குருமுகம் அநதீத்ய ப்ராஹ வேதான் அசேஷான்
நர பதி பரிக்லிப்தம் சுல்கம் ஆதாதுகாம
ஸ்வசுரம் அமர வந்த்யம் ரங்க நாதஸ்ய ஸாஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி –ஸ்ரீ நாத முனிகள் அருளிச் செய்த -முதல் தனியன்
அசேஷான் -வேதான் -ப்ராஹ –
வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழி யறுத்தான் என்றதைச் சொல்லுகிறது –
இவருக்கு அப்போது -வேதப் பிரானாரான -பீதகவாடைப் பிரானார் தாமே -பிரம குருவாய் –
போதில் கமல வன்னெஞ்சம் புகுந்து
-நாவினுளானாய் -நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளை-இவர் முகேன பேசுவித்தான் இறே-
எயிற்றிடை மண் கொண்ட எந்தையான -ஞானப் பிரான் ஆய்த்து இவரை ஞானக் கலைகளை-ஒதுவித்தது-
அமர வந்த்யம் என்கிறது
வடிவுடை வானோர் தலைவனான தம்மை அவர்கள் அடி வணங்கி ஏத்துமா போலே –
இவர் தம்மையும் அமரர் வந்திக்கும்படியான வரிசை கொடுத்தபடி -தம்மையே ஒக்க அருள் செய்வர் இறே
தம் விஷ்ணு சித்தம் நமாமி –
ஓம் நமோ விஷ்ணவே -என்னுமது விஷ்ணு சித்த விஷயத்திலே யாய்த்து –
விசேஷஞ்ஞர்க்கு பகவத் விஷயத்திலே அரை வயிறாய் -இங்கே இறே எல்லாம் பூரணமாவது -நம்பி விட்டு சித்தர் இறே
————–
மின்னார் தட மதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒரு கால்
சொன்னார் கழல் கமலம் சூடினோம் -முன்னாள்
கிழி யறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழி யறுத்தோம் நெஞ்சமே வந்து-ஸ்ரீ பாண்டிய பட்டர் அருளிச் செய்த தனியன்
ஸ்ரீ வில்லிபுத்தூர் தான் வட பெரும் கோயில் உடையானுக்கும் ஆழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் நிரூபகமான தேசமாய்த்து –
இப்படி உத்தேச்யமான ஊரை ஒருகால் அனுசந்திப்பார் எப்போதும் உத்தேச்யர் ஆகையாலே-அவர்கள் ஸ்ரீ பாதங்கள் சிரோ பூஷணமாக தார்யம் என்கிறது –
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு -என்னுமா போலே –
ஜந்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி -த்யக்த்வா தேஹம் -புநர் ஜன்ம நேதி மாமேதி சோர்ஜுந -என்று
கிருஷ்ண விஷயத்தில் ஜன்ம கர்மங்கள் ஜன்ம சம்சார பந்தத்தை அறுக்குமா போலே யாய்த்து விஷ்ணு சித்தர் ஜன்ம கர்மங்களும் –
இங்கும் ஸ்ரீ வில்லி புத்தூர் ஜன்மமும் கிழி யறுக்கை கர்மமுமாய் இருக்கும் –
வண்டு இன்னிசைக்கும் வில்லி புத்தூர் -என்றும் –
மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் -என்றும் –
பகவத் விஷயத்திலே தகப்பனாரும் மகளாரும் ஒரு கால் சொன்னால் போலே
பாகவத விஷயமாக ஒரு கால் சொன்னார் -என்றபடி-
சம்பந்த அநுசந்தானம் ஸக்ருத் தானே
—————
பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத -வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழி யறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று –ஸ்ரீ பாண்டிய பட்டர் அருளிச் செய்த தனியன்
பற்றற்ற நம்முடைய பற்று –பற்றிலார் பற்ற நின்றான் -என்னக் கடவது இறே-
———–
மற்றை ஆழ்வார்களைக் காட்டில் இவருக்கு உண்டான நெடு வாசி போலே
மற்றப் பிரபந்தங்களில் காட்டில் திருப் பல்லாண்டுக்கு நெடு வாசி உண்டு –
பன்னிரண்டு பாட்டாய் -ஐஸ்வர்ய கைவல்யங்களை நீக்கி உத்தம புருஷார்த்தமான
பகவத் கைங்கர்யத்தை ஸூக்ரஹமாக பிரதிபாதிக்கையாலே இதுக்கு நெடு வாசி உண்டு –
சேஷ சேஷி பாவ ஜ்ஞான சமனந்தரம் சேஷிக்கு அதிசயத்தை விளைக்கை சேஷ பூதனுக்கு ஸ்வரூபம் ஆகையாலே
தத் விஷயமாக மங்களா சாசனம் பண்ணுகை சைதன்ய க்ருத்யம் –
அந்த சேஷத்வ காஷ்டை யாவது தன்னை அழிய மாறியே யாகிலும் ஸ்வாமிக்கு சம்ருத்தியை ஆசாசிக்கை இறே
ஆழ்வார்கள் எல்லோரையும் போல் அல்லர் பெரிய ஆழ்வார்-ஸ்ரீ வசன பூஷணம் -சூரணை-250-
அவர்களுக்கு இது காதா சித்தம் –இவர்க்கு இது நித்யம் –சூரணை-251-
அவர்களுடைய ஆழம்கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –சூரணை-252-
அவர்களுக்கு உபய சேஷத்வத்தையும் அழித்து ஸ்வரூபத்தை குமிழ் நீருண்ணப் பண்ணும் அது
விருத்திக்கும் ஹேதுவாய்-ஸ்வரூபத்தை கரை ஏற்றும் –
1-பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –
2-பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –
3-அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலேயே வயிறு எரிவது
4-பிராப்தி பலமும் இதுவே என்பது –
5-அநிமிஷரை பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு -இது தானே -யாத்ரையாய் நடக்கும் —
அல்லாதவர்களைப் போல் கேட்கிறவர்களுடையவும் சொல்லுகிறவர்களுடையவும் தனிமையை தவிர்க்கை அன்றிக்கே –
ஆளும் ஆளார்-என்கிறவனுடைய தனிமையைத் தவிர்க்கைகாக வாயிற்று-பாஷ்யகாரரும் இவரும் உபதேசிப்பது –
அல்லாதார்க்கு சத்தா சம்ருத்திகள்–பகவத் தர்சன அனுபவ கைங்கர்யங்களாலே
இவர்க்கு மங்களா சாசனத்தாலே –
இப் பிரபந்தத்திலே முன்னிரண்டு பாட்டாலே -தாம் மங்களா சாசனம் பண்ணுகிறார் –
அத்தாலே தமக்கு பர்யாப்தி பிறவாமையாலே -மேல் மூன்று பாட்டுக்களாலே -மங்களா சாசனம்-பண்ணுகைக்கு
பகவத் சரணார்த்தி களையும் -மூன்றாவது பட்டாலும்
கேவலரையும்-நான்காவது பட்டாலும்
ஐஸ்வர்யார்த்திகளையும் –ஐந்தாவது பட்டாலும் அழைக்கிறார்-
அதுக்கு மேலே மூன்று பாட்டுக்களாலே –ஆறு -ஏழு -எட்டாவது பாட்டுக்களாலே
ஆஹூதர் ஆனவர்கள் -அழைக்கப் பட்டவர்கள் -இவரோடே சங்கதர் ஆகிறார்கள்
அதுக்கு மேலே மூன்று பாட்டுக்களாலே -ஒன்பது பத்து பதினொன்றாம் பாட்டாகளாலே –
அவர்களோடே திருப் பல்லாண்டு பாடி அருளுகிறார்-
மேலில் நிகமன பன்னிரண்டாம் பாட்டு பாட்டு-பல ச்ருதி
—————–
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு பல கோடி நூறு ஆயிரம்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா! உன் சேவடி செவ்வி திரு காப்பு –1-
பல்லாண்டு என்கிற சப்தம் ஸ்வரூப வாசி யாகிறது -மேல் பண்ணுகிற மங்களா சாசனம்-ஸ்வரூப ப்ரயுக்தம் என்கைக்காகா சொல்லிற்று –
ஜிதம் -என்றும் -நம -என்றும் -தோற்றோம் -என்றும் -போற்றி என்றும் -பல்லாண்டு -என்றும் -இவை பர்யாயம்
ஜிதம் -என்று அவனாலே தன் அபிமானம் போனபடியை இசைந்து அத் தலையில் வெற்றிக்கு மேல்-எழுத்து இடுபவன் வ்யவஹாரம்
நம –என்று எனக்கு உரியன் அல்லேன் என்கிறபடி -இது நிவர்த்த ஸ்வ தந்த்ரனுடைய வியவஹாரம்
தோற்றோம் -என்கிறது அத் தலையில் வெற்றியே தனக்கு பிரயோஜனம் என்று இருக்குமவனுடைய வ்யவஹாரம்
பல்லாண்டு -என்று தன்னைப் பாராதே அத் தலையில் சம்ருத்தியே நித்யமாகச் செல்ல வேணும்-என்று இருக்குமவன் வ்யவஹாரம்
ஒரு கால் சொன்னோம் -என்று ஆறி இருக்க மாட்டாத
தம்முடைய ஆதார அதிசயத்தாலும் -பலகால் சொல்லும் அத்தாலும் பர்யாப்தி பிறவாத
விஷய வைலஷண்யத்தாலும் அருளிச் செய்கிறார்
த்ர்ஷார்த்தனானவன் தண்ணீர் பெருமளவும் தண்ணீர் தண்ணீர் என்னுமா போலத்
தம்முடைய பயம் சமிக்கும் அளவும் பல்லாண்டு பல்லாண்டு -என்ன ப்ராப்தம் இறே
அதி சங்கையும் -அத்தாலே வந்த பயமும்
பய நிவர்த்திக்காக காலத்தை பெருக்கி இக் காலம் உள்ளதனையும் இப்படி மங்களா சாசனம்
ராம பாக்யத்தாலே மஹாராஜர் நெஞ்சிலே பட்டு பய நிவ்ருத்திக்கு உடலாய்த்து –
இவர்க்கு இது தானே பய ஹேதுவாய்த்து-
சௌகுமார்யமும் -சௌலப்யமும் பய ஹேதுக்கள் ஆகுமே-
நீ தான் உன்னைக் கண்ணாடிப் புறத்திலே கண்டால் ஸ்வதஸ் சர்வஞ்ஞனான நீயும்
கலங்கிப் பரிய வேண்டும்படி யன்றோ உன் வடிவு இருப்பது
சேஷ பூதன் சேஷி வடிவைக் கண்டால் திருவடிகள் -என்று இறே வ்யவஹரிப்பது
ஆஸ்ரயண வேளையோடு-போக வேளையோடு -மங்களா சாசன வேளையோடு -வாசி யற ஆஸ்ரியர் இழியும் துறை திருவடிகள் இறே
திருக் காப்பு குறைவற்ற ரஷை
உண்டான அமங்களங்கள் போகைக்கும் -இல்லாத மங்களங்கள் உண்டாகைக்கும் பண்ணின ரஷை என்கை
ஒரு கிரியை இன்றிக்கே குறைந்து இருப்பான் என் என்னில் —
தமக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டான நிரவதிகமான உத்க்ர்ஷ அபக்ர்ஷத்தாலே-பாசுரம் இல்லாமையாலே குறைந்து கிடக்கிறது –
இன்னமும் இவ் விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணினோம் என்று கை வாங்க ஒண்ணாத-அபர்யாப்திக்கு ஸூசகமாய் இருக்கிறது
ஸ்ரீமதே நாராயண நம அஸ்தி சொல்லாமல் போல் இங்கும் எல்லாப் பாட்டுக்கும் இது தான் முக உரை போல் இருக்கிறது
இந்தப் பாசுரம் பல்லவி போல ஒவ்வொரு பாசுரத்தோடும் சேர்த்துச் சொல்லத் தகுந்தது.
இதையும் மேல் பாசுரத்தையும் சேர்த்து ஒரு பாட்டாக அநுஸந்திப்பது ஸம்ப்ரதாயம்.
————————————————————————–
அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் ஆழியும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு–2-
கீழ் விக்ரஹ யோகத்தையும் குண யோகத்தையும் குறித்து மங்களா சாசனம் பண்ணினார்-
இதில் உபய விபூதி யோகத்தை குறித்து மங்களா சாசனம் பண்ணுகிறார்
அது போலே மங்களா சாசனத்துக்கு தாம் வேணும் -என்று தம்மையும் கூட்டிக் கொள்கிறார்-
அத் தலைக்கு பரிகைக்கு தாம் அல்லது இல்லாமையாலே -தாம் இல்லாத போது
அத் தலைக்கு அபாயம் சித்தம் என்று இருக்கிறார் இறே
ஆனால் என்னோடும் என்னாதே அடியோமோடும் -என்பான் என் என்னில் –
முறை அறியுமவர் ஆகையாலே -அடியோம் -என்றார்
கர்மோபாதிகமாக வந்த வவஸ்தைகள் எல்லாம் மறைந்தாலும்-மறையாத ஸ்வாபம் தாஸ்யம்
என்று இருக்குமவர் இறே இவர் –
தான் தனியராய் நின்று மங்களா சாசனம் பண்ணுமத்தால் பர்யாப்தி பிறவாமையாலும்
சேஷத்வம் அவிசிஷ்டம் ஆகையாலும் பஹூ வசனத்துக்கு கருத்து
வடிவாய்
வடிவு -என்று நிறமாய் -இவளோடே சேர்த்தியாலே திரு மேனிக்கு உண்டான புகரைச் சொல்கிறது
வடிவாய்
ஸ்ரீ கௌஸ்து பாதிகள் போலே ஆபரண பூதையாய் -அத்தால் வந்த அழகைச் சொல்லவுமாம்
பல்லாண்டு
கால தத்வம் உள்ள தனையும் இச் சேர்த்தி நித்யமாய்ச் செல்ல வேணும்
ஆழியும் -என்கிற சப்தத்தாலே -ஆயுதாகாரத்தாலே ரஷகமாகக் காட்ட -ஆபரண
புத்தியாலே அவனையும் குறித்து மங்களா சாசனம் பண்ணுகிறார்
பிரதிகூலர் மண் உண்ணும்படியும்
அனுகூலர் வாழும்படியாய் இறே த்வனி இருப்பது -இத் த்வனி இவருக்கு பய ஸ்தானமான படி
என் என்னில் -த்வனி வழியே நின்று இடம் காட்டிக் என்று பயப்படுகிறார்
அப் பாஞ்ச சன்னியமும் –
முன்னிலையாய் இருக்க பரோஷ நிர்த்தேசம் பண்ணுவான் என் என்னில் –
புத்ரனை அலங்கரித்த தாய் -தன் கண் படிலும் கண் எச்சிலாம் -என்று பார்க்கக் கூசுமா போலே
மங்களா சாசனம் பண்ணுகிற தம்முடைய கண்ணையும் செறித்து முகத்தை மாற வைத்து
சொல்கிறார் -அன்று யுத்தத்தில் பிறந்த ப்ரமாததுக்கு இன்று மங்களா சாசனம் பண்ணுகிறார்
இவ் விரண்டு பாட்டும் -திருமந்த்ரார்தமாய் இருக்கிறது
அடியோமோடும் -என்கிற இடத்தில் ப்ரணவார்த்தத்தை சொல்லிற்று
முதல் பாட்டில் பல்லாண்டு -என்ற பிரதம பதத்தால் நமஸ் சப்தார்தம் சொல்லிற்று
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்று அப் பாட்டில் விக்ரஹ யோகத்தையும் –
சௌர்ய வீர்யாதி குண யோகத்தையும் -இரண்டாம் பாட்டில் விபூதி யோகத்தையும்
சொல்லுகையால நாராயண பதார்த்தம் சொல்லிற்று –
உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு -என்கையாலே சதுர்த்தியில் பிரார்த்திகிற அர்த்தத்தை-சொல்லிற்று –
அன்று யுத்தத்தில் வந்த பிரபாததுக்கு இன்று அப் பாஞ்ச சந்யதுக்கு
கதே ஜலே சேது பந்தம் -போன அவதாரம் பல்லாண்டு பாடுவது இவருக்கும் இவர் மகளுக்கும்
ஸ்வரூபமும் ஸ்வரூப அனுரூபமான பிராப்யமும் -சேஷத்வம் பார தந்த்ர்யம் கைங்கர்யம்
பிரணவம் சேஷத்வம்
நம பாரதந்த்ர்யம்
நாராயண கைங்கர்யம்
————————————————————————–
வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே -3-
சதுர்விதா பஜந்தே மாம் -என்கிறபடியே -ஐஸ்வர்ய கைவல்ய பகவத் சரணார்திகள் மூவரையும் கூட்டிக் கொள்வாராக நினைத்து –
அதில் மங்களா சாசனத்துக்கு பகவத் ப்ராப்தி காமர்-ப்ரத்யாசன்னர் ஆகையாலே அவர்களை அழைக்கிறார் –
ஏகஸ் சாது ந புஞ்ஜீத -என்கிற-ந்யாயத்தாலே -இம் மங்களா சாசன ரசம் எல்லாரும் புஜிக்க வேணும் என்கிற நினைவாலே-அழைக்கிறார் என்றுமாம்
அவர்களோடே கூட மங்களா சாசனம் பண்ணுகை தமக்கு தாரகம் ஆகையாலும் என்றுமாம் –
அடியார்கள் தங்கள் இன்ப மிகு பெரும் குழுவு கண்டு -என்றும் –
அடியார்களை உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
கண்ணாலே காண்கையும் -அத் திரளிலே புகுருகையும் -இவை எல்லாம் உத்தேச்யமாய் இறே இருப்பது-
ப்ராப்த விஷயத்தில் தன்னைப் பேணாதே பர சம்ருத்தியை ஆஸாசிக்க
சர்வ நிரபேஷனான ஈஸ்வரன் இத்தைக் கண்டு -இதொரு ப்ரேம ஸ்வபாவம் இருந்தபடி என் -என்று ப்ரீதனாக –
இவனுக்கு அந்தப் ப்ரிதியே புருஷார்த்தமாய் இறே இருப்பது –
பட்டு -என்பது
உவரிக் கடலில் முத்துப் பட்டது என்னுமா போலே -நான் -எனக்கு -என்று இருக்கிற
சம்சாரத்திலே பகவத் சம்ருத்தியை ஆசாசிக்கும்படி கை ஒழிந்து இருப்பார் சிலரை
பெறுகையாவது அலாப்ய லாபம் என்னும் இடம் தோற்ற அருளிச் செய்கிறார்
நின்றீர்
வாயு பரவசமாய் திரிகிற த்ர்ணம் போலே கர்ம பரதந்த்ரனாய் திரிகிற சம்சார சேதனனுக்கு
பகவத் ஜ்ஞான பூர்வகமாக தத் சம்ருத்தியை ஆசாசிக்கப் பெற்றால் இறே ஸ்திதி உண்டாவது –
நாக பாசத்தில் அன்று அடைய மோஹித்துக் கிடக்க திருவடியும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்-
பிராணன் உடையார் உண்டோ -என்று தேடினால் போலே
சம்சாரத்தில் ஸ்வரூப ஞானம் உடையார்-தேட்டமாய் இறே இருப்பது
நின்றீர்களை -பஹூ வசனத்தாலே -உள்ளீரேல் -என்று தேட வேண்டாதே
பார்த்த பார்த்த இடம் எங்கும் பிரயோஜனாந்த பரராய் இருக்கை
ஏழ் ஆள் -என்று தமக்கு கீழே ஒரு மூன்றும் -மேலே ஒரு மூன்றும் -தாமுமாக ஏழு படியைச் சொல்லுகிறது
இஸ் சமுதாயத்தை பற்றி சாஸ்திரங்கள் சப்த சப்த ச சப்த -என்று இந்த ஏழையும்
இதுக்கு கீழே ஓர் ஏழையும் -இதுக்கு மேலே ஓர் ஏழையும் -ஆக இருப்பதொரு படியைச் சொல்லுகிறது
தச பூர்வாந்த சாபரா நாத்மா நஞ்சைக விம்சதிம் பங்க்திஞ்ச புநாதி -என்று முக பேதேன
சாஸ்திரம் சொல்லிற்று –
ஏழாட் காலும் -என்கிற சப்தம் இவ் வளவை நினைக்கிறது -இத்தால் ஒரு சந்தாநத்திலே
ஒருவன் அநந்ய பிரயோஜனன் ஆனால் அவனைப் பற்ற பகவத் பிரபாவம் சம்பந்தி
சம்பந்திகள் அளவும் செல்ல கீழும் மேலும் வெள்ளம் இடுகிறது
அக் காலத்தில் மங்களா சாசானம் பண்ணப் பெறாத குறை தீர இன்று இருந்து
மங்களா சாசனம் பண்ணுவோம் சிலர் காண் நாங்கள் -என்கிறார் –
————————————————————————–
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடும் மனம் உடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடு நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா என்று
பாடு மனமுடைப் பத்தர் உள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே -4-
ஐஸ்வர்ய காமனுக்கு காலாந்தரத்திலே யாகிலும்
பகவத் சம்பந்தம் பண்ண யோக்யதை உண்டாகையாலும் -இவனுக்கு அந்த யோக்யதையும்
அழிகையாகையாலும் துர்கதியைக் கண்டு முற்பட அழைக்கிறார்
பிரயோஜனாந்தர பரர் -மங்களா சாசனம் பண்ண வாரும் கோள் -என்றால் வருவார்களோ வென்னில்
பகவத் ப்ராப்தியில் உத்க்ர்ஷத்தையும் -அத்தைப் பற்ற கைவல்யத்தினுடைய நிகர்ஷத்தையும்-அறிவித்தால் –
விட்டுப் பற்ற வேணும் -என்னும் ஆத்ம குணாபேதரை இறே இவர் அழைக்கிறது –
கூடும் மனம் உடையீர்கள் –
புகுருவோம் என்ற நினைவே வேண்டுவது
கூட நினைப்பார்களுக்கு செய்ய வேண்டுவது முன்பு நின்ற சிறுமையை குலைத்து வர வேணும்
நாமோ நாராயணா என்று –
தன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்து ஸ்வரூப அனுரூபமான
கைங்கர்யத்தை பெற வேணும் -என்று வைஷ்ணவனாய் வர வேண்டும் என்று –
அஹமபிநமம -பகவத ஏவாஹமஸ்மி -என்று இறே நமஸ் சப்தத்துக்கு அர்த்தம் இருப்பது
ஸ்வாமி பக்கல் பண்ணும் அநுகூல வ்ருத்தி இறே புருஷார்த்தம் ஆவது –
பாடு மனமுடைப் பத்தருள்ளீர்
நினைத்து இருக்கும் அவ்வளவு போராது
ப்ரீதிக்கு போக்கு விட்டுப் பாடுவோம் என்னும் நெஞ்சு உண்டாம் படியான பிரேமத்தை
உடையீர் ஆகில்-வந்து பல்லாண்டு கூருமினோ
வந்து திருப்பல்லாண்டு பாடும் கோள்
இத் திரளிலே புக வேணும் என்று இருப்பீர் -அத்தை செய்யும் கோள்
அவ்வளவு போராது -உங்களுடைய வ்ருத்தி விசேஷமும் பெற வேணும் என்று இருப்பீர்
திருப் பல்லாண்டு பாடும் கோள் -என்று க்ரியையை இரண்டாக்கி நிர்வஹிக்கவுமாம்
பாடும் மனம் உடையீர் -நினைத்த அளவு மட்டும் இன்று அன்புடன் பாடி
ஈடு பாடு உடன்-ப்ரீதிக்கு போக்கு வீடாக பத்தர் உள்ளீர் -பிரேமை உடன் பாட
வந்து -திரு பல்லாண்டு பாட
கூடு மனம் உடையீர் முதலில் சொல்லி பாடும் மனம் உடையீர்
விருத்தி விசேஷம் கூட -கைங்கர்யம் செய்ய -கிரியை இரண்டாக்கி கூடியும் பாடியும்
கூட்டத்தோடு சேர்ந்து பாடி
————————————————————————–
அண்டக் குலத்துக்கு அதிபதி யாகி அசுரர் ராக்கதரை
யிண்டைக் குலத்தை யெடுத்துக் களைந்த விருடிகேசன் தனக்குத்
தொண்டைக் குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தை தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே -5-
அறவனை ஆழிப்படை அந்தணனை என்று ஸுத்தி குண யோகத்தை சொல்லுவாரைப் போலே-
அண்டக் குலத்துக்கு அதிபதியான ஆகாரமே யன்றோ இச் சப்தத்தில் உள்ளது –
அண்டாதிபத்யத்தில் அபேஷை உண்டு என்று தங்கள் அபேஷையை ஆவிஷ்கரிக்கிறார்கள் –
இத்தால் பிரயோஜனாந்த பரரைக் குறித்து –உதாரா -என்னுமவனுடைய ஔ தார்யம் பிரகாசிக்கிறது
இருடிகேசன் –
பிரயோஜனாந்த பரருக்கு ஐஸ்வர்யாதிகளில் கர்ம அனுகூலமாக ருசியைப் பிறப்பிக்கும் –
தன் பக்கலிலே ந்யஸ்த பரராய் இருப்பவருக்கு ஸ்வரூப அநுரூபமாக ருசியைப் பிறப்பிக்கும் –
ஐஸ்வர்யார்த்தமாக அவன் பக்கலிலே கண் வைக்கும் போதே அவன் வடிவு அழகிலே உறைக்க வையும் கோள்
அவன் -மமேதம் -என்கிற அபிசந்தியைக் குலைத்து தன் பக்கலிலே ருசியைப் பிறப்பிக்கும்
அத்தாலே அபேஷித்த ஐஸ்வர்யத்தை விஸ்மரித்து அவன் தன்னையே பற்றலாம்
பிரயோஜனாந்த பரனாய் போந்தவன் நமக்கு ஆஸாசிக்கும் இத்தனை பரிவனாகப் பெற்றோமே-என்று அவன் குளிர நோக்கும் –
ஆயிர நாமம் சொல்லி –
இரண்டு திருநாமத்தையே நிர்பந்திக்க வேண்டுவது -மமேதம் -என்று இருக்கும் அன்று இறே
ததேவம் -என்கிற புத்தி பிறந்தால் பகவத் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திருநாமங்கள் எல்லாம் போக்யமாய் இறே இருப்பது –
அவற்றை வாயாராச் சொல்லி –
பல்லாயிரத்தாண்டு என்மினே
பின்னை பல்லாயிரத்தாண்டு என்னும் கோள் –
அந் நோக்கு அழகு நித்திய ஸ்ரீ யாய் செல்ல வேணும் என்று மங்களா சாசனம் பண்ணும் கோள்
உங்களுக்கு இம் மாத்ரத்தாலே ஸ்வரூபமும் -அத்தாலே ஈஸ்வரனுக்கு சம்ருத்தியும்
உண்டாகப் பெற்றால் ஆறி இருக்கிறது என் -சடக்கென மங்களா சாசனம் பண்ணும் கோள் என்கிறார் –
————————————————————————–
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படி கால் தொடங்கி
வந்து வழி வழி யாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
யந்தியம் போதில் யரி வுருவாகி யரியை யழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே -6-
ஏழாட் காலும் பழிப்பிலோம் -என்று பிரயோஜனந்த பரரைக் குறித்து தாம் அருளிச் செய்த
தம்முடைய திரளுக்கு உண்டான ஏற்றத்தை புகுருகிறவர்கள் -தங்களுக்கு உண்டாக
சொல்லிக் கொண்டு வந்து புகுருகிறார்கள் -தம் தாம் ஏற்றம் சொல்லிக் கொண்டு வந்து
புகுருகை சாத்விகருக்கு யுக்தமோ என்னில் -ஆழ்வார் உடைய திரு உள்ளம் பயம்
கெடுகைக்காக சொல்லுகிறார்கள் ஆகையாலே யுக்தம்
ஆழ்வார் ஏழ் ஆட் காலும் பழிப்பிலோம் -என்று திரள அருளிச் செய்தார்
இவர்களும் ஏழ் படி கால் -என்று திரள சொல்லா நின்றார்கள்
இத்தால் -இஸ் சந்தானத்துக்கு மங்களா சாசன விச்சேதம் பிறந்தது இல்லை என்கை
வழி வழி -என்று-சாஸ்திர மார்க்கத்தாலும் சிஷ்ட ஆசாரத்தாலும் என்றுமாம்
பந்தனை தீர
துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யன் உடலை கீண்டு பொகுடுகையால் வந்த அனுக்கம் தீர –
திரு வவதரித்த திவசத்தில் உண்டான அபதானம் ஆகையாலே அனுக்கம் என்றது இறே
பல்லாண்டு
அனுகூலர் வாயாலே ஒருக்கால் மங்களா சாசனம் பண்ண –
அவ் வஸ்துவினுடைய அனுக்கம் போய் நித்தியமாய் செல்லும் என்று இறே இவர்கள் நினைவு
———-
தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரத்தின்
கோயில் பொறியாலே ஒற்று உண்டு நின்று குடி குடி ஆட் செய்கின்றோம்
மாயப் பொரு படை வாணனை யாயிரம் தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய வாழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே –7-
வைஷ்ணவ சிஹ்னமான திரு விலச்சினையைத் தரிக்கவே –
த்யாஜ்ய உபாதேயங்கள்-இரண்டும் ஸித்திக்கும் என்று பார்த்து –
அத்தைத் தரித்துக் கொண்டு வந்தோம் என்றார்கள் –
ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியிலே புகுரப் பண்ணின-உபகார சம்ருத்தியாலே ஆழ்வானைக் கொண்டாடுகிறார்கள்
எங்களை புகுர நிறுத்தின ஆழ்வான் உடைய வீரப் ப்ரகாசமான துறையிலே திருப்பல்லாண்டு-பாடக் கடவோம் என்கிறார்கள்
ஆழி வல்லானுக்கு –
வில் வல்லான் -வாள் வல்லான் -தோள் வல்லான் -என்னுமா போலே
யஸ்ய ஸா ஜனகாத்மஜா -என்கிறபடியே பிராட்டியை எனக்கு என்ன இட்டுப் பிறத்தல்
திருவடி தோளிலே நல் தரிக்க விருத்தல் -கை பேராமல் திரு வாழியைப் பிடித்தல் –
செய்யுமது ஆய்த்து சர்வாதிகத்துவதுக்கு லஷணம்
பல்லாண்டு கூறுதுமே –
அத் தலையில் அடிமை செய்த ஆழ்வான் உடைய வீர ஸ்ரீக்கும்
அடிமை கொண்ட கிருஷ்ணனுடைய வீர ஸ்ரீக்கும் –
மங்களா சாசனம் பண்ணுவார் பெற்றது இல்லை –
அவ் விழவு தீர இன்று இருந்து திருப் பல்லாண்டு பாடுகிறோம் என்கிறார்கள்-
————————————————————-
நெய்யிடை நல்லதோர் சோறு நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே –9-
நெய்யிடை நல்லதோர் சோறு -இத்தால் போஷக ப்ரசுரமான தாரக த்ரவ்யத்தை தரும் என்கை
கையடைக் காயும்–தாரக போஷகங்கள் கீழே சொல்லிற்றாய் -மேல் -போக்ய பதார்த்தங்களை தந்தபடி சொல்லுகிறது
திருக் கையாலே இட்ட வெற்றிலை பாக்கு என்று இவர்கள் பக்கல் கௌரவத்தாலே
இட்ட சீர்மையை சொல்லுகிறது -சேஷ பூதன் சேஷியை குறித்து இடும் பிரகாரத்தாலே இறே
சேஷி யானவன் சேஷ பூதனுக்கு இடுவது
கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும் –
தேகத்தை உத்தேச்யம் என்று இருக்குமவன் ஆகையாலே -தன் உடம்பை அலங்கரித்து
அத்தை அனுபவித்து இருக்குமவன் இறே ஐஸ்வர்யார்த்தி
பகவத் பரனாய் ஈஸ்வரனை அலங்கரித்து சதா தர்சனம் பண்ணி இருக்கிறான் அல்லனே
ஸ்வரூபத்தை உணர்ந்து -ஜ்ஞான வைராக்ய பக்திகளை ஸ்வரூபத்துக்கு ஆபரணமாக
நினைத்து இருக்கிறான் அல்லனே
கழுத்துக்கு பூணொடு காதுக்கு குண்டலமும் -என்று விசேஷிப்பான் என் என்னில் –
தன் கண்ணுக்கு அவிஷயமாய் -நாட்டார் கொண்டாடும் அதுவே தனக்கு பிரயோஜனமாய்
இருக்கையாலே
அவயவாந்தரந்களிலே -அங்குலீய காத்யாபரணங்கள் தன் கண்ணுக்கு விஷயமாய் இருக்கும் இறே
பெருமாள் மீண்டு எழுந்து அருளின அளவிலே இந்த்ரன் வரக் காட்டின ஹாரத்தை
பிராட்டியும் தாமும் இருந்து திருவடிக்கு பூட்டினால் போலே -ஈஸ்வரன் பரிந்து
இது கழுத்துக்காம் -இது காதுக்காம் -என்று திருக்கையாலே பூட்டின ஆபரணமும்
என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல –
சோரேணாத்மாபஹாரிணா -என்கிறபடியே ஆத்ம அபஹாரம் பண்ணி -அதனாலே
ஷூத்ர பிரயோஜன காமனாய் -சம்சாரியாய் போந்த என்னை –
மங்களா சாசனத்துக்கு விஷயம் ஏது என்ன -அவ் விஷயத்தை சொல்லுகிறார்
தன்னோட்டை ஸ்பர்ச சுகத்தாலே விகஸித பணமான நாகத்தினுடைய பகை உண்டு
பெரிய திருவடி -அவனை கொடியாக உடையவனுக்கு-அநந்த சாயியாய் கருடத்வஜனானவனுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறேன் என்கை
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே திரு வநந்த வாழ்வானோட்டை சேர்த்தியால்
வரும் அழகு நித்ய ஸ்ரீ யாக வேணும் என்றும்
ஏதேனும் ஒன்றை அபேஷித்து வந்தவர்களையும் எனக்காக்கிக் கொள்ள வல்லேன்
என்று கொடி கட்டி இருக்கிற சக்தி நித்ய ஸ்ரீ யாக செல்ல வேண்டும் என்றும்
திருப்பல்லாண்டு பாடுகிறேன் என்கிறார்
அநந்ய பிரயோஜனரும் -கைவல்யார்த்திகளும் -சங்கதராகிற இடத்தில் சமூஹமாக பேசினார் -பாடுதும் -கூறுதும் -என்றும்
இதில் ஐஸ்வர்யார்த்தியை ஏக வசனத்தாலே பேசுவன் என் என்னில் -கூறுவன் -என்று
அவர்கள் திரள் பரிச்சின்னமாய் -ஐஸ்வர்த்யார்திகள் திரள் அபரிச்சின்னம் ஆகையாலே
ஒரூருக்கு ஒருத்தன் வார்த்தை சொல்லுமா போலே சொல்லுகிறார்
————————————————————————–
உடுத்துக் களைந்த நின் பீதகவாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய் முடி சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திரு விழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே –9
உடுத்த நின் பீதக வாடை-களைந்த நின் பீதகவாடை-என்னாமல் – உடுத்துக் களைந்த நின் பீதகவாடை
மஞ்சளும் செங்கழுநீரும் கலந்த -இது இறே அநந்ய பிரயோஜனருக்கு ஆபரணம்
திருத் துழாய் பறிக்கும் போதும் -தொடுக்கும் போதும் -அவன் சாத்தி அருளப் புகுகிறான் –
என்னும் ஆதரத்தாலே சம்ச்க்ர்தமாய் சாத்திக் கழித்தால் சூடுமது எங்களுக்கு உத்தேச்யம் –
சுவடர் பூ சூடும் போது புழுகிலே தோய்த்து சூடுமா போலே -தத் ஸ்பர்சத்தாலே விலஷணமாய் இருக்கும் என்கை –
அவன் தானும் சிலர் -சூடிக் கொடுத்த மாலையின் சுவடு அறியுமவன்-ஆகையாலே சூடிக் கொடுக்கிறான் இறே
விடுத்த திசைக் கருமம் திருத்தி –
க்ரியதாம் -என்கிற சந்தேசமே தாரகமாக ஏவின கார்யத்தை செய்து தலைக் கட்டுகை –
ஸ்வாமி ஏவின கார்யத்தை குறையச் செய்யுமவன் அதமன் –
அத்தை குறையாமல் செய்து தலைக் கட்டுமவன் மத்யமன் –
அதுக்கு மேலே அதுக்கு அவிருத்தமான கார்யங்களையும் விசாரித்து செய்து தலைக் கட்டுமவன் உத்தமன் –திருவடி-போல் –
இத் தொண்டர்களோம்
இப்படிப் பட்ட அடியார்கள் இறே நாங்கள் –
எமக்கு என்று உடுத்தல் ஜீவித்தல் சூடுதல் செய்யுமவர்கள் அன்றிக்கே -அவன் கழித்தவை
கொண்டு தேக யாத்ரையாம் படி யிருக்குமவர்கள் இறே நாங்கள்
அதிலும் பர்யாப்தி பிறவாமையாலே
திரு வநந்தாழ்வான் மேலே சாய்ந்த போதை அழகுக்கு கண் எச்சில் வாராமைக்கு
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
இவனுடைய வடிவும் -அவனுடைய வடிவும் -கிடந்ததோர் கிடக்கை -என்கிறபடியே
பரிச்சேதிக்க ஒண்ணாத அழகு இறே கண் வளர்ந்து அருளுகிற போதை அழகு –
ஒரு வெள்ளி மலையிலே காள மேகம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிற போதை
பரபாக ரசத்தை அனுசந்தித்தால் மங்களா சாசனம் ஒழியச் செல்லுமோ என்கிறார்கள்
தேக யாத்ரையிலும் தங்கள் பாரதந்த்ர்யம் காட்டி புகுந்தார்கள்
————————————————————————–
எந்நாள் எம்பெருமான் உன் தனக்கு அடியோம் என்று எழுத்து பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக் குடில் வீடு பெற்று உய்ந்தது காண்
செந்நாள்த் தோற்றி திருமதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே வுன்னைப் பல்லாண்டு கூறுவனே –10-
பகவத் ப்ரபாவத்தாலே தங்களுக்கு பிறந்த ஏற்றத்தை சொல்லிக் கொண்டு ப்ரயோஜனாந்தர பரர்கள் வந்து புகுகிறார்கள் –
எந்நாள்-பகவத் பிரபாவம் தான் விஷயீ கரித்த திவசத்தையும் கொண்டாடும்படியாய் இருக்கும் இறே
எம்பெருமான் -என்கிற ப்ராப்தி யாலும் –
உன் தனக்கு -என்கிற சக்தியாலும் –
எழுத்துப் பட்ட -என்கிற சப்த மாத்ரத்தாலும்
பலிக்கக் கண்டோம் என்கிறார்கள் –
பட்ட -என்கிற இது –முத்துப்பட்ட -என்கிறாப் போலே–
வாழாட் பட்டு -என்கிற -இடத்தில் அர்த்தத்தின் உடைய துர்லப்த்வம் சொல்லிற்று-
வாசக சப்தத்தின் உடைய துர்லப்த்வம் சொல்லுகிறது இங்கு
அன் நாள் அமைந்து இருக்க என் நாள் சொல்வது வகுத்து சேஷி பக்கலில்
மங்களாசாசனம் பண்ண அனுக்ரகம் செய்த நாளே நல்ல நாள்
மார்கழி திங்கள் மதி நிறைந்த நல் நாள்
அக்ரூரர் கண்ணனை கூப்பிட அனுப்பிய நாளே நல்ல நாள்- கம்சன் சோறு உண்டு வளர்ந்த
எனக்கு வாய்த்த நாள் –
தாஸ்யம் என்றும் – உஜ்ஜீவனம் -என்று பர்யாயம் போலே காணும்
ஐந்தலை இத்யாதி –
அது கிடக்க -நிர்ப்பயமாய் வர்த்திக்கிற காலத்திலே பிறந்த ப்ரமாதமே போராதோ வயிறு
எரிகைக்கு என்கிறார்கள் –
ஐந்தலைய பைந்நாகத் தலை பாய்ந்தவனே –
கடிக்கைக்கு ஐந்து வாயை உடைத்தாய் -க்ரோதத்தாலே விஸ்த்ர்தமான பணத்தை உடைத்தான
சர்ப்பாச்யத்திலே யன்றோ புக்கது -ஏக தாது விநா ராமம் க்ருஷ்ணோ ப்ருந்தாவனம் ய யௌ
என்று தலையன் ஒரு நாள் பேர நிற்க -பாம்பின் வாயிலே புகும் படி இறே தீம்பு –
கிருஷ்ண அவதாரம் என்றால் ஆழ்வார்கள் எல்லாரும் ஒக்க பரிவராய் இருப்பர்கள்
இதுக்கு அடி என் -என்று ஜீயர் பட்டரை கேட்க –
ராமாவதாரத்தில் பிள்ளைகள் -தாங்கள் மிடுக்கராய் -குணாதிகருமாய் –
பிதா சம்ப ராந்தகனுமாய்
மந்த்ரிகள் வசிஷ்டாதிகளுமாய்
ஊர் அயோத்யையுமாய்
காலம் நல்ல காலமுமாய்
இருக்கையாலே அங்குத்தைக்கு ஒரு பயமும் இல்லை –
இங்கு
பிறந்தவிடம் சத்ரு க்ர்ஹமாய்
கம்சன் இடம் பார்த்து நலியும் துஷ்ப்ரக்ர்திகளை வரக் காட்டும் கரூரனுமாய்
தமப்பன் இடையனுமாய்
ஊர் இடைச் சேரியுமாய்
பிள்ளைகள் தாங்கள் தீம்பருமாய்
காலம் கலி காலத்தோடு தோள் தீண்டியாய்
இருக்கையாலே என் வருகிறதோ என்று பரிகைக்கு ஆழ்வார்கள் அல்லது இல்லை காணும்
என்று அருளிச் செய்தார் –
உன்னைப் பல்லாண்டு கூறுதுமே –உன்னை கூறுதுமே -என்கிற ஸ்வரத்துக்கு கிருஷ்ண அவதாரம் பரிகை என்று காட்டி அருளுகிறார்
இப்படிப்பட்ட உன்னை அனுசந்தித்தால் மங்களா சாசனம் ஒழிய தரிக்க விரகு உண்டோ என்கிறார்கள்
————————————————————————–
அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11-
அல் வழக்கு ஒன்றும் இல்லா
வழக்கு அல்லாதவை அநேகம் இறே
1-தேகத்தில் ஆத்ம புத்தி பண்ணுகை வழக்கு அல்ல
2-ப்ரக்ருதே பரமான ஆத்ம வஸ்துவை ஸ்வ தந்த்ரன் என்று அனுசந்திகை வழக்கு அல்ல –
3-தேவதாந்த்ரங்களில் பரத்வ புத்தி பண்ணுகை வழக்கு அல்ல –
4-பகவத் பஜனத்துக்கு பலம் பிரயோஜனாந்தரம் என்று இருக்கை வழக்கு அல்ல –
5-அநந்ய பிரயோஜனம் ஆனாலும் உபாயாந்தர சாதனம் என்று இருக்கை வழக்கு அல்ல –
6-பகவத் அனுபவத்தை -மமேதம் -என்று இருக்கை வழக்கு அல்ல –
இனி –வழக்கு -ஆவது –
சேஷிக்கு மங்களா சாசனம் பண்ணுகை என்று இறே இவர் இருப்பது
இவை -ஒன்றும் இன்றிக்கே -அத் தலைக்கு மங்களா சாசனம் பண்ணும் அது ஒன்றே வழக்கு –
திருமாலே –
இவ் வாத்ம வஸ்து ஒரு மிதுன சேஷம் -என்று சேஷத்வ பிரதி சம்பந்தியை சொல்லுகிறார்கள்
இத்தால்
மாதா பித்ர் சேஷத்வமும் -தேவதாந்தர சேஷத்வமும் கர்ம உபாதிகம் என்கை
அதவா
தேவரீருக்கு பிராட்டி நிரூபக பூதையாய் இருக்கிறாப் போலே எங்களுக்கும் தாஸ்யம்
நிரூபகம் என்கிறார்கள் -என்றுமாம்
இந்த ஸ்வரூப ஞானம் எவ் வழியாலே பிறந்தது என்னில்
சகல வேதாந்த தாத்பர்யமான மந்திர ரஹஸ்யத்தாலே பிறந்தது என்கிறார் மேல்
நல் வகையால் நமோ நாராயணா -என்று
நாராயணனுக்கே உரியேன் -எனக்கு உரியேன் அல்லேன் -என்கை
நல் வகையால்
முன்பு அர்த்த விதுரமாக -ஜப ஹோமாதி முகத்தாலே பிறந்த அந்வயம் அடையத்
தீ வகை என்று இருக்கிறார்கள் -இது தான் சர்வார்த்த சாதகம் இறே –
நமோ நாராயணா யேதி மந்த்ரஸ் சர்வார்த்த சாதகா -என்னக் கடவது இறே
நாமம் பல பரவி –
இவர் இவர்களை அழைக்கிற போது -அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்லி -என்றார் இறே -அத்தை இறே இவர்களும் சொல்லுகிறது
பரவி –
அக்ரமமாகச் சொல்லி –
சாதனமான போது இறே க்ரம அபேஷை உள்ளது –
முன்பு -மமேதம் -என்று இருந்தவர்களுக்கு -மங்களா சாசன யோக்யராம் படி
புகுர நிற்கைக்கு இசைவே வேண்டுவது –
பல் வகையாலும் பவித்ரனே –
பிரயோஜனாந்தர பரரான அசுத்தியைப் போக்கி –
அதுக்கடியான அஹங்கார மமகாரங்கள் ஆகிற அசுத்தியைப் போக்கி –
சேஷத்வம் தன்னிலும் -மாதா பித்ர் சேஷத்வம் என்ன இவ்வோ அசுத்தியைப் போக்கிப்
புகுர நிறுத்தினவனே –
உன்னைப் பல்லாண்டு கூறுவனே –
சௌந்தர்யாதி குண யுக்தனான உன்னை மங்களா சாசனம் பண்ணுகிறேன்
ஏக வசனத்தாலே
கீழ் சொன்ன புருஷார்த்திகள் மூவர் முகத்தாலும் தாமே திருப்பல்லாண்டு பாடுகிறார்
என்னும் இடம் தோற்றுகிறது
ஐஸ்வர்யார்த்தி சங்கதன் ஆகிற அளவிலும் ஏக வசனம் ஆகையாலே இங்கும்
அதுவே யாகிறது என்னவுமாம் –
எங்கனே சொல்லினும் இன்பம் பயக்குமே
முன்பு மமேதம் என்று இருந்தவர் மங்கள சாசனாம் பண்ண யோக்யதை கிட்ட இது ஒன்றே போதும்
இசைவு ஒன்றே வேண்டும் -போதுமினே போதுவீர் இச்சையே போதும்
பல் வகையாலும் பவித்ரனே -பல விதத்திலும் சுத்தன்
பிரயோஜனாந்தரம் -அதுக்கு அடிக்கடி நீர் நுமது வேர் முதல் மாய்த்து
சேஷத்வம் -தேவாந்தர பஜனம் போக்கி வெள்ளுயிர் ஆக்க வல்ல அர்த்தம்
அன்றிக்கே
ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி -பார்த்தாலும் நினைத்தாலும் -பவித்ரம் கிட்டுமே
இதுவும் பல் வகையாலும் பவித்ரன்
ரூப ஸ்ரீயை பார்த்த வாறே -போக்குமே
உன்னை -சர்வேஸ்வரன்
கூறுவனே -ஆழ்வாரே மூன்று வகையால்- பாடினார் என்ற அர்த்தம் -மூவர் முகத்தாலும் தானே அருளுகிறார்
ஏக வசனம்-முன்பு ஊருக்கு ஒருவன் போலவும் கொள்ளலாம் -கோஷ்டிக்கு ஒருவர் போலவும் கொள்ளலாம்
அல் வழக்கு ஒன்றும் இல்லா –
நானும் உனக்கு பழ அடியேன்-சொல்லும் படி மாற்றினார்
எங்கேயோ திரிந்த கஷ்டம் மனசில் படாமல் வைப்பான்-அன்று ஈந்த கன்று -மேல் வைக்கும்
அக் குற்றம் -அவ்வியல்பே ஆள் கொள்ளும்-
————
பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியைச் சார்ங்கம் என்னும்
வில்லாண்டான் தன்னை வில்லி புத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணா என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே –12
நிகமத்தில் –
இப் பிரபந்தத்தை அதிகரித்தாருக்கு பலம் சொல்லுகிறதாய் –
பிரேம பரவசராய்க் கொண்டு மங்களா சாசனம் பண்ணுகிறார் –
அநந்ய பிரயோஜனருக்கும் தம்மோபாதி பகவத் ப்ரத்யாசத்தி உண்டாகையாலே அவர்களை அழைத்தார் –
ஐஸ்வர்ய கைவல்யங்களைப் பற்றி ஆஸ்ரயித்தவர்களும் -பகவத் பிரபவத்தாலே
மங்களா சாசனத்துக்கு ஆளாவார்கள் என்று அவர்களையும் அழைத்தார் –
அவ்வளவும் இல்லாத சம்சாரிகளும் தம்முடைய பாசுரத்தில் இழியவே
யாவதாத்மபாவி மங்களா சாசன அர்ஹர் ஆவார்கள் என்று இப் பிரபந்தத்தின்
வைபவத்தை அருளிச் செய்கிறார் -பகவத் பிரசாதத்தால் வருவர் என்று நம்பி அழைத்தார்
அவ்வளவும் இல்லாத சம்சாரிகளும் இந்த பிரபந்தம் சொல்லி மங்களா சாசானம் செய்ய பலன் அருளுகிறார் இதில்
உலகு அளந்து பொழுது திரு அடி ஆண்டு- குசை தாங்கி பிடித்து ஆண்டான் -அது போல் வில்லாண்டான்
சார்ங்கம் உதைத்த சர மழை-மதம் பிடித்த யானை ஆளுவது போல் சார்ங்கம் என்பதே பிரசித்தி
வான் உயரம் வரை இருக்கும் -வில்லை பிடித்து –
இத்தால் -உப்கிரம உபசமகாரம் -ஆரம்பம் முடிவு இரண்டிலும் காட்டும்
மல்லாண்ட திண தோள் மணி வண்ணா -முதல் பாசுரம்-கொன்றவன் எம்பெருமான்-
இங்கு விரோதி போக்கி பரமேட்டி பவித்ரன்-மாவாய் பிளந்து விரோதி நிரசன சீலன்
ஐஸ் வர்யார்த்தி விரோதி போக்கி அதே குணம்
மணி வண்ணா -கருட பச்சைக்கும் உப லஷணம்
பர மேட்டி -இரண்டாம் பாசுரத்தில் உபய விபூதி சொன்னது போல்
வில்லிபுத்தூர் விட்டு சித்தன் –
அவ் ஊரில் பிறப்பாலே ஆய்த்து பகவத் ப்ரயாசத்தி –
பகவத் ப்ரயாசத்தியிலே ஆய்த்து மங்களா சாசன யோக்யமான பிரேம அதிசயம் –
விட்டு சித்தன் -என்கிற திருநாமம் உண்டாய்த்து
ஆழ்வார் விடிலும் தாம் விட மாட்டாத தன் பேறாக இவர் திரு உள்ளத்தே
நித்ய வாசம் பண்ணின படியாலே
விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் -என்னக் கடவது இறே
கால் வாங்க ஒண்ணாத அழகில் தோற்று – சூழ்ந்து சூழ்ந்து
சுழி ஆறு பட -மங்களா சாசனத்தில் மூட்டும்
பவித்ரனை -பர மேட்டியை –உரைப்பார் நமோ நமோ -பல்லாண்டு ஏத்துவர் என்று அன்வயம்
சூழ்ந்து இருந்து பாடுவது
பவித்ரன் அவன்
பரமேட்டி வைகுண்ட நாதன்
நீண்ட சார்ங்கம் பற்றி- விரும்பி பாடிய சொல்
இன்று கிடைத்த நாள் நல்லது
நமோ நாராயணா சொல்லி அங்கும் சூழ்ந்து இருந்து ஏத்த பெறுவார்
இங்கு நித்யம் இல்லை
அங்கு நித்யம்
சூழ்ந்து இருந்து ஏத்தி கைங்கர்யம் பண்ணப் பெறுவோம்-
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
Leave a Reply