ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் -551-600—–மும்மத விளக்கம் —

வேதாஸ் ச்வாங்கோ சித்த க்ருஷ்னோ த்ருடஸ் சங்கர்ஷண அச்யுத
வருணோ வாருணோ வ்ருஷபுஷ்கராஷோ மஹா மன —59-
பகவான் பகஹா நந்தி வன மாலீ ஹலாயுத
ஆதித்யோ ஜ்யோதித்யஸ் சாஹிஷ்ணுர் கதி சத்தம–60-
ஸூதந்வா கண்ட பர ஸூர் தாருணோ த்ரவிண ப்ரத
திவிஸ் ப்ருக் சர்வத்ருக் வாசோ வாசஸ்பதி ரயோ நிஜ -61
த்ரிசாமா சாமகஸ் சாம நிர்வாணம் பேஷஜம் பிஷக்
சந்யா சக்ருச் சமஸ் சாந்தோ நிஷ்டா சாந்தி பராயணம் –62
ஸூபாங்கஸ் சாந்திதஸ் ஸ்ரஷ்டா குமுத குவலேசய
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபாஷோ வ்ருஷப்ரிய —63-

—————————————————

சுத்த சத்வம் —————–544-562—–19 திரு நாமங்கள்
மஹ நீய கல்யாண குணங்கள் -563-574—-12 திரு நாமங்கள்
வியாசர் ———————575-607— 33 திரு நாமங்கள்

——————————————————-

551-வேதா –
அளவற்ற மங்களமான பலவகைப்பட்ட பெருமைகளை பக்தர்களுக்கு எக்காலமும் வழங்குபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

படைப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

விசேஷமாகத் தாங்குபவர் -காப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

552-ஸ்வாங்க-
தமது சர்வேஸ்வரத் தன்மைக்கு இலக்கணமாக குடை -சாமரம் முதலிய ராஜ்ய அங்கங்கள்
எப்போதும் உள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

தாமே காரணங்களின் சஹகாரியாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

படைப்புக் காரியத்தில் தாமே அங்கமாக இருப்பவர் -தனக்கேற்ற அங்கங்களை உடையவர் –
சுதந்திரமான அங்கங்களை உடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

553-அஜித –
உற்பத்தி அழிவு முதலிய பிரகிருதி தர்மங்களால் வெல்லப்படாத அஜிதா என்னும் ஸ்ரீ வைகுண்டத்துக்கு அதிபதி –ஸ்ரீ பராசர பட்டர் –

அவதாரங்களிலும் எவராலும் வெல்லப் படாதவர் –ஸ்ரீ சங்கரர் –

ஒருவராலும் வெல்லப் படாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

554-கிருஷ்ண –
கார் முகில் போல் அழகிய கருமை நிறம் உள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

கிருஷ்ண த்வைபாயனர் என்னும் வியாச ரூபியானவர் –ஸ்ரீ சங்கரர் –

கரிய நிறமுடையவர் -அக்னி ரூபமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————–

555-த்ருட-
தம்மை உபாசிப்பவர்களை அனுரஹிப்பதற்காக வ்யூஹத்தில் ஸ்தூலமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஸ்வரூபத்தின் சக்தியால் தன்மை மாறாதவர் –ஸ்ரீ சங்கரர் –

உறுதியானவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

556-சங்கர்ஷண-
சேதன அசேதனங்களைத் தம்மிடத்தில் ஓன்று சேரும்படி ஆகர்ஷிப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சங்கர்ஷண -சம்ஹார காலத்தில் பிரஜைகளைச் சேர்த்து இழுப்பவர் -அச்யுத -தம் ஸ்வரூபத்தை விட்டுத் தவறாதவர் –
சங்கர்ஷணோச்யுத ஒரே திருநாமம் –ஸ்ரீ சங்கரர் –

எல்லோரையும் நன்றாக இழுத்துக் கொள்பவர் -அழிவற்றவர் –சங்கர்ஷணோச்யுத ஒரே திருநாமம் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————–

557-அச்யுத –
வ்யூஹத்திலும் தமது ஸ்தானத்தில் இருந்து நழுவாதவர்–ஸ்ரீ பராசர பட்டர் –

————————————————————————–

558-வருண –
பூமி ஆகாயம் முதலிய எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டு இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மாலையில் கிரணங்களை மறைத்துக் கொள்ளும் சூரியனாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உத்தமமான ஜீவர்களை மேலே உயர்ந்த கதிக்கு அழைத்துச் செல்பவர் -தம்மை மறைப்பவர் -ஆனந்தம் உடையவர் பக்தர்களை
விரும்புபவர் -பக்தர்களால் விரும்பப் படுபவர் -அறிபவராய்-அருணா ரூபத்தில் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————————

559-வாருண-
தம்மை ஸ்வாமியாக வரிக்கும் பக்தர்களிடத்தில் இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

வருண புத்திரரான வசிஷ்டர் அல்லது அகஸ்த்யராக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

வருண புத்திரர் –வாரண -என்ற பாடமானால் பக்தர்களுக்கு வேண்டாதவற்றைத்  தவிர்ப்பவர் –
சமுத்ரத்திற்கு சுகத்தை தருபவர் -உயர்ந்தவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————–

560-வ்ருஷ-
நிழலுள்ள மரம் போலே அடியவர்கள் வந்து அடைந்து எல்லாப் பலன்களையும் அனுபவிக்கும்படி இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

மரம் போல் அசையாமல் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பக்தர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுப்பதில் கற்பக மரம் போன்றவர் -விரும்பப் படுபவர் –
அவ்ருஷ –  என்று தம்மை வெட்டுபவர் இல்லாதவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

561-புஷ்கராஷ-
கருணை பொழிந்து அடியவர்களைப் போஷிக்கும் இரு திருக் கண்களை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிந்திப்பவர்களுக்கு ஹ்ருதய கமலத்தில் பிரகாசிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

தாமரை போன்ற திருக் கண்களை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

562- மஹாமநா –
அடியவர்கள் திறத்தில் பெரிய மனம் உள்ளவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சிருஷ்டி முதலியவற்றை நினைவினாலேயே செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மேன்மையான மனம் அல்லது ஞானம் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————–

563-பகவான் –
குற்றங்கள் அனைத்தும் தவிர்ந்து கல்யாண குணங்களே நிரம்பியவர் ஆதலின் மிகவும் பூஜிக்கத் தக்கவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஐஸ்வர்யம் முதலிய ஆறு குணங்கள் யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

ஐஸ்வர்யம் முதலிய ஆறு குணங்கள் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————–

564-பகஹா –
நிரம்பிய ஐஸ்வர்யம் வீர்யம் கீர்த்தி லஷ்மி ஞானம் வைராக்கியம் ஆகிய ஆறு குணங்கள் யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

சம்ஹார காலத்தில் ஐஸ்வர்யம் முதலிய குணங்களை அழிப்பவர்–ஸ்ரீ சங்கரர் –

அசுரர்களுடைய ஐஸ்வர்யத்தை அழிப்பவர் -ஒளியுடைய சூரிய சந்திரர்களை நெருங்கும் ராகுவை அழிப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

565-நந்தீ-
வ்யூஹத்தில் சங்கர்ஷணராக இருந்த தாமே பல ராமனை அவதரித்து நந்தகோபரைத் தந்தையாக அடைந்து இருப்பவர் –
மதுவைப் பருகியதாலும் கோபிகைகள் உடன் கூடியதாலும் மகிழ்ந்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

ஸூக ரூபியாக இருப்பதால் -அல்லது -எல்லாச் செல்வங்களும் நிரம்பி இருப்பதால் ஆனந்திப்பவர் –
ஆநந்தீ -என்ற பாடம் –ஸ்ரீ சங்கரர் –

ஆநந்தீ -ஆனந்தம் யுடையவர் -நந்தீ -என்ற பாடத்திலும் அதுவே பொருள்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————-

566-வநமாலீ –
தம்மால் படைக்கப் பட்ட பஞ்ச பூதங்களில் உள்ள பரிமளங்களின் அபிமானி தேவதை யாகிய வைஜயந்தீ என்னும்
வனமாலையை எக்காலமும் அணிந்தவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பஞ்சபூத தன் மாத்ரை ஸ்வரூபமான வைஜயந்தீ  என்னும் வனமாலையை தரிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

திருவடி வரை நீண்ட மாலையை அணிந்தவர் -ஸ்ரீ லஷ்மியைத் தோழியாக யுடையவர் –
தண்ணீர் அல்லது சோற்றைத் தாங்கும் சீலம் உள்ளவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

567-ஹலாயுத –
பஞ்ச பூதங்களை அபிவருத்தி செய்யும் உழவன் போல் கலப்பையை யுடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

பல ராமனாகக் கலப்பையை ஆயுதமாக யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –

திரி புரத்தை அழித்த போது சிவனுக்கு ஆயுதமாக இருந்தவர் -பல ராமனாகக் கலப்பையை ஆயுதமாக யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

568-ஆதித்ய –
முற்பிறவியில் அதிதியாக இருந்த தேவகியின் புதல்வர் -ஆகார எழுத்தினால் அடையத் தக்கவர் –
ஆகாரம் சங்கர்ஷண மந்திர பீஜ எழுத்து –ஸ்ரீ பராசர பட்டர் –

அதிதிக்கும் கச்யபருக்கும் மகனாக ஸ்ரீ வாமனனாகப் பிறந்தவர்–ஸ்ரீ சங்கரர் –

பிரஜைகளை உண்ணும் அசுரர்களைக் கை விடுபவர் -அநாதி காலமாகவே ஞான ஆனந்தங்களை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

569-ஜ்யோதிராதித்ய –
சூர்யன் இருள் அடைந்து போகும்படி அப்ராக்ருதமான ஆச்சர்ய தேஜோ மயமாய் பேரொளியான சூர்யன் –ஸ்ரீ பராசர பட்டர் –

சூர்ய மண்டலத்தில் இருப்பவர் -பிரகாசிப்பவராயும் சூர்யனாகவும் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

ஒளிகளில் முதல்வனான சூர்யனில் இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

570-சஹிஷ்ணு –
அபராதத்தைப் பொறுத்துக் கொள்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –

குளிர்ச்சி வெப்பம் முதலிய இரட்டைகளைச் சகித்துக் கொள்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அடியவர்கள் செய்யும் பிழைகளைப் பொறுப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

571-கதிசத்தம –
தர்ம மார்க்க உபதேச விஷயத்தில் மிகச் சிறந்தவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

அனைவருக்கும் கதியாயும் உயர்ந்தவராயும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அறிவுடன் கூடிய நல்லோரால் வேண்டப்படுபவர் -அடையப் படுபவரே மிகவும் உயர்ந்தவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————

572-ஸூதந்வா-
அமுதத்தைப் பற்றிய தேவா ஸூ ரப்போரை முடித்த சிறந்த வில்லை யுடையவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

இந்த்ரிய ரூபமான சார்ங்கம் என்னும் வில்லை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

அழகிய வில்லை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

573-கண்ட பரஸூ –
சிவனுடைய யுத்தத்தை முடித்த கோடாலி யுடையவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

பரசுராம அவதாரத்தில் விரோதிகளை அழித்த கோடாலியை யுடையவர் –
அகண்ட பரசு -யாராலும் வெல்லப்படாத பரசுவை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –

எதிரிகளைப் பிளக்கும் கோடாலி யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————

574-தாருண-
இப்படி வெளிப் பகைவர்களையும் உட் பகைவர்களையும் பிளப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

நல் வழியைக் கெடுப்பவரை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

மரப் பொம்மை போல் ஸ்வ தந்த்ரம் இல்லாத உலகைத் தூண்டி நடத்துபவர் -எதிரிகளைப் பிளப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————-

575-த்ரவிணப்ரத-
வியாசராக சாஸ்திரங்களும் அவற்றின் அர்த்தங்களும் ஆகிய செல்வத்தை மிகக் கொடுப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

பக்தர்களுக்கு விரும்பியவற்றைக் கொடுப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

கல்வி பணம் முதலிய செல்வங்களை வழங்குபவர் –
உருகிய சித்தம் கொண்ட ஹரி பக்தர்களுக்கு ஸ்வரூப ஸூ கத்தைத் தருபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

576-திவி ஸ்ப்ருக்-
பர விதையினால் பரம பதத்தில் இருக்கும் ரகசியமான ஸ்வரூபத்தைத் தொடுபவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

ஆகாசத்தைத் தொடுபவர் -திவ ஸ்ப்ருக்–என்று பாடம் -ஸ்ரீ சங்கரர் –

ச்வேதத்வீபம் அனந்த ஆசனம் ஸ்ரீ வைகுண்டம் ஆகிய இடங்களில் இருப்பவர் –
திவ ஸ்ப்ருக்-என்று பாடம் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

577-சர்வத்ருக்-
மற்றுமுள்ள மகிமைகள் அனைத்தையும் காண்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

எல்லாவற்றையும் அறிந்தவரும் -வேதங்கள் புராணங்கள் -முதலியவற்றை விஸ்தரித்தவருமான வியாசர்  –
சர்வத்ருக் வியாச -என்று ஒரு திரு நாமம் -எல்லாமாகவும் கண்ணாகவும் எல்லா ஞானமாகவும் இருப்பவர் –
ருக்காதி வேதங்களை வகுத்தவர் -ருக்வேதம் -21 சாகைகள் -யஜூர் வேதம் -101 சாகைகள் –
வேதம் -1000 சாகைகள் -அதர்வண வேதம் 9 சாகைகள் –
இப்படியே புராணங்கள் முதலியவற்றையும் பிரித்த ப்ரஹ்மாவாகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்தையும் நேரடியாகக் காண்பவர் -எல்லோரைக் காட்டிலும் மேன்மை கொண்டவர் —
சர்வத்ருக் வியாச -என்று ஒரு திரு நாமம் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————

578-வியாச –
வேதங்களை நான்காக வகுத்த வியாசர்—ஸ்ரீ பராசர பட்டர் –

——————————————————————-

579-வாசஸ்பதி –
ஐந்தாம் வேதமாகிய மஹா பாரத வாக்குக்கு ஸ்வாமி—ஸ்ரீ பராசர பட்டர் –

வாசஸ்பதிர யோஜின-என்று ஒரு திரு நாமம் -வித்யைக்கு அதிபதியாகவும் கர்ப்பத்தில் பிறவாதவராகவும் இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –

அனைத்து வாக்கு மனம் ஆகியவற்றின் தேவதைகளுக்குத் தலைவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————–

580-அயோநிஜ-
சாரஸ்வதர் என்னும் அவதாரத்தில் பகவானுடைய வாக்கில் இருந்து பிறந்தமையால் கர்ப்பத்தில் பிறவாதவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

அடியவர் அல்லாதோரை சங்கிலி முதலியவைகளால் பிணைப்பவர்-கற்பத்தில் பிறவாதவர் -கம்பம் முதலியவற்றில் இருந்து
தோன்றியவர் -கர்ப்பத்தைக் காட்டிலும் வேறுபட்ட தம் நாபி கமலத்தில் இருந்து பிரமனை யுண்டாக்கியவர்—ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

581-த்ரிசாமா –
தம்மைப் பாடும் ப்ருஹத் -ரதந்த்ரம் -வாமதேவ்யம் -என்னும் மூன்று சாமான்களால் கானம் செய்யப் படுபவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

தேவ வ்ரதங்கள்என்றுபெயருள்ள மூன்று சாமங்களினால் துதிக்கப் படுபவர் –ஸ்ரீ சங்கரர் –

நிதன உத்கீத ப்ரதீஹார என்னும் மூன்று சாமங்களை யுடையவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

582-சாமக –
தம்மை அனுபவிக்கும் ஆனந்தத்தினால் தாமும் அந்த சாமங்களைப் பாடுபவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

சாம கானம் செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –

சாம வேதத்தால் அடையப் படுபவர் -சாம சப்தத்தினால் சொல்லப்படும் சரஸ்வதீ மற்றும்
வாயு தேவனிலும் அக்னியுள்ளும் இருப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————–

583-சாம –
தம்மைப் பாடுபவர்களின் பாவத்தை அழிப்பவர்—ஸ்ரீ பராசர பட்டர் –

வேதங்களில் சாமவேதம் ஆகிறேன் என்றபடி சாமவேதமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அனைத்துப் பூதங்களிலும் சமமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————-

584-நிர்வாணம் –
இப்படி பாவம் அற்றவர்களுக்கு பரம கதிக்குக் காரணம் ஆனவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

ஒரு துக்கமும் இல்லாத பரமானந்த ரூபமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

திருப்பி யடிக்க முடியாத பாணங்களை யுடையவர் -ப்ராக்ருதமான உடல் இல்லாதவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————-

585-பேஷஜம் –
சிகிச்சை யளிக்க முடியாத சம்சாரம் ஆகிய வியாதிக்கு மருந்தானவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

பிறவி என்னும் நோய்க்கு மருந்தாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பிறவி என்னும் நோய்க்கு மருந்தாக இருப்பவர் -நோய்களை வென்றவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————–

586-பிஷக் –
வியாதியின் காரணம் அறிந்த மருத்துவர்—ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சார ரோகத்தை விடுவிக்கும் பரவித்யையை ஸ்ரீ கீதையில் உபதேசித்தவர் –ஸ்ரீ சங்கரர் –

சம்சாரம் ஆகிய நோய்க்கு மருத்துவர் -சிகிச்சை செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————

587-சந்யாசக்ருத்-
பிறவி நோய் தீருவதற்குக் காரணமான சாத்விக தாகத்தைச் செய்விப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

மோஷத்திற்காக நான்காவதான சன்யாச ஆஸ்ரமத்தை ஏற்படுத்தியவர் –ஸ்ரீ சங்கரர் –

பலன்களில் ஆசையுடைய செயல்களை தியாகம் செய்விப்பவர் -நன்றாக தோஷங்களை விடுபவர் –
சம்ந்யாசக்ருத்-அசுரர்களை அழிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————

588-சம –
காமம் குரோதம் பயம் முதலியவற்றை அடக்கும் உபாயத்தை உபதேசிப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

சன்யாசிகளுக்கு சாந்தியை ஞான கரணம் என்று உபதேசிப்பவர் -எல்லா பிராணிகளையும் அடக்குபவர் –ஸ்ரீ சங்கரர் –

ஆனந்த ரூபர் -பிரம்மா முதலியவர்களின் சுகத்தை அறிபவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————————————————-

589-சாந்த –
தம் மகிமை பெருகியிருந்தும் அலையற்ற கடல் போலே அடங்கி இருப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

விஷய சுகங்களில் பற்றில்லாதவர் –ஸ்ரீ சங்கரர் –

அசுரர்கள் சுகத்திற்கு அழிவை உண்டாக்குபவர் -சுகத்திற்கு எல்லையானவர் –
தம்மைப் பற்றிய ஞானம் வரும் முன்னர் சுகம் கிட்டாமல் செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————-

590-நிஷ்டா –
மனத்தை அடக்கியவர் -நெஞ்சங்களில் நிலைத்து இருக்கும் திருமேனி யுடையவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

பிரளயத்தில் எல்லாப் பொருள்களும் ஒடுங்கும் இடமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

நிலையான தன்மை யுடையவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————-

591-சாந்தி –
சமாதி நிலையில் எல்லாவற்றையும் மறந்து தம்மையே அனுபவித்துக் கொண்டு இருக்கச் செய்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

அனைத்து அவித்யைகளும் நீங்கிய பிரம்மமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

உயர்ந்த சுகமானவர் -சுகத்தை யுடையவர் –

——————————————————

592-பராயணம் –
மோஷத்திற்குச் சிறந்த வழியான பக்தியைத் தாமே அளிப்பவர்—ஸ்ரீ பராசர பட்டர் –

சம்சாரத்திற்குத் திரும்பாமல் இருக்கும் உயர்ந்த இடமாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

முக்தர்களால் அடையப் பெறுபவர் -உயர்ந்த அடைக்கலமாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————–

593- ஸூ பாங்க –
யோகத்தின் அங்கங்களான யமம் முதல் சமாதி வரை நிறைவேற்றுபவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

அழகிய உருவத்தை தரிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மங்களமான அவயவங்கள் உள்ளவர் -மங்களத் திற்கான ஞானம் அளிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————-

594-சாந்தித –
பக்தியோகம் தலைக் கட்டியவர்களுக்கு சம்சாரத் துன்பங்களைக் களைந்து
தமது சாயுஜ்யமாகிய சாந்தியைக் கொடுப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

ஆசை வெறுப்பு முதலியவற்றில் இருந்து விடுவித்து சாந்தி அளிப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

மோஷத்தை அளிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————–

595- ஸ்ரஷ்டா –
மோஷத்தில் ஆசை உள்ளவர்களை விடுவித்து உலக வாழ்க்கையில் ஆசை உள்ளவர்களை வெகு காலமாக
அவரவர் புண்ய  பாபங்களுக்கு ஏற்பப் படைப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

ஆதியில் எல்லாவற்றையும் படைத்தவர் –ஸ்ரீ சங்கரர் –

உலகைப் படைப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

——————————–

596-குமுத –
கு எனப்படும் பிரகிருதி மண்டலத்தில் உள்ள சேதனர்களுக்கு போகங்களை அளித்து மகிழ்பவர் –
இப்படிப் படைக்கப் பட்ட பிரம்மா முதல் புல் வரை உள்ள ஏற்றத் தாழ்வுகளை யுடையதாய் -சப்தம் ஸ்பர்சம் முதலியவற்றை
அனுபவிக்கின்ற –சேதனர்களுக்கு போகங்களை அளித்து மகிழ்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

பூமியில் மகிழ்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பூமியில் மகிழ்பவர்-பூமியின் பாரத்தைத் தொலைத்து பூமிக்கு ஆனந்தத்தை அளிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

597-குவலேசய-
சம்சாரம் உள்ளவரை கு என்னும் பிரக்ருதியில்  பிறந்து உழன்று  -தம் உடல்களுக்கும் இந்த்ரியங்களுக்கும் தாமே தலைவர்கள் என்று
நினைத்து இருக்கும் சேதனர்களை அப்படியே நடத்தும் அந்தர்யாமியாக இருப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

ஜலத்தில் சயனித்து இருப்பவர் -இலந்தைப் பழத்தின் நடுவில் சயனித்து இருக்கும் தஷகனை தனக்கு விபூதியாக யுடையவர் -அல்லது
ஆதி சேஷனுடைய மடியில் சயனித்து இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

பதரிகாஸ்ரமத்தில் சயனித்து இருப்பவர் -அல்லது பூமியின் பலத்திற்காக ஸ்வேத த்வீபத்தில் சயனித்து இருப்பவர் –
பூமியில் பலத்தின் வடிவமான ஹனுமானால் அடையப் பெறுபவர் –பூமியின் மாற்றத்தில் ஆசை யுள்ளவர் –
பூமியையும் சக்தியையும் கையில் பெற்று இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————————-

598-கோஹித –
சம்சாரம் ஆகிய வித்து விளையும் உடமான ப்ரக்ருதிக்கு நன்மை செய்பவர்—ஸ்ரீ பராசர பட்டர் –

கோவர்த்தன மலையைத் தாங்கிப் பசுக்களைக் காத்தவர் -எல்லா பிராணிகளையும் அடக்குபவர் –
பூ பாரம் குறைக்க அவதரித்து அனுகூலித்தவர்–ஸ்ரீ சங்கரர் –

கண்ணுக்குள் ஜலத்தினுள் மறைந்து இருப்பவர்-பசுக்களுக்கும் வேத வாக்யங்களுக்கும் முறையே
ஸ்ரீ கிருஷ்ணனாகவும் வேத வியாசராகவும் நன்மை செய்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

———————————————————

599-கோபதி –
போக பூமியான ச்வர்க்கத்திற்கும் தலைவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

பூமிக்குத் தலைவர் –ஸ்ரீ சங்கரர் –

பசு -ஸ்வர்க்கம் -செல்வம் முதலியவற்றைக் காப்பவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –

————————————————————–

600-கோப்தா –
கர்மபலங்கள் அனைத்தையும் காப்பவர் —ஸ்ரீ பராசர பட்டர் –

தமது ஸ்வரூபத்தைத் தம் மாயையால் மறைப்பவர் -உலகைக் காப்பவர் –ஸ்ரீ சங்கரர் –

அனைவரையும் பாதுகாப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading