ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ் ஸ்ரீ தரஸ் சதா —
ஸ்ரீ யபதியாய் -விஷ்ணு வாஸூதேவ நாராயணாதி சப்த வாசியான ஸ்ரீ ப்ரஹ்மம் ஒன்றுமே
முமுஷூவுக்கு ஜ்ஞாதவ்யம் என்று சகல பிரமாண தாத்பர்யம் –
அந்த ப்ரஹ்மம் தான் விசேஷணம் என்றும் விசேஷ்யம் என்றும் த்விவிதமாய் இருக்கும் –
விசேஷணம் ஆகிறது விசேஷ்யததோடே பிரிந்து இராத தர்மம் –
விசேஷ்யம் ஆகிறது -ஸ்வ விசேஷணத்தோடே பிரிந்து இராத தர்மி –
விசேஷணமும்-போக உபகரணம் என்றும் லீலா உபாரணம் என்றும் த்விவிதமாய் இருக்கும்
போகமாகிறது இஷ்ட பல அனுபவம் –
லீலை யாகிறது -காலாந்தரத்திலே ஒரு பலம் இன்றிக்கே தாத்காலிக ரச ஹேதுவான வியாபாரம் –
போக உபகரணமும் சேதனம் என்றும் அசேதனம் என்றும் த்விவிதம் –
சேதனம் ஆகிறது ஜ்ஞான ஆஸ்ரய வஸ்து
அசேதனம் ஆகிறது ஜ்ஞான ஸூந்ய வஸ்து –
அதில் சேதன ஜாதி நித்ய வர்க்கம் என்றும் முக்த வர்க்கம் என்றும் த்வ்விதம் –
நித்ய வர்க்கம் ஆகிறது
ஒரு நாளும் சம்சாரத்தை ஸ்பர்சியாதே-பகவன் நித்ய கைங்கர்ய நிரதரசராய் இருந்துள்ள –
அநந்த-வைனதேய விஸ்வக்சே நாதி ஸூரி சங்கம் –
முக்த வர்க்கம் ஆகிறது –
பகவத் கிருபையாலே அநாதி யான அசித் சம்பந்தத்தில் நின்றும் விடப்பட்டு -நித்ய வர்க்கத்தோடு கலந்து –
அது முதலாக யாவதாத்மபாவி பகவத் கைங்கர்ய பரராய் இருக்குமவர்கள் –
அசேதனம் ஆகிறது ஸூத்த சத்வாத்மகமாய் -தன்னோடு சம்பந்தித்த சேதனருக்கு ஸ்வரூப பிரகாசகமாய் –
நித்யமாய் -ஸ்வயம் பிரகாசகமாய்-கர்ம நிரபேஷமான பகவத் இச்சையாலே -திவ்ய விக்ரஹங்களாய் –
திவ்ய ஆபரணங்களாய் -திவ்ய ஆயுதங்களாய் -சத்ர சாமராதி அபரிச்சின்னங்களாய்-
திவ்ய நகரங்களாய்-திவ்ய ஜன பதங்களாய் -அபரிச்சின்னமாய் –
நித்யருக்கும் முக்தருக்கும் பகவானுக்கும் கைங்கர்ய போக பரிகரமாய் இருக்கும் –
இனி -லீலா உபகரணமும் -சேதனம் என்றும் அசேதனம் என்றும் த்விவிதமாயிருக்கும் –
அதிலே சேதன ஜாதியும் சம்சாரிகள் என்றும் முமுஷூக்கள் என்றும் த்விவிதமாய் இருக்கும்
சம்சாரிகள் ஆகிறார் –
அநாதி யான அசித் சம்பந்தத்தால் திரோ ஹிதங்களான ஸ்வரூப ஸ்வ பாவங்களை உடையராய் -அதடியாக
அந்யதா ஜ்ஞான விபரீத ஜ்ஞானங்களை யுடையராய் –
தத் கார்யங்களான ராகத்வேஷாதி ஜன்யங்களான புண்ய பா பரூப நாநா வித கர்மங்களை யுடையராய்-
அது மூலமாக தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர்வித நாநா சரீரங்க ளிலே நிரந்தரமாக பிரவேசியா நின்று கொண்டு
அந்த சரீரங்களிலும் சரீர அநுபந்திகளில் யுண்டான அஹங்கார மமகாரங்களாலே வருகிற
துக்கங்களிலே ஸூக புத்தி பண்ணா நின்று கொண்டு சப்தாதி விஷய பிரவணராய்
தாப த்ரய தஹ்யமானராய் நிரந்தர துக்க சாகர நிமக்நராய் இருக்குமவர்கள் –
முமுஷூக்களும் ஆத்ம ப்ராப்தி காமர் என்றும் பகவத் ப்ராப்தி காமர் என்றும் த்விவிதராய் இருப்பார்கள் –
ஆத்மப்ராப்தி காமராகிறார் –
ராஜபதம் அளவாக யுடைத்தான ஐஹிகை ஐஸ்வர் யமும்
ப்ரஹ்ம பதம் அளவாக யுடைத்தான ஆமுஷ்மிக ஐஸ்வர் யமும்
அஸ்திரமாய் -துக்க மிஸ்ரம் ஆஹையாலே விவேகித்து –
ஆத்மா ப்ரக்ருதே பரனாய்-நித்யனாய் ஜ்ஞானானந்த ஸ்வரூபனாய் இருக்கையாலே
ஆத்ம போகமே புருஷார்த்தம் என்று தத் ப்ராப்திக்கு யத்னம் பண்ணுவார்கள் –
இவர்கள் தத் அதிகமான பகவத் பிராப்தி ஸூகத்தை விமர்சியாதவர்கள் –
பகவத் பிராப்தி காமராகிறார் –
ப்ரக்ருதே பரனாய் -நித்யனாய் -நிர்மலனாய்-ஜ்ஞானனந்த மயனுமாய்-அபரிச்சின்ன ஜ்ஞான குண கனுமாய்-
பகவத் அனந்யார்ஹ சேஷமாகையாலே அநந்ய போக்யமான ஆத்மாவுக்கு
ஸ்வ அனுபவம் அணுவாய் ஸ்வ தந்த்ரம் ஆகையாலே ஸ்வரூப விருத்தம் என்று விஷம் போலே அநாதரித்து
நித்யமாய் நிர்மலமாய் அபரிச்சின்ன ஜ்ஞானந்த மயமான ஸ்வரூபத்தை யுடையனாய்
சர்வ சேஷியாய்-சர்வ சரண்யனாய்-சர்வ ப்ராப்யனான –
ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தை பரம புருஷார்த்தமாக நிச்சயித்து
ஒரு தேச விசேஷத்திலும் தேக விசேஷத்திலும் அது சித்திப்பது ஆகையாலே தத் ப்ராப்திக்கு விரோதியான
தேச சம்பந்தமும் தேக சம்பந்தமும் விட வேணும் என்று ஆசைப்படுமவர்கள் –
இவர்களும் உபாசன நிஷ்டர் என்றும் நயாச நிஷ்டர் என்று த்விவிதம் –
உபாசன நிஷ்டர் ஆகிறார் –
பல சங்க பரித்யாக பூர்வகமாக யஜ்ஞ தாநாதி கர்மங்களை அனுஷ்டிக்க –
விபரீத ஜ்ஞான ஹேதுவான ரஜஸ் தமஸ் ஸூக்கள் நன்றாக நசித்து
யதாஜ்ஞான ஹேதுவான சத்வம் பிரகாசித்து -அதனாலே பகவத் ஜ்ஞானம் யுண்டாய் -அது சாஷாத்கார சமானமாய் –
அநவரத பாவனை யுண்டாய் பக்தி ரூபா பந்நமாய்-
சம்ச்லேஷ விச்லேஷங்களிலே ஸூக துக்கனாகப் பண்ணுவதாய் –
சாஸ்த்ரத்திலே மோஷ சாதநதயா விஹிதையான பக்தியை உபாயமாக அவலம்பித்தவர்கள் –
ந்யாச நிஷ்டராகிறார் –
உபாசனமும் அநேக ஜன்ம சாத்யம் ஆகையாலே துஷ்கரம் என்றும் –
தேச கால அதிகாரி ப்ரப்ருதயநேக நியம அபேஷமாகையாலே-சாபாயம் என்றும்
பிராரப்த கரமவசான பலம் ஆகையாலே சவிளம்பம் என்றும் –
அசேதனம் ஆகையாலே அசமர்த்தம் என்றும்
ஸ்வ யத்ன சாத்யம் ஆகையாலே ஸ்வரூப விருத்தம் என்றும்
பின்னையும் சொல்லப் படுகிற உபாய ஆபாசங்கள் எல்லா வற்றையும் சாங்கமாகவும் சவாசனமாகவும் விட்டு
அந்த உபாயங்கள் போல் அன்றிக்கே
நிவ்ருத்த சாத்யம் ஆகையாலும்
சக்ருத அனுஷ்டேயம் ஆகையாலும்
ஸூ கரமாயும் –
ஒரு நியமும் வேண்டி இராமையாலே நிரபாயமாயும்
தேகாவசான பலிதமாகையாலே சீகர பலப்ரதமாயும்
பரம சேதனம் ஆகையாலே பல பிரதானத்தில் ஸ்வயம் சமர்த்தாயும் –
நிருபாதிகம் ஆகையாலே ஸ்வரூப அனுரூபமான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளையே விலஷண உபாயமாக நிச்சயித்து –
அதிலே ந்யச்த பரராய் இருக்குமவர்கள் –
இந்த ந்யாச நிஷ்டரும் ஸ்வயம் ந்யச்த பரர் என்றும் -பர ந்யச்த பரர் என்றும் த்விவிதம்
ஸ்வயம் ந்யச்த பரர் ஆகிறார் –
சதாச்சார்யா கிருபையாலே லப்த ஜ்ஞானராய் -ஸ்வ தோஷத்தை அனுசந்தித்து –
ஹித பரனான சர்வேஸ்வரன் ஸ்ரீ பாதத்தை தாங்களே ஆஸ்ரயிக்க வஞ்சி –
சர்வேஸ்வரனுக்கு பத்னியாய் -வல்லபையாய் -சர்வாத்மாக்களுக்கும் ஸ்வாமிநியாய -மாதாவாய்
அவனோடு நித்ய சம்யுக்தையான பிராட்டி ப்ரசாதத்தாலே பயம் கெட்டு
வாத்சல்யாதி சமஸ்த கல்யாண குணகண விசிஷ்டனான ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளை
தம்முடைய அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் உபாயமாக ஆஸ்ரயிக்குமவர்கள் –
பரந்யச்த பரராகிறார் –
தங்களுக்காக ஆச்சார்யனாலே அனுஷ்டிக்கப் பட்ட எதாத்ரு சன்யாசத்தை யுடையவர்கள் –
இவரும்-ச நிபந்தன பர ந்யச்த பரர் என்றும் நிர் நிபந்தன பர ந்யச்த பரர் என்றும் த்விதமாய் இருப்பர்கள்-
ச நிபந்தன பர ந்யச்த பரர் ஆகிறார் –
தன்னுடைய அனுவர்த்தனாதி களாலே மந்திர பிரதனான ஆச்சார்யனாலே அனுஷ்டிக்கப் பட்ட பர ந்யாசத்தை யுடையவர்கள் –
நிர் நிபந்த பர ந்யச்த பரர் ஆகிறார் –
தனக்கு பிராப்தமான புருஷார்த்தத்தின் யுடைய உகத வைலஷண்யத்தை அனுசந்தித்து –
அது இவர்களுக்கு இல்லாத மாதரம் அன்றிக்கே -இவர்கள் படுகிற துர்க்கதியைக் காணப் பொறாத கேவல கிருபையாலே –
ப்ரீதனான ஆச்சார்யனாலே அனுஷ்டிக்கப் பட்ட பர நியசத்தை யுடையவர்கள் –
இவர்களில் -சம்சாரிகள் -ஈஸ்வரனுடைய சிஷைக்கு விஷயமானவர்கள் –
கேவலர் -உபேஷைக்கு விஷயம் ஆனவர்கள் –
உபாசகர் -அனுக்ரஹத்துக்கு விஷயம் ஆனவர்கள் –
பிரபன்னர் கிருபைக்கு விஷயம் ஆனவர்கள் –
பிரபன்னர் எல்லாருக்கும் தேக அவசானத்திலே பலமே ஒக்கும்
உத்தர உத்தர அதிகாரிகள் பாக்யாதிகாரர்கள் –
இவர்கள் ஆர்த்த அதிகாரிகள் என்றும் த்ருப்த அதிகாரிகள் என்றும் த்விவிதம் –
ஆர்த்த அதிகாரிகள் ஆகிறார் –
பகவத் பிராப்யதுக்கு விரோதியான வர்த்தமான சரீரத்தில் ஸ்திதியும் அக்னி ஜ்வாலா பஞ்சரத்தில் இருப்புப் போலே
அத்யந்த துச் சஹமாய் தோற்றி தந் நிவ்ருத்திக்கு த்வரிக்குமவர்கள் –
த்ருப்தராகிறார் –
பகவத் ப்ராப்திக்கு விரோதியான தேஹாந்திர சம்பந்தமும் -ஸ்வர்க்க நரகாதி பிரவேசத்தில் விரக்தியும் பீதியும் யுண்டாய்
தந் நிவ்ருத்திக்கு பகவானை ஆஸ்ரயித்து வர்த்தமான சரீர வியோகத்துக்கு த்வரியாதவர்கள் –
இவரும் ஸ்வ தேக சம்பந்த த்ருப்தர் என்றும் -ஸ்வ தேஹி சம்பந்த த்ருப்தர் என்றும் த்விவிதமாய் இருப்பர்கள் –
ஸ்வ தேக சம்பந்த த்ருப்தராகிறார் –
சரீர அவசா நத்திலே போகம் எத்தனை யேனும் விலஷணம் ஆனாலும் ருசி வாசனைகளால் இத்தை விட த்வ்ரியாதவர்கள் –
ஸ்வ தேஹி த்ருப்தராகிறார் தனக்கும் அவனுக்கும் யுண்டான நிருபாதிக சரீர சம்பந்தத்தை அனுசந்தித்து
அவனுடைய கார்யம் என்று த்வரியாதே ஐஹிக போக தாஸ்யத்தில் மண்டி இருக்குமவர்கள் –
ஆர்த்தர் ஆகிறார் –
பகவத் பிராப்திக்கு விரோதியான வர்த்தமான சரீரத்தில் ஸ்திதியும் அக்நிஜ்வாலா பஞ்சரத்தில் இருப்பு போலே
அத்யந்த துஸ் சஹமாய்த் தோன்றி -தந் நிவ்ருத்திக்கு த்வரிக்குமவர்கள் –
இவரும் பிரதிகூல போகார்த்தர் என்றும் அனுகூல போகார்த்தர் என்றும் த்விவிதம் –
பிரதிகூல போகார்த்தர் ஆகிறார் –
ப்ரத்யஷ சித்தமான தாப த்ரய துக்கம் அதி துஸ் சஹமாய்த் தோன்றி -அதுக்கு ஹேதுவான தேக சம்பந்தத்தையும் தேச சம்பந்தத்தையும்
தேசிகருடைய சஹவாசத்தையும் பொறாதே-சாஸ்திர த்ருஷ்டிகளாலும் ஆச்சார்யர்கள் யுடைய வசனங்களாலும் அறியப்படுமதாய்
அந்த துக்க கந்தம் இன்றிக்கே நிரதிசயமான பகவத் ப்ராப்தி ரூப ஸூகத்துக்கு த்வரைப் படுமவர்கள் –
அனுகூல போகார்த்தர் ஆகிறார் –
நிரந்தரமான த்வய அனுசந்தானத்தாலே தனக்கு ப்ராப்யமான பரம பதத்தில் நித்ய வாசத்தின் யுடைய
வை லஷண்யம் விசதமாக பிரகாசிக்க
அது இல்லாத ஷண காலமும் கல்ப சஹஸ்ரமாய்த் தோன்றும்படி ஆர்த்தராய் -ஏதத் ப்ராப்திக்கு த்வரிக்கிறார்கள்-
இந்த பிரபன்ன விஷயமான உபாயக்ருத்யம் -அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் என்று த்விவிதமாய் இருக்கும் –
அநிஷ்டம் தான் -பூர்வாகம் என்றும் உத்தாராகம் என்றும் த்விவிதமாய் இருக்கும்
அகமாகிறது –
புண்ய பாப ரூபமான கர்மம் -ஸ்வர்க்காதி சாதனமான புண்யமும் -பாபம் போலே பேற்றுக்கு ப்ரதிபந்தகம் ஆகையாலே அகம் எனப்பட்டது –
இதிலே பூர்வாகம் -ஆகிறது –
ஆஸ்ரயணத்துக்கு முன்பு அநாதி காலம் பண்ணப் பட்ட கர்மம் –
இதுவும் சஞ்சிதம் என்றும் பிராரப்தம் என்றும் த்விவிதமாய் இருக்கும்
சஞ்சிதம் ஆகிறது –
பல பிரதானத்துக்கு உத்யோகியாமல் இருக்கிறது
பிராரப்தம் ஆகிறது
பல பிரதானத்துக்கு உத்யோக்கிகிறது
ப்ராரப்தமும் வர்த்தமான சரீராரப்தம் என்றும் சரீராந்த்ராரப்தம் என்றும் த்விவிதம்
உத்தராகம் ஆகிறது –
ஆஸ்ரயணீயத்துக்கு அனந்தரம் தேஹாவசான பர்யந்தம் வாசனா பலத்தால் செய்யப்பட கர்மம்
இதுவும் ஜ்ஞானக்ருதம் என்றும் அஜ்ஞ்ஞானக்ருதம் என்றும் த்விவிதமாய் இருக்கும் –
இதுவும் சாநுதாபம் என்றும் நிர நுதாபம் என்றும் ஓர் ஒன்றே த்விவிதமாய் இருக்கும் –
இப்படிப்பட்ட பேதங்களை யுடைய அநிஷ்டத்தை இவனிடத்தில் ப்ரீதி அதிசயத்தால் உபாய பூதனான
ஈஸ்வரன் போக்கும்படி என் என்னில்
வர்த்தமான சரீராரப்தத்தை ஒழித்து -பூர்வாகத்தில் புண்ய அம்சத்தை இவனை ச்நேஹித்தவர்களை அனுபவிப்பிக்கும் –
பாப அம்சத்தை த்வேஷித்தவர்கள் அனுபவிப்பிக்கும் –சரீராப்தத்தை சரீரத்தோடு போக்கும்
இவனுக்கு எப்போதும் அனுகூல போகார்த்தி யுண்டாம்
அந்த ஆர்த்தி ரூபமான மகா துக்கத்தினாலும் சரீர அனுபாவ்யத்தை எல்லாம் அப்போதே போக்கும்
உத்தராகத்தில் அஜ்ஞ்ஞான க்ருத்யமும் அவனுடைய வாத்சல்யத்தினாலே திரு உள்ளத்துக்கு விஷயம் இன்றியே போம் –
சநுதாபமான ஜ்ஞான க்ருத்யமும் அவனுடைய ஷமைக்கு விஷயமாம் —
அது பகவத் விஷயமானால் பகவத் விஷயமான அனுதாபத்தாலே போம் –
பாகவத விஷயமானால் பாகவத விஷயத்தில் அனுதாபத்திலே போம் –
நிரநுதாப ஜ்ஞானக்ருத்யமும் சரீரானுபாவ்ய்ம் போலே அனுபவித்துப் போக்குவன்
சாமான்ய நிஷித்த அனுஷ்டானமும் பகவன் நிக்ரஹ ஹேதுவாகையாலும் -ஷிஷ்ட ஜன கர்ஹிதம் ஆகையாலும் க்ரூரம் –
பகவத் விஷயமான அனுதாப ஸூ ந்யமும் க்ரூர தரம் –
பாகவத விஷயமான அனுதாப ஸூ ந்யமுமும் க்ரூர தமம் –
ஆகையாலே ப்ரபன்னன் பகவத் பாகவத ப்ரசாதத்துக்கு ஒழிய ஷமைக்கு விஷயமாகை அனுரூபம் அல்லாமையாலே
சாவதாநத்தோடே நடக்க வேணும் –
ஆகையால் ஜ்ஞான க்ருத்யமான சாநுதாபமும் உதிக்கைக்கு அவகாசம் இல்லாமையாலே அனுதாப ஸூந்யமும் தூரதோ நிரச்தம் –
ஆனாலும் ஈத்ருச கடின பிரகிருதிகள் யுண்டாக்குவாரோ என்று சாஸ்திரம் சொல்லிற்று ஆயிற்று –
இப்படி சர்வமான கர்மங்களும் நிவர்த்யங்கள் ஆகையாலே தத் கார்யமான தேக சம்பந்தம் இல்லை –
தேக சம்பந்தம் இல்லாமையாலே தத் கார்யமான அவித்யை இல்லை –
இம்மூன்றும் இல்லாமையாலே தத் தத் வாசனா ருசிகள் இல்லை –
ஆகையாலே பிரபன்னனுக்கு சரீர அவசானத்திலே தேச கால அதிகாரி நியமங்களும் உத்தர கிரியைகளும் உபாயம் அன்று –
ஆனாலும் உத்தர கிரியைகளும் ஆன்ரு சம்ச்யத்தாலும் பகவத் ப்ரீதி ஜனகங்கள் ஆகையாலும் செய்யப்படும் அத்தனை –
இனி இஷ்ட பிராப்தியும் ஐஹிகம் என்றும் ஆமுஷ்மிகம் என்றும் த்விவிதம் –
ஐ ஹிகம் பகவத் கைங்கர்யம் என்றும் பாகவத கைங்கர்யம் என்றும் த்விவிதம்
கைங்கர்யம் ஆகிறது -இஷ்டம் செய்கை –
அது தான் சாமான்ய விஹித அனுஷ்டானமும் பகவத் சந்தோஷ ஹேது வாகையாலே -கைங்கர்யம் என்னக் கடவது இறே-
பகவானுக்கு இஷ்டம் சாஸ்திர முகத்தாலே அறிய வேணும் –பாகவதர்களுக்கு இஷ்டம் அவர்கள் நினைவிலே அறிய வேணும்
ஆக கைங்கர்யமும் மானசம் என்றும் காயிகம் என்றும் த்விவிதம்
மானசம் ஆகிறது அந்ய பரமாகாமல் தத் பரமாக்குகை —
அதுவும் செய்த உபகாரத்தை ஸ்மரிக்கையும்-செய்யக் கடவ உபகாரத்தை அபேஷிக்கையும் என்று த்விவிதம் –
இதில் ஈஸ்வரன் செய்த உபகாரம் ஆகிறது –
சதாச்சார்யனை ஆஸ்ரயிபிக்கையும்-ததர்த்தமான அதிகாரி சம்பத்தும்
செய்யத் தக்க உபகாரம் ஆகிறது -பரம பதத்தில் நித்ய கைங்கர்ய பிராப்தியும் ததர்த்தமான அதிகாரி சம்பத்தும் –
ஆமுஷ்மிகமான -கைங்கர்யமும் இதுவே -அந்த கைங்கர்யமும் வாசிகம் என்றும் காயிகம் என்றும் த்விவிதம்
வாசிகம் ஆகிறது-ஸ்துதி நாம சங்கீர்த்த நாதிகள் –
காயிகம் ஆகிறது -சம்மார்ஜன மாலா பந்த நாதிகள் –
பாகவத கைங்கர்யமும் ஆச்சார்ய கைங்கர்யமும் -தத்துல்யரான பாகவத கைங்கர்யம் என்று த்விவிதம் –
ஆச்சார்யரும் மந்திர ப்ரதர் என்றும் மந்த்ரார்த்த ப்ரதர் என்றும் த்விவிதம் –
இவர்கள் பக்கல் செய்யும் பிரதிபத்தி சமமாய் இருக்கும் –
பகவானுடைய திருவடிகள் இரண்டிலும் வைஷம்யம் யுண்டாகில் இறே ஆச்சார்ய விஷயத்தில் வைஷம்யம் யுண்டாவது-
இப்படிப்பட்ட ஆச்சார்யர்கள் செய்த உபகாரம் ஆகிறது
அனாதி காலம் விமுகனான சேதனனை பகவத் விஷயத்தில் அபிமுகனாகச் செய்கையும்
மந்த்ரார்த்த முகத்தாலே அஜ்ஞ்ஞாநத்தை நிரசித்து ஜ்ஞானத்தை யுண்டாக்கி
தத் அனுரூபமான வ்ருத்தியிலே நியமித்து -ததீய அந்தர்பாவத்தை உண்டாக்குகையும் -கைங்கர்யம் கொள்ளுகைய்ம்
இனி பாகவதர் செய்த உபகாரம் ஆவது –
குணலேசம் இன்றிக்கே தோஷங்க ளிலே பூர்ணனான தன்னை -ஆச்சார்ய சம்பந்தத்தையே பார்த்து ஸ்வரூப அனுரூபமான போகத்திலே
கூட்டிக் கொண்டு கைங்கர்யத்துக்கு விஷயம் ஆக்குகை-
இனி லீலா உபகரணமான அசேதனமும் -பிரகிருதி என்றும் காலம் என்றும் த்விவிதம் –
பிரகிருதி யாகிறது -சத்வ ரஜஸ் தமோ குணாத்மகமாய்-நித்தியமாய் -தன்னோடு சம்பந்தித்த சேதனருக்கு
தத் தத் கர்ம அனுகுணமான தேக இந்த்ரியாதி ரூபமாய் -அநேக விகாரங்களை யுடைத்தானதாய் -சப்தாதி விஷய ப்ராவண்யத்தையும்
பகவத் விஷய வைமுக்யத்தையும் பிறப்பிக்குமதாய் இருக்கும் அசித் விசேஷம்
காலம் ஆகிறது நித்யமாய் நிமேஷ காஷ்டாதி ரூபமான பஹூ விகாரங்களை உடைத்தாய்
சேதனருடைய கர்மத்துக்கும் தத் அனுகுண ரூபமான போகத்துக்கும் ஹேதுவாய் இருக்கும் –
இனி லீலா பரிகரமும் போக பரிகரமுமான சேதன அசேதன வர்க்கம் ஸ்வ விசேஷ்யமான ப்ரஹ்மத்துக்கு
வ்யாப்யமாய் -தார்யமாய் -சரீரமாய் -சேஷமாய் இருக்கும் –
இனி விசேஷ்யமும்
அகில ஹேய ப்ரத்ய நீகமாய்
கல்யாணைகதானமாய்
சதைக ரசமாய்
விபுவாய்
நித்யமாய்
ஜ்ஞானானந்தங்களை ஸ்வரூபமாக யுடையதுமாய்
ஜ்ஞான சக்த்யாதி அநந்த குண கண பூஷிதமாய்
சர்வ விசேஷமான சகல சேதன அசேதனங்களுக்கும் வியாபகமாய் தாரகமாய் நியாமகமாய் சரீரியாய் சேஷியாய்
விலஷண விக்ரஹ யுக்தமாய்
ஸ்ரீ லஷ்மி பூமி நீளா சமேதமாய்
நித்ய முக்த அனுபாவ்யமாய்
சகல ஜகத் சிருஷ்டி ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய்
சர்வ லோக சரண்யமாய்
சகல பல பிரதமாய்
ப்ரஹ்ம ருத்ராதி தேவதைகளுக்கும் -சனக சனந்த நாதி யோகிகளுக்கும் அவாங் மனச கோசரமாய்
ஸ்ருதி ஏக சமதிகம்யமாய்
சமாஸ்ரிதைக ஸூ லபமாய்
தத் உஜ்ஜீவன ஏக பிரயோஜனமாய்
பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சா ரூபங்களை -யுடைத்தாய் இருக்கும்
இப்படிப்பட்ட சமஸ்த விசேஷண விசிஷ்டமான ப்ரஹ்மம் ஒன்றையும் அறிந்த அதிகாரி
வேறு ஒன்றையும் அறிய வேண்டாத க்ருதக்ருத்யன் –
இந்த அதிகாரியே ஜ்ஞானாதிகரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் -நித்ய முக்தர்களுக்கும் –
ஆச்சார்யனுக்கும்-பிராட்டிக்கும் -ஸ்ரீ யபதிக்கும் அத்யந்த ப்ரிய தமன் –
—————————————————————————–
உபகார ஸ்ம்ருதி –
அந்தர்யாமியாய் நின்று சத்தையை நோக்கினீர்-
அழுந்திக் கிடந்த காலங்களிலே கரணங்களைத் தந்து அருளினீர் –
அக் கரண்ங்களைக் கொண்டு வ்யபிசரியாதபடி ஆச்சார்யனை இடுவித்து அங்கீ கரிப்பித்தீர் –
ரூப நாமங்களை உகந்து அருளினீர் –
பர நிந்தையும் பர ஸ்தோத்ரமுமே யாத்ரையாப் போந்த நாளிலே த்வயத்தை உச்சரிப்பித்தீர் –
தேவரீர் செய்து அருளின ஏற்றம் எல்லாம் கீழ்ப்பட்டு பிரகிருதி மேலிடப் போரா நின்றது
சரீரம்ப கங்களான கர்மங்களையும் பொறுத்து -அதிகாரி சம்பத்தியையும் பிறப்பித்து
அக்கரைப் படுத்தி அருளீர் -தேவரீர் திரு உள்ளம் ஆகில்
என்று ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அனுசந்தானம் –
அநந்ய பிரயோஜனன் அல்லாமையாலே உகப்புக்கு பாத்திரன் அல்லேன்
ஆர்த்த ப்ரபன்னன் அல்லாமையாலே இரக்கத்துக்குப் பாத்திரன் அல்லேன்
பிரமாதிகம் அல்லாமையாலே ஷமைக்குப் பாத்திரன் அல்லேன்
உபகாரகன் என்று உகந்தீர்
அனநயன் என்று இரங்கினீர்
அவர்ஜநீயன் என்று பொறுத்தீர் -என்று பெரிய வாச்சான் பிள்ளை பணிக்கும் –
——————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply