ராமஸ்ய து வச ஸ்ருதவா ஸூக்ரீவ ப்லவகேஸ்வர
பிரத்யபாஷத காகுத்ஸ்தம் சௌஹார்த்தே நாபி சோதித–18-35-
ப்லவகேஸ்வர -வானரர் தலைவரான –
ஸூக்ரீவ து -ஸூ க்ரீவ மகா ராஜரும் –
ராமஸ்ய து வச-ஸ்ரீ ராம பிரானுடைய வார்த்தையை
ஸ்ருதவா -கேட்டு
சௌஹார்த்தேந-ஸ்ரீ ராம பிரானுடைய நட்பினாலே
அபி சோதித-ஏவப் பட்டவராய்
பிரத்யபாஷத காகுத்ஸ்தம் -ஸ்ரீ ராம பிரானைக் குறித்துப் பதில் சொன்னார்-
–ராமஸ்ய து வச ஸ்ருதவா –
தம்முடைய வடிவு கண்டார்க்கு உண்டு அறுக்க ஒண்ணாதால் போலே
கேட்ட ஆ ஸ்ரீ த வர்க்கத்துக்கு உண்டு அறுக்க ஒண்ணாத வார்த்தையைக் கேட்டு –
து –
ப்ரேமாந்தராய் பெருமாளோடு விரோதித்த நிலை குலைந்து பெருமாளோடு ஏக கண்டரான வேறுபாடு –
ஸூக்ரீவ ப்லவகேஸ்வர –
இவருடைய பரிகரமும் முன்பு நின்ற நிலை குலைந்து இவரைப் போலே ஏக கண்டார்கள் ஆனார்கள் என்று கருத்து –
சௌஹார்த்தே நாபி சோதித—
தம் பக்கல் பெருமாளுக்கு யுண்டான சௌஹார்த்தத்தாலே ப்ரேரிதராய் சொன்னார்
சௌ ஹார்த்தமாவது -தத்தம் அஸ்ய அபயம் மயா என்று ஸ்வாமி களான தாம் செய்ததை நமக்குப் பின் செல்ல வேண்டி இருக்க
நம்மை பஹூ முகமாகத் தெளிவித்து நாம் இசைந்தால் ச்வீ கரிக்கக் கடவோம் என்னும் நீர்மை –
பிரத்யபாஷத காகுத்ஸ்தம் –
இந்நீர்மைக்கு அடியான குடிப் பிறப்பை யுடையவரை ஒரு வார்த்தை சொன்னார்
தம்முடைய சௌ ஹார்த்தம் பிரேரகமாக ஒண்ணாது இ ரே -அது கலக்கத்துக்கு ஹேதுவாகையாலே-
——————————————————————————————————————————————————————————
கிமத்ர சித்ரம் தர்மஜ்ஞ லோகநாத ஸூகாவஹ
யத் த்வமார்யம் ப்ரபாஷேதா சத்வவான் சத்பதே ஸ்தித –18-36-
தர்மஜ்ஞ லோகநாத ஸூகாவஹ -அறம் அறிந்தவரே –உலகின் தலைவரே -இன்பம் அளிப்பவரே –
சத்வவான்-நல் நெஞ்சை யுடையீராய் –
சத்பதே ஸ்தித-அற வழியிலே நடப்பவரான தேவரீர் –
யத் த்வமார்யம் ப்ரபாஷேதா -ஆர்யம் ப்ரபாஷேதோ யத் -நல் வார்த்தை பேசினது யாதொன்று உண்டோ அது –
கிமத்ர சித்ர-கிம் சித்ரம் அத்ர-தேவரீர் விஷயத்தில் ஆச்சரியமோ-
அவதாரிகை –
லோகத்தில் ரஷக அபேஷை யுடையாருடைய இவ்வார்த்தையின் நிழலிலே ஒதுங்கலாம்படி வார்த்தை சொன்னீர்
என்னுமிது தேவர்க்கு ஒரு ஏற்றமோ -என்கிறார் –
கிமத்ர சித்ரம் –
உம்மை ஒழிந்தார் இவ்வார்த்தை சொன்னார்கள் ஆகில் அன்றோ ஆச்சர்யம் ஆவது –
தேவரீர் அருளிச் செய்தீர் என்றால் ஆச்சர்யமோ
ஆச்சர்யம் அன்று என்னும் இடத்துக்கு ஹேதுக்கள் சொல்லுகிறது மேல்
தர்மஜ்ஞ –
தர்மங்களில் வெளிறு கழிந்த தர்மம் சரணாகத ரஷணம் என்று அறியுமவர் அல்லீரோ –
லோகநாத –
அவ்வளவேயோ -சிறியதைப் பெரியது நலியாதபடி நோக்காது ஒழிந்தால் குறையாம் படியான சர்வ நிர்வாஹகத்வத்தை யுடையீர் அல்லீரோ –
ஸூகாவஹ –
உம்முடைய நிர்வாஹகத்வம் துக்க நிவர்த்தகம் ஆனவளவேயோ -ஸூ க ஹேதுவுமாக வன்றோ இருப்பது –
சத்வவான்-
த்வயி கிஞ்சித் சமாபன்னே -41-4- என்று போந்த நீர்
நான் வத்யதாம் -17-27- என்ன
ந த்யஜேயம் -18-3- என்று நெஞ்சில் தூய்மை யுடையீர் அல்லீரோ –
சத்பதே ஸ்தித —
அபிமதம் ஆனவர்களையும் பஹிஷ்கரித்துச் செய்ய வேண்டும்படி சரணாகத ரஷணத்தில் நிஷ்டர் ஆனவர் அல்லீரோ
யத் த்
சர்வ லோகமும் உம்மை ஒழியவே உம்முடைய வார்த்தையின் நிழலிலே ஒதுங்கலாம் படி நீர் சொன்னீர் என்றது யாதொன்று
அதாகிறது –
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-18-3- என்றும்
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம -18-33–என்றும் சொன்ன வார்த்தையை
இஸ் ஸ்வ பாவங்களை யுடைய தேவரீர் அருளிச் செய்தீர் என்று இது ஒரு ஆச்சர்யமோ
உம்மை ஒழிந்தார் ஒருவர் சொல்லில் அன்றோ ஆச்சர்யம் ஆவது –
——————————————————————————————————————————————————————————–
மம சாப்யந்தராத் மாயம் ஸூத்தம் வேத்தி விபீஷணம்
அநுமாநாச்ச பாவச்ச சர்வத ஸூ பரீஷித –18-37-
மம சாப்யந்தராத் மாயம் -மம அயம் அந்தராத்மா அபி -என்னுடைய இந்த உள்ளமும்
ஸூத்தம் வேத்தி விபீஷணம்-விபீஷணனை தோஷம் அற்றவனாக அறிகிறது
அநுமாநாச்ச பாவச்ச சர்வத ஸூ பரீஷித –அனுமானத்திலும் -நினைவினாலும் -எல்லா விதத்திலும் இவன் நன்கு ஆராயப் பட்டான் –
அவதாரிகை –
நம்முடைய வார்த்தையை நீர் கொண்டாடின இத்தால் பிரயோஜனம் என்-
உம்முடைய நெஞ்சு தெளிந்தால் அன்றோ இவனை ச்வீ கரிக்கலாவது -என்ன அதுக்கும் குறை இல்லை -என்கிறார்-
மம சாப்யந்தராத் மாயம் ஸூத்தம் வேத்தி விபீஷணம்
அநுமாநாச்ச –
முக விகாராசாதி லிங்கங்களாலும்
பாவச்ச –
அவனுடைய வார்த்தை த்வநிகளாலே பிரகாசிக்கப் பட்ட நெஞ்சில் மேன்மையாலும்
ச -சப்தத்தால்
நான் வத்யதாம் -17-27-என்ற போதொடு
நீர் ந த்யஜேயம் -18-3- என்ற போதொடு
திருவடி -வித்யதே த்வச்ய சங்க்ரஹ -17-65 -என்ற போதொடு
வாசி அற ஏக ரூபனே இருந்தபடியாலும்
சர்வத –
இப்படி சர்வ பிரகாரங்களாலும்
ஸூ பரீஷித —
சம்சய விபர்யய ரஹிதமாகப் பரீஷிக்கப் பட்டான்-
————————————————————————————————————————————————————————
தஸ்மாத் ஷிப்ரம் சஹாஸ்மாபிஸ் துல்யோ பவது ராகவ
விபீஷணோ மகா ப்ராஜ்ஞ சகித்வஞ்சாப் யுபைது ந–18-38-
தஸ்மாத் ஷிப்ரம் -ஆகையாலே விரைவிலேயே
சஹாஸ்மாபிஸ் துல்யோ பவது -சஹ அஸ்மாபி துல்ய -நம்மோடு கூட ஒத்தவனாக
ராகவ -ரகு குலத் தோன்றலே
விபீஷணோ மகா ப்ராஜ்ஞ-பெரும் பேர் அறிவாளனான விபீஷண ஆழ்வான்
சகித்வஞ்சாப் யுபைது ந–சகித்வம் ச அப்யுபைது -நண்பனாய் இருக்கும் நிலையையும் அடையட்டும்-
அவதாரிகை –
இப்படி ஸூ த்த ஸ்வபாவன் ஆகையாலும் -அத்தாலே தேவர்க்கு பரிகரனாக ப்ராப்தனாகையாலும்
நாங்கள் எல்லாரும் பெற்றபேற்றை இவன் ஒருவனே பெற வேணும் -என்கை-
தஸ்மாத் ஷிப்ரம் –
ஆஜகாம முஹூர்த்தேந-என்று பதறி வந்தபடியாலும்
தத்தம் அஸ்ய அபயம் மயா-என்ற தேவர் படியாலும் விளம்ப ஹேது இன்றிக்கே இருக்க
என்னாலே யாயிற்று அவனை சவீ கரிக்கையில் விளம்பம் யுண்டாயிற்று –
நான் தெளிந்த பின்பு சடக்கென விஷயீ கரிக்க வேணும் –
சஹாஸ்மாபிஸ் துல்யோ பவது –
எங்களை எல்லாரையும் கொண்டு கொண்ட அடிமையை இவனை ஒருவனைக் கொண்டு கொண்டருள வேணும் –
கண்ணன் வானாடமரும் தெய்வத்தினமோர் அன்னையீர்களாய்-திரு விருத்தம் -27-என்று
நித்ய சூரிகள் அனைவரையும் ஆழ்வாருக்கு ஒப்பாகச் சொல்லக் கடவது இ றே-
சஹாஸ்மாபி –
இவரை அடிமை கொள்ளும் இடத்தில் இவர் பிரதானராய் இவர்க்கு நாங்கள் பரிகார பூதராய் அடிமை செய்யும்படி விஷயீ கரித்து அருள வேணும் -சஹ யுக்தேஸ் ப்ரதாநே –
ராகவ-
பிரபன்ன பவித்ரானம் பண்ணாத போது ஸ்வரூபத்தை அழிக்கும் படியான குடிப்பிறப்பை உடையீர் அல்லீரோ –
விபீஷணோ மகா ப்ராஜ்ஞ-
ஜ்ஞானன் ஆகையாவது -நம்மை வெறுமையே பற்றாசாக விஷயீ கரிப்பர் என்று இருக்கை-
ப்ராஜ்ஞனாகை யாவது -ராவண சம்சர்க்கத்தால் வந்த தோஷங்களை பாராதே விஷயீ கரிப்பர் என்று இருக்கை
மஹா ப்ராஜ்ஞனாகை யாவது -எத்தனையேனும்-அந்தரங்கரானார் -வத்யதாம் -என்றாலும் -தாம் பிற்காலியாதே இவனைத் தெளிய விட்டு விஷயீ கரிப்பர் என்று இருக்கை –
இப்படி உம்மை உள்ளபடி அறியும் பேர் அறிவாளன் அல்லனோ –
சகித்வஞ்சாப் யுபைது ந-
சஹா தாஸ அஸ்மி -40-10-என்னும்படி நான் பெற்ற பேறு பெற வேணும் –
எங்களுக்கு சஹித்வத்தை அடைய வேணும் என்றுமாம் –
தோழன் நீ -பெரிய திருமொழி -5-8-1- என்று நீர் அடிமை கொள்ளுமா போலே இவனும் எங்களை அடிமை கொள்ள வேணும் –
———————————————————————————————————————————————————————————-
ததஸ்து ஸூக்ரீவவசோ நிசம்ய தத் ஹரீஸ்வரேணாபி ஹிதம் நரேஸ்வர
விபீஷணேநாஸூ ஜகாம சங்கமம் பதத்ரி ராஜேன யதா புரந்தர 18-39-
ததஸ்து ஸூக்ரீவவசோ நிசம்ய தத் -சுக்ரீவனுடைய வார்த்தையைக் கேட்டு அதற்குப் பின்
ஹரீஸ்வரேணாபி ஹிதம் நரேஸ்வர-மனிதர் தலைவரான ஸ்ரீ ராம பிரான் -வானவர் தலைவரான சுக்ரீவனாலே -அபிஹிதம் -சொல்லப் பட்ட
விபீஷணேந சங்கமம் -விபீஷண ஆழ்வானோடே சேர்த்தியை
பதத்ரி ராஜேன யதா புரந்தர -புள்ளரையனான கருடனோடே சேர்ந்தால் போலே
ஆ ஸூ ஜகாம-விரைவில் அடைந்தார்-
அவதாரிகை –
மஹா ராஜர் சொன்னபடியே தன் பேறாகக் கிட்டினார் -என்கிறது-
தத் ஸூக்ரீவவசோ நிசம்ய து –
வத்யதாம் -என்ற மஹா ராஜருடைய அநு கூலமான அந்த வார்த்தையைக் கேட்ட பின்பு ப்ரீதியாலே பிறந்த விசேஷம்
நிசம்ய தத் பி ஹிதம் நரேஸ்வரோஸ் பூத் –
அந்த வார்த்தையைக் கேட்ட பின்பு நரேஸ்வருமானார் –
திருவடி வார்த்தையைக் கேட்ட பின்பு தாம் உளரானார்
மஹா ராஜர் வார்த்தையைக் கேட்ட பின்பு சர்வ நிர்வாஹகரானார் –
ஹரீஸ்வரேணா விபீஷணேந சங்கமம் –
சபரிகரராய்க் கொண்டு புகுர ஓட்டம் என்ற தாமே சபரிகரராய்க் கொண்டு விஷயீ கரிக்க வேண்டும் என்கிறார் என்று கருத்து
ஆ ஸூ ஜகாம –
கட்டு விடப்பட்ட தருண வத்ஸ தே நு கன்றின் பேரிலே விழுமா போலே சடக்கென கிட்டினார்
மஹா ராஜருடைய ப்ரேமம் மறுவலிடில் செய்வது என்-என்று அவர் இசைந்த போதே சடக்கென கிட்டினார் -என்றுமாம் —
புரந்தர பதத்ரிராஜே ந யதா –
இந்த்ரன் தன் பேறாகப் பெரிய திருவடியைக் கிட்டினால் போலே இவரும் தம் பேறாகக் கிட்டினார் -என்கை –
——————————————————————————————————————————————————————————–
ராகவேண அபயே தத்தே சந்நதோ ராவணாநுஜ
விபீஷணோ மகாப்ராஜ்ஞோ பூமிம் சமவலோகயன்
காத் பபாதாவநிம் ஹ்ருஷ்டோ பக்தைரநுசரை சஹ -19-1-
ராகவேண-ரகு குலத்து உதித்தவரான ஸ்ரீ ராம பிரானால்
அபயே தத்தே -அபாயமானது கொடுக்கப் பட்ட அளவிலே
சந்நதோ ராவணாநுஜ -நன்கு வணங்கியவனாய் -ராவணன் தம்பியாய்
விபீஷணோ மகாப்ராஜ்ஞோ -பேர் அறிவாளானான விபீஷணன்
பூமிம் சமவலோகயன் -பூமியைப் பார்த்துக் கொண்டு –
அநுசரை-பின் தொடர்ந்து வந்த –
பக்தை சஹ -அன்பு நிறைந்த அரக்கரோடு கூட
ஹ்ருஷ்ட -ஆனந்தம் உடையவனாய்
காத்-ஆகாயத்தில் நின்றும்
அவ நிம் பபாத -தரையிலே விழுந்தான் –
காத் பபாதாவநிம் பக்தைர சஹ –
அவதாரிகை –
அனந்தரம் -பெருமாளும் விஷயீ கரித்து மஹா ராஜரும் இசைந்தததுக்குப் பின்பு ஸ்ரீ விபீஷண ஆழ்வான் செய்தபடி -சொல்லுகிறது –
ராகவேண –
பிரபன்ன பரித்ராணம்-தமக்கு ஏற்றம் அன்றிக்கே குல தர்மம் என்கை –
தத்தம் அஸ்ய அபயம் மயா -18-34- என்றது ஜீவித்தது -மஹா ராஜர் இசைந்ததுக்குப் பின்பு -என்கை –
ராவணாநுஜ விபீஷணோ -சந்நத-
ந நமேயம் என்று இருந்த ராவணன் தம்பியாய் இருந்து வைத்துப் பிறர் அள்ளி எடுக்க வேண்டும்படி திருவடிகளிலே வந்து விழுகிறதே என்று ரிஷி கொண்டாடுகிறான் –
மகாப்ராஜ்ஞோ சந்நத-
தமக்கு அபிமதராய் இருந்துள்ள மஹா ராஜ ப்ரப்ருதிகள் -வத்யதாம் -என்ன ந த்யஜேயம்-என்று விஷயீ கரித்த உபகாரத்தை அறிந்தவன் ஆகையாலே
விஷயீ காரமாகிற மஹா உபகாரத்துக்குத் தோற்றுத் திருவடிகளிலே விழுந்தான் -என்கை
பூமிம் சமவலோகயன் சந்நத –
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி -பெரிய திருமொழி -5-8-1-என்கிறபடியே என்னுடைய நிகர்ஷம் பாராதே தம்முடைய பேறாக மேல் விழுவதே
என்று லஜ்ஜா விஷ்டனாய்க் கொண்டு திருவடிகளிலே விழுந்தபடி –
காத் பபாதாவநிம் ஹ்ருஷ்டோ பக்தைரநுசரை சஹ –
மஹா ராஜர் வத்யதாம் -என்ற போது தலையில் கால் பாவ விரகு இன்றிக்கே ஆகாஸ்தனாய் நின்றவன்
அவர் தாமே சென்று அளித்த பின்பு பிறந்த ப்ரீத்தி பிரகர்ஷத்தாலே பெருமாள் திருவடிகள் அளவும் செல்லாதே
ப்ரிய பரிகரனாய்க் கொண்டு ஆகாசத்தில்நின்றும் தரையிலே விழுந்தான் –
உத்பபாத கதா பாணிஸ் சதுர்ப்பிஸ் சஹ ராஷசை -16-16- என்று அவன் லங்கா சம்பந்தம் அற்ற போதே தாங்களும் சம்பந்தம் அற்றுப் போந்தார்கள்
வத்யதாம் ஏஷ தீவ்ரேண தண்டேந சசிவை சஹ -17-27-என்று வதத்திலும் பாக்கில் ஆனார்கள் -சவீ காரத்திலும் அந்தர் பூதரானார்கள்
இத்தால் சொல்லிற்று ஆயிற்று
ஒருவனைக் கண் அழிவு அற்ற வைஷ்ணவன் என்று நிர்ணயித்தால் அவனைப் பிரிய மாட்டாதே ச்நேஹத்தை யுடையாரைப் பரீஷிக்கக் கடவதல்ல -என்று கருத்து –
—————————————————————————————————————————————————————————————-
ஸ து ராமஸ்ய தர்மாத்மா நிபபாத விபீஷண
பாதயோ சரணான் வேஷீ சதுர்ப்பி சஹ ராஷஸை–19-2-
ஸ து ராமஸ்ய தர்மாத்மா-விபீஷண–அப்படிப்பட்ட அற வழி நெஞ்சினான விபீஷண ஆழ்வானும் ராமபிரானுடைய
நிபபாத பாதயோ சரணான் வேஷீ சதுர்ப்பி சஹ ராஷஸை–புகலிடத்தை தேடினவனாய் துணைவரான நாலு அரக்கரோடு கூட திருவடிகளில் விழுந்தான்-
அவதாரிகை –
பின்பு பதற்றம் தீர்ந்து பெருமாளுடைய திருவடிகளைப் புகலிடமாக நினைத்து சபரிகரனாய் வந்து விழுந்தான் -என்கிறது-
ஸ து –
இப்படி கலங்கின கலக்கம் தீர்ந்த வேறுபாடு
விபீஷண தர்மாத்மா-
எல்லா அவச்தைகளிலும் சரணாகதி தர்மத்தில் நின்றும் நெஞ்சு குலையாதே இருக்குமவன்
அதாகிறது -வத்யதாம் -என்ற போதோடு-சங்க்ய தாம் என்ற போதோடு -ந த்யஜேயம் -என்ற போதோடு -ஆ நயைநம் என்ற போதோடு
அஸ்மாபிஸ் துலா பவது -என்றபோதொடு வாசி அற -ராகவம் சரணம் கத -என்ற தான் பற்றின பற்றில் குலையாது ஒழிகை
ராமஸ்ய பாதயோ சரணான் வேஷீ நிப பாத –
ராமஸ்ய –
தன் பக்கலில் ஆதாராதிசயம் தோற்றும்படி அபிராமமான வடிவை யுடையராய் யுள்ளவருடைய
பாதையோ சரணான் வேஷீ –
ஸ்த நந்தய பிரஜை மாதாவின் குடைய ஸ்தநத்தையே அபாஸ்ரயமாகச் செல்லுமா போலே
திருவடிகளிலே தனக்கு புகலிடத்தை நினைத்த படி
நிபபாத
இவர் அள்ளி எடுக்கும்படி விழுந்தான்
சதுர்ப்பி சஹ ராஷஸை–
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் -என்னுமா போலே தன்னுடைய விழுக் காட்டிலே அவர்கள் அந்தர் பூதராம்படி விழுந்தான் –
——————————————————————————————————————————————————————————
அப்ரவீச்ச ததா ராமம் வாக்யம் தத்ர விபீஷண
தர்மயுக்தம் ஸ யுக்தம் ஸ சாம்ப்ரதம் சம்ப்ரஹர்ஷணம்–19-3-
அப்ரவீச்ச -சொல்லவும் செய்தான்
ததா-அப்போது
ராமம் வாக்யம் -ஸ்ரீ ராம பிரானைக் குறித்து
தத்ர விபீஷண-அக்கூட்டத்தில் விபீஷண ஆழ்வான்
தர்மயுக்தம் ஸ -தர்மங்களோடு கூடினதாயும்
யுக்தம் ஸ -தகுந்ததாயும்
சாம்ப்ரதம் -தற்சமயம்
சம்ப்ரஹர்ஷணம்-உகப்பிப்பதாயும் இருக்கிற-
விபீஷண அப்ரவீச்ச –
பாதயோர் நிபபாத –19-2- என்று காயிகமான சரணாகதியைப் பண்ணினான் -கீழ்
அவ்வளவே பெருமாளுக்கும் அமைந்து இருக்க அவ்வளவில் தனக்குப் பர்யாப்தி இல்லாமையாலே வாசிகமாகவும் சரணம் புகுந்தான் –
ததா –
திருவடியில் விழுந்த சமயத்தில் –
தாத்ரா –
பெருமாளும் மஹா ராஜரும் முதலிகளும் -ஏக கண்டராய் இருக்கிற கோஷ்டியிலே –
ராமம் வாக்யம் –
ஸூ க்ரீவம் தாமசச சம்ப்ரேஷ்ய -17-9-என்று தன்னை நிவேதிக்கைக்காக மஹா ராஜரையும் முதலிகளியும் குறித்துச் சொன்ன வார்த்தை அன்றிக்கே
சரண்யரான பெருமாள் தம்மைக் குறித்துச் சொன்ன வார்த்தை –
வாக்யம்-
சர்வார்த்தத்தையும் பரி பூரணமாகச் சொல்லுகை –
தத்ர விபீஷண
தர்மயுக்தம் ஸ-
சரணாகதிக்கு அங்கங்களான தர்மங்களோடு கூடி யுள்ளதை –
யுக்தம் ஸ –
சரண்ய விஷயத்தைக் குறித்து பிரயோக்கிகிற தாகையால் யுக்தமாய் இருக்கை-
சாம்ப்ரதம் சம்ப்ரஹர்ஷணம்-
ராகவம் சரணம் கத -17-14-என்றது போலே மஹா ராஹருக்கும் பரிகரத்துக்கும் ஸ்ரவண கடுகமாய் இருக்கை அன்றிக்கே -இப்போது எல்லார்க்கும் ஹ்ருதயங்கமமாய் இருக்குமதை –
————————————————————————————————————————————————————————————
அநுஜோ ராவணஸ் யாஹம் தேந சாஸ்ம்யவமாநித
பவந்தம் சர்வ பூதா நாம் சரண்யம் சரணம் கத –19-4–
அநுஜோ ராவணஸ் யாஹம் -நான் ராவணனுடைய தம்பியாகவும்
தேந சாஸ்ம்யவமாநித -அந்த ராவணனாலே அவமதிக்கப் பட்டவனாயும்
சர்வ பூதா நாம் சரண்யம் -எல்லா உயிர் களுக்கும் புகலிடமாய் இருக்கிற –
பவந்தம்-தேவரீரை
சரணம் கத –தஞ்சமாக அடைந்தவன் ஆகிறேன் –
அவதாரிகை –
அவ்வாக்கியம் இன்னது என்கிறது மேல் –
அநுஜோ ராவணஸ் யாஹம் தேந சாஸ்ம்யவமாநித-
இப்பாசுரத்தைச் சொல்லி முன்பே சரணம் புக்கான் அன்றோ –
புநரபி இப்படி சரணம் புகுகிறது ஏன்-என்னில் –
ஸூ க்ரீவம் தாம்ஸ்ஸ சம்ப்ரேஷ்ய-என்று ஸூக்ரீவரையும் பரிகரத்தையும் பார்த்து -நிவேதயாத -என்கிற பிரயோஜனத்துக்காக -ராகவம் சரணம் கத என்று பரோஷ ரூபேண சொன்னான் அங்கு –
இங்கு பவந்தம் சரணம் கத -என்று இவர் தம்மையே குறித்துச் சொல்லுகையாலே புநருக்தி இல்லை
அநுஜ -என்கிற ஸ்வ தோஷ க்யாபநம் ஆகிஞ்சன்யத்துக்கும் உப லஷணம்-
சர்வ பூதா நாம் சரண்யம் –
பாப பிரசுரனாய் இருந்துள்ள ராவணன் கிடந்துள்ள குடலிலே கிடந்து அவனிலும் தண்ணியன் ஆகையாலே
ராவணஸ்ய ந்ருசம் சஸ்ய ப்ராதா -என்று உம்முடைய் கோஷ்டிக்கு ஆகாத அளவே அன்றிக்கே
த்வாம் து திக் குல பாம்சனம் -என்று அவனுக்கும் ஆகாத எனக்கு சரணார்ஹரான தேவர்க்கும் ஆகாதார் உண்டோ –
பவந்தம் சரணம் கத-
ஜ்ஞான சக்த்யாதிகளாலும் பூர்ணரான தேவரைப் புகலாகப் பற்றினேன்-
——————————————————————————————————————————————————————————————–
பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச த நாநி ச
பவத்கதம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநி வை –19-5-
பரித்யக்தா மயா லங்கா -என்னாலே இலங்கை யாராசும் கை விடப் பட்டது
மித்ராணி ச த நாநி ச -நண்பர்களும் செல்வங்களும் கை விடப் பட்டன –
பவத்கதம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநி வை –என்னுடைய அரசும் உயிரும் ஸூ கங்களும் தேவரீர் இடம் அடங்கி உள்ளன –
அவதாரிகை –
அநந்தரம் ப்ராப்யாந்தர நிரசன பூர்வகமாக ப்ராப்யம் இன்னது என்கிறது-
பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச த நாநி ச-
ராவண சம்பந்தத்தால் வந்த இலங்கை -என்ன
தத் அநு பந்தி மித்ரங்கள் என்ன
தத் த்வாரா சம்ப்ராப்தமான தனம் என்ன
மற்றும் ஸோ பாதிகங்களான சம்பந்தங்களை ஸ்வாசநமாக விட்டு வந்தவன் –
இது முமுஷூவுக்கு சாஸ்திர சித்தமாக த்யாஜ்யமான ப்ராப்ய ஆபாசங்களுக்கு உப லஷணம்-
பவத்கதம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸூகாநி வை-
ராஜ்யம்–என்று பரிக்ரஹங்களுக்கு எல்லாம் உப லஷணம் –
ஜீவிதம் -என்று தாரக போஷாக போக்யங்களுக்கு உப லஷணம்
ஸூ கா நி -என்று உபயத்தாலும் வந்த ஸூ கங்களும் தேவர் திருவடிகளே –
சகல பாக்யங்களும் தேவர் திருவடிகளில் கைங்கர்ய ஸூ கத்திலே அந்தர் பூதம்
மாதா பிதா யுவதய –என்றும்
ப்ராதா பார்த்தா ச பந்துஸ்ஸ பிதா ச மம ராகவ -என்றும்
சேலேய் கண்ணியரும்-என்னக் கடவது இ றே-
விட்டவை ஓர் உறவாக மாட்டாது
சம்பந்தோ அபி ந சம்பந்த ஆத்மந பிராண காயயோ புத்ர மித்ர கலத்ராதி சம்பந்த கேந ஹேது நா -என்று எல்லா உறவுமாக வல்லீர் தேவர்
பித்ரு மாத்ரு ஸூஹ்ருத் பிராத்ரு தார புத்ராதயோ அபி வா – ஏகைகப லலாபாய சர்வலாபாய கேசவ -என்னக் கடவது இ றே –
————————————————————————————————————————————————————————–
தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா ராமோ வசனம் அப்ரவீத்
வசஸா சாந்த்வயித்வைநம் லோசநாப்யாம் பிபந்நிவ–19-6-
தஸ்ய தத் வசனம் ஸ்ருத்வா -அந்த விபீஷணனுடைய அந்த சொல்லைக் கேட்டு
வசஸா-வார்த்தையினாலே
சாந்த்வயித்வா -ஆறுதல் செய்து
ஏநம் -இந்த விபீஷணனை
லோசநாப்யாம் பிபந்நிவ–கண்களினாலே பருகுவார் போலே
ராமோ வசனம் அப்ரவீத் -ஸ்ரீ ராம பிரான் சொல்லை உரைத்தார் –
அவதாரிகை –
இவர் தம் ஸ்வரூப அநு ரூபமான வார்த்தையைக் கேட்டு தமக்கு இவர் பக்கல் யுண்டான ஆதார அதிசயம் எல்லாம்
கடாஷத்திலே தோற்றும்படி விசேஷ கடாஷம் பண்ணி யருளி ஒரு வார்த்தை அருளிச் செய்கிறார்-
தஸ்ய-
தன்னுடைய பரிகரங்களையும் விட்டுப் பெருமாளுடைய திருவடிகளையே சரணமாகப் பற்றினவனுடைய –
தத் வசனம் ஸ்ருத்வா –
பெருமாள் திருவடிகளிலே கைங்கர்யமே எனக்கு சகல போகங்களும் என்று சொன்ன வார்த்தையைக் கேட்டு –
ஏவம் வசஸா சாந்த்வயித்-
பூர்வ வ்ருத்தம் பாராதே நம்மை இங்கனே விஷயீ கரிப்பதே என்று ஹ்ருஷ்டராய் இருந்துள்ள இவரைக் குறித்து
சாபாரதன் தன் ஷாபணம் பண்ணுமா போலே வாயாலே இன்சொல்லைச் சொல்லி
அதாகிறது -நம்முடைய வைபவத்தை சொன்னதே ஹேதுவாக ராவணன் -கோன்யஸ்த் வேவம்–குல பாம்சனம் -16-15-என்ற பரிபவிக்கிற தசையிலே வந்து கைக் கொள்ள வேண்டாவோ
குறைவாளர்கள் செய்ததைப் பொறுக்கும் இத்தனை அன்றோ என்கை
லோசநாப்யாம் பிபந்நிவ–ராமோ வசனம் அப்ரவீத் –
அந்த இன்சொல்லாலே இவனை நீராக்கிக் கண்ணாலே பருகுவாரைப் போலே விசேஷ கடாஷம் செய்து அருளா நின்று கொண்டு பெருமாள் ஒரு வார்த்தை அருளிச் செய்து அருளினார் –
என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான் -திருவாய் -9-6-10-என்னக் கடவது இ றே –
———————————————————————————————————————————————————————————————
ஆக்யாஹி மம தத்த்வேந ராஷஸாநாம் பலாபலம்–19-7-
ஆக்யாஹி -சொல்லும்
மம தத்த்வேந -உள்ளபடி எனக்கு
ராஷஸாநாம் பலாபலம்–அரக்கர்கள் உடைய பலமுடைமையையும் பலமின்மையையும்
அவதாரிகை
உம்முடைய விரோதிகளை அழியச் செய்து லங்கா ராஜ்யத்திலே உம்மை அபிஷேகம் பண்ணக் கடவோம் –
உம்முடைய எதிரிகளுடைய பலம் இருக்கும்படி சொல்லீர் என்கிறார்-
யத்வா -நம் பக்கல் அநு கூல வ்ருத்தியே நமக்கு பிரயோஜனமாக சொன்னீரே
காயிகமாக வ்ருத்தியைப் பின்னைக் கொள்ளுகிறோம்-
வாசிகமாய் இருப்பதொரு வ்ருத்தியைப் பண்ணீர் என்கிறார்-
யா யா சேஷ்டா ததர்சநம் -ஸ்ரீ விபீஷண ஆள்வான் யுடைய முக மலர்த்தி காண்கைக்காக-
ஆக்யாஹி ராஷஸாநாம் பலாபலம்–
அவர்களிலே அந்ய தமனாய் இருக்கிற அவனை விஜாதீயருடைய பலம் கேட்பாரைப் போலே கேட்பான் என்-என்னில்
ந து ராஷஸ சேஷ்டித-17-24- என்னும் அளவன்றிக்கே ராஷஸ ஜாதியாரும் அல்லர் இவர்
இஷ்வாகு வம்ச்யர் என்னும் நினைவாலே
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து -திருப் பல்லாண்டு -5-என்றும்
குலம் தரும் -பெரிய திருமொழி -1-1-9-என்றும்
சொல்லலாம்படி இ றே பகவத் சமாஸ்ரயண வைபவம் இருப்பது
விப்ராத் த்விஷட் குநாயுதாத் -என்றும்
தமராவார் -நான் முகன் திருவந்தாதி -91-
மம தத்த்வேந க்யாஹி –
ராஷஸ பலத்தை அழியச் செய்யக் கடவோமாய்
அந்த பலத்தின் யுடைய அளவறியாத நமக்கு
நிலவராய் இருந்துள்ள நீர் நம் முன்பே எதிரிகளுடைய மிடுக்கைச் சொலுவது என் என்று இராதே உள்ளபடி எனக்குச் சொல்லும் என்கிறார் –
—————————————————————————————————————————————————————————-
ராஷஸா நாம் வதே சாஹ்யம் லங்கா யாஸ்ச பிரதர்ஷணே
கரிஷ்யாமி யதாப்ராணம் பிரவேஷ்யாமி ச வாஹிநீம் –19-23-
ராஷஸா நாம் வதே -அரக்கர்களை அழிப்பதிலும்
லங்கா யாஸ்ச பிரதர்ஷணே -இலங்கையை வெல்லுவதிலும்
சாஹ்யம் -உதவியை
கரிஷ்யாமி யதாப்ராணம் -உயர் உள்ள அளவிலும் செய்வேன்
பிரவேஷ்யாமி ச வாஹிநீம்-சேனையிலும் நுழைந்து போரிடக் கடவேன் –
அவதாரிகை-
அஹத்வா ராவணம் சங்க்யே சபுத்ரம் சஹ பான்தவம் -அயோத்யாம் ந பிரவேஷ்யாமி த்ரிபிஸ் தைர் ப்ராத்ருபி சபே 19-21-என்று
இவருடைய அபிஷேக பரிபந்தியாக பலத்தை நிர்ணயித்தார் பெருமாள் –
இவரும்
ராஷஸா நாம் வதே சாஹ்யம் லங்கா யாஸ்ச பிரதர்ஷணே
கரிஷ்யாமி யதாப்ராணம் பிரவேஷ்யாமி ச வாஹிநீம் -என்று
தாம் அடிமை செய்யும் படியைச் சொல்லுகிறார்
பெருமாள் அருளிச் செய்த படியே தாமும் விஜாதீயராய்ப் பேசுகிறார் –
சாஹ்யம்-என்றது தேவர் அதிகரித்து கார்யத்தில் என்னுடைய ஸ்வரூப சித்த்யர்த்தமாக யுத்தத்திலே அம்பு எடுத்துக் கொடுக்கிறேன் -என்கிறார் -யதாப்ராணம்-என்று –
ராகவார்த்தே பராக்ராந்தா ந பிராணே குருதே தயாம்–27-1-என்கிற முதலிகள் யுடைய நிலையிலே நின்று பேசுகிறார்-
பட்டர் ஸ்ரீ பாதத்திலே அபய பிரதானம் கேட்டார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -இப்பிரகரணத்தில் செய்தது ஆயிற்று என்-என்று கேட்க –
சதோஷராய் இருப்பார் சரணாகதர் ஆகார் -என்று மஹா ராஜர் பஷத்தாலே பூர்வபஷித்து
தோஷ குணங்கள் அப்ரயோஜனங்கள்
சேதனர் நின்ற நிலையிலே சரணாகதிக்கு அர்ஹர் -என்று பெருமாள் திரு உள்ளத்தாலே சித்தாந்தம் –
அபய பிரதராஜரான பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த அபய ப்ரதானசாரம் முற்றிற்று
———————————————————————————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply