ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – பன்னிரண்டாவது திரு மொழி – -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ உ. வே. P.B.A.. ஸ்வாமிகள்–

பிரவேசம் –

கீழ்த் திரு மொழியில்
இவள் பட்ட ஆர்த்தியை எம்பெருமான் உடனே வந்து
பரிஹரித்து அருள வில்லை –
அந்த ஆர்த்தியோ இவளால் ஆற்ற முடிய வில்லை –
அவன் திரு உள்ளமான போது வந்து நம்மை திரு உள்ளம் பற்றுகிறான் -என்று
ஆறி இருக்கும் தன்மை இவளுக்கு இல்லை
அவிசம்பிதமாக அவனோடு சம்ச்லேஷித்து தீர வேண்டும்படி த்வரை மிக்கது –

தானே காலால் நடந்து அவன் உள்ள விடத்தே போகப் பார்த்தும்
அசக்தியாலே கால் நடை தாராமையாலே
தன்னிடத்திலே பரிவுள்ளவர்களை நோக்கி
நீங்கள் என்னை இப்போதே அக் கண்ணபிரான் எழுந்து அருளி இருக்கும் இடத்திலே
கொண்டு போய் போடுங்கோள்-என்கிறாள்
ஒவ் ஒரு பாட்டிலும் ஒவ் ஒரு உத்தேச்ய பூமியில் இட அருளிச் செய்கிறாள்-

———————————————————————————-

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்–12-1-

பதவுரை

மற்று இருந்தீர்கட்கு–(என்னுடைய துணிவுக்கு மாறுபாடாக இருக்கின்ற உங்களுக்கு
அறியல் ஆகா–அறிய முடியாததாய்
மாதவன் என்பது ஓர் அன்பு தன்னை–மாதவன் விஷயமான அபிநிவேசத்தை
உற்றிருந்தேனுக்கு–அடைந்திருக்கிற எனக்கு
உரைப்பது எல்லாம்–நீங்கள் சொல்லுவதெல்லாம்
ஊமையரோடு செவிடர் வார்த்தை–ஊமையும் செவிடனுங் கூடி வார்த்தை சொல்லிக் கொள்வது போல் வீண்
(இப்போது எனக்குச் செய்யத்தக்கது எதுவென்றால்)
புறத்து–ஸமீப ப்ரதேசத்திலே
என்னை–என்னை
பெற்றிருந்தாளை ஒழிய போய்–மெய் நொந்து பெற்ற தாயான தேவகியை விட்டொழிந்து
பேர்த்து ஒரு தாய் இல்–வேறொரு தாயாகிய யசோதையின் க்ருஹத்திலே
வளர்ந்த–வளர்ந்தவனும்
மல் பொருந்தாமல் களம் அடைந்த–மல்ல யுத்த பூமியிலே மல்லர்கள் வந்து சேர்வதற்கு முன்னே
தான் முற்பாடனாய்ப் போய்ச் சேர்த்திருப்பவனுமான
நம்பி–கண்ண பிரானுடைய (நகரமாகிய)
மதுரை–மதுராபுரி யினுடைய
உய்த்திடுமின்–கொண்டு சேர்ந்து விடுங்கள்.

எம்பெருமானை இப்போதே பெறவேணுமென்று வருந்திக்கிடக்கின்ற ஆண்டாளை நோக்கித் தோழியரும் அன்னையரும்
‘அம்மா! நம் தலையால் ஆவதொன்றுமில்லை, பேறு அவன் தலையாலே ஆகவேணும் என்பது ஸித்தாந்தமான பின்பு
நீ இப்படிப்பதறுவதில் பயனொன்றுமில்லையே, அடைவிலேபேறு பெறலரகுமென்று ஆறியிருப்பதன்றோ முறைமை,
அஸோக வநிகையிற் பிராட்டியின் அத்யவஸாயம் உனக்குத் தெரியாததன்றோ,
அவளைப்போலே நீயும் ஆறியிருக்கவேணுங்காண், நீ இப்படிப் பதறலாகாது‘ என்றாற்போலே சிலஹிதவசநங்களைச் சொல்லப்புக,
அவர்களைக்குறித்துக் கூறுகின்றாள் –

‘எனக்கு இப்போது நிகழ்கிற அவஸ்தை இப்படிப்பட்டதென்று சிறிதும் அறிபகில்லாத நீங்கள்,
பகவத் விஷய காமத்தின் மேலெல்லையிலே நிற்கிற எனக்குச் சொல்லுகிற வார்த்தைகள் வீண்,
உங்கள் பேச்சு என்காதில் புகவும் மாட்டா, புகுந்தாலும் அவற்றுக்கு மறுமொழி வுறுமளவிலே நான் நிற்கின்றிலேன்,
ஆகையாலே நீங்கள் எனக்குஹிதஞ் சொல்லப்பார்ப்பதை நிறுத்திவிட்டு
* ஒருத்திமகனாப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்த்து சாணுர முஷ்டிகாதிமல்லர்களோடே போர்புரிந்து,
வெற்றி பெற்ற கண்ணபிரானெழுந்தருளி யிருக்கிற மதுராபுரியின் ப்ராந்தத்திலே என்னைக் கொண்டுபோய்ப் போடுங்கள்‘ என்கிறாள்.

ஊமையரோடு செவிடர்வார்த்தை – செவிடரோடு ஊமையர் வார்த்தை சொல்லுமா போலேராநின்றதென்றபடி
ஊமை வார்த்தை சொல்வதற்கு அநர்ஹன், செவிடன் வார்த்தைகேட்பதற்கு அநரஹன்,
அதுபோல நீங்கள் என்னைப் பற்றிப் பேசுவதற்கு யோக்யதை யற்றவர்கள்,
மர்யாதைமீறி நீங்கள் பேசினாலும் அப்பேச்சைக் கொள்வதற்கு எனக்குச செவியில்துளையில்லை,
ஆகையாலே நீங்கள் எனக்கு சொல்லதெல்லாம் வீண் என்றவாறு.

‘இப்படி நீ வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லலாமா? நான் உன்னைப்பெற்ற தாய் அல்லேனோ?
என்னைக் கைவிடப்பார்க்கலாமோ? என்று தாய்சொல்ல,
‘அம்மா! நான் என்செய்வேன்? பெற்ற தாயை உதறித் தள்ளிவிட்டு வேறிடந்தேடியோடுமவன் எனக்குத் தன்னோடு
ஸாம்யாபத்தி கொடுத்தான் காண்‘ என்பாள்போலக் கூறுகின்றாள் மூன்றாபடி.
கண்ணபிரான் வஸுதேவ பத்நியான தேவகிக்குப் பிள்ளையாகப்பிறந்து
நந்தகோப பத்நியான யசோதையின் மகனாக வளர்ந்தருளினவரலாறு அறியத்தக்கது.

மற்பொருந்தா மற்களமடைந்தநம்பி – ‘தன்னுடம்போடே அணையவேணு மென்னுமாசையுடைய நானிருக்க,
இத்தனைபோது புறப்பட்டு முரட்டுமல்லரோடே அணைகைக்குப் போகா நிற்கும். மல்லரானவர்கள் மற்பொருகைக்கு
யுத்த பூமியிலே சென்று கிட்டுங்காட்டில் தான் யுத்தபூமியிலே சென்று கிட்டுமாய்த்து. அவன் மல்லருடம்போடே
அணைவதற்குமுன்னே இடையிலே நான் சென்றுகிட்டிக் கொள்ளும்படி என்னை மதுரையின் பரிஸரத்திலே
கொடுபோய்ப் பொகடுங்கோள்“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் யோக்யதை அநுபவிக்கத் தக்கது.

மற்களமடைந்த வரலாறு. – கம்ஸனால் வலிய அழைக்கப்பட்டு ஸ்ரீக்ருஷ்ண பலராமர்கள் அவனது ஸபையிற் செல்லுகையில்
அவர்களை எதிர்த்துப் பொருது சொல்லும்படி கம்ஸனால் ஏவப்பட்ட சாணூரன் முஷ்டிகள் முதலிய பெருமல்லர்கள் சிலர்
வந்து எதிர்த்து உக்ரமாகப் பெரும்போர்செய்ய, அவர்களையெல்லாம் அவயாதவ்வீரர் இருவரும்
மற்போரினாலேயே கொன்று வென்றிட்டனர் என்பது மல்லவதஞசெய்த கதை.

“மதுரையின் பரிஸரத்திலே“ என்று வியாக்கியானத்தி அருளிச்செய்யப்பட்டிருத்தலால் “மதுரைப்புறத்து“ என்றபாடமே ஏற்கும்.
“புரத்து“ என்னக்கூடாது. இடையினரசுமல்ல, வல்லினறகரம்.

உய்த்திடுதல் – கொண்டு சேர்க்கையும். உஜ்ஸீவிக்கச்செய்கையும்.

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை உற்று இருந்தேனுக்கு-
எம்பெருமானை இப்போதே பெற வேணும் என்று
வருந்திக் கிடக்கிற ஆண்டாளை நோக்கி தோழிமாறும் அன்னையரும்
அம்மா நம் தலையால் ஆவது ஒன்றும் இல்லை
பேறு அவன் தலையாலே தான் ஆக வேணும் எனபது சிந்தாந்தம்
ஆனபின்பு நீ இப்படி பதறுவதில் பயன் ஒன்றும் இல்லையே
அடைவிலே பேறு பெறலாம் என்று இருப்பது அன்றோ முறை –

அசோகவனையில் பிராட்டியின் அத்யாவசாயம் உனக்குத் தெரியாதாது அன்றே -போன்ற
சில ஹித வசனங்களைச் சொல்லப் புக
அவர்களை குறித்து -அருளிச் செய்கிறாள் –
உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை –
செவிடரோடு ஊமையர் வார்த்தை சொல்லுமா போலே இரா நின்றது
ஊமை வார்த்தை சொல்வதற்கு அனர்ஹன்
செவிடன் வார்த்தை கேட்பதற்கு அனர்ஹன்
ஆகையால் நீங்கள் சொல்வது எல்லாம் வீண் –
எனக்கு இப்பொழுது நிகழ்கிற அவஸ்தை இப்படிப் பட்டது என்று சிறிதும் அறியகில்லாத நீங்கள்
பகவத் விஷயத்தின் காமத்தில் மேல் எல்லையில் நிற்கிற
எனக்குச் சொல்லுகிற வார்த்தைகள் வீண்
உங்கள் பேச்சு என் காதில் புகமாட்டா
புகுந்தாலும் மறுமொழி கூறும் நிலையில் நான் நிற்கின்றேன் அல்லேன்
ஆகையால் ஹிதம் சொல்லப் பார்ப்பதை நிறுத்தி விட்டு
இப்படி நீ வெட்டு இரண்டு துண்டு ஒன்றாக சொல்லலாமா
நான் பெற்ற தாய் அல்லவா -என்ன என்ன
அம்மா
பெற்ற தாயை உதறித் தள்ளி விட்டு வேறு இடம் தேடி ஒடுமவன் எனக்கு சாம்யாபத்தி கொடுத்தான் காண்

பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி –
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர்ந்து –

மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின் –
சாணூர முஷ்டிகாதி மல்லர்களோடு போர் புரிந்து
வெற்றி பெற்ற கண்ணபிரான்
எழுந்து அருளி இருக்கிற மதுராபுரியின் ப்ராந்தத்திலே
என்னைக் கொண்டு போய் போடுங்கோள்
அவன் உடம்போடு அனைய ஆசை கொண்டு நான் இருக்க
இத்தனை போது புறப்பட்டு
முரட்டு மல்லரோடு அணைக்கப் போகா நிற்கும்
மல்லர்கள் யுத்த பூமியில் கிட்டும் காட்டி தானே யுத்த பூமியிலே சென்று கிட்டும் ஆய்த்து
அவன் மல்லர்களோடு அணைவதற்கு முன்னே இடையிலே நான் சென்று
கிட்டிக் கொள்ளும்படி என்னை மதுரையின் பரிசரத்தில் கொடு போய் பொகடுங்கோள்
பரிசாரம் -என்பதால் மதுரைப் புறத்து -என்பதே சரியான பாடம்
புரத்து-என்னக் கூடாது –
உய்த்திடுதல் -கொண்டு சேர்க்கையும் உஜ்ஜீவிக்கச் செய்கையும்-

————————————————————————————————

நாணி யினியோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க யுறுதிர் ஆகில்
மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்–12-2-

பதவுரை

இனி–இனி மேல்
நாணி–வெட்கப்பட்டு
ஓர் கரும்ம இல்லை–ஒரு பயனுமில்லை (ஏனெனில்)
நால் அயலாரும்–ஊரிலுள்ளாரெல்லாரும்
அறிந்தொழிந்தார்–(எனது செய்தியை) அறிந்து கொண்டார்கள்
பாணியாது–காலதாமத மின்றி
மருந்து செய்து–வேண்டும் பரிஹாரங்களைச் செய்து
என்னை–என்னை
பண்டு பண்டு ஆக்க உறுதிர் ஆகில்–இப்போதைய விரஹாவஸ்தைக்கு முற்பட்டதான ஸம்ச்லேஷ தசைக்கும்
முற்பட்டதான பகவத் விஷய வாஸனையையே அறியாத தசையிலிருந்த நிறத்தைப் பெற்றவளாகச் செய்ய நினைப்பீர்களாகில்,
நீர்–நீங்கள்
என்னை–என்னை
ஆணையால்–ஸத்யமாக
காக்க வேண்டில்–காப்பாற்ற விரும்புகிறீர்களாகில்
என்னை–என்னை
ஆய்ப்பாடிக்கே–திருவாய்ப்பாடியிலே
உய்த்திடுமின்–கொண்டு சேர்த்து விடுங்கள்

மாணி உரு ஆய் உலகு அளந்த மாயனை காணில்
(மாவலியினிடத்தில்) வாமகரூபியாய்ச் சென்று (த்ரிவிக்ரமனாகி) உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட பெருமானை ஸேவிக்கப்பெற்றால்

தலை மறியும்
(இந்த நோயானது) தலை மடங்கும்.

பெண்ணே! நீ ஆயிரந்தான் சொல்லு, உன்னுடைய துணிவு உகக்கத் தக்கதாகமாட்டாது.
நீ படிதாண்டாப் பத்தினியாயிருக்க வேண்டியவள், படி கடந்து நீ செல்லுமளவில் அவ்வெம்பெருமானுக்கு
அது பெருத்த அவத்யமாய் முடியும். ப்ரபந்நஸந்தானத்திலே இப்படியுமொருத்தி கிளம்பினாளே‘ என்று ஊராரும் பழிக்கநேரிடும்,
இதெல்லாம் உனது பெண்மை நிறைவுக்குப் பாங்கல்ல, உன்ஸ்வரூபத்தை நீ காத்துக்கொள்ள வேண்டாவா?“ என்று தாய்மார் சொல்ல,
அவர்களை நோக்கிக் கூறுகின்றாள் –

நான் முறை கெட்டபடியை இனிமேலா ஊரார் அறியப்போகிறார்கள்? என்றைக்கோ அறிந்த விட்டார்கள்!
இனிமேல் அறிய வேண்டும்படி இங்கு ஒன்றும் ரஹஸ்யமாயிருக்கவில்லை,
ஏழூர்ப்புல்லையும் மேய்த்து எட்டூர்த் தண்ணீரையுங் குடித்து வருகிற கொண்டிப் பசுவின் நிலை போன்றதன்றோ எனது நிலை,
இனி நாம் ஆர்க்கு லஜ்ஜைப்பட வேணும், லஜ்ஜைப்பட்டுத்தான் பெறவேண்டியது என்ன இருக்கிறது.

இங்ஙனே கூறின ஆண்டாளை நோக்கிப் பின்னையும் அவர்கள் “நீ இப்படித் துணிச்சலாகச் சொல்லி விட்டாலும்
உன்னை நாங்கள் இவ்வளவிலே விட்டுப்போவோமா? உனக்கு நன்மை தேடுகை எங்கள் காரியமன்றோ?
யானை தன்தலையில் தான்மண்னை வாரியிட்டுக்கொண்டாலும் பாகன் அதனை ஸோதிக்கக் கடவானன்றோ?
அப்படியே நீயும் அறியாமையாலே உன் தலைக்குத் தீங்குவிளைத்துக் கொண்டாலும் அத்தீங்கைத் துடைத்து
நன்மைபெறுத்த வேண்டியது எமது கடமையாதலால் உன் துணிச்சலை நாங்கள் நிறைவேறவொட்டுவோமோ? என்றார்கள்,

அவர்களை நோக்கிக் கூறுகின்றாள், “அன்னைமீர் எனக்கு நன்மை விளைக்கவேணுமென்ற விருப்பம் உங்களுக்கு
உண்மையாக உண்டாகில், இப்போதே என்னைத் திருவாய்ப்பாயிலே கொண்டு சேர்க்கப்பாருங்கள்,
இதுவே எனக்குற்ற நன்மையாம், மற்றைப்படி நீங்கள் செய்யுமதெல்லாம் எனக்குத் தீமையேகிடீர்! என்கிறாள்.

“என்னை மெய்யே நோக்கப் பார்க்கிறிகோளாகில் தன்னுடையமை பெறுகைக்காகத் தன்னை இரப்பாளனாக்கினவனை
என் கண்ணுக்கு இலக்காகப் பாருங்கோள்“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி அநுஸந்திக்கத் தக்கது.

பாணியாது – கால தாமஸம் செய்யாமல் என்றபடி, பாணித்தல் என்னும் பதத்தை ஆழ்வார்களுள் பெரியாழ்வாரும் இவளுமே பிரியோகித்தனர்.
“பாணிக்கவேண்டா நடமின்“ என்றாரிறே பெரியாழ்வார்திருமொழியில்.

பண்டுபண்டாக்க – “பண்டாக்க“ என்றால் போராதோ? “பண்டுகண்டாக்க“ என்றதற்குக் கருத்தென்? எனில், கேண்மின்.
இப்போதைய என் அவஸ்த்தைக்கு முற்பட்டதான யாதொரு அவஸ்த்தையுண்டோ, அதற்கும் முற்பட்டதான் யாதொரு அவஸ்தையுண்டோ
அல்வவஸ்தையில் நான் எப்படி யிருந்தேனோ அப்படி என்னை இப்போது ஆக்கவிரும்புவீர்களாகில் என்றபடி இதனை விவரிப்போம். –
இப்போதைய அவஸ்தையாவது விரஹாவஸ்தை, இதற்கு முந்திய அவஸ்தையாவது ஸம்ஸலேஷா வஸ்தை,
அதற்கும் முந்திய அவஸ்தையாவது – பகவத்விஷயவாஸனையே தியாமல்அந்யபரமாகப் போது போக்கினகாலம்.
உண்டியே உடையே உகந்திருந்த காலம். அப்போது ஸரீரம வாடாமல் வதங்காமல் மாமைகுன்றாமல் பசுகுபசுகென்றிருக்குமிறே,
நிர்விசாரமாக உண்டுடுத்துத் திரயுங்காலத்திலே மேனி நித்யபுஷ்டமாயிருக்கும்.
பகவத் விஷயத்தில் வாஸனை பண்ணிப் போந்தது முதலாக “ஸம்யோகா விப்ரயோ காந்தா“ என்றபடி
க்ஷணகாலம் ஸம்ஸ்லேஷமும் சிரகாலவிஸ்லேஷமுமாய் வ்யஸநமே மீதூர்ந்து செல்லுகையாலே –
இப்போதைய விரஹாவஸ்தைக்கு முந்தியதான ஸம்ஸ்லேஷா வஸ்தையிலுள்ள நிறத்தை விரும்புவதில் ரஸமில்லையென்று,
அதற்கும் முந்தியதான அந்யபரத்வாவஸ்தையிலிருந்த நிறத்தை விரும்புகிறாளாய்த்து இவ்வளவு அர்த்தங்களையும்

இரண்டு வாக்கியத்திலே அடக்கி அருளிச்செய்தார் பெரியவாச்சான் பிள்ளை,
ஸம்ஸ்லேஷிப்பதற்கு முன்புத்தைப் பூர்த்தி எனக்குண்டாகப் பார்த்திகோளாகில், -கலக்கப்புக்கவன்று தொடங்கி
மெலிவுக்கேயிறே க்ருஷிபண்ணிற்று“ என்று –

என்னிறம் பண்டு பண்டுபோலொக்கும்“ (பெரியதிருமொழி கக.க.கூ) என்ற விடத்தில் வியாக்கி அறப் பண்டுபோலேயாம்,
கலக்கையாகிறது பிரிவுக்கு அங்குரமிறே,
கலந்து பிரிந்து லாபாலாபங்களறியாதே பூர்ணையாயிருந்த போதை நிறம்போலேயாம்“ என்பது அவ்விடத்து அருளிச்செயல்.

தலைமறியும் என்ற வினைமுற்றுக்கும் எழுவாய் வருவித்துக் கொள்ளவேணும்,
உலகளந்தமாயனை ஸேவிக்கப்பெற்றால் என்னுடைய ஆற்றாமை தலைமடங்கு மென்கை.

நாணி யினியோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்-
தாய்மார்கள் இது உனக்கு பழி ஆகுமே -பெண்மை நிறைவுக்கு பாங்கு அல்ல
இனி நாணி ஒரு கருமம் இல்லை -இனி வெட்கப்பட்டு ஒரு பயனும் இல்லை
எல்லாரும் என் செய்தியை அறிந்து கொண்டார்கள்
ஏழூர் புல்லையும் மேய்த்து எட்டூர் தண்ணீரையும் குடித்து வருகிற கொண்டிப் பசுவின் நிலை போன்றது அன்றோ எந்நிலை

பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க யுறுதிர் ஆகில்
பாணியாது -கால தாமதம் இன்றி –
பாணிக்க வேண்டா நடமின் -பெரியாழ்வாரும் இந்த பதத்தை அருளிச் செய்கிறார்
மருந்து செய்து -வேண்டிய பரிகாரங்களை செய்து
பண்டு பண்டு -இப்போது விரஹ அவஸ்தைக்கு முற்பட்ட
சம்ச்லேஷ அவஸ்தை முற்பட்ட
பகவத் விஷய வாசனையே அறியாத தசையில்
ஆக்க யுறுதிர் ஆகில் –இருந்த நிறத்தைப் பெற்றவளாக செய்ய நினைப்பீர்கள் ஆகில் –
பண்டு பண்டு –
இப்பொழுது விரஹ அவஸ்தை
பண்டு அவஸ்தை -சம்ச்லேஷ அவஸ்தை –
பண்டு பண்டு -அந்ய பரமாக -பகவத் விஷய வாசனையே தெரியாமல் -போது போக்கின அவஸ்தை
உண்டியே உடையே உகந்து இருந்த காலம்
சம்ச்லேஷைக்கு முன்புத்தை பூர்த்தி எனக்கு உண்டாகப் பார்த்தி கோளாகில் –
கலக்க பண்ண அன்று தொடக்கி மெலிவுக்கே இறே றே பண்ணிற்று –
எந்நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும் -பெரிய திருமொழி –
அதில் வியாக்யானம் –
அவன் வாய் புலற்றும் நிறம் அறப் பண்டு போலே யாம்
கலக்கை யாகிறது பிரிவுக்கு அங்குரம் இறே
கலந்து பிரிந்து லாபாபலாபங்கள் அறியாதே
பூர்ணையாய் இருந்த போதை நிறம் போலே யாம் -என்று
பண்டு பண்டு அவஸ்தையிலே தானே
சரீரம் வாடாமல் வதங்காமல் மாமை குன்றாமல் பசகு பசகு என்று இருக்குமே
மேனி நித்ய புஷ்டமாய் இருக்குமே

மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
பெருமானை சேவிக்கப் பெற்றால்
தலை மறியும் -இந்த நோயானது -தலை மடங்கும் –
என்னை மெய்யே நோக்கப் பார்க்கிறீகோள் ஆகில்
தன்னுடைமையை பெறுகைக்காக
தன்னை இரப்பாளான் ஆக்கிக் கொண்டவனை
என் கண்ணுக்கு இலக்காக பாருங்கோள்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்
சத்தியமாக -காப்பாற்ற விரும்புகிறீர்கள் ஆகில்
திருவாய்ப்பாடியிலே கொண்டு சேர்த்து விடுங்கோள்-

—————————————————————————————–

தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனி வழி  போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழி காப்பரிது மாயவன் வந்து உருக்காட்டுகின்றான்
கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற
நந்த கோபாலன் கடைத் தலைக்கே நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின்–12-3-

பதவுரை

தந்தையும்–“தகப்பனாரும்
தாயும்–தாய்மாரும்
உற்றாரும்–மற்றுமுள்ள உறவினரும்
நிற்க–இருக்கும் போது
தனி வழி–(இவள்) தான் தோன்றியாகத் தெருவிலே புறப்பட்டாள்“ என்கிற வார்த்தையானது
வந்த பின்னை–உலகில் பரவின பிறகு
பழிகாப்பு அரிது–அப் பழியைத் தடுப்பது முடியாது (நான் தனி வழி போகாதிருக்கவும் முடியவில்லை, ஏனென்றால்)
நந்த கோபாலன்–நந்த கோபருடைய
கடைத் தலைக்கே–திரு மாளிகை வாசலிலே
மாயவன்–ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையனான கண்ண பிரான்
வந்து–எதிரே வந்து
உரு காட்டுகின்றான்–தன் வடிவைக் காட்டி இழுக்கின்றானே (இப்போது நீங்கள் செய்ய வேண்டிய தென்ன வென்றால்)
கொந்தளம் ஆக்கி பரக்கழித்து குறும்பு செய்வான் ஓர் மகனை பெற்ற–(பெண்களைக்) குடிகெடுத்துக் குறும்பு செய்யும் பிள்ளையைப் பெற்றவனான
நள்ளிருட் கண்–நடு நிசியிலே
என்னை உய்த்திடுமின்–என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்

தாய் தகப்பன்மார் சுற்றத்தார் முதலானோர் இருக்கும்போது, அவர்களைக்கொண்டு தனக்குற்ற நன்மைகளைத்
தேடிக் கொள்ள வேண்டியது தகுதியாயிருக்க, ஒருபெண்பிள்ளை அவர்களையெல்லாம் திரஸ்கரித்துவிட்டுத்
தான் றோன்றியாகத் தானே புறப்பட்டாள் என்று சிலர் பழிக்கத் தலைப்படுவர்க் அப்பழியானது என்னளவிலே நில்லாமல்
இக் குடிக்கே பெருத்த பழிப்பாய்த்தலைக்கட்டும். அப்போது இப்பழியைப் பரிஹரிக்க நீங்கள் முயலாதிருக்கப்போகிறதில்லை.
ஆனால் அப்போது உங்களுடைய முயற்சி பயன்படமாட்டாது. பழிவிளைவதற்கு முன்னே
அதனைப் பரிஹ்ஹரிக்கப் பார்க்கவேணுமேயல்லது பழிவிளைந்து பரவினபின்பு அது பரிஹரிக்கப்போமோ?
பழிவிளைவதற்கு ப்ரஸக்தியில்லாமல் அடங்கியிருக்க என்னால் முடியிவில்லை,
இப்படிப்பட்ட நிலைமையில் நீங்கள் செய்யத்தக்கது யாதெனில், தான்தோன்றியாய் நானாகப்படி கடந்து புறப்பட்டுப்
போனேனென்கிற வார்த்தைக்கு அவகாஸமில்லாதபடி என்னை நீங்களாகவே விரும்பி அழைத்துக்கொண்டுபோய்க்
கண்ணபிரானருகில் சேர்த்துவிடுங்கள், அப்படிச் செய்யுமளவில் என் மநோரதமும் நிறைவேறி நானும் வாழ்ந்தேனாகிறேன்,
நீங்களும் புகழ்பெற்றுப் போகிறீர்கள். பழிக்க நினைப்பார்க்கும் அவகாஸமில்லாமே போகிறது.
இந்த ஔசித்யத்தை நீங்கள் நன்று கண்டறிந்து இப்படிச் செய்து முடிப்பீர்களென்று நம்பியே நான் விரைந்து புறப்படாதே நிற்கின்றேன் என்கிறாள்.

தாய் தகப்பனார் முதலானவர்களைத் திரஸ்கரித்தாகிலும் தான் புறப்பட்டுப்போயே தீரவேணுமென்கைக்குக்
காரணஞ்சொல்லுகிறாள் மாயன்வந்து உருக்காட்டுகின்றான் என்று, என்னைக் கண்ணபிரானுடைய திருவுருவம்
கொள்ளைகொள்ள நிற்கும்போது உங்களைப்பார்த்து நான் எங்ஙனே ஆறியிருப்பேன் என்கிறாள்போலும்.
கண்ணபிரானுடைய வேணுகானம் செவிப்பட்ட போது
“கோவலர் சிறுமியரிளங்கொங்கை குதுகலிப்ப உடலுளவிழ்தெங்கும் காவலுங்கடந்து கயிறாமாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே“ என்றபடி
பெண்களெல்லாரும் பதறி ஓடினபடி உங்களுக்கு தெரியாதா, நானும் அப்படிக்காவல்கடந்து ஓடவேணுமென்று உங்களுக்கு ஆசையா? என்கிறாள்போலும்.

தன்னைக் கொண்டுபோய் விட வேண்டுமிடத்தைக் கூறுகின்றாள் பின்னடிகளில்.
* மச்சொடு மாளிகையேறி மாதர்கள் தம்மிடம்புக்குக், கச்சொடு பட்டைக்கிழித்துக் காம்புதுகிலவை கீறி,
நிச்சலுந்தீமைகள் செய்பவனாய்,
* ஆற்றிலிருந்து விளையாடுவோர்களைச் சேற்றாலெறிந்து வளை துகில் கைக்கொண்டு,
காற்றில் கடியனாய் ஓடி நந்தகோபாலனுடைய திருமாளிகை வாசலிலே என்னைக் கொண்டுபோய்ப் படுக்கவையுங்களென்கிறாள்.
நந்தகோபாலன் கடைத்தலையென்றால் வைத்யர்களின் வீட்டுவாசல்களில் நோயாளிகள் படுகாடுகிடக்குமாயோலே
கண்ணபிரானால் புண்பட்ட பெண்கள் படுகாடு கிடக்குமிடமென்று ப்ரஸித்தமாயிருக்கும்“ என்று பட்டரருளிச்செய்வராம்.

“கொந்தளம் – சிலுகிடுகை, பரக்கழிகை – பழிவிளைக்கை“ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி அதாவது –
“கண்ணன் பெண்களைப் புண்படுத்தினவாறு என்னே!“ “நோவுபடுத்தினவாறு என்னே“ என்று அனைவரும்
மனம் நொந்து பழிக்கும்படிக்கீடான குறும்புகளைச் செய்யுமவனென்கை.

நள்ளிருட்கணென்னையும்த்திடுமின் – நாலுபேர் கண்ணிலே தென்படும் படியான மையத்திலே நீங்கள் என்னை அங்கே
கொண்டுபோனால் அவன் தாய் தங்கையர்க்கு வெட்கப்பட்டு முகம்நோக்காதேயிருப்பன்,
ஆதலால் ஒருவர்க்கும் வெள்காமல் உடனே அவன் எனை அணைக்கும்படி நடுநிசியிலே கொண்டு போங்கள் என்கிறாள்.

தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனி வழி போயினாள் என்னும் சொல்லு
தாய் தகப்பனார் சுற்றத்தார் முதலானோர் இருக்கும் போது
அவர்களைக் கொண்டு நன்மைகளை தேடாமல்
தான் தோன்றியாக புறப்பட்ட பழி
இக்குடிக்கே பெரும் பழியாய் விடும்

வந்த பின்னைப் பழி காப்பரிது-
அந்த சொல் வந்த பின் காப்பது அரிது
பழி விளைய பிரசக்தி இல்லாமல் அடங்கி இருக்க என்னால் முடிய வில்லை
நீங்களே விரும்பி என்னை அழைத்துக் கொண்டு போய் கண்ணபிரான் இடம் சேர்த்து விடுங்கோள்
நானும் வாழ்ந்தேன் ஆவேன்
நீங்களும் புகழ் பெற்றீர்கள் ஆவீர் –

பழி வந்தாலும் தான் புறப்பட்டு போக காரணம் அருளுகிறாள் மேல்
மாயவன் வந்து உருக்காட்டுகின்றான் கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர் மகனைப் –
மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்கு
கச்சோடு பட்டைக் கிழித்து காம்புதுகிலவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்பவனாய்-
ஆற்றிலிருந்து விளையோடுவோர்களை சேற்றால் எறிந்து
வளை துகில் கைக் கொண்டு
காற்றில் கடியனாய் ஓடி அகம் புகுவானாய்
இப்படி தீமைகள் செய்து திரிபவனாய் உள்ள மகனை –

பெற்ற நந்த கோபாலன் கடைத் தலைக்கே நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின்
பெற்ற நந்த கோபாலனுடைய திரு மாளிகை வாசலிலே
என்னைக் கொண்டு போய் படுக்க வையுங்கோள் –

கடைத்தலை –
வைத்தியர்கள் வாசலில் நோயாளிகள் படுகாடு கிடக்குமா போலே
கண்ணபிரானால் புண்பட்ட பெண்கள் படுகாடு கிடக்கும் இடம் பிரசித்தம் இறே -என்று பட்டர் அருளிச் செய்வர் –

கொந்தளம் -சிலுசிடுகை
பரக்கழிக்கை -பழி விளைக்கை -அதாவது
கண்ணன் பெண்களை புண் படுத்தினவாறு என்னே
நோவு படுத்தினவாறு என்னே -என்று
அனைவரும் மனம் நொந்து பழிக்கும் படிக்கு ஈடான
குறும்புகளை செய்யுமவன் -என்கை –

நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின் –
நாலு பேர் கண்ணிலே தென் படும் சமயத்திலே அங்கெ கொண்டு போனால்
அவன் தாய் தந்தையருக்கு வெட்கப் பட்டு
முகம் நோக்காதே இருப்பன்
ஒருவருக்கும் வெள்காமல் உடனே என்னை அணைக்கும் படி நடு நிசியிலே கொண்டு போங்கள் -என்கிறாள் –

—————————————————————————————————–

அங்கைத் தலத்திடை யாழி கொண்டானவன் முகத்தன்றி விழியேன் என்று
செங்கச்சுக் கொண்டு கண்ணாடை யார்த்துச் சிறு மானிடவரைக் காணில் நாணும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–12-4-

பதவுரை

அம் கைத்தலத்திடை–அழகிய திருக்கைத் தலத்திலே
ஆழி கொண்டானவன்–திரு வாழியை ஏந்தி யிருப்பவனான பிரானுடைய
முகத்து அன்றி விழியேன் என்று–முகத்தில் தவிர (மற்ற பேருடைய முகத்தில்) விழிக்க மாட்டேனென்று
செம் கச்சு ஆடை கொண்டு–நல்ல கஞ்சுகமாகிற ஆடையினாலே
கண் ஆர்த்து–கண்களை மூடிக் கொண்டு
சிறு மானிட வரை காணில் நானும்–க்ஷுத்ர மநுஷ்யர்களைக் கண்டால் வெட்கப்படா நின்ற
கொங்கைத் தலம் இவை–இக் கொங்கைகளை
நோக்கி காணீர்–(தாய்மார்களே!) நீங்கள் உற்று நோக்குங்கள் (இக் கொங்கைகளானவை)
கோவிந்தனுக்கு அல்லால்–கண்ண பிரானைத் தவிர்த்து
வாயில் போகா–மற்றொருவடைய வீட்டு வாசலை நோக்க மாட்டா, (ஆகையாலே)
இங்குத்தை வாழ்வை ஒழிய போய்–நான் இவ்விடத்திலே வாழ்வதை யொழித்து
என்னை எமுனை கரைக்கு உய்த்திடுமின்–என்னை யமுநா நதிக் கரையிலே கொண்டு போட்டு விடுங்கள்.

‘இப்படிப்பட்ட பதற்றம் உனக்கு ஆகாது, சிறிது அடக்கம்வேண்டும்‘ என்று சொன்ன தாய்மார்களை நோக்கிக் கூறுகின்றாள் –
என் கொங்கைகள் படுகிறபாட்டைப் பாருங்கள், ‘கையுந்திருவாழியுமான அழகுபொலிந்து, நின்ற கண்ணபிரானுடைய
முகத்தை நோக்குவோமேயன்றி மற்று எவரையும் நோக்கமாட்டோம்‘ என்று திண்ணிதாக
ஸங்கல்பஞ செய்துகொண்டு சிவந்த கச்சினால் கண்ணை மறைத்துக்கொண்டு க்ஷுத்ர மநுஷ்யர்களைக் கண்டால்
நாணிக்கிடக்கின்ற இம்முலைகளைக் கொண்டு நான் எங்ஙனே ஆற்றுவேன்?
கோவிந்தனுடைய வீட்டுவாசலிலே புகுந்தாலன்றித் தரிக்கமுடியாது இவற்றுக்கு,
“விழிக்குங் கண்ணிலேன் நிண்கண் மற்றல்லால் வேறொருவரோடு என்மனம் பற்றாது“ என்றும்
“மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்“ என்றும் ஸங்கல்பித்துக்கொண்டிருக்கிற இவற்றுக்கு நான் என்ன ஸமாதாநம் கூறுவேன்?
ஆகையாலே இங்கு நின்றும் என்னைக் கொண்டுபோய் யமுனைக்கரையிலே எறியுங்களென்கிறாள்.
* தூயபெருநீர்யமுனைத் துறைவனோடே ஜலக்ரீடைபண்ணி விளையாட மநோரத்திக்கிறாளாய்த்து.

“கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா“ என்றவிடத்திற்கு வியாக்கியானம் –
“பசுக்களின் பின்னே போய்த் தீம்பிலே கைவளரும் க்ருஷணனுக்கல்லது,
வழியே போய் வழிவந்து ஏகதார விரதனாயிருக்ம் சக்ரவர்த்தி திருமகனுக்கு வழிபோகாது.“ என்று.

இப்படிப் பட்ட பதற்றம் உனக்கு ஆகாது
அடக்கம் வேணும் -என்ற தாய்மார்களைப் பார்த்து
என் கொங்கைகள் படும் பாட்டைப் பாரீர் -என்கிறாள்
அங்கைத் தலத்திடை யாழி கொண்டானவன் முகத்தன்றி விழியேன் என்று
கையும் திரு ஆழி யுமான அழகு பொலிந்து நின்ற கண்ணபிரான் உடைய
திரு முகத்தை நோக்குவோமே அன்றி
மற்று எவரையும் நோக்க மாட்டோம் -என்ற திண்ணிய சங்கல்பம் கொண்டு

செங்கச்சுக் கொண்டு கண்ணாடை யார்த்துச் சிறு மானிடவரைக் காணில் நாணும்
சிவந்த கச்சினால்
கண்ணை மறைத்துக் கொண்டு
சூத்திர மனுஷ்யர்களைக் கண்டால் நாணிக் கிடக்கின்ற

கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா
இம் முலைகளைக் கொண்டு நான் எங்கனம் ஆற்றுவேன்
கோவிந்தன் உடைய வீட்டு வாசலில் புகுந்தால் அன்றி
தரிக்க முடியாது இவற்றுக்கு
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால் வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது -என்றும்
மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -என்றும்
சங்கல்ப்பித்துக் கொண்டு இருக்கிற இவற்றுக்கு
நான் என்ன சமாதானம் கூறுவேன் –

கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா –
பசுக்களின் பின்னேபோய்
தீம்பிலே கை வளரும் கிருஷ்ணனுக்கு அல்லது
வழியே போய் வழி வந்து
ஏக தார வரதனாய் இருக்கும்
சக்கரவர்த்தி திருமகனுக்கு வழி போகாது –

இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின் –
ஆகையால்
இங்கு நின்றும் என்னைக் கொண்டு போய்
யமுனைக் கரையிலே எறியுங்கோள் -என்கிறாள்
தூய பெருநீர் யமுனைத் துறைவனோடு ஜலக்க்ரீடை பண்ணி விளையாட மநோ ரதிக்கிறாள்-

————————————————————————————————

ஆர்க்கும் என் நோய் இது அறியல் ஆகாது அம்மனைமீர் துழிதிப் படாதே
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைக் கண்ட யோகம் தடவத் தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–12-5-

பதவுரை

அம்மனைமீர்–தாய்மார்களே!
என்–என்னுடைய
இது நோய்–இந்த வியாதியானது
ஆர்க்கும்–எப்படிப்பட்ட ஞானிகளுக்கும்
அறியல் ஆகாது–அறிய முடியாத்து, (ஆனால்)
துழதிப்படாதே–(இது அப்படிப்பட்ட நோயா! என்று) நீங்கள் துக்கப்படாமல்,
நீர் கரை நின்ற–காளிங்க மடுவின் கரையிலிருந்த
கடம்பை ஏறி–கடம்ப மரத்தின் மேல் ஏறி (அங்கிருந்து)
காளியன் உச்சியில்–காளிய நாகத்தின் படத்தின் மேலே
நட்டம் பாய்ந்து–ஒரு நர்த்தன வகையாகப் பாய்ந்து
போர் களம் ஆக–அப்பொய்கை தானே யுத்தக் களமாம்படியாக
நிருத்தம் செய்த–நர்த்தனம் செய்யப் பெற்ற
பொய்கை கரைக்கு–மடுவின் கரையிலே
என்னை உய்த்திடுமின்–என்னைக் கொண்டு போய்ப் போடுங்கள்.
கார் கடல் வண்ணன் என்பான் ஒருவன்–நீலக் கடல் போன்ற திரு நிறத்தனான கண்ணபிரான்
தடவ–(தனது திருக் கைகளால் என்னைத்) தடவுவானாகில்
தீரும்–(இந் நோய்) தீர்ந்து விடும்
கை கண்ட யோகம்–(இது தான்) கை மேலே பலிக்கக் கூடிய உபாயம்.

‘நோவு இன்ன தென்றுணர்ந்து அதுக்குத் தகுதியாகவன்றோ பரஹாரம் பண்ண வேணும்,
யமுனைக்கரையிலே கொண்டு போட்டுவிட்டால் என்ன பரிஹாரம் செய்யப்பட்டதாகும்?
இவளோ பித்தம் பிடித்தவள் போலவாய் வந்தபடி சொல்லுகிறாளே,
இவளுடைய உண்மையான நோய் இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே!‘ என்று
வருத்தப்படத் தொடங்கின தாய் மார்களை நோக்கிக் கூறுகின்றாள் –

அம்மணைமீர்! நீங்கள் என்னுடைய நோயை அறிந்து பரிஹரிக்கவா பார்க்கிறீர்கள்?, என்நோய் உங்களால் அறியக்கூடிய தன்று,
இந்நோயை விளைத்தவனுக்கும் இது இவ்வளவென்று பரிசோதிக்கமுடியாது, ஆதலால் இந்தநோய்க்காக நீங்கள் துக்கப்படவேண்டா,
நான் சொல்லுகிறபடியே பரிஹரிக்கப்பார்ப்பதே உங்களுக்கு நன்றாம், நான் சொல்லு முபாயம் வயபிசரித்துப்போகக்கூடியதன்று,
கைகண்டவுபாயமாய்த்து நான் சொல்லுவது,

அஃது என்னவுபாயமென்றால்,
கடல் வண்ண்ணான கண்ணபிரான் தனது திருக்கையாலே என்னைத் தடவிக்கொடுக்கு மத்தனையே வேண்டுவது,
அவ்வளவிலே எனது நோய் தீர்ந்துவிடுங்காண்மின், ஆகையாலே என்னை இங்கு நின்றுங்கொண்டுபோய்,
அக்கண்ணபிரான் காளியனுச்சியிலே நடனஞ்செய்யப்பெற்ற இடமாகிய பெய்கையின் கரையிலே என்னைச் சேர்த்துவிடுங்களென்றாள்.
காளியனுச்சியிலே கூத்தாடின இளைப்பு ஆறும்படி அவனை முலைத்தடங்களாலே அணைத்து விடாயாற்றவேணுமென்று மநோரதிக்கிறாள்போலும்.

துழதிப்படுதல் – துக்கப்படுதல். “கார்க்கடல்வண்ண னென்பானொருவன் தடவத்தீரும், (இது) கைகண்டயோகம்“ என்று அந்வயம்,
யோகமாவது உபாயம். நட்டம் – ‘நாட்பம்‘ என்றவடசொல் நட்டமெனத்திரிந்தது, ‘ந்ருத்தம்‘ என்றவடசொல்லின் திரிபாகவுமாம்.
ந்ருத்தமென்பது நிருத்தமென்றும் நட்டமென்றும் திரியக்கூடும். பொய்கை – யமுனையாற்றில் ஓர் பகுதி.

நோவு இன்னது என்று உணர்ந்து தகுதியாக பரிஹாரம் பண்ண வேண்டுமே
இவளுடைய உண்மையான நோய் இன்னது என்று விளங்க வில்லையே -என்று வருத்தப் படத் தொடங்கின
தாய்மார்களை நோக்கி
ஆர்க்கும் என் நோய் இது அறியல் ஆகாது அம்மனைமீர் துழிதிப் படாதே
அம்மனைமீர்
என் நோய் உங்களால் அறியக் கூடியது அன்று
இந் நோயை விளைத்தவனுக்கும்
இது இவ்வளவு என்று பரிச்சேதிக்கப் போகாது
ஆனால் இந்த நோய்க்காக நீங்கள் துக்கப் பட வேண்டா –

துழதிப் படுதல்
துக்கப் படுதல்

நான் சொல்லுகிற உபாயம் உங்களுக்கு நன்றாம் -கை கண்ட யுபாயம்
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைக் கண்ட யோகம் தடவத் தீரும்
கடல் வண்ணனான கண்ணபிரான் தனது திருக்கையால்
என்னைத் தடவிக் கொடுக்கும் இத்தனையே
வேண்டுவது
அவ்வளவிலே எனது நோய் தீர்ந்து விடும் காண் –

நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக

நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின் –
ஆகையால் என்னை இங்கு நின்றும் கொண்டு போய்
அக் கண்ணபிரானால் காளியன் உச்சியில் நடனம் செய்யப்
பெற்ற இடமாகிய
பொய்கையின் கரையிலே என்னைச் சேர்த்து விடுங்கோள்-
கூத்தாடின இளைப்பு ஆறும்படி
முலைத் தடங்களால் அணைத்து
விடாய் ஆற்ற வேணும் -என்று மநோ ரதிக்கிறாள்

கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் தடவத் தீரும்
இது கை கண்ட யோகம் -என்று அந்வயம்
யோகம் -உபாயம்
பொய்கை -யமுனை ஆற்றில் ஒரு பகுதி-

————————————————————————————————

கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே யென்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –12-6-

பதவுரை

கார்–வர்ஷா காலத்தி லுண்டான
தண்–குளிர்ந்த
முகிலும்–மேகமும்
கருவிளையும்–கருவிளைப் பூவும்
காயா மலரும்–காயம் பூவும்
கமலம் பூவும்–தாமரைப் பூவுமாகிற இவைகள்
வந்திட்டு–எதிரே வந்து நின்று
இருடீகேசன் பக்கல் போகு என்று என்னை ஈர்த்திடுகின்றன–“கண்ணபிரான் பக்கலில் நீயும்போ“ என்று
என்னை வலிக்கின்றன. (ஆகையாலே)
பத்தவிலோசனத்து–பக்தவிலோச்நமென்கிற ஸ்தானத்திலே
வேர்த்து–“பசுமேயக்கிற ச்ரமத்தாலே வேர்வை யடைந்து
பசித்து–பசியினால் வருந்தி
வயிறு அசைந்து–வயிறு தளர்ந்து
வேண்டு அடிசில் உண்ணும் போது ஈது என்று–வேண்டிய ப்ரஸாதம் உண்ண வேண்டிய காலம் இது என்று
பார்த்திருந்து–(ரிஷி பத்னிகளின் வரவை) எதிர்பார்த்திருந்து
நெடு நோக்குக் கொள்ளும்–நெடுங்காலம் கடாக்ஷித்துக் கொண்டிருக்குமிடமான
உய்த்திடுமின்–(என்னைக்) கொண்டு சேர்த்து விடுங்கள்.

கறுத்துக் குளிர்ந்த மேகங்களும் கருவிளைப் பூவும் காயாம் பூவும் கண்ணபிரானுடைய திருமேனிக்குப்
போலியாயிருக்கின்றமையாலும் தாமரைப்பூக்கள் அப்பிரானுடைய திவ்யாவயவங்களுக்குப் போலியாயிருக்கின்றமையாலும்
அந்த மேகம் முதலியவற்றைக் காணும்போதே கண்ணபிரானுடைய ஸ்மரணம் அவர்ஜநீயமாகி அப்போதே
அவனைச்சென்று சேரவேணுமென்கிற குதூஹலம்கிளர்கின்றபடியை ஒரு சமத்காரமாகப் பேசுகிறாள் முன்னடிகளில்.

“ஒக்குமம் மானுருவமென்று உள்ளம் குழைத்து நாணாளும், தொக்க மேகப் பல்குழாங்கள்
காணுந்தோறும் தொலைவன் நான்“ என்ற திருவாய்மொழியும்,
“பூவையு“ காயாவும் நீலமும் பூக்கின்ற காவிமலரென்றுங் காண்டோறும் -பாவியேன், மெல்லாவி மெய்ம்மிகவே பூரிக்கும்,
காவிமலர் என்றுங்காண்டோறும் -பாவியேன், மெல்லாவி மெய்ம்மிகவே பூரிக்கும், அவ்வவையெல்லாம் பிரானுருவேயென்று.“
என்ற பெரியதிருவந்தாதியும் இங்கு அநுஸந்திக்கத்தான்.

பக்தவிலோசந மென்கிற புண்யதேஸத்திலே தன்னைக்கொண்டுபோய்விட வேணுமென்கிறாள் பின்னடிகளில்
ஒருநாள் கண்ணபிரானும் பலராமனும் பசுகளுடன் இடையர்களுடன் யமுனையாற்றின் கரையிலே சென்று நெடும்போது
பசுக்களை மேய்த்துக் களைத்து ஆற்றங்கரையில் ஓரிடத்திலே உட்கார்ந்தவளவில், இடைப்பிள்ளைகள் எல்லாரும்
க்ருஷ்ண பலராமர்களை நோக்கி தங்களுடைய பசியின் கொடுமையைக் கூறி
‘இப்போதே நீங்கள் இப்பசியைப் போக்கியருள வேணும்‘ என்று மிக்க ஆர்த்தியுடன் பிரார்த்திக்க,
அவர்களுடைய பரிதாபத்தையறிந்த கண்ணபிரான்‘ ‘ஓ பிள்ளைகளே! ஸமீபத்தில் சிலமஹர்ஷிகள் ஆங்கிரஸ மென்னும் வேள்வியை
அநுஷ்டித்துக்கொண்டிருக்கிறார்கள், நீங்கள் அவர்களிடம் போய் என்பெயரையும் என்தமையனார் பெயரையும் சொல்லி,
இன்னாரால் நாங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றோமென்று கூறி அன்னம் விரும்புங்கள், பசிதீரும்‘ என்று கட்டளையிட்டனுப்பினான்,

அவர்களும் அங்ஙனமே அவ்விடஞ்சென்று விநயகத்துடன் இவ்வண்ணம் விண்ணப்பஞ்செய்து அடிசில்வேண்ட,
அவ்வந்தணர்கள் இவ்வாயர்களின் பேச்சை செவிகொடுத்துங்கேளாதொழியவே ஆய்ப்பிள்ளைகள் க்ருஷ்ண பலராமர்களிடம்
மீண்டுவந்து செய்தியைச் சொல்ல, அது கேட்ட கண்ணபிரான் புன்முறுவல் செய்து
‘பிள்ளைகாள்! அந்த மஹர்ஷிகளுடைய தர்மபத்னிகள் இருக்கிறார்களே, அவர்களிடஞ்சென்று நானும் பலராமனும்
இங்கே இருப்பதாகச் சொல்லி ப்ரஸாதம்கேளுங்கள், அப்பெண்டிர் தவறாதுதந்திடுவர்கள் என்று சொல்லி
அவர்களை ரிஷிபத்தினிகளிடமனுப்ப, உடனே அவர்கள் அவ்விடஞ்சென்று அந்தரிஷிபத்னிகளை நமஸ்கரித்து,
அம்மனைமீர்! இதோ ஸமீபத்தில் கண்ணபிரானும் நம்பி மூத்தபிரானும் பசுக்களை மேய்த்துக் களைத்திருக்கின்றனர்,
அவர்களோடு அநுசரர்களாக வந்த அஸ்மதாதிகளும் களைத்திருக்கின்றோம்,
எல்லாரும் பசிதீர்ந்து மகிழும்படி ப்ரஸாதம் தரவேணும் எனவேண்ட,

அப்பெண்டிர்கள் ஸ்ரீக்ருஷ்ணநாமஸ்ரவண மாத்ரத்திலே பரமாநந்தடைந்து உடம்புமயிர்க்கூச்செறிந்து உடனே
பக்ஷ்யம், போஜ்யம், லேஹ்யம், சோஷ்யம் -என நான்கு வகைப்பட்ட அன்னவர்கங்களையும் நல்ல நல்ல பாத்திரங்களில்
எடுத்துக்கொண்டு ஸ்ரீக்ருஷ்ண பலராமர்களிருக்குமிடத்தை நோக்கிப் புறப்படுக்கையில் தந்தையார் தாய்மார் மக்கள் உடன்பிறந்தார்
பார்த்தாக்கள் முதலானோர் எவ்வளவுதடுத்தும் அவர்களுடைய தடைக்கு உடன்படாதாராய் நிலைநின்ற
பக்தி நிஷ்டையையுடையவர்களாய் விரைந்து வந்து யமுனையாற்றங்கரைச்சோலையிலே
நம்பி மூத்தபிரானையும் கண்ணபிரானையும்ஸேவித்து, கொணர்ந்த அந்நவர்க்கங்களை ஸமர்ப்பித்துவிட்டுப்
பரமாநந்த பூரிதர்களாய் மீண்டுசென்றனர்.
அவ்வடிசிலைக் கண்ணபிரான் அவ்வாயர் பிள்ளைகளுக்குத் தந்து தானும் அமுதுசெய்தான் – என்ற வரலாறு
ஸ்ரீபாகவதத்தில் தஸமஸ்கந்தத்தில் இருபத்து மூன்றாமத்யாயத்தில் விரிவாகக் காணத்தக்கது.

ரிஷபத்தின் இவ்வண்ணமாக அடிசில் கொணந்துகொடுத்தது ஒருநாளேயல்ல, நாடோறும் கண்ணபிரான்
யமுனையாற்றங்கரைச் சோலைகளிலே வந்து ஆநிரைமேய்த்துக் களைத்துப்போகிறளென்றுணர்ந்த
அப்பெண்டிர் நெடுநாள்வரையில் நாடோறும் பகலில் உச்சிவேளையில் கொணர்ந்து கொடுத்துக்கொண்டிருந்தார்களென்றும்,
ஒவ்வொருநாளும் அவர்கள் அடிசில் கொணரும் மையத்துக் குச்சரியாகக் கண்ணபிரானும் களைப்புடன் அவ்வடிசிலை எதிர்பார்த்து
அத்திக்கையை நோக்கியிருப்பனென்றும் இப்பாட்டின் ப்ரஸங்கத்திலே அழகிய மணவாளச்சீயர் உபந்யஸித்தருளும்படி.

“வேண்ட்டிசிலுண்ணும்போது ஈதென்று பார்த்திருப்பது நெடுநோக்குக் கொள்ளும் பத்தவிலோசனம்“ –
‘நமக்கு ரிஷிபத்நிகள் ப்ரஸாதம் கொண்டு கொடுக்கும்வேளை அணுகிற்று‘ என்று அத்திசையை நோக்கி
நெடிதாகக் சூர்ணிகையின் வியாக்கியானம் காண்க.

பத்தவிலோசனம் – “***“ பக்தமென்ற வடசொல்லுக்கு அன்னமென்றுபொருள்,
விலோசனமென்பதற்குப் பார்வையென்று பொருள், சோறு பார்த்திருக்குமிடமென்றதாயிற்று.

கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
கார் காலத்திலே குளிர்ந்த முகிலும்
கருவிளைப்பூவும்
காயா மலரும் –
மேகத்தை திருஷ்டாந்தமாகச் சொல்லப் புக்கவள் -ஒன்றும் போராமையாலே பலவற்றிலேயும் கதிர் பொறுக்குகிறாள் –
அவயவ சோபைக்கு-கமலப் பூவையும் சொல்கிறாள் –

ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு –
பற்றி இழா நின்றன –
ஏன் சொல்லி என்னில் –

இருடீகேசன் பக்கல் போகே யென்று
லஷ்மணே ந கதாம் கதிம் -என்கிறபடியே –
கரணங்கள் உடையவன் பக்கலிலே போனால் அவற்றின் பின்னே போகை இ றே உள்ளது
யச்யாத்மா சரீரம் -அன்றோ -கரணாதி பாதிப -எண்ணக் கடவது இ றே
பரம சேஷியைக் கண்டால் பின்னை த்வார சேஷிகள்-
ஹ்ருஷீகம் -இந்த்ரியங்கள் -அவற்றுக்குத் தலைவன் ஹ்ருஷீ கேசன் என்றபடி அளவில் நில்லாது இ றே அவை –

வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று பார்த்திருந்து-
நானே சென்று முறை கெடப் பற்றினேன் ஆகாமே பாருங்கோள்
என் செல்லாமை பரிஹரிக்கைக்கா அன்றிக்கே அவன் செல்லாமை பரிஹரிக்க போனேனாம் படி பண்ணப் பாருங்கோள் –
வேர்த்து –
பசுக்களைக் கொண்டு போனால் காதம் இரு காதம் அவ்வருகே கை கழிய விட்டு
அங்கே ரிஷிகளுடைய ஆஸ்ரமங்க ளிலே சேமம் -தளிகை -வேண்டிவிட்டு -அவர்கள் க்ரியா பிரதானராய் இருந்த வாறே
பத்நீ சாலைகளிலே வேண்டிப் போக விடும்
அவர்கள் சேமம் கொடுத்து விட்டால் அதின் வடிவு பார்த்து திருமேனி எங்கும் வேர்த்துப் பசித்து தடுமாறி -இதனால் வேண்டி அடிசில் ஆய்த்து
விரும்பி இட்ட சோறு –
பிரயோஜ நாந்தரர் இடும் அவற்றை குழியிலே கால் கழுவினாரோ பாதி யாகவாய்த்து கொள்வது –
பித்ருக்கள் நிமித்தமாக வரிக்கப் பட்டது போலே இல்லாமல் -தானும் விதி ப்ரேரிதனாகக் கொள்ளும் என்றபடி
பெரியாழ்வார் பெண் பிள்ளை இடுமது போலே -இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில்-நான் ஓன்று நூறாயிரமாகக்
கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -9-7–என்னுமா போலே
பெரியாழ்வார் மகளாய் இழந்து இராதே ஒரு பட்டை சோற்றை கொண்டு போயாகிலும் கிட்டுவோம் -என்கிறாள்-

நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –
பத்தாம் -சமைத்த சோறு –விலோசனம் -பார்வை
சோறு பார்த்து இருந்த இடமாய்த்து
சோறு பார்த்து இருக்கும் இடத்திலே -என்றபடி –

—————————————————————————-

வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானமிலாமையும் வாய் வெளுப்பும்
உண்ணல உறாமையும் உள் மெலிவும் ஓத வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணம் துழாய் எனும் மாலை கொண்டு சூட்டத் தணியும் பிலம்பன் தன்னை
பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின்–12-7-

பதவுரை

வண்ணம் திரிவும்–(என்னுடைய) மேனி நிறத்தின் மாறுபாடும்
மனம் குழைவும்–மனத் தளர்ச்சியும்
உண்ணல் உறாமையும்–ஆஹாரம் வேண்டியிராமையுமும்
உள் மெலிவும்–அறிவு சுருங்கிப் போனதுமாகிய இவை யெல்லாம் (எப்போது தணியுமென்றால்)
ஓதம் நீர் வண்ணன் என்பான் ஒருவன்–கடல் வண்ண னென்று ப்ரஸித்தனாய் விலக்ஷணனான கண்ண பிரானுடைய
தண் அம்துழாய் என்னும் மாலை கொண்டு சூட்ட–குளிர்ந்து அழகிய திருத்துழாய் மாலையைக் கொண்டு வந்து சூட்டுமளவில்
தணியும்–நீங்கும்,
(அத்திருத்துழாய் மாலை உங்களால் இங்கே கொண்டு வந்து கொடுக்க முடியாதாகில்)
மானம் இலாமையும்–மானம் கெட்டுப் போனபடியும்
வாய் வெளுப்பும்–வாய் வெளுத்துப் போனபடியும்
பலதேவன்–பலராமன்
பிலம்பன் தன்னை–ப்ரலம்பாஸுரனை
பண் அழிய–ஸந்தி பந்தங்கள் உருக் குலையும்படி,
வென்ற–கொன்று முடித்த இடமாகிய பாண்டி வடத்து
பாண்டீரமென்னும் –ஆலமரத்தினருகில்
என்னை உய்த்துடுமின்–என்னைக் கொண்டு போய்ச் சேர்த்திடுங்கள்.

புதிதாகவந்த சிலபெண்பிள்ளைகள் ஆண்டாளுடைய அதிமாத்ரமான வைவர்ணியம் முதலியவற்றை உற்று நோக்கி
‘அம்மா! உனக்கு இந்தவிகாரங்களெல்லாம் என்றைக்குத்தீரும்? என்னசெய்தால் தீரும்? பலவகைப்பட்ட விகாரங்களை அடைந்திட்டாமே,
என்ன செய்தாலும் இந்தவிகாரங்கள் தீரமாட்டாதவை போலிருக்கின்றனவே!,
உனக்கேற்ப ஏதாகிலுமுபாயம் தெரிந்தால் சொல்லிகாண்‘ என்ன,

‘கண்ணபிரானுடைய திருத்துழாய்மாலையைக் கொண்டுவந்து சூட்டினால் இவ்விகாரங்களெல்லாம் தணிந்துவிடும் என்று இவள் சொல்ல,
அவனுடைய திருத்துழாய்மாலை எங்கள் கையில் எளிதாகக் கிடைக்குமோ? அதனை நாங்கள் எங்ஙனே கொண்டு வரக்கடவோம்? என்று
அப்பெண்கள் திகைத்து நிற்க, அஃது அரிதாகில் என்னை அப்பெருமானது திருவடிவாரத்திலேகொண்டு போய்ச் சேர்த்துவிடுங்கள்‘ என்கிறாள்.

பலராமனாற்செய்யப்பட்ட ப்ரலம்பாஸுரவத்தைக் கண்ணபிரான்றானே செய்தருளியதாகக் கூறுதலுமுண்டு,
தேனுகன் பிலம்பன் காளியனென்றும் “கருளுடைய பொழில்மருதுங் கதக்களிறும் பிலம்பனையுங் கடியமாவும்“ என்ற
பெரியாழ்வார் திருமொழிகாண்க.
உண்மையில் பலராமன் செய்த இச்செய்தியைக் கண்ணபிரான் செய்ததாகக் கூறுதல் ஒற்றுமை நயம் பற்றியாம்.
ஸ்ரீராமாவதாரத்தில் இளையபெருமாள் செய்த சூர்ப்பணகா பங்கத்தை ஸ்ரீராமபிரான்தானே செய்ததாக
ஆழ்வார்கள் அநுஸந்திப்பதும் இங்ஙனமேயாம்.
“சூர்ப்பணகாவைச் செவியொடுமூக்கு அவளார்க்க வரிந்தானைப்பாடிப்பற அயோத்திக்கரசனைப்பாடிப்பற“ இத்யாதிகள் காண்க.

“இளைய பெருமாள் இந்த்ரஜித் வதம் பண்ண, அந்தவெற்றி பெருமாளுடைய தானாப்போலேயாய்த்து இங்கும்,
நம்பிமூத்தபிரானுடைய வெற்றியும் க்ருஷ்ணனதாயிருந்ததிறே. அவன் வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் பண்ணி
மாலையிடும் போது அவன் தனியேநில்லாமே நானும் ஒக்கநின்று மாலையிடும்படியாக
என்னை அங்கே கொடுபோய்ப் பொகடுங்கோள்“ என்றவியாக்கியான ஸ்ரீஸூக்திநோக்கத்தக்கது.

ப்ரலம்ப என்ற வடசொல் பிலம்பன் எனத்திரிந்தது, பாண்டீரவடிமென்ற வடசொல் பாண்டிவடமெனத்திரிந்தது.
யமுனையாற்றின் ஸமீபத்தில் பெரிய ஆலமரமொன்று உள்ளவிடத்திற்குப் பாண்டிவடமென்று பெயர் ப்ரலம்பவதம் நடந்த இடமிது.

வண்ணம் திரிவும்
மேனி நிறத்தின் வேறுபாடும்

மனம் குழைவும் –
மனத் தளர்ச்சியும் –

மானமிலாமையும் –
மானம் கேட்டுப் போனபடியும் –

வாய் வெளுப்பும் –
வாய் வெளுத்த படியும் –

உண்ணல உறாமையும்-
ஆகாரம் வேண்டி இராமல் இருக்கும் படியும்

உள் மெலிவும் –
அறிவு சுருங்கிப் போனமையும் –

இவை எல்லாம் எப்போது தணியும் என்றால் –

ஓத வண்ணன் என்பான் ஒருவன் தண்ணம் துழாய் எனும் மாலை கொண்டு சூட்டத் தணியும் –
குளிர்ந்து அழகிய
கண்ணபிரான் உடைய திருத் துழாய் மாலையை
கொண்டு வந்து சூட்டும் அளவில்
இந்த விகாரங்கள் தணிந்து விடும் –
என்று அண்டல் அருள –

அது அரிதாகில்
பிலம்பன் தன்னை பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின் –
பிலம்பாசுரன்
சந்தி பந்தங்கள் உருக் குலையும்படி
பலராமன் கொன்று முடித்த இடமாகிய
பாண்டீரம் என்ற ஆலமரத்தின் அருகிலே என்னைக் கொண்டு போய் சேர்த்து விடுங்கோள் –

தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் –
கருளுடைய பொழில் மருதும் கதக் களிறும் பிலம்பனையும் கடியவுமாம் -பெரியாழ்வார் திருமொழி
ஒற்றுமை நயம் பற்றி கண்ணபிரான் செய்ததாக அருளி –
சூர்பணாகாவை செவியோடு மூக்கு அவளார்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற -போலே –

இளைய பெருமாள் இந்த்ரஜித் வதம் பண்ண
அந்த வெற்றி பெருமாள் யுடையதானால் போலே யாய்த்து இங்கும்
நம்பி மூத்த பிரான் உடைய வெற்றியும் கிருஷ்ணன் உடையதாய்த்து
அவன் வீராபிஷேகமும்
விஜயாபிஷேகமும்
பண்ணி மாலையிடும் போது
அவன் தனியே நில்லாமல்
நாணும் ஒக்க நின்று மாலையிடும்படியாக
என்னை அங்கே கொடு போய் பொகடுங்கோள் –

ப்ரலம்பன்-என்ற வடசொல் பிலம்பன் -ஆயிற்று
பாண்டீரவடம் வடசொல் பாண்டிவடம் திரிந்து
யமுனை ஆற்றின் சமீபத்தில் உள்ள பெரிய ஆலமரம் பாண்டீர வடம்
ப்ரலம்ப வதம் நடந்த ஸ்தானம்-

————————————————————————————————-

கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கோலோ
கற்றன பேசி வசவு உணாதே காலிகளுய்ய மழை தடுத்த
கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்–12-8-

பதவுரை

கன்று இனம்–கன்றுகளின் திரள்கைள
மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான்–மேய்ப்பதையே தொழிலாகப் பெற்றவனுமானான்.
காடு வாழ் சாதியும் ஆக பெற்றான்–(வீட்டை விட்டுக் கழிந்து) காட்டிலேயே தங்கி வாழும்படியான சாதிபிலும் பிறக்கப் பெற்றான்
பற்றி–வெண்ணெய் களவில் பிடிபட்டு
உரலிடை–உரலிலே
ஆப்பும் உண்டான்–கட்டுப்படவும் பெற்றான் (ஸௌலப்ய காஷ்டையான இச் செயல்கள்)
பாலிகாள்–குணத்தையும் குற்றமாகக் கொள்ளும் பாவிகளே!
உங்களுக்கு–உங்களுக்கு
ஏச்சுக் கொலோ–தூஷணத்துக்கோ உடலாயிற்று? (இதுவரையில் நீங்கள் இழிவாகச் சொன்னவை நிற்க இனியாகிலும்)
கற்றன பேசி வசவு உணாதே–நீங்கள் கற்ற கல்விகளைப் பேசி (என்னிடத்தில்) வசவு கேட்டுக் கொள்ளாமல்,
காலிகள் உய்ய மழை தடுத்து–பசுக்கள் பிழைக்கும்படி பெரு மழையைத் தடை செய்து
கொற்றம் குடை ஆக–வெற்றிக் குடையாக
ஏந்தி நின்ற–(கண்ண பிரனால்) தரிக்கப்பட்ட
கோவர்தனத்து–கோவர்த்தன மலையினருகே
என்னை உய்த்திடுமின்–என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்

மற்றுஞ்சிலபெண்கள் ஆண்டாளை நோக்கி, ‘அம்மா! நீ இராமபிரானை ஆசைப்பட்டாலுங் குற்றமில்லை,
மாடுமேய்க்கப் பிறந்த கண்ணனைப்போய் நீ ஆசைப்படாநின்றாய், அவனோ கன்றுகளை மேய்ப்பதற்காக
அவற்றின் பின்னே திரிவானொருசிறுவன், ஒரூரிலே தங்குவதுமில்லாமல் பசுக்களுக்கு நீரும்புல்லுமுள்ளவிடத்தே தங்குவானொருத்தன்,
வெண்ணையைக்களவாடுவதும் நெய்யைக் களவாடுவதுஞ்செய்து உரலிலே பிணிப்புண்டு திண்டாடுமவன்,
அன்னவனைப் பெறுகைக்கோ நீ இப்படிக்கிடந்து துடிக்கிறது? என்று ஏளனமாகச்சொல்ல,

அவர்களைநோக்கிச் சொல்லுகிறாள் அவன் கன்றுகளை மேய்க்கப் பெற்றதும் காடுவாழ்சாதியாகப் பெற்றதும்
உரலிடை ஆப்புண்டதும் குணமாகத்தோற்றவேண்டியிருக்க, உங்களுக்கு இவையெல்லாம் குற்றமாகத் தோற்றுவதற்குக்
காரணம் உங்களுடைய பாவமேயாம், சிறந்தகுணமே உங்களுக்குக் குற்றமாகத் தோற்ற நீங்கள்
சிசுபாலன் பிறந்த முஹூர்த்தத்திலேயோ பிறந்தது? “எத்திற முரலினோடு இணைந்திருந்தேங்கிய எளிவே!“ என்று
ஈடுபடவேண்டிய விஷயம் உங்களுக்கு தூஷணார்ஹமாயிற்றே! இனி நீங்கள் இப்படிப்பட்ட அஸந்தர்ப்பமான
நீசவார்த்தைகளை என் காதில் விழச் சொல்லுவீர்களாகில், நான் வாயில் வந்தபடி உங்களை நிந்தித்துவிடுவேன்.
அப்படி நிந்தனைகளுக்கு நீங்கள் ஆளாகாமல், அன்றொருகால் இந்திரன் ஏழுநாள் விடாமழை பெய்வித்தபோது
அந்த மழையைத்தடுத்து அனைவரையுங்காத்த கோவர்த்தன மலையினருகே என்னைக்கொண்டு போட்டுவிடுங்களென்கிறான்.

மற்றும் சில பெண்கள் ஆண்டாளை நோக்கி
நீ இராமபிரானை ஆசைப் பட்டாலும் குற்றம் இல்லை –
மாடு மேய்க்கப் போன கண்ணனை அன்றோ ஆசைப்பட்டாய்
கன்றின் பின்னே திரியும் சிறுவன்
பசுக்களுக்கு நீரும் புல்லும் இடுவான்
வெண்ணெய் நெய் களவாடி உரலோடு கட்டுப்பட்டு
இப்படிகளிலே ஏளனமாக பேச –
கற்றினம்சில மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான் –
அவன் கன்றுகளை மேய்க்கப் பெற்றதும்
காடு வாழ் சாதி யாகப் பெற்றதும்

பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கோலோ
உரலிடை ஆப்புண்டதும்
குணமாக தோற்ற வேண்டி இருக்க
உங்களுக்கு இவை எல்லாம் குற்றமாகத் தோற்றக் காரணம்
உங்களுடைய பாவமே யாம் –
நீங்களும் சிசுபாலன் பிறந்த முஹூர்த்தத்திலே யோ பிறந்தது
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -என்று ஈடுபட வேண்டிய விஷயம்
உங்களுக்கு தூஷண அர்ஹமாயிற்றே

கற்றன பேசி வசவு உணாதே காலிகளுய்ய மழை தடுத்த
கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்
இனி நீங்கள் இப்படிபட்ட அசந்தர்ப்பமான நீச வார்த்தைகளை
என் காதில் விழச் சொல்லுவீர்கள் ஆகில்
நான் வாயில் வந்தபடி உங்களை நிந்தித்து விடுவேன்
அதற்க்கு ஆளாகாமல்
அன்று இந்த்ரன் ஏழு நாள் விடா மழை பெய்வித்த போது
அந்த மழையைத் தடுத்து
அனைவரையும் காத்து அருளிய
கோவர்த்தன மலையின் அருகே என்னைக் கொண்டு போய்
போட்டு விடுங்கோள்

————————————————————————————————

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நமனை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–12-9-

பதவுரை

கிளி–(நான் வளர்த்த) கிளியானது
கூட்டில் இருந்து–கூட்டில் இருந்து கொண்டு
எப்போதும்–ஸதா காலமும்
கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்–கோவிந்தா கோவிந்தா வென்று கூவா நின்றது,
ஊட்டு கொடாது–உணவு கெடாமல் (பட்டினி கிடக்கும்படி)
செறுப்பன் ஆகில்–துன்பப் படுத்தினேனாகில்
உலகு அளந்தான் என்று–உலகளந்த பெருமானே! என்று
உயர கூவும்–உரக்கக் கூவா நின்றது!
(இந்தத் திருநாமங்கள் என் காதில் விழும் போதே என் சரீரம் புறப்படக் கிளம்புகின்றது ஆகையால்)
நாட்டில்–இவ் வுலகில்
தலை பழி எய்தி–பெருத்த அபவாதத்தை ஸம்பாதித்து
உங்கள் நன்மை இழந்து–உங்களுடைய நல்ல பேரைக் கெடுத்துக் கொண்டு
தலை இடாதே–(பிறகு ஒருவரையுமு முகம் நோக்க மாட்டாமல்) தலை கவிழ்ந்து நிற்க வேண்டாதபடி,
சூடு உயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும்–தலை யுயர்ந்த மாடங்களால் சூழப்பட்டு விளங்குகின்ற
துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்–என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்

இவள் விரஹத்தாலே நோவுபட்டிருக்கிற இச்சமயத்தில் இவன் வளர்க்குங் கிளிப்பிள்ளையொன்று இவள் முன்பு
கற்பித்துவைத்த திருநாமத்தைச் சொல்லிகொண்டு இங்குமங்கும் திரியத்தொடங்கிற்று,
‘இதை நாம்யதேச்சமாய்த் திரியும்படியாக விடவேயன்றோ இது கண்ணன் நாம்மேகுழறிக் கொல்லுகின்றது,
இதைப்பிடித்து அடைத்திடுவோம்‘ என்று பார்த்துக்கூட்டிலே யடைத்தாள், அது அங்கேயிருந்து “கோவிந்தா! கோவிந்தா!“ என்று
கூவத்தொடங்கிற்று, அதைக்கேட்ட ஆண்டாள் ‘இது சோற்றுச்செருக்காலேயன்றோ இப்படி சொல்லுகிறது,
சோற்றைக் குறைத்தோமாகில் தன்னடையே தவிருகிறது‘ என்று நினைத்துப் பட்டினியாகவிட்டுவைத்தாள்,
‘ஊணடங்க வீணடங்கும்‘ என்று இவளுடைய நினைவுபோலும். ஆனால் அந்தப்பட்டினியானது. இவளுக்கு விபரீதபலப்ரதமாயிற்று,
அரையர்கள் மிடற்றுக்கு எண்ணெயிட்டுப் பட்டினி கிடந்து மிடற்றில் கனத்தை ஆற்றிப்பாடுவதுபோல
இக்கிளியும் பட்டினிவிட்டதே காரணமாக உயரப்பாடத்தொடங்கிற்று, உலகளந்தான்!“ என்று அதுகூவும் போதை த்வநியைக்கேட்டால்
அவன் அன்றிவ்வுலகமளக்கத் திருவடிகளைப் பரப்பினவிடமெங்கும் இதுவும் தன்மிடேற்றோசையைப் பரவவிடா நின்றதுபோலும்,
அந்தக்கூவுதலைக் கேட்டவாறே நாமே பதறிஓடியாகிலும் அவனைச்சென்று கிட்டுவோமென்கிறகாதல் கிளர்கின்றது.
அப்படி நான் பதறி ஓடுவது நமது குடிக்குப் பெருத்தபழியாய் முடியும், தடிதடியாகத் தாய்மார்களிருந்தும்
ஒரு பெண்பிள்ளைக்கு நன்மைசெய்யாமல் தெருவிலேபுறப்படப் பார்த்திருந்தார்களே!‘ என்று நாளைக்கே நாடெங்கும் பழிபரவும்,
அப்போது நீங்கள் தலைகவிழ்ந்து தலையைக்கீறி நிற்கத்தான் நேரிடும், அப்படிப்பட்ட பரிபவத்துக்கு நீங்கள் ஆளாகாமல்
இப்போதே என்னை நீங்களாகவே த்வாரகையிலே கொண்டுசேர்த்து விடுங்களென்கிறாள்.

“உலகளந்தானென்றுயரக்கூவும்“ என்றவிடத்து வியாக்கியான ஸ்ரீஸூக்தி –
“க்ருஷ்ணாவதாரத்தைவிட்டு அவ்வருகே போந்ததாகில் அத்தோடு போலியான ஸ்ரீவாமநாவதாரத்தைச் சொல்லியாய்த்து நலிவது.“

கிளியானது கோவிந்தா கோவிந்தாவென்றும் உலகளந்தானென்றும் கூவினால் அந்தநாமஸ்ரவணமே தாரமாக இருக்கலாகாதா?
அது திருநாமத்தைச் சொல்லக்கூடாடிதன்று இவள் தடைசெய்வதற்குக் காரணமென்? எனில்
“உயிர்க்கதுகாலனென்றும்மை யானிரந்தேற்கு, நீர் குயிற்பைதல்காள்! கண்ணன் நாமமே குழறிக்கொன்றீர்,
தயிர்பழஞ்சோற்றொடு பாலடிசிலுந்தந்து சொல் பயிற்றியநல்வளமூட்டினீர் பண்புடையீரே“ என்ற திருவாய்மொழியை நோக்குக.
ஸம்ஸ்லேஷகாலத்தில் போகமாயிருப்பவை விஸ்லேஷகாலத்தில் வெறுக்கக் கூடியனையாமென்க. –
ஸ்ரீவசநபூசணத்தில் -“இந்த ஸ்வபாவ விசேஷங்கள் கல்யாணகுணங்களிலும் திருச்சரங்களிலும்
திருநாமங்களிலும் திருக்குழலோசையிலுங் காணலாம்,“ (க-கந.) என்ற ஸூத்ரத்தின் வியாக்கியானத்தையும் ஸேவிக்க.

துவராபதியின் வரலாறு – ‘காலயவநன்‘ என்பானொருவன் செருக்கித்திரிந்து கொண்டிருக்கையில் ஒருகால் நாரதரைப்பார்த்து
‘இவ்வுலகில் யாராவது சூரர்களுண்டா? என்றுகேட்க, அதற்கு நாரதர் ‘மதுரையில் யாதவர்களிருக்கிறார்கள்,
அவர்கள் மிக்க பராக்ரமசாலிகள்‘ என்றார், அக்காலயவநன் அதைக்கேட்டவுடனே அங்கிருந்து புறப்பட்டு மதுரைக்குவந்து
யாதவர்களுடன் போர்செய்யத்தொடங்கினான், அப்பொழுது கண்ணபிரான் இதையறிந்து மேற்கடலுக்குச்சென்று
அங்கு ஸமுத்ர ராஜனையாசித்துப் பன்னிரண்டு யோஜனைவிஸ்தீர்ணமுள்ள இடத்தை வாங்கி
அங்கு த்வாரகை என்றொரு பட்டணம் அமைத்து மதுரையிலுள்ள யாதவர்களை அங்கு அழைத்துக்கொண்டு
போய்ச்சேர்ந்து அச்சங்கெடுத்தான் (பிறகு தான் மதுரைக்குவந்து காலயவநனையும் முடித்தான்)

விரஹத்தாலே நோவு பட்டு இருக்கிற இச் சமயத்தில்
இவள் வளர்க்கும் கிளிப் பிள்ளை ஓன்று
இவள் முன்பு கற்பித்து வைத்த திரு நாமத்தைச் சொல்லிக் கொண்டு
இங்கும் அங்கும் திரிய
இதை நாம் யதேச்யமாய் திரியும்படியாக விடவே அன்றோ
இது கண்ணன் நாமமே குழறிக் கொல்லுகின்றது
இதைப் பிடித்து அடைத்து விடுவோம் -என்று
கூட்டிலே அடைத்தாள் –
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் –
அது அங்கேயே இருந்து கோவிந்தா கோவிந்தா என்று கூவத் தொடங்கிற்று –

ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும் –
அதைக் கேட்ட ஆண்டாள்
இது சோற்றுச் செருக்காலே அன்றோ இப்படி சொல்கிறது
சோற்றைக் குறைத்தோம் ஆகில் தன்னடையே தவிரும் என்று நினைத்து பட்டினியாக விட்டாள்-
ஊண் அடங்க வீண் அடங்கும் -என்ற நினைவு போலும்
அந்த பட்டினி விபரீத பலமாயிற்று
அரையர்கள் மிடற்றுக்கு எண்ணெய் இட்டு பட்டினி கிடந்து
மிடற்றில் கனத்தை ஆற்றிப் பாடுவாரைப் போலே
இக்கிளியும் பட்டினி கிடந்ததே காரணமாக உயரப் பாடத் தொடங்கிற்று
உலகளந்தான் -என்று அது கூவும் த்வநியைக் கேட்டால்
அவன் திருவடி பரம்பிய இடம் எங்கும் இதன் மிடற்று ஓசை பரவும் படி உயரப் பாட
அந்த கூவுதளைக் கேட்டவாறே
அவன் வரா விட்டாலும் நாமே பதறி அவனை அடைய காதல் கிளர்கின்றது –
உலகளந்தான் என்று உயரக் கூவும்
கிருஷ்ணாவதாரத்தை விட்டு
அவ்வருகே போந்ததாகில்
அத்தோடு போலியான
ஸ்ரீ வாமனாவதாரத்தைச் சொல்லி யாய்த்து நலிவது –

நாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நமனை இழந்து தலையிடாதே
அப்படி ஓடுவது நாட்டில் பழியாய் முடியும்
நீங்கள் தலை கவிழ்ந்து தரையைக் கீறி நிற்கத் தான் நேரிடும்
அந்த பரிபவத்துக்கு ஆளாகாமல் என்னை நீங்களே த்வாரகையிலே கொண்டு சேர்த்து விடுங்கோள்-
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்-

கிளியானது கோவிந்தா கோவிந்தா என்றும் உலகளந்தான் என்றும் கூவினால்
அந்த திரு நாம சங்கீர்த்தனமே தாரகமாக இருக்கலாகாதோ
அதை தடை செய்யக் காரணம் என் –
உயிர்க்கு அது காலன் என்று உம்மை யாம் இரந்தேற்கு நீர் குயில் பைதல்காள்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் தயிர்ப் பழம் சோற்றோடு
பால் அடிசிலும் தந்து சொல் பயிற்றிய நல வளமூட்ட்னீர்
பண்புடையீரே -திருவாய் மொழி
சம்ச்லேஷ காலத்தில் போகமாய் இருப்பவை விஸ்லேஷ காலத்தில் வெறுக்கத் தக்கவை ஆகுமே
ஸ்ரீ வசன பூஷணம் -1-13- ஸ்ரீ ஸூ கதிகள்
இந்த ஸ்வபாவ விசேஷங்கள்
கல்யாண குணங்களிலும்
திரு நாமங்களிலும்
திருக் குழல் ஓசையிலும்
காணலாம் –

–12 யோஜனை விஸ்தீரணம் த்வாரகை நிர்மாணம் –
பின்பு வடமதுரை வந்து காலயவணனை முடித்தான் –

—————————————————————————–

நிகமத்தில் இத் திருமொழி கற்றாருக்கு பலன் சொல்லித் தலை கட்டுகிறாள் –

மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சிதன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –12-10-

பதவுரை

தாழ் குழலாள்–தாழ்ந்த கூந்தலை யுடையளாய்
பொன் இயல்மாடம் பொலிந்துதோன்றும் புதுவையாகோன் விட்டு சித்தன் கோதை–பொன் மயமான மாடங்களினால்
விளங்கித் தோன்றுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளார்க்குத் தலைவராகிய பெரியாழ்வாருடைய (திருமகளான) ஆண்டாள்.
மன்னு மதுரை தொடக்கம் ஆக வண் துவராபதி தன் அளவும் தன்னை–ஸ்ரீமதுரை முதற்கொண்டு ஸ்ரீத்வாரகை வரைக்கும்
(சொல்லப்பட்ட சில திவ்யதேசங்களில்) தன்னை (ஆண்டாளை)
தமர்–தன் உறவினர்
உய்த்து பெய்ய வேண்டி–கொண்டு போய்ச் சேர்க்க வேண்டி
துணிந்த துணிவை–கொண்ட அத்யவஸாயம் விஷயமாக,
இன் இசையால் சொன்ன–இனிய இசையுடன் அருளிச் செய்த
செம் சொல் மாலை–அழகிய சொல்மாலை யாகிய இத்திருமொழியை
ஏத்த வல்லார்க்கு–ஓத வல்லவர்களுக்கு
இடம்–வாழுமிடம்
வைகுந்தம்–பரமபதமேயாம்

இத்திருமொழிகற்றார்க்குப் பலன்கூறித் தலைக்கட்டுகிறாள். வடமதுரை தொடங்கி த்வாரகாபுரியளவாகப்
பத்தெட்டுஸ்தாநங்களைச் சொல்லி அவ்விடங்களிலே தன்னைக்கொண்டுபோய்ச் சேர்க்கவேணுமென்பதாகத்
தனது பந்து வர்க்கத்திலுள்ளாரை நோக்கி ஆண்டாளருளிச் செய்த இத்திருமொழியை ஓதவல்லவர்கள்
ஸ்ரீவைகுண்டத்திலேபோய் நித்யாநுபவம் பண்ணப்பெறுபவர்கள் என்ற தாயிற்று.

மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
வடமதுரை தொடங்கி
த்வாரகா புரி அளவாக
பத்து எட்டு ஸ்தலங்களை சொல்லி

தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
அவ்விடங்களிலே தன்னைக் கொண்டு போய்ச் சேர்க்க
வேணும் என்பதாக
தனது பந்து வர்க்கத்தில் உள்ளாரை நோக்கி

பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சிதன் கோதை
ஆண்டாள் அருளிச் செய்த

இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே
இத் திரு மொழியை ஓத வல்லவர்கள்
ஸ்ரீ வைகுண்டத்திலே போய்
நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்-

————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே -அண்ணங்கராச்சார்யர்  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading