மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -79-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது
அநந்த காலம் வேண்டாவோ
என்னில் –
அவனை அனுசந்தித்து –
சப்தாதி விஷயங்களிலே அநாதரம் பிறக்கச் சடக்கென்னப்
போக்கலாம் -என்கிறார் –

நாட்டார் நான் சொல்லப் போகிற படிகளைச்
செய்தார்கள் ஆகில்
ஜென்மங்களைப் போக்கலாம் கிடீர்
என்கிறார் –

—————————————————————————————–

ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் -கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி
நிரையார மார்வனையே நின்று ——79-

பதவுரை

கார்த்த–பசுமையான நிறமுள்ளதாய்
விரை ஆர்–பரிமளம் நிரம்பியதான
நறு துழாய்–செவ்வித் திருத்துழாய் மாலையையுடையவனும்
வீங்கு ஓதம் மேனி-பொங்குங்கடல் போன்ற திருமேனியை யுடையவனும்
நிரை ஆரம் மார்வனையே–ஒழுங்கான ஹாரங்களணிந்த திரு மார்பை யுடையவனுமான பெருமானையே
நின்று–நெஞ்சு நிலைத்து நின்று
ஓர்த்த மனத்தர் ஆய்–அநுஸந்திக்கின்ற மனமுடையாய்
ஐந்து அடக்கி–பஞ்சேந்திரியங்களையும் வென்று
ஆராய்ந்து–ஸம்ஸாரத்தின் கெடுதல்களை ஆராய்ந்து
பேர்த்தால்–ஸம்ஸாரத்தில் நின்றும் நெஞ்சைத் திருப்பிக் கொண்டால்
பிறப்பு ஏழும்–ஒன்றின்பின் ஒன்றாக நேரக்கூடிய ஜன்ம பரம்பரைகளை
போக்கலாம்–தொலைத்து விடலாம்.

——————————————————————————————-

வியாக்யானம் –

ஒர்த்த மனத்தராய் –
அவனுடைய கல்யாண குணங்களை
உச்சி வீடு விடாதே
அனுசந்தியா நிற்கிற மனசை யுடையராய் –

ஐந்தடக்கி –
இந்த்ரியங்களை
விஷயங்களில் போகாத படி நியமித்து –

ஆராய்ந்து –
அநந்தரம்-
சம்சாரத்தின் உடைய தோஷ அனுசந்தானத்தைப் பண்ணி –

பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் –
அதின் நின்றும் ஹிருதயத்தை மீட்டால்
பின்பு
ஜென்மங்களைத் தப்பலாம் –
இப்படி சம்சாரத்தைப் பேர்த்தால்
பிறப்பு ஏழும் அநாயாசேன மறுவல் இடாத படி  பேர்க்கலாம் –
ஏழு பிறப்பும் என்றது உப லஷணம்-
ஜன்மம் அடங்கலும் அறுக்கலாம் -என்றபடி –
ஜன்ம சந்ததியைப் போக்கலாம் –

கார்த்த விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி –
இது கிடீர்
நான் குடிக்கச் சொல்லுகிற
வேப்பங்குடி நீர்

பச்சை நிறத்தையும்
மிக்க பரிமளத்தையும்
யுடைத்தான திருத் துழாய் மாலையையும்
தேங்கின கடல் போலே தர்ச நீயமான
வடிவு அழகையும் யுடையவன் –

நிரையார மார்வனையே நின்று –
சேர்ந்த ஆரத்தை யுடைத்தான
மார்பை யுடையவனையே
நின்று ஒர்த்த மனத்தராய் –
ஸ்வா பாவிகமான வடிவு அழகும்
ஒப்பனையால் வந்த அழகும்
இருக்கிறபடி –

இத்தால் –
சப்தாதி விஷயங்களை வளைக்கலாம் படியான
அழகைச் சொல்லுகிறது –

——————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading