மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -36-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

யாம் தொழுதும் என்றாரே –
மநோ ரதித்த படியே
அனுபவிக்கிறார் –

——————————————————————————

கையனலாழி கார்க் கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம்  வெஞ்சுடர்வாள்  -செய்ய
படை பரவை பாழிபனி நீருலகம்
அடி யளந்த மாயரவர்க்கு —–36–

பதவுரை

பனி நீர் உலகம்–குளிர்ந்த நீரையுடைய கடல்சூழ்ந்த உலகங்களை
அடி–தனது திருவடியினாலே
அளந்த–அளந்துகொண்ட
மாயர் அவர்க்கு–ஆச்சரியச் செய்கையை யுடையரான அப்பெருமாளுக்கு
கனல் ஆழி–தீஷ்ணமான சக்கரமும்
கார் கடல் வாய் வெண் சங்கம்–கருங்கடலில் தோன்றின வெளுத்த சங்கும்
வெய்ய–வெவ்விதான
கதை–கதையும்
சார்ங்கம்–சார்ங்கமும்
வெம் சுடர்வாள்–வெவ்விய சுடரையுடைய நந்தகவாளும் ஆகிய
செய்ய படை–அழகிய இவ்வாயுதங்கள்
கைய–திருக்கையிலுள்ள,
பரவை–கடலானது
பாழி–படுக்கையாயிருக்கின்றது.

——————————————————————————–

வியாக்யானம் –

கையனலாழி –
பிரதிபஷத்தின் மேலே
கனலா நின்றுள்ள அக்னியை உமிழா நின்றுள்ள
திரு வாழி-

கார்க் கடல் வாய் வெண் சங்கம் –
மேகத்தின் உடைய முழக்கத்தை யுடைத்தாய்
கடலைப் பிறப்பாக யுடைத்தாய்
வெளுத்த நிறத்தை யுடைய
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்

அன்றிக்கே
கார் போலேயும்
கடல் போலேயும்
சப்திக்கும் த்வனியை உடைய சங்கம் -என்றுமாம் –

அன்றிக்கே
கருத்த நிறத்தை யுடைத்தான கடலைப் பிறப்பிடமாக உடையவன் -என்றுமாம் –

வெய்யகதை -சார்ங்கம்  வெஞ்சுடர்வாள்
வெவ்விதான   கதை
வெவ்விதான ஸ்ரீ சார்ங்கம் –
வெவ்விதான சுடரை உடைய வாள்
இவை ஆகிற –

செய்ய படை-
செய்ய படை என்கிறது
ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு விதேயமாய் இருக்கை-
ஆபரணமான போது புகரைச் சொல்லுகிறது  –
அப்போது அவனுக்கு என் புகுகிருறதோ என்று அஞ்ச வேண்டா
அவை தனக்கு -திசை வாழி எழ -என்று மங்களா சாசனம் பண்ண அமையும்
சுடர் ஆழியும் அப் பாஞ்ச சன்னியமும் -என்னக் கடவது இறே –

கைய –
கையிலே யுள்ள –

பரவை பாழி-
திருப் பாற் கடல் படுக்கை –

பனி நீருலகம் அடியளந்த மாயரவர்க்கு  –
குளிர்ந்த திரையை உடைத்தான
கடல் சூழ்ந்த பூமியைத்
திருவடிகளாலே அளந்து கொண்ட
ஆச்சர்ய பூதன் ஆனவனுக்கு
அழகிய திவ்யாயுதங்கள் இவை
படுக்கை அது –

——————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading