ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -61-70–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

நின்றதோர் பாதம் வடிவேயோ-அவனுடைய சேஷ்டிதமும் ஆஸ்ரித பரதந்த்ரம் என்கிறது 

(ஸ்வரூபமும் ரூபமும் ஆஸ்ரித பாரதந்த்ரம் என்றார் கீழ்
இதில் சேஷ்டிதங்களும் அடியார்களுக்காகவே என்கிறார்)

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

பதவுரை

அன்று கருமாணி ஆய்–முன்பொரு காலத்திலே கரிய கோலப் பிரமசாரியாய்ச் சென்று
இரந்த–(மாவலி பக்கல் மூவடி மண்) யாசித்த
கள்வனே–க்ருத்ரிமனான பெருமானே!
நின்றது ஓர் பாதம்–(பூமியை அளப்பதாக நின்ற ஒரு திருவடியானது
நிலம்–பூ மண்டலத்தை
புதைப்ப–ஆக்ரமித்துக் கொள்ள (அதன் பிறகு)
நீண்ட தோள்–விம்ம வளர்ந்த திருத் தோளானது
திசை எல்லாம் சென்று–திக்குக்களெல்லாவற்றிலும் வியாபித்து
அளந்தது என்பர்–(மேலுலகத்தை) அளந்துகொண்ட தென்று (பெரியோர் செல்லுகின்றனர்) (இப்படி நீ காரியஞ் செய்தவிது)
உன்னை பிரமாணிக்கார் பெற்ற பேறு–உன்னை நம்பினவர்கள் எல்லாரும் பெற்ற புருஷார்த்தமாகும்

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப –
இரந்து நின்ற நிலையிலே பூமி எல்லாம்
ஓர் அடியாலே மறைக்கும் படிக்கு ஈடாக

நீண்ட தோள் சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் –
கையிலே நீர் விழுந்தவாறே
அலாப்ய லாபம் போலே
வளர்ந்த தோளானது
திக்குகள் எல்லாம் சென்று அளந்தது என்பர்

அன்று கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு –
உன்னைப் பேணாதே
உன்னுடைய விபூதியை எவன் தன்னது என்ன
அவன் பக்கலிலே இரந்தாயாய் -வஞ்சித்தாயாய் -செய்தது
இந்த்ரன் ஒருத்தனுக்கு செய்ததேயோ –

ஆஸ்ரித விஷயத்தில் தன்னை அழிய மாறி வஞ்சிக்கும்
தூது போம்
சாரத்தியம் பண்ணும்
எல்லாம் செய்து ரஷிக்கும் என்று
உன்னை பிரமாணித்தவர்கள் மார்விலே கை வைத்து
உறங்கும்படி பண்ணினாய் அத்தனை அன்றோ –

(கரே நிபதிதே தோயே வாமனோ பூத் அவாமன -கையிலே மாவலியின் தான நீர் விழுந்த உடனே வாமனன் நெடியோன் ஆனான் –
அடியாருக்காகவே தனது ஸ்வரூபத்தையும் தாழ்த்திக் கொண்டு யாசிப்பதையும் -வஞ்சிப்பதையும்
தூது போவதையும் தேர் ஓட்டுவதையும் மற்றும் பல இழி தொழில்களையும் செய்து அவர்களை ரக்ஷிப்பவன்
என்று மார்பிலே கை வைத்து உறங்கலாம் படி பெற்ற பயன் அன்றோ –
அனைவருக்கும் வைத்த தண்ணீர்ப் பந்தல் அன்றோ இந்தச் செயல் என்கிறார் -)

————————————————————————–

நப்பின்னை பிராட்டிக்கு பிரதிபந்தகமான–எருதுகளைப் போக்கி-அவளைத் தனக்காக்கிக்
கொள்ளுகையாலே-நம்முடைய பிரதிபந்தகங்களையும் போக்கும் என்கிறது –

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் -ஏறின்
பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு–62-

பதவுரை

பெண் நசையின் பின் போய்–நப்பின்னைப் பிராட்டி விஷயத்திலுண்டான ஆசைக்கு வசப்பட்டு,
ஏறின்–விருஷபங்களினுடைய
பெருத்த எருத்தம்–பெருத்த முசுப்புகளும்
கோடு–கொம்புகளும்
ஓசிய–முறியும்படியாக
எருத்து–(அந்த ரிஷபங்களின்) கழுத்தை
இறுத்த–முறித்த
நல் ஆயர் ஏறு–விலக்ஷணனான கோபால கிருஷ்ணன்
மாறு–(நமது பாபங்களுக்கெல்லாம்) சத்துருவானவன்.
என்று சொல்லி–என்றெண்ணி
வணங்கினேன்–அவனை ஆஸ்ரயித்தேன்
முன்–இதற்கு முன்பு
பேறு ஒன்றும் அறியேன்–இப்படிப்பட்ட புருஷார்த்தத்தைச் சிறிதும் அறியாதவனாயிருந்தேன்
பேதைமையால்–அப்படி அறியாதிருந்ததனால்
பெற்று அறியேன்–அதனைப் பொறாதும் இழந்தொழிந்தேன்.

எருத்தம்  = ககுத்து / மாறு  = சத்ரு

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
பேறு ஓன்று உண்டாக முன்பு அறியேன்
அறியாமையே அன்று
பெற்றும் அறியேன் –
பெறாமைக்கு அடி அறிவு கேடு –

ஏறின் பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய் எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு-
எருத்தினுடைய பெருத்தக் கழுத்தும் கொம்புகளும்
ஒசியும்படிக்கு ஈடாக நப்பின்னைப் பிராட்டியை
பெறலாம் என்கிற நசையாலே எருத்து இறுத்த

நல் ஆயர் ஏறு
நம் பிரதி பஷத்துக்கும்
மாறு என்று சொல்லி வணங்கினேன் –

(ஸஹஜ ஸ்த்ரீகள் நாம் யாவரும் -அவன் ஒருவனே புருஷோத்தமன்)

(ஞானான் மோக்ஷ அஞ்ஞானாத் ஸம்ஸார —
குண மயீ மம மாயா துரத்யயா -மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -கீதை -7-14-
கச்ச த்வமே நம் சரணம் -என்று உபதேசிக்க
நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் -என்பதால் வணக்கமே சரணாகதி யாகுமே –
நமக்கு பிரபலமான புருஷகார பலம் -நப்பின்னை -உண்டாய் இருக்க நம் பாபங்களைக் கண்டு சீறி இவனால் உதற முடியாதே
நின் அன்பின் வழி நின்று -பெரியாழ்வார் -3-10-7-ப்ரேம பரதந்த்ரன் அன்றோ )
————————————————————————–

அபிமானியான ருத்ரனுடைய சாபத்தை-போக்குகையாலும்
அவனே ஆஸ்ரயணீயன் என்கிறது

ஏறு எழும் வென்று அடர்த்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-

பதவுரை

ஏறு ஏழும்–ரிஷபங்களேழையும்
வென்று–ஜயித்து
அடர்த்த–தொலைத்த
எந்தை–ஸ்வாமியான கண்ணபிரான்
எரி உருவத்து ஏறு ஏறிபட்ட–நெருப்புப் போன்ற உருவத்தை யுடையவனும் வ்ருஷப வாஹநனுமான ருத்ரன் அநுபவித்த
விடு சாபம்–எல்லாரும் கை விடும் படியான சாபத்தை (ப்போக்குதற்காக)
பாறு ஏறி உண்ட தலை வாய் நிறைய–பருந்துக்கள் ஏறியிருந்து உண்ணுதற்குரிய கபாலம் வாய் நிரம்பும்படியாக
கோடு–குவிந்த
அம் கை–அழகிய திருக்கையாலே கீறி யெடுத்து அளித்த–

ஒண் குருதி அழகிய ரத்தத்தாலே–

கண்ட பொருள்-அக்கபாலம் கையினின்று கழன்று விழக் கண்ட விஷயத்தை
சொல்லில்–சொல்லத் தொடங்கினால்
கதை–பெரியதொரு பாரத கதையாக முடியும்.

பாறு என்று பறைவையாய் பஷி என்றபடி –

அபிமானியான ருத்ரனுடைய சாபத்தை
போக்குகையாலும்
அவனே ஆஸ்ரயணீயன் என்கிறது

ஏறு ஏழையும் வென்ற ஸ்வாமி
எரியினுடைய உருவை உடையனாய்
ருஷபத்தை ஏறின ருத்ரனை ப்ரஹ்மா
கபாலீ த்வம் பவிஷ்யஸி -என்று இட்ட சாபத்தை
ஒட்டின அழகிய கை –

கழுகும் பருந்தும் ஏறி உண்ணா நின்ற தலையை உடைய
வாய் நிறையும்படிக்கு ஈடாக
அழகிய குருதியைக் கண்ட அர்த்தத்தைச் சொல்லில்
அது ஒரு மகா பாரதம்

ஏழு எருத்தை அடர்த்த விடத்தில்
அத்தால் ஒரு தோஷம் இன்றிக்கே இருக்க
ஒரு தலையை அறுத்ததுக்காக
பாதகியானவனுடைய சாபத்தை போக்கினவனோ ஈஸ்வரன்
பாதகி யானவனோ –
தலை அறுப்புண்டு சோக்யன் ஆனவனோ-
பார்த்துக் கொள்ளும் இத்தனை

(ஓன்று மா கடல் உருவம் ஓன்று செந்தீ -திரு நெடும் தாண்டகம் -2-
தழல் நிற வண்ணன் குழல் நிற வண்ண -பெரிய திரு -6-1-2-
உருவம் கார் உருவம் எரி -முதல் திரு -5-
வேறு இசைந்த செக்கர் மேனி நீறணிந்த புன் சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்தவன் கபால மிசை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை
ஏறு சென்று அடர்த்த வீச பேசு கூசம் இன்றியே –திருச்சந்த விருத்தம் -42-
கபாலீத்வம் பவிஷ்யஸி -மாத்ஸ்ய புராணம் -சாபத்தால் பீடிக்கப்பட்டு கையும் மண்டை ஓடுமாயத் திரிந்து யாசித்து
வெண் தலைப் புலன் கலங்க உண்ட பாதகத்தன் வன் துயர் -திருச்சந்த -113-
ஸ்புடிதம் பஹுதா யாதம் -மாத்ஸ்ய புராணம் –
ஊறு செங்குருதி-என்றும்
அலங்கல் மார்பில் வாச நீர் -திருச்சந்த -113–
தலை அறுப்புண்டவனும்
தலை அறுத்து சாபம் பெற்றவனும் பரம் பொருள் அல்லரே
அந்த சாபத்தைப் போக்கி அருளினவனே பரம் பொருள்
மாத்ஸ்ய புராணம் -182-அத்யாயம் இந்த வ்ருத்தாந்தம் விவரிக்குமே-
தேவீம் ப்ரதி ருத்ர
தத க்ரோத பரீதேந ஸம் ரக்த நயநேந ச
வாம அங்குஷ்ட நகாக்ரேண சின்னம் தஸ்ய ஸிரோ மயா
ப்ரஹ்மா
யஸ்மாதநபரா தஸ்ய சிரஸ் சின்னம் த்வயா மம
தஸ்மாச் சாப ஸமா விஷ்ட கபாலீத்வம் பவிஷ்யஸி
ருத்ர
ப்ரஹ்ம ஹாஸ் அஸகுலிதோ பூத்வா சரன் தீர்த்தாநி பூதலே
ததோ அஹம் கதவான் தேவி ஹிமவந்தம் சிலோச்சயம்

தத்ர நாராயணஸ ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித
ததஸ்தேந ஸ்வகம் பார்ஸ்வம் நகாக்ரேண விதாரிதம்

மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தஸ்ய நிஸ் ஸ்ருதா

விஷ்ணு ப்ரஸாதாத் ஸூ ஸ்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ரதா
ஸ்புடிதம் பஹுதா யாதம் ஸ்வப்ந லப்தம் தனம் யதா –இவை அங்குள்ள சாரமான ஸ்லோகங்கள்)

———————————————————————

இதிஹாஸ புராணங்கள் உடைய ஹிருதயம் இருந்தபடி-அறிந்து சொன்னவற்றில்
நிர்ணீ தமான வர்த்தம்-ஆஸ்ரித பவ்யனானவனுடைய-திரு நாமத்தை சொல்லுகை -என்கிறது-

(கதை -என்றதும் இதிஹாஸ புராண பெரும் பொருளான  தாத்பர்யமான திரு நாம சங்கீர்த்தனம் பற்றி அருளிச் செய்கிறார்-கலவ் கேஸவ கீர்த்தனம் –
அருகில் சேவிக்க முடியாதவன் திரு நாமங்கள் மூலம் அனுபவித்து மகிழ்வான் அன்றோ-இதற்கும் அவன் திரு உள்ளம் பற்ற வேண்டுமே )

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையும்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–64-

பதவுரை

கண்ணா–கண்ண பிரானே!
கதையும்–இதிஹாஸ புராணங்களும்
பெரும் பொருளும்–அவற்றின் சிறந்த அர்த்தங்களும்
இதயம்–அவற்றின் தாற்பரியமும்
இருந்த வையே–உள்ளது உள்ளபடியே
ஏத்தில்–அறிந்து துதித்தால்
நின் பேரே–(அவை யெல்லாம்) உன்னுடைய திரு நாமங்களேயாம்
கதையின் திருமொழி ஆய்நின்ற திருமாலே–இதிஹாஸ புராணங்களின் ஸ்ரீஸூக்தி வடிவமாக நிற்கிற திருமானே!
உன்னை–உன்னை
பருமொழியால் காண–பரிபூர்ண சப்தங்களாலே கண்டு அது பவிக்கும்படி
பணி–திரு வுள்ளம் பற்ற வேணும்-

இதிஹாஸ புராணங்களிலே பிரதிபாதிக்கப் பட்ட
ஸ்ரீ ய பதியாய் இருந்துள்ள
உன்னை குறையற்ற சொல்லாலே ஏத்தி
அனுபவிக்கும்படி அருளிச் செய் –

அநவாப்தியான (நிறைவேறாத )சொல் அன்றிக்கே
உன்னைக் கண்டு ஹிருஷ்டனாய் ஏத்தப் பணி-

(கோது கழித்து -கங்கா காங்கேய –எச்சில் வாய் -அசாரம்-சாரம் -சார தரம்-சார தமம்–
தேவதாந்த்ர -உபாயாந்தர -உபயாந்தர -பிரபத்தி மஹா விஸ்வாஸம்-குலையுமே -திரு நாம சங்கீர்த்தனம் தான் தாத்பர்யம்)

(ஸர்வே வேதா கிருஷ்ண
வேதைஸ் ச ஸர்வைர் அஹமேவ வேத்ய -15-15-
ஸத்யம் சத்யம் புநஸ் ஸத்யம் உத்த்ருத்ய புஜ முச்யுதே -வேதாஸ் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி –
த்வம் ஆஸீர் மாத ஸ்ரீ கமி துரித மித்தந்தவ விபவ தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபி தத்தே ஸ்ருதிரபி –ஸ்ரீ குணரத்ன கோசம் -28-
காணப் பணி
இது போல் ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் கேட்டால் போதாது
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய -என்று அங்கு கண்டு அனுபவித்து
ஹாவு ஹாவு ஹாவு அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத காம் அந்நாத -என்னவும் பண்ணி அருள வேணும் –
இப்பேற்றை நிர்ஹேதுக கிருபையால் பண்ணி அருள வேணும் என்கிறார் )

————————————————————————–

(இங்கேயே இருந்து திவ்ய தேச கைங்கர்யம் என்றும்
அங்கு சென்றும் இதே போல் கைங்கர்யம் தொடர வேண்டும் என்றும்
இரண்டு நிர்வாகங்கள்
மாம் நமஸ்க்ரு பணிந்தேன் )

பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-

பதவுரை

திரு மேனி–உனது திருமேனியை
பணிந்தேன்–ஸேவித்தேன்-கண்டு பணிந்தேன் -கண்டேன் என்று சொல்ல மாட்டாரே -அஹங்கார கர்ப்பமாக இருக்குமே
உன் சே அடி மேல்–உனது செவ்விய திருவடிகளின் மேல்
பை கமலம்–அழகிய தாமரை மலர்களை
அன்பு ஆய்–அன்பு கொண்டு
கையால் அணிந்தேன்–கையால் ஸமர்ப்பித்தேன்
உன்னை–உன்னை
புரிந்து ஏத்தி–விரும்பித் துதித்து
புகல் இடம் பார்த்து–பரமபதத்திலிருக்குமிருப்பை நோக்கி-இங்கு புறப்பாடு முடிந்து திருக் கோயிலுக்குள்ளே புகும் இடம்  பார்த்து என்றுமாம்
ஆங்கே இருந்து ஏத்தி வாழும் இது துணிந்தேன்–அவ்விடத்திலேயே இருந்து கொண்டு மங்களாசாஸநம் பண்ணி
வாழும் வாழ்ச்சியே உரிய தென்று அத்ய வஸாயங்கொண்டேன்.

பணிந்தேன் திரு மேனி –
கண்டேன் என்னும் சொல்லை
சேஷபூதர் ஆகையாலே
பணிந்தேன் -என்று சொல்லுகிறார்

பைங்கமலம் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன் –
உன் திருவடிகளிலே ஸ்நேகத்தை
உடையேனாய்
அழகிய பூவை அணிந்தேன் –

புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே-இருந்து ஏத்தி வாழும் இது துணிந்தேன்-
உன்னை சேவித்து இருந்து- பார்த்து- ஏத்தி
பரம பதத்தில் இருக்கும் படியைப் பார்த்து
ஆங்கே இருந்து யேத்துகை தானே
வாழ்வாக இருக்கிற இத்தை
அத்யவசித்தேன்

பெருமாள் புக்கு அருளினால்
பின்னும் முன்னும் நின்று வைத்த
அனைத்தையும்
பின்பும் பிறகுவாளியையும்
கண்டு யேத்துகையில் துணிந்தேன்

(வா போகு வா -சக்ரவர்த்தி பெருமாள் இடம் -இவர் நம்பெருமாள் இடம்)

புரிகை
சுற்றும் பார்க்கை-

(த்விதா பஜ்யேய மப் யேவம் ந நமேயம் து கஸ்ய சித்
ஏஷ மே ஸஹஜோ தோஷ ஸ்வ பாவோ துரதிக்ரம -யுத்த –36-11-என்று
வணக்கம் அற்று இருந்த என்னை திருமேனியைக் காட்டி ஐயப்பாடு அறுத்து மேலும் ஆதாரம் பெறுக வைத்தாய்
அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அநு பபத்தி
ஸ்வயம் ப்ரயோஜனமாகவே சாத்தினேன்
கஜ ஸிம்ஹ கதீ வீரவ் ஸார்த்தூலவ் ருஷபோபமவ் -நடை அழகு
பூர்வாங்கா ததிகா பராங்க கலஹம் -முன்னிலும் பின்பு அழகிய பெருமாள்-

இங்கே இருந்து அர்ச்சா ஸ்தலங்களில் பல்லாண்டு பாடி வாழ வேண்டும் பட்டர் நிர்வாகம்

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -10-10-9-
ந ச புந ராவர்த்ததே
புணை கொடுக்கிலும் போக ஒட்டார் -பெரியாழ்வார் -4-5-2-
தத் விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாம்ஸ சமிந்ததே
சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே
அங்கு புக்கு பல்லாண்டு ஏத்தி வாழ வேணும் -என்பதே திருமலை நம்பி நிர்வாஹம் -)

————————————————————————–

பிராப்திக்கும்–பிரதிபந்தக நிவ்ருதிக்கும்–அடி -சம்சார தோஷ தர்சனம் பண்ணுகை-
ஏத்துகையில் துணிகை அன்று –

(ருசி பிறந்தமை கீழ் அருளிச் செய்து
ஸாம்ஸாரிக தண்மை -தோஷ தர்சனம் -பண்ணி அருசியும் வளர வேண்டுமே)

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
இப் பிறவி ஆவது இது கண்டாய்–இந்த ஸம்ஸாரத்தின் கொடுமை இப்படிப் பட்டது காண்.
நாம் உற்றது எல்லாம் இது கண்டாய்–(இந்த ஸம்ஸாரத்தில்) நாம் அநுபவித்த துக்கங்களெல்லாம் இப்படிப்பட்டவை காண்
நாரணன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
பேர்–திரு நாமங்களை
ஓதி–ஸங்கீர்த்தனம் பண்ணி
நரகத்து–ஸம்ஸாரமாகிற நரகத்தினுடைய
அருகு–ஸமீபத்திலும்
அணையா காரணமும்–நாம் நிற்கலாகாது என்று வெறுப்பதற்குக் காரணமும்
இது கண்டாய்– இந்த ஸம்ஸாரத்தின் தோஷமே காண்;
(இப்படி ஒவ்வொன்றையும் நான் எடுத்து உரைக்க வேண்டாதபடி)
வல்லை ஏல்–நீயே தெரிந்து கொள்ளக் கடவையாகில்
காண்–எல்லாம் தெரிந்து கொள்.

(நல் நெஞ்சே கீழே சொல்லி -வல்லையேல் -இங்கு ஸம்ஸாரத்தின் தண்மை உன்னையும் படுத்தும் அன்றோ)

நல் நெஞ்சே இப்பிறவியாவது இது கண்டாய் –
பாபத்தாலே நன்று என்று இருந்தது அன்று -பகவத் பிரசாதத்தாலே பொல்லாது என்று
தோற்றின இது கண்டாய் –
சம்சாரமாவது –

இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது
அங்குத்தைக்கு ( ஸ்ரீ கௌஸ்துப மணி போல் ) அசாதாரணமாய் இருக்கச் செய்தே
நாம் அனுபவித்தது எல்லாம் கண்டாய் இறே-
இதுக்கு ஒரு பிரமாணம் வேண்டாம் இறே –

இது கண்டாய் -இத்யாதி –
வகுத்தவனுடைய திரு நாமத்தைச் சொல்லி
நரக சமீபத்தில் செல்லாமைக்கு காரணம்
இதினுடைய தோஷ தர்சனமே –

வல்லையேல் காண் –
அனுபவித்து இருக்கச் செய்தே விடப் போகாது ஒழிகிறது பாபம்-
இல்லையேல் இதினுடைய தோஷ தர்சனத்தைப் பண்ணு-

(மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷாய
பந்தாயா விஷயா சங்கி
முக்த்யை நிர் விஷயம் மன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-)

————————————————————————–

(நம் பெருமையைப் பாராமல் ஸம்ஸார தண்மையையே பார்க்க வேணும் என்று இவர் உபதேசிக்க
பதறி -தோஷமே கண்ணில் படாமல் நம் சொத்தை
பரம விமல திருமேனி -ஆழ்வாரது –
வேறே ஒன்றைக் காண முடியாமல் மானஸ அனுபவம் -கனவில் போல் –
கண்டேன் இங்கேயே –
பின்பு திருக்கண்டேன் அடுத்த ஆழ்வார்
பொன்னாழி கை கண்டேன் அவர்
இவரும் கனலும் சுடர் ஆழி -கண்டேன்)

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

பதவுரை

யான்–அடியேன்
கனவில்–ஸ்வப்நம் போன்ற ஸ்வாநுபவத்திலே
திருமேனி–திவ்ய மங்கள விக்ரஹத்தை
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
ஆங்கு–அப்போது
அவன் கை–அவனது திருக் கையிலே
கனலும் சுடர் ஆழி கண்டேன்–ஜ்வலிக்கிற சுடர் மயமான திருவாழியைக் கண்டேன்
உறு நோய் வினை இரண்டும்–வந்தேறியாய் இருக்கச் செய்தேயும் ஒன்றி -அனுபவித்தே அற வேண்டிய -மிக்க நோய்களுக்குக் காரணமான புண்ய பாபங்களென்கிற இரண்டு கருமங்களையும்
ஒட்டுவித்து–தொலைத்திட்டு
பின்னும்–பின்னையும்
மறு நோய் செறுவான்–மறுகிளை கிளர்ந்து வரக் கூடிய வாஸநா ருசிகளையும் தொலைத்தருளுமாவனான எம்பெருமானுடைய
வலி–மிடுக்கையும்
கண்டேன்–காணப் பெற்றேன்.

கண்டேன் இத்யாதி
ஆத்மாவுக்கு நித்ய தர்மமான ஞானம்
பிரத்யஷிக்கைக்கு ஆனைத் தாளான (கவாஸ்கம் -வாசலான )மனஸ்ஸாலே
புறப்பட்டு
பாஹ்ய இந்த்ரியங்களாலே காண்கை அன்றிக்கே
ஸ்வப்னதீ கம்யம் -என்கிறபடியே
மனஸ்ஸாலே காண்கை கனவிலே காண்கை யாவது

ஆங்கு இத்யாதி
அபாதிதமாகக் –கண்டேன்

கண்டேன் இத்யாதி
அனுபவிக்கக் கடவதான புண்ய பாபங்களைப் போக்கி
பின்பு வாசனையும் போக்குமவனுடைய
மிடுக்கைக் கண்டேன்

வாசனையைப் போக்குகைக்கு வலி கண்டேன் என்றுமாம்-

(ருக்மாபம் ஸ்வப்ன தீ கம்யம் -மநு ஸ்ம்ருதி -12-122-மானஸ ஸாஷாத் காரம்
ஸூ பாஸ் ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டி அருளி வாஸனா ருசியையும் போக்கி அருளி யவனுடைய பலத்தைக் கண்டேன்
தானி ஸர்வாணி ஸம் யம்ய யுக்த ஆஸீத மத் பர -என்று இவ் வர்த்தம் கீதையில் காட்டப்பட்டுள்ளது அன்றோ)

————————————————————————–

இவனைக் கொண்டு வாசனையைப் போக்குவிக்கை அன்றிக்கே
உப்புச் சாறு கொள்ளுமவர்களைச் சொல்லுகிறது-

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலிமிக்க வாள் வரை மத்தாக -வலி மிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோணாகம் கொம்பு ஒசித்த கோ–68-

பதவுரை

வலி மிக்க–மஹா பலசாலிகளாய்
வாள் எயிற்று–வாள் போன்ற கோரப் பற்களை யுடையராய்
வாள்–வாட் படையை யுடையரான
அவுணர்–ஆஸுர ப்ரக்ருதிகள்
மாள–முடிந்து போவதற்காக
வலி மிக்க வாள் வரை மத்து ஆக–மிக்க வலிவுள்ளதாய் ஒளியை யுடைத்தான மந்தர மலையை மத்தாகக் கொண்ட
வலி மிக்க வாள் நாகம்–அதிகமான சக்தியையும் ஒளியையுமுடைய வாஸுகி நாகத்தை
சுற்றி–கடை கயிறாகச் சுற்றி
கடல் மறுக கடைந்தான்–கடல் குழம்பும்படி கடைந்தருளினவன் (எவனென்றால்)
கோள் நாகம்–மிடுக்கை யுடைய குவலயாபீடமென்னும் மத யானையினது
கொம்பு–கொம்புகளை
ஒசித்த–முறித்தொழித்த
கோ–ஸ்வாமியாவன்

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள-
மிடுக்கை உடையராய
சாயுதரான அசுரர் முடிய

வலி மிக்க வாள் வரை மத்தாக –
கடையப் புக்கால் பிதிர்ந்து போகாதபடி
மிடுக்கை உண்டாக்கி
மந்தரத்தை மத்தாகக் கொண்டு

வலி மிக்க வாணாகம் சுற்றி
நாற்கால் கடைந்தவாறே
அற்றுப் போகாதபடி வாசுகிக்கு மிடுக்கைக் கொடுத்து

மறுகக் கடல் கடைந்தான்–
கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படி
கடலைக் கடைந்தான்

கோணாகம் கொம்பு ஒசித்த கோ –
நம்மை முடிக்க வந்த குவலயா பீடத்தை கொன்று
நாட்டுக்கு ஒரு சேஷியைத் தந்தான்-

(ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் -பெரிய திரு -5-7-4-
இப் பாசுரத்தால் தமது விரோதிகளை போக்கித் தம்மை தோற்பித்துக் கொண்டான் சர்வேஸ்வரன் என்கிறார்)

————————————————————————–

கோவாகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே
மாவேகிச செல்கின்ற மன்னவரும் -பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் –69-

பதவுரை

கோ ஆகி–ராஜாதி ராஜர்களாய்
மா நிலம் காத்து–பரந்த பூமண்டலத்தை அரசாட்சி புரிந்து
நம் கண் முகப்பே–நம் கண்ணெதிரே
மா ஏகி செல்கின்ற–குதிரை யேறித் திரிகின்ற
மன்னவரும்–அரசர்களும்,
செம் கமலப்பூ மேவும்–செந்தாமரை மலர் பொருந்தி யிருக்கப் பெற்ற
நாபியான்–திரு நாபியை யுடைய பெருமானுடைய
சே அடிக்கே–திருவடிகளுக்கு
ஏழ் பிறப்பும்–பல பல ஜன்மங்களிலே
தண் கமலம்–அழகிய தாமரைப் பூக்களை
ஏய்ந்தார்–ஸமர்ப்பித்தவர்களான
தமர்–பக்தர்களாவர்

தேவர்களை ஒழிய சிலர்
வாழாதே இருக்கச் செய்தே
சிலர் வாழ்ந்தாராய் இருக்கிற ராஜாக்களும்
அழகிய தாமரைப் பூவை திரு நாபியில்
உடையவனானவனுடைய திருவடிகளிலே
குளிர்ந்த தாமரைப் பூவை அணிந்த -(அணிவித்த -)தமர்கள் இறே
ராஜாக்களாக திரிகிறவர்கள் –

(முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –-பெரிய திருவந்தாதி -72-

ஏய்ந்தார் தமர் -இவனை ஆஸ்ரயித்தவர்களே சக்கரவர்த்திகள் ஆவார் என்றும்
ஏய்ந்தாருடைய தமர் என்று இவரை ஆஸ்ரயித்த ப்ரஹ்மாதிகளை ஆஸ்ரயித்தவர்களும் சக்கரவர்த்திகள் ஆவார் என்றும் கொள்ளலாம் -)

————————————————————————–

தனக்கு நல்லவர்களுக்கு-அவன் சந்நிதி பண்ணும் இடங்கள் சொல்லுகிறது –

(ஆழ்வார் திரு உள்ளத்துக்கு எட்டு திவ்ய தேச வாசமும் ஒவ்வாது -எட்டைச் சொன்னது அனைத்துக்கும் உப லக்ஷணம்
பக்தானாம் -அடியார் உள்ளமே -அவனுக்கு பரம புருஷார்த்தம்

சோழ நாட்டு இரண்டும் -தலை அடை மொழி -தொண்டை நாட்டு -தண் கால் –
தமர் உள்ளும் -திருவேங்கட யாத்திரை மநோ ரதம் -தண் பொருப்பு
வேலை -திருப்பாற்கடல்
தமர் உள்ளும் புண்டரீகர் போல்வார் சிந்திக்கும் திருக்கடல் மல்லை
திருக்கோவில் -இவர்கள் மூவரும்
மதிள் திருக்குடந்தை -இங்கு தானே சாரங்க பாணி -ஸூ ரஷிதம் -திராவிட ஆம்னாய பெருமாள் அன்றோ)

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

பதவுரை

தமர் உள்ளம்–பக்தர்களுடைய ஹ்ருதயம்
தஞ்சை–தஞ்சை மா மணிக் கோயில்
தலை அரங்கம்–சிறந்ததான திருவரங்கம்
தண் கால்–திருத் தண் கால்
தமர் உள்ளும்–பக்தர்கள் தியானிக்கிற
தண் பொருப்பு–அழகிய திருமலை
வேலை–திருப் பாற் கடல்
தமர் உள்ளம்–பக்தர்கள் சிந்திக்கிற
மா மல்லை–திருக் கடன்மல்லை
கோவல்–திருக் கோவலூர்
மதிள் குடந்தை–திரு மதிள்களோடு கூடிய திருக்குடந்தை (ஆகிய இத்தலங்களெல்லாம்)
ஏவல்ல எந்தைக்கு இடம் என்பர்–எதிரிகளை முடிக்க வல்லவனான எம்பெருமானுக்கு இருப்பிட மென்பர்.

தமருள்ளும் –
அவற்றில் முற்பட்டது
ஆஸ்ரிதர் உடைய ஹிருதயம்

(இதிஹாச புராணம் -அத்தாலே அது முற்பட்டது -அச்சு எழுத்து குறைவான புராணம் முதலில் சொல்லாமல்
அப்யஹிதம் பொருள் உயர்ந்த ஒன்றை முதலில் சொல்ல வேண்டும்
அதே போல் இங்கும் -அர்த்த கௌரவத்தாலே
வந்தே கோவிந்த தாதவ் -பட்டர் எம்பாரைச் சொல்லி பின்பே கூரத்தாழ்வானை அருளிச் செய்தது போல் இங்கும்
தமர் உள்ளமே அவனுக்கு பரம புருஷார்த்தம்)

தஞ்சை
தஞ்சை மா மணிக் கோயில்

தலை யரங்கம்
திருப்பதிகளில் பிரதானமான கோயில்

தண் கால்
திருத் தண் கால்

தமருள்ளும் தண் பொருப்பு
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சர்வஸ்வமான திருமலை

வேலை
திருப் பாற் கடல்

தமருள்ளும் மா மல்லை கோவல்
மூன்று ஆழ்வார்களையும் நெருக்கின இடம்

மதிள் குடந்தை
திரு மழிசைப் பிரான் உகந்த இடம்

என்பரே ஏவல்ல வெந்தைக்கு இடம் —
சக்கரவர்த்தி திருமகனுக்கு
இடம் என்று சொல்லுவார்கள்

ஏ வல்ல
எய்ய வல்ல-

(தமர் உள்ளம் -அப்யர் ஹிதம் பூர்வம் -சிறந்த ஒன்றை முதலில் சொல்வதே நியாயம் –
ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ்ய ஆயதனம் மஹத் -என்றும்
நெஞ்சமே நீள் நகர் -திருவாய் -3-8-2-என்கிறபடியே
பெரும் கோயிலை முதலில் சொல்லி
வெள்ளத்து இளம் கோயில் -இரண்டாம் திரு -54-என்றபடியே -ஆராமம் சூழ்ந்த அரங்கம் போன்ற திவ்ய தேசங்களாக இளம் கோயில்கள் எல்லாம்
பிரதிபக்ஷத்தை எய்த்து விழ விட வல்ல தசரதாத்மஜனுக்கு வாசஸ்தானம் என்பர் அறிவுடையோர் என்கிறார்
ஏ வல்ல எந்தை -எய்தற்கு வல்லனான என் ஸ்வாமி என்றபடி -)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading