ஸ்ரீ எம்பார் ஸ்ரீ பட்டருக்கு அருளிச் செய்த பத்து வார்த்தைகள் –
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் இருக்கும்படி என் -என்று ஸ்ரீ பட்டர் ஸ்ரீ எம்பாரைக் கேட்க –
சகல வேத சாஸ்த்ரங்களாலே அறுதி இட்ட அர்த்தத்தை பத்து வார்த்தையாலே
ஸ்ரீ பட்டருக்கு ஸ்ரீ எம்பார் அருளிச் செய்தார் –
இப்பத்து வார்த்தைகள் உடைய வரலாறு சொல்லுகிறது
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆகிற பெரும்கடலிலே ஆழ்வார் ஆகிற காளமேகம் படிந்து –
கிருபை யாகிற அமிர்த ஜலத்தை பானம் பண்ணி
ஸ்ரீ நாதமுனி யாகிற மஹா மேருவிலே வர்ஷித்து
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் ஆகிற அருவிகளாலே போந்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆகிற ஏரியிலே தேங்கி
நம் ஆச்சார்யர்கள் ஆகிற மதகுகளாலே புறப்பட்டு
சம்சாரம் ஆகிற கழனிக்கு ஏறப் பாய்கிறது –
(லஷ்மீ நாதாக்ய சிந்தவ் -ஸடரிபு ஜலத -ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்ய ஷிஞ்சித் -ததனு ரகுவர அம்போஜ சஷுர் ஜராப்யாம் -கத்வா தாம் யாமுநாக்யாம் ஸரிதம் அத யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் -ஸம் பூர்ய ப்ராணி ஸஸ்யே ப்ரவஹதி -பாஹுதா தேசிகேந்த்ர பிரமவ்கவ்)
(ராம மிஸ்ரர் உய்யக் கொண்டார் புண்டரீகாக்ஷர் மணக்கால் நம்பி -அருவி -ஆளவந்தார் பெருக்காரு -பஞ்ச ஆச்சார்யர் வாய்க்கால் மூலம் வீராணம் ஏரி யாகிய எம்பெருமானார் -74ஸிம்ஹாஸனாதிபதிகள் -வம்சம் மூலமும் நம்மிடம் சேரும்)
இனி
எத்தினால் இடர்க் கடல் கிடக்கிறாய் -திருச்சந்த விருத்தம் -115-
அதன்றியே
பிரகிருதி அந்தத்தில் எம்பெருமான் திருவடிகளைப் பெறலாம் என்கிறது
முதல் வார்த்தை -(பேற்றுக்குத் த்வரிக்க வேண்டும் -என்பதற்குப் பிரமாணங்கள்)
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன் -திருவாய்மொழி -8-5-2- என்றும் –
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -திருவாய்மொழி -7-2-1- என்றும் –
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன் -திருவாய்மொழி -4-7-10 என்றும் –
பிரபன்னஸ் சாதகோ யத்வத் -(ப்ரபன்னன் சாதகப் பறவை போலே எம்பெருமானுடைய கருணை நீர் ஒன்றையே எதிர்பார்த்து இருப்பான்)-என்றும் இருக்கை-
இரண்டாம் வார்த்தை -(பேறு தப்பாது என்றும் துணிந்து இருக்கையாகிற மஹா விஸ்வாஸத்துக்கு பிரமாணங்கள்)அப் பேறும் அவனாலே பெற வேண்டும் என்று இருக்கை -அதாவது –
உன்னால் அல்லால் யாவாராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும்
உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் -பெரியாழ்வார் திருமொழி -5-3-3- என்றும் –
யானே நீ என் உடைமையும் நீ -திருவாய்மொழி -2-9-9- என்றும் –
எனதாருயிர் அவன் கையதே -திருவாய்மொழி -9-5-3- என்றும் –
இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால் -திருவிருத்தம் -62 என்றும் –
சேமம் செங்கோன் அருளே -திருவிருத்தம் -27-என்றும்
செய்த்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள -பெரியாழ்வார் திருமொழி -3-7-9-என்றும் -இருக்கை-
மூன்றாம் வார்த்தை –
இப் பேறு பெற்று வாழ நினைத்து இருப்பார் தேவதாந்தர பஜனம் பண்ணாது ஒழிவர் –
அதாவது –
மறந்தும் புறம் தொழா மாந்தர் -நான்முகன் திருவந்தாதி -68 என்றும் –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணைக் கீழ் வாழ்ச்சி -திருவாய்மொழி -3-2-4- என்றும் –
கூராராழி வெண் சங்கேந்தி கொடியேன் பால் வாராய் -திருவாய்மொழி -6-9-1-என்றும் –
கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல் -பெருமாள் திருமொழி -5-2-என்றும் இருக்கை –
தன் பர்த்தாவுடன் தான் வாழ வில்லை யாகிலும் பிறர் முகம் பாராதவளை இறே பதி வ்ரதை என்பது –
நான்காம் வரத்தை –
தேவதாந்தர பஜனம் பண்ணுவாரோட்டை சஹ வாஸம் வருந்தியும் கை விடுவான் –
அதாவது
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே -பெரிய திருமொழி -2-6-1- என்றும்
எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே -பெரிய திருமொழி -11-6-7- என்றும் –
சடைத் தேவர் தம் துவக்கைப் பாராது ஒழிவதே(சடைமுடியை யுடைய சிவன் ஷூத்ர புருஷார்த்தங்களைக் கொடுப்பதனால் ஏற்படும் ஆகர்ஷணத்தை அலட்சியப் படுத்துவதே) -என்றும் –
பரம் தாமத்தை (பரம பதத்தை)பற்றுவதே -என்றும் –
சத்தான சாந்துக்கு சுண்ணாம்பு விரோதியாம் போலேயும்
ஸ்தாலீ ஸம் சர்கத்தாலே ஜலத்துக்கு உஷ்ணம் ப்ரேவேசிக்குமா போலேயும் –(பாத்திரத்தில் உள்ள தண்ணீர் சுடுமா போல் தேவதாந்த்ர சம்பந்திகள் சம் சர்க்கத்தாலே நாமும் இழப்போம் அன்றோ)
ப்ராக்ருத அன்னம் த்யஜேத் -என்றும்
தஸ்ய பிரகிருதி லஷணம் -என்றும் –
த்விஷத அன்னம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்
பாண்டவான் த்விஷேச ராஜன் மம ப்ராணா ஹி பாண்டவ (உத்யோக பர்வம் -91-27-த்வேஷியின் அன்னம் உண்ணத் தகாதது -த்வேஷிக்கு ஒருபோதும் உணவளிக்கக் கூடாது -அரசனே நீ பாண்டவர்களை த்வேஷிக்கிறாய் -எனக்கு பாண்டவர்கள் உயிர் அன்றோ -கண்ணன் துரியோதனைப் பார்த்துக் அருளிச் செய்த வார்த்தை -)-என்று
சர்வ சக்தி தானே அநாதரிக்கையாலே சர்வதா நமக்கும் அநாதரணீயம்
ஐஞ்சாம் வார்த்தை –
உகந்தருளின திவ்ய தேசங்களிலே வர்த்திப்பான் –
அதாவது –
நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -நாச்சியார் திருமொழி -11-5- என்றும் –
அற்ற பற்றர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கம் -திருச்சந்த விருத்தம் -52- என்றும் –
வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள் -நாச்சியார் திருமொழி -8-9- என்றும் –
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -பெருமாள் திருமொழி -4-10 என்றும்
பிள்ளை திருநறையூர் அரையர் பட்டர் ஸ்ரீ பாதத்திலே சென்று தண்டனிட்டு –
அடியேனுக்கு தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் -என்ன –
பொய்யே யாகிலும் உகந்தருளின திவ்ய தேசங்களிலே புக்குப் புறப்பட்டீர் ஆகில்
அந்திம தசையிலே கார்ய கரமாம் -என்று அருளிச் செய்தார் –
ஆறாம் வார்த்தை –
அநுகூல்ய சங்கல்பனாய் இருக்கை –
அதாவது –
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணமறி -திருவாய்மொழி -2-7-10- என்றும்
சக்ருதேவ பிரபந்நாயா (ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய தவ அஸ்மி இதி ச யாசதே
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம-யுத்த 18-33-ஸ்ரீ ராம சரம ஸ்லோகம்)-என்றும் –
சக்ருத் க்ருதோஸ் அஞ்சலி -ஸ்தோத்ர ரத்னம் -என்றும் –
இச்சா மாத்ரமே அமையும் என்று இருக்கை-(பரம புருஷார்த்தத்தை எம்பெருமானிடமிருந்தே பெற வேணும் என்கிற இச்சா மாத்திரமே பேற்றுக்கு வேண்டியது)
(த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-ஶ்லோகம் 28 –காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.)
ஏழாம் வார்த்தை –
ப்ராதி கூல்யத்தை வருந்தியும் கை விடுவான் –
அதாவது –
பகவத் அபசார பாகவத அபசார அசஹ்ய அபசார ரூப நாநாவித அநந்த
அபசாரத்துக்கும் அடியாய் -த்யாஜ்யமான அர்த்த காமங்கள் நிமித்தமாக –
பகவத் பாகவத விஷயங்களிலே சிவிட்கு என்று இருக்குமாகில்
அத்தை வருந்தியும் கை விடுவான்
எட்டாம் வார்த்தை –
ஆழ்வார்கள் ஈரச் சொல்லாலே நெஞ்சை நெகிழ்க்கை –
அதாவது –
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே -திருமாலை -14- என்றும்
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே -பெரியாழ்வார் திருமொழி -4-4-5- என்றும் –
எண்ணக் கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ண கிலாது போய்
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்கு கவளம் உந்துகின்றார்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-3-என்றும் –
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும்
இருக்கெசுச் சாம வேத நாண் மலர் கொண்டு உன பாதம் நண்ணா நாள் அவை தத்துறு மாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே -பெரியாழ்வார் திருமொழி -5-1-6- என்றும் –
தரித்து இருந்தேன் ஆகவே தாரா கணப்போர் விரித்துரைத்த வெந் நாகத்து உன்னை
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினான் போது –நான்முகன் திருவந்தாதி -63-என்றும் –
நகரமருள் புரிந்து நான்முகற்க்குப் பூ மேல் பகர மறை பயந்த பண்பன்
பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி யுரு வெண்ணும்
அந்தியால் ஆம் பயன் எங்கென் -முதல் திருவந்தாதி -33- என்றும் இருக்கை –
ஒன்பதாம் வார்த்தை –
ஆழ்வார்கள் ஈரச் சொல்லாலே நெஞ்சை நெகிழ்க்கும் சத்துக்களோடு சஹ வாஸம் பண்ணுவான் –
அதாவது
வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் -திருப்பல்லாண்டு -3 என்றும்
தொண்டீர் எல்லீரும் வாரீர் -திருவாய்மொழி -5-2-2- என்றும்
எல்லாரும் போந்தாரோ -திருப்பாவை -15-என்றும் –
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெரும் குழுவு கண்டு -பெருமாள் திருமொழி -1-10- என்றும் –
அவன் அடியார் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க -திருவாய்மொழி -8-10-7- என்றும் –
அவன் அடியார் -திருவாய்மொழி -8-10-3- என்றும் –
திரு உடை மன்னர் -திருவாய்மொழி -4-4-8- என்றும்
வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரை சாத்தி இருப்பார் தவம் –நான்முகன் திருவந்தாதி -18-என்றும் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10- என்றும்
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -திருவாய்மொழி -10-9-11-என்றும்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்றும் இருக்கை –
(-தத்தாலே ததீயரா – ததீயராலே நாமா-எம்பெருமானுக்கும் திருமங்கையாழ்வாருக்கும் சம்வாதமாக -ததீய பரகத ஸ்வீ கார மஹிமை வைபவம் -காட்டும்-அவர்கள் மூலமே உம்மைப் பற்றினேன் -உம் மூலமே பாகவத கைங்கர்யம் பெற்றேன் -பேறு பெரும் வரை இவர்களையே மண்டினேன்-பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -)
ஆழ்வீர் உமக்கு இவர்களோட்டை சம்பந்தம் ஓரளவு இன்றியிலே இருந்ததீ -என்ன
என் செய்கேன் – 1-உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும்
2-உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும்
3-இருந்த நாளைக்கு உசாத் துணை யாகையாலும் பிரிகிலேன் என்கிறார்-
(சாண்டில்யை வ்ருத்தாந்தம் -இது வன்றோ எழிலாலி என்றால் தானே -இவையும் உண்டு -இங்கு போல் திவ்ய தேச வாசமும் வேண்டும் என்றும் அடியார் ஸஹவாசமும் வேண்டும் என்பதும் உண்டு-நாம் சாண்டில்யையும் திருமங்கை ஆழ்வாரும் போல் அல்லவே-மனம் ஈடுபாடு வேண்டுமே -போதயந்த பரஸ்பரம் துஷ்யந்தி ச ரமயந்தி இத்யாதி)
பத்தாம் வார்த்தை
ஆசார்யன் திறத்தில் செய்த அடிமையை மறந்து –செய்யப் பெறாத அடிமைக்கு இழவு பாடனாய் இருப்பன் –
அதாவது
ஆசார்யன் திரு உள்ளத்தை பின் சென்ற அனந்தாழ்வானைப் போலவும் (எம்பெருமானரைப் பிரிந்து திருமலையில் புஷ்ப கைங்கர்யம் -அனந்தாண் பிள்ளை -அன்றோ)-எம்பாரைப் போலவும்-(எம்பெருமானார் திரு உள்ளபடியே பட்டருக்கு ரக்ஷையாக த்வயம் உச்சாரணம் –வந்தே கோவிந்த தாதவ் -அல்ப அக்ஷரம் பூர்வகமாக இல்லாமல் அப்யஹிதம் பிரபாவம் அதிகமாக உள்ள ஆச்சார்யர் முன்னாக -ஞானப்பிதா -அன்றோ)
ஆசார்யன் அநாதரம் அநர்த்த கரம் என்று தன்னைத் தாழ விட்டு அடிமை செய்த
எச்சானைப் போலவும் இருக்கை(பருத்திக் கொல்லை அம்மாளை அலட்ஷியம் செய்தது கண்டு எம்பெருமானார் தம்மை அநாதரித்து விட -யஞ்ஞேசர் ஆகிற எச்சான் தம்மை தாழ விட்டு அடிமை செய்த வ்ருத்தாந்தம்)
இப் பத்து வார்த்தையும் அருளிச் செய்த ஆசார்யன் விஷயத்திலே க்ருத்ஜ்ஞனாய் இருப்பான்
இப் பத்து வார்த்தையும் ஓருரு நெஞ்சிலே பட அனுசந்திப்பான்
இப் பத்து வார்த்தையில் ஓன்று குறைந்தால் தன் ஆநுகூல்யம் அரை வயிறாம் என்று இருப்பான்
இப்படி அறுதி இட்டு இருப்பாருக்கு –வைகுண்ட மாநகர் மற்றது கையதுவே -திருவாய்மொழி -4-10-11
——————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பட்டர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ எம்பார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply