ஸ்ரீ ஸூத மஞ்ஜரீ -ஸ்ரீ பகவத் விஷயம்-மூன்றாம் பத்தின் ஸாரம்-ஸ்ரீ.உ வே. வித்வான்‌ ஸ்ரீ நிவாஸா சாரிய ஸ்வாமிகள்-

“வியாபகத்வம்‌”-திருமகள்‌ கேள்வனைன செல்வத்‌ திருமாலின்‌ திருவருளுக்கு இலக்கானவர்‌ நம்மாழ்வார்‌. ௮நாதி காலமாய்‌ வந்த இவருடைய அறியாமையைப்‌ போக்கி ஞான, பக்திகளைக்‌ கொடுத்து அவற்றை நாடும்‌ நகரமும்‌ நன்கறிய விளங்க வைத்தான்‌ எம்பெருமான்‌. இதற்கு ஆழ்வார்‌ திருவாய்‌ மலர்ந் தருளிய திருவாய்‌ மொழியே சான்றாகும்‌. எம்பெருமான்‌ அவருக்குத்‌ தன்‌னுடைய தனிப்‌ பெரும்‌ சிறப்புக்களை எல்லாம்‌ காட்டிக்‌ கொடுத்தான்‌. அவற்றைத்‌ தாம்‌ அனுபவித்ததன்றி நாட்டாருக்கும்‌ அவ்வ நுபவத்தைப்‌ பாசு ரங்கள்‌ வாயிலாக உணர்த்துகிறார்‌. அவ்வநுபவத்தில்‌ பிறந்த திவ்யப்‌ பிரபச்தமே திருவாய்‌ மொழியாகும்‌. பத்து நூறுகளைக்‌ கொண்ட (ஆயிரம்‌ பாடல்களான) இத்திருவாப்‌ மொழியில்‌ மூன்றாவது நூறான மூன்றாம்‌ பகுதி-அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ அருளிய * ஆசார்ய இதயம்‌ ” என்னும்‌ ,நூலில்‌, திருவாய்மொழி ஒவ்வொரு பத்திற்கும்‌ (ஒவ்வொரு . நூறுக்‌கும்‌) ஆழ்வாரின்‌ திருவுள்ளக்‌ கருத்தை ஆராய்ந்து அறுதி யிட்டுத்‌ தொகுத்‌ தளித்திருக்கிறார்‌.-வேதத்தில்‌ ஒரு கருத்தை அறிய முற்படுகையில்‌ பலபல இடங்களிலும்‌ சிதறிக்‌ கடக்கும்‌ அதற்குப்‌ பொருத்தமான தொடர்களை ஒன்று சேர்த்து நோக்கினல்‌ தான்‌ அக் கருத்தின்‌ முழுமை தெரியும்‌. அவ்வாறே தமிழ்‌ மறை யான திருவாய்‌ மொழியிலும்‌, ஒவ்வொரு நூறு பாசுரங்களைக்‌ கொண்ட ஒவ்‌ வொரு பத்திலும்‌ ஆழ்வாருடைய கருத்து இன்னது என்று அறிய அந்த நூறு பாசுரங்களிலும்‌ ஆங்காங்கு சிதறிக்‌ கிடக்கும்‌ தொடர்களை ஒன்று சேர்த்து நோக்கியே அந்தந்தப்‌ பத்தின்‌ முழுக்‌ கருத்தையும்‌ அறிய வேண்டியிருக்கிறது. சங்கப்‌ புலவர்களும்‌, தாம்‌ இயற்றிய தொகை நூல்களில்‌, முன்‌ பின்னாகத்‌ தொடர்களைச்‌ சிதற வைத்து, அவற்றை ஒன்று சேர்த்துப்‌ பார்க்கும்‌ நுண்‌ ணறிவு உடையவர்களான பேராசிரியர்களுக்கே விழுப்‌ பொருள்‌ விளங்குமாறு பாடல்களை அமைத்திருக்கிறார்கள்‌. அவ்வாறே, திருவாய்‌ மொழியிலும்‌ முன்‌ பின்னாகக்‌ கிடக்கும்‌ தொடர்களை ஒருங்கிணைத்து ஆழ்வாருடைய இதயக்‌ கருத்து இன்னது என்று ஸாரமாக “ஆசார்ய இதயத்தில்‌ ” எடுத்துரைக்கப்‌ பட்டுள்ளது.

பூவுலகில்‌ காணப்படும்‌ பொருள்கள்‌ அனைத்திலும்‌ இறைவன்‌ உள்ளும்‌ புறமும்‌ நிறைந்திருக்கின்‌றான்‌. அங்ஙனம்‌ இருப்பினும்‌, அப் பொருள்களிடத்திலுள்ள நன்மை தீமை எவையும்‌ அவ் விறைவனிடம்‌ சாருவதில்லை. இச் சிறப்‌ பியல்புடைய இறைவன்‌, கீழ்‌ இரண்டு நூறுகளில்‌ ஆழ்வார்‌ முடிவு செய்த (படிக்கு அவருக்கு அனுபவத்தைப்‌ பண்ணி வைத்தான்‌. அதாவது, தலை வனான எம்பெருமானுடைய விருப்பத்திற்கு ஏற்பச்‌ செயல்பட வேண்டியவனே அடிமையான இச் சீவன்‌ என்றும்‌, தனக்காக எதுவுமில்லாமல்‌ அவனுக்காகவே இருப்பது ஜீவனின்‌ கடமை என்றும்‌, இதுவே வீடு பேறு என்றும்‌, இதுவே வேதாந்த விழுப் பொருள்‌ என்றும்‌ ஆழ்வார்‌ கீழே முடிவு செய்துள்ளபடியாகும்‌, இதை அனுசரித்து எம்பெருமான்‌ தன்னுடைய திவ்விய மங்கள விக்கிரகத்தை ஆழ்வார்‌ கண்டு ௮நுபவிப்பதே தனக்கு விருப்பமாகக்‌ கருதி ஆழ்வாருக்குத்‌ தனது திருமேனி அழகைக்‌ காட்டிக்‌ கொடுத்தான்‌.

இவரும்‌ அவன்‌ வலிய வந்து தனக்குக்‌ காட்டிக்‌ கொடுத்த திருமேனி அழகை அனுபவித்து மிகவும்‌ களித்து நின்றார்‌. அக் களிப்பின்‌ மிகுதியாலே எம்பெருமானிடம்‌ கரை புரண்ட காதல்‌ மிகுந்தது இவருக்கு. அக் காதலால்‌ அவனுக்கு எல்லா அடிமைகளையும்‌ செய்ய வேண்டுமென்ற பேராவல்‌ கொண்‌டார்‌. அவ்‌ வாவலுக்கேற்ப இறைவனும்‌ தான்‌ எங்கும்‌ எப்பொருளிலும்‌ எக்‌ காலத்திலும்‌ உறைந்திருக்கும நிலையைக்‌ காட்டிக்‌ கொடுத்து, மேலும்‌ தன்‌னிடத்தில்‌ மிக்க காதல்‌ பெருகுமாறு செய்தான்‌. அக் களிப்பின்‌ மிகுதி அவனளவிலே நில்லாமல்‌ அவன்‌ தொண்டர்‌ தமக்கும்‌ தொண்டராகும்‌ ஆசையை உண்டு பண்ணியது. அதனால்‌, அத் தொண்டர்கள்‌ இறைவனை அனுபவிக்கும்‌ நெறி முறைகளைத்‌ தாம்‌ நினைத்து அதனால்‌ மிக்க மகிழ்சியடைந்தார்‌. ௮ம்‌ மகிழ்ச்சியும்‌ கட்டுக்கடங்காமல்‌ வளர்ந்தது. அதனால்‌ ஐம்புலன்களில்‌ ஒவ்‌ வொலன்றும்‌ மற்றைப்‌ புலன்களுடைய அனுபவத்தையும்‌ சேர்த்து அனுபவிக்க வேண்டுமென்ற பெரு விடாய்‌ உடையவரானார்‌. தம்முடைய புலன்கள்‌ பகவாளை வழிபடுவதிலேயே உரிமையாய்‌ மூழ்கி இருப்பதையும்‌ மற்றை உலகியலில்‌ ஈடு படாமல்‌ வெறுத்திருப்பதையும்‌ உணர்ந்தின்‌புற்றார்‌. இவ்வாறு தாம்‌ அனுபவிக்கும்‌ பகவத்‌ விஷய அனுபவத்திற்கு எவ்வித இடர்ப்பாடுமில்லாமல்‌ தாம்‌ அனுபவிக்கும்‌ பெருமையை நினைந்து அளவற்ற மகழ்ச்சி அடைந்தார்‌. ௮ம்‌ மகிழ்ச்சியால்‌ உலகில்‌ திரியும்‌ ஆன்மாக்களை நோக்க உபதேசிக்கலானார்‌. அவர்களோ பகவானுடைய மேன்மைகளையும்‌ தம்முடைய தாழ்வுகளையும்‌ கண்டு ஞானிகளால்‌ காணக் கூடிய பகவானை அறிவிலிகளான நாம்‌ எப்படி அணுக முடியும்‌? என்று எண்ணிப்‌ புறம்‌ திரியலாயினர்‌. இதைக்‌ கண்ட ஆழ்வார்‌, அவர்கள்‌ இவ்வாறு இறைவனை அஞ்சி அகலாமைக்கும்‌, அவனைக்‌ கூடுகைக்கும்‌ அவர்களை நோக்கி உபதேசிக்கலானார்‌. இவ் வுபதேசம்‌ கீழ்‌ இரண்டு நூறுகளிலும்‌ உபதேசித்த உபதேசங்களைக்‌ காட்டிலும்‌ சீர்மையுடையதாக அமைந்தது. அத்ரவது பரமபதத்திலிருந்து இராமன்‌, கண்ணன்‌ என்று அவதரித்த விபவ எம்பெருமானுடைய எளிமை குணம்‌ கீழே பேசப்பட்டது. இங்கு -இந்த மூன்றாவது நூறில்‌ அவன்‌ அர்ச்சா வடிவத்துடன்‌ சேவை கொடுத்துக்‌ கொண்டிருக்கும்‌ (அர்ச்சாவதார) எளிமை உபதேசிக்கப்படுகிறது என்பதாம்‌. அவனே அர்ச்சிராதி மார்க்கத்தின்‌ வாயிலாக நமக்கு வீடு பேற்றையும்‌ அருளுபவன்‌. நமக்காக அவன்‌ மிக எளிய முறையில்‌ நின்றும்‌, இருந்தும்‌, கிடந்ததுமான கோலங்களில்‌ கோவில்களில்‌ காத்துக் கிடக்கிறான்‌. அவனைப்‌ புறக்கணித்துத்‌ திரிவதும்‌, பாபச்‌ செயல்களை யுடைய புல்லிய மனிதர்களைப்‌ பாடி வீணாகப்‌ பாப மூட்டையைத் தாங்குவதும்‌ பயனில்லை. வீணாக நரகத்திலே அழுந்த வேண்டாம்‌. பயனற்ற வீண்‌ செயல்களைச்‌ செய்ய வேண்டாம்‌. அடியார்‌ விருப்பத்தை யெல்லாம்‌ வேண்டியபடி கொடுத்தருளுவான்‌. அவ்‌ வெம்பெருமான்‌ இறுதியில்‌ தனக்கு ஒப்பாகவே வீடு பேற்றில்‌ பயனையும்‌ கொடுப்பான்‌. அத்தகைய கருணை வள்ளலை வாய்‌ படைத்த பயன்‌ பெறும்படி. வாயினால்‌ பாடி, அவனுக்குத்‌ தொண்டு செய்வீராக! இழி தொழிலான நரஸ்‌துதியை ஒழிப்‌்பீராக! என்னைப்‌ போலவே அவன்‌ குணக் கடல்‌ ஆடுவதில்‌ ஈடு பட்டு அவனைப்‌ பாடிப்‌ பயனடைவீராக என்று, தம்‌ கண்ணில்‌ காணும்‌ உலகர்‌களைப்‌ புன்‌ நெறி விலக்கி நன்நெறிப்படுத்துகிறார்‌. இதுவே மூன்றாம்‌ பத்தின்‌ சுருங்கிய கருத்தாம்‌.

மூன்றாம்‌ பத்தில்‌ ஆழ்வாருடைய இதயம்‌ இன்னது என்பதற்குச்‌ சுருக்கமான அட்டவணை
1-எம்பெருமான்‌ எங்கும்‌ என்றும்‌ எதிலும்‌ நிறைந்தவன்‌.
2-எம்பெருமான்‌ அடியார்களுக்கு அருளும்‌ கொடைத் தன்மை.
3-ஆழ்வாருக்கு உடற்‌ பொறையில்‌ உண்டாகும்‌ வெறுப்பும்‌, எம்பெருமான்‌ திருவடி சேர்தலில்‌ உண்டான விருப்பும்‌.
4-ஆழ்வாருடையவும்‌ எம்பெருமானுடையவும்‌ இயல்புக்‌ கேற்ப ஆழ்‌வாருக்கு எம்பெருமான்‌ காட்டிக்‌ கொடுக்கிற வீடு பேறு. ஆழ்வாருக்கு அவ்வநுபவத்தில்‌ ஏற்பட்ட கலக்கம்‌ தீர்தல்‌. காலமெல்லாம்‌ அடிமை செய்ய வேண்டுமென்ற ஆசைப்பாடு.
7-எல்லாப்‌ பொருள்களிலும்‌ நிறைந்திருக்கும்‌ இறைவன்‌ புகழ்‌ பாடுதல்‌.
8-அடியார்கள்‌ எம்பெருமானை ஈடுபடுகிற முழைமையைக்‌ கண்டு தாம்‌ அவர்களிடத்தில்‌ ஈடுபாடு கொள்ளல்‌
9-ஆழ்வாருடைய ஜம்பொறிகளும்‌ அவரைப்‌ போலவே பகவானிடம்‌ ஈடுபாடு கொள்ளும்‌ சிறப்பு.
10-எம்பெருமானைப்‌ பாடுவதற்காகவே அமைந்த தம்முடைய பெருமை கூறல்‌.
11-தாம்‌ எவ்விதக்‌ குறையு மின்றி இன்பக் கடலில்‌ திளைத்திருத்தல்‌,
12-உலகிற்கு எம்பெருமானுடைய அர்ச்சாவதாரப்‌ பெருமையை எடுத்‌ துரைத்தல்‌.
13-வாய் படைத்த பயன் பெற இறைவனைத்‌ துதிக்குமாது தமது லட்சியத்தையே புலவர்களுக்கும்‌ உலகத்திற்கும்‌ உபதேசித்து உலகை நன்னெறிப்‌ படுத்தல்‌.

1-எம்பெருமான்‌ எங்கும்‌ என்றும்‌ எதிலும்‌ நிறைந்தவன்‌
வேதாந்தங்கள்‌ எம்பெருமானுடைய தனிப் பெரும்‌ சிறப்பைக்‌ கூறுகையில்‌, காலம்‌, பொருள்‌, இடம்‌ இவற்றால்‌ வரை யறுக்கப் பட்ட அனைத்துப்‌ பொருள்களையும்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌’ என்று கூறுகிறது. அதாவது ஒரு பொருளை எடுத்துக்‌ கொண்டால்‌ அது ஒரு காலத்தில்‌ தோன்றி ஒரு காலத்‌தில்‌ மறைகிறது. அதனால்‌ அந்தப்‌ பொருள்‌ கால வரைக்கு உட்பட்டதாகிறது. அது ஓர்‌ இடத்தில்‌ இருப்பதால்‌ (எல்லா விடத்திலும்‌ இல்லாததால்‌) இடத்‌திற்கு உட்பட்டதாகிறது. அந்தப்‌ பொருள்‌ பிற பொருளைக்‌ காட்டிலும்‌ வேறு பட்டு அது அதுவாக யிருப்பதால்‌ பிற பொருளைக்‌ காட்டிலும்‌ வரையறுக்கப்‌ பட்டதாகிறது. உதாரணமாகக்‌ குடம்‌ என்ற ஒரு பொருளை எடுத்துக்‌ கொண்‌டால்‌ அது ஒரு காலத்தில்‌ தோன்றி ஒரு காலத்தில்‌ மறைகிறது. அதனால்‌ அது காலத்திற்குட்பட்டதாகிறது. வேறு பொருள்களைக்‌ காட்டிலும்‌: குடம்‌! என்று பிரிந்திருப்பதால்‌ பொருள்‌ வரையறைப்பட்டு நிற்கிறது. ஒரிடத்திலிருப்‌பதால்‌ இட வரையறைப்பட்டதாகிறது. இம் மூன்று தன்மைகளும்‌ இறைவனை ஒழிந்த அனைத்துப்‌ பொருள்களுக்கும்‌ உண்டு. இறைவனோ மேற் கூறிய மூன்று வரையறைக்கும்‌ அப்பாற்பட்டு விளங்குகிறான்‌. எல்லாக்‌ காலத்திலும்‌ இருப்பதால்‌ கால வரையை அவனுக்கு இல்லை. எல்லாவிடத்திலும்‌ நிறைந் திருப்பதால்‌ இடவரையறை அவனுக்கில்லை. எல்லாப்‌ பொருளுக்கும்‌ உள்ளேயும்‌ வெளியேபும்‌ நிறைந்து அந்தந்தப்‌ பொருளும்‌ அவனாகவே ஆயிருத்‌தலால்‌ பொருளைப்‌ பற்றிய வரையறையும்‌ அவனுக்கில்லை. ஆகவே கால இடப் பொருள்‌ வரையறையும்‌ அவனுக்கில்லை. ஆகவே கால இடப் பொருகளால்‌ ஏற்பட்ட அளவுபட்ட தன்மை பகவானுக்கு இல்லை. ஆதலால்‌ இது பற்றியே அவன்‌ தனிப்‌ பெரும்‌ சிறப்பு உடையவனாகிறான்‌. இப் பெருமை அவன்‌ எல்லாப்‌ பொருளிலும்‌, எல்லாயிடத்திலும்‌, நிறைந்து நிற்பதாலேயே அவனுக்கு அமைந்திருக்கிறது. இதையே மூன்றாம்‌ பத்தில்‌ முக்கியமாக ஆழ்வார்‌ குறிப்பிடுகிறார்‌. இவற்றில்‌ எல்லாப் பொருளிலும்‌ அவன்‌ இருக்‌கிறான்‌ என்ற போது அந்தந்தப்‌ பொருளிலுள்ள நன்மை தீமைகள்‌ அவனைச்‌ சாருமே! என்று வினை எழும்‌. இதைப்‌ பற்றி எவ்விதக்‌ குற்றமும்‌ அவனுக்கு வராது, அவனுடைய தூய்மைக்கு இதனால்‌ மாசில்லை. அவன்‌ எல்லாப்‌ பொருளிலும்‌ இருந்தாலும்‌, அவ்வவப்‌ பொருனிலுள்ள நன்மை தீமைகள்‌ அவனைச்‌ சாரா வண்ணம்‌ அவன்‌ பற்றற்றவனாகவே இருக்‌கிறான்‌. அதனாலேயே அவனுக்குப்‌ “பற்றற்றான்‌!” பற்றிலனீசன்‌ என்று நூல்கள்‌ கூறுகின்றன என்று விடை காண வேண்டும்‌. இதை ஆழ்வார்‌, “முழுதுமாய்‌ முழுதியன்றாய்‌” ஏழ்ச்சிக்‌ கேடின்றி எங்ஙணும்‌ நிறைந்த எந்தாய்‌” “எஞ்ஞான்றும்‌ எங்கும்‌ ஒழிவற நிறைந்து நின்ற” “அளவிடை ஐம்புலன்கள்‌ அறியா வகையால்‌ அருவாகி நிற்கும்‌”! “யாவையும்‌ யவரும்‌ தானாய்‌ அவரவர்‌ சமயம்‌ தோறும்‌ தோய்விலன்‌” என்ற தொடர்களால்‌ மேற்‌ கூறிய கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்‌. இதனால்‌ எம்பெருமானுடைய ஸர்வ வியாபகத்துவம்‌ (எங்கும்‌ நிறைந்த தன்மை) கூறப்படுகிறது –

2-எம்பெருமான்‌ அடியார்களிடத்தில்‌ காட்டும்‌ கொடைத்தன்மை
“அடைய வேண்டிய லட்சியப்‌ பொருள்‌ எம்பெருமானைத்‌ தவிர வேறு எதுவுமில்லை என்றும்‌, அவனை அடைவதற்கு அவனைத்‌ தவிர வேறு வழி எதுவுமில்லை” என்றும்‌ உறுதி பூண்டிருப்பவரே அடியவராவார்‌.
அத்தகைய ‘அடியவர்களைப்‌ பிறவிப்‌ பெரும்‌ கடலில்‌ புகா வண்ணம்‌ எம்பெருமான்‌ பாதுகாக்கிறான்‌. பிறப்பறுத்துக்‌ கொள்ள ஆசைப்படும்‌ அவ் வடியவர்‌, வினைப்‌ பயனால்‌ மேலும்‌ பல பிறவிகள்‌ எடுக்க வேண்டி யிருந்தாலும்‌ அவற்றைத்‌ தவிர்ப்பான்‌. தற்பொழுது வினைப் பயனால்‌ எடுத்திருக்கும்‌ உடல்‌ முடிகிற போது அவ்வுடலில்‌ இருந்தும்‌ ஆன்மா வெளிப்படுகையில்‌ அவ்‌ ஆன்மாவை (வீடு பேற்றை அடைவதற்குரிய வழியான) அர்ச்சிராதி வழியாலே அழைத்துக்‌ கொண்டு வைகுந்த மா நகரிலே சேர்ப்பான்‌. அங்கு ஆன்மாவின்‌ இலக்கணமான அடிமைத்‌ தன்மையை அவன்‌ உணரும்படி காட்டித் தருவான்‌, அவ்‌ வான்மாவும்‌ தனது அடிமை இலக்கணத்தை உணர்ந்து நடந்து கொள்‌வான்‌. அதாவது பகவான்‌ சீரிய சிங்காசனத்தில்‌ எழுந்தருளி யிருக்க அவனுடைய திருவடி வைக்கும்‌ அணை போலத் தான்‌ அத் திருவடிக்‌ கீழேயிருந்து ‘குற்றேவல்‌ புரிவான்‌. இத்தகைய சிறப்பை, தன்னையே எல்லாமாகப்‌ பற்றி யிருக்கும்‌ அடியவர்க்கு எம்பெருமான்‌ செய்து கொடுப்பான்‌. இதை, தீர்த்த அடியவர்‌ தம்மைத்‌ திருத்திப்‌ பணி கொள்ள வல்ல ஆர்ச்த புகழ்‌ அச்சுதன்‌ என்றும்‌, சன்ம சன்மாந்திரம்‌ காத்து, அடியார்களைக்‌ கொண்டு போய்த் தன்மை பெறுத்தித்‌ தன்‌ தானிணைக்‌ கீழ்க்‌ கொள்ளும்‌ அப்பன்‌” என்றும்‌ ஆழ்வார்‌ அருளிச்‌ செய்கிறார்‌. இதனால்‌, அடியார்களிடத்தில்‌ எம்பெருமான்‌ மிகவும்‌ உதாரனாப்‌ (வள்ளலாய்‌) இருப்பவன்‌ என்று அவனுடைய கொடைத்‌ தன்மை உணர்த்தப் படுகிறது

3-ஆழ்வாருக்கு உடற் பொறையில்‌ உண்டாகும்‌ வெறுப்பும்‌, எம்பெருமான்‌ திருவடி சேர்தலில்‌ உண்டான விருப்பும்‌
இறைவன்‌ உலகத்தைப்‌ படைப்பதும்‌, ஆறறிவு விளங்க மனித உடலைத்‌ தருவதும்‌, ஆன்மாக்கள்‌ தன்னை வந்து அடைவதற்காகவேயாம்‌. அதை உணர்ச்து செயல்படாமல்‌, ஆன்மா தன்‌ உடல்‌ விருப்பத்திற்கேற்ப அவ்வழியே சென்று தனக்குக்‌ கேட்டை விளைவித்துக்‌ கொள்கிறது. சத்துவ, ரஜஸ்‌, தமோ குணங்களான முக்குண வேறு பாட்டாலே பல வகையாகப்‌ பிரித்தும்‌, அறிய முடியாததும்‌, தவிர்க்க முடியாததுமான தேவர்‌, மனிசர்‌, விலங்கு, தாவரம்‌ என்ற உடல்களிலே ஆன்மா அமிழ்‌கிறது. இவ்வாறான முக் குணத்தினால்‌ இவ்‌ வான்மா எடுக்கும்‌ சரீரத்திற்கு அடிப்படை, ஆதியில்‌ தன்‌ விருப்பம்‌ போல்‌ நடந்த வினையே யாகும்‌. அவ்வினை மீண்டும்‌ பாபத்தில்‌ கொண்டு போய்ச்‌ சேர்க்க அப் பாபம்‌ நால்வகையான பிறவிகளையும்‌ மாறி மாறி உண்டாக்கிக்‌ கொண்டே சுழல்கிறது. இவ்வாறு சுழலும்‌ ஆன்மாவிற்குப்‌ பிறவிப்‌ பெருங்‌ கடலைத்‌ தாண்டவோ, அதன்‌ ஆழம்‌ காணவோ முடிகிறதில்லை. பிறவிக்‌ கடலிலே வீழ்வதற்கு வினை செய்ததே யொழிய, அதிலிருந்தும்‌ கரை யேற வழி காணத்‌ தெரியவில்லை. பாபப்‌ புதரிலே அகப்பட்டு இறைவனை அடைய வழி தெரியாமல்‌ அலமறுகிற ஆன்மாவை இறைவன்‌ தானே தன்‌ கருணை மூலம்‌ கரையேற்றுகிறான்‌. அநாதி காலமாய்‌ வருகிறதும்‌. அளவுக்‌ கடங்காமல்‌ இருப்பதும்‌, தன்‌ முயற்சியால்‌ கடக்க முடியாததும்‌ மிகக்‌ கொடூரமுமான பாபத்‌ தொடர்களை மீண்டும்‌ தலை எடுக்காமல்‌ களைந்து எறிகிறான்‌ ஈசுவரன்‌. ஆழ்வார்‌ ஆகிற ஆன்மா இவ்வாறான பிறவிப்‌ பெரும்‌ கடலில்‌ அலைகையில்‌ பகவான்‌ தன்னுடைய கருணையினாலேயே இவருடைய வினைகளை வேரறுத்துக்‌ கரையேற்றி இவருக்கு அருள்‌ செய்திருக்கிறான்‌, இவ்வுண்மைகளை ஆழ்வார்‌, அந்நாள்‌ நீதந்த ஆக்கையின் வழி யுழல்வேன்‌” “பல் மா மாயப்‌ பல்‌ பிறவியில்‌ படிகின்‌ற யான்‌?? “பொல்லா வாக்கையின்‌ புணர்வினை” “வினை யியல்‌ பிறப்‌ பழுந்தி” *கொடு வினைத் தூற்‌றுள்‌ நின்‌று பாவியேன்‌ பல காலம்‌ வழி திகைத் தலமருகின்றேன்‌:’ என்று பிறவிப் பெருங் கடலில்‌ தாம்‌ பட்ட துன்பங்களையும்‌, “வினைகளை வேரறப்‌ பாய்ந்து” “தொன் மா வல்‌ வினைத்‌ தொடர்களை முதலரிந்து’? என்று பகவான்‌. ௮வற்றைக்‌ களைந்த முறையையும்‌ கூறுவதால்‌ அறியலாம்

எம்பெருமான்‌ ஆழ்வாருடைய வினைகளை யெல்லாம்‌ வேரறுத்துத்‌ தன்‌னுடைய சிறப்புக்களையும்‌ காட்டி கொடுத்த பிறகு அவருக்கு இவ் வுடலைத்‌ துறந்து விரைவில்‌ அவனைக்‌ கிட்ட வேண்டும்‌ என்ற ஆசை மிகுந்தது. ‘ இவருக்கு எம்பெருமான்‌ கொடுத்த ஞானத்தால்‌ இவர்‌ தம்முடைய பழ வினைகளை யெல்லாம்‌ கழிந்து போனதையும்‌, இனி அவ் வினை காரணமாக வரும்‌ பிறப்பும்‌ தமக்கு இல்லை என்பதையும்‌ அறிந்து கொண்டார்‌. மேலும்‌ தம்முடைய அடிமைத்‌ தன்மையும்‌ எம்பெருமானுடைய தலைமைத்‌ தன்மையையும்‌ நன்கு அறிந்தார்‌. தற்பொழுது ஆன்மா பெற்றுள்ள உடல்‌ இன்னும்‌ எவ்வளவு காலம்‌ இருக்குமோ! என்று அஞ்சினார்‌. எம்பெருமானை நோக்க, நான்‌ உன்னை அடையக்‌ கூடிய நாளை எனக்குச்‌ சொல்ல வேண்டும்‌. அந்த நாளை நினைத்தாவது நான்‌ மகிழ்ச்சியோடு இருப்பேன்‌” எந் நாள் யான்‌ உன்னை இனி வந்து கூடுவன்‌’” என்று கேட்கலானார்‌. உனக்கு அடிமையாய்‌ உள்ள நானே இவ்‌ வுடலைக்‌ கழித்துக்‌ கொண்டு உன்னை வந்தடைவது என்பது முறையாகுமோ? நீ அல்லவோ அதைச்‌ செய்து கொடுக்க வேண்டும்‌. நானாக வந்து உன்னை எப்படி அடைய முடியும்‌? எனக்கு இவ் வுடலோடே இங்கிருப்பது மிகவும்‌ அற வெறுப்பாய்‌ உள்ளதே! என்று தமக்கு இவ் வுடலோடு இங்கிருப்பது விருப்ப மில்லை என்பதையும்‌, தானாக அவனை அடைவது முறைமை யற்றது என்பதையும்‌ “எங்கு வந்து அணுகிற்பன்‌”’ எங்கு இனித் தலைப்‌ பெய்வன்‌” என்ற தொடர்‌களால்‌ கூறுகிறார்‌. மேலும்‌, இருக்கும்‌ நாளில்‌ பகவானுடைய கல்யாண குணங்‌களை அனுபவித்தே பொழுது போக்கிக்‌ கடைசியில்‌ இவ் வுடலைத்‌ துறந்து **குழந்தை தாய்‌ முலைப் பாலில்‌ வாய்‌ வைப்பது போல அவன்‌ திருவடிக்‌ கீழே, சேர வேண்டும்‌’” என்று தமக்குரிய ஆசைப் பாட்டை (காயங் கழித்து அவன்‌ தாளிணைக்‌ கீழ்ப் புகும்‌ காதல்‌”! என்று தெரிவிக்கிறார்‌. ஆக, மேற் கூறிய தொடர்‌களால்‌, எம்பெருமான்‌ தன்னுடைய பழம்‌ பெரும்‌ வினைகளெல்லாம்‌ தலைக்‌ கட்டாமல்‌ ஒழித்த உதவியும்‌, இனி இவ் வுடலோடு இவ் வுலகில்‌ இருப்பதில்‌ வெறுப்பும்‌, விரைவில்‌ இவ் வுடலை விட்டுத் தன்‌ அடிமைத்‌ தன்மைக்குச்‌ சேர அவன்‌ திருவடிக் கீழே அமரப் போகும்‌ நாள்‌ என்றைக்கு வருமோ? என்று துடிக்கிற ஆசைப்பாடும்‌ அறியலாகிறது.–

4-ஆழ்வாருடையவும்‌, எம்பெருமானுடையவும்‌ இயல்புக்‌கேற்ப ஆழ்வாருக்கு எம்பெருமான்‌ காட்டிக் கொடுக்கிற மோக்ஷம்‌
எம்பெருமான்‌, தன்னையே எல்லாமாகப்‌ பற்றி யிருக்கும்‌ அடியவருக்குத்‌ தானே தன்‌ இடத்திற்கு அழைத்துக்‌ கொண்டு போய்‌ அடிமைச்‌ செல்வத்தைக்‌ கொடுக்கிறான்‌” என்கிற எம்பெருமானுடைய இயல்பு “தீர்ந்த அடியவர்‌ தம்மை இத்யாதி தொடரால்‌ கீழே கூறப்பபட்டது. ஆழ்வாரும்‌, எம்பெருமானுக்கு அடிமை செய்வதில்‌ ஆசைப் பட்டும்‌, அதற்குத்‌ தடையாய்‌ நிற்கும்
வினைகளையும்‌, உடற்‌ பொறையையும்‌ கண்டு வெறுத்தும்‌, ஸ்வாமியான அவன்‌
சொத்தான இவ் வான்மாவை எப்பொழுது தன் வசம்‌ ஆக்குவனே என்று அவனை அடைவதில்‌ மிக்க ஆர்வம்‌ காட்டியும்‌ பேசி யிருப்பதை மேலே கண்ட தொடர்‌களால்‌ உணரலாம்‌ இதனல்‌ ஆழ்வாருடைய இயல்பை அறியலாம்‌ அல்லவா? இது காறும்‌ கூறியவற்றால்‌ இருவரது இயல்பும்‌ நன்கு விளங்கும்‌ அன்றோ! அடியார்களை மேல்‌ விழுந்து விரும்பும்‌ இயல்புடைய இறைவன்‌ தன்னிடம்‌ ஆராத காதல்‌ கொண்டு தன்னை அடையத்‌ துடிக்கும்‌ அடியவரான ஆழ்வாரைக்‌ கண்டால்‌ விடுவானோ ! ஆழ்வார்‌ ஆசைபட்டப் படியே அவருக்கு விண்ணுலகம்‌ தர விரைவானாயினன்‌. ஆயினும்‌, அங்கு போவதற்கு முன்பே அவ் வனுபவத்தை இங்கேயே இப்பொழுதே அவருக்குத் தர வேண்டும்‌ என்று கருதி அப் பரமபத அனுபவத்தை இங்கேயே அனுபவிக்கும்படி செய்தான்‌. அதாவது, தன்னுடைய திருமேனி அழகை ஆழ்வார்‌ நன்கு கண்ணாரக்‌ கண்டு அனுபவிக்கும்படி திருமாலிருஞ்சோலை மலையில்‌ அர்ச்சா ரூபியாய்‌ நின்று தன்‌ வடிவழகைக்‌ காட்டிக்‌ கொண்டு நின்றான்‌, **முடிச்சோதி என்ற திருவாய்‌ மொழி முழுவதும்‌ எம்பெருமான்‌ திருமேனி அழகை ஆழ்வார்‌ அனுபவித்துப்‌ பேசியதன்றோ’ அதுவே மோட்ச அனுபவமாகும்‌.

இனி ஊனமில்லாத மோட்சம்‌ எது என்‌பதைப்‌ பார்ப்போம்‌-மெய்ப்பொருள்‌ கண்டவரான ஞானியர்‌ ஒரு பொருளைக்‌ காணும்‌ பொழுது அப் பொருளை மேல்‌ எழப் பாராமல்‌ அப்பொருளினுள்ளே அழியாமல்‌ இருக்கும்‌ ஸத்துப்‌ பொருளான பரம்‌ பொருளையே காண்பார்கள்‌. உதாரண மாக, **கோச்சேரமான்‌ யானைக் கண்‌ சேய்‌ மாந்தரஞ்சேரல்‌ இரும் பொறை! என்பது ஒரு அரசனுடைய பெயராகும்‌. இதில்‌ *அரசன்‌’ என்ற ஜாதியும்‌, “சேரன்‌? என்ற குடியும்‌, ‘யானைப் பார்வை’ உடையான்‌ என்ற வடிவும்‌, சேய்‌” என்ற இயற் பெயரும்‌, *மாந்தரன்‌ சேரல்‌ இரும்பொறை” என்ற சிறப்புப்‌ பெயரும்‌ விளங்கக்‌ குறிக்கப் படுகிறது. இவற்றுள்‌ சாதி, குடி, வடிவு, இயற்‌ பெயர்‌, சிறப்புப் பெயர்‌ எல்லாம்‌ அழியக் கூடிய உடலைப் பற்றி வருவதால்‌ உடல்‌ அழியும்‌ பொழுது இவை அனைத்தும்‌ அழிந்து விடுகின்‌றன. இத்தகைய உடலைத்‌ தாங்கி நிற்பது அழியாத ஆத்ம தத்துவமாகும்‌. அவ் வான்ம தத்துவத்தையும்‌ தாங்கி நிற்பது பரமாத்ம தத்துவமாகும்‌. ஞானிகள்‌, அழியக்‌ கூடிய உடலையும்‌ மாறுபடுகிற ஆன்மாவையும்‌ நோக்காமல்‌ இரண்டுக்கும்‌ ஆதாரமாய்‌ இருக்கற பரமாத்ம தத்துவத்தையே காண்பார்கள்‌. அவர்களே மெய்ப்‌ பொருள்‌ கண்டார்‌’” என்று அழைக்கப் படுகிறார்கள்‌. இதனைத்‌ தமிழ் மறை “எப் பொருள்‌ எத் தன்மைத் தாயினும்‌ அப்பொருள்‌ மெய்ப்‌ பொருள்‌ காண்பது அறிவு!” என்று இயம்புகிறது. இப்படியே உலகில்‌ காணும்‌ அசையும்‌ பொருள்‌ அசையாப்‌ பொருள்‌ எல்லாவற்றையுமே காண வேண்டிய அவசியமாகும்‌. இம் முறையைக்‌ கொண்டு உலகைக்‌ காண்கின்ற ஞானிக்கு வெளிப்‌ பொருள்‌ புலனாகாமல்‌ உட் பொருளாகிற பரம்‌ பொருளே புலனாகக்‌ கூடியதாம்‌. ஒரு கால்‌ வெளிப் பொருளையும்‌ அவர்கள்‌ நோக்குவாரானல்‌ அப் பொருளை உள்ளிருக்கும்‌ பரம்‌ பொருளுக்கு உறைவிடமாக உடலாகக்‌ கருதி அதையும்‌ பரம்‌ பொருளாகவே காண்பார்கள்‌. அதனால்‌ தான்‌ ஞானிகள்‌ எல்லாப்‌ பொருளையும்‌ பரம் பொருளாகவே காண்கிறார்கள்‌ என்று நூல்கள்‌ கூறுகின்றன. இம் முறையைப்‌ பின் பற்றியே ஞானிகளுக்குத்‌ தலைவரான நம்‌மாழ்வார்‌ பகவானை அனுபவிக்கையில்‌, மோட்சம்‌ (வீடு பேறு) என்ற பொருள்‌ “பகவானே: என்று அனுபவிக்கிறார்‌. பகவானை ஊன மில்‌ மோட்சம்‌!” என்று அழைக்கிறார்‌. இப்படி எல்லாப்‌ பொருளையும்‌ பகவானாகவே கண்டு அனு பவிப்பதால்‌ பகவானைப்‌ பரி பூர்ணமாக அனுபவித்தவர்‌ ஆகிறார்‌ ஆழ்வார்‌. இதுவே ஊனமில் மோட்சம்‌ எனப்படுகிறது. இவ் வனுபவம்‌ *புகழு நல்லொருவன்‌ என்கோ!” என்ற திருவாய்‌ மொழியில்‌ அறியலாம்‌. இரண்டாவது நூறில்‌ கீழ் பத்தில்‌ “ஒளிக்‌ கொண்ட சோதியமாய்‌ உடன்‌ கூடுவது என்று கொலோ என்று பரம பதத்தில்‌ சென்று எம்பெருமானை அனுபவிக்க வேண்டு மென்று ஆழ்வார்‌ ஆசைப்பட்டுக்‌ கொண்டிருந்ததாக அறியப்படுகிறது. எம்பெருமானுக்கு ஆழ்வாரிடத்தில்‌ ஏற்பட்ட அளவிறந்த அன்பினால்‌ அங்கு போய்‌ அனுபவிக்கும்‌ அனுபவத்தை இங்கேயே அனுபவிக்கும்படி செய்தானவன்‌, இவ் வனுபவம்‌ “முடிச்‌ சோதியாய்‌ என்ற திருவாய்‌ மொழியில்‌ எம்பெருமானது வடிவழகையும்‌ ஒப்பனை அழகையும்‌ அனுபவித்துப்‌ பேசி யிருப்பதால்‌ வெளியாகிறது. ஆகவே புகழு நல்லொருவன்‌-முடிச் சோதி இவ் விரண்டு திருவாய்‌ மொழிகளிலும்‌ ஆழ்வார்‌ அனுபவித்த பகவதனுபவமே ஊனமில்‌ மோட்சானுபவம்‌ என்பதாயிற்று.

5-ஆழ்வாருக்கு அவ் வனுபவத்தில்‌ ஏற்பட்ட கலக்கம்‌ தீர்த்தல்‌
மேற்படி “முடிச்சோதி’” என்ற திருவாய்‌ மொழியில்‌ அனுபவித்த அனுபவம்‌ ” தெற்குத்‌ திருமலை ” என்று போற்றப்படுகிற திருமாலிருஞ்சோலை மலை அழகர்‌ விஷயமாகும்‌. அவனோ மா மாயன்‌, வஞ்சக் கள்வன்‌ அல்லவா? அவனுடைய வடிவழகிலே மூழ்கித்‌ துடிக்கலானார்‌ ஆழ்வார்‌. இதற்கு ஒரு உதாரணம்‌ காண வேண்டும்‌, பெருவிடாய்ப்பட்ட ஒருவன்‌ வியாதியினால்‌ வாய் திறக்க முடியாமலிருக்கிறான்‌. குளிர்ந்த நறு மணம்‌ கமழும்‌ தண்ணீரும்‌ அவன்‌ அருகில்‌ இருக்கிறது. அவன்‌ அத்‌ தண்ணீரைப்‌ பருக முடியாமல்‌ துடிப்பா னல்லவா? அது போல எம்பெருமானுடைய வடிவழகை முற்ற அனுபவிக்கப்‌ பெற முடியாமல்‌ துடிக்கலானார்‌ ஆழ்வார்‌. அப்பொழுது அழகப் பிரானான எம்‌ பெருமான்‌, ஆழ்வாரைப்‌ பார்த்து “ஆழ்வீர்‌! எத்தனை காலம்‌ ஆனாலும்‌ உம்‌முடைய கண்‌ முதலான உருப்புக்கள்‌ நம்மை முற்ற அனுபவிப்பதற்குப்‌ போதுமான தகுதி உடையதாக ஆகமுட்டா. கடலைக்‌ காணப்‌ புகுந்தவன்‌ எத்தனை காலம்‌ கடலைக்‌ கண்களால்‌ கண்டு கொண்டிருந்தாலும்‌ கடல்‌ முழுவதையும்‌ காண முடியுமா? காண முடியாதல்லவா? காண முடியாமைக்குக்‌ காரணம்‌ கடல்‌ பெருமையா? அல்லது புலன்களின்‌ வலிக்‌ குறைவா? என்றால் கடலின்‌ பெருமையைக்‌ குறை கூற முடியாதன்றே. காண்கின்றவனுடைய கண்களுக்கு அதைக்‌ காண்குற அளவு சக்தி இல்லை என்கிற குறையே உண்மை யானது. அது போல நம்மை முழுக்க அனுபவிக்க முடியாததற்குச்‌ காரணம்‌ நம்முடைய அழகைக்‌ குறை சொல்ல முடியாது. உம்முடைய உறுப்புகளுக்கு அதைக்‌ காணும்‌ போதுமான சக்தி இன்மையே குறையாகும்‌. நீர்‌ மட்டுமில்லை! வலிய உறுப்புக்கள்‌ பெற்றவரான நித்ய ஸூரிகளுக்கும்‌ நம்மை அனுபவிக்கப்‌ புகுந்தால்‌ இப்படியே தான்‌ இருக்கும்‌. யாராயிருந்தாலும்‌ நம்மை அளவிட்டு அறிய முடியாது. இது நம்முடைய இயல்பு. இதற்காக நீர்‌ வீணாகக்‌ கலங்க வேண்டாம்‌. உம்முடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே நாம்‌ வடக்குத்‌ திருமலையிலே நிற்கிறோம்‌. நீர்‌ நம்மை எப்படியெல்லாம்‌ அனுபவிக்க விரும்புகிறீரோ அப்படி யெல்லாம்‌ ௮ங்கு அனுபவிப்பீராக: என்று வடக்குத்‌ திருமலை யில்‌ நிற்கும்‌ நிலையைக்‌ காட்டிக்‌ கொடுத்தான்‌. **முடிச் சோதியில்‌” காட்டிக்‌ கொடுத்த அழகர்‌ அழகை முழுக்க முழுக்க அனுபவிக்க முடிய வில்லையே” என்றும்‌ (அதற்கான வலிமை தம்மிடத்தில்‌ இல்லையே? என்றும்‌ முறையிட்டு முந்நீர் ஞாலம்‌ ** என்ற திருவாய்‌ மொழியில்‌ பேசினார்‌. அதில்‌ கடைசியாக வடக்குத்‌ திருமலையில்‌ நிற்கும்‌ நிலையைக்‌ காட்டி ஆழ்வாரை ஆற்றுவித்தான்‌ எம்பெருமான்‌. என்‌ கண்ணனைக்‌ கண்டு கொண்டு நிலை பெற்று என்‌ கெஞ்சம்‌ பெற்றது நீடுயிரே” என்று பேசினார்‌. என்‌ நெஞ்சம்‌ நிலை பெற்றது. உயிர்‌ நீடு பெற்றது என்று ஆறுதல்‌ அடைந்தார்‌-

6-காலமெல்லாம்‌ அடிமை செய்ய வேண்டும்‌ என்ற ஆசைப்பாடு
அடுத்து **ஓழிவில்‌ காலமெல்லாம்‌’” என்ற திருவாய்‌ மொழியில்‌, அவன்‌ வடக்குத்‌ திருமலையில்‌ நிற்கும்‌ நிலையை அனுபவித்து அவ்வனுபவ இன்பத்‌தாலும்‌, தம்முடைய அடிமை பயனாக வேண்டும்‌ என்ற விருப்பதாலும்‌, அடிமை செய்ய வேண்டும்‌ என்று பாரிக்கலானார்‌. இங்ஙனம்‌ அடிமை செய்கையில்‌ எல்லாக்‌ காலத்திலும்‌ அடிமை செய்ய வேண்டும்‌. எல்லா விடத்திலும்‌ அடிமை செய்ய வேண்டும்‌. இளைய பெருமாளைப்‌ போலக்‌ கூட யிருந்தும்‌, பரதாழ்வானைப்‌ போலப்‌ பிரிந்து நின்றும்‌ எல்லா நிலைகளிலும்‌ அடிமை செய்ய வேண்டும்‌. பிறருக்குக்‌ கூறு கொடுக்காமல்‌ தாமே அனைத்தும்‌ செய்ய வேண்டுமென்று பேசலானார்‌.

7-எல்லாப்‌ பொருள்களிலும்‌ நிறைந்திருக்கும்‌ இறைவன்‌ புகழ்‌ பாடுதல்‌
ஆழ்வாருடைய கைங்கரியப்‌ பாரிப்பைப்‌ பார்த்து அவருடைய பாரிப்புக்‌ கீடாக அக் கைங்கரியத்தைப்‌ பெறுவதற்குத்‌ தானும்‌ மிக்க ஆவல்‌ உடையவனானான்‌ எம்பெருமான்‌. இதைத்‌ தெரிவிக்கவே எம்பெருமான்‌ தன்னுடைய எங்கும்‌ பரந்த தன்மையைக்‌ காட்டிக்‌ கொடுத்தான்‌. இதை அறிந்த ஆழ்வார்‌; *நமக்காகவே எம்பெருமான்‌ என்றும்‌ எங்கும்‌ எல்லாப்‌ பொருளிலும்‌ பரந்து நிற்‌கிறான்‌. எல்லாம்‌ அவனுக்கு சரீரமாப்‌ அவன்‌ எல்லாவற்றுக்கும்‌ ஆத்மாவாக எல்லாம்‌ அவன்‌ என்று சொல்லும்படியாக இருக்கிறான்‌”'” என்ற தன்மையை அறிந்து 4 புகழு நல்லொருவன்‌ என்கோ” என்ற திருவாய்‌ மொழியில்‌ அவனுடைய பரப்புத்‌ தன்மையைப்‌ புகழ்ந்து பேசலானார்‌. பஞ்ச பூதங்களும்‌ அவன்‌. பஞ்ச பூதங்களுடைய காரியமும்‌ அவன்‌. மாணிக்கம்‌ முதலான ஒளிப்‌ பொருள்‌களும்‌ அவன்‌. கரும்புக்‌ கட்டி முதலிய சுவைப்‌ பொருள்களும்‌ அவன்‌. இசை முதலிய ஒலிப்‌ பொருள்களும்‌ அவன்‌. வீடு முதலிய பேறுகளும்‌. அவன்‌. பிரமன்‌ முதலிய தேவனும்‌ அவன்‌. எல்லாவற்றுக்கும்‌ காரணமான மூல ப்ர கருதியும்‌ அவன்‌. ஜீவாத்மாக்களும்‌ அவன்‌ என்கிறார்‌. இவற்றை எல்லாம்‌ தனக்குச்‌ சரீரமாய்க்‌ கொண்டு இவற்றிற்கு ஆத்மாவாகத் தான்‌ இருப்பதால்‌ அவனையும்‌ அப் பொருள்களையும்‌ ஒற்றுமைப் படுத்தி இவ்வாறு எல்லாம்‌ அவனே என்று பேசினார்‌. எல்லாப்‌ பொருளுக்குள்ளேயும்‌ அவன்‌ இருந்தாலும்‌ அவ்வவ்‌ பொருளிலுள்ள நன்மை தீமைகள்‌ அவனைச்‌ சார்வதில்லை அவன்‌ எப்பொழுதும்‌ மாசில்லாதவனாகவே இருக்கிறான்‌ என்ற அவனுடைய தனிப் பெரும்‌ பெருமையையும்‌ பேசி அனுபவித்தார்‌. அதில்‌ இவ் வனுபவம்‌ அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. அடுத்து ”மொய்ம் மாம் பூம்‌ பொழில்‌” என்ற திருவாய்‌ மொழியில்‌ அது வெளியாகிறது.

8-அடியார்களிடத்தில்‌ ஈடுபாடு கொள்ளல்‌
“புகழுநல்லொருவனில்‌’* ஏற்பட்ட மகிழ்ச்சிப்‌ பெருக்கே ‘மொய் மாம் பூம் பொழிலில்‌” முக் கரணங்களாலும்‌ முழுகிக்‌ களிக்கும்படி அமைந்தது. இதில்‌, *எம்மானைச்‌ சொல்லி”” பண்கள்‌ தலைக்‌ கொள்ளப் பாடி? **முனிவின்‌றி ஏத்தி” பேர்‌ பல சொல்லிப்‌ பிதற்றி’? என்று கூறுவன வற்றால்‌ வாய் மொழி மகிழ்ச்சியை அறியலாம்‌. “எழுந்தும்‌ பறந்தும்‌ துள்ளாதாடீ ‘ஏத்திக்‌ குனிப்‌பார்‌” தடு குட்டமாய்‌ “கும்பிடு நட்டமிட்டாடி’” “உலோகர்‌ சிரிக்க நின்றாடி.’ என்பன வற்றால்‌ உடல்‌ மகிழ்ச்சியை உணரலாம்‌. “நெஞ்சம்‌ குழைந்து!” என்பதினால்‌ மன மழ்ச்சியை அறியலாம்‌. இம் முக்கரண மகிழ்ச்சியும்‌ ஆழ்‌வாருக்கு அளவு கடந்து பெருகியது.
அவ்வளவு கடந்த மகழ்ச்சி அவன்‌ அடியார்க்கும்‌ அடியாராய்க்‌ கடை நிலத்தில்‌ நிற்கும்‌ ஆசையை உண்டு பண்ணியது. அதனால்‌, “தம்மடியா ரடியார்‌ தமக்கடியா ரடியார்‌ தம்மடியா ரடி. யோங்களே” என்று அடியாருக்கு அடியவராய்‌ “இருக்கும்‌ இருப்பே தாம்‌ அடைய வேண்டிய லட்சியம்‌ என்று அறுதி யிட்டார்‌. கீழ்‌ இரண்டாவது நூறில்‌ “அடியார்கள்‌ குழாங்களை உடன்‌ கூடுவது என்று கொலோ என்று பேசினவர்‌, இங்கு இப்பொழுது அவர்களோடு சமமாக யிருத்து பகவாளை அனுபவிப்பது கூடாது. அடியவருக்கு அடியவராய்க்‌ கடை நிலத்தில்‌ நின்று அனுபவிப்பதே சாலச் சிறந்தது என்று அடிமையின்‌ எல்லையிலே நிற்க ஆசைப்‌ பட்டுப் பேசலானார்‌. இதுவே மொய்ம் மாம் பூம்‌ பொழில்‌ அனுபவமாகும்–

9-ஆழ்வாருடைய ஐம்பொறிகளும்‌ அவரைப்‌ போலவே பகவானிடம்‌ ஈடுபாடு கொள்ளும்‌ சிறப்பு
திருவனந்தாழ்வானை எவன்‌ படுக்கையாகக்‌ கொண்டுள்ளானே அவனே மேலான பரம்‌ பொருளாம்‌, பரம்‌ பொருளுக்கு இது ஒரு தனிப்‌ பெரும்‌ அடையாளமாகும்‌. அத்தகைய திருவனந் தாழ்வான்‌ கண்களாலேயே ஒலிகளையும்‌ கேட்பார்‌. அதாவது பாம்புகளுக்குக்‌ கண்ணே தான்‌ காது. அதனாலேயே அதற்கு கட் செவி?” என்று பெயர்‌ அமைந்தது. அத் திருவனந்தாழ்வான்‌ ஒரு உறுப்பினலேயே மற்றொரு உறுப்பினுடைய செயலைச்‌ செய்வது போல ஆழ்வாருடைய ஒவ்வொரு உறுப்பும்‌ மற்றைய உறுப்புக்களுடைய செயல்‌களையும்‌ சேர்த்துச்‌ செய்ய வேண்டுமென்று ஆசைப் படுகின்றது-நெஞ்சு நினைப்பதோடு பேச ஆசைப்படுகிறது: வாய்‌ பேசவதோடு நினைக்க ஆசைப்‌ படுகிறது. கைகள்‌, தம்‌ செயலோடு பேச ஆசைப்படுகின்றன. கண்கள்‌, தம்‌ செயலோடு கைகள்‌ செய்யும்‌ தொழிலைச்‌ செய்ய ஆசைப்படுகின்‌றன . செவிகள்‌, தம்‌ ‘செயலோடு கண்கள்‌ செயலான பார்வையையும்‌ விரும்புகின்றன. உயிர்‌, கேட்க ஆசைப் படுகிறது. இக் கருத்து முடியானே” என்ற ்‌ திருவாய்‌ மொழியில்‌ சொல்லப்படுகிறது. இதனால்‌, ஆழ்வாருடைய உறுப்புக்‌கள்‌ கட்டுக்‌ கடங்காமல்‌ பெரு விடாய்ப் பட்டு அவனை அனுபவிக்க விரும்புகிற சிறப்பு அறியலாகிறது. இத்தகைய உறுப்புக்களைப்‌ பெற்றதால்‌ ஆழ்வார்‌ சிறப்பு உடையவராகிறார்‌.

10-எம்பெருமானைப்‌ பாடுவதற்காகவே அமைந்த தம்முடைய பெருமை கூறல்‌
மேலும்‌ ஆழ்வாருடைய வாய்‌, பரனான பகவானைத்‌ தவிர அபரரான நரரைப்‌ பாடுவதில்லை, ‘“வாய்‌ கொண்டு மானிடம்‌ பாட வந்த கவியேன்‌ அல்லேன்‌** என்கிறார்‌ இவர்‌. தம்முடைய நலனுக்காகவே இவ் வுலகத்தை யெல்லாம்‌ பகவான்‌ படைத்திருக்கிறான்‌ என்று எண்ணினார்‌. அவ் வுதவியை நினைத்தே அவன்‌ விஷயத்திலேயே கவி பாடும்‌ உறுதி கொண்டார்‌. இதனை ஒன்றி ஒன்றி உலகம்‌ படைத்தான்‌ கவியாயினேற்கு”‘ என்ற தொடரால்‌ அவர்‌ தாமே வெளியிட்டிருக்கிறார்‌. இது “சொன்னால்‌ விரோதம்‌!” என்ற திருவாய்‌ மொழியில்‌ ௮றியலாம்‌.

11-தாம்‌ எவ்விதக்‌ குறையுமின்றி இன்பக் கடலில்‌ திளத்திருத்தல்‌ –
இவ்வாறு பகவத் விஷயத்தைக்‌ கவி பாடப்‌ பெற்றமையால்‌ வந்த ஏற்றத்தைக்‌ கூறிக்‌ கொண்டார்‌ ஆழ்வார்‌. அடுத்து உலகத்தவரை நோக்கலானார்‌. அவர்களோ பகவத்‌ விஷயத்தை அறவே மறந்து உலகியலில் மண்டிக்‌ கிடப்பதைக்‌ கண்டார்‌. நல்ல வேளையாக்‌ அவர்களைப்‌ போல நாம்‌ உலக மாயையில்‌ அகப்படாமல்‌ தப்பினோமே’” என்று தம்முடைய வேறுபாட்டை நினைத்து மகிழலானார்‌ அடுத்து *சன்மம்‌ பல பல என்ற திருவாய்‌ மொழியில்‌, வினைப்‌ பயனைத்‌ துய்க்கும்‌ உலகத்தவர்‌ போல அவர்கள்‌ நடுவில்‌ ராமன்‌, கண்ணன்‌ என்று தோன்றிய அவதாரத்தையும்‌, ‘ அவ்வவதாரங்‌களில்‌ நடத்திய பெருமைகளையும்‌ பேசலானார்‌. மேலும்‌ அதில்‌ திருவாபரணக்‌ கோர்வை, திவ்ய ஆயுதச்‌ சேர்த்தி, சேராததைச்‌ சேர்த்து வைக்கும்‌ திறமை முதலிய எல்லாச்‌ சிறப்புக்களையும்‌ முழுக்க முழுக்க அனுபவித்து இன்புற்றார்‌. அவ்‌ ஆனந்தத்தால்‌ தமக்கு எவ்விதக்‌ குறையு மில்லை யென்று பேசி மகிழலானார்‌. அதில்‌ முதல்‌ பாசுரத்தில்‌ பரம பதத்தில்‌ போய்‌ அனுபவிக்க வேண்டிய அனுபவங்களை எம்பெருமான்‌ இங்கேயே கொடுத்திருப்பதால்‌ அங்கு போக வில்லை என்கிற குறை தமக்கில்லை என்பதை உலகில்‌…… ..சீர் பரவப்‌ பெற்ற நான்‌ ஒரு குறைவிலனே”’ என்றார்‌-2வது பாசுரத்தில்‌, இவ்வுலகில்‌ அனுபவிக்கும்‌ அனுபவத்திற்கு தனக்‌கொரு தடையுமில்லை என்பதை **நிறை புகழ்‌ ஏத்தியும்‌. பாடியும்‌ ஆடியும்‌ யானொரு முட்டிலேனே”’ என்கிறார்‌. 3 வது பாசுரத்தில்‌, எம்பெருமானுடைய ‘இனிமையை நுகர்ந்து அம்கிழ்ச்சியால்‌ அவனுக்கு அடிமை செய்கையில்‌ முயற்சி உடைய தமக்கு உலகத்திலுள்ள சிற்றின்ப ஈடுபாட்டால்‌ வரும்‌ இதய துக்கம்‌ இல்லை என்பதை, “அவன்‌ திறத்துப் பட்ட பின்னை இறையாகிலும்‌ யான்‌ என்‌ மனத்துப் பரிவிலனே :‘ என்கிறார்‌. 4 ம்‌ பாசுரத்தில்‌, தம்மைப்‌ பற்றினாரைக் கை விட்டு விடும்‌ இதர தேவதைகளைப்‌ பற்றாமல்‌ அடியவரை ஒரு பொழுதும்‌ கைவிடாதவனான வகுத்த சேஷியான எம்பெருமானைப்‌ பற்றிய தமக்கு ஒரு துக்கமுமில்லை என்பதை, “அச்சுதனைப்‌ பற்றியான்‌ இறை யேனும்‌ இடரிலேனே”’ என்று கூறுகிறார்‌. 5ம்‌ பாசுரத்தில்‌, பாரதக்‌ கதையை உதாரணம்‌ காட்டித்‌ தமக்குத் துயரில்லை என்பதை உணர்த்துகிறார்‌. அதாவது, கண்ண பிரானிடம்‌ அந்தணன்‌ ஒருவன்‌ அடைக்கலம்‌ புகுந்தான்‌. தன்னுடைய மனைவி நான்கு. மக்களைப்‌ பெற்றும்‌ பெற்ற அவ்வப் பொழுதே அக் குழந்தைகள்‌ ஏதே ஒரு தெய்வத்தால்‌ ஒளிக்கப்பட்டன என்றும்‌, அக்‌ குழந்தைகளை மீட்டுத் தர வேண்டுமென்றும்‌ வேண்டிக்‌ கொண்டான்‌. அப்பொழுது கண்ணபிரானும்‌ அவனையும்‌ அர்ச்சுனனையும்‌ தன்னுடன்‌ தேரில்‌ ஏற்றிக்‌ கொண்டு பரமபதம்‌ சென்றான்‌. அங்கிருந்த பிள்ளைகள்‌ நால்வரையும்‌ அப்படியே அழைத்துக்‌ கொண்டு வந்து அவ்‌ வந்தணனிடம்‌ ஒப்படைத்தான்‌”? இது பாரதத்தில்‌ வந்த வரலாறு. இதில்‌ “பரம பதத்திற்குப்‌ போனவர்கள்‌ எப்படித்‌ திரும்பி வந்தார்கள்‌” என்று கேள்வி எழும்‌. நாய்ச்சிமார்கள்‌ கண்ணபிரானுடைய அவதார குணங்களை அனுபவிக்க ஆசைப்பட்டு அவ்வெம்பெருமானை வைகுந்த லோகத்திற்கு வரவழைப்பதற்காகவே அந்தணக்‌ குழந்தைகளை வைகுந்தத்திற்கு அழைத்துப்‌ போனார்கள்‌ என்றும்‌, வைதிகன்‌ பிள்ளை களுக்குப்‌ பரம பதத்தை அடைய வேண்டும்‌ என்ற ஆசையால்‌ அழைத்துச்‌ செல்லவில்லை என்றும்‌ ரகசியத்தை உணர வேண்டும்‌. அவர்களுக்கு அந்த ஆசை யில்லாததனாலேயே அங்கிருந்து அவர்கள்‌ திரும்பி வர நோந்தது என்பது ரகசியம்‌. அவர்களைப்‌ போல்‌ அல்லாமல்‌ நாம்‌ மிக்க ஆசையுடன்‌ வைகுந்த மாநகர்‌ செல்ல வேண்டும்‌ என்றிருப்பதால்‌ அவர்களைப்‌ போல இங்கு மீள வேண்டி வருமோ! என்ற துக்கமில்லை:’ என்கிறார்‌. : இதை, **வைதிகன்‌ பிள்ளைகளை உடலொடும்‌ கொண்டு கொடுத்தவனைப்‌ பற்றி ஒன்றும்‌ துயரிலனே”’ என்றுர்‌. 6வது பாசுரத்தில்‌, கண்ண பிரானுடைய குணங்களை அனுபவிக்கமப் பெற்ற தமக்குப்‌ பரமபதம்‌ போகப்‌ பெற வில்லையே” என்ற துக்கம்‌ சிறிது மில்லை என்பதை ‘*மாயன்‌ புகழ் துற்ற யான்‌ ஒர்‌ துன்பமிலனே”” என்கிறார்‌, 7வது பாசுரக்தில்‌, இவ் வுலகப்‌ படைப்பு முதலானவை யெல்லாம்‌ பகவானுடைய விளையாட்டுக்‌ காரியம்‌ என்பதை தாம்‌ நான்கு அறிந்திருப்பதால்‌ இனி இவ்வுலகத்தில்‌ பிறக்கை யாகிற துக்கம்‌ தனக்கில்லை” என்பதை, .“இன்புறும்‌ இவ்‌ விளையாட்டுடையானைப்‌ பெற்று ஏதும்‌ அல்லல்‌ இலனே”! என்கிறார்‌. 8வது பாசுரத்தில்‌ தன்னுடைய எண்ணத்தினாலேயே படைப்பு முதலிய அனைத்தையும்‌ செய்ய வல்ல மிக்க ஆற்றல்‌ உடைய பகவானைப்‌ பற்றிய தனக்கு ஒரு துக்க மில்லை என்பதை “ஞானம்‌ அஃ.தே கொண்டு எல்லாக்‌ கருமங்களும்‌ செய்‌ எல்லையில்‌ மாயனைக்‌ கண்ணனைத் தாள்‌ பற்றி யான்‌ ஒரு துக்கமிலனே”’ என்‌கிறார்‌. 9ம்‌ பாசுரத்தில்‌, உலகில்‌ நடவாத காரியங்களை நடத்திக்‌ காட்டும்‌ மிக்க ஆற்றல்‌ உடைய எம்பெருமானைப்‌ பற்றின தமக்கு ஒரு தளர்ச்சியு மில்லை என்பதை (வல்லானைப்‌ பெற்று ஒன்றும்‌ தளர்விலேனே”? என்கிறார்‌. 10வது பாசுரத்தில்‌ ஆன்மாக்கள்‌ அவனைப்‌ புறக்கணித்தாலும்‌ அவன்‌ அவற்றை அந்தர்‌ யாமியாய்‌ நின்று பாதுகாக்கும்‌ தன்மையையும்‌, தன்னை அனுசரிக்கும்‌ அடியவரைப்‌ பாதுகாக்கவே அவதாரங்கள்‌ பல செய்து ரட்சித்த தன்மையையும்‌ அறியப் பெற்ற தமக்கு ஒரு கேடுமில்லை என்று பேசி பரமானதந்தத்திலே திளைக்கலானார்‌–

12-உலகிற்கு எம்பெருமானுடைய அர்ச்சாவதாரப்‌ பெருமையை எடுத்துரைத்தல்‌
செய்ய தாமரை கண்ணன்‌ ‘என்‌ற திருவாய்‌ மொழியில்‌ அர்ச்சாவதாரப்‌ பெருமையைப்‌ பேசுகிறார்‌. இதுவே இம் மூன்றாம்‌ பத்திற்கு முக்யமான உயிர்ப்‌ பகுதியாகும்‌. இதில்‌, *செய்ய தாமரைக்‌ கண்ணன்‌” “ முதல் மூவர்க்கு முதல்வன்‌” “வானவர்‌ ஏத்த நின்ற பரமன்‌” *வானவர்‌ தம்மை ஆளும்‌ அவனும்‌ நான்முகனும்‌ செம்மையால்‌ அவன்‌ பாத பங்கயம்‌ சிந்தித்‌ தேத்தித்‌ திரிவரே”’ “விண்ணோரிறை”” “தோற்றக்‌ கேடவை இல்லவை யுடையான்‌ அவன்‌ ஒரு மூர்த்தி! “உயர நின்றதோர்‌ சோதி’! ‘*அமரர் குல முதல்‌- ‘பரஞ்சுடர்‌-என்ற அனேக தொடர்களால்‌ எம்பெருமானுடைய மேன்மை உரைக்கப்‌ பெறுகின்‌றது. இம்‌ மேன்மையைப்‌ பார்க்கிற உலகர்‌ “இத்தகைய மேன்மையை உடைய எம்பெருமாளைப்‌ பேரறிவாளர்களான நித்ய ஸூரியர்கள்‌ கிட்டி அனு பவிக்கலாமே ஒழிய அறிவொன்று மில்லாதவர்களான உலகப்‌ பற்றுடைய நாம்‌ எங்ஙனே அணுக முடியும்‌?’ என்று அஞ்சிப்‌ பின்‌ வாங்குவதை ஆழ்வார்‌ அறிந்தார்‌. அவர்களைப்‌ பார்த்ததும்‌ ஆழ்வாருக்கு இரக்கம்‌ ஏற்பட்டது.-இவ்வாறு அஞ்சி அகலும்‌ உலகோரை நோக்க, எம்பெருமானுடைய எளிமையை எடுத்து ரைக்கலானார்‌.
:*உலகீர்காள்‌! உங்களுடைய அறிவு: கேட்டையும்‌ எம்‌ பெருமானுடைய மேன்மை ஒன்றையும்‌ பார்த்து பயந்து ஒட வேண்டாம்‌. ஏற்கனவே நான்‌ கீழே “பத்துடை யடியவர்‌” (அணைவது அரவணை”’ என்ற திருவாய்‌ மொழிகளில்‌ “பகவானுக்கு எளிமையே இயல்பு என்றும்‌”’ *அவன்‌ தேவர்‌ மனிதர்‌, விலங்கு, தாவரம்‌ முதலிய எல்லாப்‌ பிறப்புகளிலும்‌ அதற்குப்‌ பொருத்தமாக அது அதுவாகவே தன்னை அமைத்துக்‌ கொண்டு அவதரிக்‌கிறான்‌” என்றும்‌ “எளிவரும்‌ இயல்வினன்‌’ “இணைவனாம்‌ எப்பொருட்க்கும்‌ என்று கூறியுள்ளேன்‌. இப்பொழுது அதையும்‌ காட்டிலும்‌ அவனுடைய எளிமையின்‌ எல்லை நிலத்தை உங்களுக்கு காட்டிக்‌ கொடுக்கிறேன்‌. நீங்கள்‌ அதை அறிக்து அஞ்சி அகலாமல்‌ அவ்‌ வெம்பெருமானை அணுகுவீராக'”‘ என்று அர்ச்சாவதாரப்‌ பெருமையை உலகுக்கு உபதேசிக்கலானார்‌-“ஒ, சம்சாரிகளே! பகவான்‌ தன்னை விரும்புவரிடம்‌ தான்‌ மிகவும்‌ அன்புடையவனாய்‌ இருக்கிறான்‌. பரம்‌ பொருள்‌ என்று பேசப்படுகிற அவன்‌ எங்கும்‌ வியாபித்திருக்கிற பெருமை யுடையவனல்லவா? ஆயினும்‌ அவன்‌ ஒரு திருமேனியோடு காட்சி தருகிறான்‌ என்றால்‌ அது தன்னை விரும்பும்‌ அடியார்‌ களுக்காவே தான்‌ அமைத்துக்‌,கொண்டதாகும்‌. பரமபதத்தில்‌ ஒரு திருமேனி யோடும்‌ இருக்கிறானே, அதுவும்‌ தன்னை விரும்பும்‌ அங்குள்ள நித்ய ஸூரிகளுக்‌காகவே யாம்‌. இங்குள்ள அடியவர்களும்‌ அவனை எந்த எந்த விதத்தில்‌ நினைக்கிறார்களோ அந்தந்த உருவத்தில்‌ அவர்களுக்குத்‌ தன்னை அமைத்துக்‌ கொடுக்கிறான்‌. இதைக்‌ கீதையிலும்‌ அவனே சொல்லி யிருக்கிறான் -சாஸ்திரங்களும்‌, தன்னைப்‌ பூசிக்கும்‌ பத்தனிடம்‌ பகவான்‌ அவனுடைய செளகரியங்‌களுக்குத்‌ தகுந்தாற்‌ போலத்‌ தன்னுடைய நிலைகளை ஆக்கிக் கொள்கிறவன்‌” என்று கூறுகின்றன. ஆகவே அடியார்கள்‌ தங்கள்‌ மனதில்‌ எதைக்‌ கொண்சு அவனுடைய திருமேனியைத்‌ தங்களுக்கு வழிபட உபயோகமாகச்‌ செய்து “கொள்ளக்‌ கருதுகிறார்களோ அதையே தனக்கு திருமேனியாக அவனும்‌ ஏற்றுக்‌ கொள்கிறான்‌. “பக்தன்‌ நினைத்ததை நாம்‌ எப்படி ஏற்றுக்‌ கொள்வது ? என்று எம்பெருமான்‌ அதைப்‌ புறக் கணிப்பதில்லை. எம்பெருமான்‌- தனக்கு ஒரு திருமேனியைக்‌ கொண்டிருப்பதே பக்தர்களை ஈடுபடுத்தத்தானே ! அத்தகைய பக்தர்கள்‌ தாங்களே மேல்‌ விழுந்து (பொன்னெ, வெள்ளியோ, மரமே) ஏதாவது ஒன்றைக்‌ கொண்டு எம்பெருமானை வழிபட வேண்டுமென்று உருவம்‌ அமைத்தால்‌ அதையே தனக்கு மிகவும்‌ விருப்பமான திருமேனியாக ஏற்பதில்‌ தடை ஏதும் இல்லையே -அவ்விக்ரகத்தையே அப்ராக்ருதமாகக் கருதி மிக மகிழ்ச்சியோடு அதில்‌ ஸாந்நித்யம்‌ செய்கிறான்‌ என்று நூல்களும்‌ கூறுகின்றன. ஆகவே நீங்கள்‌ அவனை வழிபடுவதற்கு அஞ்ச வேண்டாம்‌. உங்கள்‌ நினைவை அனுசரித்து அவன்‌ உங்கள்‌ பின் வர இருக்க, அவனுடைய மேன்மையை மட்டும்‌ நினைத்து நீங்கள்‌ அவனைப்‌ புறக்கணித்து, அகலுவது நியாயமில்லை. ஆகவே அவனை, நீங்கள்‌ நினைத்தபடி அர்ச்சாவடிவத்தில்‌ பூசியுங்கள்‌ என்று அர்ச்சாவ தாரத்தின்‌ எளிமையை * செய்ய தாமரைக்‌ கண்ணன்‌?” என்ற திருவாய்‌ மொழியில்‌ உபதேசிக்கிறார்‌. இதை நெஞ்சினால்‌ நினைப்பான் யவன்‌ அவனாகும்‌ நீள்‌ கடல்‌ வண்ணனே”! என்ற தொடரால்‌, உணரலாம்‌. இங்குக்‌ கூறப்பட்ட இறை வனுடைய அர்ச்சாவதாரத்தின்‌ எளிமைக்கு மேலே ஓர்‌ எளிமை கிடையாது என்பது முடிந்த பொருளாகும்‌. இதனால்‌ எளிமையின்‌ எல்லை நிலமே அர்ச்சாவதாரம்‌” என்பதாயிற்று. “செய்ய தாமரைக்‌ கண்ணன்‌” என்ற திருவாய்‌ மொழியில்‌ இவ்வாறு அர்ச்சாவதாரச்‌ சிறப்பையும்‌, எளிமையையும்‌ உபதேசித்‌தார்‌. அடுத்து சொன்னால்‌ விரோதம்‌? என்ற திருவாய்‌ மொழியில்‌ சம்சாரிகளுடைய இழவுக்கு நொந்து அவர்களைத்‌ தீ வழி விலக்கி நல்வழிப் படுத்துகிறார்‌. சம்சாரிகள்‌ ஐம்புல நுகர்ச்சியில்‌ ஈடுபட்டவராய்‌, அதற்கு உதவியாகச்‌ செல்‌வந்தரைக்‌ கவி பாடிப்‌ பொருள்‌ தேடி அலைவதைப்‌ பார்த்து “சொன்னால்‌ விரோதம்‌ என்ற பத்து பாடல்களாலும்‌ அவர்களுக்கு நல்லுரை கூறி உபதேசித்து அவர்களைத் திருத்தலானார்‌.

13-வாய்படைத்த பயன்‌ பெற இறைவனைத்‌ துதிக்குமாறு தமது லட்சியத்தையே புலவர்களுக்கும்‌ உலகத்திற்கும்‌ உபதேசித்து உலகை நன்னெறிப்படுத்தல்‌
ஓ, புலவீர்‌ ! எம்பெருமானை விட்டு அற்ப மனிதரைக்‌ கவி பாடி என்ன பயன்‌? சாஸ்திரங்கள்‌, அழிவில்லாத இடம்‌ பரம பதம்‌ என்றும்‌, அங்கு போனவர்‌ மீண்டும்‌ இங்கு வருவதில்லை என்றும் -அங்கு கைங்கர்யம் -தொண்டு செய்வதற்கு எவ்வித் தடையும் இல்லை என்றும் பெருமையாகக் கூறுகின்றன -எம்பெருமானை அணுகிடில் தன்னை அண்டினவர்களுக்கு அவன் தானே உபாயமாக நின்று அவர்கள் கருதிய பலனை எல்லாவற்றையும் அருளுகிறான் -மேலும் அப் பரம பதத்துக்குப் போகும் வழிக்கு அர்ச்சிராதி கதி -வழி என்று பெயர்‌. அவ் வழி மிகவும்‌ இன்ப மயமாயிருக்கும்‌. அவ் வழியின்‌ சுகத்தை அறிந்தவர்‌, பரம பதமோ, பகவத்‌ அனுபவமோ அவை யெல்லாம்‌ ஒரு சிறாங்காய்‌ -என்று கூறி அர்ச்சிராதி வழியையே மிக இன்ப மயமானது என்று அவ் வழியே போதும்‌ என்பார்கள்‌. அத்தகைய பேரின்ப மார்க்கமான அர்ச்சிராதி வழியை அவ் வெம்‌ பெருமர்ன்‌ தானே தரக்‌ கூடியவன்‌ ! அவனோ இப் பிறவிக்‌ கடலில்‌ உழலும்‌ ஆன்மாக்களை அவ் வழியில்‌ கொண்டு போக மிகவும்‌ ஆசை யுடையவனா யிருக்கிறான்‌. இவ் வுலகத்தில்‌ எவனாவது தன்‌ மீது ஆசை கொள்ள மாட்டானா என்று ஏங்கி நிற்கிறான்‌ அவன் -உங்கள்‌ வார்த்தையைக்‌ கேட்க இப்படி. எம்பெருமான்‌ ஆசைபட்டுக்‌ கிடக்க நீங்கள்‌ அவனை விட்டு விட்டு ஓரு சிறப்பு மில்லாத அற்பர்களைப்‌ புகழ்‌கிறீர்களே. நீங்கள்‌ புகழ்கிற புகழ்ச்சி எதுவும்‌ அவர்களிடமில்லையே. உங்களுக்குக்‌ கொடுக்கும்‌ பொருளும்‌ அவரிட மில்லை யல்லவா -அப்படியே யிருந்தா.லும்‌ கொடுக்கும்‌ மனமும்‌ அவர்களுக் கிருக்காதே. உங்கள்‌ தலை தெரிந்தால்‌ தங்கள்‌ தலையை மறைத்துக்‌ கொண்டு *நம்மிடம்‌ பொருள்‌ கேட்க வருகிறான்‌” என்று ஓடி ஒளிந்து கொள்வார்களே, அத்தகைய அற்பர்களை நீங்களும்‌ விடாமல்‌ பின்‌ தொடர்கிறீர்களே! அத்தகைய ௮ற்ப மனிதரைப்‌ பின்‌ செல்‌வதை விட்டு விடுங்கள்‌. அவர்களைப்‌ பற்றி எத்தனை சிறப்பித்துப்‌ பாடினாலும்‌ நீங்கள்‌ சிறப்பித்தவை எல்லாம்‌ பொய்‌ ஆவதால்‌ பாபகரமுமாகும்‌, அப்பாபத்தினால்‌ இப்‌ பொழுது உள்ள நிலையைக்‌ காட்டிலும்‌ இன்னமும்‌ கீழ்ப்பிறப்புக்களை எடுக்க வேண்டி வரும்‌. நீங்கள்‌ அறிவுடையவராய்‌ இருப்பதினால்‌ இப்பொழுது இருக்கும்‌ நிலைக்கு மேலே உயர வழி தேடுவது தானே பொருத்தமானது. கீழ் நோக்கிப்‌ போவதினால்‌ என்ன பயன்‌? அற்ப மனிதரைப்‌ பாடுவதினால்‌ உங்களுடைய ஸ்வரூபம்‌ அழிவதோடு உங்கள்‌ விருப்பமும்‌ நிறைவேறாது. எம்பெருமானோ நீங்கள்‌ வேண்டின அனைத்தையும்‌ தரக் கூடிய வள்ளல்‌, வீடு பேற்றை அளிக்கையில்‌ அங்கு தனக்குரிய சிறப்புக்கள்‌ அனைத்‌தையும்‌ கொடுத்துத்‌ தன்னைப்‌ போலவே உங்களை ஆக்க விடுவான்‌… இதனைப்‌ பெறுவதற்கு நீங்கள்‌ ஆபாசமான காரியம்‌ எதுவும்‌ செய்ய வேண்டாம்‌. அற்பர்களைப்‌ புகழ்ந்து உங்கள்‌ வாயைப்‌ பாழாக்காமல்‌ “வாய் படைத்த பயன்‌ பெறும்படி அவன்‌ விஷயத்தில்‌ கவி பாடினால்‌ போதும்‌, அதற்காக என்னுடன்‌ வாருங்கள்‌!” என்று உலகோரை அழைக்கலானார்‌. ஆகவே பகவத்‌ விஷயத்தைக்‌ கவி பாடினால்‌ கிடைப்பது பகவத்‌ அனுபவமும்‌, அவனோடு ஒத்த சகல சிறப்புக்களைப்‌ பெறுவதுமாம்‌. இக்‌ கருத்தை “வழியைத்‌ தரும்‌ நங்கள்‌ வானவர்‌ ஈசன்‌ நிற்க” என்றும்‌ ‘*தன்னாகவே கொண்டு” என்றும்‌ வரும்‌ தொடர்களால்‌ அறியலாம்‌, இவ்வான்மாவுக்கு முக்தி நிலையில்‌ கிடைக்கும்‌ பேறு இன்னது என்பது இதனால்‌ சொல்லப்பட்டதாயிற்று, இம்‌ முக்திப்‌ பேற்றை ஆன்மாக்கள்‌ பெறுவதற்காகவே அவனுளன்‌. பகவானைத்‌ தவிர அற்ப மனிதர்களைக்‌ கவி பாடுவதும்‌, அவர் பின்‌ செல்வதும்‌, அவர்களுக்கு அடிமை செய்வதும் நாய்த்‌ தொழில்‌ போல மிகவும்‌ ஈனமானது. பகவத்‌ விஷயம்‌ கற்பக மரத்தின்‌ நிழல்‌ போல மிகவும்‌ இனிமையானது. கற்பகம்‌ மரம்‌ போல வேண்டிய தெல்லாம்‌ தரக்‌ கூடியது. எத்தனை புகழ்ந்தாலும்‌ அவன்‌ பெருமைக்குப்‌ போதாது, *புகழு நல்லொருவன்‌”’ என்ற திருவாய்‌ மொழியில்‌ தான்‌ அவன்‌ புகழைப்‌ பாடி மகிழ்ந்தது போல நீங்களும்‌ உங்களுடைய வாய் படைத்த பயன்‌ பெறுமாறு உங்கள்‌ கவிக்குப்‌ பகவத்‌ விஷயத்தில்‌ பயன் படுத்துவீராக, என்னுடன்‌ கூடுவீராக” என்று தம்முடைய வழியிலே அவர்களை ஈடுபடுத்துகிறார்‌. இதுவே மூன்றாம்‌ பத்தின் ஸாரமாகும்–

—

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ.உ வே. வித்வான்‌ ஸ்ரீ நிவாஸா சாரிய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading