ஸ்ரீ உ.வே. வ்யாகரண வேதாந்த தர்ம சாஸ்த்ர வித்வான் மேல் பாக்கம் நரசிம்ஹாசார்ய ஸ்வாமிகள்
1-புருஷார்த்தாதிகரணம்--சாரீரக சாஸ்திரத்தின் மூன்றாவது அத்யாயத்தில் மூன்றாவது (குணோபஸம்ஹார) பாதத்தில் வித்யையின் ப்ரகாரத்தை நிரூபணம் செய்தார், நான்காவதான இந்த [அங்க] பாதத்தில் வித்யையின் அங்கமான கர்ம விசேஷாதிகளை நிரூபணம் செய்கிறார்.
வித்யையானது ஸ்வதந்திரமாய் பலனுக்கு சாதனமாய் இருந்தால் அன்றோ அதன் அங்கமாகிய கர்ம விசேஷத்தைப் பற்றி விசாரிப்பது யுக்தமாகும் —கர்மத்தினால் அன்றோ வித்யைக்கு அங்கம் -ஸ்வதந்த்ரமன்றே என்கிற சங்கையைப் போக்குவதற்காக உபோத்காத ரூபமாய் அமைந்தது இந்த பாதத்தில் முதலாவதான புருஷார்த்த அதிகரணம் –
வித்யையினால் புருஷார்த்தம் ஸித்திக்கிறதா அல்லது வித்யையை அங்கமாகக் கொண்ட கர்மத்தினலா வென்று ஸம்சயம், இங்கு பூர்வ பக்ஷம்-த்விதீயா ச்ருதி, தவ்ய ப்ரத்யயமிவைகளால் கர்மங்களில் கர்த்தாவான ஆத்மாவுக்கு வித்யை ஒரு ஸம்ஸ்கார மென்று ஏற்படுகிறது: ஆகையினால் வித்யை கார்த்தானான ஆத்மாவுக்கு ஸம்ஸ்காரத்தை உண்டு பண்ணி அதின் மூலமாய் க்ரத்வர்த்தம் (யாகத்துக்கு உபகாரகமே) ஆகும். புருஷார்த்த ஸாதனமன்று--அஞ்சனம் முதலிய ஸம்ஸ்காரங்களில் சத்ரு ஹிம்ஸை பலனாகச் சொல்லி இருந்தாலும் ஸம்ஸ்காரம் பரார்த்தமான படியால் அதில் சொல்லப் பட்ட பலன் கேவலம் ஸ்தோத்ரமே என்று எப்படி நிர்ணயிக்கப் பட்டிருக்கிறதோ அப்படியே இங்கு ஆத்ம ஸம்ஸ்காரமான வித்யையும் க்ரத் வர்த்தமான படியாம் -ப்ரஹ்ம பிராப்தியும் அர்த்தவாதமே யாகும் -அதில் தாத்பர்யம் கிடையாது –அபேத ஸ்ருதியினால் உபநிஷத்தில் சொல்லப்பட்ட ப்ரஹ்மமும் ஜீவனும் ஒன்றே தவிர வேறல்ல -இந்த சாமாநாதி கரண்யம் சரீராத்ம பாவத்தினால் ஏற்பட்டது என்பதும் சரியல்ல -உபநிஷத்தில் ப்ரஹ்மத்துக்கு வித்யை அங்கம் என்பதற்காக ஸ்ருதி லிங்கம் முதலிய பிரமாணங்கள் இருக்கிறபடியால் அதின் பலத்தினால் ஜீவனைக் காட்டிலும் ஜீவனான ப்ரஹ்மம் கிடையார் என்று ஸ்ருதியினால் நிர்ணயிக்கப் படுகிறது –
த்ருதீயாச்ருதி வித்யை கர்மத்துக்கு அங்கமென்று போதிக்கிறது. இங்கே வித்யா பதம் ப்ரகரணத்தினால் உத்கீத வித்யையைக் குறிப்பிடுகிறது என்று சொல்ல முடியாது ப்ரகரணத்தைக் காட்டிலும் ச்ருதி பலீயஸ்ஸான படியால் ஸர்வ வித்யா விஷயமேயாகும். லிங்கமாவது–கேகய ராஜனான ‘அச்வபதி, தன்னிடம் ஆத்ம ஜ்ஞானத்தை உத்தேசித்து வந்த மஹர்ஷிகளிடம் * யாகம் செய்யப் போகிறேன் ; இங்கு இருங்கள் * என்று சொன்ன படியால் கர்மத்துக்கு ப்ராதான்யம் தோற்றுகிறது- ஐனகாதிகள் கர்மாநுஷ்டாநத்தினாலேயே ஸித்தியை அடைந்ததாக ஸ்ரீகீதையில் சொல்லப் பட்டிருப்பதாலும், ஜ்ஞானத்தைக் கடைப்பிடித்திருக்கிற கேசித்வஜரும் அகேக யஜ்ஞங்களைச் செய்ததாக விஷ்ணு புராணத்தில் கூறி யிருப்பதாலும் கர்மத்துக்கு ப்ராதான்யம் ஏற்படுவதால் வித்யை கர்மத்திற்கு அங்கமாகும், பர லோகத்திற்கு போகும் மனிதனை வித்யையும் கர்மமும் தொடர்கின்றன -என்று இரண்டுக்கும் ஸாஹித்யம் சொல்லி யிருப்பதும் முற் கூறியபடி வித்யை கர்மத்துக்கு அங்கமாக இருந்தால் தான் பொருந்தும். அதியயநம் செய்தவனைக் ( அர்த்த ஜ்ஞான பர்யந்தமே அத்யயநம் என்று பூர்வ மீமாம்ஸையில் நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது] குறித்து கிருஹஸ்தாஸ்ரம ‘கர்மங்களை விதித்திருப்பதால் அந்த ஜ்ஞாநம் கர்மாநுஷ்டாநத்திற்கு அங்கம் என்று ஏற்படுகிறது. ஈசாவாஸ்யோப நிஷத்தில் ஆயுட்காலம் முழுவதும் ஆத்ம ஜ்ஞாநிக்கு கர்மங்களையே செய்ய வேணுமென்று நியமம் சொல்லி இருப்பதாலும் கர்மத்துக்குத் தான் பலன். வித்யை கர்மத்துக்கு அங்கம் தான். இப்படிப்பட்ட ச்ருதி லிங்காதி பலத்தினால் உபநிஷத்தில் சொல்லப்பட்ட ஆத்ம வித்யை கர்மாங்கமென்று ஏற்படுவதால் மேற்படி ஆத்மா ஜீவன் தான். அதின் வித்யை கர்த்ரு ஸம்ஸ்காரத்தின் மூலமாய் க்ரத்கர்த்தம்தான் ‘ என்று-
ஸித்தாந்தம்–எல்லா உபநிஷத்துக்களிலும் கர்ம கர்த்தாவான ஜீவனைக் காட்டிலும் வேறாய், ஸகல ஜகத்துக்கும் காரணமாய், ஸகல ஜீவர்களுக்கும் நியந்தாவாய், அபஹத பாப்மத்வாதி கல்யாண குணங்கள் நிறைந்து எல்லை யற்ற ஆநக்த ரூபனை பர ப்ரம்ஹத்தையே சொல்லி யிருப்பதால் அந்த ப்ரம்ஹத்தின் ஜ்ஞானத்திற்கு கர்த்ரு ஸம்ஸ்காரத்தின் மூலமாய் கரத்வர்த்தத்வம் சொல்ல முடியாதாகையால் வித்வையினால் தான் புருஷார்த்தமே தவிர அதை அங்கமாகக் கொண்ட கர்மத்தினால் அல்ல–வித்யையுடன் செய்யப் படுகிற கர்மத்தை அநு வதித்து அதற்கு வீர்யவத்தரத்வ ரூபமான பலனைச் சொல்லுகிற படியால் அநு வாதம் புரோவாத ஸாபேக்ஷமான படியால் ப்ரகரணத்தினால் மேற்படி வித்யாபதம் உத்கீத வித்யையே குறிப்பிடுகிறது. ஆத்ம வித்யையைக் குறிப்பிடாது. ஆகையினால் ஆத்ம வித்யைக்குக் கர்மாங்கத்வத்தை போதிக்கிற ச்ருதி இல்லை. ஆத்ம வித்யை யானது ஜீவனை விட, வேறுபட்ட பர ப்ரம்ஹ விஷயமாக நிர்ணயிக்கப் பட்டபடியால் வித்யை கர்மாங்க மல்லாமல் ஸ்வதந்ரமாக ஏற்பட்டபடியால் பரம புருஷ ப்ராப்திக்கு ஸாதனமே யாகும், ப்ரம்ஹ வித்துக்களிடம் கர்ம த்யாகமும் காணப்படுகிறது. வித்யை கர்மத்துக்கு அங்கமானால் கர்ம த்யாகம் பொருந்தாது. ப்ரம்ஹ வித்துக்களிடம் கர்மாநுஷ்டாநம் கர்ம த்யாகம் இரண்டும் எப்படிக் கூடுமென்னில் ; பலாபிஸந்தி இல்லாத கர்மங்கள் வித்யைக்கு அங்கமாகையால் அவைகளின் அநுஷ்டாநமும், காம்ய கர்மங்கள் விருத்தங்களாகையால் அவைகளின் தியாகமும் கூடும்-பர லோகத்திற்குப் போகிறவனை வித்யையும் கர்மமும் தொடர்கின்றன என்கிற விடத்தில் காம்ய பலார்த்தமான வித்யை அதின் பலனை கொடுப்பதற்காகவும், கர்மம் அதின் பலனைக் கொடுப்பதற்காகவும் கூடச் செல்கிறது என்று அர்த்தம். நிலம் ரத்நம் இவைகளை விற்பவனை இரு நூறு ரூபாய்கள் சேருகின்றன வென்றால் நிலத்திற்கு நூறும், ரத்நத்திற்காக நூறும் என்று விபாகம் எப்படி ஏற்படுகிறதோ அப்படியே தான் இங்கும் கொள்ளத் தக்கது. இது ப்ரம்ஹ வித்யா விஷயமானாலும் வித்யை ப்ராரப்த கர்மத்தின் முடிவில் மோக்ஷ ரூப பலனைக் கொடுப்பதற் காகவும், கர்மம் ஜந்மாந்தரத்தில் வித்யையின் துடர்ச்சிக்காகவும் தொடர்கிறது என்று அர்த்தமாகையால் ஒன்றும் விரோதமில்லை-ஸ்ருதியில் அர்த்த ஜ்ஞானத்தை தனியாக சொல்லி யிருப்பதால் அக்ஷர ராசி க்ரஹண மாத்ரமேயாகும். அத்யயநத்தை அர்த்த ஜ்ஞாந பர்யந்தமாகக் கொண்டாலும் மீமாம்ஸையினால் ஸாத்யமான ப்ரம்ஹ ஸ்வரூப ஜ்ஞான ரூபமான அர்த்த ஜ்ஞானத்தைக் காட்டிலும் உபாஸந ரூபமான வித்யை வேறாகையால் அதற்கு கர்மாங்கத்வம் ஸித்திக்காது, -கர்மா நுஷ்டாந நியமமும் கர்மம் வித்யைக்கு அங்கமென்கிற பக்ஷத்திலும் பொருந்துமாகையால் அதுவும் பூர்வ பக்ஷிக்கு ஸாதகமாகாது. வாஸ்தவத்தில் பற்றில்லாத ஆத்ம ஜ்ஞாநி விஷயத்தில் ஆயுட்காலம் வரை ஏதாவது கர்மத்தைச் செய்தாலும் அவனிடம் ஒட்டுவதில்லை. அதாவது பலன் கொடுப்பதில்லை என்று வித்யையின் மஹாத்ம்யத்தைக் கூறி ஸ்துதி செய்கிறது என்பது தான் அதின் தாத்பர்யம். சில சாகைகளில் தன்னிச்சையாக க்ரஹஸ்தாச்ரம த்யாகம் சொல்லி யிருப்பதால் ப்ரதானமான கர்மத்தை யிட்டு அங்காநுஷ்டானம் செய்வது தகாதாகையால் பூர்வ பஷிக்கு இது விருத்தம்- வித்யையினால் கர்மங்களுக்கு நாசம் சொல்லப்பட் டிருக்கிறது. அங்கத்தினால் அங்கிக்கு நாசம் கூடாதாகையால் இது பூர்வ பக்ஷிக்குப் பொருந்தாது. அங்கியான வித்யையினால் அங்கமான கர்மங்களுக்கும் நாசம் ஸித்தாந்தத்தில் எப்படிப் பொருந்து மென்னில், எந்த கர்மங்களுக்கு வித்யையினால் நாசம் சொல்லப் பட்டுள்ளதோ அந்த கர்மங்களை வித்யாங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை யாகையால்’ விரோத மில்லை, பூர்வ பஷி மதத்தில் ஜீவனைக் காட்டிலும் ப்ரம்ஹம் வேறாகக் கிடையாதாகையால் அதினுடைய வித்யை பரலோக ஸாதநமான எல்லா கர்மங்களுக்கும் அங்கமாக ஒப்புக் கொள்கிறபடியால் வித்யையினால் காமங்களுக்கு நாசமென்பது பொருந்தவே பொருந்தாது. ஸந்யாஸாச்ரமிகளிடமும் வித்யை உள்ளது. அவர்களுக்கு யாகம் முதலிய கர்மமில்லாத படியாலும் கர்மத்துக்கு-வித்யை அங்கமன்று, ஆனால் ஸ்ம்ருதிகளில் ஸந்ந்யாஸாச்ரமம் கூறப்பட்டிருந்தாலும் – ச்ருதியில் கர்மங்களை ஆயுட்கால பர்யந்தம் விதித்திருப்பதால் அதற்கு விருத்தமாகையால் ஸந்யாஸாச்ரமமே கிடையாது என்னில், வேதத்திலேயே ஸந்யாஸாச்ரமத்தைக் குறிப்பிட்டிருப்பதனால் அந்த ஸ்ம்ருதி வேத விருத்தமன்று ஆகிலும் ச்ருதியில் க்ருஹஸ்தாச்ரம தர்மத்தை விடுவது நிந்திக்கப் பட்டிருக்கிற படியால் ஸந்யாஸாச்ரமத்தைக் குறிப்பிடுவது கேவலம் அநுவாதமே தவிர விதி இல்லை என்னில் ச்ருதியில் க்ருஹஸ்தாச்ரமத்திற்கும் அநுவாதமாகையானல் அதற்கு ப்ராப்தி வேறு ப்ரமாணத்தினால் சொல்லுவது ச்ருதியில் தபஸ்ஸை ப்ரதாநமாகக் கொண்ட ஸந்யாஸாச்ரமத்திற்கும் அநுவாதம் பிரமாணாந்தர அபேக்ஷமாகக் கொள்ள வேணும், ஆஸ்ரமங்களை (ஸந் யாஸத்தையும் சேர்த்து )மூன்று விதமாகச் சொல்லி இவர்களுள் கேவலாச்ரம நிஷ்டர்கள் புண்ணிய லோகமடைகிறார்களென்றும் ப்ரம்ஹ நிஷ்டையில் இருப்பவன் மோக்ஷத்தை அடைகிறானென்றும் இவ் வாக்யத்தின் அர்த்தம்- அநுவாதம் போன்றவிடத்திலும் அப்ராப்தமான படியால் எப்படி விதி ஒப்புக் கொள்ளப் பட்டதோ அப்படியே இங்கு ஸந்யாசத்திற்கு விதியை ஒப்புக் கொள்ள வேண்டும்- ஜாபால ஸ்ருதியில் ஸகந்யாஸத்திற்கு ஸ்பஷ்டமாக விதியும் உள்ளது. ஆகையினால் ச்ருதி விரக்தி யில்லாதவன் விஷயம். ஆக ஸந்கயாஸாஸ்ரமிகளிடம் வித்யை இருப்பதனாலும் வித்யை கர்மாங்கமல்ல, ஆகையினால் வித்யை ப்ரதாநமானபடியால் அதனால் தான் புருஷார்த்தம் என்று ஸித்தம் –
2-ஸ்துதிமாத்ராதிகரணம்-முன் அதிகரணத்தில் ஸ்துதி ப்ரஸக்தமான படியால் ப்ரஸங்க ஸங்கதியினால் மேல் இரண்டு அதிகரணங்கள் ஆரம்பிக்கப் படுகின்றன. சாந்தோக்யோபநிஷக்தில் உத்கீதத்தைப் பற்றிக் கூறப்படுகிறது. ப்ராணிகளுக்கு ஆதாரமான பூமி ஸாரமானது-பூமிக்கு ஜலம் ஸாரமானது. ஜலத்திற்கு ஓஷதிகள் ஸாரம். ஓஷதிகளுக்கு சரீரம் ஸாரம்-சரீரத் திற்கு வாக்கு ஸாரம், வாக்குக்கு ரிக் ஸாரம், ரிக்குக்கு ஸாமம் ஸாரம். ஸாமத்திற்கு உத்கீதம் ஸாரமென்று சொல்லி ( ரஸங்களுக்குள் உத் கீதத்தை “ரஸ தமம் ‘ என்று சொல்லி யிருக்கிறது. இங்கு ரஸதமத்வாதிகள் உத்கீதத்திற்கு ஸ்துதி மாத்ரமா அல்லது உத்கீதத்தை ரஸ தமமாக த்யாநிக்க வேணு மென்று த்ருஷ்டி விதியா என்று ஸம்சயம் யாகததிற்கு அங்கமான ஜுாஹு முதலியவைகளை எடுத்து -பூலோக ஸ்வர்க்க லோகங்களாகச் சொல்லி யிருப்பதும் ‘போல் இங்கும் கர்மாங்கமான உத்கீதத்தை எடுத்து ரஸ தமமாகச் சொல்லி யிருப்பதும் ஸ்துதி மாத்திரம்தான் என்று பூர்வ பக்ஷம்-ஜுஹூ விதி வாக்யத்தின் ஸமீபத்தி லுள்ளது. ஆகையினால் அது ஸ்துதியாக ஆகிறது என்பது யுக்தம். உத்கீத விதி கர்ம காண்டத்திலே தான் உள்ளது, இங்கு ஸமீபத்திலில்லை ஆகையினால் ரஸ தமத்வத்திற்கு ஸ்துதித்வம் சொல்ல முடியாது. உபாஸந விதி இருக்கிறபடியால், உபாஸநம் எப்படிச் செய்ய வேணு மெனறு ஆகாங்க்ஷை இருக்கிறபடியால் ரஸ தமமாக உபாஸிக்க வேணுமென்று இவ் வாக்யம் த்ருஷ்டி விதி தான் என்று ஸித்தாந்தம் –
3-பாரிப்லவாதிகரணம்-முன் அதிகரணத்தில் ரஸ தமத்வாதிகள் உபாஸநார்த்தங்கள். அர்த்த வாதமல்ல என்று நிர்ணயிக்கப்பட்டது. வித்யா ப்ரகரணத்தில் திவோதாஸருடைய பிள்ளையான ப்ரதர்தனன் என்பவன் இந்திரனுடைய வீட்டிற்குச் சென்றான், யாஜ்ஞவல்க்யருக்கு இரண்டு பத்நிகளிருந்தார்கள்’ என்று ஆரம்பித்து சில உபாக்யாநங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன, இவைகள் வித்தையை ப்ரசமஸிப் பதற்காக அர்த்தவாதமா அல்லது பாரிப்லவார்த்தமா என்பது ஸம்சயம். பாரிப்லவம் என்றால் உபாக்யாநங்களைச் சொல்வது என்று அர்த்தம், அச்வமேத யாகத்தில் பாரிப்லம் ‘ என்கிற சஸ்திரம் விதிக்கப் பட்டிருக்கிறது.- பாரிப்லவ சஸ்திரத்தின் போது எல்லா உபாக்யாகங்களையும் சொல்ல வேணுமென்று விதிக்கப் பட்டிருக்கிறது. ஆகையால் வித்யா ப்ரகரணத்திலுள்ள உபாக்யானமும் சொல்லப் பட வேண்டுமா வென் று சங்கை, இங்குள்ள ‘ஸர்வ’சப்தத்திற்கு ஸங்கோச மில்லாத படியால் இவைகளுக்கும் பாரிப்லவத்தில் விநியோக மென்று பூர்வ பக்ஷம்-அச்வமேத ப்ரகரணத்தில் உபாக்கியானங்களை விசேஷித்துக் குறிப்பிட்டிருக்கிறபடியால் ஸர்வ ‘ சப்தத்திற்கு அந்த ப்ரகரணத்தில் சொல்லப்பட்டுள்ள எல்லா உபாக்யாநங்களும் ‘ என்று ஸங்கோசம் சொல்ல வேண்டும். உபாக்யானங்கள் அரந்தங்களிருக்கிறபடியால் எல்லாவற்றையும் சொல்லுவது சக்யமாக ஆகாது. ஆகையினால் கர்ம விதி யாகத்தில் வெள்ளியை தானம் செய்யக் கூடாது ‘ என்கிற நிஷேதத்திற்கு -ருதான் அழுத கண்ணீரிலிருந்து உண்டானபடியால் வெள்ளியை தானம் செய்யக் கூடாது என்கிற உபாக்யாநம் அந்த நிஷேதத்துடன் ஓரே வாக்யமாக ஸம்பந்தித்து எப்படி அர்த்த வாத மாகிறதோ அம் மாதிரியே வித்யா ப்ரகரணத்திலுள்ள உபாக்கியாநங்களும் ஒரே வாக்யமாக ஆகி வித்யையை ப்ரசம்ஸிக்கின்றன என்று ஸித்தாந்தம் –
4-அக்நீந்தனுத்யதிகரணம்-நடுவில் இரு அதிகரணங்கள் ப்ராஸங்கிகம். முதல் அதிகரணத்துடன் இதற்கு ஸங்கதி-கீழ் ஸூத்ரத்தில் ஸந்யாஸிகளுக்கும் ப்ரம்ஹ வித்யையில் அதிகாரம் சொன்னது ஸரியல்ல -ச்ருதியில் யஜ்ஞாதிகளை வித்யைக்கு அங்கமாகச் சொல்லி யிருப்பதால் ஸந்ந்யாஸிகளுக்கு யஜ்ஞ அதிகார மில்லாதபடியால் அங்கமில்லாமல் அங்கியை மாத்திரம் அநுஷ்டித்தால் பலன் கிடைக்கா தாகையால் ஸந்யாஸிகளுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் கிடையாதென்று பூர்வ பக்ஷம்-ச்ருதியினால் -ஸந்யாஸிகளுக்கும் ப்ரஹ்ம வித்யை சொல்லப் பட்டிருக்கிறது-ஸ்ம்ருதிகளில் ஆச்ரம தர்மங்களையும் ஸாமாந்ய தர்மங்களையும் அங்கமாகச் சொல்லி யிருக்கிற படியால் அக்நியின் ஆதாந பூர்வகமான யஜ்ஞாதிகளை அபேக்ஷிக்காமலேயே ஸந்யாஸிகளுக்கு வித்யையில் அதிகாரமுண்டு என்பது ஸித்தாந்தம்-
5-ஸர்வாபேக்ஷாதிகரணம்–யதிகளிடம் வித்யை’ அக்நி ஹோத்ராதிகளை அபேக்ஷிக்காமலே மோக்ஷத்திற்கு ஸாதந மாகில் கிருஹஸ்தர்களிடமும் யஜ்ஞாதிகளை அபேக்ஷிக்காமலேயே மோக்ஷத்தை ஸாதிக்கட்டும் க்ருஹஸ்தர்களுடைய வித்யைக்கு யஜ்ஞாதிகளை ஸாதநமாக சொல்லப் பட்டிருக்கிறதே என்றால் என்று சொல்லி யிருப்பதால் வேதந இச்சையான விவிதிஷைக்குதான் யஜ்ஞாதிகள் ஸாதனமே தவிர வேதத்திற்கன்று. ப்ரக்ருதி ப்ரத்யயார்த்தங்களுள் ப்ரத்யயார்த்தமே ப்ரதாநமாந படியால் ஸந் ப்ரத்யயமே – ப்ரதாநமான ஸந் ப்ரத்யயத்தின் அர்த்தமான வேதநேச்சைக்கே யஜ்ஞாதிகள் ஸாதனம் என்று பூர்வ பக்ஷம்-ப்ரத்யயார்த்தம் பிரதானம் என்கிற இது ஸாமாந்ய ந்யாயம். இச்சார்த்தகமான சப்தங்களிருக்கும் போது இச்சிக்கப்படும் அர்த்தமே ப்ரதானம் என்பது விசேஷ ந்யாயம் என்பது போன்ற ப்ரயோகங்களில் இது ப்ரஸித்தம். ஸந் ப்ரத்யயத்திற்கு ப்ரக்ருதியான கமனத்தில் (செல்வதற்கு) அச்வம் கரணமாக அந்வயிக்கிறதே தவிர செல்வதின் இச்சைக்கு கரணமன்று, அப்படியே இங்கேயும் இச்சா விஷய மான வேதநத்திற்கு தான் யஜ்ஞாதிகள் ஸாதநமாகும். யஜ்ஞாதிகளுக்கு விவிதிஷா ஸாதனத்வம் சொன்னால் அந்யோந்யாச்ரய தோஷமும் வரும். பரம ஸாத்யத்தில் இச்சை யில்லாமல் நடுவிலுள்ள ஸாத்யத்தின் உபாயத்தில் ப்ரவ்ருத்தி உண்டாகாது. ஸ்வர்கத்தில் இச்சை இல்லா விடில் அதற்கு ஸாதநமான யாகத்துக்கு ஸாதந மான த்ரவ்ய ஸம்பாதனத்தில் ப்ரவ்ருத்தி உண்டாவதில்லை. அம் மாதிரியே விவிதிஷா (வேதநேச்சை) ஸித்திக்காக யஜ்ஞா நுஷ்டாஈம் விவிதிஷையினால் ஸாத்யமான வேதநத்தில் இச்சை யில்லாமல் உண்டாகாது. வேதநேச்சை உண்டானால் வேதந உபாயமான இச்சா ஸித்திக்காக கர்மா நுஷ்டாநம் ஆகையால் வேதநேச்சை உண்டான பின்பு அதற்காக கர்மாநுஷ்டாநம் அவச்யமில்லை யாகையால் கர்மாநுஷ்டாந விதி வ்யர்த்தமாகும். தன்னுடைய ஸித்தி ஸாபேஷமாக தன்னுடைய ஸித்தி என்று ஆத்மாச்ரய தோஷம் வரும், மேலும், வேதநேச்சையினால் இச்சா ஸித்திக்கான கர்மாநுஷ்டாநம், இச்சா ஸித்திக்கான கர்மாநுஷ்டாநத்தினால் வேதநேச்சை உண்டாகிறது என்று அந்யோந்யாச்ரய தோஷமும் கூட: ஆகையினால் விவிதிஷா ஸாதனத்வம் சொல்ல முடியாது. வேதந ஸாதநத்வமே. ஆக கிருஹஸ்தர்களின் வித்யைக்கு யஜ்ஞாத்யபேஷை உண்டு என்று ஸித்தாந்தம்.
6-சமதமாத்யதிகரணம்-யஜ்ஞாதிகளுடன் கூடின கிருஹஸ்தர்களின் வித்யைக்கு சமதமாதிகளின் அபேஷை உண்டா இல்லையா வென்று ஸம்சயம். யஜ்ஞாதிகள் பாஹ்யாப் யந்தரகரணங்களின் (இந்த்ரியங்களின்) வ்யாபாரங்களாகையால் சம தமாதிகள் அந்த இந்த்ரியங்களின் நிவ்ருத்தி ரூபமாகையால் பரஸ்பரம் விருத்தங்கள். ஆகையால் கிருஹஸ்தர்கள் சம தமாதிகளை அநுஷ்டிக்க வேண்டியதில்லை என்று பூர்வ பஷம். கிருஹஸ்தன் யஜ்ஞாதிகளில் ப்ரவ்ருத்தி உடையவனாக இருந்தாலும் சமதமாதிகளையும் வித்யைககு அங்கமாக விதித்திருப்பதாலும் நிரந்தர ஸ்ம்ருதி ஸந்ததி ரூபமான வித்யையின் உத்பத்திக்கு சித்த ஸமாதாநம் காரணமாகையாலும் அவைகளையும் அவச்யம் அநுஷ்டிக்க வேண்டும். விதிக்கப்பட்ட கர்மங்களில் கரண வ்யாபாரமும், விதிக்கப்படாத நிஷ்பலமான கர்மங்களிலும், நிஷித்தமான கர்மங்களிலும் கரண வ்யாபார நிவ்ருத்தியும் என்று விஷய பேதமாகையினால் விரோதமில்லை என்று ஸித்தாந்தம்-
7-ஸர்வாந்தாநுமத்யதிகரணம்-ப்ரம்ஹ வித்யா நிஷ்டன் (கிருஹஸ்தனும்) சமாதிகளை அனுஷ்டிக்க வேண்டுமென்று முன் அதிகரணத்தில் நிர்ணயிக்கப்பட்டது. அதின் பேர்ஜன நியம ரூபமான சமமும் உண்டா என்று இவ் வதிகரணத்தில் விசாரிக்கப்படுகிறது -ப்ராண உபாஸகன் விஷயத்தில் இவனுக்கு சாப்பிடக் கூடாதது எதுவும் இல்லை என்று ஸர்வாங்கத் திற்கும் அநுமதி சொல்லி யிருக்கிறது. இது எப்போதுமா அல்லது ப்ராணனுக்கு ஆபத்து வரும்போது தானா வென்று ஸம்சயம், இந்த காலத்தில் தானென்று விசேஷம் சொல்லப் படாதபடியால் ஸர்வ காலத்திலும் தான் ஸர்வாந்நாநுமதி என்று பூர்வபக்ஷம்
இந்த ஸர்வாந்நாநுமதி ப்ராணாபத் காலத்தில்தான். எப்போதுமல்ல. ப்ரம்ஹ வித்யா நிஷ்டன் விஷயத்தில் ப்ராணாபத்திலேயே ஸர்வாந்ந ஸ்வீகாரா நுஷ்டாநம் காணப்படு கிறது. அதாவது–குரு தேசத்தில் ஒரு காலத்தில் கல் மழை பேய்ந்து பயிர்கள் நாசமடைந்து பஞ்சம் ஏற்பட்டது. அப்போது ஆஹாரத்திற்கு மிகவும் ச்ரமப்பட்ட உஷஸ்தி’ என்னும் ப்ரம்ஹ வித், வேறொரு தேசத்தில் அரசனின் யாகத்திற்குச் சென்று யாகம் செய்விக்க விரும்பி தன் பத்நியுடன் செல்லும் போது வழியில் யானைக்காரனுடைய க்ராமத்தில் தங்க நேர்ந்தது, அப்போது ஆஹார மில்லாமையால் ப்ராணாபத்து ஏற்படும் நிலையை அடைந்தார் முனிவர், அங்கு யானைக்காக கொள்ளைச் சுண்டி, அதை மடியில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த யானைக்காரனிடம் தனக்கும் கொள்ளு கொடுக்கும்படி வேண்டினார், இது நான் சாப்பிட்ட மீதியாயிற்றே! உங்களுக்குக் கொடுப்பதற்கு இதைத் தவிர வேறு இல்லையே என்றான் அவன். முனிவர் இதிலேயே தான் எனக்குக் கொடு என்று கேட்க அவன் கொடுத்தான். அதில் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு பிராணனைத் தரித்து மீதியை பத்நியிடம் கொடுத்தார். அதை அவள் வைத்துக் கொண்டாள். பிறகு யானைக்காரன் ஜலத்தை சாப்பிடும்படி கேட்டான். பிராணதாரணம் ஏற்பட்டு விட்ட படியால் இனி நான் ஜலத்தை சாப்பிடுவது உன் சேஷமானபடியால் நிஷித்தமென்று சொல்லி மறுத்து விட்டார் மஹா்ஷி. மறுநாள் காலையில் இம் மாதிரியே ப்ராண ஸம்சயம் உண்டாக யானைக்காரனுடைய சேஷ மாயும் தன்னுடைய சேஷமாயும் ராத்ரி சேஷமாயும் உள்ள அந்த கொள்ளை சாப்பிட்டு பிராணனை தரித்து ராஜாவின் யாகத்துக்குச் சென்றார் ‘ என்று உபநிஷத்தில் கூறப்பட் டுள்ளது. ஆகையினால் ப்ராணாபத்தில் தான் ஸர்வாந்ந ஸ்வீகாராநுஷ்டானம் ப்ரம்ஹ வித்யா நிஷ்டருக்கு இருக்கிறது- வித்யோத் பத்திக்காக ஆஹார சுத்தியை விதித்திருப்பதாலும் ப்ரம்ஹ வித்துக்கு ஸர்வாந்ந ஸ்வீகாரம் – ஆபத் விஷயமென்று ஏற்படுகிறது. இப்படியாகில் அல்ப சக்தியான ப்ராண வித்யா நிஷ்டனுக்கு ஸர்வாந்நாநுமதி எப்போதும் என்று எப்படி ஏற்படும் ? அதுவும் ஆபத் காலத்தில் தான்-ஆனால்’ ப்ரம்ஹ வித்யாநிஷ்டனுக்கு கெட்ட நடத்தை கூடாதென்று சொல்லி யிருக்கிற படியால் அவன் விஷயததில் ஸர்வாந்ந ஸ்வீகாரம் ஆபத் விஷயமாகலாம்.. வாமதேவ்யம் என்கிற ஸாமத்தை உபாஸிப்பவனுக்கு தன்னை விரும்பும் எந்த ஸ்த்ரீயையும் பரிஹரிக்கக் கூடாதென்று சொல்லி யிருப்பது போல் ப்ராண வித்யா நிஷ்டனுக்கு ஸர்வ காலத்திலும் முற் கூறிய வசநத்தினால் ஸர்வாந் நாநுமதி இருக்கலாமே யெனில் ஸர்வ ஸ்த்ரீகளின் அபரிஹாரத்தில் விதி இருப்பது போல் ஸர்வாந்நாநுமதி தான் இருக்கிறதே தவிர ஸர்வாந்ந பக்ஷண விதி இல்லை. விதியை கல்பிப்பதும் ஸாமாந்ய வசந விரோத மன்றியில் தான் கல்பிக்க வேணும். இங்கு ஸாமாந்ய வசநம் ஆபத்தில் தான் ஸர்வாந்நாநுமதி பண்ணுகிறது என்று இஷ்டப்படி நிஷித்த பக்ஷணம் கூடாதென்று நிஷேதமும், இருக்கிறது. ஆகையினால் ப்ராண வித்யா நிஷ்டனுக்கும் ப்ராணாபத் காலத்தில் தான் ஸர்வாந்நாநுமதி என்று சித்தாந்தம் –
8-விஹிதத்வாதிகரணம் – ப்ரம்ஹ வித்யைக்கு யஜ்ஞாதிகள் அங்கங்கள் என்று நிர்ணயிக்கப் பட்டது ஸர்பேஷாதிகரணத்தில் ப்ரம்ஹ வித்தாக இல்லாத கேவலாச்ரமிகள் யஜ்ஞாதிகளை எப்படி ஒரு தரம் அநுஷ்டிக்கிறார்களோ அப்படியே ப்ரம்ஹ வித்துக்களும் ஒரு தரம் அநுஷ்டித்தால் போதுமா அல்லது ஆச்ரம தர்மமாகவும் வித்யார்த்தமாகவும் இரண்டு தரம் அநுஷ்டிக்க வேண்டுமாவென்று ஸம்சயம்: வித்யார்த்தமான யஜ்ஞாதிகள் நித்யாக்நி ஹோத்ர மாஸாக்நி ஹோத்ரங்கள் போல் வெவ்வேறு ரூபங்களாக இருந்தால் அப்போது வித்யார்த்தமான யஜ்ஞாநுஷ்டாநத்தினால் ஆச்ரம தர்மமான யஜ்ஞம் ஸித்திக்காதாகையால் தனியாக அநுஷ்டிக்க வேண்டி வரும், நித்யாக்நி ஹோத்ர, காம்யாக்நி ஹோத்ரம் போல் அபேத மிருக்குமானால் அப்போது காம்ய ப்ரயோகத்தினாலேயே நித்யமும் ஸித்திக்குமாகையால் ஒரு தடவை அநுஷ்டித்தால் போதும், இவற்றில் எது உசிதமென்னில் ; ப்ரகரண பேதத்தினால் நித்யாக்நி ஹோத்ர மாஸாக்நி ஹோத்ர ந்யாயத்தினால் கர்ம பேதமாகையால் இரண்டு தடவை அநுஷ்டிக்க வேண்டுமென்று பூர்வ பக்ஷம்-ஆச்ரம தர்மமாக யஜ்ஞாதிகள் விதிக்கப் படுகின்றன -ஸ்ருதிகளில் வித்யாங்கமாகவும் விதிக்கப்படுகின்றன. ஆக ஆச்ரமார்த்தமான தர்மங்களே வித்யார்த்தமாகவும் விதிக்கப்படுகின்றன. விநியோகம் செய்கிற வாக்ய பேதமிருக் கிறபடியால் நித்யாநித்ய ஸம்யோக விரோதமும் கிடையாது- விநியோகிக்கிற வாக்ய பேதமிருக்கிறபடியால் (யூபஸ்தம்பம் கருங்காலியால் செய்யப்பட வேண்டுமென்றும் சொன்ன கருங்காலிக்கு) க்ரத்வர்த்தத்வமும் புருஷார்த்தத்வமும் என்று பூர்வ மீமாம்ஸையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கும் அது போல் தான் யஜ்ஞாதிகளால் ப்ரத்யபிஜ்ஞையைப் பண்ணி வித்யாங்கமாக விதிக்கப்படுவதால் இவைகளின் ஸ்வரூப பேதத்திலும் ப்ரமாணமில்லை, ஆகையினால் தான் ப்ரஸித்தமான யஜ்ஞாதி தர்மங்களை நிர்தேசித்து அவைகளால் வித்யோத்பத்திக்கு ப்ரதிபந்தக பாபத்தின் நிரஸநம் சொல்லப்படுகிறது. தினந்தோறும் அநுஷ்டிக்கும் கர்மங்களால் அந்தக் கரணம் சுத்தமாகி விசத தரமான அவபாஸ்த்தை உடையதாய் உத்க்ருஷ்டமான வித்யை உண்டாகிறது. ஆக காம்யாக்நி ஹோத்ர ப்ரயோகத்தினால் நித்யாக்நி ஹோத்ரமும் ப்ரஸங்காத் ஸித்திக்கிறது போல இங்கும் வித்யார்த்தமான அநுஷ்டாநத்தினால் ஆச்ரமார்த்தமாகவும் ஸித்திப்பதால் ஒரு தடவை தான் அநுஷ்டாநமென்று ஸித்தாந்தம்.
9-விதுராதிகரணம் -ஆச்ரம தர்மங்களை அங்கமாகக் கொண்டது வித்யை என்று நிர்ணயிக்கப்பட்ட பகியால் அநாச்ரமிகளான விதுரனு[பத்நியை இழந்தவன்)க்கும், ஸ்நாதகனுக்கும் (ப்ரஹ்ம
சர்ய ஆச்ரமத்தை முடித்து வ்ரதங்களைச் செய்து க்ருஹஸ்தாச்ரமத்தை அடைவதற்கு முன் நிலையிலிருப்பவன்) ப்ரம்ஹ வித்யையில் அதிகாரமுண்டா என்று ஸம்சயம். இவர்களுக்கு ஆச்ரம தர்மங்களில்லாதபடியால் வித்யையில் அதிகாரமில்லை என்பது பூர்வ பக்ஷம். அநாச்ரமிகளா யிருந்தாலும் ரைக்வர், பீஷ்மர், ஸம்வர்த்தர் முதலியவர்களுக்கு வித்யாநுஷ்டாநம் காணப்படுகிறதே என்னில், நான்காம் வர்ணத்தவர்களுக்கு ப்ரம்ஹ வித்யையில் அதிகார மில்லா விடினும், பாரதத்தில் விதுரர் முதலியவர்களிடத்தில் காணப்படும் ப்ரம்ஹ வித்யை யானது முன் ஜன்ம ஸித்தமாய் அதின் தொடர்ச்சி என்று எப்படி சொல்லப் பட்டுள்ளதோ அப்படியே அநாச்ரமிகளான ரைக்வாதிகளிடத்திலும் முன் ஜன்மத்தில் ப்ரம்ஹ வித்யாரம்பம் என்று கல்பிக்க வேண்டும் என்று பூர்வ பக்ஷம்.
ரைக்வர் முதலானவர்களான அநாச்ரமிகளிடம் வித்யாநுஷ்டாஈம் காணப்படுவதாலும், ச்ருதியில் ஸாமாந்ய தர்மங்களால் வித்யைக்கு உபகாரம் சொல்லி யிருப்பதனாலும், -ஜப யஜ்ஞத்தினால் வித்யா ஸித்தியை ஸ்ம்ருதியில் சொல்லி யிருப்பதனாலும் அநாஸ்ரமிகளுக்கும் ப்ரம்ஹ வித்யையில் அதிகாரமுண்டு, ஆகையினால் ஜந்மாத்ரத்தில் இவர்களுக்கு வித்யாரம்பம் என்று கல்பிக்க வேண்டிய தில்லை, அநாச்ரமியாக இருக்கக் கூடாது என்று நிஷேதமிருக்கிறதே எனில், தனம் முதலிய ஸெளகர்யமில்லாமை, தாரம் கிடைக்காத காரணம், ஸந்யாஸ யோக்யமான வைராக்ய மில்லாமை, இந்த ஆபத் காலத்தில் அசக்தனுக்கு அநாச்ரமித்வம் இருக்கலாம். சக்தனா யிருப்பவனுக்கு அநாச்ரமித்வத்தை விட ஆச்ரமியாக இருப்பது தான் ஸ்ரேஷ்டம். ஆகையினால் அநாச்ரமிகளுக்கும் வித்யையில் அதிகார முண்டு என்று ஸித்தாந்தம்-
10-தத்பூதாதிகரணம்--விதுரர்களுக்குப் போல் நைஷ்டிகாத்யாச்ரம ப்ரஷ்டர்களுக்கும் ப்ரம்ஹ வித்யையில் அதிகாரம் உண்டாவென்று இவ் வதிகரணத்தில் விசாரிக்கப் படுகிறது. அநாச்ரமிகளான விதுராதிகளுக்கு ஜபம் முதலிய ஸாதாரண தர்மங்களின் உபகாரத்தினால் ப்ரம்ஹ வித்யையில் அதிகார முண்டென்று நிர்ணயிக்கப் பட்டது போல், நைஷ்டிக, வாந ப்ரஸ்த ஸந்யாஸ ஆச்ரமங்களிலிருக்து நழுவியவர்களுக்கும் ப்ராயச் சித்தத்தின் மூலமாய் சுத்தியை சம்பாதித்து சாதாரண தர்மங்களை அங்கங்களாகக் கொண்டு வித்யையில் அதிகாரமுண்டு என்று பூர்வ பக்ஷம் –
நைஷ்டிகனுக்கும் வாந ப்ரஸ்தனுக்கும் ஸந்யாசிக்கும் அவ்வோ ஆஸ்ரம தர்மங்களில் நின்று நழுவக்கூடாது என்ற நிஷேதம் இருக்கிறபடியால் இந்த ஆஸ்ரம ப்ரஷ்டனுக்கு ப்ரஹ்ம வித்யைக்குத் தகுந்த சுத்தி கிடையாது என்று ஏற்படுகிறது -ஆகையினால் இவர்களுக்கு அதிகாரம் கிடையாது -ப்ரஹ்மச்சார்யாஸ்ரம ப்ரஷ்டனானவன் எவளால் ப்ரஷ்டனானானா அவளோடோ அல்லது ஒருத்தியை விவாஹம் செய்து கொண்டோ ஆதாநம் செய்து ஆஹவநீயத்தில் அவகீர்ணி (ப்ரம்ஹசர்ய ப்ரஷ்ட னுக்கு விதிக்கப்பட்ட) பசு யாகத்தைச் செய்யலாம் என்று பூர்வ பக்ஷத்தில்-தம்பதிகளுக்கு தான் அக்ந்யா தாநம் சொல்லி யிருப்பதால் பர ஸ்த்ரீயுடன் அக்ந்யாதாநம் கூடாது என்று ப்ரம்ஹசர்யத்திலிருந்து நழுவாதவனுக்கே விவாஹம் விதித்திருப்பதனால் ப்ரஷ்டனுக்கு ப்ராயச் சித்தம் செய்யாத போது விவாஹம் செய்வதற்கில்லை. ஆகையாவ் அக்ந்யாதாநம் ஸம்பவிக்காது ஆகையால் உபநயந ஹோமம் போல் லெளகிகாக்நியிலேயே அவகீர்ணி பசு யாகமும் என்று ஸித்தாந்தம் செய்யப் பட்டிருக்கிறது. இந்தப் ப்ராயச் சித்தத்தை செய்து கொண்டால் சுத்தி ஏற்படுமாகையால் நைஷ்டிகாதி ஆச்ரம ப்ரஷ்டர்களுக்கு ப்ரம்ஹ வித்யாதிகாரம் கூடலாமென்று மேல் ஆக்ஷேபம். இதற்கு ஸமாதாநம்-இவர்களுக்கு சுத்திக்கு காரணமான ப்ராயச் சித்தம் கிடையாதென்று ஸ்ம்ருதிகளில் சொல்லப் பட்டிருக்கிற படியால் இவர்கள் பதிதர்கள் என்றேற்படுகிற படியால் அவகீர்ணி பசு யாகத்திலும் அதிகாரமில்லை. அந்த ப்ராயச் சித்த விதி உபகுர்வாண (க்ருஹஸ்தாச்ரமத்தை அடையப்போகும்) ப்ரம்ஹசாரி விஷயமே தவிற நைஷ்டிகாதி விஷயமல்ல. சிலர், நைஷ்டிகர்களுக்கு ப்ரம்சம் நேர்ந்தாலும் இது மகா பாதகத்தில் சேர்க்கப்படவில்லை, உபபாதகமே. உபகுர்வாணனுக்குச் சொல்லி யிருக்கும் ப்ராயச்சித்தம் மற்றவர்களுக்கும் உண்டென்று சொல்லுகிறார்கள். உபபாதகமாயினும்’ மஹா பாபமாயினும் முற் கூறிய வசநத்தினால் சுத்தி கரமான ப்ராயச் சித்தம் கிடையாது என்று நிஷேதித்திருக்கிற படியாலும், சிஷ்டர்களான பெரியோர்கள் இப்படிப் பட்டவர்களுக்கு ப்ரஹ்ம வித்யையை உபதேசம் செய்வதில்லை யாகையாலும் மேற்படி ப்ராயச்சித்தம் இவர்களுக்கு நரகா நுபவத்தைத் தடுப்பதற்கு மாத்திரமாக ஆகுமே தவிர ப்ரம்ஹ வித்யைக்கு அர்ஹதையை உண்டு பண்ணாது. ஆகையால் இவர்களுக்கு அதிகாரமில்லை என்று ஸித்தாந்தம்.
11-ஸ்வாம்யதிகரணம்-உபாஸநம் செய்பவனும் செய்யாதவன் என்கிற ப்ரஸக்தியினால் உத்கீத உபாஸகநம் பண்ணுகிறவன் யாரென்று விசாரிக்கப் படுகிறது இவ்வதிகரணத்தில்: யாகத்திற்கு அங்கமான உத்கீதத்தை ஆச்ரயமாக உடையது உபாஸநம், – இதை யஜமானன் செய்ய வேண்டுமா ரித்விக் செய்ய வேண்டுமா வென்று ஸம்சயம். உபாஸநம் தனி பலனுள்ள தாகையால் பலத்தை விரும்பும் யஜமானன் தான் செய்ய வேண்டும்-பசு கறக்கும் பாத்திரத்தினால் அப் ப்ரணயநம (ஜலத்தைக் கொணர்தல்) என்கிற வ்யாபாரம் பசு காமனை உள்ளவனுக்குக் கூறப்பட்டிருந்த போதிலும் ப்ரணயநத்தை ரித்விக் செய்ய வேண்டி யிருப்பதால் கோதோஹந பாத்ரத்தை யஜமானன் எடுக்க முடியாது. உபாஸநம் மாநஸ க்ரியா ரூபமாகையால் ரித்விக்கின் உத்கீதத்தில் உபயாஸநத்தை யஜமானன் செய்ய முடியும் ஆகையினால் யஜமானன் தான் உத்கீதோபாஸநத்தைச் செய்ய வேண்டு மென்று பூர்வ பக்ஷம். உத்கீத உபாஸநம் பலனுக்கு ஸாதநமாக இருந்தாலும் ரித்விக் தான் செய்ய வேண்டும். ஸாங்கமான யாகத்தை அநுஷ்டிப்பதற்கே ரித்விக்குகளை வரிக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிற படியால் (அநுஷ்டிப்பவனுக்குத் தான் சாஸ்த்ரோக்தமான பலன்) என்கிற ஸாமாந்ய ந்யாயம் பாதிக்கப்படுகிறது. இப்படி நிர்ணயித்தால் உபாஸநத்திற்கு ப்ரஸித்தமான பெயரும் ரஷிக்கப்பட்டதாகிறது- கர்ம கர்த்தாவிடம் (ரித்விக்கு) வித்யை உள்ளதாக்ச் சொல்லும் வசகமும் குறிப்பிடத் தக்கது. ஆகையினால் உத்காதா என்கிற ரித்விக்கு தான் உத்கீதாதிகளில் ரஸதமத்வாத் யுபாஸநத்தைச் செய்ய வேண்டு மென்று ஸித்தாந்தம் –
12-ஸஹகார்யந்தரவித்யதிகரணம்-யஜ்ஞாதிகளையும் சமாதிகளையும் வித்யைக்கு ஸஹ காரிகளாக நிர்ணயித்து ஸங்கதி விசேஷத்தினால் ஸர்வாந்நா நுமதி முதலியவைகளை விசாரித்து இந்த அதிகரணத்தினால் வித்யைக்கு மற்றொரு ஸஹகாரியை நிரூபிக்கிறார். சுருதி வாக்யத்தினால் மெளனம் அநுவதிக்கப் படுகிறதா அல்லது விதிக்கப் படுகிறதா என்று ஸம்சயம். மெளனம் பாண்டித்யம் இரு சப்தங்களும் ஜ்ஞாந வாசகங்களாகையால் ஜ்ஞாநம் தான் என்று அநுவதிக்கப்படுகிறது என்று பூர்வ பக்ஷம்– யஜ்ஞாதிகள் விதிக்கப்படுகின்றன, சமதமாதிகள் விதிக்கப்படுகின்றன. அப்படியே வாக்யத்தினால் பால்யம், பாண்டித்யம், மெளனம் என்கிற மூன்று வித்யாஸஹகாரிகளும் விதிக்கப்படுகின்றன. இதில் பால்யத்தை அடுத்த அதிகரணத்தில் விசாரிக்கிறார். மெளனம் பாண்டித்யத்தை விட வேறு.ஸ்ரவண மநநங்களுக்குப் பின்பு அதின் அப்யாஸாதிசயத்தினால் உண்டான ப்ரதிபையிலை ஸகல உபநிஷத் தாத்பர்ய ப்ரதிஷ்டாபநம் செய்வது பாண்டித்யம், மெளனமானது உயர்ந்த மநம். உயர்ந்த மநந சீலர்களான வ்யாஸாதிகளிடம் முனி என்கிற சப்தம் ப்ரயோகிக்கப் படுவதால் அது தான் இங்கு மெளன சப்தார்த்தம். அதாவது உபாஸந காலத்தில் மனதில் ஐகாக்ர்யம் (ஒரே இடத்தில் நிலையாக இருத்தல்) உண்டாவதற்காக மற்ற காலங்களிலும் சுபாச்ரயமான திவ்யமங்கள விக்ரஹம் முதலானவைகளை அடிக்கடி மனதினால் பரிசீலனம் செய்து கொண்டே இருப்பது. இதுவும் வித்யாநிஷ்பத்திக்குக் காரணமாகும். . ஆனால் சாந்தோக்யோபகிஷத்தில் கிருஹஸ்த தர்மத்தினால் முக்தி என்று உப ஸம்ஹாரம் செய்யப் படுகிறதே, அதினால் கிருஹஸ்த தர்மங்கள் தான் வித்யா ஸஹகாரிகள் என்று ஏற்படுகிறதே. யஜ்ஞாதிகளுக்காக தரவ்ய ஸம்பாதகம் முதலிய பல வ்யாபாரங்களில் ஈடுபட்டுள்ள கிருஹஸ்தர்களுக்கு கீழ்ச் சொன்ன சுபாச்ரயாதி ஸம்சீலன ரூபமான மனனம் எப்படி. ஸாத்யமாகுமெனில் ; எல்லா ஆச்ரமிகளுக்கும் வித்யை உண்டென்று முன்னமே நிர்ணயிக்கப் பட்டதாகையால் யஜ்ஞாதிகளி லீடுபட்டிருக்கும் கிருஹஸ் தர்களுக்கு யஜ்ஞாதிகளால் சித்த சுத்தி ஏற்பட்டு ஷூ ஸம்சீலகம் வரும். ஒன்றும் விரோத மில்லை.” ஆகையினால் கிருஹஸ்த தர்மத்தினால் சாந்தோக்யத்தில் உபஸம்ஹரிக்கப் பட்டது. ஆக யஜ்ஞாதி ஸர்வாச்ரம தர்மஸகஹாரத்துடன் பால்ய பாண்டித்யங்களோடு மூன்றாவதான மெளநம் விதிக்கப்படுகிறது என்று ஸித்தாந்தம் –
13-அநாவிஷ்காராதிகரணம் -பால்யம் விசாரிக்கப்படுகிறது. பாலனுடைய தன்மையான வயஸ்ஸின் நிலை அடைய முடியாதாகையால் பாலனுடைய செயல் இங்கு சொல்லப்படுகிறது என்று கொள்ள வேண்டும். பாலனுடைய செயலான இஷ்டப்படி இருத்தல், சாப்பிடுதல் முதலியவைகள் இங்கு பால்ய சப்தார்த்தமா அல்லது டம்பாதிகளில்லாமையா என்று ஸம்சயம், விசேஷம் ஒன்றும் சொல்லப்படாமையால் எல்லாமும் தானென்று பூர்வபக்ஷம்– சாஸ்திரங்கள் உபாஸனம் செய்பவனுக்கு துச்சரிதாதி நிவ்ருத்தி, ஆஹார சுத்தி முதலியவை நியமிக்கபபடுகிறபடியால் பால்யம் டம்பாதிகளில்லாமையான தன்னுடை மாஹாத்ம்யத்தை வெளிக் காட்டாமையே என்று ஸித்தாந்தம்.
14-ஐஹிகாதிகரணம்-இப்படி. அங்க விசாரம் முடிந்தது. அங்கியின் உத்பத்தி ஸமயம் விசாரிக்கப் படுகிறது இவ்வதிகரணத்தில். ஐஹிக போகங்களுக்கு ஸாதநமான சில உபாஸநங்கள் உள்ளன. இவைகள், இவைகளுக்கு ஸாதநமான புண்ய கர்மா நுஷ்டாகம் பண்ணின பிறகு ‘இந்த ஜந்மத்திலேயே உண்டாகின்றனவா, அல்லது ,இந்த ஜன்மத்திலோ வேறு தேஹத்திலோ வென்று நியம மில்லாமையா என்று ஸம்சயம். ஸ்நாநம் செய்த உடனே தேஹத்திற்கு சுத்தி உண்டாகிறது. அது போல் அங்கமாக புண்ய கர்மாநுஷ்டாநம் பண்ணின உடனே இந்த ஜன்மத்திலேயே உண்டாகிறது அந்த உபாஸநம். இதின் பலமும் இந்த தேஹத்திலேயே அநுபவிக்க வேண்டியதே தவிர ஸ்வர்காதிகள் மாதிரி தேஹாந்தரத்தி லில்லை யாகையால் இந்த ஜன்மத்திலேயே உண்டாகிறது என்று பூர்வ பக்ஷம். ப்ரதிபந்தகம் இல்லாமலிருந்தால் இந்த ஜன்மத்திலேயே உண்டாகலாம். ப்ரபல கர்ம ப்ரதீபந்தகமிருந்தால் தேஹாந்தரத்திலும் உண்டாகலாம். ஆகையால் இந்த ஜன்மத்தில் தான் எனறு நியமம் சொல்ல முடியாது என்று ஸித்தாந்தம் –
5-முக்திபலாதிகரணம்-கீழ்ச் சொன்ன அநியமம் முக்தியை பலமாக உடைய உபாஸநத்திலும் அதிதேசிக்கப் படுகிறது. பரவித்யா ஸாதனமான கர்மங்கள் ப்ரபலங்களாகையால் அதை விட ப்ரபல கர்மங்களில்லாதபடியால் ப்ரதிபந்தம் ஸம்பவிக்காது. ஆகையினால் இதே ஐந்மத்திலேயே வித்யா நிஷ்பத்தி என்று அதிகாசங்கை-பகவத் ப்ரீத்யதிசய ஹேதுக்களாகையால் பர வித்யா ஸாதகமான கர்மங்கள் ப்ரபலங்க ளாயினும் அதை விட ப்ரபல தரங்களான ப்ரம்ஹ வித்துக்களின் அபசார ரூபமான கர்மங்களால் ப்ரதிபந்தம் ஸம்பவிக்கலாம். இந்த ப்ரதிபந்தமில்லாம லிருப்பதற்காகத் தான் உத்கீதோபாஸாம் விதிக்கப்படுகிறது. உத்கீத வித்யை இல்லாத கர்மங்கள் அநுஷ்டித்தால் மேற்படி ப்ரதிபந்தம் உண்டு: ஆகையினால் மோக்ஷ பலார்த்தமான உபாஸநத்திற்கும் உத்பத்தி இந்த ஜந்மத்தில் தான் என்கிற நியமமில்லை என்று ஸித்தாந்தம் –
—
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே
ஸ்ரீ ஸ்ரீ உ.வே. நரசிம்ஹாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
Leave a Reply