இந்த பாதத்திற்கு முக்திய மூன்றாம் பாதத்தில் ஜீவன், மூல ப்ரக்ருதி, இவைகளைக் குறிக்கும் ஸ்பஷ்டமான அடையாளங்களைக் காட்டும் உபநிஷத் வாக்கியங்கள் பரமாத்மாவையே கூறுகின்றன என நிரூபிக்கப் பட்டது. இனி நான்காவது பாதத்தில் ஸாங்கியர் முதலியவர்களுடைய ஸித்தாந்தத்தை அனுஸரிப்பது போல் காணப்படும் அதாவது ஜீவன் ப்ரக்ருதி இவைகளின் மிகவும் ஸ்பஷ்டமான அடையாளங்கள் காணப்படும் உபநிஷத் வாக்யங்கள் பரமாத்மாவைக் குறிக்கின்றன என்பதாக நிரூபிக்கப்படுகிறது. கீழ் மூன்று பாதங்களால் ப்ரஹ்மத்திற்கு ஜகத் காரணத்வம் உண்டு என்பதை ஸ்தாபித்து, இனி நான்காவது பாதத்தில் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறுபட்ட ப்ரதானம் ஜீவன் இவர்களுக்கு ஜகத் காரணத்வமில்லை என்று ஸ்தாபிக்கிறார் என்று ஸ்ருத ப்ரகாசிகாசிரியர் பணிப்பர்-இந்த பாதத்தில் எட்டு அதிகரணங்கள் உள்ளன. அவற்றுள் முதல் ஆறு அதிகரணங்களால் ஸாங்கியர்களுடைய ஆக்ஷேபத்தையும், அடுத்த இரண்டு அதிகரணங்களால் யோக ஸித்தாந்திகளின் ஆக்ஷேபத்தையும் பரிஹரிக்கிறார். ஆக முதல் ஆறு அதிகரணங்கள் ஒரு பேடிகையாகவும் பிந்திய இரண்டு அதிகரணங்கள் ஒரு பேடிகையாகவும் கொள்ள வேண்டும், சிலர் கடைசி எட்டாவது அதிகரணம், நான்கு பாதங்களால் ப்ரதிபாதிக்கப்பட்ட அர்த்தங்களை நிகமனம் செய்கிறது என்று கருதுகின்றனர்–
அவற்றுள் உட்பிரிவுகள் வருமாறு–முதல் இரண்டு அதிகரணங்களால் ஜகத் காரணமாகக் கபில மஹர்ஷி கருதும் ப்ரக்ருதியை நிராகரிக்கிறார். மூன்றாவது அதிகரணத்தால் கபிலர் கூறிய தத்துவங்களின் எண்ணிக்கை இருபத்து நான்கு என்பது நிராகரிக் கப்படுகின்றது. நான்காவது அதிகரணத்தில் ஸ்ருதியுள் உள்ள * அவ்யாக்ருதம் * என்னும் சொல் ப்ரக்ருதி சரீரகமான பரப்ரஹ்மத்தைக் குறிப்பிடுவதாக ஸ்தாபிக்கப்படுகிறது. ஜந்தாவது அதிகரணத்தில் ஸம்ஸாரி ஜீவன் ஜகத் காரணமாகிய பரதத்வமன்று என நிருபிக்கப்படுகிறது, ஆறாவது அதிகரணத்தில் முக்த ஜீவன் பரதத்துவமன்று என ஸ்தாபிக்கப் படுகிறது. அடுத்த ஏழு எட்டு இரண்டு அதிகரணங்களில் யோக தர்சனத்தில் கூறியபடி நிமித்த காரண மாத்ரமாகிய ஈஸ்வரன் பரதத்வமன்றெனக் கூறப்படுகிறது. இவ்வாறு பிரித்து நான்காவது பாதத்தில் ஸ்தாபிக்கப்படும் விஷயங்களை உணர வேண்டும், இனி ஒவ்வொரு அதிகரணத்தின் பூர்வபக்ஷ ஸித்தாந்தங்களை விரிவாகக் காண்போம் –
1-ஆநுமானிகாதிகரணம் -கடவல்லியில் -இந்திரியங்களைக் காட்டிலும் விஷயங்கள் சிறந்தன. விஷயங்களைக் காட்டிலும் மனது சிறந்தது. மனதைக் காட்டிலும் புத்தி சிறந்தது. புத்தியைக் காட்டிஐல் ஆத்மாவாகிய மஹத் தத்வம் சிறந்தது. அதைக் காட்டிலும் அவ்யக்தம் சிறந்தது. அதைக் காட்டிலும் புருஷன் சிறந்தவன். புருஷனைக் காட்டிலும் வேறு சிறந்த வஸ்து கிடையாது எனப் பொருள், இங்கு : அவ்யக்தம் ‘ என்கிற சொல் கபில தந்த்ரத்தில் ப்ரஸித்தமான ப்ரதானத்தைக் குறிக்கின்றதா இல்லையா என்று ஸந்தேஹம்; இதற்குப் பரிஹாரமளிக்கும் வகையில் பூர்வபஷி கருதுவதாவது—அவ்யக்தம், மஹான், புருஷன் முதலிய சொற்கள் ஸாங்கிய தர்சனத்தில் வழங்கப்படுவன, அதே சொற்களை இந்த மந்த்ரங்களில் உபயோகித்துள்ள படியால் – இங்கு ஸாங்க்ய ஸித்தாந்தமே கூறப்படுவதாக ஏற்படுகிறபடியால், அவ்யக்தம் என்கிற சொல் ப்ரதாநத்தையே குறிப்பிடுகிறது. ஆகவே அவர்கள் கூறுவது போல் ப்ரதானம் ஜகத் காரணம் என்பதில் வேதத்திற்கு நோக்கு. மேலும் இருபத்து நான்கு அசேதந தத்வங்களையும் இருபத்தைந்தாவதாகப் புருஷனையும் ஒப்புக் கொண்டு புருஷனைக் காட்டிலும் வேறு தத்துவம் கிடையாதென ஸாங்கியர்களின் கொள்கை. அந்தக் கொள்கை மேலே காட்டிய வாக்கியங்களில் ப்ரதி பலிப்பதாலும் ஸாங்கியர்களின் ஸித்தாந்தமே இந்த வாக்கியங்களில் விவக்ஷிதம் எனப் பூர்வ பக்ஷம்.–
ஸித்தாந்தமாவது–இங்கு அவ்யக்த சப்தத்தால் ப்ரதானம் கூறப்படவில்லை-தேராக உருவகப் படுத்தப்பட்ட சரீரமே கூறப்படுகிறது. ஏனெனில், இந்த வாக்கியங்களுக்கு முன்பு உள்ள வாக்கியங்களில் ஆத்மாவைத் தேரின் ஸ்வாமியாகவும் சரீரத்தைத் தேராகவும் புத்தியைத் தேரோட்டியாகவும் மனஸ்ஸைக் கடிவாளமாகவும் இந்த்ரியங்களைக் குதிரைகளாகவும் விஷயங்களைக் குதிரைகள் செல்லும் மார்க்கமாகவும் உருவகம் செய்து இந்தத் தேர் முதலியவைகள் எவனுடைய வசமாக இருக்கின்றனவோ அவனே ஸம்ஸாரக் கடலுக்கு அப்பாற்பட்ட வைஷ்ணவ ஸ்தானத்தை அடைகிறான் எனக் கூறப்பட்டது. தேர் முதலியவைகளாக உருவகப் படுத்தப்பட்ட சரீரம் முதலியவைகளுள் முக்கியமாக வசீகரிக்கப்பட வேண்டியவைகளை மந்திரங்கள் கூறுகின்றன
குதிரைகளாகக் கூறப்பட்ட இந்திரியங்களைக் காட்டிலும் மார்கங்களாகக் கூறப்பட்ட விஷயங்கள் வசிகரிக்கப்பட வேண்டியவைகளுள் முக்கியமானவை, ஏனெனில், இந்திரியங்கள் வசப்பட்டிருந்தாலும் விஷயங்கள் ஸமீபத்திலிருந்தால் அவைகளில் செல்லும் இந்திரியங்களை அடக்குவது கடினமாகையால். விஷயங்களைக் காட்டிலும் வசீகரிக்கப்பட வேண்டியவைகளுள் மனது முக்கியமானது. ஏனெனில் விஷயங்கள் சமீபத்தில் இரா விட்டாலும் அவ் விஷயங்களை ஆலோசிக்கும் மனதைக் கட்டுப்படுத்துவது சிரம மாகையால். மனதைக் காட்டிலும் இதை நான் செய்ய வேண்டு மென்கிற அத்யவஸாயம் முக்கியமானது, அதைக் காட்டிலும் காரியங்களைச் செய்கிற படியால் ஆத்மா முக்கியமானவன். ஆத்மாவைக் காட்டிலும் புருஷார்த்தங்களை அடைவதற்கு உபாயத்தை அநுஷ்டிப்பதற்கு ஸாதனமான சரீரம் முக்கியமானது. அதைக் காட்டிலும் ஸர்வாந்தர்யாமியாகிய பரமாத்மா முக்கியமானவன். எல்லாம் அவனுடைய அதீநமாக இருப்பதால். ஆகவே எம்பெருமானைச் சரணாகதியாகிய உபாயத்தால் நம் வசமாக்கிக் கொண்டால் மற்றவை யெல்லாம் நம் வசமாகி விடும் என மேற்காட்டிய வாக்கியங்களின் உட் கருத்து, ஆக முன்பு தேர் முதலியவைகளாக உருவகப் படுத்தப்பட்ட இந்திரியம் முதலிய வஸ்துக்களை அந்தந்த சப்தங்களால் கூறுமிடத்து சரீரம் என்கிற சொல்லுக்குப் பதிலாக அவ்யக்தம் என்கிற சொல்லை உபயோகப் படுத்திய வேத புருஷனுக்கு ஸாங்கியர்களுடைய கொள்கையில் நோக்கில்லை, வசீகரிக்கப் பட வேண்டிய பொருள்களைக் கூறுவதிலேயே நோக்கு. அவ்யக்தம் என்னும் ப்ரக்ருதி தத்துவம் சரீரமாகப் பரிணமிக்கிற படியால் அந்த சொல்லால் சரீரம் குறிப்பிடப் படுகிறது. ஸாங்கியர்கள் கருதும் ப்ரக்ரியை இங்கு விவஷிதமாக இருந்தால் மோக்ஷத்தை அடைவதற்காக அவ்யக்தத்தை நன்றாக அறிய வேண்டும் எனக் கூறுதல் வேண்டும். ஏனெனில் ப்ரக்ருதி ஸ்தூல ப்ரபஞ்சம் புருஷன் இவற்றின் ஸ்வரூபத்தை நன்கு அறிபவர்களுக்கே மோக்ஷம் என்று அவர்கள் ஸித்தாந்தமாகையால். மேலும் இந்த கடவல்லீ ப்ரகரணத்தில் பரமாத்மா, அவனை உபாஸித்தல், உபாஸகனான ஜீவன் இவற்றின் தத்துவம் நன்றாக அறியப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆகவே ஸாங்கியர்கள் கூறும் ப்ரக்ருதி முதலியவைகளுக்கு இங்கு ப்ரஸக்தி யில்லை–
2-சமஸாதிகரணம் -ஸ்வேதாஸ்வதர உபநிஷத்தில் –ஸத்வம் ரஜஸ் தமஸ் ஆகிய முக் குணங்களை யுடைய பிறவி யில்லாத ஒருவள் தனக்கு ஸமாந ரூபமான அநேக ப்ரஜைகளை ஸ்ருஷ்டிக்கிறாள் – பிறவி யில்லாத ஒருவன் ப்ரீதியடன் அவளோடு இணங்கியுள்ளான். பிறவி யில்லாத மற்றொருவன் அனுபவித்த பின் அவளை விட்டு விடுகிறான் என்று. இங்கு அஜா என்கிற சொல் ஸாங்கியர்கள் கூறும் ஸ்வதந்திரமான ப்ரக்ருதியைக் குறிப்பிடுகிறதா அல்லது பாமாத்மா தீனமான ப்ரக்ருதியைக் குறிப்பிடுகிறதா என்று ஸந்தேகம் வர, பூர்வ கதியானவன்–ஸம்ஸாரிகளால் ப்ரீதியுடன் அனுபவிக்கப் படுவதாயும் முக்தாத்மாக்களால் விடப் படுவதாயும் ஸ்வதந்த்ரமாக அநேக ப்ரஜைகளை ஸ்ருஷ்டிப்பதாகவும் – கூறப்படும் வஸ்து ஸாங்கியர்கள் கூறும் மூல ப்ரக்ருதியே, ஆகவே அதுவே ஜகத் காரணம் என்று ஆக்ஷேபம் செய்கிறான்.
அதற்கு ஸித்தாந்தி கூறும் ஸமாதானம் வருமாறு–இங்கு பிறவி யில்லாத வஸ்து என்று மாத்திரமே ஏற்படுகிறது. அது ஸ்வதந்திரமான ப்ரக்ருதியே என்பதற்கு அடையாளம் ஒன்றுமில்லை. வேறு ஸ்ருதி வாக்கியங்களில் ப்ரக்ருதி யானது பரமாத்மாவை ஆத்மாவாக உடையது என ஓதப் படுவதால் ஈண்டும் அஜா என்கிற சொல் பரமாத்மாத்மகமான ப்ரக்ருதியையே குறிப்பிடுகிறது. ஆகவே பரமாத்மாவினால் ஏவப்பட்ட ப்ரக்ருதி ஜகத்தை ஸ்ருஷ்டிக்கிறது என்பதே மேலே காட்டிய வாக்கியத்திற்கும் பொருளாகும் –
3-ஸங்க்யோப ஸங்க்ரஹாதி கரணம்-ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் ஓதப்படும் மந்திரத்தில் –ஐந்து ஐந்து ஜனங்களுடைய கூட்டமும் ஆகாசமும் எவனை ஆஸ்ரயித்து நிலைத்துள்ளதோ அந்த ஆத்மாவை ப்ரஹ்மமாக அறிபவன் முக்தனாகிறான் என்கிறது , இங்கு ஐயைந்து என்று கூறியபடிபால் இருபத்தைந்து வஸ்துக்கள் கருதப்படுகின்றன. இதனால் ஸாங்கியர்களின் கொள்கை த்வனிக்கிறது. இருபத்து நான்கு அசேதந தத்துவங்களையும் இருபத்தைந்தாவதாக ஆத்மாவையும் அவர்கள் ஒப்புக் கொள்கின்றபடியால்- இந்த இருபத்தைந்து வஸ்துக்களும் ஆத்மாவாகிய் புருஷனை -ஆஸ்ரயித்துள்ளன, இதனால் ஆத்மா தனக்குத் தானே ஆஸ்ரயம், வேறு ஆஸ்ரயமில்லை என்பதும் பெறப்படுகின்றது. ஆகவே உபநிஷத்துக்கு ஸாங்கியர்கள் கூறும் இருபத்தைந்து தத்துவங்களைக் கூறுவதில் தான் தாத்பர்யம் என்று பூர்வ பக்ஷம்
ஸித்தாந்தம்-– ஐயைந்து இருபத்தைந்து தத்துவங் களைச் சொல்லி அவற்றைக் காட்டிலும் வேறாக ஒன்றைச் சொல்லி மேலும் ஒரு சொல்லால் அதிகப்படியாக இரண்டு தத்துவங்கள் கூறப் பட்டிருப்பதால் இருபத்தேழு தத்வங்கள் தேறுமே யல்லது ஸாங்கியர்கள் கொள்கைப்படி இருபத்தைத்துக்கு இங்கு ப்ரஸக்தி யில்லை. மேலும் இங்கு ஐந்து ஜனங்களுடைய ஸமூஹம் என்கிற அர்த்தத்தில் பும்லிங்க சப்தம் இல்லாமல் ஸ்த்ரீ லிங்கமே சரியானது- ஆகவே பஞ்சஜனம் என்கிற பெயரை யுடையவர்கள் சிலர், அவர் ஐவர். அவர் யாவர் எனில், முன் பின் வாக்கியங்களைப் பரிசீலிக்கு மிடத்து ஐந்து ஞானேந்திரியங்கள் எனத் தீர்மானிக்கப் படுகிறது. ஆக ஐந்து ‘ஞாந இந்திரியங்களும் ஆகாசமும் எந்த ப்ரஹ்மத்தை ஆஸ்ரயித்துள்ளனவோ அந்த ப்ரஹ்மத்தை அறிபவன் முக்தியைப் பெறுவான் என்பது தான் பொருள். மேலும் ஐந்து ஞானேந்திரியங்கள் ஐந்து கர்மேந்திரியங்கள் ஐந்து பூதங்கள் ஐந்து ப்ராணன்கள் என்பதாக ஐந்து ஸமூஹங்களாக நான்கினையே சாங்கியர்கள் அங்கீ கரிக்கின்றனர் -ஐந்தாவதாக ஒரு கூட்டம் அவர்கள் மதத்தில் ஒப்புக் கொள்ளப்பட வில்லை. ஆகவே ஐயைந்து இருபத்தைந்து என்கிற பொருளில் வேத புருஷனுக்கு நோக்கில்லை. ஆன பின்பு மேற் கூறிய படியே பொருள் கொள்ள வேணும். ஸாங்கியர்களின் ஸித்தாந்தம் இங்கு விவஷிதமன்று –
4-காரணத்வாதிகரணம்–ப்ரக்ருதி ஜகத் காரணம் என்கிற மதத்தைத் தழுவி மறுபடி பூர்வ பக்ஷம் வர அதற்கு ஸமாதானமாக இந்த அதிகரணம் அமைந்துள்ளது. வேதாந்த வாக்கியங்களில் ஜகத் காரணமாகிய வஸ்து ஒருவிதமாக ஓதப்படவில்லை. சில சில இடங்களில் வெவ்வேறு சொற்களால் ஜகத் காரணமான வஸ்து அழைக்கப்படுகிறது. ஆகவே சந்தேகம் ஏற்படுகிறது. பரமாத்மா தான் ஜகத்காரணம் என்று எப்படி அறுதியிட முடியும். அதற்கு மாறாக ஸ்பஷ்ட மாக ப்ரக்ருதியைக் சூறிப்பிடுவதால் அதுவே ஜகத் காரணமாகலாம்-ப்ரக்ருதியின் ஸ்தூலமான அவஸ்தையையும் அதன் ஸூக்ஷ்மமான அவஸ்தையையும் சொல்லி அதன் கார்யமான வஸ்துக்களில் காரணமாகிய ப்ரக்ருதி வ்யாபித்திருக்கும் தன்மையையும் பெரியதாக இருக்கும் தன்மையையும் காட்டுகிறது. ஆகையால் ப்ரதானமே ஜகத் காரணம் என்று அறுதி யிடலாம். ஸாங்க்ய ஸ்ம்ருதி க்ரந்தமும் அதற்கு அநுகூலமாக உள்ளது. அசேதந மாகிய ஜகத்துக்கு ௮சேதன மாகிய ப்ரக்ருதி காரணமானால், யுக்தியும் அநுகூலமாக அமைகிறது என்பதாகப் பூர்வ பக்ஷம்-எல்லாவற்றையும் அறியும் சேதந மாகிய ப்ரஹ்மத்தைக் குறிப்பிட்டு அதையே நாம ரூப விபாகமிராமையால் அதுக்குத்தக்க சொல்லால் குறிப்பிட்டு அதுவே ஜகத்துக்குக் காரணம் என்பதில் தான் ஸ்ருதிக்குத் தாத்பரியம். இரா விட்டால் அசேதனமான ப்ரக்ருதிக்கு ஸர்வ கர்த்ருத்வம் எங்ஙனே பொருந்தும். ஆகவே இங்குள்ள சொல் எப்படி ஸ்வரூப நித்யத்வத்தால் ப்ரஹ்மத்தைக் குறிக்கிறதோ அதே போல் சொல்லும் மற்ற ஒன்றும் ப்ரஹ்மத்தையே குறிப்பிடுகிறது- நாம ரூப விபாகமற்ற ப்ரபஞ்சத்தை – சரீரமாக உடையது என்று அதன் பொருள்-மற்றச் சொல்லுக்கும் அதுவே பொருள். ஆகவே ப்ரஹ்மமே ஜகத் காரணம் எனத் தீர்மானிக்கலாம் என்று ஸித்தாந்தம்-
5-ஐகத்வாசித்வாதிகரணம்--ப்ருஹதாரண்யத்தில் பாலாகி அஜாத சத்ரு இவர்களுடைய ஸம்பாஷணையில் அஜாத சத்ரு-என்கிற காசி ராஜன் பாலாகி என்பவரைப் பார்த்து உனக்கு நான் ப்ரஹ்மத்தைப் பற்றிக் கூறுகின்றேன் என்று ஆரம்பித்து, பரத்யக்ஷமாகக் காணப்படும் புத்திரன் முதலியவர்களுக்கு எவன் ஸ்ருஷ்டி கர்த்தவோ அவர்களை ஸ்ருஷ்டிப்பதற்குக் காரணமான புண்ய பாபங்களாகிய கர்மத்தை எவன் உடையவனோ அவனே மோக்ஷத்தை விரும்புகிறவர்களால் அறிய வேண்டியவன் என்று ஓதப்படுகிறது-. இங்கு கர்ம ‘என்கிற சொல் லோகத்திலும் வேதத்திலும் புண்ய பாபங்களைக் குறிப்பதாக ப்ரஸித்தி உள்ளபடியால் அவைகளையே குறிப்பிடுகிறது. அவற்றை உடையவன் ஜீவாத்மாவே. ஆகையால் அவன் தான் செய்த புண்ய பாபங்களை அனுபவிப்பதற்காக ஜகத்தானது ஸ்ருஷ்டிக்கப்படுவதால் ஜீவாத்மாவே ஜகத்துக்குக் காரணம். அவனுடைய ஸ்வரூபமே மோக்ஷத்திற்காக அறிய வேண்டும் என்பதாகப் பூர்வ பக்ஷம்-
இந்த வாக்கியம் பாலாகியினால் முன்னமே அறியப்படாத ப்ரஹ்ம தத்வத்தை அறிவிப்பதற்காகத் தோன்றிய படியால், புத்திரன் முதலிய புருஷர்களோ அவர்களை – ஸ்ருஷ்டிக்கும் புருஷனோ பாலாகிக்கு முன்னமே தெரியுமாகையால் அந்த புருஷனைச் சொல்லுவதில் மேற் காட்டிய வாக்யத்துக்கு நோக்கில்லை. ஆன பின்பு ஸர்வ ஜகத்துக்கும் காரண பூதனான ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்ட பரமாத்மாவைச் சொல்வதில் தான் ஸ்ருதிக்குத் தாத்பர்யம். அதற்குச் சேர மேலே காட்டிய வாக்யத்திற்குப் பொருள் கொள்ள வேண்டும். காணப்படும் புருஷர்களுக்கு எவன் ஸ்ருஷ்டி கர்தாவோ, பல பேசி என்? : காணப்படும் எல்லா ப்ரபஞ்சமும் எவனுடைய ஸ்ருஷ்டிக்கு விஷயமோ அவனே அறியத் தகுந்தவன் என்பதே அந்த பொருள். இங்கு * கர்ம’ என்கிற சொல் புண்ய பாபங்களைக் குறிக்க வில்லை. செய்யப்படுகிறது அதாவது ஸ்ருஷ்டிக்கப்படுமது என்கிற பொருளைக் குறிக்கிறது. ஆகையால் புண்ய பாபங்களை உடையவன் என்று பெறப் படாது. எல்லா ஜகத்தும் எவனுடைய ஸ்ருஷ்டிக்கு விஷயமோ அவன், அதாவது ஸர்வ ஜகத்துக்கும் காரண பூதன் என்றே பெறப்படும். அப்படிப் பட்டவன் ஜீவாத்மாவைக காட்டிலும் வேறுபட்ட பரமாத்மாவே. அவனே மோக்ஷத்திற்காக அறியத் தகுந்தவன் என்பது ஸித்தாந்தம் –
6-வாக்யாந்வயாதிகரணம்-ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் மைத்ரேயி என்பவளுக்கு மோக்ஷ ஸாதனமான ஞானத்துக்கு விஷயமாக ஆத்மா குறிப்பிடப் பட்டுள்ளது. ஸ்ருதிவாக்யப்படி . கணவன் மனைவிக்கு ப்ரீதி விஷயமாகும் போது பர்த்தாவின் இச்சையை நிறை வேற்றுவதற்காக ப்ரீதி விஷயனாவதில்லை. தன்னுடைய காமத்தை நிறை வேற்றுவதற்காகவே பத்னீ பர்த்தாவிடம் ப்ரீதியைச் செலுத்துகிறாள். இது போல் எல்லாரும் அவரவருக்கு ப்ரீதி விஷயமாகும் போது அவரவரின இச்சை பூர்த்தி யாவதற்காகவே ப்ரீதி பாத்ரமாகின்றனர். தனக்காகவே உலகில் எல்லாம் ப்ரீதி விஷயமாகிற படியால் தன் ஆத்ம ஸ்வரூபத்தையே த்யானம் பண்ண வேண்டும் என்பது ஸ்ருதி வாக்யத்தின் பொருள். இங்கு த்யானத்துக்கு விஷயமாகக் குறிப்பிடப்பட்ட ஆத்மா ஜீவனா அல்லது ஸர்வேஸ்வரனா என்று ஸந்தேஹம். பர்த்தா முதலிய ப்ரிய வஸ்துக்களின் ஸம்பந்தம் ஆத்மாவுக்குக் கூறப்பட்டுள்ள படியால் ஜீவாத்மாவே இங்கு விவஷிதன். ப்ரக்ருதி வியுக்தனாக ஜீவாத்மாவை த்யானம் செய்தால் மோக்ஷம் ஸித்திக்கும் என்று ஸாங்க்யர்கள் கூறுவதால் ஜீவாத்ம ஸ்வரூப தியானத்துக்கு மோக்ஷ ஸாதனத்வம் உபபந்நமே. ஆகவே வேதாந்த வாக்யங்கள் ஸாங்க்யர்கள் ஒப்புக் கொண்ட புருஷனையே கூறுகின்றன. அந்த புருஷனுடைய சேர்க்கையினால் ப்ரக்ருதி ஜகத்தை ஸ்ருஷ்டிக்கிறது என்று பூர்வபஷம் –
இங்கே ஸித்தாந்தமாவது :–இந்த ப்ரகரணத்தின் ஆரம்பத்தில் யாக்ஞவல்க்யரிடம் மைத்ரேயியானவள் மோக்ஷத்திற்கு உபாயம் எது என்று கேட்க அதற்கு உபாயமாக ஆத்ம தியானத்தை உபதேசிக்கிறார். அந்த ஆத்மா ஜீவனாக இருக்க முடியாது. ஏனெனில் வேத வாக்யங்கள் பரமாத்மாவை தியானம் செய்வதே மோஷ உபாயம் என்று கூறுகின்றனவாகையால் ஜீவாத்ம ஸ்வரூப த்யானத்துக்கு மோக்ஷ ஸாதநத்வம் கூடாதிறே. மேலும் இந்த ப்ரகரணத்தில் எல்லா ஜகத்துக்கும் காரணமாக ஆத்மாவைக் கூறுகிறபடியால் நிர்விசேஷம் என்று ஸாங்க்யர்கள ஒப்புக் கொண்ட ஆத்மாவுக்கு ஜகத் காரணத்வமாகிய விசேஷம் அனுபபன்னம், ஆகவே இந்த ஸ்ருதிக்கு வேறு விதமாகப் பொருள் கொள்ள வேணும்-இந்த சொல்லுக்கு ஸங்கல்பம் என்று பொருள். பர்த்தாவானவன் *நான் என் பத்னிக்குப் பிரியனாகக் கடவேன் * என்று ஸங்கல்பிக்கிறான். அந்த ஸங்கல்பத்தை நிறை வேற்றுவதற்காக பத்னி பர்த்தாவிடம் ப்ரீதி வைக்கிறாள் என்பது கிடையாது. பர்த்தாவுக்கு அவ்வாறு ஸங்கல்பம் இருந்தாலும் பத்னிக்கு பர்த்தாவிடம் ப்ரீதி யின்மையையும் நாம் உலகில் காண்கிறபடியால். ஆகவே ஸத்ய ஸங்கல்ப ஞான ஸர்வேஸ்வரன் “இவளுக்கு இவன் ப்ரியனாகக் கடவன்’ என்று ஸங்கல்பிக்கிறான். அவனுடைய ஸங்கல்பத்தை நிறைவேற்றுவதற்காகவே பத்னியானவள் பர்த்தாவிடம் ப்ரீதி வைக்கிறாள். ஆகவே ஸத்ய ஸங்கல்பனான பரமாத்மாவையே த்யானம் செய்ய வேண்டும் என்று பொருள். இங்கு ஆத்மா என்கிற சொல் ஜீவாத்மாவுக்கு அந்தர்யாமியாகிய (தனக்கு அந்தர் யாமியாகிய) பரமாத்மாவைக் குறிப்பிடுகிறது என காசக்ருத்ஸ்ன மஹர்ஷி கருதுகிறார். அதுவே வியாஸருடைய ஸித்தாந்தம் என்று ஸ்ரீபாஷ்யாதி க்ரந்தங்களில் பரக்கப் பேசப்பட் டுள்ளது.
7–ப்ரக்ருத்யதிகரணம்–இந்த அதிகரணத்தில் ஸேஸ்வர ஸாங்க்யன் பூர்வபக்ஷீ. அவன் கருத்து–உலகில் எந்த காரிய த்ரவ்யம் உண்டானாலும் அதற்கு உபாதான காரணம் என்றும் நிமித்த காரணம் என்றும் இரு வகைக் காரணங்கள் உண்டு. மண்ணினால் செய்யப்படும் குடம் முதலியவை களுக்கு மண் உபாதாந காரணம். குயவன் நிமித்த காரணம். வேறு உருவத்தில் பரிண மிக்கும் காரணம் உபாதான காரணம் பரிணமிக்கும் படியாகச் செய்பவன் நிமித்த காரணம், உபாதான காரணம் வேறு நிமித்த காரணம் வேறு. ஆகவே ஜகத்துக்கு உபாதான காரணமும் நிமித்த காரணமும் ப்ரஹ்மமே என்கிற வேதாந்திகள் பக்ஷம் யுக்திக்குச் சேராது, ஜகத்துக்கு உபாதான காரணம் ப்ரக்ருதி அது ஜகத்தாகப் பரிணமிக்கிறபடியால். நிமித்த காரணம் ஈஸ்வரன், அவனால் ஏவப்பட்ட ப்ரக்ருதி ஜகத்தாகப் பரிணமிக்கிறபடியால்–வேத வாக்யமும் ஈச்வரனால் ஏவப்பட்ட ப்ரக்ருதியே ஜகத்தை உண்டு பண்ணுகிறது என்று கூறலாம் படி யுள்ளது –
இதற்கு ஸித்தாந்தி கூறும் பதில், சாந்தோக்ய உபநிஷத்தில் ப்ரஹ்மம் அறியப் பட்டால் எல்லாம் அறியப் படுகிறது என்று கூறி, எப்படி. மண் அறியப் பட்டால் அதன் விகாரமாகிய குடம் முதலியன அறியப் படுகின்றனவோ என்று உதாஹரணம் காட்டப் பட்டுள்ளது. . இதனால் ப்ரஹ்மம் உபாதான காரணம் என்று அறியப் படுகிறது. ப்ரஹ்மம் நிமித்த காரண மாத்ரம் என்று கொண்டால் நிமித்த காரணமாகிய குயவன் அறியப்பட்டால் குடம் முதலியன அறியப்படாமையால் ஜகத்தும் அறியப்பட மாட்டாது. ஆக ப்ரஹ்மம் அறியப்பட்டால் ஜகத்தும் அறியப்படும் என்கிற ப்ரதிக்ஜை அநுபபன்னமாகி விடும். உபாதான காரணமாகிய மண் அறியப்பட்டால் அதன் விகாரமாகிய குடம் முதலியவைகள் மண் என அறியப் படுகிறபடியால் உபாதான காரண ஞானத்தால் அதன் காரியமும் அறியப் படும் என்பது உபபந்ந மாகையால் ப்ரஹ்மத்தை உபாதான காரணமாகவும் ஒப்புக் கொள்ள வேணும். ஆகவே எங்காவது ஸ்ருதியில் ப்ரக்ருதி ஜகத்தை ஸ்ருஷ்டிப்பதாகக் கூறியிருந்தால் அங்கும் ப்ரக்ருதியை சரீரமாக உடைய ப்ரஹ்மமே ஸ்ருஷ்டிக்கிறதென்று கொள்ள வேணும் –
8-ஸர்வ வ்யாக்யாநாதிகரணம்--இதற்கு முன்புள்ள அதிகரணம் வரையில் முதல் அத்யாயத்திலுள்ள நான்கு பாதங்களில் கூறப்பட்ட நியாய விசேஷங்களைக் கொண்டு, கீழ் அதிகரணங்களில் உதாஹரிக்காத ஜகத் காரண ப்ரதிபாதக வாக்யங்களுக்கும் சேதனாசேதனங்களைக் காட்டிலும் வேறுபட்ட பரமாத்மாவைக் கூறுவதிலேயே தாத்பர்யம் என்று அறுதியிட வேண்டும் என்பதாக இந்த அதிகரணத்துக்கு ஸ்ரீபாஷ்யத்தில் அருளிய பொருள். பூர்வாதிகரணங்களில் உதாஹரிக்காத வாக்கியங்கள் எவை? சேதனாசேதன ப்ரதிபாதக வாக்யங்கள் எனில், அவைகளுக்குத் தாத்பர்யத்தை பூர்வ நிர்ணீத ந்யாயங்களால் கண்டு கொள்ளலாம் ஆகையால் அதற்காக இநத அதிகரணம் தேவையில்லை. ஆகவே தேவதாந்தர வாசகங்களான ஹிரண்ய கர்ப்பன், சிவன் முதலிய சப்தங்களை நிர்தேசித்து ஜகத் காரண வஸ்துவைக் கூறும் வாக்யங்களே கீழ் அதிகரணங்களில் உதாஹரிக்காத வாக்யங்கள். அவைகளுக்கும் நாராயணன் ஜகத் காரண புருஷன் என்பதில் நோக்கு, இவ் விஷயமே இந்த அதிகரணத்தில் விவஷிதம் என்பதாக ஸ்ருத ப்ரகாசிகையிலும் அதிகரண ஸாராவளியிலும் கூறப்படுகிறது.
இங்கு ஒரு கேள்வி பிறக்கின்றது.-அதாவது கீழ் அதிகரணங்களில் உதாஹரிக்கப் பட்ட வாக்யங்கள் ஸர்வ விலக்ஷணமான நாராயணனைக் கூறுகின்றன என்று யுக்திகளால் நிர்ணயம் செய்திருந்தால் அல்லவா அதே யுக்திகளால் சிவன் முதலிய தேவதாந்தர வாசக சப்தங்களை உடைய வாக்யங்களும் நாராயணனையே கூறுகின்றன என்று அதிதேசம் பண்ணலாம். கீழ் அதிகரணங்களில் உபநிஷத் வாக்யங்கள் சேதனாசேதன விலக்ஷண ப்ரஹ்ம பரங்கள் என்றிம்மாத்திரம் அல்லவா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . ஆகவே அதிதேசம் எப்படிப் பொருந்தும் என்று. இந்த விடத்தில் ஸ்ருத ப்ரகாசிகையை அவசியம் எல்லோரும் ஸேவிக்க வேணடும். அங்கு ஸுதர்சனப் ட்டருடைய நிரூபணம் வெகு நன்றாக அமைந்துள்ளது. அதாவது கீழ் முதல்அத்யாயம் நான்கு பாதங்களில் உள்ள ஒவ்வொரு அதிகரணத்திற்கும் அவைகளின் விஷய வாக்யங்களுக்கும் நாராயணன் ஜகத் காரணம் என்பதிலேயே தாத்பரியம் என்று யுக்தி ப்ரமாணங்களுடன் நிரூபித்து அந்த ந்யாயத்தால் சிவாதி பரமாகத் தோன்றும் வாக்யங்களுக்கும் நாராயணனைக் கூறுவதில் தான் தாத்பர்யம் என்பதைத் தெரிவிப்பதற்காக இந்த அதிகரணம் தோன்றியது என நிருபித்துள்ளார்-
—
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ.வே. வித்வான் நாவல்பாக்கம் ஸ்ரீ ராமானுஜ தாதாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
Leave a Reply