6 ஆம் பாசுரம் திருஆய்ப்பாடி திவ்ய தேசப் பிராட்டி
7 ஆம் பாசுரம் வடமதுரை திவ்ய தேசப் பிராட்டி
8 ஆம் பாசுரம் துவாரகை திவ்ய தேசப் பிராட்டி
9 ஆம் பாசுரம் திருப் பாற் கடல் திவ்ய தேசப் பிராட்டி
10 ஆம் பாசுரம் திருக் கண்ணபுர திவ்ய தேசப் பிராட்டி
11 ஆம் பாசுரம் திருவரங்கம் ஸ்ரீரங்க நாயகி
12 ஆம் பாசுரம் திருவேங்கடம் பத்மாவதித் தாயார்
13 ஆம் பாசுரம் திருக் குடந்தை கோமள வல்லித் தாயார்
14 ஆம் பாசுரம் பரமபதம் பெரிய பிராட்டியார்
15 ஆம் பாசுரம் திருமாலிருஞ்சோலை மலை சுந்தர வல்லித் தாயார்
ஸ்ரீஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரைத் திரு வாய்ப்பாடியாகக் கொண்டு பாசுரமருளிச் செய்துள்ளாள் என்பது பொதுவான கருத்து-ஆதலின் முதலில் துயிலுணர்த்தப் பெறும் பிராட்டி திருவாய்ப்பாடி
திவ்ய தேசத்துப் பிராட்டியாக எண்ணத் தட்டில்லை -ஆயர்பாடிக்கு அணி விளக்காகக் கண்ணன் பிறந்த நாலிரு திங்களில் செய்தனவாகப் பேசப்பெறும் பால லீலைகளில் பேய்முலை நஞ்சுண்டதும் திருக் காலால் சகடம் சாடியதும் திருவாய்ப் பாடியில் தானே அவை தாமே இப் பாட்டில் சுட்டப் பெறு கின்றன-
புள்ளினங்கள் புள்ள ரையன் புகழ் குழறின” என்றார் -திருத் தகப்பனார் பெரியாழ்வார். அவரது பெண் பிள்ளையான இவளும் அவர் வாக்கை ஒட்டி “ புள்ளும் சிலம்பின ” என்கிறார்.-துளசி வநத்தில் தன்னைக் கண்டெடுத்துத் தனக்குப் பாலும் அமுதுமாகக் க்ருஷ்ண பக்தியைக் கொடுத்து வளர்த்த
பட்டர் பிரானைத் திருத் தகப்பனாராக மட்டும் பார்க்காமல் ஆசாரியராகவும் வரித்தவளாயிற்றே –
ஸ்ரீ கோதா பிராட்டியார் விஷயமான ஸ்ரீ கோத உபமாஷ்டக ஸ்லோஹம் நீராட்டம் உத்சவம் போது திரு மஞ்சன கட்டியத்தில் சேவிப்பார்கள் ஸ்ரீ பெரியாழ்வார் வம்சம் ஸ்ரீ வேத பிரான் பட்டர் அருளிச் செய்தது என்பர்-
சயாமாம் த்விஜாதி ப ஸூ தாம் ஸ்ரவணாபி ராமம்
மஞ்ஜூ ஸ்வ நாம் மத நமீச்வரஜம் பஜந்தீம்
கோதே குரோஸ் த்ரிஜகதாம் குணசாலி நீம் த்வாம்
லீலா ஸூ கீம் க்ருததிய சமுதாஹரந்தி –ஸ்ரீ கோதா பிராட்டியும் கிளியும்–பசுமை நிறம் கொண்டதாய் இருக்கும்-முட்டை -குஞ்சு இரு பிறவி -அரசன் கருடன் பெண் -கிளி -விஷ்ணு சித்தன் திருக்குமாரி
அணி மழலைக் கிளி மொழி-மன்மதன் வாஹனம் -உம்பியையும் உம்மையும் தொழுதேன்-சாஷாத் மன்மதன் கண்ணனையே பாடி உகப்பித்த நீர் ஸூகாச்சார்யாருக்கு ஒப்பு
முதலில் முட்டை வடிவில் தோன்றி பின்னர் குஞ்சு வடிவெடுப்பதால் பறவைகள் வட மொழியில் த்விஜம் என்று வழங்கப்படுகின்றன .-‘த்விஜாதிப’ என்று புள்ளரையரான கருடன்.-‘த்விஜாதிப ஸுதாம்’ என்று கருடனின் பெண்ணாக மதிக்கப் பெறும் பைங்கிளி
பிள்ளாய்” என்றது பூஜ்ய வாச ஸப்தம். ஸ்ரீ வான மா மலை ஜீயர் ஸ்வாமி அருளிச் செய்த ஸ்வாபதேசத்தில் ‘அஸ்மத் குருப்யோ நம:’ என்று காட்டுகிறார். ஆதலின் அவரை முன்னம்
துயிலுணர்த்தி அவர் துணை யோடு திருவாய்ப் பாடிப் பிரோட்டியைத் துயிலுணர்த்துகிறார்கள்
கண்ணன் போல் பொங்கும் பரிவுடைய யசோதைப் பிராட்டியாரைப் போல் பாவித்துத் தாய்ப் பாசுரமிட்ட அவரைப் புருஷகாரமாகப் பற்றித் திருவாய்ப்பாடிப் பிராட்டியை அன்பு கூர்ந்து ‘பிள்ளாய்!’ என்று
அழைத்துத் துயிலுணர்த்துகிறாள். ஸ்ரீவிட்டுசித்தர் பக்ஷிராஜன் திருவம்சமாகவே திருவவதரித்தார் அன்றோ –இந்தப் புள்ளரயனைப் புருஷகாரமாகப் பற்றிப் ‘புள்ளரையன் கோயில்… பிள்ளாய்’ என்று
கொண்டாடுகிறார்கள் –
‘புள்ளரையன் கோ ‘ என்று ‘தாஸஸ் ஸ ஸகா வஹநம்’ –ஆக பக்ஷி ராஜன் பணிவிடையை ஏற்கும் எம் பெருமானைச் சொல்லி, கோ இல்’ என்று அவ்வெம் பெருமானின் இன் துணையும் நற்றுணையுமான பிராட்டியைச் சொல்கிறது. (மனைவி, கிழத்தி, இல்லாள், இல் என்று அனையவை மருதத் தலை மகட்காகும்-முல்லை நிலத் தலைவிக்கும் ஆகும் திவாகர நிகண்டு – 307, 3088)’கோ இல் இல்’ என்று பிராட்டியின் இல்லமாகத் திகழும் திருவாய்ப்பாடி என்றுமாம்.
இந்த புள்ளரையன் கோயிலில் ஒலிக்கும் சங்கம் எம் பெருமானது இடக் கையில் ஏறி வீற்றிருக்கும் வலம்புரிச் சங்கத்தின்றும் மாறுபட்டது. எங்கனம் என்னில் ‘ஆநிரை மீளக் குறித்த சங்கம்’
(பெரியா .திரு. 3-4-3) என்கிற படியே அந்தச் சங்கமோ கானகம் மேவி மேய்ந்து திரிந்து மாலை வேளையான அளவில் ஆநிரைகள் வீடு திரும்ப வேண்டி ஒலிக்கும்.-மற்ளற நாள் ருக்மிணிப் பிராட்டி வேண்டு கோளை ஏற்று அவளை மணம் முடிக்க வந்திருப்பதைக் குறிக்க பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலி’யும் (நாச்சியார்.திரு 9-9)-அன்று.-பின்னர் பாரதப்போர் துவங்கும் முன் பாண்டவர்க்கு அபயம் அளித்து உற்சாகம் ஊட்டவும் துர்யோதனாதியர் தொடை நடுங்கி வெலவெலத்துப் போம்படி ஜய கோஷம் செய்து முழங்கும் சங்கம்(ஸ்ரீ கீதை 1 -15)போன்றதன்று.
இஃது இந்த திவ்ய தம்பதிகளின் அடியார்கள் முழங்குவது; அர்ச்சையில் அவன் ரக்ஷணத்தில் யீடுபாடுடைய கைங்கர்ய பரர்களை அத்தாணிச் சேவகத்திற்கு அழைக்கும் சங்கம்.ஆதலின் அமைதியான விடியற் காலை வேளையில் பேரரவமாக முழங்கும். இந்த அடையாளம் கூறி ‘மலரணை பள்ளி கொள்ளும் அன்னமாம் (திருப்பள்ளி -.2) ஆயர் பாடி பிராட்டியைத் துயிலுணர்த்துகிறாள். அதனைச் செவி மடுத்தும் பிராட்டி அசை வின்றி யிருக்க மற்றும் ஒரு செய்தி கூறி எழுப்ப முற்படுகிறாள்.
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்து’ இராம அவதாரத்தில் காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து பட்ட துன்பம் தீரவும், பூதேவி வேண்டின படி பூபாரம் போக்கப் பாரதப் போர் மூளும் நாள் வரை அமைதியாகத் துயில ஆய்ப்பாடி வந்து தோன்ற, இங்கும் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் பருவமடையாத
நிலை ல் நம்பி மூத்த பிரான் பாது காப்பில் ‘ஓர்க் கீழ்க் கன்றாய்’ (நாச்.திரு 14-1) வளர்ந்து வருமளவில்,
அன்று ஓருநாள் அன்னையின் உருவில் நச்சுப் பாலூட்ட வந்த பூதனையை மாய்த்த போது ‘ஸர்வ கந்த’ னாவனுடைய திருமேனி தீண்டப் பெறும் பேறு பெற்றதால் பூதனையின் உயிரற்ற உடலும் மணம் வீசியதாம். அத்தகைய க்ருக்ஷ்ண ஸம்ஸ்லேஷம் பெற்று மணம் பெற சற்றும் ஆசை யில்லாமல்
உறங்கிக் கிடக்கலாகுமோ?
மற்றொரு நாள் யசோதை பிராட்டி யமுனைக் கரையில் நீராடச் செல்லும் முன்பு காவலுக்கு வைத்த வண்டிச் சக்கரத்தில் கள்ளத் தனமாக உருமாறி வந்த ஓர் அசுரனைத் தாய்ப்பால் வேண்டி அழுவது போல் கால்களை உதைத்து அவ்வசுரனை வதம் செய்த அவன் திருக்கால்களை உன் தாமரைக் கைகள் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டாமோ என்கிறார்கள்.
இங்கனம் ஓர் அசுரப் பெண்ணாலும் ஆணாலும் ஏற்படக் கூடிய ஆபத்தின் நின்றும் அவனைக் காக்க அவன் உறையும் இடத்தை எல்லோரும் அறியச் செய்யும் மங்கள தீப ரேகையான உன்னை ஒளிக்காட்டாதே மறைத்தாயோ.
அவனே இன்று அர்ச்ச பரா தீனனாக அர்ச்சையில் எழுந்தருளி யிருக்கையாலே அவனுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடித்திருக்கும் எங்களுடன் பல்லாண்டு பாட ‘அகலகில்லேன் இறையும்’ (திருவாய் 6-10-10) என்றிருக்கும் மஹிஷியான நீயே தலைமை ஏற்று எம்மை வழி நடத்தத் துயிலெழுந்து வர வேண்டும் என்று வேண்டுகிறாள்.நாம் துயிலுணர வேண்டுமோ! தங்களின் ஸத்தோ ஹேதுவான அவன் ரக்ஷணத்திற் கென்றே சேஷத்வ பாரதந்த்ரயத்தில் தலை சிறந்த வைகுந்தத்தமரரும் முநிவரும் ஊரில் பசு நிரைக் கொட்டில்களில் எல்லாம் படுகாடு கிடக்கிறார்களே என்று பிராட்டி திருவுள்ளமாக , பிள்ளாய்! அவர்களும் துயிலெழுந்தனர் காண்.-அவர்கள் பாடும் பல்லாண்டு ஓலியானது விடியற் காலை நேரத்தில் யோகிகள் எல்லோரும் துயிலுணர்ந்தவாறே ஹரி: ஹரி: என்று ஏழு முறை உரக்க அனுஸந்திக்கும் பேரரவம் போல் எங்கள் காதுகளில் உட்புகுந்து உள்ளம் குளிரச் செய்து நாங்கள் எழுந்து வந்துள்ளோம்.
‘ஆயினும் அஞ்ஜையான பின் யான் என் செய்வது?’ என்று அப்பெண்பிள்ளை திருவுள்ளமாக , எப்படி மேய்ச்சலுக்குப் போய் ஊர் திரும்பும் பசு ஊர் நெருங்கியது கண்டு தன் கன்றினை நினைந்து கனைக்க உடன் வரும் குருட்டு பசுவும் கனைக்குமோ அது போல் நீயும் பகவத் விஷயத்தில் புதியவளாகையாலே சப்தாதி விஷயங்களில் தமோ குணம் மிக்கவராய் இருத்தலன்றி ஆத்ம விஷயத்திலும் ஈஸ்வர விஷயத்திலும் ஸங்கோச மில்லாத ஜ்ஞாந வைபவத்தை உடைய துஞ்சா முநிவரைப் பின் பற்றி அவன் திரு நாமங்களைப் பாடி பறை கொள்ள எழுந்திராய் என்று வேண்டுகிறார்கள் –
—
ஏழாம் பாட்டில் கோவர்த்தனமும் விருந்தாவநமும் உள்ளடங்கிய திருவடமதுரை திவ்ய தேசப் பிராட்டியைத் துயிலுணர்த்துகிறாள்-ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் ‘ஹரி:’ என்கிற திரு நாமத்தை -656வது (ஸ்ரீ பட்டர் வ்யோக்யானத்தில்) திரு நாம மாகக் காணலாம்-கோவர்த்தன மலை மேல் எம் பெருமான் ‘ஹரி’ என்கிற திரு நாமத்துடன் சேவை சாதிக்கிறானாம் -கீழ்ப் பாசுரத்தில் முநி வர்களும் யோகிகளும் ஹரி: ஹரி: என்று அனுஸந்தித்த அளவில் திருவாய்ப்பாடிக்கு அருகில் உள்ள திவ்ய தேசமான கோவர்த்தநத்தில் கோயில் கொண்டுள்ள கோவர்த்தனேசன் நெஞ்சில் நிழலாட, அவனது பிராட்டியைத் துயிலெழுப்ப, அவளும் துயிலுணர்ந்து இவர்கள் திளரில் சேர,அடுத்து அருகே உள்ள பிரதாந திவ்ய தேசமான திருவடமதுரை பிராட்டியைத் துயிலெழுப்ப முற்படுகின்றனர்-
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் 654 ஆவது திரு நாமமான ‘கேசவ’திரு நாம வ்யோக்யானத்தில் வடமதுரையில் ‘கேசவன்‘ என்கிற திருப் பெயருடன் எம்பெருமான் சேவை சாதிக்கிறான் என்று காட்டப்படுகிறது. ஆதலின் ஏழாம் பாட்டில் ‘நாயகப் பெண் பிள்ளாய்’ என்றும், ‘தேசமுடையாய் ‘ என்றும் இந்த திவ்ய தேசப் பிராட்டியைத் துயிலுணர்த்துவதாகக் கருதலாம்.-ஆயினும் பிராட்டியை ‘நாயகப் பெண் பிள்ளை’யாகக் கொண்டாடும் முன் ‘பேய்ப் பெண்ணே ‘ என்று கூறுவதென்? எனில் -பேய்த்தனம் என்பது அந்யதா ஞாநத்தைக் குறிப்பது என்பது அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவுள்ளம். பகவத் ஸம்ஸ்லேஷம் பாகவத ஸம்ஸ்லேஷம் வரை என்றறிந்து ஆறி யிருப்பதே என்ன அறிவு? என்று கோபித்துப் பேசுகிற வார்த்தையே ‘பேய்ப்பெண்ணே ‘ ஆகும். அந்யதா ஞானம் என்பது வேறாக அறிவது ஆகும். அறிவின்மை அல்லது பேதமையைக் காட்டும்-மேலையார் செய்யாதன செய்யோம் என்று ஸங்கல்பத்திருக்கச் செய்தே-‘நெடுமோ லழகு தன்னில் நீள் குணத்தி லீடுபடுமா நிலை யுடை பத்தர்க்கு’ (திருவாய் நூற் 80) அடிமையாக வாழ்தல் இன்பம் என்று ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணமாக ஆழ்வார் அருளிச் செய்த வைதீக ஸித்தாந்தத்தை ‘ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும்’ (குறள் 834) அதனைத் தான் காற்கடை கொள்ளும் பேதையே என்றவாறு.-அறிவில் குறையுடைய ஆனைச் சாத்தன் பறவைகளும் ‘ கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்’ என்கிறபடியே க்ருஷ்ண க்ருஷ்ண என்று கம்சனுக்கு பயந்து சொல்ல முடியாமல் தமக்குள் கெஞ்சலாக கீச்சு கீச்சு என்று கலந்து பேசக் கேட்டும் கண்ணுறங்கும் பேதையே என்றுமாம்-மற்றும் பேதைப்பெண்ணே என்று கூறினால் பாடலின் சீர் தட்டுமாதலின் சுருக்கிப் பேய்ப் பெண்ணே ! என்கிறாள் எனலாம்-க்ருஷ்ண ஸம்ச்லேஷத்தைப் பெற தங்களின் பாரிப்பு அறியாமல் படுத்துக் கிடக்கிறாளே என்ற வேதனையை வெளியிட்டவாறே
‘பேய்ப்பெண்ணே ‘ என்கிறார்கள்.-தாழவோ பழித்தோ சொன்னார்களன்று. அங்கனம் தாழப் பழித்துச் சொன்னோமே யாகிலும் தன் பால் அன்பு மிக்கவர் தன்ளைத் தாழப் பழித்துச் சொன்ன வன்று அது பொறுக்காமல் முகம் ோட்டும் அவன் போல் அவனது பிராட்டியும் வந்து முகம் காட்டக் கூடும் என்று எண்ணி உரைத்தார்கள் போலும்.திருவிருத்தம் 62 ஆம் பாசுர வியாக்யானத்தில் ஸ்ரீ எம்பார்
அருளிச் செய்த வார்த்தையின் உட் பொருள் காண்க -முகில் வண்ணனே என்று ஒருமையில் கூறாமல் முகில் வண்ணரே என்று பன்மையில் கூறினால் உள்ளுவார் உள்ளிற் றெல்லாம் உடன் இருந்து அறியுமவன் அன்பரானவர் அவ்வாறு கூறியதன் உள் நோக்கம் அறிந்து மேலோட்டமாக மதிப்புடன் கூறுவதாக எண்ணி என்ளை நிந்திப்பதென்? என்று மல்லு கட்டிக் கொண்டு வந்து முகம் காட்டுவானாம். தன் ஸ்வரூபத்தாலே தான் நாடும் பேற்றைப் பெற விருக்க யன்றிக்கே தன் ஸ்வரூபத்தை யழித்தாகிலும் அதனைப் பெற வார்த்தை யாடுகிறார்கள்.
திருவாய்ப் பாடியினின்றும் விருந்தா வநத்திற்குக் குடி பெயர்ந்த போதும் ஆயர் பெண்டிர் கண்ணன் மிகவும் விரும்பித் திருடியாவது உண்ணும் அன்று கடைந்த வெண்ணைய் எடுக்க ,முப்போதும் தயிர் கடையத் தவறுவதில்லை-அதே போல் அடியார்கள் க்லேசம் நீக்கவும் தன்னைத் தம் கண்கள் ஆரளவும் காண வேண்டும் என்ற அவர்கள் விடாய் தீர்க்கவும் தவறாத வண்ணம் கண்ணுக்குத் தோற்றாதே ரக்ஷிக்கும் ஸர்வேஸ்வரன் நாராயணன்- ஆஸ்ரித வாத்ஸல்ய மூர்த்தியாய் ஹரி கேசவ திரு நாமத்தோடே இங்கு வட மதுரை திவ்ய தேசத்தில் அர்ச்சா மூர்த்தியாகக் கோவில் கொண்டிருக்கின்றான். அவனது திவ்ய மஹிஷியாய் எம் காரியத்தைத் தலைக் கட்டித் தரத் துணையாக வர வேண்டும் என்று தேசமுடையாய் என்று போற்றிப் பிரார்த்திக்கிறார்கள்-‘தேசமுடையாய்’ – ஒளி பொருந்தியவளே
‘வக்ஷஸ் :பீடிம் மது விஜயிநோ பூஷயந்தீம் ஸ்வ காந்த்யா ’(மதுவெனும் அசுரளை வெற்றி கொண்ட எம் பெருமானுடைய திருமார்பாகிய பீடத்தை அழகுறச் செய்பவள்) என்று ஸ்வாமி வேதாந்தவாசிரியரின் ஸ்ரீஸ்துதி.
‘ஓஜஸ் தேஜோ த்யுதிதர:” (ஸஹ. நாமம் . 276)
ஓஜ; பலம்
தேஜஸ் – தேசு பிறளர வெல்லும் பராபிபவந ஸாமர்த்யம்.
த்யுதி – ப்ரகாசம், ஒளி (ஔஜ்வல்யம்)
இவற்றை எல்லாம் உடைய அவனுக்கு ஒளிக் கற்றையாய்த் திகழ்பவளே என்று குண கீர்த்தநம் செய்கிறார்கள்.
அன்றிக்கே ‘ப்ரகாசாத்மா ‘ – (ஸஹ. நாம -.277) ஒளி மணி வண்ணன்
‘தேஜோ வ்ருஷ:’ – (ஸஹ. நாம -. 763) தேஜஸ்ஸை வர்ஷிப்பவன்-என்கிறபடியே அவளைக் கண் குளிரக் காண எங்களுக்குப் பூரண ஒளி விளக்காக இருப்பவளே என்று கொண்டாடுகிறார்கள்.-
ஆழ்வானும் ‘யஸ்யோ வீக்ஷ்ய முகம் ததிங்கித பராதீநோ விதத்தே அகிலம்’ (ஸ்ரீஸ்தவம் 1) என்று அருளிச் செய்தபடி, ‘ஆதிதேவ:’(ஸஹ.நா 491) எனும் திரு நாமமுடைய எம்பெருமான் தேவர்களைப் படைத்து அவர்களை வெவ்வேறு பணிகளைச் செய்ய நியமித்து அவர்களை அடக்கி ஆளும் தேஜஸ்ஸை உடையவன். அந்த ஆதி தேவன் உன் அன்பின் வழி நிற்பவனாதலின் உன் நியமநத்தைச் சிரமேற் கொண்டு தன் அடியார் வேண்டுவனவற்றைத் தலைக் கட்டித் தர வல்லவன் ஆதலின் அவனிலும் மிக்க தேஜஸ்ஸை உடைய நீ எழுந்தருளி நாம் வேண்டுவன வற்றைப் பெற்றுத் தர வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்கள்.
இவ்வளவும் இவர்கள் சொல்வதைக் கேட்டிருந்தும் எழுந்து வராமையால் ‘தேசமுடையாய் ’ என்று தான் அரசியாகத் திகழும் வடமதுரை நாட்டின் செல்வ வளம் இவளைக் கண்ணுறங்கச் செய்வதாக எண்ணி அதனால் வரும் குற்றம் சுட்டிக் காட்டுகிறார்கள் ஆகவுமாம்.
‘இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு‘ (குறள் 737)–என்கிறபடியே யமுநை ஆறும் கோவர்த்தந மலையும் அரணும்
அவயவமாய் அமைந்துள்ள வடமதுரை நாட்டின் அரசியாகத் திகழ்பவளே !
‘ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு’ (குறள் 740)-என்றும் சொல்கிறபடியே உன்றன் குடிமக்களான நாங்கள் உன் பால் அன்போடு நாயகப் பெண் பிள்ளாய் என்று கொண்டாடுவதைக் கேட்டு நீயும் எங்களிடத்து அருள் கூர்ந்து எழுந்து வந்து வாயிற் கதவைத்த் திறக்க வேண்டும். அவ்வாறு செய்யாது போனால் நாட்டின் கண் யாவும் நிறைந்திருத்தலால்-ஏதும் பயனில்லை எனும் குற்றம் வாராமல் பார்த்தருள் என்கிறார்கள்.
‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானும் கெடும்’. (குறள் 448)-என்பதனால் முதலில் பேய்ப்பெண்ணே என்று உரைத்ததோடு இப்போது வஞ்சப் புகழ்ச்சியாக தேசமுடையாய் என்றிடித் துரைப்பது என் பொருட்டு எனின்
‘ஏதங் கொண்டு ஊதியம் போக விடல்’-(குறள் 831)-என்கிற வள்ளுவன் வாக்கின்படி தனக்குக் கேடு பயப்பன வற்றைக் கைக் கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கை விடுதலாகிற பேதைமை எனும் ‘அளற்றின் கண் (குறள் 835) வீழாமல் காப்பதற்காம்.
‘அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ
தஞ்ச லறிவார் தொழில்’ (குறள் 428)-என்றதளை நோக்கி இவர்கள் கூற்றின் உண்மையை உணர்ந்த திரு வட மதுரை திவ்ய தேசப் பிராட்டி துயிலெழுகின்றாள்.
—
எட்டாம் பாட்டில் துயிலெழுப்பப்படும் பெண் பிள்ளை திருத்துவாரகை திவ்ய தேசத்துப் பிராட்டி எவ்வாறு ஒப்பாகிறாள் என்று பார்க்க வேண்டும்.-கண்ண பிரான் ஓரிரவில் வடமதுரையில் தோன்றி, அற்றை இரவிலேயே கோகுலத்தில் ஒளிந்து வளர்ந்து, பின்னர் விருந்தா வநத்தில் குடி புகுந்து, கம்ச வதத்தின் பின் வட மதுரையில் மீண்டும் வாழ்ந்து வருகையில், கம்ச வதத்திற்குப் பழி வாங்கும் பொருட்டு படை யெடுத்து வந்த ஐரா ஸந்தன் பதினேழு முறை தோற்றோடுகிறான்.-மீண்டும் பதினெட்டாம் முறை காலயவனன் துணை கொண்டு ஜரா ஸந்தன் வருவதை அறிந்து வடமதுரையை விட்டு குடி மக்களுடன் கடலரசன் அனுமதி பெற்று மேலைக் கடலருகே துவாரகா பட்டினத்தை நிறுவிக் குடியேறினான்.
இங்கு தான் ருக்மணி ஸத்யபாமா ஆகியோரைக் கடி மணம் கொள்கிறான். மற்றும் எண்மரையும், நரகாசுர வதத்திற்குப் பின் பதினாறாயிரவரையும் மணம் புரிந்து கொள்கிறான்.-ஆதலின் கண்ணன் பிறப்பு வளர்ப்பின் வரிசையில் அடுத்த திவ்ய தேசமாக துவாரகை இடம் பெறுகிறது. இந்த திவ்ய தேசப் பிராட்டியான ருக்மிணி தேவியை கோது கலமுடைய பாவாய்‘என்று ஸ்ரீ ஆண்டாள்அழைக்கிறாள்-அன்று ருக்மணிப் பிராட்டியின் சகோதரன் அவளை சிசுபாலனுக்கு திருமணம செய்து தர ஏற்பாடு செய்வதை அறிந்த ருக்மிணிப் பிராட்டி கண்ணளை மணக்கவே தான் விரும்புவதை ஓர் அந்தணரிடம் கண்ணனுக்குக் கடிதம் அனுப்புகிறாள்.கண்ணன் அதைப் பெற்றதுமே பதில் கடிதம் எழுதி அனுப்பவும் தாமதிக்காமல் மிக்க குதூ கலத்துடன் தேரேறிச் சென்று
‘திண்ணார்ந்திருந்த சிசுபாலன் தேசழிந்து அண்ணாந்திருக்கவே ஆங்கவளைக் கைப் பிடித்து’ (நாச். திரு. 11-9) துவாரகைக்கு அழைத்து வந்து மணம் புரிந்து கொண்டான்.இங்கனம் ருக்மிணிப் பிராட்டி என்ற பெயர் செவிப்பட்டாலே கண்ணன் கொள்ளும் குதூகலத்தை அளவிட முடியாதாதலின் கோது கலமுடைய பாவாய் என்கிறாள்.-
‘கோது கலமுடைய ….. …..தேவாதி தேவன்’
‘தேவ: ஸ்ரீ கர்ப்ப:’ (ஸஹ. நா 376, 377)-ஜீவர்களை மாயை என்னும் கயிற்றால் கட்டி விளையாடுபவர். அகலகில்லேன் என்றிருக்கும் பிராட்டியைத் தன் இன்புறும் விளையாட்டிலும் பிரியாமலிருந்து
கொண்டு கர்ப்பத்தைப் போல் காப்பவன். மன் பல்லுயிர்களும் அவனது பேரருளுக்கு இலக்காக விருப்பம் இன்றிக்கே மதி மயங்கிக் கேட்டினைச் சூழ்த்துக் கொண்டிருப்பது கண்டு பிராட்டி முகத்தைப்
பார்த்துப் புன் முறுவல் செய்ய அதுவே கோல் விழுக்காட்டாலே அவனுக்கு லீலா ரசமாயிற்றாம்.
‘ஸ்ரத்தயோ தேவோ தேவத்வமஸ்னுதே ‘ என்கிறபடியே சிறு தேவனான எம்பெருமான் ‘ஸ்ரத்தா ‘ சப்த வாஸ்யையான உன்னுடனான தொடர்பினாலேயே தேவாதி தேவனாய் யிருக்கும் தன்மையை அடைகிறான். ஆதலின் நீ எங்களுடன் சேர்ந்தாலன்றோ எங்கள் மநோ ரதம் கார்ய கரமாவது என்று கூறி அழைக்கிறாள்.-ஆனால் இப் பெண் பிள்ளையோ எனில், நாம் செல்ல வேண்டுமோ? ‘ஸ்வம்’ (சொத்து) இருக்கும் இடம் தேடி ஸ்வாமி வாரானோ என்று ஆராய்ந்து கொண்டிருப்பதை ஸ்ரீ ஆண்டாள்
உணர்ந்து’நாம் சென்று சேவித்தால் ….ஆ ஆ வென்று அருளும்’ என்று கூறுகிறாள்.–
எங்கனே எனில் இவர்கள் நம்மை நாடி வரும்வரை வாளா இருந்து விட்டோமே ; ‘ஸர்வேஸ்வர:’ (ஸஹ. நா 97) -தன்னைப் பற்றியவரைத் தானே சென்றடைபவன் என்று ஸ்ரீ பீஷ்மர் சூட்டிய திரு நாமம் பொய்த்து விடுமோ என்று அவன் ஆராய்ந்து ‘ஐயகோ! தப்பச் செய்தோம்’ என்று விரைந்தருள் புரிவான்-அன்றிக்கே தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் என் செய்வான்? எனில் , ‘ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் நாளும் ஒளி மா மலர்ப் பாதம் பணிவோம்’ என்றாரிறே பரகால நாயகியும் (திருமொழி 9-3-9). ‘அன்பராய்ப் போதும்’ – ஆஆ வென்று அருளும்.-அவன் என்ன தான் செய்தாலும் அவன் பக்தியால் அடையப் படுபவன் என்ற வார்த்தைகளை மாற்ற முடியாதன்றோ?
உபாயம் எனக் ருதி அவன் திருவடிகளில் வணங்கினால் அவன் மிறுக்கு பண்ணித் தராவிடினும் நாம் பண்ணும் பக்தி அவனைத் தரும்படி பண்ணி வைக்கும். ‘மம ப்ரிய:’ என்று அவன் நம்மிடம் பக்தி கொண்டு நம்மை அடைய வேண்டும் என்றிருப்பதனை விடுத்து, இனி நாம் பக்தராய் அவன் இருப்பிடம் நோக்கிப் போவோம். பேறு நமக்குக் கிட்ட வேண்டுமென்றால் அதற்குரிய வழிகளில் ஈடுபடுவதும் நம் செயலாக இருக்க வேண்டும் அன்றோ? அவனை ஒரே இடத்தில் நிலையாக இருக்கச் செய்ய வேண்டுமோ? அவன் நம்மை நோக்கி எதிரே வரும்படி நாம் அவனை நோக்கிச் செல்வோம். நாம் செய்யும் செயல்கள் நமக்கு இயல்பானுவை என்றிருந்தா லன்றோ அவன் பொறுத்திருப்பான். அவனை அடையப் பக்தியை உபாயமாகப் பற்றினால் அவனுக்கு நிலை கொள்ளா தன்றோ? ஆ! ஆ! தப்பச் செய்தோம் என்று உடனே அருள் செய்ய முற்படுவான் என்கிறாள்.
அன்று உன் பரிகாரமான எம் பெரிய தகப்பனார் (நம்மாழ்வார்) தாய்ப் பேச்சாக ‘முறையோ’ (திரு விருத் 62) என்று கேட்ட கேள்விக்கு உரு வெளிப்பாடாய் குளிர நோக்கப் பெற்றார் அன்றோ? அங்கனாகில் மஹிஷியே நேரில் வந்தால் கேட்க வேண்டுமோ?
–
ஒன்பதாம் பாட்டில் திருப்பாற் கடல் திவ்ய தேச பிராட்டியான கடல் மகள் நாச்சியாரைத் துயிலெழுப்புவதாகக் கருதலாம்-வட மேற்கே அரபிக் கடலோரம் உள்ள வண் துவராபதி போல்
தென் கிழக்கே வங்கக் கடலோரம் தக்ஷிண துவராபதியாக இராஜமன்னார்குடி எனும் செண்பக ஆரண்ய ஷேத்ரம்-அமைந்துள்ளது. இங்குள்ள ஸன்னிதி மாட வீதிகள் கோபால ஸமுத்திரம் என்றே வழங்கப்படுகிறது. மற்றும் இங்கு திருப் பாற் கடல் வீதி என்று ஒரு வீதியும் திருப் பாற் கடல் எனும் புஷ்கரணியும் உள்ளன . ஆதலின் துவாரகையை அடுத்துத் திருப் பாற் கடல் திவ்ய தேசப் பிராட்டியை யன்றோ துயிலெழுப்ப வேண்டும்.
எம்பெருமான் ஆமையாகி ஆழ் கடல் கடைந்த அன்று கடலரசனிடமிருந்து தோன்றிய கடல் மகள் நாச்சியார்மற்றெல்லாரும் கை தொழ எம்பெருமான் திரு மார்பைச் சென்று சேர்ந்தாள். கடலரசன் மனைவிமார்களான ஸப்த நதிகளும் பிராட்டியின் தாயார் முறையாயினர். அது போன்று ஸ்ரீ
ஆண்டாளும் அழகிய மணவாளப் பெருமாளான அரங்கன் அணி மார்பைச் சேர்ந்ததால் அவளைப் பெற்ற பெரியாழ்வாரும் கடலரசன் போல் எம்பெருமானுக்கு மாமனார் ஆகிறார். ஆதலால் தன் மணவாளரின் மாமனார் கடலரசனைத் தனக்கு ‘மாமான்’ என்ற உறவு முறையிலும் அவனது மனவியரை ‘மாமீர்’ என்ற முறையிலும் கடல் மகள் நாய்ச்சியாரை ‘மாமன் மகள் ‘ என்றும் விளிக்கின்றாள்.
இந்தப் பாற் கடலில் “இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனத் துத்தி அணிபணமாயிரங்களார்ந்த அரவரசப் பெருஞ் சோதி“யே (பெருமாள் திரு. 1-1) தூ மணி மாடத்துச் சுற்றும் விளக்கேற்றி வைத்தது போல் ப்ரகாசமாக உள்ளது. ஆங்குறையும் பிராட்டி அங்கு ‘வானவர்கள் அந்தூபம் தரா நிற்க ‘ (திருவிருத்தம் -21) அதில் நின்றும் கமழும் நறுமண மயக்கில் கண்ணுறங்கிக் கிடக்கிறாள்.
‘மாதவ’ (ஸஹ. நா 169, 741) என்ற பதத்தில் ‘மா’ -மௌனத்தைக் குறிக்கும்.-‘த’ த்யாநத்தைக் குறிக்கும்.-‘வ’ யோகத்தைக் குறிக்கும்.-ஆக ஊமை போல் வாய் மூடி மௌனமாயிருந்தும், செவிடு போல் த்யான நிலையில் நின்றும், அநந்தல் (தூக்கம்) போல் ‘ஸ்ரீ கர’ (ஸஹ.நா 618) என்கிற திரு நாமத்தை யொட்டி அவன் போல் பாற் கடல் யோக நித்திரை கொண்டுள்ளாள் போலும்.
ஸ்ரீவைகுந்தத்தின் நின்று திருமதுரைக்கு வரும் வழியில் கண்ணன் திருப் பாற் கடலில் வ்யூஹ வாஸுதேவக் கோலத்துடன் சேவை சாதிக்க , கண்குளிர காணப் பெற்று அங்கே அவனுக்கு ‘ஸுமுக :’
(ஸஹ.நா . 457) (மலர்ந்த திரு முக முடையவன்), ‘மநோ ஹர: ஸஹ.நா . 462) (மனதைக் கவர்பவன்), ‘ஸ்வாபந :’ (ஸஹ.நா . 466) வசீகரித்துத் தூங்க வைப்பவன்) ஆகிய திரு நாமங்கள் வழங்கப்படுகையால் அவனால் ஏமப் பெருந்துயிலில் ஆழ்த்தப் பட்டாளா ? என்று ஆச்சரியமாக இருக்கிறது என்கிறாள்-இவளைத் துயிலெழுப்புவது எவ்வாறு என்று அன்னைமார் ஆராய்ந்து கொண்டிருக்கக் கண்டு எந்த அம்மான் பொடியால் கண்ணுறங்கப் பெற்றாளோ அது கொண்டே உறக்கம் கலைந்து எங்களுடன் சேர வேண்டும் ஆதலின் மாமீர் அவனது கல்யாண குணங்களைப் பேசும் ஸ்ரீஸஹஸ்ர நாமமும் நவின்று எழுப்புமாறு பிரார்த்திக்கிறார்கள்.–
—
பத்தாம் பாட்டில் திருக் கண்ண புர நாயகியை ‘அம்மனாய்’ என்றும் ‘அருங்கலமே ‘ என்றும் விளித்துத் துயிலெழுப்புகிறாள். திருப்பாற் கடல் நாச்சியாரைத் துயிலுணர்த்திய பின் திருப் பரமபத நாயகியைத்
துயிலெழுப்பாமல் திருக் கண்ணபுர நாயகியைத் துயிலெழுப்புவான் என் என்றால் திருப் பாற் கடல் நாச்சியார் துயிலெழுந்ததும் ஸ்ரீ ஆண்டாளிடம் செய்தி ஒன்று தெரிவிக்கிறாள். அதாவது வங்க மலி தடங் கடலின் அருகில் மேற்கில் ‘பூலோ வைகுண்டம்’ என்றழைக்கப்படும் க்ருஷ்ண ஆரண்ய ஷேத்ரம் உள்ளது. இங்குள்ள திருக் கோயிலில் கருவறையில் மூல மூர்த்தி நீலமேகப் பெருமாளாக சேவை சாதிக்கிறார். அவரது வலது பக்கம் தனிக்கோயில் நாச்சியாராக மூல மூர்த்தி க்ருஷ்ண புர நாயகி எழுந்தருளி யிருக்கிறார்.-இப்பெருமானே திருப்பாற் கடல் சமுத்திர ராஜன் வேண்டு கோளுக்கிணங்க அவனது புதல்வன் சந்திரனுக்கு தக்ஷ முநிவனின் சாபத்தால் ஏற்பட்ட க்ஷய ரோகத்தைப் போக்கி யருளினான். இப் பெருமானின் பிராட்டியையும் நாம் உடன் அழைத்துச் சென்றால் நல்லது என்று யோசளை கூற, க்ருஷ்ண புர நாயகி பால் ஸ்ரீ ஆண்டாளின் கவனம் திரும்புகிறது.-அந்த பிராட்டியோ பரமபதத்தேறிச் செய்யும் கைங்கர்ய அனுபவத்தை இங்கேயே கண்ணபுரத்தம்மானால் கைக் கொண்டு, நோன்பாவது கண்ணபுரத்தம்மானை உபாயமாக அறிவது என்ற எண்ணம் கொண்டு உறங்கிக் கிடக்கிறாள். அவளிடம் ‘அம்மனாய்’ நீ எங்கள் குழுவிற்குத் தலைமை ஏற்று அழகு படுத்த வேண்டியவள் அன்றோ என்று அழைக்கிறாள்.
அவளோ ஆண்டாளின் இந்த செவிக்கினிய செஞ் சொல்லிலீடுபட்டும் நம்மை இவர்களின் அடிமையாகப் பார்க்காமல் நம்மைத் தங்கள் தலைவியாக ஏற்க விரும்பும் எண்ணத்திற்கு இளசந்தோமாவோம் என்று எழுந்திருந்து வாசல் கதவைத் திறக்காமலும் மறுமாற்றம் ஏதும் கூறாமலுமிருந்தாள்-இது நிற்க இந்த திவ்ய தேசத்தின் கிழக்கில் உள்ள கடலில் கருடன் அமர்ந்து தவஞ்செய்த கருட பர்வதம் ஆழப் புதைந்துளளது. அந்த கருட பர்வதத்திற்குக் காட்சி தர வருடந் தோறும் மாசி மாதம் பௌர்ணமி யன்று கடற் கரையிலிருக்கும் திருமலை ராயன் பட்டிைத்திற்கு உற்சவ
மூர்த்தி சவுரிப் பெருமான் கருட வாகனத்தில் சவுரி முடியுடன் எழுந்தருள்கிறான். மற்றும் தலம், வநம், நதி, கடல், நகரம்,தீர்த்தம், விமாநம், ஆகிய ஸப்த புண்ணிய ஷேத்ரமாகவும் விளங்குகிறது.
தவிர ஸ்ரீரங்கம், திருவேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், வான மா மலை , சாள க்ராமம், புஷ்கரம், பத்ரிகாஸ்ரமம், நைமி சாரண்யம் ஆகிய எட்டு ஸ்தலங்களிலும் திருமந்திரத்தின் எட்டெழுத்துக்களின் ஒவ்வொரு
எழுத்தின் வடிவத்தில் எம்பெருமான் எழுந்ததருளி இருக்க எட்டெழுத்துக்களின் முழு வடிவமாகத் திருக் கண்ணபுரத்தில் சேவை சாதிக்கிறான்-ஆதலின் இத்தகைய நாற்றத்துழாய் முடி நாராயணனான
புண்ணியனின் மஹிஷியான உன்னுடன் சேர்ந்து அவனைப் போற்ற எங்களுக்கும் கைங்கர்ய ஸித்தி உண்டாக எழுந்தருள வேண்டும்.
—
கீழ்ப் பத்தாம் பாட்டில் எம் பெருமானின் கீழை வீடான திருக் கண்ணபுரத்து நாயகி இவர்களுடன் சேர கற்றுக் கறவை ‘ என்று தொடங்கும் பதினோராம் பாட்டில் எம் பெருமானின் மேலை வீடான ஸ்ரீரங்க ஷேத்ரத்து நாச்சியாரான ஸ்ரீரங்க நாயகியை ‘பொற் கொடி’ என்றும், ‘புன மயில்’ என்றும், ‘செல்வப் பெண்டாட்டி’ என்றும் விளித்துத் துயிலெழுப்புகிறாள்.
யது குலத்தில் ஸூரர் பிரிவில் வந்த வஸு தேவன் பிள்ளையாக அவதரித்ததால் கண்ணனுக்கு சௌரி என்ற பெயர் ஏற்பட்டது. கீழ்ப் பத்தாம் பாட்டில் அந்த திரு நாமம் அனுசந்திக்ப்பட்டது. அவன் எப்படிப்பட்ட ஸூரன் என்று இப் பாட்டில் அனுஸந்திக்கிறாள்-‘கற்றுக் கறவை கணங்கள் பல கறந்த ….கோவலன்’ என்கிறாள்.
‘மஹாபல:‘ (ஸஹ.நா. 174) என்கிற திரு நாமம் சாற்றி பீஷ்மரும் முன்னமே ஸ்துதித்துக் கொண்டாடினார். அதற்கேற்ப வெண்ணை யுண்ணும் பொருட்டு கோவலனாய்க் கறவை மாடுகள் பலவற்றையும் தானொருவனாகவே கறக்கும் பேராற்றல் படைத்த திண் புயம் கொண்டவன்.
அது மட்டுமோ? ‘செற்றார் திறலழியச் ….. செய்யும் …. கோவலன்’-என்கிறாள்.-அந்த வலிமை படைத்த தோள்களின் துணை கொண்டு ‘மஹாத்ரித்ருத்’ (ஸஹ.நா. 182) என்று பீஷ்மர் கொண்டாடின படி-அன்று மந்திர மலையைத் தம் முதுகில் சுமந்தது போல் மற்றை நாள் தன் சுண்டு விரலால் ஏழு நாள்கள் கோவர்த்தந மலையைக் குடையாகப் பிடித்துச செறுக்கொண்டு கல் மழை பெய்வித்த இந்திரன் திறலழியச் செய்து ‘கோவிந்த’ பட்டாபிஷேகம் செய்யப் பெற்ற கோவலன் – மற்றும், ‘செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும் ….கோவலன்’ என்கிறாள்.
கர தூஷணர்களுடன் போருக்கு வந்த பதினாயிரம் அரக்கரையும் இலக்குவன் துணை யின்றித் தானொருவனே போரிட்டு வென்று சீதாப் பிராட்டியின் அணைப்பால் போரில் ஏற்பட்ட இரணத்துக்கு ஒத்தடம் கொடுக்கப் பெற்றவன். பின் பிறக்க வுள்ள இளங் கிளியான பரகால நாயகியும் ‘பார்த்தன் செல்வத் தேரேறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை செருக்களத்துத் திறலழியச் செற்றோன்’ (திரு மொழி 2-10-8) என்றும், “மன்னெல்லாம் முன்னவியச் சென்று வென்றிச் செருக்களத்துத் திறலழியச்
செற்ற வேந்தன்’ (திருமொழி 6-6-8) என்றும் பாட்டினால் காட்டப் பெற இருப்பவன். இவர்களும் மேலே ‘சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி’ என்று பல்லாண்டு பாட விருக்கிறார்கள்.-அத்தகைய தோள்களைக் கொழுகொம்பாகக் கொண்டு தழுவிப் படரும் ‘லக்ஷ்மி கல்ப லதா ‘ என்றும், ‘லக்ஷ்மி கல்பவல்லீ” என்றும் ஸ்ரீரங்க ராஜ ஸ்தவத்திலும் (பூர்வ 10) ஸ்ரீகுணரத்ந கோசத்திலும் (3)
பேசப்படும் ‘பொற் கொடியே என்று விளிக்கிறாள்.
எனினும் தாடகை வாலி ஆகியோரை அழித்ததையும், கர தூஷணரோடு போரிடுகையில் பின்னால் மூன்றடிச் சென்றதுவும் கால யவனனுக்குப் பயந்து புறமுதுகிட்டதையும், குற்றமாகக்
கூறப்படுகிறதே எனில் இவ்வாறான சில செயல்கள் எதிரிகளுடைய தீ மனம் கெடுக்கவும் அவர்களுக்கு மருவித் தொழும் மனம் கொடுக்கவுமாம் என்று சொல்ல வேண்டுமே அன்றிக் குற்றமாகாது.-அன்றிக்கே வாலிப பருவத்தில் செய்தவையே அன்றி மாடு மேய்க்கும் கோவலனாய்க் குற்றமொன்றில்லாதவன். ‘சரப:’ என்ற 357 ஆவது திரு நாமத்தின்படி வரம்பு மீறி நடப்பவர்களை அழிப்பவன். ஆதலின் வலியச் சென்று போரிடும் குற்றமும் நிராயுத பாணிகளைத் தாக்கும் குற்றமும் இல்லாதவன்.
தன்னையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தன்னையே ஓக்க அருள்’ (திருவாய் மொழி 11-5-3) செய்யும் ‘பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியோன்’ (திருவாய். 9-3-9) அவன் ஆதலின், அவன்
அடியவனாகிய இந்தக் கோவலனும் குற்றமொன்றில்லாத கோவலன். இவன் பாதுகாப்பில் கண்வளரும் பொற்கொடி இவள்.-‘புற்றரவு புன மயில்‘ –பிராட்டி அடக்க ஒடுக்கமாய் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது புற்றிலுள்ள அரவை நினைவு படுத்தும். ஆயினும்
எம்பெருமானுக்குள்ள அகடித கடநா சாமர்த்தியம் அதாவது சேராச் சேர்த்திப் பிராட்டிக்கும் இயல்பாக உள்ளதால் பார்க்க பாம்பையும் அதன் எதிரியான மயிலைப் போலவும் சேவை சாதிப்பவளே என்கிறாள்.
புன மயிலே ’ – ‘சிகீ யான அரங்கன் எனும் ஆண் மயில் ‘அநுசிகீ ’ எனும் இப் புன மயிலை மகிழ்விக்கத் தோகை விரித்தாடுகின்றான்.- பெண் மயிலான தன்னை மகிழ்விக்க ஆண் மயிலான அரங்கன் தன் தோகை விரித்தாடச் செய்பவள். அவன் சிங்கம் போலவும் எருது போலவும் தன் நடை யழகைக் காட்டினால் உன்னைப் போல் அமர்ந்த நிலையில் அவன் நடையைக் காட்ட இயலாது-அந்த நடை யழகைக் காட்டியருளப் போதராய் என்று வேண்டுகிறாள்.-‘எதற்கு’ என்று பிராட்டி அறிய விரும்புகிறாள் போலும் என்று எண்ணி ‘முகில் வண்ணன் பேர் பாட’ என்று கூறுகிறாள்.-‘முகில் வண்ணன் பேர்’ என்று வான் திகழும் சோலை முகில் வண்ண மதிலரங்கர் திருவடி மேல் எம் பிரபந்ந ஜந கூடஸ்தர் சொல் மாலையாக நோற்ற ஆயிரம் இன் தமிழ்ப் பா . அதனை இன்னிசை யோடு நாவினால் பாடி அவனும் நாமும் யின்பமெய்த என்கிறாள்.
திருவரங்கச் செல்வனைத் தன் திருக் கண் நோக்கினாலும் புருவ நெறிப்பினாலும் நியமிக்கும் திருவுடையவள். ஆதலின் செல்வப் பெண்டாட்டி’ என்று விளிக்கிறாள்.-அன்றிக்கே செல்வ நாரணனின் இணை பிரியா இன் துணையாகும் செல்வப் பெண்டாட்டி‘ என்று சொல்லவுமாம். திருவான உன்னுடன்
இருப்பதா லன்றோ திருவாளன் இனிதாக திருக் கண்கள் வளர்கின்றான். ஆதலின் நீ யன்றோ எங்கள் காரியத்தைத் தலைக் கட்டித் தர வேண்டும். தனியாகக் கிடந்துறங்கிப் பயனில்லை. ஆதலின் சிற்றாதே பேசாதே கிடக்காமல் எழுந்தருள பிரார்த்திக்கிறாள்.
அன்றிக்கே சுற்றத்துத் தோழிமார்- ஆராமம் சூழ்ந்த அரங்க மாதலின் அவன் பகல் வேட்டையாகச் சென்று தங்கும் தோட்டங்கள் மற்றை திவ்ய தேசங்கள்.-அவ் விடத்துப் பிராட்டிமார் சுற்றத்துத் தோழிமார் ஆயினர்-அன்றிக்கே திருவாய் மொழி 7-2-8 ன் ஈடு வ்யாக்யானத்தில் ‘என் திரு மகள்’ என்னுமிடத்தில் ஸ்வாமி நம்பிள்ளை அருளிச் செய்துள்ளமை போல் சாஷாத் லக்ஷ்மியோடு ஒக்கச் சொல்லலாம்படியான நம்மாழ்வார் தலைமையிலான தம் தந்தைமார் பதின்மரையும் சொல்லிற்றார் ஆகவுமாம்.’ காவியங் கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை ஓப்பாள்‘-(திருவாய் மொழி 3-7-9) என்றன்றோ பரகால நாயகியின் தாய்ப் பாசுரம்.
—
பன்னிரண்டாம் பாட்டில் திரு வேங்கடவன் திரு மார்பின் நின்றும் இறையும் அகலகில்லேன் என்றுறையும் பத்மாவதித் தாயாரைத் துயிலெழுப்புகிறாள். கீழை மற்றும் மேலை வீட்டில் எழுந்தருளி இருக்கும் பிராட்டிமார் துயிலுணர ஸ்ரீ ஆண்டாளின் கவனம் வடக்கில் திரும்புகிறது. அந்த பக்கத்திலிருந்த திரு வேங்கடவனே கீழை வீட்டில் திருக் கண்ணபுரத் தம்மானாகவும் மற்றும் மேலை வீட்டில் அரங்கத்தரவின் அணையனாகவும் எழுந்ததருளி இருப்பினும், குன்றாத வைகுந்த வாழ்வை இகழ்ந்து பூமகள் நாச்சியார் தாமே கோதை நாச்சியார் எனும் திரு நாமத்துடன் பெரியாழ்வார் பெண் பிள்ளையாக அவதரித்திருப்பதை அறிந்து, அவள் வரவை எதிர்பார்த்து வேங்கட மலையில் கோயில் கொண்டு, ‘முகிலிடை மின்’னே (மூன்றாம். திரு 55) போல் திகழ்கின்ற திரு மார்பில் அகலகில்லேன் இறையும் என்றிருக்கும் பிராட்டியுடன் நிற்கின்றான். ஆங்கனம் அங்குக் கோயில் கொண்டருளும் பத்மாவதித் தாயாரைத் துயிலெழுப்புகிறாள்.
‘பனித்தலை வீழ நின் வாசற் கடை பற்றி’, ‘குளிரருவி வேங்கடம்’ என்றும், ‘பனி வரையினுச்சி’ என்றும் சொல்லப்படும் ஷேத்ரமாதலின் மார்கழி முன் பனி தலை மீது விழுகிறது-அதாவது பகவத் குண அனுபவம் பெறும் மநோ ரதத்துடன் புறப்பட்டோம். நடுவில் பாகவத குண அனுபவம் பண்ணா நிற்கின்றோம்.-“நற் செல்வன்”-‘ஸர்வயோக விநிஸ்ருத:’ (ஸஹ.நா 104) என்று பீஷ்ம பிதாமகரால் போற்றப்படுகிறவன். எல்லா உபோயங்களாலும் அடையப் படுபவன். ஸாஸ்திரங்களில் சொல்லப்பட்ட தல்லாது தன் புத்தியில் தோற்றியதோர் உபாயத்தால் அடையக் கூடியவன்- ஒழிவில் காலமெல்லோம் நிழல் போல் கண்ணனை விட்டுப் பிரியாமல் மனம் மெய் மொழிகளால் தொண்டாற்றும் ஏந்து பெருஞ் செல்வம் படைத்த நற் செல்வன் இவன்.
‘போய பிழையும் புகு தருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்’ வண்ணம் ‘வேங்கடத்துறைவார்க்கு நம என்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே ‘ (திருவாய். 3-3-6) ஆதலின், மற்றைய விஷயங்களில் விரக்தராய்க் கைங்கர்ய ருசி யுடையராய்த் தங்கள் ஸ்வரூபத்தைச் சேர்ந்த கைங்கரியத்தையே செய்பவன்.-கீழ்ப் பாட்டில் மாற்றாதே பால் சொரியும் பசுக் கூட்டங்கள் பல ஆற்றப் படைத்த செல்வன் கருதப்பட்டு அவனுக்கு மாறான நற் செல்வன் இந்தப் பாட்டில் பாராட்டப் பெறுகின்றான்.-‘மனத்துக் கினியான்’ இராமனை நேரில் கண்டும் அவனிடம் மனம் பறி கொடுக்காமல் இருக்கும் வாநர வீரர்கள் நாற் திசையிலும் சென்று சீதாப் பிராட்டியைத் தேடும் பணியில் ஈடுபடுத்தும் காலை திருவேங்கட மலை பக்கம் செல்ல வேண்டாம் என்று சுக்ரீவன் எச்சரிக்கை செய்ததாக்க கம்ப நாட்டாழ்வான் கூறுவான். ( கிஷ் நாடு விட்ட படலம் 29 காண்க ). ஏனெனில், ‘இன்றிப் போக இரு வினையும் கெடுத்து ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான் நின்ற வேங்கடம்’ (திருவாய். 9-3-8) என்ற ஆழ்வார் வாக்கினை அடி யொற்றி அந்தத் திருமலை யப்பனிடம் மனம் பறி கொடுத்து இராம காரியத்தை மறக்கச் செய்யும் மனத்துக் கினியான் அவன்- மேலும், ‘புணராய் நின்ற மரமேழ் அன்றெய்த ஒரு வில் வலவோ'(திருவாய். 6-10-5)என்கிற நம்மாழ்வார் வாக்கினை அடி யொற்றி ஸ்ரீவேங்கடச ஸ்தோத்திரத்தில் ‘அபிரோம குணாகர தாசரதே ‘ என்று ஸ்ரீப்ரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்வாமி அனுபவித்தபடி திருமலை யப்பனே ஸ்ரீராமனாக திருவவதரித்தருளினதாக கருதலாம்.
‘வேடார் திருவேங்கடம் மேய விளக்கு’ (திருவாய் மொழி 4-7-5) என்றும்-‘வேங்கடம் மேவிய வேத நல் விளக்கு’ (திருவாய் மொழி 4-3-8) என்றும்-சொல்லப்படுகிற திருமலையில் ‘மின்னார் முகில் சேர் திருவேங்கடம்” (திரு வாய் மொழி 1-10-6) என்கிறபடியே திருமகள் கேள்வனாகிய தேவனை அனைத்தில்லத்தாரும் அறிந்து கொண்டாட எழுந்தருள என்று வேண்டுகிறாள்.
—
செழுங் கொழும் பெரும்பனி பொழியும்’ வடக்குத் திருமலையில் நிலையார நின்றான் தன் பிராட்டியைத் துயிலெழுப்பிய பின் தனது பெரிய தகப்பனாரான திருமழிசைப் பிரான் ஏரார் கோலம் திகழத் திருக் குடந்தையில் கிடந்த திருக்கோலம் காண ஏ ஏகினாற் போல் ஸ்ரீ ஆண்டாளும் பதின்மூன்றாம் பாட்டில் திருக் குடநதை அமுதனின் திவ்ய மஹிஷியான கோமள வல்லித் தாயாரைத் துயிலெழுப்ப முற்படுகிறாள். ‘போதரிக் கண்ணினாய்!’ என்றும் ‘பாவாய்!’ என்றும் உள்ள விளிகள் மற்ற திவ்ய தேச மஹிஷிகளுக்கும் பொருந்தி யிருக்க ஈண்டு’குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே …. கள்ளம் தவிர்’ என்பதை நோக்குங் கால் திருக் குடந்தை திவ்ய தேசத்தி பொற்றோமரைக் கயக் கரையிலே கோயில் கொண்டுள்ள கோமள வல்லித் தாயார் விஷயமாகவே இவ்விளிகள் அருளிச் செய்துள்ளதாகவே எண்ண வேண்டியதாகிறது.
கீழ் மூன்று பாட்டுக்களால் கிழக்கு மேற்கு வடக்கு திக்கில் குடி கொண்டுள்ள , முறையே திருக் கண்ணபுரத்தம்மான், திரு அரங்கன் மற்றும் திரு வேங்கடவன் பிராட்டி மாரைத் துயிலெழுப்பி பிறகு தெற்கில் குடி கொண்டுள்ள அழகரின் பிராட்டியைத் துயிலெழுப்பச் செல்லாமல் இடையில் இருக்கும் அமுதனின் பிராட்டியைத் துயிலெழுப்புவதன் காரணம் என்ன என்று ஆராய வேண்டும்.
அன்றொரு நாள் பிருகு முநிவரின் செயலால் வருந்தி தான் நித்ய வாசம் செய்து கொண்டிருந்த மாலவன் திரு மார்பை விட்டுப் பிரிந்த ஸ்ரீதேவித் தாயார் பூவுலகில் ஓரிடத்தில் மறைந்து வாசம்
செய்து கொண்டிருக்கையில் கலியுகத்தில் திருமலையில் எம்பெருமான் ஸ்ரீநிசாசனாக அவதாரம் செய்திருந்தான்.
முன்பு ஸ்ரீராம அவதாரத்தில் , ஏக பத்னி விரதனனான எம்பெருமான் தன்னை மணம் புரியத் தவம் மேற் கொண்ட குசத்துவஜ ரிஷியின் புதல்வியான வேதவல்லியை மற்றொரு அவதாரத்தில் திருமணம் செய்து கொள்வதாக வரமளித் திருந்தான். அதன் படியே அவ்வமயம் ஆகாச ராஜாவின் புதல்வியாக வேதவல்லி பிறந்து பத்மாவதியெனும் திரு நாமத்துடன் வளர்ந்திருக்க அவளைத் திருமணம் புரிந்து கொள்கிறான்-அதைக் கேள்விப்பட்டு ஸ்ரீதேவி மிக்க சீற்றத்துடன் திருமலை நோக்கி வருகிறாள். அவ்வாறு ஸ்ரீதேவி வருவதை அறிந்த ஸ்ரீநிவாசன் திருக் குடந்தை நகர் வந்து ஒரு பாதாள குகையில் குடியேறினார். அங்கு வந்த இந் நிலையில் இராம அவதாரத்தில் எம்பேருமான் விபீடணனுக்கு அளித்த ப்ரணவாக்ருதி விமானத்தின் மற்றொரு பிரிவான வைதீக விமானத்தில் சார்ங்க பாணியாக எம்பெருமான் திருக் குடந்தையில் கோயில் கொள்கிறான்–
திவ்ய தம்பதிகளிடத்துத் தான் செய்த அபசாரத்திற்கு வருந்தி ப்ருகு முநிவரும் ஹேம ரிஷி எனும் பெயருடன் இந்த திவ்ய தேசத்திற்கு வந்து பொற்றாமரைக் குளத்தில் அவதரித்திருந்த பிராட்டியை
கோமள வல்லி எனும் திரு நாமமிட்டு சேர்த்து எம்பெருமான் சார்ங்க பாணிக்கு திருமணம் செய்து கொடுக்கிறார். ஆக திருமகள் பொருட்டே அரங்கனும் ஸ்ரீநிவாசனும் குடியேறி இந்த
திவ்ய தேச பிராட்டியான கோமள வல்லி நாச்சியாரைத் துயிலெழுப்புகிறாள்.
போதரிக் ண்ணி’-கொந்தார் பைம் பொழில் சூழ்ந்துள்ளதாய் ‘கொங்கார் சோலை ‘
‘சாலி வேலி தண் வயல் தடங் கிடக்கும்’ பூம் பொழிலும் கொண்டு,’என்றும் பொன்னித் தடங் கொண்ட தாமரை சூழும்தண் பூங் குடந்தை ‘ யாதலால், தவமியற்றும் காலத்தே தூமலர்கள் துவளற ஆய்ந்து கொண்டேத்தினமையால் அந்த பூக்களைப் போன்றே இவள் கண்களும் உரு மாறினமையால் போதரிக் கண்ணி ஆயினள்.-‘போதரிக் கண்ணினாய்’ –‘போது’ என்று பூவையும், ‘அரி’ என்று மானையும் சொல்லி-பூவையும் மானின் கண்ணையும் ஒத்த கண்ணழகு படைத்தவள்.’கற்றுப் பிணை மலர்க் கண்’ (திரு. விரு 65) என்று ஆழ்வார் அருளிச் செய்தவாறு கன்றான மானின் மலர் போலே இருக்கிற கண் என்றுமாம். கண்ணனுடைய கண்ணிலே அகப்பட்டு அவன் தன் கருமை நிறம் இவளது கண்ணிலே ஏறப் பெற்ற கண்ணழகு படைத்தவள்-
அரி என்று சத்ருவாய் பூவைப் போட்டியில் எதிரிட்டு வெல்லும் கண் என்றுமாம். ‘ காவியும் நீலமும் வேலுங் கயலும் பல பல வென்று…..தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே ‘ (திரு.விரு 67) என்று ஆழ்வார் அருளிச் செய்தவாறே அழகிய இறகு களையுடைய அன்னம் போன்ற நடை யழகை உடைய இந்தப் பிராட்டியின் இணை மலர்க் கண்கள் தம் கடைக்கண் சிவப்பினால் செங்கழுநீர்ப் பூவையும், கருமையால் கரு நெய்தலையும், நோக்குகின்ற கூர்மையால் வேலாயுதத்தையும், ஆகார
சௌந்தர்யத்தினால் கயல்மீன்களையும், இப்படியான தன் மற்றுமுள்ள குணங்களினால் மற்ற பொருட்களையும் அடையப் புக்கவிடம் புக்கு வென்றது.
இதனால் பிராட்டியின் ஜ்ஞாந ஸ்ரீ பேசப்பட்டது. இது கொண்டு ஒப்புயர்வற்ற உன் துணை மலர்க் கண்கள் எனும் ஓரவயவத்தாலே அவனையும் கூட மயக்க வல்லவளாயிற்றே ? அதனை யொழிந்து அந்த மரதக மணித் தடத்தே எம்மையும் சேர்த்துக் கொண்டு குள்ளக் குளிரக் குடைந்து நீராடாமல் படுத்துறங்க வல்லையோ என்கிறார்கள். உன் கை வளை பற்றித் தனித்து அழைத்துச் செல்கிற கள்வனின் கள்ளத்தனம் உன்னிடத்தில் ஏறிட்டதோ என்கிறார்கள்.-இன்று மநோ ரதம் கை கூடினமையால் ‘பள்ளிக் கிடத்தியோ’ எங்கள் மநோ ரதம் கை கூட வேண்டுமே ” கள்ளம் தவிர்”.
ஆராவமுதத்தை எங்களுடனும் சேர்ந்து அனுபவிக்க எண்ணாமல் தனித்து அனுபவிக்கும் கள்ளம் தவிர் என்கிறாள். அவர்கள் வேண்டியவாறே அன்று கலந்து நீராடியதைக் குறிக்கும் வண்ணம் இற்றை அளவும் தைத்திங்கள் பிறந்த அடுத்த நாள் கனுவன்று விஜயவல்லி சீதா பிராட்டியுடன் பொற்றாமரைக் குளத்தில் பிடி வைத்து நீராட்டம் காண்கிறாள்.
—
கீழ் பதின் மூன்றோம் பாட்டில் துயிலுணர்ந்த கோமள வல்லித் தாயார் கருவறையில் பெருமாளும் பிராட்டியும் எழுந்தருளி யிருக்கும் திவ்ய தேச தரிசநத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.-ஆங்கே , உத்யோக ஸயநம் புரிந்தவாறே திகழக் கிடந்தான் திருவடி வாரத்தில் ஸப்த நதி களும் பூதேவியும் துவய மந்திரத்தின் முற்கூற்றை (ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே )அனுஸந்தித்தபடி எழுந்தருளி யிருக்க , துவய மந்திரத்தின் பிற்கூற்றை (ஸ்ரீமதே நாராயணாய நம:) நினைவு படுத்தும் வகையில் திருமுடியின் வலப்பக்கம் பெரிய பிராட்டி உடனமர்ந்து இருவருமான சேர்த்தியில் கைங்கர்ய ரஸம் காணப் பணித்திருக்கும் அந்த திவ்ய தரிசநம் சேவிக்கப் பெற்றார் மாக வைகுந்தத்தே ‘குடந்தை எங்கோவலன் குடியடியோர்’ (திரு. வாய்.-10-9-7) இவர் என்று வைகுந்தத்தமரரும் முநி வரும் வாழ்த்தி வர வேற்று துதி போடுவது ஸ்ரீ ஆண்டாள் நெஞ்சில் நிழலாட பரமபதத்தே எழுந்தருளி இருக்கும் பெரிய பிராட்டியாரை நங்காய் என்று விளித்து அழைக்கிறாள்.
அன்றிக்கே , இங்குள்ளோர் எண்ணிய வுடன் பரம பதம் செல்ல முடியா விட்டாலும் அங்குள்ளோர் அவன் திருவுள்ளக் கருத்தினடியாக இங்கு வந்து பிறக்கலாமே .-வைகுந்தத் தமரரும் முநிவருமே கண்ணனின் பால லீலைகளை நேரில் அனுபவிக்க ஆயர்களாகப் பிறந்ததாகச் சொல்வதுண்டே –பெரிய பிராட்டியாரும் அவ் வண்ணம் இங்கோர் ஆயர் சிறுமியராகத் தோன்றி யிருக்க அவளைத் துயிலெழுப்புகிறாள் என்றும் கருதலாம்.-இந் நிலவுலகில் எம்பெருமானின் அர்ச்சாவதாரக் கருத்தைச் சிறப்பிக்க தானும் வேண்டுருக் கொண்டு அவதரிக்கும் திருமகள், புரிந்தனர் – அவனுக்கு ஆயர் சிறுமியர் மேற் கொள்ள விருக்கும் நோன்பில் தானும் உடனிருந்து அவர்கள் காரியத்தைத் தலைக் கட்டிக் கொடுக்கும் பொருட்டு, தன் ஸ்வரூப ரூப குண விபூதிகளில் சற்றும் குறையாமல் பிறந்திருந்தாள் போலும். அவளை இன்னார் என்று கண்டு கொண்ட ஸ்ரீ ஆண்டாள் அவளைத் துயிலெழுப்புகிறாள்–
‘த்ரிபாத் விபூதி’யான பரம பதத்தில் கால்பங்கே பூவுலகம். ஆதலின் இவ் வுலகம் பரம பதத்துக்குப் புழக் கடைத் தோட்டம் போலுள்ளது.’புரந்தரன் செய்த நாங்கை ‘ (பெரிய திரு. 3-6-8) என்கிற படியே சுவர்க்த்தில் உண்டான எல்லா நலன்களும் பூமிக்கும் உண்டாக வேண்டும் பொருட்டு காண்டற் கினிய பூக்களை உடைய சோலைகளால் சூழப்பட்டதாய் இந்திரனாலே அமைக்கப்பட்ட திரு நாங்கூரிலே திருக் காவளம் பாடியிலே ஸ்ரீருக்மிணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீகோபாலன் அடியார்களுக்குக் கற்ப மரமாக எல்லாருக்கும் ஒரு சேர உதவுதற் பொருட்டு நிலையாக எழுந்தருளி யுள்ளது போல் அன்று திருவாய்ப்பாடி அருகே திருப் பரம பதத்துக்கு ஓப்பாக ஒரு திவ்ய தேசம் விளங்கி யிருக்க அந்த திவ்ய தேசப் பிராட்டியை எழுப்பினார்கள் போலும்.
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்’-எம் பெரிய தகப்பனார் நம் மாழ்வார் எம் பெருமான் போல் எங்களுக்கு வேட்க்கை எழுப்பிய பின்னர் அவனை நாடிச் செல்லும் எங்கள் போல் ஏதேனும் குற்றம் கண்டு வெறுத்து எங்கள் கைங்கர்யம் கொள்ளாமல் விடக் கூடும். (கறவைகள் பாசுரத்தில் தெரிவித்த
வண்ணம்) அவனிடம் குற்றம் ஆவது என்?-இந்த உலகில் பிறந்திருக்கச் செய்தே குற்றம் செய்யாதவர் எவர்? எனது பரிகரமான இவர் திறத்து உனது ஸ்வாதந்திரியத்தைக் கை விட்டு காரணம் இன்ன தென்று சொல்ல மாட்டாத உன் பேரருள் புரிந்து இவர்கள் குற்றேவல் கொள்ள வேண்டும் என்று அவன்
வெருவாமைக்கு அவனோடே மறுதலைத்துப் பேசி எங்கள் பால் அவனுக்கு மாலேற்ற வல்லை நீயே அன்றோ? ஆதலின் நீ எழுந்திராய் என்கிறார்கள்.
பூவின் மிசை நங்கைக்கும் இவளுக்கும் வேற்றுமை காண்பதரிதால் ‘நங்காய்’ என்று அழைக்கிறாள்.-‘நங்காய்’-பரிபூர்ணனான பர வாசு தேவ நம்பிக்கு ஏற்ற பூர்த்தி ‘உனக்கேற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா ‘ என்கிறபடியே இவள் திறத்து அவனது ஸ்வரூப ரூப விபவங்கள் மூன்றும் நிறைந்திருத்தலால்-‘நங்காய்’ என்று அழைக்கிறாள். குண பூர்த்தி உடைய ஆண் -நம்பி, பெண் – நங்கை )
‘நாணாதாய்’ ‘நாவுடையாய் ‘ என்று மற்றுமிரு ஒற்றுமைகள் காட்டுகிறாள்.
‘நாணாதாய் ‘ பரமபதத்தே பர்யங்க வித்யையில் இருவருமான சேர்த்தியிலே உங்கள் அபிமத பிள்ளைகள் உங்கள் படுக்கையில் ஏறித் துவைக்க நாணாதாய் என்று சொல்கிறார்கள்.’நாவுடையாய் ‘ பாங்காக உன் திருவடியைப் பற்றி நிற்கும் எங்கள் எழில் சேனை முதல்வர்க்கு ஹிதமாக துவய மந்த்ரத்தை உபதேசித்தவளே . அன்றிக்கே உமது தொட்டில் பிள்ளையாகவே வளர்ந்த ஸ்ரீபராசர பட்டர் நம் பெருமாள் ஸ்ரீரங்க ரஜர் என்று பர்த்தாவின் பெயர் சொல்வதை நாவுக்கு அகாரியமாகக் கருதி’அழகிய மணவாளப் பெருமாள்’ என்கிற அசாதாரணமான திரு நாமம் செப்பப் பழக விட்டவளே என்கிறார்களாகவுமாம்.–
பரமபதத்தை நித்யர்களும் சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையராக இருக்கச் செய்தே , பங்கயப் பூவிற் பிறந்த உன்னையே நாளும் பார்த்தனுபவிக்கும் எம்பெருமானின் திருக் கண்கள் பங்கயக் கண்ணாக சிவப்பேறி யிருப்பது போல் நித்யர் கட்கு இல்லை . ஆதலின் அந்த பங்கயக் கண்ணானைப் பாட
எழுந்தருள பிரார்த்திக்கிறார்கள்.
—
இதுவரை ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்துள்ள திருப்பாவையில் ஆறாம் பாட்டு தொடக்கமாக பதினைந்தாம் பாட்டு முடிவாக ஸ்ரீ ஆண்டாள் தான் அருளிச் செய்த நாச்சியார் திரு மொழியில்
மங்களா சாஸநம் செய்தருளிய பதினோரு திவ்ய தேசங்களுள், ஸ்ரீவில்லிபுத்தூர் நீங்கலாக மற்ற பத்து திவ்ய தேச பிராட்டிமாரைத் துயிலெழுப்புகிறாள் என்ற நோக்கில் கீழ் ஓன்பது பாசுரங்களில் எந்தெந்த திவ்ய தேச பிராட்டியைத் துயிலெழுப்புவதாகக் கருத வாய்ப்புண்டு என்று பார்த்தோம்.-இனி இறுதியாக யுள்ள பதினைந்தாம் பாட்டில் திரு மாலிருஞ்சோலை மலை திவ்ய தேசத்தில் பஞ்ச ஆயுத
ஸஹிதனாய் தென்னானையாய்த் திகழும் சுந்தர ராஜன் என்றும்,கள்ளழகர் என்றும் பரம ஸ்வாமி என்றும் அழைக் ப்படுகின்ற எம்பெருமானின் பட்ட மஹிஷியான கல்யாண சுந்தர வல்லியைத்
துயிலெழுப்புகிறாள் என்பதைக் காண்போம்.
எழுப்பும் பெண் பிள்ளையோ ஸ்ரீ ஆண்டாள் மதிப்புடைய சோலைக் கிளி எழுப்பப்படும் பெண்பிள்ளையோ பிராட்டியோ பெருமதிப்புடைய மாலிருஞ் சோலை மலையில் துயிலும் இளங்கிளி
ஸ்ரீ வானமா மலை ஜீயர் பத்துப் பாடல்களினால் வாக்ய குரு பரம்பரை க்ரமத்தில் அமைந்துள்ள பகவத் கைங்கர்ய பரர்களைத் துயிலெழுப்புவதாக அனுஸந்தித்த அளவில், இப் பாட்டால் ‘ஸ்ரீமதே சடகோபாய நம:’ என்னும் அர்த்தம் தொனிப்பதாக அருளிச் செய்வர்.ஆதலின் தனிச்சிறையில் விளப்புற்ற கிளி மொழியாளான (திருவாய் 4-8-5) சுந்தர காண்டத்துச் சுடர் கொடியும், சுடர் முடியண்ணல் தாள் பணியும் ‘அணி மழலைக் கிளி மொழியாளான ‘ (திருவாய் 4-8-5) நம்மாழ்வாரும் சேர்ந்தே இப்பாசுரம் தன்னில் துயிலுணர்த்தப்படுகிறார்கள் என்று கருத வாய்ப்பாகிறது.-‘ காவியங் கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை ஒப்பாளாதலின் சுந்தர வல்லி நாச்சியாரையும் நம்மாழ்வாரையும் ஒரு சேர வைத்து இப்பாட்டில் உள்ள சொற்களுக்குப் பொருள் எவ்வாறு அவர்களைக் குறிப்பிடுகின்ற என்பதாய் அனுபவிக்கலாம்.
திருமாலிருஞ்சோலை மலை விஷயமாக தாமருளிச் செய்த திருவாய் மொழியினை பிராட்டி சந்நிதியில் ஆழ்வார் அதி காலை வேளையில் இந்தளம் என்கிற பண்ணில் இசைத்துப் பாடி அனுபவித்துக் கொண்டிருக்கிறார்-திருமாலிருஞ்சோலை விஷயமாக ஆழ்வார் அருளிச் செய்துள்ள நான்கு பதிகங்களிலே ‘முடிச்சோதியாய்’ (3-1)என்கிற பதிகமும் மற்றும் ‘திருமாலிருஞ்சோலைமலை ‘ பதிகத்தில் (10-8-1, 6) ஆகிய இரண்டு பாசுரங்களும் காலை 6 மணி முதல் 9 மணி வரையான முதல் ஜாமத்தில் பாட வேண்டிய இந்தளம் என்கிற பண்ணில் அமைந்துள்ளது. (மற்ற பாசுரங்களான கிளரொளி (2-10) நாட்டம் என்கிற பண்ணிலும், முந்நீர் (3-2) சீகாமரம் என்கிற பண்ணிலும் , செஞ்சொல் (10-7) தத்கேசி என்கிற பண்ணிலும் அமைந்துள்ளனவாகத் திருச்சித்திரகூடம் முனைவர் ஸ்ரீ
உ வே அ. வெ . ரங்காச்சாரியார் ஸ்வாமி அவர் தொகுத்துள்ள ‘ஸ்ரீமந் நாதமுநி வைபவப் பிரகாசிகை ” எனும் நூலில் திருவாய் மொழியில் பண்கள்’ என்ற தலைப்பில் உள்ள அத்யாயம்-19ல் காட்டியுள்ளார்.
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்துள்ள நாச்சியார் திருவாய் மொழியில் திருமாலிருஞ்சோலை மலை விஷயமாக பாடிய ஒன்பதாம் திருவாய் மொழியில் 8 ஆம் பாட்டில் ‘ காலை யெழுந்திருந்து கரிய
குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி மருள் ‘பாடுவதைக் குறிப்பிட்டுள்ளாள். ஆங்கே ‘மருள்- இந்தளம் என்கிற பண்ணைப் பாடுகிறது’ என்று உரை வரைகிறார் பெரிய வாச்சான் பிள்ளை.
இவ்வாறு பிராட்டியும் ஆழ்வாரும் இந்தளம் பண்ணைப் பாடி அனுபவித்துக் கொண்டிருக்க அதின் இனிமையிலே ஆழ்ந்து செவி மடுத்த ஆண்டாள் அவர்களைக் குறித்து ‘எல்லே இளங் கிளியே ‘ என்றழைத்தாள் போலும்.-அவ்வாறு ஆண்டாள் அழைப்பது தங்கள் அனுபவத்திற்குத் தடையாய் இருப்பதோல் ‘சில் என்று அழையேன்மின்‘ என்று மறுமொழி வருகிறது.-குன்றம் என்றாலே ‘சில்லு சில் என்று ஒலி அறா ‘ (திருவாய் மொழி 1-7-9) என்கிற படியே மலைத்தேனைப் பருகத் துடிக்கும் சில் வீடு
என்ற வண்டினம் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் போலும். அந்த வண்டினம் போல் நங்கைமீர் நும்மின்குரல் திருமாலிருஞ்சோலைமலை விஷயமான அனுபவத்திற்கு இடையூறாக இருப்பதால் ‘அழையேன்மின் போதர்கின்றேன்’ என்கிறாள்–
ஆழ்வாரும் ‘எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே ‘ என்றும் ‘வண்டுகளோ வம்மின்’ (திருவிருத்தம் 54,55) என்று பேசியிருக்கிறவாறு இவ்விடத்தும் வீட்டின் வாசலில் இருப்பவர்களின் பேச்சை வண்டுகளின் ரீங்காரமாகக் கொண்டாடிப் பேசுகிறார் .
“உனக்கென்ன வேறுடையை ” நாங்கள் முன்பு ஸ்ரீரங்க நாயகியை பொற்கொடி என்றது உன்னிடத்தில் அன்றோ பலிக்கக் காண்கிறோம். ‘ஆரூட ஸ்ரீ:’ என்கிற படியே அவன் வல மார்பினில் ஏறி வீற்றிருந்து
சுந்தரவல்லி யான நீ பொற் கொடி போல் அவன் திண் தோளைக் கொழு கொம்பாகப் பற்றி விளையாடும் உன்னாலன்றோ அவனுக்கு ‘ஏறு திருவுடையான்’ என்றும் ‘சுந்தரத் தோளுடையான்’என்றும் திரு நாமம் வாய்க்கப் பெற்றுள்ளது. ஆதலின் அவனுக்கு-ஜகத் காரணன் என்கிற விசேஷணத்துடன் ஸ்ரீ வல்லபன் என்கிற விசேஷணத்தாலு மன்றோ நாங்கள் அவனைப் பற்றுவது.
ஆழ்வார் எங்கும் நாச்சியார் போன்று அமர்ந்து சேவை சாதிக்கிறார். ‘ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போல் அவன் பேரும் தார்களுமே பிதற்ற’ (திருவாய் 6-7-2) வைத்தவரைப் பின் பற்றி ஸ்ரீ ஆண்டாளும் இந்த திவ்ய தேசத்தில் அமர்ந்து சேவை சாதிக்கிறார்.-கீழே எட்டாம் பாட்டில் கூறியது போல் மிக்குள்ள பிள்ளைகளும் போந்தாரோ என்று பிராட்டி வினவ உங்கள் திருவடி நிலையான ஆழ்வாரை (ஸ்ரீ சடகோபரை ) எழுந்தருளப் பண்ணி எங்கள் சிரந்தொட்டு எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டுகிறாள். எங்கள் சிரம் மீது அவர் கரம் தொட்டு ஆசி கூற மற்றை நம் காமங்கள் மாற்றும் மாயனைத் தூயோமாய் வந்து தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் எங்கள் எண்ணம் ஈடேறப் பெற்றுய்வோம் என்கிறார்களாகவுமாம்-
——————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply