“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”கலி 98 வதான நள வருடம் ஆடி மாதம் சுக்ல பக்ஷம் சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாளில்-ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்” -அரங்கனையும் ஆண்டாள்! அரங்கன் அடியவர்களையும் ஆண்டாள்!]
தநுர்த்தராய வித்மஹே ஸர்வ ஸித்தயை ச தீமஹி தந்நோ தரா ப்ரசோதயாத் “–த்ரிகும்ஸத் தாம வ்ராஜதி’ என்கிறது பூஸுக்தம். 30 இடங்களில் பூமாதா வாஸம் பண்ணுவதாக சொல்லுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருமாளிகையிலுள்ள “கனக சமர பூபாலனம்” எனும் மஞ்சத்தில் திருப்பாவை முப்பது பாசுரங்களை நினைவூட்டும்படி 30 தங்க மாவிலைகள் உள்ளன.
திருவரங்க அழகியமணவாளனின் கைத்தலம் பற்றுவதையே குறிக்கோளாக கொண்டு வராகஷேத்திரத்தில் தோன்றியது ஸ்ரீகோதை ஆண்டாளின் திருப்பாவையான பகவதி கீதை.-துயிலெழும்போது ஹரி ஹரி என்று எழுந்திருக்கவேண்டும். (‘உத்திஷ்ட சிந்தய ஹரிம்’)-முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து ஹரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ’-குளிக்கும்போது கேசவனின் நாமம் சொல்லி குளிக்க வேண்டும். (‘வ்ரஜன் சிந்தய கேசவம்’)—கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?”-உண்ணும்போது கோவிந்தனை மனதில் நினைத்து உண்ணவேண்டும். (‘புஞ்சன் சிந்தய கோவிந்தம்’)தூங்க போகும் முன் மாதவனை நினைக்க வேண்டும். (‘ஸ்வபன் சிந்தய மாதவம்’) .-ஏமப் பெரும் துயில் மந்திரப் பட்டாளோ, மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ.
ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணு: ஸ்மரணம் பாத சேவனம் அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் சக்கியம் ஆத்ம நிவேதனம்.”
[ஸ்ரவணம் – கேட்பது; கீர்த்தனம் – பாடுவது; ஸ்மரணம் – நினைப்பது, அசை போடுவது; பாத சேவனம் – திருவடிகளில் அடைக்கலம்; அர்ச்சனம் – துதிப்பது; வந்தனம் – வணங்குவது; தாஸ்யம் – சொல்வதை சிரமேற் கொண்டு செய்வது; சாக்கியம் – நட்புடன் இருப்பது; ஆத்ம நிவேதனம் – பரிபூரண சரணாகதி.]
• மகாபார யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.
• திருப்பாற்கடல் கடையப்பட்டதும், முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் மார்கழி மாதத்தில்தான்.
• இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான் என்பது வரலாறு.
ஸ்ரீபெரும்புதூரில் ஆசூரி கேசவ சோமையாஜி பட்டர், காந்திமதி அம்மையார் இவர்களின் திருமகனாக “இளையாழ்வார்’ என்றழைக்கப்பட்டார்-ராமானுஜர். மதுராந்தகத்தில் பஞ்ச சமஸ்காரம் செய்யும்போது “ராமானுஜன்’ என்ற பெயர் குருவான பெரிய நம்பியால் சூட்டி அருளப்பட்டது. “எதிராஜர்‘ என்ற திருநாமம் கச்சிப் பேரருளாளனாலும் “உடையவர்’ என்ற பெயர் திருவரங்கத்து நம்பெருமாளாலும் “தேசிகேந்திரன்‘ என்ற திருப்பெயர் திருமலை வேங்கடேசப் பெருமாளாலும். “ஸ்ரீ பாஷ்யகாரர்‘ என்று காஷ்மீரத்து சாரதா பீட சரஸ்வதியாலும், பெரிய நம்பிகளால் “திருப்பாவை ஜீயர்’ எனவும், திருக்கோஷ்டியூர் நம்பிகளால் “எம்பெருமானார்‘ எனவும் அழைக்கப்பட்டார். ஆண்டாள் நம் “கோவிலண்ணன்‘ எனவும் திருமாலையாண்டான் “சடகோபன் பொன்னடி’ எனவும் திருவரங்கப்பெருமாளரையர் “லட்சுமண முனி‘ எனவும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அழைத்துள்ளனர்.-இந்த பன்னிரு திருநாமங்களில் இராமானுஜருக்கு பிடித்த திருநாமம்
| “திருப்பாவை ஜீயர்” | என்பதே ஆகும்
தேவஸ்ய மஹிஷீம் திவ்யாம் ஆதௌ கோதா முபாஸ்மஹே |
யந்மௌலி மாலிகாம் ப்ரீத்யா ஸ்வீகரோதி ஸ்வயம்ப்ரபு: ||(எவள் சூடிக்களைந்த மாலையை ஸர்வேஸ்வரனான ப்ரபு உகப்புடன் ஏற்றுக்கொண்டானோ அவ்விஷ்ணுவின் திவ்யமஹிஷியான அத்தகைய கோதையை முதலிலே உபாசிக்கிறோம்.)
திருப்பாவையின் மூன்று பத்தும் மூன்று கபாலங்கள் என்கிறபடி, ஒவ்வொரு கபாலத்தின் தொடக்கத்திலும் திரிவிக்கிரமனை துதிக்கிறார் ஆண்டாள் என்பதைக் கவனிக்க வேண்டும்.”ஒங்கி உலகளந்த உத்தமன்” என்று முதல் பத்திலே திரிவிக்கிரமனை நினைக்கிறாள். “அம்பர மூடறுத்து ஓங்கி உலகளந்த..” என்று அடுத்த பதினொன்று முதல் இருபது வரையிலான பாசுரத்துக்குள்ளே இரண்டாவது முறையாக திரிவிக்ரம அவதாரத்தைப் பாடுகிறாள். “அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி” என்று மறுபடியும். இருபத்தொன்று முதல் முப்பது வரையிலான பாசுரங்களுக்குள்ளே மறுபடியும் திரிவிக்கிரமன் திருவடிகளைப் போற்றுகிறாள். ஆகையினாலே, திருப்பாவை ஒரு வேள்வி போன்றது. ஆண்டாள் நமக்கு கீதையின் வழியைக் காட்டி, “நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா!” என்று ஆச்ரயித்து, அவனையே திருக்கல்யாணமும் செய்துக் கொண்டாள்.-ஆண்டாள் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தாள். அப்படிச் சேர்ந்ததில் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டல் இருக்கிறது. வராஹ மூர்த்தி சொன்னதை அனுசரித்து அவள் அவனை அடைந்தது போல நாமும் அவனை அடையலாம். அவன் நமக்குப் பதி. நாம் அவனுக்கு பத்தினி என்கிற பாவத்துடன் உத்தமமான சரணாகதி மார்க்கத்தைக் கடைப்பிடித்தோமானால் நாமும் அவனை அடையலாம்.!
நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ் ஸித்தம் அத்யா பயந்தீ
ஸ்வோச் சிஸ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய :–நீளாதேவியின் அம்சமான நப்பின்னைப் பிராட்டியின் உயர்ந்து பருத்த முலைத்தடங்களாகிற மலையடிவாரத்திலே உறங்குகின்றவனும், தான் சூடிக் கொடுத்த மாலையாலே கட்டுப்பட்டவனும் ஆன கிருஷ்ணனுக்கு அவனுடைய பாரதந்த்ர்யத்தை (அதாவது ஆத்மாக்கள் அவனிட்ட வழக்காயிருந்து அவனுக்கே பயன்படுவதை) உணர்த்தி எம்மை அடிமைகொள்ள வேணும் என்று நிர்பந்தித்த ஆண்டாளை நமஸ்கரிக்கிறேன் என்று இந்தத் தனியனை சமர்ப்பிக்கிறார் ஸ்ரீ பராசர பட்டர்
பதவுரை:
நீளா– நப்பின்னைப் பிராட்டியுடைய;
துங்க-உயரமான;
ஸ்தநகிரி-முலையாகிய மலையின்;
தடீ- தாழ்வாரத்தில்
ஸுப்தம்-தூங்குகின்றவனான;
க்ருஷ்ணம்-கண்ணனை;
உத்ப்போத்ய-நன்றாக எழுப்பி;
சத-நூற்றுக்கணக்கான;
ச்ருதிசிரஸ்-வேதாந்தங்களில்;
ஸித்தம்-முடிந்தபொருளாகச் சொல்லியிருக்கிற;
ஸ்வம்-தன்னுடைய;
பாரார்த்யம்-பரத்வத்தை;
அத்யாபயந்தி-சொல்லிக்காட்டுகிறவளும்;
ஸ்வ-தன்னுடைய;
உச்சிஷ்டாயாம்-சூடிக்களைந்ததான;
ஸ்ரஜி-மாலையில்;
நிகிளிதம்-நன்றாகக்கட்டுப்பட்டவனாயிருக்கின்ற அந்தக்கண்ணனை
யா-எவள்;
பலாத்க்ருத்ய-பலவந்தப்படுத்தி;
புங்க்தே-அவனுடைய குணங்கள், செயல்களை அனுபவிக்கிறாளோ (அப்படிப்பட்ட)
கோதா-கோதை யென்று ப்ரஸித்தமான;
தஸ்யை-அவள்பொருட்டு;
இதம் இதம் நம- இத்தகைய படிகளில் நமஸ்கரிக்கிறேன்;
பூய ஏயவாஸ்து பூய-இவ்விதமே மறுபடியும் நமஸ்கரிக்கின்றேன்.
“ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷீரார்ணவநிகேதந: | நாகபர்யங்கமமுத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் || ‘(க்ஷீராப்தி நாதனான ஸ்ரீமந்நாராயணனன்றோ ஆதிசேஷனான படுக்கையை விட்டு மதுராபுரிக்கு கிருஷ்ணனாக வந்திருக்கிறான்.) என்று ஹரிவம்சத்திலும் சொல்லப்பட்டதன்றோ?
கம்ப நாட்டாழ்வார் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார். [ நம் அன்னை கோதை ஆண்டாளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவத்தின் போது, உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது.] ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை. ‘நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ’ என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதுவரை விழா ஆரம்பமாகவில்லை. காரணத்தை கம்பர் கேட்டபோது, ‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்’’ என்று பதில் அளித்தனர் விழாக் குழுவினர்.-உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, ‘‘இதுவா பாருங்கள்?’’ என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். ‘ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?’ எனக் கேட்டனர். கம்பர், ‘‘திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!’’ என்றார். நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர். அந்த. ஆபரணத்தை “கம்பர் கொச்சு” என்றே வழங்கினர்.-ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் ராஜகோபுரம், தமிழக அரசின் சின்னமாக உள்ளது. 11 நிலை, 11 கலசங்களுடன் இருக்கும் இதன் உயரம், 196 அடி ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங் கோயில் இராஜகோபுரத்தைக் கண்டு வியந்த கம்பநாட்டாழ்வார் வானளாவிய இத்திருக்கோபுரத்திற்கு இணையாக “மேருமலைச் சிகரமேயன்றி வேறு உவமானம்” கூற முடியாது என்று பொருள்படியாக ஒரு பாடலைப் பாடினார்.
“இருக்கோதும் அந்தணர் சூழ் புதுவாபுரி யெங்கள் பிரான்
மருக்கோதை வாழும் வடபெருங்கோயில் மணிவண்ணனார்
திருக்கோபுரத்துக் கிணை அம்பொன் மேருச் சிகரம் என்றே
பருக் கோதலா மன்றி வேறுவ மானப் பணிப்பில்லையே”
பேய்முலை நஞ்சுண்டு கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சி” என்று அவதாரத்தை அனுபவித்து “வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை” என்று அவதாரங்களுக்கு அடியான க்ஷிராப்தி நாதனைப் பற்றி பேசுகிறார்கள். “வித்தை விரைக்கைக்கு நீரிலே சேர்த்தாப்போலே இருக்கை” என்கிறது நாலாயிரப்படி வ்யாக்யானம். வித்தினை என்பதை ஜகத் காரணபூதன் என்றும் பொருள் கொள்ளலாம்.
மூன்று வகையான நோன்புக் கிரிசைகள் பற்றி இப்பாசுரம் பேசுகிறது.
அ) வாக்கு – “பரமனடி பாடி” என்பது வாசிகம்
ஆ) செயல் – நீராடுதல், ஈகை செய்தல் ஆகியவை காயிகம்
இ) மனம் – “உய்யுமாறெண்ணி” அதாவது பரமனை சதாசர்வ காலமும் சிந்தையில் வைத்தல் என்பது மானசீகக் காரியம்
• நோன்பின் போது விலக்க வேண்டிய ஆறு: நெய் உண்ணல், பால் உண்ணல், மையிடுதல், மலர் சூடல், செய்யாதனச் செய்தல், கோள் சொல்லல் ஆகியவை.
• கடைபிடிக்க வேண்டிய ஆறு: பரமனடி பாடுதல், அதிகாலை நீராடல், ஐயம் இடல், பிச்சை இடல், அவற்றை இயன்றவரை இடல், உய்வதற்கு வேண்டி உகந்து இடல் ஆகியவை
• மையிட்டெழுதல் என்பது ஞான யோகத்தையும், மலரிட்டு முடித்தல் என்பது பக்தி யோகத்தையும், ஐயம் என்பது பகவத் வைபவத்தையும், பிச்சை என்பது பாகவத வைபவத்தையும் உட்பொருளாகக் கொண்டுள்ளன.
• ‘உய்யுமாறெண்ணி’ என்ற பதத்தை ‘உய்யும்’, ‘ஆறு எண்ணி’ என்று பிரிக்கலாம். ‘உய்யும்’ என்பது மோட்ச சித்தி பெறுவதைக் குறிக்கிறது. அதை அடைய, காஞ்சீ வரதராஜப் பெருமாள், திருக்கச்சி நம்பிகள் வாயிலாக, ராமானுஜருக்கு உபதேசித்த ஆறு (விசிஷ்டாத்வைத) வைணவக் கோட்பாடுகளை சிந்தையில் நிறுத்துவதை, “ஆறு எண்ணி” என்பது உட்பொருளாகக் குறிக்கிறது.
1.[அஹமேவ பரம் தத்வம்] – நானே எல்லாவற்றுக்கும் மேலான மெய்ப்பொருள்
2.[தர்சனம் பேத ஏவ] – ஜீவாத்மாக்களும்/அசேதனங்களும் என்னிலிருந்து வேறுபட்டவை (அவை என்னுடைய சரீரமாக விளங்குபவை)
3.[உபாயம் ப்ரபத்தி] – “என் ஒருவனையே தஞ்சமாகப் பற்றுவாய்” என்னிடத்தில் சரணம் அடைவது ஒன்றே என்னை அடைவிக்கும் வழி.
4.[அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்] – தங்களின் மரணத்தருவாயில் இருக்கும் சரணாகதர்களுக்கு, என்னைப்பற்றிய சிந்தனை கட்டாயமில்லை. வராஹ சரம ஸ்லோகத்தில் நானே அறிவித்தது போல, உன்னுடைய அந்திம காலத்தில் நானே உன்னைப்பற்றிய சிந்தனையை ஏற்கிறேன்.
5.[தேஹாவஸானே முக்தி] – சரணாகதர்கள் தற்போதுள்ள தங்களுடைய இந்த சரீரத்தின் முடிவிலேயே முடிவில்லாத பரமாத்மாவிற்கு கைங்கர்யம் செய்வதற்கான பரமபதத்தை அடைவர்
6.[பூர்ணாசார்ய பதாச்ரிதா] – மஹாபூர்ணரை (பெரிய நம்பிகளை) ஆசார்யனாக ஏற்றுக்கொள்வாயாக என்ற ஆறு கட்டளைகளாகும். இதையே ஆண்டாள் “உய்யும் ஆறு எண்ணி” என்று நமக்கு வழி காட்டுகிறாள் என்பார்கள்.
“யத்ராஷ்டாக்ஷர ஸம்ஸித்தோ மஹாபாகோ மஹீயதே |
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பி க்ஷதஸ்கரா:||”
[அஷ்டாக்ஷர ஸித்தியடைந்த மஹான் எவ்விடத்திலிருக்கிறானோ அங்கு வ்யாதி, பஞ்சம், திருடர்கள் முதலியவர்கள் ஸஞ்சரிப்பதில்லை.]
“பாபாநாம் வாஸுபாநாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம |
கார்யம் கருணமார்யேண ந சச்சிந்நாபராத் யதி||”
[வானர! பாபிகளாயிருந்தாலும், புண்யவான்களாயிருந்தாலும், கொல்லத்தக்கவர்களாயிருந்தாலும் அவர்கள் விஷயத்தில் குணவானாயிருப்பன் கிருபை செய்யவேண்டும். குற்றம் செய்யாதவர்கள் எவனுமில்லையே.] என்றவளுடைய [*சீதா லட்சுமி*] கடாக்ஷத்தாலே வந்ததாகையாலே நீங்காத செல்வமாயிருக்கிறது.
ஸர்வேsஸ்மை தேவா பலிமாவஹந்தி” [இந்த ப்ரஹ்மஞானிக்கு எல்லா தேவர்களும் காணிக்கை செலுத்துகிறது.] என்றும்
“யஸ்த்வைவம் ப்ராஹ்மணோ வித்யாத் தஸ்ய தேவா அஸந் வசே” [ப்ரஹ்ம ஞானியான ஒருவன் இம்மாதிரி உன்னையறிந்தானாகில் அவனுக்கு எல்லா தேவர்களும் வசத்திலிருக்கிறார்கள்.] என்றும் வேதம் கோஷிக்கிறதல்லவா?
ஒருமுறை ஸ்வாமி கூரத்தாழ்வானை ஒருவர் “மற்ற தெய்வங்களைக் கண்டால் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்” என்று கேட்க “சாஸ்திர வ்ருத்தமாக கேளாதே காண்! உங்களைக் கண்டால் மற்ற தெய்வங்கள் எப்படி நடந்து கொள்ளும், என்றல்லவோ நீ கேட்கவேண்டுவது என்று பதிலுரைத்தாராம்.
“ருசம் ப்ராம்ஹம் ஜநயந்த: தேவா அக்ரே ததப்ருவந்” [பரப்ரம்மத்தின் ப்ரீதியை உண்டு பண்ணுவதற்காக நித்யஸூரிகள் முதலில் நம: என்னும் அச்சொல்லைச் சொன்னார்கள்.] என்று நித்யஸுரிகளும் அவனுடைய உகப்புக்காகவன்றோ கைங்கர்யம் செய்வது .
திருப்பாவை நான்காம் பாசுரத்தில் 11 முறை ‘ழ’கரத்தைப் பயன்படுத்தியிருக்கிறாள். இப்பாசுரத்தில், தமிழுக்கே சொந்தமான “ழ” என்ற எழுத்து “ஆழி (3 தடவை) மழை (2 தடவை), ஊழி, பாழியம், தாழாதே, வாழ, மார்கழி, மகிழ்ந்து” என்று ‘ழ’கரம் பதினோரு முறை வருவதைக் காணலாம்.
ஆண்டாளின் தந்தையார் பெரியாழ்வார் தனது ஒரே பாசுரத்தில் 10 முறை தமிழ் மொழியின் சிறப்பு மிகுந்த எழுத்தான , ‘ழ’கரத்தைப் பயன்படுத்தியுள்ளார்.[பெரியாழ்வாரின் “குழல் இருந்து” என்று தொடங்கும் 285-வது பாசுரத்தில் “ழ”கரம் பத்து முறை வருகிறது.]
• “ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து” எனும்போது மெய் உவமையும், உரு உவமையும்,
“ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து” எனும்போது வினை உவமையும்,
“சரமழை போல்” எனும்போது பயன் உவமையும் உள்ளதால் உவமையணிக்கான தமிழ் இலக்கணம் இப்பாசுரத்தில் வெளிப்படுவதைக் காணலாம்.
(ஒன்றும் நீ கை கரவேல்)
அருமையாகப் பெற்ற அர்த்த விசேஷங்களை ஒன்றும் ஒளித்திடாமல் வர்ஷித்த யதிராச மேகம்.”இராமாநுசனென்னுஞ் சீர்முகிலே” – [இராமா.நூற்ற.82] என்கிறபடி “உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்” என்கிற ஸ்ரீபாஷ்யகார திவ்ய ஸூக்தி மிகப்பொருத்தமாக அநுஸந்திக்கத்தகும்.
ததோSகில ஜகத் பத்ம போதாயாSச்யுத பாநுநா |
தேவகீ பூர்வ ஸந்த்யாயாமாவிர்பூதம் மஹாத்மநா||” [ பிறகு, உலகங்களாகிற தாமரைகளை மலரச் செய்வதற்காக அச்யுதனாகிற பெரிய ஸூர்யன் தேவகியாகிய விடியற்காலைவேளையில் ஆவிர்பவித்தான்.] என்று அருளினாரன்றோ.
.1-உபாயம்: தூமலர் தூவித் தொழுதல், வாயினால் பாடுதல், மனத்தினால் சிந்தித்தல்
2.உபேயம்: மாயன், மன்னு வடமதுரை மைந்தன், தூயபெருநீர் யமுனைத் துறைவன், ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு, தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரன்
3.புருஷார்த்தம்: போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
“புண்யாம்போஜ விகாஸாய பாபத்வாந்த க்ஷயாய ச;
ஸ்ரீமான் ஆவிரபூத்பூமௌ ராமாநுஜ திவாகர:”
அரியென்ற) ஸர்வ பாபங்களையும் போக்கடிப்பவன் என்பதை உணர்த்தும் திருநாமத்தை அநுஸந்திக்கை.
“ஹரிர் ஹரதி பாபாநி துஷ்ட சித்தைரைபி ஸம்ருத: |
அநிச்சயாsபி ஸம்ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக:||”
[கெட்ட மனமுடையவர்களால் நினைக்கப்பட்டாலும் ஹரியானவன் அவர்களது பாபத்தைப் போக்கடிக்கிறான். விருப்பமில்லாமல் தொடப்பட்ட அக்னியும் கொளுத்துகிறதன்றோ?]
என்றல்லவோ சொல்லப்பட்டது.
இந்த ஆறாம் பாசுரத்தில் திருமாலின் ஐந்து நிலைகளும் பாடப்பட்டுள்ளன.
“வித்தினை” எனும்போது பரம்பொருளான (1.பரம்) வைகுண்டநாதனையும்,
“வெள்ளத்தரவில் துயிலமர்ந்த” எனும்போது (2.வ்யூஹம்) பாற்கடல் வியூஹ மூர்த்தியையும்,
“சகடம் கலக்கழியக் காலோச்சி” எனும்போது (3.விபவம்) விபவ அவதார கண்ணனையும்,
“புள்ளரையன் கோயில்” எனும்போது (4.அர்ச்சை) அர்ச்சாவதார ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமானையும், “உள்ளத்துக் கொண்டு” எனும்போது (5.அந்தர்யாமித்வம்) அந்தர்யாமியான பரமனையும்
நம் அன்னை கோதை நாச்சியார் போற்றிப் பாடியிருப்பதாக நம் வைணவப் பெரியோர்களௌ உள்ளுரையாக கூறுவர்
புள்ளரையன் கோயில் வெள்ளை விளிசங்கு )எம்பெருமானார்க்கு மிகச்சிறந்த பிரத்யபிஜ்ஞாபகம். பாலன்னவண்ணத்துன் பாஞ்சஜன்யமே என்றபடி பால் போன்ற நிறத்தது சங்கு; ஸ்வாமி எம்பெருமானாரும் “துக்தோதத்வத் தவள மதுரம் சுத்த ஸத்வைகரூபம் ரூபம் யஸ்ய ஸ்புட யதித ராம யம பணீந்த்ராவதாரம்” என்றபடி பால் போன்ற திருநிறத்தவர்-(புள்ளரையன் கோயில்) “பூமருவப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனலரங்கமே” என்று பெரியாழ்வார் புள்ளரையன் கோயிலாகக் கூறிய திருவரங்கத்தில் வாழ்ந்தது. சக்கரம் சங்கு என்ற திவ்யாயுதங்களில் சக்கரமானது கருதுமிடம் பொருது என்ற அருளிச் செயலின் படியே. காதீவிப்லோஷாதி நாநா கார்ய ஷடகஷங்களுக்காக, பாஹ்ய ஸஞ்சாரங்கள் செய்து கொண்டேயிருக்கும். சங்கு அப்படியன்றியே “உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் கண்படை கொள்ளல் கடல்வண்ணன் கைத்தலத்தே” என்னும்படியிருக்கும். ஸ்வாமி ராமாநுஜர் தாமும் “யாவச் சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுவ மாஸ்வ” (சரணாகதி கத்யம்) என்ற ஸ்ரீரங்கநாதன் கட்டளையைப் பெற்றுக் கோயிலே கதியாயிருந்தவர். ஆகவே “கோயில் சங்கு” என்றது ஸ்வாமி ராமாநுஜருக்கு மிகப்பொருத்தமாகும்.
உத்காயதீ நாமரவிந்த லோசநம்
வ்ரஜாங்க நாநாம் த்வமஸ்ப்ருசத் த்வநி: |
தத்நச்ச நிர்மந்த நசப்தமிச்ரிதோ
நிரஸ்யதே யேந திசாமமங்களம் ||[தாமரைக்கண்ணனை நினைத்துப் பாடுகிற கோபஸ்த்ரீகளின் ஒலியானது, தயிர் கடையும் ஓசையுடன் கூடிக்கொண்டும், திசைகளின் அமங்களங்களைப் போக்கிக் கொண்டும் ஸ்ரீவைகுண்டத்தையும் எட்டியது.]
காசு, பிறப்பு, தயிர் என்ற மூன்றும் முறையே அஷ்டாட்சரம், த்வயம் மற்றும் சரமசுலோகம் ஆகிய மூன்று மகா மந்திரங்களை உணர்த்துவதாகவும் ஒர் உள்ளர்த்தம் உண்டு.
“தமீச்வராணாம் பரமம் மஹேச்வரம் தம் தேவதாநாம் பரமஞ்ச தைவதம்|” [ஈச்வரர்களுக்கும் மேலான மஹேச்வரனும், தேவதைகளுக்கும் மேலான தேவதையை, ] என்று ச்வேதாச்வர உபநிஷத் உத்கோஷித்தது. ஆழ்வார்களும் “அயர்வரும் அமரர்கள் அதிபதியானவன்” என்றும் “மனிதர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவாவோ” என்றார்கள். இவைகளையெல்லாம் கொண்டு “தேவாதி தேவனை” என்கிறாள் ஆண்டாள்.
“அர்வாஞ்சோ யத்பத் சரஜி ஜத்த்வமாஸ்ரித்ய பூர்வே மூர்த்த்னா யச்யான் வ்யபமுகதா தேசிகா முக்திமாபு” என்ற பட்டர் ஸ்ரீஸூக்தி படிக்கும், “பாத கோடீரயோஸ் சம்பத்தேன சமித்யமான விபவாந்” என்ற நிகமாந்த மகாதேசிக குரு ஸ்ரீஸூக்திபடிக்கும், திருவடி ஸம்பந்தத்தாலே பின்னானார்களையும், திருமுடி ஸம்பந்தத்தாலே முன்னோர்களையும் வாழ்வித்தவர் ஸ்வாமி எம்பெருமானார்.
மேதினி யெலாம் புகழும் வேதாந்த தேசிகன் சொல்
மாதர் செயுங் கோதா மான்மியத்தை — ஆதரவாய்ப்
போற்றினோர் பட்டர்பிரான் போலப் புகழ்மருவி வீற்றிருப்பர் வைகுந்த மேல்“-என்ற ஒரு பாடலும் ஒன்றுண்டு.
“விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணாஸ் தத்வதோ யே தேஷாம் ராஜந் ஸர்வயக்ஞாஸ் ஸமாப்தா:“-[ அரசரே! ப்ரம்மஞானிகளான எவர்கள் கிருஷ்ணனை உண்மையாக அறிகிறார்களோ, அவர்களுக்கு எல்லா நோன்புகளும் முடிந்து விட்டன.]
நான்கு பாசுரங்கள் ஸ்ரீராமாவதாரப் பெருமையைப் பாடுகின்றன. அவற்றில் 10 ஆவது,முதலாவது ஆகும்.(மற்றவை,12ஆவது,13ஆவது,24 ஆவது பாசுரங்கள்.)
கோகுலத்து கோபியர் கண்ணனைக் காணும் பெரும்பேறு பெற்றவர்கள். அதனால், அவர்களுக்கு கண்ணபிரான் “கண்ணுக்கினியவன்” ஆவான் 🙂 ஆனால், ஸ்ரீராமபிரானை (ராம அவதாரம் முடிந்து விட்டபடியால்!) கோபியரால் நினைக்க மட்டுமே முடியும், அதனாலேயே அவர்களுக்கு சக்ரவர்த்தி திருமகன் “மனத்துக்கினியவன்” ஆகின்றான் என்று அபினவ தேசிகன் சுவாமிகள் கூறுவார்.
இதை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பிரத்யேகமாக தினமும் செய்கிறார்கள். எப்படிச் செய்கிறார்கள் தெரியுமா ?-அது ஒரு தனிக்கலை , அதற்கென்றே ஒரு குடும்பத்தினர் கோவிலுக்கு அருகில் வசிக்கிறார்கள். சுத்தமான வாழை நார் மற்றும் மரவள்ளிக்கிழங்கின் இலைகளைக் கொண்டு இந்தக் கிளியின் உடலும் முகமும் வடிவமைக்கிறார்கள் . ஏழிலை என்று சொல்லப் படுகின்ற மரவள்ளி இலை கிளியின் உடலுக்கும், மற்றும் நந்தியாவட்டை இலைகளை கிளியின் இறக்கைகளுக்கும் பயன் படுத்துகிறார்கள். கிளி உருவாக பயன் படுத்தப் படுகிற சிறிய மூங்கில் குச்சிகளை அந்த இலைகள் மறைத்து விடுகின்றன. கிளி அமர்ந்திருப்பது போல காண்பிப்பதற்கு , நந்தியாவட்டை பூக்களே கிளியின் கால்களாக அமைக்கப் படுகின்றன . இறக்கைகளுக்கு முதலில் பனைஒலையும் , அதன் மேல் இலைகளும் போர்த்தப் படுகின்றன .கிளியின் வால் பகுதிக்கு, வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுக்கள் உபயோகப் படுத்தப் படுகின்றன. கிளியின் கண்கள் பளிச்சிட காக்காய் பொன் என்கிற பொருளை உபயோகிக்கின்றனர். சிவப்பு நிற மாதுளம் பூ , கிளியின் மூக்கிற்கு பயன் படுத்தப் படுகிறது. இவ்வாறான ஒரு கிளியைத் தயாரிக்க சுமார் ஆறு மணி நேரம் ஆகிறது. நுணுக்கமான இந்த வேலையை ஆண்கள்தான் செய்கின்றனர்.
• அந்தப் பச்சைக் கிளியை தினசரி மாலை 6.30. மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையின் போது தாயார் ஆண்டாளின் இடது தோளில் சார்த்துவது வழக்கம். அந்தக் கிளி, இரவு அர்த்தசாமப் பூஜை வரை ஆண்டாளின் தோளில் வீற்றிருக்கும். அதற்குப் பிறகு ஆண்டாளுக்குச் சார்த்தப்பட்ட மாலை முதலானவற்றைக் களையும் நிகழ்வின் போது, கிளியும் அகற்றப்படும்.
இதுவரை பத்து இடைச்சிகளாக உருவகப்படுத்தப்பட்டவை, 10 இந்திரியங்கள், புலன்கள். (செய்புலன்-கர்மேந்திரியம் 5, உணர்புலன்-ஞானேந்திரியம் 5) ஆகும். இந்தப் பாசுரத்தில் குறிக்கப்படுவது இவை பத்தையும் பின்னிருந்து இயக்குவது மனம்.
“மனஸ் – மனம்” இறைவனை அடையத் தடையாயிருக்கும் கதவு. குரு தொடர்பினால் அந்த இருளை நீக்கித் தாளைத் திறந்திட்டால், நமது “இதய கமலத்தில் கோயில்” கொண்டிருக்கும் இறைவனைக் காணலாம்.
கோ உறையும் இல் ‘கோயில்’ ஆவது தாரக மந்திரமான திருமந்திரம்–மந்த்ர இரஹஸ்யம்’-.-கொடி தோன்றும் வாயில்’ தாயாய் இறை ஞான அமுதூட்டி சீவர்களைக் காத்து நிற்கும் போஷக மந்திரமாம் -விதி இரஹஸ்யம்’-த்வயத்தைக் குறிக்கிறது.-இறைவன் தன் வாய்மொழியாக அளித்த வாக்கு, சரணம் செய்தவர்களைக் காப்பேன் என்னும் உறுதிமொழி. ஆகவே ‘வாய் நேர்நதது’ சீவாத்மாக்களுக்குப் பலனைத் தருவதாக, மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதான, அனுபவித்து சுகமடையச் செய்வதாக விளங்கும் போக்ய மந்திரமாம் -அநுஸந்தான அநுஷ்டான இரஹஸ்யம்-சரமஸ்லோகத்தைக் குறிக்கின்றது.-இப்பாசுரத்தில் கோயில் காப்பான் – திரு மந்திரம் என்றும் கொடி தோன்றும் தோரண வாயில் காப்பான் – த்வயம் என்றும், நென்னலே வாய் நேர்ந்தான் – சரம ஸ்லோகம் என்றும் பூர்வர்கள் கருதினர்.
பெரியாழ்வாரின் சகோதரர் ஆதிகேசவரின் அபிமான புத்திரரான நாராயணதாசரின் வழிவந்தோர், “வேதப்பிரான் பட்டர்” என்ற திருநாமத்துடன் பெரியாழ்வாரின் வம்சத்துக் குரியவர்களாக இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
உற்சவகாலங்களில் ஸ்ரீஆண்டாளுக்கும் ஸ்ரீரெங்க மன்னாருக்கும் திருமஞ்சன நீராட்டு செய்யும் போது கட்டியம் கூறும் உரிமை இவர்களுக்குண்டு.
மார்கழி பகற்பத்து முதல் நாளன்று ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்க மன்னார் துணையுடன் சன்னதித் தெருவில் எழுந்தருளும்போது ஸ்ரீபெரியாழ்வாரின் வம்சத்தில் வந்த வேதப்பிரான் பட்டர்கள் அவர்களை எதிர்கொண்டழைக்கிறார்கள். தங்கள் வீட்டு வாசலில் அவர்களை நிறுத்தி பிறந்தவீட்டு உபசாரங்களையும் செய்கிறார்கள். வாசலிலும் திண்ணையிலும் காய்கறிகளையும், கனிவர்க்கங்களையும் நிரப்பி பாலும் பருப்பும் (இவ்விதம் காய்கறிப் பரப்பி வைத்து பெண்வீட்டுச் சீதனமாக வழங்குவதை “பச்சை பரத்தி என்றும் பொரிகடலையுடன் சர்க்கரைப்பால் கலந்து கொடுப்பதை” மணிப்பருப்பு” என்றும் வழங்குவர்) நிவேதனம் செய்து தம் குடும்பத்து பெண்ணான ஆண்டாளையும், மாப்பிள்ளை அரங்கனையும் அன்போடு உபசரிக்கிறார்கள்.
அம்பரத்தையும், தண்ணீரையும், சோற்றையும் அறம் செய்தவர் ஸ்வாமி ராமாநுஜர். “அம்பரம் வ்யோம வஸ்த்ரயோ” என்று நிகண்டு கூறியபடி அம்பரமாவது ஆகாசம்; பரமாகாசம் எனப்படுகிற பரமபதம். அதையும் வ்ரஜையாகிற தண்ணீரையும், “அந்நம் ப்ரஹ்மேதி வ்யாஜாநாத்” என்று உபநிஷத்தில் அன்னமாய்ச் சொல்லப்பட்ட பரப்ரஹ்மாநுபவத்தையும், அறம் செய்யும் எம்பெருமான். க்ருபாமாத்ர ப்ரஸன்னாச்சார்யராய் உபகரித்தருளினவர் எம்பெருமானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதி முன்புறத்தில் மாதவிப்பந்தல் உள்ளது. ஆண்டாள், இந்த பந்தலுக்கு கீழ்தான் வளர்ந்தாள். இந்தப்பந்தல் மரங்களால் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டாள், தன்னை கோபிகையாக பாவித்து, கண்ணனை வேண்டி பாடிய சிற்பங்கள் இந்த பந்தலுக்கு அருகிலுள்ள விதான சுவரில் உள்ளது.-(மாதவி = வசந்தமல்லி அல்லது செண்பகம் என்னும் கொடி! குருக்கத்திக் கொடி என்றும் சொல்வார்கள்.)-ஆச்சார்யர்கள் விளக்கங்களில் மாதவிப் பந்தல்:
⭐ சுகப் பிரம்ம மகரிஷிகள் முதலான பல ஞான முனிவர்களும்,
⭐ சனகாதி மகரிஷிகள் முதலான கர்ம யோகிகளும்,
⭐ துருவன்,பிரகலாதன் போன்ற பக்த அன்பு உள்ளங்களும்,
⭐ ஆஞ்சநேயர் முதலான சரணாகத தொண்டு உள்ளங்களும், இன்னும் பலரும் வந்த அமரும் பந்தல் என்றே குறிப்பிடுகின்றனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம். ஆண்டாள் கோயில் கருவறையைச் சுற்றி முதல் பிரகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் திருப்பாற்கடல், வைகுண்டம் பெருமாள் உட்பட அனைத்து பெருமாளையும் தரிசிக்கலாம்.
ஸ்ரீஆண்டாள் சன்னதியில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் மண்டபம், “கனக சமர பூபாலனம்” (முத்துப்பந்தல்) எனப்படுகிறது. இதில் வாழைமரம், மாவிலை மற்றும் பூச்செண்டும் இருக்கிறது. மேலே திருமாலின் பாதம் இருக்கிறது. திருப்பாவை 30 பாசுரங்களையும், நினைவுறுத்தும்படி 30 தங்க மாவிலைகள் இம்மஞ்சத்திலே கட்டப்பட்டுள்ளன. ஒரு இலைக்கும் மற்றொரு இலைக்கும் இடையே ஒரு பூச்செண்டு உள்ளது.
ஸ்ரீகோதை ஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார், ஸ்ரீபெரியாழ்வார் ஆகிய மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் அருள்பாலிக்கின்றனர். ரெங்கமன்னார் “அ’காரம், ஆண்டாள் “ம’காரம், கருடாழ்வார் அம்சமான பெரியாழ்வார் “உ’காரம் என இம்மூவரும் ” ௐ ” எனும் பிரணவ மந்திரத்தின் பொருளாக திகழ்கின்றனர் என்பதால் “முப்புரிஊட்டியதலம்” என அழைக்கப்படுகிறது.-ஸ்ரீஆண்டாளின் திருக்கோயிலான “நாச்சியார் திருமாளிகை” முழுதும் கருங்கற்களால் ஆனது. கருவறை விமானத்தில் திருப்பாவை பாசுரங்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
அவ்விமானத்திற்கு “திருப்பாவை விமானம்” என்று பெயர்.-உட்பிராகாரத்தில் தேக்குமர வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது “மாதவிப் பந்தல்” உள்ளது. மணி மண்டபத்தில்
ஆண்டாள் சந்நிதியின் நேர் எதிரில் வெண்கலத்தால் செய்யப்பட்ட தட்டொளி இருக்கிறது. இதில் தான் ஆண்டாள் தன் முகத்தை பார்த்தாளாம். ஆண்டாள் திருப்பாவை(20)யில், ‘உக்கமும் தட்டொளியும்‘ என்று குறிப்பிட்டிருக்கிறாள்.
தட்டொளிக்கு அருகிலுள்ள ஒரு தூணில், தனது வாலை தலைக்குமேல் சுருட்டி வைத்துள்ள ஆஞ்சநேயர் சிற்பம் மிக வித்தியாசமான முறையில், சிறப்பான சிற்பக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது. ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கியவாறு தமது வாலை உடல் முழுவதும் வட்டமாகச் சுற்றியவாறு அமைந்திருக்கும் சிற்பம் இது.
நாச்சியார் திருமாளிகையில் தென்கிழக்கு மூலையில் பெரியாழ்வார் வழிபட்ட ‘இலக்குமி நாராயணர்’ திருவுருவச் சிலையும் அமைந்துள்ளது. சுதை சிற்பமாக அமைந்திருக்கும் இத்திருமேனியின் இடது மடியில் இலக்குமி தேவி அமர்ந்திருக்கிறாள். பல வர்ணங்களால் அழகு மிளிரும் இச்சிற்பம் ‘வர்ணகலாபேரர்’ என்றழைக்கப்படுகிறது.
மகா மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற ‘வெள்ளிக் கிழமை குறடு’ என்ற மண்டபம் ஒன்று உள்ளது.[இதன் தூண்களில் திருமலை நாயக்கர் மற்றும் அவரின் மனைவியர் இருவரது சிலைகள் உள்ளன.] அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பெற்ற மஞ்சத்தில் இடக் கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் ரங்க மன்னார் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார். கருவறையில் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரங்க மன்னார், ஸ்ரீகருடாழ்வார் (பெரிய திருவடி) ஆகியோர் சேவை சாதிக்கிறார்கள். திருவரங்கன், திருமணக் கோலத்தில் ராஜகோபாலனாக செங்கோல் ஏந்தி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மூல விக்கிரகங்களுக்கு முன்னால் தங்கத்தாலான கனக சப்ர மஞ்சத்தில் உற்சவர்களாக இந்த மூவரும் எழுந்தருளி உள்ளனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் உற்சவர் “ரங்கமன்னார், ராஜ மன்னார்” ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில், இவர் மாப்பிள்ளைக் கோலத்தில் காட்சி தருகிறார். அப்போது அந்தக் கால நிஜார் மற்றும் சட்டை அணிவார். காலில் செருப்பும் அணிந்திருக்கிறார். அருகில் மணப்பெண் அலங்காரத்தில் ஆண்டாளின் திருக்காட்சி. ‘மன்னாருக்கு தொடை அழகு’ என்பர். ஆண்டாளின் மாலையை (தொடை = மாலை) அணிந்து கொள்வதால் அழகு என்பர்.
அம்பரமே’ எனத் தொடங்கும் 17 ஆம் பாசுரத்தில் முதலெழுத்து ‘அ ‘காரம். ‘உந்து மத’ எனத் தொடங்கும் 18 ஆம் பாசுரத்தின் முதலெழுத்து ‘உ’காரம். ‘முப்பத்துமூவர்’ எனத் தொடங்கும் 20 ஆம் பாசுரத்தில், இந்தப் பாசுரம், முதலெழுத்து ‘ம’காரம். இந்த மூன்று எழுத்துகளும் , ‘அ’காரம் +’உ’காரம் +’ம’காரம் ,சேர்ந்தால் வருவதே ப்ரணவம் . நடுவில் வரும் 19 ஆம் பாசுரம் ‘குத்துவிளக்கெரிய’ அதன் முதலெழுத்து ‘கு’ இது வினையையும் பெயரையும் இணைக்கும் வேற்றுமை உருபு. எனவே 17,18,20 ஆகிய பாசுரங்களை இணைக்கும் பாசுரம் 19. இவை நான்கும் ஒன்றோடொன்று தொடர்புடைய வகையில் அமைந்து ப்ரணவத்தைக் குறித்தன.
ஆண்டாளின் பிறபெயர்கள்:ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இதற்கு பூமாலை என்று பொருள். இவளுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, ஆண்டாள், பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவை பாடிய செல்வி, வேயர்குல விளக்கு, ஶ்ரீரங்கமஹிஷி, புதுவையர்கோன் விட்டுசித்தன்கோதை, சீலத்தனள், தென்திருமல்லிநாடி, புதுவையர்கோன் பட்டன்கோதை,
குழற்கோதை,-புதுவைமன்னன் பட்டர்பிரான்கோதை,
வில்லிபுத்தூர்கோன் கோதை, சுரும்பார் குழற்கோதை, விட்டுசித்தன்வியன் கோதை, வில்லைத்தொலைத்த புருவத்தாள், ஶ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீ, கோதா விஷ்ணு சித்தாத்மஜா, ஶ்ரீதந்விநவ்யபுரவாஸினி, வைதிக விஷ்ணுசித்த தநயா, ஶ்ரீரங்கபதிதேவி, ம்ருதுவாணி, நூதனநகரஸ்திதா, நூதனபுரநாயகி, ரங்கஜீவிகா,ஶ்ரீரங்கநாயகி, கோபீவேஷதரா, துளசிவன ஸஞ்ஜாதா, பட்டநாதப்ரியா, க்ருஷ்ணாயுத போகி, ரங்கநாதப்ரியா, யதிராஜ ஸகோதரி,துர்லபஶ்ரீ ஸுலக்ஷணா, தநுர்மாஸ க்ருத வ்ரதா, நாராயணபதாஶ்ரிதா, திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள், திருப்பாவை முப்பதும்செப்பினாள், பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள், ஒருநூற்றுநாற்பத்து மூன்றுரைத்தாள், உயரரங்கர்க்கே கண்ணியுகந்தளித்தாள்,
திருமல்லிவளநாடி, வண்புதுவை நகர்க்கோதை, விஷ்ணுசித்த தநூஜா என பல பெயர்கள் உண்டு.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் த்வஜஸ்தம்ப மண்டபத்தில் வடபுறப்பகுதியில் இந்த கண்ணாடி மாளிகை உள்ளது. வேறு எந்தக் கோயிலிலும் இப்படி இல்லையென்று கூறுமளவிற்கு மிகவும் எழிலார்ந்த அமைப்புடன் இம்மண்டபம் உள்ளது. இதனை இரண்டு லட்சம் செலவில் கோயம்புத்தூர் விஜயலட்சுமி மில்ஸ் அதிபர் ஸ்ரீமான் V.L. பாலகிருஷ்ண நாயுடு –
B. ஜானகியம்மாள் தம்பதியனர் நம் கோதை ஆண்டாளின் உகப்பிற்கினியவாறு (30-07-1985 அன்று) கட்டிக்கொடுக்கப்பட்டது.-இந்த கண்ணாடி மாளிகையின் உள்ளே ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்கமன்னார் எழுந்தருள்வதற்கான நாலுகால் குறடு உள்ளது. அதன் தூண்கள் உள்பட. மண்டபத்தின் தாழ்வாரம் ஆகிய எல்லாப் பகுதிகளும் கண்ணாடி வேலைப்பாடுகள் தாம். 7 1/2 அடி உயரமும் 3 1/2 அடி அகலமும் உள்ள பல நிலைக் கண்ணாடிகளை இணைத்துள்ளார்கள். இம்மாளிகையின் வாயிலில் கருங்கல் பளிங்கினால் செதுக்கப்பெற்ற இரண்டு யானைகள் உள்ளன.
தத்துவங்களின் வரிசையில் அகந்தைக்கு 22 ஆவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதையொட்டியே இந்த திருப்பாவை 22 ஆவது பாசுரத்தில் அகந்தையை அகற்ற வேண்டியதன் அவசியத்தை ஸ்ரீஆண்டாள் அழகுற அமைக்கிறாள் என்பர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோதை ஸ்ரீஆண்டாள் திருக்கோயிலில் வைகானஸ ஆகம முறைப்படி
மொத்தம் 12 திருநாட்கள் திருஆடிப்பூர உற்சவம் நடைபெறுகிறது. வழக்கம் போல் திருப்பூர நந்தவனத்தில் ம்ருத்சங்க்ரஹணம் மற்றும் த்வஜஸ்தம்ப மண்டபத்தில் கொடி ஏற்றம், என சேனை முதலியார் புறப்பாட்டுடன் உற்சவம் தொடங்குகிறது.
🔹முதல் நாள்
அன்று இரவு ஸ்ரீஆண்டாள்-ஸ்ரீரங்கமன்னார் 16வண்டிச்சப்பரத்தில் திருவீதிப் புறப்பாடு கண்டருளுவர்.
🔹இரண்டாம் நாள்
இரவு ஸ்ரீஆண்டாள் – சந்திரப்ரபை வாகனம்;
ஸ்ரீரங்கமன்னார் – சிம்மவாகனம்;
🔹மூன்றாம் நாள்
இரவு ஸ்ரீஆண்டாள் – தங்கப்பரங்கி நாற்காலி வாகனம்; ஸ்ரீரங்கமன்னார் – அனுமார் (சிறிய திருவடி ) வாகனம்;
🔹நான்காம் நாள்
இரவு ஸ்ரீஆண்டாள் – சேஷ வாகனம்;
ஸ்ரீரங்கமன்னார் – கோவர்த்தனகிரி;
🔹ஐந்தாம் நாள்
காலை ஐந்து பெருமாள் ஆண்டாளுடன் பெரியாழ்வாருக்கு மங்களாசாசனம் நடைபெறும்.
இரவு ஸ்ரீஆண்டாள் – அன்னவாகனம்;
ஸ்ரீரங்கமன்னார் உள்பட ஐந்து பெருமாள்களும் ஐந்து கருட சேவை நடைபெறும்.
🔹ஆறாம் நாள்
இரவு ஸ்ரீஆண்டாள் – கனகதண்டியல் வாகனம்; ஸ்ரீரங்கமன்னார் – யானை வாகனம்;
🔹ஏழாம் நாள்
இரவு ஸ்ரீஆண்டாள் மடியில் ஸ்ரீரங்கமன்னார் சயன சேவை
🔹எட்டாம் நாள்
இரவு ஸ்ரீஆண்டாள் – புஷ்பப்பல்லக்கு;
ஸ்ரீரங்கமன்னார் – குதிரை வாகனம்
🔹ஒன்பதாம் நாள் காலை திருவாடிப்பூரம் தேரோட்டம்;
🔹பத்தாம் நாள் சப்தாவரணம்;
இரவு ஸ்ரீஆண்டாள் சிங்கம்மாள் குறட்டில் முத்துக்குறி உற்சவம்;
🔹பதினொன்றாம் நாள் தீர்த்தவாரி
🔹பன்னிரண்டாம் நாள் விடையாற்றி.
ஒன்பதாம் திருநாளான திருவாடிப்பூரத்தன்று அதிகாலையிலேயே ஸ்ரீஆண்டாளும் ஸ்ரீரங்கமன்னாரும் பெரியதிருத்தேர் எழுந்தருளுகிறார்கள். இத்திருத்தேர் வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இத்தேரின் வடம் கோர்க்கும் ஒரு இரும்பு வளையத்தில், “சாலிவாகன சகாப்தம், கொல்லம் 1025 வருஷம் [கி.பி.1825](சௌமிய வருடம்) ஆவணி மாதம் 14ம் தேதி, குருவாரம்” என்றெழுதப்பட்டுள்ளது. இத்தேரின் அமைப்பு அதிசயிக்கத்தக்கது. இத்தேரின் சக்கரங்கள் 4+4+1= 9 ஆகும். தேர்தட்டின் ஊன்று கால்கள் 81 ஆகும். (8+1= 9) இவற்றை எந்த வரிசையிலிருந்து பார்த்தாலும் ஒன்பது என்ற எண் வரும். தேரின் உள் பகுதியான அஸ்திவார அமைப்பில் உள்ள தூண்கள் 144 ஆகும்.( 4+4+1= 9).
எண்கணிதசாஸ்திரப்படி, இத்தேரின் எப்பகுதியையும், குறுக்கு வசமாகவோ, நெட்டு வசமாகவோ, நடுவசமாகவோ, எப்படிக் கூட்டினாலும் ஒன்பது என்ற இலக்கம் வரும். அதே போல தேருக்கு வடமும் ஒன்பது ஆகும். இத்தேரில் ஒவ்வொரு தட்டின் பக்கவாட்டிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் தலபுராணச்செய்திகள், இராமாயண, மகாபாரதம் மற்றும் சைவ,வைணவ புராணக் காட்சிகள் உள்ளன.
160 அடி உயரமுள்ள இத்தேரில் மேல்பகுதியிலுள்ள கலசம் மட்டும் 150 கிலோ எடை கொண்டது என திருக்கோயில் பழைய தல வரலாற்றுப்புத்தகம் கூறுகிறது. முற்காலங்களில் 15000 பேர் சேர்ந்து இழுத்தும் ரதவீதி சுற்றி நிலைக்கு வர சில நாட்கள் ஆகுமாம். ரதவீதி சுற்றி வந்த பிறகு ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் திவ்ய தம்பதியினர் சிங்கம்மாள் குறட்டில் எழுந்தருளுகிறார்கள். பின்னர் வெள்ளிக்கிழமை குறட்டில் உள்ள திருமலை நாயக்கர் சிலைக்கு மரியாதை செய்யப்படுகிறது. பிறகு சிங்கம்மாள் குறட்டிலிருந்து புறப்பட்டு திருவாடிப்பூர நந்தவனத்திலுள்ள திருப்பூர மண்டத்தில் எழுந்தருளுகிறார்கள்.
(எப்பாடும் பேர்ந்து உதறி)
“ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் அஞ்சனகிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமஞ்ச பத்ரி நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத த்வாராபதி ப்ரயாகா மதுரா அயோத்யா கயாபுஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனிம்” என்கிறபடியே எண்டிசையும் பாதசரத்தாலே சஞ்சரித்து, ஆங்காங்கு விபக்ஷர்களுண்டாகில் அவர்களை உதறியருளினவர் ஸ்வாமி.
திருவாடிப்பூர உற்சவம் 5ம் திருநாளன்று ஐந்து கருட சேவை நடைபெறும். பெரிய தங்க அன்ன வாகனத்தில் ஸ்ரீஆண்டாளும், சிறிய அன்னவாகனத்தில் ஸ்ரீபெரியாழ்வாரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருக்கும் பெரியபெருமாள் (வடபத்திரசாயீ), மற்றும் ஸ்ரீரங்கமன்னார், மற்றும் செண்பகத்தோப்பு காட்டழகர் (சுந்தரராஜப் பெருமாள்), ஸ்ரீவி.திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகிய ஐந்து பெருமாள்களும் தனித்தனி தங்க கருட வாகனத்திலும் ஆக இந்த ஏழுவரும் எட்டு வீதிகளில் சுற்றி புறப்பாடு கண்டருளுவர். ஆண்டாள் இந்த ஐந்து பெருமாள்களை மட்டுமே பதிகமாக மங்களாசாசனம் செய்துள்ளாள்.
இந்த ஐந்து கருடசேவை பற்றி சுவையான ஓர் செய்தி! பூமிதேவியின் அம்சமான சத்யபாமா ஒருநாள் பஞ்சபாண்டவர்களின் பத்தினியாகிய திரௌபதியைப் பார்த்து ஐவர்க்கு மனையாள் என்பதை பரிகசிக்க கோபம் கொண்ட அவள் சத்யபாமாவை “தன்னைப் போல ஐவரைப் பதியாக அடைக!” எனச் சாபமிட்டாளாம். அச்சாபத்தின் காரணமாக பூமிபிராட்டியான சத்யபாமா பட்டர்பிரான் பெரியாழ்வார் நந்தவனத்தில் ஸ்ரீஆண்டாளாக அவதரித்து, சாபத்தின்படி ஐந்து பெருமாள்களை மணந்தாள் என்கிற புதுமைச் செய்தியினை வில்லி இயற்றிய “ஸ்ரீஆண்டாள் பிள்ளைத்தமிழ்” மற்றும் சிதம்பரநாத கவி இயற்றிய “சீவலமாறன் கதை” ஆகிய சிற்றிலக்கிய நூல்களில் காணலாம்.
ஏழாம் நாள் காலையில் ஸ்ரீஆண்டாள் அரங்கமன்னார் தங்கத் தோளுக்கினியானில் வழக்கமாக வருகிற வீதி உலாக்களையும் சேர்த்து, சில புதிய தெருக்களில் எழுந்தருளி, இரவில் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் எழுந்தருளுகின்றனர்.-(ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் போகும் பாதையில் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கர்ப்பகிருகம், அர்த்தமண்டபம், இரண்டு பிராகாரங்கள் இருக்கின்றன. கர்ப்பகிருகத்தில் ருக்மிணி, சத்யபாமா சமேத ஸ்ரீநவநீதகிருஷ்ணன் எழுந்தருளியிருக்கிறார்-அங்கே சயனத் திருக்கோலம் நடைபெறுகிறது. ஸ்ரீ ஆண்டாள் தொடையில் இராஜகோலத்திலுள்ள ஸ்ரீரங்கமன்னாரின் “சயனத்திருக்கோலம்” கண்டவர்கள் கண் படைத்த பயனை அறிவர்.
முத்துக்குறி உற்சவம்-(ஆடிப்பூர ப்ரம்மோற்சவம் பத்தாம் நாள்)- (அரையர் சேவை)-சிங்கம்மாள் குறடு என்ற ஒரு இடத்தில் தான் இது நடக்கும்! தலைவியின் அம்மா, தன் பெண், பெருமாள் மேல் காதல் கொண்டு, இப்படி உருகி உருகி மெலிகிறாளே என்று ஏக்கப்படுவாங்க! “இரக்கம் இல்லாத பெருமாளே”ன்னு காய்வாய்ங்க.
“வாணுதல் இம் மடவரல், உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள், விறல்
வாணன் ஆயிரந்தோள் துணித்தீர், உம்மைக்
காண நீர் இரக்கம் இல்லீரே.“-பின்னர், கட்டுவிச்சி என்னும் குறத்தி வந்து முத்துக்குறி சொல்லுவாள்.முறத்தில் முத்தைப் பரப்பி, பாடிக்கிட்டே, எண்ணி என்ணிக் குறி சொல்லுவாள் குறத்தி!
மாலையில் தொடங்கி இரவெல்லாம் தொடர்ந்து விடிய விடிய நடக்கும் இந்த உற்சவம்.-அரையர்களே, தங்களை அலங்கரித்துக் கொண்டு, தாளங்கள் தட்டி, தமிழ்ப் பாசுரங்கள் இடையே முழங்க, ஆடி அபிநயித்துக் காட்டுவார்கள்!பத்தாம் நாள் சப்தாவரணம் முடிந்த பிறகு முத்துக்குறி உற்சவம் நடைபெறுகிறது. ஸ்ரீஆண்டாள் செட்டியக்குடித் தெருப்பெண் உருவில் காட்சியளிப்பாள். ஸ்ரீநாதமுனிகள் பரம்பரையைச் சேர்ந்த அரையர் குறத்தியாய் இருந்து பாசுரங்களின் மூலம் அபிநய முத்திரையோடு முத்துக்குறி சொல்வர். ஆண்டாள் அரங்கனை அடைய குறி கேட்பதாக ஐதீகம்
சங்கம்) சங்க ஸ்பர்சத்தால் துருவனுக்கு ஸர்வக்ஞ சக்தியை பகவான் உண்டாக்கினதாக புராணங்கள் கூறுகின்றன-ஸ்வாமி ஸ்பர்சத்தால் கூரத்தாழ்வான், கூரத்துஆண்டாள் எம்பார், அனந்தாழ்வான் பிள்ளான் முதலானோரை ஸர்வக்ஞனாக்கினவர் ஸ்வாமி.
(பறை) பகவத் குணங்களை எங்கும் பறை சாற்றினவராகையாலே தாமே பறையென்னத் தகுவர்.
(பல்லாண்டிசைப்பார்) பெரியாழ்வார் போலே எம்பெருமானுக்குத் தாம் பல்லாண்டு பாடினது மட்டுமின்றியே பல்லாயிரவரைப் பாடுவிக்கவும், வல்லவராயிருந்தார்.
(கோல விளக்கு) ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு குல பிரதீபம் ஆக இருந்தார்.
(கொடி) ஸ்ரீவிசிஷ்டாத்வைத சித்தாந்த விஜய த்வஜம் ஆவார்.
(விதானம்) “தொடுத்து மேல் விதானமாய் பௌவ நீரார் அரவணை” என்ற திருச்சந்த வ்ருத்தத்தின் படியே கண்ணன் வடமதுரையிலிருந்து திருவாய்ப்பாடிக்கு எழுந்தருளின போது விதானமாய் இருந்தவர் ஆதிசேஷன்
“அன்னம் தடந்தாம ரைப்போதி னைக்கொணர்ந்து அளியமென் பேடையோ டும்
ஆடகப் பூஞ்சோலை யுள்குடம் பையைஅமைத்து அகலாத சோலைமலை வாழ்
மன்னன் தனக்குநீ வாய்நேர்த்தி டப்பொன்னி வளைகோயில் அண்ணன்அன் பால்
வாழ்விக்கு மாறர்திரு மகளாய உரிமைக்கும் வரிசைஇது எனமதித் தே
இன்அன் புறப்புதிய வெண்ணெயொடு தேன்நிறைத்து இருநூறொடு ஒருநூற தாய்
இனியதெள் அமுதென்ன அக்கார அடிசிலும் இயற்றவே தைத்திங்கள் வாய்
பொன்னின் தடாநிறைத் தருளும்இன் அமுதமே!
பொன்ஊசல் ஆடியரு ளே! புதுவைமா நகர்மன்னர் வதுவைக்கு அமைந்துளாய்!
பொன்ஊசல் ஆடியரு ளே (பாடல்: 98)(ஆண்டாள் பிள்ளைத் தமிழ் எனும் சிற்றிலக்கியத்தில்
(10. பொன்னூசல் பருவம்))
|அக்கார அடிசில்||-தேவையான பொருள்கள்:-தினை அரிசி – ஒரு கப்
பாசிப் பருப்பு – அரை கப்
பால் – 3 கப்
வெல்லம் நன்றாகப் பொடித்தது – இரண்டரை கப்
நெய் – அரை கப்
முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை – தலா 10 அல்லது 15
ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன்
தினை அரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வாசனை வரும்வரை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஆறியதும் தண்ணீர்விட்டுக் களைய வேண்டும். அதனுடன் 3 கப் பாலைச் சேர்த்து குக்கரில் நன்றாக வேகவைக்க வேண்டும். 3 முறை விசில் சத்தம் வந்ததும் இறக்கிவைத்துவிட வேண்டும். அதன் பிறகு சூடு ஆறியதும் குக்கரைத் திறந்து சாதத்தை ஒரு குழிக்கரண்டியின் அடிபாகத்தால் நன்றாக மசிக்கவும்.-இப்போது, பொடித்து, நன்றாக தூள் செய்யப்பட்ட வெல்லம் ரெடியாக வைத்திருக்கிறோம்தானே! அந்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். வெல்லம் நன்றாகக் கரைந்ததும் வடிகட்டி, பிறகு ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். இப்போது அது கெட்டியானல் போதும், பாகு பதம் இருக்கவேண்டும் என்பதில்லை.வேகவைத்திருக்கும் சாதத்தை இந்த வெல்லக் கரைசலில் சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். இப்போது பாதி நெய்யை ஊற்றுங்கள். எல்லாம் சேர்ந்து கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிடலாம். மீதியுள்ள நெய்யைச் சூடாக்கி அதில் முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த் தூள், உலர் திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து, அக்கார அடிசிலில் கொட்டி நன்றாகக் கிளற வேண்டும்.
கி.பி.1872ல் தஞ்சை மாவட்டத்தில் பிறந்து 12வயதிலே நாடகக் கம்பெனியில் சாதாரண நடிகனாகச் சேர்ந்து, பிற்காலத்திலே நம் கோதை ஸ்ரீஆண்டாளின் அற்புத அருள் சக்தியில் நாடகக் கலையுலகில் தமிழகம் கண்டிராத புதுமைகளையும் புரட்சிகளையும் செய்தவர் சி. கன்னையா நாயுடு அவர்கள். ஆண்டாளின் அருளைப் பெறுவதற்கு முன்பு வீண் பொழுது போக்குக் கதைகளையே நாடகமாக நடத்தி வந்தார். அவற்றால் பெரும் நஷ்டமடைந்து, மனமொடிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து சேர்ந்தார். ஸ்ரீஆண்டாளை வணங்கி, கோவில் வாசலில் அனாதையாக படுத்துறங்கினார். பிறகு மறுநாள் மதுரையில் தங்கியபோது, அவரது கனவில் ஸ்ரீஆண்டாள் தோன்றி, ஆறுதல் கூறி ஊக்கமும்,ஆறுதலும் அளித்தாள். மதுரை மேலக்கோபுரவாசலில் ஓட்டலில் பணியாற்றிய கிட்டப்பா, செல்லப்பா, அனந்த நாராயணன் என்னும் மூவரையும் வைத்து நாடகம் நடத்துமாறும் அவருக்கு அறிறுத்தி விட்டு கனவில் மறைந்தாள். அதன்படியே கன்னையா இராமாயணம்,மகாபாரதம், பகவத் கீதை, ஸ்ரீஆண்டாள் கல்யாணம், ஸ்ரீஇராமானுஜ வைபவம், தசாவதாரம், அரிச்சந்திரா போன்ற தெய்வீகக் கதைகளையே நடத்திக் காட்டி, மக்களைக் கவர்ந்து நாடகக் கலை உலகில் பெரும் பெயரும் செல்வமும் பெற்றார்.ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு கன்னையா அவர்கள் வழங்கியவை:- யானை,ஒட்டகம்,பசு, காளை, 305தோலா எடையுள்ள தங்கக் குடம் (“கன்னையா தங்கக்குடம்” என்றே கூறுவர்), தங்க டம்ளர்கள், தங்கத்தால் செய்த எச்சில் பணிக்கம், தங்கத்தால் செய்த மாம்பிஞ்சு மாலை, ரங்கூன் காசுமாலை, பச்சைக்கல் நடுவிலும், சுற்றிலும் வைரக் கற்களும் பதித்த பதக்கம் (“கன்னையா வைரப் பதக்கம்” என்பர்), தங்க சரிகைப் பாவாடைகள், தண்டியல், ஜரிகைப் பண்ணாங்கம், தசாவதாரத் தோரணம், அரங்கநாதர் சயனக் கோலத்துடன் கூடிய பெரிய திரை ஆகியன. இன்னும் பல கைங்கர்யங்களை நம் கோதை ஆண்டாளுக்குச் செய்துள்ளார்.
கிழக்கு நோக்கியுள்ள ஶ்ரீஆண்டாள் கோயிலின் முதல் மண்டபமாகிய கொட்டகை போல கல்லாலே கட்டப்பட்ட பந்தல் அமைப்புடைய பந்தல் மண்டபம், மற்றும் திருமலை நாயக்கரின் அத்தையும், இரகுவீரமுத்து விஜயரங்க சொக்கப்ப நாயக்கரின் மகளுமான சிங்கம்மாள் கட்டிய குறடு உள்ளது. இவர் பெயரால் சிங்கம்மாள்புரம் தெரு (சிங்கமாடத்தெரு) என்னும் அக்கிரகாரமும் இவ்வூரில் உள்ளது.
“சிங்கம்மாள் குறடு” என்னும் மண்டபம் தாண்டி, பங்குனி உத்திர திருக்கல்யாண மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் உட்புற உச்சியில் இராமாயணக்கதை முழுவதும் வண்ண ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் ஆண்டு தோறும் பங்குனிமாதம், ஶ்ரீஆண்டாள் திருக்கல்யாண மகோத்ஸவம் நடைபெறுகிறது.-இக்கோவிலிலூள்ள தூண்கள் மிகவும் பெரியவை. ஒவ்வொரு தூணும் சிற்பக் கலை வல்லுநர்கள் கண்டுவியக்கும் மகிமை வாய்ந்த சிறந்த வேலைப்பாடுகள் உடையது.வேணுகோபாலன், இராமன், இலட்சுமணன், கார்த்தவீரியார்ச்சுனன், கர்ணன், ஜலந்தரன், மன்மதன், அயோமுகி என்னும் அரக்கி, ரிஷிகள், ரிஷிபத்னிகள், காண்டீபன், குகப்பெருமான், சந்நியாசி வேடத்தில் அர்ச்சுனன், ஊர்த்துவமுக வீரபத்ரர், பிக்ஷாண்டார் கோலத்தில் பரமசிவன், ருத்ரகணிகை, விஸ்வகர்மா, நடனமாது, சாத்தகி, மோகனஅவதாரம், அன்னத்தின் மீது இரதிதேவி, நடன நிலையில் வீணையேந்திய கலைமகள், இவ்வளவு அழகு ததும்பும் அபாரமான வேலைப்பாடுகள் உடைய சிற்பங்கள் பல துவஜஸ்தம்ப மண்டபத்தில் உள்ளன. இதில் கலைவாணி சிலை அற்புதமானது. கலைவாணியின் கால்பெருவிரலிலிருந்து மூக்கு வரை ஒரே சமநிலையும், மேற்படி சிலையில் நான்கு வளைவுகளும் கொடுத்திருப்பது கலைக்கு பெருமை தரக்கூடிய அற்புதம் ஆகும். சில தூண்களில் வியாக்ரபாத விநாயகி, சங்கநிதி, பத்மநிதி ஆகியவற்றையும்காணலாம். சூர்ப்பனகையின் மூக்கு மற்றும் முலைகளை வாளால் அறுக்கும் இலட்சுமணன் சிலை மற்றகோயில்களில் காணக்கிடைக்காத நாயக்கர் காலத்து கலைப்படைப்பாகும்.
மார்கழி நீராட்ட உற்ஸவம்-இவ்வுற்சவம் தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவு ஶ்ரீஆண்டாள் சர்வாலங்கார பூஷிதையாக வடபெருங்கோயிலுக்கு எழுந்தருளி வடபத்ரசாயியிடம் மார்கழி நோன்பு நோற்க, அனுமதிகேட்கும் “பிரியாவிடை” நடைபெறுகிறது. ஶ்ரீஆண்டாள், வடபத்ரசயனர் பெரியபெருமாள் சந்நிதியின் மஹாமண்டபத்திற்கு எழுந்தருளி, ஏகாந்த திருமஞ்சனம் கண்டருள்வார். பின்னர் குடை,சாமரங்களுடன், புஷ்பமாரி பொழிய ஸ்வஸ்திவாசனம் கோஷிக்க கைத்தல சேவையாக மூலஸ்தானம் எழுந்தருளுகிறாள். ஆண்டாளுக்கும்,வடபெருங்கோயிலுடையானுக்கும் திருவாராதனம், வேதவிண்ணப்பம் நடைபெறும். பின்னர் திருக்கதவம் தாளிடப்படும். அப்போது ஶ்ரீஆண்டாள் மார்கழி நீராட்டத்திற்கு எம்பெருமானிடம் அனுமதி கேட்பதாக ஐதீகம். பின்னர் திருக்கதவம் நீக்க, அரையருக்கு அருளப்பாடு சாதிக்க, அவரும் திருப்பாவை முப்பது பாசுரங்களையும் அமுததொழுக, தாளத்தோடு சேவித்து, முதல்பாட்டுக்கு வியாக்யானம் செய்வார். பின்னர் ஸ்தலத்தார் உற்சவ வைபவம் மற்றும் பஞ்சாங்கம் வாசிப்பர். ஆண்டாள் அங்கிருந்து புறப்பட்டு, பெரியாழ்வார் மங்களாசாசனம் முடிந்து நாச்சியார் திருமாளிகையை அடைவார்-நீராடல் உற்ஸவத்தின் ஒவ்வொரு நாளும் தங்கப் பல்லக்கில் வட பெருங்கோவிலின் ராஜகோபுர வாசலில் ஸ்ரீ ஆண்டாள் எழுந்தருள, நாள்பாட்டு’ வைபவம் நடைபெறும். அதாவது, ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கான திருப்பாவைப் பாடல் பாடப்படுவதே இந்த நிகழ்ச்சி.)மறுநாள் காலையில், ஶ்ரீஆண்டாள் தங்கப்பல்லக்கிலே எழுந்தருளி பெரியகோபுர வாசலை அடைகிறாள். அன்று நாட்பாட்டு ‘மாலே மணிவண்ணா’ பாசுரத்தை ஸ்ரீ ஆண்டாளே சொல்வதாக ஐதீகம். இந்தப் பாடல், “ஆலின் இலை யாய் அருளேலோ எம்பாவாய்” என்று முடிவுறும்.
சமஸ்கிருதத்தில் ‘வட விருட்சம்’ என்றால் ஆலமரம் என்றும், ‘பத்ரம்’ என்றால் இலை என்றும் பொருள் ஆகும். ‘வடபத்ரசாயி’ என்பதையே, ‘ஆலின் இலையாய்’ என்று அழகுத் தமிழில் ஆண்டாள் கூறுகிறாள். அரையர் நாள் பாசுரம் சேவித்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டு பல விடையாத்து மண்டபங்களை முடித்துக்கொண்டு திருமுக்குளக்கரையில் உள்ள எண்ணெய் காப்பு மண்டபம் எழுந்தருளுகிறாள். இவ்வாறு பல்லக்கிலே எழுந்தருளும் போது ஶ்ரீஆண்டாள் தினமும் ஒரு திருக்காலத்துடன் விளங்குவார்.
ஸ்ரீ ஆண்டாள் நீராடல் உற்சவத்தின்
2ஆம் நாள் கள்ளழகர் திருக்கோலம்.
3ஆம் நாள் கண்ணன் கோலம்,
4ஆம் நாள் முத்தங்கி சேவை,
5ஆம் நாள் பெரியபெரு மாள் கோலம்,
6ஆம் நாள் மஹாராணியாக அமர்ந்த கோலம்,
7ஆம் நாள் தங்க கவச சேவை என தரிசனம் தருவது சிறப்பு.
திருமுக்குளம் கரையில் உள்ள நீராட்ட மண்டபத் தில், மாலை 3 மணிக்கு ஆண்டாளுக்கு ‘எண்ணெய் காப்பு’ வைபவம் நடை பெறும்.
அழகான தோற்றத்துடன் சௌரிக் கொண்டையுடனும், சர்வ ஆபரணங்களுடனும், ஶ்ரீஆண்டாள் அமர்ந்தபடி இருக்க அர்ச்சகர்களும், பரிசாரகர்களும் இணைந்து அனைத்து உபசாரங்களுடன் எண்ணெய் காப்பு சாற்றுதல் என்னும் வைபவத்தை தொடங்குகிறார்கள். முதலில் ஶ்ரீஆண்டாளின் திருவடிகளை விளக்கி, கைகளை விளக்கி அர்க்யம், பாத்யம் முதலியவைகளை சமர்ப்பிக்கிறார்கள். பின்பு ஶ்ரீஆண்டாளின் தலையலங்காரமாக உள்ள சூரிய-சந்திரன், நெற்றிச்சரம், துராய் இழுப்புச்சங்கிலி, தங்க மல்லிகை மொட்டு, தங்க கமலம், ரத்ன ராக்கொடி, ரத்னஜடை, முதலான தலையணிகளையும், காசு மாலை, பவளமாலை, வைரப்பதக்க மாலை முதலிய ஆபரணங்களையும் படிகளைந்து, பின் ஶ்ரீகோதையின் சௌரிக் கொண்டையை அவிழ்த்துக் கோதி விட்டு சிடுக்கு நீக்கி, சீப்பினால் தலைவாரி, மூலிகைகளால் காய்ச்சப்பட்ட தைலத்தை சாற்றுகிறார்கள். இவ்வாறு மூன்று முறை செய்யப்படுகிறது. ஒரு மஹாராணிக்கு செய்யும் சகல உபசாரங்களும் நம் அன்னை ஶ்ரீகோதை ஆண்டாளுக்கு செய்கிறார்கள். (பக்தர்களுக்கு தைலம் ப்ரசாதமாக வழங்கப்படுகிறது.) பின்னர் பத்தி உலாத்தல் முடிந்து திருமஞ்சன குறட்டிற்கு எழுந்தருளுகிறாள். அங்கு நவகலசத்தினால், வேதகோஷங்கள், முழங்க, வாத்ய கோஷங்களுடன் ஶ்ரீஆண்டாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. பிரபல நாடகக் கலைஞரான கன்னையா நாயுடு அவர்களால் சமர்பிக்கப்பட்ட தங்கக் குடம் இதில் பிரதான கலசமாகும். பின்னர் தினம் ஒரு வாகனத்தில் சௌரிக் கொண்டையுடன் திருவீதி வலம் வந்து வடபெருங்கோயிலை அடைகிறாள். அங்கு நாள் பாட்டு நடைபெறும்.
அந்த உற்சவத்தின் ஆறு மற்றும் எட்டாம் நாட்களில் நடக்கும் சவுரித் திருமஞ்சனம் விசேஷமானது.
அப்போது ஒரு நாள், மூக்குத்தி சேவை நடைபெறும். ஸ்ரீ ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும், அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது.தை மாதப்பிறப்பன்று, ஸ்வாமி மணவாளமாமுனிகளுக்காக எண்ணெய் காப்பு உற்சவத்தின் நிறைவுத்திருநாள் கொண்டாடப்படுகிறது. எண்ணெய்க்காப்பு, நீராட்டம் முடிந்து பல்லக்கிலே வடபெருங் கோயிலுக்கு ஶ்ரீஆண்டாள் எழுந்தருளி நாள்பாட்டு முடிந்தவுடன்
கவிச்சக்ரவர்த்தி கம்பர் சார்பாக “கம்பன் கொச்சு” என்னும் கம்பன் குஞ்சலம் சாற்றப்படுகிறது. பின்பு மணவாளமாமுனிகள் சந்நிதியை அடைகிறாள். மாமுனிகள் எழுந்தருளி வந்து ஶ்ரீஆண்டாளுக்கு மங்களாசாசனம் செய்கிறார்.
திருப்பாவை முப்பதுக்கும் வங்கக்கடல் கடைந்த மாதவன் தான் லக்ஷ்யபூதன். கண்ணபிரானை லக்ஷ்ய பூதனாகக்கொள்ளுமவர்கள் தேவர்களின் பிரார்த்தனையினால் கடலைக் கடைந்து அமுதம் கொடுத்து, “பலேக்ரஹிர் ஹி கமலாலாபேந ஸர்வச் ச்ரம:” என்று பட்டரருளிச்செய்த படியே பிராட்டியையும் பெற்று மகிழ்ந்த எம்பெருமானைப் பொருளாகக் கொள்க. திருப்பாவை ஜீயரென்ற திருநாமத்திற்கேற்ப எம்பெருமானாரையே திருப்பாவைக்கு லக்ஷ்ய பூதராகக் கொள்ளுமவர்கள் இங்ஙனே பொருள் காண்க:− “நிர்மத்த்ய ஸ்ருதி ஸாகராத்” என்றும் “நாமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்” என்றும் கடலாகச் சொல்லப்பட்ட ஸம்ஸ்க்ருத த்ராவிட உபய வேதங்களையும் திருநாவின் மந்த்ரத்தால் கடைந்து “வஸஸ்ஸுதாம் வஸுமநஸோ பௌம: பிபந்த்வந்வஹம்” என்று ஸ்வாமி தாமே அருளிச்செய்தபடி நிலத்தேவர்கள் நித்யாநுபவம் பண்ண அமுதமளித்தவர் ஸ்வாமி.-மாதவனை) மா- மஹத்தான; தவனை- தவத்தையுடையவரை; மஹாதவத்தையுடைய எம்பெருமானாரை என கொள்க.-இங்கு இப்பரிசுரைப்பார்) இங்ஙனே முப்பது பாசுரங்களுக்கும் நாம் காட்டின நிர்வாஹமும் அணி புதுவை பைங்கமலத் தண்டெரியல் பட்டர்பிரான் கோதை திருவுள்ளமுகந்ததேயென்று, கொண்டு உபந்யாஸ கோஷ்டிகளிலெடுத்துரைக்குமவர்கள்.-செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்) “பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து” [பெரியாழ். திரு.5-2-8] என்ற பெரியாழ்வாரின் அருளிச் செயலின்படியும், “ஸா மூர்த்திர் முரமர்த நஸ்ய ஜயதி” என்ற யதிராச ஸப்ததி [ஸ்லோ:63] யின்படியும், ஸாக்ஷாத் ஶ்ரீமந்நாராயண அவதாரமான ஸ்வாமி எம்பெருமானாருடைய திருவருளை எங்கும் பெற்று “அம்ருதஸாகராந்தர் நிமக்ந ஸர்வாவயவாஸ் ஸுகமாஸீரந்” என்று தலைக்கட்டாயாயிற்று.-‘பகவதா ஆத்மீயம் ஸ்ரீமத் பாதாரவிந்தயுகளம் ஸிரஸி க்ருதம் த்யாத்வா அம்ருதஸாகராந்தர் நிமக்ந ஸர்வாவயவஸ் ஸூகமாஸீத‘ (எம்பெருமானால் தன்னுடைய பரமபோக்யமான திருவடித்தாமரைகளை தன் தலையில் வைக்கப்பட்டதாக த்யாநம் பண்ணி ஆனந்தமாகிற அமுதக்கடலுக்குள்ளே மூழ்கிய எல்லா அவயங்களையும் உடையவானைக் கொண்டு ஸுகமாக இருக்கக்கடவன்) என்று ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் எம்பெருமானார் ஸ்வாமி ஶ்ரீராமாநுஜர், ஶ்ரீமந்நாராயணன் விஷயத்தில் அருளிச்செய்தார்.
தேடிக்கிடையாத் திரவியத்தைத் தெவிட்டாத அமுதைத் திருமாலைப்
பாடிப் பரவும் பசுங்கிளியைப் பவ வெம்பிணி தீர்த்திடும் மருந்தை
ஆடிப்பூரத் தவதரித்த அகில நிகமாகம விளக்கைச்
சூடிக்கொடுத்த சுடர் கொடியைத் தொழுது வினைக்கு விடை கொடுப்போம்!”–வரகவி அப்புவைய்யங்கார் என்கிற ஶ்ரீநரசிம்மாச்சாரியார்]
ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம் |
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாம் அநந்யசரண: சரணம் ப்ரபத்யே ||” [“கோதாஸ்துதி” _ஸ்லோ.1) வேதாந்த தேசிகர் அருளியது.](ஶ்ரீவிஷ்ணுசித்தர் என்னும் வேயர் குலக்கொடியாம், நந்தவனத்தில் வளர்ந்த அழகு மிக்க கற்பகத் தருவினைச் சுற்றிப்படர்கின்ற பெண்கொடியாகவும், திருவரங்கநாதனான அரிச்சந்தன மரத்தைத் தழுவும் அழகு மிக்க பொறுமையுடன் கூடிய பூமிப்பிராட்டியாகவும், இனிமையான மற்றுமொரு ஸ்ரீதேவியாகவும் விளங்கும் கோதையை அல்லாமல், மற்றொரு தெய்வம் சரணடையாது அவளையே அடைந்தேன்.)
மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்nஇனிதமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவளைப் பெற்ற வயிறுடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீ கேசா முலையுணாயே-பெரியாழ்வார் திருமொழி: 2-2-6]
மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லிப் புத்தூருறை வான்றன்
பொன்னடி காண்பதோ ராசையினாலென் பொருகயற் கண்ணினை துஞ்சா
இன்னடி சிலோடி பாலமு தூட்டி எடுத்தவென் கோலக் கிளியை
உன்னோடு தோழமை கொள்வன் குயிலே உலகளந் தான்வரக் கூவாய்!–நாச்சியார் திருமொழி:5-5]
வேயர்புகழ் வில்லிபுத்தூர் ராடிப்பூரம் மேன்மேலும் மிகவிளங்க விட்டுசித்தன்
தூயதிரு மகளாய் வந்த ரங்கனார்க்குத் தூழாய்மாலை முடிசூடித் கொடுத்த மாதே!
நேயமுடன் திருப்பாவை பாட்டாறந்தும் நீயுரைத்த தையொரு திங்கட்பாமாலை
ஆயபுகழ் நூற்றுநாற்பத்து மூன்றும் அன்புடனே யடியேனுக்குகருள் செய்நீயே–ஶ்ரீதேசிகன் பிரபந்தம்
இன்றோ திருவாடிப்பூர மெமக்காக
அன்றோவிங் காண்டா ளவதரித்தாள் – குன்றாத
வாழ்வாக வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய். (22 )
பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒருநாளைக்
குண்டோமனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு (23)
அஞ்சு குடிக்கொரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து (24)
ஸ்வோச்சிஷ்ட மாலிகா பந்த கந்த பந்துர ஜிஷ்ணவே|
விஷ்ணு சித்த தனுஜாயை கோதாயை நித்ய மங்களம்||
மாத்ருசா (அ)கிஞ்சன த்ராண பத்த கங்கண பாணயே|
விஷ்ணு சித்த தனுஜாயை கோதாயை நித்ய மங்களம்||
ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே|
நந்த நந்தன ஸூ ந்த்ர்யை கோதாயை நித்ய மங்களம்||
நல்ல திருமல்லிநாடியார்க்கு மங்களம்!
நால்திசையும் போற்றும் எங்கள் நாச்சியார்க்கு மங்களம்!
மல்லிகை தோள் மன்னனாரை மணம் புரிந்தார்க்கு மங்களம்!
மாலை சூடிக்கொடுத்தாள் மலர்தாள்களுக்கு மங்களமே!!
நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே !
நானூற்று அறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே !
சொல்லரிய லானிதனிற் சோதிவந்தான் வாழியே !
தொடை சூடிக்கொடுத்தாளைத் தொழுமப்பன் வாழியே !
செல்வநம்பி தனைப்போலச் சிறப்புற்றான் வாழியே !
சென்று கிழியறுத்து மால் தெய்வமென்றான் வாழியே !
வில்லிபுத்தூர் நகரத்தை விளங்கவைத்தான் வாழியே !
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே!.
திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதூஉம் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!
சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி!
திருவரையில் சாத்திய செந்துவராடை வாழி!
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி!
இலங்கிய முந்நூல் வாழி! இணைத் தோள்கள் வாழி!
சோராத துய்ய செய்ய முகச் சோதி வாழி!
தூ முறுவல் வாழி! துணை மலர்க் கண்கள் வாழி!
ஈராறு திரு நாமம் அணிந்த எழில் வாழி!
இனி திருப் போடு எழில் ஞான முத்தரை வாழியே!
அறு சமயச் செடி யதனை யடி யறுத்தான் வாழியே!
அடர்ந்து வரும் குதிட்டிகளை யறத் துரந்தான் வாழியே!
செறு கலியை சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே!
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே!
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே!
மாறனுரை செய்த தமிழ் மறை வளர்ந்தான் வாழியே!
அறம் மிகு நற் பெறும் பூதூர் அவதரித்தான் வாழியே!
அழகாரும் எதிராசர் அடி இணைகள் வாழியே!
ஶ்ரீமதே ரம்யஜாமாத்ரு முனீந்த்ராய மஹாத்மநே|
ஶ்ரீரங்க வாஸிநே பூயாத் நித்யஶ்ரீ நித்ய மங்களம்||
——————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply