ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-மூன்றாம் அத்யாயம்-ஸாதந அத்யாயம் – மூன்றாம் பாதம் –குண உப சம்ஹார பாதம் ––ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

மூன்றாம் பாதம் –குண உப சம்ஹார பாதம் –உபாசனம் த்யானம் பக்தி போன்ற ப்ரஹ்ம வித்யைகளும்
அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளும் படிக்கப் படுகின்றன – இதில் 26 அதிகரணங்கள்/ 64 ஸூத்ரங்கள் உள்ளன –-இதுவரை பத்து பாதங்களால் மோக்ஷத்திற்கான தத்வ ஞானம் உறுதி செய்யப் பட்டது மேல் வரும் ஆறு பாதங்களாலே பர ப்ரஹ்ம பிராப்தி என்னும் பலத்துடன் அதுக்கு ஹேதுவான உபாஸனத்தையும் விளக்கப் பட இருக்கிறது-ப்ரஹ்ம உபாஸனத்தில் இச்சை பிறக்க ப்ரஹ்மமே பலம் தருவது என்பது வரை கூறப்பட்டது-இப்போது அந்த உபாசன விஷயத்தில் ஓர் இடத்தில் கூறப்பட்ட குண விசேஷங்களை மற்றோர் வித்யையிலும் அனுசந்தானம் செய்ய ஏற்றுக் கொள்வதாகிற குண உப ஸம்ஹாரத்தையும் கூறப்பட்ட குணங்களை அதே வித்யையில் மட்டும் அனுசந்தானம் செய்வது என்னும் விகல்பத்தையும் தீர்மானிக்க பேத அபேத சிந்தை செய்யப் படுகிறது-வித்யைகள் ஒன்றுக்கு ஓன்று வேறு படாதவைகள் என்றால் குணங்களை உப சம்ஹாரம் செய்யலாம் வித்யை களுக்குள் பேதம் உண்டு என்னில் விகல்பம் தான் என்று கருத்து-இந்த பேத அபேதங்கள் இப்பாதத்தில் ஒத்தவை அல்ல ஆயினும் அவை குண ஸம்ஹாரத்திற்கு நிமித்தங்களே-இந்தப் பாதத்தில் குண சம்ஹாரம் உண்டா இல்லையா என்பது விசாரிக்கப் படுவதால்இதற்கு குண சம்ஹார பாதம் என்ற பெயர் ஆயிற்று

முதல் அதிகரணம் -சர்வ வேதாந்த ப்ரத்யய அதிகரணம்- 5 ஸூத்ரங்கள்–
வைச்வாநர வித்யை-தஹர வித்யை போன்ற வேத சாகைகளில் ஓதப்படும்
அனைத்தும் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

இரண்டாவது அதிகரணம் -அந்யதாத்வ அதிகரணம் -4 ஸூத்ரங்கள்–
சாந்தோக்யம் மற்றும் ப்ருஹத் உபநிஷத்தில்,சொல்லும் உத்கீத வித்யைகள்
வெவ்வேறு என்று நிரூபிக்கப் பட உள்ளது-

மூன்றாவது அதிகரணம் -சர்வாபேத அதிகரணம் -1-ஸூத்ரம்-
சாந்தோக்யம் கௌஷீதகீ உபநிஷத்துக்களில் கூறப்படும் பிராண வித்யை என்பது
ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

நான்காவது அதிகரணம் -ஆனந்தாத் யதிகரணம் 7 -ஸூத்ரங்கள்-
ப்ரஹ்ம ஆனந்த மயம் -அவிகாராய -ஞான மயம் -அபரிச்சேத்யம்-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் -ஆகிய
ஐந்து குணங்களும் ப்ரஹ்ம வித்யையில் படிக்கப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

ஐந்தாவது அதிகரணம் -கார்யாக்யா நாதிகரணம் –1-ஸூத்ரம்-
ஆசமனம் செய்யும் நீர் பிராணனுக்கு வஸ்த்ரமாக உள்ளது என்று நிரூபிக்கப் படுகிறது –

ஆறாவது அதிகரணம் -சமா நாதிகரணம் –1-ஸூத்ரம்–
சுக்ல யஜூர் வேதம் -அக்னி ரஹச்யம்-ப்ருஹத் ஆரண்யகம் -இரண்டு உபநிஷத்களிலும் உள்ள
சாண்டில்ய வித்யைக்குள் -ரூபத்தில் வேறுபாடு இல்லாததால் – இரண்டும் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது-

ஏழாவது அதிகரணம் -சம்பந்தாதி கரணம் –3 -ஸூத்ரங்கள்-
ஆதித்யனை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம்-அந்தராதித்ய வித்யை –
கண்களை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம் அஷி வித்யை என்பதும் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

எட்டாவது அதிகரணம் -சம்ப்ரு யதிகரணம் –1-ஸூத்ரம்-
கட உபநிஷத்தில் உள்ள சம்ப்ருதி -அனைத்து வல்லமை உடன் இருத்தல் -த்யு வ்யாப்தி -தேவ லோகத்தில் பரவி இருத்தல் –
ஆகியவை அனைத்து வித்யைகளிலும் உபாசிக்க வேண்டியவை அல்ல என்று நிரூபிக்கப் படுகிறது –

ஒன்பதாவது அதிகரணம் -புருஷ வித்யாதிகரணம் –1-ஸூத்ரம்–
சாந்தோக்யம் தைத்ரியம் இரண்டிலும் முழங்கப் படும் புருஷ வித்யைகளில் ரூபம் வேறுபடுவதால்
அவை வெவ்வேறு வித்யைகள் என்று நிரூபிக்கப் படுகின்றன –

பத்தாவது அதிகரணம் -வேதாத்யதிகரணம்—1-ஸூத்ரம் –
தைத்ரிய சீஷா வல்லியில் உள்ள சில மந்த்ரங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் அல்ல என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -11- ஹான்நயதி கரணம் —1-ஸூத்ரம் –
புண்ய பாப கர்மங்கள் மோஷம் பெறுபவனை விட்டு விலக்கி மற்றவர்களுடன் சேர்த்து விடுகின்றன -என்று
அனைத்து வித்யைகளிலும் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -12- சாம்பராய திகரணம்–5 -ஸூத்ரங்கள்- –
உபாசகனின் கர்மம் முழுவதும் அவன் உடலை விட்டு கிளம்பும் காலத்தில் அழிந்து விடுகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -13–அநிய மாதிகரணம் —1-ஸூத்ரம்-
அனைத்து வித்தைகளுக்கும் அர்ச்சிராதி மார்க்கம் பொது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -14-அஷரத்யதி கரணம் –2–ஸூத்ரங்கள்–
ப்ரஹ்மத்தின் அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் போன்ற மேன்மைகள் அனைத்து வித்யைகளிலும் ஓதப்பட வேண்டும் நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -15-அந்தரத்வாதிகரணம் -3- ஸூத்ரங்கள்–
ப்ருஹத் உபநிஷத்தில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் ஓதப்படும் வித்யைகள் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -16-காமாத்யதிகரணம் -3- ஸூத்ரங்கள்–
சாந்தோக்யம் ப்ருஹத் இரண்டிலும் கூறப்படும் தஹர வித்யை ரூபம் ஒன்றாதலால் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது

அதிகரணம் -17- தந் நிர்த்தாரணா நியமாதி கரணம் –1-ஸூத்ரம்–
சாந்தோக்யத்தில் உள்ள உத்கீத உபாசனங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ள
யாகங்களில் இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -18-பிரதாணாதிகரணம்—1-ஸூத்ரம்–
அபஹத பாப்மா போன்ற குணங்களை உபாசிக்கும் பொழுது தஹர ஆகாசம் என்னும் ப்ரஹ்மத்தின்
ஸ்வரூபமும் உபாசிக்கப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -19-நாராயண அநுவாகம்
ப்ரஹ்ம வித்யையின் மூலம் உபாசிக்கப்படும் பரம் பொருள் எந்த தேவதை என்று உணர்த்தவே என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -20-பூர்வ விகல்பாதி கரணம் -7-ஸூத்ரங்கள் –
அக்னி கிரியாமயமான யாக அங்கம் அல்ல -வித்யாமயமான யாக அங்கமே என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -21-சரீரே பாவதி கரணம் -2-ஸூத்ரங்கள் –
சாதன தசையில் அனைத்து வித்யைகளிலும்-தன்னைப் பாவங்கள் அற்றவன் முதலான ஸ்வரூபம் உள்ளதாகவே
ஜீவன் உபாசித்துக் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

அதிகரணம் -22-அங்காவபத்தா திகரணம் -2-ஸூத்ரங்கள் –
சாந்தோக்யத்தின் உத்கீத உபாசனைகள் அனைத்து சாகைகளிலும் தொடர்பு உடையவை ஆகும் என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -23-பூமஜ்யாயஸ் த்வாதி கரணம் -1 ஸூத்ரம் –
சாந்தோக்யத்தில் கூறப்பட்ட பூரணமான வைச்வாநர உபாசகமே சரியானது என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -24-சப்தாதி பேதாதி கரணம்-1 ஸூத்ரம் –
சத் வித்யை தஹர வித்யை போன்ற ப்ரஹ்ம
வித்யைகள் ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டவை என்று நிரூபிக்கப் படுகிறது –

அதிகரணம் -25-விகல்பாதிகரணம்-2-ஸூத்ரங்கள் – –
ப்ரஹ்ம வித்யைகளில் ஏதேனும் ஒன்றைப் பற்றினாலும் பலன் கிட்டுமே –

அதிகரணம் -26-யதாச்ரய பாவ அதிகரணம்–6 ஸூத்ரங்கள்-
உத்கீத உபாசனம் அனைத்து யாகங்களிலும் அங்கம் அல்ல என்று சிலர் மீண்டும் ஆஷேபிக்க சமாதானம் கூறுகிறது-

————

இனி, ஸாத₄ந அத்யாயம் என்ற இந்த மூன்றாவது அத்யாயத்தின் முக்கியமான விஷயத்தை விவரிக்கிறார். ஸாத₄நம் என்றால் மார்கம் -வழி என்று பொருள். மோக்ஷத்தை அடைவதற்கான வழியை ஆராயும் அத்யாயம் தான் ஸாத₄ந அத்யாயம்–உபநிஷத்துக்களில் மோக்ஷம் அடைய ஆசைப்படுபவன் பர ப்ரஹ்மமான ஶ்ரீமந் நாராயணனைத் த்யானம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. த்யானம் என்றால் பரமாத்மாவை இடை விடாமல் அன்போடு தொடர்ந்து நினைப்பது. இந்த த்யானம் தான் பக்தி மார்கம் என்றும் உபாஸனம் என்றும் வித்யை என்றும் கூறப்படுகிறது.-ப்ரஹ்மத்தை உபாஸனம் செய்ய பலவிதமான வித்யைகள் உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டுள்ளன. பரமாத்மாவுக்கு எண்ணிறந்த கல்யாண குணங்கள் உள்ளபடியால், அதில் ஒரு சில குணங்களோடு அவரைத் த்யானிப்பது ஒரு வித்யை , வேறு சில குணங்களோடு கூடியவராக த்யானிப்பது வேறொரு வித்யை ஆகும். சாண்டில்ய வித்யை , த₃ஹர வித்யை , ஸத்₃வித்யை , பூ₄ம வித்யை , அந்தராதி₃த்ய வித்யை முதலான 32 வித்யைகள் உபநிஷத்துகளில் கூறப்பட்டுள்ளன.

இப்போது இந்த மூன்றாவது பாதத்திற்கு கு₃ண உப ஸம்ஹார பாதம் என்று பெயர். கு₃ணம் என்றால் பரமாத்மாவின் பண்புகள். உப ஸம்ஹாரம் என்றால், ஓரிடத்தில் சொல்லப்பட்ட விஷயத்தை மற்ற இடங்களில் சேர்த்துக் கொள்வது. இந்தப் பாதத்தில் செய்யப்படும் ஆராய்ச்சி யாதெனில் – உபநிஷத்துக்களில் ஓரிடத்தில் சொல்லப்பட்ட பரமாத்மாவின் குணங்களை அந்தப் பகுதியில் சொல்லப்பட்ட வித்யை யில் மட்டும்தான் சேர்த்துக் கொண்டு த்யானிக்க வேண்டுமா (விகல்பம்) ? அல்லது வேறு இடத்தில் சொல்லப்பட்ட வித்யையிலும் இவற்றை சேர்த்துக் கொண்டு த்யானிக்க வேண்டுமா (உப ஸம்ஹாரம்)?

இதை முடிவு செய்ய,வேறொரு ஆராய்ச்சி தேவை – வெவ்வேறு உபநிஷத்களில் கூறப்பட்டுள்ள ப்ரஹ்ம வித்யைகள் ஒன்றா? வேறா? என்று. இரண்டு இடங்களில் சொல்லப்பட்ட வித்யைகள் ஒன்று தான் என்றால், உப ஸம்ஹாரம் செய்ய வேண்டும், அதாவது, ஓரிடத்தில் சொல்லப்பட்ட குணங்களை மற்றோர் இடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வித்யைகள் வெவ்வேறானவை என்றால், விகல்பம் தான், அதாவது, அந்தந்த குணத்தை அங்கங்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்-எனவே குணங்களுக்கு உப ஸம்ஹாரமா விகல்பமா என்ற அறிவதற்காக வித்யைகள் ஒன்றா வேறா என்று ஆராயப்படுகிறது.

பூர்வ மீமாம்ஸையில் கர்மங்களின் வேறுபாடு
இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு முன்னால், வேதத்தில் சொல்லப்பட்ட யாகம், ஹோமம், தானம் முதலான கர்மங்களைப் பற்றி ஆராய்வதற்காக மஹரிஷி ஜைமிநி எழுதிய பூர்வ மீமாம்ஸா அல்லது கர்ம மீமாம்ஸா என்று அழைக்கப்படும் ஸாஸ்த்ரத்திலிருந்து ஒரு சில கருத்துக்களை நாம் அறிந்து கொண்டால் மேலே செய்யப் போகும் ஆராய்ச்சிக்கு உதவும்.

பூர்வ மீமாம்ஸையின் இரண்டாம் அத்யாயத்தில், (பேத அத்யாயம்)வேதத்தில் சொல்லப்பட்ட கர்மங்களின் (செயல்களின்) வேறுபாட்டை எப்படி அறிய வேண்டும் என்று ஆராய்கிறார் ஜைமிநி. அந்தக் கர்மத்தைக் காட்டிலும் இந்தக் கர்மம் வேறு என்று அறிய ஆறு ப்ரமாணங்கள் (கருவிகள்) உள்ளன என்று அவ் விடத்தில் நிரூபிக்கிறார்.
1-சப்₃தா₃ந்தரம்
– சப்தாந்தரம் என்றால் ’வேறு சொல்’. வெவ்வேறு வினைச் சொற்களால் குறிக்கப்படும்
செயல்கள் வெவ்வேறு கர்மங்களாகத் தான் இருக்க வேண்டும். எடுத்துக் காட்டு – யாகம் செய், ஹோமம் செய், தானம் செய் என்ற கட்டளைகளில், யாகம் தானம் ஹோமம் என்ற வெவ்வேறு சொற்களால் சொல்லப் படுகிற படியால் அந்தக் கர்மங்கள் வெவ்வேறு தான். யாகமும் ஹோமமும் ஒன்றாகாது.

2-அப்₄யாஸ: – அப்₄யாஸம் என்றால் திரும்பத் திரும்பச் சொல்லுதல். வேதத்துக்கு ஒரு பண்பு உள்ளது –
’ஒவ்வொரு வாக்கியமும் புதிதான அர்த்தங்களை மட்டுமே சொல்லும், முன்னமே அறியப்பட்ட அர்த்தங்களைச் சொல்லாது’ என்று. ஆகையால், வேதத்தில் எங்காவது ’யாகம் செய்’, ’யாகம் செய்’ என்று இரண்டு கட்டளைகள் காணப்பட்டால், அவை இரண்டும் ஒரே யாகத்தைச் செய்யச் சொல்கின்றன என்று கொள்ள முடியாது, இரண்டாவது வாக்கியம் வீணானபடியால். எனவே , இரண்டு வாக்கியங்களால் கட்டளையிடப்படும் யாகங்கள் இரண்டும் வெவ்வேறு என்றே கொள்ள வேண்டும்.

3-ஸம்க்₂யா – ஸம்க்₂யா என்றால் எண்ணிக்கை . வேதத்தில் கர்மங்களைக் கட்டளை யிடும் போதே , அவற்றை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை யோடு சேர்த்துச் சொல்லி யிருந்தால், கண்டிப்பாக அவ் விடத்தில் கர்மங்களில் வேறுபாடு உள்ளது என்று தான் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டு – ’மூன்று ஹோமங்களைச் செய்’ என்ற வேதம் சொன்னால், அது வெவ்வேறு ஹோமங்கள் இங்கு சொல்லப் படுகின்றன என்று தான் ஏற்க வேண்டும்.

4-ஸம்ஜ்ஞா – ஸம்ஜ்ஞா என்றால் பெயர். இரண்டு வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்படும் யாகங்கள்
வெவ்வேறாகத் தான் இருக்க வேண்டும். பெயர் என்பது குறிப்பிடும் வசதிக்காகத் தான். எனவே ஒரு யாகத்துக்கு ஒரு பெயர் போதுமானது. எனவே வெவ்வேறு பெயர்களை உடைய யாகங்கள்
வெவ்வேறாகத் தான் இருக்கும்.

5- கு₃ண: – குணம் என்றால் பண்பு. சில பண்புகளோடு கூடிய ஒரு யாகத்தைச் சொல்லி விட்டு,அதற்குப் பிறகு முரண்பட்ட வேறொரு பண்போடு கூடிய யாகத்தை வேதம் கூறினால், அது கண்டிப்பாக
வேறொரு யாகமாகத் தான் இருக்க வேண்டும். எடுத்துக் காட்டு – “பாலைக் கொண்டு ஹோமம் செய்” என்று ஒரு புதிதான ஹோமத்தைச் சொல்லி விட்டு, அதற்குப் பின் “தயிரைக் கொண்டு ஹோமம் செய்” என்று வேதம் கூறினால், இந்த இரண்டவது வாக்கியத்தில் சொல்லப்படும் ஹோமம் வேறொரு ஹோமமாகத் தான் இருக்க முடியும், முதல் ஹோமத்தில் பால் என்ற பொருள் முன்னமே சொல்லப் பட்டு விட்டபடியால்.(இந்த்ரனைக் குறித்து யாகம் செய் -ஸூர்யனைக் குறித்து யாகம் செய் என்னும் பொழுதும் வேறே வேறே யாகங்களையே குறிக்கும்)

6- ப்ரகரணாந்தரம் ् – ப்ரகரணாந்தரம் என்றால் வேறு ப்ரகரணம். வேதத்தில் பல பகுதிகள் உள்ளன.ஒரே விஷயத்தைப் பற்றி (யாகமோ , ஹோமமோ , வேறொன்றோ ) பேசக் கூடிய வேதப் பகுதிக்குப் ப்ரகரணம் என்று பெயர். ஒரு ப்ரகரணத்தில் ஒரு யாகத்தைச் சொல்லி விட்டு, வேறொரு ப்ரகரணத்தில் அதே போல் தோற்றும் யாகத்தைச் சொல்லி யிருந்தாலும், அந்த யாகம் வேறொன்று என்று தான் கொள்ள வேண்டும், ப்ரகரணம் மாறிவிட்டபடியால்.(சைந்தவம் உப்புக்கும் குதிரைக்கும் பெயர் -இரண்டும் கடலில் இருந்து வந்ததால் -சாப்பிடும் பொழுது சொன்னால் உப்பையே குறிக்கும் -ராஜா வேட்டைக்குச் செல்லும் பொழுது அதே சொல்லுக்கு குதிரையைக் குறிக்கும்)

இப்படி யாகம் முதலான கர்மங்களுக்குள் உள்ள வேறுபாட்டை அறிய ஜைமிநி கூறுய கருவிகளைக் கொண்டு உபநிஷத்துக்களில் உபாஸனங்களுக்குள் இருக்கும் வே றுபாட்டையும் அறியலாம். இது இந்த பாதத்தில் செய்யப்பட உள்ளது

பூர்வ மீமாம்ஸையில் கர்மங்களின் ஐக்யம்
இது வரை இரண்டு கர்மங்களுக்குள் உள்ள வேறுபாட்டை அறிவதற்கான வழிகளைப் பூர்வ மீமாம்ஸையில் சொன்னபடி பார்த்தோம். அதே பூர்வ மீமாம்ஸையில் எப்போது இரண்டு வித்யைகள் ஒன்று தான் (ஐக்யம்) என்று கொள்ள வேண்டும் என்பதையும் மஹரிஷி ஜைமிநி கூறுவதால், அதுவும் நமக்கு இப்போது தேவையானது.

பூர்வ மீமாம்ஸையில் இரண்டாம் அத்யாயத்தின் நான்காவது பாதத்தில் இரண்டாவது அதிகரணம் சாகா₂ந்தராதி₄கரணம் (2-4-2-) என்றும், அதில் சொல்லப்பட்ட ந்யாயம் ஸர்வ சாகா₂ ப்ரத்ய்ய ந்யாயம் என்றும் கூறப்படுகிறது. அந்த அதிகரணத்தின் சுருக்கம் பின் வருமாறு –
பூர்வபக்ஷம் – வேதங்களில் இரண்டு வெவ்வேறு சாகைகளில் சொல்லப்பட்ட கர்மங்கள் வெவ்வேறாகத் தான் இருக்க வண்டும், ஏனென்றால் அப்யாஸம் (திரும்பத் திரும்பச் சொல்லுதல்) என்ற ப்ரமாணம் உள்ளது. ஒரு சாகையில் சொல்லப்பட்ட அதே கர்மத்தை வேறொரு சாகையில் வேதம் கட்டளை யிட்டால், சொன்னதையே திரும்பச் சொல்வதாக ஆகுகையால் வேதத்துக்கு தோஷம் வரும். எனவே , இரண்டும் வெவ்வேறு தான்.(ரிக் வேதத்தில் 9 சாகைகள் -யஜுர் வேதத்தில் 15-20 சாகைகள் -சாமவேதத்தில் 1000 சாகைகள் உண்டு)

ஸித்தாந்தம் – ஏகம் வா ् ஸம்யோக₃ ரூப சோத₃நா ஆக்₂யா அவிசேஷாத்-
ஏகம் வா
– இரண்டு சாகைகளிலும் சொல்லப்பட்ட கர்மம் ஒன்று தான்
ஸம்யோக₃ -பயனும் ரூப வடிவமும்
சோத₃நா -கட்டளை வாக்கியமும்
ஆக்₂யா -பெயரும்
அவிசேஷாத் -மாறாதபடியால்

இரண்டு சாகைகளில் சொல்லப்பட்ட கர்மங்களுக்கும் பெயரும், பயனும், வடிவமும் (எந்த தேவதையைக் குறித்து எந்தப் பொருளைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும் என்பதும்), கட்டளை யிடும் வாக்கியமும் ஒன்றாக இருந்தால், அவ் விரண்டு கர்மங்களும் ஒன்று என்று தான் கொள்ள வேண்டும்

அப்யாஸம் (திரும்பத் திரும்பச் சொல்லுதல்) என்ற தோஷமும் வராது. ஏனென்றால், ஒருவர் ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது தோஷமல்ல; ஒருவர் ஒரு விஷயத்தை ஒருவருக்கே திரும்பத் திரும்பச் சொல்வது தான் தோஷம். இங்கு இரண்டு சாகைகளையும் கற்கும் மக்கள் வெவ்வேறான படியால், அவரவர்க்கு அந்தந்த சாகையில் உள்ள ஒரு வாக்கியம் ஒரே முறை தான் இக் கர்மத்தை உபதேசிப்பதால், அப்யாஸமே இவ் விடத்தில் இல்லை . எனவே இந்தக் கர்மங்களில் வேறுபாடில்லை , இரண்டும் ஒரே கர்மம் என்று தான் கொள்ள வேண்டும்

3-3-1-ஸர்வ வேதாந்த ப்ரத்யயாதி₄கரணம்-பல உபநிஷத்துக்களில் ஒரே கர்மம் -அதிகரணத்தின் பின்புலம் -ஸங்கதி –-ஓர் உபநிஷத்தில் ஒரு வித்யையில் சொல்லப்பட்ட பரமாத்மாவின் குணங்களை
மற்றொரு உபநிஷத்தில் சொல்லப்பட்ட வித்யையில் சேர்த்துக் கொள்ளுதல் உப ஸம்ஹாரம் ஆகும். அந்தந்த இடத்தில் சொல்லப்பட்ட பரமாத்மாவின் குணங்களை அந்தந்த இடத்திலுள்ள வித்யையில் மட்டும் வைத்து த்யானித்தல் விகல்பம் ஆகும்.இவற்றில் எது சரி என்ற ஆராய்ச்சி இந்த பாதத்தில் முக்கியமானது. அதற்காக, இரண்டு உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட வித்யைகள் வெவ்வேறா ? அல்லது ஒன்றா ? என்று ஆராய வேண்டும். இந்த முதல் அதிகரணத்தில் இதைத்தான் வ்யாஸர் ஓரிடத்தில் ஆராய்கிறார். ஒர் வித்யை என்றால் உப ஸம்ஹாரம் செய்ய வேண்டும், வெவ்வேறு என்றால் விகல்பம் ஏற்படும் என்று கருத்து

ஸந்தேஹம் – சாந்தோக்யம் மற்றும் ப்ருஹதாரண்யக உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ள வைஶ்வாநர வித்யை போன்ற ப்ரஹ்ம வித்யைகள் ஒரே வித்யையா? அல்லது அவை வெவ்வேறு வித்யைகளா ?

பூர்வ பக்ஷம் – பூர்வ மீமாம்ஸையில் கூறப்பட்டுள்ை நியாயங்களின் படி, அவை வெவ்வேறு வித்யைகள் தான்.முதலில், அப்₄யாஸம் அதாவது மீண்டும் மீண்டும் உபதேசிக்கப்படுவது இங்கு காணப்படுகிறது. வேதம் ஒரே செயலை இரண்டு முறை கட்டளை யிட முடியாது. எனவே இவை வெவ்வேறு வித்யைகள் தான்-மேலும், இந்த உபதேசங்கள் இரண்டும் வெவ்வேறு ப்ரகரணங்களில் கூறப்பட்டிருப்பதாலும், ப்ரகரணாந்தரம் என்ற ப்ரமாணத்தால் அவற்றை ஒரே வித்யை என்று கொள்ள
முடியாது. ஆக, வெவ்வேறு உபநிஷத்துகளில் கூறப்படும் வித்யைகள் வெவ்வேறானவையே –

பூர்வ மீமாம்ஸை சாஸ்த்ரத்தில் எற்கனவே ஆராயப்பட்ட இவ் விஷயத்தை இங்கு ப்ரஹ்ம ஸூத்ரங்களில் மறுபடியும் ஆரய்வதற்குக் காரணம் – இங்கு ஸந்தேகத்துக்கு அதிகப்படியான ஒரு காரணம் உள்ளது.-தேஷாமேவ ஏதாம் ப்₃ரஹ்ம வித்₃யாம் வதே₃த ஶிரோ வ்ரதம் விதி₄வத் யைஸ்து சீர்ணம்) என்று ஸ்ருதி கூறுகிறது. அதாவது, “விதிப்படி ஶிரோ வ்ரதம் என்ற வ்ரதத்தை அனுஷ்டித்தவர்களுக்கு மட்டுமே இந்தப் ப்ரஹ்ம வித்யையை உபதேசிக்க வேண்டும்” என்று கூறுகிறது.-இந்த ஶிரோ வ்ரதம் என்பது அதர்வண வேத சாகையைச் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு விசேஷ விரதமாகும். எனவே , இந்த வித்யை அதர்வண வேத சாகயைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உரியது என்று இந்த விதி காட்டுகிறது.-எல்லாச் சாகைகளிலும் கூறப் படும் வித்யை ஒன்றே என்று ஏற்றுக் கொண்டால், மற்ற வேத சாகைகளைச் சேர்ந்தவர்களும் இந்த ஶிரோ வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படியானால், இந்த விதி அதர்வண வேதத்தாருக்கு மட்டுமே என்று கூறியதற்குப் பொருள் இருக்காது. ஆகவே , இந்த வித்யைகள் ஒன்றல்ல; வெவ்வேறானவையே

வெவ்வேறு உபநிஷத்துக்களிலும் ஒரே வித்யையே -ஸித்தாந்தம் – (1) ஸர்வ வேதா₃ந்த ப்ரத்யயம் சோத₃நாத்₃ யவிசேஷாத்
ஸர்வ வேதா₃ந்த ப்ரத்யயம்
— எல்லா வேதாந்தங்களிலும் அறியப்படும் (வித்யை ஒன்றே-ஏகமே );
சோத₃நா — கட்டளை
ஆதி — பெயர், வடிவு, பலன் ஆகியவற்றில்;
அவிசேஷாத் — வேறுபாடு இல்லாததால்.

பூர்வ மீமாம்ஸையில் கூறப்பட்ட ஸர்வ சாகா₂ ப்ரத்யய ந்யாயம் இங்கும் பொருந்துகிறது. எனவே , பல்வேறு உபநிஷத்துகளில் கூறப்படும் வைஶ்வாநர வித்யை போன்ற வித்யைகள், வெவ்வேறு வித்யைகள் அல்ல; ஒரே வித்யையின் பல்வேறு விளக்கங்களே .
சோத₃நா (கட்டளை ): சாந்தோக்ய உபநிஷத்திலும், வாஜஸநேய சாகையிலும் (வைஶ்வாநரம் உபாஸ்தே ) அதாவது “வைஶ்வாநரனை உபாஸிக்க வேண்டும்” என்ற ஒரே கட்டளை கூறப்படுகிறது.
ரூபம் (உபாஸனத்தின் வடிவு):-உபாஸனத்தின் என்பது த்யானம். அதில் வேறுபாடு என்பது த்யானிக்கப்படும் பொருளின் வேறுபாட்டால் மட்டும் தான் ஏற்படும். இந்த வித்யையிலோ இரண்டு உபநிஷத்துக்களிலும் உபாஸிக்கப்பட வேண்டியவர் உலகங்களை யெல்லாம் தனக்கு உடலாகக் கொண்ட ஒரே வைஶ்வாநர ப்ரஹ்மம் தான். எனவே , வித்யைகளின் வடிவமும் ஒன்றே .
ஆக்₂யா (பெயர்): எல்லா இடங்களிலும் இந்த உபாஸனை வைஶ்வாநர வித்யை என்ற ஒரே பெயரால் அறியப்படுகிறது.
ஸம்யோகம் (பலன்): எல்லா இடங்களிலும் இந்த வித்யையின் பலன் ப்ரஹ்ம ப்ராப்தி (ப்ரஹ்மத்தை அடைதல்) என்பதே .-
ஆகவே , பல்வேறு வேத சாகைகளில் கூறப்பட்டாலும், “அந்த வைஸ்வாநர வித்யை தான் இதுவும்” என்கிற ப்ரத்யபி₄ஜ்ஞா என்னும் அறிவு ஏற்படுவதால் வைஶ்வாநர வித்யை ஒன்றே .-

2-பே₄தா₃த் ந இதி சேத் ஏகஸ்யாமபி
பேதா₃த்
— (அப்₄யாஸம், ப்ரகரணாந்தரம் என்ற ப்ரமாணங்களால்) வித்யைகளில் வேறுபாடு இருப்பதால்;
— (வித்யைகள்) ஒன்றல்ல;
இதி சேத் — இவ்வாறு கூறினால்; ஏகஸ்யாமபி — ஒரே வித்யையானலும் (அவை இருக்கலாம்).

பூர்வ பக்ஷியின் கேள்வி – திரும்பத் திரும்பச் சொல்வது வீணானபடியால் இவை யிரண்டும் ஒரே வித்யையாக இருக்க இயலாது

ஸித்தாந்தியின் பதில் – இங்கு அப்₄யாஸம் (திரும்பத் திரும்பச் சொல்லுதல்) என்னும் தோஷமே இல்லை .

சிரோ வ்ரதம் த்யானத்தின் அங்கமா? கல்வியின் அங்கமா?
ஒரே நபருக்கே , ஒரே விஷயம் மீண்டும் மீண்டும் உபதேசிக்கப்பட்டால் மட்டுமே அது அப்₄யாஸம் ஆகும். அது போலவே , ஒரே நபருக்கே வெவ்வேறு ப்ரகரணங்களில் ஒரே மாதிரியான வித்யைகள் மீண்டும் கட்டளை யிடப்பட்டால் மட்டுமே , அதனால் புதிய வித்யை ஒன்று கூறப்படுகிறது என்று கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.-ஆனால், வெவ்வேறு சாகைகளை ஒருவரே அத்யயனம் செய்யப் போவதில்லை . எனவே சாந்தோக்யத்தில் உள்ள வாக்கியம் அந்த சாகையைப் படிப்பவர்களுக்கு வைஸ்வாநர வித்யையை உபதேசிக்கிறது, ப்ருஹதாரண்யகத்தில் உள்ள வாக்கியம் அந்த சாகையைப் படிப்பவர்களுக்கு வைஸ்வாநர வித்யையை உபதேசிக்கிறது. எனவே , அங்கு திரும்பத் திரும்பச் சொல்லுதல் என்ற தோஷமே இல்லை .-அதனால் இவை வெவ்வேறு வித்யைகள் என்று கொள்ள எந்தக் காரணமும் இல்லை

3-ஸ்வாத்₄யாயஸ்ய ததா₂த்வே ஹி ஸமாசார அதி₄காராச் ச ஸவவச் ச தந் நியம:
“ஶிரோ வ்ரதத்தை அனுஷ்டித்தவர்களுக்கே இந்த வித்யை உரியது” என்று ஒரு நியமத்தால் வித்யைகள் வேறுபடுகின்றன என்று கூறுவது பொருந்தாது. ஏனெனில், அந்த நியமம் வித்யைக்காக அல்ல; வேத அத்யயனத்திற்காகவே விதிக்கப்பட்டது.”
ஹி— ஏனெனில்;
ஸ்வாத்₄யாயஸ்ய — வேத அத்யயனத்திற்கே ;
ததா₂த்ரே — சிரோ வ்ரதம் அங்கமாக இருப்பதற்காக (உபதேசம்); —
மேலும்;
ஸமாசார — ஸமாசார கிரந்தத்தில்; அதி₄காராத் —வேத வ்ரதம் என்று இது குறிப்பிடப்படுவதால்;
ஸவவத் — ஸவ ஹோமங்களைப் போல; தந் நியம: — அந்த நியமம் பொருந்துகிறது-

பூர்வ பக்ஷீ, “ஶிரோ வ்ரதத்தை அனுஷ்டித்தவர்களுக்கு மட்டுமே இந்தப் ப்ரஹ்ம வித்யையே உபதேசிக்க வேண்டும்” என்ற ஸ்ருதியைக் காட்டி, அதர்வண வேதத்தில் கூறப்படும் வித்யை மற்ற சாகைகளில் கூறப்படும் வித்யைகளிலிருந்து வேறுபட்டது என்று வாதிட்டார்.

(அத்யயனம் -கற்பது-இது வேறு -இதற்க்கு மேல் -அனுஷ்டானம் நிலை வேறே)

அது சரியல்ல. ஶிரோ வ்ரதம் என்பது வித்யையின் அங்கம் அல்ல; வேத அத்யயனத்தின் அங்கம். வேதத்தைப் படிப்பதற்குத் தேவையான ஸம்ஸ்காரத்தை அளிப்பதற்காகவே இந்த விரதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையே (நைதத் அசீர்ண வ்ரத: அதீ₄தே ) என்ற ஸ்ருதி, “இந்த விரதத்தை அனுஷ்டிக்காதவன் இதை அத்யயனம் செய்யக் கூடாது” என்று கூறுவதன் மூலம் தெளிவு படுத்துகிறது. மேலும், ஸமாசாரம் என்னும் கிரந்தத்திலும், (இத₃மபி வேத வ்ரதேந வ்யாக்₂யாதம்)
என்ற விடத்தில் இந்த சிரோ வ்ரதம் வேத வ்ரதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாலும், (உபாசன விரதம் அல்ல -வேத விரதம் என்றும் நிரதேசிப்பதால் )இந்த நியமம் வித்யைக்கானது அல்ல.-அத₂ர்வண வேதத்தில் சொல்லப்பட்ட ஸவ ஹோமங்கள் என்பவை எப்படி அந்த சாகைகளைப் படிப்பவர்களுக்கு மட்டுமானதோ அதே போல் இந்த சிரோ வ்ரதமும். ஆக, இது வித்யையின் பகுதி அல்ல. அதனால் இரண்டிடங்களும் ஒரே வித்யையே கூறப்படுகிறது

வேதமே உப ஸம்ஹாரத்தைக் காட்டுகிறது
4– த₃ர்ஸயதி ச –
“மேலும் (ஸ்ருதி) காட்டுகிறது”
இது வரை , யுக்தியின் மூலம் பல்வேறு வேத சாகைகளில் கூறப்படும் வித்யைகள் ஒன்றே என்று நிறுவப்பட்டது. இப்போது, அதையே ஸ்ருதி ப்ரமாணத்தாலும் ஸூத்ரகாரர் உறுதிப்படுத்துகிறார்.
சாந்தோக்ய உபநிஷத்தில்,(தஸ்மிந் யத₃ந்த: தத் விஜிஞாஸி தவ்யம்) என்று “இதயத்துக்குள் இருக்கும்
பரமாத்மாவுக்குள் உள்ளதை த்யானிக்க வேண்டும்” என்று கூறி, (கிம் தத₃த்ர வித்₃யதே யத₃ந்வேஷ்டவ்யம்), அதாவது “அந்தப் பரமாத்மாவுக்குள் உள்ளது எது?” என்று கேட்டுக் கொண்டு, எட்டு (அபஹத பாப்மாதி )கல்யாண குணங்களைச் சொல்கிறது.(இதுவே தஹர வித்யை )

அதே போல், தைத்திரீய உபநிஷத்திலும், அதே வித்யையைக் குறிப்பிட்டு, “्(தஸ்மிந் தத₃ந்த: தது₃பாஸி தவ்யம்), அதாவது “பரமாத்மாவுக்குள் உள்ளதை உபாஸிக்க வேண்டும்” என்று மட்டும் கூறுகிறது. உள்ளே இருப்பது என்ன என்று ஆராயவே இல்லை . இதற்கு ஒரே கருத்து தான் இருக்க முடியும் – இதே வித்யை தான் சாந்தோக்யத்திலும் சொல்லப்பட்டுள்ள படியால், அங்கிருந்து உள்ளே இருப்பது என்ன என்று தெரிந்து கொள்ளலாம் என்று. ஆகவே , அந்த வித்யைகள் ஒன்றே

5–உப ஸம்ஹார: அர்தா₂பே₄தா₃த் விதி₄சேஷவத் ஸமாநே ச
ஸமாநே —
(வித்யை ) ஒன்றாக இருக்கும் போது;
— கண்டிப்பாக;
உப ஸம்ஹார: — (குணங்களைச் ) சேர்த்துக் கொள்ள வேண்டும்;
விதி₄சேஷவத் — அந்தந்த விதியின் அங்கங்களைப் போல;
அர்தா₂பே₄தா₃த் — பயனில் வேறுபாடு இல்லாததால்;

பல உபநிஷத்துகளில் கூறப்படும் உபாஸனை ஒன்றே என்று நிரூபிக்கப்பட்டதால், அந்த உபாஸனையில் கூறப்படும் கல்யாண குணங்களையும் ஒன்றிலிருந்து மற்றொன்றில் உப ஸம்ஹாரம் செய்ய வேண்டும்.-ஒரு உபநிஷத்தில் ஒரு வித்யையை விதித்து விட்டு, அங்கேயே சில குணங்களைச் சொன்னால், அந்த குணங்களை யெல்லாம் கண்டிப்பாக அந்த வித்யையில் த்யானிக்க வேண்டும் என்று ஏற்றுக் கொள்கிறோம், அந்த குணங்கள் அந்த விதிக்கு சேஷமாக (அங்கமாக -பகுதியாக -உதவுவதாக) இருப்பதால். இதைத் தான் வ்யாஸர் ’விதி₄சேஷம் போல்’ என்கிறார். அதே போல், வேறொரு உபநிஷத்தில் சொல்லப்பட்ட குணமும் இந்த உபாஸனத்துக்கு அதே போன்ற உதவியையே செய்கிற படியால், பயனில் எந்த வேறுபாடும் இல்லை . இதைத் தான் வ்யாஸர் ’அர்த்தத்தில் (பயனில்) வேறுபாடு இல்லாதபடியால்) என்கிறார்-

ஆக, இரண்டு இடங்களிலும் சொல்லப்பட்ட வித்யைகள் ஒன்றானபடியால், இரண்டிடத்தில் சொல்லப்பட்ட குணங்களையும் சேர்த்துத்தான் அந்த வித்யையில் பரமாத்மாவைத் த்யானம் செய்ய வேண்டும் என்று நிச்சயமாயிற்று.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading