ஸ்ரீ ஆசார்ய நூற்றந்தாதி-

Click to access 2015.295141.Alarmeil-Mang-kaiyan-thaatiyum.pdf

யாதும்‌ அறியேன்‌ அதையே அறிந்தன்று
போதரா யென்றே பொருளாக்கும்‌ – நீதியான்‌
ஆசையால்‌ தாளினையே காப்பா அறிந்தின்று
பேசுகின்றேன்‌ வாஞ்சை வரப்‌ பெற்று –காப்புச் செய்யுள்

உய்வு பேற்றுக்குரிய யாதொன்றும்‌ அறியாத அறிவிலி” என்று என்னையறிந்து, அதுவே காரணமாக அடியேனைத்‌ தன்பாலழைத்து மெய்யுணர்வு இன்மையால்‌ அசித்தைப்போல (அறிவற்ற ஜடப்பொருளைப்‌ போல) கிடந்தவனை, மெய்யுணர்வை முற்றும்‌ போதித்து பொருளல்லாத . என்னைப்‌ பொருளாக்கி, சத்தை-யுண்டாம்படி செய்த ஆசாரியன்‌ செயலை இன்றாக அறிந்து மிக்க பிரேமையுற்ற அடியேன்‌, ஆசாரிய நூற்றந்தாதி என்ற வெண்பா யாப்பினால்‌ வாஞ்சையே வடிவாக ஆசாரியன்‌ திருவடிகளை முன்னிட்டுக்‌ கொண்டு இந்நூலை இயற்றுகின்றேன் –

சீரார்‌ வநசச்‌ செழுங்கடல்‌ வந்தமுதின்‌
ஏரார்‌ நிறைபொருள்மார்‌ பேய்ந்துறையும்‌ – ஆரா
வமுத்‌ யமுதமே வேறன்‌ றயிந்தை
எமையாளும்‌ பாடியன்தாள்‌ இங்கு–1-

எம்பெருமான்‌ திருக்கண்‌ வளர்தலால்‌ செழுமையுற்ற பாற்‌ கடலில்‌, (மஹாலக்ஷ்மி) தான்‌ தோன்றுவதற்கேற்ற சிறப்புற்றத்‌ தாமரை மலரில்‌ அமுதத்தோடு வந்தவதரித்து, எல்லாவற்றாலும்‌ அழகுமிக்க ஒத்தார்‌ மிக்காரையில்லாத பரம்பொருளான திருமாலின்‌ திருமார்பில்‌ இறையும்‌ அகலாது. பொருந்தியுள்ள ரூபத்தாலும்‌ குணத்தாலும்‌ பேரழகு வாய்ந்த பெரியபிராட்டியார்‌, அழுதந்தவிர்த்தப்‌ பேறு என்னலாம் படி எம்மையாளும்‌ திருவயீந்திரபுரம்‌ கச்சிக்‌ கிடாம்பி பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின் திருவடியையே பற்றுக்கோடாகப் பற்றி உய்யும்படி அடியேனுக்குப் பேர் அருள் செய்தான் –

இங்கே திரிந்தே எழு பிறப்பும்‌ தீர்ந்தொழிந்தேன்‌
சிங்கப்‌ பிரான் சீர்மை ஆய்ந்தறிந்தேன்‌ – பொங்கும்‌
கருணைக்‌ கடலமு துண்பேன்‌ அமிந்தைத்‌
திருவன்‌ திருவடி சேர்ந்‌ தின்று –2-

இருள்தரு மாஞாலமாகிய இவ்வுலகத்தில்‌ மனம்போனபடி திரிந்த அடியேன்‌ திருவயீந்திரபுரத்தில்‌ வாசஞ்செய்யும்‌ ஸ்ரீமத்‌ பகவத்‌ கைங்கர்யமாகிய செல்வம்‌ நிரம்பப்பெற்ற ஸ்ரீமத்‌ கச்சிக்‌ கிடாம்பி பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின்‌ திருவடிகளை, அவரருளால்‌ இன்று சேர்ந்து தேவ, மனித, விலங்கு, பறப்பன, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்‌ ஆகிய ஏழுவகைத்‌ தோற்றங்களாகப்‌ பிறக்கும்‌ பிறவியொழிந்து, சிங்கப்பிரான்‌ புகழை ஆராய்ந்தறிந்து ஸ்ரீவைகுண்டமாகிய திருநாட்டிற்‌ சேர்ந்து அளவில்லாமல்‌ பொங்கி வழியக்கூடிய பநப்தநாதனின்‌ கருணையை அநுபவிப்பேன் –

இன்றுநாளை யென்றறியேன்‌ கங்குல்
பொன்றுமுட லென்றுநா னென்றறியேன்‌ – பொன்றுவிக்கும்‌
தீதறியேன்‌ யாதறியேன்‌ தேரத்‌ தெரிந்தென்னை
ஒதுவித்த தொண்பொருள்‌ ஒன்று-3-

இன்றென்றும்‌ நாளையென்றும்‌ உலகத்தவம்‌ சொல்லும்‌ கால வேறுபாட்டையும்‌ இவற்றைச்‌ சார்ந்து நிகழும்‌ நிகழ்ச்சிகளின்‌ வேறுபாட்டையும்‌ இவ்வாறே இரவு பகலின்‌ வேறுபாட்டையும்‌ அறியேன்‌. எடுக்கும்‌ பிறவிகள்‌ தோறும்‌ அழிந்து படும்‌ உடல்கள்‌ அவ்வாறு அழியாத நிலை பெற்ற உயிர்களின்‌ நிலைகளையும்‌ அறியேன்‌. அழிவுக்குக் காரணமான அடியேனை நன்கறிந்து இந் நிலை போய்‌ எல்லாவற்றையும்‌ தெளிய அறியும்படி ஒப்பற்ற பொருள்‌ ஒன்று ஒதுவித்தது –

ஒன்றுதான்‌ போதமுநி வேதமுநி நாதமுநி நன்று நலந்தீதுங்‌ காட்டுமுநி – நன்றும்‌ சிவந்த வாய் செம்பவளம் கண் கமலம் ஒன்மை உவந்துளத்துப்‌ பாடியனென்‌ றோர் -4-

ஒதுவித்த அழகிய பொருள்‌ யாதெனின்‌? மனனஞ்‌ செய்து மெய்யுணர்வை நிரம்பப்‌ பெற்றதும்‌, இதைப் பிறருக்கு அறிவிப்பதையே தொழிலாக வுடையதும்‌, நல்லொழுக்கத்தில்‌ ஏவுவதும்‌ மற்றுள்ள நல்லதும்‌ தீயதும்‌ காட்டக்கூடிய நன்கு சிவந்த தாமரைப் போன்ற வாயையும்‌ தாமரைப்‌ போன்ற இதழ்களை யுடையதும்‌ அழகிய கைகளை யுடையதும்‌ எல்லார்‌ திறத்தும்‌ நன்மையே வேண்டுவதுமான பாஷ்யமா சாரியரே யாகுமாம் –

ஓரடி முந்தமற்‌ றோரடி முந்தவதின்‌
ஈரடியும்‌ சேர்ந்தென்னை ஏற்பதே? – ஈரடியக்‌
சேர்ந்திணைந்‌ தன்றன்றே சேமமாம் ஆறுபயன்‌
ஒர்ந்திணைந்‌ துள்ளதெம்‌ பால்‌–5–

அடியேனை ஏற்பதற்காக ஓரடிமுற்பட்டு வர, அதைக்காட்டிலும்‌ இன்னொரு திருவடி முற்பட, இப்படி ஈரடியும்‌ சேர்ந்தென்னை ஏற்றது வியப்பன்றோ? இதன்றி இந்த இரண்டு திருவடிகளும்‌ சேர்ந்தே சாதனமும்‌ பயனுமாகும்‌ என்பதை யானறியேன் –

எம்பெரு மானார்‌ இசைத்ததாக்‌ கேட்டதுண்டு
நம்பும்‌ படி யொன்றும்‌ நானறியேன்‌ – வம்பெதற்கு?
வீடில்நாள்‌ மூன்றில்‌ முமுச்சுபடி மெய்ப்பித்த
பாடியனே பெற்றேன்‌ பயன்‌–6-

உஜ்ஜீவனத்துக்‌ கேதுவாக எம்பெருமானார்‌ ஸ்ரீபாஷயம்‌ அருளிச்‌ செய்துள்ளதாகக்‌ கேளவிப்படுகிறோம்‌, அதை நேர் கண்டறிந்ததில்லை. ஸ்ரீபாஷ்யத்தில்‌ சீக்கிரமாகப்‌ பல ப்ராப்தி உண்டு, இல்லை யென்‌கிற வம்பெதற்கு? நிரந்தரமாக மூன்று நாட்களில்‌ முமுக்ஷுப்படி என்கிற திருமந்திரார்த்தத்தை உள்ளவாறு கேட்பித்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளையே அடியேற்குப்‌ பயனாகப்‌ பெற்றேன்‌-

பயனுற்ற தொன்றன்றே பாவிரித்தான்‌ மாறன்‌ உயர்வசந பூடணம்‌ ஓதி – நயந்துரைத்தான்‌ தத்துவ மூன்றின்‌ தகவனைத்தும்‌ தானோக்கி வித்தகன்நீ! யென்றான்‌ வியந்து–7-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளைப்‌ பயனாக மட்டுமோ பெற்றோம்‌? இவரால்‌ மாறன் கலையாகிற பகவத்‌ விஷயத்தை உரைக்கப் பெற்றேன்‌;ஸ்ரீவசன பூஷணம்‌ உரைக்கப்‌ பெற்றேன்‌; இங்ஙனே தத்வ த்ரயமும்‌ அருளப்‌ பெற்றேன்‌; இவற்றைக்‌ கேட்ட தன்மையைக்‌ கண்டு வியந்து ‘நீ வித்தகன்‌” என்று அவரால்‌ அருளப் பெற்றேன் –

வியந்தான்‌ உகந்தான்‌ விரிகமலம்‌ நோக்கி
பயந்தான்‌ பரன் தான்‌ பணியை – உயர்ந்தோர்‌
இணைந்தா மரைத்தாள்‌ இசைத்தான்தன்‌ பொன்தான்‌
பிணைத்தான்‌ பீழை தகர்த்து–8-

ஸ்ரீ பாஷ்யமாசாரியன்‌, அடியேனை வியந்தான்‌, உகந்தான்‌, தாமரைக் கண்களால்‌ விரியக்‌ கடாக்ஷித்தான்‌. அடியேன்‌ பாலுள்ள குறைகளைப் போக்கி உயர்ந்தவர்களான மெய்யடியார்‌ திருவடி யிணை யடியை வணங்கும்படி இசைவித்து, தன்‌ அழகிய திருவடிகளில்‌ இருத்திக்‌ கொண்டான்‌.

தகர்த்தேன்‌ மடமை வினைப்படலம்‌ தாக்கி
உகக்கடிந்தேன் ஊணைக் கமலம் புகுந்தேன்‌
நனியாக் கலவி இன்பம் நாளும் நுகர்வேன்
இனியனெனும் பாடியன் தாள் ஏய்ந்து –9

இனியவரான ஸ்ரீ பாஷ்யமாசரியன்‌ திருவடிகளைப்‌ பொருந்தியதால்‌ அறிவின்‌மையை அறத்தொலைத்து, அதன்‌ காரியமான பாப சமூகத்தையொழித்து, அதின்‌ கார்யமான உடல்‌ தொடர்பை யொழித்து, இறைவன்‌ திருவடிகளைப் பிரியா மெய்யடியார்‌ கூட்டத்து புகுந்து அளவிலா இன்பம்‌ நாளும்‌ நுகர்பவனாயினேன் —

ஏய்ந்த குருகூரன்‌ தன்தான்‌ இணையடியே வாய்ந்த சரணா வரித்தன்றே – நீந்திப்‌
பிறவிக்‌ கடல் கடந்தீர்‌ பேதை எனையும்‌ உறவைப்பீர்‌ உந்திருத்தாள்‌ உய்த்து–10–

பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே! திருக் குருகூரில்‌ அவதரித்து பிறந்த பொழுதே துறவியான நம்மாழ்வாரின்‌ திருவடிகளிணையே தஞ்சமாகக்‌ கொண்டு, அவரருளால்‌ பிறவிக் கடல்‌ கடந்தீர்‌. அறிவிலியான அடியேனையும்‌ தேவரீர்‌ திருவடிகளில்‌ பொருந்தச் செய்து, அவ்வாறே பிறவி தொலைத்து பேரின்பமுற்று வாழும்படி செய்வீராக –

உய்த்தும்‌ கடைக் கணித்தும்‌ ஒப்ப நினைந்திட்டும்
எய்த்த இது தன்னைப் பற்றாச-மெய்த்த வுரை
எட்டு எழுத்தும் முப்பத்திரண்டு எழுத்தும் ஐயைந்தும்
தொட்டுரைத்த ஒன்றே துணை –11-

அடியேன்‌ அறிவிலியாய்‌ உய்யும் வழி யறியாமல்‌ பிறவிக் கடலில்‌ ஆழ, அதையே காரணமாகக் கொண்டு பாஷ்யமாசாரியர்‌ என்னை நினைத்து தன் முன்‌ நிறுத்தி, கருணைப் பூத்தக்‌ கண்களால்‌ நோக்கி, மெய்யடியார்‌ திரளில்‌ சேரும்படி செய்து, மெய்ப் பொருளான எட்டெழுத்துள்ள திருமந்திரம்‌, இருபத்தைந்து எழுத்தான த்வய மந்திரம்‌, முப்பத்திரண்‌ டெழுத்தான சரம ச்லோகம்‌ இவைகளின்‌ அர்த்தங்களைச்‌ சுட்டிக் காட்டி நெஞ்சில்‌ பதிய வைத்த அவரருளே அடியேனுக்கு உஜ்ஜீவனத்துக்குத்‌ துணை யாகும் —

துணைவனே துன்பப்‌ பிறவிக்‌ கடல்நீர்‌
புணைவனே பொய்ம்மை இருள்தீர்‌ – இணையில்‌
கதிரவனே பூரியர்‌ சுற்றங்‌ கழற்றும்‌
சதிரனே தந்தருள்வாய மறறு–12-

துணைவராயும்‌, துன்பமேயான பிறவிக் கடலைக்‌ கடத்தும்‌ நாவாய்‌ போன்றவராயும்‌, பொய்யறிவாகிய இருளை நீக்கும்‌ ஸூரியனாயும்‌, தகவு இல்லாதவர்களின்‌ உறவை நீக்கும்‌ சதுரராயும்‌ உள்ள தேவரீர்‌, உய்வு பேற்றுக்குத்‌ தக்கதை அடியேனுக்கு உகந்து அருள்‌ செய்வீராக –

மற்றோர்‌ பொருளுளதே? மாயை அறத் தொலைத்து
தெற்றத்‌ தெளிவித்துச்‌ சேம நல்கி – பிற்றைப்‌
பிறப்பொழித்துப்‌ பெம்மான்‌ கழலிணைத்து நாளும்‌
உறுமின்பம் உண்பிக்கவே–13-

ஆசாரியன்‌ அருளைக் காட்டிலும்‌ பிறிதொரு சிறந்த பொருள்‌ அடியேற்குளதோ? பிறவிக்‌ கேதுவான பிரகிருதி தொடர்பை நீக்கி,அறிவின்‌ மையாகிற மயக்கத்தைப் போக்கித் தெளிவைத்‌ தந்து,இவ்வளவிலேயே ஆனந்தமுறச்‌ செய்து முகுந்தனான இறைவன்‌ திருவடிகளில்‌ சேர்த்து மேலுள்ள காலமெல்லாம்‌ பேரின்பம்‌ நுகரும்‌ வாய்ப்பினை அடையும்படி செய்தார் –

உண்பித்தான்‌ ஒண்மை உலகார்யன்‌ ஓர்ந்தருள்செய்‌
விண்புகு விஞ்சுசுவை முத்தர்தம்‌ – பண்பிதனை
தக்கவாறுண்டு தரமுயர்ந்து நிற்கின்றேன்‌
மிக்கவா நான் எவ்வெவர்க்கும் மேல் –14-

உலகோர்க்கு உய்யும்‌ வழியைத்‌ தந்தவரான வள்ளல்‌ பிள்ளை லோகசாரியர்‌, தாம் மிக வுணர்ந்து அருளிச்‌ செய்த ஆகாசத்தைப்‌ போன்று உயர்ந்த சுவை யுடைய முத்தர்க்கு இன்பத்தை வழங்கக்‌ கூடியதான ஸ்ரீவசநபூஷணம்‌ என்ற நூலை அமுதாகக் தேர்ந்து அநுபவிக்கும்படி செய்தார்‌. பாஷியமாசாரியரும்‌ அதை அடியேனுக்கு உபகரித்தார்‌. அடியேனும்‌ அதன்‌ தரமறிந்து உள்ளத்திருத்தினேன்‌. இதனால்‌, நான்‌ உலகில்‌ எவருக்கும்‌ மேன்மையனாவேன் –

மேலா மிகு புகழ்ப் பாடியன் தன் மெய் வழி சால்
தோலா அருள்தந்த தொல்வழியில்‌ – நாலாம்‌
வழியே எளிய உரிய வழியா
அழிவிலா ஈரியல்புக்காம் –15-

மேலானார்‌ புகழும்‌ புகழ்களுக்கெல்லாம்‌ மேம்பட்ட புகழாலரான பாஷ்யமாசாரியர்‌, தம்‌ மெய்யுணர்வால்‌ ஆய்ந்து, முக்தி நெறியான நான்கில்‌ எல்லா நெறிகளைக் காட்டிலும்‌ மிக எளியதும்‌ அழிவற்ற ஆத்ம பரமாத்மாக்களுடைய உண்மை நிலைமைகளுக்குப்‌ பொருந்தியதும்‌ எவரும் மேற் கொண்டொழுகுவதற்கு உரியதாகிய மிகச்‌ சிறந்தது சரணாகதி உபாயமே யாகும்‌ என்றார் –

ஆமா றறிவுடைய ராவ தரிதன்றே
தேமா மலர்மா திருவருள்சார்‌ – நாமடந்தை
நாவன்‌ திருவயிந்தைப்‌ பாடியன்‌ நல்குதல் போல்‌
யாவனே ஆரியர்சார்‌ பின்று–16-

தன்னை யடைந்தாரை உய்விக்கத்தக்க அறிவுடையராக்குவது அரிதே யன்றோ இவ் வுலகின்‌ நிலை? இப்படி யிருக்க, தேனொழுகும்‌ தாமரை மலரைப் பிறப்பிடமாக வுடைய திருமகளின்‌ அருளைப் பெற்ற கலைமகள்‌ வாழும்‌ திருநாவை வுடையவரான திருவயீந்திரபுரம்‌ பாஷ்யமாசாரியரைப்‌ போல்‌ அடைந்தாரைக் காக்கும்‌ இயல்புடையவர்‌ எவரே உளர் –

இன்றே பிறந்தேன்‌ பழுதே யிழந்த நாள்‌
குன்றோ? மலையோ? கொழுங்கடலோ? – ஒன்றறியேன்‌
பாடியன்‌ வந்திலனேல்‌ பாழன்றே?
மேல் நாளும்‌ தேடிவந்தான்‌ ஏதிலருள்‌ செய்து–17-

மாறி மாறிப் பலப்‌ பிறவிகளை யடைந்து நின்ற கீழ்‌ நாள்களெல்லாம்‌ பல கல்பங்களாக கழிந்தது மட்டுமின்றி ஒரு குன்றினளவு, பெரியமலையளவு பெருங்கடலினளவு என்றளவிட முடியாதக்‌ காலமெல்லாம்‌ எனக்குப்‌ பழுதேயாயின. பாஷிய மாசாரியர்‌ காரணமற்ற கருணையால்‌ அடியேனைத்‌ தேடி வந்து, எனக்கருள்‌ செய்த இந்நாளே பயனுள்ள பிறவி யடைந்தேன்‌ என்றவாறு-

செய்த நலன்‌ ஈதென்று சிந்திக்க ஒல்லுமே?
மெய்யுணர்வின் மேம் பொருளைச் சேர் நெறியும் பொய்மையைப்
போக்குதலும் மெய்ம்மை மிக வுணர்த்தி பொன் கழலில்
வீக்கு மெய்ம்மைப்‌ பாடியன் மெய்‌ யின்று–18-

பாஷ்யமாசாரியர்‌ செய்த ஆனந்தத்துக்‌ கேதுவான நன்மைகளை மனத்தால்‌ நினைக்கவும்‌ முடியுமா? மெய்யுணர்வின்‌ தொடர்பால்‌ அடைதலுக்குரிய பரம் பொருளை அடையும்‌ வழியையும்‌, அதற்குத்‌ தடையானப்‌ பொய்யுணர்வைப்‌ போக்குதலும்‌, தன்னுடைய அழகிய திருவடிகளில்‌ சேர்த்துக்‌ கொண்டு மெய்யறிவை நன்கு உணர்த்தி அருள்‌ செய்த இவை யனைத்தும்‌ மெய்யேயாகும் –

இன்றன்றே யானும்‌ இலன் போய்‌ உளனானேன்‌
என்றடி யேனை இருந்துகேள்நீ – என்றதுமே
எண்பெருக்‌ கந்நலத்‌ தொண்பொரு ளாயினன்‌
திண்கழற்‌ பாடியற்‌ சேர்ந்து–19-

அடைந்தாரைக்‌ கைவிடாது எம்பெருமானிடத்தில்‌ சேர்க்கும்‌ திருவடி களையுடைய பாஷ்யபாசாரியர்‌, அடியேனை அழைத்து ௭திரிலிருத்தி முமுஷுப்படியைப்‌ போதித்தலுமே, எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட அளவிடமுடியாத ஆனந்தத்தை யுடைய இறைவனோடு சம தர்மத்தை அடையத் தக்க இன்றே, அசத்தாயிருந்த அடியேன்‌ சத்தானப்‌ பொருளானேன்‌ என்றவாறு –

சேர்ந்தேதி லின்னருளே பொய்ம்மையைத்‌ தீர்த்தருள
ஆர்ந்த மதிநலம்‌ அன்றடைந்து – ஓர்ந்தீங்‌
குபய விபூதி ஒழிவி லுடையான்‌
அபயமிங்‌ குற்றே னது–20-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின்‌ வேறு காரணமற்ற இன்னருளால்‌ அடியேனைத்‌ தன் பால்‌ சேர்த்து நிறைந்த பக்தியும்‌ அறிவும்‌ உண்டாகும்படி பண்ணி, ஒரு சிறு துணுக்கும்‌ தன்னை விட்டு நீங்காது இரண்டு விதமான உலகத்திலிருக்கும்‌ அனைத்தையும்‌ தனக்குடமைப்‌ பொருளாகக்‌ கொண்டிருக்கும்‌ எம்பெருமனால்‌ அஞ்சேல்‌ என்றருளப்‌ பெற்றேன்‌. ஈதன்றே அடியேனுடைய பாக்கியம் –

அதன்றே ஒழுக்கம் இலது உண்டறிதல்
அதன்றி மெய்ஞ்ஞானம் அறிதல் இதன்றே?
முழுமையன் பாடியன் முந்துற்ற என் போல்
விழுமயரின் மிக்கார் எவர் ? –21-

அறிவொழுக்கங்களால்‌ நிறைவுபெற்ற குருவை அடைவதே உய்வு பேற்றிற்குரியதாகும்‌. இதனை நாம்‌ அறிவது இயலாதே. இது உலகின்‌ நிலை. அப்படியிருக்க அறிவற்றவனான அடியேன்‌ இவற்றை எப்படி அறிவேன்‌? அறிவொழுக்கங்களால்‌ நிறைந்த பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே அடியேன்‌
இருக்குமிடம்‌ தேடிவந்து இன்னருளைச்‌ செய்தார்‌. இதனால்‌ அடியேனைப்போல்‌ சிறப்புடையாரின்‌ மிக்கவர்‌ எவர்-

எவரே? விடம்போல்‌ இருந்துடன்‌ நாளும்‌ பவரேகைப்‌ பண்ணும்‌ பரிசும்‌ – அவரே கழற்றுந்‌ திறனறிவார்‌ பாடியன்‌ தானே கழற்றுங்‌ கருணை மிகக்‌ கொண்டு –22-

தீய செயலைப்புரிவதற்குக்‌ காரணமான நம்முடைய உடலானது விஷம்போல்‌ நாள்‌ தோறுமிருந்து நம்மை நலிகின்றது. இப்படிப்பட்ட உடற்பிறவியை நீக்க வேண்டுமானால்‌ விரோதி ஸ்வரூபத்தை நன்றாசு அறியவேண்டும்‌. அவ்வாறு அறிந்து, அவ்விரோதியை பொக்குவதில்‌ வல்லவரான பாஷ்யமாசாரியர்‌, தன்‌ கருணையாலே அடியேனுடைய விரோதியை போக்கி என்னை ஆட்கொண்டர்‌-

கொண்டான்‌ நிரம்புங்‌ குறைக்கொள்ளி நானாவேன்‌
மண்டிய தீவினையேன்‌ மாலுடையேன்‌ – கொண்டான்‌
உலகில்‌ நிகரில்லாப்‌ பாடியன்‌ ஒன்றோ
அலகில்‌ அருளால்‌ அணைத்து–23

இவ்வுலகில் எல்லாவாற்றாலும்‌ நீசைதை நிரம்பிய குறைக்‌ கொள்ளியானக்‌ காரணத்தினால்‌ மொய்த்த தீவினையுடைய வனானேன்‌-இத்தகு தீவினையேனையும்‌ கைக்‌ கொண்டு ஒப்பற்றக்‌ கருணை யுடையவராக ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ அளவற்ற அருளால்‌ அடியேனை அணைத்துக் கொண்டார் –

அணைவான்‌ அணைத்தார்‌ பெரிய உடையார்‌
இணையில்லாச்‌ சீரார்‌ இறையை – அணைத்தான்‌
கருணைக்‌ கடல்போலுங்‌ கண்ணென்னுந்‌ தோளால்‌
பரிவுமிகும்‌ பாடியன்வந்‌ தின்று–24-

முத்தனாய்‌ வருமவனை அணைத்துக் கொள்ளும்‌ அளவற்ற கல்யாண குணங்கள்‌ நிரம்பிய ஒப்பற்றவனான சக்ரவர்த்தித்‌ திருமகனை (இராமனை) பெரியஉடையார்‌ என்ற ஜடாயு அளவற்ற ஆர்வத்தால்‌ அணைத்தார்‌. அது போல்‌, பெருங் கருணைக் கடலான பாஷ்யமாசாரியர்‌, பவித்திரத்தை உண்டாக்கும்‌ கண்ணென்னும்‌ தோளால்‌ அடியேனை அணைத்துக்‌ கொண்டார்‌.

இன்றன்‌ றிறைவன்பா லுள்ளவுற வொன்பதும்‌
ஒன்றும்‌ உணரோம்யாம்‌ தானறிவான்‌ – இன்றயிந்தை
பாடியன்பால்‌ சேர்த்தும்‌ பரிவின்‌ முழுக்களித்தான்‌
ஈடிலம்யாம்‌ என்றுலகின்‌ தேர்வு–25-

அநாதிகாலமாக எம்பெருமானுக்கும்‌ நமக்கும்‌ உள்ள உறவு ஒன்பதையும்‌ நாம்‌ அறியோம்‌. முற்றுணர்வினாகிய எம்பெருமான்‌ தானறிவான்‌. இத்தகு உறவின்‌ காரணமாக அடியேனை உய்வு பெற நினைத்து தகுந்தவரான பாஷ்யமாசாரியரிடம்‌ பரிவோடு சேர்த்து, மெய்யுணர்வை முழுக்க உண்டாக்கினான்‌. இதனால்‌, இன்று உலகவர்‌ இவன்‌ ஒப்பற்றவன்‌ என்று நிர்ணயிப்பதற்கு ஏதுவானேன்‌ – என்றவாறு –

தேர்வ லிதமென்னாச்‌ சிந்தியேன்‌ பாவியேன்‌
ஊரோ டுழல்வேனைப்‌ பாடியனாம்‌ – நாரணன்‌
மந்திரத்தின்‌ நுண்பொருளை மாட்டிச்‌ செவிவழியே
தந்தருள்‌ செய்தான்‌ நேர்ந்து–26-

ஆத்மாவாகிற நமக்கு நன்மையைச்‌ சிந்திக்காமல்‌ உண்டியே உடையே என்று உகந்தோடும்‌ ஊரவரோடு உழல்கின்ற பாவியான என்னை, பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ அடியேனுக்கு இதம்‌ செய்வதற்காக, என்னை வளைத்துப்பிடித்து நாரணன்‌ மந்திரமாம்‌ எட்டெழுத்தின்‌ உட்பொருளை செவியின்‌ மூலம்‌ உபதேசித்தருள்‌ செய்

நேர்ந்து நினைந்தும்‌ வணங்கி வழிபட்டும்‌
கூர்ந்துமிகும்‌ அன்பின்‌ குறிக்கொண்டும்‌ – தீர்ந்துநின்பால்‌
தஞ்சம்‌ அடைந்தனன்‌ பாடிய நின்‌ தாளிணையே
எஞ்சுத லில்லா அரன்‌–27-

பெருமான்‌ அருள்தமக்கு வேண்டுமென்று ஈடுபட்டு, வணங்கி வழிபாடுகளைச்‌ செய்யும்‌ மிகமிக அன்புடையவரான பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே! தேவரீரையே தஞ்சமென்றடைந்தேன்‌. ஆதலின்‌, தேவரீர்‌ அடியேனுடைய உய்வு பேற்றிற்குக்‌ குறைவற்றக்‌ காப்பாளாராக ஆகக் கடவீர் –

அரணென்‌ றடைந்தனன்‌ ஆரியநின்‌ தாள்கள்‌
முரணும்‌ அழுக்குடம்பும்‌ ஞானம்‌ – முரணும்‌
ஒழுக்கமும் தெற்றென அற்றன தேர்ந்தேன்
விழுப்பொருள்‌ நீயா விழைந்–28-

ஆசாரிய ஸ்வாமிகளே! தேவரீர்‌ திருவடிகளே காப்பாகுமென்று தஞ்மென்று அடைந்தேன்‌. அடைந்த இம்மாத்திரத்‌ தாலேயே, தீயவிஷயத்தில்‌ ஈடுபாட்டை விளைவிக்கும்‌ அழுக்குடம்பு, அதன்காரணமான தீயவொழுக்கம்‌, அதன்காரணமான பொய்யறிவு இவையனைத்தும்‌ பறந்தோடின. இதனால்‌, தேவரீரே விழுமிய பொருளென்று உணர்ந்தேன் –

விழைந்தேன்‌ இனியதா வேகடஞ்செய்‌ நின்னை
விழைந்திலன்முன்‌ மாயவன்சேற்‌ றள்ளல்‌ – அழுந்தி
பல் பகல் பாழ் பட்ட மீட்பதினி யுண்டாயின்
நல் வகையில் நீ இனி நல்கு –29-

முன்காலமெல்லாம்‌ வலிய சேறாகிய இந் நிலவுலகில்‌ அழுந்தி உருப்படி யில்லாமல்‌ கிடந்தமையால்‌ இரும்பைப்‌ பொன்னாக்குவாரைப்‌ போல் இருக்கிற தேவரீருடைய ஸ்வபாவத்தை அறியாமல்‌ நீண்டகாலம்‌ பாழே போனேன்‌. இன்றாகத்‌ தேவரீரை அறிந்து அன்பு பூண்டேன்‌. ஆனால்‌, பாழே கழிந்த காலத்தை இனி மீட்பதொன்று உண்டே? தேவரீரே இதை யருளிச்‌ செய்ய வேணும்‌-

நல்கும்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ வேட்பன
அல்லனே தான் பொதுவன்‌ நீர்சிறப்பின்‌ – அல்லரே
ஏந்தூர்‌ சடகோபன்‌ வேட்பன ஈவதே
உந்தம்‌ சிறப்பினுக்‌ கொப்பு–30-

குருகூருக்குத்‌ தலைவரான நம்மாழ்வார்‌ எவ் வண்ணம்‌ எம்பெருமானை ஆசைப்படுவாரோ உபய விபூதிக்கும்‌ பொது நின்ற எம்பெருமான்‌ அவ் வண்ணமே நல்குவான்‌. எமக்கு ஆசாரியரான தேவரீரோ, உம்மைத் தஞ்சமென்று அடைந்தாரை அவர்கள்‌ விரும்பியது தரும்‌ சிறப்புடைய நியதி யுடையீர்‌. இத்தகைய நீர்‌, உம்மையே தஞ்சமாக அடைந்த ஏந்தூர்‌ சடகோபனாகிய அடியேன்‌ விரும்பியதைக்‌ கொடுப்பதே சிறப்பாகக்‌ காப்பவரான உமக்குத்‌ தகும்‌ என்று அடியேன்‌ விண்ணப்பம் –

ஒக்கும்‌ அடியேனைக்‌ கைக்கொளல்‌ உந்தமக்கே
ஒக்கும்‌ அடியேனும்‌ தாள்சாரல்‌ – தக்கதே
ஈடினை யில்லாப்‌ பெருமையீர்‌ நீரன்றே
ஈடினை யில்சின்ன வனான்‌–31-

சிறப்புடைய ஆசாரியரான உமக்கே அடியேனைக்‌ கைக்கொளல் தகும்‌. தேவரீரோ ஈடியிணையில்லாப்‌ பெருமை-யுடையவரெனத்‌ தக்கவராகையாலே, அடியேன்‌ தேவரீர்‌ திருவடிகளைக்‌ சார்வதே ஒக்கும்‌. அடியேனோ சிறியவர்களில்‌ ஈடிணையில்லவன்‌ என்பதே உண்மையாகும்‌

நானென்‌ றெனதென்றும்‌ நான்பெரிய கோனென்றும்‌
வானொன்‌ றகங்காரத்‌ தியான்வளர்ந்தேன்‌ – தேனென்‌
றமுதென்றும்‌ மும்மநுப்பால்‌ ஆழ்ந்ததின்‌ ஆசான்‌
நமவென்‌ நலங்கொடுத்தனன்‌–3
2–

அடியேன்‌ கீழ்க்கழிந்த நாள்களிலெல்லாம்‌ நானென்றும்‌,எனதென்றும்‌, நானே பெரியவன்‌ என்றும்‌ இப்படி வானைவிட உயர்ந்தஅகங்காரத்தில்‌ முதிர்ந்தவனாய்‌ இருந்தேன்‌. இந்நிலையில்‌ ஆசார்ய சுவாமிகள்‌ அடியேனுக்கு மூன்று மந்திரங்களில்‌ முதல்‌ மந்திரமான திருமந்திரத்தில்‌ நடுவில்‌ பதமான நம: என்ற சொல்லை விவரித்து, தேனில்‌ இனியதும்‌ அமுதம்‌ போன்றதும்‌ மரண மற்றதுமான இந்த விஷேச அர்த்தங்களை உபதேசித்து அடியேனை உய்வித்தார் –

கொடுத்தான்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌ ஈந்த
கொடுத்தான்‌ பதின்மர்‌ குறிக்கும்‌ மொழிகள்‌
கொடுத்தான்‌ கலம்பகம்‌ மற்றும்‌ அனந்தம்‌
மடுத்தேன்‌ மதுவெனப்‌ பெற்று–33-

உலகோர்‌ துன்பத்தைப்‌ போக்க திருநகரியில்‌ அவதரித்தவர்‌ நம்மாழ்வார்‌, அவர்‌ அருளிய பிரபந்தங்கள்‌, மற்றுள்ள ஆழ்வார்கள்‌ பிரபந்தங்களையும்‌ கொடுத்தார்‌. அடியேன்‌ பாஷ்யமாசாரியரை அடைந்ததே காரணமாக, அடியேனைக் கொண்டு திருவாய்மொழிக்‌ கலம்பகத்தையும்‌ இயற்றும்படி செய்து, மதுரமிக்க ஸம்பிரதாய அர்த்தங்களையும்‌ அடியேனை அநுபவிக்கச்‌ செய்தார் –

பெற்றேனின்‌ தாளிணையில்‌ பாமாலை பெய்கலையைக்‌
கற்றேன்‌ கடும்பிறவி காய்ந்தொழித்தேன்‌ – நற்றேன்‌
ஒழுகுநின்‌ கீர்த்தி நயந்துரைத்தேன்‌ ஓர்கால்‌
பழகு பரிந்துரைப்பால்‌ பட்டு–34-

ஆசாரியரே! மறு பிறப்பறுக்கும்‌ உமது தாளிணையே தஞ்சமாகப்‌ பெற்றேன்‌. நின்‌ திருவடி விஷயமான பாமாலையாகிற கலையைக்‌ கற்றேன்‌-இதனால்‌, துன்பத்துக்குக்‌ காரணமான பிறவி மீண்டும்‌ வாரா வண்ணம்‌ தேவரீர்‌ கீர்த்திகளை உலகறியச்‌ செய்தேன்‌.சில சமயம்‌ உலகோர்க்கு தேவரீர்‌ திருவடியை அடைய புருஷகாரமாகவும்‌ வாய்ப்பேன்‌ – என்றவாறு-

பட்டேன்‌ பருவரல்‌ பல்லூழிக்‌ காலமெல்லாம்‌
தொட்டேன்‌ பாடியன் தன்‌ தூமலர்த்தான்‌ – தொட்டதுமே
முன்ன வினை பின்ன வினை ஆரத்த மூன்று ஒழிந்த
என்னை நிகர் யாரே யினி –35-

கீழ்க் கழிந்த நாட்களிலெல்லாம்‌ பிறப்பிறப்புப்‌ பிணியால்‌ படாத பாடுபட்டேன்‌. காதாகித்கமாக பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளின்‌ திருவடியைத்‌ தொட்டேன்‌-தொட்டதும் இப் பிறப்புக்கு முற்பட்ட பிறவிகளில்‌ செய்த வினைகள்‌, பிற்பட்ட வினைகள்‌ இவை யனைத்தும்‌ தீயினில்‌ தூசாகி கழிந்தொழிந்தன. இனி, வினை யற்றவர்களில்‌ எனக்கு நிகராக யவருமில்லை என்றவாறு–

இனியோர் குறை யுண்டோ பூதூரில் வள்ளல்
பனி மலர்த் தாளிணையே பற்றா -நனி விழையும்
சிங்களில் பாடியன் தன் செங்கமலத் தாளிணையே
துங்கமா தூய் மௌளிக் கொண்டு –36–

ஸ்ரீபெரும்புதூர்‌ யதிராசருடைய குளிர்ந்த தாமரை மலர்‌ போன்ற திருவடியினையே பற்றாக மிக விரும்பி, ஆறும்‌ பேறுமாகப்‌ பற்றிய பாஷ்யமாசாரியருடைய திருவடித்‌ தாமரையையே அடியேன்‌ உத்துங்கமான முடியாகக்‌ கொண்ட பிறகு, இனியும்‌ ஒரு குறையுள்ளதோ? எனக்கு –

கொண்டான்‌ வரமுநி கோயில்‌ உகந் தயிந்தை
கொண்டான் நல மந்தம் இல்லத–கொண்டோம்
உலகளந்தான்‌ பொன்னடியோம்‌ பாடியன் போல் யமும் ன்பம்‌
நிலமளந்தான்‌ சொம்மாயினோம் –37–

மணவாளமாமுநிகள்‌ திருவமீந்திர புரத்தையே தமக்குகந்த கோயிலாகக்‌ கொண்டார்‌. அதை யறிந்த பாஷ்யமாசாரியரும்‌ நலமந்தமில்லாததான அந்தக்‌ கோயிலையே தமக்கேற்ற வாச ஸ்தலமாகக்‌ கொண்டார்‌. இவர்‌ அபிமாநித்த சிஷ்யர்களாகிய யாமும்‌ உலகளந்தான்‌ பொன்னடியார்‌ ஆதலால்‌ நிலமளந்தவனுடைய சொத்தாக ஆயினோம் —

நேமிசங்கம்‌ கண்கைகால்‌ வாய்முகம்‌ நாபியணி
தாமரைகள்‌ தாங்கி கருணைக்‌ கண்ணோட்டம்‌
அயிந்தையில்‌ ஈருருவும்‌ ஆறு பயன்‌ ஆவதே!
நயந்தெரிந்து நானடைந்தேன்‌ நன்கு–38-

அடைந்தாரைக்‌ காப்பாற்ற வேண்டி பஞ்ச ஸம்ஸ்காரார்த்தமாகத் தரித்த திருவாழித்‌ திருச் சங்கமும்‌, தன்னை அடைந்தாரை நோக்கும்‌ மலர்ந்த திருக் கண்களும்‌, பிறவி போக்கும்‌ திருவடிகளும்‌, அஞ்சலென்ற திருக் கைகளும்‌, உபதேசம்‌ செய்யும்‌ திரு முகமும்‌, எம்பெருமான்‌ திருமேனிக்குப்‌ போலி யுருவான திரு நாபிக்‌ கமலமும்‌ ஆகிய இவைகளைத்‌ தாங்கி கருணைக்‌ கண்ணோட்டங்‌ கொண்டு எழுந்தருளி யிருக்கும்‌ ஸ்ரீமந்‌ மணவாள மாமுனிகளும்‌ அவரின்‌ நிழல்‌ என்னலாம்படியான பாஷ்யமாசாரியரும்‌ இவர்கள்‌ இருவரும்‌ ஈருருவோ? என்று நினைக்கலாம் படி யிருக்கும்‌ இருப்பை நினைத்து அவர்களையே தஞ்சமடைந்தேன்‌.

நன்றென்‌ றுளதேயோ? பொய்யறியா நானறிந்த
என்றென்றும்‌ யாண்டும்‌ இலதன்றே – குன்றாக்‌
கருணைக்‌ கடலே தான்‌ பாடியன்‌ வேறன்‌
றிருனிலத்தில்‌ பேரொளியே யின்று–39-

பொய்யென்ப தறியாத அடியேன்‌ அறிந்த தொன்றைச்‌ சொல்லுகின்றேன்‌. இருள் தரு மா ஞாலத்தில்‌ பேரொளிப்‌ பிழம்பாகத்‌ திகழும்‌ திருவயீந்திர புரம்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே ஆவர்‌. கருணைக் கடலான அவரைப்‌ போல்‌ நன்றான ஒரு பொருள்‌ இன்று எவ்விடத்திலாகிலும்‌ உளதோ? இல்லை யென்றபடி –

இன்றன்றே? என்றென்றும்‌ ஈடிணை யென்பதில்லை
பொன்றாப்‌ புகழோன்‌ சடகோபன்‌ – பொன்றாத
பேரறிஞன்‌ நாதமுநி யாமுநன்‌ பேராளன்‌
நேராவ ரென்பதிலை நேர்‌–40-

இன்றும்‌ முற் காலத்திலும்‌ மேல் வரும்‌ காலத்திலும்‌ என்றும்‌ அழியாத புகழை யுடைய நம்மாழ்வாருக்கு ஒப்பானவர்‌ எவருமில்லை எனலாம்‌. அவரை அடி பணிந்த குறை வற்ற போறிஞரான ஸ்ரீமந்‌ நாத முநிகள்‌, அங்ஙனமே யாமுந முளிகள்‌, திக்கெட்டும்‌ புகழ் பரவும்‌ பேராளரான ராமாநுஜர்‌ முதலான இவர்களுக்கும்‌ ஒப்பாகக்‌ கூடியவர்‌ ஒருவரும்‌ இலர்‌ எனலாம்‌. நன்மை யொன்று மில்லாத அடியேனை அங்கீகரித்தமையால்‌ பாஷ்யமாசாரியரை வேண்டுமானால்‌ அந்த பூர்வாசாரியர்களுக்கும்‌ ஒப்புச்‌ சொல்லலாம்‌ – என்றவாறு –

நேராவார்‌ யாரே? கருணை நிரம்பியதில்‌
நேரார்‌ நிகரில்‌ புகழொன்றில்‌ – நேராவார்‌
உண்டேயோ? பாடியற்குப்‌ பெம்மானும்‌ உள்ளதேல்‌?
புண்டரீகம்‌ வான்பூத்த போல்‌–41-

கருணை நிரப்பத்திலும்‌ வாத்சல்யாதி குணங்களிலும்‌ பாஷ்யகாரருக்கு நிகர்‌ ஒருவருண்டோ? எல்லா நற் பண்புகளால்‌ நிறைந்தவனான எம்பெருமானும்‌ அவருக்கு நிகராக மாட்டான்‌. உளர்‌ என்பீரேல்‌! ஆகாயத்தில்‌ பூத்தத்‌ தாமரைப்‌ போலாகும்‌ என்பேன் –

போலா மதுரகவி மாறன் தன்‌ பொன்னருளே
ஏலாரே? சான்றோ ரெனக் கொண்டு – மேலாத்‌
தகவுடைய தாய் தந்தை என்று நின்ற அஃதே
மிக விரும்பும்‌ பாடியனே மெய்‌–42-

மதுரகவியார்‌, தன்புன்மையைக்‌ கண்டால்‌ சான்றோர்‌ தன்னை ஏற்க மாட்டார்‌ என்று கருதியே அழகிய அருளை யுடைய ஸ்வாமி நம்மாழ்வாரையே தகவுடையதாய்‌, தந்தையான எல்லா வுறவுமாய்க்‌ கொண்டு தஞ்சமடைந்தார்‌. ஆழ்வாரும்‌ அவரை ஏற்றார்‌. அதைப் போலவே புன்மை யுடைய அடியேனை பாஷ்யமா-சாரியர்‌ ஏற்றுக்‌ கடைக் கணித்ததும்‌ மெய்யே யாகும்‌-

மெய்ம்மைத் திருவயிந்தை பாடியன் மேல் நாளில்
செம்மை யுறச் செய்யா திருப்பேனேல் -அம்மே
நலன் துறந்து நாண் துறந்து பாழ் படுவன் அன்றே
இலனாகி எய்த்து இருப்பன் இன்று –43-

பொய்யில்லா மணவாள மா முநிகள்‌ திருவயீந்திரபுரத்தில்‌ கோயில்‌ கொண்டதனால்‌ அத் தலம்‌ இன்று மெய்த்தல மாயிற்று. அத் தலத்தையே தனக்கு இருப்பிடமாகக்‌ கொண்டு ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரியர்‌ முன் காலத்தில்‌ அடியேனை செம்மைப் படுத்தா திருப்பாரானால்‌, அம்மம்மே ! அடியேன்‌ எல்லா நலன்களையும்‌ துறந்து லஜ்ஜையும்‌ துறந்து அசத்தாகிப்‌ பாழ்பட்டிருப்பேன்‌ இன்று – என்றவாறு –

இன்றன்றே மாறன்‌ சடகோபன்‌ என்றென்று
நன்றானேன்‌ உண்ணாட்டுத்‌ தேசிதனை – நன்றா
குடிகஷணைன்‌ கோவிந்தன்‌ மாதவன்‌ அன்பர்‌
மடிவைத்து கந்தருள்வான்‌ மால்‌–44-

பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளால்‌ அடியேன்‌ செம்மைப்‌ பெற்றமையால்‌, இன்று மாறன்‌ என்றும்‌, சடகோபனென்றும்‌ உலகவர்‌ இயம்புகின்றதால்‌, அடியான்‌ தொண்டன்‌ என்ற உள் நாட்டுத்‌ தேஜஸ்ஸைத்‌ தரும்‌ பேர் பெற்றவனானேன்‌; கோவிந்தன்‌ குடியடியானென்றும்‌, மாதவன்‌ தமரென்றும்‌ சொல்லத்‌ தரமுடையவனானேன் . இதனால்‌ ஸ்ரீவைகுண்டத்தில் தேவிமாரோடு எழுந்தருளி யிருக்கும்‌ பர வாசுதேவன் இவனால்‌ அலம்பி லாபம்‌ பெற்றோம்‌ என்று உச்சி முகந்தருள்‌ செய்யும்‌ பாக்கியம்‌ பெற்றேன்‌ – என்றவாறு –

மாலே படைத்துக்‌ கடைக் கணித்தான்‌ மற்றுள்ள
ஏலா திருத்தான்‌ அன்றோ! – தோலாப்‌
புகழா இத்தைப் பாடியன் பூதூர்‌ முனிபோல்‌
மிகப் பரிந்தாட்‌ கொண்டான்‌ விழைந்து –45-

எம்பெருமான்‌ பிரளய காலத்தில்‌ இறகொடிந்த பக்ஷிகளைப்‌ போலான ஜீவாத்மாக்களைக்‌ கடைக் கணித்து, கை கால்‌ உறுப்புக்களோடுக்‌ கூடிய சரீரத்தைக்‌ கொடுத்து, அறிவைக்‌ கொடுத்து விட்டு விட்டான்‌. அயிந்தைப்‌ பாடியனோ ஸ்ரீபெரும்புதூர்‌ இராமாநுஜரைப்‌ போல்‌ ஜீவர்கள்‌ விஷயத்தில்‌ ஐயோ! ஐயோ! என்று மிகப்‌ பரிந்து அவர்களை விரும்பி அடிமை கொண்டான் –

விழையொழி யாதாயின்‌ வெந்துயரே வீவில்‌
விழைவுளதேல்‌ பாடியன் பால்‌ இன்பம்‌ – கழியும்‌?
விதிசூழ்ந்‌ திலனென்று வீறுசால்‌ தானே
பதிந்தான் தன்‌ பாலாம்பேரன்பு–46-

உலகியலில்‌ இருக்கும்‌ ஆசையை ஒருவன்‌ விடவில் யென்றால்‌, அவன்‌ பிறவித்‌ துன்பத்தில்‌ ஆழ்ந்து கிடக்க வேண்டியதே. ஆனால்‌, உத்தாரக ஆசாரியரான பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ திறத்து பேரன்பு உளதேல்‌, அந்தமில்‌ பேரின்பம்‌ நீங்குமா? நீங்காது. எம்பெருமான்‌ கருனை ஜிவர்களிடம்‌ ஏறிப்‌ பாயவில்லை என்று நினைத்து பாஷ்யமாசாரியர்‌ ஜீவர்கள்‌ தன் பால்‌ கொள்ள வேண்டிய பேரன்‌பை தாமே பதியும்படி செய்தார் –

அன்பின்‌ நிகரில்லா னாங்கே கருணையின்‌
இன்பி னிணையில்லான்‌ தோற்றத்தால்‌ – பொன் பிறங்கும்‌
மேரு மிசைப்‌ பூத்த செந்‌ தாமரையே ஒருருத்தாள்‌
கண் கை முகம் வாய்‌ மதி –47.

ஸ்ரீ பாஷ்யமாசாரியர்‌, எம்பெருமான்‌ திறத்தும்‌, தன்னை தஞ்சமென்றடைந்த சீடர்‌ திறத்தும்‌ அளவிலா அன்புடைமையின்‌ இன்புறுவதிலும்‌ இணையில்லாதவரே. இவர்‌ தோற்றத்தில்‌ பொன்னிறத்தால்‌ அழகிய திருமேனி, திருவடிகள்‌, திருக்கண்கள்‌, திருக்கைகள்‌, திருப்பவளம்‌, திருமுகம்‌ இவையனைத்தும்‌ அப்போதலர்ந்த செந்தாமரையொத்து பொன்மலையான மேருமலை௰ல்‌ பூத்தபல செந்தாமரைப் போல்‌ காட்சி யளிக்குமென்பதாம் –

மதியொன்றில்‌ மான்குறள்நேர்‌ மாயை கடிவில்‌
எதி சட கோப னிவனே – கதியில்லான்‌
என்போலும்‌ ஏழையைக்‌ கண்போலும்‌ காப்பவன்‌
விண்போகும்‌ சீர்பாடி யன்‌–48–

செயல்‌ செய்யச்‌ சிந்திப்பதில்‌ வாமந மூர்த்தி போலும்‌, மாயயைக்‌ கோபித்துப்‌ போக்குவதில்‌ முற்றுந் துறந்த சடகோபனே யாவான்‌. தன்‌ பாலீடுபாடு இல்லாத என்னைப்‌ போல்‌ அறிவிலியைக்‌ கண்‌ போலும்‌ சிறப்புறச்‌ செய்து காத்தருள்வார்‌ வானளாவிய கீர்த்தி வாய்ந்த பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌- என்பதாம்

பாடியனோ சானகியோ போல்வீர்நன்‌ குத்தமரில்‌
வீடில்சீர்‌ ஆழ்வான்‌ தனையடைந்தார்‌ – கோடல்‌
பதி பரவும்‌ பாங்கில்‌ கலியனோ டொப்பீர்‌ மதி நலத்தால்‌ மாறனே நீர்‌–49-

தான்‌ நரகமடைந்தாலும்‌ பரவாயில்லை. ஆனால்‌, ஆசை யுடையோர்‌ இழக்கலாகாது என்று எண்ணி ஆசாரியன்‌ ஆணையை மீறி திருமந்திரத்தை ஆசையுள்ள எல்லோருக்கும்‌ தூளி தானம்‌ செய்த எம்பெருமானாரைப்‌ போலவும்‌, தேவ மாதரை மீட்கத்‌ தான்‌ சிறையிருந்த சீதாப் பிராட்டியைப்‌ போலவும்‌, தரிசனத்தைக்‌ காக்க தன்‌ கண்ணை யிழந்த கூரத்தாழ்வானைப்‌ போலவும்‌, தன்னை அடைந்தாரைக்‌ கைக் கொண்டு திவ்விய தேசங்களை வாழ்த்திய திருமங்கை யாழ்வாரைப்‌ போலவும்‌, மயர்வற மதிலம்‌ அருளப்‌ பெற்றவர்களில்‌ தலைவரான நம்மாழ்வாரைப்‌ போலத்‌ திகழும்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளே! இவர்களில்‌ நீவீர்‌ எவரோடு ஒப்பாவீர்‌-

நீரே சயமே யடிமைத்‌ தலை நின்றீர்‌ நீரே அடிமையில்‌ நீக்கமிலீர்‌ – நீர்தாமே கோதிலடி யாருங்‌ குணந்திகழ்‌ கொண்டலும்‌ நீதி நெறி வித்தகரும்‌ நீர்‌–50-

பாஷ்யமாசாரியரே! பயனாகிற அடிமையில்‌ தலை நின்றவர்‌ நீரே; எம்பெருமானுக்‌ காற்றும்‌ தொண்டில்‌ பிரிவதில்லாதவரும்‌ நீரே; குற்றம்‌ யாதுமில்லாது அடிமையில்‌ தலை நின்ற தோடல்லாமல்‌ அடைந்தாரைக்‌ கைக் கொண்டு குணந் திகழ்‌ மேகத்தோடு ஒத்தவரும்‌ ஆவீர்‌. ஆத்ம பரமாத்மாக்களின்‌ நீதியை முற்றும்‌ அறிந்தவரும்‌ நீரே யாவீர் –

நீரே நிகரற்ற நீசனெனை கைக்கொண்டீர்‌
பாருடன்‌ நீரும்‌ பரிவுமிகு – ஊரவரும்‌
எக்காலத்‌ தெவ்வெவரும்‌ ஏற்பதொண்‌ றுண்டேயோ?
மிக்க புகழ் தத்துவமே –51–

நிகரற்ற நீசனான என்னை நீரே உகந்துக்‌ கைக் கொண்டீர்‌. நிலத் தேவரும்‌ ஸ்வேதத்‌ தீப வாசிகளும்‌, மங்களாசாஸனமே யாத்திரை யாயுள்ள நித்திய விபூதியிலுள்ளாரும்‌ முதலாக எக்காலத்திலும்‌ எவ்வுலகிலுள்ளாரும்‌ ஏற்பது என்பது இல்லை யேயாம்‌. மேலாம்‌ புகழே வடிவான தத்துவமே இதுவாகும்‌. தேவரீருடைய வாத்சல்ய குணம் –

மேதினியில்‌ ஐம்புல வாஞ்சை மிகவுடையன்‌
காதுங்‌ கடுநெஞ்சன்‌ தீச்செயல்கள்‌ – யாதும்‌
எனையன்றே அண்டி நிலை பெறுவ யாண்டும்‌
வினையமென்ப தொன்றும்‌ மிகை–52-

பாருலகில்‌ ஐம்புலன்‌ நுகரும்‌ விஷய விருப்பம்‌ மிக உடையவன்‌; கொலை செய்ததற்குரிய கடுமை மிக்க நெஞ்சினை யுடையவன்‌; கொடிய செய்கைகளை யுடைய இப்படிப்பட்ட யாவும்‌ என்னைச்‌ சேர்ந்தே நிலை பெறுவனவாம்‌. எம்பெருமான்‌ விஷயமாக அன்பின்‌ பட்டும்‌ அடக்கமென்பதே யில்லாதவனடியேன் –

மிகையனே மெய்யடியாா கூட்டத்து யானோ
தகையிலன்‌ சாது கோட்டி தம்மில்‌ – நகையிலன்‌
நள்ளருட்கண்‌ இங்கலம்போல்‌ நானொருவன்‌ உள்ளேன்பால்‌
உள்ளதெல்லாம்‌ தீய துள–53-

மெய்யடியார்‌ கூட்டத்து அதிகப்‌ படுவேன்‌ யானொருவன்‌ என்பதாகும்‌. சாது கோட்டிக்குரிய பண்பற்றவன்‌; பகவதநுபவ மில்லாதவன்‌; குதூகலமில்லாதவன்‌; நடுநிசியில்‌ அடுப்புக்கரிபோல்‌ ஒளியற்றவன்‌; இலனென்பாரில்‌ நானொருவன்‌ உளன்‌; என்னிடம்‌ உள்ளதெல்லாம்‌ தீயதே உள்ளதாம் –

உளதேயோ? நீர்செய்‌ செயலின்‌ தரந்தான்‌
உளதேயோ? எம்பெருமான்‌ செய்த – உளதே?
இருவீரும்‌ செய்தசெயற்‌ கொப்பறிவணர்‌ உண்டோ?
பெருமைமிகு பாடியனே! பேசு–54-

தேவரீர்‌ அடியேன்‌ திறத்துச்‌ செய்த செயலின்‌ தரமறிதலுண்டோ? தேவரீரை அடியேற்குத்‌ தந்த எம்பெருமான்‌ செய்த செயலுக்கு ஈடுண்டோ? தேவரீர்களிருவரும்‌ செய்த நல்லுதவிக்‌ கொப்புண்டோ? ஒப்பறிவாரிங்குளரோ? இவற்றை பெருமை மிகு பாஷ்யமாசாரியரே! நீரே அருளிச்‌ செய்ய வேணும் –

பேசுதல்‌ வல்லீரே? நீர்செய்த பேருதவி
பேசுந்‌ தரமுடைத்‌ தல்லவே – நீசனேனைக்‌
கைக்கொண்ட காரியமே எற்கறி வித்ததால்‌
இக் குறிப்பே கொண்டுரைத்தேன்‌ இங்கு–55-

ஆசாரிய ஸ்வாமிகளே! அடியேன்‌ திறத்து தேவரிர்‌ செய்த பேருதவியானது, தேவரீரே அருளிச்‌ செய்யும்‌ தரமற்றது. ஆதலினால்‌ பேசுதல்‌ வல்லீராக மாட்டீர்‌. உனக்கெப்படித்‌ தெரியும்‌ என்று கேட்பீரானால்‌, அடியேனோ நிகரற்ற நீசனானவனெனக்‌ கொண்டு செம்மை படுத்திய செயலே, அடியேற்கறிவித்தாகுமிதைக்‌ கொண்டே நிகரற்ற செயலென்கிறேனாகும் –

இங்கறிந்தேன்‌ இன்றாக எம்பெருமான்‌ செய்தநன்றி
துங்கமிகு பாடியனைத்‌ தோற்றுவித்தல்‌ – இங்கிலதேல்‌
தொல்லூழிக்‌ காலந்‌ தொலைந்தகீழ்‌ மேல்நாளும்‌
பல்லூழிக்‌ காலம்‌ பழுது –56-

எம்பெருமான்‌ அடியேனை உய்விக்க வேண்டியே பாஷ்யமாசாரிய ஸ்வாமிகளைத்‌ தோற்றுவித்தான்‌ என்பதனை இன்றாக அறிந்தேன்‌. அப்படி அவரைத்‌ தோற்றுவிக்க வில்லையானால்‌, அடியேற்கு கீழ் கழிந்த காலமும்‌ இனி மேல்‌ வருங்காலமும்‌ பழுதாய்‌ முடிந்திருக்கு மன்றோ –

பழுதாகா வண்ணம்‌ பாடியன்தன்‌ சீலம்‌
விழுமிதென்‌ றுள்ளில்‌ விரித்தான்‌ – கழிபேர்‌
கருணையான்‌ அவ்வளவே வேறன்று கொண்டு
சரணடைந்தேன்‌ பாடியன்தா ளின்று–57-

ஆசாரிய ஸ்வாமிகள்‌, பிறர்‌ நலமே பேணும்‌ மிக்கப்‌ பெருங் கருணையால்‌ தன்னைச்‌ சார்ந்தாரை உய்வு பெறுத்தலில்‌ மிகவும்‌ ஊற்றமுடையவர்‌ ஆவார்‌ என்பதனை அடியேன்‌ உள்ளத்தில்‌ மிக விரியக்‌ காட்டி யருளினார்‌. இவ்வளவிலேயே அடியேன்‌ நிர்ணயித்து, இவர்‌ திருவடிகளில்‌ தஞ்சமென்றடைந்தேன்‌. இதனால்‌, அடியேன்‌ வாழ் நாளைப்‌ பழுதாகா வண்ணம்‌ மேற் கொண்டேன்‌ இன்றெ என்பதாம் –

இன்றயிதை மாமுநிதன்‌ தாளில்‌ இருந்து தொண்டு
நன்றியற்றும்‌ பாடியன் தன்‌ நாண்மலர்த்தாள்‌ – குன்றாத
ஆறுடன்‌ பேறாக வானில்‌ அரியயயன்‌
வீறுடன்‌ பெற்றேன்‌ விரைந்து–.58-

இன்றாக திருவயிந்திரபுரத்தில்‌ கோயில்‌ கொண்டுள்ள மணவாளமாமுநிகள்‌ திருவடிகளில்‌ செய்யும்‌ தொண்டு நிலை நின்ற பேறென்றறிந்து தொண்டு செய்யும்‌, ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய அன்று பூத்த தாமரை போன்ற அழகிய திருவடிகளையே அழிவற்ற ஆறுடன்‌ பேறாக வானில்‌ பெறும்‌ பயனின்‌ பெறுதற்கரிய பயனாக சிறப்புற்ற வகையில்‌ விரைந்து பெற்றேன்‌ என்பதாம் –

விரைந்து திருமலை யாழ்வார்‌ விரும்பி
வரமுநியை சீடராகக்‌ கொண்டார்‌ – வரமுநியும்‌
கோயில் அயிந்தை கொடு பாடியற் கொண்டார்
ஆய்விலடி யேற்கொண்டான்‌ ஆர்ந்து –59-

திருமலையாழ்வார்‌, தீவிரமாக மிக விரும்பி மணவாள மாமுனிகளை உபயாத்திரையும்‌ தமதாகக்‌ கொண்டு சிறப்பித்தார்‌. மணவாள மாமுனிகள்‌
திருவயிந்திபுரம்‌ விரும்பி கோயில்‌ கொண்டு ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளை உய்யும்படியே பெற்றார்‌. பாஷ்யமாசார்ய சுவாமிகளடியேனை அளவிடற்கரிய பேரன்பினில்‌ கைக் கொண்டார் —

ஆர்ந்தபுகழ்‌ அச்சுதனே வந்தான்‌ உலகார்யன்‌
தேர்ந்தறிய வல்லமே? தன்பெருமை – தேர்ந்தறிவ
தென்ப தொருபொருள்‌ நாடுறைவர்‌ யாரறிவார்‌?
பண்பனே பாடியற்குக் காப்பு –60-

நிரம்பிய புகழுடைய அடைந்தாரைக்‌ கைவிடாத எம்பெருமான்‌ பிள்ளை யுலகாசார்யராய்‌ வந்துதித் தருளுகையால்‌ இவர்‌ பெருமை நாமறியோ மென்பதொரு பொருளல்ல, உலகிலுள்ளார்‌ எவருமே அறிய முடியாத பெருமையாகக்‌ கருதக் கூடிய பண்புடையரான உலகா சாரியரே ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்குக்‌ காப்பாவார் –

காப்பு வடக்குதிரு வீதிப் பிள்ளை காத்திலரேல்‌
காப்பெவர்‌ வாய் மொழி ஈட்டுரைக்கு – காப்பன்றி
நுண் பொருள்‌ முற்றவும்‌ நோக்குவித்தான்‌ பாடியற்கு
பண்பினெற்‌ கீந்தான்‌ பயன்‌–61-

வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை நம்பிள்ளை சொன்னை திருவாய்மொழி ஈட்டின்‌ உரையைக்‌ காத்து எழுதவில்லையானால்‌, காப்பாவார்‌ யார்‌? இந்த வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை ஸ்ரீவைஷ்ணவத்தை காப்பது மட்டுமல்லாமல்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரியருக்கு ஈட்டுரையை தன்னருளால்‌ இவரிடம்‌ வந்து சேரும்படி நோக்குவித்தார்‌. இந் நோக்கை பாஷியமாசாரியர்‌ தம் பரம கருணையாலே அடியேன்‌ திறத்தில்‌ பயனுறும்படி செய்தார் –

பயனாநம்‌ பிள்ளையின்றேல்‌ ஆழ்வார்கள்‌ பாக்கள்‌
பயனோயோ? உம்பர்‌ திவத்தொப்பாம்‌ – பயனுடைத்தே
ஈடின மில்லார் இறையின்பம் மில்லாதோர்
பாடியனே பெற்றான் தன்‌ சீர்‌–62-

உலகுக்குப்‌ பெரும்‌ பயனாக உயர்வற உயர்நலமுடையவனால்‌ மயர்வற மதிநலம்‌ அருளப்‌ பெற்றவர்களாழ்வார்கள்‌ பதின்மரும்‌, இப்படி இவர்களால்‌ இறை யனுபவம்‌ கரைந்து வழிந்தவாறே அருளிச்‌ செயல்கள்‌ தொண்டர்க்கமுத மாயமைந்தன அருளிச்செயல்கள்‌. நம்பிள்ளை என்ற ஸ்வாமிகள்‌ அவதரிக்கவில்லையானால்‌ இந்த அருளிச்செயல்‌ பயனுடையதாகாது. இதன்றி தாழ்த்திக்கு முடிந்த நிலமான இருள்தருமா ஞாலம்‌ உம்பர்‌ திவத்தொப்பாம்‌ பயனுடைத்‌ தாயிற்று. இத்தகு அனுபவம்‌ நம்பிள்ளைகளால்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்‌ சார்ய சுவாமிகளுக்கு அருளப் பெற்ற அவ் வனுபவம்‌ தம் பரம கருணையால்‌ எமக்குக்‌ கொடுத்தார் –

தஞ்சீரை ஞானியர்கள்‌ தாம்புகழும்‌ வேதாந்தி
நஞ்சீயர்‌ தாம்பட்டர்‌ நல்லருளால்‌ – எஞ்சாத
ஆர்வமுடன்‌ மாறன்‌ மறைப்பொருள்‌ நூறுரு
ஆர்ந்தெற்கீந்‌ தான்பா டியன்‌–63-

தம்‌ கீர்த்தியை மெய் ஞானியர்கள்‌ கொண்டாடும்‌ தரமுடைய நஞ்சீயர்‌ என்றும்‌ வேதாந்தி என்றும்‌ பெயருடையார்‌, பட்டர்‌ திருவருளால்‌ மாறன்‌ மறையாகிய திருவாய்மொழியின்‌ நுண்‌ பொருள்கள்‌ முற்றும்‌ தம்மைச்‌ சார்ந்தார்‌ தமக்கு நூறுருவமையைக்‌ கொடுத்ததை, ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய சுவாமிகள்‌ மேற்படியார்‌ அருள்களால்‌ தாம்‌ பெற்று தன் பேரருளால்‌ அடியார்க்கருளினார் –

அன்பின்‌ அலைகடல்‌ ஆயிரம்போக்‌ காழ்பொருள்‌
இன்பின்‌ இளங்குமரன்‌ எம்பிராற்‌ – கின்புருவன்‌
எட்டெழுத்‌ தெட்டுகாதை பண்ணின்‌ தனிச் சுவையன்‌
பட்டர்திருத்‌ தாள்பா டியன்‌–64-

எம்பெருமானார் திறத்தும்‌ மெய்யடியார் திறத்தும்‌ அலைகடலை யொத்த அன்புடையாரும்‌, இன்பம ளிக்கும்‌ இளங்குமரனும்‌, பிறவித்‌ துயரொழிய வேண்டுவார்க்கு துன்பமொழித்து எம்பிரான் பால்‌ சேர்த்து இன்பமளிக்கும்‌ எட்டெழுத்துக்கு அஷ்டச்லோகி என்ற நூலருளியவரும்‌ பண்ணின்‌ தனிக் கலைஞரும்‌ ஆயிர நாமத்துக்கு ஆழ் பொருளெல்லாம்‌ அருளிச்‌ செய்தவருமாகிய ஸ்ரீமத்‌ பட்டருடைய திருத் தாளை தஞ்சமடைந்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய சுவாமிகளின்‌ திருவடிகளே அடியேற்குத்‌ தஞ்சமாகும் –

பாடியன்‌ எம்பார்‌ பதற்சேர்ந்‌ திதந் தெரிவான்‌
ஈடில்‌ சுவையன்‌ தமிழ் மறையின்‌ – நாடு புகழ்‌
நாலாயிரம் பாவில்‌ எம்பெருமானார் தாள் சேர்த்‌
தோலாத்‌ துணைச் சீட னாம்‌–65-

ஸ்ரீபாஷ்யமருளிச்‌ செய்த எம்ருமானார்‌ திருத்தாளினைச்‌ சேர்ந்து உய்யும்‌ இதந்தெரிந்தவரும்‌, தமிழ்‌ வேதமாகிய நாலாயிரம்‌ பாசுரங்களில்‌ ஈடிணை யில்லாச் சுவையுடைய பண்ணின்‌ தணிக் கலைஞருமாகியவரும்‌ உலகெல்லாம்‌ புகழும்படியான எம்பார்‌, சிஷ்யாச்சார்ய முறையில்‌ சிறிதும்‌ மாறுபடாதவராய்‌ எம்பெருமானாருக்கு துணைமிக்க சீடனுமாவார்‌. இவர்‌ திருவடிகளைப்‌ பற்றின ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யர்‌ அடியேனை ஏற்ற குருவாகும் –

சீடன்‌ பெரியநம்பி சேர்ந்தசீடர்‌ ஐவர்‌
சேடனிரா மானுசனா சீர் தரும் -பாடியற்கும்
எம்பெருமான் உட்பட இந் நிலத் தேவர்க்கும்
இம்பர் நலமந்தமில் –66-

அர்ச்சாவதார மூர்த்திகளாய்‌ கோயில்‌ கொண்டுள்ள எம்பெருமான்களுட்பட ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய ஸ்வாமிகளோடு நிலத் தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்களோடு வாசி யற அனைவர்க்கும்‌ இவ் வுலகிலுள்ளவர்‌ கட்கும்‌ இங்குண்டான ஆநந்தம்‌ நிலைத்திருப்பதற்குக்‌ காரணம்‌, ஐவர்களான பெரிய நம்பி, திருக்கோட்டியூர்‌ நம்பி பெரிய திருமலை நம்பி, திருமலை யாண்டான்‌, திருவரங்கப்‌ பெருமாளரையர்‌ இவர்களுக்கு சிஷ்யராய்‌ திருவனந்தாழ்வான்‌ அம்சமாய்‌ இராமாநுசராய்‌ வந்தவதரித் ததாலாகும் –

இலரேல்‌ இருநூ றகவைகளும்‌ ஈங்கே
நலமொன்‌ றுளதேயோ? நாட்டில்‌ – பலவென்‌?
பரமன் படைப்போடு பாடியன் எற்கோடல்‌
தரமன்று சத்திய மீது–67-

எம்பெருமானாரும்‌ அவருடைய மறு அவதாரமான மணவாள மாமுனிகளும்‌ இருநூறு ஆண்டுகள்‌ இந்த நிலத்தின் கண்‌ எழுந்தருளி யிருக்க வில்லையே யானால்‌ இந்த நானிலத்தில்‌ ஆனந்த மென்பதொன்றும்‌ உண்டோ? இல்லையேயாம்‌. நிற்க. பல பேசி என்‌? பரமன் படைத்த படைப்பும்‌ ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ அடியேனைக்‌ கைக் கோடலும்‌ முதலானவை பயனற்றுப்‌ போயிருக்கும்‌ இது சத்தியம்‌.

இதுவொப்ப தின்பமில்லை யாமுநர்த்‌ தாள்கள்‌
கதி பெற்றூர்‌ யாமுநர்த்‌ தாதை – கதி பெற்றேன்‌
இவ் விருவர்‌ தாங்களே ஆறுடன்பே றென்றபடியேன்‌
செவ்வி யுறச்‌ சேர்ந்தூய்ந்த னன்‌-68

ஸ்ரீமத்‌ ஆளவந்தார்‌ திருவடிகளையே ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளும்‌, இவர்‌ திருக் குமாரரான யாமுநாசார்ய ஸ்வாமிகளும்‌ தமக்குக்‌ கதி என்று பெற்றிருந்த இந்த இரண்டு ஸ்வாமிகளுடைய திருவடிகளையே கதி யென்றும்‌ ஆறும்‌ பேறுமா செவ்வி யுறச்‌ சேர்ந்துய்ந்தே னென்பதில்‌ இது ஓப்பதின் இல்லையாம் –

சேர்ந்தூய்ந்தோன்‌ சீராமன்‌ பங்கயக்கண்‌ ணன்தாள்கள்‌
ஆர்ந்த புகழ்ப்‌ பாடிய னம்பொனடிச்‌ – சேர்ந்துய்ந்தேன்‌
இவ்வளவே பேற்றினுக்கு ஏய்ந்த யானும் பெற்றனன்
கவ்வை யென்பால்‌ காட்டா தலை–69-

அடியேன்‌ நிரம்பிய புகழாளரான ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌, மணக்கால்‌ நம்பி, உய்யக் கொண்டார்‌ இவ் விருவருடைய திருவடிகள்‌ அடைந்து உய்ந்தவர்‌. இந்த ஸ்வாமிகளின்‌ திருவடிகளே கதி யென்று சேர்ந்த இவ்வளவே பேறு பெறுதற்குரிய யாவும்‌ பொருந்தி விட்டன. ஆதலால்‌ துர் விஷயங்கள்‌ என்பால்‌ தலை காட்டாது –

தலைகாட்டாத்‌ தண்ணென்ற ஞானவவொழுக்‌ கங்கள்‌
தலைக்காட்டாத்‌ தண்ணென்ற முக்கும்‌ – நிலைநாட்டும்‌
வாள்நேர்‌ உயர்கதியும்‌ வள்ளலெனும்‌ பாடியன்தன்‌
தான்தர முந்தும்‌ தகவு–70-

மிகத்‌ தாழ்ந்தான பொய்யறியும்‌ தீயொழுக்கம்‌ அழுக்குடம்பும்‌ என்பாலும்‌ தலைக் காட்டாதவைகள்‌. ஒளி பொருந்திய நித்திய விபூதியாம்‌ உயர் கதி வள்ளலெனும்‌ ஸ்ரீமத்பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய தயையால்‌ தானே முந்தும்‌.

தகவில்‌ உலகின்‌ தகவுடையீர்‌ நீரேதகவென்னும்‌ தத்துவம்‌ வேட்கும்‌ – தகையீர்‌
தகுதியில்‌ தத்துவம்‌ நாயேனைக்‌ கொண்டு தகும் கூட்டம்‌ தந்தளித்தீர்‌ நீர்‌–71-

பெருமை யென்பதறியாத உலகில்‌ பெருமை மிக உடையீர்‌ நீர்‌. தயை யென்ற தத்துவம் தானே விரும்பும்‌ தயை யுடையீர்‌ நீர்‌. தகுதி என்பது இல்லாத அடியேனான கீழோனைக்‌ கைக் கொண்டு நிலத்தேவர்‌ கூடத்திலடியேனை இருத்தினீர்‌. இவற்றை யெல்லாம்‌ அடியேனைக்‌ கைக் கொண்டவாற்றானே அறிந்தேன் –

நீர்தந்த சேமம்‌ நிமலனாம்‌ நாதமுநி
பார் நிரம்பும்‌ பல் புகழ்ப்‌ பாவினத்தை – சீருநவே .
மீள்வித்த விஞ்சுசுவைப்‌ பண்ணமர்நா லாலிரத்தால்‌
ஆள்வித்த பாடியனன்றோ–72-

மிக்க சுவை யுடையதும்‌ பண்ணமைந்ததும்‌ உலகம்‌ நிறைந்த புகழுடையதுமான நாலாயிரத்தில் திவ்ய ப்ரபந்த பாசுரங்களைக்‌ ‘குற்றமன்றிக் குணம்‌ மிக்கவரான ஸ்ரீமந் நாதமுநிகள்‌, மறைந்து போனதை மீள்வித்ததைக்‌ கொண்டு அடியேனை ஆள்வித்தீர்‌. ஆதலால்‌, இத்தகைய பாஷ்யமாசார்யரான நீர்‌, அடியேற்கு எல்லாச்‌ சேமமும்‌ நீரன்றோ –

அன்றே குருகூர்ச்‌ சடகோபன்‌ தாளிணையும்‌ பொன்றாப்‌ புகழ்நிரம்பும் வாய் மொழியும்‌ –
நன்றுதவி பொந்நிலத்தில்‌ பொன்னிலத்தில்‌ மன்னு புகழ்ப் பாடியன்
என்னை நிகர்‌ யானென்றனன்‌–73-

திருக்குருகூரிலவதரித்த நம்மாழ்வருடைய இரண்டு திருவடிகளையும்‌, அழிவற்ற இவரருளிச்‌ செயலாம்‌ திருவாய்மொழியும்‌ அடியேற்குய்யும்‌ வண்ணம்‌ உதவி, இருள்தருமாஞாலமாகிய இவ்வுலகிலும்‌ தெளிவிசும்பு திருநாடான பரமபதத்திலும்‌ நிரம்பப்‌ பொருந்தியுள்ள புகழாளரான ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ ‘உனக்கு நிகர்‌ நீதா னென்றார் –

என்றறிவேன்‌ என்னாயன்‌ செய்தநன்றி முற்றவும்‌
இன்றறிந்தேன்‌ ஓரளவே சேனையர் கோன்‌ – தன் திறத்தில்‌
அன்பின்‌ அளவில்யான்‌ அங்ஙனமே என்பாலும்‌
அன்பின்‌ அளவில்லான்‌ என்று–74-

அடியேற்கு வகுத்த ஸ்வாமியான ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ அடியேனை உய்வித்தல்‌ பொருட்டு, அடியேன் திறத்தில்‌ செய்த நலம்‌ முற்றவும்‌ என்றும்‌ அறியப் போகாது. ஆயினும்‌ இன்றாக ஓரளவே அறிந்து கொண்டேன்‌. ஸ்ரீவைஷ்ணவ சமயாசார்யர்களில்‌ முதல்வரான ஸ்ரீமத் விஷ்வக்சேனரிடத்தில்‌ தாழுய்யும்‌ பொருட்டும்‌ பிறரை உய்வித்தல்‌ பொருட்டும்‌ அளவிறந்த அன்புடையாரானார்‌. அதே நிலையில்‌ அடியேனை உய்வித்தல்‌ பொருட்டு அளவு கடந்த அன்புடையரானார் –

என்றும்‌ மறவேன்‌ மறந்தேன்‌ இனியுணர்ந்தேன்‌
குன்றேய் குணக் கொண்டல்‌ பாடி – நின்ற புகழ்‌
கேள்வன் பொன்‌னாகத்து நீங்காத்தாய்‌ தாள்கட்கு
ஆளென்று புக்கான்‌ தனை–75-

குன்று போல்‌ மிக்க குணங்களால்‌ நிறைவாளனும்‌, கொண்டல் மேகம்‌ போல்வானும்‌ குறையேது மின்றி நற்குணக் கடலாக நின்ற புகழாளனான இறைவன்‌ திருமார்பை இறையும்‌ அகலாத உலக மாதாவான திருமகள்‌ திருவடிகளைத்‌ தஞ்சமென்று பற்றும்‌ ஸ்ரீமத் பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளை உணராமையால்‌ மறந்தேன்‌; அடியேன்‌ உணர்ந்தேன்‌; இனி மறவேன் –

கேள்வனாகம்‌ நீங்காத்தாய்‌ தாள்கள்‌ சிரங்கொண்டு
கேள்வனையே தஞ்சமென்று கொள்ளும்‌ – மீள்வில்சீர்‌
பாடியன் தன் ஆர்ந்த புகழ் எக்காலும் பண் தொடுத்து
பாடுதற்‌ குற்றதொரு பற்று–76-

உலக நாயகன் தன்‌ திருமார்பை இறையும்‌ அகலாத உலக மாதாவின்‌ திருவடிகளைச்‌ சிரத்திற்‌ கணியாகக்‌ கொண்டு இவளைப்‌ புருஷகாரமாக, எம்பிரான்‌ தன்‌ திருவடிகளையே தமக்குத்‌ தஞ்சமென்று கொள்ளும்‌, பழுதின்றி குணங்களால்‌ நிறைந்த புகழாளரான ஸ்ரீமத்பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய கெளரவம்‌ மிக்க புகழை எக்காலத்தும்‌ பண்ணின்‌ இசையோட தொடுத்துப்‌ பாடுதற்குரிய தொரு உபாதானமாகும் –

பற்றோ சிறிதில்‌ பரன்சீர்க்‌ கடல்மூழ்கி
நற்றமிழ்நூல்‌ நான்களித்த இன்பமாரிப்‌- பெற்றியன்‌
வண்குருகை வந்தருளும்‌ மாறன்‌ மலரடியே
பண்புமிகும்‌ பாடியருக்‌ கின்பு –77

உலகியலில்‌ பற்று சிறிதுமின்றி பரனாம்‌ பெருமானுடைய குணக்கடலில்‌ மூழ்கி அந்த குணங்களையே உபாதாநமாகக்‌ கொண்டு, திருவாய்மொழி திருவிருத்தம்‌, பெரிய திருவந்தாதி, திருவாசிரியம்‌ என்கிற நான்குப்‌ பிரபந்தங்களளித்த வளமிக்க குருகூரில்‌ வந்தவதரித்த நற்குணக்கடலாகிய சடகோபருடைய திருவடிகளே ஸ்ரீமத்பாஷ்யமா சார்ய ஸ்வாமிகளுக்கு என்‌றும்‌ இன்பமேயாம் –

இன்புருவன்‌ பொய்கை எழிலியகல்‌ வார்கடல்நெய்‌
மின்சுடரா வேங்கடவற்‌ காட்டுமவன்‌ – பொன்னடிகள்‌
வன்சரணா வாழும்‌ அயிந்தைவரும்‌ பாடியன்தூள்‌
உன்சரணா நெஞ்சமே யுள்‌–78-

பகவதநுபவ இன்பமே வடிவான பொய்கையாழ்வார்‌, ஸ்ரீபூமியையே அகலாக, நிறைகடலை நெய்யாக விளக்கேற்றி இந்த ஒளிமிக்க விளக்கால்‌ திருவேங்கடத்தெம்பெருமானை உலகங்காணக்‌ காட்டும்‌ அவர்‌ திருவடிகளையே தமக்கு வாழ்வாக அவதரித்த, ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யஸ்வாமிகள்‌ திருவடிகளையே நெஞ்சமே! உனக்குத்‌ தஞ்சமாக நினைவில்‌ கொள்ளுவாயாக –

உள்ளிருள்‌ நீக்கும்‌ ஒளிவிளக்‌ கேற்றுதற்கு
தெள்ளுதமிழ்‌ தேர்ந்து துணைக்கோடும்‌ – விள்ளரிய
கீர்த்தியார்‌ பூதத்தார்‌ தாளினையே பாடியற்கு
சீர்த்த பயன்‌ எற்கிவனே வாழ்வு–79-

உலகவருடைய அகவிருளைப்‌ போக்குதற்கு உள்ளத்திலுண்டான கோணலைப்‌ போக்கும்‌ தெளிந்த தமிழ் பாசுரமே நம்‌ செயலுக்கேற்ற துணை என்று தேர்ந்து துணையாகக்‌ கொண்ட, எவராலும்‌ புகழ்ந்து சொல்லுதற்கரிய சிறப்பு வாய்ந்த பூதத்தாழ்வார்‌ திருவடிகளையே, தமக்குற்ற பயனாகக்‌ கொண்ட ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே, அடியேற்கேற்ற பேரின்ப வாழ்வாகும்‌ என்பதாம் —

வாழ்வான்‌ வலிய வழி கண்டேம்‌ நன்மைமிக்காள்‌
கேழில் திருக்‌ கண்ட பொன்‌ னாழி கண்ட – கீழ்வில்‌
தமிழ்த் தலைவன்‌ பொன்னடியே தன் சரண்‌ கொண்டான்‌
எமைக்காக்கும்‌ ஏற்ற வழி–80-

நலமந்தமில்லதொரு நாட்டில்‌ போய்‌ வாழ்ச்சி பெற, சிறப்புற்ற மார்க்கமொன்று நாம்‌ கண்டு கொண்டோம்‌. எல்லா நலன்களாலும்‌ மிக்காளரான திருக்கண்டதோடு பொன்னாழி கண்டேன்‌ என்று பாடிய எக்குறையுமற்ற பேயாழ்வாராகிய தமிழ்த்‌ தலைவன்‌ அழகிய திருவடிகளே தன்‌ சரண் என்று கொள்ளும்‌, ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ எம்மைக்‌ காப்பதற்கு ஏற்ற வழியாகுமென்பதாம் –

வழியல்‌ வழி யனைத்தும்‌ வாள் கொண்டு வெட்டி
கழிய மிகு நல்வழியே காட்டும்‌ – பழுதில் புகழ்‌
பத்திசாரன்‌ தாளிணையே பாடியற்காம்‌ பரிசு
இத்தகையோன்‌ ஏற்ற பரிசு–81-

தேவதாந்தர சாதனாந்தர ப்ரயோஜநாந்தர முதலான வழியில்லா அல் வழிகள்‌ பலவும்‌, தம்‌ நாவென்னும்‌ வாளால்‌ அறத் தொலைத்து எம்பெருமான்‌ நாரணனே ஆறும்‌ பேறும்‌ என்பது முதலா மிக மிக நல்ல வழிகளனைத்தும்‌ தெளியக் காட்டி உலகவரை உய்வித்த திருமழிசைப்‌ பிரான் திருடியிணைகளே, ஏற்ற பயனாகக்‌ கொண்ட ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே எமக்குரிய எல்லாப்‌ பயனுமாவாரென்பதாம் –

பரிசறிவார்‌ பல்லோர்‌ பரிசறிவார்‌ ஈடே?
குருகை வரு வண்சட கோபன்‌ – திருவடியே
பாடியற்‌ கேற்ற நிதி பாடியன் சேர்ப்‌ பாடியனே
ஈடிணையில்‌ எந்தம்‌ நிதி–82-

உலகில்‌ உற்ற பயனறிவார்‌ தாம்‌ கண்டதுவே பயனென்பார்‌ பல்லோர்‌, ஆனால்‌ பாஷியமாசாரியர்‌ கண்ட பரிசே அனைவர்க்கும்‌ ஏற்ற பயனாகையால்‌ பயனறிவார்‌ இவர்க்கீடில்லை. திருக்குருகூரில்‌ அவதரித்த சடகோபன்‌ திருவடிகளே நிதி போன்ற கதியாகும்‌ என்றருளியவர் ஸ்வாமி ராமாநுஜர்‌. இந்த ராமாநுஜர்‌ திருவடியைச்‌ சாரும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யஸ்வாமி ஈடும்‌ எடுப்புமில்லா நிதியாகும்‌ எம் தமக்கு –

நிதிகண்‌ டுரைசெய்தோன்‌ நீள்குன்றத்‌ தியாவும்‌
நிதியா அடியா ரடித்தூள்‌ – நிதியாக இன்பப்‌
பெருங்குழுசேர்‌ சேரலர்‌ கோனின்பம்‌
பாடியற்‌ கின்பமெற்‌ கு-83

திருவேங்கட மலையின்‌ தொடர்பே நிதி என்றும்‌, மெய்யடியார்‌ திருவடித் துகளே நிதியாகவும்‌, எம்பெருமானை நினைந் தின்‌புறும்‌ பெருங் குழுவே பேரின்பமாகச்‌ சேரும்‌ குலசேகரப்‌ பெருமானே ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்கு இன்பம்‌. இந்த ஸ்வாமிகளே அடியேனுக்கு ஏற்ற ‘இன்பமென்பது –

எமக்குக்‌ கதியாவார்‌ பாடியரென்‌ போல்வார்‌
தமக்குங்‌ கதியாவர்‌ தாமே – குமைக்கும்‌ .
உலகென்று பல்லாண்‌டு ஓதும் விட்ணு சித்தர்‌
உலகிய லென்று பல்லாண்‌ டோதிய பட்டர் பிரான்‌– 84

இவ்வுலகின்‌ தன்மையால்‌ எம்பெருமான்‌ திருமேனிக்குக்‌ கண்ணேறு வரும்‌ என்று பல்லாண்டு பாடிய பட்டர்பிரான்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்கும்‌ உற்ற காப்பாவார்‌. இத்தகு ஸ்வாமி எமக்குக்‌ கதியாவதன்றி, என் போல்வார்‌ கீழோர்‌ பலருக்குங்கதி தாமே யாவாரென்பதாம் –

உற்று நோக்கில் தேவியர் மூவர் உயர்ந்தோர் யார்
பற்றிப்‌ பரன் தாள்‌ உலகுய்ய – முற்றுணர்வை
ஒதியருள்‌ கோதை உயர் கதி கொள்‌ பாடியன் தாள்‌
மா துயர் மாய்க்கும் மருந்து–85-

எம்பெருமானுடைய தேவியார்‌ மூவராகும்‌. இவர்களில்‌ உலகவர்களுக்கு உபசரிப்பதில்‌ உயர்ந்தோர்‌ யாவரென உற்று நோக்கில்‌ உலகோர்‌ பரன் தாள்‌ பற்றி உய்வடைய இன்றியமையாச்‌ சாதனமான மெய் யுணர்வை இரண்டு ப்ரபந்தங்களில்‌ தெள்ளத்‌ தெளிய ஒதி யருளிய கோதை நாச்சியரே என்பது தேறும்‌. இத்தகு நாச்சியார்‌ திருவடிகளையே உயர்ந்த கதியாகப்‌ பற்றிய ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ திருவடிகளே பிறவித் துயர்‌ ஒழிக்கும்‌ மருந்தாகுமென்பதாம் –

மருந்தாய தொண்டர் தாள்‌ தொண்டர் தாள்‌ தூளே
பெருவடிவாப்‌ பேணிக் கொள்‌ பெம்மான்‌ திருவடி சேர்‌
பாடியன் தன் தாளிணையே ஒப்பில் பரகதிக்கு
ஈடில்லா நம்நல்‌ தவம்‌–86-

பிறவி நோய மாத்திரமன்று, அனைத்து நோய்க்கும்‌ மருந்தாவது தொண்டரடித் தூளே யாகும்‌. இத் தகுத்‌ தொண்டரடிப்‌ பொடியே தமக்கு மேம்பட்ட திருமேனியாக விரும்பிக்‌ கொண்டதையே நிரூபகமாக உடையவர்‌ தொண்டரடிப்‌ பொடியாழ்வாராகும்‌. இந்தப்‌ பெருமை யுடைய இவ் வாழ்வார்‌ திருவடிகளையே தமக்குத்‌ தஞ்சமாகச்‌ சேர்ந்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய திருவடி-யிணையே ஒப்பற்ற நலமந்தமில்லதோர்‌ நாட்டிற்குப்‌ போவான்‌ ஈடிணை யில்லா நம்முடைய நல்ல தவமாகும்‌ என்பதாம் –

நற்றவம்‌ மொன்றுமிலேன்‌ நாரணன்‌ தாள் பணியேன்‌
உற்ற உறவறியேன்‌ ஊழ்வினையேன்‌ — பற்றி நின்‌
தாள்பணியேன்‌ தண் கழலே பொய்யன்‌ புறந் திரிவேன்‌
ஆள் கொண்டாய்‌ கொண்டதுவே மெய்‌–87-

நலமந்தமில்லாதோர்‌ நாடுபுகுவான்‌ பொருட்டு உலகவர்‌ செய்வதாகிய நல்ல தவங்களொன்றும்‌ செய்திலேன்‌. இதைத்‌ தருவானான நாராயணன்‌ திருவடிகளைப்‌ பணிவதும்‌ செய்திலேன்‌. இவைகளின்‌ காரணமாக ஊழ்வினை வயத்தவனாய்‌, மெய்யுணர்வு மறைக்கப்‌ பெற்றவனாய்‌ பரனுக்கும்‌ எனக்கும்‌ உள்ள உறவுகளை ஒன்றும்‌ அறியேன்‌. இந்தக்‌ குறைகளெல்லாம்‌ தீர்த்து தெளிய பரம காருணிகரான தேவரீர்‌ திருவடிகளைத்‌ தஞ்சமென்று பற்றி பணியேன்‌. இன்னும்‌ பொய்யனாய்‌ தேவரீரையும்‌, எம்பெருமானையும்‌ விட்டுப்‌ புறந் திரியுமவனான அடியேனை மேல்‌ விழுந்து அடிமை கொண்டதுமன்றி, மெய்யாம்‌ வகையில்‌ மேல்‌ செய்வனவற்றைச்‌ செய்து அருளினீர் –

மெய்யார்‌ திகிரியையும்‌ மேவார்‌ செருக்களத்தில்‌
உய்யா வகை முழங்கும்‌ ஒண்ணந்தும்‌ – மெய்யாரும்‌
எட்டெழுத்தும்‌ புண்டரமும்‌ இன்னருளே நாமமும் நின்‌
பட்டழுந்தும்‌ பங்கயமீந்‌ தாய்‌–88-

ஒளிப் பிழம்பாகத்‌ திகழும்‌ திருமேனியை யுடைய சுதரிசனாழ்வானையும்‌, விரோதிகள்‌ நிறைந்துள்ள யுத்தக் களத்தில்‌ புகுந்து, விரோதிகள்‌ குடல்‌ குழம்பும்படி முழுங்கும்‌ பாஞ்ச சந்நியாழ்வானையும்‌ முறையே வலது தோளிலும்‌ இடது தோளிலும்‌ பொறித்து உண்மை யறிவினை விளைப்பதற்கு இன்றியமையாத திருவஷ்டாக்ஷர மந்திர முதலான வற்றையும்‌ திருமண்‌ காப்பையும்‌ திருவாராதன தெய்வமான தேவரீருடைய திருவடி நிலையும்‌ ஈந்தருளினீர் –

(ஈந்த) அருளே அருள் தந்த அன்னே சுரக்கும்‌
பொருளே இணையடிகள்‌ பொன்னே – மருவார்கள்‌
அங்கம் அடரும் அயிந்தை வாழ் அண்ணலே
இங்கு இறைவர் ஆள்கவத்‌ தா–89-

இவையெல்லாம்‌ தந்த, அருளே ஒருவடி வென்னலாம்படியான ஸ்வாமிகளே! அடியேன்‌ கடைத்தேற அருளைத் தந்த இறைவன்‌ போன்றவரே! மிகவும்‌ சுரந்து மிக உண்டான செல்வமே! பொன் போலுமழகிய இணைந்த திருவடிகளை யுடையீரே! விரோதிகளைப்‌ பறிப்பது போல்‌ ஒழிக்கும்‌ திருவயிந்தையில்‌ கோயில்‌ கொண்டுள்ள உற்ற ஸ்வாமியே! மேன்மேலும்‌ இங்ஙனமே ஆள்வீராக!

நல்குங்‌ கமலநேர்‌ நாண்மலர்த்‌ தாள்தொடங்கி
பல்சுவைய மேனி பரியந்தம்‌ – பல்சுவையில்‌
பாடிப்‌ பரவிய பாணன்சேர்‌ பாடியனே
ஈடில்‌ கதியாம்‌ எமக்கு–91-

நலமனைத்தும்‌ நல்குந் திருமகள்‌ தோற்றத்துக் கேதுவாகிய அன்று பூத்த தாமரைப்‌ போன்ற திருவடி மலர்‌ தொடங்கி, மிக்க பேரழகுக்குக்‌ கொள்கலமாகிய திருமேனி பரியந்தமாக பல விதமான பாட்டுச்‌ சுவையுண்டாம்படி பாடிப் பரவிய திருப்பாணாழ்வாரைத்‌ தஞ்சமடைந்த ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே! நீரே எந்தமக்கு ஒப்பற்ற கதியாகுமென்பதாம் –

எமக்குங்‌ கதியுண்டே எண் பதினாறு தலம்
தமை வாழ்த்தியதே தகும்பே றமைக்கும்
பரகாலன் தாளிணையே தஞ்சம் கொள் பண்பன்
அரவிந்த மன்ன திருத்தாள் –92-

திருமங்கையாழ்வார்‌ எண்பத்தியாறு திவ்விய தேசங்களை வாழ்த்தி, அதுவே பெறும்‌ பயனான நலமந்த மில்லாதொரு நாடென்றமைக்கும்‌ இவர் திருவடிகளே தஞ்சமென்று கொள்ளும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய தாமரை போன்ற திருவடிகளே ஏதிலனான அடியேற்கு கதியாகு மென்பதாம் –

தாளிணைகள்‌ தானவர்‌ தேவர்‌ தொழுதிறைஞ்ச
நாள்தொறும்‌ மாமுனி வாழ்த்துரைக்க – நாள்தொறும்‌
பாவியேனைக்‌ கைக்கொண்ட பாடியன்‌ நாவழுத்த
தேவனாதன்‌ சேரயிந்‌ தை–93-

திருவயீந்த்ர புரமானது தினந்தோறும்‌ தானவர்களும்‌ தேவர்களும்‌ வந்து வந்து தொழுதிறைஞ்சவும்‌, ஸ்ரீமன்‌ மணவாளமாமுனிகள்‌ நாள்தொறும்‌ வாழ்த்துரைக்கவும்‌, பாவியேனான அடியேனையும்‌ கைக்கொண்ட ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரிய ஸ்வாமிகள்‌ நாவினால்‌ நாள் தொறும்‌ நவின்று வழுத்தவும்‌ தேவனாதன்‌ கோயில்‌ கொண்ட தலமாகும் –

அயிந்தையில்‌ பாடிய யாதறியா நாயேன்‌
கயவனெனைக்‌ கண்டுகந்‌ தன்பின்‌ – நயந்தழைத்த
நன்மைமுற்றும்‌ ஊட்டினையே! நாண் மூன்றில்‌ அன்றின்‌றும்‌
நன்மைமிகும்‌ பேறனைத்தும்‌ நல்கு–94-

திருவயீந்திரபுரத்தில்‌ நித்திய வாசம்‌ செய்யும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யாசார்ய ஸ்வாமிகள்‌, உண்மை உணர்வில்‌ ஒன்றும்‌ அறியாத கீழோனானக்‌ கயவனாகிற என்னைக்‌ கண்டு செளசீல்யத்தால்‌ உகந்தருகில்‌ அழைத்து நன்மை யென்பதனைத்திலும்‌ மேம்பட்ட நன்மையை முற்றூட்டாக மூன்று நாளில்‌ அக் காலத்து ஊட்டி யருளினீர்கள்‌. அது போல்‌ நன்மை மிகும்‌ பேறனைத்தும்‌ இன்று நல்குவீராக –

நல்கும்‌ நலமிக்க ஆசார்யர்க்‌ கெல்லைநீர்‌!
பல் புகழில்‌ மிக்‌க புகழ்ப் பாடியர் நீர் -அல்வழியில்‌
செல்வேன்‌ சிரத்தில்‌ அடி சூட்டிச் சீடர்களில்‌
எல்லையிவ லென்னும்‌ பேர் –95-

பல புகழில்‌ மிக்க புகழாளராம்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ நீராகும்‌. அதே நிலையில்‌ ஆசார்யரென்பவரில்‌ முடிவில்‌ உயர்ந்தவரெனத்‌ தக்கவர்‌ நீரே. அடியேனோ நன்மைக்கு மாறான அல் வழியிலேயே செல்பவன்‌. இத் தகு அடியேனுக்கு சிரோ பூஷணமாக தேவரீர்‌ திருவடித் தாமரைகளைச்‌ சூட்டி அலங்கரித்தருளி சிஷ்ய வர்க்கத்தில்‌ இவன்‌ முடிவானவனென்னும்‌ பேர்‌ நல்குவீராக –

போ் பிதற்றிப்‌ பெற்றேன்‌ பெறும் பரி சங்ஙனமே
சீர்ப் பாடிப்‌ பெற்றேன்‌ சிறப்பெல்லாம்‌ – காரேய்‌
கருணை தனைக்‌ கண்டு கலக்கங்கள்‌ தீர்ந்தேன்‌
இருணிலத்தில்‌ பாடியன்தாள்‌ ஏய்ந்து–96-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளின்‌ திருநாமத்தைக்‌ கண்டவாறு பிதற்றியும்‌ மெய்யடியார்‌ கூட்டத்துப்‌ பெற வேண்டிய பகவதனுபவ பயனைப்‌ பெற்றேன்‌. அவ்வாறே அவர்‌ சீர்களைப்‌ பாடி உய்வு பேற்றுக்குரிய சிறப்பெல்லாம்‌ பெற்றேன்‌. கைம்மாறு கருதாத கொண்டல்‌ முகில்‌ போல்‌ இந்த இருள் தரு மா ஞாலத்தில்‌ அவர் தம்‌ கருணைப்‌ பெருக்கத்தைக்‌ கண்டு உய்வகையில்‌ குறை யுண்டாக்கும்‌ கலக்கங்கள்‌ தீரப் பெற்றேன்‌. இவ்வளவும்‌ இவர்‌ தம்‌ திருவடிகளைப்‌ பொருந்தியதலாகும் –

ஏய்ந்த கருணைவடி வானோன்‌ இவனன்றே
வாய்ந்த ஒழுக்கநிலை நின்றோனே – மாய்ந்து
அறிவின்மை முற்றறிவின்‌ பாடியன்‌ மிக்கோன்‌
பிறிது பெறுவ தெவன்‌?–97-

ஒழுக்கத்திற்‌ காணுமிடத்து மிகப் பொருந்திய கருணையே வடிவானவர்களாகிய ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளே யாவர்‌. இந்த கருணைக்கேற்ற ஒழுக்க மிக்காரும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யரே தான்‌. அறிவின்மை தொலைந்து முழு மெய்யுணர்வின்‌ மிக்கவரென்பதில்‌ குறை யேதுமில்லாதவர்‌. இத்தகு பண்புகளிருக்க இதில்‌ மிக்க பிரிதொரு பண்பு பெறுவதெது –

எவன்தான்‌? அயிந்தையில்‌ ஈடிணை யில்லான்‌
எவன்தான்‌? மதுரகவி நிட்டை – எவன்தான்‌?
வரயோகித்‌ தாள்சேர்ந்த தேவநாதன்‌ சேயாம்‌
பரனாம்‌ இவனெங்‌ கதி–98-

திருவயிந்திரபுரத்தில்‌ ஈடிணையில்லா ஆசார்யர்யவரே? மதுரகவி நிட்டையை மேற்கொண்டிருந்தவர்‌ யாவரே? ஸ்ரீமன்‌ மணவாள மாமுனிகளையே கதியென்று பற்றிய தேவனாதாசார்யர்‌ திருக்குமாரரென்ற சிறப்புற்றவர் யாவரே? இத்‌ தன்மைகளால்‌ மேன்மை யுள்ளவராகிய ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யஸ்வாமிகள்‌ ஆகிய நீரே எங்களுக்குக்‌ கதி யாவீர் –

கதியொன்‌ நிலதென்போல்‌ காசினியில்‌ யாது?
மதிதான்‌ இலதில்‌ உலகில்‌ – எதுவொன்‌
றிதுவேயோ? பாடியற்குப்‌ பற்றுதற்‌கேது
இதுபோல்வார்‌ யாரே? இனி–99-

யாரும்‌ பற்றத் தகாத கதியற்றவன்‌ என்போல்வாருலகில்‌ யாவர்‌? அறிவின்மையில்‌ இந்நில உலகில்‌ என் போல்வார் யாரே? இனி இத்தகு நிராதீன நிலைகளே ஸ்ரீமத்பாஷ்யமாசார்யர்‌ தனக்குத்‌ தஞ்சமெனக்‌ கருதி கைக் கொள்வதற்குங்‌ காரணமாயினவாம்‌. இதனால்‌ ஸ்ரீமத்பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுக்கு உலகில்‌ நிகரில்லை யென்பதாம் –

இனிமறவேன்‌ செம்‌ ப்க்கொண்‌ டிசைத்து
வினவி முறுவல்‌ மிகப்பூத்து – நனிமகிழ்ந்து
செந்தா மரைக்கண்‌ கடைக்கணித்த சீர்மைதனை
அந்தோ யான்‌ உய்வழியீ தென்று–100-

அடியேனை ஒரு பொருளாக மதித்து எதிரிலமரச்‌ செய்து சிவந்த பவளம்‌ போன்ற செவ்வாய்க்‌ கொண்டு மந்திரார்த்தங்களைச்‌ சொல்லி வினாவுதல்‌ செய்து, தக்க விடையளிக்க வெண்முறுவல்‌ மலரச்‌ சிறு நகைபுரிந்து மிக்கபேருவகை கொண்டு செந்தாமரை யொத்த திருக்கண்கள்‌ கொண்டு கடைக்கணித்து உகந்த, இந்த கெளரவச்‌ செயலை அந்தோ! அந்தோ! இவைகளே அடியேற்கு உய்யும்‌ மாழ்க்கமென்று எக்காலும்‌ நினைவிற்கொண்டு இனி எக்காலும்‌ மறவேன்‌ என்பதாம் –

என்றும்நின்‌ தாளிணைக்கண்‌ சென்னி யிலக்காகும்‌
என்றும்‌ அருண்மொழியுள்‌ ளெஞ்சாது – நின்றருளும்‌
சேமத்‌ திருமேனி செவ்விக்கள்‌ ஈன்றிலகும்‌
யாமிழைத்த தென்ன தவம்‌? –101-

ஸ்ரீமத்‌ பாஷ்யமாச்சார்ய ஸ்வாமிகளே! தேவரீருடைய திருவடித்‌ தாமரைகளே அடியேன்‌ சென்னிக்கு இலக்காக அமைந்துள்ளன. தேவரீர்‌ கருணை கொண்டு அருளிச்‌ செய்த அருள் மொழிகளே உள்ளத்தில்‌ குறைவற்று என்றும்‌ நின்‌று பிரகாசிக்கும்‌. தேவரீர்‌ திவ்ய மங்கள விக்ரஹமே அழகிய கண்களில்‌ விளங்கிக்‌ கொண்டிருக்கும்‌. இத்தகு, சீரிய பயன்களைக்‌ கொண்டிருக்க யாம்‌ எத்தகைய தவமியற்றினேனோ? தெரியாது.

தவமிழைத்தோர்‌ யாரே? தமியன்போல்‌ கல்லா
தெவையெனைத்தும்‌ கேட்டுத்‌ தெளிந்தார்‌? – யவரேயோ?
பாடியன்தன்‌ னின்னருளே யிங்கன்‌ பகர்வித்த
ஈடில்லா நீசனெனை ஏற்று–102–

தனித்து கதியற்று நிற்பவன்‌ யான்‌. இத்தகையன்‌ பெருந்தவம்‌ செய்த அடியனைப்‌ போல்‌ யாரே? இனி முறையாகக்‌ கல்லாமலே சீரிய நூல்களைக்‌ கேட்டுத்‌ தெளிந்தோர்‌ யார்‌? ஐயந் திரிபுகளாகிற குற்றங்களைந்து தெரியக் கற்பிக்கும்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளருள்‌ ஈடில்லா நீசெனனை ஏற்று இவ் வண்ணம்‌ சொல்லும்படி செய்தது –

ஏற்றேன்‌ பிராட்டி திருவருளால்‌ எம்பிரானை
ஏற்ற னிவனருளால்‌ பாடியனை – ஏற்பதும்‌
ஏலாத தென்பதிலை பாடியன்தன்‌ இன்னருளால்‌
ஏலாவை குந்தமுத லேற்பு–103-

கருணை வடிவாயமைந்த பிராட்டி கடாக்ஷத்தால்‌ எம்பிரானை கதியாக ஏற்றேன்‌. இவன்‌ தன்னின்னருளால்‌ ஸ்ரீமத்‌ பாஷ்யமாசாரியனை கதியாக ஏற்கப்‌ பெற்றேன்‌. இவனருளால்‌ பேறு பெருவதெவையுளதோ அவைகளில்‌ இன்னது ஏற்க முடியும்‌ இன்னது ஏலாதது என்பதில்லை. ஏற்றரும்‌ வைகுந்த முதலாக வுள்ளதனைத்தும்‌ ஏற்கும்‌ வாய்ப்பினைப்‌ பெற்றோம்‌ என்பதாம்‌-

ஏற்பதே நின்‌ தாளின்றி என் சிரத்தால்‌ வேறொன்றை
ஏற்றறேல் நின்‌ சார்பன்‌ றயலொன்றை – ஏற்பதே?
தாளருமை கண்டேன்‌ குருகூர்ச்‌ சடகோபன்‌
ஆளுடையான்‌ கண்ட வாறு–104-

ஆசாரிய ஸ்வாமிகளே! அடியேன்‌ தேவரீர்‌ திருவடிகளின்‌ அருமைப் பாட்டை அறிந்தவன்‌. எவ்வாறறிந்தேனென்னில்‌? திருக்குருகூரில்‌ அவதரித்த சடகோபனாம்‌ நம்மாழ்வாரை எம்பெருமான்‌ நோக்கி, நீர்‌ விலக்ஷணமான மோக்ஷமென்று அடிக்கடி சொல்வீரே அந்த மோக்ஷம்‌ தந்தோமென’ ‘அந்த மோக்ஷம்‌ வேண்டா, தேவரீர்‌ திருவடிகளை சிரசிலணிவித்தருள வேண்டு மென்றார்‌. அதைப் போல்‌ தேவரீர்‌ திருவடிகள்‌ சார்பன்றி வேறொள்றை ஏற்க மாட்டேன்‌ என்பதாம் –

ஆறும்பே றென்றறியார்‌ ஆசிரியா்‌ இந்நிலையில்‌
மாறில்‌ மறைமுற்றும்‌ ஐயபின்றித்‌ – தேறியநீர்‌
ஏதிலன்‌ என்னை இருயென்று முற்றுணாத்தும்‌
கோதிலருள்‌ உந்தங்‌ குணம்‌.–105-

உலகில்‌ ஆசாரியனென்று தம்மைச்‌ சொல்லிக்‌ கொள்ளுமவர்கள்‌ இன்னது சாதனம்‌, பயன்‌ இன்னது என்று வேறுபடுத்தி அறிய மாட்டார்கள்‌. இந்த நிலையில்‌ தேவரீர்‌ வேதங்களும்‌ இவைகளின்‌ சாரமான மந்திரங்கள்‌. இவைகளில்‌ பொருள்களை ஐயந் திரிபற நன்குணர்ந்தவர்‌ நீரே. இத்‌ தகுதி யுடைய நீர்‌ அடியேனோ மூடர்களில்‌ முதல்வன்‌. இத்தகைய அடியேனை எதிரிலிரு என்று இருத்தி அனைத்தும்‌ ஐயம்‌ திரிபற உணர்த்தினீர்‌. இதனால்‌ உந்தம்‌ குணம்‌ யாதுங்‌ குறைவில்லா அருளொன்றேயாக அறிகிறேன்‌.

குணந்திகழ் சீர்க்‌ கொண்டலே பாடியனே தூயோய்‌
மணமலிந்த தாமரைத்‌ தாளோய்‌! – குணமலிந்த
சீநிவாசன்‌ தாளிணையோய்‌! தேவநாதன்‌ கதனேயோ!
கோபாலன் சொல்லமுதக் கூட்டு -105-

குணங்களால்‌ கைம்மாறு கருதாது பெய்யும்‌ கொண்டல்‌ மேகம்‌ போன்ற ஸ்வாமிகளே! ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்யர்‌ என்ற திருநாமமுடையவரே! மணமே உபாதாநமான தாமரையே போலுந்‌ திருவடிகளை யுடையீரே! அடைந்தாரை உய்விக்கும்‌ நற்பண்புகளே திருமேனியான ஸ்ரீநிவாச ஆசார்ய ஸ்வாமிகளின்‌ திருவடிகளாகவே இருப்பவரே! ஸ்ரீமத்‌ தேவநாதசார்ய ஸ்வாமிகளின்‌ திருக்குமாரரே! ஸ்ரீமத்‌ கோபாலாசார்ய ஸ்வாமிகளின்‌ சொல்லமுதமே திருமேனியாக வுடைய ஸ்வாமிகளே என்றவாறு.

கூட்டமு துள்ள தினிமையொருங்‌ கேக்கூட்டி
நாட்டும் தெளி யுணர்வை ஐயமின்றி – நாட்டிச்
சிரத்தில்‌ பரன் தாளும்‌ பாடியன் தாள்‌ சேர்க்கும்‌
வரமிக்க வைகுந்த வான்‌–107–

முன் தோன்றல்களான ஆழ்வாராசார்யர்களாகிய சான்றோர்களுடைய கூட்டமுதின்‌ இனிமையை அடியேனுள்ளத்‌ தொருங்கே கூட்டி இதன்‌ பயனான மெய்யுணர்வை ஐவந்திரிபின்றி நிலை நிறுத்தியும் இதன்‌ பயனாக திருமகள்‌ கேள்வன்‌ திருவடித் தாமரைகளையும்‌, ஸ்ரீமத் பாஷ்ய மாசார்ய ஸ்வாமிகளின்‌ திருவடித் தாமரைகளையும்‌ அடியேன்‌ சிரோ பூஷணமாக சேர்த்தது யாதோ எனின்‌? ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளின்‌ அபிமானம்‌ பெற்ற, இவனுக்கு நாம்‌ முற்பட்டோமாக வேண்டுமென்று சிறப்புக்களனைத்தும்‌ ஒருங்கே யுடைய வைகுந்தமென்கிற பரமபதமானது, ‘சிரோபூஷணத்‌ தோடு கூடிய இவனை நம்மிடத்தில்‌ நிறுத்திக்‌ கொள்ள வேண்டு” மென்ற அவாவோடு இருத்திக்‌ கொண்டது என்பதாம் –

வானாளும்‌ சீர்சீநி வாசன்‌ மலரடியைத்‌
தான்சேர்‌ தகவுடைய பாடியன்தன்‌ – தேன்பெருகு
செந்தா மரையிணையே சிந்திப்ப தென்பேறா
அந்தோ! அவனருளும்‌ சீர்‌–108-

வைகுந்த வானாட்டில்‌ ஆட்சி செலுத்தும்‌ சிறப்புகளனைத்தும்‌ ஒருங்கே பொருந்திய ஸ்ரீமத்‌ ஸ்ரீநிவாசாசார்ய ஸ்வாமிகள்‌ தாமரை போன்ற திருவடிகளைச்‌ சேர்ந்த கருணையே வடிவான ஸ்ரீமத்‌ பாஷ்யமாசார்ய ஸ்வாமிகளுடைய செந்தாமரை யொத்த திருவடி யிணையையே சிந்திப்பதையே அடியேனுடைய பரம பிரயோஜனமாக உடைய அடியேனை, ஆசார்ய ஸ்வாமிகள்‌ தம்‌ கருணையால்‌ ஐயோ!” என்றிரங்கி யருளும்‌ அருளையே அடியேன்‌ சிறப்பாக உடையவனாவேன்‌ – என்பதாம் –

இருள் தரு மா ஞாலத்து இயங்கும் உயிர்கள்
அருந்துயரில்‌ ஆழ்ந்தழுந்தல்‌ உண்மை -அருந்துயர்தீர்ந(து)
அந்தமில்பே ரின்பமுற ஆசார்ய னைத்துதி நூற்‌
றந்தாதி யன்றோ கதி.–நூற்‌ பயன்‌

இருள்தருமாஞாலமாகிய லீலா விபூதியில்‌ நிரந்தரமாக இயங்கிக்‌ கொண்டிருக்கும்‌ ஆத்மாவானது, எய்தற்கரிய நிரம்பிய துன்பத்தில்‌ அழுந்துதலென்பது உண்மை விஷயமாகும்‌. இந்த துன்பத்தில்‌ மீண்டு எல்லையில்லா இன்பமேயான பேரின்பமெய்த ஆசார்யனிடத்து தான்‌ பெற்றபேற்றினைஎண்ணித்‌ துதிப்பதேயாகும்‌–அதற்கு வழி ஆசார்ய நூற்றந்தாதியை இடைவிடாமல்‌ அநுசந்திப்பதே ஏற்ற கதியாகும்

சுபமஸ்து

ஸ்ரீ கச்சிக்‌ கிடாம்பி சின்ன ஸ்வாமிகள்‌ வாழித் திருநாமங்கள்‌ –ஸ்ரீ க.கி. யாமுநாசார்ய ஸ்வாமிகள் –

ஆத்ரேய ராமாவரஜ குரோர்‌ புத்ரம்‌ ததாஸ்ரயம்‌
வேதாந்த த்வய ஸம்பந்தம் யாமுனம் ப்ரணமாம்யகம் –

மடஞ்சால்‌ மநனே வல் வினைகள்‌ சிந்தும்‌
உடைந்தோடும்‌ ஊழ் வினைசால்‌ சென்மம்‌-தடஞ் சூழ்ந்த
பூதூர் மன்‌ தன்னருளும்‌ பொன்னருளும்‌ நின்வயமாம்‌
யாதானும்‌ யாமுநனென்‌ றேத்து

சீராரும்‌ திருவயிந்தை திகழவந்தோன்‌ வாழியே
சேயாய்பா டியர்க்கவன்தன்‌ தாளடைந்தோன்‌ வாழியே
நீராரைப்‌ பசி உத்தி ராடத்தோன்‌ வாழியே
நீள்சரணா எதிபதிதன்‌ னிணையடியோன்‌ வாழியே.
பார் புகழும்‌ பூருவர் தாள்‌ பற்றுமவன்‌ வாழியே
பதின்மர் அருள் மொழி கோதை பரவுமவன் வாழியே
ஏரார்‌ உலகார்யன்‌ நூலுரைப்போன்‌ வாழியே
எஞ்ஞான்றும்‌ யாமுனன் தாள்‌ எம் கதியா வாழியே

வாழி திருப்பாடி யன்தன்சீர்‌ மல்கிய மாதகவால்‌
வாழும்‌ சிரீயா முநனென்‌ நிறைகுரவன்‌ – வாழியவன்‌
மாறன்‌ பிறைப்‌ பொருளும் ஆகமத்தின்‌ மான்‌ பொருளும்
தேறும்‌ படி யுரைக்கும்‌ சீர் –

சேவிப்போர்‌ பிறப்பறுக்கும்‌ திருவடிகள்‌ வாழியே
செம்பொன் செய்மலை வெயிலேய் செம்பட்டும் வாழியே
பூவியலும்‌ நாபியொடு புரிநூலும்‌ வாழியே
பொருவரிய தோளிணையும்‌ புரிகண்டம்‌ வாழியே
பாவியரும்‌ உய்யப் பணிக்கும்‌ பவள வாய்‌ வாழியே
பாண் மதிஏய்‌ திரு முகமும்‌ கருணை விழி வாழியே
நீவியெனும்‌ குரவரருண்‌ மொழி உளத்தோன்‌ வாழியே
நீள் புகழ் யாமுநன் தாள்‌ நினைப்போரும்‌ வாழியே

அடியார்கள் வாழ அரங்கம் முதல் வாழ சடகோபன்‌ தண்டமிழ்நூல்‌ வாழ-படியிலிரு
மன்னும்‌ மறைப் பயிற்றும்‌ யாமுனனென்‌ தேசிகனே! இன்னுமொரு நூற்றாண்‌ டிரும்‌.

ஸ்ரீ கச்சிக்‌ கிடாம்பி யாமுநாசார்ய ஸ்வாமிகள்‌ திருவடிகளே சரணம்

ஸ்ரீ கச்சிக் கிடாம்பி பெரிய ஸ்வாமிகள்‌ வாழித் திருநாமங்கள்‌ -ஸ்ரீ க.கி. பாஷ்யமாச்சார்ய ஸ்வாமிகள்‌

ஆத்ரேய ஸ்ரீநிவாசார்ய பதபங்கே ரூஹாஸ்ரயம்‌
தேவநாத குரோர்‌ ஸூனும்‌ ராமாநுஜ குரும் பஜே.

ஏங்கும்‌ மடநெஞ்சே! எம்பெருமான்‌ ஈந்தநிதி ஒங்கு புகழ்‌ பாடியன்தன்‌ ஒண்மலர்த்தாள்‌-தேங்கிய நீர்க்‌
கண்டா மரையிணைகள்‌ கைத்தாமரை யிணைகள்‌ உண்டாய் காலமெல்லாம் உள் –

அநவரதம்‌ தெளி சிங்கர்‌ அடிதொழுவோன்‌ வாழியே
அருள்ஸ்ரீ னிவாசார்யன்‌ அடைந்துயந்தோன்‌ வாழியே
அநகன் தேவ நாதாரயன்‌ அருஞ்சேயோன்‌ வாழியே
ஆதிரைநாள்‌ புரட்டாசி அவதரித்தோன்‌ வாழியே
அனைத்தறிந்த கோபாலர்‌ அடைந்தறிந்தோன்‌ வாழியே
அரங்கம் முதல் உகந்தருள்‌ மாநிலத் தன்பன்‌ வாழியே.
அநர்த்தமிலா(து) உலகார்யன்‌ நூலுரைப்போன்‌ வாழியே
அமிந்தைவர முனி தாள்சேர்‌ பாடியன் தாள்‌ வாழியே-

எதிபதிதன்‌ இணையடியே கதியுடையோன்‌ வாழியே
ஈடில்லா ஈடுதனை எடுத்துரைப்போன்‌ வாழியே
பதின்மருடன்‌ கோதைமொழி பரிந்து கற்றோன்‌ வாழியே
பார்புகழும்‌ பூருவர்தாள்‌ பற்றுமவன்‌ வாழி
மதுரகவி நிட்டையையே நிட்டை கொள்வோன்‌ வாழியே
வன்முடும்மை இருகுரவர்‌ மலரடியோன்‌ வாழியே
மதிமிகுந்த வரமுனிதாள்‌ வாழ்த்துமவன்‌ வாழியே
பாடிய ராமாநு சாரியன் தாள்‌ வாழியே

வாழிசிரீ நிவாசார்யன்‌ கோபாலன்‌ மாதகவால்‌
வாழும்சீ பாடிய மாசார்யன்‌ – வாழியவன்‌.
மாறன் மறைப்பொருளும் பாடியத்தின் மான் பொருளும்
தேறும்‌ படியுரைக்கும்‌ சீர்‌.

சென்மம்‌ தவிர்த்தருளும்‌ சேஷிகள்‌ வாழியே
சேமஞ்செய்‌ பொன்னாடைத்‌ திருநாபி வாழியே
தன்மம்‌ விரிந்தணைய திருமார்பும்‌ வாழியே
தரணிதனில்‌ அஞ்சலெனும்‌ கரதலமும்‌ வாழியே
நன்மருந்து பொழிமதிபோல்‌ திருமுகமும்‌ வாழியே
நளினஞ்செய்‌ கருணை மொழி கண்ணினையும்‌ வாழியே
மென்மை குவிந்தனைய திருமேனி வாழியே
மெய்மைஇரா மாநுசன்தாள்‌ மேன்மேலும்‌ வாழியே.

ததியர்கள்‌ வாழ தலநூற்‌(று) எண்வாழ
மதிநலஞ்சால்‌ மாறன்‌ மறை வாழ – பதியார்ந்த
மண்ணுலகும்‌ வாழ சிரீ பாடியமா தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டி டிரும்

ஸ்ரீ கச்சிக்‌ கிடாம்பி பாஷ்யமாசார்ய ஸ்வாமிகள்‌ திருவடிகளே சரணம் –

—-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading