ஸ்ரீ அலர்மேல் மங்கை யந்தாதி-

ஸ்ரீ அலர்மேல்மங்கையந்தாதி
முதல் நூலான இந்நூல் கட்டளைக் கலித்துறையிலான பாயினத்தாலாயது.இஃது, நான்கு அடிகளையுடையதாய் அடிதோறும் ஐந்து சீர்களோடு கூடி, முதற்சீர் நான்கும் வெண்டளை பிறழாமல் இறுதிச்சீர் கூவிளங்காயும் கருவிளங்காயுமாக ஏதேனும் ஒன்றைப் பெற்று ஒவ்வொரடியும் முதற்சீர் நேரசையாயிருந்தால் ஒற்றெழுத்து நீங்கலாக பதினாறு எழுத்தும், நிரையசையாயிருந்தால் பதினேழ் எழுத்துக் கணக்கோடு ஈற்றடியின் இறுதிச்சீரின் ஈற்றசை ஏகாரம் பெற்று முடிதல் வேண்டும். உதாரணம்,
அடியடி தோறும் ஐஞ்சீ ராகி முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாக் கடையொரு சீரும் விளங்கா யாகி நேர்பதி னாறே நிரைபதி னேழென்று ஓதினர் கலித்துறை ஓரடிக் கெழுத்தே.”என்பது இலக்கண விதியாகும்.

இங்ஙன்‌ கட்டளைக்‌ கலித்துறை என்ற நூறு பாக்களான்‌ அமைந்த அலர்மேல்மங்கை அந்தாதியின்‌ முதற்பா காப்புச்‌ செய்யுள்‌, நூல்‌ தடையின்றி இனிது நிறைவேறும்‌ பொருட்டு சுவாமி நம்மாழ்வாராகிற ஆசாரிய வணக்கமும்‌ செயப்படுபொருளும்‌ எய்த உரைக்கும்‌ தற்சிறப்புப்‌ பாசிரமாக அமைந்துள்ளது

இழைத்தா ரிலதா மறையின்‌ பொருள் சீர்த்த இன்தமிழால்‌
இழைத்தான்‌ இவனே சராசரம் முற்றும் நினைவகத்தே
இழைத்தான்‌ சிரம் தான்‌ குலுங்க ஓர்‌ ஆயிரம்‌ பாவிழைத்தான்‌
இழைத்தான்‌ அலர் மேல் மங்கை யந்தாதி க்கருள்‌ முற்றுறவே-
காப்புச் செய்யுள்

எவராலும்‌ செய்யாமல்‌ இயல்பாக தோன்றிய வேதங்களின்‌ பொருளை இனிய தமிழில்‌ ஆயிரம்‌ பாசுரங்களாகச்‌ சொன்ன குருகூர்‌ நம்பியே, அறிவுடை பொருள்கள்‌ அறிவில்‌ பொருள்கள்‌ இவைகளை நினைவாற்றலாலேயே தோற்றுவித்த இறைவன்‌, தன்‌ சிரத்தை குலுக்கி கேட்கும்படியாகத்‌ திருவாய்மொழி என்ற ஆயிரம்‌ சொன்னவனே-இந்த அலர்மேல்மங்கை அந்தாதிக்கு இடையூறின்றி நிறைவு பெரும்படி காப்பாக இருந்து தானே அடியேனுக்கு அருள்‌ செய்தான்-

உலகொருங்‌காக வணங்குதற்‌ காக உடையவன்தான்‌
உலகொருங்‌ காக உளப்படுத்‌தாகத்‌ தகலகில்லாள்‌
உலகொருங்‌காக உடையவளாகக்‌ கலைக்கு நில்லா
உலகொருங்‌காக உதவுவாளாகத்‌ தெழில் வணங்கே.

நெஞ்சே! எல்லா உலகும்‌ தன்னை வந்து வணங்குவதற்காக அவர்களுக்கு இறைவனிடத்தில்‌ பரிந்துரை கூறுவதற்காக அனைத்து சராசரங்களையம்‌ ஊழிக்‌ காலத்தில்‌ தன்‌ வயிற்றில்‌ கொள்ளும்‌ இறைவனுடைய திருமார்பை விட்டு அகலாதவளான திருமகள்‌, இறைவனையும்‌ அவன்‌ உடைமைகள்‌ ஆன உபய விபூதிகளும்‌ ஒருங்கு சேர்த்துப் பார்த்தாலும்‌. பிராட்டியின்‌ பேர்‌ அழகு பதினாறு கலைகளில்‌ ஒரு கலைக்கும்‌ போதாத பேரழகு உடைய பிராட்டியை வணங்குவாயாக —

வணங்குக நெஞ்சே! மதிமுகம்‌ தீஞ்சொல்‌ அமுதனையவ்‌ i
வணங்குக ளுத்தமை பங்கயத் தாள் தாள் பராபரர் நீர்
வணங்குக சென்னி மகரம்‌ அகரம்‌ சுதந்திரத்தை
வணங்குக நுஞ்சீர்ப்‌ பெறஇரு வீர்க்கொரு வாய்ப்பெனுமே–2-

நெஞ்சே! முழு மதி போன்ற முகமும்‌, இனிய சொற்களும்‌, அமுதம்‌ ஒத்த இனிமையும்‌ உடைய தெய்வ பெண்களுள்‌ மிக மேம்பட்ட பிராட்டியின்‌ திருவடி தாமரைகளை வணங்குக! பிராட்டியின்‌ தொடர்பால்‌ அகாரத்தை பேராக உடைய மேலார்க்கும்‌ மேலாலனாகிய எம்பெருமான்‌ தன்‌ சுதந்திரத்தை தளர்த்தி கொடுப்பானாக- மகாரத்தை பேராக உடைய ஆன்மாக்கள்‌ தங்கள்‌ சென்னிகளை வணங்குவாராக.- இவ்வாறு பிராட்டியின்‌ இருப்பு பெருமானுக்கும்‌, ஆன்மாக்களுக்கும்‌ சிறப்புப்‌ பெற உதவுவதாகும்-

வாய்த்தவத்‌ தாயவள்‌ சேர்த்தியின்‌றேல் வேத வேத்தியன் தான்‌
வாய்த்தவத்‌ தாவனே? காட்டியும்‌ ஊட்டி மறைத்திடுமவ்‌
வாய்த்தவத்‌ தாயவக்‌ காரியம்‌ சீரிய வாமதுவே
வாய்த்தவத்‌ தாயவச்‌ சேதநன்‌ சேர்ந்து நல்‌ வாழ்வுறுமே–3–

உலகங்களுக்குத்‌ தாயாக வாய்ந்த பிராட்டியின்‌ சேர்த்தி இல்லை யென்றால்‌, வேதங்களால்‌ பரம்‌ பொருளென்று போற்றப்‌ பெறும்‌ திருமாலும்‌, மெய்ப் பொருள்‌ ஆக முடியுமா? அவனால்‌ செய்யப்படும்‌ படைத்தல்‌, காத்தல்‌, அழித்தல்‌ என்ற செயல்களும்‌ சிறப்புற நிகழுமா? அநாதியான சீவான்‌ மாக்கள்‌ எம்பெருமானைச்‌ சேர்ந்து உய்வு பெறுமா-

வாழ்வது மாகம னுந்திரி யம்பகனும்‌ ககரன்‌
வாழ்வது மாகலை யாதிய மோன முனிக் கணமும்‌
வாழ்வது மாகமும்‌ தாரணி பூவிவ ரத்துயிர்கள்‌
வாழ்வது மாக முதல்தனி வாய்த்த கருணையினே–4-

எல்லா பொருள்களுக்கும்‌, தாயாய்‌ கருணையே வடிவெடுத்த பிராட்டி எம்பெருமான்‌ திருமார்பில்‌ வீற்றிருப்பதினாலேயே வானவர்‌ மன்னனாகிய இந்திரனும்‌, ககாரம்‌ என்ற பெயருடைய பிரமனும்‌, முக்கண்ணனாகிய உருத்திரனும்‌, மேம்பட்ட கலைகள்‌ முதலியனவும்‌ இடையறாத தவத்திலேயே ஈடுபட்டு இருக்கும்‌ முனிவர்‌ குழுவும்‌, பூமியும்‌, வானுலகும்‌, அவ்வுலகுகளில்‌ உள்ள ஜீவன்மாக்களும்‌ நல் வாழ்வு வாழ்கின்றன-

கருணைத்‌ திருவுரு காரணத்‌ தோருரு காவலன்தன்‌
கருணைத்‌ திருவுரு உள்ளங்‌ கசிவரக்‌ காகமொடு
கருணைத்‌ திருவுரு தானே யரக்கியீர்‌ காப்பெனென்ற
கருணைத்‌ திருவுரு உள்ளமன்‌றோ நமைக்‌ காப்பதுவே–5–

கருணையே வடிவு எடுத்தவனும்‌, உலக காரணனும்‌ பேரழகிய உருவினனும்‌, உலகைக்‌ காப்பவனும்‌ அழகிய பெருமானுடைய திருவுள்ளம்‌ பெருந் தவறு செய்த காக்கையின்‌ திறத்துக்‌ கருணையால்‌ உருகி அதனை கொல்லாது விடுத்தற்கும்‌, கருணையே வடிவெடுத்தவளாய்‌, தன்னை ஓயாது நலிவுறுத்திய அரக்கியரையும்‌, அனுமனால்‌ ஏதம்‌ வராது காப்பேன்‌’ என்ற பிராட்டியின்‌ கருணை வடிவான உள்ளம்‌ அன்றோ? காரணமாகும்‌. அந்தத்‌ திருவுள்ளமே வாழ்க்கையில்‌ பல தவறுகளையும்‌ செய்யும்‌ நம்மையும்‌ பாதுகாப்பதாகும் –

காப்பது நாம்தாங்‌ கருமமே முன்னா எவருமென்னின்‌
காப்பது நாம்தாமென் காப்பதா வைதிகச் சொல்வ தெவன்
காப்பது நாந்தாங்‌ கருமமே முன்னா அடைந்திவரை
காப்பதுங்‌ காசில்‌ குணத்தா லருள் வடைந்தவர்க்கே–6-

அவரவர்‌ செய்த நல் வினை தீ வினைகளுக்கு எற்‌ப நாம்‌ அவர்களைக்‌ காப்பாற்றுகிறோம்‌ என்று எம்பெருமான் திருவுள்ளம்‌ பற்றினால்‌ நீர்‌ பெருமானை நோக்கி உலகை காப்பதாக வேதம்‌ வல்லார்‌ கூறுவது பொருந்துமா? உங்களைச்‌ சரணாக அடையாதாரை அவர்கள்‌ வினைகளுக்கு ஏற்ப பயனளிப்பீர்‌; தன்னைச்‌ சாணாக அடைந்தவர்‌ திறத்து உம்முடைய வாத்சல்யாதி குணங்களால்‌ அவர்களை வினைகளை நோக்காது அருள் செய்யக்‌ கடவீர்‌”‘ என்பாள் –

அடைந்திடும்‌ ஏதெதோ நுந்தான்‌ அடையாத கல்வதுவே
அடைந்தில தாகா தெவரெவை தீவினை மாய்வதுவே
அடைந்தவை எவ்வெப்‌ பயனும்‌ அடையா திழக்குமதோ?
அடைந்திடு வாரும்‌ அடைகிலா தாரும்‌ உமது சேயே–7–

பிராட்டியே! உன் திருவடிகளை சரணாகப்‌ பற்றுபவரும்‌ பற்றாதவரும்‌ உன்‌ மக்களே. உன்‌ திருவடிகளைச்‌ சரணாகப்‌ பற்றாததனால்‌ பலவகை துன்பங்களும்‌ வந்து சேரும்‌; திருவடிகளைச்‌ சரணாக பற்றாமையால்‌ எந்த தீவினையும்‌ அழிய மாட்டா; திருவடிகளைப்‌ பற்றினவர்கள்‌ தாம்‌ கருதிய எவ்வெப்‌ பயன்களையும்‌ அடையாமல்‌ இழப்பதில்லை. இவ்வாறாக தாயாகிய உன்னைச்‌ சரணடையாமல்‌ பலர்‌ துன்பப்படுகிறார்கள்‌ என்பது குறிப்பாகும் –

உமது சேயாவா ரலாதார்‌ உளரே? கணிப்பதற்கும்‌
உமது சேயாவ சராசரம்‌ உள்ள அனைத்துமன்றோ!
உமது சேயாவ னலாதவன்‌ ஓர் பொருள்‌ நாரணனே
உமது சேய்க்கூட்டத்து அடியவன் ஓர் பொருள் கைவிடவே –8–

உம் மக்களல்லாதார்‌ என்று குறித்தறிவதற்கும்‌ சிலர்‌ உளரோ?-எல்லா இங்கியற்‌ பொருள்களும்‌ உமது குழந்தைகளே- உனக்கு வசப்படாத ஸ்வதந்திரப்‌ பொருள்‌ எம்பெருமான்‌ ஒருவனே- உம்முடைய மக்கள்‌ குழாத்தில்‌ அடியேனும்‌ ஒருவன்‌ ஆகலில்‌ அடியேனைக்‌ கைவிட்டு விடாதீர் –

கைவிடாக்‌ காப்ப தவனெனச்‌ சான்றோர்‌ பறையறைவர்‌
கைவிடாக்‌ காப்பவர்‌ நீரா அவனா எவரறிவார்‌?
கைவிடாக்‌ கொள்கை யனுமனைக்‌ கை விடச்‌ செய்தவர் யார்‌?
கைவிடாக்‌ காவல்‌ எழுநூ றரக்கியர்‌ கண்டதன்றே?–9-

எல்லா உயிர்களையும்‌ கைவிடாமல்‌ காப்பவன்‌ என்று சான்றோர்‌ பரக்கக்‌ கூறுவர்‌. அப்படிக்‌ கைவிடாமல்‌ காப்பவர்‌ நீரா? நும்‌ கணவராகிய எம்பெருமானா? என்பதனை உண்மையாகவா அறிகிறார்கள்‌? அரக்கியரை அழிக்க வேண்டும்‌ என்ற உறுதியான எண்ணத்தோடு வந்த அனுமனை, உம்மை விடாமல்‌ துன்புறுத்தி வந்த அரக்கியர்‌ எழுநூற்றுவரைப்‌ பாதுகாத்து, அனுமன்‌ எண்ணத்தைக்‌ கை விடச்‌ செய்த நும்‌ செயலை நோக்க, எல்லா உயிர்களையும்‌, கை விடாது காக்கும்‌ செயல்‌ உம்முடையதே என்று புலப்படுகின்றதன்றோ-

கண்ட அமுதம்‌ திசை திருப்பும் செயல் காப்பதற்கோ
கண்ட அமுதம் உமைக் குறிக்‌ கொண்டே கடல் கடைந்தான்‌
கண்ட அமுதச்‌ செயலில்‌ களவிதைக்‌ கண்டறிந்தீர்‌
கண்ட அமுதென வையகம்‌ காப்பதார் ? எய்துவதே–10-

தேவர்கள்‌ உள்ளத்தைத்‌ திசை திருப்பி அவர்கள்‌ நலன்‌ பெறுவதற்காகப்‌ பாற் கடல்‌ கடைந்து அமுதினைக்‌ கொண்ட எம்பெருமானுடைய செயல்‌ அவர்களை அமுதத்தால்‌ காப்பதற்காகவோ நிகழ்ந்தது? ஆய்ந்து கண்டால்‌ உண்மையான அமுதமாகிய உம்மைப்‌ பெற்ற பின்னரே எம்பெருமானுடைய உலகங்காத்தல்‌ தொழில்‌ சிறப்புற நிகழ்ந்து வருகிறது எனலாம்‌. ஆதலின்‌ உலகினை உண்மையாகக்‌ காப்பவர்‌ நீரே என்பது தேற்றம்‌–

எய்துவ துண்டே? அருளின்றி எம்மோய்‌ எனைத்தையுமே
எய்துவ துண்டே? சிவனயன்‌ இந்திரன்‌ தம் பதங்கள்‌
எய்துவ துண்டே?
அடியவன்‌ என்றென்‌ றிறைவனுமே
எய்துவ துண்டே? நுமநோக்‌ கிலதெனின்‌ முத்தியுமே–11-

அலர்மேல்‌ மங்கையீரே! தேவரீர்‌ அருளின்றி எந்தப்‌ பயன்களையும்‌ உலகவர்‌ எய்த இயலுமா? எம்பெருமானும்‌ தனக்கு அடியவன்‌ என்று எவனையும்‌ எய்துதல்‌ இயலுமா? பிரம்மன்‌, சிவன்‌, இந்திரன்‌ முதலியோரும்‌ தத்தம்‌ பதவிகளை அடைதல்‌ இயலுமோ? நும்‌ அருள்‌ நோக்கிலதெனின்‌ வீடு பேற்றினையும்‌ எய்த இயலுமா? என்றவாறு –

முத்தி யுளதென்‌ றளிப்பான்‌ முகுந்தன்‌ ஒருவனன்றே?
முத்தி யுளசுவைக்‌ கீடில்லை என்பதே முற்றுமுண்மை
முத்தி யுளசுவைக்‌ குற்றான்‌ முகுந்தன்‌ ஒருவனன்றே?
முத்தி யுளசுவை நீரின்றேல்‌ முற்றும்‌ பயனிலதே–12-

முத்தியை ஆன்மாக்களுக்கு வழங்குபவன்‌ முகுந்தனாகிய திருமாலே.-முத்திப் பேரின்பத்துக்கு இணையான இன்பம்‌ இல்லை என்பதே முழுமையான உண்மையாகும்‌. அம் முத்திச்சுவையை ஆன்மா பெறத்‌ திருமாலே காரணம்‌ ஆவான்‌ என்பதும்‌, அம் முத்திப்‌ பேரின்பம்‌ நல்கும்‌ என்பதும்‌, தாயாகிய நீர்‌ இல்லை யென்றால்‌ பயனிலவாகும் –

பயனற்‌ றிருப்பன உபய வி பூதிமான் பண்ணவனேல்‌
பயனற்‌ றிருப்பன்‌ நிகரில்‌ புகழ்சால்‌ பரமனேலும்‌
பயனற்‌ றிருப்பன்‌ தனிமாப்‌ புகழின்‌ படைப்பனேலும்‌
பயனற்‌ றிருப்பன்‌ அலர் மேல மங்கை தன்‌ பாலிலதே–13–

அலர்மேல்‌ மங்கை தன் பக்கம்‌ இல்லையாயின்‌, மண்‌ விண்‌ என்ற ஈருலகங்களுக்கும்‌ தலைவனாகத்‌ தான்‌ இருந்தாலும்‌, ஒப்பற்ற புகழை யுடைய பரம் பொருள்‌ என்ற நிலை இருந்தாலும்‌, ஒப்பற்ற மேம்பட்ட புகழுக்குரிய படைப்புச்‌ செயல்களைச்‌ செய்தாலும்‌ எம்பெருமான்‌ அவற்றால்‌ பயனற்றவனாகவே இருப்பான் –

பால தடைந்தனன்‌ பாதகத்‌ தாபமாழ்‌ தூறதனின்‌
பால தடைந்தனன்‌ பொய்ம் மதிப்‌ பற்றும்‌ ஒழுக்கமதின்
பால தடைந்தனன்‌ தீவினைப்‌ பாவிய காடதனின்‌
பால தடைதல்‌ கழிய நின்‌ பங்கயத்‌ தாளருளே–14-

அடியேன்‌ தீவினையாகிய வெப்பம்‌ சூழ்ந்துள்ள புதர்களில்‌ அகப்பட்டு அடைந்துள்ளேன்‌. அதனால்‌ பொய்யான அறிவைப்‌ பின்பற்றி ஒழுகும்‌ ஒழுக்கத்தை மேற் கொண்டேன்‌. இதனால்‌ தீவினை பரவிய காடாகிய உலக வாழ்க்கையில்‌ ஈடுபட்டேன்‌. அவ் வாழ்க்கையில்‌ ஈடுபடும்‌ அடியேனை மீட்டு பிறவித்‌ துயர்‌ சேர்வதில்‌ நின்றும்‌ நீங்குமாறு உன்‌ தாமரைப்‌ போன்ற திருவடிகளைச்‌ சேர்ப்பாயாக –

அருளால்‌ நிறைந்தொளிர்‌ கண்ணுடை அன்னைநீ, ஆதுவர்பால்‌
அருளால்‌ நிறைந்த அழகின்‌ இனியைநீ எம்பிரான்பால்‌
அருளால்‌ நிறைந்த அளியை நீ தேவர் தம்‌ மாததம்பால்‌
அருளால்‌ நிறைந்த அலர்மேல் மங்கை நீ ஆளெமையே–1
5-

அருளால்‌ நிறைந்த அலர்மேல்‌ மங்கையீர்‌ ! நீர்‌ பிறவிப்‌ பிணியால்‌ வருந்துவோர்பிணி தீர்க்க அருளால்‌ நிறைந்து விளங்கும்‌ அன்னையாய்‌ உள்ளீர்‌; அருளால்‌ நிறைந்த நீர்‌ எம்பெருமான்பால்‌ இனிய அழகிய உருவெடுத்து அமைந்துள்ளீர்‌, தேவ மாதர்‌ திறத்தில்‌ அருளால்‌ நிறைந்த இரக்கமே வடிவாக உள்ளீர்‌; அத்தகைய அருள்‌ வடிவாகிய நீர்‌ அடியேனையும்‌ ஆட்கொண்டு அருள்வீராக –

எமையாள வந்தே புணரி எழுந்தீர்‌ அமுதுடனே
எமையாள வந்தே துழாய் கமழ்‌ மார்பத்‌ ‘ தினிதிருப்பீர்‌
எமையாள வந்தநீர்‌ மங்கா புரத்தில்‌ இருந்தருள்வீர்‌
எமையாள வந்தெம்‌ மனத்தில்‌ இருப்பதும்‌ மாலுடனே–16–

எம்மை ஆட்கொள்வதற்காகவே திருமகளாகிய நீர்‌ அமுதத்தோடு அவதரித்தீர்‌; திருத்துழாய்‌ மணம்‌ கமழும்‌ திருமாலின்‌ திருமார்பில்‌ மகிழ்ச்சியாக இருக்கிறீர்‌; அலர்மேல்‌ மங்கா புரத்தை உகந்து அருளி வீற்றிருக்கின்றீர்‌; எம்மை ஆட்கொள்வதற்காக எம்பெருமானுடன்‌ சேர்ந்து எங்கள்‌ உள்ளத்தில்‌ அமர்ந்துள்ளீர் –

மாலுநும்‌ கூட்டும்‌ மலமற்‌(று) அமானவன்‌ பால்தருமே
மாலுநும்‌ கூட்டும்‌ மணிமண்‌ டபத்துட் புகுந்திடவே
மாலுநும்‌ கூட்டும்‌ மணிமண்‌ டபமேவி கேள்விகொள
மாலுநும்‌ கூட்டும்‌ மகிழ்ந்‌து அணைந்து உச்சி முகப்பதுவே ! –17–

எம்பெருமானுடன்‌ கூடிய தாங்கள்‌ சேர்ந்திருப்பது உலகம்‌ மாசற்று வீட்டுலகிற்கு அழைத்துச்‌ செல்லும்‌ அமானவன்‌ தொடர்பை உண்டாக்கும்‌; வைகுந்‌தத்திலிருக்கும்‌ திருமாமணி மண்டபத்தில்‌ புகும்‌ வாய்ப்பினை ஆன்மாக்களுக்கு நல்கும்‌; எம்பெருமான்‌ ‘நீ யார்‌ என்ன? நான்‌ ப்ரஹ்மம் ஆகிறேன்‌’ என்‌று ஜீவான்மா விடை கூறவும்‌, அவ்வான்மாவை மகிழ்வோடு தழுவி தாயன்பால்‌ உச்சி மோக்கும்‌ உயர்நிலையும் தரும் –

முகந்தருள்‌ நுந்தம்‌ கருணையின்‌ முன்னர்‌ இணையெதுவே?
முகந்தருள்‌ அண்ணல்‌ கருணை பிறிதின்‌ முனைந்ததுவே?
முகந்தருள்‌ மாறன்‌ அருள்நு மதருளின்‌ முன்வருமே?
முகந்தருள்‌ பூதார்‌ முனைவன்‌ அருளும்‌ இணையிலதே–18-

ஆன்மாக்களை விரும்பித் தழுவும்‌ எம்பெருமானுடைய கருணை இணையற்றதே? அத் தகைய செயலைச்‌ செய்யும்‌ மாறனுடைய கருணையும்‌ இணை யற்றதே? அதனை ஒத்த இராமாநுசர்‌ கருணையும்‌ ஈடு அற்றதே? என்பர்‌. இவற்றுக்கு எல்லாம்‌ காரணமாக அமையும்‌ தாயாராக அன்பு காட்டும்‌ உம்‌ அருளுக்கு முன்னர்‌ ஒப்பாகாது இவைகள்‌ குறைவடையும் –

இணையிலை என்பது நித்ய விபூதியி லெய்துமின்பம்‌
இணையிலை என்ப பிறவிக் கண்‌ ஆழ்வதில்‌ எய்துதுன்பம்‌
இணையிலை யென்ப திறைவன்‌ உயிர்கள்பால்‌ செய்யுமருள்‌
இணையிலை நும்மருட்‌(கு) இத்தனை சேரிலும்‌ ஒன்றினக்கே?-19-

நித்திய விபூதி என்னும்‌ பரமபதத்தில்‌ எய்தும்‌ இன்பம்‌ இணையற்றது; பிறவித் துயரில்‌ ஆழும்‌ துன்பமும்‌ இணையற்றது; இறைவன்‌ ஆன்மாக்கள்‌ பக்கம்‌ செலுத்தும்‌ அன்பும்‌ இணையற்றது; இவ்வளவும்‌ ஒன்று சேரினும்‌ தாயாராகிய நுமது அருளுக்கு நிகராக மட்டா –

ஒன்றினும்‌ ஒன்றா உலகியல்‌ பற்றைக்‌ களைவதற்கே
ஒன்றினும்‌ ஒன்றா உயர்பரன்‌ பால் நின்‌றகலகிலீர்‌
ஒன்றிலும்‌ ஒன்றாக்‌ கயவன்‌ சிறைநின்‌று பகரித்தீர்‌!
ஒன்றினும்‌ ஒன்றா உலைப்பும்‌ அரக்கியர்‌ நற்றமிதே–20-

தாழ்வில்லாத தனக்கு பிரிதொன்று இணையாகாத இவ் வுலக பற்றினை எம்மிடத்தில்‌ இருந்து போக்குவதற்காகவே, தன்னை ஓக்கும்‌ பொருள்‌ பிரிதொன்று இல்லாத மேம்பட்ட எம்பெருமான்‌ மார்பினில்‌ அகலாது தங்கி இருக்கின்றீர்‌. இழிவில்‌ தனக்கு ஒப்பவர்‌ இல்லாத இராவணனுடைய சிறையில்‌ இருந்து, அவனுக்கு உபதேசித்த நிலையிலும்‌ அரக்கியர்‌ ஈடு இணையில்லா தாழ்ந்த மொழிகளால்‌ அலைத்த நிலையிலும்‌ உம்‌ ஈடில்லா உபதேசத்தால்‌ அவர்களுக்கு நன்மையே புரிந்தீர் –

நற்றமாம்‌ நுந்தாள்‌ சரணா நணுகுவ தோர் செயலே
நற்றமாம்‌ நுந்தாள்‌ நணுகி இறை தாள்‌ நணுகுவதே
நற்றமாம்‌ நுந்தாள்‌ நணுகப்‌ பிறர் தாள்‌ நணுகுவதோ?
நற்றமாம்‌ நுந்தாள்‌ நணுகா திறைதாள்‌ நணுகுவதோ?–21-

நன்மையே தரும்‌ நும்‌ திருவடிகளைத்‌ தஞ்சமென்று பற்றுவதே மேம்பட்ட செயலாகும்‌. உம்‌ திருவடிகளை முதற்கண்‌ பற்றிட்ட பின்‌ எம்பெருமான்‌ திருவடிகளைப்‌ பற்றுவதற்குப்‌ பிறருடைய பரிந்துரைக்கு முயல்வது தேவையற்ற செயலாகும்‌. உம்‌ திருவடிகளைப்‌ பற்றாது எடுத்த எடுப்பிலேயே எம்பெருமான்‌ திருவடிகளைப்‌ பற்றுவது முறையல்லவே –

நணுகுவ துண்டே? அகப்புறப்‌ பற்றுசால்‌ நாகரீகம்‌
நணுகுவ துண்டே? பிறவித்‌ தொழுவினில்‌ நாலுசெயல்‌
நணுகுவ துண்டே? நமன்தமர்‌ சித்திர குத்தனாதி
நணுகுவ துண்டே? பரத்துவம்‌ நக்கனைப்‌ போல்பவர்க்கே–22-

உம்மைச்‌ சரணமடைந்தவர்களை யான்‌ எனது என்ற அகப்புறப்‌ பற்றுக்கள்‌ கொண்ட பண்பாடு அடையுமோ? பிறவியாகிய தொழுக்கட்டையில்‌ இயங்கும்‌ செயல்‌ அடையுமோ? இயமனுடைய ஏவலன்‌ சித்திரகுப்தனும்‌ நமனும்‌ நலிவதற்கு அணுகுவார்களா? உம்மைச்‌ சரணமடைவோருக்குச்‌ சிவன்‌ முதலான தேவர்களைப்‌ பரம்‌ பொருளாம் தன்மை உண்டென்ற நினைவு ஏற்படுமா-

கேதங்கள்‌ வாரா நமன்தமர்‌ கேள்விகொள்‌ தீயசொற்கள்‌
கேதங்கள்‌ வாரா பராசத்தி போல்பவர் கீழ் படிதல்‌
கேதங்கள்‌ வாரா புறசமயத்துறு கேடுசெயல்‌
கேதங்கள்‌ வாரா நும திருதாள் மலர் கிட்டுவார்க்கே –23-

உம்முடைய திருவடிகளிரண்டினையும்‌ சரணாகப்‌ பற்றுபவர்களுக்கு, யமனுடைய ஏவலர்‌ பழித்துக்‌ கூறும்‌ தீயசெயல்களைக்‌ கேட்கும்‌ தீவினையாகிய துயரங்கள்‌ வாரா. உமாதேவி முதலிய சிறுதெய்வங்களை வழிபாடு நிகழ்த்தும்‌ குறைபாடுவாரா. வேற்றுச்‌ சமயங்களைப்‌ பின்பற்றுவதாகிய தீயசெயல்களும்‌ ஏற்பட மாட்டாதென்பதாம் –

கிட்டுவ துண்டே? நுமதடி யாரெனும்‌ கேழில்பதம்‌
கிட்டுவ துண்டே? மிதுநநும்‌ கீழிருந்‌ தாற்றுதொண்டு
கிட்டுவ துண்டே? மிதுநநும்‌ கேழில புன்முறுவல்‌
கிட்டுவ துண்டே? மிதுநறும்‌ தாண்மலர்க்‌ கீழிருப்பே–24-

நும்முடைய அடியவரெனும்‌ ஒப்பிலாப்‌ பதவி எல்லோருக்கும்‌ கிட்டுமோ? பெருமானும்‌ நீருமாக இருக்கும்‌ இருவர்‌ திருவடிகளின்‌ கீழிருந்தாற்றும்‌ தொண்டு எல்லோருக்கும்‌ கிட்டுமோ? நும்மிருவருடைய ஒப்பற்ற புன்முறுவலைக்‌ காணும்‌ வாய்ப்புகள்‌ எல்லோருக்கும்‌ கிட்டுமோ? இருவருடைய திருவடித் தாமரைகளின்‌ கீழ்‌ என்றும்‌ இருக்கும்‌ இருப்பு எல்லோருக்கும்‌ கிட்டுமோ-

தாள்மலர்க்‌ கீழ்நின்‌ றிரப்பா தரணி புரப்பவரும்‌
தாள்மலர்க்‌ கீழ்நின்‌ றிரப்பார்‌ தமதியல்‌ பெய்துவாரும்‌
தாள்மலாக்‌ கீழ்நின்‌ றெனைவரும்‌ தாங்குவார்‌ மெய்யுணர்வே
தாள்மலாக்‌ கீழ்த் தொண்‌ டலர் மேல் மங்கை! தனமெமதே–25-

அலர்மேல்‌ மங்கையாகிய அன்னையே! இவ் வுலகைக்‌ காக்கும்‌ அரசர்களும்‌ உன்‌ திருவடித் தாமரைகளின்‌ கீழ்‌ நின்று வேண்டிய செல்வத்தை இரப்பர்‌. கைவல்ய இன்பம்‌ வேண்டுவாரும்‌, அந்தமில்‌ பேரின்பம்‌ வேண்டுவாரும்‌ இவற்றின்‌ காரணமாகிய மெய் யுணர்வு பெற விரும்புவாரும்‌ உன்‌ திருவடித் தாமரைகளைப்‌ பற்றியே இருப்பர்‌. உம்‌ திருவடிக் கீழ்‌ தொண்டே அடியேன்‌ வேண்டும்‌ செல்வமாகும்-

தனத்தவர்‌ தாய் நின கோட்டி தனி முதல் கோட்டியையும்
தனத்தவர்‌ நேர்மைத்‌ தனிமனந்‌ தன்னில்‌ நிறுத்தெடுத்து
தனத்தவர்‌ கெளரவத்‌ தாய்நின கோட்டி லகுமிகுத்த
தனத்தவர்‌ சாமிதன்‌ கோட்டி எனுநிலை தந்தனரே–26-

தாயே! ஸ்ரீயபதி. திருவடிகளில்‌ தொண்டு செய்தலையே தமக்குச்‌ செல்வம்‌ என்று கருதும்‌ அடியவர்‌, உமது குழாத்தின்‌ பெருமையையும்‌, ஒப்பற்ற முதற் பொருளாகிய எம்பெருமானுடைய குழாத்தின்‌ பெருமையையும்‌, தங்கள்‌ மனமாகிய தராசின்‌ இரு தட்டுகளிலும்‌ நிறுத்துப் பார்த்து தாயாகிய உங்கள்‌ குழாத்தின்‌ பெருமையே மதிப்புடையது எனவும்‌, எம்பெருமானுடைய குழாத்தின்‌ பெருமை சற்று மதிப்பு குறைந்ததுவே எனவும்‌ நிலைநாட்டி யுள்ளனர் –

தந்த மலைக்கும்‌ வினையர்‌ தகவிலர்‌ என்னநிரை
தந்த மலைக்குடை யான்தள்ளு மென்றும்‌ தருக்கியிகல்‌
தந்த மலைக்குமைத்‌ தான்திருத்‌ தாளிணைத்‌ தஞ்சமென்று
தந்த மலையவர்‌ மேல்மங்கை சற்றே தரிப்பதுண்டே–27-

பசுக்களையும்‌ ஆயர்களையும்‌ காப்பதற்காக கோவர்த்தன மலையை குடையாக எடுத்தவனும்‌, தன் மேல்‌ செருக்குற்று போர்‌ செய்யவந்த சாணுரன்‌, முஷ்டிகன்‌ என்ற மல்லர்களை அழித்தவனான எம்பெருமான்‌, வினைகளால்‌ துன்பத்தை யடைந்த அடியார்க்‌ தன்னை நேராக தஞ்சமடைந்தால்‌, இவர்கள்‌ நெடுநாள்‌ செய்த அபராதங்களைக்‌ கணக்கிட்டுச்‌ சீறுவான்‌ என்று நினைத்து, தேவரீர்‌ புருஷகாரமாகிய சிபாரிசு பண்ணி அடியார்களை எம்பெருமான்‌ திருவடிகளை அடையத்‌ தந்து, பெருமான்‌ அவர்களை ஏற்கும் வரையில்‌ ஆறியிராமல்‌ அடியார்களுக்காகப்‌ பதறுபவள்‌ அன்றோ நீர்‌-

உண்டே? திரிபோ டுனர்வின்மை ஐயம்‌ முதலதீர்தல்‌
உண்டே? இவற்றின்‌ ஒழிந்துப் பெறப்பெறு மெய்யுணர்வும்
உண்டே? பரனெனுந்‌ தாரக மாதியாம்‌ உச்சநிலை
உண்டே? உடையான்‌ குறைதீர்‌ வதின்றேல்‌ உமது நோக்கே.
–28-

அன்னையீர்‌! நுமது கடைக்கண்பார்வை எங்கள்‌ மேல்‌ பொருந்தாவிடில்‌ அறிவின்மை திரிபுணர்ச்சி, ஐயம்‌ என்ற குறைபாடுகள்‌ ஆன்மாக்களை விட்டு நீங்குமா? இவற்றின்‌ நீங்கிப்‌ பெறக்கூடிய மெய்யுணர்வு ஏற்படுமா? எம்பெருமானே தாரகம்‌, போஷகம்‌, போக்கியம்‌ என்ற மனநிலை ஏற்படுமா? ஆன்மாக்கள்‌ தன்னை கிட்டவில்லையே என்ற எம்பெருமானுடைய குறையும்‌ தீருமா?

உமதுநோக்‌ கன்றே? பலபல அண்டங்கள்‌ உள்ளவாதல்‌
உமதுநோக்‌ கிவ்வெலாம்‌ பாலநம்‌ செய்பொருள்‌ உள்ளதுவும்‌
உமதுநோக்‌ கின்றே? இவை தாம்‌ நிரல்பட ஊர்வதுவே?
உமது நோக்‌கா மாதின் ஒப்பின்ற அருளும் இவ்வின்பமிதே -29-

அம்மையீர்‌! உம்‌ கடைக்கண்‌ பார்வை செலுத்தப்படாவிடின்‌ எம்பெருமான்‌ பல அண்டங்களைப்‌ படைப்பதுவும்‌, அவனால்‌ காக்கப்பட்ட இவ் வண்டங்கள்‌ உளவாதலும்‌, இவற்றின்‌ செயல்கள்‌ நிரல்பட நிகழ்வதுவும்‌ ஒப்பற்ற வீட்டின்பத்தை இவ்வான்மாக்கள்‌ எய்தி வாழ்வதுவும்‌ நிகழற்பாலதா–

இன்பம்‌ உளதா எவரும்‌ மயங்கி விடமரத்தில்‌
இன்பம்‌ உளதா எவரும்‌ பறிப்பர்‌ விடக்கனிகள்‌
இன்பக்‌ கனிதான்‌ மிதுநநும்‌ பாலன்‌ பியைவதின்றி
இன்பக்‌ கனியாம்‌ நுமதடி யாரோ டிணங்குமிதே–30-

இன்பம்‌ உளதாகக்‌ கருதி மன மயக்கங்கொண்டு சிலர்‌, உலகியலாகிய விஷமேறிய மரத்தில்‌ தோன்றும்‌ விஷக் கனிகளைப்‌ பறிப்பர்‌. பிராட்டியும்‌ பெருமானும்‌ ஆகிய நும்‌ இருவரிடம்‌ அன்பு செய்வதன்றி இன்பமாகிய கனிதான்‌ வேறுளதோ? உங்கள்‌ அடியவரோடு இணங்கி வாழும்‌ வாழ்வே உண்மையான இன்பச்சுவை தரும்‌ பழமாகும் –

இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டத்‌ திருந்திட லென்பதென்ன
இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டத்து இரானொரு தொண்டனாமே?
இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டமே வானுலக இன்பமாமே
இணங்கிநும்‌ தொண்டர் தம்‌ கூட்டத் திருந்திடச் செய்‌கெனையே — 31-

நும்மடியார்தம்‌ கூட்டத்தோடும்‌ கலந்து வாழ்தலென்பது ஒரு சாதாரணச்‌ செயலாகுமா? உங்கள்‌ அடியார்‌ கூட்டத்தின்‌ இணக்கம்‌ இல்லாதவனும்‌ தொண்டருள்‌ ஒருவனாவானா? நும்‌ தொண்டரோடு இயைந்து வாழும்‌ வாழ்வே வானுல கின்பமாகும்‌. ஆதலின்‌ அடியேனை நும்‌ அடியார்‌ நடுவின்‌ இருந்திடச்‌ செய்யும்‌ அருளினைச்‌ செய்வீராக –

எனைப்போல்‌ பிழைசெய்வார்‌ யாரே? உலகினில்‌ இல்லையென்றும்‌
எனைப்போல்‌ பிழை செய்யார்‌ யாரே? உலகினில்‌ இல்லையின்றும்‌ ்‌
எனைப்போல்‌ பிழையாமை செய்தொறும்‌ யானென தின்மையுண்டேல்‌
எனைப்போல்‌ பிழையாமை உம்மரு ளாலல்ல தில்லையன்றே–32-

என்னைப்போல்‌ தவறான செயல்கள்‌ புரிந்தவர்கள்‌ உலகில்‌ என்றுமில்லை, என்னைப்போல்‌ மனமொத்து பிழை செய்யாதவர்‌ உலகில்‌ யாருமில்லை. யானென்று அகப்பற்றும்‌ புறப்பற்றும்‌ கழிந்ததென்றால்‌ செயலில்‌ பிழையில்லையாம்‌. அத்தகைய அகப்புறப்‌ பற்றும்‌ நீக்கிச்‌ செயல்களைப்‌ பிழையறச்‌ செய்தல்‌ உம்மருளாலல்லது ஏற்படாது –

அன்றே மகரமும்‌ ஆமையுங்‌ கேழலுந்‌ சிங்கமாவான்‌
அன்றே சறையினான்‌ ஆன்மேய்க்‌ கரைசால்‌ துவருடையான்‌
அன்றே இரணியன்‌ ஊனுண்‌ டவனென அறிந்திலிரே?
அன்றே வனசத்‌ தமுதின்‌ அமுதுடன்‌ தோன்றினீரே–33-

ஒவ்வொரு காலத்தில்‌ மீனாகவும்‌, ஆமையாகவும்‌, பன்றியாகவும்‌, நரசிங்கமாகவும்‌ அவதரித்த எம்பெருமானே மாட்டாரங்கழியில்‌ தோல்பை தொங்க அழுக்குப்படிந்த செந்நிற ஆடையை அணிந்த ஆயனாகிய கண்ணனாவான்‌. அடியவனுக்கு தீங்கு செய்த இரணியனுடைய மார்பைப்‌ பிளந்த அவன்‌ உடலை உண்டவனும்‌ அப்பெருமானே யன்றோ? அன்று பாற்கடலில்‌ அமுதம்‌ தோன்றியபொழுது தாமரை மலரில்‌ தோன்றிய தாங்கள்‌ அவன்‌ மார்பில்‌ இணைந்திருக்கின்றீர்‌. அவனைத்‌ தாங்கள்‌ அறியவில்லையா

மறைதலும்‌ தோன்றலும்‌ உண்டே? உலகினில்‌ மானிடர்க்கும்‌
மறைதலும்‌ தோன்றலும்‌ வாச வனாதியா தேவர்களும்‌
மறைதலும்‌ தோன்றலும்‌ உண்டே? மலரயன்‌ சூலியொடும்‌
மறைதலும்‌ தோன்றலும்‌ மங்கைநும்‌ ஆட்சிக்‌ கிலைகறங்கே–34-

அலர்மேல்‌ மங்கையீர்‌! உம்முடைய ஆளுகை நன்றன்றே! மறைதலும்‌ தோன்றலுமாகிய சுழற்சி இல்லை. ஆனால்‌ உலகில்‌ உள்ளமானிடர்‌ முதலியோருக்கும்‌ இந்திரன்‌ முதலிய தேவர்களுக்கும்‌ தாமரை மலரில்‌ தோன்றிய பிரமனுக்கும்‌ அவன்‌ தனயனாகிய சிவனுக்கும்‌ பிறப்பிறப்பாகிய தோன்றலும்‌ மறைதலும்‌ உண்டன்றோ-

கறங்குபு சக்கர கையன லதிலேன்‌ காசினியில்‌
கறங்குபு செல்வக்‌ றந்திலேன்‌ கல்விதனில்‌
கறங்குபு நெஞ்சின்‌ இளந்துணுக்‌ குற்றனென்‌ காத்திலையே
கறங்குங்‌ கரிசறத்‌ தேற்றந்‌ தருவித்தை நீயலையே? –35-

சுழலும்‌ சக்கரத்தை என்றும்‌ கையிலேந்திய திருமாலைப்‌ பற்றிய அடியேன்‌ வேறு தெய்வங்களை அறியேன்‌. மாறி, மாறி வரும்‌ செல்வமாகிய மாசு என்பக்கல்‌ வராதபடியானேன்‌. கல்வியைப்‌ பெற அற்பத்துணிவுடையேனாய்‌ முற்றப்பெறாத வனானேன்‌. நின்றவாநில்லா நெஞ்சின்‌ கரிசைப்‌ போக்கித்தெளிவைத்தரு வித்தை நீயாயிருந்தும்‌ கல்வியை முற்றநீர்‌ தந்திடவில்லையே –

நீயலை யேயணு வாயே விபுவின்‌ நிமிர்ந்துறைவாய்‌
நீயலை யேநிதி யாளி பெறுவதும்‌ நின்னிடமே
நீயலை யேயவன்‌ பாலநம்‌ நேருறச்‌ செய்வதுவே?

நீயலை யேழுத்தி இன்பம்‌ இணைந்திருந்‌ தாக்குவிப்பே–36-

அணுவளவாக இருந்தும்‌ நீர்‌, எங்கும்‌ வியாபித்துள்ள விபுவான பெருமானைப் போல்‌ சக்தி விசேஷத்தாலே கரந்தெங்கும்‌ பரந்தெங்கும்‌ உள்ளாய்‌ நீரன்றோ? செல்வத்துக்கு உரிய தெய்வம்‌ நீரல்லையோ? அனைவரும்‌ எல்லாச்‌ செல்வமும்‌ பெறுதல்‌ உமமிட மிருந்தன்றோ? எம்பெருமானுடைய காத்தல்‌ தொழிலை முறையாகச்‌ செய்பவரும்‌ நீயல்லையே? எம்பெருமானோட கூடியிருந்து புருஷகாரம்‌ செய்து அடியார்கள்‌ வீடு பேற்றின்பம்‌ அடைவதற்காக முயற்சி செய்பவள்‌ நீரன்றோ –

ஆக்கலுங்‌ காத்தல்‌ உமதுளத்து கப்பினுக்‌ கெம்பெருமான்‌
ஆக்கலுங்‌ காத்தலும்‌ ஆவவே? உந்தங்கண்‌ ணோக்கிலதேன்‌
ஆக்கலுங்‌ காத்தல்‌ அழிப்பதொன்‌ றன்றி நுமக்காக
ஆக்கலுங்‌ காத்தல்‌ அழித்தல்‌ ஆம்பயன்‌ சேதநனே–37-

எம்பெருமான்‌ படைத்தல்‌ காத்தல்‌ அழித்தல்‌ தொழில்களைச்‌ செய்வது உமக்கு இன்பத்தை அளிப்பதற்கே. உம்‌ பார்வையின்றேல்‌ பெருமானுடைய ஆக்கலுங்காத்தலு முறையாக நிகழா. எம்பெருமான்‌ முத்தொழிலும் செய்வது உமக்காக. இம் முத்‌ தொழில்களால்‌ ஆகும்‌ பயன்‌ சேதனனைத் தம்போடிணைத்துக்‌ கொள்வதற்காகவே-

உடனிருந்‌ தன்பர்போல்‌ ஊறுபல்‌ லாற்றற்‌ களவுமுண்டே?
உடனிருந்‌ தாக்கம் அறிவொடு வீக்கும் உணக்குவமே
உடனிருந்‌ தைம்பொறி ஊட்டும்‌ புலநலத்‌ தொன்றுவமே
உடனிருந்‌ துந்தம்‌ கடைக்கணின்‌ நோக்குவீர்‌ தீர்ந்திடவே–38-

ஐம்பொறிகள்‌ இவ்வுடம்பில்‌ ஆன்மாக்களோடு கூடியிருந்து ஆற்றும்‌ பலவகை இடையூறுகளுக்கு எல்லை யுண்டோ? அவை ஆன்மாவோடு தொடர்ந்திருந்தே பக்தி செல்வத்தையும்‌ ஞானத்தையும்‌ கெடுக்கிறது, அவை: போக்கும்‌ திறத்தை நாங்கள்‌ அறிவோமா? அவ்வாறு அறியாமல்‌ ஐம்பொறிகள்‌ உண்பிக்கும்‌ புலனின்பத்தில்‌ ஈடுபட்டுக்‌ காலங்கழிக்கின்றோம்‌. இத்தகைய அறியாமை எம்மை விட்டு நீங்குமாறு தாயாகிய நீர்‌ எம்‌ பக்கம்‌ இருந்து உமது கடைக் கண்ணால்‌ நோக்கி எமக்கு அருள்‌ செய்வீராக –

தீர்ந்திடச்‌ செய்தீர்‌ துருவனைச்‌ சிற்றனைச்‌ செய்கொடுமை
தீர்ந்திடச்‌ செய்தீர்‌ இரணியற்‌ கொன்றவன்‌ சேய்‌ கொலையைத்
தீர்ந்திடச்‌ செய்தீர்‌ சிறைப்படு மாதர்‌ பிறர்துயரும்‌
தீர்ந்திடச்‌ செய்வீர்‌ அடியேன்‌ படுங்கடுந்‌ தீமைகளே–39-

துருவன்‌ என்ற அரசிளங்குமரனுக்கு அவன்‌ சிற்றன்னையால்‌ ஏற்பட்ட துயரங்கள்‌ எம்பெருமானைக்‌ கொண்டு நீங்குமாறு செய்தீர்‌. இரணியனைக்‌ கொன்று அவன்‌ மகன்‌ பிரகலாதன்‌ கொலை செய்யப் படுதலை நீங்குமாறு செய்தீர்‌, இத்தகைய தாங்கள்‌ அடியவனாகிற நான்‌ படும்‌ கடுந்தீவினைகளும்‌ நீங்குமாறு செய்வீராக –

தீமைகள்‌ செய்வன ஐம்பொறி சேர்க்கும்‌ புலனலங்கள்‌
தீமைகள்‌ செய்வன பெண்ணெனும்‌ ஆணெனும்‌ ஈருடல்கள்‌
தீமைகள்‌ செய்வன ஒன்றினோடு ஓன்றுடன் சேர் பிணக்காம்
தீமைகள்‌ செய்வனடொன்‌ மேல்நலம்‌ சேரத்‌ தடைமிழைத்தே–40-

ஐம்பொறிகளால்‌ நுகரப்பெறும்‌ புலனின்பங்கள்‌ சேதநன்‌ எம்பெருமானை அடையாதபடி தீமைகள்‌ செய்கின்றன. பெண்ணுடல்‌ எனவும்‌, ஆணுடல்‌ எனவும்‌ பருத்து உலாவப்படும்‌ இருவகை உடல்களும்‌ தீமைகள்‌ தருவனவேயாம்‌. மேம்பட்ட வீட்டின்பம்‌ அடைய முடியாதபடி தீமை செய்யும்‌ இவற்றை அகற்றுவீராக –

இழைப்ப துலகென காப்ப தழிப்ப திவைசெயல்கள்‌
இழைப்பதற்‌ கோர்துணை இன்றித்‌ தனதிடத்‌ தாக்குமவன்‌
இழைப்பவன்‌ மார்வத்‌ திருந்துநீ ரீதின்‌ இகந்தெவையும்‌
இழைப் பவற் கொண்டே இணை இல் பேரின்பத்‌ திருத்துவீரே–41-

உலகங்களைப்‌ படைத்தலும்‌, காத்தலும்‌, அழித்தலும்‌ என்ற முத்தொழில்களையும்‌ பிறருதவியின்றி எம்பெருமான்‌ தானே தனதிடத்தே நிகழ்த்தும்‌ போது, தேவரீர்‌ திருமார்பில்‌ பிரியாமல்‌ உறைந்து கொண்டு முத்தொழில்களிலும்‌ தொடர்பின்றி, எல்லா உயிர்களும்‌ எம்பெருமானைக்‌ கொண்டே, இணையில்லாப்‌ பேரின்ப உலகமாகிய பரம பதத்தில்‌ சேர்வதற்கு ஆவன செய்கின்றீர் –

இருத்துவீர்‌ நான்முக னாதி எவரையும்‌ தம்பதத்தே
இருத்துவீர்‌; தாளடையாரை அவர்தம்‌ இருவினையில்‌
இருத்துவீர்‌; தத்தம்‌ வரம்புடை யார்தம்‌ இயல்பறிந்து
இருத்துவீர்‌; தஞ்சமா ஈரிணைத்‌ தாள்களில்‌ தொண்டுடனே–42-

நான்முகன்‌ முதலிய தேவர்களை அவரவர்‌ பதவிகளில்‌ நிலையாகப்‌ பலகாலம்‌ வரை இருக்கச்‌ செய்கின்றீர்‌. உம்மை வணங்காதவர்களை அவரவர்‌ நல்வினை தீவினைகளுக்கேற்பப்‌ பயன்‌ தந்து நுகரும்‌ வண்ணம்‌ வாழ்க்கையிலிருக்கும்படி காலம்‌ கழிக்க வைக்கின்றீர்‌. ஆன்மாநந்தமே போதும்‌ என்ற வரம்புடையவர்களை கைவல்யத்திருக்கச்‌ செய்கின்‌றீர்‌. உம்மையே தஞ்சமாக துடைந்த அடியார்களை நும்மிருவருடைய இணைந்துள்ள திருவடிகளில்‌ செய்யும்‌ திருத்தொண்டை நிலையாக ஈடுபடுத்துகின்றீர் –

தொண்டினை யன்றிச்‌ சுகமே? உலகொரு நாயகமே
தொண்டினை யன்றிச்‌ சுவர்க மெனுமோர்‌ தனிச்சுகமே?
தொண்டினை யன்றி உயிர்சுகத்‌ தாழ்தல்‌ ஒருசுகமே?
தொண்டினை யன்றிக்‌ குழாத்தொடும்‌ உந்தம்‌ தொண்டுமொன்நே? –43-

உமது திருவடிகளில்‌ தொண்டு செய்வதால்‌ ஏற்படும்‌ இன்பம்‌ உலகொரு நாயகமாக ஆளும்‌ தலைமையாலும்‌ கிட்டாது. இதனை ஒத்த இன்பம்‌ சுவர்கம்‌ முதலான எவ்வுலகத்திலும்‌ இல்லை. இதனை ஒத்த இன்பம்‌ ஆன்மா தன்னைத்‌ தானே அநுபவிக்கிற கைவல்யீத்திலும்‌ இல்லை. தங்கள்‌ திருவடிகளில்‌ அடியார்‌ குழாத்தொடும்‌ ஒன்றிச்‌ செய்யும்‌ தொண்டே பேரின்பம்‌ பயப்பது. தனித்துச்‌ செய்யும்‌ தொண்டு பேரின்பம்‌ பயவாது –

ஒன்றும்‌ அறிந்திலன்‌ ஒள்ளிய உம் தம் அருள் பெருக்கை
ஒன்றும்‌ அறிந்திலன்‌ எம்மான்‌ பரத்துவத்‌ துண்மைதனை
ஒன்றும்‌ அறிந்திலன்‌ அணுவில் விபூவினை உட்படுத்தல்
ஒன்றும றிந்திலன்யான்‌ எங்கும்‌ அணுநீர்‌ எனவொத்தே–44

மேம்பட்ட தாயாகிய உம்முடைய அருள் வெள்ளம்‌ பற்றி ஒன்றும்‌ அறியேன்‌ அடியேன்‌. அது போலவே எம்பெருமானுடைய மேலார்க்கும்‌ மேலானாகிய, உண்மையும்‌ அறியேன்‌. எங்கும்‌ பரந்திருக்கும்‌ தனித் தன்மையை உடைய எம்பெருமான்‌ அணுவளவினதாகிய ஆன்மாவுக்குள்‌ மறைந்திருப்பதையும்‌ அணு அளவு நுண்ணிய தாங்கள்‌ எங்கும்‌ பரவியிருக்கும்‌ விபுவாகிய எம்பெருமான்‌ அளவினை ஒத்திருப்பதனையும்‌ அறியேன்-

ஒத்திருப்‌ பீர்நீர்‌ உபேய நிலைதனக்கு எவ்வுயிர்க்கும்‌
ஒத்திருப்‌ பீர்நீர்‌ உபாய நிலையில்‌ புருடகாரம்‌
ஒத்திருந்‌ தேயுநீர்‌ காக்கும்‌ நிலையில்‌ உடனருள்வீர்‌
ஓந்திருந்‌து அண்மையில் நீக்கும்‌ தொழிலில்‌ உடன் இருப்பே-45-

எம்பெருமான்‌ எல்லா உயிர்களுக்கும்‌ சென்று சேரத்தக்க பயனாகிய நிலையில்‌ இருக்கும்போது உயிர்களுக்கு இன்பம்‌ அருளும்‌ நிலையில்‌ தாயாகிய நீங்கள்‌ எம்பெருமானை ஒத்திருப்பீர்‌. உயிர்‌ எம்பெருமானை அடையும்‌ உபாய நிலையில்‌ பரிந்துரைக்‌ கூறி, உயிர்களைப்‌ பாதுகாக்கும்‌ தொழிலில்‌ எம்பெருமானோடு உடனிருந்து செயல்படுகின்றீர்‌. அவன்‌ பக்கலில்‌ உடனிருந்தும்‌ அவன்‌ செய்யும்‌ அழித்தல்‌ தொழிலையும்‌ ஆமோதிக்கிறீர்-

ஒட்டிலிர்‌ எம்பிராற்‌ சேடம்‌ உளதன்றிப்‌ புன்னிமயொன்றும்‌
ஒட்டிலீர்‌ ஒன்றும்‌ சுதந்திரம்‌ இன்றன்றிப்‌ பண்பிலதில்‌
ஒட்டிலீர்‌ இவ்விரு தன்மையும்‌ இன்றி ஒருகுறையும்‌
ஒட்டிலீர்‌ உம்பர்கோன்‌ சேதநர்‌ பற்றருள்‌ மற்றவையே –46-

தாயாராகிய தாங்கள்‌ எம்பெருமானுக்கே யடிமையாயுள்ளீர்‌. மற்றவர்‌ திறத்து அடிமையாம்‌ கீழ்மை யன்றித்‌ தலைவியாக உள்ளீர்‌. தங்களுக்கு எம்பெருமானை விடுத்துச்‌ சுதந்திரம்‌ இல்லை.-எம்பெருமானுக்கு அடிமை-மற்றவருக்குத்‌ தலைமை. ஏனைய உயிர்‌ பண்புகள்‌ யாவுக்‌கும் நிபந்தனம்‌ என்ற இரு தன்மை அன்றி நுமக்கு குறை தரும்‌ பண்புகள்‌ எதன்‌ கண்ணும்‌ தொடர்பில்லை. எம்பெருமான்‌ திறத்துப்‌ பற்றும்‌ உயிரினங்கள்‌ திறத்தருளுவதன்‌றி மற்றைய கீழான பண்புகளோடு தொடர்புடையீ ரல்லீர் –

மற்றவை தாம்சுவை, யற்றவை மாயையை யாரறிவார்‌?
மற்றவை தாம்சுவை யுற்றவை யாமென மாலுமிதே
மற்றவை தாமற்ப சாரம்‌ உயிர்ச்சுவை மாரணமே
மற்றவை தீர்ந்தும்‌ தொண்டர்‌ குழுவுடன்‌ வாழ்சுவையே –47-

உம்‌ திருத்தொண்டு தவிர ஏனையவை சுவையற்றவையாகவும்‌,சேதனன்‌ அவற்றை சுவையுடையனவாகக்‌ கருதச்‌ செய்யும்‌ உமது மாயையின்‌ ஆற்றலை அறியவல்லவர்‌ யார்‌? மற்ற பொருள்கள்‌ சுவையுள்ளன என்று சேதனன்‌ கருதுதல்‌ மாயையின்‌ மயக்கமே. ஏனைய புலனின்பங்கள்‌ மிகக் குறைவான சுவை புடையனவே. மரணமாகிய கைவல்யம் முதலான இவற்றை விடுத்து நும்‌ தொண்டர்‌ குழாத்தொடும்‌ வாழும்‌ சுவையே மேம்பட்ட சுவையாகும் –

வாழ்சுவை மிக்கசீர்த்‌ தொண்டர்க்‌ கமுதெனும்‌ வாய்மொழியும்‌
வாழ்சுவைப்‌ பேருரை ஐவர்‌ வழங்கிய கோலமுடன்‌
வாழ்சுவை மிக்க கலியன் சொல்‌ மாலையா றங்கமுடன்‌
வாழ்சுவை வேரிமா மாறாத பூமேல்‌ இருப்பருளே–48-

மேம்பட்ட நறுமணம்‌ மாறாத தாமரை மேல்‌ இருக்கும்‌ பெருமாட்டியே! நல் வாழ்வுக்கு உரிய சுவை மிக்க சிறப்பினையுடைய தொண்டருக்கு அமுதம்‌ எனப்படும்‌ திருவாய்மொழியும்‌, இந்நூலுக்குத்‌ திருக்குருகைப்‌ பிரான்‌ பிள்ளான்‌, நஞ்சீயர்‌, வாதிகேசரி, பெரியவாச்சான்பிள்ளை, நம்பிள்ளை சொன்னதை ஏடுபடுத்திய வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை இவர்கள்‌ வழங்கிய ஐந்து உரைகளும்‌ ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, பன்‌ னீராயிரப்படி, இருபத்திநாலாயிரப்படி, முப்பதாறாயிரப்படி என்று போற்றப்படும்‌ அழகிய ஐந்து உரைகளும்‌, மேம்பட்ட திருமங்கை மன்னன்‌ அருளிய பெரிய திருமொழி திருக்குறுந்தாண்டகம்‌, திருநெடுந்தாண்டகம்‌, சிறிய திருமடல்‌, பெரிய திருமடல்‌, திவெழுகூற்றிருக்கை என்ற பெயர்களையுடையதாய்‌ அருளிய சொல்‌ மாலைகளும்‌ உன்‌ அருளால்‌ ஏற்பட்டனவாகும் –

இருப்பதும்‌ வந்தும்‌ உறைவதும்‌ ஏற்றசீர்த்‌ தாமரையே
இருப்பதும்‌ நாச்சியார்‌ கோயிலும்‌ வெள்ளறை ஏருறையூர்‌
இருப்பதும்‌ எல்லா இதய கமலத்‌(து) இறைவனுடன்‌
இருப்பதும்‌ நித்திய ஸூரிகள்‌ வாழ்த்த இறையுடனே–49-

உனக்குப்‌ பொருத்தமான சிறப்பை யுடைய தாமரையே நீ காட்சி வழங்குமிடமும்‌ தோன்றுமிடமும்‌, நிலையாத்‌ தங்கி இருக்குமிடமும்‌, நீ கோயில்‌ கொண்டிருக்கும்‌ திருப்பதிகள்‌ திருநறையூர்‌, திருவெள்ளறை, திருஉறையூர்‌, முதலியனவும்‌. ஆன்மாக்களின்‌ இதய தாமரைகளும்‌ நித்திய ஸூரிகள்‌ வாழ்த்தும்படி இறைவனுடன்‌ வீற்றிருக்கும்‌ பரமபதமும்‌ உனக்கு நிலையான இருப்பிடங்களாகும் –

இறையுடன்‌ எவ்வெப்‌ பிறப்பினும்‌ தோன்றல்‌ இணக்கமுடன்‌
இறையுடன்‌ சேர்ந்திருந்‌ தெவ்வெவ்‌ வளத்தினு முந்துகிறீர்‌
இறையுடன்‌ சேர்ந்தே பரனெனும்‌ ஏற்றம்‌ விளைப்பதுவே
இறையுடன்‌ சேர்க்கவும்‌ இன்பநீர்‌ சேதனர்‌ ஏற்பதுவே –50-

எம்பெருமான்‌ எடுக்கும்‌ எவ்வெவ்வதாரத்திலும்‌ அவன்‌ திருவுள்ளத்துக்கு ஏற்பவே தோன்றுதலும்‌, எம்பெருமானுடன்‌ சேர்ந்திருந்தே எல்லா அறங்களிலும்‌ முற்பட்டு செயற்படுதலும்‌, எம்பெருமானை நீர்‌ சேர்ந்திருந்திருப்பதாலேயே அவனுக்கு எல்லாரிலும்‌ மேம்பட்டவன்‌’ என்று ஏற்றம்‌ விளைவிப்பதும்‌, எம்பெருமானுடன்‌ ஆன்மாக்களைச்‌ சேர்ப்பதும்‌, அவற்றை அவன்‌ ஏற்றுக்‌ கோடலும்‌ ஆகியவை அனைத்தும்‌ தாயாராகிய உங்களுக்கு மதிப்புடைய செயல்களாகும் –

ஏற்பதும்‌ எல்லா உலகும்‌ இணையில்‌ தனம்விரும்பி
ஏற்பதும்‌ ஞாநிகள்‌ எல்லாம்‌ பரனிடம்‌ சேர்ந்திடவே
ஏற்பதும்‌ நித்தரும்‌ முத்தரும்‌ தந்தொண்‌ டெழிலுறவே
ஏற்பதும்‌ எம்மான்‌ அகத்தெழில்‌ நீர்தாம்‌ முகத்தெளிவே–51-

எல்லா உலகத்திலுள்ளவர்களும்‌, ஒப்பற்ற செல்வத்தை விடும்‌ ஞாநிகள்‌ எல்லோரும்‌ தம்மை எம்பெருமானிடம்‌ சேர்ப்பிப்பதை விரும்பியும்‌, நித்தியசூரிகளும்‌, முத்தி பெற்றுப்‌ பரமபதத்திலுள்ளவர்களும்‌, தங்கள்‌ தொண்டுசிறக்க அவர்களால்‌ வழிபடப்படுகின்ற தாங்கள்‌ எம்பெருமான்‌ உள்ளத்தெய்தும்‌ உகப்பைக்‌ சுண்டு, அதனால்‌ ஏற்படும்‌ மகிழ்வால்‌ முகத்தின்‌ தெளிவான அழகைப்‌ பெற்றுள்ளீர்கள் –

முகத்தெளி வுள்ள தறிவிலார்க்‌ குத்தனம்‌ முந்துதலால்‌
முகத்தெளி வுள்ளதாம்‌ மூதறி ஞர்தமது மெய்யுணர்வால்‌
முகத்தெளி யுண்டாம்‌ பரனுக்குத்‌ தம்மை முகந்தளிப்பால்‌
முகத்தெளி வுண்டாம்‌ முகம்பரன்‌ சீர்தனைக்‌ கண்டுமக்கே–52-

அறிவில்லாதார்க்கு செல்வம்‌ மிகுதலினாலே முகத்தெளி வேற்படுகிறது. உண்மை யறிவுடையவர்களுக்குத்‌ தத்துவ ஞானத்தால்‌ முகத்தெளிவுண்டாகிறது. மெய்யடியார்கள்‌ தம்மை முற்றவும்‌ வழங்குதலால்‌ அப்பரனுக்கு உள்ளத்துகப்பால்‌ முகத்‌ தெளிவுண்டாகிறது. எம்பெருமான்‌ உகப்பைக்‌ கண்டு உகத்தலால்‌ தாயாராகிய உமக்கு முகத்தெளிவும்‌ மகிழ்ச்சியுமேற்படுகிறது –

உமக்கொரு பாதப்‌ பயனாம்‌ உலகோர்‌ செழிப்புறவே
உமக்கொரு பாதிப்‌ பயனாம்‌ சுவர்க துற்றிடுதல்‌
உமக்கொரு முக்கால்‌ பயனாம் தமதியல்பு ஊர் புகுதல்‌
உமக்கொரு முற்றாம் அடியார் குழுவில்‌ உடனிருப்‌பே –53-

உலகவர்‌ செழிப்புறும்‌ செயல்‌ எம்பெருமானுக்கும்‌, தாயாராகிய உமக்கும்‌ காற்பங்கு மகிழ்ச்சியாகிய பயனைத்‌ தருகிறது; ஆன்மாக்கள்‌ சுவர்க்க இன்பம்‌ அடைதலால்‌ உமக்கு அரைப்பங்கு மகிழ்ச்சியாகிய பயன்‌ கிட்டுகிறது; ஆன்மாக்கள்‌ வீட்டுலகம்‌ அடைந்து கைவல்லிய இன்பம்‌ நுகர்தலைக்‌ கண்டு உங்களுக்கு முக்காற்‌ பங்கு மகிழ்ச்சிப்‌ பயன்‌ ஏற்படுகிறது; அடியார்‌ குழாத்தில்‌ நடுவில்‌ நீவிர்‌ இருவரும்‌ இருப்பது உமக்கு நிறை மகிழ்ச்சியாகிய பயனை உண்டாக்குகிறது –

அடியார்‌ குழாங்களைக் காணுதல் வாய்ப்பென்‌ றறிவளித்திர்‌
அடியார்‌ குழாங்களைக் காணும்‌ பெரும்பயன்‌ ஆய்ந்தளித்தீர்
அடியார்‌ குழாத்தின்‌ அகத்துறை பேரின்பம்‌ ஈந்தநீரே
அடியார்‌ அடிசூடும்‌ பேரரசாள நினைப்பிரன்றே–54-

அடியார்‌ குழாங்களைக்‌ காணுதலே உண்மையான செயல்‌ என்ற அறிவைத்‌ தந்துள்ளீர்‌. அதனால்‌ ஏற்படும்‌ பெரும்‌ பயனை அடியேன்‌ பெறுமாறு என்‌ நிலையை ஆராய்ந்தருள்‌ செய்தீர்‌. அடியார்‌ குழாத்துள்‌ அடியேனும்‌ ஒருவனாக அவருடனே இணைந்து தங்கும்‌ வாய்ப்பினை நல்கிய தாங்களே, அடியேன்‌ அடியார்களுடைய திருவடிகளைத்‌ தலையில்‌ சூடி மகிழ்தலாகிய பெரிய அரசாட்சியை அருளுமாறு திருவுள்ளம்‌ பற்ற வேண்டும்‌-

நினைப்பதும்‌ எல்லா உயிர்களும்‌ உய்யுமா நீக்கமின்றி
நினைப்பதும்‌ எம்பிரான்‌ காப்பும்‌ நிகில செயல்நலங்கள்‌
நினைப்பதும்‌ தேவிகள்‌ மற்றவர்‌ நும்போல்‌ நினைவுகொள்ள
நினைப்பதும்‌ செவ்விதான்‌ நீள உபய விபூதியுமே –55-

எல்லா உயிர்களும்‌ எம்பெருமானும்‌ பிராட்டியுமாகிய நும்மை நீங்காமல்‌ பற்றிப்‌ பிறவித்‌ துயரிலிருந்து பிழைத்து வீடு பேறுஅடையுமாறும்‌, எம்பெருமானுடைய காத்தல்‌ செயலோடு ஏனைய செயல்களும்‌ முறையாக நிசுழுமாறும்‌, எம்பெருமானுடைய தேவியருள்‌ ஏனையராகிய மண்மகளும்‌, ஆயர்‌ மடமகளும்‌, நும்மைப்‌ போன்ற நினைவினையே கொள்ளுமாறும்‌, லீலா விபூதியும்‌ நித்திய விபூதியையும்‌ தொடர்ந்து எல்லா நலன்களும்‌ பெறுமாறும்‌ தாயாகிய நீங்களே திருவுள்ளம்‌ பற்றியுள்ளீர்கள் –

விபூதி விபூதிமான்‌ நும்நோக்கில்‌ உள்ளதும்‌ ஓர்பொருளே!
விபூதி விபூதிமான்‌ உந்தம்சீர்‌ சார்பன்றி உள்ளதாமே?
விபூதி விபூதிமான்‌ சீரலர்‌ மேல்மங்கை உம்மதாட்சி
விபூதி விபூதிமான்‌ உந்தம தேர்கடைக்‌ கண்ணதன்றே–56-

அலர்மேல்‌ மங்கையீரே! ஈருலகமும்‌ அவற்றையுடையானும்‌ நும்பார்வை தம்மேல்‌ பதிவதாலேயே ஒப்பற்ற பொருள்களாகின்றன. உம்‌ தொடர்பின்றேல்‌ உலகுகளுக்கும்‌ அவற்றை உடையானுக்கும்‌ நிறை நலம்‌ ஏற்படுமா? உலகுகளும்‌ உம்‌ அன்பிற்கு வசப்பட்ட உடையானும்‌ உம்‌ செல்வங்களாம்‌. எல்லா உலகுகளும்‌ உம்‌ கடைக்கண்‌ நோக்கினை எதிர்நோக்கி உள்ள பொருள்களே –

உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றயி ராணிதன்கண்‌
உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றே மலைமகள் கண்‌
உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றே கலைமகள் கண்‌
உந்தங்‌ கடைக்கணின்‌ பல்கூற்றில்‌ ஒன்றதே தாமரையே –57-

உம்‌ கடைக்கண்ணின்‌ அருள்‌ நோக்கத்தின்‌ பல கூறுகளில்‌ ஒரு கூறு தம்மீது பொருந்தியதனால்‌ இந்திராணியும்‌, பார்வதியும்‌, நாமகளும்‌ சிறப்புறுகின்றனர்‌. அங்ஙனமே பெருமானுடைய தாமரைக்‌ கண்களும்‌ வீறுபெற்று விளங்குகின்றன-

தாமரைக்‌ கண்ணன்‌ தகவிலை அன்றே கதிர் முழக்கே
தாமரைக்‌ கையய யம்மேலும்‌ வீடணர்த்‌ தாழ்ததியதே
தாமரைத்‌ தாள்பிறப்‌ பீர்பதாச்‌ சொல்லுதல்‌ சொல்லளவே
தாமரைத்‌ தந்தநும்‌ மொக்கும்‌ உபய விபூதிவேந்தே–58-

எம்பெருமான்‌ தாமரைக்‌ கண்ணனாய்‌ இருக்கும்‌ செயல்‌ உன்னீடில்லாக்‌ கதிர்‌ முழக்குப்‌ போன்ற வெளி அழகு மாத்திரமே. எம்பெருமானுடைய தாமரைக்கை அபய முத்திரை உடையதேனும்‌ அவனைத்‌ தஞ்சமென்றடைந்த விபீஷணாழ்வானை ஐயுறச்‌ செய்தது. எம்பெருமானுடைய தாமரைத்‌ திருவடிகள்‌ அடியாருடைய பிறவிப் பிணியைப்‌ போக்குவன என்ற செய்தி அடியேங்கள்‌ பக்கல்‌ செயற்படுவதாகத்‌ தெரியவில்லை. தாமரையில்‌ தோன்றிய தாயாராகிய தங்களை ஈருலக வேந்தனாகிய எம்பெருமானும்‌ ஒப்பானோ-

வேந்தர்‌ தலைவன்‌ தயரதன்‌ மேலாம்‌ மருகிமானீர்‌
வேந்தர்‌ தலைவன்‌ சனகன்‌ விரும்பும்‌ திருமகள் நீர்‌
வேந்தர்‌ தலைவன்‌ இராமன்‌ வியத்தகு தேவியானீர்‌
வேந்தர்‌ தலைக்கடை வேசரி நாசமாக்‌ கண்டீர்‌ நீரே–59-

அரசர்‌ தலைவர்களாகிய தயரதற்கும்‌ சனகர்க்கும்‌, இராமபிரானுக்கும்‌ முறையே மருமகளும்‌, விரும்பி வளர்த்த செல்வமகளும்‌, வியத்தகு தேவியுமாகிய தாங்கள்‌, அரசருள்‌ கடைப்பட்ட கோவேறு கழுதை போன்ற இராவணனைப்‌ பூண்டோடு அழியுமாறு செய்தீர் –

நீரே பரம புருடன்‌ புருடனா நிரணமிப்பீர்‌
நீரே உயிர்கள்‌ உடையான்‌ அணையுமா நேர்ந்திடுவீர்‌
நீரே அடியான்‌ பணியவன்‌ உள்ளம்‌ நிலைக்கவைப்பீர்‌
நீரே இவன் செயும்‌ தொண்டை நினைத்து மகிழவைப்பீர்‌–60-

நீரே எம்பெருமானைக்‌ கணவனாகத்‌ தேர்ந்தெடுத்தீர்‌. நீரே ஆன்மாக்களை எம்பெருமான்‌ தன்னோடு பொருந்துமாறு ஏற்றுக்‌ கொள்ளுதற்குரிய பரிவுரை கூறிச்‌ சேர்த்து வைப்பீர்‌. நீரே அடியவன்‌ செய்யும்‌ திருத்‌ தொண்டினை எம்பெருமான்‌ உகந்தருளுமாறு அவன்‌ உள்ளத்தில்‌ நிலைபெறச்‌ செய்வீர்‌. நீரே அடியவன்‌ செய்யும்‌ தொண்டுகளை நினைத்து எம்பெருமான்‌ மகிழுமாறு செய்வீர் –

மகிழ்வீர்‌ மணாளன்‌ படைத்ததைக்‌ காத்திவை யீர்ப்பிதனை
மகிழ்வீர்‌ மணாளன்‌ சராசரம்‌ பந்தென ஆடுசெயல்‌
மகிழ்வீர்‌ மணாளன்‌ உலகம்‌ முறையுடன்‌ பாலடைதல்‌
மகிழ்வீர்‌ மணாளன்‌ வனமாலை சேர்திரு மார்பினையே–61-

நீரே உங்கள்‌ மணாளனாகிய எம்பெருமான்‌ உலகைப்‌ படைத்துக்‌ காத்து ஊழிக் காலத்தில்‌ அவற்றை வயிற்றினிட்டு மறைப்பதனையும்‌, இவ்வுலகத்து உயிர்களை அவன்‌ பந்து போல ஆட்டுவித்தலையும்‌, உலகத்துயிர்கள்‌ தத்தம்‌ பக்குவத்திற்கு ஏற்ப முன்னோ பின்னோ அவன்பால்‌ அடைதலையும்‌ கண்டு, மகிழ்தலோடு எம்பெருமானுடைய வனமாலை அணிந்துள்ள மார்பினை உங்கள்‌ இருப்பிடமாகக்‌ கொண்டு மகிழ்வீர் —

மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ மல்கிய வெண்மை முதலுகத்தும்‌
மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ நீர்கொளும்‌ செம்மை மறுயுகத்தும்
மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ மல்கிய சாமளம்‌ மூன்றினிலும்‌
மார்பினைத்‌ தீர்ந்தூசல்‌ கொள்‌ளுவான்‌ மாநிறம்‌ நான்கினி்‌லே -62-

அலர்மேல்‌ மங்கையீர்‌! நீர்‌ எம்பெருமான்‌ திருமார்பினை விடுத்துத்‌ தனியே ஊஞ்சலில்‌ ஆடும்‌ போது கொள்ளும்‌ வெண்ணிறத்தைக்‌ கிருத யுகத்தும்‌, பின்‌ ஒருகால்‌ செம்மை நிறத்தைத்‌ திரேதா யுகத்தும்‌, மீண்டும்‌ ஒருகால்‌ கொள்ளும்‌ நீல நிறத்தைத்‌ துவாபர யுகத்தும்‌, மறுபடியும்‌ ஊழியாகிய கலியுகத்தும்‌ எம்பெருமான்‌ கரு நிறமும் முறையே தனக்குரிய நிறங்களாக்‌ கொண்டுள்ளான்-

நான்கெனும்‌ வேதம்‌ நவில்வநுங்‌ கீர்த்தியே நானிலத்தே
நான்கெனுந்‌ தோளால்‌ நலனுற சார்வதே நாரணனாம்‌
நான்கெனுந்‌ தாளால்‌ நடையறம்‌ பெற்ற நுமதுநோக்கின்‌
நான்கெனும்‌ மார்க்கம் நலமிகு மார்க்கம் செலுத்துவீரே –63-

தாயீர்‌! நான்கு வேதங்களும்‌ கூறுவன இறைவன்‌ புகழே-நாரணனாகிய எம்பெருமான்‌ தன்‌ நான்கு தோள்களாலும்‌ மகிழ்வுறத்‌ தழுவவது உம்மையே- உம் பார்வையாலேயே அறம்‌ என்னும்‌ பசு நான்கு கால்களால்‌ நடக்கிறது-கர்ப்பம்‌, யாம்யம்‌, தூமம்‌, அர்ச்சிராதிகதி என்ற நான்கு கதிகளுள்‌ நன்மை மிக்க அர்ச்சிராதிகதி மார்க்கத்தில்‌ உம்‌ அடியார்களை எம்பெருமானைக் கொண்டு செலுத்துவீராக —

செலுத்தும்‌ வினைகளைத்‌ தீய்ந்திடச்‌ செய்யும்‌ உமதருளை
செலுத்தும்‌ படைப்புப்‌ பதம்பெறு வானுறும்‌ சீரருளே
செலுத்தும்‌ சதமகன்‌ மூவுல காட்சி நும்சீரருளே
செலுத்துநும்‌ நேர்மைசால்‌ சீர்மை உபய விபூதிமனே –64-

துயரத்தில்‌ செலுத்தும்‌ கரும பயன்களை உமது அருள்‌ அழித்து ஒழிக்கும்‌. பிரமன்‌ படைப்புத் தொழில்‌ செய்வதும்‌, இந்திரன்‌ மூவுலகம்‌ ஆளுவதும்‌, எம்பெருமான்‌ தன்‌ இரு செல்வங்களாகிய உலகங்களை ஆட்சி செய்வதும்‌ நும்‌ இச்சையின்‌ பொருட்டே –

விபூதி பெறுமே விலகி நும்‌ பார்வை தனதனேலும்
விபூதி நும் கூட்டின்றி வில்வமே யாயின்‌ விளைவதுண்டே?
விபூதிசால்‌ இந்திர போகம்‌ விளையுமே? வாசவற்கும்‌
விபூதி விளைக்கும்‌ அருளன்றி உண்டே? எவர் தமக்கே–65-

நும்‌ அருட்பார்வை விலகின்‌ செல்வத்துக்கு உரிய குபேரனும்‌ செல்வத்தைப்பெறுதல்‌ இயலுமா? வில்வத்தினால்‌ கூட உம்‌ தொடர்பில்லையேல்‌ செல்வம்‌ விளைத்தல்‌ இயலுமா? உம்‌ அருளினாலேயே இந்திரனுக்கும்‌ செல்வம்‌ மிக்க தேவ இன்பம்‌ விளைகிறது. செல்வத்தை நல்கும்‌ உம்‌ அருளன்றி ஒருவருக்கும்‌ எவ்வகைச்‌ செல்வமும்‌ கிட்டாது —

தன்னலம்‌ நீத்துப்‌ பிறர் நலம்‌ பேணுமித்‌ தாயினம்யார் ?
தன்னலத்‌ தாழ்வில்‌ தரிக்கிலர்‌ மூவராந்‌ தேவதேவர்‌
தன்னலத்‌ தாழ்விலர்‌ முப்பத்து முக்கோடி தேவர்தாமும்‌
தன்னலம்‌ நீத்தல்‌ உபய விபூதிக்கும்‌ தாயதாலே–66-

மூம் மூர்த்திகளும்‌ தன்னலம்‌ குறைந்தால்‌ அமைதி யுற மாட்டார்கள்‌-முப்பத்து மூவருடைய வரிசையில்‌ சேர்ந்த தேவர்களும்‌, தன்னலம்‌ தாழ்வதைப்‌ பொறுக்க மாட்டார்கள்‌. தன்னலத்தை விடுத்துப் பிறர்‌ நலத்துக்காகவே வாழும்‌ தாய்க் குலம்‌ உம்‌ அம்சமே. நீர்‌ ஈருலகங்களுக்கும்‌ தாயராக இருப்பதால்‌ தன்னலம்‌ நீத்துச்‌ செயல்‌ புரிகிறீர் —

தாயெனக்‌ கோடல்‌ சசியும்‌ உமையும்‌ கலைமகளும்‌
தாயெனச்‌ சித்திதே வானை பிடாரி குறமகளும்‌
தாயெனப்‌ பத்தினித்‌ தெய்வ மாச்சாற்றும்‌ மகளிரெல்லாம்‌
தாயெனும்‌ நீயெனும்‌ பொருளன்றி மற்றைத்‌ தகவுளதே–67-

உலகவர்‌ தாய்மார்‌ என்று போற்றும்‌ இந்திராணியும்‌, உமா தேவியும்‌, கலை மகளும்‌, சித்தி தேவியும்‌, தெய்வானை அம்மையாரும்‌. பிடாரியும்‌, வள்ளியும்‌, தாயார் என்று போற்றப்படும்‌ பத்தினிப்‌ பெண்டிரும்‌ உம்மைப்‌ போன்ற தாயாவார்களா? ஈருலகிற்கும்‌ தாயெனப்படும்‌ உன்னுடைய அம்சமே என்று கூறுவதைத்‌ தவிர வேறு பொருளுடைய சொற்றொடர்‌ உள்ளதோ?-

உளதே? கருணை சால்‌ சீலம்‌ உமதிரு பாலதன்றி
உளதே? உலகவர்‌ தாய்தந்தை மற்றுள உற்ற சுற்றம்‌
உளதே? அணுவும்‌ விபுவுமாய ஒன்றிலும்‌ நீக்கமின்மை
உளதே? உபாயமும்‌ பேறாம்‌ உயர்வுறு மிக்க பண்பே –68-

பெருமானும்‌ நீருமாகிய இருவர்‌ பக்கத்தலன்‌றி வேற்றுத்‌ தெய்வங்கள்‌ பால்‌ கருணையும்‌ அதற்கேற்ற செயலும்‌ உளவோ? மற்ற தெய்வங்கள்‌ உங்கள்‌ இருவரைப்‌ போல்‌ உலக மக்களுக்குப்‌ பெற்றோரும்‌ சுற்றமும்‌ ஆவாரோ? நீரும்‌ எம்பெருமானும்‌ அணுவும்‌ விபவுமாய்‌ இருந்து உடல் மிசை உயிர்‌ எனக் கலந்து பரந்திருக்கும்‌ செயல்‌, மற்ற தெய்வங்கள்‌ பால்‌ உண்டோ? வீட்டிற்கு நிமித்தப்‌ பொருளான உபாயமும்‌ உபயே யமுமாக இருக்கும்‌ உயர் தன்மை உங்கள்‌ இருவர் பால்‌ அன்றி மற்ற தெய்வங்கள்‌ பக்கம்‌ உள்ளதோ?

பண்பிவை நுந்தம்‌ பரனுக்‌ கடிமை பிறிதிலின்மை
பண்பிவை நுந்தம்‌ பரனருட்‌ சார்பன்றி சார்பிலதாம்‌
பண்பிவை நுந்தம்‌ பரனுகப்‌ பின்முகம்‌ பூப்பதுவே
பண்பிவை நீழல்‌ பரன்சார்‌ புளதில தோர் வழக்கே–69-

எம்பெருமானுக்கே அடிமையா யிருத்தலன்‌றிப் பிற தெய்வங்களுக்கு அடிமையா யிருக்கும்‌ பண்பு நும்மிடம்‌ இல்லை. எம்பெருமான்‌ அருளைச்‌ சார்தலன்றிப்‌ பிற சாதனங்களைப்‌ பின்பற்றாமை நும்‌ பண்பாகும்‌. எம்பெருமான்‌ உகப்பிணைக்கண்டு உகத்தலே நும்‌ பண்பு-எம்பெருமானுடைய நிழலாக அவனைப்‌ பிரியாது இருப்பதும்‌ நும்‌ பண்பு. இப் பண்புகள்‌ எம்பெருமான்‌ சார்பு உளதேல்‌ நும் பால்‌ உண்டு. இலதேல்‌ நம்பால்‌ இல்லை- எனவே, நீர்‌ என்றும்‌ எம்பெருமானைப்‌ பிரியாது இருக்கின்றீர் –

வழக்கோ நன்‌ மக்கள் பால்‌ தீர்ந்து புன்‌ மக்கள்பால்‌ சார்வதுவே
வழக்கோ? சிறைக்கண்யம் தேவ மகளிர் சிறை கழிப்பீர்
வழக்கோ? மண் மாதர்‌ சிறை எமைத் தீர்ப்பதை பார்த்திருப்பீர்‌
வழக்கோ? படு துயர் யாம் கண்டு கத்தல் மணாளனோடே –70-

தாயாராகிய தாங்கள்‌ நன் மக்கள்‌ பக்கலினின்று நீங்கிப்‌ புன் மக்கள் பக்கல்‌ சேர்வது முறையோ? அடியவராகிய நாங்கள்‌ பிறவிச்‌ சிறையில்‌ கிடக்கவும் சிறைப்பட்டுத் தேவ மகளிரைத் தாங்கள் சிறைவீடு செய்தமை முறையோ – பூ மடந்தை கோதை நாச்சியராக அவதரித்து எமக்கு மெய்யுணர்வு அளித்து எம்மைப்‌ பிறவிச் சிறையிலிருந்து விடு விப்பதனை நீங்கள்‌ பார்த்துள்ளீர்கள்‌. நாங்கள்‌ படுந்துயரைக் கண்டும்‌ அதனைப்‌ போக்க முயலாது தங்கள்‌ மணாளனாகிய எம்பெருமானுடன்‌ தாங்கள்‌ உகந்திருப்பது முறையோ

ஓடுங்‌ கறங்கன்ன ஊழ்வினைச்‌ சூழலில்‌ ஒத்திருப்போம்‌
ஓடுங்‌ கறங்கின்‌ உலகியல்‌ ஒன்றின்பின்‌ ஒன்றுறுவ
ஒடுங்‌ கறங்கின்‌ இறை நெறி ஆம்பரிசு ஊர்ந்தலைப்ப
ஓடுங்‌ கறங்கிவை வீடுசெய்‌ யுந்தங்கண்‌ நோக்கிலதே–71-

உம்முடைய கடைக்கண்‌ நோக்கம்‌ எம்மேல்‌ பதியாததால்‌ முன்செய்த வினைகளால்‌ காற்றாடிபோலச்‌ சுழற்றப்படுகிறோம்‌. உலகியல்‌ வாழ்வும்‌ ஒன்றன்பின்‌ ஒன்றாக எங்களைச்‌ சுழலச்‌ செய்கின்றன, பல தெய்வங்களையும்‌ வழிபடும்‌ ஆராதனைகள்‌, நெறிமுறைகள்‌ போல்வன எம்மை அணுகி சுழல்விக்கின்றன. இச் சுழற்சி களிலிருந்து எங்களை விடுவிக்கத்‌ தங்களாலேயே இயலும் –

நோக்கில தாயிடின்‌ உள்ளதோர்‌ நுண்ணறிவு யார்க்குளதாம்‌?
நோக்கில தாயின்‌ நுவலுமி யாவும்‌ நிலை பெறுமே?
நோக்கில தாயின்‌ நுவல்படைப்‌ பீர்ப்பதும்‌ ஆமதுவே?
நோக்கில தாயின்‌ உகந்தருள்‌ நோன்தலம்‌ புல்லெழுமே–72-

உங்களுடைய அருள் நோக்கு இல்லையேல்‌ ஒருவருக்கும்‌ மெய் உணர்வு ஏற்படாது. எம்பெருமானுடைய உடைமைகளாகிய இயங்கியற் பொருள்ளும்‌ நிலையியற்‌ பொருளும்‌ நிலையாக இருக்கமாட்டா. எம்பெருமானுடைய படைத்தல்‌, காத்தல்‌, முதலிய செயல்களும்‌ முறையாக நிகழா? எம்பெருமாள்‌ உகந்தருகின்ற திருப்பதிகள்‌ யாவும்‌ தரிசிப்பார் இன்மையால்‌ புல்‌ தோன்றி வளரும்‌ பாழிடங்கள்‌ ஆகும் –

புல்லெழும்‌ நும்சார்‌ பிலதென்ன புண்ணிய நோன்பிடங்கள்‌
புல்லெழும்‌ புண்ணிய கேத்திரம்‌ புண்ணிய தீர்த்தங்களும்‌
புல்லெழும்‌ முத்தி தருமென போற்று நும்‌ ஏழ்தலமும்‌
புல்லெழும்‌ வேங்கடம்‌ சோலை நல்‌ வான மலையதுவே–73–

நும்‌ தொடர்பு இல்லை யெனின்‌ அறச் செயல்கள்‌ செய்வதற்கு ஏற்றன என்று போற்றப்படும்‌ புண்ணிய பூமிகளும்‌, புண்ணிய திருத் தலங்களும்‌,புண்ணிய தீர்த்தங்களும்‌, முத்தி தரும்‌ திருப்பதிகளாகிய அவந்தி அத்தினாபுரி, துவாரகை முதலியனவும்‌, எம்பெருமான்‌ உகந்தருளி யிருக்கும் வேங்கடமலை, வானமாமலை முதலியனவும்‌, பயன்‌ கொள்ளும்‌ அடியவருடைய வருகை இன்மையால்‌ பாழ் பட்டுவிடும்

மலையுமால்‌ நெஞ்சும்‌ பொறியும்‌ புலனொடு மாறி மாறி
மலையுமால்‌ முன்முன்‌ வினையும்‌ சுவையொடு வாசனையும்‌
மலையுமால்‌ தாபக்‌ கனலும்‌ மறித்து வரு பிறப்பும்‌
மலையுமால்‌ ஈங்கிதின்‌ வைத்திருப்‌ பான்றனைக்‌ கேட்கிலீரே–74–

இவ் வுலக வாழ்க்கையில்‌, நும்‌ அடியார்களை நெஞ்சமும்‌ அறிவும்‌ பொறியும்‌ புலன்‌ நுகர்ச்சியும்‌ செயற்‌ பொறிகளும்‌ தனித்தும்‌ கிளர்ந்தும்‌ நலியும்‌. பண்டைய வினைகளும்‌ அவற்றின்‌ வழிவரும்‌ சுவைகளும்‌ அவற்றின்‌ சுவடுகளும்‌ நலிகின்றன. ஆதியாத்மிகம்‌, ஆதிதைவிகம்‌, ஆதிபெளதிகம்‌ என்று கூறப்படும்‌ இடுக்கண் தரும்‌ மூவகைத்‌ தீக்களும்‌, மாறிமாறித்‌ தோன்றும்‌ பிறவிப்‌ பிணியும்‌ நலிவுறுத்துகின்றன. அடியார்கள்‌ படும்‌ இத் துயர்களை இம் மண்ணுலகில்‌ அவர்களை வைத்து வருந்தச்‌ செய்யும்‌ செயல்‌ பற்றித்‌ தாங்கள்‌ எம்பெருமான்‌ பக்கல்‌ வினவ மாட்டீர்களா –

கேட்கிலீர்‌ ஆய்பாடி வெண்ணை கவர்ந்துண்ணும்‌ கேவலத்தை
கேட்கிலிர்‌ முன்பகை வாய் வந்த கேட்டவன்‌ மேனிகொண்டான்‌
கேட்கிலீர்‌ பாஞ்சாலி மூர்க்கர்‌ கிளரவைக்‌ கூக்குரலைக்‌
கேட்கிலீர்‌ நீருமே பல்லூழி யான்படுங்‌ கேடிதையே–75-

எம்பெருமான்‌ ஆயர்பாடியில்‌ வெண்ணையைக்‌ களவினால்‌ உண்ணலாகிய இழி செயல்‌ செய்தான்‌. தன்‌ கண் முன்‌ பகைவனாய்‌ வந்து தன்னோடு பொருது உயிர் நீத்த சிசுபாலனுக்குத்‌ தன்‌ திருவடிமில்‌ இடம்‌ அளித்தான்‌. அரசவையில்‌ பாஞ்சாலியைக்‌ கெளரவரும்‌ அவரைச்‌ சேர்ந்தவர்களும்‌ பழித்துப்‌ பேசினர்‌. இவற்றைக்‌ குறித்து எந்த வினாவும்‌ எழுப்பாத தாங்கள்‌, பல ஊழிக் காலமாக அடியேன்‌ அனுபவிக்கும்‌ கேடுகளையும்‌ பற்றி வினவாதிருப்பதில்‌ வியப்பு ஒன்றும் இல்லை –

கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ பிணைதலும்‌ கேழிலதே
கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ உளத்துக்‌ கிளருமருள்‌
கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ வடமறை நேருமொழி
கேடில்‌ விழுப்புகழ்‌ நுந்தம்‌ உபதேசக்‌ கேள்வியதே–76-

எம்பெருமானும்‌ நீங்களும்‌ சேர்ந்திருக்கும்‌ சேர்த்தியும்‌ உங்கள்‌ உள்ளத்தில்‌ மேன்‌ மேலும்‌ பெருகும்‌ அருளும்‌, வேதத்தை ஒத்து இனிய நும்‌ மொழிகளும்‌, இரக்கத்தால்‌ நீங்கள்‌ பிறருக்கு வழங்கும்‌ நல்லுரைகளும்‌ என்றும்‌ அழிவில்லாத பெரும்‌ புகழுக்கு உரியனவாம் –

கேள்விகொள்‌ வீர்நும கேள்வி யவன்கொள வையமுய்யும்‌
கேள்விகொண்‌ டானலன்‌ கேடுவுந்‌ துற்றதால்‌ கெட்டொழிந்தான்‌
கேள்விகொள்‌ வீரே சிறைப்பட்ட ரக்கியர்கே ழில்நிந்தை
கேள்விகொள்‌ வீர்பிற மாதர்தம்‌ கேடு தவிர்ப்பதற்கே–77-

அடியார்களுடைய குறைகளைச்‌ செவி மடுக்கும்‌ தாங்கள்‌ எம்பெருமானுக்கு அவற்றைத்‌ தெரிவிப்பதனால்‌ உலகவராம்‌ அவர்கள்‌ ‘நன்மை அடைகிறார்கள்‌. தங்கள்‌ சொற்களைக்‌ கேளாததனால்‌ கேடுகளை அடைந்து இராவணன்‌ அடியோடு அழிந்தான்‌. சிறையிலிருந்து அரக்கியர்‌ கூறிய கடஞ்சொற்களைத்‌ தாங்கள்‌ செவி மடுத்தீர்கள்‌. ஏனைய தேவ மாதர் தம்‌ சிறையைத்‌ தவிர்ப்பதற்கே தாங்கள்‌ அவ் வரக்கியர்‌ கூற்றைப்‌ பொறுமையோடு செவி மடுத்தீர் —

தவிர்ப்பதும்‌ எம்பிரான்‌ சேதநர்த்‌ தள்ளும்‌ சுதந்திரத்தைத்‌
தவிர்ப்பதும்‌ சேதனர்‌ தம்பிழைக்‌ கண்டு நடுங்குமதைத்‌
தவிர்ப்பதும்‌ தம்ம தியல்பின்‌ முரண்பிறர்‌ சொல்லுமதைத்‌
தவிர்ப்பதும்‌ சார்வார்‌ மிதுநத்‌ திருப்பின்‌ தமபிறப்பே–78

பிராட்டியாரே! ஆன்மாக்களைப்‌ புறக்கணிக்கும்‌ எம்பெருமானுடைய சுதந்திரத்தைத்‌ தாங்களே பரிந்துரை கூறி நீக்குகிறீர்‌. ஆன்மாக்கள்‌ தம்‌ பிழைகளை நினைத்து நடுங்குவதைத்‌ தாங்கள்‌ கருணையால்‌ போக்குகிறீர்‌. ஆன்மாவின்‌ இயல்புக்கு மாறாகப்‌ பிறர்‌ பேசுவதைப்‌ போக்குவீரும்‌ நீர்‌. எம்பெருமானும்‌ நீரும்‌ இருக்கும்‌ இருப்பினைச்‌ சரணாகச்‌ சார்பவர்‌ தம்‌ பிறவியைப்‌ போக்குபவரும்‌ நீரே-

பிறப்பதற்‌ கோர்வினைக்‌ கட்டில்லை என்றும்‌ பிறந்தருள்வீர்‌
பிறப்பதற்‌ கும்மொரு தாய்தந்தை யில்லை பிறந்தருள்வீர்‌
பிறப்பது தாமரையாம்‌ பெற்றிக்கோ ருறுப்புமில்லை
பிறப்புத்‌ தவிரா(து) அவன்பிறப்‌ பொக்கப்‌ பிறக்குமதே–79-

உலகில்‌ பிறப்பதற்குரியதொரு வினையின்‌ தொடர்பு இல்லாமலேயே நீங்கள்‌ உலகில்‌ பிறப்பெடுக்கிறீர்கள்‌. தாய்‌ தந்தையர்‌ இல்லாமலே இயல்பாலேயே நீங்கள்‌ பிறவி எடுக்கிறீர்‌. தாங்கள்‌ பிறப்பிடமாகிய தாமரைக்குத்‌ தங்களைப்‌ பிறக்கச்‌ செய்யும்‌ உறுப்பு எதுவும்‌ இல்லை.
எம்பெருமான்‌ உலகில்‌ பிறவி எடுக்குந்‌ தோறும்‌ அவனுக்கு ஏற்க நீங்களும்‌ பிறவி எடுக்கின்றீர்‌-

பிறப்பதோ பெம்மான்‌ சுரர்குலம்‌ தாமும்‌ சுரர்குலமே
பிறப்பதோ பெம்மான்‌ மனிதனே தாழும்‌ மனிதகுலம்‌
பிறப்பதோ பெம்மான்‌ விலங்கது தாமும்‌ விலங்கினமே
பிறப்பதோ பெம்மான் தான்‌ தாவரம்‌ தாமுமோர்‌ தாவரமே ! –80–

பெருமான்‌ தேவனாகப்‌ பிறப்பின்‌ நீங்களும்‌ தேவியாகவும்‌,மனிதனாகப்‌ பிறப்பின்‌ பெண்மகளாகவும்‌, விலங்காகப்‌ பிறப்பின்‌ மறைந்து நின்‌று பெண்‌ விலங்காகவும்‌, தாவரமாகப்‌ பிறப்பின்‌ நீங்களும்‌ மறைந்து நின்று தாவரமாகவும்‌ பிறப்பெடுக்கின்றீர்‌. நும்‌ இணை பிரியாமை இருக்குமாறு என்னே? என்பது குறிப்பெச்சம் –

தாவி லருங்கலை நும்மருள்‌ கூட்டின்‌ தகவுடைத்தாம்‌
தாவி லருங்கலைக்‌ கற்றோன்‌ கதிரோன்முன்‌ சாயிழந்தான்‌
தாவி லருங்கலைக்‌ சாற்றற்‌(கு) அரியவன்‌ நும் வயமே
தாவி லருங்கலைக்‌ முற்றும்‌ இயல்பி னறி வரிதே? –81-

வருத்தமில்லாத அரிய கலைகள்‌ நும்‌ அருளொடு கூடியே பெருமை பெறுகின்றன. நீங்குதலில்லாத அரிய கலைகளைச்‌ ஸூரியனை அடுத்துச்‌ கற்ற அனுமனும்‌ நும்‌ சொற்களால்‌ தன்‌ எண்ணத்தைக்‌ கை விட்டு நும்மைச்‌ சூழ்ந்த அரக்கியரை நலியாது விடுத்தான்‌. நீங்குதலில்லாத பல கலைகளாலும்‌ உள்ளவாறு அறிய முடியாத எம்பெருமானும்‌ நுமக்கு வசப்பட்டவனே. நீங்குதலில்லாத அரிய கலைகளும்‌ உம்மை உள்ளவாறு அறிதல்‌ இயலாது–

அறிவி தேயலர்‌ மேல்மங்கை நுந்தரத்‌ தாயிரத்தொன்‌(று)
அறிவரி தேயயன்‌ நெற்றியில்‌ அங்கணன்‌ இந்திரனும்‌
அறிவரி தேஅயன்‌ தேவி அயிராணி பார்வதியும்‌
அரிவரி தேயுடன்‌ தேவியர்‌ நீரும்‌ அமலனுமே–82-

அன்னையார்‌! நும்‌ தகுதியின்‌ ஆயிரத்திலொரு கூறு கூட மற்றவர்‌ அறிதல்‌ இயலாது. பிரமன்‌, சிவன்‌, இந்திரன்‌ என்ற பெருந்தேவரும்‌ அவர் தேவியராகிய நா மகள்‌, பார்வதி, இந்திராணி என்பவரும்‌ கூட நும்‌ தகுதியை உள்ளவாறு அறிதல்‌ இயலாது. மற்றவரைக்‌ கூறுதல்‌ ஏன்‌? உம்முடன்‌ இருக்கும்‌ நில மடந்தையும்‌, ஆயர் குல மடந்தையும்‌ நீரும்‌ எம்பெருமானும் கூட நும்‌ பெருமையை அறிதல்‌ அருமையாகும் –

அமலன்‌ அமுதங்‌ கடைந்தான்‌ பிறர்க்கென்‌ றுமை யடைந்தான்‌
அமலன்‌ அனைத்தும்‌ இயக்கற்‌ குரியன்‌ நினைவினாலே
அமலன்‌ அனைத்தும்‌ தனதா உடையான்‌ இயல்புறவே
அமலன்‌ உடையன்‌ செயலன்‌ உமதவன்‌ மார்பி௫ப்பே –83-

களங்கமற்ற எம்பெருமான்‌ பிறருக்கு அமுதம்‌ கடைந்து கொடுப்பதான பொய்க் காரணம்‌ காட்டிக் கடல்‌ கடைந்த செய்கை உலகத்துக்‌ தாயாராகிய உம்மைப்‌ பெறவே, எல்லா உலகப்‌ பொருள்களையும்‌ ஆட்டுவிக்கும்‌ செயலையும்‌ யாவற்றையும்‌ தன்னை உடைமையாகப்‌ பெற்றிருக்கும்‌ சிறப்பினையும்‌ உடையவனாய்‌, அனனத்தையும்‌ உடையவனாகவும்‌ ஆள்பவனாகவும்‌ சிறந்து விளங்குகிறான்‌. இதற்குக்‌ காரணம்‌, நீர்‌ அவன்‌ மார்பிலிருந்து உற்சாகப் படுத்து வதலாலேயே –

இருப்ப திறையும்‌ பிரிவிலை மேன்மை பிரிவிலையே
இருப்பதும்‌ வில்வத்‌ திரிணியக்‌ கூட்டினும்‌ சேமமுற
இருப்பதும்‌ ஐயந்‌ திரிபறத்‌ தேர்ந்த தெளிவுணர்வின்‌
இருப்பதும்‌ மெய்யடி யார் தம்‌ குழுவில்‌ இறையுடனே–84-

ஒரு கண நேரமும்‌ பிரிவினை மேற் கொள்ளாது எம்பெருமான்‌ திரு மார்பில்‌ இருக்கும்‌ மேம்பட்ட நிலையை உடைய நீர்‌ பொற் குவியலிலும்‌ வில்வத்திலும்‌, ஐய உணர்வும்‌ திரிபுணர்வும்‌ நீங்குதலால்‌ தெளிவுடைய அடியாருடைய மெய்யுணர்வில்‌ வீற்றிருப்பதும்‌, மெய்யடியார்‌ குழுவில்‌ எம்பெருமானோடு தங்கியிருப்பதும்‌ ஆகிய உயரிய செயல்களைச்‌ செய்கின்றீர் —

உடனுறை யானென தென்பதின்‌ உற்ற கொடியதெது?
உடனுறை ஐம்பொறி கோட்புலன்‌ சார்தலின்‌ ஊனமுன்டே?
உடனுறை ஊழ்வினைக்‌ கட்டில்‌ வலிய பிரிப்புமுண்டே?
உடனுறைந்‌ தெம்மான்‌ உறுவன தீர்ப்புறும்‌ வேண்டுகோளே –85-

ஆன்மாக்கள்‌. உடலில்‌ தங்கியிருந்து ‘யான்‌’ என்று அகங்கரிக்கும் அகங்காரத்தை விடக்‌ கொடியது யாது உள்ளது? ஐம்பொறி புலன்களைச்‌ சார்ந்த சிற்றின்ப நுகர்ச்சியின்‌ குறைபாடுகளுடன்‌ கூடியது வேறு உண்டே? முன்‌ செய்த வினைகள்‌ இப் பிறப்பில்‌ நம்மைப்‌ பிணித்து இன்ப துன்பங்களை நுகர்விக்கும்‌ பிணைப்பை விட வலிய பிணைப்பு உளதோ? பெருமானுடன்‌ இருந்து ஆன்மாக்களின்‌ இத் தீமைகளைத்‌ தீர்க்குமாறு வேண்டுவதனையே நும்‌ பண்பாகக்‌ கொண்டுள்ளீர்‌–

வேண்டியார்‌ பாலும்‌ அரக்கியர்‌ தீமையை விள்ளகிலீர்‌
வேண்டிப்‌ பிறந்தகம்‌ புக்ககம்‌ விட்டோர்‌ கணம் விரும்பீர்
வேண்டி முயலீர்‌ சிறையிருள்‌ தீயின்‌ விடுதலையை
வேண்டிடில் எம்மான் அடைந்தவர் ஏற்குமா வேட்கையிதே –86-

அசோக வனத்தில்‌ அரக்கியர்‌ நுமக்கு இழைத்த கொடுமைகளை நும்‌ நெருங்கிய உறவினரிடத்தும்‌ நீர்‌ தெரிவிக்க வில்லை. புக்ககத்தை விடுத்துப்‌ பிறந்தகம்‌ சென்று வர ஒரு கணமும்‌ நீர்‌ விரும்பினீர்‌ அல்லீர்‌. தீயினும்‌ கொடிய சிறையினின்றும்‌ நும்‌ முயற்சியால்‌ விடுதலை பெற நீர்‌ முயன்றீர்‌ அல்லீர்‌. எம்பெருமானைச்‌ சரணம்‌ அடைந்த அடியவர்களை ஏற்குமாறு கொள்ளும்‌ விருப்பத்தையே நீர்‌ வேண்டி நிற்கிறீர் —

வேட்கை பரன்பால்‌ அடியான்‌ விரும்பி அடைந்திடவே
வேட்கை பிரியில்‌ அடியார்க்‌(கு) அனர்த்தம்‌ விளையுமென்றே
வேட்கை யிருளுமிஞ்‌ ஞாலம்‌ தெருளும்‌ விசும்புறவே
வேட்கை திரு மா மணி மண்டபம் என்னும் வேங்கடமே –87–

அடியவன்‌ எம்பெருமானை விரும்பிச்‌ சரண்புகும்‌ செயலொன்றே நும்‌ வேட்கையாகும்‌. அத்தகைய வேட்கையை நீர்‌ நீத்துவிட்டால்‌ அடியவருக்குத்‌ தீங்கே விளையும்‌. இவ்விருள்‌ தருமாஞாலமாகிய நிலவுலகைப்‌ பரமபதமொத்த துன்பக்‌ கலப்பில்லா இன்ப மயமாக்குவதே உம்முடைய ஆசை. நீர்‌ உகந்தருளி யிருக்க விரும்புமிடம்‌ நில வுலக வைகுந்தத்‌ திரு மா மணி மண்டபமாகிய திருவேங்கட மலையே —

வேங்கடம்‌ வேங்கட மேவாய்‌ வெருவி இருந்திடுவீர்‌
வேங்கடம்‌ கீழிருந்‌ தன்புப தேசம்‌ விரித்துரைப்பீர்‌
வேங்கட மார்பகம்‌ நீங்கா விழைந்தே அபயமீவீர்‌
வேங்கடற்‌ குற்றதோர்‌ தொண்டொன்று பத்தா விரிப்பது–88-

நீர்‌ பரகால நாயகியை ஆவேசித்து! வேங்கடமே! வேங்கடமே! என்று விருப்பத்தோடு பல நாளும்‌ தன்னை மறந்து கூப்பிடச்‌ செய்தீர்‌. வேங்கட மலையின்‌ கீழிருந்தவாறே எம்பெருமானுக்குச்‌ சேதனர்‌ பக்கல்‌ அன்பு காட்டுமாறு உபதேசிக்கின்றீர்‌. வேங்கடத்தான்‌ மார்பினைப்‌ பிரியாமலிருந்தே அடியார்க்கு அஞ்சற்க! என்ற அருளுரை வழங்குகின்றீர்‌. குறை காணாது அடியாரை ஏற்றுக்‌ கொள்ளுமாறு எம்பெருமானிடம்‌ பரிந்துரை கூறும்‌ திருப் பணியை அடியவர்‌ உய்வதற்கே விரிவாகச்‌ செய்கின்றீர் –

விரியத்‌ தமர்செய்‌ வினைதான்‌ கழிவ தவனருளால்‌
விரியு மியல்பாழ்‌ வினைநீங்க ஒங்க நிகரில்சீர்‌
விரியத்‌ தமா்பால்‌ குறைகாணான்‌ மேன்மேல்‌ அருளுமவன்‌
விரியுஞ்‌ செயலுகப்‌ பீரலர்‌ மேல்மங்கை உம் மியல்பே–89-

அலர்மேல்‌ மங்கையீர்‌! அடியார்கள்‌ மிகுதியாகச்‌ செய்யும்‌ வினைகள்‌ யாவும்‌ எம்பெருமான்‌ அருளால்‌ நீங்கற்பாலன. அப் பெருமானிடத்தில்‌ தவறு கண்டு புறக் கணிக்கும்‌ சுதந்திர உணர்வு நீங்கவும்‌, தவறுகளையும்‌ உகக்கும்‌ ஒப்பற்ற புகழுடைய தூயன்பு அவன் பால்‌ தழைக்கவும்‌, அவன்‌ அடியார்களிடத்துக்‌ குறை காணாது அவர்களுக்கு விரிவாக அருள் புரியும்‌ மேம்பட்ட செயலுக்காக அடியவர்‌ திறத்தப்‌ பரிந்துரை கூறுவது உம்‌ பணபாகும் –

இயல்பீ திருவரைக்‌ காணும்‌ மறைப்பது மெய்யுணர்வை
இயல்பிது முக் குணத் தேய்ந்து மயக்கம் விளைக்குமதாம்‌
இயல்பீ திருவினை பாசப்‌ பிணக்கின்‌ இயக்குமிதே
இயல்பீ திறையுடன்‌ சார்ந்திவை முற்று மகற்றுவீரே–90-

எம்பெருமானும்‌ நீருமாகிய இருவரையும்‌ மனத்தால்‌ காணும்‌ உண்மை யறிவை மறைப்பது இவ் வுடம்பின்‌ இயல்பாகும்‌. காமம்‌, வெகுளி, மயக்கம்‌ என்ற முப் பண்புகளுடன்‌ பொருந்தி மெய்ப் பொருளை உள்ளவாறு அறிய முடியாதபடி மறைத்து மயங்கச்‌ செய்வதும்‌ இவ் வுடம்பின்‌ இயல்பாம்‌. நல் வினை தீ வினைகளாகிய பற்றுக்களால்‌ ஆன்மாவை ஆட்டுவிப்பதும்‌ இவ் வுடம்பின்‌ இயல்பாம்‌. எம்பெருமானைச்‌ சார்ந்து நீங்கள்‌ உடல்‌ குற்றங்கள்‌ அனைத்தையும்‌ நீக்குகின்‌றீர்‌. இது உமக்கு இயல்பாக அமைந்த பண்பாகும்‌-

வீராங்‌ கனைநீர்‌ விமலன்‌ திறத்தாறு பண்புடையீர்‌
வீராங்‌ கனைகள்‌ உமைப்போல்‌ விரதியர்‌ யாவரேனும்‌
வீராங்‌ கனைகள்‌ விழுமத்‌ தொழுதெழு மூவியலார்‌
வீராங்‌ கனைகளை நீர்‌ தத்த மியலால்‌ விளைப்பீரே-91-

வீரம்‌ சான்ற பெண்மகளாராகிய தாங்கள்‌ எம்பெருமான்‌ ஞானம்‌, சக்தி பலம்‌, ஐஸ்வரியம்‌, வீரியம்‌, தேஜஸ் என்ற ஆறு பண்புடையனாதல்‌ போல அவன்‌ திறத்தில்‌ உசுப்பில்‌ உகத்தல்‌, நோவின்‌ நோதல்‌, ஒண்பொருள்‌ கொடுத்தல்‌, நன்கு இனிது மொழிதல்‌, புணர்வு நனிவேட்டல்‌, பிரிவு நனி இரங்கல்‌ என்ற ஆறு பண்புகளை உடையீர்‌. உம்மைப்போல்‌ விரதமுடையார்‌ யாவரும்‌ வீரப் பெண்களே. எம்பெருமானைத்‌ தொழுது எழும்‌ வீரப் பெண்கள்‌ எம்பெருமானே ஆண்டான்‌, அவனே ஆறு, அவனே பேறு என்ற மூன்று இயல்பு உடையவர்கள்‌ தம்‌ பண்புகளில்‌ நெகிழ்வில்லாதபடி வீராங்கனைகளைத்‌ தயாரிப்பவரும்‌ தாங்களே —

விப்பிர நாரா யணனொடும்‌ விஞ்சு சீர்‌ மாறனொடும்‌
விப்பிரத்‌ தோன்றலாம்‌ விட்டுசித்‌ தன்னொடு வீசு புகழ்‌
விப்பிர ஊர்தி வியன் தமிழ்ப்‌ பாணன்‌ பிறவி வெரு
விப்பிர புத்தி செய்‌ வேந்தன்‌ குலசே கரனொடுமே–92-

தொண்டரடிப்‌ பொடியாழ்வார்‌ ஆகிய விப்பிரநாராயணர்‌, மேம்பட்ட சிறப்பினை உடைய சடகோபர்‌, அந்தணருள்‌ மேம்பட்ட விட்டு சித்தர்‌, யோக சாரங்க முனிவர்‌ தோளில்‌ சுமக்கப்பட்டு எம்பெருமானைத்‌ தரிசிக்க வந்த திருப்பாணாழ்வார்‌, பிறவிப்‌ பிணிக்கு அஞ்சி விற்றுவக்‌ கோட்டம்மானைச்‌ சரண்‌ புகுந்த குலசேகரப்‌ பெருமான்‌ ஆகியவரும் –

ஒடுங்கலில்‌ சீரார்‌ முதல்வர்கள்‌ மூவராம்‌ ஒன்தமிழர்‌
ஒடுங்கலில்‌ ஞானமும்‌ பத்தி விரத்தியும்‌ ஒங்கு கோதை
ஒடுங்கலில்‌ யோகி மழிசை மன்‌ உற்ற மதுரகவி
ஓடுங்குலில்‌ வாழ்த்துக்‌ கலியன்‌ உதிப்பித்‌தும் மருளே –93-

மற்றும்‌ குறைவற்ற சிறப்புடைய முதலாழ்வார்கள்‌, மூவர்‌ ஞான பக்தி வைராக்கியத்தால்‌ மேம்பட்ட கோதையராகிய ஸ்ரீஆண்டாள்‌, யோகியாய்‌ வாழ்ந்த திருமழிசைப்‌ பிரான்‌ மதுரகவியார்‌, 86 திவ்விய தேசங்களைப்‌ ்‌ பாடியருளிய திருமங்கையாழ்வார்‌ முதலானாருடைய திருஅவதாரங்கள்‌ தாயாராகிய உமது முனைப்பினாலும்‌ எம்பெருமான்‌ அருளாலும்‌ இந்த பூலோகத்தில்‌ உண்டாயின–

உமதரு ளொன்றே உதவு மெய்‌ ஞானநீர்‌ வித்தையதால்‌
உமதருள்‌ சேதனர்‌ பாலதாம்‌ உற்ற நல்‌ தாயதனால்‌
உமதருள்‌ ஏற்பன் உலகுண் பரனின் இனியையதால்
உமதருள்‌ முற்றவும்‌ உற்றதே யாக்கும்‌ நெகிழ்தலிலே–94-

அன்னையாராகிய நீர்‌, வித்தையே வடிவினராய்‌ இருப்பதால்‌ உம்‌ அருளே மெய்யுணாவை உண்டாக்குவதாகும்‌. தாங்கள்‌ உலகின்‌ தாயாக இருப்பதனால்‌ தங்கள்‌ அருள்‌ இவ்வுலகினுள்ள உயிர்களின்‌ பக்கல்‌ பரவியுள்ளது. எம்பெருமான்‌ உகப்பிற்குரிய தேவியராக நீர்‌ இருப்பதால்‌ ஊழியில்‌ உலகை வயிற்றில்‌ வைத்துப்‌ பாதுகாக்கும்‌ எம்பெருமான்‌ உம்‌ அருள்செயல்களைத்‌ தானும்‌ இசைகிறான்‌. உம்‌ அருள்‌ செயல்களைக் குறைவுறாமல்‌ உயிர்களுக்கு ஏற்புடைய நன்மைகளையே உண்டாக்கும் —

நெகிழ்வதே உந்தம்‌ அருளிலர்‌ நேர்வது முற்றவுமே
நெகிழ்வதே இந்திரன்‌ நீடு சிவனயன்‌ நேர் பதங்கள்‌
நெகிழ்வதே ஓரிரு கோள்கதி யைம்பூத நேர்மையதும்‌
நெகிழ்வதில்‌ நித்த விபூதி நும்‌ சார்பில்‌ நிலைத்திடுமே-95-

உம்‌ அருள்‌ பெறாதார்‌ செய்யும்‌ செயல்கள்‌ முழுமையாக நிறைவேறாமல்‌ இடையிலேயே தடைபட்டு அழியும்‌. உம்‌ அருளின்‌றேல்‌ இந்திரன்‌, சிவன்‌, அயன்‌ என்பார்‌ பதவிகள்‌ நிலை பேறு அடைய மாட்டா, மேலும்‌, ஞாயிறு, திங்கள்‌ இயக்கமும்‌ ஐம் பூதப்‌ பண்புகளும்‌ நெகிழ்ந்து விடும்‌. அழிவில்லாத பரம பதமும்‌ உம்‌ தொடர்பினாலேயே நிலை பெற்றிருக்கும் —

நிலை நிற்கு மன்றோ கயவன்‌ சிறைவைத்த பாதகத்தை
நிலை நிற்கு மன்றோ நெருப்பிடை மூழ்க நீர்‌ நேர்ந்த செயல்‌
நிலை நிற்கு மன்றோ நிமலன் தன்‌ பள்ளி இருந்த செயல்‌
நிலை நிற்கு மன்றோ நிலத்தின்‌ புகு செயல்‌ மாதருக்கே–96-

இராவணன்‌ உங்களைச்‌ சிறை வைத்த நீசச்‌ செயல்‌ உலக மக்கள்‌ உள்ளத்தில்‌ துன்பத்தை உண்டு பண்ணும்‌. தாங்கள்‌ நெருப்பில்‌ மூழ்குவதற்கு ஈடுபட்ட செயலும்‌, வான்மீகியின்‌ ஆசிரமத்தில்‌ நீங்கள்‌ பல காலம்‌ இருந்த செய்தியும்‌, இறுதியில்‌ பூமிக்குள்‌ புகுந்து மறைந்த செயலும்‌ உலகவர்‌ உள்ளத்தில்‌ என்றும்‌ நிலை நிற்பனவாம் —

மாதா நுமதே அழகின்‌ சிகரமே மற்றுமுண்டே
மாதா நுமதே அருளின்‌ வடிவம்‌ பிறிதிலதே
மாதா நுமதே பிறர் நலம்‌ பேணும்‌ சிறப்புடைமை
மாதா நுமதே நிலை பிரி தொண்டர்‌ அடிப்படுத்தே–97-

அன்னையீர்‌! அழகின்‌ உயர்ந்த நிலையும்‌ அருளின்‌ வடிவமும்‌, பிறர்‌ நன்மையே வேண்டிச்‌ செயற்படும்‌ மாட்சிமையும்‌ உடைய நீங்கள்‌ அடியார்‌ தொண்டினை மிகைப்படுத்தி எம்பெருமானுக்குப்‌ பரிந்துரை கூறி, அவர்களை ஆட்கொள்வதற்காகப்‌ பெருமானைப்‌ பிரியாது இருக்கின்றீர் —

அடியனைக்‌ கொண்டதே யாவும்‌ அடைந்தது போலுமானீர்‌
அடியனில்‌ கீழ்மையோன்‌ முன்பின்‌ படைப்பிலும் யாருமுண்டே
அடியர்பால்‌ காணீர்‌ குறையடி யேன்கேட்‌ டறிந்ததுண்டு
அடியனின் தாழ்வையும் கொண்ட நீர் ஆய்ந்திடின் உண்மை யன்றே –98-

மிகக் கீழனோகிய அடியேனை ஆட் கொண்ட திறத்தால்‌ தங்கள்‌ விருப்பமெல்லாம்‌ நிறைவேறியது போன்ற நிறை மகிழ்வைப்‌ பெற்றுள்ளீர்‌. முன்‌ ஊழிகளிலும்‌ இனி வரும்‌ ஊழிகளிலும்‌ நிகழ்ந்த, நிகழ இருக்கின்ற படைப்புகளில்‌ அடியேனிலும்‌ கீழானோர்‌ இருக்க மாட்டார்கள்‌. தாங்கள்‌ அடியார்களுடைய குறைகளைப்‌ பொருட்படுத்த மாட்டீர்‌ என்று கேட்டறிந்ததுண்டு. தங்கள்‌ உயர்வையும்‌ அடியேன்‌ தாழ்வையும்‌ ஆராய்ந்தால்‌ தாங்கள்‌ அடியேனை ஆட் கொண்டது மெய்யான செயலேயாகும் –

உண்மைப் பொருள் அலர்மேல் மங்கை சேர்ந்து இங்கு உளன் ஒருவன்
உண்மைப் பொருள் பொறைத் தாயினை ஒக்கலை யேந்து கேழல்
உண்மைப்‌ பொருள்ளேழ்‌ விடை செற்று வந்து கொள்‌ பின்னை கேள்வர்
உண்மைப் பொருள் மூன்றே ஓர்த்துப் பொதுவுறக் காண்ப தென்றே –99-

மெய்ப்பொருளாம்‌ பெருமான்‌ அலர்மேல்‌ மங்கையுடன்‌ சேர்ந்து வேங்கட மலையில்‌ உள்ளான்‌. பொறுமைக்கு இருப்பிடமாகிய பூமித் தாயை தன்‌ இடையில்‌ வைத்துக்‌ கொணர்ந்த மகா வராக மூர்த்தியும்‌, அசுரா உட்புகுந்த ஏழு காளைகளை அழித்துப்‌ பின்னையை மணந்த கண்ணனும்‌, வேங்கடவனும்‌ ஒரே உண்மைப்‌ பொருளின்‌ அவதாரங்களே என்பதனைக்‌ காணலாம்‌

என்றலர்‌ மேல்மங்கை நின் தாள்சார்‌ என்கண்‌ அருளுவதே?
என்றலர்‌ மேல்மங்கை மன் தாள்சார்‌ என்கண்‌ அருளுவதே?
என்றலர்‌ மேல்மங்கை தொண்டர் சார்‌ என்கண்‌ அருளுவதே?
என்றலர்‌ மேல்யங்கை போற்றும்‌ அருளென்கண்‌ பார்த்துலகே –100-

அலர்மேல்‌ மங்கைத்தாயே! என்னிடம்‌ உன்திருவுளச்‌ சார்பினை அருளுவது என்றோ? நீர்‌ எம்பெருமான்‌ திருவடிகளை அடியேன்‌ சாரும்‌ வாய்ப்பினை அருளுவது என்றோ? பிராட்டி பெருமாள்‌ என்ற இருவரையும்‌ சரணாகப்‌ பற்றிய தொண்டர்கள்‌ சார்பினை அடியேனுக்கு அருளுவது என்றோ? அடியேன்‌ மாட்டு அலர்மேல்‌ மங்கை பாலிக்கும்‌ அருளும்‌ எம்பெருமாள்‌ அடியேன் திறத்தில்‌ செய்யும்‌ அருளையும்‌ உலகவர் போற்று நாள்‌ என்று வருமோ?

அலர்மேல மங்கை நல்‌ தாய்திருத்‌ தாளன்ப ரும்பயனை
அலர் மேல மங்கையந்‌ தாதி தனையோதி ஆர்வமும
அலர்மேல மங்கை இணையடித்‌ தாமரை தம்மினெஞ்சம்‌
அலர்மே லமர்ந்துறை யன்னமாய்‌ நின்றன்பு பெற்றிடுமே –நூற்பயன்

நற்றாயாகிய அலர்மேல்‌ மங்கை திருவடிகளில்‌ அன்பு பெருகுதலாகிய அரிய பயனாய்‌, இந்த அலர்மேல்‌ மங்கையந்தாதியை ஆர்வத்தோடு ஒதுவதால்‌ நம்‌ நெஞ்சமானது, அப்பெருமாட்டியின்‌ திருவடித்‌ தாமரைகளில்‌ அன்னம்போல்‌ நீங்காதிருந்து தூய அன்பினைப்‌ பெற்றுச்‌ சிறந்து விளங்கும்-


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading