ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —–ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51
இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற –சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –
திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது–
—
மண் மாதர் -பூமா தேவி திருமுலைத்தடம் –-தென்னன் உயர் பொறுப்பும் தெய்வ வடமலையும் இத்யாதி காரார் வரை கொங்கை -இத்யாதி– இரண்டு திருமலையும் -இதன் மேல் நின்று கண்ணீரே நீராக அருவியாக பெருகுகிறதாம்-திருமால் கொடியான் என்று சொல்லி -தனக்கு மிதுனத்தில் கைங்கர்யம் கொடுக்காமல்-இந்த அருவி சப்தமே -என்று சமாதானம்-மூவரும் அத்தனை நெருக்கம் -இது போல் வராதே-மூன்று நிர்வாஹங்கள் இதற்கு-நஷ்டம் பராக் கடாக்ஷம் இல்லாத போது த்ரிபுவனங்களும் இருக்க மழைக்கண் நோக்கு -பிராட்டி கடாக்ஷம் பெற்று சத்தை பெற்றனவே–அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு -2-5–இதன் விவரணம்-அங்கு -உள்ளார் இடம் செய்த அன்பை ஆழ்வார் மேல் வைக்க –இது காறும் இல்லாமல் இருக்க இப்பொழுது சேர்ந்த பின்பே பூர்ணன் ஆனான்
கலந்த பின்பே அனைத்தும் –திவ்ய ஆபரணங்கள் -திவ்ய ஆயுதங்கள் –உள-ஏற்கனவே இருந்தும் இல்லாததும் சமம் முன்பு – -இப்பொழுது தான் உளவானவை ஆனதே-தோழி -கால மயக்கு துறை –
மழையே இல்லை –பூமாதேவி யுடைய கண்ண நீரே -என்று சொல்லி சமாதானம் படுத்த முயல்கிறாள் –
இப்படி இவருடைய ஆர்த்தியைக் கண்ட ஸூஹ்ருத் பூதர் அனுபவ யோக்ய தசையிலே அனுபவிக்கப் பெற்றிலோம் -ஆசந்ந ரானார் நித்ய அனுபவம் பண்ணப் பெறா நின்றார்கள்-நமக்கு அவனோடு உண்டான அசாதாரண சம்பந்தமும் அகிஞ்சித் கரமாயிற்றே -என்று இவர் ஈடுபடுகிறாராக நினைத்து
நிதர்சன முகத்தாலே ஈஸ்வரனுடைய ஸ்வா தந்தர்யத்தை ஸூசிப்பித்து ஆற்றின பிரகாரத்தை
காலம் கண்டு கலங்கின தலை மகள் ஆற்றாமையை தோழி காலம் மறைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு-அவதாரிகை-கலந்து பிரிந்த தலைமகன் கார் காலத்திலே வருகிறோம் என்று போனானாய் காலமும் வந்து வர்ஷிப்பதும் செய்யா நின்றது என்று தலைமகள் தளர தோழியானவள்
அக்காலம் அன்று காண் இது –பெரிய பிராட்டியார் ஸர்வேஸ்வரனையும் கொண்டு திருவனந்த ஆழ்வான் மேலே ஸம்ஸ்லேஷ அர்த்தமாக ப்ரவேசிக்க அத்தைக் கண்ட ஸ்ரீ பூமிப் பிராட்டியானவள்
இப்பரிமாற்றத்துக்கு நான் கூட்டு அன்றிக்கே ஒழிவதே -என்று அழுகிற கண்ணநீர் காண் இது
நீ நினைக்கிற வர்ஷம் அல்ல காண் இது -என்று இங்கனே காலத்தை மயக்கி தரிப்பிக்கிறாளாய் இருக்கிறது
அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர்வாய்
மழைக் கண் மடந்தை யரவணை ஏற மண் மாதர் விண் வாய்
அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே – 52–கால மயக்கு –
அந்தாமத்து அன்பால் அடியார்களோடு இறைவன்
வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் -சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே
வாய்ந்த வன்பை நாடோறும் வை––15—ஆடியாடி யிலே தாம் பட்ட இடர் எல்லாம் போம்படி ஆசைப் பட்டபடியே அடியார் குழாங்கள் உடன் கூடி வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு தம்மோட்டைக் கலவியாலே அவன் வடிவிலே பிறந்த புதுக் கணிப்பை மண்டி அனுபவித்துப்ரீதராய்ச் செல்லுகிற
அந்தாமத்து அன்பில் அர்த்தத்தை அந்தாமத்து அன்பாலே -அருளிச் செய்கிறார் –அந்தாமத்து அன்பு செய்யும் படியான ஆழ்வார் திருவடிகளிலே உன் தன் மொய் கழற்கு அன்பை முயல்கின்றேன் – என்கிறபடியே-மனசே ஸூசங்கதமான சங்கத்தை நித்யமாக நிஷிப்தம் ஆக்கு நிதியை அடியிலே இட்டு வைப்பாரைப் போலே அன்பை அடியிலே இட்டு வை-
அழைக்கும் கரும் கடல்–அபாம் அபி சுக்லம்-என்று ஜலத்துக்கு ஸ்வாபம் வெளுப்பே ஆகிலும் – நீர் செறிவாலே கறுத்து இருக்கும் இறே- கீழ் கறுத்து மேல் வெளுத்த திரைகளை உடைத்தாய் இருந்த போது – நீல ரத்னத்தாலே செய்ததொரு ஸ்தலத்திலே ஸ்படிகத்தாலே சோபன பரம்பரையாக (படிக்கட்டு)
படுத்தால் போல்-ஆயிற்று இருக்கிறது –சக்யம் அம்பர மாருஹ்ய மேக சோபான பந்க்திபி
குடஜ் அர்ஜுன மாலாபிர் அலங்கர்த்தும் திவாகர –-மால்யமான் என்னும் மலை பகுதியில் இருந்த போது பெருமாள் இளைய பெருமாள் இடம் அருளிய வார்த்தை-சக்யம் (கிஷ்கிந்தா)-இத்யாதி –மேகங்களான சோபன பங்க்திகளாலே ஆகாசத்திலே ஏறி –அக்காலத்திலே அலரக் கடவ- குடஜங்களையும் அர்ஜூனங்களையும் கொண்டு –நம் குருவான ஆதித்யனுடைய மத்யத்திலே-சதா த்யேயனாய் இருக்கிற சர்வேஸ்வரனை உபாசிக்கை சக்யமாய் இருந்தது – இதுக்கு குறை இத்தைனையும் இறே-நாம் பெரிய பெருமாளை சமாராதனம் பண்ணப் புக்கால் –சஹ பத்ன்யா -என்றபடி –கூட நின்று எடுத்து-கை நீட்டும் மைதிலி உண்டாக பெறாத இது ஒன்றும் இறே குறை-வெண் திரைக்கே கொண்டு போய் –அத் திரைகளால் அலைக்கிற இதிலே நீர் நடுக்க – நடுங்க கொண்டு போய்–அலர்வாய் – அலர் -தாமரை-தாமரைப் பூவைப் போலே இருந்துள்ள திருப் பவளத்தை உடையவள்-என்னுதல் –அலரிலே உண்டானாவள் –வாய் -இடம்-தாமரையை தனக்கு உத்பத்தி ஸ்தானமாய் உடையவள் என்னுதல்–மழைக் கண் மடந்தை –போக ஸ்தானத்தையும் பார்த்து இவளையும் பார்த்தால்-பின்னை அவள் பின்னே போம்படியாய் –ஒரு பாட்டம் மழை விழுந்தால் போலே ஆயிற்று –குளிர நோக்கினால் நோக்கி இருப்பது –பின்னை அவள் கருத்தை பின் செல்ல வேண்டும்படியாய் இற்று இருப்பது –அரவணை ஏற –திரு அனந்தாழ்வான் மேலே சம்ஸ்லேஷ அர்த்தமாக சென்று ஏற –மண் மாதர்- பூமிப் பிராட்டி–விண் வாய் அழைத்து –விண்ணாகிற வாயாலே அழைத்து -என்னுதல் –விண்ணிலே (வாய் -இடம் )நின்று அழைத்து என்னுதல் –திரைகள் மேல் நோக்கிக் கொந்தளித்து -ஆகாசத்திலே சப்தித்த போது-பூமியானது அழைத்தால் போலே ஆயிற்று இருக்கிறது –புலம்பி பல பாசுரங்களைச் சொல்லி புலம்பி–முலை மலை மேல் நின்றும் –முலைகளாகிற மலைகளில் நின்றும்-ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு பூமி விபூதி ஆகையாலே -மலைகளை முலைகளாக சொல்லலாம் இறே–காரார் வரை கொங்கை -இத்யாதி--ஆறுகளாய் –வர்ஷித்தவாறே – மலைகளில் நின்றும் அருவிகள் விழுந்து நிரம்பி போகா நிற்கும் இறே –மழைக் கண்ண நீர் – மழை போல் இருந்துள்ள கண்ணீர் – மற்றை போது மழையான கண்ண நீர் தானாய் இருக்கும் இறே–திருமால் கொடியேன் என்று –-இருவருமான சேர்த்தி பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –அது நமக்கு இழவுக்கு உடல் ஆவதே –நீர்மைக்கு உடலானது -க்ரௌர்யத்துக்கு உடலாய் தலைக் கட்டுகிறதே –என்று வார்கின்றதே –அவனுடைய கொடுமையைச் சொல்லி அழுகிறவளுடைய கண்ணீர் ப்ரவஹிக்கிற படி காண் –பிராட்டியும் சர்வேஸ்வரனும் சம்ஸ்லேஷத்தில் ஆரம்பிக்க – ஸ்ரீ பூமிப் பிராட்டி அது கண்டு பொறுக்க மாட்டாமை-அழுகிறாள் காண் என்று- அவன் குறித்து போன கார் காலம் வந்து வர்ஷிக்க
அத்தை மயக்குகிறாள் தோழி
அவளோடு அவன் கலந்த போது அவயவியோடு கலந்தால் போலே இவர்கள் இருக்கவும் –
இவர்களோடு கலந்த போது தன்னுடைய ஸ்தன பாஹூ திருஷ்டிகள் உடன் கலந்தால் போலே அவள் நினைத்து இருக்கவும் – இப்படி இவர்களுடைய ஸ்வரூபமாய் அபரிச்சின்ன விஷயம் ஆகையாலே –
எல்லாரும் கூடி அனுபவிக்க வேண்டி இருக்க -இருவருக்கும் பாத்தம் போராதே ஷூத்தர விஷயங்களில் உண்டான சாபத்ன்யம் இவ்விஷயத்தில் உண்டாக சொல்லுமது உப பன்னம் ஆம் படி எங்கனே என்ன –இச் சோத்யத்துக்கு முன்புள்ள முதலிகள்- தானும் அவளுமான போகத்துக்கு நாம் ஸ்ரக் சந்தனாதிகளோ பாதியாய் இருக்க என்னை அநாதரித்து போவதே என்று இன்னாதாய் அழுகிறாள் -என்று பரிஹரித்தார்கள் –இத்தை ஆளவந்தார் கேட்டருளி –-வடிவிணை இல்லா மலர் மகளை இந்நீர் நடுங்க நடுங்கும்படி கடலிலே கொடு போவதே – படுக்கையாக நான் கிடக்கச் செய்தே -என்று
ஸ்ரீ பூமிப் பிராட்டி அழுகிறாள் காண் -என்று அருளிச் செய்தார்–இத்தை ஸ்ரீ பட்டர் -கேட்டருளி –
இது எல்லாம் வேண்டாம் காண்- அனுபபன்னமாய் இருப்பதோர் அர்த்தத்தைச் சொல்லவே -இது எங்கனே கூடும்படி என்று தலைமகள் நெஞ்சிலே படும் — அவள் விசாரித்து நிர்ணயிக்கும் காட்டில் அவன் வந்து கொடு நிற்கும் -என்னும் விஸ்ரம்பத்தாலே சொன்னார்களாக அமையும் காண் -என்று அருளி செய்தார்-–ஒரு ஆச்சார்யர் நம்பிள்ளை இடத்தில் குறைய நினைத்து தாமே திரு விருத்தத்தைப் பார்த்துக் கொண்டு போக இப் பாட்டு அளவாக ஒரு வகையாக நிர்வஹித்து இது தெரியாமையாலே ஒருத்தரும் அறியாதபடி அர்த்த ராத்திரியிலே வந்து பிள்ளையை அழைக்க இப் பாட்டினுடையவும் இவருடையவும் ஸ்வ பாவம் அறியுமவர் ஆகையால் அழைக்கும் கருங்கடலோ என்றாராம் என்று ஆத்தான் அருளிச் செய்வர்–
கால மயக்கு துறை –7-/-18-/52-/-68-பாட்டுக்களிலும் இதே துறை –-ஆற்றாமை மிக்கு -விரக காலம் நீடிப்பதால் மீண்டும் மீண்டும் இதே துறை வரும்-கடல் தன் மகளான ஸ்ரீ தேவியை இனிய குரலால் அழைத்து அலைகள் ஆகிற கையால் நீட்டி அவன் இடம் சேர்க்க-பூ தேவி கொங்கைகள் மலைகள் மேல் ஆறாக பெருக- காரார் வரைக் கொங்கை –திரு மடல்–திருமால் கொடியேன் என்று வார்கின்றதே -திருமகள் மேல் காதல் பித்து –பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு – பல நாயகிகள் உடையவனும் இது இயல்பு காண் –பூ தேவி போலே பராங்குச நாயகி உன்னையும் உபேக்ஷித்தான் -என்று சொல்லி
நாயகி ஆராயாது தொடங்கி ஆற்றாமை குறையுமே-திருப் பாற் கடல் -கருங்கடல் என்னலாமோ என்னில் – நீல ரத்னத்தை பாலில் இட்டால் அப்பால் முழுவதும் மணி நிறம் ஆகுமே –
பிராணவாகார விமானம் நிறம் மாறியது போலே -பெரிய பெருமாள் நிழலீட்டாலே கருங்கடல்-
பெரிய கடல் என்றுமாம் -கருமை -பெருமை –
அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர்வாய்-மழைக் கண் மடந்தை யரவணை ஏற -பிறந்த அகவாசி தோன்ற ஆதரித்து அழைப்பாரைப் போலே அழைப்பதாய் தன்னுள் அகவாயில் கண் வளருகிற ஸர்வேஸ்வரன் திருமேனியின் நிழலீட்டாலே ஸ்யாமளமான கடலானது தன்னுடைய வெளுத்த திரக் கைகளாலே எடுத்துக் கொண்டு போகப் போய் தாமரைப்பூ இடத்திலே இருக்கிற
மழை போலே அத்யுதாரமான கண்ணை யுடையளாய் மடப்பம் முதலான ஸ்த்ரீத்வ குணத்தாலே பூர்ணையாய் இருக்கிற பெரிய பிராட்டியார் திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே ஏற–குளிர்ந்த கண் -என்றுமாம்-மண் மாதர்-பூமியாகிய பிராட்டி யானவள்–விண் வாய் அழைத்து புலம்பி-தானும் கிட்டு அனுபவிக்கப் பெறாத இழவாலே ஆகாசத்திலே மேக த்வனி முகத்தால் புலம்பி அழைத்து–முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்–பூமிக்கு முலையாய் இருக்கிற மலை மேல் நின்றும் ஆறுகளாகிற பிரவாகத்தை யுடைத்ததாய்க் கொண்டு–மழைக் கண்ண நீர்-வர்ஷமான கண்ண நீரானது–திருமால் கொடியேன் என்று வார்கின்றதே–பெரிய பிராட்டியாருக்குப் பிச்சானாவான் கொடியனாய் இருந்தான் என்று வடியா நின்றது என்று உத் ப்ரேக்ஷையாலே காலத்தை மயக்கி உரைத்தாளாயிற்று –இத்தால்-இவருடைய ஆர்த்தியைக் கண்ட ஸூஹ்ருதுக்கள் நித்ய அநபாயினி யான பிராட்டியாரோடு ஒத்த போகத்தை யுடைய ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு க்ஷண விஸ்லேஷத்தில் அதிசய ஆர்த்தி பிறக்கும்படி அன்றோ(இது நாலாவது நிர்வாகம் –கீழ் பெரியவாச்சான் பிள்ளை நிர்வாகத்தில் மூன்று பார்த்தோமே )
அத் தலையில் வை லக்ஷண்யமும் ஸ்வா தந்தர்யமும் இருக்கும்படி நீர் அவன் செய்தது கண்டு ஆறி இருக்கை காணும் பிராப்தம் என்று இவரை ஆஸ்வஸிப்பித்ததாயிற்று—பூமி பக்கல் யுண்டான இந்த உத் ப்ரேக்ஷை ஈஸ்வரனுடைய ஸ்வா தந்தர்யத்துக்கு ஸூசகம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஈடு வியாக்யானம்-அழைக்கும் போகத்துக்கு ஏகாந்தமான ஸ்தலம் இங்கே யுண்டாய் இருக்க போக்தாக்களாய் இருக்கிற நீங்கள் வாரிகளோ என்று அழைக்கிறாப் போலே யாயிற்று
கடல் கோஷிக்கிற படி–கருங்கடல் வெண் திரைக்கே-நீர்ச்சேர்த்தியாலே கறுத்து இருக்கும் இறே
கீழ் கறுத்து அவகாசம் யுண்டாய் மேல் திரைந்து காட்டின பொது வெளுத்து இருக்கும் இறே
அபாமபி சுக்லம் -என்று ஜலத்துக்கு ஸ்வ பாவம் வெளுப்பே யாகிலும் அந்நீர்ச் சேர்த்தியாலே கறுத்து இருக்கும் இறே கீழே கறுத்து மேலே–
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி–மண் மாதர் விண் வாய் அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய் மழைக் கண்ண நீர் திருமால் கொடியேன் என்று வார்கின்றதே –=வாய் -இடம்-ஸ்வாவதாரத்தில் அவன் பிரிவைப் பொறாத மண் மகளுக்காக இவ்வாகாசத்தை தனக்கு இடமாகக் கொண்ட மேகங்கள் வேங்கடவனைத் தன் முழக்கத்தால் அழைத்ததாயிற்று-அதுக்கு அவன் வாராமையாலே அவனுக்கு இருப்பிடமாகிற முலையில் நின்றும் அவன் கேட்கத் தன் சீர் முழக்கத்தால்
தான் அவன் கொடுமைகளைப் புலம்பிக் கொண்டு மழையாகிற தன் கண்ணீர்கள் ஆறுகளாய்ப் பெருக அழா நின்றதே-மழை -மேகம்-வார்கின்றதே -பெருகா நின்றதே –
ஸ்வாபதேசம் – எம்பெருமானுடைய ஸ்வாதந்தர்யம் -காட்டுமே-இத்தால் – நாமும் தேவிமார் போலே அனுபவிக்கப் படுபவர் –-கால விளம்பத்துக்கு ஆறி இருக்கவே வேண்டும் -என்றவாறு –
ஸ்வாபதேசம்-பகவத் லாபத்தால் அல்லது கால ஷேபம் பண்ண இவர்க்கு அரிதாகையாலே பார்ஸ்த்வஸ்தர் அநுப பன்னங்களைச் சொல்லியாகிலும் ஆஸ்வசிப்பிக்க வேண்டும்படியான தசை பிறந்தபடியைச் சொல்லுகிறது –
தாத்பர்யம்--வர்ஷா காலத்தில் வர்ஷம் குறித்துப் போன நாயகன் அக் காலம் வந்ததும் வருவதாகச் சொல்லிப் போக வர்ஷமும் வர அவன் வரவில்லை -என்று ஆர்த்தி விஞ்சி நாயகி இருக்க
தோழியானவள் இது வர்ஷா காலம் அல்ல வந்தால் அவனும் வந்து இருப்பான் என்று சொல்ல
மழை கொட்டுகிறதே-ஆறுகளும் பெருகா நின்றனவே என்ன
நீல ரத்னம் -படிக்கட்டுக்களில் போவாரைப் போல பெரிய பிராட்டியார் தனது நாயகன் உடன் சென்று திருவனந்த ஆழ்வான் மேல் அவன் கருத்தின் வழி நடப்பவன் அவன்-கச்ச ராம மயா சஹா சீதை சொன்னாள்-அவள் கூட்டிப் போகப் போனான் பெருமாள் அன்றோ-மழைக் கண் மடந்தை கண் வழி அன்றோ அவனும் செல்பவன்-மிதுனமாய் இருப்பது அவனது தயா வர்த்தக ஹேது என்று இருக்க
விபரீதமாய் முன்பு உள்ள தயையும் போய் நிர்த் தயானாய் போனானே என்று அழுகிறாள்
கண்ண நீர்கள் ஆறு போல் பெருகா நின்றது நீ வர்ஷா காலம் என்று பிரமிக்க வேண்டா -என்று
காலத்தை மயக்கி சமாதானம் படுத்துகிறாள்
2-5-அந்தாமத்து அன்பு -பிரவேசம் –
கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே ‘கஜேந்திரன் என்னும் யானையானது, கரையில் இழுக்கிறது;
முதலையானது, தண்ணீருக்குள் இழுக்கிறது,’என்றதனைப் போன்றது ஒன்றாம்,
கீழ் ‘ஆடிஆடி’ என்ற திருவாய்மொழியில் ஆழ்வார்க்குப் பிறந்த வ்யஸனம் -துக்கம்;
அது எல்லாம் ஆறும்படியாக,
அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் ‘சேனை முதலியாரால் கொடுக்கப்பட்ட கைலாகை ஏற்றுக் கொள்ளாமலும்’
என இவ்வாறாகக் கூறியுள்ளபடியே,
பெரிய த்வரையோடே – மிகுந்த விரைவோடே ஆயுதங்களையும் ஆபரணங்களையும் -அக்ரமமாக -முறைபிறழத் தரித்துக் கொண்டு,
மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து உள்ளே போய்ப் புக்கு,
யானையை ஒரு கையாலும் முதலையை ஒரு கையாலும் அணைத்து எடுத்துக்கொண்டு கரையிலே ஏறி,
க்ராஹம் சக்ரேனை மாதவ ‘திருவாழியாலே முதலையைப் பிளந்தார்’ என்கிறபடியே,
பிரஜையின் – குழந்தையின் வாயில் முலையைக் கொடுத்துக் கிரந்தியைச் சிகிச்சை செய்வது போன்று,
பெரிய பிராட்டியாரும் தானுமாக, இரண்டுக்கும் நலிவு வாராமல் திரு ஆழியாலே விடுவித்துச் சாத்தியருளின
திருப்பரியட்டத்தின் தலையைச் சுருட்டித் தன் வாயிலே வைத்து
அவ்யானையின் புண் வாயை வேதுகொண்டு திருக்கையாலே குளிரத் தீண்டிக்கொண்டு நின்றாற்போலே,
இவ்வாழ்வாரும் ’வலங்கொள் புள் உயர்த்தாய்’என்று கூப்பிட்ட-ஆர்த்த நாதம் – துக்க ஒலியானது செவிப்பட,
‘அழகிதாக நாம் உலகத்தைப் பாதுகாத்தோம்! நாம் ஆரானோம்!’ என்று,
பிற்பட்டதனால் உண்டாகும் -லஜ்ஜா பயங்களினால் -நாணத்தாலும் பயத்தாலும்-விஹ்வலனாய் கலங்கினவனாய்,
தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்கள் ஒப்பனை, திவ்ய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தி, இவை எல்லாவற்றோடும்
வந்து ஸம்ஸ்லேஷித்து – கலந்து- அத்தாலே ஹ்ருஷ்டானாய் -மகிழ்ந்தவனாய்,
தான் -க்ருதக்ருத்யனாய் -செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்து முடித்தவனாய்
இருக்கிற இருப்பை அனுபவித்து, -அவ்வனுபவ ஜெனித ஹர்ஷ ப்ரகரஷத்தாலே –
அவ்வனுபவத்தால் உண்டான மகிழ்ச்சியின் மிகுதியால் தாம் பெற்ற பேற்றைப் பேசி அனுபவிக்கிறார்.
அஞ்சாம் திருவாய் மொழியிலே – இப்படி இவருடைய ஆர்த்தியைக் கண்டு த்வரிதனாய் ஸம்ஸலேஷித்த சர்வேஸ்வரனுக்கு ப்ரீதியாலே வந்த ஸுந்தர்யாதிசயத்தை
அருளிச் செய்கிறதாக -பிரதமத்திலே –
-1-சங்க்ரஹேண-பூஷண அவயவ -ஆயுத சோபா விசிஷ்டமான வடிவு அழகையும் –2-அத்தோடு கூடின விபூதி உன்மேஷத்தையும்
-3-சம்ச்லேஷ காரிதமான ரக்ஷகத்வ உன்மேஷத்தையும் –4-ஸ்திர உஜ்ஜ்வல்யத்தையும் –
-5-உபமான ராஹித்யத்தையும் –6-அபர்யந்த பூஷணாதி யோகத்தையும் –
-7- தர்ச நீய சேஷ்டிதத்வத்தையும் —-8-சம்ச்லேஷ வைலக்ஷண்யத்தினுடைய வாசா மகோசாரதையையும்–
–9-சொல்லுகைக்கு அதிகாரிகள் இல்லை என்னும் இடத்தையும் -10-சொல்லுகை அரிது என்னும் இடத்தையும் –
அருளிச் செய்து -தம்முடைய சம்ச்லேஷ ப்ரீதிகாரித ஸுந்தர்ய பாரம்யத்தை அருளிச் செய்கிறார் –
முதற்பாட்டில், இவர் ஆசைப்பட்ட படியே அடியார்கள் குழாங்களோடே வந்து கலந்தபடி சொன்னார்;
இரண்டாம் பாட்டில், தம்மோடு கலந்த பின்பு திருமேனியும் திவ்விய அவயவங்களும் திவ்விய ஆயுதங்களும் நிறம் பெற்றன என்றார்;
மூன்றாம் பாட்டில், தம்மோடே கலந்து தன் சத்தை பெறுதல். இன்றேல், இல்லையாம் படியாய் வந்து கலந்தான் என்றார்;
நான்காம் பாட்டில், மேல் உவமையாகச் சொன்ன பொருள்கள் நேர் நில்லாமையாலே, அவற்றைச் சிக்ஷித்துச் சேர்த்துக் கூறி அனுபவித்தார்;
ஐந்தாம் பாட்டில், அவைதாமும் உவமையாக நேர் நில்லாமையாலே, அவற்றைக் கழித்து உபமேயந்தன்னையே அனுபவித்தார்.
ஆறாம் பாட்டில், ‘இப்படி எல்லாரைக்காட்டிலும் வேறுபட்ட தன்மையினையுடைய இவன், முத்தன் தன்னை
அனுபவிக்குமாறு போன்று, தான் என்னை அனுபவித்தான்’ என்றார்;
ஏழாம் பாட்டில், தமக்காக இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தான் என்றார்;
எட்டாம் பாட்டில், ‘அவனை என்னால் பேச முடியாது’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், துணை தேடிக் கொண்டு மீண்டும் பேசுவதற்குத் தொடங்கினார்;
‘பத்தாம் பாட்டில்’, ‘இப்படிகளால் என்னோடே கலந்து இம்மகாகுண ஒன்றையும் பேச என்றால் சால மிறுக்குடைத்து’ என்றார்;
நிகமத்தில் , இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.
அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-
என் ஆவி –அவன் மேல் விழத் தாம் இறாய்த்தமை தோன்றுகிறது.-இவர், முன் நிலையினை நினைந்து இறாய்நின்றார்;அதுவே காரணமாக அவன் மேல் விழாநின்றான்.
கமர் பிளந்து இடத்திலே நீர் பாய்ச்சுவாரைப் போன்று. ‘உள்உள் ஆவி உலர்ந்து உலர்ந்து’ என்கிற ஆவியிலே வந்து சேர்கின்றான் ஆதலின், ‘என் ஆவி’ என்கிறார்.
‘விடாயர் மடுவிலே சேருமாறு போன்று வந்து சேர்கின்றான்’ என்பார், ‘சேர்’ என்கிறார்.
‘இப்படி மேல் விழுகைக்குக் காரணம் என்?’ என்னில், ‘அம்மான் ஆகையாலே’ இவரைப் பெற்ற பின்னரே அவன் சர்வேஸ்வரனானான் என்பார், ‘அம் தாமத்து அன்பு செய்து
என் ஆவி சேர் அம்மான்’ என்கிறார்
அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள – இதற்கு, ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைபட்டபடியே, நித்திய சூரிகளோடே வந்து கலந்தான்,’ என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் அருளிச் செய்வர். ‘
ஆயின், அவர்களை ‘ஆழி நூல் ஆரம்’ என்று சொல்லுவது என்?’ என்னில், சின்மயராய் -ஞானவான்களாய் இருக்கச் செய்தே, பாரதந்திரிய சித்திக்காகத் தங்களை இங்ஙனம் அமைத்துக் கொள்கிறார்கள் இத்தனையே.
இனி, இதற்கு எம்பெருமானார்,-செந்தாமரைத் தடம் கண்’ என்று சொற்களைக் கூட்டியும் பொருள்-இவரோடு கலப்பதற்கு முன்பு அவனைப் போன்றே இவையும்-அனுஜ்ஜ்வலமாய் – ஒளி இழந்தவையாய்ச்–அசத்- சத்தை அற்ற பொருளுக்குச் சமமாய், இவரோடு கலந்த பின்பு உஜ்ஜவலமாய் ஒளிப்பொருளாகிச் சத்தை பெற்ற படையைச் சொல்லுகிறது’ என்று பொருள் அருளிச் செய்வர்.
‘ஆயின், அவன் ஒளியிழந்தால் இவையும் ஒளியிழக்க வேண்டுமோ?’ எனின்,
கற்பகத் தரு வாடினால் அதில் பூவும் தளிரும் வாடுவன அன்றோ?
———-
திருவுடம்பு வான்சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2-
தம்மோடே கலந்த பின்பு அவனுக்குப் பிறந்த புகரைச் சொல்லி, ‘தன் உடம்பைப் பற்றிப் பிரமன் சிவன் முதலியோர்கள் சத்தையாம்படி இருக்கின்றவன் தான், என் உடம்பைப் பற்றித் தன் சத்தையாம்படி இராநின்றான்’ என்கிறார்
’ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை; விபூதி இல்லை’ என்கிறவர்கள் முன்பே, ஆப்த தமரான இவர்,‘திரு உடம்பு வான் சுடர்’ என்னப்பெறுவதே! ‘ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை, குணம் இல்லை’ என்கிறவர்கள் செய்து வைக்க மாட்டாத பாவம் இல்லை; அவர்களைச் சார்ந்து அதனைக் கேட்க இராதபடி பெருமாள் நமக்குச் செய்த உபகாரம் என்?’ என்று அருளிச் செய்வர் நஞ்சீயர்.
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அன்றே திருமேனியில் துவக்கு உண்கிறார்?தான் மதித்தார்க்குக் கொடுப்பதும் திருமேனியை ஆதலானும் ‘திருஉடம்பு’ என்கிறார்.-வான் சுடர் –முதலிலே தேஜோ ரூபமான திருமேனி; மிகவும் ஒளி பெற்றது இவருடைய கலவியாலே-.இப்படித் திருமேனி பேரொளிப் பிழம்பாய் இருப்பத்தற்குக் காரணம் பஞ்ச சக்தி மயமாக இருத்தல்’ என்பது நம்பிள்ளையின் திருவுள்ளம்.
பஞ்ச சக்திகளாவன : – பரமேஷ்டி, புமான், விஸ்வம், நிவிருத்தி, சர்வம் என்பன.
ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கு – என்னோடே வந்து கலக்கிற இடத்தில், நீங்குமிடம் ஒன்றும் இன்றியே வந்து கலந்தான். அநந்ய பரையான ‘தனக்கே உரியவரான பெரிய பிராட்டியாரைப் போன்று, அந்நிய பரரான -பிறர்க்கு உரியவர்களான பிரமனுக்கும் சிவனுக்கும் திருமேனியில் இடங்கொடுத்து வைப்பதே!’ என்று இந்தச் சீல குணத்தை அனுசந்தித்து, வித்தராய் இருந்தார் முன்பு; இப்போது தமக்கு உடம்பு கொடுத்தபடி கண்டவாறே ‘அது பரத்துவம்’ என்று தோற்றி, ‘ இது என்ன சீலத்தின் மிகுதி! ஓ’ என்பார் ‘ஓ’ என்கிறார்.
———-
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3-
ஸ்வ வ்யதிரிக்த- தன்னின் வேறுபட்ட -ஸமஸ்த வஸ்துக்களும் -எல்லாப் பொருள்களும் தன்னைப் பற்றி உளவாம்படி இருக்கிற சர்வேஸ்வரன், தான் என்னைப்பற்றி உளனாய் என்னோடே வந்து கலந்தான்’-உலகத்துப் பொருள்கள், இவனைப் பற்றாத போது சத்தை இன்றியே இருக்கிறது, ஸ்வரூபத்தாலே; இவன், ஆழ்வாரைக் கலவாத போது சத்தை இன்றியே இருப்பது,பிரணயித்வ குணத்தால் -காதலாகிய பண்பாலே–என்னுள் கலந்தவன் – அகஸ்தியப் பிராதா ‘அகஸ்தியர்க்கு உடன்பிறந்தவன்’ என்னுமாறு போன்று, நிரூபகம் இருக்கிறபடி.-‘நாராயணன், வாஸூ தேவன்’ என்பன போன்று, ‘என்னுள் கலந்தவன்’ என்று காணும் அவனுக்குத் திருநாமம்.வாட்டம்இல் புகழ் வாமனன்’ இவரோடு கலந்த பின்பு வளர்ந்தபடியும், புகர் பெற்றபடியும், தரையிலே கால் பாவித் தரித்தபடியும், திண்மையை உடையனானபடியும் நோக்கி, ‘மின்னும் சுடர்மலை’ என்கிறார்.
—————-
எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4-
நீர் ஒருகால் கூறியதை ஒன்பதில் கால் கூறி இங்ஙனே கிடந்து படுகிறது என்?’ என்ன,
‘நான் அது தவிர்கிறேன்; நீங்கள் அவ் விஷயத்தை ஒருகால் இருந்தபடியே எப்பொழுதும் இருக்கும்படி செய்ய –வல்லிகோளே- வல்லீர்களோ?’ என்கிறார்.மரதகம் குன்றம் ஒக்கும் –
கீழ் –எப்பொருளும் தனாய் -ஜெகதாகாரனாய் , உலகமே உருவமாய் நிற்கும் நிலை சொல்லிற்று; இங்கு, அசாதாரண விக்கிஹம் தன்னையே சொல்லுகிறது.
கீழ் ‘மின்னும் சுடர்’ என்று தம்முடைய கலவியால் வந்த புகரைச் சொல்லிற்று;-அப்புகருக்கு இருப்பிடமான-ஆஸ்ரயமான அசாதாரண விக்கிரஹத்தைச் சொல்லுகிறது இங்கு.
—————
ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5–
ஆராவமுதமாய்-உபமேயத்தையே சொல்லுகிறார்.-அசித்தைக்காட்டிலும் தம்மைக் குறைய நினைத்தபடியாலே ‘அல் ஆவி’ என்கிறார்.-என்னை ஆரா அமுதாக நினைத்து, என் அளவாகத் தன்னை நினைத்து அன்றோ கலந்தது-காரார் கருமுகில் போல் – என்னுடைய கலவி ‘பெறாப்பேறு’ என்னும் இடம் தன் வடிவிலே தோன்ற இரா நின்றான்.-பின்னும் இழை பலவே – அனுபவித்துப் போம் இத்தனை ஒழிய, என்னாற்சொல்லித் தலைக் கட்டப் போமோ? முடியாது,’ என்றபடி.
————-
பலபலவே யாபரண பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6-
என்னுடனே கலந்து ஆற்றானாய்ப்-அநேக சரீர பரிக்ரஹம் பண்ணி -பல சரீரங்களை மேற்கொண்டு என்ன அனுபவியா நின்றான்’ -முத்தன் தன்னை யனுபவிக்கும்போது படுமாறு போன்று, தான் என்னை அனுபவிக்கப் பல வடிவு கொள்ளா நின்றான் -ஆக, இவற்றால், தன்னின் வேறு பட்டவற்றை எல்லாம் விஷயமாக உடையனாய், அவற்றை எல்லாம் அறியவும் வல்லவனாய்,-அவற்றை எல்லாம் அனுபவித்தால் வரும் ஏற்றத்தையும் உடையவனாய் இருக்கும் இருப்பைத் தெரிவித்தபடி.-சர்வ இந்திரியங்களுக்கும் போக்யமாய் இருக்கும் பரிகரங்களை உடையவன் என்னும் இடத்துக்கு உப லக்ஷணம் -பாம்பணை மேலாற்கேயோ-என்றது –
————
பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7—
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும், ஷீராப்தியில் -திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருளி, இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்தன எல்லாம் எனக்காக அன்றோ?’ -பொன் முடி அம் போர் ஏறு பள்ளி அமர்ந்ததுவும், ஏறு செற்றதுவும், மராமரம் எய்ததுவும் ஆன இவையெல்லாம், எனக்காகவே கிடீர்-தன்னுடைய சர்வ சேஷ்டிதங்களையும் எனக்கே போக்யமாகச் செய்து அருளினான் -என்கிறார் –
———-
பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8-
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும் என் தண்மையைப் பாராது,
என்னோடே வந்து கலந்த இம்மஹா குணத்தை என்னால் பேசி முடியாது,’ என்கிறார்.
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை – அவ்விஞ்ஞாத -‘அறியாதவராக இருக்கின்றார்’ என்கிறபடியே, என் தண்மை பாராதே கண்ணைச் செம்பளித்து வந்து கலந்தான்.-இறைவன் பக்கல் நன்மைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருப்பன போன்று,-இவர் பக்கல் தீமைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருக்கின்றபடி.
இனி, இதற்கு,’ ‘ஆடி ஆடி’ என்ற திருப்பதிகத்தில் -விஸ்லேஷ வியசனத்தால் -‘பிரிவுத்துன்பத்தாலே நான் முடியப் புக,-அது காணமாட்டாது என்னோடே வந்து கலந்து
ஒரு குணத்தையும் சொல்லப்புகில், ஆனந்த குணம் ஒன்றையும் சொல்லப்புக்க வேதம் பட்டது படும் இத்தனை.
இனி, இத்தொடர்மொழிக்கு, ‘அவன் என்னை அனுபவிப்பிக்க, அத்தால் எனக்குப் பிறந்த ரசம் அனுபவித்துவிடும் அத்தனை அல்லாது, பாசுரமிட்டுச் சொல்லி முடியாது’ என்றுமாம்.சொல்லுவது என் சொல்லீரே – விஷயாந்தர அனுபவத்துக்கு பாசுரம் இட்டுச் சொல்லுகிற நீங்கள் இதுக்கு ஏதேனும் சொல்ல வல்லீர்களோ-
———–
சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரையோத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –2-5-9-
பாசுரம் இல்லை’ என்னா, கைவாங்கமாட்டாரே; சம்சாரிகளைப் பார்த்து,
‘என் நாயனான சர்வேஸ்வரனை நீங்கள் அனைவரும் கூடியாகிலும் சொல்ல வல்லீர்களோ?’ என்கிறார்.-திவ்யாத்தம ஸ்வரூப குணங்களுக்கு எல்லை காணிலும் திவ்ய மங்கள விக்கிரகங்களின் குணங்களுக்கு எல்லை காண முடியாமல் இருத்தலைத் தெரிவித்தபடி.-உபமான ரஹிதன் –
————-
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10-
பட்டர் இவ்விடத்தில்–
நைநம் வாசா ஸ்த்ரீயம் ப்ரூவன் நைநமஸ்த்ரீ புமான் ப்ரூவன் புமாம்சம் ந ப்ரூவன் நைனம் வதன் வததி கம்சன் அ இதி ப்ரஹ்ம
(,‘பரமாத்துமாவைப் பற்றிப் பேசும் ஒருவன் தனது வாக்கால் இப்பரம்பொருளைப் பெண் என்றும் சொல்லுகிறான் இல்லை;
ஆண் என்றும் சொல்லுகிறான் இல்லை; இவ்விருபாலுக்கும் வேறான அலியாகவும் சொல்லுகிறான் இல்லை.
அத்தகைய பரம்பொருள் அகாரவாச்சியனாய் இருக்கின்றான்’; )
ச வை ந தேவா ஸூரமர்த்ய திர்யங் ந ஸ்த்ரீ ந ஷண்டோ ந புமான் ந ஐந்து நாயங்குண கர்ம ந சன் நிஷேத சேஷோ ஜயதாத சேஷ
(‘அப் பரம்பொருள், தேவன் அசுரன் மனிதன் விலங்கு இவைகளாய் இல்லை; பெண்ணாகவும் இல்லை; அலியாகவும் இல்லை;
ஆணாகவும் இல்லை; வேறுபட்ட மற்றைப் பொருள்களாகவும் இல்லை; குணமாக இல்லை;
கிரியையாக இல்லை; சேதனனுமாக இல்லை; அசேதனனுமாக இல்லை,’ )என்னும்
இவ்வேத புராண வாக்கியங்களை மேற்கோள் காட்டி அருளிச் செய்தவாறே,
அருகு இருந்து கேட்டிருந்த ஒரு தமிழ்ப்புலவர், ‘ஸ்வாமி, நாட்டில் காணப்படுகின்ற மூன்றின்படியும் அல்லனாகில்,
சொல்லப்படுகின்ற பொருள் சூன்யமோ பின்னை?’ என்று கேட்க,
பட்டர், ‘பிள்ளை இயல் அறிவுக்குப் போந்திருந்தது இல்லையே!
‘ஆணல்லன் பெண்ணல்லள் அலியும் அல்லது’ என்றார் இலரே? ‘அல்லன், அல்லன், அல்லன்’ என்கிறார். ஆதலின்
‘புருஷோத்தமன்’ என்பதனை அச்சொற்கள் தாமே தோற்றுவிக்கின்றனவே?’ என்று அருளிச்செய்தார்.
‘ஆணல்லன் பெண்ணல்லன்’ என்கின்ற இத்தால் சஜாதீய விஜாதீய நிஷேதம் செய்தபடி
ஏகப் பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை -நீ எங்கட்குப் புத்திரனாகப் பிறக்க வேண்டும்’ என்ற சிலர் இரந்தால், அப்படியே வந்து பிறப்பான்-அன்போடு தன்னைப் பேணி மறைக்க வேண்டும்படி வந்து அவதரிப்பான்’ -இந்த இந்த நிலைகளை எனக்கு அறிவித்த இறைவன் படிகளைப் பேச என்றால் சால மிறுக்குடைத்து.
————
கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11-
பேச ஒண்ணாது ஒழிந்தது பரத்துவத்தை அன்று; குடக்கூத்து ஆடிய செயல் ஒன்றுமே ஆயிற்று.-கூடுவர் வைகுந்தம் – ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்றுகொலோ’ என்று ஆசைப்பட்டுப் பெறாது ‘ஆடியாடி’யாய் விசனப் படாமல், இப் பாசுர மாத்திரத்தைச் சொல்லவே நான் பிரார்த்தித்துப் பெற்ற பேறு பெறுவார்கள்.-இவருடைய அனுபவத்தை பரமபதத்தில் அனுபவிக்க பெறுவார் –-
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply