ஸ்ரீ திரு விருத்தம்-பாசுரம் -9-திண் பூஞ் சுடர் நுதி நேமி -பொலிக பொலிக –5-2-

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே-ருக் வேத ஸ்தானமாய் இருக்கிறசொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே-இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே – சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

திரு விருத்தம் பிரிவின் துயரத்தையும், திருவாய்மொழி பிரிவின் முடிவில் கிடைக்கும் ஆத்ம ஞானத்தையும் அருளிச் செய்கிறது

(நீங்கல் அருமை கூறல் துறை –தலைமகன் தலைவிக்குச் சொல்லும் பாசுரம்
நேமி விண்ணாட்டில் பண்ணும் விருப்பத்துக்கும் மேல் இவள் இடம் பிராவண்யம் கொண்டவன்
அங்கு சென்று திரும்பாமல் இருப்பது போல்-திண் பூஞ்சுடர்  நுதி நேமி -நான்கு விசேஷணங்கள்
யஞ்செல்வர் விண்ணாடனையவண்  பூ மணி வல்லி -நான்கு விசேஷணங்கள்
யாரே பிரிபவர் தாம் இவையோ-கண்ணுக்கு உள்ள பெருமை ஒன்றுமே போதும்
இல் பொருள் உவமை -கமல மலர்-அஸி தேக்ஷிணை –சீதாப் பிராட்டி –அத் திரு அவனைப் பற்றும்
இவளோ -இத் திருவோ -இருவரையும் பற்றும் )-பொலிக பொலிக –5-2-இதன் விவரணம்
ஆழ்வார் கடாக்ஷத்தால் உலகே வாழும் வரிசை மாறாமல் இரண்டு பாசுரங்களும் இரண்டு பதிகங்களும் )

திரு மலைக்குப் போக நினைத்தான் என்று பழி இட்டாள்-நீ காண் நினைத்தாய் -என்கிறான்
அவன்-அதாவது-பாகவத் சம்ஸ்லேஷம் பிறந்த பின்பு பாகவத் சம்ஸ்லேஷம் மட்டுமேயாய் இருந்த படி
ஸ்வரூப ஜ்ஞானம் கண்டிலோம் –எங்களை அறியச் செய்யாது ஒழிந்தால் உன்னை அறிய வேண்டாமோ –(எங்களை -என்று மதுரகவி ஆழ்வார் போல் உள்ள அனைவரையும் சொன்னவாறு )
ஸ்வரூபம் -விக்ரஹம் -உன்னுடைய விக்ரக வைலஷண்யம் நீ அறியாய்
–(உம்மை விட்டுப் பிரிந்தால் தரிக்க மாட்டாத எங்களையும் நீ அறியாய்-உன்னுடைய ஸ்லாக்யதையையும் நீ அறியாய்-
கீழ்ப் பாசுரம் -இப்பாசுரம் -பிரிந்தால் அஸஹ்யம்-பிரிய மாட்டேன் இரண்டுக்கும் -இரண்டுக்கும் சேர்ந்து ஐதிக்யம்-இங்கும் திருவேங்கட யாத்ரை உள்ளதே )

எம்பெருமானார் திரு மலைக்குப் போவதாய் பிறந்த படி கேட்டு-பிள்ளை உறங்கா வல்லி தாசர்
அது தாங்க மாட்டாமல் தம் அகத்தே போய் மூடிக் கொண்டு கிடந்து-காண்கின்றனகளும்   -என்கிற பாட்டை அனுசந்தியா நிற்க-அங்குச் செய்கின்ற அளவு என்ன என்று ஒரு வைஷ்ணவரை போக விட-இப் பாட்டை அனுசந்தித்து சோகித்து கிடந்தார் -என்ன–உடையவர் -நெல் கொடுத்து வா என்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை அனுப்ப அவர் வாங்கிக் கொள்ளாமல் அழுது இருக்க அத்தை அவர் வந்து உடையவருக்கு தெரிவித்தார்-இது நம்பிள்ளை ஈட்டில் உண்டே
மாறு ஓன்று இல்லா மாருதி சிறியாண்டான் ஸ்வாமியை மேல்கோட்டையில் இருந்து அனுப்பி கூரத்தாழ்வானைப் பற்றி அறிந்தார் உடையவர் இவ்வாறு அடிக்கடி சிஷ்யர்களைப் பற்றி விசாரிப்பார்
வண்  பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் -என்று சொல்லி போர மாட்டிற்று இல்லையோ என்று அருளிச் செய்தார்

உன் நிலை இருந்தபடி இது அன்றோ -என்று என்னோடே கூடி இருக்கச் செய்தே திருமலைக்குப் போவதாக நினைத்தாய் -என்று பழி இட்டாள்-நானோ போக நினைத்தேன் -நீ அன்றோ திருமலைக்குப் போக நினைத்தாய் -என்றான் அவன்-பாகவத ஸம்ஸ்லேஷம் செல்லா நிற்க பகவத் பரிக்ரஹம் உள்ள தேசத்தில் போக நினைக்கும்படி அன்றோ நீ பகவத் விஷயத்தில் வர நின்ற நிலை – அப்படி நினைத்தேனாகில் நீ சொல்லிற்று எல்லாம் பொறுக்கிறேன் -என்கிறான் –

நான் சன்னிஹிதனாய் இருக்கச் செய்தே விஸ்லேஷத்தை நினைத்து-விஸ்லேஷித்ததாகக் கொண்டு இவள் நோவு படுகிறாள் என்று பார்த்து நான் பிரிய நினைக்கிலேன் என்று அவளைத் தரிப்பிக்கிறான்

ஸ்வரூப ஞானம் இல்லாதார் சொல்லும் வார்த்தை பிரமாணமாகக் கொள்ளலாமோ –
தம் தாமை அறியாதே இங்கனே அதி சங்கை பண்ணலாமோ –
இவள் அதி சங்கை தீர்க்கை யாகிறது இவள் ஸ்வரூபத்தை அறிவிக்கை போலே காணும்

திண் பூஞ்சுடர்  நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய
வண்  பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ
கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே
–9-தலைவன் தலைவியின் நீங்கல் அருமை கூறுதல்

திண் பூஞ்சுடர்  நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய வண்  பூ மணி வல்லி உன்னைப் பிரிபவர் யார்-திண்ணியதாய்-அழகியதாய் ஒளியையும் வாயையும் யுடைய நேமியைப் பிடித்து-அழகிய ஐஸ்வர்யத்தை யுடைய பரமபதம் போல்-நச புன ஆவ்ருத்ததே-திரும்பாத அத்தேசம் போல்
பரஞ்சோதி உப சம்பத்தயே ஸ்வேந ரூபேண -பெற்று திரும்பாதவன்-அதுக்கும் மேலே அழகியதான
யாரே பிரிபவர் தாம் இவையோ-

திண் பூஞ்  –
ஆஸ்ரிதர்  உடைய விரோதியைப் போக்கும் இடத்து பிற்காலியாதே பணைத்து   இருக்கிற படி –
ஆயுத கோடியிலும் ஆபரண கோடியிலும் அன்வயம் உண்டாகையாலே –(தருணவ் ரூப சம்பன்னவ் ஸூ குமாரவ் மஹா பலவ் -போல் இங்கும்-என்று நம்பிள்ளை ஈட்டில் காட்டி அருளுகிறார்-சீரிய சிங்கம் பூவைப்பூ வண்ண போல் இங்கும் )

திண் -என்றது
திருவாழி தான் திண்ணிதாய் இருக்கை
ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் இடத்தில் பிற்காலியாது இருக்கை
நித்ய விபூதியில் உள்ளார் அனுபவிக்கும் இடத்தில் அதி சங்கை பண்ணினால் –
அவ்வதி சங்கை பரிக்ரஹிக்கையில் போக்யமாய் இருக்கை
அஸ்தானே பய சங்கையோடே ஸ்தானே பய சங்கையோடே இவ்வாசி இல்லை இறே
பரிஹரிக்க வேண்டும் இடத்தில் சங்கா விஷயம் மரண ஹேதுவானாலும் பரிஹரிக்க வேணும் இறே
இனி ஸம்ஸாரிகளுக்குள்ளே பயமில்லை என்னும் அத்தனை அல்லது விஷயா தீனமாகவும் வருமது உண்டு இறே

பூ -போக்யமாய் -தர்ச நீயமுமாய் இருக்கை-திண் பூ என்றது –தன்னைத் தரிக்குமவன் படி தனக்கும் உண்டாய் இருக்கும் இறே-ஸூ குமாரவ் -மஹா பலவ்(ஆரண்ய -1-14 )என்னுமா போலே-திருவாழி தனக்கு ஆயுத கோடியிலும் ஆபரண கோடியிலும் -இரண்டிலும் உண்டே அந்வயம்

சுடர் நுதி -நேமி –
தேஜஸ்-கூர்மை உடைய திரு ஆழி –சுடர்-திருமேனியில் இருட்சிக்குக் கை விளக்கு பிடித்தால் போலே இருக்கை-நுதி -என்று கூர்மை-புகரையும் கூர்மையும் யுடைய நேமி -திருவாழி

யஞ்செல்வர்-
திரு ஆழியை உடையார் ஆகையாலே வந்த அழகும் ஐஸ்வர்யமும் –அம் செல்வர்-திருக் கையும் திருவாழியும் சேர்ந்த சேர்த்தியால் வந்த ஐஸ்வர்யம் என்னலாம்-காந்தியைச் சொல்லவுமாம்
சேர்ந்த சேர்த்தி அழகாலே-கூராராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய் (திருவாய் -6-9-1 ) என்னலாம் படி இறே இருப்பது

விண்ணாடனைய வண்  பூ மணி வல்லி யாரே பிரிபவர்-
நச புன ஆவர்த்ததே
-என்கிற தேசத்தை பிரியில் அன்றோ – உன்னை பிரிவது –வண்மை -ஔதார்யம்
தமக்கு மானஸ அனுசந்தானமாக  அனுபவித்து இருக்க அமைந்து இருக்கச் செய்தே ஜகத்துக்கு உபகாரமாக பிரபந்தத்தை அருளிச் செய்தபடி –எம்பெருமான் தம் ஒருவருக்குமே மயர்வற மதி நலம் அருள தாம் ஜகத்துக்கு மயர்வற மதி நலம் அருளின படி –தாமே சொல்லினும் –வண்  சடகோபன் –என்று இறே  சொல்லுவது-அருள் கொண்டாடும் –அவன் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
எண்டிசையும் அறிய இயம்புவேன் சடகோபன் அருளையே-தாய்க்கும் தம்பிக்கும் மகனுக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தாருக்குமே இவ்வண்மை உள்ளது
-அபேஷா நிரபேஷமாக அருளுவார்கள் )பூ –போக்யதை –மணி வல்லி –தனக்குத் தான் ஆபரணமாய் இருக்கிற படி-நாயகன் கழுத்தைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய கொடி –-கழுத்தைக் கட்டிக் கொண்டு கண்ணும் கண்ண நீருமாய் இருக்கிறபடி –-ஒரு கொம்பிலே சேர்க்க வேண்டி இருக்க நிலக்கிடை கிடக்கிற படி –(துவண்டு அன்றோ கிடக்கிறாள் )ஆரே பிரிபவர் தாம்-பிரணயித்வம் இல்லாமை யாகிலும் சைதன்யம் இல்லையோ –

வண் பூ மணி வல்லி-–ஆழ்வார் திரு நாமம் –மணி வல்லிப் பேச்சு வந்தேறி அன்றேகோல் தேடி ஓடும் கொழுந்தே போன்றதே மால் தேடி ஓடும் மனம் -பாரதந்தர்யமே வடிவானவள்-வண் பூ மணி வல்லி
தர்ச நீயமான புஷ்போத் கமத்தை உடைத்தாய் ஸ்லாக்யமான கொடி போன்றவளை (பூ மலர்ந்த கொடி )

கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே-
பூம் கமலமா -கண்ணா-குவளை புஷ்பமா-கறுத்த ஒளியை யுடைத்தாய்-வெளுத்து இருந்த முத்து அரும்பி -சோக அஸ்ரு -ஏக்கத்தால்-முக்தமான மானைப் போல் உள்ள நோக்கு போலே விழியா நின்ற
ஸ்லாக்யமான அதரமும் கொண்டவள்–மான் விழிக்கின்ற-மான் போலே விழிக்கும் -உவமைத் தொகை–மாயிதழே–-பெரிய இதழை யுடைத்து என்னலான-மா இதழ் கண்களின் ரப்பை என்றுமாம்-

கமலம் என்கையாலே அரி சிதறுதலும் (மெதுவாக மலரும் )
கருஞ்சுடர் என்கையாலே அஞ்சனம் அணிவும்
வெண் முத்து அரும்பி -என்கையாலே ஆற்றாமையும்
குவளையின் பெரிய இதழ் -என்கையாலே கடைச் சிவப்பும்
மான் விழிக்கின்ற -என்கையாலே செல்லாமை நோக்குதலும் தோற்றிற்று
குவளை -நெய்தல் என்னவுமாம்

இவையோ கண்--வெறும் புலத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் காண்–பூங்கமலம் – அழகிய கமலம் –கருஞ்சுடராடி–மதமதப்பு இருந்தபடி –வெண் முத்தரும்பி-சிப்பியிலே முத்து அரும்பினால் போலே சோக பிந்துவேயாய் தோற்றின படி –வண் பூங்குவளை–உதாரமாய் அழகியதான குவளை –மடமான் விழிக்கின்ற –-சர்வதா சாம்யம் –மாயிதழே– அதரம் இருக்கிறபடி –வெண் முத்து அரும்பிய கமலம்
சிரத்தை யுடன் ஈடுபாட்டுடன் பார்க்கும் குவளை-மை தீட்டியது –வண்மையான குவளை-மடமான் -முற்றுவமை-மா இதழ் கொண்ட கண்கள் இவ்வாறு சிக்ஷித்து சொல்ல வேண்டுமே )

இவையே கண் என்கையாலே
நாட்டு ஒப்பான ஞானம் அன்று என்றபடி

பூங்கமலம் கருஞ்சுடராடி -என்கையாலே
ஞானத்துக்கு ஆகாரம் விஷயாதீனம் என்றிட்டு-பத்ம வர்ணனையும் அஞ்சநாபனையும் விஷயீ கரித்தமை தோற்றிற்று

கண்ணுக்கு கூர்மை சேர்ப்பது மை -அஞ்சனம்-இவரது ஞானத்துக்கு விஷயம் மெய் நின்ற பகவத் ஞானம் -அந்த வடிவம்-ஸம்ஸார ஞானம் பொய் நின்ற ஞானம்-திருவையும் மாலையையும் க்ரஹித்தவள் -மெய்யான ஞானம்-பூம் கமலம் -அவள்-கரும் குவளை -அவன் )

வெண் முத்தரும்பி -என்கையாலே
சுத்த ஸ்வ பாவமான முக்தா ஹாரத்தை ஆவிஷ் கரித்தமை சொல்லிற்று

குவளை மாயிதழ் என்கையாலே
அநுராதகதை (சிகப்பு) தோற்றிற்று-இவரது வெறும் வாக்ய ஜன்ய ஞானம் இல்லையே
பக்தி ரூபா பன்ன ஞானம் தானே-ராகம் கலந்த ஞானம் –

மான் விழிக்கின்ற என்கையாலே
விஸ்லேஷ அசஹதை தோற்றிற்று

ஏவம் விதமான ஞான வை லக்ஷண்யத்தாலும் இவரைப் பிரியப் போமோ என்கிற பாசுரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

ஸ்வா பதேசம்
ஆழ்வார் வைஷ்ணவர்களோடே கூட இருக்கச் செய்தே பிரிவு வரில் செய்வது என்-என்று அதி சங்கை பண்ண –அத்தைக் கண்ட வைஷ்ணவர்களே பரிஹரிக்க வேண்டி இருக்கிறபடி –ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவரைப் பிரிந்து தங்களுக்குத் தரிக்க ஒண்ணாமை –நீரே எல்லாம் எங்களுக்கு மாதா பிதா சர்வம் –-நாத முனி யாமுன முனி ராமானுஜ முனி -முனித் த்ரயம் நீரே அறுதி யிட்டார்களே -அதே போல் நாங்களும் என்று இவருக்கு அறிவித்து அவரைத் தரிப்பித்தமை சொல்லிற்று-

தாத்பர்யம்-முன் பாசுரத்தில் ஆழ்வார் ஸூஹ்ருதரான பாகவதர்கள் தம்மை விட்டுப் பிரிவதாக விசன்னராக இருக்க அவர்களும் உம்முடைய வை லக்ஷண்யத்தைக் கண்ட நாங்கள் பிரிய மாட்டோம் என்று அருளிச் செய்த பாசுரத்தை நாயகி யுடைய சவுந்தர்யத்தால் மக்னனான நாயகன் உரைத்த பாசுரமாக அருளிச் செய்கிறார்–சவுந்தர்யம் -லாவண்யம்-மார்த்தவம் –-சந்நிவேசம் -முதலான
இவற்றை நிரூபகமாக உள்ள அவயவங்கள் உடைய நாயகியை ஸ்ரீ மானான திருமால் உள்ள ஸ்ரீ வைகுண்டம் சேர்ந்தவர்கள் அங்குள்ள தேஜோ மயமான வலிய திருவாழி தொடக்கமான -ஆயுதம் ஆபரணம் இரண்டு ஆகாரமும் உண்டே – போக்யத்தில் ஈடுபட்டு அத்தை விட்டுத் திரும்ப மாட்டாதாப் போலே-உன்னுடைய மாந்தளிர் போன்ற அதரத்தையும் கமலம் போல் அதி ஸூந்தரமாய் கரு நெய்தலின் முத்துக்கள் சிதரிக்க கிடந்தால் போல் -சோக அஸ்ரு சொரிந்து மான் போல் விழிக்கும் குவளை போன்ற கண்களை யுடைய உன்னைக் கண்டார் பிரிவாரோ ஆகையால் நான் உன்னை விட்டுப் பிரிய மாட்டோம்-பாகவத சம்ஸ்லேஷம் கிட்டிய பின்பு பகவத் ஸம்ச்லேஷம் தேடிப் போவாரோ என்றவாறு-


5-2-பொலிக பொலிக பொலிக-ப்ரவேஸம்-

ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயைக் காண்கைக்காக நித்திய சூரிகள் இங்கே வர,
அவர்களைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்.
இத் திருவாய்மொழியால்” என்று ஆளவந்தார் அருளிச் செய்தாராகத் திருமாலை யாண்டான் பணிப்பர்.
அங்ஙன் அன்றிக்கே, “நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய் மொழியிலே, சம்சாரிகள் படுகிற கிலேசத்தை நினைத்து,
அதற்குப் பரிஹாரமாக, ‘ஒன்றுந் தேவும்’ என்ற திருவாய் மொழியிலே பகவானுடைய பரத்துவத்தை எடுத்துப் பேசித் திருத்த,
அதனாலே திருந்திச் சம்சாரம் பரமபதம் என்ற வேறுபாடு இல்லாமல் அங்குள்ளாரும் இங்கே வரலாம்படி இருக்கிற இருப்பைக் கண்டு
மங்களாசாசனம் செய்கிறார்” என்று இங்குள்ளார் பக்கலிலே பிராதாந்யம் தோற்ற எம்பெருமானார் அருளிச் செய்வர்.

தாம் பகவானுடைய பரத்துவத்தை எடுத்துப் பேச, அதனாலே திருந்தின
சத்துவ குணமுடையார் அடங்கலும் எங்கும் பரந்திருக்கிறபடியையும்,
குறிக்கோளின்மையாலும் அறிவின்மையாலும் இராஜசராயும் தாமசராயுமுள்ளார் குறைந்தவர்களா யிருக்கிற படியையும்,
சத்துவ குணமுடையார் மேற்கொண்ட தாகையாலே ‘உத்தம தர்மமான ஸ்ரீ வைஷ்ணவ தர்மமே பிரசித்தமாய்ப் போருகிற படியையும்,
அதற்கு மாறுபட்ட தர்மங்கள் மறைந்தவைகளாய்ப் போருகிற படியையும், தேச காலங்கள் அதிகாரிகள் அங்கங்கள் என்கிறவற்றுக்கு
உண்டான நன்மைகள் “எல்லாத் தர்மங்களுக்குள்ளே வைஷ்ணவ தர்மம் உத்தமமானது” என்கிறபடியே,
பகவானுடைய ஸ்பரிசத்தாலேயா யிருக்கிற படியையும், (பாகவத ஸ்பர்சம் என்னாமல் பகவத் ஸ்பர்சம் என்றது –
இவர்கள் பகவானுக்கு பிரகாரம் -தஷிணோ பாஹூ இளைய பெருமாள் போலே –
கொல்லை மூக்கரிந்த்திட்ட குமரனார் -போலே அபி நாபாவம் -விட்டுப் பிரிக்காத சம்பந்தம் உண்டே )
அது இல்லையாகில் எல்லா நன்மைகளும் உண்டானாலும் அவை அடையத்
தண்ணியனவா யிருக்கிற படியையும் சொல்லி,
தம்மாலே திருந்தின ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவடிகளிலே விழுந்தும்,
திருந்துகைக்குத் தகுதியுடையாரைத் திருத்தியும்,
திருந்தாதாரை உபேக்ஷித்தும்,
இப்படி, கூட்டங்கூட்டமாக நிறைந்திருக்கும் பாகவதர்களைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்.-

இத்திருவாய்மொழிக்கு இரண்டு வகையாக அவதாரிகை அருளிச்செய்கிறார்.
ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை’ என்றது, ஆழ்வார் உபதேசத்தாலே
திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கூட்டத்தைத் தெரிவித்தபடி,
நித்தியசூரிகள் இங்கே வர’ என்றது, இத் திருவாய்மொழியில் வருகின்ற “தேவர்கள் தாமும் புகுந்து”,
நேமிப்பிரான் தமர் போந்தார்” என்னும்
பாசுரப் பகுதிகளைத் திருவுள்ளம் பற்றி. ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்திலே நித்தியசூரிகளுக்குப் பிராதாந்யம் தோற்றும்.
இதனால், “ஒன்றும் தேவும்” என்ற திருவாய்மொழிக்கும், இத்திருவாய்மொழிக்கும் நேரே பொருள் இயைபு தோன்றும்.
இடையேயுள்ள “கையார் சக்கரம்” என்ற திருவாய் மொழி, பிராசங்கிகம். (இடைபிறவரல்.)

பாசுரங்களில் கூறப்படும் பொருள்களை உட்கொண்டு அவற்றை விவரணம் செய்கிறார்
‘தாம் பகவானுடைய’ என்று தொடங்கி. “கடல்வண்ணன்பூதங்கள்” என்றதனைத் திருவுள்ளம் பற்றிச்
சத்துவ குணமுடையார்’ என்றும்,
“மலியப் புகுந்து” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘எங்கும் பரந்திருக்கிறபடியையும்’ என்றும்,
“உள்ளீரேல்” என்றதனை நோக்கிக் ‘குறைந்தவர்களாயிருக்கிறபடியை’ என்றும் அருளிச்செய்கிறார்.
‘சத்துவ குணமுடையார் மேற்கொண்டதாகையாலே’ என்றது,
மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
“பெரிய கிதயுகம்பற்றி” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘உத்தம தர்மமான ஸ்ரீ வைஷ்ணவ தர்மமே
பிரசித்தமாய்ப் போருகிறபடியையும்’ என்கிறார்.
‘அதற்கு மாறுபட்ட தர்மங்கள் மறைந்தவைகளாய்ப் போருகிற படியையும். என்றது.
திரியும் கலியுகம் நீங்கி” என்றதனைத் திருவுள்ளம்பற்றி அன்றி,
“சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே” என்றதனைத் திருவுள்ளம் பற்றி எனலுமாம்.
‘தேச காலங்கள்’ என்றது “மண்மேல், கலியும் கெடும்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி.
இவை இரண்டும் அதிகாரி அங்கங்களுக்கும் உபலக்ஷணம்.

கொசித் கொசித் என்று -எப்போதோ எப்போதோ —இவர் ஆவிர்பாவம் கலியும் கெடும் போலே ஸூசிதம்
பாகவதம் -த்ராவிடேஷூ மகா பாகவதர்கள் -நாராயண பராயதா –நாராயணா எல்லாமாகக் கொண்டு இருப்பார்கள் –
தாமிரபரணி கரையில் -பயச்வினி-பாலாற்று -கரையில் வேகவதி வைகை-காவேரி கரையில் தோன்றுவார்கள் –
ராமானுஜ திவாகர – -கலித் த்வம்சம்-பவிஷ்யகார ராமானுஜ விக்ரகம் மதுரகவி ஆழ்வாருக்கும் –
நாத முனிகளுக்கும் பிரசாதித்து அருளினார்
வஜ்ர நாபன் என்பவர் -ஸ்ரீ கிருஷ்ணன் உடனே இருந்தவர் என்பர் -ஸ்ரீ கிருஷ்ணன் சந்ததியில் வந்தவர் என்றும் சொல்வர்-
வடக்கில் ஸ்ரீ கிருஷ்ண விக்ரகம் பல இடங்களில் -பிரதிஷ்டை செய்து அருளினார் என்பர்

இரண்டாம் திருவாய் மொழியிலே -கீழே -பகவத் கிருபா பாரவஸ்யத்தை அனுசந்தித்து ஸந்துஷ்டாரான ஆழ்வாருடைய
ப்ரீதியை அனுபவிக்கைக்கு -பகவத் குண அனுபவ வித்தராய் ஸூரி சமரான பாகவதர்கள் சம்சாரத்தில் துரிதம் எல்லாம் நீங்கும்படி
ப்ரேம பரவசராய்த் திரண்டு வந்தபடியைக் கண்டு –
ஈஸ்வரன் இவர்களை இட்டு ஜகத்தைத் திருத்த நினைத்தானாகக் கூடும் என்று திரு உள்ளம் பற்றி
அவனுடைய நிரதிசய மஹாத்ம்யத்தையும்
மஹாத்ம்ய ப்ரகாசகமான ஸ்ரீ யபதித்வாதி சிஹ்னத்தையும்
ஆஸ்ரித உபகாரகமான திவ்ய விக்ரஹாதி யோகத்தையும்
உபகார அர்த்தமான சமுத்திர ஸாயித்தவத்தையும்
அதுக்கும் அடியான ஸ்ரீ வைகுண்ட வாஸத்தையும்
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமான திவ்ய ஆயுதவத்தையும்
திரு அவதார தசையில் யுண்டான அதிசயித ஆதிக்யத்தையும்
ஆதிக்ய லக்ஷணமான ஸ்ரீ வத்ஸ சிஹ்னத்தையும்
ஆஸ்ரித விஷயத்தில் அப்ரச்யுத ஸ்வ பாவத்தையும்
அதிசயித சீலவத்தையும்
அனுசந்தித்து -இவ்வோ ஸ்வ பாவங்களில் வித்தரான பாகவதர் இங்கே ஸந்நிஹிதராகப் பெறுவதே என்று ஹ்ருஷ்டராய்
மங்களா சாசனம் பண்ணி இவர்களை அநு வர்த்தித்து ஸூத்த ஸ்வ பாவராய் இவர்களோடு ஓக்க நீங்களும்
பகவத் விஷயத்தை அனுபவிக்கப் பாருங்கோள் என்று லௌகிகரைக் குறித்து உபதேசித்து அருளுகிறார்

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.
–5-2-1-

பெரியாழ்வாரைப் போலே முற்படப் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்து, பின்பு பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்ய வேண்டாவோ?” என்ன, -நம்பிள்ளை கேட்க –
அப்படியே யன்றோ செய்தது,-“வீற்றிருந்தேழுலகு” என்ற திருவாய்மொழியால் பகவானுடைய நிறைவிற்கு மங்களாசாசனம் செய்தார் கண்டீரே;
பின்னை இத் திருவாய் மொழியிலே பாகவதர்களுடைய கூட்டத்திற்கு மங்களாசாசனம் செய்கிறார்” என்று நஞ்சீயர் அருளிச் செய்தார்.
பரமாசாரியரான இவரைப் பின் சென்றாரித்தனை காணும் பெரியாழ்வாரும்.

இங்கு நமனுக்கு யாது ஒன்றும் இல்லை--யமனும் தனக்கு அடைத்த இந் நிலத்தில் ஆராயலாவது ஒன்று இல்லை;-இனிப் பரம பதத்தில் சென்று ஆராயில் ஆராயு மத்தனை என்பார் “இங்கு” என்கிறார்.-தர்ம புத்திரனுக்கும் ஒருகால் நரக லோகத்தைக் காணுதல் செய்ய வேண்டியிருந்ததே யன்றோ, அதற்கும்-ஆள் இல்லை என்பார் ‘யாது ஒன்றும் இல்லை’ என்கிறார்.

“எந்தத் தேசத்தில் திரு அஷ்டாக்ஷர மந்திர சித்தியை யுடைய பெருமை பொருந்திய
பாகவதர்கள் வசிக்கின்றார்களோ-மதிக்கப்படுகிறார்களோ-அங்கு வியாதி துர்பிக்ஷம் தஸ்கர-களவு முதலானவை நடமாடுகின்றன இல்லை” என்கிறபடியே,
நாராயணயா அர்த்தம் -பகவத் ஏக போகத்வம் -விரோதி -வியாதி -விஷய ப்ராவண்யம்
உபாயத்வ விரோதி -ஸூவ ரஷணம் ஒழிகை – நமஸ் அர்த்தம் பஞ்சம் –-ஆத்மா அபகாரம் தஸ்கரம் –களவு -பிரணவம் அர்த்தம் –-பாகவத சஞ்சாரம் இல்லாமையே யன்றோ இப் பொல்லாங்குகள் உண்டாவதற்குக் காரணம்; அவர்கள் சஞ்சாரம் உண்டான பின்பு இவை நிற்குமோ? அன்றிக்கே நாட்டில் உள்ள வியாதி களவு பஞ்சம் -இத்யாதி குலம் தரும் செல்வம் தரும் இத்யாதி

மண் மேல்- அவன் அழகிலே தோற்றிருப்பவர்கள் உள்ளது பரம பதத்திலே அன்றோ? என்ன, இங்கே என்று படி எடுத்துக் காட்டுகிறார். –-மண் பிடி எடுத்து காட்டுகிறார் –
பகவானுடைய அநுபவத்திற்கு மேட்டு மடையான சம்சாரத்தில் மரு பூமியில் தண்ணீர் போலே எங்கேனும் ஒருவர் இருவர் உண்டாமத்தனை யன்றோ? என்ன,-மலியப் புகுந்து-
“அடியார்கள் குழாங்கள்” என்கிறபடியே, நெருங்கப் புகுந்து.-இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்- சந்தோஷத்தின் மிகுதியாலே பாடுவது, உடம்பு இருந்த இடத்திலே இராமல் ஆடுவதாய்க் கொண்டு, யமன் முதலானோர்கள் தலை மேலே அடியிட்டுச் சஞ்சரிக்கக் கண்டோம்.-உழி தருகை--பயம் இல்லாமல் எங்கும் சஞ்சரித்தல்.

————-

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே
.–5-2-2-

”கொடு உலகம் காட்டேலே” – திருவாய். 4. 9 : 10.-என்கிறபடியே, பாகவதர் அல்லாதாரைக் கண்ட இன்னாப்புத் தீர, பாகவதர்களுடைய கூட்டத்தைக் காணப் பெற்றோம்.

தொண்டீர் எல்லீரும் வாரீர் – பாகவதர்கள் விஷயத்தில் ஆசையுள்ளவர்களாய், பேராளன் பேர் ஓதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே” என்று இருப்பார் அடையத் திரளுங்கோள்.-‘வாருங்கோள்’ என்பது, என்ன பிரயோஜனத்துக்கு? என்னில்,-தொழுது தொழுது நின்று ஆர்த்தும் – பிரயோஜனத்துக்குப் பிரயோஜனம் தேட வேணுமோ? கை மேலே பிரயோஜனமன்றோ.-தொழுகை பிரயோஜனம் -சடக்கென அப்பொழுதே ப்ரத்யக்ஷ பலம்-பிரத்யஷ பலன் சடக்கென காணலாம் –-தொழுது தொழுது’ என்ற அடுக்குத் தொடரால், அது தானே பிரயோஜனமாயிருக்கிறது என்பதனைத் தெரிவித்தபடி.
ஆர்த்தும் என்றது, ஆர்த்துக் கொள்ளுவோம்; சந்தோஷத்தோடு கூட ஆரவாரம் செய்வோம் என்றபடி.

மண் மேல் பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே–“ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே” என்னும் தேசம் ஒழிய, அதற்கு மாறுபட்ட பூமியிலே, பர பிரேரிதராய் -வேறு ஒன்றனாலே தூண்டப் பட்டவர்களாய் அன்றிக்கே, தங்கள் பிரீதிக்குப் போக்கு விட்டு, பண் மிகும்படி நின்று தாங்களே பாடி, அது இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே ஆடி, பரந்து திரிகின்றார்கள்.
‘தாங்களே பாடி’ என்று பொருள் அருளிச் செய்வதனால், “பண் தாம் பாடி” என்ற பாடமே ஏற்புடைத்து. “பண் தான் பாடி” என்பது இப்பொழுதுள்ள பாடம்.-

—————-

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.
–5-2-3-

பெரிய கிருதயுகம் பற்றி –கலி காலம் முதலிய காலங்களால் மறைக்கப்படுதல் இல்லாத ஒரு போகியான கிருத யுகத்தை யுடையராய்.-பற்றி – பற்றினவராய்; இது, தேவர்களுக்கு அடைமொழி.-கலியைப் போகப் பற்றி என்றும், கிருதயுகத்தைப் புகுரப் பற்றி என்றும் பொருள்

ஆப்பான் ‘ஆதி சிருஷ்டியில் கிருத யுகத்தைக் காண் சொல்லுகிறது’ என்பராம்.எங்கும் இடம் கொண்டனவே –எங்கும் தங்களுக்கு இடமாகக் கொண்டார்கள். புறச் சமயத்தாருக்கும் குத்ருஷ்டிகளுக்கும் இடம் இல்லாதபடி சிஷ்யர்களும் சிஷ்யர்களுக்குச் சிஷ்யர்களுமாக எங்கும் பரந்தார்கள்.-

——————-

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே
.–5-2-4-

இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே-பயிர் தேயும்படி களை வளருமாறு போலே சத்துவ குணத்தை யுடைய பெரியோர்கள் ஒதுங்கும்படி வளருகின்ற
புறச் சமயங்களை எல்லாம் பறித்துப் பொகடுவாரைப் போலே.
‘போலே’ என்பான் என்? என்னில், சத்துவ குணமுடைய பெரியோர்கட்குப் ‘பிறரை நலிய வேணும்’ என்ற ஓர் எண்ணம் இல்லையே அன்றோ
நெற் செய்யப் புற்றேயுமா போலே, இவர்கள் ஊன்ற ஊன்ற அவர்கள் தாமாகவே தேய்வார்கள் அத்தனை.

கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி நடந்தும் பறந்தும் குனித்தும் – தங்களுக்கு விருப்பமான எல்லாக் காரியங்களுக்கும் தகுதியாம் படி பூமியைக் கைக் கொண்டு, ஒவ்வோர் இடத்திலே இருந்தும், ஒவ்வோர் இடத்திலே நின்றும், பகவானுடைய அநுபவத்தின் மிகுதியால் வந்த களிப்பினால் பலப் பல பாட்டுக்களைப் பாடியும்,
மனத்தைக் கொள்ளை கொள்ளும்படியாக உலாவியும், கால் தரையிலே பாவாதபடி பரபரப்போடு நிருத்தம் செய்தும். நாடகம் செய்கின்றன –இவர்கள் செய்யும் காரியம் இவர்க்கு வல்லார் ஆடினாற் போலே இருக்கை.
எம்பெருமானாருடைய நிற்றல் நடத்தல் படுத்தல் முதலியவைகளை நாம் கொண்டாடுமாறு போலேயும், ஆளவந்தாருடைய நடையை அரசன் கொண்டாடினாற் போலேயும் இவர் கொண்டாடுகிறபடி” என்று அருளிச் செய்வர் நஞ்ஜீயர்.

———–

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.
–5-2-5-

ஒன்றும் தேவும்” என்ற திருவாய் மொழியைக் கேட்டுச் சம்சாரம் திருந்தின படி.
“வாழ் ஆட்பட்டு நின்றீர் உள்ளீரேல்” என்று தேட வேண்டாதே, எல்லாரும் வாழாட்பட்டு,
‘அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்’ என்று தேட வேண்டும் படியாயிற்று

தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே – பிறர்க்குத் தொண்டு செய்தல் நாய்த் தொழிலாகும்” என்கிற மற்றை விஷயங்களிலே தொண்டு பட்டிருக்க உங்களைக் கல்பந்தானே வருத்திக் கொண்டு, தானும் பேரும் என்னுதல்;
அன்றிக்கே,
வைகுந்தன் பூதங்கள் உங்களையும் கொன்று ஊழியையும் பேர்ப்பர் என்னுதல்.

—————

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.
–5-2-6-

நேமிப் பிரான் தமர் போந்தார்–கையும் திருவாழியுமான அழகிலே தோற்றிருக்குமவர்கள் வந்தார்கள்.-நேமிப் பிரான் தமர்-ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்திலே நித்திய ஸூரிகள்.-
எம்பெருமானார் நிர்வாஹத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்கள்.

சென்று தொழுது உய்ம்மின்–அவர்கள் பாடே சென்று அவர்களைத் தொழுது உஜ்ஜீவித்துப் போகுங்கோள் என்னுதல்.-ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹம்
அவர்களோடே சென்று சர்வேச்வரனை அடைந்து உஜ்ஜீவித்துப் போகுங்கோள் என்னுதல்.-எம்பெருமானார் நிர்வாஹம்

சிந்தையைச் செந் நிறுத்தியே--தொழுத பின்னர் “எனக்கு ஒன்று தா, உனக்கு ஒன்று தருகிறேன்” என்னாமல் வணங்குங்கோள் என்கிறார்.

———–

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே
.–5-2-7-

காப்பாற்றுவதில் நிலைநிற்கின்றவரும் எல்லா ஆத்மாக்களுக்கும் ஈச்வரனாயும் மஹாத்மாவாயும் இருக்கிறவருமான விஷ்ணுவைத் தவிர,-காப்பாற்றும் திறன் வேறு ஒருவர்க்கும் இல்லை என்பது பிரசித்தம்” என்கிறபடியே, என்றும் ரக்ஷண தர்மம் கிடப்பது அவன் பக்கலிலேயாம்.-புன் சிறு தெய்வங்களைப் பரம்பொருளாக நினைத்து இருக்கும் தண்ணிய மனம் உங்களுக்கு வேண்டா.-அவனுக்குச் சரீரமாக அல்லது ஸ்வதந்திரமாயிருப்பது ஒரு தேவதை இல்லை.-

இறுப்பது எல்லாம் அவன் மூர்த்யாயவர்க்கே இறுமின் – ஆனபின்பு, நீங்கள் அவ்வத் தேவர்கட்குக் கொடுக்கும் சமாராதநத் திரவியங்களை எல்லாம்-‘இவர்கள் அவனுக்குச் சரீரமாக இருப்பவர்கள்’ என்று புத்திபண்ணி, அவர்களுக்குக் கொடுக்கப் பாருங்கோள்.
‘இறுப்பது எல்லாம்’ என்றது, “தேவதாந்தராய-பிற தேவதையின் பொருட்டு” என்று தோற்றுகிற நித்திய நைமித்திகக் காமங்களை யெல்லாம் என்றபடி.
அவன் மூர்த்தியாயவர்க்கே’ என்றது, அவனுக்குச் சரீரமாக இருக்கிற அவர்களுக்கே என்றபடி.
ஆக, “அந்தராத்மா சர்வேச்வரன்’ என்று புத்திபண்ணி அவனுக்குச் சாமாராதனம் செய்கிறோம் என்ற எண்ணத்தோடு செய்யுங்கோள் என்றபடி.-தன் திருவடிகளை பிடித்தார்க்கு தானே பலம் கொடுக்கக் கடவனாய் இருக்கும் இறே அவன் –

———–

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே
.–5-2-8-

பின்ன ருசிகளான -அதிகாரிகளை யுடைத்தான சர்வ லோகங்களுக்கும் -தன் சரீர பூதரான தேவதைகளை சமாராத்யராக நிறுத்தினான் –ஈஸ்வரோஹம் என்று இருப்பார் தலை வணங்குகைக்காக நிறுத்தினான் –ஆஸ்ரயிப்பார்களோடு ஆஸ்ரயணீயரோடு வாசி அற எல்லார்க்கும் நிர்வாஹகன் அவன் தானே -சேதனருடைய குண அனுரூபமாக ஆராத்யராகவும் அபிமத பலப்ரதராம் படியும் பண்ணினான் –மறுவையும் திருவையும் மார்விலே உடையவன் -ஸ்ரீ வத்ஸத்தை திரு மார்பிலே உடையவன்-அசாதாரணமான விக்ரஹத்தின் அழகிலே தோற்று தங்கள் உளராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்

பகவத் அனுபவ பிரீதியின் மிகுதியாலே கீதங்களைப் பாடி, ‘சம்சாரத்தில் வசிக்க வேண்டியிருந்ததே!’ என்கிற வெறுப்பு இன்றிக்கே பூமி எங்கும் பரந்தார்கள்.-நீர் மேவித் தொழுது உய்ம்மின் – ஆன பின்பு, நீங்கள் சென்று அவர்களை அடைந்து உஜ்ஜீவியுங்கோள் என்னுதல்; அந்தச் சத்துவ குணத்திலே நிலை நின்ற பெரியோர்களைப் போன்று நீங்களும் வேறு ஒரு பயனைக் கருதாதவர்களாய்ச் சர்வேச்வரனை அடைந்து உஜ்ஜீவித்துப் போகுங்கோள் என்னுதல்.

————

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே
.–5-2-9-

வேதப் புனித இருக்கை நாவிற் கொண்டு – வேதத்தில் அவன் விபூதி விஷயமாகப் பரக்குமவற்றை அன்றிக்கே, அசாதாரண விக்கிரஹத்திலும் குணங்களிலும்
ஸ்வரூபத்திலுமாகப் பரந்திருக்கிற ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளை நாக்கிலே கொண்டு.
நாவில் கொண்டு -நாவினால் நவிற்று -அஹ்ருதயமாக சொன்னதை அடியாருக்கும் பகவருக்கும் கொள்ளாமல் நமக்குக் கொள்வதே பொருந்தும் –

அச்சுதன் தன்னை- இவர்கள் நாவிலே கொண்டு மனத்தோடு படாமல் சொன்னால் அதனை மனத்தொடு பட்டதாகக் கொண்டு “ அவர்களை விட மாட்டேன்” என்னுமவன்.

ஞான விதி பிழையாமே--பக்தியினாலே தூண்டப்பட்டுச் செய்கின்ற காரியங்களில் ஒன்றும் தப்பாமல்.-ஞானம்’ என்கிறது, ஞான விசேஷமான பக்தியை.-

மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகம்- அவனை விடாமல் நின்று அடிமை செய்யுமவர்களாலும், குணங்களை அநுசந்தானம் செய்வதற்கு அவ்வருகு ஒன்றுக்கும்
ஆற்றல் இல்லாதே இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களாலும் மிக்கது உலகம். என்றது,
தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும்,-கிடந்த இடத்தே கிடந்து குணாநுபவம் செய்யும் ஸ்ரீ பரதாழ்வானையும் போலே இருப்பாராய் ஆயிற்று உலகம் அடைய என்றபடி. ஆதலால், நீங்களும் மேவித் தொழுது உய்ம்மின்-

————-

மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே
.–5-2-10-

வகுத்தது அல்லாத விஷயத்திலே தொண்டு பட்டுத் திரிகிற நீங்கள், அவர்களோடு ஒக்கச-கிருஷ்ணன் உடைய அசாதாரண விக்ரஹத்தை பொருந்தி ஆஸ்ரயித்து அடைந்து வணங்கப் பெறில் உங்கள் தோஷம் போகையே அன்றிக்கே, யுகம் காரணமாகப் பொருந்தி வருகின்ற தோஷமும் போம்-

பொலிக பொலிக வென்று பூ மகள் கோன் தொண்டர்
மலிவு தன்னைக் கண்டு உகந்து வாழ்த்தி -உலகில்
திருந்தார் தம்மைத் திருத்திய மாறன் சொல்
மருந்தாகப் போகும் மனமாசு
———–42-ஒன்றும் தேவிலே தாம் பண்ணின பகவத் பரத்வ உபதேசத்தைக் கேட்டு சம்சார பரமபத விபாகம் அறும்படி நாடாக திருந்தின பாகவத சம்ருத்தியைக் கண்டு ஹ்ருஷ்டராய் தாம் திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களா சாசனம் பண்ணியும்
திருந்துகைக்கு யோக்யதை யுடையாரை உபதேசித்துத் திருத்தியும் திருந்தாதவரை உபேஷித்தும் செல்லுகிற பொலிக பொலிக பொலிக – வில் அர்த்தத்தை பொலிக பொலிக -என்று துடங்கி அருளிச் செய்கிறார்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading