நம்முடைய ஸம்பிரதாயத்தில் எம்பெருமானார்க்குத் திருப்பாவை ஜீயரென்று ஸுப்ரஸித்தமான வ்யபதேசமுள்ளது. திருப்பாவையில் மிக்க ஈடுபாடு கொண்டு அதை யநுஸந்திப்பதில் போர அபிநிவிஷ்டரா யெழுந்தருளி யிருந்தது பற்றி அங்ஙனே வ்யபதேச முண்டாயிற்று என்பது தவிர மற்றுமோர் சிறந்த ஹேதுவுமுண்டு. அதாவது, திருப்பாவையில் ஒவ்வொரு பாசுரத்திலும் எம்பெருமானாரைச் சிந்திக்க வேண்டும் படியான சொற்றொடர்கள் அமைந்திருக்கின்றன வென்பதே.இஃது ஏறிட்டுரைக்யம் முறையிலன்றிக்கே ஏற்ற முறையில் விவரிக்கப்படுமாறு காண்க. மீமாம்ஸா சாஸ்திரத்தில் விநியோக பநக்த்வம் என்கிற நியாயம் ஈண்டு பெரும் பாலும் அநுஸந்திக்கத் தக்கதாம்.
மதி நிறைந்த நன்னாள் * என்பதற்கு சந்திரன் நிறைந்த நன்னாள் – பரிபூர்ண சுக்ல பக்ஷம் என்பது ஒரு பொருள். மதி – ஞானம்; அது நிறையப் போகிற நல்ல நாள் என்பது உள்ளுறை பொருள். எம்பெருமானார் அவதரித்த நாள் இருள் தரு மா ஞாலத்தவர்களுக்கு ஞானம் நிறைவதற்கு ஹேதுவான நன்னாளன்றோ ? ‘நிறையப் போகிற என்ன வேண்டு மிடத்து (நிறைந்த) என்றது கால வழுவமைதி யென்பர் தமிழர். “ஆசம்ஸாயாம் பூதவச்ச” என்பது வடமொழி வியாகரணம். யதிராஜ ஸப்ததியில் * அநபாய விஷ்ணு பத ஸம்ச்ரயம் பஜே* என்கிற ஸ்லோகத்தினால்-எம்பெருமானார் விலக்ஷண சந்திரனாக ப்ரதிபாதிக்கப் பட்டுள்ளார். அந்த யதிராஜ சந்திரன் தோன்றிய நன்னாள் என்னவுமாம். சித்திரைத் திங்களானது மனிதர்களுக்கு முதல் மாதம். மார்கழித் திங்களானது தேவர்களுக்கு முதல் மாதம் என்னும் பொருத்தமுளது. இது வியாக்கியானங்களிலும் விசதம். ஆகவே, ஸ்வாமியின் அவதாரம் முதல் மாதத்திலென்கிற ப்ரஸித்திக்குக் குறை யில்லை
அநபாய விஷ்ணு பத சம்ஸ்ரயம் பஜே
கலயா கயா அபி கலயா அபி அனுஜ்ஜிதம்
அகளங்க யோகம் அஜடாசய உதிதம்
யதிராஜ சந்த்ரம் உபராக தூரகம் –ராமானுஜர் ஒரு உண்மையான சந்திரன். பௌர்ணமி நிலவு இறைவனின் பாதமாகிய பாதுகாப்பான வானத்தில் நிலை பெற்றுள்ளதால். சந்திரன், இலக்கங்கள் நிறைந்தது (அதாவது 16 கலைகள்), பரிபூரணமாக இருப்பது, குறைபாடுகள் இல்லாதது, இப்போது நீர் ஆதாரங்கள் காரணமாக, கிரகணத்திற்கு உட்பட்டது அல்ல; எனவே ராமானுஜரும் பாதுகாப்பான விஷ்ணு வாசஸ்தலத்தை நாடியுள்ளார், அனைத்து வித்யாக்களிலும் முழு தேர்ச்சி பெற்றவர்,
புலன் இன்பங்களை அனுபவிக்கும் மக்களிடமிருந்து வெகு தொலைவில் உள்ளார். அந்த ராமானுஜரை வணங்குகிறேன்
(பாற்கடலுள் பையத் துயின்ற பரமன்) திருப்பாற்கடலிலே துயின்ற பரம புருஷன் ஷீராப்திநாதன். நம்மாழ்வார் “உனது பாலே போல் சீரில் பழுத்தொழிந்தேன்”என்கிற பாசுரத்தினால் பகவத் குணங்களைப் பாலாகப் பேசினார். அவர் தாமே அக்குணங்களைக் கடலாகவும் பேசினார் “சீர்க்கடலையுள் பொதிந்த” என்ற பாசுரத்தினால். இவற்றுக்குச் சார்பாக “அநந்த குண ஸாகரம் பரஹ்ம” (அனந்தமான குண ஸாகரத்தை யுடையவர்] பரம புருஷர் என்றருளினார் ஸ்ரீ பாஷ்யகாரர். அவ்வளவோடு நில்லாமல் அக் குணங்களையே தமது திவ்ய க்ரந்தங்களில் வாய் வெருவுவதும் செய்கின்றார். ஏவஞ்ச, பகவத் குண ஸாகரத்திலே அஸ்தமிதாந்ய பாவராய் இன்புறும் பரமர் எம்பெருமானாரென்க.
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து” “ஞானங் கனிந்த நலங் கொண்டு”இத்யாதிகளான நூற்றந்தாதிப் பாசுரங்களிற் படியே எம்பெருமானை விட ஓங்கி-அதிசயித்து, உலகத்தை யெல்லாம் ஸ்வாதீனமாக்கிக் கொண்ட உத்தமர் ஸ்ரீராமாநுஜ ரொருவரே. ஒருவர்க்கும் ஒன்றுஞ் சொல்லாதவர் அதமர். நிர்ப்பந்தத்தினால் சொல்லுபவர் மத்யமர். தம்முடைய கருணையினால் தாமே சொல்லுமவர் உத்தமர்.-*ஓராண் வழியா யுபதேசித்தார் முன்னோரென்கிற உபதேச ரத்தின மாலையின் படி உத்தமர் ஸ்ரீராமாநுஜ ரொருவரே யாவர். நூற்றந்தாதியில் மற்றொரு பேறு மதியா தென்கிற பாசுரத்தில் உத்தமனாகவுங் கூறப்பட்டுள்ளார்.
மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக் காள்
உற்றவரே தனக் குற்றவ ராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமா னுசனை யிந் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்றறி யேனொரு பேதைமையே.–57-மாதவன் திருவடிகளை உபாயமாகவும் -உபேயமாகவும்-கொள்ளுமவன் உத்தம அதிகாரி எனப்படுவான் .
எம்பெருமானார் அத்தகைய அதிகாரி ஆதலின் அவரை உத்தமன்-என்கிறார் .
த்வயார்த்த நிஷ்ட்டர் -என்றபடி .கீழ் சொன்ன அதிகாரிகளில் அரங்கனையும் சேர்த்து
உத் புருஷன் உத்தர புருஷன் ஆழ்வார்கள் உத்தம புருஷன் ஆச்சார்யர்கள் என்ற படி.
எம்பெருமானுடைய ஆழியும் சங்கும் சார்ங்கமும் வருவதனால்-“அடையார் கமலத் தலர் மகள் கேள்வன்’‘ என்கிற நூற்றந்தாதிப் பாசுரப்படிக்கும், வவ்ருதே பஞ்சபிராயுதைர் முராரே:” என்கிற யதிராஜ ஸப்ததிப் படிக்கும் பஞ்சாயுதாழ்வார்களின் ப்ராதுர்ப்பாவ விசேஷமான எம்பெருமானார் நினைப்பூட்டப் படுகிறார். ஒன்றும் நீ கை கரவேல்— அருமையாகப் பெற்ற அர்த்த விசேஷங்களை ஒன்றும் ஒளித்திடாமல் வர்ஷித்த மேகம் *இராமாநுச னென்னுஞ் சீர் முகிலே. ஆழி யுள் புக்கு எனற விடத்து “உபநிஷத் துக்தாப்தி மத்யோத் த்ருதாம்’‘ என்கிற ஸ்ரீ பாஷ்யகார திவ்ய ஸூக்தி மிகப் பொருத்தமாக அநுஸந்திக்கத்தகும்.
தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது,வெந் தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின் றானென்ன புண்ணீயனோ!
தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர் முகிலே.–82-சீர் முகில் -என்னும் இராமானுசன் -என்று மாறுக-சீர் -இங்கே வள்ளன்மை குணம்-வள்ளன்மை உடைய முகிலாக சொல்லப் படுபவர் ஸ்ரீ இராமானுசன் -என்க-இன்று கண்டு உயர்ந்தேன் –இராமானுசன் என்னும் கார் தன்னையே -24- காரேய் கருணை இராமானுச -25- திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையால் மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை -26--விசேஷஜ்ஞ்ஞர் அவிசேஷஜ்ஞ்ஞர் என்னும் விபாகம் அற எல்லார்க்கும் பிரகாசித்து இருந்துள்ள குணவத்தா பிரதையை வுடையராய்-குணம் திகழ் கொண்டல் – 60- என்னும்படியே-பரம உதாரரான எம்பெருமானார் என்ன தார்மிகரோ !-கொண்டல் அனைய வண்மை ஏரார் குணத்து எம் இராமானுசன் -74-கார் கொண்ட வண்மை இராமானுச -83-இராமானுசன் –சீர் வெள்ள வாரியை வாய் மடுத்து இன்று உண்டு கொண்டேன் -84–உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் –இராமானுச என் செழும் கொண்டலே -104–
ஆயர் குலத்தினில் தோன்று மணி விளக்கு எம்பெருமானார். இடக் கை வலக் கை யறியாத இடையர்கள் வாழ்ந்த விடம் திருவாய்ப்பாடி. அதில் தோன்றிய அணி விளக்கு ‘ஆயர் பாடிக் கணி விளக்கே!‘ என்று யசோதைப் பிராட்டியா லழைக்கப்படுகிற அச்யுத பாநுவான கண்ண பிரான். ந்ருபசு: என்று ஆளவந்தாரும், வ்ருத்த்யா பசுர் நரவபு : என்று மணவாள மா முனிகளு மருளிச் செய்த படி பசு ப்ராயர்களான அஸ்மதாதிகள் வர்த்திக்குமிடமும் ஆயர் குல மாதலால் இருள் தரு மா ஞாலமாகிற இவ் வாயர் குலத்திலே தோன்றிய அணி விளக்கு-ராமாநுஜ திவாகரர். ”புண்யாம் போஜ விகாஸாய பாப த்வாந்த க்ஷயாய ச, ஸ்ரீமாநாவிரபூத் பூமெள ராமாநுஜ திவாகர “‘ என்னக் கடவதிறே.
”புள்ளரையன் கோயில் வெள்ளை விளி சங்கு’‘ என்பது எம்பெருமானார்க்கு மிகச் சிறந்த ப்ரத்யபிஞாபகம். “பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே” என்றபடி பால் போன்ற நிறத்தது சங்கு; ஸ்வாமி யெம்பெருமானாரும் “துக்தோ தந்வத் தவள மதுரம் சுத்த ஸத்வைக ரூபம் ரூபம் யஸ்ய ஸ்புட யதிதராம் யம் பணிந்த்ராவதாரம்” என்றபடி பால் போன்ற திரு நிறந்தவர். இந்தச் சங்கு எங்கு வாழ்ந்ததென்னில் [புள்ளரையன் கோயில்.] “பூ மருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் கெழ் குழறும் புனலரங்கமே “ என்று பெரியாழ்வார் புள்ளரையன் கோயிலாகக் கூறிய திருவரங்கத்தில் வாழ்ந்தது. சக்கரம் சங்கு என்ற இரண்டு தில்யாயுதங்களில் சக்கரமானது “கருதுமிடம் பொருது” என்ற அருளிச் செயலின் படியே காசீ விப்லோஷாதி நாநா கார்ய விசேஷங்களுக்காக பாஹ்ய ஸஞ்சாரங்கள் செய்து கொண்டே யிருக்கும். திருச் சங்கு அப்படி யன்றியே “உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம், கண் படை கொள்ளல் கடல் வண்ணன் கைத் தலத்தே” என்னும்படி யிருக்கும். ஸ்வாமி தாமும் “யாவச் சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ” [சரணாகதி கத்யே] என்ற ஸ்ரீரங்கநாதன் கட்டளையைப் பெற்றுக் கோயிலே கதியா யிருந்தவர். ஆகவே ‘கோயில் சங்கு ‘ என்றது ஸ்வாமி யெம்பெரு மானார்க்கு மிகப் பொருத்தம்.
[கலந்து பேசின பேச்சரவம்.] பூர்வாசார்ய ஸூக்திகளோடே கலந்திருக்கும்படி [அவற்றுக்கு முரண்படாதபடி) ஸ்ரீஸூக்தி யருளிச் செய்தவர் ஸ்ரீராமாநுஜர் என்பது இவருடைய திவ்ய ஸூக்தியினால் ஸித்தம். ஸ்ரீபாஷ்யம் தொடங்கும் போதே “பகவத் போதாயந க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்திம் பூர்வாசார்யாஸ் ஸஞ்சி பு:; தந்மதாது ஸாரேண ஸூத்ராக்ஷராணி வ்யாக்க்யாஸ் யந்தே” என்றருளிச் செய்தவர் ஸ்வாமி யொருவரே யன்றோ. அன்றியும் கலந்து பேசுவதாவது வட மொழி தென் மொழிகளைக் கலந்து மணி ப்ரவாளமாகப் பேசுவது. இத்தகைய கரந்தம் முதன் முதலாகத் திருவாறாயிரப்படியே தோன்றியது. அது பிள்ளானருளியதாயினும் “எதிராசர் பேரருளால்” என்று மணவாள மாமுனிகளருளிச் செய்தபடியே ஸ்வாமி கற்பித்த நடையே யாம் அது. ஆகவே இரு மொழிகளைக் கலந்து பேசின பேச்சுக்கு நிதான பூதர் ஸ்வாமி யென்று குறிப்பிட்டவாறு.
”மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து”என்றதில் ஸ்வாமியின் ப்ரபாவமே நன்கு ஸ்புரிக்கும். “அர்வாஞ்சோ யத் பத ஸரஸிஜ த்வந்த்வ மாச்ரித்ய, பூர்வே மூர்த்நா யஸ்யாந்வய முபகதா தேசிகா முக்தி மாபு’ என்ற பட்டர் ஸ்ரீ ஸூக்திப் படிக்கும், “பாத கோடீராஸ் ஸம்பந்தேந ஸமித்யமா ந விபவாங் என்ற நிகமாந்த மகா குரு ஸூக்திப் படிக்கும் திருவடி ஸம் பந்தத்தாலே பின்னோர்களையும் திருமுடி ஸம்பந்தத்தாலே முன்னோர்களையும் வாழ் வித்தவர் ஸ்வாமி யெம்பெருமானார்.மிக்குள்ள பிள்ளைக ளென்றது ஸ்வாமிக்கும் பூஜ்யர்களாயிருந்த பூருவர்களை. அவர்களைப் போகாமல் காந்து என்றது தாம் அவதரித்து அவர்களை நற் கதி யெய்துவித்த படியைக் காட்டுமதாம்.
[மணிக் கதவம் தாள் திறவாய்] மணி யென்று ரத்னத்திற்குப் பெயர். நவ ரத்னங்களாகையாலே ஒன்பது என்கிற ஸங்க்யை ஸூசிதமாகிறது. கதவு என்பது ப்தார்த்தங்களைச் சேமித்து வைப்பது. ஸ்வாமியினுடைய திவ்ய க்ரந்தங்களே இங்குக் கதவென்பன. ஸ்வாமி யருளிச் செய்தவை ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதார்த்த ஸங்க்ரஹம்,கீதா பாஷ்யம், சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம். நித்யம் என்று ஒன்பது திவ்ய க்ரந்தங்களாகையாலே அவையே இங்கு மணிக் கதவமெனப் படுகிறது. அவற்றைத் திறக்க வேணுமென்றது- அவற்றிலுள்ள அர்த்த விசேஷங்கள் எங்களுக்கும் நிலமாம்படி விளக்கி யருள வேணு மென்றபடி.
*நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்? அருங்கலமே! என்ற இரண்டு விளிகளிலும் ஸ்வாமியின் ப்ரத்யபிஞை நன்கு உண்டாகும். நோற்று என்றது மஹாபாக்ய வசத்தாலே என்றபடி. ஸுவர்க்கம் புகுகின்ற –ஸுவர்க்கமென்று ஸமூஹத்திற்குப் பெயர் ; ஒரு வகுப்பு என்றபடி. ( ) என்பதனால் மிகச்சிறந்த வகுப்பு என்றதாகும். யாதவ பரகாசரிடத்திலே வாசித்துக் கொண்டிருந்து அவர் சாயையிலே ஒதுங்கி யிருந்த ஸ்வாமி அவருடைய கருத்தின் படியே ஆபத்துக்களை யடைந்து போகாமல் நம் போல்வர்களின் பாக்ய வசத்தாலே பெருந்தேவி மணவாளனான பேரருளாளனது பரம க்ருபைக்கு இலக்காகி ஸ்ரீ வைஷ்ணவ வகுப்பிலே புகுந்து அனைவர்க்கும் தாயாயிருந்தவர்.சுவர்க்கம் என்பதற்கு ஸ்வர்க்கமென்றே பொருளானாலும் “யஸ் த்வயா ஸஹஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா” என்ற ஸ்ரீராமாயணத்தின் படி எம்பெருமானோடு கூடப் பெற்றவ ரென்றதாகும். ஸித்தாச்ரமத்தில் நின்றும் வருகிறோமென்று சொல்லிக் கொண்டு வந்த வேடனும் வேடுவிச்சியுமான பகவத் தம்பதிகளோடே கூடப் பெற்றமை கூறினபடி. அருங்கலமேt என்றது அருமை பெருமை வாய்ந்த ஆபரணமே! என்றும், உத்தம ஸத் பாத்ரமே! என்றும் பொருள்படும். நம்முடைய குரு பரம்பரையிலே மஹா பூஷணமாக விளங்குமவர் ஸ்வாமி. “தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதிச பதம் பாதி நாந் யத்ர”என்னும்படிக்குப் பொருத்தமாக உத்தம ஸத் பாத்ரமாயும் விளங்குமவர்.
இப் பாசுரத்தில் கற்றுக் கறவை யென்று தொடங்கி கோவலர் தம் பொற்கொடியே!என்னுமளவுமுள்ள விளி பூர்த்தியாக எம்பெருமானார் தன்மையையே தெரிவிக்குமதாயிருக்கும். கற்று – சொல்லார் தமிழொரு மூன்றும், சுருதிகள் நான்குமெல்லை யில்லா வற நெறியாவும் தெரிந்தவன்? என்ற நூற்றந்தாதிப் பாசுரப்படியே எல்லாக் கல்விகளையும் கற்று; [கறவைக் கணங்கள் பல கறந்து)-பஞ்சாசார்ய பதாச்ரித: என்று யதிராஜ வைபவத்தில் கூறியுள்ளதை விவரிக்கிறபடி. “கலாமங்கேஷு திஷ்டந்தி புவநாநி சதுர்தச” என்கிறபடியே கோக்கள் பதினான்கு லோகங்களையும் தம்முள் வஹிக்குமா போலே சதுர்தச வித்யைகளையும் தம்முட்கொண்டு நன்றாகக் கறக்கு மாசாரியர்கள் பலரிடத்திலும் ஸ்த் ஸம்ப்ரதாயார்த்தங்கள் கேட்டு உய்ந்தவர் ஸ்வாமி. பெரிய நம்பி பக்கலிலே பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்று மந்த்ரார்த்தங்கள் கேட்டும், பெரிய திருமலை நம்பி பக்கலிலே ஸ்ரீராமாயணார்த்தம் கேட்டும் திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே ரஹஸ்யார்த்தங்கள் சிக்ஷித்தும், திருமாலை யாண்டான் பக்கலிலே திருவாய்மொழிப் பொருள் கேட்டும், ஆளவந்தாராழ்வார் ஸ்ரீபாதத்திலே அருளிச்செயல் கற்றும் நல்வார்த்தைகள் கேட்டும் போந்தவராகையாலே கறவைக் கணங்கள் பலகறந் தென்றது ஸ்வாமிக்கு மிகப் பொருத்தம். அதற்கு மேல் செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்] எம்பெருமானை நிர்க் குணனென்றும் நிர் விபூதிகனென்றும் நிர் லக்ஷ்மீகனென்றும் திவ்ய மங்கள விக்ரஹ சூந்யனென்றும் சொல்லுமவர்கள்-செற்றார்; அவர்களுடைய நிறலழிய வாக்கு மிடுக்குத் தொலையும் படியாக, திசை தொறு மெழுந்தருளி வாதப் போர் நிகழ்த்தியவர் ஸ்வாமி “விப்ரம் நிர்ஜித்ய வாதத ” என்கிறபடியே இது குற்றமாகை யன்றிக்கே ஸித்தாந்த ரக்ஷணார்த்தமாகச் செய்ததாகையாலே நற்றமே யாயிற்றென்று காட்ட“குற்றமொன்றில்லாத என்றது. கோ என்னும் வடசொல் நாநார்த்தமாகையாலே ஸ்ரீ ஸூக்தியையும் சொல்லக் கடவது; “யத் கோ ஸஹஸ்ர மபஹந்தி தமாம்ஸி பும்ஸாம் ” என்ற விடத்திலுமிது காணலாம். கோ வல்லவர் –மஹா வித்வான்கள். அவர் தம் பொற் கொடி –ஸ்வாமி. கோ அ(ல்)லர்-ஸ்வதந்திரரல்லர்.
ஸ்வாமியின் திருவவதார ஸ்தலமான ஸ்ரீபெரும் பூதூரில் இரட்டித்து ஸேவிக்கும் பாசுரமிது-.பூருவாசாரியர்களும் தங்கள் வியாக்கியானங்களின் முடிவிலே
எம் பெருமானாரை ப்ரஸ்தாவித்திருக்கும் பாசுரமுமிது. இங்கு இவ்வளவே நாமெழுதப் போதும். ஆயினும் சிறிது விவரிக்கலாகிறது. இப் பாட்டில் நற் செல்வனென்றது ஸ்வாமியைக் கருதி.நற் செல்வ னென்பதை வடமொழியிற் கூற வேணுமானால் லக்ஷ்மி ஸம்பந்ந: என்ன வேணும். ஸ்ரீராமாயணத்தில் *லக்ஷ்மண லக்ஷ்மிஸம்பந்த:* என்னப்பட்ட இளைய பெருமாளே யன்றோ இளையாழ்வாராகத் திருவதரித்தவர் . அவர் ”அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” என்று விபவாவதாரத்திலே அடிமை செய்யப் பெற்றார் ; இவர் “நித்ய கிங்கரோ பவாநி” என்று அர்ச்சா ஸ்தலங்களிலே ஒப்புயர்வற்ற அடிமைகள் செய்யப் பெற்றார். “மன்னிய தென்னரங்கா புரி மா மலை மற்று முவந்திடு நாள்
இப் பாட்டில் கள்ளத் தவிர்ந்து கலந்தென்றது உயிரான சொற்றொடர். ‘‘கிம்
தேந ந க்ருதம் பாபம் சோரேணாத்மாப ஹாரிணா” என்றபடி ஆத்மாபஹாரக்
கள்வமென்றுண்டு; அது தவிர மற்றொரு கள்வம் கேண்மின்; “ஏகஸ் ஸ்வாது ந
புஞ்ஜீத புஞ்ஜீத பஹுபிஸ் ஸஹ “‘இன் கனி தனி யருந்தான்” என்கிறபடியே
போக்ய பதார்த்தங்களைப் பலரோடுங்கூடி யநுபவித்துக் களிக்கை யன்றிக்கே அசலறியாதபடி யனுபவிக்கை கள்வம்; எம்பெருமானார்க்கு முற்பட்ட ஆசாரியர்களிடத்து இத்தகைய கள்வமிருந்தது; அதனைத் தவிர்ந்தவர் ஸ்வாமி யொருவரே–தவிர்ந்து எல்லாரோடுங் கலந்து அனுபவித்தவர். “பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம் புக்கார் “ என்றதும் ஸ்வாமியின் பெருமையை நினைப்பூட்டும். பாவைக்களமென்பது கால க்ஷேப மண்டபம்; அதில் எல்லாரும் புகப் பெற்றது ஸ்வாமிக்கு முன்பு இல்லை; அதிகார பரீக்ஷை பண்ணிப் பலர் விலக்கப் பட்டிருந்தார்களன்றோ-ஆசைக்கு மேற்பட அதிகார ஸம்பத்தி யில்லை யென்று கொண்ட ஸ்வாமியின்காலத்தில் தான் பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம் புக்கார். அதனை நன்கு காட்டின படி.
இப் பாட்டில் “செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின” என்பதில் ஸ்வாமியின் திவ்ய ப்ரபாவமொன்று நினைவுக்கு வரும். ஸ்வாமி யாதவ ப்ரகாச ரிடத்திலே பூர்வபக்ஷ வேதாந்தம் வாசித்தபோது ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம ‘ஐத தாத்ம்ய மிதம் ஸர்வம் ‘தத் த்வமஸி இத்யாதி ஸ்ருதி வாக்யங்களுக்கு அவர் அபார்த்தம் கூற, ஸ்வாமி இப்படி யன்றோ பொருள்’ என்று உபபந்நமான அர்த்த மருளிச் செய்ய, மேல் வாய் திறக்க மாட்டாதே ஹுங்காரமே பண்ணிப் போந்ததாக வைபவ நூல்கள் விளம்புகின்றன. அது இங்கு நினைவுக்கு வரும். ஸ்வாமி திருவாய் மலர்ந்தருளியது செங்கழுநீர் வாய் நெகிழ்ந்தமை; யாதவர் மறு மாற்றம் சொல்ல மாட்டாமே வாய் மூடிக் கிடந்தது ஆம்பல் வாய் கூம்பினமை. மேலே *செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர் தங்கள் திருக் கோயில் சங்கிடுவான் போகின்றார்” என்றதும் ஸ்வாமிக்கு மிகப் பொருத்தம். செங்கல் பொடிக் கூறை=*காஷா
யேண க்ருஹீத பீத வஸநா* என்று ஸப்ததியில் போற்றப்பட்ட திவ்ய மூர்த்தி. வெண் பல்=*அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே . என்னும்படி மஹா விரக்த ஸார்வ பெளமராகையாலே “யத் தஸ்மை திஷ்ட தேந்ய: க்ருபணமசரணோ தர்சயந் தந்தபங்க் தீ” என்னும்படி பிறர் பாடே பல்லைக் காட்டப் பெறாதவர். தவத் தவர் மம . மம என்னாதே ‘தவ, தவ’ என்று சேஷத்வம் பரிமளிக்க நிற்பவர். தங்கள் திருக் கோயில்= அமுதனாருடைய ஆதீனத்தி லிருந்த கோயில் தங்கள் திருக் கோயிலென்னும்படி தம்மதீனமாகப் பெற்றவர். சங்கிடுவான்—’சங்க:’ என்ற வடமொழி சங்கு என்று திரிவது போல் சங்கு:’ என்ற வடமொழியும் சங்கு எனத் திரியும். இச்சொல் திறவு கோல் என்னும் பொருளைத் தரும். ஆறாயிரப்படியில் இப் பொருளும் பணிக்கப் பெற்றது . ஆழ்வான் மூல மாகத் திருக் கோயில் திறவு கோலைப் பெற்ற இதிஹாஸம் இச் சொற்றொடரில் அநு ஸந்திக்கலாகிறது.
இப் பாட்டில் “உனக்கென்ன வேறுடையை” என்னுஞ் சொற்றொடர் நிதியானது. உமக்கு மட்டும் அஸாதாரணமான பெருமை என்னே! என்று வியந்து கூறப் பட்டுள்ளது. ஸ்வாமிக்கு முன்னே நம்மாழ்வாரும் ஸ்ரீமந் நாதமுனிகளும் ஆளவந்தாரும் நம் தர்சனத்திற்கு நிர்வாஹகர்களா யிருக்கச் செய்தேயும், ‘நம்மாழ்வார் தரிசனம்’ என்றோ, ‘நாதமுனிகள் தரிசனம்’ என்றே ‘ஆளவந்தார் தரிசனம் என்றோ வ்யவஹாரம் வாராமே ‘எம்பெருமானார் தரிசனம்’ என்றே வ்யவஹாரம் நிகழ்ந்து வருகைக்கீடான ஸ்வாமியின் அஸாதாரணமான பெருமை இங்கு அநு ஸந்திக்க வரியது. மாற்றாரை மாற்றழிக்க வல்லானென்ற விடத்தில் பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹநச் சார்வாக சைலாசநி: பெளத்த த்வாந்த நிராஸ வாஸர பதிர் ஜைநேப கண்டீரவ:, மாயாவதி புஜங்க பங்க கருட:” * தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும்…… நீசரும் மாண்டனர்* “சாறுவாக மத நீறு செய்து” இத்யாதிகள் நினைவுக்கு வரும்.
யதிராஜஸப்ததியில் ” அமுநா தபநாதிசாயி பூம்நா யதிராஜேந நிபத்தநாயகஸ்ரீ :, மஹதீ குருபங்க்திஹாரயஷ்டி” என்று பணித்தபடியே நம்முடைய குருபரம்பரா ஹாரத்தில் நாயகமணியாய் விளங்குமவர் ஸ்வாமி. [நந்தகோபன்]]தனக்கு ஒளரஸ புத்திரனில்லாமல் ஆயர் புத்திரனல்லன் அருந்தெய்வம் “ என்னப்பட்டவொரு தெய்வத்தைப் புதல்வனாகக் கொண்ட நந்தகோபன் போலே ஸ்வாமியும் ‘யதிராஜ ஸம்பத் குமாரா !’ என்னும்படி செல்லப் பிள்ளையைத் தம்புத்திரராகப்பெற்றவர். (உடைய] உடையவரென்கிற திருநாமம் ஸுசிதமாகிறதென்று கொள்ளக்குறையில்லை. (கோயில் காப்பான்] •ஸ்ரீமந்! ஸ்ரீரங்கச்ரிய மநுபத்ரவாமநுதிநம் ஸம்வர்த்தய என்னும்படி ஸ்ரீரங்க ஸ்ரீயைக்காத்தருளினவர் ஸ்வாமி. (கொடித்தோன்றும் தோரணவாசல் காப்பான்] “உபய வி பூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷிக்தா!” என்பது ஸ்வாமிக்குக் கட்டியம். கீழ் கோயில் காப்பானே ‘ என்பதனால் லீலா விபூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் சொல்லிற்று, இங்கு நித்ய விபூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம்
சொல்லுகிறது. ”கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர்” “நெடுவரைத்தோரணம் நிறைத்து எங்கும் தொழுதனருலகே” என்னும்படி கொடித் தோன்றும்தோரண வாசல் நித்ய விபூதிவாசல்; அதையும் பிறர்புகாதபடிகாத்தருள்பவர்ஸ்வாமி.
அம்பரத்தையும் தண்ணீரையும் சோற்றையும் அறம் செய்தவர் ஸ்வாமி.
”அம்பரம் வ்யோம வஸ்த்ரயோ என்றநிகண்டின்படி அம்பரமாவது ஆகாசம்;
பரமாகாச மெனப்படுகிற பரமபதம். அதையும், விரஜையாகிற தண்ணீரையும்,
அந்நம் ப்ரஹ்மேதி வ்யஜாநாத் என்று உபநிஷத்தில் அன்னமாகச் சொல்லப்
பட்ட பரப்ரஹ்மாநுபவத்தையும், அறஞ்செய்யுமெம்பெருமான்-க்ருபாமா த்ரப்ரஸந்நா
சார்யராய் உபகரித்தருளினவர் எம்பெருமானார். மேலே” அம்பர மூடறுத்து
ஓங்கியுலகளந்த வும்பர் கோமான்” என்றதும் எம்பெருமானாரை நன்கு நினைப்
பூட்டும். ஆளவந்தாருடைய சரம திருமேனியை ஸ்வாமி ஸேவிக்கப்பெற்றபோது
“ஆளவந்தாரோடே நான் சேர்ந்து வாழப்பெறில் பரமபதத்திற்குப் படிகட்டி
யிருப்பேனே!” என்று ஸ்வாமி பணித்ததாக ப்ரஸித்தி. ஆளவந்தாரோடே
சேர்ந்துவாழப் பெறாமற் போனாலும் *யத்பதாம் போருஹ த்யாந ஸ்லோகப்படியும்
“ஏகலவ்யனன்றோ நான்” என்ற ஸூக்திப்படியும் அவருடைய விலக்ஷணாநுக்ரஹ
பாத்ரமாயிருக்கப் பெற்ற பெருமையினால் நித்யவிபூதிக்கும் லீலாவிபூதிக்கும்
இடைச்சுவர் தள்ள உபய விபூதியையும் ஓரு போகி யாக்கினவர் நம் ஸ்வாமி
யென்று ப்ரஸித்தமாயிற்று. “மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தங்
காண்மினே” என்ற விடத்தே வியாக்கியானத்தில் உபய விபூதிக்கும் இடைச் சுவர்
தள்ளின பெருமை பட்டருடையதாக அருளிச் செய்யப்பட்டிருந்தாலும் அப் பெருமை ஸ்வாமிக்கு கிம்புநர் ந்யாய ஸித்தமே. அம்பரத்தை- பரமாகாசத்தை,ஊடறுத்தவர் என்றதாயிற்று.
இப் பாசுரம் மூலமாகவே ஸ்வாமிக்குத் திருப்பாவை ஜீயரென்று வ்யபதேச முண்டாயிற்றென்றும் ப்ரஸித்தமாதலால் இங்கு நாம் வேறு எதுவும் விவரிக்க வேண்டிற்றிலை. ஆனாலும் கீழும் மேலுமுள்ள விவரணங்களுக்குச் சேர இங்கு மொன்றுரைப்போம். கந்தங்கமழுங்குழ ! என்று கேச பாசத்தை யிட்டுச் சொன்னது ஸ்வாமியின் திருவுள்ளத்திற்கு மிகவுகப்பான ஸம்போதனமாம். மதாந்தரஸ்தர்களான யதிகள் சிகையை வஹியாதே முண்டனம் செய்து போருவர்கள்;அங்ஙனன்றிக்கே “காரிசுதன் கழல் சூடிய முடியும் கன நற்சிகை முடியும் “ என்றும்
“கமநீய சிகாநிவேசம்” என்றும் ”சிகயா சேகரிணம் பதிம் யதீநாம்” என்றும் நம் முதலிகள் உள் குழைந்து பேசும்படி கமநீய சிகா பந்தத்தோடு ஸ்வாமி ஸேவை
ஸாதித்த வழகு நெஞ்சு குளிர அனுபவிக்கப்பட்டதாயிற்று.
திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே எம்பெருமானார் பதினெட்டு பர்யாயம்
எழுந்தருளி ரஹஸ்யார்த்த விசேஷம் பெற்று அவ்விடத்திலேயே அதைச்சிலர்க்கு உபதேசித்தருளின இதிஹாஸம் இப்பாட்டில் நன்கு ஸூசிதமாகிறது
தோரண விளக்கு, குத்துவிளக்கு என்று இருவிளக்குண்டு. தோரணவிளக்கு
ஸ்தாவரமாயிருக்கும். குத்துவிளக்கு ஜங்கமமாயிருக்கும். ஸ்வஸ்தானத்திலேயே ஸ்தாவரராகவிருந்த திருக்கோட்டியூர் நம்பி தோரண விளக்காவார். பலகால் கதாகதம் செய்தருளின எம்பெருமானார் குத்துவிளக்காவர். இந்தகுத்துவிளக்கு எரிய நம்பிபக்கலிலே அர்த்தவிசேஷம் கேட்டு ஜ்வலிக்கஎன்றபடி. [கோட்டு] “ஏகதேச விக்ருதம் அநந்யவத் பவதி” என்கிற வடமொழி வியாகரண முறையின்படி கோட்டி என்றதாகக் கொள்க. கோஷ்டீ என்னும் வட சொல் கோட்டியென்று தானே திரியும். திருக்கோட்டியூரென்றதாயிற்று. இவ்விடத்திலேயே [கால் கட்டு] ரஹஸ்யார்த்த முபதேசித்தருளா நின்ற நம்பிகள் தம் திருவடியைத் தொட்டு சபதம் செய்து கொடுக்கும்படி நியமித்தாரன்றே;அந்த கால் கட்டு ஸூசிதமாகிறது. (மேலேறி] ஏற்கெனவே தம்மை அநுவர்த்தித்துக் கொண்டிருந்த சில விலக்ஷணர்களுக்கு உபதேசிக்கத் திருவுள்ளம் பற்றிய ஸ்வாமி ஸன்னிதியின் மேல் தளத்தி லேறின படியைக் காட்டுகிறது. இப்படி ஆசார்ய திவ்யாஜ்ஞையைக் கடந்து உபதேசித்திருப்பரோ சாஸ்த்ர வச்யரான ஸ்வாமி? என்கிற சங்கைக்குப் பரிஹாரம் செய்கிறது [மலர் மார்பா!) என்னும் விளி. ஸ்வாமியினுடைய ஹ்ருதய வைசால்யமே அதற்குக் காரணமென்று காட்டினபடி. மலர்ந்த ஹ்ருதய முடையவரே! என்று விளித்தபடி.
இப்பாட்டில் ‘செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பங்கொடுக்கும் விமலா! என்னும் விளிகள் ஸ்வாமிக்கு மிகவும் ஏற்றிருப்பவை. வடமொழியில் ஆர்ஐவமெனப்படும் குணம் தமிழில் செப்பமெனப்படும். மநோ வாக் காயங்களின் ஒற்றுமையாகிற கரண த்ரய ஸாரூப்யமே ஆர்ஜவம்; அது தான் செப்பம். ஸ்வாமியினுடைய திவ்ய ஸ்ரீஸூக்திகளை ஸேவிக்கும் போது ஒவ்வோரக்ஷரமும் அவருடைய ஆர்ஜவத்தை யன்றோ தெரிவிக்கின்றது! பர நிந்தை முதலியவற்றை நெஞ்சாலும் நினையாமலும் வாக்கிலும் காட்டாமலுமிருந்த
பெருமை ஸ்வாமிக்கும் ஸ்வாமியின் புநரவதார பூதரான மணவாள மா முனிகளுக்கும் அஸாதாரணமன்றோ. [திறலுடையாய்!] திறலாவது பராபிபவந ஸாமர்த்தியம்.நீறு பூத்த நெருப்புப் போலே யிருந்து இதர வாதிகளின் துர் வாதங்கள் தலையெடுக்க வொட்டாதபடி செய்தருளுமாற்றலும் ஸ்வாமிக்கு அஸாதாரணம்.
[செற்ர்க்கு வெப்பம் கொடுக்குப்] செற்றாராகிறார் எம்பெருமானுடைய பெருமையை ஸஹியாதே “குணிநமபி குணைஸ் தம் தரித்ராணம் – ஆஹு” என்ற பட்டர் ஸ்ரீ ஸூக்திப்படியே அப்பெருமானை ஸர்வ தரித்ரனாகப் பேசி வைத்தவர்கள்;அவர்களுக்கு வெப்பம் கொடுத்தவர் ஸ்வாமி. வெப்பமாவது ஜ்வரம். பீதி ஜ்வரம். ‘தஸ்மை ராமாநுஜார்யாய நம : பரம யோகிநே, ய: ஸ்ருதி ஸ்ம்ருதித்ராணாம் அந்தர் ஜ்வரமசீசமத்’ என்று ஸ்வாமி ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ரங்களுக்கிருந்த அந்தர் ஜ்வரத்தைப் போக்கடித்ததாகச் சொல்லிற்று. அதை எங்கே போகவிட்டார் தெரியுமோ? செற்றருடைய உள்ளத்திலே போக விட்டாராயிற்று. திருவடி இலங்கையைக் கொளுத்தினாரே, எந்த நெருப்பைக் கொண்டு கொளுத்தினாரென்று கேட்க, வாலில் அரக்கர் பற்றவைத்த நெருப்பினால் என்றார்களாம்; அன்று அன்று; சோகவஹ்ம் ஜநகாத்மஜாயா : ஆதாய தேநைவததாஹ லங்காம்’ என்று பிராட்டி திரு வயிற்றிலே மண்டிக் கிடந்த சோகாக்னியை அங்கு நின்றும் கிளப்பி அதனாலேயே இலங்கையைக் கொளுத்தினா ரென்றார் மர்மஜ்ஞர். அது போலவே யிங்கும். ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூத்ரங்களின் அந்தர் ஜ்வரத்தை யெடுத்துச் செற்றார் வயிற்றி லெறிந்தபடி.
“வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான்” என்னும் போது ஸ்வாமியின் பெருமை தவிர வேறு எதுவும் நினைவுக்கு வாராது. ஸ்வாமிக்கு முன்பிருந்த ஆசார்யர்களை யெடுத்துக் கொண்டு அவர்களுக்கு எத்தனை சிஷ்யர்கள்? என்று கேட்டால் இருவர் மூவர் நால்வர் ஐவர் என்ன வேண்டுமத்தனை;ஸ்வாமியின் சிஷ்ய வர்க்கங்களைப் பற்றிக் கேட்டாலோ “ஏகாந்திபிர் த்வாதசபிஸ் ஸஹஸ்ரை: ஸம் ஸேவிதஸ் ஸம்யமி ஸப்த சத்யா” என்று உடனிருந்தவர்கள் பேசும்படியாயிருக்கும் அன்றியும், மஹா ஜ்ஞான நிதிகளாகத் தேர்ந்தெடுத்து எழுபத்து நான்கு ஸிம்ஹாஸநாதிபதிகளென்று ஸ்தாபிக்கப் பட்டுள்ளார்கள்.அவர்கள் தாம் எப்படிப்பட்டவர்களென்னில்; [ஏற்ற கலங்கள்] ஆசார்ய ஸார்வ பெளமர்க்கு ஏற்றிருக்குந் தன்மையை யுடைய ஸத்பாத்ர பூதர்களான ஸச் சிஷ்யர்கள். பின்னையும் எப்படிப்பட்டவர்களென்னில்; (எதிர் பொங்கி மீதளிப்ப] “சிஷ்யாதிச்சேத் பராஜயம்” என்னும்படி ஆசார்யரையும் விஞ்சினவர்களா யிருப்பர்கள்.காச்மீரத்தில் சாரதா பீடத்தில் ஸ்வாமியும் ஆழ்வானும் போதாயந விருத்தியைக் கடாக்ஷியா நிற்க அதற்கு இடையூறு விளைந்த போது ‘க்ரந்தத்தைப் பூர்த்தியாகப் பார்க்க முடிய வில்லையே!) என்று ஸ்வாமி க்லேசிக்க, அந்த வருத்தி கரந்தத்தைப்பூர்த்தியாகக் கடாக்ஷித்து அத்தனையும் ஹ்ருதி தரித்துக் கொண்டிருந்த ஆழ்வான் “இங்கே விண்ணப்பஞ் செய்யவோ? இரண்டாற்றின் நடுவே விண்ணப்பஞ் செய்யவோ ‘ என்று பணித்தாரென்று ப்ரஸித்தம். இப்படியே யன்றோ மேன் மேலுமுள்ள சிஷ்ய வர்க்கங்களின் சரித்திரமும். அவர்கள் இன்னமும் எப்படிப் பட்டவர்களென்னில்;[மாற்றாதே பால் சொரியும்] அவ்வாசாரியர்களின் பரம்பரை பெரும்பாலும் அநுஸ்யூதமாக நிகழ்ந்து வந்து பால் போன்ற அர்த்த விசேஷங்களைச் சொரிந்து கொண்டிருக்கும்படி சொன்னவாறு. இத்தகைய வள்ளல் பெரும் பசுக்களை ஆற்றப் படைத்தவர் ஸ்வாமி. ஆற்ற அபரிமிதமாக. மேலே”‘மாற்றாருனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்” என்றவிடத்து யாதவ ப்ரகாசர் வந்து பணிந்த விருத்தாந்தம் மிகப் பொருத்தம்.
திங்களுமாதித்தியனு மெழுந்தாற் போல் அங்கணிரண்டுங் கொண்டு ” என்றதில் ஸ்வாமியினுடைய உபய வேதாந்த க்ரந்த ப்ரவசநபடுத்வம் பேசப்படுகிறது. திங்களும் ஆதித்தியனும் ஏக காலத்தில் எழுவது அஸம்பாவிதம். ஆதித்யனெழும் போது தீக்ஷ்ணதையும், திங்கள் எழும் போது தண்ணளியும் அநுபவிக்கலாயிருக்கும்.உபய வேதாந்த ப்ரவர்த்தகரான ஸ்வாமி காலை வேளைகளில் ஸ்ரீபாஷ்ய காலஷேபம் ஸாதிப்பதும், மாலை வேளைகளில் அருளிச்செயல் [பகவத்விஷய ] கால ஷேபம் ஸாதிப்பது மாயிருப்பவர். மதாந்தர ப்ரத்யாக்க்யாந தத் பரமான ஸ்ரீபாஷ்யத்தின் அர்த்தங்கள் அநுபவிக்கப்படும் போது தீஷ்ணதையும், செவிக்கினிய செஞ்சொல்* சீர் கலந்த சொல் ஈரச் சொல்.* என்ன நின்ற அருளிச் செயல்களின் அர்த்தங்கள் அநுபவிக்கப்படும் போது ஸெளம்யதையும் காணலாயிருக்கும். இரண்டிலுமிரண்டு முண்டானாலும், “இப்படிச் சொல்லுகிறதும் ஊற்றத்தைப் பற்ற” என்ற ஸ்ரீவசந பூஷண ப்ரக்ரியையிலே கொள்ளக் கடவது. மேலே அங்கணிரண்டுங் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல், என்ற விடத்திலும் உபய வேதாந்தப் பொருள்களையும் எங்களுக்குக் கடாக்ஷித் தருள வேணுமென்ற பிரார்த்தனை யுள்ளது. “சஷுஷ்மத்தாது சாஸ்த்ரேண” என்றபடி கண்ணென்பது சாஸ்த்ரமேயாம். உபய வேதாந்தங்களும் ஸ்வாமிக்கு இரண்டு திருக் கண்களென்க. ஒன்றில் ஆதரமும் மற்றொன்றில் அநாதரமும் கொண்டிருக்கையே சாபமாகும். அது தொலைய வேணுமென்றவாறு. ஸ்வாமி பக்கலிலே சிஷ்யர்கள் பிரார்த்திப்பது இது.இதற்கு மலையும் முழஞ்சும் விலக்ஷணமாயிருக்கும். முந்நூறாண்டு வேதமோ தின பரத்வாஜ மஹர்ஷிக்கு தேவேந்திரன் வேதங்களை மலையாகக் காட்டினனென்று வேதமே சொல்லுகையாலே வேதமே மலையாகக் கொள்ள வுரியது. அதில் முழஞ்சாவது தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயாம்* என்னும்படி தர்ம க்ஷ்மங்கள் பொதிந்திருக்குமிடம், அதிலே மன்னிக் கிடந்து லௌகிக விஷயங்களில் திருக் கண் செலுத்தாதே* ஆத்மயேவ ஆத்மாநம் பச்யந் ஸுகித்திருப்பவர் ஸ்வாமி-(அறிவுற்று.) ‘நாம் அவதரித்தது எதற்காக?’ என்று தம் அவதார ப்ரயோஜனத்தைக் குறிக் கொண்டு என்றபடி-“அமர கோச” தீ விழித்து- புத்திர் மநீஷா திஷணா தீ:என்றவிடத்து புத்தி பர்யாயமாகப் படிக்கப்பட்ட கடாக்ஷமே என்பது இங்குத் தீ யென நிற்கின்றது. அது விழித்கிருப்பது-விகஸித்திருப்பது ஸ்வாமிக்கே யென்க-[எப்பாடும் பேர்ந்து உதறி] ஸ்ரீரங்கம் கரிசைல மஞ்ஜந கிரிம் தார்க்ஷ்யா த்ரிஸிம்ஹாசலௌ ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம். ஸ்ரீமத் த்வாராவதீ ப்ரயாக மதுரா யோ த்யா கயா புஷ்கரம் ‘ஸாளக்ராம கிரிம் நிஷேவ்ய ரமதே ராமாநுஜோயம் முநி- என்கிறபடியே எண்டிசையும் பாத சாரத்தாலே ஸஞ்சரித்து,ஆங்காங்கு விபக்ஷர்களுண்டாகில் அவர்களை உதறி யருளினவர் ஸ்வாமி.
”அறிவுற்றுத் தீ விழித்து வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்துமுழங்கிப் புறப்படும் சீரிய சிங்கம்” நம் யதி ஸார்வபெளம ஸிம்ஹம் தவிர வேறுண்டோ? நூற்றந்தாதியில் “கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமானொலி மிக்க பாடலை யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயமிராமாநுசன்” என்று சீரிய சிங்கமாகச் சொல்லப்பட்டவர் ஸ்வாமி. உலகில் சிங்கம் ஹேயமான வுணவை யுண்டு செருக்கியிருக்கும்; யதிராஜ ஸிம்ஹம் திருமங்கையாழ்வா ருடைய திவ்ய ஸூக்திகளை யுண்டு அதனால் தடித்திருக்கு மென்கிறார் அமுதனார்.
இதில் “வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி” என்றதை உயிராகக் கொள்க. “கொல்வது கோல்’ என்னுமாபோலே வெல்வது வேல் எனப்படும். கண்ணபிரான் திருக்கையில் வேலாகச் சொல்லப்படுவது திருவாழியாழ்வான். ஸ்வாமி திருக்கையில் வேலாகச் சொல்லப்படுவது த்ரிதண்டம். ஸப்ததியில் ‘ விஸ்வக்ஸேநோ யதிபதிரபூத் வேத்ரஸாரஸ் த்ரிதண்ட:” என்று சேனையர் கோன் ஸ்வாமியாகத் திருவவதரிக்க, உபயவிபூதி நிர்வாஹ நிபுணமாய் அவருடைய திருக்கையிலுள்ள திருப்பிரம்புதானே த்ரிதண்டமாயிற்று என்னப்பட்டது.அந்தத் திருப்பிரம்புக்கு எவ்வளவு சக்தியோ அவ்வளவும் ஸ்வாமியின் த்ரிதண்டத்துக்கு முண்டென்க. தாடீபஞ்சகத்தில் ஸ்வாமிக்குப் பேசவேண்டிய பெருமைகளெல்லாம் த்ரிதண்டத்தின் மேலும் யஜ்ஞஸூத்ரத்தின் மேலும் ஏறிட்டுப் பேசப்பட்டுள்ளன. அங்ஙனம் பேசுகையில் “பாஷண்டஷண்ட கிரிகண்டந வஜ்ர தண்டா:…ராமாநுஜஸ்ய விலஸந்தி முநேஸ் த்ரிதண்டா?” என்றும், “தத்தேராமா நுஜார்ய: பரத்திகதக சிரோ வஜ்ரதண்டம் த்ரித்தண்டம்” என்றும் பேசப்பட்டதுண்டே,அதுதான் வென்று பகை கெடுக்குமென்றதற்கு விவரணம். அப்படிப்பட்டகையில் வேலாகிய முக்கோலுக்கு மங்களாசாஸனம் செய்தது முக்கோல் பிடித்த முனிக்கே மங்களாசாஸனம் செய்தபடியாமென்றுணர்க.
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த கஞ்சன் கருத்தைப் பிழைப்பித்து அவன்
வயிற்றில்நெருப்பென்னநின்றவர்ஸ்வாமி.கம்ஸன் கண்ணனிடத்திலே அனர்த்தம்
விளைக்க வழிதேடியிருந்ததுபோல, நம் ஸ்வாமிக்கு அனர்த்தம் விளைக்க வழிதேடியிருந்தவர் ஒருவர் ப்ரஸித்தர். அவருடைய கருத்தைப் பிழைப்பித்து [பிழைப்படச்
செய்து] ஓரிரவில் ஒளித்து வளர்ந்தவர் ஸ்வாமி. விந்த்யாடவியெங்கே! ஸத்யவிரத க்ஷேத்ரமெங்கே !ஓரிரவில் அங்கு நின்றும் இங்கு வந்து சேர்ந்தவர் தம் ப்ரபா
வங்களையெல்லாம் ஒளித்துவைத்திருந்தாரத்தனையன்றே. அன்ன வர் ஆஸுர ப்ரக்ருதிகளின் வயிற்றில் நெருப்பென்ன நின்றார். ‘ பாஷண்ட ஸாகர மஹாபடபா முகாக் :” என்று நெருப்பாகவேயன்றோ பேசப்பட்டார் ஸ்வாமி. [நெடுமால்-வியாமோஹங் கொண்டவர். ” அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹத:.’
இதில் *ஆலினிலையாய்! * என்ற விளி இன் சுவை மிக்கது. ஆலின் இலை யதன் மேல் பைய வுயோகு துயில் கொண்ட பரம் பரன் கண்ணன்.[ஆலின் நிலையாய்!ஆலமரத்தின் நிலைமை போன்ற நிலைமை யுடையவர் ஸ்வாமி. எம்பெருமான் பாஹச் சாயா மவஷ்டப் தோ யஸ்ய லோகோ மஹாத்மந.” என்கிறபடியே தன் பாதச் சாயையிலே ஒதுங்கினவர்களுக்கு நிழல் கொடுத்துத் தாபம் தீர்ப்பவன்.ஸ்வமியோ வென்னில் “ப்ராப்தாநாம் பாத மூலம் ப்ரக்ருதி மதுரயாச் சாயயா தாப ஹ்ருத் வ ” என்றாப் போலே அடி பணிந்தார்க்குத் திருவடி நிழல் கொடுத்துத் தாபம் தணிப்பவர். இதுதானே ஆலின் நிலைமை. நூற்றந்தாதி தொடங்கும் போதே “பல் கலையோர் தாம் மன்ன வந்த விராமாநுசன் சரணாரவிந்தம்” என்றன்றோ தொடங்கிற்று: பல் கலையோர் தாம் மன்ன வந்த என்ற விசேஷணத்தை இராமானுசனுக்கு ஆக்குவது போலவே அவருடைய சரணார விந்தத்திற்கு மாக்கலாமே. “நயக்ரோதோ பஹுபாத் வட ” என்ற அமர கோசம் ஆல மரத்திற்கு [பஹுபாத்] என்று பெயர் படித்தது. உண்மையில் ஆல மரமானது மற்ற மரங்களைப் போலன்றிக்கோ அபரிமிதமான பாதங்களை யுடைத்தாயிருக்கும். ஸ்வாமிக்கும் திரு வடிகள் அபரிமிதங்கள். [சிஷ்யர்களே திருவடிகள் இப் பாட்டில் சொன்ன ‘சங்கம் பெரும் பறை பல்லாண்டிசைப்பார் கோல விளக்கு கொடி விதானம்‘ என்னுஞ் சொற்களை ஊன்றி நோக்கினால் இவை யெல்லாம் ஸ்வாமியே யென்னப் பொருந்தும். [சங்கம்] த்ருவனிடஞ்சென்ற பகவான் சங்க ஸ்பர்சத்தினால் அவனை ஸர்வஜ்ஞ னாக்கினதாகப் புராணங் கூறும்; அது போல, ஸ்வ ஸம்பந்தத்தாலே ஆழ்வான் ஆண்டான் அனந்தாழ்வான் எம்பார் பிள்ளான் முதலானாரை ஸர்வஜ்ஞராக்கினவர் ஸ்வாமி.[பறை] பகவத் குணங்களை எங்கும் பறை சாற்றினவராகையாலே தாமே பறை யென்னத் தகுவர். (பல்லாண்டிசைப்பார்] பெரியாழ்வார் போலே எம்பெருமானுக்குத் தாம் பல்லாண்டு பாடினது மட்டுமன்றியே பல்லாயிரவரைப் பாடுவிக்கவும் வல்லராயிருந்தார். (கோல விளக்கு] ஸ்ரீவைஷ்ணவகுல ப்ரதீபமாயிருந்தவர் –(கொடி] ‘ஸ்ரீமல்லமண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜ’மென்று பிறரைச் சொல்லும்போது ஸ்வாமிக்குச் சொல்ல வேணுமோ? விசிஷ்டாத்வைத ஸித்தாந்த விஜயத்வஜமென்க. (விதானம் ] கண்ணன் வடமதுரையிலிருந்து திருவாய்ப்பாடிக் கெழுந்தருளும்போது “தொடுத்து மேல் விதானமாய பௌவ ரராவணை” என்ற திருச்சந்தவிருத்தத்தின்படியே விதானமாயிருந்தவர் ஆதிசேஷனான திருவனந் தாழ்வான்; அவரேயன்றோ ஸ்வாமியாக வடிவெடுத்தார்.
யஜ்ஜ மூர்த்தி போல்வாரான பல பல அத்வைதிகள் முதலிலே ஸ்வாமியோடு எதிரம்பு கோப்பவர்களாய் (கூடாதவர்களாய்] இருந்து பிறகு கூடினவர்களாய் ஸ்வாமிக்கு வெற்றியைத் தந்தார்கள். அவர்களை வெல்வதற்கு உறுப்பாயிருந்த சீர்களை யுடையவர் ஸ்வாமி. அந்தச் சீர்கள் எவை யென்னில்; கேவலம் வைதுஷ்யம் மட்டுமல்ல; திவ்ய மங்கள விக்ரஹ குணங்களும், திவ்யாத்ம குணங்களும் பல பல. ஸ்வாமியின் வடிவழகை ஸேவித்த மாத்திரத்திலேயே யீடுபட்டவர்கள் பல பலர். கோவிந்தா] பசுக்களை மேய்ப்பதனாலே கண்ணன் கோவிந்தனாயினன்-ஸ்ரீஸக்திகளும் கோ சப்தார்த்த மென்று கீழே காட்டினோமாகையாலே ஸகல ப்ரமாணங்களையும் ”பிபேத் யல்ப ஸ்ருதாத் வேதோ மாமயம் ப்ரதரி யதி” என்னும்படியான பீதியைப் போக்கி ரக்ஷித்தமையாலே ஸ்வாமியும் கோவிந்தர்..-பசு ப்ராயர்களான நம்மைக் காத்தவரென்றுமாம்.
“குறை யொன்று மில்லாத கோவிந்தா! உன்றன்னைப் பிறவி பெறுந் தனை புண்ணியம் யாமுடையோம்” என்னும் வார்த்தை ஸ்வாமி யெம்பெருமானாரை நோக்கி ஸ்ரீவைஷ்ணவ குலத்தவர்கள் யாவரும் சொல்லத் தக்கது. ஞானம் அனுட்டானம் பர ஸம்ருத்தியேக ப்ரயோஜநத்வம் ஆகிய மூன்றும் ஆசார்ய பீடஸ்தர்களுக்கு அவச்யாபேக்ஷிதங்கள் இவை மூன்றும் நன்கு நிறையப் பெற்றவர் ஸ்வாமியே– 1-குறை யில்லாத – 2-குறை யொன்றில்லாத – 3-குறை யொன்று மில்லாத என்று யோஜித்து மேற் சொன்ன மூன்றாலும் குறையற்றிருப்பவர் ஸ்வாமியே என்று கொள்வது. கூரத்தாழ்வான் ஸ்வாமிக்கிட்ட தனியனில் “தயைக ஸிந்தோ: என்று விசேஷணமிட்டது பர ஸம்ருத்த்யேக ப்ரயோஜநத்வத்தையே காட்டின படி.–இத்தகைய பெருமை வாய்ந்த ஸ்வாமி நமக்குக் குல கூடஸ்தராகித் திரு வவதரிக்கப் பெற்றது வாசா மகோசரமான நமது பெரும் பாக்கிய மன்றோ! இந்த ஹர்ஷ ப்ரகர்ஷத்தைக் காட்டுவதாம் உன்றன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோமென்பது. உன்றன்னை யென்பதற்கு ‘உன்றன்னைக் கொண்டு’ என்று பொருள் கொள்வது மிகச் சிறக்கும். உன்றன்னால் என்றபடி.(உருபு மயக்கம்.) ஸ ஹி வித்யாதஸ் தம் ஐநயதி தத் ஸ்ரேஷ்டம் ஜந்ம என்கிறபடியே நாங்கள் ஸ்ரேஷ்டமான வித்யா ஜன்மத்தை தேவரீர் திருவருளாலன்றோ பெற்றிருக்கிறோம். ஸ்வாமி திருவம்சத்திலே நாம் பிறக்கப் பெற்றது, நம் குல விளக்காக ஸ்வாமி அவதரிக்கப் பெற்றது ஆகிய இரண்டும் இங்கு விவக்ஷிதமென்க.
எற்றைக்கு மேழேழ் பிறவிக்கு முன் றன்னோடுற்றோமே யாவோம் உனக்கே நாமாட் செய்வோமென்பது நாமெல்லோரும் ஸ்வாமியை நோக்கியே சொல்லத் தகுந்த வார்த்தை. ஆழ்வார்கள் *இருள் தருமா ஞாலத்துளினிப் பிறவி யான் வேண்டேனென்றும், இயக்கறாத பல் பிறப்பிலென்னை மாற்றி யென்றும், ஆதலால் பிறவி வேண்டேனென்றும் புநர் ஜன்மத்தை வெறுத்துப் பேசுவர்கள். நாம் அப்படி வெறுக்க வேண்டா; எத்தனை ஜன்மங்களும் யதேஷ்டமாக நேரட்டும்; நேருகிற ஜன்மங்கள் தோறும் இப்போது நமக்கு வாய்த்திருப்பதுபோலவே எம்பெருமானார் திவ்ய ஸுக்தி ஸுதைகளையே பருகும் பாக்கியம் வாய்த்திடுமானால் பிறவியில் வெறுப்பு நமக்கேதுக்கு? ஒரு பிறப்பன்று, ஒன்பதினாயிரம் பிறப்புமெடுப்போமாக-அதற்குச் சளைப்போமல்லோம்; ஆனால் அப் பிறவி தோறும் . (உன்றன்னோடுற்றோமே யாவோம்] ‘இராமாநுசனடியார்’ என்னும் விருதுக்கு லோபமின்றிக்கே யிருக்கக் கடவோம் . (உனக்கே நாம் ஆட் செய்வோம் வடுக நம்பியைப் போலே ஸ்வாமிக்கே அடிமை செய்து கொண்டிருக்கக் கடவோம். *கையில் கனி யென்னக் கண்ணனைக் காட்டித் தரினும், உன்றன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் என்ற அமுதனாரநுஸந்தானமே உறைத்திருக்கக் கடவது நமக்கு.
திருப்பாவை முப்பதுக்கும் வங்கக் கடல் கடைந்த மாதவன் தான் லக்ஷ்யபூதன். கண்ண பிரானை லக்ஷ்ய பூதனாகத் கொள்ளுமவர்கள் தேவர்களின் பிரார்த்தனையினால் கடலைக் கடைந்து அமுதங் கொடுத்து “பலே க்ரஹிர் ஹி கமலாலாபே ஸர்வச் ச்ரம:” என்று பட்டரருளிச் செய்தபடியே பிராட்டியையும் பெற்று மகிழ்ந்த எம்பெருமானைப் பொருளாகக் கொள்க.திருப்பாவை ஜீயரென்ற திருநாமத்திற்கேற்ப எம்பெருமானாரையே திருப்பாவைக்கு லக்ஷ்ய பூதராகக் கொள்ளுமவர்கள் இங்ஙனே பொருள் காண்க; நிர்மத்த்ய ச்ருதி ஸாகராத் என்றும்- நமாம் யஹம் த்ராவிட வேத ஸாகரம்” என்றும் கடலாகச் சொல்லப்பட்ட ஸம்ஸ்க்ருத த்ராவிட உபய வேதங்களையும் திரு நாவின் மந்தரத்தால்
கடைந்து ” வசஸ்தாம்…ஸுமநஸோ பெளமா : பிபந்த் வந்வஹம்” என்று ஸ்வாமி தாமே யருளிச் செய்தபடி நிலத் தேவர்கள் நித்யா நுபவம் பண்ண அமுத மளித்தவர் ஸ்வாமி. மாதவனை] மா-மஹத்தான, தவனைா–தவத்தை(தபஸ்ஸை] யுடையவரை; மஹா தபஸ்வியை யென்றபடி. தபஸ்விகளில் தலைவரன்றோ ஸ்வாமி எம்பெருமானார். [இங்கு இப் பரிசு உரைப்பார்] இங்ஙனே முப்பது பாசுரங் களுக்கும் நாம் காட்டின நிர்வாஹமும் ‘அணி புதுவைப் பைங்கமலத் தண்டெரியல் பட்டர்பிரான் கோதை திருவுள்ள முகந்ததே யென்று கொண்டு உபந்யா கோஷ்டிகளிலெடுத்துரைக்குமவர்கள். *”செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலா லெங்குந் திருவருள் பெற்று இன்புறுவர்”= பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து என்ற பெரியாழ்வாரருளிச் செயலின்படியும், ஸா மூர்த்திர் முரமர்தநஸ்ய ஜயதி என்ற ஸப்த ஸுக்திப்படியும் ஸாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணாவதாரமான எம்பெருமானாருடைய திருவருளை எங்கும் பெற்று அம்ருத ஸாகராந்தர் நிமக்ந ஸர்வாவயவாஸ் ஸுகமாஸ்தல் என்று தலைக் கட்டிற்றாயிற்று .
மன்னு மணவாள மா-முனிவன் மாண்புரைக்கு மன்ன புகழண்ணங்கராசிரியன் சொன்ன திருப்பாவைச் சீயர் சிறப்புரைக்கு மிந் நூல் விருப்பாலுரைப்பார்க்கு வீடு.
திருப்பாவை ஜீயர் திருவடிகளே சரணம்.
—————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்
Leave a Reply