ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –
கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –
சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு
———————————————————————————-
ஸ்ரீ மும் மணிக் கோவை -தமிழ் பிரபந்த லஷணம் படி 30 பாசுரங்கள் அடங்கி இருக்க வேண்டும்-இப்பொழுது 10 பாசுரங்களே அனுசந்தானத்தில் வருகின்றன
மேலும் திரு வயிந்திர புரம் தெய்வ நாயகன் மீது இவர் அருளிச் செய்த -பந்து -கழல் அம்மானை -ஊசல் -ஏசல் –இந்த ஐந்து பிரபந்தங்களும் நம் தீ வினைப் பயனை அனுசந்தான பரம்பரையில் வராமல் மறைந்து விட்டன
இதில் ஆழ்வார்களைப் போலே அளவில்லா காதல் கொண்டு
நாயகி தோழி செவிலி இவர்கள் பேய்ச்சாய்ப் பாடிய பாசுரங்கள் நம் மனத்தை கவரும் –
—————–
ஸ்ரீ தேசிகன் தெய்வ நாயகனைச் சரணம் அடையத் திரு உள்ளம் கொண்டு முதலில் செங்கமல வல்லித்தாயார் இடம் செய்யும் புருஷகார ப்ரபத்தியை முதல் பாசுரத்தால் வெளியிடுகிறார் –ஸ்ரீ சப்தார்த்தம் அருளுகிறார் –
அருள் தரும் அடியார் பால் மெய்யை வைத்துத்
தெருள் தர நின்ற தெய்வ நாயக நின்
அருள் எனும் சீர் ஓர் அரிவை யானது என
இருள் செக வெமக்கோர் இன்னொளி விளக்காய்
மணி வரை யன்ன நின் திரு வுருவில்
அணி அமர் ஆகத்து அலங்கலாய் இலங்கி
நின் படிக்கு எல்லாம் தன் படி ஏற்க
வன்புடன் நின்னோடு வதரித்து அருளி
வேண்டுரை கேட்டு மிண்டவை கேட்பித்து
ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமர் உனை அணுக
நின்னுடன் சேர்ந்து நிற்கும் நின் திருவே –1-
அருள் தரும் – அருளைக் கொடுக்கும்
அடியர் பால் – (உன்) தாஸ பூதர்கள்
விஷயத்தில்,
மெய்யை- ஸத்யத்தை (அல்லது சரீரத்தை,
அதாவது திரு மேனியை)
வைத்து – ஸ்தாபித்து,
தெருள் தர -ஞானத்தைக் கொடுப்பதற்காக
நின்ற- நிற்கின்ற
தெய்வநாயக – தேவநாதனே!
நின் – உன்னுடைய
அருள் எனும் – கருணை என்னும்
சீர் – (கல்யாண)குணம்
ஓர் அரிவை ஒரு ஸ்திரீ (ரூபம்) கொண்டது
ஆனது என என்னும்படியாக,
இருள் – அஜ்ஞானமாகிற இருட்டு
செக- நாசமடையும்படியாக
எமக்கு – எங்களுக்கு
ஓர் இன் ஒளி – ஒப்பற்ற இனிமையான ( போக்யமான) பிரகாசத்தை யுடைய விளக்காய் தீபமாகி,
மணி வரை யன்ன – ரத்ன பர்வதம் போன்ற
நின் திருவுருவில் – உனது அழகிய ரூபத்தில்
அணி அமர் – திருவாபரணங்கள் அமைந்துள்ள
ஆகத்து- திரு மார்பில்
அலங்களிலாய் – மாலையைப் போல் விசேஷ அலங்காரமாக
இலங்கி- பிரகாசித்துக் கொண்டு,
நின் படிக்கு உன்னுடைய பிரகாரங்களுக்கு
எல்லாம் –
தன் படி- தன் பிரகாரங்கள்
ஏற்க- ஒத்திருக்கும்படி
அன்புடன் – பிரீதி யுடன்
உன்னோடு – உன்னோடு கூட
அவதரித்தருளி – அவதாரம் செய்தருளி,
வேண்டு (சேதனர்கள்) பிரார்த்திக்கின்ற
உரை (அல்லது உனக்கு) வேண்டுவதான வார்த்தைகளை
கேட்டு- தான் கவனமாய்க் கேட்டு
மீண்டு அவை – மறுபடி அந்த வார்த்தைகளை
நீ (அல்லது)அந்தச் சேதனர்கள்
கேட்கும்படியாகச் செய்து,
கேட்பித்து
ஈண்டிய திரண்ட பாபங்கள் வினைகள்
மாண்டிட – முழுவதும் நாசமடையும்படி
முயன்று – பிரயத்னம் செய்து
தன்னடி சேர்ந்த தமர்-தன் திருவடிகளை ஆஸ்ரயித்த பக்தர்கள்
உனை அணுக – உன்னை அடையும்படி
நின்னுடன் சேர்ந்து- உன்னுடன் எப்போதும்
பிரிவில்லாமல் சேர்ந்து
நிற்கும் – நிலையாக நிற்கின்ற(அல்லது நிற்பாள்)
நின் திருவே – உன்னுடைய லக்ஷ்மியே.
ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன் அருளிச் செய்த தமிழ்ப் பிரபந்தங்களுள் முதலாவது மும்மணிக்கோவை என்பது பெரியோர் கொள்கை.ஆதலால் இந்தப் பாசுரம் மும்மணிக் கோவைக்கு மட்டுமல்லாமல், ஸ்வாமி தேசிகனுடைய தமிழ்ப் பிரபந்தங்கள் அனைத்துக்குமே மங்களப் பாசுரமாகும். அருளில் ஆரம்பிக்கிறது. ஸகல மங்களங்களுக்கும் அதி தேவதையான பெரிய பிராட்டியார் விஷயமான பாசுரம் இது. ”அகர முதலவெழுத்தெல்லாம்” என்ற திருவள்ளுவர் வாக்கின் படி எழுத்துக்களுள் முதலான
அகாரத்தைக் கொண்டு இம் முதற்பாட்டுத் தொடங்குகிறது. ”அ’ என்னும் அக்ஷரம் ஸ்ரீமந் நாராயணனைச் சொல்லும்’ என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அந்த எழுத்தைக் கொண்டே அவ்வெம்பெருமான் விஷயமாகப் பாடப் பெறும் இந்த நூல் ஆரம்பிக்கப்படுகிறது.மும்மணிக்கோவை’ என்பது தமிழில் 96வகையான பிரபந்தங்களுள் ஒன்று.அது முப்பது பாசுரங்கள் கொண்டதென்றும், ஆசிரியப்பா (அகவல்), வெண்பா, கலித்துறை இம் மூன்று விதப் பாக்களும் அந்தாதியாக முறையே மாறி மாறி வர வேண்டும் என்றும் தமிழர்கள் அதற்கு இலக்கணம் வகுத்திருக்கிறார்கள். இவ்விதம் வரிசையாகக் கோக்கப்பட்ட மும்மணிகளால் ஆனதால், இது ‘மும்மணிக்கோவை எனப்படுகிறது.ஸ்ரீதேசிகன் வடமொழியில் காவ்யம், நாடகம், ஸந்தேசம், ஸ்தோத்ரம் என்று பல்வேறு முறைகளில் க்ரந்தங்கள் இயற்றி யிருப்பது போலவே சந்தமிகு தமிழிலும் தமிழர்கள் மரபை யொட்டிப் பல துறைகளிலும் பிரபந்தங்களை அருளிச் செய்திருக்கிறார்.அவற்றுள் மும்மணிக்கோவை’ என்கிற இவ்வழகிய பிரபந்தம் திருவஹிந்த்ர புரத்தில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீதேவநாதனைப் பற்றியது. இந்த எம்பெருமான் விஷயமாக ஸ்ரீதேசிகன் ஸம்ஸ்கிருதம், பிராகிருதம், தமிழ், இம் மூன்று மொழிகளிலும் அநேக விதமான ஸ்தோத்ரங்களைச் செய்துள்ளார்.-இவற்றில் அவ்வெம்பெருமானுடைய திவ்ய மங்கள் விக்ரஹம், அங்கப்ரத்யங்க ஸெளந்தர்யம், அதில் தமக்குள்ள வியாமோஹம் இவைகளைப் பரக்கப் பேசி யுள்ளார். ஜீவாத்மாவை ஸ்திரீயாகவும், புருஷோத்தமனைப் புருஷனாகவும், பக்தியைக் காமமாகவும் பாவித்து வர்ணிக்கும் தமிழர் மரபை இந்தப் பெருமாளிடத்தில் தான் இவ்வாசார்ய வள்ளல் அனுபவித்திருக்கிறார்.
ஊன்றிப் பார்க்குமிடத்து மும்மணிக்கோவை என்ற பெயர் கொண்ட இப்பிரபந்தத்தில் கவி ஸார்வ பெளமனான நம் தேசிகன் யாப்பிலக்கண முறையில் மட்டுமன்றி இன்னும் மற்ற விதங்களிலும் இதை மும் மணிகளின் கோவையாக விசித்திரமாக அமைத்திருக்
கிறார் என்று நினைக்க வேண்டி யிருக்கிறது. இந்நூலைச் செவ்வனே படித்து ஆராய்ந்து அவைகளை யெல்லாம் அறிதல் அவசியம். ஒவ்வொரு பகுதியிலும் ஆசிரியப்பா, வெண்பா, கலித்துறை என்கிற மூன்று விதமான பாக்கள் இருப்பது போலவே, ஒவ்வொன்றிலும் நாம் அவச்யம் அறிய வேண்டிய தத்துவம் ஹிதம் புருஷார்த்தம் என்ற மூன்றும் கூறப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
இம்முதற்பாட்டில் பகவானுடைய தன்மையும், அவனோடு பிராட்டியினுடைய பிரிவில்லாச் சேர்த்தியும், ஈச்வர க்ருபா கார்யங்களெல்லாம் இருவரும் சேர்ந்தே அனுக்ரஹிக்குமவை என்கிற உண்மையும் காட்டப்படுகின்றன. பிராட்டியின் சேர்த்தி யில்லா விட்டால் அவ்வித அனுக்ரஹங்கள் நமக்குக் கிடைக்கா என்பதையும் தெரிவித்துள்ளார். இவை யெல்லாம் ஒவ்வொரு வரியிலும் பதத்திலும் கூட நாம் நன்கு காணலாம்.
இந்தப் பாசுரம் ‘அருள்’ என்று ஆரம்பித்து, திருவே’ என்று முடிகிறது. இவ் விரண்டையும் இசைத்து அநுஸந்தித்தால், லக்ஷ்மீ தத்துவமும் தயாதத்துவமும் வெகு அழகாக ஸூசிக்கப்பட்டதாகும்.
அருள் தரும்’ என்கிற சொற்றொடரில் ‘தரும்’ என்பதை மூன்று வகையில் அன்வயித்துப் பொருள் கூறலாம். ‘தரும்’ என்பதை வினைச் சொல்லாகவும்,அதை’திரு’ என்கிற எழுவாய்க்குப் பயனிலையாகவும் கொண்டால், ‘திருவே அருள் தரும்’ என்று வாக்கியம்
அமைகிறது. பயனிலையை முதலிலும் எழுவாயைக் கடைசியிலும் வைப்பதை இலக்கண முறையில் விற்பூட்டு’ என்னும் பொருள் கோளாகக் கூறுவர்.’தரும் என்னும் சொல்லை ‘அடியவர்’ என்பதோடும், ‘தெய்வநாயக’ என்பதோடும் அன்வயித்து இரண்டு விசேஷார்த்தங்களைப் பெறலாம். அருள் தரும் அடியவர்—அருள் புரிகிறவர்களே அடியவர்கள் – பகவத் தாஸ பூதர்கள்.எவர்கள் உலக வாழ்க்கையில் சென்றவிடமெங்கும் எக்காலத்திலும் எவரிடத்திலும் அருளே புரிந்து வருகிறார்களோ, அவர்களே மெய் யடியார்கள்.”அருள்கொண்டாடும் அடியவர்”, “அருள் மிகுத்ததொரு வடிவாய்” “அருள் தரும் ஆர தேசிகனே”, என்று முன்னுள்ளோர் பாராட்டிய அருள். அருள் புரிபவர்களுக்கே அருள் கொடுக்கப்படும் என்கிற தத்துவமும் விசதமாகிறது. அருள் தரும் தெய்வநாயக என்பது மூன்றாவது அன்வயம். இம்மூன்று அர்த்தங்களையும் ஒரு மும்மணியாகக் கருதலாம். இவ்விதம் சில பதங்களை முன்பின் பதங்களுக்கிடையே வைத்து அப்பதங்களுடன் தனித்தனியே அன்வயித்து அர்த்த புஷ்டியையும் த்வனி மூலமாய் அத்புத ரஸங்களையும் அமைப்பது இம் மஹாகவியின் ஸம்ஸ்கிருத – தமிழ்க்கவனங்களிலெல்லாம் காணக் கூடிய ஒரு பேரழகு.
முதல் பாசுரத்தில் மூன்று அருள்கள் – “அருள்தரும் அடியவர்”, “நின் அருள்”,”அவதரித்தருளி”;
இரண்டாம் பாசுரத்தில் மூன்று “திரு ;
மூன்றாம் பாசுரத்தில் “மும்மறை”;
நான்காம் பாசுரத்தில் மும் மணி”(பன்மணி, சித்திரமணி, அத்திரமணி) இவைகளெல்லாம் சொற்களாலான மும் மணிகள்.
பொருள் கொள்ளுமிடத்து எத்தனையோ மும்மணிகளை ரஸிகர்கள் கண்டெடுக்கலாம்.கவி ஸிம்மத்தின் கவிதையை ஊன்றிப் படிக்கப் படிக்க எதிர்பாராத புதிய புதியசொற் சுவையும் பொருட்சுவையும் பெற்று ஆனந்திக்கலாகும்.
“பத்துடையடியவர்க்கு எளியவன் ” என்றார் நம்மாழ்வார். அருள்தரும் அடியர் பால் மெய்யை வைப்பவனென்று பாடுகிறார் நம்மாசார்யோத்தமன்.
“அடியவர்க்கு மெய்யனாகிய தெய்வ நாயகன்-என்று திருமங்கைமன்னன் மங்களாசாஸனம்.-அந்த இரண்டு திருநாமங்களையும் எடுத்துக் கொண்டு ஒரோர் விசேஷணமிட்டு, “அருள்தரும் அடியவர் பால் மெய்யை வைத்து”, ‘தெருள் தர நின்ற தெய்வ நாயக” என்று இங்கே பாடுகிறார்.
‘அருள்தரும் அடியவர்பால் மெய்யை வைப்பவன்‘ என்றதால் ‘அப்படி யல்லாதாரிடத்துப் பொய்யன்’ என்று தோன்றுகிறது. “பொய்யர்க்கே பொய்யனாகும்” அன்றோ மெய்யை வைப்பது என்றால் அவர்கள் விஷயத்தில் ஸத்யஸந்தனாக விளங்குவது; அல்லது பிரஹ்லாத பீஷ்மாதிகள் விஷயத்தில் போல அவர்கள் வார்த்தையை மெய்யாக்குவது ‘வைத்து’ என்பதால் காப்பாற்றுவதற்காக (நிக்ஷேபமாக) ஒப்புவிக்கப்பட்டது என்று த்வனிக்கிறது. தன்னைக் காட்டிலும் தன்னடியாரிடத்து நம்பிக்கை வைத்துத் தனது ஸத்யத்திற்கு அவர்களை ரக்ஷகர்களாக்குகிறான் என்றதாயிற்று.மேலும் மெய்’ என்னும் சொல்லுக்குச் சரீரம் எனப் பொருள் உண்டு. அவ்வர்த்தமும் கவியின் திருவுள்ளத்திலிருக்கிறது என்று தெரிகிறது. மெய்யன்’என்றால் திருமேனியை யுடையவன் – அது இங்கே அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹம். அதன் ரஷணத்தை அடியார்களிடம் ஒப்படைத்து வைத்ததாகப் பேசப்படுகிறது.அர்ச்சா- திருமேனி அர்ச்சக – பராதீந அகிலாத்ம ஸ்திதியை யுடையதொன்றன்றோ? அதனிடத்தில் பரிவுடன் அதனைப் போற்றும் மெய்யடியவர் பால் அது வைக்கப்பட்டிருக்கிறது என்கிற ரஹஸ்யம் விளங்குகிறது.
அடியவர்க்கே, மெய்யன்’ – விக்ரஹ விசிஷ்டன்;-அல்லாதார்க்குப் புலப்படான் -மெய்யை (திருமேனியை ) மெய்யாக (உண்மையாக) வைப்பது அடியவர் பால் தான் என்று ஒரு ரஸமான அர்த்தமும் இங்கே த்வனிக்கிறது.
தெருள் தர நின்ற – இதுவும் ஓர் அர்ச்சாவதார ரஹஸ்யம். தன்னைக் கிட்டி வழி படுவோருக்கு ஞானத்தைக் கொடுக்கிறான். திருக் கோயில்களில்
எழுந்தருளியிருக்கும் திவ்ய மங்கள விக்ரஹங்களை ஞானம் சிறிதுமின்றியே வந்து ஸேவிப்பவர்களுக்கும் அந்த ஸேவையினாலேயே ஞானம் உண்டாகிறது என்கிற தத்துவம் இதனால் உணர்த்தப்படுகிறது.
தர-முக்காலத்திலும் ஞானத்தைக் கொடுக்க ஸங்கல்பித்திருக்கிறான் என்று த்வனி.
நின்ற – வந்து தோன்றி மறைந்து போகும் ராம கிருஷ்ணாத்யவதாரங்கள் போலன்றிக்கே, ஞானம் நல்குவது என்ற த்ருடமான ஸங்கல்பத்துடன் ஸ்திரமாய் என்றென்றைக்கும் நிற்கிறான் என்று கூறப்படுகிறது.
நின்ற தெய்வ நாயக – அயிந்தைமாநகரில் நின்ற திருக் கோலத்துடன் எம்பெருமான் எழுந்தருளியிருப்பதைக் கண்ணா க் கண்டு இங்ஙனம் விளிக்கிறார்.
“அருள் வரதர் நின்ற பெருமையே” என்பது போல்-இங்கும் நிற்கிற அழகுக்குத் தோற்றுப் பாசுரமிடுகிறார்.
தெய்வ நாயக – அவன் தெய்வக் குழாங்கள் கை தொழ நிற்கும் தனிப்பெரும் நாயகன்.-அப்படியே அழைக்கிறார்.
நின்- நின்னருள்’ என்பதால் மற்றோர்களின் அருள் விலக்கப்படுகிறது. “அவ்வருளல்லன அருளுமல்ல” (நம்மாழ்வார்). இதைக் குறிக்க வேண்டி பாசுரத்தில் இரண்டாவது அடியில் ‘நின்’ என்னும் பதம் தனியான சொல்லாக விளங்குகிறது. ‘தெய்வ நாயக நின்‘ என்று அசைக்கும் இசைக்கும் சேர நிறுத்தி அனுபவிப்பதில் ஒரு ரஸம் காண்கிறது.
அருள் – வடமொழியில் ‘தயா’, க்ருபா’, ‘கருணா ‘,”அநுகம்பா , முதலான சொற்களின் பொருள்களையெல்லாம் கொடுக்க வல்ல ஒரு தமிழ்ச் சொல் இது.
அருள் எனும் சீர் : சீர் என்றால் குணம். இந்த சொற்றொடரால் ‘அருள் ஒன்று தான் குணம்; எம்பெருமானுடைய மற்ற குணங்களெல்லாம் அருளின் ஸம்பந்தமிராவிடில் தோஷங்களே யாவன’ என்கிற தத்துவார்த்தத்தைக் காட்டுகிறார்.
ஓர் அரிவையானதென – ஒப்பற்றஒரு ஸ்திரீ ரூபம் கொண்டது போல. குணம் வேறு, ரூபம் வேறு என்று தத்துவம் இருக்க, இங்கே குணமே ரூபமானது ; என்று ரஸமாகப் பேசுகிறார் .
என – என்று சொல்லும்படியாக. பிராட்டி அருள் நிறைந்தவளோ அல்லது அருள் பிராட்டியாக வடிவு கொண்டதோ என்று தர்க்கிக்கும்படி இருக்கிற நிலை காட்டப்படுகிறது. ஸந்தேஹாலங்காரம் போலும் இது.
எமக்கு--சேதனர்களுக்கு;மனுஷ்யர்களுக்கு.-அவர்களுள் ஒருவராய்த் தம்மையும் கூட்டிக்
கொண்டு பேசுகிறார்.
இருள்செக -எல்லாவிதமான இருளும் நீங்க.-உண்மையான தத்துவ ஹித புருஷார்த்தங்கள் எவை என்று தெரியாமல் துன்புறும் நிலை நீங்க. பிரகாசத்தினால் எப்படி இருள் இருந்தவிடம் தெரியாது போய் விடுகிறதோ அப்படியே நம்முடைய அஜ்ஞானமாகிற இருள் அடியோடு நீங்கும்படி செய்ய வல்ல இன்னொளி விளக்கு பிராட்டி-இன்னொளி விளக்கு – கண்ணைக் கூசச் செய்யும் கொடுஞ் சுடரன்று; இனிமையான ஒளியுள்ளது.
இருட்டில் தவிப்பவர்களுக்குத் தீபம் கிடைத்தால் என்ன ஸந்தோஷம் ஏற்படுமோ அதை ‘இன்’ என்பதால் குறிப்பிடுகிறார்.
ஒளி விளக்கு – மங்காத சுடர்.”நந்துதலில்லா நல் விளக்கு”என்று நான்காவது பாசுரத்தில் கூறுகிறார்.-விளங்க வைப்பது விளக்கு.-ஒளி விளக்கு- ஏற்றிய தீபம். அப்படிப்பட்ட தீபம் கிடைத்த பிறகு இருட்டைப் போக்குவதற்கு ஓர் உபாயம் தேட வேண்டியதில்லை. அது போலப் பிராட்டியின் கடாக்ஷம் பெற்றால் ஞானம் தானாக வரும் என்றபடி. அவள் “சைதன்ய – ஸ்தன்ய -தாயிநீ” அன்றோ?விளக்கு தன்னையும் காட்டி மற்ற வஸ்துக்களையும் காட்டுவது போலப் பிராட்டி தன்னையும் காட்டிக் கொண்டு எம்பெருமானையும் நமக்குக் காட்டிக் கொடுக்கிறாள்.
மணிவரையன்ன நின் திருவுருவில்- “பச்சைமாமலை போல் மேனி” என்றும் “கருமாணிக்க மலை” என்றும் ஆழ்வார்கள் அனுபவித்ததைச் சேர்த்து –மணி – வரை’ என்று பாசுரமிடுகிறார். ‘திரு – உரு’-மணி வரை’ என்ற போது ‘திரு’மணியாகவும்,உரு’ வரையாகவும் முறையே உத் பிரேக்ஷிக்கப்படுகின்றன. பெருமாளுக்குப் பிராட்டி தான் ஒளி பயக்கிறாள். “ப்ரபாவாந் ஸீதயா தேவ்யா”, “தீபஸ்- த்வமேவ ஜகதாம் தயிதா ருசிஸ்-தே” என்று ஸ்வாமியின் அருளிச் செயல்கள்.
அணியமராக அலங்கலாய் இலங்கி–அணியமராகத்து அலங்கலாயிலங்கி‘ என்றும் பாடம் உண்டு.-பொருளில் பேதமில்லை. ‘அணி’ என்பதற்கு அழகு, ஆபரணம் என்று இரண்டு அர்த்தங்கள் உண்டு.-ஆபரணங்கள் எல்லாம் அமர்ந்து நிறம் பெற விரும்பும் திரு மார்பு’ என்று பொருள் கொள்வது உசிதம்.
ஆகம் பிராட்டியின் அகம் -வீடு, பெருமாளது ஆகம்(மார்பு) ஆகம் -ஹ்றுதய ஸ்தானம்.
அலங்கலாய் இலங்கி- அலங்கல்- ஓர் ஆபரணம்.-அலங்காரமாய் ஒளி கொடுத்துக் கொண்டு,ஆபரணங்களுக்கு மேல் ஆபரணமாய் விளங்கி; “ உன் திருமார்வத்து மாலை நங்கை” என்கிறபடியே. நின்படிக்கெல்லாம் தன்படி ஏற்க -உன் ரூப -குண – ஸெளந்தர்ய – லீலாதி ஸர்வப் பிரகாரங்களுக்கும் ஒன்று விடாமல் தன் ரூப குண ஸெளந்தர்ய லீலாதி ஸர்வப் பிரகாரங்களும் ஒத்திருக்கும்படி.
ஏற்க’ என்பதால் பிராட்டி ஸ்வேச்சையாலே பெருமாளுக்கு ஒத்த பிரகாரங்களைக் கொண்டு அநுரூபையாய் இருக்கிறாள் என்பது காட்டப்படுகிறது.
“ யத் – பாவேஷு ப்ருதக் – விதே அநுகுணாந் பாவாந் ஸ்வயம் பிப்ரதீ”. ‘தன் படி’ ‘நின் படி’ என்று வேற்றுமை இருக்கச் செய்தேயும்,அவற்றுள் ஒற்றுமையும் ஐக ரஸ்யமும் ஏற்க’ என்பதால் கூறப்படுகின்றன. ‘ஸஹ – தர்ம-சரித“ என்றும் “துல்ய-ஸீலவயோ -வ்ருத்தாம்” என்றும் மஹர்ஷிகள் கொண்டாடும் ஒற்றுமை யன்றோ? கடலுக்கு இக் கரையிலிருந்து-அவன் “மித்ர- பாவே ” என்றால், கடலுக்கு அக்கரையிலிருந்து அவள் “தேந மைத்ரீ பவது தே” என்று சொல்லும்படி ஓத்த மனோ வியாபாரங்களை யுடையவர்கள்.
அன்புடன் உன்னோடு அவதரித்தருளி -அவன் அவதாரம் போல இவள் அவதாரமும் கிருபையின் கார்யம் என்று காட்ட ‘அருளி’ என்று பிரயோகிக்கிறார். அவனுக்குப் போல இவளுக்கும் பூலோகத்திற்கு வருவது ஒரு அவதரணம் மேல் உலகத்திலிருந்து இழிதல்
அன்புடன்- அன்பினால்; அவனிடத்து அன்பினாலும் சேதனர்களான நம்மிடத்து
அன்பினாலும் பிராட்டி அவதரித்தருளுகிறாள்.-இறையும் அகலகில்லாதவளாகையால் அவனை விட்டுப் பிரிந்திருக்க ஸஹியாதவளாய் அவதரிக்கிறாள். அவளும் வந்தால் தானே அவதார கார்யம் நிறைவேறும்? ‘உன்னோடு’ என்னும் பதம் இருவரும் சேர்ந்து அவதரித்த போது தான் தத்துவ பூர்த்தி என்பதைக் காட்டுகிறது. ஒருவர் மட்டும் அவதரித்தால்
பரதத்வத்தின் ஏக தேசந்தான் அவதரித்ததாகும்.-ஆகையால் உன்னோடு அவதரித்தருளி.
வேண்டுரை கேட்டு மீண்டவை கேட்பித்து--மிக ரஸமான சொற்றொடர். யாரிடம் • கேட்டு யாரைக் கேட்பித்து என்பதை ஆராய்ந்தால் ஆச்சர்யமான அர்த்தங்கள் ஏற்படுகின்றன. இதற்கு மூன்று அர்த்தங்கள் கொள்ளக் கிடக்கின்றன : முதலாவது,-சேதனன் வேண்டுரை ( பிரார்த்தனையை) அவனிடம் கேட்டு, எம்பெருமான் திருச்செவிகளில் அவைகளைக் கேட்பித்து, என்பது; இரண்டாவது, எம்பெருமான் சேதனர் பக்கல் வேண்டும் (எதிர்பார்க்கும்
நிலைகளைப் பற்றிய ] உரையை அவனிடம் கேட்டுத் தன் பிரஜைகளான சேதனர்களுக்கு வாத்ஸல்யத்தால் அதை அறிவிக்கும் பொருட்டு அவர்களைக் கேட்பித்து என்பது; மூன்றாவது, எம்பெருமானிடம் கேட்ட வசனங்களையே அவன் அந்த நிஷ்டையினின்றும் தவறினது போல் காணும் ஸமயங்களில் அவனையே கேட்பித்து என்பது. இந்த மூன்றும் நம்மாசார்யோத்தமனது ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் பொதிந்து கிடக்கும் அர்த்த விசேஷங்கள் த்வயாதிகாரத்தில் இந்தப் பங்கதிகள் காணக் கிடக்கின்றன. ‘ ஸ்ருணோதி-ஸ்ராவயதி’‘ என்கிற வ்யுத்பத்திகளில் ‘ஸாபராதரான அடியார்களை ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே காட்டிக் கொடுத்தருளவேணும் என்று இப்புடைகளிலே ஆஸ்ரிதருடைய
ஆர்த்த த்வனியைக் கேட்டு ஸர்வேவரனுக்கு விண்ணப்பம் செய்து, இவர்களுடைய ஆர்த்தியை ஸமிப்பிக்கும்’ என்றதாம்.** ஆந்ரு ஸம்ஸ்யம் பரோ தர்ம?”
இத்யாதிகளை அவன் பக்கலிலே கேட்டு “ஸ்ருணு சாவஹித: காந்த யத்தே வஹ் யாம் – யஹம் ஹிதம்! ப்ராணைரபி த்வயா நித்யம் ஸம் ரக்ஷ்ய: சரணாகத :”என்று கபோதத்தைக் கபோதி கேட்பித்தாப் போலே அவஸரத்திலே கேட்பிக்கும் என்னவுமாம். ஸர்வேஸ்வரன் பக்கலிலே லோக ஹிதத்தைக் கேட்டு “மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்’ இத்யாதிகளிற்படியே விபரீதரையும் கூடக் கேட்பிக்கும் என்னவுமாம்’ பெருமாளிடத்தில் வால்லப்யத்தால் (சலுகையால்] அவனையும் நம்மிடம் வாத்ஸல்யத்தால் நம்மையும் பிராட்டி கேட்பிக்கிறாள் என்றதாயிற்று.
ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று– ஜீவாத்மாக்களிடம் சேர்ந்துள்ள எல்லா வினைகளும் வேரோடு அழியும்படி, முயன்று-ஸர்வ ப்ரகாரத்தாலும் எப்பாடு பட்டாயினும் வினைகளை மாள வைத்து, தன்னடி சேர்ந்த– தனது, அதாவது பிராட்டியினுடைய சரணங்களை ஆஸ்ரயித்தவர்களான தமர்-பாகவதர்கள் ; பிராட்டியால் தன்னுடையவர்கள் என அங்கீகரிக்கப்பட்டவர்கள்.
உனை அணுக- அணுக நிற்கும்’ என்றதால் பிராட்டி எம்பெருமானோடு இடைவிடாது நிற்பது அவனை ஆஸ்ரயிக்கிறவர்களை வாழ்விக்கவே.’அணுக என்பதற்கு அணுகுவதற்காகவே என்று அர்த்தம்;-அல்லது அவர்கள் உன்னை அணுகுங்கால் உன் பக்கத்தில் ப்ராப்ய கோடியில் (அடைய வேண்டிய நிலையில்) நிற்கிறாள் என்னவுமாம்.
நின்னுடன் சேர்ந்து- உன்னோடு ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ் தைகளிலும் ஒரு சேர்த்தியாய் இருந்து. நிற்கும்- ஸ்திரமாய் எழுந்தருளி யிருக்கும்.
நின் திருவே – உனது தேவியே. உன்னுடன் ஒரு படியாய் நிற்கக் கூடியவள் பிராட்டி ஒருத்தியே தவிர வேறு எவருமில்லை என்றபடி.
‘நின் திரு’ – உன்னை யிட்டு அவள் திரு. உனக்கும் திருவாய் நிற்பவள்; திருவைத் தருபவள்.
நின் திருவே அருள்தரும் என்று (விற் பூட்டாக) அந்வயித்துக் கொள்வாருமுண்டு என்பது முன்பே கூறப்பட்டது. அருள் என்னும் சீர் வடிவெடுத்தாற் போன்ற திருவாலல்லது வேறு யாரால் அருள் தர இயலும்?
———————–
திருமால் அடியவர்க்கு மெய்யனார் செய்ய
திரு மா மகள் என்றும் சேரும் திரு மார்பில்
இம்மணிக் கோவையுடன் ஏற்கின்றார் என் தன்
மும்மணிக் கோவை மொழி –2-
திருமால்- ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரன்
அடியவர்க்கு மெய்யனார்- தாஸ பூதர்களான பக்தர்கள் விஷயத்தில் ஸத்யம் தவறாதவர்.
செய்ய – சிவந்த (அல்லது நேர்மையை யுடைய)
திருமாமகள் – பெரிய பிராட்டியார்
என்றும் – எப்போதும்
சேரும் – சேர்ந்து நிற்கும்
திருமார்பில்- (தமது) அழகிய மார்பில்
இம்மணிக் கோவையுடன்-இந்தமணிகளான ஹாரத்துடன்
என் தன் – என்னுடையதான
மும் மணிக் கோவை-மும்மணிக் கோவையாகிய கோவை
மொழி சொல்லை
ஏற்கின்றார் – ஏற்றுக் கொள்ளுகிார்.
இம்மணிக் கோவையுடன்-இந்த ஸ்ரீ கௌஸ்துபம் முதலிய ரத்னஆகாரத்துடன்
எம்பெருமானும் அன்புடன் ஏற்கும் இப்பிரபந்தம் பாகவதர்களுக்கு பரம போக்யமாம் -என்றவாறு –
திருமால்,அடியவர்க்கு மெய்யனார் திருமாலா யிருத்தல் பற்றி அவர் அடியவர்க்கு மெய்யனாகிறார்.-அல்லது திருமாலடியவர்க்கு மெய்யனார்-திருமாலுடைய அடியவர்க்கு மெய்யனார் என்று ஓரே பதமாகப் பொருள் கொள்ளலாம் – அப்போது தத்வ- ஹித . புருஷார்த்தங்கள் அனைத்தும் திருவும் மாலும் சேர்ந்த ஒரு மிதுனமே என்று நிச்சய ஜ்ஞானமுடையவர் திறத்து மெய்யன் என்றதாயிற்று.
செய்ய– முன் பதங்களோடு சேர்த்து அந் வயித்து ஒரு பொருளும் பின் பதங்களோடு சேர்த்து அந்வயித்து ஒரு பொருளும் கொள்ளும்படி இந்தப் பதம் உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறது. செய்ய பெருமாள் இந்தப் பிரபந்தத்தைத் தான் செய்து விட்டு எனது பிரபந்தம் என்று பெயரிட்டார் என்று ஒரு பொருள் த்வனிக்கிறது. மேலே என்றன்’ என்ற பதமும் இதை உறுதிப்படுத்துகிறது. இது பிரபந்தாரம்பத்தில் செய்யும் ஸாத்விக த்யாகத்தைக் குறிக்கும் மனோபாவம். திருமால் செய்ய, செய்யுள் அவதரித்தபடி.’செய்ய திருமகள்’ – சிவந்த பிராட்டியார் அல்லது செம்மை யுடைய திரு.-
என்றும் சேரும்- நித்ய வாஸம் செய்யும் திரு மார்பில்- திருவின் சோத்தியால் திரு மார்பு;அன்றிககே ஸ்வயம் அழகையுடைய மார்பு.பொன் தோய் வரை மார்பின் போக்யதையை அன்று கண்டு கொண்டன்றோ அதைத் தனக்கு ஆலயமாக அமைத்துக் கொண்டாள் பிராட்டி!
இம் மணிககோவை – இது எதைக் குறிக்கிறது-என்று ஆராய வேண்டி யிருக்கிறது. ‘இந்த’ என்று சுட்டிக் காட்டுவதால் இந்தப் பிரபந்தத்தை என்று பொருள் கொள்ளலாம். பெருமாள் திரு மார்பில் இருக்கும் ரத்ன ஹாரங்களைச் சுட்டிக் காட்டிப் பேசுகிறார் என்று சிலர்பொருள் கூறுகிறார்கள். அது பொருந்துமா என்று ஆலோசிக்க வேண்டும்.
‘இன் மணிக கோவை’ என்று பாடம் கொண்டு இனிமை யான ரத்னங்கள் என்றும் பொருள் கொள்கிறார்கள். ஆனால் ‘இன்மணி’ எதுகைக்குப் பொருந்தாது.
ஏற்கின்றார்- அடியேன் பணிவுடன் ஸமர்ப்பிப்பதைப் பரீதியுடன் அங்கீகரிக்கிறார்.
என்றன் -என்னுடையதான, அகங்கார மமகாரங்களை யறவே யொழித்த ஆசார்யன் என்றன்’ என்று பேசினால் “என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து” என்ற நம்மாழ்வார் அருளிச் செயலை அடி யொற்றிப் பேசியதாகக் கொள்ள வேண்டும்.
மும்மணிக்கோவை மொழி – இந்தப் பிரபந்தத்தின் பெயர் இருப்பதைக் கொண்டு ஓர் அர்த்தம் இருக்கவே இருக்கிறது.
மொழி’ என்பது வடமொழி தென்மொழி என்ற பாஷைகளில் போல பாஷையைச் சொல்லும்.நவமணி மாலையின் கடைசிப் பாசுரத்தில்,
“அந்தமில் சீர் அயிந்தை நகர் அமர்ந்த நாதன்
அடியிணைமேல் அடியுரையால் ஐம்ப தேத்திச்
சிந்தை கவர் பிராகிருத நூறு கூறிச்
செழுந்தமிழ் மும்மணிக்கோவை செறியச் சேர்த்து“-என்று அருளிச் செய்திருப்பதை நோக்கின், இம் மணிக்கோவை மொழி’ என்றவிடத்து, ஸம்ஸ்கிருதம், பிராக்ருதம், தமிழ் என்ற மூன்று மணிகள் போன்ற மொழிகளின் கோவை யொன்று இப்பிரபந்த நிர்மாணத்தால் பூர்த்தி யாயிற்று என்று பாசுரமிடுவதாகத் தெரிகிறது.
அந்தமில் சீர் அயிந்தை நகர் அமர்ந்த நாதன்
அடியிணை மேல் அடி உரையால் ஐம்பது ஏத்திச்
சிந்தை கவர் ப்ராக்ருதம் நூறு கூறிச்
செழும் தமிழ் மும் மணிக் கோவை செறியச் சேர்த்துப்
பந்து கழல் அம்மானை ஊசல் ஏசல்
பரவு நவ மணி மாலை இவையும் சொன்னேன்
முந்தை மறை மொழிய வழி மொழி நீ என்று
முகுந்தன் அருள் தந்த பயன் பெற்றேன் நானே –10-
அடி உரையால் ஐம்பது ஏத்திச் -எல்லா பாஷைகளுக்கும் மூலமாய் உள்ள
வட மொழியால் -தேவ நாயக பஞ்சாசத் -என்ற ஐம்பது ஸ்லோகங்களை இயற்றிப் புகழ்ந்து
சிந்தை கவர் ப்ராக்ருதம் நூறு கூறிச் -மனத்தைக் கவர்கின்ற ப்ராக்ருத பாஷையால் -அச்யுத சதகம் -என்னும் நூறு அஸ் ஸ்லோகங்களைக் கூறி செழும் தமிழ் மும் மணிக் கோவை செறியச் சேர்த்துப் பந்து கழல் அம்மானை ஊசல் ஏசல் பரவு நவ மணி மாலை இவையும் சொன்னேன் மும் மணிக் கோவையின் மீதி 20 பாசுரங்களும் பந்து கழல் அம்மானை ஊசல் ஏசல் ஆகிய பிரபந்தங்கள் ஐந்தும் அகப்பட வில்லை –
————————–
மொழிவார் மொழிவன மும்மறை யாகும் அயிந்தையில் வந்து
இழிவார் இழிக வென்று இன்னமுதக் கடலாகி நின்ற
விழி வார் அருள் மெய்யர் மெல்லடி வேண்டிய மெல்லியல் மேல்
பொழிவார் அனங்கர் தம் பூம் கரும்பு உந்திய பூ மழையே -3-
மொழிவார் – வார்த்தை சொல்பவர்கள்
மொழிவன – பேசும் வார்த்தைகளெல்லாம்
மும் மறையாகும் – மூன்று வேதங்களே என்றுசொல்லும்படியிருக்கும்
அயிந்தையில் – திருவஹிந்த்ரபுரத்தில்
வந்து- (அர்ச்சாவதாரமாக) எழுந்தருளி,
இழிவார் – இறங்க (அதாவது அனுபவிக்க)விருப்ப முடையவர்
இழிக என்று – வந்து அனுபவியுங்கள் என்று(சொல்வதுபோல)
இன்னமுதக் கடல் ஆகி – (அனுபவிப்போருக்கு)
இனிமையான அம்ருத ஸமுத்ரம் என்னும்படி
நின்ற – நின்று கொண்டிருக்கும் (இதற்கு மெய்யர் என்பதோடு அந்வயம்)
விழிவார் அருள் – திருக்கண்களில் பெருகும் கிருபையை யுடைய
மெய்யர் – அடியவர்க்கு மெய்யனாகிய ஸ்ரீதேவநாதனுடைய
மெல்லடி -தாமரைப் பூப்போல் மிருதுவான திருவடியை
வேண்டிய – விரும்பிய
மெல்லியள்மேல் -மிருதுவான சரீரத்தையுடைய இந்த ஸ்திரீயின் மேல்
அனங்கர் – மன்மதனார்
தம் பூங்கரும்பு உந்திய -தமது அழகிய கரும்பாலான வில்லி இருந்து கிளம்பிய
பூமழையே – புஷ்ப வர்ஷத்தை
பொழிவார் – வர்ஷிப்பார்.
தோழியின் பேச்சாக பேசி அனுபவிக்கிறார்
பெண்டிர் சிறுவர் கிளி குயில் சகல ஜீவ ராசிகளும் பேசுகின்ற வாக்யங்கள்
எல்லாம் சகல வேத சரமாம் -திரு வயிந்திர புரம் -திவ்ய தேச பெருமையால் –
தெய்வ நாயகனை அணைய விரும்பி அது பெறாது வருந்தும் தலைவின் மீது மன்மதனும்
கரும்பு வில்லின் நின்று பூ மாரியைப் பெய்து இன்னும் வாட்டுகின்றானே
பிரகிருதி சம்பந்தம் வாட்டுக்கிறது -என்று ஸ்வாபதேசப் பொருள்-
ஸ்ரீமந்நிகமாந்தமகா தேசிகனுடைய தமிழ்ப் பிரபந்தங்கள் ஆழ்வார்களுடைய திவ்யப் பிரபந்தங்களை அடியொற்றியே அவதரித்திருக்கின்றன. பக்தி விஞ்சிய
போது ஆழ்வார்கள் தாமான தன்மையை மறந்து ஸ்திரீ ஸ்வபாவத்தை ஏறிட்டுக் கொண்டு சிங்காரப் பேச்சுகளாலே தங்களுடைய பக்தி பாரவச்யத்தைப் பாசுரமிட் டிருக்கிறார்கள். மும்மணிக்கோவையில் மூன்று பாசுரங்கள் அதே ரீதியில் அமைந்திருக்கின்றன.அவற்றுள் இது முதல் பாசுரம். ஆறாவது ஒன்பதாவது பாசுரங்களும் இங்ஙனமே இருப்பன. பக்தி யோக நிஷ்டனுக்குச் சொன்ன பரபக்தி பரஜ்ஞானம் பரமபக்தி என்ற தசைகள் பிரபன்னனுக்கும் உண்டு என்பதைக் காட்டுவதற்காகவும் இம் மூன்று பாசுரங்கள் பாடப்பட்டனவாகத் தோன்றுகிறது. ஸாத்விக பரிசீலனம் சாஸ்திராப்பியாஸம் முதலியவற்றால் பகவத் விஷயத்தில் வரும் பிரீதி விசேஷம் ஸார்வேஸ்வரனைத் தெளிய அறிய வேண்டும் என்ற ஆசைக்குக் காரணமாய் பக்தி என்று பேர் பெற்றிருக்கும். இந்த பக்தியினால் வரும் பரபக்தி எம்பெருமானுடைய ஸ்வரூபாதிகளை விஷயமாகக்
கொண்டதாய் ஸ்ம்ருதி ரூபமாய் ஸாக்ஷாத்காரம் போல் தெளிவை யுடைத்தாய் நிரதிசய ப்ரீதி ரூபமான த்யான விசேஷம். இந்த பரபக்தி பகவானை ஸாக்ஷத்கரிக்க வேண்டும் என்ற அபிநிவேசத்தை யுண்டாக்கி, “ஒருநாள் காண வாராய்” என்று புலம்பும்படி பண்ணி பகவத் பிரஸாதத்தாலே அக்காலத்தில் மட்டும் இருக்கும் பரிபூர்ண ஸாக்ஷாத்காரத்தை யுண்டாக்கும். இந்த ஸாஷாத்காரம் பரஜ்ஞானம் என்று பேசப்பட்டது. நிரதிசயமான பகவத் ஸ்வரூபத்தைக் கண்டவாறே பெற்றல்லது தரிக்க வொண்ணாத பிரீதி விசேஷமே பரமபக்தி. இந்தப் பிரபந்தத்தில் மூன்றாவது, ஆறாவது, ஒன்பதாவது இம்மூன்று பாசுரங்களில் இந்த மூன்று தசைகளையும் முறையே ஸ்ரீதேசிகன் அனுபவிக்கிறார். பக்தி ஸ்ருங்காரமாக பரிணமிக்கிறது என்பதும் ஆத்மாக்களுக்குப் பரமாத்மாவைக் குறித்து ஸ்திரீ பாவம் ஏற்படலாம் என்பதும் பிரமாணங்களிலிருந்து கிடைக்கிறது. ஸ்ரீதேசிகனே,”பக்தி: ஸ்ருங்கார – விருத்த்யா பரிணமதி” என்று த்ரமிடோபநிமிஷத் தாத்பர்ய ரத்நாவளியிலும்,”பக்திம் நிஜாம் ப்ரணய பாவநயா க்ருணந்த: என்று கோதா ஸ்துதியிலும் அருளிச் செய்திருக்கிறார். புருஷோத்தமனின் அழகும் ஆடவரும் பெண்மையை அவாவும்படியான தொன்றன்றோ? ஒரு நாயகி ஏற்ற நாயகனை வரித்து அவனுடன் கூடப் பெறாத போது மன்மத பாணங்களால் அடியுண்டு வருந்துவதும் அவனை நினைந்து நைந்து உருகுவதும் ஸ்ருங்காரர ஸப்ரதானமான காவியங்களில் வர்ணிக்கப்படும் விஷயங்கள். அந்த முறையையும், விசேஷித்து அதில் தமிழர்கள் துறையையும் பின்பற்றி ஸ்ரீதேசிகன், இங்கு தெய்வநாயகனைப் பெற ஆசைப்பட்டு, அவ்வாசை பெருகித் தன்னிலையை மாற்றிப் பெண்ணிலையை அடைவித்தபடியையும், அப்போது விரஹத்தை விருத்தி செய்யும் மன்மத பாணங்களாலே அடியுண்டு வருந்தும் நிலையையும், ஒரு தோழியின் பாசுரத்தாலே தெரிவிக்கிறார். ஸ்ரீதெய்வ நாயகனிடம் மையல் கொண்டு ஸ்திரீ பாவத்தை அடைந்தமை மெல்லடி வேண்டிய மெல்லியள்‘ என்பதால் காட்டப்பட்டது. அவனைக் கூடப் பெறாது அதனால் உண்டான விரஹ வேதனையை மன்மதன் தன் புஷ்பபாணங்களை வர்ஷித்து விருத்தி செய்கிறான் என்பதை ‘அனங்கர் தம் பூங்கரும்புங்திய பூமழையே பொழிவார்’ என்றுபேசுகிறார்.அனங்கனாகையால் அவனுக்கு சரீரம் இல்லை.சரீரம் இருந்தாலன்றோ சரீரம் படைத்தார் படும் வருத்தத்தை உணரக் கூடிய மனமிருக்கும். ஒன்று இரண்டு பாணங்களை எய்தான் என்பதில்லாமல் இடைவிடாது பூ(மன்மத சர) மழையாய்ப்பொழிந்து விரஹத்தை மறக்கவும் ஒட்டாது செய்கிறான் என்பது பொருள்.மன்மதனுக்குக் கரும்பு தான் வில் என்றும், புஷ்பங்களே பாணங்கள் என்றும் பிரஸித்தம். அனங்கனாயிருந்தும் சரீரம் கொண்டு செய்யவேண்டிய கார்யமான எய்தலைச் செய்கிறான் ; துன்பத்தை உண்டு பண்ணும் இயல்பில்லாத புஷ்பங்களாலே வருத்துகிறான்; பஞ்ச பாணம் மட்டுமுடையவன் பாண வர்ஷத்தைச் செய்கிறான்; இவ்வளவும் வருத்தம் பொறா ஒரு மெல்லியள் மேல் என்ன விபரீதம்! என்று தோழி கலங்கிக் கூறும் பாசுரமாயிருக்கிறது இது. இப்படித் தமிழ் மரபை யொட்டிப் பாசுரார்த்தம் பெறுவதோடு நிற்காமல் இன்னும் சற்று ஆழ்ந்து பார்த்தால் சில சப்த ஸ்வாரஸ்யங்களால் வேறு ரஸமான அரத்தங்களும் தோன்றுகின்றன. ‘அனங்கர்’ என்று மரியாதை தோற்ற உபயோகிக்கப்பட்ட சொல் ஸாதாரண மன்மதனைச் சொல்வதோடு கூட ஸாஷாந்- மந்மத- மந்மத :” என்று சொல்ல வல்ல அழகப் பிரானார் தம்மையே குறிக்கிறது எனக் கொள்ளலாம். அவருடைய பூங்கரும்பாவது அழகிய திருப் புருவங்கள். “இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல வில் கொல்? மன்னிய சீர் மதனன் கருப்புச்சிலை கொல்?” என்று நம்மாழ்வார் எம்பெருமானுடைய திருப்புருவங்களை சங்கித்தபடி அப்பூங்கரும்பிலிருந்து விடப்பட்ட பாணங்கள் போல் இருக்கின்றன திருக்கண்மலர்களின் கடாக்ஷங்கள்.தேவ நாயக பஞ்சாசத்தில் “அம்ருத – வர்ஷ – நிபை :அபாங்கை:” என்று அம்ருத வர்ஷமாக வர்ணிக்கப்பட்ட கடாக்ஷங்கள் இங்கே புஷ்ப வர்ஷமாக வர்ணிக்கப் பெறுகின்றன. விரஹ தாபம் தீரும்படி குளிரக் கடாக்ஷிக்கிறான் என்று சொன்னபடி. நல்ல வேத வித்துக்களான மஹான்கள் வஸிக்கும் அயிந்தைமாநகரில் கோயில் கொண்டவனாயிற்றேஎன்று எண்ணி ஆசைப்பட்டு மோசம் போனேன் என்றும், இழிவார் இழிக என்று ஆசைப்பட்டவர்களெல்லாம் வாருங்கள் என்று சொன்ன வார்த்தையை நம்பி இந்நிலை வந்தது என்றும் விப்ரலம்ப ஸ்ருங்காரமாக வைத்துப் பொருள் கொள்ளுவதோடு நில்லாமல், ஸத்ஸஹ வாஸத்தாலும் தன் ஸங்கல்பத்தாலும். தன்னை விரும்புவாரைத் தானும் விரும்பிக் குளிரக் கடாக்ஷிக்கிறான் என்று ஸம்ஸ்லேஷ தசா விஷயமாகவும் அர்த்தம் கொள்ளலாம். பெரும்பாலும் நாயிகா பாவம் விஸ்லேஷ தசையிலேயே கைக்கொள்ளப்படுகிறது.-ஸம்ஸ்லேஷ ரஸமும் த்வனிக்கும்படியாக விஸ்லேஷ தசையைப் பேசும் பாசுரம் அழகாக அமைந்திருக்கிறது.
அயிந்தைமாநகரிலுள்ள மெய்யடியார்கள்
ஸ்ரீதேசிகன் காலத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தார்கள் என்பதை ‘மொழிவார் மொழிவன மும்மறையாகும்’ என்றதிலிருந்து ஒருவாறு ஊகிக்கலாம்.
க்ஷேத்திர மஹிமையால் அவர்களுக்கு இப் பெருமை கிடைத்தது என்றும் பொருள் கொள்ளும்படி ‘மும்மறை ஆகும் அயிந்தை’ என்று பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட மஹான்கள் வஸிப்பதாலேயே எம்பெருமானும் இதை உகந்து இங்கே நித்ய வாஸம் பண்ணுகிறான் என்பதும் ஸுசிதம். இப்படி பகவத் – ஸாந்நித்யமும் பாகவத – ஸம்ருத்தியும் மலிந்து கிடந்ததாலேயே ஸ்ரீதேசிகன் நெடுநாள்
இங்கே வாஸம் செய்யத் தீர்மானித்திருக்க வேண்டும். என்றும் அறியலாம்.
அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த க்ஷேத்திரத்தில் வந்தது மட்டுமன்றி எம்பெருமான் இங்கே
நிலையாக நின்றான்; அதுவும் ஒரு இன்னமுதக் கடலாக என்று இரண்டாம் பாதத்தில் கூறப்படுகிறது.
“கடலொப்பார் கண்டிடினும் காணாக் கூத்தால் “என்கிறபடி அளவிட வொண்ணாமைக்கும் காம்பீர்யத்திற்கும் கடல் போல் விளங்குகிறார். ஆனால் உப்புக்கடலன்று; அமுதக்கடல்;இன்னமுதக் கடல்.இது ஓர் அபூதோபமை. “அலையற்ற ஆரமுதக்கடல் “என்பதுபோல ஸ்ரீதேவநாதனுடைய திவ்யமங்கள விக்ரஹம் ஒரு விலக்ஷணமான அம்ருத ஸாகரம் போல் விளங்குகிறது என்கிறார்.
இழிவார் இழிக – நிற்கிற நிலையிலிருந்தே அனைவரையும் கூவி அழைத்து உங்களுக்காகவே நான் இங்கே வந்து நிற்பது என்று பேசாமல் பேசினாராயிற்று.’இழிவார்’ என்பதால் ஆசை மட்டும் இருக்குமாகில் அனைவருக்கும் இழிய அதிகாரம் உண்டு
என்று கிடைக்கிறது.
விழிவார் அருள் மெய்யர் -திருக் கண்களிலிருந்து வெள்ளமிடும் அருளை யுடைய மெய்யர். ‘இழிவார் இழிக’ என்று கூறியதை மெய்யாக்கிக் கொடுக்கும் கண்களைக் கொண்டு அடியவர்க்கு மெய்யராகிறார்.
மெல்லடி வேண்டிய மெல்லியள் — சரண கமலமாகையால் மெல்லடி,மிருதுவான பாதம்; அதை விரும்புவோரும் கூட மெல்லியர் (மிருதுவான தன்மையர்) ஆகிறார்கள் என்றும் சொல்லும்படி திருவடிகளின் மார்த்தவம் இருக்கிறது. ‘மெல்லடி வேண்டிய படியால் மெல்லியள் ஆனாள் ‘என்று ரஸோக்தி மெல்லியள் ‘ என்ற ஸ்திரீ லிங்கமான பதமும் கடைசிப் பாதமும் இப்பாசுரம் நாயிகாபாவ விஷயம் என்பதைக் காட்டுகின்றன. பெண் பேச்சிலும் தன் பேச்சு,தாய்ப் பேச்சு, தோழிப் பேச்சு என்று பல வகை யுண்டு. ‘மெல்லியள்’ என்று படர்க்கைச் சொல்லாக இருப்பதால் இது தாய் அல்லது தோழியின் பேச்சாக இருக்கவேண்டும்.நாயகி மன்மதபாணத் திற்கு இலக்கானமையைக் கூறுவதால் அந்த
ரங்கத் தோழியின் பேச்சு என்று சொல்வது பொருந்தும்.
பொழிவார் …… பூமழையே – இவள் மென்மை கண்டு இரங்காமல் மன்மதன் தன் அம்பு மழையைப் பொழிகிறான். மன்மத மன்மதன் இவளது மென்மைக்கேற்ப மிருதுவான புஷ்பங்களை எய்கிறான் என்று த்வனி. ஸாதாரண மன்மதன் தன் பாணங்களை எய்து ஒரு தலைவிக்கு ஒரு தலைவனிடத்தில் ஆசையை விளைவிப்பான். மன்மதமன்மதனான இவனோ தன்னிடத்திலேயே ஆசையை உண்டாக்கி அதை விருத்தி செய்கிறான் என்ற வேறுபாடும் காணத்தக்கது. இவ்விதமே இன்னும் பல ரஸமான அர்த்தங்களைப் பொதிந்து கொண்டிருக்கும் இன்னமுதக்கடல் இந்தப் பாசுரம் என்பதை ரஸிகர்கள் அனு பவித்து அறியலாம்.
————————
ஸ்ரீ தெய்வ நாயகன் தனது ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி இவற்றைக் காட்டி அருள
அவனை அனுபவித்த படியை மேல் இரண்டு பாசுரங்களால் அருளிச் செய்கிறார் –
மலையில் எழுந்த மொக்குள் போல் வையம்
அழிய ஓன்று அழியா வடியவர் மெய்ய
வருமறையின் பொருள் ஆய்ந்து எடுக்கும் கால்
திருவுடன் அமர்ந்த தெய்வ நாயக
நின் திருத் தனக்கும் நீ திருவாகி
இந்து தன் நிலவுடன் இலங்கு தன்மையினை
நந்துதல் இல்லா நல் விளக்காகி
யந்தமில் யமுத வாழியாய் நிற்றி
பாற்கடல் தன்னில் பன் மணி யன்ன
சீர்க் கணம் சேர்ந்த சீலம் எல்லையிலை
யடியவர் பிழைகள் நின் கருத்து அடையாது
அடைய ஆண்டு அருளும் அரசனும் நீயே
யுயர்ந்த நீ யுன்னை எம்முடன் கலந்தனை
யயிந்தை மா நகரில் அமர்ந்தனை எமக்காய்ச்
சித்திர மணி எனத் திகழு மன்னுருவில்
அத்திரம் அணி என வனைத்தும் நீ யணிதி
விண்ணுள் அமர்ந்த வியன் உரு வதனால்
எண்ணிய ஈரிரண்டு உருக்களும் அடைதி
பன்னிரு நாமம் பல பல வுருவா
இன்னுரு வெங்கும் எய்தி நீ நிற்றி
மூனோடு ஆமை கேழல் கோளரியாய்
வானோர் குறளாய் மழுப்படை முனியாய்
பின்னும் இராமர் இருவராய்ப் பாரில்
துன்னிய பரம் தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்து அருளும் கற்கியாய் மற்று
மலிவதற்கு எண்ணும் வல்வினை மாற்ற
நானா வுருவமும் கொண்டு நல்லடியோர்
வானார் இன்பம் இங்குற வருதி
ஓர் உயிர் உலகுக்கு என்னும் நீ திருவொடு
உயிர் எல்லாம் ஏந்தி இன்புறுதி
யாவரும் அறியாது எங்கும் நீ கரந்து
மேவுறச் சூழ்ந்து வியப்பினால் மிகுதி
கொண்டிட வெம்மை யடைக்கலம் உலகில்
கண்டிலம் கதி யுனை யன்றி மற்று ஒன்றும்
பல்வகை நின்ற நின்படி யனைத்தினும்
தொல்வகை காட்டும் துணிந்து தூ மறையே -4-
மழையிலெழுந்த- (மழை பெய்து கொண்டிருக்கும் போது) அம்மழை நீரில்
உண்டான
மொக்குள்போல் – நீர்க் குமிழியைப்போல்
வையம் – உலகம் (எல்லா உலகங்களும்)
அழிய – அழியும் போது
ஒன்று அழியா – சிறிதளவும் குன்றாது குறையாது (நிற்கும்)
அடியவர் மெய்ய – தாஸ ஸத்யனாகிய தெய்வ நாயகனே!
அருமறையின் பொருள் – (கற்றறிவதற்கு) அரிய வேதங்களுடைய அர்த்தத்தை
ஆய்ந்தெடுக்குங் கால் – ஆராய்ந்து ஸாரத்தை நிஷ்கர்ஷிக்குமிடத்தில்
திருவுடன் அமர்ந்த- பெரிய பிராட்டியாருடன் கூடிய
தெய்வ நாயகன் – எல்லா தேவதைகளுக்கும் நாதன்
நீ- நீஒருவனே ;
நீ – (அப்படிப்பட்ட) நீ
நின் திரு தனக்கு – (எவளுடைய ஸம்பந்தத்தால் உனக்குத் தெய்வ நாயகத்வம் ஸ்த்தித்ததோ அப்படிப் பட்ட ) உனது பெரிய பிராட்டி யாருக்கு
திருவாகி – அவளுடைய பெருமைகளுக்கு காரணமாகி
இந்து – சந்திரன்
தன் நிலவுடன் – தனது நிலாவோடு கூட |
இலங்கு தன்மையினை – பிரகாசிப்பது போன்ற இயல்பை உடையை;
நந்துதல் இல்லா – (ஒரு போதும்) அழிவு (அணைதல்) இல்லாத
நல் விளக்காகி -நல்ல (அதாவது அழகான மங்களகரமான) தீபமாகி,
அந்தம் இல் – எல்லையில்லாத (முடிவில்லாத)
அமுத ஆழியாய் – அம்ருத ஸாகரம்போல்
நிற்றி- நிற்கிறாய்;
பாற்கடல் தன்னில் – பால் ஸமுத்திரத்தினிடத்து
பல்மணி யன்ன – பலவகை ரத்தினங்கள் இருப்பது போல
சீர்க்கணம் சேர்ந்த – கல்யாண குண ஸமூஹங்களுடன் சேர்ந்த
சீலம் – ஸௌசீல்யம் என்று சொல்லப்பட்ட (தாழ்ந்தவருடன் கூட நெருங்கிப் பழகும் )குண விசேஷத்தை
எல்லை யிலை -அளவிட வொண்ணாதபடி பெற்றிருக்கிறாய்;
அடியவர் பிழைகள் – உன்னை ஆஸ்ரயித்தவர் களுடைய அபராதங்கள்
நின் கருத்து அடையாது – உனது திருவுள்ளத்தை அடையாதபடி.
அடைய -முழுவதையும்
ஆண்டு – பரிபாலித்து
அருளும் – கிருபை செய்யும்
அரசனும் நீயே – ராஜாதி ராஜனும் நீயே;
உயர்ந்த நீ – எல்லாவற்றிற்கும் மேம்பட்ட நீ
உன்னை- அப்படிப்பட்ட உன்னை
எம்முடன் – மிகத் தாழ்ந்த எங்களோடு
கலந்தனை -(ஒரு நீராகக்) கலந்தாய்;
அயிந்தை மாநகரில் – திருவஹிந்திரபுரம் என்னும் திவ்ய தேசத்தில்
எமக்காய் – எங்களுக்காக வேண்டி
அமர்ந்தனை – நித்ய வாஸம் செய்தருளுகிறாய்;
சித்திரமணி யென – அழகான நீல ரத்னம் போல்
திகழும் – பிரகாசிக்கும்
மன்னுருவில்- நித்யமான உனது திருமேனியில்
அத்திரம் அணி என -அஸ்திரங்கள் திருவாபரணங்கள் என்று
அனைத்தும் – ஸகல தத்துவங்களையும்
நீஅணிதி- நீ அணிந்து கொண்டிருக்கிறாய் விண்ணினுள் அமர்ந்த -ஸ்ரீவைகுண்டத்தில் எழுந்தருளி யிருக்கும்
வியன் உரு – பெரிய அல்லது விலக்ஷணமான பர வாஸுதேவ ரூபம் என்ன;
அதனால் எண்ணிய -அதனால் ஸங்கல்பிக்கப் பட்ட
ஈரிரண்டு உருக்களும் – (வாஸூ தேவன், ஸங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன், என்கிற) நான்கு (வ்யூஹ) ரூபங்களையும்
அடைதி – அடைந்து நிற்கிறாய்;
பன்னிரு நாமம் – கேசவாதி பன்னிரண்டு நாமங்களை உடைய
பலபல உருவாய் – வெவ்வேறு திருமேனிகளை உடையவனாய்
என்னுரு எங்கும் -என்னுடைய சரீரம் முழு
வதும்
எய்தி- அடைந்து
நீ நிற்றி- நீ நிற்கின்றாய்.
மீனோடு ஆமை கேழல் கோளரியாய்-மத்ஸ்ய, கூர்ம, வராஹ, நரசிங்க ரூபங்களென்ன,
வானார் குறளாய் -ஆகாசத்தை அளாவிய வாமனனென்ன
மழுப்படை முனியாய் – கோடரியை ஆயுதமாக உடைய பரசுராமனென்ன,
பின்பும் ராமர் இருவராய்-அதற்குப் பிறகு ஸீதாராமன், பலராமன்- என்கிற
பாரில் துன்னிய – பூமியின் கண் அமர்ந்துள்ள
பரம் தீர் – பாரத்தைப் போக்கின
துவரை மன்னனுமாய் -துவாரகா நாதனான கிருஷ்ணனென்ன,
கலி தவிர்த்து அருளும் -கலிகாலத்தில் ஏற்படும் துன்பங்களைப்போக்கி மறுபடியும் உலகத்தை ரஷிக்கும்
கற்கியாய் -கல்கி என்னும் ரூபமான -இப்படிப்பட்ட திவ்ய அவதார திருமேனிகளை அடைந்து
மற்றும் -இன்னும்
மலிவதற்கு-எல்லோருக்கும் அதிக ஸூலபனாய் இருப்பதற்காக
என்றும் -எக்காலத்திலும்
வல்வினை -ஆஸ்ரிதர்களுடைய பலமான பாபங்களை
மாற்ற-போக்குவதற்காக
நானா வுருவமும் -பல்வேறு அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹங்களை
கொண்டு -பரிஹரித்துக்கொண்டு
நல்லடியோர்-உன்னிடத்தில் ப்ரீதியை யுடைய ஆழ்வார்களைப்போன்ற உனது தாஸ பூதர்கள்
வானார் இன்பம் -ஸ்ரீ வைகுண்டத்தில் பூர்ணமாக இருக்கும் பேரின்பத்தை
இங்குற -இங்கேயே அடையும்படியாக
வருதி-வருகிறாய் -அவதரிக்கிறாய்
ஓர் உயிர் உலகுக்கு என்னும் நீ –உலகத்திலுள்ள ஸகல சேதனா சேதன வஸ்துக்களுக்கும் ஒப்பற்ற அந்தராத்மாவாக இருக்கும் நீ
திருவொடு-பிராட்டியோடு
ஆர் உயிர் எல்லாம் -அழகுடன் பொலிகின்ற ஆத்ம வர்க்கத்தை எல்லாம்
ஏந்தி -(அந்தர்யாமி ) வடிவுடன் இருந்து தாங்கி
இன்புறுதி- (விசேஷ) இன்பத்தை அடைகிறாய்;
யாவரும் அறியாது -எவரும் அறியாமல்
எங்கும் -எல்லா இடத்திலும்
நீ கரந்து- (பாலுள் நெய் போல்) மறைந்திருந்து
மேவுறச் -மேன்மை யடையும்படியாக
சூழ்ந்து -(எல்லாவற்றையும்) வியாபித்து,
வியப்பினால் மிகுதி-(அந்த) ஆச்சர்யத்தினால் விஞ்சியிருக்கிறாய்;
கொண்டிட வெம்மை யடைக்கலம் -எங்களை ரக்ஷ்ய வஸ்துவாக ஏற்றுக் கொள்ள
உலகில் கண்டிலம் கதி யுனை யன்றி மற்று ஒன்றும்-இந்த உலகத்தில் உன்னைத் தவிர
வேறு ஒரு வித ரக்ஷகனையும் (நாங்கள்) காண வில்லை.
பல்வகை நின்ற நின்படி யனைத்தினும்- (கீழே கூறியபடி) பல விதங்களாக இருக்கும் உன் பிரகாரங்கள் எல்லாவற்றையும்
தொல்வகை காட்டும் துணிந்து தூ மறையே -பழைமையான வழியின் படியே பரிசுத்தமான வேதம் ஒன்றே தைரியமாக (நிச்சயமாக) காட்டிக் கொடுக்கும்.
ஸ்வரூப நிரூபக தர்மங்கள் ஐந்தையும் – நந்துதல் இல்லா -சத்யத்வம் –நல் என்று அமலத்வமும் -விளக்கு என்று ஜ்ஞானத்வமும் –அந்தமில் என்று அனந்தத்வமும்-அமுத வாழி-என்று ஆனந்தத்வமும் -அருளிச் செய்கிறார்
நின் திருத்தனக்கு –ஸ்ரீ மத சப்தார்த்தம்
சீர்க் கணம் சேர்ந்த -நாராயண சப்தார்த்தம்
மன்னுருவில் -திருமேனியை ஸூ சிப்பிக்கும் -சரனௌ சப்தார்த்தம் –
அடைக்கலம் -சரண சப்தார்தம் -த்வயத்தின் முற்பகுதியின் பொருளை அருளிச் செய்கிறார்
ஸ்ரீ தேசிகன் பெருமாள் கோயிலில் இருந்து திரு விந்திர புறத்திற்கு எழுந்து அருளிய பின் பேர் அருளாளனும் சுவாமிக்காக அங்கு எழுந்து அருளியதாகவும் -இத்தைக்கருதியே -அயிந்தை மா நகரில் அமர்ந்தனை எமக்காய் -என்று அருளிச் செய்ததாக பெரியோர் பணிப்பார்
ஸ்ரீ தேசிகப் பிரபந்தத்தின் பாசுரங்களுக்குள் முப்பத்திரண்டு அடிகள் கொண்ட நிலை மண்டிலஆசிரியப்பா இது வொன்றே.ஹஸ்திகிரி மாஹாத்மியத்தில் பதினாறு வரிகள் கொண்ட ஒரு பாசுரத்தில் ப்ரஹ்ம ஸூத்ரங்களின் பதினாறு பாதங்களில் கூறப்படும் பரப்ரஹ்மத்தைப் பற்றிய விஷயங்களை ஸ்ரீபாஷ்யத்தை அடி யொற்றி அநுபவித்தார். இங்கே முப்பத்திரண்டு அடிகளில் அந்தப் பரப்ரஹ்மமான ஸ்ரீமந் நாராயணனுடைய ஸ்வரூப ரூப குண விபவங்களையெல்லாம் ஆழ்வார்கள் அனுபவித்துப் பாசுரமிட்டபடியே தானும் அனுபவித்து அழகாய்ப் பாடுகிறார்.ஸ்ரீமானான நாராயணனே பர தத்துவம்,அவனே பரம ஹிதம், அவனே புருஷார்த்தம் என்பதே இங்கு நிரூபிக்கப்படுகிறது.
முதன் முதலில் எம்பெருமானுடைய நித்யத்வம் கூறப்படுகிறது. அண்டங்களும் அண்டத்துக்குட்பட்ட உலகங்களும் எல்லாம் அழிந்தவன்றும் ஒரு சிறிதும் மாறுதலில்லாத தெய்வம் இதொன்றே. மற்றைத் தெய்வங்களெல்லாம் மறைந்த பிரளயங்களிலும் இவன் ஒருவனே எஞ்சி நிற்பவன். ஆகையால் இவனே தெய்வநாயகன். இந்த விசேஷார்த்தத்தைத் தரும் சப்தம் இப்பெருமானுக்குத் திருநாமமாக அமைந்ததொருபடியே என்று அதை யிட்டே அவனை விளிக்கிறார்.
மழையில் எழுந்த மொக்குள் போல் வையம்-அழகான உவமை. மழை பொழியும்போது நீர்க்குமிழிகள் தோன்றி,சற்று நின்று அழகாகப் பிரகாசித்து, உடனே அழிகின்றன.அது போலவே இவ்வுலகமும் இருக்கிறது. பகவானுடைய தயையினால்
ஸ்ருஷ்டிக்கப்பட்டுப் பல்வேறு நாம ரூபங்களை யுடையதாய்ச் சிறிது காலம் நின்று திகழும் உலகங்களெல்லாம் நிலையாக நிற்காமல் முடிவில் அழிந்து போகின்றன.
ஒன்றழியா அடியவர் மெய்ய -எல்லாம் முற்ற அழிந்தாலும் ஒரு சிறிதும் அழியாதவன் ஒருவனே.-அவனே இங்கே அடியவர்க்கு மெய்யனாக விளங்குகிறவன். “அன்றழியா” என்றும் சிலர் பாடம் கொள்வர். ‘அன்று அழியாதவன்’ என்றால் என்றேனும் அழியக்கூடியவன் என்று பொருள்படுமாகையால் அது அவ்வளவு யுக்தமன்று.
அருமறை-ஸூக்ஷ்மமான வேதம்; அதாவது அரும்பாடுபட்டு அர்த்தத்தைக் கண்டு பிடிக்க வேண்டிய வேதம்.
அருமறையின் பொருள் – அப்படிப்பட்ட வேதத்தின் உட்பொருள். வேதம் பல படியாகப்பேசுவதொன்றாகையால் அதன் கருத்தை ஆய்ந்தறிந்து மெய்ப் பொருளைக் கொண்டு பிற பொருளை ஒதுக்க வேண்டியிருக்கிறது. அதை நன்கு ஆய்ந்தெடுத்தவர்கள் ஆழ்வார்கள்“அந்தமிலா ஆரணங்கள் நாலாய்நின்ற அதன் கருத்தை ஆழ்வார்கள் ஆய்ந்தெடுத்துச் செந்தமிழால் அருள் செய்தார்கள் என்று இவர் தாமே பிரபந்த ஸாரத்தில் அருளிச் செய்திருப்பதை இங்கே நினைப்பது. அவர்கள் அருளிச்செய்த தமிழ் மறையையே இந்தப் பாசுரத்தின் இறுதியில் “தூமறை” என்று கொண்டாடுகிறார் .
ஆய்ந்தெடுக்குங்கால் – வேதங்களை முழுவதும் ஆராய்ந்து அதன் உண்மையான கருத்தைத் தெரிந்தெடுத்தால்.
தெய்வநாயகன் திருவுடன் அமர்ந்தநீ – ‘பரதேவதை லக்ஷ்மியுடன் கூடியே யிருக்கும் நீ தான் என்று விளங்குகிறது. இந்திரனையும் வாயுவையும் ப்ரஹ்மாவையும் சிவனையும் அங்கங்கே வேதங்கள் கொண்டாடினாலும், அவற்றை யெல்லாம் ஐககண்ட்யம் செய்து பார்த்தபோது ஸ்ரீய: பதியாகிய நீதான் பரதேவதை என்று நிஷ்கர்ஷிக்கப் பட்டிருக்கிறது என்று பொருள்.
நின் திரு தனக்கு நீ திருவாகி – ‘ஸ்ரீ, என்கிற ஸம்ஸ்கிருத பதம் போல ‘திரு’ என்னும் தமிழ்ச்சொல் மங்களம் செல்வம் ஸம்பத்து முதலிய பொருள்களைக் குறிக்கும். அவைகளுக்கெல்லாம் அதி தேவதை லக்ஷ்மி அவளால் உனக்கு அவை யெல்லாம் ஸித்திக்கின்றனவாகையால் அவள் ‘நின் திரு’ உனக்குத்திரு. அப்படிப்பட்ட திருவுக்கு ஸம்பத்து மங்களம் முதலியவையெல்லாம் நீ யாகிறாய். ஆகையால் அவளுக்கு நீ திரு. இவ்விதம் ஒருவருக்கொருவர் பெருமையை யளிக்கும் இத் தன்மை வேறெங்கும்
காண இயலாது-இந்தச் சேர்த்திக்கு உபமானம் கொடுக்கிறார்
“இந்து தன் நிலவுடன் இலங்கு தன்மையினை ” என்று.
இந்து – சந்திரன். சந்திரனும் நிலவும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாமல் இருப்பது மட்டுமன்றி இரண்டும் தேஜோ ரூபமாய் இரண்டும் ஸந்தோஷத்தை உண்டு பண்ணுவது போலப் பெருமாளுடையவும் பிராட்டி யுடையவும் சேர்த்தி இருக்கிறது. உக்ரமான பாஸ்கரனையும் அவன் பிரபையையும் உபமானமாகக் கூறாது ஆஹ்லாதகரனான சந்திரனையும் சீதளமான நிலவையும் கூறியது கவனிக்கத் தக்கது.
நந்துதலில்லா நல்விளக்காகி -ஒருக்காலும் கெடாத, அதாவது மங்கியோ அணைந்தோ போகாத அழகான விளக்காகி.
அந்தமில் அமுத ஆழியாய் நிற்றி – முடிவில்லாத அம்ருத ஸாகரமாய் நிற்கிறாய். ‘அந்தமில்’ என்பதால் ஸர்வேஸ்வரனுக்கு தேசம் காலம் வஸ்து என்ற மூன்று விதத்தாலும் ஏற்படக்கூடிய முடிவு-அல்லது அளவு இல்லாமை கூறப்படுகிறது.
அமுதவாழி’ என்பதால் உப்புக்கடல் அன்று,-இன்பக் கடல் என்பது சொல்லப்படுகிறது.
இந்த இரண்டு அடிகளாலும் வேதாந்தங்களில் ப்ரஹ்மத்திற்கு முக்கியமானவை என்று நிர்ணயம் செய்யப்பட்ட ஐந்து குணங்களும் சொல்லப் படுகின்றன. “நந்துதலில்லா ” என்று ஸத்யத்வம் அதாவது விகாரமின்மை; “நல்” என்று அமலத்வம்,அதாவது கெட்ட குணங்களில்லாமை; “விளக்கு” என்று ஜ்ஞானத்வம்; “அந்தமில்” என்று அநந்தத்வம்: “அமுதவாழி” என்று ஆநந்தத்வம். “நல்விளக்காகி’ ‘அமுதவாழி’ என்று ஸர்வேஸ்வரன் ஞானாநந்த ஸ்வரூபனாக இருக்கிறான் என்று காட்டவே
‘ப்ரஹ்மம் நிர்க்குணம் கேவல சிந்மாத்திரம்’ என்று-பேசும் மதங்களைப் பொய்யாக்கி நிற்கிற நிலை இது என்று அழகாக அருளிச் செய்யப்பட்டதாகிறது.
ப்ரஹ்ம ஸ்வரூபத்தை நிரூபிக்குமதான குணங்களைப் பேசிய பின், மற்ற கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்
‘பாற்கடல் தன்னில் பன்மணி யன்ன சீர்க்கணம் சேர்ந்த சீலம் எல்லையிலை‘ என்று-சீர் என்றால் கல்யாண குணம். சீர்க் கணம் – கல்யாண குண ஸமூஹம்.இவைகள் சீலத்தில் சேர்ந்திருக்கின்றன என்கிறார். சீலமும் ஒரு குணமாயிருக்க,அதன் முக்யத்வத்தைக் காட்டும் பொருட்டு அதைத் தனிக் குணமாகவும் அதை ஆஸ்ரயித்து மற்ற குணங்ககள் இருக்கின்றன என்றும் பேசுகிறார்.-சீலம்- ஸௌசீல்யம்; அதாவது தான் மிகவும் உயர்ந்தவனா யிருக்கச் செய்தேயும் பிறர் தாழ்வை நோக்காது அவர்களுடன் ஒன்றாக நெருங்கிப் பழகும் தன்மை. இதன் பெருமையைப் பார்த்து இதையே குணமாகக் கூறுவது வழக்கம். சக்கரவர்த்தித் திருமகனின் கல்யாண குணங்களைப் பேசப் புக்க வால்மீகி
மஹரிஷி முதலில் ‘குணவான் ‘ என்று ஆரம்பித்து, அதன் பின்னரே இதர குணங்களை வரிசை யிடுகிறார்.இங்கே ‘குணம்’ என்று அவர் கூறுவது ஸௌசீல்யத்தையே. இதர குணங்கள் இதைச் சேர்ந்து நிறம் பெற்றுக் கல்யாண குணங்களாகின்றன
அவை யெல்லாம் இதில் ஒடுங்கும்.-ஆதலால் தான் சீர்க்கணம் சேர்ந்த சீலம்’ என்று பேசினபடி.-இந்தச் சீர்க் கணத்திற்கு உவமை பாற்கடல் தன்னில் பன்மணி. ஷீர ஸமுத்திரத்தில் கிடக்கும் கணக்கற்ற ரத்தினம் முதலிய மணிகள் போன்றவை
உனது ஸ்வரூபமென்னும் கடலில் குணங்கள் என்னும் மணிகள்.
சீலம் எல்லையிலை – அளவற்ற குண ஸமூஹம்.-ஸ்வரூபம் அந்தமில் அமுதவழி;குணம்-சீலம் எல்லையிலை; இரண்டும் அபரிச்சேத்யம்.எல்லையில்லாத சீலம் தன் விஷயத்தில் செய்த மஹோபகாரத்தை மேல்வரும் அடிகளால் அநுஸந்திக்கிறார். முதலில் எங்கள் குற்றங்களைப் பாராது எங்களை ரக்ஷிக்கும் இறைவன் நீயே யன்றோ என்று
பேசுகிறார். அடியவர் பிழைகள் நின் கருத்தடையாது அடைய ஆண்டருளும் அரசனும் நீயே-சிக்ஷையையே அறியாத நிலை அர்ச்சாவதாரம் ஒன்று தானே.
ஸம் ரக்ஷண தீக்ஷிதனான சக்கரவர்த்தித் திரு மகனும் குற்றம் கண்டு காகம் போல்வாரைத் தண்டிக்க முயன்றும் ராவணன் போல்வாரைத் தண்டித்துமே ரக்ஷித்தான். குற்றமே யறியாத அரும் பெரும் நிலை அடியவர்க்கு மெய்யனாகி நின்ற இவ்வர்ச்சா ஸமாதியில் தானே காணக் கிடைக்கிறது.-அடைய – எல்லோரையும், எல்லாவற்றையும், ஆண்டு – ரக்ஷித்து, அருளும் – கிருபை செய்யும் அரசனும் – சக்கரவர்த்தியும், நீயே – நீ ஒருவனே.’அடைய’ என்பதால் ஒன்று கூட விடாமல்,தேவதைகள் மனுஷ்யர்கள் திர்யக்குகள் என்ற பேதமில்லாமல் என்றபடி.-அடியவர் பிழைகள் நின் கருத்தடையாது என்பதால் அனைவரையும் காத்தருளுவதில் விலக்ஷணமான ஓர் அம்சம் பேசப்படுகிறது.அனைவருக்கும் அரசனான நீ அடியவர்களுக்கு விசேஷித்து அருள் புரிகிறாய்; அவர்களுடைய குற்றங்கள் உன் உள்ளத்தில் படுவதே யில்லை-உயர்ந்த நீ உன்னை எம்முடன் கலந்தனை சீலத்தின் கார்யம் இது. உயர்ந்த நீ – கீழே கூறப்பட்ட ஸ்வரூப ரூப குண விபவாதிகளை அநுஸந்தித்து, இப்படி உயர்ந்த (மேன்மைகளை யுடையவனான) நீ இப்படிப்பட்ட உன்னை, எம்முடன் ஒரு நீராகக் கலந்தனையே என்று ஆச்சர்யப் படுகிறார்.’எம்முடன்? என்று தன்னை மற்ற ஸம்ஸாரிகளோடு சேர்த்துப் பேசுகிறார். “பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்புமான இந்நின்ற நீர்மையில் “எண்ணில் பல் குணத்தனான அவன் வந்து கலந்த நீர்மைக்குத் தோற்றுப்
பாசுரமிடுகிறார். கலந்தனை – கங்காப் பிரவாகம் தெரு ஜலத்தோடு கலந்தது போல் ஒரே படியாய்க் காணும்படி கலந்தாய். எங்கள் ஸுக துக்கங்கள் உன்னுடைய ஸுக துக்கங்களாகும்படி கலந்தனை-அவனது ஸௌசீல்யத்தை அநுஸந்தித்து ஸ்வாமி மனமுருகி இந்தப் பாசுரம் பாடியிருக்கிறார் என்பதற்கு. இந்த அடியொன்றே சான்றாகும்.
அயிந்தைமாநகரில் அமர்ந்தனை எமக்காய்-அவன் ஸௌசீல்யத்தை அநுஸந்தித்த பிறகு ஸௌலப்ய குணத்தில் ஈடுபடுகிறார். ” பின்னானார் வணங்கும் சோதி” என்று திருமங்கை மன்னன் அது பலித்தபடி. ராம கிருஷ்ணாத்யவதாரங்கள் செய்த போது உன்னைக் கண்டு அனுபவிக்கும் பாக்கியம் பெறாத எமக்காக இன்று நாங்கள் காண அயிந்தையில் வந்து ஸ்திரமாய் எழுந்தருளி யிருக்கிறாய். எமக்காய்’ என்பதால் .இவ்விதம் அவதரித்து நீ இங்கே எழுந்தருளி யிருப்பது உனக்காக அன்று; ஸர்வ விதத்திலும் அது எங்களுக்காகவே என்றும் காட்டப்படுகிறது . ‘எமக்காய்’ என்றதால் இன்று இப் பாசுரத்தை ஓதும் நமக்கும் அருள் தர எண்ணி அயிந்தையில் நாதன் வந்து அமர்ந்திருக்கிறான் என்றபடி.
இப்படியாக எம்பெருமானுடைய ஸௌசீல்ய ளௌலப்யங்களை அனுபவித்து உலகத்திலுள்ள தத்துவங்களுக் கெல்லாம் மேற்பட்டவன் அவன் என்பதை இரண்டடிகளால் பேசுகிறார்.
சித்திரமணி யெனத் திகழும் மன்னுருவில்-அத்திரமணியென அனைத்தும் நீ அணிதி.
தத்துவங்களில் இருபத்து நாலு வகைப்பட்ட அசேதனத்தையும் இருபத்தைந்தாவதான சேதனனையும் ஸர்வேஸ்வரன் திருமேனியில் பூஷணங்களாயும் ஆயுதங்களாயும் அணிந்து கொண்டிருக்கிறான் என்று பிரமாணங்கள் கூறுகின்றன. இதையே நம் ஸ்வாமியினுடைய “புருடன் மணி வரமாக” என்ற அதிகார ஸங்கிரஹப் பாசுரத்திலும், “தத்வை: அஸ்த்ர விபூஷணை:” என்ற ஸங்கல்ப ஸூர்யோதயத்தின்
மங்கள ஸ்லோகத்திலும் காணலாம் . மன்னுரு – ஸ்திரமான,நித்யமான, விக்ரஹம்.
சித்திரமணி என -அழகான மணி,-கண்ணைக் கவரும் நீல ரத்னம் போல் எம்பெருமானுடைய திருமேனி திகழ்கின்றது.-பழைய ஸ்ரீ கோசங்களிலெல்லாம் ‘அணுகி
என்றே பாடமிருக்க, இங்கே”அணிதி” என்ற ஒரு பாடம் மேற் கொள்ளப் பட்டிருக்கிறது. ‘அணுகி’கிட்டி என்று அர்த்தம். பொருளும் பொருந்த வில்லை.-அன்வயமும் பொருந்த வில்லை. ‘தரித்து’ என்று பலாத்காரமாகப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.
அணுகி’ என்ற வினை யெச்சத்தை மேல் வரும் அமர்ந்த’ என்றபதத்தோடாவது அல்லது ‘அடைதி’ என்ற பதத்தோடாவது அன்வயிக்க வேண்டும்.-இரண்டு பக்ஷங்களிலும் அர்த்த ஸ்வாரஸ்யம் குறைவாகவே இருக்கிறது. ‘அணிதி’ என்று வினைமுற்றாக வைப்பது பாசுர அமைப்புக்கும் ஒத்ததாக இருக்கிறது; பொருளும் தெளிவாக இருக்கிறது. அடைதி-“நிற்றி’ ‘வருதி” இன்புறுதி’ மிகுதி’ என்ற மேல் வாக்கியங்களின் போக்கைக் கவனித்தால் இதுவும்’அணிதி’ என்றே இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது -32 அடியுள்ள பாசுரத்தில் 16 அடிகள் இத்துடன் முற்றுப் பெறுகின்றன. வினை முற்றே உசிதம் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். மேல் வரும் அடிகளில் பஞ்ச ரூபங்கள் வர்ணிக்கப் பெறுகின்ற
விஷயம் வேறாகப் போகிறபடியால் அவற்றுடன் ஒட்டி அன்வயிக்க வேண்டிய ‘அணுகி’ என்னும் பாடம் அவ்வளவு ஸ்வாரஸ்யமாகத் தோன்ற வில்லை.
பாசுரத்தின் பிற்பகுதியில் பகவச் சாஸ்திரம் என்று கொண்டாடப் படுகிற பாஞ்சராத்ரத்தில் பரக்கப் பேசப்பட்ட எம்பெருமானுடைய பஞ்ச ரூபங்களைப் பேசுகிறார். முதலில் பர ரூபம்
விண்ணினுளமர்ந்த வியனுரு-விண்– பரமபதம், அதில் அமர்ந்த, வியன் -பெரிய, அல்லது பெருமை வாய்ந்த, அல்லது ஆச்சர்யமான, உரு-விக்ரஹம். இதுதான் பர வாஸு தேவ ரூபம் என்றும் ‘ஆதியஞ் சோதி யுரு‘ என்றும்-கொண்டாடப்படும் திவ்ய மங்கள விக்ரகம்.
அதனால் எண்ணிய ஈரிரண்டு உருக்களும் அடைதி-அதனால்-பர வாஸுதேவ ரூபத்தினால், எண்ணிய – ஸங்கல்பிக்கப்பட்ட, ஈரிரண்டு உருக்களும்-(வாஸுதேவன்,ஸங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் என்று பிரஸித்தமான) நான்கு வ்யூஹ ரூபங்களையும், அடைதி -அடைகிறாய். இவற்றின் குணம் கார்யம் முதலியவற்றை ஸ்வாமியின் ரஹஸ்ய க்ரந்தங்களிலிருந்து அறியலாம்.
இவ் வியூஹ ரூபங்களினுடைய அவாந்தர பேதங்களான கேசவன் முதலான பன்னிரண்டு ரூபங்களையும் அடுத்தபடியாகப் பிரஸ்தாவிக்கிறார். பன்னிருநாமம்-கேசவன்,நாராயணன்,மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன்,திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், இருடீகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரண்டு திருநாமங்கள்.-பல பல உருவாய்- இந்த நாமங்களுக்கு ஏற்பத் தனித் தனி பன்னிரண்டு ரூபங்கள் கொண்டு-என்னுரு எய்தி– என் சரீரத்தில் நெற்றி,வயிறு,மார்பு, உட்கழுத்து, வயிற்றின் வலப் புறம், வலது புஜம், வலக் கழுத்து, வயிற்றின் இடது புறம், இடது
புஜம்,இடக்கழுத்து, முதுகு, பிற்கழுத்து என்னும் ஸ்தானங்களில் முறையே சேர்ந்து.-எங்கும் எய்தி – கிழக்கு, மேற்கு, ஊர்த்வம்-(மேல்புறம்), தெற்கு, வடக்கு, தென் கிழக்கு, தென் மேற்கு,வட மேற்கு, வட கிழக்கு, கீழ்ப் புறம் என்ற எல்லாத் திசைகளிலும் சேர்ந்து.-நீ நிற்றி-நீ நிற்கிறாய். ஸ்வாமி அருளிச் செய்திருக்கும் ‘பன்னிரு நாமம் என்ற பிரபந்தத்தில் இவ் விரிவுகளெல்லாம் காணலாம்.
வியூஹங்களுக்கு அடைதி என்றும் பன்னிரு நாமங்களுக்கு ‘நிற்றி’ என்றும், அவதாரங்களுக்கு’வருதி‘ என்றும் பேசியவர் பர ரூபத்திற்கு அப்படி
யாதொரு வினைச் சொல்லும் உபயோகிக்காத அழகும் ரஸமும் அனுபவிக்கத்தக்கன –
விபவம், அர்ச்சை, அந்தர்யாமி என்ற மூன்று வகையான அவதாரங்களைப் பற்றி மேலடிகளில் பேசத் தொடங்குகிறார் . “மீனோடாமை” முதல் “கற்கியாய்” என்பது வரை விபவாவதாரங்கள்; “மற்றும்”தொடங்கி ” இங்குற வருதி” வரை அர்ச்சாவதாரங்கள்; அடுத்த இரண்டு அடிகள் அந்தர்யாம்யாவதாரத்தைப் பற்றியவை.-மீன்-மத்ஸ்யாவதாரம்; ஆமை – கூர்மாவதாரம்;கேழல் – வராஹாவதாரம்; கோளரி-நரஸிம்ஹாவதாரம் (கோள் – வலிமை, அரி – சிங்கம்) ; வானார் குறள் – ஆகாசம் நிறைந்த வாமனன் (குறள் – குள்ளன், வாமனன்); ‘வானார் குறள் ‘என்று திரிவிக்கிரம ரூபத்துடன் வாமனனையும் சேர்த்து இரண்டையும் ஒருசொற்றொடரால் பாசுரமிடும் அழகு கவனிக்கத்தக்கது. மழுப்படை முனி – பரசுராமன், (மழு =கோடரி, பரசு;படை – அதை ஆயுதமாக உடையவர்;பின்னும் இராமர் இருவராய் – ஸ்ரீராமனையும் பலராமனையும் சேர்த்துப் பேசுகிறார். ‘பின்னால்-என்பது முன் சொன்ன பரசுராமனும் ஒரு ராமனாயிற்றே என்ற எண்ணத்தால்.
பாரில் துன்னிய பரந்தீர் துவரை மன்னனுமாய்-கிருஷ்ணாவதாரம் ; இவ்வவதாரத்தில் ஸ்வாமிக்கு உள்ள விசேஷ ஈடுபாடு வாக்கியத்திலேயே தோற்றுகிறது. மேலும் பூமி ஒரு பசு வடிவங்கொண்டு அதர்ம மேலீட்டினால் தனக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தெரிவித்ததின் பேரில் ஸர்வேஸ்வரன் கிருஷ்ணாவதாரம் செய்தருளினான் என்கிற புராண ப்ரக்ரியையைத் திருவுள்ளத்தில் கொண்டு ‘பாரில் துன்னிய பரந்தீர்’என்று பாடப்படுகிறது. துன்னிய – நிறைந்த;பரம் -சுமை; துவரை – துவாரகை. கலிதவிர்த்தருளும் கற்கி– மேல் வரப் போகும் அவதாரம் ; கலியுகம் போய் கிருத யுகம் வரப்போவது அவர் அவதாரத்தாலே என்ற கொள்கையைக் காட்ட, ‘கலி தவிர்த்து’ என்று கூறப்பட்டிருக்கிறது.
“மற்றும்” என்று தொடங்கி எம்பெருமானுடைய அர்ச்சாவதாரங்களைப் பேசுகிறார். மத்ஸ்யம் கூர்மம் முதலிய விபவாவதாரங்களைப் போல இவைகளும் எம்பெருமானுடைய அவதாரங்களே ஆகிலும் அவைகளைக் காட்டிலும் இவை பல அம்சங்களில் வேறுபட்டவை என்பதைக் காட்ட ‘மற்றும்’ என்கிறார்.
மற்றும் மலிவதற்கு– இன்னும் அதிக ஸுலபனாகி எல்லோருக்கும் எளியவனாவதற்கு. ராம கிருஷ்ணாத்யவதாரங்களின் ஸௌலப்யமும் பரத்வம் என்னலாம்படி யன்றோ அவன் அர்ச்சாவதார ஸௌலப்யமிருப்பது . ஸர்வ ஸஹிஷ்ணுவாய் அர்ச்சக பராதீனமான அகில ஆத்ம ஸ்திதியை யுடைய இந்த அர்ச்சையின் ஸௌலப்யத்தை அநுஸந்தித்து மஹான்களெல்லாம் மனமுருகி மயங்குகிறார்கள் என்று பட்டர் ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் வியந்ததை இங்கே நம்மாசார்யோத்தமன் ஸூசிப்பிக்கிறார்.
என்றும் வல்வினை மாற்ற -விபவாவதாரங்களைப் போல் தோன்றி மறையாமல் எப்போதும் ஸ்திரமாக நிற்கும் அர்ச்சா ரூபங்கள் ஒரு காலத்தில் மட்டும் அநுஸரித்தவர்களுடைய வினைகளைப் போக்கின என்றில்லாமல் என்றும் ஆஸ்ரிதர்களுடைய கொடிய வினைகளையும் போக்குவதற்காக என்று பொருள். பகவானுடைய திவ்ய மங்கள விக்ரஹம் ஸூபாஸ்ரயம் என்று கூறப்படுகிறது. பகவத் ஸ்வரூபம் போலன்றி த்யானத்திற்கு யோக்யமாயிருப்பதால் அது ஆஸ்ரயமாகிறது; பாபத்தைப் போக்குவதாகையால் ஸூபமாகவும் ஆகிறது. ‘திருவடி முதல் திருமுடி வரை புருஷோத்தமனது திவ்ய மங்கள விக்ரஹத்தை ஸேவித்தால் மஹாபாதகங்களெல்லாம் பறந்தோடிவிடும்’என்ற வசனத்தை நினைப்பூட்ட ‘வல் வினை மாற்ற என்று பேசப் பட்டிருக்கிறது.-இந்த வாக்கியத்தில் பல பாட பேதங்கள் காண்கின்றன. ‘‘நலிவதற்கெண்ணும் வல்வினை”, “மலிவதற்கெண்ணும் வல்வினை “, “நல்வினை ” என்றே சில பாடங்கள் உள. எல்லாவற்றையும் தூக்கிப் பார்த்து “மலிவதற்கு என்றும் வல்வினை மாற்ற”என்ற பாடமே யுக்தமென்று தீர்மானித்து அதுவேஇங்கு கொள்ளப்பட் டிருக்கிறது.
விபவாவதாரங்கள் பத்து என்று பொதுவாகச் சொல்லுகிறார்கள். அர்ச்சாவதாரங்களோ கணக் கற்றவை. அமைப்பும் வடிவமும் கூடப் பலவிதங்களாயிருப்பவை என்பதை “நானாவுருவம்” என்று காட்டுகிறார். பக்தனுடைய மனோ ரதத்திற்கு அநுகுணமாக வடிவங்களை ஸர்வேஸ்வரன் மேற் கொள்ளுகிறான்.
“தமருகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானே” என்று ஆழ்வார்கள் இதையே பாடுகிறார்கள். இப்படி அவன் பல்வேறு வடிவங்கள் எடுப்பது எதற்காக என்றால் “நல்லடியோர் வானார் இன்பம்-இங்குற.” ஆழ்வார்களுடைய அருளிச் செயல்களின் உயர்ந்த ரஹஸ்யம் இது. ‘விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவும் அடிமை யெல்லாம் மண்ணுலகத்தில் மகிழ்ந்தடைகின்றனர்..நம்பண்ணமரும் தமிழ் வேத மறிந்தபகவர்களே ” என்று அதிகார ஸங்கிரஹத்தில் அருளிச் செயல்களுக்குள்ள பெருமை கூறப்பட்டிருக்கிறது. ஸ்ரீவைகுண்டத்தில் நித்ய ஸூரிகள் எந்த இன்பத்தை அடைகிறார்களோ, அந்த இன்பம்
(வான்= ஸ்ரீ வைகுண்டம், ஆர்= நிறைந்த), இங்கே தன்னை உபாஸிப்போருக்குக் கிடைக்கும்படி எம்பெருமான் அர்ச்சா ரூபத்தோடு எழுந்தருளி யிருக்கிறான் என்று பொருள். ‘நல்லடியோர்‘ என்பது அர்ச்சா ரூபங்களை உலோகத்தாலானவை என்று நினையாது இவை அப்ராக்ருதமான திருமேனிகளே என்ற தத்துவத்தை உணர்ந்து அவ்விதமே உபாஸிப்பவர்களைக் காட்டுகிறது.
வான் ஆர் இன்பம் இங்குஉற – பதங்களிலேயே வாசி தோற்றும்படி பாசுரம் பாடப்பட்டிருக்கிறது.-வானிலுள்ள இன்பம் மண்மிசை ஏற்படும்படி என்று ஒரு சேராச் சேர்த்தியைப் பேசுகிறார். அந்த இன்பத்தை இங்கே பெற்றவர்கள் தான், “இங்கே திரிந்தேற்கு இழுக்குற்றென்?” என்றும், “ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே” என்றும்,”இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என் ” என்றும் பாட வல்லவர்களானார்கள். அந்தச் செந்தமிழாரணத்தின் வழியை யடியொற்றிய ஸ்வாமியின் ஸ்ரீஸூக்திகளில் இந்த மனோ பாவத்தைத் திரும்பத் திரும்பக் காணலாம்.
“ஸ்வயம் ஸமுதிதம் வபு: தவ நிசாமயந்த: ஸதா வயம் த்ரிதர – நிர்வ்ருதிம் புவி முகுந்த விந்தே மஹி” என்றும், “முக்தாநுபூதிம் இஹ தாஸ்யதி மே முகுந்த:” என்றும்,’ஸத்யம் சபேவாரண-சைல – நாதவைகுண்டவாஸேபி ந மே பிலாவு : என்றும் இந்தச் சந்தமிகு தமிழ் மறையோன் அருளிச் செயல்களில் பல இடங்களில் காண்கிறோம்.
வருதி – அப்படி மெய்யன்பர்கள் பேரின்பம் அடையும்படி நீ இங்கே,வருதி – வருகிறாய், இதனால் உன் வரவுதான் அப்படிப்பட்ட பேரின்பத்தை அடைவிக்கிறது என்று தெரிகிறது.
இப்படி பரம் வியூஹம்,விபவம்,அர்ச்சை என்ற நான்கு ரூபங்களைப் பேசிவிட்டுக் கடைசியில் அந்தர் யாமி ரூபத்தைப் பற்றிப் பேசுகிறார்.
“திருவோடு ஒருயிர் உலகுக்கு என்னுநீ, ஏருயிரெல்லாம் ஏந்தி இன்புறுதி” என்று.
“என் திருமகள் சேர்மார்பனே என்னு மென்னுடை ஆவியே”‘என்று ஆழ்வார் ஆத்மாக்களுள் ஒருவரான தமக்குப் பிராட்டியோடு கூடிய பகவானே அந்தர்யாமி ரூபமாக இருக்கிறான் என்று அருளிச் செய்தது ஆத்ம வர்க்கங்கள் எல்லாவற்றுக்கும் துல்யம் என்பதை, “ஏருயிரெல்லாம் ஏந்தி” என்பதால் குறிப்பிடுகிறார். பிராட்டியும் நீயுமாக உலகனைத்துக்கும் ஓருயிராக இருக்கச் செய்தேயும், சேதனங்களுள் ஒவ்வொருவருக்குள்ளும் சூக்ஷ்மமான அந்தர்யாமி அவதாரமாக இருந்து அவர்களைத் தாங்கி அதனால் ஆநந்தமடைகிறாய். ஸ்வ ரூபத்தால் எல்லா வஸ்துக்களிலும் அந்த: பிரவேசம் செய்து நியமிக்கிறவன் திவ்ய மங்கள விக்ரஹத்துடன் ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் எழுந்தருளி யிருக்கிறான் என்பது இங்கே கூறப்படுகிறது . பிரஜைகள் இடர்ப்பட்டு அம்மா’ என்று அழைத்தால் உடனே முகங்காட்டி ரக்ஷிக்க விரையும் வாத்ஸல்யம் நிறைந்த மாதா பிதாக்களைப் போல , என்றாகிலும் நம் பக்கல் இச் சேதனன் திரும்பிய போது அவனை ரக்ஷிக்க வேண்டுமென்ற ஆதரத்தினால் அந்தர்யாமி ரூபமாய் எழுந்தருளி யிருக்கிறான்.ஏருயிர்-விருத்தியடைகின்ற அல்லது-அழகிய உயிர்,அசேதனம் போலன்றிக்கே தர்ம பூத ஞாநத்தால் மேன்மேலெனப் பெருமையை அடைவது அல்லது ஜ்ஞாநாநந்த ஸ்வரூபத்தால் ஜடமான பொருள்களைக் காட்டிலும் அழகு பொருந்தியது. இந்த ஆத்ம வர்க்கங்களை யெல்லாம் தாங்கி.’ஓருயிரெல்லாம் ஏந்தி’ என்று சிலர் பாடம் கொள்வர். அதில் பொருள் நயமில்லாததோடு ஏந்தி -என்பதுடன் மோனையுமில்லாமல் போகிறது.திருவோடு சேர்ந்து நின்ற போதும் நீயும் அவளும் ஈருயிராயில்லாமல் ஒருயிராகவே விளங்குகிறீர்கள் என்றுகாட்ட ஓருயிர்’ என்று பேசப்பட்டிருக்கிறது. ஓர் – ஒன்றான, ஒப்பற்ற என்று பொருள்.-இன்புறுதி – நல்லடியோர் இன்பமுற வருதி,என்று கீழே சொல்லப்பட்டது. இங்கே ‘இன்புறுதி’ என்று அவனடையும் இன்பம் பேசப்படுகிறது.”தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பு” என்றும், “மாசற்றார் மனத்துள்ளான்” என்றும் ஆழ்வார்கள் அனுபவித்த அனுபவங்களை யெல்லாம் திருவுள்ளத்தில் கொண்டு இங்கே இப்படி அருளிச் செய்கிறார்.யாவரு மறியாது எங்குநீ கரந்து- எல்லா வஸ்துகளுக்குள்ளும் நீ வியாபித்திருக்கிறாய்; ஆயினும் ஒருவருக்கும் புலப்படுவதில்லை.கரந்து-ஒளிந்து “உடல்மிசை உயிரெனக் கரந்து” என்றும் “பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய் ‘என்றும் நம்மாழ்வார் அருளிச் செயல். இப்படி உள்ளே யிருக்கின்ற நீ வஸ்துக்களின் வெளியேயுமிருக்கிறாயே என்ற ஆச்சர்யத்தைப் பேசுகிறார்.”மேவுறச் சூழ்ந்த” என்று.-மே – மேன்மை; உற – ஏற்பட; சூழ்ந்து -வெளியே வ்யாபித்து. ‘உள்ளேயும் வியாபித்து வெளி யெங்கும் வியாபித்து ‘ நிற்கும் நிலை “அந்தர்- பஹி -சததஸர்வம் வ்யாப்ய நாராயண : ஸ்தித:” என்று உபநிஷத்தால் கொண்டாடப் பட்டபடியே இங்கேயும் கூறப்படுகிறது. இந்த ஆச்சரியமான நிலை உன் ஒருவனிடத்தில் தான் காணப்படுகிறபடியால் நீ அந்த வியப்பினால், மிகுதி -மேம்பட்டவனாகிறாய்.”ஆச்சர்யவத் பயதி” என்று கீதாசார்யன் பாராட்டும் ஆச்சர்யம் இங்கே ஸ்வாமிக்கு ஏற்பட்டிருக்கிறது. வியப்பினால் மிகுதி’ என்னும் பதங்களைப் பாசுரம் முழுவதிலும் கூறப்பட்ட பகவானுடைய ஆச்சர்யமான ஸ்வரூப ஸ்வபாவங்களைப் பற்றியதாகவும் வைத்துக் கொள்ளலாம். இத்துடன் இந்தப் பாசுரத்தில் வர்ணிக்கப்பட்ட எம்பெருமானின் இயல்பு முடிவடைகிறது. ஆகவே வியப்பில் முடிவது வியப்பில்லை.
கொண்டிட எம்மை அடைக்கலம் உலகில் கண்டிலம் கதி உனையன்றி மற்றொன்றும்”மழையிலெழுந்த” என்று ஆரம்பித்து இருபத்தெட்டு வரிகளால் எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபவாதிகளை அனுபவித்து இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் மேன்மை பொருந்திய உன்னைத் தவிர எங்களுக்கு வேறு ரக்ஷகன் இல்லை என்று தம்முடைய நிர்ணயத்தை விண்ணப்பிக்கிறார்.அடைக்கலம் – ரக்ஷிக்கப் படவேண்டிய பொருள்.-எங்களை ரக்ஷிப்பதற்கு உன்னைத் தவிர வேறு ரக்ஷகன் இல்லை. இப்படி வேறு ரக்ஷகன் இல்லா நிலையே அநந்யகதித்வம்’ என்று கூறப்படுகிறது.பல்வகை நின்ற படியனைத்தும்-தொல்வகை காட்டும் துணிந்து தூமறையே.பல்வகைநின்ற = பலவிதங்களா யிருக்கும்,உன் படி யனைத்தும் – உனது ஸ்வரூப – ரூப – குண விபவாதிகள் எல்லாப் பிரகாரங்களையும், தொல்வகை = பழைமையான வழியில் துணிந்து காட்ட வல்லது பரிசுத்தமான வேதம் ஒன்று தான்.தூமறை – பரிசுத்தமான வேதம். இன்ன காலத்தில் இன்னார் இது செய்தார் என்றுசொல்ல முடியாதபடி அபௌருஷேயமாய், ‘எம்பெருமானுடைய மூச்சுக் காற்றுக்கள் தாம் வேதமாயின’ என்று சொல்லியபடி பரிசுத்தங்களான வேதங்கள். இங்கே தூமறை’ என்பதற்குத் தமிழ் மறை யென்ற பொருளும் கொள்ளலாம். இந்தப் பாசுரத்தின் ஆரம்பத்தில் வேதங்களை அருமறை என்று பிரஸ்தாவித்து, அதன் பொருளை ஆய்ந்தெடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இங்கே துணிந்து தூமறை காட்டும்’ என்ற பதங்களால் இது அந்த வேதங்களைக் காட்டிலும் வேறுபட்ட மற்றொரு வேதம் என்று கொள்ள வேண்டி வருகிறது. தவிரவும் யாதவாப்யுதயத்தில் உன்னுடைய ஒரு குணத்தின் ஒரு மூலையில் வேதங்களாகிற ஸ்துதி பாடகர்கள் ஓய்வடைந்து விட்டார்கள்’ என்று கூறியிருக்கிற ஆசார்யன் உனது பல்வேறு பிரகாரங்களையும் மறைதான், காட்ட வல்லது’ என்றால் இது மற்றொரு மறையாதல் வேண்டும். வடமொழி வேதம் எம்பெருமானை அணுக மாட்டாது, ‘அவனை அடையாது வாக்கு மனதுடன் திரும்பி விட்டது’ என்று தான் பேச வல்லதாயிற்று. கண்டேன்’ ‘கண்டேன்’என்று ஆழ்வார்களைப் போல உத்கோஷிக்க வேத வேதாந்தங்களால் இயலவில்லை. கண்டவர் தாமே காட்ட வல்லார். மாமலராள் தன்னொடு மாயனைக் கண்டமை காட்டுவது அவனைக் கண்ட ஆழ்வார்களின் அருளிச் செயலால் தானாகும்.மேலும் ‘துணிந்து’ என்பதால், அபெளருஷேயமான வேதமும் அசக்யம் என்று கைவிட்ட விஷயத்தைக் காட்ட முற்பட்டால் அது துணிந்து செய்யும் கார்யம் என்பது ஸுசிப்பிக்கப்படுகிறது.தொல்வகை காட்டும்’ என்ற பதச் சேர்த்தி வெகு அர்த்த புஷடியுள்ளது. காட்டும்போது, ‘இது புதிது புதிதாகக் கல்பிக்கப் பட்டது’ என்று தோற்றாமல் வேதங்கள் முன்சென்ற வழியே சென்று பார்க்கப்பட்டத்திது.’ என்று பார்ப்போர் மனத்தில் படும்படி காட்டுவது, “மதுரகவி தோன்றக் காட்டும் தொல் வழியே நல்வழிகள் துணிவார்கட்கே” என்ற அதிகார ஸங்கிரஹப் பாசுரச் சொற்றொடருடன், “தொல் வகை காட்டும் துணிந்து தூமறையே” என்பதைச் சேர்த்துப் பார்த்து ரஸிகர்கள் பல ரஸமான அர்த்தங் களையும் அனுபவிக்கலாம்.
————————
தூ மறையின் உள்ளம் துளங்காத் துணிவு தரும்
ஆம் அறிவால் ஆர்ந்து அடிமை ஆகின்றோம் பூ மறையோன்
பாராயணத்தில் பணியும் அயிந்தை நகர்
நாராயணனார்க்கே நாம் –5-
தூமறையின் – பரிசுத்தமான வேதத்தினுடைய
உள்ளம்- தாத்பரியம்
துளங்கா – ஸம்சயம் அடையாமல்
துணிவு தரும் – (நிச்சயம் இது என்ற)உறுதியான எண்ணத்தைத் தரும்
ஆம் அறிவால் -தகுந்த (வேதாந்த) விசேஷ ஞானத்தால்
ஆர்ந்து – நிறைந்து
அடிமையாகின்றோம் – (நாம்) தாஸர்களாக ஆகின்றோம். (யாருக்கு எனில்)
பூ மறையோன் – தாமரைப் பூவில் உண்டானவனும், எப்போதும் வேதாத்யயனம் செய்து கொண்டிருக்குமவனுமான ப்ரஹ்மாவினுடைய
பாராயணத்தில்- (வேத) பாராயணத்தில்
பணியும் – நமஸ்கரிக்கப்படும் (தெய்வமான) அயிந்தைநகர் – திருவஹிந்திரபுரத்தில் (எழுந்தருளி யிருக்கிறவனான )
நாராயணனார்க்கே-நாராயண சப்த ப்ரதிபாத்யனான எம்பெருமானுக்கே
நாம்-(அடிமையாகின்றோம் என்பதோடு அன்வயம்).
நாராயணனார்க்கே நாம்–அடிமை ஆகின்றோம்-என்று த்வயத்தில் ஸ்ரீ மதே நாராயணாய-சப்தார்த்தமும் துளங்காத் துணிவு-நம சப்தார்த்தமும் அருளிச் செய்கிறார் –
நான்காம் பாசுரத்தில் பெருமாளுடைய ஸ்வரூப ரூப குண விபவங்களை உபய வேதாந்தங்களும் கொண்டாடும்படியை விரிவாய்ப் பேசி ஐந்தாவதானஇப் பாசுரத்தில் அப்படிப்பட்ட எம்பெருமானோடு நமக்கு உணர வேண்டிய ஸம்பந்தத்தை உபபாதிக்கிறார்.நாம் அவனுக்கு அடிமையாகிறோம். இதுவும் நமக்கு உபய வேதாந்தம் காட்டிக் கொடுக்கும் ஓர் அர்த்த விசேஷம் என்பது இப் பாசுரத்தின் திரண்ட பொருள். இப்பாட்டில் ஸ்தல புராணமும் ஒருவாறு ஸுசிப்பிக்கப்படுகிறது.
“தூ மறை துணிந்து காட்டும்” என்றார் கீழ்ப்பாட்டில் ; இதில் காட்டுவதோடு நில்லாமல், நல்ல அர்த்தங்களை அறிந்து அனுஷ்டிக்க வேண்டிய துணிவையும் அது நமக்கு அளிக்கிறது என்கிறார்.
உள்ளம் ஹ்ருதயம். தூமறையின் உள்ளமாவது வேதாந்தங்களின் உண்மையான தாத்பரியம்.
இது ஆமறிவு – இதுவாகிற, அல்லது, இத்தால், ஏற்படும் அறிவு; ‘ஆம்’ என்பது ‘அல்ல’ என்பதற்கு எதிர்ச் சொல்லாய்,’உண்டு’ என்கிற ஆஸ்திக்ய புத்தியைச் சொன்னபடி யாயினுமாம். அதாவது ஒன்றும் இல்லை’ என்று கூறும் ஸித்தாந்தங்களைத் தவிர்ந்து
எல்லாம் உண்டு – தெய்வம் உண்டு,-அதற்குக் கல்யாண குணங்களும் உண்டு’ என்று பேசும் அறிவாளிகளின் ளித்தாந்தத்தைச் சேர்ந்து,என்று பொருள்.
ஆஸ்திக்ய புத்தி தான் துளங்காத் துணிவைத் தரக் கூடியது.
‘உள்ளம் துளங்காத் துணிவு தரும் தூ மறையின் ஆமறிவால்’ என்று அன்வயித்தும் பொருள் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. அநாதிகாலமாக ஸம்ஸரித்துப் போந்து மீண்டும் நமக்கு என்ன துர்க்கதிகள் வருமோ என்று துளங்கும்(அஞ்சும்) நமக்கு அவ் வண்ணம் அஞ்ச வேண்டாதபடி வேதாந்தங்களின் ஹ்ருதய ஸ்தானங்களான தத்துவ ஹித
புருஷார்த்தங்களின் அறிவால் (ஞானத்தால்) ஆர்ந்து(நிறைந்து) நமக்கு ஸ்வாமியான ஸர்வே வரனுக்குத் தாஸபூதர்களாகக் கடவோம் நாம்.
தூமறையை ‘ஸம்ஸ்கிருத வேதமாகக் ‘ கொண்ட போது தூமறை யனைத்தும் பார்த்தால் கலக்க மேற்படக் கூடுமெனினும் அதன் உள்ளத்தைப் பார்த்த போது துளக்கம் நீங்கித் துணிவு (ஸநிச்சயம்) ஏற்படும் என்று பொருள் கொள்ளுதலும், தூமறையைத் தமிழ்மறையாகக் கொண்டபோது உள்ளம் துளங்காத் துணிவு தரும் தூமறையின் ஆமறிவு என்று அன்வயித்து ‘மிகுந்த தெளிவுடன் அருளிச் செயல்கள் காட்டிக் கொடுக்கும் அர்த்த விசேஷம்’ என்று பொருள் கொள்ளுதலும் உசிதம்.–ஆர்ந்து நிறைந்து; அல்லது மகிழ்ந்து அநுபவித்து.அறிவால் ஆர்ந்து- அறிவு நிறைந்து அடிமையாகின்றோம்; அல்லது அறிவால் மகிழ்ந்து(அனுபவபூர்த்தியோடு) அடிமையாகின்றோம். இவனுக்கு அடிமைத் தொழில் செய்வதிலும் இனியது வேறில்லை என்ற ஞானத்துடன் அடிமையாகின்றோம். “அங்கணாயகர்க்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே” என்று கொண்டாடத்தக்க நிலையாயிற்றே அது.அடிமை யாகின்றோம் – நமது சேஷத்துவமும் அவனுடைய சேஷித்துவமும் நமது ஸம்பிரதாயத்தின் முக்கியமான அர்த்தங்கள். சேதனன் சேஷத்வத்தை வஹித்த போது தாஸனாகிறான். அப்போது சேஷி ஸ்வாமி யாகிறான். இளையபெருமாள் அனுஷ்டித்துக் காட்டிய தாஸ்யம் (அடிமை) தான் இங்கே காட்டப்படுகிறது. ஸ்ரீ வைஷ்ணவ ஸித்தாந்தத்தின் அடிப்படையான இந்த தாஸ்யம் தான் ஆழ்வார் ஆசார்யர்கள் ஸ்ரீஸுக்திகளில் பரக்கப் பாராட்டப்பட்டிருக்கிறது. அடிமையாகின்றோம் என்று தாஸ வர்க்கங்களை முற்பாதியால் பேசிப் பாசுரத்தின் பிற்பாதியில் அவ்விதம் அடிமை கொள்ளுமவனான ஸ்வாமியின் நிலையைப் பேசுகிறார்.
பூமறையோன் . . நாராயணனார் என்று.-பூவிலுதித்தவனும் மறையை இடைவிடாது சொல்லி வருபவனுமான ப்ரஹ்மா பணிகிறான். இத்தால் எம்பெருமானுடைய மேன்மை சொன்னபடி.
நாராயணனார்- அவன் ஸர்வத்துக்கும் இருப்பிடம் என்றும் ஸர்வத்தையும் இருப்பிடமாக உடையவன் என்பதும் இத்தால் கூறப்படுகிறது. இவன் இருக்குமிடம் அயிந்தைநகர்.நமக்கு ஸ்வாமி யானவன் நம்மை-அடிமை கொள்வதற்காகவே அமர்ந்த அயிந்தை. பாராயணத்தில்- பாராயண காலத்தில் அல்லது பாராயணத்தால் -பாராயணம் செய்வதால் . பாராயணம் செய்யுமவர்கள் அவரவர்கள் இஷ்ட தேவதையைப் பணிந்து பின்னரே பாராயணத்தைத் தொடங்குவது மரபு. இங்கே ப்ரஹ்மா பாராயணம் செய்யும் போது பணிவது அயிந்தை நகரை அலங்கரிக்கும்தேவநாதனையே தான் என்று காட்டப்படுகிறது.
இங்குப் ‘பாராயணம்’ என்ற சொல்லை உபயோகித்ததால் அர்த்த ஜ்ஞானமோ அநுஸந்தானமோ இல்லாமல் பாராயணத்தை மட்டும் செய்வதும் மிக்கபயனளிக்குமென்று தெரிகிறது.
‘பணியும்’ என்னும் சொல் ‘நாராயணனார் ?என்னும் சொல்லோடு மட்டுமில்லாமல் ‘அயிந்தைநகர்’ என்பதோடும் அந்வயிக்குமாறு அமைக்கப் பட்டிருக்கிறபடியால் வேறொரு பொருளும் தோற்றுகிறது. ‘பூமறையோன் பாராயணத்தில் பணியுமயிந்தைநகர்” என்று நகரைப் பிரமன் பணிகிறான் என ஓர் பொருளையும் கவி உத்தேசித்தே யிருத்தல் வேண்டும். ஏனெனில் திருவயிந்திரபுர ஸ்தல புராணத்தில் ப்ரஹ்மா சவ்கந்திய வனம் என்றபேர் கொண்ட இந்த ஸ்தலத்திற்கு வந்த போது ஓர்அசரீரி வாக்கு ஏற்பட்டதாகவும் அதன் சொற்படி இவ்வூரில் தவமிருந்து பெருமாளை ஸாக்ஷாத்கரித்துத் தமது லோகத்தை மீண்டும் அடைந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இதை யொட்டி அங்கே யிருக்கும் மலைக்கு ப்ரஹமாசலம் என்று பெயர் வழங்குகிறது . ஸ்வாமியும் “ப்ரஹமாசலே ச பஹு மாந – பதே முநீநாம்” என்று அனுஸந்தித்திருக்கிறார்.
நாராயணனார்க்கே-இந்த ஏ’ காரத்தின் பெருமை சொல்லுந்தரமன்று. “உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்ற நாச்சியார் அருளிச் செயலின் ரஸம் முழுவதையும் காட்ட வேண்டி “நாராயணனார்க்கே நாம் அடிமை யாகின்றோம்” என்று அதை மொழி பெயர்த்தருளிச் செய்தபடி. நமது அநந்யசரணத்வம் (வேறு புகலில்லாமை) இதனால் வெளியாகிறது.
நாம்=அடிமைப்பட்டவுடன் பெருமை உண்டா கிறதென்று சொல்லிலேயே விளங்குகிறது.
அடியோம்’ என்ற அநுஸந்தானம் நிற்க இங்கே அவனுக்கு அடிமைப்பட்டதால் ஏற்பட்ட ஸாத்துவிக அஹங்காரம் பிரகாசிக்கிறது.
————
ஆர்க்கும் கருணை பொழிவான் அயிந்தையில் வந்து அமர்ந்த
கார்க் கொண்டலைக் கண்ட காதல் புன்மையில் கண் பனியா
வேர்க்கும் முகிழ்க்கும் விதிர்விதிர்க்கும் வெள்கி வெவ்வுயிர்க்கும்
பார்க்கின்றவர்க்கு இது நாம் என் கொல் என்று பயிலுவமே –6-
ஆர்க்கும் – யாருக்கும், அதாவது யாவருக்கும்,(எல்லோருக்கும்)
கருணை பொழிவான் – கிருபையை வர்ஷிக்க வேண்டி அல்லது வர்ஷிப்பானொருவனாகி
அயிந்தையில் வந்து அமர்ந்து கார்க் கொண்டலைக் கண்ட-திருவயிந்திரபுரத்தில் வந்து அங்கே ஸ்திரமாகத் தங்கிய கருமை நிறம் கொண்ட மேகத்தை பார்த்த (கார்மேக
வண்ணனான தேவநாதனை ஸேவித்த என்றபடி)
காதல்-(அதனால்)காதலை யடைந்த
புனமயில் – காட்டிலுள்ள மயில் ( இங்கே மயிலின் அழகை யுடைய இந்தப் பெண்)
கண் பனியா – கண்ணினின்றும் நீர்த்துளி அரும்பா நின்று கொண்டு
வேர்க்கும் – உடல் முழுவதும் வேர்க்கப் பெறுவாள் ;
முகிழ்க்கும் – மயிர்க்கூச்செறிவாள்;
விதிர் விதிர்க்கும் – நடுநடுங்குவாள்;
வெள்கி- வெட்கத்தை யடைந்து
வெவ்வுயிர்க்கும் -வெப்பமான பெரு மூச்சு விடுவாள்;
பார்க்கின்றவர்க்கு இது என்கொல் என்று
(இந்தப் பெண்ணின் இத்தகைய அவஸ்தைகளைப்)-பார்க்கின்றவர்களுக்குத் தான்
இந்த நிலைமை என்ன என்று? நாம் பயிலுவம் – நாம் சொல்லக் கடவோம்(இன்ன தென்று சொல்லத் தெரிய வில்லையே என்றபடி)
தலைவின் நிலைமை கண்டு தோழி இரங்கிப் பேசுதல்
ஸ்வாபதேசப் பொருளில் -ஸ்வாமி உடைய பகவத் அனுபவ ஆர்வ மிகுதியையும்
அது கிடைக்கப் பெறாத நிலைமையில் படும் பாட்டையும் கண்டு பாகவதர்கள் வியந்து கூறியதாய்க் கொள்ளலாம்
“கண்டு வணங்கினார்க்கு என்னாங் கொல்” ‘பெருமாளை நேருக்கு நேராகக் கண்டு ஸேவிப்போர் தசை என்னவாகும்?” என்று திருமழிசை யாழ்வார் ஒரு பாசுரத்தில் கேட்கிறார். அதற்கு ஸ்ரீமந் நிகமாந்த தேசி கன் இந்தப் பாசுரத்தில் ஸமாதாநம் சொல்லுகிறார் போலும். ‘பூயோபூய? புளக நிசிதை:“என்று தொடங்கும் ஸ்ரீ வரதராஜபஞ்சாசத் ஸ்லோகத்தை இதனுடன் ஒப்பிட்டடுப் பார்க்க வேண்டும்.
“சாஸ்திர- ஐந்ய- தத்துவ ஜ்ஞான – கர்ம யோகாதி பரம்பரையாலே பிறந்த பரபக்தியானது ஸாக்ஷாத்கரிக்க வேண்டும் என்கிற அபிநிவேசத்தை யுண்டாக்கி, “காணுமாறருளாய் ‘ என்று விலபிக்கும்படி பண்ணி, இவ் வபேக்ஷா மாத்ரமடியாக வந்த பகவத் ப்ரஸாத விசேஷத்தாலே தத் கால நியதமான பரிபூர்ண ஸாக்ஷத்காரத்தை யுண்டாக்கும். இஸ் ஸாக்ஷாத்காரம் பரஜ்ஞானம் என்று பேசப்பட்டது. ” இவை ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரயஸார பங்க்திகள் . அந்த பரஜ்ஞான தசையைச் சித்திரிக்கிறது இப்பாசுரம்.-பிராட்டியைச் சரணமடைந்து, ஸாத்விக த்யாக புரஸ்ஸரமாகப் பெருமாளுடைய ஸ்வரூப ரூப குண விபவாதிகளை யெல்லாம் உள்ளபடி அறிந்து, ஆகமம் காட்டியபடியே உணர்ந்து,அவனுக்கு அடிமையானதின் பலனாக ஸ்ரீ தேவநாதன் ஸ்ரீ தேசிகனுக்குத் தன் வடிவழகைக் காட்டிக் கொடுக்க, அதனால் உண்டான அனுபவம் மேலிட்டு ஒரு பிராட்டி (நாயிகா)
தசையை யடைந்து அந்த அனுபவங்களை யெல்லாம் இப்பாசுரத்தால் பேசுகிறார்.
காட்டில் ஸ்வேச்சையாக ஸஞ்சரிக்கும் மயில் மேகத்தைக் கண்டதும் மிகக் களித்துத் தோகையை விரிப்பது நர்த்தனம் செய்வது இவை போன்ற பல செய்கைகளைச் செய்யும். அதுபோல் இந்த மயில் போன்ற ஸ்திரீயும் எம்பெருமானாகிய கார்மேகத்தைக் கண்டு பலபடியான நிலைகளை அடைகிறாள். மயிலைப் போல் அழகுடைமை பற்றி அத்தகைய உத்தம ஸ்திரீகளை ‘மயில்’ என்று பேசுவது முறை.புனம் என்றால் காடு. புன மயில் என்றால் காட்டில் தன்னிச்சையால் விஹரிக்கும் மயில் என்று பொருள் . ‘புனமயிலே! போதராய்” என்ற ஆண்டாள் அருளிச் செயலை நினைப்பது. இங்கே “காதல் புனமயில்”-காதல் என்னும் காட்டிலே ஸஞ்சரிக்கும் மயில் போன்ற ஸ்திரீ.-இவள் கண்டது கார்க் கொண்டல், அதாவது மழை காலத்து மேகம் ; வெளுத்த மேகமாயிராமல், நீருண்டு கறுத்து அழகாயிருக்கிறது. மேகங்கள் மலையினிடத்தே தங்கும். இங்கே ஓஷதாத்ரி என்னும் மலையை யுடைய அயிந்தையில் வந்து அமர்ந்ததாம் இந்தக் காளமேகம். மேகங்கள் வந்தவுடன் மழைபெய்யும். அவ்வண்ணமே இந்தக் காளமேகமும்கருணையை வர்ஷிக்கிறது. மழை எல்லோருக்கும் பெய்யும் என்று பிரஸித்தம். அப்படியே இந்தக் கருணை மழையும் இன்னார் இனியார் என்று வித்தியாஸம் பாராமல் யார்க்கும் பொழியும். ‘ஆர்க்கும்’ என்ற பதத்திற்கு யாவருக்கும்? என்றும் ‘சப்திக்கும்’ என்றும் பொருள்களைக் கொள்ளலாம். ‘ஆர்க்கும்.கார்க் கொண்டல்’ “வலம்புரி போல் நின்றதிரும்”-இடி முழக்கத்துடன் கூடிய மேகம் என்று அர்த்தமாகிறது. ஆர்க்கும் கருணை பொழிவான் வந்தமர்ந்த’ என்ற சொற்றொடரால் எல்லோருக்கும் தனது க்ருபையை வர்ஷிப்பதற்காகவே வந்து அமர்ந்த படியைக் கவி கூறுகிறார்.இந்த ஆறாவது பாசுரமும் நாயிகா பாவத்தில் அமைந்திருக்கிறது என்பது முன்னமே சொன்னோம். ஸ்ரீதேவ நாதனை ஸேவித்த ஒரு பெண்ணின் தசையைக் கவி வர்ணிப்பதைத் தமிழ் மரபை யொட்டி அவள் தாயார் பேசுவதாக வைத்து இப் பாசுரம் அவதரித்திருக்கிறதாயும் கூறுவர். அப்படியாயின்”நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்,எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை”என்ற நம்மாழ்வார் அருளிச் செயலைப் பின் பற்றியதாகக் காண்கிறது இந்தப் பாசுரம். ‘நான் என்ன வென்று சொல்லுவேன் இவளுடைய அவஸ்தைகளை’என்பதுதான் இரண்டு பாட்டுக்களின் போக்கும்.
அவன் கார்க்கொண்டல்; இவள் காதற் புனமயில். காண்போர் தாபத்தைப் போக்கும் குளிர்ந்த திருமேனியும் அதன் அழகும் அவன் விஷயத்தில் பிரஸித்தங்களாயிருக்குமாப் போலே இவளுடைய காதலும் (பக்தியும்) பிரஸித்தம்.
ஆசைக்கு விஷயமான நாயகனை ஆசையை யுடைய நாயகி நேருக்கு நேராகக் கண்டால் படும் பாடுகளை மேல் வர்ணிக்கிறார்.
கண் பனியா வேர்க்கும் – கண்களில் நீர்த் துளிகள் அரும்பிப் பனித் திவலைகள் போல் பிரகாசிக்கின்றன.
“புண்டரீக பலாமாப்யாம் விப்ரகீர்ணம் இவோதகம்” என்று இந்த அழகைத் திருவடி அனுபவிக்கிறார்.
பனியா – பனிப்ப. பனியைச்-சொன்னபடியால் குளிர்ச்சி சொல்லப்பட்டது. ஆனந்த பாஷ்பம் குளிர்ந்திருக்கும். வேர்க்கும் – கண்கள் தாம் நீரைப் பெருக்குகின்றன வென்றால், உடல் முழுது ம்கூட வேர்வை விடுகிறது.
முகிழ்க்கும்-மயிர்க்கூச்செறிகிறது. இது புதிதாக ஏற்பட்ட ஸம்ஸ்லேஷ அனுபவத்தைக் காட்டுகிறது.“நவ – ஸங்கம – ஸவ்ரீடா:”-புதிதாக ஏற்பட்ட ஸங்கமத்தாலே நாணமுற்ற நாயகியினுடைய லக்ஷ ணங்கள் இவை எல்லாம்
விதிர் விதிர்க்கும்-நடுநடுங்கும்; இன்ப மேலீட்டினால் நடுங்கும். அல்லது அவன் பெருமையையும் தன் சிறுமையையும் எண்ணி நடுங்கும் என்றாயினுமாம்
வெள்கி வெவ்வுயிர்க்கும் -வெட்கிப் பெரு மூச்சு விடும். வெட்கமும் தன் நிலைமையை எண்ணியே.-அதாவது எல்லா விதத்திலும் கீழ்ப்பட்டவளான தன்னை எல்லா விதத்திலும் மேற் பட்டவனான ஸர்வேஸ்வரன் விரும்பி வந்து ஸம்ஸ்லேஷம் கொடுத்துப் பெறாப்
பேறு பெற்றானாய் நிற்பதைக் கண்டு இப் பெண் வெட்கமடைகிறாள் என்றபடி.
“த்வய்யச்-யுதவிசதி சித்தம் அபத்ரபம் மே” என்றும் “நாணமில்லாச் சிறுதகையேன் நான் இங்கலற்றுவதென்” என்றும், “மாம் அலஜ்ஜம்” என்றும் அவனை ஆசைப்படுவதெல்லாம் வெட்கங்கெட்ட தன்மையைக் காட்டுகிறதென்று அனுஸந்திப்பது இயல்பு.
அவனை நேருக்கு நேராகக் கண்ட போது,
“ஆடிக் காண்பன் பாடி யலற்றுவன் தழுவல்வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்” என்று ஆழ்வார் அனுசந்தித்த படியே நாணம் மேலிடுவதும்
ஸஹஜம். இங்கே இந்தப் பெண்ணும் பெருமாளை ஸேவித்த போது முதலாக இன்பத்தை நுகர்ந்து பிறகு தன்னிலையை யெண்ணி வெட்கிப் போய் நமக்கு இவன்
எப்படி பதியாகப் போகிறான் என்கிற ஏக்கத்தால்-வெவ்வுயிர்க்கும் -உஷ்ணமான நீண்ட பெருமூச்சு விடுகிறாள். இந்தப் பாசுரத்தில் அவனைப் பெற்றதாலுண்டான ஸம்ஸ்லேஷாநந்தமும் அவனைப் பெறாது போய் விடுவோமோ என்று நினையும் போது ஒரு நடுக்கமும் ஒருங்கே தோற்றக் கிடக்கின்றன. இத்தகைய பாசுரங்களை அவரவர்கள் தந்தாம் உள்ளத்தில் இட்டு அனுபவித்து அர்த்தம் காண வேண்டுமே யன்றி ஒருவர் உணர்த்த உணரற்பாலதன்று. ஆசார்யோத்தமன் எம்பெருமானை அனுபவித்து, அவ்வனுபவத்தால் உண்டான பிரீதியின் பரீவாஹமாக அனுபவித்தபடியே பேசின பாசுரம் இது என்று சொல்லவும் வேண்டுமோ?“இப்படி இவள் அடையும் தசைகளை யெல்லாம் பார்க்கின்ற அயலார் ‘அவை என்ன? என்று கேட்கிறார்கள். நான் என்ன சொல்வது? உலகத்திலே காணும் நடத்தைக்கு மாறாக உள்ள இந்தத் தசைகளை நான் என்ன வென்று எடுத்துரைப்பது?” என்ற வினாவில் பாசுரம் முடிகிறது.
பக்த்யதியத்தால் பெரியோர்களுக்கு உண்டாகும் அனுபவங்களும் ஏற்படும் நிலைகளும் பிறருக்கு விளங்கா. அவற்றைக் கண்டு அதிசயிக்கும் உலகோரை நோக்கி ஆழ்வாரும் “என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்” என்றே சொல்ல வல்லவரானார். ஆக ஆழ்வார் தேசிகன் இவர்கள் தசை நமக்கு வந்த போதே நாம் இவற்றை யறிய வல்லோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
————————
பயின மதி நீயே பயின மதி தருதலின்
வெளியும் நீயே வெளியுற நிற்றலின் –தேஜஸ் ஸூ ம் நீயே சகல வஸ்துக்களும் உன்னால் பிரகாசம் அடைவதால்
தாயும் நீயே சாயை தந்து உகத்தலின் –சாயை -திருவடி நிழலை
தந்தையும் நீயே முந்தி நின்று அளித்தலின்
உறவும் நீயே துறவாது ஒழிதலின்
உற்றது நீயே சிற்றின்பம் இன்மையினால்
ஆறும் நீயே யாற்றுக்கு அருள்தலின்
அறமும் நீயே மற நிலை மாய்த்தலின் –மற நிலை -பாபங்களின் நிலையை
துணைவனும் நீயே இணையிலை யாதலின்
துய்யனும் நீயே செய்யாள் உறைதலின் –துய்யன் -பரிசுத்தன்
காரணம் நீயே நாரணன் ஆதலின்
கற்பகம் நீயே நற்பதம் தருதலின்
இறைவனும் நீயே குறையொன்று இலாமையின்
இன்பமும் நீயே துன்பம் துடைத்தலின்
யானும் நீயே என்னுள் உறைதலின்
எனது நீயே யுனதன்றி இன்மையின்
நல்லாய் நீயே பொல்லாங்கு இலாமையின்
வல்லாய் நீயே வையம் உண்டு உமிழ்தலால்
எங்கனம் ஆகும் மெய்ய நின்னியல்பே
யங்கனே ஒக்க வறிவது ஆரணமே –7-
பயின்மதி தருதலின்-மேன்மேல் வித்யை முதலியவற்றைக் கற்கும் புத்தியைத் தருவதால்
பயில்மதி நீயே-சிக்ஷையினால் வரும் புத்தி யென்று சொல்லக் கூடியவன் நீ தான்.
வெளியுற நிற்றலின்(எனக்கு) புறம்பே யுள்ள வஸ்துக்களாய் நிற்பதால்
வெளியும் நீயே-வெளிப்பட்ட வஸ்துவும் நீ தான்.
சாயை தந்து உகத்தலின்-நிழலைக் கொடுத்து அதனால் ஸந்தோஷம் அடைவதால்
தாயும் நீயே – எனக்குத் தாயும் நீ தான்.
முந்தி நின்று – முன்பே வந்து நின்று
அளித்தலின் – கொடுத்துக் காப்பதால்
தந்தையும் நீயே – எனக்குப் பிதாவும் நீயே.
துறவாது ஒழுகலின்-(ஒருகாலும்) கை விடாத நிலையை யுடையவனாகையால்
உறவும் நீயே – (ஸர்வவித)பந்துவும் நீயே.
சிற்றின்பம் இன்மையின்- நீ சிற்றின்ப மில்லாமையால்
உற்றதும் நீயே – எனக்கு வகுத்த புருஷார்த்தமும் நீதான்.
ஆற்றுக்கு – (ஒரு பயனைப் பெற அனுஷ்டிக்கும்)
அருள் தலின் – பலனை அளிப்பதால்
உபாயத்திற்கு ஆறும் நீயே – (உண்மையில்) உபாயம் என்பது நீ தான்.
மற நிலை – அதர்ம வழிகளை
மாய்த்தலின் -ஒழித்தலால்
அறமும் நீயே – உண்மையான தர்மம் நீயே.
இணை யிலையாதலின்- உனக்குச் சமமானவர் வேறெவரு மில்லாத படியால்
துணைவனும் நீயே – உற்ற துணைவனும் நீயே.
செய்யாள் – பெரிய பிராட்டியார்
உறைதலின்- (உன்னிடத்தில்) நித்தியமாக வஸிப்பதால்
துய்யனும் நீயே – பரம பரிசுத்தனும் நீயே.
நாரணன் ஆதலின் -நாராயணன்’ என்னும் சொல்லால் கூறப்படுபவனாதலால்
காரணம் நீயே – (எல்லா வற்றுக்கும்) காரணம் நீ தான்.
நற்பதம் தருதலின் – நல்ல உயர்ந்த வாழ்வைக் கொடுப்பதால்
கற்பகம் நீயே – கற்பக வ்ருக்ஷம் நீ தான்.
குறை ஒன்றிலாமையின்- ஒருவிதமான குறைவும் இல்லாதவனாகையால்
இறைவனும் நீயே–(எல்லோருக்கும்) மஹாராஜனும் நீயே.
துன்பம் துடைத்தலின்–துன்பத்தைப் போக்குவதால்
இன்பமும் நீயே–இன்பம் எனப்படுவதும் நீதான்
என்னுள் உறைதலின்–எனக்குள்ளே அந்தராத்மாவாக வஸிப்பதால்
யானும் நீயே– ‘நான்’ என்று கூறப்படும் ஆத்ம வஸ்துவும் நீயே.
உனதன்றி யின்மையின்.-உன்னுடைய தல்லாமல் (உலகில்) வேறு ஒரு பொருளும்
இல்லாமையால்
எனதும் நீயே-என்னுடையது என நான் அபிமானிக்கும் பொருளும் நீ தான்.
பொல்லாங்கு இலாமையின் -ஒருவிதத் தீங்கும் (உன்னிடம்) இராமையால்
நல்லாய் நீயே – நீ தான் நல்லவன்.
வையம் உண்டு உமிழ்தலின்-உலகத்தை எல்லாம் (ப்ரளய காலத்திலே) விழுங்கி
(ஸ்ருஷ்டி காலத்தில்) உமிழ்வதால்
வல்லாய் நீயே – (மிகுந்த) சக்தியுள்ளவன் நீயே.
மெய்ய!- (அடியவர்க்கு) மெய்யனே!
நின்வியப்பு ஏ – உன் ஆச்சர்யமான தன்மை
எங்ஙனம் ஆகும் – எவ் வண்ணம் ஆகுமோ
அங்ஙனமே ஒக்க – அவ் வண்ணமே பொருந்துமாறு
அறிவது- உணர வல்லது
ஆரணமே – வேதம் ஒன்று தான்.
தெய்வ நாயகன் எதிரே வந்து உம்மோடு அணையாது வாழ இருப்பது அர்ச்சாவதாரம் என்பதால் என்று சமாதானம் செய்து மேலும் சில குணங்களைக் காட்டி அருள அவற்றை அனுபவித்து பேசுகிறார் –
எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபவாதிகளை யெல்லாம் தூ மறை காட்டியபடியே தாம் கண்டதை நான்காவது பாட்டிலே பேசிய ஆசார்யன் அடுத்த அகவலான இந்த ஏழாவது பாசுரத்தில் உலகிலுள்ளவை யெல்லாம் அவனே என்று அற்புதமான அவனது பெருமையை அனுஸந்திக்கிறார்.
பயின்மதிநீயே பயின்மதி தருதலின்-‘பயிலுதல்? என்ற சொல்லுக்கு சொல்லுதல், அப்யஸித்தல் அல்லது பழகுதல் என்று பொருள். மதியாவது ஞானம். இது ஆத்மாவுக்கு ஸ்வரூபமாகவும் குணமாகவும் இருக்கிறது.(ஜ்ஞாநாநந்த மயஸ்வாத்மா). மேன்மேலும் பயின்று (பழகி) விருத்தி யடையக் கூடிய ஞானத்தை இவ்வாத்மாவுக்கு நல்குகிற
படியால் அந்த ஞானமும் நீயே.உன்னையே ஞானம் என்று சொல்ல வேண்டும் என்று கொண்டாடுகிறார்.”பயில்மதி தருதலின்” என்பதில் ‘பயில்மதி’யை எழுவாயாகக் கொண்டு,”தாமரையாள் கேள்வன்-ஒருவனையே நோக்கும் உணர்வு ” என்கிறபடி மதி உன்னையே காட்டிக் கொடுக்கிற படியால் ஞானத்தின் பயனான உன்னை யன்றி யாரை ஞானம்’ என்று சொல்லலாம் என்றும் பொருள் கொள்ளலாம். ‘மதி’ என்பதற்கு ‘சந்திரன்’ என்றும் பலர் பொருள் கொண்டிருக்கின்றனர். ‘மநோ மய’: என்பதற்கு மனத்தால் அறியக் கூடியவன் என்பது போல ‘மதி’ என்பதற்கு ஞானத்தால் உணரப் படுகிறவன் என்றும்
பொருள் கொள்ளலாம்.வெளியும் நீயே வெளியுற நிற்றலின் – மதி அல்லது
‘ஞானம்’ என்னும் சொல்லால் உணர்த்தப்படும் ஆத்மா நீ என்றார்; இங்கு அதற்குப் புறம்பான ஸகல வஸ்துக்களும் நீயே என்கிறார். வெளியுற – (ஆகாயத் தோடு) ஸ்பர்சம் ஏற்படும்படியாக அல்லது கண் முதலிய இந்திரியங்கள் உற (உணரும்படியாக) புறம்புள்ள எல்லா வஸ்துக்களுமாய் நிற்பதாலே,
வெளியும் நீயே – அந்த வெளியும் நீதான். “நிற்கின்ற தெல்லாம் நெடுமால்’ என்ற நினைவு இங்கு.
‘வெளி’ என்பதற்கு ‘வெளிச்சம்’ என்று பொருள் கொண்டு ஒளியுடைய ஸூர்யன் சந்திரன் அக்னி இவை உன்னாலேயே ஒளி பெற்று விளங்குகின்றன என்றும் பொருள் கூறியிருக்கிறார்கள்.
தாயும் நீயே சாயை தந்து உகத்தலின் – ஸர்வேஸ்வரனைத் தாயாக வர்ணிப்பதை யொட்டி இங்கே தாயும் நீயே என்று கூறி அதற்குக் காரணத்தையும் காட்டுகிறார்.’சாயா’ என்னும் வடமொழிச் சொல் நிழல், பிரதிபிம்பம், ஸாம்யம், அழகு, ரக்ஷணம், என்று பல் பொருள் கொண்டது.அவை யெல்லாம் இங்கே கொள்ளலாம். குழந்தையைப் பெற்றுக் கண் நிழலிலே வைத்துக் காத்து அதனால் சந்தோஷமடைவது தாயின் இயல்பு. அது போல் எம்பெருமானும் தன்னடி நிழலை யளித்துக் காத்து அதனால் தன்னைப் பேறு பெற்றவனாக எண்ணி உகக்கிறான்.
தந்தையும் நீயே முந்தி நின்றளித்தலின் – அன்புக்கு உரிய குணங்களால் தாயாவது போல ரக்ஷணத்திற்கு உறுப்பான அம்சங்களாலே நீ தந்தையும் ஆகிறாய்.
முந்தி நின்று – எனக்கு நன்மையான வற்றை யான் அறிந்து உன்னை வேண்டாமலிருப்பினும் நீயே-எனக்கு நலத்தை யறிந்து முன் வந்து கொடுத்தருள்கிறாய். என் அறிவின்மையால் நான் தீமையைத் தீமை யென்று அறியாது நிற்க, அது வருவதற்கு
முன்பே முன் நின்று அதை விலக்கி என்னைக் காப்பாற்றுகிறாய், அதனால் நீ தந்தையும் ஆகிறாய்.உலகத்தில் தாய் வேறு, தந்தை வேறாயிருப்பது போலன்றி,எம்பெருமான் தாயும் தந்தையுமாகிறான்.
“தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான்” என்றும்,”தான் எனக்காய் நினைந்து அருள் செய்யும் அப்பன்” என்றும் திருமங்கையாழ்வாருடைய அருளிச்செயல்
உறவும் நீயே துறவாதொழுகலின் – தாய் தந்தை என்பது மட்டுமன்று,எல்லாவித பந்துவும் நீயே என்கிறார். ஒரு காலும் என்னைத் துறவாதிருத்தலால் நீதான் உறவு. ஏனையோர் உறவெல்லாம் ஒரு காரணத்தை யிட்டு நிற்கும். அவர்கள் கைவிட்டுச் சென்றாலும் செல்வர். நீ ஒருவனே கைவிடாதவன்.”உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஓழிக்க
ஒழியாது . இவ்விடத்தில் ‘ஒழிதலின்’ என்ற பதம் இவ் வாக்கியத்திற்கு அநுகுணமா யில்லை யென்றதால்-ஒழுகலின்’ என்றபாடம் கொள்ளப்பட்டது.
உற்றதும் நீயே சிற்றின்பமின்மையின் – உற்றது ஏற்றது.அதாவது என் ஸ்வரூபத்திற்கு அனு குணமான புருஷார்த்தமும் நீயே. ஏனெனில் நீ சிற்றின்பமில்லை.அல்பமாய் நிலை யற்ற ஸுகங்கள் போலில்லாததால், நீ தான் எனக்கேற்ற புருஷார்த்தம்.
ஆறும் நீயே ஆற்றுக்கு அருள்தலின் – ஆறு என்றால் வழி. பேரின்பமாகிய புருஷார்த்தத்திற்கு உபாயமாய் நிற்பவனும் நீயே, உபாயம் பக்தி -பிரபத்திகளன்றோ எனில் அதற்கு விடையாக ‘ஆற்றுக்கு அருள்தலின் என்கிறார்.அதாவது பக்தி முதலானவைகளை ஒருவன் அனுஷ்டித்தாலும் அதனால் ப்ரஸன்னனான ஸர்வேஸ்வரனே தன் அநுக்ரஹ ஸங்கல்பத்தால் அவற்றுக்குப் பலன் கொடுக்கிறானே யொழிய அவை தாமே பலத்தைக் கொடுக்க சக்தி யற்றவை. அதனால் யகவானை ஸித்தோபாயம் என்றும் பக்தி ப்ரபத்திகளை ஸாத்யோபாயம் என்றும் கூறுவர்.
அறமும் நீயே மறநிலை மாய்த்தலின் – அறம்- தர்மம்;அதற்கு மாறான நிலை மறம். அதாவது அதர்மம்.-அதை ஒழிப்பதால் தர்ம ஸ்வரூபமா யிருப்பவனும் நீயே.அநாதியான கர்ம வாஸனையாலே எங்களுக்குப் பாபத்தில் உள்ள ருசியை விளக்குகிறாயன்றோ? இதற்கு மேல் அறமுண்டோ? மறநிலை மாய்ந்த போதன்றிப் புருஷார்த்தத்தில் ருசி பிறவாது;உபாயத்தில் பிரவிருத்தியும் ஏற்படாது, ஆகவே உற்ற புருஷார்த்தம்,அதைப் பெறுவிக்கும் ஆறு(உபாயம் ), அதில் மூட்டுவிக்கும் அறம், இவை யனைத்தும் நீயே என்கிறார். இங்கு ராமோ விக்ரஹவாந் தர்ம?” ‘கருஷ்ணம் தர்மம் ஸநாதநம்’ என்பவற்றை ஸ்மரிப்பது.
துணைவனும் நீயே-இணையிலை யாதலின் -எக்காரியத்திலும் உன்னைத் தவிர வேறு எனக்கு துணைவன் இல்லை. உனக்கு ஸமானம் வேறொருவரும் இல்லை யாதலால் வேறு எவனைத் துணையாகக் கூறமுடியும்.-உற்ற துணைவன் நீயே. நீ துணைவனா யிருக்கும் போது வேறு எவராலும் எனக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. நீ துணைவனா யிருக்கையில் என்னைத் தடுப்பார் யாருமில்லை. நீ துணை செய்யாத போது
என்னால் ஆகக் கூடியது ஒன்றுமில்லை.
துய்யனும் செய்யாள் நீயே செய்யாள் உறைதலின் – சிவந்த நிறமுடையவள்,-அதாவது பெரிய பிராட்டியார். அவள் உன்னிடம் நித்ய வாஸம் செய்வதால் நீயே பரிசுத்தன். ‘(ஸ்ரீய:பதியாய் நிகில ஹேய ப்ரத்யனீகனாய்-என்று பூர்வர்கள் அருளிச் செயலால் ஸ்ரீய: பதியாய்-அதாவது லக்ஷ்மிக்குப் பதியாயிருப்பதாலே ஹேயப்ரத்யநீகன் (ஸகல தோஷங்களுக்கும் எதிர்த் தட்டா யிருக்கிறான்) என்று கிடைக்கிறது. பிராட்டிக்கு அஸாதாரண குணங்களான தயை, அநுக்ரஹம் முதலியன ஈஸ்வர குணத்தில் சேராமலிருக்குமே யாயின் அந்த ஈஸ்வர குணங்கள் தோஷங்களாகவே ஆகக் கூடுமாதலின் இங்கு செய்யாள் உறைதலின் துய்யன் என்று பேசுகிறார்.-
“தத் கல்யாணம் கிமபி யமிநாம் ஏக லக்ஷ்யம் ஸமாதெள பூர்ணம் தேஜ: ஸ் ரதி பவதீ பாதலாக்ஷாரஸாங்கம்” என்ற ஸ்ரீஸ்துதி ஸ்லோகத்திலும் இதே பொருள் த்வனிக்கிறது. பிராட்டியின் ஸம்பந்தம் பெற்றதால் அவனுக்கு மங்களத்வம் உண்டாகிறது.”ஸீதேவா நுகதா லக்ஷ்மீ: தஸ்ய கிந் நாம துர்லபம்” என்ற சுமித்திரையின் வாக்கியத்தாலும் “அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்யஸா ஜநகாத்மஜா” என்ற மாரீசன் வாக்கியத்தாலும் வால்மீகி பகவான் விவரிக்கும் அர்த்தங்களும் இங்கே கொள்ளத் தக்கன காரணம் நீயே நாரணன் ஆதலின் -நாராயண சப்தத்தால் குறிக்கப்படுபவன் நீயே யாகையால் ஸகல ஜகத்துக்கும் காரணம் நீ தான். “நானுன்னை யன்றி யிலேன் கண்டாய் நாரணனே நீ என்னை யன்றி யிலை” என்ற திருமழிசைப் பிரான் வாக்கின்படி ஸமஸ்த வஸ்துக்களுக்கும் இவன் இருப்பிடம்,இவனுக்கு ஸமஸ்த வஸ்துக்களும் இருப்பிடம்.-இரண்டு வகையாலும் நீயே நாராயணன், உபாதானம் நிமித்தம் என்ற இரு வகைக் காரணமும் இவனே என்ற ஸுக்ஷ்மார்த்தங்களெல்லாம் காரணம் நீயே என்பதால் காட்டப்படுகின்றன .
கற்பகம் நீயே நற் பதம் தருதலின்– எல்லா வாற்றுக்கும் மூல காரணமா யிருப்பது மட்டுமன்றி எல்லாவற்றையும் கொடுக்க வல்ல கற்பக வ்ருக்ஷமும் நீயே.-கேட்டதை யெல்லாம் கொடுப்பது நமக்கு ஹிதமாக ஆகாது. நன்மை தீமைகளை அறியாது கற்பக வ்ருக்ஷம் நாம் கேட்பதை யெல்லாம் கொடுக்கும். எம்பெருமானோ வெனில் வேண்டிக் கேட்கிலும் தீமையைத் தன்னடியார்களுக்குக் கொடான்.-யாசிதோபி ஸதாபக்தை: நாஹிதம் காரயேத் ஹரி:” நமக்கு எது ஹிதமோ அதையே கொடுப்பது எம்பெருமானான இந்தக் கற்பகத்தின் ஏற்றம் .
நற் பதமாவது அடையப்படும் சிறந்த பதம்.-இங்கே எம்பெருமானே அங்ஙனமாதலின் நற்பதம் எனப்படுகிறான். ‘எனக்கே தன்னைத் தந்த கற்பகம்’‘ என்ற ஆழ்வார் அருளிச் செயலின் படி தன்னையே நமக்கு நற்பதமாக நல்குமவன். அவனை அனுபவித்தலாகிற மோக்ஷநந்தத்தைத் தர வல்லமை வேறெவருக்கும் கிடையாது;-சாதாரண கற்பகத்திற்கும் கிடையாது. அதையும் அடைவிக்குமவனான நீதான் உண்மையில் கற்பகம்.
இறைவனும் நீயே-குறையொன்றிலாமையின் – ஒருகுறையுமில்லாமல் பரிபூரணனான நீதான் எங்களுக்கு மஹாராஜன்.-அரசனென்பவன் குறைகளும் குற்றங்களும் இல்லாதிருக்க வேண்டும்.-அவைகள் ஒன்றும்-உன்னிடத்தில் கிடையாதபடியால் நீயே எங்களுக்கு இறைவன்.”‘குறையொன்றுமில்லாத கோவிந்தா.. இறைவா ”-என்ற திருப்பாவையின் இருபத் தெட்டாவது பாசுரத்தின் பொருள் இங்கே கிடைக்கிறது. ‘குறையொன்று மில்லாதபடியால் அவன் இறைவன்’ என்று இசைத்துப் பொருள்படுத்துகிறார்
இன்பமும் நீயே துன்பம் துடைத்தலின் – இங்கு இன்பமுடையவன்’ என்ற பொருளைத் தரும்.’இன்பன்’ என்ற சொல்லை ப்ரயோகிக்காது ‘இன்ப சொரூபன்‘ என்ற பொருளில் ‘இன்பம்’ என்றே கூறியதால், ஸம்ஸாரமாகிற பெருந் துயரைப் போக்கித் தன்னை அனுபவித்தலாகிய பேரின்பத்தை நாம் பெறும்படி செய்கிறான் என்றதாயிற்று. அவனே இன்பமா யிருந்தாலன்றி, இன்பமுடையனாக விருப்பதால் மாத்திரம் நம் துன்பத்தை ஒழிக்க வல்லனாகான்.-அவனே இன்பமயமாயிருப்பது பற்றி நம் துன்பங்களை யெல்லாம் தொலைக்கிறான் என்றபடி-
யானும் நீயே என்னுளுறைதலின்–கீழ் பதினான்கு அடிகளில் மதி,வெளி, தாய், தந்தை, உறவு, உற்றது, ஆறு,அறம், துணைவன்,துய்யன், காரணம்,கற்பகம், இறைவன், இன்பம், என்ற அம்சங்களை யெடுத்துத் தம்மளவில் அந்த அந்த அம்சங்களாய் நின்று விளங்குகின்றான் என்று-அருளிச் செய்து வந்த இவ்வாசிரியர் இனி மற்றும் பல அம்சங்களையும் கூறி விரித்துக் கொண்டிருக்க வேண்டாமென்று இவ் வடியிலும் அடுத்த அடியிலும் தாமும் தம்முடையவான அனைத்துமே அவ்வெம்பெருமான் தான் என்று முடிக்க முற்படுகிறார்.-‘நான்’ என்று சொல்லப்படும் ஆத்மாவாகிய என்னுள் வியாபித்து நிற்பதால் ‘நீவேறு நான் வேறு என்ற பேச்சுக்கே இடமில்லை. உனது திவ்யாத்ம ஸ்வரூபத்தால் என்னுடைய உள்ளும் புறமும் வியாபித்து நிற்கின்றாய்;-அங்குஷ்ட மாத்திர பரிமாண முள்ளவனாய் என்னுடைய ஹ்ருதயமாகிய குகையில் உன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹத்துடன் உறைகின்றாய் ; பனிக்கடலுள் பள்ளிகோளைப் பழகவிட்டு என் மனக் கடலுள் வாழ்கின்றாய்; அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையும் நீயுமாய் என் அகம்படி வந்து புகுந்து நிற்கின்றாய்; வந்த நாள் வந்து என் நெஞ்சிடங்கொண்ட நீ மற்றோர் நெஞ்சறியாது என்னிடமே ஸ்திரமாக எழுந்தருளி யிருக்கின்றாய்; நான் உனக்குச் சரீரமாய் நீ எனக்கு ஆத்மாவாய் நின்று நாமிருவரும் பிரித்துப் பார்க்க வியலாத நிலையில் நிற்பது பற்றி யானும் நீயே யாகின்றாய் – என்றவாறு.
செய்யாளாகிய பிராட்டி கணமும் அவனை-விட்டுப் பிரியாது அவனிடம் உறைவதாகக் கீழே அருளிச் செய்தார் ஆசிரியர். இங்கு அவ் வெம்பெருமான் தம்முள் உறைவதாகக் கூறி யருளினார்;-ஆகவே இரண்டிடத்திலும் உறைதலின் என்ற சொல் பிரயோகித்தமை பற்றிப் பிராட்டியும் எம்பெருமானும் தம்முள் உறையும் சேர்த்தியை ஸ்வாமி தேசிகன் கண்டு மகிழ்ந்த சுவை காண்க.-எனதும் நீயே உனதின்றியின்மையின் முந்திய அடியில் யான் என்று வரும் அஹங்காரத்தை மாற்றினாராயிற்று, இவ்வடியில் ‘எனது’
என்று வரும் மமகாரத்தை மாற்றுகிறார். ஸகல வஸ்துக்களும் உன்னுடையவை உனக்குச் சேஷமானவை ; அவற்றுள் சிலவற்றை என்னுடைய அறியாமையால் என்னுடையனவாகக் கூறிக் கொள்கின்றேன்; என் வீடு, என் தோட்டம் என்றெல்லாம் பிதற்றும்படி மமகாரம் மிகுத்து நிற்கின்றது. உனக்குச் சேஷ பூதமில்லாத வஸ்துவே கிடையாது. ஆகவே எனது எனப்படும் அனைத்தும் உனக்குச் சேஷ பூதமே. சேஷி ஸம்பந்தாலே எனது எனப்படும் யாவும் நீயே.என்றவாறு.
யானும் நீ எனதும் நீ என்ற அநுஸந்தாநம் ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் மிக மிகக் காணக் கிடக்கின்றது. கடல் ஞாலம் செய்தேனும் யானே-யென்னும்’ என்கிற திருவாய் மொழியில் ஆழ்வார் தாமும் ஈஸ்வரனே யென்று அநுபவித்துப் பேசி யருளினார் ‘யானே யென்னை யறிய கிலாதே யானே யென்றனதே யென்றிருந்தேன் யானேநீ என்னுடைமையும் நீயே” என்ற பாசுரத்தில் ஆழ்வார் முந்திய தசையையும் பிந்திய தசையையும் சேர்த்துப் பாசுரமிட்டார். இங்கு நம் ஆசார்யோத்தமர் ‘யானும் நீயே’ எனதும் நீயே’ என்று நல்லுணர்வுக்குப் பின்வரும் அனுஸந்தானத்தை மட்டும் எடுத்து அருளிச் செய்தார். ஆளவந்தார் “ஸகலம் தத்ஹி தவைவ மாதவ” ‘அனைத்தும் உன்னுடையன’ என்றார் ஸ்வாமி தேசிகன் ‘அனைத்தும் நீயே’ என்கிறார்-அனைத்தும் நீயே யாதலால். மேல் வரும் இரண்டு அடிகளில் எம்பெருமானுடைய நன்மையையும் வன்மையையும் பேசி
முடிக்கிறார்:-நல்லாய் நீயே பொல்லாங்கிலாமையின் பொல்லாங்கு = தீங்கு, தீமை. இது இல்லாமையின் நல்லவனெனப்படுபவன் நீயே.
கீழடிகளில் துறவா தொழுகல்’ சிற்றின்பமின்மை’ ‘மறநிலைமாய்த்தல்’ குறையொன்றிலாமை துன்பம் துடைத்தல்‘ என்ற அம்சங்களால் விலக்குதற்குரிய தன்மைக்கு எதிராயிருக்கும் தன்மை கூறப்பட்டதாகிறது. இங்குக் கூறப்பட்ட அம்சங்களையே ஒன்று கூட்டி அதன் திரண்ட பொருளை இவ்வடியில் ‘பொல்லாங்கிலாமையின்’ என்ற தொடரால் வெளியிட்ட ருளினாரென்று கூடக் கூறலாம்.-வல்லாய் நீயே வையமுண்டுமிழ்தலின் உலகங்களை யெல்லாம் ப்ரளய காலத்தில் உண்டு
மீண்டும் ஸ்ருஷ்டி காலத்தில் உமிழ்வதால் வல்லமை யென்னும் குணம் உன்னிடம் தங்கி யிருக்கிறது.-நீயே ஸர்வ சக்தன். தெய்வங்கள் என்று பாராட்டப் படுவர்களெல்லாரும் எம்பெருமானுண்டுமிழ்ந்த எச்சில் தேவர்’ என்று ஆழ்வார்களிடம் பெயர் வாங்கி விட்டனர். ஆக நீ யொருவனே ஸர்வ சக்தன் என்றவாறு.-நம்மாழ்வார் ‘படைத் திடந்துண்டு மிழ்ந்தளந்து தேர்ந்துலகளிக்கும் முதற் பெருங்கடவுள்’ என்று மகிழ்ந்து பாடிய அம்சம் இது. ‘ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும் அகப்படக் கரந்து ஓராலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒருமா தெய்வம் மற்றுடையமோ யாமே‘ என்று நம்மாழ்வார் திருவாசிரியத்தை முடித்த ரீதியில் ஸ்ரீ தேசிகனும் அத்தகைய முறைபிலே இந்த ஆசிரியப் பாவிலும் அதே பெருமையைப் பேசி ஒருவாறாக முடிக்கிறார்.-எங்ஙனமாகு மெய்யனின் வியப்பே அங்ஙனே யொக்க அறிவதாரணமே-‘மெய்ய’ என்பது இங்கு விளி. தொடக்கத்திலே இடப்பட்ட ‘அடியவர்க்கு மெய்யன்‘ என்ற திருநாமம் இப்பாசுரத்தில் பேசப்பட்ட பற்பல குண விசேஷங்களால் பொருத்தம் பெற்று மெய்யானது பற்றி இப் பாசுரத்தின் இறுதியில் ‘மெய்ய’ என்று ஒரு முறை அழைத்துக் கொண்டார் போலும்
ஆரணம் என்பது வேதம்.கர்ம பாகம் ஜ்ஞாந பாகம் எனப் பாகுபாடு பெற்ற வேதத்தில் ஜ்ஞாந பாகமாய் விளங்கும் உபனிடதங்கள் தாம் ஆச்சர்யமான உன் இயல்புகளை உள்ளபடி ஒருவாறு அறியும் வல்லமை பெற்றன.
வியப்பு என்றதால் ஒன்றுக் கொன்று மாறுபட்டு உலகில் ஒரிடத்தில் சேர்ந்து நிற்கப் பெறாதே தன்மைகளெல்லாம் உன்னிடம் கூடி நிற்கும் ஆச்சரியத்தை அடியேன் என்னென்பேன் என்றதாயிற்று. உதாஹரணமாய் உள்ளும் புறமும் ஒத்து
வியாபித்திருத்தல், தாயும் தந்தையுமாயிருத்தல்,-தன்னை அனுபவிக்கக் கொடுப்பவனாகவும் கொடுக்கப் படும் பொருளாகவும் நிற்றல்,யானாகவும் எனதாகவும்
நிற்றல், ஆகிய மாறுபட்ட தன்மைகளெல்லாம் உன்னிடம் ஒன்று கூடி நிற்கப் பெற்றாயே! இதென்ன ஆச்சரியம்! என்கிறார். நம்மாழ்வாரும் இத்தகைய மாறுபட்ட தன்மைகளை எம்பெருமானிடம் கண்டு”நல்குரவும் செல்வும்’ என்ற (6-3) திருவாய்மொழியில் அநுபவித்துப் பேசி யருளினார். கீழ்க் கூறிய விருத்த மாறுபட்ட) தத்துவங்களை மற்ற ப்ரத்யக்ஷம் முதலிய ப்ரமாணங்களால் அறிய முடியாதாதலின் இவ் விஷயத்தில் வேதமே ப்ரமாணம் என்றதாயிற்று.
இங்கு ‘ஆரணமே’ என்ற சொல்லின் ஏகாரத்தை வினாப் பொருளில் கொண்டு ஆரணம் அறிவதே’ என்றாக்கி உன் தன்மைகளை உபநிடதமும் அறிய வல்லதோ என்றும் பொருள் கொள்வது சிறக்கும். எம்பெருமான் தனக்கும் தன் தன்மை அறிய வரிதாய் நிற்க ( தனக்கும் தன் தன்மை யறிவரியானை)அவன் தன்மையை வேதம் மட்டும் அறிந்து விடுமோ? எம்பெருமானுடைய குணங்களை யறிய மனத்தையும் துணை கொண்டு பயணம் புறப்பட்டுப் பெரு முயற்சி செய்தும் அவனுடைய ஆநந்த குணத்தின் ஏக தேசத்தையும் காண வியலாது கையற்றுத் திரும்பி வந்ததாய் உபநிடதம் தானே முறையிடவில்லையா? யதோ வாசோ நிவர்த்தந்தே- இங்ஙனம் ஏகாரத்தை வினாப்பொருளிற் கொள்வதில் உள்ள தகுதியைச் சில குறிப்புக்களும் வலியுறுத்தும். ‘வியப்பு” என்பதால் ஆச்சர்யமென்று காட்டி,பின் அதை அறிய முடியு மென்று சொல்வதைக் காட்டிலும் அறிய முடியாதென்று சொல்வது சிறக்குமன்றோ; ஒரு மிக்க அறிவது என்றும் பொருள் தரும் ஒக்க அறிவது’ என்னும் தொடர் உன் அற்புதத் தன்மைகளை யெல்லாம் ஒரு மிக்க அறிவது இயலாததா மென்று கூறுவதிலே மிக்க நோக்குடைய தென்னலாம். மேலும் அடுத்த பாசுரம் ‘ஆரணங்கள் தேட’ என்று தொடங்குவதால் வேத பாகங்களனைத்தும் ஒன்று கூடியும் அவனைத் தேடிக் கொண்டே இன்னும் அவனைக் கண்ட பாடில்லை யென்றதாயிற்று. ஆதலின் ஏகாரத்தை வினாப் பொருளிற் கொள்வதும் தகும். ஆழ்வார்களும் பல விடங்களில் எம்பெருமானை நோக்கி அனைத்தும் நீயே என்று பாடியுள்ளார்கள்.
ஆனால் இப்பாசுரத்தில் 18 அடிகளில் ‘நீயே’ ‘நீயே என்று ஸ்ரீ தேசிகன் பாடியது போல் எங்கும் காண முடியாது. உயர்ந்த தத்துவார்த்தங்களும் அழகிய காவ்ய ரசனையும் ஒருங்கே இப் பாசுரத்தில் நாம் கண்டு களிக்கக் கிடக்கின்றன என்னுதல் மிகையாகாது
—————
ஆரணங்கள் தேட அயிந்தை நகர் வந்து உதித்த
காரணராய் நின்ற கடல் வண்ணர் -நாரணனார்
இப்படிக்கு மிக்கு அன்று எடுத்த பாதம் கழுவ
மெய்ப்படிக்கம் ஆனது பொன் வெற்பு –8-
ஆரணங்கள் தேட வேதங்கள் (எம்பெருமானைக் காணாமல்) தேடிக் கொண்டிருக்க
அயிந்தை நகர் வந்துதித்த காரணராய் நின்ற-திருவகீந்திரபுரத்தில் வந்து அவதரித்த( ஸகலஜகத்)காரண வஸ்துவாய் நிற்கின்ற
கடல் வண்ணர்- ஸமுத்ரம் போன்ற வர்ணமுடையவரான
நாரணனார்- நாராயணனெனப்படும்
எம்பெருமான்
இப்படிக்கு – இந்த பூமிக்கு
மிக்கு-மேற்பட்டு
அன்று எடுத்த-அன்று (த்ரிவிக்ரமாவதாரத்தில்) தூக்கிய
பாதம் – திருவடியை
கழுவ – அலம்ப (அதாவது ப்ரஹ்மா திருமஞ்சனம் செய்ய) (அந்த நீரை ஏற்பதற்கு)
பொன் வெற்பு – மேரு பர்வதம்
மெய்ப் படிக்கம் ஆனது -உண்மையான ப்ரதிக்ரஹ பாத்திரமாயிற்று.
ஸ்ரீ பாத தீர்த்தம் ஏந்தும் படிக்கமானதே மஹா மேரு பர்வதம் -வியப்பின் மேல் வியப்பு -திரிவிக்கிரம அவதாரம் அன்றோ –
இப் பாசுரத்தின் உள்ளுறை பொருள் அறிய வரிதாயுளது. இன்று நம் கண் முன் காட்சி தரும் இத் தெய்வநாயகனே பர ரூபத்தை யுடையனாகவும்,அன்று உலகளந்த த்ரிவிக்ரமனாய் ஸேவை ஸாதித்த வனாகவும் கூறுவதால் அர்ச்சாவதாரத்திற்கும் பரம் விபவம் முதலிய ரூபங்களுக்கும் உள்ள ஒற்றுமையும் தொடர்பும் கூறப்பட்டதாகின்றது.
ஆரணங்கள்தேட அயிந்தை நகர் வந்துதித்த--நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வனான எம்பெருமான் இங்கு அயிந்தையில் வந்து எல்லோரும் கண்டு களிக்குமாறு நிற்கின்றான்.-வேதங்கள் ஒரு முகமாய்த் தன்னைத் தேடிக் கொண்டே நிற்க, அவற்றுக்கு அகப்படாது அவற்றை ஏமாற்றி விட்டு, நம்மை வாழ்விக்கத் திருவுளங்கொண்டு தன்னுடைய எல்லையற்ற ஸுவ்லப்யத்தால் இவ் வயிந்தையில் ஸகல சேதநரும் ஸேவித்து இன்புறலாவதொரு வடிவு கொண்டு விளங்கும் அற்புதம் பாசுரத்தின் முதலடியால் வெளியாகின்றது.-வேதத்தின் கைக்கு எட்டாத பரமபுருஷன் நம் கையில் எளிதாக வந்துதோன்றி அகப்பட்டானே !என்ன ஆச்சர்யம் !!!
காரணராய் நின்ற கடல்வண்ணர் நாரணனார்-இந்தக் கடல் வண்ணனே உலகமனைத்துக்கும் காரணமான வஸ்து. இவனே நாராயண சப்தத்தால்
சொல்லப்படுபவன்; நார – அயந சப்தங்கள் சேர்ந்து’நாராயண’ என்று ஆகும் போது அயந சப்தத்தில் உள்ள நகர ணகரமாகி அதனால் காட்டப்படும் ஒரு குறிப்பிட்ட வ்யக்தியும் இவனே.
இப்படிக்கு மிக்கு-படி – பூமி. இந்த பூமியையும் தாண்டித் திருவடி தூக்கப்பட்டதென்று கருத்து.-படி. – ப்ரகாரம்; ஒருவராலும் இத்தகையதென்று அளவுபடுத்திப் பேச வியலாது.அந்த நிலைமையை மீறிச் செய்தது . இந்த த்ரிவிக்ரமா வதாரம் என்றும் கொள்ளலாம்.-மேலும் – உன் பெருமைகளை ஒருவாறு கூற முற்பட்டுக் கீழ்ப் பாசுரங்களில் சிலவற்றைக் கூறி இப் பாசுரத்தில் ‘ஆரணங்கள் தேட என்று தொடங்கினேன். ஆனால் நீ த்ரிவிக்ரமாவதாரத்திற் செய்த செய்கைகளை நினைந்து அனுபவிக்கும் போது கீழ் நான் கூறிய பெருமைகளெல்லாம் ஏக தேசமென்னும்படி யிருக்குமென்ற கருத்தில் நோக்கமுடையதாகவும் ‘இப்படிக்கு மிக்கு’ என்ற தொடரைக் கொள்ளலாம்.
அன்றெடுத்த பாதம் உலகனைத்தையும் ஒரு திருவடியா லளந்து ஆகாசமெல்லாம் அளக்கத் தூக்கப்பட்ட திருவடி-ஆங்கு மாவலி வேள்வியிலிரந்து சென்று அகலிடமுழுதினையும் அளந்த பாதம்.-கழுவ – திருமஞ்சனம் செய்ய. இங்குத் திருமஞ்சனம் செய்தவர் யார் என்று கூறப்படவில்லை.-ப்ரஹ்மா தாம் செய்தார் என்பது மிகப் பிரசித்தம்.
“குறைகொண்டு நான்முகன்குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்திக் கறை கொண்ட
கண்டத்தான் சென்னிமே லேறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை யாங்கு“-என்று நான்முகன் திருவந்தாதிப் பாசுரம் திருவுள்
ளத்தில் தோன்றி யிருக்கும்.
ஸ்ரீ தேவநாதன் தன் திருவடிகளின் ப்ரபாவத்தால் நதிகளில் சிறந்ததும் புண்யமுமான கங்கையை உலகுக் களித்தது போல் மலைகளிற் சிறந்த மஹா மேருவை ஸுவர்ண மலையாக்கித் தந்தபெருமையையும் வெளியிடுகிறார்.
மெய்ப்படிக்கமானது பொன் வேற்பு
பொன் வெற்பு – மேருமலை . ப்ரஹ்மா திருமஞ்சனம் செய்த திருவடித் தீர்த்தத்தை ஏந்தியபடியால் இம்மலை பொன்னுமாய் ப்ரதிக்ரஹ பாத்ரமுமாயிற்று யென்று ஸசிதம்.
ஆராதிக்கப்படும், வஸ்து எம்பெருமானுடைய பொன்னார் கனை கழற்கால்; ஆராதிப்பவன் பி ரஹ்மா;திருமஞ்சனம் செய்வது குண்டிகை நீராலே; ஏந்துகிற பாத்ரம் மஹாமேருபர்வதம். எம்பெருமானுடைய திருவடியில் ப்ரம்மா செய்த திருமஞ்சனத் தீர்த்தத்தைத் தான் ஏந்திய பெருமை பெற்ற படியாலே தான் மேரு பர்வதம் பொன் மலையானதோடு
மஹா மேருவுமாயிற்றுப் போலும். விண்ணுலகில் செய்யப் பெற்ற திருமஞ்சனத் தீர்த்தம் பூமியில் விழும் போது முதலில் உயரமான மேருமலையின் மீதே விழுவதால் மேருமலை படிக்கமாக வர்ணிக்கப்பட்டது.
மூவராகிய ஒருவனை-மூலவுலகுண்டு மிழ்ந்தளங்தானை’ என்று ஸ்ரீ தேவநாதனைத் திருமங்கைமன்னன் மங்களாசாஸநம் செய்தார். அதைத் தழுவி ஸ்ரீ தேசிகன் முந்திய பாசுரத்தில் ‘வையமுண்டுமிழ்தலின்‘ என்றதால் உண்டுமிழ்ந்ததையும், இப் பாசுரத்தில் மூன்றாமடியில் அளந்ததையும் பேசினார்.
மஹாமேரு படிக்கமானதாகக் கூறுவது உதப்ரேக்ஷை மாத்திரமா, புராணங்களில் எங்காவது இவ் வரலாறு எடுக்கப்பட்டுளதாவென்பது ஆராய வேண்டிய விஷயம்.
——————————–
வெற்புடன் ஒன்றி யயிந்தையில் வெவ்வினை தீர் மருந்து ஓன்று
அற்புதமாக வமர்ந்தமை கேட்டருள வேண்டி நிற்கப்
பற்பில் அமர்ந்த செய்யாள் படி காட்டிய பண்புடை எம்
வில் புருவக் கொடிக்கு ஓர் விலங்கா மயல் பெற்றனமே –9-
அயிந்தையில் -திருவயிந்திரபுரத்தில்
வெற்புடன்- மலையோடு
ஒன்றி-சேர்ந்து(ஸம்பந்தம் பெற்று)
வெவ் வினைதீர்- கொடிய பாவங்களைப் போக்க வல்ல
ஒன்று மருந்து- ஒப்பற்ற (ஒரு) மருந்து
அற்புதமாக அதிக ஆச்சர்ய சக்திகளோடு
அமர்ந்தமை-இருந்ததை
கேட்டு அருள் வேண்டி நிற்க- (பிறர் சொல்லக்)கேட்டு கூடியதாக
(அந்த மருந்தின்) அருளைப் பிரார்த்தித்து நிற்குங்கால்
பற்பில்- தாமரையில் (பத்மத்தில்) அல்லது
தாமரையாகிய இல்லத்தில் (வீட்டில்)
அமர்ந்த- வீற்றிருந்த
செய்யாள்- பெரிய பிராட்டி யுடைய
படி- தன்மைகளை
காட்டிய-(நாம் காணும்படி)காட்டிக் கொடுத்த
பண்புடை -தன்மைவாய்ந்தவளான
எம் வில் புருவக் கொடிக்கு-வில்லைப் போன்ற புருவத்தையுடைய கொடியை யொத்த எங்கள் பெண்ணுக்கு
ஓர்-அதி விலக்ஷணமான
விலங்காமயல் – தீராத மயக்கத்தை(ஆசையை)
பெற்றனம் – அடைந்தனம்.
வெற்புடன் ஒன்றி யயிந்தையில் வெவ்வினை தீர் மருந்து ஓன்று -தெய்வ நாயகன் என்னும் மருந்து
ஔஷதாத்ரி திருமலையோடு ஓன்று பட்டு
அற்புதமாக வமர்ந்தமை கேட்டு –
அருள் வேண்டி நிற்கப் -அதன் கடாஷத்தை வேண்டி நிற்க
பற்பில் அமர்ந்த செய்யாள் படி காட்டிய-தாமரை ஸ்தானத்தில் எழுந்து அருளி யுள்ள பெரிய பிராட்டியுடைய பிரகாரங்களை நினைவு ஊட்டிய
பண்புடை -ஸ்வ பாவத்தை உடைய
எம் வில் புருவக் கொடிக்கு ஓர் விலங்கா மயல் பெற்றனமே -நீங்காத மயக்கம் வரப் பெற்றோம்
செவிலித் தாய் நல் தாய்க்குக் கூறுதல் -செவிலித் தாய் அறத்தொடு நிற்றல் -துறை -அயலாருக்கு மணம் பசுவதை தடுத்து பேசுவது
பரிபூர்ண அனுபவம் பெறத் துடிக்கும் ஸ்வாமி உடைய பேராவல் கொண்ட பித்தரான நிலையை பாகவதர் வியந்து பேசுவது –
ஆழ்வார் வாராயின முலையாளிவள் வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நன்னோயிது’ என்றார் திருவிருத்தத்தில். வானோர் தலை மகன் தேவநாதன். அவன் பால் ஸ்ரீ தேசிகனுக்கு ஏற்பட்ட மிக்க பக்தியை ஒரு காதல் நோயாக வர்ணித்துக் காட்டுகின்றது இப் பாசுரம். கீழ்3, 6, ம் பாசுரங்களின் குறிப்புக்களில் அவற்றை முறையே பரபக்தி பரஜ்ஞாந தசைகளென்றும் இந்த 9 ம் பாட்டு பரம பக்திதசையென்றும் சொன்னோம். “இப்படி நிரதிசய போக்கியமான பகவத் ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரித்தவாறே பெருவிடாய்ப் பட்டவன் தடாகத்தைக் கண்டாற்போலே பிறந்த ப்ரீத்யதிசயம் பரம பக்தி” என்று ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில்அருளிச் செய்யப்பட்டிருக்கிறது.
“ஆர்க்குங் கருணை”யில் எம்பெருமான் தன்னைக் காட்டிக் கொடுக்க அப்போது ஓர் அநுபவம் பிறந்தது. அவ்வநுபவம் “பயின் மதி’ யிலும் “ஆரணங்கள் தேட’விலும் தொடர்ந்து வந்து ‘எல்லாம் அவனே யென்றும், ‘எல்லாம் அவனதே’ என்றும் ஸாக்ஷாத்காரம் பிறந்தது.அதன் பலனாகப் பெருவிடாய் ஏற்பட்டு அந்தப் பிரீதி தலைக்கேறி நின்ற நிலையை இப்பாசுரத்திற் காண்கிறோம். இதை உணர்த்தப் பெண் பேச்சு வேண்டி யிருந்த படியால் இப் பாசுரம் நாயிகா பாவத்தில் அமைந்தது.-நோய் வாய்ப்பட்ட ஒருவன் அந்நோயைத் தீர்க்க வல்ல ஒரு மருந்து ஓரிடத்திலிருப்பதைக் கேள்வி யுற்றான். உடனே அங்குச் சென்று அம்மருந்தைப் பெற்று உபயோகித்தான், நோய் தீருவதற்கு மாறாகத் தீரா நோயாக விளைந்தது. இப்படியும் உண்டோ என்று வியக்கும் நிலையில் இப்பாசுரத்தின் போக்கு அமைந்திருக்கிறது. பேஷஜம் (மருந்து) பிஷக் (வைத்தியன்)என்று ஸஹஸ்ர நாமத்தில் இரண்டு திருநாமங்கள். ஆழ்வார்களும் ‘செடியார் வினைகள் தீர் மருந்தே’ என்றும் மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணா’ என்றும் பெருமாளை மருந்தாயும் மருத்துவனாயும் அநுபவிக்கின்றனர். மருந்தும் பொருளும் அமுதமும் தானே
யாகிறவனன்றோ. மலைகளில் விளையும் மருந்துக்கு வீர்யம் அதிகம்.
மாமலையிலுள்ள மருந்தே பிணி தீர்க்குமன்றோ?இங்கு தேவநாதனாகிய உயர் மருந்து ஒளஷதாத்ரி யென்னும் மலையிலமர்ந்துளது. அந்த மலையின் ஒரு பகுதியிலேயே எம்பெருமான் திருக் கோயில் அமைந்திருப்பதை இன்றும் காணலாம். ஆகவே மலையாகிய இடத்தால் வந்த சிறப்பும் கூறியதாயிற்று. மலையும் ஒளஷத்த மலை ; அம்மலையிலுள்ள இவனும் ஓர் பரமெளஷதம் (மருந்து). இடமும் ஒளஷதம்; அதில் உள்ள பொருளும் ஒளஷதம். இதை நினைந்தே ‘வெற்புடனொன்றி…. மருந்து’ என்றார் போலும். ஒன்றுதல்-ஒன்றுபட்டிருத்தல், ஒத்திருத்தல்.
வெவ்வினை தீர் மருந்து-உலகிலுள்ள மற்ற மருந்துக்கள் உடலைப் பற்றிய நோய்களையே தீர்க்கும். இந்த மருந்தோ அத்தகைய நோய்களை மாத்திர மன்றி ஆத்மாவைப் பற்றிய கொடிய வினையாகிய நோய்களையும் தீர்க்க வல்லதாய் மிக உயர்ந்ததாய்த் திகழ்கின்றது.
ஒன்று மருந்து-ஒப்பற்ற மருந்து. அன்றி சகல நோய்களையும் தீர்க்க வல்ல ஒரே மருந்து. இந்த தெய்வநாயகனெனும் ஒரு மருந்தே எல்லா வினைகளையும் ஒழிக்க வல்ல தென்ற தாயிற்று. ‘மாம் ஏகம்’ என்று தானே சொல்லிக் கொண்ட ஒரே மருந்து.
அற்புதமாக-உலகில் வெவ்வேறு மருந்து வெவ்வேறு நோய் களைப் போக்கும். அதற்கு மாறாக இங்கு தெய்வ நாயகனெனும் மருந்து ஒன்றே எல்லா வினைகளையும் போக்க வல்லதாயிருப்பது மித அற்புதமன்றோ!மேலும் அயிந்தையில் அற்புதமாக அமர்ந்தமை என்று அந்வயம் கொண்டு, இத்தகைய உயர்ந்த ஒளஷதம் அயிந்தையில் நம் அனைவருக்கும் எளிதில் கிடைக்குமாறு அமைந்திருப்பது அற்புதம் என்றும் கொள்ளலாம்.
கேட்டு ஒளஷத ஸேவை செய்து அநுகூல மடைந்தோரும் அவர்கள் அனுகூலமடைந்ததைப் பார்த்தோரும் சொல்லக் கேட்டு, ‘கூரார் வேற்கண்ணீருமக்கறியக் கூறுகேனோ‘ என்ற கட்டுவிச்சி போன்ற அதிகாரிகள் சொல்லக் கேட்டு அருள் வேண்டி நிற்க அம்மருந்தை அணுகி,அதை ஸேவித்து அதனால் வரும் பலன்களைப் பிரார்த்தித்து நிற்க விலங்காமயல்-இத்தகைய ஒளஷதத்தை ஸேவிப்பதால் என்ன பலனைக் கண்டோமென்றால்- ஒரு நோய் தீர்ந்து-மற்றொரு நோய் பற்றிக் கொண்டது. முதலிலிருந்த நோய்க்குப் பரிஹாரம் உண்டு. இந்த மருந்தினால் வந்த நோயோ விலங்காமயல் ; எந்நாளும் தீராத நோய்.மயல் -மயக்கம்; காதல். கட்டு விச்சியும்’தீரா நோய் செய்தானென வுரைத்தாள்’ என்று மடலில் முடிவு கட்டினாற் போலே இப் பாசுரத்திலும் விலங்காமயல்’ என்று நிச்சயித்ததாகக் கூறலாம்
விளங்கா மயல் – விளக்க வொண்ணாத காதல்; விலக்க வேண்டாத காதல். ஆசைப்பட்டு நெடுங்காலம் தவங் கிடந்து பெற வேண்டிய இந்தக் காதல் நிலையை அடைந்த பின்னர் விலக்க வேண்டு மென்று நினைப்பாரும் உண்டோ என்றபடி : விலங்கு ஆம் மயல் என்றும் பதம் பிரிக்கலாம். விலங்காக ஆகிய மயல், விலங்கு – எம்பெருமானிடத்துப் பிணிக்கும்
பாசம்.அங்குமிங்கும் சலிக்க வொட்டாமற் செய்யும் தளை (விலங்கு). இங்கு எம்பெருமானிடம் காதல் அவனை விட்டு வேறொன்றிலும் மனம் செல்லாதவாறு
செய்கின்றது. ‘தூரம் ப்ரயாத மபி துஸ்த்யஜ காட பந்தம்‘ என்று இவர் தாமே தேவநாயக பஞ்சாசத்தில் அநுஸந்தித்தபடி. எவ்வளவு தூரத்திற் செல்ல முற்பட்டாலும் வலியப் பிடித்திழுக்கும்படியான ஒரு பந்தம்.
பற்பிலமர்ந்தசெய்யாள் படிகாட்டிய பண்புடை எம் விற்புருவக் கொடிக்கு-பெரிய பிராட்டியாருடைய தன்மைகளை அநுசரிக்கும் என்னுடைய இந்தப் பெண் என்பது இந்தத் தொடருக்குத் திரண்ட பொருள். செய்யாள் – லக்ஷ்மி. பற்பு-என்பது தாமரையைக் குறிக்கும். அதாகிற இல் – வீடு, வாஸஸ்தானம்-அதில் அமர்ந்த – வீற்றிருக்கும் செய்யாள். இங்கு
பற்பிலமர்ந்த செய்யாள்‘ என்ற தொடர் இந்த திவ்ய தேசத்தில் தனிக் கோயில் நாய்ச்சியாராக எழுந்தருளி யிருக்கும் செங்கமலவல்லி நாய்ச்சியாரை
ஸூசிப்பிப்பதாயும் கொள்ளலாம்.
‘பற்பில் மறந்த செய்யாள்’ என்றும் பாடமுண்டு . அப்போது பெருமாளிடத்து ஆசையாலே தனது பிறந்தகமான தாமரையை முற்றிலும் மறந்த செய்யாள் என்றாகிறது. உததிபரமவ்யோம்நோ?’ என்று பட்டர் அருளிச் செய்ததை அடி யொற்றியது-இப்பாடத்தால் வரும் பொருள் பிரகரணத்திற்கும் இப் பாடம் நன்கு பொருந்தியதாகக் காண்கிறது.-செய்யாள் படி காட்டிய பண்புடை எம்பெருமானிடத்து ப்ரீதி நிறைந்து அவனை விட்டு அரைக் கணமும் பிரிவைச் சகியாதவளாய்ப் பரிதவிக்கும் நாயகியின் நிலையை வர்ணிக்கும் நம்மாழ்வார் ‘திருமகள் கொல் பிறந்திட்டாள்’ என்று பாடினார் . திருமங்கை யாழ்வாரும் ‘காவியங்கண்ணி யெண்ணில் கடி மா மலர்ப் பாவை யொப்பாள்’ என்று பாசுரமிட்டார். இப் பாசுரங்களெல்லாம் ஸ்வாமி திருவுள்ளத்திலோட ‘செய்யாள் படி காட்டிய பண்புடை’ யென்று பேசுகிறார். இறையு மகல கில்லேன்-என்று க்ஷண காலமும் பிரிவைப் பொறுக்காத தன்மையை எண்ணிப் பெரிய பிராட்டியாரோடு ஸாம்யம் காட்டியபடி.-பண்பு இப்படியானால் இவள் ரூபம் எப்படி? |
விற் புருவக் கொடி.வில்லைத் தொலைத்த புருவத்தாள்‘-கொடி போன்ற மேனியை யுடையாள் என்று இந் நாயகியினுடைய ரூப வைலக்ஷண்யம் பேசப்படுகின்றது. தமிழ்ப் பிரபந்தங்கள் இயற்றுவதில் இவர் பர காலனோ அல்லது பக்தி ஸாரனோ வென்று ஸ்ரீ தேசிகன் விஷயமாகப் பூர்வர்கள் வியந்து புகழ்ந்திருக்கிறார்கள். நம்மாழ்வார் பாடிய ‘கங்குலும் பகலும்’ என்ற திருவாய் மொழியின் ரீதியை அநுஸரித்துத் திருமங்கை யாழ்வார் ‘திவளும் வெண் மதி போல்’ என்ற திருமொழியைப் பாடி யிருக்கிறார். அவ் விரண்டு பதிகங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பராங்குச நாயகிக்கு பகவத் ப்ரேமம் முற்றியதென்று ஒரு பெருமை மட்டும் வெளியாகிறது. பரகால நாயகிக்கு அந்தப் பெருமையுடன் தானே ரூப லாவண்யாதிகள் நிறைந்து அவனே பார்த்து மேல் விழுவதற்குறிய பெருமை வாய்ந்தவள் இவள் என்று விசேஷாம்சம் அழகாகக் காட்டப் பட்டிருக்கிறது. ‘குவளையங் கண்ணி’ ‘கொல்லி யம் பாவை-இளம்படி’ இளங்கனி’ ‘குலங்கெழு கொல்லி’ கோமள வல்லி’ என்றெல்லாம் பேசிய கலியனை அடி யொற்றியே இங்கே விற் புருவக் கொடி என்று வர்ணித்ததாகக் கொள்ள வேண்டும். ஸ்வாமி தேசிகன் நாயிகா பாவத்தை அடைந்த போது எந்த வர்ணனை தான் அதிகமாகும்? ஆசார்யோத்தமன் ஸ்ரீ தேவநாதனிடத்தில் மிகுந்த வ்யாமோகம் அடைந்தமையை அவ்வெம்பெருமான் விஷயமான எல்லாப் பிரபந்தங்களிலும் காண்கிறோம்.-அது மிக விலக்ஷணமான தசையை யடைந்து ‘பக்தி: ஸ்ருங்கார வ்ருத்த்யா பரிணமதி‘ என்று அவர் தாமே யருளிச் செய்தபடி ஸ்த்ரீ பாவத்தை யடையச் செய்தது. ஸ்ரீ தேவநாயக பஞ்சாசத்தில் ‘பிம்பாதரம் ஸ்பருசதி ராகவதீ மதிர்மே‘ என்பது போன்ற பல வாக்கியங்கள் உள. அடுத்த பிரபந்தமான அச்யுத சதகம் முழுவதையும் பெண்கள் பாஷை யென்று பிரஸித்தி யடைந்த பிராகிருத பாஷையிலே அமைத்தார்.-அச்யுத சதகத்திற்கு அடுத்த பிரபந்தம் மும்மணிக்
கோவை. வடமொழி- ப்ராக்ருத நூல்களிலேயே ஸ்ருங்கார பாவத்தைப் பாராட்டிய ஸ்வாமி தமிழ்நூலாகிய இதில் இன்னும் வெளிப்படையான ரீதியிலே ஆழ்வார் காட்டிய துறைகளைக் கொண்டு அவ் வனுபவத்தைப் பேசி யிருக்கிறார். இந்த நூலில் 3, 6, 9, ம் பாசுரங்களில் ஆழ்வார்களுடைய நாயிகா பாவ ரஸங்களையெல்லாம் பொருத்திப் பாடியிருப்பது புலப்படுகிறது.-மேல் பிரபந்தங்களான பந்து,கழல், அம்மானை,
ஊசல், ஏசல், என்னும் ஐந்தும் கூட நாயிகா பாவத்திலே நிலை யுடையன வாதல் வேண்டும் -அவை நம் தீ வினையால் மறைந்து விட்டன.
—————-
பெற்றனை நீயே மற்றுள வெல்லாம் — அனைத்தையும் நீயே சிருஷ்டித்து அருளினாய்
பெறுவது நின்னை யுறுவது கொள்வார் -உன்னையே தக்க உபாயமாகவும் பலனாகவும் கொள்வார்
நின்னலால் அன்றி மன்னார் இன்ப
நீ நின் பொருட்டு நீ என் பொருட்டு இலை
நின்னுரு நின்றும் மின்னுருத் தோன்றும் –உன் திரு மேனியில் இருந்தே மின் போல் நிலையற்ற அனைத்தும் பிறக்கின்றன
நின் தனக்கு நிகர் நின்னடி யடைவார்
ந பால் அன்றி யன்பால் உய்யார்
வாரணம் அழைக்க வந்த காரணனே –10-
வாரணம்- கஜேந்திரன்
அழைக்க- (மூலமே என்று) அழைக்க
வந்த – வந்து தோன்றிய
காரணமே! – காரண வஸ்துவே
மற்று உள எல்லாம் – (உன்னைத் தவிர) மற்றெல்லாவற்றையும்
நீயே பெற்றனை – நீயே பிறப்பித்தாய்.
உறுவது கொள்வார் – தாம் பெற வேண்டிய
தகுந்த புருஷார்த்தத்தை அடைய விரும்புமவர்கள்
பெறுவது – அடைவது
நின்னை – உன்னைத் தான்
(அவர்கள்)
நின்னால் அன்றி- உன்னாலே யன்றி
இன்பம் மன்னார் – (வேறொருவராலும்
எத்தகைய) இன்பத்தையும் பெற மாட்டார்கள்.
நீ- நீ (நின் இருப்பும் செய்கையும்)
நின் பொருட்டு – உனக்காகவே (யன்றி)
என் பொருட்டு -என் பலனுக்காக இல்லை அன்று.
நின் உரு நின்றும் – உன் உருவத்தினின்றும்
மின்உரு – மின் போல் சஞ்சலமான,நிலை யற்ற
தோன்றும் – உற்பத்தி யாகின்றது;
உலகம் நின்அடி- உன் திருவடிகளை
அடைவார் – அடைபவர்
நின்றனக்கு – உனக்கு
நிகர் -சமமாக ஆவார்கள்;
நின் பால்- உன் விஷயத்தில்
அன்பால் அன்றி- பக்தி கொண்டாலன்றி
உய்யார்-உஜ்ஜீவிக்க மாட்டார்கள்
மேலே உள்ள 20 பாசுரங்களும் கிடைக்கப் பெற்றிலோம் –
இப்பிரபந்தம் இன்று காணும் நிலையில் இது கடைசிப் பாசுரமாக விளங்குகிறது.-தமிழ்ப் பிரபந்த விலக்கணத்தின் படி மும்மணிக்கோவை 30 பாசுரங்கள் கொண்டதாக விருக்க வேண்டும். இங்கு இதற்கு மேலுள்ள 20 பாசுரங்களும் நமக்குக் கிடைக்காமல் மறைந்து போயிருக்க வேண்டும்.
பெற்றனை நீயே மற்றுள வெல்லாம்-”மற்று தெல்லாம்‘ என்றும் பாடம்-கொள்வார்.
பொருள் ஒன்றே. உன்னை யொழிந்த அனைத்தையும் நீயே பிறப்பித்தனை பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தை நீ’ என்றார் ஆழ்வார். பெற்றனை என்பதற்கு அடைந்திருக்கின்றாய் என்றும் பொருள் கொள்ளலாம். அப்போது அவை யனைத்தும் உன்னுடையனவே என்ற கருத்துத் தேர்கிறது.
எல்லாம் உள= எல்லாம் ஸத்தியமே பொய்யானவை யல்ல என்ற விசிஷ்டாத்வைத்துவம் த்வனிக்கிறது.
பெறுவது நின்னை யுறுவது கொள்வார்-தம் ஸ்வரூபத்திற்கு ஏற்ற பலனைப் பெற விரும்புவோர் பெறுவது உன்னையே. ‘உறுவது கொள்வார்’-என்றது பரமைகாந்திகளை. ‘திருவொடு மருவிய இயற்கை மாயாப் பெருவிறலுலகம் மூன்றினொடு நல் வீடு பெறினும் கொள்வ தெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே’-என்று நம்மாழ்வாரும், ‘நாதே
நஸ்த்ருணம் அந்யத்- அந்யத்- அபி-வ…. வாசா ந யாசாமஹே’ என்று ஸ்ரீ தேசிகன் தாமும் அருளிச் செய்தபடி எம்பெருமானை யன்றி வேறெதையும் பொருட்படுத்தாத அதிகாரிகள் இங்கே குறிப்பிடப் பட்டவர்.
முதலிரண்டு வாக்கியங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் எல்லாவற்றையும் நீ அடைந்து நிற்கிறாய்;-உன்னை அம்மஹாதமாக்கள் பெறுகின்றனர் என்று
ரஸமான ஒரு கருத்துத் தோன்றுகிறது.
நின்னாலன்றிமன் னாரின்பம்.-இந்த வாக்யத்திற்கும் ‘உறுவது கொள்வார்’
என்பதையே எழுவாயாகக் கொள்ள வேண்டும்’-பரமை காந்திகள் நீயாகிய இன்பத்தைப் பெறுவதுவும் உன்னாலேயே. அவர்களுக்கு நீ புருஷார்த்தமாவது மட்டு மன்றி உபாயமும் நீயே. இங்கு-உன்னாலல்லால் யாவராலு மொன்றுங் குறைவேண்டேன்‘ என்ற அவர்களது திடமான மனப்பான்மைவிளங்குகிறது. அதுவுமவனதின்னருளே’ என்று-அவன் கை பார்த்திருக்குமவரே உண்மைப் பரமை காந்திகள்.’உறுவது கொள்வார்‘-என்னுமதை இங்கு வருவியாமல், யார் எந்த இன்பத்தை எவர் மூலமாகப் பெற்றாலும் அது உண்மையில் உன்னாலேயே கிடைக்கின்றது என்று பொதுப்பட்ட தத்துவத்தை உணர்த்தியதாகவும் கொள்ளலாம்.
நின் பொருட்டு நீ என் பொருட்டிலை-நின்பொருட்டன்றி என் பொருட்டில்லை
என்றும் பாடமுண்டு. உன் இருப்பும் உன் செய்கையும் மற்றுமுள்ள அனைத்தும் உனக்காகவே யன்றி எனக்காக வில்லை.-அவற்றால் வரும் பலன் அனைத்தும்
உன்னுடையனவே.இதனால் எம்பெருமான் அனைத்துக்கும் சேஷியாய் நிற்கும் தன்மை கூறப்பட்டபடி.-பட்டர் ‘ஸ்வமுத்திச்ய ஸ்ரீமான்’ என்று உபநிஷத்தின் கருத்தை வெளியிட்டதை இங்கு ‘நின் பொருட்டு என்றும் ‘என் பொருட்டில்லை’ என்றும் இரண்டும் வகையாக ஸ்ரீ தேசிகள் காட்டியருளியபடி.
நின்னுரு நின்று மின்னுருத் தோன்றும்-உன் உருவத்திலிருந்து மின்னலைப் போல்
சஞ்சலமான,நிலையற்ற ஐகத்துத் தோன்றும்.-இங்கு ஒரு ரஸமான அர்த்தம் த்வனியால் கிடைக்கிற தென்னலாம். அதாவது மின் உரு – மின்னற்கொடி போன்ற பெரியபிராட்டி, நின்னுரு நின்று- உன் வடிவத்தில்,தோன்றும் பிரகாசிக் கிறாள் என்று திருவையும் திருமாலையும் நேரிற்கண்ட பேயாழ்வார் ‘பொலிந்திருண்டகார் வானில் மின்னே
போல் தோன்றி மலிந்து திருவிருந்தமார்பன்’ என்று பாசுரமிட்டதைத் திருவுள்ளத்திற் கொண்டு அந்தப் பொருளையும் கொடுக்கும் முறையில் பாசுரத்தை ஸ்ரீ தேசிகன் அமைத்திருக்கக்கூடும்.
நின்றனக்கு நிகர் நின்னடியடைவார்-உன்னடி யடைந்து அதனால் உனது (பரம்)பதம் பெற்றவர்கள் உன்னைப் போன்ற வடிவம் பெறுதலாகிய ஸாரூப்யத்தை யடைவதுடன் உனக்குச் சமமான போகத்தையும் பெற்று விளங்குகிறார்கள்.
‘தன்னனைய ஸூரியர் தன்னடிக் கீழ் வாழ’ என்று இவர் தாமே வேறிடத்தில் அருளிச் செய்தார். தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே யொக்க அருள் செய்யும் அவனதியல்பும் ஓடியோடிப் பல பிறப்பும் பிறந்துழலும் சேதநர்கள் அவனடி
யடைந்த மாத்திரத்தாற் பெறும் பேறும் ஒருங்கே விளங்குகின்றன இவ்வடியில்
நின்பாலன்றி அன்பாலுய்யார்-நின்னடி யடைபவர் அன்பாலன்றி உய்யார்;-அதிலும் நின்பால் அன்பாலன்றி உய்யார் என்று பொருள் கொள்க.-வாரணமழைக்க வந்த காரணமே-கீழ் 9 பாசுரங்களில் ஸ்ரீ தேவநாதனை அடியவர்க்கு மெய்யனென்றும் அயிந்தை நாதனென்றும் தெய்வ நாயகனென்றும் விளித்தார். ஸ்ரீ தேசிகன்-இந்தப் பாசுரத்தில் பொதுப்பட மூலகாரணமே என்று மனமுருகிக் கூப்பிடுகிறார். கஜேந்திரனைக்
காத்த வரலாற்றில் ஸ்ரீ தேசிகனுக்கு மிக்க ஈடுபாடு உண்டென்னலாம். நவமணி மாலையிலும் “கையு மாழியுமாய்க் களிறு காத்தவனே” என்று அழைக்கிறார் . வாரணம் – யானை. ஏதோ ஒரு யானை அழைக்க – ஆதி மூலமே என்று கூப்பிட,வந்த -(அந்த யானையைக் காக்க) ஓடிவந்த காரணமே-ஜகத் காரண வஸ்துவே; இங்கு ‘அழைக்க’ என்ற சொல் யாகம் முதலிய க்ரியைகளையும் விசேஷ தபஸ்ஸையும் செய்தும் பெருவதற்கு அரியனான எம்பெருமான் யானை ‘மூலமே’ என்று அழைத்த மாத்திரத்திலே ஓடி வந்த ஸௌலப்யத்தைக் காட்டுகிறது. உலகில் தன்னிடம் சேருவதையே வருகை
என்று கூறுவதால் இங்கு ‘வந்த’ என்ற சொல் கஜேந்த்ர ரக்ஷணம் செய்வதற்காக வந்த இடமே எம்பெருமானுக்கு உரிய இடமென்றும் ஆகவே தன்னிடத்திற்கு வந்தா னென்றும் பொருளை த்வனியால் காட்டும். காரணம்’ என்றதால் தெய்வங்களெல்லாம் ஓடி யொளித்தவன்று அவன் ஒருவனே யானையைக் காக்க ஓடி வந்தபடியால் அவனே தெய்வ நாயகன் எனப்படும் காரணமாகின்றான்என்று சித்ததாயிற்று.
இந்தப் பாசுரத்தில் ஸ்ரீ தேசிகன் ஒரு சித்திரத்தை அமைத்திருக்கிறார். நீ,நின்னை, நின்னால், நின்பொருட்டு, நின்னுரு நின்று, நின்( னடி.), நின் பால் என்று ஏழு வேற்றுமைகளையும் ஏழடிகளில் வரிசையாய்க் கையாண்டு காரணமே யென்று விளி வேற்றுமையில் முடித்திருக்கிறார். தொன்று தொட்டு நான், என்னை என்னால், எனக்கு, என்னின்,எனது.என்பால் என்று, அஹங்காரம் முற்றி அதன் மீது வரும் வேற்றுமைகளையே உபயோகித்து வந்த சேதநன் பகவதநுக்ரஹம் பெற்றவாறே அகங்கார மமகாரங்களை ஒழித்து எம்பெருமானை முன்னிலையாக்கி அவன் விஷயத்திலே அத்தனை வேற்றுமைகளையும் உபயோகித்து உய்வான் என்று ஸூசிக்கப்பட்டதாகிறது.
மேலும் வேற்றுமையே யில்லாத எம்பெருமானிடம் எல்லா வேற்றுமைகளையும் ஏற்றிப் பேசிய ரஸம் காண்க.
இப்பிரபந்தத்தின் ஆதிச்சொல் அருள்; முடிவிலுள்ள சொல்- காரணம். இரண்டும் சேர்ந்து ‘அருள்காரணம்’ என்றாகி திருமாலின் அருளே அனைத் துக்கும் முக்கிய காரணம் என்ற உண்மைப் பொருளை-இப்பிரபந்தம் முழுவதிலும் தெரிவிக்கின்றது.
————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply