கசாவதாரனைக் கார்த்த சாரதி மேல்
தசாவதார வெச்சரிக்கை யதுசொல
நிசாவதாரனாய் நிகழ் குருகூரெனுந்
திசாவதாரன் திருவடி யேத்துவாம்–ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்துதி.
கசாவதாரன் இந்திரத்யும்நன் என்னும் அரசன் இவன் அகத்தியரது சாபத்தினால் யானையாகிக் காட்டில் திரிந்த போது, மடுவில் வந்து நீரருந்த இவன் காலைப் பிடித்தவன் தேவல முனிவனால் முதலையாகச் சபிக்கப்பட்ட ஆகா என்னும் கந்தருவன்
திருவல்லிக்கேணிப்பதி ஸ்ரீ பார்த்த ஸாரதியே
அரு வேதவல்லித்தாயார் எச்சரிக்கை
ஸ்ரீ தாயார் கருணைக்கடாக்ஷமே ஓர் உருவாய்க்கொண்டு ஆருயிர்த்திரள்கள் மோக்ஷம் பெரும் பொருட்டே ஏணியாக எழுந்தருளி ஸேவை சாதிக்கும் பெருமாள்
ஒளிமேவிடுங் கமலாசனன் உயரிந்திரன் விண்ணோர்
அளிமேவிடப் போற்று முர ஹரியே எச்சரிக்கை.
பொங்கெழின் மிகுந்த பங்கய மலரைத் தவிசாக வுடைய சதுர்முகப் பிரம்மனும் உயர் வமைந்த விண்ணுலகரசாதிபனாகிய தேவேந்திரனும் இன்னும் அனந்த கோடித் தேவர்களும் தேவரீரது திருவாயிலின் கண் திருவருளுதயத் தரிசனார்த்தத்தின் நிமித்தம் நெக்கு நெக்குருகி நிலமிசை வீழ்ந்து திரிகரணம் என்னும் – மனம் வாக்கு காயத்தால்-ஒற்றுமைப்பட அட்டாங்க பஞ்சாங்கமாக நமஸ்கரித்தெழும் சிறப்பினை வாய்ந்த -முரஹரி யென்னும் திரு நாமத்தை யுடையவனே! எச்சரிக்கை.
மேல் கீழொடு யேட்டுத் திசை மேவும் பல வண்டம்
சூல் கொண்டெனக் காக்கு மதுசுதனா எச்சரிக்கை.
மேல் நாடெனச் செப்பும் விண்ணுலகத்தின் கண் உள்ளனவும், கீழ்நாடெனச் செப்பும் மண்ணுலகத்தின் கண் உள்ளனவும், அஷ்ட திசையின் கண் உள்ளனவும், இன்னும் எவராலும் அளவிட்டுச் சொல்லுவதற் கரிதாகிய அண்டரண்ட பகிரண்டங்களில் உள்ளனவுமாகிய ஜீவ கோடிகளைத் தன் தாய் கருப்பத்தில் சிசுவை வைத்துக் காப்பாற்றும் தன்மை யினும் ஆயிர மடங்கதி மாக அன்பு வைத்து அவ்வவ் வுயிர்களை ஸ்வதந்திரத்தால் காத்து இரக்ஷிக்கும் மாஷிமை யுடைய மதுசூதனா! எச்சரிக்கை.
துதி சேர் தசாவதார நற்றுளபா பத்ம நாபா
கதி சேர்ந்திட வருள் தாமரைக் கண்ணா எச்சரிக்கை.
நித்திய பத்தியைச் சதா இடைவிடாது செய்து உய்யும் அன்பர்களுடைய துதி யமையப் பெற்ற திவ்யத் திருமங்கள திரு மேனி பத்தாக வுடையவனே! தேன் கசிதலமையப் பெற்ற நல்ல துளப மாலையை அணிந்தவனே! பதுமம் பூத்த திருநாபியை உடையவனே ! இப் பிறப்பிறப்பென்னும் துக்க சாகரத்தில் மூழ்கி திருவடிகட்குப் பாத்திரனாகா நிற்கும் இந் நாயேனைத் தேவரீரது அழியாத மோக்ஷ இன்பானுபவ ஸ்திதியில் சேர்த்து அத் திருவடிகட்குப் பாத்திரனாச் செய்குவாய். தாமரைக் கொப்பாகிய தடங் கண்களை உடையவனே ! எச்சரிக்கை.
அருமாமறை களவாடிய அடல் சோமுகசுரனை
பெரு மச்சவதாரங்கொடு பிளந்தோய் எச்சரிக்கை.
அரிய சிறப்பினை வாய்ந்த இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்கு வேதங்களையும் திருடிக் கொண்டு ஓடிக் கடல் புகுந்த தபோ பலத்தினால் பெற்ற நிகரில்லாத ஆற்றலை வகித்த சோமுகாசூரன் என்பவன் தருக்கு ஒழிய, அக்கணமே தேவர்கள் வேண்டுகோளுக்கிரங்கி பெரிய மச்சாவதாரத் திருமேனி கொண்டெழுந்தருளி அவன் மார்பைப் பிளந்து அழித்தவனே! எச்சரிக்கை
விருப்பாய்சுரர் திருப்பாற்கடல் மேவிக் கடைந்திடுநாள்
உருப்பாய்ந்திடு கூர்மத்துரு உற்றோய் எச்சரிக்கை.
மிர்தத்தினின்றும் நீங்கற் பொருட்டு மிக்க சந்தோஷத்தினால் தேவர்கள் யாவரும் ஒருங்கு
கூடி ஷீராப்தியினின்றும் அமிர்தம் எடுக்க மந்தர கிரியை மத்தாகவும் வாசுகியைத் தாம்பாகவுங் கொண்டு கடைந்திட்ட போது அம் மந்தரகிரி நிலத்தில் புதைந்து எழாது நிற்க அத் தருணம் எழிலமைந்த ஐயுருவமையப் பெற்ற கூர்மாவதாரத் திருவுருவங் கொண்டெழுந்தருளி அம்மந்தரகிரியை முதுகினால் தாங்கி தேவர்களைக் காத்து அமிர்தம் பகிர்ந்தவனே !எச்சரிக்கை.
பாயாய் தரை சுருட்டும் படும்பாவி இரண்யரக்கண்
மாயப்பெரும் கோலத்துரு மகிழ்ந்தோய் எச்சரிக்கை
பஞ்சபூத காரிய சராசர பேதமாகத் தெற்றென விளங்கும் இந்நில உலகத்தை தன்னுடைய தபோ பராக்ரமத்தினால் பாயாகச் சுருட்டி கக்கத்தில் வைத்ததோடி நரகில் கோட்டை கட்டி அதனுட் ஒளித்த மிக்க பாதகனாகிய ஹிரண்யாக்ஷன் என்பவன் உயிரை எமன் உண்டு போக பெரிய வராஹ திருவவதார திருமேனி கொண்டருளி தனது வலிமைமிக்க கோட்டினால் குத்தித் தூக்கி எறிந்து அழித்தவனே எச்சரிக்கை
எனக்கோர் தெய்வம் எதிரில்லெனும் இரண்யக் கசிபவனை
சினந்தே வரு தூணின் நரசிங்கா எச்சரிக்கை.
இராகத் துவேஷத்தினால் கட்டுப்பட்டு அஞ்ஞான மல மாயாதிகளால் நெற்றுண்டு
நான் என்னும் ஆணவப் பெரும் பேய்ப் பிடித்துத் தன் சுதந்திரம் பாராட்டி எனக்கு நிகர் அகிலத்தில் ஒன்றுமில்லை; எந்தத் தெய்வமுமில்லை ; நானே தெய்வமெனக் கூறித் திரிந்த மிக்க வலி யமைந்த இரண்யக்கசிபு என்னும் துஷ்டனை நிக்ரஹஞ்செய்து, பழ வன்பிற் சிறந்த இளங்குழவியாகிய பிரகலாதாழ்வானென்னும் சிஷ்டனைக் காத்து ரக்ஷித்து அனுக்கிரஹஞ்செய்வான் வேண்டி ஆற்றொணாப் பெருங்கோபமுற்று ஆங்கு எதிரில் இருந்த ஓர் தம்பத்தின் கண் நரசிங்காவதாரத் திருமேனி கொண்டருளி க்ஷணமே அவன் மணிக்குடலைப் பிடுங்கிக் கழுத்தில் மாலையாகத் தரித்தவனே! எச்சரிக்கை.
ஒருமாபலிப் பெருமாவலி உற்றே யழித்திடவே
அருவமனனென வந்திடும் அச்சுதா எச்சரிக்கை.
தனக்கு நிகரில்லை யெனத் தருக்குற்று வாழ்ந்த மஹாபலிச் சக்ரவர்த்தியின் மிகுந்த பராக்கிரமத்தை அழித்து, அவன் அடங்குமாறு வாமனாவதாரத் திருமேனி கொண்டருளி அச்சக்ரவர்த்தியினிடம் மூன்றடி மண் யாசித்து மண்ணும் விண்ணும் ஈரடியால் அளந்து மற்றோரடிக்கு இடம் இல்லாமையால் அவன் சிரத்தில் பாதத்தை அமைத்து பாதாளத்தில் இறுத்தி அவன் ஆற்றலடக்கின புருடோத்தமனே ! அச்சுதனே! எச்சரிக்கை
உயரந்தணர் நிமித்தம் உலகரசர் தமைக் கொல்ல
செயமேவிய வடிவாம் பரசுராமா எச்சரிக்கை.
பிருகு வம்சத்தில் பிறந்த ஜமதக்கினி என்னும் பிராமணோத்தமருக்கும் ஸ்ரீரேணுகா தேவிக்கும் செல்வத் திருக்குமாரனாய்த் தோன்றி தனக்கு எவரும் எதிரில்லை யெனத் திரிந்து வாழ்நாளில், தந்தையை ஓர் க்ஷத்திரிய வம்சஸ்தன் -கார்த்த வீர்யார்ஜுனன் -கொல்லக் கோபமுற்று இது முதல் க்ஷத்திரியப் பூண்டுகளைக் கரு வறுப்பேனென பிரதிக்ஜை செய்து, மிக்க பராக்கிரமமும் அழகிய வடிவும் அமைந்த பரசு என்னும் ஆயுதம் ஏந்தி பரசுராமாவதாரத் திருமேனி கொண்டு எழுந்தருளினவனே ! எச்சரிக்கை.
வலமேவிய இலங்கைத்தலம் வளர் ராவணன்
அழிவுற்று இலகத் தசரத புத்ர ஸ்ரீ ராமா எச்சரிக்கை
தேவர்கள் யாவரும் மும்முறை வலம் வந்து தொழும் பெருமை வாய்ந்துள்ள -முன்னொரு கல்பத்தில் குபேரனுடைய வாசஸ் ஸ்தானமாக இருந்த -இலங்கைத் தலத்தில் மிக்க கீர்த்தி வளரப்பெற்ற ராவணேஸ்வரனும் இவன் கிளைகளும் அழிய ஆஞ்சநேயர் முதலான சேனாவசினியப் பெருக்கோடு சென்று அழித்து தன் பராக்கிரமத்தை நிலை நிறுத்திய காகுத்த திலகனே -தசை திக்குகளிலும் தன் ரத்தத்தைச் செலுத்தி வெற்றி கொண்ட தசரத சக்ரவர்த்திக்குத் திருக்குமாரனாக ஸ்ரீ ராமாவதார திருமேனி தரித்து எழுந்தருளினவனே -எச்சரிக்கை –
ப்ரலம்பன் முற்பலராக்கதர் பிரதாபங்கள் கெடவே
திரமேவிய பலராமனாய் திகழ்வாய் எச்சரிக்கை
யாவராலும் அழியப்படாத வரங்களைப் பெற்று சொர்க்க மத்திய பாதாளங்களை எல்லாம் கிடு கிடு என்றும் நடுங்கச் செய்து ஆணவத்தால் அழிந்த ப்ரலம்பன் முதலான மஹா கொடிய இராக்கதர்களை நிக்ரஹித்து அவர்களுடைய வீர பிரதாபங்கள் கெட்டொழியத் திறம் அமைந்த பலராமாவதாரத் திருமேனி பூண்டு உலகம் புகழ வந்தருளினவனே எச்சரிக்கை –
சீர் பாரதம் நடக்கத் திருவுள்ளம் கொடு செப்பும்
ஓர் கிருட்டினப் பரமாய் வரும் உச்சிதா எச்சரிக்கை
துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்யும் பொருத்தும் கௌரவர் முதலானவர்களுடைய வீறு அழியவும் -பூமிப்பாரம் ஒழியவும் பாண்டவர்களுடைய சத்தியம் எங்கும் செழிக்கவும் கருணை ஸ்வரூபனாய் திருவுள்ளம் கொண்டு ஸ்ரீ மஹா பாரதம் நடத்த சொல்வதற்கு அரிய கிருஷ்ண பரம அவதாரம் கொண்டு எழுந்தருளிய அகில லோக சரண்யனே உச்சிதனே எச்சரிக்கை
வெற்றிப் பெரும் உலகம் தன்னை வீறுற்று அழித்திடவே
கற்கிப் பெயர் புனை சக்கரக் கையா எச்சரிக்கை
ஜயம் பெற்ற இப்பூவுலகில் கண் ஸத்யம் பிறழ்ந்தும் அஸத்யம் உறழ்ந்தும் காம க்ரோத மத லோப மோக மாத்சர்யங்களால் அழிந்துமுள்ள வன் நெஞ்சம் பொருந்தின பெரும் பாதகர்களை அழித்து உலகில் ஸத்யம் செழித்து நிலத்து ஒங்க பத்தாவது அவதாரமான கற்கி அவதார திருமேனி பூண்டு விளங்குபவனே -அழகிய சங்கு சக்கரங்களை ஏந்திய திருக்கரங்களை யுடையவனே எச்சரிக்கை
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply