இரும்பு உலக்கை! – மௌஸலபர்வம் பகுதி – 1-தீய சகுனங்களைக் கண்ட யுதிஷ்டிரன்; பலராமன், கிருஷ்ணன் ஆகியோரின் முக்தியையும், யாதவர்களின் அழிவையும் கேட்டது; துவாரகைக்கு வந்த விஸ்வாமித்ரர், கண்வர் மற்றும் நாரதர்; யது குலத்தை அழிக்கும் இரும்பு உலக்கை; உலக்கையைப் பொடியாக்கிக் கடலில் கொட்டிய யாதவர்கள்…
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “(போருக்குப் பிறகு) முப்பத்தாறு ஆண்டுகள் {36} ஆனபோது, குருக்களைத் திளைக்கச் செய்பவனான யுதிஷ்டிரன் வழக்கத்திற்கு மாறான தீய சகுனங்கள் பலவற்றைக் கண்டான்.(1) காற்று, உலர்ந்ததாகவும் {வெப்பமாகவும்}, வலுவானதாகவும், பருக்கைக் கற்களைப் பொழிந்து கொண்டிருப்பதாகவும் அனைத்துப் பக்கங்களில் வீசிக் கொண்டிருந்தது. பறவைகள் இடமிருந்து வலமாக வட்ட கதியில் சுழலத் தொடங்கின.(2) பேராறுகள் எதிர் திசைகளில் ஓடின. அனைத்துப் பக்கங்களிலும் அடிவானமானது எப்போதும் மூடுபனியால் மறைக்கப்பட்டிருந்தது. (சுடர்மிக்க) கரிகளைப் பொழிந்தபடியே எரிகொள்ளிகள் வானத்தில் இருந்து பூமியில் விழுந்தன.(3) ஓ! மன்னா {ஜனமேஜயா}, சூரிய வட்டில் எப்போதும் புழுதியால் மறைக்கப்பட்டதாகவே தெரிந்தது. அஃது உதிக்கும்போது, நாள் சமைக்கும் அந்தப் பெரும் ஒளிக்கோள் காந்தியை இழந்ததாகவும், (மனிதர்களின்) தலையற்ற உடல்களால் கடக்கப்படுவது போலவும் தெரிந்தது.(4) ஒவ்வொரு நாளும் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டை சுற்றிலும் கடுமையான ஒளி வளையங்கள் தென்பட்டன. அந்த வளைகளில் மூன்று நிறங்கள் தெரிந்தன. அவற்றின் முனைகள் கருப்பாகவும், முரடாகவும், நிறத்தில் செஞ்சாம்பல் நிறத்திலும் இருந்தன. ஓ! மன்னா, அச்சத்தையும், ஆபத்தையும் முன்குறிப்பிடுபவையான இவையும், இன்னும் பல தீச்சகுனங்களும் காணப்பட்டு, மனிதர்களின் இதயங்களைக் கவலையால் நிறைத்தன.(6)சிறிது காலத்திற்குப் பிறகு, குரு மன்னன் யுதிஷ்டிரன், இரும்பு உலக்கையின் விளைவால் விருஷ்ணிகளுக்கு ஏற்பட்ட பேரழிவைக் குறித்துக் கேள்விப்பட்டான்.(7) பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, ராமனும் மட்டுமே உயிருடன் தப்பினர் என்பதைக் கேட்டு, தன் தம்பிகளை அழைத்து, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களோடு ஆலோசித்தான்.(8) ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட அவர்கள், பிரம்மதண்டத்தின் தண்டனையால் {பிராமணச் சாபத்தால்} விருஷ்ணிகள் அழிவைச் சந்தித்தனர் என்பதைக் கேட்டுப் பெரிதும் துயரடைந்தனர்.(9) கடல் வற்றிப் போவதைப் போல வாசுதேவனின் {கிருஷ்ணனின்} மரணத்தை அந்த வீரர்களால் நம்ப முடியவில்லை. உண்மையில் அந்தச் சாரங்கபாணியின் அழிவு அவர்களுக்கு நம்ப முடியாததாக இருந்தது.(10) இரும்பு உலக்கை குறித்து அறிந்த பாண்டவர்கள், துன்பம் மற்றும் கவலையால் நிறைந்தனர். உண்மையில், அவர்கள் முற்றிலும் உற்சாகமற்றவர்களாக, வெறுமையான துன்பத்தில் துளைக்கப்பட்டவர்களாகக் கீழே அமர்ந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(11)
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “உண்மையில், ஓ! புனிதமானவரே, அந்தகர்களும், விருஷ்ணிகளும், பெருந்தேர்வீரர்களான போஜர்களும், வாசுதேவன் {கிருஷ்ணன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே எவ்வாறு அழிவை அடைந்தனர்?” என்று கேட்டான்.(12)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “(பெரும்போர் முடிந்து) முப்பத்தாறு ஆண்டுகளை {36} அடைந்த போது, விருஷ்ணிகளை ஒரு பேரிடர் மூழ்கடித்தது. காலத்தால் தூண்டப்பட்ட அவர்கள் அனைவரும் இரும்பு உலக்கையின் விளைவால் அழிவைச் சந்தித்தனர்”.(13)
ஜனமேஜயன், “விருஷ்ணிகள், அந்தகர்கள் மற்றும் போஜர்கள் உள்ளிட்ட அந்த வீரர்கள் யாரால் சபிக்கப்பட்டு அழிவை அடைந்தனர்? ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, இதை நீர் எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(14)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஒருநாள், சாம்பனையும் எண்ணிக்கையில் ஒருவனாய் தங்களுக்கு மத்தியில் வைத்திருந்த விருஷ்ணி வீரர்கள், விஷ்வாமித்ரரும், கண்வரும், நாரதரும் துவாரகைக்கு வருவதைக் கண்டனர்.(15) தேவர்களால் தரிக்கப்படும் தண்டக்கோலால் பீடிக்கப்பட்ட அந்த வீரர்கள், சாம்பனைப் பெண் போல வேடமிட வைத்து அந்தத் தவசிகளை அணுகி, அவர்களிடம்,(16) “இவள் அளவிலா சக்தி கொண்டவனும், ஒரு மகனை விரும்புபவனுமான பப்ருவின் மனைவியாவாள். முனிவர்களே, இவள் என்ன பெறுவாள் என்பதை நீங்கள் உறுதியாக அறிவீர்களா?” என்று கேட்டனர்.(17)
இவ்வாறான வஞ்சனை முயற்சிக்கு அந்தத் தவசிகள் என்ன செய்தனர் என்பதைக் கேட்பாயாக,(18) “சாம்பன் என்ற பெயரைக் கொண்டவனும், வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வாரிசுமான இவன், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அழிவுக்கான ஓர் இரும்பு உலக்கையைப் பெறுவான்.(19) தீயவர்களே, கொடூரர்களே, செருக்கால் போதையுண்டிருக்கும் நீங்கள், உங்கள் குலத்தில் ராமனையும் {பலராமனையும்}, ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} தவிர அனைவரையும் இந்த இரும்பு உலக்கையால் அழிப்பீர்கள்.(20) கலப்பையைத் தரிக்கும் அருளப்பட்ட வீரன் {பலராமன்}, தன் உடலைக் கைவிட்டுப் பெருங்காட்டில் நுழைவான், அதே வேளையில் ஜரன் என்ற பெயரைக் கொண்ட ஒரு வேடன் தரையில் கிடக்கும் உயர் ஆன்மக் கிருஷ்ணனைத் துளைப்பான்” என்றனர்.(21)
அந்தத் தீயவர்களால் வஞ்சிக்க முயற்சி செய்யப்பட்ட அந்தத் தவசிகள், கண்கள் சிவந்த கோபத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, இந்தச் சொற்களைச் சொன்னார்கள். இவ்வாறு சொல்லிவிட்டு அவர்கள் கேசவனை {கிருஷ்ணனைக்} காணச் சென்றனர்.(22) நடந்ததை அறிந்த மதுசூதனன் {கிருஷ்ணன்}, விருஷ்ணிகள் அனைவரையும் அழைத்து, அது குறித்து அவர்களுக்குச் சொன்னான். பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், தன் குலத்தின் முடிவை முழுமையாக அறிந்தவனுமான அவன் {கிருஷ்ணன்}, விதிக்கப்பட்டதெதுவோ அது நிச்சயம் நடக்கும் என்று சொன்னான்.(23) ரிஷிகேசன் இவ்வாறு சொல்லிவிட்டு தன் மாளிகைக்குள் நுழைந்தான். அண்டத்தின் தலைவன் வேறுவகையில் விதிக்க விரும்பவில்லை.(24)
அடுத்த நாளில் சாம்பன் உண்மையில் எதன் மூலம் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் குலத்தில் ஒவ்வொருவரும் சாம்பலாக எரிக்கப்படுவார்களோ அதுவேயான ஓர் இரும்பு உலக்கையைப் பெற்றான்.(25) உண்மையில் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அழிவுக்கான அந்தச் சாபத்தின் மூலம் பெரும் யமதூதன் போலத் தெரிந்ததும், கடுமையானதும் ஓர் இரும்பு உலக்கையைச் சாம்பன் பெற்றான். மன்னனுக்கு இந்தச் செய்தி முறையாகத் தெரிவிக்கப்பட்டது.(26) மனத்தில் உள்ள பெரும் துயரத்துடன் மன்னர் (உக்ரசேனர்) அந்த இரும்பு உலக்கையைப் பொடியாக {மாவு போலக்} குறைக்கச் செய்தான். ஓ! மன்னா, அந்தப் பொடியை கடலுக்கள் வீசுவதில் மனிதர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.(27) ஆஹுகன், ஜனார்த்தனன், ராமன், உயர் ஆன்ம பப்ரு ஆகியோரின் ஆணையின் பேரில், அந்த நாள் முதல் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களுக்கு மத்தியில் எவரும் மதுவும், போதையூட்டும் எவ்வகைச் சாரயமும் உற்பத்தி செய்யக்கூடாது, கமுக்கமாக மதுவையும், சாராயத்தையும் உற்பத்தி செய்பவர்கள், தங்கள் உற்றார் உறவினர் அனைவருடன் சேர்த்து உயிரோடு கழுவேற்றப்படுவார்கள் என்று அந்த நகரம் முழுவதும் அறிவிக்கப்பட்டது.(28-30) மன்னனுக்கு அஞ்சியும், களங்கம் கற்பிக்க முடியாத செயல்களைச் செய்யும் ராமனின் {பலராமனின்} ஆணை என்பதை அறிந்தும், குடிமக்கள் அனைவரும் அந்த விதிக்ககுக் கட்டுப்பட்டு, மது மற்றும் சாராய உற்பத்தியைத் தவிர்த்தனர்[1]” {என்றார் வைசம்பாயனர்}.(31)
காந்தாரியின் சொல்! – மௌஸலபர்வம் பகுதி – 2-துவாரகையில் தீய சகுனங்களைக் கண்ட கிருஷ்ணன்; காந்தாரியின் சாபத்தை நினைத்து அதை உண்மையாக்க விரும்பியது; யாதவர்களைத் தீர்த்தயாத்திரை செல்லக் கட்டளையிட்டது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விருஷ்ணிகளும், அந்தகர்களும் (எக்கணமும் நிகழுமென அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பேரிடரைத் தவிர்க்க) இவ்வாறு முயற்சித்தபோது, உடல் வடிவம் கொண்ட காலன் ஒவ்வொருநாளும் அவர்களுடைய இல்லங்களில் திரிந்து கொண்டிருந்தான்.(1) பயங்கரமும், கடுமையும் நிறைந்த மனிதனாக அவன் தெரிந்தான். வழுக்கைத் தலை கொண்ட அவன், நிறத்தில் கறுப்பும் பழுப்பும் கொண்டவனாக இருந்தான். சில வேளைகளில் விருஷ்ணிகள் அவனைத் தங்கள் இல்லங்களுக்குள் உற்று நோக்குபவனாகக் கண்டார்கள்.(2) விருஷ்ணிகளுள் வலிமைமிக்க வில்லாளி அவன் மீது நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகளை ஏவினாலும், அவன் உயிரினங்கள் அனைத்தின் அந்தகனின்றி வேறில்லை என்பதால் எக்கணையும் அவனைத் துளைப்பதில் வெல்லவில்லை.(3)
நாளுக்கு நாள் காற்று பலமாக வீசியது, விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அழிவை முன்னறிவிக்கும் பயங்கரமான பல்வேறு தீய சகுனங்கள் எழுந்தன.(4) வீதிகளில் எலிகளும், சுண்டெலிகளும் மொய்த்துக் கொண்டிருந்தன. எந்த வெளிப்படை காரணமும் இன்றி மண்குடங்கள் பிளவுபட்டவையாக, உடைந்தவையாகத் தெரிந்தன. இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் முடி மற்றும் நகங்களை எலிகளும், சுண்டெலிகளும் தின்றன.(5) சாரிகைகள் {நாகணவாய்ப் பட்சிகள் / பூவைப் பறவைகள்} விருஷ்ணிகளின் வீடுகளுக்குள் அமர்ந்து கொண்டே {சீசீ கூசீ என்ற} குற்றொலிகளை எழுப்பிக் கொண்டிருந்தன. அந்தப் பறவைகளால் உண்டான ஒலி இரவும், பகலும் குறுகிய நேரமும் நிற்கவில்லை.(6)
ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஸாரஸங்கள், ஆந்தையின் கூவலைப் பின்பற்றுவதும், ஆடுகள் குள்ளநரிகளின் ஊளையைப் பின்பற்றுவதும் கேட்கப்பட்டன.(7) மங்கிய நிறம் கொண்டவையும், சிவந்த நிறக் கால்களைக் கொண்டவையுமான {கபோதங்களெனும்} பறவைகள் பலவும் காலனால் தூண்டப்பட்டு அங்கே தோன்றின. புறாக்கள் எப்போதும் விருஷ்ணிகளின் வீடுகளில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தன.(8) பசுக்களுக்குக் கழுதைகளும், கோவேறு கழுதைகளுக்கு யானைகளும் பிறந்தன. நாய்களுக்குப் பூனைகளும், கீரிப்பிள்ளைக்கு எலியும் பிறந்தன.(9)
பாவச்செயல்களைச் செய்யும் விருஷ்ணிகள் வெக்கமெதையும் உணர்வதாகக் காணப்படவில்லை. அவர்கள் பிராமணர்கள், பித்ருக்கள் மற்றும் தேவர்களிடம் அலட்சியம் காட்டினர்.(10) அவர்கள் தங்கள் ஆசான்களையும், பெரியோர்களையும் அவமதித்துத் தாழ்த்தினர். ராமனும் {பலராமனும்}, ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்} மட்டும் வேறு வகையில் செயல்பட்டனர். மனைவியர் கணவர்களை வஞ்சித்தனர், கணவர்கள் மனைவியரை வஞ்சித்தனர்.(11) நெருப்பு மூட்டப்பட்ட போது அதன் தழல்கள் இடப்புறம் நோக்கி எரிந்தன. சில வேளைகளில் அவை நீல மற்றும் சிவப்பு நிற காந்தியுடன் தழல்களைச் செலுத்தின.(12)
சூரியன் அந்த நகரத்தில் எழும்போதோ, மறையும்போது, மனித வடிவிலான தலைற்ற முண்டங்களால் அது சூழப்பட்டதாகக் காணப்பட்டது.(13) சமையலறைகளில் நன்கு சமைக்கப்பட்ட தூய்மையான உணவை உண்பதற்காகப் படைக்கும்போது அதில் பல்வேறு வகையான எண்ணற்ற புழுக்கள் காணப்பட்டன.(14) கொடைகளைப் பெறும் பிராமணர்கள் அந்த நாளுக்கு அல்லது (அந்த நிகழ்வு நடக்கும்) அந்த நேரத்திற்கு ஆசி கூறும்போது, அல்லது உயர் ஆன்ம மனிதர்கள் அமைதியான ஜபத்தில் ஈடுபடும்போது, எண்ணற்ற மனிதர்கள் ஓடும் ஒலி கேட்கப்படுகிறது.(15) நட்சத்திரக்கூட்டங்கள் மீண்டும் மீண்டும் கோள்களால் தாக்கப்பட்டன. எனினும் யாதவர்களில் ஒருவரும் தன் பிறவிக்கான நட்சத்திரக்கூட்டத்தின் காட்சியைப் பெற முடியவில்லை[1].(16) அவர்களுடைய வீடுகளில் பாஞ்சஜன்யம் முழக்கப்படும்போது, கழுதைகளின் முரண்பட்ட பயங்கரக் குரல் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உரக்கக் கனைத்தது[2].(17)காலத்தின் விபரீதப் போக்கைக் குறிக்கும் அடையாளங்களைக் கண்டு, புதுநிலவு நாள் {அமாவாசை} பதிமூன்றாவது (மற்றும் பதினான்காவது) சந்திர நாளுடன் இணங்குவதைக் கண்டும் யாதவர்களை அழைத்த ரிஷிகேசன் {கிருஷ்ணன்} அவர்களிடம்,(18) “பதினான்காவது சந்திர நாள் {திதி} மீண்டும் ஒருமுறை ராஹுவினால் பதினைந்தாவதாகச் செய்யப்பட்டது. அத்தகைய ஒரு நாள் பாரதர்களின் பெரும்போர் நடந்த காலத்தில் தோன்றியது. அது மீண்டும் நமது அழிவுக்காகத் தோன்றுகிறது” என்றான்.(19). கேசியைக் கொன்றவனான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, காலம் காட்டும் நிமித்தங்களை நினைத்து முப்பத்தாறாம் ஆண்டு வந்ததெனவும், காந்தாரி தன் பிள்ளைகளின் மரணத்திலும், தன் உற்றார் உறவினர் அனைவரையும் இழந்ததிலும் ஏற்பட்ட துயரில் எரிந்து சொன்னது நடக்கப் போகிறது என்பதையும் புரிந்து கொண்டான்.(20,21)
{கிருஷ்ணன், தனக்குள்ளேயே}, ‘போருக்காக இருபடைகளும் அணிவகுக்கப்பட்ட காலத்தில், யுதிஷ்டிரர் கண்ட மிகக் கொடிய தீச்சகுனங்களைப் போலவே தற்போதும் நேர்கிறது’ {என்று நினைத்தான்}. இவ்வாறு சொன்ன வாசுதேவன் {கிருஷ்ணன்}, காந்தாரியின் சொற்களை உண்மையாக்கக் கூடிய நிகழ்வுகளை உண்டாக்க முயற்சி செய்தான். பகைவரைத் தண்டிப்பவனான அவன் ஏதாவது புனித நீர்நிலைக்குப் புனிதப் பயணம் {தீர்த்தயாத்திரை} மேற்கொள்ளுமாறு விருஷ்ணிகளுக்கு ஆணையிட்டான்.(23) பெருங்கடலின் புனித நீரில் நீராட விருஷ்ணிகள் கடற்கரைக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற கேசவனின் ஆணையைத் தூதர்கள் அறிவித்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(24)
யாதவர்களின் அழிவு! – மௌஸலபர்வம் பகுதி – 3-துவாரகை மக்கள் கண்ட தீய கனவுகள்; கிருஷ்ணனின் ஆணைப்படி பிரபாஸம் சென்றது; கிருதவர்மனைக் கொன்ற ஸாத்யகி; பலரால் கொல்லப்பட்ட சாத்யகியும், பிரத்யும்னனும்; கிருஷ்ணன் செய்த படுகொலை; உலக்கைப் பொடிகளால் உண்டான புற்களால் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கொன்றது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்தக் காலத்தில், விருஷ்ணி பெண்கள், கரிய நிறத்தவளும், வெண்பற்கள் கொண்டவளுமான ஒரு மங்கை, தங்கள் வசிப்பிடத்திற்குள் நுழைந்து, உரக்க நகைத்து, தங்கள் மணிக்கட்டுகளிலிருந்து மங்கலக் கயிறுகளைப் பறித்துக் கொண்டு துவாரகை முழுவதும் ஓடுவதைப் போல ஒவ்வொரு நாள் இரவும் கனவு கண்டனர்.(1) ஆண்களோ, பயங்கரக் கழுகுகள் தங்கள் இல்லங்களுக்கும், நெருப்பறைகளுக்குள்ளும் நுழைந்து தங்களை எடுத்து அவற்றின் கழுத்தில் அணிந்து கொள்வதைப் போலக் கனவு கண்டனர்.(2) ஆபரணங்கள், குடைகள், கொடிமரங்கள், கவசங்கள் ஆகியவற்றைக் கொடிய ராட்சசர்கள் எடுத்துக் கொள்வதும் காணப்பட்டது.(3) அக்னியால் கொடுக்கப்பட்டதும், இரும்பாலானதும், கடினமான வஜ்ரத்தால் அமைந்த குழிசியை {நடு குழியைக்} கொண்டதுமான கிருஷ்ணனின் சக்கரமானது, விருஷ்ணிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆகாயத்தில் உயர்ந்தது.(4)
சூரியப் பிரகாசம் கொண்டதும், முறையாக ஆயத்தம் செய்யப்பட்டதுமான வாசுதேவனின் சிறந்த தேரானது, தாருகன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன்னுடன் பூட்டப்பட்டிருந்த குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்டது. (சைப்யம், சுக்ரீவம், மேகபுஷ்பம், வலாகம் என்ற பெயர்களையுடையவையும்) எண்ணிக்கையில் நான்கானவையும், எண்ணத்தின் வேகம் கொண்டவையுமான அந்த முதன்மையான குதிரைகள், பெருங்கடலின் பரப்பின் வழியே தேரை இழுத்துச் சென்று தப்பி ஓடின[1].(5) கருட சின்னத்தையும், பனைமரச் சின்னத்தையும் கொண்டவையான கிருஷ்ணன் மற்றும் பலதேவனுடைய தேர்களில் உள்ளவையும், அவ்விரு வீரர்களால் மதிப்புடன் வழிபடப்படுவையுமான இரு பெரும் கொடிமரங்களும், புனித நீர்நிலைக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ள இருந்த விருஷ்ணிகளையும், அந்தகர்களையும் இரவும் பகலும் அழைத்துக் கொண்டிருந்த அப்சரஸ்களால் இழுத்துச் செல்லப்பட்டன.(6) இந்தச் சகுனங்கள் காணப்படவும், கேட்கப்படவும் நேரிட்டப்போது, மனிதர்களில் முதன்மையானவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான விருஷ்ணிகளும், அந்தகர்களும் தங்கள் மொத்த குடும்பங்களுடன் ஏதோவொரு நீர்நிலைக்குப் புனிதப் பயணம் புறப்பட விரும்பினர்.(7) அவர்கள் பல்வேறு வகை உணவுவகைகளையும், பானவகைகளையும், பல்வேறு வகை மது மற்றும் இறைச்சிகளையும் தயாரித்தனர்.(8) அழகில் சுடர்விட்டவையும், கடுஞ்சக்தி கொண்டவையுமான விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் துருப்புகள், அந்த நகரத்திலிருந்து தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளில் வெளியே புறப்பட்டன.(9) அப்போது தங்கள் மனைவியருடன் பிரபாஸத்திற்குச் சென்ற யாதவர்களில் ஒவ்வொருவரும், தங்களுக்கென ஒதுக்கப்பட்டதும், உணவு மற்றும் பான வகைகள் அபரிமிதமாக இருந்ததுமான (தற்காலிக) வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.(10)கடற்கரையில் அவர்கள் தங்கள் வசிப்பிடத்தை அமைத்திருப்பதைக் கேள்விப்பட்டவரும், யோகத்தை நன்கறிந்தவரும், மனிதர்களில் ஞானியுமான உத்தவர், அங்கே சென்று அவர்களிடம் (புறப்படுவதற்கான) அனுமதியை பெற்றுக் கொண்டார்.(11) உத்தவர் (உலகில் இருந்து) செல்ல விரும்புவதைக் கண்டும், விருஷ்ணிகளின் அழிவு மிக நெருக்கத்தில் இருப்பதை அறிந்தும் கிருஷ்ணன், அவரைத் தடுக்கும் மனநிலை கொள்ளாமல் அவரை வணங்கினான்.(12) அப்போது விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களில் வலிமைமிக்கவர்களும், தங்களுக்கான வேளை வந்தவர்களுமான அந்தத் தேர்வீரர்கள், மொத்த ஆகாயத்தையும் தன் காந்தியால் நிறைத்தபடி பெரும்பயணம் செல்லும் உத்தவரைக் கண்டனர்.(13) விருஷ்ணிகள், உயர் ஆன்ம பிராமணர்களுக்காகச் சமைக்கப்பட்ட உணவை மதுவுடன் கலந்து குரங்குகளுக்குக் கொடுத்தனர்.(14) கடுஞ்சக்தி கொண்ட அந்த வீரர்கள், குடிப்பதையே முக்கிய அம்சமாகக் கொண்ட தங்கள் உயர்ந்த விழாவை பிரபாஸத்தில் தொடங்கினர். நூற்றுக்கணக்கான எக்காளங்களின் முழக்கம் மொத்த களத்திலும் எதிரொலித்தது, தங்கள் தொழிலைச் செய்வதற்காக வந்திருந்தவர்களான நடிகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களால் அது நிறைந்திருந்தது.(15)
கிருஷ்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ராமன் {பலராமன்} கிருதவர்மனுடன் சேர்ந்து குடிக்கத் தொடங்கினான், யுயுதானன் {சாத்யகி}, கதன், பப்ரு ஆகியோரும் அதையே செய்தனர்.(16) அப்போது மதுவால் ஊக்கமடைந்திருந்த யுயுதானன், அந்தச் சபையின் நடுவில் வைத்துக் கிருதவர்மனை கேலி செய்யும் வகையில் அவமதித்து,(17) “ஆயுதந்தரித்த எந்த க்ஷத்திரியன், உறக்கத்தின் அரவணைப்பில் கட்டுண்டவர்களும், அதனால் ஏற்கனவே இறந்தவர்களைப் போன்றவர்களுமான மனிதர்களைக் கொல்வான்? எனவே, ஓ! ஹிருதிகன் மகனே {கிருதவர்மனே}, நீ செய்ததை யாதவர்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்” என்றான்.(18) யுயுதானன் {சாத்யகி} இந்தச் சொற்களைச் சொன்னதும், தேர்வீரர்களில் முதன்மையான பிரத்யும்னன், ஹிருதிகன் மகனிடம் {கிருதவர்மனிடம்} தான் கொண்ட மதிப்பின்மையை வெளிப்படுத்தும் வகையில் அவற்றை {சாத்யகியின் சொற்களை} மெச்சினான்.(19) இதனால் கோபம் மூண்ட கிருதவர்மன், இடது கையால் சாத்யகியைச் சுட்டிக் காட்டியதன் மூலம் அவனை வன்மையாக அவமதித்துச் செய்து, இந்தச் சொற்களைச் சொன்னான்.(20)
{கிருதவர்மன்}, “தன்னைத் தானே வீரன் என்று சொல்லிக் கொள்பவனான நீ, போர்க்களத்தில் (பகை எண்ணங்கள் அனைத்தையும் கைவிட்டு) பிராயத்தில் அமர்ந்திருந்தவனும், கரங்களற்றவனுமான பூரிஸ்ரவஸை கொடூரமாகக் கொன்றதெவ்வாறு?” என்று கேட்டான்.(21)
பகைவீரர்களைக் கொல்பவனான கேசவன் {கிருஷ்ணன்}, அவனுடைய சொற்களைக் கேட்டு, கோபவசப்பட்டவனாக, கிருதவர்மன் மீது தன் கோபப்பார்வையைச் செலுத்தினான்.(22) அப்போது சாத்யகி, மதுசூதனனிடம் {கிருஷ்ணனிடம்}, கொண்டாடப்படும் சியமந்தகம் என்ற ரத்தினத்தை {சியமந்தக மணியை} சத்ரஜித்திடம் இருந்து அபகரிப்பதற்காக, கிருதவர்மன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதைத் தெரிவித்தான்.(23) இந்தக் கதையைக் கேட்ட சத்தியபாமை, கோபவசப்பட்டவளாகக் கேசவனை அணுகி, அவனது மடியில் அமர்ந்து கொண்டு கண்ணீர் சிந்தியபடியே (கிருதவர்மன் மீது) அவனது கோபத்தை அதிகரித்தாள்.(24)
அப்போது சினத்துடன் எழுந்த சாத்யகி, “உறங்கிக் கொண்டிருந்தவர்களான திரௌபதியின் ஐந்து மகன்கள், திருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகியோரைத் துரோணரின் மகனுடைய {அஸ்வத்தாமனின்} துணையுடன் கொன்ற இவனை {கிருதவர்மனை}}அவர்களைப் பின்பற்றிச் செல்லச் செய்வேன் என வாய்மையின் பேரில் நான் ஆணையிடுகிறேன். ஓ! கொடியிடையாளே {சத்யபாமையே}, கிருதவர்மனின் வாழ்வு மற்றும் புகழுக்கான காலம் முடிவுக்கு வந்துவிட்டது” என்றான்.(25-27)இந்தச் சொற்களைச் சொன்ன சாத்யகி, கிருதவர்மனை நோக்கி விரைந்து, கேசவன் {கிருஷ்ணன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே வாளால் அவனது தலையைத் துண்டித்தான்.(28) அந்த அருஞ்செயலைச் செய்த யுயுதானன் {சாத்யகி}, அங்கே இருந்த பிறரையும் தாக்கத் தொடங்கினான். மேலும் தீங்கு செய்வதில் இருந்து அவனைத் தடுப்பதற்காக ரிஷிகேசன் {கிருஷ்ணன்} ஓடினான்.(29) எனினும், ஓ! ஏகாதிபதி, அந்த நேரத்தில் வந்திருந்த கால முரணால் தூண்டப்பட்ட போஜர்கள், அந்தகர்களில் அனைவரும் கூடி சிநியின் மகனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டனர்.(30) வலிமையும், சக்தியும் கொண்ட ஜனார்த்தனன், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கோபத்துடன் சாத்யகியை நோக்கி விரையும் வீரர்களைக் கண்டும், காலத்தின் தன்மையை அறிந்தும் கோபவசப்படாமல் அசையாமல் அப்படியே நின்றான்.(31) விதியால் தூண்டப்பட்டவர்களும், மதுவால் ஊக்கமடைந்தவர்களுமான அவர்கள், தாங்கள் உண்டு கொண்டிருந்த பானைகளால், யுயுதானனை {சாத்யகியைத்} தாக்கத் தொடங்கினர்.(32)
சிநியின் மகன் {சாத்யகி} இவ்வாறு தாக்கப்பட்ட போது, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்} பெருஞ்சினம் கொண்டான். போஜர்களுடனும், அந்தகர்களுடனும் போரிட்டுக் கொண்டிருந்த சாத்யகியை மீட்பதற்காக அவன் விரைந்து ஓடினான்.(33) வலிமைமிக்கக் கரங்களையும், செல்வசக்தியையும் கொண்ட அந்த வீரர்கள் இருவரும் பெருந்துணிவுடன் போரிட்டனர். ஆனால் முரண்பட்டவர்கள் அதிகம் பெருகியிருந்ததால் கிருஷ்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.(34) யதுக்களைத் திளைக்கச் செய்பவன் {கிருஷ்ணன்}, தன் மகனும் {பிரத்யும்னனும்}, சிநியின் மகனும் {சாத்யகியும்} கொல்லப்பட்டதைக் கண்டு கோபமடைந்தவனாக அங்கே வளர்ந்திருந்த ஏரகப்புற்களை[2] கைநிறையப் பிடுங்கி எடுத்தான்.(35) கைநிறைந்தவையாக இருந்த அந்தப் புற்கள், வஜ்ரத்தின் சக்தியோடு கூடியதும், பயங்கரமானதுமான ஓர் இரும்பு உலக்கையாக {முசலமாக} மாறியது. கிருஷ்ணன் அதைக் கொண்டு தன் முன் வந்த அனைவரையும் கொன்றான்.(36)அப்போது, அந்தகர்கள், போஜர்கள், சைனேயர்கள், விருஷ்ணிகள் ஆகியோர் காலத்தால் தூண்டப்பட்டவர்களாக அந்தப் பயங்கரக் கைக்கலப்பில் ஒருவரையொருவர் தாக்கினர்.(37) உண்மையில், ஓ! மன்னா, ஓ! பலமிக்கவனே, அவர்களில் எவர் அந்த ஏரகப் புற்களைக் கோபத்துடன் பிடுங்கி எடுத்தாலும், உடனே அவை அவன் கரங்களில் ஒரு வஜ்ரமாக மாறின.(38) அங்கே காணப்பட்ட ஒவ்வொரு புல்லும் பயங்கரமான இரும்பு உலக்கையாக {முசலங்களாக} மாறின. ஓ! மன்னா {ஜனமேஜயா}, இவை அனைத்தும் பிராமணர்கள் கொடுத்தச் சாபத்தினால் உண்டானவை என்பதை அறிவாயாக.(39) புல்லை ஏவிய எவனும், முற்றிலும் துளைக்கப்பட முடியாத பொருட்களை அஃது எளிதாகத் துளைத்துச் செல்வதைக் கண்டான். உண்மையில் அங்கே இருந்த ஒவ்வொரு புல்லும் வஜ்ரத்தின், சக்தியைக் கொண்ட ஒரு பயங்கரமான உலக்கையானது {முசலமானது}.(40)
ஓ! பாரதா {ஜனமேஜயா}, மகன் தந்தையைக் கொன்றான், தந்தை மகனைக் கொன்றான். மதுவினால் ஊக்கமடைந்திருந்த அவர்கள் விரைந்து சென்று ஒருவர்மீது ஒருவர் பாய்ந்தனர்.(41) குகுரர்களும், அந்தகர்களும், சுடர்மிக்க நெருப்பிடம் விரைந்து செல்லும் விட்டில்பூச்சிகளைப் போல அழிவை அடைந்தனர். இவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டபோது, அவர்களில் எவனும் தப்பிச்செல்ல நினைத்தானில்லை.(42) அழிவுக்கான காலம் வந்துவிட்டதை அறிந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, அனைத்தையும் கண்டபடியே அங்கே நின்றான். உண்மையில் அந்த மதுசூதனன், புல்லாலான ஓர் இரும்பு உலக்கையை உயர்த்தியபடியே அங்கே நின்றான்.(43) ஸாம்பன், சாருதேஷ்ணன், பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோர் கொல்லப்பட்டதைக் கண்ட மாதவன் {கிருஷ்ணன்} சினத்தால் நிறைந்தான்.(44)
கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கும் கதனைக் கண்டதும், அவனது கோபம் பெருகுகிறது, சாரங்கம், சக்கரம் மற்றும் கதாயுதத்தைத் தரிப்பவனான அவன் அப்போது விருஷ்ணிகளையும், அந்தகர்களையும் முற்றாக அழித்தான்.(45) ஓ! மன்னா, அப்போது, பகை நகரங்களை வெல்பவனும், வலிமையும், சக்தியும் கொண்டவனுமான பப்ருவும், தாருகனும் கிருஷ்ணனிடம் சொன்னதைக் கேட்பாயாக.(46) {பப்ருவும், தாருகனும்}, “ஓ! புனிதமானவரே, உம்மால் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் கொல்லப்பட்டனர். ராமர் {பலராமர்} இருக்கும் இடத்திற்குத் திரும்புவீராக. அவர் எங்கே சென்றாரோ அங்கேயே நாங்கள் செல்ல விரும்புகிறோம்” என்றனர்”.(47)
பரமெய்திய நாயகன்! – மௌஸலபர்வம் பகுதி – 4-பலராமனைக் கண்டடைந்த கிருஷ்ணன்; தாருகனைப் பாண்டவரிடம் அனுப்பியது; சேஷனாகிக் கடலிற் சென்ற பலராமன்; உடலைக் கைவிட யோகத்தில் கிடந்த கிருஷ்ணன்; கிருஷ்ணனின் பாதங்களைத் தாக்கிய ஜரன்; அவனுக்கு முக்தியளித்துப் பரம்பதமெய்திய கிருஷ்ணன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தாருகன், கேசவன், பப்ரு ஆகியோர் அந்த இடத்தைவிட்டு அகன்று, ராமன் {பலராமன்} இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றனர். அளவற்ற சக்தி கொண்ட அந்த வீரன், பூமியில் தனிமையான ஓர் இடத்தில் மரமொன்றில் சாய்ந்தவாறு சிந்தனையுடன் அமர்ந்திருப்பதை அவர்கள் கண்டனர்.(1) பேரான்மா கொண்ட ராமனைக் கொண்ட கிருஷ்ணன், தாருகனுக்கு ஆணையிடும் வகையில், “குருக்களிடம் சென்று யாதவர்களுடைய படுகொலையைப் பார்த்தனுக்கு அறிவிப்பாயாக. பிராமணர்களின் சாபத்தின் மூலம் யாதவர்களுக்கு நேர்ந்த இந்த முடிவைக் கேட்டு அர்ஜுனன் இங்கே விரைவாக வரட்டும்” என்றான். இவ்வாறு சொல்லப்பட்ட தாருகன், துயரில் புலனுணர்வை இழந்தவனாகக் குருக்களின் (தலைநகரை நோக்கி) தேரில் சென்றான்.(3)
தாருகன் சென்ற பிறகு, தன்னிடம் காத்திருக்கும் பப்ருவைக் கண்ட கேசவன் {கிருஷ்ணன்} அவனிடம் இந்தச் சொற்களில், “பெண்களைப் பாதுகாப்பதற்கு நீ விரைந்து செல்வாயாக. (அவர்களிடம் உள்ள) செல்வத்தால் ஈர்க்கப்படும் கள்வர்கள் அவர்களுக்குத் தீங்கேதும் செய்யாதிருக்கட்டும்” என்றான்.(4)
கேசவனால் இவ்வாறு சொல்லப்பட்ட பப்ரு, மதுவால் இன்னும் கதியற்றவனாகவும், தன் உற்றார் உறவினர்கள் கொல்லப்பட்டதால் மகிழ்ச்சியற்றவனாகவும் அங்கிருந்து சென்றான். அவன் கேசவனின் அருகில் சிறிது நேரம் ஓய்ந்திருந்து, அங்கிருந்து புறப்பட்டபோது, வேடனின் கைகளின் மூலம் ஒரு மரச்சம்மட்டியில் இணைக்கப்பட்டிருந்த இரும்பு உலக்கையானது {முசலமானது}, யாதவக் குலத்தில் எஞ்சியிருந்த ஒரேயொருவனும், பிராமணர்களால் சபிக்கப்பட்டவனுமான அவன் {பப்ரு} மீது திடீரெனப் பாய்ந்து அவனைக் கொன்றது[1].(5) பெருஞ்சக்தி கொண்ட கேசவன், பப்ரு கொல்லப்பட்டதைக் கண்டு தன் அண்ணனிடம், “ஓ! ராமரே {பலராமரே}, பெண்களை உற்றார் உறவினர்களிடம் ஒப்படைக்கும் வரை எனக்காக இங்கே காத்திருப்பீராக” என்றான்.(6)துவாராவதி நகரத்திற்குள் நுழைந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் தந்தையிடம் {வசுதேவரிடம்}, “தனஞ்சயன் {அர்ஜுனன்} வரும்வரை நம் வீட்டுப் பெண்கள் அனைவரையும் பாதுகாப்பீராக.(7) காட்டின் எல்லைப்புறத்தில் ராமர் {பரசுராமர்} எனக்காகக் காத்திருக்கிறார். நான் அவரை இன்று சந்திக்கப் போகிறேன். குரு குலத்தில் முதன்மையான க்ஷத்ரியர்களுக்கு நேர்ந்த பேரழிவை நான் ஏற்கனவே கண்டதைப் போலவே யதுக்களின் பேரழிவையும் கண்டேன்.(8) என்னருகில் யதுக்கள் இல்லாமல் யாதவர்களின் நகரத்தை என்னால் காண இயலாது[2]. காட்டுக்குச் சென்று, ராமரின் {பலராமரின்} துணையுடன் நான் தவம்பயிலப் போகிறேன் என்பதை அறிவீராக” என்றான் {கிருஷ்ணன்}.(9)இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, தன் தந்தையின் பாதத்தைத் தலையால் தீண்டி, விரைவாக அவரது முன்னிலையைவிட்டு அகன்றான். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் பிள்ளைகளிடம் இருந்து கவலையால் உரத்த ஓலம் எழுந்தது.(10) உரக்க ஓலமிட்டு அழுத அந்தப் பெண்மணிகளின் ஒலியைக் கேட்டு, தன் பாதச் சுவடுகளை மீண்டும் பின்பற்றிச் சென்று, அவர்களிடம், “அர்ஜுனன் இங்கே வருவான். மனிதர்களில் முதன்மையான அவன் உங்களைத் துயரில் இருந்து விடுவிப்பான்” என்றான்.(11)பிறகு, காட்டுக்குச் சென்ற கேசவன் {கிருஷ்ணன்}, அங்கே தனிமையான இடத்தில் அமர்ந்திருக்கும் ராமனைக் கண்டான். ராமன் யோகத்தில் நிலைத்திருப்பதையும், அவன் வாயில் இருந்து ஒரு பெரும்பாம்பு வெளியே வந்ததையும் அவன் கண்டான்.(12) அந்தப் பாம்பு வெண் நிறத்தில் இருந்தது. ஆயிரம் தலைகளைக் கொண்டவனும், மலையைப் போன்ற பெருவடிவம் கொண்டவனும், சிவந்த கண்களைக் கொண்டவனுமான அந்த உயர் ஆன்ம நாகன் {பலராமன்}, (இவ்வளவு காலம் தான் வசித்த அந்த) மனித உடலை விட்டகன்று கடலுக்கு வழிவகுக்கும் பாதையில் சென்றான்.(13) சமுத்திரனும், தெய்வீகப் பாம்புகள் பலரும், புனித ஆறுகள் பலவும் அவனைக் கௌரவமாக வரவேற்பதற்காக அங்கே இருந்தனர். அங்கே கார்க்கோடகன், வாசுகி, தக்ஷகன், பிருதுசிரவஸ், வருணன் {அருணன்}, குஞ்சரன்,(14) மிச்ரி, சங்கன், குமுதன், புண்டரீகன், உயர் ஆன்ம திருதராஷ்டிரன், ஹிராதன், கிராதன், கடுஞ்சக்தி கொண்ட சிதிகந்தன் {சிதிப்ருஷ்டன்}, {நிகேது}, சக்ரமந்தன், அதிஷண்டன்,(15) முதன்மையான நாகர்களாக அழைக்கப்படும் துர்முகன், அம்பரீஷன், மற்றும் மன்னன் வருணன் ஆகியோர் அங்கே இருந்தனர். முன் சென்று வரவேற்று, அவனுக்கு அர்க்கியமும், கால் கழுவ நீரும் பல்வேறு சடங்குகளுடன் அளித்து, அந்த வலிமைமிக்க நாகனை வழிபட்டு வணங்கிய அவர்கள் அனைவரும் அவனிடம் வழக்கமான விசாரிப்புகளைச் செய்தனர்.(16)அண்ணன் {பலதேவன்/ பலராமன்} இவ்வாறு (மனிதர்களின்) உலகில் இருந்து சென்றதும், தெய்வீகப் பார்வையைக் கொண்டவனும், அனைத்தின் கதியையும் முழுமையாக அறிந்தவனுமான வாசுதேவன் சிந்தனையிலேயே சில காலம் காட்டில் தனியாகத் திரிந்து கொண்டிருந்தான். பெருஞ்சக்தி கொண்ட அவன் வெறும் பூமியில் அமர்ந்தான்.(17) அதற்கு முன்பு, முற்காலத்தில் காந்தாரி முன்னறிவிக்கும் வகையில் சொன்ன சொற்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தான். (கிருஷ்ணனின் வீட்டில் விருந்தினராக வந்திருந்த) துர்வாசர் உண்டு எஞ்சிய பாயஸத்தை அவனுடைய உடலில் பூசிய போது சொன்ன சொற்களையும் அவன் நினைவுகூர்ந்தான்.(18) விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அழிவையும், அதற்கு முன்பு நடந்த குருக்களின் படுகொலையையும் நினைத்துப் பார்த்த அந்த உயர் ஆன்மா {கிருஷ்ணன்}, (உலகை விட்டு தான் செல்ல வேண்டிய) நேரம் வந்துவிட்டதெனத் தீர்மானித்தான். அப்போது அவன் தன் புலன்களை (யோகத்தில்) அடக்கினான்.(19) அனைத்தையும் குறித்த உண்மையை அறிந்தவனான வாசுதேவனே, பரம தேவனென்றாலும், அனைத்து ஐயங்களையும் விலக்குவதற்காகவும், (மனித இருப்பின் காரியத்தில்) குறிப்பிட்ட விளைவுகளை நிறுவுவதற்காகவும், மூவுலகங்களை ஆதரித்து அத்ரி மகனின் {துர்வாசரின்} சொற்களை உண்மையாக்குவதற்காகவும் அவன் இறக்க விரும்பினான்[3].(20)கிருஷ்ணன், தன்னுடைய புலன்கள், வாக்கு, மனம் ஆகியவை அனைத்தையும் கட்டுப்படுத்தி உயர்ந்த யோகத்தில் {படுத்துக்} கிடந்தான். ஜரன் என்ற பெயரைக் கொண்ட ஒரு கடும் வேடன், மான்களை விரும்பி அங்கே வந்தான்.(21) உயர்ந்த யோகத்தில் பூமியில் நீண்டு கிடந்த கேசவனை மானாக நினைத்து, ஒரு கணையைக் கொண்டு அவனது குதிங்காலில் துளைத்து, தன் இரையைக் கைப்பற்றுவதற்காக அந்த இடத்திற்கு விரைந்து வந்தான்.(22) அங்கே வந்த {வேடன்} ஜரன், யோகத்தில் குவிந்தவனும், பல கைகளைக் கொண்டவனும், மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியிருந்தவனுமான ஒரு மனிதனைக் கண்டான். தன்னைக் குற்றவாளியாக நினைத்து அச்சத்தில் நிறைந்த அவன் கேசவனின் பாதங்களைப் பற்றினான்.(23) அந்த உயர் ஆன்மா அவனுக்கு {ஜரனுக்கு} ஆறுதலளித்த பிறகு, தன் காந்தியால் மொத்த ஆகாயத்தையும் நிறைத்தபடியே மேல்நோக்கி உயர்ந்தான்.(24)
அவன் {கிருஷ்ணன்} சொர்க்கத்தை அடைந்தபோது, வாசவன், அஸ்வினி இரட்டையர்கள், ருத்ரன், ஆதித்யர்கள், வசுக்கள், விஸ்வேதேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், முதன்மையான கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்கள் ஆகியோர் முன் வந்து அவனை வரவேற்றனர்.(25) அப்போது, ஓ! மன்னா, சிறப்புமிக்கவனும், கடுஞ்சக்தி கொண்டவனும், அனைத்தையும் படைத்து அழிப்பவனும், யோக ஆசானுமான நாராயனன், தன் காந்தியால் சொர்க்கத்தை நிறைத்தபடியே, நினைத்தற்கரியதான தன்னுலகை {வைகுண்டத்தை} அடைந்தான்.(26) அப்போது, தேவர்கள், (தெய்வீக) முனிவர்கள், சாரணர்கள், கந்தர்வர்களில் முதன்மையானவர்கள், அழகிய அப்சரஸ்கள், சித்தர்கள் மற்றும் சாத்யர்கள் பலரையும் கிருஷ்ணன் சந்தித்தான். அவர்கள் அனைவரும் பணிவுடன் குனிந்து அவனை வழிபட்டனர்.(27) ஓ! ஏகாதிபதி, தேவர்கள் அனைவரும் அவனை வணங்கினர், முனிவர்களில் முதன்மையானோர் பலரும், அனைவரின் தலைவனான அவனை வழிபட்டனர். கந்தவர்கள் அவனது புகழைப் பாடிக் கொண்டிருந்தனர், இந்திரனும் இன்பமாக அவனைத் துதித்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(28)
துவாரகையில் அர்ஜுனன்! – மௌஸலபர்வம் பகுதி – 5-ஹஸ்தினாபுரம் சென்ற தாருகன்; யாதவர்கள் அழிந்ததை பாண்டவர்களுக்குத் தெரிவித்தது; துவாரகை சென்று கிருஷ்ணனின் மனைவியரைத் தேற்றி வசுதேவரிடம் சென்ற அர்ஜுனன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அதேவேளையில் தாருகன், குருக்களிடம் சென்று, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பிருதையின் {குந்தியின்} மகன்களைக் கண்டு, இரும்பு உலக்கைகளைக் கொண்டு விருஷ்ணிகள் எவ்வாறு ஒருவரையொருவர் கொன்றனர் என்பதைச் சொன்னான்.(1) போஜர்கள், அந்தகர்கள் மற்றும் குகுரர்களுடன் சேர்ந்து விருஷ்ணிகள் அனைவரும் கொல்லப்பட்டதைக் கேட்ட பாண்டவர்கள், துயரால் எரிந்து பெருங்கலக்கமடைந்தனர்.(2) கேசவனின் அன்பு நண்பனான அர்ஜுனன், அவர்களிடம் {பாண்டவர்களிடம்} விடைபெற்றுக் கொண்டு, தன் தாய்மானை {வசுதேவரைக்} காணப் புறப்பட்டுச் சென்றான். அவன் அனைத்திற்கும் அழிவு ஏற்படும் என்று சொன்னான்[1].(3)ஓ! பலமிக்க மன்னா {ஜனமேஜயா}, தாருகனோடு சேர்ந்து விருஷ்ணிகளின் நகரத்திற்குச் சென்ற அந்த வீரன், கணவனை இழந்த ஒரு பெண்ணைப் போலத் தெரிந்த துவாரகை நகரத்தைக் கண்டான்.(4) முன்னர், அண்டத்தின் தலைவனையே {கிருஷ்ணனையே} தங்கள் பாதுகாவலனாகக் கொண்டிருந்த அந்தப் பெண்கள், இப்போது தலைவனற்றவர்களாக இருந்தனர். தங்களைப் பாதுகாக்க பார்த்தன் {அர்ஜுனன்} வந்திருப்பதைக் கண்ட அவர்கள் அனைவரும் உரக்க ஓலமிட்டனர்.(5) பதினாறாயிரம் பெண்கள் {16,000} வாசுதேவனை {கிருஷ்ணனைத்} திருமணம் செய்திருந்தனர். உண்மையில், அர்ஜுனன் வருவதைக் கண்ட அவர்கள் அனைவரும் கவலையால் உரக்கக் கதறினர்.(6)
கிருஷ்ணனின் பாதுகாப்பை இழந்த அந்த அழகிகளையும், அவர்களது மகன்களையும் குரு இளவரசன் சந்தித்ததும், பார்வையைத் தடுக்கும் கண்ணீரினால் அவனால் அவர்களைப் பார்க்க முடியவில்லை.(7) துவாரகையெனும் ஆறானது, விருஷ்ணிகளையும், அந்தகர்களையும் அதன் நீராகவும், குதிரைகளை மீன்களாகவும், தேர்களைத் தெப்பங்களாகவும், இசைக்கருவிகளின் ஒலிகளையும், தேர்களின் சடசடப்பொலியையும் அதன் அலைகளாகவும், வீடுகள், மாளிகைகள் மற்றும் பொதுச் சதுக்கங்கள் ஆகியவற்றைத் தடாகங்களாகவும் கொண்டிருந்தது. ரத்தினங்களும், விலைமதிப்புமிக்கக் கற்களும் அதன் பாசிகளாக இருந்தன. வஜ்ரதாலான சுவர்களை {பிரகாரங்களை} அதில் மிதக்கும் மலர் மாலைகளாகக் கொண்டிருந்தது. வீதிகளும், சாலைகளும், பரப்பில் சுழிகளுடன் கூடிய பெரும் நீரோட்டமாக இருந்தன. பெரிய திறந்த வெளிகள் பெரும் ஏரிகளாக இருந்தன. ராமனும் {பலராமனும்}, கிருஷ்ணனும் அதன் இரு பெரும் முதலைகளாக இருந்தனர். இனிமையான அந்த ஆறு இப்போது காலனின் வலைக்குள் கட்டப்பட்ட கடும் வைதரணீ ஆற்றைப் போல அர்ஜுனனுக்குத் தெரிந்தது.(8-10)
உண்மையில், பெரும் நுண்ணறிவைக் கொண்ட வாசவன் மகன் {அர்ஜுனன்}, விருஷ்ணி வீரர்களை இழந்திருந்த அந்த நகரத்தை இவ்வாறே கண்டான்.(11) அழகை இழந்து, முற்றிலும் மகிழ்ச்சியற்றதாக இருந்த அது, குளிர் காலத் தாமரையைப் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தியது. துவாரகை அளிக்கும் காட்சியைக் கண்டும், கிருஷ்ணனின் எண்ணற்ற மனைவியரைக் கண்டும், கண்ணீரால் குளித்த கண்களுடன் கூடிய அர்ஜுனன் உரக்க ஓலமிட்டபடியே பூமியில் விழுந்தான்.(12) அப்போது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சத்ரஜித்தின் மகளான சத்யை {சத்தியபாமா}, ருக்மிணி ஆகியோரும் தனஞ்சயனுக்கு அருகில் கீழே விழுந்து துன்பத்துடன் உரக்க ஓலமிட்டனர்.(13) அவனை எழச் செய்து ஒரு பொன் இருக்கையில் அவனை அமரச் செய்தனர். பெண்கள், அந்த உயர் ஆன்மாவைச் சூழ்ந்து அமர்ந்து, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.(14) கோவிந்தனைப் புகழ்ந்து, அந்தப் பெண்களிடம் பேசிக் கொண்டிருந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அவர்களுக்கு ஆறுதலளித்து, தன் தாய்மானை {வசுதேவரைக்} காணச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(15)
கிருஷ்ணனின் சொற்கள்! – மௌஸலபர்வம் பகுதி – 6-யாதவ அழிவுக்கான காரணத்தை அர்ஜுனனிடம் சொல்லிப் புலம்பிய வசுதேவர்; கிருஷ்ணன் சொன்னதை அர்ஜுனனிடம் சொன்னது; நாட்டையும் ஒப்படைத்துவிட்டு உயிர்விட நிச்சயித்த வசுதேவர்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தமது மகன்கள் குறித்த சோகத்தினால் எரிந்து தரையில் கிடந்தவரும், வீரரும், உயர் ஆன்மாவுமான அனகதுந்துபியை {வசுதேவரை} அந்தக் குரு இளவரசன் {அர்ஜுனன்} கண்டான்.(1) ஓ! பாரதா {ஜனமேஜயா}, அகன்ற மார்பையும், வலி கரங்களையும் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தன் மாமனைவிட அதிகம் பீடிக்கப்பட்டுக் கண்ணீரில் குளித்த கண்களுடன், தன் மாமனின் பாதங்களைத் தீண்டினான்.(2) ஓ! பகைவரைக் கொல்பவனே {ஜனமேஜயனே}, வலிய கரங்களைக் கொண்ட அனகதுந்துபி, தமது தங்கை மகனின் தலையை முகர விரும்பினாலும் அதைச் செய்யத் தவறினார்.(3) வலிய கரங்களைக் கொண்டவரும், ஆழமாகப் பீடிக்கப்பட்டவருமான அந்த முதிய மனிதன் {வசுதேவர்}, தமது கரங்களால் பார்த்தனை {அர்ஜுனனை} ஆரத்தழுவிக் கொண்டு, தமது மகன்கள், சகோதரர்கள், பேரப்பிள்ளைகள், மகள்களின் மகன்கள் மற்றும் நண்பர்களை நினைத்து உரக்க அழுதார்.(4)
வசுதேவர், “ஓ! அர்ஜுனா, பூமியின் மன்னர்கள் அனைவரையும், தைத்தியர்களை நூறுமுறையும் அடிபணியச்செய்த அந்த வீரர்களைக் காணாமல் நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். நான் இறப்பது கடினம் என்பதை நான் காண்கிறேன்.(5) ஐயோ, ஓ! பார்த்தா, அர்ஜுனனின் அன்புக்குரிய சீடர்களும், அவனால் பெரிதும் மதிக்கப்பட்டவர்களுமான அந்த இரு வீரர்களின் {சாத்யகி மற்றும் பிருத்யும்னன் ஆகியோரின்} குற்றத்தால் விருஷ்ணிகள் அழிந்தனர்.(6) விருஷ்ணிகளில் முதன்மையான அதிரதர்களாக எந்த இருவர் கருதப்பட்டனரோ, உரையாடல்களின் போது யாவரின் பெயரைக் குறிப்பிட்டால் நீ பெருமைப்படுவாயோ,(7) ஓ! குரு குலத்தின் தலைவா, கிருஷ்ணனின் அன்புக்குரியவர்களாக யாவர் இருந்தனரோ, ஓ! தனஞ்சயா, அந்த இருவரே {சாத்யகி மற்றும் கிருதவர்மன் ஆகியோரே} விருஷ்ணிகளின் அழிவுக்கு முக்கியக் காரணங்களாக இருந்தனர்.(8)
ஓ! அர்ஜுனா நான் சிநியின் மகனையோ {சாத்யகியையோ}, ஹிருதிகளின் மகனையோ {கிருதவர்மனையோ} நான் நிந்திக்கவில்லை. அக்ரூரனையோ, ருக்மிணியின் மகனையோ {பிரத்யும்னனையோ} நான் நிந்திக்கவில்லை. (முனிவர்களின்) சாபமே ஒரே காரணம் என்பதில் ஐயமில்லை.(9) கேசி, கம்சன், செருக்கில் பெருகிய சைத்யன் {சேதி நாட்டு சிசுபாலன்}, நிஷாதர்களின் ஆட்சியாளனுடைய மகனான ஏகலவ்யன், கலிங்கர்கள், மகதர்கள், கந்தாரர்கள், காசியின் மன்னன், பாலைவனத்திற்கு மத்தியில் ஒன்று கூடியிருந்த பல ஆட்சியாளர்கள், கிழக்குக்கும், தெற்குக்கும் உரிய பல வீரர்கள், மலைசார்ந்த பகுதிகளைச் சேர்ந்த பல மன்னர்கள் ஆகியோரை அழிப்பதற்குத் தன் ஆற்றலை வெளிப்படுத்திய அண்டத்தின் தலைவனான மதுசூதனன், ஐயோ, முனிவர்கள் இட்ட சாபத்தின் மூலம் எழும் பேரிடரில் எவ்வாறு அலட்சியமாக இருந்தான்?(10-12)நீயும், நாரதரும், முனிவர்களும், அவனை மங்கா மகிமை கொண்ட, பாவமற்ற நித்திய தேவன் கோவிந்தனாக அறிவீர்கள்.(13) ஐயோ, பலமிக்க விஷ்ணுவேயான அவன், எதிலும் தலையிடாமல், தன் உற்றார் உறவினரின் அழிவைக் கண்டிருக்கிறான். என் மகனே {கிருஷ்ணனே} இவையனைத்தையும் நடக்க அனுமதித்திருக்க வேண்டும்.(14) அவனே அண்டத்தின் தலைவனாக இருந்தான். எனினும், ஓ! பகைவரை எரிப்பவனே, காந்தாரி மற்றும் முனிவர்களின் சொற்களை அவன் பொய்யாக்க விரும்பவில்லை.(15) ஓ! வீரா, அஸ்வத்தாமனால் கொல்லப்பட்ட உன் பேரனை நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன் சக்தியின் மூலம் அவன் உயிர்மீட்டான்.(16) எனினும், உன்னுடைய நண்பனான அவன் {கிருஷ்ணன்}, தன் உற்றார் உறவினரைக் காக்க விரும்பவில்லை.
ஓ! பாரதக் குலத்தின் தலைவா {அர்ஜுனா}, தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், நண்பர்கள் ஆகியோர் இறந்து கிடப்பதைக் கண்டு, அவன் என்னிடம் இந்தச் சொற்களைச் சொன்னான், “இறுதியில் நம் குலத்திற்கும் அழிவு வந்தது.(17,18) துவாராவதி நகருக்கு பீபத்சு {அர்ஜுனன்} வருவான். விருஷ்ணிகளுக்கு நேரிட்ட பேரழிவை அவனுக்குச் சொல்வீராக.(19) யதுக்களின் அழிவைக் கேட்ட உடனேயே, வலிமையும், சக்தியுமிக்க அந்த வீரன் நிச்சயம் காலந்தாழ்த்தாமல் இங்கே வருவான்.(20) ஓ! தந்தையே, நானே அர்ஜுனன், அர்ஜுனனே நான் என்பதை அறிவீராக. நீர் செய்ய வேண்டியதை அவன் சொல்வான்.(21) பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் எது சிறந்ததோ அதைப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} செய்வான். அவனே உமது ஈமச் சடங்குகளையும் செய்வான்.(22) அர்ஜுனன் சென்றதும், எந்தத் தாமதமும் இல்லாமல், சுவர்கள் {பிரகாரங்கள்}, மாடமாளிகைகளுடன் கூடிய இந்தத் துவாராவதி நகரம், பெருங்கடலால் விழுங்கப்படும்.(23) என்னைப் பொறுத்தவரையில், புனிதமான ஏதோவோரிடத்தில் ஓய்ந்திருந்து, நுண்ணறிவுமிக்க ராமரின் {பலராமரின்} துணையுடன், கடும் நோன்புகளை நோற்றுக் கொண்டு என் காலத்திற்காகக் காத்திருக்கப் போகிறேன்” என்றான்.(24)
நினைத்துப் பார்க்கமுடியாத ஆற்றலைக் கொண்ட ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, பிள்ளைகளுடன் என்னை விட்டுவிட்டு, நான் அறியாத ஏதோவோரிடத்திற்குச் சென்றுவிட்டான்.(25) உன்னுடைய மைத்துனர்களான அந்த உயர் ஆன்மாக்கள் {பலராமன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய} இருவரையும், என் உற்றார் உறவினருக்கு நேர்ந்திருக்கும் இந்தப் பயங்கரப் பேரழிவையும் நினைத்து உணவனைத்தையும் கைவிட்டு, துன்பத்தால் மெலிந்திருக்கிறேன்.(26) நான் உண்ணவும் மாட்டேன், வாழவும் மாட்டேன். ஓ! பாண்டுவின் மகனே நீ என்னைச் சந்தித்தது நற்பேற்றாலேயே. ஓ! பார்த்தா, கிருஷ்ணன் சொன்ன அனைத்தையும் நீ நிறைவேற்றுவாயாக.(27) ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, இந்தப் பெண்கள் அனைவருடனும், இங்கே இருக்கும் இந்தச் செல்வம் அனைத்துடனும் கூடிய இந்த நாடு இப்போது உனதாகும். என்னைப் பொறுத்தவரையில், ஓ! பகைவரைக் கொல்பவனே, எனது அன்புக்குரியதாக இருந்தாலும் என் உயிர்மூச்சைக் கைவிடுவேன்” என்றார் {வசுதேவர்}.(28)
துவாரகை மூழ்கியது! – மௌஸலபர்வம் பகுதி – 7-வசுதேவரைத் தேற்றி யாவரையும் இந்திரப்ரஸ்தம் செல்லச் சொன்ன அர்ஜுனன்; யோகத்தால் உடலை விட்ட வசுதேவர்; வசுதேவர், கிருஷ்ணன் ஆகியோரைத் தகனஞ்செய்த அர்ஜுனன்; கள்வர்களால் கொள்ளையிடப்பட்டது; வஜ்ரனுக்கு முடிசூட்டியது; ருக்மிணி தீக்குளித்தது; ஸத்யபாமை தவம் செய்யச் சென்றது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பகைவரை எரிப்பவனான பீபத்சு {அர்ஜுனன்} இவ்வாறு தன்னுடைய தாய்மாமனால் {வசுதேவரால்} சொல்லப்பட்டதும், உற்சாகமற்ற இதயத்துடன் கூடியவனாக, அதேபோல உற்சாகமற்றிருந்த வசுதேவரிடம்,(1) “ஓ! மாமா, விருஷ்ணி குலதைச் சேர்ந்த அந்த வீரனையும் {கிருஷ்ணனையும்}, என்னுடைய உற்றார் உறவினரான வேறு சிலரையும் இழந்திருக்கும் இந்தப் பூமியை என்னால் பார்க்க முடியவில்லை.(2) மன்னர் {யுதிஷ்டிரன்}, பீமசேனர், சகாதேவன், நகுலன், எண்ணிக்கையில் ஆறாவதாக யாஜ்ஞசேனி ஆகியோரும் இக்காரியத்தில் என்னைப் போலவே மனம் கொண்டுள்ளனர்.(3) மன்னர் புறப்படுவதற்கான காலமும் வந்துவிட்டது. நாங்கள் புறப்படுவதற்கான நேரமும் மிக அருகில் இருக்கிறது. காலப்போக்கை நன்கு அறிந்தோரில் நீர் முதன்மையானவராக இருக்கிறீர்.(4) எனினும், ஓ! பகைவரைத் தண்டிப்பவரே, விருஷ்ணி குலத்தின் பெண்கள், பிள்ளைகள் மற்றும் முதியோரை முதலில் இந்திரப்ரஸ்தத்திற்கு அனுப்புவீராக” என்றான்.(5)
தன் மாமனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, அடுத்ததாகத் தாருகனிடம் அர்ஜுனன், “தாமதமேதும் இல்லாமல் விருஷ்ணி வீரர்களில் முக்கியத் தலைவர்களை நான் காண விரும்புகிறேன்” என்றான்.(6) இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு (கொல்லப்பட்ட) பெருந்தேர்வீரர்களுக்காக வருந்தி, சுதர்மம் என்றழைக்கப்படும் யாதவர்களின் பெருஞ்சபைக்குள் நுழைந்தான்.(7) அவன் அமர்ந்ததும், பிராமணர்கள் உள்ளிட்ட குடிமக்கள் அனைவரும், நாட்டின் அமைச்சர்கள் அனைவரும் வந்து அங்கே அவனைச் சூழ்ந்து அமர்ந்தனர்.(8)
அப்போது அவர்கள் வருந்தியதைவிட அதிகம் வருந்திய பார்த்தன் {அர்ஜுனன்}, வருத்தத்திலிருந்தவர்களும், உற்சாகமற்றவர்களாக இருந்தவர்களும், உயிரில்லாத இறந்தவர்களைப் போல இருந்தவர்களுமான குடிமக்கள் மற்றும் அதிகாரிகளிடம், அந்தச் சந்தர்ப்பத்திற்குப் பொருந்திய இந்தச் சொற்களைச் சொன்னான்:(9) “விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களில் எஞ்சியிருப்போரை நான் என்னுடன் அழைத்துச் செல்லப் போகிறேன். விரைவில் பெருங்கடல் இந்நகரத்தை {துவாரகையை} விழுங்கப் போகிறது.(10) உங்கள் தேர்களை ஆயத்தம் செய்து, அவற்றில் உங்கள் செல்வங்கள் அனைத்தையும் வைத்துக் கொள்வீராக. (கிருஷ்ணனின் பேரனான {கொள்ளுப்பேரனான}) இந்த வஜ்ரன்[1] சக்ரப்ரஸ்தத்தில் {இந்திரப்ரஸ்தத்தில்} உங்கள் மன்னனாக இருப்பான்.(11) இன்றிலிருந்து ஏழாவது நாள் சூரிய உதயத்தில் நாம் புறப்படுவோம். தாமதமில்லாமல் ஆயத்தமாவீராக” என்றான் {அர்ஜுனன்}.(12)தூய செயல்களைக் கொண்ட பிருதையின் மகனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், பாதுகாப்பை அடையும் ஆவலில் இருந்த அவர்கள் அனைவரும் தங்கள் ஆயத்தங்களை விரைவாகச் செய்தனர்.(13) அர்ஜுனன் அந்த இரவைக் கேசவனின் மாளிகையில் கழித்தான். அவன், திடீரெனப் பெருந்து துன்பத்தில் மூழ்கிக் கலக்கமடைந்தான்.(14) காலை விடிந்ததும், பெருஞ்சக்தியையும், ஆற்றலையும் கொண்ட வசுதேவர் யோகத்தின் துணையுடன் உயர்ந்த கதியை அடைந்தார்.(15) அப்போது வசுதேவரின் மாளிகையில் இருந்து இதயம் பிளக்கும்படி உரக்க அழுது கொண்டிருந்த பெண்களின் ஒலி கேட்கப்பட்டது.(16) அவர்கள் கலைந்த கேசம் கொண்டவர்களாகவும், ஆபரணங்களோ, மலர்மாலைகளோ அற்றவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் கைகளால் மார்பில் அடித்துக் கொண்டு இதயத்தைப் பிளக்கும் ஒப்பாரியில் ஈடுபட்டனர்.(17) பெண்களில் முதன்மையானவர்களான தேவகி, பத்ரை, ரோஹினி, மதிரை ஆகியோர் தங்கள் தலைவனின் உடல் மீது விழுந்தார்கள்.(18) அப்போது பார்த்தன் தன் மாமனின் உடலை, மனிதர்களால் சுமக்கப்படும் ஒரு விலைமதிப்புமிக்க வாகனத்தில் சுமந்து வரச் செய்தான்.(19) அப்போது துன்பத்தால் ஆழமாகப் பீடிக்கப்பட்டவர்களும், இறந்து போன வீரரிடம் பேரன்பு கொண்டவர்களுமான துவாரகையின் குடிமக்களும், மாகாணத்து மக்கள் அனைவரும் அதை {அந்த வாகனத்தைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(20)
அந்த வாகனத்திற்கு முன்பு, அவர் {வசுதேவர்} வாழ்ந்த போது நிறைவு செய்த குதிரை வேள்வியின் முடிவில் தலைக்கு மேல் பிடிக்கப்பட்ட குடைகளும், அவர் தினமும் வழிபட்ட சுடர்மிக்க நெருப்புகளும் சுமந்து செல்லப்பட்டன; அவற்றைக் கவனித்துக் கொண்ட புரோகிதர்களும் முன்சென்றனர்.(21) அந்த வீரரின் உடலானது, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அவர்களது மனைவிகளாலும், அவர்களைச் சூழ்ந்த ஆயிரக்கணக்கான பெண்களாலும், ஆயிரக்கணக்கான மருமகள்களாலும் பின்தொடரப்பட்டது.(22) இறுதிச் சடங்குகள், அவர் வாழ்ந்த போது அவருக்கு ஏற்புடையதாக இருந்த இடத்திலேயே செய்யப்பட்டது.(23) வீரரான அந்தச் சூரன் மகனின் {வசுதேவரின்} நான்கு மனைவிகளும் ஈமச் சிதையில் ஏறித் தங்கள் தலைவனின் உடலுடன் எரிந்தனர். அவர்கள் அனைவரும் அவருக்கு உரிய இன்பலோகங்களையே அவருடன் அடைந்தனர்.(24) பாண்டுவின் மகன் தன் மாமனையும், அவரது நான்கு மனைவியரின் உடல்களையும், நறுமணமிக்கப் பல்வேறு வகை நறுமணப் பொருட்கள் மற்றும் கட்டைகளைப் பயன்படுத்தி எரித்தான்.(25) ஈமச் சிதை எரிந்தபோது, சாமங்கள் ஓதும் தெளிவான ஒலி மற்றும் குடிமக்கள் மற்றும் அந்தச் சடங்கைப் பார்த்துக் கொண்டிருந்தோரின் ஓலம் ஆகியவற்றுடன் மரமும், வேறு எரியும் பொருட்களும் எரியும் உரத்த ஒலியும் எழுந்தது.(26)
அது முடிந்ததும், வஜ்ரனின் தலைமையிலான விருஷ்ணி மற்றும் அந்தகக் குலத்தின் சிறுவர்கள், அந்த உயர் ஆன்ம வீரருக்கு நீர்க்காணிக்கைகளைச் செலுத்தினர்.(27) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஒவ்வொரு கடமையையும் கவனமாகச் செய்த பல்குனன் {அர்ஜுனன்}, இந்தக் கடமையைச் செய்துவிட்டு, அந்த இடத்திற்கு அருகிலேயே இருந்த விருஷ்ணிகள் கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்றான்.(28) சுற்றிலும் கொல்லப்பட்டுக் கிடக்கும் அவர்களைக் கண்ட குரு இளவரசன் பெரிதும் மகிழ்ச்சியற்றவனானான். எனினும், நடந்ததைக் கருத்தில் கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதை அவன் செய்தான்.(29) ஏரகப் புற்களாலானவையும், பிராமணர்களிட்ட சாபத்தின் குணத்தில் பிறந்தவையுமான இரும்பு உலக்கைகளால் {முசலங்களால்} கொல்லப்பட்ட அந்த வீரர்களின் உடல்களுக்கு வயது முதிர்வின் அடிப்படையிலான வரிசையில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.(30)
ராமர் {பலராமர்} மற்றும் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} உடல்களைத் தேடச் செய்த அர்ஜுனன், அச்செயலில் திறம்பெற்ற மனிதர்களைக் கொண்டு அவற்றை எரிக்கச் செய்தான்.(31) அடுத்து இறந்தோருக்குச் செய்யப்படும் சடங்குக்களை முறையாகச் செய்த அந்தப் பாண்டுவின் மகன், ஏழாம் நாளில் தன் தேரில் ஏறி விரைவாகப் புறப்பட்டான்.(32) விருஷ்ணி வீரர்களின் விதவைகள், காளைகள், கோவேறுகழுதைகள் மற்றும் ஓட்டகங்களால் இழுக்கப்பட்ட தேர்களில் அந்த உயர் ஆன்ம பாண்டுவின் மகனை {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(33) அவர்கள் அனைவரும் பெருந்துன்பத்தில் இருந்தனர். விருஷ்ணிகளின் பணியாட்களும், குதிரைவீரர்களும், தேர்வீரர்களும் கூட அந்த ஊர்வலத்தைப் பின்தொடர்ந்தனர். அந்த நாட்டின் குடிமக்களும் அங்கே வசித்தவர்களும், பிருதை மகனின் ஆணையின் பேரில், வீரர்களற்றதும், பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்களை மட்டுமே கொண்டதுமான அந்தக் குதிரைப்படை அணிவகுப்பைச் சூழ்ந்து கொண்டு ஒரே நேரத்தில் புறப்பட்டுச் சென்றனர்.(35)யானைகளின் முதுகுகளில் இருந்து போரிட்ட போர்வீரர்கள் மலைகளைப் போன்று பெரியவையாக இருந்த யானைகளில் சென்றனர். காலாட்படை வீரர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.(36) அந்தக, விருஷ்ணி குலங்களின் பிள்ளைகள் அனைவரும் அர்ஜுனனைப் பின்தொடர்ந்து சென்றனர். பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், செல்வந்தர்களாக இருந்த சூத்திரர்கள் ஆகியோரும், வாசுதேவனின் அந்தப்புரத்தில் அமைந்தவர்களான பதினாறாயிரம் {1600} பெண்களையும், கிருஷ்ணனின் நுண்ணறிவுமிக்கப் பேரனான {கொள்ளுப்பேரனான} வஜ்ரனையும் முன்னிட்டுக் கொண்டு சென்றனர்.(38) போஜ, விருஷ்ணி, அந்தகக் குலத்தைச் சேர்ந்த பிற வீரர்களின் மனைவிகளும், இப்போது தலைவனற்றவர்களாக இருந்தவர்களுமான பெண்கள் லட்சக்கணக்கில் அர்ஜுனனுடன் புறப்பட்டுச் சென்றனர்.(39) தேர்வீரர்களில் முதன்மையானவனும், பகை நகரங்களை வெல்பவனுமான அந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்}, செல்வம் நிறைந்ததும், பெருங்கடலைப் போலத் தெரிந்ததுமான விருஷ்ணிகளின் இந்தப் பெரும் ஊர்வலத்தின் வழியைப் பாதுகாத்துச் சென்றான்.(40) மக்கள் அனைவரும் புறப்பட்டதும், சுறாக்கள் மற்றும் முதலைகளின் இல்லமான பெருங்கடலானது, இன்னும் அனைத்து வகைச் செல்வங்களுடன் நிறைந்திருந்த துவாரகையைத் தன் நீரில் மூழ்கச் செய்தது[2].(41) எந்த நிலப்பகுதி கடக்கப்பட்டதோ அஃது உடனடியாகப் பெருங்கடலின் நீரில் மூழ்கியது.(42) அற்புதம் நிறைந்த இந்தக் காட்சியைக் கண்ட துவாரகாவாசிகள், வேக வேகமாக நடந்து, “விதியின் போக்கு அற்புதம் நிறைந்தது” என்றனர்[3].(43)தனஞ்சயன் {அர்ஜுனன்}, துவாரகையைக் கைவிட்ட பிறகு, இனிமையான காடுகள், மலைகள் மற்றும் இனிமை நிறைந்த ஓடைகளின் ஓரத்தில் விருஷ்ணி பெண்களை ஓய்ந்திருக்கச் செய்து மெதுமெதுவாக அணிவகுத்துச் சென்றான்.(44) ஐந்து நீர்நிலைகளைக் கொண்ட நாட்டை {பஞ்சநதம் / பஞ்சாப்} அடைந்த பலமிக்கத் தனஞ்சயன், அந்நிலத்தின் மத்தியில் தானியங்கள், பசுக்கள் மற்றும் பல விலங்குகள் நிறைந்த ஒரு பெரிய முகாமை அமைத்தான்.(45) ஓ! பாரதா {ஜனமேஜயா}, தலைவர்களற்ற அந்த விதவைகளின் பாதை பிருதையின் மகனால் {அர்ஜுனனால்} மட்டுமே பாதுகாக்கப்படுவதைக் கண்ட கள்வர்கள், (கொள்ளையிடுவதற்காகப்) பேராசை கொண்டனர்.(46) அப்போது, பேராசையில் மூழ்கிய இதயங்களைக் கொண்டவர்களும், இழிந்த பாவிகளும், மங்கலமற்றவர்களாகத் தோன்றுபவர்களுமான ஆபிரர்கள், ஒன்று கூடி தங்களுக்கு ஆலோசனை நடத்தினார்கள்.(47) அவர்கள், “இங்கே ஒரேயொரு வில்லாளியான அர்ஜுனன் மட்டுமே இருக்கிறான். இந்தக் குதிரைப்படை அணிவகுப்பில் பிள்ளைகளும், முதியவர்களும் இருக்கிறார்கள். நம்மை மீறி அவன் அவர்களின் வழியைப் பாதுகாத்து வருகிறான். (விருஷ்ணி) போர்வீரர்கள் சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்” என்றனர்.(48)
ஆயிரம் எண்ணிக்கையில் இருந்தவர்களும், தண்டங்கள் தரித்தவர்களுமான அந்தக் கள்வர்கள் கொள்ளையிட விரும்பி விருஷ்ணிகளை நோக்கி முன்னேறினர்.(49) முரண்பட்ட காலப்போக்கால் தூண்டப்பட்ட அவர்கள், உரத்த சிங்க முழக்கங்களுடனும், கொல்லும் விருப்பத்துடனும் அச்சுறுத்தியவாறு அந்தப் பெருங்கூட்டத்தின் மீது பாய்ந்தனர்.(50) குந்தியின் மகன் {அர்ஜுனன்} பாதையின் வழியே முன்னேறாமல் திடீரென நின்று தன் தொண்டர்களுன் திரும்பி, ஊர்வலத்தைத் தாக்கும் கள்வர்கள் இருக்கும் இடம் நோக்கிச் சென்றான்.(51)
அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட போர்வீரன் {அர்ஜுனன்}, தாக்கிக் கொண்டிருப்பவர்களிடம் சிரித்தவாறே, “இழிந்த பாவிகளே, உங்கள் உயிர்கள் மீது உங்களுக்கு ஆசையிருந்தால் இதைத் தவிர்ப்பீராக. நான் என் கணைகளால் உங்கள் உடல்களைத் துளைத்து உயிரை எடுக்கும்போது இதற்காக வருந்துவீர்கள்” என்றான்.(52)
அந்த வீரனால் இவ்வாறு சொல்லப்பட்டும் அவற்றை அலட்சியம் செய்த அவர்கள், மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்டாலும் அர்ஜுனன் மீது பாய்ந்தனர்.(53) அப்போது அர்ஜுனன், பெரியதும், அழிவற்றதுமான தன் தெய்வீக வில்லுக்கு நாண்பூட்ட முயற்சித்தான்.(54) போர் கடுமையாக இருந்தபோது, பெரும் சிரமத்துடன் அதில் நாண்பூட்டுவதில் வென்றான். அப்போது அவன் தன் தெய்வீக ஆயுதங்களை நினைக்கத் தொடங்கினாலும் அவை மனத்தில் தோன்றவில்லை.(55) போரின் கடுமையையும், தன் ஆயுத வலிமையின் இழப்பையும், தெய்வீக ஆயுதங்கள் தோன்றாமையையும் கண்ட அர்ஜுனன் பெரிதும் வெட்கமடைந்தான்.(56) காலாட்படை, யானை வீரர்கள், தேர்வீரர்கள் உள்ளிட்ட விருஷ்ணி வீரர்களுடன் சேர்ந்து கள்வர்களால் அபகரிக்கப்பட்ட விருஷ்ணி பெண்களையும் மீட்பதில் அவன் தவறினான்.(57) அந்தக் கூட்டம் மிகப் பெரியதாக இருந்தது. கள்வர்கள் அதைப் பல்வேறு முனைகளில் தாக்கினர். அர்ஜுனன் தன்னால் முடிந்த அளவு அதைப் பாதுகாக்க முயன்றாலும், அவனால் வெல்ல முடியவில்லை.(58) போர்வீரர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பெண்களில் முதன்மையான பலர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர், அதேவேளையில் வேறு சிலர் தாங்களே விரும்பி அந்தக் கள்வர்களுடன் சென்றனர்[4].(59)பலமிக்க அர்ஜுனன், விருஷ்ணிகளின் பணியாட்களால் ஆதரிக்கப்பட்டவனாகக் காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் கள்வர்களைத் தாக்கினான்.(60) ஓ! மன்னா {ஜனமேஜயா}, எனினும் விரைவில் அவனது கணைகள் தீர்ந்தன. முற்காலங்களில் அவனது கணைகள் வற்றாதவையாக இருந்தன. எனினும் இப்போது அவை வேறுவகையில் ஆகின.(61) தன் கணைகள் தீர்ந்ததைக் கண்ட அவன் பெருந்துன்பத்தில் ஆழமாகப் பீடிக்கப்பட்டான். அப்போது அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்} தன் வில்லின் முனைகளினால் அந்தக் கள்வர்களைத் தாக்கத் தொடங்கினான்.(62) எனினும், ஓ! ஜனமேஜயா, அந்த மிலேச்சர்கள், பார்த்தன் {அர்ஜுனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே விருஷ்ணிகள் மற்றும் அந்தகப் பெண்களில் முதன்மையானோர் பலரை அபகரித்துப் பின்வாங்கினர்.(63) பலமிக்கத் தனஞ்சயன் இவை யாவற்றையும் விதியின் பணியெனக் கருதினான். கவலையால் நிறைந்த அவன், (தெய்வீக) ஆயுதங்கள் தோன்றாமை, தன் கர வலிமையின் இழப்பு, தன் வில் தனக்குக் கீழ்ப்படியாமை ஆகியவற்றை நினைத்து பெருமூச்சுவிட்டான்.(64,65) அவன், இவை அனைத்தும் விதியின் பணியெனக் கருதியவனாகப் பெரிதும் உற்சாகத்தை இழந்தான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, முன்பு கொண்டிருந்த பலத்தை இப்போது தான் கொண்டிருக்கவில்லை என்று சொல்லி அவன் மேலும் முயற்சி செய்வதை நிறுத்தினான்[5].(66) அந்த உயர் ஆன்மா {அர்ஜுனன்}, இன்னும் அவர்களிடம் எஞ்சி இருந்த செல்வத்தையும் மிச்சமிருந்த விருஷ்ணி பெண்களையும் அழைத்துக் கொண்டு குருக்ஷேத்திரம் வந்து சேர்ந்தான்.(67)இவ்வாறு எஞ்சியிருந்த விருஷ்ணிகளைக் கொண்டு வந்து சேர்த்த அவன் {அர்ஜுனன்}, அவர்களைப் பல்வேறு இடங்களில் நிறுவினான்.(68) கிருதவர்மனின் மகனை, எஞ்சியிருந்த போஜ மன்னனின் பெண்களுடன் சேர்த்து, மார்த்திகாவதம் என்றழைக்கப்படும் நகரத்தில் நிறுவினான்.(69) சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் ஆகியோருடன் எஞ்சியிருந்தவர்களின் வழியைப் பாதுகாத்த அந்தப் பாண்டுவின் மகன், குதிரைகளற்றவர்களாக இருந்த அவர்களை இந்திரப்ரஸ்த நகரத்தில் நிறுவினான்.(70) அற ஆன்மா கொண்ட அர்ஜுனன், யுயுதானனின் {சாத்யகியின்} அன்பு மகனை, முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்களுடன், சரஸ்வதி ஆற்றங்கரையில் நிறுவினான்.(71) இந்திரப்ரஸ்தத்தின் ஆட்சி {கிருஷ்ணனின் கொள்ளுப்பேரனான} வஜ்ரனுக்குக் கொடுக்கப்பட்டது. அக்ரூரின் விதவைகள் காட்டுக்குள் ஓய்ந்து செல்ல விரும்பினார்கள். வஜ்ரன் மீண்டும் மீண்டும் அவர்களைத் தடுத்தாலும் அவர்கள் அவன் சொல்வதைக் கேட்கவில்லை.(72) ருக்மிணி, காந்தார இளவரசி, சைப்யை, ஹைமவதி, ஜாம்பவதி ஆகியோர் ஈமச் சிதையில் ஏறினர்.(73) சத்யபாமை, மற்றும் கிருஷ்ணனின் மனைவிகளான பிறர், காட்டுக்குச் சென்று தவம் பயில்வதில் தங்களை நிலைக்கச் செய்யத் தீர்மானித்தனர்.(74) அவர்கள் கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, ஹரியை தியானித்துக் கொண்ட தங்கள் காலத்தைக் கழித்து வாழத் தொடங்கினர். அவர்கள் இமயத்தைக் கடந்து சென்று கலாபம் என்ற இடத்தில் தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்[6].(75) துவாராவதியில் இருந்து அர்ஜுனனைப் பின்பற்றி வந்த மனிதர்கள், குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வஜ்ரனிடம் ஒப்படைக்கப்பட்டனர்.(76) அந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற செயல்கள் அனைத்தையும் செய்த அர்ஜுனன், கண்ணீரால் குளித்த கண்களுடன், வியாசரின் ஆசிரமத்திற்குள் நுழைந்தான். அங்கே தீவில் பிறந்தவரான அந்த முனிவர் சுகமாக அமர்ந்திருப்பதை அவன் கண்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(77)
வியாசர் சொன்ன கதி! – மௌஸலபர்வம் பகுதி – 8-வியாசரைக் கண்டு துவாரகையின் அழிவைக் கூறிய அர்ஜுனன்; பாண்டவர்களும் சொர்க்கமடைவர் என்று சொன்ன வியாசர்; துவாரகையின் செய்தியை யுதிஷ்டிரனிடம் சொன்ன அர்ஜுனன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “வாய்மை நிறைந்த முனிவரின் {வியாசரின்} ஆசிரமத்திற்குள் நுழைந்த அர்ஜுனன், ஒரு தனிப்பட்ட இடத்தில் சத்யவதியின் மகன் {வியாசர்} அமர்ந்திருப்பதைக் கண்டான்.(1) உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரும், கடமைகள் அனைத்தின் அறிவைக் கொண்டவருமான அந்த முனிவரை அணுகிய அவன், “நான் அர்ஜுனன் வந்திருக்கிறேன்” என்று சொல்லி அவருக்காகக் காத்திருந்தான்.(2)
உயர்ந்த தவங்களுடன் கூடிய சத்யவதியின் மகன் {வியாசர்} “நல்வரவு” என்று பதிலளித்தார். அமைதியான ஆன்மாவைக் கொண்ட அந்தப் பெருமுனிவர், மேலும், “இருக்கையில் அமர்வாயாக” என்று சொன்னார்.(3) பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, பெரிதும் உற்சாசகம் இழந்தவனாகவும், மீண்டும் மீண்டும் பெருமூச்சுகளை விடுபவனாகவும், கவலை நிறைந்தவனாகவும் இருப்பதைக் கண்ட வியாசர், அவனிடம்,(4) “வேறு எவரின் நகங்கள் அல்லது முடியிலிருந்தோ, வேறு எவரின் துணியின் முனையில் இருந்தோ, குடுவையின் {குடத்தின்} வாயிலிருந்தோ உன் மீது நீர் தெளிக்கப்பட்டதா? மாதவிடாய் காலம் முடிவடைவதற்கு முன்பே எந்தப் பெண்ணுடனும் கலவியில் ஈடுபட்டாயா? பிராமணனைக் கொன்றாயா?(5) போரில் வெல்லப்பட்டாயா? நீ செழிப்பை இழந்தவனைப் போலக் காணப்படுகிறாய். நீ எவராலும் வீழ்த்தப்பட்டாயா என்பதை நான் அறியேன். ஓ! பாரதக் குலத்தின் தலைவா {அர்ஜுனா}, நீ ஏன் பெரிதும் நொந்து போன தன்மையுடன் இருக்கிறாய்? ஓ! பிருதையின் மகனே, இவற்றைச் சொல்வதில் உண்மையில் எத்தீங்கும் இல்லையெனில் அனைத்தையும் எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்” என்றார் {வியாசர்}.(6)
அர்ஜுனன் {வியாசரிடம்}, “(புதிதாய் எழுந்த) மேகம் போன்ற நிறத்தைக் கொண்டவனும், இரு தாமரை இதழ்களைப் போன்ற அகன்ற விழிகளைக் கொண்டவனுமான கிருஷ்ணன், ராமருடன் {பலராமருடன்} சேர்ந்து தன் உடலைக் கைவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(7) பிரபாஸத்தில், பிராமணர்களால் இடப்பட்ட சாபத்தில் உண்டான இரும்பு உலக்கைகளின் {முசலங்களின்} மூலம் விருஷ்ணி வீரர்களுக்கு அழிவேற்பட்டது. அந்தப் பேரழிவு பயங்கரமானதாக இருந்தது, ஒரேயொரு வீரன் கூட அதில் தப்பவில்லை.(8) ஓ! பிராமணரே, உயர்ந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களும், சிங்கம் போன்ற செருக்குடையவர்களுமான போஜ, அந்தக, விருஷ்ணி குலத்து வீரர்கள் போரில் ஒருவரையொருவர் கொன்றனர்.(9) இரும்பு கதாயுதங்கள் போலத் தெரியும் கரங்களைக் கொண்டவர்களும், கனத்த தண்டங்கள், ஈட்டிகளின் தாக்குதலையும் தாங்கவல்லவர்களுமான அவர்கள் அனைவரும், ஐயோ, ஏரகப் புற்களினால் கொல்லப்பட்டனர். காலவோட்டத்தின் முரணைக் காண்பீராக.(10)
வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட போர்வீரர்கள் ஐநூறாயிரம் {ஐந்து லட்சம் 5.00.000} பேர் இவ்வாறு வீழ்த்தப்பட்டனர். ஒருவரோடொருவர் மோதி அவர்கள் அழிவை அடைந்தனர்.(11) அளவிலா சக்தி கொண்ட யாதவ வீரர்களுக்கு நேர்ந்த இந்தப் பேரழிவையும், சிறப்புமிக்கக் கிருஷ்ணனுக்கு நேர்ந்த அழிவையும் மீண்டும் மீண்டும் நினைத்து மனத்தில் அமைதியைப் பெறத் தவறுகிறேன்.(12) சாரங்கபாணியின் {கிருஷ்ணனின்} மரணம், பெருங்கடல் வற்றியதைப் போல, மலை நகர்ந்ததைப் போல, சொர்க்கம் விழுந்ததைப் போல, நெருப்பு குளிர்ந்ததைப் போல நம்ப முடியாததாக இருக்கிறது.(13) விருஷ்ணி வீரர்களின் துணையை இழந்த நான் இவ்வுலகில் வாழ விரும்பவில்லை.(14)
ஓ! தவங்களையே செல்வமாகக் கொண்டவரே, இதைவிட அதிகத் துன்பம் நிறைந்த மற்றொரு நிகழ்ச்சி நடந்தது. அதை மீண்டும் மீண்டும் நினைத்தே என் இதயம் பிளக்கிறது.(15) ஓ! பிராமணரே, ஐந்து நீர்நிலைகள் உள்ள நாட்டில் {பஞ்சநதத்தில் / பஞ்சாபில்} நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆயிரக்கணக்கான விருஷ்ணி பெண்கள் ஆபிரர்களால் அபகரிக்கப்பட்டனர்.(16) என் வில்லை நான் எடுத்தபோது அதில் நாண்பூட்டவதற்கு இணையானவனாக நான் இல்லை. என் கரங்களில் இருந்த வலிமை அந்தச் சந்தர்ப்பத்தில் மறைந்தவிட்டதாகத் தெரிந்தது.(17) ஓ! பெரும் தவசியே {வியாசரே}, என்னுடைய பல்வேறு வகை ஆயுதங்கள் வெளிப்படத் தவறின. மேலும் என் கணைகள் விரைவில் தீர்ந்த போயின.(18)
அளவிலா ஆன்மா கொண்டவனும், நான்கு கரங்களைக் கொண்டவனும், சங்கு, சக்கரம், கதாயுதம் தரித்தவனும், மஞ்சள் ஆடை உடுத்தியவனும், கரிய நிறத்தவனும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களையும் கொண்டவனை இப்போது என்னால் காணமுடியவில்லை. ஐயோ, கோவிந்தன் {கிருஷ்ணன்} இல்லாமல் என் வாழ்வை துயரில் இழுத்துக் கொண்டு நான் எதற்காக வாழ வேண்டும்?(19) என் தேருக்கு முன் செல்பவனும், பெருங்காந்தியும் மங்காத பலமும் கொண்டவனும், செல்லும் போதே பகை போர்வீரர்களை எரிப்பவனுமான அந்தத் தெய்வீக வடிவத்தை இப்போது என்னால் காண முடியவில்லை.(20) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, முதலில் எவனுடைய சக்தியால் பகை துருப்புகள் அனைத்தையும் எரித்து, காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் அதன்பிறகு அவர்களைக் கொன்றேனோ அவனை இப்போது என்னால் காணமுடியாமல் நான் துயரால் நிறைகிறேன் என் தலை கிறுகிறுக்கிறது. உற்சாகமின்மை மற்றும் கவலையால் துளைக்கப்பட்டிருக்கும் நான் என் மனத்தில் அமைதியை அடையத் தவறுகிறேன்.(21,22) வீர ஜனார்த்தனன் இல்லாமல் நான் வாழத் துணியேன். எப்போது விஷ்ணு இந்தப் பூமியை விட்டுச் சென்று விட்டான் என்பதைக் கேட்டேனோ அப்போது என் கண்கள் மங்கின, அனைத்தும் என் பார்வையில் இருந்து மறைந்தன.(23) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, உற்றார், உறவினரும், ஆற்றலும் கொள்ளைபோனவனான எனக்கு இப்போது நன்மையெது என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான் {அர்ஜுனன்}.(24)
வியாசர் {அர்ஜுனனிடம்}, “விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும் பிராமணர்களின் சாபத்தால் எரிக்கப்பட்டனர். ஓ! குருகுலத்தின் தலைவா, அவர்களின் அழிவுக்காக நீ வருந்துவது தகாது.(25) விதிக்கப்பட்டதே நடந்திருக்கிறது. அந்த உயர் ஆன்மப் போர்வீரர்களின் விதி இதுவே. கிருஷ்ணன் இதைக் கலங்கடிக்க முழுவதும் தகுந்தவெனினும், அது நடைபெற வேண்டுமென்றே அவன் அதை அனுபவித்தான்.(26) கோவிந்தன், அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்துடன் கூடிய அண்டத்தின் போக்கையே மாற்ற இயன்றவனாக இருந்தான். உயர் ஆன்ம பிராமணர்களின் சாபத்தைக் குறித்துச் சொல்ல வேறென்ன இருக்கிறது?(27) எவன் உன் மீது கொண்ட அன்பின் மூலம் சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்துக் கொண்டு உன் முன்பு செல்வானோ, அவன் நான்கு கரம் கொண்ட புராதன முனிவனான வாசுதேவன் ஆவான்.(28) அகன்ற விழிகளைக் கொண்ட கிருஷ்ணன், பூமியின் கனத்தைக் குறைத்து, தன்னுடைய (மனித) உடலைக் கைவிட்டு, தன்னுடைய உயர்ந்த இருக்கையை {கதியை} அடைந்திருக்கிறான்.(29) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரா, பீமனையும், இரட்டையர்களையும் {நகுல் சகாதேவனையும்} உதவியாகக் கொண்ட உன்னாலும் தேவர்களின் பெரும்பணி நிறைவேறியிருக்கிறது.(30)
ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே {அர்ஜுனனே}, நீயும், உன் சகோதரர்களும் உங்களுடைய வாழ்வின் பெரும் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டதால் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களென நான் உங்களைக் கருதுகிறேன். நீங்கள் இவ்வுலகத்தில் இருந்து செல்வதற்கான வேளை வந்துவிட்டது. ஓ! பலமிக்கவனே, இதுவே இப்போது உங்களுக்கு நன்மையானது.(31) ஓ! பாரதா, செழிப்பின் நாட்கள் மீறாமல் இருக்கும்போது, புத்தியும், ஆற்றலும், தொலைநோக்குப் பார்வையும் இவ்வாறே எழுகிறது. எதிர்மறையான காலம் வரும்போது இதே உடைமைகள் மறைந்துபோகும்[1].(32) இவை அனைத்தும் காலத்தையே தங்கள் வேராகக் கொண்டுள்ளன. ஓ! தனஞ்சயா, உண்மையில், காலமே அண்டத்தின் வித்தாகும். மேலும், காலமே தன் விருப்பபடி அனைத்தையும் ஈர்க்கிறது[2].(33) ஒருவன் வலிமையடைகிறான், மேலும் வலிமையை இழுந்து பலவீனமாகிறான். ஒருவன் தேர்ந்தவனாகி பிறரை ஆட்சி செய்கிறான், பிறகு அந்நிலையை இழந்து, பிறரின் ஆணைகளுக்குக் கீழ்ப்படியும் ஒரு பணியாளனாகிறான்.(34) உன் ஆயுதங்கள் வெற்றியை அடைந்து தாம் வந்த இடத்திற்கே சென்றுவிட்டன. மேலும் அவற்றுக்கான காலம் வரும்போது அவை மீண்டும் உன் கரங்களில் வரும்.(35) ஓ! பாரதா, நீங்கள் அனைவரும் உயர்ந்த கதியை அடைவதற்கான காலம் வந்துவிட்டது. ஓ! பாரதக் குலத்தின் தலைவா {அர்ஜுனா}, இதுவே உங்கள் அனைவருக்குமான உயர்ந்த நன்மையென நான் கருதுகிறேன்” என்றார் {வியாசர்}”.(36)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அளவிலா சக்தி கொண்ட வியாசரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்டு யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்குத் {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பினான்.(37) அதற்குள் நுழைந்த அந்த வீரன் {அர்ஜுனன்} யுதிஷ்டிரனை அணுகி அவனிடம் விருஷ்ணிகள் குறித்து நடந்தது அனைத்தையும் சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(38)
மௌஸல பர்வம் முற்றும்
—————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply