ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ  மஹாப்ரஸ்தானிக பர்வம்-

நெடும்பயணம்! – மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 1-பரிக்ஷித்துக்கு முடிசூட்டி, யுயுத்சுவிடம் நாட்டை ஒப்படைத்த யுதிஷ்டிரன்; நகரவாசிகளிடம் அனுமதி பெற்றுக் கொண்டு தம்பியருடனும், திரௌபதியுடனும் புறப்பட்டது; அக்னியின் சொற்படி காண்டீவத்தையும், அம்பறாதூணியையும் கடலில் போட்ட அர்ஜுனன்…

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “விருஷ்ணி மற்றும் அந்தகக் குல வீரர்களுக்கிடையில் இரும்பு உலக்கைகளை {முசலங்களைக்} கொண்டு நடந்த மோதலைக் கேட்டும், கிருஷ்ணன் சொர்க்கத்திற்கு உயர்ந்ததை அறிந்து கொண்டும் பாண்டவர்கள் என்ன செய்தனர்?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விருஷ்ணிகளின் பெரும் படுகொலையைக் குறித்துக் கேட்ட கௌரவ மன்னன் {யுதிஷ்டிரன்} உலகை விட்டுச் செல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். அவன் அர்ஜுனனிடம்,(2) “ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, காலன் (தன் கொதிகலனில்) அனைத்து உயிரினங்களையும் சமைக்கிறான். (எது நம் அனைவரையும் கட்டுகிறதோ அந்தக்) காலப் பாசத்தினாலேயே {கயிறுகளாலேயே} இது நடந்திருக்கிறது என நான் நினைக்கிறேன். இதைக் காண்பதே உனக்கும் தகும்” என்றான்.(3)

அண்ணனால் {யுதிஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, “காலன், காலன்” என்ற சொல்லை மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லி, பெரும் நுண்ணறிவைக் கொண்ட தன் அண்ணனின் கருத்தை முழுமையாக ஏற்றான்.(4) அர்ஜுனனின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட பீமசேனனும், இரட்டையர்களும் {நகுல சகாதேவர்களும்}, அர்ஜுனன் சொன்ன சொற்களை முழுமையாக ஏற்றுக் கொண்டனர்.(5) தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதற்காக இவ்வுலகில் இருந்து ஓயத் தீர்மானித்த அவர்கள் யுயுத்சுவைத் தங்கள் முன் கொண்டு வந்தனர். யுதிஷ்டிரன் தன் பெரியதந்தைக்கு {திருதராஷ்டிரனுக்கு} அவரது வைசிய மனைவியின் மூலம் பிறந்த மகனிடம் {யுயுத்சுவிடம்} நாட்டை ஒப்படைத்தான்.(6)

பரிக்ஷித்தை அரியணையில் நிறுவியவனும், பாண்டவர்களில் மூத்த சகோதரனுமான மன்னன் {யுதிஷ்டிரன்}, கவலையால் நிறைந்தவனாக, சுபத்திரையிடம்,(7) “உன்னுடைய மகனின் மகனான இவனே குருக்களின் மன்னனாக இருப்பான்.(8) பரிக்ஷித் ஹஸ்தினாபுரத்தை ஆள்வான், அதே வேளையில் யாதவ இளவரசனான வஜ்ரன் சக்ரப்ரஸ்தத்தை ஆள்வான். இவன் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டும். ஒருபோதும் அநீதியில் உன் இதயத்தை நிலைக்கச் செய்துவிடாதே {அதர்மத்தில் மனத்தைச் செலுத்தாதே}” என்றான்.(9)

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, தன் சகோதரர்களுடன் சேர்ந்து, பெரும் நுண்ணறிவைக் கொண்ட வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, முதியவரான தங்கள் தாய்மாமனுக்கும் {வசுதேவருக்கும்}, ராமருக்கும் {பலராமருக்கும்}, பிறருக்கும் முறையாக ஆகுதிகளைக் காணிக்கையாக்கினான். பிறகு அவன் இறந்து போன தன் உற்றார் உறவினர் அனைவருக்கும் முறையாகச் சிராத்தங்களைச் செய்தான்.(10,11)

மன்னன், ஹரியைக் கௌரவிப்பதற்காக அவனுடைய பெயரை மீண்டும் மீண்டும் சொல்லி, தீவில் பிறந்தவரான வியாசர், நாரதர், தவச் செல்வத்தைக் கொண்ட மார்க்கண்டேயர், பரத்வாஜ குலத்தின் யாஜ்ஞவல்கியர் ஆகியோருக்கு இனிய உணவு வகைகளைப் படைத்தான்.(12) கிருஷ்ணனைக் கௌரவிப்பதற்காக அவன் பல ரத்தினங்களையும், ஆடைகளையும், துணிமணிகளையும், கிராமங்களையும், குதிரைகளையும், தேர்களையும்,(13) பெண் பணியாட்களையும் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பிராமணர்களில் முதன்மையானோருக்குக் கொடையளித்தான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, குடிமக்களை அழைத்து, கிருபரை ஆசானாக நிறுவி, பரிக்ஷித் அவரது சீடனாக்கப்பட்டான். பிறகு மீண்டும் யுதிஷ்டிரன் தன் குடிமக்களை அழைத்தான்.(14,15) அந்த அரசமுனி தன் நோக்கங்களை அவர்களுக்குத் தெரிவித்தான். குடிமக்களும், மாகாணவாசிகளும் மன்னனின் சொற்களைக் கேட்டு,(16) கவலையால் நிறைந்தவர்களாக அவற்றை அங்கீகரிக்காமல் இருந்தனர். “ஒருபோதும் இது நடக்காது” என்று அவர்கள் மன்னனிடம் சொன்னார்கள்.(17)

காலம் கொண்டுவரும் மாற்றங்களை நன்கறிந்தவனான அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்கவில்லை. அற ஆன்மா கொண்ட அவன் தன் கருத்துகளை அங்கீகரிக்குமாறு மக்களை ஏற்கச் செய்தான்.(18) பிறகு அவன் உலகத்தைவிட்டுச் செல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். அவனது சகோதரர்களும் அதே தீர்மானத்தையே எடுத்திருந்தனர். பிறகு, தர்மனின் மகனும், குருக்களின் மன்னனுமான யுதிஷ்டிரன்,(19) தன் ஆபரணங்களை அகற்றி, மரவுரிகளைத் தரித்தான். பீமன், அர்ஜுனன், இரட்டையர் மற்றும் பெரும்புகழைக் கொண்ட திரௌபதி ஆகியோரும்,(20) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அதே போலவே மரவுரிகளையே உடுத்திக் கொண்டனர்.

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அருளை வழங்கவல்ல தொடக்க அறச் சடங்குகளைச் செய்த அந்த முதன்மையான மனிதர்கள் தங்கள் புனித நெருப்புகளை நீருக்குள் விட்டனர். அந்த இளவரசர்களை அந்தத் தோற்றத்தில் கண்ட பெண்கள் உரக்க அழுதனர்.(21,22) முற்காலத்தில் திரௌபதியுடன் சேர்ந்து அறுவராகி, பகடையாட்டத்தில் வீழ்த்தப்பட்டுத் தலைநகரைவிட்டுப் புறப்பட்ட கோலத்திலேயே இப்போதும் அவர்கள் தெரிந்தனர். எனினும், அந்தச் சகோதரர்கள் அனைவரும் ஓய்வில் பெரும் உற்சாகம் கொண்டனர்.(23) யுதிஷ்டிரனின் நோக்கங்களை உறுதி செய்து கொண்டவர்களும், விருஷ்ணிகளின் அழிவைக் கண்டவர்களுமான அவர்களை வேறு எந்தச் செயல்பாட்டாலும் நிறைவடையச் செய்ய இயலாது. ஐந்து சகோதரர்களும், ஆறாவதாகத் திரௌபதியும், ஏழாவதாக ஒரு நாயும் சேர்ந்து(24) தங்கள் பயணத்திற்குப் புறப்பட்டனர். உண்மையில், இவ்வாறே, ஏழு பேர் அடங்கிய அந்தத் தரப்புக்குத் தலைமை தாங்கிய மன்னன் யுதிஷ்டிரன், யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தில் இருந்து சென்றான். குடிமக்களும், அரச குடும்பத்துப் பெண்களும் சிறிது தொலைவுக்கு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(25) எனினும், அவர்களில் எவருக்கும், மன்னனை அவனுடைய கருத்தில் இருந்து பின்வாங்கும்படி கேட்கும் துணிவில்லை. அந்த நகரவாசிகள் திரும்பிவந்தனர்.(26)

கிருபரும், பிறரும் தங்களுக்கு நடுவில் இருந்து யுயுத்சுவைச் சூழ்ந்து நின்றனர். ஓ! குரு குலத்தோனே {ஜனமேஜயனே}, நாகத் தலைவனின் மகளான உலூபி, கங்கையின் நீருக்குள் நுழைந்தாள்[1].(27) இளவரசி சித்திராங்கதை மணிப்புரத்தின் தலைநகருக்குப் புறப்பட்டுச் சென்றாள். பரிக்ஷித்தின் பாட்டிகளான வேறு பெண்கள் அவனைச் சூழ்ந்திருந்தனர்.(28) அதே வேளையில், ஓ! குரு குலத்தோனே அந்த உயர் ஆன்ம பாண்டவர்களும், பெரும்புகழைக் கொண்ட திரௌபதியும், தொடக்க உண்ணாநோன்பை நோற்று, கிழக்கு நோக்கிய முகங்களைக் கொண்டு புறப்பட்டுச் சென்றனர்.(29) யோகத்தில் தங்களை நிறுவி கொண்ட அந்த உயர் ஆன்மாக்கள் துறவறம் நோற்கத் தீர்மானித்து, பல்வேறு நாடுகளைக் கடந்து பல்வேறு ஆறுகளையும், கடல்களையும் அடைந்தனர்.(30) யுதிஷ்டிரன் முன்னே சென்றான், அவனுக்குப் பின்னால் பீமன்; அடுத்து அர்ஜுனன்; அவனுக்கு அடுத்துப் பிறப்பின் வரிசையில் இரட்டையர்கள்;(31) ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, அவர்கள் அனைவருக்கும் பின்னால் பெண்களில் முதன்மையானவளும், பேரழகைக் கொண்டவளும், கரிய நிறத்தவளும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவளுமான திரௌபதி சென்றாள்.(32)பாண்டவர்கள் காட்டுக்குப் புறப்பட்ட போது, ஒரு நாயும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றது. தொடர்ந்து சென்ற அவ்வீரர்கள் செந்நீர் கொண்ட கடலை அடைந்தனர்.(33) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தனஞ்சயன் {அர்ஜுனன்}, பெரும் மதிப்பு மிக்கப் பொருட்களில் ஒருவனுக்குள்ள பேராசையின் மூலம் இயக்கப்பட்டவனாகத் தன்னுடைய தெய்வீக வில்லான காண்டீவத்தையும், வற்றாதவையான தன்னிரு அம்பறாத்தூணிகளையும் கைவிடாமல் இருந்தான்.(34) நெருப்பின் தேவன் தங்களுக்கு முன்னால் ஒரு மலையென நிற்பதைப் பாண்டவர்கள் கண்டனர். அவர்களுடைய வழியை அடைத்த அந்தத் தேவன் உடல் கொண்ட வடிவத்துடன் அங்கே நின்று கொண்டிருந்தான். ஏழு தழல்களைக் கொண்ட அந்தத் தேவன் {நெருப்பின் தேவன்} பாண்டவர்களிடம், “பாண்டுவின் வீர மகன்களே, என்னை நெருப்பின் தேவனாக {அக்னி தேவனாக} அறிவீராக.(36) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, ஓ! பகைவரை எரிப்பவனான பீமசேனா, ஓ! அர்ஜுனா, ஓ! பெருந்துணிவுமிக்க இரட்டையர்களே, நான் சொல்வதைக் கேட்பீராக.(37) குரு குலத்தின் முதன்மையானவர்களே, நானே நெருப்பின் தேவன். அர்ஜுனன் மற்றும் நாராயணனின் பலத்தாலும், என்னாலும் காண்டவக் காடு எரிக்கப்பட்டது.(38) உன் தம்பியான பல்குனன் {அர்ஜுனன்}, உயர்ந்த ஆயுதமான காண்டீவத்தைக் கைவிட்ட பிறகு காட்டுக்குச் செல்லட்டும். இவனுக்கு இனியும் இதற்கான தேவை ஏதும் இல்லை.(39) உயர் ஆன்மக் கிருஷ்ணனுடைய மதிப்புமிக்கச் சக்கரம் (உலகில் இருந்து) மறைந்து போனது. மீண்டும் வேளை வரும்போது அஃது அவனது கைகளுக்குத் திரும்பும்.(40) விற்களில் முதன்மையான இந்தக் காண்டீவம், பார்த்தனின் பயன்பாட்டுக்காக வருணனிடம் இருந்து என்னால் அடையப்பட்டதாகும். அதை நான் வருணனுக்கே கொடுக்க வேண்டும்” என்றான் {அக்னி தேவன்}.(41)

இதன்பேரில், அந்தத் தேவன் சொல்வதைச் செய்யுமாறு சகோதரர்கள் அனைவரும் அர்ஜுனனைத் தூண்டினர். அப்போது அவன் {அர்ஜுனன்} வில்லையும் {காண்டீவத்தையும்}, வற்றாதவையான இரு அம்பறாத்தூணிகளையும் (கடலின்) நீருக்குள் வீசினான்.(42) அதன் பிறகு, ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, நெருப்பின் தேவன் அங்கேயே அப்போதே மறைந்து போனான். பாண்டுவின் வீர மகன்கள் அதன் பிறகு, தெற்கு நோக்கித் தங்கள் முகங்களைத் திருப்பியவர்களாகச் சென்றனர்.(43) அதன் பிறகு, அந்தப் பாரத இளவரசர்கள் உப்புக் கடலின் வடக்குக் கரையில் தென் மேற்காகச் சென்றனர்.(44) பிறகு மேற்கு நோக்கித் திரும்பிய அவர்கள், பெருங்கடலால் மறைக்கப்பட்ட துவாரகா நகரத்தைக் கண்டனர்.(45) அடுத்ததாக அந்த முதன்மையானவர்கள் வடக்கு நோக்கிச் சென்றனர். யோகம் நோற்றுக் கொண்டிருந்த அவர்கள், மொத்த பூமியையும் வலம் வர விரும்பினர்” {என்றார் வைசம்பாயனர்}.(46)

ஒவ்வொருவராக விழுந்தனர்! – மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 2-வரிசையாகச் செல்லும்போது திரௌபதியும் பாண்டவர்களும் ஒவ்வொருவராக விழுவது; அவர்கள் விழக் காரணம் கேட்ட பீமனுக்குப் பதில் சொல்லி வந்த யுதிஷ்டிரன்; நாய் மட்டும் தொடர்ந்து சென்றது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களைக் கொண்டவர்களும், யோகத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருந்தவர்களுமான அந்த இளவரசர்கள் {பாண்டவர்கள்} வடக்கு நோக்கிச் சென்று மிகப் பெரும் மலையான ஹிமவானை {இமயத்தைக்} கண்டனர்.(1) ஹிமவானைக் கடந்த அவர்கள், மணல் நிறைந்த ஒரு பெரிய பாலைவனத்தைக் கண்டனர். பிறகு அவர்கள், உயர்ந்த சிகரங்கள் கொண்ட மலைகளில் முதன்மையான மேரு மலையைக் கண்டனர்.(2) யோகத்தில் குவிந்திருந்த அந்த வலிமைமிக்கவர்கள் அனைவரும் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, யாஜ்ஞசேனி {திரௌபதி} யோகத்தில் இருந்து வீழ்ந்து பூமியில் விழுந்தாள்.(3)

பெரும்பலம் கொண்ட பீமசேனன் அவளது வீழ்ச்சியைக் கண்டு நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம்,(4) “ஓ! பகைவரை எரிப்பவரே, இந்த இளவரசி எந்தப் பாவச் செயலையும் செய்யவில்லை. இந்தக் கிருஷ்ணை பூமியில் விழுந்ததற்கான காரணத்தை எங்களுக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(5)

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்குத்} தனிச்சிறப்பளிக்கும் பெரும்பாகுபாடு இவளிடம் {திரௌபதியிடம்} உண்டு. ஓ! மனிதர்களில் சிறந்தவனே, அவ்வொழுக்கத்தின் கனியை {பலனை} அவள் இன்று அடைந்திருக்கிறாள்” என்றான்”.(6)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பாரதக் குலத்தில் முதன்மையான அவன், இதைச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து சென்றான். அற ஆன்மாவையும், பெரும் நுண்ணறிவையும் கொண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன், மனத்தில் மனத்தையே கொண்டு தொடர்ந்து சென்றான்.(7) அப்போது, பெரும் கல்வி கற்றவனான சகாதேவன் பூமியில் விழுந்தான். அவன் கீழே விழுவதைக் கண்ட பீமன் மன்னனிடம்,(8) “ஐயோ, பெரும் பணிவுடன் நம் அனைவருக்கும் தொண்டு செய்துவந்த மாத்ராவதியின் மகன் {சகாதேவன்}, ஏன் பூமியில் விழுந்தான்?” என்று கேட்டான்.(9)

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “அவன் {சகாதேவன்}, ஒருபோதும் ஞானத்தில் தனக்கு இணையானவரென ஒருவரையும் கருதவில்லை. அந்தக் குற்றத்தின் காரணமாகவே இந்த இளவரசன் {சகாதேவன்} விழுந்தான்” என்றான்”.(10)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன மன்னன், சகாதேவனை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றான். உண்மையில், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தன் சகோதரர்களுடனும், நாயுடனும் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான்.(11) உற்றார் உறவினரிடம் பேரன்பு கொண்டவனும், துணிச்சல்மிக்கவனுமான நகுலன், கிருஷ்ணை {திரௌபதி} மற்றும் பாண்டவனான சகாதேவன் ஆகிய இருவரும் விழுவதைக் கண்டு கீழே விழுந்தான்.(12) பெரும் மேனியெழில் கொண்ட வீர நகுலன் விழுந்ததும், பீமன் மீண்டும் மன்னனிடம்,(13) “முழுமையான அறவோனும், நம் ஆணைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிந்தவனும், அழகில் ஒப்பற்றவனுமான இந்த நகுலன் கீழே விழுந்துவிட்டான்” என்றான்.(14)

பீமசேனனால் இவ்வாறு கேட்கப்பட்ட யுதிஷ்டிரன், நகுலனைக் குறித்து இந்தச் சொற்களைச் சொன்னான்: “அவன் அற ஆன்மா கொண்டவனாகவும், நுண்ணறிவு மிக்க மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகவும் இருந்தான்.(15) எனினும், மேனியெழில் தனக்கு நிகராக எவரும் இல்லையென அவன் {நகுலன்} நினைத்தான். உண்மையில், அந்த வகையில் அவன் தன்னை அனைவரிலும் மேன்மையானவனாகக் கருதினான்.(16) அதன் காரணமாகவே நகுலன் விழுந்தான். ஓ! விருகோதரா {பீமா}, இதை அறிவாயாக. ஓ! வீரா, ஒரு மனிதனுக்காக விதிக்கப்பட்டதை அவன் அனுபவிக்கவே வேண்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}.(17)

வெண்குதிரைகளைக் கொண்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், பாண்டுவின் மகனுமான அர்ஜுனன், நகுலனும், பிறரும் விழுவதைக் கொண்டு, இதயத்தில் பெரும் துயருடன் கீழே விழுந்தான்.(18) மனிதர்களில் முதன்மையானவனும், சக்ரனின் சக்தியைக் கொண்டவனுமான அவன் {அர்ஜுனன்} கீழே விழுந்தபோது, உண்மையில், வெல்லப்பட முடியாதவனான அந்த வீரன் மரணத் தருவாயில் இருந்தபோது, பீமன் மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்},(19) “இந்த உயர் ஆன்மா எந்தப் பொய்யையும் சொன்னதாக எனக்கு நினைவில்லை. உண்மையில், கேலிக்காகக் கூட இவன் பொய்யேதும் பேசியவனல்ல. எந்தத் தீய விளைவின் காரணமாக இவன் பூமியில் விழுந்தான்?” என்று கேட்டான்.(20)

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “அர்ஜுனன், நம் பகைவர்கள் அனைவரையும் ஒரே நாளில் எரித்துவிடுவேன் என்று சொன்னான். தன் வீரத்தில் செருக்குக் கொண்டவனாக இருப்பினும், அதை அவன் {அர்ஜுனன்} நிறைவேற்றவில்லை. அதனால் அவன் வீழ்ந்தான்.(21) இந்தப் பல்குனன், வில்லாளிகள் அனைவரையும் அலட்சியமாகக் கருதினான். செழிப்பில் விருப்பம் இருக்கும் ஒருவன் ஒருபோதும் இத்தகைய மிகையுணர்வுகளில் ஈடுபடக்கூடாது” என்றான்”.(22)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச்சொல்லிவிட்டு மன்னன் தொடர்ந்து சென்றான். பிறகு பீமன் விழுந்தான். கீழே விழுந்த பீமன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம்,(23) “ஓ! மன்னா, பார்ப்பீராக. உமக்கு அன்பான நான் விழுந்துவிட்டேன். என்ன காரணத்தினால் நான் விழுந்தேன்? அதை நீர் அறிந்தால் எனக்குச் சொல்வீராக” என்றான்.(24)

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “நீ அதிகம் உண்டாய், உன் பலம் குறித்துத் தற்பெருமை பேசினாய். ஓ! பார்த்தா {பீமா}, உண்ணும்போது, நீ பிறரின் தேவையை ஒருபோதும் கவனிக்கவில்லை. ஓ! பீமா, அதற்காகவே நீ விழுந்தாய்” என்றான்.(25)

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரன், இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் தொடர்ந்து சென்றான். அவன், நான் மீண்டும் மீண்டும் உன்னிடம் சொன்ன அந்த நாய் மட்டுமே ஒரே துணையாக அவனை {யுதிஷ்டிரனைப்} பின்தொடர்ந்து சென்றது” {என்றார் வைசம்பாயனர்}.(26)

ஆரியன் யுதிஷ்டிரன்! – மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 3-சொர்க்கம் செல்வதற்கு யுதிஷ்டிரனைத் தன் தேரில் ஏறச் சொன்ன இந்திரன்; நாயை விட மறுத்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனைப் புகழ்ந்த யமன்; சகோதரர்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல விரும்பிய யுதிஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அப்போது, ஆகாயத்தையும், பூமியையும் உரத்த ஒலியால் நிறைந்தபடி ஒரு தேரில் பிருதையின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} வந்த சக்ரன், அவனை அதில் ஏறச் சொன்னான்.(1) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் பூமியில் விழுந்ததைக் கண்டு, அந்த ஆயிரங்கண் தேவனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(2) “என் தம்பிகள் அனைவரும் கீழே விழுந்து விட்டனர். அவர்களும் என்னுடன் வர வேண்டும். ஓ! தேவர்கள் அனைவரின் தலைவா, அவர்கள் அனைவரும் என்னுடன் இல்லாமல் நான் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பவில்லை.(3) ஓ! புரந்தரா, அனைத்து ஆடம்பரங்களுக்கும் தகுந்தவளும், மென்மையானவளுமான இளவரசியும் (திரௌபதியும்) எங்களோடு வர வேண்டும். இதை அனுமதிப்பதே உனக்குத் தகும்” என்றான்.(4)

சக்ரன் {யுதிஷ்டிரனிடம்}, “உன் தம்பிகளை நீ சொர்க்கத்தில் காண்பாய். அவர்கள் உனக்கு முன்பே அங்கே சென்றுவிட்டனர். உண்மையில், கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்த்தே அவர்கள் அனைவரையும் அங்கே காண்பாய். ஓ! பாரதர்களின் தலைவா, நீ துயரடையாதே.(5) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அவர்கள் தங்கள் மனித உடல்களைக் களைந்துவிட்டு அங்கே சென்றிருக்கின்றனர். உன்னைப் பொறுத்தவரையில், நீ உன்னுடைய உடலுடனேயே அங்கே செல்ல விதிக்கப்பட்டிருக்கிறது” என்றான்.(6)

யுதிஷ்டிரன் {சக்ரனிடம்}, “ஓ! கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் தலைவா, இந்த நாய் என்னிடம் மிகுந்த அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} இருக்கிறது. இதுவும் என்னுடன் வர வேண்டும். இதனிடம் நான் இதயம் நிறைந்த கருணை கொண்டிருக்கிறேன்” என்றான்.(7)

சக்ரன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, இறவாமை, எனக்கு நிகரான நிலை, அனைத்துத் திசைகளிலும் பரந்திருக்கும் செழிப்பு, உயர்ந்த வெற்றி, சொர்க்கத்தின் இன்பங்கள் அனைத்தும் இன்று உன்னால் வெல்லப்பட்டன. இந்த நாயை நீ கைவிடுவாயாக. இதில் எந்தக் கொடுமையும் கிடையாது” என்றான்.(8)

யுதிஷ்டிரன் {சக்ரனிடம்}, “ஓ! ஆயிரங்கண் கொண்டவனே, ஓ! அறவொழுக்கம் கொண்டவனே, அறவொழுக்கம் கொண்ட ஒருவனால் நீதியற்ற ஒரு செயலைச் செய்வது மிகவும் கடினமாகும். என்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட ஒன்றைக் கைவிட்டுச் செழிப்பை அடைய நான் விரும்பவில்லை[1]” என்றான்.(9)இந்திரன் {யுதிஷ்டிரனிடம்}, “நாய்களுடன் இருக்கும் மனிதர்களுக்குச் சொர்க்கத்தில் எவ்விடமும் கிடையாது. தவிர, குரோதவாசர்கள் (என்றழைக்கப்படும் தேவர்கள்) அத்தகைய மனிதர்களின் புண்ணியங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்கின்றனர். ஓ! நீதிமானான மன்னன் யுதிஷ்டிரா, இதைச் சிந்தித்துச் செயல்படுவாயாக. நீ இந்த நாயைக் கைவிடுவாயாக. இதில் கொடுமையேதும் இல்லை” என்றான்.(10)

யுதிஷ்டிரன் {சக்ரனிடம்}, “அர்ப்பணிப்புடன் இருக்கும் ஒருவனைக் கைவிடுவது முடிவிலா பாவத்திற்கு வழிவகுக்கும் எனச் சொல்லப்படுகிறது. இஃது ஒரு பிராமணனைக் கொல்லும் பாவத்திற்கு நிகரானது. எனவே, ஓ! பெரும் இந்திரா, என் மகிழ்ச்சியை விரும்பி நான் இன்று இந்த நாயைக் கைவிட மாட்டேன்.(11) அச்சமடைந்தவனையோ, என்னிடம் அர்ப்பணிப்புள்ளவனையோ, என் பாதுகாப்பை நாடுபவனையோ, ஆதரவற்றவனையோ, துன்பத்தால் பீடிக்கப்பட்டவனையோ, என்னிடம் வந்தவனையோ, தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதில் பலவீனனையோ, உயிரை வேண்டுபவனையோ ஒருபோதும் கைவிடமாட்டேன் என்பது என் உறுதியான நோன்பாகும். இத்தகைய ஒருவனை என் உயிர் போகும் வரை ஒருபோதும் நான் கைவிட மாட்டேன்” என்றான்.(12)

இந்திரன் {யுதிஷ்டிரனிடம்}, “ஒரு நாயால் பார்க்கப்படும் வகையில் கொடுக்கப்படும் எந்தக் கொடையும், பரப்பப்படும் எந்த வேள்வியும், வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகள் எதுவும் குரோதவாசர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. எனவே, நீ இந்த நாயைக் கைவிடுவாயாக. இந்த நாயைக் கைவிடுவதன் மூலம் நீ தேவர்களின் உலகை அடைவாய்.(13) ஓ! வீரா {யுதிஷ்டிரா}, உன் தம்பிகள், கிருஷ்ணை {திரௌபதி} ஆகியோரைக் கைவிட்ட நீ உன் சொந்த செயல்களால் இன்பலோகத்தை அடைந்திருக்கிறாய். ஏன் கலக்கமடைகிறாய்? நீ அனைத்தையும் துறந்துவிட்டாய். ஏன் இந்த நாயையைத் துறக்காமலிருக்கிறாய்?” என்று கேட்டான்.(14)

யுதிஷ்டிரன், “இறந்தோருடன் நட்போ, பகையோ கிடையாது என்பது உலகங்கள் அனைத்திலும் நன்கறியப்பட்டது. என் தம்பிகளும், கிருஷ்ணையும் இறந்த போது, என்னால் அவர்களை மீட்க முடியவில்லை. எனவே, நான் அவர்களைக் கைவிட்டேன். எனினும், அவர்கள் உயிரோடு இருந்தவரை அவர்களை நான் ஒருபோதும் கைவிடவில்லை.(15) ஓ! சக்ரா, பாதுகாப்பு நாடி வந்தவனை அச்சுறுத்துவது, பெண்ணைக் கொல்வது, பிராமணனுக்குரியதைக் களவாடுவது, நண்பனுக்குத் தீங்கிழைப்பது என்ற இந்த நான்கும் செயல்களும், அர்ப்பணிப்புடன் இருப்பவனைக் கைவிடுவதற்கு நிகரானவையென நான் நினைக்கிறேன்” என்றான்”.(16)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இந்தச் சொற்களைக் கேட்டு (நாயாக இருந்த) அறத் தேவன் மிகவும் நிறைவடைந்தவனாகப் புகழால் நிறைந்த இனிய குரலில் இந்தச் சொற்களைச் சொன்னான்.(17)

தர்மன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னர்களின் மன்னா, நீ நற்குடியில் பிறந்தவனாகவும், நுண்ணறிவையும், பாண்டுவின் நல்லொழுக்கத்தையும் கொண்டவனாக இருக்கிறாய். ஓ! பாரதா, அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொள்வது இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.(18) ஓ! மகனே, முன்பு துவைத வனத்தில் பேராற்றல் கொண்டவர்களான உன் உடன்பிறந்தோர் இறந்தபோது என்னால் நீ சோதிக்கப்பட்டாய்.(19) உன்னுடன் பிறந்தவர்களான பீமனையும், அர்ஜுனனையும் அலட்சியம் செய்து உன் (மாற்றாந்) தாய்க்கு நன்மை செய்யுஃம விருப்பத்தில் நகுலனின் உயிரை மீட்க நீ விரும்பினாய்[2].(20) தற்போதைய நிகழ்வில் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக நினைத்து, இவனை {நாயைத்} துறப்பதற்குப் பதில் தேவர்களின் தேரையே நீ துறந்துவிட்டாய். எனவே, ஓ! மன்னா, சொர்க்கமேதும் உனக்கு நிகரானதல்ல.(21) எனவே, ஓ! பாரதா, வற்றாத இன்பங்களைக் கொண்ட உலகங்கள் உனதாகின. ஓ! பாரதர்களின் தலைவா, நீ அவற்றை வென்றுவிட்டாய், உன்னுடைய கதி உயர்ந்ததும், தெய்வீகமானதுமாகும்” என்றான் {யமன்}”.(22)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அப்போது தர்மன், சக்ரன், மருத்துகள், அஸ்வினிகள், வேறு தேவர்கள், தெய்வீக முனிவர்கள் ஆகியோர் யுதிஷ்டிரனைத் தேரில் ஏறச் செய்து சொர்க்கத்திற்குச் சென்றனர். வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், தங்கள் விருப்பத்தின் பேரில் எந்த இடத்திற்கும் செல்ல வல்லவர்களுமான அவர்கள் தங்கள் தங்களுக்குரிய தேர்களைச் செலுத்தினார்கள்.(23,24) குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனான மன்னன் யுதிஷ்டிரன், தன் பிரகாசத்தால் மொத்த ஆகாயத்தையும் ஒளிபெறச் செய்து, விரைவாக ஏறி அந்தத் தேரைச் செலுத்தினான்.(25)

பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையானரும், தவம் கொண்டவரும், உலகங்கள் அனைத்தையும் அறிந்தவருமான நாரதர், அப்போது தேவ கூட்டத்திற்கு மத்தியில் இந்தச் சொற்களைச் சொன்னார்:(26)”இங்கே இருக்கும் அரசமுனிகள் அனைவரும், யுதிஷ்டிரனுடைய சாதனைகளால் கடக்கப்பட்ட சாதனைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.(27) இவன் தன் புகழாலும், காந்தியாலும், ஒழுக்கமெனும் செல்வத்தாலும் உலகங்கள் அனைத்தையும் மறைத்து, தன் சொந்த (மனித) உடலுடன் சொர்க்கத்தை அடைந்தான். பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரைத்} தவிர வேறு எவரும் இதை அடைந்ததாக நாம் கேள்விப்பட்டதில்லை[3]” என்றார்.(28)அறம் சார்ந்தவனான அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, நாரதரின் இந்தச் சொற்களைக் கேட்டு, தேவர்களையும், அங்கே இருந்த அரசமுனிகள் யாவரையும் வணங்கி,(29) “மகிழ்ச்சி நிறைந்ததோ, துன்பகரமானதோ, என் தம்பிகள் எந்த உலகத்தை இப்போது அடைந்திருக்கிறார்களோ அங்கேயே நான் செல்ல விரும்புகிறேன். நான் வேறெங்கும் செல்ல விரும்பவில்லை” என்றான்.(30)

மன்னனின் இந்தப் பேச்சைக் கேட்ட தேவர்களின் தலைவன் புரந்தரன், உன்னத அறிவால் நிறைந்த இந்தச் சொற்களைச் சொன்னான்,(31) “ஓ! மன்னர்களின் மன்னா, உன் புண்ணியச் செயல்களால் வெல்லப்பட்ட இந்த இடத்தில் நீ வாழ்வாயாக. நீ ஏன் இன்னும் மனிதப் பற்றுகளைப் பேணி வளர்க்கிறாய்?(32) எந்த மனிதனாலும் ஒருபோதும் அடைய முடியாத பெரும் வெற்றியை நீ அடைந்திருக்கிறாய். ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, உன்னுடன் பிறந்தோரும் இன்பலோகங்களையே வென்றிருக்கின்றனர்.(33) மனிதப் பற்றுகள் இன்னும் உன்னைத் தீண்டிக் கொண்டிருக்கின்றன. இது சொர்க்கம். தேவர்களின் உலகை அடைந்திருக்கும் தெய்வீக முனிவர்களையும், சித்தர்களையும் இதோ பார்” என்றான்.(34)

பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்ட யுதிஷ்டிரன் மீண்டும் தேவர்களின் தலைவனுக்குப் பதிலளிக்கும் வகையில்,(35) “ஓ! தைத்தியர்களை வென்றவனே, அவர்களிடமிருந்து பிரிந்திருக்கும் எங்கும் நான் வசிக்கத் துணியேன். என்னுடன் பிறந்தோர் எங்கே சென்றனரோ அங்கேயே நான் செல்ல விரும்புகிறேன்.(36) பெண்களில் முதன்மையானவளும், போதுமான விகிதங்களில் அங்கங்களைக் கொண்டவளும், கரிய நிறத்தவளும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவளும், அறவொழுக்கம் ஒழுகுபவளுமான திரௌபதி எங்கே சென்றாளோ, அங்கேயே நானும் செல்ல விரும்புகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.(37)

மஹாப்ரஸ்தானிக பர்வம் முற்றும்

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading