மூவரின் மறைவு! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 37-காட்டில் இருந்த திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் குந்தி ஆகியோர் சொர்க்கமடைந்ததை ஹஸ்தினாபுரம் வந்து சொன்ன நாரதர்; திருதராஷ்டிரன் ஆணைப்படி சஞ்சயன் இமயமலைக்குச் சென்றதையும் சொன்னது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, பாண்டவர்கள் (தங்கள் தந்தையின் {திருதராஷ்டிரனின்} ஆசிரமத்திலிருந்து) திரும்பிய நாளிலிருந்து இரண்டு வருடம் கழிந்த பிறகு, தெய்வீக முனிவரான நாரதர் யுதிஷ்டிரனிடம் வந்தார்.(1) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட குரு மன்னனும், பேசுபவர்களில் முதன்மையானவனுமான யுதிஷ்டிரன், அவரை முழுமையாக வழிபட்டபிறகு, இருக்கையில் அமரச் செய்தான். முனிவர் சற்று ஓய்ந்திருந்த பிறகு, மன்னன் {யுதிஷ்டிரன்}, அவரிடம்,(2) “நீண்ட காலத்திற்குப் பிறகு புனிதரான நீர் என் சபைக்கு வருவதை நான் காண்கிறேன். ஓ! கல்விமானான பிராமணரே {நாரதரே}, நீர் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறீரா?(3) நீர் சென்று வந்த நாடுகள் என்னென்ன? நான் உமக்குச் செய்ய வேண்டியதென்ன? எனக்கு நீர் சொல்வீராக. மறுபிறப்பாளர்களில் முதன்மையானவராகவும், எங்களது உயர்ந்த புகலிடமாகவும் நீரே இருக்கிறீர்” என்றான்.(4)
நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “நான் நீண்ட காலம் உன்னைக் காணவில்லை. எனவே, அதன் காரணமாகவே நான் என் துறவு ஆசிரமத்தில் இருந்து உன்னிடம் வந்தேன். ஓ! மன்னா, நான் புனித நீர்நிலைகள் பலவற்றையும், புனித ஓடையான கங்கையையும் கண்டு வந்தேன்” என்றார்.(5)
யுதிஷ்டிரன் {நாரதரிடம்}, “கங்கைக் கரையில் வசிக்கும் மக்கள், உயர் ஆன்ம திருதராஷ்டிரர் கடுந்தவங்களைப் பயின்று வருகிறார் என்று சொல்கின்றனர்.(6) நீர் அங்கே அவரைக் கண்டீரா? குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரான அவர் அமைதியாக இருக்கிறாரா? காந்தாரி, பிருதை {குந்தி} மற்றும் சூதனின் மகனான சஞ்சயன் ஆகியோர் அமைதியுடன் இருக்கின்றனரா?(7) உண்மையில், என்னுடைய அரசத் தந்தை எப்படி இருக்கிறார்? ஓ! புனிதமானவரே, நீர் மன்னரைக் கண்டிருந்தால் (அவரது நிலையையும் அறிந்திருந்தால்) அதைக் கேட்க நான் விரும்புகிறேன்” என்றான்.(8)
நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, நான் கேட்டதையும், அந்தத் துறவாசிரமத்தில் நான் கண்டதையும் சொல்கிறேன், அமைதியாகக் கேட்பாயாக.(9) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, ஓ! மன்னா, நீ குருக்ஷேத்திரத்தில் இருந்து திரும்பியதும் உன் தந்தை கங்காத்வாரத்தை நோக்கிச் சென்றார்.(10) நுண்ணறிவுமிக்க அந்த ஏகாதிபதி, தனது (புனித) நெருப்பையும், காந்தாரியையும், தன் மருமகளான குந்தியையும், சூதனான சஞ்சயனையும், யாஜகர்கள் அனைவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.(11) தவங்களையே செல்வமாகக் கொண்ட உன் தந்தை கடுந்தவப்பயிற்சியில் தன்னை நிறுவிக் கொண்டான். அவன் தன் வாயில் சரளைக் கற்களைக் கொண்டு, பேச்சை மொத்தமாகத் தவிர்த்து வாழ்வாதாரத்திற்காகக் காற்றை மட்டுமே உண்டு வந்தான்.(12)
கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்த அவன், காட்டில் உள்ள தவசிகள் அனைவராலும் வழிபடப்பட்டான். ஆறு மாத காலத்தில் அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} வெறும் எலும்புக்கூடாகத் தன்னைக் குறைத்துக் கொண்டான்.(13) காந்தாரி நீரை மட்டுமே உண்டு வாழ்ந்தாள், குந்தி ஒரு மாத இடைவெளியில் சிறிதளவு உணவை உண்டாள். ஓ! பாரதா, சஞ்சயன், ஒவ்வொரு ஆறாம் நாளிலும் சிறிது உண்டு வாழ்ந்து வந்தான்.(14) ஓ! ஏகாதிபதி, (குரு மன்னனுக்குரிய) புனித நெருப்பானது, அவனுடன் இருந்த வேள்வித் துணைவர்கள் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை ஊற்றி முறையாக வழிபடப்பட்டது. மன்னன் இந்தச் சடங்கைக் கண்டாலும், காணாவிட்டாலும், இதை அவர்கள் செய்து வந்தனர்.(15) மன்னனுக்கு நிலையான வசிப்பிடம் ஏதும் இருக்கவில்லை. அவன் காட்டிற்குள் திரிபவனாக இருந்தான். ராணிகள் இருவரும், சஞ்சயனும் அவனைப் பின்தொடர்ந்தனர்.(16)
சமமான மற்றும் சமமற்ற நிலத்திலும் சஞ்சயன் வழிகாட்டியாகச் செயல்பட்டான். ஓ! மன்னா, களங்கமற்ற பிருதை {குந்தி}, காந்தாரியின் கண்ணானாள்.(17) ஒரு நாள், அந்த மன்னர்களில் சிறந்தவன், கங்கையின் விளிம்பில் உள்ள ஓரிடத்திற்குச் சென்றான். அப்போது அந்தப் புனித ஓடையில் நீராடி, தன் ஆசிரமத்தை நோக்கி முகத்தைத் திருப்பித் தன் தூய்மைச் சடங்குகளை நிறைவடையச் செய்தான்.(18) காற்று உயர எழுந்தது. கடுமையான காட்டுத்தீ உண்டானது. அது சுற்றிலும் அந்தக் காடு முழுவதையும் எரிக்கத் தொடங்கியது.(19) விலங்குக் கூட்டங்கள் சுற்றிலும் எரிக்கப்பட்ட போது, அந்தப் பகுதியில் வசித்த பாம்புகளும் எரிக்கப்பட்ட போது, காட்டுப் பன்றிகள் அருகில் உள்ள புதர்களுக்கும், நீர்நிலைகளுக்குச் செல்லத் தொடங்கின.(20)
அந்தக் காடு இவ்வாறு அனைத்துப் பக்கங்களிலும் பீடிக்கப்பட்டபோது, அங்கே வசித்த உயிரினங்கள் அனைத்தும் இத்தகைய துன்பத்தை அடைந்தபோது, உணவேதும் உண்ணாத மன்னன் {திருதராஷ்டிரன்}, அசைவதற்கோ, முயற்சி செய்தற்கோ இயலாதவனாக இருந்தான்.(21) மெலிந்து போயிருந்த உன்னுடைய தாய்மார்கள் இருவரும் அசைய முடியாத நிலையில் இருந்தனர். மன்னன் {திருதராஷ்டிரன்}, அனைத்துப் புறங்களில் இருந்தும் தீ தன்னை நோக்கி வருவதைக் கண்டு,(22) திறம்மிக்கத் தேரோட்டிகளில் முதன்மையான சூதன் சஞ்சயனிடம், “ஓ! சஞ்சயா, தீ உன்னை எரிக்காத இடத்திற்குச் செல்வாயாக.(23) எங்களைப் பொறுத்தவரையில், இந்த நெருப்பால் எங்கள் உடல்கள் துன்புற்று அழிவடைந்து உயர்ந்த கதியை அடையப் போகிறோம்” என்றான்.
அவனிடம் {திருதராஷ்டிரனிடம்}, பேசுபவர்களில் முதன்மையான சஞ்சயன்,(24) “ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, புனிதமற்றதாக இருக்கும் இந்தத் தீயால் கொண்டுவரப்படும் மரணம் உமக்குத் துன்பத்தையே தரும். எனினும், இந்தத் தீயில் இருந்து தப்பிக்கும் வழிமுறை எதையும் நான் அறியவில்லை.(25) அடைத்ததாக என்ன செய்யப்பட வேண்டும் என்பதை நீர் குறிப்பிட வேண்டும். இவ்வாறு சஞ்சயனால் சொல்லப்பட்ட மன்னன் மீண்டும்,(26) “நாம் சொந்த விருப்பத்தின் பேரில் வீட்டைவிட்டு வெளியேறியதால் இந்த மரணம் நமக்குத் துன்பத்தைத் தராது. (மரணத்திற்கான வழிமுறையாக) நீர், நிலம், காற்று மற்றும் உணவைத் தவிர்த்தல் ஆகியவை மெச்சப்படுகின்றன. எனவே, ஓ! சஞ்சயா நீ தாமதமில்லாமல் எங்களைவிட்டுச் செல்வயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.
குவிந்த மனம் கொண்ட அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, சஞ்சயனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்.(28) அவன் காந்தாரியுடனும், குந்தியுடனும் கிழக்கு நோக்கி அமர்ந்தான். அவனது இந்த மனோநிலையைக் கண்ட சஞ்சயன், அவனை வலம் வந்தான்.(29) நுண்ணறிவைக் கொண்ட சஞ்சயன், “ஓ! பலமிக்கவரே, உமது ஆன்மாவைக் குவிப்பீராக” என்றான். ஒரு முனிவரின் {வியாசரின்} மகனும், பெரும் ஞானம் கொண்டவனுமான மன்னன் {திருதராஷ்டிரன்} தனக்குச் சொல்லப்பட்டவாறே செயல்பட்டான் {சஞ்சயன்}. உயர்ந்த அருளைக் கொண்ட காந்தாரியும், தாயான பிருதையும் கூட அதே மனநிலையில் நீடித்தனர்.(31) அப்போது உன்னுடைய அரசத் தந்தை {திருதராஷ்டிரன்} அந்தக் காட்டு நெரிப்பில் மூழ்கினான். அவனது அமைச்சனான சஞ்சயன், அந்தத் தீயில் இருந்து தப்பிப்பதில் வென்றான்.(32)
கங்கைக் கரையில், தவசிகளுக்கு மத்தியில் நான் அவனைக் கண்டேன். பெரும் சக்தியும், பெரும் நுண்ணறிவும் கொண்ட அவன் {சஞ்சயன்}, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு இமய மலைக்குச் சென்றான்.(33) ஓ! ஏகாதிபதி, இவ்வாறே உயர் ஆன்ம குரு மன்னன் மரணத்தை அடைந்தான். உன்னுடைய இரு தாய்மார்களான காந்தாரியும், குந்தியும் இவ்வாறே மரணத்தைச் சந்தித்தனர்.(34) நான் விருப்பம்போலத் திரிந்து கொண்டிருந்தபோது, ஓ! பாரதா, அந்த மன்னன் மற்றும் அந்த இரு ராணிகளின் உடல்களை நான் கண்டேன்.(35) அந்த ஆசிரமத்திற்கு மன்னன் திருதராஷ்டிரனின் கதியைக் கேட்டு பல தவசிகள் வந்தனர். அவர்கள் தங்களுடைய கதிக்காக ஒருபோதும் வருந்தவில்லை.(36) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, ஓ! பாண்டுவின் மகனே, மன்னனும், இரு ராணிகளும் அங்கே எவ்வாறு எரிந்தனர் என்ற விபரங்களை அனைத்தையும் நான் கேட்டேன்.(37) ஓ! மன்னர்களின் மன்னா, நீ அவர்களுக்காக வருந்தலாகாது. அந்த ஏகாதிபதியும் {திருதராஷ்டிரனும்}, காந்தாரியும், உன் தாயும் தங்கள் விருப்பத்தின் பேரிலையே நெருப்போடான தொடர்பை அடைந்தனர்” என்றார் {நாரதர்}”.(38)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “திருதராஷ்டிரன் இவ்வுலகில் இருந்து சென்றுவிட்டதைக் கேட்ட உயர் ஆன்மப் பாண்டவர்கள் அனைவரும் பெருந்துயரமடைந்தனர்.(39) அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் ஓலமிடும் பேரொலி கேட்டது. குடிமக்களும், அந்த முதிய மன்னனின் கதியைக் கேட்டு உரக்க ஒப்பாரி செய்தனர்.(40) “ஓ!, ஐயோ” என்று பெருங்கவலையில் தன் கரங்களை உயரத் தூக்கி கதறி அழுதான் மன்னன் யுதிஷ்டிரன். அவன் தன் அன்னையை நினைத்து ஒரு குழந்தையைப் போல அழுதான். பீமசேனன் தலைமையிலான அவனது தம்பிகள் அனைவரும் அதையே செய்தனர்.(41) பிருதை {குந்தி} இத்தகைய விதியைச் சந்தித்தால் என்பதைக் கேள்விப்பட்ட அரசக் குடும்பத்துப் பெண்கள், துயரத்தில் உரக்க ஒப்பாரியிட்டனர்.(42) பிள்ளையற்றவனாக இருந்த அந்த முதிய மன்னனும், அவனுடைய விதியைப் பகிர்ந்து கொண்ட ஆதரவற்றவளான காந்தாரியும் எரிந்து இறந்ததைக் கேட்டு மக்கள் அனைவரும் வருந்தினர்.(43) ஓலமிடும் ஒலி சற்று நின்றபோது, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தன் பொறுமையனைத்தையும் அழைத்து, கண்ணீரை நிறுத்திக் கொண்டு இந்தச் சொற்களைச் சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(44)
யுதிஷ்டிரன் புலம்பல்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 38-திருதராஷ்டிரன் காந்தாரி மற்றும் குந்தியின் மரணத்தைக் கேட்டுப் புலம்பிய யுதிஷ்டிரன்; காட்டுத் தீயில் எரிய நேர்ந்ததற்கு வருந்தியது…
யுதிஷ்டிரன் {நாரதரிடம்}, “உயர் ஆன்மா கொண்டவரும், கடுந்தவங்களில் ஈடுபட்டவருமான அந்த ஏகாதிபதியின் {திருதராஷ்டிரரின்} உற்றாரான நாம் அனைவரும் உயிரோடு இருக்கையில்,(1) ஓ! மறுபிறப்பாளரே {நாரதரே}, விதி இவ்வாறு நேர்ந்திருப்பதால், மனிதர்களின் கதியை ஊகிப்பது அரிதே. ஐயோ, விசித்திரவீரியரின் மகன் {திருதராஷ்டிரன்} இவ்வாறு எரிந்து இறப்பார் என்று யார் நினைத்தது?(2) அவர் வலிமைமிக்கக் கரங்களையும், பெருஞ்செழிப்பையும் கொண்ட நூறு மகன்களை உடையவராக இருந்தார். அந்த மன்னரே பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொண்டவராக இருந்தார். ஐயோ, அவரே காட்டுத்தியில் எரிந்து இறந்தாரே.(3) ஐயோ, அழகிய மங்கையரின் நற்கரங்களில் உள்ள பனையோலைகளால் முன்பு வீசப்பட்டவர் {திருதராஷ்டிரர்}, இப்போது, காட்டுத்தீயில் எரிந்து மரணமடைந்து கழுகுகளின் சிறகுகளால் வீசப்படுகிறார்.(4)
சூதர்கள் மற்றும் மாகதர்களின் கூட்டத்தால் ஒவ்வொரு காலையிலும் துயிலில் இருந்து எழுப்பப்பட்ட அவர் {திருதராஷ்டிரர்}, என்னுடைய பாவம் நிறைந்த செயல்களால் வெறுந்தரையில் உறங்க வேண்டியிருந்தது.(5) புகழ்பெற்றவளும், பிள்ளைகளை இழந்தவளுமான காந்தாரிக்காக நான் வருந்தவில்லை. தன் கணவனைப் போன்ற அதே நோன்புகளை நோற்று, அவனுடையதாகியிருக்கும் உலகங்களையே தானும் அடைந்திருக்கிறாள்.(6) எனினும், தன் மகன்களின் சுடர்மிக்கப் பெருஞ்செழிப்பைக் கைவிட்டுக் காட்டில் வசிக்க விரும்பிய பிருதைக்காக {குந்திக்காக} நான் வருந்துகிறேன்.(7) நமது அரசுரிமைக்கு ஐயா, நமது ஆற்றலுக்கு ஐயோ!, க்ஷத்திரிய நடைமுறைகளுகு ஐயோ!, உயிரிரோடு இருந்தாலும் உண்மையில் நாம் இறந்தவர்களே.(8)
ஓ! மேன்மையான பிராமணர்களில் முதன்மையானவரே {நாரதரே}, அரசுரிமையைக் கைவிட்டு தன் வசிப்பிடத்தைக் காட்டில் அமைத்துக் கொள்ள விரும்பிய குந்தியின் காலப் போக்கு மிக நுட்பமானது.(9) மற்றும் புரிந்து கொள்ள மிகக் கடினமானது. யுதிஷ்டிரன், பீமன், விஜயன் ஆகியோரின் தாய் ஓர் ஆதரவுமற்ற உயிரினமாவாள். இதை நினைத்து நான் கலக்கமடைந்தேன்.(10), காண்டவத்தில் அர்ஜுனன், நெருப்பின் தேவனை நிறைவடையச் செய்தது வீணே. நன்றி மறந்தவனான அவன் {அக்னி தேவன்} தனக்குச் செய்யப்பட்ட தொண்டை மறந்து தனக்குக்கு நன்மை செய்தவனின் தாயை எரித்துக் கொன்றிருக்கிறான்.(11) ஐயோ, அர்ஜுனனின் தாயை அந்தத் தேவனால் எவ்வாறு எரிக்க முடியும்? பிராமண வேடத்தைப் பூண்டு, முன்பு அர்ஜுனனிடம் உதவி வேண்டி அவன் {அக்னி தேவன்} வந்தான். நெருப்பின் தேவனுக்கு ஐயோ. பார்த்தனுடைய கணைகளின் கொண்டாடத்தக்க வெற்றிக்கு ஐயோ.(12)
ஓ! புனிதமானவரே {நாரதரே}, அந்தப் பூமியின் தலைவன் {திருதராஷ்டிரன்} புனிதமற்றதான நெருப்புடன் கலந்ததன் மூலம் மரணமடைந்தான் என்பது பெரும் துன்பத்தை உண்டாக்கவல்ல மற்றுமொரு நிகழ்வாகத் தோன்றுகிறது. மொத்த பூமியையும் ஆண்டு, தவப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிந்தவரும், குரு குலத்தவருமான அரசமுனியை {திருதராஷ்டிரரை} மரணம் எவ்வாறு ஆட்கொள்ளும்? அந்தப் பெருங்காட்டில் புனித மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட நெருப்புகள் இருக்கின்றன. ஐயோ, புனிதமற்ற நெருப்பின் துணையை அடைந்த என் தந்தை {திருதராஷ்டிரர்} இந்த உலகில் இருந்து சென்றுவிட்டார். அந்தப் பெருங்காட்டில் மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட நெருப்புகள் இருந்தன. ஐயோ, என் தந்தை புனிதமற்ற நெருப்பின் தொடர்பைப் பெற்று இவ்வுலகில் இருந்து சென்றார்.(13,14) பிருதை {குந்தி}, வடிவம் குறைந்து, மெலிந்தவளாக மேனியெங்கும் நரம்புகள் தெரிய, அச்சத்தால் நடுங்கி, உரக்கக் கதறி அழுது, “ஓ! மகனே யுதிஷ்டிரா” என்று சொல்லி, தன்னை அந்தப் பயங்கரத் தீ அணுகுவதற்காகக் காத்திருந்திருப்பாள்.(15) மேலும் என் தாயான அவள் சுற்றிலும் பயங்கரத் தீயால் சூழப்பட்டிருந்தபோது,, “ஓ! பீமா, இந்த ஆபத்தில் இருந்து என்னைக் காப்பாற்றுவாயாக” என்று சொல்லியிருக்க வேண்டும்.(16) அவளுடைய மகன்களுக்கு மத்தியில், சகாதேவனே அவளது அன்புக்குரியவனாவான். ஐயோ, மாத்ரவதியின் அந்த வீரமகன் அவளைக் காப்பாற்றவில்லை[1]” என்றான் {யுதிஷ்டிரன்}.(17)மன்னனின் {யுதிஷ்டிரனின்} இந்தப் புலம்பல்களைக் கேட்டு அங்கே இருந்த அனைவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டு அழத் தொடங்கினர். உண்மையில், அண்ட அழிவுக்காலத்தில் உள்ள உயிரினங்களுக்கு ஒப்பான அளவுக்குப் பாண்டுவின் மகன்கள் ஐவரும் துயரால் பீடிக்கப்பட்டிருந்தனர்.(18) அழுது கொண்டிருந்த அந்த வீரர்களின் புலம்பல் ஒலிகள் அந்த அரண்மனையின் அகன்ற அறைகளை நிறைத்து அங்கிருந்து தப்பித்து ஆகாயத்தையே துளைத்தன” {என்றார் வைசம்பாயனர்}.(19)
தாயாரின் சிராத்தம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 39-திருதராஷ்டிரனை எரித்தது மந்திராக்னி என்பதை விளக்கிய நாரதர்; திருதராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் யுயுத்சுவும், குந்திக்கு யுதிஷ்டிரனும் தர்ப்பணம் ஸ்ராத்தம் முதலியவற்றைச் செய்தது; அதன் பிறகு நகரம் திரும்பி ஆட்சிபுரிந்தது…
நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, “மன்னன் {திருதராஷ்டிரன்} புனிதமற்ற நெருப்பால் எரித்துக் கொல்லப்படவில்லை. இதை நான் அங்கேயே கேட்டேன். ஓ! பாரதா, விசித்திரவீரியனின் {விசித்திரவீரியனின் மகனான திருதராஷ்டிரனின்} விதி அவ்வாறானதாக இல்லை.(1) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தவனுமான அந்த முதிய மன்னன் {திருதராஷ்டிரன்}, (கங்காத்வாரத்தில் இருந்து திரும்பிய பிறகு) காட்டுக்குள் தனியாக நுழைந்து, முறையாக வேள்வி நெருப்புகளைத் தூண்டச் செய்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். தனது புனிதச் சடங்குகள் அனைத்தையும் செய்துவிட்டு அவைகள் அனைத்தையும் அவன் புறக்கணித்தான்.(2) பிறகு, ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, அவன் தன்னோடு வைத்திருந்த யாஜக பிராமணர்கள், அந்த நெருப்புகளைக் காட்டின் தனிமையான இடத்தில் வீசிவிட்டு, வேறு குற்றேவல்களை விரும்பி அங்கிருந்து சென்று விட்டனர்.(3)
இவ்வாறு காட்டில் வீசப்பட்ட நெருப்பு வளர்ந்தது. பிறகு அஃது ஒரு பெரிய காட்டுத்தீயானது. கங்கைக் கரையில் வசிக்கும் தவசிகளிடம் நான் கேட்டது இதுவே.(4) ஓ! பாரதர்களின் தலைவா, தன்னுடைய (புனித) நெருப்புடன் சேர்ந்தே, நான் ஏற்கனவே சொன்னது போல அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} கங்கைக் கரையில் மரணமடைந்தான்.(5) ஓ! பாவமற்றவனே, ஓ! யுதிஷ்டிரா, பாகீரதியின் புனிதக் கரைகளில் நான் கண்ட தவசிகள் சொன்னது இதுவே.(6)
ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, இவ்வாறு மன்னன் திருதராஷ்டிரன், தன்னுடைய சொந்த புனித நெருப்புடன் கலந்து இவ்வுலகில் இருந்து சென்று தனதாகியிருக்கும் அந்த உயர்ந்த கதியை அடைந்தான்.(7) ஓ! மனிதர்களின் தலைவா, உன் தாயார் {குந்தி}, பெரியோருக்கு ஆற்றிய தொண்டின் மூலம் பெரும் வெற்றியை அடைந்தாள். இதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.(8) ஓ! மன்னர்களின் மன்னா, அவர்களைக் கௌரவிக்கும் வகையில் உன் தம்பிகளுடன் சேர்ந்து நீர்க்கடன்களைச் செய்வதே இப்போது உனக்குத் தகும். எனவே, இறுதியில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படட்டும்” என்றார் {நாரதர்}”.(9)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அப்போது மனிதர்களில் முதன்மையானவனும், பாண்டவர்களின் சுமைகளைத் தாங்குபவனுமான அந்தப் பூமியின் தலைவன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பிகள் மற்றும் குடும்பத்துப் பெண்கள் அனைவரின் துணையுடன் வெளியே சென்றான்.(10) நகர மற்றும் மாகாணவாசிகளும், தங்கள் பற்றுறுதியினால் {விசுவாசத்தினால்} தூண்டப்பட்டவர்களாக வெளியே சென்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒன்றையாடையை மட்டுமே உடுத்திக் கொண்டு கங்கைக் கரையை நோக்கிச் சென்றனர்.(11) பிறகு யுயுத்சுவைத் தங்கள் தலைமையில் கொண்ட மனிதர்களில் முதன்மையானவர்கள் அந்த ஓடைக்குள் மூழ்கி, அந்த உயர் ஆன்ம மன்னனுக்கு நீர்க்காணிக்கைகளைக் கொடுக்கத் தொடங்கினர். மேலும் அவர்கள் அதே போன்ற காணிக்கைகளைக் காந்தாரி மற்றும் பிருதையின் {குந்தியின்} பெயர்களைத் தனித்தனியே சொல்லி அவர்களின் குடும்பங்களையும் குறிப்பிட்டுச் சொல்லி கொடுத்தனர்.(12)
வாழ்வைத் தூய்மையாக்கும் அந்தச் சடங்குகளைச் செய்த பிறகு அவர்கள் திரும்பினாலும் தங்கள் தலைநகருக்குள் திரும்பாமல், அதற்கு வெளியே தங்கள் வசிப்பிடத்தை அமைத்தனர். இறந்தோரைத் தகனம் செய்வது தொடர்பான விதிகளை நன்கறிந்தவர்களும், நம்பிக்கைக்குரியவர்களுமான எண்ணற்ற மக்களை அந்த முதிய மன்னன் {திருதராஷ்டிரன்} எரிந்து இறந்த இடமான கங்கா துவாரத்திற்கு அனுப்பினான்.(13) முன்பே அந்த மனிதர்களுக்கு வெகுமதிகளை அளித்த மன்னன் {யுதிஷ்டிரன்}, இன்னும் எஞ்சியிருந்த திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் குந்தியின் உடல்களுக்குத் தகனச் சடங்குகளைச் செய்யுமாறு அவர்களுக்கு ஆணையிட்டான்.(14) பனிரெண்டாம் நாளில் முறையாகத் தூய்மை செய்து கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, இறந்து போன தன் உறவினர்களுக்கு அபரிமிதமான கொடைகள் அடங்கிய சிராத்தங்களை முறையாகச் செய்தான்.(15)
திருதராஷ்டிரனைக் குறிப்பிட்டு பொன்னாலான, வெள்ளியாலான பல கொடைகளையும், பசுக்கள் மற்றும் விலைமதிப்புமிக்கப் படுக்கை உள்ளிட்ட கொடைகளையும் கொடுத்தான்.(16) பெரும் சக்தி கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, காந்தாரி மற்றும் பிருதையின் பெயர்களைச் சொல்லி பல சிறந்த கொடைகளை அளித்தான்.(17) ஒவ்வொரு மனிதனும் தான் விரும்பியதையும், விரும்பியதற்கு அதிகமானவற்றையும் பெற்றான். படுக்கைகள், உணவு, தேர்கள், வாகனங்கள், ரத்தினங்கள், செல்வம் ஆகியவனவும் அபரிமிதமாகக் கொடையளிக்கப்பட்டன.(18)
உண்மையில் மன்னன் {யுதிஷ்டிரன்}, தன்னிரு தாய்மாரையும் குறிப்பிட்டுத் தேர்களையும், வாகனங்களையும், ஆடைகளையும் மறைப்புகளையும், பல்வேறு வகை உணவுகளையும், பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பெண் பணியாட்களையும் கொடையளித்தான்.(19) இவ்வாறு பல்வேறு வகையான கொடைகளை அபரிமிதமாக அளித்த அந்தப் பூமியின் தலைவன், அதன் பிறகு, யானையின் பெயரால் அழைக்கப்படும் தன் தலைநகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தான்.(20) மன்னனின் ஆணையின் பேரில் கங்கைக் கரைக்குச் சென்றிருந்த மனிதர்கள் அனைவரும், மன்னன் மற்றும் இரு ராணியரின் உடல்களில் எஞ்சியவற்றை {எலும்புகளைத்} (தகனம் மூலம்) முறையாக அப்புறப்படுத்தினர்.(21)
உடல்களில் எஞ்சியிருந்த அவற்றை {எலும்புகளை} மாலைகள் மற்றும் பல்வேறு வகை நறுமணப்பொருட்களுடன் உரிய முறையில் கௌரவித்து, அவற்றை அப்புறப்படுத்தி {தகனம் செய்து}, தங்கள் பணியை முடித்துவிட்டதை அவர்கள் யுதிஷ்டிரனுக்குத் தெரிவித்தனர்.(22) பெரும் முனிவரான நாரதர், அற ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரனுக்கு ஆறுதலளித்துவிட்டு, தான் விரும்பிய இடத்திற்குச் சென்றுவிட்டார்.(23) இவ்வாறே மன்னன் திருதராஷ்டிரன் நகரத்தில் பதினைந்து வருடங்களையும், காட்டில் மூன்று வருடங்களையும் கழித்து இவ்வுலகில் இருந்து விடைபெற்றுச் சென்றான்.(24)
போரில் தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்த அவன் {யுதிஷ்டிரன்}, தன் உற்றார் உறவினர், நண்பர்கள், பங்காளிகள் மற்றும் தன் சொந்த மக்களைக் கௌரவிக்கும் வகையில் பல கொடைகளை அளித்தான்.(25) மன்னன் யுதிஷ்டிரன், தன் பெரிய தந்தையின் {திருதராஷ்டிரனின்} இறப்புக்குப் பிறகு மிகவும் உற்சாகமற்றவனானான். தன் உற்றார் உறவினரை இழந்த அவன் ஏதோவொருவாறு அரசெனும் சுமையைச் சுமந்தான்.(26) ஒருவன் ஆஸ்ரமவாஸிக பர்வத்தைக் குவிந்த கவனத்துடன் கேட்க வேண்டும், சொல்லப்படுவதைக் கேட்ட பிறகு அவன் பிராமணர்களுக்கு ஹவிஸ்யம் உண்ணக் கொடுத்து, நறுமணப் பொருட்கள் மற்றும் மலர்மாலைகளால் அவர்களைக் கௌரவிக்க வேண்டும்” {என்றார் வைசம்பாயனர்}.(27)
நாரதாகமன உபபர்வம் முற்றும்
ஆஸ்ரமவாஸிக பர்வம் முற்றிற்று
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply