ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ ஆஸ்ரமவாஸிக பர்வம்-ஸ்ரீ புத்ர தர்சன உப பர்வம்-

காந்தாரியின் வேண்டுதல்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 29-திருதராஷ்டிரனுடைய ஆசிரமத்தில் ஒரு மாதம் வசித்த பாண்டவர்கள்; மகன்களை நேரில் காண திருதராஷ்டிரனுக்கு விருப்பமிருப்பதை வியாசரிடம் சொன்ன காந்தாரி; குந்தியின் விருப்பத்தைக் கேட்ட வியாசர்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! கல்விமானான பிராமணரே, குரு குலத்தில் முதன்மையானவனும், பூமியின் தலைவனுமான திருதராஷ்டிரன், தன் மனைவியுடனும் {காந்தாரியுடனும்}, தன் மருமகளான குந்தியுடனும் காட்டில் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட போது, உண்மையில் விதுரன் தன் உடலைவிட்டு யுதிஷ்டிரனுக்குள் நுழைந்த பிறகு, தவம் செய்யும் ஆசிரமத்தில் பாண்டவர்கள் அனைவரும் வசித்து வந்தபோது, உயர்ந்த சக்தியைக் கொண்ட பெருமுனிவர் வியாசர் அந்த முதிர்ந்த மன்னனுக்கு உறுதிமொழி அளித்த பிறகு, அவர் {வியாசர்} சாதித்த அருஞ்செயலென்ன என்பதை எனக்குச் சொல்வீராக.(1-3) மங்கா மகிமை கொண்ட குரு மன்னன் யுதிஷ்டிரன் தன் மக்களுக்களுடன் அந்தக் காட்டில் எத்தனை நாட்கள் தங்கினான்?(4) ஓ! பலமிக்கவரே, தங்கள் மக்கள் மற்றும் மனைவியருடன் கூடிய உயர் ஆன்மப் பாண்டவர்கள் அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தபோது எந்த உணவை உட்கொண்டு வாழ்ந்து வந்தனர்? ஓ! பாவமற்றவரே இதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான் {ஜனமேஜயன்}”.(5)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஏகாதிபதி, பாண்டவர்கள் தங்கள் துருப்புகள் மற்றும் தங்கள் குடும்பத்துப் பெண்மணிகள் ஆகியோருடன் சேர்ந்து குரு மன்னனின் அனுமதியுடன் பல்வேறு வகை உணவுகள் மற்றும் பானங்களைக் கொண்டு தங்களைத் தாங்கிக் கொண்டு அந்தக் காட்டில் பெரும் மகிழ்ச்சியுடன் ஒரு மாத காலத்தைக் கடத்தினர். ஓ! பாவமற்றவனே, அந்தக் காலம் முடியும் தருணத்தில் வியாசர் அங்கே வந்தார்.(6,7) அந்த இளவரசர்கள் வியாசரைச் சுற்றிலும் அமர்ந்து பல்வேறு காரியங்களை விவாதித்துக் கொண்டிருந்தபோது வேறு முனிவர்களும் அந்த இடத்திற்கு வந்தனர்.(8) ஓ! பாரதா, நாரதர், பர்வதர், கடுந்தவங்களைக் கொண்ட தேவலர், விஸ்வாவசு, தும்புரு, சித்திரசேனன் அங்கே இருந்தனர்.(9) கடுந்தவங்களுடன் கூடிய குரு மன்னன் யுதிஷ்டிரன், திருதராஷ்டிரனின் அனுமதியுடன் உரிய சடங்குகளின் படி அவர்களை வழிபட்டான்.(10)

யுதிஷ்டிரனின் அந்த வழிபாட்டை ஏற்றுக் கொண்ட அவர்கள் அனைவரும் (குசப் புற்களாலான) புனித இருக்கைகளிலும், மயிலிறகுகளாலான சிறந்த இருக்கைகளிலும் அமர்ந்தனர்.(11) அவர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, பெரும் நுண்ணறிவைக் கொண்ட குரு மன்னன் {திருதராஷ்டிரன்} பாண்டு மகன்கள் சூழ தன் இருக்கையில் அமர்ந்தான்.(12) காந்தாரி, குந்தி, திரௌபதி, சாத்வத குலத்தவள், அரச குடும்பத்தைச் சார்ந்த வேறு பெண்கள் ஆகியோரும் அமர்ந்தனர்.(13) அப்போது எழுந்த உரையாடல், சிறந்ததாகவும், பக்தி, பழங்கால முனிவர்கள், தேவர்கள் மற்றும் அசுரர்கள் தொடர்புடைய காரியங்களைக் குறிப்பிடுவதாகவும் இருந்தது.(14)

அந்த உரையாடல் நிறைவை எட்டிய போது, நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரும், வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான வியாசர், உயர்வான நிறைவை அடைந்து, அந்தக் குருட்டு மன்னனிடம் மீண்டும், “ஓ! மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரா}, பிள்ளைகளின் நிமித்தமான துயரில் எரிந்து கொண்டிருக்கும் உன் இதயத்தில் உன்னால் பேணி வளர்க்கப்படும் காரியம் என்ன என்பதை நான் அறிவேன். எந்தக் கவலை காந்தாரியின் இதயத்தில் எப்போதும் இருக்கிறதோ,(15-17) எது குந்தியின் இதயத்தில் இருக்கிறதோ, எது திரௌபதியின் இதயத்ததில் பேணி வளர்க்கப்படுகிறதோ, தன் மகனின் இறப்பின் நிமித்தமாகக் கிருஷ்ணனின் தங்கையான சுபத்திரையாலும் எது பேணி வளர்க்கப்படுகிறதோ அந்த எரியும் துயர் அனைத்தையும் நான் அறிவேன். ஓ! மன்னா, உன் வீட்டைச் சார்ந்தவர்களான இந்த இளவரசர்கள் மற்றும் இளவரசிகளுடன் உன் சந்திப்பை கேள்விப்பட்டே,(18,19) ஓ! கௌரவர்களைத் திளைக்கச் செய்பவனே, உன் ஐயங்களை விலக்கும் பொருட்டு நான் இங்கே வந்தேன். தேவர்கள், கந்தர்வர்கள், மற்றும் இந்தப் பெரும் முனிவர்கள் அனைவரும்,(20) நான் இத்தனை வருடங்கள் நீண்டிருக்கும் காலத்தில் அடைந்திருக்கும் தவத்தின் சக்தியை இன்று காணட்டும். எனவே, ஓ! மன்னா, நான் இன்று நிறைவேற்ற வேண்டிய உன் விருப்பமென்ன என்பதை எனக்குச் சொல்வாயாக.(21) நான் உனக்கு ஒரு வரத்தைத் தருமளவு பலம் கொண்டவன். என் தவங்களின் கனியை {பயனைக்} காண்பாயாக” என்றார்.

அளவற்ற புத்தியைக் கொண்ட வியாசரால் இவ்வாறு சொல்லப்பபட்டதும், மன்னன் திருதராஷ்டிரன்,(22) ஒரு கணம் சிந்தத்தவனாகப் பேச ஆயத்தமானான். அவன் {திருதராஷ்டிரன்}, “நான் பெரும் நற்பேறு பெற்றவனாவேன். உன் உதவியைப் பெறும் நல்வாய்ப்பையும் நான் பெற்றிருக்கிறேன். இன்று என் வாழ்வு வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டது.(23) பெரும் பக்திமான்களான உங்கள் அனைவருக்கும், எனக்கும் இடையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறதே. எனக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் உயர்ந்த இன்ப கதியை நான் இன்று அடையப் போகிறேன்.(24) தவங்களைச் செல்வமாகக் கொண்ட தவசிகளும், பிரம்மனுக்கு இணையானவர்களுமான உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் வென்றேனே. உங்கள் அனைவரையும் கண்டதே பாவங்கள் அனைத்தில் இருந்தும் என்னைத் தூய்மையடையச் செய்யும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.(25) பாவமற்றவர்களே, மறுமையில் என் கதி குறித்த எந்த அச்சமும் இனி எனக்கில்லை. என் பிள்ளைகளின் அன்பு நிறைந்தவனாக இருப்பதால் நான் எப்போதும் அவர்களது நினைவுகளையே பேணி வளர்க்கிறேன். எனினும், மிகத் தீய புத்தி கொண்ட தீயவனான என் மகன்{துரியோதனன்} இழைத்த பல்வேறு குற்றச் செயல்களை நினைப்பதால் எப்போதும் என் மனம் வதைக்கப்படுகிறது. பாவம் நிறைந்த புத்தியைக் கொண்ட அவன் அப்பாவிகளான பாண்டவர்களை எப்போதும் துன்புறுத்தினான்.(26,27)

ஐயோ, குதிரைகள், யானைகள் மற்றும் மனிதர்களுடன் கூடிய மொத்த பூமியும் அவனால் அழிக்கப்பட்டது. உயர் ஆன்ம மன்னர்கள், பல்வேறு நாடுகளின் ஆட்சியாளர்கள் பலரும்,(28) என் மகனின் தரப்பை அடைந்து மரணத்திற்கு இரையாகினர். ஐயோ, அன்புக்குரிய தந்தைமார், மனைவியர் மற்றும் தங்கள் உயிர் மூச்சையே கைவிட்ட(29) அந்த வீரர்கள் அனைவரும் இறந்தோரின் மன்னனுடைய {யமனின்} விருந்தினர்களாகிவிட்டனர். ஓ! மறுபிறப்பாளரே, போரில் தங்கள் நண்பனுக்காகக் கொல்லப்பட்ட அந்த மனிதர்கள் அடைந்த கதியென்ன?(30) களத்தில் விழுந்த என் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் அடைந்த கதியென்ன? வலிமைமிக்கவரும், சந்தனுவின் மகனுமான பீஷ்மர், பிராமணர்களில் முதன்மையானவரான துரோணர் ஆகியோர் என் மூடத்தனம் மற்றும், நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவனான பாவம் நிறைந்த என் மகனின் மூலம் படுகொலைக்கு உள்ளானதை நினைத்து என் இதயம் எப்போதும் துன்புறுகிறது.(31,32) பூமியின் அரசுரிமையை அடைய விரும்பிய அவன் செழிப்பில் சுடர்விட்ட குரு குலத்தின் அழிவுக்குக் காரணனானான். இவை யாவற்றையும் நினைத்துப் பார்க்கும் நான் துன்பத்தில் பகலும், இரவும் எரிந்து கொண்டிருக்கிறேன்.(33) துன்பம் மற்றும் துயரத்தால் ஆழமாகப் பீடிக்கப்பட்டிருக்கும் என்னால் மன அமைதியை அடைய முடியவில்லை. உண்மையில், ஓ! தந்தையே, இவை யாவற்றையும் நினைத்துப் பார்க்கும் என் மனத்தில் ஒருபோதும் அமைதி ஏற்படுவதில்லை” என்றான் {திருதராஷ்டிரன்}”.(34)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஜனமேஜயா, அந்த அரசமுனியால் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தப்பட்ட இந்தப் புலம்பல்களைக் கேட்ட காந்தாரிக்குத் துன்பம் புதுப்பிக்கப்பட்டது.(35) குந்தி, துருபதன் மகள் {திரௌபதி}, சுபத்திரை மற்றும் குரு குலத்தைச் சேர்ந்த வேறு ஆண்களும், பெண்களும், மருமகள்களும் அதே போலத் துன்பம் புதுப்பிக்கப்பட்டவர்கள் ஆனார்கள்.(36) கட்டப்பட்ட கண்களுடன் கூடிய ராணி காந்தாரி, தன் மாமனாரிடம் {வியாசரிடம்} பேசினாள். தன் மகன்களின் படுகொலையால் ஆழமான துயரில் பீடிக்கப்பட்டிருந்த அவள்,(37) “ஓ! தவசிகளில் முதன்மையானவரே, இந்த மன்னர் {திருதராஷ்டிரர்} தமது மகன்களின் மரணத்திற்கு வருந்தி, மன அமைதியை இழந்து பதினாறு வருடங்கள் கடந்துவிட்டன.(38) ஓ! பெரும் முனிவரே {வியாசரே}, தமது பிள்ளைகளின் படுகொலையின் நிமித்தமான துயரால் பீடிக்கப்பட்டிருக்கும் இந்த மன்னர் எப்போதும் பெருமூச்சு விட்டபடியே இரவில் உறங்காமலிருக்கிறார்.(39) உமது தவ சக்தியின் மூலம் நீர் புதிய உலகங்களையே படைக்கவல்லவராயிருக்கிறீர். இப்போது மறுமையில் இருக்கும் இந்த மன்னரின் பிள்ளைகளை இவருக்குக் காட்டுவதைக் குறித்து வேறென்ன நான் சொல்ல முடியும்?(40)

துருபதன் மகளான இந்தக் கிருஷ்ணையும் {திரௌபதியும்} தன் உற்றார் உறவினர் மற்றும் பிள்ளைகள் அனைவரையும் இழந்திருக்கிறாள். என் மருமகள்களில் எனக்கு மிகவும் அன்புக்குரியவள் இதன் காரணமாக மிகவும் துன்புறுகிறாள்(41) இனிய வாக்கைக் கொண்டவளும், கிருஷ்ணனின் தங்கையுமான சுபத்திரை, தன் மகனை இழந்து ஆழமான துன்பத்தில் எரிந்து கொண்டிருக்கிறாள்.(42) அனைவராலும் மதிக்கப்படுபவளும், பூரிஸ்ரவசின் மனைவியுமான இந்தப் பெண், தன் கணவனை விதி வென்றதால் துன்பத்தில் பீடிக்கப்பட்டு எப்போதும் இதயம் பிளக்கும் அழுகையில் ஈடுபட்டு வருகிறாள்.(43) குரு குலத்தவரும், நுண்ணறிவுமிக்கவருமான பாஹ்லீகர் இவளது மாமனார் ஆவார். ஐயோ, இந்தப் போரில் சோமதத்தரும் தன் தந்தையுடன் சேர்ந்து கொல்லப்பட்டார்[1].(44)ஐயோ, பெரும் நுண்ணறிவையும் பெருஞ்செழிப்பைக் கொண்ட உமது மகனான இந்த மன்னரின் {திருதராஷ்டிரனின்} மகன்களும், போரில் ஒருபோதும் பின்வாங்காத வீரர்களுமான அந்த நூறு பேரும் போரில் கொல்லப்பட்டனர்.(45) அந்த மகன்களின் நூறு மனைவியரும் துன்புறுபவர்களாக, மன்னன் மற்றும் எனது துயரத்தை அதிகரிக்கச் செய்கிறார்கள். ஓ! பெரும் தவசியே {வியாசரே}, அந்தப் பெரும்படுகொலையால் தாக்கப்பட்ட இவர்கள் அனைவரும் என்னைச் சூழ்ந்து திரண்டிருக்கின்றனர்.(46) ஐயோ, ஓ! பலமிக்கவரே, ஐயோ, அந்த உயர் ஆன்ம வீரர்கள், பெருந்தேர் வீரர்கள், என் மாமனார், சோமதத்தர் மற்றும் பிறரின் கதி என்னவானது?(47) ஓ! புனிதமானவரே, எதனால் இந்தப் பூமியின் தலைவரும், நானும், என்னுடைய மருமகளான இந்தக் குந்தியும், எங்கள் துயரில் இருந்து விடுபடுவோமோ அஃது உமது அருளின் மூலம் நடக்கட்டும்” என்றாள் {காந்தாரி}.(48)

காந்தாரி இவ்வாறு சொன்னதும், கடும் நோன்புகள் பலவற்றால் முகம் வற்றியிருந்த குந்தி, சூரியப் பிரகாசத்துடன் கூடியவனும், கமுக்கமாகப் {இரகசியமாகப்} பிறந்தவனுமான தன் மகனை {கர்ணனை} நினைக்கத் தொடங்கினாள்.(49) வரமளிக்கும் முனிவரும், தொலைவில் நடப்பதைக் காணவும், கேட்கவும் இயன்றவருமான வியாசர், அர்ஜுனனின் அரசத் தாய் துன்பத்தால் பீடிக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.(50) அவளிடம் வியாசர், “ஓ! அருளப்பட்டவளே, உன் மனத்தில் என்ன இருக்கிறது என்பதை எனக்குச் சொல்வாயாக. நீ சொல்ல விரும்புவதை எனக்குச் சொல்வாயாக” என்றார்.(51) இதன் பேரில் தன் மாமனாருக்குத் தலைவணங்கிய குந்தி, நாணத்துடன் கடந்த கால நிகழ்வுகள் தொடர்பான சொற்களைச் சொன்னாள்” {என்றார் வைசம்பாயனர்}.(52)

குந்தியின் கவலை! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 30-கர்ணனின் பிறப்பைக் கூறிய குந்தி; கர்ணனைப் பார்க்க விரும்புவதாக வியாசரிடம் சொன்னது; குந்தியின் ஐயத்தைக் காரணத்துடன் போக்கிய வியாஸர்…

குந்தி, “ஓ! புனிதமானவரே {வியாசரே}நீர் என் மாமனாராக இருப்பதால் என்னுடைய தேவர்களுக்குத் தேவராகவும் இருக்கிறீர். உண்மையில், நீர் தெய்வங்களுக்கு தெய்வமாக இருக்கிறீர். நீர் என்னுடைய உண்மையான சொற்களைக் கேட்பீராக.(1) மறுபிறப்பாள வகையைச் சார்ந்தவரும், கோபம் நிறைந்தவரும், துர்வாசர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு தவசி பிச்சை கேட்டு உண்பதற்காக என் தந்தையின் வீட்டிற்கு வந்தார்[1]. புறம் மற்றும் அக ஒழுக்கத்தின் தூய்மையினாலும், அவர் {துர்வாசர்} செய்த பல பிழைகளைக் காண மறுத்ததாலும் நான் அவரை நிறைவடையச் செய்தேன். கோபத்தைத் தூண்டும் வகையில் அவரது நடத்தை இருந்தாலும் நான் அவரிடம் கோபங்கொள்ளவில்லை.(3) கவனத்துடன் தொண்டாற்றப்பட்ட அந்தப் பெருந்தவசி என்னிடம் உயர்வான நிறைவை அடைந்து எனக்கு ஒரு வரம் அருளும் மனநிலையை எட்டினார். அவர் {துர்வாசர்}, “நான் கொடுக்கும் வரத்தை நீ ஏற்க வேண்டும்” என்பதே அவருடைய சொற்களாகும்.(4)அவருடைய {துர்வாசருடைய} சாபத்திற்கு அஞ்சிய நான், “அவ்வாறே ஆகட்டும்” என்றேன். அந்த மறுபிறப்பாள முனிவர், மீண்டும் என்னிடம்,(5) ஓ! அருளப்பட்ட காரிகையே, ஓ! அழகிய முகம் படைத்தவளே, நீ தர்மனுக்கு அன்னையாவாய். நீ அழைக்கும் தேவர்கள் உனக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருப்பார்கள்” என்றார்.(6)

அந்த மறுபிறப்பாளர் {துர்வாசர்} இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு என் பார்வையில் இருந்து மறைந்தார். நான் ஆச்சரியத்தால் நிறைந்தேன். எனினும், அந்த முனிவர் கொடுத்த மந்திரம், எப்போதும் என் மனத்தில் வசித்து வந்தது.(7) ஒரு நாள் நான் என் அறையில் அமர்ந்து கொண்டு உதிக்கும் சூரியனைக் கண்டேன். நாள் சமைப்பவனை என் முன்னே கொண்டு வர விரும்பிய நான் அந்த முனிவர் சொன்ன சொற்களை நினைவுகூர்ந்தேன்.(8) நான் குற்றத்தை உணராமல், சிறுமிக்குரிய தன்மையினால் அந்தத் தேவனை {சூரியனை} அழைத்தேன். எனினும், (என்னால் அழைக்கப்பட்ட) அந்த ஆயிரங்கதிர் தேவன் என் முன்னிலைக்கு வந்தார்.(9) அவர் தம்மை இரண்டாகப் பிரித்துக் கொண்டார். ஒரு பகுதியைக் கொண்டு ஆகாயத்திலும், மற்றொன்றினால் என் முன்னே பூமியிலும் அவர் நின்று கொண்டிருந்தார்.(10)

அவரைக் கண்டு நடுங்கிக் கொண்டிருந்த என்னிடம் அவர் இந்தச் சொற்களில், “என்னிடம் இருந்து ஒரு வரத்தைக் கேட்பாயாக” என்றார். அவருக்குத் தலைவணங்கிய நான், என்னைவிட்டுச் சென்றுவிடுமாறு அவரிடம் கேட்டேன்.(11)

அவர் {சூரிய தேவன்}, “பயனற்ற வருகை என்ற கருத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. உன்னையும், உனக்கு வரமாக இந்த மந்திரத்தை அளித்த பிராமணரையும் {துர்வாசரையும்} நான் எரிக்கப் போகிறேன்” என்றார்.(12)

ஒரு தீமையும் செய்யாத அந்தப் பிராமணரை சூரியனின் சாபத்தில் இருந்து பாதுகாக்க நான் விரும்பினேன். எனவே நான், “ஓ! தேவா, உம்மைப் போன்ற ஒரு மகனை நான் பெறுவேனாக” என்றேன்.(13) அந்த ஆயிரங்கதிர் தேவன் தன் சக்தியால் என்னுள் ஊடுருவி, என்னை முழுமையாகக் கலங்கடித்தார். பிறகு அவர், “நீ ஒரு மகனைப் பெறுவாய்” என்று சொல்லிவிட்டு ஆகாயத்திற்கே திரும்பிச் சென்றார்.(14) நான் என் தந்தையின் கௌரவத்தைக் காக்க விரும்பி, இவ்வாறு உலகிற்குக் கமுக்கமாக {இரகசியமாக} வந்தவனும், கர்ணன் என்ற பெயரைக் கொண்டவனுமான குழந்தையைத் தண்ணீரில் விட்டுவிட்டு அந்தப்புரத்திலேயே தொடர்ந்து வாழ்ந்தேன்.(15) ஓ! மறுபிறப்பாளரே, முனிவர் துர்வாசர் என்னிடம் சொல்லி இருந்ததைப் போலவே, அந்தத் தேவனுடைய அருளின் மூலம் ஐயமில்லாமல் நான் மீண்டும் கன்னிகையானேன்.(16)

அவன் வளர்ந்து வந்தபோது நானே அவனது அன்னை என்பதை அவன் அறிந்திருந்தாலும், மடமை கொண்ட நான் அவனை அங்கீகரிக்க எந்த முயற்சியையும் செய்யவில்லை. ஓ! மறுபிறப்பாள முனிவரே, உமக்கு நன்றாகத் தெரிந்த இஃது என்னை எரித்துக் கொண்டிருக்கிறது.(17) இது பாவம் நிறைந்ததாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் உம்மிடம் உண்மையைச் சொன்னேன். ஓ! புனிதமானவரே, என்னுடைய மகனான அவனைக் {கர்ணனைக்} காண்பதற்கான என் ஏக்கத்தை நிறைவடையச் செய்வதே உமக்குத் தகும்.(18) ஓ! தவசிகளில் முதன்மையானவரே, ஓ! பாவமற்றவரே, இந்த மன்னரின் நெஞ்சில் இருப்பதும், நீர் அறிந்ததுமான அந்த விருப்பம் இன்று கனியட்டும்” என்றாள் {குந்தி}.(19)

குந்தியால் இவ்வாறு சொல்லப்பட்டவரும் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான வியாசர் அவளுக்கு மறுமொழியாக, “நீ அருளப்பட்டிருப்பாயாக. நீ என்னிடம் சொன்ன அனைத்தும் நடக்கக் கூடியவையே.(20) (கர்ணனின் பிறப்பைப் பொறுத்தவரையில்) எக்குற்றமும் உன்னைச் சாராது. நீ கன்னித்தன்மையை அடைந்தாய். தேவர்கள் (யோக) பலம் பொருந்தியவர்களாவர். அவர்களால் மனித உடல்களில் ஊடுருவ முடியும்[2].(21) தேவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களால் எண்ணத்தை மட்டுமே கொண்டு (சந்ததியைப்) பெற இயலும். சொல், பார்வை, தீண்டல், பாலியல் கலவி ஆகியற்றின் மூலமும் அவர்கள் பிள்ளைகளைப் பெறுகின்றனர்.(22) நீ மனித வகையைச் சார்ந்தவளாவாய். (நடந்தவற்றில்) உன்னிடம் குற்றமேதும் இல்லை. ஓ! குந்தி, இதையறிவாயாக. உன் இதயத்தில் உள்ள நோய் அகலட்டும்.(23) வலிமையானவர்களுக்கு அனைத்தும் இனிமையானவை, வலிமையானவர்களுக்கு அனைத்தும் தூய்மையானவை, வலிமையானவர்களுக்கு அனைத்தும் புண்ணியமிக்கவை. வலிமையானவர்களுக்கே அனைத்தும் உரியவை” என்றார் {வியாசர்}.(24)

தேவ அம்சங்கள்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 31-போரில் மாண்டவர்களைக் காட்டப் போவதாகச் சொன்ன வியாசர்; ஒவ்வொருவரும் எவரெவருடைய அம்சமென்பதையும் சொன்னது; அனைவரும் கங்கைக் கரைக்குச் சென்றது…

வியாசர், “ஓ! காந்தாரி, நீ அருளப்பட்டிருப்பாயாக, நீ உன் மகன்கள், சகோதரர்கள், நண்பர்கள், உற்றார், உறவினர் மற்றும் உன் தந்தைமார் ஆகியோரை உறக்கத்தில் இருந்து எழுந்த மனிதர்களைப் போல இவ்விரவில் காணப் போகிறாய்.(1) குந்தி கர்ணனைக் காண்பாள், யது குலத்தவள் {சுபத்திரை} தன் மகன் அபிமன்யுவைக் காண்பாள். திரௌபதி தன் ஐந்து மகன்களையும், தன் தந்தைமாரையும், தன் சகோதரர்களையும் காண்பாள். நீ கேட்பதற்கு முன்பே என் மனத்தில் இருந்த எண்ணமிது. ஓ! காந்தாரி, மன்னனாலும், உன்னாலும், குந்தியாலும் தூண்டபட்டபோது நான் இந்த நோக்கத்தை ஊக்குவித்தேன்.(3) அந்த மனிதர்களில் முதன்மையானவர்களுக்காக நீ வருந்தக்கூடாது. க்ஷத்திரிய நடைமுறைகளில் நிறுவப்பட்ட தங்கள் அர்ப்பணிப்பின் விளைவால் அவர்கள் மரணமடைந்தனர்.(4)

ஓ! குற்றமற்றவளே, தேவர்களின் பணியைச் செய்வதைத் தவிர வேறேதும் முடியாது. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே அந்த வீரர்கள் பூமிக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் தேவர்களின் பகுதிகளாவர் {அம்சங்களாவர்}.(5) கந்தர்வர்கள், அப்சரஸ்கள், பிசாசங்கள், குஹ்யர்கள், ராட்சசர்கள், பெரும் புனிதர்கள், (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், தெய்வீக முனிவர்கள்,(6) தேவர்கள், தானவர்கள், களங்கமற்ற குணம் கொண்ட தெய்வீக முனிவர்கள் ஆகியோர் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் மரணமடைந்தனர்[1].(7)நுண்ணறிவுமிக்கவனும், திருதராஷ்டிரன் என்ற பெயரைக் கொண்டவனுமான கந்தர்வர்களின் மன்னனே, மனிதர்களின் உலகில் உன் தலைவனான திருதராஷ்டிரனாகப் பிறப்பெடுத்தான் {அவதரித்தான்} எனக் கேள்விப் படுகிறோம்.(8) மங்கா மகிமை கொண்டவனும், அனைவரைக் காட்டிலும் புகழ்மிக்கவனுமான பாண்டு, மருத்துக்களிலிருந்து உதித்தான் என்பதை அறிவாயாக. க்ஷத்ரி {விதுரன்} மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய இருவரும் அறத் தேவனின் {தர்ம தேவனின்} இரு பகுதிகளாவர் {அவதாரங்களாவர்}.(9) துரியோதனனைக் கலியென்றும், சகுனியை துவாபரனென்றும் அறிவாயாக. ஓ! நற்குணங்களைக் கொண்டவளே, துச்சாசனனும், {அவனைச் சார்ந்த} பிறர் அனைவரும் ராட்சசர்கள் என்பதை அறிவாயாக.(10)

பெரும் வலிமைமிக்கவனும், பகைவரைத் தண்டிப்பவனுமான பீமசேனன் மருத்துக்களில் இருந்து வந்தவனாவான். பிருதையின் மகனான இந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} புராதன முனிவனான நரன் என்பதை அறிவாயாக.(11) ரிஷிகேசன் {கிருஷ்ணன்} நாராயணனாவான், இரட்டையர்கள் அஸ்வினிகளாவர். வெப்பங்கொடுப்பவர்களில் முதன்மையான சூரியன், தன்னுடலை இரண்டாக வகுத்து, ஒரு பகுதியைக் கொண்டு உலகங்களுக்கு வெப்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான், மற்றொரு பகுதியைக் கொண்டு (பூமியில்) கர்ணனாக வாழ்ந்தான். அனைவரையும் மகிழ்ச்சியுறச் செய்தவனும், பாண்டவர்களின் உடைமைகளுக்கு வாரிசும், (ஒன்று கூடி போரிட்ட) ஆறு பெரும் தேர்வீரர்களால் கொல்லப்பட்டவனுமான அர்ஜுனன் மகனாக {அபிமன்யுவாக} சோமன் பிறந்தான். அவன் சுபத்திரையிடம் பிறந்தான். யோக பலத்தின் மூலம் அவன் தன்னைத் தானே இரண்டாக வகுத்துக் கொண்டான்.(12-14) வேள்வித் தீயில் இருந்து திரௌபதியுடன் சேர்ந்து உதித்த திருதஷ்டத்யும்னன், நெருப்பு {அக்னி} தேவனின் மங்கப் பகுதியாவான் {அவதாரமாவான்}. சிகண்டி ஒரு ராட்சசனாவான்.(15)

துரோணர் பிருஹஸ்பதியின் பகுதி என்றும், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ருத்தரனின் பகுதியாகப் பிறந்தவன் என்றும் அறிவாயாக. கங்கையின் மைந்தனான பீஷ்மர், மனிதனாகப் பிறந்த வசுக்களில் ஒருவராவார்.(16) ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, இவ்வாறே தேவர்கள் மனிதர்களாகப் பிறந்து, தங்கள் பணியை நிறைவற்றிய பின்னர்ச் சொர்க்கத்திற்குத் திரும்பிச் சென்றனர்.(17) மறுமைக்குத் திரும்பிச் சென்ற அவர்கள் அனைவரைக் குறித்தும் உங்கள் இதயங்களில் உள்ள கவலையை நான் இன்று விலக்குவேன்.(18) நீங்கள் அனைவரும் பாகீரதியை {கங்கையை} நோக்கிச் செல்வீராக. அப்போது, போர்க்களத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரையும் காண்பீர்கள்” என்றார் {வியாசர்}”.(19)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அங்கே இருந்தோர் அனைவரும் வியாசரின் சொற்களைக் கேட்டு, சிங்க முழக்கம் செய்து கொண்டே பாகீரதியை நோக்கிச் சென்றனர்.(20) தன் அமைச்சர்களுடன் கூடிய திருதராஷ்டிரனும், பாண்டவர்களும், அங்கே வந்திருந்த முதன்மையான முனிவர்களும் கந்தர்வர்களும், சொல்லப்பட்டது போலவே புறப்பட்டனர்.(21) கங்கைக் கரையை அடைந்த அந்த மனிதக் கடல், தான் விரும்பியவாறு தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டது.(22) பெரும் நுண்ணறிவைக் கொண்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, பாண்டவர்களுடனும், குடும்பத்தின் பெண்கள் மற்றும் முதியவர்களுடனும் ஓர் இனிமையான இடத்தில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.(23) இறந்து போன இளவரசர்களைக் காணப் போகும் இரவின் வருகைக்காக அவர்கள் ஒரு முழு வருடத்தைப் போல அந்த நாளைக் கழித்தனர்.(24) சூரியன் மேற்கின் புனித மலையை அடைந்தபோது, அவர்கள் அனைவரும் அந்தப் புனித ஓடையில் நீராடி தங்கள் மாலை சடங்குகளை முடித்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(25)

ஞானக்கண்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 32-இரவில் கங்கையில் இறங்கிப் போரில் இறந்தவர்களை அழைத்த வியாசர்; தங்கள் தங்கள் ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்களுடன் கங்கையில் தோன்றி கரைக்கு வந்த இரு தரப்பினர்; வியாசர் கொடுத்த ஞானக் கண்ணால் அனைவரையும் நேரில் கண்ட திருதராஷ்டிரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இரவு வந்ததும், அவர்கள் அனைவரும் தங்கள் மாலைச் சடங்குகளை முடித்துக் கொண்டு வியாசரை அணுகினர். அற ஆன்மா கொண்டவனும், தூய்மையான உடலுடனும், ஆன்மாவை நோக்கிச் செலுத்தப்படும் மனத்துடனும் கூடியவனுமான திருதராஷ்டிரன், பாண்டவர்களுடனும், தனக்குத் துணையாக இருந்த முனிவர்களுடனும் சேர்ந்து அங்கே அமர்ந்தான்.(2) அரசக் குடும்பத்தின் பெண்மணிகள் காந்தாரியுடன் சேர்ந்து ஒரு தனிப்பட்ட இடத்தில் அமர்ந்தனர். குடிமக்கள் மற்றும் மாகாணவாசிகள் அனைவரும் தங்கள் வயதின்படியாக வரிசையாக அமர்ந்திருந்தனர்.(3)

அப்போது வலிமையும், சக்தியும் கொண்டவனும், பெரும் தவசியுமான வியாசர் பாகீரதியின் புனித நீரில் நீராடி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், பாண்டவர் தரப்பில் போரிட்டவர்களும், கௌரவர் தரப்பில் போரிட்டவர்களுமான இறந்து போன வீரர்கள் அனைவரையும் அழைத்தார்.(4,5) இதன் பேரில், ஓ! ஜனமேஜயா, செவிடாக்கக்கூடியதும், முன்பு குருக்கள் மற்றும் பாண்டவர்களின் படைகளில் கேட்கப்பட்டதற்கு ஒப்பானதுமான ஆரவாரம் நீருக்குள் இருந்து எழுவது கேட்கப்பட்டது.(6)

அப்போது பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையிலான மன்னர்கள், தங்கள் துருப்பினர் அனைவருடன் பாகீரதியின் நீரில் இருந்து ஆயிரக்கணக்கில் எழுந்தனர்.(7) அங்கே விராடனும், துருபதனும் தங்கள் மகன்கள் மற்றும் படைகளுடன் இருந்தனர். திரௌபதியின் மகன்கள், சுபத்திரையின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன் ஆகியோரும் இருந்தனர்.(8) கர்ணன், துரியோதனன், வலிமைமிக்கத் தேர்வீரனான சகுனி, பெரும் பலம் கொண்டவர்களும், துச்சாசனன் தலைமையிலானவர்களுமான திருதராஷ்டிரனின் வேறு பிள்ளைகளும் அங்கே இருந்தனர்.(9)

ஜராசந்தனின் மகன், பகதத்தன், பெருஞ்சக்தி கொண்ட ஜலசந்தன், பூரிஸ்ரவஸ், சலன், சல்லியன், மற்றும் தம்பியுடன் கூடிய விருஷசேனன் {கர்ணனின் மகன்கள்} ஆகியோரும் அங்கே இருந்தனர்.(10) (துரியோதனன் மகனான) லக்ஷ்மணன், திருஷ்டத்யும்னனின் மகன், சிகண்டியின் பிள்ளைகள் அனைவரும், தம்பியுடன் கூடிய திருஷ்டகேது ஆகியோரும் அங்கே இருந்தனர்.(11) அசலன், விருஷகன், ராட்சசன் அலாயுதன், பாஹ்லீகர், ஸோமதத்தன், மன்னன் சேகிதானன் ஆகியோரும் அங்கே இருந்தனர்.(12)

இவர்களும், எண்ணிக்கையைக் கொண்டு வசதியாகப் பெயர் கூற முடியாத இன்னும் பலரும் அந்தச் சந்தர்ப்பத்தில் தோன்றினர். அவர்கள் அனைவரும் பாகீரதியின் நீரில் இருந்து ஒளியுடல்களுடன் எழுந்தனர்.(13) அந்த மன்னர்கள், போர்க்களத்தில் போரிட்டுக் கொண்டிருந்தபோது உடுத்தியிருந்த உடை, தரித்திருந்த கொடிக்கம்பம் மற்றும் வாகனத்துடன் தோன்றினர்.(14) அவர்கள் அனைவரும் தெய்வீக ஆடை உடுத்தியவர்களாகவும், பிரகாசமான காதுகுண்டலங்களுடன் கூடியவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பகை, செருக்கு, கோபம் மற்றும் பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுபட்டவர்களாக இருந்தனர்.(15)

அவர்களது செயல்களைச் சொன்னவாறே கந்தர்வர்கள் அவர்களது புகழைப் பாடினர், வந்திகள் அவர்களுக்குப் பணிவிடை செய்தனர். தெய்வீக உடுப்புகளை உடுத்தியவர்களும், தெய்வீக மலர்மாலைகளைச் சூடியவர்களுமான அவர்கள் ஒவ்வொருவரும் அப்சரஸ் கூட்டங்களால் பணிவிடை செய்யப்பட்டனர்.(16) அந்த நேரத்தில், சத்யவதியின் மகனாகிய அந்தப் பெருந்தவசி தன் தவங்களின் பலத்தால், திருதராஷ்டிரனுக்கு தெய்வீகப் பார்வையைக் கொடுத்து அவனை நிறைவடையச் செய்தார்.(17) தெய்வீக அறிவும் பலமும் கொண்டவளும், பெரும் புகழைக் கொண்டவளுமான காந்தாரி, தன் பிள்ளைகள் அனைவருடன், போரில் கொல்லப்பட்ட அனைவரையும் கண்டாள்.(18)

அங்கே கூடியிருந்தோர் அனைவரும், நிலைத்த பார்வையுடனும், இதயம் நிறைந்த ஆச்சரியத்துடனும், தங்களுக்கு மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தியதும், நம்பமுடியாததுமான அந்த ஆச்சரியமான நிகழ்வைக் கண்டனர்.(19) அஃது இன்புற்றிருந்த ஆடவர் மற்றும் பெண்களுக்கான உயர்ந்த விழாவாக {உத்ஸவமாகத்} தெரிந்தது. அந்த அற்புதக் காட்சி, திரையில் வரையப்பட்ட படத்தைப் போலத் தெரிந்தது.(20) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அந்தத் தவசியின் அருளால் பெற்ற தெய்வீகப் பார்வையுடன் கூடிய திருதராஷ்டிரன், அந்த வீரர்கள் அனைவரையும் கண்டு இன்பத்தால் நிறைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(21)

சமரசம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 33-போரில் இறந்தவர்களும், உயிரோடு இருந்தவர்களும் ஒருவரையொருவர் சந்தித்து அந்த இரவு முழுவதையும் விளையாட்டாகக் கழித்தது; இந்தப் பர்வத்தைக் கேட்பதாலும், சொல்வதாலும் உண்டாகும் பலன்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அப்போது மனிதர்களில் முதன்மையானவர்களும், கோபமும், பொறாமையும் அற்றவர்களும், பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவர்களுமான அவர்கள், மறுபிறப்பாள முனிவர்களால் விதிக்கப்பட்ட உயர்ந்த, மங்கல விதிகளுக்கு இணக்கமான வகையில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர். மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் இருந்த அவர்கள் அனைவரும் சொர்க்கத்தில் திரியும் தேவர்களைப் போலத் தெரிந்தனர்.(1,2) ஓ! மன்னா {ஜனமேஜயா}, மகன் தன் தந்தையையோ, தாயையோ சந்தித்தான், மனைவிமார் தங்கள் கணவர்களையும், சகோதரன், தன் சகோதரனையும், நண்பன் தன் நண்பனையும் சந்தித்தனர்.(3) மகிழ்ச்சியில் நிறைந்திருந்த பாண்டவர்கள், பெரும் வில்லாளியான கர்ணனையும், சுபத்திரையின் மகனையும் {அபிமன்யுவையும்}, திரௌபதியின் மகன்களையும் சந்தித்தனர்.(4) ஓ! ஏகாதிபதி, பாண்டுவின் மகன்கள் மகிழ்ச்சிமிக்க இதயங்களுடன் கர்ணனை அணுகி, அவனோடு இணக்கம் கொண்டனர் {சமரசமாகினர்}.(5)

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, அந்தப் போர்வீரர்கள் அனைவரும் அந்தப் பெருந்தவசியின் அருளால் ஒருவரையொருவர் சந்தித்துத் தங்களுக்குள் இணக்கமாகினர்.(6) பகைமை அனைத்தையும் கைவிட்ட அவர்கள் நட்பு மற்றும் அமைதியை நிறுவினர். இவ்வாறே மனிதர்களில் முதன்மையானவர்களான அந்தக் கௌரவர்கள் அனைவரும், பிற மன்னர்களும், குருக்களுடனும், பிள்ளைகளுடன் கூடிய தங்கள் உற்றார் உறவினருடனும் சேர்ந்தனர். அந்த இரவு முழுவதையும் பெரும் மகிழ்ச்சியில் கடத்தினர்.(7,8) உண்மையில், அந்த க்ஷத்திரிய வீரர்கள் தாங்கள் உணர்ந்த மகிழ்ச்சியின் விளைவால் அந்த இடத்தைச் சொர்க்கமாகவே கருதினர். ஓ! ஏகாதிபதி, அந்தப் போர் வீரர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட அந்த இரவில் துன்பமோ, அச்சமோ, ஐயவுணர்வோ, நிறைவின்மையோ அங்கே இல்லை. தந்தைமார், சகோதரர்கள், கணவர்கள், மகன்கள் ஆகியோரைச் சந்தித்த(9,10) பெண்கள் தங்கள் துயர் அனைத்தையும் கைவிட்டு, மகிழ்ச்சியாரவாரத்தை அடைந்தனர்.

இவ்வாறு ஓரிரவு ஒருவரோடு ஒருவர் விளையாடிய அந்த வீரர்கள், பெண்கள்,(11) ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டு, ஒருவரிடமொருவர் விடைபெற்றுக் கொண்டு தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். உண்மையில் அந்த முதன்மையான தவசி {வியாசர்} போர்வீரர்களின் அந்தக் கூட்டத்திற்கு விடைகொடுத்தனுப்பினார்.(12) (உயிரோடு இருந்த) அவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண்ணிமைக்கும் காலத்திற்குள் அந்தப் பெருங்கூட்டம் மறைந்து போனது. அந்த உயர் ஆன்ம மனிதர்கள், தங்கள் தேர்களுடனும், கொடிமரங்களுடனும் புனித ஆறான பாகீரதிக்குள் மூழ்கி, தங்கள் தங்களுக்குரிய வசிப்பிடங்களுக்குச் சென்றனர். சிலர் தேவலோகத்திற்கும், சிலர் பிரம்மலோகத்திற்கும்,(13,14) சிலர் வருண லோகத்திற்கும், சிலர் குபேரலோகத்திற்கும் சென்றனர். அந்த மன்னர்களில் சிலர் சூரியலோகத்திற்குச் சென்றனர்.(15)

ராட்சசர்கள் மற்றும் பிசாசங்களுக்கு மத்தியில் சிலர் உத்தரக் குருக்களின் நாட்டுக்குச் சென்றனர். இனிமை நிறைந்த மனத்துடன் திரிந்த வேறு சிலர் தேவர்களின் தோழமையை அடைந்தனர்.(16) இவ்வாறே அந்த உயர் ஆன்ம மனிதர்கள் அனைவரும் தங்கள் வாகனங்கள், விலங்குகள் மற்றும் தங்கள் தொண்டர்களுடன் மறைந்தனர். அவர்கள் அனைவரும் சென்ற பிறகு, அந்தப் புனித ஓடையின் நீருக்குள் நின்றிருந்தவரும், பேரறமும், சக்தியும் கொண்டவரும், குருக்களுக்கு நன்மை செய்பவரும், பெருந்தவசியுமான வியாசர், விதவைகளாக இருந்த க்ஷத்திரியப் பெண்மணிகளிடம் இந்தச் சொற்களில்,(17,18) “இந்த முதன்மையான பெண்களில், தங்கள் கணவர்கள் அடைந்த உலகத்தை அடைய விரும்புகிறவர்கள், சோம்பலனைத்தையும் கைவிட்டு, புனிதமான பாகீரதிக்குள் விரைவாக மூழ்குவீராக” என்றார்.(19)

அவருடைய இந்தச் சொற்களைக் கேட்ட முதன்மையான பெண்கள், அவற்றில் நம்பிக்கை கொண்டு, தங்கள் மாமனாரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு பாகீரதியின் நீருக்குள் மூழ்கினர்.(20) மனித உடல்களில் இருந்து விடுபட்ட அந்தக் கற்புடைய பெண்கள், ஓ! மன்னா, தங்கள் கணவர்களால் அடையப்பட்ட உலகங்களுக்குத் தங்கள் கணவர்களுடன் சென்றனர்.(21) இவ்வாறே அறவொழுக்கம் கொண்டவர்களும், கணவர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவர்களுமான பெண்கள், பாகீரதியின் நீருக்குள் நுழைந்து, மனிதக்குடியிருப்பில் இருந்து விடுபட்டு, தங்கள் கணவர்களால் அடையப்பட்ட உலகங்களுக்குச் சென்று தங்கள் கணவர்களின் துணையை அடைந்தனர்.(22) தெய்வீக வடிவங்களுடன் கூடியவர்களாக, தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களாக, தெய்வீக உடுப்புகளையும், மலர்மாலைகளையும் அணிந்து கொண்டு, தங்கள் கணவர்கள் அடைந்த வசிப்பிடங்களான அந்த உலகங்களுக்குச் சென்றனர்.(23) சிறந்த ஒழுக்கத்தையும், பல நற்குணங்களையும் கொண்ட அவர்களது கவலைகள் அனைத்தும் களையப்பட்டு, தங்களுக்கு உரிமையானவையும், அனைத்தையும் கொண்டவையுமான அந்த இன்பலோகங்களுக்குச் சிறந்த தேர்களில் செல்பவர்களாக அவர்கள் காணப்பட்டனர்.(24) பக்திக்கடமைகளில் அர்ப்பணிப்புடைய வியாசர், அந்நேரத்தில் வரங்களை அளிப்பவராக மாறி, அங்கே கூடியிருந்த மனிதர்கள் அனைவரின் விருப்பங்களும் கனியும் வரத்தை அளித்தார்.(25) பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள், இறந்தவர்களான புனிதர்களுக்கும், உயிருடன் கூடிய மனிதர்களுக்கும் இடையில் நடந்த இந்தச் சந்திப்பைக் கேள்விப் பட்டு பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.(26)

இந்தக் கதையை முறையாகக் கேட்கும் மனிதன், தனக்குப் பிடித்தமான அனைத்தையும் அடைவான். உண்மையில், இம்மையிலும், மறுமையிலும் உள்ள ஏற்புடைய பொருட்கள் அனைத்தையும் அவன் அடைவான்.(27) கல்வி கற்றவனும், அறிவியல் அறிந்தவனும், அறவோரில் முதன்மையானவனுமான எந்த மனிதன், பிறர் கேட்கும்படி இந்தக் கதையைச் சொல்வானோ அவன் இம்மையில் பெரும்புகழையும், மறுமையில் மங்கல கதியையும், உற்றார் உறவினர் சேர்க்கையையும், விரும்பத்தக்க பொருட்கள் அனைத்தையும் அடைவான். அத்தகைய மனிதன் தன் வாழ்வாதாரத்திற்காகத் துன்பம் நிறைந்த செயல்களில் ஈடுபடாமல், வாழ்வில் அனைத்து வகை மங்கலப் பொருட்களையும் அடைவான். வேத கல்வி மற்றும் தவங்களில் அர்ப்பணிப்புள்ளவனும், பிறர் கேட்க இந்தக் கதையைச் சொல்பவனுமான மனிதன், அறுவடை செய்யப்போகும் வெகுமதிகள் இவையே.(28,29) நல்லொழுக்கம் கொண்டவர்களும், தற்கட்டுப்பாட்டில் அர்ப்பணிப்புள்ளவர்களும், தாங்கள் அளிக்கும் கொடைகளின் மூலம் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மை அடைந்தவர்களும், நேர்மை கொண்டவர்களும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவர்களும், பொய்மையில் இருந்தும், பிறருக்கும் தீங்கிழைக்கும் விருப்பத்தில் இருந்தும் விடுபட்டவர்களும், நம்பிக்கையுடன் கூடியவர்களும், சாத்திரங்களையும், நுண்ணறிவையும் நம்புகிறவர்களுமான மனிதர்கள், அற்புதம் நிறைந்த இந்தப் பர்வத்தைக் கேட்டு மறுமையில் நிச்சயம் உயர்ந்த கதியை அடைவார்கள்” {என்றார் வைசம்பாயனர்}”.(30,31)

மாண்டோர் மீள்வரோ! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 34-மாண்டோர் மீள்வதெப்படி என்று கேட்ட ஜனமேஜயன்; காரணத்துடன் விடையளித்த வைசம்பாயனர்…

சௌதி சொன்னார், “பெரும் நுண்ணறிவுமிக்க மன்னன் ஜனமேஜயன், தன் மூதாதையர்கள் மீண்டும் தோன்றி மறைந்த கதையைக் கேட்டு உயர்வான நிறைவையடைந்தான்.(1) இன்பத்தால் நிறைந்த அவன், மீண்டும் வைசம்பாயனரிடம், இறந்தோர் மீண்டும் தோன்றும் காரியத்தைக் குறித்துக் கேட்கும் வகையில், “உடல் அழிந்தவர்கள் அதே வடிவில் மீண்டும் தோன்றுவது எவ்வாறு சாத்தியம்?” என்று கேட்டான்.(2) இவ்வாறு கேட்கப்பட்டவரும், பேசுபவர்களில் முதன்மையானவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான அந்த வியாசரின் சீடர் {வைசம்பாயனர்}, ஜனமேஜயனிடம் இவ்வாறு பதிலளித்தார்.(3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “செயல்கள் (அதன் விளைவுகளை அனுபவிக்காமல், அல்லது தாங்கிக் கொள்ளாமல்) ஒருபோதும் அழிவடைவதில்லை என்பது நிச்சயமானது. ஓ! மன்னா, செயல்களின் மூலமே உடல்கள் பிறக்கின்றன; குணங்களும் பிறக்கின்றன.(4) அடிப்படையான பெரும்பூதங்களுக்கும், அனைத்தின் தலைவனுக்கு உள்ள உறவின் விளைவால் அவை நித்தியமானவையாக இருக்கின்றன. அவை நித்தியமானவற்றுடனே இருக்கின்றன. அதே போலவே, நித்தியமற்றவை அழியும்போது அவை அழிவடைவதில்லை.(5) முயற்சியின்றிச் செய்யப்படும் செயல்கள் உண்மையானவையும், முதன்மையானவையும், உண்மை பயனைக் கொடுப்பவையுமாகும். எனினும், சாதிப்பதற்கு முயற்சி தேவைப்படும் செயல்களுடன் தொடர்புடைய ஆன்மா இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது.(6)

அவ்வாறு (இன்ப துன்பத்துடன்) இணைந்திருந்தாலும், ஒரு கண்ணாடியில் உயிரினங்கள் பிரதிபலிக்கப்படுவதைப் போலவே அவற்றால் அஃது ஒருபோதும் மாற்றமடைவதில்லை என்பது ஒரு குறிப்பிட்ட உள்ளுணர்வாகும். அஃது ஒருபோதும் அழிவடைவதில்லை[1].(7) (நல்ல அல்லது தீய கனிகளை {பலன்களைத்} தாங்கிக் கொள்வதன் மூலமோ, அனுபவிப்பதன் மூலமோ) ஒருவனுடைய செயல்கள் தீராதவரை, அவன் உடலையே சுயமென {ஆத்மாவெனக்} கருதுகிறான். எனினும், செயல்கள் தீர்ந்த மனிதன், உடலை சுயமெனக் கருதமால் சுயத்தை வேறொன்றாக ஏற்றுக் கொள்கிறான்.(8) (அடிப்படை பூதங்கள், புலன்கள் முதலியன உள்ளிட்ட) இருப்பிலுள்ள பல்வேறு பொருட்கள் ஓர் உடலை அடைந்து ஒன்று கலக்கின்றன. (உடலுக்கும், சுயத்திற்கும் இடையில் உள்ள) வேறுபாட்டைப் புரிந்த ஞானம் கொண்ட மனிதர்களுக்கு அந்தப் பொருட்களே நித்தியமானவையாகின்றன[2].(9)குதிரை வேள்வியில், குதிரையைக் கொல்லும் காரியத்தில் இந்த ஸ்ருதி கேட்கப்படுகிறது. உடல்படைத்த உயிரினங்களின் நிச்சய உடைமைகளான உயிர்மூச்சுகள் (மற்றும் புலன்கள் முதலியவை), அவை மறுமைக்குச் செல்லும்போதும் நித்தியமாக நீடித்திருக்கின்றன.(10) ஓ! மன்னா {ஜனமேஜயா}, உனக்கு ஏற்புடையதாக இருந்தால், நான் உனக்கான நன்மையைச் சொல்வேன். நீ வேள்வி செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, தேவ பாதைகள் குறித்துக் கேள்விப்பட்டிருப்பாய்.(11) உன்னுடைய எந்த வேள்விக்குமான ஆயத்தங்கள் செய்யப்பட்ட போது, தேவர்கள் உனக்கு நன்மை செய்ய விரும்பினர். உண்மையில், தேவர்கள் இவ்வாறான மனோநிலையை அடைந்து உன் வேள்விக்கு வந்த போது, கொல்லபட்ட விலங்குகளை (இம்மையில் இருந்து மறுமைக்கு இட்டுச் செல்லும்) பாதையின் தலைவர்களாக அவர்களே இருந்தனர்[3].(12)இந்தக் காரணத்தினாலேயே, நித்தியமானவர்கள் (ஜீவர்கள்), வேள்விகளில் தேவர்களைத் துதிப்பதன் மூலம் சிறந்த கதிகளை அடைவதில் வெல்கிறார்கள். அடிப்படையான ஐந்து பூதங்கள் நித்தியமானவையெனும்போது, ஆன்மாவும் நித்தியமெனும்போது, (உறையில் பொதிந்த ஆன்மாவான) புருஷன் என்றழைக்கப்படுபவனும் அவ்வாறே ஆகிறான்.(13) இஃது இவ்வாறிருக்கும்போது, ஓர் உயிரினம் பல்வேறு வடிவங்களை ஏற்கும் எனக் காண்பவன், பிழையான புரிதலைக் கொண்டவன் என்று கருதப்படுகிறான். பிரிவில் அதீத துயரில் ஈடுபடுபவன் முட்டாளென நான் நினைக்கிறேன்.(14) பிரிவில் தீமையைக் காணும் ஒருவன், சேர்க்கையைக் கைவிட வேண்டும். தனியாக நிற்பதன் மூலம் சேர்க்கைகள் அமையாமல், பிரிவிலேயே உலகத் துன்பங்கள் பிறக்கின்றன என்பதால் கவலைகள் கைவிடப்படுகின்றன[4].(15)உடலுக்கும், சுயத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்பவன் மட்டுமே, பிழையான தீர்மானத்தில் {தவறான நம்பிக்கையில்} இருந்து விடுபடுகிறான், வேறு எவரும் விடுபடுவதில்லை. மற்றொன்றை (சுயத்தை) அறிந்தவன் உயர்ந்த புத்தியை அடைந்து, பிழையில் இருந்து விடுபடுகிறான்[5].(16) உயிரினங்களைப் பொறுத்தவரையில், அவை புலப்படாத நிலையில் இருந்து தோன்றி, மீண்டும் புலப்படாத நிலைக்குள்ளேயே மறைந்து போகின்றன. நான் அவனை அறிவதில்லை. அவனும் என்னை அறிவதில்லை. என்னைப் பொறுத்தவரையில், துறவு இன்னும் எனதாகவில்லை[6].(17) பலமற்றவன் எந்த உடலில் இருந்து தன் செயல்கள் அனைத்தையும் செய்கிறானோ அவன் தன் செயல்களுக்கான கனிகளை இன்புறவோ, பொறுத்துக் கொள்ளவோ செய்கிறான்.(18) அந்தச் செயல் மனச்செயலாக இருந்தால் அதன் விளைவுகளும் மனத்தால் தாங்கவோ, இன்புறவோ கூடியதாக இருக்கும், அஃது உடலைக் கொண்டு செய்யப்படுவதாக இருந்தால், அதன் விளைவுகளும் உடலால் தாங்கவோ, இன்புறவோ கூடியதாக இருக்கும்” {என்றார் வைசம்பாயனர்}.(19)

அவப்ருதஸ்நானம்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 35-பரிக்ஷித்தைக் காட்ட வேண்டிய ஜனமேஜயன்; பரிக்ஷித், சமீகர் மற்றும் சிருங்கி ஆகியோரை காட்டிய வியாசர்; வேள்வி முடிவில் நீராடி ஆஸ்தீகரை வணங்கிய ஜனமேஜயன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னன் திருதராஷ்டிரன் ஒருபோதும் தன் மகன்களைக் கண்டதில்லை. ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, அந்த முனிவரின் {வியாசரின்} அருள் மூலம் கண் பார்வையை அடைந்த அவன், தன்னைப் போலவே இருந்த தன் பிள்ளைகளை முதல் முறையாகக் கண்டான்.(1) மனிதர்களில் முதன்மையானவனான அந்தக் குரு ஏகாதிபதி, மன்னர்களின் கடமைகள், வேதங்கள், உபநிஷத்துகள் அனைத்தையும் கற்று, (அவற்றிலிருந்தே) நிச்சய புத்தியையும் அடைந்தான்.(2) பெரும் ஞானம் கொண்ட விதுரன்தன் தவச் சக்தியின் மூலம் உயர்ந்த வெற்றியை அடைந்தான். திருதராஷ்டிரனும், தவசியான வியாசரைச் சந்தித்தன் விளைவால் பெரும் வெற்றியை அடைந்தான்”.(3)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “வியாசர் எனக்கொரு வரம் தர மனம் கொண்டு, என் தந்தை {பரீக்ஷித்} இவ்வுலகில் இருந்து செல்லும்போது எவ்வளவு வயதுடன் இருந்தாரோ, அவர் என்ன உடையை உடுத்துவது வழக்கமோ அதே வடிவத்தில், அதே உடையுடன் அன்பு கூர்ந்து அவரை {பரீக்ஷித்தை} எனக்குக் காட்டினால், நீர் சொன்ன அனைத்தையும் நான் நம்புவேன்.(4) அத்தகைய காட்சி எனக்கு மிக ஏற்புடையதே. உண்மையில், நான் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனாக என்னைக் கருதிக் கொள்வேன். நான் ஒரு குறிபிட்ட தீர்மானத்தை அடைந்திருக்கிறேன். ஓ!, இந்த முதன்மையான முனிவரின் {வியாசரின்} அருளின் மூலம் என் விருப்பம் கனியும் நிலையால் மகுடம் சூட்டப்படட்டும்” என்று கேட்டான்”.(5)

சௌதி {லோமஹர்சனரின் முனிக்கூட்டத்திடம்} சொன்னார், “மன்னன் ஜனமேஜயன் இந்தச் சொற்களைச் சொன்ன பிறகு, பெரும் சக்தியும், நுண்ணறிவும் கொண்ட வியாசர், தன் அருளைக் காட்டும் வகையில், (வேறு உலகில் {மறுமையில்} இருந்து) பரிக்ஷித்தைக் கொண்டு வந்தார்.(6) மன்னன் ஜனமேஜயன், பேரழகுடன் கூடியவனும், சொர்க்கத்தில் இருந்து வந்தவனுமான தன் அரசத் தந்தை (இவ்வுலகில் இருந்து செல்லும் காலத்தில்) இருந்த அதே வயது மற்றும் அதே வடிவத்துடன் அவனைக் கண்டான்.(7) உயர் ஆன்ம சமீகர், அவரது மகனான சிருங்கின் ஆகியோரும் அதே போல அங்குக் கொண்டு வரப்பட்டனர். மன்னனின் ஆலோசகர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் அவர்களைக் கண்டனர்.(8) மன்னன் ஜனமேஜயன், தன் வேள்வியில் இறுதி நீராடலைச் செய்து பெரிதும் மகிழ்ந்தான். அவன் புனித நீரைத் தன் மீது ஊற்றிக் கொண்டதைப் போலவே தன் தந்தையின் மீதும் ஊற்றினான்.(9)

இறுதி நீராடலைச் செய்த மன்னன், யாயாவரர்களின் குலத்தில் பிறந்தவரும், ஜரத்காருவின் மகனுமான மறுபிறப்பாளர் ஆஸ்தீகரிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(10) “ஓ! ஆஸ்தீகரே, என் கவலைகள் அனைத்தையும் அகற்றியவரும், என்னுடைய தந்தையுமான இவர் {பரிக்ஷித்}, என்னால் காணப்பட்டதால், என்னுடைய இந்த வேள்வி பல அற்புதம் நிறைந்த நிகழ்வுகள் நிறைந்ததாயிற்று” என்றான்.(11)ஆஸ்தீகர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, தவங்களின் பெரிய கொள்ளிடமும், புராதன முனிவரும், தீவில் பிறந்தவருமான வியாசர் எந்த வேள்வியில் இருக்கிறாரோ, அந்த வேள்வியைச் செய்தவன் நிச்சயம் ஈருலகங்களையும் {இம்மையையும், மறுமையையும்} வெல்வான்.(12) ஓ! பாண்டவர்களின் மகனே, நீ அற்புதம் நிறைந்த ஒரு வரலாற்றைக் கேட்டிருக்கிறாய். பாம்புகள் எரிக்கப்பட்டுச் சாம்பலாகி, உன் தந்தையின் பாதச்சுவடுகளைப் பின்பற்றிச் சென்றன.(13) ஓ! ஏகாதிபதி, தக்ஷகன், உன்னுடைய நேர்மையின் காரணமாகத் துன்பம் நிறைந்த விதியில் இருந்து பெருஞ்சிரமத்துடன் தப்பித்துவிட்டான். முனிவர்கள் அனைவரும் வழிபடப்பட்டனர். உன்னுடைய உயர் ஆன்ம தந்தையால் அடையப்பட்ட கதியையும் நீ கண்டாய்.(14) பாவத்தைத் தூய்மையாக்கும் இந்த வரலாற்றைக் கேட்டதன் மூலம் நீ அபரிமிதமான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டியிருக்கிறாய். இந்த மனிதர்களில் முதன்மையானவனைக் கண்டதன் மூலம் உன் இதயத்தில் உள்ள முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன.(15) அறச் சிறகுகளை ஆதரிப்பவர்கள் எவரோ, நல்லொழுக்கமும், சிறந்த மனநிலையும் கொண்டவர்கள் எவரோ, எவரைக் கண்டால் பாவங்கள் பொடிபடுமோ அவர்களை நாம் அனைவரும் வணங்க வேண்டும்” என்றார் {ஆஸ்தீகர்}”.(16)

சௌதி தொடர்ந்தார், “மறுபிறப்பாளர்களில் முதன்மையான அவரிடம் {ஆஸ்தீகரிடம்} இருந்து இதைக் கேட்ட மன்னன் ஜனமேஜயன், அனைத்து வழியிலும் அந்த முனிவரை மீண்டும் மீண்டும் கௌரவித்து வழிபட்டான்.(17) கடமைகள் அனைத்தையும் அறிந்த அவன், அதன் பிறகு, மங்கா மகிமை கொண்ட முனிவர் வைசம்பாயனரிடம், மன்னன் திருதராஷ்டிரனனுடைய காட்டு வாசத்தின் தொடர்ச்சியைக் கேட்டான்” {என்றார் சௌதி}.(18)

நகரந்திரும்பல்! – ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 36-ஆசிரமம் திரும்பியது; வியாசரின் ஆணைப்படி யுதிஷ்டிரனை நகரம் திரும்ப வற்புறுத்திய திருதராஷ்டிரன்; பாண்டவர்கள் சென்றது…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}“நண்பர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருடன் கூடிய தன் மகன்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோரைக் கண்ட பிறகு மனிதர்களின் ஆட்சியாளனான திருதராஷ்டிரனும், மன்னன் யுதிஷ்டிரனும் என்ன செய்தனர்?” என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தன் பிள்ளைகள் மீண்டும் தோன்றி மிக அற்புதமான காட்சியைக் கண்ட அந்த அரசமுனி திருதராஷ்டிரன் துன்பமற்றவனாகி, (பாகீரதியின் கரைகளில் இருந்து) தன் ஆசிரமத்திற்குத் திரும்பினான்.(2) பொதுமக்களும், பெரும் முனிவர்கள் அனைவரும், திருதராஷ்டிரனால் விடை கொடுத்து அனுப்பப்பட்டுத் தாங்கள் விரும்பிய இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(3) மனைவியருடன் கூடிய உயர் ஆன்ம பாண்டவர்கள், ஒரு சிறிய பரிவாரத்துடன், அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.(4)

அப்போது மறுபிறப்பாள முனிவர்களாலும், பிற மக்களாலும் கௌரவிக்கப்படுபவரான சத்தியவதியின் மகன் {வியாசர்} அந்த ஆசிரமத்திற்கு வந்து திருதராஷ்டிரனிடம்,(5) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரா, ஓ! குரு குலத்தின் மகனே, நான் சொல்வதைக் கேட்பாயாக. பெரும் ஞானம், புனிதச் செயல்கள், தவச் செல்வம், சிறந்த குருதி, வேதங்கள் மற்றும் அதன் அங்கங்களில் அறிவு, பக்தி, வயது, பெரும் நாநயம் ஆகியவற்றைக் குறித்த பல்வேறு உரையாடல்களை நீ கேட்டிருக்கிறாய்.(6,7) மீண்டும் நீ கவலையில் உன் மனத்தை நிலைக்கச் செய்யாதே. ஞானம் கொண்ட ஒருவன் ஒருபோதும் தீயூழால் கலங்கமாட்டான். தெய்வீக வடிவைக் கொண்ட நாரதரிடமிருந்து தேவ புதிர்கள் {ரகசியங்களை} நீ கேட்டிருக்கிறாய்.(8) உன் பிள்ளைகள் அனைவரும், க்ஷத்திரிய நடைமுறைகளை நோற்றதன் மூலம் ஆயுதங்களால் புனிதப்படுத்தப்பட்ட மங்கல கதியை அடைந்தனர்.(9) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான இந்த யுதிஷ்டிரன், தன் தம்பிகள், மனைவிகள் மற்றும் உற்றார் உறவினருடன் உன் அனுமதிக்காகக் காத்திருக்கிறான்.(10) நீ இவனை அனுப்புவாயாக. அவன் தன் நாட்டுக்குத் திரும்பிச் சென்று அதை ஆளட்டும். இவ்வாறு காட்டில் வசித்தவாறே இவர்கள் ஒரு மாதத்தைக் கடத்திவிட்டனர்.(11) ஓ! மன்னா, அரசுரிமையெனும் நிலை எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். ஓ! குரு குலத்தோனே, ஒரு நாடு பல பகைவர்களைக் கொண்டதாகும்” என்றார் {வியாசர்}.(12)

ஒப்பற்ற சக்தி கொண்ட வியாசரால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், வாக்கை நன்கு அறிந்தவனுமான குரு மன்னன் {திருதராஷ்டிரன்}, யுதிஷ்டிரனை அழைத்து, அவனிடம்,(13) “ஓ! அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, நீ அருளப்பட்டிருப்பாயாக. நீ உன் தம்பிகளுடன் சேர்ந்து நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! மன்னா, உன் கருணையின் மூலம் என்வழியில் இனியும் எந்தத் துன்பமும் நிற்கவில்லை.(14) ஓ! மகனே, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தில் {ஹஸ்தினாபுரத்தில்} இருக்கையில் நான் உன்னோடு இருந்ததைப் போலவே இங்கேயும் நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். ஓ! கல்விமானே, உன்னை என் பாதுகாவலனாகக் கொண்டு நான் ஏற்புடைய பொருட்கள் அனைத்தையும் அனுபவிக்கிறேன்.(15) ஒரு தந்தை தன் மகனிடம் இருந்து பெறும் தொண்டுகளனைத்தையும் நான் உன்னிடம் இருந்து பெற்றுவிட்டேன். நான் உன்னிடம் நிறைவுடன் இருக்கிறேன். ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உன்னிடம் எனக்குச் சிறு நிறைவின்மையும் இல்லை. ஓ! மகனே, இனியும் எந்தத் தாமதமும் செய்யாமல் நீ செல்வாயாக.(16)

உன்னைச் சந்தித்ததில் இருந்து நான் என் தவங்களை விட்டுவிட்டேன். உன்னைச் சந்தித்தன் விளைவால் மட்டுமே தவங்களுடன் கூடிய என்னுடைய உடலை என்னால் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது[1].(17) மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகளை உண்டு, நான் நோற்கும் நோன்புகளுக்கு இணையானவற்றை நோற்று வரும் உன்னுடைய தாய்மாரான இவர்கள் இருவரும் நீண்ட காலம் உயிரோடு இருக்க மாட்டார்கள்.(18) உன்னை நான் சந்தித்தன் (பலன்) மூலமும், வியாசரின் தவப் பலத்தின் மூலமும் மறுமையில் வசித்தவர்களான என் பிள்ளைகளும், பிறரும் எங்களால் காணப்பட்டனர்.(19) ஓ! பாவமற்றவனே, என் வாழ்வின் நோக்கத்தை நான் எட்டிவிட்டேன். நான் இப்போது கடுந்தவங்களைப் பயில்வதில் என்ன நிறுவிக்கொள்ள நான் விரும்புகிறேன். எனக்கு அனுமதி அளிப்பதே உனக்குத் தகும்.(20) ஈமப்பிண்டம், புகழ், சாதனைகள் மற்றும் நமது மூதாதையரின் குலம் ஆகியவை இப்போதும் உன்னையே சார்ந்திருக்கின்றன. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இன்றோ, நாளையோ நீ புறப்படுவாயாக. ஓ! மகனே {யுதிஷ்டிரா}, தாமதிக்காதே.(21) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மன்னர்களின் கடமைகள் என்னென்ன என்பதை நீ மீண்டும் மீண்டும் கேட்டிருக்கிறாய். இன்னும் நான் வேறு என்ன உனக்குச் சொல்ல முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. ஓ! பெரும்பலம் கொண்டவனே, இனியும், உன்னிடம் இருந்து எந்தத் தேவையும் எனக்கில்லை” என்றான் {திருதராஷ்டிரன்}”.(22)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வாறு சொன்ன அந்த (முதிய) ஏகாதிபதியிடம், மன்னன் யுதிஷ்டிரன், “ஓ! அறத்தின் ஒவ்வொரு விதியையும் அறிந்தவரே, இவ்வழியில் என்னை நீர் கைவிடுதல் உமக்குத் தகாது. நான் எந்தக் குற்றத்தையும் செய்த குற்றவாளியில்லை.(23) என் சகோதரர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அவர்கள் விருப்பபடி செல்லட்டும். உறுதியான நோன்புகளுடன் நான் உமக்கும், என்னிரு தாய்மாருக்கும் பணிவிடை செய்வேன்” என்று மறுமொழி கூறினான்.(24)

அப்போது காந்தாரி {யுதிஷ்டிரனிடம்} அவனிடம், “ஓ! மகனே, இவ்வாறு வேண்டாம். கேட்பாயாக, குரு குலம் இப்போது உன்னையே சார்ந்திருக்கிறது. என்னுடைய மாமனாரின் ஈமப் பிண்டமும் உன்னையே சார்ந்திருக்கிறது. ஓ! மகனே, நீ செல்வாயாக.(25) நாங்கள் உன்னால் போதுமான அளவுக்குத் தொண்டாற்றப்பட்டு, கௌரவிக்கப்பட்டிருக்கிறோம். மன்னர் {திருதராஷ்டிரர்} சொல்வதையே நீ செய்ய வேண்டும். உண்மையில், ஓ! மகனே, நீ உன் தந்தையின் {திருதராஷ்டிரரின்} ஆணைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்றாள்”.(26)

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} தொடர்ந்தார், “காந்தாரியால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், அன்புக்கண்ணீரால் குளித்த கண்களைத் துடைத்துக் கொண்டு, புலம்பியபடியே இந்தச் சொற்களைச் சொன்னான்,(27) “மன்னரும், பெரும்புகழைக் கொண்ட காந்தாரியும் என்னைக் கைவிடுகின்றனர். துயரில் நிறைந்திருக்கும் என்னால் எவ்வாறு உங்களை விட்டுச் செல்ல முடியும்?(28) எனினும், ஓ! நீதிமிக்கப் பெண்ணே, அதே வேளையில் நான் உன் தவங்களை ஒருபோதும் தடுக்கத் துணிய மாட்டேன். தவங்களைவிட உயர்ந்தன வேறேதும் இல்லை. தவங்களின் மூலமே ஒருவன் பரமனை அடைகிறான்.(29) ஓ! ராணி, என் இதயம் இனியும் முன்பைப் போல நாட்டை நோக்கித் திரும்பவில்லை. இப்போது என் மனம் முழுமையாகத் தவங்களிலேயே நிலைத்திருக்கிறது.(30) மொத்த பூமியும் இப்போது வெறுமையாக இருக்கிறது. ஓ! மங்கலப் பெண்மணியே, அவள் {பூமாதேவி} இனியும் என்னை நிறைவடையச் செய்யவில்லை. நம் உற்றார் உறவனரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. நமது பலம் முன்பைப்போல இல்லை.(31) பாஞ்சாலர்கள் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றனர். பெயரளவில் மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள். ஓ! மங்கலப் பெண்மணியே, அவற்றை மறுசீரமைப்பதிலும், வளர்ச்சியிலும் துணை செய்யக்கூடிய எவரையும் நான் காணவில்லை.(32) அவர்கள் அனைவரும் போர்க்களத்தில் துரோணரால் எரிக்கப்பட்டுச் சாம்பலாகிவிட்டனர். எஞ்சியிருந்தவர்களும் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமரால்} இரவில் கொல்லப்பட்டனர்.(33) எங்கள் நண்பர்களாக இருந்த சேதிகளும், மத்ஸ்யர்களும் இப்போது {உயிருடன்} இல்லை. வாசுவதேவன் {கிருஷ்ணன்} காத்ததால் விருஷ்ணி இனக்குழு மட்டுமே எஞ்சியிருக்கிறது.(34) விருஷ்ணிகளைக் கண்டு மட்டுமே நான் வாழ விரும்புகிறேன். எனினும், அறம், செல்வம் மற்றும் இன்பத்தை ஈட்டுவதில் எனக்குரிய விருப்பத்தின் காரணமாகவே நான் உயிர்வாழ விரும்புகிறேன். நீ எங்கள் அனைவரின் மீதும் மங்கலப் பார்வையைச் செலுத்துவாயாக. உன்னைப் பார்ப்பதே எங்களுக்குக் கடினமாகும்.(35) மன்னர், மிகக் கடுமையானவையும், தாங்கிக் கொள்ள முடியாதவையுமான தவப்பயிற்சியைத் தொடங்கப் போகிறார்” என்றான் {யுதிஷ்டிரன்}.

இந்தச் சொற்களைக் கேட்டவனும், போரின் தலைவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான சகாதேவன்,(36) கண்ணீரில் குளித்த கண்களுடன் யுதிஷ்டிரனிடம், “ஓ! பாரதக் குலத்தின் தலைவா, நான் என் தாயை விட்டுச் செல்லத் துணியேன்.(37) நீர் விரைவாகத் தலைநகரம் திரும்புவீராக. ஓ! பலமிக்கவரே, நான் தவங்களைப் பயில்வேன். இங்கேயே தவங்களின் மூலம் நான் என் உடலை மெலியச் செய்து,(38) மன்னர் மற்றும் என்னுடைய தாய்மார்களான இவர்களின் பாதங்களுக்குத் தொண்டாற்றுவதில் ஈடுபடுவேன்” என்றான்.

அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரனைத் {சகாதேவனைத்} தழுவிய பிறகு குந்தி, “ஓ! மகனே, செல்வாயாக. இவ்வாறு பேசாதே.(39) நான் சொல்வதைச் செய்வாயாக. நீங்கள் அனைவரும் இங்கிருந்து செல்வீராக. அமைதி உங்களுடையதாகட்டும். மகன்களே, மகிழ்ச்சி உங்களுடையதாகட்டும்.(40) நீங்கள் இங்கே தங்கினால் எங்கள் தவங்கள் தடைபடும். நான் உன்னிடம் கொண்டுள்ள பற்றின் காரணமாக உயர்வான என் தவங்களில் இருந்து நான் வீழ்ந்துவிடுவேன்.(41) எனவே, ஓ! மகனே, எங்களை விட்டுச் செல்வாயாக. ஓ! பெரும்பலம் கொண்டவனே, எங்களுக்கிருக்கும் வாழ்நாள் காலம் சிறிதே” என்றாள்.(42) இவற்றாலும், குந்தியின் இன்னும் பல்வேறு பேச்சுகளாலும், சகாதேவன் மற்றும் மன்னன் யுதிஷ்டிரனின் மனங்கள் நன்கு நிலைநிறுத்தப்பட்டன. குருகுலத்தில் முதன்மையான அவர்கள், தங்கள் தாயிடமும், (முதிய) ஏகாதிபதியிடமும் அனுமதியைப பெற்றுக் கொண்டு, பின்னவர்களை வணங்கி, விடைபெற்றுக் கொள்ளத் தொடங்கினர்.(43)

யுதிஷ்டிரன், “மங்கல ஆசிகளால் மகிழ்ச்சியடைந்த நாங்கள் தலைநகரத்திற்குத் திரும்பப் போகிறோம். உண்மையில், ஓ! மன்னா, உமது அனுமதியைப் பெற்றுக் கொண்டு எங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, நாங்கள் இந்த ஆசிரமத்தை விட்டகல்வோம்” என்றான்.(44)

உயர் ஆன்மா கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்ட அரச முனி திருதராஷ்டிரன், யுதிஷ்டிரனை ஆசீர்வதித்து, அவனுக்கு அனுமதி அளித்தான்.(45) பெரும்பலம் கொண்டோர் அனைவரிலும் முதன்மையான பீமனை மன்னன் {திருதராஷ்டிரன்} தேற்றினான். பெருஞ்சக்தி கொண்டவனும், பெரும் நுண்ணறிவுமிக்கவனுமான பீமன், மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} தன் பணிவைக் காட்டினான்.(46) அர்ஜுனனைத் தழுவிக் கொண்டு, மனிதர்களில் முதன்மையானவர்களான இரட்டையர்களையும் கட்டிப் பிடித்து, மீண்டும் மீண்டும் அவர்களுக்கு ஆசிகூறிய குரு மன்னன் அவர்கள் புறப்படுவதற்கான அனுமதியையும் கொடுத்தான்.(47)

அவர்கள் காந்தாரியின் பாதத்தையும் வழிபட்டு அவளிடமும் ஆசிகளைப் பெற்றனர். அப்போது அவர்களுடைய அன்னனையான குந்தி, அவர்களுடைய தலையை முகர்ந்து பார்த்து அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினாள். பிறகு தாயிடம் பால் குடிக்கத் தடை செய்யப்பட்ட கன்றுகளைப் போல அவர்கள் மன்னனை {திருதராஷ்டிரனை} வலம்வந்தனர். உண்மையில் அவர்கள் அவனை நிலைத்த பார்வையுடன் கண்டு மீண்டும் மீண்டும் அவனை வலம் வந்தனர்.(48,49) அப்போது திரௌபதியின் தலைமையிலான அந்தக் கௌரவக் குடும்பத்துப் பெண்கள் அனைவரும், சாத்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளின் படி மாமனாரை வழிபட்டு. அவனிடம் அனுமதி பெற்றுக் கொண்டனர்.(50) காந்தாரி மற்றும் குந்தி ஆகியோர் ஒவ்வொருவரையும் தழுவி அவர்களுக்கு ஆசிகூறி, விடை கொடுத்து அனுப்பினர். அவர்களுடைய மாமியார் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொன்னாள். விடைபெற்றுக் கொண்ட அவர்கள் தங்கள் கணவர்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.(51)

அப்போது அங்கிருந்த தேர்வீரர்கள், “பூட்டுங்கள், பூட்டுங்கள்” என்று சொன்ன உரத்த ஒலியும், ஓட்டகங்கள் மற்றும் குதிரைகளின் ஒலிகளும் கேட்டன.(52) மன்னன் யுதிஷ்டிரன், தன் மனைவிகளோடும், துருப்புகளுடனும், உற்றார் அனைவருடனும் ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(53)

புத்ரதர்சன உப பர்வம் முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading