ஸ்ரீ பவிஷ்ய பர்வம்-பகுதி 4–

சிவனின் தொண்டர்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 61-(ஸ்ரீகிருஷ்ண ஸமீபே ஷி²வாக³மநம்)-சிவனின் தொண்டர்கள் குறித்த விவரிப்பு…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “பூதங்களின் முகங்களைக் கொண்டவர்களும், நீண்ட விழிகளுடன் கூடியவர்களும், ஆடிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தவர்களும், விளையாட்டாக ஒருவரையொருவர் அறைகூவி அழைத்தவர்களுமான கண்டாகர்ணன், விரூபாக்ஷன், குண்டதாரன், குமுத்வஹன்,{1} தீர்க்கரோமன், தீர்க்கபுஜன், தீர்க்கபாஹு, நிரஞ்சனன், உருநேத்ரன், ஷதமுகன், ஷதக்ரீவன், ஷதோதரன்,{2} குண்டோதரன், மஹாக்ரீவன், ஸ்தூலஜிஹ்வன், துவிபாஹு, பார்ஷ்வவக்த்ரன், சிம்ஹமுகன்,{3} {திரிபாஹு, பஞ்சபாஹு, தீர்க்காஸ்யன்},{3} வியாக்ர வக்தரன், சிதானனன் ஆகிய கோர ரூபம் கொண்ட அனைவரும் அந்தச் சிவனுடன் இருந்தனர்.{4}

இவர்களைத் தவிர, ஊனுண்ணும், சடலங்களைச் சுமக்கும், குருதியைக் குடிக்கும் எண்ணற்ற பிசாசுகளும் அங்கே இருந்தன.{5} அங்கேயும், இங்கேயும் கிட்டும் சடலங்களைக் கைப்பற்றி உண்ணுந்தொழில் ஒன்றே அவர்களுடையதாகத் தோன்றியது.{6} இந்தப் பிசாசுகள் அனைத்தும் நெடியவையாகவும், பருத்தவையாகவும், குலைந்த வடிவம் கொண்டவையாகவும், நரம்புகள் புடைத்துத் தெரிபவையாகவும் இருந்தன. அவற்றின் சூல நுனிகளில் பல சடலங்கள் தொங்கின.{7} அவற்றில் பலவும் மனிதத் தலைகளை {கபாலங்களை} மாலைகளாக அணிந்திருந்தன, வேறு சில மனிதக் குடல்களால் தங்களை மறைத்திருந்தன.{8}(1-8)

சில டிண்டிமங்களை {உடுக்கைகளை} இசைத்தன, சில திக்குகள் அனைத்தும் எதிரொலிக்கும்படி உரக்கச் சிரித்தன. இந்தப் பிசாசுகளில் கபாலிகர்கள், பைரவர்கள், ஜடிலர்கள், முண்டிகள் ஆகியவை முக்கியமானவையாகத் திகழ்ந்தன.{9} பரமேஷ்வரனை நினைவுகூர்ந்த பெரும் முனிவர்கள் பலரும் வேத மந்திரங்களை ஓதிக் கொண்டே அங்கே வந்தனர். அவர்களில் சிலர் கமண்டலங்களைச் சுமந்து வந்தனர், சிலர் தரையில் குசப்புற்களை விரித்தனர், மேலும் பலர் இடைக்கச்சையை மட்டுமே அணிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் தகுந்த ஜபங்களால் சிவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். இவ்வாறே பெரும் முனிவர்கள் பலரும், பிசாசுகளும், சித்தர்களும், கந்தர்வர்களும் தங்கள் மனைவியரோடு அங்கே வந்தனர்{10-13}.(9-13)

கந்தர்வர்களின் மகள்கள் அனைவரும் திறன்பெற்ற நர்த்தகர்களாகவும், பாடகர்களாகவும் அங்கே ஆடிக்கொண்டிருந்தனர். சங்கரனான சிவனைத் துதிக்கும் வித்யாதரர்களும் அங்கே வந்தனர்.(14) முன்னணியில் அப்சரஸ்கள் ஆடிக் கொண்டிருந்தனர். இவ்வாறே, பிசாசுகள், பூதங்கள், முனிவர்கள், கின்னரர்கள்,{15} பிரமதர்கள் ஆகியோருடன் கூடிய சிவன், விஷ்வேஷ்வரனான விஷ்ணு {கிருஷ்ணன்} தவமியற்றி வரும் இடத்திற்கு வந்தான்.{16} தேவர்களும், லோக பாலர்களும் அங்கே இருந்தனர். சிவன் உமையுடனும், புனித கங்கையுடனும் அங்கே இருந்தான்.{17}(15-17) சர்வலோக பிரபுவான பவன் {சிவன்}, பிரணவ மகத்துவத்தின் அடையாளமாகத் திகழ்ந்தான். தன்னிறைவடைந்தவனும், சடாமுடி தரித்தவனும், ஒப்பற்ற ஆற்றலைக் கொண்டவனுமான அவன் தன் தொண்டர்களின் துணையுடன் ஹரியான விஷ்ணுவைக் காண அங்கே வந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(18) 

விஷ்ணுவின் சிவத்துதி | பவிஷ்ய பர்வம் பகுதி – 62-(ஸ்ரீ விஷ்ணுக்ருதா ஷிவஸ்துதி)-சிவனைத் துதித்த கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “இவ்வாறு பகவான் ருத்திரன்தன் காளை வாகனத்தைச் செலுத்திக் கொண்டும், பூதங்களின் துணையுடனும், எண்ணற்ற பிசாசங்கள், உரகங்கள் ஆகியவற்றுடன் அங்கே வந்தான்.(1) தேவேசனான விஷ்ணு உத்தம தவம் செய்து கொண்டும், விதிப்படி வேள்வி நெருப்பில் புனித ஆகுதிகளைச் செலுத்திக் கொண்டும் இருப்பதை அவன் கண்டான்.(2) தலைவன் கிருஷ்ணன் ஒரு வேட்டியையும், சாதரத்தையும் {துண்டையும்} அணிந்திருந்தான், அவனது முடி சடையாக இருந்தது. கருடன் அவனுக்கு விறகுகளைக் கொண்டு வந்தான், சக்கரம் மலர்களைக் கொண்டு வந்தது, திரிசூலம் குசப்புற்களைக் கொண்டு வந்தது. கதாயுதம் பிற தொண்டுகளைச் செய்து வந்தது. அந்தத் தலைவன் இந்திரன் தலைமையிலான தேவர்களாலும், பெரும் முனிவர்களாலும் சூழப்பட்டிருந்தான்.(3,4)

அப்போது பிரபுவான பகவான் {கிருஷ்ணன்} சர்வபூதங்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஏதோவொன்றைத் தியானித்துக் கொண்டிருந்தான். முக்கண்ணனும், அமைதிமிக்கவனும், மகத்தானவனுமான உமாபதி {சிவன்}, அவனை {கிருஷ்ணனைக்} கண்டு தன் வாகனத்தில் இருந்து கீழே இறங்கினான். பெரும் நிறைவடைந்த தலைவன் சிவன், பூதங்கள், பிசாசங்கள், ராக்ஷசர்கள், குஹ்யகர்கள்,{5,6} முனிவர்கள், விப்ரர்கள் ஆகியோருடன் சேர்ந்து, “தேவா {கிருஷ்ணா}, ஜகந்நாதா, உனக்கு ஜயம் உண்டாகட்டும். ருத்திரனாக விரிவடையும் ஜனார்த்தனா, உனக்கு ஜயம் உண்டாகட்டும்.(5-7) விஷ்ணுவே {நீக்கமற நிறைந்தவனே}, ரிஷிகேசா {புலன்களை வென்றவனே}, நாராயணா, உனக்கு ஜயம் உண்டாகட்டும். பராயணா {தஞ்சம் அளிப்பவனே}, புராணாத்மா {புராதன தேவா}, ஹரேஷ்வர {சிவனுக்குத் தலைவனான} தேவா, உனக்கு ஜயம் உண்டாகட்டும்.(8) ஆதிதேவா, ஜகந்நாதா, உனக்கு ஜயம் உண்டாக்கடும். சங்கரப் பாவனா {சங்கரனின் பிறப்பிடமே, உயிரினங்களைக் காப்பவனே}, உனக்கு ஜயம் உண்டாகட்டும். கௌஸ்துப மணியால் ஒளிரும் அங்கங்களைக் கொண்டவனே, உனக்கு ஜயம் உண்டாகட்டும். பஸ்மவிராஜிதா {சாம்பல் பூசிய உடல் கொண்டவனே} உனக்கு ஜயம் உண்டாகட்டும்.(9) சக்கரகதாபாணியே, உனக்கு ஜயம் உண்டாகட்டும். சூலிந்திரிலோசனா {சூலம் தரித்தவனே, முக்கண்ணனே}, உனக்கு ஜயம் உண்டாகட்டும். மௌக்திகமுத்துக்களால் அங்கங்கள் ஒளிர்பவனே, உனக்கு ஜயம் உண்டாகட்டும். நாகவிபூஷணா {பாம்புகளின் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனே}, உனக்கு ஜயம் உண்டாகட்டும்” {என்றான் சிவன்}.(10)

முனிவர்கள் இந்த வணக்கமொழிகளைச் சொல்லிவிட்டு அந்த ஹரியை வணங்கினர். பகவான் {கிருஷ்ணன்}, செந்நீல வண்ணனும், பொருளின் இயல்பை ஆள்பவனும், பாவங்களை அழிப்பவனும், காளையைக் கொடியாகக் கொண்டவனுமான சங்கரனைக் கண்டபோது இதயம் நிறைவடைந்தவனாக மஹாதேவனைப் பின்வருமாறு துதித்தான்:(11,12)

பகவான் {கிருஷ்ணன்} சொன்னான்: “நஞ்சுண்டு கண்டம் {தொண்டை} நீலமடைந்த நீலகண்டா, படைப்பவனும், பிரகாசம் கொண்டவனும், உபவாசங்களில் சிறந்தவனுமான உன்னை நான் வணங்குகிறேன்.(13) இந்த அண்டத்தில் அனைத்தையும் ஆள்பவனே, கதாதாரியே, ரிஷப ரூபம் கொண்ட மொத்த அண்டத்தையே உடலகாகக் கொண்டவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(14)

பொருள் வடிவமற்றவனே, பிநாகாபாணியே, துன்புற்றவர்களின் உற்ற நண்பனே, மங்கல வடிவம் கொண்ட சிவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(15) தன்னில் நிறைவடைந்தவனாக இருந்தாலும், பொல்லாதவர்களைக் கொல்பவனே, மலைகளில் வசிப்பவனே, முற்றான அமைதியாகவும், பெரும் மங்கலனாகவும் திகழ்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(16)

ஹரனே, ஹரிஹரனே, கோரனே {பயங்கரனே}, அகோரனே {பயங்கரமற்ற மென்மையானவனே}, கோரனுக்கும், அகோரனுக்கும் பிரியனே, உன்னை நான் வணங்குகிறேன்.(17) கால ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டவனே, காலத்தைக் கட்டுப்படுத்துபவனே, இரண்டாம் நிலை படைப்பாளிகளைப் படைப்பவனே, கிரிகளில் வசிப்பவனே, சாந்தமானவனே, மங்கலமான சிவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(18)

பெரு வடிவம் கொண்டவனே, புனிதத்தலங்களை மாசடையச் செய்யும் அசுரர்களை அழிப்பவனே, பரம வசிப்பிடமே, இருப்பில் உள்ள அனைத்தின் மூல வித்தே, எட்டு வடிவங்களில் வெளிப்படுபவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(19) புலித்தோலுடுத்தியவனே, பினாகாபாணியே, திரிசூலந்தரித்தவனே, கட்வாங்கம் கொண்டவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(20)

தேவதேவனே, ஆகாசமூர்த்தியே, ஹரனே, ஹரிரூபனே, பேரொளி படைத்தவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(21) பக்தனே, பக்தனுக்குப் பிரியமானவனே, பக்தர்களுக்கு அருள்பவனே, வான விரிவையே வடிவமாகக் கொண்ட ஜகன்மூர்த்தியே, உன்னை நான் வணங்குகிறேன்.(22)

சந்திரதேவா, சூரியதேவா, பிரதான தேவனே, பூதபதியே உன்னை நான் வணங்குகிறேன்.(23) சடாமுடியுடன் பயங்கர வடிவம் கொண்டவனே, வழக்கத்திற்கு மாறான அலங்காரம் கொண்டவனே, பூதங்களுக்கு {உயிரினங்களுக்கு} நன்மை செய்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(24)

சூரியக்கதிர்களைப் போன்ற பிரகாசமான கேசத்தைக் கொண்டவனே, வில் தரிப்பவர்களில் முதன்மையானவனே, பக்தர்களின் இதயங்களில் உள்ள அச்சங்களை விலக்குபவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(25) பகைவரின் இதயங்களில் அச்சத்தை உண்டாக்கும் ஹரனே, தக்ஷனின் வேள்வியை அழித்தவனே, பகனின் கண்களைப் பறித்தவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(26)

பவனென அறியப்படும் உமாபதியே, கைலாயத்தில் வசிப்பவனே, படைப்பின் ஆதி தேவா, அண்டத்தைப் புறவடிவாகக் கொண்டவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(27) கபாலத்தைக் கைகளில் தாங்கியவனே, பிரம்மனின் ஐந்தாம் தலையைக் கொய்தவனே, முக்கண்களைக் கொண்டதால் திரையம்பகன் என்று அழைக்கப்படும் சிவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(28)

சந்திரசேகரா, வரம் வேண்டுபவருக்கு வரம் அருள்பவனே, வேள்வியில் விறகாகவும், அரிசியாகவும், நெய்யாகவும், குசப்புல்லாகவும் இருப்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(29) எல்லையற்ற சக்தி கொண்டவனே, நாகபாசத்தை ஆயுதமாகக் கொண்டவனே, துதிக்கத்தக்க பல்வேறு வடிவங்களைக் கொண்டவனே, பத்ரபானத்தை விரும்புபவனே, உன்னைநான் வணங்குகிறேன்.(30)

சுடலையில் வசிப்பவனே, ஜயசப்தத்தை விரும்புபவனே, இதுவரை இல்லாத ஆற்றலை வெளிப்படுத்த விரும்புபவனே, பலம், வீரம் ஆகியவற்றின் உடல்வடிவமாகத் திகழ்பவனே,(31) மங்கலப் பொருட்களை விரும்புபவனே, மங்கலமிக்கவனே, மஹாகோரமாக இருந்தாலும் கவர்ச்சிமிக்க மங்கல வடிவைக் கொண்டவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(32)

மணிகளை விரும்புபவனே, உன்னையும், உன் தேரையும் மணிகளால் அலங்கரிப்பவனே, பகைவரை எதிர்க்கும்போது கடும் வடிவை வெளிப்படுத்த விரும்புபவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(33) உடையற்ற வடிவில் நிறைவடைந்து உடையின்றிச் செல்பவனே, உயிரினங்கள் அனைத்தின் உறைவிடமாகத் திகழ்பவனே, எங்கும் இன்பமாக வசிப்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(34) உயிரினங்கள் அனைத்தின் உயிராகவும், ஆன்மாவாகவும் திகழ்பவனே, உன்னை வழிபடுபவர்களுக்கு அனைத்து வகை மாய வளங்களையும் அருள்பவனே, வாமனதேவா, மஹாதேவா, உன்னை நான் வணங்குகிறேன்.(35)

எந்தச் சொற்களால் உன் மகிமைகளை முழுமையாகச் சொல்ல முடியும்? எவனால் உன் மகிமைகளை முழுமையாகச் சொல்ல முடியும்? எவனுடைய நாவால் உன் புகழை முறையாய் விளக்க முடியும்?(36) ஹரனே, பகவானே, என் குற்றங்களைப் பொறுப்பாயாக. நான் உன் பக்தன் என்பதை அறிந்து என்னைக் காப்பாயாக. சர்வபூதேசா, சர்வாத்மனா, உலகில் உள்ள அனைவரின் நன்மைக்காக நீ செயல்படுவாயாக. பக்தர்களிடம் அன்பு கொண்ட நீ அவர்களுக்குப் புகலிடம் அளிப்பாயாக” {என்றான் கிருஷ்ணன்}”.(37,38) 

கிருஷ்ணனைத் துதித்த சிவன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 63-(ஸ்ரீ ஷிவக்ருதா விஷ்ணுஸ்துதி)-கிருஷ்ணனைத் துதித்த சிவன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “காளைக்கொடி கொண்டவனும், சூலபாணியும், சாக்ஷாத் உமாபதியுமான அந்த தேவன், கருடக்கொடி கொண்ட விஷ்ணுவின் கைகளைப் பற்றிக் கொண்டு, தேவர்கள் அனைவரும், பெரும் முனிவர்களும் கேட்கும் வகையில் பின்வருமாறு பேசினான்:(1,2) “தேவதேவேசா, சக்கரபாணியே, ஜனார்த்தனா, என்ன காரணத்திற்காக நீ இங்கே தவம் செய்து கொண்டிருக்கிறாய்? நான் செய்ய வேண்டியதென்ன? உனது பிரார்த்தனை என்ன?(3) நீயே நேரடியாக நித்தியனான விஷ்ணு எனும்போது அனைத்து வகைத் தவங்களின் இலக்காக நீயே இருக்கிறாய். ஜனார்த்தனா, ஜகத்பதியே, மகத்தான மகனை அடையும் விருப்பத்தில் நீ இந்தத் தவத்தைச் செய்கிறாய் என்றால் அத்தகைய மகனை நான் உனக்கு ஏற்கனவே கொடுத்துவிட்டேன் என்று அறிவாயாக. பகவானே அதன் காரணத்தை இப்போது கேட்பாயாக.(4,5)

பூர்வத்தில் கிருத யுகத்தில், ஏதோவொரு காரியத்திற்காக நான் பத்தாயிரம் வருடங்கள் மஹாகோர தவம் இருந்தேன்.(6) தேவேசா, அந்த நேரத்தில் என் மனைவி பவானி {பார்வதி}, தன் தந்தையின் ஆணையின் பேரில் தொடர்ந்து எனக்குத் தொண்டாற்றி வந்தாள்.(7) தேவா, என் தவத்தைக் கண்டு அஞ்சிய இந்திரன், என் கவனத்தைச் சிதறடிக்கக் காமதேவனை அனுப்பினான். காமதேவனும், தன் நண்பன் வசந்தனுடன் என் எதிரில் வந்தான்.(8) ஹரியே, மலர்களைத் திரட்டியும், பிற பணிகளைச் செய்தும் பார்வதி எனக்குத் தொண்டாற்றி வரும்போது என் முன் வந்த காமதேவன், தன் கணையில் குறி பார்த்தான்.(9) தேவேசா, இதைக் கண்ட நான் என் நெற்றியில் இருந்த மூன்றாம் கண்ணில் நெருப்பு வெளிப்படும் அளவுக்குச் சீற்றமடைந்தேன்.(10)

விஷ்ணுவே, அவ்வாறே காமதேவன் சாம்பலாக எரிக்கப்பட்டான். அதன்பிறகுதான் காமன், இந்திரனின் ஆணையின் பேரில் அந்தக் காமன் என் முன் வந்தான் என்பதை அறிந்தேன்.(11) தேவேசா, ஜனார்த்தனா, பிறகு நான் காம தேவன் மேல் கருணை கொண்டேன். இதை அறிந்த பிரம்மன் அவனுக்குப் புதிய உடலை வழங்கும்படி என்னைத் தூண்டினான்.(12) ஜகத்பதியே, அந்தக் காமதேவன் உன் மகனாகப் பிறக்கும் ஏற்பாட்டை நான் செய்திருக்கிறேன். அவன் பிரத்யும்னன் என்ற பெயரில் அழைக்கப்படுவான். இந்த மகனைப் பெற்றுக் கொண்ட பிறகு அவனே காம தேவன் என்பதை நீ அறிவாயாக” என்றான் {சிவன்}.

இதைச் சொன்னபிறகு மஹாதேவனும், உமாதேவியும் தங்கள் கரங்களைக் குவித்துக் கொண்டு, அங்கே கூடியிருந்தவர்களும், தலைவனின் மகிமைகளை அறிய ஆவலுடன் இருந்தவர்களுமான முனிவர்கள் அனைவரிடமும் கிருஷ்ணனின் ஆழமான குண இயல்புகளையும், அவனது உண்மையான அடையாளத்தையும் சொல்லத்தொடங்கினர். குருவின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, மஹாதேவன் கரங்குவிப்பதைக் கண்ட தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், கின்னரர்களும், தேவதேவஷ்வரனும், விஷ்ணுவுமான ஸ்ரீ கிருஷ்ணனின் எதிரில் தங்கள் கைகளைக் கூப்பியபடியே நின்றனர்.(13-17)

அப்போது மஹேஷ்வரன், “சாங்கிய தத்துவத்தைக் கற்றறிந்த ஞானிகள், மஹாதத்வத்தின் மூலக்காரணமாக முற்றான உண்மையையும், இரண்டாம் காரணமாகப் பொருளின் இயல்பையும் {பிரகிருதியையும்} சொல்கின்றனர்.(18) நுட்பமான பொருளியல்பு பிரதானம் என்று அறியப்படுகிறது. அதுவே வெளிப்பட்டிருக்கும் அண்டத்திற்கான உடனடி காரணமாகும். பொருளியல்பு {பிரகிருதி} என்பது, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களைக் கொண்டதாகும். சாங்கிய தத்துவத்தைக் கற்றறிந்த அறிஞர்கள், நீயே பொருளியல்பின் மூலக்காரணன் என்பதை அறிவார்கள். விஷ்ணுவே, உன் சக்தியின் மாற்றமே பொருளியல்பாகும் {பிரகிருதியாகும்}, நீயே பொருள் சக்தியின் தேவனுமாவாய்.(19,20) மகத் தத்துவத்தில் இருந்து போலியான அகங்காரம் உண்டானது. ஜகந்நாதா, படைப்பின் தொடக்கமான பிரதானத்தில் இருந்து வெளிப்பட்டிருக்கும் மஹத் தத்துவத்தின் காரணன் நீயே ஆவாய்.(21)

பிரபுவே, தேவா, அகங்காரத்தில் இருந்து ஐந்து பூதங்களும் உண்டானதைப் போலவே, புலன்நுகர் பொருட்களும், {சுவை, ஒளி [காட்சி], ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய} ஐந்து தன்மாத்திரைகளும் உண்டாகின.(22) ஜகத்பதியே, ஐம்பூதங்களும் உன் சக்தியின் வெளிப்பாடே ஆகும். நீயே அவற்றைக் கட்டுப்படுத்துபவனாக இருக்கிறாய். பிருத்வி {நிலம்}, வாயு {காற்று}, ஆகாசம் {ஆகாயம்}, அப்பு {நீர்}, ஜ்யோதி {ஒளி / நெருப்பு} ஆகியவை பஞ்சபூதங்களாகும்.(23) கண்கள், மூக்கு, தோல், நாக்கு, காதுகள் ஆகியன ஐந்தும் அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்} ஆகும். மனம், ஐம்புலன்களையும் அதனதனுக்குரிய பொருள்களுடன் தொடர்புகொள்ளத் தூண்டுவதால் ஆறாவது புலனாக அழைக்கப்படுகிறது.(24) ஜனார்த்தனா, வாக்கு முதலிய ஐந்து செயற்புலன்களும் {வாய், கை, கால், மலவாய், கருவாய் என்ற கர்மேந்திரியங்களும்} இருக்கின்றன. ஒவ்வொருவரின் இதயத்திலும் பரமாத்மா இருப்பதால், நீயே அந்தப் புலன்களை அதனதனுக்குரிய செயல்பாடுகளில் மன இயக்கத்தின் கீழ் ஈடுபடுத்துகிறாய். தேவேசா, ஒவ்வொரு புலனுக்கும் தகுந்த கடமைகளை நீயே பரிந்துரைக்கிறாய்.(25,26)

ரஜஸ் குணத்தில் ஈடுபட்டு நீ அண்டத்தைப் படைக்கிறாய். சத்வ குணத்தில் ஈடுபட்டு அதைப் பராமரிக்கிறாய், தமஸ் குணத்தில் ஈடுபடுவதன் மூலம் அண்ட வெளிப்பாட்டை அழிக்கிறாய். இவ்வாறே அனைத்தையும் கட்டுப்படுத்தும் உயர்ந்தவனாக, சத்வ, ரஜஸ், தமஸ் குணங்கள் என்ற பொருளியல்பின் {பிரகிருதியின்} முக்குணங்களின் மூலம் அண்ட வெளிப்பாட்டை உண்டாக்கி, பராமரித்து, அழிக்கிறாய். மாதவா, பண்பட்ட ஆன்மாக்களின் இதயங்களில் இருந்தபடியே அவர்களை நீ புலன்களில் இன்புற்றிருக்கச் செய்கிறாய். எனவே, நீயே அனைத்து வகை இன்பங்களுக்கும் காரணனாக இருக்கிறாய்.(27-30)

பிரபுவே, பிரம்மாவின் வடிவில் நீயே படைக்கிறாய், விஷ்ணுவின் வடிவில் நீயே பராமரிக்கிறாய், ருத்திரனின் வடிவில் நீயே அழிக்கிறாய். இவ்வாறே முக்குணங்களின் அவதாரங்களாக நீயே வெளிப்பட்டிருக்கிறாய்.(31) பூமி {நிலம்}, அப்பு {நீர்}, அனலம் {நெருப்பு}, வாயு {காற்று}, வானம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எட்டும் உன்னிடமுள்ள தனித்தனி பொருள் சக்திகள் ஆகும்.(32) ஆயிரக்கணக்கான தலைகளும், ஆயிரக்கணக்கான கண்களும், ஆயிரக்கணக்கான கைகளும், கால்களும் கொண்ட அண்ட வடிவில் நீ வெளிப்படுகிறாய். இந்திரனின் தலைமையிலான தேவர்களின் வடிவங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வடிவங்களிலும் நீ வெளிப்படுகிறாய்.(33) ஏழு த்வீபங்களும் {கண்டங்களும்}, ஏழு கடல்களையும் கொண்ட உலகில் நீ நீக்கமற நிறைந்திருக்கிறாய். வெளிப்படாத வடிவில் நீ எங்கும் இருக்கிறாய். எனினும், அண்டத்தின் மேலே பத்து அங்குலத்தில் இருப்பதாக உருவகமாகச் சொல்லப்படுகிறாய்.(34)

வெளிப்பட்டோ, வெளிப்படாமலோ உள்ள பொருள் இயல்புகளின் காரணன் நீயே. ஜனார்த்தனா, உன் புறவடிவம் அண்ட வெளிப்பாட்டைக் கொண்டதாகும்.(35) ஜகந்நாதா, அந்த அண்ட வடிவின் வாயில் இருந்து, வேத கல்வியை முதலாகக் கொண்ட ஆறு தொழிற்கடமைகளில் ஈடுபட்டு உலகத்தைப் பாதுகாக்கும் பிராமணர்கள் தோன்றினார்கள்.(36) க்ஷத்திரியர்கள் உன் தோள்களில் இருந்து உண்டானார்கள், வைசியர்கள் உன் வயிற்றில் இருந்தும், சூத்திரர்கள் உன் கால்களில் இருந்தும் உண்டானார்கள்.(37)

தேவேசா, இவ்வாறே நான்கு வர்ணங்களும் உன் உடலில் இருந்து உண்டானவை. குளிர்ந்த கதிர்களுடன் உயிரினங்கள் அனைத்திற்கும் இன்பத்தை அளிப்பவனான சந்திரன், உன் மனத்தில் இருந்து தோன்றினான். உயிரினங்கள் அனைத்தின் கண்களாகக் கருதப்படுபவனான சூரியன், உன் கண்களில் இருந்து தோன்றினான். அவனுடைய கதிர்களாலேயே மொத்த உலகமும் ஒளியூட்டப்பட்டது. இந்திரனும், அக்னியும் உன் வாயில் இருந்து உண்டானார்கள், வாயு உன் உயிர் மூச்சில் இருந்து உண்டானான்.(38-40) ஜனார்த்தனா, உன் உந்தியில் இருந்து வெளி உண்டானது. கோபதியே, மஹாகோரமான தியுலோகம் உன் தலையில் தோன்றியது.(41) ஜகத்பதியே, உன் கால்களில் இருந்து பூமி வெளிப்பட்டது, உன் காதுகளில் இருந்து திசைகள் உண்டாகின. இவ்வாறே நீயே மொத்த அண்டத்தைப் படைத்து அதில் படர்ந்தூடுருவி நீக்கமற நிறைந்தாய்.(42)

கேசவா, அண்டம் முழுவதும் நீயே நீக்கமற நிறைந்திருப்பதால் {வியாபித்திருப்பதால்} விஷ்ணு என்று அறியப்படுகிறாய்.(43) முக்காலத்தையும் அறிந்தவனே, நீரில் (நாரா) கிடப்பதால் {அயண}, நீ நாராயணன் என்று அறியப்படுகிறாய்.(44) தேவா, உயிரினங்களின் துன்பங்களை அழிப்பதால் {ஹரம் செய்வதால்} நீ ஹரி என்ற பெயரைப் பெற்றாய். பிறருக்கு நன்மை செய்வதால் நீ சங்கரன் என்றும் கொண்டாடப்படுகிறாய்.(45) எப்போதும் பெருகும் பெரியவனாக இருப்பதால் நீ பிரம்மன் என்று குறிப்பிடப்படுகிறாய். மதுவை (புலன்களை) அடக்கியதால் நீ மதுசூதனன் என்று கொண்டாடப்படுகிறாய்.(46) விஷ்ணுவே, கேசவா, புலன்களை {இந்திரியங்களை / ரிஷிகங்களை} நீ வென்றவனானதால் ரிஷிகேசன் என்று அழைக்கப்படுகிறாய்.(47) “க” என்பது பிரம்மனைக் குறிக்கும், “ஈசன்” என்பது உடல்படைத்த ஆன்மாக்களைக் கட்டுப்படுத்துபவனான என்னைக் குறிக்கும். நாங்கள் இருவரும் உன் உடலில் இருந்து உண்டாக்கப்பட்டதால் நீ கேசவன் என்று அறியப்படுகிறாய்.(48) பகவானே, “மா” என்றால் வித்யை {அறிவு} ஆகும். நீ அதன் தலைவனான “தவன்” ஆவாய் என்பதால் நீ மாதவன் என்று அழைக்கப்படுகிறாய். தவன் என்ற சொல் தலைமைத் தன்மையைக் குறிக்கும்.(49) “கௌ” என்பது வேத தீர்மானங்களைக் குறிக்கும். அவற்றை நீ நன்றாக அறிந்தவன் என்பதால் கோவிந்தன் என்றழைக்கப்படுகிறாய்.(50) முனிவர்களில் முதன்மையானவர்கள் மூன்று வேதங்களை “திரி” என்று குறிப்பிடுவார்கள். நீ வேத அறிவைக் கடந்தவனாக இருப்பதால் திரிவிக்கிரமன் என்று அறியப்படுகிறாய்.(51) நீ நுட்பமானவனாக இருப்பதால் வாமனன் என்று அறியப்படுகிறாய். சிந்திப்பவர்களில் நீ முதன்மையானவனாக இருப்பதால் முனி என்று அழைக்கப்படுகிறாய். மனத்தைக் கட்டுப்படுத்தியவன் என்பதால் யதி என்று அழைக்கப்படுகிறாய்.(52) தவங்களைச் செய்வதால் நீ தபஸ்வி என்றழைக்கப்படுகிறாய். பூதங்கள் {உயிரினங்கள்} அனைத்தும் உன்னில் வசிப்பதால் பூதவாசன் என்று அழைக்கப்படுகிறாய்.(53) பூதங்கள் {உயிரினங்கள்} அனைத்திற்கும் நீ ஈசனாகத் திகழ்வதால் ஈசுவரன் என்று அழைக்கப்படுகிறாய். பிரபுவே, வேத மந்திரங்கள் அனைத்திலும் ஓங்காரம் உன்னைப் பிரதிபலிக்கிறது. சந்தஸ்களில் நீ காயத்ரியாக இருக்கிறாய்.(54)

அக்ஷரங்களில் {எழுத்துகளில்} நீ அகரமாக இருக்கிறாய். உண்மையில் எழுத்துகள் அனைத்தின் நித்திய பொருளாக நீயே இருக்கிறாய். ருத்திரர்களில் நீ சங்கரனாகவும், வசுக்களில் நீ பாவகனாகவும் இருக்கிறாய்.(55) மரங்களில் நீ புனித அசுவத மரமாக இருக்கிறாய். உயிரினங்களின் ஆன்ம குருவாகப் பிரம்மனாக இருக்கிறாய். மலைகளில் நீ மேருவாக இருக்கிறாய். தேவ முனிவர்களில் நீ நாரதனாக இருக்கிறாய்.(56) தைத்திய தானவர்களில் நீ பெரும்பக்தனான பிரகலாதனாகவும், சர்ப்பங்களில் நீ வாசுகியாகவும் இருக்கிறாய்.(57) குஹ்யகர்களில் தேவர்களின் கருவூல அதிகாரி குபேரனாக இருக்கிறாய். நீர் வாழ் உயிரினங்களில் அவற்றின் தலைவனான வருணனாக நீ இருக்கிறாய். புனித ஆறான கங்கை உன்னையே பிரதிபலிக்கிறாள்.(58) இருப்பின் தொடக்கமாகவும், நடுப்பகுதியாகவும், முடிவாகவும் நீயே இருக்கிறாய். இந்த அண்டம் உன்னில் இருந்து வெளிப்பட்டிருக்கிறது. முடிவில் அது மீண்டும் உன்னில் கலந்து விடும்.(59)

ஜனார்த்தனா, ஜகத்பதியே, நான் உன்னில் இருந்து வேறுபட்டவனல்ல, நீயும் என்னில் இருந்து வேறுபட்டவனல்ல. நமக்கிடையில் எந்த வேறுபாட்டையும் ஒருபோதும் காணமுடியாது.(60) கோவிந்தா, இவ்வுலகில் துதிக்கப்படும் உன்னுடைய புனிதப் பெயர்கள் அனைத்தும் என் பெயர்களுமாகும். எவருக்கும் வேறு வகையில் சிந்திக்கக் காரணமில்லை.(61) தேவேசா, கோபதியே, உன்னை வழிபடுவதும், என்னை வழிபடுவதும் ஒன்றே. உன்னிடம் பகை கொண்டவர் எனக்கும் பகையாளி என்பதில் ஐயமில்லை.(62) தேவா, நான் உன் விரிவாக இருப்பதால் நானும் உயிரினங்களின் தலைவனாகக் கருதப்படுகிறேன். உன்னைக் கடந்ததோ, உன்னில் காணப்படாததோ ஏதுமில்லை.(63) ஜகத்பதியே, தேவேசா, முக்காலங்களில் இருக்கும் எதுவும் நீயின்றி வேறில்லை. உன்னையன்றி இருப்பில் வேறொன்றும் இல்லை.(64)

பிரபுவே, தேவர்கள் எப்போதும் உன் ஆழ்ந்த குணங்களைத் துதிக்கிறார்கள். நித்தியமான ரிக், யஜூர், சாம வேதங்களாக நீயே இருக்கிறாய்.(65) அனைத்தின் பிறப்பிடமாகத் திகழ்பவனே, இன்னும் வேறு என்ன சொல்ல? ஒரு வகையில் நீ அனைத்துமாக இருக்கிறாய், இருப்பினும் நீ அனைத்தில் இருந்தும் வேறுபட்டவனாகவும் இருக்கிறாய். விஷ்ணுவே, மாதவா, கேசவா, அனைத்து வகையிலும் நான் உன்னை வணங்குகிறேன்.(66) ஈசுவரனே, நான் உன்னை வணங்குகிறேன். ஹரியே நித்தியம் நான் உன்னை வணங்குகிறேன். உந்தியில் தாமரை மலரைக் கொண்டவனே, சர்வாத்மனே உன்னை நான் வணங்குகிறேன்” {என்றான் சிவன்}”.(67) 

கிருஷ்ண ஸ்வரூபம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 64-(மஹாதேவேந கிருஷ்ணஸ்வரூபவர்ணநம்)-கிருஷ்ணனின் ஸ்வரூபத்தை முனிவர்களிடம் விளக்கிச் சொன்ன சிவன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “சிவன், அந்தத் தேவதேவேசனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வாறு சொல்லிவிட்டு முனிவர்களிடம் திரும்பி, “விப்ரர்களே, ஹரியைக் காண வந்திருக்கும் பக்தர்களான நீங்கள் அனைவரும் இவனைக் குறித்த இந்த உண்மையை அறிய வேண்டும்.(1) இந்தத் தேவனே பரம்பொருளாவான். இவனுக்கு இணையாகவோ, மேன்மையாகவோ வேறெவரும் இல்லை. இவனே நீங்கள் செய்யும் தவங்களின் இறுதி இலக்காவான். இந்த உண்மையை நீங்கள் அறிவீராக.(2) விப்ரர்களே, சிதறாத கவனத்துடன் இவனைத் தியானிப்பதையே வழக்கமான பயிற்சியாக நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இவனை அறிந்து கொள்வதே உங்களுக்கு முழுமையை அளிக்கும், அதுவே உங்கள் பரம தனமாகவும் இருக்கும்.(3)

இவனை அறிந்து கொள்வதே உங்கள் பிறப்பின் இறுதி வெற்றியாகவும், உங்கள் தவங்களின் பலனுமாக இருக்கும். உண்மையில் இவனை அறிந்து கொள்வதே உங்கள் புண்ணியங்களின் கொள்ளிடமும், உங்கள் சநாதன தர்மமுமாகும்.(4) இவனே உங்களுக்கு மோட்சத்தை அருள்வான். இவனே எடுத்துக்காட்டாக இருந்து இதை உங்களுக்குக் கற்பிப்பான். இவனே புண்ணியத்தை அருள்வான், இவனே உங்கள் நற்செயல்களில் பலனாகவும் இருப்பான்.(5)

ஆன்ம அறிவியலைக் கற்றறிந்த அறிஞர்கள் இவனையே துதிக்கின்றனர். இவனே மூன்று வேதங்களின் இறுதி இலக்காவான். பிரம்மத்தை அறிந்த பிரம்மவாதிகள் இவனது தாமரைப் பாதங்களை அடைய இவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றனர்.(6) சாங்கிய தத்துவத்தைப் பின்பற்றி மாயா யோகத்தை நித்தம் பயிலும் கல்விமான்களும் இவனையே துதிக்கின்றனர். வேதங்களை நன்கறிந்த கல்விமான்கள், தன்னை அறிந்து கொண்ட ஆன்மாக்கள் அனைத்தின் இறுதி இலக்காக இவனையே ஏற்கின்றனர்.(7) இது சச்சரவில்லா உண்மை என்பதால், இக்காரியத்தை மேலும் கருத்தில் கொள்ள ஏதுமில்லை. எப்போதும் சத்வ குணத்துடன் இருக்கும் உங்களைப் போன்ற பக்தர்கள் ஹரியையே நித்தம் தியானிக்க வேண்டும்.(8)

நீக்கமற நிறைந்திருக்கும் நாராயணனுக்கு மேலானவன் எவனுமில்லை. விப்ரர்களே, நீங்கள் எப்போதும் ஓங்காரத்தைச் சொல்லி கேசவனைத் தியானிப்பீராக.(9) அவ்வாறு செய்வதால் நீங்கள் உங்கள் வாழ்வின் இறுதி இலக்கை அடைவீர்கள். இதில் ஐயமேதும் இல்லை. ஒரு பக்தன் ஹரியைத் தியானித்தால் இவன் எளிதில் நிறைவடைகிறான்.(10) விப்ரர்களே, விஷ்ணு உங்களிடம் நிறைவடைந்தால், உங்களைப் பொருள் பற்றில் இருந்து விடுவிப்பான். அச்யுதனின் தொடர்பை அடைய நீங்கள் விரும்பினால் இடையறாமல் இவனைத் தியானிப்பீராக.(11)

விஷ்ணுவை உங்கள் ஆன்ம குருவாகக் கருதுவீராக. இவன், பொருள் பற்றின் காரண வேரான உங்கள் அறியாமையை அகற்றுவான். எனவே, முக்குண அவதாரங்களெனப் பிரம்மன், விஷ்ணு, சிவனை ஏற்கும் நீங்கள் எப்போதும் ஹரியை நினைத்துத் துதிக்க வேண்டும்.(12) விப்ரர்களே, தவப்பயிற்சியால் சக்தியூட்டப்பட்ட நீங்கள் எப்போதும் கவனமாக உங்கள் மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் மனமும், புலன்களும் உங்களுக்குக் கட்டுப்படுவதன் மூலம் தூய்மையடைந்துவிட்டால் உங்களிடம் விஷ்ணு நிறைவடைவான்.(13)

விப்ரர்களே, நீங்கள் என்னை நினைத்தால், நான் கேசவனைக் குறித்த ஞானத்தை உங்களுக்குக் கொடுப்பேன். இவனை வழிபடுவதால், தானாகவே நானும் வழிபடப்பட்டவனாவேன்.(14) இவனை அடையும் உபாயங்களை விளக்கிச் சொன்ன என்போதனைகளில் நீங்கள் ஐயமேதும் கொள்ளாதீர். பாவம் நிறைந்த உணர்வுகள் அனைத்தையும் அழிக்கும் இந்தப் பிரபுவே மாயையின் தலைவனாவான். எனவே நீங்கள் அனைவரும் இவனது தாமரைப் பாதங்களை அடைய முயற்சி செய்ய வேண்டும்.(15) விப்ரேந்திரர்களே, உங்கள் நற்புத்தி சுட்டும் வழியில் செயல்படுவீராக, அவ்வாறு செயல்படுவதால் நீங்கள் தூய்மையடைவீர்கள். அவ்வாறே தேவனும் உங்களிடம் நிறைவடைவான்” {என்றான் சிவன்}”.(16)

வைசம்பாயனர் சொன்னார், “மன்னா {ஜனமேஜயா}, சங்கரன் பேசியதைக் கேட்ட அந்தப் புண்ணியச் சீலர்கள் அனைவரும், அவனது போதனைகளை ஏற்றுத் தங்கள் மனங்களில் இருந்த ஐயங்கள் அனைத்திலிருந்தும் தெளிவடைந்தனர்.(17)

அந்த விப்ரர்கள் அனைவரும் கூப்பிய கரங்களுடன் மஹாதேவனிடம் {சிவனிடம்}, “ஹரனே, நீ சொன்னது அனைத்தும் உண்மையே. எங்கள் ஐயங்கள் மறைந்தன. உன் தீர்மானங்களை முழுமையாக நாங்கள் ஏற்கிறோம்.(18) தேவா, இந்தக் காரியத்திற்காகவே உன்னுடைய வசிப்பிடத்திற்கு இன்று நாங்கள் வந்தோம். உங்கள் இருவரையும் சந்தித்ததால், எங்கள் மாயைகள் விலகின.(19) தேவேசா, உன் போதனைகளைப் பின்பற்றுவதிலேயே எங்களுக்கான உண்மையான நன்மை இருக்கிறது. உன்னால் பரிந்துரைக்கப்பட்டபடியே நாங்கள் எப்போதும் ஹரியை நிறைவடையச்செய்ய முயற்சிப்போம்” என்றனர் {முனிவர்கள்}. பகவான் ருத்திரனிடம் இவ்வாறு சொன்ன அந்த முனிவர்கள் அனைவரும் கேசவனின் தாமரைப் பாதங்களில் விழுந்து வணங்கினர்” {என்றார் வைசம்பாயனர்}.(20) 

சிவனின் விஷ்ணுத்துதி | பவிஷ்ய பர்வம் பகுதி – 65-(புநரபி ஷிவக்ருதா விஷ்ணுஸ்துதி)-கிருஷ்ணனைத் துதித்த சிவன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அதன்பிறகு முனிவர்கள் ஆச்சரியப்படும் வகையில் ருத்திரன், விஷ்ணுவும், விஷ்வேஷ்வரனுமான ஹரியை மீண்டும் துதிக்கத் தொடங்கினான். முனிவர்களும் குவிந்த கவனத்துடனும், நிறைவுடனும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.(1)

அப்போது மகேஷ்வரன், “நான் நித்தம் தியானிக்கும் பகவனான வாசுதேவனை வணங்குகிறேன். பெரும்பிரகாசம் கொண்ட தேவா, உன் பேரொளியின் பிரதிபலிப்பாலேயே மொத்த அண்டத்திற்கும் ஒளியூட்டுபவன் நீயே.{2} உன் பிரகாசத்தின் பிரதிபலிப்பை மீண்டும் பிரதிபலிக்கும் சந்திரனின் குளிர்ந்த கதிர்களைத் தருபவனும் நீயே.{3} நீக்கமற நிறைந்திருக்கும் விஷ்ணு நீயே. உலகின் ஜடப் பொருள்களை இயக்கம் கொண்டவையாகச் செய்பவன் நீயே.{4} அவற்றின் இதயங்களைத் தூண்டி, அதனதன் தொழில்களிலும், கடமைகளிலும் ஈடுபடுத்தி, அந்தந்த சூழலுக்குத் தகுந்த இன்பத்தை அவற்றுக்கு அளிப்பவனும் நீயே.{5}

அனைத்துமாக இருப்பவன் நீயே, இருப்பினும் அனைத்தில் இருந்தும் வேறுபட்டவன் நீயே. வேதங்களைப் பாதுகாக்கும் பிரம்மனைப் போலவே, வாக்கை உன் வடிவங்களில் ஒன்றாகக் கொண்டவன் நீயே.{6} கைகளில் குசப் புற்களையும், ஆடையையும், வேள்விப் பொருள்கள் பிறவற்றையும் தரித்திருப்பவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.{7}

மொத்த அண்டத்தையும் பாதுகாப்பவன் நீயே, நிர்ணயிக்கப்பட்ட காலம் வந்ததும் உன் கோப வடிவமான பயங்கர முகம் படைத்த ருத்திர வடிவில் அதற்கு ஒரு முடிவை ஏற்படுத்துபவனும் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.{8} பிறப்பற்றவன் நீயே, தேவதேவேசன் நீயே, அண்டத்தின் உண்மைப் படைப்பாளன் நீயே. படைப்பின் போது உயிரினங்கள் அனைத்திற்கும் உயிரூட்டுபவன் நீயே.{9} பிரம்மனின் வடிவில் கோள்களையும், அவற்றில் வசிப்பனவற்றையும் வெளிப்படுத்துபவன் நீயே. தேவதேவேசா, மஹத் தத்துவத்தின் உட்பொருள் திரளாக மாற்றமடைவது உன் சக்தியே. பொருள் இயல்பானவள் {பிரகிருதியானவள் / இயற்கையானவள்} ஐந்து பூதங்களை வெளிப்படுத்தும் வகையில் உன் பார்வையால் அவளைக் கலங்கடிப்பவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.{10}

பக்தர்களின் பாவங்களை அழிப்பவன் நீயே, பூமியின் உண்மை மணம் நீயே. ஜகத்பதியே, அனைத்து வடிவங்களையும் வெளிப்படுத்தும் மூல வடிவம் நீயே. சூரியனைப் போன்று பிரகாசமிக்கவன் நீயே.{11} உயிரினங்கள் அனைத்தையும் பராமரிப்பதற்கான வெப்பத்தையும், ஒளியையும் அளிக்கும் அந்தச் சூரியனை வெளிப்படுத்தியவனும் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.

ஹரியே, வெப்பம், குளிர், இன்பம், துன்பம் ஆகியவற்றை உணரச்செய்யும் காற்றாக இருப்பவன் நீயே.{12} தீண்டல் உணர்வை அந்தக் காற்றே உண்டாக்குகிறது. உன்னை நான் வணங்குகிறேன்.

விஷ்ணுவே, ஆகாயத்தில் உண்டாகும் ஒலி பிரதிபலிப்பது உன்னையே.{13} நுட்பமான ஆன்மாக்கள் அனைத்தும் உன் அங்கங்களாகத் திகழ்வதால் அனைத்து உயிரினங்களின் உயிராகவும், ஆன்மாவாகவும் இருப்பவன் நீயே.{14}

ஜகந்நாதா, மனித வடிவை ஏற்றிருந்தாலும், மொத்த அண்டத்தையும் தாங்கி நீடிக்கச் செய்பவன் நீயே. மாயா சக்தியின் தலைவன் நீயே. மாயையின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டவன் நீயே. இருப்பின் பொருள் பற்றில் இருந்து விடுதலை அளிப்பவன் {மோக்ஷம் அருள்பவன்} நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.

இருப்பில் உள்ள அனைத்தின் உண்மைக் காரணன் நீயே, எல்லையற்ற ஆழ்நிலை குணங்களைக் கொண்டவனாக இருந்தாலும், குணமற்றவனாகத் திகழ்பவன் நீயே. சிந்தனைக்கப்பாற்பட்டவன் நீயே. அனைவரின் முயற்சிகளிலும் நோக்கமாகத் திகழ்பவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.

ஹரியே, ஹரனாகத் திகழ்பவன் நீயே.{15,16} படைப்பின் தொடக்கத்தில் பிரம்மனின் இதயத்திற்கு ஞானத்தை ஊட்டியவன் நீயே. பிரம்மத்தை அறிந்தவன் நீயே. பரப்ரம்மன் நீயே. வேள்வியின் வடிவம் நீயே. ஆயிரம் தலைகளையும், வாய்களையும்,{17} கண்களையும் கொண்ட அண்ட வடிவன் நீயே. கோடிக்கணக்கான கதிர்களின் பிரகாசத்தால் அமைந்தவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன். அண்ட வடிவம் நீயே, அண்டத்தைப் படைத்தவன் நீயே. மொத்த அண்டத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் நீயே.{18} அனைத்து உயிரினங்களுக்கும் வசிப்பிடமாக இருப்பவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.

ஹரியே, உடல் படைத்த ஆன்மாக்களின் புலன்களாகத் திகழ்பவன் நீயே. புலன் நுகர் பொருட்களாக இருப்பவனும் நீயே. புலன்களின் தலைவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.{19}

வேத வடிவம் நீயே, வேதங்களைக் காக்கும் ஹயக்ரீவனாக அவதரித்தவன் நீயே. நெருப்பின் வடிவை ஏற்பவன் நீயே. நட்சத்திரங்களையும், கோள்களையும் அதனதன் நிலைகளில் நிலைக்கச் செய்யும் சக்தி நீயே.{20} சூரியன் நீயே, சூரிய புத்திரன் நீயே, சூரியனின் தலைவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.

ஹரியே, குளிர்ந்த கதிர்களைத் தருபவனும், மயக்கம் தருபவனுமான சோமன் நீயே.{21} [வஷட்காரமாக, ஸ்வாஹாவாக, ஸ்வதாவாக இருப்பவன் நீயே]. வேள்வியின் வடிவம் நீயே, வேள்வியின் மூலம் வழிபடப்படுபவன் நீயே, வேள்விப் பொருட்கள் அனைத்தையும் படைத்தவன் நீயே. வேள்விகளில் சொல்லப்படும் புனித மந்திரங்களாக வெளிப்படுபவன் நீயே. வேள்விக்குடம், வேள்விக் கரண்டி மற்றும் வேள்விக்குரிய பிற பொருட்கள் அனைத்துமாக இருப்பவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.(2-22)

ஓம் என்ற புனித எழுத்து, உன்னுடைய சூக்ஷும உடலிலிருந்து வேறுபட்டதல்ல. தவறும் இயல்புடைய, தவறாத இயல்புடைய அனைத்தின் தலைவன் நீயே. வேதமானவன் நீயே, வேத வடிவானவன் நீயே, பகைவரை அழிக்கும் ஆயுதங்களை இருப்புக்கு அழைப்பவன் நீயே, அந்த ஆயுதங்களின் உடல்வடிவம் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.(23) சிறந்த ஆசிகளை அருள்பவன் நீயே, கதாயுதம், கட்கம், சங்கு, சக்கரம், திரிசூலம், கேடயம் ஆகியவற்றைத் தரித்தவன் நீயே. உன்னை நான் வணங்குகிறேன்.(24)

சர்வாத்ம குருவே, ஞானத்திற்கும், இன்பத்திற்கும் கொள்ளிடமாகத் திகழ்வதால் புத்திமான்களுக்குப் பிடித்தமானவன் நீயே. அனைத்து உயிரினங்களிலும் பரமாத்மாவாக இருப்பவன் நீயே. பக்தர்களின் பாவங்களை அழிக்கும் விஷ்ணுவே, உன்னை நான் வணங்குகிறேன்.(25) சர்வலோகேசா, இருப்பில் உள்ள அனைத்தையும் படைத்தவனே, முற்றான தூய்மையின் வடிவமாகத் திகழ்பவனே, யஜ்ஞ வராஹனாக அவதரித்தவனே, உன்னை நான் வணங்குகிறேன்.(26) விஷ்ணுவே உன்னை வணங்குகிறேன், விஷ்ணுவே உன்னை வணங்குகிறேன், விஷ்ணுவே உன்னை வணங்குகிறேன், ஹரியே உன்னை வணங்குகிறேன், என் தியானப் பொருளாகத் திகழும் வாசுதேவா உன்னை நான் வணங்குகிறேன்.(27) கரிய வண்ணனும், நீக்கமற நிறைந்தவனுமான கிருஷ்ணனை நான் வணங்குகிறேன். கிருஷ்ணனான உன்னை உண்மையில் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். ஜனார்த்தனா, அண்டத்தில் உள்ள நல்லோரைக் காப்பாயாக” {என்றான் சிவன்}.(28)

ஜகந்நாதனை இவ்வாறு துதித்த சிவன், முனிவர்களிடம் திரும்பி, “நீங்கள் கேசவனிடம் சரணடைந்து, இந்தத் துதியை தினமும் சொல்வீராக. அனைவருக்கும் பாதுகாப்பை வழங்குபவன் இவனே. இந்தத் தலைவனைச் சரணடைந்தால் நிச்சயம் உங்களைப் பாதுகாப்பான். அனைத்து வகைப் பாவங்களையும் அழிக்கவல்ல இந்தத் துதியைச் சொல்பவன், தன் இதயத்துக்குள் ஹரியின் பேரின்பத்தை அடைவான். இந்தத் துதியைக்[1] கேட்டோ, சொல்லியோ ஹரியை நிறைவடையச் செய்பவர்களால் அடையப்படமுடியாததுதான் ஏது?(29-31) நீங்கள் உங்கள் வாழ்வை வெற்றிகரமானதாக்க விரும்பினால், சிறந்த விரதங்களை நோற்று, பக்தர்களிடம் அன்பு கொண்ட கேசவனை எப்போதும் நினைப்பீராக” {என்றான் சிவன்}.(32)பூதகணங்களுக்கு நன்மை செய்யும் ருத்ரனான பகவான் சங்கரன், இதைச் சொல்லிவிட்டு, உமையுடனும், தன் தொண்டர்களுடனும் அங்கேயே அப்போதே மறைந்தான்.(33) முனிவர்கள் அனைவரும் இதயத்தில் நிறைவடைந்து ஹரியை வணங்கினர். அவர்கள் நாராயணனே பரம தத்துவம் {முற்றான உண்மை} என்பதை உணர்ந்து, தங்கள் வாழ்வு வெற்றியடைந்ததாக {பிறவிக்கடன் தீர்ந்ததாகக்} கருதினர்.(34) மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அங்கே இருந்த தேவர்கள் அனைவரும் புறப்படுவதற்கு முன்னர், ஹரியை வணங்கிவிட்டுத் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.(35)

அதன்பிறகு அந்தப் புண்டரீகாக்ஷன் {தாமரைக் கண் கிருஷ்ணன்}, முன்பு சங்கு, சக்கரம், கதை, கட்கம் {வாள்}, வில், கணைகளுடன் கருடனில் ஏறி வந்ததைப் போலவே, பெரும் முனிவர்களால் நித்தம் தொண்டாற்றப்படும் பதரிகாசிரமத்திற்கு மாலை வேளையில் திரும்பிச் சென்றான்.(36,37) ஈசுவரனான அந்த ஹரி, பதரிகாசிரமத்தை அடைந்ததும் முனிவர்கள் அனைவரையும் வணங்கிவிட்டு, அவர்களால் வழிபடப்பட்டவனாக ஓர் ஆசனத்தில் சுகமாக அமர்ந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(38) 

பௌண்டரகன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 66-(பௌண்ட்ரகவ்ருத்தாந்தராம்பம்)-சபையில் உரையாற்றிய பொண்டரகனின் தற்பெருமை…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அதேவேளையில், கல்விமானும், வலிமைமிக்கப் போர்வீரனும், விருஷ்ணி குலத்தைப் பகைக்கும் விரதம் கொண்டவனும், கிருஷ்ணனிடம் பொறாமை கொண்டவனும், பலமிக்க மன்னர்களில் முதன்மையானவனுமான பௌண்டரகன், தனக்கு அடங்கிய சிற்றரசர்கள் அனைவரையும் விரைவாக அழைத்துத் தன் சபையில் அவர்களிடம் பின்வருமாறு பேசினான்:(1,2)

{பொண்டரகன்}, “பலமிக்க மன்னர்கள் அனைவரையும் வீழ்த்தி, பிருத்வி முழுவதையும் நான் வென்றேன். விருஷ்ணி குலம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. கிருஷ்ணன் தரும் ஆதரவினால் அவர்கள் கர்வத்துடன் இருக்கின்றனர்.(3) கிருஷ்ணனைப் புகலிடமாகக் கொண்ட அவர்கள் தங்கள் வரிகளைக் கட்ட மறுக்கின்றனர். அகந்தை கொண்ட கிருஷ்ணன், தன் வலிமைமிக்கச் சக்கரத்தின் மீது கொண்ட நம்பிக்கையில் என்னைப் புறக்கணிக்கிறான்.(4) சக்கரம், சங்கு, கதாயுதம், வில், கணைகள் ஆகியவற்றை நம்பி அந்த இடையன் கர்வத்தில் இருக்கிறான். ஆயுதங்களின் பலமே அவனைச் செருக்கில் மிதக்க வைக்கிறது.{5}

உண்மையில், நானே வாசுதேவன் என்றாலும், செருக்கில் மிதக்கும் அந்த இடையன் என் பெயரைக் களவாடிவிட்டான். அவனது சக்கரத்தை வீழ்த்தவல்லதும், அவனது செருக்கை சல்லி, சல்லியாக நொறுக்கவல்லதும், உறுதிமிக்கதுமான சுதர்சன சக்கரம் என்னிடம் இருக்கிறது. மதிப்புமிக்க மன்னர்களே, என் சக்கரம் ஆயிரம் ஆரங்களைக் கொண்டதாகும், அதனால் விரும்பிய வடிவங்கள் பலவற்றையும் ஏற்க முடியும். அது நிச்சயம் அழிவற்றதுமாகும்.{6-8} பயங்கர நாணொலியை எழுப்பும் தெய்வீக வில்லான அற்புத சாரங்கம் என்னிடமும் இருக்கிறது. என்னுடைய பெரிய கதாயுதம் கௌமோதகி என்றழைக்கப்படுகிறது. இரும்பாலான அஃது ஓராயிரம் பாரங்கள்[1] எடை கொண்டதாகும்.(5-10) யமனே அஞ்சக்கூடியதும், கிருஷ்ணனின் வாளை எளிதாக அழிக்கக்கூடியதுமான நந்தக வாள் என்னிடம் உள்ளது.(11) கவசம் பூண்டும், கதாயுதம், வாள், சங்கு, சக்கரம் ஆகியவற்றைக் கொண்டும் போர்க்களத்தில் கிருஷ்ணனை நான் வெல்வேன். இதில் ஐயமேதும் இல்லை.இப்போதிலிருந்து நீங்கள் அனைவரும் என்னைக் கதாயுதம், சக்கரம், சங்கு, வில் ஆகியவற்றைத் தரித்தவன் என்றே {அதாவது கதீ என்றும், சக்ரீ என்றும், சங்கீ என்றும் சாரங்கி என்றும்} அழைக்க வேண்டும்.(12,13) மேலும் நீங்கள் வாசுதேவனென என்னை அழைக்கவேண்டுமேயன்றி யது குலத்தை ஆதரிக்கும் அந்த இடையனை அல்ல. நான் அவனைக் கொல்வதன் மூலம் சச்சரவுகளை அகற்றி உண்மையான வாசுதேவன் ஆவேன்.(14) மஹாத்மாவான நரகன் என் ஆருயிர் நண்பனாவான். போரில் அவனை அந்த இடையன் கொன்று விட்டான். என்னை நீங்கள் வாசுதேவனாக ஏற்காவிட்டால் உங்களைத் தண்டிக்கும் வகையில் பத்தாயிரம் தங்க நாணயங்களையும், பெரும் அளவிலான நெற்குவியல்களையும் எனக்கு வலுக்கட்டாயமாகச் செலுத்த வைப்பேன்” {என்றான் பௌண்டரகன்}.(15)

மன்னா, அந்த ராஜேந்திரன் {பௌண்டரகன்} இந்த மூடச் சொற்களைப் பேசி முடித்ததும், சபையில் இருந்த மன்னர்களில் சிலர் சங்கடத்துடன் கூடியவர்களாக அமைதியாக இருந்தனர். அந்த மன்னர்கள் வலிமைமிக்கவர்களாக இருப்பினும், எப்போது விவேகத்துடன் செயல்பட வேண்டும் என்பதை அறிந்தவர்களாகவும் இருந்தனர்.(16,17) மற்ற மன்னர்கள் தங்கள் தலைகளை அசைத்து, “சரிதான், அப்படியே செய்வோம்” என்று சொல்லி பௌண்டரகனைத் துதித்தனர். பெருஞ்செருக்கில் பெருகிய அவர்கள், “நிச்சயம் நாம் கிருஷ்ணனை வீழ்த்துவோம்” என்றனர்” {என்றார் வைசம்பாயனர்}.(18) 

பௌண்டரகனும் நாரதரும் | பவிஷ்ய பர்வம் பகுதி – 67-(பௌண்ட்ரகநாரதஸம்வாதம்)-நாரதரிடம் பேசிய பௌண்டரகன்; பௌண்டரகனை எச்சரித்த நாரதர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அதே வேளையில் சர்வலோகங்களில் பயணிக்க வல்ல நாரதர், கைலாச சிகரத்தில் இருந்து, பௌண்டரகனின் நகரத்திற்குச் சென்றார்.(1) அவர் வானத்தில் இருந்து இறங்கி, மன்னனின் {பௌண்டரகனின்} வாயிற்காப்போனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அவனது அரண்மனைக்குள் பிரவேசித்தார்.(2) அர்க்கியம் மற்றும் பிற மங்கலப் பொருட்களுடன் மன்னனால் மதிக்கப்பட்டு, தொண்டாற்றப்பட்ட அவர், அதன்பிறகு அலங்காரத் துணிகளால் மறைக்கப்பட்ட வெண்மையான ஆசனத்தில் அமர்ந்தார்.(3)

அப்போது ஆற்றலில் அதீத செருக்குக் கொண்ட பௌண்டரகன், முதலில் நாரதரின் நலத்தை விசாரித்துவிட்டு, பிறகு பின்வருமாறு பேசினான்:(4) “விப்ரேந்திரரே, நாரதரே, சர்வ காரியங்களிலும் பண்டிதரே, தேவர்கள், சித்தர்கள், கந்தர்வர்களால் பெரிதும் மதிக்கப்படுபவரே, எங்கும் தடையில்லாமல் சர்வலோகங்களுக்கும் செல்லவல்லவரே, பலமிக்கவனும், புகழ்மிக்கவனுமான பௌண்டரகனாகிய நான் வாசுதேவன் என்ற பெயருக்குத் தகாதவனா?(5-7)

சங்கு, சக்கரம், கதாயுதம், வில் ஆகிய அடையாளங்களால் நான் அலங்கரிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய வாளையும், கேடயத்தையும் கொண்டு சிங்கம் போன்ற மன்னர்கள் பலரை நான் வென்றிருக்கிறேன். அனைவரின் வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் நானே கொடுக்கிறேன்.(8) ஒப்பற்ற ராஜ்ய போகம் கொண்டவனாகவும், ஒப்பற்ற ஆற்றலுடன் ஆளும் வலிமைமிக்க மன்னனாகவும் நான் இருக்கிறேன். வெல்லப்படமுடியாதவனான நான் என் குடிமக்களைப் பாதுகாக்க வல்லவனாகவும் இருக்கிறேன்.(9)

இப்போது வாசுதேவன் என்ற பெயரில் ஓர் இடையன் இருக்கிறான். எனினும் அவன் அந்தப் பெயரைக் கொள்வதற்குப் போதுமான ஆற்றலைக் கொண்டவனல்ல என நான் கருதுகிறேன்.(10) விப்ரேந்திரரே, அந்த இடையன் மூடத்தனத்தால் என் பெயரைப் பயன்படுத்துகிறான். இவ்வுலகில் சச்சரவின்றி நானே வாசுதேவனாக இருக்க அந்த யாதவனை நிச்சயம் வீழ்த்துவேன். என் சொற்களைக் குறித்து வைத்துக் கொள்வீராக. விருஷ்ணி குலத்தவர் அனைவரையும் வீழ்த்தி, கிருஷ்ணனின் வசிப்பிடமான துவாரகையை நான் அழிப்பேன். இந்தப் படையெடுப்பில் எனக்குத் துணை புரியும் விருப்பத்தை உறுதி செய்வதற்காக வலிமைமிக்க மன்னர்கள் பலர் இங்கே கூடியிருப்பதை நீர் காணலாம்.(11-13)

என்னிடம் வேகமான குதிரைகள் எண்ணற்றவையும், காற்றைவிட வேகமாகச் செல்லும் ரதங்களும், மதங்கொண்ட யானைகள், ஒட்டகங்கள் ஆகியவை கோடிக்கணக்கிலும் இருக்கின்றன. விப்ரரே, நாரதரே, நீர் செல்லும் இடமெங்கும் என் எண்ணத்தைக் குறித்துச் சொல்வீராக. இந்திரனின் சபையிலும் என்னுடைய ஒப்பற்ற ஆற்றலைச் சொல்லி நீர் துதிப்பீராக. இதுவே எனது வேண்டுகோளாகும். நான் உம்மை வணங்குகிறேன்” {என்றான் பௌண்டரகன்}.(14-16)

அப்போது நாரதர் {பௌண்டரகனிடம்}, “மன்னா, அண்டத்திற்குள் எங்கும் என்னால் செல்ல முடியும் என்பது உண்மைதான். என்னால் நிறைவேற்ற முடியாத பணியென ஏதும் கிடையாது.(17) எனினும், நீ விரும்பியபடி நான் எவ்வாறு பேசத்துணிவேன்? தேவேசனும், சக்கரபாணியும், ஜனார்த்தனனும், விஷ்ணுவுமான அந்தத் தேவன் துஷ்டர்களையும், அவர்களின் உற்றார் உறவினர்களையும் கொல்லும் வரை அவனைத் தவிர வேறு எவனை வாசுதேவனென அழைக்க முடியும்?(18,19) சூரியக் கதிர்களால் ஒளியூட்டப்படும் உலகங்கள் அனைத்தையும் கிருஷ்ணன் ஆளும்வரை, “பௌண்டரகன்தான் வாசுதேவன்” என எவன் சொல்லத் துணிவான்?

உன்னைப் போன்ற மூடனால் மட்டுமே இவ்வாறு பேச முடியும்.(20) அண்டத்திற்குள் எங்கும் திரிய வல்லவனும், சிந்தனைக்கு அப்பாற்பட்டவனும், ஆறு செல்வங்கள்[1] நிறைந்தவனும், பாவங்களை அழிப்பவனும், வில்லும், கதாயுதமும் தரிப்பவனும், நீக்கமற எங்கும் நிறைந்தவனுமான அந்த விஷ்ணு விரைவில் உன் செருக்கை அழிப்பான்.(21) மன்னா, ஆதிதேவனான கிருஷ்ணன் உன் கர்வத்தைக் கலங்கடிப்பான். நீ நினைப்பதும், செய்வதும் அனைத்தும் நகைப்பிற்குரியனவாகும். உன்னுடைய ஆயுதங்களைக் கொண்டு கிருஷ்ணனின் வலிமைமிக்க வில்லையும், வாளையும் அழிக்க இயலாது. உன்னை நீயே நகைப்பிற்குரியவனாக்கிக் கொள்கிறாய்” {என்றார் நாரதர்}”.(22,23) 

துவாரகையைத் தாக்கிய பௌண்டரகன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 68-(பௌண்ட்ரகஸ்ய த்வாரகாவரோதம்)கிருஷ்ணனிடம் செய்தியைச் சொன்ன நாரதர்; துவாரகையை நோக்கிப் படையெடுத்து வந்த பௌண்டரகன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “மன்னா, பௌண்டரகன் தன் பலத்தின் மீது கொண்ட செருக்கில் மிதந்து கொண்டிருந்தான். அந்தச் சபையில் அவன் விப்ரர்களில் சிறந்த நாரத முனிவரிடம் கோபத்துடன் பின்வரும் சொற்களை மறுமொழியாகக் கூறினான்:(1) “முனியே, நீர் என்ன சொல்கிறீர்? நான் மன்னன், என்னைச் சுற்றிலும் எண்ணற்ற துவிஜர்கள் சூழ்ந்திருந்தாலும், அடுத்தவரைச் சபிப்பதில் நீர் மகிழ்ச்சி அடைகிறீர். உம்மை அதிருப்தியடையச் செய்ய அஞ்சுகிறேன் என்பதால் நீர் விரும்பியவாறு எங்கு வேண்டுமானாலும் செல்வீராக” {என்றான் பௌண்டரகன்}.

பௌண்டரகன் இதைச் சொன்னதும், காற்றின் வழியில் பயணிப்பவரான நாரத முனிவர், கிருஷ்ணன் இருக்கும் இடத்திற்குச் சென்றார். நாரதர் சொன்னதைக் கேட்ட கிருஷ்ணன், “துவிஜர்களில் சிறந்தவரே, அவன் முற்றான நிறைவுடன் முழுமூடனாகத் தற்புகழ்ச்சி செய்து கொள்ளட்டும். நாளை நான் அவனது செருக்கை அழிப்பேன்” என்றான்.(2-5)

பதரிகாசிரமப் புனிதத்தலத்தில் அமர்ந்திருந்த கிருஷ்ணன், இதைச் சொல்லிவிட்டு அமைதியடைந்தான். அதேவேளையில் வலிமைமிக்கப் பௌண்டரகன், தன் பெரும்படையுடன் துவாரகை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான்.(6) அந்த மன்னனின் பெரிய படையில் ஆயிரக்கணக்கான குதிரைகளும், எண்ணற்ற யானைகளும், கோடிக்கணக்கான ஆயுதங்களைத் தரித்த படைவீரர்களும் இருந்தனர். மன்னன் பௌண்டரகன் வெற்றி அடையும் தீர்மானத்துடன் துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(7) அந்த மன்னனிடம் லட்சக்கணக்கான காலாட்படை வீரர்கள் இருந்தனர். ஏகலவ்யன் உள்ளிட்ட பிற மன்னர்களும் அவனை ஆதரித்தனர்.(8) அந்த மன்னனின் படையில் எட்டாயிரம் தேர்களும், பத்தாயிரம் யானைகளும், ஆயிரம் கோடி காலாட்படை வீரர்களும் இருந்தனர்.(9)

அந்த வீர மன்னன் {பௌண்டரகன்} தன் படைகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்த போது, உதயகிரியின் மேலிருக்கும் சூரியனைப் போலவே தோன்றினான்.(10) அவன் நடுராத்திரியில் துவாரகாபுரியைத் தாக்க நினைத்தான். அந்த நள்ளிரவில் ஒளியூட்டுவதற்காகக் காலாட்படை வீரர்கள் தீப்பந்தங்களை ஏந்திச் சென்றனர்.(11) இவ்வாறு அந்தப் பௌண்டரகன், ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, கோட்டைகளால் நன்கு பாதுகாக்கப்பட்ட துவாரகையை நோக்கி முன்னேறினான்.(12)

மன்னா {ஜனமேஜயா}, பௌண்டரக மன்னன், கையில் தீப்பந்தத்துடன், ஈட்டிகள், வாள்கள், கதாயுதங்கள், பரிகங்கள், தோமரங்கள், சக்திகள், கணைகள், திரிசூலங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதங்கள் நிரப்பப்பட்ட தேரில் துவாரகையை நோக்கிச் சென்றான். கொடிகள் பலவும், கிங்கிணி மணிகளும் அந்தத் தேருக்கு மேலும் அழகூட்டின. விற்களும், கதாயுதங்களும் அதனதனுக்குரிய இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. சூரியனையோ, அக்னியையோ போன்று பிரகாசமிக்க அந்தப் பெருந்தேரானது, அண்ட அழிவின் போது முழங்கும் மேகங்களைப் போலவோ, பெரும் பேரிகைகளைப் போலவோ செல்லுமிடமெல்லாம் பேரொலியை எழுப்பிக் கொண்டிருந்தது.(13-16)

பெரும் செல்வாக்குடன் இருந்த மன்னன் பௌண்டரகன், ஜகத்பதியான கிருஷ்ணனையும், அவனை ஆதரிக்கும் விருஷ்ணி குல வீரர்கள் பலரையும் கொல்ல நினைத்தான். அவன் நகரத்தின் வாசலை அடைந்த போது, உறுதிமிக்க மன்னர்கள் பலர் அவனுக்குத் துணையாக இருந்தனர். அங்கேயே அவன் தன் படைமுகாமை அமைத்தான். பிறகு அவன் {பௌண்டரகன்} தன் அமைச்சர்களிடம் பின்வருமாறு பேசினான்:(17,18) “போர் பேரிகைகளை முழக்குவீராக. “யாதவர்களே, எங்கள் மன்னனுக்குரிய கப்பத்தைக் கட்டுவீராக, அல்லது நகரத்தை விட்டு வெளியே வந்து எங்களுடன் போரிடுவீராக. கிருஷ்ணனைப் புகலிடமாகக் கொண்டிருக்கும் யாதவர்கள் அனைவரையும் கொல்லும் விருப்பத்தில் பெருஞ்சக்திவாய்ந்த பௌண்டரக மன்னன் இங்கே போரிட வந்திருக்கிறான்” என்று என் பெயரில் அறிவிப்பீராக” என்றான் {பௌண்டரகன}.(19,20)

இவ்வாறு பௌண்டரகனால் ஆணையிடப்பட்ட அமைச்சர்கள் தங்கள் முகாமை விட்டு வெளியேறி யாதவர்களில் சில ஒற்றர்களைச் சந்தித்தனர். அந்நேரத்தில் எங்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தீப்பந்தங்கள் தென்பட்டன. உண்மையில் அதற்குள் பகைவரிடையே மோதல்கள் வெடித்திருந்தன. தங்கள் ஆயுதங்களைக் கூர்த்தீட்டிய க்ஷத்திரிய மன்னர்கள், சிங்கங்களைப் போல முழங்கிக் கொண்டே, “விருஷ்ணி குல வீரர்கள் எங்கே? ஜகந்நாதன் எங்கே? பெரும் வீரனான சாத்யகி எங்கே? கிருதவர்மன் எங்கே? யாதவர்களின் மகுட ரத்தினமான பலராமன் எங்கே?” என்று கேட்டனர். பௌண்டரகனின் போர்வீரர்கள் கிருஷ்ணனின் வசிப்பிடமான துவாரகையை அணுகும் முன்பே தங்கள் ஆயுதங்களைப் பொழியத் தொடங்கினர்” {என்றார் வைசம்பாயனர்}.(21-25)

ஏகலவ்யன் அறைகூவல் | பவிஷ்ய பர்வம் பகுதி – 69-(யாதவாநாம் யுத்தோத்யோகம்)-யாதவர்களுக்கும், பௌண்டரப் படைகளுக்கும் இடையில் நடந்த போர்; ஏகலவ்யனின் வலிமை; சாத்யகியை அறைகூவியழைத்த ஏகலவ்யன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அதேவேளையில் {துவாரகையின்} நகரவாயிலில் முகாமிட்டிருக்கும் பெரும்படையைக் குறித்து யாதவர்கள் அறிந்தனர்.{1} பிரளய காலத்தில் பொங்கும் கடலைப் போலத் தோன்றும் பகைவனின் படையை அவர்கள் கண்டனர்.{2} அப்போது அந்த யாதவர்கள் விரைவாகத் தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டும், தீப்பந்தங்களை ஏற்றிக் கொண்டும் எதிர்த்தாக்குதலுக்கான ஆயத்தங்களைச் செய்தனர். சாத்யகி, பலராமன், கிருதவர்மன், நிசடன்,{3} நுண்ணறிவுமிக்க உத்தவர், வலிமைமிக்க உக்கிரசேனன் ஆகியோரும், யாதவப் போர்வீரர்கள் பிறரும் கவசங்களைப் பூண்டு கொண்டு பிற ஆயத்தங்களை ஏற்பாடு செய்தனர்.(1-4) அவர்கள் அனைவரும் வலிமைமிக்கவர்களாகவும், சாதனைகளுடன் கூடிய போர்வீரர்களாகவும், இரவு நேரப்போர் தந்திரங்களை நன்கறிந்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் தங்கள் வாள்களையும், பிற ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, பகைவருடன் போரிட ஆயத்தமாக இருந்தனர்.(5)

வலிமைமிக்க எண்ணற்ற யாதவர்கள், தங்கள் படையின் தேரோட்டிகள், குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை வீரர்களால் ஆதரிக்கப்பட்டவர்களாகவும், முழுமையாக ஆயுதந்தரித்தவர்களாகவும் போரிட ஒன்றுகூடினர்.(6) மனிதர்களில் சிறந்தவர்களும், மஹாத்மாக்களுமான அந்த யாதவர்கள், தங்கள் தீப்பந்தங்களை எடுத்துக் கொண்டு நகரத்தை விட்டு விரைந்து சென்றனர்.(7) அவர்கள் நகரத்தைவிட்டு வெளிவரும்போதே ஒருவருக்கொருவர், “பௌண்டரகன் எங்கே?” என்று கேட்டுக் கொண்டனர். எண்ணற்ற தீப்பந்தங்களால் மொத்த நகரமும் பிரகாசமாக ஒளியூட்டப்பட்டது.(8) அஃது இரவாக இருந்தாலும் கிட்டத்தட்ட பகலைப் போலவே பிரகாசமாக இருந்தது. அதன் பிறகு விருஷ்ணி குலத்தவருக்கும், அவர்களின் பகைவருக்கும் இடையில் போர் உண்டானது.(9)

அந்தப் போர் மிகக் கடுமையானதாகவும், அனைவருக்கும் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது. குதிரை வீரர்கள், குதிரைவீரர்களுடனும், யானை வீரர்கள், யானை வீரர்களுடனும் மோதினர், தேர்கள் தேர்களோடு மோதின. இவ்வாறே அந்தப் போர் தொடர்ந்து கொண்டிருந்தது. இரு படைகளும் கலந்து குழப்பமடைவதற்கு முன்னர் வாள்வீரர்கள் வாள்வீரர்களுடனும், கதாயுத வீரர்கள் பகைவரின் படையைச் சார்ந்த கதாயுத வீரர்களுடனும் போரிட்டனர். இரு தரப்பிலும் இருந்த போர்வீரர்களின் கூச்சல்களும், அறைகூவல்களும் பிரளய காலத்தில் பொங்கும் கடலுக்கு ஒப்பான ஒலியுடன் இருந்தது.(10-12)

பகைப்படைப் போர்வீரர்கள், தங்கள் ஆயுதங்களால் பயங்கரக் காயங்களை ஏற்படுத்தியவாறே ஒருவரோடொருவர் போர் புரிந்தனர். திசைகள் எங்கும், “பெரும் வாளைத் தாங்கிய இவன் எவ்வாறு தரையில் விழுந்து கிடக்கிறான் பார்”, “என்னுடைய வலிமைமிக்கக் கூரிய கணைகளைப் பார்”, “கதாயுதத்தைச் சுழற்றும் இந்த வலிமைமிக்கப் போர்வீரனைப் பார்” என்ற ஒலிகள் கேட்டுக் கொண்டிருந்தன.(13,14) கவசம் தரித்தவர்களும், பாதுகாப்பைத் தரும் பிற கவசங்களையும் அணிந்து கொண்டு அங்கேயும் இங்கேயும் திரிபவர்களும், விற்கள், கணைகள், கதாயுதங்கள், ஈட்டிகள் ஆகியவற்றுடன் கூடியவர்களுமான வலிமைமிக்கப் போர்வீரர்களால் அந்தப் போர்க்களம் நிறைந்திருந்தது.(15) சூலங்களைச் சுழற்றிக் கொண்டு ஓடும் போர்வீரர்கள் அனைத்துத் திசைகளிலும் தென்பட்டனர். தந்தங்களையே ஆயுதங்களாகக் கொண்ட எண்ணற்ற யானைகள் பிளிறிக் கொண்டே அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தன.(16)

வேகமாகச் செல்லக்கூடிய போர்வீரர்கள் சிலர், காற்றைப் போல நகர்ந்து சென்றதால், ஒரே நேரத்தில் பல இடங்களில் போரிடுபவர்களைப் போலத் தோற்றமளித்தனர்.(17) படைவீரர்கள் பலர் தங்கள் பகைவரின் சூலங்களைத் தங்கள் சூலங்கள், கதாயுதங்கள், பரிகங்கள், தோமரங்கள் ஆகியவற்றால் முறித்தனர்.(18) மன்னா, இவ்வாறே அந்தப் போர் உக்கிரமாகத் தொடர்ந்தது. திடீரெனப் போர்க்களத்தில் ஒரு கலவரம் ஏற்பட்டது.(19) எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கான பெரும் விலங்குகள் கதறிக் கொண்டும், அலறிக் கொண்டும் போர்க்களத்திற்குள் நுழைந்தன. சங்கு முழக்கங்களுடன் சேர்ந்த இவ்வொலிகள் பொறுத்துக் கொள்ளமுடியாதவையாகின.(20)

நடுராத்திரியில் அந்தப் பெரும்போருக்கான ஒரு முடிவு ஏற்படப்போவதாகத் தெரியவில்லை. விருஷ்ணி குலத்தவரும், அவர்களின் பகைவருக்கும் இடையில் மங்காத உற்சாகத்துடன் போர் தொடர்ந்து கொண்டிருந்தபோது, போர்க்களத்தில் உண்டான ஒலிகள் செவிடாக்குபவையாக இருந்தன. கணக்கிலடங்கா சடலங்கள் தரையில் சிதறிக் கிடந்தன. உண்மையில், வலிமைமிக்கப் போர்வீரர்கள் பலர் தங்கள் பகைவருடன் சேர்ந்து, கேசம் கலைந்தவர்களாகத் தரையில் விழுந்து கிடந்தனர். படைவீரர்கள் பலர் தங்கள் கவசங்கள் சிதறடிக்கப்பட்டுத் துண்டுகளாக வெட்டப்பட்டுக் கிடந்தனர். போர்வீரர்கள் பலர் இவ்வாறு யமராஜனின் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டபோது, மரணத் தேவனின் பணிச்சுமை அதிகரிப்பதாகத் தெரிந்தது.(21-25)

பெரும் போர்வீரனும், வேடர்களான நிஷாதர்களின் தலைவனுமான ஏகலவ்யன், தன் ஆயிரக்கணக்கான கணைகளால் யாதவர்களைத் துன்புறுத்தியபடியே போர்க்களத்தில் இரண்டாம் யமராஜனைப் போலத் தோற்றமளித்தான். அந்தப் போரில் அவன் தன் கணைமாரியால் விருஷ்ணி குல க்ஷத்திரியர்கள் எண்ணற்றோரைக் கொன்றான்.(26-28) ஏகலவ்யன், தன்னுடைய அர்த்தச்சந்திரக் கணைகள் இருபத்தைந்தால் நிசடனையும், பத்தால் சாரணனையும், ஐந்தால் கிருதவர்மனையும், தொண்ணூறால் உக்கிரசேனனையும், ஏழால் வசுதேவரையும், பத்தால் உத்தவரையும், ஐந்தால் அக்ரூரரையும் துளைத்தான்.(29,30) இவ்வாறே ஏகலவ்யன் ஒருவர் பின் ஒருவராகக் கிட்டத்தட்ட யாதவப் போர்வீரர்கள் அனைவரையும் தன் கணைகளால் துளைத்தான்.

யாதவப் படையை விரட்டிய பிறகு ஏகலவ்யன் பின்வருமாறு அறைகூவல் செய்தான்:(31) “வலிமைமிக்க ஏகலவ்யன் நானே. கையில் கதாயுதத்துடன் கூடிய சாத்யகி இன்று என் கோபத்திலிருந்து எவ்வாறு தப்பப் போகிறான்?” {என்றான் ஏகலவ்யன்}.{32} இவ்வாறே யது குலத்தின் வீரப் போர்வீரர்கள் அனைவரையும் ஏகலவ்யன் அறைகூவியழைத்தான். அப்போது, சிங்கங்களே பீதியடையும் வகையில் அவன் கர்ஜனை செய்து கொண்டிருந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(32,33)

சாத்யகி | பவிஷ்ய பர்வம் பகுதி – 70-(ஸாத்யகிபௌண்ட்ரகயோ꞉ ஸம்வாதம்)-பௌண்டரகன் கட்டளை; யாதவர்களைக் காக்க வந்த சாத்யகி; பௌண்டரகன், சாத்யகி உரையாடல்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “மன்னா, யாதவப் படை வீரர்கள், தங்கள் பகைவர்களால் பெரிதும் துன்புறுத்தப்பட்டு, தங்கள் தீப்பந்தங்கள் அணைந்து போர்க்களத்தைவிட்டுத் தப்பி ஓடினர். இஃது அந்தப் படையின் தலைவர்களுக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. யாதவர்கள் தப்பிச் செல்வதைக் கண்ட பௌண்டரகன்: “அன்புக்குரிய கூட்டாளிகளே, விரைந்து சென்று நம் பகைவரின் நகரத்தைத் தரைமட்டமாக்குவீராக.(1-3) பூமியின் தலைவர்களே, கோடரிகள், கயிறுகள் என உங்கள் கைகளில் இருக்கும் எந்த ஆயுதத்தையும் எடுத்துக் கொண்டு நகரத்தைச் சூழ்வீராக.(4) முதலில் நகரத்தின் சுற்றுச் சுவர் மதில்களை உடைத்து, மாளிகைகள் அனைத்தையும் நொறுக்கி, யாதவர்களின் இளம்பெண்கள் அனைவரையும், அவர்களின் பணிப்பெண்களையும் கடத்திச் செல்வீராக.(5) மதிப்புமிக்க ரத்தினங்கள் அனைத்தையும், நீங்கள் காணும் செல்வம் எதனையும் அபகரித்துச் செல்வீராக” என்று ஆணையிட்டான்.

இதற்கு மறுமொழியாக மன்னர்கள் அனைவரும், “அவ்வாறே செய்கிறோம்” என்று சொல்லிவிட்டு, தங்கள் கோடரிகளால் சுற்றுச்சுவர் மதில்களையும், மாளிகைகளையும் நொறுக்கத் தொடங்கினர்.(6,7) அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் மதில்களின் மீது கற்பாறைகளை வீசியபோது பேராரவார ஒலி உண்டானது.(8) மன்னா, நகரத்தின் கிழக்குப்புறச் சுற்றுச் சுவர் கிட்டத்தட்ட முழுமையாகத் தகர்க்கப்பட்டது. மதில் நொறுங்கிவிழும் ஒலிகளைக் கேட்ட சாத்யகி பெருஞ்சீற்றம் அடைந்தான்.(9)

அவன் {சாத்யகி}, “யதுகுலத் தலைவன் கேசவன், நகரைப் பாதுகாக்கும் பொறுப்பை என் தோள்களில் சுமத்திவிட்டுச் சங்கரனைக் காண கைலாச மலைக்குச் சென்றிருக்கிறான். எனவே, நான் எவ்விலை கொடுத்தேனும் இப்போது நகரைப் பாதுகாக்க வேண்டும்” என்று நினைத்தான். இவ்வாறு நினைத்த சாத்யகி, தன் வில்லை எடுத்துக் கொண்டு, உறுதிமிக்கதும், நன்கு அலங்கரிக்கப்பட்டதும், தாருகனின் மகனால் செலுத்தப்பட்டதுமான தேரில் ஏறினான்.(10-12)

வலிமைமிக்கவனான சாத்யகி, கிருஷ்ணன் சொன்னவற்றை நினைத்துப் பார்த்து காதுகுண்டலங்களாலும், கைவளைகளாலும் தன்னை அலங்கரித்து, கவசம் பூண்டு, விற்கள், கதாயுதங்கள், வாள்கள் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டான். பிறகு அவன், நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற பயங்கரமானதும், சிறந்ததுமான தன் வில்லையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு போருக்குப் புறப்பட்டான். சாத்யகி தன் வில்லின் நாண்கயிற்றைச் சுண்டி நாணொலி எழுப்பியது பகைவரின் இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்தியது.(13,14)

சாத்யகி விரைவாகத் தன் தேரில் ஏறிக் கொண்டு, தீப்பந்தங்களால் ஒளியூட்டப்பட்ட போர்க்களத்திற்குச் சென்றான். போரிடும் ஆவல் கொண்டவனும், கதாயுதம், வில், அம்பறாதூணிகள் ஆகியவற்றைக் கொண்டவனுமான தலைவன் பலராமன் அவனைப் பின்தொடர்ந்து சென்றான். சாத்யகியின் படையைச் சேர்ந்த போர்வீரர்கள், போர்க்களத்தை நோக்கிச் செல்லும்போதே சிங்கங்களைப் போலக் கர்ஜித்தனர்.(15,16) ஆலோசகர்களில் முதன்மையானவரும், வலிமைமிக்கவருமான உத்தவர், மதங்கொண்ட யானையின் மீது ஏறி, போர்வியூகங்களைச் சிந்தித்தபடியே போர்க்களத்தை நோக்கிச் சென்றார். விருஷ்ணி குல வீரர்கள் பலரும் பகைவருடன் போரிடும் ஆவலுடன் புறப்பட்டுச் சென்றனர்.(17,18)

பலமிக்கவனான கிருதவர்மனும், முன்னணி வீரர்கள் பிறரும், கிருஷ்ணன் சொன்னதை நினைவுக்கூர்ந்து தேர்களிலும், யானைகளிலும் ஏறி, தீப்பந்தங்களை ஏந்தி சங்கங்களைப் போலக் கர்ஜித்தபடியே போரிடப் புறப்பட்டுச் சென்றனர். யாதவப் போர்வீரர்களில் முதன்மையானோரான இவர்கள் அனைவரும், பகைவரை எதிர்க்கும் பேராவலில் நகரின் கிழக்கு வாயிலில் ஒன்று கூடினர். மன்னா {ஜனமேஜயா}, படைவீரர்களின் தீப்பந்தங்களால் திசைகள் அனைத்திலும் ஒளியூட்டப்பட்டிருந்த கிழக்கு வாயிலில் படை திரண்ட பிறகு, கவசம் பூண்டவனும், பல்வேறு வகையான ஆயுதங்களைக் கொண்டு சென்றவனுமான சாத்யகி உறுதிமிக்கத் தன் வில்லை எடுத்து, நாண்கயிற்றைக் காதுவரை இழுத்து, காற்றைப் போன்ற வேகம் கொண்ட தெய்வீகக் கணையொன்றை எதிரிகள் மீது ஏவினான்.(19-23)

இதன்விளைவாக ஒடுக்கப்பட்ட எதிரி வீரர்கள் வீழ்வதை உணர்ந்து தங்கள் தலைவனான பௌண்டரகனின் உறவிடம் தேடித் தப்பிச் சென்றனர்.(24) சாத்யகியின் கணை உண்டாக்கிய சூறாவளி, பகைவீரர்கள் தங்கள் தலைவனின் உதவியை நாடும் தேர்வு ஒன்றே இருக்கும் வகையில் அவர்களைச் சிதறடித்தது.(25) அதன்பிறகு, சினி குலத்தைச் சேர்ந்த சாத்யகி நகரின் கிழக்கு வாயிலில் நின்றபடியே மற்றொரு தெய்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்துப் பின்வருமாறு பேசினான்:(26) “நுண்ணறிவுமிக்கப் பௌண்டரகனின் தலைமையிலான மன்னர்களில் முதன்மையானவர்களே, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நான் சாத்யகி. உங்கள் தலைவனுடன் போரிடும் ஆவலில் வில்லுடனும், கணைகளுடனும் நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன். அவனை நான் ஒரே முறை கண்டாலும், அவன் இறக்கும் வரையில் ஓயமாட்டேன். கேசவனின் பணியாளான நான் பௌண்டரகனைக் கொல்லவே இங்கே வந்திருக்கிறேன்.(27,28) கூடியிருக்கும் க்ஷத்திரியர்கள் அனைவரின் முன்னிலையிலும் இந்தப் பாவியின் தலையைக் கொய்து, நாய்களுக்கும், நரிகளுக்கும் அதை உணவாய் அளிப்பேன்.(29) நாங்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் நடு ராத்திரியில் இங்கே வருபவன் கள்வனல்லாமல் வேறு எவன்? பௌண்டரகன் ஒரு மன்னனல்ல அவன் கள்வன். அந்த இழிந்தவனுக்கு உண்மையில் துணிவிருந்தால் அவன் கள்வனைப் போலச் செயல்பட்டிருக்க மாட்டான்.(30,31) ஐயோ, மன்னனாக அழைக்கப்படும் கள்வன் போர்க்களத்தில் என் முகத்திற்கு நேரே ஏன் வரவில்லை? போரிடும் அறைகூவலை அவன் விடுத்திருந்தாலும் என் முன்னால் அவனைக் காணமுடியவில்லை” {என்றான் சாத்யகி}.(32)

சாத்யகி இதைச் சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தான். பிறகு அவன், ஒரு தெய்வீகக் கணையை நாண்கயிற்றில் பொருத்தி அதைக் காதுவரை இழுத்தான்.(33) சாத்யகியின் இந்தச் சொற்களைக் கேட்டதும் பௌண்டரகன், “கோழையான அந்தக் கிருஷ்ணன் எங்கே? பெண்களையும், விலங்குகளையும் கொல்லும் அந்தக் கிருஷ்ணன் எங்கே? பெண்களின் பணியேற்கும் என் பகைவன் எங்கே? என் பெயரைக் களவு செய்த அவன் எங்கே ஒளிந்திருக்கிறான்?(34,35) என்னுடைய நல்ல நண்பனும், மஹாத்மாவுமான நரகனை அவன் கொன்றான். அந்தப் பாவியைப் போரில் கொன்ற பிறகே என் கோபம் தணிவடையும்.(36) பலமிக்க வீரா, என்னுடன் போரிடத் தகாதவனான நீ விரும்பினால் வீட்டுக்குத் திரும்பிச் செல்லலாம். மாறாக நினைத்தால், முன்மாதிரியற்ற என் ஆற்றலைத் தனிப்பட்ட முறையில் உணர்ந்து கொள்ள ஒருக்கணம் காத்திருப்பாயாக.(37) வீழ்த்தப்பட முடியாத என் கணைகளால் நான் உன் சிரத்தை விரைவில் கொய்யப் போகிறேன். உன்னையும், உன் தொண்டர்கள் அனைவரையும் நான் போரில் கொன்ற பிறகு பூமி உன் குருதியைப் பருகுவாள்.(38) சாத்யகி கொல்லப்பட்டான் என்பதை அந்த இடையன் விரைவில் அறிவான். யது குலத்தில் முதன்மையானவனே, செருக்கில் மிதக்கும் அந்த இடையன் நீ கொல்லப்பட்டதும் தானாக வீழ்வான். மஹாத்மாவே, கைலாச மலைக்குப் புறப்படும் முன்னர் நகரைப் பாதுகாக்கும் பொறுப்பை அந்த இடையன் உனக்கு அளித்தான் என்று கேள்விப்பட்டோம். சாத்யகி, உனக்குத் துணிவும், உன் ஆற்றலில் நம்பிக்கையும் இருந்தால் வில்லையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு போருக்கு ஆயத்தமாவாயாக” {என்றான் பௌண்டரகன்}.

பௌண்டரகன் இதைச் சொல்லிவிட்டுப் போருக்கு ஆயத்தமாகும் வகையில் தன் வில்லையும், கணைகளையும் எடுத்துக் கொண்டான்.(39-41)

சாத்யகி பௌண்டரக யுத்தம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 71-(ஸாத்யகிபௌண்ட்ரகயோர்யுத்தம்)-பௌண்டரகனை நிந்தித்த சாத்யகி; பௌண்டரகனுக்கும் சாத்யகிக்கும் இடையில் நடைபெற்ற போர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “விருஷ்ணி குல வீரர்களில் முதன்மையான சாத்யகி, கிருஷ்ணனை நினைவுகூர்ந்து, கோபத்துடன் பின்வரும் சொற்களைச் சொன்னான்:(1) “பௌண்டரகா, மன்னர்களில் இழிந்தவனே, வஞ்சகனால் மட்டுமே நீ சொன்னது போல் வாசுதேவனை விமர்சிக்க முடியும். வாழ விரும்பும் எவன்தான் உன்னைப் போல அந்த ஜகத்பதியை நிந்திப்பான்?(2) நீ செய்வதைப் போலவே சொல்வதால் உன் மரணம் மிக அருகில் இருப்பதை உணர்கிறேன். உன்னைப் போன்ற மனிதனின் நாவை நூறு துண்டுகளாக வெட்ட வேண்டும்.(3) பௌண்டரகா, உன் தலையை உன் உடலில் இருந்து துண்டிப்பேன். உன் தலை உன் உடலில் இருக்கும் வரை வாசுதேவன் என்ற பெயரை நீ பயன்படுத்திக் கொள்ளலாம். விரைவில் இந்த உலகம் போலி வாசுதேவன் அற்றதாகும்.(4,5)

துராத்மாவே, நீக்கமற நிறைந்திருப்பவனும், அனைத்தின் பிறப்பிடமுமான ஜகந்நாதன் மட்டுமே வாசுதேவன் என்ற பெயருக்குத் தகுந்தவன். இதில் ஐயமேதுமில்லை.(6) மன்னர்களில் இழிந்தவனே, நான் இப்போது உன் தலையைக் கொய்யப் போகிறேன். அதுவரையோ, பகவானான கிருஷ்ணன் திரும்பி வரும் வரையோ போர்க்களத்தில் உன் ஆற்றலை வெளிப்படுத்துவாயாக. எஞ்சியிருக்கும் கொஞ்ச காலத்தைப் பயன்படுத்திக் கொள்வாயாக.(7,8) என்னுடைய வாள், கதாயுதம், வில், கணைகள் ஆகியவற்றைக் கொண்டு உன்னுடன் போரிடத் தயாராக இருக்கிறேன். நீ உன் ஆற்றலின் எல்லையைக் காட்டுவாயாக.(9) உண்மையில் எங்கள் நகரத்தில் உன் வரவு, போலி வாசுதேவனை அகற்றி வாழ்வை வெற்றிகரமானதாக்கும் வாய்ப்பை எனக்குத் தந்திருக்கிறது.(10) மன்னர்களில் இழிந்தவனே, நான் உன்னை எள்ளளவு சிறு துண்டுகளாக்கி நாய்களுக்குப் பரிமாறப் போகிறேன்” என்றான் {சாத்யகி}.

சாத்யகி, வாசுதேவன் என்று அழைத்துக் கொள்ளும் பௌண்டரக மன்னனிடம் இதைச் சொல்லிவிட்டு, நாண்கயிற்றில் கணையொன்றைப் பொருத்தித் தன் காது வரை இழுத்து எதிரியை நோக்கி ஏவினான். அந்தக் கணை பௌண்டரகனைத் துளைத்து ஆழமான காயத்தை உண்டாக்கியதால் அவனது கண்களில் இருந்தும் மற்ற அங்கங்களிலிருந்தும் குருதி பெருகியது. விரைவாக மீண்டு, சீற்றமடைந்த பௌண்டரகன், சிங்கம் போல் கர்ஜனை செய்து கொண்டே ஒன்பது, அல்லது பத்து கணைகளை ஏவி சாத்யகியைக் காயப்படுத்தினான்.(11-14) அந்தப் போலி வாசுதேவன், சாத்யகியின் நெற்றியில் காயத்தையும், தன் தொண்டர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியையும் உண்டாக்கி தன்னுடைய பயங்கரக் கணைமாரியைத் தொடர்ந்து பொழிந்து கொண்டிருந்தான். இதனால் பெரும் ஆளுமைகளில் சிறந்தவனும், விருஷ்ணி குல வீரர்களில் உறுதிமிக்கவனுமான அவன் {சாத்யகி}, தன் தேருக்குப் பின் சென்று மயக்கத்துடன் அமர்ந்தான்.(15-17)

அப்போது பௌண்டரக மன்னன் பத்துக் கணைகளை ஏவி சாத்யகியின் தேரோட்டியைக் காயப்படுத்தி, இருபத்தைந்து கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் காயப்படுத்தினான்.(18) பௌண்டரகனின் கடுந்தாக்குதலின் விளைவாக உண்மையில், அந்தத் தேரோட்டியும், குதிரைகளும், குருதியில் நனைந்து, மயக்கமடைந்தனர்.(19) மன்னா {ஜனமேஜயா}, தேரில் அமர்ந்திருந்த பௌண்டரகன் சிங்கம் போல் கர்ஜித்தான். அந்த ஆரவாரத்தைக் கேட்ட சாத்யகி மீண்டும் சுய நினைவை அடைந்தான்.(20) வலிமைமிக்கச் சாத்யகி, தன் தேரோட்டியும், குதிரைகளும் கடுங்காயம் அடைந்திருப்பதைக் கண்ட கோபத்தில் வெறி கொண்டவனானான்.(21)

அப்போது அவன் {சாத்யகி}, “இனி உன் ஆற்றலின் எல்லையைப் பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு, பௌண்டரகனின் மார்பைக் கணைகளால் துளைத்து அவனுக்குத் துன்பத்தை உண்டாக்கினான்.(22) மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கணைகளால் தைக்கப்பட்ட பௌண்டரகனின் மார்பில் இருந்து சூடான குருதி பாய்ந்ததால் அவனது உடல் திடீரெனத் துடித்தது. அவனுடைய மூச்சுப் பாம்பின் மூச்சு போல ஒலித்தது. சுய நினைவை இழந்த அவன், சூழ்நிலைகளைப் பொருட்படுத்தமால் தன் தேரில் அமர்ந்தான்.(23,24)

அப்போது சாத்யகி, பத்துக் கணைகளால் பௌண்டரகனின் தேரைத் துண்டுகளாக நொறுக்கினான். மேலும் அவன் தன் பல்லத்தைக் கொண்டு அவனது கொடிக்கம்பத்தையும் அறுத்தான்.(25) சாத்யகி, தொடர்ந்து கணைகளை ஏவி பௌண்டரகனின் குதிரைகளைக் காயப்படுத்தி அவனது தேரோட்டியையும் கொன்றான். பிறகே அவன், அந்தக் குதிரைகளைக் கொன்று பௌண்டரகனின் தேரை நொறுக்கினான்.(26,27) மன்னா, அவன் பத்துக் கணைகளால் பௌண்டரகனின் தேர்ச்சக்கரங்களைக் கடுகளவுள்ளவையாக வெட்டிவிட்டு உரக்கச் சிரித்து நின்றான்.(28)

விருஷ்ணி குலத்தின் வலிமைமிக்க வீரனான சாத்யகி, சிங்கத்தைப் போல முழங்கினான். க்ஷத்திரியர்கள் அனைவரும் பார்வையாளர்களாக நின்றிருந்தனர். பிறகு அவன் எழுபது கணைகளால் போலி வாசுதவேனின் முதுகையும், தலையையும், விலாப்புறங்களையும், மார்பையும் துளைத்தான். இவ்வாறு பௌண்டரகன் தன் மொத்த உடலும் கணைகளால் துளைக்கப்பட்டுப் போர்க்களத்தில் ஆதரவற்றவனாக நின்று கொண்டிருந்தான். ஓர் ஈகையாளன் வறுமையடைந்ததும் ஈகையேதும் செய்ய முடியாததைப் போலவே, தற்பெருமை செய்பவனும், கர்வம் கொண்டவனுமான பௌண்டரகன், மறுமொழியேதும் சொல்ல இயலாதவனாக அமைதியாக நின்றிருந்தான். சிறிது நேரம் கடந்ததும், பௌண்டரகன் அமைதி நிலைக்கு மீண்டு அர்த்தச்சந்திரக் கணையொன்றால் கோபத்துடன் சாத்யகியைத் துளைத்தான். சாத்யகி தன்னை நோக்கி விரைந்து வந்த போது அந்தப் போலி வாசுதேவன் அவனை ஏழு கணைகளால் துளைத்தான். இதற்குப் பதிலடியாகச் சாத்யகி ஏவிய சக்திமிக்க ஐந்து கணைகள் பௌண்டரகனின் வில்லை முறித்ததால் அவன் நிறைவுடன் உரத்த கர்ஜனை செய்தான்.(29-34)

பௌண்டரகன் தன் கதாயுதத்தை எடுத்து அதைச் சில முறை சுழற்றி சாத்யகியின் மார்பில் வீசினான்.(35) எனினும் அந்த யது குல வீரன் அந்தக் கதாயுதத்தைத் தன் இடது கையால் பிடித்துக் கொண்டான். இந்த அற்புதச் செயலைச் செய்த பிறகு அவன் பௌண்டரகனைத் தன் கணைகளால் மீண்டும் தாக்கினான்.(36) போலி வாசுதேவன் பத்து சக்தி ஆயுதங்களால் சாத்யகிக்குப் பதிலடி கொடுத்தான். இவ்வாறே போர் தொடர்ந்து கொண்டிருந்தது.(37) சாத்யகி இவ்வாறு சக்தி ஆயுதத்தால் தாக்குண்ட பிறகு, தன் வில்லை வைத்து விட்டு இன்னும் வலிமையான ஒன்றை எடுத்துக் கொண்டான். அதன் பிறகு அந்த முதன்மையான விருஷ்ணி குலப் போர்வீரன், பகைவரின் மத்தியில் பேரழிவை ஏற்படுத்தினான்” {என்றார் வைசம்பாயனர்}.(38)

வீரர்கள் அடைந்த ஆச்சரியம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 72-ஸாத்யகிபௌண்ட்ரகயோர்யுத்தம்)-பௌண்டரகனுக்கும் சாத்யகிக்கும் இடையில் நடைபெற்ற போர்; ஆச்சரியமடைந்த இருதரப்பு வீரர்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “மன்னா {ஜனமேஜயா}, அதன்பிறகு விருஷ்ணி குல நந்தனனான சாத்யகி கோபத்துடன் கதாயுதத்தை எடுத்து வீசி {பௌண்டரக} வாசுதேவனைப் பலமாகத் தாக்கினான்.(1) அதற்குப் பதிலடியாகப் போலி வாசுதேவனும் சாத்யகியைத் தன் கதாயுதத்தால் தாக்கினான். உறுதிமிக்கக் கதாயுதங்களைக் கொண்டிருந்த அந்த வீரர்கள் இருவரும் காட்டில் ஒன்றோடொன்று மோதும் செருக்குமிக்கச் சிங்கங்கள் இரண்டைப் போலத் தோன்றினர். சாத்யகி இடது புறத்தில் இருந்து போலி வாசுதேவனின் மார்பில் தாக்கினான். அதே வேளையில் வாசுதேவனும் வலதுபுறத்தில் இருந்து சாத்யகியைத் தாக்கியதால் இருவரும் தங்கள் பகைவரிடம் இருந்து பலமான அடிகளைப் பெற்றனர்.(2-4)

சாத்யகியின் வலுவான கதாயுதத்தால் தாக்கப்பட்ட வலிமைமிக்கப் பௌண்டரகன் முழங்காலிட்டு விழுந்தான். எனினும் அவன் எழுந்த பிறகு, தன் கதாயுதத்தால் சாத்யகியின் நெற்றியில் தாக்கினான். அதன்விளைவாகச் சாத்யகி கலக்கமடைந்தான். விரைவாக மீண்டெழுந்த சாத்யகி, தன் கதாயுதத்தால் பௌண்டர தேச மன்னனைத் தாக்கி பதிலடி கொடுத்தான்.(5,6)

மரணத் தூதன் போலத் தெரிந்த அந்தப் போலி வாசுதேவன், பெரும் பலம்வாய்ந்த போர்வீரனாகத் திகழ்ந்தான். அவன் சாத்யகியை சாம்பலாக எரித்துவிடுவதைப் போலப் பார்த்து தன் கதாயுதத்தால் அவனைத் தாக்கினான்.(7) சாத்யகி உயிரற்றவனைப் போல நனவிழந்து தரையில் விழும் வகையில் அந்த அடி பலமானதாக இருந்தது.(8) மன்னா, இருப்பினும் சாத்யகி ஒரு கணத்தில் குதித்தெழுந்து, பௌண்டரகன் வீசிய கதாயுதத்தைக் காற்றிலேயே பிடித்தான். இரும்பாலான அந்தப் பெரிய கதாயுதத்தைப் பெரும்பலத்துடன் முறித்து அதை வீசியெறிந்தான். வீரமிக்கச் சாத்யகி இந்த அற்புத சாதனையைச் செய்துவிட்டுச் சிங்கம் போல் முழங்கினான்.(9,10)

கதாயுதத்தை இழந்த போலி வாசுதேவன், இடது கையால் சாத்யகியைப் பிடித்துத் தன்னுடைய வலது கையால் அவனது மார்பில் மீண்டும் மீண்டும் குத்தினான்.(11,12) விருஷ்ணி குலத்தின் சிறந்த வீரன் {சாத்யகி}, தன் கதாயுதத்தைப் போர்க்களத்தில் வீசியெறிந்துவிட்டு போலி வாசுதேவனைப் பலமாக அறைந்தான்.(13) போலி வாசுதேவன் சாத்யகியை அறைந்து பதிலடி கொடுத்தான். இவ்வாறு இருவரும் கடுமையான துவந்த யுத்தம் செய்தனர்.(14) மன்னா, இரு பகைவர்களும் ஒருவரையொருவர் முட்டிகளிலும், முஷ்டிகளிலும், கைகளிலும், தலையிலும் தாக்கிக் கொண்டனர். காட்டில் இரு பனை மரங்கள் மோதும்போது உண்டாகும் உரத்த ஒலிக்கு ஒப்பாகவே இந்தப் போராளிகள் இருவரும் மோதும்போதும் உண்டானது. கொண்டாடப்பட்ட போர்வீரர்களான பௌண்டரகனும், சாத்யகியும் அந்த நள்ளிரவில் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு மற்போர் அரங்கில் விளையாடும் புகழ்பெற்ற மல்லர்களைப் போலப் போரிட்டனர்.(15-18)

அந்தப் போரைப் பார்த்துக் கொண்டிருந்த உக்கிரசேனன் தரப்பு, பௌண்டரகன் தரப்புப் படை வீரர்கள் அனைவரும் சாத்யகி, போலி வாசுதேவனால் கொல்லப்படுவானா, போலி வாசுதேவன் சாத்யகியால் கொல்லப்படுவானா என்று நினைத்து ஆச்சரியப்பட்டனர். அவர்கள், “இந்தப் பெரும் வீரர்கள் இருவரும் இன்று ஒருவரையொருவர் கொன்று தெய்வீக உலகங்களை அடையப் போகிறார்கள், அல்லது களைத்துப் போகும் வரை தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கப் போகிறார்கள்” என்று நினைத்தனர்.(19-21)

பிறகு அவர்கள், “ஐயோ, இந்த வீரர்கள் இருவரின் பலமும், பொறுமையும் எவ்வளவு அற்புதமானவை? மொத்த உலகிலும் இவர்கள் இருவரும் நிச்சயம் பெரும் பலமிக்கவர்களே. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் கூட இவ்வளவு கோரமான யுத்தம் நடந்ததில்லை. இத்தகைய போர் இதற்கு முன்பு கேட்கப்பட்டதுமில்லை, காணப்பட்டதுமில்லை” என்றனர்.(22,23)

மொத்த வானமும் கரிய மேகங்களால் மறைக்கப்பட்ட அந்த நள்ளிரவில் இவ்வாறே இரு படைகளின் வீரர்களும் தாங்கள் கண்டு கொண்டிருந்த துவந்த யுத்தத்தைப் பற்றிப் பேசிக் கொண்டனர்.(24) அதன் பிறகு அந்தப் போர்வீரர்கள் இருவரும் தொடர்ந்து கொஞ்ச நேரம் போரிட்டுக் கொண்டிருந்தனர். சாத்யகி தன் முஷ்டியால் பௌண்டரகனை பத்து முறை தாக்கினான்.(25) பிறகு வலிமைமிக்கப் பௌண்டரகன் தன் முஷ்டியால் சாத்யகியை ஐந்து முறை தாக்கினான். அவர்கள் ஒருவரையொருவர் குத்திய ஒலிகள் மொத்த உலகையும் கலக்கமடையச் செய்தன. எங்கும் இந்த ஒலிகளைக் கேட்ட மக்கள் அதன் காரணத்தை அறிந்து ஆச்சரியமடைந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(26)

ஏகலவ்யனின் படை | பவிஷ்ய பர்வம் பகுதி – 73-(ஏலலவ்யஸைந்யவதம்)-ஏகலவ்யனுக்கும் பலராமனுக்கும் இடையில் நடந்த போர்; பலராமனால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான நிஷாதர்கள்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அதேவேளையில் வேடர்களின் மன்னனான {நிஷாதிபதியான} ஏகலவ்யன், தன் வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு கோபத்துடன் பலபத்ரனை {பலராமனை} எதிர்த்து வந்தான்.(1) அவன் பத்துக் கணைகளால் பலராமனைத் தாக்கிவிட்டு, க்ஷத்திரியர்கள் பிறர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மேலும் பத்துக் கணைகளால் அவனது வில்லையும் முறித்தான்.(2) அதற்குப் பதிலடியாக அந்த ஜகத்பதி {பலராமன்} ஏவிய பத்துக் கணைகள், ஏகலவ்யனின் தேரோட்டியைக் காயப்படுத்தியது. அடுத்ததாக அவன் ஏவிய முப்பது கணைகள் அந்தத் தேரின் பெரும்பகுதியை நொறுக்கியது.(3)

வலிமைமிக்க ஏகலவ்யன் பெரும் வில் ஒன்றை எடுத்துக் கொண்டு, பகைவரை அழிக்கும் வலிமைமிக்கக் கணையொன்றை அதன் நாண்கயிற்றில் பொருத்தினான். ஒப்பற்ற வலிமை கொண்ட பலராமன் இதைக் கண்டு மிதிபட்ட பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டபடியே பாம்புக் கணைகள் பத்தை விரைவாக ஏவி தன் பகைவனின் {ஏகலவ்யனின்} வில்லை முறித்தான்.(4-6) வில்லை இழந்த ஏகலவ்யன், ஒரு பயங்கர வாளை விரைவாக எடுத்துக் கொண்டு பலராமனை நோக்கி விரைந்து ஓடினான்.(7) பிரதாபவனும், போர்க்கலைத் திறன் கொண்டவர்களில் முதன்மையானவனுமான பலராமன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஐந்து கணைகளை ஏவி ஏகலவ்யனின் வாளை எள்ளளவு துண்டுகளாக நொறுக்கினான்.(8)

நிஷாதனின் {வேடன் ஹிரண்யதனுசின்} மகனான ஏகலவ்யன், இரும்பாலான மற்றொரு வாளை எடுத்துச் சுழற்றி பலராமனின் தேரோட்டி மீது வீசினான்.(9) எனினும் ஒப்பற்ற யதுகுல வழித்தோன்றல் {பலராமன்}, அந்த வாள் தன் தேரோட்டியை அடையும் முன்பே பத்துக் கணைகளால் அதைத் துண்டுகளாக்கினான்.(10)

அப்போது ஏகலவ்யன் சிறிய கிங்கிணி மணிகளால் அலங்கரிக்கப்பட்ட சக்தி ஆயுதத்தை இருப்புக்கு அழைத்து, பலராமன் மீது ஏவி சிங்கத்தைப் போல முழங்கினான்.(11) பலராமன், அந்தச் சக்தி ஆயுதம் தன்னை நெருங்கும்போதே அதைப் பற்றி, உடனே தன் பகைவனுடைய மார்பின் மீது அதை வீசித் தாக்கினான். உயிரற்றவனைப் போல ஏகலவ்யன் தரையில் மயங்கி விழும் அளவுக்கு அதன் தாக்குதல் வலிமைமிக்கதாக இருந்தது.(12-15)

மன்னா {ஜனமேஜயா}, ஏகலவ்யனின் படையில் நிஷாதர்கள் என்று அறியப்படும் வேடர்கள் எண்பத்தெட்டாயிரம் பேர் படைவீரர்களாக இருந்தனர்.(16) மன்னா, அவர்கள் நெருப்பை நோக்கிப் பாயும் விட்டில் பூச்சிகளைப் போலத் தங்கள் கதாயுதங்களையும், வாள்களையும், சூலங்களையும், விற்களையும், பரிகங்களையும், பராசங்களையும், தோமரங்களையும், கோடரிகளையும், ஈட்டிகளையும் எடுத்துக் கொண்டு, இரண்டாம் ராமச்சந்திரனைப் போலத் தெரிபவனும், யாதவர்களுக்கு மத்தியில் நிற்பவனுமான பலராமனை நோக்கி விரைந்து சென்றனர். அந்த நிஷாதர்கள் பலராமனை அணுகும்போதே அவன் மீது கணைமாரியைப் பொழிந்தபடி சென்றனர்.(17-20)

நெய்யூட்டப்பட்ட நெருப்பைப் போலச் சுடர்விட்டுக் கொண்டிருந்த பலராமனைச் சிலர் தங்கள் கோடரிகளால் தாக்கினர், சிலர் தங்கள் கதாயுதங்களால் அடித்தனர், வேறு சிலர் தங்கள் ஈட்டிகளை அவன் மீது ஏவினர். இவ்வாறு அந்த நிஷாதர்கள் அனைவரும் தங்கள் பகைவனை {பலராமனை} அடுத்தடுத்துத் தாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது சீற்றமடைந்த பலராமன், தன் கலப்பையைப் பயன்படுத்தித் தன்னை நோக்கி நிஷாதர்களை இழுத்துத் தன் முசலத்தால் அவர்களைத் தாக்கினான்.

மன்னா, மலைப்பகுதிகளில் வசிப்பவர்களான அந்த ஆயிரக்கணக்கான நிஷாதர்களும் பலராமனின் முசலத்தால் தாக்கப்பட்டுப் போர்க்களத்தில் மாண்டு விழுந்தனர். பலராமன், அந்த நிஷாதர்கள் அனைவரையும் ஒரே கணத்தில் கொன்றுவிட்டு, சிங்கத்தைப் போல உரக்க கர்ஜித்தான்.

பிணந்தின்னும் பிசாசுகள் எண்ணற்றவை அவ்விரவில் போர்க்களத்தில் வந்து சடலங்களை உண்டன. அவை, இறந்து போன போர்வீரர்களின் மார்பில் இருந்து குருதியைப் பருகி, உண்பதற்காக அவர்களின் உடல்களைத் துண்டுகளாக அறுத்தன” {என்றார் வைசம்பாயனர்}.(21-25)

நால்வரின் கதாயுதப்போர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 74-(பௌண்ட்ரகயுத்தம்)-ஏகலவ்யனுக்கும், பலராமனுக்கும் இடையிலும், பௌண்டரகனுக்கும், சாத்யகிக்கும் இடையிலும் நடந்த கதாயுதப் போர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அந்த இரவில் ஊனுண்ணும் பல வகை உயிரினங்கள் போர்க்களத்திற்கு வந்து பயங்கரமாகச் சிரித்தபடியே கொல்லப்பட்ட போர்வீரர்களின் சடலங்களை உண்டன.(1) பச்சை மாமிசம் உண்பவர்களும், சடலங்களில் இருந்து குருதியைப் பருகுபவர்களுமான பிசாசங்களும், ராட்சசர்களும் அங்கிருந்தனர்.(2) மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, காக்கைகள், பருந்துகள், கழுகுகள், வல்லூறுகள், நரிகள் உள்ளிட்ட ஊனுண்ணும் பலவகைப் பறவைகளும், விலங்குகளும் கூட அந்தப் போர்க்களத்திற்கு வந்து, கொல்லப்பட்ட போர்வீரர்களையும், தேரோட்டிகளையும் உண்டு மகிழ்ந்தன. அந்தப் பெரும் விழாவில் அவை பிசாசங்களுடனும், ராட்சசர்களுடனும் சேர்ந்து மெய்மறந்து கூத்தாடின.

போர் தொடர்ந்து கொண்டிருந்த அதே வேளையில், ஏகலவ்யன் நினைவு மீண்டான். அவன் தன் படை வீரர்கள் கொல்லப்பட்டதைக் கண்டு பெருஞ்சீற்றம் அடைந்து, தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு பலராமனை நோக்கி ஓடினான்.(3-5) மன்னா, அந்த ஏகலவ்யன் தன் கதாயுதத்தைக் கொண்டு பலராமனின் தோள்களைத் தாக்கினான். அதற்குப் பதிலடியாக, கதாயுதம் தரித்திருந்தவனும், ஆற்றல் செருக்கில் மிதந்து கொண்டிருந்தவனுமான பலராமன், பாவம் நிறைந்த அந்த நிஷத மன்னனை {ஏகலவ்யனை} பலமாகத் தாக்கினான்.

அதன்பிறகு ஏகலவ்யனுக்கும், பலராமனுக்கும் இடையில் பயங்கரமான கதாயுதப்போர் தொடங்கியது. அவர்கள் சீற்றத்துடன் மோதிக் கொண்ட போது, கதாயுதங்கள் மோதும் ஒலிகளால் வானம் நிறைந்திருந்தது.(6-8) அச்சத்தை ஏற்படுத்தும் அந்த ஒலிகள் அண்ட அழிவின் போது பொங்கும் கடலின் ஒலியை ஒத்திருந்தது. இதன் விளைவாகப் பாம்புகளின் மன்னன் அனந்த சேஷனும், திக்பாலர்களும் கலக்கமடைந்தனர்.(9) வானமெங்கும், நிலமெங்கும் அந்த ஆரவார ஒலி கேட்டுக் கொண்டிருந்தது.

அதே வேளையில் மன்னன் பௌண்டரகனுக்கும், சாத்யகிக்கும் இடையில் தொடர்ந்து வந்த போரில் அவர்கள் ஒருவரையொருவர் பலமாகத் தாக்கிக் கொண்டிருந்தனர்.(10,11) அந்தப் போரிலும் பயங்கர ஒலிகள் எழுந்தன. ஒருவரை ஒருவர் கொல்வதற்கு முயற்சி செய்த அந்த வலிமைமிக்கப் போர்வீரர்கள் நால்வர் ஏற்படுத்திய ஒலிகளால் மொத்த அண்டமும் உண்மையில் கலக்கமடைந்தது.

அந்தப் பயங்கர இரவானது, அடிவானில் சூரியன் எழுந்து நட்சத்திரங்கள் மறைந்து படிப்படியாக முடிவுக்கு வந்தது. சூரிய பகவான் உதித்ததும் இரவின் இருள் அகன்று சந்திரனின் ஆதிக்கம் குறுகியது. பகல் தொடங்கியதும் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த நான்கு வீரர்களின் போர், பழங்காலத்தின் தேவாசுரப் போரை நினைவுப்படுத்தும் வகையில் உக்கிரமடைந்தது” என்றார் {வைசம்பாயனர்}.(12-15)

துவாரகை திரும்பிய கிருஷ்ணன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 75-(துவாரகாயாம் ப்ரத்யாகதஸ்ய ஸ்ரீகிருஷ்ணஸ்ய பௌண்ட்ரகேண ஸஹ யுத்தம்)-பதரிகாசிரமத்தில் இருந்து துவாரகைக்குத் திரும்பி வந்த கிருஷ்ணன்; பௌண்டரகனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த விவாதம்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அந்த நாள் தொடங்கியதும் தேவகியின் மகனான பகவான் ஜகந்நாதன்பதரிகாசிரமத்தில் இருந்து துவாரகை திரும்பத் தீர்மானித்தான்.(1) மன்னா {ஜனமேஜயா}, முதலில் அவன் அங்கு வசித்திருந்த முனிவர்கள் அனைவரையும் வணங்கி விடை பெற்றுக் கொண்டு அதன் பிறகு கருடன் மீதேறி துவாரகைக்குப் புறப்பட்டான்.(2) மனிதர்களின் மன்னா, கிருஷ்ணன் துவாரகாபுரியை நெருங்கியபோது, அங்கே நடந்து கொண்டிருக்கும் போரினால் ஏற்படும் பெருங்கலவரத்தின் ஒலியைக் கேட்டான்.(3)

அதைக் கேட்ட கிருஷ்ணன், “இஃதென்ன கலவரம்? போர் ஏதும் நடக்கிறதா? என் அண்ணன் பலராமனின் குரலையும், சாத்யகியின் குரலையும் என்னால் கேட்க முடிகிறது.(4) பௌண்டரகன் துவாரகையைத் தாக்கியிருக்கக் கூடும். தீய மனம் கொண்ட அந்த மன்னனுடன் யாதவர்கள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். போர் நடப்பதே இந்தக் கலவரத்திற்கான காரணம் என்பது திண்ணம்” என்று நினைத்தான்.(5,6)

இவ்வாறு நினைத்துக் கொண்டிருந்த ஹரி, தன் பாஞ்சஜன்ய சங்கை உரக்க முழக்கி விருஷ்ணி குல வீரர்களை நிறைவடையச் செய்தான்.(7) கேசவனின் சங்கு முழக்கம் வானத்தையும், பூமியையும் நிறைத்தது. ஆழ்நிலை ஒலி அதிர்வைக் கேட்ட யாதவர்களும், விருஷ்ணிகளும் தங்களுக்குள் பேசிக் கொள்ளத் தொடங்கினர்: “கிருஷ்ணன் வந்திருக்கலாம். இவ்வொலி அவனுடைய பாஞ்சஜன்ய சங்கின் ஒலிதான்” {என்றனர்}. மன்னா {ஜனமேஜயா}, யாதவர்களும், விருஷ்ணிகளும் கிருஷ்ணன் வந்துவிட்டதை உணர்ந்து அச்சமற்றவர்களானார்கள். பிறகு அவர்கள் திடீரெனக் கருடனையும், தேவகியின் மகனான கிருஷ்ணனையும் கண்டனர். செய்தி பரவியதும் சூதர்களும், மாகதர்களும் அங்கே வந்தனர்.(8-11) நீக்கமற நிறைந்திருக்கும் அண்டத்தின் தலைவனும், ஈசுவரனும், தாமரைக் கண்களைக் கொண்டவனுமான ஜனார்த்தனனை நோக்கி விரைந்து சென்ற யாதவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(12)

யதுவின் மிகச்சிறந்த வழித்தோன்றலான கிருஷ்ணன், கருடனின் முதுகில் இருந்து இறங்கி, அவனிடம் {கருடனிடம்}, “நீ தேவலோகம் திரும்பலாம்” என்றான். அவன், கருடனை அனுப்பிவிட்டுத் தாருகனிடம், “என் தேரைக் கொண்டு வருவாயாக” என்றான். தாருகன், “ஆணை” என்று மறுமொழி கூறிவிட்டு ஒரே கணத்தில் கிருஷ்ணனின் முன்னிலையில் தேரைக் கொண்டு வந்து, “இதோ உன் தேர். இனி நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்டான். தாருகன் இதைச்சொல்லி வணங்கிவிட்டு கைகளைக் கூப்பியபடியே அந்தத் தலைவனின் முன்னிலையில் நின்றான்.(13-15)

கருடன் சென்றதும் கிருஷ்ணன் தன் தேரில் ஏறி போர்க்களத்தை நோக்கிச் சென்றான்.(16) மன்னா, போர்க்களத்தை நெருங்கிய போது அந்தத் தலைவன் கிருஷ்ணன், தன் பாஞ்சஜன்ய சங்கை முழக்கி, கூடியிருக்கும் போர் வீரர்களுக்குத் தன் வரவை அறிவித்தான்.(17)

போரில் அதியாவல் கொண்ட கிருஷ்ணன் எவ்வாறு போர்க்களத்திற்கு வந்தான் என்பதைக் கண்ட பௌண்டரகன், சாத்யகியுடனான போரில் இருந்து விலகி இவனை {கிருஷ்ணனை} எதிர்க்கத் திரும்பினான்.(18) மன்னா {ஜனமேஜயா}, பௌண்டரகன் புறப்படுவதைக் கண்ட சாத்யகி அவனைத் தடுக்க முயலும் வகையில், “மன்னா, போரை விட்டு விலகாதே. இது முறையான நெறியல்ல.(19) முதலில் நீ என்னை வீழ்த்த வேண்டும். அதன் பிறகே பிறருடன் போரிட நீ செல்ல முடியும். நீ ஒரு க்ஷத்திரியன். போருக்கான ஆவலுடன் நான் நீடிக்கும் வரையில் நீ என்னையே எதிர்க்க வேண்டும். இந்தப் போர்க்களத்தில் நான் உன் செருக்கை எவ்வாறு நொறுக்கப் போகிறேன் என்பதைப் பார்” என்றான். சினியின் பேரனான சாத்யகி இதைச் சொல்லிவிட்டு, பௌண்டரகனின் வழியை அடைத்துக் கொண்டு அவனது முன்னிலையில் நின்றான். அப்போதும் பௌண்டரகன் சாத்யகியைப் புறக்கணித்துவிட்டுக் கிருஷ்ணனை நோக்கியே சென்றான்.(20-22)

கிருஷ்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சாத்யகி தன் கதாயுதத்தால் மீண்டும் பௌண்டரகனைத் தாக்கினான்.(23) பௌண்டரகனுடனான போரில் சாத்யகி தன் கதாயுதத்தைப் பெருந்திறனுடன் தரித்திருப்பதைக் கண்ட கிருஷ்ணன், பெரும் நிறைவடைந்தவனாக அவனைப் பெரிதும் புகழ்ந்தான்.(24) சிறிது நேரம் கடந்ததும் கிருஷ்ணன், சாத்யகியைப் போரில் இருந்து விலகச் செய்யும் வகையில், “அவன் விரும்பியதனைத்தையும் செய்யட்டும். விடுவாயாக” என்றான். வலிமைமிக்கச் சாத்யகி அப்போதுதான் போரில் இருந்து விலகினான்.(25)

அதன்பிறகு மன்னன் பௌண்டரகன், தலைவன் கிருஷ்ணனிடம், “யாதவா, இடையா, எங்கே சென்றிருந்தாய்?(26) கிருஷ்ணா, உன்னுடன் போரிட விரும்பியே நான் இங்கே வந்தேன். பெரும்படையைக் கொண்டிருக்கும் நானே கொண்டாடப்படும் உண்மையான வாசுதேவன். என் படையின் துணையுடன் உன்னைக் கொன்று இவ்வுலகில் சச்சரவுக்கிடமில்லாமல் வாசுதேவனாக இருப்பேன். கோவிந்தா, நீ சக்கரபாணியெனப் புகழ்பெற்றிருந்தாலும் அந்தச் சக்கரம் என் சக்கரத்தால் இப்போது அழிவடையப் போகிறது. மாதவா, “சக்கரத்தைக் கொண்டிருப்பதால் நான் வெல்லப்பட முடியாதவன்” என்ற உன் செருக்கை இனி நீ விடுவாயாக. இன்று க்ஷத்திரியர்கள் அனைவரின் முன்னிலையிலும் நான் உன்னுடைய நன்மதிப்பை அழிப்பேன். ஜனார்த்தனா, உண்மையான சாரங்கபாணியாக என்னை அறிவாயாக. நீயோ ஒரு போலி. சங்கு, சக்கரக் கதாதாரியாக என்னை அறிந்து உன் மாயச் செருக்கைக் கைவிடுவாயாக.(27-31)

உலகின் கல்விமான்களும், செல்வந்தர்கள் அனைவரும் என்னையே சங்கு, சக்கர, கதாதாரியெனக் குறிப்பிடுவார்கள். கடந்த காலத்தில் கம்சனின் மூத்த சேவகர்களையும், {பூதனை போன்ற} சில பெண்களையும், சில குழந்தைகளையும் {கம்சனால் கொல்லப்பட்ட தேவகியின் ஆறு மகன்களையும்}, சில மாடுகளையும் நீ கொன்றிருக்கிறாய். இதற்கே நீ உன் பலத்தில் செருக்கடைந்தாய். நீ என் எதிரில் நின்றால் நான் இன்று உன் செருக்கை அழிப்பேன்.(32,33) கோவிந்தா, நீ போரிட விரும்பினால் உன் ஆயுதங்களை எடுத்துக் கொள்வாயாக” என்றான். பௌண்டரகன் இதைச் சொல்லிவிட்டு தன் வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு கிருஷ்ணனின் முன்னிலையில் நின்றான்.(34)

கிருஷ்ணன், அந்தப் போலி வாசுதேவனின் சொற்களைக் கேட்டுச் சிரித்துவிட்டு, “மன்னா, விரும்பியதேதும் நீ பேசலாம். பசுக்களையும், குழந்தைகள், மற்றும் பெண்களையும் கொன்றவன் என என்னை நீ பழிக்கலாம்.(35,36) மன்னா, நீ உன் சக்கரத்தையும், கதாயுதத்தையும் போலச் சாரங்க வில்லையும் சுதந்திரமாகக் காட்டலாம். நீ விரும்பினால் உன்னை நீ வாசுதேவன் என்றும் அழைத்துக் கொள்ளலாம்.(37) நீ விரும்பினால் என் சங்கு, சக்கரம், கதாயுதத்தைத் தரிப்பவன் என்றும் உன்னை நீ குறிப்பிட்டுக் கொள்ளலாம். எனினும், நீ கேட்க விரும்பினால் நான் உனக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.(38)

பிரபுவே, இவ்வுலகில் நான் இருக்கும்போதே உன்னை என் பெயரால் அழைக்கும் க்ஷத்திரியர்கள் பலர் இருக்கின்றனர்.(39) என் சக்கரம் எல்லையற்ற சக்தியுடன் மஹாகோரமாக அசுரர்களை வதைக்கக் கூடியது. உன் சக்கரம் வடிவத்தில் என்னுடையதைப் போல இருந்தாலும் ஆற்றலில் வேறானது. உன் ஆயுதங்கள் பெயரால் மட்டுமே என்னுடையவை போன்றிருந்தாலும் பலத்தால் அவ்வாறில்லை.(40) மன்னா, உயிரினங்கள் அனைத்தின் உயிரையும் பாதுகாக்கும் இடையன் நான். நல்லோரைக் காத்து, அல்லோரைத் தண்டிப்பவனும் நான்.(41) மன்னர்களில் இழிந்தவனே, உன் பகைவரை வென்ற பிறகு நீ கொக்கரிக்கலாம். கையில் ஆயுதங்களுடன் நான் உன் முன்னிலையில் நிற்கும்போது என்னை வீழ்த்தாமலேயே உன்னால் எவ்வாறு கொக்கரிக்க முடிகிறது?(42) பௌண்டரகா, உனக்குச் சக்தி இருந்தால் என்னைக் கொல்வாயாக. அந்த வீரச் சாதனையைச் செய்த பிறகு உன் இதயம் நிறைவடையுமட்டும் தற்புகழ்ச்சி செய்து கொள்வாயாக. எனினும் இப்போது நான் கையில் வில், கதை, வாள், சக்கரம் ஆகியவற்றுடன் உன் முன்னிலையில் என் தேரில் அமர்ந்திருக்கிறேன்.(43) வேத நெறிகளை நோற்பவனே, தேரில் ஏறி போரிட ஆயத்தமாவாயாக” என்றான் {கிருஷ்ணன்}. இதைச் சொல்லிவிட்டுச் சிங்கத்தைப் போலக் கிருஷ்ணன் முழங்கினான்” என்றார் {வைசம்பாயனர்}.(44)

பௌண்டரகன் வதம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 76-(பௌண்ட்ரகவதம்)பௌண்டரகனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த போர்; பௌண்டரகன் கொல்லப்பட்டது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “பரம்பொருளான வாசுதேவன் தன் வில்லை எடுத்துக் கணைகளைப் பொருத்தி அவற்றைப் பௌண்டரகன் மீது ஏவத் தொடங்கினான்.(1) பௌண்டரகன் தன் பங்குக்குப் பத்துக் கணைகளை ஏவி கிருஷ்ணன் மீது எதிர்த் தாக்குதல் தொடுத்தான்.(2) பிறகு அந்தப் போலி வாசுதேவன் தாருகன் மீது இருபத்தைந்து கணைகளையும், குதிரைகள் மீது பத்தையும், யதுவின் சிறந்த வழித்தோன்றலான கிருஷ்ணன் மீது எழுபது கணைகளையும் தொடுத்தான்.(3)

கேசிசூதனனான {கேசியைக் கொன்றவனான} கேசவன், “பௌண்டரகன் பேராணவம் கொண்டவனாக இருக்கிறானே” என்று நினைத்து மெல்லச் சிரித்தான்.(4) கொண்டாடப்படும் சாரங்க வில்லைத் தரித்தவனான அந்தக் கேசவன், கணைகளாலான ஓடையைப் பொழிந்து பௌண்டரகனின் கொடியை அறுத்தான்.(5) பிறகு அவன் பௌண்டரகனுடைய தேரோட்டியின் தலையைக் கொய்து, மேலும் நான்கு கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் கொன்றான். அவன் பௌண்டரகனின் மெய்க்காவலர்களைக் கொன்று தேரை நொறுக்கி, தன் சக்கரத்தால் தேரின் சக்கரத்தை எள்ளளவு துண்டுகளாக்கினான். இவ்வளவையும் செய்துவிட்டுத் தாக்குதலை நிறுத்திப் புன்னகைத்தான்.(6,7)

போலி வாசுதேவனான பௌண்டரகன், தன் வாளை எடுத்துக் கொண்டு நொறுங்கிய தேரில் இருந்து கீழே குதித்துத் தரையில் நின்றபடியே அதை {அந்த வாளைக்} கேசவன் மீது வீசினான்.(8) கேசவன், தன் தேரில் அமைதியாக அமர்ந்திருந்தபடியே அந்த வாளை நூறு துண்டுகளாக்கினான். வலிமைமிக்கப் பௌண்டரகன் ஒரு பரிகத்தை எடுத்துக் கொண்டு, பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த க்ஷத்திரியர்கள் அனைவரின் முன்னிலையில் அதைக் கிருஷ்ணன் மீது வீசினான்.(9,10) மன்னா {ஜனமேஜயா}, ஜகந்நாதன் அலட்டிக் கொள்ளாமல் அந்தப் பரிகத்தைப் பாதியாக முறித்தான். பகைவரைக் கொல்பவனான மன்னன் பௌண்டரகன், அடுத்ததாக ஆயிரம் ஆரங்களைக் கொண்டதும், முப்பது பாரங்கள்[1] எடை கொண்டதும், பிரகாசமிக்கதுமான ஓர் இரும்புச் சக்கரத்தை இருப்புக்கு அழைத்தான். பிறகு அவன் கிருஷ்ணனிடம் பின்வருமாறு பேசினான்.(11,12)பௌண்டரகன், “கோவிந்தா, கர்விகளில் முதன்மையானவனே, உன் சக்கரத்தை அழிக்கக்கூடியதும், பீதியை ஏற்படுத்துவதுமான என் சக்கரத்தைப் பார். விருஷ்ணியின் வழித்தோன்றலே, இப்போது உன் செருக்கை நான் தகர்க்கப் போகிறேன். வெல்லப்பட முடியாத இந்தச் சக்கரத்தை உனக்காவே நான் வரவழைத்தேன். உனக்கு ஆற்றலிருந்தால் என் முயற்சியை வீணடிப்பாயாக” என்றான்.

பெரும்பலவானும், செல்வாக்குள்ள மன்னனுமான பௌண்டரகன் இதைச் சொல்லிவிட்டுத் தன் சக்கரத்தை ஓராயிரம் முறை சுழற்றிக் கிருஷ்ணன் மீது ஏவினான். பலவான்களில் உயர்ந்தவனான கிருஷ்ணன், அந்தச் சக்கரம் காயத்தை ஏற்படுத்தாமல் தன்னைக் கடந்து செல்லும் வகையில், தன் தேரில் இருந்து விரைவாக இறங்கி சிங்கம் போலக் கர்ஜித்தான். முதலில் கிருஷ்ணன், அவனது துணிவையும், வீரத்தையும் கண்டு ஆச்சரியமடைந்து, “ஐயோ, பௌண்டரகனின் உள்ளச் சமநிலையும், பொறையும் {நீடித்து நிற்கும் திறனும்} எவ்வளவு அற்புதமானது” என்று நினைத்தான். இவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கும்போதே அந்த ஜகந்நாதன் தன் அற்புதத் தேரில் இருந்து குதித்தான். முயற்சி வீணடிக்கப்பட்ட பௌண்டரகன், பெரும் பாறை ஒன்றை எடுத்துக் கிருஷ்ணன் மீது வீசினான். எனினும் அவன், சிந்தனைக்கு அப்பாற்பட்ட தன்னுடைய அசாத்திய ஆற்றலைப் பயன்படுத்தி அந்தப் பாறையைப் பௌண்டரகன் மீதே திருப்பிவிட்டான்.(13-19) இவ்வாறே அந்த ஹரி நீண்ட நேரம் பௌண்டரகனுடன் போரிட்டுக் கொண்டிருந்தான். இறுதியில் அவன், அசுரர்களின் குருதியைப் பருகும் தன் சக்கரத்தை இருப்புக்கு அழைத்தான்.(20)

தங்கத்தலான அந்தச் சக்கரம், தைத்திய மாமிசத்தால் ஊட்டம் பெற்றதாகவும், அவர்களுடைய {தைத்தியர்களுடைய} மனைவிகளின் கர்ப்பங்களை அழிக்கக்கூடியதாகவும் இருந்தது. சில நேரங்களில் அந்தச் சக்கரம் ஆயிரம் ஆரங்களைக் கொண்டதாகவும், வேறு சில நேரங்களில் நூறாயிரம் {ஒரு லட்சம்} ஆரங்களைக் கொண்டதாகவும் தெரிந்தது. உயர்ந்ததும், செழுமையானதும், தேவர்களால் வழிபடப்படுவதுமான அந்தத் தெய்வீக ஆயுதம், தைத்தியர்களின் இதயங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.(21,22) பாவங்களில் இருந்து பக்தர்களைக் காப்பவனும், சாரங்கபாணியுமான விஷ்ணுவின் நித்தியப் பயன்பாட்டுக்குரிய அந்தச் சக்கரத்தால் அந்தக் கோவிந்தன் பௌண்டரகனைக் கொன்றான்.(23) இறைச்சியுண்ணும் அந்தச் சக்கரம், பௌண்டரகனின் உடலைத் துண்டித்துவிட்டுக் கிருஷ்ணனின் கைகளுக்குத் திரும்பியது.(24) அப்போது பௌண்டரகனின் உயிரற்ற உடல் போர்க்களத்தில் விழுந்தது. பிரதாபவானும், ஹரியுமான பகவான் விஷ்ணு, பொருள்முதல்வாதிகளுக்குப் புரியாத ஆழ்நிலை இயல்பைக் கொண்ட பௌண்டரகனை இவ்வாறு கொன்றுவிட்டு, யாதவர்கள் அனைவராலும் துதிக்கப்பட்டவனாகச் சுதர்மம் என்று அறியப்படும் தன் சபா மண்டபத்திற்குத் திரும்பிச் சென்றான்” என்றார் {வைசம்பாயனர்}.(25)

ஓடி ஒளிந்த ஏகலவ்யன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 77-(ஏகலவ்யநிர்யாணம்)-பலராமனிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் கடல் தாண்டி தனித்தீவில் ஓடி ஒளிந்த ஏகலவ்யன்; யாதவர்களின் சபையில் உரையாற்றிய கிருஷ்ணன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அதே வேளையில் போர்க்களத்தில் பலசாலிகளில் சிறந்த பலராமன், ஏகலவ்யனின் மார்பைத் தாக்கி சிங்கம்போலக் கர்ஜித்தான்.(1) அதற்குப் பதிலடியாக ஏகலவ்யனும், பலத்தின் செருக்கில் வெறிக் கொண்டிருந்த வலிமைமிக்கப் பலராமனின் மார்பைத் தன் கதாயுதத்தால் தாக்கினான்.(2) ஏகலவ்யனின் கதாயுதத்தால் தாக்கப்பட்ட விருஷ்ணி குல பலராமன், அலட்சியமாகத் தன் இரு கைகளாலும் அதைப் பற்றி, அந்த நிஷாத மன்னன் {ஏகலவ்யன்} வெற்றியில் நம்பிக்கை அனைத்தையும் இழந்து, சீற்றமிக்கக் கடுஞ்சுறாக்களின் வசிப்பிடமான பெருங்கடலின் கரைக்குத் தப்பியோடும் வகையில் அவனைப் பலமாகத் தாக்கினான்.(3,4)

ஏகலவ்யன் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடும்போது, பலராமன் அவனைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றான். ஏகலவ்யன் உண்மையில் அஞ்சி எங்கு ஓடினாலும் அங்கெல்லாம் பலராமன் அவனை நெருங்கினான்.(5) மன்னா, இறுதியில் ஏகலவ்யன், பலராமனின் கோபத்தில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கடலுக்குள் புகுந்து, ஐந்து யோஜனைகள் நீந்திச் சென்றான்.(6) ஏகலவ்யன் வசிப்போரெவருமற்ற தீவொன்றை அடைந்து அங்கே வசித்து வந்தான். இவ்வாறே பலராமன் நிஷாதர்களின் மன்னனான ஏகலவ்யனை வென்றான்.(7)

அதன் பிறகு, அந்த ஹலாயுதன், எண்ணற்ற வைரங்களாலும், மதிப்புமிக்க ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த சுதர்மம் என்ற சபையை அடைந்தான். அதே வேளையில் சாத்யகியும் போர்க்களத்தை விட்டு அந்தச் சபா மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான்.(8) மன்னா, பிற யாதவர்கள் அனைவருங்கூடப் போர்க்களத்தை விட்டு வந்து அந்த ராஜசபையின் இருக்கைகளில் அமர்ந்தனர். அந்நேரத்தில் தேவகியின் மகனான பகவான் {கிருஷ்ணன்} அந்த விருஷ்ணிகளின் சபையில் பின்வருமாறு பேசினான்.(9,10)

கிருஷ்ணன், “யாதவர்களில் முதன்மையானவர்களே, நான் கைலாச மலைக்குச் சென்று, செந்நீல வண்ணனான சங்கரனை என் தவத்தால் நிறைவடையச் செய்து, அவனது ஆசியைப் பெற்றேன்.(11) தேவர்கள் அனைவரும், தபோதனர்களான பெரும் முனிவர்கள் அனைவரும் அங்கே இருந்தனர். சங்கரன் என்னைச் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்து, நான் புறப்படும் முன் அழகிய துதிகளை எனக்கு அர்ப்பணித்தான்.(12) நான் பதரிகாசிரமத்தில் இருந்தபோது ஓரிரவில் அசாதரண அனுபவம் ஒன்றை அடைந்தேன். வலிமைமிக்கப் பிசாசங்கள் இரண்டு வேட்டையாடியவாறும் என்னைக் குறித்துப் பேசிக் கொண்டும் என் முன் வந்தன. உண்மையில், அவற்றின் மனங்கள் என்னில் நிலைத்திருந்தன. உண்மையில் பேரான்மாக்களான இந்தப் பிசாசங்கள் இரண்டும் என்னைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தன. அவை பெரும்பணிவுடனும், பக்தியுடனும் என்னை வணங்கின. நான் அவர்களிடம் நிறைவடைந்ததால் தேவலோகத்தில் வசிக்குமாறு அனுப்பி வைத்தேன். அந்த நிகழ்வுக்குப் பிறகு, என் தவத்தால் மஹாதேவனை நிறைவடையச் செய்து இன்று இங்கே திரும்பினேன்” என்றான் {கிருஷ்ணன்}”.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “கிருஷ்ணன் சொன்ன அனைத்தையும் கேட்ட விருஷ்ணி குலத்தோர் அனைவரும், அவனது புகலிடத்தை மீண்டும் அடைந்து, மிகப் பாதுகாப்பாக உணர்ந்து அவனைத் துதித்தனர். அதன் பிறகு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(13-17)

பிறகு ஜகந்நாதன் தன் மாளிகைக்குச் சென்று நடந்தவை அனைத்தையும் ருக்மிணி, சத்யபாமா ஆகியோருக்கு உரைத்தான்.(18) அன்பு மனைவியரான அவ்விருவரும் தங்கள் கணவன் சொன்னதைக் கேட்டுப் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மன்னா, இவ்வாறே கிருஷ்ணனின் கடந்த காலங்கள் அனைத்தையும் உனக்கு விரிவாகச் சொல்லிவிட்டேன்.(19) கிருஷ்ணன் தொடர்ந்து பூமியை ஆண்டு, எண்ணற்ற துஷ்டர்களைக் கொன்று, பூமியின் பாரத்தைக் குறைத்தான். தேவர்களின் தலைவனும், பெரும் முனிவர்களால் வழிபடப்படுபவனுமான அவன் {கிருஷ்ணன்}, நரகாசுரன், பெரும் மன்னன் பௌண்டரகன், ஹயக்ரீவன், நிசும்பன், சுந்தன், உபசுந்தன் உள்ளிட்ட முக்கிய அசுரர்களைக் கொன்று முனிவர்களையும், பிராமணர்களையும் பாதுகாத்தான்.(20,21)

கிருஷ்ணன் எண்ணற்ற பசுக்களையும், அளவில்லா செல்வத்தையும் பிராமணர்களுக்குக் கொடையாகக் கொடுத்தான். அவன் அக்னி ஹோத்ரங்களைச் செய்து, பிராமணர்களுக்கு நல்ல உணவைக் கொடுத்து அவர்களை நிறைவடையச் செய்தான்.(22) அவன் வேதங்கற்றுப் பிரம்மச்சரியம் அனுசரித்து முனிவர்களையும், யஜ்ஞங்களைச் செய்து தேவர்களையும், ஆகுதிகளைக் கொடுத்துப் பித்ருக்களையும் நிறைவடையச் செய்தான்.(23) இவ்வாறே தேவர்களின் தலைவனான கிருஷ்ணன், தன் ராஜ்ஜியத்தைத் தடையில்லாமல் ஆண்டான், பிராமணர்களின் தலைமையிலான குடிமக்கள் அனைவரும் அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(24)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    “அதே வேளையில் போர்க்களத்தில் பலசாலிகளில் சிறந்த பலராமன், ஏகலவ்யனின் மார்பைத் தாக்கி சிங்கம்போலக் கர்ஜித்தான்.(1) அதற்குப் பதிலடியாக ஏகலவ்யனும், பலத்தின் செருக்கில் வெறிக் கொண்டிருந்த வலிமைமிக்கப் பலராமனின் மார்பைத் தன் கதாயுதத்தால் தாக்கினான்.(2) ஏகலவ்யனின் கதாயுதத்தால் தாக்கப்பட்ட விருஷ்ணி குல பலராமன், அலட்சியமாகத் தன் இரு கைகளாலும் அதைப் பற்றி, அந்த நிஷாத மன்னன் {ஏகலவ்யன்} வெற்றியில் நம்பிக்கை அனைத்தையும் இழந்து, சீற்றமிக்கக் கடுஞ்சுறாக்களின் வசிப்பிடமான பெருங்கடலின் கரைக்குத் தப்பியோடும் வகையில் அவனைப் பலமாகத் தாக்கினான்.(3,4)

ஏகலவ்யன் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடும்போது, பலராமன் அவனைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றான். ஏகலவ்யன் உண்மையில் அஞ்சி எங்கு ஓடினாலும் அங்கெல்லாம் பலராமன் அவனை நெருங்கினான்.(5) மன்னா, இறுதியில் ஏகலவ்யன், பலராமனின் கோபத்தில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கடலுக்குள் புகுந்து, ஐந்து யோஜனைகள் நீந்திச் சென்றான்.(6) ஏகலவ்யன் வசிப்போரெவருமற்ற தீவொன்றை அடைந்து அங்கே வசித்து வந்தான். இவ்வாறே பலராமன் நிஷாதர்களின் மன்னனான ஏகலவ்யனை வென்றான்.(7)

அதன் பிறகு, அந்த ஹலாயுதன், எண்ணற்ற வைரங்களாலும், மதிப்புமிக்க ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த சுதர்மம் என்ற சபையை அடைந்தான். அதே வேளையில் சாத்யகியும் போர்க்களத்தை விட்டு அந்தச் சபா மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான்.(8) மன்னா, பிற யாதவர்கள் அனைவருங்கூடப் போர்க்களத்தை விட்டு வந்து அந்த ராஜசபையின் இருக்கைகளில் அமர்ந்தனர். அந்நேரத்தில் தேவகியின் மகனான பகவான் {கிருஷ்ணன்} அந்த விருஷ்ணிகளின் சபையில் பின்வருமாறு பேசினான்.(9,10)

கிருஷ்ணன், “யாதவர்களில் முதன்மையானவர்களே, நான் கைலாச மலைக்குச் சென்று, செந்நீல வண்ணனான சங்கரனை என் தவத்தால் நிறைவடையச் செய்து, அவனது ஆசியைப் பெற்றேன்.(11) தேவர்கள் அனைவரும், தபோதனர்களான பெரும் முனிவர்கள் அனைவரும் அங்கே இருந்தனர். சங்கரன் என்னைச் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்து, நான் புறப்படும் முன் அழகிய துதிகளை எனக்கு அர்ப்பணித்தான்.(12) நான் பதரிகாசிரமத்தில் இருந்தபோது ஓரிரவில் அசாதரண அனுபவம் ஒன்றை அடைந்தேன். வலிமைமிக்கப் பிசாசங்கள் இரண்டு வேட்டையாடியவாறும் என்னைக் குறித்துப் பேசிக் கொண்டும் என் முன் வந்தன. உண்மையில், அவற்றின் மனங்கள் என்னில் நிலைத்திருந்தன. உண்மையில் பேரான்மாக்களான இந்தப் பிசாசங்கள் இரண்டும் என்னைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தன. அவை பெரும்பணிவுடனும், பக்தியுடனும் என்னை வணங்கின. நான் அவர்களிடம் நிறைவடைந்ததால் தேவலோகத்தில் வசிக்குமாறு அனுப்பி வைத்தேன். அந்த நிகழ்வுக்குப் பிறகு, என் தவத்தால் மஹாதேவனை நிறைவடையச் செய்து இன்று இங்கே திரும்பினேன்” என்றான் {கிருஷ்ணன்}”.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “கிருஷ்ணன் சொன்ன அனைத்தையும் கேட்ட விருஷ்ணி குலத்தோர் அனைவரும், அவனது புகலிடத்தை மீண்டும் அடைந்து, மிகப் பாதுகாப்பாக உணர்ந்து அவனைத் துதித்தனர். அதன் பிறகு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(13-17)

பிறகு ஜகந்நாதன் தன் மாளிகைக்குச் சென்று நடந்தவை அனைத்தையும் ருக்மிணி, சத்யபாமா ஆகியோருக்கு உரைத்தான்.(18) அன்பு மனைவியரான அவ்விருவரும் தங்கள் கணவன் சொன்னதைக் கேட்டுப் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மன்னா, இவ்வாறே கிருஷ்ணனின் கடந்த காலங்கள் அனைத்தையும் உனக்கு விரிவாகச் சொல்லிவிட்டேன்.(19) கிருஷ்ணன் தொடர்ந்து பூமியை ஆண்டு, எண்ணற்ற துஷ்டர்களைக் கொன்று, பூமியின் பாரத்தைக் குறைத்தான். தேவர்களின் தலைவனும், பெரும் முனிவர்களால் வழிபடப்படுபவனுமான அவன் {கிருஷ்ணன்}, நரகாசுரன், பெரும் மன்னன் பௌண்டரகன், ஹயக்ரீவன், நிசும்பன், சுந்தன், உபசுந்தன் உள்ளிட்ட முக்கிய அசுரர்களைக் கொன்று முனிவர்களையும், பிராமணர்களையும் பாதுகாத்தான்.(20,21)

கிருஷ்ணன் எண்ணற்ற பசுக்களையும், அளவில்லா செல்வத்தையும் பிராமணர்களுக்குக் கொடையாகக் கொடுத்தான். அவன் அக்னி ஹோத்ரங்களைச் செய்து, பிராமணர்களுக்கு நல்ல உணவைக் கொடுத்து அவர்களை நிறைவடையச் செய்தான்.(22) அவன் வேதங்கற்றுப் பிரம்மச்சரியம் அனுசரித்து முனிவர்களையும், யஜ்ஞங்களைச் செய்து தேவர்களையும், ஆகுதிகளைக் கொடுத்துப் பித்ருக்களையும் நிறைவடையச் செய்தான்.(23) இவ்வாறே தேவர்களின் தலைவனான கிருஷ்ணன், தன் ராஜ்ஜியத்தைத் தடையில்லாமல் ஆண்டான், பிராமணர்களின் தலைமையிலான குடிமக்கள் அனைவரும் அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(24)

ஹம்சன் டிம்பகன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 78-(வைஷம்பாயநம் ப்ரதி ஜநமேஜயப்ரஷ்நம்)-ஹம்சன், டிம்பகன், விசக்ரன் அறிமுகம்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்},    “தவம் செய்யும் பிராமணர்களில் சிறந்தவரே, சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணனின் கடந்த காலத்தைப் பற்றி மேலும் அதிகமாகக் கேட்க விரும்புகிறேன்.(1) கேசவனைக் குறித்துக் கேட்கையில் ஒருபோதும் எனக்குத் தெவிட்டுவதில்லை. சக்கரபாணியான அந்த ஹரியுடைய புனிதப் பெயர்களின் மகிமையை மேலும், மேலும் கேட்க எவன்தான் விரும்பமாட்டான்? ஹரியின் பெயர்கள், வடிவங்கள், குணங்கள் ஆகியவையும், கடந்த காலத்தைக் குறித்தவையும், புலனுணர்வுக்கு அப்பாற்பட்டவையுமான கதைகளைத் தொடர்ந்து கேட்பதே வாழ்வின் மாறா இலக்காகத் திகழ்கிறது.(2,3)

ஹம்சன், டிம்பகன்[1]ஆகியோரின் கூட்டு முயற்சிகள் உலகத்தை எவ்வாறு பாதித்தன? அவர்களின் செயல்பாடுகள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின என்று அறியப்படுகிறது.(4) விசக்ரன் என்ற தானவனுடனான போர் எவ்வாறு நடந்தது? ஹம்சன், டிம்பகன் ஆகியோரின் நல்ல நண்பன் அவன் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(5) பார்க்கவரின் {பரசுராமரின்} சீடர்களான அந்த இளவரசர்கள் இருவரும் பெரும்பலமிக்கவர்களாகத் திகழ்ந்தனர். அவர்கள், சங்கரனின் ஆசிகளைப் பெற்று, ஆயுதப் பயன்பாட்டில் திறன்மிக்கவர்களாகத் திகழ்ந்தனர் என்றும் சொல்லப்படுகிறது.(6)பிராமணரே, ஜகத்பதியான கேசவன், இவ்விரு மன்னர்களுடன் கடும்போரில் ஈடுபட்டான் என முன்னர் நீர் குறிப்பிட்டிருந்தீர்.(7) அவர்கள் யாருடைய மகன்கள்? ஏன் அவர்கள் கிருஷ்ணனுடன் போரிட்டனர்? மன்னா, உலகை வெல்லும் பேராவல் கொண்ட தானவனான விசக்ரன், திரிசூலம் தரித்த எண்பத்தெட்டாயிரம் தானவ வீரர்களின் ஆதரவைப் பெற்றிருந்தான்.(8,9) தானவனான அந்த விசக்ரனை வெல்ல முடியாது என்றே கருதப்பட்டது. அவன் யாதவர்களுடன் போரிட விரும்பி, அவர்களிடம் சிறு தவறையாவது, குறையையாவது காணத் தொடர்ந்து முயன்று வந்தான். இறுதியில் ஒரு பெரும்போர் நேரிட்டு விசக்ரனைக் கொல்லும் நம்பிக்கையுடன் கிருஷ்ணனே போரில் நுழைந்தபோதும், வெற்றியை அடைய அவன் {விசக்ரன்} சிறந்த முயற்சி செய்திருக்கிறான்” என்றான் {ஜனமேஜயன்}.(10)

பிரம்மதத்தன் மித்ரஸஹர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 79-(ஹம்ஸடிம்பகோத்பத்தி)-மன்னன் பிரம்மதத்தனுக்கும், பிராமணர் மித்ரஸஹருக்கும் இடையில் இருந்த நட்பு; ஹம்சன், டிம்பகன், ஜனார்த்தனன் பிறப்பு…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, சால்வதேசத்தைத் தன் ராஜ்ஜியமாகவும், பிரம்மதத்தன் என்ற பெயரையும் கொண்ட ஓர் உத்தம மன்னன் இருந்தான். மன்னா, அவன் அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்ட தூய இதயம் படைத்தவனாகவும் இருந்தான்.(1) அவன் எப்போதும் தன் மனத்தையும், புலன்களையும் கவனமாகக் கட்டுப்படுத்திக் கொண்டு ஐவகை வேள்விகளை {பஞ்சயஜ்ஞங்களைச்} செய்து வந்தான். வேதங்களில் சொல்லப்படும் பிரம்மத்தைக் குறித்த அறிவியலை நன்கறிந்தவனாகவும் அவன் இருந்தான். எப்போதும் வேள்விகளில் ஈடுபடுபவனாக இருந்ததால் அவனது இருப்பே உயிரினங்கள் அனைத்திற்கும் மங்கலகரமானதாக இருந்தது.(2)

பூமியின் தலைவா {ஜனமேஜயா}, அவனுக்கு உன்னத மனங்கொண்ட அழகிய மனைவியர் இருவர் இருந்தனர். அவர்கள் நல்ல குணங்களைக் கொண்டவர்களாக இருப்பினும் பிள்ளைகள் இல்லாதவர்களாக இருந்தனர்.(3) தேவலோகத்தில் இந்திரன் சசியுடன் இன்புற்றிருந்ததைப் போலவே, பிரம்மதத்தனும் தன் மனைவியர் இருவருடன் பெரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருந்தான். அவன், பெரும் யோகியும், தொடர்ந்து வேத வேதாங்க கல்வியில் ஈடுபட்டவரும், மித்ரஸஹன் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு பிராமணரைத் தன் நண்பராகக் கொண்டிருந்தான். பிராமணர்களில் மகுட ரத்தினமாகத் திகழ்ந்த அவரும் அந்த மன்னனைப் போலவே பிள்ளையற்றவராக இருந்தார்.(4,5)

ஒரு மகனை அடைய விரும்பிய மன்னன், தன் மனைவியர் இருவரின் துணையுடன் கூடியவனாகப் பத்து வருட காலம் திரிசூலபாணியான சிவனை வழிபட்டான்.(6) மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, பிராமணரான மித்ரஸஹரும் ஒரு மகனை அடையும் நோக்கத்திற்காக வைஷ்ணவ வேள்வி ஒன்றை {வைஷ்ணவ ஸத்ரத்தைச்} செய்தார்.

மன்னன் பிரம்மதத்தனால் வழிபடப்பட்ட செந்நீல வண்ணனான சிவன், அவனது கனவில் தோன்றி, “மன்னா, மங்கலங்கள் அனைத்தையும் நீ அடைவாயாக. நான் உன்னிடம் நிறைவடைந்திருக்கிறேன். ஒரு வரம் வேண்டுவாயாக” என்று கேட்டான்.(7,8) அந்த மன்னனும் {பிரம்மதத்தனும்} மகிழ்ச்சியாக, “என் அன்புக்குரிய தலைவா, நான் இரண்டு மகன்களை அடைய விரும்புகிறேன்” என்று கேட்டான். காளைச் சின்னக் கொடியைக் கொண்ட சிவன், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி மறைந்தவுடனேயே மன்னன் தன் உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்தான்.

நுண்ணறிவுமிக்க மித்ரஸஹர், கலப்படமற்ற அர்ப்பணிப்புடன் ஐந்தாண்டு காலம் கேசவனை வழிபட்டார். தேவர்களின் தலைவனான அந்த ஜனார்த்தனன், அவரது வழிபாட்டில் நிறைவடைந்து, அவரைப் போலவே நல்லவனாக ஒரு மகனை அருளினான். மன்னா, உரிய காலத்தில் ராணிகள் இருவரும் கருவுற்ற அதே வேளையில் விஷ்ணு அந்தப் பிராமணருடைய மனைவியின் கருவறையில் தன் வீரியத்தை வைத்தான். சிவனின் அருளால் ராணிகள் இருவரும் வலிமைமிக்க இரண்டு மகன்களைப் பெற்றனர்.

மன்னன் பிரம்மதத்தன், தன் இரு மகன்களுக்கும், ஜாதகர்மம் {பெயர்ச்சூட்டுவிழா} முதலிய பரிந்துரைக்கப்பட்ட சடங்குகள் அனைத்தையும் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளுடனும், விதிமுறைகளுடனும் செய்து வைத்து, பிராமணர்களுக்கு ஈகையாகப் பெருஞ்செல்வத்தைக் கொடையளித்தான்.

மன்னா {ஜனமேஜயா}, மித்ரஸஹரும், ஜகந்நாதனே பிள்ளையாகப் பிறந்திருக்கிறானென அனைவருக்கும் தோன்றுவண்ணம் ஒரு மகனைப் பெற்றார். அந்தப் பிராமணர் {மித்ரஸஹர்}, தன் மகனுக்கான தூய்மைச் சடங்குகள் அனைத்தையும் விதிப்படி கடமையுணர்வுடன் செய்தார்.(9-16)

இளவரசர்கள் இருவரும், அந்தப் பிராமணப் பிள்ளையும் ஒரே வயதினராக இருந்தனர். அவர்கள் அனைவரும் வேத கல்வி கற்று, வேதாந்தங்களில் தேர்ச்சியடைந்து, வில்லைப் பயன்படுத்தும் முறையையும், படைக்கலைகள் பிறவற்றையும் கற்றுக் கொண்டனர். இளவரசர்களில் மூத்தவன் பெயர் ஹம்சன் என்பதும், இளையவன் பெயர் டிம்பகன் என்பதும் ஆகும். அந்தப் பிராமணரின் {மித்ரஸஹரின்} மகன் பெயர் ஜனார்த்தனன் ஆகும். அவர்கள் அனைவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(17-19)

வரலாபம் | பவிஷ்ய பர்வம் பகுதி – 80-(ஹம்ஸடிம்பகயோர்வரலாபம்)-சிவனை நோக்கித் தவம் செய்த ஹம்சனும், டிம்பகனும்; அவர்கள் அடைந்த வரங்கள்…வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, இளவரசர்களான ஹம்சனும், டிம்பகனும் சிவனின் சக்திமிக்க அவதாரங்களாகத் தோன்றியதால், அவர்கள் பெரும் நுண்ணறிவுமிக்கவர்களாகத் திகழ்ந்தனர். ஒரு காலத்தில் அவர்கள் கடுந்தவஞ்செய்யத் தீர்மானித்தனர்.(1) மன்னா {ஜனமேஜயா}, இதற்காக அவர்கள் இமய பர்வதத்திற்குச் சென்றனர். செந்நீல வண்ணனும், மங்கலம் அருள்பவனும், பக்தர்களின் வாழ்வுத் துயரங்கள் அனைத்தையும் விலக்குபவனும், உமையின் கணவனுமான சிவனை நிறைவடையச் செய்து, பேராற்றலையும், தெய்வீக ஆயுதங்களையும் அடையும் நம்பிக்கையில், தங்கள் மனத்தைக் கவனமாகக் கட்டுப்படுத்திக் கொண்டும், நீரையும், காற்றையும் மட்டுமே ஆகாரமாக உண்டும் அங்கே அவர்கள் தவம் செய்து வந்தனர்.(2,3)

அவர்கள் {ஹம்சனும், டிம்பகனும்}, தங்கள் இதயங்களில் சிவனை வைத்துத் தங்கள் மனங்களை அவனிலேயே நிலைநிறுத்தி வந்தனர். அவர்கள் இவ்வாறே பகலிரவுகள் தொடர்ந்து, அவனுடைய பெயர்களைச் சொல்லி, “தேவர்களின் தலைவனும், அண்டத்தை ஆள்பவனும், பக்தர்களின் பேரன்புக்குரியவனும், சங்கரன், ஹரன், சர்வன், சிவானந்தன், நீலக்ரீவன், உமாபதி, ரிஷபத்வஜன், விரூபாக்ஷன், ஹரியக்ஷன், கிரீசன், ஈசன், வாசுதேவசிவன், அச்யுதன், சதாசிவன், மஹாதேவன் என்றெல்லாம் அழைக்கப்படுபவனும், புனித அக்ஷரமான ஓம் என்பதன் தனி உருவகமும் எவனோ, அவனை நாங்கள் வணங்குகிறோம்” என்றே துதித்தும் வந்தனர். இவ்வாறே அவ்விரு சகோதரர்களின் தவம் தொடர்ந்து வந்தது.(4-7)

மன்னா {ஜனமேஜயா}, படிப்படியாக, அந்த இளவரசர்கள் இருவரும் பொருள் பற்றிலிருந்தும், போலி ஆணவத்தில் இருந்தும் விடுபட்டனர். அவர்கள் மௌன விரதம் இருந்தவாறே, ஐந்து வருடங்கள் தவம் புரிந்தனர். அவர்களின் சுயக்கட்டுப்பாட்டில் நிறைவடைந்த சிவன், புலித்தோலுடுத்தி, சிரத்தில் பிறைமதி தாங்கிய திரிசூலபாணியாக அவர்களின் முன்பு காட்சியளித்தான். பாவங்களை அழிப்பவன் தங்கள் முன் நிற்பதைக் கண்ட அந்தச் சகோதரர்கள் இருவரும், பெருமகிழ்ச்சியடைந்தவர்களாக அவனை மீண்டும் மீண்டும் வணங்கினர்.(8-10)

அப்போது சிவன், “என் அன்புக்குரிய இளவரசர்களே, நீங்கள் இருவரும் மங்கலங்களை அடைவீராக. வேண்டும் வரத்தைக் கேட்பீராக. அதை நான் அருள்வேன்” என்றான்.

மன்னா, இந்தச் சொற்களைக் கேட்ட அந்த இளவரசர்கள் இருவரும் {ஹம்சனும், டிம்பகனும்}, “பிரபுவே, எங்களிடம் நீ நிறைவடைந்தது நிச்சயமென்றால், தேவர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள் ஆகியோரால் நாங்கள் வெல்லப்பட முடியாதவர்களாவோமாக. உயிரினங்கள் அனைத்தின் வாழ்வாகவும் {உயிராகவும்}, ஆன்மாவாகவும் இருப்பவனே, இந்த வரத்தையே நாங்கள் பெரிதும் விரும்புகிறோம்.(11,12) சிவனே, சக்திமிக்க தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும் அடைவதையே நாங்கள் இரண்டாம் வரமாக வேண்டுகிறோம். மஹேஷ்வரம், ரௌத்ரம், பிரம்மசிரம் என்ற ஆயுதங்களை நாங்கள் அடைவோமாக.(13) சர்வனே, போர்க்களங்களில் நம்பிக்கையெனும் முற்றான உறுதியை உணர்வதற்காக, துளையா கவசத்தையும், முறியா விற்களையும், நொறுங்கா கோடரிகளையும் நாங்கள் விரும்புகிறோம்.(14) மஹாதேவா, {இருவராக இங்கிருக்கும்} நாங்கள் ஒவ்வொருவரும், உமது பூதகணங்கள் இரண்டைத் துணையாகக் கொள்வோமாக” என்று கேட்டனர்.

சிவன், அதற்கு மறுமொழியாக, “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி, பிருங்கி, ரிடீ, குண்டோதரன், விரூபாக்ஷன் என்ற தன்னுடைய நான்கு பூதகணங்களை அவர்களுக்குத் துணையாகக் கொடுத்தான்.

அப்போது சிவன், “பூதேசர்களே, இவ்விரு இளவரசர்கள் போரில் ஈடுபடும்போதெல்லாம் நீங்கள் இவர்களுக்குத் துணைபுரிவீராக” என்றான். இதைச் சொன்ன சிவன், அங்கேயே அப்போதே மறைந்தான்.(15-17)

அந்தக் காலத்தில் இருந்தே ஹம்சனும், டிம்பகனும் பெருஞ்சக்திமிக்கப் போர்வீரர்களாகவும், அனைத்து வகை ஆயுதப் பயன்பாடுகளையும் முற்றாக அறிந்தவர்களாகவும் திகழ்ந்தனர். அவர்கள் தன்னிகரற்ற வில்லாளிகளாகவும், பெருஞ்செல்வாக்குமிக்க ஆளுமைகளாகவும் வலம் வந்தனர்.(18) கவசந்தரித்தவர்களான அவர்கள் இருவரும், போர்க்களம் புகும்பொழுதெல்லாம், முன்னணி தேவர்களாலும், அசுரர்களாலுங்கூடத் தங்களை வெல்ல முடியாது என்பதை நிரூபித்து வந்தனர்.(19)

அவர்கள், தங்கள் மேனிகளைச் சாம்பலால் {பஸ்மத்தால் / நீறால்} அலங்கரித்துக் கொண்டும், மூவரி திலகத்தைத் தங்கள் நெற்றியில் தரித்துக் கொண்டும், சிவனைப் போற்றும் விழாக்களை அப்போதைக்கப்போது நடத்தி வந்தனர்.(20) அவர்கள் தங்கள் உடல்களை ருத்ராக்ஷங்களால் அலங்கரித்துக் கொண்டும், மான் தோல் உடுத்திக் கொண்டும், “அமைதியில் ஆழ்ந்த அறிஞனான மஹாதேவனையே நாங்கள் வணங்குகிறோம். நமசிவாய” என்று அவனையே {சிவனையே} துதித்துக்கொண்டிருந்தனர். இவ்வாறு அந்த இளவரசர்கள் இருவரும், தலையில் கங்கையைத் தரித்த அந்த மஹாதேவனைப் போலவே நீரில் நனைந்த சடாமுடிகளுடன் தோற்றமளித்தனர்.(21,22) தவம் செய்து முடித்த அந்தப் பெரும் வீரர்கள் இருவரும் வீடுகளுக்குத் திரும்பி, தங்கள் தந்தை {பிரம்மதத்தன்}, தந்தையின் நண்பரான மித்ரஸஹர், தங்கள் அன்னையர் ஆகியோரை வணங்கினர்.(23)

மன்னா {ஜனமேஜயா}, பெரும் நுண்ணறிவுமிக்க ஜனார்த்தனன் இடையறாமல் நீண்டகாலமாகத் தொடர்ந்து சாத்திரங்களைப் பயின்று வந்தான். தர்மாத்மாவான அவன், அனைத்து வகை ஞானங்களிலும் தேர்ச்சியடைந்து, ஐயந்தெளிந்த ஞானியானான்.(24) அவன், தொடர்ச்சியாகத் தன் மனத்தையும், புலன்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் முற்றான உண்மையை {பிரம்மத்தைத்} தியானித்து வந்தான். அவன் {ஜனார்த்தனன்}, புலன்களின் தலைவனும், பீதாம்பரதாரியுமான {மஞ்சற்பட்டாடை உடுத்தியவனுமான} விஷ்ணுவை வழிபடுவதிலேயே ஈடுபட்டுவந்தான்.(25) உரிய காலத்தில் ஹம்சனும், டிம்பகனும் திருமணம் செய்து கொண்ட பிறகே, ஜனார்த்தனுனும் இல்லறவாழ்விற்குள் நுழைந்தான்.(26)

அந்த மூன்று நண்பர்களும் ஐவகை வேள்விகளை {பஞ்சயஜ்ஞங்களைச்} செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அவர்கள் தங்கள் தங்கள் மனைவியருடன் பற்றுமிக்கவர்களாகவும், நன்றியுணர்வுடன் தங்கள் பெரியோருக்கு கடமையாற்றுபவர்களாகவும் திகழ்ந்தனர். மன்னா, அறப்பாதையைப் பின்பற்றுவதே நாகரிக மனிதனுக்கு மிகச் சிறந்த வழி என்பதில் அவர்கள் ஆழமான நம்பிக்கையைக் கொண்டிருந்தனர்” என்றார் {வைசம்பாயனர்}.(27)

————————————-—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading