ஸ்ரீ மஹாபாரதம் — ஸ்திரீ பர்வம்-ஜலப்ரதானிக உப பர்வம்-விசோக உப பர்வம்–

திருதராஷ்டிரனைத் தேற்றிய சஞ்சயன்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 01-பிறகு என்ன நடந்தது என வைசம்பாயனரிடம் விசாரித்த ஜனமேஜயன்; திருதராஷ்டிரனின் துயரம்; திருதராஷ்டிரனின் புலம்பல்; இறந்தோருக்கான ஈமச்சடங்குகளைச் செய்யுமாறு சொன்ன சஞ்சயன்; சஞ்சயனின் கடிந்துரையும், தேற்றமும்; விதுரன் பேசத் தொடங்கியது…(விசோகம் என்றால் துயர முடிவு, அல்லது துயரத்தில் இருந்து விடுதலை என்பது பொருளாகும். இந்தப் பர்வத்தில் விதுரன் திருதராஷ்டிரன் துயர்களைய முயற்சி செய்வதால் இப்பர்வத்திற்கு இந்தப் பெயர்.)

ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது – அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! தவசியே {வைசம்பாயனரே}, துரியோதனனும், போர்வீரர்கள் அனைவரும் வீழ்ந்த பிறகு, செய்தியை அடைந்த மன்னன் திருதராஷ்டிரன் என்ன செய்தான்?(1) உயரான்ம குரு மன்னனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன் என்ன செய்தான்? எஞ்சிய மூவரான கிருபரும், மற்றவர்களும் என்ன செய்தனர்?(2) அஸ்வத்தாமனின் சாதனைகள் குறித்த அனைத்தையும் நான் கேட்டுவிட்டேன். அவர்கள் ஒருவருக்கொருவர் சபித்த கடிந்துரைகளுக்குப் பிறகு என்ன நடந்தது என்பதை எனக்குச் சொல்வீராக. பார்வையற்ற முதிய மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்குச்} சஞ்சயன் சொன்ன அனைத்தையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னன் திருதராஷ்டிரன், தனது நூறு மகன்களையும் இழந்த பிறகு, அதன் காரணமாகத் துயரால் பீடிக்கப்பட்டு, உற்சாகமற்றவனாக, கவலையில் மூழ்கி, பேசும் சக்தியை இழந்தவனாகக் கிளைகள் ஒடிந்த மரத்தைப் போலத் தெரிந்தான்.(4)

பெரும் ஞானத்தைக் கொண்டவனான சஞ்சயன் அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} அணுகி, அவனிடம், “ஓ! ஏகாதிபதி, நீர் ஏன் வருந்துகிறீர்? துயரம் எக்காரியத்தையம் செய்யாது.(5) ஓ! மன்னா, பதினெட்டு {18}அக்ஷௌஹிணி போராளிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். வெறித்துப் போயிருக்கும் பூமியானது இப்போது கிட்டத்தட்ட வெறுமையாகவே இருக்கிறது.(6) பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுமான மன்னர்கள் அனைவரும், உமது மகனுடன் சேர்ந்து தங்கள் உயிரை விட்டனர்.(7) இப்போது விதிப்படி செய்ய வேண்டியது, உமது தந்தைமார், மகன்கள், பேரப்பிள்ளைகள், சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் ஆசான்களுக்கான ஈமச் சடங்குகளே ஆகும்” என்றான் {சஞ்சயன்}”.(8)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மகன்கள், அமைச்சர்கள் மற்றும் தன் நண்பர்கள் அனைவரையும் இழந்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான மன்னன் திருதராஷ்டிரன், காற்றால் வேரோடு பிடுங்கப்பட்ட ஒரு மரத்தைப் போலத் திடீரெனக் கீழே பூமியில் விழுந்தான்.(9)

{அப்போது} திருதராஷ்டிரன், “மகன்கள், அமைச்சர்கள் மற்றும் என் நண்பர்கள் அனைவரையும் இழந்த நான், நிச்சயம் கவலையுடன் பூமியில் திரியப் போகிறேன்.(10) முதுமையால் பீடிக்கப்பட்டு, சொந்தங்கள், நண்பர்கள் ஆகியோரை இழந்து, சிறகுகளற்ற பறவைக்கு ஒப்பாக இருக்கும் எனக்கு உயிர் வாழும் தேவை என்ன இருக்கிறது?(11) ஓ! பெரும் ஞானியே, கண்களை இழந்தவனான நான், ஒளியிழந்த நட்சத்திரத்தைப் போலவே இப்போது நாட்டை இழந்து, சொந்தங்களை இழந்து ஒளியில்லாமல் இருக்கிறேன்.(12) நண்பர்களும், ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, தெய்வீக முனிவரான நாரதர், தீவில் பிறந்தவரான கிருஷ்ணர் {வியாசர்} ஆகியோரும் ஆலோசனைகளைச் சொன்ன போது, அவற்றை நான் பின்பற்றவில்லை.(13) சபைக்கு மத்தியில் வைத்து கிருஷ்ணன், “ஓ! மன்னா, பகைமைகளை நிறுத்துவோம். உமது மகனே {துரியோதனனே} மொத்த நாட்டையும் எடுத்துக் கொள்ளட்டும். (பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களை மட்டுமே கொடுப்பீராக)” என்று எனக்கு நன்மையானதைச் சொன்னான். மூடனான நான் அந்த அறிவுரையைப் பின்பற்றாததால் இப்போது, எரிச்சலூட்டத்தக்க இந்தக் கவலையை அடைந்தேன்.(14)

பீஷ்மரின் நீதிமிக்க ஆலோசனைகளை நான் கேட்கவில்லை. ஐயோ, ஒரு காளையைப் போன்ற முழங்கும் துரியோதனனின் படுகொலையைக் கேட்டும்,(15) துச்சாசனனின் மரணம், கர்ணனின் அழிவு, துரோணச் சூரியனின் மறைவு ஆகியவற்றைக் கேட்டும் என் இதயம் துண்டுகளாக நொறுங்காமல் இருக்கிறதே.(16) ஓ! சஞ்சயா, முந்தைய நாட்களில் நான் செய்த எந்தத் தீச்செயலின் விளைவாக இன்று துன்புறுகிறேன் என்பதை என்னால் நினைவுகூரமுடியவில்லை.(17) விதிவகுக்கும் உயர்ந்தவன் {பிரம்மன்}, இந்த அளவுக்குத் துன்பத்தைத் தாங்கிக் கொள்ள விதித்திருக்கிறான் என்றால் நான் முந்தைய பிறவிகளில் பெரும்பாவங்களைச் செய்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.(18) என் சொந்தங்கள் அனைவரின் இந்த அழிவும், என் நலன் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவரின் இந்த நிர்மூலமும், விதியின் பலத்தாலேயே இந்த முதிர்வயதில் என்னை வந்தடைந்திருக்கிறது. இழிந்தவனான என்னைவிட இந்த உலகத்தில் வேறு எந்த மனிதன் அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கிறான்?(19) நிலை இவ்வாறு இருப்பதால், உறுதிமிக்கத் தீர்மானத்துடன், பிரம்மலோகத்திற்கு இட்டுச்செல்லும் நீண்ட வழியில் நான் செல்வதை இந்த நாளே பாண்டவர்கள் பார்க்கட்டும்”[1] என்றான்”.(20)வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மன்னன் திருதராஷ்டிரன் இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவனது துயரத்தை அகற்றுவதற்காகப் பின்வரும் வார்த்தைகளைச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது துயரத்தைக் கைவிடுவீராக. பெரியோரின் உதடுகளின் மூலம் வேதங்களையும், பல்வேறு சாத்திரங்கள் மற்றும் புனிதமான ஆகமங்களின் தீர்மானங்களையும் நீர் கேட்டிருக்கிறீர். சிருஞ்சயன், தன் மகனுடைய மரணத்தின் நிமித்தமாகப் பீடிக்கப்பட்டிருந்தபோது, அவனிடம் தவசிகள் சொன்ன அந்த வார்த்தைகளையும் நீர் கேட்டிருக்கிறீர்.(22) உமது மகன் {துரியோதனன்}, இளமையில் பிறக்கும் {தோன்றும்} செருக்கை {கொழுப்பை} அடைந்தபோது, நலன்விரும்பிகளால் உமக்குச் சொல்லப்பட்ட ஆலோசனைகளை நீர் ஏற்க மறுத்தீர். கனியை விரும்பிய நீர், உமக்கான உண்மையான நன்மை எதுவோ, அதைப் பேராசையினால் செய்யாமல் இருந்தீர்.(23) {அந்த} உமது அறிவே ஒரு கூரிய வாளைப் போல {இப்போது} உம்மைக் காயப்படுத்தியிருக்கிறது. பொதுவாகவே தீய நடத்தை கொண்டோரின் துணையையே நீர் நாடினீர்.(24) உமது மகன் {துரியோதனன்}, தன் ஆலோசகர்களாகத் துச்சாசனன், தீய ஆன்மாவான ராதையின் மகன் {கர்ணன்}, அதே அளவுக்குத் தீயவனான சகுனி, மூட புத்தி கொண்ட சித்திரசேனன், சல்லியன்[2] ஆகியோரையே கொண்டிருந்தான். உமது மகன் (தன் சொந்த நடத்தையினாலேயே) மொத்த உலகத்தையும் தன் எதிரியாக்கிக் கொண்டான்.(25)ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஓ! மன்னா, குருக்களின் மரியாதைக்குரிய தலைவரான பீஷ்மர், காந்தாரி, விதுரர், துரோணர், சரத்வான் மகனான கிருபர், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணன், நுண்ணறிவு கொண்ட நாரதர், இன்னும் பல முனிவர்கள் மற்றும் அளவிடமுடியாத சக்தி கொண்ட வியாசர் ஆகியோரின் வார்த்தைகளுக்கு உமது மகன் கீழ்ப்படியவில்லை.(26,27) உமது மகன் {துரியோதனன்} ஆற்றல் படைத்தவனாக இருப்பினும், அவன் சிறு மதி கொண்டவனாகவும், செருக்குடையவனாகவும், எப்போதும் போரை விரும்புபவனாகவும், தீயவனாகவும், வெறிகொண்ட மூர்க்கனாகவும், நிறைவற்றவனாகவும் இருந்தான்.(28) நீரோ கற்றறிந்தவராகவும், நுண்ணறிவு கொண்டவராகவும், எப்போதும் உண்மை பேசுபவராகவும் இருக்கிறீர். உம்மைப் போன்ற நேர்மையாளர்களும், அறிவாளிகளும் துயரத்தால் ஒருபோதும் திகைக்கமாட்டார்கள்.(29) {உமது மகன்களில்} எவரும் அறங்கருதவில்லை. போர் என்ற ஒற்றை வார்த்தையே அவர்களது உதடுகளில் இருந்தன. அதன் காரணமாகவே க்ஷத்திரிய வகையினர் முற்றாக அழிக்கப்பட்டு, உமது எதிரிகளின் புகழ் பெருகியிருக்கிறது.(30)

நடுவருக்கான இடத்தில் இருந்த நீரோ, நலம்பேணும் அறிவுரை என ஒரு வார்த்தையும் சொல்லாதிருந்தீர். அப்பணிக்குத் தகாத நீர், தராசுகளைச் சமமாக நிறுத்தவில்லை.(31) ஒவ்வொரு மனிதனும், தான் ஏற்கனவே செய்த ஏதோ ஒன்றுக்காக வருந்த வேண்டிய தேவையில்லாமல் தொடக்கத்திலிருந்தே நன்மையான செயல்களையே {முறைப்படி} செய்ய வேண்டும்.(32) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் துரியோதனன் மீது கொண்ட பாசத்தால் நீர் அவனுக்கு ஏற்புடையதையே செய்தீர். அதற்காகவே இப்போது நீர் வருந்த வேண்டியிருக்கிறது. எனினும், நீர் துயரத்துக்கு ஆட்படுவது உமக்குத் தகாது.(33) பள்ளத்தைக் கவனியாமல் தேனை நோக்கி மட்டுமே கண்களைச் செலுத்தும் மனிதன், தேனின் மீது தான் கொண்ட பேராசையின் மூலமே அழிவை அடைகிறான். அத்தகு மனிதன் உம்மைப் போலவே வருந்த வேண்டியிருக்கும்.(34) துயரப்படும் மனிதன் ஒருபோதும் செழிப்பை வெல்வதில்லை. துயரப்படுவதால் ஒருவன் தன் ஆசைகளின் கனிகளையே இழக்கிறான். மேலும் நமது விருப்பத்திற்குரிய பொருட்களை அடைவதற்கு அந்தத் துயரமே தடையாக இருக்கிறது. துயரத்தில் மூழ்குபவன் தன் முக்தியையும் {விடுதலையையும்} இழக்கிறான்.(35)

எரியும் கரியைத் தன் உடுப்பில் மறைக்கும் ஒரு மனிதன், அதற்குள் முடுக்கப்படும் நெருப்பினால் எரிக்கப்பட்டுத் தான் அடைந்த காயங்களுக்காக வருந்துவானானால், அவன் மூடன் என்றே அழைக்கப்படுவான்.(36) நீரும், உமது மகனும், உங்கள் வார்த்தைகளால் பார்த்த-நெருப்பை {அர்ஜுன நெருப்பைத்} விசிறி, உங்கள் பேராசையின் விளைவால் உண்டான செயல்களால் தெளிந்த நெய்யை {அந்நெருப்பில்} ஊற்றி, அந்நெருப்பைச் சுடர்விட்டெரியச் செய்து, அஃதை எரிக்கும் தழல்களாக்கினீர்கள்.(37) அந்நெருப்பு இவ்வாறு சுடர்விட்டபோது, உமது மகன்கள் பூச்சிகளைப் போல அதில் விழுந்தனர். எனினும், எதிரியின் கணைகள் எனும் நெருப்பில் எரிந்தவர்களான அவர்களுக்காக இப்போது நீர் வருந்துவது தகாது.(38) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இப்போது நீர் கொண்டிருக்கும் அழுகைக்கறை கொண்ட முகமானது, சாத்திரங்களால் அங்கீகரிக்கப்படவோ, நல்லோரால் புகழப்படவோ இல்லை.(39) நெருப்புப் பொறிகளைப் போன்ற இந்தக் கண்ணீர்த்துளிகள் யாருக்காகச் சிந்தப்படுகின்றனவோ, இறந்தோரான அவர்களையே அவை எரிக்கும். உமது துயரை அறிவினால் கொன்று, உமது பலத்தால் எழுவீராக” {என்றான் சஞ்சயன்}.(40) இவ்வாறே உயரான்ம சஞ்சயனால் அம்மன்னன் {திருதராஷ்டிரன்} தேற்றப்பட்டான். ஓ! எதிரிகளை எரிப்பவனே {ஜனமேஜயா}, அப்போது, விதுரன் தன் பேரறிவை வெளிப்படுத்தும் வகையில் மீண்டும் அம்மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} பேசினான்” {என்றார் வைசம்பாயனர்}.(41)

திருதராஷ்டிரனைத் தேற்றிய விதுரன்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 02-முதிய மன்னனுக்கு ஆறுதலளித்த விதுரன்; கொல்லப்பட்டவர்கள் சொர்க்கத்தையும், கொலை செய்தவர்கள் புகழையும் அடைவார்கள் எனவே கவலை கொள்வது தகாது எனத் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன விதுரன்; காலத்தின் வலிமை, வாழ்வின் நிலையாமை, ஞானத்தின் மேன்மை, முற்பிறவிச் செயல்களின் விளைவுகள் ஆகியவற்றைச் சொன்ன விதுரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஜனமேஜயா, விதுரன், விசித்திரவீரியன் மகனிடம் {திருதராஷ்டிரனிடம்} சொன்ன அமுதம் போன்ற எந்த வார்த்தைகள் அந்த மனிதர்களில் காளையை {திருதராஷ்டிரனை} மகிழ்ச்சியடைச் செய்தனவோ அவற்றைக் கேட்பாயாக.(1)

விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா! எழுவீராக. ஏன் பூமியில் கிடக்கிறீர்? உம்மைத் தாங்கிக் கொள்வீராக. ஓ! மன்னா, இதுவே உயிரினங்கள் அனைத்தின் இறுதி முடிவாகும்.(2) ஒன்றாகத் திரளும் அனைத்தும் முடிவில் அழிவையே அடைகிறது; உயர்ந்து செல்லும் அனைத்தும் விழப்போவது உறுதி. சேர்வது முடிவில் பிரிவது உறுதி; உயிரானது முடிவில் இறப்பது உறுதி.(3) ஓ! பாரதரே, வீரன் மற்றும் கோழை ஆகிய இருவரையும் யமன் இழுத்துச் செல்கிறான். ஓ! க்ஷத்திரியர்களில் காளையே, பிறகு ஏன் க்ஷத்திரியர்கள் போரில் ஈடுபட மாட்டார்கள்?(4) போரிடாதவனும் மாள்வதைக் காண்கிறோம். மேலும், போரிடுபவன் உயிர் தப்புவதையும் காண்கிறோம். எனினும், ஓ! மன்னா, நேரம் வரும்போது எவரும் தப்ப முடியாது.(5)

வாழும் உயிரினங்களைப் பொறுத்தவரையில், அவை முதலில் {ஆதியில்} இருப்பிலில்லை. இறுதியில் மீண்டும் அவை இருப்பில் இல்லாமல் போகின்றன. இதில் {நடுவில் மட்டுமே இருக்கும் ஒன்றில்} துயர் கொள்ள என்ன இருக்கிறது?(6) துயரில் ஈடுபடும் மனிதன் இறந்தவனைச் சந்திப்பதில் வெல்வதில்லை. துயரில் ஈடுபடுவதாலேயே ஒருவன் தானே சாவதில்லை. உலகத்தின் வழி இவ்வாறிருக்கையில், ஏன் நீர் துயரில் ஈடுபடுகிறீர்?(7) அனைத்துயிர்களையும், ஏன் தேவர்களையும் கூடக் காலன் இழுத்துச் செல்கிறான். ஓ! குருக்களில் சிறந்தவரே, காலத்திற்கு அன்புக்குரியவனோ, வெறுப்புக்குரியவனோ எவனும் கிடையாது.(8) புல்லின் நுனிகள் அனைத்தையும் கிழிக்கும் காற்றைப் போலவே, காலமும் அனைத்து உயிரினங்களையும் தன் வசப்படுத்துகிறது.(9) ஒரே இடத்தை நோக்கிச் செல்லும் வணிகக்கூட்டத்தின் உறுப்பினர்களைப் போலவே அனைத்து உயிரினங்களும் இருக்கின்றன. (அனைத்தையும் காலன் சந்திக்கும்போது) அவன் {காலன்} எவரை முதலில் சந்திக்கிறான் என்பது பெரிய காரியம் இல்லை {எவனுக்குக் காலம் வருகிறதோ அவன் முந்திச் செல்கிறான்}.(10)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் கொல்லப்பட்டவர்களைக் குறித்துத் துயருறுவது உமக்குத் தகாது. சாத்திரங்களுக்கு ஏதேனும் அதிகாரம் இருக்குமெனில், அவர்கள் அனைவரும் உயர்ந்த முடிவையே அடைந்திருக்க வேண்டும்.(11) அவர்கள் அனைவரும் வேதங்களை நன்கறிந்தவர்கள்; அவர்கள் அனைவரும் நோன்புகள் நோற்றவர்கள். எதிரியை முகத்துக்கு நேராகச் சந்தித்தே அவர்கள் அனைவரும் மரணத்தைச் சந்தித்திருக்கிறார்கள். இதில் கவலை கொள்ள என்ன இருக்கிறது?(12) (பிறப்பதற்கு முன்பு) அவர்கள் கண்ணுக்குத் தெரியாதவர்களாக இருந்தார்கள். அறியப்படாத அவ்விடத்தில் இருந்து வந்த அவர்கள் மீண்டும் காணப்படாமலேயே கண்ணுக்குத் தெரியாமல் போகிறார்கள். அவர்கள் உம்முடையவர்களல்ல; நீரும் அவர்களுடையவரல்ல. பிறகு இத்தகு மறைவால் என்ன கவலை ஏற்பட முடியும்?(13) கொல்லப்பட்ட ஒருவன் சொர்க்கத்தை வெல்கிறான் {அடைகிறான்}. கொலையைச் செய்தவனால் புகழ் வெல்லப்படுகிறது {அடையப்படுகிறது}. நம்மைப் பொறுத்தவரை, இவ்விரண்டும் {சொர்க்கமும், புகழும்} பெரும் தகுதியையே {புண்ணியத்தையே} தருகின்றன. எனவே, போரானது பலனற்றதில்லை.(14) இந்திரன், அனைத்து விருப்பங்களையும் அருளவல்ல உலகங்களை அவர்களுக்குக் கொடுப்பான் என்பதில் ஐயமில்லை. ஓ! மனிதர்களில் காளையே, அவர்கள் இந்திரனின் விருந்தினர்களாவர்.(15)

போரில் கொல்லப்பட்ட வீரர்கள் சொர்க்கத்திற்குச் செல்வதைவிட, அபரிமிதமான கொடைகளைக் கொண்ட வேள்விகளாலோ, தவங்களாலோ, கல்வியாலோ ஒரு மனிதன் சொர்க்கத்திற்கு வேகமாகச் செல்ல முடியாது.(16) வேள்வி நெருப்பைக் கொண்டிருக்கும் பகைவீரர்களின் உடல்களில் அவர்கள் தங்கள் கணை ஆகுதிகளைப் பொழிகிறார்கள். பெருஞ்சக்தி கொண்ட அவர்கள், பதிலுக்கு (தங்கள் எதிரிகளால் அவர்கள் மீது ஊற்றப்படும்) கணை ஆகுதிகளைப் தாங்கிக் கொள்கிறார்கள்.(17) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் ஒரு க்ஷத்திரியனுக்கு, போரைவிடச் சொர்க்கத்திற்குச் செல்லும் சிறந்த பாதை வேறேதும் இல்லை என நான் உமக்குச் சொல்கிறேன்.(18) அவர்கள் அனைவரும் உயர் ஆன்ம க்ஷத்திரியர்களும், துணிச்சல் கொண்டவர்களும், சபைகளின் ரத்தினங்களுமாவர். அவர்கள் உயர்ந்த அருள்நிலையை அடைந்திருக்கின்றனர். அவர்கள் நாம் கவலைகொள்ளத்தக்க மனிதர்களல்லர்.(19) ஓ! மனிதர்களில் காளையே, உம்மை நீரே தேற்றிக் கொண்டு, கவலையை விடுவீராக. செயல்கள் அனைத்தையும் கைவிட்டு, கவலையில் மூழ்குவது உமக்குத் தகாது.(20)

இவ்வுலகில் ஆயிரக்கணக்கான தாய்மாரும், தந்தைமாரும், மகன்களும், மனைவியரும் இருக்கின்றனர். அவர்கள் யாருடையவர்கள்? நாம் யாருடையவர்கள்?(21) கவலையில் இருந்து நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான காரணங்கள் எழுகின்றன. அந்த ஆயிரக்கணக்கான காரணங்களும் அச்சத்தையே உண்டாக்குகின்றன. எனினும், இவை அறியாமை கொண்டோரையே பாதிக்கும்; ஞானியருக்கோ அவை ஒன்றுமில்லை.(22) ஓ! குருக்களில் சிறந்தவரே, காலத்திற்கு அன்புக்குரியவரோ, வெறுப்புக்குரியவரோ எவருமில்லை. அனைவரையும் சமமாகவே காலம் இழுத்துச் செல்கிறது. காலமே அனைத்துயிரையும் வாழச் செய்கிறது. காலமே அனைத்தையும் அழிக்கவும் செய்கிறது. அனைவரும் உறங்கும்போது, காலம் மட்டுமே விழித்துக் கொண்டிருக்கிறது. காலம் தடுக்கப்பட முடியாததாகும்.(24) இளமை, அழகு, உயிர், உடைமைகள், உடல்நலம், நண்பர்களின் தோழமை ஆகிய அனைத்தும் நிலையற்றவையே. ஞானியாக இருப்பவன் இவை எவற்றிலும் ஒருபோதும் நாட்டங்கொள்ள மாட்டான்.(25)

உலகளாவிய {அனைவருக்கும் பொதுவான} ஒன்றுக்காக வருந்துவது உமக்குத் தகாது. துயரில் ஈடுபடுவதால் ஒருவன் இறக்கலாம். ஆனால் துயரமானது, அதில் ஈடுபடுவதால் ஒருபோதும் கனமற்றதாகாது.(26) நீர் உமதுதுயரைக் கனமானதாக உணர்ந்தால், அதில் ஈடுபடாமல் அதற்குப் பதலடியைக் கொடுக்க வேண்டும். துயரத்தில் ஈடுபடாமல் இருப்பதே துயரத்திற்கான மருந்தாகும்.(27) அதிலேயே வசிப்பதால் ஒருவன் அதைக் குறைக்க முடியாது. மறுபுறம் அதில் ஈடுபடுவதால் அது வளரவே செய்கிறது. தீமை நேரும்போதோ, அன்புக்குரிய ஒன்றை இழக்கும் நிலையிலோ துயரில் மனம் பீடிக்கப்படுபவர்கள் சிறுமதி கொண்டோரே.(28) உமது இதயம் எதில் வசித்திருக்கிறதோ {எதை விரும்புகிறதோ}, அது பொருளோ, அறமோ, இன்பமோ கிடையாது(29). மனநிறைவற்றவர்கள், செல்வத்தை அடைவதில் நேரும் திருப்பத்தின் இணக்கத்தில் திகைப்படைகிறார்கள். ஒருவனது உடலின் துயரமானது, மருந்தால் கொல்லப்படுவதைப் போலவே, அவன் மனத்துயரத்தை ஞானத்தால் கொல்ல வேண்டும். ஞானமே இந்தச் சக்தியைக் கொண்டிருக்கிறது. எனினும், மூடர்களால் மன அமைதியை அடையவே முடியாது.(30,31)

முந்தைய வாழ்வின் செயல்பாடுகள் ஒரு மனிதனை நெருக்கமாகப் பின்தொடர்ந்து, அவன் எங்கே கிடக்கிறானோ அங்கேயே கிடந்து, எங்கே தங்குகிறானோ அங்கேயே தங்கி, அவன் ஓடும்போது அவனுடனேயே ஓடுகிறது.(32) வாழ்வின் அச்சூழல்களில் ஒருவன் நல்லதாகவோ, அல்லதாகவோ செயல்பட்டிருந்தால், அவன் அதே போன்ற சூழ்நிலைகளில் இன்புறவோ, துன்புறவோ செய்கிறான்.(33) ஒருவன் செயல்களைச் செய்யும் (உடல் அமைப்புகளில்) அவ்வடிவங்களில் அவன் அதேபோன்ற வடிவங்களின் பலன்களால் இன்புறவோ, துன்புறவோ செய்கிறான்.(34) ஒருவன் தானே தனது நண்பனாவான், அதே போலவே அவனே அவனுக்கு எதிரியுமாவான். ஒருவன் தானே தன் நல்ல மற்றும் தீய செயல்பாடுகளின் சாட்சியாக இருக்கிறான்.(35) நற்செயல்களில் இருந்து இன்பநிலையெழுகிறது, தீச்செயல்களில் இருந்து பாவகரச் செயல்களே எழுகின்றன. ஒருவன் எப்போதும் தன் செயல்பாடுகளின் கனிகளையே அடைவான்.(36) ஓ! மன்னா, உம்மைப் போன்ற புத்திசாலி மனிதர்கள், அறிவால் அங்கீகரிக்கப்படாததும், அடிவேரையே (அறம் மற்றும் இன்பத்தைத்) தாக்குவதுமான பாவகரமான பெருங்குற்றங்களில் ஒருபோதும் மூழ்குவதில்லை” என்றான் {விதுரன்}.(37)

மண்குடமும் மனித வாழ்வும்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 03-விதுரனின் இனிய உரையாடலைத் தொடரும்படி கேட்டுக் கொண்ட திருதராஷ்டிரன்; மனித வாழவின் நிலையாமையை மீண்டும் எடுத்துச் சொன்ன விதுரன்…

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “ஓ! பெரும் ஞானியே, உன் வார்த்தைகளால் என் துயரம் விலகுகிறது. எனினும், நீ மீண்டும் பேசுவதை நான் கேட்க விரும்புகிறேன்.(1) உண்மையில், தீயவை சேர்வதாலும், விருப்பத்திற்குரிய பொருட்களை இழப்பதாலும் பிறக்கும் மனத்துயரத்தில் இருந்து ஞானியர் எவ்வாறு விடுபடுகின்றனர்” என்று கேட்டான்.(2)

விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஒருவன் துயரம் மற்றும் மகிழ்ச்சியில் இருந்து எவ்வழிகளில் தப்ப முடியுமோ அவற்றின் மூலமே, துயரம் மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டையும் அடக்கி ஒரு ஞானி அமைதியை அடைகிறான்.(3) ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, எந்தப் பொருட்களுக்காக நாம் கவலையடைகிறோமோ அவை அனைத்தும், குறுகிய காலத்தைக் கொண்டவையே {நிலையில்லாதவையே}. இவ்வுலகம் பலத்தைப் பொறுத்துக்கொள்ளாத ஒரு வாழை மரத்தைப் போல இருக்கிறது.(4)

ஞானி மற்றும் மூடன், பணக்காரன் மற்றும் ஏழை ஆகியோர் அனைவரும், சதை இழந்த உடல்களுடனும், வெறும் எலும்புகளுடனும், வாடி வதங்கிய தசைகளுடனும் {நரம்புகளுடனும்}, கவலையற்றுச் சுடலைகளில் {சுடுகாடுகளில்} உறங்கும்போது, அவர்களில் எவரின் தனிப்பட்ட அடையாளங்களைக் கண்டு அவர்களின் பிறப்பு மற்றும் அழகின் தன்மைகளை உயிர்பிழைத்திருப்போரால் உறுதிசெய்ய முடியும்? (மரணமடைந்ததும் அனைவரும் சமமே எனும்போது), எப்போதும் (இவ்வுலகப் பொருட்களால்) வஞ்சிக்கப்படும் அறிவைக் கொண்ட மனிதர்கள், ஒருவருக்கொருவர் பதவி மற்றும் நிலைகளில் {அந்தஸ்துகளில்} ஏன் ஆசை கொள்கிறார்கள்?(5,6) மனிதர்களின் உடல்கள் வீடுகளைப் போன்றன எனக் கல்விமான்கள் சொல்கின்றனர். காலம் வரும்போது இவை அழிக்கப்படுகின்றன. எனினும், ஒருவன் {ஆன்மா} அழிவில்லாதவனாக இருக்கிறான்.(7) ஒரு மனிதன், பழையதாகவோ, புதியதாகவோ இருக்கும் தன் ஆடையைக் களைந்து, மற்றொரு ஆடையை அணிவதைப் போலவே உடல்படைத்த அனைவரின் உடல்களும் அவர்களால் களையப்படுகின்றன.(8) ஓ! விசித்திரவீரியன் மகனே {திருதராஷ்டிரனே}, உயிரினங்கள் இன்பம் அல்லது துன்பத்தைத் தங்கள் செயல்களின் கனியாகவே அடைகின்றன.(9)

மண்குடங்களில் சில, குயவனின் சக்கரத்தில் இருக்கும்போதே நொறுங்குகின்றன, சில ஓரளவே வடிவங்கொள்ளும்போதும், சில நல்ல வடிவத்தை அடையும்போதும், சில சக்கரத்தில் இருந்து அகற்றும்போதும், சில கொண்டு செல்லப்படும்போதும், சில கொண்டு செல்லப்பட்ட பிறகும், சில ஈரமாக இருக்கும் போதும், சில உலர்ந்திருக்கும்போதும், சில சுடப்பட்ட பிறகும், சில உலையில் இருந்து எடுக்கப்படும்போதும், சில உலையில் இருந்து எடுக்கப்பட்ட பிறகும், சில பயன்படுத்தப்படும்போதும் நொறுங்குவதைப் போலவே உடல்படைத்த உயிரினங்களின் உடல்களும் அழிகின்றன.(11-13) சிலர் கருவறையில் இருக்கும்போதே அழிவை அடைகின்றனர், சிலர் கருவறையை விட்டு வெளியேறியதும், சிலர் வெளியேறிய அடுத்த நாள், சிலர் அரை மாதம் சென்றோ, ஒரு மாதத்திலோ, சிலர் நடு வயதிலும், சிலர் முதிர் வயதிலும் அழிவை அடைகின்றனர்.(14-15)

உயிரினங்கள் தங்கள் முந்தைய வாழ்வுகளில் செய்த செயல்களுக்கு ஏற்பவே பிறக்கவோ, இறக்கவோ செய்கின்றனர். உலகத்தின் வழி இவ்வாறு இருக்கும்போது, நீர் ஏன் துயரத்தில் ஈடுபடுகிறீர்?(16) மனிதர்கள், நீர்விளையாட்டில் நீந்தும் போது, சில வேளைகளில் மூழ்குவதையும், சில வேளைகளிலும் மேலெழுவதையும் போலவே உயிரினங்களும் வாழ்வெனும் ஓடையில் மூழ்கி மேலெழுகின்றன. ஞானம் குறைந்தவர்கள், தங்கள் செயல்களின் விளைவாலேயே துன்புறவோ, அழிவடையவோ செய்கின்றனர்.(17,18) எனினும், வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்ய விரும்பி அறம் நோற்கும் ஞானியர், இவ்வுலகில் உயிரினங்களுடைய தோற்றத்தின் உண்மையான இயல்பை அறிந்து, இறுதியாக உயர்ந்த முடிவை அடைகின்றனர்” என்றான் {விதுரன்}.(19)

தோற்றம், வளர்ச்சி மற்றும் மறைவு! – ஸ்திரீ பர்வம் பகுதி – 04-உயிரானது கருவறையில் வசிக்கும் முறையையும், பிறந்து அடையும் துன்பத்தையும், அதன் இறப்பையும் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன விதுரன்…

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “ஓ! பேசுபவர்களில் முதன்மையானவனே, இவ்வுலகெனும் அடர்க்காடு எவ்வாறு அறியப்பட வேண்டும்? இதை நான் கேட்க விரும்புகிறேன். இதைக் கேட்கும் எனக்கு நீ சொல்வாயாக” என்று கேட்டான்.(1)

விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “உயிரினங்களின் செயல்பாடுகள் அனைத்தையும் நான் அவற்றின் முதல் கருத்தறிப்பிலிருந்தே விளக்குகிறேன். தொடக்கத்தில் அது {உயிரானது} குருதி மற்றும் உயிர்நீரின் கலவையில் {சுக்லசோணிதத்தில்} வாழ்கிறது. அதன் பிறகு அது மெல்ல மெல்ல வளர்கிறது. ஐந்து மாதங்கள் கடந்ததும் அது வடிவத்தை ஏற்கிறது.(2) அடுத்தாக {ஆறாம் மாதத்தில்} அங்கங்கள் அனைத்தும் வளர்ந்த நிலையில் முதிர்கருவாகி, சதையும், குருதியும் கலந்த தூய்மையற்ற ஓரிடத்தில் வாழ்கிறது.(3) பிறகு, காற்றின் செயல்பாட்டின் மூலம், அதன் அடி உறுப்புகள் தலைகீழாக மாறி, தலையானது கீழே வருகிறது. இந்நிலையிலேயே கருப்பையின் வாயிலை அடைந்து, பல்வேறு துன்பங்களை அனுபவிக்கிறது.(4) கருப்பைச் சுருங்கி விரிவதன் விளைவாலும், தன் முந்தைய செயல்பாடுகள் அனைத்தின் விளைவாலும் அந்த உயிரினம் வெளியே வருகிறது. அதன் பிறகு அது தன்னை நோக்கி விரைந்து வரும் இவ்வுலகின் தீமைகளை எதிர்கொள்கிறது. இறைச்சியை நுகர்ந்து வரும் நாய்களைப் போல இடர்கள் அதை நோக்கி வருகின்றன.(5)

அதன்பிறகு, அது தன் முந்தைய செயல்களில் கட்டுப்பட்டிருக்கும்போது, பல்வேறு நோய்கள் அதை அணுகுகின்றன.(6) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புலனுணர்வுகள், பெண்கள், செல்வம், மற்றும் வாழ்வின் பிற இனிய பொருட்களில்ல் கட்டுப்பட்டிருக்கும் அதைப் {மனித ஆண் உயிரினத்தைப்} பல்வேறு தீமைகள் அணுகுகின்றன.(7) இதனால் பிடிக்கப்படும் அது {அவன்} ஒரு போதும் மகிழ்ச்சியை அடைவதில்லை. அந்தப் பருவத்தில், நன்மையான, அல்லது தவறான தன் செயல்களின் கனிகளை அடைவதில் அது {அவன்} தவறுகிறது {தவறுகிறான்}. எனினும் சிந்தனையில் தங்களின் இதயங்களை நிலைக்கச் செய்பவர்கள், தங்கள் ஆன்மாக்களைப் பாதுகாப்பதில் வெற்றியடைகிறார்கள்.(8) தன் புலன்களால் ஆளப்படும் ஒருவன், தன் வாயிலில் வந்திருக்கும் காலனை அறிவதில்லை. இறுதியாக, யமனின் தூதர்களால் இழுக்கப்படும் அவன், குறித்த நேரத்தில் தன் அழிவைச் சந்திக்கிறான்.(9) புலன்களின் கலக்கத்தால் அவன் செய்த நன்மையோ, தீமையோ, தொடக்கத்தில் செய்யப்படுபவையே. இவற்றின் கனிகளால் இன்புறவோ, துன்புறவோ செய்யும் அவன், தற்கொலைக்குச் சமமான தன் செயல்பாடுகளில் மீண்டும் அலட்சியம் கொள்கிறான்.(10)

ஐயோ, உலகம் வஞ்சிக்கப்பட்டு, பேராசையானது அதை {உலகத்தைத்} தன் ஆளுகையின் கீழ் கொண்டு வருகிறது. பேராசை, கோபம், அச்சம் ஆகியவற்றால் அறிவை இழக்கும் ஒருவன் தன்னையே உணர்வதில்லை.(11) தனது பிறப்பின் {குலவழியின்} பெருமையால் இன்பத்தில் நிறையும் ஒருவன், உயர்பிறப்பாளர்களையும் இழிவுசெய்கிறான். செல்வத்தின் செருக்கால் பெருகும் அவன், ஏழைகளை ஏளனம் செய்வதும் காணப்படுகிறது.(12) ஒருவன் அடுத்தவரை அறியாமை கொண்ட மூடர்களாகக் கருதுகிறான், அனால், தன்னைக் குறித்து ஆராய்வதேயில்லை.(13)

ஞானிகளும், ஞானமற்றவர்களும், செல்வந்தரும், செல்வமற்றவர்களும், உயர்ந்த பிறவியும், தாழ்ந்த பிறவியும், மதிக்கப்படுபவர்களும், மதிக்கப்படாதவர்களும்,(14) என அனைவரும், சதையற்றதும், வற்றிய தசைகளால் இணைக்கப்படும் வெறும் எலும்புகளை மட்டுமே கொண்டதுமான உடல்களுடன், இறந்தோரின் இடத்திற்குச் சென்று, அனைத்துக் கவலைகளில் இருந்தும் விடுபடும்போது,(15) மேற்கண்டவர்களின் பிறப்பையும், அழகையும் குறித்து எந்த அடையாளங்களைக் கொண்டு உறுதி செய்ய முடியும்?(16)

இதே வகையிலேயே அனைவரும், வெறுந்தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறார்கள் எனும்போது, ஏன் மனிதர்கள் தங்கள் புலனுணர்வை மறந்து, ஒருவரையொருவர் வஞ்சிக்க விரும்ப வேண்டும்?(17) ஒருவன் (சாத்திரங்களில் இருக்கும்) இந்தச் சொலவடையை {பழமொழியை [ஸ்ருதியைத்]} தன் கண்களால் கண்டோ, பிறரிடம் இருந்து கேட்டோ இந்த நிலையற்ற உலக வாழ்வில் தொடக்கக் காலத்திலிருந்தே அறத்தைப் பின்பற்றிவந்தால், அவன் உயர்ந்த முடிவை {கதியை} அடைகிறான்.(18) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இவையாவற்றையும் கற்றவன், எந்த வழிகளில் உண்மையைப் பின்பற்றிச் சென்றாலும், அவற்றில் அவன் வெற்றியடைகிறான்” என்றான் {விதுரன்}.(19)

இடர்களும் தேனும்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 05-இடர்களுக்கு மத்தியிலும், பேராபத்திலும் கூட மனிதன் உயிர்வாழும் ஆசைகொண்டிருப்பதை உவமையின் மூலம் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன விதுரன்…

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “கடமைகளெனும் அடர்க்காட்டைப் பாதுகாப்பாகக் கடக்க அறிவாற்றும் வழிமுறைகள் குறித்த அனைத்தையும் எனக்கு விபரமாகச் சொல்வாயாக” என்று கேட்டான்.(1)விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “தான்தோன்றியை {சுயம்புவை} வணங்கி, உமது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, வாழ்வெனும் அடர்க்காட்டைக் குறித்துப் பெருந்தவசிகள் என்ன சொல்கின்றனர் என்பதை நான் உமக்குச் சொல்கிறேன்.(2)

பேருலகில் வாழும் ஒரு குறிப்பிட்ட பிராமணன், ஒரு சந்தர்ப்பத்தில், அடைவதற்கரியதும், இரைதேடும் விலங்குகள் நிறைந்ததுமான ஒரு பெரிய காட்டை அடைந்தான்.(3) அஃது உரக்க முழங்கிக் கொண்டிருக்கும் சிங்கங்கள், புலிகள் மற்றும் யானைகளைப் போலத் தெரியும் பிற விலங்குகள் ஆகியவற்றால் அனைத்துப் பக்கங்களிலும் நிறைந்திருந்தது. யமனே அச்சங்கொள்ளும் வகையில் அந்தக் காடு பயங்கரத் தன்மையை அடைந்திருந்தது.(4) ஓ! ஏதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே} அந்தக் காட்டைக் கண்ட அந்தப் பிராமணரின் இதயம் அதிகக் கலக்கத்தை அடைந்தது. ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, அவருக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது, மேலும் அச்சத்திற்கான பிற அடையாளங்கள் அனைத்தும் அவரில் வெளிப்பட்டன.(5)

அதற்குள் {காட்டுக்குள்} நுழைந்த அவன், திசைப்புள்ளிகள் அனைத்திலும் தன் கண்களைச் செலுத்திக் கொண்டு, யாரேனும் ஒருவரின் பாதுகாப்பை நாடுவதற்காக அங்கேயும், இங்கேயும் ஓடத் தொடங்கினான்.(6) அவன், அந்தப் பயங்கர உயிரினங்களிடம் இருந்து தப்பும் விருப்பத்தால் அச்சத்துடன் ஓடிக் கொண்டிருந்தான். எனினும் அவன், அவற்றிடம் இருந்து தொலைவாகச் செல்லவோ, அவற்றின் முன்னிலையில் இருந்து விடுபடவோ தவறினான்.(7) அப்போது அவன், அந்தப் பயங்கரக்காடானது ஒரு பெரிய வலையால் சூழப்பட்டிருப்பதையும், {அந்தக் காட்டுக்கு வெளிப்புறத்தில்} அங்கே அச்சத்தையேற்படுத்தக்கூடிய ஒரு பெண் தன் கரங்களை விரித்தபடி நின்றிருப்பதையும் கண்டான்.(8) அந்தப் பெரும் காடானது, நெடும்பாறைகளைப் போல நெடியவையும், சொர்க்கத்தையே {வானத்தையே} தொட்டுக்கொண்டிருந்தவையும், பயங்கர வடிவைக் கொண்டவையுமான ஐந்து தலை பாம்புகள் பலவற்றாலும் சூழப்பட்டிருந்தது.(9) அதற்குள் {அந்தக் காட்டுக்குள்} புற்களால் சூழப்பட்டதும், செடிகொடிகளால் சுற்றிலும் மறைக்கப்பட்டிருந்ததுமான ஒரு குழி {கிணறு} இருந்தது.(10)

அந்தப் பிராமணன் இவ்வாறு திரிந்து கொண்டிருந்த போது, கண்களுக்குப் புலப்படாத அந்தக் குழிக்குள் விழுந்தான். ஒன்றொடொன்றாகப் பின்னிப் பிணைந்து கிண்ட அந்தக் கொடிகளின் பின்னலில் அகப்பட்டுக் கொண்ட அவன், பலாமரத்தின் கனியை {பலாப்பழத்தைப்} போல அதில் தொங்கிக் கொண்டிருந்தான். கால் மேலாகவும், தலை கீழாகவும் அங்கேயே அவன் தொங்கிக் கொண்டிருந்தான்.(11,12) அந்நிலையிலேயே பல்வேறு இன்னல்கள் அவனை மூழ்கடித்தன. அவன் அந்தக் குழிக்குள் வலிமைமிக்கப் பெரும் பாம்பொன்றைக் கண்டான். மேலும் அவன் அந்தக் குழியின் வாயிலருகே ஒரு பெரும் யானை நிற்பதையும் கஙண்டான்.(13) கரிய நிறம் கொண்ட அந்த யானையானது, ஆறு முகங்களையும், பனிரெண்டு கால்களையும் கொண்டிருந்தது. மேலும் அந்த விலங்கு {யானை} கொடிகளாலும், மரங்களாலும் மறைக்கப்பட்டிருந்த அந்தக் குழியை நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருந்தது.(14) (அந்தக் குழியின் வாயருகே இருந்த) மரத்தின் கிளைகளில் பயங்கர வடிவிலான தேனீக்கள் தங்கள் கூட்டில் சேகரிக்கப்பட்ட தேனைக் குடிப்பதற்காக அங்கே பெருமளவில் மொய்த்து கொண்டிருந்தன.(15)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அனைத்துயிர்களுக்கும் இனியதாக இருப்பினும், குழந்தைகளை மட்டுமே ஈர்க்கும் அந்தத் தேனை அவை {அந்தத் தேனீக்கள்} மீண்டும் மீண்டும் விரும்பின.(16) (கூட்டில் சேகரிக்கப்பட்ட) அந்தத் தேனானது, பல ஊற்றுகளாகக் கீழே வழிந்தது. குழிக்குள் தொங்கிக் கொண்டிருந்த அம்மனிதன் அதைத் தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்தான்.(17) இத்தகு துயரகரமான நிலையில் அந்தத் தேனைக் குடித்தாலும், அவனது தாகம் அடங்கவில்லை. மீண்டும் மீண்டும் தாகம் தனியாத அவன் மேலும் மேலும் தேனை விரும்பினான்.(18) ஓ! மன்னா, அப்போது அவன் உயிரைக் குறித்துக் கவலையடையாமல் இருந்தான். அப்படிப்பட்ட அவ்விடத்தில்கூட அம்மனிதன் உயிர்வாழும் நம்பிக்கையுடனேயே இருந்தான். கருப்பு மற்றும் வெள்ளை எலிகள் பல, அம்மரத்தின் வேர்களை உண்டு கொண்டிருந்தன.(19)

இரைதேடும் விலங்குகளிடமும், காட்டின் வெளிப்புறத்தில் இருக்கும் அந்தப் பெண்ணிடமும், அந்தக் கிணற்றின் அடியில் இருக்கும் பாம்பிடமும், உயரத்தில் நிற்கும் அந்த யானையிடமும்,(20) எலிகளின் செயல்பாட்டால் கீழேவிழ இருக்கும் மரத்திடமும், தேனைச் சுவைப்பதற்காகப் பறந்து கொண்டிருந்த அந்தத் தேனீக்களிடமும் அவனுக்கு அச்சமிருந்தது.(21) அந்தக் காட்டில் தன் புலனுணர்வுகளை இழந்திருக்கும் அந்த அவல நிலையிலும், அவன் தன் வாழ்வை நீட்டிப்பதில் உள்ள நம்பிக்கையை {உயிரோடு வாழும் நம்பிக்கையை} ஒருபோதும் இழக்கவில்லை” {என்றான் விதுரன்}.(22)

விதுரனின் உவமை விளக்கம்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 06-தான் சொன்ன கதை ஓர் உவமையென்றும், அந்த உவமைக்கான விளக்கத்தையும் சொன்ன விதுரன்…

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “ஐயோ, அம்மனிதனின் துயரம் மிகப்பெரியது, அவனது வாழ்வு முறையும் வலி நிறைந்ததே. ஓ! பேசுபவர்களில் முதன்மையானவனே, வாழ்வுக்கான அவனது ஈடுபாடு எங்கிருந்தது? மேலும் அவனது இன்பம் எங்கிருந்தது? {அவன் அங்கே எவ்வாறு இன்புற்றிருக்க முடியும்?}(1) அந்த மனிதன் வசித்து வந்ததும், அறம்பயில்வதற்கு அனுகூலமற்றதுமான அந்த இடம் எங்கிருக்கிறது? ஓ!, அம்மனிதன் அந்தப் பெரும் பயங்கரங்களில் இருந்து எவ்வாறு விடுபடுவான்?(2) இவையனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. அப்போது அவனுக்காக நாம் முறையாக முயற்சி செய்யலாம். அவனை மீட்கும் வழியில் கிடக்கும் கடினத்தன்மையை நினைத்து நான் பெரிதும் இரங்குகிறேன் {கருணை கொள்கிறேன்}” என்றான்.(3)

விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, மோக்ஷதர்மத்தை {வீடுபேற்றை} அறிந்தோர் இதை ஓர் உவமையணியாகக் குறிப்பிடுவார்கள். இதை முறையாகப் புரிந்து கொள்ளும் மனிதன், அதன் பிறகு அருள் உலகங்களை அடைவான்.(4) காடுகளாக விளக்கப்படுவது பேருலகமாகும். அதற்குள் அளவான இடத்துடன் கூடிய அடைதற்கரிய காடானது ஒருவனின் சொந்த வாழ்வாகும்.(5) இரைதேடும் விலங்குகளாகச் சொல்லப்படுவது (நம்மை ஆட்கொள்ளும்) நோய்களாகும். பெரும் உடலுடன் அந்தக் காட்டில் வசிக்கும் பெண்ணானவள்,(6) நிறத்தையும், அழகையும் அழிக்கும் முதுமையாக ஞானியரால் காணப்படுகிறாள். குழியாக {கிணறாகச்} சொல்லப்படுவது உடல், அல்லது உடல்கொண்ட உயிரினங்களின் உடற்கட்டாகும்.(7) அந்தக் குழியின் அடியில் வசிக்கும் பெரும்பாம்பானது, உடல்கொண்ட அனைத்து உயிரினங்களையும் அழிக்கும் காலமாகும். உண்மையில், அதுவே அண்டத்தை அழிக்கிறது.(8) 

அம்மனிதன் அகப்பட அந்தக்குழியில் வளர்ந்திருக்கும் செடிகொடிகளே, ஒவ்வொரு உயிரினமும் பேணி வளர்க்கும் உயிர்மீது கொண்ட {உயிர்வாழும்} விருப்பமாகும்.(9) ஓ! மன்னா, குழியின் வாயிலில் நிற்கும் மரத்தை நோக்கி வரும் ஆறு தலை யானையானது, வருடம் எனச் சொல்லப்படுகிறது. அதன் ஆறு முகங்கள் பருவகாலங்களையும், பனிரெண்டு கால்கள் பனிரெண்டு மாதங்களையும் குறிக்கின்றன.(10) மரத்தை உண்ணும் வெள்ளை மற்றும் கருப்பெலிகள், உயிரினங்களின் வாழ்நாளைக் குறைக்கும் பகல்களும், இரவுகளுமாகும். தேனீக்களாகச் சொல்லப்படுபவை நமது ஆசைகளே ஆகும்.(11) தேனைச் சொட்டும் எண்ணற்ற ஓடைகள், நமது ஆசைகளின் நிறைவால் கிட்டும் இன்பங்களாகும். மனிதர்கள் அதற்கே {இன்பங்களுக்கே} அடிமைகளாக இருக்கின்றனர்.(12) வாழ்வின் போக்கை இவ்வாறே ஞானியர் அறிகின்றனர். அந்த ஞானத்தினாலேயே அவர்கள் அவற்றின் கட்டுகளை அறுத்து வெற்றியடைகின்றனர்” என்றான் {சஞ்சயன்}.(13)

அஹிம்சையே பேரறம் என்ற விதுரன்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 07-அமுதத்துக்கு நிகரான விதுரனின் வார்த்தைகளை மீண்டும் கேட்க விரும்பிய திருதராஷ்டிரன்; மனிதனை ஆட்கொள்ளும் நோய்கள், முதுமை ஆகியவற்றையும், அவற்றிலிருந்து ஞானிகள் எவ்வாறு தப்புகின்றனர் என்பதையும், புலனுணர்வுகளின் நுகர்வால் வாழ்நாள் குறைவதையும், மறுபிறவி அடையாமையே மனிதனுக்கு வேண்டிய விடுதலை என்பதையும், அஃதை அடைவதற்கு வேள்விகளை விடவும், நோன்புகளைவிடவும் அஹிம்சையே முக்கியமானது என்பதையும் திருதராஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன விதுரன்…

திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, “நீ சொன்ன இந்த உவமை அற்புதமானது. நிச்சயமாக, நீ உண்மையை அறிந்திருக்கிறாய். அமுதம் போன்ற உன் பேச்சைக் கேட்ட பிறகும், இன்னும் உன்னிடம் நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(1)

விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, உலகக் கட்டுகளில் இருந்து ஞானியர் தங்களை விடுவித்துக் கொள்ளும் அறிவின் வழிமுறைகளைக் குறித்து மீண்டும் விவரமாகச் சொல்கிறேன் கேட்பீராக.(2) ஓ! மன்னா, நீண்ட தொலைவுக்குப் பயணம் செய்யும் ஒரு மனிதன், களைப்படையும்போது சில நேரங்களில் நிற்க வேண்டியிருக்கும்,(3) அதேபோலவே, ஓ! பாரதரே, சிறுமதிகொண்டவர்கள், வாழ்வின் நீண்ட வழியில் பயணித்து, கருவறையில் மீண்டும் மீண்டும் பிறத்தல் என்ற வடிவில் அடிக்கடி நின்றுவிடுகின்றனர். எனினும், ஞானியர் அந்தக் கடனிலிருந்து விடுபடுகின்றனர்.(4) சாத்திரங்களை அறிந்தோர் இதன் காரணமாகவே வாழ்வை நீண்ட வழி பயணமென்று விவரிக்கின்றனர். ஞானியரும், கடினங்கள் நிறைந்த வாழ்வின் சுழற்சியை ஒரு காடாகவே சொல்கின்றனர்.(5)

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உயிரினங்கள் அசைவனவாகவோ, அசையாதனவாகவோ இருப்பினும் அவை இவ்வுலகிற்கு மீண்டும் மீண்டும் திரும்ப வேண்டும். ஞானிகள் மட்டுமே தப்புவார்கள்.(6) மனம் மற்றும் உடல் சம்பந்தமாக மனிதர்களுக்கு நேரும் நோய்கள், புலன்படுபவையாகவோ, புலன்படாதவையாகவோ இருப்பினும், ஞானியர் அவற்றை இரைதேடும் விலங்குகளாகவே சொல்லியிருக்கின்றனர்(7) ஓ! பாரதரே, மனிதர்கள் எப்போதும் அவற்றால் பீடிக்கப்பட்டுத் தடுக்கப்படுகிறார்கள் {துன்புற்றுப் பயணத்தைத் தொடராமல் நிற்கின்றனர்}. மேலும் அவர்களின் சொந்த செயல்பாடுகளையே பிரதிபலிக்கும் அந்த இரைதேடும் விலங்குகள் {நோய்கள்}, அந்தச் சிறுமதியாளர்களிடம் எந்தக் கவலையையும் உண்டாக்குவதில்லை.(8) ஓ! ஏகாதிபதி, ஒரு மனிதன் எவ்வாறாவது நோய்களில் இருந்து விடுபட்டால், பிறகு அழகை அழிக்கக்கூடிய முதுமை அவனை வெல்கிறது.(9) அம்மனிதன் ஒலி, வடிவம், சுவை, தீண்டல், மணம் என்ற புலனுணர்வுகளுக்குரிய பொருட்களின் சேற்றில் மூழ்கி அவனைப் பாதுகாக்க ஏதுமின்றி அங்கேயே {அந்தச் சேற்றிலேயே விழுந்து} கிடக்கிறான்.(10) அதேவேளையில், வருடங்கள், பருவகாலங்கள், மாதங்கள், அரைமாதங்கள் {பக்ஷங்கள்}, பகல்கள், இரவுகள் ஆகியன அடுத்தடுத்து வந்து அழகைக் கெடுத்து, அவனுக்காக ஒதுக்கப்பட்ட காலத்தைக் குறைக்கின்றன.(11) இவை அனைத்தும் காலனின் தூதர்களே. எனினும், சிறுமதி படைத்தோர் அவற்றை இவ்வாறு அறிவதில்லை. உயிரினங்கள் அனைத்தையும் அவற்றின் செயல்பாடுகளின் மூலமே விதியைச்சமைப்பவன் ஆள்கிறான் என ஞானியர் சொல்கின்றனர்.(12)

ஓர் உயிரினத்தின் உடல் தேர் என்றழைக்கப்படுகிறது. வாழ்வின் கொள்கையே {புத்தியே} அதன் {அந்தத் தேரின்} சாரதியாகும். புலன்களே குதிரைகளாகும். நமது செயல்களும், அறிவுமே அதன் கடிவாளங்களாகும்.(13) ஓடிக்கொண்டிருக்கும் அக்குதிரைகளைப் பின்தொடர்ந்து செல்வோர், மறுபிறப்பெனும் சுழற்சிக்குள் இவ்வுலகிற்கு மீண்டும் மீண்டும் வர வேண்டும்.(14) எனினும், தன் அறிவால் அவற்றைக் கட்டுப்படுத்தும் தன்னடக்கத்துடன் கூடிய ஒருவன் அவ்வாறு மீண்டும் வருவதில்லை.(15) உண்மையான சக்கரம் போலவே சுழலும் வாழ்வெனும் சக்கரத்தில் திரிந்தும் திகைப்படையாதோர், உண்மையில் மறுபிறப்பெனும் சுழற்சியில் திரிவதில்லை.(16) ஞானம் கொண்ட ஒருவன், மறுபிறப்பெனும் கடனைத் தவிர்க்க நிச்சயம் முயற்சிக்க வேண்டும். ஒருவன் இதில் அலட்சியமாக இருக்கக்கூடாது, அலட்சியமே மீண்டும் மீண்டும் நம்மை அதில் {மறுபிறப்பெனும் கடலில்} ஆழ்த்தும்.(17)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, கோபம் மற்றும் பேராசையை அடக்கி, உள்ளடக்கத்துடனும், உண்மை நிறைந்த பேச்சுடனும், இருக்கும் ஒரு மனிதனே அமைதியை அடைவதில் வெல்கிறான்.(18) திகைப்படையும் மூடரின் உடலானது யமனின் தேர் என்று அழைக்கப்படுகிறது. ஓ! மன்னா, அத்தகு மனிதன் நீர் அடைந்ததையே அடைவான்.(19) ஓ! பாரதரே, நாட்டையும், நண்பர்கள் மற்றும் பிள்ளைகள் ஆகியோரையும் இழப்பதும், இது போன்ற இழப்புகளும், ஆசையின் ஆதிக்கத்தில் இருப்பவனையே மூழ்கடிக்கும்.(20) ஞானியான ஒருவன், பெருந்துன்பங்கள் அனைத்திற்கும், அறிவெனும் மருந்தை இட வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மா கொண்ட ஒரு மனிதன், உண்மையில் நன்மைதரக்கூடியதும், கிட்டத்தட்ட அடையமுடியாததுமான ஞானமருந்தை அடைந்து கவலை என்றழைக்கப்படும் மிக முக்கிய நோயை உண்மையில் கொன்றுவிடுவான் {குணப்படுத்துவான்}.(21) துயரத்தில் இருக்கும் ஒரு மனிதனை, தன்னடக்கமுள்ள அவனது ஆன்மாவாலான்றி, ஆற்றலாலோ, செல்வத்தாலோ, நண்பர்களாலோ, நலன் விரும்பிகளாலோ {நோயிலிருந்து} குணப்படுத்த முடியாது. எனவே, ஓ! பாரதரே, அனைத்துத் தீங்குகளையும் செய்யாமலிருக்கும், அல்லது அனைத்து உயிரினங்களிடமும் நட்புடனிருக்கும் பெருங்கடமையை {அஹிம்சையைப்} பன்பற்றி நன்னடத்தையை நோற்பீராக.(22)

தற்கட்டுப்பாடு, துறவு, கவனக்குவிப்பு ஆகியவையே பிரம்மத்தின் மூன்று குதிரைகளாகும். இந்தக் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும் தன்னான்மா எனும் தேரில் செல்லும் ஒருவன், நன்னடத்தை எனும் கடிவாளத்தின் துணை கொண்டு, மரணம் குறித்த அச்சமனைத்தையும் விட்டு, அதை {அந்தத் தேரைச்} செலுத்திச் பிரம்மலோகத்தை அடைகிறான்.(23) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, எந்த மனிதன் தீங்கிழையாமையை அனைத்து உயிரினங்களுக்கும் உறுதி செய்கிறானோ, அவன் அருளாளனான விஷ்ணுவின் உயர்ந்த உலகங்களுக்குச் செல்கிறான்.(24) உயிரினங்கள் அனைத்திற்கும் தீங்கிழையாமையை உறுதி செய்வதால் ஒருவன் அடையும் கனியை, ஆயிரம் வேள்விகளாலோ, தினநோன்புகளாலோ அடையமுடியாது.(25) அனைத்துப் பொருட்களிலும் தன்னை {சுயத்தை} விட அன்புக்குரியது வேறு எதுவுமில்லை. ஓ! பாரதரே, மரணத்தை எந்த உயிரினமும் விரும்புவதில்லை. எனவே, அனைவருக்கும் கருணை காட்டப்பட வேண்டும்.(26) பல்வேறு வகைத் தவறுகளால், தங்கள் சொந்த அறிவெனும் வலையிலேயே சிக்கும், தீயோரும், நல்லோரும் மீண்டும் மீண்டும் உலகத்தில் திரிய நேர்கிறது. எனினும், நுண்ணியப் பார்வை கொண்ட ஞானியரே பிரம்மத்துடன் ஒன்றுகலந்துவிடுகின்றனர்” {என்றான் விதுரன்}”.(27)

தேவரகசியம்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 08-மயக்கமடைந்து கீழே விழுந்த திருதராஷ்டிரன்; போரில் நேர்ந்த படுகொலைக்கான கமுக்கமான வரலாற்றை விளக்கி திருதராஷ்டிரனைத் தேற்றிய வியாசர்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விதுரனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகும், தன் மகன்களின் மரணம் குறித்த துயரத்தால் பீடிக்கப்பட்ட குருக்களின் தலைவன் {திருதராஷ்டிரன்}, உணர்விழந்தவனாகக் கீழே தரையில் விழுந்தான்.(1) அவனது நண்பர்களும், தீவில் பிறந்தவரான {துவைபாயனரான} வியாசரும், விதுரன் மற்றும் சஞ்சயன் ஆகியோரும், நலன்விரும்பிகள் பிறரும், வாயில் காப்போரும், அவனது நம்பிக்கையைப் பெற்றோரும், அவன் விழுந்த நிலையைக் கண்டு,(2) அவனது உடலில் குளிர்ந்த நீரைத் தெளித்து, பனை ஓலைகளால் விசிறிவிட்டுத் தங்கள் கரங்களால் அவனை மெல்லத் தடவினர். அந்நிலையிலேயே நீண்ட நேரம் கிடந்த மன்னனை {திருதராஷ்டிரனை} அவர்கள் தேற்றினர்.(3)

நீண்ட நேரத்திற்குப் பிறகு உணர்வுகள் மீண்டவனான அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, தன் மகன்களின் மரணம் குறித்த துயரில் மூழ்கி, நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தான்.(4) பிறகு அவன் {திருதராஷ்டிரன்}, “மனதநேயத்துக்கு ஐயோ, மனித உடலுக்கு ஐயோ, மனிதத்தன்மையாலேயே இவ்வாழ்வு அடிக்கடி துயரங்களை அனுபவிக்கிறது.(5) ஐயோ, மகன்கள், செல்வங்கள், சொந்தங்கள் மற்றும் உறவினர்களின் இழப்பால் ஒருவன் அனுபவிப்பது, நஞ்சையோ, நெருப்பையோ போன்ற பெருந்துயரமாகும்.(6) துயரம் அங்கங்களை எரிக்கிறது, அதனால் நமது ஞானமும் அழிகிறது. அத்துயரத்தில் மூழ்கும் ஒருவனுக்கு மரணமே சிறந்ததாகும்.(7) தீப்பேற்றால் நான் அடைந்திருக்கும் துயரமும் அவ்வாறானதே. உயிரை விடுவதைவிட வேறு எந்தவகையிலும் அது முடிவுபெறாது என நான் காண்கிறேன். எனவே, ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே, இந்த நாளே நான் என் உயிருக்கு முடிவுகட்டப் போகிறேன்” என்றான் {திருதராஷ்டிரன்}.(8) உயரான்மா கொண்டவரும், பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான தன் தந்தையிடம் {வியாசரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன திருதராஷ்டிரன், துயரில் மூழ்கியவனாகத் திகைப்படைந்தான் {மயக்கமடைந்தான்}. ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அம்மன்னன், தன் துன்பங்களை நினைத்துப் பார்த்துப் பேச்சற்றவனானான்.(9) இவ்வார்த்தைகளைக் கேட்ட பலமிக்க வியாசர், பிள்ளைகளின் மரணத்தினால் உண்டான துயரத்தில் பீடிக்கப்பட்டிருந்த தன் மகனிடம் {திருதராஷ்டிரனிடம்} இவ்வாறு {பின்வருமாறு} பேசினார்.(10)

வியாசர் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரா, நான் சொல்வதைக் கேள். ஓ! பலமிக்கவனே, நீ! கல்விமானும், பெரும் நுண்ணறிவு கொண்டவனும், கடமைகளைப் புரிந்து கொள்வதில் திறன் கொண்டவனும் ஆவாய்.(11) ஓ! எதிரிகளை எரிப்பவனே, அறியத்தக்கது எதையும் நீ அறியாதவனில்லை. மரணமடைய விதிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் நிலையாமையை நீ அறிவாய் என்பதில் ஐயமில்லை.(12) ஓ! பாரதா, உயிரினங்களுடன் கூடிய உலகம் {ஜீவலோகம்} நிலையற்றது, இவ்வுலகமே நிலையானதில்லை, உயிரானது நிச்சயம் மரணத்தினால்தான் முடிவுக்கு வரும் எனும்போது, நீ ஏன் துயருறுகிறாய்?(13) ஓ! மன்னா, காலத்தால் கொண்டவரப்பட்டு ஒன்றுதிரண்ட உண்மைகள், உன் கண்களுக்கு முன்பாக, உன் மகனையே {துரியோதனனையே} இந்தப் பகைமைக்குக் காரணமாக்கின.(14)

ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, குருக்களின் அழிவு தவிர்க்கப்பட முடியாதது. உயர்ந்த முடிவை அடைந்திருக்கும் அவ்வீரர்களைக் குறித்து நீ ஏன் வருந்துகிறாய்?(15) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உயரான்ம விதுரன் அனைத்தையும் அறிவான். ஓ! மன்னா, தன் வலிமை முழுவதையும் பயன்படுத்தி அவன் {விதுரன்} அமைதியைக் கொண்டு வர முயன்றான்.(16) ஒருவன் அழிவில்லாமைக்காகப் போராடினாலும், விதியால் வகுக்கப்பட்ட பாதையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது என் கருத்தாகும்.(17) தேவர்களால் தீர்மானிக்கப்பட்ட பாதை என்னால் நேரடியாகக் கேட்கப்பட்டது. உன் மன அமைதிக்காக அதை நான் உனக்குச் சொல்கிறேன்.(18)

ஒரு காலத்தில் நான், எக்களைப்புமின்றி வெகு வேகமாக இந்திரனின் சபையை அடைந்தேன். அங்கே சொர்க்கவாசிகள் அனைவரும் ஒன்றாகக் கூடியிருப்பதைக் கண்டேன்.(19) ஓ! பாவமற்றவனே, அங்கே நாரதரின் தலைமையில் தெய்வீக முனிவர்கள் அனைவரும் இருந்தனர். ஓ! ஏகாதிபதி, அங்கே (உடல் வடிவத்துடன் கூடிய) பூமாதேவியையும் கண்டேன்.(20) ஒரு குறிப்பிட்ட காரியத்தின் நிறைவுக்காகவே அவள் தேவர்களிடம் வந்திருந்தாள். தேவர்களை அணுகிய அவள் {பூமாதேவி},(21) “அருளப்பட்டவர்களே, நீங்கள் எனக்காகச் செய்ய வேண்டியது அனைத்தையும், பிரம்மனின் வசிப்பிடத்தில் வைத்து நீங்கள் ஏற்கனவே உறுதி கூறினீர்கள். அது விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்” என்றாள்.(22)

உலகங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவனான விஷ்ணு, அவளது வார்த்தைகளைக் கேட்டு, அந்தத் தெய்வீகச் சபைக்கு மத்தியில் சிரித்துக் கொண்டே,(23) “துரியோதனன் என்ற பெயரில் அறியப்படுபவனான திருதராஷ்டிர மகன்களில் மூத்தவன் உன் காரியத்தை நிறைவேற்றுவான். அம்மன்னனின் மூலமே உனது நோக்கம் நிறைவேறும்.(24) குருக்களத்தில் {குருக்ஷேத்திரத்தில்} மன்னர்கள் பலர் அவனுக்காக ஒன்று கூடுவார்கள். தாக்கவல்ல அவர்கள், கடும் ஆயுதங்களெனும் கருவிகள் மூலம் ஒருவரையொருவர் கொல்லச் செய்வார்கள்.(25) ஓ! தேவி, அப்போதைய போரில் உன் சுமை குறைக்கப்படும். ஓ! அழகியே, வேகமாக உன் இடத்திற்குச் சென்று, உயிரினங்களைச் சுமப்பதைத் தொடர்வாயாக” என்றான்.(26)

இப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காந்தாரியின் கருவறையில் பிறந்தவனான உன் மகன் துரியோதனன், அண்ட அழிவை உண்டாக்கும் நோக்குடன் உதித்த கலியின் {கலிகாலத்தின்} ஒரு பகுதியாவான் என்பதை உன்னால் புரிந்து கொள்ள முடியும்.(27) பழிவுணர்ச்சி, அமைதியின்மை, பெருங்கோபம் ஆகியவற்றைக் கொண்டவனாகவும், நிறைவடையக் கடினமானவனாகவும் அவன் இருந்தான். விதியின் ஆதிக்கத்தால் அவனது சகோதரர்களும், அவனைப் போலவே மாறினார்கள்.(28) சகுனி அவனது தாய்மாமனாகவும், கர்ணன் அவனது பெரும் நண்பனாகவும் ஆனார்கள். அந்த அழிவு வேலைக்குத் துணைபுரியவே பல்வேறு மன்னர்கள் பூமியில் பிறந்தார்கள்.(29) மன்னன் எவ்வழியோ, குடிகளும் அவ்வழியே. மன்னன் நேர்மையானவனாக இருந்தால், அவனது ஆட்சிப்பகுதியில் நேர்மையற்றவர்களும், நேர்மையாளர்களாக ஆவார்கள்.(30) பணியாட்கள் தங்கள் தலைவர்களின் தகுதிகள் மற்றும் குறைகளால் பாதிப்பை அடைகிறார்கள் என்பதில் ஐயமில்லை {பணியாட்கள் தங்கள் தலைவர்களின் குணங்களையே அடைகிறார்கள்}. ஓ! மன்னா, உன் மகன்கள் ஒரு தீய மன்னனை அடைந்து அழிவை அடைந்தார்கள். ஓ! ஏகாதிபதி அவர்களுக்காக வருந்தாதே. துயருறக் காரணமேதுமில்லை.(32)

ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, {இதுவரை} நடந்தவற்றில் பாண்டவர்கள் சிறு தவறையும் செய்யவில்லை. உன் மகன்கள் அனைவரும் தீய ஆன்மாக்களைக் கொண்டோராக இருந்தனர். அவர்களே உலகத்திற்கு இந்த அழிவைச் செய்தனர்.(33) நீ அருளப்பட்டிருப்பாயாக. ராஜசூய வேள்வியின் போது யுதிஷ்டிரனின் சபையில் நாரதர்,(34) “பாண்டவர்களும், கௌரவர்களும் ஒருவரோடொருவர் மோதி, அழிவைச் சந்திப்பார்கள். ஓ! குந்தியின் மகனே, நீ செய்ய வேண்டியதைச் செய்வாயாக” என்றார் {நாரதர்}.(35) நாரதரின் வார்த்தைகளைக் கேட்டுப் பாண்டவர்கள் துயரால் நிறைந்தார்கள். இவ்வாறே நான் தேவர்களின் அழிவில்லா ரகசியத்தை உனக்குச் சொல்லிவிட்டேன்.(36)  தேவர்களால் விதிக்கப்பட்ட அத்தனையும் நடந்தது என்பதால், இஃது உன் துயரத்தை அழித்து, உன் உயிர்மூச்சில் அன்பை மீட்டெடுத்து, பாண்டவர்களிடம் பாசம் கொள்ளச் செய்யும்.(37)

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {திருதராஷ்டிரனே}, இவையனைத்தும் சில காலத்திற்கு முன்பே நான் அறிந்தேன். வேள்விகளில் முதன்மையான ராஜசூயத்தின்போது, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் நான் இதைப் பேசவும் செய்தேன்.(38) நான் அவனிடம் கமுக்கமாக இவையனைத்தையும் சொன்னபோது, அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} கௌரவர்களுடனான அமைதியைப் பாதுகாக்க தன்னாலான சிறந்த முயற்சியைச் செய்தான். எனினும், தேவர்களால் விதிக்கப்பட்ட அது (அவனால் கலங்கடிக்கப்பட முடியாத அளவுக்கு) சக்தி வாய்ந்ததாக இருந்தது.(39) எவ்வாறாயினும், ஓ! மன்னா, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் யமனின் செயலைக் கலங்கடிக்கவல்லவையல்ல.(40)

ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, நீ அறத்தில் அர்ப்பணிப்பு கொண்டவனும், மேன்மையான நுண்ணறிவைக் கொண்டவனுமாவாய். அனைத்துயிரினங்களுக்கும் எது வழி, எது வழியில்லை என்பதையும் நீ அறிவாய்.(41) மன்னன் யுதிஷ்டிரன், நீ துயரால் எரிவதையும், அடிக்கடி உன் உணர்வுகளை இழப்பதையும் {மயங்கி விழுவதையும்} அறிந்தால், தன் உயிர்மூச்சையே விட்டுவிடுவான்.(42) அவன் எப்போதும் கருணையுள்ளவனாகவும், ஞானம் கொண்டவனாகவும் இருக்கிறான். இழிந்த உயிரினங்கள் அனைத்திடமும் கூட அவன் தன் அன்பை விரிவடையச் செய்கிறான். ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி, அவன் {யுதிஷ்டிரன்} உன்னிடம் கருணைகொள்ளாதிருக்க என்ன சாத்தியம்?(43) என் ஆணையின் பேரிலும், தவிர்க்க முடியாத விதியை அறிந்தும், பாண்டவர்களிடம் அன்பு கொண்டு உன் உயிரைத் தாங்கிக் கொள்வாயாக.(44) இவ்வாறு நீ வாழ்ந்தால், உன் புகழ் உலகமெங்கும் பரவும். அனைத்துக் கடமைகளின் அறிவை அடைந்து, பலவருடங்களின் தவத் தகுதியை நீ அடைவாய்.(45) ஓ! மன்னா, உன் மகன்களின் மரணத்தால் உன் இதயத்தில் எழுந்திருக்கும் இந்தத் துயரமெனும் சுடர்மிக்க நெருப்பானது, ஞானமெனும் நீரால் எப்போதும் அணைக்கப்பட வேண்டும்” {என்றார் வியாசர்}.(46)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அளவிலா ஆன்மா கொண்டவரான வியாசரின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிறிது நேரம் சிந்தித்த திருதராஷ்டிரன்,(47) “ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே {தந்தையே}, நான் துயரெனும் பெருங்கனத்தால் அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கிறேன். என் புலனுணர்வுகள் என்னை அடிக்கடி கைவிடுகின்றன, என்னால் என்னையே தாங்கிக் கொள்ள முடியவில்லை.(48) எனினும், தேவர்களால் விதிக்கப்பட்டதைக் குறித்த உமது வார்த்தைகளைக் கேட்டதால், என் உயிர்மூச்சை விட நினைக்காமலும், துயரில் ஈடுபடாமலும் வாழ்வேன்” என்றான்.(49) சத்தியவதியின் மகனான வியாசர், ஓ! ஏகாதிபதி, திருதராஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு அங்கேயே அப்போதே மறைந்து போனார்” {என்றார் வைசம்பாயனர்}.(50)

திருதராஷ்டிரனை மீண்டும் தேற்றிய விதுரன்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 09-முதிய மன்னனுக்கு ஆறுதலளித்த விதுரன்; கொல்லப்பட்டவர்கள் சொர்க்கத்தையும், கொலை செய்தவர்கள் புகழையும் அடைவார்கள் எனவே கவலை கொள்வது தகாது எனத் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன விதுரன்; காலனின் வலிமை, வாழ்வின் நிலையாமை ஆகியவற்றைச் சொன்ன விதுரன்…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாள {பிராமண} முனிவரே, புனிதமான வியாசர் சென்ற பிறகு, மன்னன் திருதராஷ்டிரன் என்ன செய்தான்? எனக்கு இதைச் சொல்வதே உமக்குத் தகும்.(1) மேலும் குரு மன்னான மன்னனும், உயரான்மாவுமான தர்மன் மகன் {யுதிஷ்டிரன்} என்ன செய்தான்? கிருபர் முதலான மூவரும் என்ன செய்தனர்.(2) அஸ்வத்தாமனின் செயல்களையும், ஒருவருக்கொருவர் சாபங்களைப் பழித்துரைத்ததையும் நான் கேட்டேன். அடுத்ததாக நடந்ததையும், (முதிர்ந்த மன்னனிடம்) அடுத்து சஞ்சயன் என்ன சொன்னான் என்பதையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(30)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “துரியோதனன் கொல்லப்பட்டு, துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்ட பிறகு, தன் ஆன்மப் பார்வையை இழந்த சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் திரும்ப வந்தான்.(4)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்து வந்தவர்களும், பல்வேறு மக்களின் மன்னர்களும் என அனைவரும் உமது மகன்களுடன் சேர்ந்து இறந்தோரின் உலகத்தை அடைந்தனர்.(5) ஓ மன்னா, (அமைதிக்காக) தொடர்ந்து வேண்டிக் கொள்ளப்பட்டவனும், ஆனால் (பாண்டவர்களைக் கொன்று) தன் பகைமையை முடிக்க வேண்டும் என எப்போதும் விரும்பியவனுமான உமது மகன் {துரியோதனன்} இவ்வுலகத்தை நிர்மூலமாகச் செய்தான்.(60) ஓ! மன்னா, உமது மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் தந்தைமார் ஆகியோரின் ஈமச் சடங்குகளை முறைப்படி செய்ய ஏற்பாடு செய்வீராக” என்றான்”.(7)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சஞ்சயனின் இந்தப் பயங்கர வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, கீழே பூமியில் விழுந்து, உயிரை இழந்தவனைப் போல அசைவற்றுக் கிடந்தான்.(8)

கடமைகள் அனைத்தையும் அறிந்தவனான விதுரன், பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} அணுகி, இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(9) “ஓ! மன்னா, ஏன் இவ்வாறு கீழே கிடக்கிறீர்? எழுவீராக. ஓ! பாரதக் குலத்தின் காளையே, வருந்தாதீர். ஓ! பூமியின் தலைவரே, அனைத்துயிர்களின் இறுதியான முடிவும் இதுவேயாகும்.(10) முதலில் உயிரினங்கள் இருப்பில் இல்லாதிருந்தன. ஓ!பாரதரே, நடுவிலோ, அவை இருப்பில் இருந்தன. இறுதியிலும், அவை இருப்பில் இல்லாமல் போகின்றன. இவை யாவற்றிலும் என்ன கவலையைக் கொள்ள முடியும்?(11) துயரில் ஈடுபடுவதால், இறந்தோர் திரும்பி வருவதில்லை. துயரில் ஈடுபடுவதால் ஒருவன் தானே இறப்பதுமில்லை. உலகத்தின் வழி இவ்வாறிருக்கையில், ஏன் நீர் துயரில் ஈடுபடுகிறீர்?(12) போரில் ஈடுபடாமலேயே ஒருவன் இறக்கலாம். போரில் ஈடுபட்ட பிறகும் ஒருவன் உயிரோடு தப்பலாம். ஆனால், ஓ! மன்னா, காலன் வரும்போது ஒருவனால் தப்ப முடியாது.(13)

அனைத்து வகை உயிரினங்களையும் காலன் இழுத்துச் செல்கிறான். ஓ! குருக்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, காலனுக்கு அன்புக்குரியவனோ, வெறுப்புக்குரியவனோ எவனும் கிடையாது.(14) ஓ! பாரதக் குலத்தின் காளையே புல்லின் நுனிகள் அனைத்தையும் கிழிக்கும் காற்றைப் போலவே, காலனின் ஆதிக்கத்திற்குள் அனைத்து உயிரினங்களும் வருகின்றன.(15) ஒரே இடத்தை நோக்கிச் செல்லும் வணிகக்கூட்டத்தின் உறுப்பினர்களைப் போலவே அனைத்து உயிரினங்களும் இருக்கின்றன. வேறொருவனுக்குச் சிறிது முன்பாகவே காலன் ஒருவனைச் சந்திக்கிறான் என்றால் அதில் வருந்துவதற்கான காரணம் என்ன இருக்கிறது?(16) மேலும் ஓ! மன்னா, போரில் வீழ்ந்த சிறப்புமிக்கவர்கள் அனைவரும் சொர்க்கத்திற்கே சென்றிருப்பதால், அவர்கள் உமது துயரத்திற்குரிய பொருட்கள் அல்லர்.(17) போரில் துணிவுடன் இருந்த வீரர்களைவிட அபரிமிதமான கொடைகளைக் கொண்ட வேள்விகளாலோ, தவங்களாலோ, அறிவாலோ ஒரு மனிதன் சொர்க்கத்திற்கு எளிதாகச் செல்ல முடியாது.(18)

அவர்கள் அனைவரும் வேதங்களை நன்கறிந்தவர்கள்; அவர்கள் அனைவரும் நோன்புகள் நோற்றவர்கள். எதிரியை முகத்துக்கு நேராகச் சந்தித்தே அவர்கள் அனைவரும் மரணத்தைச் சந்தித்திருக்கிறார்கள். இதில் கவலை கொள்ள என்ன இருக்கிறது?(19) அவர்கள், நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவதைப் போலத் துணிச்சல்மிக்க எதிரிகளின் உடல்களில் தங்கள் கணை ஆகுதிகளைப் பொழிந்தார்கள். மனிதர்களில் முதன்மையானோரான அவர்கள், பதிலுக்குத் தங்கள் மீது ஊற்றப்படும் கணை ஆகுதிகளைப் தாங்கிக் கொண்டனர்.(20) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் ஒரு க்ஷத்திரியனுக்கு, போரைவிடச் சொர்க்கத்திற்குச் செல்லும் சிறந்த பாதை வேறேதும் இல்லை என நான் உமக்குச் சொல்கிறேன்.(21) அவர்கள் அனைவரும் உயர் ஆன்ம க்ஷத்திரியர்களும், துணிச்சல் கொண்டவர்களும், சபைகளின் ரத்தினங்களுமாவர். அவர்கள் உயர்ந்த அருள்நிலையை அடைந்திருக்கின்றனர். அவர்கள் நாம் கவலைகொள்ளத்தக்க மனிதர்களல்லர்.(22) ஓ! மனிதர்களில் காளையே, உம்மை நீரே தேற்றிக் கொண்டு, கவலையை விடுவீராக. செயல்கள் அனைத்தையும் கைவிட்டு, கவலையில் மூழ்குவது உமக்குத் தகாது” {என்றான் விதுரன்}[1].(23)

விசோக உபபர்வம் முற்றும்

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading