களங்காணப் புறப்பட்ட அரசமகளிர்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 10-அரச மகளிரை அழைத்துக் கொண்டு போர்க்களத்திற்குச் செல்லத் தீர்மானித்த திருதராஷ்டிரன்; குருகுலப் பெண்களைத் தேரில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்த விதுரன்; அரச குடும்பமும், பெரும் எண்ணிக்கையிலான குடிமக்களுக்கும் ஹஸ்தினாபுரத்தை விட்டுப் புறப்பட்டது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்தப் பாரதக் குலத்தின் காளை (திருதராஷ்டிரன்), விதுரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டுத் தன் தேரை ஆயத்தம் செய்ய ஆணையிட்டான்.(1) மன்னன் {திருதராஷ்டிரன்} மீண்டும் {விதுரனிடம்}, “காந்தாரியையும், பாரதக்குல பெண்கள் அனைவரையும் தாமதிக்காமல் இங்கே கொண்டு வருவாயாக. குந்தியையும், அவளுடன் உள்ள பிற பெண்கள் அனைவரையும் இங்கே கொண்டு வருவாயாக” என்றான்.(2) நீதிமிக்க ஆன்மா கொண்ட திருதராஷ்டிரன், ஒவ்வொரு கடமையையும் அறிந்த விதுரனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி, கவலையால் உணர்வுகளை இழந்து தன் தேரில் ஏறினான்.(3) அப்போது, தன் மகன்களின் மரணத்தின் நிமித்தமான துயரால் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரி, தன் தலைவனின் {திருதராஷ்டிரனின்} ஆணையினால், குந்தி மற்றும் அரச குடும்பத்தின் பிற மகளிரின் துணையுடன், பின்னவன் {திருதராஷ்டிரன்} தனக்காகக் காத்திருந்த இடத்திற்கு வந்தாள்.(4) பெருந்துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள் ஒன்றாக மன்னனிடம் வந்து சேர்ந்தனர். அவர்கள் சந்தித்தபோது, ஒருவரையொருவர் கைவிரித்து அழைத்து, கவலையால் உரத்த ஓலமிட்டனர்.(5)
விதுரன், அந்தப் பெண்களைவிட அதிகம் பீடிக்கப்பட்டிருந்தாலும், அவர்களைத் தேற்றத் தொடங்கினான். அழுதுகொண்டிருந்த அந்த அழகிய பெண்களின் அருகில் ஆயத்தமாக இருந்த தேரில் ஏற்றி, (அவர்களுடன் சேர்ந்து) நகரத்தைவிட்டுப் புறப்பட்டான்.(6) அந்நேரத்தில் ஒவ்வொரு குருவின் {குருகுலத்தோன் ஒவ்வொருவனின்} வீட்டிலும் துன்ப ஓலம் எழுந்தது. பிள்ளைகளுடன் சேர்த்து மொத்த நகரமும் பெருந்துயரால் பீடிக்கப்பட்டிருந்தது.(7) இதற்கு முன்பு தேவர்களாலேயே {கண்கொண்டு} காணப்படாத மங்கையர், தங்கள் தலைவர்களை இழந்து ஆதரவற்றவர்களாகி இப்போது பொது மக்களால் காணப்பட்டனர். அவர்கள் அழகிய குழல்கள் கலைந்தவர்களாக, ஆபரணங்களற்றவர்களாக, உடுப்பாக ஒற்றையாடையை அணிந்திருந்த அந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் மிகத் துயரத்துடன் அவ்வாறு சென்றனர்.(9) உண்மையில் அவர்கள், தங்கள் தலைவன் வீழ்ந்ததும் மலைக்குகைகளில் இருந்து வெளிவரும் புள்ளிமான் கூட்டத்தைப் போல வெண்மலைகளுக்கு ஒப்பான தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர்.(10)
அந்த அழகிய பெண்கள், கேளிக்கை வட்டாரங்களில் பெண் குதிரைக்குட்டிக் கூட்டங்களைப் போலவும், அடுத்தடுத்த வானம்பாடிக் கூட்டங்களாகவும் கவலையால் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தனர்.(11) ஒருவரையொருவர் கரங்கள் பற்றிக் கொண்ட அவர்கள், தங்கள் மகன்கள், சகோதரர்கள் மற்றும் தந்தைமாருக்காக உரத்த ஓலமிட்டனர். யுக முடிவின் போது நேரும் அண்ட அழிவுக்காட்சியை அது வெளிப்படுத்துவதாக இருந்தது.(12) துயரால் தங்கள் புலனுணர்வுகளை இழந்த அவர்கள், புலம்பிக் கொண்டும், அழுதுகொண்டும், அங்கேயே இங்கேயும் ஓடிக்கொண்டும், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருந்தனர்.(13) தங்கள் பாலினத் தோழிகளின் முன்னிலையிலேயே முன்பெல்லாம் வெட்கப்படும் அந்தப் பெண்டிர், இப்போது மிகக் குறைவாகவே உடுத்தியிருந்த நிலையில் தங்கள் மாமியார்கள் முன்னிலையில் தோன்றியும் வெட்கமடையாதிருந்தனர்.(14) முன்பெல்லாம் வருந்தத்தக்க சிறு காரணங்களுக்காகவும் ஒருவருயொருவர் தேற்றிக் கொண்ட அவர்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா} இப்போதோ, துயரால் திகைப்படைந்து, ஒருவரையொருவர் கண்ணெடுத்துப் பார்ப்பதையும் தவிர்த்தனர்.(15)
மன்னன் {திருதராஷ்டிரன்}, ஓலமிட்டுக்கொண்டிருக்கும் அந்த ஆயிரக்கணக்கான பெண்களால் சூழப்பட்டு, நகரைவிட்டுப் புறப்பட்டு, போர்க்களத்தை நோக்கி வேகமாகச் சென்றான்.(16) கலைஞர்கள் {சிற்பிகள்}, வணிகர்கள் {வியாபாரிகள்}, வைசியர்கள், அனைத்து வகை இயந்திரக் கைவினைஞர்கள் ஆகியோரும் {வேலை செய்து பிழைக்கும் மற்ற அனைவரும்} நகரத்தில் இருந்து புறப்பட்டு மன்னனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(17) குருக்களை மூழ்கடித்திருக்கும் அந்த முற்றான அழிவால் பீடிக்கப்பட்டிருந்த அந்தப் பெண்டிர், சோகமாக அழுததால், அவர்களுக்கு மத்தியில் எழுந்த ஓலமானது அனைத்து உலகங்களையும் துளைப்பதாகத் தெரிந்தது.(18) அந்த ஓலத்தைக் கேட்ட அனைத்து உயிரினங்களும், யுக முடிவில் நெருப்பு எழுந்து அனைத்தையும் எரிக்கும் அண்ட அழிவுக்கான நேரம் வந்துவிட்டதென நினைத்தன.(19) ஓ! மன்னா, குருவின் {குருகுலத்தோனான திருதராஷ்டிரனின்} வீட்டிற்கு அர்ப்பணிப்புள்ள குடிமக்களும், தங்கள் ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த அழிவால் தங்கள் இதயங்கள் துயரில் நிறைய, அந்தப் பெண்களைப் போலவே உரக்க ஓலமிட்டனர்” {என்றார் வைசம்பாயனர்}.(20)
அரசக்குடும்பத்தை வழியில் சந்தித்த மூவர்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 11-தன் மகனின் படையில் எஞ்சியிருக்கும் மூன்று வீரர்களை வழியில் சந்தித்த திருதராஷ்டிரன்; துரியோதனன் நியாயமற்ற முறையில் கொல்லப்பட்டதைக் காந்தாரிக்குச் சொன்ன கிருபர்; பாண்டவர்களிடம் கொண்ட அச்சத்தால் கிருபர், அஸ்வத்தாமன் மற்றும் கிருதவர்மன் ஆகியோர், காந்தாரியிடமும், திருதராஷ்டிரனிடமும் விடைபெற்றுக் கொண்டு சென்றது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “திருதராஷ்டிரன், இரண்டு மைல்கள் {ஒரு குரோச தொலைவு} செல்வதற்குள், சரத்வான் மகனான கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் கிருதவர்மன் ஆகியோரைச் சந்ததித்தான்.(1) பெரும் சக்தி கொண்டவனும், பார்வையற்றவனுமான அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} அம்மூவரும் கண்டதும், துயரால் பெருமூச்சுவிட்டபடியும், கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அழுதுகொண்டும், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அடைதற்கரிய சாதனைகளைச் செய்த உமது அரசமகன் {துரியோதனன்}, தன் தொண்டர்களுடன் இந்திரலோகம் சென்றுவிட்டான்.(3) துரியோதனனின் படையில் நாங்கள் மூன்று தேர்வீரர்கள் மட்டுமே உயிரோடு தப்பினோம். ஓ! பாரதக் குலத்தின் காளையே, பிறரனைவரும் அழிந்துவிட்டனர்” என்றனர்.(4)
மன்னனிடம் அவர்கள் இதைச் சொன்னதும், சரத்வான் மகனான கிருபர், துயரால் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரியிடம், இவ்வார்த்தைகளைச் சொன்னார்,(5) “உன் மகன்கள், போரில் அச்சமில்லாமல் போரிட்டு, பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளை வீழ்த்தி, வீரர்களுக்குத் தகுந்த சாதனைகளைச் செய்து கொண்டிருந்தபோது வீழ்ந்தனர்.(6) அவர்கள், ஆயுதங்களைப் பயன்படுத்தி அடையும் பிரகாசமான உலகங்களை அடைந்து, பிரகாசமான வடிவங்களை ஏற்று விளையாடிக் கொண்டிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.(7) அவர்களில் எந்த வீரனும் போரில் புறமுதுகிடவில்லை. அனைவரும் ஆயுதம் தீர்ந்தோ, ஆயுதமுனையினாலோ வீழ்ந்தனர். அவர்களில் எவரும் தங்கள் கரங்களைக் கூப்பித் தஞ்சம் கேட்கவில்லை {சரணடையவில்லை}.(8) ஆயுதங்கள் தீர்ந்தோ, ஆயுதங்களின் முனையிலோ போரில் மரணத்தை அடைவது க்ஷத்திரியன் அடையும் உயர்ந்த கதி என்று சொல்லப்படுகிறது.(9) ஓ! ராணி {காந்தாரி}, அவர்களின் எதிரிகளான பாண்டவர்களும் அதிக நற்பேற்றைப் பெறவில்லை. அஸ்வத்தாமன் தலைமையில் நாங்கள் என்ன செய்தோம் என்பதைக் கேட்பாயாக.(10)
உன் மகன் துரியோதனன், பீமனால் நியாயமற்ற வகையில் கொல்லப்பட்டான் என்பதை அறிந்த நாங்கள், உறக்கத்தில் புதைந்திருந்த பாண்டவர்களின் முகாமில் புகுந்து அவர்கள் அனைவரையும் கொன்றோம்.(11) பாஞ்சாலர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். உண்மையில் துருபதனின் மகன்கள் அனைவரும், திரௌபதியின் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(12) நம் பகைவரின் மகன்களுக்கு இந்தப் பேரழிவைச் செய்துவிட்டு, போரில் அவர்கள் முன்பு நிற்க இயலாததால் இப்போது தப்பிச் செல்கிறோம்.(13) நம் எதிரிகளான பாண்டவர்கள் அனைவரும் வீரர்களும், வலிமைமிக்க வில்லாளிகளுமாவர். சினத்தால் நிறையும் அவர்கள், பழிதீர்ப்பதற்காக எங்களை அடைய விரைவில் வருவார்கள்.(14) ஓ! சிறப்புமிக்கப் பெண்மணியே, தங்கள் மகன்கள் கொல்லப்பட்டதைக் கேட்டு, சினத்தால் மதங்கொள்பவர்களும் வீரர்களுமான அந்த மனிதர்களில் காளைகள் {பாண்டவர்கள்} வேகமாக எங்கள் தடத்தைப் பின்தொடர்ந்து வருவார்கள்.(15)
(உறங்கும் முகாமுக்குள்) பேரழிவை ஏற்படுத்திய நாங்கள் {இங்கே} நிற்பதற்கும் துணியமாட்டோம். ஓ! ராணியே {காந்தாரியே}, எங்களுக்கு விடைகொடுப்பாயாக. உன் இதயத்தைக் கவலையில் ஆழ்த்துவது உனக்குத் தகாது.(16) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீயும் எங்களுக்கு விடைகொடுப்பாயாக. மன உரம் அனைத்தையும் {உதவிக்கு} அழைப்பாயாக. க்ஷத்திரியக் கடமைகளை அதன் உயர்ந்த வடிவில் நோற்பாயாக” என்றார் {கிருபர்}.(17)
ஓ! பாரதா {ஜனமேஜயா}, கிருபர், கிருதவர்மன் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர், பெரும் ஞானம் கொண்ட மன்னன் திருதராஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அவனை வலம் வந்து,(18) அவனிடமிருந்து தங்கள் கண்களை அகற்ற முடியாமல், தங்கள் குதிரைகளைத் தூண்டி கங்கைக்கரையை நோக்கிச் சென்றனர்.(19) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவ்விடத்தைவிட்டு அகன்ற அந்தப் பெருந்தேர்வீரர்கள், இதயங்கள் கவலையில் மூழ்கிய நிலையிலேயே, ஒருவரிடமிருந்து ஒருவர் விடைபெற்றுக் கொண்டு, பிரிந்து சென்றனர்.(20)
சரத்வான் மகனான கிருபர் ஹஸ்தினாபுரத்திற்கும்; ஹிருதிகனின் மகன் {கிருதவர்மன்} தன் நாட்டுக்கும்; துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} வியாசரின் ஆசிரமத்திற்கும் புறப்பட்டுச் சென்றனர்.(21) இவ்வாறே, பாண்டுவின் உயரான்ம மகன்களுக்குக் குற்றமிழைத்த அவ்வீரர்கள், அச்சத்தால் பீடிக்கப்பட்டும், ஒருவரின் மீது மற்றவர் பார்வையைச் செலுத்திக் கொண்டும் தாங்கள் விரும்பிய இடத்திற்குச் சென்றனர்.(22) இவ்வாறு மன்னனைச் சந்தித்தவர்களும், துணிச்சமிக்கவர்களுமான அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்கள், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, சூரியன் உதிக்கும் முன்பே தாங்கள் தேர்ந்தெடுத்த இடங்களுக்குச் சென்றனர்.(23) ஓ! மன்னா {ஜனமேஜயா}, இதற்குப் பின்னரே, பெரும் தேர்வீரர்களான பாண்டுவின் மகன்கள் துரோணரின் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} மோதி, தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி (ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போல) அவனை வென்றனர்” {என்றார் வைசம்பாயனர்}.(24)
திருதராஷ்டிரத் தழுவல்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 12-திருதராஷ்டிரன் நகரத்தைவிட்டுப் புறப்பட்டதை அறிந்து அவனைச் சந்திக்கப் புறப்பட்ட யுதிஷ்டிரன்; அவனை அடைந்து வணங்கியது; யுதிஷ்டிரனை ஆரத்தழுவிய திருதராஷ்டிரன்; பீமனை நொறுக்குவதாக எண்ணிக் கிருஷ்ணனால் கொடுக்கப்பட்ட இரும்புப் பதுமையைத் தூள் தூளாக்கிய திருதராஷ்டிரன்; முடிவை ஏற்றுக் கொள்ளுமாறு திருதராஷ்டிரனிடம் சொன்ன கிருஷ்ணன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “போர்வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகு, யுதிஷ்டிரன், தன் பெரியப்பாவான திருதராஷ்டிரன், யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தைவிட்டு {ஹஸ்தினாபுரத்தை விட்டுத்} புறப்பட்டதைக் கேள்விப்பட்டான்.(1) ஓ! மன்னா {ஜனமேஜயா}, மகன்கள் கொல்லப்பட்ட துயரத்தில் இருந்த யுதிஷ்டிரன், தன் (நூறு) மகன்களின் படுகொலையால் துயரில் முழ்கி, கவலையில் நிறைந்திருக்கும் தன் பெரியப்பாவைச் சந்திக்கத் தன் தம்பிகளுடன் புறப்பட்டான்.(2) அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, உயரான்ம வீரனும், தசார்ஹ குலத்தோனுமான கிருஷ்ணனாலும், யுயுதானனாலும் {சாத்யகியாலும்}, யுயுத்சுவாலும் பின்தொடரப்பட்டான்.(3) துயரில் எரிந்து கொண்டிருந்த திரௌபதியும், தன்னுடன் இருந்த பாஞ்சாலப் பெண்களின் துணையுடன், தன் தலைவனை {யுதிஷ்டிரனைக்} கவலையோடு பின்தொடர்ந்து சென்றாள்.(4) யுதிஷ்டிரன், ஓ! மன்னா, துயரால் பீடிக்கப்பட்டு, பெண் அன்றில் கூட்டத்தைப் போல அழுது கொண்டிருக்கும் பாரத மகளிர்க்கூட்டத்தைக் கங்கைக் கரையின் அருகில் கண்டான்.(5)
மன்னன் {யுதிஷ்டிரன்}, ஏற்புடைய மற்றும் ஏற்கமுடியாத அனைத்துவகை வார்த்தைகளையும் சொல்லி அழுது புலம்பிக் கொண்டும், துயரால் தங்கள் கரங்களை உயர்த்திக் கொண்டும் வந்த அந்த ஆயிரக்கணக்கான மகளிரால் சூழப்பட்டு,(6) “தந்தைமார், சகோதரர்கள், ஆசான்கள், மகன்கள் மற்றும் நண்பர்களைக் கொன்ற அந்த நீதிமிக்க மன்னன் எங்கே? அவனது உண்மையும், கருணையும் எங்கே?(7) ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே {யுதிஷ்டிரா}, துரோணரையும், உன் பாட்டனான பீஷ்மரையும், {மைத்துனனான} ஜெயத்ரதனையும் கொன்றபிறகாவது உன் இதயம் அமைதி அடைந்ததா?(8) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உன் தந்தைமாரும், சகோதரர்களும், தடுக்கப்பட முடியாத அபிமன்யுவும், திரௌபதியின் மகன்களும் இவ்வாறு கொல்லப்பட்டதைக் கண்ட பிறகும், உனக்கு அரசுரிமைக்கான தேவை என்ன இருக்கிறது?” {என்று அவர்களால் கேட்கப்பட்டான்}.(9)
வலிய கரங்களைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், பெண் அன்றில்களைப் போலக் கதறிக்கொண்டிருந்த அந்த மங்கையரைக் கடந்து சென்று, தன் பெரியப்பாவின் {திருதராஷ்டிரரின்} பாதங்களை வணங்கினான்.(10) எதிரிகளைக் கொல்பவர்களான பாண்டவர்கள், முறைப்படி தங்கள் பெரியப்பாவை வணங்கி, தங்கள் பெயரைச் சொல்லி அவனிடம் தங்களை அறிவித்துக் கொண்டனர்.(11) தன் மகன்களின் படுகொலையால் துயரில் மிகவும் பீடிக்கப்பட்டிருந்த திருதராஷ்டிரன், அந்தப் படுகொலைக்குக் காரணமான பாண்டுவின் மூத்த மகனை {யுதிஷ்டிரனை}, விருப்பமில்லாமலேயே தழுவிக் கொண்டான்.(12) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை ஆரத்தழுவி, சில ஆறுதல் வார்த்தைகளைச்சொன்ன பிறகு, தீய ஆன்மா கொண்டவனான அந்தத் திருதராஷ்டிரன், தன்னை அணுகும் அனைத்தையும் எரித்துவிடும் சுடர்மிக்க நெருப்பைப் போலப் பீமனைத் தேடினான்.(13) உண்மையில், அவனது துயரெனும் காற்றால் தூண்டப்பட்ட கோபமெனும் நெருப்பானது, பீமக் காட்டை எரிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிந்தது.(14)
பீமனிடம் அவன் கொண்டிருக்கும் தீய நோக்கங்களை உறுதி செய்து கொண்ட கிருஷ்ணன், உண்மையான பீமனை இழுத்துவிட்டு, அந்த முதிய மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} இரும்பாலான இரண்டாம் பாண்டவனின் {பீமனின்} சிலையைக் கொடுத்தான்.(15) பெரும் நுண்ணறிவைக் கொண்ட கிருஷ்ணன், தொடக்கத்திலேயே திருதராஷ்டிரனின் நோக்கங்களைப் புரிந்து கொண்டு, அவற்றைக் கலங்கடிப்பதற்காகவே இந்தச் சூழ்ச்சியைச் செய்தான்.(16) பெரும் பலம் கொண்டவனான மன்னன் திருதராஷ்டிரன், தன்னிரு கரங்களாலும் அந்த இரும்பு பீமனைப் பற்றிக் கொண்டு, இரத்தமும், சதையுமான உண்மையான பீமனாகவே கருதி அதைத் துண்டுகளாக நொறுக்கினான்.(17) பத்தாயிரம் {10000} யானைகளுக்கு இணையான வலிமையைக் கொண்ட அம்மன்னன் {திருதராஷ்டிரன்} அந்தச் சிலையைத் துண்டு துண்டானச் சிதறல்களாக்கினான். எனினும், தன் மார்பும் குறிப்பிட்ட அளவுக்குக் காயமடைந்ததால் {மிகவும் நசுக்கப்பட்டதால்} அவன் ரத்தம் கக்கத் தொடங்கினான்.(18) குருதியில் மறைந்திருந்த அந்த மன்னன், மலர்களின் சுமையை உச்சியில் கொண்டிருக்கும் பாரிஜாத மரத்தைப் போலக் கீழே தரையில் விழுந்தான்.(19) கல்விமானும், அவனது தேரோட்டியும், கவல்கணன் மகனுமான சஞ்சயன் அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} உயர்த்தி, ஆறுதல் சொல்லித் தேற்றி, “இவ்வாறு செயல்படாதீர்” என்றான்.(20)
பிறகு, தன் கோபத்தைக் கைவிட்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, தன் இயல்பான நிலையை அடைந்து, துயரால் நிறைந்து, “ஐயோ, ஓ! பீமா, ஐயோ, ஓ! பீமா!” என்று சொல்லி உரக்க அழத்தொடங்கினான்.(21) அவன் இன்னும் கோபத்தின் ஆளுகையில் இல்லை என்பதையும், பீமனைக் கொன்றதால் உண்மையாக வருந்துவதையும் (தான் நம்பியவாறே)[1] புரிந்து கொண்டவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்}, இந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னான்,(22) “ஓ! திருதராஷ்டிரரே, நீர் பீமசேனரைக் கொல்லவில்லை என்பதால் வருந்தாதீர். ஓ! மன்னா, நீர் நொறுக்கியது ஓர் இரும்பு சிலையே.(23) ஓ! பாரதக் குலத்தின் காளையே, நீர் சினத்தால் நிறைந்திருக்கிறீர் என்பதைப் புரிந்து கொண்ட நான், குந்தியின் மகனை {பீமரைக்} காலனின் கோரப் பற்களுக்கிடையில் இருந்து இழுத்துவிட்டேன்.(24) ஓ! மன்னர்களில் புலியே, உடல்வலுவில் உமக்கு இணையாக எவனும் இல்லை. ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, உமது கரங்களின் அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள இங்கே எவன் இருக்கிறான்?(25)உண்மையில், காலனுடன் மோதி எவனும் உயிருடன் தப்ப முடியாது என்பதைப் போலவே, உமது அணைப்புக்குள் இருந்து பாதுகாப்பாக எவனாலும் வெளியேற முடியாது.(26) அதன் காரணமாகவே, உமது மகனால் {துரியோதனனால் கதாயுதப் பயிற்சிக்காகச்} செய்யப்பட்ட பீமரின் இந்தச் சிலையை உமக்காகவே தயாராக வைத்திருந்தேன்.(27) உமது மகன்களின் மரணத்தால் உண்டான துயரின் மூலம் உமது மனம் நீதியில் இருந்து விழுந்துவிட்டது. ஓ! பெரும் மன்னா, இதன் காரணமாகவே நீர் பீமசேனரைக் கொல்ல முயன்றீர்.(28) எனினும், ஓ! மன்னா, பீமரைக் கொல்வது உமக்கு ஒரு நன்மையையும் செய்யாது. ஓ! ஏகாதிபதி, அதனால் உமது மகன்கள் பிழைத்து வர மாட்டார்கள்.(29) எனவே, உமது இதயத்தைத் துயரில் நிலைநிறுத்தாமல், அமைதியை எட்டும் நோக்கில் எங்களால் எது செய்யப்பட்டதோ அஃதை ஏற்றுக்கொள்வீராக {அங்கீகரிப்பீராக}” என்றான் {கிருஷ்ணன்}”.(30)
கோபம் அகன்ற திருதராஷ்டிரன்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 13-பீமனிடம் கோபத்தை வளர்ப்பதற்காகத் திருதராஷ்டிரனைக் கடிந்துரைத்த கிருஷ்ணன்; கோபத்தை விட்டு தன் தம்பியின் பிள்ளைகளை ஒருவர்பின் ஒருவராகத் தழுவிக் கொண்ட திருதராஷ்டிரன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அப்போது சில பெண்பணியாட்கள் மன்னனைக் கழுவி விட அங்கே வந்தனர். அவன் முறையாகத் தூய்மைப்படுத்தப்பட்ட பிறகு, மதுசூதனன் {கிருஷ்ணன்}, அவனிடம் {திருதராஷ்டிரனிடம்} மீண்டும்,(1) “ஓ! மன்னா, நீர் வேதங்களையும், பல்வேறு சாத்திரங்களையும் படித்திருக்கிறீர். பழைய வரலாறுகள் அனைத்தையும், மன்னர்களின் கடமைகள் குறித்த அனைத்தையும் நீ கேட்டிருக்கிறீர்.(2) கல்விமானான நீர் பெரும் ஞானம் கொண்டவராகவும், பலம் மற்றும் பலவீனத்துக்குத் தகுந்தவராகவும் இருக்கிறீர். உமக்கு நேர்ந்தவை அனைத்தும் உமது தவறுகளின் விளைவே எனும்போது இத்தகு கோபத்தை ஏன் வளர்க்கிறீர்?(3) போருக்கு முன்பே நான் உம்மிடம் பேசினேன். ஓ! பாரதரே, பீஷ்மர், துரோணர், விதுரர், சஞ்சயன் ஆகியோரும் உம்மிடம் பேசினர். எனினும், நீர் எங்கள் அறிவுரையைப் பின்பற்றவில்லை.(4) உண்மையில், எங்களால் பரிந்துரைக்கப்பட்டாலும், உமக்கும், உமது பலம் மற்றும் துணிவுக்கும் பாண்டவர்கள் மேம்பட்டவர்கள் என்பதை அறிந்து, நாங்கள் சொன்ன ஆலோசனைகளின் படி நீர் செயல்படவில்லை.(5)
தன் குறைகளைக் காணவல்லவனும், கால, நேர வேறுபாடுகளை அறியவல்லவனுமான மன்னன் பெருஞ்செழிப்பை அடைகிறான்.(6) எனினும், எந்த மனிதன் நலன்விரும்பிகளால் ஆலோசனை கூறப்பட்டும், அவர்களது நல்ல {இனிமையான}, அல்லது தீய {கசப்பான} வார்த்தைகளை ஏற்கவில்லையோ, அவன் தன் தீய கொள்கையின் விளைவால் உண்டாகும் துயரை அடைந்து துன்பப்படுகிறான்.(7) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இப்போது வாழ்வின் வேறு வழியைக் காண்பீராக. நீர் உமது ஆன்மாவைக் கட்டுப்படுத்தாமல், துரியோதனனின் ஆளுகைக்குள் இருந்து உம்மைத் துன்புறுத்திக் கொண்டீர்.(8) உமக்கு நேர்ந்திருப்பவை உமது தவறாலேயே உம்மை அடைந்தன. பிறகு ஏன் நீர் பீமரைக் கொல்ல முயல்கிறீர்? உமது சொந்த தவறுகளை நினைத்துப் பார்த்து, உமது கோபத்தை இப்போது அடக்குவீராக.(9) அற்பனான எவன் செருக்கினால் பாஞ்சால இளவரசியை {திரௌபதியைச்} சபைக்குக் கொண்டு வந்தானோ, அவன் நியாயமாகப் பழி தீர்க்கப்படவே பீமசேனரால் கொல்லப்பட்டான்.(10) உமது சொந்த செயல்பாடுகளையும், தீய ஆன்மா கொண்ட உமது மகனின் {துரியோதனனின்} செயல்பாடுகளையும் பார்ப்பீராக. பாண்டுவின் மகன்கள் முற்றிலும் அப்பாவிகளாவர். இருப்பினும், அவர்கள் உம்மாலும், அவனாலும் {துரியோதனனாலும்} மிகக் கொடூரமாக நடத்தப்பட்டார்கள்” என்றான் {கிருஷ்ணன்}”.(11)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கிருஷ்ணனால் இவ்வாறு உண்மை சொல்லப்பட்ட பிறகு, மன்னன் திருதராஷ்டிரன் அந்தத் தேவகியின் மகனிடம் {கிருஷ்ணனிடம்} மறுமொழியாக,(12) “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நீ சொன்னது போலத்தான் இருக்கிறது. ஓ! மாதவா, நீ சொல்வது முற்றிலும் உண்மையே. ஓ! அற ஆன்மாவே, பிள்ளை பாசமே என்னை அறத்திலிருந்து விழச் செய்தது.(13) மனிதர்களில் புலியும், உண்மை ஆற்றல் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான பீமன், என் அணைப்புக்குள் வராமல் உன்னால் பாதுகாக்கப்பட்டது நற்பேற்றாலேயே.(14) இருப்பினும், நான் இப்போது கோபத்திலிருந்தும், நோயிலிருந்தும் விடுபட்டிருக்கிறேன். ஓ! மாதவா, வீரனான அந்தப் பாண்டுவின் இரண்டாம் மகனை {பீமனைத்} தழுவிக் கொள்ளும் விருப்பத்தால் ஆவலடைந்திருக்கிறேன்.(15) மன்னர்கள் அனைவரும் இறந்து, என் பிள்ளைகளும் இல்லையென்றான பிறகு, என் நல்வாழ்வும், மகிழ்ச்சியும் பாண்டுவின் மகன்களைச் சார்ந்தே இருக்கப் போகிறது” என்றான் {திருதராஷ்டிரன்}.(16) இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த முதிய மன்னன், அற்புத உடற்கட்டுகளைக் கொண்டோரான பீமன், தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரையும், மனிதர்களில் முதன்மையானவர்களான மாத்ரியின் மகன்கள் {நகுலன், சகாதேவன்} இருவரையும் தழுவியழுது, ஆறுதலடைந்து, அவர்களை வாழ்த்தியருளினான்” {என்றார் வைசம்பாயனர்}.(17)
காந்தாரியின் கோபம்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 14-யுதிஷ்டிரனைச் சபிக்க நினைத்திருந்த காந்தாரி; தீடீரென அங்கே வந்த வியாசர் அவளது கோபத்தைத் தணிக்க ஆலோசனை கூறுவது; அவரது ஆலோசனையை ஏற்றுக் கொண்ட காந்தாரி, பீமனின் அநியாயத்தைச் சுட்டிக்காட்டியது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “திருதராஷ்டிரனால் ஆணையிடப்பட்ட குரு குலக் காளைகளான அந்தப் பாண்டவச் சகோதரர்கள், கேசவனின் {கிருஷ்ணனின்} துணையுடன் காந்தாரியைக் காணச் சென்றனர்.(1) களங்கமற்றவளான காந்தாரி, தன் நூறு மகன்களின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தன் எதிரிகள் அனைவரையும் கொன்றதை நினைவுகூர்ந்து அவனைச் {யுதிஷ்டிரனைச்} சபிக்க விரும்பினாள்.(2) சத்தியவதியின் மகன் {வியாசர்}, பாண்டவர்களிடம் அவள் கொண்டிருக்கும் தீய நோக்கங்களைப் புரிந்த கொண்டு, தொடக்கத்திலேயே அதற்கு எதிர்வினையாற்றத் தனக்குள் தீர்மானித்தார்.(3) மனோவேகத்தில் தாம் விரும்பும் இடத்திற்குச் செல்ல வல்ல அந்தப் பெரும் முனிவர் {வியாசர்}, கங்கையின் புனிதமான தெளிந்த நீரால் தம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.(4) ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்தையும் தமது ஆன்மப் பார்வையால் பார்க்க வல்ல அந்தத் தவசி {வியாசர்}, தன் மனத்தை அதை நோக்கிச் செலுத்தி அங்கே தோன்றினார்.(5)
பெரும் தவத்தகுதியைக் கொண்டவரும், எப்போதும் உயிரினங்களின் நன்மையையே நோக்கமாகக் கொண்டவருமான அந்த முனிவர் {வியாசர்}, சரியான நேரத்தில் தன் மருமகளிடம் {காந்தாரியிடம்},(6) “சபிப்பதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாதே. மறுபுறம் உன் மன்னிப்பைக் காட்ட {வழங்க} அதைப் பயன்படுத்துவாயாக {பொறுமை காட்டுவாயாக}. ஓ! காந்தாரி, நீ பாண்டவர்களிடம் கோபங்கொள்ளக் கூடாது. உன் இதயத்தை அமைதியில் நிலைநிறுத்துவாயாக. உன் உதடுகளிலிருந்து உதிரப்போகும் வார்த்தைகளைத் தடுப்பாயாக. என் அறிவுரையைக் கேட்பாயாக.(7) வெற்றியை விரும்பிய உன் மகன் {துரியோதனன்}, பதினெட்டு நாட்கள் நீடித்த அந்தப் போரின் போது ஒவ்வொருநாளும்[1] உன்னிடம், “ஓ! தாயே, எதிரிகளுடன் போரிடப் போகும் எனக்கு அருள்புரிவாயாக” என்று வேண்டினான்.(8) வெற்றியை விரும்பிய உனது மகன் ஒவ்வொரு நாளும் இவ்வார்த்தைகளால் இரந்து கேட்டுக் கொண்டும், நீ அவனுக்கு எப்போதும் கொடுத்த பதில், “எங்கே அறமிருக்கிறதோ, அங்கே வெற்றியுமிருக்கும்” என்பதாகும்.(9)ஓ! காந்தாரி, நீ சொன்ன வார்த்தைகள் ஏதும் பொய்த்ததாக எனக்கு நினைவில்லை. எனவே, துரியோதனனால் வேண்டிக் கேட்டுக் கொள்ளப்பட்டு, நீ சொன்ன அந்த வார்த்தைகளும் பொய்க்க முடியாது. நீ எப்போதும் அனைத்து உயிரினங்களின் நன்மையிலேயே ஈடுபட்டிருக்கிறாய்.(10) க்ஷத்திரியர்களின் அந்தப் பயங்கரப் போரில் அடுத்தக் கரையை அடைந்த பாண்டுவின் மகன்களே நிச்சயமாக வென்றிருக்கிறார்கள், {அவர்களிடமே} அறத்தின் அளவும் அதிகமாக இருக்கிறது.(11) நீ முன்பு மன்னிக்கும் அறத்தை {பொறுமையை} நோற்று வந்தாய். அஃதை இப்போது ஏன் நீ நோற்கக்கூடாது? ஓ! அறமறிந்தவளே, அநீதியை அடக்குவாயாக. எங்கே அறமிருக்கிறதோ, அங்கேதான் வெற்றியுமிருக்கும்.(12) ஓ! காந்தாரி, உன் அறத்தையும், நீ பேசிய வார்த்தைகளையும் நினைவுகூர்ந்து உன் கோபத்தை அடக்குவாயாக. ஓ! அழகாகப் பேசுபவளே, வேறுவகையில் செயல்படாதே” என்றார் {வியாசர்}.(13)
இவ்வார்த்தைகளைக் கேட்ட காந்தாரி {வியாசரிடம்}, “ஓ! புனிதமானவரே, பாண்டவர்களிடம் நான் எந்தக் கோபமும் கொள்ளவில்லை, அவர்கள் அழிய வேண்டும் என்று விரும்பவுமில்லை. எனினும், என் மகன்களின் மரணத்தால் ஏற்பட்ட துயரின் விளைவாக, என் இதயம் மிகப் பலத்த கலக்கத்தையடைகிறது.(14) குந்தி எவ்வளவு கவனமாகப் பாண்டவர்களைப் பாதுகாக்கிறாளோ, அதே அளவு நானும் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், நான் பாதுகாக்கும் அளவுக்குத் திருதராஷ்டிரரும் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் நான் அறிவேன்.(15) துரியோதனன் மற்றும் சுபலரின் மகனான சகுனி ஆகியோரின் குற்றத்தின் மூலமும், கர்ணன் மற்றும் துச்சாசனன் ஆகியோரின் செயல்பாடுகளின் மூலமும், குருக்களின் இந்த முற்றான அழிவு நடைபெற்றிருக்கிறது.(16) இக்காரியத்தில், பீபத்சு {அர்ஜுனன்} மீதோ, பிருதையின் மகனான விருகோதரன் {பீமன்} மீதோ, நகுலன் மீதோ, சகாதேவன் மீதோ, யுதிஷ்டிரன் மீதோ சிறு பழியையும் இணைத்துச் சொல்ல முடியாது.(17)
ஆணவம் மற்றும் செருக்குடன் கூடிய கௌரவர்கள், போரில் ஈடுபடும்போது, (அவர்களின் உதவிக்கு வந்த) பலருடன் சேர்ந்து வீழ்ந்திருக்கிறார்கள். இதனால் நான் வருத்தமடையவில்லை.(18) ஆனால், வாசுதேவன் {கிருஷ்ணன்} முன்னிலையில், பீமனால் செய்யப்பட்ட ஒரு காரியம் (என் சினதைத் தூண்டும்படி} இருக்கிறது. உயர் ஆன்ம விருகோதரன் {பீமன்}, ஒரு பயங்கரக் கதாயுதப் போருக்குத் துரியோதனனை அறைகூவி அழைத்து விட்டு,(19) போரில் பல்வேறு வகைகளில் திரியும்போது, அவனை {பீமனை} விட என் மகன் {துரியோதனன்} திறனில் மேன்மையானவன் என்பதை அறிந்து, உந்திக்கு {தொப்புளுக்குக்} கீழே தாக்கினான்.(20) இதுவே என் கோபத்தைத் தூண்டுகிறது. கடமைகள் {தர்மங்கள்} அனைத்தையும் அறிந்த உயரான்ம மனிதர்களால் தீர்மானிக்கப்பட்ட கடமைகளை, வீரர்கள் தங்கள் உயிர்களுக்காக ஏன் கைவிடுகிறார்கள்?[2]” என்று கேட்டாள் {காந்தாரி}”.(21)
யுதிஷ்டிரனின் கால்கட்டைவிரல்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 15-காந்தாரியிடம் பேசிய பீமன், நியாயமற்ற முறையில் துரியோதனனைக் கொன்ற தன் குற்றத்தைக் குறைத்துச் சொன்னது; துச்சாசனனின் குருதியைக் குடித்த செயலைப் பீமனுக்குச் சுட்டிக்காட்டி அவனைக் கண்டித்த காந்தாரி; தன் தம்பியின் குருதியை உண்மையில் குடிக்கவில்லை என்றும், கர்ணன் மட்டுமே அஃதை அறிவான் என்றும் சொன்ன பீமன்; காந்தாரியிடம் பணிந்த யுதிஷ்டிரன்; காந்தாரியின் கண்கள் யுதிஷ்டிரனின் கால் கட்டைவிரல் நகத்தை எரித்தது; தங்கள் தாயைச் சந்தித்த பாண்டவர்கள்; திரௌபதியோடு சேர்ந்து அழுத குந்தி; திரௌபதிக்கு ஆறுதலளித்த காந்தாரி …
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “காந்தாரியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமசேனன், பயந்தவன் போலத் தெரிந்து, அவளை ஆறுதல் படுத்த இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “அந்தச் செயல் நேர்மையானதோ, நேர்மையற்றதோ, அஃது அச்சத்தினாலும், என்னைக் காத்துக் கொள்ளும் நோக்குடனுமே செய்யப்பட்டது. எனவே, என்னை இப்போது மன்னிப்பதே உனக்குத் தகும்.(2) உன் வலிமைமிக்க மைந்தன் {துரியோதனன்}, நேர்மையான நல்ல போரில், எவராலும் கொல்லப்பட முடியாதவனாக இருந்தான். துரியோதனனே முன்பு நியாயமற்ற வகையில் யுதிஷ்டிரரை வென்றான்[1]. இதன் காரணமாகவே நான் நியாயமற்றதைச் செய்தேன். அவன் எப்போதும் எங்களிடம் வஞ்சகமாகவே நடந்து கொண்டான். இதன் காரணமாகவே நான் நியாயமற்ற செயலைச் செய்ய வேண்டியிருந்தது.(4) உன் மகனே, அவனது தரப்பில் கொல்லப்படாமல் எஞ்சிய ஒரே வீரன். அந்த வீர இளவரசன் {துரியோதனன்} என்னைக் கதாயுத்ததில் கொல்லாமல் இருக்கவும், மீண்டும் எங்களை அவன் நாட்டை இழக்கச்செய்யாமல் இருக்கவும் நான் அவ்வழியில் செயல்பட்டேன்.(5)
பாஞ்சால இளவரசி {திரௌபதி} தன் பருவ காலத்தில் ஒற்றையாடை உடுத்தியிருந்தபோது, உன் மகன் அவளிடம் சொன்ன அனைத்தையும் நீ அறிவாய்.(6) சுயோதனனை {துரியோதனனை} ஒழிக்காமல், கடல்களுடன் கூடிய மொத்த பூமியையும் எங்களால் அமைதியாக ஆள முடியாது. இதன் காரணமாகவே நான் அவ்வழியில் செயல்பட்டேன்.(7) உன் மகன் எங்களுக்குப் பல தீங்குகளைச் செய்தான். சபைக்கு மத்தியில் வைத்து அவன் தன் இடது தொடையைத் திரௌபதிக்குக் காட்டினான்.(8) அந்தத் தீய நடத்தைக்காகவே அப்போதே உன் மகன் எங்களால் கொல்லத்தக்கவனாவான். எனினும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் ஆணையின் பேரிலும், ஏற்கப்பட்ட ஒப்பந்தத்தின் படியும் நாங்கள் எங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டோம்.(9) ஓ! ராணி, இவ்வழிகளில் உன் மகன் {துரியோதனன்} எங்களுடன் தீராப் பகைமையைத் தூண்டிக் கொண்டிருந்தான். (உன் மகனால் விரட்டப்பட்டு) நாங்கள் காட்டில் அடைந்த பாடு மிகப் பெரியதாகும். இவையனைத்தையும் நினைவுகூர்ந்தே நான் அவ்வழியில் செயல்பட்டேன்.(10) போரில் துரியோதனனைக் கொன்றதன் மூலம் நாங்கள் எங்கள் பகைமைகளின் முடிவை அடைந்துவிட்டோம். யுதிஷ்டிரர் தமது நாட்டை மீண்டும் அடைந்துவிட்டார். நாங்களும் கோபத்திலிருந்து விடுபட்டோம்[2]” என்றான்.(11)பீமனின் வார்த்தைகளைக் கேட்ட காந்தாரி, “(போர்த்திறனில்) இவ்வாறு என் மகனை நீ புகழ்வதாலேயே, அவன் இத்தகு மரணத்திற்குத் தகாதவனாவான். எனினும், நீ என்னிடம் சொன்ன அனைத்தையும் அவன் செய்திருக்கிறான். {அது ஒருபுறம்} இருப்பினும், ஓ! பாரதா, விருஷசேனன் நகுலனை, அவனது குதிரைகளை இழக்கச் செய்தபோது, நீ போரில் துச்சாசனனது உடலின் குருதியைக் குடித்தாய்.(13) அத்தகு கொடூரச் செயல் நல்லோரால் நிந்திக்கப்படுகிறது. மிக இழிந்த ஒருவனுக்கே அது தகும். ஓ! விருகோதரா {பீமா}, அப்போது நீ செய்தது தீச்செயலே. இஃது உனக்குத் தகாது” என்றாள்.(14)
பீமன் {காந்தாரியிடம்}, “அந்நியனின் குருதியைக் குடிப்பதும் முறையாகாது, அப்படியிருக்கையில், ஒருவனுடைய சொந்த இரத்தத்தைக் குடிப்பதைப் பற்றி என்ன சொல்ல முடியும்? ஒருவனின் தம்பி, ஒருவனின் சுயமே ஆவான். அவர்களுக்குள் எந்த வேறுபாடும் கிடையாது.(15) எனினும், ஓ! தாயே, (நான் குடித்ததாகக் கருதப்படும்) குருதி, என் உதடுகளையும், பற்களையும் தாண்டவில்லை. கர்ணன் இதை நன்கறிவான். என் கைகள் மட்டுமே (துச்சாசனனின்) குருதியால் பூசப்பட்டிருந்தது.(16) போரில் விருஷசேனன், நகுலனைக் குதிரைகளை இழக்கச் செய்ததைக் கண்டு, மகிழ்ச்சியடைந்த (கௌரவ) சகோதரர்களை நான் பீதியால் நிறையச் செய்தேன்.(17) பகடையாட்டத்திற்குப் பிறகு, திரௌபதியின் குழல்கள் பற்றப்பட்டபோது, நான் சினத்தால் சில குறிப்பிட்ட வார்த்தைகளைச் சொன்னேன். அவ்வார்த்தைகள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன.(18) அந்தச் சபதத்தை நான் நிறைவேற்றாமல் இருந்திருந்தால், நான் நாளெல்லாம் க்ஷத்திரியக் கடமைகளில் தவறியவனாகக் கருதப்பட்டிருப்பேன். ஓ! ராணி, இதன் காரணமாகவே நான் அச்செயலைச் செய்தேன்.(19) ஓ! காந்தாரி, என்னிடம் களங்கம் காண்பது உனக்குத் தகாது. முன் நாட்களில் உன் மகன்களைத் தடுக்காமல், அப்பாவிகளான எங்கள் மீது எந்தக் களங்கத்தையும் காண்பதும் உனக்குத் தகாது” என்றான்.(20)
காந்தாரி {பீமனிடம்}, “ஓ! குழந்தாய் {பீமா}, எவராலும் வெல்லப்படாத நீ, இந்த முதிய மனிதரின் {திருதராஷ்டிரரின்} நூறு மகன்களைக் கொன்றிருக்கிறாய். ஓ!, குற்றங்கள் குறைந்தவர்களும், நாட்டை இழந்தவர்களுமான இந்த முதிர்ந்த இணையின் {தம்பதியரின்} ஒரேயொரு மகனையாவது நீ ஏன் எஞ்சவிடவில்லை?(21) ஒரேயொரு ஊன்றுகோலைக் கூட இந்தக் குருட்டு இணைக்கு நீ ஏன் விட்டு வைக்கவில்லை? ஓ! குழந்தாய், என் பிள்ளைகள் அனைவரையும் கொன்று, பிறகும் நீ காயமில்லாமல் வாழ்ந்தாய் என்றாலும், (அவர்களைக் கொல்லும்போது) நீ நீதியின் பாதையைப் பின்பற்றியிருந்தால் எனக்கு எந்தத் துயரமும் இல்லை” என்றாள்”.(23)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன காந்தாரி, தன் மகன்கள், தன் பேரப்பிள்ளைகள் அனைவரும் கொல்லப்பட்டதால் கோபத்தில் நிறைந்தவளாக, யுதிஷ்டிரனை விசாரிக்கும் வகையில், “எங்கே மன்னன் {யுதிஷ்டிரன்}?” என்று கேட்டாள்.(24) அவள் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், மன்னன் யுதிஷ்டிரன், நடுங்கிக் கொண்டே, கூப்பிய கரங்களுடன் அவளை {காந்தாரியை} அணுகி, அவளிடம் இந்த மென்மையான வார்த்தைகளைச் சொன்னான்,(25) “ஓ! தேவி, உன் மகன்களைக் கொன்ற கொடூரனான யுதிஷ்டிரன் இங்கே இருக்கிறேன். நானே இந்த அண்டத்தின் அழிவுக்குக் காரணமாக இருப்பதால் உன் சாபங்களுக்கு நான் தகுந்தவனே. ஓ!, என்னைச் சபிப்பாயாக.(26) உயிர், நாடு, செல்வம் ஆகியவற்றின் எந்தத் தேவையும் இனியும் எனக்கு இல்லை. இத்தகு நண்பர்களைக் கொல்லச் செய்த நான், பெரும் மூடனாகவும், நண்பர்களை வெறுப்பவனாகவுமே என்னை நிரூபித்துக் கொண்டேன்” என்றான்.(27)
அச்சத்தில் மூழ்கி இவ்வார்த்தைகளைப் பேசியவனும், காந்தாரியின் அருகில் நின்றவனுமான யுதிஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, அவள் {காந்தாரி} நீண்ட பெருமூச்சுகளை விட்டபடியே ஒன்றும் சொல்லாதிருந்தாள்.(28) அறவிதிகளை அறிந்தவளும், பெரும் முன்னறிதிறனைக் கொண்டவளுமான அந்தக் குரு ராணி {காந்தாரி}, தன் பாதத்தில் விழ முன்னோக்கிக் குனிந்த இளவரசன் யுதிஷ்டிரனின் {கால்} கட்டை விரலில் தன் கண்களை மறைத்திருந்த துணியின் ஊடாக அவற்றை {தன் கண்களைச்} செலுத்தினாள். இதனால், முன்பு மிக அழகிய நகங்களைக் கொண்டிருந்த மன்னனின் கட்டைவிரல் புண்ணுள்ள நகத்தைக் கொண்டததானது[3].(29,30) இதைக் கண்ட அர்ஜுனன் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} பின்புறத்திற்கு நகர்ந்து சென்றான் {ஒளிந்து கொண்டான்}, பாண்டுவின் பிற மகன்களும் அமைதியிழந்தவர்களாக அடுத்தடுத்த இடத்திற்கு நகர்ந்து சென்றனர்.(31)
பிறகு காந்தாரி, தன் கோபத்தைக் கைவிட்டு, ஒரு தாயைப் போலப் பாண்டவர்களுக்கு ஆறுதலளித்தாள். அகன்ற மார்புகளைக் கொண்ட அந்த வீரர்கள் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு, வீரர்களைப் பெற்றவளான தங்கள் தாயிடம் {குந்தியிடம்} சென்றனர்.(32) நீண்ட காலத்திற்குப் பிறக் தன் மகன்களைக் கண்ட குந்தி, அவர்களின் நிமித்தமாகக் கவலையில் நிறைந்து, தன் முகத்தைத் துணியால் மறைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள். தன் பிள்ளைகளோடு சேர்ந்து சிறிது நேரம் அழுதபிறகு, பல ஆயுதங்களால் அவர்களின் உடல்களில் ஏற்பட்டிருந்த காயங்களையும், வடுக்களையும் கண்டாள்.(34) பிறகு அவள், மீண்டும் மீண்டும் அவர்களைத் தழுவி கொண்டு, தன் ஒவ்வொரு மகனையும், அன்பாகத் தட்டிக் கொடுத்தாள். பிறகு அவள் {குந்தி}, பிள்ளைகள் அனைவரையும் இழந்தவளும், வெறுந்தரையில் கிடந்து பரிதாபகரமாகப் புலம்பிக் கொண்டிருப்பவளுமான திரௌபதியைக் கண்டு, துக்கத்தால் பீடிக்கப்பட்டு அவளோடு சேர்ந்து அழுதாள்.(35)
அப்போது திரௌபதி {குந்தியிடம்}, “ஓ! மதிப்புக்குரிய பெருமாட்டியே, அபிமன்யுவுடன் சேர்த்து உன் பேரப்பிள்ளைகள் அனைவரும் எங்கே சென்றுவிட்டனர்? உன்னை இத்தகு துயரத்தில் கண்டும் அவர்கள் ஏன் உன் முன்பு தோன்றாமல் தாமதிக்கின்றனர்? பிள்ளைகளை இழந்த எனக்கு {அடையப்பட்டிருக்கும்} நாட்டால் என்ன தேவையிருக்கிறது {நாட்டால் என்ன ஆகப்போகிறது}?” என்று கேட்டாள்.(36) துயரத்தில் பீடிக்கப்பட்டு இவ்வாறு அழுதுகொண்டிருக்கும் பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} உயர்த்திய பிருதை {குந்தி}, அகன்ற கண்களைக் கொண்ட அந்தப் பெண்ணுக்கு {திரௌபதிக்கு} ஆறுதலளிக்கத் தொடங்கினாள்.(37) பிறகு குந்தி, பாஞ்சால இளவரசியுடன், தன் மகன்களைப் பின்தொடர்ந்து சென்று, தானே பெருந்துயரில் இருந்தாலும், துயரில் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரியை நோக்கிச் சென்றாள்.(38)
அந்தச் சிறப்புமிக்கப் பெண்மணி {குந்தி} தன் மருமகளுடன் {திரௌபதியுடன்} இருப்பதை அறிந்த காந்தாரி, அவளிடம் {திரௌபதியிடம்}, “ஓ! மகளே, வருந்தாதே.(39) உன்னைப்போலவே நானும் துயரில் பீடிக்கப்பட்டிருப்பதைப் பார்.(39) இந்த அண்ட அழிவானது, தடுக்கப்பட முடியாத காலத்தின் வழியால் கொண்டுவரப்பட்டது என நான் நினைக்கிறேன். தவிர்க்கப்பட முடியாத இந்தப் பயங்கரப் படுகொலை வேண்டுமென்றே மனிதர்களால் செய்யப்பட்டதில்லை.(40) கிருஷ்ணனின் அமைதிக்கான தூது தோல்வியுற்றபோது, பெரும் ஞானியான விதுரரால் முன்னறிந்து சொல்லப்பட்டவையே இப்போது நடந்திருக்கின்றன.(41) எனவே, தவிர்க்க முடியாத இக்காரியத்திற்காக, அதிலும் குறிப்பாக அது நேர்ந்த பிறகு நீ வருந்தாதே. போரில் கொல்லப்பட்டவர்களுக்காக வருந்தக்கூடாது.(42) நானும் உன்னோடு சேர்ந்து அதே இக்கட்டான சூழ்நிலையிலேயே இருக்கிறேன். (நீயே இவ்வாறு நடந்து கொண்டால்) யார் எங்களுக்கு ஆறுதல் சொல்வது? என் தவறாலேயே இந்த முதன்மையான குலம் அழிவையடைந்தது” என்றாள் {காந்தாரி}”.(43)
ஜலப்ரதானிக உப பர்வம் முற்றும்
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply