அழுது புலம்பிய யுதிஷ்டிரன்! – சௌப்திக பர்வம் பகுதி – 10-யுதிஷ்டிரனுக்கு நடந்த செய்தியைச் சொன்ன திருஷ்டத்யும்னனின் சாரதி; திரௌபதியை அழைத்து வர நகுலனை அனுப்பிய யுதிஷ்டிரன்; முகாமை அடைந்து, மாண்டு கிடக்கும் தன் தரப்பினரைக் கண்டு அழுது புலம்பிய யுதிஷ்டிரன்…
வைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} சொன்னார், “அந்த இரவு கழிந்ததும், திருஷ்டத்யும்னனின் சாரதியானவன், உறங்கும் வேளையில் ஏற்பட்ட அந்தப் பேரழிவைக் குறித்த செய்தியை மன்னன் யுதிஷ்டிரனுக்குத் தெரிவித்தான்.(1)
அந்தச் சாரதி {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, “தங்கள் முகாமில் கவனமற்றவர்களாகவும், நம்பிக்கையுடனும் உறங்கிக் கொண்டிருந்த திரௌபதியின் மகன்களும், துருபதனின் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(2) ஓ! மன்னா, இரவு வேளையில் உமது முகாமானது, கொடூரர்களான கிருதவர்மன், கோதமரின் மகன் கிருபர் மற்றும் பாவம் நிறைந்த அஸ்வத்தாமன் ஆகியோரால் நிர்மூலமாக்கப்பட்டது.(3) அம்மனிதர்கள், வேல்கள், ஈட்டிகள் மற்றுப் போர்க்கோடரிகளைக் கொண்டு ஆயிரக்கணக்கான மனிதர்கள், யானைகள், குதிரைகள் அடங்கிய உமது படையை அழித்துவிட்டனர்.(4) கோடரியால் வெட்டி வீழ்த்தப்பட்ட காட்டைப் போல உமது படை கொல்லப்பட்டபோது, உமது முகாமில் இருந்து உரத்த ஓலம் கேட்டது.(5) ஓ! ஏகாதிபதி, அந்தப் பரந்த படையில் நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்கிறேன். ஓ! அற ஆன்மாவே, கிருதவர்மன் கவனமற்றிருந்த வேளையில் மிகுந்த சிரமத்திற்கிடையில் நான் தப்பித்து வந்தேன்” என்றான்.(6)
குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, (எதிரிகளை எதிர்த்துச் செல்கையில் அவர்களைத்) தாங்கிக் கொள்ள இயன்றவனானாலும், இந்தத் தீயச் செய்தியைக் கேட்டு, தன் மகன்களை இழந்ததால் ஏற்பட்ட துயரத்தில் பீடிக்கப்பட்டுக் கீழே பூமியில் விழுந்தான்.(7) சாத்யகி, முன்னே வந்து மன்னனைப் பிடித்துக் கொண்டான். பீமசேனன், அர்ஜுனன், மாத்ரியின் இரு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரும் தங்கள் கரங்களை நீட்டினர் {நீட்டி யுதிஷ்டிரனைப் பிடித்துக் கொண்டனர்}.(8)
அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, புலனுணர்வு மீண்டு, சோகத்துடனும், தடுமாற்றத்துடனும் இவ்வார்த்தைகளைச் சொல்லிப் பெரும் துயரத்தால் அழுது புலம்பினான்: “ஐயோ, எதிரியை வென்றும், இறுதியில் நாமே வெல்லப்பட்டோம் {வீழ்ந்தோம்}.(9) ஆன்மப் பார்வை கொண்டவர்களால் கூட நிகழ்வுகளின் வழியை அறிவது கடினமே. வெல்லப்பட்ட எதிரி, வெற்றியடைந்துவிட்டான். மேலும், நாமோ வெற்றியடைந்தும், வெல்லப்பட்டோம் {வீழ்த்தப்பட்டோம்}.(10) சகோதரர்கள், நண்பர்கள், தந்தைமார், மகன்கள், நலன் விரும்பிகள், சொந்தங்கள், அமைச்சர்கள் ஆகியோர் அனைவரையும் வென்று இறுதியில் நாமே வெல்லப்பட்டோம்.(11) அவலம் செழிப்பாகத் தெரிகிறது, செழிப்பு அவலமாகத் தெரிகிறது. இந்த நமது வெற்றியானது, தோல்வியின் வடிவத்தையே ஏற்றிருக்கிறது. எனவே நமது வெற்றி தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.(12) வெற்றியையடைந்தும், துயரமடைந்த அற்பனாக நான் துயரத்தையே அடைகிறேன். பிறகு, எவ்வாறு இதை என்னால் வெற்றியாகக் கருத முடியும்? உண்மையில், நான் எதிரியால் இரண்டு மடங்கு வீழ்த்தப்பட்டிருக்கிறேன்.(13) யாருக்காகச் சொந்தங்கள் மற்றும் நண்பர்களைக் கொன்று வெற்றிக்காகப் பாவமிழைத்தோமோ, ஐயோ, அவர்கள் வெற்றி மகுடம் சூடிக்கொண்டு, வீழ்த்தப்பட்டவர்களான கவனம் நிறைந்த எதிரிகளால் வெல்லப்பட்டனர்.(14)
முள்பதித்த கணைகள், நாளீகங்கள் ஆகியவற்றைத் தன் பற்களாகவும், வாளையே தன் நாவாகவும், நாணொலி தரும் நாண்கயிற்றுடன் கூடிய வில்லையே தன் வாயாகவும், உள்ளங்கையொலிகளையே தன் முழக்கமாகவும் கொண்டவனும், போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவனும், மனிதர்களில் சிங்கமுமான கோபக்காரக் கர்ணனிடம் இருந்தே தப்பித்தவர்கள், ஐயோ!, கவனக்குறைவினால் கொல்லப்பட்டார்கள்.(15,16) தேர்களையே ஆழமான தடாகங்களாகவும், கணைமாரியே அலைகளாகவும், போர்வீரர்களின் ஆபரணங்களே ரத்தினங்களாகவும், தேர்க்குதிரைகளையே விலங்குகளாகவும், ஈட்டிகள் மற்றும் வாள்களையே மீன்களாகவும், யானைகளேயே முதலைகளாகவும், விற்களையே பெரும் நீர்ச்சுழிகளாகவும், வலிமைமையிக்க ஆயுதங்களையே நுரையாகவும், போர் அடையாளத்தையே சக்தியில் பெரும் சந்திரோதயமாகவும், நாண்கயிற்றின் நாணொலி மற்றும் உள்ளங்கையொலிகளையே முழக்கங்களாகவும் கொண்ட துரோணப் பெருங்கடலைத் தங்கள் சிறந்த ஆயுதங்களாலான படகால் கடந்த இந்த இளவரசர்கள், ஐயோ கவனக்குறைவினால் கொல்லப்பட்டார்கள்.(17,18) இவ்வுலகின் மனிதர்களைப் பொறுத்தவரையில் கவனக்குறைவைவிட மரணத்திற்கான சக்திமிக்கக் காரணம் வேறு எதுவுமில்லை. கவனமற்ற மனிதனை செழுமையானது அனைத்துப் பக்கங்களிலும் கைவிடுகிறது, மேலும் அனைத்து வகை அவலங்களும் அவனை மூழ்கடிக்கின்றன.(19)
{பீஷ்மரின்} தேரில் நின்றதும், சிறந்த நுனி கொண்டதுமான உயர்ந்த கொடிமரத்தில் இருந்த புகைவிரிப்பானது {கொடியானது} அந்தப் பீஷ்ம நெருப்பை, பிழையற்றதாகக் காட்டியது. கணைகளே அதன் தழல்களாயின, கோபமே அதை வீசிப்பெருக்கும் காற்றானது. உறுதிமிக்க வில்லின் நாணொலியும், உள்ளங்கையொலியும் அந்நெருப்பின் முழக்கமானது. கவசமும், பல்வேறு வகை ஆயுதங்களும் அதற்குள் ஊற்றப்படும் ஹோமக் காணிக்கைகள் ஆகின. பகைவரின் பரந்த படையானது அந்த நெருப்பால் எரிக்கப்படும் உலர்ந்த காட்டுப்புல்லானது. ஐயோ, பயங்கர சக்தியுடன் கூடிய {பீஷ்மரெனும்} அந்தக் கடும் நெருப்பையும் தாங்கிக் கொண்டவர்கள், இறுதியில் கவனக் குறைவால் வீழ்ந்தனர்.(20,21) கவனக்குறைவுள்ளவன், ஞானத்தையோ, தவத்தையோ, செழிப்பையோ, பெரும்புகழையோ ஒருபோதும் அடையமுடியாது.(22)
நமது எதிரிகளில் எஞ்சியிருக்கும் சிலர், உண்மையில் இந்திரனைப் போன்றவர்களான அம்மன்னர்களின் மகன்கள் மற்றும் பேரர்கள் பலரை நமது கவனக்குறைவினால் கொன்றுவிட்டனர். ஐயோ, விலைமதிப்புமிக்கக் கப்பல்களில் செல்லும் வணிகர்களைப் போல, பெருங்கடலைக் கடந்த பிறகு, கவனக்குறைவினால் ஒரு சிறு ஓடையில் அழிந்தனர்.(23) யாருடைய உடல்கள் இப்போது வெறுந்தரையில் கிடக்கின்றனவோ, அவர்கள் பொறாமையுள்ள அந்த இழிந்தவர்களால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்தையே அடைந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. எனினும், இளவரசி கிருஷ்ணைக்காகவே {திரௌபதிக்காகவே} வருந்துகிறேன்.(24) அவள் {திரௌபதி}, தன் சகோதரர்கள், மகன்கள் மற்றும் மதிப்பிற்குரிய தந்தையான பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்} ஆகியோரின் படுகொலையைக் கேட்டு உணர்வற்றுப் பூமியில் விழப் போகிறாள் என்பதில் ஐயமில்லை. அவள், துயரால் உடல்மெலிந்து மீண்டும் எழும்ப மாட்டாள்.(25) இத்தகு துன்பத்தின் விளைவால் உண்டாகும் துயரைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், மகிழ்ச்சிக்குத் தகுந்தவளான அவள் எந்த அவல நிலையை அடைவாள்? மகன்கள் மற்றும் சகோதரர்களின் படுகொலையால் இதயம் பிளக்கப்படும் அவள், நெருப்பில் எரிபவளாக ஆகப்போகிறாள்” என்றான்.(26)
ஆழமான துயரால் இத்தகு புலம்பல்களில் ஈடுபட்ட அந்தக் குரு குல மன்னன் {யுதிஷ்டிரன்}, பிறகு நகுலனிடம், “செல்வாயாக, சென்று, நற்பேறற்றவளான இளவரசி திரௌபதியையும், அவளது தாய்வழி உறவினர்களையும் அழைத்து வா” என்றான்.(27)
நீதியில் யமனுக்கு இணையான அம்மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆணையைக் கீழ்ப்படிந்து ஏற்ற நகுலன், பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மனைவியர் அனைவருடன் {தன் தாய்மாருடன்} திரௌபதி எங்குத் தங்கியிருந்தாளோ அந்த இடத்திற்குத் தன் தேரில் வேகமாகச் சென்றான்.(28) யுதிஷ்டிரன், மாத்ரியின் மகனை {நகுலனை} அனுப்பிவிட்டு, துயரால் நொறுங்கி, கண்களில் கண்ணீருடன், எங்குத் தன் மகன்கள் போரிட்டார்களோ, எங்குப் பல்வேறு வகை உயிரினங்கள் இன்னும் மொய்த்துக் கொண்டிருந்தனவோ, அந்தக் களத்திற்குத் தன் நண்பர்கள் துணையுடன் சென்றான்.(29) கடுங்காட்சிகள் நிறைந்த அந்தச் சபிக்கப்பட்ட களத்திற்குள் நுழைந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, குருதியில் மறைந்து, உடல்கள் சிதைக்கப்பட்டு, உடல்களில் இருந்து தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தரையில் கிடப்பவர்களான தன் மகன்கள், நலன்விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் கண்டான்.(30) நீதியாளர்களில் முதன்மையான யுதிஷ்டிரன், அவர்களை அந்த அவலநிலையில் கண்டு ஆழமாகத் துயரடைந்தான். பிறகு அந்தக் குருக்களின் தலைவன் {யுதிஷ்டிரன்}, தன் தொண்டர்களுடன் சேர்ந்து உரக்க அழுது, புலன் உணர்வுகளை இழந்து கீழே பூமியில் விழுந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(31)
பிராயத்தில் அமர்ந்த திரௌபதி! – சௌப்திக பர்வம் பகுதி – 11– திரௌபதியை யுதிஷ்டிரனிடம் அழைத்து வந்த நகுலன்; மயக்கமடைந்த திரௌபதி; அஸ்வத்தாமனைப் பாண்டவர்கள் கொல்லவில்லையெனில் பிராயத்தில் அமரப்போவதாகத் தீர்மானித்த திரௌபதி; அவளுக்கு ஆறுதல் சொன்ன யுதிஷ்டிரன்; அஸ்வத்தாமனைக் கொன்று அவனுடைய தலையிலுள்ள மணியைக் கொண்டு வரச் சொன்ன திரௌபதி; நகுலனைச் சாரதியாகக் கொண்டு அஸ்வத்தாமனைக் கொல்லப் புறப்பட்ட பீமன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஜனமேஜயா, போரில் தனது மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கொல்லப்பட்டதைக் கண்ட மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆன்மா பெருந்துயரில் மூழ்கியது.(1) அந்த மகன்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும் கூட்டாளிகளை நினைத்துப் பார்த்ததும் அந்தச் சிறப்புமிக்க ஏகாதிபதியை ஆழமான சோகம் ஆட்கொண்டது.(2) உணர்வற்று நடுங்கிக் கொண்டிருந்த அவனுடைய கண்கள் கண்ணீரால் குளித்தன. அப்போது அவனது நண்பர்களும் கவலையில் மூழ்கியிருந்தாலும், அவனுக்கு ஆறுதல் சொல்லத் தொடங்கினர்.(3) அந்நேரத்தில் {தன் அண்ணனின்} குற்றேவல்களை நிறைவேற்றுவதில் திறம் கொண்டவனான நகுலன், பெரும் துயரில் இருந்த இளவரசி கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்}, சூரியப் பிரகாசம் கொண்ட தனது தேரில் அங்கே வந்து சேர்ந்தான்.(4)
அவள் {திரௌபதி இதுவரை} உபப்லாவ்யத்தில் வசித்திருந்தாள். அவள் {திரொபதி}, தன் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்ற இதயம் பிளக்கும் செய்தியைக் கேட்டு மிகவும் கலக்கமடைந்திருந்தாள்.(5) காற்றால் அசைக்கப்பட்ட வாழையைப் போல நடுங்கிய அந்த இளவரசி கிருஷ்ணை {திரௌபதி}, யுதிஷ்டிரனின் முன்னிலைக்கு வந்து, துயரால் பீடிக்கப்பட்டுக் கீழே விழுந்தாள்.(6) முற்றாக மலர்ந்த இரு தாமரைகளுக்கு ஒப்பான கண்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவளது முகம், இருளால் மூடப்பட்ட சூரியனைப் போலத் துயரால் கறுத்திருந்தது.(7) கோபம் நிறைந்தவனும், கலங்கடிக்க முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான விருகோதரன் {பீமன்}, பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் அவளைக் {திரௌபதியைக்} கண்டு வேகமாகச் சென்று, அவளை உயர்த்தி {எழச் செய்து}, தன் கரங்களால் அவளை {ஆறுதலாகப்} பிடித்துக் கொண்டான்.(8)
பீமசேனனால் ஆறுதலளிக்கபட்ட அந்த அழகிய மங்கை {திரௌபதி} அழத் தொடங்கி, தன் சகோதரர்களுடன் கூடியவனான பாண்டு மகன்களில் மூத்தவனிடம் {யுதிஷ்டிரனிடம்},(9) “ஓ! ஏகாதிபதி, க்ஷத்திரியக் கடமைகளை நோற்ற உமது துணிச்சல்மிக்க மகன்களின் படுகொலைக்குப் பின்பு, நீர் மொத்த பூமியையும் அடைந்து அதை {பூமியை} அனுபவிக்கப் போவது நற்பேற்றாலேயே.(10) ஓ@ பிருதையின் {குந்தியின்} மைந்தரே {யுதிஷ்டிரரே}, மொத்த பூமியையும் அடைந்துவிட்டோம் என்ற நினைப்பில் நீர் மகிழ்ச்சியாக இருப்பதும் நற்பேற்றாலேயே. மதங்கொண்ட யானைக்கு ஒப்பான நடையைக் கொண்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு} குறித்து நீர் சிந்திக்காததும் நற்பேற்றாலேயே. உபப்லாவ்யத்தில் வசித்த என்னைப் போலல்லாமல், க்ஷத்திரியக் கடமைகளை நோற்றுக் கொல்லப்பட்ட உமது வீர மகன்களை நீர் எண்ணாதிருப்பதும் நற்பேற்றாலேயே.(12) ஓ! பிருதையின் மைந்தரே, உறங்கிக் கொண்டிருந்த அந்த வீரர்கள், பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவனான துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} படுகொலை செய்யப்பட்டதைக் கேட்டு, ஏதோ நெருப்பின் மத்தியில் இருப்பவளைப் போல, துயரம் என்னை எரித்துக் கொண்டிருக்கிறது.(13) போரில் உமது ஆற்றலை வெளிப்படுத்தி, பாவச் செயல்கள் புரியும் அந்த இழிந்தவன் {அஸ்வத்தாமன்} மற்றும் அவனது தொண்டர்கள் அனைவரின் உயிர்களையும் நீர் எடுக்காமல், அந்தத் துரோணர் மகனைத் தனது பாவச்செயலுக்கான கனியை அறுவடை செய்ய வைக்காமல் இருந்தால், பாண்டவர்களே, கேளுங்கள், நான் இங்கே பிராயத்தில் அமரப் போகிறேன்” என்றாள் {திரௌபதி}.(14,15)
யக்ஞசேனன் மகளும், ஆதரவற்றவளுமான கிருஷ்ணை {திரௌபதி}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, பாண்டு மகனில் மூத்தவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனின் அருகில் அமர்ந்தாள்.(16) நீதிமிக்க ஆன்மா கொண்டவனான அரசமுனி யுதிஷ்டிரன், தன் அன்புக்குரிய ராணி {திரௌபதி} பிராயத்தில் அமர்வதைக் கண்டு, அவளிடம், “ஓ! மங்கலமான பெண்ணே {கல்யாணி}, ஓ! அறநெறிகளை அறிந்தவளே, உன் மகன்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உன்னதமான இறப்பை நேர்மையாகச் {க்ஷத்திரிய முறைக்கேற்ப} சந்தித்தனர். அவர்களுக்காக நீ வருந்துவது தகாது.(17,18) ஓ! அழகிய இளவரசி, துரோணர் மகனைப் பொறுத்தவரை, அவர் தொலைதூரக் காட்டுக்குச் சென்றுவிட்டார். ஓ! பெண்ணே, போரில் அவருடைய வீழ்ச்சியை உன்னால் எவ்வாறு உறுதிசெய்ய முடியும்?” என்று கேட்டான்.(19)
திரௌபதி {யுதிஷ்டிரனிடம்}, “துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் தலையில் ஒரு ரத்தினத்துடனேயே {மணியுடனே} பிறந்தான் என நான் கேட்டிருக்கிறேன். போரில் அந்த இழிந்தவனைக் கொன்ற பிறகு, என்னிடம் கொண்டு வரப்படும் அந்த ரத்தினத்தை {மணியை} நான் காண்பேன். ஓ மன்னா, அந்த ரத்தினத்தை உமது தலையில் சூட்டிய பிறகே நான் என் உயிரைத் தாங்கிக் கொள்ளவேன். இதுவே எனது தீர்மானம்” என்று பதிலுரைத்தாள்.(20)
பாண்டுவின் அரசமகனிடம் {யுதிஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, பீமசேனனை அணுகி, உயர்ந்த நோக்கம் கொண்ட இந்த வார்த்தைகளை அவனிடம் {பீமனிடம்} சொன்னாள்:(21) “ஓ! பீமரே, க்ஷத்திரியக் கடமைகளை நினைவுகூர்ந்து, நீர் என்னைக் காப்பதே உமக்குத் தகும். சம்பரனைக் கொன்ற மகவத்தை {இந்திரனைப்} போல, பாவச்செயல்களைச் செய்யும் அம்மனிதனை {அஸ்வத்தாமனைக்} கொல்வீராக.(22) இவ்வுலகில் உமது ஆற்றலுக்கு இணையானவர்கள் வேறு எவரும் இல்லை. வாரணாவத நகரில் பேரிடர் நேர்ந்த சமயத்தில் நீர் எவ்வாறு பார்த்தர்கள் அனைவரின் புகலிடமாக இருந்தீர் என்பது உலகம் முழுவதும் நன்றாக அறியப்பட்டிருக்கிறது.(23) மேலும் ஹிடிம்பனால் நாம் பார்க்கப்பட்டபோதும்,[1] அதே வழியில் நீரே எங்கள் புகலிடமானீர்.(24) மகவத் {இந்திரன்} (தன் மனைவியான) புலோமனின் மகளை {பௌலோமி [அ] சச்சியைக்] காத்தது போலவே, விராட நகரத்தில் நீர் என்னைப் பேரிடரில் {கீசகனிடம்} இருந்து காத்தீர்[1].(25) ஓ! பார்த்தரே {பீமரே}, ஓ! எதிரிகளைக் கொல்பவரே, முன் நாட்களில் நீர் அடைந்த அந்தப் பெரும் சாதனைகளைப் போலவே, இப்போது துரோணர் மகனை {அஸ்வத்தாமனைக்} கொன்று மகிழ்ச்சியடைவீராக” {என்றாள் திரௌபதி}.(26)பெரும் வலிமைமிக்கவனும், குந்தியின் மகனுமான பீமசேனனால், அந்த இளவரசியின் {திரௌபதியின்} இவ்வார்த்தைகளையும், பரிதாபகரமான இன்னும் வேறு புலம்பல்களையும் கேட்டுப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(27) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் பெருந்தேரில் ஏறிய அவன் {பீமன்}, நாண்கயிற்றில் கணை பொருத்தப்பட்ட தன் அழகிய வில்லையும் எடுத்துக் கொண்டான்.(28) நகுலனைத் தன் தேரோட்டியாகச் செய்து கொண்டும், துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} கொல்லும் தீர்மானத்துடனும், தன் வில்லை வளைக்கத் தொடங்கி, தாமதமில்லாமல் தன் குதிரைகளைத் தூண்டச் செய்தான்.(29) ஓ! மனிதர்களில் புலியே, காற்றின் வேகத்தைக் கொண்ட அக்குதிரைகள் இவ்வாறு தூண்டப்பட்டுப் பெரும் வேகத்தில் சென்றன.(30) பெரும் வீரமும், மங்காத சக்தியும் கொண்ட பீமன், பாண்டவ முகாமில் இருந்து புறப்பட்டு, அஸ்வத்தாமனின் வாகனத்தடத்தைப் பின்தொடர்ந்தபடியே பெரும் வேகத்தில் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(31)
கிருஷ்ணச் சக்கரம் கேட்ட அஸ்வத்தாமன்! – சௌப்திக பர்வம் பகுதி – 12-அஸ்வத்தாமன் பிரம்மாயுதத்தைக் கொண்டவனாதலால் பீமனின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு யுதிஷ்டிரனை வேண்டிய கிருஷ்ணன்; அஸ்வத்தாமன் பிரம்மாயுதத்தை அடைந்த வரலாறு; கிருஷ்ணனின் சக்கரத்தை அடைவதற்காகத் துவாரகை சென்ற அஸ்வத்தாமனின் துணிபு; அவனால் சக்கரத்தை உயர்த்த இயலாமை; கிருஷ்ணனின் கடிந்துரை; பீமனைப் பாதுகாக்க யுதிஷ்டிரனிடம் வேண்டிய கிருஷ்ணன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தடுக்கப்படமுடியாதவனான பீமசேனன் புறப்பட்டதும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனான அந்த யதுகுலத்தின் காளை {கிருஷ்ணன்}, குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம்,(1) “ஓ! பாண்டுவின் மைந்தரே {யுதிஷ்டிரரே}, உமது தம்பி, தன் மகன்களின் படுகொலைகளால் உண்டான துயரத்தில் மூழ்கி, துரோணரின் மகனை {அஸ்வத்தாமரைக்} கொல்லும் விருப்பத்தில் போரிடத் தனியொருவராகச் செல்கிறார்.(2) ஓ! பாரதக் குலத்தின் காளையே, உமது தம்பியர் அனைவரிலும், பீமரே உமக்கு அன்பானவர். அவர் பெரும் ஆபத்தில் வீழ்ந்தும், நீர் ஏன் இன்னும் காக்க முயலவில்லை?(3) பகை நகரங்களை அடக்கவல்ல துரோணர், தன் மகனுக்கு {அஸ்வத்தாமருக்கு} அறிவித்த பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதமானது, மொத்த உலகத்தையும் எரிக்கவல்லதாகும்.(4) சிறப்புமிக்கவரும், உயர்ந்த அருளைக் கொண்டவரும், வில்தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவருமான அந்த ஆசான் {துரோணர்}, அந்த ஆயுதத்தைத்தான் மகிழ்ச்சியுடன் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்குக்} கொடுத்தார்.(5)
அதைத் தாங்கிக்கொள்ள முடியாதவரான அவருடைய {துரோணருடைய} ஒரே மகன் {அஸ்வத்தாமர்}, அஃதை {பிரம்மசிரத்தை} அவரிடம் இரந்து கேட்டார். அவர் {துரோணர்}, தமக்கு விருப்பமில்லாமலேயே அவ்வாயுதத்தின் அறிவை அஸ்வத்தாமருக்குப் புகட்டினார்.(6) சிறப்புமிக்கத் துரோணர், தன் மகனின் மன உலைவை {சஞ்சலத்தை} அறிந்திருந்தார். கடமைகள் அனைத்தையும் அறிந்தவரான அந்த ஆசான் அவருக்குக் கட்டளையாக,(7) “ஓ! குழந்தாய், போருக்கு மத்தியில் நீ பெரும் ஆபத்தைச் சந்தித்தாலும், இவ்வாயுதத்தை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது, அதிலும் குறிப்பாக மனிதர்களை எதிர்த்துப் பயன்படுத்தக்கூடாது” என்று சொன்னார்.(8) இவ்வாறே ஆசான் துரோணர் தன் மகனிடம் சொன்னார். அவர் {துரோணர்}, சிறிது நேர் கழித்து மீண்டும் அவரிடம் {அஸ்வத்தாமரிடம்}, “ஓ! மனிதர்களில் காளையே, நீ நீதியின் பாதையில் நடக்கமாட்டாய் என்று தெரிகிறது” என்றார்.(9) தன் தந்தையின் இந்தக் கசப்பான வார்த்தைகளைக் கேட்டவரும், தீய ஆன்மா கொண்டவருமான அஸ்வத்தாமர், அனைத்து வகைச் செழிப்பையும் அடையும் {அடைய முடியாத} மனத்தளர்ச்சியுடன், துயரத்தில் பூமியெங்கும் திரியத் தொடங்கினார்.(10)
ஓ! குருக்களின் தலைவரே {யுதிஷ்டிரரே}, நீங்கள் காட்டில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, துவாரகைக்கு வந்த அவர் {அஸ்வத்தாமர்}, விருஷ்ணிகளால் வழிபடப்பட்டுத் தன் வசிப்பிடத்தை அங்கே அமைத்துக் கொண்டார்.(11) அவர், துவாரகையில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட பிறகு, ஒரு நாள், தோழனற்றவனாகவும், அருகே யாருமில்லாதவனாகவும் கடற்கரையில் இருந்த என்னிடம் வந்து, சிரித்துக் கொண்டே,(12) “ஓ! கிருஷ்ணா, ஓ! தாசார்ஹா, தேவர்களாலும், கந்தர்வர்களாலும் வழிபடப்படுவதும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட, பாரதர்களின் ஆசானான என் தந்தை {துரோணர்}, கடுந்தவங்களுக்குப் பிறகு அகஸ்தியரிடம் இருந்து அடைந்ததுமான பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதமானது, என் தந்தையிடம் இருப்பது போலவே, இப்போது என்னிடமும் இருக்கிறது.(13,14) ஓ! யதுகுலத்தில் முதன்மையானவனே, அந்தத் தெய்வீக ஆயுதத்தைப் பெற்றுக் கொண்டு, போரில் எதிரிகள் அனைவரையும் கொல்லவல்ல உனது சக்கரத்தை எனக்குக் கொடுப்பாயாக” என்று கேட்டார்.(15)
கரங்களைக் கூப்பிக் கொண்டு பெரும்பிதற்றல் செய்து, இவ்வாறு அவர் என்னிடம் எனது சக்கரத்தைக் கேட்டபோது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, நான் அவரை மகிழ்விக்க விரும்பி, அவரிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னேன்,(16) “தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள் ஆகியோர் அனைவரும், பறவைகள், பாம்புகள் ஆகிய அனைத்தும் ஒன்றுகூடினாலும், என் சக்தியின் நூறில் ஒரு பங்குக்கும் அஃது இணையாகாது.(17) நான் இந்த வில்லையும், இந்த ஈட்டியையும் {சக்தியையும்}, இந்தச் சக்கரத்தையும், இந்தக் கதாயுதத்தையும் கொண்டிருக்கிறேன். என்னிடம் இருக்கும் இவற்றில், நீர் எதை விரும்பினாலும், நான் அஃதை உமக்குக் கொடுப்பேன். நீர் கொடுக்க விரும்பும் ஆயுதத்தைக் கொடுக்காமலே, இந்த என் ஆயுதங்களில் நீர் எதையெடுக்க வல்லவரோ, அஃதை எடுத்துக் கொண்டு, போரில் பயன்படுத்திக் கொள்வீராக” என்றேன்.(19) இவ்வாறு சொல்லப்பட்டதும், என்னை அறைகூவி அழைப்பதைப் போலத் துரோணரின் அந்தச் சிறப்புமிக்க மகன் {அஸ்வத்தாமன்}, இரும்பாலானதும், ஆயிரம் ஆரங்களைக் கொண்டதும், வஜ்ரத்தைப் போன்று கடினமானதும், சிறப்புமிக்கக் குழியை {நடுத்துவாரத்தைக்} கொண்டதுமான என் சக்கரத்தை என்னிடம் இருந்து வேண்டினார்.(20)
நான் அவரிடம், “எடுத்துக் கொள்ளும்” என்று சொன்னேன். இவ்வாறு சொல்லப்பட்டதும், திடீரென எழுந்த அவர், தன் இடக்கையால் அச்சக்கரத்தைப் பற்றினார்.(21) இருப்பினும், அந்த ஆயுதத்தை அது கிடந்த இடத்தில் இருந்து அவரால் அசைக்கவும் முடியவில்லை. பிறகு அவர் அதை வலக்கரத்தால் பற்ற ஆயத்தமானார்.(22) பிறகு அவர், உறுதியாக அதைப் பற்றிக் கொண்டு, தன் பலமனைத்தையும் வெளிப்படுத்தினாலும் அதைத் தரிக்கவோ, அசைக்கவோ முடியவில்லை. இதனால் அந்தத் துரோணரின் மகன் சோகத்தில் நிறைந்தார். ஓ! பாரதரே, முயற்சியால் களைத்தபிறகே அவர் {அஃதை எடுப்பதை} நிறுத்தினார்.(23,24)
அந்நோக்கத்தில் இருந்து தமது இதயத்தை விலக்கியப் பிறகு, உணர்வற்றவராகவும், கவலை கொண்டவராகவும் இருந்த அஸ்வத்தாமரிடம் நான்,(25) “ஓ! பிராமணரே, எவன் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகக் கருதப்படுகிறானோ, எவன் காண்டீவத்தைத் தரித்திருக்கிறானோ, எவன் வெண்குதிரைகளைத் தன் தேரில் பூட்டியிருக்கிறானோ, எந்த வீரன் தன் கொடிமரத்தில் குரங்குகளின் இளவரசனைப் பொறித்திருக்கிறானோ,(26) எந்த வீரன், தேவர்களின் தேவனும், நீலமிடறு கொண்டவனும், உமையின் தலைவனுமான பெரும் சங்கரனிடமே மல்யுத்தம் செய்து வெல்ல விரும்பினானோ,(27) எந்தப் பல்குனனைத் தவிரப் பூமியில் எனக்கு வேறு அன்புக்குரிய நண்பவன் எவனும் இல்லையோ, எந்த நண்பனுக்கு என் மனைவியர் மற்றும் பிள்ளைகள் உட்பட எதையும் நான் கொடுப்பேனோ,(28) அந்த என் அன்புக்குரிய நண்பனான, களங்கமற்ற செயல்களையுடைய பார்த்தன் {அர்ஜுனன்} கூட என்னிடம் இத்தகு வார்த்தைகளை ஒருபோதும் சொன்னதில்லை.(29)
தவத்துறவுகளின் மூலமும், இமய மலைச்சாரலில் பனிரெண்டு வருடங்கள் கடுந்தவம் செய்தும் எந்த மகனை அடைந்தேனோ,(30) எவன் சனத்குமாரனின் ஒரு பகுதியோ, என்னைப் போலவே கடும் நோன்புகளை நோற்றவளான என் மனைவி ருக்மிணியிடம் என்னால் எவன் பெறப்பட்டானோ,(31) அந்தப் பெருஞ்சக்தி கொண்ட எனது மகன் பிரத்யும்னன் கூட, சிறுமதி கொண்ட உம்மைப் போல, பொருட்களில் சிறந்ததும், ஒப்பற்றதுமான இந்தச் சக்கரத்தை ஒருபோதும் என்னிடம் கேட்டதில்லை.(32) பெரும் வலிமையைக் கொண்ட ராமர் {பலராமர்}, ஒருபோதும் இத்தகு வார்த்தைகளை என்னிடம் பேசியதில்லை. கதனோ, சாம்பனோ நீர் கேட்டதை ஒருபோதும் கேட்டதில்லை.(33) துவாரகையில் வசிக்கும் விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களின் பெருந்தேர்வீரர்களில் எவரும் என்னிடம் நீர் கேட்டதைக் கேட்டதில்லை.(34) நீர் பாரதர்களுடைய ஆசானின் {துரோணரின்} மகனாவீர். யாதவர்கள் அனைவராலும் நீர் உயர்வாக மதிக்கப்படுகிறீர். ஓ! தேர்வீரர்களில் முதன்மையானவரே, நான் கேட்கிறேன், இவ்வாயுதத்தைப் பயன்படுத்தி நீர் யாருடன் போரிடப்போகிறீர்?” என்று கேட்டேன்.(35)
இவ்வாறு என்னால் சொல்லப்பட்ட துரோணர் மகன், “ஓ! கிருஷ்ணா, ஓ மங்கா மகிமை கொண்டவனே, உன்னை வணங்கிய பிறகு, உன்னிடம் போரிட வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. ஓ! கிருஷ்ணா, தேவர்கள் மற்றும் தானவர்களால் புகழப்படும் உன் சக்கரத்தை அதற்காகவே நான் வேண்டினேன். நான் அஃதை அடைந்திருந்தால், இவ்வுலகில் வெல்லப்பட முடியாதவனாக ஆகியிருப்பேன்.(37) ஓ! கேசவா, ஓ! கோவிந்தா, கிட்டத்தட்ட அடையமுடியாத என் விருப்பத்தை அடைய முடியாமலே நான் உன்னை விட்டுச் செல்லப் போகிறேன். இப்போது என்னிடம் நல்வார்த்தைகளைப் பேசுவாயாக.(38) பயங்கரமான மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான நீ ,இந்தப் பயங்கரமான ஆயுதத்தைத் தரித்திருக்கிறாய். இவ்வாயுதத்தால் நீ ஒப்பற்றவனாக இருக்கிறாய். இவ்வுலகில் இதைத்தரிக்கவல்லவன் எவனுமில்லை” என்றார்.(39)
என்னிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, பிறகு, குதிரை இணைகள் {ஜோடிகள்} பலவற்றையும், அதிகச் செல்வத்தையும், பல்வேறு வகை ரத்தினங்களையும் பெற்றுக் கொண்டு துவாரகையை விட்டகன்றார்.(40) அவர் கோபம்நிறைந்தவராகவும், தீய ஆன்மா கொண்டவராகவும், மன அமைதியற்றவராகவும், மிகக் கொடூரராகவும் இருக்கிறார். பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதத்தை அவர் அறிந்திருக்கிறார். விருகோதரர் {பீமர்} அவரிடம் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்” என்றான் {கிருஷ்ணன்}”.(41)
பிரம்மசிரமேவிய அஸ்வத்தாமன்! – சௌப்திக பர்வம் பகுதி – 13-கிருஷ்ணனுடன் சேர்ந்து பீமனைப் பின்தொடர்ந்த பாண்டவர்கள்; நிற்குமாறு அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டும் நிற்காத பீமன்; வியாசருடன் அமர்ந்திருக்கும் அஸ்வத்தாமனைக் கண்ட பாண்டவர்கள்; பிரம்மசிர ஆயுதத்தை வெளியிட்ட அஸ்வத்தாமன்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், யாதவர்கள் அனைவரையும் மகிழ்விப்பவனுமான அவன் {கிருஷ்ணன்}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, வலிமைமிக்க அனைத்து வகை ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருக்கும் தன் அற்புதத் தேரில் ஏறிக் கொண்டான்.(1) தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், காம்போஜ இனத்தைச் சேர்ந்த முதன்மையானவையுமான குதிரைகளில் ஈரிணைகள் {இரண்டு ஜோடிகள்} அவ்வாகனத்தில் பூட்டப்பட்டிருந்தன. அந்தச் சிறந்த தேரின் தூரம் {ஏர்க்கால்} காலைச் சூரியனின் நிறத்தில் இருந்தது.(2) {அந்த ஏர்க்காலின்} வலப்புறத்தில் சைவியம் என்றறியப்பட்ட குதிரையும், இடப்புறத்தில் சுக்ரீவமும்; பார்ஷினியில் {பின்புறத்தில்} மேகபுஷ்பம் மற்றும் வலாஹகம் என்றழைக்கப்பட்ட இரு குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன.(3) அந்தத் தேரில், ரத்திரங்கள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீகத் தச்சனால் {விஸ்வகர்மனால்} செய்யப்பட்டதுமான தெய்வீகக் கொடிமரமொன்று மாயனை (விஷ்ணுவைப்) போலவே உயர்ந்து நின்றிருந்தது.(4) அந்தக் கொடிமரத்தின் நுனியில் வினதையின் மகன் (கருடன்) பெருங்காந்தியுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். உண்மையில், அந்தப் பாம்புகளின் எதிரியானவன் {கருடன்}, உண்மையின் உடல்வடிவமான {சத்தியரூபியான} கேசவனின் {கிருஷ்ணனின்} கொடிமர உச்சியில் அமர்ந்திருந்தான்.(5)
வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான ரிஷிகேசன் {கிருஷ்ணன்} அத்தேரில் ஏறிக்கொண்டான். அவனை அடுத்து தடுத்தற்கரிய சாதனைகளைக் கொண்ட அர்ஜுனனும், குருக்களின் மன்னனான யுதிஷ்டிரனும் அதே வாகனத்தில் ஏறினார்கள்.(6) சாரங்கம் என்றழைக்கப்படும் வில்லைத் தரிக்கும் தசார்ஹ குலத்தோனின் {கிருஷ்ணனின்} அருகில் அத்தேரில் அமர்ந்திருந்த பாண்டுவின் மகன்கள் இருவரும், வாசவனின் {இந்திரனின்} அருகில் அமர்ந்திருக்கும் அசுவினி இரட்டையர்களைப் போல மிக அழகாகத் தெரிந்தனர்.(7) அந்தத் தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, உலகமனைத்தாலும் புகழப்படும் தன் தேரில் அவர்களை ஏறச் செய்து, பெரும் வேகம் கொண்ட அந்த முதன்மையான குதிரைகளைத் தூண்டினான்.(8) பாண்டு மகன்கள் இருவராலும், அந்த யாதவக் காளையாலும் {கிருஷ்ணனாலும்} செலுத்தப்பட்ட அந்தச் சிறந்த வாகனத்தில் இருந்த குதிரைகள் அவர்களை ஏற்றிக் கொண்ட பிறகு திடீரெனப் பறந்தன.(9) அந்தச் சாரங்கபாணியை {கிருஷ்ணனை} அவ்விலங்குகள் பெரும் வேகத்தோடு சுமந்து சென்ற போது, அவற்றின் விரைவால் ஏற்பட்ட ஒலியானது, காற்றின் ஊடாகச் செல்லும் பறவைகளின் ஒலியைப் போலப் பேரொலியாக இருந்தது.(10)
ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பெரும் வேகத்தில் சென்ற அவர்கள், விரைவாகத் தாங்கள் பின்தொடர்ந்து சென்ற வலிமைமிக்க வில்லாளியான பீமசேனனை அடைந்தனர்.(11) அந்தப் பெருந்தேர்வீரர்கள் பீமனைச் சந்தித்தாலும், எதிரியை நோக்கி மூர்க்கமாகச் செல்பவனும், கோபத்தில் நிறைந்தவனுமான அந்தக் குந்தியின் மகனைத் {பீமனைத்} தடுக்கத் தவறினர்.(12) சிறப்புமிக்கவர்களும், உறுதியானவர்களுமான அந்த வில்லாளிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவன் {பீமன்}, பகீரதனால் கீழே கொண்டுவரப்பட்ட ஆற்றின் {கங்கையாற்றின்} கரையை, மிக வேகமாகச் செல்லும் தன் குதிரைகளின் மூலம் அடைந்தான்.(13) அங்கே நீர் முனையின் {கரையின்} அருகில், உயர் ஆன்மா கொண்டவரும், சிறப்புமிக்கவரும், கரிய நிறத்தவரும், தீவில் பிறந்தவருமான வியாசர் பல முனிவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருப்பதைக் கண்டான்.(14) மேலும் அவன் {பீமன்}, புழுதியால் மறைக்கப்பட்டவனும், குசப்புல்லாலான ஆடை உடுத்தியவனும், தெளிந்த நெய்யை மேனியெங்கும் பூசிக்கொண்டிருந்தவனும், தீச்செயல்கள் புரிபவனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அங்கே அவரின் {வியாசரின்} அருகில் அமர்ந்திருப்பதையும் கண்டான்.(15)
வலிமைக்கக் கரங்களைக் கொண்ட குந்தியின் மகன் பீமசேனன், அஸ்வத்தாமனை நோக்கி விரைந்து, கணை பொருத்தப்பட்ட தன் வில்லை எடுத்து, “நில், நிற்பாயாக” என்றான்.(16) கையில் வில்லுடன் தன்னை நோக்கி வரும் அந்தப் பயங்கர வில்லாளியையும் {பீமனையும்}, ஜனார்த்தனனின் {கிருஷ்ணனின்} தேரிலிருந்த அவனது சகோதரர்கள் இருவரையும் {யுதிஷ்டிரன் மற்றும் அர்ஜுனனையும்} கண்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்},(17) மிகுந்த கலக்கத்தை அடைந்து, தன் நேரம் வந்ததென நினைத்தான். தளர்வடையா ஆன்மா கொண்ட அவன் {அஸ்வத்தாமன்}, (தன் தந்தையிடம் இருந்து தான் அடைந்த) அந்த உயர்ந்த ஆயுதத்தை {பிரம்மசிரத்தை} தன் மனத்தில் அழைத்தான்.(18) பிறகு அவன் {அஸ்வத்தாமன்}, தன் இடக்கையால் ஒரு புல்லை {சீழ்கீர்க்கையை {நாணற்புல்லை}} எடுத்தான்.
பெரும்துன்பத்தில் வீழ்ந்த அவன் {அஸ்வத்தாமன்}, அந்தப் புல்லை உரிய மந்திரங்களுடன் ஈர்த்து, அதைப் பலமிக்க அந்தத் தெய்வீக ஆயுதமாக {பிரம்மசிரமாக} மாற்றினான்.(19) (பாண்டவர்களின்) கணைகளையும், தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட அவர்களையும் {பாண்டவர்களையும்} காணப்பொறுக்காத அவன் {அஸ்வத்தாமன்}, கோபத்தால், “பாண்டவர்களின் அழிவுக்காக” என்ற இந்தப் பயங்கரமான வார்த்தைகளைச் சொன்னான்.(20) ஓ! மன்னர்களில் புலியே {ஜனமேஜயா}, துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்} இவ்வார்த்தைகளைச் சொல்லி, அனைத்துலகங்களும் திகைக்கும் வகையில் அவ்வாயுதத்தை ஏவினான்.(21) யுகத்தின் முடிவில் அனைத்தையும் அழிக்கும் யமனைப் போல, மூவுலகங்களையும் எரிக்கவல்லதாகத் தெரிந்த அந்தப் புல்லில் இருந்து நெருப்புண்டானது” {என்றார் வைசம்பாயனர்}.(22)
நெருப்புகளுக்கிடையில் நாரதரும், வியாசரும்! – சௌப்திக பர்வம் பகுதி – 14-அர்ஜுனன் தன் பிரம்மாயுதத்தை ஏவியது; இயற்கையில் தோன்றிய இயல்புக்குமீறிய சகுனங்கள்; அவ்விரு ஆயுதங்களின் மூலம் உண்டான இரு நெருப்புகளுக்கிடையில் மூவுலகங்களைக் காப்பதற்காக நின்ற நாரதரும், வியாசரும்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, மிகத் தொடக்கத்திலேயே துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} நோக்கத்தைக் குறிப்புகளால் அறிந்து கொண்டான். அர்ஜுனனிடம் அவன் {கிருஷ்ணன்},(1) “ஓ! அர்ஜுனா, ஓ! பாண்டுவின் மகனே, உன் நினைவில் இருப்பதும், துரோணரால் உனக்குப் புகட்டப்பட்ட அறிவுமான அந்தத் தெய்வீக ஆயுதத்தை {பிரம்மாயுதத்தைப்} பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது.(2) ஓ! பாரதா {அர்ஜுனா}, உன்னையும், உன் சகோதர்களையும் காப்பதற்காக, அனைத்து ஆயுதங்களையும் தணிக்கவல்லதான அவ்வாயுதத்தை இப்போரில் ஏவுவாயாக” என்றான்.(3) கேசவனால் {கிருஷ்ணனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், பகைவீரர்களைக் கொல்பவனான அர்ஜுனன், நாண்கயிற்றில் கணை பொருத்தப்பட்ட தன் வில்லை எடுத்துக் கொண்டு, வேகமாகத் தன் தேரில் இருந்து இறங்கினான்.(4) தனது ஆசானின் மகனுக்கும் {அஸ்வத்தாமனுக்கும்}, தனக்கும், தன் சகோதரர்களுக்கும் நன்மையை விரும்பிய அந்த எதிரிகளை எரிப்பவன் {அர்ஜுனன்},(5) தேவர்கள் அனைவரையும் வணங்கி, பெரியோர் அனைவரையும் வணங்கி, உலகங்கள் அனைத்தின் நன்மையைச் சிந்தித்து, “அஸ்வத்தாமரின் ஆயுதம் இவ்வாயுதத்தால் தணிக்கப்படட்டும்” என்ற வார்த்தைகளைச் சொல்லி அவ்வாயுதத்தை ஏவினான்.(6)
காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} ஏவப்பட்ட அவ்வாயுதமானது, யுக முடிவில் தோன்றும் அனைத்தையும் எரிக்கும் நெருப்பைப் போலக் கடுந்தழல்களுடன் எரிந்தது.(7) அதே போலவே, கடுஞ்சக்தி கொண்டவனான துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} ஏவப்பட்ட ஆயுதமும், பெரும் நெருப்புப்பந்தைப் போலப் பயங்கரத் தழல்களுடன் சுடர்விட்டெரிந்தது.(8) எண்ணற்ற இடிமுழக்கங்கள் கேட்டன; ஆயிரக்கணக்கான எரிநட்சத்திரங்கள் விழுந்தன; உயிரினங்கள் அனைத்தும் பேரச்சத்தால் ஈர்க்கப்பட்டன.(9) ஒலியால் நிறைந்திருப்பதாகத் தெரிந்த மொத்த ஆகாயமும், அந்நெருப்பின் தழல்களுடன் பயங்கரத் தன்மையை அடைந்தது. மலைகள், நீர் நிலைகள் மற்றும் மரங்களுடன் கூடிய மொத்த பூமியும் நடுங்கியது.(10)
அப்போது, அனைத்து உயிரினங்களின் ஆன்மாவான நாரதர், பாரத இளவரசர்கள் அனைவரின் பாட்டன் (வியாசர்) ஆகிய இருபெரும் முனிவர்களும், மூவுலகங்களையும் எரிக்கும் அவ்விரு ஆயுதங்களையும் கண்டு, அங்கே தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர். அந்த இரு முனிவர்களும், அஸ்வத்தாமன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இரு வீரர்களையும் அமைதிப்படுத்த முயன்றனர்.(11,12) கடமைகள் அனைத்தையும் அறிந்தவர்களும், உயிரினங்கள் அனைத்தின் நன்மையை விரும்பியவர்களும், பெருஞ்சக்தியைக் கொண்டவர்களுமான அவ்விரு தவசிகளும், சுடர்மிக்க அவ்விரு ஆயுதங்களுக்கு மத்தியில் நின்றனர்.(13) எந்தச் சக்தியிலும் மூழ்க இயலாதவர்களான அந்தச் சிறப்பு மிக்க முனிவர்கள் இருவரும், அவ்விரு ஆயுதங்களுக்கிடையில் சுடர்மிக்க இரு நெருப்புகளைப் போலத் தங்களை நிறுத்திக் கொண்டனர்.(14) உயிருடன் கூடிய எவ்வுயிரினத்தாலும் தடுக்கப்பட முடியாதவர்களும், தேவர்கள் மற்றும் தானவர்களால் துதிக்கப்படுபவர்களுமான அவ்விருவரும், அவ்விரு ஆயுதங்களின் சக்தியை தணிக்கும் வகையில், உலகமனைத்துக்கும் நன்மை செய்ய இவ்வழியில் செயல்பட்டனர்.(15)
அவ்விரு முனிவர்கள், “இந்தப் போரில் வீழ்ந்த பெருந்தேர்வீரர்கள், பல்வேறு வகை ஆயுதங்களை அறிந்திருந்தனர். எனினும் அவர்கள், மனிதர்கள் மீது இத்தகு ஆயுதத்தை ஒருபோதும் ஏவியதில்லை. வீரர்களே, நீங்கள் செய்திருக்கும் இந்த மூர்க்கச் செயல் என்ன தெரியுமா?” என்று கேட்டனர்”.(16)
ஆயுதத்தைத் திருப்ப முடியாத அஸ்வத்தாமன்! – சௌப்திக பர்வம் பகுதி – 15-தன் ஆயுதத்தை விலக்கித் திருப்பிக் கொண்ட அர்ஜுனன்; தன் ஆயுதத்தை விலக்கிக் கொள்ள முடியாத அஸ்வத்தாமன், அதைப் பாண்டவப் பெண்களின் கருவறையை நோக்கிச் செலுத்துவது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மனிதர்களில் புலியே, நெருப்பைப் போன்ற காந்தியைக் கொண்ட அவ்விரு முனிவர்களையும் கண்டவுடனேயே, தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் தெய்வீகக் கணையைத் திரும்பிப் பெறத் தீர்மானித்தான்.(1) கரங்களைக் கூப்பிக் கொண்ட அவன், அம்முனிவர்களிடம், “நான் இவ்வாயுதத்தைப் பயன்படுத்தும் போது, “(எதிரியின்) அந்த ஆயுதம் தணிவடையட்டும்” என்று சொல்லியே ஏவினேன்.(2) நான் இந்த உயர்ந்த ஆயுதத்தைத் திரும்பப் பெற்றால், பாவம் நிறைந்த செயல்களைச் செய்யும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, தன் ஆயுதத்தின் சக்தியால் எங்கள் அனைவரையும் எரித்துவிடுவார் என்பதில் ஐயமில்லை.(3) நீங்கள் இருவரும் தேவர்களைப் போன்றவர்களாவீர். எங்கள் நன்மையையும், மூன்று உலகங்களின் நன்மையையும் பாதுகாக்கும்படியான ஏதாவது வழிமுறையை ஆலோசிப்பதே உங்களுக்குத் தகும்” என்றான்.(4)
இந்த வார்த்தைகளைச் சொன்ன தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் ஆயுதத்தைத் திருப்பிக் கொண்டான். போரில் அவ்வாயுதத்தைத் திருப்புவது தேவர்களுக்கே மிகக் கடினமான செயலாகும்.(5) ஒரு முறை ஏவப்பட்ட அந்த உயர்ந்த ஆயுதத்தைப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} தவிர, மஹேந்திரனாலும் திருப்பமுடியாது.(6) அவ்வாயுதம் பிரம்ம சக்தியில் பிறந்ததாகும். தூய்மையற்ற ஆன்மா கொண்ட எந்த மனிதனாலும் அதைத் திருப்ப முடியாது. பிரம்மச்சரிய வாழ்வுமுறையை நோற்கும் ஒருவனால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.(7) பிரம்மச்சரிய நோன்பைப் பயிலாத ஒருவன், அஃதை ஏவிய பிறகு மீண்டும் திருப்பினால், அனைத்துக் கருவிகளுடன் சேர்த்து, அவனுடைய {ஏவியவனின்} தலையையும் அது தாக்கி வீழ்த்தும்.(8) அர்ஜுனன் ஒரு பிரம்மச்சாரியும், நோன்புகளை நோற்பவனுமாவான். கிட்டத்தட்ட அடையமுடியாத ஆயுதத்தை அடைந்த அவன் {அர்ஜுனன்}, பெரும் ஆபத்தான சூழ்நிலையில் மூழ்கியிருந்தபோதும், ஒருபோதும் அதைப் பயன்படுத்தவில்லை.(9) உண்மை நோன்பை நோற்பவனும், பெரும் வீரம் கொண்டவனும், பிரம்மச்சாரியின் வாழ்வுமுறையை நோற்பவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பணிவுடையவனாகவும், பெரியோர் அனைவருக்கும் கீழ்ப்படிந்தவனாகவும் இருந்தான். இதன் காரணமாகவே அவனால் அவ்வாயுதத்தைத் திருப்பிக் கொள்ள முடிந்தது.(11)
ஆனால் துரோணரின் மகனோ {அஸ்வத்தாமனோ}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த உயர்ந்த ஆயுதத்தைப் போரில் திரும்பப் பெற முடியாமல், தீவில் பிறந்தவரான முனிவரிடம் {வியாசரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(12) “ஓ! தவசியே, பேராபத்தால் அச்சமடைந்தும், என் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பியும், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகவும் நான் இந்த ஆயுதத்தை ஏவினேன்.(13) ஓ! புனிதமானவரே {வியாசரே}, பொய் நடத்தை கொண்ட இந்தப் பீமசேனன், போரில் திருதராஷ்டிரர் மகனைக் {துரியோதனனைக்} கொன்றபோது பாவம் நிறைந்த செயலைச் செய்தான்.(14) ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, அதன் காரணமாகவே தூய்மையற்ற ஆன்மா கொண்டவனான நான் இந்த ஆயுதத்தை ஏவினேன். எனினும், இப்போது இதை நான் திரும்பப் பெறத் துணிய மாட்டேன்.(15) பாண்டவர்களின் அழிவுக்காகவே, தடுத்தற்கரிய இந்தத் தெய்வீக ஆயுதத்தை நெருப்பின் சக்தியால் ஈர்த்து நான் ஏவினேன்.(16) பாண்டவர்களின் அழிவுக்காகத் திட்டமிட்டு ஏவப்பட்டதே இந்த ஆயுதம். எனவே, அது பாண்டு மகன்கள் அனைவரின் உயிரையும் எடுக்கும்.(17) ஓ! மறுபிறப்பாளரே, கோபத்தால் நான் இந்தப் பாவம் நிறைந்த செயலைச் செய்துவிட்டேன். பாண்டவர்களின் அழிவுக்காகவே போரில் நான் இவ்வாயுதத்தை இருப்புக்கு அழைத்தேன்” என்றான் {அஸ்வத்தாமன்}.(18)
வியாசர் {அஸ்வத்தாமனிடம்}, “ஓ! குழந்தாய் {அஸ்வத்தாமா}, பிருதையின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதத்தை அறிந்தவனாவான். கோபத்தாலோ, போரில் உன்னை அழிக்கவோ அவன் அந்த ஆயுதத்தை ஏவவில்லை.(19) மறுபுறம், உன் ஆயுதத்தைக் கலங்கடிக்கவே அவன் அதைப் பயன்படுதிதனான். மேலும் அவன் {அர்ஜுனன்} அதைத் திரும்பவும் பெற்றான்.(20) உன் தந்தை கற்பித்ததன் மூலம் பிரம்ம ஆயுதத்தையே அடைந்தும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிடவில்லை.(21) அர்ஜுனன் அந்த அளவுக்குப் பொறுமையும், அந்த அளவுக்கு நேர்மையும் கொண்டிருக்கிறான். மேலும் அவன் அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவனாவான். அப்படிப்பட்ட ஒரு மனிதனை, அவனது சகோதரர்களுடன் சேர்த்து அழிக்க நீ ஏன் முயல்கிறாய்?(22) பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதமானது எந்த இடத்தில் வைத்து, மற்றொரு உயர்ந்த ஆயுதத்தால் கலங்கடிக்கப்படுமோ, அந்த இடத்தில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு சொட்டு நீரையும் மேகங்கள் பொழியாது. அக்காலத்தில் அங்கே பஞ்சமேற்படும்.(23)
இக்காரணத்திற்காகவே, சக்தியைக் கொண்டவனாகவே இருந்தாலும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான இந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, வாழும் உயிரினங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் உனது ஆயுதத்தை அவனது ஆயுதத்தால் கலங்கடிக்கவில்லை.(24) பாண்டவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; நீயும் பாதுகாக்கப்பட வேண்டும்; இந்த நாடும் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இந்த உனது தெய்வீக ஆயுதத்தைத் திரும்ப அழைப்பாயாக.(25) உன் இதயத்தில் இருந்து இந்தக் கோபத்தை அகற்றி, பாண்டவர்களைப் பாதுகாப்பாக இருக்கச் செய்வாயாக. அரச முனியான யுதிஷ்டிரன், பாவம் நிறைந்த எச்செயலையும் செய்து வெற்றியடைய ஒருபோதும் விரும்பமாட்டான்[1].(26) உன் தலையில் இருக்கும் அந்த மணியைக் கொடுப்பாயாக. பாண்டவர்கள் அதை {மணியை} எடுத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக உனக்கு உன் உயிரைத் தருவார்கள்” என்றார் {வியாசர்}.(27)துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, “பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் இதுவரை ஈட்டியிருக்கும் செல்வங்கள் அனைத்தையும் விட இந்த எனது மணி விலைமதிப்புமிக்கதாகும். இந்த மணியைச் சூடியவனுக்கு ஆயுதங்கள், நோய் மற்றும் பசி ஆகியவற்றிடமிருந்து எப்போதும் அச்சமேற்படாது. தேவர்கள், தானவர்கள் மற்றும் நாகர்களிடம் அவன் அச்சங்கொள்ளத் தேவையில்லை.(29) ராட்சசர்கள் மற்றும் கள்வர்களிடமும் அவன் அச்சங்கொள்ள மாட்டான். எவ்வழியிலும் நான் அதைப் பிரிந்திருக்க முடியாது.(30) இருப்பினும், ஓ! புனிதமானவரே, நீர் எதைச் செய்யச் சொல்கிறீரோ அஃது என்னால் செய்யப்பட வேண்டும். இதோ எனது மணி. இதோ நான். எனினும், (மரண ஆயுதத்தால் ஈர்க்கப்பட்டிருக்கும்) இப்புல்லானது,(31) உயர்வானதும், வலிமைமிக்கதும், கலங்கடிக்கப்பட முடியாத ஆயுதமாகவும் இருப்பதால், இது பாண்டவப் பெண்களின் கருவறைகளில் பாயும். ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே- வியாசரே}, இவ்வாயுதத்தை ஒருமுறை ஏவியபிறகு என்னால் திரும்பப் பெற முடியாது.(32) நான் இப்போது இந்த ஆயுதத்தைப் பாண்டவப் பெண்களின் கருவறைகளில் வீசப் போகிறேன். ஓ! புனிதமானவரே, உமது ஆணைகளைப் பொறுத்தவரையில், வேறு விதங்களில் நான் அவற்றுக்கு நிச்சயம் கீழ்ப்படிவேன்” என்றான் {அஸ்வத்தாமன்}.(33)
வியாசர், “இவ்வாறே செய். எனினும், ஓ! பாவமற்றவனே, வேறு எந்த நோக்கத்திலும் புத்தியைச் செலுத்தாதே. இவ்வாயுதத்தைப் பாண்டவப் பெண்களின் கருவறைகளில் வீசி ஒழிவடைவாயாக {அனைத்தையும் நிறுத்துவாயாக}” என்றார்”.(34)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தீவில் பிறந்தவரின் {துவைபாயனரான வியாசரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட துரோணரின் மகன், அந்த ஆயுதத்தைப் பாண்டவப் பெண்களின் கருவறைகளில் வீசினான்”.(36)
மூவாயிரம் வருடங்கள் திரிவீர்! – சௌப்திக பர்வம் பகுதி – 16-கருவை மீட்பேன் என்று சொன்ன கிருஷ்ணன்; அஸ்வத்தாமனைச் சபித்தது; கிருஷ்ணனின் சாபத்தை அங்கீகரித்த வியாசர்; சாபத்தை ஏற்றுக் கொண்டு, தன் தலையில் இருந்த மணியைக் கொடுத்த அஸ்வத்தாமன்; திரௌபதியிடம் திரும்பிச் சென்ற பாண்டவர்கள்; திரௌபதியிடம் மணியைக் கொடுத்த பீமன்; அம்மணியைத் தலையில் சூடிக்கொள்ளுமாறு யுதிஷ்டிரனிடம் சொன்ன திரௌபதி…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாவம் நிறைந்த செயல்களைச் செய்யும் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} (பாண்டவப் பெண்களின் கருவறையில்) அவ்வாயுதம் ஏவப்படப்போவதை அறிந்த ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, உற்சாகம் நிறைந்த இவ்வார்த்தைகளை அவனிடம் {அஸ்வத்தாமனிடம்} சொன்னான்:(1) “பக்தி நோன்புகளை நோற்கும் ஒரு குறிப்பிட்ட பிராமணர், இப்போது அர்ஜுனனின் மருமகளாக இருப்பவளான விராடனின் மகள் {உத்தரை} உபப்லாவ்யத்தில் இருக்கும்போது அவளைக் கண்டு,(2) “குரு குலம் அருகிப் போகும்போது உனக்கு ஒரு மகன் பிறப்பான். இந்தக் காரணத்திற்காக அந்த உன் மகன் பரீக்ஷித் என்ற பெயரால் அழைக்கப்படுவான்” என்றார்.(3) அந்தப் பக்திமானின் வார்த்தைகள் உண்மையாகும். பாண்டவர்கள் பரீக்ஷித் என்ற பெயரில் ஒரு மகனை {பேரனை} அடைவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.(4)
சாத்வத குலத்தில் முதன்மையானவனான கோவிந்தன் {கிருஷ்ணன்} இவ்வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கோபத்தால் நிறைந்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அவனிடம் {கிருஷ்ணனிடம்} மறுமொழியாக,(5) “ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாண்டவர்களிடம் நீ கொண்ட ஒருதலைச் சார்பினால் சொல்லப்படும் இது நடக்காது. ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, என் வார்த்தைகள் நிறைவேறும்.(6) என்னால் உயரத்தப்பட்ட என் ஆயுதம் {ஐஷீகம் [நாணற்புல்லாலான பிரம்மசிரம்]}, நீ எந்தக் கருவைக் காக்க விரும்புகிறாயோ, விராடன் மகளின் {உத்தரையின்} கருவறையில் உள்ள அந்தக் கருவின் மேலேயே விழும்” என்றான்.(7)
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, “இந்த வலிமைமிக்க ஆயுதத்தின் பாய்ச்சல் கனியற்றதாகாது. அந்தக் கரு மாளும். மாண்டதே மீண்டும் உயிரை அடைந்து நீண்ட வாழ்வைப் பெறும்.(8) உம்மைப் பொறுத்தவரையில், ஞானிகள் அனைவரும் உம்மைக் கோழையாகவும், இழிந்த பாவியாகவும் அறிவார்கள். எப்போதும் பாவம் நிறைந்த செயல்களிலேயே ஈடுபடும் நீர் பிள்ளைகளைக் கொல்லும் கொலையாளியாவீர். இக்காரணத்திற்காக, இந்த உமது பாவங்களுக்குரிய கனியை நீர் தாங்கவே வேண்டும்.(9) எந்தத் தோழனும் இல்லாமல், பேசுவதற்கு எவருமில்லாமல் இப்பூமியில் மூவாயிரம் {3000} வருடங்கள் நீர் திரிந்து கொண்டிருப்பீர்[1].(10) தனியொருவராகவும், உம்மருகே எவரும் இல்லாத நிலையிலும் நீர் பல்வேறு நாடுகளில் திரிந்து கொண்டிருப்பீர். ஓ! இழிந்தவரே {அஸ்வத்தாமரே}, மனிதர்களுக்கு மத்தியில் உமக்கு இடமேதும் கிடையாது.(11) சீழ் மற்றும் குருதியின் முடைநாற்றம் உம்மிலிருந்து வெளிப்படும், மேலும் அடைதற்கரிய காடுகளும், அச்சந்தரும் முட்புதர்களும்தான் உமது வசிப்பிடங்களாகும். ஓ! பாவம் நிறைந்த ஆன்மா கொண்டவரே {அஸ்வத்தாமரே}, நோய்கள் அனைத்தின் கனத்துடன் நீர் பூமியில் திரிந்து கொண்டிருப்பீர்.(12)வீரப் பரீக்ஷித் வயதை அடைந்து, வேதங்களை அறிந்து, பக்தி நோன்புகளை நோற்று, சரத்வான் மகனிடம் {கிருபரிடம்} இருந்து ஆயுதங்கள் அனைத்தையும் அடைவான்.(13) நீதிமிக்க ஆன்மாக் கொண்ட அந்த மன்னன் {பரீக்ஷித்}, உயர்ந்த ஆயுதங்கள் அனைத்தின் அறிவையும் அடைந்து, க்ஷத்திரியக் கடமைகள் அனைத்தையும் அறிந்து, அறுபது {60} ஆண்டுகளுக்குப் பூமியை ஆள்வான்.(14) மேலும், ஓ! தீய ஆன்மா கொண்டவரே, உமது கண்களுக்கு முன்பாகவே அந்தப் பிள்ளை {பரீக்ஷித்} குருக்களின் வலிமைமிக்க மன்னனாவான்.(15) உமது ஆயுதநெருப்பின் சக்தியால் எரிக்கப்பட்டாலும் நான் அவனை மீட்பேன். ஓ மனிதர்களில் இழிந்தவரே, என் தவங்கள் மற்றும் என் உண்மையின் சக்தியை நீர் காண்பீராக” என்றான் {கிருஷ்ணன்}.(16)
வியாசர் {அஸ்வத்தாமனிடம்}, “மிகக் கொடூரமான இந்தச் செயலைச் செய்து, எங்களை அவமதித்ததாலும், (பிறப்பால்) நல்ல பிராமணனாக இருந்தாலும், உன் நடத்தை இவ்வாறு இருப்பதாலும்,(17) தேவகியின் மகன் {கிருஷ்ணன்} சொன்ன அந்தச் சிறந்த வார்த்தைகள், க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றும் உன் வழக்கில் உணரப்படும் என்பதில் ஐயமில்லை” என்றார்.(18)
அஸ்வத்தாமன் {வியாசரிடம்}, “ஓ! புனிதமானவரே, மனிதர்கள் அனைவரின் மத்தியில் உம்முடன் நான் வாழ்ந்து வருவேன். மனிதர்களில் முதன்மையானவனும், சிறப்புமிக்கவனுமான இவனது வார்த்தைகள் உண்மையாகட்டும்” என்றான்”.(19)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் மணியை உயர் ஆன்மப் பாண்டவர்களிடம் கொடுத்துவிட்டு, அவர்களது கண்களுக்கு முன்பாகவே உற்சாகமில்லாமல் காட்டுக்குள் சென்றான்.(20) தங்கள் எதிரிகள் அனைவரையும் தண்டித்துக் கொன்றுவிட்ட பாண்டவர்கள், கோவிந்தனையும் {கிருஷ்ணனையும்}, தீவில் பிறந்த கிருஷ்ணரையும் {துவைபானரான வியாசரையும்}, பெருந்தவசியான நாரதரையும் முன்னிட்டுக் கொண்டு, அஸ்வத்தாமனுடன் பிறந்த அந்த மணியை எடுத்துக் கொண்டு, பிராய நோன்பை நோற்று அமர்ந்திருந்த நுண்ணறிவு கொண்ட திரௌபதியிடம் வேகமாகத் திரும்பி வந்தனர்”.(21,22)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்}, காற்றின் வேகத்திற்கு ஒப்பான சிறந்த குதிரைகளால் சுமக்கப்பட்டு, தசார்ஹ குலத்தோனையும் {கிருஷ்ணனையும்} உடனழைத்துக் கொண்டு, தங்கள் முகாமுக்குத் திரும்பினர்.(23) தங்கள் தேர்களில் இருந்து வேகமாகக் கீழிறங்கியவர்களும், அதிகத் துயருடன் இருந்தவர்களுமான அந்தப் பெருந்தேர்வீரர்கள், துருபதன் மகளான கிருஷ்ணை {திரௌபதி} துயரத்தால் பீடிக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.(24) கிருஷ்ணனுடன் கூடிய பாண்டவர்கள், சோகம் மற்றும் துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்தவளும், உற்சாகமற்றவளுமான அந்த இளவரசியை {திரௌபதியை} அணுகி, அவளைச் சுற்றி அமர்ந்தனர்.(25)
அப்போது, மன்னனின் {யுதிஷ்டிரனின்} அன்புக்குரியவனும், வலிமைமிக்கவனுமான பீமசேனன், அந்தத் தெய்வீக மணியை அவளிடம் {திரௌபதியிடம்} கொடுத்து, இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(26) “ஓ! இனிமையான மங்கையே இந்த மணி உனதானது. உன் மகன்களைக் கொன்றவன் வெல்லப்பட்டான். உன் கவலையை விட்டு எழுந்து, ஒரு க்ஷத்திரியப் பெண்ணுக்குரிய கடமைகளை நினைவுகூர்வாயாக.(27) ஓ! கரிய கண்களைக் கொண்டவளே, ஓ! மருண்ட பெண்ணே, வாசுதேவன் (உபப்லாவ்யத்திலிருந்து) தூதுசெல்லப் புறப்பட்டபோது, அந்த மதுசூதனனிடம் இந்த வார்த்தைகளையே நீ சொன்னாய்:(28) “ஓ! கோவிந்தா, மன்னர் {யுதிஷ்டிரர்} அமைதியை விரும்புவதால், நான் கணவர்கள் இல்லாதவள். நான் மகன்களோ, சகோதரர்களோ இல்லாதவள். நீயும் {என்னைப் பொறுத்தவரையில்} உயிரோடில்லை” என்றாய்.(29)
இந்தக் கசந்த வார்த்தைகளையே நீ மனிதர்களில் முதன்மையானவனான கிருஷ்ணனிடம் சொன்னாய். க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு மிகவும் ஏற்புடைய அந்த வார்த்தைகளை நீ நினைவுகூர்வதே உனக்குத் தகும்.(30) அரசுரிமைக்கான நமது வழியில் தடையாக இருந்த இழிந்த துரியோதனன் கொல்லப்பட்டான். துச்சாசனனின் உயிர்க்குருதியை நான் குடித்துவிட்டேன்.(31) நம் எதிரிகளுக்கு நாம் பட்ட கடனைச் செலுத்திவிட்டோம். மனிதர்கள் பேசும்போது, இனியும் நம்மை நிந்திக்க முடியாது. துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} வென்றாலும், அவன் பிராமணன் என்பதாலும், இறந்துவிட்ட நமது ஆசானுக்கு {துரோணருக்கு} மரியாதை காட்ட வேண்டும் என்பதாலும் அவனை விடுவித்துவிட்டோம்.(32) ஓ! தேவி, அவனது புகழ் அழிக்கப்பட்டது, அவனது உடல் மட்டுமே எஞ்சியிருக்கிறது. தன் மணியை இழந்த அவன், இப்பூமியில் ஆயுதங்களற்றவனாகத் திரியப் போகிறான்” என்றான் {பீமன்}.(33)
திரௌபதி, “நாம் காயம் பிழைத்த காரணத்தால், நாம் அடைந்த கடனை மட்டுமே திரும்பச் செலுத்த நான் விரும்பினேன். ஆசானின் மகன் {அஸ்வத்தாமர்}, அந்த ஆசானை {துரோணரைப்} போலவே எனது மரியாதைக்குரியவராவார்.(34) ஓ! பாரதரே {பீமரே}, இந்த மணியை மன்னர் {யுதிஷ்டிரர்} தன் தலையில் சூடிக் கொள்ளட்டும்” என்றாள். அப்போது அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, திரௌபதியின் விருப்பப்படியே அந்த மணியை எடுத்து, ஆசானின் பரிசென அதைக் கருதி அதைத் தன் தலையில் சூடினான்.(35) சிறப்பானதும், தெய்வீகமானதுமான அந்த மணியைத் தன் தலையில் சூடிய அந்தப் பலமிக்க மன்னன் {யுதிஷ்டிரன்}, தனக்கு மேலே சந்திரனைக் கொண்ட ஒரு மலையைப் போல அழகாகத் தெரிந்தான்.(36) இளவரசி திரௌபதி, தன் மகன்களின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டிருந்தாலும், மனோபலம் கொண்டவளான அவள், தன் நோன்பை {பிராய நோன்பைக்} கைவிட்டாள். பிறகு மன்னன் யுதிஷ்டிரன், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணனிடம் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(37)
பிரம்மனால் படைக்கப்பட்ட மற்றொரு படைப்பாளன்! – சௌப்திக பர்வம் பகுதி – 17-தனியொருவனாக இருந்து கொண்டு அஸ்வத்தாமனால் பலரை எவ்வாறு கொல்ல முடிந்தது என்று கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷடிரன்; மஹாதேவனின் மகிமை குறித்துச் சொல்லத் தொடங்கிய கிருஷ்ணன்; உயிரினங்களைப் படைக்குமாறு சிவனிடம் சொன்ன பிரம்மன்; சிவன் தவம் செய்தது; அந்நேரத்தில் மற்றொருவனை உண்டாக்கி உயிரினங்களைப் படைக்கச் செய்த பிரம்மன்; தவம் நிறைந்து திரும்பிய சிவன் கோபம் கொண்டு மஞ்சவான் மலைக்குச் சென்றது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “உறங்கும் வேளையில், அந்த மூன்று தேர்வீரர்களால் துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்ட பிறகு, பெருந்துயரில் இருந்த யுதிஷ்டிரன், தசார்ஹ குலோத்தனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1) “ஓ! கிருஷ்ணா, பாவம் நிறைந்தவரும், இழிந்தவரும், போரில் பெருந்திறமற்றவருமான அஸ்வத்தாமரால் வலிமைமிக்கத் தேர்வீரர்களான என் மகன்கள் அனைவரையும் எவ்வாறு கொல்ல முடிந்தது?(2) அதே போலவே, ஆயுதங்களில் சாதித்தவர்களும், பேராற்றல் கொண்டவர்களும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எதிரிகளுடன் போரிட வல்லவர்களுமான துருபதன் பிள்ளைகள் அனைவரையும் அந்தத் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமரால்} எவ்வாறு கொல்ல முடிந்தது?(3) எவனுடைய முன்பு, பெரும் வில்லாளியான துரோணராலேயே தோன்ற முடியாதோ அந்த முதன்மையான தேர்வீரனான திருஷ்டத்யும்னனை அவரால் எவ்வாறு கொல்ல முடிந்தது?(4) ஓ! மனிதர்களில் காளையே, போரில் நம் மக்கள் அனைவரையும் தனியொருவராகக் கொல்லவதற்கு அந்த ஆசான் மகனால் {அஸ்வத்தாமரால்} என்ன காரியம் செய்யப்பட்டது?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(5)
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, “உண்மையில், அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, தேவர்கள் அனைவரிலும் உயர்ந்தவனும், நித்தியமானவனுமான மஹாதேவனின் உதவியை நாடினார். இதன் காரணமாகவே, இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான போர்வீரர்களைத் தனியொருவராக அவரால் கொல்ல முடிந்தது.(6) மஹாதேவன் நிறைவுகொண்டால், அவனால் அழிவின்மையையும் {மரணமில்லா பெருவாழ்வை} அளிக்க முடியும். கிரிசனால் {சிவனால்} இந்திரனையே தடுக்குமளவுக்குப் பெரும் வீரத்தை அளிக்க முடியும்.(7) ஓ! பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நான் உண்மையில் மஹாதேவனை {உள்ளபடியே} அறிவேன். பழங்காலத்தில் அவன் செய்த பல்வேறு செயல்களையும் நான் அறிவேன்.(8) ஓ! பாரதரே, அவனே உயிரினங்கள் அனைத்தின் தொடக்கமும், நடுவும், முடிவும் ஆவான். இந்த மொத்த அண்டமே அவனது சக்தியின் மூலமே இயங்கி அசைகிறது.(9)
பலமிக்கப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, உயிரினங்களைப் படைக்க விரும்பி ருத்திரனைக் கண்டான்; அந்தப் பெரும்பாட்டன் அவனிடம், “தாமதமில்லாமல் உயிரினங்களைப் படைப்பாயாக” என்றான்.(10) இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்ட செஞ்சடை ருத்திரன் {சிவன்}, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, நீரில் மூழ்கி, உயிரினங்களின் குறைகளை உணரும் வரை நீண்ட காலத்திற்குத் தவம் பயின்றான்.(11) ருத்திரனை எதிர்பார்த்து மிக நீண்ட காலம் காத்திருந்த பெரும்பாட்டன் {பிரம்மன்}, தன் விருப்பத்தின்படியான ஆணையொன்றால் அனைத்து வகை உயிரினங்களின் படைப்பாளனாக வேறொருவனை இருப்புக்கு அழைத்தான்.(12) நீருக்குள் மூழ்கியிருக்கும் கிரிசனை {சிவனைக்} கண்ட அவன் {இரண்டாமவன்}, தன் தந்தையிடம், “எனக்கு முன்பு எந்த உயிரினமும் பிறக்கவில்லையென்றால் நான் உயிரினங்களைப் படைப்பேன்” என்றான்.(13) அதற்கு அவனது தந்தை, அவனிடம், “உன்னைத் தவிர்த்து முதலில் பிறந்த வேறொருவனும் இல்லை. இந்த ஸ்தாணு, நீரில் மூழ்கியிருக்கிறான். எந்தக் கவலையுமின்றிச் சென்று உயிரினங்களைப் படைப்பாயாக” என்றான்.(14) அவன் {இரண்டாமவன்}, இந்த நால்வகை உயிரினங்கள் அனைத்தையும் படைத்த தக்ஷனை முதலாகக் கொண்ட உயிரினங்கள் பலவற்றைப் படைத்தான்.(15)
எனினும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அவர்கள் படைக்கப்பட்ட உடனேயே பசியால் பீடிக்கப்பட்டு, தங்கள் தந்தையையே உண்ண விரும்பி அவனை நோக்கி ஓடினர்.(16) அதன் பேரில் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட அந்த இரண்டாமவன், தன் வாரிசுகளிடம் இருந்து பாதுகாக்கப்பட விரும்பி, அவனை {பிரம்மனை} நோக்கி ஓடினான். அவன் அந்தப் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே, இவர்களிடம் இருந்து என்னைப் பாதுகாப்பீராக, இந்த உயிரினங்களுக்கு நிர்ணயிக்கப்படும் உணவை அவர்கள் உண்ணட்டும்” என்றான்.(17) அப்போது பெரும்பாட்டன், செடிகொடிகளையும், காய்கறிகளையும் அவர்களது உணவாக நிர்ணயித்து, பலமிக்கவர்களுக்கு {பலமிக்க உயிரினங்களின்} வாழ்வாதாரமாக {உணவாக} பலவீனர்களை {பலமற்ற உயிரினங்களை} நிர்ணயித்தான்.(18) புதிதாகப் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் இவ்வாறு தங்களுக்கு ஊட்டப்பண்பு {வாழ்வாதாரம்} நிர்ணயிக்கப்பட்டதும், தங்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று, மகிழ்ச்சியுடன் தங்கள் தங்கள் வகைக்கான இனங்களுடன் கூடி {புணர்ந்து} பெருகினர்.(19) அந்த உயிரினங்கள் பெருகி, பெரும்பாட்டனும் நிறைவடைந்ததும், முதலில் பிறந்தவன் நீரில் இருந்து எழுந்து, உயிரோட்டத்துடன் கூடிய படைப்பைக் கண்டான்.(20)
அவன் {ருத்திரன்}, பல்வேறு வகை உயிரினங்கள் படைக்கப்பட்டுவிட்டதையும், அவை தங்கள் சக்தியாலேயே பல்கி பெருகிவிட்டதையும் கண்டான். இக்காட்சியால் கோபமடைந்த ருத்திரன், தன் பிறப்புறுப்பை {லிங்கத்தைப்} பூமியின் குடல்களுக்குள் மறையும்படி செய்தான். மங்காதவனான பிரம்மன் அவனிடம் மென்மையான வார்த்தைகளில்,(21,22) “ஓ! சர்வா, இவ்வளவு காலம் நீருக்குள் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? என்ன காரணத்தினால் உனது பிறப்புறுப்பை {லிங்கத்தை} பூமியின் குடல்களுக்குள் காணாமல் போகச் செய்தாய்?” என்று கேட்டான்.(23) இவ்வாறு கேட்கப்பட்ட அந்த அண்டத்தின் தலைவன் {சிவன்}, கோபத்துடன் தலைவன் பிரம்மனிடம், “இந்த உயிரினங்கள் அனைத்தையும் வேறு எவனோ படைத்திருக்கிறான். பிறகு இந்த என் அங்கமானது என்ன நோக்கத்தை நிறைவேற்றப் போகிறது?[1](24) ஓ! பெரும்பாட்டனே, கடுந்தவத்தின் மூலம் நான் இந்த உயிரினங்கள் அனைத்திற்கான உணவைப் படைத்திருக்கிறேன். இந்தச் செடிகொடிகளும், அவற்றை உண்டு உயிர்வாழ்வோரைப் போலவே பல்கிப் பெருகும்” என்றான்.(25)இந்த வார்த்தைகளைச் சொன்ன பவன், உற்சாகமற்றவனாகவும் கோபத்துடனும் மிகக் கடும் தங்களைப் பயில்வதற்காக {இமயமலைச் சாரலில் உள்ள} முஞ்சவான் மலைகளின் அடிவாரத்திற்குச் சென்றான்” {என்றான் கிருஷ்ணன்}.(26)
ருத்திர உதவி! – சௌப்திக பர்வம் பகுதி – 18-கிருதயுக முடிவில் தேவர்கள் செய்த பெரும் வேள்வி; வேள்வியை அழித்த ருத்திரன்; ருத்திரனின் உதவியின் மூலம் வெற்றியை அடைந்த அஸ்வத்தாமன்…
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, “கிருத யுகம் {தேவயுகம்} கடந்ததும், ஒரு வேள்வியைச் செய்ய விரும்பிய தேவர்கள், அதற்கு வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி முறையான ஆயத்தங்களைச் செய்தனர்.(1) தெளிந்த நெய்யையும், தேவைப்படும் வேறு பொருட்களையும் சேகரித்தனர். அவர்கள், தங்கள் வேள்விக்குத் தேவையான பொருட்கள் என்ன என்பதை மட்டும் திட்டமிடாமல், வேள்விக்கொடைகளில் தங்களுக்குச் சேர வேண்டிய பங்குகளைக் குறித்தும் தீர்மானித்துக் கொண்டனர்.(2) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உண்மையில் ருத்திரனை அறியாத தேவர்கள், அந்தத் தெய்வீக ஸ்தாணுவுக்கு எந்தப் பங்கையும் ஒதுக்கவில்லை.(3) மான்தோல் உடுத்துபவனான ஸ்தாணு, வேள்விக் கொடைகளில் தனக்கு எந்தப் பங்கையும் தேவர்கள் ஒதுக்காததைக் கண்டு, அந்த வேள்வியை அழிக்க விரும்பி, அந்நோக்கத்திற்காக ஒரு வில்லைக் கட்டமைத்தான்.(4) வேள்விகள், லோக வேள்வி, தனிச்சிறப்புகளடங்கிய சடங்குகளுடன் கூடிய வேள்வி {கிரியா வேள்வி}, அழிவில்லாத இல்லற வேள்வி {கிருஹ வேள்வி}, ஐந்து மூலகப் பொருட்கள் மற்றும் அவற்றின் சேர்மங்களில் இன்புற்று மனிதன் நிறைவை அடக்கிய வேள்வி {பஞ்சபந்ரு வேள்வி} என நான்கு வகை வேள்விகள் இருக்கின்றன. இந்த நால்வகை வேள்விகளின் மூலமே இந்த அண்டம் உதித்தது[1].(5)முதல் மற்றும் நான்காம் வகை வேள்விகளின் பொருட்களைக் கொண்டு கபர்தின் {அடர்ச்சடையன் சிவன்} அந்த வில்லைக் கட்டமைத்தான். அந்த வில்லானது ஐந்து முழம்[2] நீளம் இருந்தது.(6) ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, புனித (மந்திரமான) வஷட்காரமே அதன் நாண்கயிறானது. வேள்வியின் நான்கு அங்கங்கள் அந்த வில்லின் அலங்காரங்களாகின.(7) பிறகு சினத்தால் நிறைந்த மஹாதேவன் அந்த வில்லை எடுத்துக் கொண்டு, தேவர்கள் வேள்வி செய்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றான். பிரம்மச்சாரியைப் போல உடுத்தியவனும், வில்லைத் தரித்திருந்தவனும் மங்காதவனுமான ருத்திரன் அங்கே வந்ததைக் கண்ட பூமாதேவி, அச்சத்தால் சுருங்கி, தன் மலைகளுடன் நடுங்கத் தொடங்கினாள்.(9) காற்று அசைவதை நிறுத்தியது, நெருப்பு மூட்டப்பட்டால் சுடர்விட்டெரியவில்லை. ஆகாயத்தின் நட்சத்திரங்கள் கவலையால் ஒழுங்கற்ற வழிகளில் திரியத் தொடங்கின.(10) சூரியனின் ஒளி குறைந்தது. சந்திரவட்டில் தன் அழகை இழந்தது. மொத்த ஆகாயமும் அடர்த்தியான இருளில் மூழ்கியது.(11)துயரில் மூழ்கிய தேவர்கள் என்ன செய்வது என்பதை அறியாதிருந்தனர். அவர்களது வேள்வி சுடர்விட்டெரிவது நின்றது. தேவர்கள் அனைவரும் பீதியடைந்தனர்.(12) அப்போது ருத்திரன், அந்த வேள்வியுடைய உடல்வடிவத்தின் இதயத்தைக் கடுங்கணையொன்றால் துளைத்தான். உடல் வடிவம் கொண்ட வேள்வியானது, மானின் வடிவத்தையேற்று, நெருப்பு தேவனுடன் {அக்னியுடன்} தப்பி ஓடியது.(13) அவ்வடிவில் சொர்க்கத்தை அடைந்த அவன் {வேள்வியானவன்} அழகால் சுடர்விட்டெரிந்தான். எனினும், ஓ! யுதிஷ்டிரரே, ருத்திரன் அவனை ஆகாயத்தில் பின்தொடர்ந்து சென்றான்.(14) வேள்வியானவன் தப்பி ஓடியபிறகு, தேவங்கள் தங்கள் ஒளியை இழந்தனர். தங்கள் உணர்வுகளை இழந்தவர்களான தேவர்கள் திகைப்படைந்திருந்தனர்.(15)
அப்போது முக்கண்ணனான மஹாதேவன், தன் வில்லைக் கொண்டு, சாவித்ரியின் கரங்களைச் சினத்தால் முறித்து, பகனின் கண்களையும், பூஷ்ணனின் {பூஷாவின்} பற்களையும் பிடுங்கினான்.(16) பிறகு தேவர்களும், அந்த வேள்வியின் பல்வேறு அங்கங்கள் அனைத்தும் தப்பி ஓடின. அவர்களில் சிலர் தப்பி ஓட முயலும்போது சுழன்று உணர்வுகளையற்றுக் கீழே விழுந்தனர்.(17) நீல மிடறு கொண்ட ருத்திரன் இவ்வாறு அவர்களைக் கலங்கடித்து, தன் வில்லின் நுனியைச் சுழற்றி அவர்களை முடக்கி உரக்கச் சிரித்தான்.(18) தேவர்கள் அப்போது பெருங்கூச்சலிட்டனர். அவர்களின் ஆணையின் பேரில் அந்த வில்லின் நாண்கயிறு அறுந்தது. நாண்கயிறு அறுந்ததும், அந்த வில்லானது ஒரு கோடாக நெடுக விரிந்தது.(19) பிறகு தேவர்கள், வில்லற்றவனாக இருந்த அந்தத் தேவர்களின் தேவனை {சிவனை}, {மான்வடிவில்} உடல் கொண்ட வேள்வியானவனுடன் அணுகி, அந்தப் பலமிக்க மஹாதேவனின் பாதுகாப்பை நாடி, அவனை நிறைவுகொள்ளச் செய்ய முயன்றனர்.(20)
நிறைவையடைந்த அந்தப் பெருந்தேவன் தன் கோபத்தை நீருக்குள் எறிந்தான். ஓ! மன்னா, அந்தக் கோபமானது நெருப்பின் வடிவத்தை ஏற்று, அந்த நீர்த்தனிமத்தை எரிப்பதிலேயே எப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.(21) பிறகு அவன் சாவித்ரிக்கு {சூரியனுக்கு} அவனது கரங்களையும், பகனுக்கு அவனது கண்களையும், பூஷ்ணனுக்கு {பூஷாவுக்கு} அவனது பற்களையும் மீண்டும் கொடுத்தான். ஓ! பாண்டவரே {யுதிஷ்டிரரே}, பிறகு அவன் வேள்விகளையும் மீண்டும் நிறுவினான்.(22) உலகமானது மீண்டும் பாதுகாப்பானதாகவும், நலமானதாகவும் மாறியது. தேவர்கள், அந்தப் பெருந்தெய்வத்தின் {சிவனின்} பங்காகத் தெளிந்த நெய்க்காணிக்கைகள் அனைத்தையும் ஒதுக்கினர்.(23) ஓ! ஏகாதிபதி, மஹாதேவன் கோபமடைந்த போது, மொத்த உலகமும் இவ்வாறே கலங்கியது; அவன் நிறைவடைந்தபோதோ அனைத்தும் பாதுகாப்பானவை ஆகின. பெருஞ்சக்தி கொண்ட அந்த மஹாதேவனே அஸ்வத்தாமரால் நிறைவுகொள்ளச் செய்யப்பட்டான்.(24) இதன் காரணமாகவே வலிமைமிக்க வில்லாளிகளான அந்த உமது மகன்களை அந்தப் போர்வீரரால் கொல்ல முடிந்தது. இதன் காரணமாகவே, பாஞ்சாலர்களையும், அவர்களது தொண்டர்கள் அனைவரையும் அவரால் கொல்லமுடிந்தது.(25) உமது மனத்தில் இவற்றை நினைக்காதீர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அக்காரியத்தைச் செயவில்லை. அது மஹாதேவனின் அருளாலேயே செய்யப்பட்டது. இப்போது அடுத்ததாகச் செய்ய வேண்டியதைச் செய்வீராக” என்றான் {கிருஷ்ணன்}” {என்றார் வைசம்பாயனர்}.(26)
ஐஷீக உபபர்வம் முற்றும்
சௌப்திக பர்வம் முற்றிற்று
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply