கிருஷ்ணனிடம் புலம்பிய காந்தாரி! – ஸ்திரீ பர்வம் பகுதி – 16-ஞானக்கண்ணால் போர்க்களத்தைக் கண்ட காந்தாரி; காந்தாரிக்கு ஞானக்கண் அளித்த வியாசர்; சோகத்தில் அழும் தன் மருமகள்களைக் கிருஷ்ணனுக்குக் காட்டிய காந்தாரி; களநிலவரத்தைக் கிருஷ்ணனுக்கு வர்ணித்து அழுது புலம்பியது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன காந்தாரி, போர்க்களத்தில் இருந்து தொலைவாக இருந்த அந்த இடத்தில் நின்று கொண்டு, தன் ஞானக்கண்ணால் குருக்களின் படுகொலையைக் கண்டாள்.(1) தன் தலைவனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} அர்ப்பணிப்புடன் இருந்த அந்த உயர்ந்த அருளைக் கொண்ட பெண்மணி {காந்தாரி}, எப்போதும் உயர்ந்த நோன்புகளை நோற்று வந்தாள். கடுந்தவங்களைச் செய்து கொண்டிருந்த அவள், எப்போதும் உண்மை நிறைந்த பேச்சைக் கொண்டிருந்தாள்.(2) புனிதச் செயல்களைச் செய்யும் பெருமுனிவர் வியாசரால் கொடுக்கப்பட்ட வரத்தின் விளைவால், அவள் ஆன்ம அறிவையும் சக்தியையும் கொண்டவளானாள். அப்போது அந்தப் பெருமாட்டி பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டாள்.(3) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்தக் குரு குல பெருமாட்டி {காந்தாரி}, அருகில் இருந்து பார்ப்பவளைப் போல, காணப்பயங்கரமானவையும், அற்புதக் காட்சிகள் நிறைந்தவையுமான போராளிகளில் முதன்மையானவர்களுடைய போர்க்களத்தைத் தொலைவிலிருந்தே கண்டாள்.(4) எலும்புகளும், தலைமுடியும் எங்கும் சிதறிக் கிடக்க, குருதியோடையால் மறைக்கப்பட்டிருந்த அந்தக் களம், அனைத்துப் பக்கங்களிலும் ஆயிரமாயிரம் சடலங்களால் விரவப்பட்டுக் கிடந்தது.(5)
யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள் மற்றும் பிறவகைப் போராளிகளின் குருதியால் மறைக்கப்பட்டிருந்த அதில், தலையற்ற முண்டங்களும், உடல்களற்ற தலைகளும் நிறைந்திருந்தன.(6) மேலும் அது {அந்தப் போர்க்களமானது}, யானைகள், குதிரைகள், ஆண்கள், பெண்கள், நரிகள், நாரைகள், அண்டங்காக்கைகள், கங்கங்கள், காக்கைகள் ஆகியவற்றின் ஒலிகளை எதிரொலித்துக் கொண்டிருந்தது.(7) மனித ஊனுண்ணும் ராட்சசர்களின் விளையாட்டுக்களமாக அஃது இருந்தது. அன்றில்களும், கழுகுகளும் நிறைந்த அதில் நரிக்கூட்டங்களின் மங்கலமற்ற ஒலி எதிரொலித்துக் கொண்டிருந்தது.(8)
பிறகு வியாசரின் ஆணையின் பேரில் மன்னன் திருதராஷ்டிரன், யுதிஷ்டிரன் தலைமையிலான பாண்டுவின் மகன்கள் அனைவருடனும், வாசுதேவனுடனும் {கிருஷ்ணனுடனும்} மற்றும் குரு பெண்கள் அனைவருடனும் போர்க்களத்தை நோக்கிச் சென்றான்.(9,10) தங்கள் தலைவர்களை இழந்தவர்களான அந்தப் பெண்கள், குருக்ஷேத்திரத்தை அடைந்து, கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கும் தங்கள் சகோதரர்கள், மகன்கள், தந்தைமார் மற்றும் கணவர்கள் ஆகியோர் இரைதேடும் விலங்குகளாலும், நரிகள், அண்டங்காக்கைகள், காக்கைகள், பேய்கள் {பூதங்கள்}, பிசாசங்கள், ராட்சசர்கள் மற்றும் இன்னும்பிற இரவு உலாவிகளாலும் உண்ணப்படுவதைக் கண்டனர்.(11,12)
ருத்திரனின் விளையாட்டுக் களத்தில் காணப்படும் காட்சிகளுக்கு ஒப்பான அந்தப் பேரழிவைக் கண்ட பெண்கள், உரக்கக் கதறியபடியே தங்கள் விலைமதிப்புமிக்க வாகனங்களில் இருந்து வேகமாகக் கீழிறங்கினர். தாங்கள் இதுவரை கண்டிராத காட்சியைக் கண்ட அந்தப் பாரதக் குலப் பெண்கள், தங்கள் அங்கங்களில் பலம் குறைவதை உணர்ந்து, கீழே தரையில் விழுந்தனர்.(14) வேறு சிலரோ, தங்கள் புலனுணர்வுகளை இழந்து மயக்கமடைந்தனர். உண்மையில், பாஞ்சாலப் பெண்களும், குருகுலப் பெண்களும் சொல்லொண்ணாத் துயரில் மூழ்கினர்.(15) அனைத்துக் கடமைகளையும் அறிந்தவளான அந்தச் சுபலன் மகள் {காந்தாரி}, துயரில் பீடிக்கப்பட்ட பெண்களின் கூச்சலை அனைத்துப் பக்கங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருந்த அந்தப் பயங்கரக் களத்தைக் கண்டு,(16) மனிதர்களில் முதன்மையானவனும், தாமரைக் கண்ணனுமான கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினாள்.
குருக்களின் முற்றான அழிவைக் கண்டு, அக்காட்சியால் துயரத்தில் நிறைந்த அவள் {காந்தரி – கிருஷ்ணனிடம்}, இவ்வார்த்தைகளைச் சொன்னாள்:(17) “ஓ! தாமரைக்கண் மாதவா {கிருஷ்ணா}, என் இந்த மருமகள்களைப் பார். தங்கள் தலைவர்களை இழந்து, கலைந்த கேசங்களுடன், பெண் அன்றில் கூட்டத்தைப் போல, துயரால் இவர்கள் பரிதாபகரமாகக் கதறுவதைப் பார்.(18) சடலங்களை அடைந்த அவர்கள், அந்தப் பெரும் பாரதத் தலைவர்களின் நினைவுகளைத் திரும்பச் சொல்கிறார்கள். அவர்கள் தங்கள் மகன்கள், சகோதரர்கள், தந்தைமார் மற்றும் கணவர்களை நோக்கிப் பெருங்கூட்டமாக அங்கேயும், இங்கேயும் ஓடுகிறார்கள்.(19) ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, தங்கள் பிள்ளைகளை இழந்தவர்களும், வீரர்களின் தாய்மாருமான அவர்கள் அனைவராலும் இந்தக்களமே மறைக்கப்பட்டிருப்பதைப் பார். அதோ அந்தப் பகுதிகள், துணைவர்களை இழந்தவர்களும், வீரர்களின் துணைவர்களுமான {மனைவிகளுமான} அவர்களால் மறைக்கப்பட்டிருப்பதைப் பார்.(20) மனிதர்களில் புலிகளான பீஷ்மர், கர்ணன், அபிமன்யு, துரோணர், துருபதன், சல்லியன் ஆகியோரால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்தப் போர்க்களமானது சுடர்மிக்க நெருப்புகளைக் கொண்டிருப்பதைப் போலத் தெரிவதைப் பார்.(21), உயரான்மப் போர்வீரர்களின் தங்கக் கவசங்கள், விலைமதிப்புமிக்க ரத்தினங்கள், அங்கதங்கள், கேயூரங்கள் மற்றும் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பார்.(22) வீரர்களின் கையில் இருந்து வீசப்பட்ட ஈட்டிகள் {சக்திகள்} மற்றும் முள்பதிக்கப்பட்ட தண்டங்கள் {பரிகங்கள்} ஆகியவற்றாலும், வாள்கள், பல்வேறு வகைகளிலான கூரிய கணைகள் மற்றும் விற்கள் ஆகியவற்றாலும் அது விரவப்பட்டுக் கிடப்பதைப் பார்.(23)
ஒன்றாகக் கூடியிருக்கும் இரைதேடும் விலங்குகள் நின்றுகொண்டோ, விளையாடிக் கொண்டோ, கிடந்த நிலையிலோ தாங்கள் விரும்பியபடி இருக்கின்றன.(24) ஓ! பலமிக்க வீரா, போர்க்களம் இவ்வாறே இருக்கிறது. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இக்காட்சியால் நான் துயரில் எரிந்து கொண்டிருக்கிறேன். ஓ! மதுசூதனா, (அனைத்தும் எவற்றால் உண்டானவையோ) அந்த ஐம்பூதங்களே {பஞ்சபூதங்களே} பாஞ்சாலர்களையும், குருக்களையும் அழித்திருக்கின்றன என நான் நினைக்கிறேன்.(26) கடுமைநிறைந்த கழுகுகளும், ஆயிரக்கணக்கான பிற பறவைகளும், குருதிதோய்ந்த உடல்களின் கவசங்களைப் பிடித்து இழுத்து அவற்றை விழுங்குகின்றன.(27) ஜெயத்ரதன், கர்ணன், துரோணர், பீஷ்மர், அபிமன்யு போன்ற வீரர்கள் இறப்பார்கள் என்று எவர் கருதியிருப்பார்கள்?(28) ஐயோ, ஓ! மதுசூதனா, கொல்லப்பட முடியாதவர்களாக இருப்பினும் அவர்களும் கொல்லப்பட்டார்கள். கழுகுகளும், கங்கங்களும், அண்டங்காக்கைகளும், பருந்துகளும், நாய்களும், நரிகளும் அவர்களை உண்கின்றன.(29)
அதோ அங்கே, துரியோதனன் தரப்பில் போரிட்டவர்களும், கோபத்தில் களம் புகுந்தவர்களுமான அந்த மனிதர்களில் புலிகள், அணைந்த நெருப்புகளைப் போல இப்போது கீழே விழுந்து கிடக்கின்றனர்.(30) அவர்கள் அனைவரும் மென்மையான, தூய்மையான படுக்கையில் உறங்கத் தகுந்தவர்களாவர். ஐயோ, ஆனால் அவர்கள் இடரில் மூழ்கி இன்று வெறுந்தரையில் உறங்குகிறார்கள்.(31) அவர்களது புகழைப் பாடும் துதிபாடிகளால் முன்பு எப்போதும் அவர்கள் மகிழ்விக்கப்பட்டார்கள். {அப்படிப்பட்ட} அவர்கள், இப்போது, நரிகளின் கடுமையான மங்கலமற்ற ஊளையைக் கேட்கின்றனர்.(32) அங்கங்களில் சந்தனக்குழம்பையும், ஜவ்வாது பொடியையும் பூசிக்கொண்டு, விலைமதிப்புமிக்கப் படுக்கைகளில் முன்பு உறங்கிய அந்தச் சிறப்புமிக்க வீரர்கள், ஐயோ, இப்போது புழுதியில் உறங்குகின்றனர்.(33) இந்தக் கழுகுகளும், ஓநாய்களும், அண்டங்காக்கைகளுமே இப்போது அவர்களது ஆபரணங்களாகியிருக்கின்றன. மீண்டும் மீண்டும் மங்கலமற்ற கடும் இரைச்சலை உண்டாக்கும் அந்த உயிரினங்கள் இப்போது அவர்களின் உடல்களை இழுத்துச் செல்கின்றன.(34) போரில் திளைப்பவர்களும், உற்சாகமிக்கவர்களாகத் தெரிபவர்களுமான அந்த வீரர்கள், ஏதோ இன்னும் உயிரோடு இருப்பதைப் போலத் தங்களின் அருகில் கூரிய கணைகளையும், நன்கு கடினமாக்கப்பட்ட வாள்களையும், பிரகாசமான கதாயுதங்களையும் கொண்டிருக்கின்றனர்.(35)
அழகையும், நல்ல நிறத்தையும், கொண்டவர்களும், தங்க மாலையால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான முதன்மையான வீரர்கள் பலரும், தரையில் உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.(36) பருத்த கரங்களைக் கொண்ட வேறு சிலர், ஏதோ தங்கள் அன்புக்குரிய மனைவியரைத் தழுவிக் கொள்வதைப் போலக் கதாயுதங்களைத் தழுவிக் கொண்டு உறங்குகின்றனர்.(37) கவசம் பூண்ட இன்னும் சிலர், தங்கள் கரங்களில் பிரகாசமான ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றனர். ஓ! ஜனார்த்தனா, இரைதேடும் விலங்குகள் அவர்கள் இன்னும் உயிரோடு இருப்பதாகக் கருதி அவர்களைச் சிதைக்காமல் இருக்கின்றன.(38) கழுத்துகளில் பசும்பொன்னாலான அழகிய மாலைகளை அணிந்திருக்கும் வேறு சில சிறப்புமிக்க வீரர்கள், அனைத்துப் பக்கங்களிலும் சிதறிக் கிடந்து, ஊனுண்ணும் விலங்குகளால் இழுத்துச் செல்லப்படுகின்றனர்.(39) அதோ அங்கே, ஆயிரக்கணக்கான கடும் நரிகள், மரணத்தால் அசையாமல் கிடக்கும் சிறப்புமிக்க வீரர்கள் பலரின் கழுத்தைச் சுற்றியிருக்கும் தங்க ஆரங்களை இழுத்துக் கொண்டிருக்கின்றன.(40)
ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட துதிபாடிகள் பலரின் பாடல்களாலும், துதிகளாலும் முன்பு மகிழ்விக்கப்பட்ட அவர்கள்,(41) இப்போது துயரால் பீடிக்கப்பட்டு, அவர்களைச் சூழ்ந்து அமர்ந்து கொண்டு அழுது புலம்பும் அழகிய பெண்களால் சூழப்பட்டிருக்கிறார்கள்.(42) அந்த அழகிய பெண்களின் முகங்கள் மங்கியிருந்தாலும், செந்தாமரைகளின் கூட்டத்தைப் போல இன்னும் ஒளியுடனேயே இருந்தன.(43) அந்தக் குரு மங்கையர் தங்கள் தங்கள் தொண்டச்சிகளுடனும், தோழிகளுடனும் சேர்ந்து அழுவதை நிறுத்திவிட்டனர். அவர்கள் அனைவரும் கவலையில் நிறைந்துள்ளனர். சோகத்தில் மூழ்கியிருக்கும் அவர்கள் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(44) கோபத்துடன் அழுது புலம்பிக் கொண்டிருக்கும் அந்த அழகிகளின் முகங்கள், காலைச் சூரியனைப் போவோ, தங்கத்தைப் போலவோ, புடம்போட்ட தாமிரத்தைப் போலவோ பிரகாசமாக இருக்கின்றன.(45)
முற்றுபெறாத பொருள் கொண்ட தங்கள் ஒவ்வொருவரின் புலம்பல்களையும் கேட்ட அம்மங்கையரால், அனைத்துப் பக்கத்திலும் இருந்து வெடித்த உரத்த துயர ஓலங்களின் விளைவாக அவற்றின் பொருளை உணர்ந்து கொள்ள முடியவில்லை.(46) அவர்களில் சிலர், நீண்ட பெருமூச்சுகளைவிட்டு, மீண்டும் மீண்டும் புலம்பல்களில் ஈடுபட்டுத் துயரால் திகைப்படைந்து தங்கள் உயிரையே விடுகின்றனர்.(47) அவர்களில் பலர், (தங்கள் மகன்கள், கணவர்கள், அல்லது தந்தைமாரின்) உடல்களைக் கண்டு அழுது, உரக்க ஓலமிடுகின்றனர். வேறு சிலர் தங்கள் மென்மையான கரங்களால் தங்கள் தலைகளில் அடித்துக் கொள்கின்றனர்.(48) பூமியானது, துண்டிக்கப்பட்ட தலைகள், கரங்கள் மற்றும் பிற அங்கங்கள் ஒன்று கலந்த நிலையில் விரவப்பட்டு, பெருங்குவியல்களாகச் சேர்ந்து, இந்தப் பேரிடரின் அடையாளங்களோடு மிகப் பிரகாசமாகத் தெரிகிறது.(49) பேரழகைக் கொண்ட தலையற்ற முண்டங்கள் பலவற்றையும், உடல்களற்ற தலைகள் பலவற்றையும் கண்ட அந்த அழகிகள், உணர்விழந்து போய் நீண்ட நேரமாகத் தரையில் கிடக்கின்றனர்.(50)
குறிப்பிட்ட தலைகளைக் குறிப்பிட்ட உடல்களுடன் பொருத்திப் பார்க்கும் அப்பெண்கள், துயரால் உணர்விழந்து மீண்டும் தங்கள் தவறுகளைக் கண்டு, “இஃது இவருடையதல்ல” என்று சொல்லி மீண்டும் மிகுந்த துன்பத்துடன் அழுகின்றனர்.(51) வேறு சிலர், கணைகளால் துண்டிக்கப்பட்ட கரங்களையும், தொடைகளையும், கால்களையும் ஒன்றாக இணைத்து, (மீட்கப்பட்ட அந்த வடிவங்களைக் கண்டு) மீண்டும் மீண்டும் தங்கள் உணர்வுகளை இழக்கின்றனர்.(52) பாரத மங்கையர் சிலர், விலங்குகள், பறவைகளால் சிதைக்கப்பட்டு, தலைகள் வெட்டப்பட்டிருந்த தங்கள் தலைவர்களின் உடல்களைக் கண்டு, அவற்றை அடையாளம் காண முடியாமல் தவிக்கின்றனர்.(53) வேறு சிலரோ, ஓ! மதுசூதனா, எதிரிகளால் கொல்லப்பட்ட தங்கள் சகோதரர்கள், தந்தைமார், மகன்கள் மற்றும் கணவர்களைக் கண்டு, தங்கள் கரங்களால் தங்கள் தலைகளை அடித்துக் கொள்கின்றனர்.(54)
சதை மற்றும் குருதியால் சகதியாகி இருக்கும் பூமியானது, இன்னும் வாளைப் பிடியில் கொண்டிருக்கும் கரங்களாலும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளாலும் கடக்கப்பட முடியாததாக இருக்கிறது.(55) சிறு துயரையும் இதற்கு முன்பு அனுபவித்திராத அந்தக் களங்கமற்ற மங்கையர், தங்கள் சகோதர்கள், தந்தைமார், மகன்கள் ஆகியோர் களத்தில் பரவிக் கிடப்பதைக் கண்டு இப்போது சொல்லொணாத் துயரத்தில் மூழ்கியிருக்கின்றனர்.(56) ஓ! ஜனார்த்தனா, சிறந்த பிடரியால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அழகிய குதிரைக் குட்டிகளுக்கு ஒப்பானவர்களான திருதராஷ்டிரர் மருமகள்களைப் பார்.(57) ஓ! கேசவா, அழகிய வடிவங்களைக் கொண்ட அந்த மங்கையர் இத்தகு தன்மையை அடைந்திருப்பதைக் காண்பதைவிடச் சோகமான காட்சி எனக்கு வேறு என்ன இருக்க முடியும்?(58) ஓ! கேசவா, என் மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் எதிரிகளால் கொல்லப்பட்டதை நான் காண்பதால், நான் என் முந்தைய பிறவிகளில் பெரும்பாவங்களை இழைத்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை” {என்றாள் காந்தாரி}.(59) துயரால் இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காந்தாரியின் கண்கள் தன் மகன் (துரியோதனனின்) மேல் விழுந்தது” {என்றார் வைசம்பாயனர்}.(59)
பானுமதியின் நிலை! – ஸ்திரீ பர்வம் பகுதி – 17-துரியோதனனின் உடலைக் கண்டு கதறி விழுந்த காந்தாரி; தன் மகனின் உடலைக் கண்ணீரால் நனைத்தது; ஆதரவற்ற திருதராஷ்டிரனுக்காக வருந்தியது; துரியோதனனின் மனைவியான பானுமதியின் நிலையைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணனிடம் புலம்பிய காந்தாரி…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “காந்தாரி, துரியோதனனைக் கண்டதும், துயரால் தன் உணர்வுகளை இழந்து, வேரோடு சாய்க்கப்பட்ட வாழை மரத்தைப் போலத் திடீரெனப் பூமியில் விழுந்தாள்.(1) விரைவில் தன் உணர்வுகள் மீண்ட அவள், குருதியில் மறைந்து வெறுந்தரையில் கிடக்கும் தன் மகனைக் கண்டு மீண்டும் மீண்டும் உரக்க ஓலமிட்டபடியே அழத் தொடங்கினாள்.(2) தன் மகனை ஆரத்தழுவி கொண்ட காந்தாரி, அவனுக்காகப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டாள். துயரால் பீடிக்கப்பட்டவளும், அதிகமான புலன்கலக்கம் அடைந்தவளுமான அந்தக் குரு குல ராணி {காந்தாரி}, “ஐயோ, ஓ! மகனே”, “ஐயோ, ஓ! மகனே” என்று சொல்லி அழுதாள்.(3) கவலையால் எரிந்த அந்த ராணி, பருத்த, அகன்ற தோள்களைக் கொண்டவனும், மாலைகளாலும், கழுத்தணிகளாலும் அலங்கரிக்கப்பட்டவனுமான தன் மகனின் {துரியோதனனின்} உடலைத் தன் கண்ணீரால் நனைத்தாள்.
அருகே நின்றிருந்த ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்} அவள் {காந்தாரி},(4) “ஓ! பலமிக்கவனே, ஓ! விருஷ்ணி குலத்தோனே, இந்தக் குலத்திற்கு அழிவை ஏற்படுத்திய இந்தப் போரின் தொடக்கத்தில், இந்த மன்னர்களில் முதன்மையானவன் {துரியோதனன்} என்னிடம், “ஓ! தாயே, இந்த உட்பூசலில் எனக்கு வெற்றியை விரும்புவாயாக” என்றான். அவன் இவ்வார்த்தைகளை என்னிடம் சொன்னபோது, ஓ! மனிதர்களில் புலியே, பேரிடர் எங்களை அணுகியதை அறிந்த நான், அவனிடம் {துரியோதனனிடம்}, “எங்கே அறமிருக்கிறதோ, அங்கேயே வெற்றியுமிருக்கும்.(6) ஓ! மகனே, உன் இதயம் போரில் நிலைத்திருப்பதால், ஆயுதங்களால் ({ஆயுதங்களைப்} பயன்படுத்தி) அடையும் உலகை தேவர்களைப் போலவே நீ அடைவாயாக ({அடைந்து} அங்கே விளையாடிக் கொண்டிருப்பாயாக)” என்றேன்.(7) இவையே நான் அவனிடம் சொன்ன வார்த்தைகளாகும். இதன் காரணமாக நான் என் மகனுக்காக வருந்தவில்லை. எனினும், நண்பர்களையும், சொந்தங்களையும் இழந்து ஆதரவற்றவராக இருக்கும் திருதராஷ்டிரருக்காகவே நான் வருந்துகிறேன்.(8) ஓ! மாதவா, தேர்வீரர்களில் முதன்மையானவனும், கோபம் நிறைந்தவனும், ஆயுதங்களில் திறன்மிக்கவனும், போரில் தடுக்கப்பட முடியாதவனுமான என் மகன் {துரியோதனன்} வீரர்களின் படுக்கையில் உறங்குவதைப் பார்.(9) காலத்தால் கொண்டுவரப்பட்ட மாறுபாடுகளைப் பார். பழங்காலத்தில் மகுடம் தரித்தோர் அனைவரின் தலைகளிலும் நடந்து சென்ற இந்த எதிரிகளை எரிப்பவன், இப்போது புழுதியில் உறங்குகிறான்.(10)
வீரர்களுக்கான படுக்கையில் உறங்கும் வீரத் துரியோதனன், அடைதற்கு மிக அரிய கதியையே அடைந்திருக்கிறான் என்பதில் ஐயமில்லை.(11) முன்பு, பேரழகுப் பெண்கள் புடைசூழ அமர்ந்திருந்த அந்த இளவரசன் {துரியோதனன்}, இப்போது வீரர்களின் படுக்கையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு மங்கலமற்ற நரிகள் திளைக்கின்றன.(12) முன்பு, மகிழ்ச்சிப்படுத்துவதற்காக ஒருவரோடொருவர் போட்டிப் போட்டுக் கொண்ட மன்னர்களால் சூழப்பட்ட இவன், இப்போது கழுகுகளால் சூழப்பட்டுத் தரையில் கிடக்கிறான்.(13) முன்பு, அழகிய பெண்களால் அழகிய விசிறிகளைக் கொண்டு விசிறப்பட்டவன், இப்போது (ஊனுண்ணும்) பறவைகளின் சிறகடிப்பால் விசிறப்படுகிறான்.(14) பெரும் பலத்தையும், உண்மை ஆற்றலையும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட இந்த இளவரசன் {துரியோதனன்}, போரில் பீமசேனனால் கொல்லப்பட்டு, சிங்கத்தால் கொல்லப்பட்ட ஒரு யானையைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறான்.(15)
ஓ! கிருஷ்ணா, பீமசேனனின் கதாயுதத்தால் கொல்லப்பட்டு, குருதியில் மறைந்து, வெறுந்தரையில் கிடக்கும் துரியோதனனைப் பார்.(16) ஓ! கேசவா, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட எவன், பதினோரு {11} அக்ஷௌஹிணி துருப்புகளைத் திரட்டினானோ, அவன் தன் தீயக் கொள்கையின் {தீய புத்தியின்} விளைவால் இப்போது கொல்லப்பட்டுக் கிடக்கிறான்.(17) ஐயோ, பெரும் வில்லாளியான, இந்த வலிமைமிக்கத் தேர்வீரன், பீமசேனனால் கொல்லப்பட்டு, சிங்கத்தால் கொல்லப்பட்ட ஒரு புலியைப் போல இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறான்.(18) அலட்சியம் செய்பவனும், மூடனுமான இந்தத் தீய இளவரசன் {துரியோதனன்}, விதுரன் மற்றும் தன் தந்தையை {திருதராஷ்டிரரை} அலட்சியம் செய்து, பெரியோரை அவமதித்ததன் விளைவாகவே மரணத்திற்கு அடிபணிந்திருக்கிறான்.(19) எவன் எந்த எதிரியுமில்லாமல் பதிமூன்று {13} ஆண்டுகள் இந்தப் பூமியை ஆண்டானோ, ஐயோ, என் மகனான அந்த இளவரசன், எதிரிகளால் கொல்லப்பட்டு இன்று வெறுந்தரையில் உறங்குகிறான்.(20)
ஓ! கிருஷ்ணா, சிறிது காலத்திற்கு முன்புதான் யானைகள், பசுக்கள் மற்றும் குதிரைகள் நிறைந்த பூமியானது, துரியோதனனால் ஆளப்படுவதை நான் கண்டேன்.(21) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இன்றோ, யானைகள், பசுக்கள் மற்றும் குதிரைகளற்று வேறொருவனால் அவள் {பூமி} ஆளப்படுவதை நான் காணப் போகிறேன். ஓ! மாதவா, நான் உயிர்வாழ வேண்டிய தேவை என்ன இருக்கிறது?(22) கொல்லப்பட்ட வீரர்களின் அருகில் இந்த அழகிய பெண்களின அழுது கொண்டிருக்கும் காட்சியே என் மகன் கொல்லப்பட்டதைக் காட்டிலும் அதிகத் துன்பத்தைத் தருவதைப் பார்.(23) ஓ! கிருஷ்ணா, லக்ஷ்மணனின் தாயும், பெரும் இடையைக் கொண்டவளும், கலைந்த கேசத்துடன் இருப்பவளும், தங்கமயமான வேள்விப்பீடத்திற்கு ஒப்பானவளுமான துரியோதனனின் அன்புக்குரிய மனைவியை {பானுமதியைப்}[1] பார்.(24) பெரும் நுண்ணறிவைக் கொண்ட இந்தக் காரிகை, தன் வலிமைமிக்கத் தலைவன் {துரியோதனன்} உயிரோடிருந்த போது, தன் தலைவனின் அழகிய கரங்களின் அணைப்பிற்குள் விளையாடிக் கொண்டிருந்தாள்.(25)போரில் கொல்லப்பட்ட என் மகனையும், பேரப்பிள்ளையையும் கண்டும், உண்மையில் என் இதயம் நூறு துண்டுகளாக ஏன் நொறுங்கவில்லை?(26) ஐயோ, அந்தக் களங்கமற்ற மங்கை {பானுமதி}, குருதியால் மறைந்திருக்கும் தன் மகனை (மகனின் தலையை) முகர்ந்து பார்க்கிறாள். மேலும், அழகிய தொடைகளைக் கொண்டவளான அந்த மங்கை, தன் அழகிய கரத்தால் துரியோதனனின் உடலை மென்மையாகத் தடவுகிறாள்.(27) ஒரு நேரம் தன் தலைவனுக்காகவும் {துரியோதனனுக்காகவும்}, மறுநேரம் தன் மகனுக்காகவும் {லக்ஷ்மணனுக்காகவும்} அவள் {பானுமதி} கவலையுறுகிறாள். ஒரே நேரம் அவள் தன் தலைவனையும், மறுநேரம் தன் மகனையும் பார்க்கிறாள்.(28) ஓ! மாதவா, தன் கரங்களால் தன் தலையை அடித்துக் கொண்டு, குருக்களின் மன்னனான தன் வீரத் துணைவனின் மார்பில் அவள் விழுவதைப் பார்.(29) தாமரையின் இதழ்களைப் போன்ற நிறத்தைக் கொண்டவளான அவள், ஒரு தாமரையைப் போலவே அழகாக இருக்கிறாள். நற்பேறற்ற அந்த இளவரசி இப்போது தன் மகனின் முகத்தையும், இப்போது தன் தலைவனின் முகத்தையும் தடவுகிறாள்.(30) சாத்திரங்களும், சுருதிகளும் உண்மையென்றால், ஆயுதப் பயன்பாட்டால் ஒருவன் வெல்லும் (அருள் நிறைந்த) உலகங்களையும் இந்த மன்னனும் {துரியோதனனும்} அடைந்திருப்பான் என்பதில் ஐயமில்லை” என்றாள் {காந்தாரி}.(31)
துச்சாசனனைக் கண்ட காந்தாரி! – ஸ்திரீ பர்வம் பகுதி – 18-தன் மருமகள்களின் பரிதாபகரமான நிலையைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக்காட்டிய காந்தாரி; துச்சாசனனைக் கொன்று அவனுடைய உயிர்க்குருதியைக் குடித்த பீமனை நினைத்தது; துச்சாசனன் செய்த தீமையைச் சொன்னது; பீமனைக் குறித்துத் துரியோதனனுக்குத் தான் எச்சரித்ததைக் கிருஷ்ணனிடம் நினைவுகூர்ந்த காந்தாரி…
காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “ஓ! மாதவா, (போர்முயற்சியில்) களைப்படைய இயலாத என் மகன்கள் நூறு பேரும், போரில் பீமசேனனின் கதாயுதத்தால் கொல்லப்பட்டனர்.(1) என் மகன்களை இழந்தவர்களான இளம் வயதுடைய என் மருமகள்கள், கலைந்த கேசங்களுடன் இன்று போர்க்களத்தில் திரிவதே எனக்குப் பெரும் துயரை அளிக்கிறது.(2) ஐயோ, பல ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கால்களுடன், சிறந்த மாளிகைகளின் உப்பரிகைகளிலேயே நடந்த இவர்கள், இப்போது, பெருந்துயரால் இதயம் பீடிக்கப்பட்ட நிலையில், குருதியால் சகதியாகியிருக்கும் இந்தக் கடும்பூமியைத் தங்கள் கால்களால் தீண்டுகின்றனர்.(3) கவலையில் சுழலும் இவர்கள், பெருஞ்சிரமத்துடன் கழுகுகளையும், நரிகளையும், காகங்களையும் விரட்டிக் கொண்டு, மதுவால் வெறியேற்றப்பட்டவர்களைப் போலத் திரிந்து கொண்டிருக்கின்றனர்[1].(4) பழுதற்ற அங்கங்களைக் கொண்டவர்களும், கொடியிடை கொண்டவர்களுமான இந்த மங்கையர், இந்தப் பயங்கரப் பேரழிவைக் கண்டு, துயரத்தில் மூழ்கிக் கீழே விழுவதைப் பார்.(5)
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, லக்ஷ்மணனின் தாயான இந்த இளவரசியை {பானுமதியைக்} கண்டு என் இதயம் துயரத்தால் பிளக்கிறது.(6) அழகிய கரங்களைக் கொண்ட இந்த மங்கையரில் சிலர், வெறுந்தரையில் இறந்து கிடப்பவர்களான தங்கள் சகோதரர்களையும், சிலர் தங்கள் கணவர்களையும், சிலர் தங்கள் மகன்களையும் கண்டு, கொல்லப்பட்டவர்களின் கரங்களைப் பற்றிக் கொண்டு கீழே விழுகின்றனர்.(7) ஓ! வெல்லப்படாதவனே, இந்தப் பயங்கரப் பேரழிவைக் கண்டு கதறி அழும் முதிய மற்றும் நடுத்தர வயது பெண்களின் ஓலத்தைக் கேட்பாயாக.(8) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, அந்தக் காரிகையர், களைப்பால் மயங்கி, உடைந்த தேர்க்கூடுகளில் தங்களைத் தாங்கிக் கொண்டு ஓய்வதைப் பார்.(9) ஓ! கிருஷ்ணா, அவர்களில் சிலர், அழகிய மூக்கு மற்றும் காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதும், துண்டிக்கப்பட்டதுமான தங்கள் சொந்தக்காரனின் தலையை எடுத்துக் கொண்டு துயரில் நிற்பதைப் பார்.(10)
ஓ! பாவமற்றவனே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அவர்களுடையவர்களும், சிறுமதி கொண்டவளான என்னுடையவர்களுமான உறவினர்கள் மற்றும் சொந்தங்கள் அனைவரும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதால், நாங்கள் எங்கள் முந்தைய பிறவியில் பெரும்பாவங்களைச் செய்திருக்க வேண்டும். ஓ! விருஷ்ணி குலத்தோனே, நியாயமானவையாகவோ, நியாயமற்றவையாகவோ இருக்கும் எங்கள் செயல்பாடுகள் பலமில்லாமல் போகாது.(11,12) ஓ! மாதவா, அழகிய முலைகளையும், வயிற்றையும் கொண்டவர்களும், நற்குடியில் பிறந்தவர்களும், பணிவுடையவர்களும், கரிய இமை முடிகளைக் கொண்டவர்களும், தங்கள் தலைகளில் கருங்குழலைக் கொண்டவர்களும், இனிய குரலைக் கொண்டவர்களும், அன்னப்பறவைகளைப் போல அன்பானவர்களுமான அந்த இளம்பெண்கள், பெருந்துயரத்தால் தங்கள் புலனுணர்வுகளை இழந்து, நாரைக் கூட்டத்தைப் போலப் பரிதாபகரமாக அழுவதைப் பார்.(13,14) ஓ! தாமரைக்கண் வீரா, முற்றுமுழுதாக மலர்ந்திருக்கும் தாமரைகளுக்கு ஒப்பான அவர்களுடைய அழகிய முகங்கள் சூரியனால் எரிக்கப்படுவதைப் பார்.(15)
ஐயோ, ஓ! வாசுதேவா {கிருஷ்ணா}, செருக்குடையவர்களும், மதங்கொண்ட யானைகளைப் போன்ற ஆற்றலைக் கொண்டவர்களுமான என் பிள்ளைகளின் மனைவியர், இப்போது பொதுமக்களின் வெறித்த பார்வைக்கு வெளிப்பட்டு நிற்கின்றனர்.(16) ஓ! கோவிந்தா, என் மகன்களுக்குச் சொந்தமானவையான, நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட கேடயங்கள், சூரியப் பிரகாசத்துடன் கூடிய கொடிமரங்கள், தங்கக் கவசங்கள், கழுத்தணிகள், தங்கத்தாலான மார்புக் கவசங்கள், தலைக்கவசங்கள் ஆகியன, தெளிந்த நெய்யிலான நீர்க்காணிக்கைகள் {ஆகுதிகள்} ஊற்றப்பட்டு, காந்தியுடன் சுடர்விட்டெரியும் வேள்வி நெருப்புகளைப் போலப் பூமியில் சிதறிக் கிடப்பதைப் பார்.(17,18) பீமனால் வீழ்த்தப்பட்டு, எதிரிகளைக் கொல்லும் அந்த வீரனால் அங்கமெல்லாம் உள்ள குருதி குடிக்கப்பட்டு அங்கே துச்சாசனன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.(19) ஓ! மாதவா, பகடையாட்டத்தின் போது உண்டான தன் துயரங்களை நினைத்துப் பார்த்த திரௌபதியினால் தூண்டப்பட்டு, பீமனின் கதாயுதத்தால் கொல்லப்பட்ட என் மற்றொரு மகனை {துச்சாசனனைப்} பார்.(20)
ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, தன் அண்ணனுக்கும் {துரியோதனனுக்கும்}, கர்ணனுக்கும் ஏற்புடையதைச் செய்ய விரும்பிய இந்தத் துச்சாசனன், பகடையில் வெல்லப்பட்ட அந்தப் பாஞ்சால இளவரசியிடம் {திரௌபதியிடம்}, சபைக்கு மத்தியில் வைத்து, “நீ இப்போது ஓர் அடிமையின் மனைவியாவாய். ஓ! பெண்ணே, சகாதேவன், நகுலன் மற்றும் அர்ஜுனனுடன் இப்போது நீ எங்கள் வீட்டுக்குள் நுழைவாயாக” என்றான்[2].(21,22) ஓ!கிருஷ்ணா, அச்சந்தர்ப்பத்தில் நான் மன்னன் துரியோதனனிடம், “ஓ! மகனே {துரியோதனா}, (உன் தரப்பில் இருந்து) கோபம் நிறைந்தவனான சகுனியைக் கைவிடுவாயாக.(23) உன் தாய்மாமன் மிகத் தீய ஆன்மாக் கொண்டவனும், சச்சரவை அதிகம் விரும்புபவனுமாக இருக்கிறான். ஓ! மகனே, தாமதமில்லாமல் அவனைக் கைவிட்டு, பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்வாயாக.(24) ஓ! சிறு மதி கொண்டோனே, கோபம் நிறைந்த பீமசேனனைக் குறித்து நீ நினைத்துப் பார்க்கவில்லை. எரிப்பந்தங்களைக் கொண்டு யானையைத் தாக்கும் மனிதனைப் போல நீ உன் வார்த்தைகளெனும் கணைகளால் அவனைத் {பீமனைத்} துளைக்கிறாய்” என்றேன்.(25)ஐயோ, என் வார்த்தைகளை அலட்சியம் செய்த அவன் {துரியோதனன்}, பெருங்காளையின் மீது விஷத்தைக் கக்கும் பாம்பொன்றைப் போலத் தன் வார்த்தை நஞ்சை அவன் {பீமன்} மீதும், ஏற்கனவே சொல்லீட்டிகளால் துளைக்கப்பட்டிருந்த அவர்கள் {பாண்டவர்கள்} மீதும் கக்கினான்.(26) அதோ அங்கே சிங்கத்தால் கொல்லப்பட்ட பெரும் யானையொன்றைப் போல, பீமசேனனால் கொல்லப்பட்டுத் தன் பருத்த கரங்கள் இரண்டையும் விரித்தபடியே துச்சாசனன் உறங்கிக் கொடிருக்கிறான்.(27) பெருங்கோபம் கொண்டவனான பீமசேனனோ, தன் எதிரியின் {துச்சாசனனின்} குருதியைப் போரில் குடித்து மிகப் பயங்கரமான செயலைச்செய்துவிட்டான்” என்றாள் {காந்தாரி}.(28)
மகன்களுக்காகப் புலம்பிய காந்தாரி! – ஸ்திரீ பர்வம் பகுதி – 19- தன் மகன்களான விகர்ணன், துர்முகன், சித்திரசேனன், விவிம்சதி, துஸ்ஸகன் ஆகியோரைச் சுட்டிக்காட்டி, அவர்களது அவல நிலையையும், அவர்களது பெருமையையும் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி…
காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “ஓ! மாதவா, ஞானியரால் மெச்சப்பட்ட என் மகன் விகர்ணன், பீமனால் கொல்லப்பட்டுப் பயங்கரமாகச் சிதைந்த நிலையில் வெறுந்தரையில் கிடக்கிறான்.(1) ஓ! மதுசூதனா, உயிரை இழந்து (கொல்லப்பட்ட) யானைகளுக்கு மத்தியில் கிடக்கும் விகர்ணன், நீல மேகங்களால் சூழப்பட்ட கூதிர் கால வானத்தத்தில் இருக்கும் சந்திரனைப் போல இருக்கிறான்.(2) தோலுரை பூட்டப்பட்டதும், தொடர்ந்து வில்லேந்துவதால் வடு நிறைந்ததுமான அவனது {விகர்ணனின்} அகன்ற உள்ளங்கையை உண்ணும் விருப்பத்தால் கழுகுகளால் அது கடுமையாகத் துளைக்கப்பட்டிருக்கிறது.(3) ஓ! மாதவா, ஆதரவற்றவளான அவனது மனைவி, அழுகும் பிணத்தை உண்ண விரும்பும் அந்தக் கழுகுகளைச் சிரமத்துடன் விரட்டிக் கொண்டிருக்கிறாள்.(4) ஓ! மாதவா, ஓ! மனிதர்களில் காளையே, இளமை நிறைந்தவனும், துணிச்சல்மிக்கவனும், அழகனும், ஆடம்பரத்திலேயே வளர்க்கப்பட்டவனும், அனைத்து வகை இன்பங்களுக்குத் தகுந்தவனுமான அந்த விகர்ணன், இப்போது புழுதிக்கு மத்தியில் உறங்கிக் கொண்டிருக்கிறான்.(5) துணிக்கோல் கணைகளாலும் {கர்ணிகளாலும்}, முள்பதித்த கணைகளாலும் {நாராசங்களாலும்}, நாளீங்களாலும் அவனது முக்கியப் பகுதிகள் அனைத்தும் துளைக்கப்பட்டிருந்தாலும், அந்தச் சிறந்த பாரதக் குலத்தவனின் அழகு அவனைக் கைவிடவில்லை.(6)
எதிரிகளின் பெருங்கூட்டத்தைக் கொல்பவனான என் மகன் துர்முகன், சபதத்தை நிறைவேற்றுபவனான வீரப் பீமசேனனால் கொல்லப்பட்டு, எதிரியை நோக்கிய முகத்துடன் அதோ உறங்கிக் கொண்டிருக்கிறான்.(7) ஓ! கிருஷ்ணா, ஓ! குழந்தாய், இரைதேடும் விலங்குகளால் அவனது பாதிமுகம் உண்ணப்பட்டிருந்தாலும், ஏழாம் நாள் வளர்பிறைச் சந்திரனைப் போல அஃது அழகாகத் தெரிகிறது.(8) ஓ! கிருஷ்ணா, நான் சொன்னது போலவே இருக்கும் என் வீர மகனின் {துர்முகனின்} முகத்தைப் பார். அந்த என் மகன் எதிரிகளால் கொல்லப்பட்டு, எவ்வாறு இப்படிப் புழுதியை உண்ணும்படி செய்யப்படலாம்?(9) ஓ! இனியவனே, ஓ! தேவலோகத்தை வெல்பவனே, எவன் முன்னிலையில் எந்த எதிரியாலும் நிற்க முடியாதோ, அந்தத் துர்முகன் எவ்வாறு எதிரிகளால் கொல்லப்படலாம்?(10)
ஓ! மதுசூதனா, வில்லாளிகள் அனைவருக்கும் உதாரண வீரனும், திருதராஷ்டிரரின் மற்றொரு மகனுமான சித்திரசேனன், இதோ கொல்லப்பட்டுத் தரையில் கிடப்பதைப் பார்.(11) மலர்களாலும், மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட அவனது அழகிய வடிவத்தைச் சுற்றிலும், துயரத்தால் பீடிக்கப்பட்டு, பரிதாபகரமாக அழுது கொண்டு, இரைதேடும் விலங்குகளுடன் இப்போது அமர்ந்திருக்கும் அந்த இளம்பெண்களைப் பார்.(12) ஓ! கிருஷ்ணா, அந்தப் பெண்கள் வெளியிடும் உரத்தத் துன்ப ஓலங்களும், இரை தேடும் விலங்குகளின் இரைச்சலும், முழக்கங்களும் எனக்கு மிக ஆச்சரியமானவையாகத் தெரிகின்றன.(13)
ஓ! மாதவா, இளமை நிறைந்தவனும், அழகனும், எப்போதும் மிக அழகிய பெண்களால் கவனித்துக் கொள்ளப்பட்டவனுமான என் மகன் விவிம்சதி, புழுதிக் கறையுடன் அதோ உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்.(14) அவனது கவசம் கணைகளால் துளைக்கப்பட்டிருக்கிறது. பேரிடருக்கு மத்தியில் கொல்லப்பட்ட அந்த வீர விவிம்சதியை, ஐயோ, இப்போது கழுகுகள் சூழ்ந்து {அவனை உண்பதற்காகக்} காத்திருக்கின்றன.(15) போரில் பாண்டவப் படையணிக்குள் ஊடுருவிய அந்த வீரன், பெருமைக்குரிய க்ஷத்திரியனின் படுக்கையில் இப்போது கிடக்கிறான்.(16) ஓ! கிருஷ்ணா, சிறந்த மூக்காலும், அழகிய புருவங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, சந்திரனுக்கு ஒப்பாக, புன்னகையுடனும், பேரழகுடனும் கூடிய அவனது {விவிம்சதியின்} முகத்தைப் பார்.(17) கந்தர்வனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தெய்வீக மங்கையரைப் போல முன்பெல்லாம், பெரும் எண்ணிக்கையிலான மிக அழகிய பெண்கள் அவனுக்காகக் காத்திருப்பார்கள்.(18)
எதிரிகளைக் கொல்லும் வீரனும், சபைகளின் ரத்தினமும், தடுக்கப்பட முடியாத போர்வீரனும், எதிரிகளைத் தடுப்பவனுமான என் மகன் துஸ்ஸஹனை எவரால் தாங்கிக் கொள்ள முடியும்?(19) கணைகளால் மறைக்கப்பட்டிருக்கும் துஸ்ஸஹனின் உடலானது, மலர்ந்திருக்கும் கர்ணீகரங்களால் {கோங்கு மரங்களால்} நிறைந்திருக்கும் ஒரு மலையைப் போலப் பிரகாசமாகத் தெரிகிறது.(20) தங்க மாலையுடனும், பிரகாசமான கவசத்துடனும் கூடிய துஸ்ஸஹன், உயிரையிழந்திருந்தாலும், ஒரு வெண்மலையையோ, நெருப்பையோ போன்று பிரகாசமாகத் தெரிகிறான்” என்றாள் {காந்தாரி}.(21)
பரிதாபமாக அழுத உத்தரை! – ஸ்திரீ பர்வம் பகுதி – 20-உத்தரை அழுதுகொண்டிருப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; அபிமன்யுவின் பெருமைகளைச் சொல்லி அழுத உத்தரை; உத்தரையை இழுத்துச் சென்ற மத்ஸ்யக் குலப் பெண்கள்; விராடன் இறந்து கிடப்பதைக் கண்டு அந்தப் பெண்களும் பெருந்துக்கத்தால் பீடிக்கப்படுவது; அபிமன்யுவைப் போன்றே மேலும் பல இளைஞர்கள் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கிருஷ்ணனிடம் சொன்ன காந்தாரி…
காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “ஓ! கேசவா {கிருஷ்ணா}, “எவன் அவனது தந்தையையும் {அர்ஜுனனையும்}, உன்னையும் விட வலிமையிலும், துணிவிலும் ஒன்றரை மடங்கு மேம்பட்டவனாகக் கருதப்பட்டானோ, எவன் செருக்குமிக்கதும், சீற்றமிக்கதுமான ஒரு சிங்கத்துக்கு ஒப்பானவனாக இருந்தானோ,(1) எவன் எந்தவொரு தொண்டனுமில்லாமல், தனியொருவனாக ஊடுருவப்பட முடியாத எனது மகனின் {துரியோதனனின்} வியூகத்தை ஊடுருவினானோ, எவன் பலருக்குக் காலனாகத் தன்னை நிரூபித்துக் கொண்டானோ, ஐயோ, அவன் {அந்த அபிமன்யு} இப்போது மரணத்திற்கு அடிபணிந்து இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறான்.(2) ஓ! கிருஷ்ணா, அளவிலா சக்தி கொண்ட வீரனும், அர்ஜுனனின் மகனுமான அபிமன்யு இறந்த பிறகும்கூட அவனது ஒளி மங்காமல் இருப்பதை நான் காண்கிறேன்.(3) அங்கே விராடனின் மகளும், காண்டீவதாரியின் மருமகளும், களங்கமற்ற அழகுடையவளுமான அந்தப் பெண் {உத்தரை}, தன் வீரக் கணவனைக் கண்டு, துயரத்தில் மூழ்கி புலம்பிக் கொண்டிருக்கிறாள்.(4)
ஓ! கிருஷ்ணா, விராடனின் மகளான அந்த {அபிமன்யுவின்} இளம் மனைவி, தன் தலைவனை அணுகி, அவனைத் தன் கரங்களால் மென்மையாகத் தடவிக் கொண்டிருக்கிறாள்.(5) உயர்ந்த நுண்ணறிவையும், பெரும் அழகையும் கொண்ட அந்தப் பெண், முன்பெல்லாம் தேனூட்டப்பட்ட மதுவால் {மத்வீகமது} வெறியூட்டப்பட்டு, வெட்கத்துடன் தன் தலைவனைத் தழுவிக் கொண்டு, முற்றாக மலர்ந்த தாமரைக்கு ஒப்பானதும், சங்கு போன்று மூன்று கோடுகளுடன் கூடிய கழுத்தால் தாங்கிக் கொள்ளப்பட்டதுமான சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} முகத்தில் முத்தமிடுவாள்[1].(6,7) ஓ! வீரா, தன் தலைவனின் கவசத்தைக் கழற்றும் அந்தக் காரிகை {உத்தரை}, தன் துணைவனின் குருதிதோய்ந்த உடலை இப்போது வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.(8)ஓ! கிருஷ்ணா, அந்தப் பெண் {உத்தரை}, தன் தலைவனைக் கண்டு, {உன்னை நோக்கி} உன்னிடம், “ஓ! தாமரைக் கண்ணா, உமக்கு ஒப்பான கண்களைக் கொண்ட இந்த வீரர் கொல்லப்பட்டார்.(9) ஓ! பாவமற்றவரே, வலிமையிலும், சக்தியிலும், ஆற்றலிலும் இவர் உமக்கு இணையானவராக இருந்தார். அழகிலும் இவர் உமக்கு ஒப்பானவரே. இருப்பினும் எதிரியால் கொல்லப்பட்டு வெறுந்தரையில் உறங்கிக் கொண்டிருக்கிறார்” என்கிறாள்.(10) பிறகு தன் தலைவனிடம் {அபிமன்யுவிடம்} பேசும் அந்தக் காரிகை, “அனைத்து ஆடம்பரங்களுடனும் நீர் வளர்க்கப்பட்டீர். ரங்கு மானின் மென்மையான தோலிலேயே நீர் உறங்குவீர். ஐயோ, இப்படி இன்று வெறுந்தரையில் கிடக்கும் உமது உடல் வலியை உணரவில்லையா?(11) தங்க அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், யானைகளின் துதிக்கைகள் இரண்டுக்கு ஒப்பானவையும், வில்லை அடிக்கடி பயன்படுத்துவதால் கடினமடைந்த தோலால் மூடப்பட்டிருப்பவையுமான உமது பருத்த கரங்களை விரித்துக் கொண்டு, ஓ! தலைவா, பயிற்சிக்கூடத்தில் அதிகப் பயிற்சியினால் களைப்படைந்தவரைப் போலவே அமைதியாக உறங்குகிறீர். ஐயோ, இவ்வாறு அழுது கொண்டிருக்கும் என்னிடம் நீர் ஏன் பேசாமலிருக்கிறீர்?(12,13) நான் உமக்கு எக்குற்றமும் இழைத்ததாக எனக்கு நினைவில்லையே. பிறகு ஏன் என்னிடம் நீர் பேசாமலிருக்கிறீர்? முன்பெல்லாம், தொலைவிலேயே என்னைக் கண்டாலும் பேசுவீரே.(14) ஓ! மதிப்புக்குரிய ஐயா, பெரும் மதிப்பிற்குரிய சுபத்திரையையும், தேவர்களுக்கு ஒப்பான இந்த உமது தந்தைமாரையும், துயரால் அழுது கொண்டிருக்கும் பாவியான என்னையும் விட்டுவிட்டு நீர் எங்கே செல்லப் போகிறீர்?” என்று சொல்லி அழுகிறாள்.(15)
ஓ! கிருஷ்ணா, அந்த அழகிய காரிகை {உத்தரை}, குருதி தோய்ந்த தன் தலைவனின் குழல்களைத் திரட்டி, அவனது தலையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, அவன் உயிரோடிருப்பதைப் போல அவனிடம் {பின்வருமாறு} பேசிக் கொண்டிருக்கிறாள்.(16) அவள் {உத்தரை அபிமன்யுவிடம்}, “வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தங்கை {சுபத்திரை} மகனும், காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} மகனுமான உம்மை, போருக்கு மத்தியில் அந்தப் பெரும் தேர்வீரர்களால் எவ்வாறு கொல்ல முடிந்தது?(17) ஐயோ, யாவரால் நீர் உயிரை இழக்கச் செய்யப்பட்டீரோ, தீச்செயல்களைச் செய்பவர்களான அந்தக் கிருபர், கர்ணர், ஜெயத்ரதர், துரோணர் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்} உள்ளிட்ட போர்வீரர்களுக்கு ஐயோ.(18) இளம் வயதுடைய போர்வீரரான உம்மைச் சூழ்ந்து கொண்டு, என்னைத் துன்புறுத்த உம்மைக் கொன்ற அந்த நேரத்தில், அந்தப் பெரும் தேர்வீரர்களின் மனநிலை எவ்வாறு இருந்தது? {அவர்களுடைய மனம் எவ்வாறு உம்மைக் கொல்லத் துணிந்தது}(19) ஓ! வீரரே, பல பாதுகாவலர்களைக் கொண்ட நீர், பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆதரவற்றவராக எவ்வாறு கொல்லப்பட்டீர்?(20)
ஓ! வீரரே {அபிமன்யுவே}, ஒன்று சேர்ந்த பலரால் போரில் நீர் கொல்லப்பட்டதைக் கண்டும், மனிதர்களில் புலியும், பாண்டுவின் மகனுமான உமது தந்தையால் {அர்ஜுனரால்} எவ்வாறு உயிரின் சுமையைத் தாங்கிக் கொள்ள முடிகிறது?(21) ஓ! தாமரைக் கண்ணைக் கொண்டவரே, உம்மை இழந்த பிறகு, பரந்த நாட்டை அடைந்ததோ, எதிரிகளை வீழ்த்தியதோ பார்த்தர்களுக்கு எந்த மகிழ்ச்சியையும் தராது.(22) ஆயுதங்களைப் பயன்படுத்தி அடையப்படும் அருள் உலகங்களுக்கு, நானும் அறம் மற்றும் தற்புலனடக்கப் பயிற்சிகளால் வெகு விரைவில் வந்துவிடுவேன்.(23) போரில் கொல்லப்பட்ட உம்மைக் கண்ட பிறகும், பாவியான நான் இன்னும் மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதால், நேரம் வராதபோது சாக முடியாது என்பது தெரிகிறது.(24) ஓ! மனிதர்களில் புலியே, பித்ருக்களின் உலகத்திற்குச் சென்று, புன்னகையுடன் கலந்த இனிய வார்த்தைகளை என்னிடம் போல வேறு யாரிடம் இப்போது நீர் பேசுவீர்?(25)
உமது பேரழகாலும், புன்னகை கலந்த உமது மென்மையான வார்த்தைகளாலும் சொர்க்கத்தின் அப்சரஸ்களுடைய இதயங்களை நீர் கலங்கடிப்பீர் என்பதில் ஐயமில்லை.(26) ஓ! சுபத்திரையின் மகனே, அறச்செயல்கள் புரிந்தோருக்காக ஒதுக்கப்படும் உலகங்களை அடைந்து, அந்த அப்சரஸ்களுடன் இப்போது நீர் கலக்கப் போகிறீர். அவர்களுடன் விளையாடும்போது, நான் உமக்குச் செய்த நற்செயல்களைச் சிற்சில நேரங்களிலாவது நினைத்துப் பார்ப்பீராக.(27) ஓ! வீரரே {அபிமன்யுவே}, {திருமணம் செய்து} ஏழாம் மாதத்தில் நீர் உயிரை இழந்திருப்பதால், இவ்வுலகத்தில் என்னுடனான உமது இணைப்பு ஆறு மாதங்களுக்கே[2] விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது” {என உத்தரை அபிமன்யுவோடு பேசிக் கொண்டிருக்கிறாள்}.(28)ஓ! கிருஷ்ணா, தன் நோக்கங்கள் அனைத்தும் கலங்கடிக்கப்பட்டு இவ்வாறு புலம்பிக்கொண்டிருப்பவளும், துன்பத்தால் பீடிக்கப்பட்டிருப்பவளுமான உத்தரையை மத்ஸ்ய அரசக் குடும்பத்தின் பெண்கள் இழுத்துச் செல்கின்றனர்.(29) உத்தரையை இழுத்துச் செல்லும் அந்தப் பெண்களும், கொல்லப்பட்ட விராடனைக் கண்டு அந்தப் பெண்ணைவிட {உத்தரையைவிட} அதிகம் பீடிக்கப்பட்டு உரத்த ஓலமிட்டு அழுது கொண்டிருக்கின்றனர்.(30) துரோணரின் கணைகளாலும், ஆயுதங்களாலும் சிதைக்கப்பட்டு, குருதியால் மறைக்கப்பட்டிருந்த விராடன், அலறும் கழுகுகள், ஊளையிடும் நரிகள் மற்றும் கரையும் காகங்களால் சூழப்பட்டுத் தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறான்.(31) கரிய கண்களைக் கொண்ட அந்த மங்கையர், இன்பமாக அலறிக் கொண்டிருந்த ஊனுண்ணும் பறவைகள் அமர்ந்திருந்ததும், நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்ததுமான மத்ஸ்ய மன்னனின் {விராடனின்} உடலைப் புரட்ட முயற்சிக்கின்றனர். துயரால் மிகவும் பீடிக்கப்பட்டுப் பலவீனமடைந்திருக்கும் அவர்களால் தாங்கள் நினைத்ததைச் செய்ய முடியவில்லை {விராடனின் உடலைப் புரட்ட முடியவில்லை}.(32) சூரியனால் எரிக்கப்பட்டு, முயற்சியால் களைப்படைந்திருக்கும் அவர்களது முகங்கள் நிறமற்றவையாக மங்கியிருக்கின்றன.(33) ஓ! மாதவா, அபிமன்யுவைத் தவிர்த்து, {விராட இளவரசனான} உத்தரன், காம்போஜ இளவரசனான சுதக்ஷிணன், அழகன் லக்ஷ்மணன் ஆகிய மற்ற பிள்ளைகள் அனைவரும் கூடப் போர்க்களத்தில் {இவ்வாறே} கிடப்பதைப் பார்” என்றாள் {காந்தாரி}.(34)
ஊனுண்ணும் உயிரினங்களால் உண்ணப்பட்ட கர்ணனின் உடல்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 21-கர்ணனின் உடலைக் கண்டு, கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; கர்ணனின் மனைவிகளான விருஷசேனனின் தாயும், சுஷேனனின் தாயும் வந்து அழுதது; விலங்குகளால் உண்ணப்பட்டு எஞ்சியிருந்த கர்ணனின் உடலைக் கண்ட அவனது மனைவிகள் …
காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “பெரும் வில்லாளியும், வலிமைமிக்கவனுமான கர்ணன் அங்கே தரையில் கிடக்கிறான். போரில் அவன் சுடர்மிக்க நெருப்பைப் போன்றவனாக இருந்தான். எனினும், அந்த நெருப்பு, பார்த்தனின் {அர்ஜுனனின்} சக்தியால் அணைக்கப்பட்டது.(1) பல அதிரதர்களைக் கொன்றவனான அந்த விகர்த்தனன் மகன் கர்ணன், குருதியில் நனைந்தபடி, வெறுந்தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடப்பதைப் பார்.(2) கோபம் நிறைந்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அவன், பெரும் வில்லாளியாகவும், வலிமைமிக்கத் தேர்வீரனாகவும் இருந்தான். அவன், காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} போரில் கொல்லப்பட்டு, இப்போது தரையில் உறங்கிக் கொண்டிருக்கிறான்.(3) வலிமைமிக்கத் தேர்வீரர்களான என் மகன்கள், யானை மந்தையானது தங்கள் தலைவனை முன்னணியில் கொண்டு போரிடுவதைப் போலப் பாண்டவர்களிடம் கொண்ட அச்சத்தினால், கர்ணனைத் தங்கள் தலைமையில் நிறுத்திக் கொண்டு போரிட்டனர்.(4) ஐயோ, சிங்கத்தால் கொல்லப்பட்ட ஒரு புலியைப் போலவோ, மதங்கொண்ட யானையால் கொல்லப்பட்ட மற்றொரு யானையைப் போலவோ அந்தப் போர்வீரன் {கர்ணன்}, சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டிருக்கிறான்.(5)
ஓ! மனிதர்களில் புலியே {கிருஷ்ணா}, கலைந்த கேசத்துடன், உரத்தத் துன்ப ஓலத்துடனும், ஒன்றுகூடியிருப்பவர்களான அந்தப் போர்வீரனின் மனைவியர், வீழ்ந்துவிட்ட அந்த வீரனைச் சுற்றிலும் அமர்ந்திருக்கின்றனர்.(6) அந்தப் போர்வீரனைக் குறித்த எண்ணங்களால் உண்டான கவலையில் நிறைந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்கு, {கர்ணன் மீது கொண்ட அச்சத்தால்} பதிமூன்று ஆண்டுகளாகக் கண்சிமிட்டும் நேர உறக்கமும் கிட்டவில்லை.(7) போரில் பகைவர்களால் தடுக்கப்பட முடியாதவனும், எதிரிகளால் வெல்லப்பட முடியாதவனுமான மகவத்தை {இந்திரனைப்} போலவே, கர்ணனும், அண்ட முடிவில் கடுந்தழல்களுடன் அனைத்தையும் எரிக்கும் நெருப்பைப் போன்றவனாகவும், அசையாமல் நிற்கும் இமயத்தைப் போன்றவனாகவும் இருந்தான்.(8) ஓ! மாதவா {கிருஷ்ணா}, அந்த வீரனே திருதராஷ்டிரர் மகனின் பாதுகாவலனாகவும் இருந்தான். ஐயோ, காற்றால் வீழ்த்தப்பட்ட மரத்தைப் போலவே அவன் இப்போது உயிரையிழந்து வெறுந்தரையில் கிடக்கிறான்.(9)
கர்ணனின் மனைவியான, விருஷசேனனின் தாய், பரிதாபகரமாக அழுது புலம்பி தரையில் விழுவதைப் பார்.(10) அவள் இப்போது, “உனது ஆசானின் {பரசுராமரின்} சாபம் உம்மைப் பின்தொடர்ந்தது என்பதில் ஐயமில்லை. உமது தேரின் சக்கரம் பூமியால் விழுங்கப்பட்டபோது, கொடூரனான தனஞ்சயன் {அர்ஜுனன்} உமது தலையை ஒரு கணையால் அறுத்துவிட்டான்.(11) ஐயோ, வீரத்திற்கும் திறனுக்கும் ஐயோ” என்று சொல்கிறாள்.
சுஷேனனின் தாயான {மற்றொரு} மங்கை, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், துணிச்சல்மிக்கவனுமான கர்ணன், இடுப்பில் சுற்றிய தங்கக் கச்சையுடன் தரையில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைக் கண்டு மிகவும் பீடிக்கப்பட்டவளாக, துன்பத்தால் கதறியபடியே, தன் உணர்வுகளை இழந்து கீழே விழுகிறாள்.(12)
ஊனுண்ணும் உயிரினங்கள் அந்தச் சிறப்புமிக்க வீரனின் {கர்ணனின்} உடலை உண்டு, அதை {அவ்வுடலை} மிகச் சிறிய அளவாகக் குறைத்தன[1]. தேய்பிறையின் பதினாலாம் இரவில் வரும் நிலவைப் போன்ற அந்தக் காட்சி மகிழ்ச்சியளிப்பதாக இல்லை. தன் மகனின் {சுஷேனின்} மரணத்தால் துயரில் எரிந்து கொண்டிருந்த அவள், தன் தலைவனின் {கர்ணனின்} அருகில் வந்து அவனது முகத்தை முகர்கிறாள்” என்றாள் {காந்தாரி}.(14)
காட்டுக்கு இழுத்துச் செல்லப்பட்ட ஜெயத்ரதனின் உடல்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 22-அவந்தியின் மன்னன் மற்றும் பிரதீபனின் மகனான பாஹ்லீகர் ஆகியோர் இறந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; ஜெயத்ரதன் பாண்டவர்களால் மன்னிக்கப்பட்டதையும், பிறகு அவர்களுடைய மகனைக் கொன்றதால் அவனை மன்னிக்காததையும் சொன்னது; துச்சலையில் நிலையை எடுத்துரைத்த காந்தாரி…
காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “பீமசேனனால் கொல்லப்பட்டு, அவந்தியின் தலைவன் இங்கே கிடப்பதைப் பார். கழுகுகள், நரிகள் மற்றும் காகங்கள் அந்த வீரனை உண்கின்றன. அவன் பல நண்பர்களைக் கொண்டவனென்றாலும் இப்போதோ முற்றிலும் நண்பர்களற்றவனாகக் கிடக்கிறான்.(1) ஓ! மதுசூதனா, எதிரிகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய அந்தப் போர்வீரன், இப்போது குருதியால் மறைக்கப்பட்டு வீரனின் படுக்கையில் கிடப்பதைப் பார்.(2) நரிகள், கங்கங்கள் மற்றும் பல்வேறு ஊனுண்ணும் பிற உயிரினங்களும் அவனை இப்போது இழுத்துக் கொண்டிருக்கின்றன. காலத்தால் கொண்டவரப்பட்ட மாறுபாடுகளைப் பார்.(3) உயிரோடிருக்கும்போது எதிரிகளைப் பயங்கரமாகக் கொல்பவனும், இப்போது வீரனின் படுக்கையில் கிடப்பவனுமான அவனைச் சுற்றிலும் அவனது மனைவியர் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து கொண்டு துயருடன் அழுதுகொண்டிருக்கின்றனர்.(4)
பிரதீபரின் மகனும், பெரும் சக்தி கொண்டவரும், வலிமைமிக்க வில்லாளியுமான பாஹ்லீகர், ஓர் அகன்ற தலைக் கணையால் கொல்லப்பட்டு, உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு புலியைப் போல இப்போது தரையில் கிடக்கிறார்.(5) உயிரை இழந்திருந்தாலும், அவரது முகத்தின் நிறமானது, வளர்பிறையின் பதினைந்தாவது நாளில் முழுமையானதாக எழும் சந்திரனைப் போலவே இன்னும் மிகப் பிரகாசமாக இருக்கிறது.(6)
தன் மகனின் மரணம் குறித்த துயரத்தால் எரிந்தும், தன் நோன்பை நிறைவேற்ற விரும்பியும், அந்த இந்திரனின் மகன் (அர்ஜுனன்}, அங்கே அந்தப் பிருஹத்க்ஷத்திரனின் மகனை {ஜெயத்ரதனைக்} கொன்றான்.(7) சிறப்புமிக்கத் துரோணரால் பாதுகாக்கப்பட்ட ஜெயத்ரதன், தன் சபதத்தை நிறைவேற்ற விரும்பிய பார்த்தனால் {அர்ஜுனனால்}, பதினோரு அக்ஷௌஹிணிகளின் துருப்புகளை ஊடுருவிவந்து கொல்லப்பட்டான்.(8) ஓ! ஜனார்த்தனா, மங்கலமற்ற கழுகுகள், செருக்கும் சக்தியும் நிறைந்தவனும், சிந்து-சௌவீரர்களின் தலைவனுமான ஜெயத்ரதனை உண்கின்றன.(9) ஓ! அச்யுதா, அர்ப்பணிப்புமிக்க அவனது மனைவிகள் காக்க முயன்றாலும், ஊனுண்ணும் உயிரினங்கள் அருகில் இருக்கும் காட்டுக்கு அவனது உடலை இழுத்துச் செல்கின்றன.(10) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், சிந்துக்கள் மற்றும் சௌரவீரர்களின் தலைவனுமான அவனது {ஜெயத்ரதனின்} காம்போஜ மற்றும், யவன மனைவியர், (அந்தக் காட்டு விலங்குகளிடம் இருந்து) அவனைப் பாதுகாக்கின்றனர்.(11)
ஓ! ஜனார்த்தனா, கேகயர்கள் துணையுடன் அவன் {ஜெயத்ரதன்} திரௌபதியை அபகரிக்க முயற்சித்த போதே அவன் பாண்டவர்களால் கொல்லத்தக்கவனானான்.(12) எனினும், துச்சலையின் மீது கொண்ட மதிப்பால் அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் அவனை {ஜெயத்ரதனை} விடுவித்தனர். ஓ! கிருஷ்ணா, மீண்டும் துச்சலையின் மீது அதே மதிப்பை ஏன் அவர்கள் காட்டவில்லை?(13) இளம் வயதையுடைந்த அந்த என் மகள் {துச்சலை} இப்போது அழுது கொண்டிருக்கிறாள். அவள், தன் கரங்களால் தன் உடலை அடித்துக் கொண்டு, பாண்டவர்களை நிந்தித்துக் கொண்டிருக்கிறாள்[1].(14) ஓ! கிருஷ்ணா, இளம் வயதையுடைய என் மகள் {துச்சலை} விதவையாகவும், என் மருமகள்கள் அனைவரும் தலைவர்களற்றவர்களாகவும் செய்யப்பட்டதைவிட வேறு என்ன பெரிய துயரம் எனக்கு இருக்க முடியும்?(15)ஐயோ, ஐயோ, என் மகள் துச்சலை, துயரம் மற்றும் அச்சமனைத்தையும் கைவிட்டு, தன் கணவனின் தலையைத் தேடி அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்.(16) தங்கள் மகனை {அபிமன்யுவைக்} காக்க விரும்பிய பாண்டவர்கள் அனைவரையும் எவன் தடுத்து நிறுத்தினானோ, எவன் ஒரு பரந்த படையைக் கொல்லும் காரணமாக அமைந்தானோ, அவன் {ஜெயத்ரதன்}, இறுதியாக மரணத்திற்கு அடிபணிந்தான்.(17) ஐயோ, சந்திரனைப் போன்ற அழகிய முகங்களைக் கொண்ட அவனது மனைவியர், மதங்கொண்ட யானைக்கு ஒப்பானவனான அந்தத் தடுக்கப்பட முடியாத வீரனைச் சுற்றிலும் அமர்ந்து, அழுதுகொன்றிருக்கின்றனர்” என்றாள் {காந்தாரி}.(18)
துரோணரின் பாதங்களை இழுத்துச் சென்ற நரிகள்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 23-சல்லியன், பகதத்தன், பீஷ்மர், துரோணர் ஆகியோர் வீழ்ந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; அவர்கள் ஒவ்வொருவரின் பெருமையையும் சொன்னது; துரோணர் ஈமச்சிதையிலிடப்பட்டு அவருக்கான இறுதிச்சடங்குகள் நடைபெறுவதைக் கிருஷ்ணனுக்குச் சொன்ன காந்தாரி …
காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “ஓ! ஐயா, நகுலனின் தாய்மாமனான சல்லியன், பக்திமானும், அறவோனுமான யுதிஷ்டிரனால் போரில் கொல்லப்பட்டு அங்கே கிடக்கிறான்.(1) ஓ! மனிதர்களில் காளையே, அவன் {சல்லியன்} எப்போதும் உனக்கு இணையானவன் என்று சொல்லி தற்பெருமை பேசிக் கொள்வான். அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} உயிரையிழந்து கிடக்கிறான்.(2) போரில் கர்ணனின் சாரதி நிலைய ஏற்றபோது அவன் {சல்லியன்}, பாண்டு மகன்களின் வெற்றிக்காகக் கர்ணனின் சக்தியைக் குறைக்க முயன்றான்.(3) ஐயோ, ஐயோ, சந்திரனைப் போன்று அழகானதும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களால் அலங்கரிக்கப்பட்டதுமான சல்லியனின் மென்மையான முகம், காகங்களால் உண்ணப்படுவதைப் பார்.(4) ஓ! கிருஷ்ணா, புடம்போட்ட தங்கத்தின் நிறத்தில் இருக்கும் அம்மன்னனின் {சல்லியனின்} நாவு, அவனது வாயிலிருந்து வெளியேறி, ஊனுண்ணும் பறவைகளால் உண்ணப்படுகிறது.(5)
மத்ர அரசக் குடும்பத்தின் மங்கையர், யுதிஷ்டிரனால் உயிரை இழக்கச் செய்யப்பட்டவனும், சபைகளின் ரத்தினமுமாமான அம்மன்னனின் {சல்லியனின்} உடலைச் சுற்றி அமர்ந்து கொண்டு துன்பத்தால் உரக்க ஓலமிட்டனர்.(6) அந்தப் பெண்கள், பருவகாலத்தில் இருக்கும் பெண்யானைக் கூட்டமானது, சகதியில் மூழ்கும் தங்கள் தலைவனைச் சுற்றி இருப்பதைப் போல வீழ்ந்துவிட்ட அந்த வீரனைச் சுற்றிலும் அமர்ந்திருக்கின்றனர்.(7,8) துணிச்சல்மிக்கவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், அந்தச் சல்லியன், கணைகளால் உடல் சிதைக்கப்பட்டு, வீரர்களுக்கான படுக்கையில் நீண்டு கிடக்கிறான்.(9)
பேராற்றலைக் கொண்டவனும், மலை நாட்டு ஆட்சியாளனும், யானை அங்குசம் தரிப்போர் அனைவரில் முதன்மையானவனுமான மன்னன் பகதத்தரும், உயிரை இழந்து அங்கே தரையில் கிடக்கிறார்.(10) அவர் தலையில் அணிந்திருக்கும் தங்கமாலை இன்னும் பிரகாசமாக இருப்பதைப் பார். இரைதேடும் விலங்குகளால் அவனது உடல் உண்ணப்பட்டாலும், அந்த மாலையானது இன்னும் அவரது தலையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.(11) இந்த மன்னனுக்கும் {பகதத்தனுக்கும்} பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த போரானது, சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, அசுரன் விருத்திரனுக்கும் இடையில் நடந்ததைப் போல மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மிகக் கடுமையானதாக இருந்தது.(12) அந்த வலிய கரத்தோன், பிருதையின் மகனான தனஞ்சயனுடன் போரிட்டு, அவனைப் பெருஞ்சிக்கலில் ஆழ்த்தி, இறுதியில் தன் எதிராளியால் கொல்லப்பட்டார்.(13)
வீரத்திலும், சக்தியிலும் இவ்வுலகத்தில் ஒப்பில்லாதவரும், போரில் பயங்கரச் சாதனைகளை அடைந்தவருமான பீஷ்மர் உயிரை போகக் கிடக்கிறார்.(14) ஓ! கிருஷ்ணா, சூரியப் பிரகாசம் கொண்ட அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, யுகத்தின் முடிவில் ஆகாயத்தில் இருந்து விழுந்த சூரியனைப் போலப் பூமியில் நீண்டு கிடப்பதைப் பார்.(15) ஓ! கேசவா, போரில் தன் ஆயுதங்களின் நெருப்பால் எதிரிகளை எரித்தவரும், வீரமிக்கவரும், மனிதர்களில் சூரியனுமான அந்த வீரர், உண்மையான சூரியனைப் போலவே மாலையில் மறைந்தார்.(16) ஓ! கிருஷ்ணா, கடமையறிவில் {தன் பெரியப்பாவான} தேவாபிக்கு இணையான அந்த வீரர் {பீஷ்மர்}, வீரர்களுக்குத் தகுந்த கணைகளின் படுக்கையில் இப்போது கிடப்பதைப் பார்.(17) நாணற்கட்டில் கிடக்கும் தெய்வீக ஸ்கந்தனைப் போல, முள்பதித்த மற்றும் முள் பதிக்கப்படாத கணைகளாலான {கர்ணிகள் மற்றும் நாளீகங்களாலான} அவரது சிறந்த படுக்கையில் நீண்டு கிடக்கிறார்.(18) உண்மையில், கங்கையின் மைந்தன், தன் படுக்கைக்கான அன்பளிப்பாகக் காண்டீவதாரியால் கொடுக்கப்பட்டதும், மூன்று கணைகளாலானதுமான சிறந்த தலையணையில் தன் தலையைச் சாய்த்துக் கிடக்கிறார்.(19) தன் தந்தையின் {சந்தனுவின்} ஆணைகளுக்குக் கீழ்ப்படிவதற்காக {தன் தந்தையின் விருப்பம் நிறைவேறுவதற்காக} இந்தச் சிறந்தவர் தன் உயிர்நீரை மேலெழுப்பினார். ஓ! மாதவா, போரில் ஒப்பற்றவரான அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} இதோ இங்கே கிடக்கிறார்.(20)
அற ஆன்மா கொண்டவரும், ஈருலகங்கள் சம்பந்தமான தன் அறிவின் துணையுடன் அனைத்துக் கடமைகளையும் அறிந்தவருமான அந்த வீரர், இறப்புக்குரிய மனிதராக இருந்தும், இறவாதவரைப் போலத் தன் உயிரை இன்னும் பிடித்துக் கொண்டிருக்கிறார்.(21) கணைகளால் தாக்கப்பட்ட சந்தனுவின் மகன் {பீஷ்மர்} கிடக்கும் இன்று, கல்வி, ஆற்றல் மற்றும் போரில் அடையத்தக்க பெருஞ்சாதனைகளைக் கொண்ட வேறு எந்த மனிதனும் இவ்வுலகில் இல்லை என்று தெரிகிறது.(22) பேச்சில் உண்மையுள்ளவராக இருந்த இந்த அறமும், நீதியும் மிக்க வீரர் {பீஷ்மர்}, பாண்டவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டதும், தன் மரணத்திற்கான வழியைத் தானே சொன்னார்.(23) ஐயோ, அருகிக் கிடந்த குரு பரம்பரையை எவர் மீட்டாரோ, பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கவர், குருக்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு இவ்வுலகைவிட்டுச் செல்கிறார்.(24) ஓ! மாதவா, தேவனுக்கு ஒப்பானவரும், மனிதர்களில் காளையுமான தேவவிரதர் {பீஷ்மர்} சொர்க்கத்திற்குச் சென்ற பிறகு, குருக்கள் அறம் குறித்தும், கடமை {நீதிகள்} குறித்தும் யாரிடம் கேட்பார்கள்?(25)
பிராமணர்களில் முதன்மையானவரும், அர்ஜுனன், சாத்யகி மற்றும் குருக்களின் ஆசானுமான துரோணர், தரையில் கிடப்பதைப் பார்.(26) ஓ! மாதவா {கிருஷ்ணா}, அந்தத் துரோணர், பெருஞ்சக்தி கொண்டவராகவும், தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போன்றோ, பிருகு குலத்தின் சுக்கிரனைப் போன்றோ நால்வகை ஆயுதங்களையும் அறிந்தவராக இருந்தார்.(27) அவரது அருளாலேயே, பாண்டுவின் மகனான பீபத்சு {அர்ஜுனன்} மிகக்கடுஞ்சாதனைகளை அடைந்தான். {அப்படிப்பட்ட} அவர் உயிரை இழந்து இப்போது தரையில் கிடக்கிறார். (இறுதியில்) ஆயுதங்கள் அவரது உத்தரவுக்கு ஏற்ப இருப்புக்கு வர மறுத்தன.(28) அவரைத் தலைமையில் கொண்டே கௌரவர்கள் பாண்டவர்களை அறைகூவியழைத்தனர். ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான அவர், இறுதியில் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டார்.(29) அனைத்துத் திசைகளிலும் தன் எதிரிகளை எரித்தபடியே போரில் அவர் திரிந்த போது, அவரது போக்கு காட்டுத்தீக்கு ஒப்பானதாக இருந்தது. ஐயோ, உயிரை இழந்த அவர் அணைந்த நெருப்பைப் போல இப்போது தரையில் கிடக்கிறார்.(30)
வில்லின் கைப்பிடி இன்னும் அவரது {துரோணரது} பிடியில் இருக்கிறது[1]. ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவரது விரல்கள் இன்னும் தோலுரைகளுடன் இருக்கின்றன. கொல்லப்பட்டாலும் அவர் இன்னும் உயிருடன் இருப்பவரைப் போலே இருக்கிறார்.(31) ஓ! கேசவா, நான்கு வேதங்களும், அனைத்து வகை ஆயுதங்களும் எவ்வாறு தலைவன் பிரஜாபதியைக் கைவிடவில்லையோ அவ்வாறே இந்த வீரரையும் கைவிடவில்லை.(32) துதிகள் அனைத்திற்கும் தகுந்தவையும், பாணர்கள் மற்றும் துதிபாடிகளால் உண்மையில் துதிக்கப்படுபவையும், சீடர்களால் வழிபடப்படுபவையுமான அவரது {துரோணரது} மங்கலப் பாதங்கள், இப்போது நரிகளால் இழுத்துச் செல்லப்படுகின்றன.(33) ஓ! மாதவா, துயரால் புலனுணர்வுகளை இழந்த கிருபி, துருபதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} கொல்லப்பட்ட துரோணரைத் துயரத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.(34) துயரால் பீடிக்கப்பட்டிருக்கும் அந்த மங்கை {கிருபி}, கலைந்த கேசத்துடன், தலையைத் தொங்கப் போட்டப்படி பூமியில் விழுவதைப் பார்.(35) தலையில் சடாமுடி தரித்தவர்களான பிரம்மச்சாரிகள் பலர், திருஷ்டத்யும்னனின் கணைகளால் ஊடுருவி பிளக்கப்பட்ட கவசத்துடன் கூடிய துரோணரின் உடலைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.(36)சிறப்புமிக்கவளும், மென்மையானவளுமான கிருபி, உற்சாகமற்றவளாக, துயரில் பீடிக்கப்பட்டவளாக, போரில் கொல்லப்பட்ட தன் தலைவனின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய முயல்கிறாள்.(37) சாமங்களை {சாமவேதத்தை} உரைப்பவர்கள், துரோணரின் உடலை ஈமச்சிதையில் நிறுத்தி, உரிய சடங்குகளுடன் நெருப்பை மூட்டி, (நன்கறியப்பட்ட) மூன்று சாமங்களைப் பாடிக் கொண்டிருக்கின்றனர்.(38) ஓ! மாதவா, தலையில் சடாமுடி தரித்திருக்கும் அந்தப் பிரம்மச்சாரிகள், அந்தப் பிராமணரின் {துரோணரின்} ஈமச்சிதையில் விற்கள், ஈட்டிகள், தேர்க்கூடுகள் ஆகியவற்றைக் குவிக்கின்றனர்.(39) பெருஞ்சக்திகொண்ட அந்த வீரர் {துரோணர்}, பல்வேறு வகைக் கணைகளைத் திரட்டிக் கொண்டு இருந்த அவற்றில் எரிக்கப்படுகிறார். உண்மையில் அவர்கள், சிதையில் அவரை அமர்த்தி, பாடவும், அழவும் செய்கின்றனர்.(40) வேறு சிலர், இத்தகு சூழ்நிலைகளில் உரைக்கப்படும் (நன்கறியப்பட்ட) மூன்று சாமங்களை உரைக்கின்றனர். நெருப்பில் நெருப்பாக அந்நெருப்பில் துரோணரை எரித்தவர்களும்,(41) மறுபிறப்பாள {பிராமண} வகையைச் சார்ந்தவர்களுமான அவரது {துரோணரது} சீடர்கள், அந்தச் சிதைக்கு இடப்புறமாக, கிருபியைத் தங்கள் தலைமையில் கொண்டு கங்கைக் கரையை நோக்கிச் செல்கின்றனர்[2]” என்றாள் {காந்தாரி}.(42)(துரோணரின் இறுதிச்சடங்கில் அஸ்வத்தாமன் பங்குபெறவில்லை என்பது இங்கே தெரிகிறது. பெண்ணான கிருபி, ஈமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்கிறாள்.)
சகுனியிடம் அச்சங்கொள்கிறேன்! – ஸ்திரீ பர்வம் பகுதி – 24-பூரிஸ்ரவஸ், சோமதத்தன் மற்றும் சகுனி ஆகியோர் இறந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; பூரிஸ்ரவஸின் தாய் மற்றும் அவனது மனைவியர் ஆகியோரின் அழுகையை விவரித்துச் சொன்னது; சகுனி இறந்தாலும், அவனைக் குறித்து அஞ்சுவதாகக் கிருஷ்ணனிடம் சொன்ன காந்தாரி …
காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “யுயுதானனால் {சாத்யகியால்} கொல்லப்பட்ட சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, பெரும் எண்ணிக்கையிலான பறவைகளால் கொத்திக் கிழிக்கப்படுவதைப் பார்.(1) ஓ! ஜனார்த்தனா, (அங்கே கிடக்கும்) சோமதத்தன், தன் மகனின் மரணத்தால் துயரில் எரிந்து பெரும் வில்லாளியான யுயுதானனை {சாத்யகியை} நிந்தித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.(2) களங்கமற்ற பெண்ணும், துயரில் மூழ்கிருப்பவளுமான பூரிஸ்ரவஸின் தாய், அங்கே தன் தலைவன் சோமதத்தனிடம்,(3) “ஓ! மன்னா, யுகமுடிவில் நேரும் காட்சிகளுக்கு ஒப்பான குருக்களின் நிர்மூலத்தையும், பாரதர்களுக்கு ஏற்பட்ட இந்தப் பேரழிவையும் நீர் காணாதது நற்பேற்றாலேயே.(4) கொடியில் வேள்விக்கம்பத்தை {யூபத்தைக்} கொண்டவனும், அனைவருக்கும் பெருங்கொடைகள் கொடுக்கப்பட்ட எண்ணற்ற வேள்விகளைச் செய்தவனுமான உமது வீர மகன் {பூரிஸ்ரவஸ்} போர்க்களத்தில் கொல்லப்படுவதை நீர் காணாததும் நற்பேற்றாலேயே.(5)
கடலுக்கு மத்தியில் நாரைக்கூட்டம் கதறுவதைப் போல, இந்தப் பேரழிவுக்கு மத்தியில் அச்சம்நிறைந்திருப்பவர்களான உமது மருமகள்கள் துயரத்துடன் கதறுவதை நீர் கேட்காததும் நற்பேற்றாலேயே.(6) ஒற்றையாடை உடுத்தியிருப்பவர்களும், கருகுழல்கள் கலைந்தவர்களும், கணவர்கள் மற்றும் மகன்களை இழந்தவர்களான உமது மருமகள்கள், அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(7) அர்ஜுனனால் வீழ்த்தப்பட்டுக் கரங்களை இழந்தவனும், உமது மகனுமான அந்த மனிதர்களில் புலி {பூரிஸ்ரவஸ்}, இரைதேடும் விலங்குகளால் இப்போது விழுங்கப்படுவதை நீர் காணாதது நற்பேற்றாலேயே.(8) போரில் கொல்லப்பட்ட உமது மகன் சலனையும், உயிரை இழந்த பூரிஸ்ரவஸையும், துயரில் மூழ்கி விதவைகளாகியிருக்கும் உமது மருமகள்களையும் இன்று நீர் காணாதது உமது நற்பேற்றாலேயே.(9) வேள்விக்கம்பத்தைத் தன் கொடிமரத்தில் கொண்டிருந்த அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரனின் தங்கக் குடை கிழிக்கப்பட்டு, அவனது தேர்த்தட்டில் நொறுக்கப்பட்டிருப்பதை நீர் காணாததும் நற்பேற்றாலேயே” என்கிறாள் {பூரிஸ்ரவஸின் தாய்}.(10)
பூரிஸ்ரவஸின் கருங்கண் மனைவியர், சாத்யகியால் கொல்லப்பட்ட தங்கள் தலைவனைச் சூழ்ந்து கொண்டு அங்கே பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.(11) ஓ! கேசவா {கிருஷ்ணா}, தங்கள் தலைவன் கொல்லப்பட்ட துயரால் பீடிக்கப்பட்டு, பயங்கரப் புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அம்மங்கையர், தரையை நோக்கிய முகங்களுடன் பூமியில் விழுந்து, மெதுவாக உன்னை அணுகுகின்றனர். அவர்கள்,(12) “ஐயோ, தூய செயல்பாடுகளைக் கொண்ட அர்ஜுனன், வேள்வி செய்வதில் அர்ப்பணிப்புள்ளவரான இந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர் {பூரிஸ்ரவஸ்} கவனமில்லாமல் இருந்தபோது, அவரது கரங்களைத் தாக்கி வீழ்த்தி இத்தகு நிந்திக்கத்தக்க செயலை ஏன் செய்தான்? ஐயோ, பிராய நோன்பை நோற்று அமர்ந்திருந்தவரும், தன்னடக்கம் கொண்டவருமான அந்த மனிதரின் உயிரை எடுத்ததன் மூலம் சாத்யகி இன்னும் அதிகப் பாவத்தைச் செய்திருக்கிறான்.(14) ஐயோ, ஓ! நேர்மையாளரே {அறவோனே}, நியாயமற்ற {அதர்மமான} முறையில் இரண்டு எதிரிகளால் கொல்லப்பட்டு, நீர் தரையில் கிடக்கிறீர்” என்கின்றனர். ஓ! மாதவா, பூரிஸ்ரவஸின் இரு மனைவியரும் இவ்வாறே துயரத்தால் உரக்க அழுகின்றனர்.(15)
அங்கே, கொடியிடை கொண்டோரான அந்தப் போர்வீரனின் மனைவியர், வெட்டப்பட்ட தன் தலைவனின் கரத்தைத் தங்கள் மடியில் வைத்துக் கொண்டு கடுமையாக அழுகின்றனர்.(16) அவர்களில் ஒருத்தி, “அழகிய பெண்களின் இடுப்புக்கச்சைக்குள் புகுந்து, பருத்த முலைகளைக் கசக்கி, தொப்பு, தொடைகள் மற்றும் இடைகளைத் தீண்டி, அவர்களால் உடுத்தப்படும் அரைக்கச்சின் முடிச்சுகளைத் தளர்த்தும் அந்தக் கரம் இதோ.(17) எதிரிகளைக் கொன்று, நண்பர்களின் அச்சத்தை அகற்றி, ஆயிரம் பசுக்களைக் கொடையளித்து, போரில் க்ஷத்திரியர்களை நிர்மூலமாக்கிய அந்தக் கரம் இதோ.(18) களங்கமில்லாச் செயல்களைச் செய்யும் அர்ஜுனன், வேறொருவருடன் போரிட்டுக் கவனமில்லாமல் இருந்த உமது கரத்தை, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வெட்டினான்.(19) ஓ! ஜனார்த்தனா, சபைகளுக்கு மத்தியில் பேசும்போது, அர்ஜுனனின் இந்தப் பெரும் சாதனையை எவ்வாறு நீ சொல்லப் போகிறாய்? அந்தக் கிரீடியே {அர்ஜுனனே} கூட என்ன சொல்லப் போகிறான்?” என்கிறாள்.(20) அந்தப் பெண்களில் முதன்மையானவள் {தன் புலம்பல்களை}, உன்னை இவ்வாறு நிந்தித்துவிட்டு, இறுதியாக நிறுத்திக் கொண்டாள். அந்தப் பெண்மணியின் சக்காளத்திகள், அவள் ஏதோ தங்கள் மருமகளைப் போல அவளுடன் சேர்ந்து பரிதாபகரமாக ஒப்பாரியிடுகின்றனர்.(21)
கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்டவனும், காந்தாரர்களின் தலைவனுமான வலிமைமிக்கச் சகுனி, சகோதரியின் மகனால் கொல்லப்படும் தாய்மாமனாக, சகாதேவனால் கொல்லப்பட்டு இதோ கிடக்கிறான்.(22) முன்பெல்லாம் தங்கக் கைப்பிடிகளைக் கொண்ட இரு விசிறிகளால் இவன் எப்போதும் விசிறப்படுவான். ஐயோ, இப்போது நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் அவன் {சகுனி}, பறவைகளின் சிறகடிப்பால் விசிறப்படுகிறான்.(23) இவன் {சகுனி} நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வடிவங்களை ஏற்பவனாவான். எனினும், பெரும் மாயசக்திகளைக் கொண்ட இவனது மாயைகள் அனைத்தும், பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} சக்தியால் எரிக்கப்பட்டுவிட்டன.(24) வஞ்சகத்தில் திறன்மிக்க அவன் {சகுனி}, தன் மாய சக்தியால் சபையில் யுதிஷ்டிரனை வென்று, பரந்த நாட்டை வென்றான். எனினும், இப்போது அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} சகுனியின் உயிர்மூச்சையே வென்றுவிட்டான்.(25)
ஓ! கிருஷ்ணா, பெரும் எண்ணிக்கையிலான பறவைகள் இப்போது சகுனியைச் சுற்றி அமர்ந்திருப்பதைப் பார். பகடையில் திறன் மிக்க இவன் {சகுனி}, ஐயோ, அத்திறனை என் மகன்களின் அழிவுக்காகவே அடைந்திருக்கிறான்.(26) என் பிள்ளைகளுக்கும், இந்தச் சகுனிக்கும், இவனைப் பின்தொடர்ந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் அழிவை உண்டாக்கிய பாண்டவர்களுடனான இந்தப் பகைமையெனும் நெருப்பு இவனாலேயே {இந்தச் சகுனியாலேயே} தூண்டப்பட்டது.(27) ஓ! பலமிக்கவனே, ஆயுதம் பயன்படுத்துவதன் மூலம் என் மகன்கள் அடைந்ததைப் போலவே, தீயவனாக இருப்பினும், ஆயுதங்களைப் பயன்படுத்தி {அழிந்ததால்} அருள் உலகங்கள் பலவற்றை இவனும் அடைந்துவிட்டான்.(28) ஓ! மதுசூதனா, இந்தக் கோணல்புத்திக்காரன் {சகுனி}, நம்பிக்கையுள்ளவர்களும், பாகுபாடற்றவர்களுமான என் பிள்ளைகளுக்குள், அங்கேயும் சச்சரவை உண்டாக்கி விடக்கூடாதே என்பதே என் அச்சமாக இருக்கிறது” என்றாள் {காந்தாரி}.(29)
கிருஷ்ணனைச் சபித்த காந்தாரி! – ஸ்திரீ பர்வம் பகுதி – 25- காம்போஜ மன்னன் சுதக்ஷிணன், கலிங்க மன்னன் சுருதாயுஷ், மகத மன்னன் ஜயத்சேனன், கோசல மன்னன் பிருஹத்பலன் திருஷ்டத்யும்னனின் மகன்கள், கேகேயச் சகோதரர்கள் ஐவர், பாஞ்சால மன்னன் துருபதன், சேதி நாட்டு மன்னன் திருஷ்டகேது, திருஷ்டகேதுவின் மகன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் இறந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; தன் மகன்கள் எரிக்கப்படப் போவதை நினைத்து மயக்கமடைந்து கீழே விழுந்தது; பேரழிவைத் தடுக்காமல் அலட்சியமாக இருந்ததற்காகக் கிருஷ்ணனைச் சபித்த காந்தாரி; சாபத்தை மயக்கப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட கிருஷ்ணன்…
காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “ஓ! மாதவா, காம்போஜ படுக்கைவிரிப்பில் சுகமாகக் கிடக்கத்தகுந்தவனும், காம்போஜர்களின் தடுக்கப்பட முடியாத ஆட்சியாளனும், காளையின் கழுத்தைக் கொண்டவனுமான இந்த வீரன் {காம்போஜ மன்னன் சுதக்ஷிணன்}, புழுதிக்கு மத்தியில் கிடப்பதைப் பார்.(1) பெரும் துயரில் பீடிக்கப்பட்டிருக்கும் அவனது மனைவி, முன்பு சந்தனக்குழம்பால் பூசப்பட்டதும், இப்போது குருதி படிந்திருப்பதுமான அவனது கரத்தைக் கண்டு அழுது கொண்டிருக்கிறாள்.(2)
உண்மையில் அந்த அழகி, “அழகிய உள்ளங்கைகளாலும், அருள்நிறைந்த விரல்களாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பவையும், அணைக்கையில் ஒருபோதும் ஒரு கணமும் இன்பம் என்னைவிட்டு விலகாதபடி செய்தவையுமான இந்த உமது இரு கரங்களும், இப்போதும் இரு பரிகங்களுக்கு ஒப்பானவையாகவே இருக்கின்றன.(3) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {சுதஷிணரே}, உம்மை இழந்திருக்கும் நான் என்ன கதியை அடையப்போகிறேன்” என்று சொல்கிறாள். இனிய மெல்லிய குரலைக் கொண்ட அந்தக் காம்போஜ ராணி, உணர்ச்சிகளுடன் நடுங்கியவாறே ஆதரவற்றவளாக அழுது கொண்டிருக்கிறாள்.(4) அங்கே இருக்கும் அழகிய பெண்களின் கூட்டத்தைப் பார். தேவர்களால் அணியப்படும் மாலைகள் சூரியனுக்கு வெளிப்பட்டாலும் அழகாக இருப்பது போலத் துன்பத்தால் களைப்படைந்தாலும், வெப்பத்தால் வாட்டப்பட்டாலும் அவர்களது வடிவங்களின் அழகு குலையவில்லை.(5)
ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இரண்டு அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் வலிமைமிக்கக் கரங்களுடன் கூடிய கலிங்கர்களின் வீர ஆட்சியாளன் {சுருதாயுஷ்} தரையில் கிடப்பதைப் பார்.(6)
ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, மகத ஆட்சியாளனான ஜயத்சேனனைச் சுற்றி நின்று அழும் அந்த மகதப் பெண்களைப் பார்.(7) அகன்ற விழிகளையும், இனிய குரலையும் கொண்ட அந்தப் பெண்களின் அழகான மற்றும் மென்மையான ஓலங்கள் என் இதயத்தை அதிகம் திகைப்படைச் செய்கின்றன.(8) ஆபரணங்கள் அனைத்தும் தளர்ந்த நிலையில் துயரால் பீடிக்கப்பட்டு அழுது கொண்டிருப்பவர்களும், விலைமதிப்புமிக்கப் படுக்கைகளில் ஓய்வெடுக்கத் தகுந்தவர்களுமான அந்த மகதப் பெண்கள், ஐயோ, இப்போது வெறுந்தரையில் கிடக்கின்றனர்.(9)
மேலும், கோசலர்களின் ஆட்சியாளனும், தங்கள் தலைவனுமான இளவரசன் பிருஹத்பலனைச் சுற்றியிருக்கும் வேறு சில பெண்கள், உரத்த ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.(10) அபிமன்யுவால், கரங்களின் முழு வலிமையுடன் துளைக்கப்பட்ட கணைகளை, அவனது {பிருஹத்பலனின்} உடலில் இருந்து பிடுங்கும் அந்தப் பெண்கள், மீண்டும் மீண்டும் மயங்கி விழுங்கின்றனர்.(11) ஓ! மாதவா, களைப்பாலும், சூரியனின் கதிர்களாலும் பீடிக்கப்படும் அந்த அழகிய பெண்களின் முகங்கள் இப்போது ஒளிமங்கிய தாமரைகளைப் போலத் தெரிகின்றன.(12)
இளம்வயதுடையவர்களும், தங்க மாலைகள் மற்றும் அழகிய அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும் துணிச்சல்மிக்கவர்களுமான திருஷ்டத்யும்னனின் மகன்கள், துரோணரால் கொல்லப்பட்டு அங்கே கிடக்கின்றனர்.(13) சுடர்மிக்க நெருப்பில் விழும் பூச்சிகளைப் போல அவர்கள் அனைவரும், நெருப்பறையைப் போன்ற தேரையும், தழல்களேயான விற்களையும், விறகுகளேயான கணைகள், ஈட்டிகள் மற்றும் கதாயுதங்களையும் கொண்ட துரோணரின் மேல் பாய்ந்து எரிக்கப்பட்டனர்.(14)
அதே போலவே, பெரும் துணிவைக் கொண்டவர்களும், அழகிய அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான ஐந்து கேகேய சகோதரர்களும், துரோணரை நோக்கித் திரும்பிய அவர்களின் முகங்களுடன் அவரால் {துரோணரால்} கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கின்றர்.(15) புடம்போட்ட தங்கத்தின் காந்தியைக் கொண்டவையும், தங்கத்தாலானவையுமான கவசங்கள், கொடிமரங்கள், தேர்கள், மாலைகள் சுடர்மிக்கப் பல நெருப்புகளைப் போலப் பூமியில் பிரகாசமான ஒளியைச் சிந்துகின்றன.(16)
ஓ! மாதவா {கிருஷ்ணன்}, துரோணரால் வீழ்த்தப்பட்ட மன்னன் துருபதன், ஒரு பெருஞ்சிங்கத்தால் கொல்லப்பட்டுக் காட்டில் கிடக்கும் வலிமைமிக்க யானையைப் போல அங்கே கிடப்பதைப் பார்.(17) ஓ! தாமரைக்கண்ணா, வெண்மையான நிறம் கொண்ட பாஞ்சாலர்களின் மன்னனுடைய பிரகாசமான குடையானது, கூதிர்கால ஆகாயத்தின் சந்திரனைப் போல இருக்கிறது.(18) அந்த முதிய மன்னனின் மனைவியரும், மருமகள்களும், துயரால் பீடிக்கப்பட்டு, ஈமச்சிதையில் அவனது {துருபதனது} உடலை எரித்துவிட்டு, அந்தச் சிதையைத் தங்கள் வலப்பக்கம் கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்.(19)
அதோ அங்கே, உணர்வுகளை இழந்தவர்களான அந்தப் பெண்கள், துரோணரால் கொல்லப்பட்டவனும், பெரும் வில்லாளியும், துணிச்சல்மிக்கவனும், சேதிகளில் காளையுமான திருஷ்டகேதுவை அகற்றிக் கொண்டிருக்கின்றனர்.(20) ஓ! மதுசூதனா, எதிரிகளை நொறுக்குபவனான இந்தப் பெரும் வில்லாளி {திருஷ்டகேது}, துரோணரின் பல ஆயுதங்களைக் கலங்கடித்துவிட்டு, காற்றால் வேரோடு பிடுங்கப்பட்ட ஒரு மரத்தைப் போல உயிரை இழந்து இங்கே கிடக்கிறான்.(21) ஐயோ, துணிச்சல்மிக்கச் சேதிகளின் ஆட்சியாளனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான இந்தத் திருஷ்டகேது, ஆயிரக்கணக்கான எதிரிகளைக் கொன்றுவிட்டு, தானே உயிரையிழந்து இங்கே கிடக்கிறான்.(22) ஓ! ரிஷிகேசா, சேதிகளின் ஆட்சியாளனுடைய உடல் ஊனுண்ணும் பறவைகளால் கிழிக்கப்பட்டாலும், இன்னும் அழகிய குழல்களுடனும், அழகிய காது குண்டலங்களுடனும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அதை {அந்த உடலைச்} சுற்றி அவனுடைய மனைவியர் அமர்ந்திருக்கின்றனர்.(23) அந்தப் பெண்களில் முதன்மையானோர், தசார்ஹ குலத்தில் பிறந்த அந்த வீர திருஷ்டகேதுவின் நெடிய உடலைத் தங்கள் மடியில் கிடத்திக் கொண்டு, சோகத்தால் அழுது கொண்டிருக்கின்றனர்.(24)
ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, அழகிய குழல்களையும், சிறந்த காது குண்டலங்களையும் கொண்டவனும், துரோணரின் கணைகளால் போரில் கொல்லப்பட்ட திருஷ்டகேதுவின் மகனைப் பார்.(25) அவன், தன் தந்தை எதிரிகளுடன் போரிட்ட போது ஒருபோதும் அவனை விட்டு அகவில்லை. ஓ! மதுசூதனா, மரணத்தில்கூட அவன் தன் வீரத் தந்தையை விட்டு அகலவில்லை பார்.(26)
அதே போலவே, பகைவர்களைக் கொல்பவனான எனது மகனின் {துரியோதனின்} மகனும் {பேரனும்}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான லக்ஷ்மணனும் அவனது தந்தையான துரியோதனனைப் பின்தொடர்ந்து சென்றுவிட்டான்.(27)
ஓ! கேசவா {கிருஷ்ணா}, இளவேனில் காலத்தில் பூத்துக் குலுங்கும் இரு சால மரங்கள் புயலால் வீழ்த்தப்பட்டதைப் போல அவந்தியின் இரு சகோதரர்களான விந்தனும் அனுவிந்தனும் போரக்களத்தில் கிடப்பதைப் பார்.(28) தங்கக் கவசம் பூண்டவர்களும், தங்க அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், வாள்கள் மற்றும் விற்களை இன்னும் தரித்திருப்பவர்களுமாக அவர்கள் கிடக்கிறார்கள். காளை போன்ற கண்களைக் கொண்டவர்களும், பிரகாசமான மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அவர்கள் இருவரும் போர்க்களத்தில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறார்கள்.(29)
பாண்டவர்களும், நீயும், துரோணர், பீஷ்மர், விகர்த்தனன் மகன் கர்ணன், கிருபர்,(30) துரியோதனன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வலிமைமிக்கத் தேர்வீரனான ஜெயத்ரதன், சோமதத்தன், விகர்ணன், துணிச்சல்மிக்கவனான கிருதவர்மன் ஆகியோரிடமிருந்து தப்பியிருப்பதால் நீங்கள் நிச்சயம் கொல்லப்பட முடியாதவர்களே.(31) காலத்தால் கொண்டுவரப்பட்ட மறுபாடுகளைப் பார். ஆயுதபலத்தால் தேவர்களையே கொல்லவல்லவர்களான அந்த மனிதர்களில் காளையர், இறுதியில் அவர்களே கொல்லப்பட்டவர்கள் ஆனார்கள்.(32) ஓ! மாதவா, மனிதர்களில் காளையரான இந்த வீரர்கள் க்ஷத்திரியப் போர்வீரர்களால் கொல்லப்பட்டதால், விதியால் கொண்டு வர முடியாத எதுவும் இல்லை என்பதில் ஐயமில்லை.(33) ஓ! கிருஷ்ணா, உபப்லாவ்யத்தில் இருந்து நீ தூது வெல்லாமல் சென்ற போதே, பெருஞ்சுறுசுறுப்பைக் கொண்டவர்களான என் மகன்கள் கொல்லப்பட்டார்கள் (என நான் கருதினேன்).(34) சந்தனுவின் மகனும் {பீஷ்மரும்}, விதுரனும், “உன் பிள்ளைகளிடம் பாசங்கொள்வதை நிறுத்துவாயாக” என்றனர்.(35) அம்மனிதர்கள் சொன்ன எதுவும் நடக்காமல் போகாது. ஓ! ஜனார்த்தனா, என் மகன்கள் விரைவில் சாம்பலாக எரிக்கப்படப் போகிறார்கள்” என்றாள் {காந்தாரி}”.(36)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இந்த வார்த்தைகளைச் சொன்ன காந்தாரி, துயரால் தன் உணர்வுகளை இழந்து பூமியில் விழுந்தாள். தன் உறுதியைக் கைவிட்ட அவள், துயரால் தன் உணர்வுகளை இழந்தவளானாள்.(37) தன் மகன்களின் மரணத்தால் கவலையாலும், கோபத்தாலும் நிறைந்த அவள் {காந்தாரி}, கலங்கிய இதயத்துடன் கிருஷ்ணனே அனைத்துக் குற்றத்திற்கும் காரணமென்றாள்.
அந்தக் காந்தாரி {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, பாண்டவர்களும், தார்தராஷ்டிரர்களும் எரிக்கப்பட்டுவிட்டனர். ஓ! ஜனார்த்தனா, அவர்கள் இவ்வாறு நிர்மூலத்தையடைந்தபோது, நீ ஏன் அவர்களிடம் அக்கறையற்றவனாக இருந்தாய்?(39) பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களையும், பெரும் படையையும் கொண்டவனான நீ, இந்தப் படுகொலையைத் தடுக்க வல்லவனாக இருந்தாய். நீ நாநலமிக்கவனாகவும் {பேச்சுச் சாமர்த்தியம் கொண்டவனாகவும்}, (அமைதியைக் கொண்டு வரும்) சக்தி படைத்தவனாகவும் இருந்தாய்.(40) ஓ! மதுசூதனா, ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, இந்த அண்டப்பேரழிவின் {மொத்த அழிவின்} போது, வேண்டுமென்றே நீ அலட்சியமாக இருந்ததால், இந்தச் செயலின் கனியை நீ அறுவடை செய்ய வேண்டும்.(41) ஓ! சக்கரத்தையும், கதாயுதத்தையும் தரிப்பவனே, என் கணவரிடம் கடமையுணர்வுடன் காத்திருந்ததால் {பணிவிடை செய்ததால்}, நான் அடைந்திருப்பதும், அடைவதற்கரிதானதுமான அந்த சிறு தகுதியை {புண்ணியத்தைக்} கொண்டு, நான் உன்னைச் சபிக்கப் போகிறேன்.(42) ஓ! கோவிந்தா, குருக்களும், பாண்டவர்களும் ஒருவரையொருவர் கொன்ற போது, நீ அகற்றையற்றவனாக இருந்ததால், நீயே உன் சொந்த உறவினர்களைக் கொல்பவனாவாய்.(43) ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இன்றிலிருந்து முப்பத்தாறு {36} வருடங்களில், உன் உறவினர்களையும், நண்பர்களையும், மகன்களையும் நீயே கொல்லச் செய்த பிறகு, காட்டிற்குள், அருவருப்பான முறையில் நீ அழிவையடைவாய்.(44) மகன்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் இழந்த இந்தப் பாரதக் குலப் பெண்களைப் போலவே, உன் குலத்தின் பெண்களும் அழுது புலம்புவார்கள்” என்று சபித்தாள் {காந்தாரி}”.(45)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைக் கேட்ட உயரான்ம வாசுதேவன் {கிருஷ்ணன்}, மதிப்புக்குரிய காந்தாரியிடம் பேசும் வகையில், மயக்கப் புன்னகையுடன் இந்த வார்த்தைகளை அவளிடம் சொன்னான்,(46) “என்னைத் தவிர இவ்வுலகில் விருஷ்ணிகளை அழிக்கவல்லவர்கள் எவரும் இல்லை. இதை நான் நன்கறிவேன். அதைக் கொண்டுவரவே நான் முயற்சிப்பேன். ஓ! அற்புத நோன்புகளைக் கொண்டவளே, இவ்வாறு சபித்ததால், அப்பணியை நிறைவேற்றவே நீ எனக்கு உதவியிருக்கிறாய்.(47) விருஷ்ணிகள், மனிதர்களாலோ, தேவர்களாலோ, தானவர்களாலோ யாராலும் கொல்லப்பட முடியாதவர்கள். எனவே, அந்த யாதவர்களே ஒருவரையொருவர் வீழ்த்துவார்கள்” என்றான்.(48) தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} இந்த வார்த்தைகளைச் சொன்னதும், பாண்டவர்கள் திகைப்படைந்தனர். கவலையால் நிறைந்த அவர்கள் அனைவரும், உயிரில் நம்பிக்கையற்றவர்களானார்கள்” {என்றார் வைசம்பாயனர்}.(49)
ஸ்திரீ உபபர்வம் முற்றும்
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply