கிரௌஞ்ச வியூகம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 050-முதல் நாள் தோல்வி குறித்து யுதிஷ்டிரன் கவலைப் பட்டு கிருஷ்ணனிடம் செல்வது; அர்ஜுனனின் அக்கறையின்மை குறித்து யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம் வருந்துவது; கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு ஆறுதலைச் சொல்வது; யுதிஷ்டிரன் திருஷ்டத்யும்னனிடம் கிரௌஞ்ச வியூகத்தை அமைக்கும்படி சொல்வது; திருஷ்டத்யும்னனும் அவ்வாறே அமைப்பது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, முதல் நாளில் துருப்புகள் திரும்பப் பெறப்பட்டு, போரில் பீஷ்மரின் கோபத்தால் {கோபத்தைக் கண்டு} துரியோதனன் மகிழ்ச்சி கொண்ட போது, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பிகள் அனைவருடனும் மற்றும் (தனது தரப்பின்) மன்னர்கள் அனைவருடனும் சேர்ந்து ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்} சென்றான்.
பீஷ்மரின் ஆற்றலைக் கண்டும், தனது தோல்வியை நினைத்தும் பெரும் துக்கத்தில் நிறைந்த அவன் {யுதிஷ்டிரன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த விருஷ்ணி குலக்கொழுந்திடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, வலிமைமிக்க வில்லாளியான பீஷ்மரின் பயங்கர ஆற்றலைப் பார். காய்ந்த புல்லை {வைக்கோலை} எரிக்கும் நெருப்பைப் போல, அவர் {பீஷ்மர்} எனது துருப்புகளை எரிக்கிறார். தெளிந்த நெய்யால் ஊட்டப்படும் நெருப்பைப் போல எனது துருப்புகளை நக்கிக் கொண்டிருக்கும் அந்த உயர் ஆன்ம வீரரை {பீஷ்மரை} நம்மால் காணக்கூட முடியுமா?
வில் தரித்தவரும், மனிதர்களில் புலியுமான அந்த வலிமைமிக்க வீரரை {பீஷ்மரைக்} கண்டு, கணைகளால் பீடிக்கப்பட்டு, எனது துருப்புகள் ஓடுகின்றன. சினம் கொண்ட யமனோ, வஜ்ரம் தரித்தவனோ {இந்திரனோ}, கையில் வருண பாசத்தைக் கொண்டவனோ {வருணனோ}, கதாயுதத்துடன் கூடிய குபேரனோ கூடப் போரில் வீழ்த்தப்படலாம், ஆனால், வலிமைமிக்கத் தேர்வீரரும், பெரும் சக்தி படைத்தவருமான பீஷ்மரை வீழ்த்துவது இயலாது. இப்படிப்பட்ட நிலையில், பீஷ்மர் எனும் அடியற்ற கடலில் (என்னைக் காக்க) ஒரு படகில்லாமல் நான் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.
ஓ! கேசவா {கிருஷ்ணா}, எனது புரிதலில் உள்ள பலவீனத்தின் விளைவாக, (போரில் எதிரியாகப்) பீஷ்மரை அடைந்த நான், ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, காட்டுக்குச் செல்வேன். பூமியின் தலைவர்களான இவர்களை {பாண்டவர்களைப்}, பீஷ்மர் என்ற உருவத்தில் உள்ள மரணத்திற்கு {காலனுக்கு} அளிப்பதைவிட நான் அங்கே {காட்டில்} வாழ்வதே விரும்பத்தக்கது.
வலிமைமிக்க ஆயுதங்களை அறிந்த பீஷ்மர், ஓ! கிருஷ்ணா, எனது படையை அழித்துவிடுவார். சுடர்விடும் நெருப்பில், தங்கள் சொந்த அழிவுக்காக விழும் பூச்சிகளைப் போல, எனது படையைச் சேர்ந்த போராளிகளும் விழுவார்கள்.
ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நாட்டுக்காக ஆற்றலை வெளிப்படுத்துவதில், நான் அழிவை நோக்கியே இட்டுச் செல்லப்படுகிறேன். வீரர்களான எனது தம்பிகள், தங்கள் அண்ணனின் மேல் கொண்ட அன்பினால், அரசுரிமையையும், மகிழ்ச்சியையும் இழந்து, எனக்காகக் கணைகளால் பீடிக்கப்பட்டு வலியோடு இருக்கின்றனர். உயிரை மிக உயர்வாக நாம் கருதுகிறோம். ஏனெனில், இத்தகு சூழ்நிலையில் உயிர் என்பது (தியாகம் செய்ய முடியாத அளவுக்கு) விலைமதிப்பில்லாததாகும்.
எஞ்சிய எனது நாட்களில் நான் கடுந்தவங்களைப் பயில்வேன். ஓ! கேசவா {கிருஷ்ணா}, இந்த எனது நண்பர்கள் கொல்லப்படுவதற்கு நான் காரணமாக மாட்டேன். வலிமைமிக்கவரான பீஷ்மர், அடிப்பவர்களின் முதன்மையான எனது தேர்வீரர்கள் பல்லாயிரம் பேரை எதிர்த்து, தனது தெய்வீக ஆயுதத்துடன் இடைவிடாமல் {களத்தில்} நிற்கிறார். ஓ! மாதவா {கிருஷ்ணா}, எதைச் செய்தால், அஃது எனக்கு நன்மையைச் செய்யும் என்பதைத் தாமதிக்காமல் சொல்வாயாக.
அர்ஜுனனைப் பொறுத்தவரை, அக்கறையில்லாத ஒரு பார்வையாளனாகவே நான் அவனைக் காண்கிறேன். பெரும் வலிமை கொண்ட இந்தப் பீமன் மட்டுமே, க்ஷத்திரியக் கடமைகளை நினைவில் கொண்டு, தனது கரங்களின் ஆற்றலை வெளிப்படுத்தி, தனது சக்தியை முழுமையாகப் பயன்படுத்துகிறான். வீரர்களைக் கொல்லும் தனது கதாயுதத்தைக் கொண்டு, தனது சக்தியை முழுமையாகப் பயன்படுத்திக் காலாட்படை வீரர்கள், குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகள் ஆகியவற்றுடன் மோதி மிகக் கடினமான சாதனைகளை அடைகிறான். எனினும், ஓ! ஐயா {கிருஷ்ணா}, நூறுவருடங்கள் நன்கு போரிட்டாலும் எதிரிப் படையை அழிப்பதற்கு இவனால் {பீமனால்} ஆகாது.
(நமக்கு மத்தியில்) இந்த உனது நண்பன் (அர்ஜுனன்) மட்டுமே (வலிமைமிக்க) ஆயுதங்களை அறிந்தவனாவான். எனினும், பீஷ்மராலும், உயர் ஆன்ம துரோணராலும் நாம் எரிக்கப்படுவதைக் கண்டும், அக்கறையே இல்லாமல் நம்மைப் பார்க்கிறான். பீஷ்மர் மற்றும் உயர்ஆன்ம துரோணரின் தெய்வீக ஆயுதங்கள் தடையில்லாமல் பயன்படுத்தப்பட்டு க்ஷத்திரியர்கள் அனைவரையும் எரித்துக் கொண்டிருக்கின்றன. ஓ! கிருஷ்ணா, கோபம் தூண்டப்பட்ட பீஷ்மரின் ஆற்றலும், (அவரது தரப்பில்) இருக்கும் மன்னர்களின் துணையும், ஐயமில்லாமல் நம்மை நிர்மூலமாக்கிவிடும். ஓ! யோகத்தின் தலைவா {கிருஷ்ணா}, காட்டுத்தீயைத் தணிக்கும் மழைநிறைந்த மேகங்களைப் போலப் பீஷ்மருக்கு மரணத்தை எவன் அளிப்பானோ, அந்த வலிமைமிக்கத் தேர்வீரனை, அந்தப் பெரும் வில்லாளியை {அர்ஜுனனை} நீ பார்ப்பாயாக. ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, (பிறகு) உனது கருணையின் மூலம், எதிரிகள் கொல்லப்பட்டு பாண்டுவின் மகன்கள் தங்கள் நாட்டை மீட்டு, தங்கள் சொந்தங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்” என்றான் {யுதிஷ்டிரன்}.
இதைச் சொன்ன உயர் ஆன்ம பிருதையின் மகன் {குந்தியின் மகன் யுதிஷ்டிரன்}, துன்பத்தால் பீடிக்கப்பட்ட இதயத்துடனும், மனம் ஒடுக்கப்பட்டும், சிந்திக்கும் மனநிலையோடு நீண்ட நேரம் அமைதியாக இருந்தான்.
துன்பத்தால் பீடிக்கப்பட்டு, கவலையால் உணர்வுகளை இழந்த அந்தப் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைக்} கண்ட கோவிந்தன் {கிருஷ்ணன்}, பாண்டவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியூட்டும்படி, “ஓ! பாரதர்களின் தலைவரே {யுதிஷ்டிரரே}, வருந்தாதீர். உமது தம்பிகள் அனைவரும் வீரர்களாகவும், உலகப் புகழ்பெற்ற வில்லாளிகளாகவும் இருக்கும்போது வருந்துவது உமக்குத் தகாது. வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, வயதால் மரியாதைக்குரிய இருவரான விராடர் மற்றும் துருபதர், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன் ஆகியோரும் {கிருஷ்ணனான} நானும் உமக்கு நன்மையைச் செய்வதில் ஈடுபட்டிருக்கிறோம். ஓ! மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, (தங்கள்) துருப்புகளுடன் கூடிய இந்த ஏகாதிபதிகள் அனைவரும் உமது உதவியை வேண்டியும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே} உமக்கு அர்ப்பணிப்புடனும் இருக்கின்றனர். உமது படையின் தலைவனும், பிருஷத குலத்தின் வலிமைமிக்கத் தேர்வீரனுமான இந்தத் திருஷ்டத்யும்னனும், நிச்சயமாகப் பீஷ்மரைக் கொல்லப் போகிறவனான இந்தச் சிகண்டியும் உமது நன்மையையே எப்போதும் வேண்டி, உமக்கு ஏற்புடையதையே செய்து வருகிறார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.
இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் (யுதிஷ்டிரன்), அந்தச் சபையில், வாசுதேவன் {கிருஷ்ணன்} கேட்டுக் கொண்டிருக்கையிலேயே, வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னனிடம், “ஓ! திருஷ்டத்யும்னா, நான் உன்னிடம் சொல்லும் வார்த்தைகளைக் குறித்துக் கொள். ஓ! பிருஷத குலத்தைச் சேர்ந்தவனே, நான் உதிர்க்கும் வார்த்தைகள் மீறப்படக்கூடாது. வாசுதேவனின் {கிருஷ்ணனின்} அங்கீகாரத்துடன், நீ எங்கள் படைகளின் தலைவனாக இருக்கிறாய். பழங்காலத்தில் தேவர்களின் படைக்குத் தலைவனாக {சேனாதிபதியாக} எப்போதும் இருந்த கார்த்திகேயனைப் {முருகனைப்} போல, ஓ! மனிதர்களில் காளையே {திருஷ்டத்யும்னா}, நீயும் பாண்டவப் படைக்குத் தலைவனாக இருக்கிறாய்.
ஓ! மனிதர்களில் புலியே {திருஷ்டத்யும்னா}, உனது ஆற்றலை வெளிப்படுத்திக் கௌரவர்களைக் கொல்வாயாக. ஓ! ஐயா {திருஷ்டத்யும்னா}, நானும், பீமனும், கிருஷ்ணனும், மாத்ரியின் மகன்களும், கவசம் பூண்ட திரௌபதியின் மகன்களும் [1] மற்றும் பிற மன்னர்களில் முதன்மையானவர்களும், ஓ! மனிதர்களில் காளையே {திருஷ்டத்யும்னா} உன்னைப் பின்பற்றுவோம்” என்றான் {யுதிஷ்டிரன்}.
பிறகு, (கேட்பவர்களை) மகிழ்விக்கும் வண்ணம் திருஷ்டத்யும்னன் {யுதிஷ்டிரனிடம்}, “பழங்காலத்தில் சுயம்புவால் விதிக்கப்பட்டது போலவே, ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரரே}, நானே துரோணரைக் கொல்பவனாவேன். இப்போதோ இந்தப் போரில் பீஷ்மர், துரோணர், கிருபர், சல்லியன், ஜெயத்ரதன் மற்றும் (குரு தரப்பில் இருக்கும்) செருக்கு நிறைந்த ஏகாதிபதிகள் அனைவருடனும் நான் போரிடுவேன்” என்றான் {திருஷ்டத்யும்னன்}.
இளவரசர்களில் முதன்மையானவனும், எதிரிகளைக் கொல்பவனுமான பிருஷதனின் மகன் {திருஷ்டத்யும்னன்} இதைத் துணிச்சலாகச் சொன்ன போது, பெரும் சக்தி கொண்டவர்களும், போரில் தோற்கடிக்கப்பட முடியாதவர்களுமான பாண்டவ வீரர்கள் பேரொலியுடன் ஆரவாரம் செய்தனர். பிறகு, பிருதையின் {குந்தியின்} மகனான யுதிஷ்டிரன், தனது படைத்தலைவனான பிருஷதன் மகனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} (இவ்வார்த்தைகளால்), “எதிரிகள் அனைவரையும் அழிக்கவல்லதும், பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த போரில் பிருஹஸ்பதியால் இந்திரனுக்குச் சொல்லப்பட்டதும், பகையணியின் படைப்பிரிவுகளை அழிக்கவல்லதுமான ஓர் அணிவகுப்பு {வியூகம்} உண்டு. கிரௌஞ்சருமா {Krauncharuma – கொக்கு போன்ற வடிவம் கொண்ட வியூகம்} என்ற பெயரில் அறியப்பட்ட அந்த அணிவகுப்பை {வியூகத்தை} நீ அமைப்பாயாக. இதற்கு முன்னால் காணப்படாத அதை {கிரௌஞ்ச வியூகத்தை}, குருக்களுடன் சேர்ந்து பிற மன்னர்களும் காணட்டும்”, என்றான் {யுதிஷ்டிரன்}.
[2]
விஷ்ணுவால் சொல்லப்பட்ட வஜ்ரதாங்கியைப் போல {இந்திரனைப்போல} மனிதர்களில் தேவனால் {யுதிஷ்டிரனால்} சொல்லப்பட்ட அவன் {திருஷ்டத்யும்னன்}, காலை விடிந்ததும், முழுப் படையின் முன்னணியில் தனஞ்சயனை {அர்ஜுனனை} நிறுத்தினான். இந்திரனின் கட்டளையின் பேரில் தேவதச்சனால் செய்யப்பட்ட தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கொடி, வானத்தில் அசைந்து கொண்டிருந்த போது, அஃது அற்புதமான அழகுடன் திகழ்ந்தது. இந்திரவில்லின் {வானவில்லின்} நிறங்களை ஒத்த நிறங்களைக் கொண்ட கொடிகள், விண்ணதிகாரிகளை {பறவைகளைப்} போலப் பறந்து கொண்டிருந்தன. வானத்தில் பறக்கும் நீராவியால் ஆன மாளிகை போல அது தெரிந்தது. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தேர் சென்ற பாதையெங்கிலும் அது நடனமாடிக் கொண்டு செல்வதைப் போலவும் தெரிந்தது. அந்தக் காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, ரத்தினங்கள் நிறைந்த அதனுடனும் (கொடிக்கம்பத்துடனும்), அந்தக் கொடிக்கம்பம் காண்டீவந்தாங்கியுடனும் {அர்ஜுனனுடனும்} எனச் சுயம்புவுடன் சூரியனைப் போல (சூரியனுடன் சுயம்புவைப் போல என) [2] உயர்ந்த அலங்காரத்துடன் தெரிந்தது.பெரிய எண்ணிக்கையிலான துருப்புகளால் சூழப்பட்ட மன்னன் துருபதன் (அந்த அணிவகுப்பின் {வியூகத்தின்} தலைமையில் இருந்தான். குந்திபோஜன் மற்றும் சைப்யன் ஆகிய இரு மன்னர்களும் அதன் கண்களாகினர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தாசர்ணர்கள் {தாசேரகர்கள்}, பிரயகர்கள் {பிரபத்ரர்கள்}, அநூபகர்கள், கிராதர்கள் ஆகியோரின் ஆட்சியாளர்கள் அதன் {கிரௌஞ்ச வியூகத்தின்} கழுத்தில் நிறுத்தப்பட்டார்கள். ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, யுதிஷ்டிரன், படச்சரர்கள் {Patachcharas}, ஹூனர்கள் {Hunas}, பௌரவகர்கள் {Pauravakas}, நிஷாதர்கள் ஆகியோர் அதன் {அந்தக் கிரௌஞ்ச வியூகத்தின்} இரு சிறகுகள் ஆனார்கள். அதேபோல, பிசாசர்கள், குண்டவிஷர்கள் {குண்டீவிஷர்கள்}, மந்தகர்கள், லடாகர்கள், தங்கணர்கள், உத்திரர்கள் {உத்பசர்கள்}, சரபர்கள் {சபரர்கள்}, தும்புமர்கள், வத்சர்கள், நாகுலர்கள் ஆகியோரும் அப்படியே {கிரௌஞ்ச வியூகத்தின் சிறகுகள்} ஆனார்கள். நகுலனும் சகாதேவனும் தங்களை இடது சிறகில் நிறுத்திக் கொண்டார்கள் [3].அந்தச் சிறகுகள் இரண்டும் சந்திக்கும் இடத்தில், பத்தாயிரம் தேர்களும், தலையில் நூறாயிரமும் {ஒருலட்சமும்}, பின்புறத்தில் ஆயிரம் லட்சத்து இருபதாயிரமும் {ஓர் அர்ப்புத்ததிற்கு மேல் இருபதாயிரம்}, கழுத்தில் நூற்று எழுபதாயிரம் {ஒரு லட்சத்து எழுபதாயிரம்} தேர்களும் நிறுத்தப்பட்டன. சிறகுகளின் இணைப்புகள், சிறகுகள், சிறகுகளின் எல்லைகள் ஆகியவற்றில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுடர்விடும் மலைகளைப் போன்ற பெரும் உடல் படைத்த யானைகள் முன்னேறிக் கொண்டிருந்தன.
கேகயர்கள், காசி ஆட்சியாளன், முப்பதாயிரம் தேர்களுடன் கூடிய சேதிகளின் மன்னன் ஆகியோரின் துணையோடு விராடன் அதன் {அந்த வியூகத்தின்} பின்புறத்தைக் காத்தான் [4]. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் வலிமைமிக்க அணிவகுப்பை {கிரௌஞ்ச வியூகத்தை} இப்படி வகுத்துக் கொண்ட பாண்டவர்கள் அனைவரும் கவசங்களைத் தரித்துக் கொண்டு சூரிய உதயத்தை எதிர்பார்த்துப் போருக்காகக் காத்திருந்தார்கள். சுதமானவையும், விலையுயர்ந்தவையுமான அவர்களது வெண்குடைகள் சூரியனைப் போலப் பிரகாசமாக அவர்களது தேர்களிலும், யானைகளிலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது”. {என்றான் சஞ்சயன்}
பாண்டவர்களின் கிரௌஞ்ச வியூகம் – பீஷ்ம பர்வம் பகுதி – 051-இரண்டாம் நாள் போர் துவங்குவதற்காகக் கௌரவர்களும் பாண்டவர்களும் செய்த ஏற்பாடுகள்; சங்கு முழக்கங்கள்; சிங்க முழக்கங்கள்…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அளவிலா சக்தி கொண்ட பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} அமைக்கப்பட்டதும், வலிமையானதும், பயங்கரமானதும், கிரௌஞ்சம் என்று அழைக்கப்பட்டதுமான அந்த அணிவகுப்பை {கிரௌஞ்ச வியூகத்தைக்} கண்ட உமது மகன் {துரியோதனன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஆசான் {துரோணர்}, கிருபர், சல்லியன், சோமதத்தனின் மகன் {பூரிஸ்வரவஸ்}, விகர்ணன், அஸ்வத்தாமன், துச்சாசனன் தலைமையிலான தனது தம்பிகள் மற்றும் {தன் தரப்பில்} போருக்காகத் திரண்டிருந்த எண்ணிலடங்கா வீரர்களை அணுகி, அவர்கள் அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம் நேரத்திற்குத் தகுந்த வார்த்தைகளைச் சொன்னான். அவன் {துரியோதனன்}, “பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைத் தரித்திருக்கும் நீங்கள் அனைவரும் சாத்திரங்களை அறிந்தவர்களாக இருக்கிறீர்கள். வலிமைமிக்கத் தேர்வீரர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் பாண்டு மகன்களையும் அவர்களது துருப்புகளையும் தனியாகவே கொல்லத் தகுந்தவர்களாக இருக்கிறீர்கள். அப்படியிருக்கையில், ஒன்றாகத் திரண்டிருக்கும் நீங்கள் அனைவரும் சேர்ந்து எவ்வளவு அதிகம் செய்ய முடியும்? {என்பதை நினைத்துப் பாருங்கள்}.
எனவே, பீஷ்மரால் பாதுகாக்கப்படும் நமது படை அளவிட முடியாததாக இருக்கிறது. அதே வேளையில், பீமனால் பாதுகாக்கப்படும் அவர்களது {பாண்டவர்களின்} படை அளவிடக்கூடியதாகவே இருக்கிறது [1]. சம்ஸ்தானர்கள், சூரசேனர்கள், வேணிகர்கள் {வேத்ரிகர்கள்} [2], குகுரர்கள், ரேசகர்கள் {ஆரோசகர்கள்}, திரிகார்த்தர்கள், மத்ரகர்கள், யவனர்கள், சத்ருஞ்சயன், துச்சாசனன், அற்புத வீரனான விகர்ணன், நந்தன், உபநந்தகன், சித்திரசேனன், மணிபத்ரகர்கள் {பாரிபத்ரகர்கள்} ஆகியோர் தங்கள் (அவரவர்) துருப்புகளோடு பீஷ்மரைப் பாதுகாக்கட்டும்” என்றான் {துரியோதனன்}
பிறகு, பீஷ்மர், துரோணர், உமது மகன்கள் ஆகியோர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பார்த்தர்களுடையதை {பாண்டவர்களின் வியூகத்தை} தாக்குப்பிடிக்கும் வண்ணம் வலிமைமிக்க ஓர் அணிவகுப்பை {வியூகத்தை} {??} வகுத்தார்கள். அதிக அளவிலான துருப்புகளால் சூழப்பட்ட பீஷ்மர், தேவர்களின் தலைவனைப் போலவே, ஒரு வலிமைமிக்கப் படைக்குத் தலைமை தாங்கி முன்னேறினார். பெரும் சக்தி கொண்டவரும், வலிமைமிக்க வில்லாளியுமான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குந்தலர்கள், தசார்ணர்கள், மகதர்கள் {மாகதர்கள்}, விதர்ப்பர்கள், மேலகர்கள் {மேகலர்கள்}, கர்ணர்கள், பிராவரணர்கள் {கர்ணப்பிராவரணர்கள்} ஆகியோரோடு அவரை {பீஷ்மரைப்} பின்தொடர்ந்தார். காந்தாரர்கள், சிந்துசௌவீரர்கள், சிபிக்கள், வசாதிகள், போர்க்களத்தின் ரத்தினமான பீஷ்மரைப் பின்தொடர்ந்தார்கள். தனது துருப்புகள் அனைத்துடனும் சேர்ந்த சகுனி பரத்வாஜரின் மகனைப் {துரோணரைப்} பாதுகாத்தான்.
தனது தம்பிகள் அனைவருடனும், அஸ்வாதகர்கள், விகர்ணர்கள், அம்பஷ்டர்கள், கோசலர்கள், தரதர்கள், சகர்கள் க்ஷுத்ரகர்கள், மாலவர்கள் ஆகியோருடனும் கூடிய மன்னன் துரியோதனன், பாண்டவப் படைக்கு எதிராக உற்சாகமாக முன்னேறினான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பூரிஸ்ரவஸ், சலர், சல்லியன், பகதத்தன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோர் {பீஷ்மரின்} இடது பக்கத்தைப் பாதுகாத்தனர். சோமதத்தன், சுசர்மன், காம்போஜ ஆட்சியாளன் சுதக்ஷிணன், சதயு மற்றும் சுருதயு ஆகியோர் வலது பக்கத்தைப் பாதுகாத்தனர். அஸ்வத்தாமன், கிருபர், சத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் பெரும் பிரிவுகளிலான துருப்புகளுடன் படையின் பின்புறத்தில் நின்றனர். அவர்களுக்கும் பின்னால், கேதுமான், வசுதானன், காசி மன்னனின் பலமிக்க மகன் {அபிபூ} ஆகியோர் இருந்தனர்.
ஓ! பாரதரே, போருக்காக உற்சாகமாகக் காத்திருந்த உமது துருப்புகள் அனைத்தும் பெரும் மகிழ்ச்சியுடன் தங்கள் சங்குகளை ஊதி, சிங்க முழக்கம் செய்தார்கள். அந்தப் (போராளிகளின்) ஒலிகளைக் கேட்டு மகிழ்ச்சியால் நிறைந்தவரும், பெரும் ஆற்றலைக் கொண்டவரும் மரியாதைக்குரியவருமான குரு {கௌரவ} பாட்டன் {பீஷ்மர்}, சிங்க முழக்கம் முழங்கி தனது சங்கை எடுத்து ஊதினார். அதன்பேரில், பிறரும் தங்கள் சங்குகள், பேரிகைகள், பல விதங்களிலான காகளங்கள், ஆனகங்கள் ஆகியவற்றை முழங்கினார்கள். அந்த ஒலி ஆரவாரமிக்கப் பேரொலியாக இருந்தது.
வெண்குதிரைகள் பூட்டப்பட்ட பெருந்தேரில் நின்றிருந்த மாதவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், தங்கத்தால் ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கள் அற்புத சங்குகளை முழங்கினார்கள். ரிஷிகேசன் {கிருஷ்ணன்} பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்பட்ட சங்கை ஊதினான். அர்ஜுனன் தேவதத்தையும், பயங்கரச் செயல்களைப் புரியும் விருகோதரன் {பீமன்}, பௌண்ட்ரத்தையும் முழங்கினார்கள். குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன் அனந்தவிஜயம் என்ற அழைக்கப்பட்ட சங்கை ஊதினான். அதே வேளையில், நகுலனும் சகாதேவனும் சுகோஷம், மணிபுஷ்பகம் என்று அழைக்கப்பட்ட சங்குகளை எடுத்து முழங்கினார்கள் [3].
காசி ஆட்சியாளன் [4], சைப்யன், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, திருஷ்டத்யும்னன், விராடன், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, பெரும் வில்லாளியான பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்}, திரௌபதியின் ஐந்து மகன்கள் ஆகியோர் அவரவர் சங்குகள் எடுத்து ஊதி சிங்க முழக்கம் செய்தார்கள். அந்த வீரர்களால் எழுப்பப்பட்ட ஆரவாரமிக்கப் பேரொலி பூமியிலும் வானத்தில் உரக்க எதிரொலித்தது. இப்படியே, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியில் நிறைந்திருந்த குருக்களும் பாண்டவர்களும் மீண்டும் போரிட்டு ஒருவரை ஒருவரை அழிக்க விரைந்து முன்னேறினார்கள்.” {என்றான் சஞ்சயன்}.
பீஷ்மார்ஜுனப் போர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 052-போர்வீரர்களை உற்சாகப்படுத்திய துரியோதனன்; பீஷ்மர் செய்த பெரும்போர்; பாண்டவர்களின் படை சிதறி ஓடுவதைக் கண்ட அர்ஜுனன் பீஷ்மரை எதிர்த்து தானே செல்வது; பீஷ்மரின் துணைக்குக் கௌரவர்களில் சிலரும், அர்ஜுனனின் துணைக்குப் பாண்டவப் படையில் சிலரும் விரைந்தது; அர்ஜுனனுக்கும் பீஷ்மருக்கும் இடையில் நடைபெற்ற ஒப்பற போர்…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “இப்படி எனது படைகளும், பகைவர்களின் படைகளும் போர்வியூகத்தை அமைத்துக் கொண்ட பின்னர், அடிப்பவர்களில் முதன்மையானவர்கள் {அவர்கள் அனைவரும்} எப்படித் தாக்கினார்கள்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அனைத்துப் பிரிவுகளும் இப்படி அணிவகுக்கப்பட்ட பின்னர், கவசம் தரித்திருந்த ஒவ்வொரு போராளியும் தங்கள் அழகிய கொடிகளை உயர்த்திப் பிடித்த வண்ணம் {போருக்காகக்} காத்திருந்தனர். எல்லையற்ற கடலைப் போன்றிருந்த (குரு) படையைக் கண்ட உமது மகன் துரியோதனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, படைக்குள் இருந்தபடியே உமது தரப்பின் போராளிகள் அனைவரிடமும், “கவசம் தரித்த நீங்கள், போரிடத் தொடங்குவீராக” என்றான். உயர்த்தப்பட்ட கொடிகளுடன் கூடிய போராளிகள் அனைவரும், கொடூர எண்ணங்களை வளர்த்துக் கொண்டு, தங்கள் உயிர்களையே துச்சமாக மதித்து, பாண்டவர்களுக்கு எதிராக விரைந்தனர். அதன்பிறகு அங்கே நடைபெற்ற போர் கடுமையானதாகவும், மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.
தேர்கள் மற்றும் யானைகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்தன. தேர்வீரர்களால் அடிக்கப்பட்டவையும், அழகிய இறகுகளும், கூரிய முனைகளும் கொண்டவையுமான பெரும் சக்தி படைத்த கணைகள் யானைகளின் மீதும் குதிரைகள் மீதும் பொழிந்தன. இப்படிப் போர் ஆரம்பித்த போது, மதிப்பிற்குரிய குரு பாட்டனும், பயங்கர ஆற்றல் கொண்டவரும் வலிய கரங்களைக் கொண்டவருமான பீஷ்மர், கவசம் தரித்து, தனது வில்லை எடுத்துக் கொண்டு, அவர்களை {கௌரவர்களை} அணுகி, சுபத்திரையின் வீர மகன் {அபிமன்யு}, வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனன், கேகயர்களின் ஆட்சியாளன், விராடன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், சேதி மற்றும் மத்ஸ்ய வீரர்கள் ஆகியோர் மீது கணைமாரியைப் பொழிந்தார்.
(பாண்டவர்களின்) வலிமைமிக்க அந்த அணிவகுப்பு {வியூகம்}, அந்த வீரர் {பீஷ்மர்} போரிடத் தொடங்கியதும் நடுங்கத் தொடங்கியது. போராளிகள் அனைவருக்கும் இடையில் நடைபெற்ற போரானது பயங்கரமாக இருந்தது. குதிரைவீரர்கள், தேர்வீரர்கள் மற்றும் குதிரைகளில் முதன்மையானவை ஆகியன விரைவில் விழுந்தன. பாண்டவர்களின் தேர்ப்படைப் பிரிவுகள் சிதறி ஓடிப் போகத் தொடங்கின. பிறகு, மனிதர்களில் புலியான அர்ஜுனன், வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மரைக் கண்டு, விருஷ்ணி குலத்தோனிடம் {கிருஷ்ணனிடம்} கோபத்துடன், “பாட்டன் {பீஷ்மர்} இருக்கும் இடத்திற்கு முன்னேறுவாயாக. ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, கோபம் தூண்டப்பட்ட இந்தப் பீஷ்மர், துரியோதனனின் நலனுக்காக எனது படையை அழித்துவிடுவார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இந்தத் துரோணர், கிருபர், சல்லியன், விகர்ணன் ஆகியோர் துரியோதனன் தலைமையிலான திருதராஷ்டிரர் மகன்களுடன் சேர்ந்து கொண்டும், உறுதிமிக்க இந்த வில்லாளி {பீஷ்மர்} தரும் பாதுகாப்பிலும், பாஞ்சாலர்களைப் படுகொலை செய்துவிடுவார்கள். எனவே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எனது துருப்புகளுக்காக நானே பீஷ்மரைக் கொல்வேன்” என்றான் {அர்ஜுனன்}.
அவனிடம் {அர்ஜுனனிடம்} வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, கவனமாக இருப்பாயாக. ஏனெனில், ஓ! வீரா {அர்ஜுனா}, பாட்டனின் {பீஷ்மரின்} தேரை நோக்கி உன்னை நான் விரைவாகக் கொண்டு செல்வேன்” என்றான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்ன சௌரி {கிருஷ்ணன்}, உலகத்தால் கொண்டாடப்படும் அந்தத் தேரை, பீஷ்மரின் தேருக்கு முன்பாக நிறுத்தினான். எண்ணிலடங்கா கொடிகள் அசைந்து கொண்டிருக்க, (வெள்ளை) நாரைக்கூட்டங்களைப் போன்ற அழகான குதிரைகள் வேகமாகச் செல்ல, கடுமுழக்கம் செய்யும் குரங்கைப் {குரங்கின் உருவத்தை} பொறித்த கொடி உயர்ந்திருக்க, சூரியப் பிரகாசத்துடனும், மேகங்களின் முழக்கத்தைப் போன்ற சடசடப்பொலியுடனும் கூடிய தனது பெரிய தேரில், கௌரவப் படைகளையும், சூரசேனர்களையும் கொன்றபடி சென்றவனும், நண்பர்களின் மகிழ்ச்சி அதிகரிப்பவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அங்கே மோதலுக்கு விரைந்து வந்தான்.
(இப்படி) மிக வேகமாக மதங்கொண்ட யானையைப் போல விரைந்து வந்த அவன் {அர்ஜுனன்}, போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வீரமிக்கப் போராளிகளுக்கு (இப்படியே) அச்சமூட்டி, தனது கணைகளால் அவர்களை வீழ்த்தி, சைந்தவன் தலைமையிலான வீரர்களாலும், கிழக்குப் பகுதி {கிழக்கு நாடுகளின்} வீரர்கள், சௌவீரர்கள், கேகயர்கள் ஆகிய போராளிகளால் பாதுகாக்கப்பட்ட சந்தனுவின் மகன் பீஷ்மருடன் பெரும் வேகத்துடன் மோதினான். காண்டீவம் என்று அழைக்கப்படும் வில்லைத் தாங்குபவனை {அர்ஜுனனை} எதிர்க்க, குரு பாட்டனையும் {பீஷ்மரையும்}, தேர்வீரர்களான துரோணர் மற்றும் விகர்த்தனன் மகனையும் {கர்ணன்} தவிர வேறு யாரால் முடியும்?
பிறகு, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, கௌரவர்களின் பாட்டனான பீஷ்மர் அர்ஜுனனை எழுபத்தேழு {77} கணைகளால் {நாராசங்களால்} அடித்தார். துரோணர் இருபத்தைந்தாலும் {25}, கிருபர் ஐம்பதாலும் {50}, துரியோதனன் அறுபத்துநான்காலும் {64}, சல்லியன் ஒன்பது {9} கணைகளாலும் (அவனை {அர்ஜுனனை}) அடித்தனர். மனிதர்களில் புலியான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அறுபது {60}, விகர்ணன் மூன்று {3}, சைந்தவன் ஒன்பது {9}, சகுனி ஐந்து {5} என அவனை {அர்ஜுனனை} அம்புகளால் அடித்தனர். மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்த்தயாணி {சல்லியன்}, [1] அந்தப் பாண்டுவின் மகனை அகன்ற தலை கொண்ட மூன்று {3} கணைகளால் {பல்லங்களால்} துளைத்தான். அனைத்துப் புறங்களில் இருந்தும் அவர்கள் அடித்த கூரிய கணைகள் துளைத்தபடியே இருந்தாலும், அந்தப் பெரும் வில்லாளி, அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன் {அர்ஜுனன்}, (கணைகளால்) துளைக்கப்பட்ட ஒரு மலையைப் போல நடுங்காதிருந்தான்.
அதன் பேரில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கிரீடம் தரித்தவனான அளவிலா ஆன்மா கொண்டவன் {அர்ஜுனன்}, பீஷ்மரை இருபத்தைந்து {25} கணைகளாலும், கிருபரை ஒன்பது {9} கணைகளாலும், துரோணரை அறுபதாலும் {60}, ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டரரே}, விகர்ணனை மூன்றாலும் {3}, அர்த்தயாணியை {சல்லியனை} மூன்று {3} கணைகளாலும், மன்னனை {துரியோதனனை} ஐந்து {5} கணைகளாலும் அடித்தான்.
அதன்பிறகு, சாத்யகி, விராடன், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், திரௌபதியின் மகன்கள், அபிமன்யு ஆகிய அனைவரும் (அவனுக்கு உதவும் பொருட்டு) அவனைச் {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டார்கள். சோமகர்களால் ஆதரிக்கப்பட்ட பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, கங்கை மைந்தரின் {பீஷ்மரின்} நலம் நாடுவதிலேயே ஈடுபட்டுக் கொண்டிருந்த பெரும் வில்லாளியான துரோணரை நோக்கி முன்னேறினான்.
பிறகு, தேர்வீரர்களில் முதன்மையான பீஷ்மர், எட்டு {8} கூரிய கணைகளால் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} விரைந்து துளைத்தார். இதனால் உமது தரப்புப் போராளிகள் மனம் நிறைந்தனர். தேர்வீரர்களில் சிங்கங்களான அவர்களின் முழக்கங்களைக் கேட்டவனும், பெரும் ஆற்றல் கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேர்வீரர்களில் சிங்கங்களான அவர்களுக்கு மத்தியில் உற்சாகமாக நுழைந்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களை (தொடர்ந்து) குறி வைத்து, தனது வில்லைக் கொண்டு விளையாடினான்.
அப்போது, மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் துரியோதனன், போரில் பிருதையின் மகனால் {குந்தியின் மகன் அர்ஜுனனால்} பீடிக்கப்படும் தனது துருப்புகளைக் கண்டு பீஷ்மரிடம், “ஓ! கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, கிருஷ்ணனோடு கூடியவனும், பாண்டுவின் மகனுமான வலிமைமிக்க இவன் {அர்ஜுனன்}, நீரும், தேர்வீரர்களில் முதன்மையான துரோணரும் உயிரோடிருக்கையிலேயே, நமது துருப்புகள் அனைத்தையும் வீழ்த்தி, நமது வேர்களை வெட்டிக் கொண்டிருக்கிறான். ஓ! ஏகாதிபதி {பீஷ்மரே}, கர்ணன் எனது நலன் விரும்பியாக இருப்பினும், உம் நிமித்தமாகவே, பிருதையின் {குந்தியின்} மகன்களுடன் போரிடாமல் ஆயுதங்களை ஒதுக்கி வைத்தான். எனவே, ஓ! கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, பல்குனனைக் {அர்ஜுனனைக்} கொல்ல என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வீராக” என்றான் {துரியோதனன்}.
இப்பபடிச் சொல்லப்பட்ட உமது தந்தை தேவ விரதர் {பீஷ்மர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, “க்ஷத்திரிய பழக்கவழக்கத்திற்கு {அறத்திற்கு} ஐயோ” என்று சொல்லி பார்த்தனின் {அர்ஜுனனின்} தேரை நோக்கி முன்னேறினார். மேலும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தங்கள் தேரில் (போருக்காக) அந்த இரு வீரர்களும் நிற்பதைக் கண்ட மன்னர்கள் அனைவரும் சிங்க முழக்கம் செய்த படி, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தங்கள் சங்குகளை முழக்கினர்.
துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, துரியோதனன், உமது மகன் விகர்ணன் ஆகியோர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே} அந்த மோதலில் {பீஷ்மருக்குத் துணை நிற்க} பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டு போருக்காக நின்றனர். அதே போலப் பாண்டவர்கள் அனைவரும் தனஞ்சயனை {அர்ஜுனனை} சூழ்ந்து கொண்டு கடும் மோதலுக்கு நின்றனர். போரும் ஆரம்பித்தது. அந்த மோதலில் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, பார்த்தனை {அர்ஜுனனை} ஒன்பது {9} கணைகளால் துளைத்தார். அர்ஜுனனும் பதிலுக்குப் பத்து {10} கணைகளால் அவரது உயிர்நிலைகளில் துளைத்தான். பிறகு, பாண்டுவின் மகனான அர்ஜுனன், நன்கு அடிக்கப்பட்ட ஓர் ஆயிரம் {1000} கணைகளால் பீஷ்மரை அனைத்துப் புறங்களிலும் மூழ்கடித்தான். எனினும், பார்த்தனின் {அர்ஜுனனின்} அந்த அம்புகளாலான வலையை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சந்தனுவின் மகனான பீஷ்மர் (தனக்குச் சொந்தமான) மற்றொரு அம்புவலையால் கலங்கடித்தார். போரில் மகிழ்வு கொண்டு, மனம் நிறைந்த அந்த இருவரும் {பீஷ்மரும்-அர்ஜுனனும்}, ஒருவரின் மேல் மற்றவர் ஆதிக்கம் பெற முடியாமல், சாதனைகளுக்கு எதிரான சாதனைகளை ஒருவருக்கொருவர் செய்ய விரும்பினர். பீஷ்மரின் வில்லில் இருந்து அடிக்கப்பட்ட தொடர்ச்சியான அம்புகள், அர்ஜுனனின் கணைகளால் விலக்கப்பட்டன. அதே போல அர்ஜுனனால் அடிக்கப்பட்ட கணைகள் அனைத்தையும், தனது கணைகளால் தரையில் வீழ்த்தினார் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}.
கூரிய முனைகள் கொண்ட இருபத்தைந்து {25} கணைகளால் பீஷ்மரை அர்ஜுனன் துளைத்தான். அந்த மோதலில் பீஷ்மரும் பார்த்தனை {அர்ஜுனனை} ஒன்பது {9} கணைகளால் துளைத்தார். வலிமைமிக்க வீரர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான அவர்கள் இருவரும் ஒருவரின் குதிரைகளை மற்றவர் துளைத்தனர். அவர்களின் கணைகளும், தேர்களின் சக்கரங்களும் கூட விளையாடத் தொடங்கின.
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அடிப்பவர்களில் முதன்மையான பீஷ்மர், மூன்று {3} கணைகளால் வாசுதேவனை {கிருஷ்ணனை} நடு மார்பில் அடித்தார். பீஷ்மரின் வில்லில் இருந்து அடிக்கப்பட்ட அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட மதுசூதனன் {கிருஷ்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} மலர்ந்திருக்கும் பலாச {கின்சுக} மரத்தைப் போலக் காணப்பட்டான். மாதவனைக் {கிருஷ்ணனைக்} கண்டு கோபமுற்ற அர்ஜுனன், அந்த மோதலில் கங்கை மைந்தருடைய {பீஷ்மரின்} தேரோட்டியை மூன்று {3} கணைகளால் துளைத்தான். அந்த இருவீரர்களும், அந்தப் போரில் ஒருவரை ஒருவர் குறிபார்க்க எண்ணி, அதில் வெல்ல முடியாதவர்களாக இருந்தனர். அந்த இரண்டு வீரர்களின் தேரோட்டிகளின் திறமை, கரங்களின் வேகம் ஆகியவற்றின் விளைவாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, முன்னேறுவதிலும், பின்வாங்குவதிலும், அழகிய வளையங்களாகச் சுழல்வதிலும் தங்கள் தேர்களை ஈடுபடுத்தித் தங்கள் திறமைகளை அவர்கள் வெளிக்காட்டினார்கள்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தாக்குவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} தாங்கள் எதிர்பார்த்ததை அடைவதற்காக அவர்கள் இருவரும் அடிக்கடி தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டே இருந்தனர். இரு வீரர்களும் சிங்க முழக்கங்களுடன் சங்குகளையும் ஊதினர். அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களுடைய வில்லின் நாணொலிகளும் ஒன்று போலவே இருந்தன. சங்கு முழக்கம், தேர்களின் சடசடப்பொலி ஆகியவற்றால் திடீரெனப் பூமி பிளந்தது {பூமியில் விரிசல் விட்டது}. இப்படியே நடுங்கத் தொடங்கிய அது {பூமி}, பாதாள ஒலிகளையும் உண்டாக்கத் தொடங்கியது. ஓ! பாரதக் குலத்தின் காளையே, அவர்கள் இருவருக்குள்ளும் எந்த ஏற்றத்தாழ்வையும் யாராலும் காண முடியவில்லை. பெரும் வலிமையும், போரில் பெரும் துணிவும் கொண்ட அவ்விருவரும் ஒருவருக்கொருவர் இணையானவர்களாகவே இருந்தனர்.
பீஷ்மரின் கொடியைக் கொண்டு (கண்டு) மட்டுமே, (உதவி செய்ய) அவரைக் கௌரவர்களால் அணுக முடிந்தது. அதே போல, பாண்டவப் படையினரும் (உதவி செய்ய) பிருதையின் மகனை {குந்தியின் மகன் அர்ஜுனனை} அணுக அவனது கொடியே வழிகாட்டியது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் முதன்மையானவர்களான அவ்விருவரும் தங்கள் ஆற்றல்களை இப்படி வெளிக்காட்டிய போது, போர்க்களத்தில் இருந்த உயிரினங்கள் அனைத்தும் ஆச்சரியத்தால் நிறைந்தன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, யாராலும் அவர்களுக்குள் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை. அறநெறிகளை நோற்கும் மனிதர்களால் அவர்களிடம் எந்த அற மீறலையும் காண முடியவில்லை. கணை மேகங்களின் விளைவால் (சில நேரங்களில்) அவ்விருவரும் யார் கண்ணுக்கும் தெரியாதவாறு மறைந்தார்கள். விரைவில் அவ்விருவரும் மீண்டும் தெரியவும் ஆரம்பித்தனர்.
அவர்களது ஆற்றல்களைக் கண்ட கந்தர்வர்கள், சாரணர்கள் மற்றும் பெரும் முனிவர்களுடன் கூடிய தேவர்கள் தங்களுக்குள், “இந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் கோபத்தால் தூண்டப்பட்டிருக்கும்போது, தேவர்கள், அசுரர்கள் மற்றும் கந்தர்வர்களுடன் கூடிய உலகங்கள் அனைத்தினாலும் கூட, {இந்தத் தேர்வீரர்களைப்} போரில் வீழ்த்த முடியாது. பெரும் ஆச்சரியங்கள் நிறைந்த இந்தப் போர், உலகங்கள் அனைத்திலும் ஆச்சரியம் நிறைந்ததாகவே உண்மையில் இருக்கும், இது போன்ற ஒரு போர் இனி எப்போதும் நடைபெறாது. பெரும் புத்திக்கூர்மை கொண்டவனும், குதிரைகள், தேர் மற்றும் வில்லைக் கொண்டவனும், போரில் கணைமாரி பொழிபவனுமான பிருதையின் மகனால் {அர்ஜுனனால்} இந்த மோதலில் பீஷ்மரை வீழ்த்த முடியாது. தேவர்களாலேயே போரில் வீழ்த்தப்பட முடியாத பெரும் வில்லாளியான பாண்டுவின் மகனையும் {அர்ஜுனனையும்} இந்த மோதலில் பீஷ்மரால் வீழ்த்த முடியாது. இந்த உலகம் எவ்வளவு காலம் நீடித்திருக்குமோ, அவ்வளவு காலம் இந்தப் போரும் தொடரவே செய்யும்” என்றனர் {தேவர்கள்}.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் போரிட்டுக் கொண்டிருந்த கங்கையின் மைந்தரையும் {பீஷ்மரையும்}, அர்ஜுனனையும் புகழ்ந்த {தேவர்களின்} இவ்வார்த்தைகளை நாங்களும் கேட்டோம். அவ்விருவரும் போரில் தங்கள் ஆற்றலை இப்படி வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது, உமது தரப்பின் வீரர்களும், பாண்டவர்கள் தரப்பு வீரர்களும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} கூரிய குறுவாள்களையும், பளபளக்கும் போர்க்கோடரிகளையும், எண்ணிலடங்கா கணைகளையும், பல்வேறு விதமான ஆயுதங்களையும் கொண்டு ஒருவரை ஒருவர் கொன்றனர். இரு படைகளின் துணிச்சல்மிகுப் போராளிகளும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும், அடித்துக் கொண்டும் நடந்த அந்தக் கொலைகார மோதல் இப்படி நீடித்துக் கொண்டே இருந்தது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணருக்கும், பாஞ்சாலர்களின் இளவரசனுக்கும் {திருஷ்டத்யும்னனுக்கும்} இடையில் நடைபெற்ற மோதலும் பயங்கரமாகவே இருந்தது”. {என்றான் சஞ்சயன்}.
துரோணர் திருஷ்டத்யும்னன் மோதல்! – பீஷ்ம பர்வம் பகுதி – 053-துரோணருக்கும் திருஷ்டத்யும்னுக்கும் இடையில் நடைபெற்ற போர்; இடையில் குறுக்கிட்ட பீமன்; பீமனுக்கு எதிராகக் கலிங்கர்களைத் தூண்டிய துரியோதனன்…
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, சிறந்த முறையில் போரில் முயற்சி செய்பவர்களான பெரும் வில்லாளி துரோணர், பிருஷத குலத்தின் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} ஆகிய இருவரும் தங்களுக்குள் எப்படிப் போரிட்டுக் கொண்டனர்? சந்தனுவின் மகனான பீஷ்மரால் (கூட) போரில் பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} தப்ப இயலவில்லை எனும்போது, ஓ! சஞ்சயா, முயற்சியை விட விதி மேன்மையானது என்றே நான் கருதுகிறேன். உண்மையில், கோபத்தால் தூண்டப்பட்டிருக்கும் பீஷ்மரால் அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் அழித்து விட முடியும் எனும்போது, ஓ! சஞ்சயா, போரில் தனது ஆற்றலை வெளிப்படுத்தும் அவரால் {பீஷ்மரால்} பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} ஏன் தப்ப இயலவில்லை?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பயங்கரப் போரைக் குறித்து அமைதியுடன் கேட்பீராக. தேவர்களுடன் கூடிய வாசவனாலும் {இந்திரனாலும்} கூடப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} வெல்ல முடியாது. துரோணர், திருஷ்டத்யும்னனை பல்வேறு வகையான கணைகளால் {பல்லங்களால்} துளைத்து, அவனின் {திருஷ்டத்தும்னனின்} தேரோட்டியைத் தேர் தட்டில் இருந்து விழச் செய்தார். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கோபம் தூண்டப்பட்ட அந்த வீரர் {துரோணர்}, அற்புதமான தனது நான்கு கணைகளைக் கொண்டு திருஷ்டத்யும்னனின் நான்கு குதிரைகளைத் துன்புறுத்தினார். வீரனான திருஷ்டத்யும்னனும் ஒன்பது {9} கணைகளால் துரோணரைத் துளைத்து, அவரிடம், “நில்லும், நில்லும்” என்று சொன்னான்.
பெரும் ஆற்றல் கொண்டவரும், அளவிலா ஆன்மா கொண்டவருமான அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, கோபம் நிறைந்த திருஷ்டத்யும்னனைத் தனது கணைகளால் மறைத்தார். பிறகு அவர் {துரோணர்} மரணத்தின் இரண்டாவது கோலைப் போன்றதும், சக்ரனின் {இந்திரனின்} வஜ்ரத்தைப் போன்றதுமான ஒரு பயங்கரக் கணையைப் பிருஷதனின் மகனுடைய {திருஷ்டத்யுன்மனின்} அழிவுக்காக எடுத்தார். பரத்வாஜர் {துரோணர்} அந்தக் கணையைக் கொண்டு குறி பார்ப்பதைக் கண்ட போராளிகளுக்கு மத்தியில் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் ஓலங்கள் எழுந்தன.
வீரனான திருஷ்டத்யும்னன் அந்தப் போர்க்களத்தில் மலைபோல அசைவற்றுத் தனியாக நின்றான். ஆச்சரியகரமான அவனது ஆற்றலை நாங்கள் அப்போது கண்டோம். தனக்கான மரணத்தைப் போலத் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்ததும், பயங்கரமானதுமான சுடர்விடும் அந்தக் கணையை வெட்டிய அவன் {திருஷ்டத்யும்னன்}, பரத்வாஜரின் மகன் {துரோணரின்} மீது கணைமாரியைப் பொழிந்தான். கடுஞ்சாதனையைச் செய்த அந்தத் திருஷ்டத்யும்னனைக் கண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும், அப்போது மகிழ்ச்சியால் நிறைந்து பேரொலியுடன் ஆரவாரம் செய்தனர்.
துரோணரைக் கொல்ல விரும்பியவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான அந்த இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, தங்கம் மற்றும் வைடூரியம் ஆகியவறால் அலங்கரிக்கப்பட்ட ஈட்டி ஒன்றை துரோணரின் மீது ஏவினான். சிரித்து நின்ற பரத்வாஜரின் மகன் {துரோணர்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருப்பதுமான அந்த ஈட்டியை மூன்று துண்டுகளாகத் துண்டித்தார். இப்படித் தனது ஈட்டி கலங்கடிக்கப்பட்டதைக் கண்டவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான திருஷ்டத்யும்னன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணரின் மேல் கணைகளை மழையெனப் பொழிந்தான்.
அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணர், அந்தக் கணை மாரியைக் கலங்கடித்தபடி, வாய்ப்புக் கிடைத்த சமயத்தில், துருபதன் மகனுடைய {திருஷ்டத்யும்னனுடைய} வில்லை ஒடித்தார். (இப்படி) அந்த மோதலில் தனது வில் ஒடிக்கப்பட்டவனும், பெரும் புகழ் கொண்டவனுமான வலிமைமிக்க வீரன் {திருஷ்டத்யும்னன்}, மலை போன்ற பலம் நிறைந்த ஒரு கனமான கதாயுதத்தைத் துரோணர் மீது விசினான். அவனது {திருஷ்டத்யும்னனின்} கரங்களில் இருந்து வீசப்பட்ட அந்தக் கதாயுதம் துரோணரின் அழிவுக்காகக் காற்றில் நகர்ந்து சென்றது.
அதன் பிறகு நாங்கள் பரத்வாஜர் மகனின் {துரோணரின்} அதிசயம் நிறைந்த ஆற்றலைக் கண்டோம். (தனது தேரின்) வேகத்தால், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கதாயுதத்தைக் கலங்கடித்த அவர் {துரோணர்}, கூரிய முனைகள் கொண்டதும், நன்கு கடினமாக்கப்பட்டதும், தங்க இறகுகள் படைத்ததும், சாணைக்கல்லில் கூர் தீட்டப்பட்டதுமான பல கணைகளைப் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} நோக்கி அடித்தார். பிருஷதனின் {திருஷ்டத்யும்னனின்} கவசத்தைக் கடந்த அவை, அந்தப் போரில் அவனது இரத்தத்தைக் குடித்தன.
உயர் ஆன்மா கொண்ட திருஷ்டத்யும்னன் அப்போது, அந்த மோதலில் தனது ஆற்றலை வெளிப்படுத்தி, வேறு ஒரு வில்லை எடுத்துக் கொண்டு, ஐந்து {5} கணைகளால் துரோணரைத் துளைத்தான். பிறகு, இரத்தத்தில் நனைந்த அந்த மனிதர்களில் காளைகளான அவ்விருவரும், வசந்த காலத்தில் மலர்ந்திருக்கும் பலாச மரங்களைப் போலத் தோன்றினார்கள். பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்டுத் தனது ஆற்றலை வெளிப்படுத்தியவரும், தனது படைப்பிரிவின் தலைமையில் இருந்தவருமான துரோணர், துருபதன் மகனுடைய {திருஷ்டத்யும்னனின்} வில்லை மீண்டும் ஒரு முறை ஒடித்தார்.
வில் ஒடிந்தவனும், அளவிலா ஆன்மா கொண்டவனுமான அந்த வீரனை {திருஷ்டத்யும்னனை} மலையில் மழையைப் பொழியும் மேகங்களைப் போல எண்ணிலா நேர்க் கணைகளால் அவர் {துரோணர்} மூடினார். மேலும், அவர் {துரோணர்} தனது எதிரியின் {திருஷ்டத்யும்னனின்} தேரோட்டியைத் தேர்த் தட்டில் இருந்து {மீண்டும்} விழச் செய்தார். நான்கு கணைகளால் குதிரைகளையும் விழச்செய்த அந்தத் துரோணர் சிம்ம கர்ஜனை புரிந்தார். மேலும் அவர் {துரோணர்}, மற்றொரு கணையால், திருஷ்டத்யும்னன் கரங்களை மூடியிருந்த தோலுறைகளையும் அறுத்தார். வில் ஒடிக்கப்பட்டு, தேரிழந்து, தனது குதிரைகள் கொல்லப்பட்டு, தேரோட்டி வீழ்த்தப்பட்ட அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, கைகளில் கதாயுதத்துடன் தனது தேரில் இருந்து இறங்கி பெரும் ஆற்றலை வெளிப்படுத்தினான்.
ஆனால், தனது தேரில் இருந்து அவன் {திருஷ்டத்யும்னன்} இறங்குவதற்கு முன்பே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணர், தனது கணைகளால் அந்தக் கதாயுதத்தைச் சுக்குநூறாக வெட்டினார். இந்தச் சாதனை எங்களுக்குப் பெரிதாகத் தெரிந்தது. அதன் பிறகு, பலமிக்கக் கரங்களைக் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய, பெரிய கேடயத்தையும், அழகிய வாள் ஒன்றையும் எடுத்துக் கொண்டு, சினமிக்க யானையை நோக்கி விரையும் பசிமிகுந்த சிங்கத்தைப் போலத் துரோணரைக் கொல்ல விரும்பி விரைந்தான்.
அதன் பிறகு, நாங்கள் கண்ட பரத்வாஜர் மகனின் {துரோணரின்} ஆற்றலும், ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் அவரது (கரங்களின்) வேகமும், அவரது கரங்களின் பலமும் அற்புதம் நிறைந்தனவாக இருந்ததன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தனியாகவே அவர் {துரோணர்}, தனது கணை மாரியால் பிருஷதனின் மகனைத் {திருஷ்டத்யும்னனைத்} தடுத்தார். போரில் பெரும் பலத்தைக் கொண்டிருந்தாலும், அவனால் {திருஷ்டத்யும்னனால்} மேலும் முன்னேற முடியாமல் போனது. தான் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு, அந்தக் கணை மேகங்களைத் தனது கரங்களின் வேகத்தைப் பயன்படுத்திக் கேடயத்தால் விலக்கிக் கொண்டு இருந்த வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னனை நாங்கள் கண்டோம்.
பிறகு, அந்த உயர் ஆன்ம பிருஷதன் மகனுக்கு {திருஷ்டத்யும்னனுக்கு} உதவ விரும்பியவனும் வலிமைமிக்கக் கரங்களும், பெரும் பலம் கொண்டவனுமான பீமன், அங்கே விரைந்து வந்தான். கூரிய ஏழு கணைகளால் துரோணரைத் துளைத்த அவன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விரைவாகப் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} மற்றொரு தேரில் ஏற்றச் செய்தான்.
பிறகு, மன்னன் துரியோதனன், பெரும் படைப்பிரிவால் ஆதரிக்கப்பட்ட கலிங்கர்களின் ஆட்சியாளனிடம் பரத்வாஜர் மகனைப் {துரோணரைப்} பாதுகாக்கத் தூண்டினான். பயங்கரமானதும், வலிமைமிக்கதுமான கலிங்கர்களின் படைப்பிரிவு, உமது மகனின் {துரியோதனனின்} உத்தரவின் பேரில் பீமனுக்கு எதிராக விரைந்தது. அப்போது, தேர்வீரர்களில் முதன்மையான துரோணர், பாஞ்சால இளவரசனை {திருஷ்டத்யும்னனை} கைவிட்டு விட்டு, விராடனுடனும், துருபதனுடனும் ஒரே சமயத்தில் மோதினார்.
போரில் மன்னன் யுதிஷ்டிரனை ஆதரிக்கத் திருஷ்டத்யும்னனும் முன்னேறினான். அப்போது, பயங்கரமானதும், மயிர் கூச்சத்தை ஏற்படுத்துவதும், உலகை அழிப்பதுமான அச்சம் நிறைந்த அந்தப் போர் கலிங்கர்களுக்கும், உயர் ஆன்ம பீமனுக்கும் இடையில் நடைபெற்றது.
பீமன் புரிந்த கோரத்தாண்டவம்! – பீஷ்ம பர்வம் பகுதி – 054அ-பீமனைத் தாக்க நிஷாத மன்னன் கேதுமானுடன் சேர்ந்து விரைந்த கலிங்க மன்னன் சுருதாயுஸ்; போர்க்களத்தின் கொடூர நிலை; பீமசேனனைக் கைவிட்டு சேதி நாட்டு வீரர்கள் பின்வாங்குவது; பீமன் தனியாகப் போராடுவது; பீமனின் குதிரைகளைக் கொன்ற சக்ரதேவன்; பீமன் சக்ரதேவனைக் கொல்வது; பானுமானைக் கொன்ற பீமன்; வாளை எடுத்துக் கொண்டு பீமன் புரிந்த கோரத்தாண்டவம்….
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “எனது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டவனும், தனது துருப்புகளால் ஆதரிக்கப்பட்டவனும், பெரும் படைப்பிரிவின் தலைவனுமான கலிங்கர்களின் ஆட்சியாளன் {சுருதாயுஸ்}, அற்புதம் நிறைந்த சாதனைகளுக்குச் சொந்தக்காரனும், மரணத்தைப் போன்ற கதாயுதத்தைக் கையில் கொண்டு போர்க்களத்தில் உலவும் வீரனுமான வலிமைமிக்கப் பீமசேனனை எதிர்த்து எப்படிப் போரிட்டான்?” என்று கேட்டான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, இப்படி உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்ட கலிங்கர்களின் வலிமைமிக்க மன்னன் {சுருதாயுஸ்}, ஒரு பெரும் படையின் துணையுடன் பீமனின் தேரை நோக்கி முன்னேறினான். அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சேதிகளால் {சேதி நாட்டு வீரர்களால்} ஆதரிக்கப்பட்ட பீமசேனன், நிஷாதர்களின் மன்னனுடைய மகனான கேதுமானுடன் சேர்ந்து கொண்டு தன்னை நோக்கி வருவதும், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்கள் நிறைந்ததும், வலிமைமிக்கதுமான கலிங்கர்களின் பெரும் படையை நோக்கி விரைந்தான்.
கவசம் தரித்தவனும், கோபத்தால் தூண்டப்பட்டவனுமான சுருதாயுசும் அணிவகுக்கப்பட்ட தனது துருப்புகளால் பின்தொடரப்பட்டு, மன்னன் கேதுமான் துணையுடன் அந்தப் போரில் பீமனுக்கு முன்பாக வந்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பல்லாயிரம் தேர்களுடன் கூடிய கலிங்கர்களின் ஆட்சியாளனும் {சுருதாயுசும்}, பத்தாயிரம் {10,000} யானைகள் மற்றும் நிஷாதர்களுடன் கூடிய கேதுமானும், பீமசேனனை அனைத்துப் புறங்களில் இருந்தும் சூழ்ந்தனர்.
பிறகு, பீமசேனனைத் தங்கள் தலைமையில் கொண்டவர்களான சேதிகள், மத்ஸ்யர்கள், கரூசர்கள், ஆகியோர் பல மன்னர்களுடன் சேர்ந்து நிஷாதர்களுக்கு எதிராக விரைவாகச் சென்றனர். ஒருவரை ஒருவர் கொல்லும் விருப்பத்தில் விரைந்து கொண்டிருந்த வீரர்களுக்கிடையில், கடுமையான பயங்கரப் போர் தொடங்கியது. பீமனுக்கும், அவனது எதிரிகளுக்கும் இடையில் திடீரென மூண்ட அந்தப் போர், ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் இந்திரனுக்கும், திதியின் மகன்களுடைய வலிமைமிக்கப் படைக்கும் இடையில் நடந்த போரைப் போன்று பயங்கரமானதாக இருந்தது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போரில் போராடிக் கொண்டிருந்த அந்த வலிமைமிக்கப் படையின் ஆரவாரம், முழங்கிக் கொண்டிருக்கும் கடலின் ஒலியைப் போலப் பேரொலியாக இருந்தது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்ட போராளிகள் அந்தப் போர்க்களம் முழுவதையும் சதையும், இரத்தமும் பரவிய ஒரு சுடுகாடு போல ஆக்கினர். படுகொலை செய்யும் விருப்பத்தால் உந்தப்பட்ட போராளிகளுக்கு நண்பனையும் எதிரியையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியவில்லை. போரில் எளிதில் வெல்லப்பட முடியாத அந்தத் துணிவுமிக்க வீரர்கள், தங்கள் சொந்த நண்பர்களையே தாக்கத் தொடங்கினர். சேதிகள் {சேதி நாட்டு வீரர்கள்} ஒரு புறத்திலும், கலிங்கர்களும், நிஷாதர்களும் ஒருபுறத்திலுமென, சிலருக்கும், பலருக்கும் இடையில் நடந்த அந்த மோதல் பயங்கரமாக இருந்தது.
தங்கள் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தித் தங்கள் ஆண்மையை வெளிப்படுத்திய சேதிகள் பீமசேனனைக் கைவிட்டு திரும்பிச் சென்றனர். சேதிகள் தன்னைத் தொடர்வதை நிறுத்தியதும், கலிங்கர்கள் அனைவருடனும் போரிட்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தனது சொந்த கரங்களின் பலத்தை மட்டுமே நம்பி திரும்பாமல் போரிட்டான்.
உண்மையில், வலிமைமிக்க அந்தப் பீமசேனன் அசையாமல் தனது தேர் தட்டில் நின்றபடி கலிங்கர்களின் படைப்பிரிவின் மேல் தனது கூரிய கணைகளை மழையெனப் பொழிந்தான். அப்போது, வலிமைமிக்க வில்லாளியும், தேர்வீரனுமான அந்தக் கலிங்கர்களின் மன்னன் {சுருதாயுஸ்}, சக்ரதேவன் என்ற பெயரால் அறியப்பட்ட அவனது {சுருதாயுசின்} மகன் ஆகிய இருவரும் தங்கள் கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனைத் {பீமனைத்} தாக்கத் தொடங்கினர். தனது அழகிய வில்லை அசைத்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன், தனது கரங்களின் தனிப்பட்ட பலத்தை மட்டுமே நம்பி அந்தக் கலிங்கனுடன் {சுருதாயுசுடன்} போரிட்டான். எண்ணிலாக் கணைகளை அந்தப் போரில் அடித்த சக்ரதேவன், அவற்றைக் கொண்டு பீமசேனனின் குதிரைகளைக் கொன்றான்.
எதிரிகளைத் தண்டிப்பவனான பீமசேனன் தேரிழந்து நிற்பதைக் கண்ட சக்ரதேவன், அவன் {பீமன்} மீது கூரிய கணைகளை அடித்தபடியே அவனிடம் விரைந்தான். ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, கோடை காலம் கடந்ததும் {கார்காலத்தில்} மழையைப் பொழியும் மேகங்களைப் போல அந்த வலிமைமிக்கச் சக்ரதேவன் கணைமாரியைப் பொழிந்தான். ஆனால், வலிமைமிக்கப் பீமசேனனோ, குதிரைகள் கொல்லப்பட்ட தனது தேரில் நின்று கொண்டே, கடுமையான இரும்பிலான {எஃகால் ஆன} ஒரு கதாயுதத்தைச் சக்ரதேவன் மேல் வீசினான். அந்தக் கதாயுதத்தால் கொல்லப்பட்ட கலிங்க ஆட்சியாளரின் மகன் {சக்ரதேவன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கொடியும் தேரோட்டியும் கொண்ட தனது தேரில் இருந்து கீழே தரையில் விழுந்தான்.
தனது மகன் {சக்ரதேவன்} கொல்லப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான கலிங்கர்களின் மன்னன் {சுருதாயுஸ்}, பல்லாயிரம் தேர்களுடன் பீமனை அனைத்துப் புறங்களிலும் சூழ்ந்து கொண்டான். பெரும் வலிமை கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன் கதாயுதத்தைக் கைவிட்டு, கடுஞ்சாதனை செய்ய விரும்பி, வாளை எடுத்துக் கொண்டான். மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மனிதர்களில் காளை {பீமன்}, தங்கத்திலானதும், சந்திரப்பிறைகளைக் கொண்டதுமான ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். கோபத்தால் தூண்டப்பட்ட கலிங்கர்களின் ஆட்சியாளனும் {சுருதாயுசும்}, தனது வில்லின் நாண் கயிற்றைத் {கைகளால்} தேய்த்துக் கொண்டு, (அந்தப் பாண்டவனை {பீமனைக்}) கொல்ல விரும்பிய அந்த ஏகாதிபதி {சுருதாயுஸ்} பாம்பின் விஷத்தைப் போன்ற ஒரு பயங்கரக் கணையை எடுத்து பீமசேனனின் மீது எய்தான். இப்படித் தொடுக்கப்பட்ட அந்தக் கூரிய கணையை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது பெரும் வாளால் பீமசேனன் இரண்டாகப் பிளந்தான். அதனால் பெரிதும் மகிழ்ந்த அவன் {பீமன்}, துருப்புகளை அச்சுறுத்தும் வகையில் பேரொலியுடன் முழங்கினான்.
பீமசேனனுடனான அந்த மோதலில் பெரும் கோபம் தூண்டப்பட்டவனான கலிங்கர்களின் ஆட்சியாளன் {சுருதாயுஸ்}, சாணைக்கல்லில் கூர் தீட்டப்பட்ட பதினான்கு தோமரங்களை {ஈட்டியில் ஒரு வகை} அவன் {பீமன்} மீது வீசினான். எனினும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாண்டுவின் மகன் {பீமன்}, தான் கொண்டிருந்த அந்தச் சிறந்த வாளைக் கொண்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வானில் வந்து கொண்டிருந்த அந்தத் தோமரங்கள் தன்னை அடையும் முன்பே அவற்றைத் துண்டு துண்டாக வெட்டிப் போட்டான். (இப்படி) அந்தப் போரில் அந்தப் பதினான்கு தோமரங்களையும் வெட்டியவனும் மனிதர்களில் காளையுமான அந்தப் பீமன் பானுமானைக்[1] கண்டு அவனிடம் விரைந்தான்.
அப்போது, பானுமான் கணைமாரியால் பீமனை மறைத்து, குரலால் பேரொலியை எழுப்பி அவ்வொலியை வானில் எதிரொலிக்கச் செய்தான். எனினும், அந்தக் கடும்போரில், பீமனால் அந்தப் பேரொலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தானே உரத்த குரலைக் கொண்டவனான அவன் {பீமன்}, அதைவிட அதிக ஒலியுடன் ஆரவாரம் செய்தான். அவனது ஆரவாரத்தைக் கேட்ட கலிங்கர்களின் படை அச்சத்தால் நிறைந்தது. அந்தப் போரில், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, அதற்கு மேலும் பீமனை யாரும் மனிதனாகக் கருதவில்லை.
ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, கையில் வாளுடன் உரக்க ஆரவாரம் செய்த அந்தப் பீமன், (பானுமானின்) அற்புதமான யானையின் மீது குதித்தான். அந்த யானையுடைய தந்தங்களின் உதவியைக் கொண்டு {தந்தங்களைப் பிடித்துக் கொண்டு} அந்த யானைகளின் இளவரசனுடைய {யானையின்} முதுகில் ஏறிய அவன் {பீமன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தனது கனமான வாளைக் கொண்டு பானுமானை நடுவில் இரண்டாகப் பிளந்தான். இப்படிக் கலிங்கர்களின் இளவரசனை அந்தப் போரில் கொன்ற அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {பீமன்}, அடுத்து பெரும் சுமையைத் தாங்க வல்ல தனது வாளை அந்த யானையின் கழுத்தில் இறக்கினான். தலை வெட்டப்பட்ட அந்த யானைகளின் இளவரசன் பெரும் ஒலியோடு அலறிக் கொண்டு, வேகமான கடலின் அலைகளால் உண்ணப்படும் {அரிக்கப்படும்} அடிவாரம் கொண்ட சிகரத்துடன் கூடிய மலையைப் போலப் பூமியில் விழுந்தது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அப்படி விழும் யானையில் இருந்து கீழே குதித்தவனும், உற்சாகமிழக்காத ஆன்மா கொண்டவனுமான அந்தப் பாரதக் குலத்தின் இளவரசன் {பீமன்}, (முன்பு போலவே) கவசத்துடனும், கையில் வாளுடனும் பூமியில் நின்றான்.
அனைத்துப் புறங்களிலும் எண்ணற்ற யானைகளை விழச்செய்து (போர்க்களத்தில்} பல பாதைகளை உண்டாக்கிக் கொண்டு திரிந்தான். குதிரைப்படை, யானைகள், தேர்கள், காலாட்படையின் பெரும்பகுதி என அனைத்தையும் கொன்றபடி நெருப்புச் சக்கரத்தைப் போல அவன் சுழல்வதாக அப்போது தெரிந்தது. மனிதர்களில் தலைவனும், வலிமைமிக்கவனுமான பீமன், கூரிய முனை கொண்ட தனது வாளைக் கொண்டு, யானை மீதிருந்த போராளிகளின் உடல்களையும் தலைகளையும் விரைவாக வெட்டிக் கொண்டு பருந்தின் சுறுசுறுப்புடன் களத்தில் பறப்பதாகத் தெரிந்தது.
காலாட்படை வீரனாக நின்று, கோபத்தால் தூண்டப்பட்டு, பிரளய காலத்து யமனைப் போலத் தனியனாகவே நின்று தனது எதிரிகளுக்கு அச்சமூட்டிய அவன் {பீமன்}, அந்தத் துணிவுமிக்க வீரர்களைக் கலங்கச் செய்தான். அவர்களில் புத்தியற்றிருந்தவர்கள் மட்டுமே, கையில் வாளுடன் அந்தப் பெரும்போரில் வேகமாக உலவி கொண்டிருந்த அவனை நோக்கிப் பெரு முழக்கம் செய்து கொண்டு விரைந்தார்கள். எதிரிகளைக் கலங்கடிப்பவனும், பெரும் பலம் கொண்டவனுமான அவன் {பீமன்} அந்த வீரர்களுடைய தேரின் ஏர்க்கால்களையும், நுகத்தடிகளையும் வெட்டி, இறுதியில் அந்த வீரர்களையும் கொன்றான்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமசேனன் பல்வேறு விதமான அசைவுகளை அங்கே வெளிப்படுத்துவதாகத் தெரிந்தது. வேகமாக நகர்தல், உயரமாகச் சுழன்று வருதல், இருபக்கங்களிலும் அசைதல், நேராகக் குதித்தல், ஓடுதல், உயரமாகக் குதித்தல் என {களத்தில்} அசைந்து கொண்டிருந்தான். மேலும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவன் {பீமன்} முன்னோக்கி விரைந்தும், மேல்நோக்கி விரைந்தும் காணப்பட்டான் [2]. உயர் ஆன்ம பாண்டுவின் மகனுடைய {பீமனுடைய} அற்புதமான வாளால் சிதைக்கப்பட்ட சிலர், உயிர்நிலைகளில் தாக்கப்பட்டோ, உயிரிழந்து கீழே விழும்போதோ உரக்க அலறினர்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துதிக்கைகள் வெட்டப்பட்ட சிலவும், தந்தங்கள் வெட்டப்பட்ட சிலவும், தலை பிளக்கப்பட்ட சிலவும் எனப் பல யானைகள் தங்கள் ஓட்டுநர்களை {பாகன்களை} இழந்து, தங்கள் படைகளையே கொன்றபடி பெரும் அலறலுடன் கீழே விழுந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உடைந்த ஈட்டிகள், யானை செலுத்தும் வீரர்களின் தலைகள், யானைகளுக்கு மேலிருந்த கூடுகள், தங்கம் போன்ற பிரகாசமான கச்சைகள், கழுத்தணிகள், சக்திகள், உலக்கைகள், அம்பறாத்தூணிகள், பல்வேறு வகைகளிலான பொறிகள், அழகிய விற்கள், பளபளக்கும் தலைகளைக் கொண்ட குறு அம்புகள் {பிண்டிபாலங்கள்}, யானைகளை வழிநடத்தப் பயன்படும் அங்குசங்கள் {வேணுகங்கள்}, இரும்பு மாவெட்டிகள், பல்வேறு வடிவங்களிலான மணிகள், தங்கத்தால் இழைக்கபட்ட வாள் பிடிகள் ஆகியவை கீழே விழுவதையும், அல்லது (ஏற்கனவே) விழுந்து கொண்டிருக்கும் குதிரை ஓட்டிகளிடம் இருந்து அவை விழுவதையும் நாங்கள் கண்டோம்.
உடலின் முன்புறமும், கீழ்ப்புறமும், துதிக்கையும் வெட்டப்பட்டோ, முழுவதும் கொல்லப்பட்டோ கிடந்த யானைகளைக் கொண்ட பூமி, நொறுங்கி விழுந்த மலைகள் பரவியிருக்கும் போர்க்களம் போலத் தோன்றியது. இப்படிப் பெரும் யானைகளை நசுக்கிய அந்த மனிதர்களில் காளை {பீமன்}, அடுத்ததாகக் குதிரைகளையும் நசுக்கினான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த வீரன் {பீமன்}, குதிரை வீரர்களில் முதன்மையானவர்களையும் சாய்த்தான்.
ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவர்களுக்கும், அவனுக்கும் {பீமனுக்கும்} இடையில் நடந்த அந்தப் போர் எல்லையில்லா கடுமை கொண்டதாக இருந்தது. கடிவாளங்கள், பூட்டங்கயிறுகள், பொன்னொளிவீசும் கச்சைகள், குதிரையின் மேல்விரிப்புகள், ஈட்டிகள், விலைமதிப்புமிக்க ரிஷ்டிகள் {வளையும் தன்மைமிக்க ஒரு வகை வாள்}, கவசங்கள், கேடயங்கள், அழகிய ஆபரணங்கள் ஆகியன அந்தப் போர்க்களத்தில் தரையில் பரவிக் கிடந்தன. அவன் {பீமன்}, (இரத்தத்தால்) பற்பல நிறமுள்ள அல்லி மலர்களால் நிரம்பியதைப் போலத் அந்தப் போர்க்களத்தைப் தோன்றச் செய்தான்.
வலிமைமிக்கவனான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, உயரக் குதித்து, கொடிமரங்களுடன் கூடிய சில தேர்வீரர்களைத் தன் வாளால் இழுத்துக் கிழே தள்ளினான். அடிக்கடி மேலே குதித்தும், பெரும் சுறுசுறுப்புடன் அனைத்துப் புறங்களிலும், பல்வேறு வழிகளில் விரைந்தும் சென்ற அந்த வீரன் {பீமன்} போராளிகளை வியக்கச் செய்தான். காலால் சிலரைக் கொன்றான். தரையில் இழுத்துப் போட்டு, பூமியில் அழுத்தி சிலரைக் கொன்றான். தனது வாளால் சிலரைக் கொன்றான். தனது முழக்கங்களால் சிலரை அச்சுறுத்தினான். (தான் ஓடும்போது உண்டான) விசையால் சிலரைத் தரையில் வீழ்த்தினான். சிலர் அவனைக் {பீமனைக்} கண்ட அச்சத்தால் புறமுதுகிட்டு ஓடினார்கள். இப்படியே, பெரும் சுறுசுறுப்புக் கொண்ட கலிங்கர்களின் பெரிய படை அந்தப் போர்க்களத்தில் பீமசேனனைச் சூழ்ந்த படி அவனிடம் விரைந்து சென்றது” {என்றான் சஞ்சயன்}.
திருஷ்டத்யும்னனுக்கு அன்பான பீமனும், சாத்யகியும்! – பீஷ்ம பர்வம் பகுதி – 054ஆ-தரையில் நின்று போரிட்ட பீமனைக் கணைகளால் துளைத்த கலிங்க மன்னன் சுருதாயுஸ்; தேரோட்டி அசோகன் பீமனுக்காகத் தேரைக் கொண்டு வருவது; சுருதாயுசைக் கொன்ற பீமன்; கலிங்கப்படையின் சத்தியதேவன், சத்யன், கலிங்க இளவரசனான கேதுமான் ஆகியோரைப் பீமன் கொன்றது; பீமனைச் சூழ்ந்த கொண்ட கலிங்கர்கள்; ஆயிரக்கணக்கான கலிங்கர்களைப் பீமன் கொல்வது; பீமனின் உதவிக்கு விரைந்த திருஷ்டத்யும்னனும், சாத்யகியும்; பீமசேனனைப் பீஷ்மர் எதிர்ப்பது; பீஷ்மரின் தேரோட்டியைக் கொன்ற சாத்யகி; தேரோட்டி இல்லாத குதிரைகள் பீஷ்மரைக் களத்தைவிட்டே கொண்டு செல்வது; கலிங்கர்கள் அனைவரையும் பீமன் கொல்வது; திருஷ்டத்யும்னன், பீமன், சாத்யகி ஆகியோர் ஒருவரையொருவர் தழுவிக் கொள்தல்…
சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அப்போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கலிங்கத் துருப்புகளின் தலைமையில் நிற்கும் சுருதாயுஸைக் கண்ட பீமசேனன், அவனை {சுருதாயுசை} நோக்கி விரைந்தான். அவன் {பீமன்} முன்னேறி வருவதைக் கண்டவனும், அளவிலா ஆன்மாக் கொண்டவனுமான கலிங்கர்களின் ஆட்சியாளன் {சுருதாயுஸ்}, ஒன்பது {9}கணைகளைக் கொண்டு பீமசேனனின் மார்பைத் துளைத்தான். கலிங்கர்களின் ஆட்சியாளனால் {சுருதாயுசால்} அடிக்கப்பட்ட கணைகளால் தாக்குண்டு, அங்குசத்தால் துளைக்கப்பட்ட யானை போலவும், விறகெனும் உணவூட்டப்பட்ட நெருப்பு போலவும் பீமசேனன் கோபத்தால் சுடர்விட்டெரிந்தான்.
அப்போது, தேரோட்டிகளில் சிறந்தவனான அசோகன் தங்கத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரைக் கொண்டு வந்து அதில் பீமனை ஏறச் செய்தான். அதன்பேரில், எதிரிகளைக் கொல்பவனான குந்தியின் மகன் {பீமன்}, அந்தத் தேரில் ஏறினான். பிறகு, “நில், நில்” என்று சொன்னபடி கலிங்கர்களின் ஆட்சியாளனை {சுருதாயுசை} நோக்கி விரைந்தான். கோபத்தால் தூண்டப்பட்ட வலிமைமிக்கச் சுருதாயுஸ், தனது கரத்தின் வேகத்தை வெளிக்காட்டியபடி பீமன் மீது கூரிய பல கணைகளைச் செலுத்தினான் அந்தக் கலிங்கனின் {சுருதாயுசின்} அற்புத வில்லில் இருந்து அடிக்கப்பட்ட ஒன்பது கணைகளால் தாக்குண்டவனும், வலிமைமிக்க வீரனுமான பீமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தடியால் அடிக்கப்பட்ட ஒரு பாம்பைப் போலப் பெரும் கோபத்துக்கு உள்ளானான்.
வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனும், பிருதையின் {குந்தியின்} மகனுமான பீமன், கோபத்தால் தூண்டப்பட்டுப் பெரும்பலத்துடன் தனது வில்லை வளைத்து, முழுவதும் இரும்பாலான {உருக்காலான} ஏழு கணைகளால் அந்தக் கலிங்க ஆட்சியாளனைக் {சுருதாயுசைக்} கொன்றான் [1]. இரண்டு கணைகளால், கலிங்கனின் தேர்ச்சக்கரங்களைப் பாதுகாத்த இரு வலிமைமிக்கப் பாதுகாவலர்களையும் கொன்றான். இப்படியே {சுருதாயுசின் தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்களான} சத்தியதேவன் மற்றும் சத்யனை அவன் {பீமன்} யமனுலகிற்கு அனுப்பி வைத்தான். அளவிலா ஆன்மா கொண்ட பீமன், பல கணைகளையும், நீண்ட ஈட்டிகளையும் கொண்டு கேதுமானையும் யமனுலகிற்கு அனுப்பி வைத்தான். அதன்பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட கலிங்க நாட்டு க்ஷத்திரியர்கள், பல்லாயிரக்கணக்கான போராளிகளால் ஆதரிக்கப்பட்டு, கோபம் நிறைந்த பீமசேனனுடன் அந்தப் போரில் மோதினார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஈட்டிகள் {சக்திகள்}, கதாயுதங்கள், வாள்கள், தோமரங்கள், ரிஷ்டிகள் {சுருள் கத்திகள்}, போர்க்கோடரிகள் ஆகியவற்றைக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான கலிங்கர்கள் பீமனைச் சூழ்ந்து கொண்டார்கள். அப்படி எழுந்த கணைமாரியைச் சிதறடித்த அந்த வலிமைமிக்க வீரன் {பீமன்}, தனது கதாயுதத்தை எடுத்துக் கொண்டு (தனது தேரிலிருந்து) பெரும் வேகத்துடன் கீழே குதித்தான். அதன் பிறகு பீமன் எழுநூறு {700} வீரர்களை யமனுலகு அனுப்பி வைத்தான். அதற்கும் கூடுதலாக, எதிரிகளைக் கலங்கடிப்பவனான அவன் {பீமன்}, இரண்டாயிரம் {2000} கலிங்கர்களை மரணலோகம் அனுப்பி வைத்தான். அந்தச் சாதனை உயர்வானதாகவும், அற்புதம் நிறைந்ததாகவும் தெரிந்தது. இப்படியே பயங்கர ஆற்றல் கொண்டவனும், வீரனுமான அந்தப் பீமன் கலிங்கர்களின் பெருங்கூட்டத்தைத் தொடர்ச்சியாக வீழ்த்திக் கொண்டிருந்தான்.
அந்தப் போரில், பாண்டுவின் மகனால் {பீமனால்}, தங்கள் பாகனை இழந்த யானைகள், கணைகளால் பீடிக்கப்பட்டு, தங்கள் படையினரையே மிதித்தபடி காற்றால் செலுத்தப்படும் மேகங்களின் திரளைப் போல உரத்த பிளிறல்களை உதிர்த்துக் கொண்டும் களத்தில் உலவின. வாளைக் கையில் கொண்டிருந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன், மகிழ்ச்சியால் நிறைந்து, பயங்கரமான பேரொலியை எழுப்பும் தனது சங்கை எடுத்து ஊதினான். அந்தச் சங்கொலியால் அவன் {பீமன்} கலிங்கத் துருப்புகள் அனைத்தின் இதயங்களையும் அச்சத்தால் நடுங்கச் செய்தான்.
ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, ஒரே நேரத்தில் கலிங்கர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழப்பதாக அங்கே தெரிந்தது. போராளிகள் அனைவரும் மற்றும் விலங்குகள் அனைத்தும் அச்சத்தால் பீடிக்கப்பட்டன. பல பாதைகளில் பீமன் விரைந்ததன் விளைவாகவோ, யானைகளின் இளவரசனைப் போல அனைத்துப் புறங்களில் விரைந்ததன் விளைவாகவோ, தொடர்ச்சியாகக் குதித்ததன் விளைவாகவோ, அவனது {பீமனின்} எதிரிகள், தங்கள் புலனுணர்வுகளை இழந்து மயக்கமடைவதாகத் தெரிந்தது.
முதலையால் கலக்கப்பட்ட ஒரு பெரும் தடாகத்தைப் போலப் பீமசேனனால் அந்த முழுப் (கலிங்கப்) படையும் அச்சத்தால் நடுங்கியது. பீமனின் அற்புதச் சாதனைகளின் விளைவால் பீதியடைந்திருந்த கலிங்கப் போராளிகள் அனைவரும் திக்குகள் அனைத்திலும் சிதறி ஓடினர். எனினும் அவர்கள் மீண்டும் அணிதிரண்ட போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டவப்படையின் தலைவன் (திருஷ்டத்யும்னன்), தன் தனிப்பட்ட துருப்புகளிடம் “போரிடுங்கள்” என்று கட்டளையிட்டான். சிகண்டியின் தலைமையில் இருந்தவர்களும், தாக்குவதில் சாதித்த தேர்ப்படைகளால் ஆதரிக்கப்பட்டவர்களுமான (பாண்டவப் படையின்) பல தலைவர்கள், தங்கள் படைத்தலைவனின் வார்த்தைகளைக் கேட்டு, பீமனை அணுகினார்கள்.
பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், மேகத்தின் நிறத்தைக் கொண்ட பெரும் யானைப் படையுடன் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான். இப்படித் தனது படையினர் அனைவரையும் தூண்டிக் கொண்டிருந்த பிருஷதனின் மகன் {திருஷ்டத்யும்னன்}, பல அற்புத வீரர்களால் சூழப்பட்டு, பீமசேனனின் ஒரு பக்கத்தை {ஒரு புறத்தைப்} [2] பாதுகாப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.
பாஞ்சாலர்களின் இளவரசனுக்குத் {திருஷ்டத்யும்னனுக்குத்} தனது உயிரை விட அன்புக்குரியவர்களாகப் பீமனையும், சாத்யகியையும் தவிர இவ்வுலகில் வேறு யாரும் இருக்கவில்லை. பகைவீரர்களைக் கொல்பவனான பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், எதிரிகளைக் கொல்பவனுமான பீமசேனன் கலிங்கர்களுக்கு மத்தியில் உலவுவதைக் கண்டான். ஓ! மன்னா, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, மகிழ்ச்சியால் நிறைந்த அவன் {திருஷ்டத்யும்னன்} பல முழக்கங்களை {கர்ஜனைகளைச்} செய்தான். உண்மையில், அவன் தனது சங்கை எடுத்து ஊதியவாறும், சிம்மமுழக்கம் செய்தவாறும் இருந்தான். புறாக்களைப் போல வெண்ணிறக் குதிரைகள் பூட்டப்பட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான திருஷ்டத்யும்னனுடைய தேரின் சிவப்புக் கொடிக்கம்பத்தைக் {கோவிதாரக் கொடியைக் [3]} கண்ட பீமசேனனும் ஆறுதல் அடைந்தான்.
கலிங்கர்களுடன் மோதிக் கொண்டிருந்த பீமசேனனைக் கண்ணுற்ற அளவிலா ஆன்மாகக் கொண்ட திருஷ்டத்யும்னன், அவனது {பீமனின்} உதவிக்கு விரைந்தான். பெரும் சக்தி கொண்ட வீரர்களான திருஷ்டத்யும்னனும், விருகோதரனும் {பீமனும்}, தூரத்தில் சாத்யகியைக் கண்டு, அப்போரில் இன்னும் மூர்க்கமாகக் கலிங்கர்களுடன் போரிட்டனர்.
வெற்றிவீரர்களில் முதன்மையானவனும், மனிதர்களில் காளையுமான அந்தச் சினியின் {சிநியின்} பேரன் {சாத்யகி}, அந்த இடத்தை நோக்கி விரைவாக முன்னேறி பீமன் மற்றும் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} ஆகிய இருவரின் பக்கவாட்டை அடைந்தான். கையில் இருந்த வில் பெரும் அழிவை உண்டாக்கத் தன்னை மேலும் கடுமையாக்கிக் கொண்ட அவன் {சாத்யகி} போரில் எதிரியைக் கொல்லத் தொடங்கினான். கலிங்கத்தில் பிறந்த வீரர்களின் இரத்தம் மற்றும் சதை ஆகியவை கலந்த இரத்த வெள்ளத்தாலான ஆறை அங்கே பீமன் தோன்றச் செய்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போது பீமசேனனைக் கண்டத் துருப்புகள், “பீமனின் வடிவில் காலனே வந்து கலிங்கர்களுடன் போரிடுகிறான்” என்று கதறினர்.
போரில் இந்தக் கதறல்களைக் கேட்ட சந்தனுவின் மகனான பீஷ்மர், பீமனை நோக்கி விரைந்து வந்து, படையில் உள்ள போராளிகளுடன் சூழ்ந்து கொண்டார். அதன்பேரில், சாத்யகி, பீமசேனன், பிருஷதக் {பார்ஷதக்} குலத்துத் திருஷ்டத்யும்னன் ஆகியோர், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த பீஷ்மரின் தேரை நோக்கி விரைந்தனர். அந்தப் போரில் கங்கையின் மைந்தரை விரைந்து சூழ்ந்த கொண்ட அவர்கள் அனைவரும், நேரத்தைக் கடத்தாமல், ஆளுக்கு மூன்று பயங்கரமான கணைகளால் பீஷ்மரைத் துளைத்தனர்.
எனினும், உமது தந்தையான தேவவிரதர் {பீஷ்மர்}, வலிமைமிக்க வில்லாளிகளாகப் போரில் போராடிக் கொண்டிருந்த அவர்கள் ஒவ்வொருவரையும் மூன்று நேரான கணைகளால் பதிலுக்குத் துளைத்தார். ஆயிரக்கணக்கான கணைகளால் அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களைத் தடுத்த அவர் {பீஷ்மர்}, தங்கக் கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த பீமனின் குதிரைகளைக் கொன்றார். குதிரைகள் கொல்லப்பட்டாலும் தேரிலேயே தங்கிய பெரும் சக்தி கொண்ட பீமன், பெரும் வேகத்துடன் ஓர் ஈட்டியை பீஷ்மரின் தேர் மீது எறிந்தான்.
உமது தந்தையான தேவவிரதர் {பீஷ்மர்}, அந்த ஈட்டி தன்னை எட்டும் முன்பே அதை இரண்டாகத் துண்டித்துத் தரையில் வீழ்த்தினார். அப்போது, மனிதர்களில் காளையான பீமசேனன், எஃகினால் {சைக்கிய இரும்பினால்} ஆனதும், கனமானதுமான ஒரு பெரிய கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, தனது தேரில் இருந்து விரைவாகக் குதித்தான். தேர்வீரர்களில் முதன்மையான அவனை {பீமனைத்} தன் தேரில் ஏற்றிக் கொண்ட திருஷ்டத்யும்னன், அந்தப் புகழ்பெற்ற வீரனை {பீமனை}, மற்றவர்கள் கண்ணெதிரிலேயே கூட்டிச் சென்றான் [4].
பீமனுக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பிய சாத்யகி, தனது கணையால் மதிப்புக்குரிய குரு பாட்டனின் {பீஷ்மரின்} தேரோட்டியை வீழ்த்தினான். தனது தேரோட்டி கொல்லப்பட்டதும், காற்றின் வேகத்தைக் கொண்ட தனது குதிரைகளால், பீஷ்மர், போர்க்களத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டார். (இப்படி) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர் {பீஷ்மர்} களத்தை விட்டுக் கொண்டு செல்லப்பட்ட போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வைக்கோலை எரிக்கும் பெரும் நெருப்பைப் போலப் பீமசேனன் சுடர்விட்டு எரிந்தான். கலிங்கர்கள் அனைவரையும் கொன்ற அவன் {பீமன்} துருப்புகளின் மத்தியிலேயே இருந்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உமது தரப்பைச் சேர்ந்த யாரும் அவனோ {பீமனோடு} மோதத் துணியவில்லை.
பாஞ்சாலர்களாலும், மத்ஸ்யர்களாலும் வழிபடப்பட்ட அவன் {பீமன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னனைத் தழுவி கொண்டு சாத்யகியை அணுகினான். கலங்கடிக்கப்படமுடியாத ஆற்றல் கொண்டவனும், யதுக்களில் புலியுமான சாத்யகி, பீமசேனனை மகிழ்விக்கும் வண்ணம், திருஷ்டத்யும்னனின் முன்னிலையில் அவனிடம் {பீமனிடம்}, “கலிங்கர்களின் மன்னன் {சுருதாயுஸ்}, கலிங்கர்களின் இளவரசன் கேதுமான், அதே நாட்டைச் {கலிங்க நாட்டைச்} சேர்ந்த சக்ரதேவன் மற்றும் கலிங்கர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டது நற்பேறாலேயே. யானைகளும், குதிரைகளும், தேர்களும், உன்னத வீரர்களும், துணிவுமிக்கப் போராளிகளும் நிறைந்த கலிங்கர்களின் அந்தப் பெரும்படை உமது கரத்தின் பலம் மற்றும் ஆற்றலால் மட்டுமே நசுக்கப்பட்டது” என்றான் {சாத்யகி}.
இதைச் சொன்னவனும், எதிரிகளைத் தண்டிப்பவனும், நீண்ட கரங்களைக் கொண்டவனுமான சினியின் பேரன் {சாத்யகி}, அவனது {பீமன் இருந்த} தேரில் விரைந்து ஏறி, பாண்டுவின் மகனைத் {பீமனைத்} தழுவி கொண்டான். பிறகு, மீண்டும் தனது தேருக்கே திரும்பிய அந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {சாத்யகி} கோபத்தால் தூண்டப்பட்டு உமது துருப்புகளைக் {கௌரவத் துருப்புகளைக்} கொல்லத் தொடங்கி, பீமனை {பீமனின் கரங்களைப்} பலப்படுத்தினான்.” {என்றான் சஞ்சயன்}.
அர்ஜுனன் செய்த போர்! – பீஷ்ம பர்வம் பகுதி – 055-அஸ்வத்தாமனுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் திருஷ்டத்யும்னனைக் கண்டு அபிமன்யு அங்கே விரைவது; பெரும் வீரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்த அபிமன்யுவைக் எதிர்த்து, துரியோதனன் மகனான லக்ஷ்மணன் விரைவது; அபிமன்யுவிடம் துன்புறும் தனது மகனைக் கண்டு துரியோதனன் அங்கே விரைவது; அபிமன்யுவைக் காக்க அர்ஜுனன் அங்கே விரைவது; அர்ஜுனன் புரிந்த பெரும் போர்; கௌரவவீரர்கள் அனைவரும் நாலா பக்கமும் சிதறி ஓடுவது; இரண்டாம் நாள் போரைப் பீஷ்மர் முடிவுக்குக் கொண்டு வருவது…
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த நாளின் முற்பகல் கடந்தும் [1], ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள், குதிரைப்படை வீரர்கள் ஆகியோரின் அழிவு தொடர்ந்த போது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சல்லியன் மற்றும் உயர் ஆன்ம கிருபர் ஆகிய மூன்று வலிமைமிக்கத் தேர்வீரர்களுடனும் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} போரிட்டுக் கொண்டிருந்தான்.
பாஞ்சால மன்னனின் {துருபதனின்} வலிமைமிக்க அந்த வாரிசு {திருஷ்டத்யும்னன்}, உலகம் முழுதும் கொண்டாடப்படும், துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} குதிரைகளைக் கொன்றான். தன் விலங்குகளை {குதிரைகளை} இழந்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, விரைவாகச் சல்லியனின் தேரில் ஏறிக் கொண்டு, பாஞ்சால மன்னனின் வாரிசின் {திருஷ்டத்யும்னனின்} மீது தன் கணைகளைப் பொழிந்தான்.
துரோணரின் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} திருஷ்டத்யும்னன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தனது கூரிய கணைகளை இறைத்தபடி அங்கே விரைந்து வந்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அவன் {அபிமன்யு}, சல்லியன் மீது இருபத்தைந்தும் {25}, கிருபரின் மீது ஒன்பதும் {9}, அஸ்வத்தாமன் மீது எட்டும் {8} எனத் தன் கணைகளை அடித்தான். எனினும், இறகு படைத்த பல கணைகளால் அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அர்ஜுனன் மகனைத் {அபிமன்யுவைத்} துளைத்தான். சல்லியன் பனிரெண்டு {12} கணைகளாலும், கிருபர் மூன்று {3} கூரிய கணைகளாலும் அவனை {அபிமன்யுவைத்} துளைத்தனர்.
உமது பேரனான லக்ஷ்மணன் {துரியோதனனின் மகன்}, சுபத்திரையின் மகன் {அபிமன்யு} போரில் ஈடுபடுவதைக் கண்டு சினம் தூண்டப்பட்டு அவனிடம் {அபிமன்யுவிடம்} விரைந்தான். அவர்களுக்கு இடையிலான போரும் தொடங்கியது. சினம் தூண்டப்பட்ட துரியோதனனின் மகன் {லக்ஷ்மணன்}, அந்த மோதலில் கூரிய கணைகளைக் கொண்டு சுபத்திரையின் மகனைத் {அபிமன்யுவைத்} துளைத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அது (அந்தச் செயல்) மிகுந்த அற்புதம் நிறைந்ததாகத் தோன்றியது.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கோபம் தூண்டப்பட்டவனும், வேகமான கரங்களைக் கொண்டவனுமான அபிமன்யு, தனது சகோதரனை {லஷ்மணனை} ஐநூறு {500} [2] கணைகளால் துளைத்தான். லக்ஷ்மணனும், தன் கணைகளைக் கொண்டு அவனது (தனது சகோதரனின் {அபிமன்யுவின்}) வில் தண்டின் நடுப்பகுதியில் {வில்லை பிடிக்கும் இடத்தில்} வெட்டினான். இதனால், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மக்கள் அனைவரும் உரக்கக் கூச்சலிட்டனர். பகைவீரர்களைக் கொல்பவனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தனது ஒடிந்த வில்லை ஒரு பக்கம் விட்டுவிட்டு, அழகானதும், கடுமையானதுமான மற்றொரு வில்லை [3] எடுத்துக் கொண்டான். இப்படி மோதலில் ஈடுபட்டவர்களும், மனிதர்களில் காளையருமான அவ்விருவரும், ஒருவரையொருவர் சாதனைகளில் விஞ்ச விரும்பி, கூரிய பல கணைகளால் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்டனர்.
அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது பேரனால் (அபிமன்யுவால்) இப்படித் துன்புறுத்தப்படும் தனது வலிமைமிக்க மகனைக் {லக்ஷ்மணனைக்} கண்ட மன்னன் துரியோதனன், அந்த இடத்திற்கு விரைந்து சென்றான். (அந்த இடத்தை நோக்கித்) உமது மகன் {துரியோதனன்} திரும்பியதும், மன்னர்கள் அனைவரும் தேர்க்கூட்டங்களுடன் அனைத்துப் புறங்களில் இருந்து அர்ஜுனனின் மகனைச் {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் வீழ்த்தப்பட முடியாதவனும், கிருஷ்ணனுக்கு நிகரான ஆற்றல் கொண்டவனுமான அந்த வீரன் {அபிமன்யு} இப்படி அந்த வீரர்களால் சூழப்பட்டாலும், சிறிதும் நடுங்காதிருந்தான்.
சுபத்திரையின் மகன் {அபிமன்யு} போரில் ஈடுபட்டு வருவதைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, கோபத்தால் தூண்டப்பட்டும், தனது மகனைக் காக்க விரும்பியும் அந்த இடத்திற்கு விரைந்து வந்தான். அதன் பேரில், பீஷ்மர் மற்றும் துரோணரின் தலைமையில் இருந்த மன்னர்கள் தங்கள் தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகள் ஆகியவற்றுடன் சவ்யசச்சினை {அர்ஜுனனை} நோக்கி வேகமாக விரைந்து வந்தனர்.
அப்போது, யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்படை ஆகியவற்றால் திடீரென எழுப்பப்பட்ட பூமியின் புழுதி, அடர்த்தியாக வானத்தை மூடுவது தெரிந்தது. மேலும் ஆயிரக்கணக்கான யானைகளும், நூற்றுக்கணக்கான மன்னர்களும், அர்ஜுனனின் கணைகளை அடைந்த போது {நெருங்கிய போது}, எந்த முன்னேற்றத்தையும் மேற்கொண்டு அடைய முடியவில்லை. உயிரினங்கள் அனைத்தும் உரத்த அலறல்களை வெளியிட்டன. திசைப்புள்ளிகள் அனைத்தும் இருளடைந்தன.
குருக்களுடைய அத்துமீறலின் விளைவுகளைப் பொறுத்தவரை, அப்போது அது {அத்துமீறலின் விளைவு} கடுமையான மற்றும் கொடூரமான தன்மையை அடைந்தது [4]. கிரீடியால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட அம்புகளின் விளைவால், வானத்தையோ, திசைப்புள்ளிகளையோ, சூரியனையோ வேறுபடுத்திக் காண முடியவில்லை [5].
(தங்கள் முதுகில் இருந்த) கொடிகளை இழந்த யானைகள் பலவாக இருந்தன. தங்கள் குதிரைகளை இழந்த தேர்வீரர்களும் பலராக இருந்தனர். தங்கள் தேர்களை இழந்து உலவி கொண்டிருந்த தேர்ப்படைத் தலைவர்கள் சிலரும் காணப்பட்டனர். தங்கள் தேர்களை இழந்த சில தேர்வீரர்கள், தோள்கள் அங்கதங்களால் {தோள்வளைகளால்} அலங்கரிக்கப்பட்டு, கைகளில் ஆயுதத்துடன் அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. குதிரையோட்டிகள் தங்கள் குதிரைகளைக் கைவிட்டும், யானையோட்டிகள் தங்கள் யானைகளைக் கைவிட்டும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக அனைத்துப் புறங்களிலும் சிதறி ஓடினர். அர்ஜுனனுடைய கணைகளின் விளைவால் மன்னர்கள் விழுவதும், தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகளில் இருந்து அவர்கள் வீழ்த்தப்படுவதும் காணப்பட்டது.
கடுமையாக மாறிய முகம் கொண்ட அர்ஜுனன், கதாயுதத்தைப் பிடித்தபடி உயர்த்தப்பட்ட வீரர்களின் கரங்களையும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வாள்களையோ, ஈட்டிகளையோ, அம்பறாத்தூணிகளையோ, கணைகளையோ, விற்களையோ, அங்குசங்களையோ, கொடிகளையோ தாங்கிக் கொண்டிருந்த கரங்களையும் தனது பயங்கரக் கணைகளைக் கொண்டு போர்க்களமெங்கும் வெட்டினான். அந்தப் போரில், உடைந்து சுக்குநூறாக்கப்பட்ட முள் பதித்த தண்டங்கள், உலக்கைகள், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே} சவளங்கள் {பிராசங்கள் – ஈட்டிகளில் ஒரு வகை}, குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, பட்டா கத்திகள், கூர்முனை கொண்ட போர்க்கோடரிகள், வேல்கள் {தோமரங்கள்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துண்டுதுண்டான கேடயங்கள், கவசங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கொடிமரங்கள், வீசி எறியப்பட்ட அனைத்து வகை ஆயுதங்கள், பொற்காம்புகள் கொண்ட குடைகள், இரும்பு கொக்கிகள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தாற்றுக் கோல்கள் {அங்குசம் போன்றது}, சாட்டைகள் மற்றும் பூட்டாங்கயிறுகள் ஆகியவை குவியல்களாகக் கொட்டப் பட்டிருப்பதை அந்தப் போர்க்களத்தில் காண முடிந்தது.
ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, வீர அர்ஜுனனைப் போரில் எதிர்த்து முன்னேற உமது படையில் ஒரு மனிதனும் இல்லை. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருதையின் மகனை {குந்தியின் மகன் அர்ஜுனனைப்} போரில் எதிர்த்து சென்ற எவரும், கூரிய கணைகளால் துளைக்கப்பட்டு அடுத்த உலகத்திற்கு அனுப்பப்பட்டனர். உமது போராளிகள் அனைவரும் ஓடும்போது அர்ஜுனனும், வாசுதேவனும் {கிருஷ்ணனும்} தங்கள் அற்புத சங்குகளை முழங்கினர்.
அந்தப் போரில் (குரு) படை நிர்மூலமாக்கப்பட்டதைக் கண்ட உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, புன்னகைத்தவாறே பரத்வாஜரின் வீர மகனிடம் {துரோணரிடம்}, “கிருஷ்ணனின் துணையைக் கொண்டவனும், பாண்டுவின் வீரமகனுமான இந்த வலிமைமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தான் ஒருவனே (நமது) துருப்புகளைக் கையாளத் தகுதி வாய்ந்தவன் போல, அவர்களைக் கையாள்கிறானே. நாம் இப்போது காணும் இவனுடைய வடிவம் யுக முடிவில் தோன்றும் அந்தகனுக்கு {அனைத்தையும் அழிப்பவனுக்கு} ஒப்பாக இருப்பதால், இன்று இந்தப் போரில், எவ்வழியிலும் இவன் {அர்ஜுனன்} வீழ்த்தப்பட முடியாதவனாகவே இருக்கிறான். (நம்முடைய) இந்தப் பரந்த படையை மீண்டும் திரட்டுவது இயலாது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஓடும் நமது துருப்புகளைப் பாரும். அதோ, அனைத்து வழிகளிலும் முழு உலகின் பார்வையைக் கொள்ளையடிக்கும் சூரியன், அஸ்தம் [6] என்று அழைக்கப்படும் சிறந்த மலையை அடையப் போகிறான். இதனால், ஓ! மனிதர்களில் காளையே {துரோணரே}, (படைகளைத்) திரும்ப அழைக்கும் நேரம் வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். சோர்வும், பீதியும் அடைந்திருக்கும் வீரர்கள் அனைவரும் போரிட மாட்டார்கள்” என்றார் {பீஷ்மர்}.
ஆசான்களில் சிறந்த துரோணரிடம் இதைச் சொன்னவரும், வலிமைமிக்கத் தேர்வீரருமான பீஷ்மர், உமது படைகளைத் திரும்ப அழைக்க ஏற்பாடு செய்தார். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சூரியன் மறைந்து, மாலையின் சந்திப்பொழுது ஏற்பட்டதும், உமது படைகளும், அவர்களது படைகளும் பின்வாங்கின” {என்றான் சஞ்சயன்}.
இரண்டாம் நாள் போர் முற்றிற்று
——————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply