ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ வன பர்வம்-ஸ்ரீ  திரௌபதி சத்யபாமா சம்வாத பர்வம்–

திரௌபதியின் அர்ப்பணிப்பு! – வனபர்வம் பகுதி 231-(திரௌபதி சத்யபாமா சம்வாத பர்வம்)-கணவனை வசப்படுத்தும் உத்தியை திரௌபதியிடம் சத்தியபாமா கேட்பது; அதற்கு பதிலுரைக்கும் திரௌபதி கணவனுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களின் அறத்தைச் சொன்னது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்த அந்தணர்களும், பாண்டுவின் சிறப்புமிக்க மகன்களும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, திரௌபதியும், சத்தியபாமாவும் ஆசிரமத்திற்குள் நுழைந்தனர். வசதியாக அமர்ந்த பிறகு, அந்த இரு மங்கையரும் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இன்பமாகச் சிரித்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, எப்போதும் ஒருவருக்கொருவர் இனிமையாகப் பேசும் அந்த இரு மங்கையரும், சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டபடியால், குருக்கள், யதுக்கள் சம்பந்தமான கதைகளில் இருந்து இனிமையான கதைகளைப் பேசத் தொடங்கினர். கிருஷ்ணனுக்குப் பிடித்தமான மனைவியும், சதராஜித்தின் மகளும், மெல்லிடையாளுமான சத்தியபாமா, தனிமையில் திரௌபதியிடம், “ஓ! துருபதன் மகளே {திரௌபதியே}, பலமும் அழகும் கொண்டு, லோகபாலர்களைப் போல இருக்கும் வீரர்களான பாண்டுவின் மகன்களை, நீ எந்த நடையைக் கொண்டு ஆள்கிறாய்? அழகானவளே {திரௌபதி}, அவர்கள் {பாண்டவர்கள்} உனக்குக் கீழ்ப்படிந்து, உன்னிடம் எப்போதும் கோபம் கொள்ளாமல் இருப்பது எவ்வாறு? ஓ! அழகான அம்சங்கள் கொண்டவளே {திரௌபதி}, சந்தேகமற பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} உனக்கு எப்போதும் அடங்கியே நடக்கிறார்கள். மேலும், நீ சொல்வதைச் செய்ய எப்போதும் விழிப்புடன் இருக்கிறார்கள். ஓ! மங்கையே {திரௌபதி}, இதற்கான காரணத்தை எனக்குச் சொல். இது நடப்பது நோன்புகள் பயில்வதாலா? தவத்தாலா? மந்திர ஆற்றலாலா? (பருவத்தில்) குளிக்கும்போது மருந்து கொடுக்கப்படுவதாலா? அறிவியல் திறமையாலா? {வித்தையின் சக்தியாலா?}, இளமையான தோற்றத்தின் ஆதிக்கத்தாலா? குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரிப்பதாலா? ஹோமத்தாலா? கண் மை {அஞ்சனம்} மற்றும் பிற மருந்துகள் பூசுவதாலா? ஓ! பாஞ்சால இளவரசியே {திரௌபதியே}, எந்த அருளப்பட்ட மங்களமான பொருளால், ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, கிருஷ்ணர் எனக்கு எப்போது கீழ்ப்படிந்து நடப்பார் என்பதை இப்போது எனக்குச் சொல்” என்று கேட்டாள் {சத்தியபாமா}.

கொண்டாடப்படும் அந்தச் சத்தியபாமா இப்படிச் சொல்லி முடித்ததும், கற்புடையவளான துருபதனின் அருளப்பட்ட மகள் {திரௌபதி} அவளுக்குப் பதிலளித்தாள். 

அவள் {திரௌபதி}, “ஓ! சத்தியபாமா, தீ மங்கையரின் நடைகளைக் குறித்து நீ என்னிடம் கேட்கிறாய். ஓ! மங்கையே {சத்தியபாமா}, தீய பெண்கள் தொடர்ந்து செய்து வரும் காரியங்களுக்கு நான் எப்படி உனக்குப் பதில் கூற முடியும்? புத்திசாலியும், கிருஷ்ணனுக்குப் பிடித்த மனைவியுமான நீ என்னிடம் இந்தக் கேள்விகளைக் கேட்பதோ, என்னைச் சந்தேகிப்பதோ உனக்குத் தகாது. தனது மனைவி மந்திரங்களுக்கும் மருந்துகளுக்கும் அடிமையானவள் என்பதை ஒரு கணவன் அறியும்போது, அவளைத் தனது படுக்கை அறையில் பதுங்கியிருக்கும் பாம்பாகக் கண்டு, அந்த நேரத்தில் இருந்து அஞ்சத் தொடங்குவான். அச்சத்தால் வாடும் ஒரு மனிதன் மனஅமைதியுடன் இருக்க முடியுமா? மனஅமைதியில்லாத மனிதன் மகிழ்ச்சியை அடைவது எவ்வாறு? ஒரு கணவன் தன் மனைவியின் மந்திரங்கள் மூலம் ஒருபோதும் அவளுக்குக் கீழ்ப்படிய மாட்டான்.

வலிநிறைந்த நோய்களை எதிரிகள் அனுப்புகிறார்கள் என்று நாம் கேள்வி படுகிறோம். உண்மையில் பிறரைக் கொல்ல விரும்புபவர்கள், வழக்கமான பரிசுகளின் வடிவில் நஞ்சை அனுப்புகின்றனர். அதை வாங்கும் மனிதன் அதிலிருக்கும் தூள்களை நாவாலோ, தோலாலோ தொட்டு, விரைவாக உயிரை இழக்கின்றனர். மனிதர்களின், விரைவீக்கம், தொழுநோய், மூப்பு, ஆண்மையற்ற தன்மை, அறியாமை, குருட்டுத்தனம், செவிட்டுத்தனம் ஆகியவற்றுக்குச் சில நேரங்களில் பெண்கள் காரணமாக இருக்கின்றனர். எப்போதும் பாவத்தின் பாதியில் நடக்கும் இந்தத் தீய பெண்கள், சில நேரங்களில் தங்கள் கணவர்களுக்குக் காயமும் {தீங்கும்} ஏற்படுத்துகின்றனர். ஆனால், ஒரு மனைவியானவள், சிறு காயத்தைக் கூடத் தனது தலைவனுக்கு ஏற்படுத்தக் கூடாது.

ஓ! சிறப்புமிக்க மங்கையே {சத்தியபாமா}, உயர் ஆன்மா கொண்டவர்களான {மகாத்மாக்களான} பாண்டுவின் மகன்களிடம் நான் எந்த மாதிரியான நடத்தையை மேற்கொள்கிறேன் என்று இப்போது கேள். கர்வத்தைப் புறந்தள்ளி, ஆசை மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் நான் எப்போதும் பாண்டுவின் மகன்களுக்கும், அவர்களது மனைவியருக்கும் அர்ப்பணிப்புடன் சேவை செய்கிறேன். பொறாமையைத் தடுத்து, நான் செய்யும் சேவைகளால் தாழ்ந்த உணர்வை அடையாமல், இதயத்தில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் எனது கணவர்களுக்காக நான் காத்திருக்கிறேன். இதய உணர்வுகளைப் பிரதிபலிக்கும்படி பார்க்கவோ, அமரவோ அல்லது முறைகேடாக நடக்கவோ, தீமையும், பொய்மையும் பேசவோ எப்போதும் அஞ்சி, சூரியனையும் நெருப்பையும் போன்று பிரகாசிக்கும் பலமிக்க வீரர்களும், சந்திரனைப் போன்ற அழகானவர்களும், கடும் சக்தியும் பராக்கிரமமும் கொண்டவர்களும், பார்வையாலேயே எதிரிகளைக் கொன்றுவிடும் சக்தி படைத்தவர்களுமான பிருதையின் {குந்தியின்} மகன்களுக்குச் {பாண்டவர்களுக்குச்} சேவை செய்து வருகிறேன். {என்றாள் திரௌபதி}

தேவனோ, மனிதனோ, கந்தர்வனோ, இளைஞனோ, நன்கு அலங்கரிக்கப்பட்டவனோ, செல்வந்தனோ, அழகுள்ளவனோ, எப்படிப்பட்டவனாக இருப்பினும் {அந்நியனை} எனது இதயம் விரும்பாது. எனது கணவன் நீராடாமல், உணவருந்தாமல், உறங்காமல் இருக்கும் வரை நானும் நீராடாமல், உண்ணாமல், உறங்காமல் இருக்கிறேன். உண்மையில், எங்கள் பணியாட்கள் நீராடி, உண்டு, உறங்கும் வரை நான் எதையும் மேற்கொள்வதில்லை. களத்திலிருந்தோ, வனத்திலிருந்தோ, நகரத்திலிருந்தோ கணவன் திரும்பி வரும்போது, நான் விரைவாக எழுந்து அவரை வணங்கி நீரும் இருக்கையும் கொடுக்கிறேன். வீட்டையும், வீட்டுப் பொருட்களையும், உண்ணப் போகும் உணவையும் நான் எப்போதும் நன்கு வரிசைப்படுத்திச் சுத்தமாக வைத்திருப்பேன். கவனமாக அரிசியை வைத்திருந்து, சரியான நேரத்தில் உணவைப் படைப்பேன்.

கோபம் நிறைந்த அல்லது எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய பேச்சை நான் எப்போதும் பேசுவதில்லை. தீய பெண்களின் நடத்தையை நான் எப்போதும் மேற்கொள்வதில்லை. சோம்பலைத் தூரமாகத் தள்ளி வைத்து, எப்போதும் ஏற்புடையதையே நான் செய்கிறேன். வேடிக்கையின் போது தவிர நான் மற்ற நேரங்களில் சிரிப்பதில்லை. வீட்டு வாயிலில் நான் அதிக நேரம் நிற்பதில்லை. இயற்கையின் அழைப்புகளுக்குப் பதில் சொல்லும் {காலைக்கடன்கள் செலுத்தும்} இடங்களிலோ, வீட்டோடு இணைந்திருக்கும் இன்பத்தோட்டங்களிலோ நான் நீண்ட நேரம் இருப்பதில்லை. சத்தம் போட்டு சிரிப்பதையோ, அதிகமாக ஆர்வம் கொள்வதையோ, குற்றம் நேர வழிவகுக்கும் அனைத்தையும் நான் எப்போதும் தவிர்க்கிறேன். உண்மையில், ஓ! சத்தியபாமா, நான் எப்போதும் எனது தலைவர்களுக்காக {கணவர்களுக்காகக்} காத்திருக்கிறேன். எனது தலைவர்களிடம் இருந்து பிரிவு என்பது எனக்கு எப்போதுமே ஏற்புடையதல்ல.

எந்த உறவினருக்காகவாவது எனது கணவர் வீட்டை விட்டுச் செல்லும்போது, நான் மலர்களையும், அனைத்து வகை நறுமணத் தைலங்களையும் துறந்து தவம் செய்ய ஆரம்பிக்கிறேன்.எனது கணவர் குடிக்காததை, உண்ணாததை, மகிழாததை நானும் எப்போதும் துறக்கிறேன். ஓ! அழகான மங்கையே {சத்தியபாமா}, ஆபரணங்கள் பூண்டு, எனக்குச் சொல்லப்பட்டுள்ள உபதேசத்தின் படி என்னை அடக்கிக் கொண்டு, எப்போதும் எனது தலைவரின் நன்மையையே அர்ப்பணிப்புடன் நாடுகிறேன். உறவினர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிச்சையிடுதல், தேவர்களின் வழிபாடுகளில் செய்யப்படும் காணிக்கை, இறந்தவர்களுக்கான காணிக்கை, மங்களகரமான நாட்களில் உணவைச் சமைத்து மூதாதையருக்கும், மதிப்பிற்குரிய விருந்தினர்களுக்கும் காணிக்கையளிப்பது, எங்களது மரியாதைக்குரியவர்களுக்குச் சேவை, எனது கடமைகளென நான் கருதும் அனைத்தையும் எனது மாமியார் {குந்தி} எனக்குச் சொல்லிக் கொடுத்துள்ளபடி, இரவு பகல் பாராது, எந்த வகையான சோம்பலும் கொள்ளாது, நிறைவேற்றி வருகிறேன். பணிவு மற்றும் ஏற்கப்பட்ட விதிகளை முழு இதயத்தோடு ஏற்றுக் கொண்ட நான், அறத்தைக் கடைப்பிடித்து, பணிவும், உண்மையும் நிரம்பி இருக்கும் எனது தலைவர்களை, ஒரு சிறு அசைவில் கோபம் கொள்ளும் நஞ்சுநிரம்பிய பாம்புகளைப் போலக் கருதி, எப்போதும் அவர்களுக்குச் சேவை செய்து வருகிறேன். கணவனை மதிப்பதை அடிப்படையாகக் கொண்டதே பெண்களின் நிலைத்த அறமாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

கணவனே மனைவியின் தேவன். அவனே அவளது புகலிடம். உண்மையில், அவனைத் தவிர வேறு என்ற புகலிடமும் அவளுக்குக் கிடையாது. அப்படியிருக்கும்போது, ஒரு மனைவியால் எப்படித் தனது தலைவனுக்குத் தீங்கிழைக்க முடியும்? உறங்குவதிலோ, உண்பதிலோ, ஒரு மனிதரைப் புகழ்வதிலோ, நான் எப்போதும் எனது தலைவனின் விருப்பங்களுக்கு எதிராக நடக்க மாட்டேன். எப்போதும் எனது கணவர்களின் வழிகாட்டுதலின்படி, நான் எனது மாமியாரை எப்போதும் நான் இகழ்ந்து பேச மாட்டேன். ஓ அருளப்பட்ட மங்கையே {சத்தியபாமா}, என் விடாமுயற்சி, என் சுறுசுறுப்பு, மூத்தோர்களுக்குப் பணிவுடன் நான் செய்யும் பணி ஆகியவற்றாலேயே எனது கணவர்கள் எனக்குக் கீழ்ப்படிந்த நடக்கிறார்கள்.

வீரர்களைப் பெற்றவளும், உண்மை பேசுபவளும், வணங்கத்தக்கவளுமான குந்திக்கு, தினமும் உணவு, பானம் மற்றும் உடைகள் கொடுத்து நானே தனிப்பட்ட முறையில் பணி செய்கிறேன். உணவு மற்றும் உடை விஷயத்தில் நான் எனது விருப்பங்களுக்கு இடம் கொடுப்பதில்லை. பொறுமையில் பூமிக்கு சமமான அந்த இளவரசியை {குந்தியை} நான் எப்போதும் வார்த்தைகளால் கடிந்து கொண்டதில்லை.

முன்பெல்லாம், யுதிஷ்டிரரின் அரண்மனையில் எட்டாயிரம் {8000} அந்தணர்கள் தங்கத்தட்டுகளில் உண்பார்கள். இல்லற வாழ்வு வாழும் ஸ்நாதக வகை அந்தணர்கள் எண்பதாயிரம் {80,000} பேருக்கு, ஒவ்வொருவரும் முப்பது பணிப்பெண்களை நியமித்துக் கவனித்தார் யுதிஷ்டிரர். இது தவிர, உயிர்விதை மேல்நோக்கிய பத்தாயிரம் யதிக்கள் தங்கத்தட்டுகளில் தங்கள் உணவை அருந்தினார்கள். வேதத்தை உச்சரிக்கும் அந்த அந்தணர்கள் அனைவருக்கும் நான் உணவு, பானம், விஸ்வதேவனுக்குப் {ரிக் வேத தேவன்} படைக்கப்பட்ட பகுதி போக மீந்த பொருட்கள் அனைத்தையும் கொடுத்து அவர்களை [1] வழிபட்டு வந்தேன்.

குந்தியின் சிறப்புமிக்க மகன் {யுதிஷ்டிரர்} கைகளில் தங்க ஆரங்களும், கழுத்தில் தங்க ஆபரணங்களும், விலையுயர்ந்த பூமாலைகளும், தங்க நகைகளும் பூண்டு, மேனியில் சந்தனம் பூசியிருந்த நூறாயிரம் {ஒரு லட்சம் 1,00,000} பணிப்பெண்களைக் கொண்டிருந்தார். நகைகளாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்கள் அனைவரும் பாடுவதிலும், ஆடுவதிலும் திறன் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். ஓ! மங்கையே {சத்தியபாமா}, நான் அந்தப் பெண்கள் ஒவ்வொருவரின் பெயர்களையும் குணங்களையும் அறிவேன். அவர்கள் யார், அவர்கள் என்னவாக {எந்தப் பணியில்} இருந்தார்கள், அவர்கள் எதைச் செய்யவில்லை என்பதையெல்லாம் நான் அறிவேன்.

குந்தியின் புத்திசாலி மகன் {யுதிஷ்டிரர்}, கைகளில் தங்கத்தட்டுகளுடன் தினமும் விருந்தினர்களை உபசரிக்கும் நூறாயிரம் {1,00,000} பணிப்பெண்களையும் கொண்டிருந்தார். யுதிஷ்டிரர் இந்திரப்பிரஸ்தத்தில் வாழ்ந்த போது, நூறாயிரம் {1,00,000} குதிரைகளும், நூறாயிரம் {1,00,000} யானைகளும் அவரைத் தொடர்ந்து செல்லும். யுதிஷ்டிரர் இந்த உலகை ஆண்டபோது அவர் கொண்டிருந்தவைதான் இவையனைத்தும். இருப்பினும், ஓ! மங்கையே {சத்தியபாமா}, இவற்றின் எண்ணிக்கை, இவர்களுக்கான விதிகள், ஆகியவற்றை நிர்ணயித்தவள் நான்தான். அவர்களது குறைகள் அனைத்தையும் கேட்க வேண்டியவளும் நான்தான். உண்மையில், அந்த மாளிகையில் இருந்த பணிப்பெண்கள் மற்றும் பிற வகைச் சேவகர்கள், அரச நிறுவனத்துக்குள் இருந்த மாடு ஆடு மேய்ப்பவர்கள் ஆகிய அனைவரும் என்ன செய்தார்கள், என்ன செய்ய வில்லை என்பதை நான் அறிவேன்.

ஓ! அருளப்பட்ட சிறப்புமிக்க மங்கையே {சத்தியபாமா}, மன்னரின் வரவு மற்றும் செலவுகளையும், அவர்களது மொத்த செல்வத்தையும் பாண்டவர்களுக்கு மத்தியில் நான் மட்டுமே அறிவேன். பாரதர்களின் காளைகளான அவர்கள் {பாண்டவர்கள்}, தங்களால் உணவளிக்கப்பட வேண்டியவர்களைக் கவனிக்கும் சுமையை என்மீது வைத்துவிட்டு, ஓ! அழகான முகம் கொண்டவளே {சத்தியபாமா}, என்னை மதித்தனர். தீய இதயம் கொண்டவர்களால் தாங்க முடியாத பெரும் பாரமான இந்தச் சுமையை, எனது வசதிகளைத் துறந்து, அவர்களுக்கு அர்ப்பணிப்புடன் நான் பகலும் இரவும் சுமந்தேன். என் கணவர்கள் அறம் செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்த போது, எப்போதும் நிறைந்திருக்கும் வருணனின் கொள்கலனைப் போல இருக்கும் அவர்களது வற்றாத கருவூலத்தை நான் நிர்வகித்தேன். முதலில் எழுந்து, கடைசியாகப் படுக்கைக்குச் செல்வதை நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஓ! சத்தியபாமா, இதுவே எப்போதும் என் கணவர்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்கு ஏதுவாக இருந்தது. கணவர்களை எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கச் செய்யும் இந்தப் பெரிய கலையை நான் எப்போதும் அறிந்து வைத்திருக்கிறேன். எப்போதுமே நான் தீய பெண்களின் பழக்கங்களைக் கைக்கொண்டதில்லை. நான் அவற்றைக் கைக்கொள்ள எப்போதும் விரும்பியதுமில்லை” என்றாள் {திரௌபதி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கிருஷ்ணை {திரௌபதி} உதிர்த்த அறம் நிரம்பிய இவ்வார்த்தைகளைக் கேட்ட சத்தியபாமா, முதலில் அறம்சார்ந்த பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} வணங்கி, பிறகு, “ஓ! பாஞ்சால இளவரசியே, ஓ! யக்ஞசேனன் மகளே {திரௌபதியே}, நண்பர்களுக்கு மத்தியில் வேடிக்கையான உரையாடல்கள் திட்டமிடப்படாமல் இயல்பாகவே எழுகின்றன. நான் தவறிழைத்துவிட்டேன், மன்னிப்பாயாக!” என்றாள் {சத்தியபாமா}.”

திரௌபதியின் அறிவுரை! – வனபர்வம் பகுதி 232-கணவனிடம் எப்படி நடந்து கொண்டால், அவன் மனைவிக்குக் கீழ்ப்படிந்தவனாக இருப்பான் எனத் திரௌபதி சத்தியபாமாவுக்குச் சொன்னது…

திரௌபதி {சத்தியபாமாவிடம்} சொன்னாள், “கணவரின் இதயத்தை ஈர்ப்பதற்கான சூழ்ச்சியற்ற வழியை நான் இப்போது உனக்குக் குறிப்பிடுவேன். அன்பிற்குரிய தோழியே {சத்தியபாமா}, அதைக் கைக்கொள்வதன் மூலம், நீ மற்ற பெண்களிடம் இருந்து உனது தலைவனை ஈர்த்துக் கொள்வாய். ஓ! சத்தியபாமா, தேவலோகத்தையும் சேர்த்து அனைத்து உலகிலும், கணவனுக்கு நிகரான வேறு தேவன் {தெய்வம்} கிடையாது. அவர் {கணவர்} உன்னிடம் திருப்தியடையும்போது, நீ (உனது கணவரிடம் இருந்து) விரும்பிய பொருட்களையெல்லாம் அடைவாய். அவர் {கணவர்} கோபப்படும்போது, அது அத்தனையும் இழப்பாய். வாரிசையும், மகிழ்வுண்டாக்கும் பல்வேறு பொருட்களையும் கணவரிடம் இருந்தே ஒரு மனைவி பெறுகிறாள். உனது கணவரின் மூலமே நீ அழகிய படுக்கைகளையும், இருக்கைகளையும், ஆடைகளையும், மாலைகளையும், நறுமணப்பொருட்களையும், பெரும் புகழையும், அதன் பிறகு சொர்க்கத்தையும் அடைவாய். எளிதான வழிகளில் யாரும் மகிழ்ச்சியை அடைந்து விட முடியாது. உண்மையில் கற்புள்ள பெண், இன்பத்தைத் துன்பத்துடனே பெறுகிறாள்.

எப்போதும் கிருஷ்ணனை நட்புடன் புகழ்ந்து உடல் பாடுகளை விரும்பி ஏற்றுக் கொள். அழகிய இருக்கைகளையும், அற்புதமான மாலைகளையும், பல்வேறு நறுமணப் பொருட்களையும், உடனடி சேவையையும் கொடுத்து, இவ்வழியில் நடந்தாயேயானால், அவர் {கிருஷ்ணன்} “நான் இவளால் உண்மையாகவே விரும்பப்படுகிறேன்” என்று எண்ணி உனக்கு அர்ப்பணிப்புடன் இருப்பார். வாயிலில் உனது தலைவரின் குரலைக் கேட்டதும், உனது இருக்கையில் இருந்து எழுந்து, அறையில் தயாராக நீ இருக்க வேண்டும். அவர் அந்த அறைக்குள் நுழைவதை நீ கண்டதும், உடனடியாக அவருக்கு அமர ஒரு இருக்கையைக் கொடுத்து, கால்கழுவ நீரைக் கொடுக்க வேண்டும். அவர் பணிப்பெண்ணிடம் எதையாவது செய்யச்சொன்னாலும், நீயே எழுந்து, அதை நீயே செய்வாயாக. உனது இந்த மனநிலையையும், முழு இதயத்தோடு நீ அவரை வணங்குகிறாய் என்பதையும் கிருஷ்ணன் அறியட்டும்.

ஓ! சத்தியபாமா, உனது தலைவர் எதைப் பேசினாலும், அது ரகசியமாக இல்லாவிட்டாலும் கூட, அதை யாரிடமும் பிதற்றிக் கொண்டிருக்கக்கூடாது. உனது சக்காளத்திகளில் {கிருஷ்ணனின் மற்ற மனைவியர்) யாராவது குறித்து வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினால், அவர் அது குறித்து உன்னிடம் எரிச்சலடையக்கூடும். உனது தலைவரிடம் அன்புடனும், அர்ப்பணிப்புடனும் இருந்து அவரின் நன்மையை விரும்பும் எவருக்கும் உனது சக்திகள் அனைத்தையும் பயன்படுத்தி உணவு கொடுப்பாயாக. இருப்பினும், உனது தலைவரிடம் பகைமை பாராட்டுவர்கள், அவருக்குத் தீங்கிழைக்க நினைப்போர் ஆகியோர் வஞ்சகத்துக்கு அடிமையாக இருப்பதால் அவர்களிடம் இருந்து இருந்து நீ தள்ளி இருக்க வேண்டும். மனிதர்களின் முன்னிலையில், அனைத்து உற்சாகங்களையும், கவனக்குறைவுகளையும் புறந்தள்ளி, அமைதியாக இருப்பதன் மூலம் உனது நாட்டங்களை மறைத்துக் கொள்ள வேண்டும். உன் மைந்தர்களான பிரத்யும்னன் மற்றும் சாம்பனுடன் கூடத் தங்கவோ அல்லது தனியாக உரையாடவோ செய்யாதே.

உயர்ந்த பிறப்புப் பிறந்தவர்கள், பாவமற்றவர்கள், தங்கள் தலைவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள் ஆகிய பெண்மணிகளிடம் மட்டுமே நீ சேர வேண்டும். கோபம் நிறைந்த, குடிக்கு அடிமையான, பெருந்தீனிக்கார, திருட்டுத்தனமுள்ள, தீய, பகை மேலிட்ட பெண்களிடம் இருந்து நீ எப்போதும் ஒதுங்கி இருக்க வேண்டும். இது போன்ற நடத்தையே மரியாதைக்குரியதும், செழிப்பை உண்டாக்குவதுமாகும். அது பகைமையைச் சமன் செய்யும் திறன் பெறும் போது, அது சொர்க்கத்திற்குக் கூட வழிவகுக்கும். எனவே, விலையுயர்ந்த மாலைகளையும், ஆபரணங்களையும் அணிந்து, அற்புதமான தைலங்களை மேனியில் பூசிக்கொண்டு உனது கணவரை நீ வழிபடுவாயாக” என்றாள் {திரௌபதி}.

விடைபெற்றான் கிருஷ்ணன்! – வனபர்வம் பகுதி 233-சத்தியபாமா திரௌபதியிடம் அவளது பிள்ளைகளின் நலம் குறித்துச் சொன்னது; கிருஷ்ணனும் சத்தியபாமாவும் தங்கள் நகருக்குக் கிளம்பியது..

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, ஜனார்த்தனன் என்றும் அழைக்கப்படும் மதுவைக் கொன்றவனான {மதுசூதனான} கேசவன் {கிருஷ்ணன்}, சிறப்புமிக்கப் பாண்டுவின் மகன்களுடனும், மார்க்கண்டேயரின் தலைமையிலான அந்தணர்களுடனும் பல்வேறு ஏற்புடைய கதைகளைப் பேசிவிட்டு, அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, தனது தேரில் ஏறி சத்தியபாமாவை அழைத்தான்.

துருபதன் மகளை {திரௌபதியை} அணைத்துக் கொண்ட சத்தியபாமா, அவளிடம் {திரௌபதியிடம்} மனப்பூர்வமான வார்த்தைகளால் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினாள். அவள் {சத்தியபாமா}, “ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, உனக்கு எந்தக் கவலையோ துயரமோ ஏற்படாதிருக்கட்டும்! தேவர்களுக்கு இணையான உனது கணவர்களால் வெல்லப்பட்ட பூமியை நீ நிச்சயம் திரும்ப அடைவாய், அதனால், உறக்கமில்லா இரவுகளை நீ கடக்க வேண்டிய காரணம் ஏதும் உனக்கு இல்லை. ஓ! கரிய கண்களையுடையவளே {திரௌபதி}, இது போன்ற நிலையையும், மங்களக்குறிகளையும் கொண்ட நீ நீண்ட நாட்களுக்குத் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்க முடியாது. அனைத்து முட்களில் இருந்தும் விடுபட்டு, உனது கணவர்களுடன் நீ இந்த உலகை அமைதியாக அனுபவிப்பாய் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஓ! துருபதன் மகளே {திரௌபதி}, திருதராஷ்டரன் மகன்கள் கொல்லப்பட்டு, அவர்களின் விரோதச் செயல்களுக்கான பழிதீர்க்கப்பட்ட பிறகு, இந்தப் பூமி யுதிஷ்டிரரால் ஆளப்படுவதை நீ நிச்சயம் காண்பாய். {வனவாசம் ஏற்று} நாட்டைவிட்டு வெளியேறும் வழியில் உன்னைக் கண்டு, கர்வத்தால் அறிவிழந்து சிரித்த கௌரவர்களின் மனைவியர், ஆதரவற்று விரக்தியுடன் இழிந்த நிலையை அடைவதை நீ விரைவில் காண்பாய். ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, நீ துன்பத்திலிருந்த போது உனக்குத் தீங்கிழைத்தவர்கள் ஏற்கனவே யமனின் வசிப்பிடத்தை அடைந்துவிட்டதாக நினைத்துக் கொள். யுதிஷ்டிரருக்குப் பிறந்த பிரதிவிந்தியன், பீமருக்குப் பிறந்த சுதசோமன், அர்ஜுனருக்குப் பிறந்த ஸ்ருதகர்மா, நகுலருக்குப் பிறந்த சதாநீகன், சகதேவனுக்குப் பிறந்த ஸ்ருதசேனன் ஆகிய உன் மகன்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஆயுதங்களில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அபிமன்யுவைப் போலவே அவர்கள் அனைவரும் துவாராவதியில் {துவாரகையில்} இன்பமாகத் தங்கியிருக்கின்றனர்.

சுபத்திரையும் மகிழ்ச்சியாகத் தன் முழு ஆன்மாவோடு, உன்னைப் போலவே அவர்களைப் பார்த்துக் கொள்கிறாள். அவர்களைக் கண்டு உன்னைப் போலவே மகிழ்கிறாள். உண்மையில் அவர்களது துயரங்களில் துக்கப்பட்டு, மகிழ்ச்சியில் இன்பமும் கொள்கிறாள். பிரதியும்னனின் அன்னையும் {ருக்மிணியும்} அவர்களிடம் முழு ஆன்மாவோடு அன்பு செலுத்துகிறாள். தனது மகன்களான பானு மற்றும் பிறருடன் கேசவரும் {கிருஷ்ணரும்}, அவர்களைச் சிறந்த கவனத்துடன் பார்த்துக் கொள்கிறார். எனது மாமியார் {தேவகி} அவர்களை உண்ண வைத்து, உடுத்தி எப்போதும் மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறாள். ராமரும் {பலராமர்}, மற்றும் பிறரும் சேர்ந்த அந்தகர்களும், விருஷ்ணிகளும் அவர்களைப் பாசத்துடன் கவனித்துக் கொள்கிறார்கள். ஓ! அழகிய மங்கையே {திரௌபதி}, பிரத்யும்னனிடம் அவர்கள் எப்படிப் பாசம் கொண்டிருக்கிறார்களோ அதற்குச் சமமாக உன் பிள்ளைகளிடமும் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஏற்றுக் கொள்ளும் வகையில், உண்மையான மனப்பூர்வமான வார்த்தைகளைப் பேசிய சத்தியபாமா வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தேருக்குச் செல்ல விரும்பினாள். பிறகு அந்தக் கிருஷ்ணனின் மனைவி {சத்தியபாமா}, பாண்டவர்களின் ராணியை {திரௌபதியை} வலம் வந்தாள். இப்படிச் செய்த அழகிய சத்தியபாமா கிருஷ்ணனின் தேரில் ஏறினாள். திரௌபதிக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அவளைக்கண்டு சிரித்த யாதவர்களின் தலைவன் {கிருஷ்ணன்}, {தன்னைத் தொடர்ந்து வந்த} பாண்டவர்களைத் திரும்பி செல்லச் செய்து, (தனது தேரில் பூட்டப்பட்டிருந்த) வேகமான குதிரைகளில் தனது சொந்த நகரத்திற்குக் {துவாரகைக்குக்} கிளம்பினான்.

திரௌபதி சத்யபாமா சம்வாத பர்வம் முற்றிற்று

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading