மழைக் காலமும் இலையுதிர் காலமும்! – வனபர்வம் பகுதி 181(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம்)துவைத வனத்தில் வெயில் காலம் போய், மழைக்காலம் வந்தது; அதைத் தொடர்ந்து இலையுதிர்க்காலத்தையும் பாண்டவர்கள் துவைத வனத்தில் மகிழ்ச்சியாகக் கழித்தது; பிறகு யுதிஷ்டிரனும் பாண்டவர்களும் துவைத வனத்திலிருந்து காம்யக வனத்திற்கு மீண்டும் சென்றது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அவர்கள் {பாண்டவர்கள்} அவ்விடத்தில் வசித்து வந்த போது, வெயில் காலம் முடிவுக்கு வந்து, அசையும் அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் மழைக்காலம் வந்தது. உருளும் ஒலியுடன் கூடிய கரு மேகங்கள், சொர்க்கத்தையும் {வானத்தையும்}, திசைப்புள்ளிகளையும் மறைத்தன. இடைவிடாத மழை பகலிலும் இரவிலும் பெய்தது. நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான இதுபோன்ற மேகங்கள், பார்ப்பதற்கு மழைக்காலத்து மண்டபங்களைப் போலக் காட்சியளித்தன. சூரியனின் பிரகாசம் பூமியில் இருந்த மறைந்தது; அதன் இடத்தைக் கறையற்றப் பிரகாசம் கொண்ட மின்னல் பிடித்துக் கொண்டது. அதிகமான புற்கள் வளர்ந்து, களிப்புக் கொண்ட காட்டு ஈக்களோடும் ஊர்வனவற்றோடும் சேர்ந்த பூமியானவள் மழையில் அமைதியாகக் குளித்த வண்ணம் அதிக மகிழ்ச்சியை அடைந்தாள். அனைத்தையும் நீர் மறைத்திருந்ததால், எது சம தரை, எது சமமற்ற தரை என்பது தெரியவில்லை; அங்கே இருந்த ஆறுகளோ, மரங்களோ அல்லது மலைகளோ தெரியவில்லை.
வெயில் காலத்தின் முடிவில், கிளர்ந்தெழும் நீருடன் இருந்த ஆறுகள், அந்தக் கானகத்திற்கு அழகு சேர்த்த வண்ணம் பெரும் சக்தியோடு ஓடியது பாம்புகளின் சீற்றத்தைப் போலக் கேட்டது. மழை பெய்து கொண்டிருந்த போது, பன்றிகள், மான்கள் மற்றும் பறவைகள் பல தரப்பட்ட ஒலிகளை வெளியிடத் தொடங்கின. அந்தச் சத்தம் அந்தக் கானகத்திற்குள் கேட்டுக் கொண்டே இருந்தது. சாதகப் பறவைகளும், மயில்களும், ஆண் குயில்களும், உற்சாகம் கொண்ட தவளைகளும் மழையில் ஆனந்தமாக ஓடி விளையாடின. மணற்பாங்கான இடங்களிலும், பாலை நிலங்களிலும் சுற்றித்திரிந்த பாண்டவர்களுக்கு அந்த மழைக்காலம் பலவிதமான தோற்றங்கள் கொண்ட மேகங்களின் முழக்கத்தோடு இனிதாகக் கடந்து சென்றது.
பிறகு, ஆண் வாத்துகளும் {ganders}, நாரைகளும் நிறைந்த மகிழ்ச்சி நிறைந்த இலையுதிர் காலம் {autumn} வந்தது. அக்கானகத்தின் நிலப்பரப்பு முழுவதும் புற்களால் நிறைந்திருந்தது; தெளிந்த நீர் கொண்ட ஆறுகள் அமைதியாக ஓடின; ஆகாயத்தில் விண்மீன்கள் பிரகாசமாக ஒளிர்ந்தன. விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அந்த இலையுதிர் காலம், பெருந்தன்மை கொண்ட பாண்டவர்களுக்கு மகிழ்ச்சியானதாகவும், இனிமையானதாகவும் இருந்தது. சரஸ்வதி நதியின் கரையில் அவர்கள் உலவிய போது, ஆகாயம் முழுவதும் நாரைகள் நிறைந்திருந்தன. நீராடும் புனிதமான நீர்நிலைகள் அனைத்தும் அவற்றால் {நாரைகளால்} நிறைந்திருந்தன. {இதைக்கண்ட} அவர்களின் {பாண்டவர்களின்} மகிழ்ச்சி பெரிதாக இருந்தது. வலிமைமிக்க விற்களைத் தாங்கிய அந்த வீரர்கள் {பாண்டவர்கள்}, குறிப்பாக, தெளிந்த நீருடன் முழுமையாக ஓடும் சரஸ்வதி நதியைக் கண்டு மகிழ்ந்தார்கள்.
ஓ! ஜனமேஜயா, இலையுதிர்காலத்தில், கார்த்திகை மாதத்தின் முழு நிலவுடன் கூடிய புனிதமான இரவொன்றை அங்கே வசிக்கும் போது {சரஸ்வதி நதியின் அருகில்} அவர்கள் {பாண்டவர்கள்} கழித்தார்கள். பிறகு பரதனின் வழித்தோன்றல்களான அந்தப் பாண்டு மகன்கள் {பாண்டவர்கள்}, ஒரு மங்களகரமான காலத்தை, தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்து, பெருமையும் நேர்மையும் மிக்கத் தவசிகளுடன் கழித்தனர். தேய்பிறைத் தொடங்கியவுடன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேரோட்டிகள் மற்றும் சமையற்கலைஞர்களுடன் கூடிய பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, காம்யகம் என்ற பெயர் கொண்ட கானகத்திற்குள் நுழைந்தனர்.
கண்ணன் வந்தான்! – வனபர்வம் பகுதி 182அ-கிருஷ்ணன் சத்யபாமாவுடன் காம்யக வனம் சென்று பாண்டவர்களைச் சந்தித்தல்; நாரதர் மற்றும் மார்க்கண்டேயர் வருகை; கிருஷ்ணனின் வேண்டுகோளுக்கிணங்க மார்க்கண்டேயர் விளக்கங்களைச் சொல்லத் தொடங்குதல்..
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! குருவின் மகனே {ஜனமேஜயா}, யுதிஷ்டிரனும் மற்றவர்களும் காம்யக வனத்தை அடைந்ததும், முனிவர்க்கூட்டத்தால் அன்போடு வரவேற்கப்பட்டு, அங்கேயே கிருஷ்ணையுடன் {திரௌபதி} வாழ்ந்தனர். பாண்டுவின் மகன்கள் அங்கே பாதுகாப்புடன் வசித்து வந்த போது, பல அந்தணர்கள் அவர்களுக்காகக் காத்திருந்தனர். அப்போது ஒரு குறிப்பிட்ட அந்தணர், “சூரனின் வழித்தோன்றலும், வலிய கரங்களும், சுயக்கட்டுப்பாடும் கொண்டவனும், உயர்ந்த அறிவாளியும், அர்ஜுனனுக்கு அன்பிற்குரிய நண்பனுமானவன் {கிருஷ்ணன்} இங்கே வருவான். குருவின் வழித்தோன்றல்களில் முதன்மையானவர்களே, நீங்கள் இங்கே வந்துவிட்டீர்கள் என்பதை ஹரி {கிருஷ்ணன்} அறிவான். அந்த ஹரி {கிருஷ்ணன்} எப்போதும் உங்களைக் காண விரும்புபவனாவான். அவன் எப்போதும் உங்கள் நன்மையை நாடுபவன். மேலும், பல வருடங்களாகக் கடும் தவத்திற்கும், கல்விக்கும், நோன்புக்கும் தன்னை அர்ப்பணித்திருந்த மார்க்கண்டேயரும் உங்களை இங்கே வந்து சந்திப்பார்” என்றார் {அந்த அந்தணர்}.
இவ்வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் சைப்யம், சுக்ரீவம் என்ற குதிரைகளால் இழுக்கப்பட்ட ரதத்தில், சத்யபாமாவுடன் கூடியவனாகத் தேரோட்டிகளில் சிறந்தவனான கிருஷ்ணன், புலோமனின் மகளான சச்சியுடன் கூடிய இந்திரன் போல அங்கே காணப்பட்டான். குருவின் வழித்தோன்றல்களில் மிகவும் நேர்மையானவர்களைக் காண விரும்பிய தேவகியின் மகன் {கிருஷ்ணன்} அங்கே {காம்யக வனத்திற்கு} வந்தான். புத்திகூர்மையுடைய கிருஷ்ணன், தனது தேரில் இருந்து இறங்கி, நிர்ணயிக்கப்பட்ட வழியின்படி அந்த அறம்சார்ந்த மன்னனின் {யுதிஷ்டிரனின்} முன்பாக இதய மகழ்ச்சியுடன் நிலம்படிந்தான் {நெடுஞ்சாண் கிடையாக வணங்குவது}. அதேபோல, பலசாலி மனிதர்களில் முதன்மையான பீமனின் முன்னிலையிலும் அவ்வாறே செய்தான். பின்பு அவன் {கிருஷ்ணன்} தௌமியருக்குத் தனது மரியாதையைத் தெரிவித்தான். அதே வேளையில் இரட்டையர்கள் இருவரும் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும்} அவனிடம் {கிருஷ்ணனின் முன்பாக} நிலம்படிந்தனர். பிறகு, சுருள் முடி கொண்ட அர்ஜுனனை வாரி அணைத்துக் கொண்டு, துருபதனின் மகளிடம் {திரௌபதியிடம்} ஆறுதல் வார்த்தைகள் பேசினான் {கிருஷ்ணன்}.
அன்பிற்குரிய அர்ஜுனன் தன் அருகே வரவும், தாசார்ஹ குலத் தலைவனின் வழித்தோன்றலான அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {கிருஷ்ணன்}, அவனைக் {அர்ஜுனனைக்} கண்டு நீண்ட காலம் ஆகிவிட்டதால், மீண்டும் மீண்டும் அணைத்துக் கொண்டான். அதே போல, கிருஷ்ணனின் அன்பிற்குரிய மனைவியான சத்யபாமாவும், பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} அன்பிற்குரிய மனைவியான துருபதனின் மகளைத் {திரௌபதியைத்} தழுவினாள். தங்கள் மனைவியுடனும் {திரௌபதியுடனும்}, புரோகிதருடன் {தௌமியருடனும்} கூடிய பாண்டுவின் மகன்கள், வெண்தாமரையைப் போன்ற கண்களைக் கொண்ட கிருஷ்ணனுக்குத் தங்கள் மரியாதைகளைச் செய்து எல்லாப்புறமும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். படைக்கப்பட்ட அனைத்திற்கும் மதிப்புமிக்கத் தலைவனும் பலம்வாய்ந்த தலைவனுமான சிவன் (தனது மகன்) கார்த்திகேயனுடன் சேர்ந்திருக்கும் போது பெறும் அழகைப் போலவே, செல்வங்களை வெல்பவனும், அசுரர்களுக்குப் பயங்கரமானவனுமான பிருதையின் {குந்தியின்} மகன் அர்ஜுனனுடன் கூடி நிற்கும்போது கிருஷ்ணன் அழகாக இருந்தான்.
வளையங்களுடன் கூடிய கிரீடத்தைத் தனது தலையில் தாங்கியிருந்த அர்ஜுனன், கானகத்தில் {இதுவரை} என்னவெல்லாம் நடந்தன என்பது குறித்துச் சுருக்கமாகக் கதனின் [1] அண்ணனான கிருஷ்ணனிடம் விவரித்தான். (வசுதேவருக்கும் தேவரக்ஷிதா என்ற பெண்ணுக்கும் பிறந்தவன் ஆவான். இவன் கிருஷ்ணனுக்குத் தம்பியாவான்.)பிறகு அர்ஜுனன், “சுபத்திரையும், அவளது மகன் அபிமன்யுவும் எப்படி இருக்கிறார்கள்?” என்று {கிருஷ்ணனிடம்} கேட்டான். மதுவைக் கொன்றவனான கிருஷ்ணன், பிருதையின் மகனுக்கும், புரோகிதருக்கும் {தௌமியருக்கும்} நிர்ணயிக்கப்பட்ட முறையில் தனது மரியாதைகளைச் செலுத்திவிட்டு, அவர்களுடன் அமர்ந்து, மன்னன் யுதிஷ்டிரனைப் புகழ்ந்து பேசினான். அவன் {கிருஷ்ணன்}, “ஓ! மன்னா, நாடுகளை வெல்வதைக் காட்டிலும் அறமே விரும்பத்தக்கது; அது உண்மையில் ஒரு தவப்பயிற்சியாகும். கடமை உமக்கு நிர்ணயித்தவற்றுக்கு உண்மையுடனும் கள்ளங்கபடமற்றும் கீழ்ப்படிந்த நீர், இவ்வுலகையும், இதைத் தொடர்ந்து வரும் உலகையும் வென்றுவிட்டீர். முதலில் {பிரம்மச்சரிய காலத்தில்} நீர் அறக்கடமைகளை ஆற்றும்போது கல்வி பயின்றீர். முறையான வழியில் முழுமையான ஆயுத அறிவியலை அடைந்து, க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்பட்ட முறையான வழிகளில் செல்வத்தை வென்று, எல்லாக்காலங்களிலும் கொண்டாடப்படும் வேள்விச் சடங்குகளைச் செய்தீர். நீர் சிற்றின்பங்களில் மூழ்கவில்லை; ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, இன்ப நோக்கங்களைக் கொண்டு {காமத்தினால்} நீர் செயல்படுவதுமில்லை, அல்லது, செல்வத்தில் பேராசை கொண்டு, நீர் அறம் வழுவியதில்லை; இதன் காரணமாகவே, ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரனே}, நீர் அறம்சார்ந்த மன்னன் {தர்மராஜா} என்ற பெயர் கொண்டிருக்கிறீர். நாடுகளையும், செல்வங்களையும், இன்ப வழிகளையும் {போகங்களையும்} வென்றும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, கொடை {தானம்}, உண்மை {சத்தியம்}, தவம், நம்பிக்கை, தியானம், இரக்கம் மற்றும் பொறுமை ஆகியவையே உமக்குச் சிறந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, குருஜாங்காலத்தின் மக்கள், சபாமண்டபத்தில் சீற்றத்துடன் இருந்த கிருஷ்ணையின் {திரௌபதியின்} நிலையைக் கண்ட போது, அறம் மற்றும் பண்பாட்டுக்குப் புறம்பான, மிகவும் வெறுக்கத்தக்க அதை {அச்சம்பவத்தை}, உம்மைத் தவிர வேறு யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்? அனைத்து விருப்பங்களும் நிறைவேறி ஐயமின்றி, விரைவில் மனிதர்களை நீண்ட காலம் ஆள்வீர். நிபந்தனைகள் முழுமையடைந்ததும், குருக்களைத் தண்டிக்க இதோ நாம் தயாராக இருக்கிறோம்” என்றான் {கிருஷ்ணன்}.
தாசார்ஹ குலத்தின் முதன்மையானவனான கிருஷ்ணன், தௌமியரிடமும், பீமனிடமும், யுதிஷ்டிரனிடமும், இரட்டையர்கள் மற்றும் கிருஷ்ணையிடமும், “உங்கள் ஆசிகளால் மணிமுடி தாங்கிய அர்ஜுனன், அனைத்து ஆயுதங்களின் அறிவியலையும் அறிந்து திரும்பிவிட்டான்” என்றான். பிறகு, நண்பர்கள் சூழ இருந்த தாசார்ஹ குலத்தின் தலைவனான கிருஷ்ணன், யக்ஞசேனனின் மகளான கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, ஓ! யக்ஞசேனன் மகளே, உனது மகன்கள், ஆயுதங்களின் அறிவியலைக் கற்பதற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, நேர்மையான நண்பர்களுடன் நன்னடத்தையுடன் நடந்து கொள்கிறார்கள். உனது தந்தையும், உனது உடன்பிறந்த சகோதரர்களும், அவர்களுக்கு ஒரு நாட்டையும், சில இடங்களையும் அளித்தார்கள்; ஆனால் பிள்ளைகளுக்குத் துருபதனின் இல்லத்தில் மகிழ்ச்சி தெரியவில்லை, தாய்மாமன்கள் இல்லத்திலும் அவர்களுக்கு அது தெரியவில்லை. அவர்கள் பாதுகாப்பாக ஆனர்த்தர்களின் நிலத்திற்கு வந்து, ஆயுதங்களின் அறிவியலைப் பயில்வதில் மிகவும் மகிழ்கிறார்கள். உனது மகன்கள் விருஷ்ணிகளின் நகரத்துக்குள் நுழைந்த உடனே, அங்கே இருக்கும் மக்களுக்கு விருப்பமானவர்களாகிறார்கள். நீ எப்படி அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று வழிநடத்துவாயோ, அல்லது மரியாதைக்குரிய குந்தி எப்படி வழிநடத்துவாளோ அப்படியே சுபத்திரை அவர்களைக் கண்காணிப்புடன் வழிநடத்துகிறாள். உண்மையில், அவள் மேலும் கவனமாகவே இருக்கிறாள் என்று சொல்ல வேண்டும்.
ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, அநிருத்தன், அபிமன்யு, சுநீதன், பானு ஆகியோருக்கு குருவாக இருப்பது போலவே, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்} அவர்களுக்கு {உனது பிள்ளைகளுக்கு} குருவாகவும், புகலிடமாகவும் இருக்கிறான். ஒரு நல்ல குருவாக, கதாயுதம், வாள், கேடயம், ஏவுகணை ஆகியவற்றைத் தாங்கவும், தேரோட்டவும், குதிரையோட்டவும், வீரமாக இருக்கவும் தொடர்ந்து பயிற்றுவிக்கிறான். ஓ! துருபதனின் மகளே {திரௌபதி}, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, அவர்களுக்கு நல்ல பயிற்சியை அளித்து, பலதரப்பட்ட ஆயுதங்களை முறையாகப் பயிற்றுவித்து, உனது மகன்கள் மற்றும் அபிமன்யுவின் வீரச்செயல்களால் திருப்தியடைகிறான். உனது மகன்கள் விளையாட்டுக்காக வெளியே செல்லும்போது, அவர்கள் ஒவ்வொருவரையும், ரதங்களும், குதிரைகளும், வாகனங்களும், யானைகளும் தொடர்ந்து செல்கின்றன” என்றான் {திரௌபதியிடம் கிருஷ்ணன்}.
பிறகு கிருஷ்ணன், அறம்சார்ந்த மன்னனான யுதிஷ்டிரனிடம், “தாசார்ஹ குலத்தின் போர்வீரர்களும், குகுரர்களும், அந்தகர்களும், ஓ! மன்னா, உமது கட்டளையை ஏற்பார்கள். அவர்கள் நீர் விரும்பியதைச் செய்வார்கள். ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, குதிரைவீரர்கள், காலாட்படை, குதிரைகள், ரதங்கள், யானைகள் ஆகியவற்றைக் கொண்டு, பலராமனின் தலைமையில் காற்றுபோல (எதிர்த்து நிற்க முடியாதபடி) வரும் மது குலத்தின் படை உமது கட்டளையை ஏற்கத் தயாராக இருக்கிறது. ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, பாவிகளில் தீயவனும் திருதராஷ்டிரன் மகனுமான துரியோதனனை, அவனைத் தொடர்பவர்களுடனும், அவனது நண்பர்கள் கூட்டத்துடனும், சௌபத்தின் தலைவன் சென்ற வழியே விரட்டுவீராக. ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, சபா மண்டபத்தில் ஏற்கப்பட்ட நிபந்தனைகளின் படி நீர் இருப்பதை வரவேற்கிறோம். ஆனால், தாசார்ஹ படை வீரர்களால் எதிரிகள் கொல்லப்பட்டு, ஹஸ்தினா நகரம் {ஹஸ்தினாபுரம்} உமக்காகத் தயாராக இருக்க நீர் அனுமதி அளிப்பீராக. அப்போது, நீர் உமது பாவங்களில் இருந்து விடுபட்டு, துன்பத்தை விலக்கி, அற்புதமான நிலப்பகுதியின் மத்தியில் அமைந்திருக்கும் நன்கு அறியப்பட்ட அந்த ஹஸ்தினா நகரத்தில் நுழையும்போது, அங்கு நீர் விரும்பும் இடங்களில் உலவி இன்பமாக இருக்கலாம்” என்றான் {கிருஷ்ணன்}.
பிறகு தயாள குணம் கொண்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மனிதர்களில் சிறந்தவனான கிருஷ்ணன் தெளிவாகச் சொன்னதன் பொருளைப் புரிந்து கொண்டு, அதை மெச்சி, ஆழ்ந்து ஆலோசித்த பிறகு, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} கூப்பிய கரங்களுடன், “ஓ! கேசவா, நீயே பாண்டு மகன்களின் புகலிடம் என்பதில் ஐயமில்லை; பாண்டுவின் மகன்கள் உன்னிலே தங்கள் பாதுகாவலனைக் கொண்டிருக்கிறார்கள். நேரம் வரும்போது, நீ சொன்ன பணியை நீ செய்வாய் என்பதில் ஐயமில்லை. அதைவிட அதிகமாகவும் செய்வாய். உறுதி கூறியபடி, நாங்கள் பனிரெண்டு வருடங்களைத் தனிமையான கானகங்களில் கழித்தோம். ஓ! கேசவா, நிர்ணயிக்கப்பட்ட வழியில் மறைந்திருக்கும் காலத்தையும் {அஜ்ஞாதவாசத்தையும்} முழுமையாக முடித்த பின்னர்ப் பாண்டுவின் மகன்கள் உம்மைப் புகலிடமாகக் கொள்வர். ஓ! கிருஷ்ணா, இதுவே உம்முடன் தொடர்புடையோரின் நோக்கமாக இருக்க முடியும். பாண்டுவின் மகன்கள் உண்மையின் வழியில் இருந்து பிறழமாட்டார்கள், ஏனெனில், பிருதையின் {குந்தியின்} மகன்கள் தங்கள் தானத்துடனும், தங்கள் மக்கள் மீது கொண்ட பக்தியுடனும், தங்கள் மனைவியர் மற்றும் உறவினருடனும் உன்னிலேயே பாதுகாவலனைக் கொண்டிருக்கின்றனர்” என்றான் {யுதிஷ்டிரன்}.
அந்தண சக்தி! – வனபர்வம் பகுதி 183-அந்தணர்களின் மகிமை குறித்து யுதிஷ்டிரனுக்கும் அவனைச் சூழ்ந்திருந்தவர்களுக்கும் மார்க்கண்டேயர் சொல்லியது
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பாண்டுவின் மகன்கள் உயர் ஆன்ம மார்க்கண்டேயரிடம், “அந்தணர்களின் பெருமைகளைக் கேட்கக் காத்திருக்கிறோம். நீர் எங்களுக்கு அதைச் சொல்லும்” என்றனர். இப்படிக் கேட்கப்பட்ட தவ அறமும் ஆன்ம சக்தியும், அனைத்துத் துறைகளில் ஞானமும் கொண்ட மதிப்பிற்குரிய மார்க்கண்டேயர், “எதிரிகளின் நகரத்தை வெல்பவனும், ஹேஹய குலத்தைச் சார்ந்தவனும் வலிமையான உறுப்புகள் கொண்டவனுமான ஒரு இளவயது இளவரசன் (ஒரு சமயம்) வேட்டைக்கு வெளியே சென்றான். அப்படி அவன் காட்டு மரங்கள் மற்றும் அடர்த்தியான புற்களுக்கிடையே உலவி கொண்டிருந்த போது, கறுப்பு மான் தோலை தனது மேலாடையாக உடுத்தியிருந்த ஒரு முனிவரைத் தனது அருகில் கண்டு, அவரை மான் என நினைத்துக் கொன்று விட்டான்.
தான் செய்த காரியத்தில் வலி கொண்டு, துயரத்தால் புலன்கள் செயலற்ற அவன், புகழ்பெற்ற ஹேஹயத் தலைவர்களிடம் சென்றான். அந்தத் தாமரை கண்கள் கொண்ட இளவரசன் அவர்களிடம் விவரங்களைத் தெரிவித்தான். ஓ! எனது மகனே {யுதிஷ்டிரா}, அவன் சொன்னதைக் கேட்டும், கனிகளும் கிழங்குகளும் உண்டு வாழ்ந்த அந்த முனிவரின் உடலைக் கண்டும், அவர்கள் மனதால் மிகவும் துன்புற்றார்கள். அவர்கள் அனைவரும் இந்த முனிவர் யாருடைய மகன் என்பதை அறிய அங்கும் இங்கும் தேடி விசாரித்தார்கள். அவர்கள் விரைவில், காசியபரின் மகனான அரிஷ்டநேமியின் ஆசிரமத்தை அடைந்தனர். நிலைத்த தவத்தில் இருந்த அந்தப் பெரும் முனிவரை வணங்கியபடி அவர்கள் அங்கே நின்றார்கள். அதே வேளையில், முனிவர் {அரிஷ்டநேமி} தன்பங்குக்கு, அவர்களை வரவேற்பதில் மும்முரமாக இருந்தார். அவர்கள் அந்தச் சிறப்புமிக்க முனிவரிடம் {அரிஷ்டநேமியிடம்}, விதியின் விளையாட்டால், நாங்கள் உம்முடைய வரவேற்புக்குத் தகுதியற்றவர்களானோம். உண்மையில் நாங்கள் ஒரு அந்தணரைக் கொன்றுவிட்டோம்!” என்றனர்.
அந்த மறுபிறப்பாள முனிவர்கள் அவர்களிடம், “நீங்கள் எப்படி ஒரு அந்தணனைக் கொன்றீர்கள்? அவன் எங்கிருக்கிறான்? நீங்கள் அனைவரும் எனது தவப்பயிற்சியின் சக்தியைப் பாருங்கள்” என்றார். அனைத்தையும் நடந்தவாறே அவரிடம் விவரித்த அவர்கள் அங்கிருந்து திரும்பினார்கள். ஆனால், {இறந்த} அந்த முனிவரின் உடல் அங்கே (அவர்கள் அதை விட்டுச் சென்ற இடத்தில்) இல்லை. தேடிக் களைத்த பின்னர், கனவில் கண்டதைப் போல, கருத்திழந்து வெட்கித் திரும்பினர். பிறகு, ஓ! எதிரிகளின் நகரங்களை வெல்பவனே {யுதிஷ்டிரா}, அந்த முனிவர் தார்க்ஷயர் {அரிஷ்டநேமி}, அவர்களிடம், “இளவரசர்களே, நீங்கள் கொன்ற அந்தணன் இவனா? ஆன்மப் பயிற்சிகள் மூலம் அமானுஷ்ய கொடைகள் {சக்திகள்} கொண்ட இந்த அந்தணன் உண்மையில் எனது மகனே” என்றார் {அரிஷ்டநேமி}.
அம்முனிவரைக் கண்ட அவர்கள், ஓ பூமியின் தலைவா, மிகுந்த அதிர்ச்சியை அடைந்தனர். அவர்கள், “என்ன அற்புதம்! இறந்தவர் உயிருடன் திரும்புவது எப்படி? தவ அறத்தின் சக்தியால் இவர் மீண்டும் புத்துயிர் பெற்றாரா? உண்மையில் அதை வெளியிடலாம் என்றால், ஓ அந்தணரே, நாங்கள் கேட்கக் காத்திருக்கிறோம்” என்றனர். அவர்களிடம் அவர் {அரிஷ்டநேமி}, “ஓ மனிதர்களின் தலைவர்களே, எங்கள் மீது சாவுக்கு அதிகாரம் கிடையாது. அதை யுக்தியுடன் சுருக்கமாகச் சொல்வேன். நாங்கள் எங்கள் புனிதமான கடமைகளைச் செய்கிறோம்; ஆகையால் எங்களுக்கு மரணத்திடம் பயம் கிடையாது; நாங்கள் அந்தணர்களைப் பற்றி நல்ல விதமாகப் பேசுகிறோம் ஆனால் அவர்களைக் குறித்துத் தீங்கு நினைத்தது கிடையாது; ஆகையால் மரணம் என்பது எங்களுக்குப் பயத்தைக் கொடுப்பதில்லை. எங்கள் விருந்தினர்களை உணவு, நீர் கொடுத்தும், எங்களை நம்பியிருப்பவர்களுக்கு அபரிமிதமான உணவைக் கொடுத்தும், அதன் பிறகு எஞ்சி இருப்பதை நாங்கள் உண்பதால் மரணத்திடம் எங்களுக்குப் பயம் கிடையாது. அமைதி நிரம்பி, தவம், தானம், பொறுமை ஆகியவற்றைக் கடைப்பிடித்து, புனித இடங்களுக்குச் சென்று, புனிதமான இடங்களில் நாங்கள் வாழ்கிறோம். ஆகையால் எங்களுக்கு மரணத்தின் மீது பயம் கிடையாது. ஆன்மசக்தி நிறைந்த மனிதர்கள் வாழும் இடத்தில் நாங்கள் வாழ்கிறோம்; எனவே எங்களை மரணம் பயமுறுத்துவது கிடையாது. நான் சுருக்கமாக அனைத்தையும் உங்களுக்குச் சொல்லிவிட்டேன். இப்போது அனைத்து உலகத் தீமைகளிலிருந்தும் குணமடைந்து நீங்கள் திரும்பலாம். பாவத்தினால் இனி உங்களுக்குப் பயமில்லை” என்றார். “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன அந்த இளவரசர்கள், ஓ! பாரதக் குலத்தின் முதன்மையான குலவழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, அம்முனிவரை {அரிஷ்டநேமியை} வணங்கி, மகிழ்ச்சியுடன் தங்கள் நாட்டிற்குத் திரும்பினர்.
அத்ரி கௌதமர் சர்ச்சை! – வனபர்வம் பகுதி 184-மன்னன் வைனியனின் குதிரைவேள்வியில் அத்ரி முனிவருக்கும் கௌதம முனிவருக்கும் இடையில் நடந்த சர்ச்சையைச் சொல்லி மன்னனின் பெருமையை மார்க்கண்டேயர் உரைப்பது
மார்க்கண்டேயர் {பாண்டவர்களிடம்} தொடர்ந்தார், “அந்தணர்களின் மகிமையை மீண்டும் நீங்கள் கேட்பீராக! ஒரு காலத்தில் வைனியன் {Vainya} என்ற ஒரு அரச முனி குதிரை வேள்வி செய்து கொண்டிருந்த போது, அத்ரி அவனிடம் பிச்சை கேட்பதற்குச் செல்ல விரும்பினார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதன் தொடர்ச்சியாக, அற நீதி காப்பதற்காக அத்ரி செல்வத்தின் மீதான தமது ஆசையைத் துறந்தார். பெருத்த சிந்தனைக்குப் பிறகு, அந்தப் பெரும் வலிமை படைத்தவர் {அத்ரி}, கானகத்தில் வாழ விரும்பி, தனது மனைவி மற்றும் மகன்களை ஒருங்கே அழைத்து அவர்களிடம், “நாம் அனைவரும் உயர்ந்த அமைதியையும், நமது விருப்பங்களின் முழுமையையும் அடைவோமாக. எனவே, பெரும் தகுதி கொண்ட வனவாழ்க்கையை ஏற்பவர்களாக விரைந்து கானகம் செல்வோம்” என்றார். அறநோக்கங்கள் கொண்டு வாதாடிய அவரது {அத்ரியின்} மனைவி அவரிடம், “ஒப்பற்ற இளவரசனான வைனியனிடம் சென்று அவனிடம் பெரும் செல்வங்களை இரந்து கேளுங்கள்! வேள்வியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசமுனி, இப்படி உம்மால் கேட்கப்பட்டதும் செல்வங்களை அளிப்பான். ஓ! மறுபிறப்பாள {பிராமண} முனிவரே, அங்கே சென்று, பெரும் செல்வத்தைப் பெற்றால், நீர் உமது மகன்களுக்கும், வேலைக்காரர்களுக்கும் பிரித்துக் கொடுக்கலாம். அப்படிச் செய்த பிறகு நீர் எங்கு விரும்புகிறீரோ அங்குச் செல்லலாம். இதுவே அறம் அறிந்த மனிதர்களால் இணையில்லாத உயர்ந்த அறமாக மதிக்கப்படுகிறது” என்றாள். அதற்கு அத்ரி {மனைவியிடம்}, “ஓ! அறம் சார்ந்தவளே, உயர் ஆன்ம கௌதமர் மூலம், அந்த வைனியன் ஒரு பக்தி கொண்ட இளவரசன் என்றும், உண்மையின் விளைவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவன் என்றும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் அங்கே என் மீது பொறாமை படும் அந்தணர்கள் இருக்கிறார்கள். இதையும் கௌதமர் எனக்குச் சொல்லியிருக்கிறார். ஆகவே நான் அங்குச் செல்ல முயலவில்லை. அங்கே, நான் நல்லது குறித்தும் பக்தியை அடையக்கூடிய வழிமுறைகள் குறித்தும், ஒருவரின் விருப்பங்கள் நிறைவேறுவது குறித்தும் ஆலோசனை வழங்க வேண்டியிருந்தால், எந்த நன்மையும் செய்யாத எந்தப் பயனும் இல்லாத வார்த்தைகளைச் சொல்லி அதை அவர்கள் மறுப்பார்கள். ஆயினும் எனது தீர்மானங்களை நான் ஏற்கிறேன் ஆகையால் நான் அங்குச் செல்வேன். பசுக்களையும் ஏராளமான செல்வங்களையும் வைனியன் எனக்கு அளிப்பான்” என்றார் {அத்ரி}.
மார்க்கண்டேயர் {பாண்டவர்களிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொன்ன அந்தப் பெரும் தவத்தகுதி படைத்தவர் {முனிவர் அத்ரி}, வைனியானின் வேள்விக்கு விரைந்து, வேள்விப் பீடத்தை அடைந்து, மன்னனுக்குத் தனது மரியாதையைத் தெரிவித்து, அவனை நல்ல பொருள் பொதிந்த வார்த்தைகளால் புகழ்ந்தபடி, “நீ அருளப்பட்டிருப்பாயாக! ஓ! மன்னா, இப்பூமியை ஆள்பவர்களில் நீயே முதன்மையானவன். முனிவர்கள் உன்னைப் புகழ்கிறார்கள். மேலும், தர்ம காரியங்கள் அறிந்தவர்கள் உன் போல யாருமில்லை” என்றார் {அத்ரி}. அவரிடம் {அத்ரியிடம்}, பெரும் தவத்தகுதி படைத்த கௌதம முனிவர் ஆத்திரத்துடன், “அத்ரி, மீண்டும் இந்த முட்டாள் தனத்தைச் செய்யாதீர். உமது அறிவு நல்ல நிலையில் இல்லை. நமது இந்த உலகில், படைக்கப்பட்ட அனைத்திற்கும் தலைவனான மகேந்திரனே ஆள்பவர்களில் முதன்மையானவன் ஆவான்” என்றார். பிறகு, ஓ! பெரும் இளவரசனே {யுதிஷ்டிரா}, அத்ரி கௌதமரிடம், “அனைத்து உயிர்களின் தலைவனான இந்திரன், நமது விதிகளை ஆள்வதைப் போலவே, இந்த மன்னனும் ஆள்கிறான். நீர் தவறாகக் கருதுகிறீர். ஆன்ம உணர்வு குறைவால், அறிவிழந்திருப்பவர் நீரே” என்றார். அதற்குக் கௌதமர், “நான் தவறாகக் கருதவில்லை என்பதை நான் அறிவேன். இவ்விஷயத்தில் நீரே தவறான கருத்தில் இருக்கிறீர். மன்னன் முகம் கண்டு பேசுவதற்காக, நீர் இந்த மக்கள் மன்றத்தில் அவனை முகத்துதி செய்கிறீர். நீர் உயர்ந்த அறத்தை அறியவில்லை, அது வேண்டும் என்றும் நீர் உணரவில்லை. நீர் அறியாமையில் இருக்கும் குழந்தையைப் போல இருக்கிறீர். நீர் எப்படித்தான் வயதில் முதிர்ந்தீரோ?” என்று கேட்டார் {கௌதமர்}.
மார்க்கண்டேயர் {பாண்டவர்களிடம்} தொடர்ந்தார், “வைனியனின் வேள்வியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முனிவர்களுக்கு மத்தியில் அந்த இருவரும் சர்ச்சை செய்து கொண்டிருந்தனர். அம்முனிவர்கள், “என்ன காரியம் அவர்களை உரத்தக்குரலில் பேச வைக்கிறது?” என்று கேட்டனர். பிறகு மிகுந்த பக்திமானான அனைத்து அறவிதிகளையும் கற்ற காசியபர் அந்தச் சர்ச்சையாளர்களை அணுகி என்ன காரியம் என்று விசாரித்தார். பிறகு, அந்தப் பெரும் முனிவர்களின் கூட்டத்திடம் கௌதமர், “ஓ! பெரும் அந்தணர்களே, எங்களுக்குள் நடக்கும் சர்ச்சை என்னவென்று கேளுங்கள். வைனியன்தான் நமது விதிகளின் ஆட்சியாளன் என்று அத்ரி சொல்கிறார்; இது குறித்து நமக்குப் பெருத்த சந்தேகம் இருக்கிறது” என்றர் {கௌதமர்}.
மார்க்கண்டேயர் {பாண்டவர்களிடம்} தொடர்ந்தார், “இதைக்கேட்ட உயர்ந்த மனம் கொண்ட முனிவர்கள் உடனே தங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அறமனைத்தும் அறிந்த சனத்குமாரரிடம் சென்றனர். பெரும் தவத்தகுதி படைத்த அவர் {சனத்குமாரர்} அவர்களிடம் குறிப்புகளைக் கேட்டு, அறப் பொருள் நிறைந்த வார்த்தைகளால் பேசினார். சனத்குமாரர், “வனத்தை எரிக்க நெருப்புக்குக் காற்று துணைபுரிவது போல, ஒரு அந்தணனின் சக்தி க்ஷத்திரியனிடம் கலக்கிறது. அல்லது அந்தணர்களுடன் சேர்ந்த க்ஷத்திரியன் அவனது அனைத்து எதிரிகளையும் அழிக்கிறான். ஆட்சியாளன் சட்டமளிப்பதிலும், தனது குடிமக்களைப் பாதுகாப்பதிலும் புகழ்பெற்றவன். அவன் (படைக்கப்பட்டவைக்குப் பாதுகாப்பளனாய் இருப்பதால்) இந்திரனைப் போன்றவன், (ஆலோசகனாய் இருப்பதால்) சுக்ரனைப் போன்றவன் {ஆலோசகர்}, பிருஹஸ்பதியைப் போன்றவன். (ஆகவே அவன்), மனிதர்களின் விதிகளை ஆள்பவனாகவும் இருக்கிறான் (அழைக்கப்படுகிறான்). ‘படைக்கப்பட்டவற்றைப் பாதுகாப்பவன்’, “அரசன்’, “சக்கரவர்த்தி’, ‘க்ஷத்திரியன்’ (அல்லது பூமியின் காவலன்), ‘பூமியின் தலைவன்’, ‘மனிதர்களின் தலைவன்’ என்றெல்லாம் ஒரு தனி மனிதன் வழிபடப்படுகிறான் என்றால், யார்தான் அவனை வழிபடுவது சரி என்று நினைக்கமாட்டார்கள்? ஒரு மன்னனே (சமூகம் மற்றும் சட்டங்களுக்கு) தலைமைக் காரணம். ‘போர்களில் அறம் சார்ந்தவன்’ (ஆகையால் அமைதியை நிலைநாட்டுபவன்), ‘காவல்காரன்’, ‘நிறைவானவன்’, ‘தலைவன்’, ‘முக்திக்கு வழிகாட்டி’, ‘எளிதாக வெல்பவன்’, ‘விஷ்ணுவைப் போன்றவன்’, ‘பயனுள்ள கோபம் கொண்டவன்’, ‘போர்க்களங்களை வெல்பவன்’, ‘உண்மையான தர்மத்தைப் (அன்புடன் பாதுகாத்துப்) பேணுபவன் அவனே. பாவத்திற்கு அஞ்சும் முனிவர்கள் க்ஷத்திரியர்களுக்கு (உலகியல்) வலிமையைக் கொடுக்கின்றனர். சொர்க்கத்தில் இருக்கும் தேவர்களில் சூரியன் தனது பிரகாசத்தால் இருளை விலக்குகிறான், அதே போல ஒரு மன்னனும் இவ்வுலகில் இருந்து பாவத்தை வேரோடு அழிக்கிறான். ஆகவே, புனித சாத்திரங்களின்படி பார்த்தால், அரசனின் பெருமைகள் தெரியும், மன்னனுக்கு ஆதரவாகப் பேசிய பக்கத்துக்குச் சாதகமாகப் பேசுவதற்கே நாம் கட்டுப்பட்டுள்ளோம்” என்றார் {சனத்குமாரர்}.
மார்க்கண்டேயர் {பாண்டவர்களிடம்} தொடர்ந்தார், “பிறகு அந்த ஒப்பற்ற இளவரசன் {வைனியன்}, வெற்றி பெற்ற பக்கத்தின் மீது மிகவும் திருப்தியடைந்து, தன்னைப் புகழ்ந்த அத்ரியிடம் மகிழ்ச்சியாக, “ஓ! மறுபிறப்பாள முனிவரே, நீர் என்னை இங்கே இருப்பவர்களில் பெருமையாகவும், அற்புதமான மனிதனாகவும் சொன்னீர். என்னைத் தேவர்களோடு ஒப்பிட்டீர். எனவே, நான் உமக்கும் பல்வேறு வகைப்பட்ட அபரிமிதமான செல்வங்களை அளிக்கிறேன். நீர் எங்கும் இருப்பவர் என்பது எனது எண்ணம். ஓ! நன்கு உடுத்தியவரே, நன்கு புகழப்படுபவரே, நான் உமக்குப் பத்து கோடி {Hundred Million 10,00,00,000} தங்க நாணயங்களையும், பத்துப் பாரம் {ten bharas} பொன்னையும் கொடுப்பேன்” என்றான் {வைனியன்}. பிறகு உயர்ந்த தவ அறமும், பெரும் ஆன்ம வலிமையும் கொண்ட அத்ரி, இப்படி (மன்னனால்) வரவேற்கப்பட்டு, அவன் கொடுத்த கொடைகளை உரிமை மீறாமல் பெற்றுக் கொண்டு, வீடு திரும்பினார். பிறகு அவரது செல்வங்களைத் தனது மகன்களுக்குக் கொடுத்து, தனது சுயத்தை அடக்கி, தவம் செய்யும் நோக்கோடு மகிழ்ச்சியாகக் கானகம் சென்றார்.
தார்க்ஷ்யர் சரஸ்வதி விவாதம்! – வனபர்வம் பகுதி 185அ-தார்க்ஷ்யர் மற்றும் சரஸ்வதிக்கு இடையில் நடந்த விவாதத்தைச் சொல்லி தானம், அக்னிஹோத்ரம் மற்றும் மோட்சம் குறித்து மார்க்கண்டேயர் உரைத்தல்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பகை நகரத்தை வெல்பவனே, இது சம்பந்தமாகப் புத்தி கூர்மை கொண்ட தார்க்ஷ்யர் சரஸ்வதியைக் கேட்ட போது, அவளும் இதையேதான் சொல்லியிருக்கிறாள். நீ அவளது வார்த்தைகளைக் கேள். தார்க்ஷ்யர், “அற்புதமான மங்கையே {சரஸ்வதியே}, ஒரு மனிதன் கீழே இங்கே {இவ்வுலகில்} செய்வதற்கு எது சிறந்தது? அவன் அறத்தில் (அறப்பாதையில்) இருந்து வழுவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? ஓ! அழகான மங்கையே இவை அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. உனது உத்தரவின் பேரில் {நீ சொல்லும் காரணத்தால்} நான் அறத்தின் பாதையில் இருந்து விலகாமல் இருப்பேன். ஒருவன் நெருப்புக்கு எப்போது, எவ்வாறு காணிக்கையிட வேண்டும்? {எப்படி, எப்போது அக்னிஹோத்ரம் செய்ய வேண்டும்?}. மேலும், சமரசமில்லாத அறத்தோடு இருக்க அவன் {நெருப்பை} எப்போது வணங்க வேண்டும்? ஓ! அற்புதமான மங்கையே, ஆசைகள், ஏக்கம், விருப்பம் ஆகியவை இல்லாமல், நான் இந்த உலகத்தில் வாழ இவை அனைத்தையும் எனக்குச் சொல்” என்று கேட்டார்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “உற்சாகமுடைய அந்த முனிவரால் {தார்க்ஷ்யரால்} இப்படிக்கேட்கப்பட்டு, கற்க ஆவலோடும், உயர்ந்த புத்தி கூர்மையோடும் இருக்கும் அவரைக் {தார்க்ஷ்யரைக்} கண்ட சரஸ்வதி, இந்தப் பக்தி மிக்க மங்களரமான வார்த்தைகளை அந்த அந்தணர் தார்க்ஷ்யரிடம் சொன்னாள்.
சரஸ்வதி {தார்க்ஷ்யரிடம்}, “எவன் வேத கல்வியில் ஈடுபட்டு, புனித தன்மையோடும், மன அமைதியோடும் கடவுள் தன்மையை முறையான வழியில் உணர்கிறானோ, அவன் தெய்வீக உலகங்களுக்கு உயர்ந்து, தேவர்களோடு சேர்ந்து தலைமையான பேரின்பத்தை அடைகின்றான். மீன்களும், மலர்களும், தங்க குவளை மலர்களும் நிறைந்த பல பெரிய, அழகிய, தெளிவான, புனிதமான தடாகங்கள் அங்கு இருக்கின்றன. அவை கோவிலைப் போன்றன. அவற்றைக் காண்பதே துன்பத்தை விலக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நன்கு அலங்கரிக்கப்பட்டு, தங்க நிறத்துடன் இருக்கும் அறம்சார்ந்த அப்சரஸ்களால் வழிபடப்படும் பக்தியுள்ள மனிதர்கள், அத்தடாகங்களின் கரைகளில் மனநிறைவோடு வசிக்கின்றனர்.
எவன் பசுவை (அந்தணர்களுக்கு) தானமளிக்கிறானோ அவன் உயர்ந்த உலகங்களை அடைகிறான்; எருதுகளைக் கொடுப்பவன் சூரிய உலகங்களை அடைகிறான்; உடைகள் கொடுப்பவன் சந்திர உலகத்தை அடைகிறான்; தங்கம் கொடுப்பவன் தேவர்களின் நிலையை {இறவா நிலையை} அடைகிறான். ஓடிப்போகாததும், எளிதாகப் பால் கறப்பதுமான அழகிய பசுவுடன் கன்றையும் சேர்த்துக் கொடுப்பவன், அந்த விலங்கின் உடலில் எத்தனை முடிகள் இருந்தனவோ, அவ்வளவு வருடங்கள் தேவ லோகத்தில் வாழ்வான். கலப்பை இழுக்கவும், சுமை தாங்கவும் இயன்ற பலமிக்க, சக்திவாய்ந்த, அழகிய இளம் எருதை தானமளிப்பவன், பத்துப் பசுக்களைத் தானம் கொடுத்தவன் அடையும் உலகங்களை அடைகிறான். கறப்பதற்கு வெண்கலப் பாத்திரத்துடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட கபிலப் பசுவை தானம் கொடுத்துப் பின்பு பணத்தையும் கொடுப்பவனுக்கு, {அவன் இறந்த பின்னர்} அந்தப் பசுத் தனது சிறப்பு வாய்ந்த குணத்தாலே விரும்பியதைக் கொடுப்பதாக மாறி அவனையே வந்து அடைகிறது. பசுக்களைத் தானம் கொடுப்பவன், அந்த விலங்கின் மேனியில் இருந்த முடியின் எண்ணிக்கையளவுக்கு, தனது செயல்களுக்கான எண்ணற்ற கனிகளை அறுக்கிறான். மேலும் அவன், தனது மகன்கள், பேரன்கள் மற்றும் மூதாதையர் ஆகியோர் கொண்ட ஏழு தலைமுறைகளை அடுத்த உலகத்தில் (நரகத்தில் இருந்து) காக்கிறான். பொன்னால் செய்த அழகிய கொம்புகளுடனும், கறப்பதற்கு வெண்கலப் பாத்திரத்துடன் எள்ளால் ஆன பசுவை {திலதேனுவை} அந்தணனுக்குப் பணத்துடன் தானமாகக் கொடுப்பவன் வசுக்களின் உலகங்களை எளிதில் அடைகிறான்.
தான் செய்த செயல்களின் மூலமே மனிதன், பெருங்கடலில் புயலால் தூக்கி வீசப்பட்ட கப்பலைப் போல, தீய ஆவிகள் ஆக்கிரமித்திருக்கும் இருள்நிறைந்த பாதாள உலங்களுக்கு (தனது ஆசைகளாலேயே} வீழ்கிறான்; ஆனால் அந்தணர்களுக்கு அவன் கொடுத்த பசுத் தானம் அவனை அடுத்த உலகில் காக்கிறது. தனது மகளைப் பிரம்ம விவாக முறைப்படி கொடுப்பவனும், அந்தணர்களுக்கு நிலங்களைத் தானமாகக் கொடுப்பவனும், பிற பரிசுகளைத் தானமாகக் கொடுப்பவனும் புரந்தரனின் உலகங்களை அடைகிறார்கள். ஓ! தார்க்ஷ்யா, நியாயமுள்ளவனாக, அறம்சார்ந்த மனிதனாக எவன் தொடர்ந்து ஏழு வருடங்கள் புனித நெருப்புக்குக் காணிக்கை அளிக்கிறானோ, அவன் மேலும் கீழுமான தனது ஏழு தலைமுறைகளைத் தனது செயல்கள் மூலம் தூய்மைப்படுத்துகிறான்” என்றாள் {சரஸ்வதி}.
தார்க்ஷ்யர் {சரஸ்வதியிடம்}, “ஓ அழகிய மங்கையே, வேதங்கள் சொல்லியபடி புனித நெருப்பைக் காக்கும் விதிகளைக் கேட்டு நிற்கும் எனக்கு அதை விளக்குவாயாக. இப்போது நான் உன்னிடமிருந்து புனித நெருப்பைப் பேணுவதற்கான காலத்தால் புகழப்படும் விதிகளைக் கற்கப் போகிறேன்” என்றார்.
நெருப்பு காணிக்கை {அக்னி ஹோத்ரம்}! – வனபர்வம் பகுதி 185ஆ-மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சரஸ்வதி {தார்க்ஷ்யரிடம்}, “சக்தியற்றவன், தனது கரங்களைச் சோதிக்காதவன், வேதங்களை அறியாதவன், வேதங்களின் பொருளை அறிந்தும் அதைக் கடைப்பிடிக்காதவன் ஆகியோர் நெருப்பில் காணிக்கையிடுவதைச் செய்யக்கூடாது. பிறர் மனதை அறிய விரும்பும் பரிசுத்தர்களான தேவர்கள் முயற்சியற்றவர்களிடம் இருந்து காணிக்கைகளைப் பெற மாட்டார்கள். வேதம் ஓதாதவனைத் தேவர்களுக்குக் காணிக்கையிடும் ரித்விக்காக நியமிக்கக்கூடாது. மேற்கண்டவற்றை நிறைவேற்றுபவனே வேள்வி செய்யத்தக்கவன். ஓ! தார்க்ஷ்யா! தன்னை ஓதாதவனை வேதம் குலமும் ஒழுக்கமும் அற்றவன் என்று சொல்கிறது. மேற்கண்டவற்றை நிறைவேற்றாதவன் நெருப்பில் காணிக்கையிட்டு வேள்வி செய்யக்கூடாது. முயற்சியுடன் உண்மையையே நோன்பாகக் கொண்டவர்களும், வேள்வியில் மிஞ்சுவதை உண்பவர்களும் நெருப்பில் காணிக்கையிட்டால், அவர்கள் புண்ணிய உலகங்களை அடைந்து நிகரற்ற பிரம்மனையும், பின்பு பிரம்மத்தையும் அடைகிறார்கள்” என்று சொன்னாள் {சரஸ்வதி}.
தார்க்ஷ்யர் {சரஸ்வதியிடம்}, “ஓ! மகிமையுள்ளவளே {சரஸ்வதியே}, பரமாத்மாவின் உருவமும், ஆத்ம ரூபமும், பல வித காரியங்களில் புத்திக்கூர்மையுடையவளும், ஞானத்தின் உருவமுமான உன்னை ஆத்ம தத்துவம், கர்ம தத்துவம் ஆகிய இரண்டையும் பிரகாசிக்கச் செய்பவளாக உணர்ந்து உன்னிடம் கேட்கிறேன். ஓ! அழகிய உருவமுள்ளவளே {சரஸ்வதி}, நீ யார்?” என்று கேட்டார், அதற்குச் சரஸ்வதி, “அந்தணர்களின் சந்தேகங்களைப் போக்கவே நான் நெருப்பில் {அக்னி ஹோத்ரத்திலிருந்து} இருந்து உதித்திருக்கிறேன். உள்ளத்தில் நிலைத்திருந்த நான் வெளியே வந்து, உன்னிடம் வந்து கேட்ட காரியங்களின் உண்மையான பொருளை உரைத்தேன்” என்றாள் {சரஸ்வதி}.
தார்க்ஷ்யர் {சரஸ்வதியிடம்}, “ஓ! சரஸ்வதி, உனக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை. நீ லட்சுமியைப் போல அபரிமிதமான பிரகாசம் கொண்டிருக்கிறாய். உன்னுடைய உருவம் தேவர்களைப் போல முடிவற்ற ஒளியுள்ளதாக இருக்கிறது. பிரகாசிக்கும் அறிவையும் நீ கொண்டிருக்கிறாய்” என்றார். அதற்குச் சரஸ்வதி, “ஓ! மனிதர்களில் பெருமையுடையவனே, கற்றறிந்தவனே! அந்தணனே! வேள்வி செய்பவர்கள் நல்ல சுரத்துடன் {ஸ்வரம்} உச்சரிக்கும் சிறந்த மந்திரங்களால், நான் நன்றாக வளர்ந்து, திருப்தி அடைந்து, அழகான உருவத்தை அடைகிறேன். ஓ! அறிஞனே, நெருப்பில் காணிக்கையிடும்போது மரத்திலோ, இரும்பிலோ, மண்ணிலோ செய்யப்பட்ட பாத்திரங்கள் உபயோகிக்கப்படுவதால் நான் தெய்வீக உருவமும், உள்ளுணர்வும் பெற்றவளாகிறேன்” என்றாள் {சரஸ்வதி}
தார்க்ஷ்யர் {சரஸ்வதியிடம்}, “ஓ! சரஸ்வதி, மிகப் புகழ்பெற்ற முனிவர்கள் எதைச் சிறந்த நன்மை என்று எண்ணி முயற்சிக்கிறார்கள், அறிஞர்கள் எந்த சிறந்த நிலையை அடைகிறார்களோ, துயரமற்ற நிகரில்லாத அந்த மோட்சத்தை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டார். யோகிகளும் முனிவர்களும் எதை மிக நன்மையானது என்று அறிகிறார்களோ, அந்தப் புராதானமான நிலையை நான் அறியவில்லையே” என்று கேட்டார். அதற்குச் சரஸ்வதி, “ஓ! தார்ஷ்யா, வேதத்தை அறிந்தவர்களும், தவத்தை நோக்கமாகக் கொண்டவர்களும், துயரமற்றவர்களும், உலகியல் வாழ்வில் இருந்து விடுபட்டவர்களுமான நன்மக்கள், வேதத்தைத் தியானித்து, தானம் செய்து, விரதங்களாலும், புண்ணியங்களாலும், யோகங்களாலும் உள்ளவற்றில் சிறந்ததைக் காட்டிலும் உயர்ந்த புகழ்பெற்ற நிலையை அடைகிறார்கள். அதன் மத்தியில் நறுமணமிக்க, ஆயிரம் கிளைகளைக் கொண்ட பிரய நீர் நொச்சமரம் பிரகாசிக்கிறது. அதன் அடியில் இருந்து தேன் போன்ற சுவை கொண்ட நீர்ப்பெருக்குள்ள மிகப் புண்ணியமான ஆறுகள் பெருகுகின்றன. அதன் ஒவ்வொரு கிளையில் இருந்தும் இறைச்சியும், கீரைகளும், பாயசம் போன்ற சேறும், பெரும் நதிகளின் மணல் பாங்கான தசைகளில் ஓடுகின்றன. முனிவனே! அக்னியைத் தலைவனாகக் கொண்டவர்களும், இந்திரனோடு கூடியவர்களும், மருத்துக்கள், கணங்களோடு கூடியவர்களான தேவர்கள் எந்த இடத்தில் சிறந்த வேள்விகளைச் செய்தார்கள் அந்த இடம் நிகரற்றது” என்றாள் {சரஸ்வதி}” என்றார் {மார்க்கண்டேயர்}
மனுவும்! மீனும்! – வனபர்வம் பகுதி 186-மீன் உருவத்தில் இருந்த பிரம்மனை வைவஸ்வத மனு வளர்த்தது, உலகை அழித்த பெருவெள்ளம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்கு மார்க்கண்டேயர் சொல்லல்…
பிறகு பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், அந்தணர் மார்க்கண்டேயரிடம், “இப்போது நீர் வைவஸ்வத மனுவின் வரலாற்றை உரைப்பீரா?” என்று கேட்டான்.
அதற்கு மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, {ஒரு காலத்தில்} வலிமைமிக்கப் பெருமுனிவர் {மன்னன்} ஒருவர் மனு என்ற பெயரில் இருந்தார். அவர் விவஸ்வானின் {சூரியனின்} மகனும், பிரம்மனின் புகழுக்கு ஒப்பானவரும் ஆவார். அவனது தந்தையையும், பாட்டனையும் பலத்திலும், வலிமையிலும், நற்பேறிலும், ஏன் தவச்சடங்குகளிலும் கூட அவர் {மனு} விஞ்சி நின்றார். உயர்த்திய கரங்களுடன் ஒற்றைக் காலில் நின்றபடி அந்த மனிதர்களின் தலைவன் {மனு} இலந்தைக் காடான விசாலையில் {பதரி} கடும் தவமிருந்தார். கீழ்நோக்கிய தலையுடனும் {தலைகீழாக நின்று கொண்டு}, நிலைத்த கண்களுடனும் அவர் கடுமையான உறுதியான தவத்தைப் பத்தாயிரம் வருடங்கள் செய்தார். ஒரு நாள், ஈர உடையுடனும், தலையில் சடாமுடியுடனும் தவம்பயின்று கொண்டிருந்த அவரிடம் {மனுவிடம்}, சீரிணீ நதியின் கரையை அடைந்த ஒரு மீன், “வணக்கத்திற்குரிய ஐயா, நான் ஆதரவற்ற ஒரு சிறு மீன். நான் பெரும் மீன்களைக் கண்டு அஞ்சுகிறேன்; ஆகையால், ஓ பெரும் பக்திமானே {மனுவே}, என்னைக் காப்பதே உமக்குத் தகும் என்பதை நினையும்; குறிப்பாகப் பலம்பொருந்திய மீன்கள் பலவீனமானவற்றை உண்பது ஒரு நிலையான வழிமுறையாக நிறுவப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பயங்கரக்கடலில் {நதியில்} நான் மூழ்கிப் போகமால் என்னைக் காப்பதே உமக்குத் தகும்! நான் நிச்சயம் உமது நற்செயலுக்கான ஈடு {மறு உதவி (அ) பிரதியுபகாரம்} செய்வேன்” என்றது.
அந்த மீனிடம் இருந்து இவ்வார்த்தைகளைக் கேட்ட வைவஸ்வத மனு இரக்கத்தால் ஆட்கொள்ளப்பட்டு, அம்மீனை நீரில் இருந்து தனது கரங்களால் எடுத்தார். நிலவின் கதிர்களைப் போல ஒளிரும் உடல் கொண்ட அம்மீன், நீரில் இருந்து எடுக்கப்பட்டு, ஒரு நீர் நிறைந்த மட்பாண்டத்தில் போடப்பட்டது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி வளர்க்கப்பட்ட அம்மீன், உருவத்தால் வளர்ந்தது. மனுவும் அதைக் குழந்தையைப் போலக் கவனத்துடன் வளர்த்தார். பிறகு நீண்ட காலம் கழித்து, அந்த மீன், அது இருந்த பாத்திரம் கொள்ளாத அளவுக்கு வளர்ந்தது. அதன் பிறகு (ஒரு நாள்) மனுவைக் கண்ட அம்மீன் அவரிடம், “வணக்கத்திற்குரிய ஐயா, எனக்கு வேறு ஒரு சிறந்த வசிப்பிடத்தை நியமிப்பீராக” என்று கேட்டது. பிறகு எதிரிகளின் நகரங்களை வெல்லும் புகழத்தக்க மனு, அதைப் பாத்திரத்தில் இருந்து எடுத்து ஒரு பெரிய குளத்திற்குக் கொண்டு சென்று அங்கே விட்டார். பிறகு அம்மீன் பல வருடங்கள் அங்கேயே வளர்ந்து வந்தது. அந்தத் தடாகம் இரண்டு யோஜனை நீளமும், ஒரு யோஜன அகலமும் கொண்டதாக இருந்தாலும் கூட, ஓ! தாமரை இதழ் போன்ற கண்களைக் கொண்ட குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அங்கேயும் அந்த மீனுக்கு விளையாடித்திரிய இடமில்லாமல் போனது.
பிறகு மீண்டும் மனுவைக் கண்ட அது {மீன்} {மீண்டும்}அவரிடம், , “ஓ!பக்திமிக்கப் புகழத்தக்க தந்தையே {மனுவே}, என்னைக் கடலுக்குப் பிடித்தமான மனைவியான கங்கைக்கு {கங்கை நதிக்கு} எடுத்துச் செல்லும். நான் அங்கு நீண்ட காலம் வாழ்வேன்; அல்லது நீர் விரும்பியவாறு செய்யும். ஓ! பாவமற்றவரே, நான் இந்த அளவு வளர்வதற்கு உமது உதவியே காரணம், நான் உமது கட்டளையை மகிழ்ச்சியாக நிறைவேற்றுவேன்” என்றது. இப்படிச் சொல்லப்பட்ட நேர்மையும் அடக்கமும் கொண்ட வழிபாட்டுக்குரிய மனு, அந்த மீனைக் கங்கை நதிக்கு எடுத்துச் சென்று தனது கைகளாலேயே அதை அந்நதியில் விட்டார். அங்கேயும், ஓ! எதிரிகளை வெல்பவனே {யுதிஷ்டிரா}, அம்மீன் சிறிது காலத்தில் வளர்ந்து மீண்டும் மனுவைக் கண்டு, “ஓ! தலைவா, நான் எனது பெருத்த உடலால் கங்கையில் நகர்வதற்கு இயலாமல் இருக்கிறேன்; எனவே, வழிபடத்தகுந்த ஐயா {மனுவே}, தயவு செய்து விரைவாக என்னைக் கடலுக்கு எடுத்துச் செல்லும்” என்றது. ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, பிறகு மனு அதை {மீனை} கங்கையில் இருந்து எடுத்து, கடலுக்குச் சுமந்து சென்று, அங்கே அதை {கடலிடம்} ஒப்படைத்தார். அது பெருத்த உருவம் கொண்டதாக இருந்தாலும், மனு அதை எளிதாக எடுத்துச் சென்றார். அதன் ஸ்பரிசமும், மணமும் அவருக்கு இனிமையாக இருந்தது.
{மீன்} மனுவால் கடலுக்குள் வீசப்பட்டபோது, அது புன்னகையுடன், “ஓ! வழிபடத்தகுந்தவரே, நீர் என்னைச் சிறப்புக் கவனத்துடன் பாதுகாத்தீர்; தக்க காலம் வரும்போது நீர் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறேன் கேளும்! ஓ! நற்பேறு பெற்றவரே, வழிபடத்தகுந்த ஐயா {மனுவே}, அசைவன மற்றும் அசையாதன கொண்ட இவ்வுலகம் அழியும் காலம் நெருங்கிவிட்டது. இவ்வுலகத்தைக் களையெடுப்பதற்கான வேளையும் கனிந்துவிட்டது. எனவே, உமக்கு நன்மை எதுவோ அதை இப்போது விவரிக்கிறேன்! படைப்பில் அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றைப் பயங்கரமான பேரழிவு அணுகுகிறது. நீண்ட கயிறுடன் கூடிய ஒரு பலமிக்க மகத்தான பேழையை {கப்பல் – build a strong massive ark) நீர் செய்யும். ஓ! பெருமுனியே {மனுவே}, ஏழு முனிவர்களுடன் {சப்த ரிஷிகளுடன்} நீர் அதில் ஏறி, பழங்காலத்தில் மறுபிறப்பாள அந்தணர்களால் பட்டியலிடப்பட்ட பலவிதமான விதைகளை உம்முடன் எடுத்துச் சென்று, அதைத் {விதைகளைத்} தனியாகவும் கவனத்துடனும் பாதுகாத்து வாரும். ஓ! முனிவர்களில் அன்பிற்குரியவரே {மனுவே}, அதைச் செய்துவிட்டு எனக்காகக் காத்திரும். நான் உம்மிடம் தந்தம் கொண்ட {கொம்பு கொண்ட} ஒரு விலங்காக {மீனாகத்தான் இருக்க வேண்டும்} வருவேன். அதைக் கொண்டு, ஓ! தவசியே {மனுவே}, என்னை அடையாளம் கண்டு கொள்ளும். இப்போது நான் உம்மிடம் இருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். நீர் நான் சொன்னவாறு நடந்து கொள்ளும். என்னுடைய துணை இல்லாமல் உம்மால் அந்தப் பெரு வெள்ளத்தில் இருந்து தப்பிக்க இயலாது” என்றது {மீன்}.
பிறகு மனு அந்த மீனிடம், “ஓ! பெருமைமிக்க உயிரினமே, நீ சொல்வதில் நான் சந்தேகம் கொள்ளவில்லை. நீ சொன்னது போலவே நடப்பேன்” என்றார். இப்படி ஒருவர் மற்றவரிடம் விடைபெற்றுக் கொண்டு இருவரும் சென்று விட்டனர். ஓ பெரும் பலமிக்க மன்னா {யுதிஷ்டிரா}, எதிரிகளை வெல்பவனே, மீனால் வழிகாட்டப்பட்டது போலப் பலவிதமான விதைகளை எடுத்துக் கொண்டு, நல்ல ஓடத்திலே பெரிய அலைகளுடன் கூடிய கடலில் {சப்த ரிஷிகளுடன் கூடிய மனு} மிதந்தார். பிறகு, ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா} அந்த மீனை நினைத்தார். ஓ! எதிரிகளை வெல்பவனே, பாரதக் குலத்தின் முதன்மையான வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, அந்த மீனும் அவரது மனதை அறிந்து, கொம்புகள் கொண்ட தலையுடன் அங்கே தோன்றியது. பிறகு, ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, கொம்பு கொண்ட மீன் ஒன்று பாறையின் உருவத்தில் கடலில் வருவதைக் கண்டதும், ஏற்கனவே அவர் உயர்த்திப் பிடித்திருந்த கயிற்றுச் சுருக்கை அதன் தலையில் மாட்டினார். அச்சுருக்கால் இறுக்கப்பட்ட அம்மீன், ஓ! மன்னா, எதிரிகளின் நகரங்களை வெல்பவனே {யுதிஷ்டிரா}, பெரும் சக்தியுடன் அப்பேழையை {ஓடத்தை} உப்பு நீரில் இழுத்துச் சென்றது. கூத்தாடும் அலைகளும், நிறைந்த நீரின் கர்ஜிப்பும் கொண்ட அக்கடலில் அவ்வோடம் {பேழை} இழுத்துச் செல்லப்பட்டது. ஓ! உனது எதிரிகளையும், பகை நகரங்களையும் வெல்பவனே {யுதிஷ்டிரா}, பெரும் கடலில் புயலால் தூக்கி வீசப்பட்ட அவ்வோடம் {பேழை}, ஒரு குடிகார விலைமகள் போல ஆடிச் சென்றது.
பூமிக்கும், நான்கு திசைப்புள்ளிகளுக்கும் வித்தியாசம் தெரிவில்லை.எங்குக் காணினும் நீராக இருந்தது. அந்நீர் வானத்தையும், தேவலோகத்தையும் நிறைத்தது. ஓ! பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இப்படிப் பூமியை பெருவெள்ளத் சூழ்ந்த போது, மனுவைத் தவிர ஏழு முனிவர்களும் அம்மீனும் மட்டுமே காணப்பட்டனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப்பெருவெள்ளத்தில் அம்மீன் அவ்வோடத்தைப் {அப்பேழையைப்} பல வருடங்கள் விடாமுயற்சியுடன் இழுத்துச் சென்றது. பிறகு, ஓ! குருவின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, பாரதக் குலத்தின் ஆபரணமே, அது {மீன்} அவ்வோடத்தை {அப்பேழையை} இமயத்தின் உயர்ந்த சிகரத்திற்கு இழுத்துச் சென்றது. பிறகு, ஓ! பாரதா, அம்மீன் அந்த ஓடத்தை {பேழையை} இமயத்தின் அச்சிகரத்தில் கட்டச் சொன்னது. மீனின் வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் அம்மலையின் சிகரத்தில் அவ்வோடத்தைக் {அப்பேழையைக்} கட்டினார்கள். ஓ! குந்தியின் மகனே, பாரதகுலத்தின் ஆபரணமே {யுதிஷ்டிரா}, இமயத்தின் உயர்ந்த சிகரம் இன்றும் நௌபந்தனம் (துறைமுகம்) என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள். பிறகு அம்மீன் அம்முனிவர்களிடம், “நானே அனைத்து உயிரினங்களுக்கும் தலைமையான பிரம்மம் ஆவேன். என்னைவிட உயர்ந்தவர் யாருமில்லை. மீனின் உருவைக் கொண்டு, நான் உம்மை இந்தப் பேரிடரில் இருந்து காத்தேன். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும், அசைவன, அசையாதன ஆகிய படைப்பின் பிரிவுகளையும் (மீண்டும்) {வைவஸ்வத மனு} மனு படைப்பான். கடும் தவங்களைப் பயின்றும் எனது அருளாலும், அவன் அச்சக்தியை அடைவான். மாயை அவன் மீது எந்தச் சக்தியையும் செலுத்த முடியாது” என்றது {மீன்}.
இப்படிச் சொன்ன அம்மீன் உடனே மறைந்தது. வைவஸ்வத மனு உலகத்தைப் படைப்பதற்கு மனதில் விருப்பம் கொண்டார். படைப்புத் தொழில் செய்யும் இவ்வேலையின் போது மாயை அவரை ஆட்கொண்டது, ஆகையால் அவர் பெருந்தவம் பயின்றார். தவத்தகுதியுடைய அந்த மனு, ஓ! பாரதகுலத்தின் ஆபரணமே {யுதிஷ்டிரா}, மீண்டும் சரியான மற்றும் முறையான வரிசையில் உயிரினங்களைப் படைத்தார்.
நான் {மார்க்கண்டேயரான நான்} உனக்குச் {யுதிஷ்டிரனான உனக்குச்} சொன்ன மீனின் புராணமான இந்தக் கதையைக் கேட்பது அனைத்துப் பாவங்களையும் அழிக்கிறது. மனுவின் ஆதி வரலாறான இதைத் தினமும் கேட்பவன் மகிழ்ச்சியை அடைந்து, விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி சொர்க்கத்தை அடைகிறான்” என்றார் {மார்க்கண்டேயர்}.
யுக விளக்கம்! – வனபர்வம் பகுதி 187அ-நான்கு யுகங்களின் காலம், தன்மைகள் குறித்து மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொல்லல்
பிறகு அறம் சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன் மிகுந்த பணிவுடன் சிறப்புமிக்க மார்க்கண்டேயரிடம், “ஓ! பெரும் முனிவரே {மார்க்கண்டேயரே}, நீர் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்து செல்வதைக் கண்டிருக்கிறீர். இவ்வுலக்கத்தில் உம்மளவுக்கு யாரும் நீண்ட நாள் வாழ்ந்ததில்லை! ஓ! பரமாத்மாவின் ஞானத்தை அடைந்தவர்களுள் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, மிக உயர்ந்த இடத்தில் வாழ்ந்து வரும் பெரும் மனம் படைத்த பிரம்மனைத் தவிர நீர் வாழ்ந்த வருடங்களை விஞ்ச வேறு யாரும் இல்லை. ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, பெரும் அண்டப் பிரளயத்திற்குப் பிறகு இவ்வுலகம் வானமற்று, தேவர்களற்று, தானவர்களற்று இருந்த போது நீர் பிரம்மனை வழிபட்டவர். ஊழிப் பெருவெள்ளம் முடிவுக்கு வந்து, பெருந்தகப்பன் {பிரம்மன்} விழித்தபோது, ஓ! மறுபிறப்பாள முனிவரே {மார்க்கண்டேயரே}, பிரம்மன் திசைப்புள்ளிகளைக் காற்றால் நிறைத்து, நீர் நிலைகளைச் சரியான இடத்தில் அமர்த்தி, நால்வகை உயிரினங்களையும் மறுபடி படைத்த போது, நீர் மட்டுமே அதைக் கண்டீர். ஓ! பெரும் அந்தணரே {மார்க்கண்டேயரே}, அவர் {பிரம்மனின்} முன்னிலையில் நீர், அனைத்து உயிர்களுக்கும் பெருந்தகப்பனை {நாராயணனை} ஆன்ம ஒன்றுதலுடன் தியானித்து, அவனால் {நாராயணனால்} விழுங்கப்பட்டீர்! ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, நீர் உமது கண்களால் பல முறை, படைப்பின் ஆரம்பச் செயல்களைக் கண்டிருக்கிறீர். கடும் ஆன்ம தவங்களில் மூழ்கிய நீர் பிரஜாபதிகளையே விஞ்சி நிற்கிறீர்!
அடுத்த உலகத்தில் நீரே நாராயணனுக்கு மிக நெருக்கமானவர் என்று மதிக்கப்படுகிறீர். பழங்காலத்தில் நீர் பல முறை அண்டத்தின் தலைமை படைப்பாளரை {நாராயணனை}, ஆன்ம கவனம், துறவு ஆகிய கண்களைக் கொண்டும், தாமரை போன்ற, சுத்தமான உமது இதயத்தை முற்காலத்தில் திறந்தும் கண்டிருக்கிறீர். அண்ட ஞானத்தின் உருவமான {அண்ட ஞானமான} பலஉருவம் கொண்ட விஷ்ணுவை உமது இதயத்தில் மட்டுமே காண முடியும்! இதன் காரணமாகவே ஓ! கற்ற முனிவரே {மார்க்கண்டேயரே}, நீர் கடவுளின் அருளைப் பெற்றவராதலால், அனைத்தையும் அழிக்கும் மரணத்துக்கோ, உடலைக்கெடுக்கும் மூப்புக்கோ உம்மீது எந்த அதிகாரமும் செலுத்த இயலவில்லை. சூரியனோ, சந்திரனோ, நெருப்போ, பூமியோ, காற்றோ, வானமோ இல்லாமல் அழிக்கப்பட்ட முழு உலகமும் பெருங்கடலைப் போலக் காட்சியளிக்கும்போது, தேவர்களும் அசுரர்களும், பெரும் உரகர்களும் முற்றிலும் அழிந்து போகும்போது, அனைத்து உயிர்களின் தலைவனான பெரும் மனம்படைத்த பிரம்மன் தாமரை மலரைத் தனது ஆசனமாகக் கொண்டு அதில் துயிலும்போது, நீர் மட்டுமே அவரை {பிரம்மனை} வழிபட மிஞ்சியிருந்தீர்! ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, நீர் இவை அனைத்தையும் முன்பே உமது கண்களால் கண்டிருக்கிறீர். நீர் மட்டுமே பல பொருட்களைப் புலன்களால் கண்டிருக்கிறீர். அனைத்து உலகங்களிலும் நீர் அறியாதது ஒன்றுமில்லை! எனவே, பொருட்களின் காரணங்கள் குறித்து நீர் மேற்கொள்ளும் எந்த உரையையும் கேட்பதற்காக நான் நெடுங்காலமாகக் காத்திருக்கிறேன்!” என்றான் {யுதிஷ்டிரன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “பிறப்பற்றவனும், மூல முதல்வனும், நித்தியமானவனும், அழிவற்றவனும், கற்பனைக்கெட்டாதவனும், குணங்களை உடனே ஏற்பவனும், அதை உடனே விட்டு குணங்களற்றவனாகவும் ஆகிறவனைத் {பரமாத்மாவைத்} தொழுது அனைத்தையும் நான் நிச்சயம் விவரிப்பேன். ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, மஞ்சளாடை {பீதாம்பரம்} உடுத்தியிருக்கும் இந்த ஜனார்த்தனனே {கிருஷ்ணனே} பெரும் அசைவாளனாகவும், அனைத்தையும் படைப்பவனாகவும், அனைத்தையும் வடிவமைப்பவனாகவும், அனைத்துக்கும் தலைவனாகவும் இருக்கிறான்! இவன் பெரிதானவன் என்றும், புரிந்துகொள்ளப்பட முடியாதவன் என்றும், அற்புதமானவன் என்றும், தூய்மையானவன் என்றும் அழைக்கப்படுகிறான். இவன் தொடக்கமும் {ஆதியும்} முடிவும் {அந்தமும்} அற்றவன்; உலகம் முழுவதும் நிறைந்திருப்பவன்; மாற்றமில்லாதவன்; மேலும் அழிவில்லாதவனாக இருக்கிறான். இவனே அனைத்தையும் படைப்பவன், ஆனால் இவன் பிறப்பற்றவன்; இவன் {கிருஷ்ணன்} சக்தி அனைத்துக்கும் காரணகர்த்தனாகவும் இருக்கிறான். அனைத்துத் தேவர்களைக் காட்டிலும் உயர்ந்த ஞானம் கொண்டவன் இவன். ஓ மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அண்டம் அழிந்தபிறகு, அற்புதமான படைப்புகளான இவை அனைத்தும் {மீண்டும்} உயிர் பெறுகின்றன.
கிருத யுகம் {தேவ வருடங்களில்} நாலாயிரம் வருடங்களைக் கொண்டது என்று சொல்லப்படுகிறது. அதன் வைகறைப் பொழுதும் {சந்தியும்} அந்திப் பொழுதும் {சந்தியாம்சமும்} ஒவ்வொன்றும் நானூறு வருடங்கள் அடங்கியது. திரேதா யுகம் மூவாயிரம் வருடங்கள் கொண்டது. அதன் வைகறைப் பொழுதும் {சந்தியும்} அந்திப் பொழுதும் {சந்தியாம்சமும்} ஒவ்வொன்றும் முன்னூறு வருடங்கள் அடங்கியது. அதற்கு அடுத்து வரும் யுகம் துவாபர யுகம் என்று அழைக்கப்படுகிறது. அது இரண்டாயிரம் வருடங்களைக் கொண்டது. அதன் வைகறைப் பொழுதும் {சந்தியும்} அந்திப் பொழுதும் {சந்தியாம்சமும்} ஒவ்வொன்றும் இருநூறு வருடங்கள் அடங்கியது. கலி என்று அழைக்கப்படும் அடுத்த யுகம் ஆயிரம் {தேவ} வருடங்கள் கொண்டது. அதன் வைகறைப் பொழுதும் {சந்தியும்} அந்திப் பொழுதும் {சந்தியாம்சமும்} ஒவ்வொன்றும் நூறு வருடங்கள் அடங்கியது. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, ஒவ்வொரு யுகத்துக்கும் வைகறையும், அந்திப்பொழுதும் சமமான காலத்தைக் கொண்டவை என்பதை அறிந்து கொள். கலியுகம் முடிந்ததும், மீண்டும் கிருத யுகம் வரும்.
இப்படி வரும் யுகங்களின் சுழற்சி ஒன்று பனிரெண்டாயிரம் {தேவ} வருடங்கள் கொண்டதாகும். இப்படி முழுமையான ஆயிரம் சுழற்சிகள் கொண்டதே பிரம்மனின் ஒரு பகல் ஆகும். ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, இந்த அண்ட மனைத்தும் திரும்பப் பெறப்பட்டுப் படைப்பாளனின் இல்லத்திற்குள் {பிரம்மனின் இல்லத்துக்குள்} மறைத்து வைக்கப்படுவதே, கற்றவர்களால் பிரளயம் என்று அழைக்கப்படுகிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, ஆயிரம் வருடங்களின் கடைசிக் காலத்தின் போது, அதாவது அந்தச் சுழற்சி முடிவடையும் தருவாயில் மனிதர்கள் பொதுவாகப் பொய்மைக்கு அடிமையாக இருப்பார்கள்-
கலியுகத்தின் தன்மை! – வனபர்வம் பகுதி 187ஆ-கலியுகத்தின் தன்மைகள் குறித்து மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொல்லல்.
ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, அப்போது {கலியுகத்தின் போது} வேள்விகளையும், கொடைகளையும், நோன்புகளையும் முதன்மையானவர்கள் செய்யமால் அவர்களது பிரதிநிதிகள் செய்வார்கள். சூத்திரர்களுக்காக ஒதுக்கப்பட்ட செயல்களைப் பிராமணர்கள் செய்வார்கள், சூத்திரர்கள் செல்வம் சம்பாதிப்பார்கள். க்ஷத்திரியர்கள் அறச்செயல்கள் பயில்வார்கள். கலி யுகத்தில், பிராமணர்கள் வேள்விகள் செய்வதில் இருந்தும், வேதங்கள் பயில்வதிலிருந்தும் விலகி, தங்கள் கைத்தடிகளையும், மான்தோல்களையும் தூக்கி ஏறிந்து அனைத்தையும் உண்ணும் உணவு முறைக்கு மாறுவார்கள். ஓ! மகனே {யுதிஷ்டிரா}, பிராமணர்கள் வழிபாடுகள், தியானம் செய்வதிலிருந்து விலகுவதும், சூத்திரர்கள் அவர்களாகவே அதைக் கைக்கொள்வதும் நடக்கும். உலகம் நடக்கும் பாதையே முரணாகத் தெரியும், உண்மையில் இந்தக் குறிகள் அனைத்தும் பிரளயத்தின் முன்னறிவிப்பே ஆகும். ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, எண்ணிலடங்கா மிலேச்ச மன்னர்கள் அப்போது {கலி காலத்தின் போது} பூமியை ஆள்வார்கள். அந்தப் பாவம் நிறைந்த ஏகாதிபதிகள், பொய்மைக்கு அடிமையாகி, தங்கள் குடிகளைப் பொய் தத்துவங்களின் பேரில் {அதைச் சொல்லி} ஆள்வார்கள். ஆந்தார்கள், சகர்கள், புலிந்தர்கள், யவனர்கள், காம்போஜர்கள், பாஹ்லிகர்கள், ஆபிரர்கள் ஆகியோர், ஓ! மனிதர்களுள் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, வீரம் படைத்தவர்களாகப் பூமியை ஆள்வார்கள்.
ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, உலகத்தின் இந்நிலை, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, கலிகாலத்தின் அந்தி காலமாகும்! தனி ஒரு பிராமணன் கூடத் தனது கடமைகளைச் செய்ய மாட்டான். க்ஷத்திரியர்களும், வைசியர்களும், ஓ! ஏகாதிபதி, தங்கள் வகைக்கு முரணான காரியங்களைப் பயில்வார்கள். மனிதர்களின் ஆயுள், பலம், சக்தி வீரம் ஆகிய அனைத்தும் குறையும்; குறைந்த பலமும், பலவீனமான உடலும் கொண்ட அவர்கள் உண்மையை அரிதாகப் பேசுபவர்களாக இருப்பார்கள். நாடுகளின் பெரும் பகுதிகள் முறிந்து போகும். பூமியின் பகுதிகளும், வடக்கும் தெற்கும். கிழக்கும் மேற்குமான திசைகள் அனைத்தும் ஊனுண்ணும் விலங்குகள் நிரம்பி இருக்கும். இந்தக் காலத்தில் பிரம்மத்தை உச்சரிப்பவர்களு கூட, அதை வீணாகவே செய்வார்கள். சூத்திரர்கள் பிராமணர்களை ‘அடே’ {Bho} என்று அழைப்பார்கள், அதே வேளையில் பிராமணர்கள் சூத்திரர்களை “மதிப்பிற்குரிய ஐயா” {ஆர்யா} என்று அழைப்பார்கள். ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, யுகத்தின் மூடிவில் விலங்குகள் பன்மடங்கு பெருகும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மணம் மற்றும் நறுமணத் திரவியங்கள் நம் நுகர்தல் உணர்வுக்கு உடன்படாது, மேலும் ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, பொருட்களின் சுவையும், அந்தக் காலங்களில் {கலி யுகத்தில்} நமது சுவை உறுப்புகளுக்குத் தகுந்ததாக இராது.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, குறைந்த தரம் கொண்ட பல குழந்தைகளுக்குத் பெண்கள் தாயாக இருப்பார்கள். அவர்கள் {பெண்கள்}, நற்குணமும், நன்னடத்தையுமின்றி இருப்பார்கள். மேலும் அவர்கள் தங்கள் வாய்களை இனப்பெருக்க உறுப்பின் நோக்கங்களுக்காகப் {கலவி இன்பத்திற்காகப்} பயன்படுத்துவார்கள். மனிதர்கள் வசிக்கும் இடங்களில் பஞ்சம் தாக்கும். நெடுஞ்சாலைகள் தவறான புகழ் பெற்றிருக்கும் பெண்களால் தொற்றப்பட்டிருக்கும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அது போன்ற காலத்தில் பெண்கள் பொதுவாகத் தங்கள் தலைவர்களுக்கும் {கணவர்களுக்கு} பகையாகவும், அடக்கமற்றவர்களாகவும் இருப்பார்கள்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அது போன்ற காலங்களில், பசுக்கள் குறைவான பாலையே தரும், மரங்களில் கூட்டம் கூட்டமாகக் காக்கைகள் இருக்கும், அவை மலர்களோ கனிகளோ உற்பத்தி செய்யாது. ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தணர்களைக் கொன்ற பாவத்தின் களங்கத்தோடு உள்ள மறுபிறப்பாள வர்க்கங்கள் {Regenerate classes} {பிராமண, க்ஷத்திரிய, வைசிய வர்க்கங்கள்}, பேச்சில் பொய்மைக்கு அடிமையான ஏகாதிபதிகளிடமிருந்து பரிசுகளைப் பெறுவார்கள். பேராசையும், அறியாமையும் நிரம்பிய அவர்கள், வெளிப்புறத்திற்கு அறக்குறிகள் தாங்கி, கைமாறு கருதாதவர்கள் போல வெளியே சுற்றித் திரிந்து, பூமியின் மக்களைத் துன்புறுத்துவார்கள். இல்லற வாழ்வு வாழும் மக்களோ, வரிகளின் சுமைக்கு அஞ்சி, ஏமாற்றுக்காரர்களாவார்கள். அதேவேளையில் பிராமணர்கள் துறவிகளின் ஆடையுடுத்தி, வெட்டாத ஒழுங்கற்ற நகங்களுடனும் தலை முடியுடனும், வணிகம் செய்து, அதன் மூலம் செல்வமீட்டுவார்கள். ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, இருபிறப்பாள வர்க்கங்களைச் சார்ந்தவர்கள் {பிராமண, க்ஷத்திரிய, வைசியர்கள்}, செல்வத்தின் மீது கொண்ட பேராசையால், அறம் சொல்லி பிச்சையெடுக்கும் {போலி} பிரம்மச்சாரி ஆவார்கள்.
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அக்காலங்களில் வாழ்வுமுறைகளில் முரண்பாடு கொண்டவர்களாகவும், போதையூட்டும் பானங்களுக்கு அடிமைகளாகவும், குருவின் படுக்கையைக் களங்கப்படுத்த இயன்றவர்களாகவும் மனிதர்கள் இருப்பார்கள். உடலையும், இரத்தத்தையும் விருத்தி செய்யும் உலகம் சார்ந்த விருப்பங்களையே அவர்கள் கொண்டிருப்பார்கள். ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, அதுபோன்ற ஒரு காலத்தில் துறவிகளின் ஆசிரமங்கள், எப்போதும் யாரையாவது சார்ந்திருந்து அனைத்தையும் பாராட்டும் பயமற்ற இழிந்தவர்களும், பாவிகளும் நிறைந்ததாக இருக்கும். பகனைத் தண்டிக்கும் சிறப்புமிக்கவன் {இந்திரன்}, உரிய காலத்தில் மழையைப் பொழியவே மாட்டான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தூவும் விதைகள் அனைத்தும் முளைக்காது. புனிதமற்ற செயல்களும், மனமும் கொண்ட மனிதர்கள் பொறாமை கொண்டு பிறருக்குக் கெடுதல் செய்து மகிழ்வார்கள். ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, பூமி முழுவதும் பாவமும், ஒழுக்கக்கேடும் நிறைந்ததாகும். ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தக் காலங்களில் அறம் சார்ந்தவனாக இருப்பவன் நீண்ட காலம் வாழ மாட்டான். உண்மையில் உலகம், அனைத்து விதங்களிலும் அறத்தை இழக்கும்.
ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, சூழ்ச்சி நிறைந்த வியாபாரிகளும், வர்த்தகர்களும், பொய் எடை மற்றும் அளவுகள் கொண்டு பெரும் அளவிலான பொருட்களை விற்பார்கள். {வியாபாரத்தில்} அறம் சார்ந்து இருப்பவர்கள் செழிப்படைய மாட்டார்கள்; அதே வேளை, பாவிகள் அபரிமிதமாகச் செழிப்பார்கள். அறம் தனது பலத்தை இழப்பாள், அதே வேளையில் பாவம் பலமடையும். அறத்திற்குத் தன்னை அர்ப்பணிப்பவர்கள் ஏழைகளாகவும், குறைந்த வாழ்நாள் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்; அதே வேளையில் பாவிகள் நீண்ட வாழ்நாள் கொண்டவர்களாகவும், செழிப்பை வெல்பவர்களாகவும் இருப்பார்கள். அதுபோன்ற காலங்களில், நகரங்களில் நடக்கும் பொதுவான கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் மக்கள் பாவிகளாகவே நடந்து கொள்வார்கள். மனிதர்கள் தங்கள் முடிவான சாதனைகளைச் செய்வதற்குப் பாவ வழிகளிலேயே முயற்சிப்பார்கள். மிகக் குறைவான நற்பேறையே அடைந்தாலும், மக்கள் செல்வத்தின் மீது கொண்டிருக்கும் கர்வத்தால் போதையுண்டு இருப்பார்கள். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்தக் காலங்களில் பல மனிதர்கள், கமுக்கமாக {இரகசியமாக} நம்பிக்கையுடன் தங்களிடம் கொடுக்கப்பட்ட செல்வங்களைத் திருட முயற்சிப்பார்கள். பாவம் நிறைந்த காரியங்களைச் செய்யும் அவர்கள், வெட்கங்கெட்டுப் போய், தங்களிடம் ஏதும் கொடுக்கப்படவில்லை என்பார்கள்.
புனிதமான இடங்களிலும், நகரங்களில் பொதுக் கேளிக்கைகள் நடக்கும் இடங்களிலும் இரை தேடும் விலங்குகளும், பிற விலங்களும், நீர் வாழ்வனவும் கிடப்பதை கவனிக்கலாம். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஏழு அல்லது எட்டு வயது கொண்ட பெண் பிள்ளைகள் கருவுறுவார்கள், அதேவேளையில் பத்து அல்லது பனிரெண்டு வயது ஆண்பிள்ளைகள் வாரிசுகளைப் பெறுவார்கள். தங்களது பதினாறாவது வயதில் முதுமையடைந்து, அவர்களது வாழ்நாள் விரைவாக ஓடிவிடும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி மனிதர்கள் குறுகிய வாழ்நாள் கொண்டவர்களாகும் போது, இளைஞர்கள் முதியவர்களைப் போல நடந்து கொள்வார்கள்; அதே வேளையில் இளைஞர்களிடம் காணப்படும் அனைத்தும் முதிவர்களிடமும் காணப்படும். பெண்கள் நடத்தை கெட்டவர்களாகவும், தீய நடத்தை கொண்டவர்களாகவும் இருந்து, சிறந்த கணவர்களைக் கூட ஏமாற்றி, குற்றேவலர் {வேலையாள்}, அடிமைகள் மற்றும் விலங்குகளிடம்கூடத் தன்னை மறந்து இருப்பார்கள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, வீரர்களின் மனைவியராக இருக்கும் பெண்கள் கூட, தங்கள் கணவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே, பிற ஆடவரின் துணையை நாடி தன்னை மறந்து இருப்பார்கள்.
சங்கில் அமர்ந்திருந்த சிறுவன்! – வனபர்வம் பகுதி 187இ-சம்வர்த்தக நெருப்பால் அழிக்கப்பட்ட பூமியில், மேகக்கூட்டங்கள் திரண்டு பெய்யா பெருமழையைப் பொழிதல்; அனைத்து உயிரினங்களும் அழிதல்; உயிர்களற்ற நீர் திரண்ட பூமியில் மார்க்கண்டேயர் மட்டும் அலந்து திரிந்து கடைசியாக ஒரு சிறுவனைக் கண்டடைதல்; அச்சிறுவன் மார்க்கண்டேயரை விழுங்குதல்.
{மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் சொல்லுதல்}:
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான்கு யுகங்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான வருடங்களின் முடிவில் மனிதர்களின் வாழ்வு மிகக் குறுகியதாகிவிடுகிறது. பஞ்சம் ஒன்று பல வருடங்களுக்கு நீடிக்கும். பிறகு, ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, மனிதர்களும், குறைந்த பலமும் உற்சாகமும் கொண்ட உயிரினங்களும் ஆயிரக்கணக்கில் பட்டினியாகக் கிடந்து சாகும். ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, ஆகாயத்தில் சுடர்விட்டெரியும் ஏழு சூரியன்கள் தோன்றி, பூமியில் உள்ள ஆறுகள் மற்றும் கடல்களில் உள்ள நீரனைத்தையும் குடித்துவிடும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இயற்கையில் உள்ள வனங்களும், ஈரமாகவோ உலர்ந்தோ இருக்கும் புற்களும், அவற்றால் {சூரியன்களால்} உட்கொள்ளப்பட்டுச் சாம்பலாகும். பிறகு, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஏழு சூரியன்களின் தழல்கள் மூலம் காய்ந்திருக்கும் பூமியில் காற்றின் உந்துதலால் சம்வர்த்தகம் என்று அழைக்கப்படும் நெருப்பு தோன்றும். அந்த நெருப்பானது பூமிக்குள் ஊடுருவி, பாதாள லோகங்களிலும் தனது தோற்றத்தை உண்டாக்கி, தேவர்கள், தானவர்கள் மற்றும் யக்ஷர்கள் இதயங்களில் பெரும் பயங்கரத்தை உருவாக்கும்.
ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, பாதாள லோகங்களையும், பூமி மீது இருக்கும் அத்தனையையும் அழித்து உட்கொள்ளும் அந்த நெருப்பு {சம்வர்த்தகம்}, ஒரு நொடிப்பொழுதில் அனைத்து பொருட்களையும் அழித்துவிடும். சம்வர்த்தகம் என்று அழைக்கப்படும். அமங்கலமான காற்றின் உதவிக் கொண்டிருக்கும் அந்த நெருப்பானது, நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான யோஜனைகளுக்குப் பரந்திருக்கும் உலகத்தை உட்கொள்ளும். அனைத்து பொருட்களுக்கும் தலைவனான அந்த நெருப்பு {சம்வர்த்தகம்}, பிரகாசமாகச் சுடர்விட்டு எரிந்து, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், பாம்புகள், ராட்சசர்கள் அடங்கிய இந்த அண்டத்தையே உட்கொள்ளும்.
யானைக்கூட்டங்களைப் போன்ற பெரும் மேகக் கூட்டங்கள் வானத்தில் எழுந்து, காண்பதற்கினிய மின்னல் வரிசையுடன் தோன்றும். அப்படி வரும் மேகங்களில் சில மேகங்கள் நீலத் தாமரை போன்ற நிறத்திலும்; சில நீர் குவளை {மலர்} நிறத்திலும்; சில தாமரையின் இதழ்களின் நிறத்திலும்; மேலும் சில ஊதா நிலத்திலும், சில பூசுமஞ்சளைப் போன்ற மஞ்சள் நிறத்திலும், சில காக்கை முட்டை போன்ற நிறத்திலும் இருக்கும். சில தாமரை இதழ்களைப் போன்று பிரகாசமாகவும், சில குங்குமம் போன்ற சிவந்த நிறத்திலும் இருந்தன. சில {மேகங்கள்} அரண்மனைகள் கொண்ட நகரங்களின் வடிவத்திலும், சில யானைக்கூட்டங்கள் போலவும், சில பல்லிகளைப் போலவும், சில முதலை மற்றும் சுறாக்களைப் போன்ற வடிவங்களிலும் இருக்கும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பார்ப்பதற்குப் பயங்கரமான நேரங்களில் வானத்தில் மின்னல்களுடன் கூடும் மேகங்கள் பயங்கரமாகக் கர்ஜனை செய்யும். மழை நிறைந்த அந்த {நீர்} ஆவிக் குவியல், உடனே அந்த முழு வானத்தையும் மூடும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அந்த ஆவிக் குவியல் {மேகக்கூட்டங்கள்}, மலைகள், கானகங்கள், சுரங்கங்கள் நிறைந்த இந்தப் பூமி முழுவதும் பெருவெள்ளத்தைப் பொழியும்.
ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, மேலான தலைவனால் {பிரம்மனால்} உந்தப்பட்ட அம்மேகங்கள் பயங்கரமாகக் கர்ஜனை செய்தவாறு, பூமியின் முழுப் பரப்பின் மேலும் பெருவெள்ளதைப் பொழியும். அபரிமிதமான நீரைப் பொழிந்து முழு உலகத்தையும் நிரப்பியவாறு, அந்தப் பயங்கரமான அமங்கலமான (நாம் ஏற்கனவே பேசிய {சம்வர்த்தகம் என்ற}) நெருப்பை அணைக்கும். சிறப்புமிக்க அந்தத் தலைவனால் {பிரம்மனால்} உந்தப்பட்ட அம்மேகங்கள் பூமியை நிறைத்து பனிரெண்டு வருடங்களுக்குத் தொடர்ச்சியாக மழையைப் பொழியும். பிறகு, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, கடல் தனது வரம்புகளை மீறும், மலைகள் துண்டுகளாக உடையும், அதிகரிக்கும் பெருவெள்ளத்தில் இந்தப் பூமி மூழ்கும். பிறகு, காற்றின் உந்துதலால் ஆகாயத்தின் முழு விரிவிலும் உலவும் அம்மேகங்கள், காட்சியில் இருந்து திடீரென்று மறைந்து போகும். பிறகு, ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, தாமரையை வசிப்பிடமாகக் கொண்ட அனைத்துக்கும் முதற்காரணமான பிறப்பற்ற தலைவன் {பிரம்மன்}, ஓ! பாரதா {யுதிஷ்டிரா} அந்தப் பயங்கரமான காற்றைக் குடித்து, உறங்கச் செல்வான்.
இப்படி {இதே போல ஒரு முறை} அண்டம் நெடுகிலும் ஒரே நீராகி, அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிர்கள் அனைத்தும் அழிந்து, தேவர்களும், அசுரர்களும் நாசமடைந்து, யக்ஷர்களும், ராட்சசர்களும் இல்லாமலாகி, மனிதர்களற்று, மரங்களும், ஊனுண்ணும் விலங்குகளும் மறைந்து, ஆகாயமும் இல்லாமல் போன போது, நான் மட்டும், ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, துயரத்துடன் அலைந்து கொண்டிருந்தேன். ஓ மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்தப் பயங்கரமான நீர்பரப்பின் மீது நான் அலைந்து கொண்டிருந்த போது, ஒரு உயிரினத்தையும் நான் காணாததால், எனது இதயம் துயரத்தில் இருந்தது! ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நிற்காமல் அந்தப் பெருவெள்ளத்தில் திரிந்து கொண்டிருந்த நான் சோர்வடைந்துவிட்டாலும், {எனக்கு} ஓய்வெடுக்க ஒரு இடமும் கிடைக்கவில்லை!
ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, சில காலத்திற்குப் பிறகு அந்த நீர்திரண்ட பெருவெளியில் ஒரு பரந்து விரிந்த ஆலமரத்தைக் கண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஆலமரத்தின் நீண்ட கிளை ஒன்றில் இணைக்கப்பட்ட தெய்வீகப் படுக்கையில், ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, தாமரையைப் போன்றோ சந்திரனைப் போன்றோ அழகான முகமும், முழுதும் மலர்ந்த தாமரையின் இதழ்களைப் போன்ற கண்களும் கொண்டு, சங்கின் {சங்கு} மீது அமர்ந்திருந்த ஒரு சிறுவனைக் கண்டேன். ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, இக்காட்சியைக் கண்ட எனது இதயம் ஆச்சரியத்தால் நிரம்பியது. நான் எனக்குள், “உலகமே அழிக்கப்பட்ட பிறகும், எப்படி இச்சிறுவன் மட்டும் தனியாக அமர்ந்திருக்கிறான்?” என்று கேட்டுக் கொண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தையும் குறித்த முழு ஞானங்களையும் கொண்ட என்னால் கூட, தவத்தின் மூலம் அவன் யார் என்பதை அறியமுடியவில்லை.
காயாம்பூவின் {Atasi Flower = அலி மலர்} பிரகாசமும், ஸ்ரீவத்சக் குறியும் {மரு அல்லது மச்சமும்} கொண்ட அவன் {அச்சிறுவன்}, லட்சுமியின் வசிப்பிடத்தில் இருப்பதாகவே எனக்குப் பட்டது. தாமரை இதழ்களைப் போன்ற கண்களும், ஸ்ரீவத்ச மருவும், சுடர்விடும் பிரகாசமும் கொண்ட அச்சிறுவன் கேட்பதற்கினிய உயர்ந்த வார்த்தைகளுடன் என்னிடம், “ஓ ஐயா {மார்க்கண்டேயரே}, களைத்துப் போய் ஓய்வெடுக்க விரும்புகிறீர் என்பதை நான் அறிவேன். ஓ! பிருகு குலத்தைச் சேர்ந்த மார்க்கண்டேயரே, நீர் விரும்பும் வரை இங்கு ஓய்ந்திருக்கலாம். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, எனது உடலுக்குள் சென்று, அங்கே ஓய்வெடும். அதுவே நான் உமக்கு நிர்ணயித்திருக்கும் வசிப்பிடமாகும். நான் உம்மிடம் திருப்தி கொண்டுள்ளேன்” என்றான்.
அச்சிறுவனால் இப்படிச் சொல்லப்பட்ட எனக்கு, நீண்ட வாழ்விலும், மனிதனின் நிலையிலும் பெரும் வெறுப்பு உண்டாயிற்று. பிறகு அச்சிறுவன் திடீரெனத் தனது வாயைத் திறந்தான். அசையும் திறனற்றுப்போன நான், விதியின் பயனாக அவனது வாய்க்குள் நுழைந்தேன். ஆனால், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, திடீரென அந்தச் சிறுவனின் வயிற்றுக்குள் நுழைந்த நான், அங்கே நகரங்களுடனும், நாடுகளுடனும் கூடிய முழு உலகத்தையும் கண்டேன்.
அளவிலா சக்தி மிக்கவன்! – வனபர்வம் பகுதி 187ஈ-சிறுவனின் வயிற்றுக்குள் மார்க்கண்டேயர் அண்டசராசரங்களையும் காணுதல்; ஆறுகள், மலைகள், விலங்குகள், பறவைகள், மிருகங்கள், தேவர்கள், அசுரர்கள் என அனைத்தையும் காணுதல்; வயிறு முழுமையும் திரிந்தும், அதன் எல்லையை அடையமுடியாத மார்க்கண்டேயர் அச்சிறுவனை ஒப்பற்ற தெய்வம் என்ற தீர்மானத்திற்கு வந்து அவனைச் சரணடைதல்; சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து மார்க்கண்டேயர் வெளியேறுதல்
{மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் சொல்லுதல்}: ஓ! மனிதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்த ஒப்பற்றவனின் வயிற்றுக்குள் திரிந்து கொண்டிருந்த போது, நான் கங்கை, சதத்ரு, சீதை, யமுனை, கௌசிகி, சர்மண்வதி, வேதரவதி, சந்திரபங்கை, சரஸ்வதி, சிந்து, விபாசை, கோதாவரி, வஸ்வோகாசரை, நளினி, நர்மதை, தமரா, காண்பதற்கினிய ஓட்டமும் புனிதமான நீரும் கொண்ட வேணை, சுவேணை, கிருஷ்ணவேணை, இராமை, மஹாநதி, விதஸ்தை ஆகிய நதிகளையும், ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் நதியான காவேரியையும், ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, விசால்யை, கிம்புருனை ஆகிய நதிகளையும் அவனுள் கண்டேன். இந்த அனைத்து நதிகளையும், பூமியின் இன்னபிற நதிகளையும் நான் அங்குக் கண்டேன்.
ஓ! பகைவர்களை அழிப்பவனே {யுதிஷ்டிரா}, முதலைகளும், சுறாக்களும் நிறைந்து, ரத்தினங்களின் சுரங்கமாகவும், நீரின் அற்புத கொள்ளிடமாகவும் இருக்கும் பெருங்கடலை நான் அங்குக் கண்டேன். சுடர்விட்டுப் பிரகாசிக்கும் சூரியன் மற்றும் சந்திரனோடு கூடிய ஆகாயம், சூரியனின் நெருப்பு போன்ற காந்தியுடன் அங்கு இருப்பதை நான் கண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கானகங்கள் மற்றும் தோப்புகளுடன் கூடிய பூமியையும் நான் அங்குக் கண்டேன். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பலதரப்பட்ட வேள்விகளில் ஈடுபட்டிருக்கும் பல அந்தணர்களையும், அனைத்து வகை மக்களுக்கும் நன்மை செய்வதில் ஈடுபட்டிருக்கும் க்ஷத்திரியர்களையும், விவசாயம் செய்வதில் ஈடுபட்டிருக்கும் வைசியர்களையும், மறுபிறப்பாள வகையினர் அனைவருக்கும் சேவை செய்வதில் தங்களை அர்ப்பணித்திருக்கும் சூத்திரர்களையும் நான் அங்குக் கண்டேன்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பெரும் ஆன்மா கொண்டவனின் வயிற்றில் உலவிக்கொண்டிருந்த போது, நான் இமயத்தையும், ஹேமகூட மலைகளையும் கண்டேன். மேலும் நிஷதம் மற்றும் வெள்ளி நிறைந்த ஸ்வேத மலைகள் ஆகியவற்றையும் கண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் அங்கே கந்தமாதன மலையையும் கண்டேன். மேலும், ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, உயர்ந்த மலைகளான நீல மலைகளையும் நான் அங்குக் கண்டேன். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, நான் அங்கே மேருவின் தங்க மலைகளையும், மகேந்திரத்தையும், அற்புதமான மலைகளான விந்திய மலைகளையும் கண்டேன். மேலும், மலையம், பரிபாத்ரம் ஆகிய மலைகளையும் நான் அங்கே கண்டேன். இவையும், பூமியின் இன்ன பிற மலைகளும் அவனது வயிற்றுக்குள் என்னால் காணப்பட்டன. இவை அனைத்தும் ரத்தினங்களுடனும் தங்கங்களுடனும் இருந்தன.
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நான் அவனது வயிற்றில் உலவிய போது, சிங்கங்கள், புலிகள், பன்றிகள் ஆகியவற்றையும், உண்மையில், பூமியில் உள்ள பிற விலங்குகளையும் கண்டேன். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, ஓ! மனிதர்களில் புலியே, அவனது வயிற்றில் நுழைந்த நான், சுற்றித்திரிந்து, சக்ரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களின் குலம், சத்யஸ்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், குஹ்யர்கள், பித்ருக்கள், பாம்புகள், நாகங்கள், இறகு படைத்த குலங்கள், வசுக்கள், அசுவினிகள், கந்தர்வர்கள், அசுவினிகள், யக்ஷர்கள், முனிவர்கள், தைத்திய-தானவ-நாகக் கூட்டங்கள் ஆகியவர்களைக் கண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சிங்கிகையின் மகன்களையும், தேவர்களின் அனைத்து எதிரிகளையும், உண்மையில் பூமியில் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்தும், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த உயர் ஆன்மா கொண்டவனின் வயிற்றில் என்னால் காணப்பட்டன.
ஓ! தலைவா {யுதிஷ்டிரா}, பழங்களை உண்டு, அவனது உடலில் பல நூற்றாண்டுகள் வசித்துக் கொண்டே அங்கிருந்த முழு அண்டத்தையும் சுற்றித் திரிந்தேன். இருப்பினும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, என்னால் அவனது உடலின் எல்லைகளைக் காண இயலவில்லை. ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்த உயர் ஆன்மா கொண்டவனது உடலின் எல்லைகளைக் காண்பதில் நான் தோல்வியுற்றபோதும், மனதில் பெரும் துன்பத்துடன் நான் தொடர்ந்து சுற்றித் திரிந்தேன். பிறகு, சிந்தனையாலும் செயலாலும் நான் அந்த வரம் தரும் ஒப்புயர்வற்ற தெய்வத்திடம், அவனது மேன்மையை ஏற்றுச் சரண்டைந்தேன். நான் அப்படிச் செய்ததும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, திறந்திருந்த அந்த உயர் ஆன்மா கொண்டவனின் வாய் வழியாகக் காற்றின் பலத்தால் திடீரென நான், (அவனது உடலுக்குள் இருந்து) வெளியேற்றப்பட்டேன்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு நான், முழு அண்டத்தையும் விழுங்கிவிட்டு சிறுவனின் உருவில், (மார்பில்) ஸ்ரீவத்ச மருவுடன் இருந்த அந்த அளவிடமுடியாத சக்தி கொண்டவன், ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, அதே ஆலமரக் கிளையில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். மஞ்சள் ஆடையுடனும் {பீதாம்பரத்துடனும்}, சுடர் மிகும் பிரகாசத்துடனும், ஸ்ரீவத்ச மருவுடனும் கூடிய அந்தச் சிறுவன், என்னில் திருப்தி அடைந்து, புன்னகைத்தவாறே, “ஓ! மார்க்கண்டேயரே, ஓ! முனிவர்களில் சிறந்தவரே, எனது உடலில் சிறிது காலம் வசித்து மிகவும் களைத்திருக்கிறீர்! இருப்பினும் நான் உம்மிடம் பேசுவேன்” என்றான். என்னிடம் அவன் இப்படிச் சொன்னதும், எனக்குப் பேசுமளவுக்குப் புதிய பார்வை கிடைத்தது. அதைக் கொண்டு உலக மாயையில் இருந்து விடுபட்டு உண்மையான அறிவைப் பெற்றேன். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, அந்த அளவிட முடியாத சக்தி கொண்டவனின் வற்றாத பலத்தைச் சாட்சியாகக் கண்ட நான், அவனை வணங்கி, தாமிரம் போன்று பிரகாசமாகவும், கட்டுக்கோப்பாகவும், லேசான சிவப்பு நிறத்தில் விரல்களையும் கொண்டிருந்த அவனது உள்ளங்கால்களைக் கவனமாக எடுத்து எனது தலையில் வைத்து, அடக்கத்துடன் என் கரங்களைக் குவித்து, அவனை மரியாதையுடன் அணுகினேன். தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடைய, அனைத்திற்கும் ஆன்மாவான அந்தத் தெய்வீகமானவனை நான் மீண்டும் கண்டேன்.
குவிந்த கரங்களுடன் அவன் முன் வணங்கிய நான், அவனிடம், “ஓ! தெய்வீகமானவனே, நான் உன்னையும், உனது உயர்ந்த அற்புதமான மாயையும் அறிய விரும்புகிறேன். ஓ! சிறப்புமிக்கவனே, நான் உனது வாய்வழியாக உனது உடலுக்குள் நுழைந்ததும், முழு அண்டத்தையும் உனது வயிற்றில் கண்டேன். ஓ தெய்வீகமானவனே, தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் என உண்மையில் முழு அண்டத்திலும் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிர்கள் அனைத்தையும் உனது உடலில் கண்டேன். உனது அருளால், நிற்காமல் தொடர்ச்சியாகவும் வேகமாகவும் நான் உனது உடலில் திரிந்தாலும், எனது ஞாபகம் என்னைக் கைவிடவில்லை. ஓ! பெரும் தலைவா, நான் உனது விருப்பத்தாலேயே உனது உடலைவிட்டு வெளியே வந்தேன். எனது விருப்பத்தாலல்ல. ஓ! தாமரை இதழ் கண்கள் கொண்டவனே, குறைகளற்ற உன்னை நான் அறிய விரும்புகிறேன்! முழு அண்டத்தையும் விழுங்கிவிட்டு, நீ ஏன் இங்குச் சிறுவனின் உருவத்தில் இருக்கிறாய்? இவை அனைத்தையும் எனக்கு விவரித்துச் சொல்வதே உனக்குத் தகும். ஓ! பாவமற்றவனே, முழு அண்ட மும் ஏன் உனது வயிற்றில் இருக்கிறது? ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, எவ்வளவு காலம் நீ இங்கிருப்பாய்? அந்தணர்களுக்குத் தகுந்த ஆவலால் உந்தப்பட்டே, ஓ அனைத்து தேவர்களுக்கும் தலைவா, இவை அனைத்தையும் உன்னிடம் இருந்து நான் கேட்க விரும்புகிறேன். ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனே அனைத்தையும் சரியாக அது நிகழ்ந்தவாறே, அனைத்து விவரங்களுடனும் சொல்வீராக. ஓ! தலைவா, புத்திக்கு எட்டாத அற்புதமான அவற்றை நானும் கண்டிருக்கிறேன்” என்றேன். இப்படி என்னால் சொல்லப்பட்டதும், தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமான, அனைத்துப் பேச்சாளர்களில் முதன்மையான அவன், சுடரும் பிராகசத்துடனும், பெரும் அழகுடனும், எனக்குச் சரியாக ஆறுதல் அளிக்கும் வகையில் என்னிடம் இவ்வார்த்தைகளைப் பேசினான்.
நான் நாராயணன்! – வனபர்வம் பகுதி 188-சிறுவனாக இருந்த நாராயணன் தன்னைக் குறித்துச் சொல்லி மறைந்து போதல்; மார்க்கண்டேயர் அந்த நாராயணன் கிருஷ்ணனே என்று பாண்டவர்களுக்குச் சொல்லி, அவரிடம் புகலிடம் கோரச் சொல்லல்; கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு ஆறுதல் கூறுதல்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிறகு அந்தத் தெய்வம், “ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, உண்மையில் தேவர்களும் என்னை அறிய மாட்டார்கள். இருப்பினும், நான் உம்மிடம் திருப்தி கொண்டிருப்பதால், இப்அண்டத்தை எப்படி உருவாக்கினேன் என்பதை உமக்குச் சொல்கிறேன்! ஓ! மறுபிறப்பாள முனிவரே {பிராமண முனிவரே மார்க்கண்டேயரே}, நீர் உமது மூதாதையர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருந்து கொண்டு, எனது பாதுகாப்பையும் கோரினீர் {என்னைச் சரணடைந்தீர்}. நீர் என்னை உமது கண்களால் கண்டிருக்கிறீர்! உமது ஆன்மத் தகுதியும் அதிகமானதே! பழங்காலத்தில் நீர் என்பது நாரம் என்று அழைக்கப்பட்டது. நீரே எனது வசிப்பிடமாக {அயணமாக} இருப்பதால், நான் நாராயணன் (நீரை வசிப்பிடமாகக் கொண்டவன்) என்று அழைக்கப்படுகிறேன்.
ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே {மார்க்கண்டேயரே} அனைத்துக்கும் மூலமாக, நித்தியமானவனாக, மாறாதவனாக இருக்கும் நானே நாராயணன். நானே அனைத்தையும் படைக்கிறேன்; நானே அனைத்தையும் அழிக்கிறேன். நானே விஷ்ணு, நானே பிரம்மன், நானே தேவர்கள் தலைவனான சக்ரன் {இந்திரன்}, நானே மன்னன் வைஸ்ரவணன், நானே இறந்த ஆவிகளின் தலைவனான யமன். நானே சிவன், நானே சோமன், நானே படைக்கப்பட்டவற்றுக்குத் தலைவனான காசியபர். மேலும், ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, நானே தத்ரியும் விதத்ரியுமாவேன்; நானே உருவம் கொண்ட வேள்வியுமாவேன். நெருப்பே எனது வாய், பூமி எனது பாதம், சூரியனும் சந்திரனும் எனது கண்கள்; சொர்க்கம் எனது தலையில் இருக்கும் கிரீடம், ஆகாயமும், திசைப் புள்ளிகளும் எனது காதுகள்; எனது வேர்வையில் இருந்தே நீர் பிறக்கிறது. திசைப் புள்ளிகளுக்கு மத்தியில் இருப்பதே எனது உடல்; காற்றே எனது மனமாகும்.
நான் அபரிமிதமான பரிசுகள் கொடுத்து பல நூற்றுக்கணக்கான வேள்விகளைச் செய்திருக்கிறேன். நான் தேவர்களின் வேள்விகளில் எப்போதும் இருக்கிறேன்; வேதங்களை அறிந்து வேள்வியை நடத்துபவர்கள் எனக்குக் காணிக்கைகளைக் கொடுக்கின்றனர். இப்பூமியில் மனிதர்களை ஆளும் க்ஷத்திரியத் தலைவர்கள், சொர்க்கமடைய விரும்பி வேள்விகளைச் செய்கின்றனர். அதே மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளை அடைவதற்கு விரும்பியே வைசியர்களும் தங்கள் வேள்விகளைச் செய்கின்றனர். அனைவரும் அது போன்ற நேரங்களில் சடங்குகளுடன் என்னை வழிபடுகின்றனர். சேஷனின் உருவத்தைக் கொண்டு நான்கு கடல்களையும், மேருவையும், மந்தரத்தையும் கொண்ட பூமியை (எனது தலையில்) நானே தாங்குகிறேன்.
ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே, மார்க்கண்டேயரே}, பன்றி உரு கொண்டு, நீரில் மூழ்கிய பூமியை பழங்காலத்தில் உயர்த்தியவன் நானே. ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, குதிரையின் வாயில் வரும் நெருப்பாக {வடவாமுகாக்னி} மாறி, நீரை {கடலை} குடித்து, மீண்டும் அவற்றை உருவாக்குவது நானே. என் சக்தியின் தொடர்ச்சியாக, எனது வாய், கரங்கள், தொடைகள், பாதங்கள் ஆகியவற்றில் இருந்து பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் படிப்படியாகத் தோன்றினார்கள். என்னிடமிருந்தே ரிக், சாமம், யஜூர், அதர்வன வேதங்கள் எழுந்தன. நேரம் வரும் போது இவை அனைத்தும் என்னுள்ளேயே நுழைகின்றன. தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் அந்தணர்களும், அமைதியையே உயர்ந்த பண்பாக மதிப்பவர்களும், தங்கள் ஆன்மாக்களை முழுக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களும், ஞானத்தை விரும்புபவர்களும், காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, புவிசார்ந்த பொருட்களைத் துறந்தவர்களும், தங்கள் பாவங்களை முழுமையாகக் கழுவிக் கொண்டவர்களும், கனிவும் நல்லொழுக்கமும் கொண்டு கர்வம் அகன்றவர்களும், ஆன்மா குறித்த முழு அறிவு கொண்டவர்களும் ஆழ்ந்த தியானத்துடன் என்னையே வழிபடுகிறார்கள்.
சம்வர்த்தகம் என்று அழைக்கப்படும் நெருப்பு {பிரளய கால நெருப்பு} நானே, அப்பெயரில் {சம்வர்த்தகம் என்ற பெயரில்} அழைக்கப்படும் காற்றும் நானே, அப்பட்டத்தைச் சூட்டியிருக்கும் {சம்வர்த்தகம் என்ற பட்டத்தைச் சூட்டியிருக்கும்} சூரியனும் நானே, அந்தப் பதவியைக் {சம்வர்த்தகம் என்ற பதவியைக்} கொண்ட நெருப்பும் நானே. ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, ஆகாயத்தில் தெரியும் நட்சத்திரங்கள் அனைத்தும் எனது தோலில் உள்ள துளைகள் {நுண்துளைகள்} என்பதை அறிவீராக. ரத்தினங்களின் சுரங்கங்களான கடலும், நான்கு திசைப்புள்ளிகளும், ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, எனது உடையும், படுக்கையும், இல்லமும் ஆகும் என்பதை அறிவீராக. தேவர்களின் காரியங்களுக்குச் சேவை செய்யவே அவை என்னால் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஓ! மனிதர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, காமம், கோபம், மகிழ்ச்சி, அச்சம், புத்திமயக்கம் {மோகம்} ஆகியனவும் என்னுடைய பல உருவங்களே என்பதை அறிவீராக.
ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, உண்மை, தானம், கடுந்தவம், அமைதி, எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாமை {அஹிம்சை} ஆகியவற்றைப் பயில்வதால் மனிதர்கள் அடையும் எதுவும், அது போன்ற நற்காரியங்களும், எனது ஏற்பாட்டாலேயே அடையப்படுகின்றன. என் கட்டளை மூலம் நிர்வகிக்கப்பட்டு, என் உடலுக்குள் திரியும் மனிதர்களின் உணர்வுகள் என்னால் அதிகப்படுத்தப்படுகின்றன. அவர்கள் தங்கள் விருப்பப்படி திரிவதில்லை, மாறாக என்னாலே அவர்கள் திரிய வைக்கப்படுகின்றனர். வேதங்கள் முழுமையும் கற்ற ஆன்ம அமைதி கொண்ட மறுபிறப்பாள அந்தணர்கள், தங்கள் கோபத்தை அடக்கி, பல்வேறுபட்ட வேள்விகளின் மூலம் உயர்ந்த வெகுமதியை அடைந்திருக்கின்றனர். இருப்பினும் அவ்வெகுமதியானது, பேராசை, குறுகிய மனம், அருளற்ற அசுத்தமான ஆன்மாக்கள் ஆகியற்றால் பீடிக்கப்பட்ட மதிப்பற்றவர்களாலும், தீச்செயல் செய்யும் மனிதர்களாலும் அடையமுடியாததாகும். எனவே, ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, ஆன்மாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பவர்களால் இவ்வெகுமதி அடையப்படும். மூடர்களாலும் அறியாமை கொண்டவர்களாலும் தவத்தால் மட்டுமே அடையக்கூடிய உயர்ந்த தகுதியின் கனியான அதை {அவ்வெகுமதியை} அடைய முடியாது.
ஓ! மனிதர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, அறமும், அறநெறிகளும் குறைந்து, பாவங்களும், ஒழுக்கமின்மையும் {அறநெறிமீறலும்} அதிகரிக்கும் நேரத்தில், நான் என்னைப் புதிய உருவங்களில் படைத்துக் கொள்கிறேன். ஓ! முனிவரே {மார்க்கண்டேயரே}, தேவர்களில் முதன்மையானவர்களாலும் கொல்லப்பட முடியாத தீங்கிழைக்கும் கடுமையானவர்களுமான தைத்தியர்களும் ராட்சசர்களும் பூமியில் பிறக்கும்போது, தீமைகளை அகற்றி, அமைதியை மீட்க நான் அறம்சார்ந்த மனிதர்களின் குடும்பங்களில் மனித உரு கொண்டு பிறக்கிறேன். என் மாயையால், நான் தேவர்களையும், மனிதர்களையும், கந்தர்வர்களையும், ராட்சசர்களையும், அனைத்து அசையாதவைகளையும் படைத்து, பிறகு அவை அனைத்தையும் (நேரம் வரும்போது) அழிக்கிறேன். அறம் மற்றும் நன்னெறிகளைக் காக்க நான் மனித உருவம் கொள்கிறேன். செயலுக்கான காலம் வரும்போது, மீண்டும் நான் கற்பனைக்கெட்டாத வடிவங்களை எடுக்கிறேன்.
கிருத யுகத்தில் நான் வெண்மையாகவும், திரேதா யுகத்தில் மஞ்சளாகவும், துவாபர யுகத்தில் சிவப்பாகவும், கலி யுகத்தில் கறுப்பாகவும் ஆகிறேன். கலி காலத்தில், நாலில் மூன்று பங்கு அறமீறல்கள் நடக்கின்றன. (கால் பங்கே அறநெறி இருக்கிறது). அந்த யுகத்தின் முடிவில், மரணத்தின் கடுமையான உருவத்தைக் கொண்டு நான் தனியாக அசைவன, அசையாதன ஆகியவற்றைக் கொண்ட மூன்று உலகங்களையும் அழிக்கிறேன். மூன்று அடிகளால் நான் முழு அண்டத்தையும் அடக்குகிறேன். நானே இப்அண்டத்தின் ஆன்மாவாக இருக்கிறேன்; நானே மகிழ்ச்சியின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறேன்; நானே கர்வபங்கம் செய்பவனாக இருக்கிறேன்; நான் எங்கும் இருக்கிறேன்; நான் எல்லையற்றவனாக இருக்கிறேன்; நான் புலன்களின் தலைவனாக இருக்கிறேன்; என் வலிமை பெரிதானது. ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, தனியாகவே நான் காலச்சக்கரத்தைச் சுழற்றுகிறேன்; நான் உருவமற்றவனாக இருக்கிறேன்; நான் அனைத்து உயிர்களையும் அழிப்பவனாக இருக்கிறேன்; எனது படைப்புகளின் அனைத்து முயற்சிகளுக்கும் நானே காரணனாக இருக்கிறேன். ஓ! முனிவர்களின் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, எனது ஆன்மா அனைத்து உயிரினங்களிலும் ஊடுருவியிருக்கிறது {அனைத்திலும் நான் வியாபித்திருக்கிறேன்}. ஆனால், ஓ! அனைத்து மறுபிறப்பாளர்களிலும் முதன்மையானவரே {மார்க்கண்டேயரே}, என்னை ஒருவரும் அறிவதில்லை. அனைத்து உலகங்களிலும் பக்தியுடனும் அர்பணிப்புடனும் நானே வணங்கப்படுகிறேன்.
ஓ! மறுபிறப்பாளரே {மார்க்கண்டேயரே}, எனது வயிற்றில் நீங்கள் என்னவெல்லாம் வலியை உணர்ந்திரோ, ஓ! பாவமற்றவரே {மார்க்கண்டேயரே, அவை அனைத்தும் உமது மகிழ்ச்சிக்காகவும், நற்பேறுக்காகவுமே என்பதை அறிவீராக. அவ்வுலகத்தில் என்னவெல்லாம் அசைவன மற்றும் அசையாதனவற்றைக் கண்டீரோ அவை அனைத்தும் எனது ஆன்மாவால், இருப்புக்குக் கொண்டு வந்து எழுப்பப்பட விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உயிரினங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} எனது உடலில் பாதியாவான்; நான் நாராயணன் என்று அழைக்கப்படுகிறேன். நான் சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தாங்கி நிற்கிறேன். ஓ! மறுபிறப்பாள முனிவரே {மார்க்கண்டேயரே}, யுகங்களின் நீளத்தில் ஆயிரம் மடங்கு அளக்கக்கூடிய காலத்திற்கு, அண்டத்தின் ஆன்மாவான நான், உயிரினங்களை உணர்வற்றதாக இருக்கச் செய்து {பிரம்மனான நான்} உறங்குகிறேன். ஓ! மறுபிறப்பாள முனிவர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, இப்படியே அந்த முழுக் காலமும், நான் முதிர்ந்தவனாக இருந்தும் சிறுபிள்ளையின் உருவத்தில், பிரம்மன் விழிக்கும் வரை எப்போதும் இங்கேயே இருக்கிறேன்.
ஓ! அந்தணர்களில் முதன்மையானவரே {மார்க்கண்டேயரே}, நான் உம்மிடம் திருப்தி கொண்டிருக்கிறேன். ஓ! மறுபிறப்பாள முனிவர்களில் வழிபடத்தகுந்தவரே {மார்க்கண்டேயரே} பிரம்மமான நான் உமக்குத் திரும்பத் திரும்ப வரங்களை அளித்திருக்கிறேன். அசைவன, அசையாதன என அனைத்தும் அழிக்கப்பட்டதையும், ஒரே பெரும் நீர் பரப்பையும் கண்ட நீர் துன்பத்தால் தாக்கப்பட்டீர். நான் அதை அறிந்தேன், எனவேதான் நான் உமக்கு (எனது வயிற்றுக்குள் இருக்கும்) அண்டத்தைக் காட்டினேன். நீர் எனது உடலுக்குள் இருந்து முழு உலகத்தையும் கண்ட போது, உணர்விழந்து, ஆச்சரியத்தில் மூழ்கினீர். ஓ! மறுபிறப்பாள முனிவரே {மார்க்கண்டேயரே}, இதன் காரணமாகவே நீர் விரைவாக எனது வாய்வழியாக வெளியேற்றப்பட்டீர். நான் (இப்போது) உம்மிடம், தேவர்களாலும், அசுரர்களாலும் புரிந்து கொள்ள இயலாத ஆன்மாவைக் குறித்துச் சொன்னேன். பெரும் தவசியான, புனிதமான பிரம்மா விழிக்காத வரை, ஓ! மறுபிறப்பாள முனிவரே {மார்க்கண்டேயரே}, நீர் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் இங்கேயே வசிக்கலாம். அனைத்து உயிரினங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} விழித்த பிறகு, ஓ! அந்தணர்களில் சிறந்தவரே, நான் தனியாக உடலுடன் கூடிய அனைத்து உயிர்களையும் படைத்து, ஆகாயம், பூமி, ஒளி, வளிமண்டலம், நீர் என உண்மையில் அனைத்து அசைவன மற்றும் அசையாதன ஆகிய (நீர் கண்டிருக்கக்கூடிய) உயிரினங்களையும் பூமியில் படைப்பேன்!” என்றான் {சிறுவனாக இருந்த நாராயணன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன அந்த அற்புத தெய்வம் {நாராயணன்}, ஓ! மகனே {யுதிஷ்டிரா}, எனது காட்சியில் இருந்து மறைந்து போனான்! பிறகு தான் நான் இந்தப் பலதரப்பட்ட அற்புதமான படைப்பு உயிர் பெறுவதைக் கண்டேன். ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, இந்த அற்புதமான அனைத்தையும் யுகத்தின் முடிவில், ஓ! அறம்சார்ந்த அனைத்து மனிதர்களிலும் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, சாட்சியாக இருந்து நான் கண்டேன். பழங்காலத்தில் என்னால் பார்க்கப்பட்ட, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அந்தத் தெய்வம், உனது உறவினனாக இருக்கும் இந்த ஜனாதர்த்தனனே {கிருஷ்ணனே}. எனக்கு அளிக்கப்பட்ட வரத்தின் தொடர்ச்சியாகவே, எனது ஞாபக சக்தி குறையவில்லை. ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, மரணத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் எனது வாழ்வின் காலம் மிக நீண்டது. பழமையான பெருந்தலைவனான இந்த ஹரியே, வலிமை நிறைந்த கரங்கள் கொண்டவனாக விருஷ்ணி குலத்தில் கிருஷ்ணனாகப் பிறந்து இவ்வுலகில் விளையாடிக் கொண்டிருப்பதைப் போலக் காணப்படுகிறான். இவனே தத்ரியும், விதத்ரியும் ஆவான். அனைத்து நித்தியமானவைகளையும் அழிப்பவன் இவனே. மார்பில் ஸ்ரீவத்சம் என்ற மருவைக் கொண்டவன் இவனே. அனைத்து உயிர்களின் தலைவனுக்குத் தலைவன் இவனே, உயர்ந்தவர்களில் உயர்ந்தவனான இவன் கோவிந்தன் என்று அழைக்கப்படுகிறான். மஞ்சளாடை {பீதாம்பரம்} உடுத்தி, எப்போதும் வெல்பவனும் அனைத்து தேவர்களிலும் முதன்மையானவனுமான இவனைக் கண்டதாலேயே எனக்குப் பழைய நினைவுகள் மீண்டும் வந்தன! இந்த மாதவனே {கிருஷ்ணனே}, அனைத்து உயிர்களுக்கும் தந்தையும் தாயுமானாவன்! குரு குலத்தின் காளைகளே {பாண்டவர்களே}, இந்தப் பாதுகாவலனிடம் உங்கள் பாதுகாப்பைக் கோருங்கள். {ரட்சகனான இவனைச் சரணடையுங்கள்}” என்றார் {மார்க்கண்டேயர்}
வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட பிருதையின் மகன்களும், மனிதர்களில் காளையரான இரட்டையர்களும், திரௌபதியுடன் கூடி ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} வணங்கினர். மதிப்புக்குத் தகுந்த மனிதர்களில் புலியான அவன் {கிருஷ்ணன்}, பாண்டுவின் மகன்களால் இப்படி மதிக்கப்பட்டதும், இனிமை நிறைந்த வார்த்தைகளால் அவர்களுக்கு ஆறுதல் கூறினான்”
யுகமுடிவும் கல்கி அவதாரமும்! – வனபர்வம் பகுதி 189-கலிகாலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குத் தீர்க்கத்தரிசனமாகச் சொல்லல்; கலிகாலத்தின் முடிவில் வரும் கல்கி அவதாரம் குறித்து யுதிஷ்டிரனுக்கு மார்க்கண்டேயர் விளக்கியது…
வைசம்பாயனர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “குந்தியின் மகனான யுதிஷ்டிரன், பெருமுனிவரான மார்க்கண்டேயரிடம் எதிர்காலத்தில் வரப்போகும் பூமியின் அரசாங்கம் குறித்து மீண்டும் கேட்டான்.
யுதிஷ்டிரன், “ஓ! பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, ஓ! பிருகு குலத்தின் முனிவரே {மார்க்கண்டேயரே}, யுகத்தின் முடிவில் ஏற்படும் அனைத்தின் அழிவையும், மீள்பிறப்பையும் குறித்துக் கேட்டோம். உண்மையில் அவை அற்புதமாக இருந்தன. இருப்பினும், கலிகாலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்துக் கேட்க இன்னும் மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். அறமும், அறநெறிகளும் நிலைகுலைந்த நேரத்தில், எதுதான் எஞ்சியிருக்கும்! அந்தக் காலத்தின் மனிதர்களின் பராக்கிரமம், உணவு மற்றும் அவர்களின் கேளிக்கைகள் {நடையுடைகள்} ஆகியன எவ்வாறு இருக்கும்? அந்த யுகத்தின் முடிவில், வாழ்வின் காலம்தான் எவ்வளவு? எந்த எல்லையை அடைந்த பிறகு, மீண்டும் புதிதாகக் கிருத காலம் தொடங்கும்? ஓ! முனிவரே {மார்க்கண்டேயரே}, இவையனைத்தையும் விவரமாகச் சொல்லும். இதுவரை நீர் சொன்னது அனைத்தும் வித்தியாசமாகவும் இனிமையாகவும் இருந்தன” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
இப்படிச்சொல்லப்பட்ட முனிவர்களில் முதன்மையானவர் {மார்க்கண்டேயர்}, விருஷ்ணி குலத்தின் புலிக்கும் {கிருஷ்ணனுக்கும்}, பாண்டுவின் மகன்களுக்கும் ஆனந்தம் உண்டாகும்படி தனது சொற்பொழிவை மீண்டும் தொடங்கினார். மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, என்னால் கேட்கப்பட்ட, காணப்பட்ட அனைத்தையும் சொல்கிறேன் கேள். ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, தேவர்களுக்குத் தேவனின் அருளால் நான் அறிந்ததைச் சொல்கிறேன். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, கிருதகாலத்தில் அனைத்தும், ஏமாற்று, சதி, தீமை, பேராசை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு இருந்தன. அறநெறி என்பது முழுதாக நாலு கால் கொண்ட காளையைப் போல மனிதர்களிடையே இருந்தது. திரேதா காலத்தில், பாவம் ஒரு காலை எடுத்துவிட்டது, அறநெறி மூன்று கால்களைக் கொண்டிருந்தது. துவாபர யுகத்தில், பாவமும், அறநெறியும் பாதிப் பாதியாகக் கலந்திருக்கிறது; அதனால் அறநெறி என்பது இரண்டு கால்களே கொண்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. இருண்ட காலத்தில் (கலி காலத்தில்), ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அறநெறியென்பது மூன்று பங்கு பாவத்துடன் கலந்து, மனிதர்களுக்கு அருகில் வாழ்கிறது. ஓ! யுதிஷ்டிரா, மனிதர்களின் வாழ்வின் காலமும், சக்தியும், புத்திக்கூர்மையும், உடல் பலமும் ஒவ்வொரு யுகமும் குறையும் என்பதை அறிந்து கொள்வாயாக.
ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோர் அறத்தையும், அறநெறிகளையும் ஏமாற்றுகரமாகப் பயில்வார்கள். பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் அறம் என்ற வலையைப்பின்னி தங்கள் சகாக்களை ஏமாற்றுவார்கள். கற்றலில் {கல்வியில்} பொய்ப்புகழ் கொண்ட மனிதர்கள், தங்கள் செயல்கள் மூலமாக உண்மையை {சத்தியத்தை} குறுக்கி மறைத்து வைக்க ஏற்பாடு செய்வார்கள். வாழ்நாள் குறைவதன் தொடர்ச்சியாக, அவர்களால் பெரிதாக ஞானத்தை அடைய இயலாது. புத்தி குறைவின் தொடர்ச்சியாக அவர்களுக்கு ஞானம் இருக்காது. இதனால் பொருளாசையும் பேராசையும் அவர்கள் அனைவரையும் மூழ்கடிக்கும். பேராசை, கோபம், அறியாமை, காமம் ஆகியவை கொண்ட மனிதர்கள், ஒருவர் இன்னொருவரின் உயிரை எடுக்க விரும்பி ஒருவருக்கொருவர் பகைமை பாரட்டுவார்கள். அறங்கள் குறுகி, தவத்தையும், உண்மையையும் கைவிடும் பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களுக்குச் சமானமாகக் குறைக்கப்படுவார்கள். தாழ்ந்த வகை மனிதர்கள் அனைவரும், இடைநிலை மனிதர்களின் நிலைக்கு உயர்த்தப்படுவார்கள். இடைநிலை மனிதர்கள் அனைவரும் நிச்சயமாகத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுவார்கள். ஓ! யுதிஷ்டிரா, யுகத்தின் முடிவில் உலகத்தில் நிலை இவ்வாறே இருக்கும்.
{கலி}யுக முடிவு காலத்தில், ஆடைகளில் மிகச் சிறந்தவையாகச் சணல் மற்றும் நாரால் நெய்யப்பட்ட கோணிகளால் (கோரதூஷகங்கள் = Paspalum frumentacea = Kora-dushakas} ஆன ஆடைகள் கருதப்படும். அந்தக் {கலி} காலத்தின் மனிதர்கள் தங்கள் மனைவியரை தங்கள் (ஒரே} நண்பராகக் கருதுவார்கள். பசுக்கள் இல்லாததால் மனிதர்கள் மீன்களையும், வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளின் பாலையும் உண்டு வாழ்வார்கள். அந்தக் காலத்தில் நோன்பு நோற்பவர்கள் கூடப் பேராசை கொண்டவர்களாக இருப்பார்கள். மனிதர்கள் ஒருவரை ஒருவர் எதிர்ப்பார்கள். ஒருவர் மற்றவரின் உயிரை எப்போதும் பறிப்பதற்காகக் காத்திருப்பார்கள். {அந்த} யுகத்தால் தள்ளப்பட்ட மனிதர்கள் நாத்திகர்களாகவும், திருடர்களாகவும் இருப்பார்கள். அக்காலத்தில், ஓடைகளின் கரைகளைக் கூடத் தங்கள் மண்வெட்டிகளால் தோண்டி, அதில் தானியங்களை விதைப்பார்கள். அந்த இடம் கூட அவர்களுக்கு அந்தக்காலத்தில் தரிசாகத்தான் இருக்கும். இறப்பவர்ளுக்கு {மனிதர்களுக்குத்} தேவர்களுக்கும் சடங்குகள் செய்வதில் அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்கள் கூடப் பேராசை கொண்டவர்களாகவும், அடுத்தவர்களின் உடைமைகளை அனுபவிப்பவர்களாகவும் இருப்பார்கள். தந்தை மகனுக்கு உரியதை அனுபவிப்பான், மகன் தந்தையின் உடைமைகளை அனுபவிப்பான். அக்காலத்தில் சாத்திரங்களால் விலக்கப்பட்ட இன்பங்களைக் கூட மனிதர்கள் அனுபவிப்பார்கள்.
அந்தணர்கள் வேதங்களை மரியாதைகுறைவாகப் பேசி, நோன்புகளை நோற்காமல், வீண் தர்க்கத்திற்கு அடிமையாகி, வேள்விகளையோ ஹோமங்களையோ செய்யாதிருப்பார்கள். யுக்திவாதங்களான போலி அறிவியலால் ஏமாற்றப்பட்டு, தாழ்ந்த குறுகிய அனைத்திலும் தங்கள் இதயத்தை நிலைக்கச் செய்வார்கள். பயிரிடுவதற்குத்தகாத தாழ்ந்த நிலங்களை {களர்நிலங்களை} உழுது, ஒரு வயது கொண்ட கன்றுகளையும் மாடுகளையும், கலப்பையை இழுக்கவும், சுமைகள் சுமக்கவும் பயன்படுத்துவார்கள். மகன்கள் தங்கள் தந்தைகளைக் கொல்வார்கள்; தந்தைகள் தங்கள் மகன்களைக் கொன்று எந்த மானக்கேடும் அடையாமல் இருப்பார்கள். இத்தகு செயல்கள் செய்து, துயரங்களில் இருந்து தங்களைக் காத்துக் கொண்டு, அதைப் {அச்செயலை} புகழவும் செய்வார்கள். முழு உலகமும் மிலேச்ச வகை நடத்தைகள், கருத்துகள், விழாக்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வேள்விகள் நின்று போகும், மகிழ்ச்சி எங்குமிருக்காது. பொதுமகிழ்ச்சி என்பது மறைந்தே போகும். ஆதரவற்றவர்கள், நண்பர்களற்றவர்கள் ஆகியோரிடம் இருந்து அவர்களது உடைமைகளையும் அறிவையும் மனிதர்கள் திருடுவார்கள்.
குறைந்த சக்தியும் பலமும் கொண்டு, ஞானமற்று, பேராசையும், முட்டாள்த்தனமும் கொண்டு, பாவச் செயல்கள் செய்யும் மனிதர்கள், அலட்சியமான வார்த்தைகளைச் சொல்லி, தீயவர்கள் கொடுக்கும் பரிசுகளைப் பெற்றுக் கொள்வார்கள். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, பூமியின் மன்னர்களின் இதயம் ஞானமற்றுப் பாவத்திலேயே லயித்திருக்கும், அவர்கள் தங்கள் ஞானம் குறித்துக் கர்வமாகப் பேசி, ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பி சவால் விடுப்பார்கள். அந்தக் காலத்தின் முடிவில் க்ஷத்திரியர்களும் பூமியின் முட்களாவார்கள். பேராசை கொண்டு, கர்வம் பெருகி, தீமை செய்து, (தங்கள் குடிகளைக்) காக்க விரும்பாமல், தண்டனை கொடுப்பதில் மட்டும் அவர்கள் மகிழ்ந்திருப்பார்கள். நல்லவர்கள், நேர்மையானவர்கள் ஆகியோர், துயரத்தால் அழுதாலும், அவர்களிடம் இரக்கம் காட்டாமல் தொடர்ச்சியாகத் தாக்கும் க்ஷத்திரியர்கள், அவர்களது மனைவியரையும், செல்வத்தையும் கொள்ளையடிப்பார்கள். எவனும் எந்தப் பெண்ணையும் (திருமணத்திற்காக) கேட்கமாட்டான். எவனும் எந்தப் பெண்ணை (திருமணத்திற்காக) கொடுக்கவும் மாட்டான். ஆனால் பெண்கள், யுகத்தின் முடிவு வரும்போது, தாங்களாகவே தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.
அறியாமையில் மூழ்கிய ஆன்மாக் கொண்ட புவியின் மன்னர்கள், தாங்கள் கொண்டிருப்பதில் அதிருப்தி கொண்டு, அது போன்ற நேரத்தில் {கலிகாலத்தில்}, தங்கள் பலத்தைப் பிரயோகித்து எல்லா வழிகளிலும் குடிமக்களிடம் இருந்து திருடுவார்கள். சந்தேகமற முழு உலகமும் மிலேச்சமயமாகும். யுக முடிவின் போது, வலக்கை இடதையும், இடம் வலத்தையும் ஏமாற்றும். போலிப் புகழ் கொண்ட கல்வியாளர்கள் உண்மையைச் சுருக்குவார்கள். முதியவர்கள் புத்தியற்ற இளைஞர்களையும், இளைஞர்கள் மனத்தளர்ச்சி கொண்ட முதியவர்களையும் வஞ்சிப்பார்கள். கோழை, வீரன் என்ற போலிப்புகழ் பெற்றிருப்பான். வீரர்கள், கோழைகளைப் போல உற்சாகமற்று இருப்பார்கள். யுக முடிவின் போது, மனிதர்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கையற்று இருப்பார்கள். பேராசையும், முட்டாள்தனமும் உலகம் முழுவதும் இருக்கும். அனைவரும் ஒரே வகை உணவை உண்பார்கள். பாவம் வளர்ந்து செழிப்படையும், அதே வேளையில் அறம் மங்கி, பிரகாசம் இழக்கும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோர் தங்கள் வகைக்கு யாரையும் மிச்சம் வைக்காமல் மறைந்து போவார்கள். யுக முடிவின் போது, மனிதர்கள் அனைவரும், எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே வகையின் உறுப்பினர்களாவார்கள். தந்தைகள் மகன்களை மன்னிக்க மாட்டார்கள், பிள்ளைகள் தந்தைகளை மன்னிக்க மாட்டார்கள். முடிவு நெருங்கும்போது, மனைவியர் தங்கள் கணவர்களுக்காகக் காத்திருந்து சேவை செய்ய மாட்டார்கள்.
மேலும், இது போன்ற ஒரு நேரத்தில், மனிதர்கள், கோதுமை மற்றும் யவை {பார்லி} ஆகியவற்றை முதன்மையான உணவாகக் கொண்டிருக்கும் நாடுகளைத் தேடிச் செல்வார்கள். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஆண்களும் பெண்களும், தங்கள் நடத்தைகளில் சுதந்திரமானவர்களாக இருந்து, அடுத்தவர் குறையைப் பொறுக்க முடியாதவர்களாக இருப்பார்கள். ஓ யுதிஷ்டிரா, இப்படி முழு உலகமும் மிலேச்சமயமாகும். மனிதர்கள் ஸ்ரார்த்தக் கொடை கொடுத்துத் தேவர்களைத் திருப்தி செய்வதை நிறுத்திவிடுவார்கள். எவரும் யாருடைய வார்த்தைகளையும் கேட்கமாட்டார்கள். ஒருவரும் மற்றவரால் குருவாகக் கருதப்பட மாட்டார்கள். ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, உலகம் முழுவதையும் அறிவிலித்தனம் எனும் இருள் மூழ்கடிக்கும். மனிதர்களின் வாழ்நாள் பதினாறு வருடங்களால் அளக்கப்படும், அந்த வயதை அடையும்போது இறப்பு அவர்களுக்கு ஏற்படும். ஐந்து அல்லது ஆறு வயதுடைய சிறுமிகள் பிள்ளைகளைப் பெறுவார்கள். ஏழு அல்லது எட்டு வயதுடைய சிறுவர்கள் தந்தைகளாவார்கள். ஓ! மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரா}, யுக முடிவின் போது மனைவியானவள் கணவனிடமோ, கணவன் மனைவியிடமோ திருப்தியடைய மாட்டார்கள்.
மனிதர்களுக்கு உடைமைகள் குறைவாகவே இருக்கும், மனிதர்கள் போலியாக மதக்குறிகளைத் தாங்கி நிற்பார்கள். பொறாமையும், தீய குணமும் உலகம் முழுதும் நிறைந்திருக்கும். யாரும் யாருக்கும் (செல்வத்தையோ அல்லது வேறு எதையுமோ) தானம் செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். உலகத்தில் குடியேற்றும் இல்லாத பகுதிகள் {மக்கள் தொகை குறைந்த பகுதிகள்} பற்றாக்குறை மற்றும் பஞ்சத்தால் துன்புறும். நெடுஞ்சாலைகள் அனைத்தும், காமம் நிறைந்த தீய குணம் கொண்ட ஆண்களாலும், பெண்களாலும் நிறைந்திருக்கும். அது போன்ற நேரத்தில், பெண்கள் தங்கள் கணவர்கள் மீது வெறுப்பைக் காட்டி மகிழ்வார்கள். யுக முடிவு வரும்போது, சந்தேகமற மனிதர்கள் அனைவரும் மிலேச்ச முறையைக் கைக்கொண்டு, அவர்களிடம் இருந்து வேறுபாடு இல்லாமல் அனைத்தையும் உண்பவர்களாகி, தங்கள் செயல்கள் அனைத்திலும் கடுமையாக இருப்பார்கள். ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா} பேராசையால் உந்தப்பட்ட மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி விற்கவும், வாங்கவும் {கொள்முதல் செய்தலையும்} செய்வார்கள். கட்டளைகளை {ஆசாரம்} அறியாத மனிதர்கள், சடங்குகளையும், விழாக்களையும் நடத்துவார்கள். யுக முடிவு நெருங்கும்போது நிச்சயம் மனிதர்கள் மேற்கண்டவாறே நடப்பார்கள்.
யுக முடிவு வரும்போது, தங்கள் தேவைகளால் உந்தப்பட்ட மனிதர்கள், கடுஞ்செயல் புரிந்து, ஒருவரை ஒருவர் இகழ்ந்து பேசுவார்கள். மனிதர்கள் ஈவிரக்கம் இல்லாமல் மரங்களையும் தோப்புகளையும் அழிப்பார்கள். வாழ்வு குறித்த கவலையில் மூழ்கியபடியே மனிதர்கள் இருப்பார்கள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பேராசையில் மூழ்கும் மனிதர்கள் அந்தணர்களைக் கொல்வார்கள். அதன்பிறகு, தங்களுக்குப் பொருத்தமான அவர்களது {அந்தணர்களின்} உடைமைகளை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள். சூத்திரர்களால் ஒடுக்கப்படும் மறுபிறப்பாளர்கள், அச்சத்தால் துயருற்று, “ஓ”, “அய்யோ” என்று கதறியபடி, பாதுகாக்க யாருமின்றி உலகத்தில் திரிவார்கள். யுக முடிவு வரும்போது, மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொல்லத் தொடங்கி, தீயவர்களாகவும், கடுமையானவர்களாகவும் ஆகி, விலங்கு வாழ்வு வாழ்வார்கள்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர்கள் கூட, கள்வர்களால் துன்புற்று, காக்கைகளைப் போலப் பயத்தால் வேகமாகப் பறந்து, நதிகளிலும், மலைகளிலும், அடையமுடியாத கடினமான பகுதிகளிலும் தஞ்சமடைவார்கள். தீய ஆட்சியாளர்களால் கடுமையான வரிச்சுமைக்கு எப்போதும் உட்படுத்தப்படும் மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர்கள், ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தப் பயங்கரமான நேரங்களில், அனைத்து பொறுமையையும் இழந்து, தகாத செயல்கள் புரிந்து, சூத்திரர்களின் சேவகர்கள் ஆவார்கள். சூத்திரர்கள் சாத்திரங்களை விளக்குவார்கள், அந்தணர்கள் அவர்களுக்காகக் காத்திருந்து அதைக் கேட்பார்கள். அது போன்ற விளக்கவுரைகளைக் கேட்டு, அவற்றைத் தங்கள் வழிகாட்டிகளாக எண்ணி, தங்கள் கடமைக்கான வழிகளை நிர்ணயிப்பார்கள். தாழ்ந்தவர்கள் உயர்ந்தவர்களாவார்கள், அனைத்துப் பொருட்களின் வழிகளும் முரண்பாடாகவே இருக்கும். தேவர்களைக் கைவிடும் {துறந்த} மனிதர்கள், எலும்புகளையும், சுவரில் பதிக்கப்பட்ட பிற பீடங்களையும் வணங்குவார்கள். யுக முடிவின் போது, சூத்திரர்கள், பிராமணர்களுக்காகக் காத்திருந்து சேவை செய்வதை நிறுத்துவார்கள். பெரு முனிவர்களின் ஆசிரமங்கள், அந்தணர்களின் கல்விக்கூடங்கள், தேவர்களுக்குப் புனிதமான இடங்கள், வேள்வி மண்டபங்கள், புனிதமான குளங்கள் மற்றும் பூமி ஆகியவற்றை மறைத்து கல்லறைகளும், எலும்புகள் கொண்ட நினைவுச்சின்னங்களும், சிதைவடைந்த தூண்களுமே இருக்கும். தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்கள் எதுவும் அங்கே இருக்காது. இவை அனைத்தும் யுகமுடிவின் போது நடைபெறும், இவை அனைத்தும் யுக முடிவின் குறீயீடுகள் என்பதை அறிந்து கொள்வாயாக.
{கலி} யுக முடிவு வரும்போது, கடுமையாகும் மனிதர்கள், அறத்தை இழந்து, அனைத்தையும் உண்ணும் ஊனுண்ணிகளாகி {புலால் உண்பவர்களாகி}, போதைதரும் பானங்களுக்கு அடிமையாவார்கள். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மலருக்குள் மலரும், கனிக்குள் கனியும் உண்டாகும் அப்போது யுகம் ஒரு முடிவுக்கு வரும். யுக முடிவு நெருங்கும்போது, காலமற்ற காலத்தில் மேகங்கள் மழையைப் பொழியும். அந்நேரத்தில், மனிதர்களின் விழாச் சடங்குகள் சரியான உரிய வரிசையில் நடக்காது. சூத்திரர்கள் பிராமணர்களுடன் மோதுவார்கள். உலகம் முழுவதும் மிலேச்சர்கள் நிறைந்ததாகும். வரிச்சுமையின் காரணமாக அந்தணர்கள் பயத்தில் அனைத்துப் பக்கங்களிலும் சிதறி ஓடுவார்கள். மனிதர்களுக்குள் இருந்த வேற்றுமைகள் அனைத்தும் மறைந்து அவர்கள் நடத்தைகள் அனைத்தும் ஒன்றாகும். கௌரவப் பணிகள் மற்றும் அலுவல்களால் துன்புற்ற மனிதர்கள், வனம் நிறைந்த பகுதிகளுக்குப் பின்வாங்கி, கனிகளையும், கிழங்குகளையும் உண்டு வாழ்வார்கள். இப்படிப் பாதிப்படைந்த உலகத்தில், நடத்தையில் நேர்மையற்ற காட்சிகள் எங்கும் காணப்படும். சீடர்கள் குருவின் அறிவுரைகளை இல்லாமல் செய்து {ஏற்காமல்}, அவர்களை {குருக்களை} காயப்படுத்தக்கூட முயல்வார்கள். வறிய நிலையிலுள்ள குருக்களை மனிதர்கள் அவமதிப்பார்கள். நண்பர்கள், உறவினர்கள், சம்பந்திகள் ஆகியோர், ஒரு மனிதன் சேகரித்த செல்வத்துக்காக அவனிடம் நட்புடன் இருப்பார்கள்.
யுக முடிவு வரும்போது, அனைவரும் தேவையில் இருப்பார்கள். தொடுவானத்தின் அனைத்துப் புள்ளிகளும் சுடர்விட்டபடி இருக்கும். நட்சத்திரங்களும், நட்சத்திரக்கூட்டங்களும் ஒளியற்றே இருக்கும். கோள்களும் கோள் சேர்க்கைகளும் அமங்களமாக இருக்கும். காற்றின் பாதைகள் குழப்பமுற்று கலங்கிப் போகும், தீமையை முன் குறித்தபடி எண்ணிலடங்கா எரிகற்கள் வானத்தில் ஒளிர்ந்தபடி செல்லும். சூரியன், அதே வகைக் கொண்ட மேலும் ஆறு சூரியன்களுடன் தோன்றும். சுற்றிலும் முழக்கங்களும், நெருப்பும் ஏற்படும். சூரியன் எழும் மணியிலிருந்து மறைவது வரை ராகுவால் மறைக்கப்பட்டிருப்பான். ஆயிரம் கண் கொண்ட தெய்வம் {இந்திரன்}, காலமற்ற காலத்தில் மழையைப் பொழிவான். யுக முடிவு வரும்போது, பயிர்கள் அபரிமிதமாக வளராது. பெண்கள் எப்போதும் கூர்மையான பேச்சு கொண்டவர்களாகவும், இரக்கமற்றவர்களாகவும், அழுவதில் விருப்பமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் கணவர்களின் கட்டளைகளைப் பின்பற்றவே மாட்டார்கள்.
யுக முடிவு வரும்போது, மகன்கள் தந்தைகளையும், தாய்களையும் கொல்வார்கள். பெண்கள் கட்டுபாடற்றவர்களாகி, தங்கள் கணவர்களையும், மகன்களையும் கொல்வார்கள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, யுக முடிவு வரும்போது, ராகு சூரியனை காலமற்ற காலத்தில் விழுங்குவான். அனைத்துப் புறங்களிலும் நெருப்புகள் சுடர்விட்டு எரியும். பயணிகளுக்கு, அவர்கள் கேட்டாலும் உணவும், குடிநீரும், உறைவிடமும் கிடைக்காததால், தங்கள் தேவைகளால் உந்தப்பட்டு வழியில் படுத்துக் கிடப்பார்கள். யுக முடிவு வரும்போது, காகங்கள், பாம்புகள், கழுகுகள், ராஜாளிகளும் பிற விலங்குகளும் பறவைகளும் முரண்பட்ட பயங்கராமன ஒலியெழுப்பும். யுக முடிவு வரும்போது, மனிதர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பணியாட்களைக் கைவிட்டுத் துறப்பார்கள். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, யுகத்தின் முடிவு வரும்போது, மனிதர்கள், தாங்கள் தொழில் செய்யும் நாடுகள், திசைகள், நகரங்களை விட்டு, புதியவற்றை {புதிய நாடு, திசை, நகரம் ஆகியவற்றை} ஒன்றன் பின் ஒன்றாக அடைவார்கள். மனிதர்கள் “ஓ பிதாவே” {தந்தையே}, “ஓ சுதனே” {மகனே} என்று உச்சரித்தவாறு உலகமெங்கும் திரிந்து, அதே போன்ற இன்னும் பல பயங்கரமான அலறல்களை ஒலிப்பார்கள்.
அந்தப் பயங்கராமன காலங்கள் முடிந்த பிறகு, புதிய படைப்புகள் தொடங்கும். மனிதர்கள் மீண்டும் படைக்கப்பட்டுப் பிராமணர்களில் தொடங்கும் நால்வகையாகப் பிரிவார்கள். அந்நேரத்தில், மனிதர்கள் அதிகரிக்கவும், மகிழ்ச்சிக்குத்தக்க முன்ஜாக்கிரதையோடு, மீண்டும் அனுகூலம் பெற்றவர்களாவார்கள். சூரியன், சந்திரன், பிருஹஸ்பதி {குரு = வியாழன் = jupiter} ஆகியவை ஒரே ராசிக்குள் {கடக ராசிக்குள்} புகுந்து பூச நட்சத்திரத்தில் {எட்டாவது நட்சத்திரத்தில்} ஒன்றாக இருக்கும்போது கிருத காலம் தொடங்கும். காலத்துக்குகந்த மழை பொழிய மேகங்கள் கூடும். நட்சத்திரங்களும், நட்சத்திரக்கூட்டங்களும் மங்களகரமான நிலையை அடையும். கோள்களும், தங்கள் சுற்றுப்பாதையில் முறையாகச் சுழன்று, மிகவும் மங்களகரமாக நிலையை அடையும். சுற்றிலும் செழுமையும், அபரிமிதமான ஆரோக்கியமும் அமைதியும் இருக்கும். பிறகு, நியமிக்கப்பட்ட நேரத்தில் கல்கி என்ற பெயர் படைத்த அந்தணர் பிறப்பார். அவர் விஷ்ணுவைப் புகழ்ந்தபடி, பெரும் சக்தியும், புத்திக்கூர்மையும், பெரும் பராக்கிரமும் கொண்டவராக இருப்பார். அவர் ஒரு மங்களகரமான அந்தணக் குடும்பத்தில் சம்பலம் என்ற கிராமத்தில் பிறப்பார். வாகனங்கள், ஆயுதங்கள், வீரர்கள், தளவாடங்கள், பாதுகாப்புக் கவசங்கள் போன்றவை அவர் நினைக்கும்போது அவருக்குக் கிடைக்கும். அவர் {கல்கி} மன்னர்களுக்கெல்லாம் மன்னராகி, அறத்தின் பலத்தால் எப்போதும் வெற்றி பெறுபவராக இருப்பார். அவர் மீண்டும் வகைகளை {வர்ணங்களை} மீட்டு, உயிரினங்கள் நிறைந்த, போக்கில் முரண்பாடு கொண்ட பூமியில் அமைதியை ஏற்படுத்துவார். பெரும் அறிவாற்றல் கொண்ட அந்தப் பிரகாசமிக்க அந்தணர் {கல்கி} தோன்றியதும், அனைத்தையும் அழிப்பார். அவரே அனைத்தையும் அழிப்பவராகவும், புதிய யுகத்தைத் தொடங்கி வைப்பவராகவும் இருப்பார். பிராமணர்கள் சூழ இருக்கும் அந்த அந்தணர் {கல்கி}, தாழ்ந்த இழிவான மனிதர்கள் எங்கெல்லாம் தஞ்சமடைந்திருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று அந்த மிலேச்சர்கள் அனைவரையும் அடியோடு அழிப்பார்.
கல்கி கானகம் புகுவார்! – வனபர்வம் பகுதி 190-கல்கியால் கலிகாலத்தின் தீமைகள் அகன்று புதிதாகக் கிருத காலம் மலரும் என்று மார்க்கண்டேயர் சொன்னது; விடாமல் அறம்பயிலும்படி மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் சொன்னது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “திருடர்கள் மற்றும் கொள்ளையர்களை வேரோடு அழித்த பிறகு, ஒரு பெரும் குதிரை வேள்வியில் {அசுவமேத வேள்வியில்}, இந்தப் பூமியை கல்கி அந்தணர்களுக்குக் கொடுப்பார். புனிதமான காரியங்களைச் செய்து சிறந்த புகழைக் கொண்ட கல்கி, சுயம்புவால் விதிக்கப்பட்ட மங்களகரமான புதிய அருளாட்சியை நிறுவிய பிறகு, காண்பதற்கினிய கானகத்திற்குள் புகுவார். பிராமணர்களால் திருடர்களும், கொள்ளையர்களும் வேரோடு ஒழிக்கப்பட்ட பிறகு, பூமியெங்கும் செழிப்பாக இருக்கும். இந்தப் பூமியில் உள்ள மக்கள் அனைவரும் அவரது {கல்கியின்} நடத்தையைப் பின்பற்றுவர். இந்த உலகத்தில் உள்ள நாடுகள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்த்திய பிறகு, பிராமணர்களில் புலியான கல்கி, மான் தோலையும், ஈட்டிகளையும், சூலங்களையும் அங்கேயே விட்டு, அந்தணர்களில் முதன்மையானவர்களால் புகழப்பட்டபடி பூமியெங்கும் சுற்றுவார். அவர் {கல்கி} அந்தணர்களுக்குத் தக்க மரியாதைகளைச் செய்து, திருடர்களையும் கொள்ளையர்களையும் கொல்வதிலேயே முழு நேரமும் ஈடுபட்டுக் கொண்டிருப்பார். அவர் {கல்கி}, திருடர்களையும், கொள்ளையர்களையும் கொன்று “ஓ! தந்தையே”, “ஓ! தாயே”, “ஓ! மகனே” என்று இதயத்திலிருந்து கதற வைப்பார். அதே போல, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, பாவங்கள் வேரோடு ஒழிக்கப்பட்டு, கிருத காலத்தின் தொடக்கத்தில் அறம் தழைக்கும். மனிதர்கள் மீண்டும் அறச் சடங்குகள் பயில ஆரம்பிப்பார்கள்.
கிருத காலத்தில், நன்றாகப் பதியமிட்ட தோட்டங்களும், வேள்வி மண்டபங்களும், பெரிய குளங்களும், அந்தணப் புராணங்களை வளர்க்கும் கல்விச்சாலைகளும், தடாகங்களும், கோவில்களும் எங்கும் மீண்டும் தோன்றும். விழாக்களும், வேள்விச்சடங்குகளும் மீண்டும் செய்யத்தொடங்கப் படும். அந்தணர்கள் நல்லவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் ஆவார்கள். மறுபிறப்பாளர்கள் {அந்தணர்கள்}, தவச்சடங்குகளுக்குத் தங்களை அர்ப்பணித்து முனிவர்களாவார்கள். இழிந்தவர்களால் நிரம்பியிருந்த தவசிகளின் ஆசிரமங்கள் மீண்டும் உண்மை நிறைந்த மனிதர்களின் இல்லங்களாகும். பொதுவாக மனிதர்கள் உண்மையை {சத்தியத்தை} போற்றவும் புகழவும் செய்வார்கள். நிலத்தில் தூவப்படும் விதைகள் அனைத்தும் முளைக்கும். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அனைத்து வகைப் பயிர்களும் எல்லாக் காலங்களிலும் வளரும். தானம், தவங்கள், நோன்புகள் ஆகியவற்றுக்கு மனிதர்கள் தங்களை அர்ப்பணிப்பார்கள். அந்தணர்கள் தியானத்துக்குத் தங்களை அர்ப்பணிப்பார்கள். அறம்சார்ந்த ஆன்மாக்களாலும், எப்போதும் உற்சாகமாக இருக்கும் மனிதர்களாலும் வேள்விகள் நடத்தப்படும். பூமியின் ஆட்சியாளர்கள் தங்கள் நாடுகளை அறம் சார்ந்து அரசாள்வார்கள். அப்படிப்பட்ட கிருத காலத்தில் வைசியர்கள் தங்கள் வகைக்கு உண்டான செயல்களுக்குத் தங்களை அர்ப்பணிப்பார்கள். அந்தணர்கள் ஆறு வகைக் கடமைகளுக்கு (கற்பது, கற்பிப்பது, தானாக முன்வந்து வேள்விகள் நடத்துவது, பிறர் செய்யும் வேள்விகளை நடத்திக் கொடுப்பது, அறப்பணிகள் செய்வது, பரிசுகளை ஏற்பது ஆகிய ஆறு வகைக் கடமைகளுக்குத்) தங்களை அர்ப்பணிப்பார்கள். க்ஷத்திரியர்கள் பராக்கிரமச் செயல்களுக்குத் தங்களை அர்ப்பணிப்பார்கள். சூத்திரர்கள், மூன்று (உயர்ந்த) வகையினருக்கும் சேவை செய்வதில் தங்களை அர்ப்பணிப்பார்கள்.
இவையே, ஓ! யுதிஷ்டிரா, கிருத, திரேதா, துவாபர மற்றும் தொடரும் {கலி} காலங்களின் வழிகளாகும். இப்போது நான் உனக்கு அனைத்தையும் விவரித்து விட்டேன். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, பலதரப்பட்ட யுகங்களால் அணைக்கப்படும் காலங்களைப் பொதுவாக நான் உனக்குச் சொல்லிவிட்டேன். முனிவர்களால் வழிபடப்படும் {வாயு} புராணத்தில் வாயுவால் சொல்லப்பட்ட கடந்த கால மற்றும் எதிர்கால நிலைகளை நான் இப்போது உனக்குச் சொன்னேன். இறப்பற்றவனான {சிரஞ்சீவியான} நான் உலகத்திற்கு விதிக்கப்பட்ட மற்றும் விதிக்கப்படாத வழிகளையும் பல முறை கண்டிருக்கிறேன். உண்மையில் நான் கண்ட அனைத்தையும், உணர்ந்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! மங்காத புகழ் கொண்டவனே {யுதிஷ்டிரா}, தர்மம் குறித்த உனது சந்தேகங்களை விலக்கவல்லதான வேறொன்றை நான் சொல்வேன். இனி நீ உன் தம்பிகளுடன் சேர்ந்து அதைக் கேள். ஓ! அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே, நீ உனது ஆன்மாவை அறத்தில் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அறம்சார்ந்த ஆன்மா கொண்ட மனிதன், இவ்வுலகிலும் மறு உலகிலும் அருளைப் பெறுகிறான். ஓ பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, நான் சொல்லப்போகும் மங்களகரமான வார்த்தைகளைக் கேள். ஒருபோதும் அந்தணர்களை அவமதிக்காதே. கோபம் கொண்ட அந்தணன், தனது நோன்புகளால் மூன்று உலகங்களையும் அழிக்க வல்லவன்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மார்க்கண்டேயரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட புத்திக்கூர்மையும் பெரும் பிரகாசமும் படைத்த குருக்களின் அரசத் தலைவன் {யுதிஷ்டிரன்} பெரும் விவேகம் கொண்ட வார்த்தைகளைப் பேசலானான். {யுதிஷ்டிரன்}, “ஓ! முனிவரே {மார்க்கண்டேயரே}, நான் எனது குடிகளைக் காக்க வேண்டும் என்றால், நான் எதுபோன்ற நடத்தை வழிகளைப் பின்பற்ற வேண்டும்.? நான் எனது வகைக்கான {க்ஷத்திரியர்களின்} கடமைகளில் இருந்து வழுவாமல் இருக்க நான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.
இதைக் கேட்ட மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “அனைத்து உயிரனங்களுக்கும் நன்மை செய்ய உன்னை நீ அர்ப்பணித்து, அவற்றிடம் கருணையோடு இரு. அனைத்து உயிரினங்களிடமும் அன்பு செலுத்து, எதையும் வெறுக்காதே. பேச்சில் உண்மையுடனும், எளிமையாகவும், ஆசைகளை முழுக் கட்டுக்குள் வைத்துக் கொண்டும், எப்போதும் உனது மக்களைப் பாதுகாப்பதில் உன்னை அர்ப்பணித்துக் கொள். அறம் பயின்று, பாவங்களைக் கைவிடு. மூதாதையரையும், தெய்வத்தையும் வழிபடு. அறியாமையிலும் கவனமின்மையாலும் நீ எதையெல்லாம் செய்தாயோ, அவற்றையெல்லாம் நீ செய்யும் அறப்பணிகளால் கழுவு. பெருமை மற்றும் கர்வத்தைக் கைவிட்டு, பணிவு மற்றும் நன்னடத்தையைக் கைக்கொள். முழு உலகத்தையும் அடிபணியச் செய்து இன்புற்றிரு, மகிழ்ச்சி உனதாகட்டும். இதுவே அறத்திற்கு உடன்படும் நடத்தை போக்காகும் {நடத்தையாகும்}. அறம் சார்ந்ததாக இதுவரை கருதப்பட்டு வந்ததையும், இனிமேல் கருதப்படப் போவதையும் நான் உனக்கு உரைத்துவிட்டேன். கடந்த காலம் சம்பந்தமாகவோ எதிரகாலம் சம்பந்தமாகவோ நீ அறியாதது எதுவுமில்லை. எனவே, ஓ! மகனே {யுதிஷ்டிரா}, தற்போதைய உனது இடர்க் காலத்தை மனதில் கொள்ளாதே. காலத்தால் துன்புறுத்தப்படும்போது, விவேகிகள் {ஞானம் கொண்டோர்} அதில் மூழ்கிப் போய்விடுவதில்லை. ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே {யுதிஷ்டிரா}, சொர்க்கவாசிகளும்கூட {தேவர்களும்கூட} காலத்தை விஞ்ச முடியாது. காலம் அனைத்து உயிரினங்களையும் துன்புறுத்துகிறது. ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, உண்மை {சத்தியம்} சம்பந்தமாக நான் சொன்னவற்றில் உனது மனது சந்தேகம் கொள்ள வேண்டாம். சந்தேகம் உனது இதயத்தை அடைய நீ அனுமதித்தால், உனது அறம் குறையும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நீ கொண்டாடப்படும் குடும்பமான குருக்களின் குடும்பத்தில் பிறந்திருக்கிறாய். அப்படிப்பட்ட நீ, நான் சொன்னவற்றை எண்ணத்தாலும், வார்த்தையாலும், செயலாலும் கடைப்பிடிக்க வேண்டும்” என்று பதிலுரைத்தார் {மார்க்கண்டேயர்}.
யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, “ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே {மார்க்கண்டேயரே}, உமது கட்டளையின் பேரில், காதுக்கு இனிமையான வகையில் நீர் எனக்குச் சொன்னவற்றின்படி நிச்சயமாக நடந்து கொள்வேன். ஓ! அந்தணர்களில் முதன்மையானவரே {மார்க்கண்டேயரே}, பேராசையும் காமமும் என்னிடம் கிடையாது. அச்சமோ, கர்வமோ, பெருமையோ என்னிடம் கிடையாது. எனவே, ஓ! தலைவா {மார்க்கண்டேயரே}, நான் நீர் எனக்குச் சொன்ன அனைத்தையும் கடைப்பிடிப்பேன்”, என்று பதிலுரைத்தான்.
வைசம்பாயனர் {ஜனமேஜனிடம்} தொடர்ந்தார், “புத்திக்கூர்மையுடைய மார்க்கண்டேயரின் வார்த்தைகளைக் சாரங்கம் என்ற வில்லைத் தாங்கியிருப்பவனுடன் {கிருஷ்ணனுடன்} சேர்ந்து கேட்ட பாண்டுவின் மகன்களும் {பாண்டவர்கள்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அங்கே இருந்த அந்தணர்களில் காளைகளும், மற்றுப் பிறரும் மகிழ்ச்சியால் நிரம்பினார்கள். பழங்காலம் தொடர்பான இந்த அருள் நிறைந்த வார்த்தைகளை, ஞானத்தைக் கொடையாகக் கொண்ட மார்க்கண்டேயரிடம் இருந்து கேட்ட அவர்களின் இதயங்கள் ஆச்சரியத்தால் நிரம்பின”.
பரீக்ஷித்தும்! சுசோபனையும்! – வனபர்வம் பகுதி 191அ-மார்க்கண்டேயர் தவளைக்கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்னது; பரிக்ஷித்து ஒரு பெண்ணை மணந்தது; அப்பெண் நீரில் மறைந்தது; அப்படி மறைந்ததற்குத் தவளைகளே காரணம் என்று பரிக்ஷித்துத் தவளைகளைக் கொல்ல உத்தரவிட்டது; தவளை மன்னன் ஆயு பரிக்ஷித்தைக் கண்டு, தனது மகளான சுசோபனையை அவனுக்கு மணமுடித்துக் கொடுத்தது…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} சொன்னான், “அந்தணர்களின் பெருமையைப் பலம்வாய்ந்த தவசியான மார்க்கண்டேயர் பாண்டுவின் மகன்களுக்கு விவரித்தது போன்றே நீர் எனக்கு முழுமையாக உரைப்பதே உமக்குத் தகும்”
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்} மார்க்கண்டேயரிடம், “அந்தணர்களின் பெருமைகளை எனக்கு நீர் விவரிப்பதே உமக்குத் தகும்” என்று கேட்டான். மார்க்கண்டேயர், “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில் அந்தணர்களின் நடத்தை எவ்வாறு இருந்தது என்பதைக் கேள்” என்றார்.
மேலும் மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இக்ஷவாகு குலத்தைச் சேர்ந்த ஒரு மன்னன், பரிக்ஷித் என்ற பெயரில் அயோத்தியாவில் இருந்தான். ஒருகாலத்தில் அந்தப் பரிக்ஷித் வேட்டையாடச் சென்றான். அவன் ஒரு மானைத் துரத்திக் கொண்டு சென்ற போது, அந்த விலங்கு {குதிரை}, அவனை (மனிதர்களின் வசிப்பிடங்களற்ற ஒரு இடத்துக்கு} நீண்ட தூரத்திற்கு இட்டுச் சென்றது. வெகு தூரம் சென்றதால் களைத்துப் போயிருந்த அவன் {மன்னன் பரிக்ஷித்}, பசியாலும் தாகத்தாலும் துன்புற்று அந்த நாட்டின் ஒரு பகுதியில் இருந்த இருள் நிறைந்த அடர்ந்த கானகத்துக்குச் சென்றான். அக்கானகத்தைக் கண்ட மன்னன் {பரிக்ஷித்}, அதற்குள் நுழைந்து காண்பதற்கினிய ஒரு குளத்தை அங்குக் கண்டான். அவனும் அந்த விலங்கும் {குதிரையும்} அங்குக் குளித்தனர். அங்குக் குளித்த குதிரை புத்துணர்ச்சி பெற்றது. அதன் முன் சில தாமரை இழைகளையும் தண்டுகளையும் இட்டபடி, அம்மன்னன் {பரிக்ஷித்} அந்தக் குளத்தின் அருகில் அமர்ந்தான்.
அங்கு அந்தக் குளத்தின் அருகில் அவன் {மன்னன் பரிக்ஷித்} இருந்தபோது, குறிப்பிட்ட வகை இனிமையான இசையைக் கேட்டான். அவ்விசையைக் கேட்ட அவன் தனக்குள், “இங்கு மனிதர்களின் கால்தடங்களை நான் காணவில்லை. இந்த இசை எங்கிருந்து யாரால் வருகிறது?” என்று நினைத்தான். அம்மன்னன் விரைவில் பூக்கள் சேகரித்துக் கொண்டு பாடிக்கொண்டிருந்த ஒரு அழகிய மங்கையைக் கண்டான். அம்மன்னன் {பரிக்ஷித்} அவளிடம், “அருளப்பட்டவளே, நீ யார்? நீ யாருடையவள்?” என்று கேட்டான். அதற்கு அவள், “நான் ஒரு கன்னிகை” என்றாள். அதற்கு அம்மன்னன், “நீ என்னுடையவள் ஆகும்படி நான் உன்னைக் கேட்கிறேன்” என்றான். அதற்கு அந்தக் கன்னிகை, “நீர் எனக்கு ஒரு உறுதிமொழி கொடுக்க வேண்டும், அப்போதுதான் என்னால் உம்முடையவள் ஆக முடியும். இல்லாவிட்டால் முடியாது” என்றாள். மன்னன் உறுதிமொழியைக் குறித்து அந்தப் பெண்ணிடம் கேட்க, அவள், “நீங்கள் எனது கண்களால் நீரைக் காணச் செய்யக்கூடாது” என்றாள். மன்னனும் “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அவளை மணந்தான். இப்படி அவளை மணந்து கொண்ட பரிக்ஷித் (அவளுடன்} பெரும் மகிழ்ச்சியுடன் விளையாடி, அமைதியாக அவளுடன் அமர்ந்தான். மன்னன் அவளுடன் தங்கியிருந்தபோது, அவனது துருப்புகள் அந்த இடத்தை அடைந்தன. அந்த ஏகாதிபதியை {பரிக்ஷித்தை} கண்ட துருப்புகள் அவனைச் சூழ்ந்து கொண்டன. அவனது துருப்புகளின் இருப்பால் உற்சாகமடைந்த மன்னன், {பரிக்ஷித்} ஒரு அழகான வாகனத்தில் (புதிதாக) தான் மணந்த மனைவியுடன் சென்றான்.
தலை நகரை {அயோத்தியாவை} அடைந்த அவன் {மன்னன் பரிக்ஷித்} அவளுடன் தனிமையில் வாழ ஆரம்பித்தான். மன்னனுக்கு அருகாமையிலேயே இருந்தவர்கள் கூட அவனைக் காண முடியவில்லை. இதுகுறித்துத் தலைமை அமைச்சர் மன்னனைப் பார்த்துக் கொண்ட பெண்களிடம் கேட்டான். அவன், “நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டான். அந்தப் பெண்கள், “நாங்கள் இங்கு ஒப்பற்ற அழகுடன் கூடிய ஒரு பெண்ணைக் காண்கிறோம். அவளுக்கு நீரைக் காண்பிப்பதில்லை என்ற உறுதிமொழி கொடுத்து அவளை மணந்து கொண்ட மன்னர் அவளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்” என்றனர். இந்த வார்த்தைகளைக் கேட்ட தலைமை அமைச்சர், பல மரங்களும், அபரிமிதமான மலர்களும் கனிகளும் நிறைந்த ஒரு செயற்கை கானகத்தை உண்டாக்கி, அந்தக் காட்டிற்குள்ளேயே ஒரு பெரிய குளத்தை வெட்டச் செய்து, ஒதுங்கிய இடத்தில் இருந்த அதில் {குளத்தில்} அமிர்தம் போன்ற நீர் இருந்தது.
அந்தக் குளம் முத்து வலைகளால் நன்கு மூடப்பட்டிருந்தது. ஒரு நாள் மன்னனைத் தனிமையில் சந்தித்த அவர் {தலைமை அமைச்சர்}, “இது நீரில்லாமல் இருக்கும் நல்ல காடு. நீர் இங்கு இன்பமாக விளையாடலாம்” என்றான். அமைச்சரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {பரிக்ஷித்} அந்தக் காட்டுக்குள் தனது புகழ்மிக்க மனைவியுடன் நுழைந்தான். அந்தக் காண்பதற்கினிய கானகத்தில் அவளுடன் விளையாடிய மன்னன், பசியாலும், தாகத்தாலும் துன்புற்று, களைத்துப் போனான். அம்மன்னன் {பரிக்ஷித்}, அங்கே ஒரு முல்லைக் கொடிப் பந்தலைக் கண்டு, தனது அன்பிற்குரியவளுடன் அந்தப் பந்தலுக்குள் நுழைந்தான். அங்கே அம்மன்னன், அமிர்தம் போன்ற பிரகாசத்துடன் தெளிவுடனும் நீர் நிரம்பிய ஒரு குளதைக் கண்டான். அந்தக் குளத்தின் கரையில் தன் மனைவியுட்ன அமர்ந்த அவன், தன் வணங்கத்தக்க மனைவியிடம், “இந்த நீரில் உற்சாகமாக மூழ்கு” என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட அவள் அந்தக் குளத்திற்குள் மூழ்கினாள். ஆனால் நீருக்குள் மூழ்கிய அவள் மறுபடியும் மேற்பரப்பில் காணப்படவில்லை. மன்னன் அவளைத் தேடினான், ஆனால் அவளைக் கண்டுபிடிக்க அவனால் முடியவில்லை.
பிறகு மன்னன் {பரிக்ஷித்}, அந்தக் குளத்தின் நீரையெல்லாம் வாரி இரைக்கச் சொன்னான், கடைசியாக ஒரு வளையின் வாயிலில் ஒரு தவளை அமர்ந்திருந்தது. இதனால் கோபம் கொண்ட மன்னன், “எனது ஆட்சிக்குட்பட்ட இடங்கள் அனைத்திலும் உள்ள தவளைகள் கொல்லப்படட்டும். யாரெல்லாம் என்னைச் சந்திக்க விரும்புகிறார்களோ அவர்கள் இறந்த தவளைகளுடன் என்னிடம் வரட்டும்” என்ற ஒரு உத்தரவைப் பிறப்பித்தான். இப்படித் தவளைகள் கொல்லப்பட்ட போது, அதற்கு அஞ்சிய அனைத்து தவளைகளும் தங்கள் மன்னனிடம் சென்று நடந்ததைச் சொல்லி முறையிட்டன. பிறகு தவளைகளின் மன்னன் தவசியின் ஆடைகளைத் தரித்துக் கொண்டு மன்னன் பரிக்ஷித்தின் முன்னிலையில் வந்து அந்த ஏகாதிபதியை அணுகிய பிறகு, “ஓ! மன்னா, கோபத்திற்கு ஆளாகாதே! அருள் புரிவாயாக. அப்பாவி தவளைகளைக் கொல்வது உனக்குத் தகாது” என்றது. [இங்கே இரு பாடல்கள் {ஸ்லோகங்கள்} வருகின்றன (அவை): – ஓ மங்கா புகழ் கொண்டவனே, தவளைகளைக் கொல்லாதே! உனது கோபத்தை அடக்கு! தங்கள் ஆன்மாவை அறியாமையில் வைத்திருப்பவர்களின் செழிப்பும் தவத்தகுதிகளும் குன்றும்! தவளைகளிடம் கோபம் கொள்வதில்லை என்ற உறுதிமொழியைக் கொடு! இப்படிப்பட்ட பாவத்தை இழைக்கும் உனக்கு என்ன தேவை இருக்கிறது! தவளைகளைக் கொல்வதால் உனது எந்தக் காரியம் நிறைவேறும்” என்று கேட்டது.
அன்புக்குரியவளின் மரணத்தால் மன்னன் பரிக்ஷித்தின் ஆன்மா துயரத்தில் நிரம்பியிருந்தது. அவன் {மன்னன் பரிக்ஷித்}, “நான் தவளைகளை மன்னிக்க மாட்டேன். மறுபுறம் அவைகளைக் கொல்வேன். இந்த இழிந்த தீயவைகள் {தவளைகள்} எனது அன்பிற்குரியவளை விழுங்கிவிட்டன. எனவே, என்னால் எப்போதும் கொல்லப்பட்ட இந்தத் தவளைகள் தகுந்தனவே. ஓ! கற்றவனே, இதில் உன் சார்பாக நீ தலையிடுவது உனக்குத் தகாது” என்றான். பரிக்ஷித்தின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தவளை மன்னன், மனதால் துன்புற்று, “ஓ மன்னா அருள்புரிவாயாக! நான் ஆயு என்ற பெயர் கொண்ட தவளைகள் மன்னனாவேன். உனது மனைவியாக இருந்தவள், எனது மகளான சுசோபனையே ஆவாள். உண்மையில், இது அவளது கெட்ட நடத்தையாலேயே நிகழ்ந்தது. இதற்கு முன், பல மன்னர்கள் அவளால் {இப்படி} ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். அதற்கு அம்மன்னன் {பரிக்ஷித்}, நான் அவளை அடைய விரும்புகிறேன். நீர் அவளை எனக்கு அளிப்பீராக!” என்றான்.
அதன்பேரில் தவளைகள் மன்னன் {ஆயு} தனது மகளைப் பரிக்ஷித்துக்கு அளித்து, அவளிடம் {சுசோபனையிடம்}, “மன்னனுக்காகக் காத்திருந்து அவனுக்குச் சேவை செய்” என்றான். இப்படித் தனது மகளிடம் பேசிய அவன் {தவளை மன்னன்}, மேலும் அவளிடம் கோபமாக, “நீ பல மன்னர்களை ஏமாற்றியிருப்பதால், உனது உண்மையற்ற நடத்தையின் காரணமாக, உனது வாரிசுகள் அந்தணர்களிடம் மரியாதை குறைவாக நடப்பார்கள்” என்றான். ஆனால் அவளை அடைந்த மன்னர் மிகவும் மகிழ்ந்து, மூவுலகங்களும் கிடைத்தது போல இன்புற்று இருந்தான். அவன் {மன்னன் பரிக்ஷித்} தவளைகள் மன்னனை {ஆயுவை} மரியாதையுடன் உரிய முறையில் வணங்கி மகிழ்ச்சியால் ஏற்பட்ட கண்ணீருடனும் அடைபட்ட குரலுடனும், “நான் உம்மால் உதவி பெற்றேன்” என்றான். பிறகு தவளைகள் மன்னன் தனது மகளிடம் விடைபெற்று, அவன் எங்கிருந்து வந்தோனோ அங்கேயே சென்றான்.
பரீக்ஷித்தின் மகன்களும்! வாமதேவரும்!! – வனபர்வம் பகுதி 191ஆ-பரிக்ஷித்தின் மகனான சலன் வாமதேவரிடம் இரண்டு வாமிக் குதிரைகளைப் பெறுவது; சலன் அக்குதிரைகளை மீண்டும் வாமதேவரிடம் கொடுக்க மறுப்பது; வாமதேவர் சலனை நான் ராட்சசர்கள் மூலம் கொல்வது; சலனின் தம்பி தளன் மன்னனாவது; அவனும் குதிரைகளைக் கொடுக்காமல் வாமதேவரிடம் மோதுவது; வாமதேவர் அவனைச் செயல்பட விடாமல் தடுத்தது; ராணி பெற்ற வரம்..
சில காலம் கழித்து அம்மன்னன் {பரிக்ஷித்} மூன்று மகன்களை அவளிடம் {தவளை இளவரசியிடம்} பெற்றான். அவர்களுக்குச் சலன், தளன், பலன் பெயரிட்டான். அதற்குச் சில காலம் கழித்து அவர்களது தந்தை {பரிக்ஷித்} மூத்தவனை {சலனை} அரியணையில் அமர்த்தி விட்டு, இதயத்தைத் தவத்தில் நிறுத்தி, கானகத்தில் ஓய்ந்தான். ஒரு நாள் சலன் வேட்டையாடச் சென்ற போது, ஒரு மானைக் கண்டு, தனது தேரில் அதைத் தொடர்ந்து சென்றான். அந்த இளவரசன் {சலன்} தனது தேரோட்டியிடம், “விரைவாக ஓட்டு” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தேரோட்டி, மன்னனிடம் {சலனிடம்}, “இக்காரியத்தில் ஊக்கமடையாதீர். இந்த மான் உம்மால் பிடிக்கத்தக்கது அல்ல. உண்மையில் வாமி குதிரைகள் உமது தேரில் பூட்டப்பட்டிருந்தால் உம்மால் அந்த மானைப் பிடிக்க இயலும்” என்றான். அதன்பேரில் மன்னன் {சலன்} தனது தேரோட்டியிடம், “வாமி குதிரைகளைக் குறித்து எனக்குச் சொல், இல்லையென்றால் நான் உன்னைக் கொல்வேன்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட தேரோட்டி மிகவும் பயந்தான். அவன் மன்னனுக்கும் பயந்தான், வாமதேவரின் சாபத்துக்கும் அஞ்சினான். எனவே மன்னனுக்கு அவன் எதையும் சொல்லவில்லை. உடனே மன்னன் தனது குறுவாளை எடுத்து அவனிடம் {தேரோட்டியிடம்}, “விரைவாகச் சொல். இல்லையெனில் நான் உன்னைக் கொல்வேன்” என்றான். மன்னனுக்கு {சலனுக்கு} அஞ்சிய அந்தத் தேரோட்டி கடைசியாக, “வாமி குதிரைகள் வாமதேவருக்குச்1சொந்தமானவை; அவை மனோ வேகம் கொண்டவை” என்றான் {தேரோட்டி}.
இதைச் சொன்ன தனது தேரோட்டியிடம் அம்மன்னன் {சலன்}, “வாமதேவரின் ஆசிரமத்திற்குச் செல்” என்றான். வாமதேவரின் ஆசிரமத்தை அடைந்த மன்னன் அம்முனிவரிடம் {வாமதேவரிடம்}, “ஓ! புனிதமானவரே {வாமதேவரே}, என்னால் அடிக்கப்பட்ட மான் ஒன்று வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உமது இரண்டு வாமி குதிரைகளை எனக்குக் கொடுத்து, அந்த மான் பிடிபட ஆவன செய்வதே உமக்குத் தகும்” என்றான். அம்முனிவர் {வாமதேவர்} அவனிடம் {சலனிடம்}, இவ்விரண்டு வாமி குதிரைகளை நான் உனக்குத் தருவேன். ஆனால் உனது நோக்கம் நிறைவேறியதும், எனது வாமி குதிரை ஜோடியானது விரைவாக என்னை வந்து அடைய வேண்டும்” என்று பதிலளித்தார். இந்தக் குதிரைகளை எடுத்துக் கொண்ட மன்னன் {சலன்} முனிவரிடம் {வாமதேவரிடம்} விடைபெற்றுக் கொண்டு, தனது தேரில் வாமி குதிரைகளைப் பூட்டி மானைத் தொடர்ந்து சென்றான். ஆசிரமத்தை விட்டு அகன்றதும், அவன் தனது தேரோட்டியிடம், “இந்தக் குதிரை ரத்தினங்களை வைத்துக் கொள்ள அந்தணர்களுக்குத் தகுதியில்லை. இவற்றை வாமதேவருக்குத் திருப்பித் தரக்கூடாது” என்றான். இதைச் சொன்ன அவன் {மன்னன் சலன்} மானைப் பிடித்துக் கொண்டு தனது தலை நகருக்குத் திரும்பினான். அங்கே தனது அரண்மனையின் உள்ளறைகளில் {அந்தப்புரத்தில்} அந்தக் குதிரைகளை நிறுத்தினான்.
அதே வேளையில் முனிவர் {வாமதேவர்}, “இளவரசன் இளைஞன். எனவே அற்புதமான இரண்டு விலங்குகளை அடைந்து, திரும்ப என்னிடம் கொடுக்காமல் அதனுடன் இன்பமாக விளையாடிக் கொண்டிருக்கிறான். அந்தோ, என்ன பரிதாபம்!” என்று நினைத்தார். பிறகு ஒரு மாதம் கழித்து, தனது சீடனொருவனிடம், “ஓ! ஆத்ரேயா, நீ மன்னிடம் {சலனிடம்} சென்று, வாமி குதிரைகளால் ஆக வேண்டிய காரியங்கள் முடிந்து விட்டால், அதை உனது குருவுக்குத் திருப்பி அளிக்க வேண்டும் என்று அவனிடம் {மன்னன் சலனிடம்} சொல்” என்றார். அதன்பேரில் சீடனான ஆத்ரேயரும், மன்னனிடம் சென்று, அவருக்குச் சொல்லப்பட்டதைச் சொன்னார். அதற்கு மன்னன் {சலன்}, “இந்த இரண்டு குதிரைகளை உரிமை கொள்ள மன்னர்ககளுக்கே தகுதியுண்டு. ரத்தினங்கள் போன்ற மதிப்புக் கொண்ட இவற்றை உரிமைகொள்ள அந்தணர்களுக்குத் தகுதி கிடையாது. குதிரைகளைக் கொண்டு அந்தணர்களுக்கு என்ன காரியம் ஆகப் போகிறது? திருப்தியுடன் திரும்பிச் செல்லும்” என்றான் {மன்னன் சலன்}.
மன்னனால் {சலனால்} இப்படிச் சொல்லப்பட்ட ஆத்ரேயர், தனது குருவிடம் {வாமதேவரிடம்} திரும்பி நடந்தது அத்தனையும் சொன்னார். விரும்பத்தகாத காரியத்தைக் கேட்ட வாமதேவரின் இதயம் கோபத்தால் நிறைந்தது. தானே நேரடியாக மன்னனிடம் {மன்னன் சலனிடம்} சென்று தனது குதிரைகளைக் கேட்டார் {வாமதேவர்}. அவர் கேட்டதைக் கொடுக்க மன்னன் {சலன்} மறுத்தான். வாமதேவர், “ஓ பூமியின் அதிபதியே {சலனே}, எனது வாமி குதிரைகளை எனக்குக் கொடு. உன்னால் முடிக்க முடியாத காரியத்தை அவற்றைக் {எனது குதிரைகளைக்} கொண்டு முடித்தாய். பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களின் செயல்களில் குறுக்கிட்டு, ஓ! மன்னா {சலனே}, வருணனின் சுருக்கு {பாசக்} கயிற்றால் மரணத்திற்கு ஆட்படாதே” என்றார் {வாமதேவர்}.
இதைக் கேட்ட மன்னன் {சலன்}, “ஓ! வாமதேவரே, இந்த இரண்டும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அற்புதமான சாந்தமான காளைகளே அந்தணர்களுக்குத் தகுதியான விலங்குகள். ஓ! பெரும் முனிவரே (அவற்றை எடுத்துக் கொண்டு) நீர் நினைத்த எந்த இடத்திற்கும் செல்லும். உண்மையில், உம்மைப் போன்றோரை {அந்தணர்களை} வேதங்களே சுமக்கின்றன” என்றான். பிறகு வாமதேவர் {மன்னன் சலனிடம்} , “ஓ! மன்னா {சலனே}, எங்களைப் போன்றோரை {அந்தணர்களை} வேதங்கள் சுமக்கின்றன என்பது உண்மையே. ஆனால் அது இந்த உலகத்திற்குப் பின்னர் வரும் உலகத்திலேயே நடக்கும். இருப்பினும் இவ்வுலகில், ஓ! மன்னா {சலனே}, இதைப் போன்ற விலங்குளே {குதிரைகளே} என்னையும், நம்மைப் போன்றோரையும், இன்னும் பலரையும் சுமக்கின்றன” என்றார். அதற்கு மன்னன் {சலன்}, “நாலு கழுதைகளோ, அற்புதமான வகையில் வந்த நாலு கோவேறு கழுதைகளோ, காற்றைப் போன்ற வேகம் கொண்ட நான்கு குதிரைகளோ உம்மைச் சுமக்கட்டும். இவற்றுடன் செல்லும். இந்த இரண்டு வாமி குதிரைகளும் க்ஷத்திரியர்கள் உரிமைகொள்ளத் தக்கவை. எனவே, இவை {வாமி குதிரைகள்} உமதில்லை என்பதை அறிந்து கொள்ளும்” என்று பதிலளித்தான்.
வாமதேவர் {மன்னன் சலனிடம்}, “ஓ! மன்னா {சலனே}, அந்தணர்களுக்குக் கடுமையான நோன்புகள் விதிக்கப்பட்டுள்ளன. நான் அவற்றை {சரியாக} நோற்று வாழ்ந்திருக்கிறேன் என்றால், என்னால் கட்டளையிடப்பட்ட பயங்கரமான முகம் கொண்ட பலம்வாய்ந்த நான்கு கடும் ராட்சசர்கள், கொல்லும் விருப்பத்துடன் உன்னைத் தொடர்ந்து, தங்கள் கூர்மையான ஈட்டியில் உன்னைச் சுமந்து சென்று, உனது உடலை நான்காக வெட்டிப் போடட்டும்” என்றார். இதைக் கேட்ட மன்னன் {சலன்}, “ஓ! வாமதேவரே, எண்ணத்தாலும், வார்த்தையாலும், செயலாலும் எனது உயிரை எடுக்க விரும்பும் அந்தணன் என்று உம்மை நினைப்பவர்கள், எனது கட்டளையின் பேரில், பிரகாசமிக்க ஈட்டிகளையும் வாள்களையும் எடுத்து உம்மையும் உமது சீடர்களையும் எனது முன்பாக {அடித்து} வீழ்த்தட்டும்” என்றான்.
அதற்கு வாமதேவர் {மன்னன் சலனிடம்}, “ஓ! மன்னா, இந்த எனது வாமி குதிரைகளை அடைந்து “நான் அவற்றைத் திரும்பத் தருவேன்” என்று நீ சொல்லியிருக்கிறாய். எனவே, எனது வாமி குதிரைகளைக் கொடுத்து, உனது உயிரைப் பாதுகாத்துக் கொள்” என்று பதிலுரைத்தார். இதைக் கேட்ட மன்னன் {சலன்}, மான்களைத் தொடர்வது அந்தணர்களுக்கு விதிக்கப்படவில்லை. உமது பொய்மைக்காக நான் உம்மைத் தண்டிக்க வேண்டும். ஓ! அந்தணரே, இன்று முதல் உமது கட்டளைகள் அனைத்துக்கும் கீழ்ப்படிந்து அருள் உலகங்களை அடைவேன்” என்றான். பிறகு வாம தேவர், “ஒரு அந்தணன் எண்ணத்தாலும், வார்த்தையாலும், செயலாலும் தண்டிக்கப்படக்கூடாது. கற்றறிந்த எவன் இப்படிப்பட்ட அந்தணர்களைத் தவத்தால் அறிகிறானோ, அவன் இவ்வுலகில் முக்கியத்துவம் அடைவதில் தோற்பதில்லை” என்று பதிலுரைத்தார் {வாமதேவர்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “வாமதேவர் இப்படிச் சொன்னதும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அங்கே பயங்கர முகம் கொண்ட நான்கு ராட்சசர்கள் கைகளில் ஈட்டிகளுடன் அங்கே எழுந்து, மன்னனைக் {சலனைக்} கொல்ல {அவனை} அணுகினர். அப்போது அம்மன்னன் {சலன்}, “இக்ஷவாகு குலத்தில் பிறந்தவர்களும், (எனது தம்பி) தளனும், இந்த அனைத்து வைசியர்களும் எனது அதிகாரத்தை ஏற்றுக் கொண்டவர்களானால், வாமதேவருடைய இரண்டு வாமி குதிரைகளையும் நான் கொடுக்க மாட்டேன். இப்படிப்பட்டவர்கள் அறம் சார்ந்தவர்களாக மாட்டார்கள்” என்று கதறினான். அவன் இப்படிப்பட்ட வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருந்த போது, அந்த ராட்சசர்கள் அவனை {மன்னன் சலனைக்} கொன்றனர். அந்தப் பூமியின் தலைவன் {சலன்} விரைவில் பூமியில் கிடத்தப்பட்டான். தங்கள் மன்னன் {சலன்} கொல்லப்பட்டதை அறிந்த இக்ஷவாகு குலத்தினர், {சலனின் தம்பி} தளனை அரியணையில் அமர்த்தினர்.
அந்தணரான வாமதேவர், (இக்ஷவாகு குலத்தவரின்) நாட்டுக்குச் சென்று புதிய ஏகாதிபதியிடம் {தளனிடம்}, “ஓ! மன்னா, மனிதர்கள் அந்தணர்களுக்குத் தானமளிக்க வேண்டும் என்று புனித நூல்கள் தீர்மானித்திருக்கின்றன. நீ பாவத்திற்கு அஞ்சினால், ஓ! மன்னா {தளனே}, தாமதமில்லாமல் எனது வாமி குதிரைகளைக் கொடுத்துவிடு” என்று கேட்டார். வாமதேவரின் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் கோபத்துடன் தனது தேரோட்டியிடம், “நான் வைத்திருக்கும் அம்புகளில் ஒன்றில் அழகானதைக் கண்டு அதில் நஞ்சு பூசி என்னிடம் எடுத்து வா. அதனால் துளைக்கப்பட்ட இந்த வாமதேவர் வலியால் தரையில் விழுந்து, நாய்களால் கிழிக்கப்படட்டும்” என்றான். இதைக் கேட்ட வாமதேவர், “ஓ மன்னா {தளனே}, உனக்கு உனது ராணி மூலம் சயேனஜித் என்ற பெயர் கொண்ட பத்து வயது மகன் உண்டு என்பதை நான் அறிவேன். எனது வார்த்தைகளின் உந்துதலால், அந்த உனது அன்பு பிள்ளையை அந்தப் பயங்கரக் கணைகளால் தாமதமில்லாமல் கொல்வாய்” என்றார் {வாமதேவர்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “வாமதேவரின் இந்த வார்த்தைகளால், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஏகாதிபதியால் {மன்னன் தளனால்} அடிக்கப்பட்ட அந்தக் கடும் கணை, அந்தப்புரத்தில் இருந்த இளவரசனைக் கொன்றது. இதைக் கேட்ட தளன் அப்போது, “இக்ஷவாகு குலத்தோரே, நாம் உங்களுக்கு நல்லது செய்வேன். நான் எனது சக்தியைக் கொண்டு இந்த அந்தணனைக் கொல்வேன். எனக்கு மற்றுமொரு கடும் கணையைக் கொண்டு வாரும். பூமியின் தலைவர்களே, எனது பராக்கிமத்தை இப்போது பாரும்” என்றான். தளனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வாமதேவர், “நஞ்சு பூசி பயங்கரமான தோற்றம் கொண்டு இந்தக் கணையை எனக்குக் குறிவைக்கிறாய். ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {தளனே}, உன்னால் குறி வைக்கவோ அல்லது அதை அடிக்கவோ கூட இயலாது” என்றார். அதன்பேரில் மன்னன் {தளன்} “இக்ஷவாகு குலத்தோரே, என்னால் எடுக்கப்பட்ட கணையை அடிக்க இயலாமல் நான் இருப்பதைக் கண்டீர்கள். நான் இந்த அந்தணனுக்கு மரணமளிப்பதில் தோல்வியுற்றேன். நீண்ட வாழ்நாள் கொண்டு வாமதேவர் வாழட்டும்” என்றான். வாமதேவர், “இந்தக் கணையால் நீ உனது ராணியைத் தொட்டால், நீ பாவத்திலிருந்து (அந்தணரைக் கொல்ல முயற்சித்த பாவத்திலிருந்து) தூய்மையடைவாய்” என்றார்.
மன்னன் தளன் தனக்குச் சொல்லப்பட்டது போலவே செய்தான். பிறகு ராணி முனிவரிடம் {வாமதேவரிடம்}, “ஓ! வாமதேவரே, இந்த எனது கொடிய கணவரிடம் நாளுக்கு நாள் நல்ல வார்த்தகளைச் சொல்லத்தக்கவளாகவும், அந்தணர்களுக்காகக் காத்திருந்து அவர்களுக்குச் சேவை செய்பவர்களாகவும் நான் ஆகக் கடவேன். இதனால், ஓ! அந்தணரே, நான் இதற்குப் பிறகு புண்ணிய உலகங்களை அடைவேன்” என்றாள். ராணியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வாமதேவர், “ஓ! அழகிய கண்கள் கொண்டவளே, நீ இந்த அரச குலத்தைக் காத்தாய். ஒப்பற்ற ஒரு வரத்தை இரந்து கேள். நீ என்ன கேட்டாலும் நான் உனக்கு அதைத் தருவேன். ஓ! களங்கமற்றவளே, ஓ! இளவரசியே, உனது இனத்தாரையும், இக்ஷவாகு குலத்தவரின் பெரும் நாட்டையும் ஆட்சி செய்வாயாக” என்றார். வாமதேவரின் வார்த்தைகளைக் கேட்ட அந்த இளவரசி {தளனின் மனைவியான ராணி}, “ஓ! புனிதமானவரே, எனது கணவர் இந்தப் பாவத்தில் இருந்து விடுபட வேண்டும். இதுவே நான் வேண்டும் வரம். நீர் அவரது மகனுக்கு அவரது இனத்தாருக்கும் செழிப்பை நினைப்பதில் ஈடுபட வேண்டும். ஓ! அந்தணர்களில் முதன்மையானவரே. இதுவே நான் உம்மிடம் கேட்கும் வரம்!” என்று கேட்டாள்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ராணியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட முனிவர் {வாமதேவர்}, ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, “அப்படியே ஆகட்டும்” என்றார். அதனால் மன்னன் தளன் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, அம்முனிவரை வணங்கி, அவரது வாமிக் குதிரைகளை மரியாதையுடன் கொடுத்தான்(வாமதேவர், பெருமுனிவரான கௌதமருக்கும் அகலிகைக்கும் பிறந்த மகனாவார்.)
முனிவர் பகரும்! இந்திரனும்! – வனபர்வம் பகுதி 192-மரணமற்றவர்களின் துன்பம் மற்றும் இன்பம் குறித்து முனிவர் பகருக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த விவாதத்தை யுதிஷ்டிரனுக்கு மார்க்கண்டேயர் சொல்லல்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “முனிவர்களும், அந்தணர்களும், யுதிஷ்டிரனும் கூடி மார்க்கண்டேயரிடம், “பக முனிவர் எப்படி வாழ்நாள் நீண்டவராக ஆனார்?” என்று கேட்டனர்.
“இப்படிக் கேட்கப்பட்ட மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “அரச முனி பகன் பெரும் தவசியாகவும் நீண்ட வாழ்நாள் கொண்டவராகவும் இருந்தார். இதற்கான காரணம் குறித்து நீங்கள் ஆராய வேண்டாம்” என்று பதிலுரைத்தார்.
“ஓ! பாரதா {ஜனமேஜயா}, நீதிமானான குந்தியின் மகன் யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் கூடி மார்க்கண்டேயரிடம், “பகர், தாலப்யர் என்ற பெரும் ஆன்மா படைத்த இருவரும் இறவா நிலை பெற்றவர்கள் என்றும், அம்முனிவர்கள் தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} நண்பர்கள் என்றும் அண்டத்தால் மதிக்கப்படுபவர்கள் என்றும் கேட்விப்படுகிறோம். ஓ! புனிதமானவரே {மார்க்கண்டேயரே}, இன்பமும் துன்பமும் கலந்த நிகழ்வான, பகரும் இந்திரனும் சந்தித்துக் கொண்ட (வரலாற்றை) நிகழ்வை நான் கேட்க விரும்புகிறேன். அவ்வரலாறை நீர் எங்களுக்குத் தெளிவாக விவரியும்” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போர் முடிவுற்றதும், இந்திரனே மூவலகத்திற்கும் ஆட்சியாளனானான். மேகங்கள் அபரிமிதமாக மழையைப் பொழிந்தன. பூமியில் வசித்தவர்கள் அபரிமிதமான விளைச்சலைப் பெற்று அற்புதமான நிலையைப் பெற்றனர். அறத்திற்குத் தங்களை அர்ப்பணித்து, எப்போதும் அறநெறிகள் பயின்று, அமைதியை அனுபவித்தனர். அனைத்து மனிதர்களும் தங்கள் வகைக்குரிய கடமைகளுக்குத் தங்களை அர்ப்பணித்து, இன்பமாகவும் உற்சாகமாகவும் இருந்தார்கள். வளனைக் கொன்றவன் {இந்திரன்}, உலகத்தின் அனைத்து மனிதர்களும் இன்பமாகவும், உற்சாகமாவும் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தான். அந்த நூறு வேள்விகள் செய்தவனான தேவர்கள் தலைவர் {இந்திரன்}, தனது யானையான ஐராவதத்தின் முதுகில் அமர்ந்த படி, தனது குடிகளை ஆராய்ந்தான். அவன் {இந்திரன்}, முனிவர்களின் காண்பதற்கினிய ஆசிரமங்கள் மீதும், பலதரப்பட்ட மங்களகரமான நதிகள் மீதும், செழிப்புடன் இருக்கும் நகரங்கள் மீதும், கிராமங்கள் மற்றும் ஊர்ப்புறங்கள் மீதும் தனது கண்களை மிகுந்த மகிழ்ச்சியோடு செலுத்தினான்.
அவன் {இந்திரன்}, அறப்பயிற்சிகளுக்குத் தங்களை அர்ப்பணித்து, அதிநிபுணத்துவத்துடன் தங்கள் குடிகளை ஆளும் மன்னர்கள் மீதும் கண்களைச் செலுத்தினான். குளங்கள், அணைகள் {நீர்த்தேக்கங்கள்}, கிணறுகள், ஏரிகள், தடாகங்கள் ஆகியன நீர் நிரம்பி, நோன்பு நோற்கும் அந்தணர்களில் சிறந்தவர்களால் வழிபடப்பட்டும் இருப்பதைக் கண்டு, காண்பதற்கினிய பூமியில் இறங்கினான். நூறு வேள்விகள் செய்த அந்தத் தேவன் {இந்திரன்}, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, விலங்குகளும், பறவைகளும் நிறைந்து, காய்கறிகள் அதிகமாக விளையும் கிழக்குப் பகுதியில் கடற்கரையோரமாக இருக்கும் மங்களகரமான, காண்பதற்கினிய, அருள் நிறைந்த ஆசிரமத்தை நோக்கி முன்னேறினான். அந்தத் தேவர்கள் தலைவன் {இந்திரன்}, அங்கே அந்த ஆசிரமத்தில் பகரைக் கண்டான். பகரும் இறவாதவர்களின் {தேவர்களின்} ஆட்சியாளனைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார். அவர் {பகர்}, கால் கழுவ நீரும், அமர தரைவிரிப்பும், வழக்கமாகக் கொடுக்கும் ஆர்க்கியாவும், கனிகளும், கிழங்குகளும் கொடுத்து இந்திரனை வழிபட்டார். வளனைக் கொன்றவனும் வரமளிப்பவனும், மூப்பறியாதவர்களை ஆள்பவனுமான அந்தத் தெய்வீக ஆட்சியாளன் {இந்திரன்}, வசதியாக அமர்ந்த பிறகு பகரிடம் பின்வரும் கேள்வியைக் கேட்டான். அவன் {இந்திரன்}, “ஓ! பாவமற்ற முனிவரே {பகரே}, நீர் நூறு {தேவ} வருடங்கள் {ஒரு லட்சம் வருடங்கள் என்றும் படித்திருக்கிறேன்} வாழ்ந்துவிட்டீர்! ஓ அந்தணரே, இறவாதவர்களின் துன்பங்கள் குறித்து நீர் எனக்குச் சொல்லும்” என்று கேட்டான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இதைக் கேட்ட பகர், “உடன்படாதவர்களுடன் வாழ்வதும், உடன்பட்டு அன்போடு இருப்பவர்களிடம் இருந்து பிரிவதும், தீயவர்களுடன் தோழமை கொள்வதும் இறவாதவர்கள் {சிரஞ்சீவிகள்} தாங்க வேண்டிய தீமைகளாகும். மகன்கள், மனைவிகள், சொந்தங்கள், நண்பர்கள் ஆகியோரின் இறப்பு, அடுத்தவரை நம்பியிருக்கும் நிலையில் ஏற்படும் வலி ஆகியவை தீமைகளில் மிகப்பெரிதானவைகளில் சிலவாகும். (இவை அனைத்தையும் இறப்பில்லாதவர்களின் {மரணமற்றவர்களின்} வாழ்வில் கவனிக்கலாம்). பொருளற்றவர்களைப் பிறர் அவமதிப்பதைவிடப் பரிதாபமான காட்சி உலகில் ஏதும் கிடையாது என்று நான் கருதுகிறேன். குடும்பக் கண்ணியத்தைக் கண்ணியமற்றவர்கள் பெறுவது, கண்ணியவான்கள் குடும்பக் கண்ணியத்தை இழப்பது, சேர்க்கைகள், பிரிவுகள் ஆகிய அனைத்தையும் மரணமற்றவர்களின் வாழ்வில் கவனிக்கலாம். குடும்பக் கண்ணியமற்றவர்கள் செழிப்புடன் இருந்து, அவர்கள் வெல்லாததை வெல்வது ஆகிய அனைத்தும், ஓ நூறு வேள்விகளைச் செய்த தேவனே {இந்திரா}, உன் கண் முன்பாகவே இருக்கின்றன. தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியோரால் ஏற்படும் பேரிடர்கள் மற்றும் பின்னடைவுகளை விட எது பரிதாபகரமாக இருக்க முடியும்? நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் இழிபிறப்பாளர்களின் தொடர்பால் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். ஏழைகள் செல்வந்தர்களால் அவமதிக்கப்படுகிறார்கள். இவற்றைவிட எது பரிதாபகரமாக இருக்க முடியும்? இது போன்ற முரண்பட்ட நிலைப்பாடுகளைக் கொண்ட எண்ணிலடங்கா உதாரணங்கள் உலகத்தில் இருக்கின்றன. முட்டாள்களும், அறியாமை கொண்டவர்களுமே உற்சாகமாகவும் இன்பமாகவும் இருக்கிறார்கள். அதேவேளையில் கற்றவர்களும், விவேகிகளும் {ஞானிகளும்} துயரத்தால் பாதிக்கப்படுகிறார்கள். துன்ப துயரங்களின் எண்ணற்ற நிகழ்வுகள் மனிதர்களிடையே இந்த உலகத்தில் காணப்படுகிறது. (இறவா வாழ்வு வாழ்பவர்கள் இவை அனைத்தையும் கண்டு, அதன்காரணமாகத் துன்புற வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளனர்)” என்றார் {பகர்}.
பிறகு இந்திரன் {முனிவர் பகரிடம்}, “ஓ! பெரும் நற்பேறு பெற்றவரே {முனிவர் பகரே}, மரணமற்றவர்களின் இன்பங்களையும், தேவர்கள் மற்றும் முனிவர்களால் புகழப்படும் இன்பங்களையும் எனக்குச் சொல்லும்” என்று கேட்டான்.
அதற்குப் பகர் {இந்திரனிடம்}, “தீய நண்பனின் சேர்க்கையற்று, தனது இல்லத்திலேயே பகலின் எட்டாவது அல்லது பனிரெண்டாவது பாகத்தில் குறைந்த காய்கறிகளை {கீரையை மட்டுமாயினும்} சமைப்பவனின் {சமைத்து உண்பதைவிட} இன்பம் போன்று வேறு எதுவும் கிடையாது. (எனவே, மரணமற்ற வாழ்வு வாழ்பவர்கள் இந்த அருளை நாளுக்கு நாள் எப்போதும் பெற்று இன்பமாக வாழலாம்). நாளை எண்ணாதவன் பெருந்தீனிக்காரன் என்று சொல்லப்படுவதில்லை. ஓ! மகவானே {இந்திரனே}, தன் சொந்த வீட்டில் சொற்ப காய்கறிகளையாவது {கீரையையாவது} சமைப்பவன் இன்பமாக இருக்கிறான். தன் முயற்சியால் பெற்று, யாரையும் நம்பியிராமல், பழங்களையோ காய்கறிகளையோ தன் சொந்த வீட்டிலேயே வைத்து உண்பவன் மரியாதைக்குரியவனாவான். பிறர் வீட்டில் இகழ்ச்சியுடன் கொடுக்கப்பட்ட உணவை உண்பவன், அது இனிமையான ஆடம்பர உணவாக இருந்தாலும், வெறுக்கத்தக்கதையே செய்கிறான் {அது மேன்மையுள்ளதாகாது}.
எனவே, நாயைப் போன்றோ அல்லது ராட்சசனைப் போன்றோ அடுத்தவர் இல்லத்தில் உண்ணும் குறுகிய மனம் படைத்த இழிந்தவனின் உணவு நிந்திக்கத்தக்கது என்று ஞானம் உள்ளவர்கள் கருதுகிறார்கள். விருந்தினர்களையும், வேலைக்காரர்களையும் உபசரித்து, பித்ருக்களுக்கும் கொடுத்து மீந்த உணவை உண்ணும் நல்ல அந்தணனைப் போல யாரும் மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது. ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரனே}, எவன் முதல் பாகத்தை விருந்தினர்களை உபசரித்து, மீந்ததை உண்ணும் மனிதனுக்கு அதைவிட இனிமையான புனிதமான உணவு வேறு கிடையாது. விருந்தினர்களை உபசரித்த பிறகு, ஒரு அந்தணன் உண்ணும் வாய் நிறைந்தவை (ஒரு வாய் சோறு) ஒவ்வொன்றும் ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்தற்குச் சமமான தகுதியை {பலனைத்} தருகிறது. மேலும் அப்படிப்பட்டவர் இளமையில் செய்த பாவங்கள் அனைத்தும் நிச்சயமாகக் கழுவப்படுகின்றன. உணவருந்தி, தானம் பெற்ற அந்தணனுடைய கைகளில் இருக்கும் நீர் (அன்னமிட்டவன் மீது தெளிக்கப்பட்டால்) ஒரு நொடியில் அனைத்துப் பாவங்களையும் அழிக்கிறது.
இதையும், இன்னும் பல காரியங்களையும் பகரிடம் பேசிய தேவர்கள் தலைவன் {இந்திரன் சொர்க்கத்திற்கு {தேவலோகம்} சென்றான்.
(பகர் சொல்லும் அனைத்தும் இந்திரனின் கேள்விக்கான பதில்தானா என்பதைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கிறது. தேவர்கள் தலைவன், “மரணமற்ற வாழ்வு வாழ்பவர்களின் இன்பங்கள் என்ன?” என்று கேட்கிறான். பகர், அதிலிருந்து வழுவி ஒரு குழப்பமான இணக்கமில்லாத பதிலாக யாரையும் நம்பியிராமல் இருப்பது, விருந்தினர்கள் மற்றும் வேலைக்காரர்களை உபசரிப்பதன் தர்ம பலன் ஆகியவற்றைச் சொல்கிறார். அச்சில் வந்த அனைத்து பதிப்புகளிலும் இந்த வாக்கியமே இருக்கிறது என்று இந்த இடத்தில் சொல்கிறார் கங்குலி)
{சேவை செய்வதே இன்பம் என்று நினைக்கும் பலரை நாம் இந்நாட்களில் கூட காண்பதுண்டு.
சிபி மன்னனும்! சுஹோத்திரனும்! – வனபர்வம் பகுதி 193-க்ஷத்திரிய பெருமையைச் சொல்வதற்காக மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்கு சிபி மற்றும் சுஹோத்திரன் ஆகியோர் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சியைச் சொன்னது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாண்டுவின் மகன்கள் மீண்டும் மார்க்கண்டேயரிடம், “நீர் அந்தணர்களின் பெருமைகளை உரைத்தீர். இனி அரசவகை க்ஷத்திரியர்களின் பெருமைகளை நாங்கள் கேட்க விரும்புகிறோம்” என்று கேட்டனர். அவர்களால் இப்படிச் சொல்லப்பட்ட முனிவர் மார்க்கண்டேயர் {பாண்டவர்களிடம்}, “அரசவகை க்ஷத்திரியர்களின் பெருமைகளை இப்போது கேளுங்கள். குரு குலத்தைச் சேர்ந்த சுஹோத்திரன் என்ற பெயர் கொண்ட குறிப்பிட்ட மன்னன், பெரும் முனிவர்களை சந்திப்பதற்காக ஒரு பயணம் செய்தான். அப்படி அவன் {மன்னன் சுஹோத்திரன்} அந்தப் பயணத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, அவன் உசீநரனின் மகனான மன்னன் சிபி தேரில் அமர்ந்து வருவதைக் கண்டான். இருவரும் எதிர் எதிரே வந்து சந்தித்து வணங்கிக் கொண்டனர். ஒருவரோடு ஒருவர் சம நிலைமை கொண்டவர்கள் என்பதை அறிந்து இருவரும் ஒருவருக்கு ஒருவர் வழிவிடாமல் நின்றனர்.
அந்த நேரத்தில் அங்கே நாரதர் தோன்றினார். அங்கே நடந்ததைக் கண்ட அந்த தெய்வீக முனி {நாரதர்}, “ஒருவரின் வழியை மற்றவர் தடை செய்தவண்ணம் ஏன் இருவரும் நிற்கிறீர்கள்?” என்று கேட்டார். இப்படி நாரதரால் கேட்கப்பட்ட அவர்கள் {மன்னன் சுஹோத்திரனும், மன்னன் சிபியும்}, “ஓ! புனிதமானவரே {நாரதரே}, அப்படிச் சொல்லாதீர். பழங்காலத்து முனிவர்கள், மேன்மையானவனுக்கும், திறன்வாய்ந்தவனுக்கு வழிவிட வேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றனர். இருப்பினும், ஒருவரை ஒருவர் தடுத்து நிற்கும் நாங்கள் இருவரும் எல்லா வகையிலும் சமமானவர்களாகவே இருக்கிறோம். சரியாக ஆலோசித்தால் எங்களுக்குள் ஏற்றத்தாழ்வு இல்லை” என்றனர்.
இப்படி அவர்களால் சொல்லப்பட்ட நாரதர் மூன்று சுலோகங்களைச் சொன்னார். (அவை இவையே), “ஓ! குரு குலத்தவனே {சுஹோத்திரா}, தீய நடத்தை கொண்டவன் எளியோரிடமும் கொடுமையாகவே நடந்து கொள்வான். எளிமையானவன் தீயவனிடமும் அடக்கத்துடனும் நேர்மையுடனும் நடந்து கொள்வான். நேர்மையானவன் நேர்மையற்றவர்களிடமும் நேர்மையாக நடந்து கொள்வான். அப்படி இருக்கும் போது நேர்மையானவன் மற்றொரு நேர்மையானவனிடம் ஏன் நேர்மையாக நடந்து கொள்ளக்கூடாது? நேர்மையானவன் தனக்குக் கிடைக்கும் சேவையை நூறு மடங்காக மதிக்கிறான். இது தேவர்களிடமும் வழக்கத்தில் இருக்கிறது அல்லவா? நற்குணங்கள் பெற்ற உசீநரனின் அரசமகன் {மன்னன் சிபி} நிச்சயமாக உன்னைவிட பெரியவனே. ஒருவன் உலோபியை {கஞ்சனை} தானத்தாலும், பொய்யனை உண்மையாலும், கொடுஞ்செயல் செய்பவனை பொறுமையாலும், நேர்மையற்றவனை நேர்மையாலும் வெல்ல வேண்டும். நீங்கள் இருவரும் பெரும் இதயம் கொண்டவர்களே {மேன்மையானவர்களே}. மேற்கண்ட சுலோகத்தின் பொருள் படி, உங்களில் ஒருவர் விலகி நிற்க வேண்டும்” என்று சொன்னார் {நாரதர்}.
இதைச் சொன்ன நாரதர் அமைதியானார். நாரதர் சொன்னதைக் கேட்ட குரு குலத்தின் மன்னன் {சுஹோத்திரன்}, சிபியை வலம் வந்து, அவனது எண்ணற்ற சாதனைகளைப் புகழ்ந்து, அவனுக்கு {மன்னன் சிபிக்கு} வழி கொடுத்து, தன் வழியே சென்றான். இப்படியே நாரதர் அரசவகை க்ஷத்திரியர்களின் உயர்ந்த அருளுடைமையை விவரித்தார்”
யயாதியும்! அந்தணரும்! – வனபர்வம் பகுதி 194-யயாதியைச் சந்தித்த அந்தணரின் கதையை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “மற்றுமொரு கதையைக் கேள். ஒருநாள் நகுஷனின் மகனான யயாதி, குடிமக்கள் சூழ தனது அரியணையில் அமர்ந்திருந்தான். அப்போது அங்கே ஒரு அந்தணர் தனது குருவுக்குச் செல்வம் கொடுக்கவேண்டி, கேட்டுக் கொள்வதற்காக மன்னனை அணுகினார். அந்த அந்தணர், “ஓ மன்னா {யயாதியே}, நான் {ஆசானுக்கு} உடன்பட்ட படி, நான் என் ஆசானுக்கான செல்வத்தை உன்னிடம் இரந்து கேட்கிறேன்” என்றார். அதற்கு மன்னன் {யயாதி}, “ஓ! புனிதமானவரே, உமது ஒப்பந்தம்தான் என்ன என்று எனக்குச் சொல்லும்” என்று கேட்டார்.
அதற்கு அந்த அந்தணர் {மன்னன் யயாதியிடம்}, “ஓ! மன்னா, இவ்வுலகத்தில், மனிதர்களிடம் ஒருவன் பிச்சை கேட்கும்போது, அப்படிப்பிச்சை எடுப்பவனை அலட்சியப்படுத்துவதில் {அவமதிப்பதில்} மகிழ்கிறார்கள். அதனால், ஓ! மன்னா {யயாதியே}, எதன் மீது நான் என் இதயத்தை நிலைக்க வைத்திருக்கிறேனோ அதையே கேட்கிறேன். என்ன உணர்வுகளுடன் நான் கேட்பதை நீ கொடுப்பாயோ?” என்றார். அதற்கு மன்னன் {யயாதி}, “எந்தப் பொருளையும் கொடுத்துவிட்டு, அதுகுறித்து நான் தற்பெருமை பேசுவதில்லை. என்னால் கொடுக்க முடியாத வேண்டுகோள்களை நான் கேட்பதில்லை. இருப்பினும், கொடுக்க முடிந்த வேண்டுதலைகளைக் கேட்டு, அவற்றைக் கொடுத்த பிறகு நான் எப்போதும் மகிழ்ந்தே வந்திருக்கிறேன். நான் உமக்கு ஆயிரம் பசுக்களைக் கொடுக்கிறேன். என்னிடம் தானம் கேட்கும் அந்தணர் எவரும் எனக்கு அன்பிற்குரியவரே. என்னிடம் இரந்து கேட்கும் மனிதரிடம் நான் கோபப்படுவதில்லை. ஒரு பொருளைக் கொடுத்த பிறகு அது குறித்து நான் வருந்துவதில்லை” என்றான். பிறகு அந்த அந்தணர் மன்னனிடம் {யயாதியிடம்} இருந்து ஆயிரம் பசுக்களைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றார்”
விருஷதர்பனும்! சேதுகனும்! – வனபர்வம் பகுதி 195-சேதுகன் மற்றும் விருஷதர்பனைச் சந்தித்த அந்தணரின் கதையை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} மீண்டும் அம்முனிவரிடம் {மார்க்கண்டேயரிடம்}, “உயர்ந்த நற்பேறு பெற்ற அரசகுல க்ஷத்திரியர்களைக் குறித்து எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டான். அதற்கு மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடன்}, “விருஷதர்பன், சேதுகன் என்ற பெயரில் இரு மன்னர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் அறநெறிகள் அறிந்தவர்களாகவும், தாக்குதலுக்கும், தற்காப்புக்கும் பயன்படும் ஆயுதங்களை அறிந்தவர்களாகவும் இருந்தார்கள். விருஷதர்பன் தனது பிள்ளைப்பருவத்திலிருந்தே, தங்கத்தையும் வெள்ளியையும் தவிர அந்தணர்களுக்கு வேறு எந்த உலோகத்தையும் கொடுப்பதில்லை என்ற நோன்பை நோற்று வந்தான் என்பதைச் சேதுகன் அறிந்திருந்தான். ஒரு சமயம், தனது வேத கல்வியை முடித்திருந்த ஒரு அந்தணர் சேதுகனிடம் வந்து அவனுக்கு நல்வாழ்த்துகள் சொல்லி அவனிடம் இருந்த தனது ஆசானுக்காகச் செல்வத்தை இரந்து கேட்பதற்காக “எனக்கு ஆயிரம் குதிரைகளைக் கொடு” என்று கேட்டார்.
இப்படிக் கேட்கப்பட்ட சேதுகன் அவரிடம், “உமது ஆசானுக்கு இவற்றைக் கொடுக்கும் நிலையில் நான் இல்லை. எனவே, நீர் மன்னன் விருஷதர்பனிடம் செல்லும். ஓ! அந்தணரே, அவன் {விருஷதர்பனிடம்} அறம் உயர்ந்த மன்னனாவான். அவனிடம் சென்று இரந்து கேளும். அவன் உமது வேண்டுதலை அருள்வான். இது அவன் சொல்லாமல் {கமுக்கமகா {அ} ரகசியமாக} கடைப்பிடிக்கும் நோன்பாகும்” என்று சொன்னான். இதைக் கேட்ட அந்த அந்தணர் விருஷதர்பனிடம் சென்று ஆயிரம் குதிரைகளை இரந்து கேட்டார். இப்படி வேண்டிக் கொள்ளப்பட்ட மன்னன் {விருஷதர்பன்} அந்த அந்தணரை சாட்டையால் அடித்தான். அதற்கு அந்த அந்தணர், “அப்பாவியான என்னை, ஏன் இப்படி அடிக்கிறாய்?” என்று கேட்டார்.
அந்த அந்தணர் மன்னனை {விருஷதர்பனை} சபிக்கப் போகும் நேரத்தில் அவன் {மன்னன் விருஷதர்பன்} , “ஓ! அந்தணரே, நீர் கேட்டதைக் கொடுக்காதவனைச் சபிப்பீரா? அல்லது, இது சரியான அந்தண நடத்தைதானா?” என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணர், “ஓ! மன்னர்களின் மன்னா {விருஷதர்பா}, சேதுகனால் அனுப்பப்பட்ட நான், இதற்காகவே {தானம் பெறவே} உன்னிடம் வந்தேன்” என்றார். மன்னன் {விருஷதர்பன்}, “இன்று முற்பகலில் வரும் காணிக்கை {வரிப்பணம்} யாவையும் நான் உமக்குத் தருவேன். என்னால் சாட்டையடி பட்ட மனிதனை, நான் எவ்வாறு வெறுங்கையுடன் அனுப்புவேன்?” என்றான். இப்படிச் சொன்ன அந்த மன்னன் {விருஷதர்பன்}, அன்று பகல் முழுதும், ஆயிரம் குதிரைகளின் மதிப்புக்கும் அதிகமாக வந்த வருமானத்தை அப்படியே அந்த அந்தணருக்குக் கொடுத்தான்”.
மன்னன் சிபியிடம் வந்த புறாவும்! பருந்தும்!! – வனபர்வம் பகுதி 196-புறாவுக்குத் தசையீந்த சிபியின் கதையை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது..
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஒரு நாள், தேவர்கள் அனைவரும் கூடி, உசீனரனின் மகனான, மன்னன் சிபியின் அறம் மற்றும் நற்செயல்களைக் காண பூமிக்கு இறங்க வேண்டும் என்று தீர்மானித்தனர். ஒருவருக்கொருவர் “நல்லது” என்று சொல்லிக் கொண்ட அக்னியும், இந்திரனும் பூமிக்கு வந்தனர். புறாவின் உருவத்தில் இருந்த அக்னி, பருந்தின் உருவத்தில் தன்னைத் தொடர்ந்து விரட்டி வரும் இந்திரனிடம் இருந்து விலகிப் பறந்தோடி வந்தான். பிறகு அற்புதமான இருக்கையில் அமர்ந்திருந்த மன்னன் சிபியின் மடியில் அந்தப் புறா விழுந்தது. அப்போது அங்கிருந்த புரோகிதர், மன்னனிடம் {சிபியிடம்}, “பருந்துக்குப் பயந்தும், தனது உயிரைக் காக்க விரும்பியும், இந்தப் புறா உம்மிடம் பாதுகாப்பு நாடி வந்திருக்கிறது. ஒருவனின் உடல் மேல் புறா வந்து விழுவது என்பது பெரும் ஆபத்தை முன்னறிவிப்பது {தீய சகுனம்} எனக் கற்றோர் சொல்லியுள்ளனர். சகுனங்களைப் புரிந்து கொள்ளும் மன்னன், சுட்டிக்காட்டப்படும் ஆபத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளச் செல்வத்தைத் தானம் செய்யட்டும்” என்றார் {புரோகிதர்}.
அந்தப் புறாவும் {அக்னி தேவனும்} மன்னனிடம் {சிபியிடம்}, “பருந்துக்குப் பயந்தும், எனது உயிரைக் காக்க விரும்பியும் நான் உன்னிடம் பாதுகாப்பு நாடியே வந்தேன். நான் ஒரு முனிவன். புறாவின் உருவைக் கொண்டு, உன்னிடம் பாதுகாப்பை நாடுபவனாக நான் வந்திருக்கிறேன். உண்மையில், நான் எனது உயிராக உன்னையே தேடி வந்தேன். நான் வேதமறிந்தவன்; பிரம்மச்சரிய வாழ்வுமுறையை மேற்கொள்பவன்; தன்னடக்கம் {சுயக்கட்டுப்பாடு} மற்றும் தவ அறங்கள் கொண்டவன் என்பதை அறிந்து கொள். மேலும் நான் எனது ஆசான் விரும்பாததை எப்போதும் பேசாதவன் என்றும், உண்மையில் அனைத்து அறங்களையும் கொண்டவன் என்றும் அறிந்து கொள். நான் வேதங்களைத் திருப்பிச் சொல்வேன், எனக்கு அவற்றின் உரைநடை {யாப்பிலக்கணம்} தெரியும். வேதங்களை நான் எழுத்து எழுத்தாகக் கற்றிருக்கிறேன். நான் புறா அல்ல. ஓ! என்னைப் பருந்திடம் கொடுத்து விடாதே. கற்ற, தூய அந்தணனைத் தானமாகக் கொடுப்பது நல்ல தானமாகாது” என்றது.
புறா இப்படிச் சொன்னதும், பருந்து {இந்திரன்} அம்மன்னனிடம் {சிபியிடம்}, “இவ்வுலகில் வரும் உயிரினங்கள் அனைத்தும் ஒரே குறிப்பிட்ட வகையில் வருவதில்லை. படைப்பின் வரிசையில், முற்பிறவியில், நீ இந்தப் புறா மூலமே பிறந்தாய். ஓ! மன்னா {சிபியே}, (அது உனது தந்தையாக இருப்பினும்} இந்தப் புறாவைப் பாதுகாப்பதன் மூலம் எனது உணவில் தலையிடுவது உனக்குத் தகாது. இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {சிபி அந்த பருந்திடம்}, “இதற்கு முன், மனிதர்களின் தூய மொழியைப் பறவைகள் பேசுவதை யாராவது கண்டிருக்கிறார்களா? புறா சொல்வதையும், பருந்து சொல்வதையும் அறிந்த பிறகு, அறத்தின்படி நாம் இன்று எவ்வாறு செயல்படலாம்? பாதுகாப்பை நாடி வந்த பயந்த உயிரினத்தை, அதன் எதிரியிடம் கொடுப்பவன், தனதுக்குப் பாதுகாப்புத் தேவைப்படும்போது அதை அடைய மாட்டான். உண்மையில், அவனுக்காகவே மேகங்கள் சரியான காலங்களில் மழையைப் பொழியாது. விதைகள் தூவப்பட்டாலும், அவை அவனுக்காக முளைக்காது. தன்னிடம் பாதுகாப்பை நாடி வந்த பயந்த உயிரினத்தை, அதன் எதிரியிடம் கொடுப்பவன், பிள்ளைப்பருவத்திலேயே தனது வாரிசு சாவதைக் காண்பான். அத்தகைய மனிதனின் மூதாதையர்களால் சொர்க்கத்தில் வசிக்க முடியாது. உண்மையில், நெருப்பில் அழிக்கப்படும் தெளிந்த நெய்யினாலான அவிர்ப்பாகத்தைத் தேவர்களே ஏற்க மாட்டார்கள். தன்னிடம் பாதுகாப்பை நாடி வந்த பயந்த உயிரினத்தை, அதன் எதிரியிடம் கொடுப்பவன், இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களால் வஜ்ராயுதம் கொண்டு தாக்கப்படுவான். அவன் உண்ணும் உணவு புனிதமற்றதாக இருக்கும். அத்தகைய குறுகிய ஆன்மா கொண்டவன் விரைவில் சொர்க்கத்திலிருந்து விழுவான்.
ஓ! பருந்தே, சிபி குலத்தைச் சேர்ந்த மக்கள் உனக்கு முன்பாகச் சோற்றுடன் சமைக்கப்பட்ட காளையை இந்தப் புறாவுக்குப் பதிலாக வைக்க அனுமதி. நீ மகிழ்ச்சியாக வாழும் வகையில் அவர்கள் உன்னை இறைச்சி அபரிமிதமாகக் கிடைக்கும் இடத்திற்குச் சுமந்து செல்ல அனுமதி” என்று கேட்டான். இதைக் கேட்ட பருந்து {இந்திரன் -மன்னன் சிபியிடம்}, “ஓ! மன்னா {சிபியே}, இந்தப் புறாவுக்குப் பதிலாக நான் காளை மாட்டையோ, அல்லது, உண்மையில் எந்தப் பிற இறைச்சியையோ, அல்லது அளவில் அபரிமிதமான இறைச்சியையோ நான் கேட்க மாட்டேன். இது{புறா} எனக்குத் தேவர்களால் கொடுக்கப்பட்டது. எனவே, இதன் மரணம் இன்று என விதிக்கப்பட்டுள்ளதன் விளைவால் இந்த உயிரினமே எனது இன்றைய உணவாகும். எனவே, ஓ! ஏகாதிபதியே {சிபியே}, அதை என்னிடம் கொடு” என்று கேட்டது {பருந்து}.
பருந்தால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {சிபி}, “எனது மக்கள் கவனமாக அந்தக்காளையை முழு உறுப்புகளுடன் உன்னிடம் கொண்டு வர அனுமதி. அந்தக் காளை, பயத்தால் துன்பப்படும் இந்த உயிரினத்துக்கு மாற்றுப் பொருளாக இருக்க அனுமதி. அது {காளை} என் கண் முன்பாகவே உன்னிடம் சுமந்து வரப்படட்டும். ஓ! இந்தப் புறாவைக் கொல்லாதே! நான் எனது உயிரைக் கொடுத்தாலும் கொடுப்பேனேயன்றி, இந்தப் புறாவை உனக்குக் கொடுக்க மாட்டேன். ஓ! பருந்தே, இந்த உயிரினம் சோமச்சாறுடன் கூடிய வேள்வியைப் போலக் காணப்படுகிறது என்பதை நீ அறியவில்லையா? ஓ! அருளப்பட்டவனே {பருந்தே}, இதற்காக இவ்வளவு சிரமப்படுவதை நிறுத்து. எக்காரணம் கொண்டும் என்னால் இந்தப் புறாவை உனக்குத் தர முடியாது. அல்லது, ஓ! பருந்தே, உனக்குத் திருப்தியானால், உனக்கு ஏற்புடைய எதையும் நான் உனக்குச் செய்ய வேண்டுமானால், அதைச் செய்வதன் மூலம் சிபி குலத்தின் மக்கள் மகிழ்வடைந்து என்னைப் பாராட்டும்படியாக இருந்தால், அக்காரியத்தை எனக்குக் கட்டளையிடு. நீ என்னை என்ன செய்யச் சொல்கிறாயோ அதைச் செய்வேன் என நான் உனக்கு உறுதியளிக்கிறேன்” என்றான் {மன்னன் சிபி}.
மன்னனின் இம்முறையீட்டைக் கேட்ட பருந்து {இந்திரன் -மன்னன் சிபியிடம்}, “ஓ! மன்னா {சிபியே}, இந்தப் புறாவின் எடைக்குச் சமமான சதையை உனது வலது தொடையில் இருந்து நீ அறுத்துத் தந்தால், இந்தப் புறா உன்னால் பாதுகாக்கப்பட்டதாகும்; அப்படிச் செய்தாயானால் எனக்குஏற்புடையதைச் செய்தவனாவாய்; சிபி குலத்தின் மனிதர்கள் உன்னைப் புகழும் வண்ணம் நடந்து கொண்டவனாவாய்” என்றது {பருந்து}.
இதற்கு உடன்பட்ட மன்னன், தனது வலது தொடையில் இருந்து சதையை அறுத்து, புறாவாக்கு எதிராக {தராசில்} நிறுத்துப் பார்த்த்தான். ஆனால் புறா எடை மிகுந்ததாக இருந்தது. அதன்பேரில் மன்னன் தனது சதையின் மற்றுமொரு பகுதியை வெட்டி எடுத்தான். இருப்பினும் புறா எடைமிக்கதாகவே இருந்தது. பிறகு அம்மன்னன் தனது உடல் முழுவதும் இருந்து சதைகளை அறுத்துத் தராசில் வைத்தான். இருந்தாலும் அந்தப் புறா அதைவிட அதிகமான எடை இருந்தது. பிறகு மன்னன் தானே தராசு தட்டில் ஏறி அமர்ந்தான். இதனால் அவன் எந்த வருத்தத்தையும் உணரவில்லை. இதைக் கண்ட பருந்து “(புறா) காக்கப்பட்டது” என்று சொல்லி மறைந்து போனது.
அம்மன்னன் {சிபி} புறாவிடம், “ஓ! புறாவே, அந்தப் பருந்து யார் என்பதை இந்த சிபிக்கள் {சிபி குல மக்கள்} அறியட்டும். அண்டத்தின் தலைவனைத் தவிர வேறு யாராலும், அவன் செய்ததைப் போலச் செய்ய முடியாது. ஓ! புனிதமானவனே, எனது கேள்விக்கான விடையைச் சொல்” என்று கேட்டான். அப்புறா, “நான் புகையைப் பதாகையாகக் {கொடியாகக்} கொண்ட வைஸ்வநரன் என்று அழைக்கப்படும் அக்னியாவேன். வஜ்ரம் தாங்கிய சச்சியின் தலைவனே {இந்திரனே} பருந்தாக வந்தான். ஓ! சுரதையின் மகனே {மன்னன் சிபியே}, நீ மனிதர்களில் காளையாவாய். நாங்கள் உன்னை நன்கு அறியவே வந்தோம். ஓ! மன்னா {சிபியே}, என்னைக் காப்பதற்காக இந்த உனது உடலில் இருந்து இந்தச் சதைத்துண்டுகள் வாள் கொண்டு அறுத்து எடுக்கப்பட்டதால் உனது உடலில் வெட்டுக்காயங்களை உண்டாக்கிவிட்டன. நான் இந்தக் குறிகளை {காயக்குறிகள் இருக்கும் இடங்களை} மங்களகரமாவையாக, அழகானவையாக, தங்க நிறம் கொண்டவையாக, இனிய நறுமணம் கொண்டவையாக ஆக்குவேன். பெரும் புகழை ஈட்டி, தேவர்களாலும் முனிவர்களாலும் மதிக்கப்பட்டு, உனது குடிகளை நீண்ட காலம் ஆள்வாய். உனது விலாவில் இருந்து கபோதரோமன் என்ற பெயர் கொண்ட மகன் உதிப்பான். ஓ! மன்னா. நீ கபோதரோமன் என்ற பெயர் கொண்ட மகனை உனது உடலில் இருந்து பெறுவாய். அவன் {கபோதரோமன்} சுரதை குலத்தவரில் முதன்மையானவனாக, வீரனாகப் பெரும் அழகு படைத்தவனாகத் திகழ்வதைக் காண்பாய்.
நம் ஐவரில் சிறந்தவன் சிபியே! – வனபர்வம் பகுதி 197-அஷ்டகன் முதலிய மன்னர்களில் தானத்தில் சிறந்தவன் யார் என்று நாரதர் சொன்னதை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொல்லியது..
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} மீண்டும் மார்க்கண்டேயரிடம், “மன்னர்களில் பெரும் நற்பேறு பெற்றவர்களைக் குறித்து மீண்டும் எங்களுக்குச் சொல்லும்” என்று கேட்டான். அதற்கு மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “விஸ்வாமித்திர குல மன்னன் அஷ்டகனின் குதிரை வேள்விக்குப் பல மன்னர்கள் வந்திருந்தனர். அவ்வேள்விக்கு அம்மன்னனின் {அஷ்டகனின்} மூன்று சகோதரர்களான பிரதர்த்தனன், வசுமனஸ் மற்றும் உசீனரனின் மகனான சிபியும் வந்திருந்தனர். வேள்வி முடிந்ததும் அஷ்டகன் தனது சகோதரர்களுடன் தேரில் சென்று கொண்டிருந்தபோது, வழியில் நாரதைக் கண்டு, அந்தத் தெய்வீக முனிவரிடம் {நாரதரிடம்}, “தேரில் எங்களுடன் நீரும் பயணியும்” என்றான் {அஷ்டகன்}. “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன நாரதர் தேரில் ஏறினார். அந்த மன்னர்களில் ஒருவன் அந்தப் புனிதமான தெய்வீக முனிவரான நாரதரைத் திருப்தி செய்து, “ஓ! புனிதமானவரே {நாரதரே}, நான் உம்மிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்” என்றான். அதற்கு அம்முனிவர் {நாரதர்}, “கேள்” என்றார். இப்படி அனுமதி அளிக்கப்பட்ட அம்மனிதன் {மன்னன்}, “நாங்கள் நால்வரும் நீண்ட வாழ்நாள் அருளப்பட்டு, அனைத்து அறங்களும் கொண்டவர்கள். எனவே, நிச்சயம் நாங்கள் சொர்க்கத்தில் நீண்ட நாள் வசிப்போம். இருப்பினும், எங்களில் எவர் அங்கிருந்து முதலில் விழுவர்” என்று கேட்டான்.
இப்படிக் கேட்கப்பட்ட முனிவர் {நாரதர்}, “இந்த அஷ்டகனே முதலில் இறங்குவான்” என்றார். கேள்வி கேட்டவன், “என்ன காரணத்துக்கா?” என்று கேட்டான். அதற்கு அந்த முனிவர் {நாரதர்}, “நான் அஷ்டகனின் வசிப்பிடத்தில் சில நாள் தங்கியிருந்தேன். அவன் (ஒரு நாள்) என்னைத் தனது தேரில் நகரத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கே நான் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமாகப் பல வண்ணங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பசுக்களைக் கண்டேன். அந்தப் பசுக்களைக் கண்ட நான் மன்னன் அஷ்டகனிடம், “இவை யாருடையவை” என்று கேட்டேன். அதற்கு அஷ்டகன், “நானே இப்பசுக்களைத் தானமாகக் கொடுத்தேன்” என்றான். இந்தப் பதிலால் தனது தற்பெருமையை அவன் வெளிப்படுத்தினான். இந்தப் பதிலுக்காகவே “அஷ்டகன் இறங்குவான்” என்றார்.
இப்படி நாரதர் சொன்னதும், அவர்களில் ஒருவன் மீண்டும், “எங்களில் மூவர் சொர்க்கத்தில் தங்கியிருப்போம். எங்கள் மூவரில் யார் முதலில் கீழே இறங்குவான்?” என்று கேட்டான். அதற்கு முனிவர் {நாரதர்}, “பிரதர்த்தனன்” என்றார். விசாரிப்பவன், “என்ன காரணத்திற்காக?” என்று கேட்டான். அதற்கு அந்த முனிவர் {நாரதர்}, “நான் சில நாட்கள் பிரதர்த்தனன் வசிப்பிடத்திலும் வாழ்ந்தேன். அவன் ஒருநாள் என்னை அவனது தேரில் அழைத்துச் சென்றான். அப்படிப் போகும்போது ஒரு அந்தணர் அவனிடம் {பிரதர்த்தனனிடம்}, “ஒரு குதிரையைக் கொடு!” என்று கேட்டார். அதற்குப் பிரதர்த்தனன், “{சென்று} திரும்பியதும், நான் உமக்கு ஒன்றைக் {ஒரு குதிரையைக்} கொடுக்கிறேன்” என்றான். அதற்கு அந்த அந்தணர், “அது எனக்கு விரைவாகக் கொடுக்கப்படட்டும்” என்றார். அந்த அந்தணர் இவ்வார்த்தைகளைப் பேசிய பிறகு, அம்மன்னன் {பிரதர்த்தனன்}, தேரின் வலது சக்கரத்தில் கட்டப்பட்டிருந்த குதிரையை அவருக்குக் கொடுத்தான். பிறகு குதிரை பெற விரும்பி மற்றொரு அந்தணரும் அங்கே வந்தார். முன்பு போலவே பேசிய மன்னன், அவருக்கு இடது சக்கரத்தில் கட்டப்பட்டிருந்த குதிரையைக் கொடுத்தான். அந்தக் குதிரையை அவருக்குக் {அந்த அந்தணருக்குக்} கொடுத்த மன்னன் தனது பயணத்தைத் தொடர்ந்தான். அப்போது அங்கே மற்றொரு அந்தணர் குதிரை பெற விரும்பி வந்தார். மன்னன் உடனே தனது தேரின் முன்னணியில் இடதுபுறத்தில் இருந்த குதிரையைக் கழற்றிக் கொடுத்தான். அப்படிச் செய்த பிறகு மன்னன் மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தான். அப்போது அங்கே மற்றொரு அந்தணர் குதிரை பெற விரும்பி வந்தார். மன்னன் அவரிடம், “{சென்று} திரும்பியதும், நான் உமக்கு ஒரு குதிரையைக் கொடுக்கிறேன்” என்றான். ஆனால் அந்த அந்தணர், “குதிரை எனக்கு விரைவாகக் கொடுக்கப்படட்டும்” என்றார். பிறகு மன்னன், தான் வைத்திருந்த ஒரு குதிரையை அவருக்குக் கொடுத்தான். பிறகு, தேரின் நுகத்தடியைத் தானே பற்றி, அம்மன்னன் இழுக்க ஆரம்பித்தான். அப்படி அவன் செய்த போது, அவன் {பிரதர்த்தனன்}, “இப்போது, அந்தணர்களுக்கு எதுவுமில்லை” என்றான். மன்னன் {அனைத்தையும்} தானம் செய்துவிட்டான், அது உண்மையே, இருப்பினும், அவற்றைக் கறையுடனே {அசூயையுடனே} செய்தான். அந்தப் பேச்சுக்காகவே, அவன் சொர்க்கத்தில் இருந்து விழ வேண்டியதிருக்கும்” என்றார் {நாரதர்}.
முனிவர் {நாரதர்} சொன்னதும், மீதம் இருந்த இருவரில் ஒருவர், “எங்கள் இருவரில் யார் விழுவார்?” என்று கேட்டான். அதற்கு முனிவர் {நாரதர்}, “வசுமனஸ்” என்றார். விசாரித்தவன், “என்ன காரணத்திற்காக?” என்று கேட்டான். அதற்கு நாரதர், “எனது பயணங்களின் போது ஒரு சமயம், நான் வசுமனசின் வசிப்பிடத்திற்குச் சென்றேன். அப்போது அங்கே மலர்நிறைந்த ரதத்திற்கான ஸ்வாதிவாசனம் என்ற சடங்கை அந்தணர்கள் செய்து கொண்டிருந்தார்கள்1. நான் மன்னனை அணுகினேன். அந்தணர்கள் சடங்கை முடித்து, மலர்நிறைந்த ரதம் அவர்களுக்குக் காட்சி அளித்தது. நான் அந்த ரதத்தைப் புகழ்ந்தேன். அதன் காரணமாக மன்னன் {வசுமனஸ்} என்னிடம், “புனிதமானவரே {நாரதரே}, உம்மால் இந்த ரதம் புகழப்பட்டது. எனவே, இந்த ரதம் உமதாகட்டும்” என்று சொன்னான். அதற்குப் பிறகு நான், எனக்கு {மலர்} ரதத்தின் தேவையிருந்த போது, மற்றொரு முறை வசுமனசிடம் சென்றேன். நான் அந்த ரதத்தைப் பாராட்டினேன். மன்னன் {வசுமனஸ்} “இது உமதே” என்றான். நான் மூன்றாம் முறையாக மன்னனிடம் {வசுமனசிடம்} சென்று, அந்த ரதத்தை மீண்டும் பாராட்டினேன். மன்னன் அந்த மலர் ரதத்தை அந்தணர்கள் முன் காட்சிப் படுத்திய பிறகு, கண்களை என்னிடம் திருப்பி, “ஓ! புனிதமானவரே {நாரதரே}, நீர் போதுமான அளவு மலர் ரதத்தைப் புகழ்ந்துவிட்டீர்” என்றான். இவ்வார்த்தைகளை மட்டும் சொன்ன மன்னன், எனக்கு அந்த ரதத்தைப் பரிசளிக்கவில்லை. இதற்காகவே அவன் {வசுமனஸ்} சொர்க்கத்தில் இருந்து விழுவான்” என்றார் {நாரதர்}.
மேலும் அவர்களில் {அஷ்டகன், பிரதர்த்தனன், வசுமனஸ், சிபி ஆகிய நால்வரில்} ஒருவன், “உம்முடன் வரப்போகும் ஒருவனோடு சேர்த்துப் பார்த்தால், உங்களில் யார் செல்வார்கள், யார் விழுவார்கள்?” என்று கேட்டன். அதற்கு நாரதர், “சிபி செல்வான், ஆனால் நான் விழுவேன்” என்றார். “என்ன காரணத்திற்காக?” என்று கேட்டான், விசாரித்தவன். அதற்கு நாரதர், “நான் சிபிக்கு சமமானவன் கிடையாது. ஒருநாள் ஒரு அந்தணர் சிபியிடம் வந்து, “ஓ சிபியே, நான் உன்னிடம் உணவுக்காக வந்திருக்கிறேன்” என்று சொன்னார். அதற்குச் சிபி, “நான் என்ன செய்ய வேண்டும்? உமது கட்டளைகளை நான் பெறுவேன்” என்றான். அதற்கு அந்த அந்தணர், “பிருகதகர்ப்பன் என்ற பெயர் கொண்ட இந்த உனது மகன் கொல்லப்பட வேண்டும். ஓ! மன்னா {சிபியே}, இவனையே எனது உணவாகச் சமைப்பாயாக” என்றார். இதைக் கேட்டதும், அடுத்த என்ன நடக்கும் என்று காண நான் காத்திருந்தேன். சிபி தனது மகனைக் {பிருகதகர்ப்பனைக்} கொன்று, அவனை முறையாகச் சமைத்து, அந்த உணவைப் பாத்திரத்தில் வைத்து, அதைத் தனது தலையில் சுமந்தபடி, அந்த அந்தணரைத் தேடிச் சென்றான். அந்த அந்தணரை சிபி தேடிக் கொண்டிருந்த போது, யாரோ ஒருவன், “நீர் தேடிக் கொண்டிருக்கும் அந்தணர், நகரத்துக்குள் நுழைந்து உமது வீட்டை நெருப்பிட்டு கொளுத்துகிறார். மேலும் அவர் கோபத்துடன் உமது கருவூலத்திற்கும், ஆயுதக் கிடங்கிற்கும், அந்தப்புரத்திற்கும், குதிரை லாயத்திற்கும் மற்றும் யானைக்கொட்டத்திற்கும் நெருப்பிட்டு அவற்றைக் கொளுத்துகிறார்” என்றான்.
நிறம் மாறாமல் இவையாவையும் சிபி கேட்டான், பிறகு நகரத்துக்குள் நுழைந்து அவ்வந்தணரிடம், “ஓ! புனிதமானவரே, உணவு சமைக்கப்பட்டுவிட்டது” என்றான். இதைக் கேட்ட அந்தணர் ஒருவார்த்தையும் பேசாமல், ஆச்சரியமடைந்து தாழ்ந்த பார்வையுடன் நின்றார் {தலை குனிந்து நின்றார்}. சிபி அந்த அந்தணரைத் திருப்தி செய்யும் நோக்குடன், “ஓ! புனிதமானவரே, இதை உண்ணும்” என்றான். அந்த அந்தணர், சிபியை ஒருக்கணம் பார்த்துவிட்டு, “நீயே அதை உண்பாயாக” என்றார். அதற்குச் சிபி, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, மகிழ்ச்சியுடம் தனது தலையில் இருந்த பாத்திரத்தை எடுத்து, அதை உண்ண விரும்பினான். அப்போது அந்த அந்தணர், சிபியின் கரங்களைப் பற்றி, அவனிடம் {மன்னன் சிபியிடம்}, “நீ கோபத்தை வென்றாய். அந்தணர்களுக்கு நீ கொடுக்க இயலாதது எதுவும் இல்லை” என்றார்.
இதைச் சொன்ன அந்த அந்தணர் சிபியைப் புகழ்ந்தார். சிபி அவரை நோக்கிய போது, அவன் {சிபி} தனது மகன் {பிருகதகர்ப்பன்} தேவர்களின் பிள்ளையைப் போல, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, உடலில் நறுமணத்துடன் நிற்பதைக் கண்டான். இதையெல்லாம் செய்த அந்த அந்தணர், தன்னைக் காட்சிப்படுத்தினார். அந்த அரசமுனியை {சிபியை} சோதிப்பதற்காக விதத்திரியே அந்த மாற்றுருவில் வந்திருந்தான். பிறகு அந்த விதத்திரி மறைந்தவுடன், அவனின் {சிபியின்} ஆலோசகர்கள் அம்மன்னனிடம் {சிபியிடம்}, “நீர் அனைத்தையும் அறிந்தவர். இவையாவற்றையும் நீர் எதற்காகச் செய்தீர்?” என்று கேட்டனர். அதற்குச் சிபி, “புகழுக்காகவோ, செல்வத்திற்காகவோ, இன்ப நுகர் பொருட்களை அடைய விரும்பியோ நான் இவையாவற்றையும் செய்யவில்லை. இது பாவத்தின் வழி கிடையாது. இதற்காகவே நான் இவையாவற்றையும் செய்தேன். அறம்சார்ந்தவர்கள் சுவடு பதிக்கும் பாதை புகழத்தக்கது. எனது இதயம் எப்போதும் அது போன்ற வழிகளுக்கே மேல்நோக்கிச் செல்லும்” என்றான். சிபியின் உயர்ந்த அருள் நிலையை நான் அறிவேன். எனவே, நான் அதை உரிய முறையில் விவரித்தேன்” என்றார் {நாரதர்}. ( ஸ்வாதிவாசனம் என்பது வரவிருக்கும் சடங்கில், அந்தணர்கள், தேவர்களின் அருளைப் பெறுவதற்காக, கொதிக்க வைக்கப்பட்ட அரிசியை [சோற்றை] தரையில் தூவி ஜபிப்பதாகும். மலர்ரதம் [புஷ்பவாகனம்] என்பது, ஆடம்பர சடங்குகள் செய்து சொர்க்கத்தில் இருந்து பெறப்படும் தெய்வீக ரதமாகும். இவை சில நேரங்களில் மக்கள் பார்வையிலும் செய்யப்பட்டன. அதற்கு [ரதத்தைக் காட்டுவதற்கு] முன்புதான் சுவாதிவாசனம் என்ற சடங்கு செய்யப்படும்)
இந்திரத்யும்னன்! – வனபர்வம் பகுதி 198-சொர்க்கத்திலிருந்து விழுந்த இந்திரத்யும்னனை, ஆந்தையிடம் மார்க்கண்டேயர் அழைத்துச் செல்வது; ஆந்தை அவர்கள் இருவரையும் கொக்கிடம் அழைத்துச் சென்றது; கொக்கு ஆமையை அழைத்து “இந்திரத்யும்னன் யார்?” என்பதைக் கேட்பது; இந்திரத்யும்னன் மீண்டும் சொர்க்கமடைவது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாண்டுவின் மகன்களும் {பாண்டவர்களும்}, முனிவர்களும் மார்க்கண்டேயரிடம், “உம்மைவிட நீண்ட வாழ்நாள் {ஆயுள்} அருளப்பட்டவர்கள் வேறு யாரேனும் உள்ளனரா?” என்று கேட்டனர். மார்க்கண்டேயர், “சந்தேகமற நிச்சயம் இருக்கிறார்கள். இந்திரத்யும்னன் என்ற பெயர்படைத்த ஒரு அரசமுனி, அறம் குறைந்ததால், “எனது சாதனைகள் அனைத்தும் தொலைந்தன” என்று கதறியவாறு சொர்க்கத்தில் இருந்து விழுந்தான். பிறகு அவன் {அரசமுனி இந்திரத்யும்னன்} என்னிடம் வந்து, “என்னை அறிவீரா?” என்று கேட்டான். நான் அவனிடம் {இந்திரத்யும்னனிடம்}, “அறத்தகுதியை அடையும் ஆவலில் நாங்கள் எங்களை எந்த வீட்டிற்குள்ளேயும் அடைத்து வைத்துக் கொள்வதில்லை. ஒரே கிராமத்திலோ, நகரத்திலோ {அதிகபட்சம்} ஒரு இரவு மட்டுமே வாழ்கிறோம். எனவே, எங்களைப் போன்றோர், உன்னை அறிய முடியாது. நாங்கள் நோற்கும் நோன்புகளும் உறுதிகளும் எங்களை உடலால் பலவீனமடையச் செய்கிறது. அதனால் எங்களால் உலகம் சார்ந்த எந்தக் காரியத்தையும், சொந்தமாக அறிந்து கொள்ள முடிவதில்லை. எனவே, எங்களைப் போன்ற ஒருவன், உன்னை அறிந்திருப்பது இயலாது” என்றார் {மார்க்கண்டேயர்}.
பிறகு அவன் {அரசமுனி இந்திரத்யும்னன்} என்னிடம் {மார்க்கண்டேயரிடம்}, “உம்மைவிட நீண்ட நாள் வாழ்ந்தவர் யாருமுண்டா?” என்று கேட்டான். நான் அவனிடம் {இந்திரத்யும்னனிடம்}, “இமயமலையில் பிராவாரகர்ணன் என்ற ஒரு ஆந்தை வாழ்கிறது. அது என்னைவிட முதிர்ந்தது. அது உன்னை அறிந்திருக்கலாம். இமயமலையில் அது வசிக்கும் பகுதி இங்கிருந்து மிகத் தொலைவில் உள்ளது” என்றேன். பிறகு அந்த இந்திரத்யும்னன் குதிரையாக மாறி, அந்த ஆந்தை வாழுமிடத்திற்கு என்னைச் சுமந்து சென்றான். அம்மன்னன் {இந்திரத்யும்னன்} அந்த ஆந்தையிடம், “நீ என்னை அறிவாயா?” என்று கேட்டான். அந்த ஆந்தை ஒருக்கணம் {ஒரு முகூர்த்த காலம் என்றும் சொல்லப்படுகிறது} யோசிப்பது போலத் தெரிந்தது. பிறகு, அது {ஆந்தையானது}, மன்னனிடம் {இந்திரத்யும்னனிடம்}, “நான் உன்னை அறியேன்” என்றது. அதன்பிறகு அந்த அரசமுனி இந்திரத்யும்னன், அந்த ஆந்தையிடம், “உன்னைவிட வயது முதிர்ந்தவர் வேறு யாரும் உள்ளனரா?” என்று கேட்டான். அதற்கு அந்த ஆந்தை, “இந்திரத்யும்னம் என்ற பெயரில் ஒரு தடாகம் இருக்கிறது. அந்தத் தடாகத்தில் நாதீஜங்கம் என்ற பெயரில் ஒரு கொக்கு வசிக்கிறது. அது எங்களை விட முதிர்ந்தது, நீர் அதனிடம் கேட்கலாம்” என்றது {ஆந்தை}.
இதன் பேரில் மன்னன் இந்திரத்யும்னன் என்னையும், ஆந்தையையும் சுமந்து கொண்டு நாதீஜங்கம் என்ற கொக்கு வசித்த தடாகத்திற்குச் சென்றான். நாங்கள் அந்தக் கொக்கிடம், “நீ மன்னன் இந்திரத்யும்னனை அறிவாயா?” என்று கேட்டோம். அதற்கு அந்தக் கொக்கும் சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, “நான் மன்னன் இந்திரத்யும்னனை அறியேன்” என்றது. நாங்கள் அந்தக் கொக்கிடம், “உன்னை விட வயது முதிர்ந்தவர் யாராவது இருக்கின்றனரா?” என்று கேட்டோம். அதற்கு அது {அந்தக் கொக்கு}, “இதே தடாகத்திலேயே வசிக்கும் அகூபாரம் என்ற பெயர் கொண்ட ஆமை வசிக்கிறது. அது என்னைவிட முதிர்ந்தது. இம்மன்னனை {இந்திரத்யும்னனைக்} குறித்து அது அறிந்திருக்கலாம். எனவே அகூபாரத்தை விசாரியுங்கள்” என்று சொல்லி, ஆமையிடம் சென்று, “நாங்கள் உன்னிடம் ஒன்றைக் கேட்க நினைக்கிறோம். தயவு செய்து எங்களிடம் வா” என்றது.
இதைக் கேட்ட ஆமையும் தடாகத்தில் இருந்து வெளியே வந்து, நாங்கள் இருந்த கரையின் அந்தப்பகுதிக்கு வந்தது. அது {அகூபாரம் என்ற ஆமையானது} அந்த இடத்திற்கு வந்ததும் நாங்கள் அதனிடம், “நீ மன்னன் இந்திரத்யும்னனை அறிவாயா?” என்று கேட்டோம். அந்த ஆமை சிறிது நேரம் சிந்தித்தது. அதன் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன. இதய வருத்தத்துடன் நடுங்கியவாறு தனது உணர்வை இழக்கும் நிலைக்குச் சென்றது. பிறகு அது {அகூபாரம் என்ற ஆமையானது} கூப்பிய கரங்களுடன், “ஐயோ, நான் இவனை அறிய மாட்டேனா? வேள்வி நெருப்புக் கிண்டப்படும்போது ஆயிரம் முறை வேள்விக்குச்சிகளை {யூபஸ்தம்பங்களை} இவன் இங்கு நட்டிருக்கிறான். வேள்வியின் முடிவில் இவன் அந்தணர்களுக்குத் தானமளித்த பசுக்களின் குளம்படிகளால் தோண்டப்பட்டதே இத்தடாகம். நான் அதுமுதல் இங்கேயே வாழ்கிறேன்” என்றது {ஆமை}.
இவையனைத்தையும் ஆமை சொன்ன பிறகு, அங்கே தெய்வீக உலகங்களில் இருந்து ஒரு தேர் வந்தது. வானத்திலிருந்து ஒரு குரல் இந்திரத்யும்னனிடம், “வா, சொர்க்கத்தில் உனக்குத் தகுதியான இடத்தைப் பெறு! உனது சாதனைகள் பெரியன! உனது இடத்திற்கு நீ உற்சாகமாக வா!” என்றது.
இங்கே குறிப்பிட்ட செய்யுட்கள் {ஸ்லோகங்கள்} வருகின்றன. “அறச் செயல்களில் அறிக்கை உலகத்தில் பரவி சொர்க்கத்தை அடைகிறது. அந்த அறிக்கை எவ்வளவு காலம் நீடித்திருக்குமோ, அவ்வளவு காலம் அந்த அறச்செயலைச் செய்தவன் சொர்க்கத்தில் இருப்பான். ஒரு மனிதனின் தீச்செயல்கள் வதந்தியாகப் பரவும்போது, அவன் விழுந்து அந்தத் தீச்செயலின் அறிக்கை நீடிக்கும்வரை தாழ்ந்த உலகங்களிலேயே நீடிப்பான் என்று சொல்லப்படுகிறது. எனவே, சொர்க்கத்தை அடைய விரும்பும் மனிதன் தனது செயல்களில் அறத்தோடு நடந்து கொள்ள வேண்டும். அவன் பாவம்நிறைந்த இதயத்தைக் {மனதைக்} கைவிட்டு அறத்திடம் தஞ்சமடைய வேண்டும்” {என்பதே அச்சுலோகங்கள்}
இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {இந்திரத்யும்னன்}, “முதிர்ந்தவர்களான இவர்களை அவர்கள் இருப்பிடத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் வரை இந்தத் தேர் இங்கேயே நிற்கட்டும்” என்றான். பிறகு என்னையும், ஆந்தையான பிராவாரகர்ணனையும் எங்களுக்கு உரிய இடங்களில் விட்டுவிட்டு, அவன் {மன்னன் இந்திரத்யும்னன்} அந்தத் தேரில் பயணித்து, தனக்குத் தகுதியான இடத்தை அடைந்தான். நீண்ட வாழ்நாள் வாழ்ந்துள்ளதால், நான் இவை அனைத்தையும் சாட்சியாகக் கண்டேன்” என்றார் {மார்க்கண்டேயர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படியே மார்க்கண்டேயர் அனைத்தையும் பாண்டுவின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} விவரித்தார். மார்க்கண்டேயர் முடித்ததும், பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, “நீர் அருளப்பட்டு இரும்! சொர்க்கத்திலிருந்து விழுந்திருந்த மன்னன் இந்திரத்யும்னனைச் சரியாகச் செயல்படச் செய்து, அவனது இடத்தை மீட்டெடுக்கச் செய்தீர்!” என்றனர். மார்க்கண்டேயர், “தேவகியின் மகனான கிருஷ்ணனும், நரகத்தில் மூழ்கிய நிருகன் என்ற அரசமுனியை இப்படியே எழுப்பி, அவனை {நிருகனை} சொர்க்கத்தை அடையச் செய்தான்!” என்றார் {மார்க்கண்டேயர்}.
தானத்தில் சிறந்தது அன்னதானம்! – வனபர்வம் பகுதி 199அ-யாருக்குத் தானம் செய்யலாம் யாருக்குச் செய்யக்கூடாது, அன்னதானத்தின் மகிமை ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னன் யுதிஷ்டிரன், சிறப்புமிக்க மார்க்கண்டேயரிடம், அரசமுனியான இந்திரத்யும்னன் சொர்க்கத்தை மீண்டும் அடைந்த கதையைக் கேட்ட பிறகு, அவன் {யுதிஷ்டிரன்} முனிவரிடம் {மார்க்கண்டேயரிடம்}, “ஓ! பெரும் முனிவரே {மார்க்கண்டேயரே}, இந்திரனின் உலகங்களுக்குள் அனுமதி பெற்று ஒரு மனிதன், எப்படிப்பட்ட நிலைமைகளில் தானம் கொடுக்க வேண்டும்? ஒருவன் தானம் செய்து, அதன் பலன்களை எந்த வாழ்நிலைகளில் அனுபவிக்கிறான்? இல்லற வாழ்விலா? பிள்ளைப்பருவத்திலா?, இளமையிலா? முதுமையிலா?” என்று கேட்டான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “பயனற்ற வாழ்வு நான்கு{4} வகைப்படும். பயனற்ற தானம் பதினாறு{16} வகைப்படும்.
மகனில்லாதவன் வாழ்வு பயனற்றது {1};
அறம் வழுவுபவர்கள் வாழ்வு பயனற்றது {2);
அடுத்தவன் உணவில் வாழ்பவன் வாழ்வு பயனற்றது {3};
கடைசியாக, தனக்காக மட்டுமே சமைத்து, பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் உணவளிக்காமல், அவர்களுக்கு முன்பாக உணவருந்துபவன் வாழ்வும் பயனற்றது {4}.
அறநோன்புகள் பயில்வதிலிருந்து விழுந்தவனுக்குச் செய்யப்படும் தானம் {1}, தவறாக ஈட்டிய செல்வத்தில் செய்யப்படும் தானம் {2} ஆகிய இரண்டும் பயனற்றதே. விழுந்த {அறம் வழுவிய} பிராமணன் {3}, திருடன் {4}, போலி ஆசான் {5} ஆகியோருக்குச் செய்யப்படும் தானமும் பயனற்றதே. பொய்யன் {6}, பாவி {7}, நன்றியில்லாதவன் {8}, கிராமத்தில் வசிக்கும் அனைத்து வகை மக்களுக்கும் வேள்வி செய்து கொடுப்பவன் {9}, வேதங்களை விற்பவன் 1 {10}, சூத்திரனுக்காகச் சமைப்பவன் {11}, பிறப்பால் அந்தணனாக இருந்து, தனது வகைக்குரிய தொழிலைச் செய்யாதவன் {12}, ஆகியோருக்கு அளிக்கப்படும் தானம் பயனற்றதே. ஒரு பெண் பூப்படைந்த பின்னர்த் திருமணம் செய்து கொள்பவன் {The one that has married a girl after the accession of puberty } {13}, பெண்கள் {14}, பாம்புடன் விளையாடுபவன் {15}, வீட்டு ஊழியம் செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவன் {16} ஆகியோருக்குச் செய்யப்படும் தானமும் பயனற்றதே. இந்தப் பதினாறு {16} வகைத் தானங்களும் எச்சிறப்பையும் {எந்த பலனையும்} கொடுக்காது.
மனதில் இருள் சூழ்ந்த {அஞ்ஞானம் கொண்ட} மனிதன் ஒருவன், அச்சத்தாலோ, கோபத்தாலோ தானமளித்தால், தாயின் கருவறைக்குள் இருந்து அத்தகு தானத்திற்கான பலனை அனுபவிப்பது போல அனுபவிப்பான் {அதனால் எந்தப் பலனும் இருக்காது}. {எச்சூழ்நிலையிலும்} ஒரு மனிதன் அந்தணர்களுக்குத் தானமளித்தால், அவன் தனது முதிர்ந்த வயதில் அதன் கனியைச் சுவைக்கிறான். எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சொர்க்கத்தின் வழியை அடைய வேண்டும் என்று விரும்பும் ஒருவன், எந்தச் சூழ்நிலையானாலும், தான் விரும்பும் அனைத்தையும் அந்தணர்களுக்குக் கொடுக்கலாம்” என்றார் {மார்க்கண்டேயர்}.
யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, “நால்வகை மனிதர்களிடமும் தானமேற்கும் அந்தணர்கள், அடுத்தவர்களையும் தங்களையும் எவ்வழியில் பாதுகாக்கிறார்கள்?” என்று கேட்டான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “ஜபம் 2, மந்திரங்கள் 3, ஹோமம் 4, வேத கல்வி ஆகியவற்றின் மூலம் அந்தணர்கள் ஒரு வேதப் படகைக் 5 கட்டுகிறார்கள். அதைக் கொண்டு, அவர்கள் தங்களையும் பிறரையும் காக்கின்றனர். அந்தணர்களைத் திருப்திசெய்யும் மனிதனிடம் தேவர்களும் திருப்தி அடைகிறார்கள். உண்மையில், ஓர் மனிதன், ஓர் அந்தணனின் கட்டளையின் பேரிலேயே சொர்க்கத்தை அடைகிறான்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உனது உடல் கபம் {சளி} உண்டுபண்ணும் மந்தமான சிலேத்தும உடலாகவே இருந்தாலும் கூட, நீ பித்ருக்கள், தேவர்கள் ஆகியோரை வழிபடுவதாலும், அந்தணர்களை மதிப்பதாலும், நிச்சயம் நித்திய அருள் இருக்கும் உலகங்களை நீ அடைவாய். அறத்தையும், சொர்க்கத்தையும் விரும்புபவன் அந்தணர்களைப் வணங்க வேண்டும். ஒருவன் சிரத்தங்களின் {சிரார்த்தங்களின்} போது, சபிக்கப்பட்டவர்களையும், விழுந்தவர்களையும் விலக்கினாலும்கூட, அந்தணர்களுக்குக் கவனமாக உணவளிக்க வேண்டும். அதீத வெள்ளையாக, அதீத கருப்பாக இருப்பவர்களையும், நோய்ப்பட்ட நகங்கள் {சொத்தை நகங்கள்} கொண்டோரையும், குஷ்டரோகிகளையும், ஏமாற்றுக்காரர்களையும், கைம்பெண்களுக்கோ, உயிருடன் இருக்கும் பல கணவர்களைக் கொண்ட பெண்ணுக்கோ முறைகேடாகப் பிறந்தவர்களையும், பிச்சை எடுத்துத் தங்களைத் தாங்கிக் கொள்பவர்களையும் {சிரார்த்தங்களின் போதும்} கவனமாக விலக்க வேண்டும். கண்டிக்கத்தக்க சிரார்த்தங்கள், அதைச் செய்யும் ஒருவனை எரிபொருளை உட்கொள்ளும் நெருப்பைப் போல உட்கொண்டுவிடும். சிரார்த்தங்களில் ஈடுபடுவோர், ஊமையாகவோ, குருடாகவோ, செவிடாகவோ இருந்தால், அவர்களுடன் வேதமறிந்த அந்தணர்கள் உடனிருப்பதைக் கவனமாகப் பார்க்க வேண்டும்.
ஓ! யுதிஷ்டிரா, நீ யாருக்குத் தானமளிக்க வேண்டும் என்பதைச் சொல்கிறேன் கேள். வேதங்கள் அனைத்தையும் அறிந்தவன், எந்த அந்தணன், தானமளிப்பவனையும் தன்னையும் காப்பானோ அவனுக்குத் தானம் அளிக்க வேண்டும். எவன் கொடுப்பவனையும், தன்னையும் கரையேற்றுவானோ அந்தச் சக்தி உள்ளவனுக்கே தானமளிக்க வேண்டும். ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, விருந்தினரை உபசரிப்பது என்ற தெளிந்த நெய்யை ஏற்பதைப் போல, மலர்கள், சந்தனம், மற்றும் பிற நறுமணப் பொருட்களைப் புனித நெருப்பு ஏற்பதில்லை. எனவே, ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, நீ விருந்தினர்களை உபசரிக்க முயல வேண்டும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, விருந்தினர்கள் தங்கள் பாதங்களைக் கழுவி கொள்ள நீர் கொடுப்பது, (களைத்த) தங்கள் கால்களில் தடவி கொள்ள நெய் கொடுப்பது, இருள் நிறைந்த நேரங்களில் ஒளி கொடுப்பது, உணவு மற்றும் உறைவிடம் கொடுப்பது ஆகியவற்றைச் செய்யும் மனிதன் யமனிடம் செல்ல வேண்டியதில்லை. தேவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மலர்க்காணிக்கைகளை (வழிபாட்டிற்குப் பிறகு) அகற்றல், அந்தணன் உண்ட மிச்சத்தை அகற்றல், (ஒரு அந்தணனுக்காக) நறுமணத் தைலங்களுடன் காத்திருதல், அந்தணனின் உறுப்புகளைப் பிடித்துவிடல் ஆகிய ஒவ்வொன்றும், ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, பசுதானத்தைவிட {பலன் கொடுக்கும்} தகுதியால் அதிகமானவை.
கபில பசுவை {காராம்பசுவை} தானமளிப்பவன், சந்தேகமற தன்னைக் காத்துக் கொள்கிறான். எனவே, ஒருவன் நன்கு அலங்கரிக்கப்பட்ட கபில பசுவை {காராம்பசுவை} அந்தணர்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். ஓ! பரதக் குலத்தவனே {யுதிஷ்டிரனே}, ஒருவன் நல்ல குலத்தில் பிறந்தவனுக்கும், வேதங்களை அறிந்தவனுக்கும், ஏழ்மையானவனுக்கும், மனைவி மக்கள் என்ற சுமையுடன் வாழும் இல்லற வாழ்வு வாழ்பவனுக்கும், தினமும் புனித நெருப்பை வணங்குபவனுக்கும், உனக்கு எந்தச் சேவையும் செய்யாதவனுக்கும் தானமளிக்க வேண்டும். நீ எப்போதும் இது போன்றவர்களுக்கே கொடுக்க வேண்டும். செழிப்புடன் இருப்பவர்களுக்குக் கொடுக்கக்கூடாது. ஓ! பரதக் குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, செழிப்பானவனுக்குக் கொடுப்பதில் என்ன தகுதி உண்டாகும்?
ஒரு அந்தணருக்கு ஒரு பசுக் கொடுக்கப்பட {தானம் செய்ய} வேண்டும். ஒரே பசுவை பலருக்குக் கொடுக்கக்கூடாது {தானம் செய்யக்கூடாது}. அப்படி ஒரு பசு (பலருக்கு) கொடுக்கப்பட்டால், அது விற்கப்படும்போது, தானமளித்தவன் தனது மூன்று தலைமுறைகளை இழக்கிறான். அப்படிப்பட்ட தானம், தானமளிப்பவனையோ, அதைப் பெறும் அந்தணரையோ பாதுகாப்பதில்லை. ஒருவன் எண்பது ரத்திக்கள் 6 தங்கத்தைத் தானமளித்தால், அது எப்போதும் நூறு தங்கக்கட்டிகளைத் தானமகளித்த தகுதியை ஈட்டிக் கொடுக்கும். ஏர் கலப்பையை இழுக்கும் திறம் பெற்ற பலம் வாய்ந்த காளையைத் தானமளிப்பவன், அனைத்து சிரமங்களிலிருந்தும் {துன்பங்களிலிருந்தும்} விடுபட்டு, கடைசியாகச் சொர்க்கத்தை அடைவான் என்பது நிச்சயம். கற்ற அந்தணனருக்கு நிலத்தைத் தானம் அளிப்பவன், தனது விருப்பங்கள் அனைத்தும் ஈடேறப்பட்டவனாவான். கால்கள் அழுக்கடைந்து, பலவீனமடைந்த உறுப்புகளைக் கொண்ட களைத்த பயணி, தனக்கு உணவு தரக்கூடியவனின் பெயரைக் கேட்பான். அவனுக்குப் பெயரைச் சொல்லும் மனிதர்கள் உண்டு. அப்படிக் களைத்துப் போய் வருபவனுக்கு, உணவு தருபவன் பெயரைச் சொல்லும் விவேகி, உணவைத் தானமளிப்பவன் அடையும் அதே அளவு தகுதியை அடைவான்.
(1 ரத்தி = 0.12125 கிராம், 8 ரத்தி = 1 கிராம், எனவே 80 ரத்திகள் = 10 கிராம் = 1.25 சவரன்)
எனவே நீ, பிற வகைத் தானங்களைத் தவிர்த்து உணவைத் தானமாகக் கொடு {அன்னதானம் செய்}. உணவைத் தானம் செய்வதில் கிடைப்பதை விட (தானங்களால் எழும்} பெரிய தகுதிகள் கிடைப்பதில்லை. தனது சக்திக்குட்பட்டு ஒருவன் நன்கு சமைத்த சுத்தமான உணவைக் கொடுப்பானானால், அவனது செயலின் பலனாகப் பிரஜாபதியின் (பிரம்மனின்) தோழமையைப் பெறுகிறான். உணவை விட உயர்ந்தது எதுவுமில்லை. எனவே, உணவே {தானமளிக்கப்படுவதில்} முதன்மையானதாக, அனைத்துப் பொருட்களுக்கும் முதன்மையானதாகக் கொள்ளப்படுகிறது. உணவே பிரஜாபதிதான் என்றும் சொல்லப்படுகிறது. பிரஜாபதியே வருடமாகக் கருதப்படுகிறான். வருடமே வேள்வி. அனைத்தும் வேள்வியிலேயே நிலைபெற்றிருக்கின்றன. வேள்வியினாலே அனைத்து உயிரினங்களும், அசைவன மற்றும் அசையாதனவும் தங்கள் பிறப்பை அடைகின்றன. இதன் காரணமாகவே, உணவு அனைத்திலும் முதன்மையானது என்று நாம் கேள்விப்படுகிறோம். தடாகங்களையும், பெரும் நீர்நிலைகளையும், குளங்களையும், கிணறுகளையும், உறைவிடம் மற்றும் உணவையும் தானமளிப்பவனும், இனிமையான வார்த்தைகளைப் பேசுபவனும் யமனின் எச்சரிக்கைகளைக் கேட்க மாட்டார்கள் {யமன் எச்சரிக்கமாட்டான்}. எவன் தனது உழைப்பால் ஈட்டிய அரிசியையும், செல்வத்தையும், நன்னடத்தைக் கொண்ட அந்தணனுக்குத் தானமளிப்பானோ அவனிடம் இந்தப் பூமி திருப்தியுடன் இருக்கிறாள். அவள் அவன் மீது செல்வத்தைப் பொழிகிறாள். உணவைத் தானமளிப்பவன் {அன்னதானம் செய்பவன்} முதலில் நடக்கிறான், அவனுக்குப் பின்னால் உண்மை பேசுபவனும், கோராத நபர்களுக்குத் தானமளிப்பவனும் நடக்கிறார்கள். ஆனால் அந்த மூவரும் ஒரே இடத்திற்கே செல்கிறார்கள்” என்றார் {மார்க்கண்டேயர்}
யமலோகம் செல்லும் தூரம்! – வனபர்வம் பகுதி 199ஆ-யமலோகம் செல்லும் பாதையில் யார் யார் எப்படிச் செல்வார்கள் என்றும், அறம் மற்றும் அறநெறிகள் குறித்தும் மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவை யாவையும் தனது தம்பிகளுடன் சேர்ந்து கேட்ட யுதிஷ்டிரன், ஆவலால் உந்தப்பட்டு, மீண்டும் உயர் ஆன்ம மார்க்கண்டேயரிடம், “ஓ! பெரும் முனிவரே {மார்க்கண்டேயரே}, மனிதர்களின் உலகிலிருந்து யமனின் உலகம் இருக்கும் தூரம் எவ்வளவு? அதன் அளவு என்ன? எப்படி மனிதர்கள் அதைக் கடக்கிறார்கள்? எதன் மூலம் {கடப்பார்கள்}? ஓ! அனைத்தையும் எனக்குச் சொல்லும்!” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடன்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஓ! அறம்சார்ந்தவர்களில் முதன்மையானவர்களே, உங்கள் கேள்வி, ஒரு பெரும் மர்மத்துக்குத் தொடர்புடையது. அது புனிதமானது, முனிவர்களால் பாராட்டப்படுகிறது. இது அறம்சார்ந்ததும் ஆகும்; ஆகையால் நான் அது குறித்து உன்னிடம் பேசுவேன். மனிதர்களின் வசிப்பிடத்திலிருந்து யமனின் உலகம், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எண்பத்தாறாயிரம் {86,000} யோஜனையாகும்! அந்த வழி ஆகாயத்து மேல் இருக்கிறது. {அவ்வழியில்} நீரில்லாமல் காணப் பயங்கரமாக இருக்கும்; அச்சாலையில் எங்கும் மரத்தின் நிழலோ, நீரோ, களைத்துப் போன பயணி சிறிது நேரம் ஓய்வெடுக்கும்படியான இடமோ இருக்காது. பூமியில் உயிருடன் இருக்கும் ஆண், பெண் என அனைவரும் யமனின் தூதுவர்களால் வலுக்கட்டாயமாக அவ்வழியில் அனுப்பப்படுகிறார்கள்.
கடும் மன்னனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவர்களும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தணர்களுக்குக் குதிரைகளும், இன்ன பிற வசதிகளை {வாகனங்களை} தானம் செய்தவர்கள், அந்த வழியில், அந்த விலங்குகள் அல்லது வாகனங்கள் மேல் செல்கிறார்கள். குடை கொடுத்தவர்கள், அந்த நீண்ட வழியில் சூரியக் கதிர்களைக் குடைகளால் புறம்தள்ளி செல்கிறார்கள். உணவைத் தானமாகக் கொடுத்தவர்கள், பசியில்லாமல் செல்கிறார்கள், உணவை தானம் கொடுக்காதவர்களோ பசியால் துன்பப்பட்டுச் செல்கிறார்கள். ஆடைகளைக் கொடுத்தவர்கள், அவ்வழியில் செல்லும்போது நன்கு அலங்கரிக்கப்பட்ட ஆடைகளுடன் செல்கிறார்கள். ஆடைகள் கொடுக்காதவர்கள் நிர்வாணமாகச் செல்கின்றனர். தங்கத்தைத் தானமாகக் கொடுத்தவர்கள், ஆபரணங்கள் பூண்டு மகிழ்ச்சியுடன் செல்கிறார்கள். நிலம் கொடுத்தவர்கள், தங்கள் அனைத்து விருப்பங்களும் ஈடேறிச் செல்கிறார்கள். தானியங்களைக் கொடுத்தவர்கள், எந்தத் தேவையுமில்லாமல், எந்தத் துயரமும் இல்லாமல் செல்கிறார்கள். வீடுகளைக் கொடுத்தவர்கள், மகிழ்ச்சிகரமாகத் தேர்களில் செல்கிறார்கள். குடிக்க ஏதாவது கொடுத்த மனிதர்கள், தாகத்தால் துயரடையாமல் மகிழ்ச்சியான இதயங்களுடன் செல்கின்றனர். விளக்குகள் கொடுத்தவர்கள், தங்கள் முன்பு செல்லும் பாதை பிரகாசிக்கச் செல்கிறார்கள். பசுக்களைத் தானம் கொடுத்தவர்கள், தங்கள் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு மகிழ்ச்சியாகச் செல்கிறார்கள்.
ஒரு மாதம் உண்ணாநோன்பு {உபவாசம்} இருந்தவர்கள், அன்னங்களால் இழுக்கப்படும் தேரில் செல்கிறார்கள். ஆறு இரவுகள் உண்ணா நோன்பிருந்தவர்கள் மயில்களால் இழுக்கப்படும் தேரில் செல்கிறார்கள். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, ஒரு வேளை மட்டும் உண்டு, இடைவேளைகளில் உண்ணாமல் மூன்று இரவுகளைக் கழிப்பவன், நோயிலிருந்தும், துயரத்தில் இருந்து விடுபட்ட உலகத்திற்குச் செல்கிறான். யமனின் உலகத்தில் மகிழ்ச்சியை உண்டு பண்ணும் அற்புத குணம் நீருக்கு இருக்கிறது. நீரை தானமாகக் கொடுத்தவர்கள், அங்கே புஷ்போதகை என்ற பெயர் கொண்ட ஆற்றை அடைகிறார்கள். இவ்வுலகில் நீரைத் தானம் செய்தவர்கள், அந்த ஊற்றில் குளிர்ந்த அமுதம் போன்ற நீரைப் பருகுகிறார்கள். தீச்செயல்கள் செய்தவர்களுக்கு அங்கே சீழை {சீழ்} அடைகிறார்கள். இப்படியே, ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஆறு அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றுகிறது. எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, (உன்னிடம் இருக்கும்) அந்தணர்களை உரிய முறையில் வணங்கு.
தான் நடந்த பாதையின் தூரத்தால் உறுப்புகள் பலவீனமடைந்து, நெடுஞ்சாலையின் புழுதி தன்மேல் பூசப்பட்டுச் செல்லும் ஒரு பயணி, அன்னதானம் செய்பவர் யார் என்று கேட்டு, நம்பிக்கையுடன் வீட்டுக்கு வருகிறான். அவனை மரியாதை மிகுந்த கவனிப்புடன் வணங்கு. உண்மையில் அவனே விருந்தினன்; அவனே அந்தணன் {பிராமணன்}. இந்திரனுடன் கூடிய தேவர்கள் அவனுக்கு முன்னே செல்கிறார்கள். அவன் வணங்கப்பட்டால், இந்திரனுடன் கூடிய தேவர்கள் திருப்தியடைகிறார்கள். அவன் வணங்கப்படாவிட்டால், தங்கள் தலைவனுடன் {இந்திரனுடன்} கூடிய தேவர்கள் உற்சாகமிழக்கிறார்கள். எனவே, ஓ! மன்னர்களில் முதன்மையானவனே (யுதிஷ்டிரா}, இந்த அந்தணர்களை உரிய முறையில் வணங்கு. நான் உன்னிடம் நூற்றுக்கணக்கான காரியங்களைப் பேசியிருக்கிறேன். மேலும் நீ என்ன கேட்க விரும்புகிறாய்?” என்றார் {மார்க்கண்டேயர்}.
யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, “ஓ! குருவே, நீர் அறம் மற்றும் அறநெறிகளையும் அறிந்திருக்கிறீர். எனவே நான் திரும்பத் திரும்பக் கேட்க விரும்புவது அறம் மற்றும் அறநெறிகள் சார்ந்து நீர் சொல்லும் புனிதமானவற்றையே {கதைகளையே}” என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நித்தியமான விருப்பங்கள் மற்றும் அனைத்துப் பாவங்களைக் கழுவ வல்ல வேறு புனிதமான காரியத்தை நான் இப்போது சொல்கிறேன். உன்னிப்பாகக் கேள். ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, கபிலப் பசுவைத் {காராம்பசுவைத்} தானம் கொடுப்பதற்குச் சமமான தகுதியைக் கொடுக்க வல்ல ஜேஷ்ட-புஷ்கரம் {என்ற தீர்த்தம்} அந்தணர்களின் பாதங்களைக் கழுவுவதால் எழுகிறது. அந்தணனின் பாதம் தொட்ட நீரால் பூமி ஈரத்தன்மையுடன் இருக்கும் வரை, தாமரை இதழ்களால் ஆன குவளைகளில் பித்ருக்கள் நீர் குடிப்பார்கள். விருந்தினன் {நலவிசாரிப்புடன்} வரவேற்கப்பட்டால், நெருப்பு {அக்னி} தேவர்கள் மகிழ்கிறார்கள். அவனுக்கு ஆசனம் அளிக்கப்பட்டால், நூறு வேள்விகளைச் செய்த தேவனே {இந்திரனே} திருப்தியடைகிறான். அவனது பாதம் கழுவப்பட்டால், பித்ருக்கள் மகிழ்கிறார்கள்; அவனுக்கு உணவளிக்கப்பட்டால் பிரஜாபதி திருப்தியடைகிறான்.
பரிசுத்தமான ஆன்மாவுடன் {இதயத்துடன்} ஒருவன், பசு (பிரசவ வேதனையில் இருக்கும்போது}, பிரசவிப்பதற்கு முன்னால், கன்றின் கால்களும் தலையும் காணப்படும்போது {அப்பசுவைத்} தானம் செய்ய வேண்டும். கருப்பையில் இருந்து பூமியில் விழும் கன்றுடன் கூடிய பசு, பூமிதேவிக்குச் சமமாகக் கருதப்படுகிறது. எனவே, அப்படிப்பட்ட பசுவை தானம் செய்யும் ஒருவன், பூமியை தானம் கொடுத்த தகுதியை அடைகிறான். அப்படிப்பட்ட ஒரு பசுவைக் கொடுக்கும் ஒருவன், பல ஆயிரம் யுகங்களுக்கு, அதாவது அந்த விலங்கு மற்றும் அதன் குட்டியின் ஆகியவற்றின் உடலில் உள்ள ரோமங்களின் அளவு கொண்ட யுகங்களுக்குத் தேவலோகத்தில் வணங்கப்படுவான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தானமாகப் பெறப்பட்ட ஒன்றை, ஒருவன், உடனே அறம்சார்ந்த, நேர்மையான வேறு ஒரு மனிதனுக்கு அதைத் தானம் செய்தால், அவன் பெரும் தகுதியை அடைகிறான். சந்தேகமற, அவன் கடல்கள், குகைகள், மலைகள், கானகங்கள், வனங்கள் சூழ அனைத்து எல்லைகளையும் கொண்ட முழு உலகத்தையும் தானம் செய்த பலனைப் பெறுகிறான்.
முழங்கால்களுக்கு நடுவே கைகளை வைத்துக் கொண்டு, தட்டிலிருந்து எடுத்து அமைதியாக உண்ணும் அந்தணன், பிறரை மீட்பதில் வெற்றியடைவான். குடிப்பதை விலக்கிய அந்தணர்களும், குறையுள்ளவர்கள் என்று யாராலும் பேசப்படாதவர்களும், தினமும் சம்ஹிதைகளைப் படிப்பவர்களும், பிறரை மீட்பதற்கு இயன்றவர்கள். வேதம் கற்ற அந்தணனுக்குப் நீர்க்காணிக்கையான {பானபலியான} நெய்யையும், சமையலுக்குத் தேவையான அனைத்தையும் கொடுக்க வேண்டும். நீர்க்காணிக்கையாக {பானபலியாக} நெருப்பிலிடப்பட்ட தெளிந்த நெய் வீண்போவதில்லை. அதே போல வேதம் கற்ற அறம்சார்ந்த அந்தணர்களுக்குத் தானம் கொடுப்பதும் வீண் போகாது. அந்தணர்கள் கோபத்தைத் தங்கள் ஆயுதமாகக் கொண்டிருக்கின்றனர்; அவர்கள் எப்போதும் இரும்பு, எஃகாலான ஆயுதங்கள் கொண்டு போரிடுவதில்லை. உண்மையில் இந்திரன் தனது வஜ்ரத்தைக் கொண்டு அசுரர்களைக் கொல்வது போல, அந்தணர்கள் கோபத்தைக் கொண்டு கொல்கிறார்கள். இப்படியே அறம் மற்றும் அறநெறிகள் சம்பந்தமான சொற்பொழிவு இப்போது நிறைவடைகிறது. இதைக் கேட்ட நைமிஷ வன முனிவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தார்கள். அத்தவசிகளும் இதைக் கேட்டதால் துன்பத்திலிருந்தும் கோபத்திலிருந்தும் விடுபட்டார்கள். இதன் தொடர்ச்சியாக அவர்கள் தங்கள் அனைத்துப் பாவங்களையும் அழித்தார்கள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதைக் கேட்கும் மனிதர்கள், மறுபிறப்பு எனும் கடமையில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.” என்றார் {மார்க்கண்டேயர்}.
ஆத்மாவும்! பரமாத்மாவும்!! – வனபர்வம் பகுதி 199இ-சுத்தங்கள் குறித்தும், ஆத்மா மற்றும் பரமாத்மா குறித்தும் மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது..
யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, “ஓ! பெரும் ஞானம் கொண்டவரே {மார்க்கண்டேயரே}, அந்தணன் தன்னை எப்போதும் சுத்தனாக வைத்துக் கொள்வதற்கு என்ன சுத்திகரிப்பு முறை உள்ளது?! ஓ அறம்சார்ந்த அனைத்து மனிதர்களிலும் முதன்மையானவரே {மார்க்கண்டேயரே}, நான் அதை உம்மிடம் இருந்து கேட்க விரும்புகிறேன்” என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “பேச்சுச் சுத்தம், செயல் சுத்தம், நீரைப் பயன்படுத்துவதால் வரும் சுத்தம் எனச் சுத்தம் மூன்று வகைப்படும். இந்த மூன்று வகைச் சுத்திகரிப்புகளையும் செய்யும் ஒருவன் சந்தேகமற சொர்க்கத்தை அடைகிறான். காலையிலும் மாலையிலும் சந்தியா தேவியை வணங்கி {சந்தியா வந்தனம் செய்து}, வேதங்களின் தாயான புனிதமான காயத்ரி தேவியைத் தியானத்தன்மையோடு உரைக்கும் {காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும்} அந்தணன், அவளால் சுத்திகரிக்கப்பட்டு, அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுவான். கடல்களோடு கூடிய இந்த முழு உலகையும் அவன் தானமாகப் பெற்றிருந்தாலும், அதன்காரணமாக அவன் மகிழ்ச்சியின்மையை அனுபவிக்க மாட்டான்.
சூரியன் உள்ளிட்ட தெய்வீகக் கோள்கள் அமங்களமாகி, ஒருவனுக்குப் பகையாக இருந்தாலும், இது போன்ற அவனது செயல்களால் அவை விரைவில் மங்களகரமானவையாகவும், சாதகமாகவும் மாறும். அதே வேளையில், ஏற்கனவே மங்களகரமாகவும் சாதகமாகவும் அந்த நட்சத்திரங்கள் இருந்தால், இதுபோன்ற அவனது செயல்களால், அவை மேலும் அதிக மங்களகரமாகவும், அதிகச் சாதகமாகவும் மாறும். விலங்குகளை உணவாக உண்ணும் பயங்கரமான ராட்சசர்களும், கடும் முகம் படைத்தவர்களும், பருத்த உடல் உடையவர்களும் இதுபோன்ற தூய்மையைப் பயிலும் அந்தணனுக்குத் தீங்கு செய்ய இயலாது.
அந்தணர்கள் சுடர்விட்டெரியும் நெருப்பைப் போன்றவர்கள். கல்வி கொடுப்பதாலோ, வேள்வி நடத்துவதாலோ, தானம் பெறுவதாலோ அவர்கள் எந்தக் குறைவும் அடைய மாட்டார்கள். அந்தணன் வேதமறிந்திருக்கிறானோ, அறியாதிருக்கிறானோ, சுத்தமாக இருக்கிறானோ, அசுத்தமாக இருக்கிறானோ, அந்தணர்கள் நெருப்பைப் போன்றவர்கள் என்பதால், எப்போதுமே அவர்கள் அவமதிக்கப்படக் கூடாது. இறந்தவர்களின் உடலை எரிக்க இடப்படும் நெருப்புத் தூய்மையற்றதாகக் கருதப்படுவதில்லை. அதே போல, ஒரு அந்தணன் கற்றவனோ, அறியாதவனோ அவன் எப்போதும் சுத்தனே ஆவான். அவன் பெரியவனும், தேவனுமாவான். சுவர்களாலும், வாயில்களாலும், அரண்மனைகளாலும் நிறைந்த நகரங்கள், அந்தணர்களற்று இருந்தால், தங்களது அழகை இழக்கும். உண்மையில், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தங்கள் வகைக்குரிய கடமைகளைச் சரியாகச் செய்து, கல்வி கற்று, தவத்தகுதியுடன் இருக்கும் வேதமறிந்த அந்தணர்கள் வசித்தால்தான் அது நகரமாகும். ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரா}, கற்ற அந்தணன் வசிக்கும் இடம், காடாகவோ, புல்வெளியாகவோ இருந்தால்கூட அது நகரம் என்று அழைக்கப்படும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவ்விடம் தீர்த்தமாகவும் ஆகும்.
பாதுகாப்பைக் கொடுக்கும் மன்னனையும், தவத்தகுதி படைத்த அந்தணனையும் அணுகி, அந்த இருவருக்கும் வழிபாட்டைச் செலுத்தும் ஒருவன், தனது பாவங்கள் அனைத்தையும் உடனே அழிக்கிறான்.
புனிதத் தீர்த்தங்களின் நீர்க்காணிக்கைகள் {பானபலி} செலுத்துவதையும், புனிதமானவர்களின் பெயர்களைச் சொல்வதையும், நல்லவர்கள் மற்றும் அறம்சார்ந்தவர்களுடன் உரையாடுவதையும் பாராட்டுக்குரிய தகுதிவாய்ந்த செயல்கள் என்று கற்றவர்கள் சொல்கிறார்கள். அறம்சார்ந்து நேர்மையாக இருப்பவர்கள், தங்களைப் போன்றோருடன் இருக்கும் தங்கள் தோழமையை எப்போதும் பரிசுத்தமான நீரால் புண்ணியமாக்கப்பட்ட புனிதத் தொடர்பாகக் கருதுகிறார்கள். திரி தண்டம் சுமந்து , நோன்புகள் பயின்று, நீர்க்காணிக்கைகள் கொடுத்து, நெருப்பை வணங்கி, கானகத்தில் வசித்து, உடல் மெலிந்து போவதெல்லாம், ஒருவன் இதயச் சுத்தம் இல்லாமல் இருந்தால் பயனில்லாமலேயே போகும். இன்ப நுகர் பொருட்களில் சுத்தம் எதிர்பார்க்கப்படவில்லையென்றால், அதில் ஆறு புலன்களின் {அறிவுகளின்} ஈடுபாடு எளிதானதே. எனினும், சுத்தம் இல்லாமை கடினமானதே; சுத்தமில்லாமல் கிடைக்கும் சுகம் எளிதானது கிடையாது {சுத்தமில்லாமல் சுகம் கிடைக்காது. அது மோட்சத்தைக் கொடுக்காது}.
ஓ! மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, ஆறு புலன்களின், மனது மட்டுமே எளிதாகத் தூண்டப்படும். அதுவே மிக ஆபத்தானதும் கூட வார்த்தையாலோ, செயலாலோ, ஆன்மாவாலோ பாவமிழைக்காத உயர் ஆன்ம மனிதர்கள் தவங்களில் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறதே ஒழிய, உடலை அழிக்கும் உபவாசங்களையோ நோன்புகளையோ அவர்கள் செய்வதில்லை. தனது உறவினர்களிடம் அன்பில்லாத ஒருவன், தனது உடலை சுத்தமாக வைத்திருந்தாலும் பாவத்திலிருந்து விடுபட மாட்டான். கடும் இதயமே ஒருவனது தவத்திற்கு எதிரியாகும். தவம் என்பது உலக இன்பங்களில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல. எப்போதும் சுத்தமாகவும், அறம்சார்ந்தும் இருப்பவனும், தனது வாழ்நாள் முழுவதும் அன்பைப் பயில்பவனும் இல்லற வாழ்வு வாழ்ந்தாலும் முனிவரே ஆவர். அப்படிப்பட்ட மனிதன் தனது பாவங்கள் அனைத்தையும் அழிக்கிறான். உபவாசங்களும், பிற நோன்புகளும் பாவங்களை அழிக்காது. இருப்பினும், அவற்றைப் பலமிழக்கச் செய்யும். மேலும் உடலின் சதைகளையும் இரத்தத்தையும் சுண்டச் செய்யும்.
புனிதமற்ற இதயம் கொண்டவன், நோன்புகளின் பொருளை உணராமல் அவற்றை மேற்கொள்வது, தன்னைத்தானே சித்திரவதை செய்து கொள்வதாகும். அத்தகு செயல்களைச் செய்வதால் அவன் அவனது பாவங்களில் இருந்து விடுபடுவதில்லை. அவன் வழிபடும் நெருப்பு, அவனது பாவங்களை உட்கொள்வதில்லை. புனிதத்தன்மையாலும், அறத்தாலும் மட்டுமே ஒரு மனிதன் அருள் உலகங்களை அடைகிறான். உபவாசங்களும் நோன்புகளும் பயனற்றுப் போகும். கனிகளும், கிழங்குகளும் மட்டுமே உண்பது, மௌன விரதமிருப்பது, காற்றை மட்டுமே உண்பது, சிகை மழித்து {மொட்டையடித்து} இருப்பது, நிலையான வீட்டைப் புறக்கணிப்பது, தலையில் சடா முடி தரிப்பது, வானம் பார்க்கப் படுப்பது, தினமும் உபவாசம் இருப்பது, நெருப்பை வழிபடுவது, நீரில் மூழ்குவது, வெறுந்தரையில் படுப்பது ஆகியன மட்டுமே அதுபோன்ற பலனைத் தராது {அருள் உலகங்களை அடைய முடியாது}. அறிவாலும் செயலாலும் புனிதத்தன்மையடைபவர்கள் மட்டுமே, நோய், பலவீனம், மரணம், உயர்ந்த நிலையை அடைதல் ஆகியவற்றை வெல்கிறார்கள். நெருப்பால் சுடப்பட்ட விதைகள் முளைக்காததைப் போல, அறிவால் சுடப்பட்ட வலிகள் ஆன்மாவைப் பாதிக்காது. குறைந்த காலம் வாழும் கடலின் நுரை போலவே, ஆன்மா இல்லாத செயலற்ற {மந்தமான} உடலும் மரக்கட்டை போன்றதே.
அனைவருக்குள்ளும் வசிக்கும் ஆன்மா; அந்த ஆன்மாவின் காட்சி {தரிசனம்} பெற்றவன், (வேதங்களின்} ஒரு தாள வரி {ஸ்லோகம் எனக் கொள்க} அல்லது பாதியின் உதவி பெற்றவன் ஆகியோருக்கு வேறு எதன் தேவையுமில்லை. சிலர் (வேதங்களின்} இரண்டே எழுத்துகளால் பரமாத்மாவின் அறிவைப் பெறுகிறார்கள்; சிலர் நாற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலுமான தாள வரிகளால் {சுலோகங்களால்} முக்தியை அடைகிறார்கள். பரமாத்மாவை அறிதலே {அறியும் அறிவே} முக்திக்கான குறியீடாகும். தனித்தன்மையான ஞானம் கொண்ட பழங்கால மனிதர்கள், சந்தேகங்களால் சலனப்படுபவனுக்கு இவ்வுலகமும் கிடையாது; அடுத்த உலகமும் கிடையாது; அருளுலகமும் கிடையாது என்று சொல்கின்றனர். பரமாத்மாவில் தன்னைக் காண்பவனின் நம்பிக்கையே முக்திக்குக் குறியீடாகும். வேதங்களின் உண்மையான பொருளை அறிந்தவன், அதன் உண்மையான பயன்பாட்டைப் புரிந்து கொள்கிறான். அப்படிப்பட்ட மனிதன், எரியும் காட்டைப் பார்க்கும் மனிதனைப் போல, வேதச் சடங்குகளைப் {வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கர்மங்களைப் {செயல்களைப்]} பார்த்து அஞ்சுகிறான்.
வறண்ட சொற்போர்களைத் தவிர்த்து, சுருதி மற்றும் ஸ்மிருதிகளில் ஆர்வம் செலுத்து. அறிவின் துணை கொண்டு, இரண்டாவதற்ற அழிவற்றவனை {பரமாத்மாவை} அறி. (அதை அறிந்த பிறகு) ஒருவனின் தேடல், குறைபாடுடைய வழிமுறைகளின் மூலம் வீணாகிறது. எனவே, ஒருவன் வேதங்களின் துணை கொண்டு அந்த அறிவை அடைய முயல வேண்டும். வேதங்களே பரமாத்மா; அவையே அவனது உடல்; அவையே உண்மை. விலங்கின் தன்மையால் கட்டுப்பட்டுள்ள ஆன்மா, வேதங்களில் கலந்திருக்கும் அவனை {பரமாத்மாவை} அறிய இயலாததாக இருக்கிறது. எனினும், அந்தப் பரமாத்மா சுத்தமான அறிவால் அறியத்தக்கவனாவான். வேதங்களில் சொல்லப்பட்டுள்ளபடி தேவர்களின் இருப்பும், உடல்களால் செய்யப்படும் செயல்களின் திறனும், செயல்பாட்டின் திறனும் அனைத்து யுகங்களிலும் கவனிக்கப்பட்டுள்ளது. இவற்றை விட்டுவிடுவதும், நிர்மூலமாக்குவதும் புலன்களின் {அறிவுகளின்} சுத்தத்தால் கோரப்படுகிறது. எனவே, புலன்களின் செயல்பாட்டை இடைநிறுத்தம் செய்வதே {நிறுத்துவதே} உண்மையான உபவாசமாகும். ஒருவன் தவத்தின் மூலம் சொர்க்கத்தை அடையலாம். ஒருவன் தானம் செய்வதால் இன்பநுகர் பொருட்களை அடையலாம். தீர்த்தங்களில் நீர்க்கடன் செலுத்துவதால் ஒருவனின் பாவங்கள் அழிக்கப்படலாம். ஆனால், முழுமையான விடுதலை என்பது, ஞானத்தைத் தவிர வேறெதாலும் அடைய முடியாது
மூவுலகிலும் உயர்ந்தது தானமே! – வனபர்வம் பகுதி 199ஈ-எந்தெந்த காலங்களில் தானம் செய்தால் எவ்வளவு பலன் கிடைக்கும் என்பது குறித்து மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, இப்படிச் சொல்லப்பட்ட பெரும் புகழுடைய யுதிஷ்டிரன், “ஓ! புனிதமானவரே {மார்க்கண்டேயரே}, மதிப்பைத் தரும் தானத்தின் விதிகளை நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பெரும் மன்னா, ஓ! யுதிஷ்டிரா, நீ கேட்க விரும்பும் தானத்தின் விதிகளை நான் எப்போதும் உயர்வாக மதித்து வந்திருக்கிறேன். ஸ்ருதி மற்றும் ஸ்மிருதிகளில் விவரிக்கப்பட்டுள்ள தானத்தின் மர்மங்களை {ரகசிங்களை} இப்போது கேள். கஜச்சாயை என்று சொல்லப்படும் இடைவேளைகளில், அரச மரத்தின் இலைகளால் {காற்று} வீசப்பட்டு {விசிறப்பட்டு} சிரார்த்தம் செய்யும் ஒரு மனிதன், ஓ! யுதிஷ்டிரா, அதன் பலன்களை நூறாயிரம் கல்பங்களுக்கு அடைந்து மகிழ்கிறான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு தர்மசாலையை நிறுவி, அனைத்தையும் பார்த்துக் கொள்ள ஒரு மனிதனை அதில் நியமிப்பவன், அனைத்து வேள்விகளையும் செய்த தகுதியைப் பெறுகிறான். நதியின் ஓட்டம் தனக்கு எதிராக ஓடும் தீர்த்தத்தில் ஒரு குதிரையைத் தானமளிப்பவன், வற்றாத தகுதியை அடைகிறான்.
ஒருவனது வீட்டிற்கு உணவுக்காக வரும் விருந்தாளி இந்திரனைத் தவிர வேறில்லை. அவனை உணவால் மகிழ்ச்சியடையச் செய்தால், இந்திரனே வற்றாத சிறந்த தகுதியை {உணவளிப்பவனுக்கு} அளிக்கிறான். மனிதர்கள் கப்பல்கள் மூலம் கடலைக் கடப்பது போல, மேலே சொல்லப்பட்ட தானம் செய்பவர்கள் தங்கள் அனைத்துப் பாவங்களிலிருந்தும் காக்கப்படுகிறான். அந்தணர்களுக்கு, தயிர் போன்ற எதைத் தானமளித்தாலும், அவை வற்றாத தகுகளைக் கொடுக்கின்றன. குறிப்பிட்ட சந்திர நாளில் {பாவ காலங்களில்} செய்யப்படும் தானம், பிற நாட்களில் செய்யப்படும் தானங்களை விட இரட்டிப்பு மடங்கு பலனை அளிக்கும். குறிப்பிட்ட காலத்தில் செய்யப்படும் தானம், மற்ற காலங்களில் செய்யப்படுவதை விடப் பத்து மடங்கு பலன்களைத் தரும். குறிப்பிட்ட வருடத்தில் {ருது அயணம் காலத்தில்} செய்யப்படும் தானம் மற்ற வருடங்களைக் காட்டிலும் நூறு மடங்கு பலன்களைத் தரும். ஒரு வருடத்தின் கடைசி மாதத்தில் கடைசி நாளில் செய்யப்படும் தானம், வற்றாத தகுதிகளையும் பலன்களையும் தரும்.
கதிர்திருப்பம் சார்ந்த இடங்களில் சூரியன் நிற்கும்போது செய்யப்படும் தானமும், துலாம், மேஷம், மிதுனம், கன்னி, மீனம் ஆகிய ராசிகளில் சூரியன் தங்கும் கடைசி நாளில் செய்யப்படும் தானமும், சந்திரன் மற்றும் சூரிய கிரஹணங்களின் போது செய்யப்படும் தானமும் வற்றாத பலனைத் தரும். பலன் தரும் காலங்களில் செய்யப்படும் தானம் பத்து மடங்கும், பருவ நிலை மாறும்போது செய்யப்படும் தானம் நூறு மடங்கும், ராகு காட்சி தரும் நாட்களில் {கிரஹண காலங்களில்} செய்யப்படும் தானங்கள் ஆயிரம் மடங்கும் பலன்களைத் தரும் என்று கற்றவர்கள் சொல்கிறார்கள். துலாம் மற்றும் மேஷ ராசிகளில் சூரியன் தங்கும் கடைசி நாளில் செய்யப்படும் தானம் தரும் பலன்கள் அழிவை அறியாது.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நிலத்தினால் உண்டாகும் பலன்களை ஒருவன் நிலத்தைத் தானம் செய்யாமல் அடைய முடியாது. வாகனங்களில் செல்லும் பலன்களை, ஒருவன் வாகனத்தைத் தானம் செய்யாமல் பெற முடியாது. உண்மையில் ஒரு மனிதன் ஒரு அந்தணனுக்குத் தானம் செய்யும்போது என்ன நோக்கத்தோடு தானம் செய்தானோ, அவை அவனது மறுபிறப்பில் பலன்களைக் கொடுக்கும். தங்கம் நெருப்பில் இருந்தே எழுந்தது; பூமி விஷ்ணுவிடமிருந்தும், பசுக்கள் சூரியனிடம் இருந்தும் எழுந்தன. எனவே, தங்கம், பூமி, பசுக்களைத் தானம் செய்வோர், அக்னி, விஷ்ணு மற்றும் சூரியலோகங்களை அடைவார்கள். தானம் செய்வதை விட நித்தியமானது {அழியாத்தன்மை கொண்டது} வேறு எதுவும் இல்லை. எனவே, மூவுலகிலும் இதைவிட வேறு மங்களகரமானவது வேறெங்கும் இருக்கிறதா? ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதற்காகவே, பெரும் புத்திக்கூர்மை கொண்டவர்கள், தானத்தை விட உயர்ந்ததோ, பெரிதானதோ மூவுலகிலும் இல்லை என்று சொல்கிறார்கள்.
விஷ்ணுவைக் கண்ட உதங்கர்! – வனபர்வம் பகுதி 200-உதங்கரின் தவத்தைக் கண்டு திருப்தியுற்ற விஷ்ணு அவரைச் சந்தித்தல்; துந்து என்ற அசுரனைக் குறித்து உதங்கரிடம் விஷ்ணு சொல்லல் ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் சொன்னது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, அரசமுனியான இந்திரத்யும்னன் சொர்க்கமடைந்த வரலாற்றைச் சிறப்புமிக்க மார்க்கண்டேயரிடம் இருந்து கேட்ட பாரதக் குலத்தின் காளையான யுதிஷ்டிரன் மீண்டும அந்தப் பெரும் தவத்தகுதியும், நீண்ட வாழ்நாளும் உடைய பாவமற்ற முனிவரிடம் {மார்க்கண்டேயரிடம்}, “ஓ! அறம் சார்ந்தவரே {மார்க்கண்டேயரே}, தேவர்கள், தானவர்கள் மற்றும் ராட்சசர்களின் ஒட்டுமொத்தக்கூட்டத்தையும் நீர் அறிவீர். நீர் பலதரப்பட்ட அரச பரம்பரைகளையும், நித்திய வழி வந்த முனிவர்கள் பலரையும் அறிவீர். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே, இவ்வுலகில் நீர் அறியாதது ஒன்றுமில்லை. ஓ! முனிவரே {மார்க்கண்டேயரே}, மனிதர்கள், பாம்புகள், ராட்சசர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், அப்சரசுகள் ஆகியோரின் பல கேட்பதற்கினிய கதைகளை அறிந்திருக்கிறீர். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, இக்ஷவாகு குலத்தைச் சேர்ந்த ஒப்பற்ற மன்னன் குவலாஸ்வன் {Kuvalaswa} ஏன் தனது பெயரை துந்துமாரன் {Dhundhumara} என்று மாற்றிக் கொண்டான்? ஓ! பிருகு குலத்தில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}. பெரும் புத்திக்கூர்மை கொண்ட குவலாஸ்வன் ஏன் தனது பெயரை மாற்றிக் கொண்டான் என்பதை விவரமாக அறிய விரும்புகிறேன்” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படி யுதிஷ்டிரனால் கேட்கப்பட்ட பெரும் முனிவரான மார்க்கண்டேயர், ஓ! பாரதா {ஜனமேஜயா}, துந்துமாரனின் வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தார்!”
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் உனக்கு அனைத்தையும் சொல்வேன். நான் சொல்வதைக் கேள்! துந்துமாரனின் கதை அறநெறிகள் அடங்கியது. அதைக் கேள்! ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இக்ஷவாகு குலத்தைச் சார்ந்த மன்னன் குவலாஸ்வன், துந்துமாரன் என்று அறியப்படும் காரணத்தைக் கேள். ஓ! மகனே, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உதங்கர் என்ற பெயரில் கொண்டாடப்படும் முனிவர் ஒருவர் இருந்தார். ஓ! குரு குலத்தவனே {யுதிஷ்டிரா}, ஒரு இனிமையான வனத்தில் உதங்கரின் ஆசிரமம் இருந்தது. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, விஷ்ணுவின் கருணையைப் பெறுவதற்காக, முனிவர் உதங்கர் அங்கே கடுமையான தவத்தை எண்ணிலடங்கா வருடங்களுக்குச் செய்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த ஒப்பற்ற தலைவன் {விஷ்ணு} உதங்கருக்குக் காட்சியளித்தான்.
அந்தத் தெய்வத்தை {விஷ்ணுவைக்} கண்ட முனிவர் அடக்கத்துடன், அவனைத் {விஷ்ணுவைத்} திருப்தி செய்யப் பல பாடல்களைப் பாடினார். உதங்கர், “ஓ! பிரகாசம் மிக்கவனே {விஷ்ணுவே}, தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் அசைவன, அசையாதன, ஏன் பிரம்மனும், வேதங்களும் உட்பட அறியப்பட முடிந்த அனைத்து உயிரினங்களும், அனைத்துப் பொருட்களையும் நீ படைத்தவையே. ஓ! தேவா {விஷ்ணுவே}, ஆகாயமே உனது தலை, சூரியனும், சந்திரனும் உனது விழிகள்! ஓ! மங்காதவனே, காற்று உனது சுவாசம், நெருப்பு உனது சக்தி! அடிவானத்தின் திசைகள் அனைத்தும் உனது கரங்கள், பெருங்கடலே உனது வயிறு! ஓ! தேவா {விஷ்ணுவே}, குன்றுகளும் மலைகளும் உனது தொடைகள், வானம் உனது இடுப்பு, ஓ! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, பூமியே உனது பாதம், செடிகள் உனது உடலில் இருக்கும் ரோமங்களாகும். ஓ! தேவா {விஷ்ணுவே}, இந்திரன், சோமன், அக்னி, வருணன் உட்பட உண்மையில் அனைத்து தேவர்களும், அசுரர்களும், பெரும் பாம்புகளும், பலதரப்பட்ட பாடல்களால் உன்னைப் புகழ்ந்து கொண்டு உனக்காக அடக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
ஓ! அண்டத்தின் தலைவா {விஷ்ணுவே}, படைக்கப்பட்ட அனைத்திலும் நீ பரவியிருக்கிறாய் {ஊடுருவியிருக்கிறாய்}. உயர்ந்த சக்தியும், எப்போதும் தவத்தியானத்தில் மூழ்கியிருப்பவர்களுமான பெரும் முனிவர்கள் எப்போதும் உன்னை வழிபடுகிறார்கள். நீ திருப்தியடையும்போது, அண்டம் அமைதியில் இருக்கிறது. நீ கோபத்தில் இருக்கும்போதோ, அனைத்து ஆன்மாவையும் பயங்கரம் ஊடுருவுகிறது. ஓ! தலைவா {விஷ்ணுவே}, நீயே அனைத்துப் பயங்கரங்களையும் விலக்குபவன், நீயே மேன்மையானவன்! தேவர்கள் மற்றும் மனிதர்களின் மகிழ்ச்சிக்கு நீயே காரணமானவன்! ஓ! தலைவா {விஷ்ணுவே}, உனது மூவடிகளால், மூன்று உலகங்களையும் ஆக்கிரமித்தாய். அதிகாரத்தின் உச்சியில் இருந்த அசுரர்களை நீயே அழித்தாய்! ஓ! தேவா {விஷ்ணுவே}, உனது பராக்கிரமத்தினாலேயே, தேவர்களுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது. ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே {விஷ்ணுவே}, உனது கோபமே நூற்றுக்கணக்கான பெரும் தைத்தியத் {அசுரத்} தலைவர்களை அழித்தது. நீயே படைப்பவனும், உலகத்திலுள்ள அனைத்து உயிரினங்களையும் அழிப்பவனும் ஆவாய். உன்னை வணங்கியே தேவர்கள் மகிழ்ச்சியை அடைகின்றனர்”. இப்படியே, ஓ! யுதிஷ்டிரா, உயர் ஆன்ம உதங்கர் புலன்களின் தலைவனைப் {விஷ்ணுவைப்} புகழ்ந்தார். ஆகையால், விஷ்ணு உதங்கரிடம், “நான் உன்னிடம் திருப்தி கொண்டேன். நீ விரும்பும் வரத்தைக் கேள்” என்றான். அதற்கு உதங்கர், “அண்டத்தின் தலைவனும், தெய்வீகப் படைப்பாளனும் நித்தியமானவனான ஹரியை என்னால் காண முடிந்தது. உண்மையில், இதுவே எனக்குப் பெரும் வரமாகும்!” என்றார் {உதங்கர்}.
இப்படிச் சொல்லப்பட்ட விஷ்ணு {உதங்கரிடம்}, “ஓ! மனிதர்களில் சிறந்தவனே {உதங்கா}, லாபத்தில் விருப்பமில்லாத்தன்மையையும், உனது அர்ப்பணிப்பையும் கண்டு நான் திருப்தியடைந்தேன். ஆனால், ஓ! அந்தணா, ஓ! மறுபிறப்பாளனே, நீ நிச்சயம் என்னிடம் ஒரு வரத்தைப் பெற வேண்டும்” என்றான். வரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஹரியின் {விஷ்ணுவின்} கோரிக்கையின்படி உதங்கர், ஓ! பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, கரங்கள் கூப்பி ஒரு வரத்தை யாசித்தார். “ஓ! சிறப்புமிக்கவனே {விஷ்ணுவே}, ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடையவனே, நீ என்னிடம் திருப்தியடைந்தாயானால், எனது இதயம் எப்போதும் அறம், உண்மை {சத்தியம்}, தன்னடக்கம் {சுய அடக்கம்} ஆகியவற்றைப் {உறுதியுடன்} பற்றி, எப்போதும் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருக்கட்டும்” என்றார் {உதங்கர்}.
உதங்கின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தப் புனிதமானவன் {விஷ்ணு}, “ஓ! மறுபிறப்பாளனே, இவை அனைத்தும் எனது அருளால் நடைபெறும். சொர்க்கத்தில் வசிப்பவர்களுக்காவும் {தேவர்களுக்காகவும்}, மூவுலகங்களுக்காவும் நீ ஒரு பெரிய காரியத்தைச் சாதிக்க வேண்டியுள்ளது. அதற்கு உரிய யோக சக்தி உன்னிடம தோன்றும். மூவுலகங்களையும் அழிக்கும் நோக்குடன் துந்து என்ற பெயர் கொண்ட ஒரு பெரும் அசுரன் கடும் தவம் செய்து வருகிறான். அவ்வசுரனை யார் கொல்வார் என்பதைக் குறித்துக் கேள். ஓ! மகனே {உதங்கா}, ஒப்பற்ற சக்தியும், பெரும் பராக்கிரமும் கொண்ட ஒரு மன்னன் இக்ஷவாகு குலத்தில் பிருகதஸ்வன் என்ற பெயரில் அறியப்படுவான். அவன் {பிருகதஸ்வன்}, பெரும்புனிதமும், தன்னடக்கமும், புகழும், குவலாஸ்வன் என்ற பெயரும் கொண்ட மகனைப் பெறுவான். எனது யோக சக்தியில் எழும்பும் அந்த மன்னர்களில் சிறந்தவன் {குவலாஸ்வன்}, உன்னால் கட்டளையிடப்பட்டும், தூண்டப்பட்டும், ஓ! மறுபிறப்பாள முனிவா {உதங்கா}, அம்மன்னன் {குவலாஸ்வன்}, அசுரன் துந்துவைக் கொல்பவனாவான்” என்றான் {விஸ்ணு}. அந்த அந்தணரிடம் {உதங்கரிடம்} அப்படிச் சொன்ன விஷ்ணு அங்கேயே மறைந்து போனான்.
“துந்துவைக் கொல்!” என்றார் உதங்கர்! – வனபர்வம் பகுதி 201-பிருகதஸ்வான் குவலாஸ்வனுக்கு முடிசூட்டி வனத்துக்குப் புறப்பட்ட போது, அதைத் தடுத்து துந்து என்ற அசுரனைக் கொல்ல உதங்கர் சொன்னது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இக்ஷவாகுவின் {Ikshvaku} மரணத்திற்குப் பிறகு, சசாதன் {Sasada} என்ற பெயர் கொண்ட உயர்ந்த அறம் சார்ந்த மன்னன் அயோத்தியாவின் அரியணை ஏறி இந்தப் பூமியை ஆண்டான். அந்தச் சசாதனின் வழியில் {பரம்பரையில்} பெரும் சக்தி படைத்த ககுதஸ்தன் {Kakutshta} வந்தான். அந்தக் ககுதஸ்தனுக்கு அனேனஸ் {Anenas} என்ற பெயரில் மகன் இருந்தான். அந்த அனேனசுக்கு பிருது {Prithu} என்ற பெயர் கொண்ட மகன் இருந்தான். பிருதுவுக்கு விஷ்வகஸ்வன் {Viswagaswa} என்ற பெயரில் மகன் இருந்தான். விஷ்வகஸ்வனில் இருந்து ஆதிரி {Adri} பிறந்தான். ஆதிரியில் இருந்து யுவனாஸ்வன் {Yuvanaswa} பிறந்தான். யுவனாஸ்வனில் இருந்து சிராவஸ்தன் {Sravastha} பிறந்தான். இந்தச் சிராவஸ்தனே சிராவஸ்தி என்ற நகரத்தைக் கட்டினான். சிராவஸ்தனின் வழியில் பிருகதஸ்வன் {Vrihadaswa} வந்தான். பிருகதஸ்வனில் இருந்து குவலாஸ்வன் {Kuvalaswa} பிறந்தான். இந்தக் குவலாஸ்வனுக்கு இருபத்து ஓராயிரம் {21,000} மகன்கள் இருந்தனர். இந்த மகன்கள் அனைவரும் கடுமையானவர்களாகவும், பலம் வாய்ந்தவர்களாகவும், கற்றலில் நிபுணர்களாகவும் இருந்தனர். அந்தக் குவலாஸ்வன் அனைத்து குணங்களிலும் தனது தந்தையை {பிருகதஸ்வனை} விஞ்சி இருந்தான். நேரம் வந்த போது அவனது தந்தையான பிருகதஸ்வன், வீரமிக்க உயர் அறம் கொண்ட குவலாஸ்வனை அரியணையில் ஏற்றினான். அரசை மகனிடம் {குவலாஸ்வனிடம்} கொடுத்த அந்த எதிரிகளைக் கொல்பவனும், பெரு புத்திகூர்மையுடையவனுமான மன்னன் பிருகதஸ்வன் தவம் பயில்வதற்காகக் கானகம் புறப்பட்டான்”
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அரச முனியான பிருகதஸ்வன் கானகத்திற்குப் புறப்பட்ட போதும், அந்தணர்களில் சிறந்தவரான உதங்கர் அதைக் கேள்விப்பட்டார். பெரும் சக்தியும், அளவிடமுடியாத ஆன்மாவும் கொண்ட உதங்கர், ஆயுதம் தாங்குபவர்களில் முதன்மையானவனும் மனிதர்களில் சிறந்தவனுமான அவனை {பிருகதஸ்வனை} அணுகினார். அவனை {பிருகதஸ்வனை} அணுகிய அம்முனிவர் {உதங்கர்}, துறவை கைவிடும்படி வற்புறுத்தினார். உதங்கர், “ஓ! மன்னா {பிருகதஸ்வா}, (மக்களைக்} காப்பதே உனது கடமை. நீ உனது கடமையைச் செய்வதே உனக்குத் தகும். உனது அருளால் நாங்கள் துயரங்களில் இருந்து விடுபட்டிருக்கச் செய். பெரும் ஆன்மா கொண்ட உன்னால் {மகாத்மாவான உன்னால்} காக்கப்பட்டு, இந்தப் பூமி அனைத்து ஆபத்துகளில் இருந்தும் விடுபடட்டும். எனவே, நீ கானகம் புகுவது உனக்குத் தகாது. இவ்வுலகில் மக்களைக் காப்பதே பெரும் தகுதியாகும் {பெரும் பலனைத் தரவல்லது ஆகும்}. அது போன்ற தகுதியைக் கானகத்தில் பெற முடியாது. எனவே, உனது இதயம் அவ்வழியில் செல்லாதிருக்கட்டும்.
பெரும் மன்னா {பிருகதஸ்வா}, பழங்காலத்தில் பெரும் அரசமுனிகள் தங்கள் குடிமக்களைக் காத்து பெற்ற தகுதிக்குச் {பலனுக்குச்} சமமாக எதுவும் காணப்படாது. ஒரு மன்னன் எப்போதும் தனது குடிகளைக் காக்க வேண்டும். எனவே, உனது மக்களை நீ காப்பதே உனக்குத் தகும். ஓ! பூமியின் தலைவா {பிருகதஸ்வா}, {தற்போது} என்னால் எந்த தவ அர்ப்பணிப்புகளையும் அமைதியாகச் செய்ய முடியவில்லை. எனது ஆசிரமத்திற்கு அருகில் உஜ்ஜாலகம் என்ற பெயரில் அறியப்படும் மணற்கடல் இருக்கிறது. அது நீரற்ற சமதரை கொண்ட நாடாகும். அது பல யோஜனைகள் நீளமும் அகலமும் கொண்டிருக்கிறது. அந்தப் பாலைவனத்தில் துந்து என்ற பெயர் கொண்ட தானவர்களின் தலைவன் வசிக்கிறான்.
மதுவுக்கும், கைடபனுக்கும் மகனான துந்து {Dhundhu} கடுமையானவனும், பயங்கரமானவனும் பெரும் பராக்கிரமம் படைத்தவனும் ஆவான். அளவிடமுடியாத சக்தி படைத்த அந்தத் தானவன், ஓ! மன்னா {பிருகதஸ்வா}, பூமிக்கு அடியில் வசிக்கிறான். ஓ! மன்னா {பிருகதஸ்வா}, முதலில் அந்த அசுரனைக் கொன்றுவிட்டு, பிறகு நீ கானகத்திற்குச் செல்வதே உனக்குத் தகும். அந்த அசுரன் இப்போது பெரும் துறவை மேற்கொண்டு கடும் தவத்தில் அசையாமல் படுத்துக் கிடக்கிறான். ஓ! மன்னா {பிருகதஸ்வா}, அவனது நோக்கம் மூவுலகங்களையும், தேவர்களையும் ஆள்வதேயாகும். ஓ! மன்னா {பிருகதஸ்வா}, அனைத்து உயிர்களுக்கும் பெருந்தகப்பனாக இருப்பவனிடம் {பிரம்மனிடம்} வரத்தைப் பெற்ற அவ்வசுரன், தேவர்கள், தைத்தியர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள் ஆகியோரால் கொல்லப்பட இயலாதவனாகிவிட்டான். ஓ! மன்னா {பிருகதஸ்வா}, அவனைக் கொன்று அருள் பெற்றிரு. இவ்வழியில் {கானகம் செல்வதில்} உனது இதயத்தைத் திருப்பாதே.
அவனைக் கொல்வதால் சந்தேகமற நீ பெரியதை அடைவாய். அதுமட்டுமல்லாமல், நீ அழியாத நித்தியமான புகழை அடைவாய். ஓ! மன்னா {பிருகதஸ்வா}, ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், மணலால் மூடப்பட்டுக்கிடக்கும் அந்தத் தீய அசுரன் {துந்து} எழும்பி, மூச்சு விட ஆரம்பிக்கிறான்.அப்போது, மலைகள், கானகங்கள், காடுகளுடன் கூடிய இந்த முழு உலகமும் நடுங்கத் தொடங்குகிறது.
அவனின் {துந்துவின்} மூச்சு {அங்கிருக்கும்} மணலை மேகமென எழச் செந்து சூரியனையே மறைக்கிறது. தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு, எங்கும் நெருப்புப் பொறிகள் பறக்க, புகை சூழ பூமி நடுங்கிக் கொண்டே இருக்கிறது. ஓ! மன்னா {பிருகதஸ்வா}, இவை யாவற்றின் காரணமாக என்னால் எனது ஆசிரமத்தில் அமைதியாக இருக்க முடியவில்லை. ஓ! மன்னா {பிருகதஸ்வா}, உலகத்தின் நன்மைக்காக, அவனைக் {துந்துவைக்} கொல். உண்மையில், அந்த அசுரன் கொல்லப்பட்டால், மூவுலகமும் அமைதியடைந்து மகிழ்ச்சியில் மூழ்கும்.
ஓ! மன்னா {பிருகதஸ்வா}, அந்த அசுரனைக் கொல்லத் தகுந்தவன் நீ என நான் முழுமையாக நம்புகிறேன். உனது சக்தியுடன், விஷ்ணு தனது சக்தியை இணைத்து மேன்மையாக்குவான். பழங்காலத்தில், ஓ! மன்னா {பிருகதஸ்வா}, எவன் கடுமையான இந்தப் பெரும் அசுரனைக் கொல்கிறானோ அவனை விஷ்ணுவின் சக்தி ஆக்கிரமிக்கும் என்று பழங்காலத்தில் விஷ்ணு வரமளித்திருக்கிறான். அந்த ஒப்பற்ற வைஷ்ணவ சக்தியை உன்னுள் தாங்கி, ஓ! பெரும் மன்னா {பிருகதஸ்வா}, அந்தக் கடும்பராக்கிரமம் கொண்ட அசுரனைக் {துந்துவைக்} கொல். நூற்றுக்கணக்கான வருடங்கள் முயன்றாலும், பெரும் சக்தி படைத்த துந்துவை, சக்தி குறைந்தவனால் உட்கொள்ளவே {எரிக்க} முடியாது.
மது கைடப வதம்? – வனபர்வம் பகுதி 202-துந்துவைத் தன் மகன் குவலாஸ்வன் கொல்வான் என்று சொல்லி பிருகதஸ்வன் கானகம் சென்றது; துந்து யார் என்பது குறித்து யுதிஷ்டிரன் மார்க்கேண்டயரிடம் கேட்டது; மார்க்கண்டேயர் மது மற்றும் கைடபன் ஆகியோரின் கதையைச் சொன்னது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “உதங்கர் இப்படிச் சொன்னதைக் கேட்ட வெல்லப்பட முடியாத அரச முனி {பிருகதஸ்வன்}, கூப்பிய கரங்களுடன், ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, உதங்கரிடம், “ஓ! அந்தணரே {உதங்கரே}, உமது இந்த வரவு வீண்போகாது. ஓ! புனிதமானவரே {உதங்கரே}, குவலாஸ்வன் என்ற பெயரால் அறியப்படும் இந்த எனது மகன் உறுதியும், செயல்பாடும் மிக்கவன். பராக்கிரமத்திலும் இவன் இவ்வுலகில் நிகரற்றவன். இரும்பு கதைகளைப் போன்ற கரங்களைக் கொண்ட இவனின் {குவலாஸ்வனின்} மகன்களின் துணையுடன், உமக்கு ஏற்புடைய அனைத்தையும் இவன் {குவலாஸ்வன்} சந்தேகமற சாதிப்பான். ஓ! அந்தணரே, நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன். நான் ஓய்வு பெற்றுச் செல்ல எனக்கு விடை கொடும்” என்று சொன்னான் {பிருகதஸ்வன்}. மன்னனால் {பிருகதஸ்வனால்} இப்படிச் சொல்லப்பட்ட அளவிட முடியாத சக்தி கொண்ட முனிவர் {உதங்கர்}, “அப்படியே ஆகட்டும்” என்றார். பிறகு அரச முனியான பிருகதஸ்வன், தனது மகனை {குவலாஸ்வனை} அழைத்து, உயரான்ம உதங்கரின் கட்டளைக்குக் கீழ்ப்படியச் சொல்லி, “இது உன்னால் செய்யப்பட வேண்டும்” என்று பரிந்துரை செய்து, அற்புதமான வனத்திற்குள் நுழைந்தான்” என்றார் {மார்க்கண்டேயர்}.
யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, “ஓ! புனிதமானவரே {மார்க்கண்டேயரே}, ஓ! துறவை செல்வமாகக் கொண்டவரே, இந்தப் பெரும் சக்தி படைத்த தைத்தியன் {அசுரன் துந்து} யார்? அவன் யாருடைய மகன்? யாருடைய பேரன்? இவை யாவற்றையும் நான் அறிய விரும்புகிறேன். ஓ துறவை செல்வமாகக் கொண்டவரே, நான் இந்தப் பலமிக்கத் தைத்தியனைக் {துந்துவைக்} குறித்து இதற்கு முன் கேள்விப்படவில்லை. ஓ! புனிதமானவரே {மார்க்கண்டேயரே}, ஓ! துறவுச் செல்வத்தையும் பெரும் ஞானத்தையும் கொண்டவரே, நான் உண்மையிலேயே இவை அனைத்து விவரங்களையும் குறித்து விவரமாக அறிய விரும்புகிறேன்!” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஓ பெரும் ஞானம் கொண்டவனே, நான் உண்மையில் அதன் விவரங்களைச் சொல்லும்போது, ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, அனைத்தையும் நடந்தவாறே அறிந்து கொள். அசையும் மற்றும் அசையா உயிரினங்கள் அனைத்தும் அழிந்து போது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, முழுப் படைப்புகளும் முடிவை அடைந்த போது, உலகம் முழுவதும் நீர்ப்பரப்பு பரந்து விரிந்திருந்தது. அண்டத்தின் ஊற்றுக் கண்ணும் படைப்பாளனுமான மங்காத நித்தியமானவனும், தவ வெற்றி பெற்ற முனிவர்களால் அண்டத்தின் பரமாத்மா என்று அழைக்கப்படுபவனும், பெரும் புனிதம் வாய்ந்தவனுமான விஷ்ணு, அளவிலா சக்தி கொண்ட பாம்பு சேசனின் அகலமான உடலில் யோகத் தூக்கத்தில் {யோகநித்திரையில்} கிடந்தான். அண்டத்தின் படைப்பாளனும், உயர்ந்த அருள் கொண்டவனும், அழிவை அறியாதவனுமான புனிதமான ஹரி அப்படி முழு உலகத்தையும் சுற்றிக் கொண்டு கிடக்கும் அந்தப் பாம்பின் உடலில் கிடந்து, அந்தப் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, சூரியனின் பிரகாசத்துக்கு இணையான பெரும் அழகு படைத்த தாமரை ஒன்று அவனது தொப்புளில் இருந்து உதித்தது.
சூரியனின் பிரகாசத்துக்கு ஒப்பான அந்தத் தாமரையில்தான், நான்கு கரங்களும், நான்கு முகங்களும், சுய சக்தியுடன் தொடர்ச்சியாக ஒப்பற்றவனாக இருப்பவனும், பெரும் பலமும், பராக்கிரமும் கொண்டவனும், உலகங்களின் தலைவனும், நான்கு வேதங்களுமான பெரும்பாட்டனான பிரம்மன் உதித்தான். பெரும் காந்தியும், கிரீடமும், கௌஸ்துப ரத்தினமும், ஊதா நிற பட்டும் அணிந்து பல யோஜனை நீளத்திற்குப் பாம்பின் உடலாலான அற்புதமான படுக்கையில் நீண்டு கிடப்பவன் {விஷ்ணு}, ஆயிரம் சூரியன்கள் சேர்ந்து ஒன்றாக ஆனது போல இருந்தான். சில காலங்களுக்குப் பிறகு பெரும் பராக்கிரமம் கொண்ட மது மற்றும் கைடபன் என்ற இரு தானவர்கள் அவனைக் {விஷ்ணுவைக்} கண்டனர். {அந்தக் கோலத்தில் இருந்த} ஹரியையும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டு தாமரையில் அமர்ந்திருந்த பெரும்பாட்டனையும் {பிரம்மனையும்} கண்ட மதுவும், கைடபனும் மிகவும் அலைந்த பிறகு, அளவிலா சக்தி கொண்ட பிரம்மனை பயமுறுத்தவும் அச்சுறுத்தவும் செய்தனர். அவர்களது தொடர் முயற்சிகளைக் கண்டு அச்சமுற்ற ஒப்பற்ற பிரம்மன் தனது இருக்கையிலேயே நடுங்க ஆரம்பித்தான். அவன் நடுங்கியதால், அவன் {பிரம்மன்} அமர்ந்திருந்த தாமரையின் தண்டும் நடுங்க ஆரம்பித்தது. தாமரைத்தண்டு நடுங்கியதால் கேசவன் {விஷ்ணு} விழித்துக் கொண்டான்.
துயில் கலைந்து எழுந்த கோவிந்தன் {விஷ்ணு} பெரும் சக்திமிக்க அந்தத் தானவர்களை {மது,கைடபர்களைக்} கண்டான். அவர்களைக் கண்ட அந்தத் தெய்வம் {விஷ்ணு}, “பலமிக்கவர்களே! வருக! நான் உங்களிடம் திருப்தி அடைந்திருக்கிறேன்! எனவே, நான் உங்களுக்கு அற்புதமான வரங்களை அருளுவேன்!” என்றான். இதனால் கர்வமுற்ற அந்தப் பலமிக்கத் தானவர்கள், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சிரித்துக் கொண்டே ரிஷிகேசனிடம் {விஷ்ணுவிடம்}, “ஓ! தெய்வீகமானவனே, {நீ} எங்களிடம் வரங்களைக் கேள். ஓ தலைமை தெய்வமே, நாங்கள் வரம் கொடுப்பவர்களாக இருக்கிறோம். உண்மையில், நாங்கள் உனக்கு ஒரு வரத்தை அருள்வோம்! எனவே, உனது மனதில் தோன்றும் எதையும் எங்களிடம் கேள்” என்றனர். இப்படி அவர்களால் சொல்லப்பட்ட அந்தப் புனிதமானவன் {விஷ்ணு}, “வீரமிக்கவர்களே {மது,கைடபர்களே}, நான் உங்கள் வரத்தை ஏற்கிறேன். நான் ஒரு வரத்தை விரும்புகிறேன். நீங்கள் இருவரும் பெரும் சக்தியைப் பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கு இணையான ஆண் மகன் வேறு யாரும் இல்லை. ஓ! கலங்காத பராக்கிரமம் கொண்டவர்களே {மதுகைடபர்களே}, என்னால் கொல்லப்பட உங்களைக் கொடுங்கள். உலகத்தின் நன்மைக்காக நான் சாதிக்க விரும்புவது அதையே” என்றான் {விஷ்ணு}.
அந்தத் தெய்வத்தின் {விஷ்ணுவின்} வார்த்தைகளைக் கேட்ட மதுவும் கைடபனும், “நாங்கள் எப்போதும் பொய் பேசியதில்லை; கேலிக்காகக் கூடப் பொய்மை பேசியதில்லை; அப்படியிருக்கும்போது மற்ற நேரங்களைக் குறித்து நாங்கள் என்ன சொல்வோம்! ஓ! ஆண்மக்களில் முதன்மையானவனே {புருஷோத்தமா} {விஷ்ணுவே}, உண்மை மற்றும் அறநெறிகளில் நாங்கள் எப்போதும் உறுதியுடன் இருந்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள். பலத்தில், உருவங்களில், அழகில், அறத்தில், துறவில், தானத்தில், நடத்தையில், நற்பண்புகளில், தன்னடக்கத்தில் எங்கள் இருவருக்கும் இணையான வேறு ஒருவன் கிடையாது. ஓ! கேசவா {விஷ்ணுவே}, ஒரு பெரிய ஆபத்து எங்களை {இப்போது} அணுகியிருக்கிறது. நீ சொன்னதைச் சாதித்துக் கொள். யாராலும் காலத்தை வெல்ல முடியாது. ஆனால், ஓ! தலைவா {விஷ்ணுவே}, உன்னால் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் ஒன்றை விரும்புகிறோம். ஓ! அனைத்து தெய்வங்களிலும் முதன்மையானவனும் சிறந்தவனும் ஆனவனே {விஷ்ணுவே}, உண்மையில் மேல்மறைவே இல்லாத {மறைவில்லாத} இடத்தில் எங்களைக் கொல்வாயாக. ஓ! அற்புதமான கண்களைக் கொண்டவனே {விஷ்ணுவே}, நாங்கள் உனது மகன்களாகவும் விரும்புகிறோம். ஓ! தேவர்களின் தலைவா {விஷ்ணுவே} இதுவே நாங்கள் விரும்பும் வரம் என்பதை அறிந்து கொள். ஓ! தெய்வமே, நீ எங்களிடம் முதலில் உறுதி கூறியது பொய்யாக வேண்டாம்” என்றனர். அந்தப் புனிதமானவன் {விஷ்ணு}, அவர்களுக்கு முறுமொழியாக, “ஆம். நான் நீங்கள் விரும்பியபடியே செய்வேன். அனைத்தும் நீங்கள் விரும்பியவாறே நடக்கும்!” என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிறகு கோவிந்தன் {விஷ்ணு} சிந்தித்தான், மேல்மறைவு இல்லாத இடத்தை அவன் எங்கும் காணவில்லை. பூமியிலோ ஆகாயத்திலோ மேல்மறைவில்லாத இடத்தைக் காணாத அந்தத் தெய்வங்களில் முதன்மையானவன் {விஷ்ணு}, தனது தொடைகள் முழுதும் மறைவில்லாமல் இருப்பதைக் கண்டு, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அங்கே வைத்து, அந்த ஒப்பற்ற தெய்வம் {விஷ்ணு}, தனது கூர்முனை கொண்ட சக்கரத்தால் மதுகைடபர்களின் தலைகளை அறுத்தான்”
துந்துமாரன் – பெயர்க்காரணம்? – வனபர்வம் பகுதி 203-அசுரன் துந்து பிரம்மனிடம் வரம் பெறுவது; உதங்கரால் ஏவப்பட்டக் குவலாஸ்வன் தனது படைகளுடனும், தனது மகன்களுடனும் மணற்கடலுக்கு வருவது; குவலாஸ்வன் மகன்களைத் துந்து எரிப்பது; குவலாஸ்வன் துந்துவைக் கொல்வது; குவலாஸ்வன் துந்துமாரன் என்ற பெயரால் அழைக்கப்படுவது ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சிறப்புமிக்கத் துந்து, மதுகைடபர்களின் மகனாவான். பெரும் சக்தியும் பராக்கிரமும் கொண்ட அவன் {அசுரன் துந்து}, பெரும் துறவு நோற்று, கடும் தவம்புரிந்தான். அவன் ஒற்றைக்காலில் நின்று, வெறும் நரம்புகள் மட்டும் கொண்ட உடலாகத் தன்னைச் சுருக்கிக் கொண்டான். அவனிடம் திருப்தி கொண்ட பிரம்மன் அவனுக்கு {துந்துக்கு} ஒரு வரம் கொடுத்தான். அவன் {துந்து} தலைவனான பிரஜாபதியிடம் {பிரம்மனிடம்} கேட்ட வரம், “தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள், பாம்புகள், கந்தர்வர்களில் யாராலும் நான் கொல்லப்படக்கூடாது. இதையே நான் வரமாக உம்மிடம் கேட்கிறேன்” என்பதாகும். அதற்குப் பெருந்தகப்பன் {பிரம்மன்}, “உனது விருப்பத்தின்படியே ஆகட்டும். நீ உன் வழியே செல்” என்று மறுமொழி கூறினார்.
பெருந்தகப்பனால் {பிரம்மனால்} இப்படிச் சொல்லப்பட்ட பெரும் சக்தியும் பராக்கிரமமும் கொண்ட அந்தத் தானவன் {துந்து}, அந்தத் தெய்வத்தின் {பிரம்மனின்} காலைப் பற்றித் தனது தலையில் வைத்து, அந்தத் தெய்வத்தின் பாதங்களை மரியாதையுடன் தொட்டு தன் வழியே சென்றான். இப்படி வரத்தைப் பெற்ற துந்து, விரைவாகச் சென்று விஷ்ணுவை அணுகினான். அந்தத் தெய்வத்தால் {விஷ்ணுவால்} தனது தந்தைக்கு ஏற்பட்ட இறப்பை நினைத்து கோபத்துடன் சென்ற துந்து கந்தர்வர்களையும் தேவர்களையும் வீழ்த்தி, விஷ்ணுவின் தலைமையிலான தேவர்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தினான். கடைசியாக, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அந்தத் தீய ஆன்மாவான அசுரன் {துந்து} உஜ்ஜாலகம் என்ற பெயரால் அறியப்பட்ட மணற்கடலுக்கு {பாலைவனத்திற்கு} வந்து உதங்கரின் ஆசிரமத்திற்குத் தன்னால் இயன்ற அளவுக்குத் துன்பத்தைக் கொடுக்க ஆரம்பித்தான்.
மதுகைடபர்களின் மகனான கடும் சக்தி படைத்த அந்தத் துந்து, மணலுக்கு அடியில் தனது சுரங்கக் குகைக்குள் படுத்துக் கொண்டு மூன்று உலகையும் அழிக்கும் நோக்குடன் பெரும் துறவுடன் கூடிய கடும் தவத்தைச் செய்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட உதங்க முனிவரின் ஆசிரமத்திற்கு அருகில் கிடந்து அந்த அசுரன் {துந்து} சுவாசித்துக் கொண்டிருந்த போது, மன்னன் குவலாஸ்வன், அந்த அந்தணர் உதங்கரையும், தனது மகன்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, தனது படையுடன் அங்கே அணிவகுத்து வந்தான். மிகவும் சக்திவாய்ந்த தனது இருபத்தோராயிரம் {21,000} மகன்களுடன் எதிரிகளை அழிப்பவனான மன்னன் குவலாஸ்வன் அங்கு {உஜ்ஜாலகம் என்ற மணற்கடலுக்கு} வந்தான். உதங்கரின் கட்டளையின் பேரிலும், மூன்று உலகங்களுக்கும் நன்மை செய்யும் உந்துதலாலும் சிறப்புமிக்கத் தலைவனான விஷ்ணு, அவனை {மன்னன் குவலாஸ்வனை} தனது சக்தியால் நிறைத்தான். அந்த ஒப்பற்ற வீரன் {குவலாஸவன்} அப்படித் தனது வழியில் சென்று கொண்டிருந்த போது, வானத்தில் இருந்து ஒரு சத்தமான குரல், “அழிக்கப்பட முடியாத இந்த நற்பேறு பெற்றவன் {குவலாஸ்வன்}, இன்று துந்துவை அழிப்பவனாவான்” என்று திரும்பத் திரும்பச் சொன்னது.
தேவர்கள், அவன் {குவலாஸ்வன்} மீது பூமாரி பொழிந்தனர். யாரும் இசைக்காத போதே தெய்வீகப் பேரிகைகள் ஒலிக்கத் தொடங்கின. ஞானமிக்கவனின் {குவலாஸ்வனின்} அந்த அணிவகுப்பின் போது, குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. தேவர்களின் தலைவன் {இந்திரன்}, சாலைகளில் இருக்கும் தூசிகளை {அவை பறக்காதவாறு} நனைத்து மெல்லிய சாரலைப் பொழிந்தான். ஓ! யுதிஷ்டிரா, அசுரன் துந்து இருந்து இடத்திற்கு நேர் மேலே தேவர்களின் தேர்கள் காணப்பட்டன. ஆவலால் உந்தப்பட்ட, தேவர்கள், கந்தவர்கள் மற்றும் பெரும் முனிவர்கள் துந்துவுக்கும் குவலாஸ்வனுக்கும் இடையில் நடக்கும் மோதலைக் காண அங்கே வந்தனர். ஓ! குரு குலத்தவனே {யுதிஷ்டிரா}, நாராயணனின் சக்தியால் நிறைக்கப்பட்ட மன்னன் குவலாஸ்வன், தனது மகன்களின் துணையுடன், அந்த மணற்கடலைச் சூழ்ந்தான். அம்மன்னன் {குவலாஸ்வன்} அக்கானகத்தைத் தோண்ட ஆணையிட்டான். அம்மன்னனின் {குவலாஸ்வனின்} மகன்கள் ஏழு நாட்கள் அந்த மணற்கடலைத் தோண்டினார்கள். பிறகு, அவர்கள் அந்தப் பெரும் அசுரனான துந்துவைக் கண்டனர்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, சூரியனைப் போல தனது பெருத்த உடல் ஒளிர, அவ்வசுரன் மணலுக்குள் கிடந்தான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அப்பாலைவனத்தின் மேற்குப்பகுதியை மூடியவாறு கிடந்த துந்து, எல்லாப்புறங்களிலும் குவலாஸ்வனின் மகன்களால் சூழப்பட்டான். கூரிய கணைகளாலும், கதைகளாலும், கனத்த தடிகளாலும், குறுந்தடிகளாலும், கோடரிகளாலும், இரும்பு முட்களாலும், அம்புகளாலும், கூரிய முனை கொண்ட பளபளப்பான வாட்களாலும் அந்தப் பெரும் தானவன் {அவர்களால்} தாக்கப்பட்டான். இப்படி அடிக்கப்பட்ட அந்தப் பலத்த தானவன் பெரும் கோபத்துடன் சாய்ந்திருக்கும் நிலையில் இருந்து {கிடந்த கோலத்திலிருந்து} உயர்ந்து எழுந்தான். கோபத்திலிருந்த அந்த அசுரன் {துந்து} தன் மீது ஏவப்பட்ட அனைத்து ஆயுதங்களையும் விழுங்கத் தொடங்கினான். பிறகு அவை அனைத்தையும் தனது வாயிலிருந்து நெருப்புக் கோளங்களாகக் கக்கத் தொடங்கினான். அந்தச் சுடர்களைப் பார்க்க யுக முடிவின் போது தோன்றும் சம்வார்த்த நெருப்பைப் போல இருந்தது. ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா} பழங்காலத்தில் தலைவனான கபிலர், மன்னன் சகரனின் மகன்களை எரித்ததைப் போல, அவ்வசுரன் {துந்து} அந்நெருப்பால் மன்னனின் {குவலாஸ்வனின்} மகன்கள் அனைவரையும் எரித்தான். கோபம் மூண்ட அசுரன், தனது வாயிலிருந்து வெளிப்பட்ட நெருப்பால் மூவுலகங்களையும் மூடியபடி, இந்த அற்புதச் சாதனையை நொடிப்பொழுதில் சாதித்தான்.
ஓ! பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, கோபத்தால் அசுரன் கக்கிய நெருப்பில் மன்னன் குவலாஸ்வனின் மகன்கள் அனைவரும் எரிந்து போன போது, மற்றுமொரு கும்பகர்ணனைப் போல விழித்தெழுந்த துந்துவை குவலாஸ்வன் அணுகினான். ஓ! ஏகாதிபதி, அம்மன்னனின் உடலில் இருந்து அதிக நீர் கொண்ட வலிமைமிக்க நீரோட்டம் உற்பத்தியானது. அந்நீரோட்டம் அசுரனால் வெளியிடப்பட்ட நெருப்பை அணைத்தது. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, யோக சக்தியால் நிரப்பப்பட்ட மன்னன் குவலாஸ்வன், தனது உடலில் உற்பத்தியான நீரால் அந்நெருப்பை அணைத்துவிட்டு, மூவுலகங்களின் அச்சத்தையும் போக்கும் வகையில், {அனைவராலும்} கொண்டாடப்படும் பிரம்மாயுதத்தால் {பிரம்மாஸ்திரத்தால்}, அத்தீய தைத்தியனை {அசுரன் துந்துவை} அழித்தான். தேவர்களின் எதிரியான அப்பெரும் அசுரனை அவ்வாயுதம் {பிரம்மாஸ்திரம்} கொண்டு எரித்ததால், அவன் {குவலாஸ்வன்} மூன்று உலகத்துக்கும் இரண்டாவது தலைவனைப் போல விளங்கினான். அசுரன் துந்துவைக் கொன்ற அந்த உயர் ஆன்ம மன்னன் குவலாஸ்வன் அன்றிலிருந்து துந்துமாரன் என்ற பெயரால் அறியப்பட்டான். அந்நேரத்தில் இருந்து அவன் போர்க்களத்தில் ஒப்பற்றவனாகக் கருதப்பட்டான். இந்த மோதலைச் சாட்சியாகக் கண்ட தேவர்களும் பெரும் முனிவர்களும் பெரிதும் திருப்தி கொண்டு அவனிடம் {துந்துமாரன் என்ற குவலாஸ்வனிடம்}, “எங்களிடம் ஒரு வரத்தைக் கேள்” என்றனர்.
இப்படித் தேவர்களால் கேட்கப்பட்ட மன்னன் {குவலாஸ்வன்} அவர்களை வணங்கி, ஆனந்தத்தில் நிறைந்து, கூப்பிய கரங்களுடன் அம்மன்னன் {குவலாஸ்வன்}, அவர்களிடம் {தேவர்களிடம்} “மேன்மையான அந்தணர்களுக்கு எப்போதும் செல்வத்தைத் தானமளிக்க என்னால் இயல வேண்டும்! அனைத்து எதிரிகளாலும் வெல்லமுடியாதவனாக நான் இருக்க வேண்டும்! எனக்கும் விஷ்ணுவுக்குமிடையில் நட்பு இருக்க வேண்டும்! எந்த உயிரனிடத்திடமும் எனக்கு வெறுப்பு இருக்கக் கூடாது! எனது இதயம் எப்போதும் அறத்திடம் இருக்க வேண்டும். (கடைசியாக), நான் எப்போதும் சொர்க்கத்தில் வசிப்பவனாக இருக்க வேண்டும்!” என்று கேட்டான். இதைக் கேட்ட தேவர்கள், முனிவர்கள், மற்றும் உதங்கர் ஆகியோர் மிகவும் திருப்தி கொண்டனர். அவர்கள் அனைவரும், “நீ விரும்பிய படியே ஆகட்டும்” என்றனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா} மேலும் பல உரைகளுடன் அவனை {துந்துமாரனை} வாழ்த்திய தேவர்களும், பெரும் முனிவர்களும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர். ஓ! யுதிஷ்டிரா, தனது மகன்களின் கொலைக்குப் பிறகும், மன்னன் குவலாஸ்வனுக்கு மூன்று மகன்கள் மீந்திருந்தனர். ஓ! பாரதக் குலத்தவனே {யுதிஷ்டிரா}, அவர்கள் திருடாஸ்வன், கபிலாஸ்வன், சந்திராஸ்வன் {பத்திராஸ்வன்} என அழைக்கப்பட்டனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அவர்களின் மூலமே, அளவிலா சக்தி கொண்ட இக்ஷவாகு குலத்தின் ஒப்பற்ற மன்னர்கள் தோன்றினர்”
“இப்படியே, ஓ! மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, மது கைடபர்களின் மகனான துந்து என்ற பெயர் கொண்ட பெரும் தைத்தியன் குவலாஸ்வனால் கொல்லப்பட்டான். இதற்காகவே அம்மன்னன் {குவலாஸ்வன்} துந்துமாரன் என்ற பெயரால் அழைக்கப்பட்டான். நிச்சயமாக அவன் ஏற்றுக் கொண்ட பெயர் வெற்றுப் பெயர் கிடையாது. அது {துந்துமாரன் என்ற அப்பெயர்} சொற்களின் நேரான பொருள் கொண்டதாகும்.
“நீ கேட்டபடியே புகழ்பெற்ற துந்துவின் மரணக் கதையையும் அதில் தொடர்புடைய மனிதர்கள் கதை அனைத்தையும் சொல்லிவிட்டேன். விஷ்ணுவின் புகழ் தொடர்பான இந்தப் புனித வரலாற்றைக் கேட்பவன் அறம் சார்ந்தவனாகிறான் {அறம் நோக்கித் தள்ளப்படுகிறான்}. அவன் மக்கள் செல்வத்தையும் {பிள்ளைப் பேறையும்} அடைகிறான். குறிப்பிட்ட மாதங்களில் {பாவ காலங்களில்} இக்கதையைக் கேட்பவர்களுக்கு நீண்ட வாழ்நாளும், பெரும் நற்பேறும் அருளப்படுகிறது. அனைத்துத் துன்பங்களில் இருந்தும் விடுபட்டு, நோய்கள் குறித்த எந்த அச்சத்தையும் {அவர்கள்} விடுகிறார்கள்” என்றார் {மார்க்கண்டேயர்}.
பெண்ணின் கடமை கடினமானது? – வனபர்வம் பகுதி 204-பெண்களின் கடமைகள் குறித்தும், க்ஷத்திரியர்களின் கடமை குறித்தும் யுதிஷ்டிரன் கேட்க, மார்க்கண்டேயர் அவனுக்கு விளக்கம் அளிப்பது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, மன்னன் யுதிஷ்டிரன், அறநெறி சம்பந்தமான கடினமான கேள்வியைச் சிறப்புமிக்க மார்க்கண்டேயரிடம் கேட்டான். அவன் {யுதிஷ்டிரன் மார்க்கண்டேயரிடம்}, “ஓ! புனிதமானவரே {மார்க்கண்டேயரே}, உயர்வானதும் அற்புதம் வாய்ந்ததுமான பெண்களின் அறம் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, நான் உம்மிடம் இருந்து அறநெறி சம்பந்தமான நுட்பமான உண்மைகளின் சொற்பொழிவைக் கேட்க விரும்புகிறேன். ஓ! மறுபிறப்பாள முனிவரே {பிராமண முனிவரே, மார்க்கண்டேயரே}, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே} சூரியன், சந்திரன், காற்று, பூமி, நெருப்பு, தந்தை, தாய், குரு ஆகியவர்களும், தேவர்களால் விதிக்கப்பட்ட சில பொருட்களும் {சிலரும்}, தெய்வமே உருவம் கொண்டு வந்தது போல நமக்குத் தெரிகின்றனர். நமது மதிப்பிற்குரிய இவர்கள் அனைவரும் நமது சிறப்பான கவனத்திற்கு தகுதிவாய்ந்தவர்களே. ஒரே தலைவனை வணங்கும் {அன்பொழுகும்} பெண்களும் அப்படியே {கவனத்திற்குச் சிறந்த தகுதிவாய்ந்தவர்களே}. கற்புள்ள மனைவியர், கணவர்களுக்கு வழங்கும் வழிபாடு, பெறும் சிரமம் கொண்டது என நான் கருதுகிறேன்.
ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, நன்னடத்தைக் கொண்ட பெண்கள் காட்டும் அக்கறையும், அதன் தொடர்ச்சியாகத் தங்கள் தாய் தந்தையரைக் கவனிக்கும் நல்ல மகன்களின் நடத்தையும் மிகவும் கடினமான செயல்திறன் கொண்டவை என எனக்குத் தோன்றுகிறது. ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, எப்போதும் உண்மை பேசி, முழுப் பத்து மாதங்கள் கருவுற்ற காலத்தைக் கழித்து, ஒரே தலைவனுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் அனைத்துப் பெண்களின் காரியங்களும், எதையும் விட கடினமானவையே. ஓ! போற்றுதலுக்குரியவரே, ஓ! அந்தணர்களில் காளையே {மார்க்கண்டேயரே} பெரும் சிரமத்திற்குள்ளாகி, பெரும் வலியை உணரும் {அனுபவிக்கும்} பெண்கள், தங்கள் வாரிசுகளை ஈன்றெடுத்து பாசத்துடன் வளர்க்கிறார்கள். எப்போதும் தீச்செயல்களில் ஈடுபட்டு, அதனால் பொதுவெறுப்புக்கு உள்ளானவர்களாக {அப்பெண்கள்} இருந்தாலும், மிகவும் கடினம் என நான் கருதும் அவர்களது கடமைகளைச் சாதித்து வெற்றியடைகிறார்களே!
மேலும், ஓ! மறுபிறப்பாளரே {மார்க்கண்டேயரே}, க்ஷத்திரிய வகைக்கான {வர்ணத்துக்கான} கடமைகள் குறித்த உண்மைகளை எனக்குச் சொல்லும். ஓ இரு பிறப்பாளரே {மார்க்கண்டேயரே}, தங்கள் {க்ஷத்திரிய} வகைக்குரிய கடமைகளின் தன்மையால் கொடூரமானதைச் செய்யக் கடன்பட்ட அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் {க்ஷத்திரியர்கள்}, அறத்தை {தர்மத்தை} அடைவது கடினமே! ஓ! புனிதமானவரே {மார்க்கண்டேயரே}, இக்கேள்விகள் அனைத்துக்கும் விடை பகர வல்லவராயிருக்கிறீர்; நான் இவை அனைத்தையும் குறித்த உமது சொற்பொழிவைக் கேட்க விரும்புகிறேன். ஓ! பிருகு குலத்தில் முதன்மையானவரே, அற்புத உறுதிகளை {நோன்புகளை} நோற்பவரே {மார்க்கண்டேயரே}, உமக்காக மரியாதையுடன் காத்திருந்து, இவையனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, உனது கேள்வி எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், நான் உண்மையில் அவை அனைத்தையும் குறித்துச் சொற்பொழிவாற்றுவேன். எனவே, {அவற்றை} நான் உனக்குச் சொல்லும்போது, நீ கேள். சிலர் தாயை மேன்மையானவராகக் கருதுகிறார்கள், சிலர் தந்தையை அப்படிக் கருதுகிறார்கள். இருப்பினும், வாரிசைப் பெற்று வளர்த்தெடுக்கும் தாயின் செயல் அதிகக் கடினமானதே. தந்தையரும், ஆன்மத் தவங்களாலும், தெய்வ வழிபாடுகளாலும், குளிர் வெப்பத்தைத் தாங்கிக் கொள்வதாலும், மந்திரங்கள் உச்சரிப்பதாலும், வேறு வழிகளாலும் பிள்ளைகளைப் பெறவே விரும்புகின்றனர்.
இப்படிப்பட்ட வலிகளை உணர்ந்து {அனுபவித்து}, அடைவதற்கு அரிதான பிள்ளைகளை அடைந்த பிறகும், ஓ! வீரா {யுதிஷ்டிரா}, எப்போதும் தங்கள் மகன்களின் எதிர்காலம் குறித்தே {தாயும் தந்தையும்} கவலை கொள்கிறார்கள். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தந்தை, தாய் ஆகிய இருவரும் தங்கள் மகன்கள் புகழுடனும், சாதனைகளுடனும், செழிப்புடனும், வாரிசுகளுடனும், நல்லொழுக்கத்துடனும் {அறத்துடனும்} இருப்பதைக் காணவே விரும்புகிறார்கள். தனது பெற்றோரின் {தாய் தந்தையரின்} எதிர்பார்ப்புகளை உணரும் மகன் அறம் சார்ந்தவனாவான். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, தந்தையும் தாயும் எந்த மகனிடம் திருப்தி கொள்கின்றனரோ, அவன் {அந்த மகன்} நித்தியமான புகழையும், நித்தியமான அறத்தையும் {கீர்த்தியையும் தர்மத்தையும்} இங்கேயும், இதற்கு அடுத்த உலகத்திலும் {இம்மையிலும் மறுமையிலும்} அடைகிறான். பெண்களைப் பொறுத்தவரை, வேள்விகளாலோ, சிரார்த்தங்களாலோ, அல்லது உண்ணா நோன்புகளாலோ {விரதங்களாலோ} எந்தப் பலாபலனும் கிடையாது. தங்கள் கணவர்களுக்குச் சேவை செய்வதன் மூலமே அவர்கள் {பெண்கள்} சொர்க்கத்தை வெல்கிறார்கள். ஓ! மன்னா, ஓ! யுதிஷ்டிரா, இதை மட்டுமே நினைவில் கொண்டு, கற்புடைய பெண்டிரின் {பதிவிரதைகளின்} கடமைகளைக் கவனத்துடன் கேள்” என்றார் {மார்க்கண்டேயர்}.
பெண் கண்டித்தாள் கௌசிகரை! – வனபர்வம் பகுதி 205-காட்டில் கௌசிகர் என்ற அந்தணரின் மேல் கொக்கு எச்சமிடுவது; கோபப்பார்வை பார்த்து அந்தணர் அந்தக் கொக்கை எரிப்பது; ஒரு கிராமத்திற்குள் சென்று ஓர் இல்லத்தரசியிடம் அந்தணர் பிச்சை கேட்பது; அவள் பிச்சையிட தாமதப்படுத்துவது; அந்தணர் கோபம்; அவள் அவரது கோபத்தைத் தணித்துப் புத்தி சொல்லி அனுப்புவது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, கௌசிகர் என்ற பெயரில் ஓர் அறம் சார்ந்த துறவி இருந்தார். அவர் தன்னை வேத கல்விக்கு அர்ப்பணித்துக் கொண்டு, துறவை செல்வமாகக் கொண்டு அந்தணர்களில் வெகு மேன்மையானவராக இருந்தார். அந்த அந்தணர்களில் சிறந்தவர் {கௌசிகர்} அனைத்து வேதங்களையும், அங்கங்களையும், உபநிஷத்துகளையும் கற்றறிந்தார். ஒரு நாள் அவர் {கௌசிகர்} ஒரு மரத்தின் அடியில் நின்று கொண்டு வேதம் உரைத்துக் கொண்டிருந்தபோது, அந்த மரத்தின் மேலே ஒரு பெண் கொக்கு இருந்தது. அந்நேரத்தில் அந்தப் பெண் கொக்கு அந்த அந்தணன் மீது எச்சமிட்டது. கொக்கைக் கண்ட அந்த அந்தணர் மிகவும் கோபம் கொண்டு அதற்குக் காயமேற்படுத்த எண்ணி, தனது கோபப்பார்வையை அந்தக் கொக்கின் மீது செலுத்தி, மனதால் தீங்கை நினைத்தார். அந்தக் கொக்கு உடனே தரையில் விழுந்தது.
அப்படி அந்தக் கொக்கு மரத்தில் இருந்து விழுந்து, இறந்து போய் உணர்வற்றுக் கிடப்பதைக் கண்ட அந்த அந்தணர் {கௌசிகர்}, மனதால் இரக்கம் கொண்டார். பிறகு இறந்து போன கொக்கைக் கண்ட அந்த மறுபிறப்பாளர் {பிராமணர்}, “ஐயோ, கோபத்தாலும் துர்க்குணத்தாலும் ஒரு தீச்செயலைச் செய்துவிட்டேனே” என்று சொல்லி அழுதார்”
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைப் பலமுறை சொன்ன அந்தக் கற்ற அந்தணர் {கௌசிகர்}, பிறகு பிச்சை எடுப்பதற்காக ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நற்குலத்தில் பிறந்தவர்களின் வீடுகளில் பிச்சையெடுக்கச் சென்ற அந்த அந்தணர் {கௌசிகர்}, முன்பே தான் அறிந்த ஒரு வீட்டினுள் நுழைந்தார். அவர் அந்த வீட்டினுள் நுழைந்ததுமே, “{பிச்சை} கொடு” என்று கேட்டார். அவருக்கு ஒரு பெண், “நில்லும்” என்ற வார்த்தையால் பதிலுரைத்தாள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த இல்லத்தரசி, பிச்சையிடுவதற்கான பாத்திரத்தைக் கழுவி கொண்டிருந்த போது, பசியால் துன்பப்பட்ட அவளது கணவன் திடீரென வீட்டினுள் நுழைந்தான். அந்தக் கற்புடைய இல்லத்தரசி, தனது கணவனைக் கண்டதும், அந்தப் பிராமணனைக் கவனியாமல், தனது தலைவனுக்குக் கால்களையும் முகத்தையும் கழுவ நீர் கொடுத்து, இருக்கையும் கொடுத்தாள். பிறகு அந்தக் கருவிழி மங்கை, தனது தலைவனுக்கு முன்னால் சுவை நிறைந்த உணவையும், பானத்தையும் வைத்து, அவனது தேவைகளைக் கவனிக்க விரும்பி, அடக்கத்துடன் அவன் {கணவன்} அருகில் நின்றாள். ஓ! யுதிஷ்டிரா, கீழ்ப்படிதலுள்ள மனைவியான அவள் தினமும் தனது கணவன் உண்ட தட்டில் உள்ள மிச்சத்தை உண்டாள். தனது கணவனின் விருப்பங்களுக்கு எப்போதும் கீழ்ப்படியும் நடத்தை கொண்டவளான அவள், எப்போதும் தனது கணவனை மதித்து வந்தாள். அவளது இதயத்தின் அன்பு முழுவதும் தனது தலைவனை {கணவனை} நோக்கியே இருந்தது. புனிதமான நடத்தையாலும், இல்லறக் கடமைகளில் நிபுணத்துவத்தோடும், விருந்தினர்களைக் கவனித்துக் கொண்டும், தனது கணவனுக்கு நன்மை பயப்பதையும், ஏற்புடையதையுமே அவள் எப்போதும் செய்து வந்தாள். அவள் கவனம் நிறைந்த உணர்வுகளுடன் தேவர்களை வணங்கி, விருந்தினர்கள், பணியாட்கள், மாமியார் மற்றும் மாமனாரின் தேவைகளை உணர்ந்து நடந்து கொண்டாள்.
அந்த அழகிய விழிகளைக் கொண்ட மங்கை, தனது தலைவனின் {கணவனின்} சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவள், பிச்சைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் அந்தணரைக் கண்டாள். அவரைக் கண்ட பிறகுதான், அவரைக் காத்திருக்கச் சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது. இவை அனைத்தையும் நினைவுகூர்ந்த அவள், {தான் மறந்ததை நினைத்து} வெட்கமடைந்தாள். பிறகு ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, அந்தப் பெரும் புகழுடைய கற்புள்ள பெண், பிச்சைக்காகக் கொடுக்க வேண்டியதை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அந்த அந்தணருக்குக் {பிச்சையைக்} கொடுத்தாள். அவள் அந்த அந்தணர் முன்பு வந்த போது, அவர் {கௌசிகர்}, “ஓ! பெண்களில் சிறந்தவளே, ஓ! அருளப்பட்டவளே! நான் உனது நடத்தையைக் கண்டு வியக்கிறேன்! “நில்லும்” என்று சொல்லி என்னை நிறுத்திவிட்டு, இன்னும் என்னை அனுப்பாமல் இருக்கிறாய்!” என்றார் {கௌசிகர்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்த அந்தணர் கோபத்தால் நிறைவதைக் கண்ட அந்தக் கற்புள்ள பெண் அவரைச் சமாதானம் படுத்த எண்ணி, “ஓ! கற்றவரே, என்னை மன்னிப்பதே உமக்குத் தகும். எனது கணவரே எனக்குத் தலைமையான தெய்வம். அவர் பசியோடும் களைப்போடும் வந்தார். அதனால் நான் அவருக்குச் சேவை செய்து அவருக்காகக் காத்திருந்தேன்” என்றாள். இதைக் கேட்ட அந்தணர், “உனக்கு, பிராமணர்கள் உயர்ந்த மதிப்பிற்குத் தகார். அவர்களுக்கு மேலாக உனது கணவனை உயர்த்துகிறாயா? இல்லற வாழ்வு வாழும் நீ, பிராமணர்களை அவமதிக்கிறாயா? அவர்களை {பிராமணர்களை} இந்திரனே கூட வணங்குவான். அப்படியிருக்கும்போது பூமியில் இருக்கும் மனிதர்களைக் குறித்து நான் என்ன சொல்வேன். கர்வம் கொண்ட பெண்ணே, பிராமணர்கள் நெருப்பைப் போன்றவர்கள் அவர்கள் முழு உலகத்தையும் எரித்து விடுவார்கள் என்பதை நீ அறியவில்லையா? அதை இதுவரை நீ கேள்விப்பட வில்லையா?” என்று கேட்டார்.
அந்தணரின் {கௌசிகரின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பெண், “நான் பெண் கொக்கல்ல, ஓ! மறுபிறப்பாள முனிவரே! ஓ! துறவை செல்வமாகக் கொண்டவரே, இந்த உமது கோபத்தைக் கைவிடும். கோபமுள்ள நீர், உமது கோபப்பார்வையால் என்னை என்ன செய்துவிடுவீர்? நான் அந்தணர்களை அவமதிப்பதில்லை. பெரும் சக்தி கொண்ட ஆன்மா உடைய அவர்கள் தேவர்களைப் போன்றவர்களாவர். ஆனால், ஓ! பாவமற்றவரே, இந்த எனது குற்றம் மன்னிக்கத்தக்கதே. ஞானம் கொண்ட அந்தணர்களின் சக்தி மற்றும் கௌரவத்தை நான் அறிவேன். கடலின் நீர் உவர்ப்பாகவும் குடிக்க முடியாமல் போகவும் அந்தணர்களின் கோபமே காரணம். ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தவத்தகுதியால் சுடர்விடும் முனிவர்களின் சக்தி என்னவென்பதை நான் அறிவேன். அவர்களது கோபத்தால் உண்டான் நெருப்பு இந்த நாள் வரையில் தண்டக வனத்தில் அணையாமல் இருக்கிறது. அந்தணர்களை அவமதித்ததன் காரணமாகவே, தீய மனம் கொண்ட வாதாபி அகஸ்தியரைச் சந்தித்தபோது அவரால் செரிக்கப்பட்டான். உயர் ஆன்மா கொண்ட {மகாத்மாவான} அந்தணர்களின் சக்திகளும் தகுதிகளும் பெரிது.
ஆனால், ஓ! அந்தணரே, மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} கோபத்தில் பெரியவர்களாக இருந்தாலும், அதே அளவு மன்னிப்பதிலும் பெரியவர்களாக இருக்கிறார்கள். எனவே, ஓ! பாவமற்றவரே, இக்காரியத்தில் எனது குற்றத்திற்காக நீர் என்னை மன்னிப்பதே தகும். எனது கணவருக்குச் சேவை செய்வதாற்க்காக கிடைக்கும் தகுதியையே நான் உயர்வாகக் கருதுகிறேன். நான் எனது கணவரையே தேவர்களில் உயர்ந்தவராகக் கருதுகிறேன். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே, உயர்ந்த தெய்வமாக நான் கருதும் எனது கணவருக்குப் பணிவிடை செய்வதையே நான் பெரும் தகுதியாக நினைக்கிறேன். ஓ! மறுபிறப்பாளரே, ஒருத்தி கணவருக்குச் செய்யும் பணிவிடையால் கிடைக்கும் தகுதியைப் {பலனைப்} பாரும்! நீர் உமது கோபத்தால் ஒரு பெண் கொக்கை எரித்து வந்தீர் என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால், ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, ஒருவரால் பேணப்படும் கோபமே அவனது பெரிய எதிரியாகும்.
கோபத்தையும் ஆசையையும் கைவிட்டவனையே, தேவர்கள் அந்தணன் என்று அறிகிறார்கள். எப்போதும் உண்மையைப் பேசுபவர்கள், குருவைத் திருப்தி செய்பவர்கள், தான் காயப்பட்டாலும் பதிலுக்குப் பிறருக்குக் காயமேற்படுத்தாதவர்கள் ஆகியோரையே, தேவர்கள் அந்தணர்கள் என்று அறிகிறார்கள். தனது புலன்களை {உணர்வுகளை} முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவன், அறம்சார்ந்து சுத்தனாக இருப்பவன், வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணிப்பவன், கோபம் மற்றும் காமத்தை ஆளுமை செய்பவன் ஆகியோரையே தேவர்கள் அந்தணர்கள் என்று அறிகிறார்கள். அறநெறிகள் அறிந்தவர்கள், மனோ சக்தி கொண்டவர்கள், அறத்தால் அனைவருக்கும் பொதுவானவன் {Catholic in religion என்கிறார் கங்குலி}, அனைவரையும் தனக்குச் சமமாக நினைப்பவன் ஆகியோரையே தேவர்கள் அந்தணர்கள் என்று அறிகிறார்கள். தானே பயின்று, மற்றவர்களுக்குப் பயிற்றுவிப்பவன், தானே வேள்விகள் செய்பவன், தானே முன்வந்து அடுத்தவர்களின வேள்விகளைச் செய்து தருபவன், தன்னால் இயன்ற அளவு தானம் செய்பவன் ஆகியோரையே தேவர்கள் அந்தணர்கள் என்று அறிகிறார்கள். ஆன்ம சுதந்திரம் கொண்டு, பிரம்மச்சரிய நோன்பு பயின்று, கல்விக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவன், உண்மையில், விழிப்பான வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் மறுபிறப்பாளர்களில் காளையையே தேவர்கள் அந்தணன் என்று அறிகிறார்கள்.
எதுவெல்லாம் அந்தணர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமோ அவற்றை இவற்றுக்கு முன்பாக எப்போதும் சொல்ல வேண்டும். உண்மையில் இன்பம் கொள்கிறவர்களின் இதயம் பொய்மையில் இன்பத்தைக் காணாது. ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, வேத கல்வி, ஆன்ம அமைதி, எளிய நடத்தை, புலன்களை ஒடுக்குதல் ஆகியன அந்தணர்களின் நித்திய கடமைகளாகும். அறமும் அறநெறிகளும் அறிந்தவர்கள், உண்மையும் நேர்மையும் உயர்ந்த அறங்கள் என்று சொல்கின்றனர். நித்தியமான அறம் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானது. ஆனால், அஃது எதுவாக இருந்தாலும், அஃது உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. பழங்காலத்தவர்கள், அறம் எனப்பட்டது சுருதியை நம்பி இருக்கிறது என்று தீர்மானித்திருக்கின்றனர். ஆனால், ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {கௌசிகரே}, சுருதியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அறம் பலவகைப்பட்டதாகத் தோன்றுகிறது. எனவே, புரிந்து கொள்வதற்கு அது மிகவும் நுட்பமானது. ஓ! புனிதமானவரே {கௌசிகரே} நீர் அறம் மற்றும் சுத்தம் ஆகியவற்றை அறிந்தவர். வேத கல்விக்கு உம்மை அர்ப்பணித்திருப்பவர். எனினும், ஓ! புனிதமானவரே {கௌசிகரே}, உண்மையில் அறத்தை நீர் அறியவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஓ! மறுபிறப்பாளரே {கௌசிகரே}, நீர் உண்மையில் உயர்ந்த அறம் எவற்றால் ஆனது என்பதை அறியவில்லையெனில், மிதிலை நகரத்திற்குச் சென்று அறம் சார்ந்த வேடனிடம் {தர்மவயாதனிடம்} விசாரியும். அங்கே மிதிலையில் பெற்றோருக்கு சேவை செய்வதற்குத் தன்னை அர்ப்பணித்து உண்மையுள்ளவனாக, புலன்களை முழுக் கட்டுக்குள் வைத்திருப்பவனாக ஒரு வேடன் இருக்கிறான். அறம் சம்பந்தமான சொற்பொழிவை அவன் உனக்காக ஆற்றுவான். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, நீர் அருளப்பட்டிரும். நீர் விரும்பினால் அங்கே செல்லும். ஓ! களங்கமற்றவரே {கௌசிகரே}, நான் சொன்னது உமக்கு உகந்ததாக இல்லையென்றாலும், நீர் என்னை மன்னிப்பதே உமக்குத் தகும். ஏனென்றால், அறம் கொள்ள விரும்புபவர்களால் ஒரு பெண்ணெக்குத் தீங்கிழைக்க இயலாது!” என்றாள்.
கற்புள்ள பெண்ணின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தணர் {கௌசிகர்}, “நான் உன்னிடம் திருப்தி அடைந்தேன். நீ அருளப்பட்டிரு; ஓ! அழகானவளே, எனது கோபம் தணிந்தது. உன்னால் சொல்லப்பட்ட கண்டனம் {நீ செய்த கண்டிப்பு}, எனக்கு உயர்ந்த பலனையே தரும். நீ அருளப்பட்டிரு, ஓ! அழகானவளே, நான் இப்போது சென்று, என் நன்மைக்குகந்ததைச் சாதிக்கப் போகிறேன்” என்றார் {கௌசிகர்}”.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அவளால் விடை கொடுக்கப்பட்ட மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரான கௌசிகர், அவ்வீட்டை விட்டு வந்து, தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டு, தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினார்”
வேடனிடம் சென்ற கௌசிகர்! – வனபர்வம் பகுதி 206அ-கற்புக்கரசியின் சொல் கேட்ட கௌசிகர், வேடனை {தர்மவியாதனைத்} தேடிச் செல்வது; அவ்வேடன் கௌசிகருக்கு அனைத்து அறங்களையும் சொல்வது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தொடர்ந்து அந்தப் பெண்ணின் சொற்பொழிவை நினைத்துக் கொண்டிருந்த கௌசிகர் தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டு, குற்ற உணர்வு கொண்ட மனிதரைப் போல இருந்தார். அறநெறிகள் மற்றும் அறத்தின் நுட்பமான வழிகளைக் குறித்துத் தியானித்த அவர் {கௌசிகர்}, தனக்குள்ளேயே, “அந்த மங்கை சொன்னதை மரியாதையுடன் நான் ஏற்க வேண்டும். எனவே நான் மிதிலைக்குச் செல்ல வேண்டும். நிச்சயம் அந்நகரத்தில் {மிதிலையில்} ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனும், அறம் மற்றும் அறநெறிகளின் மர்மங்களை அறிந்தவனுமான வேடன் இருப்பான். இந்த நாளிலேயே நான் துறவை செலவமாகக்கொண்ட அவனிடம் {வேடனிடம்} அறம் குறித்து விசாரிக்கச் செல்ல வேண்டும்” என்று சொன்னார். பெண் கொக்கின் மரணத்தை அறிந்த அவளது {கற்புக்கரசியின்} ஞானத்தைக் கொண்டும், அவள் சொன்ன இனிமையான அற்புதமான சொற்களைக் கொண்டும், அவருக்கு {கௌசிகருக்கு}, அவள் மேல் இருந்த நம்பிக்கை உறுதியானது. இப்படிச் சிந்தித்த கௌசிகர் அவள் சொன்ன அனைத்தையும் மரியாதையுடன் நினைத்துப் பார்த்து ஆவல் நிறைந்து மிதிலைக்குப் பயணப்பட்டார்.
பல காடுகளையும், கிராமங்களையும், நகரங்களையும் கடந்து சென்று கடைசியாக {மன்னன்} ஜனகனால் ஆளப்பட்ட மிதிலையை அடைந்தார் {கௌசிகர்}. பல்வேறு நம்பிக்கைகள் {மதங்களுக்காகக் கூட இருக்கலாம்} சம்பந்தமான கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட அந்நகரத்தைக் கண்டார். வேள்விகள் மற்றும் விழாக்களின் சத்தங்கள் நிறைந்த அந்த அழகான நகரம் {மிதிலை} அற்புதமான வாயில்களுடன் இருப்பதை அவர் கண்டார். அது {அந்நகரம் மிதிலை} அரண்மனை போன்ற வசிப்பிடங்களால் நிறைந்து, அனைத்து பக்கங்களிலும் சுவர்களால் பாதுகாக்கப்பட்டிருந்தது; கர்வப்படுவதற்க் கென்று அற்புதமான பல கட்டடங்களை அந்நகர் {மிதிலை} கொண்டிருந்தது. காண்பதற்கினிய அந்நகரத்தில் {மிதிலையில்} எண்ணிலடங்கா தேர்களும் இருந்தன. அதன் தெருக்களும் சாலைகளும் நிறைய இருந்தன.. அவை சரியாகப் போடப்பட்டிருந்தன. பலவற்றில் வழிநெடுக கடைகளாக இருந்தன. அது குதிரைகள், ரதங்கள், யானைகள், போர்வீரர்கள் என நிறைந்திருந்தது. அந்நகரத்தின் குடிமக்கள் ஆரோக்கியமானவர்களாகவும், மகிழ்ச்சிகரமானவர்களாகவும் எப்போதும் ஏதாவதொரு விழாவில் ஈடுபட்டுக் கொண்டும் இருந்தனர். அந்த நகரத்தில் நுழைந்ததும், அந்த அந்தணர் {கௌசிகர்} பலவற்றைக் கண்டார்.
அங்கே {மிதிலையில்}, அந்த அந்தணர் {கௌசிகர்}, அறம்சார்ந்த வேடனைக் {தர்மவியாதனைக்} குறித்து விசாரித்தார். சில இருபிறப்பாள மனிதர்கள் அவரைக் குறித்துச் சொல்லினர். அந்த இருபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} சொன்ன இடத்திற்குச் சென்ற அந்த அந்தணர் {கௌசிகர்}, அந்த வேடன் கசாப்புக்கடை முற்றத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்தத் தவசியான வேடன் அப்போது மான் இறைச்சியையும், எருமை இறைச்சியையும் விற்றுக் கொண்டிருந்தான். {இறைச்சியை} விலைக்கு வாங்குவோர், வேடனைச் சுற்றி பெரிய படையாகக் கூடியிருந்ததால், கௌசிகர் சற்றுத் தொலைவில் நின்றார். அந்த அந்தணர் தன்னைக் காணவே வந்திருக்கிறார் என்று அறிந்து கொண்ட வேடன், திடீரெனத் தனது ஆசனத்தில் இருந்து எழுந்து, அந்த அந்தணர் {கௌசிகர்} இருந்த அந்தக் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து அவரை {கௌசிகரை} அணுகினான். வேடன் {தர்மவியாதன்} அவரிடம் {கௌசிகரிடம்}, “ஓ! புனிதமானவரே! நான் உம்மை வணங்குகிறேன். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே} உமக்கு நல்வரவு. நீர் அருளப்பட்டிரும். நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கட்டளையிடும். “மிதிலைக்குச் செல்லும்” என்ற கற்புள்ள பெண்ணின் வார்த்தைகளை நான் அறிவேன். நீர் என்ன காரியத்திற்காக இங்கு வந்திருக்கிறீர் என்பதையும் நான் அறிவேன்” என்றான். வேடனின் {தர்மவியாதனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த அந்தணர் {கௌசிகர்} ஆச்சரியத்தில் மூழ்கினார். அவர் {கௌசிகர்}, தனக்குள்ளேயே, “உண்மையில் இது நான் காணும் இரண்டாவது அதிசயமாகும்!” என்று நினைத்தார். பிறகு அந்த வேடன் அந்த அந்தணரிடம் {கௌசிகரிடம்}, “ஓ! பாவமற்றவரே {கௌசிகரே} உமக்குத் தகாத இடத்தில் நீர் இப்போது நின்று கொண்டிருக்கிறீர். ஓ! புனிதமானவரே, நீர் விரும்பினால், நாம் எனது இல்லத்திற்குச் செல்லலாம்” என்றான் {வேடன் தர்மவியாதன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அப்படியே ஆகட்டும்” என்று அந்த அந்தணர் மகிழ்ச்சியுடன் அவனிடம் சொன்னார். அதன்பேரில் அந்த வேடன், தனக்கு முன்னால் அந்த அந்தணரை நடக்க விட்டு தனது இல்லத்துக்குச் சென்றான். காண்பதற்கினிய இல்லத்தில் நுழைந்த அந்த வேடன், தனது விருந்தாளிக்கு {கௌசிகருக்கு} ஆசனத்தைக் கொடுத்து மரியாதையுடன் நடத்தினான். பிறகு அவன் {தர்மவியாதன்} கால்களையும் முகத்தையும் கழுவி கொள்ள நீரும் கொடுத்தான். இவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்ட அந்த அந்தணர்களில் சிறந்தவர் {கௌசிகர்}, வசதியாக அமர்ந்தார். பிறகு அவர் {கௌசிகர்}, அந்த வேடனிடம் {தர்மவியாதனிடம்}, “உமது தொழில் உமக்குப் பொருத்தமானது அல்ல எனத் தெரிகிறது. ஓ! வேடா, இத்தகு கொடுந்தொழிலை நீ செய்ய நேர்வதைக் கண்டு நான் ஆழமாக வருந்துகிறேன்” என்றார். அந்தணரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வேடன், “இது எனது குலத்தொழில். நான் இதை எனது பாட்டன்கள் மற்றும் முப்பாட்டன்களிடம் இருந்து மரபுரிமையாகச் செய்து வருகிறேன். ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே கௌசிகரே}, பிறப்பால் ஏற்பட்ட எனது கடமைகள் குறித்து எனக்காக நீர் வருந்தாதீர். படைப்பாளனால் முன்பே எனக்காக விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதற்காக, நான் எனக்கு மேன்மையானவர்களுக்கும், முதியவர்களுக்கும் கவனமாகச் சேவை செய்கிறேன். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, நான் எப்போதும் உண்மையே பேசுகிறேன், பிறரை எப்போதும் பகைப்பதில்லை; எனது சக்திக்குத்தக்க சிறந்த வகையில் தானம் செய்கிறேன். தேவர்கள், விருந்தினர்கள், என்னை நம்பியிருப்பவர்கள் ஆகியோருக்குச் சேவை செய்து போக மீதம் வருவதிலேயே {மீதம் வருவதை உண்டே} நான் வாழ்கிறேன்.
நான் எதைக் குறித்தும் சிறுமையாகவோ பெருமையாகவோ பேசுவதில்லை; எதையும் நிந்திப்பதில்லை. ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, முந்தைய பிறவியின் செயல்கள், அவற்றைச் செய்தவனைத் தொடர்கின்றன. இவ்வுலகத்தில் வேளாண்மை {விவசாயம்}, {ஆடு, மாடு போன்ற} கால்நடை வளர்ப்பு, வணிகம் ஆகிய மூன்று முதன்மைத் {முக்கிய} தொழில்கள் இருக்கின்றன. மறு உலகத்தைப் பொறுத்தவரை, மூன்று வேதங்கள், ஞானம், அறநெறி அறிவியல் ஆகியன பயனளிக்கக்கூடியவை. (மூன்று வகையினருக்கும் {வர்ணத்தாருக்கு}} சேவை செய்வது சூத்திரர்களுக்கு விதிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது. வேளாண்மை வைசியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. போர்த்தொழில் க்ஷத்திரியர்களுக்கும், பிரம்மச்சரிய நோன்பு பயில்தல், துறவு, மந்திரங்கள் உச்சரித்தல், சத்தியம் ஆகியன பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. சரியான கடமைகளைச் செய்யும் குடிமக்களை, ஒரு மன்னன் அறம் சார்ந்து ஆள வேண்டும். தங்கள் வகைக்கான கடமைகளில் இருந்து விழுந்தவர்களைச் சரியான பாதையில் அவன் {மன்னன்} செலுத்த வேண்டும்.
தங்கள் குடிமக்களுக்குத் தலைவர்களாக இருப்பதால் மன்னர் அஞ்சத்தக்கவர்களாக இருக்கிறார்கள். மான்களைக் கணைகளால் அடக்குவதைப் போல, தங்கள் கடமைகளில் இருந்து விழுந்த குடிமக்களை அவர்கள் {மன்னர்கள்} அடக்க வேண்டும். ஓ! மறுபிறப்பாள முனிவரே {கௌசிகரே}, பிறப்பால் ஏற்பட்ட கடமைகளில் தவறும் ஒரு குடிமகன் கூட ஜனகனின் இந்த நாட்டில் கிடையாது. ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, நால்வகை மக்களும் தங்களுக்குரிய கடமைகளை உறுதியுடன் பற்றுகிறார்கள். தீயவர்களை மன்னன் ஜனகன் தண்டிக்கிறான். அவன் தனது சொந்த மகனாகவே இருப்பினும் அவனைத் தண்டிக்கிறான். ஆனால், அறம்சார்ந்தவர்களுக்கு அவன் {ஜனகன்} தீங்கிழைப்பதில்லை. நல்ல திறமையான ஒற்றர்களை நியமித்து, நடுநிலை தவறாத பார்வையுடன் அனைத்தையும் கவனிக்கிறான். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே} செழிப்பு, அரசு, தண்டிக்கும் திறன் ஆகியவை க்ஷத்திரியர்களுக்கு உரியது. தங்களுக்குரிய கடமைகளைப் பயில்வதன் மூலம் மன்னர்கள் உயர்ந்த செழிப்பை விரும்புகிறார்கள். ஒரு மன்னனே நால் வகை மனிதர்களுக்கும் பாதுகாவலனாக இருக்கிறான்.
ஓ! அந்தணரே {கௌசிகரே}, என்னைப் பொறுத்த வரை நான் எப்போதும் பன்றி மற்றும் எருமை இறைச்சியை விற்கிறேன். அவ்விலங்கள் என்னால் கொல்லப்படுவதில்லை. ஓ! மறுபிறப்பாள முனிவரே {கௌசிகரே}, நான் மற்றவர்களால் கொல்லப்படும் விலங்குகளின் இறைச்சியையே விற்கிறேன். எப்போதுமே நான் ஊண் {இறைச்சி} உண்பதில்லை; அவளது {ருது} காலத்தைத் தவிர மற்ற காலங்களில் நான் எனது மனைவியிடம் செல்வதில்லை; ஓ! மறுபிறப்பாளரே {கௌசிகரே}, நான் பகலில் {உண்ணா} விரதமிருந்து, இரவில் உண்கிறேன். ஒருவனின் வகைக்கான நடத்தை தீயவையாக இருந்தாலும், அவன் நன்னடத்தைக் கொண்டவனாக இருக்கலாம். அப்படியே ஒரு மனிதன் தொழிலால் விலங்குகளைக் கொல்பவனாக இருப்பினும், அவன் அறம் சார்ந்தவன் ஆகிறான். மன்னர்களில் பாவச்செயல்களின் தொடர்ச்சியாகவே அறம் பெருமளவு குறைந்து, பாவம் வளர்கிறது. இவை அனைத்தும் ஒரு நாட்டில் உள்ள குடிமக்களிடம் ஏற்பட்டால், அது நாட்டை அழிக்கிறது. ஓ! அந்தணரே {கௌசிகரே}, அப்போதுதான், காணக் கொடூரமானவர்கள், குள்ளர்கள், கூனர்கள், கனத்த தலை கொண்ட மனிதர்கள், குருடர்கள், செவிடர்கள், கோணல் கண் கொண்டவர்கள், இனப்பெருக்க சக்தியை இழந்தவர்கள் {நபும்சகர்கள்} ஆகியோர் பிறக்க ஆரம்பிக்கின்றனர். மன்னர்களின் பாவங்களினாலேயே எண்ணிலடங்கா துயர்களைக் குடிமக்கள் சந்திக்கின்றனர். ஆனால், எங்கள் மன்னன் ஜனகன், அனைத்துக் குடிமக்கள் மீதும் அறம்சார்ந்த பார்வையைச் செலுத்துகிறான். உரிய கடமைகளைத் தானே செய்பவர்களை அவன் எப்போதும் அன்புடன் நடத்துகிறான்.
என்னைப் பொறுத்தவரை, நான் எப்போதும் நற்செயல்கள் புரிகிறேன். என்னை நிந்திப்பவர்களையும் நான் நிந்திப்பதில்லை. தங்களுக்கு உரிய கடமைகளைத் தாங்களே செய்யும் மன்னர்கள், நன்மையான நேர்மையான செயல்களைப் பயில்வதில் எப்போதும் ஈடுபடுபவர்கள், தங்கள் ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள், எப்போதும் தயாராகச் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் ஆகியோர் எப்போதும் தங்கள் சக்தியைத் தாங்குவதற்கு எதையும் நம்பியிருப்பதில்லை. தனது சக்திக்குத் தக்க சிறந்த வகையில் அன்னதானம் செய்வது, வெப்பம் மற்றும் குளிரில் உறுதியுடன் இருப்பது, அறத்தில் உறுதியோடு இருப்பது, அனைத்து உயிர்களிடமும் அன்புடன் இருப்பது ஆகிய இந்தக் குணங்கள் அத்தனையும், இவ்வுலகத்தில் இருந்து தனித்து இருப்பவனைத் தவிர வேறு எவரிடமும் காண முடியாது. ஒருவன் தனது பேச்சில் பொய்மையைத் தவிர்த்து, நன்மையைத் தயங்காமல் செய்ய வேண்டும். ஆசையாலோ, கோபத்தாலோ, துன்பத்தாலோ ஒருவன் அறத்தைக் கைவிடக்கூடாது. நல்ல காலத்தில் அளவுக்கதிகமான இன்பத்தையும், கெட்ட காலத்தில் அளவுக்கதிகமான துன்பத்தையும் ஒருவன் அடையக்கூடாது. வறுமை வரும்போது ஒருவன் தாழவோ, அல்லது அறத்தின் பாதையைக் கைவிடவோ செய்யக்கூடாது. ஒருவன் எப்போதாவது தவறு செய்தாலும், அதே போன்ற தவறை மீண்டுமொருமுறை அவன் செய்யக்கூடாது. தான் நன்மை என்று கருதும் காரியத்திலேயே ஒருவன் தனது ஆன்மாவை ஊக்கப்படுத்த வேண்டும்”
வேடன் ஞானம்! – வனபர்வம் பகுதி 206ஆ-அறம் சார்ந்தவர்களின் நடத்தை குறித்து வேடன் கௌசிகருக்குச் சொன்னது.
வேடன் {தர்மவியாதன் கௌசிகரிடம்}, “தனக்குச் செய்யப்பட்ட தீங்குக்குப் பதிலாக மற்றுமொரு தீங்கையே செய்யாமல், ஒருவன், தனக்குத் தீங்கிழைத்தவர்களிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். பாவகரமான காரியத்தைச் செய்ய விரும்பும் இழிந்த மனிதன் தன்னைத் தானே கொல்கிறான். பாவம் செய்து, “அறம் என்பதே இல்லை” என்று சொல்லி, நல்லவர்களையும், சுத்தர்களையும் கேலி செய்து, தீயப் பாவியைப் போல நடந்து கொள்பவன், சந்தேகமற அழிவையே சந்திக்கிறான். காற்றடைத்த தோல் பையைப் {துருத்தியைப்} போல ஒரு பாவி வீங்குகிறான் {பருக்கிறான்}. கர்வமும் மூடத்தனமும் நிறைந்த இந்தப் பாவிகளின் எண்ணங்கள் பலவீனமானவையும் லாபமற்றதாகவும் இருக்கும். இதயம், உள்ளுறைந்திருக்கும் ஆன்மா {உள்ளுணர்வு} ஆகியவையே, பகலில் சூரியன் உருவங்களைக் கண்டுபிடிப்பதைப் போல முட்டாளைக் கண்டுபிடிப்பவை.
கர்வத்தினால் ஒரு மூடன் இவ்வுலகில் எப்போதும் பிரகாசிப்பதில்லை. கற்றவன், அழகற்றவனாக இருப்பினும், பிறரைப் பழித்துப் பேசுவது, தன்னைப் புகழ்ந்து பேசுவது ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பதால் காந்தியுடன் {பிரகாசத்துடன்} இருப்பான். தங்கள் நற்பெயரைப் பறைசாற்றும் நடவடிக்கைகளைக் கொண்ட மனிதர்கள், குணம் நிறைந்தவர்களாக இருப்பினும், அவர்கள் இவ்வுலகில் பிரகாசித்ததற்கான ஓர் உதாரணமும் கிடைக்காது. தான் செய்த தீங்கிற்காக ஒருவன் வருந்தவானேயானால், அந்த வருத்தமே அவனது பாவத்தைக் கழுவிவிடும். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, சாத்திரங்களால் சொல்லப்படும் சில பரிகாரங்களைச் செய்து பாவத்தில் இருந்து விடுபடுவதைப் போலவே, மீண்டும் அத்தீங்கைச் செய்வதில்லை என்று அவன் எடுக்கும் தீர்மானம் அவனை எதிர்காலப் பாவத்திலிருந்து காக்கும்.
ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே-கௌசிகரே}, இதுவும் அறம் சம்பந்தமாகக் காணப்படும் ஸ்ருதி என்று ஆகிறது. முன்பு அறம்சார்ந்து இருந்தவன், பாவமிழைத்தாலோ, அல்லது அதைத் தெரியாமல் செய்தாலோ, {அவன் கடைப்பிடித்த அறம்} அந்தப் பாவங்களை அழிக்கும். ஓ அந்தணரே {கௌசிகரே}, மனிதர்கள் அறியாமையில் செய்யும் பாவங்களை அறம் விரட்டியடிக்கும். ஒரு பாவத்தை இழைத்த மனிதன், அதற்கு மேலும் தன்னை மனிதன் என்று கருதுவதை நிறுத்த வேண்டும். எந்த மனிதனும் அவனது பாவங்களை மறைக்க முடியாது. ஒருவன் என்ன செய்கிறான் என்பதை அவனுக்குள் இருப்பவனும் {பரமாத்மாவும்}, தேவர்களும் காண்கின்றனர். பக்தி கொண்ட கறையில்லா மனிதன், தனது ஆடையில் இருக்கும் ஓட்டைகளை மறைப்பதைப் போல, நேர்மையானவர்களின் குறைகளை மறைக்க வேண்டும். அப்படிப்பட்டவன் நிச்சயம் முக்தியை அடைவான். பாவம் செய்த ஒரு மனிதன், அதிலிருந்து மீள நினைத்தால், சந்தேகமற அவனது பாவங்கள் எல்லாம் அழிந்து போகும். அவன் மேகங்களில் இருந்து விடுபட்டு, உதிக்கும் சந்திரனைப் போலப் பிரகாசமாகவ்வும் சுத்தமானவனாகவும் இருப்பான். இருளை விலக்கும் உதயசூரியன் போல, தனது பாவங்களில் இருந்து மீள நினைக்கும் மனிதன் அவற்றைக் கழுவிக் கொள்கிறான். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, மோகமே பாவங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது. அறியாமையில் இருக்கும் மனிதர்கள் மோகத்தின் பயனால் மட்டுமே பாவமிழைக்கின்றனர். புற்களால் மறைக்கப்பட்டுள்ள கிணறுகளின் வாய் போல, பொதுவாக, பாவிகள் தங்களை அறம் சார்ந்தவர்களாக வெளியில் காட்டிக் கொள்வார்கள். வெளிப்பார்வைக்கு அவர்கள் தன்னடக்கம் கொண்டவர்களாகவும், புனிதமானவர்களாகவும் தங்களைக் காட்டிக் கொண்டு தங்கள் வாயினால் அறம் சார்ந்த பேச்சுகளைத் அர்த்தமில்லாமல் உதிர்க்கிறார்கள். உண்மையில் அவர்களிடம் அனைத்துமே காணப்படும், ஆனால் உண்மையான அறம் மட்டும் காணப்படாது.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மனிதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, வேடனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பெரும் ஞானம் கொண்ட அந்தணர் {கௌசிகர்}, மீண்டும் அந்த வேடனிடம் {தர்மவியாதனிடம்}, “அறம்சார்ந்த நடத்தையை நான் எப்படி அறிவது? ஓ! அறம்சார்ந்தவர்களில் முதன்மையானவனே, நீ அருளப்பட்டிரு. நான் இதை உன்னிடம் இருந்து கேட்க விரும்புகிறேன். எனவே, ஓ மேன்மையான ஆன்மா கொண்டவனே, அது குறித்த உண்மைகள் அனைத்தும் எனக்குச் சொல்” என்று கேட்டார். இந்த வார்த்தைகளைக் கேட்ட வேடன், “ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, வேள்விகள், தானம், துறவு, வேதங்கள், சத்தியம் ஆகிய ஐந்தும் புனிதமானவை, இவை அறம் சார்ந்தவர்கள் என்று அழைக்கப்படுபவர்களிடம் என்றும் இருக்கும். காமம், கோபம், பேராசை, குறுக்குபுத்தி ஆகியவற்றை வென்று, அறம் சார்ந்த ஒன்று என்பதாலேயே அந்த அறத்தில் இன்புறுபவர்களே உண்மையில் அறம்சார்ந்தவர்களின் புகழ்ச்சிக்குத் தகுதியானவர்களும், அறம்சார்ந்தவர்களும் ஆவர். வேள்விகளுக்கும், வேத கல்விக்கும் தங்களை அர்ப்பணிக்கும் இம்மனிதர்கள் சுதந்திரமான நடத்தையற்றவர்களாவர். அவர்கள் நேர்மையானவர்கள் மற்றும் நல்லவர்கள் ஆகியோரின் நடத்தைகளை மட்டுமே பின்பற்றுகிறார்கள். இதுவே {நேர்மையானவர்கள் மற்றும் நல்லவர்களைப் பின்பற்றுவதே} உண்மையில் அறம்சார்ந்தவர்களின் இரண்டாவது பண்பு ஆகும்.
பெரியவர்களுக்காகக் காத்திருத்தல், சத்தியம், கோபத்தில் இருந்து விடுதலை, தானம் ஆகிய நான்கும், ஓ! அந்தணரே {கௌசிகரே}, அறம்சார்ந்தவர்களின் நடத்தையில் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதபடி இணைந்திருப்பதாகும். நற்பெயர் பெறுவதற்காக ஒரு மனிதன், அறம் சார்ந்த நடத்தையில் தனது இதயத்தை நிலைநிறுத்துகிறான். அப்படி அதை உறுதியாகப் பற்றுவது கடினமானதும் அடைவதற்கு அரிதுமாகும். ஆனால் மேற்சொன்ன நான்கு அறங்களையும் செய்தால் அதை {நற்பெயரை} அடையலாம். வேதங்களின் சாரம் சத்தியமாகும். சத்தியத்தின் சாரம் தன்னடக்கமாகும். தன்னடக்கத்தின் சாரம் உலக இன்பங்களைத் துறப்பதாகும். இவை அனைத்தையும் அறம்சார்ந்தவர்களின் நடத்தையில் காணலாம். மனிதர்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கையின் வடிவங்களைக் கேலி செய்யும் ஏமாற்றுகர முட்டாள்களைப் பின்பற்றுபவர்கள், அந்தப் பாவ வழியில் நடந்ததற்காக அழிவுக்குள் இழுத்துச் செல்லப்படுகின்றனர். எனினும், நோன்புகள் நோற்பதில் ஈடுபடும் அறம்சார்ந்தவர்களும், சுருதிகளுக்குத் தங்களை அர்ப்பணிப்பவர்களும், உலக இன்பங்களைத் தவிர்த்து அறத்தைப் பின்பற்றுபவர்களும் {நல்லொழுக்கத்துடன் இருப்பவர்களும்}, உண்மையில் அறத்தின் சுவடுகளில் நடந்து உண்மையான தர்மத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். தங்கள் குருக்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களும், சாத்திரங்களின் உணர்வுகளைப் பொறுமையுடனும் கவனத்துடனும் சிந்தித்துப் பார்ப்பவர்களும் அறம்சார்ந்த நடத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஓ! அந்தணரே {கௌசிகரே}, இவையே உயர்ந்த நுண்ணறிவை அடையச் சரியாக வழிகாட்டுபவையாகும்.
நாத்திகர்கள், அறத்தின் வரம்புகளை மீறுபவர்கள், தீய ஆன்மாக்கள், பாவகர வாழ்வு வாழ்பவர்கள் ஆகியோரைக் கைவிட்டு, அறம்சார்ந்தவர்களை மதித்து ஞானம் அடைய முயற்சி செய்வீராக. காமம் மற்றும் மோகம் ஆகியவை, வாழ்வு என்ற நதியில் இருக்கும் சுறாக்கள் போன்றவை; ஐம்புலன்களே {அங்கு} நீராக இருக்கின்றன. நீர் பொறுமை என்ற படகைக் கொண்டு, திரளான உடல் இருப்பைத் (இவ்வுலகில் மறுபடியும் மறுபடியும் பிறத்தலைத்} தவிர்த்து, அந்த {பிறவி} நதியின் அடுத்தக் கரைக்கு கடந்து செல்வீராக. அறிவார்ந்த கொள்கை மற்றும் {நல்லதைப்} பிரித்தெடுத்தலைப் பயிலும் தலைமை அறமானது, படிப்படியாக {நம்மிடம்} சேர்க்கப்படும்போது, வெள்ளைத் துணியில் இருக்கும் சாயம் போல அழகாக இருக்கிறது. சத்தியம், எவருக்கும் தீங்கிழையாமை {அஹிம்சை}, ஆகியவை அனைத்து உயிர்களுக்கும் உயர்ந்த நன்மைகளைச் செய்யும் அறங்களாகும். இவ்விரண்டில் கடைசியானது {அஹிம்சை}, உண்மையை {சத்தியத்தை} அடிப்படையாகக் கொண்ட முக்கியமான அறமாகும். நமது உளவியல், உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும்போதே, சரியாக இயங்குகிறது. அறம்பயில்வதில், உண்மையே உயர்ந்த மதிப்புடையதாகும்.
நடத்தையில் சுத்தம் என்பது, நல்ல மனிதர்கள் அனைவரின் குணமாகும். புனிதமான வாழ்வுக்காக {மற்றவரிலிருந்து} வேறுபட்டிருப்பவர்கள், நல்லவர்களும் அறம்சார்ந்தவர்களும் ஆவர். அனைத்து உயிரினங்களும் தங்கள் தன்மைக்குகந்த உள்ளார்ந்த நடத்தை கொள்கைகளைப் பின்பற்றுகின்றன. தன்னடக்கம் இல்லாத பாவிகள் காமத்தையும், கோபத்தையும், பிற தீங்குகளையும் அடைகிறார்கள். அறச்செயல்கள் அனைத்தும் நீதியில் இருந்தே தோன்றுகின்றன என்பது தொன்றுதொட்டு வரும் விதியாகும். அநீதியான நடத்தைகள் அனைத்தும் பாவமே என்று புனிதமானவர்களால் சொல்லப்பட்டுள்ளது. கோபம், கர்வம், இறுமாப்பு, பகைமை ஆகியவற்றால் இயக்கப்படாமல், அமைதியாக, வெளிப்படையாக {நேர்முகமாக} இருப்பவர்கள் அறம்சார்ந்த நடத்தை கொண்டவர்கள். மூன்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சடங்குகளை ஊக்கமுடன் செய்பவர்களும், ஞானம் கொண்டவர்களும், சுத்தமான நல்லொழுக்கம் கொண்டவர்களும், சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பவர்களும், பெரியவர்களைக் கவனிப்பவர்களும் அறம்சார்ந்த நடத்தை கொண்டவர்களாவார்கள். பெரும் சக்தி கொண்ட அத்தகைய மனிதர்களின் செயல்களையும், நடத்தைகளையும் {நாம்} அடைவது மிகக் கடினமாகும். தாங்கள் செய்யும் {நற்}செயல்களின் மூலமாகவே ஒருவன் சுத்திகரிக்கப்படுகிறான். அதன் தொடர்ச்சியாகப் பாவம் தானாக அழிகிறது. நன்னடத்தை எனும் அறம் அற்புதமானது, பழமையானது, மாற்றமுடியாதது, நித்தியமானது; இவ்வறத்தைப் புனிதமாக நோற்கும் ஞானிகள் சொர்க்கத்தை அடைகிறார்கள். தெய்வத்தின் இருப்பை நம்பும் மனிதர்கள், போலிப்பெருமைகளில் இருந்து விடுபட்டவர்கள், புனிதமான சாத்திரங்களை அறிந்தவர்கள், மறுபிறப்பாளரை (இரு பிறப்பாளரை = பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகியோரை} மதிப்பவர்கள் ஆகியோர் சொர்க்கத்தை அடைகிறார்கள்.
புனிதமான மனிதர்களில் வேதங்கள் கற்பிக்கும் உயர்ந்த அறம், தர்மசாத்திரங்கள் கற்பிக்கும் அறம், அறம்சார்ந்தவர்கள் {நல்லவர்கள்} நடத்தை {கற்பிக்கும் அறம்} என மூன்று வழிகளில் அறம் வேறுபட்டிருக்கிறது. ஞானம் அடைதல், புண்ணிய இடங்களுக்குப் புனிதப் பயணம், சத்தியம், பொறுமை, சுத்தம், வெளிப்படையான தன்மை {கபடமின்மை} ஆகியவை அறம் சார்ந்த நடத்தையைக் குறிக்கின்றன. அறம் சார்ந்த ,அனைத்து உயிர்களிடமும் எப்போதும் அன்புடனும், மறுபிறப்பாளர்களிடம் நன்றாகவும் நடந்து கொள்வார்கள். அவர்கள் எந்த உயிருக்கும் தீங்கை விளைவிக்கமாட்டார்கள் {அஹிம்சையை மேற்கொள்வார்கள்}, முரட்டுத்தனமாகப் {கொடுஞ்சொல்} எப்போதுமே பேசமாட்டார்கள். செய்யும் நல்ல மற்றும் தீய காரியங்கள் தரும் பலன்களின் விளைவுகளை நன்கு அறிந்த நல்ல மனிதர்கள், அறம் சார்ந்தவர்களால் பாராட்டப்படுகின்றனர். நீதிமானாக, நன்னடைத்துக் கொண்டவனாக, அறம் கொண்டவனாக, அனைத்து உயிருக்கும் நன்மை விரும்புபவனாக, அறத்தின் பாதையில் உறுதியாக இருப்பவனாக, சொர்க்கத்தை வென்றவனாக, தானம் செய்பவனாக, தன்னலமில்லாதவனாக, அப்பழுக்கற்ற குணம் கொண்டவனாக, துன்புறுபவர்களுக்கு உதவுபவனாக, கற்றவனாக, அனைவராலும் மதிக்கப்படுபவனாக, துறவை மேற்கொள்பவனாக, அனைத்து உயிர்களிடமும் அன்புள்ளவனாக இருப்பவர்களை அறம்சார்ந்தவர்கள் பாராட்டுகிறார்கள்.
தானம் செய்பவர்கள் இவ்வுலகிலும், (இதற்குப் பின் வரும்) அருள் உலகங்களிலும் செழிப்புடன் இருப்பார்கள். நல்ல மனிதர்களால் உதவிக்கு அழைக்கப்படும் அறம் சார்ந்த மனிதன், தனது மனைவி மற்றும் வேலையாட்களின் வசதிகளை இழந்தாலும் கூட, மிகுந்த சிரமப்பட்டாவது அவர்களுக்கு {உதவி கேட்டவர்களுக்கு} பிச்சையிட வேண்டும். தனது நன்மை, அறம் மற்றும் உலகத்தின் வழிகள் ஆகியவற்றில் ஒரு கண் வைத்திருக்கும் நல்ல மனிதர்கள், இவ்வழியிலேயே செயல்படுகின்றனர். எனவே அவர்களின் அறம், முடிவிலா காலத்தில் வளர்ந்து கொண்டே இருக்கிறது. நல்ல மனிதர்களிடம் இருக்கும் சத்தியம், அஹிம்சை, நன்னெறி, எவருக்கும் தீங்கிழையாமை, அகந்தையின்மை, அடக்கம், {உலகப்பற்று} விலக்கல், சுயக்கட்டுப்பாடு, ஆசையின்மை, ஞானம், பொறுமை, அனைத்துயிர்களிடத்திலும் அன்பு, தீயவை மற்றும் காமத்தில் இருந்து விடுபட்டிருக்கும் குணம் ஆகியவையே {இந்த} உலகத்திற்குச் சாட்சியாக இருக்கின்றன. ஒரு மனிதன் வேறு எவருக்கும் தவறு இழைக்கக்கூடாது, அவன் பிச்சையிட {தர்மகாரியங்களில் ஈடுபடவேண்டும்} வேண்டும், எப்போதும் உண்மையுடன் இருக்க வேண்டும் என்ற மூன்றும் சேர்ந்ததே, அறம் சார்ந்தவர்களின் சரியான வழியாக இருக்கிறது.
தீர்மானமான நம்பிக்கைகளும், அறம்சார்ந்த நடத்தையும், உயர்ந்த ஆன்மாவும், அனைவரிடமும் அன்பு கொண்ட, இரக்கமும் நிறைந்த நல்ல மனிதர்கள், இவ்வுலகில் மனநிறைவு கொண்டு அறத்தின் சரியான பாதையை அடைவார்கள். தீயவற்றிலிருந்து விடுதலை, பொறுமை, மன அமைதி, மன நிறைவு, இன்சொல், ஆசை மற்றும் கோபத்தைக் கைவிடுதல், அறம்சார்ந்த நடத்தை, புனிதமான சாத்திர விதிகளின் படியான கட்டுப்பாடான செயல்கள் ஆகியவையே அறம்சார்ந்தவர்களின் சரியான வழியாக இருக்கிறது. அறத்தில் நிலைத்திருப்பவர்கள் இந்த அறநடத்தை விதிகளைப் பின்பற்றுகிறார்கள். மனித நடத்தைகளுக்கு இடையில் பல்வேறு கட்டங்களில் வரும் வேற்றுமை அறிதல் மற்றும் ஞானம் அடைதல் ஆகியவற்றின் உச்சியை அடைந்தவர்கள், மிகவும் அறம் சார்ந்தவர்களாகவோ, நேர்மாறானவர்களாகவோ {அறமற்றவர்களாகவோ} இருந்து பெரும் ஆபத்துகளில் இருந்து தப்புவார்கள். ஓ! பெரும் அந்தணரே {கௌசிகரே}, இப்படியே அற நடத்தை குறித்து ஓர் அறிமுகத்துடன், எனது ஞானத்தின் படியும், நான் கேள்விப்பட்டதன் படியும், இவை அனைத்தையும் உமக்கு விவரித்திருக்கிறேன்” என்றான் வேடன் {தர்மவியாதன்}.
நல்லவர்கள் நல்லவர்களை மெச்சுவதில்லையே! – வனபர்வம் பகுதி 207-ஊண் உணவு குறித்தும், முற்பிறவி கர்மங்கள் குறித்தும், பிற உயிருக்குத் தீங்கு செய்யாமை குறித்தும் வேடன் கௌசிகருக்கு உரைத்தது.
மார்க்கண்டேயர் {{யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, பக்திமானான வேடன் {தர்மவியாதன்} அந்த அந்தணரிடம் {கௌசிகரிடம்}, “எனது செயல்கள் அனைத்தும் சந்தேகமற கொடுமையானவையே. ஆனால், ஓ! அந்தணரே {கௌசிகரே}, விதி மிக வலிமையானது. மேலும், நமது பழைய செயல்களின் {முற்பிறப்பில் செய்த வினைகளின்} விளைவால் அதைத் தவிர்ப்பது கடினமாகும். அஃது, முந்தைய பிறவியில் இழைத்த பாவத்தால் எழும் கர்மம் சார்ந்த தீமையாகும் {தோஷமாகும்}. ஆனால், ஓ! அந்தணரே {கௌசிகரே}, நான் எப்போதும் தீமையை ஒழிப்பதில் ஊக்கமுடன் இருக்கிறேன். ஓர் உயிர் தெய்வத்தாலேயே கொல்லப்படுகிறது. அதைக் கொல்பவன், இரண்டாம் நிலை முகவராக மட்டுமே {கருவியாக மட்டுமே} செயல்படுகிறான். ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, எங்கள் கர்மத்தின் காரணமாக நாங்கள் அத்தகு முகவர்களாக {கொல்லும் கருவியாக} மட்டுமே இருக்கிறோம். என்னால் கொல்லப்படும் விலங்குகளும், நான் விற்கும் அதன் இறைச்சியும் கர்ம பலனை அடைகின்றன. ஏனெனில், (அவற்றின் இறைச்சியை), தேவர்களும், விருந்தினர்களும், பணியாட்களும் சுவைமிகுந்த உணவை விருந்தாக உண்பதால், இறந்தவர்களின் ஆவி சாந்தமடைகிறது. மூலிகைகள், காய்கறிகள், மான்கள், பறவைகள், காட்டு விலங்குகள் ஆகியவை அனைத்து உயிர்களின் உணவாக இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.
ஓ! அந்தணரே {கௌசிகரே}, உசீனரன் மகனான பொறுமைமிக்க மன்னன் சிபி, தனது சொந்த சதையைத் {இறைச்சியைத்} தானமளித்து, அடைவதற்கு அரிதான சொர்க்கத்தை அடைந்தான். ஓ! அந்தணரே {கௌசிகரே}, பழங்காலத்தில், மன்னன் ரந்திதேவனின் சமையலறையில் {மடைப்பள்ளியில்} ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் விலங்குகள் கொல்லப்பட்டு வந்தன; அதே போலத் தினமும் இரண்டாயிரம் {2000} மாடுகளும் கொல்லப்பட்டன; ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, மன்னன் ரந்திதேவன் அந்த இறைச்சியைக் {தானம்} கொடுத்து வந்ததால், அவன் நிகரற்ற புகழை அடைந்தான். நான்கு மாதச் சடங்கைச் {சாதுர்மாஸ்யம்} செய்வதற்குத் தினமும் விலங்குகள் பலி கொடுக்கப்பட வேண்டும். ‘புனித நெருப்புக்கு விலங்கின் {இறைச்சி} உணவு பிடிக்கும்’ என்ற மொழி {ஸ்ருதி} நம்மிடம் இருக்கிறது. வேள்விகளில் மறுபிறப்பாள அந்தணர்களால் விலங்குகள் வகைதொகையின்றிக் கொல்லப்படுகின்றன. மந்திரங்களால் பாவம் அழிக்கப்பட்ட அவ்விலங்குகள் சொர்க்கத்தை அடைகின்றன.
ஓ! அந்தணரே {கௌசிகரே}, பழங்காலத்தில், புனிதமான நெருப்புக்கு விலங்கு {இறைச்சி} உணவு பிடிக்காமல் போயிருந்தால், யாருக்கும் அது {இறைச்சி} உணவாகியிருக்க முடியாது. இந்த விலங்கு {இறைச்சி} உணவு சம்பந்தமாக முனிவர்களால் இவ்விதி விதிக்கப்பட்டுள்ளது. “முதலில் தேவர்களுக்கும், இறந்தவர்களின் ஆவிகளுக்கும் மரியாதையாகக் காணிக்கை செய்யப்பட்ட விலங்கு {இறைச்சி} உணவை உண்பவன், அத்தகு செயலால் {காணிக்கை செய்வதால்} அசுத்தமடையமாட்டான் {தோஷத்துக்கு உள்ளாக மாட்டான்}. பிரம்மச்சாரி ஒருவன், தனது மனைவியின் மாதவிடாய் காலத்தில் {Menstrual period} கூடிவிட்டால்கூட, அவன் நல்ல அந்தணனுக்குக் குறைவாகக் கருதப்படுவதில்லை. அதுபோல, அம்மனிதன் விலங்கு {இறைச்சி} உணவு உண்டவனாகக் கருதப்பட மாட்டான். சரி, சரியில்லை என்று இக்காரியத்தைப் பரிசீலித்த பிறகே இவ்விதி விதிக்கப்பட்டது” {இதுவே விலங்கு {இறைச்சி} உணவு சம்பந்தமாக முனிவர்களால் விதிக்கப்பட்ட விதியாகும்}.
ஓ அந்தணரே {கௌசிகரே}, ஒரு சாபத்துக்கு உட்பட்டிருந்த மன்னன் சௌதாசனே மனிதர்களை இரையாகக் கொண்டான். இவ்விஷயத்தில் உமது கருத்து என்ன? ஓ! நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே – கௌசிகரே}, எனது சொந்த நடவடிக்கைகளின் விளைவாகவே {சொந்த கர்மங்களினாலேயே}, நான் இந்தத் தொழிலின் மூலம் எனது வாழ்வாதாரத்தை அடைகிறேன். ஓ! அந்தணரே {கௌசிகரே}, ஒருவன், தனது சொந்தத் தொழிலைக் கைவிடுவது, பாவம் எனக் கருதப்படுகிறது. ஒருவன் தனது சொந்தத் தொழிலைச் செய்வதென்பது மெச்சத்தகுந்த செயலே என்பதில் ஐயமில்லை. முந்தைய இருப்பின் {முற்பிறவியின்} செயல்கள் {கர்மங்கள்} எந்த உயிரினத்தையும் விடுவதில்லை. ஒருவனது செயல்களின் விளைவுகளைத் தீர்மானிப்பதில், இவ்விதி, படைப்பாளனின் {பிரம்மனின்} பார்வையைப் பெற்றது. {பல்வேறு தொழில்களை நிர்ணயிக்கும் விஷயத்தில் பிரம்மனே இவ்விதியை விதித்தான்}.
தீய கர்மத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு மனிதன், எப்போதும் தன் கர்மத்திற்கு எப்படிப் பரிகாரம் செய்வது என்பதையே கருத்தில் கொள்ள வேண்டும். தீவினையில் இருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொண்டால், தீய கர்மம் பல்வேறு வழிகளில் ஈடு {சரி} செய்யப்படும். அதற்கேற்றவாறே, ஓ! நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே}, நான் தானம் செய்கிறேன், உண்மையுடன் இருக்கிறேன், பெரியவர்களைக் கவனிப்பதில் சிரத்தை கொள்கிறேன், மறுபிறப்பாள {இருபிறப்பாள} பிராமணர்களை முழுமையாக மதிக்கிறேன், கர்வம் கொள்வதில்லை, அதிகமாகப் பேசாமலும் இருக்கிறேன்.
வேளாண்மை என்பது போற்றுதலுக்குரிய தொழிலாகக் கருதப்படுகிறது. அதில் கூட, விலங்கின வாழ்வுக்குப் பெரிய தீங்கு செய்யப்படுகிறது என்பது நன்கு அறியப்படுகிறது; நிலத்தை உழுவதால் தரையில் ஒளிந்திருக்கும் எண்ணற்ற உயிரினங்களும், பல்வேறு உருவங்களில் உள்ள விலங்குகளின் வாழ்வும் அழிக்கப்படுகின்றன. இது குறித்து நீர் என்ன நினைக்கிறீர்? ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, விரிகியும் {அரிசியும்} மற்ற அரிசி விதைகளும் {நெல் முதலிய அரிசி வகைகள் அனைத்தும்} உயிருள்ளவையே. இவ்விஷயத்தில் உமது கருத்து என்ன?
ஓ! அந்தணரே {கௌசிகரே}, மனிதர்கள் காட்டுவிலங்குகளை வேட்டையாடிக் கொன்று, அவற்றின் இறைச்சியைப் புசிக்கின்றனர்; அவர்கள் மரங்களையும், மூலிகைகளையும் {செடிகளையும்} கூட அறுக்கின்றனர்; ஆனால், ஓ! அந்தணரே {கௌசிகரே}, மரங்களிலும், பழங்களிலும், ஏன் நீரிலும் கூட எண்ணற்ற உயிரிகள் இருக்கின்றன; நீர் அப்படி எண்ணவில்லையா? ஓ! அந்தணரே {கௌசிகரே} முழுப் படைப்புமே, உயிரிகளை உணவாக ஏற்கும் விலங்குகளின் உயிரால் நிறைந்திருக்கிறது. மீன்கள் மீனை இரையாக்குகின்றன; பல்வேறு விலங்கு வகைகள் பிற விலங்கு வகைகளை இரையாகக் கொள்கின்றன; ஒன்றை ஒன்று உண்ணும் விலங்கு வகைகளும் இருக்கின்றன என்பதை நீர் காணவில்லையா? ஓ! அந்தணரே {கௌசிகரே}, மனிதர்கள் அங்கேயும் இங்கேயும் நடக்கும்போது, தரையில் ஒளிந்திருக்கும் எண்ணற்ற உயிர்களை மிதித்துக் கொல்கின்றனர். விவேகிகளும் ஞானிகளும் கூட, தூங்கும்போதும், நிலைகளை மாற்றும்போதும் எனப் பல்வேறு வழிகளில் விலங்குகளின் உயிரை அழிக்கின்றனர். இதற்கு நீர் என்ன சொல்லப் போகிறீர்? பூமியிலும், காற்றிலும் மொய்த்துக் கொண்டு இருக்கும் அனைத்து உயிர் வகைகளையும், மனிதர்கள், சுயநினைவற்ற நிலையிலும், அறியாமையிலும் அழித்து விடுகின்றனர். இப்படி நடக்கவில்லையா?
இவ்வழக்கில், மக்கள் எவ்வுயிரினத்துக்கும் தீங்கிழைக்கக்கூடாது என்ற கட்டளை, உண்மை நிலை அறியாமல் இருந்த பழங்காலத்து மனிதர்களால் விதிக்கப்பட்டது. ஓ! அந்தணரே {கௌசிகரே}, எவ்வுயிருக்கும் தீங்கிழைத்த பாவத்தில் இருந்து விடுபட்ட ஒரு மனிதனும் இவ்வுலகில் கிடையாது. முழுமையாகப் பரிசீலித்துப் பார்த்தால், எவ்வுயிருக்கும் தீங்கிழைத்த பாவத்தில் இருந்து விடுபட்டவனாக, இவ்வுலகில் ஒரு மனிதனும் கிடையாது என்ற தவிர்க்க முடியாத தீர்மானத்திற்கே நாம் வர இயலும்.. ஓ! நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே}, எவ்வுயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்று நோன்பு நோற்ற தவசிகள் கூட, விலங்குகளின் உயிருக்கு தீங்கையே செய்கின்றனர். இன்றியமையாத பெரிய தேவைகள் இருக்கும்போது மட்டுமே, தீங்கு குறைவாக இருக்கிறது. உன்னதப் பிறவிகளும், சிறந்த குணங்கள் கொண்டவர்களும் கூட, தீச்செயல்களை இழைத்துவிட்டு, அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, எதற்கும் வெட்கப்படாமல் இருக்கிறார்கள்.
பின்பற்றத்தக்க வழியில் செயல்படும் நல்லவர்கள், மற்ற நல்லவர்களால் மெச்சப்படுவதில்லை; அதே போல, முரண்பாட்டு வழியில் செயல்படும் தீயவர்கள், தங்கள் உடன் ஒத்த தீயவர்களால் புகழப்படுவதில்லை; உயர் குணங்களைக் கொடையாகக் கொண்டிருந்தாலும், நண்பர்கள், {மற்ற} நண்பர்களுக்கு ஏற்புடையவர்களாக இருப்பதில்லை. மூடப்பண்டிதர்கள் {பண்டிதர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் முட்டாள்கள்}, தங்கள் குருக்களின் அறங்களைச் {சிறப்புகளைச்} சொல்லிக் கதறுகிறார்கள். ஓ! அந்தணரே {கௌசிகரே}, பொருட்களின் இயற்கையான ஒழுங்கு இவ்வுலகில் எல்லா இடங்களிலும் தலைகீழாகவே காணப்படுகிறது. {உலகத்தில் பல பொருட்கள் மாறுபட்டிருப்பனவாகக் காணப்படுகின்றன}. பொருட்களின் நிலை மற்றும் அறம் ஆகியவற்றில் உமது கருத்தென்ன? நமது செயல்களில் நன்மையோ தீமையோ, சொல்வதற்கு அதிகமாகவே இருக்கிறது. ஆனால், எவனொருவன், தனது சொந்த தொழிலில் நிலைபெற்றிருக்கிறானோ, அவன் பெரும் புகழை அடைகிறான்.
சுக துக்கத்திற்கான காரணங்கள்! – வனபர்வம் பகுதி 208-மகிழ்ச்சி மற்றும் துக்கங்களுக்குக் காரணம் அறம் மற்றும் பாவமே என்று கௌசிகருக்குச் சொன்ன வேடன்…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, கருணையில் {இரக்கத்தில்} மேம்பட்ட அந்த அறம் சார்ந்த வேடன் {தர்மவியாதன்}, மீண்டும் நிபுணத்துவத்துடன் அந்த அந்தணர்களில் முதன்மையானவரிடம் {கௌசிகரிடம்}, “நேர்மையின் வழிகள் நுட்பமானவை, பல்முகப்பட்டவை, எல்லையற்றவை என்று முதிர்ந்தவர்கள் கருதுகிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையிலும், திருமணக் காரியத்திலும் பொய் சொல்லத் தக்கதே. சில நேரங்களில் பொய்மை உண்மையின் வெற்றிக்கு வழிவகுக்கும்; உண்மை பொய்மையாய் தேய்ந்து போகும். எது அனைத்து உயிர்களுக்கும் நன்மையை விளைவிக்குமோ அதுவே உண்மை {சத்தியம்} என்று கருதப்படுகிறது. அறம் இப்படி நெறிதவறுவதிலும் இருக்கிறது; நீர் அதன் நுட்பமான வழிகளைக் குறித்துக் கொள்ளும்.
ஓ! அறம் சார்ந்தவர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, நன்மையோ, தீமையோ ஒரு மனிதனின் செயல்களுக்கான கனிகளை {பலன்களை} அந்த மனிதன் நிச்சயமாக அறுப்பான் {பெறுவான்}. இழிவான நிலையை அடையும் அறியாமை கொண்ட மனிதன், தனது தீய கர்மத்தின் விளைவுகளை அறியாமல், தேவர்களை முற்றிலுமாக நிந்திக்கிறான். ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, மூடனும், கபடனும், நிலையற்றவனும் {சபலனும்} எப்போதும் மகிழ்ச்சியையோ துயரத்தையோ தலைகீழாக அடைகிறார்கள். கற்றலோ, நல்ல ஒழுக்க நெறியோ, சுய முயற்சியோ அவர்களைக் காப்பதில்லை. நமது முயற்சிகளின் கனிகள் {பலன்கள்} வேறு எதையும் சாராது சுதந்திரமாக இருந்தால், மனிதர்கள் தங்கள் விருப்பத்தின் நோக்கத்தை வெறும் முயற்சியிலேயே அடைவார்கள்.
இயன்றவர்கள், புத்திசாலிகள், விடாமுயற்சியுடைய மனிதர்களின் முயற்சிகள் தடைபட்டு, அவர்கள் தங்கள் செயல்களின் கனிகளை அறுப்பதில்லை என்பதைக் காண்கிறோம். மறுபுறம், மற்றவர்களுக்குத் தீங்கிழைப்பதில் சுறுசுறுப்பாக இருப்பவர்களும், உலகத்தை ஏமாற்றுபவர்களும், மகிழ்ச்சியான வாழ்வை நடத்துகிறார்கள். எந்த முயற்சியுமே இல்லாமல் சிலர் செழிப்பை அடைகின்றனர். இன்னும் சிலர் மிகுந்த முயற்சி செய்தும் தங்களுக்கு உரியவற்றை அடைய இயலாமல் இருக்கின்றனர். தங்கள் மகன் பிறப்பதற்காகத் தேவர்களை வழிபட்டு, கடும் தவங்களை இயற்றும் இரக்கப்படத்தக்கவர்களால் {பெற்றோர்}, தொடர்ந்து பத்து மாதங்கள் கருவில் இருக்கும் அவர்களுடைய மகன்கள், தங்கள் குலத்தில் மிக மோசமானவர்களாக {குலத்தைக் கெடுப்பவர்களாக} ஆகிறார்கள். சிலர் அதே போன்ற கர்மங்களால் பெறப்பட்டு, தங்கள் வாழ்வைத் தங்கள் மூதாதையர் சேர்த்த செல்வம் மற்றும் தானியக் குவியல்களைக் கொண்டு தங்கள் வாழ்வை ஒழுங்காகவும் ஆடம்பரமாகவும் கழிக்கிறார்கள்.
மனிதனைத் தாக்கும் நோய்கள், சந்தேகமற அவனது சொந்த கர்மத்தின் பலன்களே. அவர்கள் அதன் பிறகு வேடனின் கைகளில் அகப்பட்ட சிறு மான்களைப் போல நடந்து கொள்கின்றனர். மேலும் அவர்கள் மனக்கஷ்டங்களையும் அடுக்கிக் கொள்கின்றனர். ஓ! அந்தணரே {கௌசிகரே}, தங்கள் விளையாட்டின் ஓட்டத்தை இடமறிக்கும் வேடர்களைப் போல, தாங்கள் சேகரித்து வைத்திருக்கும் மருந்துகளைக் கொண்டு, தகுதி வாய்ந்த திறமை மிகுந்த மருத்துவர்களால் அந்த நோய்களின் வீரியம் சரிபார்க்கப்படுகிறது. அறத்தைப் பேணுபவர்களின் சிறந்தவரே {கௌசிகரே}, அதைத் {நோயைத்} தங்கள் கட்டுக்குள் {அதிகாரத்திற்குள்} வைத்து, (இந்தப் பூமியில் உள்ள நல்ல விஷயங்களை) அனுபவிப்பவர்கள், நாள்ப்பட்ட குடல் நோய்களில் இருந்து உண்மையில் தங்கள் துன்பத்தைக் களைகிறார்கள் என்றும், வலுவும் சக்தியும் கொண்டவர்கள், துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்றும், அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை அடையக்கூடப் பெரும் சிரமப்பட வேண்டியிருக்கிறது என்றும் கண்டீர். அனைத்து மனிதனும் இப்படியே ஆதரவற்று, துன்பம் மற்றும் மாயையில் மூழ்கி, மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப்பட்டு, பலமிக்கத் தங்கள் சொந்த செயல்களாலேயே (கர்மத்தாலேயே) மூழ்கிப் போகிறார்கள்.
செயல்களில் {எதையும் செய்யலாம் என்ற} முழுச் சுதந்திரம் இருந்திருந்தால் {தெய்வம் இல்லாதிருந்தால்}, எந்த உயிரினமும் சாகாது; யாரும் அழிவுக்கு உள்ளாகவோ, செய்த தீவினையின் தண்டனையை எதிர்நோக்கவோ மாட்டார்கள்; அனைவரும் விரும்பிய அனைத்தையும் அடைவார்கள். எல்லோரும் மற்றவரனைவரையும் {வாழ்வு எனும் பந்தயத்தில்} விஞ்சி நிற்கவே நினைப்பார்கள்; அவர்கள் அதற்காகத் தங்கள் முழுச் சக்தியையும் பயன்படுத்துவார்கள்; ஆனால் பலன் வேறுமாதிரியாக இருக்கும். ஒரு நட்சத்திரத்தின் ஆதிக்கத்தில் பிறந்த பலர் ஒரே மாதிரியான நற்பேறைப் பெறுகிறார்கள்; ஆனால் அவர்களது செயல்ளில் முதிர்ச்சியில் பெரும் வேறுபாடு காணப்படுகிறது. ஓ! நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே – கௌசிகரே}, எவனும் தன் செல்வத்தைத் தானே செலவழிப்பவனாக இருக்க முடியாது. முற்பிறவிகளில் செய்த செயல்களின் பலன்கள் இந்தப் பிறவியில் காணப்படுகிறது. ஆன்மா நித்தியமானது, முடிவில்லாதது என்பது தொன்றுதொட்டு வரும் பாரம்பரிய கருத்தாகும். ஆனால், அனைத்து உயிர்களின் உடற்கட்டும் இங்கே (கீழே) {அதாவது இவ்வுலகில்} அழிவுக்குள்ளாகிறது. எனவே வாழ்வு முடியும்போது, உடல் மட்டுமே அழிகிறது; ஆனால், ஆவியானது செயல்களோடு தனக்கு இருக்கும் சம்பந்தத்தால் வேறு எங்கோ பயணிக்கிறது {வேறு உடல் கொள்கிறது}” என்றான் {வேடன் = தர்மவியாதன்}.
அந்தணர் {கௌசிகர்}, “ஓ! கர்மக் கோட்பாட்டையும் அறிந்தவர்களிலும், சொற்பொழிவு ஆற்றுபவர்களிலும் சிறந்தவனே, ஆத்மா எப்படி நித்தியமானதாகிறது என்பதைத் துல்லியமாக அறியவிரும்புகிறேன்” என்று கேட்டார். வேடன் {தர்மவியாதன்}, “ஆவி {Spirit, ஜீவன் } இறப்பதில்லை; வெறுமனே குடியிருப்பு மற்றமே நடக்கிறது. உயிர்கள் இறக்கின்றன என்று மடமையினால் தவறுதலாகச் சொல்கின்றனர். ஆன்மா மற்றொரு {உடல்} கட்டுக்குள் தன்னை வழிப்படுத்திக் கொள்கிறது. மேலும் அதன் {ஆத்மாவின்} வாழ்விட மாற்றமே மரணம் என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களின் உலகில், எந்த மனிதனும் வேறொரு மனிதனுடைய கர்மத்தின் பலன்களைப் பெறுவதில்லை. ஒருவன் எதைச் செய்தாலும், அதன் பலனை அவன் நிச்சயம் பெறுவான் என்பது நிச்சயம்; ஒருமுறை செய்யப்பட்ட கர்மத்தின் பலன்களை அகற்றவே முடியாது. அறம்சார்ந்தவர்கள் {நல்லவர்கள்} பெரும் நற்பண்புகள் கொண்டவர்களாகவும், பாவிகள் தீச்செயல்கள் புரிபவர்களாகவும் ஆகிறார்கள். மனிதர்களின் செயல்கள் அவர்களைத் தொடர்கின்றன; அதன் தாக்கத்தால் அவர்கள் மறுபடி பிறக்கிறார்கள்” என்றான் {வேடன் தர்மவியாதன்}. அதற்கு அந்தணர் {கௌசிகர்}, “ஆவி {ஜீவன்} ஏன் பிறப்பெடுக்கிறது? அதன் {ஆவியின்} பிறப்பிடம் {உடல்கள்} ஏன் பாவகரமாகவோ அறம்சார்ந்தவையாகவோ ஆகின்றன {மனிதன் ஏன் பாவியாகவோ நல்லவனாகவோ ஆகிறான்}? ஓ! நல்லவனே {தர்மவியாதா}, அது {ஆவி, ஜீவன்} எவ்வாறு பாவிகள் குலத்திற்கோ, நல்லவர்கள் குலத்திற்கோ உடையதாகிறது?” என்று விசாரித்தார்.
வேடன் {தர்மவியாதன்}, “இம்மர்மம் இனப்பெருக்கத்தின் {ஆவி கருவில் சேரும்} பொருள் சார்ந்ததாகத் தெரிகிறது. ஆனாலும், ஓ! அந்தணரே {கௌசிகரே}, நேர்மையானவர்கள் நல்லவர்களிடமும், தீயவர்கள் பாவிகளிடமும் {முற்பிறவியில் செய்த} கர்மத்தால் குவிக்கப்பட்ட சுமையுடன், {அந்த ஆத்மா} மீண்டும் எவ்வாறு பிறக்கிறது என்பதை நான் உமக்குச் சுருக்கமாகச் சொல்வேன். அறம்சார்ந்த செயல்களைச் செய்வதனால் அது {ஆத்மா} தேவர்களின் நிலையை அடைகிறது; நல்ல மற்றும் தீய செயல்களின் கலவையால், அது {ஆத்மா} மனித நிலையை அடைகிறது. உணர்ச்சியில் மிகுதியான ஈடுபாடு கொண்டு, அதற்கு ஒப்பான சீரழிவான நடைமுறைகளைச் செய்வதால், அது {ஆத்மா} தாழ்ந்த இனங்களான விலங்குகளிடம் பிறக்கிறது {விலங்கின் நிலையை அடைகிறது}; பாவச் செய்லகளே செய்வதால், அது {ஆத்மா} நரகத்திற்கு {அல்லது, Infernal region = கொடிய இடத்திற்கு} செல்கிறது. பிறப்பு மற்றும் முதுமையினால் ஏற்படும் மனத்தளர்ச்சி ஆகிய துக்கங்களால் பாதிக்கப்பட்ட மனிதன், தனது சொந்த செயல்களின் தீய விளைவுகளை அடைய, இங்கே கீழே {பூமியில்} வாட விதிக்கப்படுகிறான். நரகப் பகுதிகள் உட்படப் பல ஆயிரக்கணக்கான பிறவிகளைக் கடந்து வரும் நமது ஆவிகள் {ஜீவன்கள்}, தங்கள் சொந்த கர்மத்தின் கட்டுகளில் இருந்து பாதுகாக்கப்படுகின்றன.
அசையும் தன்மை கொண்ட உயிரினங்கள், தங்களால் செய்யப்பட்ட இச்செயல்களினால் அடுத்த உலகில் பரிதாப நிலையை அடைகின்றன. அந்தத் துயரங்களின் எதிர்வினையால், அவை தாழ்ந்த பிறப்பை அடைகின்றன. பிறகு அவை புதிதான செயல்தொடரைக் குவிக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, நோயுள்ள மனிதன் நோயை உண்டாக்குகிற உணவைப் பெற்று மகிழ்ச்சிஅடைவதைப் போல அவை மீண்டும் துயரத்தையே அடைகின்றன. அதன் விளைவாக, தங்கள் சங்கிலிகள் தளர்த்தப்படாததால் அவற்றுக்குப் புதிய கர்மங்கள் {கர்மாக்கள்} எழுகின்றன. பல்வேறு துயரங்களால் பாதிக்கப்படுவதால், இவ்வுலகில் அவை {அசையும் உயிரினங்கள்} சக்கரங்களைப் போலச் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, தங்கள் சங்கிலிகளை அவை கைவிட்டால், தங்கள் செயல்களால் தங்களைச் சுத்திகரித்துக் கொண்டு தவமும் அறத்தியானமும் பயின்று, எண்ணற்ற இதுபோன்ற செயல்களால் சொர்க்கம் சார்ந்த பகுதிகளை {Elysian Regions} அடைகின்றன. தங்கள் சங்கிலிகளைக் கைவிடுவதாலும் கர்மத்தை சுத்திகரிப்பதாலும், மனிதர்கள் அருள் உலகத்தை அடைகின்றனர். அங்கே செல்பவர்களுக்கு துன்பம் என்பதே தெரியாது.
தீயவைக்கு அடிமையாகும் பாவிகள், தங்கள் அக்கிரமப் பாதைக்கு ஒரு முடிவை அடைய மாட்டார்கள். எனவே, எது அறம்சார்ந்ததோ {நன்மையோ} அதை நாம் செய்ய முயல வேண்டும். எது அறம்சாராததோ அதைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதயம் நிறைந்த நன்றியுணர்வுடனும், துர்குணத்தில் இருந்து விடுபட்டும், எது நன்மையோ அதைச் செய்பவன், செல்வம், அறம், மகிழ்ச்சி மற்றும் சொர்க்கத்தையும் {இதற்கு அடுத்த உலகத்தையும்) அடைகிறான். பாவங்களில் இருந்து சுத்தமடைந்தவர்கள், ஞானமுள்ளோர், பொறுமைசாலிகள், நேர்மையில் நிலைத்திருப்பவர்கள், சுயக்கட்டுப்பாடு கொண்டவர்கள் ஆகியோர், இவ்வுலகத்திலும், இதைத் தொடரும் அடுத்த உலகத்திலும் {இம்மையிலும் மறுமையிலும்} தொடர்ச்சியான இன்பநிலையை அனுபவிக்கின்றனர். மனிதர்கள் நல்லவர்களின் நிலையான அறத்தைப் பின்பற்ற வேண்டும். அவனது செயல்கள் நேர்மையானவர்களின் செயல்களை உதாரணமாகக் கொண்டிருக்க வேண்டும். புனித சாத்திரங்களை அறிந்த, ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் கற்ற அறம்சார்ந்த மனிதர்கள் இருக்கிறார்கள். மனிதனின் சரியான கடமை, தனக்குச் சரியான தொழிலைச் செய்வதில் அடங்கியிருக்கிறது. இதுவே வழக்கென்றால் பின்னது {தொழில்} குழப்பமானதாகவும், கலவையானதாகவும் இருக்காது.
ஞானி அறத்தில் மகிழ்ந்து, நேர்மையாக வாழ்கிறான். ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, இப்படி அடையப்பட்ட நேர்மையைச் செல்வமாகக் கொண்ட அப்படிப்பட்ட {அறம்சார்ந்த} மனிதன், தனக்கு எது மிகவும் அறம்சார்ந்தது எனக் கண்டடைகிறானோ அந்தச் செடியின் {அந்த அறச்செயலின்} வேருக்கு நீர் இரைக்கிறான். இப்படியே அறம்சார்ந்த மனிதன் செயல்படுகிறான். அவனது மனமும் அமைதியாக இருக்கிறது. அவன் இவ்வுலகத்தில் உள்ள தனது நண்பர்களிடம் திருப்தியுடன் இருக்கிறான். அதன் பிறகு அவன் எப்போதும் மகிழ்ச்சியையே அடைகிறான். ஓ! நல்ல மனிதரே {கௌசிகரே}, அறம்சார்ந்த மனிதர்கள், தங்கள் விருப்பத்தின்படி அழகு, சுவை, ஒலி, மற்றும் தொடு உணர்வுகளால் மகிழ்ச்சியை அடைகிறார்கள். இவையே அறத்தின் நற்கூலி {தர்மத்தின் பயன்} என்று அறியப்படுகிறது. ஆனால், ஓ! பெரும் அந்தணரே {மஹா பிராமணரே}, ஞானப் பார்வை கொண்ட மனிதன், நீதியால் கிடைக்கும் கனிகளை அறுப்பதால் திருப்தியடைவதில்லை. அதில் மன நிறைவு கொள்ளாமல் ,அவன், தனக்குள் இருக்கும் ஆன்மிக ஞானத்தால், வலி,மகிழ்ச்சி மற்றும் உலகத்தின் தீமைகள் ஆகியவற்றால் பாதிப்படையாமல் அவற்றின் மேல் அலட்சியமாக இருக்கிறான் {வைராக்கியத்தை அடைகிறான்}. தனது சொந்த விருப்பத்தின் பேரில் உலகம் சார்ந்த பொருட்களின் மீது அலட்சியம் கொள்ளும் அவன், அறத்தை மட்டும் கைவிடுவதில்லை.
உலகில் அனைத்தும் நிலையற்றது என்பதைக் கவனிக்கும் அவன் அனைத்தையும் துறப்பதற்கு முயல்கிறான். முக்திக்கான {இரட்சிப்புக்கான} வழி வகைகளை எட்ட சிந்தித்து, பல வாய்ப்புகளைக் கணக்கிட்டுப் பார்க்கிறான். இப்படியே அவன் உலக நோக்கங்களைத் துறந்து, பாவ வழிகளை அடைத்து, அறம்சார்ந்தவனாகி கடைசியாக முக்தியை அடைகிறான். முக்திக்கு ஆன்மிக ஞானமே {தவமே} முக்கியத் தேவையாக இருக்கிறது. துறவு, பொறுமை ஆகியனவே அதன் {முக்தியை அடைய} வேர்கள். இவ்வழிகளில் அவன் தனக்கு விருப்பமானவை அனைத்தையும் அடைகிறான். ஆனால், ஓ! நல்ல அந்தணரே புலன்களை அடக்குதல், சத்தியத்தின் வழிகள், பொறுமை ஆகியவற்றால் அவன், தலைமையான ஆசிரமமான, பிரம்மனின் ஆசிரமத்தை {பிரம்ம நிலையை} அடைகிறான்” என்றான் {தர்மவியாதன்}.
அந்த அந்தணர் {கௌசிகர்}, “ஓ! அறத்திலும் மிகச் சிறந்தவனே, அறக்கடமைகளைச் செய்வதில் நிலையானவனே {தர்மவியாதா}, நீ புலன்களைக் குறித்துப் பேசுகிறாய்; அவை என்ன’ அவற்றை எப்படிக் கட்டுப்படுத்துவது? அதைக் கட்டுப்படுத்துவதால் என்ன நன்மை? ஒரு உயிரினம் அதன்மூலமாக எப்படிக் கனிகளை அறுக்கிறது? ஓ! பக்திமானே, இவ்விஷயத்தில் உண்மையை எனக்குத் தெரியப்படுத்த இரந்து கேட்கிறேன்” என்றார் {கௌசிகர்}.
“பிராமணீயம் கல்!” என்ற வேடன்! – வனபர்வம் பகுதி 209-நற்செயல் தீச்செயல் ஆகியவற்றின் தன்மை மற்றும் பிராமணத் தத்துவம் ஆகியவற்றைக் கௌசிகருக்கு தர்மவியாதன் உரைத்தல்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, அந்த அந்தணரால் இப்படி விசாரிக்கப்பட்ட அந்த அறம்சார்ந்த வேடன், அவருக்கு என்ன மறுமொழி கூறினான் என்பதைக் கேள். வேடன் {தர்மவியாதன்}, “மனிதர்களின் மனங்கள் முதலில் அறிவை அடைவதில் முனைகின்றன. அதை அடைந்ததும், ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, அவர்கள் தங்கள் ஆசைகளிலும், விருப்பங்களிலும் ஈடுபடுகின்றனர். அதற்காகப் பெரிய அளவில் இலக்குகளை நிர்ணயித்து உழைக்கிறார்கள். அழகு, சுவை போன்ற அவர்கள் மிகவும் விரும்பும் காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக விருப்பம் {பாசம்}, பொறாமை, பின்னர்ப் பேராசையும் வருகின்றன. அதன் பின்னர் அவர்களது ஆன்ம ஒளி அழிகிறது.
மனிதர்கள் பேராசையின் ஆதிக்கத்தில் இருக்கும்போது, அவர்கள் பொறாமையிலும் பாசத்திலும் மூழ்குகிறார்கள். அவர்களது அறிவு, நீதியின் வழிகாட்டுதல் படி நடப்பதில் இருந்து விலகுகிறது. அவர்களது அறப் பயிற்சி கேலிக்குரியதாகிறது. பாசாங்குத்தனத்தோடு அறம் பயில்வதால், கௌரவமற்ற வழிகளில் செல்வத்தைப் பெற்று மனநிறைவு அடைகிறார்கள். இப்படி அடையப்பட்ட செல்வத்தால், அவர்களில் இருந்த புத்திசாலித்தனம் தீய வழிகளில் மயங்குகிறது. மேலும், அவர்கள் பாவமிழைக்கும் விருப்பத்தால் நிரம்புகிறார்கள்.
ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, அவர்களது நண்பர்களும், ஞானம் கொண்டவர்களும் அவர்களை எச்சரிக்கும்போது, கண்துடைப்பான {போலியான} பதில்களைத் தயாராக வைத்திருப்பார்கள். அந்தப் பதில்கள் வலுவானதாகவோ {ஆரோக்கியமானதாகவோ}, சமாதானம் ஏற்படுத்துவதாகவோ இருக்காது. தீய வழிகளுக்கு அடிமைப் பட்டிருப்பதால், அவர்கள் மூன்று வித பாவங்கள் செய்த குற்றவாளியாகிறார்கள். அவர்கள், எண்ணம், சொல், செயல்களில் {என்ற மூன்று விதங்களில்} பாவமிழைக்கிறார்கள். பொல்லாத வழிகளுக்கு அடிமைப்பட்டிருப்பதால், அவர்களது அனைத்த நல்ல குணங்களும் சாகின்றன {அழிகின்றன}. இது போன்ற தீச்செயல் செய்யும் மனிதர்கள், தன்னைப் போன்ற தன்மை கொண்ட மனிதர்களிடமே நட்பை வளர்ப்பார்கள். அதன் விளைவாக அவர்கள் இவ்வுலகிலும், அடுத்த உலகிலும் துன்பத்தையே அனுபவிக்கிறார்கள்.
பாவம் நிறைந்த மனிதன் {மேற்சொன்ன} இந்த இயல்பிலேயே இருக்கிறான். இப்போது அறம்சார்ந்த மனிதனைப் பற்றிக் கேளும். அவன் {அறம்சார்ந்தவன்}, இத்தீமைகளைத் தனது ஆன்ம உட்பார்வையால் {Spiritual Insight – ஆன்மிகப் பார்வையால்} கண்டுகொண்டு, இன்பம் மற்றும் துயரம் ஆகியவற்றுக்கிடையே உள்ள பாகுபாட்டை அறியும் ஆற்றல் பெறுகிறான். அறம்சார்ந்தவர்களை மரியாதையுடன் கவனிப்பதாலும், அறங்கள் பயில்வதாலும், அவனது மனம் நீதியை நோக்கி உயர்கிறது” என்றான் வேடன் {தர்மவியாதன்}. அந்தணர் {கௌசிகர்}, “எவரும் விளக்க முடியாத அறத்தின் உண்மை நிலையை விளக்கியிருக்கிறாய். உனது ஆன்ம சக்தி பெரிதானது. நீ எனக்குப் பெரும் முனிவரைப் போலத் தெரிகிறாய்” என்று மறுமொழி கூறினார்.
அதற்கு மறுமொழியாக வேடன் {தர்மவியாதன்}, “எங்களது மூதாதையர்களைப் போல, பெரும் அந்தணர்கள் {எங்களால்} வணங்கப்படுகிறார்கள். எப்போதும் மற்றவர்களுக்கு முன் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு {எங்களால்} திருப்தி செய்யப்படுகிறார்கள். இவ்வுலகத்தில் ஞானியாக இருப்பவர்கள், அவர்களுக்குத் {அந்தணர்களுக்குத்} திருப்தியானதை முழு இதயத்துடன் செய்கிறார்கள். ஓ! நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே, கௌசிகரே}, ஒரு வர்க்கமாக அந்தணர்களுக்கு அடிபணிந்த பின் {அவர்களை வணங்கிய பின்}, அவர்களுக்கு {அந்தணர்களுக்கு} எது திருப்தியானது என்பதை நான் உமக்கு விவரிக்கிறேன். பிராமணத் தத்துவத்தை நீர் என்னிடம் கற்றுக் {அறிந்து} கொள்ளும் {learn from me tha Brahmanic philosophy}. பெரும் கூறுகள் {ஐம்பூதங்கள்} நிறைந்த வெல்ல முடியாத முழு அண்ட மே பிரம்மம். இதை {பிரம்மத்தை} விட உயர்ந்தது எதுவும் இல்லை. பூமி, காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் ஆகியவையே பெரும் கூறுகள் {பெரும் பூதங்கள் – பெரிய அடிப்படைக் கூறுகள்} ஆகும். உருவம், மணம், ஒலி, தொடு உணர்ச்சி, சுவை ஆகியவையே அவற்றின் குணப் பண்புகளாகும். பிந்தையதின் {குணப் பண்புகளின்} தன்மைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கிறது. முன்னுரிமை வரிசையில் {முதலில்} இருக்கும் மனம் என்று அழைக்கப்படும் விழிப்புணர்வால், {அவை = குணப்பண்புகள்} படிப்படியாக ஒவ்வொன்றாக {அவை} மூன்று குணங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. {And of the three qualities, which are gradually characterised by each, in order of priority is consciousness which is called the mind} {இங்கு, பிரம்மத்தின் குணங்கள் உலகத்திலும், உலகத்தின் குணங்கள் பிரம்மத்திலும் காணப்படுகின்றன என்ற பொருள் வரும் என்று சொல்லப்படுகிறது}. ஏழாவதாக நுண்ணறிவு {புத்தி} வருகிறது. இதற்கடுத்தே சுயநலம் {அகங்காரம்} வருகிறது. அதன்பிறகு ஐம்புலன்கள் {ஐந்து இந்திரியங்கள்}, அதன் பிறகு ஆன்மா, அதன்பிறகு தார்மீகப் பண்புகளான சத்வ, ரஜஷ், தமஸ் வருகின்றன. இவை பதினேழும் அறியப்படாத அல்லது புரிந்து கொள்ள முடியாத குணங்கள் என்று {அவியக்தம் என்ற பெயரில்} சொல்லப்படுகின்றன. இவை அனைத்தையும் உமக்கு விவரித்துவிட்டேன். மேலும் நீர் அறிய விரும்புவது என்ன?” என்று கேட்டான் {தர்மவியாதன்}.
புலன்களை ஏன் அடக்க வேண்டும்? – வனபர்வம் பகுதி 210-ஐம்பூதங்களின் குணங்களையும், புலன்களை அடக்குவது, அடக்காமல் இருப்பது, மகிழ்ச்சி மற்றும் துயரங்களுக்கான காரணங்களைத் தர்மவியாதன் கௌசிகருக்குச் சொன்னது…
மார்க்கண்டேயர் {யுதிஷிட்ரனிடம்}தொடர்ந்தார், “ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இப்படி அறம்சார்ந்த வேடனால் {தர்மவியாதனால்} விசாரிக்கப்பட்ட அந்தணர் {கௌசிகர்}, மனதிற்கு மிகவும் திருப்தியைத் தரும் இந்தச் சொல்பொழிவை மீண்டும் தொடங்கினார். அந்த அந்தணர் {கௌசிகர்}, “ஓ! அறத்தைப் பேணுபவர்களின் சிறந்தவனே, ஐந்து பெரும் அடிப்படைக் கூறுகள் {ஐம்பூதங்கள்} இருப்பதாகச் சொல்லப்படுகிறது; அந்த ஐந்தில் ஒன்றின் பண்புகளை {ஒவ்வொன்றையும் என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் கங்குலி any one of the five என்று தான் சொல்கிறார்} முழுமையாக எனக்கு விபரித்துச் சொல்” என்று கேட்டார். வேடன், “பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் {ஆகிய ஐந்தும்} ஆகிய அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பண்புகள் கொண்டவை. நான் அவற்றை உமக்கு விவரிக்கிறேன்.
ஓ! அந்தணரே {கௌசிகரே}, பூமிக்கு ஐந்து பண்புகள் இருக்கின்றன. நீர் நான்கும்,, நெருப்பு மூன்றும், காற்றும் ஆகாயமும் சேர்ந்து மூன்றும் {மூன்று பண்புகளையும்} கொண்டிருக்கின்றன. ஒலி, தொடு உணர்வு, உருவம், மணம், சுவை ஆகிய ஐந்து பண்புகளும் பூமியிடம் இருக்கின்றன. ஓ! எளிய அந்தணரே {கௌசிகரே} ஒலி, தொடு உணர்ச்சி, உருவம், சுவை ஆகியவை {ஆகிய நான்கும்} நீரின் பண்புகள் என உமக்கு விவரிக்கப்பட்டுள்ளது. ஒலி, தொடு உணர்ச்சி, உருவம் ஆகிய மூன்று பண்புகளும் நெருப்புக்கு இருக்கின்றன. காற்றுக்கு ஒலி, தொடு உணர்ச்சி என்ற இருந்து பண்புகள் இருக்கின்றன. ஆகாயத்துக்கு ஒலி என்ற பண்பு இருக்கிறது. ஓ! அந்தணரே {கௌசிகரே}, ஐம்பூதங்களில் உள்ளார்ந்து இருக்கும் இந்தப் பதினைந்து பண்புகளும், இந்த அண்டத்தில் இருக்கும் அனைத்துப் பொருட்களிலும் உள்ளன. அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல; ஓ அந்தணரே {கௌசிகரே} அவை சரியான கலவையில் இருக்கின்றன.
இந்த முழு அண்ட மும் குழப்பமான நிலைக்குத் தள்ளப்படும்போது, அந்தக் கால நிறைவில் ஒவ்வொரு உடலும், மற்றொரு உடலை எடுத்துக் கொள்கிறது. சரியான வரிசையில் அது எழுகிறது, சரியான வரிசையில் அது விழுகிறது {அழிகிறது}. அனைத்து அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் நிறைந்த உலகம், தற்போது உள்ள இந்த ஐந்து அடிப்படை பொருட்களால் {ஐம்பூதங்களால்} இயற்றப்பட்டுள்ளது. புலனுணர்வால் உணரக்கூடிய எதுவும் வியக்தம் (அறியத்தக்கது அல்லது புரிந்து கொள்ளக் கூடியது) என்று அழைக்கப்படுகிறது. புலன்களுக்கு எட்டாதவையும், அனுமானத்தின் மூலமாக மட்டும் காணக்கூடியவைகள் அவியக்தம் (வியக்தம் அல்லாதது) என்று அறியப்படுகிறது.
ஒலி, உருவம் முதலிய வெளிநிலைகளை முறையான இலக்கின்படி செய்து புலன்களைக் கட்டுப்படுத்திச் சுயபரிசோதனை எனும் ஒழுக்கத்தில் ஒரு படி ஈடுபடும் ஒருவன், {அப்படிச் சுயபரிசோதனை செய்யும்போது}, அண்டத்தில் வியாபித்துள்ள தனது சொந்த ஆவியையும் {ஆன்மாவையும்} மற்றும் தன்னைப் பிரதிபலிக்கும் அண்டத்தையும் காண்கிறான். தனது முந்தைய கர்மத்துடன் {வினையுடன்} தொடர்புடைய ஒருவன், எவ்வளவுதான் ஆன்ம ஞானத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், அவனது ஆன்மாவின் புறநிலை இருப்பை மட்டுமே அறிகிறான். ஆனால் சுற்றியிருக்கும் புற நிலைமைகளால் பாதிக்கப்படாத ஆன்மா கொண்ட மனிதன், அடிப்படை ஆவியான பிரம்மம் அதைக் {கர்மங்களின் தொடர்பை} கிரகிப்பதன் காரணமாக {அம்மனிதன்} தீமைகளுக்கு ஆட்படுவதில்லை.
மாயையின் ஆதிக்கத்தில் இருந்து ஒரு மனிதன் விடுபடும்போது, ஆன்மிக ஞானத்தின் சாரம் கொண்டவையும், ஆண்மை நிறைந்தவையுமான அவனது அறங்கள், ஆன்ம ஞானத்தின் பக்கம் திரும்பி, புலனறிவும் ஆற்றலுமுள்ள புத்திசாலியாக அவனைப் பிரகாசிக்கச் செய்கிறது. அத்தகைய மனிதன், தொடக்கமும் {ஆதியும்} முடிவும் {அந்தமும்} இல்லாத, தானே இருப்பதான {சுயம்புவான}, மாற்றம் இல்லாத, உடல் வடிவம் இல்லாத, ஒப்பிடமுடியாத எல்லாம் வல்ல அறிவார்ந்த ஆவியால், உருவம் கொடுக்கப்படுகிறான். ஓ! அந்தணரே {கௌசிகரே}, நீர் இப்படி என்னை விசாரிப்பதே தன்னொழுக்கத்தினால் {சுய ஒழுக்கத்தினால்} மட்டுமே பெறக்கூடிய விளைவாகும். இந்தத் தன்னொழுக்கம், புலன்களை அடக்குவதால் மட்டுமே அடையப்படுகிறது. இதற்கு வேறு வழியில்லை. சொர்க்கம் நரகம் ஆகிய இரண்டும் நமது புலன்களைச் சார்ந்தே இருக்கிறது. கட்டுக்குள் வைக்கப்படும்போது அவை சொர்க்கத்திற்கு வழிவகுக்கும்; பழக்கப்படுத்தினால் {கட்டுப்படுத்தாவிட்டால்}, அவை நரகத்திற்கு வழிவகுக்கும். இந்தப் புலனடக்கமே ஆன்ம ஒளியை அடைவதற்கான உயர்ந்த வழிமுறையாகும். நமது புலன்களே, நமது ஆன்ம முன்னேற்றத்துக்கான வேராகவும் (காரணமாகவும்), ஆன்ம அழிவுக்கான வேராகவும் இருக்கிறது. அவற்றைப் பழக்கப்படுத்துவதால் {கட்டுப்படுத்தாமல் செயல்படவிட்டால்}, ஒரு மனிதன் சந்தேகமற தீயவற்றோடு தொடர்பு கொள்கிறான். அவற்றை அடக்கினால் அவன் முக்தியை அடைகிறான். சுயக்கட்டுப்பாடு கொண்ட ஒரு மனிதன், தன் இயல்பில் உள்ளார்ந்து இருக்கும் ஆறு புலன்களின் {அறிவுகளாக இருக்க வேண்டும்} மீது ஆதிக்கத்தை அடைந்தால், அவன் பாவத்தால் களங்கப்படுவதில்லை. மேலும் அதன் காரணமாகத் தீமைக்கு அவன் மீது எந்த அதிகாரமும் ஏற்படுவதில்லை. மனிதனின் உடல் தேராகவும், அவனது ஆன்மா தேரோட்டியாகவும், அவனது புலன்கள் குதிரைகளாகவும் ஒப்பிடப்படுகிறது. திறமையான கரங்கள் கொண்ட மனிதன், அமைதியான தேரோட்டியாக, நன்கு கட்டுப்படுத்தப்பட்ட குதிரைகளைக் குழப்பமில்லாமல் செலுத்துகிறான்.
இயற்கையாக உள்ளார்ந்து இருக்கும் ஆறு புலன்கள் எனும் முரட்டுக் குதிரைகளின் கடிவாளங்களைப் பொறுமையாக பற்றி ஓட்டுபவன் அற்புதமான தேரோட்டியாகக் கருதப்படுகிறான். நெடுஞ்சாலையில் செல்லும் ஆளுமைக்குட்படாத குதிரைகளைப் போல நமது புலன்கள் ஆகும்போது, நாம் அதன் கடிவாளத்தைப் பொறுமையாகப் பற்ற வேண்டும். பொறுமையால் மட்டுமே நாம் நிச்சயம் சிறந்ததைச் செய்ய முடியும். ஒரு மனிதனின் மனது, எந்த ஒரு புலனின் முரட்டு ஓட்டத்திலாவது மூழ்கினால், புயலின் போது உயர்ந்த சமுத்திரத்தில் தூக்கி வீசப்படும் கப்பல் போல ஆகி, அவன் தனது புத்தியை இழக்கிறான். மனிதர்கள், அந்த ஆறு பொருட்களால் கனிகளை அறுக்கலாம் {பலன்களை அனுபவிக்கலாம்} என்ற நம்பிக்கையில் மாயையால் ஏமாற்றப்படுகின்றனர். தங்கள் தெளிவான கருத்துகளால் கனிகளை அறுக்கும் ஆன்ம உள்பார்வை கொண்ட மனிதர்களால் அதன் விளைவுகள் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன” என்றான் {தர்மவியாதன்}.
சூத்திரன் பிராமணனாகலாம்! – வனபர்வம் பகுதி 211-சத்வ, ரஜஸ், தமஸ் குணங்களின் இயல்புகளையும், அக்குணங்கள் கொண்டவர்களின் தன்மைகளையும் தர்மவியாதன் கௌசிகருக்குச் சொன்னது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்த வேடன் {தர்மவியாதன்} இந்த மறைபொருள்களை விவரமாக எடுத்துக்கூறிய பிறகு, பெரும் கவனத்துடன் இருந்த அந்த அந்தணர் {கௌசிகர்}, மீண்டும் அவனிடம் நுட்பமானவை குறித்து விசாரித்தார். அந்த அந்தணர் {கௌசிகர்}, “சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய குணங்களுக்கு உரிய ஒழுக்கங்களை உள்ளது உள்ளபடி கேட்கும் எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டார். அதற்கு வேடன் {தர்மவியாதன்}, “நன்றி. நீர் கேட்பதை நான் உமக்குச் சொல்கிறேன். அது அதற்கு உரிய ஒழுக்கங்களை நான் விவரிக்கிறேன், கேளும். அவற்றில் தமஸ் குணம் (ஆன்ம) மாயையால் வகைப்படுத்தப்படுகிறது. ரஜஸ் குணம் (மனிதர்களைச் செயல்படத்) தூண்டுகிறது. சத்வ குணம் பெரும் கம்பீரத்துடன் இருக்கிறது. அதனால் அதுவே அவற்றில் {சத்வ, ரஜஸ், தமஸ் குணங்களில்} பெரியது என்று சொல்லப்படுகிறது.
ஆன்ம அறியாமை, மூடத்தனம், அறிவற்ற தன்மை, கனவிலேயே லயிப்பு, செயலற்ற தன்மை, சுறுசுறுப்பற்ற தன்மை, கோபம் மற்றும் கர்வத்தால் இயக்கம் ஆகியவற்றில் ஆதிக்கத்தில் பெரிதும் மூழ்கியவன், தமஸ் குண ஆதிக்கத்தில் இருப்பவனாகச் சொல்லப்படுகிறது. ஓ! அந்தண முனிவரே {கௌசிகரே}, ஏற்புடைய பேச்சு, சிந்தனாசக்தி, பொறாமையற்ற தன்மை, ஊக்கமான செயல்பாடுகளால் பலன்களை அடைய விருப்பம், நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்ட அற்புதமான மனிதன், ரஜஸ் குணத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உறுதி, அமைதி, கோபமடையாமை, துர்க்குணத்தில் இருந்து விடுதலை, தன்னல விருப்பத்தால் கனிகளை {பலன்களை} அறுப்பதற்காக {பெறுவதற்காக} செயல்படுவதில் நிபுணத்துவம் இல்லாமை {லாபம் அடைவதில் விருப்பமில்லாமை}, ஞானம், பொறுமை ஆகியவற்றைக் கொண்டவன் சத்வ குணத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சத்வ குணத்தைக் கொண்ட மனிதன், உலகப்பற்றால் ஆட்கொள்ளப்படும்போது, அவன் துயரால் பாதிக்கப்படுகிறான்; ஆனால், அவன் அதன் {உலகப்பற்றின்} முழு விளைவையும் அறியும்போது, அவன் உலகப்பற்றை வெறுக்கிறான். பிறகு உலக விவகாரங்களில் அலட்சிய உணர்வு அவனை ஆட்கொள்ளத் தொடங்குகிறது. பிறகு அவனது கர்வம் குறைகிறது, நீதியே அதிக முக்கியமாகிறது, அவனது முரண்பட்ட அறநெறி உணர்வுகள் ஒப்புரவாகின்றன {சமரசம் ஆகின்றன}. பிறகு, எந்தக் காரியத்திலும் சுயக்கட்டுப்பாடு தேவையற்றதாகிறது. ஓ! அந்தணரே {கௌசிகரே}, ஒரு மனிதன் சூத்திர சாதியில் பிறந்திருக்கலாம், ஆனால் அவன் நல்ல குணங்களைக் கொண்டிருந்தானானால், அவன் வைசிய நிலையையும், க்ஷத்திரியருக்கு ஒப்பான நிலையையும் அடையலாம். அவனே நேர்மையில் உறுதியாக இருந்தானானால், அவன் பிராமணனாகக் கூட ஆகலாம். இந்தக் குணங்களை நான் உமக்கு விவரித்துவிட்டேன். நீர் வேறு எதைக் கேட்க விரும்புகிறீர்?” என்று கேட்டான் {தர்மவியாதன்}.
துயரத்தைக் கடக்கும் வழி! – வனபர்வம் பகுதி 212-ஐந்து வகைக் காற்றுகளையும், அவை உடலில் எப்படிச் செயல்படுகின்றன என்பதையும், ஒரு யோகி அவற்றை எவ்வாறு உணர்ந்து பரமாத்மாவை அடைகிறான் என்பதையும், முக்குணங்களுடனும் ஆவி எப்படிக் கலந்திருக்கிறது என்பதையும் தர்மவியாதன் கௌசிகருக்குச் சொன்னது…
அந்தணர் {கௌசிகர்}, “நெருப்பு (உயிர் சக்தி), பூமியின் தனிமத்தோடு (தாது) கூடி (உயிரினங்களின்) உடல்சார்ந்த வசிப்பிடமாக எப்படி ஆகிறது? மேலும், உயிர்க்காற்று (உயிர்மூச்சு) அதன் இருக்கையின் (தசைகள் மற்றும் நரம்புகளின்) இயல்பால் எப்படிச் (உடலெனும் சட்டகத்தைச்) செயல்படத் தூண்டுகிறது?” என்று விசாரித்தார்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! யுதிஷ்டிரா, அந்தணர் {கௌசிகர்} இக்கேள்வியை அந்த வேடனிடம் {தர்மவியாதனிடம்} கூறிய போது, அவன் {வேடனான தர்மவியாதன்}, உயர்ந்த மனம் கொண்ட அந்த அந்தணரிடம் {கௌசிகரிடம்}, “உயிர் ஆவி, உணர்வுநிலை {மூளை} எனும் இருக்கையில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, உடல் கட்டமைப்பின் செயல்பாட்டுக்குக் காரணமாக இருக்கிறது. ஆன்மாவானது அவ்விரண்டிலும் {ஆவியிலும், மூளையிலும்} இருந்து கொண்டு (அவை மூலமாகச்) செயல்படுகிறது. கடந்த காலம் {சென்றது}, நிகழ்காலம் {இருப்பது}, எதிர்காலம் {வருவது} ஆகியவை ஆன்மாவிலிருந்து பிரிக்க முடியாதபடி கலந்திருக்கிறது. உயிரினங்களில் இருப்பனவற்றில் அதுவே {ஆன்மாவே} உயர்ந்தது; அதுவே பரமாத்மாவின் சாரம்; நாம் அதை வணங்குகிறோம். அதுவே {ஆன்மாவே} உயிரினங்களின் இயக்க சக்தியாக, நித்திய (ஆவியாக) புருஷனாக {நித்தியமானதாக} இருக்கிறது. அதுவே பெரியது; அதுவே புத்தியும் அகங்காரமாகவும் இருக்கிறது. அதுவே பூதங்களின் {பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றின்} பல்வேறு பண்புகளுக்கான அகநிலை {தன்னிலை} இருக்கையாக இருக்கிறது.
இங்கே {உடற்கட்டுக்குள்} இப்படி {ஆன்மாவானது} அமர்ந்து கொண்டு, வெளிப்புறமாகவோ {புறமாகவோ}, உட்புறமாகவோ {அகமாகவோ} (பொருளிலோ மனதிலோ), பிராணன் என்ற நுட்பமான ஐம்புலன்களின் காற்று {பிராணவாயு} மூலம் அனைத்துடனும் உறவுகளைத் {தொடர்புகளைத்} தக்க வைத்துக் கொள்கிறது. அதன் பிறகு ஒவ்வொரு உயிரினமும், சமானம் என்ற மற்றொரு நுட்பமான காற்றின் செயல்பாட்டால் அதன் வழியிலேயே செல்கின்றன. பின்னது {சமானம் என்ற காற்று [சமான வாயு]} அபானக் காற்றாகத் தன்னை மாற்றிக் கொண்டு, வயிற்றின் தலைப்பகுதியால் தாங்கப்பட்டு, உடலால் புறக்கணிக்கப்பட்ட பொருட்களான மலஜலங்களைச் சிறுநீரகம் மற்றும் குடலுக்குள் சுமந்து செல்கிறது. அதே காற்று {சமான [அ] அபான வாயு}, முயற்சி, உழைப்பு மற்றும் சக்தி ஆகிய மூன்று கூறுகளிலும் இருக்கிறது. அந்த நிலையில் இருக்கும் அது {சமான [அ] அபான வாயு}, இயற்பியலாளர்களால் {persons learned in physical science} உதானக் காற்று {உதான வாயு} என்று அழைக்கப்படுகிறது. மனித உடலமைப்புக்குள் இருக்கும் அனைத்துச் சந்திப்பு புள்ளிகளிலும் {junctional points} அது {சமான அல்லது உதான வாயு} தன் இருப்பை வெளிப்படுத்தும்போது, அது வியானம் என்று அழைக்கப்படுகிறது.
மேலும், அக வெப்பம் {உடலுக்குள் உருவாகும் வெப்பம்} நமது உடலமைப்புக்குள் இருக்கும் அனைத்துத் திசுக்களின் மீதும் பரவுகிறது. இவ்வகைக் காற்றுகளின் {பிராண வாயு [ஆக்சிஜன்], சமானம், அபானம், உதானம், வியானம்} மூலம் தாங்கப்பட்டு, இது {வெப்பம்} நாம் உண்ணும் உணவை, திசுக்களுக்கும் உடல் நீர்மங்களுக்கும் கடத்துகிறது. பிராணத்துடன் {பிராண வாயுவுடன்} கூட்டமைக்கும் பிற காற்றுகளால், ஒரு (கலவையான) எதிர்வினை உருவாகிறது. அதன் {அந்த எதிர்வினை} மூலம் உருவாக்கப்பட்ட வெப்பமே மனித அமைப்பின் அக வெப்பம் {Internal Heat} என்று அறியப்படுகிறது. அதுவே {அந்த வெப்பமே} நமது உணவின் செரிமானத்திற்குக் காரணமாகிறது. பிராண மற்றும் அபான காற்றுகள் {வாயுக்கள்}, சமான மற்றும் உதான காற்றுகளுக்கு {வாயுக்களுக்கு} இடையிலேயே நிலைபெற்றிருக்கின்றன. அவற்றின் கூட்டணியில் {உராய்வால்} உற்பத்தியாகும் வெப்பமே (ஏழு பொருட்கள், எலும்புகள், தசைகள் மற்றும் இதரவை அடங்கிய) உடலின் வளர்ச்சி காரணமாக அமைகிறது.
பெருங்குடல் வரை விரிந்து இருக்கும் பகுதியை இருக்கையாக {தான் இருக்கும் இடமாகக்} கொண்டது அபானம் என்று அழைக்கப்படுகிறது. தமனிகளில் {இரத்தக் குழாய்களில் இருந்து (பிராணம் முதற்கொண்ட) ஐந்து காற்றுகளும் {பிராணம், சமானம், அபானம், உதானம், வியானம்} எழுகின்றன. பிராணக் காற்று {ஆக்சிஜன்} வெப்பத்தால் செயல்பட்டு, அபானப் பகுதியின் எல்லையைத் தாக்குகிறது. பின்னர்த் திகைத்து நின்று, அந்த வெப்பத்துடன் எதிர்வினை புரிகிறது. தொப்புளுக்கு {நாபிக்கு} மேலே செரிக்காத உணவுள்ள பகுதியும் {ஆமாசயம்}, அதற்கு {தொப்புளுக்குக்} கீழே செரிமானம் செய்யும் பகுதியும் {பக்வாசயம்} இருக்கின்றன. பிராணக்காற்றும், உடலமைப்புக்குள் இருக்கும் மற்ற பிற காற்றுகளும், தொப்புளிலேயே {நாபியிலேயே} அமர்ந்திருக்கின்றன {நிலைபெற்றிருக்கின்றன}. இதயத்திலிருந்து வெளிவந்து தமனிகள் {இரத்தக்குழாய்கள், நரம்புகள்} மேலும் கீழுமாகவும், சாய்வான திசைகளிலும் ஓடுகின்றன; அவை நம் உணவில் இருந்து சிறந்த சாரத்தை எடுத்துக் செல்கின்றன. அவற்றுடன் {உணவின் சிறந்த சாரத்தை} பத்து பிராணக் காற்றுகள் {பிராணவாயுக்கள்} வினைபுரிகின்றன.
பொறுமையான யோகிகள் அனைத்துத் துன்பங்களையும் கடக்கும் வழி இதுதான். பொருட்களைச் சார்பற்ற சமமான பார்வையில் பார்க்கும் அவர் அவர்கள் {யோகிகள்}, தங்கள் ஆன்மாக்களை மூளையில் இருத்தி, அனைத்து உயிரினங்களின் உடலுக்குள்ளும் இருக்கும் பரமாத்மாவையும், பிராண மற்றும் அபானக் காற்றுகளையும் கண்டுபிடிக்கின்றனர். உடல் என்ற மாற்றுருவத்தில், (விலங்குகளின் உடலமைப்பில்) பதினொரு புறவேற்றுமைத் தனிமங்களின் நிலையில் {allotropous conditions} ஆவி {Spirit} உள்ளடங்கியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும். அது {ஆவி} நித்தியமாக இருப்பினும், சுத்திகரிக்கப்பட்ட நெருப்பு நித்தியமாக இருப்பினும், அதன் புறச்சூழலுக்கு ஏற்றவாறு மாறுவதைப் போல அதன் இயல்பு தன்னுடன் இருப்பவையின் வெளிப்படையாக மாற்றப்படுகிறது. தெய்வீகப் பொருளுடன் உறவுகொள்ளும் உடல், தாமரை இலையின் பரப்பில் இருக்கும் நீர்த்துளி {அதனுடன் ஒட்டாமல்} உருளுவது போலவே பிந்தையதுடன் {ஆவியுடன்} தொடர்புடையதாகும். {அதாவது உடலுக்கும் உயிருக்கும் உள்ள சம்பந்தம் தாமரை இலை நீர்த்துளி போன்றதாகும் என்று சொல்ல வருகிறார் போலும்}.
சத்வ, ரஜஸ், தமஸ் ஆகியவை அனைத்து உயிர்களின் குணங்கள் என்றும் வாழ்வு என்பது ஆவியின் {உயிரின்} குணம் என்றும், பிந்தையத் {ஆன்மா} பராத்மாவின் குணம் என்று அறிந்து கொள்ளும். மந்தமான, உணர்வற்ற பொருளே {ஆவியே} வாழ்வுக் கொள்கையின் இருக்கையாக இருக்கிறது. அது {ஆவி} தன் இயல்பினால் சுறுசுறுப்பானதும், பிறருக்குள் செயல்பாட்டைத் தூண்டுவதும் ஆகும். ஏழு உலகங்களையும் செயலுக்கான தூண்டுதலைச் செய்யும் அதுவே {ஆவியே} உயர்ந்தது என்று உயர்ந்த ஆன்ம உள்ளொளி கொண்ட மனிதர்களால் சொல்லப்படுகிறது. இப்படியே இந்த அனைத்து கூறுகளிலும், நித்தியமான ஆவி தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை; ஆனால், அது {ஆவி} ஆன்ம அறிவியலைக் கற்றறிந்தவர்களின் உயர்ந்த ஞானம் கொண்ட கூரிய பார்வையால் காணப்படுகிறது.
சுத்தமான மனம் கொண்ட ஒரு மனிதன், தனது இதயத்தைச் சுத்திகரித்துக் கொள்வதால், தனது செயல்களால் உண்டாகும் நல்ல மற்றும் தீய விளைவுகளை அழிக்கும் திறன் பெறுகிறான். அதனால் அவன் தனது அக ஆன்மாவின் ஞானத்தால் நித்தியமான நற்பேறை {பேரின்பத்தை} அடைகின்றான். அமைதியான நிலையும், இதயத்தைச் சுத்திகரித்துக் கொண்ட நிலையும், மகிழ்ச்சிகரமான மனநிலையில் ஆழ்ந்து உறங்கும் ஒருவனது நிலையைப் போன்றதே; அல்லது நிபுணத்துவம் வாய்ந்த கைகளால் ஒழுங்கமைக்கப்பட்ட விளக்கின் பிரகாசம் போன்றது. அற்பமான உணவை உட்கொண்டு சுத்த மனதோடு வாழும் ஒருவன் தனக்குள் பிரதிபலிக்கும் பரமாத்மாவைச் சுயமாகவே காண்கிறான். மாலைப்பொழுதிலும், இரவின் சில மணிநேரங்களிலும் மனதை ஒருமுகப் படுத்த பயின்று, திகைப்பூட்டும் விளக்கைப் போலப் பிரகாசிக்கும் தனது இதயத்தின் ஒளியில், குணங்களற்ற பரமாத்மாவை அவன் காண்கிறான். இப்படியே அவன் முக்தியையும் அடைகிறான்.
பேராசையும், கோபமும் எல்லாவகையிலும் அடக்கப்பட வேண்டும். இச்செயலே மனிதர்கள் பயில்வதற்கு ஏற்ற மிகவும் புனிதமான அறத்தைக் கொண்டிருக்கிறது. துயரம் மற்றும் தொல்லைகள் என்ற கடலை மனிதர்கள் கடப்பதற்கான வழிகள் என இதுவே கருதப்படுகிறது. கோபத்தின் தொடர்ச்சியாகத் தீமையில் மூழ்காமல், நேர்மையையும், கர்வத்தின் விளைவுகளில் இருந்து தனது அறங்களையும், மாயையின் விளைவுகளில் இருந்து கல்வியையும், மாயையில் இருந்து தனது சொந்த ஆவியையும் ஒருவன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
கருணையே அறங்களில் {நற்பண்புகளில்} சிறந்தது. பொறுமையே சக்திகளுள் சிறந்தது. நமது ஆன்ம இயல்பின் ஞானமே அனைத்து ஞானங்களிலும் சிறந்தது. அறக் கடமைகள் அனைத்திலும் உண்மையே {சத்தியமே} சிறந்தது. உண்மை பேசுவது நல்லது. உண்மையின் அறிவும் {சத்தியம் குறித்த ஞானமும்} நல்லதே. ஆனால் எது அனைத்து உயிர்களுக்கும் நன்மையைப் பயக்குமோ அதுவே உயர்ந்த உண்மை {உயர்ந்த சத்தியம்} என்று அறியப்படுகிறது. எந்த வெகுமதியும், அருளும் எதிர்பாராமல் செயல்படும் ஒருவனும், தனது துறவின் தேவைக்காக அனைத்தையும் தியாகம் செய்தவனும் உண்மையான சந்நியாசியாவன். அவனே உண்மையான ஞானி. ஒரு குரு {பிரம்மம் குறித்த} புதிருக்கான குறிப்பைத் தான் தர முடியும். பிரம்மத்துடனான தொடர்பை நமது ஆன்ம குருவாலும் கற்றுத் தரமுடியாது. பொருள் நிறைந்த உலகைத் துறப்பதே யோகம் என்று அழைக்கப்படுகிறது
.
நாம் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல், அனைத்துடனும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இந்த நமது தற்போதைய இருப்பில், எந்த உயிரினத்தையும் பழி வாங்கக்கூடாது. சுய தியாகம் {தன்னைத் தியாகம் செய்தல்}, நிம்மதி, நம்பிக்கையைத் துறத்தல், மன அமைதி ஆகியவையே ஆன்ம ஞானத்தை எப்போதும் அடைவதற்கான வழிகள். சுயத்தை அறிவதே {ஒருவனது ஆன்ம இயல்பை அறிவதே} ஞானத்தில் சிறந்தது.
இவ்வுலகிலும், அடுத்த உலகிலும் {இம்மையிலும் மறுமையிலும்}, உலகம் சார்ந்த அனைத்து விருப்பங்களையும் துறந்து, விருப்பு வெறுப்பற்ற அலட்சியப் போக்கை எடுத்துக் கொண்டால் அனைத்து துன்பங்களும் ஓய்ந்து போகும். மனிதர்கள் தங்கள் அறக் கடமைகளைத் தங்கள் புத்தியின் துணை கொண்டு நிறைவேற்ற வேண்டும். அடைவதற்கு மிகவும் அரிதான் மோட்சத்தை (முக்தியை) அடைய விரும்பும் முனிவர், துறவில் உறுதியாகவும், பொறுமையுடனும், சுயக் கட்டுப்பாட்டுடனும், தன்னை இந்த உலகத்தில் உள்ள பொருட்களுடன் கட்டிப் போடும் நீண்டகால விருப்பங்களைத் துறக்க வேண்டும். இவற்றையே பரமாத்மாவின் குணங்கள் என்று அழைக்கின்றனர்.
நாம் உணர்ந்திருக்கும் குணங்கள், அவனிடம் அகுணங்களாகச் {குணங்களற்றவையாகத் தன்னைச்} சுருக்கிக் கொள்கின்றன; அவன் எதனுடனும் பிணைப்புடையவன் அல்ல, அவனது ஆன்மப் பார்வையின் விரிவாக்கமும் வளர்ச்சியும் உணர்வால் மட்டுமே நாம் அறிய முடியும். அறியாமையின் மாயை விலக்கப்பட்டதும், இந்தக் கலப்படமற்ற உச்ச பேறு {பேரின்பம்} அடையப்படுகிறது. இன்பம் மற்றும் வலி சம்பந்தமான பொருட்களைக் கைவிடுவதாலும், இவ்வுலகின் பொருட்களில் தன்னைப் பிணைக்கும் உணர்வுகளைத் துறப்பதாலும், ஒரு மனிதன் பிரம்மத்தை (பரமாத்மாவை அல்லது முக்தியை) அடைகிறான். ஓ! நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே- கௌசிகரே}, நான் கேள்விப்பட்டவாறே, இவை அனைத்தையும், உமக்குச் சுருக்கமாக விவரித்திருக்கிறேன். வேறு எதை நீர் அறிய விரும்புகிறீர்” என்று கேட்டான் {தர்மவியாதன்}.
இல்லறத்தான் கடமை! – வனபர்வம் பகுதி 213-தர்மவியாதன் கௌசிகரைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, தன் தாய் தந்தையை அறிமுகப்படுத்தி, தன் பெற்றோருக்குத் தான் செய்யும் பணிவிடைகளைச் சொன்னது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! யுதிஷ்டிரா, முக்தி சம்பந்தமான இந்தப் புதிர்கள் அந்தணருக்கு விளக்கப்பட்ட போது, அவர் {அந்தணர் – கௌசிகர்}, பெரிதும் திருப்தியடைந்து, அந்த வேடனிடம் {தர்மவியாதனிடம்}, “நீ விளக்கிய யாவையும் பகுத்தறிவு கொண்டதாக இருக்கிறது. அறப்புதிர்கள் சம்பந்தமாக உனக்குத் தெரியாதது எதுவும் இல்லை என்று எனக்குப் படுகிறது” என்றார். வேடன் {தர்மவியாதன்}, “ஓ! நல்ல பெரும் அந்தணரே {கௌசிகரே}, நான் கோரும் அனைத்து அறத்தையும், இந்த அருள்நிலையை நான் அடைந்ததற்கான காரணத்தையும் உமது கண்களால் நீர் காண்பீர். வழிபடத்தகுந்த ஐயா, எழுந்து விரைவாக இந்த உள் அறைக்குள் நுழையும். ஓ! அறம் சார்ந்த மனிதரே {கௌசிகரே}, நீர் எனது தந்தையையும், தாயையும் காண வேண்டியது முறையாகும்” என்று சொன்னான் {வேடன் தர்மவியாதன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட அந்தணர் {கௌசிகர்}, உள்ளே சென்று ஒரு அழகிய மாளிகையைக் கண்டார். தேவர்களால் போற்றப்படும் அவர்களது {தேவர்களது} அரண்மனைகளில் ஒன்றைப் போல, நான்கு அறைகளாகப் பிரிக்கப்பட்டு, இருக்கைகளுடனும், படுக்கைகளுடனும், சிறந்த நறுமணப் பொருட்களால் மணம் நிறைந்த அற்புதமான வீடாக அது இருந்தது. அவனது {வேடனின்} மரியாதைக்குரிய பெற்றோர், உணவுண்டு முடித்து, வெள்ளை ஆடைகளை உடுத்தி வசதியாக அமர்ந்திருந்தனர். அவர்களைக் கண்ட வேடன் {தர்மவியாதன்}, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, தன் தலையை அவர்களது பாதங்களில் வைத்தான். அவனது வயது முதிர்ந்த பெற்றோர் அவனிடம் {வேடனிடம்}, “ஓ! பக்திமானே எழு. நீதி {தர்மம்} உன்னைக் காக்கட்டும்; உனது பக்திக்கான நாங்கள் உன்னிடம் மிகவும் திருப்தியாக இருக்கிறோம்; நீண்ட வாழ்நாள், ஞானம், உயர்ந்த புத்தி, உனது விருப்பங்கள் நிறைவேற்றம் ஆகியவை உனக்கு அருளப்படட்டும்.
நீ கடமையுணர்ச்சி கொண்ட நல்ல மகன். நாங்கள் நியாயமாகவும், தொடர்ச்சியாகவும் உன்னால் பார்த்துக் {கவனித்துக்} கொள்ளப்படுகிறோம். தேவர்களில் கூட உனக்கு {எங்களைத் தவிர} வேறு ஒரு தேவன் தேவையில்லை. தொடர்ந்து உன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அந்தணர்களின் சுயக்கட்டுப்பாட்டை அடைந்திருக்கிறாய். எங்களிடம் நீ கொண்டிருக்கும் பக்தியையும், சுயக்கட்டுப்பாட்டையும், அறங்களையும் கண்டு உனது முப்பாட்டன்களும், மூதாதையர்களும் தொடர்ந்து உன்னிடம் திருப்தியாகவே இருக்கின்றனர். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும், எங்களைக் கவனிப்பதில் நீ எப்போதும் தடுமாறியதில்லை. உனது மனதில் {எங்களை எப்படித் திருப்தி செய்வது என்பதைத் தவிர} இப்போது வேறு எண்ணமே இல்லை என்று தெரிகிறது. ஜமதக்னியின் மகன் ராமன் {பரசுராமன்} தனது வயது முதிர்ந்த பெற்றோரைச் சேவித்தது போலவும் அதற்கு மேலும், ஓ! மகனே, நீ எங்களைச் சேவிக்கிறாய்” என்றனர் {தர்மவியாதனின் பெற்றோர்}.
பிறகு அந்த வேடன் {தர்மவியாதன்}, அந்த அந்தணரை {கௌசிகரை} தனது பெற்றோரிடம் அறிமுகப் படுத்தினான். அவர்கள் வழக்கமான நல்வரவு வழிபாட்டுடன் அவரை வரவேற்றனர். அந்தணரும் அவர்களது மரியாதையை ஏற்றுக் கொண்டு, அவர்களது இல்லத்தில் உள்ள அவர்களது பிள்ளைகள், பணியாட்கள் ஆகியோரின் நலம் குறித்தும், அவர்களது ஆரோக்கியம் குறித்தும் விசாரித்தார். அந்த வயது முதிர்ந்த இணை {ஜோடி}, “ஓ! அந்தணரே, எங்கள் வீட்டில், எங்கள் பணியாட்கள் உட்பட அனைவரும் நலமுடன் இருக்கிறோம். வழிபடத்தகுந்த ஐயா, நீர் இந்த இடத்தை எந்தச் சிரமமும் இல்லாமல் அடைந்தீரா?” என்று கேட்டனர்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்த அந்தணர் {கௌசிகர்}, “ஆம், சிரமமின்றி அடைந்தேன்” என்றார். பிறகு அந்த வேடன் அந்த அந்தணரிடம், “வழிபடத்தகுந்த ஐயா, இந்த எனது பெற்றோர்களே நான் வணங்கும் {உயிருள்ள} சிலைகளாகும். தேவர்களுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் நான் இவர்களுக்குச் செய்கிறேன். இந்திரனைத் தலைமையாகக் கொண்ட முப்பத்து மூன்று தேவர்களும் மனிதர்களால் வழிபடப்படுவதைப் போல, இந்த எனது வயதுமுதிர்ந்த பெற்றோர் என்னால் வழிபடப்படுகின்றனர். தேவர்களுக்குக் காணிக்கைகள் பெற அந்தணர்கள் முயற்சிப்பதைப் போல, நானும் இந்த இருவருக்காகவும் (எனது தெய்வச் சிலைகளுக்காக} விடாமுயற்சியுடன் செயல்படுகிறேன். ஓ! அந்தணரே {கௌசிகரே}, இந்த எனது தந்தையும் தாயுமே எனக்குத் தலைமையான தெய்வங்கள். நான் அவர்களுக்கு மலர்களும், கனிகளும், ரத்தினங்களும் காணிக்கையாகக் கொடுத்து அவர்களை எப்போதும் திருப்தி செய்ய முயல்கிறேன். கற்றவர்களால் சொல்லப்படும் மூன்று புனிதமான நெருப்புகளும் எனக்கு இவர்களே; ஓ! அந்தணரே, அவர்கள் எனக்கு வேள்விகளைப் போலவும், நான்கு வேதங்களைப் போலவும் நன்மையானவர்களாகத் தெரிகிறார்கள்.
எனது, ஐந்து உயிரைக் கொடுக்கும் காற்றுகளும் {வாயுக்களும்}, எனது மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் ஆகிய அனைவரும் (தங்கள் சேவையை அர்ப்பணிப்புடன்) அவர்களுக்காகவே செயல்படுகின்றனர். எனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கூடி நான் எப்போதும் அவர்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஓ! நல்ல அந்தணரே, அவர்கள் குளிப்பதற்கும், கால் கழுவுவதற்கும், உணவு உண்பதற்கும், நான் எனது கைகளால் அவர்களுக்கு உதவுகிறேன். அவர்களுக்கு ஏற்பில்லாததை விடுத்து, அவர்களுக்கு ஏற்புடையதை மட்டுமே நான் அவர்களிடம் சொல்கிறேன். நான், அவர்களுக்கு ஏற்புடையதைச் செய்வது, நீதியற்ற காரியமாக இருந்தாலும் அதையே நான் உயர்ந்த கடமையாகக் கருதுகிறேன். ஓ! அந்தணரே {கௌசிகரே}, நான் அவர்களைக் கவனிப்பதில் ஊக்கத்துடன் இருப்பேன். ஓ! நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே – கௌசிகரே}, பெற்றோர் இருவர், புனித நெருப்பு, ஆன்மா, ஆன்ம குரு ஆகிய ஐவரும், செழிப்பைத் தேடும் ஒருவனின் உயர்ந்த மதிப்புக்கு உரியவர்களாவர். அவர்களை முறையாகச் சேவித்தால், ஒருவன் புனித நெருப்பை நிரந்தரமாக எரிய விட்டதற்கான தகுதியை அடைகிறான். இதுவே இல்லறவாசியின் நித்தியமான தவிர்க்கக்கூடாத கடமையாகும்.
பெற்றோரை மதிப்பதே உயரறம்! – வனபர்வம் பகுதி 214-தர்மவியாதன் கௌசிகரைத் தந்தை தாய்க்குப் பணிவிடை செய்யச் சொல்லி அறிவுறுத்தியது; அவன் ஏன் சூத்திர வர்க்கத்தில் பிறந்தான் என்ற காரணத்தையும் சொல்ல ஆரம்பித்தது
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தன் பெற்றோரை (இருவரையும்) தான் நினைக்கும் உயர்ந்த குருக்கள் என அந்த அந்தணரிடம் அறிமுகப்படுத்திய அந்த அறம் சார்ந்த வேடன் {தர்மவியாதன்}, “எனது அக ஆன்மப் பார்வையை விரிவடையச் செய்யும், இந்த அறத்தின் சக்தியைக் குறித்துக் கொள்ளும். கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த, சுயக்கட்டுப்பாடுடைய, சத்தியவதியான அந்தப் பெண்ணால், “மிதிலைக்குச் செல்லும்; அங்கே அறத்தின் புதிர்களை உமக்கு விளக்கவல்ல ஒரு வேடன் வாழ்ந்து வருகிறான்” என்று இதற்காகவே உமக்குச் சொல்லப்பட்டது” என்றான்.
அந்த அந்தணர் {கௌசிகர்}, “ஓ! பக்திமானே, உனது அறக் கடமைகளை நிறைவேற்றுவதில் நிலையாக இருக்கும் உன்னைக் கண்ட பிறகு, கணவனுக்கு உண்மையாக இருக்கும், நல்ல குணம் கொண்ட அந்த உண்மை நிறைந்த மங்கை என்னைக் குறித்து சொன்ன வார்த்தைகளையும் நினைத்துப் பார்த்து, நீ உண்மையில் அனைத்து உயர்ந்த குணங்களையும் கொண்டவன் என்று உறுதியடைகிறேன்” என்றார். வேடன் {தர்மவியாதன்}, “என் தலைவா {கௌசிகரே}, கணவருக்கு நன்றியுடன் இருக்கும் அந்த மங்கை, என்னைக் குறித்து உம்மிடம் சொன்னவை, உண்மைச் செய்திகளின் {அடிப்படையில்} முழு ஞானம் கொண்டவை என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஓ அந்தணரே {கௌசிகரே}, நான் உமக்குச் சாதகமான அனைத்தையும் குறித்து விவரித்துவிட்டேன். நல்ல ஐயா {கௌசிகரே}, இப்போது நான் சொல்வதைக் கேளும். நான் உமக்கு நன்மையானதைச் சொல்கிறேன். ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, நேர்மையான குணம் கொண்ட நீர், உமது தாய்க்கும் தந்தைக்கும் தகாததைச் செய்திருக்கிறீர். வேதங்களைக் கற்கும் காரணத்திற்காக, நீர், அவர்களின் அனுமதியின்றி வீட்டை விட்டு வெளியே வந்தீர். அக்காரியத்தில் நீர் முறையாக நடந்து கொள்ளவில்லை. வயது முதிர்ந்த துறவிகளான உமது பெற்றோர், உமது இழப்பால் ஏற்பட்ட துயரத்தில் முழுமையானக் குருடர்களானார்கள். விரைவாக இல்லம் திரும்பி அவர்களைச் சமாதானப் படுத்தும். இந்த அறம் உம்மை எப்போதும் கைவிடாதிருக்கட்டும். உயர்ந்த மனம் கொண்டு, தவத்தகுதி கொண்டு, அறத்திற்கு எப்போதும் உம்மை அர்ப்பணித்தீர். ஆனால் இவை அனைத்தும் உமக்குப் பயனில்லாமல் போகும். காலங்கடத்தாமல் விரைவாகத் திரும்பி உமது பெற்றோரைச் சமாதானப் படுத்தும். எனது சொற்களுக்குச் சிறிது மதிப்பு கொடும். மாறுபட்டு நடக்காதீர்; ஓ! அந்தண முனிவரே {கௌசிகரே}, நான் உமது நன்மைக்காகவே சொல்கிறேன், இந்நாளே விரைவாக உமது இல்லத்திற்குத் திரும்பும்” என்றான் {வேடன் தர்மவியாதன்}.
அதற்கு அந்த அந்தணர் {கௌசிகர்}, “நீ சொன்னது உண்மையே, ஐயமில்லை; ஓ! பக்திமானே நீ செழிப்பை அடைவாயாக; நான் உன்னிடம் மிகவும் திருப்தி அடைந்தேன்” என்றார். வேடன், “ஓ! அந்தணரே {கௌசிகரே}, சுத்தமான மனம் கொண்டவர்களாலும் அடைவதற்குக் கடினமான, தெய்வீகமான, பழமையான, நித்தியமான அறங்களை விடாமுயற்சியுடன் பயில்வதால், நீர் (எனக்கு) தெய்வீகமானவரைப் போலத் தோன்றுகிறீர். உமது தந்தை மற்றும் தாயின் பக்கத்திற்குச் செல்லும். விரைவாகச் சென்று, உமது பெற்றோரை வணங்குவதில் விடாமுயற்சி கொள்ளும்; இதைவிடப் பெரிய அறம் ஏதும் இருக்கிறதா என்பதை நான் அறியவில்லை” என்றான் {வேடன் தர்மவியாதன்}.
அதற்கு அந்த அந்தணர் {கௌசிகர்}, “என்னுடைய சிறு நற்பேறின் நிமித்தமாகவே நான் இங்கே வந்தேன், ஒரு சிறு நற்பேறின் காரணமாகவே நான் உன்னுடன் நட்பு கொண்டேன். அறத்தின் புதிர்களை இவ்வளவு அழகாக விளக்கக்கூடிய மனிதனை நமக்கு மத்தியில் கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாகும்; ஆயிரக்கணக்கான மனிதர்களில் அறத்தின் அறிவியலை நன்கு அறிந்த ஒரு மனிதன் கிடைப்பது அரிதானது. ஓ! பெரும் மனிதா, உனது நட்பை அடைந்ததால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீ செழிப்புடன் இருப்பாயாக. நான் நரகக்குழிக்குள் விழுந்து கொண்டிருந்தேன். ஆனால் நீ என்னைத் தூக்கி விட்டாய். இது இப்படி நடக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. (நான் எதிர்பாராமல்) நீ என் வழியில் வந்தாய்.
ஓ! பெரும் மனிதா, {சொர்க்கத்தில் இருந்து} விழுந்த மன்னன் யயாதி, தனது பேரப்பிள்ளைகளின் {தனது மகள்களின் பிள்ளைகளின்} மூலம் காக்கப்பட்டதைப் போல, நானும் உன்னால் காக்கப்பட்டேன் என்பதை அறிந்து கொள். உனது அறிவுரையின் படி நடந்து, நான் எனது தந்தையையும், தாயையும் மதித்து நடப்பேன். சுத்தமில்லாத இதயம் கொண்ட மனிதனால் பாவம் மற்றும் நீதி ஆகியவற்றைக் குறித்து அறியவே முடியாது. நித்தியமான அறத்தின் புதிர்களைக் குறித்துச் சூத்திர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் கற்பது என்பது மிகவும் கடினமானது. நான் உன்னைச் சூத்திரனாகக் கருதவில்லை. இக்காரியத்தைப் பொறுத்தவரை நிச்சயம் ஏதோ மர்மம் இருக்கிறது. நீ இந்தச் சூத்திர நிலையை, உனது கடந்த கால {பூர்வ ஜென்} கர்மாவின் கனியாக அடைந்திருக்க வேண்டும். ஓ! பெருங்குணம் கொண்டவனே, நான் இக்காரியத்தின் உண்மையை அறிய பெரிதும் விரும்புகிறேன். இதனை எனக்குக் கவனத்துடனும், உனது விருப்பத்தின் பேரில் கூறுவாயாக” என்று கேட்டார் {கௌசிகர்}.
அதற்கு வேடன் {தர்மவியாதன்}, “ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, எனது எல்லாவகை மதிப்புக்கும் அந்தணர்கள் தகுதி வாய்ந்தவர்களே. ஓ! பாவற்றவரே, எனது முற்பிறவியின் கதையைக் கேளும். ஓ! அற்புதமான அந்தணரின் மகனே {கௌசிகரே}, நான் முற்பிறவியில் வேதங்களை நன்கு படித்த, வேதாங்கங்களில் சாதித்த ஓர் அந்தண மாணவனாக இருந்தேன். எனது தவறால் நான் இந்தத் தற்போதைய என் தாழ்ந்த நிலையை அடைந்தேன். தனுர் வேத அறிவியலை (வில்வித்தை அறிவியலை) அறிந்த ஒரு குறிப்பட்ட மன்னன் எனக்கு நண்பனாக இருந்தான். ஓ! அந்தணரே {கௌசிகரே} அவனது நட்பால் நானும் வில்வித்தையில் நிபுணனாக இருந்தேன். ஒரு நாள் அம்மன்னன், தனது அமைச்சர்களுடனும் சிறந்த வீரர்களுடனும் வேட்டைக்குச் சென்றான்.
ஒரு ஆசிரமத்தினருகே அவன் பெரிய எண்ணிக்கையிலான மான்களைக் கொன்றான். ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, நானும் ஒரு கொடுங்கணையை அடித்தேன். வளைந்த கணுக்களுள்ள அந்தக் கணையால் ஒரு முனிவர் காயப்பட்டார். அவர் தரையில் விழுந்து சத்தமாக, “நான் எவருக்கும் தீங்கிழைக்கவில்லையே, எந்தப் பாவி இந்தக் காரியதைதச் செய்தான்” என்று கதறினார். என் தலைவா {கௌசிகரே}, அவரை மானென்று கருதிய நான் அவரிடம் சென்றேன். அங்கு அவர் எனது கணையால் உடல் துளைக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டேன். இத்தீயக் காரியத்தின் விளைவாக நான் (மனதால்) மிகவும் வருந்தினேன். தரையில் விழுந்து, சத்தமாக அழுது கொண்டிருந்த அந்தக் கடும் தவத்தகுதி படைத்த முனிவரிடம் நான், “ஓ! முனிவரே! அறியாமல் நான் இதைச் செய்துவிட்டேன்” என்று சொல்லி, மீண்டும், “இந்த மீறல் அனைத்தையும் மன்னிப்பதே முறையானது என்பதை நினைத்துப் பாரும்” என்றேன். ஆனால், ஓ! அந்தணரே {கௌசிகரே}, கோபம் மூண்ட அந்த முனிவர், “நீ கொடூர வேடனாகச் சூத்திர வர்க்கத்தில் பிறக்கக் கடவாய்” என்று சொன்னார்.
வேடனிடம் விடைபெற்ற கௌசிகர்! – வனபர்வம் பகுதி 215-தர்மவியாதன் தனது முற்பிறப்பு வினையைக் கௌசிகரிடம் சொன்னது; தர்மவியாதனிடமிருந்து பல அறங்களை அறிந்த கௌசிகர் தன் வீட்டுக்குத் திரும்பி, தனது பெற்றோருக்குப் பணிவிடை செய்தது…
வேடன் {தர்மவியாதன்} தொடர்ந்தான், “இப்படி அந்த முனிவரால் சபிக்கப்பட்ட நான், இந்த வார்த்தைகளால் அவரைச் சாந்தப்படுத்த முயன்றேன். “ஓ! முனிவரே, என்னை மன்னியும். இத்தீச்செயலை நான் அறியாமல் செய்துவிட்டேன். அவை அனைத்தையும் மன்னிப்பீராக. ஓ! வழிபடத்தகுந்த ஐயா, உம்மை ஆற்றிக் கொள்ளும்” என்றேன். அதற்கு அந்த முனிவர், “நான் உச்சரித்த தீச்சொல் {சாபம்} பொய்யாக முடியாது, இது உறுதி. ஆனால் உன்மீது ஏற்படும் கருணையால், நான் உனக்கு ஒரு உதவியைச் செய்கிறேன். சூத்திர வர்க்கத்தில் பிறந்தாலும், நீ பக்திமானாகவே இருப்பாய். சந்தேகமற நீ உன் பெற்றோர்களை மதிப்பாய்; அப்படி அவர்களை மதிப்பதால் நீ பெரும் ஆன்ம முழுமையை அடைவாய். உனது முற்பிறவியின் நிகழ்வுகளையும் நினைவில் கொண்டிருந்து நீ சொர்க்கத்திற்குச் செல்வாய்; இந்தத் தீச்சொல்லின் {சாபத்தின்} காலம் நிறைவடையும்போது, நீ மீண்டும் பிராமணனாவாய்” என்றார். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, முற்காலத்தில் கடுஞ்சக்தி படைத்த அந்த முனிவரால் இப்படியே சபிக்கப்பட்டேன். இப்படியே அவர் {அம்முனிவர்} என்னை ஆறுதலடையச் செய்தார். பிறகு, ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, நான் அவரது உடலில் இருந்து கணையை உருவி, அவரை ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றேன். அவர் உயிர் துறக்கவில்லை (குணமடைந்தார்). ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, இப்படியே, பழங்காலத்தில் எனக்கு என்ன நடந்தது என்பதையும், இதன் பின் நான் எப்படிச் சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்பதையும் உமக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன்” என்றான் {தர்மவியாதன்}.
அதற்கு அந்த அந்தணர் {கௌசிகர்}, “ஓ! பெரும் புத்திக்கூர்மை கொண்டவனே {தர்மவியாதா}, அனைத்து மனிதர்களும் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் ஆட்படுகின்றனர். எனவே, நீ அதற்காகக் கவலைகொள்ளல் ஆகாது. உனது (தற்போதைய) குலத்தின் வழக்கத்திற்குக் கீழ்ப்படிந்தே நீ இத்தகு தீய வழிகளில் செல்கிறாய். ஆனால் நீ எப்போதும் அறத்திற்கு உன்னை அர்ப்பணித்து, உலகத்தின் வழிகளையும் புதிர்களையும் அறிந்திருக்கிறாய். ஓ! கற்றவனே {தர்மவியாதா}, இவை உனது தொழிலின் கடமைகளாகும். அதனால் தீய கர்மத்தின் கறை உன் மீது ஒட்டாது. இங்குச் சிறிது காலம் வசித்த பிறகு, நீ பிராமணனாவாய். இப்போது கூட நான் உன்னைப் பிராமணனாகவே கருதுகிறேன். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. வீணனாக, தற்பெருமை கொண்டவனாக, தீமைகளுக்கு அடிமையாக, தீயவற்றோடு தொடர்பு கொண்டு இழிந்த நடைமுறைகள் கொண்ட ஒரு பிராமணன், சூத்திரனைப் போன்றவனாவான். மறுபுறம், நீதி நேர்மை, சுயக்கட்டுப்பாடு, சத்தியம் ஆகிய அறங்களால் எப்போதும் அலங்கரிக்கப்பட்ட ஒரு சூத்திரனை, நான் பிராமணனாகக் கருதுகிறேன். ஒரு மனிதன் தனது குணத்தால் பிராமணனாகிறான்; தனது சொந்த தீய கர்மத்தால் ஒரு மனிதன் தீமையையும், பயங்கர விதியையும் அடைகிறான். ஓ! நல்லவனே {தர்மவியாதா}, உன்னில் இருந்த பாவங்கள் அழிந்து விட்டன என நான் நம்புகிறேன். நீ இதற்காகத் துயர் கொள்ளல் ஆகாது. அறம்சார்ந்திருந்து, உலகத்தின் வழிகள் மற்றும் புதிர்களை அறிந்திருக்கும் உன்னைப் போன்ற மனிதர்கள் துயர் கொள்ள எந்தக் காரணமும் கிடையாது” என்றார் {கௌசிகர்}.
அதற்கு அந்த வேடன் {தர்மவியாதன்}, “உடல்சார்ந்த துன்பங்களை மருந்துகள் கொண்டு களைய வேண்டும்; மனம் சார்ந்தவைகளை ஆன்ம ஞானம் கொண்டு களைய வேண்டும். இதுவே ஞானத்தின் சக்தியாகும். இதை அறிந்த ஞானிகள் சிறுபிள்ளைகளைப் போல நடந்து கொள்ளக்கூடாது. தனக்கு ஏற்பில்லாத ஏதோ ஒரு சம்பவம் நடப்பதால், அல்லது தனக்கு ஏற்புடையதோ மிகவும் விருப்பமுள்ளதோவான ஏதோ ஒன்று நடைபெறாததால், சிறுபுத்தி கொண்டவர்களே துயரடைவர். உண்மையில் இந்தக் குணத்திற்கு (இன்பம் அல்லது துன்பம்) அனைத்து உயிரினங்களும் ஆட்படுகின்றன. இந்தத் துயரத்திற்கு ஆட்படாத உயிரினமோ, வர்க்கமோ ஒன்றுகூடக் கிடையாது. இத்தீமையை அறிந்த மக்கள் விரைவில் தங்கள் பாதையைச் சீர் செய்து கொள்கின்றனர். ஆரம்பத்திலேயே இதைக் கண்டு கொண்டால், அவர்கள் மொத்தமாக இதில் வெற்றி கொள்கின்றனர். இதற்காகத் {நடந்துவிட்டதே, நடக்கவில்லையே என்று} துயர் கொள்பவன், தன்னைத்தானே சிரமத்திற்கு உட்படுத்திக் கொள்கிறான். தங்களை இன்பமாகவும் மனநிறைவுள்ளவனாகவும் மாற்றும் ஞானத்தைக் கொண்டு ஞானிகள், இன்ப துன்பங்களை அலட்சியப்படுத்தி, உண்மையில் இன்பமாக இருக்கிறார்கள். ஞானிகள் எப்போதும் மனநிறைவுடன் இருக்கிறார்கள். மூடர்கள் எப்போதும் நிறைவடையாமலேயே இருக்கிறார்கள். இந்த அதிருப்திக்கு எல்லையே இல்லை. மன நிறைவே உயர்ந்த இன்பமாகும். சரியான வழியை அடைந்த மக்கள், துன்பப்படுவதில்லை. அவர்கள் எப்போதும் அனைத்து உயிர்களின் விதியின் முடிவை உணர்ந்திருக்கின்றனர்.
ஒருவன் அதிருப்திக்கு {விஷாதம்} வழி கொடுக்கக்கூடாது. அது {விஷாதம்} கடும் நஞ்சைப் போன்றது. ஒரு சீற்றம் கொண்ட பாம்பு, குழந்தையைக் கொல்வதைப் போல, அது {விஷாதம்} வளர்ச்சியற்ற புத்தி கொண்ட மனிதர்களைக் கொல்கிறது. தனது வீரியத்தைக் காட்ட வேண்டிய தருணம் தன்னை அணுகும்போது, மனக்கலக்கமடைந்து, சக்தியை இழக்கும் ஒரு மனிதன் ஆண்மையற்றவனாவான். நமது செயல்கள் அனைத்தும் அதன் விளைவுகளால் நம்மைத் தொடர்கின்றன. செயலற்ற அலட்சியப் போக்குக்குத் தன்னை ஒப்படைக்கும் எவனும் எந்த நல்லதையும் அடைவதில்லை. முணுமுணுப்பதை விட, ஒருவன் (ஆன்ம) துயரத்தில் இருந்து விடுபட வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும். முக்திக்கான வழியைக் கண்டடைந்த பிறகு ஒருவன் தன்னை உணர்வுகளில் இருந்து {சிற்றின்பத்தில் இருந்து} விடுவித்துக் கொள்ள வேண்டும். ஆன்ம ஞானத்தின் உயர்ந்த நிலையை அடைந்த மனிதன், அனைத்துப் பொருட்களுக்கும் எப்போதும் ஏற்படும் பெரும் பற்றாக்குறையைக் (உறுதியற்றவைகளைக்) குறித்த உணர்வுடனேயே {விழிப்புடனேயே} இருக்கிறான். விதியின் முடிவை கருத்தில் கொண்டிருக்கும் அப்படிப்பட்ட மனிதன், துயரப்பட மாட்டான். ஓ! கற்றவரே {கௌசிகரே}, நானும் கூடத் துயரப்படுவதில்லை; நான் எனது (இவ்வாழ்வின்) நேரத்தைக் கழித்துக் கொண்டு இங்கே இருக்கிறேன். ஓ! மனிதர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, இக்காரணத்திற்காக நான் (சந்தேகங்களால்) மனக்கலக்கம் அடைவதில்லை” என்றான் {தர்மவியாதன்}.
அதற்கு அந்த அந்தணர் {கௌசிகர்}, “நீ ஞானமும், ஆன்ம அறிவில் உயர்வும், பரந்த அறிவும் கொண்டிருக்கிறாய். பிரியா விடை பெறுகிறேன், ஓ! பக்தி மானே {தர்மவியாதா}, நீ செழிப்புடன் இருப்பாயாக, நீதி உன்னைக் காக்கட்டும், அறம் பயில்வதில் சிரத்தையுள்ளவனாக இருப்பாயாக” என்று சொன்னார் {கௌசிகர்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்த வேடன் {தர்மவியாதன்} அவரிடம் {கௌசிகரிடம்}, “அப்படியே ஆகட்டும்” என்றான். அந்த நல்ல அந்தணர் அவனை வலம் வந்த பிறகு (1) விடைபெற்றுச் சென்றார். தனது வீட்டிற்குத் திரும்பிய அந்த அந்தணர், தனது முதிர்ந்த பெற்றோரைக் கவனிப்பதில் மிகவும் சிரத்தை கொண்டார். ஓ! பக்தியுள்ள யுதிஷ்டிரா, என் நல்ல மகனே, இப்படியே, நீ என்னை உரைக்கக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கணவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் பெண்களின் அறத்தையும், மகனுக்குரிய பக்தியையும் சொல்வதற்காக அறநெறி வழிமுறைகள் நிறைந்த இந்த வரலாற்றை உனக்கு விரிவாக உரைத்துவிட்டேன்” என்றார் {மார்க்கண்டேயர்}. யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, “ஓ! பக்திமிக்க அந்தணரே, முனிவர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, இந்த அற்புதமான நல்ல அறநெறிக் கதையை எனக்கு உரைத்திருக்கிறீர்; ஓ! கல்விமானே, நீர் சொன்னதைக் கேட்டுக் கொண்டே, எனது காலம் ஒரு கணம் போலச் சென்றுவிட்டது; ஆனாலும், ஓ! வழிபடத்தகுந்த ஐயா, அறநெறியைச் சொற்பொழிவைக் கேட்பது (2) இன்னும் எனக்குத் திகட்டவில்லை {தெவிட்டவில்லை}” என்றான் {யுதிஷ்டிரன்}.(வடமொழியில் வியாதன் என்றால் வேடன் என்று பொருள். அவன் அறம்சார்ந்த வேடனாக இருந்ததால் தர்மவியாதன் என்று பெயர்–வேடனுக்கும் {தர்மவியாதனுக்கும்} அந்தணருக்கும் {கௌசிகருக்கும்} ஏற்படும் இந்த விவாதம் வியாத கீதை என்று புகழ்பெற்று இருந்திருக்கிறது.)
அக்னியும்! அங்கிரசும்!! – வனபர்வம் பகுதி 216-மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் அக்னியின் தவம் மற்றும் அங்கிரஸ் முனி அக்னியாகச் செயல்பட்ட வரலாறு ஆகியவற்றைச் சொன்னது; அக்னி அங்கிரஸ் உரையாடல்; அங்கிரஸ் அக்னியையே மீண்டும் நெருப்புக் கடவுளாகத் தொடரச் சொன்னது;
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அறம்சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன், இந்த அற்புதமான அறச் சொற்பொழிவைக் கேட்ட பிறகு, மீண்டும் மார்க்கண்டேய முனிவரிடம், “பழங்காலத்தில் நெருப்புக் கடவுள் {அக்னி தேவன்} ஏன் தன்னை நீருக்குள் ஒளித்துக் கொண்டான்? அவன் {அக்னி} மறைந்த போது, பெரும் பிரகாசம் கொண்ட அந்த அங்கிரஸ், {தானப்பலிகளில்} காணிக்கைகளைத் தெரிவிப்பதற்கு {தேவர்களுக்கு எடுத்துச் செல்லப்} பயன்பட்டு [1], நெருப்புக் கடவுளாக {மற்றுமொரு அக்னி தேவனாக} ஏன் அலுவல் புரிந்தார்? இருப்பது ஒரே நெருப்புதான். ஆனால், அதன் செயல்களின் இயல்புக்கு ஏற்ப, அது பலவாகத் தன்னைப் பிரித்துக் கொள்வதைக் காண முடிகிறதே. ஓ! வழிபடத்தகுந்த ஐயா {மார்க்கண்டேயரே}, குமரன் {முருகன்} [2] எப்படிப் பிறந்தான்? அவன் அக்னியின் {நெருப்பு தேவனின்} மகன் என்று எப்படி அறியப்பட்டான்? அவன் ருத்திரனாலோ, கங்கையாலோ, கிருத்திகையாலோ எப்படிப் பெறப்பட்டான்? இவை யாவையும் குறித்து நான் ஞானமடைய நெடுங்காலமாக விரும்புகிறேன். ஓ! பிருகு குலத்தின் உன்னத வாரிசே {மார்க்கண்டேயரே}, நடந்ததை நடந்தவாறே கற்க நான் விரும்புகிறேன். ஓ! பெரும் முனிவரே, நான் பெரும் ஆவலால் நிறைந்திருக்கிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.
அதற்கு மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “கோபத்தால் நிறைந்திருந்த, தானங்களைச் சுமந்து செல்பவன் (அக்னித் தேவன்), தவமிருப்பதற்காகக் கடலின் நீருக்குள் எப்படிச் சென்றான்? புகழத்தக்க அங்கிரஸ் தன்னை அக்னித் தேவனாக மாற்றிக் கொண்டு, இருளை அழித்து, அவரது சுட்டெரிக்கும் கதிர்களால் எப்படி உலகை விரக்தியடையச் செய்தார்? என்பது தொடர்பாகக் கற்றோர் இந்தப் பழங்கதையைச் சொல்கின்றனர். ஓ! நீண்ட கரம் கொண்ட வீரனே {யுதிஷ்டிரா} பழங்காலத்தில், பெரும் அங்கிரஸ், தனது ஆசிரமத்தில் ஓர் அற்புதமான தவத்தைச் செய்தார்; அதனால் அவர் தானங்களைச் சுமப்பவனான நெருப்பு தேவனையும் {அக்னித் தேவனை} பிரகாசத்தில் விஞ்சி, அந்த நிலையிலேயே முழு அண்டத்துக்கும் ஒளியூட்டினார்.
அந்நேரத்தில் அக்னித் தேவனும் ஒரு தவத்தைச் செய்து கொண்டிருந்தான். அவரது {அங்கிரசின்} பிரகாசத்தால் அவன் பெரும் விரக்தியடைந்திருந்தான். அவன் {அக்னி} விரக்தியடைந்திருந்தானே ஒழிய என்ன செய்வது என்பதை அறியவில்லை. பிறகு, அந்த வழிபடத்தகுந்த தேவன் {அக்னி} தனக்குள்ளேயே, “இந்த அண்டத்திற்காகப் பிரம்மன் மற்றுமொரு அக்னி தேவனைப் படைத்துவிட்டான். நான் தவம் மேற்கொண்டிருப்பதால், நெருப்பில் உறையும் தேவனான எனது சேவைகள் முடிந்துவிட்டனவே” என்று நினைத்து, தன்னை எப்படி மீண்டும் நெருப்புத் தேவனாக நிறுவி கொள்வது என்பதைக் குறித்துச் சிந்தித்தான்.
முழு அண்டத்துக்கும் நெருப்பைப் போல வெப்பத்தைத் தந்து கொண்டிருந்த அந்தப் பெரும் முனிவரை {அங்கிரசை} அவன் கண்டு, அச்சத்துடன் மெதுவாக அவரை அணுகினான் {அக்னித் தேவன்}. ஆனால் அங்கிரஸ் அவனிடம் {அக்னி தேவனிடம்}, “அண்டத்தை அசைவூட்டி விரைவாக நீ மீண்டும் உன்னை நிறுவிக் கொள். உறுதியான மூன்று உலகங்களிலும் நீ நன்று அறியப்பட்டிருக்கிறாய். மேலும், இருளை விலக்க நீயே முதலில் பிரம்மனால் படைக்கப்பட்டவன். ஓ! இருளை அழிப்பவனே, உனக்கு உரிய இடத்தை நீ விரைவாக ஆக்கிரமித்துக் கொள்” என்றார் {அங்கிரஸ்}.
அக்னி {அங்கிரஸிடம்}, “என் புகழுக்கு இப்போது இவ்வுலகில் பழுது ஏற்பட்டுள்ளது. நீரே நெருப்பு தேவன் ஆகிவிட்டீர். மக்கள் உம்மையே அறிவர். என்னை அறியமாட்டார்கள். நான் நெருப்பு என்ற நல்ல நிலையைத் துறந்துவிட்டேன். நீரே புராதான நெருப்பாகிக் கொள்ளும். நான் இரண்டாவதாகவோ பிரஜாபத்ய நெருப்பாகவோ {பிரஜாபத்யாக்னியாகவோ} அலுவல் புரிகிறேன்” என்றான் {அக்னி}. அதற்கு அங்கிரஸ் {அக்னி தேவனிடம்}, “நீயே நெருப்பு தேவனாகவும் {அக்னித் தேவனாகவும்}, இருளை விலக்குபவனாகவும் ஆகு. மனிதர்கள் சொர்க்கத்திற்குச் செல்லும் வழியைச் சுத்தப்படுத்தும் புனிதமான உனது கடமையைச் செய். ஓ! தலைவா {அக்னி தேவா}, என்னை விரைவாக உனது மூத்த பிள்ளையாகச் செய்” என்றார் {அங்கிரஸ்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அங்கிரசின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அக்னி தேவன் விரும்பியவாறே செய்தான். ஓ! மன்னா, அங்கிரஸ் பிருஹஸ்பதி என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றிருந்தார். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அக்னியால், அங்கிரசுக்கு உண்டான முதல் மகன் அவர் {பிருஹஸ்பதி} என்பதை அறிந்த தேவர்கள், அங்கு வந்து அந்தப் புதிரைக் குறித்து விசாரித்தனர். இப்படித் தேவர்களால் கேட்கப்பட்ட அவர் {அங்கிரஸ்} அவர்களுக்கு அவ்விஷயத்தில் ஞானத்தைக் கொடுத்தார். தேவர்களும் அங்கிரசின் விளக்கத்தை ஏற்றனர். இது தொடர்பாக, ஒவ்வொரு பயன்களுக்காக, அந்தணர்களால் பல்வேறு வகையில் அறியப்படும், பெரும் பிரகாசம் கொண்ட நெருப்பின் {அக்னியின்}, அற {தர்ம} வகைகளைக் {Religious sorts} குறித்து நான் உனக்கு விவரிக்கிறேன்.
அங்கீரசின் மகள்கள்! – வனபர்வம் பகுதி 217-அங்கிரசின் மகள்களின் பெயர்ப்பட்டியலை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! குருகுலத்தின் ஆபரணமே {யுதிஷ்டிரா}, பிரம்மனின் மூன்றாவது மகனான அவருக்கு {அங்கிரசுக்கு} சுபை என்ற பெயரில் மனைவி இருந்தாள். அவள் {சுபை} மூலமாக அவர் {அங்கிரஸ்} பெற்ற பிள்ளைகளைக் குறித்துக் கேள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவரது {அங்கிரசின்} மகனான பிருஹஸ்பதி {பிரகஸ்பதி}, புகழ்பெற்றவராகவும், பெரிய இதயம் படைத்தவராகவும், பெரும் உடல் வீரியம் பெற்றவராகவும் இருந்தார். அவரது மேதமை மற்றும் கல்வி ஆழமானதாக இருந்தது. மேலும் அவர் {பிருஹஸ்பதி} ஒரு ஆலோசகராகப் பெரிய புகழை அடைந்திருந்தார். பானுமதியே அங்கிரஸ் பெற்ற மகள்களில் மூத்தவளாவாள். பானுமதியே அவரது {அங்கிரசின்} பிள்ளைகள் அனைவரிலும் மிகவும் அழகானவளாக இருந்தாள். ராகா [1] என்றுஅங்கிரசின் இரண்டாவது மகள் அழைக்கப்பட்டாள். எல்லா உயிரினங்களின் அன்புக்கு அவள் இலக்காக இருந்ததால், அவளுக்கு {ராகாவிற்கு} அப்பெயர் சூட்டப்பட்டது. சினீவாலி என்பவள் அங்கிரசின் மூன்றாவது மகளாவாள். ஒருநேரம் தெரிவது போலவும், ஒரு நேரம் தெரியாதது போலவும் அவள் மெலிதாக இருந்ததால், அவள் ருத்திரனின் மகளைப் போல எண்ணப்பட்டாள். ஆர்ச்சீஸ்மதி அவரது நான்காவது மகளாவாள். அவளது பேரொளி கொண்ட பெரும் பிரகாசத்துக்காக அவளுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. ஹவிஷ்மதி என்ற பெயரால் அவரது ஐந்தாவது மகள் அழைக்கப்பட்டாள். அவள் ஹவிஸ்களையோ காணிக்கைகளையோ {தானபலிகளையோ} ஏற்றுக் கொண்டதால் அவளுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. மஹிஷ்மதி என்று பக்தையான அங்கிரசின் ஆறுவது மகள் அழைக்கப்படுகிறாள். ஓ! ஆர்வம் கொண்டவனே {யுதிஷ்டிரா}, அங்கிரசின் ஏழாவது மகள் மஹாமதி என்ற பெயரால் அறியப்படுகிறாள். அவள் எப்போதும் பெரும் பிரகாசம் கொண்ட வேள்விகளில் இருந்தாள். ஒப்பற்றவள், பகுதி இல்லாதவள் {without portion} என்ற அழைக்கப்படும் அந்த அங்கிரசின் வழிபடத்தகுந்த மகளைக் {மஹாமதியைக்} கண்டு, ஆச்சரியமடைந்த மனிதர்கள் குஹு, குஹு என்று சொல்வதால், அவள் குஹு என்ற பெயரால் {பெயராலும்} அறியப்படுகிறாள்.
பிருஹஸ்பதியின் நெருப்புப் பிள்ளைகள்! – வனபர்வம் பகுதி 218-பிருஹஸ்பதியின் பிள்ளைகள் குறித்து மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்கு விளக்கியது….
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிருஹஸ்பதிக்குச் {பிரகஸ்பதிக்கு} சந்திரலோகத்தைச் சேர்ந்த (தாரா என்று அழைக்கப்பட்ட) ஒரு மனைவி இருந்தாள். அவள் {தாரா} மூலமாக அவருக்கு {பிருஹஸ்பதிக்கு} நெருப்பின் சக்தி கொண்ட ஆறு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். சஞ்சு {சம்யு} {1} என்ற பெயர் கொண்ட ஒரு மகன் பிருஹஸ்பதிக்கு இருந்தான். நெருப்பாக இருந்த அவன் {சம்யுவின்} மீதிருக்கும் மரியாதையால், பௌர்ணமஸ்ய மற்றும் இதர வேள்விகளில் அவனுக்கு காணிக்கையாக தெளிந்த நெய் அளிக்கப்படுகிறது. அவன் {சஞ்சு} பெரும் தவத்தகுதி கொண்டவனாக இருந்தான். சதுர்மாஸ்யம் (நான்கு மாத வேள்வி} மற்றும் அஸ்வமேத (குதிரை) வேள்விகளில், அவனுக்கே {சஞ்சுவுக்கே} முதல் மரியாதை செய்யப்படுகிறது. இந்தப் பலமிக்க நெருப்பானவன் {அக்னி} எண்ணற்ற சுடர்களால் குறிக்கப்படுகிறான். சஞ்சுவின் மனைவி சத்யை என்று அழைக்கப்பட்டாள். அவள் ஒப்பற்ற அழகு படைத்தவளாக இருந்தாள். உண்மையின் {சத்தியத்தின்} பொருட்டு அவள் தர்மத்தில் (நீதியில்) இருந்து உதித்தாள்.
அந்தச் சுடர்விட்டெரியும் நெருப்பானவன், அவரது {பிருஹஸ்பதியின்} மகனாவான் {சஞ்சு}, அவனுக்கு {சஞ்சுவுக்குப்} பெரும் அறத்தகுதிகள் கொண்ட மூன்று மகள்களும் இருந்தனர். வேள்விக் காணிக்கைகளில் முதல் மரியாதை செய்யப்படும் நெருப்பானவனான, அவனது {சஞ்சுவின்} முதல் மகன் பரத்வாஜன் என்று அழைக்கப்பட்டான். சஞ்சுவின் இரண்டாவது மகன் பரதன் என்று அழைக்கப்பட்டான். அனைத்து முழு நிலவு நாட்களிலும் செய்யப்படும் (பௌர்ணமாஸ்ய} வேள்விகளில் (சுருவம் என்று அழைக்கப்படும்) வேள்வி அகப்பையால் நீர்க்காணிக்கையான தெளிந்த நெய் அவனுக்கு {பரதனுக்கு} மரியாதை செய்யவே காணிக்கையிடப்படுகிறது. இதைத் தவிர்த்து உள்ள மூன்று மகன்களில் அந்தப் பரதனே மூத்தவன். அந்தப் பரதனுக்கு, பரதன் என்ற {தன்} பெயரிலேயே ஒரு மகனும், பாரதி என்று அழைக்கப்பட்ட மகளும் இருந்தனர். அந்தப் பரத நெருப்பானவர், பிரஜாபதியான பரத அக்னியின் {நெருப்பின்} மகனாவார்.
ஓ! பாரதக் குலத்தின் ஆபரணமே {யுதிஷ்டிரா}, அவன் {பரதன்} பெரிதும் மதிக்கப்படுவதால், அவர் பெரியவன் {பாவகன்} என்று அழைக்கப்பட்டான். வீரை என்பவள் பரத்வாஜனின் மனைவியாவாள்; அவள் வீரன் என்பவனைப் பெற்றெடுத்தாள். அவன் {வீரன்} சோமனைப் போலத் தெளிந்த நெய்யால் வழிபடப்படுகிறான் என்று அந்தணர்களால் சொல்லப்படுகிறது. இரண்டாம் கட்ட தெளிந்த நெய் காணிக்கைகளில் அவன் {வீரன்} சோமனுடன் சேர்த்துக் கொள்ளப்படுகிறான். அவன் {வீரன்} ரதப்பிரபு, ரதத்வானன், கும்பரேதன் என்றும் அழைக்கப்படுகிறான். அவன் {வீரன்} தனது மனைவியான சரயு மூலம் சித்தி என்ற மகனைப் பெற்றெடுத்தான். அவன் தனது ஒளியினால் சூரியனையே மறைத்தான். நெருப்பு வேள்விக்குத் தலைமையேற்கும் மேதையாக இருப்பதால், அவன் {சித்தி} நெருப்புக் குறித்த துதிகளில் எப்போதும் குறிக்கப்படுகிறான்.
நிஸ்சயவனன் {2} {பிருஹஸ்பதியின் இரண்டாவது மகன்} என்ற நெருப்பானவன் பூமியை மட்டும் புகழ்கிறான்; அவன் புகழ், பகட்டு மற்றும் செழிப்பால் பாதிக்கப்படுவதில்லை. சுத்தமான சுடரால் ஒளிரும் பாவமற்ற நெருப்பான சத்யன் அவனது மகனாவான். இவன் சுவடுகள் அனைத்திலிருந்தும் விடுபட்டவன். பாவங்களால் இவன் தீட்டுப்படுவதில்லை. காலத்தைச் சீராக்குபவன் இவனே {சத்யனே}. அந்த நெருப்புக்கு {சத்யனுக்கு} நிஷ்கிருதி என்ற மற்றொரு பெயரும் உண்டு. அவன் இங்கிருக்கும் அனைத்து வெளிப்படையான உயிரினங்களுக்கும் நிஷ்கிருதியை {நிவாரணத்தை} அளித்ததால் அவனுக்கு அப்பெயர் உண்டானது. சரியாக வழிபடப்படும்போது அவன் {சத்யன்} நற்பேறை அளிக்கிறான். அனைத்து நோய்களையும் உருவாக்கும் அவனது {சத்யனின்} மகன் சுவனன் என்று அழைக்கப்படுகிறான். அவனால் கடுமையாகப் பாதிக்கப்படும் மக்கள் சத்தம் போட்டு அழுகிறார்கள். அவன் {சுவனன்} புத்திக்கூர்மையுடன் இந்த அண்ட ம் முழுவதும் உலவுகிறான். மற்றுமொரு நெருப்பு (பிருஹஸ்பதியின் மூன்றாவது மகன்), ஆன்ம ஞானம் கொண்ட மனிதர்களால் விஸ்வஜித் {3} என்று அழைக்கப்படுகிறான்.
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அனைத்து உயிரினங்களிலும் உணவைச் செரிக்கச் செய்யும் அகவெப்பமாக அறியப்படும் அந்த நெருப்பான பிருஹஸ்பதியின் நான்காவது மகனானவன் அனைத்து உலகங்களாலும் விஸ்வபுக் {4} என்ற பெயரால் அறியப்படுகிறான். இவன் சுயக்கட்டுப்பாடு, பெரும் அறத்தகுதி கொண்ட பிரம்மச்சாரியாவான். இவன் பக வேள்விகளில் அந்தணர்களால் வழிபடப்படுகிறான். புனித நதியான கோமதி இவனது {விஸ்வபுக்கின்} மனைவியாவாள். அவள் மூலமாகவே அறமனம் கொண்ட மனிதர்கள் தங்கள் சடங்குகளைச் செய்கிறார்கள். நீரைக் குடிக்கும் பயங்கரமான கடல் நெருப்பான வடவன் {படபன்} {5} பிருஹஸ்பதியின் ஐந்தாவது மகனாவான். இந்தப் பிரம்ம நெருப்புக்கு மேல்நோக்கி நகரும் ஆற்றல் இருக்கிறது. அதனால் அவன் {வடவன்} உத்திரபாக் என்று அழைக்கப்படுகிறான். உயிர்க்காற்றாக அழைக்கப்படும் பிராணனில் அவன் அமர்ந்திருக்கிறான்.
{பிருஹஸ்பதியின்} ஆறாவது மகன் பெரும் சுவிஸ்டகிருதன் {6} என்று அழைக்கப்படுகிறான். அவனுக்குக் காணிக்கைகள் சுவிஷ்டமாகின்றன (சு என்றால் அற்புதமாக, இஷ்டம் என்று காணிக்கை). உதக்தாரக் காணிக்கையின் போது அவன் எப்போதும் மதிக்கப்படுகிறான். அனைத்து உயிரினங்களும் பொறுமையற்றுப் போகும்போது, மன்யௌதி {Manyauti} என்று அழைக்கப்படும் நெருப்பு பெரும் கோபத்தால் நிறைகிறது. இந்தத் தவிர்க்க முடியாத கொடூரமான மற்றும் எளிதில் மிகவும் கோபம் கொள்ளும் நெருப்பான இவள் பிருஹஸ்பதியின் மகளாவாள். சுவாகா {1} என்று அறியப்படும் இவள் அனைத்துப் பொருட்களிலும் இருக்கிறாள். (சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களின் ஆதிக்கத்தால் சுவாகாவுக்கு மூன்று மகன்கள் இருந்தனர்). முதல் காரணத்தால் அவள் தேவலோகத்திலும் நிகரற்ற அழகு படைத்த மகனைப் பெற்றாள். இதன் காரணமாக அவன் காம நெருப்பு என்று தேவர்களால் அழைக்கப்பட்டான். {காமன் என்பவன் காதல் தேவன் என்கிறார் கங்குலி}. (இரண்டாம் காரணத்தால்) அவள் அமோகன் அல்லது வெல்ல முடியாத நெருப்பு என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றாள். அவன் போரில் எதிரிகளை அழிப்பவனாக இருந்தான். வெற்றியில் உறுதிகொண்டு, தனது கோபத்தைத் தடுக்கும் அவன் {அமோகன்}, வில் தாங்கியவனாகவும், தேரில் அமர்ந்தவனாகவும், மலர்மாலைகள் அணிந்தவனாகவும் காட்சி தருகிறான். (மூன்றாவது குணத்தின் செயலால்) அவள், மூன்று உக்தங்களால் புகழப்பட்டு உக்தன் (முக்தி) என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றாள். {நமது செயல்களுக்கு அற்புதமான காரணமான உடலே உக்தம், உடலுக்கு உயிரூட்டுகிற ஆன்மா இரண்டாவது உக்தம், ஆன்மாவைத் தூண்டும் பரமாத்மா மூன்றாவது உக்தம் என்று இந்த இடத்தில் சொல்கிறார் கங்குலி}. இவனே {உக்தனே} பெரிய வார்த்தையை {கடவுள் என்ற பெரிய வார்த்தை என்கிறார் கங்குலி} தோற்றுவித்தவன். எனவே இவன் சமஸ்வாசன் அல்லது ஓய்வுக்கான {முக்திக்கான} வழி என்று அறியப்படுகிறான்” என்றார் {மார்க்கண்டேயர்}.
அசுரர்கள் பாரசீகத்தின் தேவர்களா? – வனபர்வம் பகுதி 219-அக்னிகளான உக்தன் மற்றும் தபசின் பிள்ளைகள் குறித்து மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அவன் (உக்தன்), பிரம்மனின் புகழுக்கு ஒப்பான ஒரு பக்திமிக்க மகனைப் பெற பல வருடங்களாக நீடித்த கடுந்தவத்தைச் செய்தான். காசியபர், வசிஷ்டர், பிராணனின் மகனான பிராணன், அங்கிரசின் மகனான சியவணன், சுவர்ச்சகர் ஆகிய ஐந்து புனித நெருப்புகளின் துணைகொண்டு வியாஹிருதி மந்திரங்களை உச்சரித்துப் பிரார்த்தனை செய்யப்பட்டபோது, இயக்கம் தொடர்பான (படைப்பு) கொள்கைகளுடனும் ஐந்து வெவ்வேறு வண்ணங்களும் நிறைந்த மிகவும் பிரகாசமான ஆற்றல் (சக்தி) அங்கே எழுந்தது.
சுடர் விடும் நெருப்பின் நிறத்தில் அதன் தலை இருந்தது, அதன் கரங்கள் சூரியனைப் போலப் பிரகாசமாக இருந்தன. அதன் தோலும், கண்களும் தங்க நிறத்தில் இருந்தன. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அதன் பாதங்கள் கறுமையாக இருந்தன. அதன் ஐந்து வண்ணங்களும், அந்த ஐந்து மனிதர்களின் பெரும் தவத்தின் காரணமாக அதற்குக் கொடுக்கப்பட்டன. எனவே, இந்தத் தெய்வீகமானவன் {ஐந்து வண்ணமுள்ளவன் – பிரபாவனன்}, ஐந்து மனிதர்களுக்கு உடையவனாக விவரிக்கப்படுகிறான். அவனே ஐந்து இனங்களின் {கோத்திரங்களின்} முன்னோடியாவான்.
இப்படியே பத்தாயிரம் வருடம் தவம் செய்த பிறகு, அந்தப் பெரும் தவத்தகுதி படைத்தவன் {உக்தன்} படைப்புப் பணியைத் தொடங்கும் பொருட்டுப் பித்ருக்களுக்கு உடையதான பயங்கர நெருப்பு உற்பத்தியானது. தனது தலை மற்றும் வாயிலிருந்து அவன், வேகமாக வாழ்நாளை {ஆயுளை – உயிரை} அபகரிக்கும் பிருகத் மற்றும் ரதந்தாரா (பகல் மற்றும் இரவு) ஆகியவற்றைப் படைத்தான். சிவனைத் தனது தொப்புளிலும் {நாபியிலும்}, இந்திரனைத் தனது பலத்தில் இருந்தும், காற்று மற்றும் நெருப்பைத் தனது ஆன்மாவிலிருந்தும் படைத்தான். அவனது இரு கரங்களில் இருந்து உதத்தையும், அனுதத்தையும் படைத்தான்.
மனம், ஐம்புலன்கள் மற்றும் பிற உயிர்களையும் அவன் படைத்தான். இவற்றையெல்லாம் படைத்த அவன் {உக்தன்} பித்ருக்களின் ஐந்து மகன்களையும் படைத்தான். அவர்களில் பிரணிதி பிருகத்ரதனின் மகனாவான், பிருகத்ரதன் காசியபரின் மகனாவன். பானு சியவனனின் தெய்வமகனாவான். சௌபரன் சுவர்ச்சகனின் மகனாவான், அனுதாத்தன் பிராணனின் மகனாவான். இந்த இருபத்தைந்து பேரும் (அவனால் படைக்கப்பட்டதால்) புகழ்பெற்றவர்களாவர். தபஸ் என்பவன் வேள்விகளைத் தடுக்கும் பதினைந்து பிற தேவர்களையும் படைத்தான்.[1] அவர்கள் சுபீமன், பீமன், அதிபீமன், பீமபலன், அபலன், சுமித்ரன், மித்ரவந்தன், மித்ரசீனன், மித்ரவர்த்தனன், மித்ரதரமனனை {மித்ரதாமா} [2] மற்றும் சூரபிரவீரன், வீரன், சுவேகன், சூரவார்ச்சஸ், சூரஹந்திரி ஆகியோராவர். இந்தத் தேவர்கள் {அசுரர்கள்}, மூன்று வர்க்கமாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு வர்க்கத்தில் ஐந்து பேர் உள்ளனர். அவர்கள் இவ்வுலகில் நிலைநிறுத்தப்பட்டு, சொர்க்கத்தில் நடைபெறும் தேவர்களின் வேள்விகளை அழிக்கின்றனர்; அவர்கள் {அழிவுத் தேவர்கள் [அ] அசுரர்கள்} அவர்களின் {தேவர்களின்} நோக்கங்களைக் கலங்கடித்து, அவர்களின் {தேவர்களின்} தெளிந்த நெய் காணிக்கையைக் {தானபலியைக்} கெடுக்கின்றனர். இதைத் தேவர்களுக்கு நீர்க்காணிக்கைகளைச் சுமந்து செல்லும் புனித நெருப்புகளை மீறுவதற்காக மட்டுமே இதை அவர்கள் {அசுரர்கள்} செய்கின்றனர். வேள்வியை நடத்தும் புரோகிதர்கள் கவனமாக இருந்தால், அவர்கள் {புரோகிதர்கள்}, அவர்களின் {அசுரர்களின்} நினைவாகத் தான பலியை வேள்விப்பீடத்திற்கு வெளியே வைக்கின்றனர். புனித நெருப்பு வைக்கப்படும் அந்தக் குறிப்பிட்ட இடத்திற்கு அவர்களால் {அசுரர்களால்} செல்ல முடியாது. அடியவர்களின் காணிக்கைகளைத் {தான பலிகளை} தங்கள் இறகுகள் மூலம் அவர்கள் {அசுரர்கள்} சுமந்து செல்கிறார்கள். பாடல்கள் {மந்திரங்கள்} மூலமாக அமைதிப்படுத்தப்படும்போது, அவர்கள் வேள்விச்சடங்குகளைக் கலைப்பதில்லை.
தபசின் மற்றொரு மகனான பிருகதுக்தன், பூமிக்கு சொந்தமானவன் ஆவான். அவன் இவ்வுலகில், அக்னிஹோத்திர வேள்விகள் செய்யும் பக்திமான்களால் வழிபடப்படுகிறான். தபசின் மற்றொரு மகன் ரத்நதரன் என்று அறியப்படுகிறான். அவனது நினைவாகவே வேள்விக் காணிக்கைகள் மித்ரபிந்தனுக்கு வழங்கப்படுகிறது என்று வேள்வியை நடத்தும் புரோகிதர்கள் அவனைக் {ரத்னதரன்} குறித்துச் சொல்கிறார்கள். கொண்டாடப்படும் தபஸ் இப்படியே தனது மகன்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.
அஷ்டகபாலச் சடங்குகள்! – வனபர்வம் பகுதி 220-பரதன், பானு, பிருகத்பானு, மனு, ஆகிய நெருப்புகளின் சந்ததிகளையும், அக்னிகளுக்குள் ஏற்படும் தொடர்புகளால் விளையும் தோஷங்களை நிவர்த்தி செய்ய அஷ்டகபாலச் சடங்கு செய்வது ஆகியவற்றையும் மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பரதன் என்று அழைக்கப்பட்ட நெருப்பு, தவத்தின் கடும் விதிகளால் கட்டப்பட்டு இருந்தான். அவனது நெருப்புக்கு புஷ்டிமதி என்று மற்றொரு பெயரும் உண்டு. அனைத்து உயிர்களுக்கும் புஷ்டியைக் (வளர்ச்சியைக்) கொடுப்பதால் அவன் திருப்தி அடைகிறான். அதன் காரணமாகவே அவன் பரதன் (அல்லது பேணிக் காப்பவன்) என்று அழைக்கப்படுகிறான். சிவன் என்ற பெயர் கொண்ட மற்றொரு நெருப்பானவன், சக்தி (இயற்கை சக்திகளின் தலைமை தெய்வம்) வழிபாட்டுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்தான். துயரத்தில் சிக்கியிருக்கும் அனைத்து உயிர்களையும், துன்பங்களில் இருந்து விடுவிப்பதால் அவன் சிவன் (நல்லதைக் கொடுப்பவன்) என்று அழைக்கப்படுகிறான். பெரும் தவச் செல்வத்தை தபஸ் பெற்றிருந்ததால் {தபன் என்று அழைக்கலாம்}, அதை {தவச்செல்வத்தை} அடைவதற்காகப் புரந்தரன் என்ற பெயர் கொண்ட புத்திசாலி மகன் பிறந்தான். ஊஷ்மா என்ற இன்னொரு மகனும் பிறந்தான். இந்த நெருப்பு {ஊஷ்மா} அனைத்துப் பொருட்களின் ஆவியிலும் {vapour உஷ்ணமாக} காணப்படுகிறது. மேலும் மூன்றாவதாக மனு என்ற மகன் பிறந்தான். அவன் பிரஜாபதியாக அதிகாரம் செய்தான்.
பிறகு, வேதங்களைக் கற்ற அந்தணர்கள், சம்பு என்ற நெருப்பின் {நான்காவது புதல்வனின்} சுரண்டல்களைப் பேசுகின்றனர். அதன்பிறகு பிரகாசமான ஆவஸ்த்தியன் என்ற நெருப்பைக் {ஐந்தாவது மகன்} குறித்து அந்தணர்கள் பேசுகின்றனர். இப்படியே தபன், தங்கம் போன்ற பிரகாசமுடைய ஐந்து நெருப்புகளைப் படைத்தான். இவர்கள் அனைவரும் வேள்விகளில் அளிக்கப்படும் சோம பானத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். (ஒரு பகலின் உழைப்புக்குப் பிறகு) களைத்துப் போன சூரிய தேவன், பிரசந்த நெருப்பாக அறியப்படுகிறான். அவனே பூமியில் உள்ள பயங்கரமான அசுரர்களையும், இன்னும் பலவகைப்பட்ட பிற உயிரினங்களையும் படைத்தவனாவான். அங்கிரசும், தபனின் மகனான பானுவைப் பிரஜாபதியாகப் படைத்தான். வேதங்களைக் கற்ற அந்தணர்களால் அவன் {பானு}, பிருகத்பானு (பெரும் பானு) என்றும் அழைக்கப்படுகிறான். பானு சுப்ரஜா என்பவளையும், பிருகத்பானு சூரியனின் மகளையும் திருமணம் செய்தனர். அவர்கள் ஆறு மகன்களைப் பெற்றனர்; அவர்களது சந்ததியைக் குறித்துக் கேள்.
பலவீனமானவர்களுக்குப் பலத்தைக் கொடுப்பவன் பலதன் (பலத்தைக் கொடுப்பவன்) என்ற நெருப்பாவான். அவன் பானுவின் முதல் மகனாவான். அனைத்து கூறுகளும் {சக்திகளும்} அமைதியான நிலையில் இருக்கும்போது பயங்கரமாகத் தெரியும் மற்றுமொரு நெருப்பு மஞ்சுமான் {மன்யுமான்} என்று அழைக்கப்படுகிறான். அவன் பானுவின் இரண்டாவது மகனாவான். தர்சா மற்றும் பௌர்ணமஸ்யா வேள்விகளின் யாருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாகத் தெளிந்த நெய் காணிக்கையாகத் தரப்படுகிறதோ, அவன் இவ்வுலகில விஷ்ணு (பானுவின் மூன்றாவது மகன்) என்று அறியப்படுகிறான். அவன் அங்கிரஸ் என்றும் திருத்திமான் என்றும் அழைக்கப்படுகிறான். ஆக்கிரயணம் என்ற காணிக்கை, இந்திரனுடன் சேர்ந்து யாருக்கு அளிக்கப்படுகிறதோ அவன் ஆக்கிரயணன் நெருப்பு என்று அழைக்கப்படுகிறான். அவன் பானுவின் (நாலாவது) மகனாவான். அக்கிரஹன் பானுவின் ஐந்தாவது மகனாவான். சாதுர்மாஸ்ய (நான்கு மாத) சடங்குகளின் தினமும் காணிக்கைகளின் ஊற்றாக இருப்பவன் அவனே {ஆக்கிரஹன்}. ஸ்துபன் என்பவன் பானுவின் ஆறாவது மகனாவான்.
பானு என்ற பெயரால் அறியப்படும் மனுவின் மற்றுமொரு {மூன்றாவது} மனைவியின் பெயர் நிசை. அவள் {ரோஹிணி என்கிற} ஒரு மகளையும், இரண்டு அக்னிசோமன்களையும் {என்ற இரு மகன்களையும்}, மேலும் ஐந்து பிற அக்னி தேவர்களையும் பெற்றெடுத்தாள். மேக தேவர்களுடன் {மேகங்களின் தேவர்களுடன்} சேர்த்து முதல் காணிக்கையால் மரியாதை செய்யப்படும் பிரகாசமிக்க நெருப்பு {அக்னி} தேவன் வைஸ்வானரன் என்று அழைக்கப்படுகிறான். உலகங்கள் அனைத்துக்கும் தலைவன் என்று அழைக்கப்படும் மற்றுமொரு நெருப்பு விஸ்வபதி என்று அழைக்கப்படுகிறான். அவன் மனுவின் இரண்டாவது மகனாவான். மனுவின் மகள், சுவிஷ்டகிருத் என்று அழைக்கப்படுகிறாள். அவளுக்குச் செலுத்தப்படும் காணிக்கையால் ஒருவன் பெரும் தகுதிகளை அடைவதால் அவளுக்கு அப்பெயர் ஏற்பட்டது. அவள் ஹிரண்யகசியுவின் மகளாக இருப்பினும், தனது தீச்செயல்களால் அவள் அவனுக்கே {ஹிரண்யகசிபுவுக்கே} மனைவியானாள். இருப்பினும் அவள் பிரஜாபதிகளில் ஒருவராக இருக்கிறாள். உடலுக்கு அசைவைக் கொடுத்து, அனைத்து உயிர்களின் உயிர்க்காற்றை இருக்கையாகக் கொண்ட மற்றொரு நெருப்பு சன்னிஹிதன் என்று அழைக்கப்படுகிறான். ஒலி மற்றும் உருவம் சம்பந்தமான நமது கருத்துகளுக்கு அவனே காரணமாவான். நெருப்புக்கு ஆதரவாக இருந்து, கருப்பு வெள்ளை கறைகளால் குறிக்கப்படும் தெய்வீக ஆவி, பாவமற்றவனாக இருப்பினும், விரும்பிய கர்மத்தை சாதிப்பவனாக இருக்கிறான். அவனை ஞானம் கொண்டோர் கபில நெருப்பாகவும் பெரும் முனிவரகாவும் கருதுகின்றனர். அவனே சாங்கிய யோக முறையைத் தோற்றுவித்தவனாவான்.
எந்த நெருப்பின் மூலம், உலகின் பிற உயிரினங்கள் செய்யும் விசித்திரமான சடங்கில் ஆக்கிரம் என்று அழைக்கப்படும் தங்கள் காணிக்கைகளை அடிப்படை ஆவிகளானவர்கள் பெறுகிறார்களோ, அந்த நெருப்பானவன் அக்கிரணி என்று அழைக்கப்படுகிறான். அக்னி ஹோத்ர சடங்குகளுக்குக் குறைபாடுகளால் அழிவு ஏற்படும்போது அதைக் களைய உண்டான இந்தப் பிற பிரகாசமான நெருப்புகள் உலகில் புகழுடன் இருக்கின்றனர். காற்றின் செயலால் இந்த நெருப்புகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்தால், அந்தத் தோஷத்தைக் களைய, சுச்சி என்ற நெருப்பை மதித்து அஷ்டகபால சடங்கு செய்யப்பட வேண்டும். தெற்கு நெருப்பு {தக்ஷிணாக்னி} மற்ற இரண்டு நெருப்புகளுடன் {கார்ஹபதத்தோடும், ஆஹவனீயத்தோடும்} தொடர்பு கொண்டால், விதி என்ற நெருப்பை மதித்து அஷ்டகபால சடங்கு செய்யப்பட வேண்டும். தங்கள் இடத்தில் இருக்கும் நெருப்புகளான நிவேசம், தேவாக்னி என்ற நெருப்புடன் தொடர்பு கொண்டால், அந்தத் தோஷத்தைக் களைய, சுச்சி என்ற நெருப்பை மதித்து அஷ்டகபால சடங்கு செய்யப்பட வேண்டும்.
நிலைத்த நெருப்பானது, தனது மாதாந்திர காலத்தில் ஒரு பெண்ணால் தொடப்பட்டால், அந்தத் தோஷத்தைக் களைய, தஸ்யுமான் என்ற நெருப்பை மதித்து அஷ்டகபால சடங்கு செய்யப்பட வேண்டும். அக்னிஹோத்திர சடங்குகள் செய்யப்படும் போது, எந்த உயிரினத்தின் இறப்பைப் பற்றிப் பேசினாலோ, விலங்குகள் இறந்தாலோ, சுரபிமான் என்ற நெருப்பை மதித்து அஷ்டகபால சடங்கு செய்து அந்தத் தோஷம் நிவர்த்திச் செய்யப்பட வேண்டும். நோயால் துன்புறும் அந்தணன், மூன்று இரவுகள் புனித நெருப்புக்குக் காணிக்கை அளிக்க முடியாவிட்டால், வடக்கு நெருப்பை {உத்திராக்னியை} மதித்து அஷ்டகபால சடங்கைச் செய்து அதைத் திருத்த வேண்டும். தர்சத்தையும், பௌர்ணமாஸ்ய சடங்குகளையும் செய்தவன், பதிகிருத் நெருப்பை மதித்து அஷ்டகபால சடங்கைச் செய்து நிவர்த்திச் செய்து கொள்ள வேண்டும். படுக்கையறையில் இருக்கும் நெருப்புக்கும், நிலைத்தப் புனித நெருப்புக்கும் தொடர்புண்டானால், அக்னிமான் நெருப்பை மதித்து அஷ்டகபாலச் சடங்குகளைச் செய்து அது நிவர்த்திச் செய்யப்பட வேண்டும்.
அத்புத நெருப்பு! – வனபர்வம் பகுதி 221-அத்புத நெருப்பின் மகிமையை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “சுவாகா என்ற {இங்கு குறிப்பிடப்படுவது ஆண்பால் – மற்ற பதிப்புகளில் ஸஹன் என்ற பெயர் குறிப்பிடப்படுகிறது} நெருப்பின் விருப்பமான மனைவியான முதிதை, நீரில் வாழ்பவள் ஆவாள். பூமி மற்றும் வானத்தின் பிரதிநிதியான சுவாகா, தனது மனைவியிடத்தில், அத்வந்தன் {Advanta} என்ற உயர்ந்த புனிதமான நெருப்பைப் பெற்றான். இந்த நெருப்பானவன் {அத்வந்தன்}, அனைத்து உயிரினங்களுடைய அக ஆன்மாவின் ஆட்சியாளன் எனக் கற்றறிந்த அந்தணர்களுக்கு மத்தியில் ஒரு மரபு {ஐதீகம்} உள்ளது. அவன் {அத்வந்தன்} வழிபடத்தகுந்தவன், பிரகாசமுடையவன், இங்குள்ள அனைத்து பெரும் பெரும் பூதங்களின் தலைவனுமாவான். கிரகபதி {Grihapati} என்று அழைக்கப்படும் நெருப்பானவன், அனைத்து வேள்விகளிலும் எப்போதும் வழிபடப்பட்டு, இவ்வுலகில் படைக்கப்படும் காணிக்கைகள் அனைத்தையும் தெரிவிப்பவனாவான். சுவாகாவின் பெருமைமிக்க மகனான பெரும் அத்புதன் {Adbhuta} என்ற நெருப்பு நீர்நிலைகளின் {கடலின்} ஆன்மாவாகவும், வானின் இளவரசனாகவும், பெரியன அனைத்துக்கும் தலைவனாகவும் இருக்கிறான்.
அவனது {அத்புதனின்} (மகன்) பரதன் எனும் நெருப்பு, அனைத்து உயிரினங்களின் சடலங்களையும் உட்கொள்கிறான். அக்னிஷ்டோமா வேள்வியில் அவனது {பரதனின்} முதல் கிராது நியதா என்ற அழைக்கப்படுகிறது. தன்னை அணுகும் நியதனைக் காணும், தலைமை நெருப்பான சுவாகா, மாசு குறித்த பயத்தால் கடலுக்குள் தன்னை ஒளித்துக் கொண்டான். (முன்பொருமுறை) அவனை எல்லாத் திக்குகளிலும் தேடிய தேவர்களால், அவனைக் {சுவாகாவைக்} காண முடிவில்லை. அப்போது அவன் {சுவாகா} அதர்வன் {Atharvan} என்ற நெருப்பைக் கண்டு அவனிடம், “ஓ! வீரனே, நீ தேவர்களுக்கான காணிக்கைகளைச் சுமந்து வா! நான் பலவீனமடைந்து இயலாத நிலையில் இருக்கிறேன். சிவப்புக் கண் கொண்ட நெருப்பாக உன்னத நிலையை அடைந்து, எனக்கு ஆதரவளி” என்று கேட்டான். இப்படி அறிவுறுத்தப்பட்ட அதர்வன் என்ற நெருப்பாவேன் வேறு இடத்திற்குச் சென்று விட்டான். ஆனால் அவன் மறைந்திருந்த இடத்தை மீன்கள் உரைத்தன. அதற்கு அந்த நெருப்பானவன் {அதர்வன்}, “அனைத்து உயிர்களுக்கும், நீங்கள் பல வகைகளிலும் உணவாவீர்கள்” என்று அந்த மீன்களுக்குச் சாபமிட்டான்.
பிறகு காணிக்கைகளைச் சுமந்து செல்பவன் {சுவாகா} அதர்வனிடம் (முன்பு போலவே) சொன்னாலும், தேவர்களால் வேண்டிக் கொள்ளப்பட்டாலும், அவன் {அதர்வன்} அவர்களுக்கான காணிக்கைகளைத் தொடர்ந்து சுமந்து செல்ல சம்மதிக்கவில்லை. அதன்பிறகு அவன் {அதர்வன்} உணர்வற்றுப் போய் உடனே தனது ஆவியை விட்டான். தனது பூதவுடலை விட்ட அவன் {அதர்வன்}, பூமியின் குடலுக்குள் சென்றான். பூமியினுடன் ஏற்பட்ட தொடர்பால், அவன் வித்தியாசமான உலோகங்களைப் படைத்தான். அவனது சீழில் {சீழ்} இருந்து சக்தியும் {கந்தமும்} வாசனையும் எழுந்தன; எலும்புகளிலிருந்து தேவதாரு மரங்களும்; சளியிலிருந்து {கபத்திலிருந்து} கண்ணாடிகளும் {ஸ்படிகங்களும்}; நிண நீரிலிருந்து {பித்தத்திலிருந்து} மரகதக் கற்களும்; கல்லீரலில் இருந்து கருப்பு இரும்பும் {உருக்கும்} எழுந்தன. உலகம் இந்த மூன்று பொருட்களால் {மரம், கல் மற்றும் இரும்பு} அலங்கரிக்கப்பட்டன. மேகங்கள் அவனது நகங்களிலிருந்தும், பவளங்கள் அவனது நரம்புகளிலிருந்தும் உண்டாக்கப்பட்டன. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவனது உடலிலிருந்து பலதரப்பட்ட வேறு உலோகங்களும் உருவாக்கப்பட்டன.
இப்படித் தனது பூதவுடலை விட்ட அவன் {அதர்வன்}, ஒப்பற்ற தவத்தில் இருந்தான். பிருகு மற்றும் அங்கிரசின் தவத்தின் மூலம் அவன் {மீண்டும்} எழுப்பப்பட்டான். இப்படித் தவத்தால் திருப்தியடைந்த அந்தப் பலமிக்க நெருப்பு {அதர்வன்}. உடனே சுடர்விட்டு எரிந்தான். ஆனால் முனிவர்களைக் கண்ட அவன் (அதர்வன்), மீண்டும் நீர்க்கழிவுகளின் பாதுகாப்பை நாடினான். அந்த நெருப்பானவன் ஒளிந்து போனதும், முழு உலகமும் அச்சமடைந்து, அதர்வனின் பாதுகாப்பை நாடின. தேவர்களும் மற்றவர்களும் அவனை வழிபட ஆரம்பித்தனர். எதிர்பார்ப்பு ஆர்வமுமாக இருந்த மனிதர்கள் மத்தியில் அதர்வ முனி கடல் முழுவதையும் ஆராய்ந்து தேடி {கடைந்து} அந்த நெருப்பைக் {அதர்வா நெருப்பை} கண்டுபிடித்துப் படைப்புத் தொழிலை ஆரம்பித்தான்.
இப்படியே பழங்கலாத்தில் நெருப்பு அழிக்கப்பட்டு, மீண்டும் உயிரோடு வழிபடத்தக்க அதர்வனால் அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது அவன் {நெருப்பு} அநேகமாக அனைத்து உயிரினங்களின் காணிக்கைகளையும் சுமந்து செல்கிறான். கடலில் வாழ்ந்து கொண்டு, பலதரப்பட்ட நாடுகளுக்குப் பயணிக்கும் அவன், வேதங்களில் குறிக்கப்படும் பலதரப்பட்ட நெருப்புகளைப் படைக்கிறான்.
சிந்து நதி {Indus}, (பஞ்சாபின்} ஐந்து நதிகள், சோணம் {Sone}, தேவிகை {Devika}, சரஸ்வதி {Saraswati}, கங்கை {Ganga}, சதக்கும்பை {Satakumbha}, சரயு {Sarayu}, கண்டகி {Gandaki}, சர்மண்வதி {Charmanwati}, மஹி {Mahi}, மேதை {Medha}, மேதாதிதி {Medhatithi}, மூன்று நதிகளான தாமராவதி {Tamravati}, வேத்திரவதி {Vetravati}, கௌசிகி {Kausiki}, தமசை {Tamasa}, நர்மதை {Narmada}, கோதாவரி {Godavari}, வேணை {Vena}, உப வேணை {Upavena}, பீமை {Bhima}, வடவை {Vadawa}, பாரதி {Bharati}, சுப்ரயோகை {Suprayoga}, காவேரி {Kaveri}, மர்முரை {Murmura}, துங்கவேணி {Tungavenna}, கிருஷ்ணவேணி {Krishnavenn}, கபிலை {Kapila} ஆகிய நதிகள், ஓ! பாரதா {யுதிஷ்டிரா} நெருப்புகளுக்கு அன்னையராவர் என்று சொல்லப்படுகிறது!
அத்புதன் {Adbhutha} என்ற அழைக்கப்பட்ட நெருப்புக்கு பிரியா {Priya} என்று பெயரில் ஒரு மனைவி இருந்தாள்; அவள் {பிரியா} மூலமாக அவனுக்குப் பிறந்த மகன்களின் விபூ {Vipu} என்ற பெயரில் மூத்த மகன் ஒருவன் இருந்தான். எத்தனை நெருப்புகள் முன்பு சொல்லப்பட்டனவோ அந்த அளவுக்குப் பலவிதமான சோம வேள்விகளும் உண்டு. இந்த நெருப்புக் குலங்கள் அத்தனையும், பிரம்மனின் ஆவியில் முதலில் பிறந்தவர்களும், அத்ரியின் குலத்தில் இருந்து எழுந்தவர்களும் ஆவர். படைப்புகளை விரிவாக்கம் செய்ய எண்ணிய அத்ரி தனது சுய மனதால் இந்த மகன்களைப் பெற்றார். இச்செயலால், அந்த நெருப்புகள் அத்தனையும் அவரது சொந்த பிரம்ம உடல் கட்டமைப்புக்குள் இருந்து வெளிப்பட்டன. நான் இந்த நெருப்புகளின் மூலம் குறித்த வரலாற்றை உனக்கு விவரித்துவிட்டேன். அவை, பெரும் பிரகாசமும், நிகரற்ற சக்தியும், கொண்ட அவர்கள் {நெருப்புகள்} பெரியவர்களாவர். அவர்களே இருளை அழிப்பவர்களாக இருக்கிறார்கள். அந்த நெருப்புகளின் சக்திகள், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள அத்புத நெருப்பைப் போன்றனவே என்பதை அறிந்து கொள். இந்த நெருப்புகள் அத்தனையும் ஒன்றே. ஜோதிஷ்டோமா வேள்வியில் வருவதைப் போல, அங்கிரசின் உடலில் இருந்து பலதரப்பட்ட உருவத்தில் வந்ததால், முதலில் பிறந்த அந்த வழிபடத்தகுந்தவன் {அத்புதன்} முதன்மையானவன் என்பதை அறிய வேண்டும். மந்திரங்களால் முறையாக வழிபட்டால், அனைத்து உயிர்களின் காணிக்கைகளைத் தேவர்களுக்குச் சுமந்து செல்லும் அக்னியுடைய {நெருப்புகளுடைய} பெரும் குலத்தின் வரலாற்றை, இப்படியே உனக்கு நான் விவரித்துவிட்டேன்.
இந்திரன் கேசின் மோதல்! – வனபர்வம் பகுதி 222-ஆதிகாலத்தில் அசுரர்களிடம் தேவர்கள் தொடர் தோல்வி காண்பது; அதனால் தேவர்கள் படைக்கு ஒரு பலமிக்கத் தளபதி வேண்டும் என்று இந்திரன் நினைப்பது; இந்திரன் மானச மலைக்குச் செல்வது; அங்கு அவனுக்கும் கேசினுக்கும் இடையே நடக்கும் மோதல் ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! குரு குலத்தின் பாவமற்ற வாரிசே {யுதிஷ்டிரா}, அக்னி குலத்தின் பல்வேறு கிளைகளை நான் உனக்கு விவரித்துவிட்டேன். இப்போது, புத்திக்கூர்மை கொண்ட கார்த்திகேயனின் பிறப்புக் கதையைக் கேள். நான் உனக்கு, பிரம்ம முனிவர்களின் மனைவியரிடம், அத்புத நெருப்பு {அக்னி} பெற்ற அற்புதமான, புகழ்பெற்ற, உயர்ந்த சக்தி கொண்ட மகனைக் குறித்துச் சொல்கிறேன். பழங்காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதில் சுறுசுறுப்பாக இருந்தார்கள். பயங்கரமான அசுரர்கள் தேவர்களை வீழ்த்துவதில் எப்போதும் வெற்றி பெற்றார்கள்.
அவர்களால் {அசுரர்களால்} தனது படையினர் கொல்லப்படுவதைக் கண்ட புரந்தரன் {இந்திரன்}, தேவர்கள் படைக்கு ஒரு தலைவனைக் கண்டுபிடிக்கும் ஆவல் கொண்டு, தனக்குள்ளேயே, “தேவர்கள் படை அசுரர்களால் முறியடிக்கப்படுவதைக் கண்டு வீரத்துடன் அப்படையைப் பாதுகாக்கும் ஒரு பலமிக்கவனை நான் கண்டுபிடிக்க வேண்டும்” என்று ஆலோசித்தான். பிறகு அவன் {இந்திரன்} மானச மலைகளுக்குச் சென்றான். அங்கே அவன் இந்தச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது, “யாராவது ஒருவர் விரைவாக வந்து என்னைக் காக்கட்டும். அவன் எனக்கு ஒரு கணவனைக் காட்டட்டும் அல்லது அவனே எனக்குக் கணவனாகட்டும்” என்ற ஒரு பெண்ணின் இதயத்தைத் தொடும் அழுகுரலைக் கேட்டான்.
புரந்தரன் {இந்திரன்} அவளிடம், “அஞ்சாதே பெண்ணே!” என்று சொன்னான். இப்படிச் சொன்ன அவன், அங்கே தலையில் கிரீடத்துடனும், கைகளில் கதாயுதத்துடனும், உலோகங்களின் மலை போலத் தூரத்தில் நின்று கொண்டிருக்கும் (அசுரன்) கேசினைக் {Kesin} கண்டான். அவன் {கேசின்} அந்தப் பெண்ணைத் தனது கையில் பிடித்து வைத்திருந்தான். வாசவன் அந்த அசுரனிடம் {கேசினிடம்}, “ஏன் நீ இந்தப் பெண்ணிடம் இவ்வாறு இழிவாக நடந்து கொள்கிறாய்? என்னை வஜ்ரத்தைத் தாங்கும் தேவன் {இந்திரன்} என அறிந்து கொள். இந்தப் பெண்ணிடம் வன்முறை செய்வதைவிட்டு விலகு” என்றான். அவனிடம் {இந்திரனிடம்} கேசின், “ஓ! சக்ரா {இந்திரா}, நீ இவளைத் தனியாக விடு. நான் இவளை அடைய விரும்புகிறேன். ஓ! பகனைக் கொன்றவனே {இந்திரா}, நீ உயிருடன் வீடு திரும்ப முடியுமா என்பதை நினைத்துப் பார்” என்றான்.
இவ்வார்த்தைகளைச் சொன்ன கேசின், இந்திரனைக் கொல்வதற்காகத் தனது கதாயுதத்தை வீசினான். அது {கதாயுதம்} வரும் வழியிலேயே வாசவன் {இந்திரன்} தனது வஜ்ராயுதத்ததால் அறுத்துப் போட்டான். பிறகு கோபத்தால் சீற்றமடைந்த கேசின் பெரும் கற்பாறையை அவன் {இந்திரன்} மீது வீசினான். இதைக் கண்ட நூறு வேள்விகள் செய்தவன் {இந்திரன்}, அவனது வஜ்ராயுதத்தால் அதைப் பிளந்து போட்டான். அது பூமியில் விழுந்தது. அந்தக் கற்பாறைக் குவியல் அவன் மீது விழுந்ததால், கேசின் காயப்பட்டான். இதனால் பலத்த துன்பத்துக்குள்ளான அவன் {கேசின்}, அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு ஓடினான். அந்த அசுரன் சென்றுவிட்ட பிறகு, இந்திரன் அந்த மங்கையிடம், “நீ யார்? யாருடைய மனைவி நீ? ஓ அழகான முகம் கொண்ட மங்கையே, எது உன்னை இங்கு அழைத்து வந்தது?” என்று கேட்டான் {இந்திரன்}.
அத்புதனும்! சுவாஹாவும்!! – வனபர்வம் பகுதி 223-பிரஜாபதியின் மகளான தேவசேனை, இந்திரனிடம் ஒரு பலமிக்கக் கணவனை வேண்டுவது; சூரியனும் சந்திரனும் சேர்ந்த ரௌத்திர முகூர்த்தத்தில் உண்டாகும் குழந்தையே அவளுக்குச் சிறந்த கணவனாக இருப்பான் என்று இந்திரன் பிரம்மனிடம் கோருவது; அத்புதன் என்ற நெருப்பானவன் சப்த ரிஷிகளின் மனைவியரிடத்தில் மையல் கொள்வது; காமத்தால் எரிந்த அவன் தன்னை அழித்துக் கொள்ளக் கானகம் சென்றது; அவன் மீது மையல் கொண்ட சுவாகா அவனை அடைய ஒரு தந்திரத்தைச் சிந்தித்தது…
அந்த மங்கை {இந்திரனிடம்}, “நான் (அனைத்து உயிர்களின் தலைவனான பிரம்மனின்) பிரஜாபதியின் மகள். என் பெயர் தேவசேனை. எனது தங்கையான தைத்தியசேனை இந்தக் கேசினால் நாசம் செய்யப்பட்டாள் {ravished}. நாங்கள் இரு சகோதரிகளும் எங்கள் பணிப்பெண்களுடன் இந்த மானஸ மலைகளில் இன்பமாக இருப்பதற்காகப் பிரஜாபதியின் அனுமதி பெற்று இங்கு வருவது வழக்கம். பெரும் அசுரனான கேசின் எங்களுக்குத் தினமும் தனது மரியாதையைச் செலுத்திவந்தான். ஓ! பகனை விழ்த்தியவனே {இந்திரா}, தைத்தியசேனை அவனுக்கு {அசுரன் கேசினுக்குச்} செவிமடுத்தாள். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. எனவே, தைத்தியசேனை அவனாள் எடுத்துச் செல்லப்பட்டாள். ஆனால், ஓ! சிறப்புமிக்கவனே {இந்திரா}, நீ உனது பலத்தால் என்னைக் காத்தாய். இப்போது, ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, நீ எனக்கு யாராலும் வெல்லமுடியாத கணவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்றாள் {தேவசேனை}. இதற்கு இந்திரன் {தேவசேனையிடம்}, “நீ எனக்குச் சித்தியின் மகளாவாய். உனது அன்னை, எனது தாயான தாக்ஷாயணிக்கு {தக்ஷனின் மகள் என்பதால் தாக்ஷாயணி} சகோதரி ஆவாள். இப்போது நான் உனது பராக்கிரமத்தைக் {பலத்தைக்} குறித்துக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.
அதற்கு அந்த மங்கை {தேவசேனை – இந்திரனிடம்}, “ஓ! நீண்ட கரங்களைக் கொண்ட வீரனே {இந்திரா}, நான் அபலம்[1] (பலமில்லாதவள்), ஆனால் எனது கணவர் பலமிக்கவராக இருக்க வேண்டும். என் தந்தையுடைய வரத்தின் பலத்தால், அவர் தேவர்களாலும், அசுரர்களாலும் மதிக்கப்படுவார்” என்றாள். இந்திரன் {தேவசேனையிடம்}, “ஓ! களங்கமற்றவளே {தேவசேனா}, உனது கணவன் என்ன மாதிரியான பலத்தைப் பெற்றிருக்க வேண்டும் என நீ விரும்புகிறாய் என நான் கேட்க விரும்புகிறேன்” என்றான். அதற்கு அந்த மங்கை {தேவசேனை – இந்திரனிடம்}, “ஆண்மையும், புகழும், சக்தியும் வாய்ந்து, பிரம்மத்துக்கு அர்ப்பணிப்புடன் தேவர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், உரகர்கள், ராட்சசர்கள், தீய மனம் கொண்ட தைத்தியர்கள் ஆகியோர் அனைவரையும் வீழ்த்த வல்ல, அனைத்து உலகங்களையும் அடக்கவல்லவரே எனது கணவராகலாம்”, என்றாள் {தேவசேனை}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அவளது பேச்சைக் கேட்ட இந்திரன் பெரும் துன்பத்துக்குள்ளாகி, தனக்குள்ளேயே, “இந்த மங்கையின் {தேவசேனையின்} விவரிப்புக்கு ஏற்ற ஒருவன் {கணவன்} இல்லையே” என்று ஆழ்ந்து சிந்தித்தான். சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட அந்தத் தேவன் {இந்திரன்}, உதய மலையில் [2] உதிக்கும் சூரியனையும், அந்தச் சூரியனுக்குள் வழுக்கிச் செல்லும் பெரும் சோமனையும் {சந்திரனையும்} கண்டான். அந்நேரம் புதி நிலவு நாள் {அமாவாசையாததால்} ஆதலால், அந்த நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, அந்த ரௌத்திர [3] நேரத்தில் {ரௌத்திர முகூர்த்தத்தில்}, சூரியோதைய மலையில் தேவர்களும் அசுரர்களும் போரிடுவதைக் கண்டான். சிவந்த மேகங்களுடன் கூடிய வைகறையையும் {காலை சந்திப் பொழுதையும்} அவன் {இந்திரன்} கண்டான். இரத்தம் போன்ற சிவந்த நிறத்தில் இருக்கும் வருணனின் வசிப்பிடத்தையும் {கடலையும்} அவன் {இந்திரன்} கண்டான். பிருகு, அங்கிரஸ் மற்றும் இன்ன பிறரால் பலதரப்பட்ட மந்திரங்களுடன் கொடுக்கப்படும் காணிக்கைகளைச் சுமந்து செல்லும் அக்னி சூரியனின் வட்டுக்குள் செல்வதைக் கண்டான். மேலும் அவன் {இந்திரன்}, சூரியனை அலங்கரிக்கும் இருபத்துநான்கு பருவங்களையும், அத்தகு சூழ்நிலையில் சூரியனில் இருக்கும் பயங்கரமான சோமனையும் {சந்திரனையும்} கண்டான்.
சூரியன் மற்றும் சந்திரனின் அந்தப் பயங்கரமான இணைப்பைக் கண்ட சக்ரன் {இந்திரன்} தனக்குள், “சூரியன் மற்றும் சந்திரனின் இந்தப் பயங்கரமான இணைப்பு, நாளை நடக்கப் போகும் பெரும் போரை முன்னறிவிக்கிறது. சிந்து {Indus} நதியும், புதிதான இரத்த ஓட்டத்துடன் பாய்கிறது. ஓநாய் வாயில் நெருப்புடன் சூரியனுக்கு எதிராக ஊளையிடுகிறது. இந்தப் பெரும் இணைப்பு பயங்கரமானதாகவும், சக்தி நிறைந்ததாகவும் இருக்கிறது. சூரியனுடனும், அக்னியுடனும் இணையும் சந்திரனின் (சோமன்) சேர்க்கை மிகவும் அற்புதமாக இருக்கிறது. இப்போது இந்தச் சோமன் ஒரு மகனைப் பெற்றெடுத்தால், அந்த மகன், இந்த மங்கைக்கு {தேவசேனைக்குக்} கணவனாகலாம். அக்னியும் அதே போன்ற சூழ்நிலையையே கொண்டிருக்கிறான். அவனும் ஒரு தேவனே. இந்த இருவரும் ஒரு மகனைப் பெற்றெடுத்தால், அந்த மகன் இந்த மங்கைக்குக் கணவனாவான்” என்று நினைத்தான் {இந்திரன்}. இந்த நினைப்போடே, அந்த ஒப்பற்ற தேவன், தேவசேனையையும் [4] தன்னுடன் அழைத்துக் கொண்டு பிரம்ம லோகத்திற்குச் சென்றான். பெருந்தகப்பனை {பிரம்மனை} வணங்கிய {அவன்} இந்திரன், அவனிடம் {பிரம்மனிடம்}, “புகழ்பெற்ற போர்வீரனை இந்த மங்கைக்குக் கணவனாக நிச்சயம் செய்யும்” என்றான் {இந்திரன்}.
பிரம்மன் {இந்திரனிடம்}, “ஓ! அசுரர்களைக் கொல்பவனே, நீ நினைத்தவாறே ஆகட்டும். அந்தச் சேர்க்கையின் மூலம் உண்டாகும் மகன் பலம்வாய்ந்தவனாக இருப்பான். அந்தப் பலமிக்கவன் {அப்படிப் பிறக்கும் குழந்தை}, இந்த மங்கையின் கணவனாகவும், உன்னுடன் சேர்ந்து உனது படைகளுக்குத் தலைவனாகவும் இருப்பான்” என்றான் {பிரம்மன்}. இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள் தலைவனும் {இந்திரனும்}, அந்த மங்கையும் {தேவசேனையும்} அவனை {பிரம்மனை} வணங்கிய பிறகு, பலமிக்க தெய்வீக முனிவர்களும், பெரும் அந்தணர்களுமான வசிஷ்டரும் இன்னும் பிறரும் வாழும் இடத்திற்குச் சென்றனர். இந்திரனைத் தலைமையாகக் கொண்ட பிற தேவர்களும் அந்த முனிவர்கள் செய்யும் வேள்விகளில் தங்களுக்கு உரிய காணிக்கை பங்குகளைப் பெற்று சோம பானத்தைக் குடிக்கும் விருப்பத்தோடு அங்கே சென்றனர். முறையாகச் சுடர்விட்டெரியும் நெருப்பைக் கொண்டு சடங்குகளைச் செய்து அந்தப் பெரும் மனம் படைத்தவர்கள் {முனிவர்கள்} தேவர்களுக்குக் காணிக்கைகளை அளித்தனர்.
காணிக்கைகளைச் சுமந்து செல்லும் அத்புத நெருப்பு, மந்திரங்களால் அழைக்கப்பட்டான். சூரிய வட்டிலில் இருந்து வெளியே வந்த அந்தத் தலைமை நெருப்பு {அத்புதன்} பேச்சைக் கட்டுப்படுத்திக் கொண்டு முறையாக அங்கே வந்தான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, தூண்டப்பட்ட வேள்வி நெருப்புக்குள் புகுந்து, அதில் முனிவர்களால் மந்திரங்களுடன் படைக்கப்பட்ட காணிக்கைகளை எடுத்துக்கொண்டு {சுமந்து கொண்டு} சொர்க்கவாசிகளிடம் {தேவர்களிடம்} சென்றான். அப்படி அவன் திரும்பும்போது, அவன் அந்த உயர் ஆன்ம முனிவர்களின் மனைவியர் வசதியாகத் தங்கள் படுக்கையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். அந்த மங்கையர், தங்கப் பலிப்பீடம் போலவும், களங்கமற்ற சந்திரக் கதிர்கள் போலவும், நெருப்புச் சுடர்களைப் போலவும், எரியும் நட்சத்திரம் போலவும் இருந்தனர். ஆவல் நிறைந்த கண்களுடன் அந்தச் சிறப்புமிக்க அந்தணர்களின் மனைவியரைக் கண்ட அவனது மனம் கலங்கியது. அவன் {அத்புதன்} அவர்களது அழகால் தாக்கப்பட்டான். அப்படிக் கலங்குவது முறையற்றது எனக் கருதிய அவன், தனது இதயத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான். பிறகு அவன் தனக்குள்ளேயே, “இந்தப் பெரும் அந்தணர்களின் மனைவியர் கற்புடையவர்கள், {கணவனுக்கு} உண்மையானவர்கள், பிற மனிதர்களின் ஆசைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். நான் அவர்களை அடையும் விருப்பத்தால் நிறைந்திருக்கிறேன். விதிப்படி நான் அவர்கள் மீது கண்களைச் செலுத்தக்கூடாது. அவர்களைத் தொடவும் கூடாது. எனவே, நான் அவர்களது கார்ஹபத்ய {வீட்டில் வைக்கும்} நெருப்பாகி தினமும் அவர்களைக் கண்டு திருப்தியடைவேன்” என்று நினைத்துக் கொண்டான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இப்படித் தன்னை வீட்டு நெருப்பாக மாற்றிக் கொண்ட அந்த அத்புத நெருப்பானவன், அந்தத் தங்க நிறம் கொண்ட பெண்களைக் கண்டும், தனது சுடர்களால் அவர்களைத் தொட்டும் மிகவும் திருப்தி கொண்டான். அவர்களது {முனிவர்களின் மனைவியரின்} அழகால் மிகவும் கவரப்பட்ட அவன் {அத்புத நெருப்பானவன்}, அவர்களுக்கு இதயத்தைக் கொடுத்து, அவர்களிடம் தீவிரக் காதல் கொண்டு அங்கேயே நீண்ட நாள் தங்கினான். அந்த அந்தணப் பெண்களின் இதயங்களை வென்றெடுக்கும் முயற்சிகளில் கலங்கடிக்கபட்டான் அவன். அந்தக் காதலால் தனது இதயம் சித்திரவதைக்குள்ளாகி, தன்னை அழித்துக் கொள்ளும் நோக்கோடு ஒரு கானகத்திற்குச் சென்றான்.
அதற்குச் சில காலத்திற்கு முன்பே தக்ஷனின் மகளான சுவாகா, அவனிடம் {அத்புத நெருப்பானவனிடம்} காதல் கொண்டிருந்தாள். அந்தச் சிறந்த பெண் {சுவாகா}, அவனது பலவீனமான தருணங்களைக் கண்டறிய நீண்ட காலம் முயற்சி செய்தாள். ஆனால் அந்தக் குற்றமற்ற பெண்ணால் {சுவாகாவால்}, அமைதியாகவும் மன ஒருமையுடனும் இருந்த அக்னி தேவனிடம் எந்தப் பலவீனத்தையும் காணமுடியவில்லை. ஆனால் இப்போதோ, காமனால் சித்திரவதை செய்யப்பட்ட அந்த அக்னி தேவனைக் கண்ட அவள் {சுவாஹா}, தனக்குள், “நானும் காதலால் கவலை கொண்டு இருகிகறேன். எனவே, நான் அந்த ஏழு முனிவர்களின் மனைவிகளைப் போல உருவம் கொண்டு, அவர்களது அழகால் தாக்கப்பட்டுள்ள அக்னி தேவனை அந்த உருவத்தோடு அணுகுவேன். இது நடந்தால், அவனும் {அத்புத நெருப்பான அக்னி தேவனும்} திருப்தியடைவான், எனது விருப்பமும் ஈடேறும்” என்று நினைத்துக் கொண்டாள்.
கந்தன் பிறந்தான்! – வனபர்வம் பகுதி 224-சுவாகா, ஏழு முனிவர்களின் மனைவியரில் அருந்ததியைத் தவிர மற்றவர்களுடைய உருவங்களில் சென்று அக்னியுடன் கூடியது; அக்னியின் உயிரணுக்களை வெள்ளை மலையில் உள்ள தங்கத் தடாகத்தில் சுவாகா வீசியது; அதிலிருந்து ஸ்கந்தன் உண்டானது; ஸ்கந்தன் கணைகளால் கிரௌஞ்ச மலையைப் பிளந்தது; ஸ்கந்தன், வேல் கொண்டு வெள்ளை மலையின் சிகரங்களை இரண்டாகப் பிளந்தது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, பெரும் நற்பண்புகளும், எந்தக் களங்கமும் அற்ற தன்மை கொண்ட அழகான சிவை {Siva} (ஏழு முனிவர்களில் ஒருவரான) அங்கிரசின் மனைவியாவாள். அந்த அற்புதமான மங்கை (சுவாகா}, முதலில் சிவையின் உருவம் கொண்டு, அக்னியின் முன்னிலையை அடைந்து, அவனிடம் {அக்னியிடம்} அவள், “ஓ! அக்னி, நான் உன் மீது கொண்ட காதலால் துன்புறுகிறேன். நீ என்னுடன் ஊடாடுவதே உனக்குப் பொருந்தும் என நான் நினைக்கிறேன். முனிவர்களின் மனைவியர் உரிய கவனத்திற்குப் பிறகு என்னை இங்கே அனுப்பினார்கள். நான் அவர்களின் ஆலோசனைப் படியே இங்கே வந்திருக்கிறேன்” என்றாள் {சுவாகா}.
அக்னி {சுவாகாவிடம்}, “நான் காதலால் துன்புறுகிறேன் என்பதை நீ எப்படி அறிந்தாய்? நீ யாரைக் குறித்துச் சொன்னாயோ அந்த ஏழு முனிவர்களின் {சப்தரிஷிகளின்} அன்புக்குரிய மனைவியர் இதை எப்படி அறிந்தனர்?” என்று கேட்டான்.
{சிவை உருவில் இருந்த} சுவாகா {அக்னியிடம்}, “நீ எங்களுக்கு எப்போதும் பிடித்தமானவனே, ஆனால் நாங்கள் உன்னைக் குறித்து அஞ்சுகிறோம். நன்கு அறியப்பட்ட குறிப்புகளால், உனது மனதைப் படித்த அவர்கள், என்னை உனது முன்னிலைக்கு அனுப்பியிருக்கின்றனர். நான் என் விருப்பத்தைத் தணித்துக் கொள்ள இங்கே வந்திருக்கிறேன். ஓ! அக்னி, உன் விருப்பத்தைச் சூழ விரைவாகச் செயல்படு. என் சகோதரிகள் {Sister-in-law} எனக்காகக் காத்திருக்கின்றனர். நான் விரைவாகத் திரும்ப வேண்டும்” என்றாள் {சுவாகா}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பின்பு, பெரும் மகிழ்ச்சியில் நிறைந்த அக்னி, சிவையின் உருவத்தில் இருந்த சுவாகாவைத் திருமணம் செய்தான். அவனுடன் இன்பமாகக் கூடிய வாழ்ந்த அந்த மங்கை {சுவாகா}, வீரியமான உயிரணுவை தனது கைகளில் ஏந்தினாள். பிறகு அவள் தனக்குள்ளேயே, ‘கானகத்துக்குள் மாற்றுருவில் இருக்கும் நம்மைக் காண்போர், அக்னியுடன் தொடர்புப்படுத்தி, அந்த அந்தணப் பெண்களைத் தகுதியில்லாத இழிந்த நடத்தை கொண்டவர்கள் எனக் கருதுவார்களே. இதைத் தவிர்க்க, ஒரு பறவையின் உரு கொண்டால், இந்தக் கானகத்தில் இருந்து மிக எளிதாக வெளியேறலாமே!’ என்று நினைத்தாள்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிறகு இறகுபடைத்த உயிரினத்தின் உருவத்தை ஏற்ற அவள் {சுவாகா}, கானகத்தைவிட்டு வெளியேறி, நாணல் கொத்துகளும், பிற செடிகளும், மரங்களும் அடர்ந்ததும், பார்வையிலேயே விஷம் கொண்ட ஏழு தலை கொண்ட விசித்திரமான பாம்புகளால் காக்கப்பட்டதும், ராட்சசர்கள், பிசாசங்களும், பயங்கரமான ஆவிகளும், பலவகைப்பட்ட பறவைகளும் விலங்குகளும் நிறைந்ததுமான வெண்மலையை {ஸ்வேத மலை} {White Mountain} அடைந்தாள். அந்த அற்புதமான மங்கை விரைவாக அந்த மலைகளின் சிகரத்திற்கு உயர்ந்து, அந்த உயிரணுவை தங்கத்தடாகத்துக்குள் {சுவர்ணக்குண்டத்துக்குள்} வீசினாள். பிறகு அவள் {சுவாகா}, அந்த உயர்-ஆன்ம முனிவர்களின் மற்ற மனைவியரின் உருவங்களையும் அடைந்து, தொடர்ந்து அக்னியுடன் கேளிக்கையில் ஈடுபட்டாள். ஆனால், தனது கணவருக்கு (வசிஷ்டருக்கு) அர்ப்பணிப்போடு இருந்த பெரும் தவத்தகுதி கொண்ட அருந்ததியின் உருவத்தை மட்டும் அவளால் எடுக்க முடியவில்லை.
ஓ! குரு குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தப் பெண் சுவாகா முதல் சந்திர நாளில் {பிரதமை திதியில்} அக்னியின் உயிரணுக்களை அத்தடாகத்திற்குள் ஆறுமுறை வீசினாள். அப்படி வீசப்பட்ட அவை {உயிரணுக்கள்}, பெரும் சக்தி கொண்ட ஓர் ஆண் குழந்தையைப் படைத்தன. கைவிடப்பட்ட குழந்தை என முனிவர்களால் கருதப்பட்ட காரணத்தால், அவன் {அக்குழந்தை} ஸ்கந்தன் {Skanda} என்ற பெயரால் அழைக்கப்பட்டான். அக்குழந்தைக்கு ஆறு முகங்களும், பனிரெண்டு காதுகளும், அதுபோலவே கண்களும், கைகளும், கால்களும், ஒரு கழுத்தும், ஒரு வயிறும் இருந்தன. அவன் இரண்டாவது சந்திர நாளில் {துதியைத் திதியில்} தனது உருவத்தைக் கொண்டான். பிறகு சிறு குழந்தையாக மூன்றாவது நாளில் வளர்ந்தான். அந்தக் குகனின் {ஸ்கந்தனின்} உறுப்புகள் நான்காவது நாளில் வளர்ந்தன. சிவந்த மேகங்கள் சூழ, மின்னல் மின்ன, அக்குழந்தை, சிவந்த மேகங்களுக்கிடையில் இருந்து உதிக்கும் சூரியனைப் போலப் பிரகாசித்தான்.
தேவர்களின் எதிரிகளை அழிப்பதற்காக அசுரன் திரிபுரனை அழித்தவனின் {சிவனின்} மகத்தான வில்லைப் பிடித்த அந்தப் பலம்வாய்ந்தவன் {ஸ்கந்தன்}, அசைவன, அசையாதன ஆகிய பிரிவுகளைக் கொண்ட மூவுலகமும் பிரமிப்படையும்படி பயங்கரமாகக் கர்ஜித்தான். பெரும் மேகக்கூட்டங்களின் பேரிரைச்சலைப் போலத் தெரிந்த அந்த ஒலியைக் கேட்டதும், பெரும் நாகர்களான சித்திரனும் ஐராவதனும் அச்சத்தால் நடுக்கமுற்றனர். அவர்கள் {இரு நாகங்களும்} நிலையற்று இருப்பதைகண்ட, சூரியனின் பிரகாசத்தோடு இருந்த அந்தப் பிள்ளை {ஸ்கந்தன்}, அவர்களைத் தனது இரு கைகளாலும் பிடித்தான். வேலை {தனது மற்றொரு} கையிலும், சிவப்புக் கொண்டை கொண்டு பருத்திருந்த பெரும் சேவலொன்றை மற்றொரு கையிலும் பிடித்துக் கொண்டான். அந்த நீண்ட கரம் கொண்ட அக்னியின் மகன் {ஸ்கந்தன்}, பயங்கரமான ஒலி எழுப்பியபடி {அங்கே} விளையாட ஆரம்பித்தான்.
அற்புதமான சங்குகளைத் தனது இரு கைகளிலும் தாங்கிய அந்தப் பலமிக்கவன், மிகப் பலம்வாய்ந்த உயிரினங்களும் நடுங்கும் வகையில் அதை {அந்தச் சங்கை} ஊத ஆரம்பித்தான். காற்றில் தனது இரு கைகளையும் தட்டியபடி, மலை உச்சியில் விளையாடிக் கொண்டிருந்த அந்தப் பெரும் பலம்வாய்ந்தவனும் ஒப்பற்ற பராக்கிரமம் கொண்டவனுமான மஹாசேனன் {ஸ்கந்தன்}, மூன்று உலகங்களையும் விழுங்கிவிடுவதைப் போலத் தோற்றமளித்தான். சொர்க்கத்தில் உயர்ந்து நிற்கும் சூரிய தேவனைப் போல அவன் {ஸ்கந்தன்} ஒளிர்ந்து கொண்டிருந்தான். அற்புதமான பராக்கிரமும், ஒப்பற்ற பலமும் கொண்ட அவன் {ஸ்கந்தன்}, அந்த மலையின் உச்சியில் அமர்ந்து கொண்டு, தனது பல்வேறு முகங்களால், பலதரப்பட்ட திசைப்புள்ளிகளையும் நோக்கி, பலதரப்பட்ட பொருட்களைக் கண்டு, தனது உரத்த கர்ஜனைகளை மீண்டும் எழுப்பினான்.
அந்தக் கர்ஜனையைக் கேட்ட பல்வேறு உயிரினங்கள் அச்சத்தால் பணிந்து விழுந்தன. அச்சத்தாலும், மனப்பதற்றத்தாலும், அவை பாதுகாப்பைத் தேடின. அப்போது அந்தத் தேவனின் {ஸ்கந்தனின்} பாதுகாப்பை நாடிய பல்வேறு வகைகளைச் சேர்ந்த மக்கள், அவனது பலமிக்க {ஸ்கந்தனின்} பிராமணத் தொண்டர்கள் என்று அறியப்படுகிறார்கள் {are known as his powerful Brahmana followers}. பிறகு தனது இருக்கையில் இருந்து எழுந்த அந்தப் பலமிக்கத் தேவன் {ஸ்கந்தன்}, அந்த மக்களின் அச்சத்தைப் போக்கினான். பிறகு தனது வில்லை எடுத்து, வெண்மலை {ஸ்வேதமலை} இருக்கும் திசையில் கணைகளை அடித்தான். அந்தக் கணைகளால், இமயத்தின் மகனான கிரௌஞ்ச மலை தவிடுபொடியானது. அன்னங்களும், கழுகுகளும் இப்போதும் சுமேரு மலைகளுக்கு {மேரு மலைதான்} குடியேற்றம் செல்வது இதன் காரணமாகத்தான். பெரிதும் காயமடைந்த கிரௌஞ்ச மலை, அச்சத்துடன் கதறி கீழே விழுந்தான். அவன் {கிரௌஞ்ச} மலை விழுவதைக் கண்ட மற்ற மலைகளும் கதறத் தொடங்கின.
ஒப்பற்ற பராக்கிரமம் கொண்ட அந்தப் பலமிக்கவன் {ஸ்கந்தன்}, பாதிக்கப்பட்டவர்களின் கதறலைக் கேட்டும் அசையாமல், தனது தண்டாயுதத்தை {mace} {பழநிமுருகன் கையில் உள்ள தண்டாயுதம்} எடுத்து, போர்க்கூச்சல் போட்டான். பிறகு அந்த உயர் ஆன்மா கொண்டவன் {ஸ்கந்தன்}, பெரும் பிரகாசம் கொண்ட தனது தண்டாயுதத்தை வீசி, அந்த வெண்மலையின் சிகரங்களை இரண்டாகப் பிளந்தான். இப்படி அவனால் {ஸ்கந்தனால்} துளைக்கப்பட்ட வெண்மலை பெரிதும் அச்சமடைந்து, பூமியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, மற்ற மலைகளுடன் சேர்ந்து தப்பி ஓடினான். இதனால் பூமி பெரிதும் துயருற்றாள். அவளது அனைத்துப் புறங்களிலும் உள்ள ஆபரணங்களை அவள் {பூமி} இழந்தாள். அப்படித் துயருற்ற பூமி ஸ்கந்தனிடம் சென்று, தனது முழுச் சக்தியையும் அடைந்து மீண்டும் பிரகாசித்தாள். பிறகு மலைகளும் ஸ்கந்தனைப் பணிந்து, மீண்டும் திரும்பி வந்து பூமியில் ஓட்டிக்கொண்டன. பிறகு அனைத்து உயிரினங்களும், அந்தச் சந்திர மாதத்தின் ஐந்தாம் நாளில் {[வளர்பிறை] பஞ்சமி திதியில்} ஸ்கந்த வழிபாட்டைக் கொண்டாடின.
கந்தனுக்கு அமுதூட்டிய அன்னையர்! – வனபர்வம் பகுதி 225-சுவாகா ஸ்கந்தனிடம் தானே அவனது தாய் என்பதைச் சொன்னது; ஏழு முனிவர்களும் தங்கள் மனைவியரைத் தள்ளிவைத்தது; அனைத்தையும் அறிந்த விஸ்வாமித்திர் ஸ்கந்தனைத் தஞ்சமடைந்து பிறப்புச் சடங்குகளைச் செய்து வைத்தது; தேவர்கள் இந்திரனிடம் ஸ்கந்தனைக் கொல்லும்படி சொல்வது; இந்திரன் அஞ்சுவது; லோகமாதாக்கள் ஸ்கந்தனிடம் சென்றது; அவனைத் தங்களது பிள்ளையாகச் சுவீகரித்து அமுதூட்டியது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்தப் பலமிக்க, உயர்ஆன்மா கொண்டவன் {ஸ்கந்தன்} பிறந்த போது, பல்வேறு வகையான அச்சம் தரும் நிகழ்வுகள் நடந்தன. ஆண்கள் மற்றும் பெண்களின் இயல்புள், வெப்பம் மற்றும் குளிர், மேலும் இதுபோன்ற முரண்பட்ட ஜோடிகளின் இயல்புகள் தலைகீழாக மாறின. கோள்கள், திசைப்புள்ளிகள், ஆகாயம் ஆகியன வெளிச்சத்தால் ஒளிர்ந்தன. பூமியும் கதறத் தொடங்கியது. உலக நன்மையை விரும்பும் முனிவர்களும் கூட இந்தப் பயங்கர அதிசயங்களை எல்லாப் புறமும் கண்டு, அண்டத்தின் அமைதியை மீண்டும் நிலைநாட்ட இதயப்பூர்வமாக முனைந்தனர். சைத்திரரத வனத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும், “ஏழு முனிவர்களின் ஆறு மனைவிகளுடன் கூடிய அக்னியினால் நமக்கு இந்த மிக மோசமான நிலை ஏற்பட்டது” என்றனர்.
அந்தத் தேவி {சுவாகா} பறவை உருவை அடைந்ததைக் கண்ட பிறர், “இந்தத் தீமை ஒரு பறவையால் ஏற்பட்டது” என்றனர். எவருமே சுவாகாதான் இந்தத் தீங்குக்குக் காரணமானவள் என்பதை நினைக்கவில்லை. ஆனால் (புதிதாகப் பிறந்த) ஆண்பிள்ளை தனதென்று கேள்விப்பட்ட அவள் {சுவாகா} ஸ்கந்தனிடம் சென்றாள். படிப்படியாக அவனிடம் அவளே அவனது {ஸ்கந்தனின்} அன்னை என்ற உண்மையை வெளிப்படுத்தினாள். அந்த ஏழு முனிவர்களும், (அவர்களுக்கு) ஒரு பலமிக்க மகன் பிறந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டனர். அந்தக் காட்டில் வசிக்கும் அனைவரும் {முனிவர்களின் மனைவியரான} அறுவரும்தான், அந்தப் பிள்ளை பிறக்கக் காரணம் என்று சொல்லி எதிர்த்ததால், அம்முனிவர்கள், வழிபடத்தகுந்த அருந்ததியைத் தவிர்த்துத் தங்கள் ஆறு மனைவியரையும் தள்ளி வைத்தார்கள் {divorced என்கிறார் கங்குலி}. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஏழு முனிவர்களிடம் சுவாகா, “துறவிகளே {சப்தரிஷிகளே}, இந்தப் பிள்ளை என்னுடையவன். உங்கள் மனைவியர் இவனுக்குத் தாயில்லை” என்று மீண்டும் மீண்டும் சொன்னாள்.
அந்த ஏழு முனிவர்களின் வேள்விகள் முடிந்ததும், பெரும் முனிவரான விஸ்வாமித்திரர், அக்னி தேவன் காமத்தால் துன்பப்பட்டபோது, அவனை {அக்னியை} அவனறியாது பின்தொடர்ந்து சென்றார். எனவே, நடந்தது என்ன என்பது அனைத்தையும் அவர் {விஸ்வாமித்திரர்} அறிவார். மஹாசேனனிடம் {ஸ்கந்தனிடம்} பாதுகாப்புக் கோரியவர்களில் முதல் மனிதன் அவரே. மஹாசேனனுக்கு தெய்வீக துதிகளைக் காணிக்கையாக்கிய பிறகு, பிள்ளைப்பருவத்திற்குரிய, பிறப்பு சார்ந்த பதிமூன்று மங்களச் சடங்குகளும் அந்தப் பெருமுனிவரால் {விஸ்வாமித்திரரால்} அந்தப் பிள்ளைக்குச் {ஸ்கந்தனுக்குச்} செய்யப்பட்டன. பிறகு உலகத்தின் நன்மைக்காக அவர், ஆறு முகம் கொண்ட ஸ்கந்தனுக்குரிய நற்பண்புகளை {அவனுக்கு} அறிவித்தார். சேவல், சக்தி தேவி மற்றும் ஸ்கந்தனின் தொண்டர்களுக்கு மரியாதை செய்யும் சடங்குகளை நடத்தி வைத்தார். {சேவலைக் கொடியாகவும், சக்தியை வேலாகவும், தொண்டர்களைப் பரிவாரங்களாகவும் வைத்துக் கொள்ள வேண்டிய சடங்குகளைச் செய்வித்தார்}. இந்தக் காரணத்திற்காக அவர் அந்தத் தெய்வீக இளைஞனுக்கு மிகவும் பிடித்தமானவராக ஆனார். அந்தப் பெரும் முனிவர் {விஸ்வாமித்திரர்}, அந்த ஏழு முனிவர்களுக்கும் {சப்தரிஷிகளுக்கும்}, சுவாகா மாற்றுரு கொண்டதைச் சொல்லி, அவர்களது மனைவியர் அப்பாவிகள் என்பதையும் சொன்னார். ஆனால், அந்த ஏழு முனிவர்களும் இதை அறிந்து கொண்ட பிறகும் கூடத் தங்கள் துணைகளை நிபந்தனையற்ற முறையில் கைவிட்டனர்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஸ்கந்தனின் பராக்கிரமத்தைக் கேள்விப்பட்ட தேவர்கள் வாசவனிடம் {இந்திரனிடம்} சென்று, “ஓ! சக்ரா {இந்திரா}, தாமதமின்றி அந்த ஸ்கந்தனைக் கொல், அவனது பராக்கிரமம் தாங்க முடியாததாக இருக்கிறது. அவனை நீ அழிக்கவில்லையென்றால், அவன் நம்முடன் கூடிய மூவுலகங்களையும் வென்று, உன்னை வீழ்த்தி, தானே தேவர்கள் தலைவன் ஆகிவிடுவான்” என்றனர். மனதால் குழம்பிய சக்ரன், அவர்களிடம், “இந்தப் பிள்ளை பெரும் பராக்கிரமத்தைக் கொண்டிருக்கிறான். போர்க்களத்தில் தனது பலத்தைக் கொண்டு அண்டத்தைப் படைத்தவனையே {பிரம்மாவையே} இவன் அழித்துவிடுவான். எனவே, அவனிடம் செல்லத் துணிய மாட்டேன்” என்றான். அதற்குத் தேவர்கள் {இந்திரனிடம்}, “உன்னிடம் ஆண்மையில்லாததால் நீ இவ்வகையில் பேசுகிறாய். இந்த அண்டத்தின் பெரும் அன்னையர் {லோகமாதாக்கள்} இன்று ஸ்கந்தனிடம் செல்லட்டும். அவர்கள் எப்படிப்பட்ட சக்தியையும் அடக்குவார்கள். அதன் பிறகு இந்தப் பிள்ளைக் கொல்லப்படட்டும்” என்றனர். அந்தத் தாய்மாரும், “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார்கள்.
பிறகு அவர்கள் {லோகமாதாக்கள்} சென்றுவிட்டனர். ஆனால் அவனைக் {ஸ்கந்தனைக்} கண்ட மாத்திரத்தில் அவர்கள் ஊக்கமிழந்து, அவன் வெல்லப்பட முடியாதவன் என்று கருதி, அவனை {ஸ்கந்தனை} தஞ்சம் அடைந்து, அவனிடம் {ஸ்கந்தனிடம்}, “ஓ! பலமிக்கவனே, நீ எங்கள் (வளர்ப்பு) மகனாவாய். நாங்கள் உன்னிடம் பாசத்தால் நிறைந்திருக்கிறோம். உனக்குப் பால் கொடுக்க விரும்புகிறோம் {desirous of giving thee suck}. இதோ எங்கள் மார்புகளில் பால் சுரக்கிறது” என்றனர். இவ்வார்த்தைகளைக் கேட்ட பலமிக்க மஹாசேனன் {ஸ்கந்தன்}, அவர்களது முலையுண்ண விரும்பி, அவர்களை மரியாதையுடன் வரவேற்று, அவர்களது கோரிக்கைகளை ஏற்றான். பிறகு அந்தப் பலசாலிகளில் பலசாலியானவன் {ஸ்கந்தன்} தனது தந்தையான அக்னி தன்னை நோக்கி வருவதைக் கண்டான். நல்லது அனைத்தையும் செய்யும் அந்தத் தேவன், அவனது தாயார்களுடன் இருந்த தனது மகனால் உரிய முறையில் மதிக்கப்பட்டு, அவனை {ஸ்கந்தனை} வளர்க்க அவனது பக்கத்திலேயே தங்கினான். அந்தத் தாய்மாரில் கோபத்துக்குப் பிறந்தவள் [1], {குரோதசமுத்பவை} கைகளில் சூலத்தை ஏந்தி, தனது சொந்த வாரிசைக் காப்பது போலவே ஸ்கந்தனைக் கண்காணித்தாள். {லோஹிதம் என்கிற} கடலின் மகளானவள் {கரூரை}, சிவப்பு நிறத்துடன், எளிதில் கோபம் கொள்பவளாக இருந்தாள். இரத்தத்தை உண்டு வாழும் அவள், மஹாசேனனை {கந்தனை} மார்போடு அணைத்து தாயைப் போல அவனுக்குப் பாலூட்டினாள். அக்னி, பல பிள்ளைகள் தன்னைத் தொடர, ஆட்டுவாய்க் கொண்ட ஒரு வணிகனைப் போலத் தன்னை மாற்றிக் கொண்டான். தன் வசிப்பிடமான அந்த மலையில் பொம்மைகளைக் கொண்டு அந்தப் பிள்ளையைத் {ஸ்கந்தனைத்} திருப்தி செய்யத்தொடங்கினான்.
கந்தனை எதிர்த்த இந்திரன்! – வனபர்வம் பகுதி 226-ஸ்கந்தனை எதிர்த்து இந்திரன் படை நடத்துவது; தேவர்கள் ஸ்கந்தனைப் பணிவது; இந்திரன் ஸ்கந்தன் மீது வஜ்ரத்தை ஏவுவது; வஜ்ரம் துளைத்ததால் விசாகன் உண்டானது; இருவரைக் கண்டது இந்திரன் அஞ்சி ஸ்கந்தனைப் பணிந்தது; இந்திரனின் அச்சத்தை ஸ்கந்தன் போக்கியது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “உப கோள்களுடன் கூடிய கோள்களும், முனிவர்களும், தாய்மாரும், அக்னியும், எண்ணற்ற பிற ஒளிவீசும் சேவகர்களும், கொடூர முகத்தோற்றம் கொண்ட இன்னும் பல தேவலோகவாசிகளும், அன்னையருடன் இருந்த மஹாசேனனுக்காகக் {ஸ்கந்தனுக்காகக்} காத்திருந்தனர். சிறப்புமிக்கத் தேவர்களின் மன்னன் {இந்திரன்}, வெற்றியை விரும்பினாலும், அதை அடைவதில் சந்தேகங்கொண்டு தனது யானையான ஐராவதத்தில் ஏறினான். பிறகு, பிற தேவர்களுடன் சேர்ந்து ஸ்கந்தனை நோக்கி முன்னேறினான். அனைத்து தேவர்களும் தன்னைத் தொடரச் சென்ற அந்தப் பலமிக்கவன் {இந்திரன்}, வஜ்ராயுதத்தை ஏந்தியிருந்தான். மஹாசேனனைக் {ஸ்கந்தனைக்} கொல்லும் நோக்கோடு, பெரும் பிரகாசத்துடன், போர்க்குரல் கொடுத்தப்படி செல்லும் தேவ படையுடன் சென்றான். பலவகையான கொடிகளுடனும், பல்வேறு கவசங்கள் பூட்டிய போர்வீரர்களுடனும், பல விற்களுடனும், பல்வேறு விலங்குகளில் பயணித்தவாறும் அந்தப் {தேவ} படையினர் சென்றனர்.
சிறந்த ஆடைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, தன்னைக் கொல்லும் தீர்மானத்தோடு வரும் சக்ரனை {இந்திரனை} மஹாசேனன் {ஸ்கந்தன்} கண்டபோது, அவனும் {ஸ்கந்தனும்} (தனது பங்கிற்கு) அந்தத் தேவர்கள் தலைவனைச் {இந்திரனைச்} சந்திக்க முன்னேறினான். ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, பிறகு, தேவர்கள் தலைவனான அந்தப் பலமிக்க வாசவன் {இந்திரன்}, தனது போர்வீரர்களை உற்சாகமூட்ட பெரும் கர்ஜனை செய்தான். அக்னியின் மகனைக் கொல்லும் நோக்கோடு விரைவாகப் படை நடத்தி, திரிதசஸ்களாலும் [1], பெரும் முனிவர்களாலும் புகழப்பட்டு, கார்த்திகேயனின் {ஸ்கந்தனின்} வசிப்பிடத்தை அடைந்தான். பிறகு அவன் {இந்திரன்}, பிற தேவர்களுடன் சேர்ந்து சிம்மநாதம் செய்தான்; இதற்குப் பதிலாகக் குஹனும் {ஸ்கந்தனும்}, கடலின் கர்ஜனையைப் போன்ற பயங்கரமான போர் கர்ஜனையைச் செய்தான்.
அந்த ஒலியைக் கேட்ட தேவர்கள் படை, கலங்கிய கடலைப் போல ஆகி, அந்த இடத்திலேயே திகைத்து நின்றது. அந்தப் பாவகனின் {நெருப்பு தேவனின்} மகன் {ஸ்கந்தன்}, தேவர்கள் தன்னைக் கொல்லும் நோக்கோடு தன் அருகில் வருவதைக் கண்டு, கோபத்தால் நிறைந்து, தனது வாயில் இருந்து மூண்டு எரியும் நெருப்புச் சுடர்களை வெளியிட்டான். தரையில் போராடிய அந்தத் தேவ படைகளை அச்சுடர்கள் அழித்தன. அவர்களது தலைகள், உடல்கள், கரங்கள், வாகனங்களான விலங்குகள் அனைத்தும் அந்த நெரிப்பில் எரிந்தன. திடீரென அவை அனைத்தும் முறையான கோளங்களில் இருந்து இடம்பெயர்ந்த நட்சத்திரங்களைப் போலத் தோன்றின.
இப்படிப் பாதிக்கப்பட்ட அந்தத் தேவர்கள், வஜ்ராயுதத்தின் மீதிருந்த நம்பிக்கையைத் துறந்து பாவகன் {நெருப்பு தேவனின்} மகனின் {ஸ்கந்தனின்} பாதுகாப்பை நாடினர். இதனால் மீண்டும் அமைதி நிலைநாட்டப்பட்டது. இப்படித் தேவர்களால் கைவிடப்பட்ட போது, சக்ரன் {இந்திரன்}, ஸ்கந்தன் மீது தனது வஜ்ராயுதத்தை வீசினான். அது அவனை {ஸ்கந்தனை} வலப்பக்கத்தில் துளைத்தது. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அது {வஜ்ரம்}, அந்த உயர் ஆன்மா கொண்டவனின் {ஸ்கந்தனின்} உடலைக் {துளைத்துக்} கடந்து சென்றது. இப்படி வஜ்ரத்தால் தாக்கப்பட்ட ஸ்கந்தனின் உடலில் இருந்து, இளமையுடனும், கைகளில் சக்தி {club} ஆயுதத்துடனும், தெய்வீக வளையத்தால் {[அ]குண்டலத்தால்} தன்னை அலங்கரித்திருந்த ஒருவன் எழுந்தான். வஜ்ரம் துளைத்த காரணத்தால் பிறந்ததால், அவன் விசாகன் என்று பெயரிடப்பட்டான்.
கடுமையாக அழிக்கும் அக்னி தேவனைப் போல மற்றொருவன் வந்ததைக் கண்ட இந்திரன், செய்வதறியாமல் அச்சமுற்று, {தனது மரியாதையைத் தெரிவிக்க} உள்ளங்கைகளைக் கூப்பி ஸ்கந்தனின் பாதுகாப்பை நாடினான். அந்த அற்புதமான ஸ்கந்தன், தனது கைகளால் தட்டிக் கொடுத்து, அவனது {இந்திரனின்} அச்சத்தைத் துறக்கச் சொன்னான். பின்பு தேவர்கள் மகிழ்ச்சி கொண்டு, கைகள் கட்டப்பட்டவர்களானார்கள்.”
பத்ரசாகனின் ஆட்டுத்தலை! – வனபர்வம் பகுதி 227-ஸ்கந்தனின் காயத்தில் பிறந்த ஆண்பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும்; தபஸ் என்கிற அக்னியின் பெண் பிள்ளைகள் ஸ்கந்தனை மகனாக ஏற்று, எட்டாவதாகச் சிசு என்பவனை மகனாகக் கொண்டது; ஸ்கந்தனின் ஆட்டுத்தலை பற்றிய குறிப்பு…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “{யுதிஷ்டிரா} பயங்கரமான பார்ப்பதற்கு விநோதமான ஸ்கந்தனின் தொண்டர்களைக் குறித்து இப்போது கேள். ஸ்கந்தன் வஜ்ரத்தால் தாக்கப்பட்ட போது, எண்ணற்ற ஆண்பிள்ளைகள் தோன்றினார்கள். அந்தப் பயங்கரமானவர்கள், பிறந்த குழந்தைகளையும், கருவில் உள்ள குழந்தைகளையும் (அவர்களின் ஆவிகளை} களவாடுபவர்களாக {கொல்பவர்களாக} இருந்தார்கள். பெரும் பலம் கொண்ட எண்ணற்ற பெண் பிள்ளைகளும் அவனுக்குப் {ஸ்கந்தனுக்குப்} பிறந்தார்கள் {அவனது காயத்திலிருந்து தோன்றினார்கள்}. அந்தப் பிள்ளைகள் அனைவரும் விசாகனைத் தங்கள் தகப்பனாகச் சுவீகரித்துக் கொண்டார்கள்.
ஆடு போன்ற {சாக முகம் = வெள்ளாட்டு முகம்} முகமும், திறன்மிகுந்த கரங்களும் கொண்ட வணங்கத்தக்க பத்ரசாகன் {ஸ்கந்தன்} அந்நேரத்தில், அந்தத் தாய்மாரின் முன்னிலையில், தன்னால் கவனமாகப் பாதுகாக்கப்பட்ட தன் மகன்கள், மகள்களால் சூழப்பட்டு இருந்தான். இதன் காரணமாகவே, இந்தப் பூமியில் வசிப்பவர்கள் ஸ்கந்தனை குமாரர்களின் (சிறு பிள்ளைகளின்) தகப்பன் என்று அழைக்கிறார்கள். தனக்கு மகன்கள் வேண்டும் என விரும்பும் மக்கள், தங்கள் இடங்களில் ருத்திரனை அக்னித் தேவன் வடிவிலும், உமையைச் சுவாகாவின் வடிவிலும் வழிபடுகிறார்கள். அதன் காரணமாக அவர்கள் மகன்கள் அருளப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
தபமென்ற {தபஸ்} அக்னி பெற்ற பெண் பிள்ளைகள் அனைவரும் ஸ்கந்தனை வந்தடைந்தார்கள். அவன் {ஸ்கந்தன்}, “நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண்கள், “எங்களுக்கு இந்த உதவியைச் செய்; உனது அருளால், நாங்கள் அனைத்து உலகங்களுக்கும் வணங்கத்தக்க நல்ல தாய்மாராக வேண்டும்” என்று கேட்டனர். அவன் {ஸ்கந்தன்}, “அப்படியே ஆகட்டும்” என்றான். அந்தத் தயாள மனம் கொண்டவன் {ஸ்கந்தன்} மீண்டும் மீண்டும், “நீங்கள் சிவமாகவும், அசிவமாகவும் [1] பிரிக்கப்படுவீர்கள்” என்றான். பிறகு அந்தத் தாய்மார்கள் ஸ்கந்தனை மகனாக ஏற்படுத்திக் {ஏற்றுக்} கொண்டு விடைபெற்றனர். காகி, ஹலிமா, மாலினி {மாதா}, பிருன்ஹிலை {ஹலீ}, ஆர்யா, பலாலா {பாலா}, வைமித்ரா {தாத்ரி} ஆகிய இவ்வெழுவரும் சிசு என்பவனுக்குத் தாயாவார்கள்.
ஸ்கந்தனின் அருளால் இந்தத் தாய்மாருக்கு வீரியமுள்ள, அதிபயங்கரமான, சிவந்த கண்ணுள்ள, பார்ப்பவர்களை அச்சமூட்டு சிசு என்கிற மகன் உண்டானான். ஸ்கந்தனின் தாய்மார்களுக்குப் பிறந்த எட்டாவது வீரன் என இவன் கூறப்படுகிறான். ஆனால், ஆட்டு முகம் கொண்டவனைச் சேர்த்தால் அவன் {சிசு} ஒன்பதாவது வீரன் என்றும் அறியப்படுகிறான். ஸ்கந்தனின் ஆறாவது முகம் ஆட்டைப் போன்றது என்பதை அறிந்து கொள் {யுதிஷ்டிரா}. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஆறு முகங்களுக்கு நடுவில் இருக்கும் அந்த முகம் எப்போதும் தாயால் வணங்கப்படுகிறது. பத்ரசாகனின் தலை தெய்வீக சக்தியால் படைக்கப்பட்டு, அவனது அனைத்து தலைகளிலும் சிறந்த தலையாகக் கூறப்படுகிறது. ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, இந்த அறம்சார்ந்த அற்புதமான சம்பவங்கள் சந்திரமாதத்தின் ஒளிமிகுந்த பாதியில் {வளர்பிறையில் = சுக்லபட்சத்தில்} வரும் ஐந்தாவது நாளில் {பஞ்சமி திதியில்} நடந்தன. ஆறாவது நாளில் {சஷ்டியில்}, கடுமையும் பயங்கரமும் நிறைந்த ஒரு போர் அந்த இடத்தில் நடந்தது.”
கந்தன் தேவசேனை திருமணம்! – வனபர்வம் பகுதி 228-முனிவர்கள் ஸ்கந்தனை அடுத்த இந்திரன் ஆகுமாறு கோரியது; இந்திரனும் அவ்வாறே கோரியது; ஸ்கந்தன் அதை மறுத்து, தேவர்கள் படையின் படைத்தலைவனானது; ஸ்கந்தன் சிவனின் மகனாகக் கருதப்படுவதற்கான காரணம்; ஸ்கந்தன், தேவசேனை திருமணம்…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஸ்கந்தன் தங்க வளையத்தாலும் மாலையாலும் அலங்கரிக்கப்பட்டு, தங்க கிரீடம் அணிந்து, தங்க நிறக் கண்களுடனும், கூரிய பற்களுடனும் இருந்தான். அவன் {ஸ்கந்தன்} சிவப்பு ஆடையுடுத்தி பார்ப்பதற்கு அழகாக இருந்தான். நல்ல தோற்றமும், அனைத்து நற்குணங்களும் கொண்டு, மூவுலகத்திற்கும் பிடித்தவனாக இருந்தான் {ஸ்கந்தன்}. (தன்னைத் தஞ்சம் அடைந்தவர்களுக்கு} வரங்கள் அருளினான். வீரத்துடனும், இளமையுடனும் இருந்த அவன் பளபளக்கும் காது குண்டலங்களை அணிந்திருந்தான். அவன் இப்படி இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, பார்ப்பதற்குத் தாமரையைப் போன்று இருந்த நற்பேறின் தேவி {லட்சுமி தேவி} உருவம் கொண்டு வந்து, தன் பற்று உறுதியை அவனுக்கு {ஸ்கந்தனுக்கு} அளித்தாள். இப்படி அவன் நற்பேறுள்ளவனாக ஆன போது, அந்தப் புகழ்பெற்ற மென்மையான தோற்றம் கொண்டவன் {ஸ்கந்தன்} அனைவருக்கும் முழு நிலவைப் போலத் தெரிந்தான்.
உயர்ந்த மனம் படைத்த அந்தணர்கள் அந்தப் பலமிக்கவனை வழிபட்டனர். பிறகு பெரும் முனிவர்கள் ஸ்கந்தனிடம் வந்து, “ஓ! தங்க முட்டையில் பிறந்தவனே {ஸ்கந்தா}, நீ செழிப்படைவாயாக. அண்ட நன்மைக்காகக் கருவியாக நீ ஆகுக. ஓ! தேவர்களில் சிறந்தவனே {ஸ்கந்தா}, நீ ஆறு இரவுகளுக்கு (நாட்களுக்கு) முன் பிறந்தவனாக இருந்தாலும், இந்த முழு உலகமும் உனக்கு (இந்தக் குறுகிய காலத்தில்) தனது பற்றுறுதியை {விசுவாசத்தை} அளித்திருக்கிறது. நீயும் அவர்களது அச்சங்களைப் போக்கினாய். எனவே, நீ மூன்று உலகங்களுக்கும் இந்திரனாகி (தலைவனாகி) அவர்களது அச்சத்தின் காரணத்தை நீக்குவாயாக” என்றனர். அதற்கு ஸ்கந்தன், “பெரும் தவத்தைச் செல்வமாகக் கொண்ட பண்புள்ளவர்களான நீங்கள், மூவுலகங்கள் அனைத்துக்கும் இந்திரன் என்ன செய்கிறான்? தேவர்களின் மன்னன் எப்படித் தேவர்களின் படைகளை இடைவிடாது காக்கிறான்? (என்று என்னிடம் சொல்லுங்கள்)” என்று கேட்டான் {ஸ்கந்தன்}.
அதற்கு அந்த முனிவர்கள், “இந்திரன், பலம், சக்தி, குழந்தைகள், மகிழ்ச்சி ஆகியவற்றை அனைத்து உயிர்களுக்கும் கொடுக்கிறான். அவனை {இந்திரனைத்} திருப்தி செய்யும்போது, தேவர்களின் தலைவன் {இந்திரன்} அவர்கள் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுகிறான். அவன் {இந்திரன்} தீயவர்களை அழித்து, நீதிமான்களின் {அறவோரின்} விருப்பங்களை நிறைவேற்றுகிறான். அந்த வலனை அழித்தவன் {இந்திரன்}, அனைத்து உயிரினங்களுக்கும் பல்வேறு கடமைகளை நிர்ணயிக்கிறான். சூரியனில்லாத நேரத்தில் சூரியனாகவும், சந்திரனில்லாத நேரத்தில் சந்திரனாகவும் இருக்கிறான்; சூழ்நிலைக்கேற்ப அவசியம் ஏற்படும்போது, அவனே நெருப்பாகவும், காற்றாகவும், பூமியாகவும், நீராகவும் செயல்படுகிறான். இவையே இந்திரனின் கடமைகளாகும்; அவனது திறமைகளை மகத்தானவையாகும். நீயும் பலம்பொருந்தியவனே, எனவே பெரும் வீரனாக இருக்கும் நீ எங்களுக்கு இந்திரனாக ஆவாயாக” என்றனர்.
சக்ரன் {இந்திரன் – ஸ்கந்தனிடம்}, “ஓ! பலமிக்கவனே {ஸ்கந்தா}, எங்களுக்குத் தலைவனாகி எங்களை மகிழச் செய். ஓ! அற்புதமானவனே எங்கள் மதிப்புக்குத் தகுந்தவன் நீ; எனவே, இன்றே நாங்கள் உனக்குப் பட்டாபிஷேகம் செய்யட்டுமா?” என்று கேட்டான்.
ஸ்கந்தன் {இந்திரனிடம்}, “வெற்றியில் இதயத்தைச் செலுத்தி சுய உடைமையுடன் நீயே தொடர்ந்து மூவுலகங்களையும் ஆட்சி செய். நான் உனது எளிய பணியாளாக இருக்கிறேன். உனக்குச் சொந்தமான அரசுரிமையை விரும்பவில்லை” என்றான்.
சக்ரன் {இந்திரன் – ஸ்கந்தனிடம்}, “உனது பராக்கிரமம் ஒப்பற்றதாகும், ஓ! வீரா {ஸ்கந்தா}, எனவே, தேவர்களின் பகைவர்களை வீழ்த்துவாயாக. உனது பராக்கிரமத்தைக் கண்டு மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். மிகவும் குறிப்பாக, எனது பராக்கிரமத்தை இழந்த நான் உன்னால் வீழ்த்தப்பட்டேன். இப்போது நான் இந்திரனாகச் செயல்பட்டால், அனைத்து உயிரினங்களிடமும் எனக்கு மரியாதை கிடைக்காது. நமக்கிடையே சண்டை மூட்டிக் கொண்டிருப்பதில் மும்முரமாக இருப்பார்கள். என் தலைவா {ஸ்கந்தா}, பிறகு அவர்கள் நம்மில் ஒருவன் அல்லது இன்னொருவனுக்கு ஆதரவாளர்கள் ஆவார்கள். இரண்டு வேறுபட்ட பிரிவுகளாகத் தங்களை அவர்கள் அமைத்துக் கொள்ளும்போது, நம்மிருவருக்கும் இடையில் மக்களின் வேறுபாட்டால் முன்பு போலவே போர் ஏற்படும். அந்தப் போரில் சந்தேகமற நீ என்னை எளிதாக வென்று, அனைத்து உலகங்களுக்கும் தலைவனாவாய்” என்றான்.
ஸ்கந்தன் {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா {இந்திரா}, மூன்று உலகங்களுக்கும் எப்படியோ, அப்படி நீயே எனக்கும் மன்னன்; நீ செழிப்படைவாயாக! நான் கீழ்ப்படிய வேண்டிய உனது கட்டளை என்ன என்பதைச் சொல்?” என்றான்.
இந்திரன் {ஸ்கந்தனிடம்}, “உனது உத்தரவின் பேரில், ஓ! பலமிக்கவனே {ஸ்கந்தா}, நான் தொடர்ந்து இந்திரனாகச் செயல்படுவேன். இதை நீ தீர்மானமாகவும், அக்கறையுடனும் சொல்லியிருந்தால், எனக்குச் சேவை செய்யும் உனது விருப்பத்தை நீ எப்படிச் செய்யலாம் என்பதைச் சொல்கிறேன் கேள். ஓ! பலமிக்கவனே, தேவர்கள் படையின் தலைமையை {படைத்தலைவராக, சேனாதிபதியாக} நீ ஏற்றுக்கொள்” என்றான்.
ஸ்கந்தன் {இந்திரனிடம்}, “தானவர்களின் அழிவுக்காகவும், தேவர்களின் நன்மைக்காகவும், பசுக்கள் மற்றும் அந்தணர்களின் நன்மைக்காகவும், எனக்கு நீ {தேவர்கள் படைக்குப் படைத்தலைவனாக} பட்டாபிஷேகம் செய்” என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இப்படி இந்திரனால், அனைத்து தேவர்களாலும் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு, பெரும் முனிவர்களால் மதிக்கப்பட்ட அவன் {ஸ்கந்தன்} மகத்தானவனாகத் தெரிந்தான். (அவன் தலைக்கு மேலே) இருந்த பொற்குடை [1] எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் சுடரைப் {ஜுவாலை} போல இருந்தது. திரிபுரனை வீழ்த்தி புகழ்பெற்ற தேவனே {சிவனே}, விஸ்வகர்மாவின் தயாரிப்பான தெய்வீக மாலையை அவனது கழுத்தைச் சுற்றி அணிவித்தான். ஓ! உனது எதிரிகளை வீழ்த்திய பெரிய மனிதா {யுதிஷ்டிரா}, காளையைத் தனது குறியீடாகக் கொண்ட அந்த வணங்கத்தக்க தேவன் {சிவன்}, பார்வதியுடன் சேர்ந்து முன்பே அங்கு வந்திருந்தான். அவன் {சிவன்}, அவனுக்கு {ஸ்கந்தனுக்கு} மகிழ்ச்சியான இதயத்துடன் மரியாதை செலுத்தினான். அந்தணர்களால் அக்னி தேவன் ருத்திரன் என்று அழைக்கப்படுகிறான். இதன் காரணமாக ஸ்கந்தன் ருத்திரனின் {சிவனின்} மகனாக அழைக்கப்படுகிறான்.
ருத்திரனின் வீரிய வெளிப்பாட்டு குவியலால் தான் அந்த வெண்மலை {ஸ்வேத மலை} உருவாக்கப்பட்டது. கிருத்திகைகளுடன் அக்னி தேவனின் சிற்றின்ப விளையாட்டு அந்த வெண்மலையில் தான் நடந்தது. அற்புதமான குஹன் (ஸ்கந்தன்), ருத்திரனால் நன்கு மதிக்கப்பட்ட காரணத்தால், ருத்திரனின் பிள்ளை என அனைத்து தேவர்களும் அழைத்தார்கள். ருத்திரன் அக்னி தேவனின் உடலமைப்புக்குள் நுழைந்து செயல்பட்ட காரணத்தால் இந்தப் பிள்ளை உருவானதால், ஸ்கந்தன், ருத்திரனின் மகன் என்று அறியப்படலானான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ருத்திரன், அக்னி தேவன், சுவாகா, (ஏழு முனிவர்களின்) ஆறு மனைவியர் ஆகியோர் பெரும் தேவனான ஸ்கந்தனின் பிறப்புக்குக் கருவியாகச் செயல்பட்ட காரணத்தால், அவன் {ஸ்கந்தன்} ருத்திரனின் மகன் எனக் கூறப்படுகிறான்.
அக்னி தேவனின் அந்த மகன் மாசற்ற சிவப்பு நிறமுள்ள இரண்டு ஆடைகளை உடுத்தியிருந்தான். அதனால் அவன் மகத்தானவனாகவும், சிவந்த மேகக்கூட்டங்களுக்கிடையில் இருந்து எட்டிப் பார்க்கும் சூரியனைப் போலவும் தெரிந்தான். அக்னி தேவனால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட சிவப்பு சேவல் அவனது குறியீடாக ஆனது; அது {சேவல் குறியீடு}, அவனது {ஸ்கந்தனின்} தேருக்கு மேல் இருந்த போது அனைத்தையும் அழிக்கும் நெருப்பின் உருவம் போலத் தெரிந்தது. அனைத்து உயிரினங்களின் செயல்களும், ஒளியும், சக்தியும், பலமுமான, தேவர்களுக்கு வெற்றியைத் தரக்கூடிய சக்தி ஆயுதமானது அந்த ஸ்கந்தனுக்கு எதிரில் வந்தது. அந்தத் தேவனுக்கு {ஸ்கந்தனுக்கு} வெற்றியை விளைவிக்கும், அனைத்து உயிரினங்களின் முயற்சிகளையும் இயக்கும், தேவர்களின் பெருமை, உரிமை, அடைக்கலம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் சக்தி உறையும் தெய்வம் அவனுக்கு {ஸ்கந்தனுக்கு} முன்பாகச் சென்றது. ஒரு புதிர் நிறைந்த அழகு, அதாவது போர்க்களத்தில் தனது சக்திகளை வெளிப்படுத்தும் அழகு அவனது {ஸ்கந்தனின்} உடலுக்குள் நுழைந்தது. அழகு, பலம், பக்தி, சக்தி, வலிமை, சத்தியம், மேன்மை, அந்தணர்களுகுக அர்ப்பணிப்பு, மாயை அல்லது குழப்பத்தில் இருந்து விடுதலை, தொண்டர்களின் பாதுகாப்பு, எதிரிகளின் அழிவு, அனைத்து உயிரினங்களின் பாதுகாப்பு ஆகிய இவை அனைத்தும், ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, ஸ்கந்தனுடன் பிறந்த அறங்களாக இருந்தன.
அனைத்து தேவர்களாலும் இப்படி {படைத்தலைவன்} பட்டமளிக்கப்பட்ட அவன் {ஸ்கந்தன்} மகிழ்ச்சியுடனும் சுயதிருப்தியுடனும் காணப்பட்டான். அற்புதமாக உடுத்தியிருந்த அவன் {ஸ்கந்தன்}, முழு நிலவைப் போல மிகவும் அழகாகக் காணப்பட்டான். மிகுந்த மதிப்பிற்குரிய வேத மந்திரங்கள் உரைத்தல், தெய்வீக இசைக்குழுவின் இசை, தேவர்கள் மற்றும் கந்தர்வர்களின் கானம் ஆகியன எல்லாப்புறமும் ஒலித்தன. அழகாக உடுத்தியிருந்த அப்சரசுகள், மகிழ்ச்சியாகத் தெரிந்த பிசாசங்கள், தேவர்களின் படைகள் ஆகியவை சூழ பாவகனின் மகனுடைய பட்டமளிப்பு விழா பகட்டாக நடந்தது. இப்படிப் பட்டமேற்ற மஹாசேனன் {ஸ்கந்தன்} தேவலோக வாசிகளுக்கு நீண்ட இருளுக்குப் பின் தெரியும் சூரியனைப் போலத் தெரிந்தான். பிறகு தேவர்களின் படை, அவனைத் தங்கள் தலைவனாகக் கண்டு, ஆயிரக்கணக்கில் அவனைச் சூழ்ந்து நின்றது. அனைத்து உயிர்களாலும் தொடரப்பட்ட அந்த வழிபடத்தகுந்தவன் {ஸ்கந்தன்}, அவர்களது உத்தரவுகளையும், புகழ்ச்சிகளையும், மரியாதைகளையும் ஏற்றுக் கொண்டு பதிலுக்கு அவர்களுக்கு உற்சாகமூட்டினான்.
ஆயிரம் வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, முன்பு அவனால் காக்கப்பட்ட தேவசேனையை நினைத்துப் பார்த்தான். இவனே {ஸ்கந்தனே} அவளுக்குப் பிரம்மனால் நிச்சயக்கப்பட்ட கணவன் என்பதைச் சந்தேகமற கருதிய அவன் {இந்திரன்}, சிறந்த முறையில் ஆடைகள் உடுத்தியிருந்த அவளை {தேவ சேனையை} அங்கு அழைத்து வந்தான். பிறகு வலனை வீழ்த்தியவன் {இந்திரன்} ஸ்கந்தனிடம், “ஓ! தேவர்களில் முதன்மையானவனே {ஸ்கந்தா}, நீ பிறப்பதற்கு முன்பே சுயம்புவால் [2] இந்த மங்கை உனக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கிறாள். எனவே தாமரை போன்ற அழகிய இவளது வலக்கரத்தை, உரிய (திருமண) மந்திரங்களுடன் முறையாகப் பற்றுவாயாக” என்றான்.
இப்படிச் சொல்லப்பட்ட அவன் {ஸ்கந்தன்}, அவளை {தேவசேனையை} முறையாக மணந்து கொண்டான். மந்திரங்கள் கற்ற பிருஹஸ்பதி உரிய வேண்டுதல்களையும், காணிக்கை சடங்குகளையும் செய்தான். ஷஷ்டி, லக்ஷ்மி, ஆசா, சுகப்பிரதா, சினிவாலீ, குஹூ, சைவிருத்தி, அபராஜிதை என்ற அழைக்கப்படும் அவள் மனிதர் மத்தியில் ஸ்கந்தனின் மனைவியான தேவசேனை என்று அறியப்படுகிறாள். கலைத்துவிட முடியாத திருமண உடன்படிக்கையால் தேவசேனையுடன் ஸ்கந்தன் இணைக்கப்பட்ட போது, செழிப்பின் தேவியானவள் {லட்சுமி} உருவம் கொண்டு வந்து அவனுக்கு {ஸ்கந்தனுக்கு} ஊக்கத்துடன் சேவை செய்ய ஆரம்பித்தாள். ஸ்கந்தன், ஐந்தாவது சந்திர நாளில் {பஞ்சமியில்} செழிப்பை {லட்சுமி தேவியை} அடைந்ததால் அந்த நாள் ஸ்ரீபஞ்சமி (அல்லது மங்களகரமான ஐந்தாவது நாள்) என்று அழைக்கப்படுகிறது. ஆறாவது நாளில் {ஸ்கந்தன்} வெற்றியடைந்ததால், அந்தச் சந்திர நாள் {ஷஷ்டி திதி} மகிமை பொருந்திய நாளாகக் கருதப்படுகிறது.”
தீய ஆவிகள்! – வனபர்வம் பகுதி 229-ஏழு முனிவர்களின் மனைவியரை ஸ்கந்தன் அன்னையாக ஏற்றது; இந்திரன் விண்மீன் கூட்டத்தில் கிருத்திகைக்கான இடத்தைக் கோரியது; ஸ்கந்தன் அதற்கு அருளியது; வினதை உட்பட்ட தாய்மார் தீய ஆவிகளாகி குழந்தைகளைக் கொல்லும் வரத்தை ஸ்கந்தனிடம் கேட்டது; தீய ஆவிகளின் தன்மைகள் குறித்து மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஏழு முனிவர்களின் ஆறு மனைவியரும், மஹாசேனன் {ஸ்கந்தன்} நற்பேறு பெற்றதையும், தேவர்கள் படையின் தலைமை ஏற்றதையும் அறிந்து, அவனது {ஸ்கந்தனின்} இருப்பிடத்திற்கு வந்தனர். உயர்ந்த அறத்தகுதி படைத்த அந்த அறம்சார்ந்த மங்கையர் அந்த முனிவர்களால் கைவிடப்பட்டு இருந்தனர். தேவர்ப்படை தலைவனைச் சந்திப்பதில் காலந்தாழ்த்தாமல், அவனிடம் {முருகனிடம்} சென்று, “ஓ! மகனே, தேவர்களைப் போன்ற எங்கள் கணவர்களால் எந்தக் காரணமும் இன்றி நாங்கள் கைவிடப்பட்டோம். சில மனிதர்கள் நாங்கள் தான் உன்னைப் பெற்றதாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இந்தக் கதையை உண்மை என்று நம்பிய அவர்கள் {எங்கள் கணவர்கள்} பெரிதும் கோபித்துக் கொண்டு, எங்கள் புனித இடங்களில் இருந்து எங்களை வெளியேற்றிவிட்டனர். இந்த அபகீர்த்தியில் இருந்து எங்களைக் காப்பதே உனக்குத் தகும். ஓ! பலமிக்கவனே {ஸ்கந்தா} நாங்கள் உன்னை எங்கள் மகனாகச் சுவீகரிக்க எண்ணுகிறோம். உனது ஆதரவை அடைந்தால் நித்திய அருளை அடைந்து பாதுகாப்பாக இருப்போம். இதைச் செய்து கடனைத் தீர்த்தவனாவாயாக” என்றனர்.
ஸ்கந்தன், “ஓ! குறையற்ற குணம் கொண்ட மங்கையரே, நீங்கள் எனது தாய்மாரே ஆவீர்கள். நான் உங்களது மகனே! நீங்கள் விரும்பும் அனைத்தையும் நீங்கள் அடைவீர்கள்” என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பின்பு சக்ரன் {இந்திரன்} ஸ்கந்தனிடம் ஏதோ சொல்ல விரும்ப, ஸ்கந்தன் அவனிடம் {இந்திரனிடம்}, “என்ன அது?” என்று கேட்டான். ஸ்கந்தனால் பேசச் சொல்லிக் கேட்டுக் கொள்ளப்பட்ட வாசவன் {இந்திரன்}, “ரோகிணியின் தங்கையான அபிஜித் என்ற மங்கை, அவளது {ரோகிணியின்} மூப்பில் பொறாமை கொண்டு, {தானே மூத்தவளாக வேண்டும் என்று எண்ணி} தவம் செய்யக் கானகம் சென்றிருக்கிறாள். இப்படி விழுந்த நட்சத்திரத்திற்கு {அபிஜித்துக்கு = உத்திராடம் நட்சத்திரத்திற்கு} ஒரு மாற்று கண்டு கண்டுபிடிக்க முடியாமல் இழப்புடன் நான் இருக்கிறேன். உனக்கு நற்பேறு உண்டாகட்டும். இந்தப் பெரும் விண்மீன் கூட்டத்தை (அந்தக் காலி இடத்தைப் பூர்த்திச் செய்ய) சரி செய்ய, பிரம்மனிடம் நீ ஆலோசனை செய்வாயாக. தனிஷ்டம் {அவிட்டம்} மற்றும் பிற விண்மீண்கள் பிரம்மனால் படைக்கப்பட்டது. ரோகிணியும் இதுபோன்ற ஒரு நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டாள்” என்றான். பிறகு சக்ரனின் {இந்திரனின்} ஆலோசனைப் படி வானத்தில் கிருத்திகைக்கு ஒரு இடம் ஒடுக்கப்பட்டது. அக்னியைத் தலைமையாகக் கொண்ட அந்த நட்சத்திரம் {கார்த்திகை} ஏழு தலைகளுடன் ஒளிர்கின்றது. வினதை என்பவள் ஸ்கந்தனிடம், “நீ எனக்கு மகனைப் போன்றவன். ஈமச்சடங்கில் எனக்குப் பிண்டம் அளிக்கத்தக்கவன். என் மகனே, நான் எப்போதும் உன்னுடனே வாழ விரும்புகிறேன்” என்றாள்.
ஸ்கந்தன், “அப்படியே ஆகட்டும்! அனைத்துப் புகழும் உங்களையே சாரட்டும்! தாயின் பாசத்தோடு என்னை வழிநடத்தி, உங்கள் மருமகளால் மதிக்கப்பட்டு என்னுடன் எப்போதும் வாழ்ந்து வாருங்கள்” என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிறகு அந்தப் பெரும் தாய்மார்கள் ஸ்கந்தனிடம், “கற்றோரால் எங்கள் அனைத்து உயிரினங்களின் தாய்மாராவோம். ஆனால், நாங்கள் உனது தாய்மாராக விரும்புகிறோம். எங்களைப் பெருமைப்படுத்துவாயாக” என்றனர்.
ஸ்கந்தன், “நீங்கள் அனைவரும் எனது தாய்களே. நான் உங்கள் மைந்தன். உங்களைத் திருப்தி செய்ய நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றான்.
அதற்கு அந்தத் தாய்மார்கள், “பழங்காலத்தில் உலகத்திற்குத் தாய்மார்களாக அந்த (பிராம்மி, மகேஸ்வரி உட்பட்ட) மங்கையர் நியமிக்கப்பட்டார்கள். ஓ! பெரும் தேவா {ஸ்கந்தா}, அவர்களிடம் இருந்து அந்தக் கண்ணியத்தைப் பறிமுதல் செய்து, அந்த இடத்தில் எங்களை நியமிக்க வேண்டும் என்றும், அவர்களை விட்டு உலக மக்கள் எங்களை வழிபட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். உன் நிமித்தமாக அவர்களால் {எங்கள் கணவர்கள் எங்கள் மீது கோபம் கொண்டு தள்ளி வைத்ததால} நாங்கள் இழந்த சந்ததியை எங்களுக்கு நீ மீட்டுத் தா” என்றனர்.
ஸ்கந்தன், “ஏற்கனவே ஒரு முறை கொடுக்கப்பட்டுவிட்டதை {உலக அன்னையர் என்ற கண்ணியத்தை} நீங்கள் அடைய முடியாது. ஆனால், நீங்கள் விரும்பினால், உங்களுக்கு வேறு வாரிசுகளை என்னால் தர முடியும்” என்றான். அதற்கு அந்தத் தாய்மார், “நாங்கள் உன்னுடன் வாழ்ந்து கொண்டே, பலதரப்பட்ட உருவங்களைக் கொண்டு, அந்தத் தாய்மார் {பிராம்மி, மகேஸ்வரி உட்பட்ட அன்னையர்} மற்றும் அவர்களின் பாதுகாவலர்களின் சந்ததிகளை உண்ணும் சக்தி பெற விரும்புகிறோம். நீ எங்களுக்கு இந்த உதவியைச் செய்வாயாக” என்றனர்.
ஸ்கந்தன், “என்னால் உங்களுக்குச் சந்ததியைத் தர முடியும். ஆனால், இப்போது நீங்கள் சொன்னது மிகவும் வலி மிகுந்த ஒன்றாகும். செழிப்படைவீர்களாக! அனைத்துப் புகழும் உங்களைச் சேரட்டும் மங்கையரே, நீங்கள் அவர்களுக்கு {அவர்களது சந்ததிகளுக்கு} உங்கள் பாதுகாப்பை அருளுங்கள்” என்றான்.
அதற்கு அந்தத் தாய், “ஓ! ஸ்கந்தா, நீ விரும்பியபடியே நாங்கள் அவர்களைப் பாதுகாப்போம். நீ செழிப்படைவாயாக? ஆனால், ஓ! பலமிக்கவனே {ஸ்கந்தா}, நாங்கள் எப்போதும் உன்னுடன் வாழ விரும்புகிறோம்” என்றனர்.
ஸ்கந்தன், “மனிதர்களின் குழந்தைகள், இளமை நிலையான பதினாறு வயதை அடையாத வரை, நீங்கள் உங்கள் பல்வேறு உருவங்களால் அவர்களைத் துன்புறுத்தலாம். அளவற்ற கடுமைநிறைந்த ஆவியை {என் சக்தியை} நானும் உங்களுக்கு வழங்குகிறேன். அதைக் கொண்டு நீங்கள் அனைவராலும் வழிபடப்பட்டு மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்” என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிறகு ஸ்கந்தனின் உடலில் இருந்து கடுமையும் பலமும் மிக்க ஒருவன், மனிதர்களின் சந்ததிகளை விழுங்கும் காரணத்திற்காக வந்தான். {அப்படி வந்தவன்}, பசியால் உணர்வற்றுத் தரையில் விழுந்தான். ஸ்கந்தனால் உத்தரவிடப்பட்ட அந்தத் தீய மேதை ஒரு பயங்கர உருவத்தை எடுத்தான். நல்ல அந்தணர்கள் மத்தியில் அவன் ஸ்கந்தாபஸ்மாரன் என்ற பெயரால் அறியப்படுகிறான். பெரும் பயங்கரம் கொண்ட வினதை சகுனி கோள் {கிரகம்} {தீமையின் ஆவி} என்று சொல்லப்படுகிறாள். பூதனா ராட்சசி என்று கற்றோரால் அழைக்கப்படுபவள் பூதனா என்ற கோளாகும் {பூதன கிரகமாகும்}. அருவருப்பான தோற்றமும், பார்ப்பதற்குக் கடுமையும் பயங்கரமும் நிறைந்த அந்தப் பிசாசமானவள், சீதபூதனை என்றும் அழைக்கப்படுகிறாள். அந்தக் கடும்தோற்றம் கொண்ட ஆவியே {சீதபூதனையே} மங்கையரின் கருச்சிதைவுக்குக் காரணமாவாள். ரேவதி என்ற பெயராலும் அதிதி அறியப்படுகிறாள்; குழந்தைகளைத் துன்புறுத்தும், ரைவதம் என்று அழைக்கப்படும் பயங்கரமான கோள் அவளது {அதிதி [அ] ரேவதியின்} தீய ஆவியே ஆகும். தைத்தியர்களின் (அசுரர்களின்) தாயான திதி, முகமண்டிகை என்றும் அழைக்கப்படுகிறாள். அந்தப் பயங்கரி சிறு குழந்தைகளின் இறைச்சியை மிகவும் விரும்புபவளாவாள்.
ஓ! கௌரவா {யுதிஷ்டிரா}, ஸ்கந்தனால் பெறப்பட்ட ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் தீய ஆவிகளாவர். அவர்கள் கருப்பையில் உள்ள கருவை அழிப்பவர்களாவர். இவர்களே (குமாரர்களே) அந்த மங்கையருக்குக் கணவர்களாக அறியப்படுகிறார்கள். இந்தக் கொடுமையான ஆவிகளால், குழந்தைகள், எதிர்பாராத நேரத்தில் அபகரிக்கப்படுகிறார்கள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மாட்டினத்தின் {மாடுகளின்} தாய் என்று அழைக்கப்படும் சுரபி {காமதேனு}, சகுனி என்றழைக்கப்படும் தீய ஆவியால் நன்கு விரட்டப்படுகிறாள் {சகுனி காமதேனுவை வாகனமாகக் கொண்டிருக்கிறான்}. அப்படி அவளின் {சுரபியின்} துணையுடன் அவன் {சகுனி}, பூமியில் உள்ள குழந்தைகளை விழுங்குகிறான். நாய்களுக்கெல்லாம் தாயான சரமாவும், கருவில் இருக்கும் மனிதர்களைக் {குழந்தைகளைக்} கொல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறாள். மரங்களனைத்துக்கும் தாயானாவள் கரஞ்ச {புங்கை [புன்கு]} மரத்தில் தன் வசிப்பிடத்தைக் கொண்டிருக்கிறாள். அவள் எப்போதும் வரங்களைக் கொடுப்பவளாவும், நல்ல உருவமுள்ளவளாகவும், அனைத்து உயிரினங்களிடத்தில் தயை உள்ளவளாகவும் இருக்கின்றாள். எனவே, குழந்தைகளை விரும்பும் மனிதர்கள், கரஞ்ச {புங்கை} மரத்தில் அமர்ந்திருக்கும் அவளை வணங்குகிறார்கள்.
இந்தப் பதினெட்டு தீய ஆவிகளும் இறைச்சியையும், மதுவையும், அதே வகையான பிறவற்றையும் விரும்பி, பத்து நாட்களுக்கு {சூதிகா கிரகத்தில் = இறைச்சி & மது இருக்கும் இடத்தில்} தவிர்க்க முடியாமல் தங்குகின்றன. கத்ரு என்பவள் நுட்பமான உடல் கொண்டு கர்ப்பத்திற்குள் நுழைகிறாள். அங்கு அவள் {கத்ரு} கருவின் அழிவுக்குக் காரணமாகிறாள். அந்தத் {கருவுற்ற} தாய், நாகத்தை (பாம்பை) {அங்கக் குறைவுள்ள [அ] அங்கங்கள் சிதைந்த மனிதர்களான நாகர்களாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்} பெற்றெடுக்கிறாள். கந்தர்வர்களின் தாய் கருவைக் கவர்ந்து செல்கிறாள். இதன்காரணமாக அந்த {கருவுற்ற} பெண்ணுக்குக் கருச்சிதைவு ஏற்படுகிறது. அப்சரசுகளின் தாய் கருவறையில் உள்ள கருவை அகற்றுகிறாள். இதன்காரணமாக, கற்றவர்கள் அந்தக் கருவை, வளர்ச்சி குறைந்த கரு என்கின்றனர். சிவப்புக் கடல் {லோஹிதம் [கடல்]} தேவனின் மகள் ஸ்கந்தனுக்கு அமுதூட்டியவள் என்று சொல்லப்படுகிறாள். கடம்ப மரங்களில் இவள் லோஹிதாயணி என்ற பெயரால் வழிபடப்படுகிறாள். ஆண்களிடம் ருத்திரன் என்ன செய்கிறானோ, அதே செயலையே பெண்களிடம் ஆர்யை செய்கிறாள். இவளே {ஆர்யை} அனைத்துக் குழந்தைகளின் தாயாவாள். அவர்களது {குழந்தைகளின்} நன்மைக்காகத் தனித்துவமாக இவளே {ஆர்யை} வழிபடப்படுகிறாள். நான் விவரித்திருக்கும் இவர்கள் இளம் குழந்தைகளின் விதிகளை ஆதிக்கம் செலுத்தும் தீய ஆவிகளாவர். குழந்தைகள் பதினாறு வயதை அடையும் வரை இந்த ஆவிகள், அவர்களுக்குத் தீமையும், அதன் பிறகு நன்மையும் செய்கின்றன.
நான் விவரித்திருக்கும் ஆண், பெண் ஆவிகளான இவர்கள் அனைவரும் மனிதர்களால் ஸ்கந்தனின் ஆவிகள் என்றே வகுக்கப்பட்டுள்ளனர். நெருப்பிலிடப்படும் காணிக்கைகள் {தகனபலிகள்}, உறுப்புகள்சுத்தம் {அங்கசுத்தம்}, தைலங்கள் {வாசனை திரவியங்கள்}, வேள்விகள், பிற காணிக்கைகள், குறிப்பாக ஸ்கந்தன் வழிபாடு ஆகியவை அவர்களின் {அந்த தீய ஆவிகளின்} கோபத்தைத் தணிக்கும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்கள் உரிய முறையில் மதிக்கப்பட்டு, வணங்கப்பட்டால், மனிதர்கள் விரும்பும் அனைத்து நன்மைகளையும், வீரத்தையும், நீண்ட வாழ்நாளையும் {ஆயுளையும்} அளிக்கிறார்கள். மகேஸ்வரனை வணங்கி, பதினாறு வருடம் கடந்த பிறகு, மனிதர்களின் {அந்தக் குழந்தைகளின்} விதியில் ஆதிக்கம் கொள்ளும் அந்த ஆவிகளின் இயல்புகளைச் நான் இப்போது சொல்கிறேன்.
உறங்கும்போதோ, விழித்த நிலையிலோ தேவர்களைக் காணும் ஒரு மனிதன் விரைவில் பைத்தியமாகிறான். எந்த ஆவியின் ஆதிக்கத்தால் இந்தப் பிரமைகள் நடக்கின்றனவோ அது தேவ ஆவி என்று அழைக்கப்படுகிறது. வசதியாக அமர்ந்திருக்கும்போதோ, படுக்கையில் கிடக்கும்போதோ இறந்த தனது மூதாதையர்களைக் காணும் ஒரு மனிதன், விரைவில் தனது அறிவை இழக்கிறான். இந்த அறிவுணரும் மாயைக்குக் காரணமான ஆவி மூதாதையர்களின் ஆவி என்று அழைக்கப்படுகிறது. சித்தர்களை அவமதிக்கும் ஒருவன், பதிலுக்கு அவர்களால் சபிக்கப்பட்டு, விரைவில் பைத்தியமாகிறான். இந்தத் தீய ஆதிக்கத்தைக் கொண்டுவரும் ஆவி சித்த ஆவி என்று அழைக்கப்படுகிறது.
எந்த ஆவியின் ஆதிக்கத்தால் ஒரு மனிதன் நறுமணத்தை உணர்ந்து, பல்வேறு சுவைகளை {நறுமணம் பரப்புகிற அல்லது சுவையான பொருட்கள் இல்லாத போதே} அறிந்து, வேதனையடைகிறானோ, அந்த ஆவி, ராட்சச ஆவி என்று அழைக்கப்படுகிறது. எந்த ஆவியின் செயலால், தேவ இசைக்கலைஞர்கள் (கந்தர்வர்கள்), ஒரு மனிதனின் உடலமைப்புக்குள் தன் இருப்பைக் கலந்து வெகு விரைவில் பைத்தியம் பிடிக்க வைக்கிறதோ அந்த ஆவி கந்தர்வ ஆவி என்று அழைக்கப்படுகிறது. எந்த ஆவியின் ஆதிக்கத்தால் மனிதர்கள் பிசாசுகளால் எப்போதும் வேதனையடைகிறார்களோ அந்த ஆவி பைசாச ஆவி என்று அழைக்கப்படுகிறது. ஒரு விபத்தின் காரணமாக மனிதனின் உடலமைப்புக்குள் நுழைந்து, அம்மனிதனை உணர்வை இழக்கச்செய்யும் ஆவி, யக்ஷ ஆவி என்று அழைக்கப்படுகிறது.
தீமைகளின் காரணமாக அறம் பிறழ் மனம் கொண்ட ஒரு மனிதன் தனது உணர்வுகளை இழந்து, குறுகிய காலத்தில் பைத்தியக்காரன் ஆவான். அவனது நோயை சாத்திரங்கள் பரிந்துரைக்கும் முறைகளின் படி குணப்படுத்த வேண்டும். குழப்பம், பயம், அருவருப்பான காட்சிகளைக் காணுதல் ஆகியவற்றாலும் ஒரு மனிதன் பைத்தியமாகிறான். மனதை அமைதிப்படுத்துவதிலேயே அவர்களுக்கான தீர்வு இருக்கிறது. ஆவிகளில் சில விளையாட்டிலும், சில உண்பதிலும், சில காமத்திலும் விருப்பம் கொண்டிருக்கும். இப்படி ஆவிகளில் மூன்று வகுப்புகள் உள்ளன. மூன்று இலக்கத்துடன் சேர்த்து பத்து வயது {110 வயது என்று நினைக்கிறேன்} {70 வயது என்றும் வேறு உரை கண்டிருக்கிறேன்} {ஆங்கிலத்தில் Until men attain the age of three score and ten என்று கங்குலி சொல்கிறார்} ஆகும்வரை மனிதர்கள் இந்தத் தீய ஆவிகளின் ஆதிக்கம் வேதனைப்படுத்தும். பின்னர்ப் புலன்றிவாற்றலுள்ளவர்களைத் தாக்கும் தீய ஆவியாகக் காய்ச்சல் மட்டுமே இருக்கிறது. புலன்களை அடக்கியவர்கள், சுயக்கட்டுப்பாடு உடையவர்கள், சுத்தமான பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள், தெய்வத்துக்கு அஞ்சுபவர்கள், சோம்பலற்றவர்கள், களங்கம் இல்லாதவர்கள் ஆகியோரை எப்போதுமே இத்தீய ஆவிகள் தவிர்த்து விடுகின்றன. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்களின் விதிகளை உருவாக்கும் தீய ஆவிகளைக் குறித்து உனக்கு விவரித்துவிட்டேன். மகேஸ்வரனுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட உங்களுக்கு அவர்கள் {அந்தத் தீய ஆவிகள்} மூலம் தொந்தரவே ஏற்படாது” என்றார் {மார்க்கண்டேயர்}.
சிவனுக்கு மகன் கந்தன்! – வனபர்வம் பகுதி 230அ-சுவாகாவை அக்னியுடன் இணைத்த ஸ்கந்தன்; ஸ்கந்தனின் தந்தை சிவன் என்று பிரம்மன் ஸ்கந்தனிடம் சொன்னது; சிவனால் பெறப்பட்ட மிஞ்சிகையும், மிஞ்சிகனும்; ஆவிகளை வழிபட வேண்டியதற்கான தேவைகள்; குஹன் அமர்ந்திருந்த அந்த மலையின் அழகு …
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஸ்கந்தன் {அந்த அன்னையருக்கு} இந்தச் சக்திகளை எல்லாம் அளித்த போது, சுவாகா அவன் முன் தோன்றி, “இயற்கையாகவே {உண்மையில்} நீ எனது மகன். நீ எனக்கு அற்புதமான மகிழ்ச்சியை அருள வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றாள்.
ஸ்கந்தன், “எந்த மாதிரியான மகிழ்ச்சியை நீ விரும்புகிறாய்?” என்று கேட்டான்.
சுவாகா {ஸ்கந்தனிடம்}, “ஓ! பலமிக்கவனே {ஸ்கந்தா}, நான் தக்ஷனின் அன்புக்குரிய மகளான சுவாகா என்ற பெயர் கொண்டவள் ஆவேன்; எனது இளமையில் நான் ஹுதாசனனிடம் (அக்னி தேவன்) காதல் கொண்டேன். ஆனால், என் மகனே, அந்தத் தேவன் {அக்னி தேவன்} எனது உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. நான் அவருடையே (அவரது மனைவியாக) எப்போதும் வாழ விரும்புகிறேன்” என்றாள்.
ஸ்கந்தன் {சுவாகாவிடம்}, “மங்கையே, இந்த நாளில் இருந்து, அறத்தின் பாதையில் இருந்து வழுவாத நல்லவர்கள், தங்கள் தேவர்கள், மூதாதையர் ஆகியோருக்கு அந்தணர்கள் உதவியுடனும் சுத்திகரிக்கும் மந்திரங்களுடனும் காணிக்கைகள் அளிக்கும்போது, சுவாகா என்ற பெயரை இணைத்துச் சொல்லியே (அக்னி மூலமாக) அக்காணிக்கைகளை அளிப்பார்கள். அற்புதமான மங்கையே, இப்படி நீ எப்போதும் நெருப்பு தேவனான அக்னியுடன் இணைந்து வாழ்வாய்” என்றான் {ஸ்கந்தன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இப்படி ஸ்கந்தனால் மதிப்புடன் சொல்லப்பட்ட சுவாகா மிகவும் திருப்தியடைந்தாள்; தனது கணவனான பாவகனோடு (அக்னி தேவனோடு) சேர்ந்து, அவளும் அவனுக்கு {ஸ்கந்தனுக்கு} பதில் மரியாதை செய்தாள்.
பிறகு, அனைத்து உயிர்களுக்கும் தலைவனான பிரம்மன், மஹாசேனனிடம் {ஸ்கந்தனிடம்}, “நீ சென்று, திரிபுரனை வீழ்த்திய உன் தந்தையான மகாதேவனைச் சந்திப்பாயாக. ருத்திரன் {சிவன்}, (நெருப்பு தேவனான) அக்னியுடனும், உமை சுவாகாவுடனும் ஒன்றிணைந்து, அனைத்து உயிர்களின் நன்மைக்காக யாராலும் வெல்லமுடியாத உன்னை உருவாக்கக் கூடினர். உயர் ஆன்ம ருத்திரனின் உயிரணு, உமையின் இனப்பெருக்க உறுப்புக்குள் விடப்பட்டு, இந்த மலையின் மேல் வீசப்பட்டது. அதனால் மிஞ்சிகை, மிஞ்சிகன் ஆகியோர் உண்டாக்கினர். அதில் {உயிரணுவில்} ஒரு பகுதி இரத்தக் கடலுக்குள் {லோஹித சமுத்திரம்} விழுந்தது, மற்றொரு பகுதி சூரியக் கதிருக்குள்ளும், மற்றொன்று பூமியிலும் விழுந்து ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்படி விழுந்த அவை இறைச்சியில் வாழும் கோர வடிவம் கொண்ட உனது தொண்டர்கள் ஆகினர் எனக் கற்றோர் ஞாபகம் கொள்கின்றனர்” என்றான் {பிரம்மன்}. “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன உயர் ஆன்ம மஹாசேனன் தந்தையிடம் அன்பு கொண்டு, தன் தந்தையான மகேஸ்வரனை வழிபட்டான்.”
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “செல்வத்தை அடைய விரும்பும் மனிதர்கள், இந்த ஐந்து வகை ஆவிகளைச் சூரிய காந்தி பூவைக் {Sun flower}, {எருக்கம்பூ என்றும் சொல்லப்படுகிறது} கொண்டு வழிபட வேண்டும். நோய்களைத் தணிக்க அவற்றை {அந்த ஆவிகளை} வழிபட வேண்டும். சிறு குழந்தைகளின் நன்மையில் விருப்பம் கொண்ட மனிதர்கள், ருத்திரனால் பெறப்பட்ட மிஞ்சிகை, மிஞ்சிகன் என்ற இரட்டையரை வழிபட வேண்டும். தாங்கள் குழந்தைகள் பெற வேண்டும் என்று விரும்பும் மனிதர்கள், மனித இறைச்சியில் வாழும், மரங்களில் உண்டாகியிருக்கும் அந்தப் பெண் ஆவிகளை வணங்க வேண்டும். இப்படி அனைத்துப் பிசாசங்களும் எண்ணிலடங்கா வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இப்போது, ஸ்கந்தனுடைய மணிகள் மற்றும் கொடிகளின் தோற்ற மூலத்தைக் கேள். வைஜெயந்தி என்ற பெயர் கொண்ட இரு மணிகளை ஐராவதன் (இந்திரனின் யானை) கொண்டிருந்ததாக அறியப்படுகிறது. சக்ரன் {இந்திரன்} அவற்றைக் கொண்டு வந்து குஹனிடம் கொடுத்தான். அவற்றில் ஒன்றை விசாகன் எடுத்துக் கொண்டான். ஸ்கந்தன் மற்றொன்றை எடுத்துக் கொண்டான். கார்த்திகேயன் {ஸ்கந்தன்} மற்றும் விசாகனின் கொடிகள் சிவப்பு வண்ணத்தால் ஆனவை. அந்தப் பலமிக்கத் தேவனான மஹாசேனன் தேவர்களால் கொடுக்கப்பட்ட பொம்மைகளால் திருப்தியடைந்தான். தேவர்கள் படைகள், பிசாசங்களால் சூழப்பட்டு, அந்தப் பொன்மலையில் அமர்ந்திருந்த அவன் செழிப்பின் ஆடம்பரத்தால் அற்புதமாகக் காணப்பட்டான். அற்புதமான குகைகள் நிறைந்ததும், சூரியக் கதிர்களால் ஒளிர்வதுமான மந்தர மலையைப் போலவே, அற்புதமான காடுகள் கொண்ட அந்த மலையும், அவனது {ஸ்கந்தனின்} துணையால் அற்புதமாகத் தெரிந்தது.
சந்தான வனங்கள், கரவீர வனங்கள், பாரிஜாத வனங்கள், செல்வரத்தை மற்றும் அசோக மரங்கள் அடர்ந்த வனங்கள், கடம்ப மரங்கள் அடர்ந்த சோலைகள், தெய்வீக மான்கூட்டங்கள், தெய்வீகப் பறவைக்கூட்டங்கள் ஆகியவற்றால் நிறைந்திருந்த வெண்மலை {ஸ்வேத மலை} பிரகாசித்துக் கொண்டிருந்தது. இசைக்கருவிகளின் தேவையைப் பூர்த்திச் செய்து கொண்டிருந்த மேகங்களின் உருமல், கலங்கிய கடலின் முணுமுணுப்பு போலக் கேட்டுக் கொண்டிருந்தது. தெய்வீக கந்தர்வர்களும் அப்சரசுகளும் ஆடத் தொடங்கினர். அனைத்து உயிர்களின் மகிழ்ச்சியாலும் அங்கே பெருத்த இன்ப ஒலி எழுந்தது. இந்திரன் உட்பட முழு உலகும் அந்த வெண்மலைக்கு வந்துவிட்டதாகத் தோன்றியது. மக்கள் அனைவரும் திருப்தி கொண்ட பார்வைகளுடன் ஸ்கந்தனை நோக்கினர். அப்படிச் செய்வதால் அவர்கள் எந்தக் களைப்பையும் உணரவில்லை.
தேவர்கள் படை அணிவகுப்பு! – வனபர்வம் பகுதி 230ஆ-சிவன் தேரில் பார்வதியுடன் பத்திரவடம் சென்றது; இந்திரன் அவனுக்குப் பின்புறத்தில் சென்றது; கந்தன் வலதுசாரியாகச் சென்றது; இயற்கையில் உள்ள அனைத்தும் சிவனின் பின்னால் சென்றது; கந்தனிடம் சிவன் ஏழாவது படைப்பிரிவைக் காக்கும்படி சொன்னது; கந்தன் அதை ஏற்றது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அக்னி தேவனின் புகழத்தக்க மகன் {ஸ்கந்தன்} தேவர்கள் படைக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டபோது, மகிழ்ச்சியடைந்த ஹரன் (மகாதேவன்) பார்வதியுடன் சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட தேரில் பத்திரவடம் என்ற இடத்திற்குச் சென்றான். அவனது அற்புதமான தேர் {தேரோட்டியாக இருந்த} காலனால் செலுத்தப்பட்டு ஆயிரம் சிம்மங்களால் இழுக்கப்பட்டது. வெற்றிடத்தைக் கடந்து செல்லும் அவற்றைக் காண வானத்தையே விழுங்கிவிடுபவை போலத் தெரிந்தன. உலகங்களின் அசையும் பிரிவுகளில் உள்ள அனைத்து உயிரினங்களின் இதயத்திலும் பயங்கரத்தை {சிங்கங்கள்} உணர்த்தின. பயங்கரமாகக் கர்ஜித்துக் கொண்டிருந்த அந்த விலங்குகள் ஆகாயத்தில் விரைந்து கொண்டிருந்தன. அனைத்து விலங்குகளுக்கும் தலைவன் (மகாதேவன்), உமையுடன் தேரில் அமர்ந்து, இந்திரவில்லுடன் (வானவில்) கூடிய மேகத்தில் மின்னலோடு கூடிய சூரியனைப் போலப் பிரகாசித்தான். புகழத்தக்கவனான செல்வங்களின் தலைவன் {குபேரன்}, மனிதர்களின் முதுகில் அமர்ந்தபடியும், அவனது {குபேரனின்} தொண்டர்களான குஹ்யர்கள் அவனது {குபேரனின்} அழகிய புஷ்பக விமானத்திலும் {சிவனைத்} தொடர்ந்து சென்றனர்.
தேவர்கள் படைக்குத் தலைமையானவனும், வரங்களை அருள்பவனுமான மகாதேவனுக்குப் பின்புறத்தில் சக்ரனும் {இந்திரனும்} தனது யானையான ஐராவதத்தில் சென்றான். ஜம்பக யக்ஷன் மற்றும் பிற ராட்சதர்களையும் தொண்டர்களாகக் கொண்டவனும் மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தவனுமான பெரும் யக்ஷனான அமோகன் அந்தப் படையின் வலது சாரியில் இடம்பெற்றான். வசுக்கள் மற்றும் ருத்திரர்களோடு கூடிய, அற்புதப் போராற்றல் கொண்ட பல தேவர்களும் அப்படையின் வலதுசாரியில் {Right Wing} அணிவகுத்து சென்றனர்.
மரணத்தைத் துணையாகக் கொண்டிருக்கும் கோர உருவம் கொண்ட யமனும் {(தன்னை நூற்றுக்கணக்கான பயங்கர நோய்கள் பின்தொடர) அவனுடன் {சிவனுடன்} அணிவகுத்துச் சென்றான். அவனுக்குப் பின்னால் எடுத்துச் செல்லப்பட்ட, கூர்முனை கொண்ட பயங்கர ஆயுதமான நன்கு அலங்கரிக்கப்பட்ட சிவனின் திரிசூலம் விஜயம் என்று அழைக்கப்படுகிறது. புகழத்தக்க நீர்த் தேவனான வருணன், பயங்கரமான பாசத்தோடும் [1], எண்ணிலடங்கா நீர் விலங்குகளுடனும் மெதுவாகத் திரிசூலத்தோடு நடந்து வந்தான். ருத்திரனின் பட்டிசம் [2] கதை, உலக்கை, தண்டம் மற்றும் பிற அற்புதமான ஆயுதங்களால் சூழப்பட்டு விஜயம் என்ற திரிசூலத்தைப் பின்தொடர்ந்து சென்றது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பட்டிசம் ருத்திரனின் பிரகாசமான குடை மற்றும் பெரும் முனிவர்கள் சேவிக்கும் கமண்டலம் ஆகியவற்றால் தொடரப்பட்டது. இவை அனைத்தும் பிருகு, அங்கிரஸ் மற்றும் இன்னும் பிறரின் துணையோடு சென்றன. இவர்கள் அனைவருக்கும் பின்னால், தனது வெள்ளைத் தேரில், தேவர்களுக்குத் தனது சக்திகளை வெளிப்படுத்தும் வண்ணம் ருத்திரன் சென்றான்.
ஆறுகள், தடாகங்கள், கடல்கள், அப்சரசுகள், முனிவர்கள், தேவர்கள், கந்தரவர்கள், பாம்புகள், விண்மீன்கள், கோள்கள், தேவர்களின் குழந்தைகள் ஆகியோரும் இன்னுப் பல பெண்களும் இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து சென்றனர். அழகான தோற்றம் கொண்ட அந்த மங்கையர் சுற்றிலும் பூக்களைத் தூவியபடியே சென்றனர். பினாகம் என்ற வில்லைத் தாங்கிச் சென்ற தேவனை (மகாதேவனை) வணங்கியபடி மேகங்களும் அணிவகுத்துச் சென்றன. அவற்றில் சில அவனது {சிவனின்} தலைக்கு மேலே வெண்குடையைப் பிடித்துச் சென்றன. அக்னியும் (நெருப்பு தேவனும்), வாயுவும் (காற்று தேவனும்) (அரச சின்னங்களான) வெண்சாமரம் வீசினர். அரசமுனிவர்கள் {ராஜரிஷிகள்} துணையுடன் மகத்தான இந்திரனும் பிற தேவர்களும், காளை சின்னம் கொண்ட தேவனின் {சிவனின்} புகழைப் பாடிக் கொண்டே அவனைத் தொடர்ந்து சென்றனர். கற்றோரால் படைக்கப்பட்ட அத்தனை வித்தைகளும் பார்வதியைத் தொடர்ந்து அவளுக்குப் பின்புறத்தில் தொடர்வது போலக் கௌரி, வித்யா, காந்தாரி, கேசினி, மித்திரை என்று அழைக்கப்பட்ட மங்கை ஆகிய அனைவரும் சாவித்திரியோடு சேர்ந்து அவளுக்குப் {பார்வதிக்குப்} பின்புறத்தில் சென்றார்கள்.
இந்திரன் மற்றும் பிற தேவர்களுக்குக் கீழ்ப்படிந்து பலதரப்பட்ட படைப்பிரிவுகளுக்கு உத்தரவுகளைக் கொண்டு சேர்க்கும் ராட்சச ஆவி, கொடியைத் தாங்கிக் கொண்டு படைக்கு முன்னணியில் சென்றான். சடலங்களை எரிக்கும் இடங்களில் எப்போதும் மும்முரமாக இருக்கும் ருத்திரனுக்கு நண்பனும், ராட்சசர்களில் முதன்மையானவனும், அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுபவனுமான பிங்களன் என்ற பெயர் கொண்டவன், ஒரு நேரம் படைக்கு முன்னணியில் சென்றும், அடுத்த நேரம் பின்னுக்கு வந்தும் கணிக்கமுடியாத அசைவுகளுடன் மகிழ்ச்சியாக அணிவகுத்துச் சென்றான்.
அறச்செயல்களைக் காணிக்கையாகக் கொடுத்தே ருத்திர தேவன் மனிதர்களால் வழிபடப்படுகிறான். அவன் சிவன் என்றும் அழைக்கப்படுகிறான். பினாகையைத் தாங்கி எங்கும் நிறைந்திருக்கும் அந்தத் தேவனே மகேஸ்வரன். அவன் பல வடிவங்களில் வழிபடப்படுகிறான்.
தேவர் படையின் தலைவனும், அந்தணர்களின் மரியாதைக்குரியவனுமான கிருத்திகையின் மகனும் {ஸ்கந்தன்}, தேவர் படையால் சூழப்பட்டு அந்தத் தேவாதி தேவனைத் தொடர்ந்து சென்றான். மகாதேவன் மஹாசேனனிடம் {ஸ்கந்தனிடம்}, “நீ கவனமாகத் தேவர்கள் படையின் ஏழாவது படைப்பிரிவினைக் {ஸ்கந்தத்தைக்} கட்டளையிடுவாயாக {காப்பாயாக}” என்ற கனம் நிறைந்த சொற்களால் சொன்னான்.
ஸ்கந்தன் {சிவனிடம்}, “என் தலைவா! {நான்} மிக நன்றாகக் {அந்தப் படைப்பிரிவைக்} காப்பேன்! நான் ஏழாவது படைப்பிரிவை வழிநடத்துவேன். இப்போது, வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா என்பதை விரைவாகச் சொல்லும்” என்றான்.
ருத்திரன் {ஸ்கந்தனிடம்}, “செயற்களத்தில் என்னை நீ எப்போதும் பார்க்கலாம். என்னை நோக்கிப் பார்த்து, எனக்கு அர்ப்பணிப்புடன் இருந்தால், நீ பெரும் நன்மையை அடைவாய்” என்றான்.
மஹிஷனைக் கொன்ற ஸ்கந்தன்! – வனபர்வம் பகுதி 230இ-தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட போர்; புறமுதுகிட்ட தேவர்களை உற்சாகமூட்டி மீண்டும் போரிடத்தூண்டிய இந்திரன்; தேவர்களின் கை ஓங்குவது; தானவப்படையில் மஹிஷன் முன்னணிக்கு வந்து தேவர்களைத் துன்புறுத்துவது; அசுரர்களின் கை ஓங்குவது; மஹிஷன் ருத்திரனிடமிருந்து தேரைப் பறிப்பது; பெரும் கோபம் கொண்ட ஸ்கந்தன் மஹிஷனைக் கொன்றது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன மகேஸ்வரன், அவனை {ஸ்கந்தனை} அரவணைத்து ஏற்று, பிறகு அவனை விடுவித்தான். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அவன் {சிவன்} ஸ்கந்தனை விடுவித்த பிறகு, பல்வேறு வகையான சகுனங்கள் ஏற்பட்டு தேவர்களின் மன அமைதியைக் கெடுத்தன.
நட்சத்திரங்களுடன் கூடிய வானம் எரிந்து கொண்டிருந்தது. முழு அண்டமும் மொத்த குழப்பத்தில் இருந்தன. பூமி நடுங்கியபடி சடசடத்தது. முழு உலகமும் இருளில் மூழ்கியது. மதிக்கத்தக்க உமையுடன் இருந்த சங்கரன், தேவர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோர் இந்தப் பேரழிவைக் கண்டு மனக் கலக்கத்தை அடைந்தார்கள். அவர் இந்தக் குழப்ப நிலையில் இருந்த போது, அங்கே கடுமையும் பலமும் மிக்க ஒரு படை, பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு மேகத்திரள் போலவும், பாறைக்குவியல் போலவும் அவர்கள் முன்னிலையில் வந்தது.
பல்வேறு மொழிகளைப் பேசிய எண்ணிலடங்காதவர்களான அந்தப் பயங்கரமானவர்கள் {அசுரர்கள்}, சங்கரரும், தேவர்களும் நின்ற இடத்தை நோக்கி நகர்ந்தனர். அவர்கள் எல்லாப்புறங்களில் இருந்தும் கணைகளையும், பாறைக் குவியல்களையும், கதாயுதங்களையும், சதாக்னிகளையும், பிராசங்களையும், பரிகங்களையும் தேவர்கள் படையின் மீது வீசினர். தேவர்களின் படை, அங்கு ஏற்பட்ட கணை மழையாலும், பயங்கர ஆயுதங்களின் பொழிவாலும் மொத்தமாகக் குழம்பிய நிலையில் இருந்தது. அவர்களுடைய {தேவர்களுடைய} வீரர்கள், குதிரைகள், யானைகள், தேர்கள் மற்றும் ஆயுதங்களை அறுத்துப் போட்டு, அந்தத் தானவர்கள் பெரும் அழிவை ஏற்படுத்தினர். தேவர்களின் துருப்புகள் எதிரியை நோக்கிப் புறமுதுகிடப் போவது போலவே தெரிந்தது. அசுரர்களால் கொல்லப்பட்ட பல பேர், எரியும் கானகத்தில் விழும் பெரிய மரங்களைப் போல விழுந்தனர்.
அந்தத் தேவலோகவாசிகள் தங்கள் உடலில் இருந்து தலைகள் பிரிக்கப்பட்ட நிலையில் விழுந்தனர். அந்த அஞ்சத்தக்க போரில், தலைமை தாங்க யாருமில்லாமல், அவர்கள் {தேவர்கள்} எதிரிகளால் {அசுரர்களால்} கொல்லப்பட்டார்கள். பின்பு, வலனைக் கொன்றவனான தேவன் புரந்தரன் {இந்திரன்}, அசுரர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு நிலையற்று இருக்கும் தேவர்களிடம், “வீரர்களே! அஞ்சாதீர்கள்! உங்கள் முயற்சிகள் வெல்லட்டும்! அனைவரும் ஆயுதங்களை எடுத்து ஆண்மையுடன் போராடுங்கள். இதற்கு மேல் நீங்கள் துரதிர்ஷ்டத்தை அடைய மாட்டீர்கள். பயங்கர உருவம் கொண்ட அந்தத் தீயவர்களை வீழ்த்துங்கள்” என்று சொன்னான்.
சக்ரனின் {இந்திரனின்} பேச்சைக் கேட்டுத் திரும்பிய தேவலோக வாசிகள், அவனது தலைமையில் திரண்டு, தானவர்களை நோக்கி விரைந்தனர். பிறகு முப்பத்து மூன்று கோடி தேவர்களும், பலமிக்க மருதர்களும், சத்யஸ்களும், வசுக்களும் பணிக்கு {போருக்குத்} திரும்பினர். அவர்கள் எய்த அம்புகள் தைத்தியர்கள், அவர்களது குதிரைகள் மற்றும் யானைகளின் உடலில் இருந்து பெரும்பகுதி குருதியை வெளியேற்றின. அவர்கள் அடித்த கணைகள் அனைத்தும், மலையின் பக்கவாட்டில் இருந்து விழும் பாம்புகளைப் போலத் தைத்தியர்களின் உடலைக் கடந்து தரையில் விழுந்தன. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தக் கணைகளால் துளைக்கப்பட்ட தைத்தியர்கள் {அசுரர்கள்} சிதறிய மேகங்களைப் போலப் பக்கவாட்டில் விழுந்தனர்.
போர்க்களத்தில் தேவர்கள் தொடுத்த தாக்குதலாலும், பல ஆயுதங்களின் மழையாலும் தானவப்படை {அசுரப்படை} பெரும் துன்பத்துக்குள்ளாகி புறமுதுகிட்டது. பிறகு அனைத்து தேவர்களும் மகிழ்ச்சியாகத் தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தாக்குவதற்குத் தயாராக இருந்தனர். தேவ இசைக்கருவிகள் பல்வேறு ஒலிகளில் இசைக்கப்பட்டன.. இரு தரப்புக்கும் அச்சத்தை ஏற்படுத்திய அந்த மோதல் இப்படியே நடந்தது. போர்க்களம் முழுவதும் இரத்தத்தாலும், தேவர்கள் மற்றும் அசுரர்களின் உடல்களாலும் நிறைந்திருந்தன. ஆனால் திடீரெனத் தேவர்களின் நிலை மீண்டும் மோசமானது. பயங்கரமான தானவர்கள் மீண்டும் தேவர்கள் படைக்குப் பெரும் அழிவைச் செய்தனர். அசுரர்களின் பேரிகைகளும் தூரிகைகளும் இசைத்தன. தானவத் தலைவர்கள் பயங்கரமாகப் போர் கர்ஜனை புரிந்தனர்.
பிறகு கைகளில் பெரும் பாறையைத் துக்கிக் கொண்டு ஒரு பலமிக்கத் தானவன், அந்தப் பயங்கரத் தைத்திய படையில் இருந்து வெளியே வந்தான். கருமேகங்களுக்குள்ளிருந்து வெளியே வரும் சூரியனைப் போல அவன் இருந்தான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தேவர்கள் அவன் அந்தப் பாறையைத் தூக்கி வீசப்போவதைக் கண்டு குழப்பத்தால் ஓடினர். ஆனால் அந்த மஹிஷன் {Mahisha} அவர்களைத் தொடர்ந்து சென்று அவர்கள் மீது அந்த மலையை வீசினான். ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அப்படி விழுந்த அந்தப் பெரும் பாறையால் தேவர்கள் படையில் பத்தாயிரம் {10000} போர்வீரர்கள் தரையில் நசுங்கி, தங்கள் கடைசி மூச்சை விட்டனர். மஹிஷனின் இச்செயல், தேவர்களின் இதயங்களில் பயங்கரத்தை உண்டாக்கியது. அவன் {மஹிஷன்} தனது தானவத் தொண்டர்களுடன் சேர்ந்து, மான்கூட்டத்தின் மேல் விழும் சிங்கத்தைப் போல அவர்கள் {தேவர்கள்} மீது விழுந்தான்.
முன்னேறி வரும் மஹிஷனைக் கண்ட இந்திரனும் பிற தேவர்களும் தங்கள் ஆயுதங்களையும், நிறங்களையும் விட்டுவிட்டு அங்கிருந்து ஓடினர். இதனால் மிகவும் கோபமடைந்த மஹிஷன், ருத்திரனின் தேரை நோக்கி விரைவாக முன்னேறினான். அதன் {தேரின்} அருகே சென்ற அவன் {மஹிஷன்} அதன் கம்பத்தைத் {ஏர்க்காலை} தனது கைகளால் பற்றினான். கோபத்துடன் இருந்த மஹிஷன் ருத்திரனின் தேரைப் பிடித்த போது, முழு உலகமும் முனகியது. பெரும் முனிவர்கள் தங்கள் உணர்வுகளை இழந்தனர். கருமேகங்களைப் போல இருந்த பெரும் உருவம் படைத்த தைத்தியர்கள், வெற்றி அவர்களுக்கு உறுதி என நினைத்து, மகிழ்ச்சியால் மூர்க்கத்தனம் கொண்டனர். அந்தப் புகழத்தக்க தேவன் (ருத்திரன்) அந்த அவல நிலையில் இருந்தாலும், போர்க்களத்தில் அந்த மஹிஷனைக் கொல்ல நினைக்கவில்லை; அந்தத் தீய மனம் கொண்ட அசுரனுக்கு {மஹிஷனுக்கு} மரண அடியை ஸ்கந்தன் கொடுப்பான் என்பதை நினைவுகூர்ந்தான்.
கடுமை நிறைந்த மஹிஷன், தான் அடைந்த பரிசு (ருத்திரனின் தேர்) குறித்துச் சிந்தித்துத் திருப்தியடைந்து, தேவர்களுக்குப் பெரும் அச்சத்தை ஊட்டி, தைத்தியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்து பெரும் போர் கர்ஜனை செய்தான். தேவர்கள் பயத்துடன் இக்கட்டான நிலையில் இருந்த போது, கோபத்தால் எரிந்த பலமிக்க மஹாசேனன் {ஸ்கந்தன்}, பிரம்மாண்டமான சூரியனைப் போல அவர்களை {தேவர்களை} மீட்க வந்தான். அந்தத் தேவன் {ஸ்கந்தன்}, ஒளிரும் செவ்வாடை பூண்டு, சிவப்பு மலர் மாலை தரித்திருந்தான். தங்கக் கவசம் பூண்டு, சிவப்பு நிறை குதிரைகளால் இழுக்கப்பட்ட சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் இருந்த தங்க நிறத் தேரில் சென்றான். அவனைக் {ஸ்கந்தனைக்} கண்ட தைத்திய படை {அசுரப்படை} திடீரெனப் போர்க்களத்தில் சோர்வடைந்தன. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பலமிக்க மஹாசேனன் {ஸ்கந்தன்}, மஹிஷனை அழிப்பதற்காகப் பிரகாசமான சக்தியை வெளியிட்டான். அந்த ஏவுகணை மஹிஷனின் தலையை அறுத்தது. அவன் {மஹிஷன்} தரையில் விழுந்து இறந்து போனான். மலையைப் போன்ற அவனது தலை, தரையில் விழுந்து, பதினாறு யோஜனை நீளமுள்ள வட குருக்களின் {உத்தரகுரு} நாட்டு நுழைவாயிலை அடைத்துக் கொண்டிருந்தது. தற்போது அந்நாட்டு மக்கள் அந்த நுழைவாயில் வழியாக எளிதாகச் செல்கின்றனர்.
ஸ்கந்தன் மீண்டும் மீண்டும் தனது சக்தியை போர்க்களத்தில் வீசுவதையும், அது ஆயிரக்கணக்கான எதிரிப் படை வீரர்களைக் கொன்று, மீண்டும் அவனது கைகளுக்கே திரும்புவதையும் தேவர்களும் தானவர்களும் கண்டனர். மஹாசேனனின் {ஸ்கந்தனின்} கணைகளால் தாக்கப்பட்ட பயங்கரத் தானவர்கள் பெரும் எண்ணிக்கையில் கீழே விழுந்தபடியே இருந்தனர். பீதி அவர்களை ஆட்கொண்டது, ஸ்கந்தனின் தொண்டர்கள் அவர்களைக் கொல்லத் தொடங்கி, அவர்களை ஆயிரக்கணக்கில் தின்று, அவர்கள் இரத்தத்தைக் குடித்தனர். அவர்கள் குறுகிய காலத்திலேயே, இருளை அழிக்கும் சூரியனைப் போலவோ, காட்டை அழிக்கும் நெருப்பைப் போலவோ, மேகங்களை விரட்டும் காற்றைப் போலவோ தானவர்களை அழித்து மகிழ்ந்தனர். இப்படியே புகழ்பெற்ற ஸ்கந்தன் தனது எதிரிகளை அழித்தான். அவனை {ஸ்கந்தனை} வாழ்த்த தேவர்கள் வந்தனர். தனது பங்குக்கு அவன் {ஸ்கந்தன்} மகேஸ்வரனுக்குத் தனது மரியாதைகளைச் செலுத்தினான். அந்தக் கிருத்திகையின் மகனின் {ஸ்கந்தனின்} பிரகாசம் சூரியனைப் போன்ற பிரம்மாண்டத்துடன் இருந்தது.
அந்த எதிரிகள், ஸ்கந்தனால் முழுமையாக வீழ்த்தப்பட்டு, மகேஸ்வரன் போர்க்களத்தை விட்டு அகன்ற போது, புரந்தரன் மஹாசேனனைத் {ஸ்கந்தனைத்} தழுவி கொண்டு, “பிரம்மனின் உதவியால் வெல்லப்பட முடியாதவனாக இருந்த இந்த மஹிஷனை நீ கொன்றுவிட்டாய். ஓ! போர்வீரர்களில் சிறந்தவனே {ஸ்கந்தா}, தேவர்கள் அவனுக்கு {மஹிஷனுக்கு} புல்லைப் போல இருந்தனர். ஓ! பலமிக்க உறுப்புகள் {அங்கங்கள்} கொண்ட வீரா {ஸ்கந்தா}, தேவர்களுக்கு முள்ளாய் இருந்தவனை அகற்றிவிட்டாய். எங்களுடன் பகைமை பாராட்டி, முன்பு எங்களைத் துன்புறுத்திய, மஹிஷனின் வீரத்துக்கு இணையாக இருந்த, நூற்றுக்கணக்கான தானவர்களைப் போர்க்களத்தில் கொன்றாய். உனது தொண்டர்களும் நூற்றுக்கணக்கானவர்களை விழுங்கினர். ஓ! பலமிக்கவனே, உமையின் தலைவனைப் {சிவனைப்} போலவே நீயும் வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறாய். உனது முதல் சாதனையாக இந்த வெற்றி கொண்டாடப் படட்டும். மூவுலகங்களிலும் உனது புகழ் மங்காது. ஓ! வலுத்த கரங்கள் கொண்ட தேவனே {ஸ்கந்தா}, அனைத்து தேவர்களும் உனக்குத் தங்கள் பற்றுறுதியை {விசுவாசத்தை} அளிப்பார்கள்.
இப்படி மஹாசேனனிடம் {ஸ்கந்தனிடம்} பேசிய சச்சியின் கணவன் {இந்திரன்}, முக்கண் தேவனின் (சிவனின்) அனுமதியோடு, தேவர்கள் புடை சூழ தனது இருப்பிடத்திற்குச் சென்றான். ருத்திரன் பத்திரவடத்திற்குத் திரும்பினான். தேவர்களும் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பினர். ருத்திரன், தேவர்களிடம், “நீங்கள் எனக்கு அளித்தது போலவே, ஸ்கந்தனுக்கும் உங்கள் பற்றுறுதியை {விசுவாசத்தை} அளிக்க வேண்டும்” என்றான். அக்னி தேவனின் அந்த மகன் {ஸ்கந்தன்}, ஒரே நாளில் தானவர்களைக் கொன்று, மூவுலகங்களையும் வென்று பெரும் முனிவர்களால் வழிபடப்பட்டான். ஸ்கந்தன் பிறப்பு சம்பந்தமான இந்தக் கதையை உரிய கவனத்துடன் படிக்கும் அந்தணன், இவ்வுலகில் பெரும் செழிப்பை அடைந்து, அதன் பிறகு {அடுத்த உலகில்} ஸ்கந்தனின் துணையை அடைகிறான்.” என்றார் {மார்க்கண்டேயர்}.
கந்தன் துதி! – வனபர்வம் பகுதி 230ஈ-ஸ்கந்தனின் பல்வேறு பெயர்களைக் குறித்து யுதிஷ்டிரன் மார்க்கண்டேயரிடம் கேட்பது; மார்க்கண்டேயர் ஸ்கந்தனின் வேறு பெயர்களுடன் சேர்த்து கந்தனை வழிபடும் துதியையும் சொன்னது…
யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, “ஓ! புகழத்தக்க நல்ல அந்தணரே, மூவுலகங்களிலும் பல்வேறு பெயர்களால் அந்த உயர் ஆன்மா கொண்டவன் {ஸ்கந்தன்} கொண்டாடப் படுகிறான். நான் அந்தப் பெயர்களை அறிய விரும்புகிறேன்” என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அந்த முனிவர்கள் கூட்டத்தில் அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்} இப்படிப் பேசியதும், அந்த வணங்கத்தக்க உயர்ந்த தவத்தகுதி படைத்த மார்க்கண்டேயர், “ஆக்னேயன் (அக்னியின் மகன்), ஸ்கந்தன் (கைவிடப்பட்டவன்), தீப்தகீர்த்தி (சுடர்விட்டெரிபவன்), ஆனாமயன் (எப்போதும் ஆரோக்கியமாக இருப்பவன்), மயூரகேது (மயில் கொடி கொண்டவன்), தர்மாத்மன் (அறம்சார்ந்த ஆன்மா கொண்டவன்), பூதேசன் (அனைத்து உயிர்களுக்கும் தலைவன்), மஹிஷார்த்தனன் (மஹினைக் கொன்றவன்), காமஜித் (ஆசைகளை அடக்குபவன்), காமதன் (விருப்பங்களை நிறைவேற்றுபவன்), காந்தன் (அழகன்), சத்தியவாகு (உண்மை பேசுபவன்), புவனேஸ்வரன் (அண்டத்தின் தலைவன்), சிசு (குழந்தை), சீக்கிரன் (விரைவானவன்), சுச்சி (சுத்தமானவன்), சண்டன் (கடுமையானவன்), தீப்தவர்ணன் (பிரகாசமான நிறம் கொண்டவன்), சுபானன் (அழகிய முகம் கொண்டவன்), அமோகன் (கலங்கடிக்கப்பட முடியாதவன்), அனகன் (பாவமற்றவன்), ரௌத்ரன் (பயங்கரமானவன்), பிரியன் (விருப்பமானவன்), சந்திரானனன் (நிலவைப் போன்ற முகம் கொண்டவன்), தீப்தசஷ்டி (சுடர்விடும் ஈட்டியைத் {வேல்-ஐ) தாங்கியவன்), பரசாந்தாத்மன் (அமைதியான ஆன்மா கொண்டவன்), பதரகிரித் (நன்மை செய்வபவன்), குக்குடமோஹனன் (தீயவர்களுக்கும் அறையாக {புகலிடமாக} இருப்பவன்) (The chamber of even the wicked), ஷஷ்டிபிரியன் (ஷஷ்டிக்குப் பிடித்தமானவன்), பவித்ரன் (புனிதமானவன்), மாத்ருவத்ஸலன் (தாய்க்கு மரியாதையளிப்பவன்), கன்யாபர்திரன் (கன்னிகைகளைக் காப்பவன்), விபக்தன் (அண்டத்தைச் சிதறடிப்பவன்), ஸ்வாஹேயன் (சுவாகையின் புதல்வன்), ரேவதீசுதன் (ரேவதியின் புதல்வன்), பிரபு (தலைவன்), நேதன் (தலைவன்), விசாகன் (விசாகனால் வளர்க்கப்பட்டவன்), நைகமேயன் (வேதத்தில் இருந்து உதித்தவன்), சுதுஸ்சரன் (அமைதிப்படுத்த முடியாத கடுமையானவன்), சுவிரதன் (அற்புத நோன்புகள் கொண்டவன்), லலிதன் (அழகானவன்), பாலகக் கிரீடநகப்பிரியன் (பொம்மைகளை விரும்புபவன்), கசாரின் (வானத்தில் உலவுபவன்), பிரம்மச்சாரி (கற்புடையவன்), சூரன் (வீரம் கொண்டவன்), சரவணோத்பவன் (புதர்க்காட்டில் பிறந்தவன்), விஸ்வாமித்ரபிரியன் (விஸ்வாமித்திரருக்குப் பிடித்தமானவன்), தேவசேனாப்பிரியன் (தேவ சேனைக்குப் பிடித்தமானவன்), வாசுதேவப்பிரியன் (வாசுதேவனுக்குப் பிடித்தமானவன்), பிரியகிருத் (ஏற்புடையவற்றைச் செய்பவன்) என்பவையே கார்த்திகேயனின் {ஸ்கந்தனின்) தெய்வீகப் பெயர்களாகும். இதைத் திரும்பச் சொல்பவர்கள் சந்தேகமற புகழையும், செல்வத்தையும், முக்தியையும் அடைவார்கள்.
கந்தனின் பெயர்களை அடைப்புக்குறிகள் இல்லாமல் படிக்க விரும்புகிறவர்களுக்கு : ஆக்னேயன், ஸ்கந்தன், தீப்தகீர்த்தி, ஆனாமயன், மயூரகேது, தர்மாத்மன், பூதேசன், மஹிஷார்த்தனன், காமஜித், காமதன், காந்தன், சத்தியவாகு, புவனேஸ்வரன், சிசு, சீக்கிரன், சுச்சி, சண்டன், தீப்தவர்ணன், சுபானன், அமோகன், அனகன், ரௌத்ரன், பிரியன், சந்திரானனன், தீப்தசஷ்டி, பிரசாந்தாத்மன், பதரகிரித், குக்குடமோஹனன், ஷஷ்டிபிரியன், பவித்ரன், மாத்ருவத்ஸலன், கன்யாபர்திரன், விபக்தன், ஸ்வாஹேயன், ரேவதீசுதன், பிரபு, நேதன், விசாகன், நைகமேயன், சுதுஸ்சரன், சுவிரதன், லலிதன், பாலககிரீடநகப்பிரியன், கசாரின், பிரம்மச்சாரி, சூரன், சரவணோத்பவன், விஸ்வாமித்ரபிரியன், தேவசேனாப்பிரியன், வாசுதேவப்பிரியன், பிரியகிருத் {மொத்தம் 51 பெயர்கள்}
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! குரு குலத்தின் வீரமிக்கக் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, தேவர்களாலும் முனிவர்களாலும் வழிபடப்படும் அந்த நிகரற்ற, பலமிக்க, ஆறுமுகம் கொண்ட, வீரமிக்கக் குஹனிடம், அவனது வேறு பெயர்களைக் கணக்கிட்டுச் சொல்லி, முறையான பக்தியோடு நான் இப்போது வேண்ட {வணங்கப்} போகிறேன். நீ அதைக் கேள் : பிரம்மனால் படைக்கப்பட்டு, பிரம்மனுக்கு அர்ப்பணிப்புடன் இருந்து பிரம்மம் குறித்த புதிர்களை அறிந்தவன் நீ. பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையான நீ பிரம்மசாயன் என்று அழைக்கப்படுகிறாய். பிரம்மத்தை விரும்புபவன் நீ, அந்தணர்களைப் போன்ற தவமுடையவன் நீ, பிரம்மத்தைக் குறித்த பெரும் புதிரை அறிந்தவன் நீ, பிராமணர்களுக்குத் தலைவன் நீயே. சுவாகா நீயே, சுவதையும் நீயே, புனிதமானவற்றிலும் புனிதமானவன் நீயே, நீ மந்திரங்களால் எழுப்பப்படுகிறாய். நீ ஆறு சுடர் கொண்ட நெருப்பாகக் கொண்டாடப்படுகிறாய்.
வருடம் நீயே, ஆறு காலங்கள் நீயே, மாதங்கள் நீயே, பாதி (சந்திர) மாதங்கள் {பக்ஷங்கள்} {பிறைநாட்கள்} நீயே, பகல் மற்றும் திசைகள் நீயே. தாமரைக் கண் கொண்டவன் நீயே. அல்லி போன்ற முகத்தைக் கொண்டவன் நீயே. நீ ஆயிரம் முகங்களையும், ஆயிரம் கரங்களையும் கொண்டிருகிகறாய். அண்டத்தின் ஆட்சியாளன் நீயே, பெரிய காணிக்கை நீயே, தேவர்களையும் அசுரர்களையும் அசைய வைக்கும் ஆவி நீயே. படைகளின் பெரும் தலைவன் நீயே. பிரசண்டன் {சீற்றம் கொண்டவன்} நீயே, தலைவன் நீயே, பெரும் ஆசானும், எதிர்களை வீழ்த்துபவனும் நீயே. (பல உருவங்கள் கொண்ட) சஹஸ்ரபு, சஹஸ்ரதுஷ்டி (ஆயிரம் மடங்கு மனநிறைவு கொண்டவன்), சகஸ்ரபுகன் (அனைத்தையும் விழுங்குபவன்), சகஸ்ரபாதன் (ஆயிரம் கால்கள் கொண்டவன்) நீயே, பூமியும் நீயே. எண்ணற்ற உருவங்களையும், ஆயிரம் தலைகளையும், பெரும் பலத்தையும் நீ கொண்டிருக்கிறாய். உனது விருப்பத்தின் பேரிலேயே நீ கங்கை, சுவாகா, மஹி அல்லது கிருத்திகைகளுக்கு மகனாகத்தோன்றினாய்.
ஓ! ஆறுமுகத் தேவா {ஸ்கந்தா}, சேவலுடன் விளையாடிக் கொண்டு, பல்வேறு உருவங்களை உனது விருப்பத்திற்கு ஏற்ப ஏற்பவன் நீ. நீயே எல்லாக் காலங்களுக்கும் தக்ஷன், சோமன் {சந்திரன்}, மருதன், தர்மன், வாயு, மலைகளின் இளவரசன், இந்திரன் ஆவாய். பலமிக்கவன், நித்தியமானவற்றில் அதி நித்தியமானவன், தலைவர்களுக்கெல்லாம் தலைவனானவன் நீ. உண்மையைத் {சத்தியத்தைத்} தழைக்க வைப்பது, திதியின் சந்ததியை (அசுரர்களை) அழிப்பது ஆகியவற்றைச் செய்பவன் நீயே. தேவர்களின் எதிரிகளை வீழ்த்துபவன் நீயே. நீயே அறத்தின் வடிவம். பெரியவனாகவும், நுட்பமானவனாகவும் நீயே இருக்கிறாய். அறச் செயல்களில் மிக உயர்ந்தவற்றையும், தாழ்ந்தவற்றையும், பிரம்மத்தின் புதிர்களையும் அறிந்தவன் நீயே. ஓ! தேவர்களில் முதன்மையானவனே, அண்டத்தின் உயர் ஆன்மத் தலைவனே, இந்த முழுப் படைப்பும் உனது சக்தியால் நிரப்பப்பட்டுள்ளது. எனது சக்தியில் சிறந்ததைக் கொண்டு நான் உன்னை வழிபட்டேன். பனிரெண்டு கண்களும், பல கரங்களும் கொண்ட உன்னை நான் வணங்குகிறேன். மீதமுள்ள உனது குணங்கள் என் புரிதல் சக்திக்கு மீறியவையாக இருக்கின்றன {இதற்கு மேற்பட்ட உனது குணங்களை நான் அறியவில்லை}.
ஸ்கந்தனின் பிறப்பு சம்பந்தமான இந்தக் கதையைக் கவனத்துடன் படிக்கும் அந்தணன், அல்லது அந்தணர்களுக்கு உரைப்பவன், அல்லது மறுபிறப்பாளர்களால் {அந்தணர்களால்} சொல்லப்படும்போது கேட்பவன் ஆகியோர் செல்வம், நீண்ட வாழ்நாள், புகழ், குழந்தைகள், வெற்றி, செழிப்பு, மனநிறைவு, ஸ்கந்தனின் துணை ஆகியவற்றைப் பெறுவர்” என்றார் {மார்க்கண்டேயர்.}.
மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம் முற்றிற்று
———————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply