காம்யகத்தை விட்டுப் பெயரலாம் என்றான் சகாதேவன்! – வனபர்வம் பகுதி 80-அர்ஜுனன் இல்லாத கானகத்தைக் கண்டு யுதிஷ்டிரனிடம் புலம்பும் திரௌபதியும், பாண்டவர்களும்…
ஜனமேஜயன் சொன்னான், “ஓ புனிதமானவரே {வைசம்பாயனரே}, எனது முப்பாட்டனான பார்த்தன் {அர்ஜுனன்}, காம்யக வனத்தைவிட்டுச் சென்ற பிறகு, இடது கையாலும் வில்லை இழுக்கும் அந்த வீரன் {அர்ஜுனன்} தங்களுடன் இல்லாத போது {மற்ற} பாண்டுவின் மகன்கள் என்ன செய்தார்கள்? எதிரிகளை வீழ்த்தும் அந்தப் பெரும் பலம்வாய்ந்த வில்லாளியே, தேவர்களுக்கு விஷ்ணுவைப் போல, அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} ஒரே புகலிடம் என்று எனக்குத் தெரிகிறது. இந்திரனைப் போன்ற வீரம் கொண்டு போரில் புறமுதுகிடாத அந்த வீரனின் {அர்ஜுனனின்} துணையில்லாதிருந்த எனது பாட்டன்கள், தங்கள் நாட்களை எப்படிக் கடத்தினர்?”
வைசம்பாயனர் சொன்னார், “கலங்கடிக்க முடியாத வீரம் கொண்ட அர்ஜுனன் காம்யக வனத்தை விட்டுச் சென்றதும், ஓ மகனே {ஜனமேஜயா}, பாண்டுவின் மகன்கள் துக்கத்திலும் துயரத்திலும் மூழ்கினர். உற்சாகமற்ற இதயம் கொண்ட அந்தப் பாண்டவர்கள், சரத்தில் இருந்து உதிர்ந்த முத்துக்கள் போலவும், சிறகிழந்த பறவைகள் போலவும் இருந்தனர். குபேரன் இல்லாத சைத்திரரத வனம் போல, வெண்குதிரைகளைக் கொண்ட அந்த வீரன் இல்லாத கானகம் இருந்தது. ஓ ஜனமேஜயா, அந்த மனிதர்களில் புலிகளான பாண்டுவின் மகன்கள் அர்ஜுனனின் துணையை இழந்து உற்சாகமற்ற மனநிலையுடனேயே அந்தக் காம்யக வனத்தில் தொடர்ந்து வாழ்ந்தனர். ஓ பாரதகுலத்தின் தலைவா {ஜனமேஜயனே}, அந்தப் பலம் பொருந்திய போர் வீரர்கள், சுத்தமான கணைகளைக் கொண்டு, பெரும் பராக்கிரமத்துடன் அந்தணர்களின் வேள்விக்கான விலங்குகளை அடித்தனர். அந்த மனிதர்களில் புலிகளான எதிரிகளை ஒடுக்குபவர்கள், தினமும் காட்டு விலங்குகளைக் கொன்று, முறைப்படி அதைச் சுத்தப்படுத்தி, அந்தணர்களிடம் கொடுத்தனர்.
ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே அந்த மனிதக் காளைகள், அர்ஜுனனின் பிரிவால் துயரத்துடனும் உற்சாகமற்ற இதயங்களுடனும் வாழ்ந்தனர். குறிப்பாக பாஞ்சால இளவரசி {திரௌபதி}, தனது மூன்றாவது தலைவனை நினைத்து வருந்தி, யுதிஷ்டிரனிடம், “தனது இருகரங்களால், ஆயிரம் கரம் கொண்ட (பழங்கால) அர்ஜுனனையே {கார்த்தவீரியார்ஜுனன்} எதிர்க்கவல்லவர் அர்ஜுனர். பாண்டு மகன்களில் முதன்மையான அவர் இல்லாத இந்தக் கானகம் அழகற்றதாக எனது கண்களுக்குத் தெரிகிறது. அவரில்லாத இடத்தில் எனது பார்வை படும்போது, பூமி களையிழந்து காணப்படுகிறது. பூத்துக் குலுங்கும் மரங்களாலும், அற்புதங்கள் நிறைய வைத்திருந்தாலும் அர்ஜுனர் இல்லாத இந்தக் கானகம் மகிழ்ச்சியற்றதாகவே இருக்கிறது. நீல மேகக் குவியல் போலவும், மதம் கொண்ட யானையின் பராக்கிரமத்துடனும், தாமரை இதழ்கள் போன்ற கண்களும் உடைய அந்த வீரர் இல்லாத இந்தக் காம்யக வனம் எனக்கு அழகாகத் தெரியவில்லை. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இடியைப் போன்ற கர்ஜனையைக் கொடுக்கும் வில்லொலியை எழுப்புபவரும், இடது கையாலும் வில்லை இழுக்கவல்லவரும், அந்த வீரரை {அர்ஜுனரை} நினைத்து, என்னால் மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை” என்றாள் {திரௌபதி}.
ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன அழுத்தத்தால் உண்டான அவளது புலம்பலைக் கேட்ட எதிரி வீரர்களைக் கொல்பவனான பீமன், திரௌபதியிடம், “ஓ கொடியிடை கொண்ட அருளப்பட்ட மங்கையே, அமுதத்தைப் பெருமடக்காகக் குடிப்பது போல உள்ள உனது ஏற்புடைய வார்த்தைகளைக் கேட்டு எனது இதயம் மகிழ்கிறது. சமச்சீராக நீண்டு, இரண்டு இரும்பு கதாயுதங்கள் போல பருத்து, உருண்டு, வில்லின் நாணால் உண்டான காயங்களுடனும், வில் வாள், மற்ற ஆயுதங்களுடன் இரண்டு ஐந்து தலை நாகங்களைப் போல இருக்கும் கரங்களைக் கொண்ட அந்த மனிதப் புலி இல்லாமல், சூரியன் இல்லா வானம் போல இருக்கிறோம். அந்த பெரும் பலம்வாய்ந்த கரங்களைக் கொண்டவனை நம்பியே பாஞ்சாலர்களும் கௌரவர்களும், கடும் முயற்சியுடைய தேவர்களுக்குக் கூடப் பயப்படுவதில்லை. அந்த வீரனை நம்பியே நாம் நமது எதிரிகள் ஏற்கனவே வீழ்த்தப்பட்டதாகவும், பூமி ஏற்கனவே அடையப்பட்டதாகவும் கருதி வருகிறோம். அப்படிப்பட்ட அந்த பல்குனன் {அர்ஜுனன்} இல்லாமல் நான் இந்த காம்யக வனத்தில் அமைதியை அடைய முடியவில்லை. வேறு பக்கங்களில் நான் எனது பார்வையைத் திருப்பினாலும், அனைத்தும் எனக்கு வெறுமையாகவே தெரிகிறது.
பீமன் முடித்ததும், பாண்டுவின் மகனான நகுலன் கண்ணீரால் தடைபட்ட குரலுடன், “போர்க்களத்தில் இயல்புக்குமிக்க சாதனைகள் செய்து தேவர்களையும் பேச வைக்கும் அந்த வீரர்களில் முதன்மையானவர் {அர்ஜுனர்} இல்லாத இந்த வனத்தில் நாம் என்ன இன்பங்களை அடைய முடியும்? வடதிசை சென்று நூற்றுக்கணக்கன கந்தர்வத் தலைவர்களை வீழ்த்தி, காற்று போன்ற பெரும் வேகம் கொண்ட எண்ணிலடங்கா தித்திரி, கல்மாஷ வகையிலான அழகான குதிரைகளைக் கொணர்ந்தார். அப்படிக் கொணர்ந்து, பெரும் ராஜசூய வேள்வியின் போது, தனது அண்ணனான மன்னனுக்கு {யுதிஷ்டிரருக்கு} பாசத்தால் பரிசளித்த அந்தச் சிறப்புமிக்கவரும், பீமருக்குப் பின் பிறந்த அந்தப் பயங்கரப் போர்வீரரும், தேவர்களுக்கு இணையானவருமான அந்த வீரர் {அர்ஜுனர்} இல்லாத இந்தக் காம்யக வனத்தில் மேலும் வாழ எனக்கு விருப்பமில்லை” என்றான் {நகுலன்}.
நகுலனின் புலம்பல்களுக்குப் பிறகு, சகாதேவன், “போர்க்களத்தில் பல பலம்பொருந்திய வீரர்களை வீழ்த்தி, பெரும் செல்வத்தையும், கன்னிகைகளையும் கொண்டு வந்து, மன்னனுக்கு {யுதிஷ்டிரருக்கு} பெரும் ராஜசூய வேள்வியின் போது கொடுத்தவர், அந்த அளவில்லா பிரகாசம் கொண்ட வீரர், போர்க்களத்தில் அணிவகுத்து நின்ற *யாதவர்களை தனியொருவராக வீழ்த்தி, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} சம்மதத்துடன் சுபத்திரையைக் கடத்தி வந்தவர். சிறப்புமிக்க துருபதனின் பகுதியின் மேல் படையெடுத்து, ஓ பாரதரே {யுதிஷ்டிர்ரே} துரோணருக்குத் தனது குரு தட்சணையைக் கொடுத்தவர் அந்த வீரர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நமது ஆசிரமத்தில் இருக்கும் அந்த ஜிஷ்ணுவின் {அர்ஜுனரின்} புல் படுக்கையைக் கண்டு எனது இதயம் ஆறுதல் இல்லாமல் தவிக்கிறது. ஓ எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, அந்த வீரர் இல்லாத இந்தக் கானகம் நமக்கு மகிழ்ச்சியைத் தராது. ஆகவே இந்தக் கானகத்தை விட்டு சென்றுவிடுவதே நலம் என நான் கருதுகிறேன்” என்றான் {சகாதேவன்}.
பீஷ்மர் புலஸ்தியர் சந்திப்பு – வனபர்வம் பகுதி 81-துயரத்தில் இருந்த பாண்டவர்களை நாரதர் சந்திப்பது; நாரதரிடம் யுதிஷ்டிரன் தீர்த்தயாத்திரையின் பயன்களை விவரமாகக் கேட்பது; பீஷ்மர் புலஸ்தியர் சந்திப்பை நாரதர் சொல்ல ஆரம்பித்தது.
வைசம்பாயனர் சொன்னார், “தனஞ்சயன் {அர்ஜுனன்} குறித்து வருத்தத்துடன் இருந்த தனது தம்பிகள் மற்றும் கிருஷ்ணையின் {திரௌபதியின்} வார்த்தைகளைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன் பெரும் துயர் கொண்டான். அந்த நேரத்தில் (தனது எதிரில்) தேவலோக முனிவரான நாரதர் பிரம்ம அழகுடன், வேள்வி நெய்யால் சுடர்விட்டு எரியும் நெருப்புப் போல பிரகாசித்துக் கொண்டு நிற்பதைக் கண்டான். அவர் {நாரதர்} வந்ததைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன் எழுந்து நின்று அந்தச் சிறப்பு மிக்கவரை வழிபட்டான். சக்தியால் பிரகாசித்த குருக்களின் அழகான தலைவன் {யுதிஷ்டிரன்}, நூறு வேள்விகள் செய்த தேவனை {இந்திரனை}, தேவர்கள் சூழ்ந்து கொண்டதைப் போல, தனது தம்பிகளால் சூழப்பட்டு நின்றான்.
பிருதையின் {குந்தியின்} மகன்களான தனது தலைவர்களுக்குக் கட்டுப்பட்டு, அறநெறிகளின் விதிகளுக்குக் கீழ்ப்படிந்து இருந்த யக்ஞசேனி {திரௌபதி}, வேதங்களுக்கு சாவித்ரியைப் போல, மேருவின் சிகரத்திற்கு சூரியக் கதிரைப் போல இருந்தாள். சிறப்புமிக்க நாரதமுனிவர், அந்த வழிபாட்டை ஏற்றுக் கொண்டு தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} சரியான முறையில் ஆறுதலளித்தார். ஓ பாவங்களற்றவனே {ஜனமேஜயா}, உயர்ந்த ஆன்மா கொண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் பேசிய அந்த முனிவர், “ஓ அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, நீ எதைத் தேடிக் கொண்டிருக்கிறாய், என்னால் உனக்கு ஆகவேண்டியது என்ன என்பதை எனக்குச் சொல்” என்று கேட்டார். இதற்கு தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, தனது தம்பிகளுடன் சேர்ந்து, தேவர்களாலும் மதிக்கப்படும் நாரதரை வணங்கி, கரங்களைக் கூப்பியபடி, “ஓ பெரும்பேறு பெற்றவரே, நீ அனைத்து உலகங்களாலும் கொண்டாடப்படுபவர், உமக்கு என்னிடம் திருப்தியுண்டானால், எனது விருப்பங்கள் அனைத்தும் உமது அருளால் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகக் கருதுகிறேன். ஓ அற்புதமான நோன்புகள் கொண்டவரே, ஓ பாவங்களற்றவரே, நான் எனது தம்பிகளுடன் சேர்த்து உமது கருணைக்குத் தகுதிபடைத்தவர்களாக இருந்தால், ஓ முனிவர்களில் சிறந்தவரே, எனது மனதில் இருக்கும் சந்தேகத்தைப் போக்குவதே உமக்குத் தகும். புனிதமான நீர்நிலைகளையும், அங்கு அமைந்திருக்கும் கோவில்களையும் காணவிரும்பி உலகத்தைச் சுற்றுபவர்களுக்கு {தீர்த்த யாத்திரை செய்பவர்களுக்கு} என்ன சிறப்பு ஏற்படும் என்பதை எனக்கு விவரமாகச் சொல்வதே உமக்குத் தகும்” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
நாரதர், “ஓ மன்னா {யுதிஷ்டிரா}, முன்பு புலஸ்தியரிடம் இருந்து புத்திசாலியான பீஷ்மர் அறிந்து கொண்டதைக் கவனத்துடன் கேள். ஓ அருளப்பட்டவனே {யுதிஷ்டிரா} முன்பொரு காலத்தில், அறம்சார்ந்தவர்களில் முதன்மையான பீஷ்மர், ஓ மன்னா, தேவ முனிவர்களும், கந்தர்வர்களும், தேவர்களும் கூட ஓய்வெடுக்கும் பகுதியான கங்கையின் தோற்றுவாய்க்கு அருகில், அந்த அழகான, புனிதமான இடத்தில், முனிவர்களின் துணையுடன் பித்ருய நோன்பை {முன்னோர்களை [பித்ரு தேவதைகளை] வழிபடும் நோன்பு} நோற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தார். அப்படி அவர் அங்கே வாழ்ந்த போது, அந்தப் பிரகாசிப்பவர் {பீஷ்மர்}, அவரது தானத்தின் மூலம் பித்ருக்களையும், தேவர்களையும், முனிவர்களையும் சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விதிகளின் படி திருப்திப்படுத்தினார். அப்படிச் செய்து கொண்டிருக்கும்போது, ஒரு காலத்தில் அந்த சிறப்புமிக்கவர் {பீஷ்மர்}, தனது அமைதியான பாராயணத்தின் {ஒப்புவித்தலின்} போது தோற்றத்தில் அழகான முனிவர்களில் சிறந்த புலஸ்தியரைக் கண்டார் {பீஷ்மர்}.
அழகால் பிரகாசிக்கும் அந்தத் தவத் துறைவியைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்து, மிகுந்த ஆச்சரியமடைந்தார். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்த அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான பீஷ்மர், அந்த அருளப்பட்ட முனிவரை சடங்குவிதிகளின் படி வழிபட்டார். தன்னைச் சுத்திகரித்துக் கொண்டு, ஆழ்ந்த கவனத்துடன், தனது தலையில் அர்க்கியாவுடன் {பூஜைக்குத் தேவையான திரவியத்துடன்} அந்த பிரம்ம முனிவரை {பிரம்மரிஷியை} அணுகினார். பிறகு தனது பெயரை {பீஷ்மர்} உரக்கச் சொல்லியபடி, அவரிடம் {புலஸ்தியரிடம்}, “ஓ அற்புத நோன்புள்ளவரே {புலஸ்தியரே}, நீர் அருளப்பட்டிரும். நான் உமது அடிமையான பீஷ்மன். உமது காட்சி எனக்குக் கிடைத்ததால், நான் எனது பாவங்கள் அனைத்திலும் இருந்து விடுபட்டேன்” என்றார். ஓ யுதிஷ்டிரா, இதைச் சொன்ன அந்த அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான பீஷ்மர், தனது பேச்சை நிறுத்தி அமைதியாகக் கரம் கூப்பி நின்றார். நோன்புகளாலும், வேத கல்வியாலும், உடல் வற்றி மெலிந்து போயிருந்த குருக்களில் முதன்மையான பீஷ்மரைக் கண்ட அந்த முனிவர் {புலஸ்தியர்} பெரும் மகிழ்ச்சியில் மூழ்கினார்.
புஷ்கரையின் பலனைச் சொன்ன புலஸ்தியர் – வனபர்வம் பகுதி 82அ-புஷ்கரையின் பலனைச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், “ஓ அற்புத நோன்புகள் கொண்டவனே, அறநெறிகளை அறிய அருளப்பட்டவனே, உனது பணிவு, தன்னடக்கம், உண்மை ஆகியவற்றில் நான் திருப்தி கொண்டேன். ஓ பாவமற்றவனே, உனது மூதாதையர்கள் தயவால் நீ பெற்ற இந்த குணங்களால் நான் உன்னிடம் மிகுந்த திருப்தி கொண்டுள்ளேன். ஓ மகனே, அதனாலேயே உனக்கு என் காட்சி கிடைத்தது. ஓ பீஷ்மா, எனது கண்கள் அனைத்தையும் ஊடுருவும். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல். ஓ பாவங்களற்றவனே, ஓ குரு குலத்தில் முதன்மையானவனே, நீ எதைக் கேட்டாலும், நான் உனக்கு அதை அருளுவேன்” என்றார்.
பீஷ்மர் {புலஸ்தியரிடம்}, “ஓ அதிகமாக அருளப்பட்டவரே, மூவுலகங்களாலும் வழிபடப்படும் நீர் என்னிடம் திருப்தி அடைந்திருப்பதாலும், மேன்மையான உமது காட்சியை நான் கண்டதாலும், நான் ஏற்கனவே வெற்றியடைந்து விட்டதாகக் கருதுகிறேன். ஆனால், ஓ அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவரே, உமது உதவியைப் பெற எனக்குத் தகுதியுண்டானால், நான் எனது சந்தேகங்களை உம்மிடம் கேட்கிறேன், அவைகளை நீர் களைய வேண்டும். ஓ புனிதமானவரே, எனக்கு தீர்த்தங்கள் சம்பந்தமாக சில அறச் சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றைக் குறித்து என்னிடம் விரிவாகப் பேசுவீராக. நான் அவற்றைக் கேட்க விரும்புகிறேன். ஓ தேவர்களைப் போன்றவரே, ஓ மறுபிறப்பாளரான {பிராமணரான} முனிவரே, (கோவில்களைத் தரிசித்து) உலகம் சுற்றுபவர்களுக்குக் கிடைக்கும் பலன் யாது? இதை எனக்கு நிச்சயமாகச் சொல்லும்” என்று கேட்டார்.
அதற்கு புலஸ்தியர் {பீஷ்மரிடம்}, “ஓ மகனே, கவனமாகக் கேள். முனிவர்களின் புகலிடமாக இருக்கும் தீர்த்தங்களால் ஏற்படும் பலனை நான் உனக்குச் சொல்கிறேன். யாருடைய கரங்கள், பாதம், மனது, அறிவு, தவம் மற்றும் செயல்கள் அவனது முழு கட்டுப்பாட்டில் இருக்கின்றனவோ, அவன் தீர்த்தங்களின் கனிகளை அனுபவிக்கிறான். எவன் பரிசுகள் பெறுவதில்லையோ, எவன் தன்னடக்கம் கொண்டவனோ, எவன் கர்வமற்றவனோ அவன் தீர்த்தங்களின் கனிகளை அனுபவிக்கிறான். எவன் பாவமில்லாமல் இருக்கிறானோ, எவன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படுகிறானோ, எவன் அதிகமாக உண்ணாதிருக்கிறானோ, எவன் தனது புலன்களை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறானோ, எவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டிருக்கிறானோ, அவன் தீர்த்தங்களின் கனிகளை அனுபவிக்கிறான்.
ஓ மன்னா {பீஷ்மா}, எவன் கோபத்தில் இருந்து விடுபட்டிருக்கிறானோ, எவன் உண்மைச் சார்ந்து இருக்கிறானோ, எவன் தனது நோன்புகளில் உறுதியாக இருக்கிறானோ, எவன் அனைத்து உயிர்களையும் தன்னைப் போலவே கருதுகிறானோ, அவன் தீர்த்தங்களின் கனிகளை அனுபவிக்கிறான். வேதங்களில் முனிவர்கள், வேள்விகள் மற்றும் அதன் கனிகளை இப்போதைக்கும், எதிர்காலத்திற்கும் தீர்மானித்து வைத்திருக்கின்றனர். ஓ பூமியின் தலைவா {பீஷ்மா}, வேள்விகளுக்குப் பல பொருட்கள் தேவைப்படுவதாலும், பல காரியங்கள் செய்யப்பட வேண்டும் என்பதாலும், அந்த வேள்விகளை ஒரு ஏழையால் செய்ய முடியாது. ஆகையால், இவை மன்னர்களாலும் அல்லது செழிப்பும் செல்வமும் கொண்ட மனிதர்களாலும் மட்டுமே செய்ய முடியும். ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, இருப்பினும், செல்வமற்ற மனிதர்கள், கூட்டணி இல்லாதவர்கள், தனிப்பட்டவர்கள், மனைவி மக்கள் இல்லாதவர்கள், எந்தக் காரியமும் அற்றவர்கள் ஆகியோரால் அந்த வேள்விகள் செய்வதற்கு ஒப்பான புனிதமான கனிகளைப் பெற முடியும். அவற்றை போர்வீரர்களில் சிறந்த உனக்கு நான் இப்போது சொல்வேன்.
ஓ பாரத குலத்தில் சிறந்தவனே {பீஷ்மனே}, தீர்த்தங்கள் பரதேசிகளாய்ச் செல்பவர்களுக்கு உயர்ந்த பலனைத் தருவதாலும், முனிவர்களின் உயர்ந்த புதிர்களை உள்ளடக்கியிருப்பதாலும், அவை வேள்விகளை விட மேன்மை கொண்டவை. தீர்த்தத்திற்கு சென்றும், ஒருவன் மூன்று இரவுகள் உண்ணா நோன்பு இருக்கவில்லை {விரதமிருக்கவில்லை} என்றாலும், எப்போதேனும் தங்கத்தையோ, பசுக்களையோ தானமே கொடுத்ததில்லை என்றாலும், அவனே ஏழை. ஒருவன் அக்னிஷ்தோமா செய்வதாலும், இன்னும் பிற வேள்விகளைச் செய்து பெரும் பரிசுகள் கொடுப்பதாலும் ஏற்படும் பலனை விட, ஒருவன் தீர்த்தத்திற்கு பரதேசியாய்ச் செல்வதால் ஏற்படும் பலன் அதிகம். மனிதர்களின் உலகில், மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் தேவர்களுக்குத் தேவனின் {சிவனின்} தீர்த்தமொன்று *புஷ்கரை என்ற பெயரில் உள்ளது. அங்கு பரதேசியாய் செல்லும் ஒருவன் அந்த தெய்வத்துக்கு {சிவனுக்கு} இணையானவனாகிறான். ஓ குரு குலத்தில் உயர்ந்த ஆன்மா கொண்ட மகனே {பீஷ்மா}, ஒரு நாளின் இரு சந்தி வேளைகளிலும் {அதிகாலை மற்றும் மாலைப்பொழுது, அதாவது பகலும் இரவும் சந்திக்கும் வேளைகளிலும்}, நடுப்பகலிலும், நூறாயிரம் கோடி தீர்த்தங்கள் புஷ்கரையில் சங்கமித்திருக்கும். ஓ மேன்மையானவனே {பீஷ்மா}, புஷ்கரையில் ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், சத்யஸ்கள், மருதர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் அதில் எப்போதும் தங்கியிருக்கின்றனர். ஓ மன்னா {பீஷ்மா}, அங்கேயே தேவர்களும், தைத்தியர்களும், பிரம்மமுனிவர்களும் தங்கள் தவ அர்ப்பணிப்புகளைச் செய்து பெரும் பலனையும், கடைசியாக தெய்வத் தன்மையையும் அடைந்தனர்.
தன்னடக்கம் கொண்ட மனிதர்கள், மனதால் புஷ்கரையை நினைத்தாலே, தங்கள் பாவங்கள் கழுவப்பட்டு, சொர்க்கத்தில் மதிக்கப்படுகிறார்கள். ஓ மன்னா {பீஷ்மா}, தாமரையைத் தனது ஆசனமாகக் கொண்டிருக்கும் சிறப்பு மிக்க பெருந்தகப்பன் {பிரம்மன்}, இந்தத் தீர்த்தத்தில் பெரும் மகிழ்ச்சியுடன் வசித்தார். ஓ அருளப்பட்டவனே, இந்தப் புஷ்கரையிலேயே முனிவர்களுடன் கூடிய தேவர்கள் முற்காலத்தில் பெரும் தகுதிகளை அடைந்தனர். கடைசியாக உயர்ந்த வெற்றியையும் அடைந்தனர். தேவர்கள் மற்றும் பித்ருக்களின் வழிபாட்டுக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் ஒரு மனிதன், இந்தத் தீர்த்ததில் குளித்தால், குதிரை வேள்வியில் கிடைக்கும் பலன்களை விட பத்து மடங்கு அதிகமான பலனை அடைவான் என்று ஞானமுள்ளவர்களால் சொல்லப்பட்டுள்ளது. ஒ பீஷ்மா, புஷ்கர வனத்திற்குச் சென்று, ஒரு அந்தணருக்கேனும் உணவளிப்பவன், அந்தச் செயலால் அன்று {உணவளித்த அன்று} முதல் என்றும் மகிழ்ச்சியாக இருப்பான்.
சேதுவில் நீராடு! – வனபர்வம் பகுதி 82ஆ-தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களைச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} தொடர்ந்தார், “காய்கறிகளாலும், கிழங்குகளாலும், கனிகளாலும் தன்னைத் தாங்கிக் கொள்பவன், ஒரு அந்தணனுக்கு அதே பொருட்களை அவமரியாதை செய்யாமல், பக்தியுடன், கட்டணமாகக் கொடுக்கலாம். ஓ மன்னர்களில் சிறந்தவனே, அப்படிக் கொடுக்கப்படும் பரிசினால் கூட ஒரு ஞானவான் குதிரைவேள்வியில் கிடைக்கும் பலன்களை அடைந்துவிட முடியும். அந்தணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியவர்களில் சிறந்த மனிதர்கள் புஷ்கரையில் குளித்தால் மறுபிறவி என்ற கடமையில் இருந்து விடுபடுவார்கள். குறிப்பாக கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி நாளில் புஷ்கரைக்குச் செல்பவன், நித்தியமான பிரம்மனின் வசிப்பிடத்தை அடைவான். ஓ பாரதா {பீஷ்மா} கரங்களைக் கூப்பிய படி காலையும் மாலையும் புஷ்கரையை மனதால் நினைப்பவன், அனைத்து தீர்த்தங்களிலும் குளித்ததாகக் கருதப்படுகிறான்.
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், பிறப்பிலிருந்து அவர்களால் செய்யப்பட்ட பாவங்கள் அனைத்தும் புஷ்கரையில் நீராடுவதன் மூலமாக அழிகிறது. ஓ மன்னா {பீஷ்மா}, மதுவைக் கொன்றவனே {மதுசூதனனே} தேவர்களில் முதன்மையானவன் என்பது போல புஷ்கரையும் அனைத்துத் தீர்த்தங்களிலும் முதன்மையானது. நூறு வருடங்கள் அக்னி ஹோத்திரம் செய்தவனின் தகுதியை, கார்த்திகை மாதம் முழுதும் புஷ்கரையில் தங்கியவன் பெறுகிறான். வெண்மையான மூன்று குன்றுகளும், மூன்று நீரூற்றுகளும் நீண்ட காலத்திற்கு முன்னர் இருந்து புஷ்கரை என்ற பெயரால் அறியப்படுகிறது. அதன் காரணம் என்னவென்று தெரியவில்லை. புஷ்கரைக்குச் செல்வது கடினம்; புஷ்கரையில் தவச்சடங்குகள் செய்வது கடினம்; புஷ்கரையில் தானம் கொடுப்பது கடினம்; புஷ்கரையில் வாழ்வதும் கடினம்.
சரியான உணவுப் பழக்கம் மற்றும் நோன்புகளுடன் புஷ்கரையில் பனிரெண்டு {12} இரவுகள் தங்கியபிறகு, ஒருவன், ஜம்பு மார்க்கம் செல்ல வேண்டும். தேவர்களும், முனிவர்களும், பித்ருக்களும் ஓய்ந்திருக்கும் ஜம்பு மார்க்கத்தை ஒருவன் அடைந்தால், அவன் குதிரை வேள்வி செய்த தகுதியை அடைந்து, தனது விருப்பங்கள் அனைத்தும் கனியக் காண்பான். அங்கே ஐந்து {5} இரவுகள் தங்கும் மனிதனின் ஆன்மா அனைத்துப் பாவங்களில் இருந்தும் கழுவப்படுகிறது. அவன் நரகத்திற்குள் மூழ்குவதே இல்லை, ஆனால் உயர்ந்த வெற்றியை அடைகிறான். ஜம்பு மார்க்கத்தை விட்டு அகன்றவன் அடுத்து {ஸ்}தண்டுலிகாஸ்ரமத்திற்கு செல்ல வேண்டும். அங்கே செல்பவன் யாரும் நரகத்தில் மூழ்குவதில்லை, ஆனால் பிரம்மலோகத்தை அடைகிறான். ஓ மன்னா, அதன் பின்பு, அகத்திய தடாகத்திற்கு {ஏரிக்கு} சென்று தங்குபவன், பித்ருக்கள், தேவர்கள் ஆகியோரை வழிபட்டு மூன்று {3} இரவுகள் உண்ணா நோன்பிருந்து அக்னிஷ்டோமா செய்வதன் பலனை அடைகிறான். காய்கறிகளையும், கனிகளையும் உண்டு வாழ்பவன் அங்கு சென்று கௌமாரம் என்ற நிலையை {முருகனின் நிலையை} அடைகிறான்.
அடுத்து, முழு உலகத்தாலும் வழிபடப்படும் கண்வரின் அழகான ஆசிரமத்திற்கு முன்னேற வேண்டும். ஓ பாரதகுலத்தின் காளையே, தெய்வீகத்தால் நிரம்பிய அந்தப் புனிதமான வனம், நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது. ஒருவன் அதற்குள் நுழைந்ததுமே, தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். முறையான உணவு பழக்கத்துடன் நோன்பிருந்து, பித்ருகளையும் தேவர்களையும் வழிபடுபவன், ஒருவரின் விருப்பங்களைக் கனிய வைக்கும் சக்தி படைத்தவனாக ஆவான். இந்த ஆசிரமத்தை ஒருமுறை வலம் வந்த பிறகு, ஒருவன் யயாதி (சொர்க்கத்திலிருந்து) விழுந்த இடத்திற்கு வர வேண்டும். அங்கே செல்பவன் குதிரை வேள்வி செய்ததன் பலனை அடைகிறான். பிறகு முறையான உணவு பழக்கத்துடன், புலன்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன் மஹாகாலம் என்ற இடத்திற்குச் செல்ல வேண்டும். பிறகு கோடி என்ற பெயரில் அழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்ததன் பலனை அடைகிறான்.
ஒரு அறம் சார்ந்த மனிதன் அடுத்து, மூன்று உலகிலும் பத்ரவடம் என்று அறியப்படும், உமையின் கணவனான ஸ்தாணுவின் தீர்த்தத்திற்குச் செல்ல வேண்டும். பத்ரவடத்திற்குச் செல்லும் மனிதர்களில் சிறந்தவர்கள் ஈசானனைக் கண்டு, ஆயிரம் பசுக்களைக் கொடையாகக் கொடுப்பதால் கிடைக்கும் பலனை அடைவார்கள். பிறகு மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் நர்மதை ஆற்றுக்கு வந்து, பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் நீர்க்கடன்கள் கொடுப்பதால் ஒருவன் குதிரை வேள்வி செய்ததன் பலனை அடைகிறான். பிறகு பிரம்மச்சரிய வாழ்வுமுறையை மேற்கொண்டு, புலன்களை அடக்கி தென் கடலுக்குச் {இது வடமொழி மூலத்தில் தக்ஷிண சிந்து [சேது சமுத்திரமாக இருக்கலாம்] என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் தென் கடல் {southern ocean} என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது} செல்பவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்ததன் பலனை அடைந்து சொர்க்கத்திற்கு உயர்வான். பிறகு சர்மண்வதி நதியை அடைந்து, முறையான உணவுப் பழக்கத்துடனும், புலன்களைக் கட்டுப்படுத்தியும் இருப்பவன், ரந்திதேவனின் கட்டளையின் பேரில் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலன்களை அடைகிறான்.
ஓ போர்வீரர்களின் அறம் சார்ந்த தலைவனே {பீஷ்மா}, அதன் பிறகு ஒருவன் இமயத்தின் மகனான அர்ப்புடம் செல்ல வேண்டும். அங்கு பழங்காலத்தில் பூமியைத் துளைத்தப்படி சென்ற ஒரு துளை இருந்தது. அங்கே, மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் வசிஷ்டரின் ஆசிரமம் இருக்கிறது. ஒரு இரவு அங்கு தங்குவதால் ஒருவனுக்கு ஆயிரம் பசுக்களைக் கொடையாகக் கொடுப்பதால் கிடைக்கும் பலன் கிடைக்கிறது. ஓ மன்னர்களில் புலியே {பீஷ்மா} பிரம்மச்சரிய வாழ்வு முறையை மேற்கொண்டு, பிங்கம் எனும் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் நூறு கபிலைப் பசுக்களைத் தானம் கொடுப்பதன் பலனை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, ஒருவன் பிறகு, பிரபாசம் என்று அழைக்கப்படும் அற்புதமான தீர்த்தத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே எப்போதும் ஹுதாசனன் {அக்னி} நேரடியாகவே இருக்கிறான். ஓ வீரா {பீஷ்மா}, பவனனின் {இந்திரனின்} நண்பனான அவன் {அக்னி}, தேவர்களுக்கு வாயாக இருப்பவனாவான். தன்னை அடக்கி, சுத்திகரிக்கப்பட்ட ஆன்மா கொண்ட மனிதன் அந்தத் தீர்த்ததில் நீராடுவதால், அக்னிஷ்டோமா அல்லது அதிராத்ர வேள்வியால் கிடைக்கும் பலன்களை விட அதிக பலன்களை அடைகிறான்.
விஷ்ணுவின் கருணைக்காக தவமிருந்த தேவர்கள்! – வனபர்வம் பகுதி 82இ-தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களைச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} தொடர்ந்தார், “ஓ பாரத குலத்தின் காளையே {பீஷ்மா}, பிறகு சரஸ்வதி நதி கடலோடு கலக்கும் பகுதிக்குச் செல்லும் ஒருவன் நூறு பசுக்களை தானம் கொடுப்பதால் கிடைக்கும் பலனை அடைந்து சொர்க்கத்தையும் அடைந்து, எப்போதும் அக்னியைப் போல பிரகாசித்துக் கொண்டிருப்பான். கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன், அங்கிருக்கும் நீர்நிலைகளின் மன்னனான தீர்த்தத்தில் நீராடி பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் நீர்க்கடன் செய்து மூன்று இரவுகள் அங்கே வாழ்ந்தால் அவன் சந்திரனைப் போன்று பிரகாசித்து, குதிரை வேள்வி செய்ததன் பலனை அடைவான். ஓ பாரதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அதன் பிறகு ஒருவன், துர்வாச முனிவரால் விஷ்ணுவுக்கு வரமளிக்கப்பட்ட வரதானம் என்ற தீர்த்தத்திற்கு செல்ல வேண்டும். வரதானத்தில் நீராடுபவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்ததன் பலனை அடைகிறான். பிறகு ஒருவன், புலன்களை அடக்கி, முறையான உணவுமுறையுடன் துவாராவதிக்குச் {துவாரகைக்குச்} செல்ல வேண்டும். அங்கு பிண்டாரகத்தில் {தீர்த்தத்தில்} நீராடி, அபரிமிதமான தங்கத்தைக் கொடையாகக் கொடுத்த பலனை அடையலாம். ஓ அருளப்பட்டவனே {பீஷ்மா}, அங்கு தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட நாணயங்களும், திரிசூலக் குறி கொண்ட தாமரைகளையும் காணலாம் என்பது விவரிக்க அற்புதமானது. ஓ வீரர்களை அடக்குபவனே, மனிதர்களில் காளையே, அங்கே மகாதேவன் {சிவன்} நேரடியாக இருக்கிறான்.
ஓ பாரதா {பீஷ்மா}, பிறகு சிந்து நதி கடலுடன் சந்திக்கும் பகுதியை அடைந்து, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் ஒருவன் வருண தீர்த்தத்தில் நீராட வேண்டும். அங்கே நீராடி, பித்ருக்களுக்கும், முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் நீர்க்கடன் செலுத்துபவன், ஓ பாரதகுலத்தின் காளையே, வருண உலகத்தை அடைந்து அங்கே தன்னொளி பெற்று பிரகாசிக்கிறான். ஞானவான்கள் அங்கிருக்கும் தெய்வத்தை சங்குகர்ணேஸ்வரன் என்ற பெயரால் வழிபடுபவன், குதிரையை வேள்வி செய்வதால் ஏற்படுவதைப் போன்று பத்து மடங்கு பலனை அடைகிறான். ஓ பாரத குலத்தின் காளையே அந்தத் தீர்த்தத்தை வலம் வந்த ஒருவன், ஓ குருக்களில் முதன்மையானவனே {பீஷ்மா}, மூன்று உலகத்தாலும் திரிமி {சமி} என்ற பெயரால் அறியப்பட்டு கொண்டாடப்படும் தீர்த்தத்திற்குச் செல்ல வேண்டும். அந்தத் தீர்த்தம் அனைத்துப் பாவங்களையும் கழுவுகிறது. அங்கேதான் தேவர்கள் பிரம்மனையும், மகேஸ்வரனையும் {சிவனையும்} வணங்குகிறார்கள். அங்கே நீராடிய பிறகு, தேவர்களால் சூழப்பட்ட ருத்திரரை வணங்குபன் பிறவியில் இருந்து செய்த பாவங்களில் இருந்து விடுபடுகிறான். ஓ மனிதர்களில் சிறந்தவனே, அங்கேதான் திரிமி {சமி} அனைத்து தேவர்களாலும் வழிபடப்பட்டான். ஓ மனிதர்களில் சிறந்தவனே, அங்கே நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்ததன் பலனை அடைகிறான். ஓ பெரும் புத்திகூர்மை கொண்டவனே, அண்டத்தைப் படைத்தவனான விஷ்ணு, தைத்தியர்களையும், தானவர்களையும் கொன்ற பிறகு தன்னைச் சுத்திகரித்துக் கொள்ள அந்தத் தீர்த்தத்திற்கே சென்றான்.
ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மனே}, அதன் பிறகு ஒருவன் அனைவராலும் கொண்டாடப்படும வசோர்த்தாரைக்குச் செல்ல வேண்டும். அந்தத் தீர்த்தத்தை அடைந்ததுமே ஒருவன் குதிரை வேள்வி செய்ததன் பலனை அடைகிறான். ஓ குருக்களில் சிறந்தவனே, ஆன்மாவை அடக்கி, கவனம் சிதறாமல், தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செலுத்தும் ஒருவன் விஷ்ணுவின் உலகத்தை அடைந்து வணங்கப்படுகிறான். ஓ பாரதகுலத்தின் காளையே அந்தப் புனிதமான தடாகத்தில் வசுக்கள் இருக்கின்றனர். அங்கே நீராடி அதன் நீரை அருந்துபவன், வசுவாகிறான் என்று கருதப்படுகிறது. அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் சிந்தூத்தமம் என்ற ஒரு கொண்டாடப்படும் தீர்த்தம் இருக்கிறது. ஓ மனிதர்களில் சிறந்தவனே, அங்கே நீராடும் ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு சுத்திகரிக்கப்பட்ட ஆன்மாவுடனும், சுத்தமான நடத்தையுடனும் பத்ரதுங்கத்தை அடையும் ஒருவன் உயர்ந்த நிலையால் அருளப்பட்டிருக்கும் பிரம்மலோகத்தை அடைவான். பிறகு, சித்தர்களால் அடையப்பட்ட இந்திரனின் குமாரிகளின் தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மனிதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அங்கு நீராடுபவன் இந்திரலோகத்தை அடைகிறான். அந்தக் குமாரிகள் தீர்த்தத்திலேயே ரேணுகா என்ற தீர்த்தம் இருக்கிறது. அதுவும் சித்தர்களால் அடையப்பட்டதே. அங்கு நீராடும் ஒரு அந்தணன் சந்திரனைப் போலப் பிரகாசிக்கிறான். பிறகு பஞ்சநதம் என்று அழைக்கப்படும் தீர்த்தத்தை அடைந்து, புலன்களை அடக்கி, முறையான உணவு முறையுடன் இருப்பவன் சாத்திரங்களில் ஒன்றன் பின் ஒன்றாகச் சொல்லப்பட்டிருக்கும் ஐந்து வேள்விகளின் பலன்களை அடைகிறான். பிறகு, ஓ மன்னா, ஒருவன் அற்புதமான பகுதியான பீமையை அடைய வேண்டும். ஓ பாரதர்களில் சிறந்தவனே அங்கே யோனி என்று அழைக்கப்படும் அந்தத் தீர்த்ததில் நீராடும் மனிதன் (தனது அடுத்த பிறவியில்), முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட காது குண்டலங்களுடன் தேவதையின் மகனாகப் பிறந்து, நூறாயிரம் {ஒரு லட்சம்} பசுக்களைத் தானம் கொடுத்ததன் பலனை அடைகிறான்.
அடுத்து ஸ்ரீகுண்டம் {கிரிகுஞ்சம்} என்று மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் இடத்தை அடைந்து, பெருந்தகப்பனை {பிரம்மாவை} வணங்கும் ஒருவன், ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்ததன் பலனை அடைகிறான். ஓ அறம் சார்ந்தவனே, ஒருவன் பிறகு விமல் என்ற அற்புதமான தீர்த்தத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே தங்க மற்றும் வெள்ளி நிற மீன்களைக் காணலாம். அங்கு நீராடும் ஒருவன் வாசவனின் {இந்திரனின்} உலகத்தை அடைந்து, தனது ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொண்டு அனைத்துப் பாவங்களையும் கழுவி உன்னத நிலையை அடையலாம். பிறகு விதஸ்தை என்ற தீர்த்தத்தை அணுகி, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் நீர்க்கடன் செலுத்தும் ஒருவன், வாஜபேய வேள்வியில் கிடைக்கும் பலனை அடையலாம். விதஸ்தை என்ற பெயரால் பாவங்களை அழிக்கும் தீர்த்தம், நாகன் {பாம்பு} தக்ஷகனின் வசிப்பிடமான காஷ்மீர நாட்டில் இருக்கிறது. அங்கே நீராடும் மனிதன் வாஜபேய வேள்வியின் பலனை அடைந்து, அனைத்துப் பாவங்களில் இருந்தும் தனது ஆன்மாவைக் கழுவி, உயர்ந்த உன்னத நிலையை அடைகிறான்.
ஒருவன் பிறகு, வடவம் {மலதை} என்று மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் இடத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு மாலைப்பொழுதில் உரிய சடங்குகளுடன் நீராடும் ஒருவன், தனது சக்தியில் சிறந்ததை வெளிப்படுத்தி நெய் மற்றும் பாலில் வேக வைத்த அரிசியை ஏழு சுடர் கொண்ட தெய்வத்துக்கு {அக்னிக்கு} படைக்க வேண்டும். பித்ருக்களுக்கு {முன்னோர்களுக்கு} மரியாதை செலுத்தும் விதமாக அங்கு செய்யப்படும் தானம், அளவற்றதாக ஞானவான்கள் கூறுகின்றனர். முனிவர்கள், பித்ருக்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்களின் பல இனங்கள், குஹ்யர்கள், கிண்ணரர்கள், யக்ஷர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், ராட்சசர்கள், தைத்தியர்கள், ருத்திரர்கள், ஏன் பிரம்மனும் கூட, ஓ மன்னா, தங்கள் புலன்களை அடக்கி, ஆயிரம் வருடம் விஷ்ணுவின் கருணைக்காகத் தவம் இருந்து, பால் மற்றும் நெய்யில் சமைக்கப்பட்ட அரசியை கேசவனுக்குப் படைத்து, ஏழு ரிக்குகளுடன் தங்கள் கடன்களைச் செலுத்தினர். ஓ மன்னா, இதனால் திருப்தியடைந்த கேசவன் {விஷ்ணு}, ஐசுவரியம் எனும் எட்டுமடங்கான தன்மையையும், மேலும் அவர்கள் விரும்பிய பலவற்றையும் கொடுத்தான். இவற்றை அருளிய அந்தத் தெய்வம், அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே மேகத்துக்குள் மறையும் மின்னல் போல மறைந்து போனான். ஓ பாரதா {பீஷ்மா}, இதன்காரணமாகவே அந்தத் தீர்த்தம் சப்தசரு என்ற பெயரால் அறியப்படுகிறது. அந்த இடத்தில் ஏழு சுடர் கொண்ட தெய்வத்திற்கு {அக்னிக்கு}, சருவைப் படைப்பவன், நூறாயிரம் {ஒரு லட்சம்} பசுக்களைத் தானம் கொடுத்ததன் பலனையும், நூறு ராஜசூயம் மற்றும் நூறு குதிரை வேள்விகள் செய்த பலனையும் அடைகிறான்.
நானே அவனை முதலில் கண்டேன்! – வனபர்வம் பகுதி 82ஈ-தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களைச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} தொடர்ந்தார், “ஒருவன் வடவத்தை விட்டு, ரௌத்திரபதம் என்ற இடத்திற்கு முன்னேறி, மகாதேவனைக் {சிவனைக்} கண்டு குதிரை வேள்வியின் பலனை அடைவான். பிறகு தனது ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்து பிரம்மச்சரிய வாழ்வு முறை வாழ்ந்த மணிமத் {மணிமான்} என்ற இடத்தை அடைந்து, அங்கு ஒரு இரவு தங்குபவன், ஓ மன்னா, அக்னிஷ்டோமா வேள்வியைச் செய்த பலனை அடைவான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் முழு உலகத்தாலும் கொண்டாடப்படும் தேவிகை என்ற இடத்திற்குச் செல்ல வேண்டும். ஓ பாரத குலத்தின் காளையே {பீஷமா}, அங்கேதான் அந்தணர்கள் உண்டானார்கள் என்று நாம் கேள்விப்படுகிறோம். மேலும் திரிசூலம் தாங்குபவனின் {சிவனின்} பகுதியான உலகத்தால் கொண்டாடப்படும் பகுதியும் அங்கிருக்கிறது. ஒருவன் தேவிகையில் நீராடி, மகேஸ்வரனை {சிவனை} வழிபட்டு, தனது சக்திக்குத் தக்கவாறு பால் மற்றும் நெய்யில் அரசியைச் சமைத்து படையல் வைப்பவன், ஓ பாரத குலத்தின் காளையே {பீஷ்மா}, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் வேள்வியைச் செய்தவனின் தகுதியை அடைவான். ருத்ரனின் மற்றும் ஒரு தீர்த்தமான காமகியமும் அங்கே இருக்கிறது. அதில் தேவர்கள் தங்கியிருக்கின்றனர். அங்கே நீராடிய மனிதன் விரைவாக வெற்றியை அடைவான். மேலும் அங்கிருக்கும் யஜனம், பிரம்மவாலுகம், புஷ்பாம்பம் ஆகியவற்றின் நீரையும் தொடும் ஒருவன் தனது மறுபிறவியின் சோகத்திலிருந்தும் விடுபடுகிறான்.
தேவர்களும், முனிவர்களும் ஓய்ந்திருக்கும் அந்தப் புனிதமான தீர்த்தமான தேவிகை ஐந்து யோஜனை நீளமும் {1யோஜனை = 8 மைல்}, அரை யோஜனை அகலமும் கொண்டது. ஓ மன்னா அதன் பிறகு ஒருவன் தீர்க்கசத்திரம் எனும் இடத்தை நோக்கி முன்னேற வேண்டும். அங்கே பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், சித்தர்களும், பெரும் முனிவர்களும், முறையான நோன்பு நோற்று, முதற்படியான சபதங்களை ஏற்றும் அவற்றை உரைத்தும் நீண்ட காலம் தொடரும் வேள்வியைச் செய்து கொண்டிருக்கின்றனர். ஓ மன்னா, தீர்க்கசத்தரத்திற்கு மட்டும் செல்லும் ஒருவன், ராஜசூயம் மற்றும் குதிரை வேள்விகளின் பலன்களுக்கு மேன்மையான பலனை அடைகிறான். அதன்பிறகு ஒருவன் தனது புலன்களைக் கட்டுப்படுத்தி, முறையான உணவுமுறையுடன் சரஸ்வதி {ஆறு} மேருவின் மார்பில் மறைந்து சமசம், சிவோத்பேதம் மற்றும் நாகத்பேதம் ஆகிய இடங்களில் மீண்டும் வெளியாகும் விநசனத்திற்குச் சென்று அக்னிஷ்தோம வேள்வி செய்த பலனை அடையலாம். சிவோத்பேதத்தில் நீராடுவதால் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைகிறான். நாகோத்பேதத்தில் நீராடுவதால் ஒருவன் நாகர்களின் உலகத்தை அடைகிறான்.
பிறகு ஒருவன், அடைவதற்கு அரிதான ஷசயான தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ பாராத {பீஷ்மா}, அங்கே, நாரைகள் சச என்ற உருவத்தில் மறைந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் மீண்டும் தோன்றுகின்றன. ஓ பாரத குலத்தின் தலைவனே, அந்த சரஸ்வதியில் ஒருவன் நீராட வேண்டும். அப்படி அங்கே நீராடினால், ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, ஒருவன் சந்திரனைப் போன்ற பிரகாசத்தைப் பெற்று, ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடையலாம். ஓ குரு குலத்தவனே, பிறகு ஒருவன் குமாரகோடி எனும் தீர்த்தத்தை அடைந்து புலன்களை அடக்கி, அங்கே நீராடி, தேவர்களையும் பித்ருக்களையும் வழிபட வேண்டும். இப்படிச் செய்வதால், ஒருவன் பத்தாயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைந்து, தனது மூதாதையர்களை உயர்ந்த உலகங்களுக்கு அனுப்புகிறான்.
ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன், தனது ஆன்மாவைக் கட்டுப்படுத்தி, முன்பொரு காலத்தில் ஒரு கோடி முனிவர்கள் கூடிய இடமான ருத்ரகோடி என்ற இடத்திற்குச் செல்ல வேண்டும். ஓ மன்னா, மகாதேவனைக் காணும் எதிர்பார்ப்பில் பெரும் மகிழ்ச்சியில் மூழ்கி, அங்கே அந்த முனிவர்கள் கூடினர். அவர்கள் ஒவ்வொருவரும், “நானே முதலில் தெய்வத்தைக் காண்பேன்!”, ” நானே முதலில் தெய்வத்தைக் காண்பேன்!” சொல்லிக் கொண்டனர். ஓ மன்னா {பீஷ்மா} ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அந்த முனிவர்களிடையே சச்சரவைத் தவிர்க்க யோகத்தின் தலைவன் {சிவன்}, தனது யோக சக்தியால் தன்னை ஒரு கோடி உருவங்களாகப் பெருக்கிக் கொண்டு, அவர்கள் ஒவ்வொரு முன்பும் நின்றான். அனைத்து முனிவர்களும், “நானே அவனை முதலில் கண்டேன்” என்று சொன்னார்கள். ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆழ்ந்த அர்ப்பணிப்பு கொண்ட அந்த முனிவர்களிடம் திருப்தி கொண்ட மகாதேவன், அவர்களுக்கு வரமாக, “இந்த நாள் முதல் உங்கள் தர்மம் பெருகட்டும்” என்று சொன்னார்.
ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மனே}, சுத்தமான மனதுடன் ருத்திரகோடியில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்யும் பலனை அடைந்து, தனது முன்னோர்களை விடுவிக்கிறான். பிறகு ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, பெரிதும் புனிதமான கொண்டாடப்படும் பகுதியான சரஸ்வதி கடலில் சங்கமிக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். ஓ மன்னா, அங்கே, பிரம்மனின் தலைமையில் தேவர்களும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும், சித்திரை மாதத்தின் வளர்பிறை பதினான்காம் நாளில் {சதுர்த்தசியில்} கேசவனை வழிபடுகிறார்கள். ஓ மனிதர்களில் புலியே, அங்கே நீராடுவதால் ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானமாகக் கொடுத்த பலனை அடைந்து தனது அனைத்துப் பாவங்களையும் கழுவிக்கொண்டு, பிரம்மனின் உலகத்திற்கு உயர்கிறான். ஓ மன்னா, அந்த இடத்தில் முனிவர்கள் பலர் பல வேள்விகளைச் செய்திருக்கிறார்கள். அந்தப் பகுதிக்குச் செல்வதால் ஒருவன் ஆயிரம் பசுக்களைக் கொடையாகக் கொடுத்த பலனை அடைகிறான்.
தீர்த்தங்களான சமந்தபஞ்சகம்! – வனபர்வம் பகுதி 83அ-தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மரிடம் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், “ஓ மன்னா {பீஷ்மா}, அடுத்து ஒருவன், எதைப் பார்ப்பதாலேயே அனைத்துப் பாவங்களில் இருந்தும் அனைத்து உயிரினங்களும் விடுபடுமோ அந்த வணங்கப்படும் குருக்ஷேத்திரத்திற்குச் செல்ல வேண்டும். “நான் குருக்ஷேத்திரத்தில் வாழ்வேன்” என்று தொடர்ச்சியாகச் சொல்லும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். காற்றால் அடித்துக் கொண்டுவரப்பட்ட குருக்ஷேத்திரத்தின் தூசி கூட ஒரு மனிதனை (அடுத்த பிறவியில்) அருள் வாழ்க்கை வாழ வைக்கும்.
சரஸ்வதிக்குத் {நதி} தெற்கிலும், திருஷத்வதிக்கு {நதி} வடக்கிலுமுள்ள குருக்ஷேத்திரத்தில் வசிக்கும் யாவரும் சொர்க்கத்திலேயே வசிக்கிறார்கள் என்றே சொல்லப்படுகிறது. ஓ வீரனே {பீஷ்மனே}, ஓ வீரர்களில் முதன்மையானவனே, ஒருவன் அங்கு ஒரு மாதத்திற்கு வசிக்க வேண்டும். ஓ பூமியின் தலைவா {பீஷ்மா}, அங்கே இருக்கும் பெரும் புனிதம் நிறைந்த பிரம்மக்ஷேத்திரத்திற்கு பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும், சாரணர்களும், கந்தர்வர்களும், அப்சரஸ்களும், யக்ஷர்களும், நாகர்களும், ஓ பாரதா {பீஷ்மா} அடிக்கடி வருவார்கள்.
ஓ வீரர்களில் முதன்மையானவனே {பீஷ்மனே}, குருக்ஷேத்திரத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஒருவன் மனதால் நினைத்தாலும் அவனது பாவங்கள் அனைத்தும் அழிந்து, கடைசியாக அவன் பிரம்மனின் உலகத்தை அடைகிறான். ஓ குரு குலத்தின் மகனே, பக்தியுடைய மனதுடன் குருக்ஷேத்திரத்திற்குச் செல்பவன், ராஜசூய வேள்வி மற்றும் குதிரை வேள்விகளைச் செய்த பலனை அடைகிறான்.
பிறகு பெரும் பலசாலியும் (குபேரனின்) வாயில் காப்போனுமான யக்ஷன் மங்கநகனை {மந்துகனை_Yaksha called Mankanaka} வணங்குவதால், ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். ஓ அறம்சார்ந்த மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் ஹரி எப்போதுமே இருக்கும் விஷ்ணுவின் பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கே நீராடி பிறகு மூவுலகங்களின் படைப்பாளனான ஹரியை வணங்கும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து விஷ்ணுவின் உலகத்திற்குச் செல்கிறான்.
ஓ பாரதா {பீஷ்மா}, பிறகு ஒருவன் மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் தீர்த்தமான பரிப்லவம் {Pariplava} என்ற தீர்த்தத்திற்குச் சென்று (அங்கு நீராடி), அக்னிஷ்டோமா மற்றும் அதிரத்ரா வேள்விகளைச் செய்வதைவிட அதிகமான பலனை அடையலாம். பிறகு, பிருத்வி தீர்த்ததை {Prithivi அடைந்து அங்கு ஆயிரம் பசுக்களைத் தானமாகக் கொடுத்த பலனை அடையலாம். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒரு பயணி சாலூகினி {Shalukini}சென்று, அங்கு தசாஸ்வமேதத்தில் நீராடி {Dasaswamedha} பத்து குதிரை வேள்விகளைச் செய்த பலன்களை அடையலாம். பிறகு நாகர்களின் அற்புதமான தீர்த்தமான சர்ப்பதேவி {Sarpadevi} என்ற தீர்த்தத்திற்குச் செல்லும் ஒருவன், அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனைப் பெற்று நாக உலகத்தை அடைவான். ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் வாயில் காப்போனான துவாரரக்ஷகனை {அருந்துகனை_Tarantuka} அடைய வேண்டும். பிறகு அங்கே ஒரு நாள் தங்குவதால், ஆயிரம் பசுக்களைத் தானமாகக் கொடுத்த பலனை அடையலாம். பிறகு புலன்களை அடக்கி, முறையான உணவு முறையுடன் பஞ்சநதத்தை {Panchananda} அடைந்து அங்கே கோடி {koti} என்ற தீர்த்தத்தில் நீராடி ஒரு குதிரை வேள்வியின் பலனை அடையலாம். பிறகு அசுவினி {Aswins} இரட்டையர்களின் தீர்த்தத்தை அடைவதால் ஒருவன் மேனி அழகைப் பெறலாம்.
ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, எங்கும் நிறைந்த விஷ்ணு வராக வடிவத்துடன் இருந்த வராக தீர்த்தத்தை {Varaha} அடைய வேண்டும். ஓ மனிதர்களில் முதன்மையானவனே, அங்கே நீராடுவதால் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன், ஜெயந்தியில் உள்ள சோம தீர்த்தத்தை {tirtha called Sama in Jayanti} அடைந்து அங்கே நீராடுவதால் ராஜசூய வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு, {Ekahansa}ஏகஹம்சத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, கிருதசௌச்சத்தை {Kritasaucha}அடையும் ஒரு பயணி சுத்தமான ஆன்மாவுடன் தாமரைக் கண் தெய்வத்தை (விஷ்ணுவை) அடைகிறான். பிறகு ஒருவன், முஞ்சவடம் {Munjavata} என்ற சிறப்பு மிகுந்த ஸ்தாணுவின் இடத்தை அடைய வேண்டும். அங்கே ஒரு இரவு உணவருந்தாமல் தங்குபன், கணபத்தியம் {கணங்களின் தலைவன்} என்ற நிலையை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, அங்கே யக்ஷிணி {tirtha called Yakshini} என்ற கொண்டாடப்படும் தீர்த்தமொன்று இருக்கிறது. அந்தத் தீர்த்தத்திற்குச் சென்று, அங்கே நீராடுபவன், தனது விருப்பங்கள் அனைத்தும் கனியும் வரத்தைப் பெறுகிறான். ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மா}, அந்தத் தீர்த்தமே குருக்ஷேத்திரத்தின் வாயிலாகக் கருதப்படுகிறது. பிறகு ஆன்மாவை ஒருமுகமாக்கிக் கொண்ட பயணி அதை வலம் வர வேண்டும். புஷ்கரங்களுக்கு இணையான அது, ஜமதக்னியின் மகனான உயர் ஆன்ம ராமனால் {பரசுராமனால்} உருவாக்கப்பட்டது. அங்கே நீராடி, பித்ருக்களையும், தேவர்களையும் வணங்கும் ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து அனைத்திலும் வெற்றிவாகை சூடுபவனாகிறான்.
பிறகு ஒரு பயணி ஒருமுகமான ஆன்மாவுடன் ராமஹ்ரதம் {Rama-hrada}என்ற இடத்தை அடைய வேண்டும். ஓ மன்னா {பீஷ்மா}, அங்கே பெரும் சக்தி படைத்த ராமன் {பரசுராமன்} தனது பலத்தால் க்ஷத்திரியர்களை அழித்து, ஐந்து தடாகங்களை {சமந்தபஞ்சகம் என்று முன்பே பார்த்திருக்கிறோம்} ஏற்படுத்தி, ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, தன்னால் பலியானவர்களின் இரத்தத்தால் அவற்றை நிரப்பினான் என்று நாம் கேள்விப் படுகிறோம். அந்தத் தடாகங்களை க்ஷத்திரியர்களின் குருதியால் நிரப்பிய ராமன், தனது தந்தைக்கும், பாட்டன்களுக்கும் நீர்க்கடனைச் செலுத்தினான். இதனால் (நீர்க்கடனால்) திருப்தியடைந்த அந்த முனிவர்கள் ராமனிடம் {பரசுராமனிடம்}, “ஓ ராமா, ஓ ராமா, ஓ பெரும் நற்பேறு பெற்றவனே, நாங்கள் உன்னிடம் திருப்தியடைந்தோம். ஓ பிருகு குலத்தவனே, பித்ருக்கள் மீதான உனது மரியாதைக்கும், உனது வீரத்திற்கும், ஓ மேன்மையானவனே, நீ அருளப்பட்டிரு. நீ விரும்பும் வரத்தைக் கேள். ஓ பெரும் பிரகாசம் கொண்டவனே, நீ என்ன விரும்புகிறாய்?” என்று கேட்டனர்.
இப்படி (அவர்களால்) கேட்கப்பட்ட அடிப்பவர்களில் முதன்மையான ராமன், கரங்களைக் கூப்பியபடி அந்தரத்தில் நின்றுகொண்டிருந்த அப்பித்ருக்களிடம், “நீங்கள் என்னிடம் திருப்தியடைந்திருந்தால், நான் உங்கள் அருளுக்குத் தகுதிபடைத்தவனென்றால், ஓ பித்ருக்களே, எனக்கு மீண்டும் தவச்சடங்குகளில் மகிழ்ச்சி உண்டாக வேண்டும் என்று கோருகிறேன். மேலும், கோபத்தால் க்ஷத்திரிய குலத்தை அழித்த பாவம் அனைத்திலும் இருந்து உங்கள் சக்தியால் நான் விடுபட வேண்டும். எனது இந்தத் தடாகங்களும் உலகத்தோரால் தீர்த்தங்களெனக் கொண்டாடப்படட்டும்” என்று கேட்டான். ராமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பித்ருக்கள் பெரும் திருப்தியும், மகிழ்ச்சியும் கொண்டு அவனிடம், “பித்ருக்களுக்கான உனது மரியாதையால் உனது தவம் பெருகட்டும். நீ உனது கோபத்தால் க்ஷத்திரிய குலத்தை அழித்துவிட்டாய். அவர்கள் தங்கள் தீச்செயல்களால் அழிந்ததால், நீ ஏற்கனவே அந்தப் பாவத்தில் இருந்து விடுபட்டுவிட்டாய். இந்த உனது தடாகங்கள் சந்தேகமற தீர்த்தங்களாகவே ஆகும். இந்தத் தீர்த்தங்களில் நீராடும் ஒருவன், பித்ருக்களுக்கு நீர்க்கடன் செலுத்தினால், பித்ருக்கள் திருப்தியடைந்து, இவ்வுலகத்தில் சாதிக்கக் கடினமான அவனது விருப்பங்கள் நிறைவேறும் வரத்தை அவனுக்கு அளிப்பார்கள்” என்றனர்.
ஓ மன்னா {பீஷ்மா}, இந்த வரங்களை அருளிய பித்ருக்கள் பிருகு குல ராமனை {பரசுராமனை} மகிழ்ச்சியுடன் வணங்கி அங்கேயே மறைந்து போனார்கள். இப்படியே பிருகு குலத்தின் சிறப்புவாய்ந்த ராமனால் உண்டாக்கப்பட்ட அத்தடாகங்கள் புனிதமாகின. ஒருவன் பிரம்மச்சரிய வாழ்வுமுறை மேற்கொண்டு, புனிதமான நோன்புகள் நோற்று ராமனின் தடாகங்களில் நீராட வேண்டும். ஓ மன்னா {பீஷ்மா}, அங்கே நீராடி ராமனை {பரசுராமனை} வழிபடுவதால், ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான்.
நாரதரால் கிட்டும் நிகரற்ற உலகங்கள்! – வனபர்வம் பகுதி 83ஆ-தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களைப் பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், “ஓ குருகுலத்தின் மகனே {பீஷ்மா}, அதன்பிறகு ஒரு பயணி வம்சமூலகத்தை {Vansamulaka} அடைந்து அங்கே நீராடுவதால் தனது குலத்தை வளர்க்கும் பலனைப் பெறுகிறான்.. ஓ பாரதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, பிறகு காயசோதனம் என்ற தீர்த்தத்தை {Kayasodhana} அடையும் ஒருவன் அங்கே நீராடி, தன்னைச் சுத்திகரித்துக் கொண்ட பிறகு, சுத்திகரித்துக் கொண்ட அந்த உடலுடன் நிகரற்ற சிறந்த பேறு கொண்ட உலகத்தை சந்தேகமற அடைவான். ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன், எந்த இடத்தில் பெரும் சக்தி கொண்ட விஷ்ணுவால் உலகங்கள் படைக்கப்பட்டனவோ, லோகோத்தாரம் {Lokoddara} என்ற பெயரால் மூவுலகங்களிலும் புகழ்பெற்ற அந்தத் தீர்த்தத்தை அடைய வேண்டும். மூவுலகங்களாலும் வழிபடப்படும் அந்தத் தீர்த்தத்தை அடையும் ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, அங்கே நீராடி எண்ணிலடங்கா உலகங்களைத் தானே ஈட்டிக் கொள்கிறான். பிறகு ஸ்ரீ எனும் தீர்த்தத்தை {tirtha called Sree} அடையும் ஒருவன் அங்கே நீராடி, பித்ருக்களையும், தேவர்களையும் வழிபட்டு உயர்ந்த செழிப்பை அடைகிறான்.
பிரம்மச்சரிய வாழ்வு முறையை மேற்கொண்டு, ஒருமுகம் கொண்ட ஆன்மாவுடன் ஒருவன் அடுத்ததாக கபிலம் என்ற தீர்த்தத்தை {tirtha called Kapila} அடைய வேண்டும். அங்கே நீராடி, தனது சொந்த பித்ருக்களையும், தேவர்களையும் வழிபடும் மனிதன் ஆயிரம் கபில வகை பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு சூரியன் என்ற தீர்த்தத்தை {tirtha called Surya} அடைந்து அங்கே நீராடி கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் பித்ருக்களையும் தேவர்களையும் வணங்கி, முழுவதும் உண்ணாதிருப்பவன் அக்னிஷ்டோமா வேள்வியின் பலனை அடைந்து (கடைசியாக) சூரியனின் உலகத்தை அடைகிறான். பிறகு ஒரு பயணி கோபவனம் என்ற தீர்த்தத்தை {Gobhavana} அடைந்து அங்கே நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைகிறான். ஓ குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, பிறகு ஒரு பயணி சங்கினீ என்ற தீர்த்தத்தை {tirtha called Shankhini} அடைந்து, அங்கே இருக்கும் தேவி தீர்த்தத்தில்{Devi-tirtha}நீராடி பெரும் பராக்கிரமத்தை அடைகிறான். ஓ மன்னா, பிறகு ஒருவன் சரஸ்வதியில் அமைந்திருக்கும் தரந்தகம் என்ற தீர்த்தத்தை {Tarandaka }அடைய வேண்டும். அந்தத் தீர்த்தம் யக்ஷர்களின் சிறப்புமிகுந்த தலைவனும் குபேரனின் வாயில் காப்போனுமான {துவாரரக்ஷகனின்) யக்ஷனின் தீர்த்தமாகும். ஓ மன்னா, அங்கே நீராடும் ஒருவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான்.
ஓ அறம்சார்ந்த மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் பிரம்மவர்த்தம் {tirtha called Brahmavarta) என்றழைக்கப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். பிரம்மவர்த்தத்தில் நீராடும் ஒருவன் பிரம்மனின் உலகத்திற்கு உயர்கிறான். ஓ மன்னா, பிறகு ஒருவன் சுதீர்த்தம் {tirtha called Sutirtha} என்றழைக்கப்படும் அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே தேவர்களுடன் சேர்ந்து பித்ருக்களும் நேரடியாகவே வசிக்கின்றனர். ஒருவன் அங்கே நீராடி பித்ருக்களையும் தேவர்களையும் வணங்க வேண்டும். இப்படிச் செய்வதால் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து (கடைசியாக) பித்ருக்களின் உலகத்தை அடைகிறான். இதன் காரணமாகவே ஓ அறம் சார்ந்தவனே {பீஷ்மா}, அம்புமதியில் {Amvumati} அமைந்திருக்கும் சுதீர்த்தம் அற்புதமானதாகக் கருதப்படுகிறது. ஓ பாரத குலத்தில் சிறந்தவனே, பிறகு காசீஸ்வரனின் {கோசேஸ்வரனின்} தீர்த்தத்தில் {Kasiswara} நீராடி ஒருவன் அனைத்து நோயிலும் இருந்து விடுபட்டு, வழிபடப்படும் பிரம்மனின் உலகத்தை அடைகிறான். பிறகு, அங்கே மாத்ரி {மாத்ரு} {Matri} என்று அழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராட வேண்டும். மாத்ரி தீர்த்தத்தில் நீராடும் ஒருவன், ஓ மன்னா, பெரும் புத்திரப்பேறையும், பெரும் செழிப்பையும் அடைகிறான்.
பிறகு ஒருவன், கட்டுப்படுத்தப்பட்ட புலனுடனும், முறையான உணவுப்பழக்கத்துடனும் சீதவனம் {tirtha called Shitavanatirtha} என்றழைக்கப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ பெரும் மன்னா {பீஷ்மா}, வேறு எந்தத் தீர்த்தத்திற்கும் இல்லாத பலன் இந்தத் தீர்த்தத்திற்குச் சொல்லப்படுகிறது. ஒருவன் இங்கே செல்வதாலேயே புனிதத்தை அடைகிறான். தனது முடியை அந்தத் தீர்த்தத்ததில் கைவிடுவதால் {மழிப்பதால்} {தலை மயிரில் நீர் தெளிப்பதால் என்று வடமொழி மூலத்தில் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். ஆனால் கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பில் casting off his hair என்றே இருக்கிறது}, ஓ பாரதா, ஒருவன் பெரும் அருளுடைமையை அடைகிறான். அங்கேயே இருக்கும் மற்றொரு தீர்த்தம் ஸ்வாவிலோமபாக {ஸ்வானலோமாபநயன} தீர்த்தம் {Shwavillomapaha} என்ற பெயரில் இருக்கிறது. ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, அந்த நீரில் மூழ்கி கற்ற அந்தணர்கள் பெரும் திருப்தியை அடைகிறார்கள். ஓ மன்னா, நல்ல அந்தணர்கள், தங்கள் முடியை அந்தத் தீர்த்தத்தில் கைவிட்டு பிராணாயமத்தால் புனித நிலையை அடைந்து, கடைசியாக உயர்ந்த நிலையை அடைகின்றனர். ஓ மன்னா, அங்கே அந்தத் தீர்த்தத்தில் தசாஸ்வமேதிகா என்ற பெயருடைய தீர்த்தமும் {Dasaswamedhika} இருக்கிறது. ஓ மனிதர்களில் புலியே, அங்கே நீராடும் ஒருவன் உயர்ந்த நிலையை அடைகிறான்.
ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் மனுஷ தீர்த்தம் என்ற தீர்த்தத்தை {tirtha called Manusha }அடைய வேண்டும். ஓ மன்னா வேடர்களின் கணைகளால் துன்புற்ற கருப்பு நிற மான்கள் அதன் நீரில் மூழ்கி மனித உருவை அடைந்தன. பிரம்மச்சரிய வாழ்வுமுறை கொண்டு, ஒருமுகமான ஆன்மாவுடன் ஒருவன் அந்தத் தீர்த்தத்தில் நீராடுவதால் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு சொர்க்கத்தில் வழிபடப்படுகிறான். மனுஷ தீர்த்தத்திற்கு கிழக்கில் ஒரு குரோச தூரத்தில் சித்தர்கள் ஓய்ந்திருக்கும் ஆபாகம் என்ற ஆறு இருக்கிறது. அந்த இடத்தில் எவன் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபட்டு சாமை அரிசியைத் தானமளிக்கிறானோ, அவன் பெரிதான அறப்பலன்களை அடைகிறான். அங்கே ஒரு அந்தணனுக்கு உணவளிக்கப்பட்டாலும், அது ஒரு கோடி அந்தணர்களுக்கு உணவளித்ததற்கு இணையாகும். அந்தத் தீர்த்தத்தில் நீராடி, தேவர்களையும் பித்ருக்களையும் வழிபட்டு, ஒரு இரவு தங்கும் மனிதன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான்.
ஓ மன்னா, பிறகு ஒருவன், பிரம்மனின் இடமான பிரம்மோதும்பரம் {Brahmodumvara} என்ற பெயரால் பூமியில் அறியப்படும் இடத்தை அடைய வேண்டும். ஏழு முனிவர்கள் இருக்கும் அந்தக் குளத்திலும், உயர் ஆன்ம கபிலரின் கேதாரம் என்ற தீர்த்தத்திலும் சுத்தமான மனதுடனும், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும் நீராடும் ஒருவன் அங்கே இருக்கும் பிரம்மனைக் கண்டு, அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, பிரம்மனின் உலகத்தை அடைகிறான். கபிலரின் அணுகமுடியாத தீர்த்தமான கேதாரத்தை {tirtha called Kedara} அடைந்து, தனது தவ நோன்புகளால் தனது பாவங்களனைத்தையும் எரிக்கும் ஒருவன், விரும்பும் போது {அரூபமாக} மறையும் சக்தியை {அந்தர்த்தான சக்தியை} அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா} பிறகு ஒருவன், சரகம் {சங்கர} என்று அழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் {tirtha called Saraka} சென்று அங்கே தேய்பிறையின் பதினான்காம் நாளில் {சதுர்த்தசியில்} மகாதேவனைக் {சிவனைக்} காணும் ஒருவன் தனது விருப்பங்கள் ஈடேறி சொர்க்கம் அடைகிறான்.
ஓ குருகுலத்தின் மகனே {பீஷ்மா}, சரகம், ருத்ரகோடி மற்றும் அங்கிருக்கும் கிணறுகள் மற்றும் தடாகங்களில் மூன்று கோடி {30 million} தீர்த்தங்கள் இருக்கின்றன. ஓ பாரதர்களின் தலைவனே {பீஷ்மா}, அங்கே அந்தத் தீர்த்தத்ததில் இலஸ்பதம் {சுத்தாஸ்பதம்} {Ilaspada.} என்ற பெயர் கொண்ட தீர்த்தமும் இருக்கிறது. அங்கே நீராடி, தேவர்களையும் பித்ருக்களையும் வழிபடும் ஒருவன், என்றும் நரகத்தில் மூழ்காது வாஜபேய வேள்வியின் கனியை அடைகிறான். பிறகு கிந்தானம், கிஞ்சப்பியம் {Kindana and Kinjapya} எனும் தீர்த்தங்களை அடையும் ஒருவன், ஓ பாரதா {பீஷ்மா} எண்ணிலடங்கா தானங்களும், கணக்கிலடங்கா வழிபாடுகளும் செய்த பலனை அடைகிறான். பிறகு, கலசீ என்ற பெயர் கொண்ட தீர்த்தத்தில் {tirtha called Kalasi } அர்ப்பணிப்புடனும், புலன்களைக் கட்டுப்படுத்தியும் நீராடும் மனிதன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ குருக்களின் தலைவா {பீஷ்மா}, சரகத்தின் {சங்கரத்தின்} கிழக்கே, உயர் ஆன்ம நாரதரின் அனாஜன்மா {அஜானந்தை-Anajanma} என்ற பெயர் கொண்ட தீர்த்தமொன்று இருக்கிறது. அங்கே நீராடும் ஒருவன், ஓ பாரதா {பீஷ்மா}, தனது இறப்புக்குப் பிறகு, நாரதரின் கட்டளையின் பேரில் பலவகையான நிகரற்ற உலகங்களுக்குச் செல்கிறான்.
சிவனும் மங்கணகரும்! – வனபர்வம் பகுதி 83இ-தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், “பிறகு ஒருவன் வளர்பிறையின் பத்தாவது நாளில் {தசமி திதியில்} புண்டரீகம் என்று அழைக்கப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடிய ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, பௌண்டரீக வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன், மூன்று உலகத்திலும் திரிவிஷ்டபம் என்று அறியப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே அந்தத் தீர்த்தத்தில் பாவங்களை அழிக்கும் புனிதமான வைதரணி என்றழைக்கப்படும் ஆறு இருக்கிறது. அங்கே நீராடி, காளையைக் குறியீடாகக் கொண்டு, தனது கையில் திரிசூலத்தைக் கொண்டிருக்கும் தெய்வத்தை {சிவனை} வழிபட்டு, அனைத்து பாவங்களில் இருந்தும் ஆன்மசுத்தமடைந்து ஒருவன் மேன்மையான கதியை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் பலகீவனம் எனும் அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ ஏகாதிபதி {பீஷ்மா}, அங்கே அந்தத் தீர்த்தத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக தேவர்கள் தங்கள் தவங்களை இயற்றிக் கொண்டிருக்கின்றனர். பிறகு ஒருவன், திரிஷத்வதி என்ற தீர்த்தத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே நீராடி தேவர்களை வழிபடும் ஒருவன், ஓ பாரதா {பீஷ்மா}, அக்னிஷ்டோமா மற்றும் அதிரதா வேள்விகளால் கிடைக்கும் பலனைவிட மேன்மையான பலனை அடைவான்.
ஓ பாரதர்களின் தலைவா {பீஷ்மா}, சர்வதேவ தீர்த்தத்தை அடைந்து அங்கு நீராடும் மனிதன், ஓ மன்னா {பீஷ்மா}, ஆயிரம் பசுக்களைத் தானமாகக் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு பாணிகாதம் என்ற தீர்த்தத்தில் நீராடும் மனிதன் அனைத்து தேவர்களையும் வழிபட்டு, அக்னிஷ்டோமா மற்றும் அதிரதா வேள்விகளால் கிடைக்கும் பலனைவிட மேன்மையான பலனை அடைவான். மேலும் ராஜசூய வேள்வியின் பலனையும் அடைந்து கடைசியாக முனிவர்களின் உலகை அடைவான். ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் மிஸ்ரகம் என்று அழைக்கப்படும் அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மன்னர்களில் புலியே {பீஷ்மா}, அங்கே அந்தணர்களுக்காக உயர் ஆன்ம வியாசர் அனைத்து தீர்த்தங்களையும் கலந்தார் என்று நாம் கேள்விப்படுகிறோம். ஆகையால், மிஸ்ரகத்தில் நீராடும் ஒருவன் அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடியவனாவான்.
பிறகு ஒருவன், தனது புலன்களை அடக்கி, முறையான உணவுப்பழக்கத்துடன், வியாசவனம் என்ற தீர்த்தத்தை அடையவேண்டும். பிறகு அங்கே இருக்கும் மனோஜவம் என்ற தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு, மதுவதியில் இருக்கும் தேவி {Devi } தீர்த்தத்தை அடைந்து, அங்கே நீராடி தேவர்களையும் பித்ருக்களையும் வழிபடும் ஒருவன், தேவியின் {அந்தப் பெண் தெய்வத்தின்} உத்தரவின் பேரில் ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு முறையான உணவுப்பழக்கத்துடன் கௌசிகியும் திருஷ்டத்வதியும் சங்கமிக்கும் இடத்தில் நீராடும் ஒருவன், அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். பிறகு ஒருவன், பெரும் புத்திகூர்மை கொண்ட வியாசர், தனது மகனை நினைத்து எரியும் துக்கத்துடன் தனது உடலைக் கைவிட எண்ணி பிறகு தேவர்களால் உற்சாகப்படுத்தப்பட்ட இடமான வியாசஸ்தலியை அடைய வேண்டும். வியாசரின் அந்த இடத்திற்கு வரும் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைகிறான். ஓ குருகுலத்தின் மகனே {பீஷ்மா}, பிறகு கிந்தத்தம் என்றழைக்கப்படும் கிணற்றை அடைந்து குறிப்பிட்ட அளவு எள்ளை அதற்குள் வீசினால் {ஒரு பிரஸ்தம் [12 பிடி ஒரு குடவம், 4 குடவம் ஒரு பிரஸ்தம்] அதாவது நாற்பத்தெட்டு பிடி எள்ளை தானம் செய்தல் என்றும் சொல்லப்படுகிறது} அவன் அனைத்துக் கடன்களில் இருந்தும் விடுபட்டு வெற்றியை அடைகிறான். பிறகு வேதீ என்ற தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைகிறான்.
அஹஸ், சூதினம் என்று கொண்டாடப்படும் தீர்த்தங்களும் இருக்கின்றன. அங்கே நீராடும் ஒருவன், ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, சூரியனின் உலகத்திற்குச் செல்கிறான். பிறகு ஒருவன் மிருகதூமம் என்று மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மன்னா, அங்கே இருக்கும் கங்கையில் நீராட வேண்டும். அங்கே நீராடி மகாதேவனை {சிவனை} வழிபடுபவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு தேவி தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன் மூன்று உலகங்களாலும் வாமனக தீர்த்தம் என்று கொண்டாடப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே விஷ்ணுபதத்தில் நீராடி வாமனனை வழிபடும் ஒருவனின் ஆன்மா அனைத்துப் பாவங்களிலிருந்தும் சுத்தப்படுத்தப்பட்டு ஒருவன் விஷ்ணுவின் வசிப்பிடத்தை அடைகிறான். பிறகு குலம்புனத்தில் நீராடும் ஒருவன், தனது சொந்த குலத்தை புனிதமாக்குகிறான். பிறகு பவனஹ்ரதத்தை அடையும் ஒருவன் அந்த அற்புதமான மருதர்களின் தீர்த்ததில் நீராடி, ஓ மன்னா, மனிதர்களில் புலியே {பீஷ்மா}, ஒருவன் வாயுத் தேவனின் உலகத்தில் வழிபடப்படுகிறான். பிறகு அமரஹ்ரதத்தில் நீராடும் ஒருவன், அர்ப்பணிப்புடன் தேவர்கள் தலைவனை {இந்திரனை} வழிபட்டு, சொர்க்கத்தில் வழிபடத்தக்கவனாகி அற்புதமான தேரில் அமர்ந்து இறவாதவர்கள் {தேவர்கள்} துணையுடன் உலவும் பேறைப் பெறுகிறான்.
ஓ பெரும் மனிதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன், சாலிஹோத்ரனின் சாலிசூரியம் {சாலிசூர்ப்பம்} என்ற தீர்த்தத்தில் உரிய சடங்குகளுடன் நீராடி, ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான். ஓ பாரதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, பிறகு, சரஸ்வதி {நதியில்} இருக்கும் ஸ்ரீகுஞ்சம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மனிதர்களில் சிறந்தவனே, அங்கே நீராடும் ஒருவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் நைமிஷகுஞ்சத்தை அடைய வேண்டும். ஓ மன்னா, முற்காலத்தில் நைமிஷ வன தவசிகளான முனிவர்கள் புனிதநீராட்டுப்பயணத்தை {தீர்த்தயாத்திரையை} முன்னிட்டு குருக்ஷேத்திரத்தை அடைந்தார்கள். ஓ பாரதர்களின் தலைவா {பீஷ்மா}, அங்கே சரஸ்வதி நதிக்கரையில் அவர்கள் {முனிவர்கள்} ஓய்ந்திருக்க ஒரு தோட்டம் உண்டாக்கப்பட்டது. அது அவர்களுக்குப் பெரும் திருப்தியைக் கொடுத்தது. அங்கே அந்த சரஸ்வதியில் நீராடும் ஒருவன் அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைவான்.
ஓ அறம்சார்ந்தவனே, பிறகு ஒருவன் அற்புதமான தீர்த்தமான கன்யா தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைவான். பிறகு ஒருவன் பிரம்மனின் அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடும் (மூன்று) தாழ்ந்த வகையிலான ஒருவன் {அந்தணனல்லாத மூன்று வகையினர்} அந்தண நிலையை அடைகிறான். அப்படி நீராடும் ஒருவன் அந்தணனாக இருப்பின் அவனது அனைத்துப் பாவங்களும் அழிந்து அவன் உயர்ந்த நிலையை அடைவான். ஓ மனிதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் சோமம் என்ற அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மன்னா, அங்கே நீராடும் ஒருவன் சோமனின் {சந்திரனின்} உலகத்தை அடைவான். ஓ மன்னா, பிறகு ஒருவன், பெரும் ஆன்ம வெற்றிகண்ட மங்கணகர் என்ற பெயரில் கொண்டாடப்படும் முனிவர் இருக்கும் இடமான சப்தசாரஸ்வதம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும்.
ஓ மன்னா, முற்காலத்தில், கூர்மையான குசப்புல்லால் தனது கையை அறுத்துக் கொண்ட மங்கணகரின் கைக்காயத்தில் இருந்து (இரத்தத்திற்குப் பதிலாக) காய்கறிச்சாறு {அல்லது கீரைச்சாறு} சுரந்தது என்று கேள்விப்படுகிறோம். அப்படி தனது கரத்தின் காயத்தில் இருந்து காய்கறிச்சாறு வழிவதைக் கண்ட அந்த முனிவர் கண்களை அகல விரித்து ஆச்சரியமடைந்து கூத்தாடினார். அப்படி அந்த முனிவர் ஆடிய போது அவரோடு சேர்ந்து அசையாத மற்றும் அசையும் உயிரனங்களும் அவரது பராக்கிரமத்தால் ஆடத்தொடங்கின. ஓ மன்னா, பிறகு பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், தவத்தையே செல்வமாகக் கொண்ட முனிவர்களும் மங்கணகரின் செயலால் அசைந்து அக்காரியத்தை மகாதேவனிடம் சொல்லினர். அவர்கள், “ஓ தெய்வமே, அந்த முனிவர் {மங்கணகர்} ஆடாதவாறு நீர் செயல்படுவதே உமக்குத் தகும்” என்றனர்.
அப்படிச் சொல்லப்பட்ட மகாதேவன் {சிவன்}, இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன், ஆடிக்கொண்டிருந்த முனிவரை அணுகி, தேவர்களுக்கு நன்மை செய்ய விரும்பி, “ஓ பெரும் முனிவரே, ஓ அறம் சார்ந்தவரே, நீர் ஏன் ஆடிக் கொண்டிருக்கிறீர்? ஓ முனிவர்களில் காளையே, உமது இந்த மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?” என்று கேட்டான். அதற்கு அந்த முனிவர், “ஓ அந்தணர்களில் சிறந்தவரே {சிவனே}, நான் அறத்தின் வழி நடக்கும் ஒரு துறவி. ஓ அந்தணரே, எனது கைக்காயத்தில் இருந்து வழிந்தோடும் காய்கறிச் சாறை நீர் காணவில்லையா? இக்காட்சியைக் கண்ட மகிழ்ச்சியாலேயே நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்” என்றார். உணர்வுகளில் குருடாகிப் போன அந்த முனிவரின் வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தெய்வம் {சிவன்}, சிரித்துக் கொண்டே, “ஓ அந்தணரே, இதனால் நான் ஆச்சரியம் அடையவில்லை. என்னைப் பாரும்” என்றான். ஓ மனிதர்களில் சிறந்தவனே, ஓ பாவமற்ற மன்னா {பீஷ்மா}, இதைச்சொன்ன மகாதேவன் {சிவன்}. தனது கட்டைவிரலை, தனது விரலின் நுனியாலேயே அழுத்தினான். அதனால் உண்டான காயத்தில் இருந்து பனியைப் போன்ற சாம்பல் வெளிவந்தது. ஓ மன்னா {பீஷ்மா}, இதைக் கண்ட முனிவர் வெட்கி அந்தத் தெய்வத்தின் {சிவனின்} பாதத்தில் விழுந்தார். ருத்திர தெய்வத்தைவிட பெரிதான சிறந்த எதுவும் இல்லை என்று நினைத்த அவர் இந்த வார்த்தைகளால் வழிபடத்தொடங்கினார்.
அவர், “ஓ திரிசூலத்தைத் தாங்குபவனே, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் புகலிடமாக இருப்பவனே, நீயே அண்டத்துக்கும் புகலிடமாக இருக்கிறாய். அசைவன அசையாதன ஆகியவற்றைக் கொண்ட மூன்று உலகங்களையும் நீயே படைத்தாய். யுகத்தின் முடிவில் நீயே அனைத்தையும் விழுங்குகிறாய். தேவர்களாலேயே உன்னை அறிய முடியாத போது, என்னால் எப்படி உன்னை அறிய முடியும்? ஓ பாவமற்றவனே, பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் அனைவரும் உன்னிலேயே அடக்கம். உலகங்களை ஆக்குபவனும் ஆக்கும்படி செய்பவனும் நீயே. உனது கருணையாலே அனைத்து தேவர்களும் கவலையற்று, பயமற்று இருக்கின்றனர்.” என்று மகாதேவனை வழிபட்ட அந்த முனிவர் மேலும், “ஓ தேவர்களுக்குத் தேவா, உனது கருணையை எனக்கு அருள் செய். எனது தவம் சுருங்காமல் இருக்கட்டும்” என்றும் கேட்டார். பிறகு உற்சாக ஆன்மா கொண்ட அந்தத் தெய்வம் அந்த மறுபிறப்பாளரான {பிராமணரான} முனிவரிடம் {மங்கணகரிடம்}, “ஓ அந்தணா, உனது தவம் எனது அருளால் ஆயிரம் மடங்கு உயரட்டும். ஓ பெரும் முனிவா, நான் உன்னுடன் இந்த ஆசிரமத்தில் வசித்திருப்பேன். சப்தசாரஸ்வதத்தில் நீராடி என்னை வழிபடும் எவரும், அதுமுதல் அனைத்தையும் அடையும் சக்தி பெறுவர். மேலும் அவர்கள் கடைசியாக சாரஸ்வத உலகத்தைச் சந்தேகமற அடைவர்.” என்று சொன்ன அந்த மகாதேவன் {சிவன்}, அங்கேயே அப்படியே மறைந்து போனான்.
அந்தணராக ஒரு தீர்த்தம்! – வனபர்வம் பகுதி 83ஈ-தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்..
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} தொடர்ந்தார், “சாரஸ்வதத்தை அடைந்த பின்னர் ஒருவன் மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் ஔசன தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ பாரதா {பீஷ்மா}, அங்கே பிரம்மனின் தலைமையில் தேவர்களும், துறவையே செல்வமாகக் கொண்டிருக்கும் முனிவர்களும், சிறப்பு மிகுந்த கார்த்திகேயனும் தினந்தோறும் பகலும் இரவும் சந்திக்கும் இரு சந்திவேளைகளிலும் மதிய வேளையிலும் பார்க்கவருக்கு {சுக்ரனுக்கு} நன்மை செய்ய விரும்பி நேரடியாகவே இருப்பார்கள். அங்கே கபாலமோட்சம் என்ற பாவங்களைக் கழுவும் மற்றுமொரு தீர்த்தமும் இருக்கிறது. ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, அங்கே நீராடும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். பிறகு ஒருவன் அக்னி என்று அழைக்கப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மனிதர்களில் காளையே, அங்கே நீராடும் ஒருவன் அக்னியின் உலகத்தை அடைந்து தனது குலத்தை தாழ்ந்த உலகங்களில் இருந்து மீட்டெடுக்கிறான். அந்தத் தீர்த்தத்திலேயே விஸ்வாமித்ரருடைய மற்றுமொரு தீர்த்தமும் இருக்கிறது. ஓ பாரதர்களில் தலைவா, அங்கே நீராடும் ஒருவன், ஓ மனிதர்களில் சிறந்தவனே, பிரம்மனின் நிலையை அடைகிறான்.
பிறகு ஒருவன் சுத்தமான உடலுடனும், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும் பிரம்மயோனியை அடையும் ஒருவன், ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, அங்கே நீராடி பிரம்மலோகத்தை அடைந்து ஏழு தலைமுறை வரை தனது குலத்தைச் சந்தேகமற சுத்தம் செய்கிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன், மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் கார்த்திகேயனின் {முருகனின்} பிருதூதகம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடி, பித்ருக்களையும் தேவர்களையும் வழிபடும் வேலையில் ஒருவன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மனித நோக்கங்களால் உந்தப்பட்ட ஆணாலோ, பெண்ணாலோ அறிந்தோ அறியாமலோ செய்யப்பட்ட தீமைகள் யாவும் அங்கு நீராடுவதால் அழிந்து போகும். அங்கே நீராடுவதால் ஒருவன் குதிரை வேள்வி செய்யும் பலனை அடைந்து சொர்க்கத்தை அடைகிறான். குருக்ஷேத்திரத்தைப் புனிதம் என்றும்; சரஸ்வதி குருக்ஷேத்திரத்தைவிட புனிதமானது என்றும்; சரஸ்வதியைவிட ஒன்றாகக் கூடிய அனைத்துத் தீர்த்தங்களும் புனிதமானது என்றும்; அனைத்துத் தீர்த்தங்களைக் காட்டிலும் பிருதூதகம் புனிதமானது என்றும் கற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அங்கே தெய்வ வழிபாடுகளில் ஈடுபடும் மனிதன், அனைத்துத் தீர்த்தங்களிலும் சிறந்ததான பிருதூதகத்திலேயே தனது உடலைக் கைவிட்டு இறவா நிலையை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, ஒருவன் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் பிருதூதாகம் செல்ல வேண்டும் என்று வேதங்களிலும் உள்ளது. சனத்குமாரராலும், உயர் ஆன்ம வியாசராலும் கூட இது பாடப்பட்டுள்ளது. ஓ குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, பிருதூதகத்திற்கும் மேன்மையான ஒரு தீர்த்தம் வேறு எதுவும் இல்லை. சந்தேகமற அத்தீர்த்தம் சுத்திகரிக்கும் தன்மை கொண்டதும், புனிதமானதும், பாவங்களை அழிக்கவல்லதுமாகும். ஓ மனிதர்களில் சிறந்தவனே {பீஷ்மா} ஒரு மனிதன் எவ்வளவுதான் பாவியாக இருந்தாலும், பிருதூதகத்தில் நீராடினால் சொர்க்கம் செல்வான் என்று கற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஓ பாரதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அங்கே மற்றுமொரு தீர்த்தமாக மதுஸ்ரவம் என்ற தீர்த்தமும் இருக்கிறது. அங்கே நீராடும் ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான்.
ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் கொண்டாடப்படும் புனித தீர்த்தமும், சரஸ்வதியும் அருணை நதிகளும் சந்திக்கும் சங்கமமுமான அந்தத் தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடி மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருப்பவன் அந்தணனைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபட்டு அக்னிஷ்டோமா மற்றும் அதிரதா வேள்விகள் செய்த பலனை விட மேன்மையான பலனைப் பெற்று மேலும் கீழுமாகத் தனது ஏழு தலைமுறைகளை மீட்டெடுக்கிறான். ஓ குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே {பீஷ்மா}, அங்கேயே மற்றுமொரு தீர்த்தமான அர்த்தகீலம் {அவதீர்ணம்} என்ற தீர்த்தமும் இருக்கிறது. அந்தத் தீர்த்தம் முன்பொரு காலத்தில் அந்தணர்கள் மீது கொண்ட கருணையால் தார்பீயினால் {சார்ங்கீயினால்} உண்டாக்கப்பபட்டது. நோன்புகளாலும், புனிதமடைவதாலும், உண்ணா நோன்புகளாலும், சடங்குகளாலும், மந்திரங்களாலும் சந்தேகமற ஒருவன் அந்தணனாகிறான். ஓ மனிதர்களில் காளையே {பீஷ்மனே}, இருப்பினும், முற்காலத்தில் இருந்த கற்றவர்கள், சடங்குகளும், மந்திரங்களும் அற்ற ஒருவன் இந்தத் தீர்த்தத்தில் நீராடுவதன் மூலமே கற்றவனாகவும், நோன்புகள் நோற்ற பலனையும் அடைகிறான் என்பதைக் கண்டனர். தார்ப்பி இங்கே நான்கு கடல்களையும் கொண்டு வந்தான். ஓ மனிதர்களில் சிறந்தவனே, இங்கே நீராடும் ஒருவன், அதன்பிறகு துயரை அடையாமல், நாலாயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான்.
ஓ ஆறம்சார்ந்தவனே, பிறகு ஒருவன் சதஸஹஸ்ரகம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அதன் அருகிலேயே மற்றும் ஒரு தீர்த்தமான சாகஸ்ரகம் என்ற தீர்த்தமும் இருக்கிறது. அந்த இரண்டு தீர்த்தங்களும் கொண்டாடப்படுபவையே. அங்கே நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். அங்கே அளிக்கப்படும் தானங்களும் நோன்புகளும் ஆயிரம் மடங்குகளாகப் பெருகுகின்றன. ஓ மன்னா, பிறகு ஒருவன் ரேணுகா என்ற அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடி பித்ருக்களையும் தேவர்களையும் வழிபட வேண்டும். இதன்காரணமாக ஒருவன் அனைத்துப் பாவங்களிலும் இருந்து விடுபட்டு அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு விமோ என்ற தீர்த்தத்தில் ஆசைகளையும் புலன்களையும் கட்டுக்குள் வைத்து நீராடும் ஒருவன், பரிசுகளை ஏற்பதால் உண்டாகும் பாவத்தில் இருந்து விடுபடுகிறான். பிறகு ஒருவன் புலன்களைக் கட்டுக்குள் வைத்து, பிரம்மச்சரிய வாழ்வுமுறை வாழ்ந்து பஞ்சவடி வனத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே சிறிது காலம் தங்கி இருப்பதால் ஒருவன் மிகுந்த அறத்தை அடைந்து, அறம் சார்ந்தவர்களின் உலகத்தை அடைகிறான்.
பிறகு ஒருவன் வருணனின் தீர்த்தமான தன்னொளியால் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் தைஜசத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே அந்தத் தீர்த்தத்தில் யோகத்தின் தலைவனான, காளையைத் தனது வாகனமாகக் கொண்ட ஸ்தாணு {சிவன்} இருக்கிறான். அங்கே சிலகாலம் தங்கும் ஒருவன் தேவர்களுக்குத் தேவனை {சிவனை} வழிபடுவதால் வெற்றியை அடைகிறான். அங்கேதான், பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், துறவைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும் குகனை {முருகனை} தேவர்களின் படைத்தளபதியாக நியமித்தனர். ஓ குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே, அந்தத் தீர்த்தத்திற்குக் கிழக்கேதான் குரு தீர்த்தம் என்று அழைக்கப்படும் தீர்த்தம் இருக்கிறது. புலன்களை அடக்கி, பிரம்மச்சரிய வாழ்வு முறை வாழும் ஒருவன் அக்குரு தீர்த்தத்தில் நீராடுவதால் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு பிரம்மனின் உலகை அடைகிறான்.
பிறகு அடக்கப்பட்ட புலன்களுடனும், முறையான உணவுப் பழக்கத்துடனும் இருக்கும் ஒருவன் சுவர்க்கத்வாரம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே சிறிது காலம் தங்கும் ஒருவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைந்து பிரம்மனின் வசிப்பிடத்தை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒரு பயணி, அநரகம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மன்னா அங்கே நீராடும் ஒருவன் அதன்பிறகு எந்தத் துயரையும் அடைவதில்லை. ஓ மன்னா, ஓ மனிதர்களில் புலியே அங்கே நாராயணனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் எப்போதும் இருக்கின்றனர். ஓ குருகுலத்தின் அரசமகனே {பீஷ்மா}, ருத்திரனின் மனைவியும் அங்கே இருக்கிறாள். அந்தத் தேவியைக் காணும் ஒருவன் அதன்பிறகு துயரையே சந்திப்பதில்லை. அங்கே அந்தத் தீர்த்தத்தில் உமையின் தலைவனான விஸ்வேஸ்வரனும் இருக்கிறான். தேவர்களுக்குத் தேவனை {சிவனை} அங்கே காணும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். அங்கே நாராயணனையும், அவனது நாபியில் உதிக்கும் கமலத்தையும் {தாமரையையும்} காணும் ஒருவன் சுடர்விட்டுப் பிரகாசித்து விஷ்ணுவின் வசிப்பிடத்தை அடைகிறான். ஓ மனிதர்களில் காளையே அனைத்து தேவர்களின் தீர்த்தங்களிலும் நீராடும் ஒருவன் அனைத்து துக்கத்தில் இருந்தும் விடுப்பட்டு, சந்திரனைப் போல ஒளிர்கிறான்.
குருக்ஷேத்திரத்தின் தூசி! – வனபர்வம் பகுதி 83உ-தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} தொடர்ந்தார், “ஓ மன்னா {பீஷ்மா}, புனிதப்பயணம் மேற்கொள்ளும் ஒரு பயணி {யாத்ரீகர்} பிறகு, சுவஸ்திபுரம் செல்ல வேண்டும். அந்த இடத்தை வலம் வருபவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு பாவனம் என்று அழைக்கப்படும் தீர்த்தத்தை அடைந்து பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் திருப்படையல் {தர்ப்பணம்} செய்ய வேண்டும். ஓ பாரதா {பீஷ்மா} இதனால் அவன், அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். அதற்கு அருகிலேயே கங்காஹ்ரதமும் மற்றுமொரு தீர்த்தமான கூபமும் இருக்கின்றன. ஓ மன்னா, அந்தக் கூபத்தில் மூன்று கோடி தீர்த்தங்கள் இருக்கின்றன. ஓ மன்னா, அங்கு நீராடும் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான். கங்காஹ்ரதத்தில் நீராடி மகேஸ்வரனை {சிவனை} வணங்கும் ஒருவன் கணபத்திய நிலையை அடைந்து தனது குலத்தைக் காக்கிறான். பிறகு ஒருவன் மூன்று உலகத்தாலும் கொண்டாடப்படும் ஸ்தாணுவடத்தை அடைய வேண்டும். ஓ மன்னா, அங்கே நீராடும் ஒருவன் சொர்க்கத்தை அடைகிறான்.
பிறகு ஒருவன் வசிஷ்டரின் ஆசிரமம் இருக்கும் பதரீபாச்சனத்தை {பதரீகானனம்} அடையவேண்டும். அங்கே மூன்று இரவுகள் தங்கி இலந்தைப்பழத்தைச் {Jujubes} சுவைத்து உண்ண வேண்டும். அங்கே இலந்தைப்பழத்தை {மட்டுமே} உண்டு பன்னிரெண்டு ஆண்டுகள் வாழ்பவனும், அங்கே மூன்று இரவுகள் உண்ண நோன்பிருப்பவனும் நிலையான நிலையை அடைவான். ஓ மன்னா {பீஷ்மா} பிறகு இந்திரமார்க்கத்தை அடைந்து, அங்கே ஒரு பகலும் ஒரு இரவும் உண்ணாதிருக்கும் புனிதப்பயணி இந்திரனின் உலகத்தில் வழிபடப்படுகிறான். பிறகு ஏகராத்ரத்தை அடையும் மனிதன் முறையான நோன்புகளுடன், பொய்மையில் இருந்து விலகி ஒரு இரவு அங்கே தங்கினால் பிரம்மனின் உலகத்தில் வழிபடப்படுகிறான். ஓ மன்னா {பீஷ்மா} பிறகு ஒருவன், ஒளிக்குவியலான சிறப்பு மிக்க தேவன் ஆதித்தியனின் ஆசிரமத்தை அடைய வேண்டும். மூன்று உலகத்திலும் கொண்டாடப்படும் அத்தீர்த்தத்தில் நீராடி, அந்த ஒளித்தேவனை வழிபடும் ஒருவன் ஆதித்திய உலகத்தை அடைந்து தனது குலத்தைக் காக்கிறான். ஓ மன்னா {பீஷ்மா} பிறகு ஒரு புனிதப்பயணி சோமத் தீர்த்தத்தில் நீராடுவதால் சந்தேகமற சோமனின் உலகத்தை அடைகிறான்.
ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மனே}, பிறகு ஒருவன், அனைத்தையும் தூயதாக்கும் வல்லமைப் படைத்ததென முழு உலகத்தாலும் கொண்டாடப்படும் ததீச்சரின் மிகப் புனிதமானத் தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கேதான் சரஸ்வத குலத்தைச் சேர்ந்த தவச்சடங்குகளின் கடல் அங்கிரஸ் பிறந்தார். அந்தத் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து, சந்தேகமற சரஸ்வதியின் உலகத்தை அடைகிறான். புலனடக்கத்துடன், பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கும் ஒருவன் அடுத்ததாக கன்னியாஸ்ரமத்தை அடைய வேண்டும். ஓ மன்னா அங்கே புலனடக்கத்துடனும், முறையான உணவுப்பழக்கத்துடனும் மூன்று இரவுகள் தங்குபவன் நூறு தெய்வீக மங்கையரை அடைகிறான். பிறகு அவன் பிரம்மனின் உலகத்தை அடைகிறான்.
ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் ஸன்னிஹதி என்றழைக்கப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும் அங்கே சிறிது காலம் தங்கி மேலும் அறப்பயன் அடைந்தனர். அங்கே சரஸ்வதி நதியில் சூரிய கிரஹணத்தின் போது நீராடும் ஒருவன் நூறு குதிரை வேள்விகள் செய்த பலனை அடைகிறான். அங்கு செய்யப்படும் எந்த வேள்வியும் நிலையான பலனைத் தருகிறது. ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, ஓ மனிதர்களின் மன்னா, பூமியிலோ, ஆகாயத்திலோ, ஆறுகளிலோ, ஏரிகளிலோ, சிறு தடாகங்களிலோ, ஊற்றுகளிலோ, குளங்களிலோ, பெரியதாகவோ, சிறியதாகவோ குறிப்பிட்ட சில தேவர்களுக்குப் புனிதமாக இருக்கும் அனைத்து தீர்த்தங்களும் சந்தேகமற, மாதத்திற்கு மாதம் சந்நிஹதியில் கலக்கிறது. அனைத்துத் தீர்த்தங்களும் இங்கே ஒன்று சேரும் காரணத்தால்தான் அத்தீர்த்தம் தனது பெயரை {சந்நிஹதி என்று} அடைந்தது. அங்கே நீராடி அதன் நீரைப் பருகும் ஒருவன் சொர்க்கத்தில் வழிபடப்படுகிறான்.
ஒ மன்னா {பீஷ்மா}, சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசையில் சிராத்தம் செய்யும் மனிதனுக்கு உண்டாகும் பலனைக் கேள். அங்கே {சந்நிஹதியில்}, அந்த நாளில் சிராத்தம் செய்து {சமைக்கப்படாத உணவுப்பொருட்களை அந்தணர்களுக்கு தானமளித்தல் அன்னசிராத்தம் எனப்படுகிறது} அத்தீர்த்தத்தில் நீராடும் மனிதன், ஆயிரம் குதிரை வேள்விகளைச் சரியாகச் செய்வதால் வரும் பலனை அடைகிறான். ஆண்களாலும் பெண்களாலும் செய்யப்படும் என்ன வகை பாவமானாலும், அங்கே நீராடியவுடன் சந்தேகமற அழிந்து போகிறது. அங்கே நீராடும் ஒருவன் தாமரை நிறம் கொண்ட தேரில் பிரம்மனின் வசிப்பிடத்தை அடைகிறான். பிறகு, வாயில் காப்போனான யக்ஷன் மசக்ரூகனை வழிபட்டபின் கோடி தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான்.
ஓ பாரதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அந்தத் தீர்த்தத்திற்கு அருகிலேயே கங்காஹ்ரதம் என்ற ஒரு தீர்த்தம் இருக்கிறது. ஓ அறம் சார்ந்தவனே {பீஷ்மனே}, அங்கே ஒருவன் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன், பிரம்மச்சரியம் கடைப்பிடித்து நீராட வேண்டும். இதனால் ஒருவன் ராஜசுயம் மற்றும் குதிரை வேள்விகள் செய்ததை விட உயர்ந்த பலனை அடைகிறான். அதற்கு அருகிலேயே பூமியில் நன்மையை விளைவிக்கும் நைமிஷம் என்ற தீர்த்தம் இருக்கிறது. விண்ணுலகத்துக்கு புஷ்கரை நன்மையை விளைவிக்கும் என்றாலும் மூன்று உலகத்திற்கும் குருக்ஷேத்திரமே நன்மையை விளைவிக்கும். காற்றால் சுமக்கப்படும் குருக்ஷேத்திரத்தின் தூசி கூட ஒரு பாவியை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும்.
திருஷ்த்வதிக்கு {நதி} வடக்கிலும், சரஸ்வதிக்குத் தெற்கிலும் இருக்கும் குருக்ஷேத்திரத்தில் வசிப்பவர்கள் உண்மையில் சொர்க்கத்திலேயே வசிக்கிறார்கள். “நான் குருக்ஷேத்திரத்திற்குச் செல்வேன்” என்றும், “நான் குருக்ஷேத்திரத்தில் வசிப்பேன்” என்ற வார்த்தைகளை ஒரு முறையேனும் உச்சரித்தாலும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுவான். பிரம்ம முனிவர்களாலும் வழிபடப்படும் குருக்ஷேத்திரம் தேவர்களின் வேள்வி மேடையாகக் {பலிப்பீடமாகக்} கருதப்படுகிறது. அங்கே வசிக்கும் மனிதர்களுக்கு எந்தக் காலத்திலும் வருத்தப்படுவதற்கு ஏதுமில்லை. தரந்துகம், அருந்துகம் ஆகியவற்றுக்கும் ராம {ராமஹ்ரதம்}, மசக்ருகம் ஆகிய தடாகங்களுக்கும் மத்தியில் இருப்பதே குருக்ஷேத்திரம். அது சமந்தபஞ்சகம் என்றும் அழைக்கப்படுகிறது. அது பெருந்தகப்பனின் {பிரம்மாவின்} வடபுற வேள்வி மேடையெனச் சொல்லப்படுகிறது.
கங்கை யமுனை சங்கமம்! – வனபர்வம் பகுதி 84அ-தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், “ஓ பெரும் மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் அற்புதமான தீர்த்தமான தர்ம தீர்த்தத்திற்குச் செல்ல வேண்டும். சிறப்புமிக்க தர்மதேவன் உன்னதமான துறவு பயின்ற இடம் அந்தத் தீர்த்தமாகும். துறவு பயில்வதற்காகவே அவன் {தர்ம தேவன்} அந்தத் தீர்த்தத்தை உண்டாக்கி அதற்குத் தன் பெயரையும் இட்டான். ஓ மன்னா, அங்கே நீராடும் ஓர் அறம் சார்ந்த மனிதன், தனது ஏழு தலைமுறை குடும்பத்தைச் சுத்தப்படுத்துகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் அற்புதமான ஞானபாவனத்தை அடையவேண்டும். அங்கே சிறிது காலம் தங்கும் ஒருவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைந்து, முனிவர்களின் உலகத்தை அடைகிறான்.
பிறகு, ஓ ஏகாதிபதி {பீஷ்மா}, ஒருவன் சௌகந்திவனத்தை அடைய வேண்டும். அங்கே பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், துறவை செல்வமாகக் கொண்ட முனிவர்களும், சித்தர்களும், சாரணர்களும், கந்தர்வர்களும், கின்னரர்களும், நாகர்களும் வசிக்கின்றனர். ஓ மன்னா {பீஷ்மா} பிறகு ஒருவன், ஓடைகளில் சிறந்ததும், நதிகளில் முதன்மையானதுமான புனிதமான பெண்தெய்வம் சரஸ்வதி, பிலக்ஷை என்ற பெயரில் இருக்கும் இடத்தை அடைய வேண்டும். அங்கே எறும்புப் புற்றிலிருந்து வெளியேறும் நீரில் ஒருவன் நீராட வேண்டும். (அங்கே நீராடி) பித்ருக்களையும், தேவர்களையும் வணங்கும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். எறும்புப் புற்றின் அருகில் இருந்து ஒரு கனமான தடியைத் தூக்கி எறிந்தால், அந்தத் தடி செல்லும் தூரத்தைவிட ஆறு மடங்கு தூரத்தில் ஈசானதியுஷிதம் {கவேராத்யுஷிதம்} என்ற அரிதான தீர்த்தம் ஒன்று இருக்கிறது. ஓ மனிதர்களில் புலியே புராணங்களில் உரைத்திருக்கும்படி அங்கு நீராடும் மனிதன் கபில வகைப் பசுக்களை ஆயிரம் எண்ணிக்கையில் தானம் அளிக்கும் பலனையும், குதிரை வேள்வி செய்த பலனையும் அடைகிறான்.
ஓ மனிதர்களில் முதன்மையானவனே {பீஷ்மா}, பிறகு சுகந்தம், சதகும்பம், பஞ்சயக்ஷம் ஆகியவற்றுக்குப் பயணப்படுபவன் சொர்க்கத்தில் வழிபடப்படுகிறான். பிறகு திரிசூல கதம் என்ற பெயர் கொண்ட தீர்த்தத்தை அடைந்து, அங்கு நீராடி, பித்ருக்களையும், தேவர்களையும் ஒருவன் வணங்க வேண்டும். அப்படிச் செய்வதால், ஒருவன், சந்தேகமற தனது மரணத்திற்குப் பின்னர் கணபத்திய நிலையை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன், மூன்று உலகத்தாலும் சாகம்பரி என்று கொண்டாடப்படும் பெண்தெய்வத்தின் அற்புதமான இடத்திற்குச் செல்ல வேண்டும். ஓ மனிதர்களின் மன்னா {பீஷ்மா}, அங்கே அற்புதமான நோன்புகள் நோற்ற அவள் {சாகம்பரி}, தேவ வருடங்களில் ஆயிரம் வருடகாலம், மாதம் ஒரு முறை மூலிகைகளை {சாகத்தை} மட்டுமே உணவாகக் கொண்டாள். அவள் மீது ஏற்பட்ட பக்தியால் தவசிகளான முனிவர்கள் அவ்விடத்திற்கு வந்தார்கள். ஓ பாரதா {பீஷ்மா}, அவர்கள் அவளிடம் இருந்த மூலிகைகளால் மகிழ்ந்தார்கள். அதன் காரணமாகவே அவளுக்குச் சாகம்பரி என்ற பெயர் உண்டானது.
ஓ பாரதா {பீஷ்மா}, சாகம்பரிக்கு வரும் மனிதன், ஒருமுகப்படுத்தப்பட்ட கவனத்துடனும், பிரம்மச்சரியத்துடனும் மூன்று இரவுகளை மூலிகைகளை மட்டுமே உண்டு சுத்தமாகக் கழித்தால், அந்தத் தேவியின் விருப்பத்தின் பேரில் பனிரெண்டு வருடங்கள் மூலிகைகளை மட்டுமே உண்டவன் அடையும் பலனை அடைவான். பிறகு ஒருவன் மூன்று உலகங்களிலும் புகழப்படும் சுவர்ணம் என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே பழங்காலத்தில் விஷ்ணு, ருத்திரனின்கருணைக்காகவும், தேவர்களுக்கும் கிடைக்காத கிடைத்தற்கரிய வரங்களுக்காகவும், தனது வழிபாடுகளை ருத்திரனுக்குச் செலுத்தினான். ஓ பாரதா திரிபுரத்தை அழித்தவன் {சிவன்} இதனால் திருப்தி கொண்டு, “ஓ கிருஷ்ணா, சந்தேகமற நீ உலகத்தால் நேசிக்கப்படுவாய். இவ்வண்டத்தில் இருக்கும் அனைத்திலும் முதன்மையானவனாவாய்” என்றான்.
ஓ மன்னா {பீஷ்மா}, அங்கே செல்லும் ஒருவன் காளையைக் குறியீடாகக் கொண்டவனை {சிவனை} வணங்கி குதிரை வேள்வி செய்த பலனையும் கணபத்திய நிலையையும் அடைகிறான். பிறகு ஒருவன், தூமவதி என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே மூன்று இரவுகள் உண்ணாமல் நோன்பிருக்கும் ஒருவன் சந்தேகமற தனது விருப்பங்கள் அனைத்தையும் ஈடேற்றிக் கொள்கிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு தேவிக்குத் தென்பாதியில் ரதவர்த்தம் என்ற தீர்த்தம் இருக்கிறது. ஓ அறம்சார்ந்தவனே, ஒருவன் பக்தியுடனும் புலனடக்கத்துடனும் அந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். இதனால் மகாதேவனின் {சிவனின்} கருணையை அடைந்து மேன்மையான நிலையை அடைகிறான். பிறகு அந்த இடத்தை வலம் வரும் ஒருவன், ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மனே} தாரை என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அத்தீர்த்தம் அவனது அனைத்துப் பாவங்களையும் கழுவுகிறது. ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மனே}, அங்கே நீராடும் ஒருவன் தனது அனைத்துக் கவலைகளில் இருந்தும் விடுபடுகிறான்.
ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மனே}, பிறகு ஒருவன் பெரும் மலையை (இமயத்தை) வணங்கி, சந்தேகமற சொர்க்கத்தின் வாயிலைப் போல இருக்கும் கங்கையின் தோற்றுவாய்க்குச் {கங்காத்துவாரத்துக்குச்} செல்ல வேண்டும். அங்கே குவிந்த ஆன்மாவுடன் கோடி என்ற தீர்த்தத்தில் நீராட வேண்டும். இதனால் ஒருவன் பௌண்டரீக வேள்வி செய்த பலனை அடைந்து தனது குலத்தைக் காக்கிறான். அங்கே ஒரு நாள் தங்குவதால் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனையும் அடைகிறான். பிறகு தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் சப்தகங்கா, திரிகங்கா, சக்ரவர்தா ஆகிய அங்கே இருக்கும் அனைத்துத் தீர்த்தங்களிலும் நீர்க்கடன் செலுத்தும் ஒருவன் அறம்சார்ந்தவர்களின் உலகத்தை அடைகிறான். பிறகு ஒரு மனிதன் கனகலத்தில் நீராடி மூன்று நாள் உண்ணாநோன்பிருந்து குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கம் செல்கிறான்.
ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, பிறகு ஓர் புனிதப்பயணி, கபிலாவடத்தை அடைய வேண்டும். அங்கே ஒரு இரவு உண்ணா நோன்பிருந்து ஆயிரம் பசுக்கள் கொடுத்த பலனை அடையலாம். ஓ மன்னா {பீஷ்மா}, ஓ குருக்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அங்கே நாகர்களின் மன்னனான சிறப்புமிக்கக் கபிலனின் தீர்த்தமும் இருக்கிறது. அந்த நாகதீர்த்தத்தில் நீராடும் ஒருவன், ஓ மன்னா, ஆயிரம் கபில வகைப் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன் சந்தனுவின் அற்புதமான தீர்த்தமான லலிதிகத்தை அடைய வேண்டும். ஓ மன்னா, அங்கே நீராடும் ஒருவன் அதுமுதல் எப்போதும் துயரத்தில் மூழ்குவதில்லை. கங்கையும் யமுனையும் சேருமிடத்தில் நீராடும் ஒருவன் பத்து குதிரை வேள்விகள் செய்த பலனை அடைந்து தனது குலத்தைக் காக்கிறான்.
ராமனும் கோப்ரதாரமும்! – வனபர்வம் பகுதி 84ஆ-தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், “பிறகு ஒருவன் உலகத்தால் கொண்டாடப்படும் சுகந்தத்தை அடைய வேண்டும். இதனால் தனது பாவம் விலகி ஒருவன் பிரம்மனின் வசிப்பிடத்தில் வழிபடப்படுகிறான். பிறகு ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, ஒரு புனிதப்பயணி ருத்ரவர்தத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே நீராடும் ஒருவன் சொர்க்கத்ததிற்கு உயர்கிறான். கங்கையும் சரஸ்வதியும் சங்கமிக்கும் இடத்தில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்தை அடைகிறான். பிறகு பத்ரகர்ணேஷ்வரம் சென்று முறைப்படி தேவர்களை வணங்குபவன், அதன்பிறகு துன்பத்தில் மூழ்காதிருந்து சொர்க்கத்தில் வழிபடப்படுகிறான். பிறகு ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, ஒரு புனிதப்பயணி குப்ஜாம்ரகம் {குப்ஜாவதி} என்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். அப்படிச் செய்வதால் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானமாகக் கொடுத்த பலனை அடைந்து சொர்க்கத்தையும் அடைகிறான். பிறகு, ஓ மன்னா {பீஷ்மா}, ஒரு புனிதப்பயணி அருந்ததிவடம் செல்ல வேண்டும். ஒருமுகப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் பிரம்மச்சரியத்துடன் இருந்து, அங்குள்ள சமுத்ரகத்தில் {கடலில்} நீராடி, மூன்று இரவுகள் உண்ணாதிருப்பவன் குதிரை வேள்வி செய்த பலனையும், ஆயிரம் பசுக்களைத் தானமாகக் கொடுத்த பலனையும் அடைந்து தனது குலத்தைக் காக்கிறான்.
பிறகு ஒருவன் அடுத்ததாக ஒருமுகப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும், பிரம்மச்சரியத்துடனும் பிரம்மவர்தத்தை அடைய வேண்டும். இதனால் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து சோமனின் உலகத்தை அடைகிறான். யமுனபிரபாவத்துக்குச் (யமுனையின் தோற்றுவாய்க்கு{நதி மூலத்திற்கு}ச்) சென்று அங்கே நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்தில் வழிபடப்படுகிறான். பிறகு, சித்தர்களாலும் கந்தரவர்களாலும் வழிபடப்படும் சிந்து பிரபாவத்தை (சிந்து நதியின் தோற்றுவாய்) அடைந்து, ஐந்து நாட்கள் அங்கே தங்கினால், அவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான்.
அடுத்ததாக யாரும் அணுகுவதற்கு அரிதான தீர்த்தமான வேதிக்குச் செல்வதால் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்திற்கு உயர்கிறான். ஓ பாரதா {பீஷ்மா}, பிறகு ஒருவன் ரிஷிகுல்யையும், வசிஷ்டையையும் அடைய வேண்டும். வசிஷ்டைக்குச் செல்லும் எந்த வகையினரும் அந்தண நிலையை அடைகின்றனர். ரிஷிகுல்யத்திற்குச் சென்று அங்கே நீராடி ஒரு மாதத்திற்கு மூலிகைகளை உண்டு வாழ்ந்து, தேவர்களையம் பித்ருக்களையும் வழிபடும் ஒருவன் முனிவர்களின் உலகத்தை அடைவான். பிறகு அடுத்ததாக பிருகுதுங்கத்தை அடையும் மனிதன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு, விப்ரமோட்சத்தை அடையும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். ஓ பாரதா {பீஷ்மா}, பிறகு கிருத்திகை மற்றும் மாக தீர்த்தங்களை அடையும் ஒருவன், அக்னிஷ்டோமா மற்றும் அதிரதா வேள்விகளின் பலன்களைவிட மேன்மையான பலன்களை அடைகிறான்.
வித்யை எனும் அற்புதமான தீர்த்தத்தை அடையும் மனிதன், அங்கே மாலையில் நீராடினால் அனைத்து ஞானங்களையும் திறமைகளையும் பெறுகிறான். பிறகு ஒருவன் பாவங்களை அழிக்கவல்ல மஹாஸ்ரமம் என்ற தீர்த்தத்தை அடைந்து ஒரு நாளைக்கு ஒரு பொழுது மட்டுமே உண்ண வேண்டும். இதனால் ஒருவன் பல மங்களகரமான பகுதிகளை அடைந்து தனக்கு முன்பான பத்து தலைமுறைகளையும், தனக்குப் பின்பான பத்து தலைமுறைகளையும் விடுவிக்கிறான். மஹாலயத்தில் ஒரு மாத காலம் தங்கி, அங்கே மூன்று இரவுகள் உண்ணாதிருப்பவன் தனது அனைத்துப் பாவங்களும் கழுவப்பட்டு, அபரிமிதமான தங்கத்தை தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு பெருந்தகப்பனால் {பிரம்மனால்} வணங்கப்படும் விதசிகத்தை அடைபவன் குதிரை வேள்வி செய்த பலனையும் உசானசின் நிலையையும் அடையலாம். பிறகு ஒருவன் சித்தர்களால் வழிபடப்படும் சுந்தரிகா என்ற தீர்த்தத்தை அடைந்தால் முன்னோர்கள் கண்ட அற்புத மேனி அழகைப் பெறுவார்கள்.
பிறகு புலனடக்கத்துடனும் பிரம்மச்சரியத்துடனும் பிராமணி தீர்த்தத்தை அடைந்து தாமரை நிறத் தேரில் பிரம்ம லோகத்தை அடைவான். பிறகு ஒருவன் சித்தர்களால் வழிபடப்படும் புனிதமான நைமிஷத்தை அடையவேண்டும். அங்கே தேவர்களுடன் சேர்ந்து பிரம்மனும் வசிக்கிறார். நைமிஷத்திற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலே ஒருவனின் பாதி பாவங்கள் அழிகின்றன. அதற்குள் நுழையும்போது அவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். பிறகு ஒருவன் புலனடக்கத்துடன் நைமிஷத்தில் ஒரு மாத காலம் தங்க வேண்டும். ஓ பாரதா {பீஷ்மா}, உலகத்தில் உள்ள தீர்த்தங்கள் அனைத்தும் நைமிஷத்தில் உள்ளன. புலன்களில் இருந்து விடுபட்டு, ஒழுங்கு செய்யப்பட்ட உணவுமுறையுடன் அங்கு நீராடுபவன் பசு வேள்வி {கோமேத வேள்வி} செய்த பலனை அடைந்து, ஓ பாரதர்களில் சிறந்தவனே, தனக்கு முன்பும் பின்பும் உள்ள ஏழு தலைமுறையினரையும் புனிதப்படுத்துகிறான். உண்ணாதிருந்து நைமிஷத்தில் உயிரை விடுபவன், சொர்க்கலோகங்களில் மகிழ்ச்சியை அனுபவிக்கிறான். இது விவேகிகளின் கருத்தாகும். ஓ மன்னர்களில் முதன்மையானவனே {பீஷ்மா}, நைமிஷம் என்றும் எப்போதும் புண்ணியமானதே! புனிதமானதே!
அடுத்ததாக ஒருவன் கங்கோத்பேதத்தை அடைந்து மூன்று இரவுகள் உண்ணாதிருப்பதால் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைந்து பிரம்மனைப் போல ஆகிறான். சரஸ்வதியில் {நதியில்} பயணித்து ஒருவன் தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் படையலிட வேண்டும். இதனால் ஒருவன் சரஸ்வதா உலகங்களில் மகிழ்ச்சியடைகிறான். பிறகு ஒருவன், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும் பிரம்மச்சரியத்துடனும் பாகுதம் செல்ல வேண்டும். ஓ கௌரவா {பீஷ்மா}, அங்கே ஓரிரவு தங்குபவன் சொர்க்கத்தை அடைந்து அங்கே வழிபடப்பட்டு தேவாஸ்திர வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு புனிதமான மனிதர்களால் அடிக்கடி பார்க்கப்படும் க்ஷீரவதிக்குச் செல்ல வேண்டும். அங்கே தேவர்களையும் பித்ருக்களையும் வழிபடுபவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும் பிரம்மச்சரியத்துடனும் விமலசோகம் அடைந்து, அங்கே ஓர் இரவு வசிப்பவன் சொர்க்கத்தில் கொண்டாடப்படுகிறான்.
பிறகு ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, சரயுவில் இருக்கும் கோப்ரதாரம் என்ற தீர்த்ததின் மகிமையால் {தசரத} ராமன், தனது பணியாட்களுடனும் மற்ற விலங்குகளுடனும் தனது உடலைத் துறந்த, அந்த அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ பாரதா {பீஷ்மா}, ராமனின் அருளாலும், ஒருவனது தன்னறங்களாலும் {தனது செயல்களின் அறங்களாலும்}, அத்தீர்த்தத்தில் நீராடுபவனின் ஆன்மா அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறது. அவன் சொர்க்கத்தை அடைகிறான். ஓ பாரதா {பீஷ்மா}, பிறகு ஒருவன், ஓ குருகுலத்தின் மகனே {பீஷ்மனே}, கோமதியில் இருக்கும் ராம தீர்த்தத்தை அடைந்து அங்கு நீராடுபவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து, தனது குலத்தைப் புனிதப்படுத்துகிறான். ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மா}, அங்கே மற்றுமொரு தீர்த்தமான சதசாகஸ்ரகம் என்ற தீர்த்தமும் இருக்கிறது. புலன்களில் இருந்து விடுபட்டு, முறையான உணவுப்பழக்கத்துடன் இருக்கும் மனிதன், ஓ பாரத குலத்தின் காளையே {பீஷ்மா}, ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, ஒப்பற்ற தீர்த்தமான பர்த்துருஸ்தானத்தை அடைய வேண்டும். இதனால் ஒரு மனிதன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு கோடி என்ற தீர்த்தத்தில் நீராடி கார்த்திகேயனை வழிபடும் மனிதன், ஓ மன்னா {பீஷ்மா}, ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைந்து, பெரும் சக்தியை அடைகிறான்.
சாம்பலை மேனியில் பூசுதல்! – வனபர்வம் பகுதி 84இ-தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்திய
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், “அடுத்ததாக வாரணாசிக்குச் சென்று காளையைத் தனது குறியீடாகக் கொண்ட தெய்வத்தை {சிவனை} வழிபட்டு, கபிலஹ்ரதத்தில் நீராடுபவன் ராஜசூய வேள்வி செய்த பலனை அடைவான். பிறகு, ஓ குருகுலத்தைத் தழைக்க வைப்பவனே, அவிமுக்தம் என்ற தீர்த்தத்திற்குச் சென்று அங்கு தேவர்களுக்கு தேவனைக் காணும் புனிதப்பயணி, அந்தக் காட்சியின் நிமித்தமாகவே அந்தணரைக் கொன்ற பாவத்தில் இருந்தும் கூட விடுபடுகிறான். அங்கே தனது உயிரைக் கைவிடுபவன், விடுதலையைப் பெறுகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு அரிதான தீர்த்தமும் உலகத்தால் கொண்டாப்படுவதும், கங்கை சங்கமிக்கும் இடத்தில் இருப்பதுமான மார்க்கண்டேய தீர்த்தத்தை அடையும் ஒருவன், அக்னிஷ்டோமா வேள்வியைச் செய்த பலனை அடைந்து, தனது குலத்தை விடுவிக்கிறான். பிறகு கயைக்குச் சென்று புலன்களை அடக்கி, பிரம்மச்சரியம் இருந்து சிறிதுகாலம் அங்கு தங்கியிருப்பவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து தனது குலத்தை மீட்கிறான். மூன்று உலகத்தாலும் கொண்டாடப்படும் அக்ஷயவடம் அந்தத் தீர்த்தத்தில் தான் இருக்கிறது. அங்கே பித்ருக்களுக்கு தானமளிக்கப்படும் எதுவாக இருந்தாலும் அது பன்மடங்காகிறது. அங்கே மகாநதியில் நீராடி தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செலுத்தும் மனிதன் நித்தியமான உலகங்களை அடைந்து தனது குலத்தை மீட்கிறான்.
பிறகு தர்மவனத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பிரம்மசரத்தை அடைந்து அங்கே ஒரு இரவை கழிக்கும் மனிதன் பிரம்ம லோகத்தை அடைகிறான். அந்தத் தடாகத்தில் பிரம்மா ஒரு வேள்வித்தூணை எழுப்பியிருக்கிறான். அத்தூணை வலம் வரும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ பலம்பொருந்திய ஏகாதிபதி {பீஷ்மா}, பிறகு ஒருவன் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தேனுகா என்ற தீர்த்தத்தை அடையவேண்டும். அங்கே ஓரிரவு தங்கி எள்ளையும், பசுவையும் தானமாகக் கொடுப்பவனின் ஆன்மா அனைத்துப் பாவங்களில் இருந்தும் சுத்தப்படுத்தப்பட்டு, ஒருவன் சந்தேகமற சோமனின் உலகத்தை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, அங்கே அந்த மலைகளில் கபிலை என்ற பசு தனது கன்றுடன் உலாவுவது வழக்கம். ஓ பாரதா {பீஷ்மா}, அந்தப் பசு மற்றும் கன்றின் கால் தடயங்கள் இன்னும் இருப்பதாக நம்பப்படுகிறது. ஓ பாரதா, ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {பீஷ்மா}, அக்கால்த் தடயங்களில் உண்டான தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் எப்பாவம் செய்திருந்தாலும் அப்பாவங்கள் கழுவப்படுகின்றன. பிறகு ஒருவன், திரிசூலம் தாங்கும் தெய்வத்தால் {சிவனால்} புனிதப்படுத்தப்பட்டிருக்கும் கிருத்திரவடத்தை அடைய வேண்டும். அங்கே காளையைத் தனது குறியீடாகக் கொண்டிருக்கும் தெய்வத்தை {சிவனை} அணுகும் ஒருவன் சாம்பலைத் தன் மேனியில் பூசிக் கொள்ள வேண்டும். ஒருவன் அந்தணனாக இருந்தால், பனிரெண்டு வருட நோன்பு மேற்கொண்ட பலனை அடைகிறான். அவன் வேறு வகைகளைச் சார்ந்தவானாக இருந்தால், அவன், தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான்.
பிறகு ஒருவன் இனிய மெல்லிசையால் நிறைந்த உதயந்த மலைகளை அடைய வேண்டும். ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மா}, அங்கே சாவித்திரியின் கால் தடம் இன்னும் தெரிகிறது. கடும் நோன்பிருந்து காலை, நடுப்பகல் மற்றும் மாலை வழிபாடுகளை இங்கே செய்யும் அந்தணன், பனிரெண்டு வருடம் இச்சேவையைச் செய்த பலனை அடைகிறான். ஓ பாரதகுலத்தின் காளையே, அங்கே, புகழ்மிக்க யோனிதுவாரம் இருக்கிறது. அங்கே செல்லும் ஒரு மனிதன் மறுபிறவி பெறும் வலியில் இருந்து விடுபடுகிறான். தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்கள் அனைத்தையும் கயையில் கழிப்பவன் நிச்சயமாக சுத்திகரிக்கப்பட்டவனாகி, ஓ மன்னா {பீஷ்மா}, தனக்கு முன்பும் பின்பும் உள்ள ஏழு தலைமுறைகளைக் காக்கிறான். தனது பிள்ளைகளில் ஒருவன் கயைக்குச் செல்லவோ அல்லது குதிரை வேள்வி செய்யவோ அல்லது நீலக்காளையை தானம் செய்யவோ வேண்டுமானால் ஒருவன் நிறைய மகன்களைப் பெற்றுக் கொள்ள விரும்ப வேண்டும்..
ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒரு புனிதப்பயணி பல்குவை அடைய வேண்டும். இதனால் அவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து பெரும் வெற்றியையும் அடைகிறான். ஓ மன்னா, பிறகு ஒருவன், கட்டுப்பட்ட ஆன்மாவுடன் தர்மப்பிரஸ்தத்தை அடைய வேண்டும். ஓ போர்வீரர்களில் முதன்மையானவனே {பீஷ்மா}, அங்கே, அறம் என்பது நிலைத்து இருக்கிறது. அங்கே இருக்கும் கிணற்றிலுள்ள நீரை அருந்தி, குளித்துத் தன்னைச் சுத்திகரித்துக் கொண்ட ஒருவன் தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன்களைச் செலுத்தி தனது பாவங்கள் அனைத்தையும் கழுவிக்கொண்டு சொர்க்கத்திற்கு உயர்கிறான். அத்தீர்த்ததில் தான் மதங்கப் பெருமுனிவரின் ஆசிரமம் இருக்கிறது. களைப்பையும் துன்பத்தையும் போக்கும் அந்த அழகிய ஆசிரமத்திற்குள் நுழையும் ஒருவன் கவாயன {கவாமயநயஜ்ஞ} வேள்வி செய்த பலனை அடைந்து, அங்கே இருக்கும் அறத்தேவனைத் {தர்மதேவனின் உருவத்தைத்} தொடுவதால், ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான்.
ஓ மன்னா, பிறகு ஒருவன், பிரம்மஸ்தானம் என்று அழைக்கப்படும் அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே பிரம்மனை அணுகும் ஆடவர்களில் காளையே, ஓ பலம் பொருந்திய ஏகாதிபதியே {பீஷ்மா}, ராஜசூயம் மற்றும் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ மனிதர்களின் மன்னா {பீஷ்மா}, பிறகு ஒரு புனிதப்பயணி ராஜசூயத்தை அடைய வேண்டும். அங்கே நீராடும் ஒருவன் (சொர்க்கத்தில்) மகிழ்ச்சியாக வாழும் காக்ஷீயரை (முனிவரைப்) போல வாழ்கிறான். தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்ட ஒருவன் யக்ஷிணிக்கு படையலிட்டதை உண்ண வேண்டும். இதனால் யக்ஷிணியின் அருளை அடைந்து, அந்தணரைக் கொன்ற பாவத்திலிருந்தும் கூட ஒருவன் விடுபடுகிறான். பிறகு மணிநாகத்தை அடையும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். ஓ பாரதா {பீஷ்மா} மணிநாகத்தீர்த்தத்திற்குச் சம்பந்தப்பட்ட எதையும் உண்ணும் ஒருவன், கடும் விஷம் கொண்ட பாம்பால் கடிக்கப்பட்டாலும், அதன் விஷத்துக்கு வீழ்வதில்லை. அங்கே ஒரு இரவு தங்கும் ஒருவன் தனது பாவங்களைக் கழுவிக் கொள்கிறான்.
பிறகு ஒருவன் பிரம்ம முனிவர் {பிரம்மரிஷி} கௌதமருக்குப் பிடித்தமான வனத்தை அடைய வேண்டும். அங்கே அகலிகையின் மடுவில் நீராடும் ஒருவன் மேன்மையான நிலையை அடைகிறான். பிறகு ஸ்ரீயின் உருவத்தைக் காணும் ஒருவன் பெரும் செழிப்பை அடைகிறான். அந்தத் தீர்த்ததில் மூன்று உலகத்தாலும் கொண்டாடப்படும் ஒரு கிணறு இருக்கிறது. அதில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். அங்கே அரசமுனியான ஜனகனின் மற்றுமொரு கிணறும் இருக்கிறது. அது தேவர்களாலும் வணங்கப்படுகிறது. அக்கிணற்றில் நீராடும் ஒருவன் விஷ்ணுவின் உலகத்தை அடைகிறான். பிறகு ஒருவன் அனைத்து பாவங்களையும் அழிக்கும் விநசத்தை அடைய வேண்டும். அங்கே சிறிது காலம் தங்கும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைந்து சோமனின் உலகத்தை அடைகிறான்.
பிறகு ஒருவன் அனைத்துத் தீர்த்தங்களின் நீராலும் உண்டாக்கப்பட்ட கந்தகியை அடைவதால், அவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைந்து சூரிய உலகத்திற்கு உயர்கிறான். பிறகு ஒருவன் விசல்யை என்ற மூன்று உலகத்திலும் கொண்டாடப்படும் இடத்தை அடைவதால் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்திற்கு உயர்கிறான். ஓ அறம் சார்ந்தவனே {பீஷ்மா}, துறவிகளின் வனமான ஆதிவங்கத்தை அடையும் ஒருவன், சந்தேகமற குஹயர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை அடைவான். அடுத்ததாக, சித்தர்களால் அடிக்கடி அடையப்படும் கம்பனை என்ற நதியை அடைபவன், பௌண்டரீக வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்திற்கு உயர்கிறான். ஓ பூமியின் தலைவா {பீஷ்மா} மகேஸ்வரி என்று அழைக்கப்படும் ஓடைக்கு வரும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து தனது குலத்தை மீட்கிறான்.
பூர்வ ஜென்ம ஞாபகங்கள்! – வனபர்வம் பகுதி 84ஈ-தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், “பிறகு ஒருவன் தேவர்களின் குளத்திற்குச் சென்று துரதிர்ஷ்டத்திலிருந்து பாதுகாப்பை அடைந்து, குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும் பிரம்மச்சரியத்துடனும் சோமபதத்தை அடைய வேண்டும். அங்கே இருக்கும் மகேஸ்வரபதத்தில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மா}, அத்தீர்த்தத்தில் கோடி தீர்த்தங்கள் இருக்கின்றன என்பது நன்கறியப்பட்டதே. ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {பீஷ்மனே}, ஆமை வடிவில் இருந்த ஒரு தீய அசுரன் ஒருவன் அந்தத் தீர்த்தத்தை அபகரித்துச் சென்றான். அப்போது பலமிக்க விஷ்ணு அவனிடம் இருந்து அதை மீட்டான். அத்தீர்த்தத்தில் ஒருவன் தனது நீர்க்கடன்களைச் செலுத்துவதால் பௌண்டரீக வேள்வி செய்த பலனை அடைந்து விஷ்ணுவின் உலகத்தை அடைகிறான்.
ஓ மன்னர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் நாராயணன் என்றும் இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், துறவைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும், ஆதித்தியர்களும், வசுக்களும், ருத்திரர்களும் அத்தீர்த்தத்தில் கூடி அந்த ஜனார்த்தனனை {விஷ்ணுவை} வழிபடுகின்றனர். அற்புதமான செயல்கள் செய்யும் அந்த விஷ்ணு அங்கே சாலக்கிராமன் என்று அறியப்படுகிறான். {இது பத்ரிநாத் மற்றும் கண்டகி நதியாக இருக்கலாம்} மூன்று உலகங்களின் தலைவனான, வரங்கள் அருளும் அந்த நிலைத்த விஷ்ணுவை அணுகுபவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து விஷ்ணுவின் உலகத்தை அடைகிறான். ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா} அவ்விடத்தில் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் ஒரு கிணறு இருக்கிறது. நான்கு கடல்களும் அந்தக் கிணற்றுக்குள் எப்போதும் இருக்கின்றன. ஓ மன்னா, அங்கே நீராடும் ஒருவன் துரதிர்ஷ்டத்தில் இருந்து பாதுகாப்பை அடைகிறான். அங்கிருக்கும் வரமருளும் நித்தியமான கடுமை நிறைந்த மகாதேவனைக் காண்பதால், ஓ மன்னா {பீஷ்மா}, ஒருவன் மேகத்திலிருந்து வெளிவரும் நிலவெனப் பிரகாசிக்கிறான். பிறகு தூய மனதுடனும், புலனடக்கத்துடனும் ஜாதிஸ்மரத்தில் நீராடும் ஒருவன் சந்தேகமற தனது பூர்வ ஜென்ம ஞாபகங்களை அடைவான்.
பிறகு மகேஸ்வரபுரத்தை அடையும் ஒருவன், காளையைக் குறியீடாகக் கொண்ட தெய்வத்தை {சிவனை} வணங்கி, சிறிது காலம் உண்ணா நோன்பிருப்பதால் அவனது விருப்பங்கள் யாவையும் சந்தேகமற அடைகிறான். பிறகு பாவங்கள் அனைத்தையும் அழிக்கும் வாமனத்திற்குச் சென்று ஹரி தெய்வத்தை வணங்கி அனைத்து துரதிர்ஷ்டங்களில் இருந்தும் ஒருவன் விடுபடுகிறான். பிறகு ஒருவன், அனைத்துப் பாவங்களையும் அகற்றும் குசிகரின் ஆசிரமத்தை அடைய வேண்டும். பிறகு கௌசிகி நதியை அடைந்து பெரும்பாவங்களாக இருப்பினும் அங்கே நீராடுவதால் தொலைந்துவிடும். ஆகையால், ஒருவன் அங்கே நீராட வேண்டும். இதனால் அவன் ராஜசூய வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ மன்னர்களில் முதன்மையானவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் அற்புதமான சம்பக வனத்தை அடைய வேண்டும். அங்கே ஒரு இரவைக் கழிப்பதால் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை ஒருவன் அடைகிறான். அங்கே பெரும் பிரகாசமிக்க விஸ்வேஸ்வரனை அவனது துணையுடன் காணும் மனிதன், ஓ மனிதர்களில் காளையே {பீஷ்மா}, மித்ர வருணனின் உலகத்தை அடைகிறான். அங்கே மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருப்பவன், அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன் கன்னியாசம்வேத்ய தீர்த்தத்தை புலனடக்கத்துடனும் முறைப்படுத்தப்பட்ட உணவு வழக்கத்துடனும் அடைய வேண்டும். அதனால், ஓ மனிதர்களில் காளையே, ஒருவன் படைப்புத் தலைவனான மனுவின் உலகத்தை அடைகிறான். அத்தீர்த்தத்தில் அரிசியைத் தானம் கொடுத்தாலோ அல்லது அங்கே தானமளிக்கப்படும் எந்தப் பரிசாக இருந்தாலும் அது பெருகும் என்று கடும் நோன்புகள் கொண்ட முனிவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்து மூன்று உலகத்தாலும் நிஷ்சீரம் என்று கொண்டாடப்படும் தீர்த்தத்தை அடைபவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து விஷ்ணுவின் உலகத்திற்குச் செல்கிறான். ஓ மன்னா {பீஷ்மா}, நிஷ்சீரத்தில் தானமளிக்கும் ஒருவன் பிரம்மனின் உலகத்திற்கு உயர்கிறான். அந்தத் தீர்த்தத்தில் மூன்று உலகத்தாலும் அறியப்படும் வசிஷ்டரின் ஆசிரமம் இருக்கிறது. அங்கே நீராடும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு தெய்வீக முனிவர்களால் அடிக்கடி பயணிக்கப்படும் தேவகூடத்தை அடையும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து தனது குலத்தைக் காக்கிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு, குசிக முனிவரின் மகனான விஸ்வாமித்திரயை வெற்றியடைந்த இடமான கௌசிக முனிவரின் தடாகத்தை அடைய வேண்டும். அங்கே நீராடும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ வீரனே {பீஷ்மா} அங்கே கௌசிகத்தில் ஒருமாதம் தங்குபவன், ஓ பாரத குலத்தின் காளையே, அதனால் ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். தீர்த்தங்களில் சிறந்ததான மஹாஹ்ரதத்தை அடைந்து வசிக்கும் ஒருவன் துரதிர்ஷ்டத்திலிருந்து பாதுகாப்படைந்து, அபரிமிதமான தங்கத்தைத் தானமாகக் கொடுத்த பலனை அடைகிறான்.
பிறகு ஒருவன் வீராஸ்ரமத்தில் வசிக்கும் கார்த்திகேயனைக் {முருகனைக்} கண்டு ஒரு குதிரை வேள்வி செய்த பலனை அடையலாம். பிறகு, மூன்று உலகத்தாலும் கொண்டாடப்படும் அக்னிதாரத்தை அடைந்து, அங்கே நீராடி, தேவர்களுக்குத் தேவனான நித்தியமான வரமளிக்கும் விஷ்ணுவைக் காண்பதால் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு பனியால் முடி மூடப்பட்டிருக்கும் மலைகளின் அருகே இருக்கும் பெருந்தகப்பனின் {பிரம்மனின்} குளத்தை அடைந்து அங்கே நீராடும் ஒரு மனிதன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பெருந்தகப்பனின் குளத்தில் இருந்து கீழிறங்கும் ஒருவன் மூன்று உலகத்தாலும் குமாரதாரம் என்று அழைக்கப்படும் புனிதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே நீராடும் ஒருவன் தனது காரியங்கள் அனைத்தும் ஈடேறிவிட்டதாகக் கருதலாம். அத்தீர்த்தத்தில் மூன்று நாள் உண்ணாதிருந்து, அந்தணரைக் கொன்ற பாவத்தில் இருந்தும் விடுபடலாம்.
ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒரு புனிதப்பயணி, மூன்று உலத்திலும் புகழ்பெற்ற கௌரி என்ற பெரும்பெண் தெய்வத்தின் சிகரத்தை அடைய வேண்டும். ஓ மனிதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அதன் மீதேறி ஸ்தனகுண்டத்தை அடைய வேண்டும். ஸ்தனகுண்டத்தின் நீரைத் தொடுவதால் ஒரு மனிதன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். அத்தீர்த்தத்தில் நீராடி, தேவர்களையும் பித்ருக்களையும் வழிபடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து இந்திரனின் உலகை அடைகிறான். தேவர்களால் அடிக்கடி காணப்படும் தாமரார்ண கிணற்றை அடையும் ஒருவன், ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, மனித வேள்வி செய்த பலனை அடைகிறான். கிருத்திகை, கௌசிகி மற்றும் அருணை சங்கமிக்கும் சங்கமத்தில் மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்கும் படித்த மனிதன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். பிறகு ஊர்வசி மற்றும் சோமஸ்ராம தீர்த்தங்களை அடையும் ஒரு விவேகி, கும்பகர்ணாஸ்ரத்தில் நீராடி உலகத்தால் வழிபடப்படுவான். தடுமாறாத நோன்புகளுடன் பிரம்மச்சரியம் இருந்து கோமுகத்தின் நீரைத் தொடுவதால் ஒருவன் முந்தைய ஜென்ம ஞாபகங்களை மீட்டெடுக்கிறான்.
பிறகு நந்தா என்று அழைக்கப்பட்டும் வேகமாகச் செல்லும் நதியை அடையும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, கட்டுப்பட்ட ஆன்மாவுடன் இந்திரனின் உலகத்துக்கு உயர்கிறான். பிறகு கொக்குகள் அழியும் ரிஷபத் தீவுக்குச் சென்று அங்கே சரஸ்வதியில் நீராடும் ஒருவன் சொர்க்கத்தில் சுடரெனப் பிரகாசிக்கிறான். பிறகு ஔத்தாலகம் என்றழைக்கப்படும் தீர்த்ததிற்குச் செல்லும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான். அடுத்து, அந்தணர்களால் அதிகம் பார்க்கப்படும் தர்மம் என்று அழைக்கப்படும் புனிதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அதனால் ஒருவன் வாஜபேயி வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்தில் மதிக்கப்படுவான். பிறகு சம்பைக்குச் சென்று பகீரதியில் {கங்கையில்} நீராடி, தண்டபர்ணத்தில் சிறிது காலம் தங்கி ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு ஒருவன் புனிதமான தடாகமான லலிதகாவை அடையவேண்டும். அறம்சார்ந்தவர்கள் அங்கே இருக்கிறார்கள். இதனால் ஒருவன் ராஜசூய வேள்வி செய்ததாகக் கருதப்பட்டு சொர்க்கத்தில் உயர்வாக மதிக்கப்படுகின்றான்
குமரிக்கு அப்பால் நடுக்கடலில் ஒரு தீர்த்தம்! – வனபர்வம் பகுதி 85அ-தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், “பிறகு அற்புதமான தீர்த்தமான சம்வேத்திய தீர்த்தத்தை மாலைப்பொழுதில் அடைந்து, அதன் நீரைத் தொடுவதால் ஒருவன் நிச்சயமாக அறிவைப் பெறுகிறான். முற்காலத்தில் {தசரத} ராமனின் அருளால் உண்டான லௌஹித்ய தீர்த்தத்தை அடைந்தால் ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு கரதோயை நதியை அடையும் ஒருவன், மூன்று இரவுகள் உண்ணாதிருப்பதால் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். இந்த விதி படைப்பாளியாலேயே {பிரம்மனாலேயே} உண்டாக்கப்பட்டது. ஓ மன்னா {பீஷ்மா}, கடலில் கங்கை கலக்கும் இடத்தை அடையும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனைப் போன்று பத்து மடங்கு பலனை அடைவான் என்று ஞானிகள் கூறுகின்றனர். ஓ மன்னா {பீஷ்மா} கங்கையின் மறு கரைக்குக் கடந்து சென்று, அதில் நீராடி அங்கே மூன்று இரவுகள் வசிப்பவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான்.
பிறகு ஒருவன் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் வைதரணியை அடைய வேண்டும். அடுத்ததாக விராஜம் என்றழைக்கப்படும் தீர்த்தத்தை அடையும் ஒருவன் சந்திரனைப் போலப் பிரகாசிப்பவனாகி, தனது குலத்தைப் புனிதமாக்கி, அதைக் காத்து, தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். விராஜத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைந்து தனது குலத்தை புனிதப்படுத்துகிறான். சுத்தத்துடன் சோணம் மற்றும் ஜோதிரத்தியையின் சங்கமத்தில் வசிக்கும் ஒருவன், தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செலுத்துவதால் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். அடுத்ததாக, சோணம் மற்றும் நர்மதையின் பிறப்பிடங்களை உள்ளடக்கிய வம்சகுல்மத்தின் நீரைத் தொடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான்.
ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, அடுத்ததாக கோசலத்தில் ரிஷபம் என்று அழைக்கப்படும் தீர்த்தத்தில் சிறிது காலம் தங்குபவன் அங்கே மூன்று இரவுகள் உண்ணாதிருந்தால் வாஜபேய வேள்வி செய்த பலனையும் ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலனையும் அடைந்து, தனது குலத்தையும் காக்கிறான். கோசலத்தை அடையும் மனிதன் அங்கே இருக்கும் கால தீர்த்தத்தில் நீராட வேண்டும். இதனால் ஒருவன் நிச்சயமாக பதினோரு காளைகளை தானம் செய்த பலனை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா} புஷ்பவதியில் நீராடி, மூன்று இரவுகள் உண்ணாதிருப்பவன் தனது குலத்தைப் புனிதப்படுத்தி, ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு, ஓ பாரத குலத்தில் முதன்மையானவனே {பீஷ்மா}, பதரிகா என்றழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் நீண்ட வாழ்நாளை அடைந்து, சொர்க்கத்தை அடைகிறான். அடுத்ததாக சம்பையை அடைந்து, பாகிரதியில் நீராடும் ஒருவன், தண்டத்தைக் காண்பதால் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான்.
பிறகு ஒருவன் புண்ணியவான்கள் இருக்கும் புனிதமான லபேடிகையை அடைய வேண்டும். அப்படிச் செய்வதால் ஒருவன் வாஜபேய வேள்வியைச் செய்த பலனை அடைந்து தேவர்வகளால் மதிக்கப்படுகிறான். அடுத்ததாக ஜமதக்னேயன் {பரசுராமன்} வசிக்கும் மகேந்திரம் என்று அழைக்கப்படும் மலையை அடைந்து, ராமனின் {பரசுராமனின்} தீர்த்தத்தில் நீராடும் ஒருவன், குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ குருகுலத்தின் மகனே {பீஷ்மா}, இங்கே மதங்கரின் கேதாரம் என்ற தீர்த்தம் இருக்கிறது. ஒ குரு குலத்தில் முதன்மையானவனே {பீஷ்மனே}, அங்கே நீராடுவதால் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். ஸ்ரீ {ஸ்ரீபர்வதம்} என்ற மலையை அடைந்து, அங்கிருக்கும் ஓடையின் நீரைத் தொட்டு காளையைத் தனது குறியீடாகக் கொண்டிருக்கும் தெய்வத்தை {சிவனை} வணங்கினால் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். ஸ்ரீ என்ற அந்த மலையில் பிரகாசமிக்க மகாதேவன் {சிவன்}, தேவியுடன் மகிழ்ச்சியாக வசிக்கிறான். பிரம்மனும் மற்ற தேவர்களும் கூட அங்கே வசிக்கின்றனர். அங்கிருக்கும் தேவத்தடாகத்தில் சுத்தமான தெளிந்த மனதுடன் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து உயர்ந்த வெற்றியை அடைகிறான். அடுத்ததாக பாண்டிய நாட்டில் தேவர்களால் வழிபடப்படும் ரிஷப மலையை அடைபவன், வாஜபேய வேள்வி செய்த பலனை அடைந்து சொர்க்கத்தில் மகிழ்கிறான்.
பிறகு ஒருவன் அப்சரஸ்கள் அடிக்கடி செல்லும் காவேரி ஆறுக்குச் செல்ல வேண்டும். ஓ ஏகாதிபதி {பீஷ்மா}, அங்கு நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு கடற்கரையில் இருக்கும் கன்யா {கன்யாகுமாரி} தீர்த்தத்தை அடைந்து அதன் நீரைத் தொடும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். ஓ மன்னர்களில் சிறந்தவனே {பீஷ்மா} பிறகு ஒருவன், கடலுக்கு மத்தியில் பிரம்மாவின் தலைமையிலான தேவர்களும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும், பூதங்களும், யக்ஷர்களும், பிசாசர்களும், கின்னரர்களும், பெரும் நாகர்களும் {மகோரகர்களும்}, சித்தர்களும், சாரணர்களும், கந்தர்வர்களும், மனிதர்களும், பன்னகர்களும், ஆறுகளும், கடல்களும், மலைகளும் எங்கு உமையின் தலைவனை {சிவனை} வழிபடுகிறார்களோ, அங்கே மூன்று இரவுகள் உண்ணாதிருந்து அந்த ஈசானனை {சிவனை} வணங்க வேண்டும். இதனால் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து கணபத்திய {கணங்களின் தலைவன்} நிலையை அடைகிறான். அங்கே பனிரெண்டு இரவுகள் தங்குவதால் ஒருவனது ஆன்மா அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறது.
பிறகு ஒருவன் மூன்று உலகங்களாலும் காயத்ரி என்று கொண்டாடப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே மூன்று இரவுகள் வசிக்கும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா} அங்கே அந்தணர்கள் காரியத்தில் ஒரு வினோதமான நிகழ்வு நடக்கிறது. ஒரு பிராமணத்தி மூலமோ அல்லது வேறு பெண்ணின் மூலமோ பிறந்த ஒரு அந்தணன் அங்கே காயத்ரியை உச்சரித்தால் அது ஸ்வரமும் நியமமும் உள்ளதாக இருக்கிறது. அதுவே அந்தணனில்லாத மனிதன் அப்படி உரைக்க முடிவதில்லை. அந்தண முனிவரான சம்வர்த்தரின் அடைவதற்கு அரிதான குளத்தை {வாவியை} ஒருவன் அடைந்தால் அவன் மேனி அழகையும் செழிப்பையும் அடைகிறான்.
பிறகு வேணையை அடைந்து, தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செய்யும் ஒருவன் மயில்களாலும் நாரைகளாலும் இழுக்கப்படும் தேரை {விமானமாக இருக்கும் என்று நினைக்கிறேன்} அடைகிறான். அடுத்ததாக, சித்தர்களால் அடிக்கடி அணுகப்படும் கோதாவரியை அடைபவன் பசு வேள்வி செய்த பலனை அடைந்து, வாசுகியின் அற்புதமான உலகத்தை அடைகிறான். பிறகு வேணையின் சங்கமத்தில் நீராடும் ஒருவன் வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு வரதாவின் சங்கமத்தில் மூழ்கி எழும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு பிரம்மஸ்தானத்தை அடைந்து, மூன்று இரவுகள் தங்கும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைந்து, சொர்க்கத்திற்கு உயர்கிறான்.
பிறகு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும், பிரம்மச்சரியத்துடனும் குசப்லவனத்தை அடையும் ஒருவன், அங்கே மூன்று இரவுகள் தங்கி நீராடுவதால் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு கிருஷ்ண வேணையின் நீரினால் உண்டான தேவஹ்ரதம் ஜாதிஸ்மரஹ்ரதம் என்கிற குளத்திலும் நீராடினால் முற்பிறப்புகளின் நினைவுகளை அடைகிறான். அங்கேதான் தேவர்கள் தலைவன் நூறு வேள்விகளைச் செய்து சொர்க்கத்திற்கு உயர்ந்தான். அங்கே ஒருவன் பயணம் செய்வதாலேயே அவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு சர்வதேவஹ்ரதத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான்.
பிறகு ஒருவன் மிகப்பெரும் புனிதம் வாய்ந்த பயோஷ்ணி என்ற நீரில் சிறந்த நீரைக் கொண்ட குளத்தை அடையும் ஒருவன், தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செய்தால் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு புனிதமான காடான தண்டகத்தை அடையும் ஒருவன், அங்கே (அக்கானகத்தில் இருக்கும் நீரில்) நீராட வேண்டும். ஓ மன்னா {பீஷ்மா}, ஓ பாரதா, இதனால் ஒருவன் உடனே, ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான். அடுத்ததாக சரபங்கரின் ஆசிரமத்தையும், சிறப்பு மிக்க சுகரின் ஆசிரமத்தையும் அடையும் ஒருவன், துரதிர்ஷ்டத்தில் இருந்து பாதுகாப்பை அடைந்து தனது குலத்தைப் புனிதப்படுத்துகிறான்.
பிறகு ஒருவன் ஜமதக்னியின் மகன் {பரசுராமன்} முன்பு வசித்த சூர்ப்பாரகத்தை அடைய வேண்டும். அங்கே ராமனின் {பரசுராமனின்} தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் செய்த பலனை அடைகிறான். அடுத்ததாக புலனடக்கத்துடனும் முறையான உணவுப் பழக்கத்துடனும் சப்தகாதுவாரத்தில் நீராடும் ஒருவன் பெரும் பலன்களை அடைந்து தேவர்களின் உலகத்தை அடைகிறான். அடுத்ததாக புலனடக்கத்துடனும் முறையான உணவுப் பழக்கத்துடனும் தேவஹ்ரதத்தை அடையும் ஒருவன், தேவாஸ்திர வேள்வி செய்த பலனை அடைகிறான்.
ஓம் என்ற எழுத்தின் சக்தி! – வனபர்வம் பகுதி 85ஆ-தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களைப் பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர் –
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், “பிறகு ஒருவன் புலனடக்கத்துடனும் பிரம்மச்சரியத்துடனும் துங்ககத்தை அடைய வேண்டும். பழங்காலத்தில் அங்கேதான் சாரஸ்வத முனிவர் துறவிகளுக்கு வேதங்களைக் கற்பித்தார். வேதங்கள் (முனிவர்களால் மறக்கப்பட்டுத் தொலைந்த போது, அந்த அங்கிரச குமாரன் {சாரஸ்வதர்}, முனிவர்களின் மேலாடைகள் {துண்டு என்று நினைக்கிறேன்} மேல் வசதியாக அமர்ந்து கொண்டு, “ஓம்” என்ற முக்கிய எழுத்தை முழுவதும் முறைப்படி உச்சரித்தார். இதன்காரணமாக, துறவிகள் அனைவரும் தாங்கள் ஏற்கனவே கற்றதை நினைவு கூர்ந்தனர். அந்த இடத்தில்தான் முனிவர்களும், தேவர்களும் வருணன், அக்னி, பிரஜாபதி, ஹரி என்று அழைக்கப்படும் நாராயணன், மகாதேவன், மற்றும் பெரும் பிரகாசம் கொண்ட சிறப்புமிக்கப் பெருந்தகப்பன் {பிரம்மா} ஆகியோரும் வேள்வியை நடத்த பிரகாசித்துக் கொண்டிருந்த பிருகுவை நியமித்தனர். தெளிந்த நெய்யை முறைப்படி பானபலியாகக் {libation} கொடுத்து அக்னியைத் திருப்தி செய்த சிறப்புமிக்கப் பிருகு, ஒருமுறை அக்னேயதான வேள்வியை முனிவர்களுக்காக நடத்தினார். அந்த வேள்விக்குப் பிறகு முனிவர்களும் தேவர்களும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு ஒருவர் பின் ஒருவராகத் திரும்பினர். துங்கக வனத்தில் நுழையும் ஆணோ பெண்ணோ, ஓ மன்னர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகின்றனர். ஓ வீரனே, ஒருவன் அந்தத் தீர்த்தத்தில் புலனடக்கத்துடனும், முறையான உணவுக்கட்டுப்பாட்டுடனும் ஒரு மாதம் தங்க வேண்டும். ஓ மன்னா {பீஷ்மா}, இதனால் ஒருவன் பிரம்மனின் உலகத்தை அடைந்து, தனது குலத்தைக் காக்கிறான்.
பிறகு ஒருவன் மேதாவிகத்தை அடைந்து, தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செலுத்த வேண்டும். இதனால் ஒருவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைந்து, ஞாபக சக்தியையும் புத்திகூர்மையையும் பெறுகிறான். அந்தத் தீர்த்ததில் {மேதாவிகத்தில்}, முழு உலகத்தாலும் அறியப்பட்ட காலஞ்சரம் என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது. அங்கே இருக்கும் தெய்வீகத் தடாகத்தில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். ஓ மன்னா, ஒருவன் அங்கே நீராடிய பிறகு அந்தக் காலஞ்சர மலையில் (தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும்) நீர்க்கடன் செலுத்தினால், சந்தேகமற சொர்க்கத்தில் மதிக்கப்படுகின்றான். பிறகு ஒருவன், ஓ ஏகாதிபதி {பீஷ்மா} அனைத்துப் பாவங்களையும் அழிக்கவல்ல மந்தாகினி நதியை அடைந்து, மலைகளில் சிறந்த சித்திரகூடத்தையும் அடைந்து, அங்கே நீராடி தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் வழிபாடுகளைச் செய்பவன், குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து மேன்மையான நிலையை அடைகிறான்.
ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் அற்புதமான தீர்த்தமான பர்த்திரிஸ்தானத்தை அடைய வேண்டும். ஓ மன்னா, அங்கே தேவர்களின் தளபதியான கார்த்திகேயன் {முருகன்} இருக்கிறான். ஓ மன்னர்களில் முதன்மையானவனே, அந்தப் பகுதிக்குப் பயணம் செய்வதாலேயே ஒருவன் வெற்றியை அடைகிறான். பிறகு கோடி என்றழைக்கப்படும் தீர்த்ததில் நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு அந்தக் கோடியை வலம் வரும் ஒருவன் ஜேஷ்டஸ்தானத்தை அடைய வேண்டும். அங்கே சந்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டு இருக்கும் மகாதேவனைக் {சிவனைக்} காண வேண்டும். ஓ பலம்பொருந்திய ஏகாதிபதி {பீஷ்மா}, அங்கே ஒரு கொண்டாடப்படும் கிணறு இருக்கிறது. ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மா}, அந்தக் கிணற்றில் நான்கு கடல்களும் இருக்கின்றன. ஓ மன்னர்களில் முதன்மையானவனே, அங்கே கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவோடு தேவர்களையும் பித்ருக்களையும் வழிபட்டு நீராடும் ஒருவன், தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு மேன்மையான நிலையை அடைகிறான். ஓ பெரும் பலம் வாய்ந்த மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் பெருமைவாய்ந்த சிருங்கபேரபுரத்தை அடைய வேண்டும். ஓ மன்னர்களில் முதன்மையானவனே, முன்பொரு காலத்தில் தசரதனின் மகனான ராமன் இங்கேதான் (கங்கையைக்) கடந்து சென்றான். ஓ பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே {பீஷ்மா}, அந்தத் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் தனது பாவங்கள் அனைத்திலும் இருந்து விடுபடுகிறான். புலனடக்கத்துடனும், பிரம்மச்சரியத்துடனும் அங்கே இருக்கும் கங்கையில் நீராடும் ஒருவன், அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, *வாஜபேய வேள்வி செய்த பலனை அடைகிறான்.
பிறகு ஒருவன் உயர்ந்த நுண்ணறிவு கொண்ட மகாதேவனைப் பிரதிஷ்டை செய்திருக்கும் மயூரவடத்தை அடைய வேண்டும். அங்கே அந்தத் தெய்வத்தைக் கண்டு, அவனை வணங்கி வலம் வருபவன், ஓ பாரதா {பீஷ்மா} கணபத்திய நிலையை அடைகிறான். அந்தத் தீர்த்தத்தில் இருக்கும் கங்கையில் நீராடும் ஒருவனது அனைத்துப் பாவங்களும் கழுவப்படுகின்றன. ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன், முனிவர்களால் அதன் பெருமைகள் பாடப்படும் பிரயாகையை அடைய வேண்டும். பிரம்மனின் தலைமையிலான தேவர்களும், திக்குகளின் தெய்வங்களும், லோகபாலர்களும், சித்தர்களும், உலகங்களால் வழிபடப்படும் பித்ருக்களும், பெரும் முனிவர்களான சனத்குமாரர்களும் மற்றவர்களும், களங்கமற்ற பிரம்ம முனிவர்களான அங்கிரசும் மற்றவர்களும், நாகர்களும், சுபர்ணர்களும், சித்தர்களும், பாம்புகளும் {நாகர்களும்}, ஆறுகளும், கடல்களும், கந்தர்வர்களும், அப்சரஸ்களும், பிரஜாபதியுடன் கூடிய தலைவன் ஹரியும் அங்கே {பிரயாகையில்} வசிக்கின்றனர். அத்தீர்த்ததில் இருக்கும் மூன்று அக்னிக்குண்டங்களுக்கு மத்தியில், தீர்த்தங்களில் முதன்மையான கங்கை வேகமாக வருகிறாள். அங்கே அந்தப் பகுதியில்தான் உலகத்தைச் சுத்தப்படுத்தும் சூரியனின் மகளான, மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் யமுனை, கங்கையுடன் இணைகிறாள்.
கங்கைக்கும் யமுனைக்கும் இடைப்பட்ட நாடு பெண்ணின் இடையைப் போன்று இருக்கிறது என்று கருதப்படுகிறது. பிரயாகையே அதன் முதன்மையான இடம் என்றும் கருதப்படுகிறது. பிரவேள்வி, பிரதிஷ்டாம், கம்பளம், அஸ்வதரம், போகவதி ஆகிய தீர்த்தங்கள் படைப்பாளனின் {பிரம்மாவின்} வேள்வி மேடைகளாகும். ஓ போர்வீரர்களில் முதன்மையானவனே {பீஷ்மா} அந்த இடங்களில் வேதங்களும் வேள்விகளும் வடிவம் கொண்டவையாக இருக்கின்றன. துறவை செல்வமாகக் கொண்ட முனிவர்கள் பிரம்மனை வழிபடுகின்றனர். தேவர்களும், எல்லைகளை ஆளுபவர்களும் {மன்னர்களும்} அங்கே தங்கள் வேள்விகளை நடத்துகின்றனர். ஓ மேன்மையானவனே, இருப்பினும் இந்தத் தீர்த்தங்கள் அனைத்திலும் பிரயாகையே மிகவும் புனிதமானது என்று கற்றோர் சொல்கின்றனர். உண்மையில் அது மூன்று உலகிலும் முதன்மையான தீர்த்தமாகும். அந்தத் தீர்த்ததிற்குச் {பிரயாகைக்குச்} சென்று, அதன் {பிரயாகையின்} புகழைப் பாடி, அங்கிருந்து சிறிது மண்ணை எடுத்துக் கொள்பவன், தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். அங்கே இருக்கும் சங்கமத்தில் நீராடும் ஒருவன், ராஜசூய வேள்வி செய்த பலனையும், குதிரை வேள்வி செய்த பலனையும் அடைகிறான். இந்த வேள்விக்கான இடம் தேவர்களால் கூட வழிபடப்படுகிறது. ஓ பாரதா {பீஷ்மா} ஒரு மனிதன் அங்கே சிறிதளவே தானம் செய்தாலும் அது ஆயிரம் மடங்காகப் பெருகும்.
ஓ குழந்தாய் {பீஷ்மா}, வேதங்களின் உரையோ, மனிதர்களின் கருத்துகளோ, பிரயாகையில் உயிரை விட விரும்பும் உனது மனதை மாற்றாது இருக்கட்டும். ஓ குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, பத்தாயிரம் {ten thousand} தீர்த்தங்களுடன், அறுபது கோடி {600 million) தீர்த்தங்களும் பிரயாகையில் இருக்கின்றன. கங்கை மற்றும் யமுனையின் சங்கமத்தில் நீராடும் ஒருவன் நால்வகை அறிவு சம்பந்தமான பலன்களையும், உண்மையின் பலன்களையும் அடைகிறான். அந்தப் பிரயாகையில் வாசுகியின் தீர்த்தமான போகவதி என்றழைக்கப்படும் தீர்த்தம் இருக்கிறது. அங்கே நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். அந்தக் கங்கையில், பத்து குதிரை வேள்விகளின் பலனைத் தரும் மூன்று உலகத்திலும் புகழோடு இருக்கும் ராமப்பிரப்பதன தீர்த்தம் இருக்கிறது. ஓ குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, கங்கையில் எங்கேனும் நீராடும் மனிதன் குருக்ஷேத்திரப் பயணத்திற்கு ஒப்பான பலனை அடைகிறான். இருப்பினும், கனகலத்தில் அதைவிட அதிகப் பலனை அடைகிறான். பிரயாகையில் கனகலத்தைவிட அதிக பலனை அடைகிறான். நூறு பாவங்களைச் செய்த ஒருவன் கங்கையில் நீராடினால், அதன் நீரால் அவனது பாவங்கள் அனைத்தும் எரிபொருளை விழுங்கும் நெருப்பைப் போலக் கழுவப்படும். சத்திய யுகத்தில் அனைத்து தீர்த்தங்களும் புனிதமானவை என்றும், திரேதா யுகத்தில் புஷ்கரை மட்டுமே அப்படி என்றும், துவாபரையில் குருக்ஷேத்திரம் என்றும், கலியுகத்தில் கங்கை மட்டுமே புனிதம் என்றும் சொல்லப்படுகிறது.
(ஆறு சோம வேள்விகளில் முக்கியமான ஒன்றுதான் வாஜபேய வேள்வி. அதில் அந்த வேள்வியின் தலைவன் {எஜமானன்} சடங்கு நீராடி வர வேண்டும். வேள்வியின் முடிவில் மன்னனே அத்தலைவனுக்கு {எஜமானனுக்கு} வெண்குடை பிடிக்க வேண்டும். “வாஜ” என்றால் அரிசி {உணவு} என்று பொருள். “பேய” என்றால் பானகம் என்று பொருள். வாஜபேயம் என்ற பெயர் சுட்டிக் காட்டுவது போலவே, அவ்வேள்வி அபரிமிதமான பயிர் உற்பத்தியையும், அபரிமிதமான நீரையும் கொடுக்கும். அவ்வேள்வியில் சோமரச ஹோமம், பசுஹோமம் (23 விலங்குகள்), அன்னம் அல்லது வாஜ ஹோமம் {அதாவது உணவு} ஆகியவை அடக்கம். வேள்வித்தலைவன் மீதியிருக்கும் அரசியில் குளிப்பதால், அதாவது, நீரைப்போல அரிசி அவன் மீது ஊற்றப்படுவதால் “வாஜபேயம்” என்று அழைக்கப்படுகிறது.)
புலஸ்தியரும் நாரதரும் விடைபெற்றனர்! – வனபர்வம் பகுதி 85இ-தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களைப் பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், “புஷ்கரையில் ஒருவன் தவம் பயில வேண்டும்; மஹாலயத்தில் ஒருவன் தானம் செய்ய வேண்டும்; மலைய மலைகளில் ஒருவன் ஈமச் சிதையில் ஏற வேண்டும்; பிருகுதுங்கத்தில் ஒருவன் உணவைப் புறந்தள்ளி உடலைக் கைவிட வேண்டும். புஷ்கரை, குருக்ஷேத்திரம், கங்கை, {கங்கை யமுனை} சங்கமம் ஆகியவற்றில் நீராடும் ஒருவன் தனக்கு முன்பும் பின்புமான ஏழு தலைமுறைகளைப் புனிதப்படுத்துகிறான். கங்கையின் பெயரை உரைக்கும் ஒருவன் சுத்திகரிக்கப்படுகிறான்; அதைக் {கங்கையைக்} காண்பவன் செழிப்பை அடைகிறான்; அதில் நீராடி, அதன் நீரைப் பருகுபவன் தனக்கு முன்பும் பின்புமான ஏழு தலைமுறைகளைப் புனிதப்படுத்துகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, கங்கையின் நீர் ஒரு மனிதனின் எலும்பை எவ்வளவு காலம் தொட்டுக் கொண்டிருக்குமோ அவ்வளவு காலம் அவன் சொர்க்கத்தில் மதிக்கப்படுகிறான். பக்தியுடன் புனித தீர்த்தங்களுக்கும், புனிதமான இடங்களுக்கும் புனிதப்பயணம் செய்யும் பலனையும் அவன் அடைகிறான். கங்கையைப் போன்று வேறு எந்தத் தீர்த்தமும் கிடையாது, கேசவனைப் {கிருஷ்ணன் (அ) விஷ்ணு} போன்று வேறு எந்தத் தெய்வமும் கிடையாது, அந்தணனுக்கு மேன்மையானவன் யாரும் கிடையாது என்று பெருந்தகப்பனே {பிரம்மனே} சொல்லியிருக்கிறான். ஓ பெரும் மன்னா {பீஷ்மா}, கங்கை பாயும் பகுதிகள் புனிதமான ஆசிரமங்களாகக் கருதப்பட வேண்டும். கங்கைக்கரையில் இருக்கும் நிலப்பகுதிகள் துறவின் வெற்றிக்கு உகந்ததாகக் கருதப்பட வேண்டும்.
(தீர்த்தங்கள் குறித்த) இந்த உண்மையான விளக்கத்தை ஒருவன் மறுபிறப்பாளர்களுக்கும் {பிராமணர்களுக்கும்}, பக்திமான்களுக்கும், தனது மகனுக்கும், நண்பர்களுக்கும், சீடர்களுக்கும் தன்னை நம்பி இருப்பவர்களுக்கும் உரைக்கலாம். அருளப்பட்ட ஒப்பற்ற புனிதமான இந்த உரை ஒருவனைச் சொர்க்கத்திற்கு இட்டுச் செல்லும். புனிதமான, பொழுதுபோக்கான ஆன்மாவைச் சுத்தப்படுத்தும் இந்த உரை உயர்ந்த மதிப்பையும், உயந்த பலன்களையும் தருகிறது. அனைத்துப் பாவகளையும் அழிக்கும் இந்தப் புதிர் பெரும் முனிவர்களால் கவனத்துடன் பேணிப் பாதுகாக்கப்படுகிறது.
அந்தணர்களுக்கு மத்தியில் இதை உரைப்பதால் ஒருவன் சொர்க்கத்திற்கு உயர்கிறான். தீர்த்தங்களின் இந்த விவரிப்பு மங்களகரமான, சொர்க்கத்தைக் கொடுக்க வல்லது புனிதமானது; எப்போதும் அருளப்பட்டிருக்கும் அது ஒருவனின் எதிரிகளை அழிக்கிறது; அது எல்லாக் காரியங்களிலும் முதன்மையானதாக இருந்து புத்திகூர்மையை அதிகரிக்கிறது. பிள்ளையற்றவன் இந்த உரையைப் படிப்பதால் மகனைப் பெறுகிறான், ஏதுமற்றவன் செல்வத்தைப் பெறுகிறான், அரச வழியில் வந்தவன் முழு உலகத்தையும் அடைகிறான், வைசியன் செல்வத்தைப் பெறுகிறான், சூத்திரன் அவனது விருப்பங்களை அடைகிறான், அந்தணன் (இந்த உலகத்தின்) கடலைக் கடக்கிறான். ஒருவன் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு பலவகைப்பட்ட தீர்த்தங்களின் பலன்களைத் தினமும் கேட்பதால், தனது முந்தைய பல பிறவிகளின் சம்பவங்களை நினைவுகூர்ந்து சொர்க்கத்தில் மகிழ்கிறான்.
இங்கே உரைக்கப்பட்டிருக்கும் தீர்த்தங்களில் சிலவற்றை எளிதாக அடையலாம், சில அடையக் கடினமானதாகும். ஆனால் அனைத்துத் தீர்த்தங்களையும் காணும் விருப்பம் கொண்டவன், கற்பனையால் கூட அவற்றுக்குப் பயணம் செய்யலாம். வசுக்கள், சத்யஸ்கள், ஆதித்தியர்கள், மருதர்கள், அசுவினிகள், தேவர்களுக்கு இணையான முனிவர்கள் ஆகியோர் பலன்களை அடைய விரும்பி இந்தத் தீர்த்தங்களில் நீராடியிருக்கின்றனர். ஓ அற்புதமான நோன்புகள் நோற்கும் குரு குலத்தவனே {பீஷ்மா}, நான் சொல்லிய முறைகளின் படியும், புலனடக்கத்துடனும் இத்தீர்த்தங்களுக்குப் பயணம் செய்தால், உனது தகுதியை நீ வளர்த்துக் கொள்வாய். கற்ற பக்திமான்கள், தங்கள் சுத்திகரிக்கப்பட்ட புலன்களாலும், கடவுள் நம்பிக்கையாலும், வேத அறிவாலும் இத்தீர்த்தங்களை அடைய இயலும்.
ஓ கௌரவனே {பீஷ்மா} நோன்புநோற்காதவன், ஆன்மாவைக் கட்டுக்குள் வைக்காதவன்; சுத்தமில்லாதவன், திருடன், வக்கிர புத்தியுள்ளவன் ஆகியோர் தீர்த்தங்களில் நீராடுவதில்லை. நீ எப்போதும் அறம்பயில்பவனாகவும், சுத்தமான நடத்தையுள்ளவனாகவும் இருக்கிறாய். ஓ அறம்சார்ந்தவனே, அறம் அறிந்தவனே {பீஷ்மா}, உனது அறத்தால் உனது தந்தையையும், பாட்டனையும், பெரும் பாட்டன்களையும், பிரம்மாவைத் தலைமையாகக் கொண்ட தேவர்களையும், முனிவர்களையும் எப்போதும் திருப்தி செய்திருக்கிறாய். ஓ பீஷ்மா, வாசவனைப் {இந்திரனைப்} போல இருக்கும் நீ வசுக்களின் உலகை அடைந்து, பூமியில் நிலைத்த புகழுடன் இருப்பாய்” என்றார்.
நாரதர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இப்படி மகிழ்ச்சியுடன் பேசிய சிறப்புமிக்கப் புலஸ்திய முனிவர், மிகவும் திருப்தி கொண்டவராய் பீஷ்மரிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கேயே மறைந்து போனார். ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, சாத்திரங்களின் உண்மைகளை நன்றாகப் புரிந்த பீஷ்மன், புலஸ்தியரின் உத்தரவின் பேரில் உலகம் முழுவதும் சுற்றினான். ஓ அருளப்பட்டவனே {யுதிஷ்டிரா}, இப்படியே பீஷ்மன் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் தனது உயர்ந்த பலன்வாய்ந்த பயணத்தைப் பிரயாகையில் முடித்தான். இக்குறிப்புகளின் படி உலகத்தைச் சுற்றும் மனிதர் நூறு குதிரை வேள்விகளின் உயர்ந்த கனியை அடைந்து, அதன் பிறகு முக்தியை அடைவான்.
ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, முன்பு குருக்களில் முதன்மையான பீஷ்மன் அடைந்தது போல நீயும் எட்டுக் குணங்களுடன் கூடிய பலன்களை அடைவாய். நீ துறவிகளை அத்தீர்த்தங்களுக்குத் தலைமை தாங்கி அழைத்துச் சென்று {எட்டு மடங்கு} மிகப் பெரிதான பலன்களை அடைவாய். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா} ராட்சசர்களின் தொந்தரவுகள் கொண்ட தீர்த்தங்களை உன்னையன்றி யாரும் அடைய முடியாது. அதிகாலையில் எழுந்து, தீர்த்தங்களைக் குறித்து தெய்வீக முனிவர்கள் அருளியிருக்கும் உரைகளை உரைப்பவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான்.
முனிவர்களில் முதன்மையான வால்மீகி, கசியபர், அத்ரேயர், குண்டஜடரர், விஸ்வாமித்திரர், கௌதமர், அசிதர், தேவலர், மார்க்கண்டேயர், காலவர், பரத்வாஜர், வசிஷ்டர், உத்தாலக முனிவர், தனது மகனுடன் கூடிய சௌனகர், துறவிகளில் சிறந்த வியாசர், முனிவர்களில் முதன்மையான துர்வாசர், பெரும் தவமியற்றிய ஜாபாலி ஆகிய துறவை செல்வமாகக் கொண்ட சிறப்புமிக்க முனிவர்கள் உன்னிடம் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஓ பலம்பொருந்திய மன்னா {யுதிஷ்டிரா} நீ அத்தீர்த்தங்களைக் காணச் செல்.
ஓ சிறப்புமிக்க ஏகாதபதி {யுதிஷ்டிரா}, அளவற்ற சக்தி கொண்ட லோமசர் என்ற பெயர் கொண்ட பெரும் முனிவர் ஒருவர் உன்னிடம் வருவார். ஓ அறம் சார்ந்தவனே {யுதிஷ்டிரா}, அவர் சொல்வதையும், நான் சொல்லியிருப்பதையும் ஏற்று அத்தீர்த்தங்களுக்குப் பயணம் செல். இதனால் நீ மன்னன் மகாபிஷனைப் போலப் பெரும்புகழை அடைவாய். ஓ மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரா}, அறம்சார்ந்த யயாதி போல, புரூரவஸ் போல நீ உனது தன்னறத்தால் பிரகாசிப்பாய். பகீரதன் போலவும், சிறப்புமிக்க {தசரத} ராமன் போலவும் மன்னர்களுக்கு மத்தியில் நீ சூரியனாக ஒளிர்வாய். ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, முனி அல்லது இக்ஷவாகு போலவோ அல்லது பெரும் புகழ் கொண்ட புரு அல்லது வைனியன் போலவோ நீ உலகத்தால் கொண்டாடப்படுவாய். பழங்காலத்தில் விருத்திரனைக் கொன்றவன் {இந்திரன்}, தனது அனைத்து எதிரிகளையும் எரித்து மூன்று உலகத்தையும் ஆண்டு, மனத்துயரத்தில் இருந்து விடுபட்டான். தனது எதிரிகளை எல்லாம் கொன்ற அவன் தனது குடிமக்களைச் {தேவர்களைச்} சிறப்புற ஆண்டான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, உனது வகைக்கான {க்ஷத்திரிய} முறைகளுடன் முழு உலகத்தையும் அடைந்து, உனது அறத்திற்காக நீ இப்பூமியில் கார்த்தவீரியார்ஜுனனைப் போலப் புகழப்படுவாய்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ பெரும் மன்னா {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதிக்கு {யுதிஷ்டிரனுக்கு} இப்படி ஆறுதலளித்த சிறப்பு மிக்க நாரத முனிவர், மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} விடைபெற்றுக் கொண்டு அங்கேயே மறைந்து போனார். அறம்சார்ந்த யுதிஷ்டிரன் அக்காரியத்தை ஆலோசித்து, தீர்த்தங்கள் குறித்த பலன்களைத் துறவிகளுக்கு உரைக்க ஆரம்பித்தான்.
தௌமியரிடம் பேசிய யுதிஷ்டிரன்! – வனபர்வம் பகுதி 86-அர்ஜுனன் இல்லாத துயரத்தில் இருந்த யுதிஷ்டிரன், தௌமியரிடம் காம்யகத்தில் வசிக்க தனக்கு விருப்பமில்லை எனவும், வேறு இடம் ஏதாவது சொல்லுங்கள் எனவும் கோருதல்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “புத்திகூர்மை கொண்ட நாரதரின் கருத்தையும், தனது தம்பிகளின் கருத்துகளையும், உறுதிபடுத்திக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், பெருந்தகப்பனைப் {பிரம்மாவைப்} போல இருந்த தௌமியரிடம், “வீழ்த்தப்பட முடியாத வீரமும், நீண்ட கரங்களும், அளவிடமுடியாத புத்திகூர்மையும் கொண்ட மனிதர்களில் புலியான ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} ஆயுதங்கள் அடைவதற்காக நான் அனுப்பிவிட்டேன். ஓ துறவை செல்வமாகக் கொண்டவரே {தௌமியரே}, திறனுடனும், ஆயுதங்களில் நிபுணத்துவத்துடனும், மேன்மையான வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} இணையான தன்மையுடனும், எனக்கு அர்ப்பணிப்புள்ளவனுமாக அந்த வீரன் {அர்ஜுனன்} இருந்தான்.
ஓ அந்தணரே {தௌமியரே}, எதிரிகளை அழிப்பவர்களும், பராக்கிரமம் நிறைந்தவர்களுமான கிருஷ்ணனையும், அர்ஜுனனையும், சக்தி வாய்ந்த வியாசர் எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறாரோ அந்த அளவு நானும் அவர்கள் இருவரையும் குறித்து அறிந்து வைத்திருக்கிறேன். வாசுதேவனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} ஆறு பண்புகள் கொண்ட விஷ்ணுவைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதையும் அறிந்திருக்கிறேன். இது நாரதரும் அறிந்ததே. அவர் {நாரதர்} என்னிடம் இது குறித்து எப்போதும் பேசியிருக்கிறார். அவர்கள் இருவரும் நரன், நாராயணன் என்ற முனிவர்கள் என்பதையும் நான் அறிவேன். திறனுள்ளவன் {அர்ஜுனன்} என்பதை அறிந்தும் நான் அவனை {அர்ஜுனனை} (இப்பணிக்காக {ஆயுதம் அடையும் பணிக்காக}) அனுப்பினேன். இந்திரனுக்குச் சற்றும் குறையாத (பணி முடிக்க) முழுத் திறமை கொண்ட அந்தத் தெய்வ மகனை {son of god}, தேவர்கள் தலைவனைக் {இந்திரனைக்} காணவும், அவனிடம் {இந்திரனிடம்} இருந்து ஆயுதங்களைப் பெறவும் அனுப்பி வைத்தேன்.
பீஷ்மரும் துரோணரும் அதிரதர்கள். கிருபரும், துரோணரின் மகனும் {அஸ்வத்தாமனும்} வெல்லப்படமுடியாதவர்கள்; பெரும்பலம் வாய்ந்த இந்த வீரர்களைத் திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்} தனது படைத்தலைவர்களாக நியமித்திருக்கிறான். இவர்கள் அனைவரும் வேதமறிந்தவர்கள்; வீரர்கள்; அனைத்து ஆயுதங்களின் அறிவையும் பெற்றவர்கள். பெரும் பலம் கொண்ட இவர்கள் அனைவரும் அர்ஜுனனிடம் போரிட எப்போதும் விருப்பமுடியவர்கள்.
தெய்வீக ஆயுதங்களை அறிந்த சூத சாதியைச் சேர்ந்த கர்ணனும், பெரும் பலம் வாய்ந்த போர்வீரனாவான். ஊக்கம் கொண்ட அவனது ஆயுதங்களின் நிமித்தமாக அவன் வாயுத்தேவனின் பலத்தைக் கொண்டிருக்கிறான். அவனே {கர்ணனே} நெருப்புச் சுடராக இருக்கும்போது அவனது அம்புகள் அந்நெருப்பின் நாக்குகளாக இருக்கின்றன. தோலுறையிட்ட அவனது இடது கையின் அறைகள் {slaps – அடிகள்} சுடரின் படப் படவெனும் சத்தத்தைக் கொடுக்கின்றன. {கர்ணன் என்ற நெருப்புக்கு} போர்க்களத்தின் தூசியே புகையாக இருக்கிறது. காற்றால் உந்தப்பட்ட நெருப்பு போல, திருதராஷ்டிரனின் மகன்களால் உந்தப்பட்ட கர்ணன், யுக முடிவில் அனைத்தையும் எரிக்கும் மரணத்தால் அனுப்பப்பட்ட நெருப்பைப் போல, வைக்கோல் குவியலைப் போன்ற எனது துருப்புகள் அத்தனையையும் சந்தேகமற உட்கொண்டுவிடுவான்.
தாங்க முடியாத காண்டீவம் என்ற வானவில்லுக்கு அடியில் வரிசையாகத் தெரியும் வெண் குதிரைகள் என்ற வெண்நாரைகளுடனும், தெய்வீக ஆயுதங்கள் என்ற கடும் மின்னலுடனும், அர்ஜுனன் என்ற பலம்பொருந்திய மேகக்குவியல், கிருஷ்ணன் என்ற பலம்வாய்ந்த காற்றின் துணை கொண்டு, கர்ணன் எனும் பிரகாசிக்கும் சுடரைத் தனது {அர்ஜுனனின்} கணைகள் என்ற மழையால் தடுமாற்றமில்லாத உறுதியுடன் அணைக்க முடியும்.({காண்டீவம் = வானவில், வெண்குதிரைகள் = வெண் நாரைகள், அர்ஜுனன் = மேகக்குவியல், கிருஷ்ணன் = காற்று, கர்ணன் = நெருப்பு, அர்ஜுனனின் கணைகள் = மழை. இதை,})தான் ஏந்தியிருக்கும் வானவில்லுக்கடியில் தெரியும் வெண் நாரைகளால் இழுக்கப்படும் மேகக்குவியல், காற்றின் உந்துதலால் நெருப்பிடம் சென்று கடும் மின்னலுடன் மழையைப் பொழிந்து அந்நெருப்பை அணைப்பது போல, காண்டீவத்துக்கு அடியில் தெரியும் வெண்குதிரைகளால் இழுக்கப்படும் அர்ஜுனன், கிருஷ்ணனால் உந்தப்பட்டு, தெய்வீக ஆயுதங்களுடன் கர்ணனிடம் சென்று கணைகளைப் பொழிந்து அவனைக் கொல்ல முடியும்” என்றும் படிக்கலாம்.}“மேகக்குவியலான அர்ஜுனன், வானவில்லான காண்டீவத்தைப் பிடிக்கும்போது, அந்த வானவில்லான காண்டீவத்துக்கு அடியில் தெய்வீக ஆயுதங்கள் மின்னலைப் போலவும், மேகக்குவியலான அவனை இழுத்துச் செல்லும் குதிரைகள் நாரைகள் [கொக்குகள்] போலவும் தெரியும். அப்போது, கிருஷ்ணன் என்ற காற்றின் உந்துதலால், கர்ணன் என்ற நெருப்பினிடம், அர்ஜுனன் என்ற மேகக்குவியல் சென்று, தனது கணைகள் என்ற மழையைப் பொழியும்போது கர்ணன் என்ற நெருப்பு அணைந்துவிடும்” என்றும் படிக்கலாம்.}
எதிரி நகரங்களைக் கைப்பற்றும் பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்}, இந்திரனிடம் இருந்து அனைத்து தெய்வீக ஆயுதங்களையும் முழுமையுடனும் உயிரோட்டத்துடனும் அடைவான் என்பதில் சந்தேகமில்லை. தனி ஆளாகவே அவன் அவர்கள் {மேற்சொன்ன வீரர்கள்} அனைவருக்கும் சமம் என்றே நான் நினைக்கிறேன். இல்லையென்றால் போரில் அந்த எதிரிகளை வீழ்த்துவது (எங்களுக்கு) இயலாது. அனைத்து நோக்கங்களிலும் சிறந்த வெற்றியை அடைந்தவர்கள் அவர்கள். தான் ஏற்றுக் கொண்ட பணியில், அதன் பாரம் தாங்காது விழுபவனல்ல பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்}. ஆகையால், எதிரிகளை அடக்கும் அந்த அர்ஜுனன், தெய்வீக ஆயுதங்களின் முழுமையான வசதிகளுடன் திரும்பி வருவதை நாம் காண்போம்.
இருப்பினும், மனிதர்களில் சிறந்த அந்த வீரன் இல்லாமல், கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} கூடிய எங்களால் {பாண்டவர்களால்}, இந்தக் காம்யகத்தில் {காம்யக வனத்தில்} ஓய்ந்திருக்க இயலவில்லை. ஆகையால், உணவும் கனிகளும் நிறைந்த காண்பதற்கினிய வேறு புனிதமான வனத்தை எங்களுக்குக் குறிப்பிட்டுச் சொல்லும். மேகங்கள் கூடுவதைக் காண ஆவலுடன் காத்திருக்கும் *சாதகப் பறவை போலக் கலைக்க முடியாத பராக்கிரமமும், போர்க்குணமும் கொண்ட அர்ஜுனனை எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்கப் போகிறோம். அப்படி நாங்கள் காத்திருக்க பக்திமான்கள் வசிக்கும் கானகமாக அஃது இருக்க வேண்டும். மேலும், மறு பிறப்பாளர்களுக்காக {பிராமணர்களுக்காகத்} திறந்திருக்கும் சில ஆசிரமங்களையும், தடாகங்கள், ஓடைகள், அழகான மலைகள் ஆகியவற்றையும் எங்களுக்குச் சொல்லும். ஓ அந்தணரே {தௌமியரே}, அர்ஜுனன் இல்லாததால், இந்தக் காம்யக வனத்தில் வசிக்க எனக்கு விருப்பமில்லை. நாங்கள் வேறு எங்காவது செல்ல விரும்புகிறோம்” என்றான் {யுதிஷ்டிரன்}.
கிழக்கு திசையின் புண்ணிய இடங்கள்! – வனபர்வம் பகுதி 87-கிழக்கு திசையில் உள்ள புனிதமான இடங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொல்லும் தௌமியர்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “துயருற்று, ஊக்கங்குறைந்தவர்களாகப் பாண்டவர்கள் இருப்பதைக் கண்ட பிருஹஸ்பதி போன்ற தௌமியர், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, “ஓ பாரதக் குலத்தின் காளையே, ஓ பாவங்களற்றவனே {யுதிஷ்டிரனே}, நான் அந்தணர்களால் அங்கீகரிக்கப்பட்ட புனிதமான ஆசிரமங்களையும், பகுதிகளையும், தீர்த்தங்களையும், மலைகளையும் சொல்லும்போது கேட்டுக் கொள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நான் அவற்றை உரைக்கும்போது, துருபதன் மகளுடனும் {திரௌபதியுடனும்}, உனது தம்பிமாருடன் சேர்ந்து கேட்கும் நீ, ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா} உனது துயரத்தில் இருந்து விடுபடுவாய். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, இதைக் கேட்பதாலேயே நீ பலன்களை அடைவாய். ஓ மனிதர்களில் சிறந்தவனே, நான் சொல்லும் அந்த இடங்களுக்குப் பயணிப்பதால் அதை விட நூறு மடங்கு பலன்களை அடைவாய்.
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, முதலில் எனது நினைவில் உள்ளவரை, ஓ யுதிஷ்டிரா, முனிவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அழகான கிழக்குத் திசை நாடுகளைக் குறித்துச் சொல்கிறேன். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்தத் திசையில், தேவர்களாலும் மதிக்கப்படும் நைமிஷம் என்ற இடம் இருக்கிறது. அந்தப் பகுதியில் தேவர்களுக்குச் சொந்தமான பல புனிதமான தீர்த்தங்கள் இருக்கின்றன. அங்கே தேவர்களால் வழிபடப்படும் அழகான மற்றும் புனிதமான கோமதி {நதி} இருக்கிறது. தேவர்களின் வேள்விப் பகுதியும், சூரியனின் வேள்விக் கம்பமும் அங்குதான் இருக்கின்றன. அந்தப் பகுதியில் அரசத் துறவிகளால் பெரிதாக மதிக்கப்பட்டுக் கயை என்று அழைக்கப்படும் மலைகளில் சிறந்த புனிதமான மலை இருக்கிறது. அந்த மலையில் தேவர்களால் வழிபடப்பட்டுப் பிரம்மசரம் என்று அழைக்கப்படும் மங்களகரமான தடாகம் ஒன்று இருக்கிறது. ஒரு மனிதனின் மகன்களில் ஒருவனாவது கயைக்குப் பயணப்பட வேண்டும் அல்லது குதிரை வேள்வியைச் செய்ய வேண்டும் அல்லது நீலக் காளையைத் தானம் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதால் ஒருவனுக்கு முன்பும் பின்புமான பத்துத் தலைமுறைகள் விடுதலை பெறும் என்பதால் தான், பழங்காலத்தவர்கள், ஒரு மனிதன் பல மகன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர்.
ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, கயசிரம் என்ற பெயர் கொண்ட அந்தப் பகுதியில் ஒரு பெரும் நதி ஓடுகிறது. கயசிரத்தில் ஓர் ஆல மரம் இருக்கிறது. அங்குப் பித்ருக்குக்குப் படைக்கப்படும் உணவு நித்திய தன்மை பெறுவதால் அந்த ஆல மரத்தை நித்திய ஆலம் என்று அந்தணர்கள் அழைக்கிறார்கள். அந்த இடத்தின் வழியாக ஓடும் பெரும் நதி பல்கு என்று பெயரால் அறியப்படுகிறது. அதன் நீர் புனிதத்தன்மை வாய்ந்தது. ஓ பாரதர்களில் காளையே, அந்த இடத்தில் அதிகமான கிழங்குகளும், பல வகையான கனிகளையும் தனது கரையில் கொண்ட கௌசிகி என்ற நதியும் ஓடுகிறது. அங்கேதான் தவத்தைச் செல்வமாகக் கொண்ட விஸ்வாமித்திரர் தனது அந்தணத் தன்மையை அடைந்தார். அந்தத் திசையில் {கிழக்கில்} தான் புனிதமான கங்கையும் இருக்கிறது. அதன் கரையில் தான் {அந்தணர்களுக்கு} ஏராளமான பரிசுகளுடன் பல வேள்விகளைச் செய்தான் பகீரதன்.
பாஞ்சால நாட்டில் உத்பலாவனம் என்ற காடு இருக்கிறது எனவும், குசிக குலத்தைச் சேர்ந்த விஸ்வாமித்திரர் தனது மகனுடன் சேர்ந்து அங்கு வேள்விகளைச் செய்தார் எனவும், அங்கு மனித சக்திக்கு மீறிய விஸ்வாமித்திரரின் நினைவுச்சின்னத்தைக் கண்ட ஜமதக்னியின் மகன் ராமன் {பரசுராமன்}, தனது வம்சாவளியின் புகழை உரைத்தார் எனவும் சொல்கிறார்கள். காம்யகத்தில், குசிகரின் மகன் {விசுவாமித்திரர்} இந்திரனுடன் சேர்ந்து சோமச்சாற்றைப் பெருமடக்காகக் குடித்தார். பிறகு தனது க்ஷத்திரிய வகையைக் கைவிட்ட அவர் {விசுவாமித்திரர்}, “நான் ஓர் அந்தணன்” என்று சொல்ல ஆரம்பித்தார்.
ஓ வீரனே {யுதிஷ்டிரா}, அந்த இடத்தில் தான் உலகத்தால் கொண்டாடப்படும் கங்கை மற்றும் யமுனையின் சங்கமம் இருக்கிறது. புனிதமானதும், பாவங்களை அழிப்பதுமான அத்தீர்த்தம் முனிவர்களால் மதிக்கப்படுகிறது. பிரயாகை என்று அழைக்கப்படலாயிற்று. ஓ மன்னர்களில் முதன்மையானவனே, இந்தத் திசையில் தான் {கிழக்கு} அகஸ்தியரின் அற்புதமான ஆசிரமமும், பல முனிவர்கள் வசிக்கும் தாபசம் என்ற கானகமும் இருக்கின்றன. அங்கே காலஞ்சர மலைகளில் ஹிரண்யவிந்தம் என்ற பெரும் தீர்த்தம் இருக்கிறது. அங்கே இருக்கும் மலைகளில் சிறந்த அகஸ்திய மலை அழகானதும், புனிதமானதும், மங்களகரமானதுமாக இருக்கிறது.
அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மாவாக இருக்கும் பெருந்தகப்பனே {பிரம்மனே} பழங்காலத்தில் இங்கே வேள்வி செய்திருக்கிறான். ஓ பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா} இதன் காரணமாகவே அந்த இடம்
ஓ குருகுலத்தவனே, அங்கே தான், பிருகு குலத்தில் சிறப்புமிக்க ராமனுக்குப் {பரசுராமனுக்குப்} புனிதமான மகேந்திரம் என்றழைக்கப்படும் மலையும் இருக்கிறது. ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அங்கே பழங்காலத்தில் பெருந்தகப்பன் {பிரம்மா} வேள்விகளை நடத்தியிருக்கிறான். ஓ யுதிஷ்டிரா, அங்கேதான் புனிதமான பாகீரதி ஒரு தடாகத்துக்குள் நுழைந்து, புனிதமான ஆறாக, பலன்கள் அளிக்கும் பிரம்மசரமாக ஆகிறது. பாவங்கள் கழுவப்பட்ட மனிதர்களால் வசிக்கப்படும் அதன் கரையைப் பார்ப்பதாலேயே ஒருவன் பலன்களை அடைந்து விடுகிறான். அந்தத் திசையில் {கிழக்கில்}, கேதாரம் என்று அழைக்கப்படும் உயர் ஆன்ம மதங்கரின் அற்புதமான ஆசிரமம் இருக்கிறது. அது {கேதாரம்} புனிதமானது என்றும், மங்களகரமானது என்றும் உலகத்தால் கொண்டாடப்படுகிறது.
நிஷாதர்களின் மன்னன் {நளன்} தனது தாகத்தைத் தணித்துக் கொண்டு சிறிது நேரம் ஓய்ந்திருந்ததும், கனிகளும், கிழங்குகளும், நீர் நிலைகளும் நிறைந்து இருந்ததும் காண்பதற்கினியதாகவும் இருக்கும் குண்டோதம் என்று அழைக்கப்படும் மலை அங்கேதான் இருக்கிறது. அங்கேதான் துறவிகளால் அருளப்பட்டிருக்கும் காண்பதற்கினிய தேவ வனம் இருக்கிறது. அங்கே இருக்கும் மலையின் உச்சியில்தான் பாகுகா மற்றும் நந்தா நதிகள் இருக்கின்றன. ஓ பெரும் பலம் வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, நான் கிழக்குத் திசையில் இருக்கும் அனைத்துத் தீர்த்தங்கள் மற்றும் புனிதமான இடங்களைச் சொல்லிவிட்டேன். மற்ற மூன்று திசைகளிலும் இருக்கும் புனிதமான தீர்த்தங்கள், நதிகள், மலைகள், மற்றும் புனிதமான இடங்களைக் குறித்துக் கேள்” என்றார் தௌமியர்.
தேவர்களுக்கு முக்தி தந்த தாமிரபரணி! – வனபர்வம் பகுதி 88-தென் திசையில் உள்ள புனிதமான இடங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொல்லும் தௌமியர்.
தௌமியர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ பாரதா {யுதிஷ்டிரா}, எனது அறிவுக்கு எட்டிய வரை தெற்கில் இருக்கும் புனிதமான தீர்த்தங்களைக் குறித்து விரிவாக உரைக்கிறேன் கேள். அத்திசையில் புனிதமானதும் மங்களகரமானதுமான நீர் நிறைந்த கோதாவரி ஆறு ஓடுகிறது. அதன் இரு மருங்கும் துறவிகள் வசிக்கும் தோப்புகள் {Grove = தோப்பு, வனங்கள் என்றும் கொள்ளலாம்} இருக்கின்றன. அந்தத் திசையில் பறவைகளும் மான்களும் நிறைந்து, துறவிகளின் ஆசிரமங்களும் நிறைந்து பாவங்களையும் பயத்தையும் அகற்றும் வேணை நதியும், பீமரதி நதியும் ஓடுகின்றன
ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அந்த இடத்தில் நிருகன் என்ற அரசமுனியின் நதியான பயோஷ்ணி ஆறு இருக்கிறது. அந்தணர்கள் அடிக்கடி வரும் அந்த ஆறு நீர் நிறைந்து காண்பதற்கு இனியதாக இருக்கிறது. உயர்ந்த தவப்பலன்களுடைய சிறப்புமிக்க மார்க்கண்டேயர், மன்னன் நிருகனின் குலத்தின் புகழைக் குறித்துப் பாடியிருக்கிறார். பயோஷ்ணியில் இருக்கும் வராகம் என்ற அற்புதமான தீர்த்தத்தில் மன்னன் நிருகன் செய்த வேள்வியைக் குறித்து மரியாதையுடன் அவர் {மார்க்கண்டேயர்} பாடியதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வேள்வியில் இந்திரன் தான் பெருமடக்காகக் குடித்த சோமத்தாலும், அந்தணர்கள் தாங்கள் பெற்ற பரிசுகளாலும் போதையுண்டிருந்தார்கள்.
(பாத்திரத்தில்) எடுத்துக்கொண்ட, அல்லது தரையில் ஓடிக்கொண்டிருக்கும் அல்லது காற்றால் அடித்துச் செல்லப்படும் பயோஷ்ணியின் நீர், ஒரு மனிதன் தான் சாகும் வரை செய்யும் பாவங்களில் இருந்து விடுவிக்கவல்லது. சொர்க்கத்தைவிட உயர்வான அந்தப் புனிதமான இடத்தில், திரிசூலம் தாங்குபவனால் {சிவனால்} படைத்து அளிக்கப்பட்ட அந்த இடத்தில் மகாதேவனின் உருவத்தைக் காணும் மனிதன் சிவலோகத்தை அடைகிறான். துலாக்கோலில் {Scale = தராசு} ஒரு புறம் கங்கையையும் அனைத்து நதிகளின் நீரையும் வைத்து, மறுபுறம் பயோஷ்ணியின் நீரை வைத்தால், எனது கருத்துப்படி பயோஷ்ணி அனைத்துத் தீர்த்தங்களை விடவும் பலன்களால் மேன்மையானதே.
ஓ பாரதகுலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, வருணசுரோதசம் என்ற மலையில் கனிகளும் கிழங்குகளும் நிறைந்ததும், வேள்வி மேடையைக் கொண்டதுமான புனிதமான மங்களகரமான மாடர வனம் இருக்கிறது. பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரா} பிரவேணியின் வடக்கே கண்வரின் ஆசிரமமும், துறவிகள் பயணிக்கும் பல வனங்களும் இருக்கின்றன. ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா}, சூர்ப்பாரகம் என்ற தீர்த்ததில் சிறப்பு மிக்க ஜமதக்னியின் இரண்டு வேள்வி மேடைகளான பாஷாணம், புனஸ்சந்திரை என்ற தீர்த்தங்கள் இருக்கின்றன. ஓ பாரதா, ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அந்தப் பகுதியில் துறவிகள் அடிக்கடி செல்லும் அசோகம் என்ற தீர்த்தம் இருக்கிறது. மேலும், ஓ யுதிஷ்டிரா, பாண்டியர்களின் நாட்டில் அகஸ்தியம், வருணம் என்ற தீர்த்தங்கள் இருக்கின்றன. ஓ மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, அங்கே பாண்டவர்களுக்கு {பாண்டியர்களுக்கு என்று நினைக்கிறேன். ஆனால் ஆங்கிலத்தில் Pandavas என்றே இருக்கிறது) மத்தியில் குமரிகள் என்று அழைக்கப்படும் தீர்த்தம் இருக்கிறது. ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நான் இப்போது தாமிரபரணியைக் குறித்து விளக்குகிறேன் கேள்
முக்தியின் மீதிருந்த விருப்பத்தால் உந்தப்பட்டு, தேவர்கள் அந்த ஆசிரமத்தில் நோன்புகள் நோற்றனர். மூன்று உலகங்களால் கொண்டாடப்படும், புனிதமான மங்களகரமான, சக்தியுடைய அபரிமிதமான குளிர்ந்த நீருடைய கோகர்ணம் என்ற தடாகம் அப்பகுதியில் இருக்கிறது. அசுத்த ஆன்மா கொண்ட மனிதர்கள் அந்தத் தடாகத்தை அடைவது மிகுந்த சிரமமானது. அந்தத் தீர்த்தத்துக்கு அருகில் அகஸ்தியருடைய சீடரின் புனிதமான ஆசிரமமும், தேவசபம் என்ற மலையும், நிறைய மரங்களும், புற்களும், கனிகளும், கிழங்குகளும் இருக்கின்றன. அங்கே பெரும் பலனை அளிக்கக்கூடிய ரத்தினங்கள் நிறைந்த வைடூரியம் என்ற மலையும் இருக்கிறது. கனிகளும், கிழங்குகளும், நீரும் நிறைந்திருக்கும் அந்த மலையில் *அகஸ்தியரின் ஆசிரமம் இருக்கிறது.
ஓ மனிதர்களின் தலைவா, நான் இப்போது சூராஷ்டிர {சௌராஷ்டிர} நாட்டில் இருக்கும் புனிதமான இடங்கள், ஆசிரமங்கள், ஆறுகள் மற்றும் தடாகங்களைச் சொல்லப் போகிறேன். ஓ யுதிஷ்டிரா, அங்கே இருக்கும் கடற்கரையில் சமசோத்பேதமும், தேவர்களால் மதிக்கப்படும் தீர்த்தமான பிராபசமும் இருக்கின்றன என்று அந்தணர்கள் சொல்கிறார்கள். அவ்விடத்தில் தவசிகள் அடிக்கடி செல்லும் பிண்டாரகம் என்ற தீர்த்தம் இருக்கிறது. அது பெரும் பலனைக் கொடுக்கவல்லது.
அப்பகுதியில் விரைவான வெற்றிக்கு வழிவகுக்கும் பலம்வாய்ந்த மலையான உஜ்ஜயந்தம் இருக்கிறது. புத்திகூர்மையுள்ள தேவ முனிவரான நாரதர் அதை மதித்துப் பழமையான சுலோகத்தை உரைத்திருக்கிறார். ஓ யுதிஷ்டிரா! அதை நீ கேட்க வேண்டும். சூராஷ்டிரத்தில், பறவைகளும் விலங்குகளும் அதிகமாக இருக்கும் புனிதமான உஜ்ஜயந்த மலையில் தவச்சடங்குகளைச் செய்வதால், ஒரு மனிதன் சொர்க்கத்தில் மதிக்கப்படுகிறான். உருவம் கொண்டு வந்திருக்கும் பழமையானவனான {ஆதியானவனான} மதுவைக் கொன்றவன் {மதுசூதனனான கிருஷ்ணன்} வசிக்கும் பெரும் பலனையும், நிலைத்த அறத்தையும் கொடுக்கவல்ல துவாராவதி {துவாரகை} அங்கேதான் இருக்கிறது.
வேதங்களை அறிந்த அந்தணர்களும், ஆன்மாவின் தத்துவத்தை அறிந்த மனிதர்களும், சிறப்புமிக்கக் கிருஷ்ணனே நிலைத்த அறம் என்று சொல்கின்றனர். சுத்தமானவற்றில் அதிகச் சுத்தமான, நேர்மையானவற்றில் அதிக நேர்மையான, மங்களகரமானவற்றில் அதிக மங்களமானவன் கோவிந்தனே {கிருஷ்ணனே}. தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடைய அந்தத் தேவர்களுக்குத் தேவனே {கிருஷ்ணனே} நித்தியமானவன். சுத்தமான ஆன்மாவாகவும், செயல்படும் வாழ்க்கை தத்துவமாகவும், தலைமையான பிரம்மனாகவும் இருக்கும் அவனே அனைவருக்கும் தலைவனாவான். புத்திக்கெட்டாத ஆன்மா கொண்ட ஹரியான அந்த மதுவைக் கொன்றவன் {கிருஷ்ணன்} அங்கு வசிக்கிறான்..
மேற்கு திசையின் புண்ணிய இடங்கள்!! – வனபர்வம் பகுதி 89-மேற்கு திசையில் உள்ள புனிதமான இடங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொல்லும் தௌமியர்.
தௌமியர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இப்போது மேற்கு திசையில் இருக்கும் ஆனர்த்தர்களின் நாட்டில் {அவந்தி நாட்டில்} இருக்கும் பலன்களைத் தரக்கூடிய இடங்களை விவரிக்கப் போகிறேன். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அங்கு, பிரயங்கு மரங்களும் {காட்டுக்குமிழ் மரங்களும்}, மாமரங்களும் நிறைந்து பருமனான வஞ்சி மரங்களால் {Cane = பிரம்பு} வரிசையாக மாலை போன்று அலங்கரிக்கப்பட்டு மேற்கு முகமாக ஓடும் புனிதமான நதியான நர்மதை ஓடுகிறது. ஓ குரு குலத்தவரில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அனைத்து தீர்த்தங்களும், புனிதமான இடங்களும், ஆறுகளும், கானகங்களும், மூன்று உலகத்திலுமுள்ள மலைகளில் முதன்மையான மலைகளும், பெருந்தகப்பனுடன் {பிரம்மனுடன்} கூடிய தேவர்களும், சித்தர்கள், முனிவர்கள், சாரணர்களும் நர்மதையின் புனிதமான நீரில் நீராட அங்கு அடிக்கடி வருகின்றனர்.
விஸ்ரவஸ் முனிவரின் புனிதமான ஆசிரமமும், மனிதர்களை வாகனமாகக் கொண்ட கருவூலத் தலைவனான குபேரன் பிறந்த இடமும் அங்கே இருக்கிறது என்று நாம் கேள்விப்படுகிறோம். பசுமையான மரங்களும், கனிகளும், மலர்களும் எப்போதும் நிறைந்திருக்கும் மலைகளில் முதன்மையானதும், புனிதமானதும், மங்களகரமானதுமான வைடூரியச் சிகரம் அங்கே தான் இருக்கிறது. ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா} அந்த மலையின் உச்சியில், தேவர்களும், கந்தர்வர்களும் ஓய்ந்திருக்கும், முற்றும் மலர்ந்த தாமரைகளால் நிறைந்திருக்கும் புனிதமான குளம் ஒன்று இருக்கிறது. ஓ பலம்பொருந்திய ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தெய்வீக முனிவர்கள் அடிக்கடி வந்து செல்லும் சொர்க்கத்தைப் போல இருக்கும் அந்தப் புனிதமான மலையில் பல அற்புதங்களைக் காணலாம்.
ஓ எதிரி நகரங்களை அடக்குபவனே {யுதிஷ்டிரா}, அங்கே விஸ்வாமித்திரம் என்ற ஒரு நதி ஓடுகிறது. பல புனிதமான தீர்த்தங்களைக் கொண்ட அந்நதி அதே பெயர் கொண்ட அரச முனிக்குச் {விஸ்வாமித்திரருக்குச்} சொந்தமானது. அந்த ஆற்றின் கரையில் தான் நகுஷனின் மகனான யயாதி {சொர்க்கத்தில் இருந்து விழுந்தான்} அறம்சார்ந்தவர்களுக்கு மத்தியில் விழுந்து மீண்டும் நேர்மையானவர்களுக்குச் சொந்தமான நித்தியமான உலகங்களை மீண்டும் அடைந்தான். அங்கே நன்கு அறியப்பட்ட புண்ணியம் என்ற தடாகமும், மைநாகம் என்ற மலையும், அளவற்ற கனிகளும் கிழங்குகளும் நிறைந்த அசிதம் என்ற மலையும் இருக்கிறது. கக்ஷசேனரின் புனிதமான ஆசிரமம் அங்குதான் இருக்கிறது. ஓ யுதிஷ்டிரா, அனைத்து நாட்டிலும் புகழ்வாய்ந்த சியவனரின் ஆசிரமமும் அங்குதான் இருக்கிறது. ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா} அந்த இடத்தில், ஓ மேன்மையானவனே, மனிதன் கடும் தவச்சடங்குங்களின்றிக் கூட (ஆன்ம) வெற்றியை அடைகிறான்.
ஓ பலம் பொருந்திய மன்னா {யுதிஷ்டிரா}, பறவைகளும் மான்களும் வசிக்கும் ஜம்புமார்க்கம் என்ற பகுதி அங்கு இருக்கிறது. ஓ புலன்களைக் கட்டுப்படுத்தியவர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் துறவிகள் வந்து செல்லும் இடமாகவும் அஃது இருக்கிறது. அதற்கு அடுத்ததாகத் துறவிகள் எப்போதும் நிறைந்திருக்கும் புனிதமான கேதுமாலை, மேதியை, கங்காதுவாரம், மறுபிறப்பாளர்கள் {அந்தணர்கள்} வசிக்கும் நன்கு அறியப்பட்ட சைந்தவ வனம் ஆகியன இருக்கின்றன. வைகானசர்கள், சித்தர்கள் மற்றும் முனிவர்களுக்குப் பிடித்தமான வசிப்பிடமும், பெருந்தகப்பனுக்கு {பிரம்மனுக்கு} உரிய கொண்டாடப்படும் குளமுமான புஷ்கரை அங்குதான் இருக்கிறது. ஓ குருக்களின் தலைவா, அறம்சார்ந்த மனிதர்களில் முதல்வா {யுதிஷ்டிரா}, பாதுகாப்பை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்ட படைப்பாளி {பிரம்மன்}, “சுத்தமான ஆன்மாவைக் கொண்ட ஒரு மனிதன் புஷ்கரைக்குக் கற்பனையிலேனும் புனிதப் பயணம் மேற்கொண்டானேயானால், அவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் மீண்டு, சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பான்” என்ற இந்த வரிகளைப் புஷ்கரையில் பாடினான்.
வடக்கு திசையின் புண்ணிய இடங்கள்!! – வனபர்வம் பகுதி 90-வடக்கு திசையில் உள்ள புனிதமான இடங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொல்லும் தௌமியர்.
தௌமியர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரா}, இனி நான் வடக்கே இருக்கும் தீர்த்தங்களையும், புனிதமான இடங்களையும் விவரிக்கிறேன். ஓ மேன்மையானவனே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். ஓ வீரனே, இந்த உரையைக் கேட்பவன் பயபக்தியுடைய மனதை அடைகிறான். அது ஒருவனுக்கு நன்மைக்கான வழிகோலுகிறது. அந்தப் பகுதியில்தான் எளியவர்களும் அடையக்கூடிய கரைகள் கொண்டதும், தீர்த்தங்கள் நிறைந்ததுமான, பெரும்புனிதம் வாய்ந்த சரஸ்வதி நதி இருக்கிறது. ஓ பாண்டுவின் மகனே, அங்குதான் பெரும் பலன்களையும், செழிப்பையும் கொடுப்பவையான, கடலை நோக்கி கட்டுக்கடுங்காமல் பாயும் யமுனையும், பிலாக்ஷவதரணம் என்ற தீர்த்தமும் இருக்கின்றன.
சாரஸ்வத வேள்வியைச் செய்யும் மறுபிறப்பாளர்கள் {அந்தணர்கள்} வேள்வியின் முடிவில் அங்குதான் நீராடுவார்கள். ஓ பாவங்களற்றவனே, அங்கே நன்கு அறியப்பட்டு, பெரும் பலன்களைக் கொடுக்கும் தெய்வீக தீர்த்தமான அக்னிசிரஸ் இருக்கிறது. மன்னன் சகாதேவன் {ஸ்ரீஞ்சயனின் மகன்}, அங்கே ஒரு சாம்யத்தை {அளவு கோல்} வீசி எறிந்து, அந்தச் சாம்யம் எவ்வளவு தூரம் சென்றதோ, அவ்வளவு தூரமுள்ள இடத்தில் {சாம்யாக்ஷேபம் எனும்} வேள்வியைச் செய்தான். ஓ யுதிஷ்டிரா, இதனால்தான் இந்திரன் சகாதேவனைப் புகழும் வரிகளைப் பாடினான். “யமுனையில் சகாதேவன், அந்தணர்களுக்கு நூறாயிரம் பரிசுகளுடன் வேள்வி நெருப்பை வணங்கினான்” என்ற அந்த வரிகளை இன்னும் இந்த உலகில் மறுபிறப்பாளர்களால் {அந்தணர்களால்} உரைக்கப்படுகிறது.
அங்கேதான், சிறப்பிமிக்க மன்னனான ஏகாதிபத்தியம் கொண்ட பரதன், முப்பத்தைந்து {நூற்று நாற்பத்தெட்டு என்றும் சொல்லப்படுகிறது} குதிரை வேள்விகளைச் செய்தான். ஓ குழந்தாய், பழங்காலத்தின் சரபங்கர் மறுபிறப்பாளர்களின் {அந்தணர்களின்} முழு விருப்பங்களையும் அங்கேதான் ஈடேற்றுவார். அங்கேதான் பெரும் பலனைத் தரக்கூடிய கொண்டாடப்படும் அவரது ஆசிரமம் இருக்கிறது. ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, ஓ பெரும் மன்னா, பழங்காலத்தில் வாலகில்யர்கள் வேள்வி நடத்திய அந்தப் பகுதியில் தான் தேவர்களால் வழிபடப்படும் சரஸ்வதி நதி ஓடுகிறது. ஓ யுதிஷ்டிரா, அந்தப் பகுதியில் தான் பெரும் பலனைக் கொடுக்கவல்ல திருஷ்டத்வதி நதி ஓடுகிறது.
ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, நியக்கிரோதர், பாஞ்சால்யர், தால்பியகோஷர், தால்பியர் ஆகியோரின் புனிதமான ஆசிரமங்கள் அங்கே இருக்கின்றன. அற்புதமான நோன்புகள் நோற்று, பெரும் சக்தியுடன் மூவுலகங்களாலும் கொண்டாடப்படும் சிறப்பு மிக்க ஆனந்தயசசின் ஆசிரமமும் அங்கே இருக்கிறது. ஓ மனிதர்களின் தலைவா, வேத அறிவில் சொல்லப்பட்டுள்ளவர்களும், வேதங்களையும், வேதச்சடங்குகளையும் அறிந்த சிறப்புமிக்க ஏதாவர்ணம் {நிறமுள்ள}, அவவர்ணம் {நிறமற்ற} என்போர் பலன்கொடுக்கும் வேள்விகளை அங்கே செய்துள்ளனர். ஓ பாரதக் குலத்தின் தலைவா, பழங்காலத்தில் வருணன், இந்திரன் ஆகியோருடன் கூடிய தேவர்கள் தவச்சடங்குகளைப் பயின்ற விசாகயூபம் அங்கேதான் இருக்கிறது. ஆகையால் அந்த இடம் மேம்பட்ட வகையில் புனிதமானதாகும்.
பெரிதும் அருளப்பட்ட ஜமதக்னி பெருமுனிவர் வேள்விகளைச் செய்த பலாசகம் அங்கேதான் இருக்கிறது. முக்கியமான ஆறுகள் அனைத்தும், தங்கள் தங்கள் சுய உருவை எடுத்து முனிவர்கள் சூழ அங்கே இருக்கின்றனர். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த உயர்ந்த ஆன்மா கொண்டவரின் {ஜமதக்னியின்} துவக்கத்தைக் கண்ட விபவசு {அக்னி தேவன்}, “சிறப்புமிக்க ஜமதக்னி தேவர்களுக்காக வேள்வி செய்து கொண்டிருக்கும்போது அவரிடம் வந்த ஆறு, அந்தணர்களுக்குத் தேனைத் தானமாகக் கொடுத்து திருப்தி செய்தது” என்ற சுலோகத்தைப் பாடினான். ஓ யுதிஷ்டிரா, கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் அடிக்கடி வந்து போகும் இடமும், வேடர்கள் மற்றும் கின்னரர்களின் வசிப்பிடமுமான மலைகளில் முதன்மையான அந்த மலையைப் பிளந்து விரைந்து செல்லும் கங்கை அம்மலையை வெட்டும் இடமே கங்காத்துவாரம் என்றழைக்கப்படுகிறது.
ஓ மன்னா, பிரம்ம முனிவர்கள் அடிக்கடி வந்து செல்லும் அந்த இடத்தை, கனகலத்தைப் போன்ற புனிதமான தீர்த்தமென்று சனத்குமாரர் சொல்கிறார். அங்கே பெரும் முனிவர்கள் வந்து செல்லும் இடமும் புரூரவர்கள் பிறந்த இடமும், பிருகு தவம் பயின்ற இடமும்மான புரு என்ற மலை இருக்கிறது. ஒ மன்னா, அதன் காரணமாகவே அந்தப் பெரும் சிகரம் பிருகுதுங்கம் என்று அழைக்கப்படுகிறது. அந்தச் சிகரத்திற்கு அருகிலேயே புனிதமானதும் அகன்றதும், மூன்று உலகங்களிலும் புகழப்பட்டதுமான பதரி என்ற ஆசிரமம் இருக்கிறது. ஓ பரதக் குலத்தின் காளையே, நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம் ஆகிய அனைத்துமான நாராயணன் என்று அழைக்கப்படும், நித்தியமானவனும், ஆண்மக்களில் சிறந்தவனும், அனைத்துச் சிறப்புகளும் கொண்டவனுமான தலைவன் விஷ்ணுவின் ஆசிரமமே பதரி. அந்தப் பதரிக்கு அருகே பாயும் கங்கையின் குளிர்ந்த ஊற்று முன்பொரு காலத்தில் வெப்பமாக இருந்தது. அதன் கரைகள் அனைத்தும் தங்க மண்ணால் விரிக்கப்பட்டிருந்தது. அங்கே மிகுந்த பிரகாசமிக்கத் தேவர்களும், பெரும் நற்பேறு பெற்ற முனிவர்களும் தெய்வீகமான தலைவன் நாராயணனை அணுகி எப்போதும் வழிபட்டு வருகிறார்கள்.
தீர்த்தங்கள், புனிதமான இடங்கள் ஆகிய அனைத்தையும் கொண்ட முழு அண்டமும், தலைமை ஆன்மாவான தெய்வீகமான நித்தியமான நாராயணனிடமே வசிக்கின்றன. அவனே தலைமையான பிரம்மா, அவனே தீர்த்தம், அவனே தவப்பயன், அவனே முதன்மையானவன், அவனே தேவர்களில் முதன்மையானவன். மேலும் அவனே அனைத்து உயிர்களின் பெரும் தலைவனும் ஆவான். அவன் நித்தியமானவன், பெரும் படைப்பாளி அவனே, அவனே அருளின் உயர்ந்த நிலை. சாத்திரங்கள் அறிந்த கற்றவர்கள் அவனை அறிவதாலேயே பெரும் மகிழ்ச்சியை அடைகின்றனர். அந்தப் பகுதியில் தெய்வீக முனிவர்களும், சித்தர்களும், அனைத்து முனிவர்களும், பெரும் யோகி மற்றும் ஆதி தெய்வமுமான மதுவைக் கொன்றவனுடன் {மதுசூதனனான கிருஷ்ணனுடன்} அங்கேயே வசிக்கின்றனர். அந்தப் பகுதியே அனைத்து புனிதமான இடங்களிலும் முதன்மையானது என்பதில் உனது இதயம் சந்தேகம் கொள்ளாது இருக்கட்டும்.
ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, இவையே நான் உரைத்தபடி பூமியிலுள்ள புனிதமான இடங்களும் தீர்த்தங்களும் ஆகும். ஓ மனிதர்களில் சிறந்தவா, வசுக்கள், சத்யஸ்கள், ஆதித்தியர்கள், மருதர்கள், அசுவினிகள் மற்றும் தேவர்களைப் போன்ற சிறப்பு மிக்க முனிவர்கள் ஆகியோர் இவை அனைத்துக்கும் {முன்பு சொன்ன அனைத்து தீர்த்தங்களுக்கும் புனிதமான இடங்களுக்கும்} அடிக்கடி பயணிக்கின்றனர். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அந்தணர்கள் மற்றும் தவசிகளுடன் மற்றும் உனது அருள் நிறைந்த தம்பிகளுடனும் அங்கெல்லாம் பயணிக்கப்போகும் நீ துயரத்திலிருந்து விடுபடுவாய்!” என்றார் {தௌமியர்}.
லோமசர் வருகை – வனபர்வம் பகுதி 91-யுதிஷ்டிரனிடம் லோமசர் வருகை; இந்திரலோகத்தில் அர்ஜுனன் பெற்ற ஆயுதங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு லோமசர் சொல்லுதல்; யுதிஷ்டிரனுக்கு இந்திரன் சொல்லியனுப்பிய செய்தியையும் சொல்லல்
வைசம்பயானர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ குருகுலத்தின் மகனே {ஜனமேஜயா}, தௌமியர் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கே அந்த இடத்துக்கு பெரும் சக்தி படைத்த லோமசர் வந்தார். பாண்டு மகன்களின் மூத்தவனான அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, தேவலோகத்தில் சக்ரனைச் {இந்திரனைச்} சூழ்ந்த தேவர்களைப் போல தன்னைத் தொடர்பவர்களாலும், உயரிய நேர்மை கொண்ட அந்தணர்களாலும் சூழப்பட்டு இருந்தான். அவரை {லோமசரை} முறைப்படி வரவேற்ற நீதிமானான யுதிஷ்டிரன், அவரது வருகைக்கான காரணத்தையும், அவரது பயணத்தின் நோக்கத்தையும் குறித்து விசாரித்தான்.
இப்படி பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} கேட்கப்பட்ட அந்த சிறப்புமிக்க தவசி {லோமசர்}, மிகவும் திருப்தியடைந்து, பாண்டவர்களுக்கு மகிழ்வூட்டும்படி இனிமையான மொழியில், “ஓ கௌந்தேயா {குந்தியின் மகனே}, நான் எனது விருப்பத்தின்படி அனைத்துப் பகுதிகளுக்கும் பயணித்துக் கொண்டிருந்தபோது, சக்ரனின் {இந்திரனின்} வசிப்பிடத்திற்கு {இந்திரலோகத்திற்குச்} சென்று, அங்கே அந்தத் தேவர்கள் தலைவனைக் கண்டேன். இடது கையாலும் வில்லைப் பயன்படுத்தும் உனது வீரமிகுந்த தம்பி {அர்ஜுனன்}, சக்ரனின் பாதி ஆசனத்தில் அவனுடன் அமர்ந்திருப்பதை அங்கே கண்டேன். ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, இந்த ஆசனத்தில் பார்த்தனை {அர்ஜுனனைக்} கண்ட நான் வியந்தேன். தேவர்களின் தலைவன் {இந்திரன்} என்னிடம், “பாண்டுவின் மகன்களிடம் செல்லும்” என்று சொன்னான்.
இந்திரனின் வேண்டுதலாலும், பிருதையின் {குந்தியின்} உயர் ஆன்ம மகனின் {அர்ஜுனனின்} வேண்டுதலாலும், உன்னையும், உனது தம்பிகளையும் காண, நான் இங்கே விரைவாக வந்தேன். ஓ குழந்தாய், உன்னைத் திருப்தியடையச் செய்யும் காரியத்தை உரைக்கப்போகிறேன். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, ஓ மன்னா, அதை கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடனும்}, உன்னுடன் இருக்கும் முனிவர்களுடனும் கேள். ஓ பாரத குலத்தின் காளையே, ஒப்பிலா ஆயுதத்தை அடைய உன்னால் சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, ருத்திரனிடம் {சிவனிடம்} அதை அடைந்தான். அமுதத்துக்குப் பின்பு எழுந்த பிரம்மசிரம் என்று அழைக்கப்படும் அந்தக் கடும் ஆயுதத்தை ருத்திரன் கடும் தவப்பயன்களால் அடைந்தான். அந்த ஆயுதத்தை, அதை விடுக்கும் மற்றும் திரும்பப்பெறும் மந்திரங்களுடன் அர்ஜுனன் பெற்றுக் கொண்டான்.
ஓ யுதிஷ்டிரா, அளவிடமுடியாத சக்தி கொண்ட அர்ஜுனன், வஜ்ரங்களையும், தண்டங்களையும், மற்ற தெய்வீக ஆயுதங்களையும், யமன், குபேரன், வருணன் மற்றும் இந்திரனிடம் இருந்தும் அடைந்தான். ஓ குரு குலத்தின் மகனே! அவன் குரல் மற்றும் கருவி இசையையும், நடனத்தையும், சாமத்தை {சாம வேதத்தை} முறைப்படி உரைத்தலையும் விஸ்வவசுவின் மகனிடம் முழுவதுமாகக் கற்றிருக்கிறான். இப்படி ஆயுதங்களையும் அடைந்து, கந்தர்வ வேதத்தில் நிபுணத்துவம் அடைந்த உனது மூன்றாவது தம்பியான பீபத்சு {பீபத்சு} (சொர்க்கத்தில்) மகிழ்ச்சியுடன் வாழ்கிறான். ஓ யுதிஷ்டிரா, நான் இப்போது தேவர்களில் முதன்மையானவன் {இந்திரன்} அனுப்பிய செய்தியை உனக்குச் சொல்கிறேன் கேள்.
“அவன் {இந்திரன்} என்னிடம், “நீர் நிச்சயம் மனிதர்களின் உலகுக்குச் செல்வீர் என்பதில் சந்தேகமில்லை. ஓ அந்தணர்களில் சிறந்தவரே {லோமசரே}, எனது இந்த வார்த்தைகளை யுதிஷ்டிரனிடம் சொல்லக்கடவீர். உனது தம்பியான அர்ஜுனன் ஆயுதங்களை அடைந்து, தேவர்களுகளால் செய்ய முடியாத பெரும் சாதனைகளை அவர்களுக்காகச் செய்து விரைவில் உன்னிடம் திரும்புவான். அதே வேளையில், நீ உனது சகோதரர்களுடன் சேர்ந்து உன்னைத் தவச்சாதனைகளுக்கு அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். தவத்தை விட மேன்மையானது எதுவும் கிடையாது. தவப்பயன்களாலேயே ஒரு மனிதன் பெரும் பயன்களை அடைகிறான்.
ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, ஆற்றல், வலிமை மற்றும் பராக்கிரமத்தில் பெரும் தீவிரம் கொண்ட கர்ணன் கலங்கடிக்கப்பட முடியாதவன் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவன் கடும் போரில் நிபுணத்துவம் வாய்ந்தவன் என்றும், அவன் போர்க்களத்தில் எதிரிகளற்றவன் என்றும், அவன் பெரும் வில்லாளி என்றும், அவன் கடுமையான ஆயுதங்களைப் பயன்படுத்தும் செயல்திறம் மிக்க ஒரு வீரன் என்றும் சிறந்த கவசத்தால் பாதுகாக்கப்பட்டவன் என்றும் எனக்கு நன்றாகத் தெரியும். ஆதித்தியனின் அந்த மேன்மைமிக்க மகன் {கர்ணன்} மகேஸ்வரனின் மகனுக்கு {முருகனுக்கு} நிகரானவன் என்றும் எனக்கு நன்றாகத் தெரியும். அகன்ற தோள்கள் கொண்ட அர்ஜுனனின் உயர்ந்த இயற்கையான பராக்கிரமத்தைக் குறித்தும் எனக்கு நன்றாகத் தெரியும்.
போரில், கர்ணன் பிருதையின் {குந்தியின்} மகனுக்கு {அர்ஜுனனுக்கு} பதினாறில் ஒரு பாகம் கூட நிகரானவன் கிடையாது. ஓ எதிரிகளை அடக்குபவனே {யுதிஷ்டிரா}, சவ்யசாசின் {அர்ஜுனன்} சொர்க்கத்தில் இருந்து கிளம்பியதும், நான் உனது இதயத்தில் இருக்கும் கர்ணன் குறித்த பயத்தைப் போக்குகிறேன். ஓ வீரனே, உனது காரியத்தைப் பொறுத்தவரை தீர்த்தங்களுக்கான புனிதப்பயணத்தை உடனே துவங்குவது குறித்து லோமசப் பெருமுனிவர் சந்தேகமற உன்னிடம் பேசுவார். அந்த மறுபிறப்பாளரான முனிவர், தவத்தின் பயன்களைக் குறித்தும், தீர்த்தங்களைக் குறித்தும் உரைக்கும்போது, அதை நீ மதிப்புடன் பெற்றுக் கொள்” என்று கட்டளையிட்டான் {இந்திரன்}” என்றார் {லோமசர்}.
துன்பம் பொறுக்காத அந்தணர்கள் திரும்பட்டும் – வனபர்வம் பகுதி 92-அர்ஜுனனின் வார்த்தைகளை யுதிஷ்டிரனிடம் சொன்ன லோமசர்; பரிவாரத்தின் அளவைக் குறைக்கச் சொன்ன லோமசர்; துன்பம் பொறுக்காத அந்தணர்கள் திருதராஷ்டிரனிடம் சென்றது…
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ யுதிஷ்டிரா, தனஞ்சயன் {அர்ஜுனன்} என்ன சொன்னான் என்பதை இப்போது கேள். அவன், “எனது அண்ணன் யுதிஷ்டிரனை செழிப்புக்கு வழிகாட்டும் அறப்பயிற்சியில் பங்கெடுக்கச் செய்யும். தவத்தைச் செல்வமாகக் கொண்ட {லோமசரே} நீர் உயர்ந்த அற நெறிகளையும், அனைத்துவிதமான தவச்சடங்குகளையும், செழிப்பால் அருளப்பட்ட மன்னர்களின் நித்தியமான கடமைகளையும், தீர்த்தங்களால் மனிதர்கள் அடையும் புனிதப்பயன்களையும் அறிந்தவர். தீர்த்தங்கள் சம்பந்தமான பலன்களை அடைய பாண்டுவின் மகன்களைச் சம்மதிக்க வைக்கக் கடவீர். உமது முழு ஆன்மாவுடன் மன்னன் {யுதிஷ்டிரன்} தீர்த்தங்களுக்குப் பயணித்துப் பசுக்களைத் தானம் செய்யச் சம்மதிக்க வைக்கக் கடவீர்.” என்றான் {அர்ஜுனன்}
இதுவே அர்ஜுனன் என்னிடம் சொன்னது. மேலும் அவன் {அர்ஜுனன்}, “உம்மால் பாதுகாக்கப்பட்ட அவர் {மன்னனான அண்ணன் யுதிஷ்டிரன்} தீர்த்தங்களுக்குப் பயணிக்கட்டும். நீர் அவர் கடக்கமுடியா பகுதிகளையும் முரட்டு மலைகளையும் கடக்கும்போதும் கண்காணித்து, ராட்சசர்களிடம் இருந்து அவரைப் பாதுகாப்பீராக. ததீச, இந்திரனைக் காத்தது போலவும், அங்கிரஸ், சூரியனைக் காத்தது போலவும், ஓ மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே, குந்தியின் மகன்களை நீர் ராட்சசர்களிடம் இருந்து காக்க வேண்டும். வழியில் மலை முகடுகளைப் போன்ற பெரும் ராட்சசர்கள் இருக்கின்றனர். ஆனால் உம்மால் பாதுகாக்கப்பட்ட குந்தியின் மகன்களை அவர்களால் அணுக முடியாது” என்றான் {அர்ஜுனன்}.
இந்திரனின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தும், உன்னை ஆபத்துகளில் இருந்து காக்கும்படியான அர்ஜுனனின் பரிந்துரையின் பேரிலும், நானும் உன்னுடன் பயணிப்பேன். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரனே}, நான் இதற்கு முன் இரு முறை தீர்த்தப்பயணம் {தீர்த்தயாத்திரை} மேற்கொண்டிருக்கிறேன். உன்னுடன் சேர்ந்து மூன்றாவது முறையாக நான் பயணப்படப் போகிறேன். ஓ யுதிஷ்டிரா, மனுவும், மெச்சத்தகுந்த செயல்கள் செய்த மற்ற அரச முனிகளும் தீர்த்தங்களுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அவற்றுக்குப் பயணம் மேற்கொள்வதால் ஒருவனது பயங்கள் விலகுகின்றன. ஓ கௌரவ்யா {குந்தியின் மகனே யுதிஷ்டிரா} நேர்மையற்ற மனதுடையவர்களும், தங்கள் ஆன்மாவைக் கட்டுக்குள் வைக்காதவர்களும், சொற்கேளாத கல்லாதவர்களும் தீர்த்தங்களில் நீராடுவதில்லை. ஆனால் நீ எப்போதும் அறம்சார்ந்த மனநிலையில் இருக்கிறாய். அறநெறிகளை அறிந்திருக்கிறாய். சத்தியங்களில் உறுதியுடன் இருக்கிறாய். உன்னால் இந்த உலகத்தில் இருந்து நிச்சயம் விடுபட முடியும். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, மன்னன் பகீரதன், கயன், யயாதி அல்லது அவர்களைப் போன்றோரைப் போன்றவன் நீ” என்றார் {லோமசர்}.
யுதிஷ்டிரன், “ஓ அந்தணரே, உமக்குப் பதிலுரைப்பதற்கான வார்த்தைகள் கிடைக்காத அளவுக்கு, எனக்கு மகிழ்ச்சி அதிகரிக்கின்றது. தேவர்கள் தலைவன் {இந்திரன்} என்னை நினைவில் வைத்திருப்பதால், என்னைப் போன்ற நற்பேறு பெற்றவர்கள் யார் இருக்க முடியும்? உமது சேர்க்கை கிடைத்தவனும், தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தம்பியாகக் கொண்டவனும், வாசவனால் {இந்திரனால்} நினைக்கப்படுபவனுமான என்னைக் காட்டிலும் நற்பேறு பெற்றவர்கள் யார் இருக்க முடியும்? ஓ சிறப்புமிக்கவரே, தீர்த்தங்களுக்கான புனிதப்பயணத்தைக் குறித்து நீர் சொன்னதுபோலவே, தௌமியரது வார்த்தைகளால் எனது மனது ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளது. ஓ அந்தணரே, பரிந்துரைக்கப்பட்டுள்ள தீர்த்தங்களுக்கான புனிதப் பயணத்தை எந்த நேரத்திலும் மேற்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இஃது எனது உறுதியான தீர்மானமாகும்” என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பரிந்துரைக்கப்பட்ட பயணத்துக்காக மனதைத் தயார் செய்திருந்த யுதிஷ்டிரனிடம் லோமசர், “ஓ பலம்வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, உனது பரிவாரத்தைப் பொறுத்தவரை, அதன் அளவைக் குறைத்துக் கொள். இதனால் நீ செல்வது எளிதாக இருக்கும்” என்றார்.
பிறகு யுதிஷ்டிரன், “பசி தாகத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாத, பயணத்தால் களைப்படைகிற, துன்பம் பொறுக்காத, குளிர்காலத்தின் கடுமையைப் பொறுக்காத, இரந்துண்டு வாழ்பவர்களும் {பிச்சைக்காரர்களும்}, அந்தணர்களும், யோகிகளும் விலகிக் கொள்ளட்டும். இனிய இறைச்சிகளிலும், உறிஞ்சுதல் மற்றும் குடித்தலுக்குரிய உணவுகள் மற்றும் சமைத்த உணவுகளிலும் விருப்பமுடைய அந்தணர்களும் விலகிக் கொள்ளட்டும். விசுவாசத்தின் காரணமாக என்னைத் தொடர்ந்து வந்த குடிமக்களும், இதுவரை முறையான ஊதியம் கொடுத்து நான் வைத்திருந்தவர்களும் மன்னன் திருதராஷ்டிரரிடம் திரும்பிச் செல்லட்டும். அவர் {திருதராஷ்டிரர்} குறித்த நேரத்தில் அவர்களுக்குப் படிகளைக் கொடுப்பார். அந்த மன்னன் சரியான படிகளைக் {ஊதியம்} கொடுக்க மறுத்தால், எங்கள் மனநிறைவுக்காகவும், நன்மைக்காகவும் பாஞ்சாலர்களின் மன்னன் {திரௌபதியின் தந்தையும்,யுதிஷ்டிரனின் மாமனாருமான துருபதன்} அவற்றை அவர்களுக்குக் கொடுப்பார்” என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதனால் துன்புற்ற குடிமக்களும், முக்கியமான அந்தணர்களும், யதிகளும் ஹஸ்தினாபுரம் சென்றனர். நீதிமானான யுதிஷ்டிரன் மீதிருந்த பாசத்தால், அம்பிகையின் அரச மகன் {திருதராஷ்டிரன்} அவர்களை முறையாக வரவேற்று, உரிய படிகளைக் கொடுத்து அவர்களைத் திருப்தி செய்தான். பிறகு குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, சிறு எண்ணிக்கையிலான அந்தணர்களுடன், லோமசரால் உற்சாகப்படுத்தப்பட்டு, காம்யகத்தில் மூன்று இரவுகள் வசித்தான்.”
புனிதப்பயணம் ஆரம்பம் – வனபர்வம் பகுதி 93-யுதிஷ்டிரன் தீர்த்தங்களுக்கான புனிதப்பயணத்தைத் தொடங்கல்; அந்தணர்கள் தங்களையும் அழைத்துச் செல்லுமாறு கேட்டல்; யுதிஷ்டிரன் அவர்களை ஏற்றல்; வியாசர், பர்வதர், நாரதர் ஆகியோர் வருகையும் அவர்களது வாழ்த்துகளும்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்தக் கானகத்தில் (யுதிஷ்டிரனுடன்) வசித்து வந்த அந்தணர்கள், குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} (பக்திமயமான புனிதப்பயணத்திற்கு) புறப்படுவதைக் கண்டு, ஓ மன்னா {ஜனமேஜயா}, அவனை {யுதிஷ்டிரனை} அணுகி, “ஓ மன்னா {யுதிஷ்டிரா}, புனிதமான தீர்த்தங்களை நோக்கிய உனது பயணத்திற்கு, உனது தம்பிகளுடனும், சிறப்புமிக்க முனிவர் லோமசருடனும் புறப்பட்டுவிட்டாய். ஓ! மன்னா, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, எங்களையும் உன்னுடன் அழைத்துச் செல். ஓ குரு குலத்தின் மகனே, நீ இல்லாமல் எங்களால் அத்தீர்த்தங்களுக்குப் பயணம் செய்ய முடியாது. ஆபத்துகள் சூழ்ந்ததும், அடைவதற்கு அரிதானதுமான அவற்றில் {தீர்த்தங்கள்} இரை தேடும் விலங்குகளின் தொந்தரவுகளும் அதிகம் இருக்கும்
ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தத் தீர்த்தங்கள் சிறு குழுக்களில் உள்ள மனிதர்களால் {அந்தணர்களைச் சிறு குழு என்கிறார்களோ என்னவோ} அடைய முடியாதனவாக இருக்கின்றன. வில்லைத் தாங்குபவர்களில் முதன்மையான உனது தம்பிகள் எப்போதும் வீரம் மிகுந்தவர்களாக இருக்கின்றனர். உங்களைப் போன்ற வீரர்களால் பாதுகாக்கப்பட்டு, நாங்களும் அவற்றுக்கு {தீர்த்தங்களுக்கு} முன்னேறுவோம். ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, உனது கருணையால், தீர்த்தங்களால் கிடைக்கும் அருள்நிறைந்த கனியை அடைய அனுமதி கொடு. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, உனது சக்தியால் பாதுகாக்கப்பட்ட நாங்கள், அந்தத் தீர்த்தங்களை அடைந்து, நீராடி எங்கள் பாவங்களைக் கழுவி கொள்ள விடு. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்தத் தீர்த்தங்களில் நீராடுவதால், கார்த்தவீரியனும், அஷ்டகனும், அரசமுனியான லோம்பதரும், ஏகாதிபத்திய வீரனுமான பரதனும் மட்டுமே அடைந்திருக்கும் அடைவதற்குக் கடினமான பகுதிகளைச் {உலகங்களைச்} சந்தேகமற நீயும் அடைவாய்.
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பிரபாசத்தையும் மற்றத் தீர்த்தங்களையும், மகேந்திரத்தையும் மற்ற மலைகளையும், கங்கையையும் மற்ற நதிகளையும், பிலக்ஷத்தையும் மற்ற மரங்களையும் {தலவிருட்சங்களையும்- gigantic trees} உன்னுடன் காண விரும்புகிறோம். ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, உனக்கு அந்தணர்களிடத்தில் ஏதும் மதிப்பு இருக்குமானால், தக்க நடவடிக்கையை எடு. இதனால் நீ நிச்சயம் செழிப்பை அடைவாய். ஓ பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே {யுதிஷ்டிரா}, அத்தீர்த்தங்கள், தவ நோன்புகளுக்கு எப்போதும் தடையை ஏற்படுத்தும் ராட்சசர்களின் தொல்லைகளால் நிரம்பியிருக்கின்றன. எங்களை அவர்களிடம் இருந்து காத்தலே உமக்குத் தகும். லோமசரால் பாதுகாக்கப்பட்டு, எங்களையும் உடன் அழைத்துக் கொண்டு, தௌமியரும், புத்திகூர்மை கொண்ட நாரதரும் பேசிய தீர்த்தங்களுக்கும், பெரும் தவச் செல்வம் கொண்ட தெய்வீக முனிவரான லோமசர் சொன்னவற்றிற்கும் செல். அப்படிச் செல்வதால் உனது பாவங்கள் அனைத்தும் விலகும்” என்றனர்.
அவர்களால் இப்படி மரியாதையுடன் சொல்லப்பட்ட பாண்டுவின் மகன்களில் காளையான மன்னன் {யுதிஷ்டிரன்}, பீமனால் தலைமைதாங்கப்பட்ட தனது தம்பிகளால் சூழப்பட்டு, ஆனந்தக் கண்ணீருடன் அந்தத் தவசிகளிடம், “அப்படியே ஆகட்டும்” என்றான். பிறகு லோமசர் மற்றும் புரோகிதரான தௌமியரின் அனுமதியுடன், பாண்டு மகன்களில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்}, முழு ஆன்மக் கட்டுப்பாட்டுடனும் தீர்மானத்துடனும், தனது தம்பிகளுடனும், துருபதனின் களங்கமற்ற மகளுடனும் {திரௌபதியுடனும்} புறப்பட்டுச் சென்றான். சரியாக அந்த நேரத்தில், அருள்நிறைந்த வியாசரும், புத்திகூர்மை நிறைந்த பர்வதர் மற்றும் நாரதரும் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைக்} காண அங்கே காம்யகத்திற்கு வந்தனர். அவர்களைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், அவர்களை உரியச் சடங்குகளுடன் வழிபட்டான்.
அந்த ஏகாதிபதியால் {யுதிஷ்டிரனால்} இப்படி வழிபடப்பட்ட அந்த அருளப்பட்டவர்கள் யுதிஷ்டிரனிடம், “ஓ யுதிஷ்டிரா, ஓ பீமா, இரட்டையர்களே {நகுல சகாதேவர்களே}, உங்கள் மனதில் இருந்து தீய எண்ணங்களை அகற்றுங்கள். உங்கள் இதயங்களைச் சுத்திகரித்துக் கொண்டு, தீர்த்தங்களுக்குச் செல்லுங்கள். உடல் ரீதியாக விதிகளைக் கடைப்பிடிப்பது பூலோக விரதம் என்றழைக்கப்படுகிறது; அதே வேளையில், தீய எண்ணங்களில் இருந்து விடுபெற இதயத்தைச் சுத்திகரிக்கும் முயற்சி தெய்வீக விரதம் என்று அழைக்கப்படுகிறது என்று அந்தணர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தீய எண்ணங்களில் இருந்து விடுபட்ட மனது உயர்ந்த தூய்மையைக் கொண்டது. ஆகையால், உங்களைச் சுத்திகரித்துக் கொண்டு, நட்புணர்வுகளை மட்டுமே வளர்த்துத் தீர்த்தங்களைக் காணுங்கள். உடல் சார்ந்து பூலோக விரதங்களைக் கடைப்பிடித்துக் கொண்டே, தெய்வீக விரதங்களால் மனதைச் சுத்திகரிப்பவர்களாக இருந்து, ஏற்கனவே உரைகளில் கேட்டவாறு புனிதப்பயணங்களின் கனிகளை அடைந்து கொள்ளுங்கள்” என்றனர்.
“அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} கூடிய பாண்டவர்கள், தெய்வீக மற்றும் மனித முனிவர்களை வழக்கமான சடங்குகளைச் {மங்கல வாழ்த்துகளைச்} செய்ய வைத்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்த வீரர்கள் {பாண்டவர்கள்}, லோமசர், துவைபாயனர்{வியாசர்}, நாரதர் மற்றும் தெய்வீக முனிவரான பர்வதர் ஆகியோரின் பாதங்களை வழிபட்டு தௌமியருடனும், தங்களுடன் கானகத்தில் இருந்த தவசிகளுடனும் மார்கழியின் {Agrahayana} முழு நிலவிற்கு {பௌர்ணமிக்கு} அடுத்த நாளில் {the day following the full moon of Agrahayana} பூசம் நட்சத்திரத்தில் {Pushya} புறப்பட்டனர். மரவுரியும், மான்தோலும், சடா முடியும் தரித்து, துளைக்கமுடியாத கவசத்துடன் வாள்கள் ஏந்தியவாறு அவர்கள் அனைவரும் இருந்தனர். ஓ ஜனமேஜயா, அம்பறாத்தூணிகளுடனும், கணைகளுடனும், குறுவாள்களுடனும், மற்ற ஆயுதங்களுடனும் இருந்த பாண்டுவின் வீர மகன்கள், இந்திரசேனனுடனும், மற்றப் பணியாட்களுடனும், பல சமையற்காரர்களுடனும், பிற வகைகளைச் சேர்ந்த ஊழியர்களுடனும் பதினைந்து தேர்களில் {fourteen and one cars}, கிழக்கு நோக்கிய முகங்களுடன் புறப்பட்டுச் சென்றனர்
தேவர்களும் தைத்திய தானவர்களும்- வனபர்வம் பகுதி 94-தீர்த்தமாடலால் தேவர்களுக்கும், தைத்திய தானவர்களுக்கும் கிடைத்த பலன்களை யுதிஷ்டிரனுக்கு லோமசர் சொன்னது.
யுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னான், “ஓ தெய்வீக முனிவர்களில் சிறந்தவரே {லோமசரே}, நான் பலன்களற்றவனாக என்னைக் கருதவில்லை. இருப்பினும், துக்கத்தால் பாதிக்கப்பட்ட என்னைப் போன்ற வேறொரு மன்னன் இல்லை என்பது போல நான் துயரத்துடன் இருக்கிறேன். எனது எதிரிகள் நற்குணங்கள் மற்றும் அறநெறிகள் அற்றவர்களாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். இருப்பினும், ஓ லோமசரே, இந்த உலகத்தில் அவர்கள் {அந்த எதிரிகள்/பாவிகள்} ஏன் செழிப்புடன் இருக்கின்றனர்?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ மன்னா, ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, எப்போதும் நீ கவலை கொள்ளாதே. பாவிகள் அவர்கள் செய்யும் பாவங்களாலேயே செழிப்புடன் இருக்கிறார்கள். ஒரு மனிதன் தனது பாவங்களின் மூலமாகச் செழிப்படைவதையும், நற்பேறு பெறுவதையும், தனது எதிரிகளை அழிப்பதையும் நாம் காணலாம். இருப்பினும், அழிவு அவனது வேர்களைப் பற்றியிருக்கிறது. ஓ மன்னா, தைத்தியர்களும், தானவர்களும் பாவங்களினால் செழிப்படைவதை நான் கண்டிருக்கிறேன். அதே வேளை அவர்களை {பாவிகளை} அழிவு ஆக்கிரமித்தத்தையும் நான் கண்டிருக்கிறேன். ஓ மேன்மையானவனே {யுதிஷ்டிரா}, இவையனைத்தையும் பழங்காலத்தின் நேர்மையான காலத்தில் நான் கண்டிருக்கிறேன்.
தேவர்கள் அறம்பயின்றனர்; அசுரர்கள் அதைக் கைவிட்டனர். தேவர்கள் தீர்த்தங்களுக்குச் சென்றனர்; அசுரர்கள் அங்குச் செல்லவில்லை. முதலில் அசுரர்கள் கர்வமடைந்தனர். கர்வம் மாயையை உருவாக்கியது; மாயை கோபத்தை உருவாக்கியது. கோபம் அனைத்து விதமான தீய மனப்பான்மைகளையும், வெட்கங்கெட்ட செயல்களையும் உருவாக்கியது. அந்த வெட்கங்கெட்ட நிலையின் காரணமாக அவர்களிடம் இருந்த நன்னடத்தை மறைந்தது. அவர்கள் வெட்கங்கெட்டு, அறம் சார்ந்த மனப்பான்மைகள் அற்று, அற நோன்புகள் அற்றுப் போனதால், மன்னிக்கும் தன்மை, செழிப்பு மற்றும் அறநெறிகள் அவர்களை விரைவில் கைவிட்டன. ஓ மன்னா, பிறகு செழிப்புத் தேவர்களை அடைந்தது; தீயூழ் {துரதிர்ஷ்டம்} அசுரர்களை அடைந்தது.
கர்வத்தால் தங்கள் உணர்வை இழந்த தைத்தியர்களும் தானவர்களும் துரதிர்ஷ்டத்தை அடைந்தனர். கலியும் அவர்களை அடைந்தது. ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, கர்வத்தில் மூழ்கி, சடங்குகள் மற்றும் வேள்விகள் அற்று, உணர்வையும் மதியையும் இழந்து, இதயம் நிறைந்த மாயையைக் கொண்டதால் அவர்களுக்கு விரைவில் அழிவு ஏற்பட்டது. புகழற்றப் போன தைத்தியர்கள் விரைவில் அழித்தொழிக்கப்பட்டனர். கடல்கள், ஆறுகள், தடாகங்கள் மற்றும் புனிதமான இடங்களுக்குச் சென்று தங்களைச் சுத்திகரித்துக் கொண்டு, அறம்சார்ந்த பயிற்சிகள் மேற்கொண்ட தேவர்கள் தங்கள் பாவங்களைக் கழுவிக் கொண்டனர். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, தவநோன்பாலும், வேள்விகளாலும், தானங்களாலும், அருளாலும் அவர்கள் {தேவர்கள்} செழிப்பை அடைந்தனர்.
வேள்விகளையும், புனிதமான செயல்களையும் செய்த தேவர்கள், தீமையான செயல்களைக் கைவிட்டும், தீர்த்தங்களுக்கும் சென்றதால் அவர்கள் பெரும் நற்பேறை அடைந்தனர். ஓ மன்னா, இதனால் வழிகாட்டப்பட்டு, நீ உனது தம்பிகளுடன் தீர்த்தங்களில் நீராடி மீண்டும் செழிப்பை அடைவாயாக. இதுவே நித்தியமான பாதை. ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னன் நிருகன், சிபி, ஔசிநரா {உசீநரன்}, பகீரதன், வசுமனஸ், கயன், புரு, புரூரவஸ் ஆகியோர் தவம் செய்து, தீர்த்தங்களை அடைந்து, புனிதமான நீர்நிலைகளைத் தொட்டு, சிறப்புமிக்கத் தவசிகளைக் கண்டு புகழையும், புனிதத்தையும், பலன்களையும், செல்வங்களையும் அடைந்து, இறுதியாகப் பெரும் செழிப்பையும் அடைந்தனர்.
பிள்ளைகள், நண்பர்கள் மற்றும் தொடர்பவர்கள் ஆகியோருடன் கூடிய இக்ஷவாகு, முசுகுந்தன், மாந்தாத்ரி {மாந்தாதா}, மன்னன் மருத்தன் ஆகியோர் தேவர்களைப் போலவே தவத்தின் சக்தியாலும், தெய்வீக முனிவர்களின் சக்தியாலும் புகழையும் பெரும் பெருமைகளையும் அடைந்தனர். மறுபுறம், பாவங்களில் அடிப்பட்டுக் கிடக்கும் திருதராஷ்டிரன் மகன்கள் அறியாமையால் தைத்தியர்களைப் போல விரைவில் அழிந்தொழிந்து போவார்கள் என்பது சந்தேகத்திற்கிடமில்லாதது ஆகும்” என்றார் {லோமசர்}.
கயனின் வேள்விகள்! – வனபர்வம் பகுதி 95-யுதிஷ்டிரனும் அவனைத் தொடர்பவர்களும் பிரம்மசிரசை அடைவது; யுதிஷ்டிரனுக்கு ஷாமந்தர், கயனின் வேள்விகளைக் குறித்துச் சொல்வது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாண்டுவின் வீர மகன்கள், தங்களைத் தொடர்பவர்களுடன் ஒரு இடம் விட்டு மறு இடம் முன்னேறி கடைசியாக நைமிசத்தை அடைந்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, கோமதியை {கோமதி நதியை} அடைந்த பாண்டவர்கள், அந்த ஓடையிலிருக்கும் புனித தீர்த்தத்தில் நீராடி, நீர்க்கடன் செலுத்தி ஓ! பாரதா பசுக்களையும், செல்வங்களையும் தானம் அளித்தனர். ஓ பாரதா {ஜனமேஜயா}, கன்யா, அஸ்வ, கோ தீர்த்தங்களில் தொடர்ச்சியாகத் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும், அந்தணர்களுக்கும் நீர்க்கடன்கள் செலுத்தி, காலகோடியிலும் மற்றும் விஷப்பிரஸ்த மலைகளிலும் தங்கிய கௌரவர்கள் {பாண்டவர்கள்}, ஓ! மன்னா, பாகுதா {நதியை} அடைந்து அந்த ஓடையில் தங்கள் நீர்க்கடன்களைச் செலுத்தினர்.
ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, அடுத்ததாக, தேவர்களின் வேள்விப்பகுதியான பிரயாகைக்குச் சென்று, கங்கை யமுனையின் சங்கமத்தில் நீராடி பெரும் பலன்களைக் கொடுக்கும் தவ நோன்புகளைப் பயின்றார்கள். உண்மை நிறைந்த சத்தியங்களுடைய பாண்டவர்கள் அத்தீர்த்தத்தில் நீராடி தங்களுடைய அனைத்துப் பாவங்களையும் கழித்துக் கொண்டனர். ஓ! பாரதக் குலத்தின் மன்னா {ஜனமேஜயா}, பிறகு பாண்டுவின் மகன்கள் அந்தணர்களுடன் சேர்ந்து, படைப்பாளனுக்கே {பிரம்மாவுக்கே} புனிதமானதும், தவசிகளால் வழிபடப்படுவதுமான வேதி என்ற தீர்த்தத்திற்குச் சென்றனர். அங்கே சிறிது காலம் தங்கி அந்தணர்களுக்குப் பழங்களும், கிழங்குகளும், தெளிந்த நெய்யும் கொடுத்து திருப்தி செய்த அந்த வீரர்கள் {பாண்டவர்கள்}, பெரும் பலன்கள் தரக்கூடிய தவ நோன்புகளை அங்கே பயின்றனர்.
பிறகு அவர்கள், ஒப்பற்ற பிரகாசம் கொண்ட அறம்சார்ந்த அரச முனி கயனால் புனிதப்படுத்தப்பட்ட {பிரதிஷ்டை செய்யப்பட்ட} மஹிதரத்திற்குச் சென்றனர். அந்தப் பகுதியில் கயசிரஸ் என்ற மலையும், பிரம்பு புதர்கள் நிறைந்த அழகிய கரைகளுடைய காண்பதற்கினிய நதியான மஹாநதியும் இருக்கின்றன. அந்தத் தெய்வீக மலையின் புனிதமான சிகரங்களில் தவசிகளால் பெரிதும் வழிபடப்படும் பிரம்மசிரஸ் என்ற புனிதமான தீர்த்தம் இருக்கிறது. அங்கிருக்கும் தடாகத்தின் கரைகளில், பழங்காலத்தில், தர்மத்தின் நித்திய தேவன் {தர்ம தேவன் = யமன்} வசித்தான். அங்கேதான் சிறப்புமிக்க முனிவரான அகஸ்தியர் அந்தத் தெய்வத்தைக் {யமனைக்} காண வந்தார். அந்தத் தடாகத்தில்தான் அனைத்து ஆறுகளும் உற்பத்தியாகின்றன. அந்தத் தீர்த்தத்தில்தான் பிநாக தாங்கியான மகாதேவன் {சிவன்} வசித்திருக்கிறான்.
அந்தப் பகுதிக்கு வந்த பாண்டுவின் வீர மைந்தர்கள், ரிஷியக்ஞப் பெரு வேள்விக்கான முறைப்படியும் சடங்குகளின் படியும் சாதுர்மாஸ்ய நோன்பைப் பயின்றனர். அங்கேதான் நித்திய ஆலம் என்று அழைக்கப்படும் ஒரு பெரும் மரம் நிற்கிறது. அங்கே செய்யப்படும் எந்த வேள்வியும் நித்தியமான பலன்களை அளிக்கிறது. நித்திய பலன்களை அருளும் தேவர்களின் அந்த வேள்வி மேடையில், ஒருமித்த ஆன்மாவுடன் பாண்டவர்கள் உண்ணா நோன்பிருக்க ஆரம்பித்தனர். மேலும் அங்கே தவத்தைச் செல்வமாகக் கொண்ட அந்தணர்கள் நூற்றுக்கணக்கில் வந்து சேர்ந்தனர். முனிவர்களால் அருளப்பட்ட விதிப்படி சாதுர்மாஸ்ய வேள்வியை அங்கு வந்த அந்தணர்களும் மேற்கொண்டனர். வேதமறிந்தவர்களும், ஞானத்திலும் தவப்பயன்களிலும் முதிர்ந்தவர்களுமான அந்தணர்கள், பாண்டவர்கள் முன்னிலையில் புனிதமான காரியங்கள் குறித்த விவரங்களை அத்தீர்த்தத்தில் வைத்து விவாதித்தனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த இடத்தில்தான், நோன்பு நோற்பவரும் கற்றவரும், பிரம்மச்சாரியுமான புனிதமான ஷாமந்தர் அவர்களிடம் ஆமூர்த்தராயனின் மகன் கயனைக் குறித்துப் பேசினார்.
ஷாமந்தர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஆமூர்த்தராயனின் மகனான கயன் அரச முனிகளில் முதன்மையானவனாக இருந்தான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நான் சொல்லப்போகும் அவனது நற்செயல்களைக் குறித்துக் கேள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இங்கேதான் கயன் (விநியோகிப்பதற்கு) அபரிமிதமான உணவுடனும் (அந்தணர்களுக்கு) பெரும் பரிசுகளுடனும் பல வேள்விகளைச் செய்தான். அந்த வேள்விகளில், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சமைத்த அரிசி {சோறு} நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மலைகளாகவும், தெளிந்த நெய் தடாகமாகவும், தயிர் நூற்றுக்கணக்கான ஆறுகளாகவும், ஆடம்பரமான குழம்புகள் ஓடைகளாகவும் இருந்தன. நாளுக்கு நாள் இவை அனைத்து மூலைகளுக்கும், அந்தணர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டன. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அனைவரும் சுத்தமான உணவைப் பெற்றனர். (அனைத்து வேள்விகளின்) முடிவில் அந்தணர்களுக்குப் பரிசுகள் கொடுக்கப்பட்ட போது, வேத ஒலி சொர்க்கத்தை அடைந்தது. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அவ்வளவு சத்தமாக வேத மந்திரங்களைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இப்படியே அந்தப் புனிதமான ஒலி அனைத்துப் புள்ளிகளையும், பூமியையும், விண்ணையும், ஏன் சொர்க்கத்தையும் கூட நிறைத்தன.
சிறப்புமிக்கக் கயனால் அளிக்கப்பட்ட அற்புதமான உணவுப்பொருட்களாலும், பானங்களாலும் திருப்தியடைந்த மனிதர்கள், ஓ! பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இந்த வரிகளைப் பாடிக் கொண்டே சென்றனர். “கயனின் பெரும் வேள்வியில் இன்று இருக்கும் எந்த உயிரினம் தான் இன்னும் உண்ண விரும்புகின்றன? அனைவரும் உண்ட பிறகும், இன்னும் இருபத்தைந்து மலைகள் உணவு இருக்கின்றன! மகத்தான பிரகாசமிக்க அரச முனி கயனால் அடையப்பட்ட வேள்விப் பயனை இதுவரை எந்த மனிதனும் அடைந்ததில்லை. இனி அடையப்போவதுமில்லை. கயன் அளித்த தெளிந்த நெய்யால் தெவிட்டிப் போய் இருக்கும் தேவர்கள், இனியும் யார் கொடுக்கும் படையலையும் ஏற்கும் நிலையில் இல்லை. பூமியில் மணற்துகள்களைப் போல, ஆகாயத்தில் நட்சத்திரங்களைப் போல, மழையால் நிறைந்திருக்கும் மேகங்கள் பொழியும் துளிகளைப் போல, வேள்வியில் கயன் அளிக்கும் பரிசுகளை ஒருவனால் எண்ண முடியாதே” என்று பாடினர்.
“ஓ! குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, இந்த வர்ணனைகளுக்கு ஏற்ற பல வேள்விகளை மன்னன் கயன், இந்தப் பிரம்மசிரசின் அருகில் செய்திருக்கிறான்” என்றார் {ஷாமந்தர்}.
லோபாமுத்திரையை உருவாக்கிய அகஸ்தியர்! – வனபர்வம் பகுதி 96-இல்வலன், வாதாபி அறிமுகம்; அகஸ்தியர் தனது மூதாதையர்கள் குழிக்குள் தொங்குவதைக் காண்பது; அகஸ்தியர் லோபாமுத்திரையை உருவாக்கி விதரப்ப்ப மன்னனுக்குக் கொடுப்பது; லோபாமுத்திரை விதரப்ப்ப அரச பரம்பரையில் பிறப்பது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இதன் பிறகு, அந்தணர்களுக்குப் பெரும் பரிசுகளைக் கொடுத்து எப்போதும் தனித்துத் தெரியும் குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, அகஸ்தியரின் ஆசிரமத்தை அடைந்து, துர்ஜயத்தில் {வாதாபியின் மணிமதி நகரம்} வசித்தான். இங்கேதான், பேசுபவர்களில் முதன்மையான மன்னன் யுதிஷ்டிரன், லோமசரிடம், அகஸ்தியர் வாதாபியை ஏன் கொன்றார் என்று கேட்டான். மேலும் அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, மனிதர்களை அழிக்கும் தைத்திய {வாதாபி} பராக்கிரமத்தையும், அந்த அசுரன் {வாதாபி} மீது அகஸ்தியருக்கு ஏற்பட்ட கோபத்தின் காரணத்தையும் கேட்டான்–
இப்படிக் கேட்கப்பட்ட லோமசர், “ஓ! குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில் மணிமதி என்று ஒரு நகரம் இருந்தது. அந்நகரத்தில் இல்வலன் என்ற ஒரு தைத்தியன் {அசுரன்} இருந்தான். அவனுக்கு வாதாபி என்ற ஒரு தம்பி இருந்தான். ஒரு நாள் அந்தத் திதியின் மகன் {இல்வலன்}, தவப்பலன் மிக்க ஓர் அந்தணனிடம் “ஓ புனிதமானவரே, எனக்கு இந்திரனுக்கு நிகரான மகனை அருளும்” என்று கேட்டான். இருப்பினும், அந்த அந்தணன் அவ்வசுரனுக்கு இந்திரனைப் போன்ற மகனை அருளவில்லை. இதனால் அவ்வசுரன் அந்தணன் மீது பெரும் கோபம் கொண்டான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்நாளில் இருந்து, அசுரன் இல்வலன் அந்தணர்களை அழிப்பவனானான். மாயச்சக்தி கொண்ட கோபம் நிறைந்த அவ்வசுரன் {இல்வலன்}, தனது தம்பியை செம்மறி ஆட்டுக்கடாவாக மாற்றினான். நினைத்த உரு அடையக்கூடிய வாதாபியும் உடனடியாக ஆட்டுக்கடாவின் உருவத்தை அடைந்தான். சரியாகச் சுத்தம் செய்யப்பட்ட அந்த ஆட்டின் இறைச்சி அந்தணர்களுக்கு உணவாகக் கொடுக்கப்பட்டது. அதை உண்ட பிறகு அவர்கள் கொல்லப்பட்டனர். இல்வலன், தனது குரலால் யாரொருவனைக் கட்டளையிட்டு அழைத்தாலும், அவன் யமனின் வசிப்பிடத்தில் இருந்தாலும், மீண்டும் உயிருடன் கூடிய தனது உடலை அடைந்து இல்வலனிடம் வந்து விடுவான்.
இப்படிச் செம்மறி ஆட்டுக்கடாவாக அசுரன் வாதாபியை மாற்றி, அவனது இறைச்சியை முறைப்படி சமைத்து, அந்தணர்களுக்கு ஊட்டிய பிறகு, அவன் வாதாபியை கட்டளையிட்டு அழைப்பான் {இல்வலன்}. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஓ பூமியின் தலைவா, அந்தணர்களின் எதிரியான பெரிய உருவமும், பெரும் பலமும், மாயச்சக்தியும் கொண்ட அசுரன் வாதாபி, இல்வனின் உரத்தக் குரலைக் கேட்டு, {தனது இறைச்சியை உண்ட} அந்த அந்தணனின் விலாவைக் கிழித்துத் திறந்து சிரித்துக் கொண்டே வெளியே வருவான். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இப்படியாக அந்தத் தீய இதயம் கொண்ட தைத்தியன் இல்வலன், அந்தணர்களுக்கு உணவு படைத்து, தொடர்ச்சியாக அவர்களது உயிரை எடுத்து வந்தான்.
அதேவேளையில், சிறப்புமிக்க அகஸ்தியர், இறந்து போன தனது மூதாதையர்கள், தலைகீழாக ஒரு குழிக்குள் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அப்படிக் குழிக்குள் தொங்கிக் கொண்டிருந்தவர்களிடம் அவர், “உங்களது காரியம் என்ன?” என்று கேட்டார். இப்படிக் கேட்கப்பட்ட பிரம்மனை உச்சரிப்பவர்கள் {மூதாதையர்கள்}, “வாரிசுக்காக” என்றனர். மேலும் அவர்கள், “நாங்கள் உனது மூதாதையர்கள். வாரிசுக்காகவே நாங்கள் இப்படிக் குழிக்குள் தொங்கிக் கொண்டிருக்கிறோம். ஓ! அகஸ்தியா, நீ எங்களுக்காக ஒரு நல்ல மகனைப் பெற்றால், நாங்கள் இந்த நரகத்தில் இருந்து காக்கப்படுவோம். நீயும் அந்த வாரிசினால் உனது உன்னத நிலையை அடையலாம்” என்றர்.
பெரும் சக்தியும், உண்மையும், அறநெறியும் கொண்ட அகஸ்தியர், “பித்ருக்களே, நான் உங்கள் விருப்பதை நிறைவேற்றுவேன். இந்தத் துயரம் உங்களை விட்டு அகலட்டும்” என்றார். பிறகு அந்தச் சிறப்புமிக்க முனிவர் {அகஸ்தியர்} தனது குலத்தைத் தழைக்க வைப்பது குறித்துச் சிந்தித்தார். ஆனால் தானே தனது மகனாகப் பிறக்க, தனக்குத் தகுதியான மனைவியை அவர் காணவில்லை. ஆகையால் அந்த முனிவர் {அகஸ்தியர்}, ஒவ்வொரு உயிரினத்திலும் இருக்கும் மிக அழகான அங்கங்களை எடுத்து ஓர் அற்புதமான பெண்ணைப் படைத்தார். பிறகு அந்த முனிவர், வாரிசுக்காகத் தவநோன்புகளில் இருந்த விதரப்ப்ப நாட்டு மன்னனிடம் தனக்காகப் படைத்த அந்தப் பெண்ணைக் கொடுத்தார்.
(இப்படிக் கொடுக்கப்பட்ட) இனிமையான முகம் கொண்ட அந்த அருளப்பட்ட மங்கை (விதரப்ப்ப அரச பரம்பரையில்) தனது பிறப்பை அடைந்தாள். மின்னலைப் போன்ற பிரகாசத்துடன் அவளது அங்கங்கள் நாளுக்கு நாள் வளர்ந்தன. ஓ பூமியின் தலைவா, விதரப்ப்பத்தின் ஆட்சியாளனான அந்தப் பூமியின் தலைவனின் வாழ்வில் அவள் நுழைந்தவுடன், அவன் {விதரப்ப்ப அரசன்} இந்தச் செய்தியை மகிழ்ச்சியுடன் அந்தணர்களுக்குச் சொல்லி அனுப்பினான். ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தணர்களும் அந்த அருளப்பட்ட பெண்ணுக்கு லோபாமுத்திரை (லோபத்தை அளிப்பவள் = அனைத்து உயிரினங்களின் அழகைக் கவர்பவள்} என்ற பெயரை அளித்தனர். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நீருக்கு மத்தியில் இருக்கும் தாமரை போல அல்லது நெருப்பில் இருக்கும் சுடரைப் போல அவள் பெரும் அழகுடன் விரைவாக வளர்ந்தாள்.
அந்தப் பெண் {லோபமுத்திரை} வளர்ந்து, பருவமடைந்தவுடன், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நூறு கன்னிகளும், நூறு பணிப்பெண்களும் அவளுக்குக் கீழ்ப்படிந்து வேலை செய்யக் காத்திருந்தனர். அந்த நூறு பணிப்பெண்கள் மற்றும் கன்னியர்களால் சூழப்பட்ட அவள், பல நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருக்கும் ரோகிணியைப் போலப் பிரகாசித்தாள். அவள் {லோபமுத்திரை} பருவம் அடைந்த பின்னரும், அவளது நன்னடத்தைகளையும், அற்புதமான குணங்களையும் கண்ட எவரும், அவளது தந்தையான விதரப்ப்ப மன்னனின் மீதிருந்த பயத்தால், அவளது கரத்தைக் கேட்கத் துணியவில்லை. உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த லோபாமுத்திரை, அழகில் அப்சரசுகளையும் விஞ்சி, தனது நடத்தையால், தன் தந்தையையும், தனது உறவினர்களையும் மனநிறைவு கொள்ளச் செய்தாள். விதரப்ப்ப இளவரசியான தனது மகள் பருவமடைந்ததைக் கண்ட தந்தை {விதரப்ப்ப மன்னன்}, தனது மனதிற்குள், “இந்த எனது மகளை நான் யாருக்குக் கொடுக்க வேண்டும்?” என்று நினைத்தான்.
அகஸ்தியர் லோபாமுத்திரை திருமணம்! – வனபர்வம் பகுதி 97-விதரப்ப்ப நாட்டரசன் லோபாமுத்திரையை அகஸ்தியருக்கு அளித்தது; அகஸ்தியர் லோபாமுத்திரையை விலையுயர்ந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் கைவிடச் சொன்னது; பருவ காலத்தில் மனைவியை அணுகிய அகஸ்தியரிடம் விலையுயர்ந்த படுக்கை கோரிய லோபாமுத்திரை…
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இந்தப் பெண் {லோபாமுத்திரை} குடும்பக் கடமைகளை ஆற்றத் தகுந்த பருவத்தை அடைந்துவிட்டாள் என்று அகஸ்தியர் கருதியபோது, அவர் பூமியின் தலைவனான விதரப்ப்ப ஆட்சியாளனிடம் சென்று அவனிடம், “ஓ! மன்னா, உனது மகளான லோபாமுத்திரையை எனக்கு அளிக்குமாறு கோருகிறேன்” என்றார். இப்படி அந்த முனிவரால் சொல்லப்பட்ட விதரப்ப்ப நாட்டு மன்னன் நினைவிழந்தான். அவனது மகளை அந்த முனிவருக்கு {அகஸ்தியருக்கு) கொடுக்க விருப்பமில்லையென்றாலும், மறுப்பதற்கு அவன் துணியவில்லை. பிறகு அந்தப் பூமியின் தலைவன் தனது ராணியிடம் சென்று, “இந்த முனிவர் {அகஸ்தியர்} பெரும் சக்தியுள்ளவராக இருக்கிறார். அவர் கோபப்பட்டால், அவரது சாபமெனும் நெருப்பால் என்னை உட்கொண்டுவிடுவார். ஓ! இனிய முகம் கொண்டவளே, உனது விருப்பம் என்னவென்று என்னிடம் சொல்” என்றான்.
மன்னனின் இந்த வார்த்தைகளைக் கேட்டும் அவள் எவ்வார்த்தையையும் சொல்லவில்லை. துன்பத்துடன் ராணியுடன் இருக்கும் மன்னனைக் கண்ட லோபாமுத்திரை அவர்களைக் குறித்த நேரத்தில் அணுகி, “ஓ! ஏகாதிபதி, என்னைக் குறித்து நீர் வருத்தப்படலாகாது. ஓ! தந்தையே, என்னை அகஸ்தியருக்கு அளியும். அப்படி என்னை அளிப்பதால் உம்மைக் காத்துக் கொள்ளும்” என்றாள். தனது மகளின் இவ்வார்த்தைகளினால், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் {விதரப்ப்ப மன்னன்}, லோபாமுத்திரையைச் சிறப்புமிக்க அகஸ்தியருக்கு உரிய சடங்குகளுடன் கொடுத்தான்.
அவளை மனைவியாக அடைந்த அகஸ்தியர் லோபாமுத்திரையிடம், “இந்த விலையுயர்ந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் கைவிடு” என்றார். தனது தலைவனின் வார்த்தைகளைக் கேட்ட பெரிய கண்களையும், வாழைத்தண்டு போலச் சிறுத்துச் செல்லும் தொடைகளையும் கொண்ட அந்த மங்கை தனது அழகான விலையுயர்ந்த நுண்ணிய அமைப்புக் கொண்ட ஆடைகளைக் கைவிட்டாள். அவற்றைக் கைவிட்டு, கந்தலும் மரவுரியும், மான் தோலும் உடுத்தி நோன்பிலும் செயலிலும் தனது கணவனுக்கு இணையானவளாக ஆனாள். பிறகு கங்காத்துவாரத்தை {கங்கோத்ரியை} அடைந்த முனிவர்களில் சிறந்த ஒப்பற்றவர் {அகஸ்தியர்}, உதவிகரமாக இருந்த தனது மனைவியின் துணையுடன் கடும் தவம் இருந்தார். மிகவும் திருப்தியடைந்த லோபாமுத்திரையும், தனது கணவன் {அகஸ்தியர்} மீதிருந்து பெரும் மரியாதையால் அவருக்குச் சேவை செய்யத் தொடங்கினாள். மேன்மைமிக்க அகஸ்தியரும் தனது மனைவி மீது அளவற்ற அன்பை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கணிசமாகக் காலம் கடந்ததும், ஒரு நாள் அந்தச் சிறப்புமிக்க முனிவர் {அகஸ்தியர்}, பருவகாலத்தில் நீராடி தவப் பிரகாசத்துடன் ஒளிர்ந்த லோபாமுத்திரையைக் கண்டார். அந்தப் பெண்ணின் சேவைகளையும், சுத்தத்தையும், சுயக்கட்டுப்பாட்டையும், அருளையும், அழகையும் கண்டு மிகவும் திருப்தி கொண்ட அவர் அவளை மண உறவு கொள்ள அழைத்தார். இருப்பினும் அந்தப் பெண் {லோபாமுத்திரை}, தனது கரங்களைக் கூப்பி, நாணத்துடனும் அன்புடனும், “ஒரு கணவன், சந்தேகமற வாரிசுக்காகவே ஒரு மனைவியை மணக்கிறான். ஆனால் ஓ! முனிவரே, நான் உம்மீது வைத்திருக்கும் அன்பைப் போல, நீர் என் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதே உமக்குத் தகும். ஓ மறுபிறப்பாளரே {அந்தணரே}, எனது தந்தையின் அரண்மனையில் நான் வைத்திருந்ததைப் போன்ற படுக்கையில் நீர் என்னை அணுகுவதே உமக்குத் தகும். நீர் மலர்மாலை மற்றும் பிற ஆபரணங்களின் அலங்காரத்துடனும் இருக்க வேண்டும் என்றும், தெய்வீக ஆபரணங்கள் பூண்டு கொண்டு நான் உம்மை அணுக வேண்டும் என்றும் விரும்புகிறேன். இல்லையெனில், சிவப்புக்கறைகூடிய இந்தக் கந்தலுடையுடன் நான் உம்மை அணுக முடியாது. ஓ மறுபிறப்பாள முனிவரே, (அத்தகு சமயத்தில்) ஆபரணங்கள் பூணுவது பாவமுமாகாது” என்றாள்.
தனது மனைவியின் {லோபமுத்திரையின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அகஸ்தியர் “ஓ! அருளப்பட்டவளே, ஓ! கொடியிடையாளே, ஓ! லோபாமுத்திரையே, உனது தந்தையிடம் இருப்பது போல என்னிடம் செல்வம் இல்லை” என்றார். அதற்கு அவள், “தவத்தைச் செல்வமாகக் கொண்ட நீர், உமது தவச் சக்தியால், மனிதர்களின் உலகில் கிடைக்கும் அத்தனையையும் நிச்சயம் ஒருக்கணத்தில் கொண்டவரக்கூடியவர்” என்றாள். அகஸ்தியர், “நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. இருப்பினும் அஃது எனது தவப்பலனை வீணடித்துவிடும். எனது தவப்பலன்கள் தளராத வகையிலுள்ள காரியத்தை எனக்குச் சொல்” என்றார். பிறகு லோபாமுத்திரை, “ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, எனது பருவ காலம் நீண்ட காலத்திற்கு நிலைக்காது. இருப்பினும், மற்றபடி {நான் கோரியது இல்லாமல்} நான் உம்மை அணுக விரும்பவில்லை. உமது (தவப்) பலன்களையும் எவ்வகையிலும் அழிக்க நான் விரும்பவில்லை. இருப்பினும், உமது அறத்திற்குப் பழுதேற்படாமல் நான் விரும்பியதைச் செய்வதே உமக்குத் தகும்” என்றாள்.
பிறகு அகஸ்தியர், “ஓ! அருளப்பட்டவளே {லோபமுத்திரையே}, இதுவே நீ உன் இதயத்தில் தீர்மானித்திருக்கும் உறுதியென்றால், நான் செல்வத்தைத் தேடி வெளியே செல்வேன். அதுவரை, நீ இவ்விடத்தில் உனது விருப்பப்படி இருந்துகொள்” என்றார்.
செல்வம் தேடிய அகஸ்தியர்! – வனபர்வம் பகுதி 98-செல்வத்தைத் தேடிச் சென்ற அகஸ்தியர், மன்னர்கள் சுருதர்வான், பிரத்னஸ்வன் மற்றும் திரஸதஸ்யு ஆகியோரிடம் சென்று செல்வம் வேண்டுதல்; அவர்களது வரவு செலவுகள் சமமாக இருப்பதைக் கண்டு அவர்களிடம் இருந்து எதையும் பெறாமல், அவர்களது ஆலோசனையின் பேரில் இல்வலனிடம் செல்ல உத்தேசிப்பது…
லோமசர் தொடர்ந்தார், “ஓ குருகுலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, அகஸ்தியர் பிறகு, மற்ற மன்னர்களை விடச் செல்வந்தனாகக் கருதப்பட்ட மன்னன் சுருதர்வானிடம் செல்வத்தை இரந்து கேட்கச் சென்றார். அந்த ஏகாதிபதி, குடத்தில் பிறந்த முனிவர் {அகஸ்தியர்} தனது நாட்டின் எல்லைக்கு வந்திருப்பதை அறிந்து, தனது அமைச்சர்களுடன் சென்று அந்தப் புனிதமான மனிதரை மரியாதையுடன் வரவேற்றான். மன்னன், முதலில் அர்க்கியத்தைக் (நறுமணமூட்டப்பட்ட குடிநீர்) கொடுத்து, பணிவுடன் கரங்கள் கூப்பி வணங்கி, அம்முனிவரின் வருகைக்கான காரணத்தைக் கேட்டான். அதற்கு அகஸ்தியர், “ஓ பூமியின் தலைவா, செல்வம் விரும்பியே நான் இங்கு வந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள். மற்றவர்கள் யாரும் பாதிக்காதவாறு உன்னால் இயன்ற பங்கை எனக்குக் கொடு” என்று கேட்டார்
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “வரவும் செலவும் சமமாக இருப்பதை அம்முனிவரிடம் தெரிவித்த மன்னன் {சுருதர்வான்}, “ஓ கற்றவரே, எனது உடைமைகளில் இருந்து நீர் விரும்பிய செல்வத்தை எடுத்துக் கொள்ளும்” என்று சொன்னான். இருப்பினும் எப்போதும் இருபுறமும் சம பார்வை பார்க்கும் அந்த முனிவர், ஏகாதிபதியின் வரவு செலவுகளின் சமத்தன்மையைக் கண்டு, தான் எந்தச் சூழ்நிலையிலும் மன்னனிடம் இருந்து எதை எடுத்தாலும் ஏதாவது ஓர் உயிரினம் பாதிக்கப்படும் என்பதை நினைத்துப் பார்த்தார். ஆகையால், அம்முனிவர் சுருதர்வானையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு பிரத்னஸ்வனிடம் சென்றார். பின்னவனும், தனது நாட்டின் எல்லையில் அவரது வருகையை அறிந்து உரிய முறையில் வரவேற்றான். பிரத்னஸ்வனும் அர்க்கியம் மற்றும் பாதங்களைக் கழுவிக்கொள்ள நீரும் கொடுத்தான். பிறகு அந்த ஏகாதிபதி, அவர்களின் வருகைக்கான காரணத்தைக் கேட்டான். அகஸ்தியர், “ஓ பூமியின் தலைவா, செல்வம் விரும்பியே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள். மற்றவர்கள் யாரும் பாதிக்காதவாறு உன்னால் இயன்றதை எங்களுக்குக் கொடு” என்று கேட்டார்
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “தனது வரவும் செலவும் சமமாக இருப்பதைக் காட்டிய அந்த ஏகாதிபதி, “இதை அறிந்த பிறகு, நீர் விரும்பியதை எடுத்துக் கொள்ளும்” என்றான். இருப்பினும் எப்போதும் இருபுறமும் சம பார்வை பார்க்கும் அந்த முனிவர், ஏகாதிபதியின் வரவு செலவுகளின் சமத்தன்மையைக் கண்டு, தான் எந்தச் சூழ்நிலையிலும் மன்னனிடம் இருந்து எதை எடுத்தாலும் அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படும் என்பதை நினைத்துப் பார்த்தார். பிறகு அகஸ்தியர், சுருதர்வான் மற்றும் மன்னன் பிரத்னஸ்வன் ஆகியோர் புருகுத்சன் மகனான பெரும் செல்வம் படைத்த திரஸதஸ்யுவிடம் சென்றனர். அந்த உயர் ஆன்ம திரஸதஸ்யு தனது நாட்டின் எல்லையில் அவர்களது வருகையை அறிந்து, அங்குச் சென்று அவர்களை உரிய முறையில் வரவேற்றான். இக்ஷவாகு குலத்தில் வந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனான அவன், அவர்கள் அனைவரையும் உரிய முறையில் வணங்கி, அவர்கள் வருகையின் காரணத்தைக் கேட்டான். அகஸ்தியர், “ஓ பூமியின் தலைவா, செல்வம் விரும்பியே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள். மற்றவர்கள் யாரும் பாதிக்காதவாறு உன்னால் இயன்றதை எங்களுக்குக் கொடு” என்று கேட்டார்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “தனது வரவும் செலவும் சமமாக இருப்பதைக் காட்டிய அந்த ஏகாதிபதி, “இதை அறிந்த பிறகு, நீர் விரும்பியதை எடுத்துக் கொள்ளும்” என்றான். இருப்பினும் எப்போதும் இருபுறமும் சம பார்வை பார்க்கும் அந்த முனிவர், ஏகாதிபதியின் வரவு செலவுகளின் சமத்தன்மையைக் கண்டு, தான் எந்தச் சூழ்நிலையிலும் மன்னனிடம் இருந்து எதை எடுத்தாலும் அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படும் என்பதை நினைத்துப் பார்த்தார். பிறகு ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த மன்னர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, அம்முனிவரிடம் ஒன்றாக, “ஓ அந்தணரே {அகஸ்தியரே}, இந்தப் பூமியில் உள்ளவர்களிலேயே அதிகச் செல்வமுடைய இல்வலன் என்ற தானவன் ஒருவன் இருக்கிறான். நாம் அனைவரும் சேர்ந்து இன்று அவனை அணுகி, செல்வத்தை இரந்து கேட்போம்” என்றனர்.
லோமசர் தொடர்ந்தார், “ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இந்தப் பரிந்துரை அவர்கள் அனைவருக்கும் சரியானதாகத் தோன்றியது. ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அதன் பிறகு அவர்கள் அனைவரும் ஒன்றாக இல்வலனிடம் சென்றார்கள்
வாதாபியைச் செரித்த அகஸ்தியர்! – வனபர்வம் பகுதி 99அ-செல்வத்தைத் தேடிச் சென்ற அகஸ்தியருக்கு வாதாபியின் இறைச்சியை இல்வலன் படைப்பது; வாதாபியை உண்ட அகஸ்தியர் அவனைச் செரித்தது; அகஸ்தியருக்கும், மூன்று மன்னர்களுக்கும் இல்வலன் செல்வங்களைக் கொடுத்து அனுப்பியது.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அந்த மன்னர்களும், பெரும் முனிவரும் {அகஸ்தியரும்} அவனது ஆட்சிப் பகுதிக்குள் வந்ததை அறிந்து இல்வலன் தனது அமைச்சர்களுடன் சென்று அவர்களை முறைப்படி வழிபட்டான். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா} அந்த அசுரர்களின் இளவரசன் {இல்வலன்} அவர்களை விருந்தோம்பலுடன் வரவேற்று உற்சாகப்படுத்தி, (ஆடாக மாறிய) தனது தம்பியின் {வாதாபியின்} சுத்திகரிக்கப்பட்ட இறைச்சியைக் கொடுத்தான். பெரும் பலம் வாய்ந்த அசுரனான வாதாபி ஆட்டிறைச்சியாகி சமைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அரச முனிகள் துயரமடைந்து உற்சாகமிழந்து, தங்களை இழந்தனர். ஆனால் முனிவர்களில் சிறந்த அகஸ்தியர் அந்த அரச முனிகளிடம், “வருத்தத்தை வளர்க்காதீர்கள். நான் அந்தப் பெரும் அசுரனை உண்பேன்” என்றார்.
பிறகு அந்தப் பெரும் பலம் வாய்ந்த முனிவர் {அகஸ்தியர்} அற்புதமான ஆசனத்தில் அமர்ந்தார். அசுரர்களின் இளவரசனான இல்வலன் உணவைப் புன்னகையுடன் பரிமாறினான். அகஸ்தியர் (ஆடாக மாறிய) வாதாபியின் அந்த முழு இறைச்சியையும் உண்டார். இரவு உணவு முடிந்ததும் இல்வலன் தனது தம்பியை அழைத்தான். ஆனால், ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, அந்த முனிவரின் வயிற்றில் இருந்து ஓரளவு காற்று மட்டுமே மேகத்தின் கர்ஜனையைப் போன்ற உரத்த சத்தத்துடன் வெளி வந்தது. இல்வலன் திரும்பத் திரும்ப “ஓ! வாதாபியே, வெளியே வா” என்று சொன்னான். பிறகு முனிவர்களில் சிறந்தவரான அகஸ்தியர் வெடித்துச் சிரித்து, “அவனால் எப்படி வெளிவர முடியும்? நான் ஏற்கனவே அந்தப் பெரும் அசுரனைச் செரித்து விட்டேன்” என்றார்.
தனது தம்பி செரிக்கப்பட்டதைக் கண்ட இல்வலன் துயரமடைந்து, உற்சாகமிழந்து, தனது அமைச்சர்களுடன் கரங்கள் கூப்பி அந்த முனிவரிடம், “நீர் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்? நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். புன்னகையுடன் அகஸ்தியர் இல்வலனிடம், “ஓ! அசுரா, நீ பெரும் பலசாலி என்றும், அபரிமிதமான செல்வம் படைத்தவன் என்றும் நாங்கள் அறிவோம். இந்த மன்னர்கள் அவ்வளவு செழிப்பாக இல்லை. எனக்கும் செல்வத்தின் தேவை அதிகமாக இருக்கிறது. மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் எங்களுக்கு உன்னால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடு” என்றார். இப்படிக் கேட்கப்பட்ட இல்வலன் முனிவரை வணங்கி, “நான் கொடுக்க எண்ணியிருப்பதை நீர் சொன்னால், பிறகு நான் உமக்குச் செல்வத்தைக் கொடுப்பேன்” என்றான்.
இதைக் கேட்ட அகஸ்தியர், “ஓ! பெரும் அசுரா, நீ இம்மன்னர்கள் ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் பசுக்களையும், பல பொற்காசுகளையும் தர உத்தேசித்திருக்கிறாய். எனக்கு அதைவிட இரு மடங்கையும், ஒரு தங்கத் தேரையும், நினைவைப் போல வேகமாகச் செல்லும் இரு குதிரைகளையும் தர உத்தேசித்திருக்கிறாய். நீ இப்போது விசாரித்தாயானால், உனது தேர் தங்கத்தாலானது என்பதை அறிவாய்” என்றார். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அதன் பிறகு இல்வலன் சில விசாரணைகளைச் செய்து, தான் கொடுக்க எண்ணிய தேர் தங்கத்தாலானதே என்பதை உறுதி செய்தான். பிறகு அந்தத் தைத்தியன் இதயத்தில் சோகத்துடன், நிறைந்த செல்வத்தையும், அந்தத் தேரையும், அதில் பூட்டப்பட்டிருந்த விரவா, சுரவா என்ற இரு புரவிகளையும் {குதிரைகளையும்} கொடுத்தான். ஓ !பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் புரவிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மன்னர்களையும் அகஸ்தியரையும் அனைத்துச் செல்வங்களுடன் அகஸ்தியரின் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றன. பிறகு அந்த அரச முனிகள் அகத்தியரிடம் அனுமதி பெற்று, தங்கள் சொந்த நகரங்களுக்குத் திரும்பினர்.
அகஸ்தியர் (அந்தச் செல்வத்தை வைத்து) தனது மனைவி லோபாமுத்திரை விரும்பிய அனைத்தையும் செய்தார். பிறகு லோபாமுத்திரை, “ஓ! சிறப்புமிக்கவரே, நீர் எனது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றிவிட்டீர். நீர் என்னிடம் பெரும் சக்திபடைத்த பிள்ளையைப் பெற்றுக் கொள்ளும்” என்றாள். அதற்கு அகஸ்தியர், “ஓ! அருளப்பட்ட அழகானவளே, உனது நடத்தையால் நான் மிகவும் திருப்தி கொண்டேன். உனது வாரிசைக் குறித்து நான் சொல்லப்போவதைக் கேள். நீ ஆயிரம் மகன்களை விரும்புகிறாயா? அல்லது பத்து மகன்ளுக்குச் சமமான நூறு மகன்களை விரும்புகிறாயா? அல்லது நூறு மகன்களுக்குச் சமமான பத்து மகன்களை விரும்புகிறாயா? அல்லது ஆயிரம் பேரை வீழ்த்தும் ஒரு மகனை விரும்புகிறாயா?” என்று கேட்டார். அதற்கு லோபாமுத்திரை, “ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே ஆயிரம் பேருக்குச் சமமான ஒரு பிள்ளை பெற என்னை அனுமதியும். பல தீயவர்களைவிட ஒரு நல்ல கற்ற மகனே விரும்பத்தகுந்தவன்” என்றாள்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன அந்தப் பக்திமானான முனிவர் தனக்குச் சமமான நடத்தையும், தனக்கு அர்ப்பணிப்புள்ளவளுமான தனது மனைவியை அறிந்தார். அவள் கருவுற்றதும், அவர் கானகத்திற்குச் சென்றார். அந்த முனிவர் சென்றதும், அந்தக்கரு ஏழு வருடங்களாக வளர ஆரம்பித்தது. ஏழாம் ஆண்டு முடிந்ததும், பெரும் கல்வி கற்றவரான திரிதஸ்யு தன்னொளிப் பிரகாசத்துடன் கருவறையில் இருந்து வெளியே வந்தார். அந்தப் பெரும் அந்தணர், பெரும் சக்தி கொண்ட சிறப்புமிக்கத் துறவி ஒரு முனிவரின் மகனாகத் தனது பிறப்பை அடைந்து, கருவறையில் இருந்து வெளியே வந்ததும் வேதங்களையும், உபநிஷத்துகளையும், அங்கங்களையும் உரைக்க ஆரம்பித்தார். குழந்தையாக இருக்கும்போதே பெரும் சக்தி பெற்ற அவர் வேள்விக்கான எரிபொருளைத் தனது தந்தையின் ஆசிரமத்திற்குச் சுமந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதனால் இத்மவாஹன் (வேள்வி விறகைச் சும்பபவர்) என்ற பெயரில் அழைக்கப்பட்டார். தனது மகனை இத்தகு அறங்களுடன் கண்ட முனிவர் {அகஸ்தியர்} பெரிதும் மகிழ்ந்தார்.
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இப்படியே அகஸ்தியர் தனது மூதாதையர்கள் நிமித்தமாக அற்புதமான மகனைப் பெற்றெடுத்து அவர்கள் {மூதாதையர்கள்} விரும்பிய அற்புதமான உலகங்களை அடைய வைத்தார். அந்தக் காலத்தில் இருந்தே இந்த இடம் அகஸ்தியரின் ஆசிரமமாக அறியப்படுகிறது. ஓ! மன்னா, உண்மையில் இது பிரஹ்ரதக் குலத்தைச் சார்ந்த வாதாபியைக் கொன்ற அகஸ்தியரின் பல அழகுகளைக் கொண்ட அருளப்பட்ட ஆசிரமமே.
தேவர்களாலும் கந்தர்வர்களாலும் வழிபடப்படும் இந்தப் புனிதமான பாகீரதி நதி, ஆகாயத்தில் காற்றால் ஆட்டம்போடும் நீண்ட முக்கோண வடிவக் கொடியைப் போல விரைவாக ஓடுகிறது. அங்கே பாறைகள் நிறைந்த மலை உச்சிகளில் ஓடி, கீழ்நோக்கி இறங்கி, பயந்த பெண்பாம்பு போல மலைகளின் இறக்கத்தில் ஓடி, மகாதேவனின் சடாமுடியில் இருந்து வெளியேறும் அவள், தென்னாட்டிற்குள் பிரவாகமாக ஓடி, தாயைப் போல நன்மை செய்து, விருப்பமான மனைவியைப் போலக் கடலுக்கு விரைந்தோடி அதனுடன் கலக்கிறாள். பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, நீ விரும்பியவாறு அந்தப் புனித நதியில் நீராடு. ஓ! யுதிஷ்டிரா, அங்கே முனிவர்களால் வழிபடப்பட்டு, மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் பிருகு தீர்த்தத்தைப் பார். அங்கே நீராடிய (பிருகு குல) ராமன் {பரசுராமன்} (தசரதனின் மகனான) ராமனால் இழந்த சக்தியை மீண்டும் பெற்றான். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, இங்கே உனது தம்பிகளுடனும் கிருஷ்ணையுடன் {திரௌபதியுடனும்} நீராடினால், தசரதனின் மகனுடன் பகை கொண்ட நடந்த போரில் ராமனின் {பரசுராமனின்} சக்தி இழந்து போய் மீண்டும் இங்கே அடைந்ததைப் போலத் துரியோதனனால் எடுக்கப்பட்ட உனது சக்தியை நீ மீண்டும் அடைவாய்.” என்றார் {லோமசர்}.
ராமன், பரசுராமன் மோதல்! – வனபர்வம் பகுதி 99ஆ-பரசுராமன் தசரத ராமனைச் சந்தித்து தனது வில்லைக் கொடுத்துப் பரிசோதிப்பது; பரசுராமனின் கர்வத்தைப் பங்கப்படுத்திய ராமன்; சக்தியை இழந்த பரசுராமன் பிறகு வதூசரம் என்ற நதிக்குச் சென்று தனது இழந்த சக்தியை மீண்டும் பெறுவது…
வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ! பாரதா {ஜனமேஜயா}, லோமசரின் வார்த்தைகளைக் கேட்ட யுதிஷடிரன் தனது தம்பிகளுடனும், கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடனும்} சேர்ந்து அங்கே {கங்காத்துவாரத்தில்} நீராடி, தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன்களைச் செலுத்தினான். ஓ! மனிதர்களில் காளையே {ஜனமேஜயா}, யுதிஷ்டிரன் அந்தத் தீர்த்தத்தில் நீராடிய பிறகு, அவனது உடல் அதிகப் பிரகாசத்துடன் ஒளிர்ந்து, எதிரிகளின் கண்களுக்கு அரூபமானான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} லோமசரிடம், “ஓ! சிறந்தவரே, ஏன் ராமனின் {பரசுராமனின்} சக்தியும் பலமும் எடுக்கப்பட்டது? அதன் பிறகு அவர் எப்படி அதை மீட்டெடுத்தார்? ஓ! மேன்மையானவரே, நான் உம்மிடம் கேட்கிறேன். அனைத்தையும் சொல்வீராக” என்றான்.
லோமசர் சொன்னார், “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, (தசரதன் மகனான) ராமன் மற்றும் பிருகு குலத்தின் புத்திகூர்மைகொண்ட ராமன் {பரசுராமன்} ஆகியோரின் வரலாறுகளைக் கூறுகிறேன் கேள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ராவணனின் அழிவிற்காக விஷ்ணு தனது சொந்த உடலுடன், சிறப்புமிக்கத் தசரதனிடத்தில் பிறந்தான். தசரதனின் மகன் {ராமன்} பிறந்ததும், அயோத்தியையில் நாம் அவனைக் கண்டோம். பிறகுதான் ரிசகரின் மகனான பிருகு குலத்தின் ரேணுகா மூலம் பிறந்த ராமன் {பரசுராமன்}, களங்கமற்ற செயல்கள் புரிந்த தசரதனின் மகனான ராமனைக் குறித்துக் கேள்விப்பட்டு அயோத்திக்குச் சென்றார். ஆர்வ மிகுதியால் அவர் க்ஷத்திரியர்களுக்கு மரணத்தைக் கொடுத்த தெய்வீக வில்லையும் தசரத மைந்தனின் பராக்கிரமத்தை உறுதி செய்ய எடுத்துச் சென்றார்
பிருகு குலத்தின் ராமன் {பரசுராமன்} தனது நாட்டுக்குள் வந்ததை அறிந்த தசரதன், அந்த வீரரை உரிய மரியாதையுடன் அழைத்துவர தனது சொந்த மகனான ராமனை அனுப்பி வைத்தான். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, தசரதனின் மகன் தன்னை அணுகுவதையும், ஆயுதங்களுடன் தயாராக இருப்பதையும் கண்ட பிருகு குல ராமன் {பரசுராமன்} புன்னகையுடன் அவனிடம் {தசரத ராமனிடம்}, ஓ! மன்னா, ஓ! மேன்மையானவனே, க்ஷத்திரிய குலத்தை அழிக்க நான் பயன்படுத்திய கருவியான எனது கைகளில் இருக்கும் இந்த வில்லில், உன்னால் இயன்றால், உனது பலத்தையெல்லாம் பிரயோகித்து நாணேற்று” என்று சொன்னார். இப்படிச் சொல்லப்பட்ட தசரதன் மகன் {ராமன்}, “ஓ சிறப்புமிக்கவரே, என்னை இப்படி அவமதிப்பது உமக்குத் தகாது. நான் க்ஷத்திரிய வகையின் அறங்களுக்குத் தாழ்ந்த மறுபிறப்பாளர் {அந்தண} வகையைச் சார்ந்தவனல்ல. குறிப்பாக இக்ஷவாகுவின் வழித்தோன்றல்கள் யாரும் தங்கள் கரங்களின் பராக்கிரமம் குறித்துத் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை” என்றான்.
பிறகு தசரதன் மகனிடம் {ராமனிடம்}, பிருகு குல ராமன் {பரசுராமன்}, “அனைத்துத் தந்திரப் பேச்சுகளையும் நிறுத்து. ஓ மன்னா! இந்த வில்லை எடு” என்றார். இதற்குத் தசரதனின் மகனான ராமன், பிருகு குல ராமனின் {பரசுராமனின்} கைகளில் இருந்த க்ஷத்திரியர்களுக்கு அழிவைக் கொடுத்த வில்லைக் கோபத்துடன் வாங்கினான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரன் {தசரத ராமன்} புன்னகையுடன் சிறு முயற்சியும் இல்லாமல், அந்த வில்லில் நாண்பூட்டி அனைத்து உயிரினங்களையும் பயங்கொள்ளச் செய்யும் நாணொலியை எழுப்பினான். தசரதனின் மகனான ராமன், பிருகுவின் ராமனிடம் {பரசுராமனிடம்}, “இதோ. இந்த வில்லுக்கு நாண் பூட்டிவிட்டேன். ஓ! அந்தணரே, நான் வேறு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு ஜமதக்னியின் மகனான ராமன் {பரசுராமன்}, தசரதனின் சிறப்புமிக்க மகனிடம் {ராமனிடம்} ஒரு தெய்வீகக் கணையைக் கொடுத்து, “ஓ! வீரனே {தசரத ராமா}, இந்தக் கணையை வில்லின் நாணில் பொருத்தி, நாணை உனது காது வரை இழு” என்றார்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இதைக் கேட்ட தசரதனின் மகன் {ராமன்} கோபத்தில் எரிந்து, “நீர் சொன்னதை நான் கேட்டேன். மன்னித்தும் விட்டேன். ஓ! பிருகு குலத்தின் மகனே {பரசுராமனே}, நீர் கர்வம் நிறைந்து இருக்கிறீர். பெருந்தகப்பனின் {பிரம்மாவின்} கருணையால் பெற்ற சக்தியைக் கொண்டே நீர் க்ஷத்திரியர்களுக்கு மேன்மையானவராக இருக்கிறீர். அதனால் தான் நீர் என்னை அவமதிக்கிறீர். எனது சுய உருவைப் பாரும். நான் உமக்குப் பார்வையைத் தருகிறேன்” என்றான்.
ஓ! பாரதா, ஓ! யுதிஷ்டிரா, பிறகு பிருகு குலத்தின் ராமன் தசரதன் மகனின் உடலில் வசுக்களுடன் கூடிய ஆதித்தியர்களையும், ருத்ரர்களையும், மருதர்களுடன் கூடிய சத்யஸ்களையும், பித்ருக்களையும், ஹூதாசனனையும், நட்சத்திரக் குவியல்களையும், கோள்களையும், கந்தர்வர்களையும், ராட்சசர்களையும், யஹர்களையும், ஆறுகளையும், தீர்த்தங்களையும், பிரம்மனால் அடையாளங்காட்டப்பட்ட முனிவர்களில் நித்தியமான வாலகில்யர்களையும், தெய்வீக முனிவர்களையும், கடல்களையும், மலைகளையும், உபநிஷத்துகள், வசத்துகளுள், வேள்விகளுடன் கூடிய வேதங்களையும், சமன்களின் உயிர்த்தோற்றத்தையும், ஆயுத அறிவியலையும், மழையுடன் கூடிய மேகங்களையும், மின்னலையும் கண்டார்.
பிறகு சிறப்புமிக்க விஷ்ணு அந்தக் கணையை அடித்தான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இடி மற்றும் எரிகற்களின் ஓசை உலகத்தை நிறைத்து வானத்தில் மின்னல் தோன்ற ஆரம்பித்தது. பூமியின் பரப்பு மீது தூசி மற்றும் மழை பொழிய ஆரம்பித்தது. சுழற்காற்றும், பயங்கரச் சத்தமும் அனைத்தையும் அதிரச் செய்தன. பூமி நடுங்க ஆரம்பித்தாள். ராமனின் கரங்களால் அடிக்கப்பட்ட அந்தக் கணை மற்ற ராமனின் {பரசுராமனின்} சக்தியைக் குழப்பி, {தசரத} ராமனின் கரங்களுக்கே திரும்ப வந்து சேர்ந்தது. இப்படி உணர்வை இழந்த பார்க்கவர் {பரசுராமன்}, மீண்டும் சுயநினைவை அடைந்து விஷ்ணு சக்தியின் வடிவமான {தசரத} ராமனைப் பணிந்தார்.
அந்த விஷ்ணுவின் கட்டளையின் பேரில் அவர் மகேந்திர மலைகளுக்குச் சென்றார். அதுமுதல் அந்தப் பெரும் தவசி அச்சத்துடனும் அவமானத்துடனும் அங்கே வசிக்க ஆரம்பித்தார். பிறகு ஒரு வருடம் கழிந்ததும் சக்தி இழந்து கர்வபங்கப்பட்டு, துயரத்தில் இருந்த ராமனைக் {பரசுராமனைக்} கண்ட பித்ருக்கள் அவரிடம், “ஓ! மகனே, விஷ்ணுவை அணுகிய நீ நடந்து கொண்ட முறை சரியானதல்ல. மூன்று உலகங்களிலும் அவன் உனது வழிபாட்டுக்குகந்தவன். ஓ! மகனே, போ. வதூசரம் என்ற பெயர் கொண்ட புண்ணிய நதிக்குச் செல். அந்த நதியில் இருக்கும் அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடி உனது இழந்த சக்தியை மீட்டெடு. ஓ! ராமா {பரசுராமா}, அந்த நதியில், தெய்வீகக் காலத்தில், உனது பெரும்பாட்டனான பிருகு தவம்பயின்று பெரும் பலனடைந்த தீப்தோத்தம் என்ற தீர்த்தங்கள் இருக்கின்றன” என்றனர். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இப்படி அவர்களால் சொல்லப்பட்ட ராமன் {பரசுராமன்}, தனது பித்ருகளுக்குப் பிரியாவிடை கொடுத்து அந்தத் தீர்த்தங்களுக்குச் சென்று தனது சக்தியை மீண்டும் அடைந்தார். இது பழங்காலத்தில் களங்கமற்ற ராமனுக்கு {பரசுராமனுக்கு}, (தசரதன் மகனின் {ராமனின்} உருவத்தில் இருந்த) விஷ்ணுவை சந்தித்த பிறகு ஏற்பட்ட நிலையாகும்” என்றார் {லோமசர்}.
தனது எலும்புகளைக் கொடுத்த ததீசர்! – வனபர்வம் பகுதி100-விருத்திரனைத் தலைமையாகக் கொண்ட காலகேயர்கள் தேவர்களை விரட்டுவது; தேவர்களுக்குப் பிரம்மன் விருத்திரனைக் கொல்லும் உபாயத்தைச் சொல்லல்; தேவர்கள் ததீச முனிவரை அடைந்து அவரது எலும்புகளை இரந்து கேட்டல்; ததீசர் தனது உடலைத் துறத்தல்; ததீசரின் எலும்புகளைக் கொண்டு துவஷ்டிரி வஜ்ராயுதத்தை உருவாக்குதல்…
யுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னான், “ஓ மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே, சிறப்புமிக்கப் பெரும் புத்திகூர்மையுள்ள முனிவரான அகஸ்தியரின் சாதனைகளை விரிவாக நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.
லோமசர் சொன்னார், “ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அகஸ்தியரின் அற்புதமான இயல்புக்கு மிக்க வரலாற்றைக் கேள். ஓ ஏகாதிபதி, கட்டுக்கடங்கா சக்தியும் பராக்கிரமும் படைத்த அம்முனிவரை {அகஸ்தியரைப்} பற்றிக் கேள். கிருத யுகத்தில் கடுமையான தானவர்களில் குறிப்பிட்ட இனங்கள் போரில் வீழ்த்தப்பட முடியாதவர்களாக இருந்தனர். காலகேயர்கள் என்ற பெயர் கொண்ட அவர்கள் கடும் பராக்கிரமத்துடன் இருந்தார்கள். அவர்கள் தங்களை விருத்திரனுக்குக் கீழ் அமர்த்திக் கொண்டு, வித்தியாசமான ஆயுதங்களுடன் இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களை எல்லாத் திக்குகளிலும் துரத்தினர்.
பிறகு தேவர்கள் அனைவரும் விருத்திரனுடைய அழிவைத் தீர்மானிக்க இந்திரனின் தலைமையில் பிரம்மனிடம் சென்றார்கள். கரங்கள் கூப்பி நின்ற அவர்களைக் கண்ட பரமேஷ்டி {பிரம்மா} அவர்களிடம், “தேவர்களே, நீங்கள் என்ன தேடுகிறீர்கள் என்பது உட்பட அனைத்தும் என்னால் அறியப்பட்டிருக்கிறது. இப்போது விருத்திரனைக் கொல்லும் வழியை உங்களுக்குக் குறிப்பிடுகிறேன். ததீசர் {Dadhicha} என்ற பெயரில் உயர் ஆன்மா கொண்ட ஒரு பெரும் முனிவர் இருக்கிறார். நீங்கள் அனைவரும் ஒன்றாக அவரிடம் சென்று ஒரு வரத்தைக் கேளுங்கள். பெரும் திருப்தி கொண்ட இதயத்துடன், அற ஆன்மா கொண்ட அந்த முனிவர் {ததீசர்} அந்த வரத்தை உங்களுக்குக் கொடுப்பார். வெற்றியில் விருப்பம் உள்ள நீங்கள் அனைவரும் அவரிடம் {ததீசரிடம்} சென்று, “மூன்று உலகங்களின் நன்மைக்காகவும் எங்களுக்கு உமது எலும்புகளைத் தர வேண்டும்” என்று சொல்லுங்கள்.
அவர் {ததீசர்} தனது உடலைத் துறந்து, அவரது எலும்புகளை உங்களுக்குத் தருவார். அந்த எலும்புகளைக் கொண்டு, ஆறு பக்கங்கள் {ஆறு படிகள்} கொண்ட, பயங்கரமான சத்தத்துடன் மிகப் பலம் வாய்ந்த எதிரியையும் அழிக்கவல்ல வஜ்ரம் என்ற கடும் ஆயுதத்தைச் செய்யுங்கள். அந்த ஆயுதத்தைக் கொண்டு நூறு வேள்விகள் செய்தவன் {இந்திரன்} விருத்திரனைக் கொல்வான். அனைத்தையும் நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன் இவற்றை விரைவாகச் செய்யுங்கள்” என்றான் {பிரம்மன்}. இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள் பெருந்தகப்பனிடம் இருந்து வந்து, நாராயணனைத் தலைமையாகக் கொண்டு ததீசரின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.
அந்த ஆசிரமம் சரஸ்வதி நதியின் அக்கரையில் வித்தியாசமான மரங்கள் மற்றும் கொடிகள் சூழ இருந்தது. அங்கே இருந்த வண்டுகளின் ஒலி சாம வேதம் ஒலிக்கு நிகராக இருந்தது. அங்கே ஆண் கோகிலம் {குயில்} மற்றும் சகோரப் பறவைகளின் இசை நிறைந்திருந்தது. எருமைகளும், பன்றிகளும், மான்களும், சமரங்களும் புலி குறித்த பயமின்றி இன்பமாகத் திரிந்தன. மதம் பெருகிய யானைகள் ஓடையில் மூழ்கி, பெண் யானைகளுடன் விளையாடிக் கொண்டு அந்த இடத்தைத் தங்கள் பிளிறல்களால் நிரப்பின. அந்த இடம் சிங்கங்கள் மற்றும் புலிகளின் கர்ஜனையாலும் நிறைந்திருந்தது. அந்தக் காட்டின் அச்சுறுத்தும் ஏகாதிபதிகளான அவை குகைகளிலும் குறுகிய பள்ளத்தாக்குகளிலும் அவ்வப்போது அழகாகக் காணப்பட்டன. இப்படித் தேவர்கள் நுழைந்த அந்தத் ததீசரின் ஆசிரமம் சொர்க்கத்தைப் போல இருந்தது.
அங்கே ததீசர் சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருப்பதையும், பெருந்தகப்பனைப்போல இருப்பதையும் அவர்கள் {தேவர்கள்} கண்டனர். தேவர்கள் அனைவரும் அந்த முனிவரின் பாதங்களைப் பணிந்து வணங்கி, பெருந்தகப்பன் {பிரம்மன்} கேட்கச் சொன்ன அந்த வரத்தை அவரிடம் {ததீசரிடம்} இரந்து கேட்டனர். பிறகு மிகவும் திருப்தியடைந்த ததீசர், தேவர்களில் முதன்மையானவர்களிடம் {இந்திரனிடம்}, “தேவர்களே, உங்களுக்கு எது நன்மையோ அதை நான் செய்வேன். எனது உடலை நானே துறக்கிறேன்” என்று சொன்னார். ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அந்த மனிதர்களில் முதன்மையானவர் {ததீசர்}, இப்படிச் சொன்னவுடன் தனது உயிரைத் துறந்தார். மரித்த அந்த முனிவரிடம் இருந்து, ஏற்கனவே {பிரம்மனால்} வழிகாட்டப்பட்டது போல எலும்புகளை எடுத்தனர். பிறகு இதயம் மகிழ்ந்த தேவர்கள், {தேவலோக தச்சர்களில் ஒருவனான} துவஷ்டிரியிடம் {Twashtri} சென்று, அவனிடம் வெற்றியின் வழிகள் குறித்துப் பேசினர்.
அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட துவஷ்டிரி மகிழ்ச்சியில் மூழ்கி, (அந்த எலும்புகளைக் கொண்டு) மிகக் கவனத்துடன் கடுமையான ஆயுதமான வஜ்ரத்தை {Vajra} உருவாக்கினான். அதைத் தயாரித்த பிறகு மிக மகிழ்ச்சியுடன் இந்திரனிடம், “ஓ மேன்மையானவனே, ஆயுதங்களில் முதன்மையான இதைக் கொண்டு தேவர்களின் எதிரிகளைச் சாம்பலாக்கு. ஓ தேவர்கள் தலைவனே {இந்திரா}, எதிரிகளைக் கொன்ற பிறகு மகிழ்ச்சியாகத் தேவலோகத்தையும், உன்னைத் தொடர்பவர்களையும் ஆட்சி செய்” என்றான் {துவஷ்டிரி}. துவஷ்டிரியால் இப்படிச் சொல்லப்பட்ட புரந்தரன் {இந்திரன்}, மகிழ்ச்சியுடனும் உரிய மரியாதைகளுடனும் வஜ்ரத்தைத் தனது கைகளில் எடுத்துக் கொண்டான்.
விருத்திரன் வதம்! – வனபர்வம் பகுதி101-விஷ்ணு, தேவர்கள் மற்றும் முனிவர்கள் ஆகியோர் இந்திரனுக்குத் தங்கள் பலங்களைக் கொடுப்பது; இந்திரன் வஜ்ரத்தை வீசி விருத்திரனைக் கொல்வது; தலைவனில்லாத தானவர்கள் பீதியில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொள்வது; அங்கிருந்து மூன்று உலகத்தையும் அழிக்க அவர்கள் சதி தீட்டுவது…
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “வஜ்ரத்தைத் தாங்கி, பெரும் பலம் பொருந்திய தேவர்கள் துணையுடன் இருந்த இந்திரன், வானத்தையும் பூமியையும் ஆக்கிரமித்து இருந்த {அசுரன்} விருத்திரனை அணுகினான். அனைத்துப் புறங்களிலும் காலகேயர்களால் காக்கப்பட்ட அவன் {விருத்திரன்}, உயர்ந்த சிகரங்களையுடைய பெரும் மலைகளைப் போல இருந்த ஆயுதங்களை உயர்த்திக் கொண்டிருந்தான். ஓ பாரதர்களின் தலைவா {யுதிஷ்டிரா} தேவர்களுக்கும் தானவர்களுக்குமான அந்த மோதல் சிறிது நேரமே நீடித்தாலும் எல்லையில்லா பயங்கரமாக இருந்தது. அந்தக் கடும் மோதலின் போது, வீரர்களின் கைகளில் உயர்ந்தும் தாழ்ந்தும் மோதிய வாட்கள் மற்றும் கத்திகளின் ஒலி பயங்கரமாக இருந்தது. பனைமரத்தின் குலைகளில் இருந்து நழுவி தரையில் விழும் பனம்பழங்கள் போல (உடலில் இருந்து வெட்டப்பட்ட) தலைகள் வானத்தில் இருந்து பூமியை நோக்கி விழுந்தன.
இரும்பாலான கைத்தடிகளை ஏந்தி, பொற்கவசம் பூட்டிய காலகேயர்கள் தேவர்களை எதிர்த்து, எதிரியும் நெருப்பில் நகர்ந்து செல்லும் மலைகளைப் போல ஓடினார்கள். மூர்க்கத்துடனும், கர்வத்துடனும் முன்னேறி வரும் எதிரிகளைக் கண்ட தேவர்கள் அதிர்ச்சியடைந்து பயத்தால் ஓடினர். தேவர்கள் பயத்தில் ஓடுவதையும், விருத்திரன் தைரியத்தால் வளர்ந்து வருவதையும் கண்ட ஆயிரம் கண் புரந்தரன் {இந்திரன்}, மிக வாட்டமடைந்தான். தேவர்களில் முதன்மையான அந்தப் புரந்தரன், காலகேயர்கள் மேல் இருந்த பயத்தால் ஒரு கணமும் தாமதிக்கமால் மேன்மையான நாராயணனின் அபயத்தை வேண்டினான்.
மிகுந்த துயரத்தில் இருந்த இந்திரனைக் கண்ட நித்தியமான விஷ்ணு, தனது சொந்த சக்தியை அவனுக்குக் கொடுத்தான். விஷ்ணுவால் இப்படிப் பாதுகாக்கப்பட்ட சக்ரனை {இந்திரனைக்} கண்ட தேவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் சக்தியையும் அவனுக்கு அளித்தனர். களங்கமற்ற பிரம்ம முனிவர்களும் தங்கள் சக்திகளைத் தேவர்கள் தலைவனுக்குக் கொடுத்தார்கள். விஷ்ணுவாலும், அனைத்து தேவர்களாலும், உயர் ஆன்ம முனிவர்களாலும் இப்படி உதவப்பட்ட சக்ரன் முன்பை விட மிகுந்த பலம் பெற்றான்.
தேவர்கள் தலைவன் {இந்திரன்} மற்றவர்கள் பலத்தால் நிறைந்திருக்கிறான் என்பதை அறிந்த விருத்திரன் பயங்கரமாகக் கர்ஜித்தான். அவனது கர்ஜனையால் பூமியும், திசைகளும், வானமும், தேவலோகமும், மலைகளும் நடுங்க ஆரம்பித்தன. அந்தப் பயங்கரமான கர்ஜனையைக் கேட்ட தேவர்கள் தலைவன் பெரும் குழப்பமடைந்து அச்சத்தால் நிறைந்து, விரைவாக அந்த அசுரனை {விருத்திரனைக்} கொல்ல விரும்பி பெரும் பலம் வாய்ந்த வஜ்ராயுதத்தை வீசினான். இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்குண்ட, மாலையும் தங்கமும் அணிந்த அந்தப் பெரும் அசுரன், பழங்காலத்தில் விஷ்ணுவின் கைகளில் இருந்து விழுந்த மந்தரப் பெருமலையென விழுந்தான். அந்தத் தைத்தியர்களின் இளவரசன் {விருத்திரன்} கொல்லப்பட்டாலும், பீதியில் இருந்த சக்ரன் {இந்திரன்}, வஜ்ரத்தை தான் விடுக்கவில்லை என்றும், விருத்திரன் இன்னும் உயிருடன் தான் இருக்கிறான் என்றும் எண்ணி, தடாகத்துக்குள் மறைந்திருக்க விரும்பி களத்தைவிட்டு ஓடினான்.
இருப்பினும் தேவர்களும் பெரும் முனிவர்களும் மகிழ்ச்சியில் நிறைந்து இந்திரனின் புகழைப் பாட ஆரம்பித்தனர். பிறகு ஒன்றுகூடிய தேவர்கள், தங்கள் தலைவன் {விருத்திரன்} இறந்த துக்கத்தில் இருந்த தானவர்களைக் கொல்ல ஆரம்பித்தனர். கூடி நின்ற தேவர்கள் கூட்டத்தைக் கண்டு பீதியடைந்த தானவர்கள் கடலின் ஆழங்களுக்குச் சென்றனர். மீன்களும் முதலைகளும் நிறைந்த அடியற்ற ஆழத்தில் இறங்கிய தானவர்கள் ஒன்றுகூடி கர்வத்துடன் மூன்று உலகங்களையும் அழிக்கச் சதி செய்யத் தொடங்கினர். அவர்களில் அனுமானங்களில் விவேகத்துடன் இருந்த சிலரில் ஒவ்வொருவரும் தங்கள் தீர்மானத்தின்படி செயல்களின் வழிகளைப் பரிந்துரைக்க ஆரம்பித்தனர்.
அப்படிச் சதி செய்து கொண்டிருந்த திதியின் மகன்கள் முதலில் தவ அறமும் ஞானமும் கொண்ட மனிதர்களை அழிக்க வேண்டும் என்ற பயங்கரமான தீர்மானத்திற்கு வந்தனர். இந்த உலகங்கள் அனைத்தும் தவச்சக்தியால்தான் நிலைக்கிறது. ஆகையால் அவர்கள் “தவச்சக்தியை அழிப்பதில் நேரத்தை விரையம் செய்யக் கூடாது. பூமியில் தவ அறங்களையும், அறநெறிகளையும், கடமைகளையும், பிரம்ம ஞானத்தையும் உடையவர்களைக் கொல்வதில் காலந்தாழ்த்தக் கூடாது. இவர்கள் {தவசிகள்} அழிந்தால் மொத்த அண்டமும் அழிந்துவிடும்” என்றனர். அண்டத்தை அழிப்பது என்ற தீர்மானத்திற்கு வந்த அனைத்து தானவர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமுதல், தங்கள் முற்றுகைத் தொடர, மலைகளைப் போன்ற உயரங்களை உடைய அலைகள் கொண்ட வருணனின் வசிப்பிடமான கடலைத் தங்கள் கோட்டையாக அமைத்துக் கொண்டனர்” என்றார் {லோமசர்}.
நாராயணனைத் தஞ்சமடைந்த தேவர்கள்! – வனபர்வம் பகுதி102-கடலுக்குள் ஒளிந்திருந்த காலகேயர்கள் இராப்பொழுதுகளில் முனிவர்களைக் கொன்று பகல் பொழுதில் மறுபடி கடலுக்குள் ஒளிதல்; இதை மனிதர்கள் அறிய இயலாதது; தேவர்கள் நாராயணனிடம் சென்று முறையிடல்…
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “வருணனின் இருப்பிடமான நீரின் கொள்கலத்தில் {கடலில்}, அண்ட அழிவுக்கான தங்கள் நடவடிக்கைகளைத் தொடங்கினர். கோபம் கொண்ட தைத்தியர்கள் இரவின் இருளில், கானகங்களிலும் புனித இடங்களிலும் கண்ட முனிவர்களை விழுங்கத் தொடங்கினர். அந்தத் தீய பாவிகள் வசிஷ்டரின் ஆசிரமத்தில் இருந்த நூற்று எட்டு {108} அந்தணர்களையும், மேலும் ஒன்பது {9} தவசிகளையும் விழுங்கினர். பிறகு பல பிரம்மச்சாரிகள் இருந்த சியவனரின் ஆசிரமத்திற்குச் சென்று கனிகளையும் கிழங்குகளையும் மட்டுமே உண்டு வாழ்ந்த நூறு {100} அந்தணர்களை விழுங்கினர்
இவையனைத்தையும் இரவின் இருளிலேயே செய்தனர், பகலில் கடலின் ஆழங்களுக்குள் நுழைந்தனர். பரத்வாஜர் ஆசிரமத்தில் ஆன்மாக்களை அடக்கி பிரம்மச்சரிய வாழ்வு வாழ்ந்து, நீரும் காற்றும் மட்டுமே உண்டு வாழ்ந்த அனைத்து அந்தணர்களையும் கொன்றனர். இப்படியே காலகேயர்கள் என்ற அந்தத் தானவர்கள் {அசுரர்கள்} தங்கள் கரங்களின் பலத்தால் போதையுண்டு, தங்கள் ஆயுள் தீர்வதை உணராமல், முனிவர்களின் ஆசிரமங்களில் இரவின் இருளில் நுழைந்து, எண்ணிலடங்கா அந்தணர்களைக் கொன்றனர். ஓ மனிதர்களின் சிறந்தவனே {யுதிஷ்டிரா} கானகத்தில் இருந்த தவசிகளிடம் இவ்வாறெல்லாம் தானவர்கள் நடந்து கொண்டாலும், அவர்களைக் குறித்த எதையும் அறிந்து கொள்வதில் மனிதர்கள் தோல்வியுற்றனர்.
தினமும் காலையில் மாண்ட முனிவர்களின் மிச்ச சொச்ச உடல்கள் தரையில் கிடப்பதை மக்கள் கண்டனர். அவற்றில் பல உடல்கள் சதையோ இரத்தமோ அற்றிருந்தன. எலும்புகளற்று, உறுப்புகளற்று கிடந்தன. சிப்பிகளின் குவியல் போலத் தரையெங்கும் எலும்புக் குவியல் அங்கும் இங்கும் கிடந்தன. பூமி முழுவதும் வேள்விக்காக முனிவர்கள் வைத்திருந்த ஜாடிகளும், நெய்யூற்றும் கரண்டிகளும் உடைந்து ஆங்காங்கே கிடந்தன. காலகேயர்கள் குறித்த பயத்தில் இருந்த அண்டத்தில் வேத கல்வியும் வஷத்துகளும், வேள்விச்சடங்குகளும், தர்மச் சடங்குகளும் நின்று போய் உற்சாகமற்றதாகச் சூழ்நிலை இருந்தது.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்கள் இப்படி அழிந்து கொண்டிருக்கையில், மீதம் இருந்தவர்கள் பயத்தால் எல்லாத் திக்குகளுக்கும் ஓடினர், சிலர் பெரிய குகைகளுக்கும், சிலர் மலை நீரூற்றுகளுக்கும் ஓடைகளுக்கும் சென்றனர். சிலர் செத்துவிடுவோமோ என்ற பயத்திலேயே ஏதுவும் நடக்காமலேயே இறந்தனர். வீரமும் பலமும் கொண்ட சில வில்லாளிகள் உற்சாகமாக அந்தப் பெரும் இக்கட்டில் தானவர்களத் தேடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் அவர்களால் கடலுக்கடியில் தஞ்சமடைந்திருந்த அசுரர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு, தேடுதலில் திருப்தியடைந்த பிறகு அந்த வீரர்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர்.
ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, அண்டம் இப்படி அழிந்து கொண்டிருந்தபோது, வேள்வி விழாக்களும், தர்மச் சடங்குகளும் நின்று போன போது, தேவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகினர். இந்திரனை மத்தியில் கொண்டு கூடிய அவர்கள் பயத்தால் ஒருவர் ஆலோசனையை மற்றவர் கேட்டனர். பிறகு வைகுண்டத்தின் வீழ்த்தப்பட முடியாத, மேன்மையான, படைக்கப்படாத {சுயம்புவான} தெய்வமான நாராயணனின் பாதுகாப்பைத் தேவர்கள் நாடினர்.
அந்த மதுவைக் கொன்றவனை {மதுசூதனனை} வணங்கிய தேவர்கள் அவனிடம், “ஓ தலைவா, நீயே எங்களையும் அண்டத்தையும் படைப்பவன், காப்பவன், அழிப்பவனாக இருக்கிறாய். இந்த அண்டத்தில் இருக்கும் அசைவன மற்றும் அசையாதன ஆகிய அனைத்தையும் படைத்தவன் நீயே. ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனே, பழங்காலத்தில் உயிர்களின் நன்மைக்காக நீயே கடலில் மூழ்கிய பூமியை பன்றி {Boar = பன்றி, வராகம்} ரூபமெடுத்து மீட்டுக் கொண்டு வந்தாய். ஓ! ஆடவரில் சிறந்தவனே, பிறகு பாதி மனிதனாகவும், பாதிச் சிங்கமாகவும் உரு கொண்டு பழங்காலத்தில் பெரும் பலமும் பராக்கிரமும் நிறைந்த ஹிரண்யகசிபு என்ற தைத்தியனை {அசுரனைக்} கொன்றாய். மேலும் பலி என்ற பெயர் கொண்ட யாராலும் அழிக்க முடியாத பெரும் அசுரனை, குள்ளனின் (Dwarf = குள்ளமனிதன், வாமனன்} உருவம் கொண்டு மூன்று உலகங்களில் இருந்தும் கடத்தினாய். ஓ! தலைவா, பெரும் வில்லாளியும் எப்போதும் வேள்விகளுக்குத் தடை ஏற்படுத்துபவனுமான ஜம்பன் என்ற தீய அசுரன் உன்னாலேயே கொல்லப்பட்டான். உன்னால் செய்யப்பட்ட இதுபோன்ற சாதனைகளை எண்ணிக்கையில் அடக்க முடியாது. ஓ மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, நாங்கள் பயத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறோம். நீயே எங்களுக்குப் புகலிடம், ஓ தேவர்களுக்குத் தேவா இதன் காரணமாகவே நாங்கள் தற்போதைய இடர்களை உனக்குத் தெரிவித்தோம். உலகங்களையும், தேவர்களையும், சக்ரனையும் பெரும்பயத்திலிருந்து காப்பாயாக” என்றனர் {தேவர்கள்}”
அகஸ்தியரைத் துதித்த தேவர்கள் – வனபர்வம் பகுதி 103-முனிவர்கள் எப்படி இறக்கின்றனர் என்பதைத் தேவர்களுக்கு விஷ்ணு சொல்லல்; கடலை வற்ற செய்ய அகஸ்தியரை அணுகும்படி விஷ்ணு தேவர்களுக்கு அறிவுறுத்தல்; அகஸ்தியரிடம் சென்ற தேவர்கள் அவரைத் துதிபாடல்…
தேவர்கள் {விஷ்ணுவிடம்}, “உனது கருணையாலேயே நான்வகைப் பிறவிகளும் வளர்கின்றன. அப்படிப் படைக்கப்பட்டவர்கள், தேவர்களுக்கும், இறந்து போன தங்களது முப்பாட்டன்களுக்கும் காணிக்கைகள் {படையல்கள்} கொடுப்பதன் மூலம் சொர்க்கத்தில் வசிப்பவர்களைச் சாந்தப்படுத்துகின்றனர். உன்னால் காக்கப்பட்ட மக்கள், ஒருவரை ஒருவர் நம்பி வாழ்ந்து, பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வளர்கிறார்கள். இப்போது இப்படிப்பட்ட பயம் மக்களைப் பாதிப்படைய வைக்கிறது. இரவு நேரங்களில் அந்தணர்கள் யாரால் எதற்காகக் கொல்லப்படுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
அந்தணர்கள் அழிக்கப்பட்டால், இந்தப் பூமி அழிவைச் சந்திக்கும். இப்பூமிக்கு ஒரு முடிவு ஏற்பட்டால், சொர்க்கமும் அழியும். ஓ பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே, ஓ அண்டத்தின் தலைவா, உன்னால் காக்கப்படும் உலகங்களுக்கு ஒரு முடிவு வரக்கூடாது என்று உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்” என்றனர் {தேவர்கள்}.
அதற்கு விஷ்ணு, “தேவர்களே! பிறந்த பிறவிகள் அழிவைச் சந்திக்கும் காரணத்தை நான்றிவேன். அது குறித்து உங்களுக்கு நான் சொல்கிறேன். சலனமற்ற மனதுடன் நான் சொல்வதைக் கேளுங்கள். காலகேயர்கள் என்ற பெயரில் கடுமை நிறைந்த ஒரு படை இருக்கிறது. அவர்களே விருத்திரனின் தலைமையில் முழு அண்டத்தையும் பாழாக்கிக் கொண்டிருந்தனர். அறிவுநுட்பமும், ஆயிரம் கண்களும் கொண்ட இந்திரனால் விருத்திரன் கொல்லப்பட்டதைக் கொண்ட அவர்கள் தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள வருணனின் உறைவிடமான கடலுக்குள் புகுந்தனர்.
சுறாக்களும், முதலைகளும் நிரம்பிய கடலுக்குள் இறங்கிய அவர்கள், இரவு வேளையில் வெளியே வந்து, தவசிகளைக் காணும் இடத்திலேயே கொன்று போடுகின்றனர். அவர்கள் கடலுக்குள் தஞ்சம் அடைந்திருப்பதால், அவர்களைக் கொல்ல இயலாது. ஆகையால், கடலை வற்ற செய்ய ஏதாவது ஒரு உபாயத்தை நீங்கள் கைக்கொள்ள வேண்டும். அகஸ்தியரை விட வேறு யாரால் கடலை வற்ற செய்ய முடியும். கடலை வற்ற செய்யாமல், வேறு வழிகளில் அவர்களைத் (அந்தப் பேய்களைத்) தாக்க முடியாது” என்றான் {விஷ்ணு}.
விஷ்ணுவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள் பிரம்மனின் அனுமதியைப் பெற்று, பகுதிகளிலேயே சிறந்த பகுதியில் இருக்கும் அகஸ்தியரின் ஆசிரமத்திற்குச் சென்றனர். அவர்கள் வருணனின் மகனான உயரான்ம அகஸ்தியர் அங்கே பிரகாசித்துக் கொண்டிருப்பதையும், அவருக்காகப் பிரம்மனுக்காகக் காத்திருக்கும் தேவர்கள் போலப் தவசிகள் காத்து நிற்பதையும் கண்டனர். அவர்கள் மித்ரா வருண மைந்தனான அவரை {அகஸ்தியரை}அந்த ஆசிரமத்தில் அணுகி அவரது பெருமை நிறைந்த, நேரான சாதனைகளைச் சொல்லி துதித்தனர்.
அந்தத் தேவர்கள் {அகஸ்தியரிடம்}, “பழங்காலத்தில் நகுஷனால் {நஹுஷன்} ஒடுக்கப்பட்ட போது தேவர்களுக்கு நீரே புகலிடமாக இருந்தீர். உலகத்தின் முள்ளாக இருந்த அவன் தேவலோக அரியணையில் இருந்து தூக்கியெறியப்பட்டும் தேவலோகத்தில் இருந்து கீழே விழுந்தான். சூரியனிடம் கோபம் நிறைந்த போட்டியில் இருந்த மலைகளில் முதன்மையான விந்தியன் {விந்திய மலை} (சூரியனைவிட உயரம் பெற வேண்டும் என்று) திடீரெனத் தனது உயரத்தில் வளர்ந்து கொண்டிருந்தான். ஆனால் உமது உத்தரவை மீற முடியாததால் அவன் தனது வளர்ச்சியை நிறுத்தினான். உலகத்தை இருள் சூழ்ந்த போது, பிறந்த பிறவிகள் மரணத்தால் துன்புற்றன. ஆனால் உம்மைக் காப்பாளராகப் பெற்ற அவர்கள் போதுமான பாதுகாப்பை அடைந்தார்கள். நாங்கள் எப்போதெல்லாம் துயரத்திற்கு ஆட்படுகிறோமோ அப்போதெல்லாம் நீரே எங்களுக்கு மதிப்புக்குரிய புகலிடமாக இருந்திருக்கிறீர். அதன் காரணமாகவே நங்கள் உம்மிடம் ஒரு வரத்தைப் பெற வந்திருக்கிறோம். நீர் எப்போதும் நாங்கள் கேட்கும் வரங்களை அருளியிருக்கிறீர்” என்றனர் {தேவர்கள்}” என்றார் {லோமசர்}.
விந்தியத்தின் வளர்ச்சியைத் தடுத்த அகஸ்தியர் – வனபர்வம் பகுதி 104-சூரியனோடு போட்டியிட்டு உயர்ந்த விந்தியம்; விந்தியத்தின் வளர்ச்சியைத் தடுத்த அகஸ்தியர்; கடலைக் குடிக்க வேண்டும் என்று தேவர்கள் அகஸ்தியரை வேண்டுவது; அனைவரும் சேர்ந்து பெருங்கடலிடம் செல்லல்..
யுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னான், “ஓ பெரும் தவசியே, கோபத்தால் மதியிழந்த விந்தியன் {விந்திய மலை}, ஏன் திடீரெனத் தனது உருவத்தை வளர்த்துக் கொண்டான் என்பதை விவரமாகக் கேட்க விரும்புகிறேன்”
அதற்கு லோமசர், “சூரியன், தனது உதயத்திற்கும் அஸ்தமனத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் தங்கமாக மின்னும் மலைகளின் ஏகாதிபதியான பெரும் மேருவை வலம் வந்தான். இதைக் கண்ட மலையான விந்தியன் சூரியனிடம், “நீ தினமும் மேருவைச் சுற்றி வலம் வந்து அவனை மதிக்கிறாய். ஓ ஒளியை உண்டாக்குபவனே, என்னையும் அதே போல் நீ வலம் வர வேண்டும்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட சூரியன் அந்தப் பெரும் மலையிடம் {விந்தியனிடம்}, “நான் எனது சுய விருப்பத்தின் பேரில் இந்த மலையை வலம் வந்து மதிக்கவில்லை. இந்த அண்டத்தைக் கட்டியவர்களால் எனது பாதை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது” என்றான் {சூரியன்}.
இதனால் அந்த மலையானவன், சூரியன் மற்றும் சந்திரனின் பாதைகளுக்குத் தடங்கல் செய்ய விரும்பி, பெரும் கோபத்துடன் தனது உருவத்தை வளர்த்தான். அனைத்து தேவர்களும் கூடி மலைகளின் பலம் வாய்ந்த மன்னனான விந்தியனிடம் வந்து அவனது நோக்கத்தில் இருந்து பின்வாங்கச் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் அவன் அவர்கள் சொன்ன எதையும் கவனிக்கவே இல்லை. பிறகு அந்தத் தேவர்கள் அனைவரும், ஆசிரமத்தில் வாழ்ந்து, தவத்தில் ஈடுபட்டு, அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் மனிதர்களில் சிறந்தவரும் அற்புத சக்திகளால் அனைவரையும் விஞ்சி நிற்பவருமான அகஸ்தியரிடம் சென்றனர்.
தேவர்கள் {அகஸ்தியரிடம்}, “மலைகளின் மன்னனான இந்த விந்தியன் கோபம் கொண்டு சூரிய சந்திர பாதைகளையும், நட்சத்திரங்களின் வழிகளையும் அடைத்துக் கொண்டிருக்கிறான். ஓ அந்தணர்களில் முதன்மையானவரே {அகஸ்தியரே}, ஓ கொடைகளில் சிறந்தவரே, உம்மைத்தவிர வேறு யாராலும் அவனை {விந்தியனைத்} தடுக்க முடியாது. ஆகையால், அவனை அக்காரியத்தில் இருந்து பின்வாங்கச் செய்யும்” என்று கேட்டுக் கொண்டனர். தேவர்களின் வார்த்தைகளைக் கேட்ட அந்த அந்தணர் {அகஸ்தியர்}, அந்த {விந்திய} மலையிடம் சென்றார். அவர் தனது மனைவியுடன் {லோபமுத்ராவுடன்} அந்த இடத்திற்கு வந்து விந்தியன் அருகே சென்று, அவனிடம், :ஓ! மலைகளில் சிறந்தவனே {விந்தியனே}, “ஒரு காரியத்திற்காக நான் தென்னகம் செல்ல விரும்புகிறேன், ஆகையால் நீ எனக்கு ஒரு பாதை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும், நான் திரும்பி வரும்வரை எனக்காக நீ காத்திருக்க வேண்டும். நான் திரும்பி வந்த பிறகு, ஓ மலைகளின் மன்னா, நீ உனது உருவத்தை உனக்கு விருப்பப்பட்ட அளவுக்குப் பெருக்கிக் கொள்” என்றார். ஓ எதிரிகளைக் கொல்பவனே {யுதிஷ்டிரா}, கச்சிதமான இந்த ஒப்பந்தத்தை விந்தியனிடம் ஏற்படுத்திக் கொண்ட வருணனின் மகன் {அகஸ்தியர்) இதுநாள் வரை தென்னகத்தில் இருந்து திரும்பவில்லை. அகஸ்தியரின் சக்தியால் விந்தியன் மேலும் வளர முடியவில்லை என்ற இக்கதையை நீ கேட்டுக் கொண்டபடி சொல்லிவிட்டேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்போது அகஸ்தியரிடம் வேண்டிக் கொண்ட தேவர்கள் எப்படிக் காலகேயர்களைக் கொன்றார்கள் என்பதைக் கேள்.
தேவர்களின் வார்த்தைகளைக் கேட்ட மித்ரா வருண மைந்தன் அகஸ்தியர், “எங்கிருந்து நீங்கள் வருகிறீர்கள்? நீங்கள் என்னிடம் என்ன வரம் எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார். இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள், அந்தப் புனிதரிடம் {அகஸ்தியரிடம்}, “ஓ பெருமைவாய்ந்தவரே, பெருங்கடலைக் குடிக்கும் பெரும் சாதனையை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்கிறோம், பிறகு தேவர்களுக்கு எதிரிகளான காலகேயர்களையும் அவர்களைத் தொடர்பவர்களையும் எங்களால் கொல்ல முடியும்” தேவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தவசி “அப்படியே ஆகட்டும், மனிதர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் காரியத்தை நீங்கள் விரும்பியவாறே செய்கிறேன்” என்றார்.
ஓ அற்புதமான வாழ்வு வாழ்பவனே {யுதிஷ்டிரனே}, இப்படிச் சொன்ன அவர் {அகஸ்தியர்}, தவப் பயிற்சியில் பழுத்த முனிவர்களுடனும் தேவர்களுடனும் சேர்ந்து ஆறுகளின் தலைவனான கடலை நோக்கி சென்றார். மனிதர்கள், பாம்புகள், தெய்வீக கலைஞர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், பெரும் தவசிகள் ஆகியோர் அந்த அற்புதமான நிகழ்வைக் காண விரும்பி அவரைத் தொடர்ந்து சென்றனர். பிறகு அவர்கள் அனைவரும் சேர்ந்து பரிதாபமாகக் கர்ஜித்துக் கொண்டும் அலைகளை அசைத்து ஆடிக் கொண்டும், தென்றல் நிறைந்தும், நுரை தள்ளிச் சிரித்தும், குகைகளின் அருகே நீரால் அடித்தும், வித்தியாசமான வகைகளான சுறாக்களாலும், அடிக்கடி வந்து போகும் பல்வேறு பறவைகளாலும் நிறைந்திருந்த அந்தப் பெரும் கடலின் அருகில் வந்தனர். அகஸ்தியர், தெய்வீகக் கலைஞர்கள், பெரும் பாம்புகள், பெரும் கொடைகள் கொண்ட தவசிகள் ஆகியோருடன் தேவர்கள் அந்த மகத்தான நீர்க்கழிவை {கடலை} அடைந்தனர்.
கடலைக் குடித்த அகஸ்தியர் – வனபர்வம் பகுதி 105-அகஸ்தியர் கடலைக் குடித்தது; தேவர்கள் காலகேயர்களை மிச்சமில்லாமல் கொன்றது; மறுபடி கடலை நிரைக்க அகஸ்தியரை தேவர்கள் வேண்டிக் கொண்டது; அது தன்னால் இயலாது என்று அகஸ்தியர் மறுத்ததும் அதற்கான வழிகளைக் குறித்துத் தேவர்கள் ஆலோசித்தது..
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அந்த அருளப்பட்ட புனிதரான வருணனின் மகன் {அகஸ்தியர்} கடலை அடைந்தவுடன் அங்கே கூடியிருந்த தேவர்களிடமும் தவசிகளிடமும், “நான் நிச்சயம் நீர்க்கடவுளின் வசிப்பிடமான இந்தக் கடலைக் குடிக்கப் போகிறேன். நீங்கள் உங்கள் மீது உறைந்துள்ள தயாரிப்புகளை விரைவாகச் செய்யுங்கள்” என்றார்.
இப்படிச் சொன்ன அந்த மித்ராவருண மைந்தன் {அகஸ்தியர்} முழுக் கோபத்துடன், அனைத்து உலகங்களும் பார்த்துக் கொண்டிருந்த போதே அந்தக் கடலைக் குடிக்க ஆரம்பித்தார். பிறகு இந்திரனுடன் கூடிய தேவர்கள் கடல் குடிக்கப்படுவதைக் கண்டு வியந்து புகழ்ந்து பேசும் வார்த்தைகளால் அவரிடம், “நீரே எங்கள் காப்பாளரும், மனிதர்களைப் பராமரிப்பவரும், உலகங்களை உண்டாக்குபவராகவும் இருக்கிறீர். உமது உதவியால், தேவர்களுடன் கூடிய இந்த அண்ட ம் முழுநாசத்தில் இருந்து தப்பியது” என்று துதித்தனர்.
இப்படித் தெய்வீக கலைஞர்கள் தங்கள் இசைக்கருவிகளை இசைத்துச் சூழ்ந்திருக்க தேவர்களால் துதிக்கப்பட்ட அந்தப் பெருந்தன்மை கொண்டவர் {அகஸ்தியர்}, தன் மீது தெய்வீக மலர் மாரி பொழிந்த போது அந்த அகன்ற கடலை நீரற்றதாக ஆக்கினார். அந்த அகன்ற கடல் நீரற்றதானதைக் கண்ட தேவர்ப்படை மிகவும் மகிழ்ச்சியுடன் தாங்கள் விரும்பிய தெய்வீக ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வீரமிகுந்த இதயங்களுடன் அந்தப் பேய்கள் {காலகேயர்கள்} மேல் பாய்ந்தனர். ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, பெரும் கர்ஜனை செய்து கொண்டு பலமும் வேகமும் கொண்ட தேவர்களால் தாக்கப்பட்ட அவர்கள் {காலகேய அசுரர்கள்}, தேவ லோக வசிப்பாளர்களின் தாக்குதலைத் தாங்க முடியாமல் ஓடத் தலைப்பட்டனர்.
தேவர்களால் தாக்கப்பட்டு எருதுகள் போலச் சத்தமாக முக்காரமிட்ட {ம்ம்ம்ம்ம் என்ற ஒலியாக இருக்கலாம்} அந்தப் பேய்கள் {காலகேயர்கள்}, அந்தப் பயங்கரத் தாக்குதலை ஒரு கணம் {முகூர்த்தம்} தான் தாங்கினர். மனதை அடக்கி தங்களை முதிர்ச்சியடையச் செய்து கொண்ட முனிவர்களின் தவச் சக்தியால் முதலிலேயே எரிக்கப்பட்ட அந்த முயற்சியுடைய பேய்கள் தேவர்களால் அழிக்கப்பட்டனர். தங்கப் பதக்கங்களும், காதுகுண்டலங்களும், தோள்வளைகளையும் அணிந்திருந்த அந்தப் பேய்கள் கொல்லப்பட்டபோது கூடப் பூத்துக் குலுங்கும் பலாச மரத்தைப் போல அழகாக இருந்தனர்.
ஓ! மனிதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, பிறகு, காலகேய குலத்தில் பூமி தேவதையின் பிளவுகளில் பதுங்கி, பாதாளத்தைப் புகலிடமாகக் கொண்டிருந்த மீந்திருந்தவர்களும் கொல்லப்பட்டனர். அந்தப் பேய்கள் {காலகேயர்கள்} கொல்லப்பட்டதைக் கண்ட தேவர்கள் வித்தியாசமான பேச்சுகளால் அந்தப் பலம்வாய்ந்த புனிதரை {அகஸ்தியரை} இந்த வார்த்தைகளால் துதித்தனர், “ஓ பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவரே {அகஸ்தியரே}, உயிரினங்களைப் படைப்பவரே, உமது உதவியால் மனிதர்கள் பலம்வாய்ந்த அருளைப் பெற்றிருக்கின்றனர். இரக்கமற்ற பலம் கொண்ட காலகேயர்கள் உமது பலத்தாலேயே கொல்லப்பட்டனர். ஓ பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவரே (இப்போது) கடலை நிரப்பும். நீர் அருந்திய நீரை விட்டுவிடும்” என்றனர்.
இப்படிச் சொல்லப்பட்ட அருளும் பலமும் நிறைந்த தவசி {அகஸ்தியர்}, “உண்மையில் அந்த நீர் என்னால் செரிக்கப்பட்டது. ஆகையால், கடலை நிரப்ப நீங்கள் விரும்பினால் சூழ்நிலைக்கேற்ற வேறு வழிகள் உங்களால் எண்ணப்பட வேண்டும்” என்று சொன்னார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, முதிர்ந்த ஆன்மா கொண்ட அந்தப் புனிதரின் பேச்சைக் கேட்ட தேவர்கள் வியப்பாலும், சோகத்தாலும் தாக்கப்பட்டனர். பிறகு ஒருவருக்கு ஒருவர் விடைபெற்றுக் கொண்டு, பிறந்த பிறவிகளில் பெரும் புனிதரை வணங்கி, தாங்கள் வந்த வழியே திரும்பினர். பிறகு விஷ்ணுவுடன் கூடிய தேவர்கள் பிரம்மனிடம் வந்தனர். பிறகு கூப்பிய கரங்களுடைய அவர்கள் கடலை நிரப்பும் நோக்கத்துடன் திரும்பத் திரும்ப ஆலோசித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
சகரனின் தவமும்! சிவனின் வரமும்! – வனபர்வம் பகுதி 106-பிள்ளைக்காகத் தவம் இருந்த சகரன்; சகரனுக்குச் சிவன் வரமளித்தல்; சகரனின் ஒரு மனைவி அழகான குழந்தையைப் பெற்றெடுக்க, இன்னொரு மனைவி சுரைக்காயைப் பெற்றெடுத்தல்; சகரனுக்கு அசரீரியின் அறிவுரை…
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அனைவரும் அப்படி ஒன்றுகூடிய போது, மனிதர்களின் பாட்டனாகிய பிரம்மன் அவர்களிடம், “தேவர்களே, எங்கே உங்களுக்கு இன்பம் கிடைக்குமோ அல்லது இன்பம் உங்களை எங்கு வழிநடத்துமோ அங்குச் செல்லுங்கள். கடல் மீண்டும் தனது கொள்ளளவை எட்ட நீண்ட காலம் ஆகும். பெரும் மன்னனான பகீரதனின் குலத்தவர் மூலம் அச்சந்தர்ப்பம் ஏற்படும்” என்று சொன்னான். (அண்டத்தின்) பெரும்பாட்டனின் வார்த்தைகளைக் கேட்ட தேவர்களில் முதன்மையானவர்கள் (எப்போது கடல் நிரம்பும் என்று எண்ணியபடி) தாங்கள் வந்த வழியே திரும்பிச் சென்றனர்.
யுதிஷ்டிரன், “ஓ! தவசியே {லோமசரே}, என்ன சந்தர்ப்பம் அது? பகீரதனின் குலத்தவர்கள் அதை எப்படி நிறைவேற்றினர்? பகீரதரனின் தலையீட்டின் பேரில் கடல் எப்படி நிரப்பப்பட்டது? ஓ தவசியே {லோமசரே}, தங்கள் அறப்பயிற்சிகளையே தங்கள் செல்வமாக நினைப்பவர்கள் யார்? ஓ புரோகிதர்கள் வகையைச் சார்ந்தவரே, நீர் சொன்ன அந்த மன்னனின் சாதனைகள் குறித்து நான் விவரமாகக் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படி அந்தப் பெருந்தன்மைமிக்க அறம்சார்ந்த மன்னனால் {யுதிஷ்டிரனால்} கேட்கப்பட்ட புரோகிதர் வகை மனிதர்களின் தலைவர் {லோமசர்}, உயர் ஆன்ம {மன்னன்} சகரனின் சாதனைகளை உரைக்க ஆரம்பித்தார்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அழகும், பலமும் நிறைந்து, பூமியை ஆண்ட சகரன் இக்ஷவாகு இன குடும்பத்தில் பிறந்திருந்தான். ஓ பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, அச்சமூட்டும் பெயர் கொண்டிருந்த அவன் {சகரன்} மகனற்று இருந்தான். அவன் ஹைஹயர்களையும் தாலஜங்கர்களையும் {the Haihayas and the Talajanghas}அழித்து மொத்த படையணியினரையும் அடக்கி தனது நாட்டை ஆண்டு வந்தான்.
ஓ பாரதக் குலத்தோன்றல்களில் பெரிதும் புகழப்படுபவனே {யுதிஷ்டிரா}, ஓ பாரதக் குலத்தின் தலைவா, அழகில் கர்வம் கொண்டு இளமையுடன் இருந்த விதரப்ப்ப குல இளவரசியும், சிபியின் அரச பரம்பரையில் வந்த மற்றுமொருத்தியும் அவனது இரு மனைவியராக இருந்தனர். ஓ மன்னர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, மேலும் அதே மனித ஆட்சியாளன் {சகரன்}, தனது மனைவியரையும் அழைத்துக் கொண்டு, கடும் தவத்தின் மூலமாகப் பிள்ளை பெற கைலாச மலைக்குச் சென்றான். அங்கே கடும் தவமும் யோகமும் இருந்து, முக்கண்ணனும், திரிபுரன் என்ற பேயை அழித்தவனும், அனைத்து உயிருக்கும் அருள் வழங்குபவனும், நித்தியமாக நிலைத்திருப்பவனும், பிநாகம்யையும் திரிசூலத்தையும் தாங்கியவனும், நித்திய அமைதி கொண்டவனும், கடுமையானவர்களை ஆள்பவனும், பல உருவங்களை எடுக்க வல்லவனும், உமா தேவியின் தலைவனுமான பெருமைமிக்க தெய்வத்தின் {சிவனின்} காட்சியைப் பெற்றான்.
அந்தப் பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவன் {சகரன்} வரமருளும் அந்தத் தெய்வத்தைக் {சிவனைக்} கண்டதும், தனது ராணிகளுடன் அவனது பாதத்தில் விழுந்து, ஒரு மகனை விரும்பி வேண்டி நின்றான். அந்தச் சிவ தெய்வமும் அவனிடம் {சகரனிடம்} திருப்தி கொண்டு, இரு மனைவியரால் சேவிக்கப்பட்ட அந்த மனிதர்களின் நேர்மையான ஆட்சியாளனிடம் {சகரனிடம்}, “ஓ மனிதர்களின் தலைவா, என்னிடம் நீ வேண்டிக்கொண்ட கணத்தைக் (வானியல் கணிதத்தைக்) கருத்தில் கொண்டால், உனது ஒரு மனைவிக்கு, பெரும் கர்வமும், வீரமும் மிக்க அறுபதாயிரம் {60,000} மகன்கள் பிறப்பார்கள். ஆனால், ஓ பூமியை ஆள்பவனே, அவர்களை அனைவரும் ஒன்றாகவும் முற்றாகவும் அழிந்து போவார்கள். (இருப்பினும்) உனது இன்னொரு மனைவியிடம் ஒரு வீரமிக்க மகன் பிறப்பான். அவனே உனது குலத்தைத் தழைக்க வைப்பான்” என்றான் {சிவன்}.
இதைச் சொன்ன அந்த ருத்ர தெய்வம் {சிவன்}, பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த இடத்திலேயே மறைந்து போனான். பிறகு அந்த மன்னன் சகரன் தனது இரு மனைவியருடன் தனது வசிப்பிடத்திற்குப் பெரும் மகிழ்ச்சியுடன் திரும்பினான். ஓ மனுவின் மகன்களில் {மனிதர்களில்} பெரிதும் புகழப்படுபவனே {யுதிஷ்டிரா}, தாமரை இதழ் கண்கள் கொண்ட அவனின் {சகரனின்} மனைவியரான விதரப்ப்ப இளவரசியும் {வதர்ப்பி}, சிபியின் இளவரசியும் {சைப்பியை} விரைவில் பிள்ளையைப் பெற இருந்தனர். பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் விதரப்ப்ப இளவரசி சுரைக்காய் உருவத்தில் (ஏதோ ஒன்றை) பெற்றெடுத்தாள். சிபியின் இளவரசி தெய்வீக அழகுடன் கூடிய மகனைப் பெற்றெடுத்தாள்.
பிறகு அந்தப் பூமியின் அதிபதி அந்தச் சுரைக்காயை எறிந்துவிட மனதில் தீர்மானித்தான். அப்போது வானத்தில் இருந்து கடுமையும் உறுதியும் கொண்ட ஒரு குரல், “ஓ மன்னா {சகரா}, உனது அவசரச் செயலினால் குற்றவாளி ஆகாதே; நீ உனது மகன்களைக் கைவிடலாகாது. அந்தச் சுரைக்காயில் இருந்து விதைகளை எடுத்து, சுத்திகரிக்கப்பட்ட நெய் நிரப்பிய ஆவியுடன் கூடிய பாத்திரங்களில் பாதுகாத்து வை. ஓ பாரதக் குலக்வழித்தோன்றலே, பிறகு நீ அறுபதாயிரம் {60,000} மகன்களை அடைவாய். ஓ மனிதர்களின் ஆட்சியாளனே {சகரா}, பெருந்தெய்வம் {சிவன்} ஏற்கனவே சொன்னவாறு உனது மகன்கள் பிறப்பார்கள். ஆகையால் உனது மனம் வேறு விதமாக ஆக வேண்டாம்” என்றது {அசரீரி}.
குதிரையை மீட்ட அன்சுமான்! – வனபர்வம் பகுதி 107-பாத்திரங்களில் பாதுகாக்கப்பட்ட சுரைக்காய் விதைகள் அறுபதாயிரம் மகன்களாகச் சகரனுக்கும் விதரப்ப்ப இளவரசிக்கும் பிறத்தல்; சகரனுக்கும் சிபி இளவரசிக்கும் அசமஞ்சன் பிறத்தல்; கபிலரின் கோபத்துக்கு இலக்காகி அறுபதாயிரம் மகன்கள் இறத்தல்; அசமஞ்சனைச் சகரன் நாடு கடத்தல்; அன்சுமான் வேள்விக் குதிரையை மீட்டல்; அன்சுமானுக்குத் திலீபன் பிறத்தல்; திலீபன் ஆட்சிக்கட்டிலில் அமர்தல்; திலீபன் கானக வாழ்வு மேற்கொண்டு பகீரதனை மன்னனாக நியமித்தது…
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! மன்னர்களில் நேர்மையானவனே {யுதிஷ்டிரா}, வானத்தில் இருந்து இறங்கிய இச்சொற்களைக் கேட்ட அவன் {சகரன்}, ஓ! பாரதக் குல மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, நம்பிக்கையுடன் அந்தக் குரல் வழிகாட்டியபடியெல்லாம் செய்தான். பிறகு அந்த மனிதர்களின் ஆட்சியாளன் {சகரன்}, விதைகளைத் தனியாகப் பிரித்து எடுத்து, (சுரைக்காயின் அந்தப் பகுதிகளை) சுத்திகரிக்கப்பட்ட நெய் நிரம்பிய பாத்திரங்களில் வைத்தான். பிறகு அவற்றைப் பாதுகாத்தலின் பொருட்டு ஒவ்வொரு பாத்திரத்திற்கும் {குடத்திற்கும்) ஒரு செவிலியை நியமித்தான்.
ஓ! பூமியின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, பிறகு நீண்ட காலத்திற்குப் பிறகு, ருத்திரனின் {சிவனின்} கருணையால் அளவிடமுடியாத சக்தியும் மிகுந்த பலமும் வாய்ந்த அறுபதாயிரம் {60000} மகன்கள் பிறந்தனர். அவர்கள் பயங்கரமானவர்களாகவும், அவர்களது செயல்கள் இரக்கமற்றும் இருந்தன. அவர்கள் அனைவரும் வானத்தில் உயர்ந்து செல்லும் சக்தி படைத்திருந்தனர். அவர்கள் கணக்கிலடங்காதவர்களாக இருந்ததால், தேவர்கள் உட்பட அனைவரையும் மதிக்காமல் இருந்தனர். அவர்கள் பராக்கிரமம் மிக்கவர்களாகவும், போர் வெறியர்களாகவும் இருந்ததால், தேவர்களையும், கந்தர்வர்களையும், ராட்சசர்களையும் விரட்டும் ஆற்றல் பெற்றிருந்தனர்.
சகரனின் மந்த புத்தி கொண்ட மகன்களால் தொல்லைக்குள்ளான மக்கள் அனைவரும் தேவர்களுடன் சேர்ந்து பிரம்மனைப் புகலிடமாகக் கொள்ள அவனிடம் {பிரம்மனிடம்} சென்றனர். பிறகு அவர்கள் அனைத்து உயிரினங்களின் அருளப்பட்ட பாட்டன் {பிரம்மன்}, “இந்த மனிதர்களுடன் நீங்களும் உங்கள் வழியில் செல்லுங்கள். ஓ! தேவர்களே, குறுகிய காலத்தில், பெரிதும் பயங்கரமான சகரன் மகன்களின் மிகக் கோரமான அழிவு, அவர்களது தீச்செயல்களின் விளைவாகவே ஏற்படும்” என்று சொன்னான். ஓ! மனுவின் மகன்களின் {மனிதர்களின்} தலைவா {யுதிஷ்டிரா}, இப்படிச் சொல்லப்பட்ட தேவர்களும் மனிதர்களும் பாட்டனிடம் {பிரம்மனிடம்} விடைபெற்றுக் கொண்டு, எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே திரும்பிச் சென்றனர்.
ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, பிறகு பல நாட்கள் கழித்து, பெரும் பலம் மிக்க மன்னன் சகரன், குதிரை வேள்வியின் சடங்குகளை ஆரம்பிக்க {பிரதிஷ்டை செய்ய} ஏற்றுக் கொண்டான். அவனது குதிரை, அவனது மகன்களின் பாதுகாப்புடன் உலகம் முழுவதும் சுற்ற ஆரம்பித்தது. காண்பதற்குப் பயங்கரமான நீரற்ற கடலை அடைந்ததும், நன்றாகப் பாதுக்காக்கப்பட்டிருந்தும் அந்தக் குதிரை (அது நின்ற இடத்திலேயே) திடீரென மறைந்து போனது. ஓ! மதிப்பிற்குரிய ஐயா {யுதிஷ்டிரா}, பிறகு சகரனின் மகன்கள் அந்த அற்புதமான குதிரை களவாடப்பட்டதாக உணர்ந்து, தனது தந்தையிடம் சென்று, தான் பார்த்துக் கொண்டிருந்தபோதே அக்குதிரை எப்படிக் களவாடப்பட்டது என்பதை உரைத்தனர்.
அதன் பேரில் அவன் {மன்னன் சகரன்} அவர்களிடம், “செல்லுங்கள். அனைத்து முக்கியமான இடங்களிலும் குதிரையைத் தேடுங்கள்” என்றான். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, தங்கள் தந்தையின் கட்டளையின் பேரில் அவர்கள் அனைத்து முக்கியமான இடங்களிலும், பூமியின் முழுப் பரப்பிலும் குதிரையைத் தேடினர். ஒற்றுமையுடன் தேடிய சகரனின் மகன்களால், அந்தக் குதிரையையோ, அல்லது அதைத் திருடிய நபரையோ கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அவர்கள் திரும்பி வந்து, கரங்கள் கூப்பித் தங்கள் தந்தையின் {மன்னன் சகரனின்} முன்பு நின்று, “ஓ! மனிதர்களின் பாதுகாவலரே {சகரரே}, ஓ! பூமியின் ஆட்சியாளரே, ஓ! மன்னா, உமது கட்டளையின் பேரில் நாங்கள் மலைகள், காடுகள், கடல்கள், தோப்புகள், தீவுகள், ஆறுகள், சிற்றாறுகள், குகைகள் ஆகியன கொண்ட முழு உலகத்தையும் ஒன்று சேர்ந்து தேடிவிட்டோம். ஆனால் எங்களால் அக்குதிரையையோ, அல்லது அதைக் களவாடிய கள்வனையோ கண்டுபிடிக்க முடியவில்லை” என்றனர். இந்த வார்த்தைகளைக் கேட்ட அம்மன்னன் {சகரன்} கடுங்கோபத்தால் உணர்விழந்து, விதியால் ஆட்கொள்ளப்பட்டு, “அனைவரும் செல்லுங்கள். இனிமேல் திரும்பாதீர்கள்! குதிரையை மீண்டும் தேடுங்கள். என் மகன்களே, அந்த வேள்விக்குதிரை இல்லாமல் நீங்கள் மீண்டும் திரும்பக்கூடாது” என்றான்.
அந்தச் சகரனின் மகன்கள், தங்கள் தந்தையின் கட்டளையை ஏற்று மீண்டும் முழு உலகத்தையும் தேட ஆரம்பித்தனர். இப்போது அந்த வீரர்கள் பூமியின் பரப்பில் ஒரு பிளவைக் கண்டனர். அந்தப் பள்ளத்தை அடைந்த சகரனின் மகன்கள் அதைத் தோண்ட ஆரம்பித்தனர். மண்வெட்டிகளுடனும், துளறுகளுடனும் {கோடரிகளுடனும்} மிகுந்த முயற்சியுடனும் கடலைத் தோண்டிக் கொண்டே சென்றனர். வருணனின் வசிப்பிடம் {கடல்} இப்படிச் சகரனின் ஒன்றுபட்ட மகன்களால் பெரும் துயரத்துடன் எல்லாப் புறங்களிலும் தோண்டப்பட்டது. பேய்களும், பாம்புகளும், ராட்சசர்களும், மற்றப் பிற அசையும் உயிரனங்களும் சகரனின் மகன்களால் கொல்லப்பட்டபோது துயரத்தால் அலறினர். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அசையும் உயிரினங்கள் தங்கள் உடலில் இருந்து தலைகள் வெட்டப்பட்டும், தோலுரிக்கப்படும், எலும்புகளும் இணைப்புகளும் உடைக்கப்பட்டும் அழிக்கப்பட்டன.
அந்த வருணனின் வசிப்பிடத்தை {கடலை} தோண்டிக் கொண்டே சென்ற அவர்கள், அந்த வேலையில் பெரும் காலத்தைச் செலவழித்தும் குதிரையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, பிறகு வடகிழக்கு கடற்பகுதிக்கு சென்ற சகரனின் மூர்க்கமான மகன்கள் பாதாள உலகம் வரை தோண்டிக் கொண்டே சென்று கடைசியாகத் தரைப்பரப்பில் உலவி கொண்டிருந்த குதிரையைக் கண்டனர்.
அங்கே அவர்கள், பிரகாசக் குவியலாக இருந்த பெருமைமிக்கக் கபிலரைக் கண்டனர். சுடர்களுடன் கூடிய நெருப்பைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்த அவரைக் {கபிலரைக்} கண்ட அவர்கள், குதிரையையும் கண்டு மகிழ்ந்தனர். அவர்கள் தங்கள் விதியால் உந்தப்பட்டு, மூர்க்கமடைந்து பெருமைமிக்கக் கபிலரை மதிக்காமல் குதிரையைக் கைப்பற்ற முனைந்தனர். பிறகு ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, கபில வாசுதேவன் என்று பெரும் முனிவர்களால் அழைக்கப்படும் தவசிகளில் நேர்மைமிக்கக் கபிலர், கடும் பார்வை பார்த்தார். பிறகு அந்தப் பெரும் தவசி அவர்களை நோக்கி நெருப்புச் சுடர்களை அனுப்பி, அந்த மந்த புத்தி கொண்ட சகரனின் மகன்களை எரித்துப் போட்டார்.
பெரும் தவங்கள் பயின்ற நாரதர், அவர்கள் சாம்பலாக்கப்பட்டதைக் கண்டு, சகரனிடம் வந்து அத்தகவலைத் தெரிவித்தார். புனிதரின் {நாரதரின்} வாயால் இந்தப் பயங்கரமான செய்தியைக் கேட்ட மன்னன் {சகரன்}, ஒரு மணி நேரம் மிகுந்த சோகத்துடன் இருந்தான். பிறகு அவன் {சகரன்}, சிவன் ஏற்கனவே சொன்னதை நினைத்துப் பார்த்தான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, பிறகு அசமஞ்சன் மகனும், தனது பேரனுமான அன்சுமானை அழைத்து இந்த வார்த்தைகளில் பேசினான் {சகரன்}. “அளவிடமுடியாத பலம் கொண்ட எனது அறுபதாயிரம் மகன்கள் கபிலரின் கோபத்தைப் பெற்று, என் காரியமாகத் தங்கள் இறப்பைச் சந்தித்தனர். ஓ களங்கமற்ற குணம் கொண்ட எனது மகனே {பேரனே, அன்சுமானே}, எனது கடமையை நான் செய்யும் பொருட்டும், எனது குடிகளுக்கு நல்லது செய்ய விரும்பியும் உனது தந்தையையும் {அசமஞ்சனையும்} நான் கைவிடலாயிற்று” என்றான்.
யுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னார், “ஓ! அறப்பயிற்சிகளையே தனது முழுச் செல்வமாகக் கொண்ட தவசியே {லோமசரே}, மன்னர்களில் முதன்மையான சகரன் ஏன் பராக்கிரமம் கொண்ட தனது சொந்த மகனைக் கைவிட்டான்? (பிற மனிதர்கள் அனைவருக்கும்) அது சிரமமான செயல் ஆயிற்றே” என்று கேட்டான்.
லோமசர் சொன்னார், “சகரனுக்குச் சிபி இளவரசி அசமஞ்சன் என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றெடுத்தாள். அவன், நகர மக்களின் பலமற்ற குழந்தைகளைக் கழுத்தைப் பிடித்துக் கதறக் கதற நதிக்குள் தூக்கி தூக்கி வீசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அதன்பேரில் நகரமக்கள் பெரும் பீதி அடைந்து துயரத்துடன் ஒருவரை ஒருவர் சந்தித்து, கூப்பிய கரங்களுடன் சகரனிடம் வந்து, “ஓ! பெரும் மன்னா! எதிரி படைகளின் மூர்க்கமான தாக்குதில் இருந்து எங்களைக் காப்பவன் நீயே. ஆகையால் அசமஞ்சன் மூலம் எங்களுக்கு வரும் பயங்கரமான ஆபத்துகளில் இருந்து காப்பதே உனக்குத் தகும்” என்றனர். அந்த மனித ஆட்சியாளர்களில் மிக நேர்மையானவன் {சகரன்}, தனது குடிகளிடம் இருந்து இந்தப் பயங்கரச் செய்தியைக் கேள்விப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு எதுவும் பேசாமல் சோகத்துடன் இருந்தான். பிறகு தனது அமைச்சர்களிடம், “இந்த நாளே எனது மகனான அசமஞ்சனை இந்த நாட்டை விட்டுத் துரத்த வேண்டும். எனக்கு ஏற்புடையதை நீங்கள் செய விரும்பினால் இதை உடனடியாகச் செய்யுங்கள்” என்றான். ஓ! மனிதர்களின் பாதுகாவலனே {யுதிஷ்டிரா}, அந்த அமைச்சர்களும் மன்னன் சொன்னது போலவே அவன் உத்தரவை விரைவாக நிறைவேற்றினர். பெருமைமிக்கச் சகரன் தனது நகரவாசிகளின் நன்மையை நோக்கில் கொண்டு, தனது மகனை எப்படி நாடு கடத்தினான் என்பதை நான் உரைத்துவிட்டேன். இனி பெரிய பலம் வாய்ந்த வில்லைக் கொண்ட {பேரன்}அன்சுமானுக்குச் சகரன் என்ன சொன்னான் என்பதைச் சொல்கிறேன் கேள்..
சகரன், “ஓ! எனது மகனே {பேரன் அன்சுமானே}, உனது தந்தையை {அசமஞ்சனை} கைவிட்டதை நினைத்தும், எனது மகன்களின் மரணத்தைக் குறித்தும், குதிரையை மீட்பதில் வெற்றியடையாததைக் குறித்தும் துயர் நிறைந்த இதயத்துடன் இருக்கிறேன். ஆகையால், ஓ! பேரனே, துயரத்தில் துன்புறுத்தப்பட்டும், எனது அறச்சடங்குகளில் ஏற்பட்ட தடையால் குழம்பியும் இருக்கிறேன் நான். ஆகையால் நீ அந்தக் குதிரையைத் திரும்பக் கொண்டு வந்து என்னை நரகத்தில் இருந்து காக்க வேண்டும்” என்று கேட்டான். பெருமைமிக்கச் சகரனால் இப்படிச் சொல்லப்பட்ட அன்சுமான் துயரத்துடன் பூமி தோண்டப்பட்ட இடத்திற்குச் சென்றான். பிறகு அதே பாதை வழியாக அவன் கடலுக்குள் நுழைந்து சிறப்புமிக்கக் கபிலரையும், குதிரையையும் கண்டான். ஒளிக்குவியல் போலத் தனது வகைக்கு நேர்மையாக இருந்த அந்தப் பழம்பெரும் தவசியைக் கண்டு, தனது தலையைத் தரையில் பதித்து வணங்கி, தனது வருகைக்கான காரணத்தைச் சொன்னான்.
ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அன்சுமானிடம் திருப்தி கொண்ட அற ஆன்மா கொண்ட தவசியான கபிலர், தன்னிடம் ஏதாவதொரு உதவியைக் கோரும் படி கேட்டார். முதலில் அவன் வேள்விக்குத் தேவையான குதிரையைக் கேட்டான். இரண்டாவதாகத் தனது தந்தைமாரின் ஆன்ம சுத்தியைக் கேட்டான். பிறகு அந்தப் பெரும் பலம் வாய்ந்த தவசிகளின் தலைவரான கபிலர் அவனிடம், “நீ விரும்பும் எதையும் என்னால் அருளமுடியும் ஓ! களங்கமற்றவனே (இளவரசனே). நற்பேறு உனதாகட்டும்! உன்னில் பொறுமையும், உண்மையும், நேர்மையும் நிலைத்திருக்கின்றன. உன்னைக் கொண்டு சகரன் தனது விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றிக் கொள்வான். நீயே உனது தந்தைக்கு (உண்மையான) மகன். உனது திறனால் சகரனின் மகன்கள் சொர்க்கத்திற்குச் செல்வார்கள். (தெய்வநிந்தனையின் விளைவுகளால் ஏற்பட்ட மரணத்தில் இருந்து அவர்கள் மீட்கப்படுவார்கள்.)
சகரனின் மகன்களைச் சுத்திகரிக்கும் நோக்குடன் வரும் உனது மகனின் மகன் {பகீரதன்} (பெரும் தவப்பயிற்சிகளின் பொருட்டு) பெரும் தெய்வமான சிவனின் உதவியைப் பெற்று, (அதன் காரணமாக) மூன்று (தனி) ஓடைகளாகப் பாயும் நதியான கங்கையை (இந்த உலகத்திற்குக்) கொண்டு வருவான். ஓ! மனிதர்களின் தலைவா {அன்சுமானே}, நற்பேறு உனதாகட்டும்!~ இந்த வேள்விக் குதிரையை நீ அழைத்துச் செல், பெருமைமிக்கச் சகரனின் வேள்விச் சடங்குகளை முடி மகனே” என்றார் {கபிலர்}.
இப்படிச் சிறப்புமிக்கக் கபிலரால் சொல்லப்பட்ட அன்சுமான் தன்னுடன் குதிரையை அழைத்துக் கொண்டு, பலம் வாய்ந்த மனம் கொண்ட சகரனின் வேள்விச் சாலைக்குத் திரும்பி வந்தான். பிறகு உயர் ஆன்ம சகரனின் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான். சகரன் அவனது உச்சியை முகர்ந்து பார்த்தான். பிறகு அவன் {பேரன் அன்சுமான்} தான் கண்ட மற்றும் கேட்ட சம்பவங்கள் அனைத்தையும் சகரனின் மகன்கள் அழிவையும் சொன்னான். குதிரை வேள்விச்சாலைக்குத் திரும்பக் கொண்டு வரப்பட்டதையும் தெரிவித்தான். இதைக் கேட்ட மன்னன் சகரன், தனது மகன்கள் குறித்து மேலும் வருத்தமடையாமல் இருந்தான். பிறகு அவன் அன்சுமானை புகழ்ந்து, கௌரவித்து, தனது வேள்விச் சடங்குகளை முடித்தான்.
அவனது வேள்வி முடிந்ததும் சகரன் அனைத்து தேவர்களால் மரியாதையுடன் வாழ்த்தப்பட்டான். பிறகு அவன் {சகரன்} வருணனின் வசிப்பிடமான கடலைத் தனது மகனாக ஆக்கிக் கொண்டான். அந்தத் தாமரைக் கண்ணன் (மன்னன் சகரன்) நீண்ட காலத்திற்குத் தனது நாட்டை ஆண்டு, பிறகு அனைத்து பொறுப்புகளையும் அரியணையையும் தனது பேரனிடம் {அன்சுமானிடம்} கொடுத்துவிட்டுச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அதே போல ஆன்மாவால் அறம்சார்ந்தவனான அன்சுமானும், கடலின் நுனி வரை இருந்த முழு உலகத்தையும், தனது தந்தையின் தந்தையுடைய பாதச்சுவடுகளைப் பின்பற்றி ஆண்டான். திலீபன் என்று அழைக்கப்பட்ட அவனின் {அன்சுமனின்} மகன் அறம் கொண்டவனாக இருந்தான். அரசுரிமைக்கான கடமைகளை அவன் {திலீபன்} மேல் சுமத்திவிட்டு அன்சுமான் தனது உயிரை விட்டான்.
தனது மூதாதையர்களுக்கு ஏற்பட்ட துன்பகரமான விதிப்பயனை அறிந்த திலீபன் மிகவும் துக்கமுற்று, அவர்களை மீட்கும் வழிகளை நினைத்துப் பார்த்தான். அந்த மனிதர்களின் ஆட்சியாளன் {திலீபன்} கங்கையைக் கீழே (மனித உலகுக்கு) இறக்க மிகவும் முயற்சி செய்தான். தன்னால் இயன்றவரை அவன் முயன்றாலும், அவனால் தான் விரும்பியவாறு அதைக் {கங்கையைக்} கொண்டுவர முடியவில்லை. அவனுக்கு {திலீபனுக்கு) பகீரதன் என்ற பெயரில் அழகான மகன் பிறந்தான். அவன் அறவாழ்வுடனும், உண்மையுடனும், தீய எண்ணங்கள் அற்றவனுமாக இருந்தான். திலீபன் அவனை மன்னனாக நியமித்து, கானக வாழ்வை மேற்கொள்ளச் சென்றான். ஓ! பாரதக் குலத்தின் கொழுந்துகளில் சிறந்தவனே, பிறகு அந்த மன்னன் (திலீபன்), தன்னை வெற்றிகரமான தவ வழிகளில் ஈடுபடுத்தி, இறுதிக் (குறித்த) காலத்தில் கானகத்தில் இருந்து சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.
கங்கையின் அருள் பெற்ற பகீரதன்! – வனபர்வம் பகுதி 108-தனது மூதாதையர்களின் நிலையை அறிந்த பகீரதன், ஆட்சியை அமைச்சரிடம் ஒப்படைத்து விட்டு இமயத்தில் தவம் செய்வது; கங்கையைக் கண்டு அவளது அருளைப் பெறுவது; கங்கை சொன்ன நிபந்தனை; பகீரதன் சிவனை நோக்கி தவம் இருந்தது; பகீரதன் சிவனின் அருளைப் பெற்றது…
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பெரும் பலம்வாய்ந்த வில்லையும், பலம்வாய்ந்த தேரையும் கொண்ட அம்மன்னன் {பகீரதன்}, அச்சூழ்நிலையில் தலைமையேற்று (அரியணை ஏறி) இந்த உலகத்தின் ஆன்மாவாகவும், அதன் கண்களுக்குக் காண்பதற்கு இனியவனாகவும் இருந்தான். அந்தப் பலம் நிறைந்த கரங்கள் கொண்டவன் பலம்வாய்ந்த ஆன்மாக் கொண்ட கபிலரால் தனது மூதாதையர்களுக்கு ஏற்பட்ட துயரமான நிலையையும், அவர்கள் தேவலோகம் அடைய முடியாத நிலையையும் அறிந்தான். ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா} அவன் மன்னனுக்குரிய தனது அரச கடமைகளை அமைச்சரிடம் ஒப்படைத்துவிட்டு தவமியற்ற பனி நிறைந்த மலையை {இமயத்தை} அடைந்தான்.
ஓ! மனிதர்களில் புகழ்மிக்கவனே {யுதிஷ்டிரா}, தவ வாழ்வின் மூலம் தனது பாவங்களை அழித்து, அதன் காரணமாகக் கங்கையின் உதவியை அடைய அவன் {பகீரதன்} மலைகளில் முதன்மையான இமயத்தை அடைந்தான். அங்கே அவன் {பகீரதன்} அதன் சிகரங்களில் வித்தியாசமான தாதுக்களைக் கண்டான். அங்கே மேகத் துளிகள் சிதறி காற்றோடு பயணித்தன. நதிகள், தோப்புகள், (நகரத்தில் இருக்கும் பல} அரண்மனைகள் போன்ற பாறை முடுக்குகளுடன் அம்மலை இருந்தது. குகைகளிலும், பள்ளங்களிலும் சிங்கங்களும் புலிகளும் பதுங்கியிருந்தன. வித்தியாசமாக ஒலியெழுப்பும் பலவண்ண பறவைகளால் அவ்விடம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அங்கே வண்டுகளும், அன்னங்களும், நீர்க்காக்கைகளும், நீர்க்கோழிகளும், மயில்களும், நூறு இறகுகள் கொண்ட பறவைகளும், ஜீவஞ்சீவங்களாலும், குயில்களாலும், கருத்த நிறம் கொண்ட சக்கோரங்களாலும், குஞ்சுகளிடம் அன்பொழுகும் பறவைகளாலும் அவ்விடம் நிறைந்திருந்தது.
அந்த மலையில் நீர்நிறைந்த அழகிய இடங்களில் தாமரைகள் அடர்ந்திருப்பதைக் கண்டான் {பகீரதன்}. அங்கே நாரைகளின் இனிய ஒலிகளுடன், கின்னரர்களும் அப்சரஸ்களும் கற்பாறைகளில் அமர்ந்திருந்தனர். முக்கியமான இடங்களை ஆக்கிரமித்த யானைகள் அங்கிருந்த மரங்களைத் தங்கள் துதிக்கைகளால் திருடின. வித்தியாதர்கள் அங்கே அடிக்கடி வந்து சென்றனர். பலதரப்பட்ட ரத்தினங்கள் நிறைந்து, கடும் விஷம் கொண்ட பிரகாசிக்கும் நாக்குடைய பாம்புகள் நிறைந்தும் இருந்தது அம்மலை. அந்த மலையில் சில பகுதிகள் தங்கம் போலவும், மற்றவை வெள்ளி போவும் பிரகாசித்தன. சில இடங்களில் அது (பழுப்பு நிற) அஞ்சன {மருந்துக்} குவியல் போலவும் காட்சி அளித்தது. அந்தப் பனி நிறைந்த மலையில் மன்னன் {பகீரதன்} தன்னை அமர்த்திக் கொண்டான். மனிதர்களில் மிகவும் புகழத்தக்க அவன் அந்த இடத்தில் அமர்ந்து கடும் தவம் இயற்றினான். ஆயிரம் {1000} வருடங்களுக்கு அவன் நீர், கனி மற்றும் கிழங்குகள் தவிர வேறு எதையும் உட்கொள்ளவில்லை. இருப்பினும் தேவர்களின் கணக்குப்படி ஆயிரம் வருடங்கள் கழிந்ததும், பெரும் நதியான கங்கை, பொருளுரு கொண்டு {பௌதீக உருவெடுத்து [material form]}, அவனுக்கு (தெய்வீகக்) காட்சியளித்தாள்.
கங்கை {பகீரதனிடம்}, “ஓ! பெரும் மன்னா, நீ என்னிடம் என்ன விரும்புகிறாய்? நான் உனக்கு எதை அருள வேண்டும்? ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே அதை என்னிடம் சொல்! நீ சொல்வதை நான் செய்கிறேன்” என்றாள். இப்படிச் சொல்லப்பட்ட அம்மன்னன் {பகீரதன்}, அந்தப் பனிநிறைந்த மலையின் மகளான கங்கையிடம், “ஓ! வரமருளுபவளே! ஓ பெரும் நதியே, எனது தந்தையின் தந்தைகள், குதிரையைத் தேடிய போது, கபிலரால் மரணத் தேவன் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டார்கள். சகரனின் அந்த அறுபதாயிரம் மகன்களின் பலம் வாய்ந்த ஆன்மா, கம்பீரமான கபிலரால் ஒருக்கணத்தில் அழிக்கப்பட்டன. இப்படி அழிக்கப்பட்டதால் அவர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைக்கவில்லை. ஓ! பெரும் நதியே, நீ அவர்களின் உடலில் உனது நீரைத் தெளிக்காத வரை அவர்களுக்கு முக்தி கிடையாது. ஓ! அருளப்பட்ட தேவதையே, சகரனின் மகன்களான எனது மூதாதையார்கள் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல். ஓ! பெரும் நதியே, அவர்கள் நிமித்தமாகவே நான் உன்னை வேண்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “உலகத்தால் வணங்கப்படும் தேவதையான கங்கை, மன்னனின் {பகீரதனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு மிகவும் திருப்தி கொண்டு பகீரதனிடம், “ஓ! பெரும் மன்னா! நீ என்னிடம் கேட்பதை நான் செய்யத் தயாராக இருக்கிறேன்; அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், நான் வானத்தில் இருந்து பூமிக்கு இறங்கும் போது, நான் விழும் வேகம் தாங்க முடியாததாக இருக்கும். ஓ! மனிதர்களின் பாதுகாவலா {பகீரதா}! தெய்வங்களில் மிகவும் போற்றத்தக்க கருநீல மிடறு {தொண்டை} கொண்ட அந்தப் பெருந்தலைவனான சிவனைத் தவிர, அந்த வேகத்தைத் தாங்கும் சக்தி கொண்டவர் மூவுலகிலும் வேறு யாருமிலர். ஓ பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே (இளவரசனே)! தவம் பயில்வதன் மூலம் அந்த வரங்கள் அருள்பவரான சிவனின் உதவியை அடைய முயற்சி செய். அந்தத் தெய்வம் எனது வீழ்ச்சியைத் தனது தலையில் தாங்கிக் கொள்வார். ஓ! மன்னா {பகீரதா}, உனது தந்தைகளுக்கான சேவையின் நிமித்தமான உனது விருப்பத்தை அவர் நிறைவேற்றுவார்” என்றாள் {கங்கை}.
இதைக் கேட்ட பெரும் மன்னனான பகீரதன் கைலாச மலைக்குச் சென்று கடும் நோன்புகள் நோற்று, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அருளைக் கொடுப்பவனின் (சிவனின்) உதவியைப் பெற்றான். ஓ! மனிதர்களின் பாதுகாவலா {யுதிஷ்டிரா}, அந்த மனிதர்களில் சிறந்தவன் {பகீரதன்}, தனது மூதாதையர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் பெறுவதின் பொருட்டு, விழும் கங்கையைச் சிவன் தாங்கும் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டான்.
பகீரதன் மகளாகிய கங்கை! – வனபர்வம் பகுதி 109-பகீரதனிடம் சிவன் கங்கையைத் தாங்கிக் கொள்வதாக ஏற்பது; விண்ணிலிருந்த கங்கை மண்ணில் பாய்வது; பகீரதன் கங்கைக்கு வழி காட்டி கடலை அடையச் செய்தது…
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பகீரதன் சொன்னதைக் கேட்ட அந்த அருளப்பட்ட தெய்வம் {சிவன்}, தேவலோகவாசிகளுக்கு ஏற்புடையதைச் செய்ய எண்ணி அம்மன்னனிடம் {பகீரதனிடம்}, “அப்படியே ஆகட்டும். ஓ! மனிதர்களைக் காப்பவர்களில் மிகவும் நேர்மையானவனே, ஓ! பெரும் பலம்வாய்ந்த வலுத்த கரம் கொண்டவனே (இளவரசனே), சுத்தமானவளும், அருளப்பட்டவளும், தெய்வீகமானவளுமான தேவர்களின் நதி {கங்கை} வானத்தில் இருந்து வீழும்போது, உனக்காக நான் அவளைத் தாங்கிக் கொள்கிறேன்” என்றான். இப்படிச் சொல்லிய அவன் {சிவன்}, வித்தியாசமான ஆயுதங்களை உயர்த்திப் பிடித்தவாறு, பரிதாபகரமான முகங்களுடன் இருந்த தனது சேவகர்களுடன் பனி மலைக்கு வந்தான். அங்கேயே நின்றவாறு மனிதர்களில் மிகவும் போற்றத்தக்க பகீரதனிடம், “ஓ! பலம் நிறைந்த கரங்கள் கொண்டவனே (இளவரசனே), மலைகளின் மன்னனுடைய {சைலராஜன் = மலைகளின் மன்னன்} மகளான அந்த நதியை {கங்கையை} வேண்டிக் கொள். நதிகளில் மிகவும் போற்றத்தக்க அவள் {கங்கை} உலகத்தின் மூன்றாவது பகுதியில் {சொர்க்கத்தில்} இருந்து வீழும் போது, நான் அவளைத் தாங்கிக் கொள்வேன்” என்றான் {சிவன்}.
சிவனால் உச்சரிக்கப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மன்னன் {பகீரதன்} (இதயத்தில்) பக்தியுடன் தனது வணக்கங்களைச் செய்து, தனது சிந்தனையைக் கங்கையை நோக்கித் திருப்பினான். பிறகு அந்தக் காண்பதற்கினிய (நதி) சுத்தமான நீரைக் கொண்டவள் மன்னனால் {பகீரதனால்} நினைக்கப்பட்டதும், அந்தப் பெரும் தெய்வம் (சிவன்), (வீழும் தன்னைப் பெற) நிற்பதைக் கண்டு, திடீரென வானத்தில் இருந்து கீழே வந்தாள். வானத்தில் இருந்து அவள் குதித்ததைக் கண்ட தேவர்கள் பெரும் தவசிகளுடனும், கந்தர்வர்களுடன், பாம்புகளுடனும், யக்ஷரகளுடனும் பார்வையாளர்களாக அங்கே கூடி நின்று பார்த்தனர். பிறகு பனி மலையின் மகளான கங்கை வானத்தில் இருந்து கீழே வந்தாள். மீன்களும் சுறாக்கள் நிறைந்த நீர்ச்சுழிகளுடன் பொங்கிப் பெருக வந்தாள்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கடலை நோக்கிச் சென்ற அவள் {கங்கை} தன்னை மூன்று ஓடைகளாகப் பிரித்துக் கொண்டாள். அவளது நீர் நுரைக்குவியலால் சூழப்பட்டிருந்தது. பல வெண் நாரைகளின் அணிவகுப்பைப் போல இருந்தது அது {நுரைக்குவியல்} இருந்தது. நுரை எனும் ஆடையை உடுத்திச் செல்லும் அவள் {கங்கை} ஓரிடத்தில் விரிந்தும், வேறிடத்தில் வளைந்தும், சில இடங்களில் தடுமாறியும் செல்லும் மது மயக்கத்திலுள்ள மங்கையைப் போல இருந்தாள். இன்னும் பிற இடங்களில் அவள் தனது நீரடிப்பின் தன்மையால் பெரும் கர்ஜனை செய்தாள். வானத்தில் இருந்து விழும்போதே இதுபோன்ற பல விதமான செயல்கள் புரிந்து பூமியை அடைந்த அவள் {கங்கை} பகீரதனிடம், “ஓ! பெரும் மன்னா {பகீரதா}, நான் செல்ல வேண்டிய பாதையை எனக்குக் காண்பி. ஓ பூமியின் தலைவா, நான் உனக்காகவே இந்தப் பூமியில் இறங்கினேன்” என்றாள் {கங்கை}.
அதனால், ஓ! மனிதர்களில் மிகவும் போற்றத்தக்கவனே {யுதிஷ்டிரா}, இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் பகீரதன், பெரும் பலம்வாய்ந்த சகர மைந்தர்களின் உடல்களை அந்தப் புனிதமான நீர், நிறைக்கும் பொருட்டு அந்த உடல்கள் {உடல்களின் எச்சம்} கிடந்த இடத்தின் வழியாக செல்லுமாறு தனது பாதையை அமைத்துக் கொண்டான். மனிதர்களால் வழிபடப்பட்ட சிவன், கங்கையைத் தாங்கிக் கொண்ட பணியைச் சாதித்ததும், மலைகளில் போற்றத்தக்க கைலாசத்துக்குத் தேவர்களுடன் சென்றான். பிறகு அந்த மனிதர்களின் பாதுகாவலன் {பகீரதன்} கங்கையை அழைத்துக் கொண்டு கடலை அடைந்தான். வருணனின் வசிப்பிடமான அந்தக் கடலும் விரைவில் நிரம்பியது.
பிறகு அம்மன்னன் {பகீரதன்} கங்கையைத் தனது மகளாகச் சுவீகரித்துக் கொண்டு, தனது மூதாதையர்கள் பெயரில் நீர்க்கடன் செலுத்தி, இதய விருப்பம் நிறைவடைந்தவன் ஆனான். ஓ! தலைவா {யுதிஷ்டிரா}, நீ கேட்டுக் கொண்டதற்கிணங்க, கங்கை மூன்று ஓடைகளாகப் பிரிந்து ஓடி, பூமியை அடைந்து, எப்படி கடலை நிரப்பினாள்; குறித்த காரியத்திற்காக அகஸ்தியர் எப்படிக் கடலைக் குடித்தார்; அந்தணர்களைக் கொன்ற வாதாபியை அகஸ்தியர் எப்படி அழித்தார் என்ற வரலாற்றுகளைச் சொல்லிவிட்டேன்” என்றார் லோமசர்.
பேசுபவர்கள் மீது கல்லெறிந்த மலை! – வனபர்வம் பகுதி 110அ-யுதிஷ்டிரன் ஹேமகூட மலையில் சில அதிசயங்களைக் காண்பது; பிறகு நந்தை அபரநந்தை ஆகிய நதிகளில் நீராடி கௌசி நதி இருக்கும் இடத்திற்கு செல்வது; லோமசர் யுதிஷ்டிரனுக்கு ரிஷ்யசிருங்கரின் கதையைச் சொல்ல ஆரம்பிப்பது..
வைசம்பாயனர் {ஜனமேஜயா} சொன்னார், “ஓ! பாரதகுலத்தில் தலைவா {ஜனமேஜயா}! பிறகு குந்தியின் அந்த மகன் {யுதிஷ்டிரன்}, பாவங்கள் குறித்த பயத்தை அழிக்கும் தன்மை கொண்ட நந்தை, அபரநந்தை ஆகிய இரு நதிகளை மெதுவாக அடைந்தான். பிறகு அந்த மனிதர்களின் பாதுகாவலன் {யுதிஷ்டிரன்}, ஆரோக்கியத்திற்கு இருப்பிடமான *ஹேமகூடம்1 என்ற மலையை அடைந்து, அங்கே வியப்பிற்குரிய, ஆச்சரியப்படத்தக்க காட்சிகள் பலவற்றைக் கண்டான். அங்கே ஏதும் வார்த்தைகளை உச்சரித்தாலே, உடனே மேகங்கள் கூடின, ஆயிரக்கணக்கான கற்களும் விழுந்தன. இக்காட்சியைக் கண்ட மக்கள் துயருற்று, அந்த மலையை ஏற இயலாதவர்களானார்கள். அங்கே எப்போதும் காற்று வீசிக்கொண்டிருந்தது, வானம் எப்போதும் மழையைக் கொட்டிக் கொண்டே இருந்தது. மேலும் புனித ரித்துகளின் ஒலி {வேத ஒலி} கேட்டுக் கொண்டிருந்தாலும், அங்கே {வேதம் உரைப்பவர்கள்} யாரும் தென்படவில்லை.
மாலையிலும், காலையிலும் தேவர்களுக்குக் காணிக்கைகளைச் சுமந்து செல்லும் அருள் நிறைந்த நெருப்பு அங்கே தென்பட்டது. தவப்பயிற்சிகள் தடைபடும் வண்ணம் அங்கே பூச்சிகள் கடித்தன. அங்கே ஆன்மாவைச் சோகம் பீடித்து, மனிதர்கள் நோய்வாய்ப்பட்டனர். இதைப் போன்ற பல விசித்திரமான குணங்களைக் கண்ட பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் இந்த அற்புத காரியங்கள் குறித்து லோமசரிடம் கேட்டான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! எதிரிகளைக் கொல்வபனே, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நாங்கள் ஏற்கனவே கேட்டவற்றை இப்போது நான் சொல்லப் போகிறேன். அதைக் கவனமான மனதுடன் கேள். ரிஷபம் என்ற இந்தச் சிகரத்தில், முன்பொரு சமயம் அதே பெயர் {ரிஷபர்} கொண்ட தவசி ஒருவர் இருந்தார். அவர் பல நூறு வருடங்கள் தனது உயிரைத் தக்க வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். நோன்புகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அவர் மிகுந்த கோபக்காரராகவும் இருந்தார். அவர் {ரிஷபர்} பலபேர் தன்னைக் குறித்துப் பேசுவதைக் கண்டு கோபத்துடன் அந்த மலையிடம், “இங்கே வார்த்தைகளை உச்சரிக்கும் எவர் மீதும், நீ கற்களை எறியவேண்டும். மேலும் அவன் ஒலி எழுப்புவதைத் தடுக்கும் வண்ணம் நீ காற்றையும் அழைக்க வேண்டும்” என்றார். இதுதான் அந்தத் தவசி {ரிஷபர்} சொன்னது.
ஆக இந்த இடத்தில் எந்த மனிதனும் வார்த்தைகளை உச்சரித்தால், அவன் கர்ஜிக்கும் மேகங்களால் தடைசெய்யப்படுகிறான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி இந்தக் காரியங்கள் அனைத்தும் அந்தப் பெருந்தவசியால் ஏற்பட்டது. கோபத்தால் அவர் மற்றச் செயல்களுக்கும் {இங்கே} தடையேற்படுத்தினார். ஓ மன்னா! பழங்காலத்தில் தேவர்கள் நந்தைக்கு வந்த போது, திடீரென அந்தத் தேவர்களைப் பார்க்க நிறைய மனிதர்கள் (அங்கே) கூடினர். இருப்பினும் தேவர்களும், அவர்களின் தலைவனான இந்திரனும் தாங்கள் அவர்களால் காணப்படுவதை விரும்பாததால், அந்த இடத்தில் மலைகளின் உருவில் தடைகளை ஏற்படுத்தி அதை அடைவதற்கரியதாக மாற்றினர். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}!, அந்த நாள் முதல், மலைபோல் தெரியும் அதன் மேல் மனிதர்கள் தங்கள் பார்வையை எப்போதும் செலுத்த முடியவில்லை. பார்த்தாலும், அவர்களால் அதை ஏற முடியவில்லை.
தவவாழ்க்கை வாழாத எவரும் அந்தப் பெரிய மலையைக் காண முடியாது, காண முடிந்தாலும் அதை ஏற முடியாது. ஆகையால், ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}! உனது நாவைக் கட்டுக்குள் வை. அந்தக் காலத்தில் அந்தத் தேவர்கள் அனைவரும் அங்கேதான் சிறந்த வேள்விச் சடங்குகளைச் செய்தனர். ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, இந்த நாளில் கூட நாம் அக்குறிப்புகளை அங்கே காணலாம். இங்கே இருக்கும் புல்கூடப் புனிதமான குசப்புல் {வெட்டிவேர்} போன்ற உருவைக் கொண்டிருக்கிறது. இங்கே இருக்கும் தரை, புனிதமான புற்களால் மூடப்பட்டிருக்கிறது. ஓ! மனிதர்களின் தலைவா! இங்கே இருக்கும் பல மரங்கள், பலி விலங்குகள் கட்டப்படும் இடங்கள் போலவே இருக்கின்றன.
ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, தேவர்களும், தவசிகளும் இங்கே இன்னும் தங்கள் வசிப்பிடங்களை வைத்திருக்கின்றனர். அவர்களது புனித நெருப்பு {வேள்வி நெருப்பு} காலையிலும் மாலையிலும் காணப்படுகிறது. ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இங்கே நீராடும் ஒருவனின் பாவம் உடனே அழிக்கப்படுகிறது. ஓ குருகுலத்தில் மிகவும் போற்றத்தக்கவனே {யுதிஷ்டிரா}, நந்தையில் நீ நீராடிய பிறகு, விஸ்வாமித்திரர் கடுந்தவம் இருந்த அற்புதமான இடமான கௌசிகி நதிக்குச் செல்ல வேண்டும்” என்றார் {லோமசர்}. பிறகு மன்னனும் {யுதிஸ்டிரன்} தனது சேவகர்களுடன் தனது உடலை அங்கே கழுவி கொண்டு, காண்பதற்கினிய, குளிர்ந்த, சுத்தமான நீரையுடைய கௌசிகி நதிக்குச் சென்றான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, இந்தச் சுத்தமான தெய்வீக நதியின் பெயர் கௌசிகி. கவனத்தைக் கவர்கின்ற இந்த மகிழ்ச்சிகரமான ஆசிரமம் விஸ்வாமித்திரருடையது. மேலும் புனிதமான பெயரைக் கொண்ட இதோ இந்த ஆசிரமம் பலம்வாய்ந்த ஆன்மா கொண்ட காசியபருடையது. அவருக்கு நோன்புகளுக்குத் தன்னை அர்ப்பணித்து, ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ரிஷ்யசிருங்கர் என்ற மகன் ஒருவர் இருந்தார். அவர் {ரிஷ்யசிருங்கர்}, தனது நோன்புகளின் சக்தியால் இந்திரனை மழை பொழிய வைத்தார்; பேய்களான பலனையும் விருத்திரனையும் கொன்ற அந்தத் தேவன் {இந்திரன்} அவர் {ரிஷ்யசிருங்கர்} மீதிருந்த பயத்தால் பஞ்ச காலத்திலும் மழையைப் பொழிந்தான். காசியபரின் பலம்வாய்ந்த சக்தி மிக்க மகன் {ரிஷ்யசிருங்கர்} பெண்மானுக்குப் பிறந்தவராவார். அவர் {ரிஷ்யசிருங்கர்} லோமபாதனின் நாட்டில் பெரிய அற்புதத்தைச் செய்தார். அவர் பயிர்களை மீட்டெடுத்த போது, மன்னன் லோமபாதன், சூரியன் தனது மகள் சாவித்திரியைக் கொடுத்தது போல, தனது மகள் சாந்தையை அவருக்குத் {ரிஷ்யசிருங்கருக்கு} திருமணம் செய்து கொடுத்தான்” என்றார் {லோமசர்}.
பெண்களையேக் காணாத ரிஷ்யசிருங்கர்! – வனபர்வம் பகுதி 110ஆ-விபாண்டகருக்கும் பெண்மானுக்கும் ரிஷ்யசிருங்கர் பிறப்பது; அங்கதேசத்தின் மழையின்மை; லோமபாதன் ஆலோசனை; ரிஷ்யசிருங்கரைத் தன் நாட்டுக்கு வரவழைக்க லோமபாதன் திட்டம்; விலைமாதர்களிடம் பேசுதல்; திட்டத்தை ஏற்றுக் கொண்ட முதிய மங்கை…
யுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னான், “காசியபரின் மகனான {பேரனான} ரிஷ்யசிருங்கர் எப்படிப் பெண்மானுக்குப் பிறந்தார்? வெறுக்கத்தக்க பாலியல் உறவில் பிறந்த அவர் புனிதத்தன்மையை எப்படி அடைந்தார்? {அசுரர்கள்} பலனையும் விருத்திரனையும் கொன்ற இந்திரன் எக்காரணத்தால் அவ்விளம் பிள்ளைக்குப் பயந்து, பஞ்ச காலத்தில் மழையைப் பொழிந்தான்? மானாக இருந்தவரின் மனதை ஆசைப்படும்படி செய்த புனித வாழ்வு வாழ்ந்த இளவரசி சாந்தை எவ்வளவு அழகாக இருந்தாள்? அரசமுனியான லோமபாதன் அறம்சார்ந்தவனாகச் சொல்லப்படுகிறானே, அவ்வாறிருக்க, பகனைத் தண்டித்தவனான இந்திரன் அவனது நாட்டில் ஏன் மழையைப் பொழியவில்லை? ஓ! புனிதமான தவசியே! {லோமசரே} இவை அனைத்தையும் விவரமாக, நடந்த படியே எனக்கு உரைக்க வேண்டும். ரிஷ்யசிருங்கரின் வாழ்வில் நடந்த சாதனைகளை நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அந்தண சாதியைச் சார்ந்த தவசியும், ஆன்மசாதனைகளால் தனது ஆன்மாவை பக்குவப்படுத்தியிருந்தவரும், பிறப்பைக் கொடுக்கத்தவறாத வித்துடையவரும், கற்றவரும், உயிரினங்களின் தலைவர் போலப் பிரகாசிப்பவருமான விபாண்டகருக்கு, அச்சமூட்டும் பெயர் கொண்ட ரிஷ்யசிருங்கர் எப்படிப் பிறந்தார் என்பதைக் கேள். தந்தை {விபாண்டகர்} உயர்ந்த மதிப்புக்குரியவர். அதே போல மகனும் {ரிஷ்யசிருங்கர்} பெரும் பலம்வாய்ந்த ஆவி கொண்டவர். ஆகையால் அவர் சிறியவனாக இருந்த போதிலும் முதிர்ந்தவர்களால் மதிக்கப்பட்டார்.
காசியபரின் மகனான விபாண்டகர் ஒரு பெரும் தடாகத்திற்குச் சென்று நோன்பு பயில தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தேவர்களுக்கு ஒப்பான அந்தத் தவசி இப்படியே நீண்ட காலம் நோன்பிருந்தார். ஒரு முறை நீரில் {தடாகத்தில்} தனது வாயைக் கழுவி கொண்டிருந்த போது, தேவலோக மங்கையான ஊர்வசியைக் கண்டார். அதன்காரணமாக அவரது {விபாண்டகரின்} உயிர்நீர் வெளியேறியது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அங்கே {அத்தடாகத்தில்} நீர் குடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மான், தாகமிகுதியால், தண்ணீருடன் சேர்த்து அதையும் அருந்தியது. அதன்காரணமாக அந்தப் பெண்மான் ஒரு பிள்ளையைப் பெற்றது. அந்தப் பெண்மான் உண்மையில் தேவர்களின் மகளாவாள். உலகங்களைப் படைத்த புனிதமான பிரம்மன் பழங்காலத்தில் அவளிடம், “நீ ஒரு பெண் மானாவாய். அந்த உருவத்தில் இருக்கும்போது, நீ ஒரு தவசியைப் பெற்றெடுப்பாய். அன்றே நீ விடுதலை அடைவாய்” என்றான்
உலகப் படைப்பாளனின் வார்த்தைப் பொய்யாகாது; ஆகையால் விதியும் அவ்வாறே ஆயிற்று. அந்தப் பெண்மானிடம் பெரும் தவசியான அவரது {விபாண்டகரின்} மகன் {ரிஷ்யசிருங்கர்} பிறந்தார். தவத்திற்குத் தன்னை அர்ப்பணித்த ரிஷ்யசிருங்கர், தனது நாட்களைக் கானகத்திலேயே கழித்தார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}! அந்தப் பெருமைமிக்கத் தவசியின் {ரிஷ்யசிருங்கரின்} தலையில் ஒரு கொம்பு இருந்தது. அதன் காரணமாகவே, அந்தக் காலத்தில் அவர் ரிஷ்யசிருங்கர் {தலையில் கொம்புடையவர்} என்று அழைக்கப்பட்டார். தனது தந்தையைத் தவிர வேறு யாரையும் அவர் {ரிஷ்யசிருங்கர்} கண்டதில்லை ஆகையால், அவரது மனம் எப்போதும் கடமையிலேயே முழுதும் லயித்திருந்தது.
இதே காலத்தில் அங்கம் என்ற நாட்டின் {அங்கதேசத்தின்} ஆட்சியாளனாக, தசரதனின் {ரகுராமனின் தந்தையின்} நண்பனான லோமபாதன் என்ற பெயர் கொண்ட மன்னன் இருந்தான். இன்பத்தின் மீதிருந்த நாட்டத்தால் அவன் பொய்யுரைத்த குற்றத்தை அந்தணர்களுக்கு இழைத்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அந்தக் காலத்தில் உலகத்தின் ஆட்சியாளனான அவனை {லோமபாதனை} புரோகித வகுப்பில் {அந்தணர்கள்} அனைவரும் புறக்கணித்தனர். அவன் {அறச்சடங்குகளில் துணை புரிந்து} ஆலோசனை கூறும் புரோகிதர் இல்லாமல் இருந்தான். ஆயிரம் கண்கள் கொண்ட தேவனும் {இந்திரனும்} அவனது நாட்டில் {லோமபாதன் நாடான அங்கதேசத்தில்} மழை பொழிவதைத் திடீரென நிறுத்தினான். ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அவனது மக்கள் {குடிமக்கள்} பாதிப்படையத் தொடங்கினர். தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருந்த மதிப்பும் திறனும் மிக்க, பண்பட்ட மனதுடைய பல அந்தணர்களிடம் சென்று, தேவர்கள் மழையைப் பொழியும்படியான உதவிக்காக, “வானம் நமக்கு எப்படி மழையை அருளும்? (இக்காரியத்துக்கு} உகந்த ஒன்றைச் சிந்தியுங்கள்” என்று கேட்டான் {லோமபாதன்}.
இப்படிக் கேட்கப்பட்ட அந்தப் பண்பட்ட மனிதர்கள் தாங்கள் கருதியதைச் சொன்னார்கள். அந்தத் தவசிகளில் ஒருவர் அம்மன்னனிடம் {லோமபாதனிடம்}, “ஓ! மன்னர்களின் தலைவா (லோமபாதா}, அந்தணர்கள் உன்னிடம் கோபமாக இருக்கின்றனர். (ஆகையால்) அவர்களைச் சாந்தப்படுத்த ஏதாவது செய். ஓ! பூமியின் ஆட்சியாளனே, பெண்களைப் பற்றியே அறியாது, எளிமையில் இனிமை கண்டு, கானகத்தில் வசிக்கும் தவசியின் மைந்தனான ரிஷ்யசிருங்கருக்கு ஆள் அனுப்பு. ஓ! மன்னா {லோமபாதா}, தவப்பயிற்சிகளில் பெருமைவாய்ந்த அவர் {ரிஷ்யசிருங்கர்}, உனது நாட்டுக்கு {அங்கதேசத்திற்கு} வந்தால், வானம் உடனே மழையை அருளும். இதில் எனக்குச் சந்தேகமே இல்லை” என்றார்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இந்த வார்த்தைகளைக் கேட்ட லோமபாதன், தனது பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்தான். அந்தணர்களைச் சமாதானப்படுத்திய பிறகு அவன் நாடு திரும்பினான். மன்னன் திரும்பி வந்ததைக் கண்ட மக்கள் இதயத்தில் மகிழ்ந்தனர். பிறகு அந்த அங்க மன்னன் {லோமபாதன்}, ஆழ்ந்த ஆலோசனைகள் வழங்கும் தனது அமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டினான். ரிஷ்யசிருங்கரைச் சந்திப்பதற்கான திட்டத்தை வகுக்க அவன் பெரும் வலிகளைச் சந்தித்தான்.
ஓ! வழிதப்பாதவனே (இளவரசனே) {யுதிஷ்டிரனே}! அனைத்து கிளைகளிலும் ஞானம் கொண்டு, உலகக் காரியங்களில் பெரும் நிபுணத்துவம் வாய்ந்த அவனது அமைச்சர்களுடன் விவாதித்து, சாத்தியங்களை ஆராய்ந்து, கடைசியாக (தனது நோக்கம் வெற்றியடைய) ஒரு திட்டத்தை வகுத்தான். பிறகு அவன் {லோமபாதன்} நகரத்தில் இருந்த அனைத்திலும் புத்திசாலித்தனத்துடன் இருந்த விலைமகள்கள் பலருக்குச் சொல்லி அனுப்பினான். அவர்கள் வந்ததும், அந்தப் பூமியின் ஆட்சியாளன் அவர்களிடம், “அழகான பெண்களே! தவசியின் மகனான ரிஷ்யசிருங்கரின் நம்பிக்கையைப் பெற நீங்கள் ஏதாவது மயக்கும் வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அவரை நீங்கள் எனது நாட்டிற்கு அழைத்துவர வேண்டும்” என்றான். மன்னனின் கோபம் ஒரு புறம், தவசியின் சாபம் ஒரு புறம் எனக் கண்ட அப்பெண்கள் மிகவும் துக்கத்துடன் குழம்பி, இது தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது என்று தீர்மானித்தனர்.
இருப்பினும், அவர்களில் ஒருத்தியான ஒரு கிழட்டுப் பெண் {நரைத்த தலை கொண்டவள் என்றும் கொள்ளலாம்}, அம்மன்னனிடம் {லோமபாதனிடம்}, தவத்தையே செல்வமாகக் கொண்டவரை, இங்குக் கொண்டு வர நான் முயற்சிக்கிறேன். எனினும், அந்தத் திட்டத்திற்காக எனக்கு நீர் சில குறிப்பிட்ட {நான் விரும்பும்} பொருட்களைக் கொடுக்க வேண்டும். அப்படியென்றால்தான், தவசியின் மகனான ரிஷ்யசிருங்கரை என்னால் அழைத்துவர முடியும்” என்றாள். அதன்காரணமாக மன்னன் அவள் கேட்ட அனைத்தையும் கொடுத்தான். மேலும் அவன் {லோமபாதன்} ஏராளமான செல்வங்களையும், விதவிதமான ரத்தினங்களையும் கொடுத்தான். ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, பிறகு அவள் மேலும் தாமதிக்கமால், தன்னுடன் அழகும் இளமையும் நிறைந்த பல பெண்களைக் காட்டுக்கு அழைத்துச் சென்றாள்” என்றார் {லோமசர்}
ரிஷ்யசிருங்கரிடம் வந்த விலைமகள் – வனபர்வம் பகுதி 111-மன்னன் லோமபாதனிடம் உறுதி கூறி வந்த விலைமகள் ஒரு மிதக்கும் ஆசிரமத்தை அமைத்து, ரிஷ்யசிருங்கர் இருக்கும் இடத்தை அடைதல்; ரிஷ்யசிருங்கர் விலைமகளை உபசரித்தல்; சிறிது நேரம் விளையாடிவிட்டு செல்லல்; விலைமகளைப் பிரிந்ததும் ரிஷ்யசிருங்கர் சோகத்துடன் அமர்ந்திருத்தல்.; ரிஷ்யசிருங்கரின் தந்தையான விபாண்டகர் கேட்ட கேள்வி…
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, மன்னனின் {லோமபாதனின்} நோக்கத்தை நிறைவேற்ற, அவனது உத்தரவின் பேரிலும், தனது திட்டம் நிறைவேறும் பொருட்டும், அவள் {விலைமகள்} ஒரு மிதக்கும் ஆசிரமத்தைத் {ஓடத்தில் ஆசிரமம்} தயார் செய்தாள். அந்த மிதக்கும் ஆசிரமத்தில் பலதரப்பட்ட கனிகள் மற்றும் மலர்களுடன் கூடிய செயற்கை மரங்களும், இனிமையான பழங்கள் கொடுக்கக்கூடிய அழகிய புதர்களும், கொடிகளும், மந்திரத்தால் வரவழைக்கப்பட்டது போன்று பார்ப்பதற்கு இனிமையாக மனதைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தன. அவள் அந்த ஓடத்தைக் காசியபர் மகனின் {விபாண்டகரின்} ஆசிரமத்திற்கு அருகே கட்டி, அந்தத் தவசி {விபாண்டகர்} வாடிக்கையாக வெளியே செல்லும் நேரத்தை அறிந்து வர ஆட்களை அனுப்பினாள். அவள் {விலைமகள்} ஒரு சந்தர்ப்பத்தைக் கண்டு, ஒரு திட்டம் தீட்டி, தொழிலால் விலைமகளான, சாமர்த்தியசாலியான தனது மகளை {விலைமகளை} அனுப்பினாள். அந்தப் புத்திசாலிப் பெண்ணும், அந்த ஆன்மிக மனிதனின் {ரிஷ்யசிருங்கரின்} அருகே அந்த ஆசிரமத்திற்குச் சென்று அந்தத் தவசியின் மகனைக் கண்டாள்.
அந்த விலைமகள் {ரிஷ்யசிருங்கரிடம்}, “ஓ! தவசியே! ஆன்மிக அர்ப்பணிப்பாளர்கள் {முனிவர்கள்} அனைவரும் நலமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். உமது ஆசிரமத்தில் கனிகளும் கிழங்குகளும் அபரிமிதமாகச் சேமிக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். உம்மைக் காணவே நான் இங்கு வந்துள்ளேன். தவம்பயிலும் தவசிகளின் பயிற்சி பெருகுகிறது என்று நினைக்கிறேன். உமது தந்தையின் ஆவி தளராமல் இருக்கிறது என்றும், அவர் உம்மிடம் திருப்தியுடன் இருக்கிறார் என்றும் நினைக்கிறேன். ஓ! புரோகித சாதியைச் சேர்ந்த ரிஷ்யசிருங்கரே! உமது ஆய்வுகளைச் சரியாக முன்னெடுக்கிறீர் என்றும் நினைக்கிறேன்” என்றாள்.
ரிஷ்யசிருங்கர் {அந்த விலைமகளிடம்}, “நீர் ஒளிக்குவியல் போல ஒளிரும் காந்திமிக்கவராக இருக்கிறீர். நீர் வணக்கத்திற்குரியவர் என்று கருதுகிறேன். நான் உமது பாதங்களைக் கழுவ நீர் தருகிறேன். என்னிடம் இருக்கும் கனிகளையும் கிழங்குகளையும் நான் உமக்குத் தருகிறேன். புனிதமான புல்லால் செய்யப்பட்டு, கருப்பு மான் தோலால் மூடப்பட்ட இந்த ஆசனத்தில் திருப்தியாக, வசதியாக அமரும். உமது ஆசிரமம் எங்கே இருக்கிறது? ஓ! அந்தணரே, நீர் தேவர்களைப் போன்ற முகத்தோற்றம் கொண்டிருக்கிறீர். நீர் இப்போது கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் ஆன்மிக நோன்பு யாது?” என்று கேட்டார்.
அதற்கு அந்த விலைமகள் {ரிஷ்யசிருங்கரிடம்}, “ஓ காசியபரின் மகனே {பேரனே}, இந்த மலைகளுக்கு அப்பால் மூன்று யோஜனை தூரத்தில் ஒரு அழகான இடத்தில் எனது ஆசிரமம் இருக்கிறது. நான் உம்மைப்போன்ற மனிதர்களால் வணங்கத்தக்கவர் அல்ல. மேலும் நான் கால் கழுவவும் நீர் வாங்குவதில்லை. நான் தான் உமக்கு வணக்கங்கள் தெரிவிக்க வேண்டும். ஓ அந்தணரே! எனது கரங்களால் உம்மைக் கட்டி அணைத்துக் கொள்வதே நான் பயிலும் எனது ஆன்மிக நோன்பாகும்” என்றாள்.
ரிஷ்யசிருங்கர் {அந்த விலைமகளிடம்}, “நான் உமக்குக் கடுக்காய் கனிகள் {gallnut}, நெல்லிக்கனிகள் {myrobalan}, காரூஷக் கனிகள் {Karusha} {இது என்ன கனியென்று தெரியவில்லை}, மணற்பாங்கான இடங்களில் விளையும் வாதுமை {பாதாம், மணிப்பன்குகள்} {Inguda} மற்றும் அத்திப்பழம் {Indian fig} போன்ற கனிந்த பழங்களைக் கொடுப்பேன். அவை உமக்குத் திருப்தியைத் தந்தால் நீர் அதை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அவர் {ரிஷ்யசிருங்கர்} கொடுத்த ஏற்புடைய அனைத்தையும் அவள் {விலைமகள்} புறந்தள்ளினாள். பிறகு பொருந்தாத உணவுவகைகளை அவருக்குக் கொடுத்தாள். அவை ரிஷ்யசிருங்கருக்கு ஏற்புடையதாகவும், அழகானவையாகவும் இருந்தன. நறுமணமிக்க ஒரு மலர்மாலையையும், அணிந்து கொள்ள ஒளிரும் ஆடைகளையும், முதல்தரமான பானங்களையும் அவருக்கு {ரிஷ்யசிருங்கருக்கு} கொடுத்து சிரித்து மகிழ்ந்தாள். பிறகு அவரோடு விளையாடி, சிரித்து மிகவும் மகிழ்ந்தாள். அவரது பார்வையில் படும்படி அவள் பந்து விளையாடிய போது உயர்ந்து செல்லும் கொடி இரண்டாக உடைந்ததைப் போல இருந்தாள். அவரது உடலைத் தனது உடலால் அடிக்கடித் தொட்டு, மீண்டும் மீண்டும் ரிஷ்யசிருங்கரை அணைத்துக் கொண்டாள்.
பிறகு அவள் {விலைமகள்} சால, அசோக, திலக மரங்களில் இருந்து குச்சிகளை வளைத்து ஒடித்தாள். மயக்கத்தில் மூழ்கிய அவள் {விலைமகள்}, நாணம் கொண்டு அந்தப் பெரும் தவசியின் மகனை மயக்கினாள். ரிஷ்யசிருங்கரின் இதயம் தன்னால் தீண்டப்பட்டதை அறிந்த அவள் திரும்பத் திரும்பத் அவரது உடலைத் தன் உடலால் தொட்டும், பார்வையை அவர் மீது செலுத்தியும் மெதுவாக அங்கிருந்து சென்றுவிட்டாள். அப்படிச் செல்லும்போது அவள் நெருப்புக்குக் காணிக்கை செலுத்த வேண்டும் என்று அவரிடம் சொல்லிச் சென்றாள்.
அவள் {விலைமகள்} சென்ற பிறகு ரிஷ்யசிருங்கர் காதலில் மூழ்கி தனது உணர்வை இழந்தார். அவரது மனம் முழுவதும் அவளிடம் இருந்ததால் அது வெறுமையா இருந்தது. அதே நேரத்தில், தனது சாதிக்குச் சரியான கல்வியைப் பெற்று, ஆன்மிகத் தவத்தைக் கடந்த அவரது {ரிஷ்யசிருங்கரின்} இதயம் சுத்தமானதாக இருந்தது. சிங்கத்தைப் போன்ற பழுப்பு நிறக் கண்களுடனும், நகத்தின் நுனிவரையுள்ள உடல் முழுவதும் முடிகளுடனும் இருந்த காசியபரின் மகன் {விபாண்டகர்} அங்கே வந்தார். அவர் வந்து, சோகத்துடனும் தனியாகப் பெருமூச்சுவிட்டபடியும், மேல்நோக்கிய கண்களுடனும் அமர்ந்திருக்கும் தனது மகனை {ரிஷ்யசிரருங்கரைக்} கண்டார்.
துயருற்றிருந்த தனது மகனிடம் {ரிஷ்யசிருங்கரிடம்} விபாண்டகர், “என் மகனே, வேள்விக்கான விறகை இன்னும் ஏன் நீ எடுத்து வரவில்லை. தினமும் செய்ய வேண்டிய சேவைகளைச் சரியாகச் செய்திருக்கிறாய், என்று நினைக்கிறேன். வேள்விக்குத் தேவையான கரண்டிகளைச் சுத்தம் செய்விட்டாயா? கொண்டு வந்திருக்கும் பொருட்களை வைத்து நெருப்புக்கு வேள்வி செய்திருப்பாய் என்று நினைக்கிறேன். எதுவும் தேவைப்படும் நிலையில் நீ இல்லை என்று நினைக்கிறேன். ஓ! மகனே {ரிஷ்யசிருங்கனே}, நீ சோகத்துடன் உணர்விழந்து இருப்பது போலத் தெரிகிறாயே. நீ ஏன் இன்று சோகமாக இருக்கிறாய்? இந்த இடத்திற்கு யார் வந்தார் என்று என்னைக் கேட்கவிடு?” என்றார் {விபாண்டகர்}.
பெண்ணை வர்ணித்த ரிஷ்யசிருங்கர் – வனபர்வம் பகுதி 112-ன் தந்தையான விபாண்டகரிடம், தான் சந்தித்த அயல் மனிதரைக் குறித்து ரிஷ்யசிருங்கர் சொல்வது…
ரிஷ்யசிருங்கர் {தந்தை விபாண்டகரிடம்} சொன்னார், “இன்று இங்கே தலையில் முடி நிறைந்த கூந்தலுடைய ஒரு ஆன்மிக மாணவர் வந்தார். அவர் உயரமாகவும் இல்லை கட்டையாகவும் இல்லை. அவர் நல்ல மனமுடையவராகவும், பொன்னிறமாகவும், தாமரை இதழ்களைப் போன்ற பெரிய கண்களையுடையவராகவும், தேவரைப் போலப் பிரகாசிக்கும் அழகுடன் இருந்தார். சூரியனைப் போன்று அவர் அழகில் பிரகாசித்தார். அவரது பார்வை அருள் நிறைந்து கருமையுடன் இருந்தது. சடைபின்னிய அவரது கூந்தல் நீலமும் கருப்பும் கலந்து நீளமாகவும், நறுமணம் பூசப்பட்டும், தங்க இழைகள் பின்னப்பட்டும் இருந்தது.
அவரது கழுத்தில் வானத்தில் மின்னும் மின்னலைப் போன்ற அழகிய ஆபரணம் ஒன்று இருந்தது. அவருடைய கழுத்துக்குக் கீழே ஒரு முடி கூட இல்லாத இரண்டு சதைப் பந்துகள் மிக அழகிய உருவத்துடன் இருந்தன. அவருடைய இடை கொடிபோன்று மெலிதாகவும், நாபி அழகாகவும், விலாப்புறம் மென்மையாகவும் இருந்தன. எனது இடையில் இருக்கும் மேகலையைப் போல {அரைஞான் கயிறு} போல அவரது ஆடைக்குக் கீழே ஒரு தங்க இழை இருந்தது. அவரது பாதங்களில் அழகிய உரு கொண்ட ஏதோ ஒன்று {கொலுசு} கிளு கிளு சத்தத்தை உண்டாக்கியது. இந்த ஜெபமாலையைப் போல அவரது மணிக்கட்டிலும் இருந்த ஆபரணங்களும் அதே போன்ற ஒலியை எழுப்பின.
ஆபரணங்களுடன் அவர் நடக்கும்போது, நீரில் மகிழ்ச்சியாகத் திளைக்கும் அன்னங்கள் எழுப்பும் ஒலியைப் போல ஒரு ஒலி எழுகிறது. அவர் தனது மேனியில் அற்புதமான வடிவமைப்புடன் கூடிய ஆடை அணிந்திருந்தார். எனது ஆடைகள் அவருடையதைப் போல அழகாக இல்லை. அவரது முகம் காண்பதற்கு அழகாக இருந்தது. அடக்கப்பட்ட அவரது குரல் இதயத்துக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவரது பேச்சு ஆண்குயிலின் பாட்டுக்கு இணையாக இருந்தது. அதைக் கேட்டபோது, அந்த இசை உள்ளிருக்கும் ஆன்மாவைத் தொட்டது. இளவேனிற்காலத்துக் காடு, தென்றலால் தழுவப்படும்போது எப்படி அருள் நிறைந்து இருக்கிறதோ அப்படி, ஓ தந்தையே {விபாண்டகரே}, காற்று அவர் மீதும் படும்போது அற்புதமான நறுமணத்தைக் கொடுக்கிறது.
தலையில் நன்றாக முடியப்பட்ட கேசமும், முன் நெற்றியில் இரண்டாகப் பிரிக்கப்பட்ட வகிடும் அவருக்கு இருக்கின்றன. அவருடைய இரண்டு கண்களும் சக்கரவாகப் பறைவைகளைப் போன்ற மிகுந்த அழகாக இருக்கின்றன. அவருடைய வலது கையில் ஒரு விசித்திரமான பழம் {பந்து} வைத்திருந்தார். அது தரையை அடைந்து, மீண்டும் மீண்டும் ஆச்சரியமான வகையில் வானத்திற்கு எழுகிறது. அவர் அதை அடித்து, தன்னைத் தானே சுற்றி, தென்றலால் நகர்த்தப்படும் மரம் போலச் சுழன்றார். ஓ! தந்தையே, நான் அவரைக் கண்ட போது, தேவர்களின் குமாரன் என நினைத்தேன். எனது இன்பமும் மகிழ்ச்சியும் அளவற்றதாக இருந்தது.
அவர் எனது உடலை அணைத்துக் கொண்டு, எனது சடா முடியைப் பிடித்து, எனது வாயை நோக்கிக் குனிந்து, அவரது வாயுடன் எனது வாயையும் பொருத்தி, மிகவும் இனிமையான ஒரு சத்ததை உண்டாக்கினார். அவர் தனது கால்களைக் கழுவ நீருக்காகக் கவலை கொள்ளவில்லை. என்னால் கொடுக்கப்பட்ட கனிகளையும் அவர் மதிக்கவில்லை. தான் கடைப்பிடிக்கும் ஆன்மிக நோன்பு இதுதான் என்று அவர் என்னிடம் சொன்னார். உயர்ந்த மனிதரான அவர் நான் பருக மிகுந்த மனம் உள்ள பானம் ஒன்றைக் கொடுத்தார். நான் அதனால் பெரும் இன்பத்தை அனுபவித்தேன். எனது கால்களுக்கு அடியில் தரை நகர்வதைப் போல உணர்ந்தேன்.
தங்க இழையால் கட்டப்பட்ட இந்த அழகிய மாலை அவருக்கே சொந்தமானது. அவர் ஆர்வத்துடனும் பக்தியுடனும் மாலைகளைப் பிரித்துப் போட்டு அவரது ஆசிரமத்திற்குத் திரும்பினார். அவருடைய பிரிவு எனது இதயத்துக்குச் சோகத்தைக் கொடுக்கிறது. எனது உணர்வுகள் எரிச்சலைக் கொடுக்கின்றன. அவரிடம் எவ்வளவு விரைவாகச் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாகச் செல்ல வேண்டும் என்பது எனது விருப்பம். என்னுடன் இங்கே நடந்து திரிய எனக்கு அவர் வேண்டும். ஓ தந்தையே, இந்தக் கணமே என்னை அவரிடம் செல்ல விடுங்கள். அவர் பயிலும் ஆன்மிகப் பயிற்சி என்ன வகையானது? உயர்ந்த பக்தியுடைய அவருடன் அதே போன்ற வாழ்வு வாழ விரும்புகிறேன்.
அவர் எவ்வகைத் தவம் புரிகிறாரோ அவ்வண்ணமே தவம் புரிய எனக்கு விருப்பமிருக்கிறது. அவரைக் காணாமல் இருப்பதனால் எனது மனம் துன்பமடைகிறது” என்றார் {ரிஷ்யசிருங்கர்}
சாந்தையை மணந்த ரிஷ்யசிருங்கர் – வனபர்வம் பகுதி 113-தீட்டிய திட்டத்தின்படி விலைமகள்கள் ரிஷ்யசிருங்கரை லோமபாதனிடம் அழைத்துச் செல்வது; லோமபாதன் தனது மகளை ரிஷ்யசிருங்கருக்கு மணமுடித்துக் கொடுத்தது; கோபத்துடன் வந்த விபாண்டகர் சாந்தமடைந்தது.
விபாண்டகர் {ரிஷ்யசிருங்கரிடம்} சொன்னார், “ஓ மகனே {ரிஷ்யசிருங்கா}, அவர்கள் ராட்சசர்கள். அவர்கள் அழகான உருவம் எடுத்து அற்புதமாக நடந்து செல்வார்கள். நிகரில்லாத பலமும், பெரும் அழகும் கொண்டவர்கள் அவர்கள். தவப்பயிற்சிகளுக்குத் தடங்கல்கள் ஏற்படுத்துவதே அவர்களது தவம். ஓ! எனது மகனே, அவர்கள் அன்பு உருவம் கொண்டு பல வழிகளில் ஏமாற்றுவார்கள். அந்தக் கடுமையானவர்கள், காடுகளில் வசிக்கும் தவசிகளை அருள் நிறைந்த உலகில் இருந்து (அவர்கள் நற்செயல்கள் மூலம் அவற்றை வென்றிருந்தாலும்) விலக்குகின்றனர்.
தனது ஆன்மாவை முழு கட்டுக்குள் வைத்து, நேர்மையானவர்களின் உலகை அடைய விரும்புபவர்களுக்கு இவர்களிடம் எந்தக் காரியமும் இல்லை. அவர்களது செயல்கள் தீங்கானவை. தவத்திற்கு தடை ஏற்படுத்தி மகிழ்பவர்கள் அவர்கள். பக்தி நிறைந்த மனிதர்கள் அவர்களைக் காணக் கூடாது. ஓ மகனே! அந்தப் பானகங்களும் அருந்தத்தக்கவை அல்ல. அவை நேர்மையற்றவர்களால் பருகப்படும் சாராயமாகும். பிரகாசமாகவும், மணமிக்கதாவும், பல வண்ணங்களில் இருக்கும் இந்த மலர்மாலையும் தவசிக்களுக்கானது இல்லை.
அவர்கள் தீய பேய்கள் என்று சொல்லித் தனது மகனுக்குத் தடையை ஏற்படுத்திய பிறகு, விபாண்டகர் அவளைத் தேடி அலைந்தார். மூன்று நாட்கள் தேடியும் அவள் எங்கிருக்கிறாள் என்ற சுவடுகளை அறியாத அவர் மீண்டும் தனது ஆசிரமத்திற்கே திரும்பினார். அதே வேளையில், காசியபரின் மகன் {விபாண்டகர்} கனிகள் சேகரிக்கச் சென்றிருந்தார். அப்போதும் அந்த விலைமகள் மீண்டும் ரிஷ்யசிருங்கரைப் பழைய முறையிலேயே மயக்க வந்திருந்தாள். ரிஷ்யசிருங்கர் அவளைக் கண்டதும் வெகுவாக மகிழ்ந்து அவளிடம் விரைவாகச் சென்று, “எனது தந்தை திரும்புவதற்கு முன்னர், நாம் உமது ஆசிரமத்திற்குச் செல்லலாம்” என்றார்.
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அந்த விலை மகள்களின் திட்டத்தின்படி காசியபரின் {விபாண்டகரின்} ஒரே மகனைத் தங்கள் மிதக்கும் ஆசிரமத்திற்குள் நுழையச் செய்து, அந்த ஓடத்தை ஓடச் செய்தனர். பிறகு பலவிதமான செயல்கள் மூலம் அவரை மகிழ்ச்சியூட்டிக் கொண்டே, கடைசியாக அங்க மன்னன் அருகே வந்தனர். மிகுந்த வெண்ணிறம் கொண்ட அந்த மிதக்கும் ஓடத்தை நீரிலேயே விட்டு, ஆசிரமத்திலிருந்து கண்ணுக்கெட்டும் தூரத்தில் நிறுத்தி மிதக்கும் ஆசிரமம் என்ற பெயரிலேயே மிக அழகான கானகத்தை உருவாக்கினான் {லோமபாதன்}. இருப்பினும் அம்மன்னன், விபாண்டகரின் ஒரே மகனை {ரிஷ்யசிருங்கனை} அரண்மனையின் ஒரு பகுதியில் வைத்திருந்தாலும், பெண்களை அருகில் விடவில்லை. பிறகு அவன் {அங்க மன்னன் லோமபாதன்} மழை வானத்தில் இருந்து கொட்டுவதைக் கண்டான். உலகம் நீரால் நிரம்பியது.
இதய விருப்பம் நிறைவேறிய லோமபாதன் தனது மகளாகிய சாந்தையை ரிஷ்யசிருங்கருக்கு மணம் முடித்துக் கொடுத்தான். அவரது தந்தையின் {விபாண்டகரின்} கோபத்தைத் தணிக்கும் பொருட்டு, அவர் தனது மகனைக் காண வரும் வழியில் மாடுகள் இருக்கவும், நிலங்கள் உழப்பட்டு இருக்கவும் பார்த்துக் கொண்டான். அம்மன்னன் {லோமபாதன்}, அப்படி நிறைய கால்நடைகளை நிறுத்திவிட்டு, அவர்களிடம் {பணியாளர்களிடம்} பின்வருமாறு சொன்னான்.
“அந்தப் பெரும் முனிவரான விபாண்டகர் தனது மகனைக் குறித்து உங்களிடம் விசாரிக்கும்போது, நீங்கள் குவிந்த கரங்களுடன் அவரிடம் இந்த கால்நடைகளும், உழப்பட்ட நிலங்களும் உமது மகனுடையதே. நாங்கள் அவர் சொல்வதற்குக் கீழ்ப்படியும் அடிமைகள்” என்றும் சொல்லவேண்டும் என்றான் {லோமபாதன்}. கடும் கோபம் கொண்ட அந்தத் தவசி பழங்களையும், கிழங்குகளையும் சேகரித்து தனது ஆசிரமத்திற்குத் திரும்பி தனது மகனை {ரிஷ்யசிருங்கரைத்} தேடினார். அவரைக் காணாததால் மிகுந்த கோபத்திற்குள்ளானார். கோபத்தால் துன்புறுத்தப்பட்ட அவர், இது மன்னனுடைய செயல்தான் என்று சந்தேகப்பட்டார். ஆகையால், அவர் சம்பை நகரத்துக்குச் சென்று மன்னனையும், அவனது நகரத்தையும், மொத்த நாட்டையும் எரித்துவிட எண்ணினார்.
வழியில் மிகவும் களைத்துப் போய் பசியுடன் இருந்த அவர் {விபாண்டகர்}, அந்த கால்நடைகள் நிரம்பிய இடத்திற்கு வந்தார். அங்கே அவர் சரியான முறையில் மாடுமேய்ப்பவர்களால் உபசரிக்கப்பட்டு, அந்த இரவை ஒரு மன்னனைப் போல கழித்தார். இப்படிப்பட்ட பெரும் விருந்தோம்பலைப் பெற்ற அவர், அவர்களிடம், “ஓ இடையர்களே, யாருடையவர்கள் நீங்கள்” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இந்தச் செல்வம் அனைத்தையும் எங்களுக்கு உமது மகன் {ரிஷ்யசிருங்கர்} கொடுத்தார்” என்றனர். பிறகு பல இடங்களில் மனிதர்களில் சிறந்த பலரால் அவர் {விபாண்டகர்} பெரிதும் மதிக்கப்பட்டார். தனது மகன் அங்கே சொர்க்கத்தில் இருக்கும் இந்திரனைப் போல இருப்பதைக் கண்டார். (மேகத்திலிருந்து) வெளியேறும் மின்னலைப் போல இருந்த தனது மருமகளான சாந்தையையும் கண்டார். மாட்டு மந்தைகளும், குக்கிராமங்களும் தனது மகனுக்குக் கிடைத்திருப்பதைக் கண்டும், சாந்தையைக் கண்டும் அவரது பெரும் எதிர்ப்பு நிலை சாந்தப்படுத்தப்பட்டது.
ஓ மனிதர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பூமியின் தலைவனிடம் விபாண்டகர் தனது பெரும் திருப்தியை வெளிப்படுத்தினார். சூரியனையும், நெருப்பையும் பழிக்கும் சக்தி கொண்ட அந்த பெரும் தவசி {விபாண்டகர்} தனது மகனிடம் {ரிஷ்யசிருங்கரிடம்} “உனக்கு ஒரு மகன் பிறந்ததும், மன்னனுக்கு ஏற்புடையது அனைத்தையும் நீ செய்த பிறகு, தவறாமல் காட்டுக்கு வந்துவிடு” என்றார். ரிஷ்யசிருங்கரும் தனது தந்தை சொன்னபடியே செய்து, தனது தந்தையின் இடத்திற்கே திரும்பினார்.
ஓ மனிதர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, வானத்தில் இருக்கும் ரோகிணி நட்சத்திரம் சந்திரனுக்குக் காத்திருப்பதைப் போல, பெரும்பேறு பெற்ற அருந்ததி வசிஷ்டருக்குக் காத்திருப்பது போல, லோபமுத்திரை அகஸ்தியருக்குக் காத்திருப்பது போல, நளனுக்குக் கீழ்ப்படிந்த மனைவியான தமயந்தியைப் போல, இடியைத் தாங்குபவனுக்கு {இந்திரனுக்கு} சச்சி இருப்பது போல, முத்கலருக்கு நாராயணனின் மகளான இந்திரசேனை {நளாயனி} இருப்பது போல, கானகத்தில் வாழ்ந்த ரிஷ்யசிருங்கருக்காக சாந்தை பாசத்துடன் காத்திருந்தாள். இதுதான் அவருக்குச் சொந்தமான ஆசிரமம். இந்தப் பெரும் தடாகத்திற்கு அழகு சேர்க்கும் இது புனிதமான புகழைப் பெற்றிருக்கிறது. இங்கே உனது கடன்களைச் செய்து விருப்பம் நிறைவேறியவனாகு. உன்னைச் சுத்தகரித்துக் கொண்ட பிறகு, உனது பாதையை வேறு புனிதமான இடங்களின் பால் திருப்பு” என்றார் {லோமசர்}.
நீரில் மூழ்கிய பூமி – வனபர்வம் பகுதி 114-கௌசிகி நதி, கலிங்கம் ஆகிய இடங்களுக்கு யுதிஷ்டிரனை அழைத்துச் சென்ற லோமசர், அதன் பெருமைகளையும், செய்ய வேண்டிய செயல்களையும் அவனுக்கு எடுத்துச் சொல்லல்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஜனமேஜயா, பிறகு பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} கௌசிகி நதியில் இருந்து கிளம்பி அடுத்தடுத்துத் தொடர்ச்சியாக அனைத்து புனித தலங்களுக்கும் சென்றான். ஓ! மனிதர்களைப் பாதுகாப்பவனே, அவன் {யுதிஷ்டிரன்} கங்கை நதி கலக்குமிடமான கடலை அடைந்து, ஐந்நூறு நதிகளுக்கு மத்தியில் மூழ்கி நீராடி புனித சடங்குகளைச் செய்தான். ஓ! பூமியின் ஆட்சியாளனே, பிறகு தனது தம்பிகளுடன் சென்ற அந்தத் துணிவுமிக்க இளவரசன் {யுதிஷ்டிரன்} கடற்கரை வழியாகவே சென்று பழங்குடிகளான கலிங்கர்கள் வசிக்கும் இடத்திற்குச் சென்றான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, கலிங்கப் பழங்குடிகள் வாழும் ஒரு இடம் இருக்கிறது. அந்தப் பகுதியின் வழியே அறத்தேவனும் {தர்மதேவனும்} தேவர்களுடன் சேர்ந்து வழிபடும் நதியான வைதரணீ நதி ஓடுகிறது. இந்த நதியின் வடகரையில் முனிவர்கள் வசிக்கிறார்கள். ஒரு மலையால் அழகாக்கப்பட்ட அந்த இடம் அறச்சடங்குகள் செய்யத் தகுதியான இடமாக இருந்ததால், மறுபிறப்பாளர் {அந்தண} வகையைச் சார்ந்தவர்கள் அந்த இடத்திற்கு அடிக்கடி வந்து சென்றனர். சொர்க்கத்திற்குச் செல்லத் தகுதிவாய்ந்த அறம்சாரந்த மனிதர்கள் செல்லக்கூடிய தேவர்கள் வசிக்கும் இடத்தைப் பழிக்கும் வண்ணம் இவ்விடம் {கலிங்கம்} இருந்தது. பழங்காலத்தில் இந்த இடத்தில்தான் இறவாதவர்களை வேள்விகள் மூலம் வழிபட்டனர். ஓ! மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, இந்த இடம்தான், ருத்திரன் வேள்விப் பசுவைக் கைப்பற்றி “இது எனது பங்கு” என்ற சொன்ன இடம்.
ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, சிவனால் வேள்விப்பசு கவரப்பட்ட போது தேவர்கள் அவனிடம் {ருத்திரனிடம்}, “அனைத்து நேர்மையான விதிகளையும் புறந்தள்ளி, அடுத்தவர் பொருளைப் பேராசையுடன் பார்க்காதீர்” என்றனர். அதன்பிறகு, ருத்திரனைத் திருப்திப்படுத்த அவனைப் புகழ்ந்தனர். அவனுக்கு வேள்விப் பங்கைக் கொடுத்து, தகுந்த மரியாதைகளைக் கொடுத்தனர். அதன்பிறகு அவன் {சிவன்} அந்த விலங்கை அவர்களிடம் {தேவர்களிடம்} கொடுத்து, தேவர்கள் சென்ற பாதையிலேயே சென்றான். ஓ! யுதிஷ்டிரா, அதன்பிறகு ருத்திரனுக்கு என்ன நேர்ந்தது என்பதை என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள். தேவர்கள் ருத்திரன் மீது கொண்ட பயத்தால் புதிதானதும், அனைத்துப் பாகங்களைவிடச் சிறந்ததுமான பாகத்தை ருத்திரனுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இந்த இடத்தில் தனது நீர்க்கடன்களைச் செலுத்தும் யாரும், இந்தப் பழங்கதையைச் சொல்லும்போது, தனது ஊனக்கண்ணாலேயே தேவலோகத்திற்குச் செல்லும் வழியைக் காண்பார்கள்” என்றார் {லோமசர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, விதியின் உதவியால் துருபதன் மகளும் {திரௌபதியும்}, பாண்டுவின் மகன்கள் அனைவரும், வைதரணீ நதிக்குள் இறங்கி, தங்கள் தந்தையரின் பெயர்களில் நீர்க்கடன்களைச் செலுத்தினர்.
யுதிஷ்டிரன் {முனிவர் லோமசரிடம்}, “ஓ லோமசரே, பக்திச் செயலின் சக்தி எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்! இந்த இடத்தில் {வைதரணீ} உரிய முறையில் நீராடிய நான் பிறந்திறக்கும் மனிதனின் உலகங்களை மட்டும் இப்போது காணவில்லை! ஓ தவசியே, அறவாழ்வால், நான் அனைத்து உலகங்களையும் காண்கிறேன். மந்திரங்களை உரக்கச் சொல்லும் பெருந்தன்மைமிக்கக் கானகவாசிகள் ஒலி இது” என்றான்.
லோமசர், “ஓ யுதிஷ்டிரா, உனது காதுகளை எட்டும் அந்த ஒலி முன்னூறு ஆயிரம் {300,000} யோஜனைகளுக்கு அப்பால் இருந்து கேட்கிறது என்பது நிச்சயம். ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, அமைதியாக இரு. எந்த வார்த்தையும் உச்சரிக்காதே. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நமது பார்வைக்கு வந்திருக்கும் இது தானே இருப்பவனின் {பிரம்மனின்} தெய்வீக வனமாகும். ஓ மன்னா, அங்கே பயங்கரமான பெயர் கொண்ட விஸ்வகர்மா தனது அறச்சடங்குகளைச் செய்தான். அவ்வேள்வியின் பலம் மிக்க நேரத்தில், பிரம்மன், மலைகளும், கானகங்களும் கூடிய முழு உலகத்தையும் காசியபருக்கு, அவர் செய்த புரோகிதத்திற்குப் பரிசாகக் கொடுத்தான். ஓ குருவின் மகனே {யுதிஷ்டிரா}, இப்படிப் பூமி கொடுக்கப்பட்ட பிறகு, அவள் {பூமி} கவலை நிறைந்த இதயத்துடனும் மிகுந்த கோபத்துடனும் உலகத்தின் ஆட்சியாளனும் பெரும் தலைவனுமானவனிடம் {பிரம்மனிடம்} “ஓ பலம்வாய்ந்த தேவா, பிறப்பு இறப்பு உள்ள ஒரு மனிதனுக்கு என்னைக் கொடுப்பது உமக்குத் தகாது. இதோ நான் பாதாளத்திற்கு இறங்கப் போகிறேன். ஆகையால், பரிசாகக் கொடுக்கும் இந்த உமது செயலால் ஒன்றுமே நடக்காது” என்று சொன்னாள்.
ஓ! மனிதர்களின் பாதுகாவலனே {யுதிஷ்டிரா}, அருளப்பட்ட தவசியான காசியபர், பூமித்தேவி மனச்சோர்வுடனும் சோகத்துடனும் இருப்பதைக் கண்டு, அவளது கோபத்தைத் தணிக்க, ஒரு சினம் தணிக்கும் காரியத்தைச் செய்தார். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, பிறகு, அவரது பக்தியால் மகிழ்ந்தாள் பூமித்தேவி. மீண்டும் அவள் பூமியில் இருந்து எழுந்து பலிப்பீடத்தில் தனது உருவத்தை வெளிப்படுத்தினாள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பலிப்பீடத்தின் உருவில் இருக்கும் இந்தப் பகுதியே அந்த இடம். ஓ! பெரும் ஏகாதிபதி, இதன் மேல் ஏறு. உனக்குத் துணிவும் பலமும் பிறக்கும். இந்தப் பீடம் கடல் வரை சென்று அதன் {பூமியின்} இதயத்தில் நிலைத்திருக்கிறது. நற்பேறு உனதாகட்டும் இதில் ஏறி கடலைக் கட. நீ இன்று இதன் மேல் ஏறும்போது, நான் உன்னில் இருக்கும் தீமைகள் அகல வேண்டி சடங்கு செய்வேன். பிறப்புடையவனின் {மனிதனின்} தொடுதலைப் பெறும் இந்தப் பீடம் உடனே கடலுக்குள் புகுகிறது. இந்த அண்டத்தைக் காப்பவனை வணங்குவோம்! இந்த அண்டத்துக்கு அப்பால் இருப்பவனை வணங்குவோம்! ஓ! தேவர்களின் தலைவா, இந்தக் கடலில் இறங்கு.
ஓ! பாண்டுவின் மகனே, நீ இந்த உண்மையான வார்த்தைகளை உரைக்க வேண்டும். அப்படி உரைத்துக் கொண்டிருக்கும்போதே இந்தப் பீடத்தில் ஏற வேண்டும். “அக்னித் தேவனும், சூரியனும், தலைமுறைக்கான உறுப்பும், நீரும், தேவியும், விஷ்ணுவின் வித்தும் சேர்ந்து அமுதத்தின் இருப்பிடமாகவும் இருக்கிறாய். அக்னித்தேவனே கடலைப் படைத்த உறுப்பாகும். பூமியே உனது உடல். விஷ்ணுவின் வித்தே உன்னை உருவாக்கியது. நீயே அமுதத்தின் இருப்பிடம்” என்று சொல்லிக் கொண்டே பீடத்தில் ஏற வேண்டும். ஓ! பாண்டுவின் மகனே, இந்த உண்மையான வார்த்தைகள் கேட்கக்கூடிய அளவில் உரைக்கப்பட வேண்டும். அப்படி உரைக்கும்போதே இந்த ஆறுகளின் தலைவனுக்குள் {கடலுக்குள்} மூழ்கு. ஓ குந்தியின் மகன்களில் புகழத்தக்கவனே, இல்லையென்றால் {உரைக்கவில்லையென்றால்} நீரின் களஞ்சியமான இந்தத் தெய்வீகப்பிறப்புடைய நீர்த்தேவனைப் புனிதமான புல்லின் நுனி கொண்டும் தொடக்கூடாது” என்றார் {லோமசர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தீமையை விலக்கும் சடங்கு முடிந்ததும், பெருமைமிக்க யுதிஷ்டிரன், கடலுக்குள் சென்று அந்தத் தவசி சொன்ன அனைத்தையும் செய்து, மகேந்திர மலையின் பரப்புக்குச் சென்று அந்த இரவை அங்கே கழித்தான்.
ஜமதக்னி பிறப்பு – வனபர்வம் பகுதி 115-யுதிஷ்டிரன் மகேந்திர மலையில் தங்கி, பரசுராமரின் சீடரான அக்ருதவ்ரணரிடம் பரசுராமரைக் குறித்து வினவுதல்; அக்ருதவ்ரணர் பரசுராமரின் கதையைச் சொல்ல ஆரம்பிப்பது; கார்த்தவீரியார்ஜுனன் அறிமுகம்; தேவர்களும் தவசிகளும் கார்த்தவீரியார்ஜுனனின் அத்துமீறல்களை விஷ்ணுவிடம் எடுத்துக் கூறல்; கன்யாகுப்ஜநாட்டின் மன்னனான காதிக்கு மகளாக சத்தியவதி பிறப்பது; சத்தியவதியை பிருகு மைந்தன் ரிசீகர் மணப்பது; ரிசீகருக்கு ஜமதக்னி பிறப்பது.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பூமியைக் காப்பவன் {யுதிஷ்டிரன்} ஓரிரவைத் தனது தம்பிகளுடன் அங்கே தங்கி பக்திமான்களுக்கு உயர்ந்த மரியாதையை அளித்தான். பிருகுக்கள், அங்கிரஸர்கள், வசிஷ்டர்கள், காசியபர்கள் குறித்த பெயர்களை லோமசர் அவனுக்குத் {யுதிஷ்டிரனுக்குத்} தெரிவித்தார். அந்த அரசமுனியும் அவர்கள் அனைவரையும் சந்தித்து கூப்பிய கரங்களுடன் வணங்கினான். பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, பரசுராமரின் சீடனான துணிவுமிக்க அக்ருதவ்ரணரிடம் {Akritavrana}, “மரியாதைக்குரிய பரசுராமர் இந்த பக்திமான்களிடம் எப்போது தன்னை வெளிப்படுத்துவார்? பிருகு குலத் தோன்றலின் காட்சி இச்சந்தர்ப்பத்தில் கிடைப்பது விரும்பப்படுகிறது” என்றான்.
அக்ருதவ்ரணர் {யுதிஷ்டிரனிடம்} “தடையற அனைத்தையும் அறியும் ஆன்மா கொண்ட ராமருக்கு {பரசுராமருக்கு}, இந்த இடத்திற்கான உனது பயணம் குறித்துத் தெரியும். அவர் அனைத்துவிதத்தில் உன்னிடம் திருப்தியுடன் இருக்கிறார். அவர் உனக்காக விருப்பத்துடன் தன்னை வெளிப்படுத்துவார். இங்கே தவம்பயிலும் தவசிகள் பதினாலாவது {சதுர்த்தசி} மற்றும் எட்டாவது {அஷ்டமி} சந்திர நாட்களில் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இரவின் இறுதியில் பதினாலாவது நாள் {சதுர்த்தசி} உதிக்கிறது. அச்சந்தர்ப்பத்தில் கருப்பு மான்தோல் உடுத்தி ஜடா முடி தரித்தவரான அவரது {பரசுராமரது} காட்சி உனக்குக் கிடைக்கும்” என்றார்.
யுதிஷ்டிரன் {அக்ருதவ்ரணரிடம்}, “ஜமதக்னி முனிவரின் மகனும் பெரும்பலம் வாய்ந்தவருமான ராமரைத் {பரசுராமரைத்} தொடர்ந்து சென்றவர் நீர். ஆகையால் அவர் பழங்காலத்தில் செய்த சாதனைகளை நேராக சாட்சியாகக் கண்டிருக்கிறீர். ஆகையால், போர்ச்சாதியின் உறுப்பினர்களை {க்ஷத்திரியர்களைப்} போர்க்களத்தில் ராமர் {பரசுராமர்} எப்படி வீழ்த்தினார். என்பதையும் அந்த மோதல்களுக்கான காரணத்தையும் உரைக்குமாறு உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்.” என்றான்.
அக்ருதவ்ரணர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ பரதனின் மகனே {யுதிஷ்டிரனே}, ஓ மன்னர்களின் தலைவா, நான் பிருகு குலத்தின் வழி வந்த ஜமதக்னியின் மகனான ராமரின் {பரசுராமரின்} தெய்வீகச் செயல்களை உடைய அந்த அற்புதக் கதையை மகிழ்ச்சியுடன் சொல்வேன். ஹேஹய குலத்தின் பெரும் ஆட்சியாளனின் {கார்த்தவீர்யனின் மகனான அர்ஜுனனின்} சாதனைகளையும் சொல்வேன். அர்ஜுனன் {கார்த்தவீர்யார்ஜுனன்} என்ற பெயர்கொண்ட அந்த ஹேஹய குலத்தின் பலம்வாய்ந்த தலைவன் ராமரால் {பரசுராமரால்} கொல்லப்பட்டான்.
ஓ! பாண்டுவின் மகனே, அவன் {கார்த்தவீர்யனின் மகன் அர்ஜுனன்} ஆயிரம் {1000} கரங்களைக் கொண்டிருந்தான். தத்தாத்ரேயனின் கருணையால் அவனுக்கு தங்கத்தால் ஆன தெய்வீகத் தேர் ஒன்று இருந்தது. ஓ! பூமியின் பாதுகாவலனே {யுதிஷ்டிரா}, அவனது ஆட்சி அசையும் தன்மை கொண்ட உலகம் முழுவதும் பரவியிருந்தது. அந்தப் பலம் பொருந்திய ஏகாதிபதி எங்கும் தங்கு தடையின்றிச் சென்று வந்தான். பெற்ற வரத்தின் அறத்தால் தாங்கமுடியாதவாறு வளர்ந்து, தேரில் ஏறி எல்லாப் புறங்களிலும் உள்ள தேவர்களையும், யக்ஷர்களையும், தவசிகளையும் நசுக்கினான். பிறந்த அனைத்து உயிர்களும் அவனால் தொந்தரவுக்கு உள்ளாகின.
பிறகு அனைத்து தேவர்களும் கடும் அறவாழ்வு வாழ்ந்த தவசிகளும் சந்தித்து தேவர்களுக்குத் தேவனும், பேய்களை {அசுரர்களை}க் கொல்பவனும் வீழா பராக்கிரமம் கொண்டவனுமான விஷ்ணுவிடம் சென்று, “ஓ மதிப்பிற்குரிய அருள்நிறைந்த தலைவா, பிறந்த பிறவிகள் அனைத்தையும் பாதுகாக்கும் காரணத்திற்காக, உம்மால் அர்ஜுனன் {கார்த்தவீர்யனின் மகன் அர்ஜுனன்} கொல்லப்பட வேண்டும். ஹேஹய குலத்தின் பலம் பொருந்திய ஆட்சியாளன் தன்னைத் தனது தெய்வீகத் தேரில் அமர்த்திக் கொண்டு, இந்திரன், தனது ராணியான சச்சியுடன் இன்புற்றிருந்த போது அவனை அவமதித்தான்” என்றனர். ஓ பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, பிறகு அந்த மதிப்புமிக்க அருள்நிறைந்த தெய்வம் (விஷ்ணு), கார்த்தவீரியனின் மகனைக் கொல்லும் நோக்கோடு இந்திரனுடன் கலந்தாலோசித்தான். உலகத்தில் பிறந்த பிறவிகளுக்கு நன்மை விளையும் அச்சந்தர்ப்பத்தில், தேவர்களுக்குத் தலைவன் {விஷ்ணு} தொடர்பு கொள்ளப்பட்டான். உலகமனைத்தாலும் வழிபடப்படும் அந்த அருள்நிறைந்த தேவனும் {விஷ்ணுவும்}, தேவையான அனைத்தையும் செய்யும்பொருட்டு, காண்பதற்கினிய வனமான பதரிக்குச் சென்று தவம் பயின்றான். அந்த நேரத்தில் பூமியில் கன்யாகுப்ஜம்[1] என்ற நாட்டில் படைபலமிக்க காதி என்ற பெயரால் புகழ்பெற்ற பலம்பொருந்திய ஏகாதிபதி ஒருவன் இருந்தான். இருப்பினும் அவன் கானக வாழ்க்கையை மேற்கொண்டான். அப்படி அவன் வனத்திற்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தபோது அவனுக்கு விண்ணுலகின் தேவதையைப் போன்ற அழகுடைய ஒரு மகள் {சத்தியவதி} பிறந்தாள்.
பிருகுவின் மகனான ரிசீகர், அவளைத் தனக்கு மணமுடித்துத் தரும்படி கேட்டார். கடும் தவவாழ்வு வாழ்ந்த அந்த அந்தணரிடம் காதி, “எங்கள் குலத்தில் குறிப்பிட்ட வழக்கம் இருக்கிறது. இது எனது மூதாதையர்களால் உண்டாக்கப்பட்டது. ஓ புரோகித சாதியில் மிகவும் சிறந்தவரே, இந்த மணமகளை மணக்க, பழுப்பு நிற உடலும், கருப்பு நிறத்தில் ஒரு காதும், மிகுந்த வேகமும் கொண்ட ஆயிரம் குதிரைகள் வரதட்சணையாகக் கொடுக்க வேண்டும் என்பதை அறிவீராக. ஆனால், ஓ பிருகுவின் மகனே, உம்மைப் போன்ற மதிப்பிற்குரிய தவசியால் அதைக் கொடுக்க முடியாது. நான் எனது மகளை {சத்தியவதியை} ஒரு பெருமைமிக்க தவசிக்குக் கொடுக்க முடியாது என்றும் சொல்ல முடியாது” என்றான் {காதி}. அதற்கு ரிசீகர், “நான் உமக்கு, பழுப்பு நிறமும், கருப்பு நிறம் கொண்ட காதும், மிகுந்த வேகமும் கொண்ட ஆயிரம் குதிரைகளைத் தருகிறேன். நீர் உமது மகளை எனக்கு மணமுடித்துத் தாரும்” என்றார். {ரிசீகர்}.
அக்ருதவ்ரணர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி தனது வார்த்தைகளைக் கொடுத்த அவர் {ரிசீகர்}, வருணனிடம் சென்று, “பழுப்பு நிற உடலும், கருப்பு நிறத்தில் ஒரு காதும், மிகுந்த வேகமும் கொண்ட ஆயிரம் குதிரைகளை எனக்குக் கொடு. அவை எனது திருமணத்திற்கான கன்யாசுல்கத்திற்காக {ஆண்வீட்டார் பெண்வீட்டாருக்குக் கொடுக்கும் தட்சணைக்காக} வேண்டும்” என்று கேட்டார். வருணனும் அவருக்கு {ரிசீகருக்கு} ஆயிரம் குதிரைகளைக் கொடுத்தான். அந்தக் குதிரைகள் கங்கை நதியில் இருந்து எழுந்து வந்தன. அதன் காரணமாகவே அந்த இடத்திற்கு குதிரைகள் இறங்கும் இடம் {அஸ்வத் தீர்த்தம்} என்ற பெயர் ஏற்பட்டது. கன்யாகுப்ஜ நகரத்தில் காதியின் மகளான சத்தியவதி திருமணத்தில் அளிக்கப்பட்டாள். மணமகன் சார்பாக தேவர்களும் வந்திருந்தனர். புரோகிதச் சாதியில் மிகச் சிறந்தவரான ரிசீகர், ஆயிரம் குதிரைகளை அடைந்து, தேவலோகவாசிகளின் காட்சியும் கிடைத்து, சரியான உருவம் கொண்ட ஒரு மனைவியையும் வென்றார். அவர் {ரிசீகர்} அந்தக் கொடியிடை மங்கையுடன் {சத்தியவதியுடன்} இன்புற்றிருந்து இது வரை அவர் விரும்பிய அனைத்து விருப்பங்களும் நிறைவேறப்பெற்றார்.
அத்திருமணம் கொண்டாடப்பட்டபிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அவரது {ரிசீகரது} தந்தையான பிருகு அவரையும், அவரது மனைவியையும் காண வருகை தந்தார். அவர் தனது பெருமைமிக்க மகனைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார். கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து கூப்பிய கரங்களுடன் அவர் {முனிவர் பிருகு} அருகில் நின்று, அவர் சொல்லும் செயலைச் செய்யக் காத்திருந்தனர். பிறகு அந்த மரியாதைக்குரிய தவசியான பிருகு, இதயத்தில் மகிழ்ந்து தனது மருமகளிடம் {சத்தியவதியிடம்}, “அழகிய மகளே, ஒரு வரத்தைக் கேள். நீ விரும்பிய எதையும் தர நான் தயாராக இருக்கிறேன்” என்றார். அதன் பேரில் அவள் அவரிடம் ஒரு உதவியைக் கேட்டாள். தனக்கும் தனது தாய்க்கும் ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று கேட்டாள். அவரும் அவரிடம் கேட்கப்பட்டதை அருளினார்.
பிருகு {தனது மகன் ரிசீகரின் மனைவி சத்தியவதியிடம்}, “மாதவிடாயின் கடைசி காலத்தில் நீயும் உனது தாயும் ஆண் மகவைப் பெற சடங்குகளுடன் நீராட வேண்டும். நீங்கள் இருவரும் தனித்தனியாக இரு வேறு மரங்களை அணைத்துக் கொள்ள வேண்டும். அவள் அரச மரத்தையும் {Peepal tree}, நீ அத்திமரத்தையும் {Fig tree} அணைக்க வேண்டும். ஓ கடமையுணர்வுள்ள பெண்ணே, என்னால் மிகுந்த கவனத்தோடு தயார் செய்யப்பட்ட அரிசி மற்றும் பால் குடங்கள் இரண்டு {பால்சோறு கொண்ட குடங்களாக இருக்கலாம்}இங்கே இருக்கின்றன. நான் அந்த மருந்துகளைக் கண்டுபிடிக்க, முழு அண்டத்தையும் சூறையாடி {ransack}, அதன் {அம்மருந்தின்} சாரத்தை இந்தப் பாலிலும் அரிசியிலும் கலந்திருக்கிறேன். இது மிகுந்த கவனத்துடன் உணவாகக் கொள்ளப்பட வேண்டும்” என்றார். இதைச் சொல்லிவிட்டு, பார்வையில் இருந்து அவர் {பிருகு} மறைந்து போனார்.
இருப்பினும், அந்த மங்கையர் இருவரும், அரிசிக்குடங்களையும், மரங்களையும் மாற்றிக் கொண்டனர். பிறகு பல நாட்கள் கடந்ததும், அந்த மரியாதைக்குரிய தவசி {பிருகு} மறுபடியும் வந்தார். அவர் தனது தெய்வீக ஞானத்தால் (நடந்ததை) அறிந்து அங்கு வந்தார். பிறகு பெரும்பலத்தைக் கொண்ட பிருகு, தனது மருமகளான சத்தியவதியிடம், “ஓ கடமையுணர்வுள்ள பெண்ணே! அழகிய புருவம் கொண்ட எனது மகளே, தவறான அரிசிக்குடத்திலிருந்து உனது உணவைக் கொண்டாய். மேலும் உன்னால் தவறான மரம் அணைக்கப்பட்டது. உன்னை வஞ்சித்தது உனது தாயே. உனக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் புரோகித சாதியில் உதித்தாலும், அவன் போர் செய்யும் வகைக்கான குணத்தைப் பெற்றிருப்பான். அதே நேரம் உனது தாய்க்கு பலம் பொருந்திய மகன் பிறப்பான். அவன் பிறப்பால் க்ஷத்திரியனாக இருந்தாலும், புரோகித வகை வாழ்வை மேற்கொள்வான். அவனது சக்தி பெரியதாக இருக்கும். அவன் நேர்மையான மனிதர்களின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி நடப்பான்” என்றார்.
பிறகு அவள் {சத்தியவதி} தனது மாமனாரை {பிருகுவை} மீண்டும் மீண்டும், “எனது மகன் இந்தக் குணத்தை அடையவேண்டாம். எனது பேரன் அதை அடையட்டும்” என்று வேண்டிக் கேட்டாள். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அவர் அதற்கு, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார். இப்படியே அவர் அவளிடம் திருப்தி கொண்டு அவளது கோரிக்கையை நிறைவேற்றினார். பிறகு அவள் {சத்தியவதி}, எதிர்பார்த்த நாளில் ஜமதக்னி என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றெடுத்தாள். அந்தப் பிருகுவின் மைந்தன் {ஜமதக்னி} பிரகாசமும் அருளும் கொண்டிருந்தார். அவர் வயதிலும், பலத்திலும் வளர்ந்து, வேதஞானத்தில் மற்ற தவசிகளை விஞ்சி இருந்தார். ஓ பரதகுலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, ஒளியின் ஆசிரியனை {சூரியனை} பழிக்கும் வண்ணம் காந்திமிக்கவராக இருந்து, தன்னியல்புடனும், தன்னிச்சையாகவும், எந்த அறிவுறுத்தலும் இல்லாமல், முழு இராணுவக்கலையையும், நான்குவகையான ஏவுகணை ஆயுத அறிவியலையும் அறிந்தார்” என்றார் {அக்ருதவ்ரணர்}.
தாயின் சிரம் கொய்த பரசுராமர் – வனபர்வம் பகுதி 116-வேதம் கற்ற ஜமதக்னி; பிரசேனஜித்தின் மகள் ரேணுகையை மணப்பது; ரேணுகை சித்திரரதனைக் கண்டு மயங்குவது; இதை அறிந்த ஜமதக்னி பரசுராமரை, அவளது தலையைக் கொய்யச் செய்வது; பரசுராமர் வரமாகத் தாயின் உயிரைக் கோருவது; கார்த்தவீரியார்ஜுனன் ஜமதக்னியிடம் இருந்து பசுவைக் கவர்வது; இதை அறிந்த பரசுராமர் கார்த்தவீரியார்ஜுனன் கரங்களை அறுத்து வீழ்த்துவது; கார்த்தவீர்யார்ஜுனன் மகன்கள் ஜமதக்னியைக் கொல்வது; பரசுராமர் புலம்பி அழுவது…
அக்ருதவ்ரணர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஜமதக்னி தன்னை வேத கல்விக்கும், புனிதமான தவம் பயிலவும் அர்ப்பணித்துக் கொண்டார். அவர் தனது பெரும் தவங்கள் நிமித்தமாகப் புகழடைந்தார். பிறகு அவர் {ஜமதக்னி} ஒரு முறைசார்ந்த போக்கைத் தொடர்ந்து முழு வேதத்திலும் தேர்ச்சி பெற்றார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அவர் {ஜமதக்னி} பிரசேனஜித்திடம் சென்று, ரேணுகையின் கரத்தை திருமணத்திற்காகக் கேட்டார். அவரது வேண்டுதல் அம்மன்னனால் {பிரசேனஜித்தால்} அளிக்கப்பட்டது. பிருகு குலத்தின் இனியவர் {ஜமதக்னி} இப்படியே ரேணுகையைத் தனது மனைவியாக அடைந்து, அவளை {ரேணுகையைத்} தனது ஆசிரமத்தில் வசிக்க வைத்து, அவளால் உதவப்பட்டுத் தவம்பயின்றார். அவள் மூலமாக நான்கு மகன்கள் பிறந்தனர். ஐந்தாவதாக ராமர் {பரசுராமர்} பிறந்தார். ராமர் {பரசுராமர்} அனைவரிலும் இளையவராக இருந்தாலும், தகுதியில் அனைவரையும் விஞ்சியிருந்தார்.
ஒரு காலத்தில், அவளது {ரேணுகையின்} மகன்கள் கனிகள் சேகரிக்க வெளியே சென்றிருந்தபோது, தூய கடினமான வாழ்க்கை வாழ்ந்து வந்த ரேணுகை, நீராடுவதற்காக வெளியே சென்றாள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அப்படி அவள் இல்லம் திரும்பிக் கொண்டிருந்தபோது, சித்திரரதன் என்ற பெயர் கொண்ட மார்த்திகாவத நாட்டு அரசனை அவள் காண நேரந்தது. தாமரை மலர்மாலை அணிந்திருந்த அந்த மன்னன் {சித்திரரதன்} தனது மனைவியருடன் நீரில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனின் {சித்திரரதனின்} அற்புதமான வடிவத்தைக் கண்ட ரேணுகைக்கு அவன் மீது ஆசை உண்டானது. விதிக்குப்புறம்பான அந்த ஆசையை அவளால் கட்டுப்படுத்தமுடியாமல், நீரிலே மாசடைந்து, இதயத்தால் பயந்து மீண்டும் ஆசிரமம் திரும்பினாள்.
அவளது கணவர் {ஜமதக்னி}, அவளைக் கண்ட உடனேயே, அவளது நிலையை உணர்ந்தார். மயக்கத்துடன் இருந்த அவளிடம் கற்பின் காந்தம் இல்லாததைக் கண்டு வலிமைமிக்க, சக்திவாய்ந்த, மனதில் மிகுந்த கோபம் கொண்ட அவர் {ஜமதக்னி}, அவளை {ரேணுகையை} நிந்தித்து “சீச்சி” என்றார். சரியாக அதே நேரத்தில் ஜமதக்னியின் மகன்களில் மூத்தவரான ருமண்வான் வந்தார்; பிறகு சுஷேணரும், வசுவும், அதேபோல விசுவாவசுவும் வந்தனர். அந்தப் பெரும்பலம் வாய்ந்த தவசி அவர்கள் அனைவரிடமும் ஒருவர் பின் ஒருவராக, அவர்களது தாயின் உயிருக்கு ஒரு முடிவுகட்டச் சொன்னார்.
இருப்பினும் அவர்கள், மதிமயங்கி, இதயம் தொலைந்தவர்களாக இருந்தனர். அவர்கள் ஒருவார்த்தையையேனும் சொல்லவில்லை. பிறகு அவர் {ஜமதக்னி} சினம் கொண்டு அவர்களைச் சபித்தார். அப்படிச் சபிக்கப்பட்ட அவர்கள் தங்கள் உணர்வுகளை இழந்து, விலங்குகள் மற்றும் பறவைகளின் நடத்தைக்கு ஒப்பாக அசையாமல் இருந்தனர். பிறகு, அனைவரிலும் கடைசியாக எதிரி வீரர்களைக் கொல்லும் ராமர் {பரசுராமர்} ஆசிரமத்திற்கு வந்தார். அவரிடம், பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட பெரும் தவசியான ஜமதக்னி, “ஓ! மகனே {பரசுராமா}, மனவுறுத்தல் இன்றி உனது தீய அன்னையை {ரேணுகையைக்} கொல்” என்றார்.
அதன்பேரில், ராமர் {பரசுராமர்} உடனடியாகத் தனது கோடரியை எடுத்து தனது தாயின் தலையைக் கொய்தார். ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, பலம் வாய்ந்த ஆன்மா கொண்ட ஜமதக்னியின் கோபம் தணிந்தது. பிறகு அவர் மனத்திருப்தியுடன், “எனது மகனே, அறம் அறிந்த நீ, எனது ஆணையின் பேரில் கடும் சாதனையைச் செய்தாய். ஆகையால், உனது இதயத்தில் இருக்கும் விருப்பங்களைச் சொல், நான் அவற்றைத் தரத் தயாராக இருக்கிறேன். என்னிடம் கேள்” என்றார்.
அதன்பேரில், ராமர் {பரசுராமர்}, தனது தாய் {ரேணுகை} உயிர் பெற வேண்டும் என்றும், இந்தக் கொடூரச் செயலை நினைத்து தான் பீதியடையாதிருக்க வேண்டும் என்றும், தான் எந்தப் பாவத்தாலும் பீடிக்கப்படாதவராக இருக்க வேண்டும் என்றும், தனது சகோதரர்கள் பழைய நிலையை அடைய வேண்டும் என்றும், போர்க்களத்தில் தான் ஒப்பிலாதவராக இருக்க வேண்டும் என்றும், தனக்கு நீண்ட ஆயுள் வேண்டும் என்றும் கேட்டார். ஓ பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, கடுமை நிறைந்த தவம் பயின்ற ஜமதக்னி, தனது மகனின் அனைத்து விருப்பங்களையும் அருளினார்.
ஓ! தலைவா {யுதிஷ்டிரா}, ஒரு முறை, முன்பு போலவே அனைத்து மகன்களும் வெளியே சென்றிருந்த போது, கடற்கரையின் அருகே இருக்கும் நாட்டின் {அனூப நாடு} தலைவனான கார்த்தவீரியனின் வீரமிக்க மகன் {அர்ஜுனன்}, ஆசிரமத்திற்கு வந்தான். அப்படி அவன் அந்த ஆசிரமத்திற்கு வந்தபோது, அந்தத் தவசியின் {ஜமதக்னியின்} மனைவி {ரேணுகை} அவனை {கார்த்தவீரியனின் மகன் அர்ஜுனனை} விருந்தோம்பலுடன் வரவேற்றாள். எனினும், அவன் போர்வீரனுக்குரிய பெருமையால் போதை கொண்டு, தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் மகிழ்ச்சி கொள்ளவில்லை. பிறகு வலுக்கட்டாயமாக, அனைத்து எதிர்ப்பையும் மீறி, தனது பாலால் புனித நெய் வழங்கிய தலைமைப் பசுவை {பசுவின் கன்றை என்று வேறு பதிப்பில் படித்ததாக ஞாபகம்}, அதன் {தாய்ப்பசுவின்} அலறலையும் பொருட்படுத்தாமல் ஆசிரமத்தில் இருந்து கைப்பற்றிச் சென்றான். வேண்டுமென்றே அந்த வனத்தில் இருந்த பல பெரிய மரங்களை ஒடித்துச் சென்றான்.
ராமர் {பரசுராமர்} வீடு திரும்பியதும், அவரது தந்தை {ஜமதக்னி} நடந்தது யாவற்றையும் சொன்னார். கன்றின் பிரிவால் அலறும் பசுவைக் கண்ட ராமருக்கு {பரசுராமருக்கு} இதயத்தில் அதிருப்தி எழுந்தது. அவர் {பரசுராமர்} கடைசிக் காலம் நெருங்கியிருந்த கார்த்தவீரியனின் மகனிடம் {அர்ஜுனனிடம்} விரைந்தார். பிறகு அந்தப் பிருகுவின் வழி வந்தவர் {பரசுராமர்}, அந்த எதிரி வீரர்களை அழிப்பவர், போர்க்களத்தில் தனது அழகிய வில்லில் இருந்து அடிக்கப்பட்ட, தட்டை முனை கொண்ட கூர்மையான கணைகளால் தனது வீரத்தைக் காண்பித்து, கதவைத் தடுக்கும் மர ஆணிகள் போல இருந்த அர்ஜுனனின் ஆயிரம் கரங்களை அறுத்தெரிந்தார். ஏற்கனவே மரணத்தின் கரங்களில் இருந்த அவனும் {அர்ஜுனனும்}, தனது எதிரியான ராமரால் {பரசுராமரால்} வெற்றிகொள்ளப்பட்டான்.
பிறகு அந்த அர்ஜுனனின் உறவுகள் ராமருக்கு {பரசுராமருக்கு} எதிராகத் தங்கள் கோபத்தைத் திருப்பி, ராமர் {பரசுராமர்} இல்லாத நேரத்தில் ஜமதக்னியின் ஆசிரமத்திற்கு விரைந்தனர். அங்கே அவரைக் {ஜமதக்னியைக்} கண்டு கொன்றனர். அவர் பெரும் பலம் கொண்டவராக இருப்பினும், அந்நேரத்தில் தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் சண்டையிடவில்லை. இப்படி எதிரிகளால் தாக்கப்பட்டபோது, அவர் உதவியின்றிப் பரிதாபகரமாகத் தொடர்ந்து ராமனின் {பரசுராமனின்} பெயரை உரக்க அழைத்தார்.
ஓ! யுதிஷ்டிரா, மேலும், கார்த்தவீரியனின் மகன்கள் ஜமதக்னியின் மேல் தங்கள் கணைகளை அடித்துத் தங்கள் எதிரியைத் {பரசுராமரைத்} தண்டித்து வந்த வழியே சென்றனர். அப்படி அவர்கள் சென்ற பிறகு, ஜமதக்னி தனது கடைசி மூச்சை சுவாசித்த போது, பிருகு குலத்தில் இனியவரான, ராமர் {பரசுராமர்}, கைகளில் விறகுகளுடன் ஆசிரமத்திற்குத் திரும்பினார். அந்த வீரர் தனது தந்தை கொல்லப்பட்டிருப்பதைக் கண்டார். மிகுந்த துக்கமடைந்த அவர் தனது தந்தைக்கு ஏற்பட்ட தகாத விதியை நினைத்து புலம்பி அழுதார்.
யுதிஷ்டிரனுக்குக் காட்சியளித்த பரசுராமர் – வனபர்வம் பகுதி 117-தந்தை ஜமதக்னியின் இறப்புக்குப் பழிவாங்கிய பரசுராமர்; க்ஷத்திரியர்களின் இரத்தம் கொண்டு ஐந்து தடாகங்களை உருவாக்கி தனது மூதாதையர்களுக்கு நீர்க்கடன் செலுத்துவது; பூமியை அந்தணர்களுக்குக் கொடுப்பது; தன்னிடம் இருந்த செல்வத்தை அந்தணர்களுக்குப் பிரித்துக் கொடுப்பது; யுதிஷ்டிரனுக்கும் அவனது தம்பிகளுக்கும் காட்சி கொடுத்து ஆலோசனை கூறுவது; யுதிஷ்டிரன் தென்பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்வது…
ராமர் {பரசுராமர்} சொன்னார், “ஓ தந்தையே {தந்தை ஜமதக்னியே}, குற்றம் என்னுடையதே. அந்த அற்ப முட்டாள் பாவிகளான கார்த்தவீரியனின் மகன்கள் கணைகளால் கானகத்தில் இருக்கும் மானைப் போல கொல்லப்பட்டீர். ஓ தந்தையே {தந்தை ஜமதக்னியே}, அறம்சார்ந்து, நேர்மையான பாதையில் தடுமாற்றம் இல்லாது, அசையும் உயிரினங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாதிருந்தீரே. நீர் இவ்வழியில் இறந்து போக விதி எப்படி அனுமதித்து? வயோதிகரும், தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரும், போரிட விருப்பமில்லாதவருமான உம்மை நூறு கூர்மையான கணைகளால் கொன்றவர்கள் எப்படிப்பட்ட மிக மோசமான பாவத்தை இழைத்திருக்கிறார்கள்? வெட்கமற்ற அந்த மனிதர்கள் தங்கள் செயலை நண்பர்கள் மற்றும் சேவகர்கள் முன்னிலையில் உதவியற்ற எதிர்ப்பில்லாத அறம்சார்ந்த மனிதனைக் கொன்றோம் என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு சொல்வார்கள்?”
ஓ! மனிதர்களைப் பாதுகாப்பவனே {யுதிஷ்டிரனே}, இப்படியே தவத்தில் பெருமைமிக்க அவர் {பரசுராமர்} பரிதாபகரமாக அழுது புலம்பி, இறந்து போன தனது தந்தையின் ஈமச்சடங்குகளைச் செய்தார். எதிரிகளின் நகரங்களைக் வெற்றிகொள்ளும் ராமர் {பரசுராமர்} சிதையில் தனது தந்தையின் உடலைத் தகனம் செய்து சபதம் செய்தார். ஓ பாரத குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, போர்க்களத்தில் மிகுந்த வலிமையும், துணிவு மிகுந்த வீர ஆன்மாவும் கொண்டு, மரண தேவனுக்கு ஒப்பாக இருந்த அவர் {பரசுராமர்}, மொத்த படைவீரர்களின் சாதியையும் {க்ஷத்திரியர்களையும்} படுகொலை செய்வதாக சபதம் செய்து, மிகுந்த கோபத்துடன் தனது ஆயுதத்தை எடுத்து, தனியொருவராக கார்த்தவீரியனின் மகன்களைக் கொன்றார்.
ஓ! படைவீரர்கள் சாதியின் {க்ஷத்திரியர்களின்} தலைவா {யுதிஷ்டிரா}, எதிரிகளை அடிக்கும் வல்லமைபெற்ற தலைவரான ராமர் {பரசுராமர்} கார்த்தவீரியன் மகன்களைத் தொடர்ந்த வந்த க்ஷத்திரியர்களை மூன்று முறை அழித்தொழித்தார். அந்த வலிமிக்க தலைவர் ஏழு முறை {3 x 7 = 21 இருபத்தொரு முறையென்று நினைக்கிறேன்} உலகத்தை க்ஷத்திரியர்களற்றதாகச் செய்தார்.
சமந்தபஞ்சகம் என்றழைக்கப்படும் நிலப்பரப்பில் அவர்களின் {க்ஷத்திரியர்களின்} இரத்தம் கொண்டு ஐந்து தடாகங்கள் அவரால் {பரசுராமரால்} உண்டாக்கப்பட்டது. அங்கே அந்த பெரும்பலம்வாய்ந்த பிருகு குலக் கொழுந்து {பரசுராமர்} தனது மூதாதையர்களுக்கு நீர்க்கடன் செலுத்தினார். பிருகுவும், ரிசீகரும் அவர் முன்பு உருவம் கொண்டு வந்து ஆலோசனை வழங்கினர்.
பிறகு அச்சமூட்டும் பெயர் கொண்ட ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, ஒரு பெரும் வேள்வியைச் செய்து, தேவர்களின் தலைவனைத் {இந்திரனைத்} திருப்தி செய்து, ஆலோசனை கூறும் புரோகிதர்களுக்கு {ரித்விக்குகளுக்கு} பூமியை வழங்கினார். ஓ மனிதர்களைக் காப்பவனே {யுதிஷ்டிரா}, அவர் {பரசுராமர்} தங்கத்தாலான ஒரு பலிபீடத்தை எழுப்பினார். அது பத்து வியாமா அகலமும் {40 முழம் [ஒரு வியாமா என்பது 4 முழம்]}, ஒன்பது வியாமா {36 முழம்} உயரமும் இருந்தது. அதை பெருமை மிக்க காசியபருக்குப் பரிசாகக் கொடுத்தார் {பரசுராமர்}. பிறகு காசியபரின் உத்தரவின் பேரில் அந்தணர்கள் அந்த பலிப்பீடத்தை பல பங்குகளாகப் பிரித்துக் கொண்டனர். இப்படியே அவர்கள் {அந்த அந்தணர்கள்} காண்டவாயமர்கள் (பங்கு பிரித்துக் கொண்டவர்கள்) என்ற பெயர் பெற்றனர்.
மகத்தான பலம் கொண்ட படைவீரர் குலத்தை {க்ஷத்திரியர்களை} அழித்தவர் {பரசுராமர்}, பூமியை உயர் ஆன்ம காசியபருக்கு அளித்தார். பின்பு கடுமை மிகுந்த தவத்தில் ஈடுபட்டார். இப்போது அவர் மலைகளின் ஏகாதிபதியான மகேந்திரத்தில் வசிக்கிறார். இப்படியே அவருக்கும் பூமியில் வசித்த அனைத்து படைவீரர்கள் சாதிக்கும் பகைமை ஏற்பட்டது. மகத்தான பலம் கொண்ட ராமர் {பரசுராமர்} இவ்வழியிலேயே மொத்த உலகையும் அடக்கினார்” என்றார் {அக்ருதவ்ரணர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு பதினான்காவது சந்திர நாளில் {சதுர்த்தசியில்}, பலம் வாய்ந்த ஆன்மா கொண்ட ராமர் {பரசுராமர்}, சரியான நேரத்தில், அங்கிருந்த புரோகித சாதி உறுப்பினர்களுக்கு {அந்தணர்களுக்கும்}, அறம் சார்ந்த மன்னனுக்கும் (யுதிஷ்டிரனுக்கும்), அவனது தம்பிகளுக்கும் காட்சி கொடுத்தார். ஓ! மன்னர்களின் மன்னா {ஜனமேஜயா}, அந்தத் தலைவனும் {யுதிஷ்டிரனும்} தனது தம்பிகளுடன் சேர்ந்து ராமரை {பரசுராமரை} வழிபட்டான். ஓ! மனிதர்களை ஆள்பவர்களில் மிகவும் நேர்மையானவனே {ஜனமேஜயா}, அங்கே கூடியிருந்த இருபிறப்பாளர் வகையின் உறுப்பினர்களுக்கு {அந்தணர்களுக்கு} அவன் உயர்ந்த மரியாதைகளைச் செலுத்தினான். ஜமதக்னியின் மகனை {பரசுராமரை} வணங்கிய பிறகு, அவரிடம் இருந்து பாராட்டுகளைப் பெற்று, அவரது {பரசுராமரின்} வழிகாட்டுதல் படி அந்த இரவை மகேந்திர மலையில் கழித்து, தெற்குப் பகுதிகளுக்கான தனது பயணத்தைத் தொடங்கினான் {யுதிஷ்டிரன்}.
பாண்டவர்களைச் சந்தித்த கிருஷ்ணன் – வனபர்வம் பகுதி 118-கிருஷ்ணன், பலராமன் மற்றும் பல விருஷ்ணி குலத்தோர் பாண்டவர்களைச் சந்திப்பது; அவர்களிடம் பாண்டவர்கள் தங்கள் நிலையை விளக்குவது; பாண்டவர்கள் நிலை கண்டு அவர்கள் வருந்துவது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்தப் பெருமைமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} தனது பயணத்தைத் தொடர்ந்து, கடற்கரையோரமாகப் பல வித்தியாசமான இடங்களுக்குச் சென்று, புரோகித சாதியைச் சேர்ந்த மனிதர்கள் அடிக்கடி செல்லும் புனிதமான காண்பதற்கினிய பல இடங்களில் நீராடினான். ஓ பரிக்ஷித்தின் மகனே {ஜனமேஜயா}, அவன் {யுதிஷ்டிரன்} உரிய முறையில் தனது தம்பிகளுடன் நீராடி அனைத்திலும் புனிதமான ஒரு அற்புதமான நதிக்குச் {பிரசஸ்தை} சென்றான். அங்கேயும் அந்தப் பெருமை மிக்க மன்னன் மூழ்கி, தனது மூதாதையர்களுக்கும், தேவர்களுக்கும் நீர்க்கடன் கொடுத்து, இருபிறப்பாளர் வர்க்கத்தின் {அந்தணர்களின்} தலைவர்களுக்குச் செல்வத்தைப் பிரித்துக் கொடுத்தான்.
பிறகு அவன் {யுதிஷ்டிரன்} கடலில் நேரடியாக விழும் கோதாவரி நதிக்குச் சென்றான். அங்கே அவன் அவனது பாவங்களில் இருந்து விடுபட்டான். பிறகு அவன் திராவிட நிலத்தில் உள்ள கடலை அடைந்து, அகஸ்தியரின் பெயரால் அழைக்கப்படும் ஒரு புனிதமான இடத்திற்குச் சென்று, அதையும் கடந்து புண்ணியமிக்கப் பரிசுத்தமான இடங்களுக்கும் சென்றான். பிறகு அந்த வீரம் மிகுந்த மன்னன் {யுதிஷ்டிரன்} பெண்தன்மையுடைய புனித இடங்களுக்கும் {நாரீ தீர்த்தங்களுக்கும்} சென்றான். அங்கே அவன், வில்தாங்குபவர்களில் தலைவனான அர்ஜுனனின் நன்கு அறியப்பட்ட, மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைக் கதைகளைக் கேட்டான். அங்கே புரோகித வர்க்கத்தின் உயர்ந்த உறுப்பினர்களின் {அந்தணர்களின்} பாராட்டுகளைப் பெற்ற பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.
ஓ! பூமியின் பாதுகாவலா! அந்த உலகத்தின் ஆட்சியாளன் {யுதிஷ்டிரன்}, கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்ந்து அந்தப் புனிதமான இடங்களில் நீராடினான். அர்ஜுனனின் வீரத்தைப் புகழ்ந்து அந்த இடத்தில் மகிழ்ச்சியாகத் தனது நேரத்தைக் கடத்தினான். பிறகு அவன், அந்தக் கடற்கரையை ஒட்டிய புனிதமான இடங்களில் ஆயிரம் {1000} பசுக்களைக் கொடுத்தான். பிறகு, தனது தம்பிகளிடம் அர்ஜுனன் எப்படிப் பசுக்களைத் தானம் கொடுத்தான் என்று மகிழ்ந்து சொன்னான். ஓ மன்னா {ஜனமேஜயா}, ஒன்றன்பின் ஒன்றாகக் கடற்கரையோரமுள்ள சூர்ப்பாரகம் என்ற பெயரில் அழைக்கப்படும் அனைத்திலும் புனிதமான இடத்தை அடையும் வரை, பல புனிதமான இடங்களையும், மற்றப் பல புனிதமான இடங்களையும் இதய விருப்பம் நிறைவேறி தரிசித்தான்.
பிறகு கடற்கரையில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைக் கடந்து உலகத்தில் கொண்டாடப்படும் ஒரு கானகத்தை அடைந்தான். பழங்காலத்தில் அங்கே தேவர்கள் தவம்பயின்றனர். அறம்சார்ந்தவர்களான மனிதர்களின் ஆட்சியாளர்கள் பலர் பல வேள்விச் சடங்குகளை அங்கே செய்திருந்தனர். நீண்டு பருத்து அழகான கரங்களைக் கொண்ட அவன் {யுதிஷ்டிரன்}, அங்கே வில்லேந்துபவர்களில் முதன்மையான ரிசீகரின் மகனது கொண்டாடப்படும் பலிப்பீடத்தைக் கண்டான். அப்பீடம் தவசிகளாலும், வழிபடத்தக்க அறம்சார்ந்தவர்களாலும் சூழப்பட்டிருந்தது. பிறகு அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, அனைத்துத் தேவர்கள், வசுக்கள், வாயு, மற்றும் இரண்டு தெய்வீக மருத்துவர்கள், சூரியன் மகனான யமன், செல்வத்தின் தலைவன், இந்திரன், விஷ்ணு, படைப்புத் தலைவன் {பிரம்மன்}, சிவன், சந்திரன், நாளின் ஆசிரியர் {சூரியன்}, நீர்த்தலைவன், சத்யஸ்கள் கூட்டம், மூதாதையர்கள், தொடர்பவர்களுடன் கூடிய ருத்திரர், கல்வித் தேவதை {சரஸ்வதி}, சித்தர்கள் கூட்டம் மற்றும் பல இறவாத தேவர்களின் புனிதமான காண்பதற்கினிய சன்னதிகளை {கோவில்களை} கண்டான்.
அக்கோவில்களில் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} பல உண்ணாநோன்புகள் நோற்று, பெருமளவில் ரத்தினங்களைக் கொடையாகக் கொடுத்தான். தனது உடலுடன் அனைத்து புண்ணிய இடங்களிலும் மூழ்கி, மீண்டும் சூர்ப்பாரகத்திற்கு வந்தான். அவன் தனது தம்பிகளுடன் அதே கடற்கரைக்கு வந்து, உலகம் முழுவதும் அந்தணர்களால் புகழ் பரப்பப்பட்ட புனிதமான இடமான பிரபாசத்துக்கு வந்தான். இரு பெரிய சிவந்த கண்களைக் கொண்டவன், அங்கே தனது தம்பிகளுடன் நீராடி, மூதாதையர்களுக்கும், தேவர்களுக்கும் நீர்க்கடன் செலுத்தினான். மற்ற அந்தணர்களும், கிருஷ்ணையும் {திரௌபதியும்}, லோமசருடன் சேர்ந்த அதையே செய்தனர்.
பனிரெண்டு நாட்களுக்குக் காற்று மட்டும் நீர் மட்டுமே உண்டு வாழ்ந்தான். பிறகு எல்லாப்புறமும் நெருப்பு சூழ இரவும் பகலும் {ஆன்ம} சுத்திகரிப்பு சடங்குகளைச் செய்தான். இப்படியே அறம் சார்ந்த மனிதர்களில் பெரியவன் {யுதிஷ்டிரன்} தன்னைத் தவத்தில் ஈடுபடுத்திக் கொண்டான். இப்படி அவன் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, மன்னன் {யுதிஷ்டிரன்} கடும் தவமிருக்கிறான் என்ற செய்தி பலராமனையும், கிருஷ்ணனையும் எட்டியது. விருஷ்ணி குலத்தில் இரு தலைவர்களும் தங்கள் படைகளுடன் அஜமீட குலத்தைச் சேர்ந்த யுதிஷ்டிரனிடம் வந்தனர். உடலெல்லாம் அழுக்குடன் தரையில் படுத்துக் கிடந்த பாண்டுவின் மகன்களையும், துன்ப நிலையில் இருந்த துருபதன் மகளையும் {திரௌபதியையும்} கண்ட அவர்களது துயரம் பெரிதாக இருந்தது. கதறி அழுவதை அவர்களால் நிறுத்த முடியவில்லை.
பிறகு, துரதிர்ஷ்டத்தால் வீழ்த்த முடியாத வீரம் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, ராமனையும் {பலராமனையும்}, கிருஷ்ணனையும், சாம்பனையும், கிருஷ்ணனின் மகனையும் {பிரத்தியும்னனையும்}, சினியின் பேரனையும் {சாத்யகியையும்}, மற்ற விருஷ்ணிகளையும் சந்தித்து உரிய வகையில் மரியாதை செலுத்தினார். பிறகு அவர்கள் அனைவரும் பதிலுக்குப் பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} அதே போல மரியாதை செலுத்தினர். பிறகு அவர்கள் அனைவரும், ஓ மன்னா {ஜனமேஜயா}, இந்திரனைச் சுற்றி அமரும் தேவர்களைப் போல யுதிஷ்டிரனைச் சுற்றி அமர்ந்தனர். மிகவும் திருப்தியடைந்த அவன் {யுதிஷ்டிரன்}, தனது எதிரிகளின் அனைத்து சூழ்ச்சிகளையும், தாங்கள் காட்டில் எப்படி வசித்தனர் என்பதையும், அர்ஜுனன் ஆயுத அறிவியலைக் கற்க எப்படி இந்திரனின் வசிப்பிடம் சென்றான் என்பதையும் விவரித்து, இதயத்தால் மகிழ்ந்தான். அவர்களும் அவனிடம் இருந்து அனைத்து செய்திகளை அறிந்து மகிழ்ந்தனர். ஆனால் பாண்டவர்கள் மிகவும் மெலிந்திருப்பதைக் கண்ட பெருந்தன்மையுடைய கம்பீரமான விருஷ்ணிகளால் கண்ணீர் சிந்துவதை நிறுத்த முடியவில்லை. அவர்கள் உணர்ந்த வேதனையால், அவர்களது கண்களில் இருந்து கண்ணீர் தடையற வழிந்து கொண்டிருந்தது” என்றார் {வைசம்பாயனர் ஜனமேஜயனிடம்}.
பலராமன் வேதனை – வனபர்வம் பகுதி 119-பாண்டவர்களுக்கு ஏற்பட்ட நிலையையும், துரியோதனன் பூமி ஆள்வதையும் நினைத்து பலராமன் வருந்துவது…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} கேட்டான், “ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, பாண்டுவின் மகன்களும், விருஷ்ணிகளும் புனிதமான இடமான பிரபாசத்தை அடைந்ததும் என்ன செய்தனர்? அவர்கள் அனைவரும் பலம்பொருந்திய ஆன்மாவைக் கொண்டவர்கள். அறிவியலின் அனைத்துப் பிரிவுகளையும் அறிந்த விருஷ்ணிகளும் பாண்டுவின் மகன்களும் நட்பு ரீதியான மதிப்பீட்டின்படியே ஒருவரை ஒருவர் அணுகுவர். ஆகையால், அவர்களுக்குள் என்ன உரையாடல் நடந்தது?”
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கடற்கரையில் இருக்கும் புனிதமான இடமான பிரபாசத்தை விருஷ்ணிகள் அடைந்தபோது, அவர்கள் பாண்டுவின் மகன்களைச் சூழ்ந்து அவர்களுக்காகக் காத்திருந்தனர். பிறகு பசும்பால், குருக்கத்திப்பூ {Kunda Flower}, சந்திரன், வெள்ளி மற்றும் தாமரையின் வேரைப் போன்ற நிறம் கொண்டு, காட்டு மலர்மாலை அணிந்து, கலப்பையை ஆயுதமாகக் கொண்ட தாமரை இதழ்போன்ற கண்களைக் கொண்ட பலராமன், “ஓ! கிருஷ்ணா, “பெருந்தன்மை கொண்ட யுதிஷ்டிரன், ஜடா முடியுடன் வனவாசம் செய்து மரவுரி தரித்து இத்தகு இழி நிலையில் இருப்பதால் அறப்பயிற்சி நன்மைக்கோ அல்லது நேர்மையற்ற செயல்கள் தீமைக்கோ இட்டுச் செல்வதை நான் காணவில்லை. இப்போது துரியோதனன் பூமியை ஆள்கிறான். இருப்பினும் இந்தப் பூமி அவனை இன்னும் விழுங்கவில்லை.
இதனால், குறைந்த அறிவுடைய மனிதன்கூட, அறம் சார்ந்திருப்பதைவிட, தீய வழி வாழ்வே சரியானது என்றே நம்புவான். துரியோதனன் வளமிக்க நிலையிலும், யுதிஷ்டிரன் அரியணை திருடப்பட்டும் இப்படித் துன்புற்றால், இக்காரியத்தில் மக்கள் என்ன செய்வார்கள்? இந்தச் சந்தேகமே அனைத்து மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறது. நேர்மையான வழியில் சென்று, உண்மையில் கண்டிப்புடன், இதயத்தில் தயாளத்துடன், அறத்தேவன் {தர்மதேவன்_எமதர்மன்} மூலம் உதித்த மக்கள் தலைவன் {யுதிஷ்டிரன்} இங்கே இருக்கிறான். இந்தப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, நாட்டையும் இன்பத்தையும் கொடுப்பானேயொழிய, வாழ்வதற்காக ஒருபோதும் நேர்மையான பாதையில் இருந்து விலக மாட்டான்.
பீஷ்மர், கிருபர், அந்தணரான துரோணர், சபையின் மூத்த உறுப்பினரான வயோதிக மன்னன் {திருதராஷ்டிரன்} ஆகியோர் பிருதையின் மகன்களை வெளியேற்றிய பிறகு எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்? தீயமனம் கொண்ட பாரதக் குலத்தின் தலைவர்களுக்கு ஐயோ. பூமிக்குத் தலைவனான அந்த இழிந்த பாவி {திருதராஷ்டிரன்}, தனது குலத்தின் மூதாதையார்களை வேறு உலகத்தில் சந்திக்கும்போது, அவர்களிடம் என்ன சொல்வான்? தன்னை மீறி நடக்காத மகன்களை அரியணையில் இருந்து விரட்டிய பிறகு, பழியில்லா வகையில் அவர்களை நடத்தியதாக அவனால் சொல்ல முடியுமா? தன் மனக்கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு அவன் {திருதராஷ்டிரன்} குருடனாகிவிட்டான். அவன் செய்த எந்தச் செயலால் இப்படிப் பூமியில் உள்ள அனைத்து மன்னர்களைக் காட்டிலும் குருடாகிப் போனான்? தனது நாட்டிலிருந்து குந்தியின் மகன்களை வெளியேற்றியதால் அல்லவா அப்படி ஆனான்?
தனது மகன்களுடன் சேர்ந்து மனிதத்தன்மையற்ற இக்குற்றச் செயலைச் செய்திருக்கும் விசித்திரவீரியனின் மகன் {திருதராஷ்டிரன்}, இறந்தவர்கள் உடலை எரிக்கும் இடத்தில் மலர்கள் நிறைந்த தங்க மரங்களைக் காண்கிறார் என்பதில் சந்தேகமில்லை. நிச்சயமாக அவர்கள் தங்கள் தோள்களை உயர்த்தி., தங்கள் சிவந்த பெரிய கண்களை உருட்டி முறைத்துப் பார்த்த போது, அவர்களது தீய ஆலோசனையை இவர் கேட்டிருக்க வேண்டும். அதனால்தான் அச்சமற்ற முறையில் அவர் போருக்குத் தேவையான ஆயுதங்களுடனும், தம்பிகளின் துணையுடனும் இருந்த யுதிஷ்டிரனைக் கானகத்திற்கு அனுப்பியிருக்கிறார்.
ஓநாயைப் போலப் பெரும்பசியுடனும் உண்ணும் விருப்பத்துடனும் இங்கே இருக்கும் பீமன், போருக்குத் தேவையான ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் வெறும் கைகளின் பலத்தாலேயே ஒரு படையணியையே அழிக்கக் கூடிய ஆற்றல் படைத்தவன். போர்க்களத்தில் இருக்கும் பெரும் படைகளும் இவனது வெறும் போர்க் கர்ஜனையை மட்டுமே கேட்டு முற்றிலும் காலியாகும். இப்போது அந்தப் பலம் வாய்ந்தவன் பசியாலும், தாகத்தாலும் துன்புற்று, களைப்பு தரும் பயணங்களால் மெலிந்திருக்கிறான். ஆனால் அவன் தன் கைகளில் கணைகளையும், பிற போர் ஆயுதங்களையும் ஏந்தி எதிரிகளைப் போர்க்களத்தில் சந்தித்தால், அவன் தனது கானக வாழ்வின் துயரங்களை நினைவு கூர்ந்து, தனது எதிரிகளைக் கொல்வான். இது நிச்சயமாக நடக்கும் என நான் கருதுகிறேன்.
இந்த முழு உலகத்திலும் இவனது {பீமனது} பலத்துக்கும் வீரத்துக்கும் இணையாக வேறு எந்த ஒரு ஆன்மாவும் பெருமை பேச முடியாதே. ஐயோ, இவனது உடல் குளிராலும், வெப்பத்தாலும் காற்றாலும் மெலிந்து போயிருக்கிறதே. ஆனால், அவன் போரிட எழுந்து நின்றால், எதிரிகளில் ஒரு மனிதனையும் விடமாட்டான். இந்தப் பெரும் போர்வீரனான இந்தப் பலம் நிறைந்த பீமன், தேரில் ஏறி, ஓநாயின் பசி கொண்டு தனி ஒருவனாகக் கிழக்குத் திசையில் இருந்த மனிதர்களின் ஆட்சியாளர்களை மொத்தமாகப் போரில் வென்று காயமில்லாமல் பத்திரமாகத் திரும்பினான். அதே பீமன், மரவுரி தரித்து, கானகத்தில் இழி வாழ்வு வாழ்ந்து துயரத்தில் இருக்கிறான்.
இந்தப் பலமிக்கச் சகாதேவன் தெற்கில் உள்ள மன்னர்கள் அனைவரையும் வீழ்த்தியவன். கடற்கரையில் கூடியிருக்கும் அந்த மனிதர்களின் தலைவர்கள் துறவியின் கோலத்தில் இவனைக் காண்கிறார்கள். போர்க்களத்தில் வீரமிக்க நகுலன் தனி ஒருவனாக மேற்குத் திசை ஆண்ட மன்னர்களை வீழ்த்தியவன். அவன் இப்போது கனிகளையும் கிழங்குகளையும் உண்டு ஜடாமுடி தரித்து, உடலெல்லாம் அழுக்கடைந்து கானகத்தில் திரிகிறான். தேரில் ஏறினால் ஒருபெரும் போர்வீராங்கனையும் ஒரு மன்னனின் {துருபதனின்} மகளுமான இவள் {திரௌபதி}, வேள்விச் சடங்கின் போது வேள்விப் பீடத்தில் இருந்து உதித்தவளாவாள். எப்போதும் மகிழ்ச்சிக்கு மட்டுமே பழக்கப்பட்டிருந்த இவள், கானகத்தில் துயர்நிறைந்த வாழ்வை எப்படி வாழ்கிறாள்? வாழ்வின் இன்பங்களுக்கு அறமே தலைமையானது. இனபத்திற்கு மட்டுமே பழக்கப்பட்ட அறத்தேவன் மகன் {யுதிஷ்டிரன்}, வாயுத்தேவன் மகன் {பீமன்}, தேவர்களின் தலைவன் {இந்திரன்} மகன் {அர்ஜுனன்}, தேவ மருத்துவர்கள் {அசுவினி தேவர்கள்} மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர் தேவர்களின் மகன்களாக இருந்தும் எப்படி அனைத்து வசதிகளையும் இழந்து கானகத்தில் துயர்வாழ்வு வாழுகின்றனர்? அறத்தின் மகன் வீழ்ந்த போது, அவனது மனைவியும், தம்பிமாரும், தொடர்பவர்களும், அவனும் விரட்டப்பட்ட போது துரியோதனன் எப்படி வளம்பெறத் துவங்கினான்? ஏன் இந்தப் பூமி தனது அனைத்து மலைகளுடன் அடங்கிப் போகவில்லை?” என்று கேட்டான் {பலராமன்}.
சாத்யகியின் ஆலோசனை – வனபர்வம் பகுதி 120-பாண்டவர்களுக்காக நாம் போராடலாம் என்று யாதவர்களிடம் சாத்யகி ஆலோசனை கூறுவது; யுதிஷ்டிரன் அதை ஏற்கமாட்டான் என்று கிருஷ்ணன் சொல்வது; யாதவர்களும் பாண்டவர்களும் பிரிவது; பாண்டவர்கள் தங்கள் புனித பயணத்தைத் தொடர்வது..
சாத்யகி சொன்னான், “ஓ! ராமா {பலராமா}, இது புலம்புவதற்கான நேரமன்று; யுதிஷ்டிரன் ஒரு வார்த்தையும் பேசவில்லையென்றாலும் இந்த நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் தக்க காரியத்தைச் செய்வோமாக. தன் நன்மைகளைக் கவனித்துக் கொள்ள ஆட்களிருப்பவர்கள், தாங்களே எதையும் செய்து கொள்வதில்லை; சைப்பியனும் {சிபியும்} மற்றவர்களும் யயாதிக்குச் செய்ததைப் போல, தங்கள் வேலையைச் செய்து கொள்ள அவர்களுக்குப் பிறர் இருக்கிறார்கள். அதே போல, ஓ ராமா! {பலராமா}, தங்கள் சார்பாக, தங்கள் வேலையைச் செய்யப் பிறரை மனிதர்களுக்குத் தலைவர்களாக நியமித்து, காப்பாளர் உள்ளவராக இருப்பவர்கள் ஆதரவற்றவர்கள் போலச் சிரமத்தை அடைவதில்லை. மூன்று உலகங்களையும் சேர்த்துக் காக்கக்கூடியவர்களான ராமனையும் {பலராமனையும்}, கிருஷ்ணனையும் மற்றும் பிரத்யும்னன், சாம்பன் ஆகியோரையும் என்னையும் காப்பாளராகக் கொண்டவர்கள் தானே பாண்டுவின் மகன்கள். அப்படியிருக்கும்போது இந்தப் பிருதையின் {குந்தியின்} மகன் தன் தம்பிகளுடன் கானகத்தில் எப்படி வாழ்கிறார்?
பலதரப்பட்ட ஆயுதங்களுடனும், கவசங்களுடனும் தசாஹர்களின் படை கிளம்ப இந்த நாளே தகுந்தது. விருஷ்ணிகளின் படைகளால் திருதராஷ்டிரன் மகன்கள் நசுக்கப்படட்டும். அவர்கள் தங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து மரணத் தேவன் வசிப்பிடத்திற்குச் செல்லட்டும். கோபத்தால் தூண்டப்பட்டால், கொம்பாலான வில்லைத் தாங்குபவன் {கிருஷ்ணன் – சாரங்கம் என்ற வில்லைத் தாங்குபவன்} தனியொருவனாகவே இந்த முழுப் பூமியையும் சூழ முடியும். தேவர்களின் தலைவனான பெரும் இந்திரன் விரித்திரனைக் கொன்றதைப் போலத் திருதராஷ்டிரன் மகனை அவனுடைய ஆதரவாளர்களுடன் சேர்த்து நீர் கொல்ல வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
பிருதையின் {குந்தியின்} மகனான அர்ஜுனன், எனக்குச் சகோதரனும், நண்பனும், குருவும் ஆவான். மேலும் அவன் இரண்டாவது கிருஷ்ணனைப் போன்றவன். தகுதியுடைய மகனை விரும்பும் மனிதன், முரண்படாத சீடனைத் தேடும் குரு ஆகியோர் இதன்காரணமாகவே {தீமை அழிய} அவற்றைத் தேடுகின்றனர். இதன் காரணமாகவே, செயல்களில் சிறந்த செயலும், செய்து முடிக்கக் கடினமானதுமான அந்த அற்புதமான வேலையைச் செய்ய நேரமும் வந்திருக்கிறது. துரியோதனனின்1 கணைகளை எனது அற்புதமான ஆயுதங்களால் நான் சிதறடிப்பேன். பாம்புகள், நஞ்சு, நெருப்பு ஆகியவற்றுக்குச் சற்று குறைந்த எனது அற்புதமான கணைகளைக் கொண்டு, கோபத்துடன் நான் அவனது தலையைக் கொய்வேன். கூரிய முனை கொண்ட எனது வாளால், போர்க்களத்தில் அவனது தலையை உடலில் இருந்து அறுப்பேன். பிறகு அவனது ஆதரவாளர்களையும், துரியோதனனையும்2 மற்ற அனைத்து குரு குலத்தவரையும் கொல்வேன்.
ஓ! ரோகிணியின் மகனே {பலராமா}, பிரளயகாலத்தில் பெரும் புற்குவியலை எரிக்கும் நெருப்பு போலப் போர்க்களத்தில் நான் எனது ஆயுதங்களைக் கொண்டு போர்வீரர்களில் சிறந்தவர்களைக் கொல்லும்போது பீமனின் ஆதரவாளர்கள் இதயத்தில் மகிழட்டும். பிரத்யும்னன் அடிக்கும் கூரிய கணைகளைக் கிருபர், துரோணர், விகர்ணன், கர்ணன் ஆகியோரால் தாங்க முடியாது. அர்ஜுனன் மகன் {அபிமன்யு} வீரத்தை நான் அறிவேன். அவன் போர்க்களத்தில் கிருஷ்ணனின் மகனைப் {பிரத்யும்னனைப்} போன்றவன். சாம்பன் தனது ஆயுதங்களின் பலத்தால் துச்சாசனனைத் தண்டிக்கட்டும். அவன் {சாம்பன்}, துச்சாசனனையும், அவனது தேரோட்டியும், அவனது தேரையும் தனது பலத்தால் அழிக்கட்டும்.
களத்தில் நடக்கும் போரில் ஜாம்பவதியின் மகன் {பிரத்யும்னன்} தாங்க முடியாதவனாக இருப்பான். எதுவும் அவனது பலத்தைத் தாங்க முடியாது. அவன் சிறுவனாக இருந்த போது சம்பரன் என்ற அசுரனின் படை அவனால் விரைவாக விரட்டப்பட்டது. உருண்ட தொடை கொண்டவனும், மிக நீண்ட பருத்த கரங்கள் கொண்டவனுமான அஸ்வசக்ரன் இவனாலேயே {பிரத்யும்னனாலேயே} கொல்லப்பட்டான். தேரில் இருக்கும்போது போரில் வல்லவனாக இருக்கும் சாம்பனுடைய தேரை யார்தான் யுத்தத்தில் நேர் கொண்டு எதிர்த்து வர முடியும்? மரணத்தின் பிடிக்குள் வரும் மனிதனால் எவ்வாறு தப்பிக்க முடியாதோ, அப்படியே. போர்களத்தில் அவனது பிடிக்குள் வரும் எவரும் எப்படித் தப்ப முடியும்? வாசுதேவனின் {கிருஷ்ணனின்} மகன் தனது கணைகளின் நெருப்பால், தேரில் இருக்கும்போது வலியவர்களான பீஷ்மர் துரோணர் மற்றும் தனது மகன்களால் சூழப்பட்ட சோமதத்தன் ஆகியோர் கொண்ட எதிரிகளின் படையை எரித்துப் போடுவான்.
போராயுதங்களை எடுத்து, கைகளில் அற்புதமான கணைகளையும், சக்ராயுதத்தையும் கொண்டிருக்கும் கிருஷ்ணனுக்கு நிகராக, தேவர்களையும் சேர்த்து இந்த உலகத்தில் யார்தான் இருக்கிறார்கள்? அநிருத்தன் தனது கேடயத்தையும் வாளையும் எடுத்துக் கொள்ளட்டும். அவன் திருதராஷ்டிரன் மகன்களின் தலைகளை உடலில் வெட்டியெடுத்து இந்தப் பூமியின் பரப்பை நிரப்பட்டும். உணர்வற்ற அவர்களது உடலை எடுத்து புல் மூடிய அந்தப் பூமியின் மேல் எழுப்பப்படும் வேள்விப் பீடத்தில் எறியட்டும். கதன், உலூகன் {உல்முகன்}, பாகுகன், பானு, நீதன், யுத்தத்தில் வீரனான இளம் நிசடன், கடும்போர் செய்கிறவர்களான சாரணன், சாருதேஷ்ணன் ஆகிய அனைவரும் தங்கள் குலத்துக்குகந்த சாதனைகளைப் புரியட்டும்.
சாத்வதர்கள் மற்றும் சூரர்களின் ஒன்றுபட்ட படை, விருஷ்ணிகள், போஜர்கள் மற்றும் அந்தகர்களின் சிறந்த படைவீரர்களுடன் சேர்ந்து போர்க்களத்தில் திருதராஷ்டிரன் மகன்களைக் கொன்று தங்கள் புகழை உலகம் முழுவதும் பரப்பட்டும். அறம் பயில்பவர்களில் மிக மேன்மையான யுதிஷ்டிரர் சூதாட்டத்தின் போது குரு குலத்தின் மிக நேர்மையானவர் {பீஷ்மர்} முன்பு எடுத்துக்கொண்ட உறுதி நிறைவேறும் வரை அபிமன்யு இந்தப் பூமியை ஆளட்டும். அதன்பிறகு, நமது கணைகளால் அவரது எதிரிகள் வீழ்ந்த பிறகு அந்த அறம் சார்ந்த மன்னன் {யுதிஷ்டிரன்} பூமியைப் பாதுகாக்கட்டும். அப்போது இந்தப் பூமியல் திருதராஷ்டிரன் மகன்களென்று யாரும் இருக்க மாட்டார்கள். தேரோட்டியின் மகனும் {கர்ணனும்} இருக்க மாட்டான். இதுவே நாம் செய்ய வேண்டிய முக்கிய வேலையாகும். இது நிச்சயம் நமக்குப் புகழைத் தரும்” என்றான் {சாத்யகி}.
அதற்குக் கிருஷ்ணன், “ஓ மது குலத்தின் வழித்தோன்றலே {சாத்யகியே}!, நீ சொல்வது உண்மை என்பதில் சந்தேகமில்லை; ஓ பலமும் வீரமும் கொண்டவனே, உனது வார்த்தைகளை நாங்கள் ஏற்கிறோம்! ஆனால், இந்தக் குரு குலத்தின் காளை (யுதிஷ்டிரன்), தனது கரத்தின் பலத்தால் வெல்லப்படாத வரை, இந்தப் பூமியின் ஆட்சி அதிகாரத்தை ஏற்கமாட்டார். இன்பத்திற்காகவோ, பலத்திற்காகவோ, பேராசைக்காகவோ யுதிஷ்டிரர் தனது சாதியின் {சத்திரிய சாதியின்} விதிகளைக் கைவிடமாட்டார். பீமனும் அர்ஜுனனும் இதை ஏற்க மாட்டார்கள். இரட்டைச் சகோதரர்களும் {நகுலனும் சகாதவேனும்}, துருபதன் மகளான கிருஷ்ணையும் {திரௌபதியும்} இதை ஏற்க மாட்டார்கள். ஓநாயின் பசி கொண்டவனும் (பீமனும்), செல்வங்களை வெல்பவனும் (அர்ஜுனனும்), இந்த முழு உலகிலும் போரில் நிகரற்றவர்கள் ஆவார்கள். மாத்ரியின் இரு மகன்களும் {நகுல-சகாதேவன்} இவரது காரியத்தை நிறைவேற்ற இருக்கும்போதும், ஏன் இந்த மன்னன் இந்த முழு உலகத்தையும் ஆளக் கூடாது? பாஞ்சாலத்தின் உயர் ஆன்ம ஆட்சியாளனும், கேகய மன்னனும் சேர்ந்து தங்கள் பலத்தால் ஒன்றுபட்டால், யுதிஷ்டிரரின் எதிரிகள் அழிவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}.
யுதிஷ்டிரன் சொன்னான், “ஓ! மது குலத்தின் வழித்தோன்றலே {சாத்யகி}! நீ இப்படிப் பேசுவது எனக்கு வியப்பைத் தரவில்லை. ஆனால் எனக்கு, ஆட்சி அதிகாரத்தை விட உண்மையே முதல் கருதுகோளாகப் படுகிறது. ஆனால் கிருஷ்ணன் மட்டுமே என்னைச் சரியாக அறிவான்; அதே போல, நானே (உண்மையில்) கிருஷ்ணனைச் சரியாக அறிவேன். ஓ வீரம் கொண்டவனே! ஓ மது குலத்தின் வழித்தோன்றலே! வீரச்செயல்களுக்கான நேரம் வந்துவிட்டது என்பதை அவன் {கிருஷ்ணன்) கண்டவுடன், ஓ சினி குலத்தவரில் மிகத்துணிவுள்ளவனே {சாத்யகி}, அந்த அழகிய முடி கொண்டவன் (கிருஷ்ணன்) சுயோதனனை {துரியோதனனை} வீழ்த்துவான். தாசார்ஹ குலத்தைச் சேர்ந்த வீரர்கள் இன்று திரும்பிச் செல்லட்டும். அவர்களே எனது காப்பாளர்களும் மனிதர்களில் முதன்மையானவர்களும் ஆவர். அவர்களால் நான் இன்று பார்க்கப்பட்டேன். ஓ! அளவிடமுடியா பலம் கொண்டவனே! அறத்தின் வழியில் இருந்து எப்போதுமே விழக்கூடாது. நீங்கள் மகிழ்ச்சியாகக் கூடியிருக்கும்போது, நான் மீண்டும் உன்னைப் பார்ப்பேன்” என்றான்.
பிறகு அவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறி, மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தி, இளையவர்களை அணைத்துக் கொண்ட பிறகு, அந்த யது குலத்து வீர மனிதர்களும், பாண்டுவின் மகன்களும் பிரிந்து சென்றனர். யதுக்கள் தங்கள் இல்லங்களுக்கு மீண்டும் சென்றனர்; பாண்டவர்கள் புனித இடங்களுக்குச் செல்லும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். கிருஷ்ணனைப் பிரிந்த பிறகு, அந்த அறம் சார்ந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது தம்பிகளுடனும், பணியாட்களுடனும், லோமசருடனும், வடிகட்டப்பட்ட சோமச் சாறு கலந்த நீருடைய புனிதமான நதியான பயோஷ்ணிக்குச் சென்றான். அங்கே அந்த உயர் ஆன்ம யுதிஷ்டிரன், பல இரு பிறப்பாளர் வர்க்கத் தலைவர்களால் {அந்தணர்களால்} புகழ்ந்து வரவேற்கப்பட்டான். அவர்கள் {அந்தணர்கள்} அவனை அங்கே கண்டு மகிழ்ந்தனர்.
கயன் செய்த வேள்விகள் – வனபர்வம் பகுதி 121-கயன் செய்த வேள்விகள்; பயோஷ்ணி ஆறின் பெருமை; நர்மதை ஆறு; நீலரத்தின மலை; சியவனர் கோபம்..
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நிருகன் {மன்னன் கயன்} இங்கே வேள்வி செய்த போது, அவன் சோமச் சாறைக் கொடுத்து எதிரிகளின் நகரங்களை அழிக்கும் இந்திரனைத் திருப்தி செய்தான். இதனால் இந்திரன் புத்துணர்ச்சி பெற்று மிகவும் திருப்தி கொண்டான். இங்கே தேவர்களோடு சேர்ந்த இந்திரனும், அனைத்து உயிரினங்களின் பாதுகாவலர்களும், புரோகிதர்களுக்குப் பெரும் அளவில் பரிசுகள் கொடுத்து அந்த வேள்வியைக் கொண்டாடினர். இங்கே உலகத்தின் தலைவனான மன்னன் அமிர்தராயசன் {கயன்} ஏழு குதிரை வேள்விகளைச் செய்தபோது, சோமச் சாறால் இடியைத் {வஜரத்தை} தாங்கும் இந்திரனைத் திருப்தி செய்தான். மற்ற வேள்விகளில் மரத்தாலும் மண்ணாலும் செய்யப்பட்ட இன்றியமையாத பொருட்கள் அனைத்தும், அவனால் செய்யப்பட்ட ஏழு வேள்விகளிலும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன. ஏழு குச்சி கட்டுகள், வேள்வி வளையங்கள், இடங்கள், அகப்பைகள், பாத்திரங்கள், கரண்டிகள் ஆகியன அவனால் தயாரிக்கப்பட்டன. ஒவ்வொரு வேள்வி குச்சியின் மேலும், ஏழு வளையங்கள் பொருத்தப்பட்டிருந்தன.
ஓ! யுதிஷ்டிரா, இந்திரனுடன் கூடிய தேவர்கள் சேர்ந்து அவனது புனித சடங்குக்குத் தேவையான வேள்விக் குச்சிகளைப் பளபளக்கும் தங்கத்தில் செய்தார்கள். பூமியின் பாதுகாவலனான கயன் நடத்திய அந்தச் சிறப்பு வாய்ந்த வேள்விகளிலெல்லாம், சோமச்சாற்றைக் குடித்து இந்திரன் திருப்தியடைந்தான். அந்த வேள்விகளை நடத்திய புரோகிதர்களும் அவர்களுக்குக் கிடைத்த பணிக்கொடையில் திருப்தி கொண்டார்கள். சொல்லொணா செல்வத்தைப் பெற்ற அந்தப் புரோகிதர்கள் அவற்றை எண்ணிப் பார்த்தனர். பூமியின் மண் துகள்கள் போல, வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் போல, மழையில் விழும் துளிகள் போல, அவை எவராலும் எண்ண முடியாதவையாக இருந்தன. கயன் கொடுத்த செல்வங்கள் எண்ணிக்கையில் அடக்க முடியாதவையாக இருந்தன. ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஏழு வேள்விகளில் அவற்றை நடத்திய புரோகிதர்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றில் மேற்சொன்னவையைக் கூட எண்ணிவிடலாம். ஆனால், அவனால் அளிப்பட்ட பணிக்கொடைகளின் நிறைவை யாராலும் எண்ணிக்கையில் அடக்க முடியாது.
தேவதச்சனால் {விஸ்வகர்மாவால்} கல்வித் தேவதையின் {சரஸ்வதியின்} உருவம் தங்கத்தில் பொறிக்கப்பட்டு, அனைத்துத் திக்குகளில் இருந்தும் வந்திருந்த புரோகித சாதி உறுப்பினர்களுக்குக் {அந்தணர்களுக்கு} பரிசாகக் கொடுக்கப்பட்டன. ஓ! மனிதர்களின் பாதுகாவலனே {யுதிஷ்டிரா}, அந்த உயரான்ம கயன் தனது வேள்விச் சடங்குகளைச் செய்த போது, பல இடங்களில் வேள்வித்தூண்கள் நாட்டப்பட்டதால், பூமியின் பரப்பில் சிறிது இடமே எஞ்சியிருந்தது. ஓ பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, அந்தப் புனிதச் செயலால் அவன் {கயன்} இந்திரலோகத்தை அடைந்தான். இந்தப் பயோஷ்ணி ஆறில் நீராடும் எவரும் கயன் அடைந்த உலகங்களை அடைகிறார்கள். ஆகையால், ஓ! மன்னர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, ஓ! தடுமாற்றம் இல்லாத இளவரசே! நீயும் உனது தம்பிகளும் இந்த நதியில் நீராட வேண்டும். ஓ! பூமியின் பாதுகாவலா {யுதிஷ்டிரா}, அப்போதுதான் நீ இந்த அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுவாய்” என்றார் {லோமசர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே {ஜனமேஜயனே}, யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன், அந்தப் பயோஷ்ணி ஆறில் நீராடினான். பிறகு ஓ! பாவமற்ற இளவரசே {ஜனமேஜயா}, அந்த வலிமைமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} தனது தம்பிகளுடன் சேர்ந்து நீலரத்தின மலைக்கும், பெரும் ஆறான நர்மதைக்கும் பயணப்பட்டான். அருளப்பட்ட தவசியான லோமசர் அவனிடம் மகிழ்ச்சிகரமான பல புண்ணிய இடங்களையும், தேவர்களின் புனிதக் கோவில்களையும் சொன்னார். பிறகு அவன் தனது தம்பிகளுடன் அந்த இடங்களுக்குத் தனது விருப்பப்படியும், வசதிக்குத்தக்கவாறும் பயணப்பட்டான் பல இடங்களில் அந்தணர்கள் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} இருந்து ஆயிரக்கணக்கான பரிசுகளைப் பெற்றனர்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}! நீலரத்தின மலையை அடைந்து, நர்மதையாற்றில் மூழ்குபவன் தேவர்களும் மன்னர்களும் வசிக்கும் உலகங்களை அடைவான். ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே! {யுதிஷ்டிர}னே இந்தக் காலம் திரேதா யுகத்துக்கும், கலியுகத்துக்கு இடைப்பட்ட காலமாகும். ஓ! குந்தியின் மகேன {யுதிஷ்டிரா}, இதுவே ஒரு மனிதன் தனது பாவங்களைத் தொலைக்கும் காலமாகும். ஓ மரியாதைக்குரிய ஐயா {யுதிஷ்டிரா}, இந்த இடத்தில்தான், சர்யாதி வேள்விச்சடங்குகளைச் செய்த போது, இரு தேவ மருத்துவர்களுடன் {அசுவின் தேவர்களுடன்} காணும் உருவத்தில் இந்திரன் வந்து, சோமச்சாற்றைப் பருகினான். கடும் தவமிருந்த பிருகுவின் மகன் {சியவனர்}, இந்திரன் மீது கோபம் கொண்டு, அவனை அசைவற நிற்கச் செய்து, இந்த இடத்தில் தான் சுகன்யா என்ற இளவரசியை மனைவியாக அடைந்தார்.”
யுதிஷ்டிரன் {லோமசரிடம்}, “பகாசுரனைத் தண்டித்தவனான ஆறு குணங்களைக் கொண்டவன் {இந்திரன்}, சியவனரால் எப்படி அசைவற்று நிற்க வைக்கப்பட்டான்? எக்காரணத்திற்காக அந்தப் பெரும் பலம் வாய்ந்த தவசியானவர் {சியவனர்}, இந்திரன் மீது கோபம் கொண்டார்? ஓ அந்தணரே {லோமசரே}, அவர் தான் தேவ மருத்துவர்களைச் சோமச்சாற்றைக் குடிக்கும் தகுதிக்கு உயர்த்தியவரா? இவை அனைத்தையும், சரியாக அது நடந்த படியே மதிப்பிற்குரிய நீர் மறுபடி எனக்குச் சொல்ல வேண்டும்” என்று கேட்டான் {யுதிஷ்டிரன் லோமசரிடம்}.
சுகன்யாவை மணந்த சியவனர் – வனபர்வம் பகுதி 122-சியவனர் கடுந்தவம் இருப்பது; சியவனரைச்சுற்றி எறும்புப்புற்று வளர்வது; சர்யாதி தனது பணியாட்களுடனும் நாலாயிரம் பெண்களுடனும், தனது ஒரே மகளுடனும் அங்கே வருவது; சுகன்யாவைக் கண்டு சியவனர் மயங்குவது; எறும்புப்புற்றில் தெரிந்த சியவனரின் கண்களைச் சுகன்யா முள்ளால் துளைப்பது; சியவனர் கோபம் கொள்வது; சர்யாதி சியவனரைச் சாந்தப்படுத்துவது; சுகன்யா சியவனர் திருமணம்…
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பெரும் முனிவரான பிருகுவுக்குச் சியவனன் என்ற பெயரில் ஒரு மகன் பிறந்திருந்தார். மிகப்பிரகாசமானவராக அவர் {சியவனர்} அந்தத் தடாகத்தின் அருகே தவமிருக்கத் தொடங்கினார். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}! ஓ மனிதர்களின் பாதுகாவலா! பெரும் சக்தி கொண்ட அவர் {சியவனர்} வீர நிலை என்ற ஆசனத்தில் {வீராசனம்} நீண்ட காலத்திற்கு அசைவற்று அதே இடத்தில் அமர்ந்திருந்தார். கொடிகள் சூழ்ந்த அவரை {சியவனரைச்} சுற்றி எறும்புப்புற்று {கரையான்புற்று} உண்டாயிற்று. அதன் பிறகு நீண்ட காலம் கழித்து, திரளான எறும்புக் கூட்டம் அவரை மொய்த்தது. முழுதும் எறும்புகளால் மூடப்பட்ட அந்த மதிநுட்பமுடைய தவசி {சியவனர்} கிட்டத்தற்ற மண்குவியல் போலவே காணப்பட்டார். அப்படி எறும்புப்புற்றால் மூடப்பட்ட அவர் தொடர்ந்து தவம்பயின்று வந்தார்.
அதன் பிறகு, நீண்ட காலம் கடந்து, சர்யாதி என்ற பெயர் படைத்த பூமியின் ஆட்சியாளன், அந்த இனிமையான அற்புதமான தடாகத்துக்கு கேளிக்கைக்காக வந்தான். ஓ பாரதக் குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, அவனோடு சேர்ந்து அவனால் {மன்னன் சர்யாதியால்} மணம்புரியப்பட்ட நாலாயிரம் பெண்களும் அங்கே வந்தனர். மேலும், அழகான புருவம் கொண்ட அவனது {மன்னன் சர்யாதியின்} மகளான சுகன்யா என்ற பெயர் கொண்டவளும் அவனோடு வந்திருந்தாள். தேவர்கள் அணியும் ஆபரணங்கள் பூண்டிருந்த அவள் {சுகன்யா}, தனது பணிப்பெண்கள் சூழ நடந்து, பிருகுவின் மகன் {சியவனர்} அமர்ந்திருந்த அந்த எறும்புப் புற்றை அணுகினாள். பணிப்பெண்கள் சூழ இருந்த அவள் {சுகன்யா}, அழகான இயற்கைக் காட்சிகளையும், உயர்ந்த மரங்கள் நிரம்பிய வனத்தையும் கண்டு உல்லாசமாக இருக்க ஆரம்பித்தாள். இளமையின் துவக்கத்தில் இருந்த அவள் {சுகன்யா} அழகாகவும், எளிதில் காதல் கொள்ளத்தக்க வகையிலும், விளையாட்டின் மீது நாட்டம் கொண்டவளாகவும் இருந்தாள். பூத்துக்குலுங்கும் காட்டு மரங்களின் கிளைக்குச்சிகளை அவள் உடைத்துக் கொண்டிருந்தாள்.
புத்திக்கூர்மை கொண்ட பிருகுவின் மகன் {சியவனர்}, பணிப்பெண்களற்று, ஒற்றையாடையுடனும், ஆபரணங்கள் பூணப்பட்டும் இருந்த அவளை {சுகன்யாவை} நடமாடும் மின்னலெனக் கண்டார். அவளை {சுகன்யாவை} அக்கானகத்தில் தனிமையில் கண்ட மிகப் பிரகாசமுள்ள அந்தத் தவசி {சியவனர்}, ஆசையால் ஈர்க்கப்பட்டார். தவச் சக்தி கொண்ட அந்த மறுபிறப்பாள முனிவர் {சியவனர்}, மெல்லிய குரலில் அந்த மங்களகரமானவளை {சுகன்யாவை} அழைத்தார். ஆனால் அவளுக்கு அவரது குரல் கேட்கவில்லை. பிறகு, அந்த எறும்புப் புற்றில் தெரியும் அந்தப் பிருகு மகனின் {சியவனரின்} கண்களைக் கண்ட சுகன்யா ஆர்வமிகுதியால் தனது உணர்வை இழந்து, “இது என்ன?” என்று கேட்டவாறு, ஒரு முள்ளை எடுத்து அந்தக் {முனிவர் சியவனரின்} கண்களைத் துளைத்தாள். அவளால் கண்கள் துளைக்கப்பட்ட அவர் மிகுந்த வலியை உணர்ந்து கோபமடைந்தார். (கோபத்தால்) அவர் சர்யாதியின் படையில் இருந்தவர்களின் இயற்கை அழைப்புகளைத் {மலம் மற்றும் சிறுநீர் கழிதலைத்} தடை செய்தார்.
இப்படி இயற்கையின் அழைப்புகள் தடைசெய்யப்பட்ட அந்த மனிதர்கள் மிகுந்த துன்பத்தை அடைந்தனர். இந்நிலைகளைக் கண்ட மன்னன் {சர்யாதி} “முதியவரும், எப்போதும் தவத்திலிருப்பவரும், கோபம் கொண்டவருமான பிருகுவின் சிறப்புமிகுந்த மகனுக்கு {சியவனருக்கு} யார் தீங்கிழைத்தது.? அறிந்தவர்கள் விரைவாக எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டான். அதற்குப் படைவீரர்கள், “அம்முனிவருக்கு யாரும் தீங்கிழைத்தார்களா என்பது எங்களுக்குத் தெரியாது. நீர் சொல்வது போல இருந்தால், இவ்விஷயத்தை நீர்தான் விசாரித்து அறியவேண்டும்” என்றனர். அதன் பேரில் அந்தப் பூமியின் ஆட்சியாளன், (சந்தர்ப்பத்திற்கேற்ப) அச்சுறுத்தல், சமரசம் என்ற இரண்டையும் பயன்படுத்தித் தனது நண்பர்களிடம் (அச்சூழ்நிலை பற்றி) விசாரித்தான். ஆனால் அவர்களும் எதையும் அறியவில்லை.
இயற்கை அழைப்புகள் தடைசெய்யப்பட்டதால் துயரப்பட்ட படையினரைக் கண்டும், தனது தந்தையின் துயரத்தைக் கண்டும், சுகன்யா தனது தந்தையிடம், “நான் கானகத்தில் உலவிக் கொண்டிருந்தபோது, ஒரு எறும்புப்புற்றில் ஒளிரும் பொருள் ஒன்றைக் கண்டேன். அதை மின்மினிப் பூச்சி என்றெண்ணி அதை நெருங்கித் (முள்ளால்) துளைத்தேன்” என்றாள். இதைக் கேட்ட சர்யாதி உடனே அந்த எறும்புப்புற்றுக்கு வந்து வயதிலும், தவத்திலும் முதிர்ந்த பிருகுவின் மகனைக் {சியவனரைக்} கண்டான். பிறகு அந்தப் பூமியின் அதிபதி கூப்பிய கரங்களோடு (அத்தவசியைக்) கண்டு, “சிறுபிள்ளைத்தனமாக அறியாமையில் எனது மகள் {சுகன்யா} செய்த இந்தச் செயலை மன்னிப்பதே உமக்குத் தகும்” என்றான். பிருகுவின் மகனான சியவனர், “என்னை அவமதித்த இவள், கர்வம் நிறைந்து எனது கண்களைத் துளைத்தாள். ஓ மன்னா {சர்யாதி}, அழகுடன் கூடிய இவள் {சுகன்யா}, அறியாமையிலும், சபலத்தாலும் தனது உணர்வுகளை இழந்தாள். உனது மகள் எனது மணமகளாக வேண்டும். அந்த ஒரு நிபந்தனையால் மட்டுமே உன்னை மன்னிப்பேன் என்று நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன்” என்றார் {சியவனர்}.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அந்தத் தவசியின் {சியவனரின்} வார்த்தைகளைக் கேட்ட சர்யாதி, சற்றும் நேரமும் பொறுக்காமல், தனது மகளை அந்த உயர் ஆன்ம சியவனருக்கு அளித்தான். அந்த மங்கையின் கரத்தைப் பெற்ற அந்தப் புனிதமானவர் {முனிவர் சியவனர்} மன்னனிடம் {சர்யாதியிடம்} திருப்தி கொண்டார். அந்த முனிவரின் அருளை வென்ற அந்த மன்னன் {சர்யாதி} தனது படைகளுடன் நகரத்துக்குத் திரும்பினான். களங்கமற்ற சுகன்யாவும் அந்தத் தவசியை {சியவனரை} கணவராக அடைந்து, அவரது தவப்பயிற்சியின்போதும், விதிகளைக் கடைப்பிடிக்கும்போதும் அவரை நன்றாகப் பராமரித்தாள். அந்த அழகிய முகம் கொண்டவள் {சுகன்யா}, கபடமற்றவளாக இருந்து விருந்தினர்களுக்கும், புனித நெருப்புக்கும் பணிவிடை செய்து சியவனரை வழிபட்டு வந்தாள்.”
இளமையைப் பெற்ற சியவனர் – வனபர்வம் பகுதி 123-குளித்துவிட்டு வந்த சுகன்யையைக் கண்ட அசுவினி தேவர்கள், அவள் அழகைக் கண்டு பாராட்டுவது; ஒரே உருவத்தில் இருக்கும் அவளது கணவர் மற்றும் தங்கள் இருவர் ஆகிய மூவரில் ஒருவரை அவள் கணவனாகத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால், அவளது கணவருக்கு {சியவனருக்கு} இளமையைத் திரும்ப அளிப்பதாக அசுவினிகள் கூறுவது; சுகன்யை இச்செய்தியை சியவனருக்குச் சொல்வது; சியவனர் அதற்கு இணங்குவது; அசுவினிகள் சியவனரை இளமையடையச் செய்வது; மூவரில் தனது கணவரையே சுகன்யைத் தேர்ந்தெடுப்பது; சோமச்சாற்றைப் பருகும் நிலையை அசுவினிகளுக்குக் கொடுப்பதாகச் சியவனர் உறுதியளிப்பது…
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு முறை தேவர்களான அசுவினி இரட்டையர்கள் சுகன்யையை, அவள் குளித்து முடித்து வெற்றுடலோடு இருக்கும்போது காண நேர்ந்தது. தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} மகளைப் போல அற்புதமான உறுப்புகள் கொண்டவளைக் {சுகன்யையைக்} கண்ட நாசத்யர்களான {மூக்கில் பிறந்தவர்களான} அசுவினிகள் அவளை {சுகன்யையை} நெருங்கி அவளிடம், “ஓ! அழகிய வடிவம் கொண்ட தொடைகளைக் கொண்டவளே, நீ யாருடைய மகள்? நீ இந்தக் கானகத்தில் என்ன செய்கிறாய்? ஓ! மங்களகரமானவளே, அற்புதமான அருள் கொண்டவளே, இவற்றை அறிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம். ஆகையால் நீ எங்களுக்கு அதைச் சொல்”, என்றனர்.
இதன் பேரில் அவள் {சுகன்யா} அந்தத் தேவர்களில் முதன்மையானவர்களிடம் {அசுவினிகளிடம்} நாணத்துடன், “நான் சர்யாதியின் மகளென்றும், சியவனரின் மனைவியென்றும் அறிந்து கொள்ளுங்கள்” என்றாள். இதைக்கேட்ட அசுவினிகள் புன்னகையுடன், “ஓ! நற்பேறு பெற்றவளே {சுகன்யா}, மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவருக்கு {சியவனருக்கு} உனது தந்தை {சர்யாதி} உன்னை ஏன் அளித்தான்? ஓ! மருட்சியுடைய மங்கையே, நிச்சயமாக நீ மின்னலைப் போல இந்தக் கானகத்தில் பிரகாசிக்கிறாய். ஓ! பெண்ணே, தேவர்களில் கூட இப்படி எங்கள் கண்களைக் கூசச் செய்தவளை நாங்கள் கண்டதில்லை. ஓ! மங்கையே, ஆபரணங்களற்று, மகிழ்ச்சிகரமான ஆடைகளற்று இருக்கும்போதே நீ இந்தக் கானகத்தில் மிகுந்த அழகுள்ளவளாக இருக்கிறாய். ஓ! குற்றமற்ற உறுப்புகள் கொண்டவளே, இப்படி அழுக்கும் சேறும் பூசப்பட்டவளாக இருந்தால் பிரகாசிக்க மாட்டாய். ஆனால், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பபட்டு, கண்கவர் ஆடைகளை உடுத்தினால் மிகவும் பிரகாசிப்பாய். ஓ! அற்புதமான மங்கையே, ஒளிவீசும் புன்னகை கொண்டவளே, மூப்பினால் தளர்ந்தவரும், இன்பம் உணர முடியாத நிலையை அடைந்தவரும், உன்னைப் பராமரிக்க முடியாதவருமான கணவரை {சியவனரை}, இந்தத் துயரத்திலும் நீ ஏன் சேவிக்கிறாய்? ஓ! தெய்வீக அழகு கொண்ட மங்கையே, நீ சியவனரைக் கைவிட்டு, எங்களில் ஒருவரை கணவராக ஏற்பாயாக. உனது இளமையைக் கனியற்றதாக்குவது உனக்குத் தகாது” என்றனர் {அசுவினிகள்}.
இப்படிச் சொல்லப்பட்ட சுகன்யா, அந்தத் தேவர்களிடம், “நான் என்னை எனது கணவரான சியவனருக்கு அர்ப்பணித்திருக்கிறேன். அதில் ([ஒரு மனிதரிடம் விசுவாசத்துடன் இருக்கும்] எனது நேர்மையில்) உங்கள் சந்தேகங்களை ஊக்குவிக்காதீர்கள்” என்றாள். அதற்கு அவர்கள் {அசுவினிகள்} மீண்டும் அவளிடம் {சுகன்யாவிடம்}, “நாங்கள் இருவரும் தேவ மருத்துவர்கள். நாங்கள் உனது தலைவனை இளமையும் அருளும் கொண்டவராக மாற்றுகிறோம். அதன்பிறகு, நீங்கள் எங்களில் ஒருவரை, அதாவது நாங்கள் இருவர் மற்றும் உனது கணவர் ஆகிய மூவரில் ஒருவரை உனது துணையாகத் தேர்ந்தெடு. ஓ! மங்களகரமானவளே, இதற்கு உறுதியளித்து நீ உனது கணவரை இங்கே அழைத்து வா” என்றனர்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அவர்கள் {அசுவினிகள்} வார்த்தைகளை ஏற்றுக் கொண்ட அவள், பிருகுவின் மகனிடம் {சியவனரிடம்} சென்று அந்த இரண்டு தேவர்களும் {அசுவினிகளும்} சொன்னதைச் சொன்னாள். அவளது செய்தியைக் கேட்ட சியவனர், தனது மனைவியிடம் {சுகன்யாவிடம்}, “அப்படியே செய்” என்றார். தனது தலைவனின் அனுமதியைப் பெற்ற அவள் {சுகன்யா}, (அசுவினி தேவர்களிடம் சென்று) அவர்களிடம், “அப்படியே செய்யுங்கள்” என்றாள். “அப்படியே செய்யுங்கள்” என்ற அவளது வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் {அசுவினிகள்} மன்னனின் {சர்யாதியின்} மகளிடம் {சுகன்யாவிடம்}, “உனது கணவர் நீருக்குள் இறங்கட்டும்” என்றனர்.
அழகை அடைய விரும்பிய சியவனரும் விரைவாக நீருக்குள் இறங்கினார். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த அசுவினி இரட்டையர்களும், அந்த நீரின் பரப்புக்குள் மூழ்கினார். அடுத்த நொடியில் அவர்கள் அனைவரும் அழகான உருவத்துடனும், இளமையுடனும், காதில் மெருகூட்டப்பட்ட குண்டலங்களுடனும் தோன்றினர். பார்வைக்கு ஒரே உருவத்தைக கொண்ட அவர்கள் அவளிடம் {சுகன்யாவிடம்}, “ஓ! நற்பேறு கொண்டவளே, எங்களில் ஒருவரை உனது துணையாகத் தேர்ந்தெடு. ஓ! அழகானவளே, உனது எண்ணத்துக்குத் திருப்தி உண்டாக்கும் ஒருவரை நீ உனது தலைவனாகத் தேர்ந்தெடு” என்றனர். அவர்கள் அனைவரும் ஒரே தோற்றம் கொண்டிருப்பினும், அவள் ஆழ்ந்து ஆராய்ந்து, கடைசியாகத் தனது கணவரின் அடையாளத்தை உறுதி செய்து, சரியாக அவரையே {சியவனரையே} தேர்வு செய்தாள்.
பேராசைப் பட்ட அழகையும், தனது மனைவியையும் அடைந்த மிகுந்த சக்தி கொண்ட சியவனர், மிகவும் திருப்தி கொண்டு அந்த நாசத்ய {நாசியில் பிறந்த அசுவினி} தேவர்களிடம், “உங்கள் கைகளால் ஒரு முதிர்ந்தவனான நான், இளமையும் அழகும் பெற்று எனது இந்த மனைவியையும் அடைந்ததால், மிகவும் திருப்தி கொண்ட நான், நிச்சயமாக உங்களைத் தேவர்கள் தலைவன் {இந்திரன்} முன்னிலையில் சோமச் சாற்றைப் பருகுபவர்களாக ஆக்குவேன். இதை நான் உங்களுக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றார் {சியவனர்}. இதைக் கேட்ட அந்த இரட்டையர்கள் {அசுவினிகள்} மிகுந்த மகிழ்ச்சியுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர். பிறகு சியவனரும் சுகன்யாவும் தேவர்களைப் போலத் தங்கள் நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்தினர்.
சியவனரால் அசைவிழந்த இந்திரன் – வனபர்வம் பகுதி 124-சியவனர், தனது மாமனான சர்யாதியிடம் சொல்லி ஒரு வேள்விக்கு ஏற்பாடு செய்து, சோமச்சாற்றின் பங்கை அசுவினிகளுக்குப் படைக்க முயற்சிப்பது; இந்திரன் அதற்குத் தடை சொல்வது; அதை மீறி கொடுக்க முயன்ற சியவனர் மேல் வஜ்ரத்தை இந்திரன் ஓங்க, சியவனர் இந்திரனை அசைவற்றவனாக்கியது; சியவனரால் உண்டாக்கப்பட்ட பிசாசு இந்திரனிடம் செல்வது…
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சியவனர் இளமையைப் பெற்றார் என்ற செய்தி சர்யாதியை அடைந்தது. மிகவும் திருப்தி கொண்ட அவன் {சர்யாதி}, தனது படைகளுடன், பிருகு மைந்தனின் {சியவனரின்} ஆசிரமத்திற்கு வந்தான். அங்கே சியவனரும், சுகன்யாவும் தேவர்களிடம் எழுந்த இரு பிள்ளைகள் போல இருப்பதைக் கண்டான். அவனும் {சர்யாதியும்} அவனது மனைவியும் அடைந்த மகிழ்ச்சி பெரியதாக இருந்தது. அவன் மொத்த பூமியையும் வென்றுவிட்டதாகக் கருதினான். அந்தத் தவசியால் {சியவனரால்} அந்தப் பூமியின் ஆட்சியாளனும் {சர்யாதியும்} அவனது மனைவியும் மரியாதையாக வரவேற்கப்பட்டனர். பிறகு அந்த மன்னன் {சர்யாதி}, அந்தத் தவசியின் {சியவனரின்} அருகில் அமர்ந்து, மகிழ்ச்சிகரமாக விவாதித்தான்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு, அந்தப் பிருகுவின் மைந்தர் {சியவனர்} அந்த மன்னனிடம் {சர்யாதியிடம்} இன்சொல்பேசி, “ஓ! மன்னா, நான் உனக்கு ஒரு வேள்வியைச் செய்வேன். ஆகையால் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்வாயாக” என்றார். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அதன்பேரில், பூமியின் பாதுகாவலனான சர்யாதி, மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்று, சியவனரின் கோரிக்கையைப் பாராட்டினான். பிறகு வேள்வி செய்யக்கூடிய ஒரு நன்னாளில் சிறப்பாகச் சொல்லும் அளவுக்கு ஒரு வேள்விக் கோவிலை ஏற்படுத்தி அதில் விரும்பத்தக்க அனைத்து பொருட்களையும் வைத்தான். அங்கே பிருகுவின் மகனான சியவனர், மன்னனின் {சர்யாதியின்} புரோகிதராகப் பணியை ஏற்றார். அந்த இடத்தில் நடந்த அற்புதமான நிகழ்ச்சிகளை இனி சொல்கிறேன் கேள்.
சியவனர், தேவ மருத்துவர்களான அசுவினிகளுக்குப் படைப்பதற்காகச் சோமச்சாற்றில் ஒரு பகுதியை எடுத்து வைத்தார். அந்தத் தவசி அதைத் தெய்வீக அசுவினிகளுக்குப் படைப்பதற்கு எத்தனித்த போது, இந்திரன், “அசுவினிகளான இவர்கள் இருவருக்கும் சோமச்சாற்றின் பகுதியை அடைவதற்கு உரிமையில்லை என்பது எனது கருத்து. இவர்கள் சொர்க்கத்தில் தேவர்களுக்கு மருத்துவர்களாக இருக்கிறார்கள். இவர்களது தொழிலே, இவர்களுக்கு (சோமச்சாற்றைப் பெறுவதில்) உரிமையில்லை என்பதைப் பறைசாற்றுகிறது” என்று தனது தடையைச் சொன்னான்.
அதற்குச் சியவனர் {இந்திரனிடம்}, “வலிமைமிக்க ஆன்மாக் கொண்ட இவர்கள் இருவரும் பெரும் தொழிலைச் செய்பவர்களே! இவர்கள் அசாதாரண அழகும் அருளும் கொண்டவர்கள். ஓ! இந்திரா, இவர்கள் என்னை நித்திய இளமை கொண்டவனாக, தேவர்களுக்கு இணையானவனாக மாற்றியிருக்கிறார்கள். வடித்த சோமச்சாற்றைப் பெறும் தகுதியை நீயும் பிற தேவர்களும் ஏன் பெற வேண்டும்? இவர்கள் {அசுவினிகள்} ஏன் பெறக்கூடாது? ஓ! தேவர்களின் தலைவா, ஓ எதிரிகளின் நகரங்களை அழிப்பவனே {இந்திரா}, அசுவினிகளும் தேவர்கள் என்ற மதிப்புடையவர்கள் என்பதை நீ அறிவாயாக” என்றார். இதற்கு இந்திரன் {சியவனரிடம்}, “இவர்கள் இருவரும் குணப்படுத்தும் {சிகிச்சை} கலை பயில்கிறார்கள். ஆகையால் அவர்கள் சேவகர்களைத் தவிர வேறல்ல. நினைத்த வண்ணம் தங்கள் உருவங்களை அடைந்து, இவர்கள் மனிதர்களின் உலகில் உலவிவருகிறார்கள். இவர்கள் எப்படி உரிமையுடன் சோமச்சாற்றைக் கோரலாம்?” என்றான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “இப்படிப்பட்ட வார்த்தைகள் தேவர்கள் தலைவனால் மறுபடியும் மறுபடியும் பேசப்பட்ட போது, பிருகுவின் மகன் {சியவனர்} இந்திரனைக் கருதிப் பாராமல் {லட்சியம் செய்யாமல்}, காணிக்கை {சோமச்சாற்றை} படைக்கும் நோக்குடன் எடுத்தார். அந்தச் சோமச்சாற்றின் அற்புதமான பகுதியை அந்த இரு அசுவினிகளுக்கும் அவர் படைக்கப்போகும் நேரத்தில், அசுரன் பலனை அழித்தவன் {இந்திரன்}, இச்செயலைக் கண்டு அவரிடம் {சியவனரிடம்}, “அந்தத் தேவர்களுக்குப் படைக்கும் நோக்கோடு நீர் சோமத்தை எடுத்தீரென்றால், நிலைத்திருக்கும் அனைத்து ஆயுதங்களிலும் மேன்மையான, கொடூர வடிவிலான எனது வஜ்ராயுதத்தை நான் உம்மீது ஏவுவேன்” என்றான் {இந்திரன்}.
இந்திரனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பிருகுவின் மகன் {சியவனர்} புன்னகையுடன் அவனைப் பார்த்தபடி, சோமச்சாற்றின் பகுதியை அசுவினிகளுக்குப் படைப்பதற்காக எடுத்தார். அப்போது சச்சியின் தலைவன் {இந்திரன்} கொடூர வடிவம் கொண்ட வஜ்ரத்தை அவர் மீது வீச எத்தனித்தான். அவன் அதை ஏவ முற்பட்ட போது, அவனது கரங்கள் பிருகுவின் மைந்தனால் {சியவனரால்} அசைவற்றனவாக மாற்றப்பட்டன. சியவனர் புனித பாடல்களை {மந்திரங்களை} உரைத்து நெருப்பில் படையலிட்டார். அவரது நோக்கம் நிறைவேறிய பிறகு, அவர் அந்தத் தேவனை {இந்திரனை} அழிக்க முற்பட்டார், பிறகு அந்தத் தவசியின் தவச்சக்தியின் விளைவாக தீய ஆவி கொண்ட பெரிய பிசாசானவன் உண்டானான். பெரும் பலமும், பெருத்த உருவமும் கொண்ட அவனது பெயர் மதன் ஆகும்.
அவனது {பிசாசான மதனின்} உடல் தேவர்களாலும் அசுரர்களாலும் அளவிடமுடியாதபடி இருந்தது. அவனது வாய்ப் பயங்கரமாகப் பெருத்த அளவிலும் கூரிய பற்களுடனும் இருந்தது. அவனது ஒரு தாடை பூமியில் இருந்தபோது, மறு தாடை சொர்க்கம் வரை நீண்டது. அவனுக்கு நான்கு கோரைப் பற்கள் {தெற்றுப் பற்கள்} இருந்தன. அவை ஒவ்வொன்றும் நூறு யோஜனை தூரமும், மற்றப் பற்கள் பத்து யோஜனை தூரமும் இருந்தன. அவை ஒவ்வொன்றின் முனையும் கூரிய ஈட்டி போலவும் ஒரு மாளிகையின் கோபுரம் போலவும் இருந்தன. அவனது இரு கரங்களும் இரு மலைகள் போலப் பத்தாயிரம் யோஜனை தூரம் இருந்தன. அவனது இரு கண்களும் சூரியனையும் சந்திரனையும் ஒத்திருந்தன. அவனது முகம் பிரளயத்தின் பெருந்தீ போல இருந்தது. அவன் தனது வாயை, மின்னலைப் போல இருந்த ஓய்வறியா நாவால் நக்கிக் கொண்டிருந்தான். அவனது வாய்த் திறந்திருந்தது. அவனது பார்வை பயங்கரமாக இருந்தது. அவன் இந்த மொத்த உலகத்தையுமே விழுங்கிவிடுவான் போல இருந்தது. அப்படிப்பட்ட அந்தப் பிசாசானவன் {மதன்} நூறு வேள்விகள் செய்த தேவனிடம் {இந்திரனிடம்} விரைந்தான். அவனது நோக்கம் அந்தத் தேவனை {இந்திரனை} விழுங்குவதாக இருந்தது. அந்த அசுரன் கர்ஜித்த பயங்கர ஒலி உலகத்தையே நிரப்பியது.
சோமத்தைப் பெற்ற அசுவினிகள் – வனபர்வம் பகுதி 125-சியவனர், இந்திரனை விடுவித்தது; லோமசர் தீர்த்தங்களின் பெருமைகளை விவரிப்பது.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “நூறு வேள்விகள் செய்தவன் (இந்திரன்), தன்னை விழுங்க எண்ணி தன்னைநோக்கி வரும் மரணத் தேவன் போல வாயைத் திறந்து கொண்டு வந்த பயங்கர முகம் கொண்ட பிசாசான மதனைக் கண்டான். தனது கரங்கள் அசைவற்று இருந்ததால், அச்சத்தால் அவன் திரும்பத் திரும்பத் தனது உதட்டோரங்களை நாவால் நனைத்தான்.
பிறகு, அச்சத்தால் பீடிக்கப்பட்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, சியவனரிடம், “ஓ! பிருகுவின் மகனே! ஓ! அந்தணரே, நான் உண்மையைச் சொல்கிறேன். இன்று முதல் அந்த அசுவினிகள் இருவரும் சோமச்சாற்றைப் பருகும் தகுதி பெறட்டும். என்னிடம் கருணை கொள்ளும்! எனது பணி பயனற்றுப் போகக்கூடாது. இது விதியாகட்டும். ஓ! புரோகித வகையைச் சேர்ந்த தவசியே! உமது பணியும் ஒன்றுமில்லாமல் போகக்கூடாது. இந்த இரு அசுவினிகளும், உம்மால் தகுதிபெற்றதால், சோமச்சாற்றைப் பருகும் உரிமையைப் பெறுவார்கள். மேலும், ஓ பிருகுவின் மகனே, உமது சக்தியின் புகழ் பரவவே நான் இதைச் செய்தேன். உமது சக்திகளைக் காட்ட ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதே எனது நோக்கம். சுகன்யாவின் தந்தையின் {மன்னன் சர்யாதியின்} புகழும் எங்கும் பரவ வேண்டும் என்பது எனது மற்றொரு நோக்கம். ஆகையால், என்னிடம் கருணை கொள்ளும். நீர் விரும்பியவாறே அனைத்தும் நடக்கட்டும்” என்றான் {இந்திரன்}.
இந்திரனால் இப்படிச் சொல்லப்பட்டதும், சக்திவாய்ந்த ஆன்மாக் கொண்ட சியவனர் உடனே அமைதியடைந்தார். பிறகு அவர் எதிரி நகரங்களை அழிப்பவனை {இந்திரனை} விடுவித்தார். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தச் சக்திவாய்ந்த தவசி {சியவனர்} பிசாசான மதனை (உண்மையில் போதையை) {மதத்தை} மதுவுக்கும், பெண்களுக்கும், சூதுக்கும், விளையாட்டுக் களத்துக்கும் எனப் பலவாறாகப் பகுத்தளித்தார். இப்படிப் பிசாசான மதனைக் கைவிட்டு சோமச்சாற்றின் பங்கைக் கொடுத்து இந்திரனைத் திருப்திப்படுத்தி, மன்னன் சர்யாதி மற்றத் தேவர்களையும் அசுவினி இரட்டையர்களையும் வணங்கவும் அம்மன்னனின் புகழ் அனைத்து உலகங்களை அடையவும் உதவி செய்தார். பிறகு பேச்சறிந்தவர்களில் சிறந்த அவர் {சியவனர்}, தமது அன்பான மனைவியான சுகன்யாவுடன் அக்கானகத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பறவையொலிகளுடன் பளபளக்கும் இதுவே அத்தடாகம். இங்கே நீ உனது தம்பிகளுடன் சேர்ந்து உனது மூதாதையர்களுக்கும் தேவர்களுக்கும் நீர்க்கடன் செலுத்த வேண்டும். ஓ! பூமியின் ஆட்சியாளா {யுதிஷ்டிரா}, ஓ! பாரதகுலத்தின் வழித்தோன்றலே, அதை அடைந்த பிறகு, சிகதாக்ஷத்தைக் கண்டு, ஸைந்தவ வனத்தை அடைந்து, எண்ணற்ற சிறு செயற்கையாறுகளைக் காண வேண்டும். ஓ! பெரும் மன்னா, ஓ! பாரதகுலத்தின் வழித்தோன்றலே, அனைத்து புனிதமான தடாகங்களின் நீரையும் தொட்டு தெய்வமான ஸ்தாணுவின் (சிவன்) பாடல்களைப் {மந்திரங்களைப்} பாடி அனைத்துக் காரியங்களிலும் வெற்றியைச் சந்திக்க வேண்டும். ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே {யுதிஷ்டிரா}, ஏனென்றால், இது துவாபர மற்றும் திரேதா யுகத்தின் சந்திக்காலம் ஆகும். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இது ஒரு மனிதனின் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் வல்லமை பெற்ற காலமாகும்.
இந்த இடம் ஒரு மனிதனின் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் வல்லமை பெற்றிருப்பதால், இங்கே நீ நீராட வேண்டும். பண்படுத்தப்பட்ட மனங்கள் கொண்ட மனிதர்கள் வாழும் ஆர்ச்சிக மலையும் இங்கே தான் இருக்கிறது. அனைத்துக் காலங்களின் கனிகளும் இங்கே எல்லாக் காலங்களிலும் வளர்கிறது. ஓடைகள் இங்கே எப்போதும் ஓடிக்கொண்டிருக்கின்றன. தேவர்களுக்குத் தகுந்த அற்புதமான இடம் இது. தேவர்களால் நிறுவப்பட்ட பல உருவங்களிலான புனித கற்குவைகளும் இருக்கின்றன. ஓ! யுதிஷ்டிரா, இதுவே சந்திரனுக்குச் சொந்தமான நீராடும் இடம். இதைச் சுற்றி, இந்தக் கானகவாசிகளான தவசிகளும், வாலகில்யர்களும், காற்றை மட்டுமே உண்ணும் பாவகர்களும் எப்போதும் இருக்கின்றனர். இவையே மூன்று சிகரங்களும், மூன்று நீரோடைகளும் ஆகும். நீ அவற்றை ஒவ்வொன்றாக வலம் வரலாம். பிறகு உனது வசதிக்கேற்ப நீராட வேண்டும்.
ஓ! மன்னா, மனிதர்களை ஆட்சி செய்த சந்தனுவும், சுனகனும், நரநாராயணர்களும் நித்தியமான பகுதிகளை இங்கிருந்துதான் அடைந்தனர். இங்கே இந்த வலிமைமிக்கத் தவசிகளுடன் தேவர்களும் மூதாதையர்களும் இருக்கின்றனர். இந்த ஆர்ச்சிக மலையில் அவர்கள் அனைவரும் தவமிருக்கின்றனர். ஓ! யுதிஷ்டிரா, அவர்களுக்கு நீ படையல் செய்ய வேண்டும். ஓ! மனிதர்களைப் பாதுகாப்பவனே, இங்கே தான் அவர்களும், தவசிகளும், பாலில் சமைக்கப்பட்ட சோறை {அரிசியை} உண்கிறார்கள். வற்றாத ஊற்றுக் கொண்ட யமுனை இங்கேதான் இருக்கிறது. ஓ! பாண்டுவின் மகனே, கிருஷ்ணர் {வியாசர்} இங்கேதான் தனது தவவாழ்வை மேற்கொண்டார். ஓ! எதிரிகளின் சடலங்களை இழுத்துச் செல்பவனே, இரட்டைத் தம்பிகளும் {நகுலனும் சகாதேவனும்}, பீமசேனனும், கிருஷ்ணையும் {திரௌபதியும்}, மேலும் நாங்கள் அனைவரும் உம்முடன் இந்த இடத்திற்குச் செல்வோம்.
ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இது இந்திரனுக்குச் சொந்தமான புனித ஊற்றாகும். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, படைத்திடும் தேவனும் {தாதாவும்}, தவிர்த்திடும் தேவனும் {விதாதாவும்}, வருணனும் மேல்நோக்கி எழுந்து, பொறுமையைக் கடைப்பிடித்து, உயர்ந்த நம்பிக்கையைக் கொண்டு இங்கே வசிக்கலாயினர். இந்தச் சிறந்த மற்றும் அனுகூலமான மலை, அன்பும், நேர்மையான மனநிலையும் கொண்ட மனிதர்களுக்குத் தகுந்ததாக இருக்கிறது. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சக்திமிக்கத் தவசிகளும் தங்கள் அறச்சடங்குகளைச் செய்ய அடிக்கடி வந்து செல்லும் இதுவே கடும் பாவங்களை அழிக்கவல்ல புனிதமான யமுனையாகும். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, பெரும் வில் படைத்த மாந்தாதாவும், அற்புதமான பரிசுகளைக் கொடுக்கவல்லவனும் சகாதேவனின் மகனுமான சோமகனும் இங்கேதான் தேவர்களுக்காக வேள்விச் சடங்குகளைச் செய்தனர்
யுவனாஸ்வனின் மகன் மாந்தாதா – வனபர்வம் பகுதி 126-யுவனாஸ்வன் நாட்டைத் துறந்து கானகத்தில் தவமிருப்பது; தாக மிகுதியால் அர்ச்சனை செய்யப்பட்ட நீரைப் பருகுவது; அந்நீரின் தன்மையால் யுவனாஸ்வன் தனது உடலிலேயே மாந்தாதாவைப் பெறுவது; மாந்தாதாவின் பெயர்க்காரணம்; மாந்தாதா செய்த சாதனைகள்.
யுதிஷ்டிரன் {லோமசரிடம்} சொன்னான், “ஓ பெரும் அந்தணரே, யுவனாஸ்வனின் மகனும், ஏகாதிபதிகளில் சிறந்தவனும், மூவுலகங்களாலும் கொண்டாடப்படுபவனுமான மன்னர்களில் புலி போன்ற மாந்தாதா எப்படிப் பிறந்தான்? அளவற்ற காந்தி கொண்ட அவன் {மாந்தாதா}, பெரும் ஆத்மா கொண்ட {மஹாத்மாவான} விஷ்ணுவுக்கு மூவுலகங்களும் கீழ்ப்படிந்திருப்பது போல, தனது சக்திக்கும் கீழ்ப்படிந்திருக்கும்படி எப்படி வசப்படுத்தினான். அந்த அறிவுநுட்பமுடைய ஏகாதிபதியின் வாழ்வையும், அவன் {மாந்தாதா} செய்த சாதனைகளையும் நான் அறிய விரும்புகிறேன். சம்பவங்களை விவரிக்கும் கலையில் நீர் சிறந்திருப்பதால், இந்திரனின் காந்தியைப் பழிக்கும் வகையில் இருந்த அவனுக்கு மாந்தாதா என்ற பெயர் எப்படித் தோன்றியது என்பதையும், ஒப்பற்ற சக்தியுடன் அவன் {மாந்தாதா} எப்படிப் பிறந்தான் என்பதையும் உம்மிடம் கேட்க விரும்புகிறேன்” என்றான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் ஆன்மா கொண்ட {மகாத்மாவான} அந்த ஏகாதிபதி மாந்தாதா என்ற பெயரால் உலகம் முழுவதும் ஏன் கொண்டாடப்பட்டான் என்பதைக் கவனத்துடன் கேள். பூமியின் ஆட்சியாளனான யுவனாஸ்வன் இக்ஷவாகு குலத்தில் உதித்தான். அந்தப் பூமியின் பாதுகாவலன் மிகச்சிறந்த பரிசுகளுக்காக அறியப்பட்ட எண்ணற்ற வேள்விகளைச் செய்தான். அறம் சார்ந்த மனிதர்களில் மிகவும் அற்புதமான அவன் ஆயிரம் குதிரை வேள்விகளைச் செய்தான். மேலும் அவன் உயர்ந்த வகையிலான பல வேள்விகளை அபரிமிதமான பரிசுகளுடன் செய்தான். ஆனால் அந்தத் தவசியான மன்னனுக்கு {யுவனாஸ்வனுக்கு} ஒரு மகன் இல்லை. பெரும் ஆன்மாவும், கடும் நோன்புகளும் கொண்ட அவன், அமைச்சர்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு, தொடர்ந்து கானகத்தில் வசிக்க ஆரம்பித்தான். பண்பட்ட ஆன்மாகக் கொண்ட அவன் {மன்னன் யுவனாஸ்}, புனிதமான ரித்துகளில் சொல்லப்பட்ட உபதேசத்தின்படி அர்ப்பணிப்புடன் நடந்து வந்தான்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு காலத்தில் அந்த மனிதர்களின் பாதுகாவலன் {யுவனாஸ்வன்} உண்ணா நோன்பு இருந்தான். அவன் பசியால் மிகவும் துன்பப்பட்டான். அவனது அந்தரங்க ஆன்மா கூடத் தாகத்தால் வறண்டதாகத் தோன்றியது. (அந்த நிலையில்) அவன் {யுவனாஸ்} பிருகுவின் ஆசிரமத்துக்குள் நுழைந்தான். ஓ! மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, அந்த இரவில்தான், பிருகு குலத்தின் மகிழ்ச்சியான அந்தப் பெரும் தவசி, சௌதியும்னிக்கு {சௌதியும்னியின் மகன் யுவனாஸ்வனுக்கு} ஒரு மகன் பிறக்கும் நோக்கில் ஒரு அறச்சடங்கை நடத்தியிருந்தார். ஓ மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, {அச்சடங்கில்} புனிதப் பாடல்களை {மந்திரங்களை} ஒப்புவித்து {பாராயணம் செய்து} புனிதப்படுத்தப்பட்ட நீரைக் கொண்டு நிரப்பப்பட்ட ஒரு பெரிய குடுவை அந்த இடத்தில் இருந்தது. சௌதியும்னியின் {யுவனாஸ்வனின்} மனைவி அந்நீரைப் பருகினால், தேவனைப் போன்ற ஒரு மகன் பிறக்கக்கூடிய தன்மை கொண்டதாக அது இருந்தது. அந்த வலிமைமிக்கத் தவசிகள் அக்குடுவையை ஒரு பீடத்தில் மேல் வைத்துவிட்டு, இரவு விழித்திருந்த களைப்பால் உறங்கச் சென்றுவிட்டனர்.
பெரும் தாகத்தால் அவதியுற்று மேல்வாயும் வறண்டிருந்த சௌதியும்னி {யுவனாஸ்வன்} அவர்களைக் கடந்து சென்றான். அம்மன்னனுக்குக் குடிப்பதற்கு நீர் மிகத் தேவையாக இருந்தது. அவன் அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்து நீரை யாசித்தான். அவன் மிகவும் களைத்திருந்ததால், வறண்ட தொண்டையில் இருந்து தளர்ந்த குரலுடன் கேட்டான். அக்குரல் பலவீனமான பறவையின் வலுவற்ற ஒலி போல இருந்தது. அவனது குரல் யாருடைய காதுகளையும் சென்றடையவில்லை. பிறகு அம்மன்னன் நீர் நிறைந்த குடுவையைக் கண்டான். அவன் விரைவாக அதனிடம் ஓடி, நீரைப் பருகி குடுவையைக் கீழே வைத்தான். அம்மன்னன் {யுவனாஸ்வன்} பெருத்த தாகத்தில் இருந்ததால், குளிர்ந்த அந்நீர் உடனடியாக அந்த அறிவுநுட்பமுடையை ஏகாதிபதியின் {யுவனாஸ்வனின்} தாகத்தைத் தணித்தது.
பிறகு அந்தத் தவசிகளும், துறவை செல்வமாகக் கொண்டவரும் உறகத்திலிருந்து எழுந்தனர். அனைவரும் குடுவையில் இருந்த நீர் இல்லை என்பதைக் கண்டனர். அதன்பேரில் அவர்கள் அனைவரும் கூடி ஒருவருக்கொருவர், யார் இதைச் செய்திருக்கக்கூடும் என்று வினவினர். பிறகு யுவனாஸ்வன் தனது செயலை உண்மையாக ஒப்புக்கொண்டான். பிறகு பிருகுவின் மரியாதைக்குரிய மகன் {சியவனரா? ரிசீகரா தெரியவில்லை}, “இது சரியில்லை. புதிரான மறைகுணம் {Occult Virtue} உட்செலுத்தப்பட்ட நீர் அது. கடும் தவத்தை மேற்கொண்டு, எனது அறச்செயல்களின் தன்மைகளையெல்லாம், உனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டி அந்நீரில் உட்செலுத்தியிருந்தேன். ஓ! உடல்வலிமையும் பராக்கிரமும் கொண்ட தவசியான மன்னா {யுவனாஸ்வா}, இதனால் உனக்குப் பலத்திலும் பராக்கிரமத்திலும் மிகுந்தவனும், இந்திரனையே மரணதேவன் வசிப்பிடத்திற்கு அனுப்பும் வீரம் கொண்டவனுமான ஒரு மகன் தவச்சக்தியின் வல்லமையால் பிறந்திருப்பான்.
ஓ! மன்னா {யுவனாஸ்வா}, இவ்வகையிலேயே இந்நீர் என்னால் தயாரிக்கப்பட்டது. ஓ! மன்னா, இந்நீரைப் பருகியதால், நீ முற்றும் தகாத ஒன்றைச் செய்திருக்கிறாய். ஆனால் நடந்த விபத்திலிருந்து மீள்வது இப்போது இயலாது. நீ செய்த செயல் நிச்சயமாக விதியின் செயலாகத் தான் இருக்க வேண்டும். ஓ! பெரும் மன்னா {யுவனாஸ்வா}, எனது தவ உழைப்பின் அறத்தாலும், ஒப்புவிக்கப்பட்ட {பாராயணம் செய்யப்பட்ட} புனிதமான பாடல்களாலும் {மந்திரங்களாலும்} நிறைந்த அந்நீரைத் தாகத்தால் நீ பருகியதால், மேற்கண்ட குணங்கள் படைத்த ஒரு மகனை உனது சொந்த உடலில் இருந்தே பெற வேண்டும். உன்னைப் போன்ற வீரம் கொண்டவனும், இந்திரனுக்குச் சமமானவனுமான ஒரு மகனை நீ பெறுவாய். இப்படி ஒரு முடிவேற்பட்டதால், அற்புதமான விளைவு கொண்ட ஒரு வேள்வியை நாங்கள் உனக்காகச் செய்கிறோம். அதன்காரணமாகப் பிரசவ வலியோ அல்லது எந்தப் பிரச்சனையோ ஏற்படாது” என்றார்.
பிறகு நூறு வருடம் கடந்ததும், சூரியனைப் போன்ற ஒளிகொண்ட ஒரு மகன் {மாந்தாதா}, பெரும் ஆன்மாக் கொண்ட அம்மன்னனின் {யுவனாஸ்வனின்} இடதுபுறத்தைத் துளைத்துக் கொண்டு வெளியே வந்தான். அந்த மகன் பெரும் பலத்தைக் கொண்டிருந்தான். யுவனாஸ்வன் இறக்காதது ஆச்சரியமாக இருந்தது. பிறகு பெரும் பலம்வாய்ந்த இந்திரன் அவனை {யுவனாஸ்வனின் அந்த மகனைக்} காண வந்தான். அப்போது தேவர்கள் அந்தப் பெரும் இந்திரனிடம், “இந்தப் பிள்ளை எதைக் குடிப்பான்?” என்று விசாரித்தனர். அப்போது இந்திரன் தனது சுட்டுவிரலை {ஆட்காட்டி விரல், forefinger} அவன் {அக்குழந்தையின்} வாய்க்குள் கொடுத்தான். பிறகு அந்த இடியைத் தாங்குபவன் {இந்திரன்}, “அவன் என்னைப் பருகுவான்” என்றான். ஆகவே தேவலோகவாசிகள் அனைவரும் கூடி அந்தப் பிள்ளைக்கு “என்னைப் பருகுவான்” என்ற பொருள் கொண்ட “மாந்தாதா” என்ற பெயரைச் சூட்டினர்.
பிறகு, ஓ! மன்னா {யுதிஷ்டிரா} இந்திரன் நீட்டிய சுட்டுவிரலைச் சுவைத்த அப்பிள்ளை, பெரும் பலத்தை அடைந்து, பதிமூன்று முழம் உயரத்திற்கு வளர்ந்தான். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, புனிதமான ஆயுத அறிவியலுடன் கூடிய அனைத்து புனிதமான கல்வியையும் ஆதிக்கம் நிறைந்த அப்பிள்ளை அடைந்தான். இவை அனைத்தையும் {அனைத்து ஞானத்தையும்} அவன் {மாந்தாதா} தனது எண்ணச்சக்தியின் துணை இல்லாமலேயே அடைந்தான். ஓ! பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, ஆஜகவம் என்ற வில்லும், மருப்புகளாலான {விலங்கின் கொம்பு} எண்ணிலடங்கா கணைகளும், பிளக்க முடியாத கவசமும் உடனே, அந்த நாளே அவனை வந்தடைந்தன. இந்திரனால் அவன் அரியணையில் அமர்த்தப்பட்டு, மூன்று உலகத்தையும் நேர்மையான வழியில் மூன்று காலடிகளால் அடைந்த விஷ்ணுவைப் போல வெற்றிக் கொண்டான். அந்தப் பெரும் பலம் வாய்ந்த மன்னனின் {மாந்தாதாவின்} தேர்ச்சக்கரம் எந்த வழியில் சென்றாலும் அது (உலகம் முழுவதும்) தடுக்கமுடியாததாக இருந்தது. ரத்தினங்கள் அனைத்தும் தானாகவே அந்தத் தவத்தன்மை வாய்ந்த மன்னனிடம் வந்தன.
ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, பூமி மேல் இருக்கும் பாதை அந்த மன்னனுக்குச் சொந்தமானதே. இது செல்வம் நிறைந்ததாக இருக்கிறது. அவன் பல வகைப்பட்ட எண்ணிலடங்கா வேள்விகளைச் செய்து, அபரிமிதமான கொடைகளைப் புரோகிதர்களுக்குக் கொடுத்தான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் சக்தியும், அளவற்ற காந்தியும் கொண்ட அவன், புனிதக் குவியல்களை {Sacred piles} அமைத்து, பக்தி நிறைந்த அற்புதமான சாதனைகளைச் செய்து, இந்திரனின் அருகில் அமரும் நிலையை அடைந்தான். ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அசைக்க முடியாத பக்தியால் கட்டளைகளையிட்டு, அதன் அறத்தின் தன்மையால் மட்டுமே கடல், ரத்தினங்களின் தோற்றுவாய் மற்றும் அனைத்து நகரங்களுடன் கூடிய பூமியை வென்றான். அவனால் உண்டாக்கப்பட்ட வேள்விக்களங்கள் பூமியெங்கும் எல்லாப்புறத்திலும் இருக்கின்றன. {அவனது வேள்வி மேடைகளால்} மறைக்கப்படாத இடம் எதுவும் இல்லை.
ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பெரும் பலம் வாய்ந்த ஏகாதிபதி {மாந்தாதா}, அந்தணர்களுக்குப் பத்தாயிரம் பத்மங்கள் {பத்துலட்சம் கோடி [1000000,00,00,000} எண்ணிக்கையிலான} பசுக்களைக் கொடுத்தான் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து பனிரெண்டு வருடங்களுக்கு {மழையில்லாமல்} பஞ்சமேற்பட்டபோது, அந்தப் பெரும்பலம்வாய்ந்த மன்னன் {மாந்தாதா} இடியைத் {வஜ்ரத்தைத்} தாங்குபவனான இந்திரனைக் கவனிக்காமல் {லட்சியம் செய்யாமல்}, அவன் {இந்திரன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே பயிர் செழிக்க மழை பொழிய ஏற்பாடு செய்தான். பெரும் கர்ஜனை செய்து கொண்டிருந்த, சந்திர வம்சத்தில் தோன்றிய மகிமையுள்ள காந்தார மன்னன், அவனது {மாந்தாதாவின்} அம்புகளால் அடித்துக் கொல்லப்பட்டான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பண்படுத்தப்பட்ட ஆன்மா கொண்ட அவனால் நால்வகை மக்களும் காக்கப்பட்டனர். பெரும் சக்தி கொண்ட அவனது தவம் மற்றும் நேர்மையான வாழ்வின் அறத்தால் உலகம் எந்தத் தீங்கும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது, இந்த இடத்தில் தான் சூரியனைப் போன்ற அவன் {மாந்தாதா}, தேவர்களுக்கு வேள்வி செய்தான். இதைப் பார்! இதோ இருக்கிறது! குருக்களின் களத்திற்கு மத்தியில் இருக்கும் இந்தப் பாதையே அனைத்திலும் புனிதம் வாய்ந்தது. ஓ பூமியின் குருவே {யுதிஷ்டிரா}, உன்னால் கோரப்பட்ட படி நான் மாந்தாதாவின் பெரும் வாழ்வையும், அவன் பிறந்த முறையையும், இயல்புக்குமிக்க வகையிலான அவனது பிறப்பையும் உரைத்தேன்” என்றார் {லோமசர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, சக்திமிக்கத் தவசியான லோமசரால் இப்படிச் சொல்லப்பட்ட குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, சோமகன் குறித்த புதிய கேள்விகளைக் கேட்டான்”
சோமகனும்! ஜந்துவும்! – வனபர்வம் பகுதி 127-சோமகன் மகனில்லாதிருப்பது; தனது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுப்பது; சோமகன் தனது புரோகிதரிடம் நூறு மகன்கள் பிறக்க வழி கேட்பது; மன்னன் வேள்வியில் தனது ஒரே மகனை பலி கொடுத்தால் நூறு பிள்ளைகள் பிறப்பார்கள் என்று குடும்பப் புரோகிதர் சொல்வது…
யுதிஷ்டிரன் {லோமசரிடம்} கேட்டான், “ஓ உரைப்பவர்களில் சிறந்தவரே {லோமசரே}! மன்னன் சோமகன் கொண்டிருந்த சக்தி மற்றும் பலத்தின் எல்லை எது? அவனது செயல்களைக் குறித்தும், அவனது சக்தி குறித்தும் உள்ளபடியே அறிய விரும்புகிறேன்”
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ யுதிஷ்டிரா! சோமகன் என்ற பெயரில் ஒரு அறம்சார்ந்த மன்னன் இருந்தான். ஓ! மன்னா, அவனுக்கு, கணவனுக்குச் சரியான பொருத்தமான நூறு {100} மனைவியர் இருந்தனர். அவன் {சோமகன்} பெரும் அக்கறை எடுத்துக் கொண்டும், அவர்களில் ஒரு மகனைப் பெற முடியவில்லை. நீண்ட காலம் கடந்தும் அவன் மகனற்றவனாகவே தொடர்ந்தான். ஒரு சமயம், அவன் முதிர்ந்த வயதடைந்த பிறகும் ஒரு மகனைப் பெற அனைத்து வகையிலும் முயன்று கொண்டிருந்தான். அப்போது அந்த நூறு மனைவியரில் ஒருத்தியிடம், ஜந்து என்ற பெயர் கொண்ட மகன் பிறந்தான். அனைத்து அன்னையரும் அவனைச் சுற்றி அமர்ந்து கொள்வதும், அவனை {ஜந்துவை} மகிழச்செய்யும் பொருட்களை அனைவரும் கொடுப்பதும் வழக்கம்.
ஒரு நாள் அந்தப் பிள்ளையில் இடையில் ஒரு எறும்பு கடிக்க நேர்ந்தது. அந்தப் பிள்ளையும் வலியால் சத்தமாகக் கதறினான். உடனே அத்தாய்மார்கள், பிள்ளை எறும்பால் கடிக்கப்பட்டதைக் கண்டு மிகவும் துன்புற்றார்கள். மேலும் அவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு மிகவும் அழுதார்கள். இதனால் அங்கே ஆரவாரவொலி எழுந்தது. திடீரென அவ்வலியின் கதறல், குடும்பப் புரோகிதர் அருகிருக்க அமைச்சர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த பூமியின் ஆட்சியாளனை {சோமகனை} (அவனின் காதுகளை) அடைந்தது. பிறகு அம்மன்னன் {சோமகன்} அது என்னவென்ற தகவலைக் கேட்டனுப்பினான். அரச துதிபாடி {பொதுவாக வாயிற்காப்போன்}, அது அவனது மகனைக் குறித்த காரியம் என்று விளக்கினான். சோமகன் தனது அமைச்சர்களுடன் எழுந்து, பெண்கள் இருந்த அந்தப்புரத்திற்கு விரைந்தான். ஓ! எதிரிகளை அடக்குபவனே {யுதிஷ்டிரா}, அங்கே வந்ததும், அவன் {சோமகன்} தனது மகனுக்கு ஆறுதல் கூறினான். இப்படிச் செய்த பிறகு, பெண்களின் அந்தப்புரத்தைவிட்டு வெளியே வந்த மன்னன், தனது குடும்பப் புரோகிதர் மற்றும் அமைச்சர்களுடன் அமர்ந்தான்.
சோமகன் {குடும்பப் புரோகிதரிடம்}, “ஒரே மகனைக் கொண்டிருப்பது இகழத்தக்கது! இதற்கு நான் மகனற்றவனாகவே இருந்திருக்கலாம். அனைத்து உயிரினங்களும் நோய்வாய்ப்படும் சாத்தியம் இருப்பதைக் கருதினால் ஒரே பிள்ளை கொண்டிருப்பது தொல்லையே. ஓ! அந்தணரே, ஓ! எனது தலைவா! நான் பல பிள்ளைகள் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த நூறு மனைவியரையும் நான் மணந்தேன். அதுவும் அவர்களைச் சோதித்தறிந்து, எனக்கு அவர்கள் தகுதியானவர்களாக இருப்பார்கள் என்றறிந்த பிறகே மணந்தேன். ஆனால் அவர்களுக்குப் பிள்ளைகளில்லை. அனைத்து வகையிலும் முயன்று, பெரும் முயற்சிக்குப் பின்னர் அவர்கள் ஜந்து என்ற ஒரு மகனைப் பெற்றார்கள். இதைவிடப் பெரிதாகத் துக்கம் தரக்கூடியது எது? ஓ! இரு பிறப்பாளர்கள் சாதியில் {அந்தணர்களில்} மிக அற்புதமானவரே! நான் வயதால் வளர்ந்து மூப்படைந்துவிட்டேன். எனது மனைவியரும் அப்படியே. இருப்பினும் இந்த ஒரே மகன்தான் அவர்களின் நாசியில் மூச்சாக இருக்கிறான். அவன் எனக்கும் அப்படியே இருக்கிறான். ஒருவன் நூறு மகன்களைப் பெறக்கூடிய ஏதாவது சடங்கு இருக்கிறதா? (அப்படி ஒன்று இருந்தால்), அது சிறியதா அல்லது பெரியதா என்றும், செய்வதற்கு எளிதானதா அல்லது கடுமையானதா என்றும் சொல்லும்” என்று கேட்டான்.
குடும்பப் புரோகிதர் {மன்னன் சோமகனிடம்}, “ஒரு மனிதன் நூறு மகன்கள் பெறக்கூடிய ஒரு அறச்சடங்கு இருக்கிறது. ஓ! சோமகா, உன்னால் அதைச் செய்ய முடியும் என்றால், நான் அதை உனக்கு விவரிக்கிறேன்” என்றார்.
சோமகன், “அது நன்மையோ அல்லது தீமையோ, நூறு மகன்களைப் பிறக்க வைக்கக்கூடிய அச்சடங்கு ஏற்கனவே முடிந்ததாக எடுத்துக் கொள்ளும். அருளப்பட்ட நீர் அதை எனக்கு விளக்குவதே தகும்” என்றான்.
அதற்கு அந்தக் குடும்பப் புரோகிதர், “ஓ! மன்னா {சோமகா}, நான் ஒரு வேள்வியைச் செய்ய அனுமதி. அதில் நீ உனது மகனான ஜந்துவைத் தியாகம் செய்ய வேண்டும். பிறகு, குறைந்த நாட்களிலேயே உனக்கு அழகான நூறு மகன்கள் பிறப்பார்கள். ஜந்துவின் கொழுப்பு தேவர்களுக்குப் படையலாக நெருப்பிலடப்படும்போது, அந்தத் தாய்மார் அதில் வரும் புகையை முகர்ந்து பார்க்க வேண்டும். அது வீரமும் பலமும் மிக்கப் பல மகன்களை அவர்களுக்குக் கொடுக்கும். ஜந்து, மீண்டும் அதே தாயினிடத்தில் உனக்கே மகனாகப் பிறப்பான். அவனது முதுகில், தங்கத்தாலான ஒரு குறி {மச்சம்} தோன்றும்” என்றார்.
யமனைச் சந்தித்த சோமகன்! – வனபர்வம் பகுதி 128-வேள்வி நடந்தேறுவது; ஜந்து கொல்லப்படுவது; தாய்மார்களுக்கு நூறு மகன்கள் பிறப்பது; ஜந்துவே மீண்டும் மூத்த மகனாகப் பிறப்பது; சோமகனும் புரோகிதரும் இறப்பது; புரோகிதர் நரகத்தில் அவிக்கப்படுவதைச் சோமகன் காண்பது; புரோகிதருடன் சேர்ந்து சோமகனும் நரகவாசம் பெற்று பிறகு அருள் உலகை அடைந்தது
சோமகன் {குடும்ப புரோகிதரிடம்} சொன்னான், “ஓ அந்தணரே! எது நடத்தப்பட வேண்டுமோ அதை, அதன் அவசியத்திற்கேற்ப துல்லியமாகச் செய்யும். நான் பல மகன்களைப் பெற விரும்புவதால், நீ சொல்லும அனைத்தையும் நான் செய்வேன்”
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பிறகு வேள்வியை நடத்திய அந்தப் புரோகிதர், ஜந்துவை பலிக்காணிக்கையாக்கினார். இரக்கம் கொண்ட அந்தத் தாய்மார்கள் அந்த மகனை வலுக்கட்டாயமாகப் பறித்து எடுத்துச் சென்றான். பிறகு அவர்கள், “ஐயோ, நாங்கள் கெட்டோம்” என்றனர். அவர்கள் துன்பத்தின் சித்திரவதையால் பாதிக்கப்பட்டு, ஜந்துவின் வலக்கரத்தைப் பற்றிப் பரிதாபகரமான முறையில் அழுதனர். ஆனால் வேள்வியை நடத்திய புரோகிதரோ, அந்தப் பிள்ளையை வலக்கரத்தால் பற்றி இழுத்தார். பெண் அன்றில் பறவைகளைப் போல அவர்கள் துயரத்தால் கதறினர். ஆனால் அந்தப் புரோகிதர் அவர்களது மகனை இழுத்து, அவனைக் கொன்று, அவனது கொழுப்பை சரியான முறையில் எரித்தார். ஓ! குரு குலத்தின் இன்பமே {யுதிஷ்டிரா}, அக்கொழுப்புப் படையலாக்கப்பட்ட போது, துயரத்தில் இருந்த அத்தாய்மார், அதன் மணத்தை நுகர்ந்தபடியே, திடீரெனத் தரையில் (மயங்கி) விழுந்தனர்.
ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, பிறகு அந்த அழகிய மங்கையர் அனைவரும் கருவுற்றனர். ஓ! பாரதகுலத்தின் வழித்தோன்றலே! {யுதிஷ்டிரா}, பத்து மாதம் கடந்ததும் சோமகனுக்கு அந்த மங்கையர்கள் மூலம் நூறு மகன்கள் பிறந்தனர். ஓ பூமியின் ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, ஜந்து, முன்புபோலவே, தன் தாயிடத்திலேயே சோமகனின் மூத்த பிள்ளையாகப் பிறந்தான். அந்த மங்கையருக்கு அவன் {ஜந்து} அன்பிற்கினியவனாக இருந்தது போல அவர்களது சொந்த பிள்ளைகளும் இருக்கவில்லை. அவனது முதுகில் தங்கக்குறியும் {மச்சம்} இருந்தது. அவன் அந்த நூறு மகன்களைக் காட்டிலும் மேன்மைதங்கியவனாக இருந்தான்.
பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்தில் சோமகனின் குடும்பப் புரோகிதர் தனது உயிரை விட்டார். சோமகனும் அவ்வாறே தனது உயிரை விட்டான். இப்போது அவன் {சோமகன்}, தனது புரோகிதர் கொடுராமன நரகத்தில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். அவன் {சோமகன்} அவரிடம் {புரோகிதரிடம்}, “ஓ! அந்தணரே! நீர் ஏன் இந்த நரகத்தில் அடைபட்டுக் கிடக்கிறீர்!” என்று கேட்டான். நெருப்பில் வெந்து கொண்டிருந்த அந்தக் குடும்பப் புரோகிதர் அவனிடம் {சோமகனிடம்}, “உனது வேள்வியை நான் நடத்தியதன் விளைவு இது” என்றார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இதைக் கேட்ட தவசியான அம்மன்னன் {சோமகன்}, இறந்தவர்களின் ஆன்மாவைத் தண்டிக்கும் தேவனிடம் {யமனிடம்}, “நான் இதற்குள் நுழைவேன். எனது வேள்வியை நடத்திய புரோகிதரை விடுவி; இந்த மரியாதைக்குரிய மனிதர் என் காரணமாகவே இந்நரக நெருப்பில் வேக வைக்கப்படுகிறார்” என்றான்.
அதற்குத் தர்மராஜன் {யமன்} {மன்னன் சோமகனிடம்}, “ஒருவன் இன்னொருவன் செயல்களுக்காக மகிழவோ துன்பப்படவோ முடியாது. ஓ! பேசுபவர்களில் சிறந்தவனே {சோமகா}! நீ காணும் இவை யாவும் உனது செயல்களின் கனிகளாகும்”, என்றான்.
ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, பிறகு அந்த அழகிய மங்கையர் அனைவரும் கருவுற்றனர். ஓ! பாரதகுலத்தின் வழித்தோன்றலே! {யுதிஷ்டிரா}, பத்து மாதம் கடந்ததும் சோமகனுக்கு அந்த மங்கையர்கள் மூலம் நூறு மகன்கள் பிறந்தனர். ஓ பூமியின் ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, ஜந்து, முன்புபோலவே, தன் தாயிடத்திலேயே சோமகனின் மூத்த பிள்ளையாகப் பிறந்தான். அந்த மங்கையருக்கு அவன் {ஜந்து} அன்பிற்கினியவனாக இருந்தது போல அவர்களது சொந்த பிள்ளைகளும் இருக்கவில்லை. அவனது முதுகில் தங்கக்குறியும் {மச்சம்} இருந்தது. அவன் அந்த நூறு மகன்களைக் காட்டிலும் மேன்மைதங்கியவனாக இருந்தான்.
அதற்குத் தர்மராஜன் {யமன்} {மன்னன் சோமகனிடம்}, “ஒருவன் இன்னொருவன் செயல்களுக்காக மகிழவோ துன்பப்படவோ முடியாது. ஓ! பேசுபவர்களில் சிறந்தவனே {சோமகா}! நீ காணும் இவை யாவும் உனது செயல்களின் கனிகளாகும்”, என்றான்.
சோமகன் {யமனிடம்}, “இங்கே இருக்கும் இந்த அந்தணர் இல்லாமல் நான் அருளுலகு செல்ல விரும்பவில்லை. சொர்க்கமோ, நரகமோ நான் இம்மனிதரின் துணையுடனே இருந்து விடுகிறேன். ஓ தர்மராஜா {யமா}, எனது செயல் அவருக்கு ஒத்ததுதான். அச்செயல் நன்மையோ தீமையோ, அதன் கனி எங்கள் இருவருக்கும் சமமாகவே இருக்க வேண்டும்” என்றான்.
தர்மராஜன் {யமன்}, “ஓ! மன்னா {சோமகா}! இதுவே உனது விருப்பமென்றால், அச்செயலுக்கான கனியை அவன் பெறும் காலம் வரை சுவை. அதன் பிறகு நீ அருளுலகு செல்லலாம்” என்றான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்தத் தாமரை இதழ் போன்ற கண்களைக் கொண்ட மன்னன் {சோமகன்}, பரிந்துரைக்கப்பட்டபடியே அனைத்தையும் சரியாகச் செய்தான். அவரது பாவங்கள் தொலைந்த பிறகு, அவன் தனது புரோகிதருடன் விடுவிக்கப்பட்டான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, புரோகிதரிடம் அன்பு கொண்ட அவன் நல்வினையினால் கிடைத்த அருள் உலகையும், மற்றும் அனைத்தையும் புரோகிதரான அந்த அந்தணருடனேயே அடைந்தான். நமது கண்ணெதிரே இருக்கும் இந்த ஆசிரமம் அவனுடையதே {சோமகனுடையதே}. இங்கே புலனடக்கத்துடன் ஆறு இரவுகள் தங்கும் மனிதன் அருளப்பட்ட உலகங்களை அடைகிறான். ஓ! மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, ஓ! குரு குலத்தின் தலைவா! உற்சாகத்தை விடுத்து, தன்னடகத்துடன், நாம் ஆறு இரவுகளைக் கழிக்க வேண்டும். நீ அதற்குத் தயாராகு” என்றார் {லோமசர்}.
குதிரை வேள்வி செய்த பரதன்! – வனபர்வம் பகுதி 129-வேள்விகள், தீர்த்தங்கள், வேள்விகள் செய்த மன்னர்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்கள் என்று யுதிஷ்டிரனுக்கு லோசமர் சொன்னவை.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ மன்னா! பழங்காலத்தில் உயிரினங்களின் தலைவனே {பிரம்மனே} இங்கு இஷ்டீகிருதம் {Ishtikrita} என்ற ஆயிரம் {1000} வருட வேள்வியைச் செய்திருக்கிறான். நாபாகனுடைய மகனான அம்பரீஷனும் யமுனையாற்றுக்கு அருகில் வேள்வியைச் செய்திருக்கிறான். அப்படி வேள்வியைச் செய்து பத்துப் பத்மங்கள் {ஒரு பத்மம் = நூறு கோடி {100,00,00,000} (தங்கக்காசுகளை) வேள்வியைக் கவனித்த புரோகிதர்களுக்குக் கொடுத்து, தனது வேள்விகளாலும் தவத்தாலும் உயர்ந்த வெற்றியை அடைந்தான்.
ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நகுஷனின் மகனான அளவிடமுடியா சக்தி கொண்டவனும், புனித வாழ்வு வாழ்ந்தவனுமான யயாதி முழு உலகத்தையும் ஆட்சி செய்து வேள்விகள் செய்தது இந்தப் பகுதியில்தான். அவன் {யயாதி} இந்திரனுடன் போட்டிப் போட்டு வேள்விகளை இங்கே செய்தான். பல விதமான வடிவங்களிலுள்ள வேள்வி மேடைகள் பூமியை நிறைப்பதையும், யயாதியின் பக்தி நிறைந்த செயல்களின் தாக்கத்தின் மூலம் உலகம் எப்படி மூழ்கியிருக்கிறது என்பதையும் பார். இது ஓர் இலை கொண்ட ஒரு வன்னி மரம். இது அற்புதமான தடாகம்.
பரசுராமரின் தடாகங்களையும், நாராயணனின் ஆசிரமத்தையும் பார். ஓ பூமியின் பாதுகாவலா {யுதிஷ்டிரா}, அளவற்ற சக்தி படைத்த ரிசீகரின் மகன், இந்தப் பாதையின் வழியே சென்று, பூமியின் இந்தப் பகுதியில் மீது உலாவி, யோகச் சடங்குகளைப் பயிலும் ரௌப்பிய {Raupya} ஆற்றையும் இதோ பார். ஓ! குரு குலத்தின் மகிழ்ச்சியே {யுதிஷ்டிரா}, உரல்களைப் போன்ற காதணிகளோடு கூடிய ஒரு பெண் பிசாசு (ஒரு அந்தணப் பெண்ணிடம்) கூறியதும் பரம்பரையாக வந்ததுமான கதையைக் கேள். (அவள் {அந்தப் பெண் பிசாசு}), “யுகாந்தரத்தில் தயிரை உண்டு, அச்சுதஸ்தலத்தில் வாழ்ந்து, பூதலயத்தில் நீராடியதால், நீ உனது மகன்களுடன் வாழ்வாய். ஓ பாரதக் குலத்தின் மிக நேர்மையானவனே {யுதிஷ்டிரா}, இங்கே ஒரு இரவைக் கழித்த பிறகு, இரண்டாவது இரவில் நடக்கும் சம்பவங்கள் பகல் பொழுதில் நடந்த சம்பவங்களுக்கு முற்றிலும் வித்தியாசமானவையாக இருக்கும். இன்றிரவை நாம் இதே இடத்தில் கழிப்போம்.
ஓ! பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, இதுவே குருக்களின் போர்க்கள வாயிலாகும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதே இடத்தில்தான் நகுஷனின் மகனான ஏகாதிபதி யயாதி வேள்விச் சடங்குகளைச் செய்து, அபரிமிதமான ரத்தினங்களைக் கொடையாகக் கொடுத்தான். இந்திரனும் அந்தப் புனிதமான சடங்குகளின் மூலம் திருப்தியடைந்தான். இது பிலக்ஷாவதரணம் என்ற பெயரில், யமுனையாற்றின் கரையில் இருக்கும் அற்புதமான புனித நீராட்டுப் பகுதியாகும். பண்பட்ட மனம் கொண்ட மனிதர்கள் இதைச் சொர்க்கத்திற்கான வாயில் என்று சொல்கிறார்கள். ஓ! மதிப்பிற்குரிய ஐயா {யுதிஷ்டிரா}, சாரஸ்வத மன்னன் இங்கே வேள்விச்சடங்குகளைச் செய்த பிறகு, வேள்விக்கம்புகளை உரலாகப் பயன்படுத்திய உயர்ந்த வகையிலான தவசிகள் அந்தப் புனிதச் சடங்கின் இறுதியில் தங்கள் புனித நீராடலைச் செய்தனர்.
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இங்கே மன்னன் பரதன் வேள்விச் சடங்குகளைச் செய்தான். குதிரை வேள்வியைச் செய்ய, இங்கே தான் அவன் வேள்விப்பசுவான குதிரையைச் சுதந்திரமாக விட்டான். அந்த ஏகாதிபதி {பரதன்} முழு உலகத்தின் ஆட்சியையும் நேர்மையாக வெற்றிக் கொண்டான். ஒரு முறைக்குப் பலமுறை கருநிறம் கொண்ட குதிரையை விட்டான். ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, தவசிகளின் தலைவரான சம்வர்த்தரால் பாதுகாக்கப்பட்ட மருத்தன் இந்த இடத்தில் தான் அற்புதமான வேள்விகளைச் செய்து வெற்றியடைந்தான். ஓ! மன்னர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, இந்த இடத்தில் நீராடும் ஒருவன், அனைத்து உலகங்களையும் கண்டு, தீயச் செயல்களில் இருந்து சுத்தப்படுத்தப் படுவான். ஆகையால், நீ இந்த இடத்தில் நீராட வேண்டும்” என்றார் {லோமசர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாண்டு மகன்களில் மிகவும் போற்றுதலுக்குரியவன் {யுதிஷ்டிரன்} பிறகு, தனது தம்பிகளுடன் நீராடினான். சக்திவாய்ந்த தவசிகள் வாழ்த்துப் பாடினார்கள். பிறகு அவன் {யுதிஷ்டிரன்} லோமசரிடம், “உண்மையின் பலம் கொண்டவரே {லோமசரே}, இந்தப் பக்தி நிறைந்த செயலின் அறத்தால், நான் அனைத்து உலகங்களையும் காண்கிறேன். இந்த இடத்தில் இருந்து, நான் பாண்டுவின் மகன்களில் புகழத்தக்கவனும், வெள்ளைக் குதிரையில் சவாரி செய்பவனுமான அர்ஜுனனைக் காண்கிறேன்” என்றான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! தோள்வலிமை மிக்கவனே {யுதிஷ்டிரா}, அது உண்மையே. உயர்ந்த வகையிலான தவசிகளால் இவ்வாறு அனைத்து உலகங்களைக் காண முடியும். தன்னையே முழுப் புகலிடமாக நம்பி இருக்கும் மனிதர்களால் மொய்க்கப்படும் புனிதமான இந்தச் சரஸ்வதியைப் {சரஸ்வதி நதியைப்} பார். ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே {யுதிஷ்டிரா}, இங்கே நீராடிய பிறகு, நீ அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டவனாவாய். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இங்கே தான் சாரஸ்வத மன்னனுக்காக, தெய்வீகத் தவசிகளும், பூலோகத் தவசிகளும், அரசத்தவசிகளும் வேள்விச்சடங்குகளைச் செய்தனர். இதுவே உயிரினங்களின் தலைவனுடைய {பிரம்மனுடைய} வேள்விப்பீடமாகும். இது எல்லாப்புறங்களிலும் ஐந்து யோஜனை தூரம் கொண்டதாகும். வேள்வி செய்வதையே பழக்கமாகக் கொண்ட பெருமைமிக்கக் குருக்களின் களம் இதுவே” என்றார் {லோமசர்}.
மறைந்து தோன்றிய சரஸ்வதி நதி! – வனபர்வம் பகுதி 130-சரஸ்வதி நதி, சமசோபேசம், பிரபாசம், விபாசம், காஷ்மீரம், மானசசரோவரம், வாதிகண்டம், உஜ்ஜனகம், கௌசவம், பிருகுதுங்கம், விதஸ்தம், ஜலா, உபஜலா நதிகள், ஆகிவற்றின் பெருமைகளை லோமசர் யுதிஷ்டிரனுக்குச் சொல்வது; உசீநரன் கதையைச் சொல்லத் துவங்குவது…
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! பாரதக் குலத்தின் மகனே! மனிதர்கள் தங்கள் கடைசி மூச்சை இங்கே விடும்போது, அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}! ஆயிரமாயிரம் மனிதர்கள் இந்த இடத்திற்கு இறப்பதற்காக வருகின்றனர். தக்ஷன் இங்கே வேள்வியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவனால் {தக்ஷனால்}, “இந்த இடத்தில் இறக்கும் மனிதர்கள் சொர்க்கத்தில் ஒரு இடத்தை வெல்வார்கள் {பெறுவார்கள்}” என்ற ஒரு அருள்வாக்குச் சொல்லப்பட்டது. நீர் நிறைந்த, அழகான, புனிதமான நதியான சரஸ்வதி இங்கேதான் இருக்கிறது; ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இங்கேதான் சரஸ்வதி மறைந்த விநசனம் என்ற இடம் இருக்கிறது. இங்கேதான் நிஷாதர்களின் நாட்டு வாயில் இருக்கிறது. அவர்கள் மீதுள்ள வெறுப்பால்தான் சரஸ்வதி, நிஷாதர்கள் தன்னைக் காணாதவாறு பூமிக்குள் நுழைந்தாள்.
சரஸ்வதி மீண்டும் அவர்களுக்குக் {நிஷாதர்களுக்கு} காட்சி தந்த சமசோபேசம் என்ற புனிதமான இடமும் இங்குதான் இருக்கிறது. இங்கேதான் அவள் {சரஸ்வதி} கடலை நோக்கி ஓடும் புனிதமான நதிகளுடன் இணைகிறாள். ஓ! எதிரிகளை வீழ்த்துபவனே {யுதிஷ்டிரா}, இங்கேதான் பெருமுனிவரான அகஸ்தியரை லோபமுத்திரை தனது தலைவனாக ஏற்றுக் கொண்ட புனிதமான இடமான சிந்து இருக்கிறது. ஓ! சூரியனைப் போன்று பிரகாசிப்பவனே {யுதிஷ்டிரா}, இந்திரனுக்குப் பிடித்தமானதும், அனைத்துப் பாவங்களையும் விலக்கவல்லதுமான பிரபாசம் எனும் புனிதத் தீர்த்தம் இங்கே தான் இருக்கிறது. இதோ இங்குதான் விஷ்ணுபதம் என்ற பகுதி இருக்கிறது.
இங்குதான் காண்பதற்கினிய புண்ணிய நதியான விபாசம் இருக்கிறது. இந்த ஓடையில்தான் {விபாசத்தில்தான்} தனது மகன்களின் மரணத்தால் ஏற்பட்ட துயரத்தின் காரணமாகப் பெருமுனிவரான வசிஷ்டர் தனது உறுப்புகளைக் கட்டிக் கொண்டு விழுந்தார். அவர் அந்நீரில் இருந்து கட்டுகளற்றவராக எழுந்தார். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, புனிதமான தவசிகளால் அடிக்கடி தரிசிக்கப்படும் காஷ்மீரம் என்ற பகுதியை இதோ உனது தம்பிகளுடன் பார். ஓ! பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, இங்கேதான் அக்னிக்கும் பெருமுனிவரான காசியபருக்கும், நகுஷனுக்கும், வடக்கு திசையின் தவசிகளுக்கு விவாதம் நடந்தது. ஓ! பெரும் இளவரசே {யுதிஷ்டிரா}, இதோ இங்கேதான் மானசசரோவரத்தின் வாசல் இருக்கிறது. இந்த மலையின் மத்தியில்தான், ராமர் {பரசுராமர்} ஒரு இடைவெளியைத் திறந்தார். ஓ! கலங்காத பராக்கிரமம் கொண்ட இளவரசே, இங்கேதான் நன்கறியப்பட்ட பகுதியான வாதிகண்டம் இருக்கிறது. இது விதேகத்திற்கு வடக்கில் இருக்கிறது. விதேகத்தின் வாயில் இதற்கு {வாதிகண்டத்திற்கு} அருகிலேயே இருக்கிறது.
ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, இந்த இடம் தொடர்பாக மற்றுமொரு குறிப்பிடத்தக்க செய்தி இருக்கிறது. ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும், விரும்பும் உரு கொள்ளும் தெய்வமான சிவன், உமையுடனும் தன்னைத் தொடர்பவர்களுடனும் காணப்படுகிறான். இந்தத் தடாகத்தில்தான், தங்கள் குடும்பத்தின் நன்மையை விரும்பும் மக்கள், பிநாகபாணிக்கு {பிநாகம் என்ற வில்லைத் தாங்கிய சிவனுக்கு} சித்திரை மாதத்தில் வேள்விகள் நடத்துவர். அர்ப்பணிப்புமிக்க மனிதர்கள், தங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தி, இந்தத் தடாகத்தில் நீராடி, பாவங்களில் இருந்து விடுபட்டு, சந்தேகமர புனிதமான இடங்களை அடைகின்றனர். புனிதத்தவசியான வசிஷ்டரும் அவரது மனைவி அருந்ததியும், தவசியான யவக்கிரியும் மன அமைதி அடைந்த உஜ்ஜனகம் என்ற புண்ணியத் தீர்த்தம் இங்கேதான் இருக்கிறது. இங்கே இருக்கும் கௌசவம் என்ற தடாகத்தில் கௌசேசயம் {நூறு இதழ் கொண்ட தாமரை} என்ற பெயர்கொண்ட தாமரைகள் வளர்கின்றன. இங்கேதான் ருக்மிணியின் புனிதமான ஆசிரமம் இருக்கிறது. இங்கே தான் அவள் {ருக்மிணி} கோபம் என்ற தீய ஆர்வத்தை {குணத்தை} வென்று அமைதியை அடைந்தாள்.
ஓ! இளவரசே {யுதிஷ்டிரா}! பிருகுதுங்கத்தில் இருக்கும் தியானங்களின் மனிதனைப் பற்றி நீ ஏதாவது கேள்விப்பட்டிருப்பாய் என்று நினைக்கிறேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அங்கே ஒரு உயர்ந்த சிகரம் இருக்கிறது. ஓ மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, அங்கேதான் மனிதர்களின் பாவங்களைக் கரைக்கும் புனிதமான ஓடையான விதஸ்தம் இருக்கிறது. அந்த ஓடை மிகுந்த குளுமையுடன் தெளிந்த நீரை உடையது. அது பெரும் முனிவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஓ இளவரசே {யுதிஷ்டிரா}, யமுனையின் இருமருங்கிலும் பாயும் ஜலா மற்றும் உபஜலா என்ற புனிதமான நதிகளைப் பார். இங்கே வேள்வி செய்ததன் மூலம் மன்னன் உசீநரன் {உசீநரனின் மகன் சிபி என்று நினைக்கிறேன்} இந்திரனின் பெருமைகளைக் கடந்தான். ஓ! பாரதக் குல வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, உசீநரனின் தகுதியைச் சோதிப்பதற்காகவும் அவனுக்கு வரங்களை அளிப்பதற்காகவும் இந்திரனும் அக்னியும் சேர்ந்து, அந்த வேள்விக்களதில் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். இந்திரன் பருந்தின் உருவத்தையும், அக்னி புறாவின் உருவத்தை எடுத்து அந்த மன்னனிடம் வந்தனர். பருந்தின் மீது கொண்ட பயத்தின் காரணமாகப் புறா, பாதுகாப்பு கோரி அம்மன்னனின் தொடையில் அமர்ந்தது.
புறாவுக்குத் தசையீந்த உசீநரன்! – வனபர்வம் பகுதி 131-இந்திரன் பருந்தாகவும், அக்னி புறாவாகவும் உருவம் கொண்டு மன்னன் உசீநரனிடம் வருதல்; மன்னன் புறாவைப் பாதுகாத்தல்; புறாவுக்கீடாக மன்னனின் தசையைப் பருந்து கேட்டல்; மன்னனுன் உவகையுடன் தனது தசையை அறுத்துத் துலாக்கோலில் வைத்தல்; புறாவின் எடை கூட இருந்ததால் மன்னன் முழுமையாகத் தன்னைக் கொடுத்தல்…
பருந்து{இந்திரன்} {உசீநராவிடம்}, “பூமியின் அனைத்து மன்னர்களும் உன்னைப் பக்தியுள்ள ஆட்சியாளன் என்று சொல்கின்றனர். ஓ! இளவரசே {உசீநரா}, அப்படிப்பட்ட நீ, விதி எனக்கு அனுமதித்திருக்கும் செயலை ஏன் தடுத்தாய்? நான் பசியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அறத்திற்குச் சேவை செய்வதாக நினைத்துக் கொண்டு தெய்வத்தால் எனக்குக் கொடுக்கப்பட்ட இரையைப் {எனக்குக் கொடுக்காமல்} பறிக்காதே. அப்படிச் செய்தால் நீ அறத்தைக் கைவிட்டவனாவாய்” என்று சொன்னது.
அதற்கு அந்த மன்னன் {உசீநரன்}, “ஓ! இறகு படைத்த குலத்தில் சிறந்தவனே {பருந்தே}, உன்மீது கொண்ட பயத்தால் பாதிக்கப்பட்டு, உனது கரங்களில் இருந்து தப்பிய இந்தப் பறவை {புறா}, அவசரத்துடன் என்னிடம் உயிர்ப்பிச்சைக் கேட்டு வந்திருக்கிறது. இவ்வகையில் இந்தப் புறா எந்தன் பாதுகாப்பைக் கோரியிருக்கும்போது, அதை நான் உனக்குத் தராமல் இருப்பதே உயர்ந்த அறம் என்பதை ஏன் நீ காணவில்லை? இப்புறா, பயத்தால் நடுங்கி, துயரத்துடன், என்னிடம் உயிர்ப்பிச்சை கேட்டிருக்கிறது. ஆகையால் இதைக் {புறாவைக்} கைவிடுவது நிச்சயமாகப் பழியையே கொடுக்கும். அந்தணனைக் கொல்பவனும், அனைத்து உலகங்களுக்கும் தாயான பசுவைக் கொல்பவனும், தன்னிடம் பாதுகாப்பு கோரியவனைக் கைவிடுபவனும் சம பங்கு பாவிகளே” என்றான் {உசீநரன்}.
அதற்கு அந்தப் பருந்து {இந்திரன்}, “ஓ! பூமியின் தலைவா, உணவாலேயே அனைத்து உயிரினங்களும் வாழ்வைப் பெற்று வளர்கின்றன. உயிரைத் தக்க வைத்துக் கொள்கின்றன. ஒரு மனிதன் தனக்கு மிகவும் விருப்பமானதைக் கைவிட்டு நீண்ட காலம் வாழ்ந்து விடலாம். ஆனால் உணவைத் தவிர்த்துவிட்டு அவனால் வாழ முடியாது. ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {உசீநரா}, உணவை இழந்த நான் நிச்சயம் எனது உடலைவிட்டு, இது போன்ற தொல்லைகளை அற்ற அறிய முடியாத உலகங்களை அடைந்துவிடுவேன். ஓ! பக்தியுள்ள மன்னா {உசிநரா}, ஆனால், நீ இந்த ஒரு புறாவைக் காப்பாற்றுவதால் ஏற்படும் எனது மரணத்தினால், எனது மனைவியும் மக்களும் அழிந்து போவார்கள். ஓ இளவரசே! அப்போது நீ பல உயிர்களைக் காக்காமல் விடுகிறாய். அறத்தின் பாதையில் குறுக்கே நிற்கும் மற்றொரு அறம் நிச்சயம் அறமாகாது. உண்மையில் அது நேர்மையற்ற செயலாகும். ஆனால், ஓ மன்னா {உசீநரா}, சத்தியத்தைப் பராக்கிரமமாகக் கொண்டவனே, எந்த அறம் மற்ற அறங்களுக்குக் குறுக்கே நிற்காமல் இருக்குமோ அதுவே அறம் என்ற பெயருக்குத் தகுதி வாய்ந்ததாகும். ஓ! பெரும் இளவரசே {உசீநரா}, எதிர்க்கும் {முரண்பட்ட} அறங்களுக்கிடையே ஒரு ஒப்பாய்வைச் செய்த பிறகு, ஒவ்வொன்றின் நன்மைகளையும் கருத்தில் கொண்டு, எது தீமையில்லையோ அந்த அறத்தைக் கைக்கொள்ள வேண்டும். ஓ! மன்னா, ஆகையால், அறங்களைத் துலாக்கோலில் ஏற்றி, முதன்மையானதை {நல்லறத்தை} ஏற்றுக் கொள்” என்றது {பருந்து-இந்திரன்}.
இதற்கு அம்மன்னன் {உசிநரன் பருந்திடம்}, “ஓ பறவைகளில் சிறந்தவனே, நீ மிகவும் நன்மை நிறைந்த வார்த்தைகளைப் பேசுவதால், நீ பறவைகளின் ஏகாதிபதியான சுபர்ணன் {கருடன்} என்று நினைக்கிறேன். நீ அறத்தின் வழிகளைக் குறித்து முழுதும் அறிந்தவன் என்பதைத் தீர்மானிக்க நான் சிறிதும் தயக்கப்பட வேண்டியதில்லை. நீ அறம் குறித்து ஆச்சரியப்படும் வகையில் பேசுவதால், நீ அறியாத எதுவும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். உதவி நாடி வந்தவனைக் கைவிடும் ஒருவனை எப்படி அறம்சார்ந்தவன் என்று நீ கருத முடியும்? ஓ! விண்ணதிகாரியே, இக்காரியத்தில் உனது முயற்சி உணவைத் தேடுவதுதானே. உன்னால் வேறு உணவையோ, வேறு அதிகமான உணவையோ உண்டு உனது பசியைப் போக்கிக் கொள்ள முடியுமே. மாடு, பன்றி, மான் அல்லது எருமை என இன்னும் சுவைநிறைந்த வேறு எந்த உணவைக் கேட்டாலும் நான் அதை உனக்காகப் பெற்றுத்தரத் தயாராக இருக்கிறேன்” என்றான்.
அதற்கு அந்தப் பருந்து {உசிநராவிடம்}, “ஓ! பெரும் மன்னா, பன்றி, மாடு அல்லது வேறு எந்த வகையின் விலங்கையும் {விலங்கின் இறைச்சியையும்} உண்ண விரும்பவில்லை. வேறு வகை உணவால் எனக்கு என்ன பயன்? ஆகையால், க்ஷத்திரியர்களில் காளையே, சொர்க்கத்திலிருந்து இன்று எனக்கான உணவாக விதிக்கப்பட்ட அந்தப் புறாவை எனக்குக் கொடு. ஓ! பூமியின் தலைவா {உசீநரா}, புறாக்களைப் பருந்துகள் தின்பது என்பது தொன்றுதொட்ட வழக்கம்தானே. ஓ! இளவரசே, வாழைமரத்தின் பலத்தை அறியாமல், ஆதரவுக்காக அதைக் {வாழைமரத்தைக்} கட்டிப்பிடிக்காதே.
அதற்கு அம்மன்னன் {உசிநரன் பருந்திடம்}, “விண்ணதிகாரியே, நான் எனது குலத்துக்குச் சொந்தமான நாட்டின் வளங்களை உனக்கு அளிக்க விரும்புகிறேன். அல்லது நீ விரும்பும் எதையும் கொடுக்கச் சித்தமாகி இருக்கிறேன். எனது பாதுகாப்பை நாடி வந்திருக்கும் இந்தப் புறாவை மட்டும் விட்டுவிட்டு, நீ எதைக்கேட்டாலும் நான் மகிழ்ச்சியுடன் கொடுப்பேன். இந்தப் பறவையின் {புறாவின்} விடுதலைக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குத் தெரிவி. ஆனால் எச்சந்தர்ப்பத்திலும் இதை {இப்புறாவை} நான் உனக்கு அளிக்க மாட்டேன்” என்றான்.
அதற்கு அந்தப் பருந்து , “ஓ மனிதர்களின் பெரும் ஆட்சியாளா, உனக்கு இந்தப் புறாவின் மீது அவ்வளவு ஆசை இருந்தால், உனது தசையின் ஒரு பகுதியை அறுத்து, அந்தப் புறாவின் எடைக்கேற்ப துலாக்கோலில் நிறுத்து. புறாவின் எடைக்குத் தக்க துலாக்கோல் நிற்பதாக நீ கருதினால் அதுவே எனக்குத் திருப்தியைக் கொடுத்துவிடும்” என்றது. அதற்கு அந்த மன்னன், “ஓ! பருந்தே, இந்த உனது கோரிக்கையை, எனக்கான உதவியாக நான் கருதுகிறேன். ஆகையால், துலாக்கோலில் நிறுத்திய பிறகு நான் எனது தசையை உனக்குக் கொடுப்பேன்” என்றான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இதைச் சொன்ன பிறகு, உயர்ந்த அறம் சார்ந்த அந்த மன்னன் {உசிநரன்} தனது தசைப்பகுதியை வெட்டியெடுத்து, புறாவின் எடைக்கெதிராகத் துலாக்கோலில் நிறுத்தினான். தனது தசையை விடப் புறவின் எடை அதிகமாக இருப்பதாகக் கண்டான். பிறகு மேலும் தனது தசை அறுத்து, ஏற்கனவே இருப்பதோடு வைத்தான். பகுதிக்குப் பின் பகுதியாக அவன் வைத்தாலும் புறாவே எடை கூடியதாக இருந்தது. அவனது உடலில் வேறு தசையும் இல்லை. ஆகையால் தசைகளற்ற அவன் தானே அந்தத் துலாக்கோலில் ஏறி அமர்ந்து கொண்டான்.
பிறகு அந்தப் பருந்து {உசிநராவிடம்}, “ஓ அறம்சார்ந்த மன்னா, நான் இந்திரன். தெளிந்த வேள்வி நெய்யைச் சுமப்பவனான அக்னியே இந்தப் புறா. உனது தகுதியைச் சோதிப்பதற்காகவே நாங்கள் இந்த வேள்விக்களத்திற்கு வந்தோம். நீ உனது உடலில் இருந்து உனது தசையை அறுத்துக் கொடுத்ததால், உனது புகழ் எப்போதும் நிலைத்திருப்பதோடு மட்டுமின்றி, இந்த உலகத்தில் மற்ற அனைவரின் புகழை விடவும் விஞ்சியே நிற்கும். ஓ மன்னா, மனிதர்கள் உன்னைக் குறித்துப் பேசும் காலம் வரை, உனது புகழும் ஓங்கி உயர்ந்து நிற்கும். நீ உயர்ந்த புனிதமான உலகங்களில் வசிப்பாய்” என்றான். மன்னனிடம் இதைச் சொன்ன இந்திரன் சொர்க்கத்திற்கு உயர்ந்தான். அந்த அறம்சார்ந்த மன்னன் உசீநரன், தனது பக்தி நிறைந்த செயல்களால் சொர்க்கத்தையும் பூமியையும் நிறைத்து, ஒளிரும் உடலுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்தான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த உன்னத இதயம் கொண்ட ஏகாதிபதியின் {உசீநரனின்} வசிப்பிடத்தைப் பார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இங்கே புனிதமான தவசிகளும், தேவர்களும் ஒன்றாக அறம்சார்ந்த உயர் ஆன்ம அந்தணர்களுடன் காணப்படுவார்கள்” என்றார் {லோமசர்}.
அஷ்டவக்கிரன் பிறப்பு! – வனபர்வம் பகுதி 132-உத்தாலகர் தனது சீடனான கஹோடருக்கு, தனது மகள் சுஜாதையை மணமுடித்துக் கொடுப்பது; சுஜாதைக்குக் கரு உருவாவது; அந்தக் கரு, தனது தந்தை கஹோடர் சரியாக வாசிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுவது; அக்கருவுக்குச் சாபமிட்ட கஹோடர்; வாதப்போரில் தோற்று கஹோடர் இறப்பது; தனது தந்தை கஹோடர் இறந்தது தெரியாமல் வளரும் அஷ்டவிக்கிரன்; உண்மையை அறிந்ததும் ஜனகரின் வேள்விக்குச் செல்ல தனது மாமனான சுவேதகேதுவுடன் அஷ்டவக்கிரன் புறப்பட்டது…
லோமசர் {யுதிஷ்டிரன்}, “ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, புனிதமான மந்திரங்களில் நிபுணர் என்று உலக முழுதும் புகழ்பெற்ற உத்தாலகரின் மகன் சுவேதகேதுவின் புனிதமான ஆசிரமத்தை இங்கே பார். இந்த ஆசிரமம் தென்னை மரங்கள் நிறைந்ததாக இருக்கிறது. இங்கேதான் ஸ்வேதகேது சரஸ்வதி தேவியை மனித உருவில் கண்டு, அவளிடம், “வாக்கைக் {பேச்சைக்} கொடையாகக் கொண்டவனாக நான் இருக்க வேண்டும்” என்று கேட்டார். அந்த யுகத்தில், மாமனும் மருமகனுமான உத்தாலகரின் மகனான ஸ்வேதகேதுவும், கஹோடரின் மகனான அஷ்டவக்கிரரும் புனித கதைகளை அறிந்தவர்களில் சிறந்தவர்களாக இருந்தனர். ஒப்பற்ற சக்தி கொண்ட மாமனும் மருமகனுமான அந்த இரு அந்தணர்களும், மன்னன் ஜனகனின் வேள்விக்களத்திற்குச் சென்று வந்தினை {வந்தின்-ஐ} {வந்தி என்றும் அழைக்கப்படுகிறார்} ஒரு வாதப்போரில் வென்றார்கள். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, சிறுவனாக இருக்கும்போதே வந்தினை வென்று, நதியில் மூழ்கும்படி செய்த அஷ்டவக்கிரரைப் பேரனாகக் கொண்டவரின் {உத்தாலகரின்} இந்த ஆசிரமத்தை உனது தம்பிகளுடன் கூடி வழிபடு” என்றார் {லோமசர்}.
அதற்கு யுதிஷ்டிரன் {லோமசரிடம்}, “ஓ! லோமசரே, வந்தினை இவ்வகையில் வீழ்த்திய அந்தச் சக்திமிக்க மனிதரை {அஷ்டவக்கிரரைக்} குறித்து அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. அவர் ஏன் அஷ்டவக்கிரராகப் {உடலின் எட்டுப் பகுதிகள் கோணலானவராகப்} பிறந்தார்?” என்று கேட்டான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, “தவசியான உத்தாலகருக்கு, கஹோடர் {கஹோளர் என்றும் அழைக்கப்படுகிறார்} என்ற பெயரில் ஆசைகளை அடக்கிய ஒரு சீடர் இருந்தார். அவர் {கஹோடர்}, தன்னைக் குருவின் சேவைக்கு அர்ப்பணித்து, நீண்ட காலத்திற்குத் தனது கல்வியைத் தொடர்ந்தார். அந்த அந்தணர் {கஹோடர்}, தனது ஆசிரியருக்கு நீண்ட காலம் சேவை புரிந்தார். இவரது சேவையை உணர்ந்த குருவும் {உத்தாலகரும்}, தனது மகளான சுஜாதாவையும், சாத்திரங்கள் மீதான ஆளுமையையும் அவருக்குக் {கஹோடருக்குக்} கொடுத்தார். அவளும் {சுஜாதாவும்} நெருப்புக்கு ஒப்பான ஒரு பிள்ளையைக் கருவில் சுமந்தாள். அந்தக் கரு தனது தந்தை படித்துக் கொண்டிருந்த போது அவரிடம் {கஹோடரிடம்}, “ஓ தந்தையே, இரவு முழுவதும் படிக்கிறீர்கள். ஆனால் உமது வாசிப்புச் சரியானதாக எனக்குத் தெரியவில்லை. உமது கருணையால், இந்த எனது கரு நிலையிலேயே சாத்திரங்களையும், வேதங்களையும் அதன் பல கிளைகளையம் நான் அறிந்திருக்கிறேன். ஓ தந்தையே, உமது வாயில் இருந்து வெளிவருபவை {உச்சரிப்பு} சரியானதில்லை என்று நான் சொல்கிறேன்” என்றது. இப்படித் தனது சீடர்களின் முன்னிலையில் அவமதிக்கப்பட்ட அந்தப் பெரும் முனிவர் {கஹோடர்}, கோபத்தால் கருவில் இருந்த அந்தக் குழந்தையிடம், “கருவில் {வக்கிரகதியில்} இருக்கும்போதே நீ இப்படிப் பேசுவதால், உனது உடலில் எட்டுக் கோணல்களைக் கொண்டிருப்பாய்” என்று சபித்தார்.
அதே போல அக்குழந்தையும் கோணலுடனேயே பிறந்தது. அதனாலேயே அந்தப் பெரும் தவசி அஷ்டவக்கிரர் என்ற பெயரால் அறியப்பட்டார். அவருக்கு {அஷ்டவக்கிரருக்கு}, சுவேதகேது என்ற பெயரில் மாமன் ஒருவர் இருந்தார். அவர்கள் இருவரும் {அஷ்டவக்கிரரும், சுவேதகேதுவும்} சமவயது கொண்டவர்களாகவே இருந்தனர். கருவில் வளர்ச்சியடைந்த குழந்தையால் துன்பப்பட்ட சுஜாதை, செல்வத்தை விரும்பி, செல்வமற்றிருந்த தனது கணவரைத் தனிமையில் அழைத்துச் சமாதானப்படுத்தி, “ஓ பெரும் தவசியே, எனது கர்ப்பத்தின் பத்தாவது மாதத்தை நான் எப்படிச் சமாளிப்பேன்? நான் பிரசவித்த பிறகு, என் நிலைமையில் இருந்து நான் மீள வேண்டிய பொருள் எதுவும் உம்மிடம் இல்லையே” என்றாள்.
இப்படி மனைவியால் {சுஜாதாவால்} சொல்லப்பட்ட கஹோடர், செல்வத்திற்காக மன்னன் ஜனகனிடம் சென்றார். அங்கே அவர் வாத {பேச்சு} அறிவியல் அறிந்த வந்தினுடன் ஒரு வாத போரில் தோற்று, (அதன் தொடர்ச்சியாக) நீரில் மூழ்கடிக்கப்பட்டார். தனது மருமகன் {கஹோடர்} வந்தினுடன் விவாவித்து அந்த வாதப்போரில் தோற்று, நீரில் மூழ்கடிக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட உத்தாலகர், தனது மகளான சுஜாதையிடம், “நீ இதை அஷ்டவக்கிரனிடம் சொல்லாமல் கமுக்கமாக {ரகசியமாக} வைத்துக் கொள்” என்றார். அஷ்டவக்கிரன் பிறந்த பிறகு, அவன் இவ்விஷயத்தைக் குறித்து எதையும் கேள்விப்படாதவாறு அவளும் {சுஜாதையும்} அந்த {தனது தந்தையின்} ஆலோசனையின்படி நடந்து கொண்டாள். அவன் {அஷ்டவக்கிரன்}, உத்தாலகரைத் தனது தந்தையாகவும், சுவேதகேதுவைத் தனது தமையனாகவும் கருதினான்.
அஷ்டவக்கிரனுக்குப் பனிரெண்டு வயதானது. தனது தந்தையின் மடியில் அவன் உட்கார்ந்திருப்பதைச் சுவேதகேது கண்டான். இதனால் அவன் {சுவேதகேது} அவனை {அஷ்டவக்கிரனைக்} கையைப்பிடித்து இழுத்தான். இதனால் அஷ்டவக்கிரன் அழுததால், அவனிடம் {அஷ்வக்கிரரிடம்}, “இது உனது தந்தையின் மடியல்ல” என்றான் {ஸ்வேதகேது}. இந்தக் கொடும் வார்த்தை அஷ்டவக்கிரனின் இதயத்துக்குள் நேராகச் சென்று, மிகுந்த வலியை உண்டாக்கியது. அவன் நேராக இல்லத்திற்குச் சென்று, தனது தாயிடம், “எனது தந்தை எங்கே?” என்று கேட்டான். (இந்தக் கேள்வியால்) பெரிதும் துயருற்ற சுஜாதா, சாபத்திற்குப் பயந்து நடந்தது அத்தனையும் சொன்னாள்.
அனைத்தையும் கேட்ட அந்த அந்தணன் {அஷ்டவக்கிரன்}, இரவில், தனது மாமனான சுவேதகேதுவிடம், “நாம் மன்னன் ஜனகனின் வேள்விக்குச் செல்லலாம். அங்கே அற்புதங்கள் பலவற்றைக் காண வேண்டியுள்ளது. அங்கே நாம் அந்தணர்களுக்கிடையே நடைபெறும் வாதப்போரைக் கேட்டு, அற்புதமான உணவை உண்ணலாம். நமது ஞானமும் அதிகரிக்கும். புனிதமான வேதங்களை உரைப்பது காதுக்கு இனியதும், அருள் நிறைந்ததும் ஆகும்” என்றான். பிறகு அந்த மாமனும் மருமகனும், அற்புதமான வேள்வியான மன்னன் ஜனகனின் வேள்விக்குச் சென்றனர். வாயிலில் இருந்து விரட்டப்பட்ட அஷ்டவக்கிரன் மன்னனைச் {மன்னன் ஜனகனைச்} சந்தித்து, இந்த வார்த்தைகளை உரைத்தான்” என்றார் {லோமசர்}.
அஷ்டவக்கிரன் ஞானம்! – வனபர்வம் பகுதி 133-அஷ்டவக்கிரன், வாயில் காப்போன், மன்னன் ஜனகன் ஆகியோர் பேசிக் கொள்வது; மன்னன் ஜனகன் அஷ்டவக்கிரனைப் பரிசோதித்துப் பார்ப்பது; பிறகு வேள்விக்களத்திற்குள் அனுமதிப்பது…
அஷ்டவக்கிரன் {மன்னன் ஜனகனிடம்}, “வழியில் எந்த அந்தணனும் எதிர்படாத போது, அந்த வழி, குருடர், செவிடர், மகளிர், சுமைதூக்கிகள், மன்னன் ஆகியோரை முறையே சாரும். ஆனால் வழியில் ஒரு அந்தணனைச் சந்தித்தால், அந்த வழி அவனுக்கு மட்டுமே {அந்த அந்தணனுக்கே} சொந்தமாகும்” என்றான். அதன்பேரில் மன்னன் {ஜனகன்}, “உள்ளே நுழையும் தனிச்சலுகையை {உமக்கு} அளிக்கிறேன். எனவே, உள்ளே நுழைந்து நீர் விரும்பியதைச் செய்யலாம். சிறு பொறி நெருப்பையும் அசட்டை செய்யக்கூடாது. இந்திரனே கூட அந்தணர்களைப் பணிகிறான்” என்றான். இதற்கு அஷ்டவக்கிரன் {ஜனகனிடம்}, “ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே, எங்கள் ஆவல் மேலீட்டால், உனது வேள்விச்சடங்கைக் காண நாங்கள் வந்திருக்கிறோம். நாங்கள் உனது விருந்தினர்களாக இங்கே வந்திருக்கிறோம். எங்களுக்கு (உள்ளே நுழைய) உனது அனுமதி வேண்டும்.
ஓ! இந்திரதியும்னனின் மகனே {ஜனகா}, நாங்கள் வேள்வியைக் காண விரும்பியும், மன்னன் ஜனகனைக் கண்டு அவனுடன் பேசவும் வந்திருக்கிறோம். ஆனால், உனது பாதுகாவலர் எங்களைத் தடை செய்கின்றனர். இதனால் எங்களது கோபம் ஜுரத்தைப் போல எரிகிறது” என்றான்.
அதற்கு அந்தப் பாதுகாவலர், “நாங்கள் வந்தினின் {வந்தியின்} கட்டளைகளை ஏற்று நடக்கிறோம். நான் சொல்ல வேண்டியதைக் கேளும். சிறுவர்கள் நுழைய இங்கே அனுமதிப்பதில்லை. கற்ற முதிர்ந்த அந்தணர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்” என்றான். அதற்கு அஷ்டவக்கிரன், “முதிர்ந்தவர்களுக்குத்தான் அனுமதி என்ற நிலைதான் இருக்கிறது என்றால், ஓ! பாதுகாவலனே, எங்களுக்கும் உள்ளே நுழைய உரிமை உண்டு. நாங்கள் முதிர்ந்தவர்கள். நாங்கள் புனிதமான நோன்புகளை நோற்றிருக்கிறோம். வேதம் உரைப்பதனால் உண்டான சக்தியையும் கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்களுக்கு மேன்மையானவர்களுக்குப் பணிவிடை செய்திருக்கிறோம். எங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தியிருக்கிறோம். ஞானத்திலும் நிபுணத்துவத்தை வென்றிருக்கிறோம். நெருப்பு சிறு பொறியாக இருந்தாலும், அதைத் தொட்டால் எரிக்கும் என்பதனால் சிறுவர்களும் அசட்டை செய்யப்படக்கூடாது என்று சொல்லப்படுகிறது” என்றான் {அஷ்டவக்கிரன்}.
பாதுகாவலன், “ஓ! இளம் அந்தணரே, நான் உம்மைச் சிறுவராகவே கருதுகிறேன். ஆகையால், தெய்வீகத் தவசிகளால் போற்றப்படுவதும் பிரம்மத்தின் {கடவுளின்} இருப்பை உணர்த்துவதும், ஒரு எழுத்தைக் கொண்ட போதிலும் பல பொருளை உணர்த்துவதுமான அந்த ஒரு வரியை நீர் உரைக்க வேண்டும். வீண் பெருமை பேசாதீர். கற்ற மனிதர்கள் உண்மையில் மிகவும் அரிதாகவே இருக்கின்றனர்” என்றான். அதற்கு அஷ்டவக்கிரன், “இலவ {இலவம்பஞ்சு} மரத்தின் முடிச்சுகள் அதன் வயதைக் குறிப்பதில்லை. ஆகவே உண்மையான வளர்ச்சியை வெறும் உடல் வளர்ச்சியால் அனுமானிக்க முடிவதில்லை. ஒரு மரம் மெலிதாகவும், குறுகியதாகவும் இருந்தாலும் கனிகளைத் தாங்கினால், அது முழுமையாக வளர்ந்தது என்று அழைக்கப்படுகிறது. ஆனால், கனியைத் தாங்காதவை வளர்ந்தவையாகக் கருதப்படுவதில்லை” என்றான்.
பாதுகாவலன், “சிறுவர்கள், முதியவர்களிடம் இருந்து கல்வியைப் பெற்றுக் கொண்டு காலத்தால் அவர்களும் வளர்ந்து முதிர்கிறார்கள். ஞானம் என்பது குறுகிய காலத்தில் அடையக்கூடியதல்ல. நீர் குழந்தையாக இருந்த போதிலும் ஏன் முதிர்ந்த மனிதனைப் போலப் பேசுகிறீர்?” என்று கேட்டான். அதற்கு அஷ்டவக்கிரன், “ஒருவனது தலை நரைத்துப் போவதால் அவன் முதிர்ந்தவனாவதில்லை. ஒருவன் வயதால் குழந்தையாக இருந்தாலும், அவன் ஞானத்தைப் பெற்றிருந்தால் தேவர்களும் அவனை முதிர்ந்தவனாகக் கருதுகிறார்கள். ஒரு மனிதனின் தகுதி வயதிலோ, நரை முடியிலோ, செல்வத்திலோ அல்லது நண்பர்களாலோ வருவது என்று தவசிகள் விதிக்கவில்லை. எங்களுக்குள் வேதங்களை நன்கு அறிந்தவனே பெருமைவாய்ந்தவன். ஓ! வாயில் காப்போனே, நாங்கள் அவையில் வந்தினைக் காண விரும்பி இங்கே வந்திருக்கிறோம். கழுத்தில் தாமலை மாலை அணிந்திருக்கும் மன்னன் ஜனகனிடம் சென்று, நான் இங்கே இருக்கிறேன் என்பதைச் சொல். உள்ளே நுழைந்து கற்ற மனிதர்களுடன் சர்ச்சையில் ஈடுபட்டு, வாதப்போரில் வந்தினை நான் தோற்கடிப்பதை நீ இன்று காண்பாய். மற்றவர்கள் அமைதியடைந்த பிறகு, முதிர்ந்த கல்வி கற்ற அந்தணர்களும் தனது முதன்மைப் புரோகிதர்களுடன் கூடிய மன்னனும் {ஜனகனும்}, எனது திறனின் மேன்மை அல்லது தாழ்மையான தன்மையைச் சாட்சியாகக் காண்பார்கள்” என்றான்.
பாதுகாவலன், “பதின்ம வயதில் இருக்கும் நீர், கல்வி கற்ற மனிதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பபடும் இந்த வேள்விக்குள் நுழைவீர் என்று எப்படி நம்பலாம்? இருப்பினும் நான் உமது நுழைவுக்காகச் சில வழிகளில் முயற்சிப்பேன். நீரும் உமது பங்குக்கு முயற்சி செய்யும்” என்றான். பிறகு அஷ்டவக்கிரன் மன்னனிடம் சென்று, “ஓ மன்னா, ஓ ஜனக குலத்தில் முதன்மையானவனே, நீயே தலையாய இறையாண்மை. அனைத்து சக்திகளும் உன்னில் நிறைந்திருக்கின்றன. பழங்காலத்தில் வேள்விகளைக் கொண்டாடுபவனாக மன்னன் யயாதி இருந்தான். இக்காலத்தில் நீயே அதைச் செய்கிறாய். கற்றவனான வந்தின், வாதம் புரிவதில் நிபணர்களை வீழ்த்தியபிறகு, உம்மால் நியமிக்கப்பட்டிருக்கும் தனது நம்பிக்கைக்குரிய சேவகர்கள் மூலம் அவர்களை {வாத நிபுணர்களை} நீரில் மூழ்கடிப்பதாகக் கேள்விப்பட்டோம். இதைக் கேட்ட பிறகே, நான் இந்த அந்தணர்கள் முன்னிலையில், பிரம்மத்தின் ஒருமைப்பாடு குறித்த கொள்கையை விளக்க இங்கே வந்திருக்கிறேன். வந்தின் இப்போது எங்கிருக்கிறான்? சூரியன் நட்சத்திரங்களை அழிப்பது {மறைப்பதைப்} போல நானும் அவனை {வந்தினை} அணுகி அழிக்க வந்திருக்கிறேன். அவன் {வந்தின்} எங்கிருக்கிறான் என்பதைச் சொல்லுங்கள்” என்றான் {அஷ்டவக்கிரன்}.
அதற்கு மன்னன் {ஜனகன்}, ஓ அந்தணரே, வந்தினின் வாத திறனை நீர் அறியாததால் அவரை வீழ்த்திவிடலாம் என்று நம்புகிறீர். அவரது சக்தியை அறிந்தவர்கள் உம்மைப் போலப் பேச முடியுமா? வேதமறிந்த அந்தணர்கள் அவரிடம் முயன்றும் பார்த்துவிட்டார்கள். அவரது {வாதத்திறனை} சக்தியை அறியாததாலேயே நீர் வந்தினை வென்று விடலாம் என்று நம்புகிறீர். சூரியன் முன்னால் மறைந்து போகும் நட்சத்திரங்களைப் போல, அவர் முன்னால் பல அந்தணர்கள் மறைந்து போயிருக்கின்றனர். தங்கள் கல்வியில் கர்வம் கொண்ட மக்கள் அவரை வீழ்த்த விரும்பி, அவரது முன்னிலையில் வந்து தங்கள் புகழைத் தொலைத்து, சபை உறுப்பினர்களிடம் கூடப் பேசும் துணிவை இழந்து, அவருக்கெதிரில் இருந்து விலகிப் போயிருக்கின்றனர்” என்றான்.
அஷ்டவக்கிரன் {மன்னன் ஜனகனிடம்}, “வந்தின் இதுவரை என்னைப்போன்ற மனிதனுடன் சர்ச்சையில் ஈடுபடவில்லை. இதனால் தான் அவன் தன்னைச் சிங்கமாகக் கண்டு கர்ஜித்து வருகிறான். ஆனால் இன்று என்னைச் சந்தித்து, நெடுஞ்சாலையில் {அச்சாணியற்று} சக்கரங்கள் விலகிய வண்டியைப் போல இறந்து விழுவான்” என்றான். மன்னன் {ஜனகன் அஷ்டவக்கிரனிடம்}, “முப்பது பிரிவுகளும், பன்னிரெண்டு பகுதிகளும், இருபத்துநான்கு இணைப்புகளும் {பொருத்துகளும்} முன்னூற்று அறுபது ஆரங்களும் கொண்ட ஒரு பொருளின் {சக்கரத்தின்} முக்கியத்துவத்தை எவன் அறிவானோ அவனே உண்மையில் கற்ற மனிதனாவான்” என்றான்.
அஷ்டவக்கிரன் {ஜனகனிடம்}, “இருபத்துநான்கு இணைப்புகளும் {பொருத்துகளும்}, ஆறு மையங்களும் {நாபிகளும்-தொப்புள்களும்}, பனிரெண்டு எல்லைகளும் {அச்சுகளும்}, முன்னூற்று அறுபது ஆர்ங்களும் கொண்ட எப்போதும் நகரும் சக்கரம் {காலச்சக்கரம்} உன்னைப் பாதுகாக்கட்டும்”என்றான். {சூரியன், சந்திரன் மற்றும் நிழற்கோள்களின் {ராகு, கேது} சுழற்சியைக் கொண்ட காலச்சக்கரத்தின்படி சரியான நேரங்களில் செய்யப்படும் நற்செயல்கள் உன்னைப் பாதுகாக்கட்டும் என்பதே பொருள்}. மன்னன் {ஜனகன் அஷ்டவக்கிரனிடம்}, “தேவர்களுள் எவன், (தேரில் பூட்டப்பட்ட) இரண்டு பெண் குதிரைகளைப் போல சேர்ந்திருப்பவைகளும், பருந்தைப் போல விழுகின்றவைகளுமானவற்றைத் தேவர்களுள் எவன் தாங்குகிறான்? அவை எதைப் பெற்றெடுக்கின்றன?” என்று கேட்டான். அஷ்டவக்கிரன் {ஜனகனிடம்}, “ஓ! மன்னா, உன் வீட்டிலும், ஏன் உனது பகைவரின் வீட்டிலும் கூட அவ்விரண்டும் {இடியும், மின்னலும் அல்லது துன்பமும், மரணமும்} நேர வேண்டாம். காற்றைச் சாரதியாகக் கொண்டிருப்பவன் {மேகம் அல்லது மனம்} இவற்றைப் பெற்றெடுக்கிறான். அவையும் {இடியும், மின்னலும் அல்லது துன்பமும் மரணமும்} அவனையே {மேகத்தையே அல்லது மனத்தையே} பெற்றெடுக்கின்றன” என்றான்.
பிறகு அம்மன்னன் {ஜனகன்}, “உறங்கும் போதும் தனது கண்களை மூடாதது எது; பிறக்கும்போதும் எது அசையாமல் இருக்கிறது; இதயம் இல்லாதது எது; எது தன் வேகத்தைத் தானே பெருக்கிக் கொள்ளும்?” என்று கேட்டான். அதற்கு அஷ்டவக்கிரன், “உறங்கும்போது கண் இமைகளை மூடாதது மீன் {எப்போதும் விழிப்புடன் இருக்கும் ஜீவாத்மா}. உற்பத்தியாகும்போதும் {பிறக்கும்போதும்} அசையாமல் இருப்பது முட்டை {இம்மைக்குரிய முட்டை அல்லது உலகம் என்றும் கொள்ளலாம்}. இதயமே இல்லாதது கல் {உடலைத் துறந்த ஆன்மா}. தனது வேகத்தைத் தானே பெருக்கிக் கொள்வது ஆறு {ஒரு யோகியின் இதயம்}” என்றான்.
அதற்கு மன்னன் {ஜனகன் அஷ்டவக்கிரனிடம்}, “ஓ தெய்வீக சக்தியைக் கொண்டவரே, நீர் மனிதர் அல்ல என்று காண்கிறேன். நான் உம்மைச் சிறுவனாகக் கருதவில்லை, முதிர்ந்த மனிதராகவே கருதுகிறேன்; பேச்சில் தன்னை உம்முடன் ஒப்பிடத்தக்க வேறு மனிதன் கிடையாது. ஆகையால் நான் உமக்கு அனுமதியளிக்கிறேன். அதோ வந்தின் {வந்தி} அங்கிருக்கிறார்” என்றான் {மன்னன் ஜனகன்}.
வாதப்போரில் வென்ற அஷ்டவக்கிரன்! – வனபர்வம் பகுதி 134-அஷ்டவக்கிரன், வந்தின் {வந்தி} வாதப்போர்; அஷ்டவக்கிரன் வெல்வது; வந்தினைக் கடலில் மூழ்கச் சொல்வது; வந்தின் அஷ்டவக்கிரனின் தந்தையை வரவழைத்துக் கொடுப்பது; கஹோடர் தனது மகனான அஷ்டவக்கிரனை நதியில் மூழ்கச் செய்து கோணலான உடலை நிமிர்த்தியது…
அஷ்டவக்கிரன் {மன்னன் ஜனகனிடம்}, “ஓ! மன்னா {ஜனகா}, ஓ! கடுமையான நிலங்கள் கொண்ட பகுதிகளின் தலைவனே, ஒப்பற்ற சக்திகள் கொண்டு, ஒரே இடத்தில் கூடியிருக்கும் இந்த ஏகாதிபதிகளின் சபையில், சர்ச்சைகளின் தலைவனான வந்தினை என்னால் காண முடியவில்லை. அகன்ற நீர்ப்பரப்பின் மேல் அன்னத்தைத் (அன்னப்பறவையைத்} தேடுவது போல, நான் அவனை {வந்தினைத்} தேடிக் கொண்டிருக்கிறேன். ஓ! வந்தினே, நீ உன்னைச் சர்ச்சைகள் {வாதம்} செய்வதில் முதன்மையானவனாகக் கருதிக் கொள்கிறாய். என்னுடன் நீ பந்தயத்தில் ஈடுபட்டதும், நதியின் ஓட்டம்போல உனது பேச்சுச் சரளமாக இருக்காது. நான் முழுமையாகச் சுடர்விட்டெரியும் நெருப்பு போன்றவன். ஓ! வந்தினே, என் முன் அமைதியாக இரு. தூங்கிக் கொண்டிருக்கும் புலியை எழுப்பாதே.
வாயின் ஓரங்களை நாவால் நக்கிக் கொண்டிருக்கும் விஷம் கொண்ட பாம்பின் தலை மீது நீ மிதித்தால், உனது காலால் காயமடைந்த அதன் {அந்தப் பாம்பின்} கடியில் இருந்து நீ தப்பமுடியாது. பலத்தில் கர்வம் கொண்ட பலமற்ற மனிதன், மலையைக் குத்த முயன்றால், அவனது கைகளுக்கும், நகங்களுக்கும் காயம் ஏற்படுகின்றன. ஆனால் மலையின் மீது எந்தக் காயமும் இருப்பதில்லை. மைநாக மலைக்கு {Mainaka} மற்ற மலைகள் எப்படித் தாழ்ந்தனவோ, காளைகளுக்குக் கன்றுகள் எப்படித் தாழ்ந்தனவோ, அதே போல மிதிலையின் தலைவனுக்கு, பூமியின் பிற மன்னர்கள் அனைவரும் தாழ்ந்தவர்களே. இந்திரனே தேவர்களில் முதன்மையானவன், கங்கையே நதிகளில் சிறந்தவள். ஆகையால், ஓ! மன்னா {ஜனகனே}, நீ மட்டுமே ஏகாதிபதிகளில் மிகச் சிறந்தவன். ஓ மன்னா, வந்தினை எனது முன்னிலைக்குக் கொண்டு வரச் செய்” என்றான் {அஷ்டவக்கிரன்}.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, வந்தின் மீது கோபத்தில் இருந்த அஷ்டவக்கிரன் அந்தச் சபையில் இப்படி முழங்கிய பிறகு, “எனது கேள்விகளுக்கு நீ பதில் சொல். நான் உனது கேள்விகளுக்குப் பதில் சொல்கிறேன்” என்றான்.
{1} அதற்கு வந்தின் {அஷ்டவக்கிரனிடம்}, “ஒரே நெருப்புதான் பல உருவங்களில் மூட்டப்படுகிறது; ஒரே சூரியன்தான் இந்த முழு உலகத்துக்கும் ஒளியூட்டுகிறான்; தேவர்கள் தலைவனான இந்திரன் என்ற ஒரே வீரன்தான் எதிரிகளை அழிக்கிறான்; யமன் ஒருவனே பித்ருகளின் ஒரே தலைவனாக இருக்கிறான்” என்றார் {வந்தின்}.(பிரம்மத்தின் ஒருமைப்பாட்டை விளக்கவே அஷ்டவக்கிரர் ஜனகனின் வேள்விக்கு வந்திருக்கிறார். வந்தின் தனது எதிராளியை எதிர்க்க பல்வேறு தத்துவ அமைப்புகளைப் பயன்படுத்துகிறார். அவர் லோகாயதத் [Buddhistic system] தத்துவத்தைக் கொண்டு ஆரம்பிக்கிறார். அந்த உரையின் வடிவம் இலக்கியத்தில் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. புதிர் நிறைந்ததும், உள்ளுறை பொருளை வினோதமான முறையிலும் இழிந்த தோற்றத்திலும் பலவகைப்பட்ட சேர்க்கைகளின் தோற்றத்திலும் மறைத்து சொல்லும் ஒரு உரையாக வந்தினின் உரை உள்ளது. மேற்சொன்னவை அனைத்தும் ஒன்று என்ற எண்ணைக் குறிப்பதாகவும், ஆண்டவனும், தலைவனும், புலன்களின் வழிகாட்டியும் – அறிவாற்றல் கொண்ட ஒருவனே {ஒருமையே} என்று சொல்லியும் வந்தின் சர்ச்சையைத் துவக்குகிறார்.))
{2} அஷ்டவக்கிரன் {வந்தினிடம்}, “இரு நண்பர்களான இந்திரனும் அக்னியும் எப்போதும் நகர்வது இருவராகவே; நாரதரும், பர்வதரும் தெய்வீக முனிவர்களாகிய இருவரே; அசுவினி குமாரர்கள் இருவரே; ஒரு தேரின் சக்கரங்கள் இரண்டே. தெய்வத்தால் விதிக்கப்பட்டுக் கணவனும் மனைவியுமாக வாழும் ஒரு இணையில் இருவரே உள்ளனர்” என்றான்.(வேத வெளிப்பாட்டில் நண்பர்களான இரு பறவைகள் ஒரு மரத்தில் ஒன்றாக வாழ்கின்றன. அதில் ஒன்று பழங்களை உண்ண, மற்றொன்று அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் வெளிப்படையாவது என்னவென்றால், ஆண்டவர்களும், தலைவர்களும், புலன்களின் வழிகாட்டிகளும் இருவரே என்பதுதான் {இருமையுடன் செயல்படுகின்றன என்பதுதான்}. ஒரு ஆற்றல் {அறிவு} இருக்கும்போதே இயல்பான இரண்டாம் ஆற்றல் {அதாவது உணர்வு} இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவன் {ஒரு அறிவாளி} செயலற்று உறங்கிக் கொண்டிருக்கும்போதும் அந்த மற்றொரு ஆற்றல் {அறிவு [அ] மூளை] தனது நடவடிக்கையைத் தொடர்கிறது. அப்படி இல்லையென்றால் நாம் உறங்கிய பிறகு எதுவும் நமக்கு நினைவிருக்காது. அல்லது உறக்கத்திற்கு முன்பு நடந்ததையும், பின்னர் நடக்கும் நிலையையும் இணைத்துப் பார்க்க முடியாது. இதன்படி எண் இரண்டை மேற்கோள் காட்டும் அஷ்டவக்கிரன், அறிவாற்றலையும் தவிர வேறு ஒரு ஆற்றலும் {உணர்வு என்ற ஆற்றலும்} உள்ளது என்பதைச் சொல்கிறார். உணர்வு {consciousness} என்ற ஆற்றலும் சேர்ந்து இரண்டும் கூட்டாகவே ஆண்டவர்களாகவும், தலைவர்களாகவும், புலன்களின் வழிகாட்டிகளாகவும் செயல்படுகின்றன. அவை இரண்டுமே {அறிவும், உணர்வும்} ஒன்றாக இந்திரனும் அக்னியும் போலவும், மேற்சொன்ன பலவற்றைப் போலவும் செயல்படுகின்றன} என்கிறார்.))
{3} வந்தின் {அஷ்டவக்கிரனிடம்}, “செயல்களின் வினையால் மூன்று விதமான உயிரினங்கள் உண்டாகின்றன; மூன்று வேதங்கள் இணைந்து வாஜபேயம் என்ற வேள்வியைச் செய்கின்றன, மூன்று வேறு காலங்களில் அத்வர்யுக்கள் {மூன்று வர்ணத்தார்} வேள்விச்சடங்குகளைச் செய்கின்றனர்; மூன்று என்பது உலகங்களின் எண்ணிக்கை {சொர்க்கம், நரகம், பூமி}; தெய்வீக ஒளிகளும் மூன்றாக உள்ளன {சூரியன், சந்திரன், நெருப்பு}” என்றார்.
{4} அஷ்டவக்கிரன் {வந்தினிடம்}, “அந்தணர்களின் ஆசிரமங்கள் நான்கு; நான்கு வர்ணங்கள் வேள்விகளைச் செய்கின்றன; முக்கியமான திசைகள் நான்கு; எழுத்துகளின் எண்ணிக்கை நான்காகும் {“அ”காரம், “உ”காரம், “ம”காரம், மற்றும் அர்த்தமாத்திரை [புள்ளி] ஆகிய எழுத்துகள் சேர்ந்தனவே ஓம் என்ற வடிவம்}; பசுவின் கால்களும் நான்கு என்பது எப்போதும் அறியப்பட்டதே” என்றான்.
{5} வந்தின் {அஷ்டவக்கிரனிடம்}, “நெருப்புகளின் எண்ணிக்கை ஐந்து, பங்கி என்ற செய்யுளடி ஐந்து அடி கொண்டது; வேள்விகள் ஐந்து; ஐந்து பூட்டுகள் {கொண்டைகளாகவும் இருக்கலாம்} அப்சரஸ்களின் தலையில் இருப்பதாக வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது; உலகில் அறியப்பட்ட புனிதமான ஆறுகள் ஐந்து” என்றார்.
{6} அஷ்டவக்கிரன் {வந்தினிடம்}, “புனித நெருப்பை நிறுவும் வேளையில் {வேள்வியில்}, ஆறு பசுக்களை வேள்விக் கொடையாகச் {தட்சணையாகச்} சிலர் கேட்கின்றனர்; காலச்சக்கரத்திற்குச் சொந்தமான பருவங்கள் ஆறு; புலன்களின் எண்ணிக்கை ஆறு; கிருத்திகை நட்சத்திரக் கூட்டத்தில் ஆறு நட்சத்திரங்கள் இருக்கின்றன; அனைத்து வேதங்களிலும் சாத்யஸ்கங்கள் என்கிற வேள்விச் சடங்களுகள் ஆறு என்று காட்டப்படுகின்றன” என்றான்-ஐந்து புலன்களைத் {கண், காது, மூக்கு, நாக்கு, சருமம் ஆகியன} தவிர அஷ்டவக்கிரர் கூடுதலான உணர்வான மனத்தைச் {மனம்} சொல்லியபடி, ஆறு என்ற எண்ணை மேற்கோள் காட்டுகிறார்)
{7} வந்தின் {அஷ்டவக்கிரனிடம்}, “ஏழு எண்ணிக்கையில் வளர்ப்பு விலங்குகள் இருக்கின்றன; வன விலங்குகள் ஏழு ஆகும். ஒரு வேள்வியின் முடிவில் ஏழு செய்யுளடிகள் {meters = சந்தங்கள்} சொல்லப்படுகின்றன; முனிவர்கள் எழுவர்; (உலகில்) அஞ்சலி செலுத்தும் வடிவங்கள் ஏழாக முன்வைக்கப்படுகின்றன; வீணையின் தந்திகள் ஏழு என்பது அறியப்பட்டதே” என்றார்.ஆன்மா, அவை {அந்த ஆறு புலன்கள் : கண், காது, மூக்கு, நாக்கு, சருமம் + மனம்} மூலமும், ஏழாவதாக அறிவின் மூலமும் மகிழ்ச்சி மற்றும் துன்பத்தை அனுபவிக்கிறது என்று சொல்கிறார்.)
{8} அஷ்டவக்கிரன் {வந்தினிடம்}, “நூற்றுக்கணக்கானவற்றை அடக்கி வைத்துக் கொண்டிருப்பது எட்டுப் பைகள் {சணலாலான கோணிகள்}; சிங்கங்களை வேட்டையாடும் சரபத்துடைய {சரபம்} கால்களின் எண்ணிக்கை எட்டு; தேவர்களில் எட்டு பேர் வசுக்கள் என்று கேள்விப்படுகிறோம்; வேள்விகளில் உள்ள யூபங்கள் {வேள்விக் கம்பங்கள்} எட்டுப் பட்டைகள் கொண்டவை” என்றான்.{கண், காது, மூக்கு, நாக்கு, சருமம் + மனம் + அறிவு ஆகியவற்றையும் தாண்டி} அகங்காரத்தை அறிதலும் மற்றொன்றொன்று {அதாவது அகங்காரமும், மகிழ்ச்சி மற்றும் துன்பத்தில் மய்ய வினையாற்றுகிறது என்கிறார்})
{9} வந்தின் {அஷ்டவக்கிரனிடம்}, “பித்ருக்களுக்கு {மூதாதையர்களுக்குச்} செய்யப்படும் வேள்விகளில் {சாமிதேனீ என்ற} நெருப்புக் கிண்டப்படும் போது ஒன்பது மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன; படைப்பின் செயல்முறைகள் ஒன்பது செயல்பாடுகளாக நியமிக்கப்பட்டுள்ளன; பிருகதீ என்ற செய்யுளடி {metre} ஒன்பது எழுத்துகள் கொண்டது. (கணக்கில்) ஒன்பது எண்களே எப்போதும் உள்ளன” என்றார்.முக்குணம் {அதாவது இருப்பு, தூய்மைக்கேடு [அழுகும் தன்மை], அறியாமை ஆகியவற்றைக்} கொண்ட பிரக்ருதி {உலகின் எதிரிடை அல்லது பௌதீகக் [பொருள்] காரணம்}, பிரதானத்தின் {உலகின் நேரிடை அல்லது ஆன்மிகக் [கருத்து] காரணம்} மூன்று குணங்களுடன் {ஏற்றம் தாழ்ச்சி, சமம்} பல்வேறு விகிதாச்சாரங்களில் கலந்து {ஒன்பது எண்ணிக்கையைப் பெற்று} உலகத்தின் பல பொருட்களை உண்டாக்குகிறது. எனவே, பரக்ருதி அல்லது இயற்கையின் நித்திய தன்மை நிரூபிக்கப்படுகிறது. மேலும் இருமை கோட்பாடும் நிறுவப்படுகிறது என்கிறார் வந்தின்
{10} அஷ்டவக்கிரன் {வந்தினிடம்}, “இவ்வுலக மனிதரின் அறிவுடலுக்குள் நுழைந்தால், {அந்த ஆன்மாவுக்கு} முக்கியத் திக்குகளின் எண்ணிக்கை பத்து என்று சொல்லப்படுகிறது; பத்து நூறுகள் ஆயிரமாகும், பெண்கள் கருவைப் பத்து மாதங்கள் சுமக்கின்றனர்; உண்மை ஞானத்தை {தத்துவத்தை} உரைக்கும் ஆசிரியர்கள் பத்து பேர், அதை வெறுப்பவர்கள் {தத்துவத்தை நிராகரிப்பவர்கள்} பத்து பேர், அதைக் கற்கும் தகுதி படைத்தோர் பத்துப் பேராகும்” என்றான்.ரகிருதி எதையும் உருவாக்குவதில்லை. மாயையின் மூலம் பிரம்மம், பத்து உறுப்புகளுடன் {அதாவது, ஐந்து செயல் உறுப்புகள் {வாய், கை, கால், மலவாய், கருவாய்}, ஐந்து உணர்வுறுப்புகள் {கண், காது, மூக்கு, நாக்கு, சருமம்} ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, பொருட்களின் அமைப்புகளை வெளிப்படுத்துகிறது. ஆகவே பிரக்ருதிக்கு உண்மையான இருப்பு இல்லை. அவள் {பிரக்ருதி} ஆன்மாவின் இருப்பில் மட்டுமே தெரிகிறாள் என்கிறார் அஷ்டவக்கிரர்)
{11} வந்தின் {அஷ்டவக்கிரனிடம்}, “உயிரினங்களுக்கு இன்பம் தரக்கூடிய பொருட்கள் பதினொன்று; யூபங்களின் {வேள்விக் கம்புகளின்} எண்ணிக்கை பதினொன்றாகும். உயிருள்ள எவருக்கும் இயல்பு நிலை மாற்றம் பதினொன்றாகும்; சொர்க்கத்தில் இருக்கும் தேவர்களில் ருத்திரர்கள் பதினோரு பேராகும்” என்றார்.இங்கே யூபங்கள் {வேள்விக்கம்புகள்} என்பன மனிதர்களை இவ்வுலகத்தோடு கட்டிப்போடும் உணர்ச்சிகளாகும். இங்கே ருத்திரர்கள் என்பவர்கள் மற்றவர்களை அழ வைப்பவர்கள் என்று பொருளில் சொல்லப்படுகிறது.புலனுணர்வின் {காட்சி, ஒலியறிதல், தொடு உணர்ச்சி, சுவை, நாற்றம் ஆகியவற்றின்} பதினோரு பொருட்களால் எழும் இன்பம் மற்றும் துன்பத்திற்கான தடைகளிடம் இருந்து ஒரு ஆன்மா விடுபடுவதில்லை. இவ்வுலகில் அனைத்து மனிதர்களும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் ஆட்படுகின்றனர். சொர்க்கத்திலும் ருத்திரர்கள் {அழ வைப்பவர்கள்} இருக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம் என்று சொல்ல வருகிறார் வந்தின்)
{12} அஷ்டவக்கிரன் {வந்தினிடம்}, “ஒரு வருடம் பனிரெண்டு மாதங்களைக் கொண்டது; ஜகதீ என்ற செய்யுளடி {சந்தம்} பனிரெண்டு எழுத்துகளால் ஆனது; சிறு வேள்விகள் பனிரெண்டாகும்; கற்றவர்கள் சொற்படி, ஆதித்தியர்கள் பனிரெண்டு பேர்” என்றான்.
இன்பத்தாலும் துன்பத்தாலும் பாதிக்கப்படாத பரமாத்மாவின் இருப்பு உண்மையில் இருக்கிறது. ஆனால் அவனது {பரமாத்மாவின்} இருப்பை, எளிதாக உணரக்கூடிய வகையில் நிரூபிக்க முடியாது. அல்லது அறியாமை கொண்டவர்களால் அவனைக் {பரமாத்மாவைக்} காண முடியாது. மனிதர்கள், அறம், உண்மை {சத்தியம்}, சுயக்கட்டுப்பாடு, நோன்புகள், நல்லெண்ணம், அடக்கம், மன்னிக்கும் குணம், பகைமை தவிர்த்தல், தியாகம், கொடை {தானம்}, ஒருமைப்பாடு {குவிந்த கவனம்} மற்றும் புலன்களின் மீதான கட்டுப்பாடு ஆகிய பனிரெண்டின் மூலம் அந்த நிலையை {பரமாத்மாவைக் காணும் நிலையை} அடையலாம் என்கிறார் அஷ்டவக்கிரர்)
{13} வந்தின் {அஷ்டவக்கிரனிடம்}, “பதிமூன்றாவது சந்திர நாள் {திரயோதசி திதி} மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது; உலகில் பதிமூன்று தீவுகள் இருக்கின்றன.” என்றார்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, “இவ்வளவு தூரம் சொன்னதும் வந்தின் நிறுத்திவிட்டார். அதன்பேரில் அஷ்டவக்கிரன் மீதி பாதி ஸ்லோகத்தைச் சொன்னான்.
அஷ்டவக்கிரன் {வந்தினிடம்}, “கேசியால் பதிமூன்று வேள்விகள் செய்யப்பட்டன. வேதத்தின் அதிச்சந்தங்களால் {அதிஜகதீச்சந்தங்களால் = நீண்ட செய்யுளடிகளால்} பதிமூன்றும் விழுங்கப்பட்டன” என்றான்.பதிமூன்று என்ற எண்ணை மேற்கோள் காட்டியே அஷ்டவக்கிரர் முடிக்கிறார். அடிப்படையில் பாதிக்கப்படாத ஆன்மா – பத்து உறுப்புகள், அறிவு, மனம், மற்றும் அகங்காரம் {ஐந்து செயல் உறுப்புகளான வாய், கை, கால், மலவாய், கருவாய், ஐந்து உணர்வுறுப்புகளான கண், காது, மூக்கு, நாக்கு, சருமம் ஆகியவையும் + அறிவு + மனம் + அகங்காரம் அறிதல்} ஆகிய பதிமூன்றால் இன்பத்தையும் துன்பத்தையும் அடைகிறது. ஆனால் அதிச்சந்தங்கள், அதாவது அறியாமையை வெற்றி கொண்டவையான அந்தப் பனிரெண்டும், அறமும் இன்ன பிறவும் சேர்ந்து அந்தப் பதிமூன்றையும் அழிக்கிறது. அதுவே முக்தி {விடுதலையடைந்த} நிலையாகும் என்கிறார் அஷ்டவக்கிரர்.)
அஷ்டவக்கிரர் பேசுவதையும், சூதனின் மகன் {வந்தின்} தலைதாழ்த்தி, சிந்தனையிலாழ்ந்து அமைதியடைந்ததையும் கண்ட அந்தச் சபை பெரும் கூச்சலை ஏற்படுத்தியது. மன்னன் ஜனகனால் நடத்தப்பட்ட அந்த அற்புதமான வேள்வியில் இப்படி அமளி எழுந்தபோது, மிகவும் திருப்தியடைந்த அந்தணர்கள், கூப்பிய கரங்களுடன் அஷ்டவக்கிரனை அணுகி அவனுக்கு அஞ்சலி செலுத்தத் தொடங்கினர்.
அதன் பிறகு அஷ்டவக்கிரன், “இதற்கு முன்னால் இந்த மனிதன் {வந்தின்}, சர்ச்சைகளில் அந்தணர்களை வீழ்த்தி, அவர்களை நீருக்குள் வீழ்த்துவதை வழக்கமாக வைத்திருந்தான். இன்று வந்தினும் அதே விதியைச் சந்திக்கட்டும். அவனைப் பிடித்து நீரில் மூழ்கடியுங்கள்” என்றான்.
வந்தின் {மன்னன் ஜனகனிடம்}, “ஓ ஜனகா, நான் மன்னன் வருணனின் மகனாவேன். இங்கே உனது வேள்வி நடக்கும்போதே, அங்கேயும் {எனது தந்தையான வருணனின் உலகத்திலேயும்} பனிரெண்டு வருடங்கள் {12} நீளும் வேள்வி நடந்து கொண்டிருக்கிறது. அதனாலேயே நான் முதன்மையான அந்தணர்களை அங்கே {நீரில் மூழ்கடித்து} அனுப்பி வைத்தேன். அவர்கள் வருணனின் வேள்விக்குச் சாட்சியாக இருக்கச் சென்றிருக்கிறார்கள். அதோ பார்! அவர்கள் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். வணங்கப்பட வேண்டிய அஷ்டவக்கிரருக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். இவரது கருணையால் நான் இன்று என்னைப் பெற்றவருடன் {வருணனுடன்} சேர்ந்து கொள்ளப் போகிறேன்” என்றார்.
அஷ்டவக்கிரன், “வார்த்தைகள் அல்லது நுணுக்கத்தின் மூலமாக அந்தணர்களை வீழ்த்திய வந்தின், அவர்களைக் கடலின் நீரில் மூழ்கடித்தான். (வேத உண்மையை மறைத்து, தவறான வாதங்கள் மூலமாக அவர்களை அடக்கினான்), அவர்களை நான் இன்று என் ஞானத்தின் விளைவால் காப்பாற்றினேன். இதைக் கபடற்ற வெளிப்படைத்தன்மை கொண்ட மனிதர்கள் தீர்மானிக்கட்டும். நல்லது கெட்டது அறிந்த நெருப்பு, நேர்மையானவர்களின் உடலை எரிக்காமல் விட்டு அவர்களிடம் சார்பு நிலை {பாரபட்சம்} கொள்கிறது. ஆகவே, சிறுவர்கள் பேசும் திறமை குறைந்தவர்களாக இருப்பினும், நல்ல மனிதர்கள், அச்சிறுவர்களின் முயற்சிகளில் அவர்களுக்கு ஆதரவாகவே முடிவு எடுப்பார்கள். ஓ ஜனகா, நறுவிலி மரத்தின் {ஸ்லேஷ்மாதகீ [Sleshmataki] மரம் = இதன் இலையையும், கனியும் உண்பது புத்தியைக் கெடுக்கும்.} கனியை உண்டதன் விளைவாக {வந்தினின் போதனைகளைக் கேட்டதால்} உணர்வை இழந்தது எனது வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறாய். அல்லது {வந்தினின்} முகத்துதி உனது உணர்வைத் திருடிவிட்டதா? யானை ஒன்று என் வார்த்தைகளால் (எனும் கொக்கியால்) துளைக்கப்பட்டும் அதை அறிய மறுப்பது போல, நீ என் வார்த்தைகளைக் கேட்க மறுக்கிறாய்” என்றான்
ஜனகன் {அஷ்டவக்கிரனிடம்}, “உமது வார்த்தைகளைக் கேட்ட பிறகு, அவற்றை நான் அற்புதமானதும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதுமாக எடுத்துக் கொள்கிறேன். உமது வடிவம் கூட மனிதசக்திக்கு அப்பாற்பட்டதாக வெளிப்படையாகத் தெரிகிறது. இன்று வந்தினை நீர் வாதத்தில் தோற்கடித்ததால், உம் வசம் அவரை ஒப்படைக்கிறேன்” என்றான். அஷ்டவக்கிரன் {ஜனகனிடம்}, “ஓ மன்னா, வந்தின் உயிருடன் இருப்பதால், எனது எந்த நோக்கத்திற்கும் பயன்படப் போவதில்லை. உண்மையில் வருணன் அவனது தந்தையானால், அவன் கடலில் மூழ்கட்டும்” என்றான்.
வந்தின், “நான் மன்னன் வருணனின் மகனே. இத்தருணத்திலேயே (ஆகையால்) மூழ்குவதில் எனக்கு எந்தப் பயமும் இல்லை. அஷ்டவக்கிரர், நீண்ட காலத்திற்கு முன்பு தொலைந்து போன தனது தந்தை கஹோடரைக் காண்பார்” என்றார்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, “பிறகு வருணனால் முறையாக வழிபடப்பட்ட அந்த அந்தணர்கள் அனைவரும் ஜனகனுக்கு முன்பாக {நீரிலிருந்து} எழுந்து வந்தனர். கஹோடர், “ஓ ஜனகா, இதற்காகவே மனிதர்கள் நற்செயல்களைச் {வேள்விகள் போன்றவற்றை என்று நினைக்கிறேன்} செய்து மகன்களுக்காக வேண்டுகிறார்கள். நான் எதில் தவறினேனோ அது என் மகனால் அடையப்பட்டது. பலமற்ற மனிதர்கள் பலம்பொருந்திய மகனைப் பெறுவார்கள்; மக்கு மனிதர்கள் அறிவார்ந்த மகன்களைப் பெறுவார்கள்; கல்வியற்றவர்கள் கல்வியில் சிறந்தவனை மகனாகப் பெறுவார்கள்” என்றார் {கஹோடர்}. வந்தின், “ஓ ஏகாதிபதி {ஜனகா}, உனது கூரிய கோடரியாலேயே யமன் தனது எதிரிகளின் தலைகளைக் கொய்கிறான். உமக்கு வளமையுண்டாகட்டும்! மன்னன் ஜனகனின் இந்த வேள்வியால், உக்தா {உக்தயம்} சடங்குகளுக்குரிய முதன்மையான மந்திரங்கள் சொல்லப்பட்டு, சோமச்சாறும் போதுமான அளவு குடிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் நேரிடையாக நேரில் வந்த தேவர்களும், தங்கள் புனிதமான பங்குகளைப் பெற்று விட்டனர்” என்றார்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, “மேம்பட்ட பிரகாசத்துடன் அந்தணர்கள் {நீரிலிருந்து} உயர்ந்து வந்த போது, வந்தின் மன்னன் ஜனகனின் அனுமதியுடன், கடலின் நீருக்குள் இறங்கினார். பிறகு சூதனின் மகனை {வந்தினை} வென்ற அஷ்டவக்கிரன் தனது தந்தையை வழிபட்டான். தானும் {நீரிலிருந்து} வந்த அந்தணர்களால் வழிபடப்பட்டான்.(சூதனின் மகன் என்பதற்கு விளக்கம் இதுதான். சூ (su) என்றால் அற்புதம், உதா (uta) என்றால் வேள்வி என்றும் பொருளாகும். ஆகவே அந்தச் சொல்லிணைப்பு {சூதனின் மகன் என்றால்} அற்புதமான வேள்வியை நடத்தியவன் என்ற பொருளைத் தருகிறது.)
பிறகு அஷ்டவக்கிரன் தனது ஆசிரமத்திற்குத் தனது மாமனுடன் {சுவேதகேதுவுடன்} சென்றான். பிறகு அவனது {அஷ்டவக்கிரனின்} தாயின் {தாய் சுஜாதாவின்} முன்னிலையில் அவனது தந்தை {கஹோடர்}, அவனிடம் {அஷ்டவக்கிரனிடம்}, “(ஓ மகனே), விரைவாக இந்தச் சமங்கா நதிக்குள் இறங்கு” என்றார். அதன் படி அவனும் (நீருக்குள்) இறங்கினான். (அவன் நீருக்குள் மூழ்கியதும்), அவனது (கோணலான) உறுப்புகள் அனைத்தும் உடனே நிமிர்த்தப்பட்டன. அந்த நாளில் இருந்து அந்த நதி சமங்கா என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அதுமுதல் அவள் {சமங்கா நதி} (பாவங்களைச்) சுத்தீகரிக்கும் அறம்பயில ஆரம்பித்தாள். அவளுக்குள் {சமங்கா நதியில்) நீராடும் ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். ஆகையால், ஓ யுதிஷ்டிரா, நீ உனது தம்பிகளுடனும், மனைவியுடனும் நீருக்குள் இறங்கி சுத்திகரிப்பைச் செய். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, ஓ அஜமீட குலத்தின் வழித்தோன்றலே, இங்கே உனது தம்பிகளுடனும் அந்தணர்களுடனும் மகிழ்ச்சியாக வசித்து, நற்செயல்கள் செய்யும் நோக்கோடு மற்றப் பிற தகுதிகளை வளர்க்கும் நற்செயல்களைச் செய்” என்றார் {லோமசர்}.
யவக்கிரீயும்! இந்திரனும்!! – வனபர்வம் பகுதி 135-லோமசர் யுதிஷ்டிரனிடம் யவக்கிரீயின் கதையைச் சொல்ல ஆரம்பிப்பது; யவக்கிரீ கடுந்தவம் இருப்பது யவக்கிரி வேத ஞானத்தை அடைவது பரத்வாஜர் யவக்கிரீயிடம் அகங்காரம் கூடாது என்று எச்சரிப்பது; யவக்கிரீ முனிவர்களைப் புண்படுத்தி இன்பங்கண்டு திரிவது…
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, முன்பொரு காலத்தில் மதுவிலை என்று அழைக்கப்பட்ட சமங்க நதி இதோ தெரிகிறது. இங்கேதான் பரதன் நீராடிய கர்த்தமிலம் என்ற இடம் இருக்கிறது. சச்சியின் தலைவன் {இந்திரன்}, விரித்திரனைக் கொன்றதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பேரிடரின் போது, அவன் தனது சுத்திகரிப்பைச் சமங்கையில் செய்து பாவத்தில் இருந்து விடுபட்டான். ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, இந்த இடத்தில்தான் மைநாக மலை பூமிக்குள் மூழ்கியது; அதனாலேயே இந்த இடம் வினசனம் என்று அழைக்கப்படுகிறது. ஓ! மனிதர்களில் காளைகளே, பழங்காலத்தில் அதிதி, மகன்களைப் பெறுவதற்காகக் கொண்டாடப் பட்ட ஒரு உணவைச் சமைப்பதற்காக (பிரம்மன் தலைமையில்), இந்த உயர்ந்த மலையில் ஏறி, சொல்ல முடியாத இழிவான துன்பத்துக்கு ஓர் முற்றுப் புள்ளி வைத்தாள்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இங்குதான் தவசிகளுக்கு விருப்பமான கனகல மலைத்தொடர் இருக்கிறது. இங்கேதான் பெரும் நதியான கங்கையும் இருக்கிறது. பழங்காலத்தில், புனிதமான தவசியான சனத்குமாரர் இங்கேதான் துறவில் வெற்றியை அடைந்தார். ஓ! அஜமீட குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, இந்த நதியில் நீராடி பாவங்கள் அனைத்திலும் இருந்து விடுதலை பெறு. ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீ உனது அமைச்சர்களுடன் புண்ணியம் என்று அழைக்கப்படும் இந்தத் தடாகத்துக்கும், பிருகுதுங்கம் மலைக்கும், துஷ்னிகங்கா {ஓசையில்லாமல் செல்லும் கங்கை} என்று அழைக்கப்படும் இந்த இரு ஆறுகளுக்கும் செல். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இங்கே ஸ்தூலசிரஸ் என்கிற தவசியின் ஆசிரமம் இருக்கிறது. இந்த இடத்தில் உனது கோபத்தையும் அகங்காரத்தையும் விட்டுவிடு. ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அங்கே ரைப்பியரின் அழகிய ஆசிரமத்தில் தான், வேத அறிவு கொண்ட பரத்வாஜரின் மகனான யவக்கிரீ அழிந்தார்” என்றார் {லோமசர்}.
யுதிஷ்டிரன் {லோசரிடம்}, “பரத்வாஜரின் மகனான பெரும் தவசி யவக்கிரீ எப்படி வேதங்களில் ஆழமான ஞானத்தை அடைந்தார்? மேலும் அவர் எப்படி அழிந்தார்? நான் இவற்றையெல்லாம் நடந்தபடியே அறிய ஆவலாய் இருக்கிறேன். தேவர்களைப் போன்ற அம்மனிதர்களின் செயல்களின் விவரிப்பைக் கேட்பதில் நான் மகிழ்கிறேன்” என்றான்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பரத்வாஜரும், ரைப்பியரும் இரு நண்பர்களாவர். அவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து பெரும் மகிழ்ச்சியுடன் இங்கே வசித்தார்கள். ரைப்பியருக்கு அர்வாவசு, பரவசு என்று இரு மகன்கள் இருந்தனர். ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, பரத்வாஜருக்கு யவக்கிரீ என்ற ஒரே மகன் இருந்தான். பதரத்வாஜர் தவம்பயின்றிருந்த வேளையில் ரைப்பியர் தனது இருமகன்களுக்கும் வேதங்களில் நல்ல நிபுணத்துவத்தைக் கொடுத்தார். ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, சிறுவர்களாக இருந்த பொழுதிலிருந்தே அந்த இருவருக்குள்ளும் {பரத்வாஜருக்கு ரைப்பியருக்கும்} நட்பு ஒப்பற்றதாக இருந்தது. ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, தவம்பயின்ற தனது தந்தை அந்தணர்களால் அசட்டை செய்யப்பட்டதையும், அதே வேளையில் ரைப்பியரையும் அவரது மகன்களையும் {அர்வாவசுவையும், பரவசுவையும்} அவர்கள் {அந்தணர்கள்} நன்கு மதித்தையும் கண்ட யவக்கிரீ மிகவும் துக்கம் கொண்டு, மன வருத்தமடைந்தார். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அதன் பிறகு அவர் {யவக்கிரீ} வேத ஞானத்திற்காகக் கடுந்தவத்தை ஆரம்பித்தார். அவர் தனது உடலை எரியும் நெருப்புக்கு வெளிப்படுத்தினார். கடும் தவம்பயின்று, இந்திரனின் மனதில் துயரத்தை ஏற்படுத்தினார். ஓ யுதிஷ்டிரா, பிறகு இந்திரன் அவரிடம் {யவக்கிரீயிடம்} சென்று, “ஓ தவசியே, எதற்காக நீர் இத்தகு கடும் தவம் இருக்கிறீர்?” என்று கேட்டான். அதற்கு யவக்கிரீ, “தேவர்களில் புகழத்தக்கவனே {இந்திரனே}, எந்த அந்தணனும் அடைய முடியாத வேத ஞானத்தை நான் விரும்புகிறேன். ஓ! பகனை வீழ்த்தியவனே {இந்திரா}, அந்த ஞானத்திற்காகவே நான் இத்தகு கடும் தவம் செய்கிறேன். ஓ! கௌசிகா எனது தவத்தின் சக்தியால் நான் அனைத்து சாத்திரங்களின் ஞானத்தையும் அறிய விரும்புகிறேன். ஓ!தலைவா {இந்திரா}, ஆசிரியர்கள் மூலம் அடையப்படும் வேத ஞானத்திற்கு நீண்ட காலம் பிடிக்கிறது. ஆகையால், (குறுகிய காலத்திற்குள் வேத ஞானம் அடைய) நான் இந்த உயர்ந்த முயற்சியைச் செய்கிறேன்” என்றார் {யவக்கிரீ}. அதற்கு இந்திரன், “ஓ! அந்தணத் தவசியே, நீர் மேற்கொண்டிருக்கும் வழி சரியானதல்ல. ஓ! அந்தணரே, நீர் எதற்காக உம்மையே அழித்துக் கொள்கிறீர்? போய் ஒரு குருவின் வாயிலாக அவற்றைப் படித்துக் கொள்ளும்” என்றான் {இந்திரன்}.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, இப்படிச் சொல்லிவிட்டு, சக்ரன் {இந்திரன்} சென்றுவிட்டான். பிறகு அளவிடமுடியாத சக்தி கொண்ட யவக்கிரீ மீண்டும் தனது கவனத்தைத் தவத்தில் செலுத்தினார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அவரது கடுந்தவங்களை அறிந்த இந்திரன் மீண்டும் பெரும் தாக்கத்திற்கு உள்ளானான். பிறகு வலனைக் கொன்ற தேவனான இந்திரன், மீண்டும் கடுந்தவத்திலிருந்த அந்தப் பெரும் தவசியிடம் வந்து, “நீரும் உமது தந்தையும் வேத ஞானத்தை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்; ஆனால் உமது முயற்சிகள் வெற்றி அடைய முடியாது. இந்த உமது செயல் பரிந்துரைக்கத்தக்கதன்று” என்றான். யவக்கிரீ, “ஓ தேவர்களின் தலைவா {இந்திரா}, நீ எனது விருப்பங்களை நிறைவேற்றவில்லையென்றால், நான் இந்த வேள்வியில் சுடர்விட்டு எரியும் நெருப்பில் எனது அங்கங்களை வெட்டிப் போடுவேன்” என்றார் {யவக்கிரீ}.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அந்த உயர் ஆன்ம தவசியின் தீர்மானத்தை அறிந்த அறிவுநுட்பம் கொண்ட இந்திரன் சிறிது நேரம் சிந்தித்து, அவரது கருத்தை மாற்ற சிறந்த ஓர் உபாயத்தைக் கண்டுபிடித்தான். பிறகு இந்திரன், நூறு வயது கொண்ட ஒரு உறுதியற்ற சுவாசக்கோளாறுடைய ஒரு அந்தண வடிவம் எடுத்தான். பிறகு அவன் {இந்திரன்}, யவக்கிரீ தனது நீர்க்கடனை செலுத்த வரும் பகீரதியின் {கங்கையின்} கரையில் மணலை அள்ளி வீசிக் கொண்டிருந்தான். அந்தணர்களின் தலைவரான யவக்கிரீ தன்னைக் கவனிக்காததைக் கண்ட இந்திரன், அக்கங்கையை மணலால் நிரப்பத் தொடங்கினான். நிறுத்தாமல் கைநிறைய மணலை அள்ளி பகீரதிக்குள் எறிந்து, அந்தத் தவசியின் {யவக்கிரீயின்} கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு அணை கட்டத் தொடங்கினான்.
இந்திரன் அணை கட்டுவதைக் கண்ட தவசிகளில் காளையான யவக்கிரீ சத்தம் போட்டு சிரித்து, “நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய். ஓ! அந்தணா, உனது நோக்கம்தான் என்ன? ஒன்றுக்கும் ஆகாத, இந்தப் பெரும் முயற்சியை நீ ஏன் செய்கிறாய்?” என்று கேட்டார். இந்திரன், “ஓ மகனே, ஒரு தாராளமான வழி வேண்டும் என்பதற்காக நான் கங்கையின் மீது அணை கட்டுகிறேன். (இந்த நதியை) படகில் கடக்க மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்” என்றான். யவக்கிரீ, “ஓ துறவை செல்வமாகக் கொண்டவரே, இந்தப் பெரும்பலம் வாய்ந்த ஊற்றை உம்மால் அணை கட்டித் தடுக்க முடியாது. ஓ அந்தணரே, அனுபவத்திற்கு ஒத்துவராத உமது முயற்சியைக் கைவிடும், அனுபவத்துக்குகந்த வேறு எதையாவது செய்யும்” என்றார். இந்திரன், “ஓ தவசியே, நிச்சயமாகக் கனி தராது என்று தெரிந்தும், வேதங்களின் ஞானத்தை அடைய நீர் செய்யும் தவத்தைப் போலத்தான் நானும் இந்தப் பெரும்பணியைச் செய்கிறேன்” என்றான். யவக்கிரீ, “ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, உனது முயற்சிகளைப் போலவே எனது முயற்சிகள் அனைத்தும் கனியற்றதாகுமென்றால், எது அனுபவத்திற்கு உகந்து வருமோ அதை எனக்குச் செய் {உன்னால் முடிந்ததை எனக்குச் செய்}. நான் மற்ற மனிதர்களை விஞ்சி இருக்கும் வகையில் எனக்கு வரங்களை அருள் செய்” என்று கேட்டார் {பரத்வாஜரின் மகன் யவக்கிரிவர்}.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பிறகு இந்திரன் அந்தப் பெருஞ்சக்தி வாய்ந்த தவசி கேட்ட வரங்களை அளித்தான். பிறகு அவன், “நீர் விரும்பிய படியே, வேதங்களின் ஞானம் உமக்கும் உமது தந்தைக்கும் கிடைக்கும். உமது அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். ஓ யவக்கிரீ, வீட்டிற்குச் செல்லும்” என்றான்.
இப்படித் தனது விருப்பத்தை அடைந்த யவக்கிரீ தனது தந்தையிடம் {பரத்வாஜரிடம்} வந்து, “ஓ! தந்தையே, எனக்கும் உமக்கும் வேதங்கள் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. நான் அனைத்து மனிதர்களை விஞ்சும் வகையில் வரங்களைப் பெற்றிருக்கிறேன்” என்று சொன்னான். பரத்வாஜர், “ஓ மகனே {யவக்கிரிவனே}, நீ விரும்பிய நோக்கங்களை அடைந்ததனால், நீ அகங்காரம் கொள்வாய். நீ அப்படி அகங்காரத்தை அடையும்போது நீ இரக்கமற்று போவாய். அப்படி இரக்கமற்றுப் போவதால், விரைவில் அழிவு உன்னை வந்தடையும். ஓ எனது மகனே {யவக்கிரிவனே}, இது சம்பந்தமாகத் தேவர்கள் ஒரு உபகதையைச் சொல்வார்கள். ஓ மகனே {யவக்கிரிவனே}, பழங்காலத்தில் பாலதி என்ற பெயரில் பெரும் சக்தி கொண்ட ஒரு தவசி வாழ்ந்து வந்தார். தனது பிள்ளையின் இறப்பால் துக்கத்தில் இருந்த அந்த முனிவர் {பாலதி}, தேவர்களைப் போலவே இறவாதவனாக ஒரு மகனை வேண்டி கடும் தவம் செய்தார். அவர் விரும்பியபடி ஒரு மகனையும் அடைந்தார். ஆனால் அவருக்கு {முனிவர் பாலதிக்கு} ஆதரவாக நடந்து கொண்ட தேவர்கள், அவரது மகனை இறவாதவனாக ஆக்கவில்லை. அவர்கள், “இறக்கக்கூடிய ஒரு மனிதன் ஒரு நிபந்தனையின் பேரில் இறவாதவனாக ஆக முடியும். இருப்பினும் உமது மகனின் உயிர், ஏதாவது ஒன்றின் மூலம் பிரிவதாக இருக்க வேண்டும்” என்று கேட்டனர். அதற்குப் பாலதி, : “ஓ தேவர்களின் தலைவா, நித்தியமாக நிலைத்து நிற்கும் இந்த அழிவில்லாத மலைகள் அவன் உயிர் பிரிவதற்கான காரணமாக இருக்கட்டும்” என்று சொன்னார். பிறகு அந்தத் தவசிக்கு {பாலதிக்கு}, மேதாவி என்ற பெயரில் ஒரு மகன் பிறந்தான். அவர் எரிச்சல் மிக்க மனநிலை கொண்டவனாக இருந்தான். அனைத்தையும் (தனது பிறப்பைக் குறித்துக்) கேள்விப்பட்ட அவன் {மேதாவி}, அவனுக்கு அகங்காரம் பெருகி, முனிவர்களை அவமதிக்க ஆரம்பித்தான். முனிவர்களுக்குத் தீங்கிழைத்தவாறே அவன் இந்தப் பூமியைச் சுற்றி வந்தான்.
ஒருநாள் பெரும் சக்தி கொண்டவரும் கற்றறிந்தவருமான தனுஷாக்ஷர் என்ற தவசியை அவன் {மேதாவி} சந்திக்க நேர்ந்தது. மேதாவி அவருக்குத் தீங்கிழைத்தான். அதனால் அந்தத் தவசி {தனுஷாக்ஷர்} “சாம்பலாகப் போ” என அவனைச் {மேதாவியைச்} சபித்தார். இருப்பினும் மேதாவி சாம்பலாகவில்லை. பிறகு தனுஷாக்ஷர், மேதாவியின் உயிருக்குக் காரணமாக இருந்த அந்த மலையை எருமைகளைக் கொண்டு சிதறடித்தார். தனது உயிருக்குக் காரணமான மலையின் அழிவால் அந்தப் பிள்ளையும் {மேதாவியும்} அழிந்து போனான். மேதாவியின் தந்தை {பாலதி} தனது இறந்த மகனை அணைத்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதார். ஓ மகனே, அப்படி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த அந்தத் தவசியிடம் வேதங்களை அறிந்த தவசிகள் என்ன சொன்னார்கள் என்பதைச் சொல்கிறேன் கேள். “எந்த நிபந்தனையின் பேரிலும் {இறக்கக்கூடிய} ஒரு மனிதன், விதியால் நிர்ணயிக்கப்பட்ட முடிவை மீற முடியாது. பார்! தனுஷாக்ஷர் எருமைகளைக் கொண்டே மலைகளைக் கூடப் பிளந்துவிட்டார்.” என்றனர்.
ஆகையால் வரங்களைப் பெற்றுவிட்டோம் என்று அகங்காரம் கொள்ளும் இளந்துறவிகள் குறுகிய காலத்தில் அழிந்து போவார்கள். நீ {யவக்கிரீயே} அவர்களுள் ஒருவனாக ஆகவிடாதே. ஓ எனது மகனே {யவக்கிரீ}, இந்த ரைப்பியர் பெரும் சக்தி வாய்ந்தவர். அவரது பிள்ளைகளும் {அர்வாவசுவும், பரவசுவும்} அவரைப் {ரைப்பியரைப்} போலவே இருக்கின்றனர். ஆகையால் நீ அவரை {ரைப்பியரை} அணுகாமல் எச்சரிக்கையாய் இரு. ஓ எனது மகனே, பெரும் தவசியான ரைப்பியர் எரிச்சல் குணம் கொண்டவர். அவர் கோபப்பட்டால் உனக்குத் தீங்கு நேரும்” என்றார் {பரத்வாஜர்}. யவக்கிரீ, “ஓ தந்தையே {பரத்வாஜரே}, நீர் சொன்னவாறே நான் செய்வேன். அதற்காக நீர் எவ்வகையிலும் வருந்தாதீர். எனது தந்தையைப் போலவே, எனக்கு ரைப்பியரும் மரியாதைக்கு உரியவரே!” என்றான். அப்படி இனிமையான வார்த்தைகளைத் தனது தந்தையிடம் கூறிய யவக்கிரீ, எதற்கும் யாருக்கும் அஞ்சாமல், முனிவர்களைப் புண்படுத்துவதில் இன்பம் கொண்டு திரிய ஆரம்பித்தார்.” என்றார் {லோமசர் யுதிஷ்டிரனிடம்}.
யவக்கிரீயின் அழிவு! – வனபர்வம் பகுதி 136-யவக்கிரீ, ரைப்பியரின் மருமகளும், பரவசுவின் மனைவியுமான பெண்ணின் மீது மையல் கொள்வது; அவள் யவக்கிரீயை ஏமாற்றிவிட்டு, ரைப்பியரிடம் வந்து விஷயத்தைச் சொல்வது; ரைப்பியர் தனது முடியினால் உண்டான ராட்சசன் மூலம் யவக்கிரீயைக் கொன்றது…
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, “அச்சமற்று உலவிக்கொண்டிருந்த யவக்கிரீ, சித்திரை மாதத்தின் ஒரு நாளில் ரைப்பியரின் ஆசிரமத்தை அணுகினார். ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, பூத்துக்குலுங்கும் மரங்களுடன் இருந்த அந்த அழகிய ஆசிரமத்தில், அவர், கின்னரப் பெண்மணி போல மெல்ல நடந்து கொண்டிருந்த ரைப்பியரின் மருமகளைக் காண நேர்ந்தது. ஆசையால் தனது உணர்வுகளை இழந்த யவக்கிரீ, அந்த நாணம் கொண்ட பெண்ணிடம் சிறிதும் வெட்கமில்லாமல், “நீ என்னோடு இணைந்திருப்பாயா?” என்று கேட்டார். அவரது {யவக்கிரீயின்} இயல்பை அறிந்து, சாபத்திற்கு அஞ்சி, அதே வேளையில் ரைப்பியரின் சக்தியையும் நினைத்துப் பார்த்து, அவரிடம் “நான் சம்மதிக்கிறேன்” என்று சொன்னாள் அவள் {ரைப்பியரின் மருமகள்}.
ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, பிறகு அவரை {யவக்கிரீயை} தனிமையில் அழைத்துச் சென்று சங்கிலியால் பிணைத்தாள். ஓ! எதிரிகளை வெல்பவனே {யுதிஷ்டிரா}, ஆசிரமத்திற்குத் திரும்பிய ரைப்பியர், பரவசுவின் மனைவியான தனது மருமகள் கண்ணீருடன் இருப்பதைக் கண்டார். ஓ! யுதிஷ்டிரா, அவர் {ரைப்பியர்} அவளைச் சமாதானப் படுத்தி, அவளது துயரத்திற்கான காரணத்தைக் கேட்டார். அதன்பேரில், அந்த அழகிய மங்கை, யவக்கிரீ தன்னிடம் பேசியதையும், பதிலுக்கு புத்திசாலித்தனமாக தான் செய்தவற்றையும் சொன்னாள். யவக்கிரீயின் தீய நடத்தையைக் கேட்ட அந்தத் தவசி {ரைப்பியர்} கோபத்தால் எரிந்தார்.
எளிதில் கோபமடையக்கூடிய மனநிலை கொண்ட அந்தப் பெரும் முனிவர் {ரைப்பியர்}, இதனால் ஏற்பட்ட உந்துதலால், தனது ஜடா முடியில் இருந்த ஒரு முடியைப் பிடுங்கி, புனிதமான மந்திரங்களைச் சொல்லி அதை வேள்வித்தீயில் காணிக்கையாகக் கொடுத்தார். இதன் காரணமாக அந்த நெருப்பில் இருந்து அவரது மருமகளை ஒத்த உருவம் கொண்ட ஒரு பெண் வெளிப்பட்டாள். பிறகு அவர் மேலும் ஒரு முடியை அவரது ஜடா முடியில் இருந்து பிடுங்கி மீண்டும் அதை வேள்வி நெருப்பில் காணிக்கைக் கொடுத்தார். இப்போது காண்பதற்குப் பயங்கராமன கடும் விழிகள் கொண்ட ஒரு ராட்சசன் வெளிவந்தான். பிறகு அந்த இருவரும் {அந்த அழகிய பெண்ணும், ராட்சசனும்} ரைப்பியரிடம், “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். அதற்கு அந்தக் கோபக்கார முனிவர் {ரைப்பியர்}, “நீங்கள் சென்று யவக்கிரீயைக் கொல்லுங்கள்” என்று சொன்னார். “அப்படியே செய்கிறோம்” என்று சொன்ன அவர்கள், யவக்கிரீயைக் கொல்லும் நோக்குடன் அங்கிருந்து சென்றனர்.
அந்தப் பெரும் இதயம் கொண்ட முனிவர் {ரைப்பியர்} படைத்த அந்த அழகிய பெண், தனது அழகால் யவக்கிரீயை மயக்கி, அவரிடம் இருந்த கமண்டலத்தைப் {sacred water pot} பிடுங்கிக் கொண்டாள். பிறகு அந்த ராட்சசன், ஓங்கிய ஈட்டியுடன் {அல்லது சூலத்துடன்}, கமண்டலம் இழந்ததால் சுத்தமற்றிருந்த யவக்கிரியின் மேல் பாய்ந்தான். ஓங்கிய ஈட்டியுடன் தன்னை நோக்கி வரும் ராட்சசனைக் கண்ட யவக்கிரீ, திடீரென எழுந்து தடாகத்தை நோக்கி ஓடினார். ஆனால் அத்தடாகம் நீர் வற்றிப் போய் இருப்பதைக் கண்டார். மேலும் பல நதிகளுக்கு ஓடினார். ஆனால் அவையும் வறண்டிருப்பதையே கண்டார்.
ஈட்டி {[அ] சூலம்} தாங்கிய ராட்சசனால் மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்ட யவக்கிரீ பயத்தால் தனது தந்தையின் {பரத்வாஜரின்} அக்னிஹோத்ர அறைக்குள் நுழைய முற்பட்டார். ஆனால் அவர் {யவக்கிரீ}, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சூத்திரனான ஒரு குருட்டுக் காவற்காரணால் தடுக்கப்பட்டார். அவர் {யவக்கிரீ} அந்த மனிதனிடம் {சூத்திர சாதியைச் சேர்ந்த குருட்டுக் காவற்காரனிடம்} பிடிபட்ட நிலையில், அந்த வாசலிலேயே நின்றார். யவக்கிரீ இப்படிச் சூத்திரனால் பிடிபட்டதை அறிந்த ராட்சசன், தனது ஈட்டியை அவர் {யவக்கிரீ} மீது வீசினான். இதனால் இதயம் துளைக்கப்பட்ட அவர் {யவக்கிரீ}, அங்கேயே இறந்து கீழே விழுந்தார். யவக்கிரீயைக் கொன்ற அந்த ராட்சசன் ரைப்பியரிடம் திரும்பி, அந்த முனிவரின் {ரைப்பியரின்} அனுமதியுடன் அந்தப் பெண்ணுடன் {ரைப்பியர் உருவாக்கிய பெண்ணுடன்} வாழ ஆரம்பித்தான்.
பரத்வாஜரின் பிள்ளைப் பாசம்! – வனபர்வம் பகுதி 137-விறகு சேகரித்து வந்த முனிவர் பரத்வாஜர் தனது மகனின் இறப்பை அறிவது; மகனின் பிரிவைத் தாளாது அழுதுப் புலம்புவது; பரத்வாஜர் ரைப்பியருக்கு சாபமிடுவது; தனது மகனின் உடலை எரியூட்டி, தானும் நெருப்பில் விழுவது..
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, விறகுகள் சேகரித்து அந்த நாளின் சடங்குக் கடமைகளை நிறைவேற்றிய பரத்வாஜர் தனது ஆசிரமத்திற்குத் திரும்பினார். அவரது மகன் {யவக்கிரீ} இறந்துவிட்டதால், வழக்கம்போல அவரை {பரத்வாஜரை} வரவேற்கும் வேள்வி நெருப்பு அன்று அவரை வரவேற்கவில்லை. அக்னிஹோத்திரத்தில் இருந்த மாற்றத்தைக் கண்ட அந்தப் பெரும் முனிவர் {பரத்வாஜர்}, அங்கு அமர்ந்திருந்த சூத்திரனான அந்தக் குருட்டுக் காவற்காரனிடம், “ஓ! சூத்திரா, ஏன் இன்று என்னைக் கண்ட பிறகு நெருப்புகள் மகிழவில்லை? நீயும் உற்சாகமாக இருப்பதாகத் தெரியவில்லையே. எனது ஆசிரமம் நன்றாக இருக்கிறதா {அனைத்தும் நன்றாக இருக்கின்றனவா}? அற்ப புத்தி கொண்ட எனது மகன் {யவக்கிரீ} ரைப்பிய முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றிருக்க மாட்டான் என்று நம்புகிறேன். ஓ! சூத்திரா, எனது கேள்விகள் அனைத்திற்கும் விரைவாகப் பதில் சொல். எனது மனம் ஐயம் கொள்கிறது” என்று கேட்டார் {பரத்வாஜர்}.
அதற்கு அந்தச் சூத்திரன், “அற்ப புத்தி கொண்ட உமது மகன் {யவக்கிரீ} ரைப்பிய முனிவரிடம் சென்றதால், ஒரு ராட்சசனால் கொல்லப்பட்டு இங்கே (தரையில்) நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடக்கிறார். ஈட்டி {சூலம்} தாங்கிய ராட்சசனால் தாக்கப்பட்ட அவர், இந்த அறைக்குள் நுழைய முற்பட்ட போது, நான் எனது கரங்களால் அவரது வழியைத் தடுத்தேன். சுத்தமற்ற நிலையில் நீரை எடுக்க விரும்பிய அவர் நம்பிக்கையற்று நின்ற போது, கரங்களில் ஈட்டியுடன் இருந்த உணர்ச்சி வேகமுள்ள ராட்சசனால் கொல்லப்பட்டார்” என்றான்.
அந்தச் சூத்திரனிடம் இருந்து இந்தப் பெருந்துயரத்தைக் கேட்ட பரத்வாஜர் மிகவும் துன்புற்ற தனது மகனை {யவக்கிரீயைக்} கட்டி அணைத்துக் கொண்டு புலம்பி அழுதார். அவர் {பரத்வாஜர்}, “ஓ எனது மகனே, எந்த அந்தணனாலும் அறியப்படாத வேதங்களை நீ அறிய வேண்டும் என்று, அந்தணர்களின் நன்மைக்காக அல்லவா நீ தவம் பயின்றாய். அந்தணர்களிடம் உனது நடத்தை நன்றாகவே இருந்தது. அனைத்து உயிர்களுக்கும் தீங்கு செய்யாதவனாக இருந்தாய். ஆனால் ஐயோ! (கடைசியில்} முரட்டுத்தனம் என்ற குறையைக் கொண்டாய். ஓ! எனது மகனே, ரைப்பியனின் வசிப்பிடத்தை அணுகாதே என்று நான் உன்னைத் தடுத்தேனே; ஆனால், மரணத் தேவன் அல்லவா உன்னை அவ்விடம் அழைத்துச் சென்றிருக்கிறான்.
நான் முதிர்ந்த வயதினன் என்பதை அறிந்தும், நீ {யவக்கிரீ} எனது ஒரே மகன் என்பதை அறிந்தும் அந்தத் தீய மனம் கொண்ட மனிதன் {ரைப்பியன்} கோபத்துக்கு இடம் கொடுத்தானே. ரைப்பியனின் ஏற்பாட்டால் அல்லவா நான் எனது குழந்தையை இழந்தேன். ஓ! எனது மகனே, நீ இல்லாத உலகில் நான் இனி வாழ மாட்டேன். நான் எனது உயிரை விடுகிறேன். ஆனால், நான் ஒன்றைச் சொல்கிறேன். குறுகிய காலத்திற்குள் ரைப்பியனின் மூத்த மகன், அவனை {ரைப்பியரைக்} கொல்வான். துயரத்தை அறியாமல் மகிழ்ச்சியோடு வாழ்வதால் {பிள்ளையின் மரணத்தைக் காணாததால்}, பிள்ளைகளே பெறாதவர்கள் அருளப்பட்டவர்களே. தனது பிள்ளை இறந்த துக்கம் தாளாமல், தனது ஆருயிர் தோழனைச் சபிக்கும் ஒரு மனிதனைவிடத் தீய மனிதன் வேறு எவன் இருக்க முடியும்! எனது மகன் இறந்ததைக் கண்டதால், நான் எனது ஆருயிர் நண்பனைச் சபித்து விட்டேன்! இவ்விதமான துயரை இவ்வுலகத்தில் என்னைத் தவிர வேறு யார் அனுபவிப்பான்?” என்று புலம்பி அழுதார். இப்படி நீண்ட நேரம் புலம்பி அழுத பரத்வாஜர் தனது மகனின் {யவக்கிரீயின்} உடலுக்கு எரியூட்டினார். பிறகு, தழல்விட்டு முழுதும் எரிந்த நெருப்புக்குள் அவரும் புகுந்தார்” என்றார் {லோமசர்}.
முயற்சியின்றி பெற்ற கல்வி பயன்தராது! – வனபர்வம் பகுதி 138-ரைப்பியரை மான் என்று நினைத்த பராவசு அவரைக் கொல்வது; பராவசு தம்பியான அர்வாவசுவை ஏமாற்றிக் காட்டுக்கு அனுப்புவது; அர்வாவசு கடுந்தவம் இருந்து சூரிய வெளிப்பாடை அடைந்து, ரைப்பியரையும், பரத்வாஜரையும், யவக்கிரீயையும் உயிர்மீட்பது; தனக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்று அக்னியிடம் கேட்ட யவக்கிரீ…
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அதேநேரத்தில், ரைப்பியரின் எஜமானனும் {வேள்வியின் எஜமானனும், ரைப்பியரின் சீடனுமான என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.} நல்ல அதிர்ஷ்டம் வாய்ந்தவனும் பெரும் பலம் வாய்ந்த மன்னனுமான பிருகத்யுன்மனன், ஒரு வேள்வியைச் செய்தான். அந்தப் புத்திகூர்மை கொண்ட ஏகாதிபதி {பிருகத்யும்னன்}, ரைப்பியரின் மகன்களான அர்வாவசுவையும், பராவசுவையும் தனக்கு {பிருகத்யும்னனுக்கு} உதவியாக வேள்வியில் ஈடுபடுத்தினான்.
ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அந்த இருவரும் {அர்வாவசுவும், பராவசுவும்} தங்கள் தந்தையிடம் {ரைப்பியரிடம்} அனுமதி பெற்றுக் கொண்டு {பிருகத்யும்னனின்} வேள்வியை நடத்த சென்றனர். ரைப்பியரும் பராவசுவின் மனைவியும் ஆசிரமத்தில் இருந்தனர். இப்படியே செல்கையில் ஒரு நாள், தனது மனைவியைக் காண விரும்பிய பராவசு, தனியாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது கருப்பு மான்தோலால் தன்னை மூடியிருந்த தனது தந்தையை {ரைப்பியரை} வனத்தில் கண்டான். அந்த இரவு மிகுந்த இருளாக இருந்தது. களைப்பால் குருடாகியிருந்த பராவசு அந்த ஆழ்ந்த கானகத்தில் தனது தந்தையை அங்குமிங்கும் திரியும் மானாக நினைத்தான். தவறுதலாக அவரை {தந்தை ரைப்பியரை} மானாக நினைத்துக் கொண்ட பராவசு, எந்த உள்நோக்கமும் இல்லாமல், தனது பாதுகாப்புக்காக, தனது தந்தையைக் கொன்றான்.
ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, பிறகு (தனது தந்தையின்) இறுதிச் சடங்குகளை முடித்து, வேள்விக்குத் திரும்பி தனது சகோதரனிடம், “உன்னால் இந்தக் காரியத்தைத் {இந்த வேள்வியைத்} துணையில்லாமல் செய்ய முடியாது. நான் மானென்று நினைத்து நமது தந்தையைக் கொன்றுவிட்டேன். ஓ! சகோதரா {அர்வாவசுவே}, அந்தணரைக் கொன்ற பாவம் போக நீ எனக்காக நோன்பிரு. ஓ முனிவனே {அர்வாவசுவே}, நான் எந்தத் துணையும் இல்லாமல் இந்த வேள்வியை முடிப்பேன்” என்றான் {பராவசு}. அர்வாவசு, “கொடைநிரம்பிய பிருகத்யும்னனின் இந்த வேள்வியை நீ நடத்து; எனது புலன்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, நீ அந்தணரைக் கொன்ற பாவத்துக்காக {பிரம்மஹத்தி தோஷம் நீங்க}, உனக்காக நான் நோன்பிருப்பேன்” என்றான் {அர்வாவசு}”
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அந்தணரைக் கொன்ற பாவத்திற்கான நோன்பை முடித்த முனிவன் அர்வாவசு வேள்விக்குத் திரும்பினான். தனது சகோதரன் {அர்வாவசு} வருவதைக் கண்ட பராவசு, வன்மத்துடன் கூடிய அடைபட்ட குரலுடன், பிருகத்யும்னனிடம், “ஓ மன்னா, அந்தணரைக் கொன்ற இவன் வேள்வியில் நுழையாதவாறு பார்த்துக் கொள். அந்தணரைக் கொன்றவனின் பார்வை கூட உனக்குத் தீங்கை இழைத்துவிடலாம்” என்றான். ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இதைக் கேட்ட அம்மன்னன் உடனடியாகத் தனது சேவகர்களை அழைத்துக் (அர்வாவசுவை வெளியேற்றுமாறு} கட்டளையிட்டான்.
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அப்படி அவன் {அர்வாவசு} வெளியேற்றப்பட்ட போது, அந்தச் சேவகர்கள் அவனை {அர்வாவசுவை} தொடர்ச்சியாக “அந்தணரைக் கொன்றவனே” என்று சொன்னதால், அர்வாவசு ஒரு முறைக்குப் பலமுறை, “நான் எந்த அந்தணரையும் கொல்லவில்லை” என்றான். தான் தனக்காக {பிரமஹத்தி தீர} அந்நோன்பைச் செய்யவில்லை என்றும், தனது சகோதரனே {பராவசுவே} அப்பாவத்தை இழைத்தவன் என்றும், தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். கோபத்துடன் இவ்வார்த்தைகளைச் சொல்லி, சேவகர்களைக் கண்டித்த அந்தக் கடுந்தவம் கொண்ட அந்தண முனிவன் {அர்வாவசு}, பிறகு அமைதியாக வனத்திற்குள் சென்றான். அங்கே அந்தப் அந்தண முனிவன் {அர்வாவசு} கடுமையான நோன்புகள் இருந்து சூரியனின் பாதுகாப்பை வேண்டினான். அப்போது சூரிய வழிபாடு குறித்த கல்வி அவனுக்கு வெளிப்பாடானது. அது {சூரிய கல்வி} வெளிப்பட்டு அவனை {அர்வாவசுவை} அடைந்தது. (வேள்வி நெய்யில்) முதற்பங்கைப் பெறும் சூரியன் அவனுக்கு எதிரில் உருவமெடுத்து வந்தான்.”
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அர்வாவசுவின் செயல்களில் தேவர்களும் திருப்திகொண்டிருந்தனர். அவர்கள் அவனை {அர்வாவசுவை} (பிருகத்யும்னனின்) வேள்வியில் முதன்மைப் புரோகிதராக ஈடுபடுத்தி, பராவசுவை வேள்வி செய்வதிலிருந்து நீக்கினர். பிறகு அக்னியும், பிற தேவர்களும் அர்வாவசுவுக்கு வரங்களை அளித்தனர். மேலும் அவன் {அர்வாவசு} அவனது தந்தை {ரைப்பியர்} உயிர்மீள வேண்டும் என்று வேண்டினான். மேலும் தனது சகோதரனின் பாவம் விலக்கப்பட வேண்டும் என்றும், தனது தந்தை தான் கொல்லப்பட்டதை மீண்டும் நினைக்கக்கூடாது என்றும், பரத்வாஜரும், யவக்கிரீயும் மீண்டும் உயிர்பெற வேண்டும் என்றும், சூரியன் சம்பந்தமான வெளிப்பாடு (பூமியில்) புகழடைய வேண்டும் என்று வேண்டினான். அந்தத் தேவனும் “அப்படி ஆகட்டும் என்று சொல்லி, மேலும் வரங்களை அளித்தான்.
ஓ! யுதிஷ்டிரா, அதன்பேரில் அனைவரும் உயிர்மீண்டனர். அப்போது யவக்கிரீ அக்னியிடமும் பிற தேவர்களிடமும், “நான் அனைத்து வேதங்களின் ஞானத்தையும் பெற்றேன். மேலும் தவமும் பயின்றேன். இருப்பினும், ஓ இறவாதவர்களின் {தேவர்களின்} தலைவா {அக்னியே}, ரைப்பியரால் எப்படி என்னை இத்தகைய வழியில் கொல்ல முடிந்தது?” என்று கேட்டான். அதற்குத் தேவர்கள், “ஓ யவக்கிரீ, நீ நடந்தகொண்டதைப் போல மீண்டும் நடந்து கொள்ளாதே. நீ கேட்பது சாத்தியமே, ஏனென்றால் நீ உனது முயற்சியின்றி, ஒரு குருவின் உதவியின்றி வேதம்பயின்றாய். ஆனால் இந்த மனிதனோ {ரைப்பியரோ}, அனைத்துத் தொல்லைகளையும் தாங்கி, தனது நடத்தையால் குருவைத் திருப்தி செய்து, அற்புதமான வேதங்களைப் பெரும் முயற்சியுடன் குருவிடம் இருந்து நீண்ட காலத்திற்குப் பிறகு பெற்றார்” என்றனர்.”
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, “யவக்கிரீயிடம் இதைச் சொன்ன அவர்கள் {தேவர்கள்} அனைவரும் இந்திரனைத் தலைமையாகக் கொண்டு சொர்க்கம் திரும்பினர். ஓ! யுதிஷ்டிரா, அனைத்துப் பருவங்களிலும் பூத்துக்குலுங்கும் மலர்களையும் கனிகளையும் தாங்கியிருக்கும் மரங்கள் நிறைந்த இந்தப் புண்ணியமான ஆசிரமம் அந்தத் தவசியினுடையதே {யவக்கிரீயுடையதே}. ஓ மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரா}, இந்த இடத்தில் வசித்தால், உனது பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபடுவாய்” என்றார் {லோமசர்}.
பாண்டவர்கள் கைலாயம் ஏற முற்படுவது! – வனபர்வம் பகுதி 139-லோமசரின் வழிகாட்டுதலின் படி யுதிஷ்டிரன் பல மலைகளையும் அற்புத தீர்த்தங்களையும் கடந்தது.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, ஓ மன்னா, இப்போது நீ உசீரவிஜம், மைநாகம், ஸ்வேதம் மற்றும் கால மலைகளைத் தாண்டியிருக்கிறாய். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, ஓ! பரதனின் வழித்தோன்றல்களில் காளையே, இப்போது உனக்கு முன்பாக ஏழு கங்கைகள் பாய்ந்தோடுகின்றன. இவ்விடம் புண்ணியம் நிறைந்த புனிதமான இடமாகும். இங்கே இடைவெளி இல்லாமல் அக்னி சுடர்விட்டு எரிகிறது. மனுவின் எந்த மகனும் {எந்த மனிதனும்} இந்த அற்புதக் காட்சியைக் காண இயன்றதில்லை. ஆகையால், ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, இதோ இந்தத் தீர்த்தங்களைத் தீவிரமானக் கவனம் கொண்ட மனதுடன் பார். நாம் கால மலையைக் கடந்து வந்துவிட்டதால் தேவர்களின் விளையாட்டு மைதானத்தில் அவர்களுடைய கால்தடங்களைப் பார்ப்பாய். நாம் இப்போது, யக்ஷர்களாலும், யக்ஷர்களின் மன்னர்களான மாணிபத்திரன், மற்றும் குபேரன் ஆகியோர் வசிக்கும் வெள்ளைப் பாறை போல இருக்கும் இந்த மந்தர மலையில் ஏறுவோம்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, எண்பதாயிரம் {80,000} பேர் கொண்ட கந்தர்வப்படையும், அதைப்போல நான்கு மடங்குக்கும் அதிகமான எண்ணிக்கையில், கைகளில் ஆயுதங்களுடனும் பல்வேறு உருவங்களிலும் இருக்கும் கிம்புருஷர்களும், யக்ஷர்களும், யக்ஷ மன்னன் மாணிபத்திரனுக்காகக் காத்திருக்கின்றனர். இப்பகுதிகளில் அவர்களது சக்தி அதிகமாக இருக்கும். வேகத்தில் அவர்கள் காற்றைப் போல இருக்கிறார்கள். சந்தேகமற அவர்களால் தேவர்களின் தலைவனையும் {இந்திரனையும்} அவனது ஆசனத்தில் இருந்து இறக்க முடியும். அப்படிப்பட்ட அவர்களால் பாதுகாக்கப்பட்டும், ராட்சசர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் இருக்கும் இந்த மலைகள் அணுகுவதற்கு மிகவும் அரிதானது {ஏறுவதற்குக் கடினமானது}. ஆகையால், ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, உனது நினைவுகளைக் கவனமாக ஒருமுகப்படுத்து. அது ஒருபுறம் இருக்க, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, ராட்சசர்களின் குடும்பங்களும், குபேரனின் கடுமையான அமைச்சர்களும் இங்கே இருக்கின்றனர். நாம் அவர்களையெல்லாம் சந்திக்க நேரிடும். ஆகையால், ஓ! குந்தியின் மகனே, உனது சக்திகளைக் குவித்துக் கொள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கைலாச மலை ஆறு யோஜனை உயரம் கொண்டது. அதில் {கைலாச மலையில்} மிகப்பெரிய இலந்தை மரம் ஒன்று இருக்கிறது.
ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, எண்ணிலடங்கா யக்ஷர்களும், ராட்சசர்களும், கின்னரர்களும், நாகர்களும், சுபர்ணர்களும், கந்தர்வர்களும் குபேரனின் அரண்மனைக்குச் செல்லும் இந்த வழியாகச் செல்கின்றனர். ஓ! மன்னா, என்னாலும், பலம்வாய்ந்த பீமசேனனாலும் காக்கப்படும் நீ, உனது சுய தவ அறத்தாலும், சுய கட்டளையாலும், நீ இன்றும் அவர்களோடு கலக்க வேண்டும். மன்னன் வருணனும், போர்க்களங்களை வெல்லும் யமனும், கங்கையும், யமுனையும், இந்த மலையும், மருதர்களும், அசுவினி இரட்டையர்களும், அனைத்து நதிகளும், தடாகங்களும் உன்னைக் காக்கட்டும். ஓ! ஒளிவீசுபவனே {யுதிஷ்டிரனே}, தேவர்களிடமும், அசுரர்களிடமும், வசுக்களிடமும் உனக்குப் பாதுகாப்பு கிடைக்கட்டும். ஓ! கங்கா தேவி, இந்திரனுக்குப் புனிதமான பொன் மலையிலிருந்து உனது கர்ஜனை எனக்குக் கேட்கிறது. ஓ! மங்கள தேவியே இந்த மலைப்பாங்கான பகுதிகளில் அனைவராலும் வழிபடப்படும் அஜமீட குலத்தைச் சேர்ந்த இந்த மன்னனை {யுதிஷ்டிரனைக்} காப்பாற்று. ஓ! மலையின் (இமயத்தின்) மகளே, இந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, இந்த மலைப்பாங்கான பகுதிக்குள் நுழையப்போகிறான். எனவே அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} உன் பாதுகாப்பை வழங்கு” என்றார் {லோமசர்}
“இப்படி நதியிடம் {கங்கையிடம்} பேசிய லோமசர் யுதிஷ்டிரனிடம், “எச்சரிக்கையாக இரு” என்றார்.
யுதிஷ்டிரன் , “முன்னெப்போதும் இல்லாத வகையில் லோமசர் குழம்புகிறார். ஆகையால், எல்லோரும் கிருஷ்ணையை {திரௌபதியைக்} காப்பாற்ற வேண்டும். நாம் கவனக்குறைவாக இருக்க முடியாது. இந்த இடத்தை அணுகுவது கடினம் என்று லோசமருக்கு நிச்சயமாகத் தெரிகிறது. எனவே, இங்கே நமது செயல்கள் மிகுந்த தூய்மையுடன் இருக்க வேண்டும்” என்று அனைவரிடமும் சொன்னான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு அவன் {யுதிஷ்டிரன்} தனது தம்பியான பெரும் வீரம் கொண்ட பீமனிடம், “ஓ பீமசேனா, கிருஷ்ணையை {திரௌபதியைக்} கவனமாகக் காத்து வா. அர்ஜுனன் அருகில் இருந்தாலும், தொலைவில் இருந்தாலும், ஆபத்துக் காலங்களில் கிருஷ்ணை {திரௌபதி} உன்னுடைய பாதுகாப்பை மட்டுமே எப்போதும் நாடுகிறாள்” என்றான் {யுதிஷ்டிரன்}.
பிறகு அந்த உயரான்ம ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} இரட்டையர்களான நகுலன் மற்றும் சகாதேவனை அணுகி, அவர்களது தலையை முகர்ந்து, அவர்கள் உடலைத் தடவி கண்களில் நீருடன், “அச்சப்பட வேண்டாம். எனினும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்” என்றான் {யுதிஷ்டிரன்}.
அனைவரையும் சுமப்பேன்” என்றான் பீமன்! – வனபர்வம் பகுதி 140-பீமன், திரௌபதி, சகாதேவன் மற்றும் பலரைத் திரும்பிச் செல்லுமாறு யுதிஷ்டிரன் கேட்டுக் கொள்வது; கடக்க முடியாத இடங்களில் திரௌபதியையும், நகுல சகாதேவனையும் தான் சுமப்பதாக பீமன் சொல்வது; நான் நடப்பேன் என்று திரௌபதி சொல்வது; அர்ஜுனனை நினைத்து யுதிஷ்டிரன் வருந்துவது…
யுதிஷ்டிரன், “ஓ! விருகோதரா {பீமா}, இந்த இடத்தில் பலமும் சக்தியும் வாய்ந்த கண்ணுக்குத் தெரியாத ஆவிகள் இருக்கின்றன. எனினும், நாம் அவற்றை நமது தவம் மற்றும் அக்னிஹோத்திரங்களின் பலன்களால் அவற்றைக் கடந்து செல்லலாம். ஓ! குந்தியின் மகனே {பீமா}, ஆகையால், நீ உனது ஆற்றல்களைப் பெருக்கி, பசி மற்றும் தாகத்தைப் போக்கு. மேலும் ஓ! விருகோதரா {பீமா} உனது வலிமையையும் புத்திசாலித்தனத்தையும் அடைய நடவடிக்கை எடு.
ஓ! குந்தியின் மகனே {பீமனே}, அந்தத் தவசி (லோமசர்) கைலாச மலையைக் குறித்து என்ன சொன்னார் என்பதைக் கேட்டாய். எனவே, கவனமாகச் சிந்தித்த பிறகு, இந்த இடத்தைக் கிருஷ்ணை {திரௌபதி} எப்படிக் கடப்பாள் என்பதை உறுதி செய். அல்லது ஓ! அகன்ற கண் கொண்ட பலம்வாய்ந்த பீமா, நீ சகாதேவனையும், நமது அனைத்து தேரோட்டிகளையும், சமையற்காரர்களையும், பணியாட்களையும், தேர்களையும், குதிரைகளையும், பயணத்தால் களைப்படைந்திருக்கும் அந்தணர்களையும் இங்கிருந்து அழைத்துச் செல். நானும் நகுலனும் கடும் தவங்களைப் பயிலும் தவசியான லோமசருடன் நோன்புகள் நோற்று, அதிகச் சுமையில்லாதவர்களாக முன்னேறுகிறோம். நீ எனது வருகையை எதிர்பார்த்து, எச்சரிக்கையுடன் கங்கையின் தோற்றவாயில், திரௌபதியைப் பாதுகாத்துக் கொண்டு நான் வரும் வரை காத்திரு” என்றான்.
அதற்குப் பீமன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பரதகுலத்தோன்றலே {யுதிஷ்டிரரே}, இந்த அருளப்பட்ட இளவரசி {திரௌபதி}, துன்பத்தாலும் துயரத்தாலும் புண்பட்டுப் பாதிக்கப்பட்டிருந்தாலும், வெண்குதிரைகளைக் கொண்டவனைக் {அர்ஜுனனைக்} காணும் நம்பிக்கையில் எளிதாக முன்னேறுவாள். போரில் பின்வாங்காத உயர் ஆன்ம அர்ஜுனனைக் காணாது, நீர் அடையும் மனவருத்தம் மிகப்பெரியதே. ஓ! பரதரே {யுதிஷ்டிரரே}, நீர் என்னையோ, சகாதேவனையோ, கிருஷ்ணையையோ {திரௌபதியையோ} காணவில்லையென்றால் உமது மனவருத்தும் நிச்சயம் இன்னும் அதிகரிக்கும். நமது பணியாட்களுடனும், தேரோட்டிகளுடனும், சமையற்காரர்களுடனும், உமது கட்டளையின் பேரில் செல்லும் இன்னும் மற்றவர்களுடனும் அந்தணர்கள் திரும்பட்டும். ராட்சசர்களால் பாதிக்கப்பட்டும், எவரும் அணுக முடியாத இந்த முரட்டுத்தனமான மலைப்பாங்கான பகுதிகளில் உம்மை விட்டுவிட்டு நான் செல்ல மாட்டேன். ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, உயர்ந்த நற்பேறு பெற்ற இந்த இளவரசி {திரௌபதி}, தனது தலைவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறாள். ஆகையால் நீரில்லாமல் அவள் வரமாட்டாள். சகாதேவன் எப்போதும் உமக்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறான், அவனும் தனது பாதச்சுவடுகளைத் தேடி பின்வாங்க மாட்டான். அவனது மனநிலையை நான் அறிவேன். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, ஓ பலம்வாய்ந்த ஏகாதிபதி, நாங்கள் அனைவரும் சவ்யசச்சினைக் {அர்ஜுனனைக்} காண ஆவலுடன் இருக்கிறோம். ஆகையால் நாம் அனைவரும் ஒன்றாகவே செல்லலாம். நமது தேர்கள் மூலமாகப் பல குகைகளையுடைய இந்த மலையை நாம் அடைய முடியவில்லையென்றால், கால்நடையாகச் செல்லலாம். ஓ மன்னா, நீர் வருந்தாதீர், நான் பாஞ்சாலன் மகளை {திரௌபதியை}, அவள் நடக்க இயலாத பகுதிகளில் தூக்கிக் கொள்வேன். ஓ மன்னா, நான் இதுகுறித்துத் தீர்மானித்து விட்டேன். ஆகையால் உமது மனம் கவலை கொள்ள வேண்டாம். கடக்க முடியாத பகுதிகளில் தங்கள் தாயின் மகிழ்ச்சிக்குக் காரணமான இந்த இளம் உடல் கொண்ட இரட்டை வீரர்களையும் {நகுல சகாதேவர்களையும்} நான் சும்பபேன்” என்றான் {பீமன்}.
யுதிஷ்டிரன் {பீமனிடம்}, “ஓ பீமா, சிறப்புமிக்கப் பாஞ்சாலியையும், இந்த இரட்டையர்களையும் சுமப்பதாக நீ பேசுவதால், உனது பலம் அதிகரிக்கட்டும். நீ அருளப்பட்டிரு. இத்தகு வீரம் வேறு எந்த ஒரு மனிதனிடமும் கிடையாது. உனது பலம், புகழ், தகுதி, மதிப்பு ஆகியவை பெருகட்டும்! ஓ நீண்ட கரமுடையவனே, கிருஷ்ணையையும் {திரௌபதியையும்}, நமது தம்பிகளான இரட்டையர்களையும் சுமக்க முன்வருவதால், உனக்குக் களைப்போ தோல்வியோ எப்போதும் ஏற்படாது” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு அழகான கிருஷ்ணை {திரௌபதி} புன்னகையுடன், “ஓ பாரதக் குலத்தோன்றலே {யுதிஷ்டிரரே}, என்னால் நடக்க முடியும். எனவே நீ என்னைக் குறித்து வருத்தப்படாதீர்” என்றாள்.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, “கந்தமாதன மலையை அடைவது ஒருவரின் தவத்தால் மட்டுமே முடியும். எனவே, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, நாம் அனைவரும் தவம்பயில்வோம். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நகுலா, சகாதேவா, பீமசேனா, ஓ குந்தியின் மகன்களே {பாண்டவர்களே} நீங்களும் நானும் வெண்குதிரைகளைக் கொண்டவனைக் {அர்ஜுனனைக்} காண்போம்” என்றார்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே தங்களுக்குள் பேசிக் கொண்டு, சுபாகுவின் அழகான பரந்த நாட்டைக் கண்டனர். இமயத்தின் அருகில் இருந்த அந்த நாட்டில் குதிரைகளும் யானைகளும், கிராதர்களும், தங்கணர்களும், நூற்றுக்கணக்கான புளிந்தர்களையும் {குளிந்தர்கள்} இருந்தனர். அந்தப் பகுதி தேவர்கள் அடிக்கடி வரும்பகுதியாகவும், அற்புதங்கள் நிறைந்த பகுதியாகவும் இருந்தது. புளிந்தர்களுக்குத் தலைவனான மன்னன் சுபாகு, அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து வணங்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றான். இப்படி மரியாதையுடன் வரவேற்கப்பட்டு, வசதியாக அந்த இடத்தில் தங்கிய பிறகு, ஆகாயத்தில் பளிச்சென மின்னிய இமய மலையை நோக்கிய பயணத்தை அவர்கள் தொடர்ந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, தங்கள் பணியாட்களான இந்திரசேனன் மற்றும் பிறரையும், சமையற்காரர்களையும், கண்காணிப்பாளர்களையும், திரௌபதியின் பணியாட்களையும் மற்றும் அனைத்து செல்வங்களையும் அந்தப் பெரும் ரதவீரர்களான குருக்களின் மைந்தர்கள் புளிந்தர்களின் தலைவனிடம் {சுபாகுவிடம்} ஒப்படைத்துவிட்டு, அந்நாட்டில் இருந்து புறப்பட்டு, கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} எச்சரிக்கையாக முன்னேறினர். அவர்கள் அனைவரும் அர்ஜுனனைக் காணும் நோக்கத்தோடு மகிழ்ச்சியாகச் சென்றனர்.
யுதிஷ்டிரன் சொன்னான், “ஓ! பீமசேனா, ஓ! பாஞ்சாலி, இரட்டையர்களே எனது வார்த்தைகளைக் கேளுங்கள். கடந்த பிறவிகளில் செய்யப்பட்ட செயல்கள் (அதற்குண்டான பலனைக் கொடுக்காமல்) அழிந்து போவதில்லை. பாருங்கள்! எப்படிப்பட்ட நாம் இப்படிக் கானகவாசிகளானோம். தனஞ்சயனைக் {அர்ஜுனனைக்} காண்பதற்காகக் களைத்துப் போய்த் துயரத்தில் இருக்கும் நாம், ஒருவரை ஒருவர் தாங்கிக் கொண்டு, இந்தக் கடக்கமுடியாத இடங்களைக் கடப்போமாக. பஞ்சுப் பொதியை எரிக்கும் நெருப்பு போல இதுவே என்னை எரிக்கிறது. ஓ வீரா {பீமா}, நான் எனது பக்கத்தில் தனஞ்சயனை {அர்ஜுனனைக்} காணவில்லை. நான் எனது தம்பிகளுடன் அவனைக் காண்பதற்காகக் கானகத்தில் வசித்து வருகிறேன். யக்ஞசேனிக்கு {திரௌபதிக்கு} ஏற்பட்ட பெருத்த அவமானத்தின் நினைவும் என்னை எரித்துக் கொண்டிருக்கிறது. ஓ! விருகோதரா {பீமா}, வலிமையான வில்லும், ஒப்பற்ற சக்தியும் கொண்டவனும், நகுலனுக்கு மூத்தவனுமான சிறப்புமிக்கப் பார்த்தனை {அர்ஜுனனை} நான் காணவில்லை. ஓ! விருகோதரா {பீமா}, இதற்காகவே நான் வருந்துகிறேன்.
உண்மையில் உறுதி கொண்ட வீரனான அர்ஜுனனைக் காண்பதற்காக, கடந்த ஐந்து வருடங்களாக நான் பலதரப்பட்ட தீர்த்தங்களையும், அழகிய கானகங்களையும், தடாகங்களையும் கடந்தேன். இருப்பினும் நான் இன்னும் அவனைச் சந்திக்கவில்லை. ஓ! விருகோதரா {பீமா}, இதற்காகவே நான் வருந்துகிறேன். கருநீல நிறமும், நீண்ட கரங்களும், சிம்மம் போன்ற இடுப்பும் கொண்ட குடகேசனை {அர்ஜுனனை} நான் காணவில்லை. ஓ! விருகோதரா {பீமா}, இதற்காகவே நான் வருந்துகிறேன்.
ஆயுதங்களை அறிந்தவனும், போரில் நிபுணனும், வில்லாளிகளில் ஒப்பற்றவனுமான குருக்களில் முதன்மையானவனை {அர்ஜுனனை} நான் காணவில்லை.ஓ! விருகோதரா, இதற்காகவே நான் வருந்துகிறேன்.
உத்திரம் நட்சத்திரத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவனும், பகைவர்களுக்கு மத்தியில் பிரளய கால யமன் போலத் திரிபவனும், மதப்பெருக்குள்ள யானை போன்றவனும், சிங்கம் போன்ற தோள்களை உடையவனும், சக்ரனுக்கு நிகர்த்த வீரமும் சக்தியும் கொண்டவனும், இரட்டையர்களுக்கு {நகுல சகாதேவனுக்கு} மூத்தவனும், வெள்ளைக் குதிரைகள் கொண்டவனும், ஒப்பற்ற வீரனும், பலமான வில்லைக் கொண்டவனும் பிருதையின் {குந்தியின்} மகனுமான தனஞ்சயனை {அர்ஜுனனைக்} காணாமல் நான் துயரத்தில் இருக்கிறேன். ஓ! விருகோதரா {பீமா}, இதற்காகவே நான் வருந்துகிறேன்.
குறுகிய மனம் கொண்டவனால் {துரியோதனனால்} அவமதிக்கப்பட்ட போதும் , மன்னிக்கும் இயல்பு கொண்டவன் அவன் {அர்ஜுனன்} நேர்மையானவர்களுக்குப் பாதுகாப்பையும் நன்மையையும் கொடுப்பவன். ஆனால் தீயன செய்ய முயலும் கடினமான நபர்களுக்குத் தனஞ்சயன் {அர்ஜுனன்} கடும் விஷத்தைப் போன்றவனாவான். அவன் இந்திரனைப் போன்றவனாவான்.
அளவில்லா ஆன்மாவும், பெரும் பலமும் கொண்ட பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்}, பகைவரும் வீழ்ந்து போகும்போது கருணையும் பாதுகாப்பும் அளிப்பவனாவான். அவன் {அர்ஜுனன்} நமக்கு அனைவருக்கும் புகலிடமாவான். அவன் {அர்ஜுனன்} எதிரிகளைப் போரில் நசுக்குவான். அவன் எவ்வளவு நிதியையும் திரட்டும் சக்தி படைத்தவன் . அவனே நமது மகிழ்ச்சிக்குக் காரணமானவன். அவனின் {அர்ஜுனனின்} வீரத்தாலேயே நாம் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} இழந்த அத்தனை செல்வத்தையும் அடைந்தோம். ஓ! வீரா {பீமா}, அவனது பலத்தாலேயே மூன்று உலகமும் கொண்டாடும்படியான ஒரு சபா மண்டபத்தைக் கட்டினோம். ஓ! பாண்டுவின் மகனே {பீமா}, வீரத்தில் அந்தப் பல்குனன் {அர்ஜுனன்} வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} நிகரானவன், போரில் அவன் ஒப்பற்றவன். இணையில்லாதவன். கார்த்தவீரியனைப் போன்றவன். ஐயோ! ஓ! பீமா நான் அவனைக் காணவில்லை. பராக்கிரமத்தில் அவன் மிகுந்த பலசாலியான சங்கர்ஷணருக்கும் (பலராமன்) வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்} நிகரானவன். கரங்கள் மற்றும் ஆன்ம பலத்தில் அவன் புரந்தரனுக்கு {இந்திரனுக்கு} இணையானவன். வேகத்தில் அவன் காற்றைப் போன்றவன். கருணையில் அவன் நிலவைப் போன்றவன். கோபத்தில் அவன் யமனைப் போன்றவன்.
ஓ! பலம்வாய்ந்த கரம் கொண்டவனே {பீமா}, மனிதர்களில் போர்க்குணமிக்கப் புலி போன்ற அவனைக் {அர்ஜுனனைக்} காணும் நோக்கத்தோடு நாம் கந்தமாதன மலையை அடைவோம். அங்கே கொண்டாடப்படும் இலந்தை மரத்தின் அருகே நரன் மற்றும் நாராயணரின் ஆசிரமும் இருக்கிறது. அது யக்ஷர்கள் வசிக்கும் இடமாகவும் இருக்கிறது. அந்த மலைகளில் சிறந்த மலையை நாம் காண்போம். கடும் தவம்பயின்று காலாலேயே நடந்து சென்று ராட்சசர்களால் பாதுகாக்கப்படும் குபேரனின் அழகிய தடாகத்திற்குச் செல்வோம். ஓ! விருகோதரா {பீமா} அந்த இடத்தில் நாம் வாகனத்தில் செல்ல முடியாது. ஓ! பரதனின் மகனே {பீமா}, பேராசை கொண்டவர்களோ, கொடுமையானவர்களோ அல்லது எளிதில் கோபம் கொள்பவர்களோ அந்த இடத்தை அடைய முடியாது. ஓ! பீமா, அர்ஜுனனைக் காண்பதற்காகக் கடும் நோன்புகள் கொண்ட இந்த அந்தணர்களுடன் சேர்ந்து நாமும் நமது வாள்களைக் கட்டிக் கொண்டும், விற்களைத் தாங்கிக் கொண்டும் அங்கே செல்வோம். சுத்தமற்றவர்களையே, ஈக்களும், கொசுக்களும், புலிகளும், சங்கங்களும், ஊர்வனவும் சந்திக்கும். ஆனால் சுத்தமானவர்கள் அவற்றைச் சந்திக்க முடியாது. எனவே, நாம் கட்டுக்கோப்பாக, நமது புலன்களில் இருந்து விடுபட்டு, தனஞ்சயனை {அர்ஜுனனைக்} காண விரும்பி கந்தமாதன மலைக்குச் செல்வோம்” என்றான் {யுதிஷ்டிரன்}.
நரகாசுரன் வதமும்! வராக அவதாரமும்! – வனபர்வம் பகுதி 141-லோமசர் பாண்டவர்களுக்கு நரகாசுரன் கதையையும், பூமி பாதாளத்துக்குள் மூழ்கியதையும், அதை விஷ்ணு பன்றி உரு கொண்டு மீட்ட கதையையும் சொல்வது…
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! பாண்டுவின் மகன்களே, பல மலைகளையும், நதிகளையும், நகரங்களையும், கானகங்களையும், அழகிய தீர்த்தங்களையும் நீங்கள் கண்டீர்கள். புனிதமான நீர்நிலைகளையும் உங்கள் கரங்களால் தொட்டிருக்கிறீர்கள். இப்போது இந்த வழி தெய்வீக மலையான மந்தரத்திற்குச் செல்கிறது. ஆகையால் கவனத்துடனும், உள் அடக்கத்துடனும் இருங்கள். தகுதியான செயல்கள் புரிந்த தெய்வீக முனிவர்கள் மற்றும் தேவர்களின் வசிப்பிடங்களுக்குச் செல்ல இருக்கிறீர்கள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இங்கேதான் தேவர்கள் மற்றும் தவசிகளின் கூட்டத்தால் போற்றப்படும் அழகான பெரும் நதி {நதியான அலகாநந்தை [அலகை]} இலந்தை மரம் இருக்கும் இடத்தை நோக்கிப் பாய்கிறது. உயர் ஆன்மா கொண்டவர்களான வைஹாயசர்கள், வாலஹில்யர்கள் மற்றும் வலிமைமிக்க ஆன்மா கொண்ட கந்தர்வர்கள் ஆகியோர் அடிக்கடி அந்த இடத்திற்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். சாமம் பாடும் தவசிகளான மரீசி, புலகஹர், பிருகு மற்றும் அங்கீரஸ் ஆகியோர் இந்த இடத்தில் தான் சாம வேதத்தை முழங்கினர். இங்கேதான் மருதர்களுடன் கூடிய தேவர்களின் தலைவன் {இந்திரன்} தனது தினசரி வழிபாடுகளைச் செய்கிறான். சத்யஸ்களும், அசுவினிகளும் அவனுக்குச் {இந்திரனுக்குச்} சேவை செய்கின்றனர். சூரியனும், சந்திரனும், கோள்களும், மற்ற ஒளிரும் தேவர்களும் இரவும் பகலும் இந்நதியை நாடுகின்றனர். ஓ! பெரும்நற்பேறு பெற்ற ஏகாதிபதியே, காளையைத் தனது குறியாகக் கொண்ட இந்த உலகத்தைக் காக்கும் மகாதேவன், கங்கையின் தோற்றுவாயில் {கங்கா துவாரத்தில்} இந்நதியின் பெரும் வீழ்ச்சியைத் தனது தலையில் தாங்கினான். ஓ! குழந்தைகளே, ஆறு பண்புகளைக் கொண்ட இந்தத் தேவியை {கங்கையை} அணுகி, மனச்செறிவுடன் இவளைத் தொழுது கொள்ளுங்கள்”
உயர் ஆன்மா கொண்ட லோமசரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டுவின் மைந்தன் {யுதிஷ்டிரன்}, ஆகாயத்தில் பாய்ந்தோடிய அந்நதியை {கங்கையை} மரியாதையுடன் வழிபட்டான். பாண்டுவின் பக்திமிக்க மகன்கள் அவளை {கங்கையைப்} போற்றி வழிபட்ட பிறகு முனிவர்களுடன் சேர்ந்து தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். அந்த மனிதர்களில் சிறந்தவர்கள் தொலைவில் மேரு மலையைப் போன்று பரந்த அளவிலான வெள்ளைப் பொருட்கள், எல்லாப் பக்கங்களிலும் சிதறிக் கிடப்பதைக் காண நேரந்தது. பாண்டுவின் மகன்கள் தன்னை இது குறித்துக் கேட்பார்கள் என்று உணர்ந்த தர்க்கமறிந்த லோமசர், “ஓ! பாண்டுவின் மகன்களே, ஓ! மனிதர்களில் சிறந்தவர்களே, உங்களுக்கு முன்பாக, பரந்த அளவில் ஒரு மலையைப் போலவும், அழகிய கைலாசக் குன்று போலவும் நீங்கள் காணும் இவை வலிமைமிக்கத் தைத்தியனான நரகனின் {நரகாசுரனின்} எலும்பு குவியலாகும். இவை இம்மலையை அடைந்ததால் இம்மலையைப் போலவே காணப்படுகிறது. தேவர்களின் நன்மைக்காக நித்திய தெய்வமும், பரமாத்மாவுமான விஷ்ணுவால் அந்தத் தைத்தியன் {நரகாசுரன்} கொல்லப்பட்டான். இந்திரனின் இடத்தை, கடும் தவத்தின் மூலமும் வேத ஞானத்தின் மூலமும் அடைவதற்காக, அந்த வலிமைமிக்க மனம் கொண்டவன் (அந்தப் பேய் {அசுரன் நரகாசுரன்}) பத்தாயிரம் {10,000} வருடங்களுக்குக் கடும் தவமிருந்தான். அவனது துறவினாலும், கரங்களின் பலம் மற்றும் வலிமையாலும் அவன் வெல்லப்பட இயலாத அளவு வளர்ந்து, எப்போதும் (இந்திரனுக்கு) தொல்லை கொடுத்தான்.
ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, அவனது {நரகனின்} பலத்தையும், தவத்தையும், ஆன்ம நோன்புகளையும் கண்ட இந்திரன் பயத்தில் மூழ்கினான். {ஆகையால்}, அவன் நித்திய தெய்வமான விஷ்ணுவை மனதால் நினைத்தான். எங்குமிருக்கும் அந்த அருள் நிறைந்த அண்டத் தலைவன் {விஷ்ணு}, அவன் {இந்திரன்} முன்பாகத் தோன்றினான். தவசிகளும் தேவர்களும் விஷ்ணுவைத் தங்கள் வழிபாடுகளால் துதி செய்தனர். அழகிய சுடரால் ஒளியூட்டப்பட்ட ஆறு பண்புகள் கொண்ட அக்னியும் அவனது {விஷ்ணுவின்} முன்னிலையில் தனது பிரகாசத்தை இழந்தான். தனது முன்னிலையில் தெய்வமான விஷ்ணுவைக் கண்ட, வஜ்ரதாரியான தேவர்களின் தலைவன் {இந்திரன்}, உடனடியாகத் தனது தலையைத் தாழ்த்தி வணங்கி, தனது பயத்திற்குக் காரணத்தை விஷ்ணுவிடம் உரைத்தான். அதற்கு விஷ்ணு, “ஓ! சக்ரா {இந்திரா}, தைத்தியர்களின் தலைவனான நரகனைக் குறித்து நீ அஞ்சுகிறாய் என்பதை நான் அறிவேன். தனது தவ வெற்றியின் மூலம் அவன் இந்தப் பதவிக்குக் குறி வைக்கிறான். ஆகையால், அவன் தவத்தில் வெற்றிக் கண்டிருந்தாலும், நீ நிம்மதி கொள்ளும்படிக்கு, நிச்சயமாக நான் அவனது உடலில் இருந்து ஆன்மாவைக் கொய்வேன். தேவர்களின் தலைவா {இந்திரா} சற்று நேரம் பொறுப்பாயாக” என்றான். பிறகு வலிமையின் எல்லையான விஷ்ணு தனது கரத்தால் (தாக்கி) அவனது (நரகனின்) புலன்களை இழக்கச் செய்தான். அவன் {நரகாசுரன்} இந்தப் பூமியின் மீது மலைகளின் ஏகாதிபதி (இடியால்) அடிபட்டு விழுவது போல விழுந்தான். இந்த அற்புதத்தால் கொல்லப்பட்ட அவனது எலும்புகள் இந்த இடத்தில் குவிந்திருக்கின்றன. விஷ்ணுவின் மற்றொரு செயலும் இங்கே வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு முறை இந்த முழு உலகமும் பாதாளப் பகுதிகளுக்குள் {கடலுக்குள்} மூழ்கித் தொலைந்து போனது. பிறகு அவள் {பூமி}, ஒற்றைக் கொம்பு {தந்தம் = tusk} கொண்ட பன்றியின் உருவில் {வராக அவதாரம்} இருந்த அவனால் {விஷ்ணுவால்} மேலே உயர்த்தப்பட்டாள்” என்று சொன்னார் {லோமசர்}.
யுதிஷ்டிரன் {லோமசரிடம்}, “ஓ! வழிபடத்தகுந்தவரே, தேவர்களுக்குத் தலைவனான விஷ்ணு நூறு யோஜனைகள் ஆழம் மூழ்கிப் போன பூமியை எப்படி உயர்த்தினார் என்பதைக் குறிப்பாக உரைப்பீராக. படைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தாங்கும் பெரும் நற்பேறு பெற்ற பூமாதேவி, நிலையாக நின்று அனைத்து வகையான பயிர்களையும் விளையச் செய்பவள் ஆயிற்றே. அப்படிப்பட்ட அவள், யாருடைய சக்தியால் நூறு யோஜனைகளுக்குக் கீழே மூழ்கடிக்கப்பட்டாள்? எந்தச் சூழ்நிலையில் இப்படிப்பட்ட பெருஞ்செயல் பரமாத்மாவல் நிகழ்த்தப்பட்டது? ஓ! இரு பிறப்புக் கொண்ட குலத்தின் {அந்தணர்களின்} தலைவரே {லோமசரே}, நடந்தவாறே அவை முழுமையும் அறிய விரும்புகிறேன். நிச்சயமாக அது உம்மால் அறியப்பட்டிருக்கிறது” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, நீ (உரைக்குமாறு) என்னைக் கேட்டுக் கொண்ட கதையை நான் முழு நீளத்தில் சொல்கிறேன் கேள். ஓ! குழந்தாய், பழங்காலத்தில், கிருத யுகத்தில் ஒரு பயங்கரமான காலத்தில், யமனின் கடமைகளை நித்தியமான ஆதி தேவனே மேற்கொண்டான். ஓ! வீழாதவனே, தேவர்களுக்குத் தேவன் யமனின் வேலைகளைச் செய்தபோது, பிறப்புகள் எப்போதும் போல இருந்தாலும் இறப்புகள் நேரவில்லை. பிறகு பறவைகளும் விலங்குகளும், பசுக்களும், ஆடுகளும், மான்களும், அனைத்து ஊனுண்ணும் விலங்குகளும் பல்கிப் பெருகின. ஓ! மனிதர்களில் புலியே, எதிரிகளை வீழ்த்துபவனே, மனிதகுலமும் நீரூற்று போல ஆயிரக்கணக்கில் பெருகியது. ஓ! எனது மகனே {யுதிஷ்டிரா}, உயிரினங்களின் எண்ணிக்கை பயங்கரமாகப் பெருகி, அதிக பாரத்தால் தள்ளாடிய பூமி, நூறு யோஜனைகள் ஆழத்திற்கு மூழ்கியது. அவளது அங்கங்கள் அனைத்தும் வலியால் துன்பப்பட்டு, தீவிர அழுத்தத்தால் புலன்கள் இழந்து துயரத்தில் இருந்த பூமா தேவி, தேவர்களில் முதன்மையான நாராயணனின் பாதுகாப்பை நாடினாள். பூமி, ஓ! ஆறு பண்புகளைக் கொண்டவரே {நாராயணரே}, உமது அருளாலேயே, நான் இவ்வளவு நீண்ட நெடுங்காலத்திற்கு நிலையாக இருந்தேன். ஆனால் இப்போது எனக்குச் சுமை அதிகமாகிவிட்டது. என்னால் இனிமேலும் தாங்க முடியாது. ஓ! புகழத்தக்கவரே, எனது பாரத்தைக் குறைப்பதே உமக்குத் தகும். நான் உமது பாதுகாப்பைக் கோருகிறேன். ஓ! தலைவா, எனக்கு அருள் செய்யும்” என்று கேட்டாள். அவளது இவ்வார்த்தைகளைக் கேட்ட, ஆறு பண்புகள் கொண்ட அந்த நித்திய தலைவன் அன்பாதரவும் பரிவும் கொண்ட தெளிவான எழுத்துகளாலான வார்த்தைகளை உரைத்தான். விஷ்ணு, “ஓ! அனைத்து வளங்களையும் தாங்கும் பாதிக்கப்பட்ட பூமியே {பூமாதேவியை}, அஞ்சாதே. உனது பாரம் குறையும்படி நான் செயல்புரிவேன்” என்றான்.”
“லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “இப்படி மலைகளைக் காது வளையங்களாகக் கொண்ட பூமியை {பூமாதேவியை} அனுப்பிய அவன் {விஷ்ணு}, திடீரென அதிகப் பிரகாசத்துடன் கூடிய ஒற்றைக் கொம்பு கொண்ட பன்றியுரு கொண்டான். தனது சிவந்த விழிகளால் பயங்கரத்தை உண்டாக்கி, சுடரும் தனது மேனியில் இருந்து நெருப்பை வெளியிட்டுக் கொண்டு, அந்தப் பகுதியில் பெரும் உருவம் கொண்டான். ஓ! வீரனே {யுதிஷ்டிரா}, பிறகு வேதங்களில் நிறைந்திருப்பவன் {விஷ்ணு} பிரகாசிக்கும் தனது ஒற்றைத் தந்தத்தால் பூமியைத் தாங்கிக் கொண்டு, அவளை நூறு யோஜனைகள் உயர்த்தினான். அவளை {பூமியை} அப்படி உயர்த்திய போது பெரும் அதிர்வு ஏற்பட்டது, அனைத்து தேவர்களும், துறவு பூண்ட தவசிகளும் கூட அதனால் நடுங்கினர். சொர்க்கமும், வானமும், ஏன் பூமியும் கூட ஓ! ஐயோ! என்ற ஆச்சரியக் குறிகளால் நிரம்பின. தேவர்களோ அல்லது மனிதர்களோ யாரும் அமைதியாக இருக்க இயலவில்லை. எண்ணிலடங்கா தேவர்கள் முனிவர்களுடன் சேர்ந்து, சுய ஒளியில் எரிந்து கொண்டிருந்த பிரம்மனிடம் சென்றனர். பிறகு அனைத்துயிர்களின் செயலுக்கும் சாட்சியான தேவர்களின் தலைவன் {இந்திரன்}, கூப்பிய கரங்களுடன் பிரம்மனை அணுகி, “ஓ! தேவர்களின் தலைவா {பிரம்மாவே}, அசையும் மற்றும் அசையாத உயிர்களும் அடங்கிய படைக்கப்பட்ட அனைத்துயிர்களும் நடுங்கிப் போயுள்ளன. அவர்கள் அமைதியற்றிருக்கின்றனர். ஓ! தேவர்களின் தலைவா {பிரம்மனே}, கடல்களும் அமைதியாக இல்லை. முழுப் பூமியும் நூறு யோஜனைகள் கீழ் சென்றுள்ளது. இதற்கு யாது காரணம்? யாருடைய ஆதிக்கத்தால் மொத்த அண்ட மும் கொந்தளித்திருக்கிறது? தயைகூர்ந்து இவை அனைத்தையும் எங்களுக்கு விளக்கும். நாங்கள் அனைவரும் குழம்பிப் போயுள்ளோம்” என்று கேட்டான் {இந்திரன்}.
அதற்குப் பிரம்மன் {இந்திரனிடம்}, “இறவாதவர்களே {தேவர்களே}, எக்காரணத்திற்காகவும், இடத்திற்காகவும் அசுரர்களின் மீது நீங்கள் கொண்டுள்ள அச்சத்தை ஊக்கப்படுத்தாதீர்கள். சொர்க்கத்தின் இந்த நடுக்கும், எங்கும் நிறைந்த, அழியா ஆன்மாக் கொண்ட நித்தியமான பரமாத்மாவின் ஆதிக்கத்தால் நிகழ்த்தப்பட்டது. அந்தப் பரமாத்மாவான விஷ்ணு நூறு யோஜனைகளுக்கு மூழ்கிப் போன பூமியை உயர்த்தினான். இந்த நடுக்கம், பூமி உயர்வதால் ஏற்படுகிறது. இதை அறிந்து கொண்டு உங்கள் சந்தேகங்களை விலக்கிக் கொள்ளுங்கள்” என்றான். தேவர்கள், “பூமியை உயர்த்திய அவர் {விஷ்ணு} எங்கே? ஓ! ஆறு பண்புகளைக் கொண்டவரே, அந்த இடத்தை எங்களுக்குச் சொல்லும். நாங்கள் அங்கே செல்வோம்” என்றனர். பிரம்மன், “நீங்கள் செல்லுங்கள், உங்களுக்கு நன்மை உண்டாகட்டும். நீங்கள் நந்தனத்தில் ஓய்வெடுக்கும் அவனை {விஷ்ணுவைக்} காண்பீர்கள். அங்கே வழிபடத்தக்க சுபர்ணன் {கருடன்} உங்களுக்குத் தெரிவான். பூமி உயர்த்தப்பட்ட பிறகு, யாரால் பூமி வெளிப்பட்டதோ, அந்தப் பரம்பொருள், அனைத்தையும் உட்கொள்ளும் பிரளய கால நெருப்பு போல எரிந்து கொண்டு பன்றியின் உருவில் இருக்கிறான். அவனது {விஷ்ணுவின்} மார்பில் ஸ்ரீவத்சம் என்ற ரத்தினம் காணப்படும், அழிவறியா அப்பரம்பொருளைக் காணுங்கள்” என்றான் {பிரம்மன்}.”
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பிறகு தேவர்கள், பெருந்தகப்பனைத் {பிரம்மனைத்} தலைமையாகக் கொண்டு, எல்லையற்ற அப்பரம்பொருளிடம் வந்தனர். பின் அவனது புகழைக் கேட்ட பிறகு, அவனிடம் பிரியாவிடை பெற்று, எங்கிருந்து வந்தனரோ அங்கேயே சென்றனர்”
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஜனமேஜயா, இந்தக் கதையைக் கேட்ட அனைத்துப் பாண்டவர்களும், காலந்தாழ்த்தாமல் விரைவாக லோமசர் காட்டிய வழியில் முன்னேறினர்”.
வன்காற்றும்! பெருமழையும்!! – வனபர்வம் பகுதி 142-கந்தமாதன மலையை நோக்கிப் புறப்பட்ட பாண்டவர்கள் நடுவழியில் வன்காற்றிலும், பெருமழையிலும் சிக்கிக் கொண்டு தனித்தனியாகப் பதுங்கியிருந்ததும், காற்றும் மழையும் ஓயந்த பிறகு மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கியதும்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ மன்னா {ஜனமேஜயா}, அளவிடமுடியாத சக்தி கொண்ட, வில்லாளிகளில் முதன்மையானவர்களான அவர்கள் {பாண்டவர்கள்}, முழுவதும் நீட்டி இழுக்கப்பட்டு நாணேற்றப்பட்ட விற்களைத் தாங்கிக் கொண்டும், அம்பறாத்தூணிகள் மற்றும் கணைகளைத் தாங்கிக் கொண்டும், உடும்புத்தோலாலான விரலுறைகளைத் தரித்துக் கொண்டும், வாட்களோடும், அந்தணர்களில் சிறந்தவர்களை உடனழைத்துக் கொண்டு, பாஞ்சாலியுடன் {திரௌபதியுடன்} கந்தமாதனத்தை நோக்கிச் சென்றார்கள். அவர்கள் தங்கள் வழியில், தேவர்களும், முனிவர்களும் அடிக்கடி வந்து போகும், பல தடாகங்களையும், நதிகளையும், மலைகளையும், கானகங்களையும், மலையுச்சிகளில் அகன்று விரிந்த தங்கள் நிழல்களைப் பரப்பும் மரங்களையும், அனைத்துக் காலங்களின் கனிகளுடன் பூத்துக் குலுங்கும் மரங்கள் நிறைந்த இடங்களையும் கண்டனர். தங்கள் மனங்களை உள்ளடக்கி, கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே உண்ட அந்த வீரர்கள், பல்வேறு வகையான விலங்குகளைக் கண்டு கொண்டே கொடும்பாறைகள் நிறைந்த கடினமான, முரட்டுத்தனமான பாதைகளைக் கடந்து சென்றனர். இப்படியே அந்த உயர் ஆன்மா உடையவர்கள், கின்னரர்கள் மற்றும் அப்சரசுகள் அடிக்கடி வந்து போகும் இடமும் முனிவர்களும், சித்தர்களும், தேவர்களும் வசிக்கும் இடமுமான அந்த மலையின் {கந்தமாதனம்} சமீபத்தை அடைந்தனர்.
ஓ! மனிதர்களின் தலைவா, அந்த வலிமைமிக்க வீரர்கள் அந்தக் கந்தமாதன மலையை அடைந்த போது, அங்கே ஆவேசமான காற்று எழுந்து கனமான மழை பொழிந்தது. இதன் காரணமாக உலர்ந்த இலைகளுடன் கூடிய தூசிப்படலம் மேகமாகத் திடீரென எழுந்து பூமியையும், காற்றையும் வானத்தையும் மூடியது. ஆகாயம் இப்படிப் புழுதியால் மூடிய போது, (பாண்டவர்கள்) யாரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவோ, பேசிக்கொள்ளவோ இயலவில்லை. இருளால் அடைபட்ட கண்களுடனும், பாறைகளைத் தூக்கிய காற்றால் தள்ளப்பட்டும், இருந்த அவர்களால் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள முடியவில்லை. பிறகு காற்றினால் முறிக்கப்பட்டுத் தரையில் விழும் மரங்களால் பெரும் சத்தம் உண்டாயிற்று. வன்காற்றால் திசைதிருப்பப்பட்ட அவர்கள், “வானமே இடிந்து விழுகிறதோ; அல்லது பூமியோ மலைகளோ வெடிக்கின்றனவோ” என்று நினைத்தார்கள்.
அந்த வன்காற்றுக்குப் பயந்த அவர்கள் வழியோரத்தில் இருக்கும் மரங்களையும், எறும்புப் புற்றுகளையும், நிலக்குடைவுகளையும் {மேடு பள்ளங்களையும்} கைகளால் தேடி உணர்ந்து ஆங்காங்கு பதுங்கினார்கள். வலிமைமிக்கப் பீமசேனன் கைகளில் வில்லுடன் கிருஷ்ணையைத் {திரௌபதியைத்} தாங்கிப் பிடித்தபடி ஒரு மரத்தினடியில் நின்றான். நீதிமானான யுதிஷ்டிரன் தௌமியருடன் சேர்ந்து பெருங்காட்டில் பதுங்கினான். புனித நெருப்பைச் சுமந்த சகாதேவன் பாறைக்கிடையில் பதுங்கினான். நகுலனுடன் சேர்ந்து லோமசர் மற்றும் பெரும் தவம் பயின்ற பிற அந்தணர்கள் பயத்தில் ஆளுக்கொரு மரத்திற்கடியில் நின்றனர். காற்றுத் தணிந்து, புழுதி அடங்கியதும் அங்கே அடர்த்தியான நீர் {பெரிய நீர்த்திவலை} கொண்ட பெருமழை பொழிந்தது. தொடர்ந்து வஜ்ரம் வீசப்பட்டது போன்ற ஒரு பேரோலி சடசடவெனக் கேட்டது. விரைவாக மின்னிய மின்னல் அருள் நிறைந்த மேகங்களுடன் தனது விளையாட்டை ஆரம்பித்தது. வேகமான காற்றின் துணையுடன் மழை இடைவெளியில்லாமல் எல்லாப்புறங்களையும் நிரப்பியபடி பொழிந்தது.
ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, அங்கே சுற்றிலும் சேறுடன் கலங்கலாக நுரை பொங்கும் பெரும் ஆறுகள் ஓடத் தொடங்கின. அவை {அந்நதிகள்} மிகப்பெரும் நீர்த்தொகுதிகளாகப் பரந்து விரிந்து நுரை தள்ளியபடி பயங்கர ஒலியுடன் மரங்களை வேருடன் அகற்றி விரைந்து சென்றன. ஓ பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா} அந்தப் பேரொலி நின்று, காற்றும் தணிந்த பிறகு, அவர்கள் அனைவரும் தங்கள் பதுங்கிடங்களில் இருந்து எச்சரிக்கையுடன் வெளிவந்து ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். பிறகு அந்த வீரர்கள் கந்தமாதன மலையை நோக்கிப் புறப்பட்டனர்.
யுதிஷ்டிரன் அழுகை! – வனபர்வம் பகுதி 143-கடும் பாதைகளைக் கடந்து வந்த திரௌபதி மயங்கி விழுவது; பாண்டவர்கள் அதிர்ச்சியுறுவது; யுதிஷ்டிரன் அழுது புலம்புவது; பிறகு பீமன் யுதிஷ்டிரனின் கட்டளையின்பேரில் கடோத்கசனை வரவழைப்பது..
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பாண்டுவின் உயர்ஆன்ம மகன்கள் {பாண்டவர்கள்} இரண்டு மைல்கள் தூரம் முன்னேறுவதற்குள், கால்நடையாகச் செல்லும் பயணத்திற்குப் பழக்கப்படாத திரௌபதி விழுந்தாள். பாஞ்சாலனின் {துருபதனின்} அப்பாவி மகள் {திரௌபதி} இந்தத் துன்பத்தால் ஏற்பட்ட களைப்பினாலும், தனது அதீத மென்மையாலும் மயங்கினாள். ஒன்றுக்கொன்று நெருக்கத்துடன் யானையின் துதிக்கையைப் போன்று இருந்த தனது தொடைகளை ஒரு ஆதரவுக்காக பற்றிக் கொண்டிருந்தவள், நடுங்கியவாறு வாழை மரம் விழுவதைப் போலத் திடீரென விழுந்தாள். அந்த அழகானவள் {திரௌபதி} ஒடிந்த கொடி போல விழுவதைக் கண்ட நகுலன் முன்னே ஓடி வந்து அவளைத் தாங்கிப் பிடித்தான். அவன் {நகுலன்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பாஞ்சாலன் மகளான இந்தக் கரிய விழியாள் {திரௌபதி}, களைப்பால் தரையில் விழுந்துவிட்டாள். எனவே, ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரரே}, நீர் இவளைக் கவனியும். துன்புறத்தகாதவளும் மெல்ல நடப்பவளுமான இந்த மங்கை {திரௌபதி} இப்படிப்பட்ட கடும் நிலைகளை அடைய நேரிட்டது. பயணக் களைப்பால் இவள் {திரௌபதி} மிகுந்த துன்பத்தை அடைந்திருக்கிறாள். ஓ! வலிமைமிக்க மன்னா {யுதிஷ்டிரரே}, எனவே நீர் இவளைத் தேற்றும்” என்றான் {நகுலன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நகுலனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னனும் {யுதிஷ்டிரனும்}, பீமனும், சகாதேவனும் மிகுந்த துக்கத்துடன் அவளை {திரௌபதியை} நோக்கி விரைவாக ஓடி வந்தனர். பலமற்று, முகம் வாடியிருக்கும் அவளைக் கண்ட குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, அவளை {திரௌபதியை} வாரி மடியில் எடுத்துக் கொண்டு புலம்ப ஆரம்பித்தான். யுதிஷ்டிரன், “வசதிக்குப் பழக்கப்பட்ட இவள் {திரௌபதி}, நன்றாகப் பாதுகாக்கப்பட்டு, படுக்கையில் அற்புதமான விரிப்புகள் கொண்ட அறைகளில் தூங்க வேண்டிய இந்த அழகானவள் {திரௌபதி}, இப்படித் தரையில் விழுந்து கிடக்கிறாளே! ஐயோ! அனைத்து அற்புதமான பொருட்களுக்கும் தகுதி வாய்ந்த இவளுடைய {திரௌபதியுடைய} மிருதுவான பாதங்களும், தாமரை போன்ற முகமும் இப்படி என்னால் (மட்டுமே) கருநீல நிறத்தை அடைந்தனவே. ஓ! என்ன காரியம் செய்தேன்! பகடைக்கு அடிமையான முட்டாளாகி, வனவிலங்குகள் நிறைந்த கானகத்தில் கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} என்னுடன் அழைத்துக் கொண்டு திரிந்தேனே! பாண்டுவின் மகன்களைத் தலைவர்களாக அடைந்தால் மகிழ்ச்சியுடன் இருப்பாள் என்ற நம்பிக்கையிலேயே துருபதர்களின் மன்னனான இவளது தந்தை {துருபதன்} இந்த அகன்ற கண்ணுடையவளை {திரௌபதி} அளித்தான். நம்பிய எதையும் அடையாமல், பயணத்தின் களைப்பினாலும், சோகத்தாலும், பாவியான என்னால் தரையில் விழுந்து உறங்குகிறாளே” என்று புலம்பினான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} சொன்னார், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இப்படிப் புலம்பிக் கொண்டிருந்தபோது, தௌமியரும் பிற முக்கிய அந்தணர்களும் அந்த இடத்திற்கு வந்தனர். பிறகு அவர்கள் மரியாதை நிறைந்த தங்கள் ஆசிகளால் அவனை {யுதிஷ்டிரனைச்} சமாதானப்படுத்தினர். ராட்சசர்களை விரட்ட வல்ல மந்திரங்களைச் சொல்லி சில சடங்குகளையும் செய்தனர். (பாஞ்சாலியின்) உடல்நிலை தேறுவதற்கான மந்திரங்களை அந்தப் பெருந்துறவிகளை உரைத்தனர். பாண்டவர்களின் ஆறுதல் தரும் உள்ளங்கைகளால் தொடப்பட்டும், நீர்த்துளிகள் அடங்கிய குளிர்ந்த காற்று வீசப்பட்டும் ஆறுதல் அடைந்த அவள் {திரௌபதி}, படிப்படியாகப் புலனுணர்வை அடைந்தாள். களைப்படைந்த அந்த அப்பாவிப் பெண் {திரௌபதி} புலனுணர்வு அடைவதைக் கண்ட பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, அவளை {திரௌபதியை} மான் தோலில் கிடத்தி ஓய்வெடுக்கச் செய்தனர். அனைத்து மங்கலக் குறிகளும் கொண்டு சிவந்திருந்த அவளுடைய {திரௌபதியுடைய} கால்களை, வில்லின் நாணால் வடுபட்ட தங்கள் கைகளால் நகுலனும் சகாதேவனும் மெல்லப் பிடித்து விட்டனர். குருக்களில் முதன்மையானவனான நீதிமானான யுதிஷ்டிரனும் அவளுக்கு ஆறுதல் அளித்தவாறே பீமனிடம், “ஓ! பீமா, (நம்முன்னால்) இன்னும் கடக்க வேண்டிய கடுமை நிறைந்தனவும் பனிமூடியனவுமான பல மலைகள் உள்ளன. நீண்ட கரமுடையவனே {பீமா}, இந்தக் கிருஷ்ணை {திரௌபதி} இவை யாவையும் எப்படிக் கடக்கப் போகிறாள்?” என்று கேட்டான். அதற்குப் பீமன், “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உம்மையும், இந்த இளவரசியையும் {திரௌபதியையும்}, மனிதர்களில் காளையரான இந்த இரட்டையர்களையும் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரையும்} நானே சுமந்து செல்ல முடியும். எனவே, ஓ! மன்னர் மன்னா {யுதிஷ்டிரரே}, உமது மனதில் துயரத்தை வளர்த்துக் கொள்ளாதீர். அல்லது, ஓ! பாவமற்றவரே {யுதிஷ்டிரரே}, உமது உத்தரவின் பேரில், என் பலத்துக்குச் சமமானவனும், விண்ணை அதிகாரம் செய்யவல்லவனும் ஹிடிம்பையின் மகனுமான வலிமைமிக்கக் கடோத்கசன் நம் அனைவரையும் சுமந்து செல்வான்” என்றான் {பீமன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு யுதிஷ்டிரனின் அனுமதியுடன், பீமன் தனது ராட்சச மகனை நினைத்தான். தந்தையால் {பீமனால்} நினைக்கப்பட்ட மாத்திரத்தில் பக்திமிக்கக் கடோத்கசன் பாண்டவர்களையும், அந்தணர்களையும் வணங்கியவாறு கூப்பிய கரங்களுடன் அங்கே தோன்றினான். அவர்களும் அவனை {கடோத்கசனை} பாசத்துடன் விசாரித்தனர். பிறகு அவன் {கடோத்கசன்}, கடும் பராக்கிரமம் கொண்ட தனது தந்தையிடம் {பீமனிடம்}, “உம்மால் நினைக்கப்பட்டதால், நான் உம்மைச் சேவிப்பதற்காக அதிவிரைவாக வந்தேன். ஓ! நீண்ட கரம் கொண்டவரே, எனக்குக் கட்டளையிடும். நீர் என்ன கட்டளையிட்டாலும் அதை என்னால் நிச்சயம் செய்ய முடியும்” என்றான். இதைக் கேட்ட பீமசேனன், அந்த ராட்சசனைத் {கடோத்கசனைத்} தனது மார்புறத் தழுவினான்.
திரௌபதியைச் சுமந்த கடோத்கசன்! – வனபர்வம் பகுதி 144-கடோத்கசன் திரௌபதியைச் சுமக்க மற்ற ராட்சசர்கள் பாண்டவர்களையும், அந்தணர்களையும் சுமக்க, பாண்டவர்கள் பல நாடுகளைக் கடந்து கைலாசத்தைக் கண்டு நர நாராயணனின் ஆசிரமத்தில் நிற்கும் பெரும் இலந்தை மரத்தை அடைவது; அங்கே சில காலம் வசித்து மகிழ்வது…
யுதிஷ்டிரன் {பீமனிடம்} சொன்னான், “ஓ! பீமா, வலிமைமிக்கவனும், ராட்சசர்களின் வீரத்தலைவனும், நமக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனும், உண்மையுள்ளவனும், அறமறிந்தவனுமான சட்டப்படியான உனது மகன் {கடோத்கசன்}, தாமதமில்லாமல் (அவனது) தாயைச் (திரௌபதியைச்) சுமந்து செல்லட்டும். ஓ! கடும் பராக்கிரமம் கொண்டவனே {பீமா}, உனது கரத்தின் பலத்தால், நான் பாஞ்சாலன் மகளுடன் {திரௌபதியுடன்} சேர்ந்து காயப்படாமல் கந்தமாதனம் அடைவேன்”
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தனது தமயனின் {அண்ணன் யுதிஷ்டிரனின்} வார்த்தைகளைக் கேட்ட மனிதர்களில் புலியான பீமசேனன், எதிரிகளை ஒடுக்குபவனான தனது மகன் கடோத்கசனிடம், “ஓ! ஹிடிம்பையின் வெல்லப்பட முடியாத மகனே {கடோத்கசனே}, இந்த உனது அன்னை {மற்றொரு அன்னையான திரௌபதி} மிகவும் சோர்வாக இருக்கிறாள். நீயோ பலவானாகவும் விரும்பிய இடத்திற்குச் செல்லத்தக்கவனாகவும் இருக்கிறாய். எனவே, ஓ! விண்ணதிகாரியே இவளைச் சுமந்து செல். செழுமை உனதாகட்டும்! இவளை உனது தோள்களில் ஏற்றி, அவளுக்குச் சஞ்சலமேற்படுத்தாதவாறு தலைக்கு மேல் வெகு தொலைவில் இல்லாமல் ஒரு வழியை மேற்கொண்டு எங்களுடன் வா” என்றான். அதற்குக் கடோத்கசன், “நீதிமானான யுதிஷ்டிரரையும், தௌமியரையும், கிருஷ்ணையையும் {திரௌபதியையும்}, இரட்டையர்களையும் {நகுல சகாதேவர்களையும்} நான் தனி ஒருவனாகவே சுமக்க முடியும் என்கிற போது, இன்று எனக்கு உதவி செய்ய இன்னும் பிறர் இருக்கிறார்கள். எனவே, அப்படிச் சுமப்பதில் என்ன அற்புதம் இருக்கப் போகிறது? ஓ! பாவமற்றவரே {தந்தை பீமரே}, வானத்தில் நகரும் வல்லமையும், நினைத்த உருவை கொள்ளும் வல்லமையும் கொண்ட நூற்றுக்கணக்கான (ராட்சச) வீரர்கள் அந்தணர்களுடன் சேர்த்து உம்மையும் சுமப்பார்கள்” என்றான் {கடோத்கசன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இதைச்சொன்ன கடோத்கசன் பாண்டவர்களுக்கு மத்தியில் இருந்த கிருஷ்ணையை {திரௌபதியைத்} தூக்கினான். (ராட்சசர்கள்) மற்றவர்கள் பாண்டவர்களைச் சுமக்கத் தொடங்கினர். மேலும் தனது சுய ஆற்றலால், ஒப்பற்ற சுடரொளி கொண்ட லோமசர், சித்தர்களின் பாதையில் இரண்டாவது சூரியனைப் போல நகர்ந்தார். ராட்சசர்கள் தலைவனின் {கடோத்கசனின்} கட்டளையின் பேரில், கடும் பராக்கிரமம் கொண்ட ராட்சசர்களும் அந்தணர்களைச் சுமந்து கொண்டு முன்னேறினர். அழகான கானகங்களைக் கண்டுகொண்டே பெரும் இலந்தை மரத்தை நோக்கி முன்னேறினர்.
அதிவேகம் கொண்ட ராட்சசர்களால் மிகவிரைவாகத் தூக்கிச் செல்லப்பட்ட அந்த வீரர்கள் நெடுந்தூரத்தை குறுகிய தூரம் கடப்பவர்களைப் போலக் கடந்து சென்றார்கள். அவர்களது வழியில், மிலேச்ச மக்களால் நிரம்பிய பல்வேறு ரத்தினச் சுரங்கங்களைக் கொண்ட தடங்களையும் கண்டார்கள். மேலும் அவர்கள் பல்வேறு தாதுக்கள் நிரம்பி, வித்யாதரர்கள் கூட்டத்தால் சூழப்பட்டு, குரங்குகள், கின்னரர்கள், கிம்புருஷர்கள் கந்தர்வர்கள் வசித்த, மயில்கள், சமரங்கள், குரங்குகள், மான்கள், கரடிகள், பன்றிகள், கவயங்கள், எருமைகள் நிரம்பிய, குறுக்கே பாயும் நீரோட்டங்கள், பலவகையான பறவைகள், விலங்குகள், மரங்கள் ஆகியவை நிரம்பிய குன்றுகளைக் கண்டார்கள்.
இப்படிப் பல நாடுகளையும், உத்திர குரு நாட்டையும் கடந்து, மலைகளில் முதன்மையான பல அதிசயங்கள் கொண்ட கைலாசத்தைக் கண்டார்கள். அதன் அருகிலேயே, அனைத்துக் காலங்களுக்கும் உரிய கனிகளையும், மலர்களையும் தாங்கும் தெய்வீக மரங்கள் நிறைந்த, நரன் மற்றும் நாராயணனின் ஆசிரமத்தையும் கண்டார்கள். அவர்கள் உருண்ட அடிமரம் கொண்ட அழகிய இலந்தை மரத்தையும் {பதரீ விருக்ஷத்தையும்} கண்டார்கள். அது {அந்த இலந்தை மரம்} இளந்தளிர்களுடன் புதியதாக இருந்தது; பரந்த நிழல் பரப்பிக் கொண்டிருந்தது; அற்புதமான அழகுடன் இருந்தது; தடித்த, மென்மையான, நேர்த்தியான, பசுமையான இலைகள் கொண்டிருந்தது; ஆரோக்கியம் அளிப்பதாக இருந்தது; மாபெரும் கிளைகள் கொண்டிருந்தது; அகன்று பரவியிருந்தது; ஒப்பற்ற காந்தியுடன் இருந்தது; முழுதும் வளர்ந்த சுவை நிறைந்த தேனொழுகும் கனிகளைத் தாங்கிக் கொண்டிருந்தது. இந்தத் தெய்வீக மரம், வலிமைமிக்க முனிவர்க்கூட்டத்தால் அடிக்கடி அடையப்பட்டது. விலங்குகளின் ஆவிகளால் மதம் கொண்ட பறவைகள் அதில் வசித்தன. கொசுக்களும் ஈக்களும் அற்ற, பழங்களும், கிழங்குகளும், நீர் நிலைகளும் நிறைந்த, பச்சைப்புற்களால் மூடப்பட்ட, தேவர்களும், கந்தர்வர்களும் வசித்த இயற்கை சுகாரதாரம் நிறைந்த, அழகான குளிர்ந்த மென்மையான உணர்வுகளைத் தூண்டும் ஒரு இடத்தில் அது {அந்த இலந்தை மரம்} வளர்ந்திருந்தது.
அந்தணர்களுடன் அந்த இடத்தை {இலந்தை மரத்தை} அடைந்த அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் {பாண்டவர்கள்}, மெதுவாக ராட்சசர்களின் தோள்களில் இருந்து இறங்கினார்கள். பிறகு இருபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} காளையர்களுடன் சேர்ந்த பாண்டவர்கள் அங்கே இருந்த நர நாராயணனின் அழகிய ஆசிரமத்தைக் கண்டார்கள். அந்த ஆசிரமம் மனச்சோர்வற்று இருந்தது; புனிதமானதாக இருந்தது; கதிரவனின் கதிர்கள் தொடாத இடத்தில் இருந்தது; பசி, தாகம், வெப்பம் மற்றும் குளிர் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு அனைத்து துக்கத்தையும் விலக்குவதாக இருந்தது; வலிமைமிக்க முனிவர்களால் சூழப்பட்டதாக இருந்தது; சாம, ரிக், யஜுஸ் வேதங்களின் அருள் செயல்களால் அலங்கரிக்கப்பட்டதாக இருந்தது; ஓ! மன்னா {ஜனமேஜயா}, அறம் உதறிய {தவிர்த்த} மனிதர்கள் அணுக முடியாததாக இருந்தது; காணிக்கைகளாலும் ஹோமங்களாலும் அழகுடன் இருந்தது; புனிதமாக இருந்தது; நன்கு பெருக்கி {துடைப்பத்தால் கூட்டி} மெழுகி இருந்தது; தெய்வீக மலர்களின் காணிக்கைகளால் {புஷ்ப பலிகளால்} சுற்றிலும் பிரகாசித்துக் கொண்டிருந்தது; அங்கே வேள்வி நெருப்பின் பலி பீடங்கள், புனித தூபங்கள் {யூபங்கள்} மற்றும் குடங்கள் பரவியிருந்தன. பெரும் நீர்க்குடங்களும், உறிகளும் கொண்டு அனைத்து உயிர்களுக்கும் புகலிடமாக இருந்தது; வேத மந்திரங்கள் அங்கே எதிரொலித்துக் கொண்டே இருந்தன; வசிப்பதற்கு ஏற்ற தெய்வீகமான இடமாக இருந்து களைப்பைப் போக்கியது; பிரகாசத்தினையும் புரியாத சிறப்புகளையும் கொண்டிருந்தது; தெய்வீக குணங்களும் கம்பீரமாக அது {நர நாராயணரின் ஆசிரமம்} இருந்தது.
அந்த ஆசிரமத்தில் கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டும் உண்ணும் பெரும் முனிவர்கள் பலர் வசித்து வந்தனர்; அவர்கள் தங்கள் புலன்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்; அவர்கள் கருப்பு மான் தோல் உடுத்தியிருந்தனர்; சூரியனையும் அக்னியையும் போல அவர்கள் பிரகாசத்துடன் இருந்தனர்; விடுதலையை {முக்தியை} தீவிர நோக்கமாகக் கொண்டு துறவால் தங்கள் ஆன்மாவைப் பெருகச் செய்தனர்; அவர்கள் வானப்பிரஸ்த வகை வாழ்வை வாழ்ந்தனர்; புலனடங்கியவர்களாக இருந்தனர்; பரமாத்மாவை உணர்ந்திருந்தனர்; பெரும் நற்பேறு பெற்றவர்களாக இருந்தனர்; வைதீக மந்திரங்களை அவர்கள் ஓதினர். தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, புலன்களில் இருந்து விடுபட்ட தர்மனின் மகனான அளவற்ற சக்தி கொண்டவனும் புத்திகூர்மையுள்ளவனுமான யுதிஷ்டிரன், தனது தம்பிகளை உடன் அழைத்துக் கொண்டு, அம்முனிவர்களை அணுகினான். தெய்வீக அறிவு கொண்ட அந்தப் பெரும் முனிவர்கள் யுதிஷ்டிரனின் வருகையை அறிந்து, அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
வேதங்களை உரைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நெருப்பு போன்ற அம்முனிவர்கள் யுதிஷ்டிரனுக்கு அருளாசிகள் கூறிய பிறகு, அவனுக்குப் பொருத்தமான வரவேற்பை அளித்தனர். அவர்கள் அவனுக்குத் தெளிந்த நீரையும், மலர்களையும் கிழங்குகளையும் கொடுத்தனர். நீதிமானான யுதிஷ்டிரனும் மரியாதையுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டு அம்முனிவர்களின் வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான். ஓ! பாவமற்றவனே {ஜனமேஜயா}, பிறகு பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, கிருஷ்ணையையும் {திரௌபதியையும்}, தனது தம்பிகளையும், வேத வேதாங்கங்கள் அறிந்த ஆயிரக்கணக்கான அந்தணர்களையும் அழைத்துக் கொண்டு தெய்வீக மனம் கொண்டு சுக்கிரனின் வசிப்பிடத்தைப் போலவும் சொர்க்கத்தைப் போலவும் இருந்த அந்தப் புனிதமான ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.
அங்கே அந்தப் பக்திமான் {யுதிஷ்டிரன்}, பகீரதியால் அழகூட்டப்பட்டு, தேவர்களாலும் தெய்வீக முனிவர்களாலும் வழிபடப்படும் நர நாராயணனின் ஆசிரமத்தைக் கண்டான். பிரம்ம முனிவர்களாலும், தேனொழுகும் கனிகளாலும் நிரம்பிய அவ்வாசிரமத்தைக் கண்ட பாண்டவர்கள் மகிழ்ச்சியால் நிரம்பினார்கள். அந்த இடத்தை அடைந்த பிறகு, அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் அந்தணர்களுடன் கூடி அவ்விடத்தில் வசிக்க ஆரம்பித்தார்கள். அங்கே அவர்கள், பலவகையான பறவைகளும், பெருமைமிக்கவர்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்த பிந்து தடாகத்தையும் {பிந்துசரசையும்}, தங்கச் சிகரங்கள் கொண்ட மைநாக மலையையும் கண்டார்கள். பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} கிருஷ்ணையை {திரௌபதியை} அழைத்துக் கொண்டு அனைத்து பருவ காலங்களின் மலர்களும் மின்னும் அற்புதமான வனங்களில் உலவி மகிழ்ச்சி கொண்டான். அங்கே பூத்துக் குலுங்கும் மலர்கள் நிரம்பிய மரங்கள் அனைத்துப் புறங்களிலும் இருந்தன. கனிகளின் பாரத்தால் அவை வளைந்து இருந்தன. எண்ணற்ற ஆண் குயில்கள் இலைகள் மின்னும் அம்மரங்களில் இருந்தன. குளிர்ந்த நிழலை அடர்த்தியாகத் தந்த அந்த மரங்களைக் கண்டு இனிமை அடைந்தனர். அவர்கள் தெளிந்த நீருடைய அழகான தடாகங்கள், தாமரைகளாலும், குவளை மலர்களாலும் நிரம்பி வழிவதைக் கண்டு மகிழ்ந்தனர்.
ஓ! தலைவா {ஜனமேஜயா}, அங்கே தூய நறுமணம் கொண்ட மென்மையான காற்று கிருஷ்ணைக்கும் {திரௌபதிக்கும்}, பாண்டவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டியது. அந்த இலந்தை மரத்திற்கு அருகில், குந்தியின் வலிமைமிக்க மகன், எளிய வீழ்ச்சியும் கொண்ட பாகீரதி, புதிய தாமரைகளுடனும், மாணிக்கம் மற்றும் பவளங்களாலான படித்துறைகள் கொண்டிருப்பதைக் கண்டனர். அங்கே மரங்கள் அடர்ந்திருந்தன. தெய்வீக மலர்கள் பரவிக் கிடந்தன. மனதிற்கு இனிமையாக அச்சூழல் இருந்தது. தேவர்களும், முனிவர்களும் அடிக்கடி வந்து போன, அணுகுவதற்குக் கடினமான அந்த இடத்தில் தங்களைச் சுத்திகரித்துக் கொண்டு பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும், முனிவர்களுக்கம் பாகீரதி நதியின் புனித நீரால் நீர்க்கடன் செய்தனர். இப்படியே அந்த மனிதர்களில் காளைகளான குரு குலத்தைத் தழைக்க வைப்பவர்கள் {பாண்டவர்கள்}, அந்தணர்களை நீர்க்கடன் செலுத்த வைத்தும், தியானம் பயில வைத்தும் அங்கேயே வசிக்க ஆரம்பித்தனர். தேவர்களைப் போன்ற தோற்றம் கொண்ட மனிதர்களில் புலிகளான அந்தப் பாண்டவர்கள், திரௌபதியின் பல்வேறு கேளிக்கைகளைச் சாட்சிகளாகக் கண்டு மகிழ்ச்சியை உணர்ந்தனர்.
ஹனுமான் தரிசனம்! – வனபர்வம் பகுதி 145-காற்றில் அடித்துவரப்பட்ட தாமரையைப் பார்த்து திரௌபதி மகிழ்தல்; அதே போன்ற மலர்களைப் பறித்து வருமாறு திரௌபதி பீமனிடம் வேண்டுதல்; மலர் வேட்டைக்குக் கிளம்பிய பீமன்; மலையைக் கலங்கடித்து ஒரு தடாகத்தை அடைவது; தடாகத்தில் நீராடி மீண்டும் மலர் வேட்டை; மலரைத் தேடி செல்லும் பாதையில் ஹனுமான் படுத்திருப்பது; ஹனுமான் பீமனைத் தடுப்பது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சுத்தத்தைக் கடைப்பிடித்த அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்} அங்கே தனஞ்சயனை {அர்ஜுனனைக்} காணும் எதிர்பார்ப்புடன் ஆறு இரவுகள் வசித்தனர். அப்போது அங்கே திடீரென்று வடகிழக்கில் இருந்து காற்று விசியது. அக்காற்று, சூரியனைப் போன்று பிரகாசித்த ஆயிரம் இதழ் கொண்ட தெய்வீகத் தாமரையை ஒன்றை அங்கே கொண்டு வந்து சேர்த்தது. அழகான, சுத்தமான, பூமியில் இல்லாத நறுமணம் கொண்ட அந்தத் தாமரை காற்றால் அடித்துவரப்பட்டுத் தரையில் கிடப்பதை பாஞ்சாலி {திரௌபதி} கண்டாள். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த அற்புதமான அழகான தாமரையை {சௌகந்திக மலரை} அடைந்த அந்த அருளப்பட்டவள் {திரௌபதி} மிகவும் மகிழ்ந்து பீமசேனனிடம், “ஓ! பீமரே, நறுமணத்தின் தோற்றுவாயைத் தன்னகத்தே கொண்ட மிக அழகான இந்தத் தெய்வீக மலரைப் பாரும். ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே, இது எனது இதயத்தை மகிழ்விக்கிறது. இது {இந்த மலர்} நீதிமானான யுதிஷ்டிரருக்கு வழங்கப்படும். எனது திருப்திக்காக இதே போன்ற மலர்களைப் பறித்துக் கொண்டு வாரும். அவற்றை நான் காம்யக வனத்தில் இருக்கும் நமது ஆசிரமத்திற்குக் கொண்டு செல்வேன். ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {பீமரே}, என்னிடம் உமக்கு அன்பிருந்தால், இதே வகை மலர்களை எண்ணிக்கையில் பறித்து வாரும். நான் அவற்றை நமது ஆசிரமத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன்” என்றாள். இதைச் சொல்லிவிட்டு, அந்த அழகிய பார்வை கொண்ட களங்கமற்ற மங்கை {திரௌபதி}, அம்மலரை எடுத்துக் கொண்டு நீதிமானான யுதிஷ்டிரனிடம் சென்றாள்.
தனது அன்பிற்குரிய ராணியின் விருப்பத்தை அறிந்த மனிதர்களில் காளையான பெரும்பலமிக்கப் பீமன் அவளை {திரௌபதியைத்} திருப்தி செய்யும் பொருட்டு உடனே கிளம்பினான். மலர்களைப் பறிக்கும் நோக்குடன் அவன் {பீமன்} மலர் வந்த திக்கை நோக்கி காற்றை எதிர்த்துக் கொண்டு மிகுந்த வேகத்துடன் சென்றான். பின்புறம் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வில்லையும், கடும் விஷம் கொண்ட பாம்புகளைப் போன்ற கணைகளையும் எடுத்துக் கொண்டு கோபத்தில் செல்லும் சிங்கத்தைப் போலவும், மதங்கொண்ட யானை போலவும் சென்றான். பெரும் வில்லையும் கணைகளையும் எடுத்துச் செல்லும் அவனை {பீமனை} அனைத்து உயிர்களும் கண்டன. சோர்வோ, தளர்வோ, பயமோ, குழப்பமோ எதுவும் அந்தப் பிருதையின் {குந்தியின்} மைந்தனும் வாயுவின் (காற்றின்) வாரிசுமானவனை ஆட்கொள்ளவில்லை.
பயமோ குழப்பமோ அற்ற அந்தப் பெரும்பலம் வாய்ந்தவன் {பீமன்} திரௌபதியைத் திருப்தி செய்ய வேண்டி, தனது கரத்தின் பலத்தை மட்டுமே நம்பி அச்சிகரத்தில் ஏறினான். எதிரிகளைக் கொல்லும் அவன் {பீமன்}, மரங்களும், கொடிகளும், கரும்பாறை பரப்பும் கொண்டு கின்னரர்கள் அடிக்கடி அடையும் அந்த அழகிய சிகரத்தில் ஏறினான். பல்வேறு வண்ணங்களில் தாதுக்களும், தாவரங்களும், விலங்குகளும், பல வண்ண பறவைகளும் அங்கே இருந்தன. அச்சிகரம் முழு ஆபரணங்களுடன் அலங்கரிக்கப்பட்ட பூமாதேவியின் உயர்த்தப்பட்ட கரம் போல இருந்தது. ஒப்பற்ற பராக்கிரமம் கொண்ட அவன் {பீமன்} தனது பார்வையைக் கந்தமாதனத்தின் சரிவுகளில் நிலைக்க வைத்தபடி முன்னேறினான். அங்கே எல்லாப் பருவகாலங்களுக்கும் உரிய அழகான மலர்கள் மலர்ந்திருந்தன. அவன் {பீமன்} மனதில் பல்வேறு எண்ணங்களைச் சுழலவிட்டபடி தனது காதுகளையும் கண்களையும் ஆண் குயில்களும், கருவண்டுகளும் கானமெழுப்பும் பகுதிகளில் நிலைக்க வைத்தபடி சென்றான்.
அனைத்து பருவ காலங்களிலும் பூக்கும் மலர்களின் அரிய நறுமணத்தை நுகர்ந்தபடி அந்தப் பெரும் பராக்கிரமம் கொண்டவன் {பீமன்} மதங்கொண்ட யானையைப் போல அக்கானகத்தில் உலாவினான். கந்தமாதனத்தின் புதிய தென்றல், மலர்களின் நறுமணத்தைச் சுமந்தபடி சில்லென வீசிய போது, அது அவனுக்கு {பீமனுக்குத்} தந்தையின் தீண்டல் போல இருந்தது. இப்படிக் களைப்பு நீங்கிய அவனது உடலில் மயிர்க்கூச்செறிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இருந்த அந்த எதிரிகளை ஒடுக்குபவன், யக்ஷர்களும், கந்தர்வர்களும், தேவர்களும், பிரம்ம முனிவர்களும் வசித்த அம்மலை முழுவதும் தான் தேடி வந்த மலர்களைத் தேடினான். ஏழிலைம்பாலை {Saptachchada) மரத்தின் இலைகளால் வருடப்பட்ட அவன் {பீமன்} மேல் சிவப்பு, கருப்பு, வெள்ளை வண்ண தாதுக்களின் நிறங்கள் பூசப்பட்டன. அதனால் அவன், புனித தைலத்தைக் கொண்டு அலங்கரித்து விரல்களால் பூசப்பட்ட கோடுகளை மேனியில் கொண்டவன் போல இருந்தான். அம்மலையின் பக்கங்களில் மேகங்கள் விரிந்து இருந்ததால், அம்மலைக்குச் சிறகுகள் முளைத்தது போலக் காணப்பட்டது.
நீரூற்றுகளில் இருந்து நீர் விழுவது முத்துக் கழுத்தணிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டதைப் போலத் தோன்றியது. அழகிய நிலக்குடைவுகள், தோப்புகள், நில அடுக்குகள், குகைகள் ஆகியன அங்கே {அம்மலையில்} இருந்தன. அப்சரசுகளின் வளையொலிகளுக்கு ஏற்ப அற்புதமான மயில்கள் நடனமாடின. திக்குகளுக்குத் தலைவர்களான யானைகளின் {திக்கஜங்களின்} தந்த நுனிகளால் முட்டப்பட்டுத் தேய்ந்த கற்களையுடைய பாறைபரப்பை அது {அம்மலை} கொண்டிருந்தது. நதிகளின் நீர் மலையில் இருந்து வீழ்வது பார்ப்பதற்கு, அம்மலையின் ஆடை தளர்வதைப் போல இருந்தது. வாயுத் தேவனின் அந்த அருள் நிறைந்த மகன் {பீமன்}, விளையாட்டுத்தனமாகவும், மகிழ்ச்சியுடனும், எண்ணிலடங்கா செடி கொடிகளைத் தனது பலத்தால் தள்ளிக் கொண்டு சென்றான். வாயில் புற்களுடன் இருந்த மான்கள் ஆவலால் அவனைப் பார்த்த படி நின்றன. (இதுவரை) பயமறியாததால், அச்சமடையா அவை, ஓடாமல் நின்றிருந்தன.
தனது காதலியின் {திரௌபதியின்} விருப்பத்தை நிறைவேற்றும் செயலில் ஈடுபட்டிருந்த பாண்டுவின் இளமைமிகுந்த மகன் {பீமன்}, தீரம் கொண்டவனாகவும், தங்க நிறத்தில் பிரகாசிப்பவனாகவும் இருந்தான். சிங்கத்தைப் போன்று வலிமைநிறைந்த உடல் கொண்டிருந்தான். மதம் கொண்ட யானையைப் போல நடந்தான். மதம் கொண்ட யானையின் சக்தியையும் கொண்டிருந்தான். மதம் கொண்ட யானையைப் போன்றே தாமிர நிறத்தில் கண்களைக் கொண்டிருந்தான். மற்றுமொரு மதங்கொண்ட யானையைத் தடுக்கும் ஆற்றல் கொண்டிருந்த அவன் {பீமன்}, அந்த அழகிய கந்தமாதனத்தைத் தனது அழகிய விழிகளால் கண்டான். அக்காட்சி புதுமையான வகையில் அழகைத் தந்தது. யக்ஷர்கள் மற்றும் கந்தர்வர்களின் மனைவியர் தங்கள் கணவர்களின் அருகில் அரூபமாக அமர்ந்து கொண்டு, முகத்தில் பல்வேறு உணர்ச்சிகளை வெளிக்காட்டியபடி அவனைப் {பீமனைப்} பார்த்துக் கொண்டிருந்தனர். கானகத்தில் வசித்த திரௌபதியைத் திருப்தி செய்யும் நோக்கில், அழகிய கந்தமாதனத்தில் உலவி கொண்டிருந்த அவன் {பீமன்}, துரியோதனனால் இழைக்கப்பட்ட தீமைகளை நினைத்துப் பார்த்தான்.
பிறகு அவன் {பீமன்}, “தற்போது அர்ஜுனனும் சொற்ப காலம் வசிக்கச் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டான். நானும் மலர்களைப் பறிக்க வந்துவிட்டேன். இப்போது எங்கள் அண்ணனான யுதிஷ்டிரர் என்ன செய்வார்? மனிதர்களில் முதன்மையான யுதிஷ்டிரர், நகுலனையும், சகாதேவனையும், பாசத்தாலும், அவர்கள் வீரத்தின் மேல் கொண்ட சந்தேகத்தாலும் என்னைத் தேடி வர அனுப்ப மாட்டார் என்பது நிச்சயம். எப்படி நான் விரைவாக மலர்களைப் பெறுவது?” இப்படி நினைத்தவாறே, மனிதர்களில் புலி போன்ற அவன் மிக வேகத்துடன் {amain = முழு வேகமாக} பறவைகளின் மன்னனைப் போல {கருடனைப் போல} சென்றான். அவனது மனமும் பார்வையும் அந்த அழகிய மலையின் மீதே நிலைத்திருந்தது. தனது பயணத்தின் விதிகளாகத் திரௌபதியின் வார்த்தைகளைக் கொண்ட, பலமும், காற்றைப் போன்ற வேகமும் கொண்ட பாண்டுவின் மகனான விருகோதர பீமன், தனது மனதையும், பார்வையையும் பூத்திருக்கும் அம்மலையின் சரிவுகளில் நிலைக்க வைத்தபடி பூமி நடுங்குமாறு சம இரவு நாளில் {உத்தராயணத்தில்} வரும் புயலைப் போல மிக விரைவாக யானைக்கூட்டங்களைப் பயமுறுத்தியபடி, சிங்கங்கள் புலிகள், மான்கள் ஆகியவற்றை நடுங்கச் செய்தபடி, பெரும் மரங்களையும் செடி கொடிகளையும் வேரோடு பிய்த்தெறிந்தபடி, சென்றான். அவன் அப்படிச் சென்றது ஒரு யானை பெரும் மலைச் சிகரத்தில் ஏறுவது போலவும், இடியோசை கூடி கர்ஜிக்கும் மேகம் நகர்வது போலவும் இருந்தது.
கர்ஜித்தபடி சென்ற பீமனால், விழிப்படைந்த புலிகள் தங்கள் குகைகளை விட்டு வெளி வந்தன. மற்றக் கானக உலாவிகள் {விலங்குகள்} தங்களை மறைத்து ஒளிந்து கொண்டன. வானத்தைப் பாதையாகக் கொண்டவைகள் {பறவைகள்} பயத்தால் (சிறகுகள் விரித்து) எழுந்தன. மான்கூட்டங்கள் விரைவாக ஓடின. பறவைகள் மரங்களை விட்டு அகன்றன. சிங்கங்கள் தங்கள் குகைகளைக் கைவிட்டன. பெரும் பலமிக்கச் சிங்கங்கள் தங்கள் தூக்கம் கலைந்தன. எருமைகள் பார்த்தன. பயத்திலிருந்த யானைகள் கானகத்தை விட்டு ஆழமான காட்டுக்குள் தங்கள் துணைகளுடன் ஓடின. பன்றிகளும், மான்களும், சிங்கங்களும், எருமைகளும், புலிகளும், ஓநாய்களும், கவயங்களும் கூட்டம் கூட்டமாக அலறத் தொடங்கின.
சிவந்த வாத்துகளும், அன்னங்களும், நீர்க்காக்கைகளும், வாத்துக்களும், கிளிகளும், ஆண் குயில்களும், அன்றில்களும் குழப்பத்தால் எல்லாத் திசைகளுக்கும் பறந்தன. சில கர்வம் கொண்ட யானைகள் தங்கள் துணைகளால் உந்தப்பட்டும், சில சிங்கங்களும் யானைகளும் கோபமடைந்தும், பீம சேனன் மீது பாய்ந்தன. இதயத்தில் பயங்கொண்டமையால், அந்தக் கடுமை நிறைந்த விலங்குகள் மலம் மற்றும் சிறுநீரைக் கழித்து, வாயை அகல விரித்துக் கதறின.
தனது கரத்தின் பலத்தை மட்டுமே நம்பிய அந்தப் பெரும்பலம் வாய்ந்த பாண்டவனான வாயுத்தேவன் மகன் {பீமன்}, ஒரு யானையைக் கொண்டு மற்றொரு யானையையும், ஒரு சிங்கத்தைக் கொண்டு மற்றொரு சிங்கத்தையும் கொல்ல ஆரம்பித்தான். மற்ற விலங்குகளைத் தனது அறைகளாலேயே கொன்றான். பீமனால் இப்படி அடிக்கப்பட்ட சிங்கங்களும், புலிகளும், சிறுத்தைகளும் பயம் நிறைந்து கதறி மலம் மற்றும் சிறுநீர் கழித்தன. அவற்றையெல்லாம் அழித்த பாண்டுவின் பெரும் பலம் கொண்ட அழகிய மகன் {பீமன்} கானகத்தில் நுழைந்து தனது கர்ஜனையால் அதை நிறைத்தான். பிறகு அந்த நீண்ட கரம் கொண்டவன் கந்தமாதனத்தின் சரிவுகளில் ஓர் அழகிய வாழை மரம் பல யோஜனைகளுக்குப் பரந்து நிற்பதைக் கண்டான். பிறகு மதம் கொண்ட சிங்கம் போல அந்தப் பெரும்பலம் வாய்ந்தவன் பல மரங்களை உடைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு முன்னேறினான். பலம் நிறைந்த மனிதர்களில் முதன்மையான பீமன், பல பனை மர உயரம் கொண்ட {ஒரு மரத்திற்கு மேல் ஒரு மரம் அடுக்கிய பனை மரங்களின் உயரமுள்ள} பல வாழை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தான். ஆண் சிங்கம் போன்ற கர்வம் கொண்ட அந்தச் சக்தி மிக்கவன் பெரும் கர்ஜனை செய்தான். பிறகு அவன் {பீமன்} பெரும் உருவத்திலான பல விலங்குகளையும், மான்களையும், குரங்குகளையும், சிங்கங்களையும், எருமைகளையும், நீர் விலங்குகளையும் எதிர்த்து மோதினான்.
அந்த விலங்குகளின் கதறல்களோடு சேர்ந்து பீமனும் கர்ஜித்தான். இந்தப் பேரொலியால் கானகத்தின் தூரப்பகுதிகளில் இருந்த விலங்குகள் கூட அச்சமடைந்தன. விலங்குகள், பறவைகளின் கதறல்களைக் கேட்ட எண்ணற்ற நீர்வாழ் பறவைகள் திடீரெனத் தங்கள் ஈரம்படிந்த சிறகுகளுடன் எழுந்தன. அந்த நீர்வாழ் பறவைகளைக் கண்ட பாரதர்களில் காளை {பீமன்}, அந்தத் திக்குக்குச் சென்று பரந்து விரிந்த அழகான ஒரு தடாகத்தைக் கண்டான். அந்த ஆழமறியாத தடாகத்தின் கரைகளில் இருந்த தங்க வாழை மரங்கள், அங்கு வீசிய மெல்லிய தென்றலால் ஆடி, அந்த இடத்திற்குச் சாமரம் வீசின. குவளைகளும் தாமரைகளும் நிறைந்த அந்தத் தடாகத்துக்குள் உடனே இறங்கி ஆனந்தமாக மதம் கொண்ட யானை போல விளையாடத்தொடங்கினான் பீமன்.
இப்படி அங்கே சிறிது நேரம் விளையாடிய பிறகு, அந்தப் பிரகாசமுடையவன் {பீமன்} எழுந்திருந்து, மரங்கள் நிறைந்த கானகத்திற்குள் வேகமாகச் சென்றான். பிறகு அந்தப் பாண்டவன் {பீமன்} தனது சங்கை எடுத்துப் பலமாக ஊதினான். தனது கரங்களைத் தட்டிய வலிமைமிக்கப் பீமன் சொர்க்கத்தின் அனைத்துப் புள்ளிகளையும் அதிர வைத்தான். சங்கு நாதத்தையும், பீமனின் கர்ஜனையையும், கைத்தட்டல்களையும் கேட்ட மலைகளின் குகைகள் எதிரொலி செய்து கர்ஜித்தன. இடியைப் போன்ற கைத்தட்டல் ஓசையைக் கேட்டுக் குகைகளில் தூங்கிக் கொண்டிருந்த சிங்கங்கள் பலமாகக் கர்ஜித்தன. சிங்கங்களின் கர்ஜனையால் பயந்த யானைகள், ஓ! பாரதா {ஜனமேஜயா}, பயங்கரமாகப் பிளிறின. இவை அனைத்தும் அந்த மலையை நிறைத்தன.
இப்படி உதிர்க்கப்பட்ட ஒலிகளைக் கேட்ட பீமசேனனின் அண்ணனும், குரங்குகளின் தலைவனுமான வானர ஹனுமான், பீமனுக்கு நல்லது செய்யும் நோக்குடன், சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையைத் தடுத்துக் கொண்டிருந்தான். (பீமன்) அந்த வழியைக் கடக்கக்கூடாது என்று எண்ணி, குறுகிய பாதையில் குறுக்காகப் படுத்து, அங்கிருந்த வாழை மரங்களுக்கு அழகூட்டி, பீமனின் பாதுகாப்புக்காக அவ்வழியைத் தடுத்துக் கொண்டிருந்தான். பீமனுக்குச் சாபமோ, தோல்வியோ ஏற்படக்கூடாது என்ற நோக்கத்துடன், வாழைத்தோப்புக்குள் நுழைந்த ஹனுமான், தனது பெருத்த உடலை வாழை மரங்களுக்கு மத்தியில் கிடத்தி அரைத்தூக்கத்தில் இருப்பது போலக் கிடந்தான். கொட்டாவி விட்டபடி, தனது நீண்ட வாலை ஆட்டி, அதை இந்திரனின் கம்பம் போல உயர்த்தி, இடியைப் போலச் சத்தம் எழுப்பினான். அந்த மலையின் எல்லாப்புறத்திலும் மாடு கத்துவதைப் போல எதிரொலித்தன. அவனது {ஹனுமனின்} வாலின் அசைவால் அந்த மலையின் சிகரங்கள் நடுங்கத்தொடங்கி, சுற்றிலும் சிதறி விழ ஆரம்பித்தன. மதங்கொண்ட யானைகளின் பிளிறல்களைப் பின்னுக்குத் தள்ளிய அந்த வாலாட்டும் ஒலி அந்த மலைச்சரிவு முழுவதும் பரந்து கேட்டது.
அவ்வொலியைக் கேட்ட பீமனின் உடலில் மயிர்க்கூச்செறிப்பு ஏற்பட்டது. அவன் {பீமன்} அந்த வாழைத்தோப்பு முழுவதும் அவ்வொலி வந்த இடத்தைத் தேடினான். அந்தப் பலம் வாய்ந்தவன் {பீமன்}, ஓர் உயர்ந்த பாறைப் பரப்பில் குரங்குகளின் தலைவனை {ஹனுமானைக்} கண்டான். அவனை {ஹனுமானைக்} காண மின்னலைப் பார்ப்பது போலக் கடினமாக இருந்தது. தாமிர வண்ணத்தில் மின்னலைப் போன்ற அவன் {ஹனுமான்} இருந்தான். அவனது குரலும் இடியைப் போல இருந்தது. அவன் மின்னலைப் போல விரைவாக அசைந்தான். குறுகிய சதை கொண்ட அவனது கழுத்தை அவனது தோள்கள் தாங்கிக் கொண்டிருந்தன. மெலிந்த இடையும் பருத்த தோள்களும் கொண்டவனாக அவன் {ஹனுமான்} இருந்தான். அவனது வால் நீண்ட முடிகளால் மூடப்பட்டு இருந்தது. அது முனையில் சற்று வளைந்து பதாகை போல உயர்ந்திருந்தது.
ஹனுமானின் தலையில், சிறு உதடுகளும், தாமிரம் போன்ற முகமும் நாக்கும், சிவந்த காதுகளும், சுறுசுறுப்பான கண்களும், முனை கூரிய வெண்ணிற பற்களும் இருந்தன. அவனது தலை ஒளிரும் சந்திரனைப் போல இருந்தது. அவனது வாயை வெண்ணிற பற்கள் அலங்கரித்தன. பிடரி பரந்து அசோக மலர்க் குவியல் போல இருந்தன. பொன் வாழை மரங்களுக்கு மத்தியில் அவன் எரியும் நெருப்பைப் போலச் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தான். அந்த எதிரிகளைக் கொல்பவன் {ஹனுமான்} போதையால் சிவந்த கண்களுடன் பார்த்தான். புத்திசாலியான பீமன், பெருத்த உடல் கொண்ட வலிமைமிக்க அந்தக் குரங்குகளின் தலைவன் {ஹனுமான்} சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையைத் தடுத்துக் கொண்டு இமயமெனப் படுத்திருப்பதைக் கண்டான். அந்தப் பெரும் கானகத்தில் தனிமையில் இருந்த அவனைக் கண்ட நீண்ட கரமுடைய அச்சமற்ற வீரனான பீமன், நீண்ட எட்டுகள் வைத்து அவனை அணுகி, இடியைப் போன்று சத்தமாகக் கர்ஜித்தான். பீமனின் அந்தக் கர்ஜனையால் விலங்குகளும் பறவைகளும் பயந்தன.
எனினும் வலிமை மிக்க ஹனுமான சிறிதளவே தனது கண்களைத் திறந்து, போதையால் சிவந்த கண்களுடன் அலட்சியத்துடன் (பீமனை) பார்த்தான். பிறகு அவனிடம் {பீமனிடம்} ஹனுமான் சிரித்துக் கொண்டே, “நோயுற்ற நான், இனிமையாக உறங்கிக் கொண்டிருந்தேன். ஏன் என்னை நீ எழுப்பினாய்? அறிவுள்ளவனான நீ பிற உயிரினங்களிடம் இரக்கம் கொள்ள வேண்டும். விலங்கினத்தைச் சேர்ந்த நாங்கள் அறம் அறியாதவர்கள். ஆனால் அறிவுடைய மனிதர்கள் உயிரினங்களிடம் இரக்கம் காட்டுவார்கள். பிறகு ஏன் உன்னைப் போன்ற அறிவுடையவர்கள், கொடியவற்றைச் செய்து உடலாலும், சொல்லாலும், இதயத்தாலும் {மனதாலும்} அறத்தை அழித்துக் கொள்கிறார்கள்? அறம் என்பதை நீ அறியவில்லை. ஞானமுள்ளோரின் ஆலோசனையையும் நீ பெற வில்லை. எனவேதான், நீ அறியாமையுடன் சிறுபிள்ளைத்தனமாகத் தாழ்ந்த விலங்குகளை அழிக்கிறாய். நீ யார்? மானிடத்தன்மையற்றதும் மனிதர்களற்றதுமான இந்த வனத்திற்கு நீ ஏன் வந்தாய்? ஓ! மனிதர்களில் முதன்மையானவனே இன்று நீ எங்கே செல்லப் போகிறாய் என்பதைச் சொல். இதற்கு மேல் நீ முன்னேற முடியாது. இந்த மலைகள் அடைவதற்கு அரிதானவை. ஓ! வீரனே, தவத்தாலன்றி வேறு முறையில் இவ்வழியை அடையமுடியாது. அந்த இடத்திற்கு வேறு வழியும் கிடையாது. தேவர்களின் இந்தப் பாதை, மனிதர்களால் கடக்க முடியாதது. ஓ! வீரனே, இரக்கத்தின் காரணமாக நான் உன்னைத் தடுக்கிறேன். எனது வார்த்தைகளைக் கேள். இந்த இடத்திற்கு மேல், மேலும் நீ முன்னேற முடியாது. எனவே, ஓ! தலைவா, நில். ஓ! மனிதர்களின் தலைவா இன்று உனது வரவு வரவேற்கப்படுகிறது. ஓ! மனிதர்களில் சிறந்தவனே, எனது வார்த்தைகள் ஏற்கத்தக்கது என நீ நினைத்தால், இங்கே ஓய்ந்திருந்து, அமுதத்துக்கு நிகரான கனிகளையும் கிழங்குகளையும் உண்டு திரும்பு. வீணாக அழிவை அடையாதே” என்று சொன்னான் {ஹனுமான்}.
“வாலை நகற்று” என்ற ஹனுமான்! – வனபர்வம் பகுதி 146-பீமன் ஹனுமானை வழிவிடச் சொல்வது; ஹனுமான் போகாதே என்று எச்சரிப்பது; மீண்டும் பீமன் ஹனுமானை மிரட்டுவது; ஹனுமான் தனது வாலை நகர்த்தி வைத்துவிட்டு செல்லுமாறு அடக்கத்துடன் சொல்வது; பீமனால் ஹனுமானின் வாலை நகர்த்த முடியாமல் போவது; தான் யார் என்பதை ஹனுமான் சொல்வது–
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ எதிரிகளை ஒடுக்குபவனே {ஜனமேஜயா}, புத்திசாலி குரங்குத் தலைவனின் {ஹனுமானின்} வார்த்தைகளைக் கேட்ட பீமன், “யார் நீ? ஏன் குரங்கின் உருவை ஏற்றிருக்கிறாய்? அந்தணர்களுக்கு அடுத்த க்ஷத்திரியக் குலத்தைச் சேர்ந்தவன் கேட்கிறேன். குரு குலத்தில் சந்திர வம்சத்தில் குந்தியின் கருவறையில் பிறந்த பாண்டுவின் மகன்களில் ஒருவனும், வாயுத்தேவனின் வாரிசுமான எனது பெயர் பீமசேனன்” என்றான். குரு வீரனின் {பீமனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட ஹனுமான் புன்னகைத்தான். அந்த வாயுத்தேவனின் மகன் (ஹனுமான்), வாயுத்தேவனின் வாரிசிடம் (பீமசேனனிடம்), “நான் ஒரு குரங்கு {வானரம்}. நீ விரும்பும் பாதையில் நான் உன்னை அனுமதிக்க மாட்டேன். போதும். நீ திரும்பிச் செல்லுதல் நலம். அழிவைச் சந்திக்காதே” என்றான் {ஹனுமான்}.
அதற்குப் பீமசேனன் {ஹனுமானிடம்}, “ஓ குரங்கே {வானரமே}, எதன் மூலமும் உண்டாகும் அழிவைக் குறித்து நான் கேட்கவில்லை. எனக்கு வழியை விடு. எழு! எனது கைகளால் துன்பத்தை அடையாதே” என்றான். ஹனுமான், “எழுவதற்கு எனக்குப் பலமில்லை; நான் நோயால் துன்புறுகிறேன். நீ செல்ல வேண்டுமானால் என்னைத் தாண்டிச் செல்” என்றான். பீமன், “குணங்களற்ற பரமாத்மா உடல் முழுவதும் இருக்கிறான். ஞானத்தால் அறியத்தக்க அவனை என்னால் அவமதிக்க இயலாது. எனவே, நான் உன்னைத் தாண்டிச் செல்ல மாட்டேன். அனைத்து உயிர்களிலும் உறைந்திருக்கும் அவனை {பரமாத்மாவை} நான் அறியாதிருந்தால், கடலைத் தாண்டிய ஹனுமானைப் போல, உன்னையும் இந்த மலையையும் நான் தாண்டியிருப்பேன்” என்றான். அதற்கு ஹனுமான், “கடலைத் தாண்டிய அந்த ஹனுமான் யார்? ஓ! மனிதர்களில் சிறந்தவனே, நான் உன்னைக் கேட்கிறேன். உன்னால் முடிந்தால் அதைச் சொல்” என்றான்.
பீமன் {ஹனுமானிடம்}, “அவன் எனது தமயன். அனைத்தையும் அற்புதமாகவும் சரியாகவும் செய்பவன். அவன் புத்திகூர்மை கொண்டவன். மன பலமும் உடல் பலமும் கொண்டவன். ராமாயணத்தில் அறியப்பட்ட சிறப்பு மிக்கக் குரங்குகள் தலைவன் அவனே. ராமனின் ராணிக்காக {சீதைக்காக}, அந்தக் குரங்கு மன்னன் ஒரே எட்டில் நூறு யோஜனைகள் கொண்ட கடலைத் தாண்டினான். அந்தப் பெரும் பலமிக்கவனே எனது தமயன். நான் சக்தியிலும், பலத்திலும், பராக்கிரமத்திலும், போரிலும் அவனுக்குச் சமமானவன். என்னால் உன்னைத் தண்டிக்க முடியும். அதனால் எழுந்திரு. ஒன்று எனக்கு வழியை விடு, அல்லது எனது பராக்கிமத்தை இன்று பார். நான் சொல்வதை நீ கேட்கவில்லையென்றால், நான் உன்னை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவேன்” என்று மறுமொழி கூறினான் {பீமன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பலத்திலும், தனது கரங்களின் வலிமையின் மீது கொண்ட கர்வத்திலும் (பீமன்) அவன் போதையுண்டிருப்பதை அறிந்த ஹனுமான், இதயத்தில் கேலியாக நினைத்து, “ஓ! பாவமற்றவனே, கண்டிக்காதே. வயதின் காரணமாக, எனக்கு எழுந்திருக்கும் அளவு பலமில்லை. என்னிடம் இரக்கம் கொண்டு, எனது வாலை ஒரு புறமாக நகர்த்தி வை” என்றான். இப்படி ஹனுமானால் சொல்லப்பட்ட பீமன், தனது கரங்களின் பலத்தில் கர்வம் கொண்டும், {ஹனுமானை} சக்தியிலும் பராக்கிரமத்திலும் குறைந்தவன் என நினைத்து, தனக்குள், “இந்த வாலைப் பிடித்து, சக்தியும், வீரமும் அற்ற இந்தக் குரங்கை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புகிறேன்” என்று எண்ணினான்.
அதன்பிறகு, புன்னகையுடனும், கேலியுடனும் தனது இடது கையால் வாலைப் பிடித்தான். ஆனால் அந்த வலிமைமிக்கக் குரங்கின் வாலை அவனால் {பீமனால்} நகர்த்த முடியவில்லை. பிறகு இந்திரனின் நினைவாக நடப்பட்ட தூணைப் போல இருந்த அவ்வாலை இரு கைகளாலும் பிடித்து இழுத்துப் பார்த்தான். இருப்பினும் வலிமைமிக்கப் பீமனால் இரு கைகளாலும் அந்த வாலை உயர்த்த முடியவில்லை. அவனின் {பீமனின்} புருவங்கள் நெறிந்தன, கண்கள் உருண்டன, முகம் சுருங்கியது, அவனின் {பீமனின்} உடல் முழுவதும் வேர்த்தது. இருப்பினும் அவனால் அதை உயர்த்த முடியவில்லை. மிகவும் முயற்சித்த பிறகும், சிறப்புமிக்கப் பீமன் அவ்வாலை உயர்த்துவதில் தோல்வியுற்றான். பிறகு அவன் {பீமன்}, அக்குரங்கின் பக்கத்தில் வந்து வெட்கத்துடன் முகம் கவிழ்ந்து நின்றான்.
அந்தக் குந்தியின் மகன் {பீமன்}, சிரம் தாழ்த்தி, கரம் குவித்து {ஹனுமானிடம்}, “ஓ! குரங்குகளில் முதன்மையானவனே இரக்கம் கொள். எனது கடும் வார்த்தைகளுக்காக என்னை மன்னித்துக் கொள். நீ சித்தனா, தேவனா, கந்தர்வனா அல்லது குஹ்யனா? ஆவலால் கேட்கிறேன். குரங்கின் உருவில் இருக்கும் நீ யார் என்பது ரகசியமில்லை என்றால், ஓ! நீண்ட கரம் கொண்டவனே, நான் கேட்கலாம் என்றால் சொல். ஒரு சீடனாக உன்னைக் கேட்கிறேன், ஓ! பாவமற்றவனே நான் உனது புகலிடத்தைக் கோருகிறேன்” என்றான் {பீமன்}.
அதற்கு ஹனுமான் {பீமனிடம்}, “ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, உனது ஆவலின் எல்லையை அறிந்து நான் விரிவாகவே உரைக்கிறேன். ஓ! பாண்டுவின் மகனே {பீமா} கேள். ஓ! தாமரை இதழ் போன்ற கண்களைக் கொண்டவனே, நான் உலகத்தின் உயிரான வாயுத்தேவனால் கேசரியின் மனைவியிடத்தில் பெறப்பட்டவன். நான் ஒரு குரங்கு {வானரம்}, எனது பெயர் ஹனுமான். பெரும் பலம் வாய்ந்த அனைத்து வானர மன்னர்களும், வானரத் தலைவர்களும், சூரியனின் மகன் சுக்ரீவனிடமும், இந்திரனின் மகன் வாலியிடமும் காத்து நின்றார்கள். ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {பீமா}, காற்றுக்கும் நெருப்புக்கும் இடையே இருப்பது போல எனக்கும் சுக்ரீவனுக்கும் இடையில் நட்பு இருந்தது. ஏதோ காரணத்திற்காகத் தனது தமயனால் {வாலியால்} துரத்தப்பட்ட சுக்ரீவ்வன் என்னுடன் நீண்ட நாட்களாக ரிஷ்யமுக மலையில் வசித்து வந்தான். தசரதனின் பெரும் பலம் வாய்ந்த மகனும், விஷ்ணுவின் மானுட உருவமுமான வீரன் ராமன் இவ்வுலகத்தில் தனது பிறப்பை அடைய நேர்ந்தது. வில்லாளிகளில் முதன்மையான அவன் {ராமன்}, தனது தந்தையின் நன்மைக்காகத் தனது ராணியையும் {சீதையையும்}, தனது தம்பியையும் {இலட்சுமணனையும்} அழைத்துக் கொண்டு வந்து தண்டக வனத்தில் வசிக்க ஆரம்பித்தான். ராட்சச ஏகாதிபதியும் தீயவனுமான இராவணன், ரத்தினம் போன்ற புள்ளிகள் கொண்ட பொன் மான் வடிவம் கொண்ட மாரீசன் என்ற ராட்சசன் உதவியோடு, மனிதர்களில் முதன்மையானவனை {ராமனை} வஞ்சித்து, அவனுடைய (ராமனின்) ராணியை {சீதையைக்} கபடத்தாலும் பலத்தைப் பயன்படுத்தியும் ஜனஸ்தானத்திலிருந்து கடத்திச் சென்றான்.
ஹனுமான் சுயவரலாறு! – வனபர்வம் பகுதி 147-ஹனுமான் சொன்ன சுயவரலாறு
ஹனுமான் {பீமனிடம்} சொன்னான், “தனது மனைவி {சீதை} கடத்தப்பட்ட பிறகு, ரகுவின் வழித்தோன்றால் {ராமன்}, தனது தம்பியுடன் {லட்சுமணனுடன்} சேர்ந்து தனது ராணியைத் {சீதையைத்} தேடிக் கொண்டிருந்த போது, வானரத் தலைவனான சுக்ரீவனை மலைச்சிகரத்தில் சந்தித்தான். பிறகு அவனுக்கும் {சுக்ரீவனுக்கும்}, உயர் ஆன்ம ராகவனுக்கும் இடையில் ஒரு நட்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. பிறகு பின்னவன் {ராமன்}, வாலியைக் கொன்று, சுக்ரீவனை அரசாட்சி ஏற்க வைத்தான். நாட்டை அடைந்த பிறகு சுக்ரீவன், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான வானரங்களைச் சீதையைத் தேடி அனுப்பி வைத்தான். ஓ! மனிதர்களில் சிறந்தவனே {பீமா}, ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே அந்த எண்ணிலடங்கா குரங்குகளுடன் நானும் சீதையைத் தேடி தென்திசை நோக்கிப் பயணித்தேன்.
பிறகு வலிமைமிக்கச் சம்பாதி என்ற பெயர் கொண்ட கழுகு, சீதை இராவணனின் வசிப்பிடத்தில் இருக்கும் வரலாற்றைச் சொன்னது. பிறகு ராமனுக்கு வெற்றியைத் தேடித்தரும் முயற்சியில் நான் நூறு யோஜனைகள் பரந்திருந்த கடலை திடீரெனத் தாண்டினேன். ஓ! பாரதர்களின் தலைவா {பீமா}, எனது சுய பராக்கிரமத்தில் முதலைகள் மற்றும் சுறாக்களின் வசிப்பிடமான கடலைக் கடந்து, இராவணனின் வசிப்பிடத்தில் தேவர்களின் மகளுக்கு ஒப்பாக இருந்த, மன்னன் ஜனகனின் மகளான சீதையைக் கண்டேன். ராமனின் அன்பிற்குரியவளான மங்கை வைதேகியிடம் {சீதையிடம்} நான் பேசிய பிறகு, கோபுரங்களும், பாதுகாப்பு அரண்களும், வாயில்களும் கொண்ட மொத்த இலங்கையையும் எரித்து, எனது பெயரைச் சொல்லிவிட்டுத் திரும்பினேன்.
என்னிடம் இருந்து அனைத்தையும் கேட்ட தாமரை இதழ் போன்ற கண்களை உடைய ராமன், தான் செய்ய வேண்டிய செயல்களை உறுதி செய்து கொண்ட பிறகு, தனது படைக்கு ஒரு வழி ஏற்படுத்துவதற்காக, ஆழமான கடலின் மேல் ஒரு பாலத்தை அமைத்தான். குரங்குக் கூட்டமும் அந்தப் பாலத்தைக் கடந்தன. பிறகு ராமன் தனது பராக்கிரமத்தால் போரில் ராட்சசர்களையும், உலகத்தையே ஒடுக்கியவனான இராவணனையும் அவனது அடிப்பொடிகளையும் கொன்றான். தனது தம்பியுடன் சேர்ந்து ராட்சசர்களின் மன்னனை {இராவணனை} அவனது மகன்கள் மற்றும் உறவினர்களோடு சேர்த்து கொன்ற பிறகு, பக்திமானும், மதிப்பிற்குரியவனும், நம்பி வந்தவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனுமான விபீஷணனை ராட்சசத் தலைவனாக நியமித்து, இலங்கையின் அரசுரிமையை அவனிடம் {விபீஷணனிடம்} கொடுத்தான் {இராமன்}. பிறகு தொலைந்து போன வேதத்தை மீட்டு வந்தது போலத் தனது மனைவியை {சீதையை} மீட்டு வந்தான் {ராமன்}.
பிறகு ரகுவின் மகனான ராமன், தனக்கு அர்ப்பணிப்புடன் இருந்த மனைவியுடன் {சீதையுடன்}, தனது சொந்த நகரமும், எதிரிகளால் அடைய முடியாத நகரமுமான அயோத்யைக்குத் திரும்பி, அங்கே அந்த மனிதர்களின் தலைவன் வசிக்கலானான். பிறகு மன்னர்களில் முதன்மையான ராமன் அரசாட்சியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டான். பிறகு, தாமரை மலர் போன்ற கண்களையுடைய ராமனிடம் நான் {ஹனுமான்} ஒரு வரம் கோரினேன், “ஓ! எதிரிகளைக் கொல்பவனே, ராமா, உனது சாதனைகளின் வரலாறு உலகத்தில் எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம் நான் உயிர் வாழக் கடவேன்” என்று கேட்டேன். அதற்கு அவன் {ராமன்}, “அப்படியே ஆகட்டும்” என்றான். ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, ஓ! பீமா, சீதையின் அருளாலும் {ராமனின் அருளாலும்}, எனது கேளிக்கைக்கான அனைத்து அற்புதமான பொருட்களும், இங்கே யார் வசித்தாலும் எனக்கு வழங்கப்படுகிறது. ராமன் பதினோராயிரம் {11000} ஆண்டுகள் அரசுபுரிந்தான்.
பிறகு தனது சொந்த இருப்பிடத்திற்கு உயர்ந்தான். அது முதல், ஓ! பாவமற்றவனே {பீமா}, இங்கே அப்சரசுகளும், கந்தர்வர்களும் சேர்ந்து அந்த வீரனின் {ராமனின்} சாதனைகளைப் பாடி என்னை மகிழ்விக்கின்றனர். ஓ! குருக்களின் மகனே {பீமனே}, இந்தப் பாதை மனிதர்களால் கடக்க முடியாத பாதை. ஓ! பாரதா {பீமா}, அதனாலேயே, யாரும் உன்னை வீழ்த்தவோ சபிக்கவோ கூடாது என்ற காரணத்திற்காகவே இறவாதவர்கள் {தேவர்கள்} நடந்து செல்லும் பாதையில், உனது வழியைத் தடுத்தேன். இது சொர்க்கத்திற்குச் செல்லும் வழிகளில் ஒன்று. இது தேவர்களுக்கானது; இதன் வழியே மாள்பவர்கள் {மனிதர்கள்} செல்ல முடியாது. ஆனால், நீ தேடி வந்த தடாகம், அதோ அந்தத் திசையில் இருக்கிறது” என்றான் {ஹனுமான்}.
ஹனுமானின் யுக விளக்கம்! – வனபர்வம் பகுதி 148-ஹனுமான் சொன்ன யுகங்களின் விளக்கம்
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச்சொல்லப்பட்ட வலிமையான கரங்களைக் கொண்ட பலமிக்கப் பீமசேனன், பாசத்துடனும், இதய மகிழ்ச்சியுடனும், தனது அண்ணணான வானரத் தலைவன் ஹனுமானை வணங்கி, மென்மையான வார்த்தைகளில், “என்னைவிடப் பேறு பெற்றவர்கள் யாரும் இல்லை; நான் எனது அண்ணனைக் கண்டுவிட்டேன். இது எனக்குச் செய்யப்பட்ட மிகப்பெரும் ஆதரவு; நான் உம்மிடம் மிகத் திருப்தி கொண்டேன். நீர் எனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என இப்போது விரும்புகிறேன். ஓ வீரரே, சுறாக்கள் மற்றும் முதலைகளின் வசிப்பிடமான கடலை தாண்டிய நேரத்தில், நீர் அடைந்த ஒப்பற்ற வடிவத்தைக் காண விரும்புகிறேன். அப்படிச் செய்தால் நான் திருப்தி கொள்வேன். உமது வார்த்தைகளையும் நம்புவேன்” என்றான்.
இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பெரும் வானரம் {ஹனுமான்} சற்றே சிரித்து, “அந்த வடிவத்தை நீயோ, வேறு எவரோ காண இயலாது. அந்த யுகத்தில் இருந்த நிலைகள் வேறு. அந்த நிலை இப்போது இல்லை. கிருத யுகத்தில், பொருட்களின் நிலை ஒன்று, திரேதா யுகத்தில் மற்றொன்று, துவாபர யுகத்தில் இன்னும் ஒன்று என்ற நிலையே இருந்தது. இந்த யுகத்தில் அழிவு நடைபெறுகிறது; என்னிடம் இப்போது அந்த வடிவம் இல்லை. நிலம், நதிகள், செடிகள், பாறைகள், சித்தர்கள், தேவர்கள், தெய்வீக முனிவர்கள் வேறு வேறு யுகங்களில் பொருட்களின் நிலைகளுக்கு இணங்கியும் காலத்திற்கு இணங்கியுமே இருக்கின்றன. ஆகையால், ஓ! குருகுலத்தைத் தழைக்க வைப்பவனே, எனது முந்தைய வடிவத்தைக் காண விரும்பாதே. யுகத்துடன் இணக்கமாகவே நான் இருக்கிறேன். நிச்சயமாக, காலம் தவிர்க்க முடியாதது” என்றான் {ஹனுமான்}.
பீமசேனன் {ஹனுமானிடம்}, “யுகங்களின் கால அளவையும், ஒவ்வொரு யுகத்தின் வகைமுறைகள், சடங்குகள், அறம், இன்பம் மற்றும் பொருள், செயல்கள், சக்தி, வாழ்வு {பிறப்பு}, மரணம் {இறப்பு} ஆகியவற்றை எனக்குச் சொல்லும்” என்று கேட்டான். அதற்கு ஹனுமான், “ஓ குழந்தாய் {பீமா}, ஒரே நித்திய தர்மம் மட்டுமே நடைமுறையில் இருந்த யுகம் கிருதம் என்று அழைக்கப்படுகிறது. யுகங்களில் சிறந்த அந்தச் யுகத்தில் அனைவரும் தர்மத்தில் சரியாக இருந்தனர். ஆகையால் அப்போது எந்தத் தர்மச் செயல்களுக்கும் தேவை ஏற்படவில்லை. பிறகு அறத்திற்கு எந்தச் சீரழிவும் ஏற்படவில்லை; மக்களும் குறையவில்லை {இறப்பில்லை}. இதன் காரணமாகவே அந்த யுகம் கிருதம் {சரியானது} என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அந்த யுகம் குறைவை அடைந்தது.
ஓ! குழந்தாய் {பீமா}, கிருத யுகத்தில், தேவர்களோ, பேய்களோ {dmons அசுரர்களோ}, கந்தர்வர்களோ, யக்ஷர்களோ, ராட்சசர்களோ, நாகர்களோ கிடையாது. அப்போது வாங்குவதும் விற்பதும் இல்லாதிருந்தது. சாம, ரிக், யஜுர் என எதுவும் இல்லை. உடல் உழைப்பு எதுவும் அப்போது இல்லை. வாழ்க்கையின் தேவைகள் அனைத்தும் நினைத்த மாத்திரத்தில் கிடைத்தன. உலகைத் துறப்பதே ஒரே தகுதியாக இருந்தது. அந்த யுகத்தில் நோயோ, புலன்களின் சிதைவோ இல்லை. கோபம், பெருமை {கர்வம்}, பாசாங்குத்தனம், குழப்பம், விருப்பமின்மை, தந்திரம், பயம், துன்பம், பொறாமை, பேராசை ஆகியன அப்போது இல்லை. இதன் காரணமாகவே, யோகிகளின் தலைமைப் புகலிடமான, பரப்பிரம்மனை அனைவரும் அடைந்தனர். வெண்நிறம் அணிந்த நாராயணனே உயிரினங்களின் ஆன்மாவாக இருந்தான்.
கிருத யுகத்தில், அந்தணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரது தனித்துவமான பண்புகள் அனைத்தும் இயற்கையாக இருந்தன. அவர்கள் தங்களுக்குரிய கடமைகளைச் சரியாகச் செய்தனர். அப்போது பிரம்மனே ஒரே புகலிடமாக இருந்தான். அவர்களின் பழக்க வழக்கங்கள் அனைத்தும் இயற்கையாகவே பிரம்மனை அடைவதாக இருந்தது. அவர்களது ஞானத்தின் நோக்கம் பிரம்மனாகவே இருந்தது. அவர்களது அனைத்துச் செயல்களும் பிரம்மனைக் குறித்தே இருந்தன. இவ்வழியில் அனைத்து வகையினரும் தகுதியை அடைந்தனர். ஒரே சீரான ஆன்மாவே அவர்களது தியான நோக்கமாக இருந்தது. அப்போது ஒரே மந்திரம் தான் (ஓம் என்ற மந்திரம் மட்டும்தான்) இருந்தது. ஒரே கட்டளையே இருந்தது. பலதரப்பட்ட பண்புகளைக் கொண்டிருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரே வேதத்தையே பின்பற்றினார்கள். அவர்களுக்கு ஒரே தர்மமே {மதமே} இருந்தது. காலத்தின் பிரிவுகளின் படி அவர்கள், எந்த நோக்கத்தையும் கொள்ளாமல் நால்வகை வாழ்வுகளை மேற்கொண்டதால் அவர்கள் விடுதலையை {முக்தியை} அடைந்தனர். பிரம்மத்துடன் தன்னை அடையாளம் காண்பதே கிருத யுகத்தின் தர்மமாக {மதமாக} இருந்தது. கிருத யுகத்தில் நான்கு வகைகளின் {வர்ணங்களின்} அறங்கள் நான்கு பிரிவுகள் {கால்கள்} உடையதாக இருந்தது. முக்குணங்கள் {சத்வம், ரஜஸ், தமஸ்} இல்லாத அந்த யுகமே கிருத யுகமாகும்.
திரேதா யுகத்தின் தன்மையையும் என்னிடம் இருந்து கேட்டுக் கொள். இந்த யுகத்திலேயே வேள்விகள் அறிமுகமாகின. அறமும் கால் இழந்தது. (உயிரினங்களின் ஆன்மாவாக இருக்கும்) நாராயணன் சிவப்பு நிறத்தை ஏற்றான். மனிதர்கள் உண்மையைப் {சத்தியத்தைப்} பயின்று, தங்களைத் தர்மங்களிலும், தர்மச் சடங்குகளிலும் ஈடுபடுத்திக் கொண்டனர். அதுமுதல் வேள்விகளும், பலதரப்பட்ட தர்ம நோன்புகளும் நடைமுறைக்கு வந்தன. திரேதா யுகத்தில் மக்கள் நோக்கத்தை அடைவதை பல வழிகளில் செய்யத் தொடங்கினர். அவர்கள் செயல்கள் மூலமாகவும் கொடைகள் மூலமாகவும் அவற்றை அடைந்தனர். அவர்கள் அறத்தின் பாதையில் இருந்து வழுவாதிருந்தார்கள். அவர்கள் தவத்திற்கு அர்ப்பணிப்புடன் இருந்தனர். நால் வகைகளும் {வர்ணங்களும்} தங்கள் கடமைகளைச் சரியாகப் பின்பற்றிச் சடங்குகளைச் செய்தனர். திரேதா யுகத்தின் மனிதர்கள் இப்படியே இருந்தனர்.
துவாபர யுகத்தில் அறம் ஒரு பாதிக் குறைந்தது {இரு கால்கள் குறைந்து, இரு கால்களில் நின்றது}. நாராயணன் மஞ்சள் நிறத்தை அணிந்தான். வேதங்கள் நான்காகப் பிரிக்கப்பட்டன. சில மனிதர்கள் நான்கு வேதங்களை அறிந்தனர், சிலர் மூன்று வேதங்களை அறிந்தனர், சிலர் ஒரு வேதத்தை அறிந்திருந்தனர். மேலும் சிலர் ரிக்கைக் கூட அறியவில்லை. சாத்திரங்கள் இப்படிப் பகுக்கப்பட்டபிறகு செயல்கள் அதிகரிக்கத் தொடங்கின. மக்கள் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, துறவிலும் கொடையிலும் ஈடுபட்டனர். முழு வேதத்தையும் பயிலும் திறனற்றதால், அது பல பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. அறிவு குறைந்ததன் விளைவாகச் சிலரே உண்மையில் நிலைத்திருந்தார்கள். மக்கள் சத்தியத்தில் இருந்து வழுவிய போது, பலதரப்பட்ட நோய்களும், காமம் {ஆசை} பெருகவும், இயற்கைப் பேரிடர்களும் ஏற்பட ஆரம்பித்தன. இவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தவம் மேற்கொள்ள ஆரம்பித்தனர். சிலர் வாழ்வில் நல்ல காரியங்களை விரும்பியோ அல்லது சொர்க்கத்தை விரும்பியோ வேள்விகள் கொண்டாடினர். துவாபர யுகம் தொடங்கியதும் மனிதர்கள் அவர்கள் செய்யும் அக்கிரமங்களால் சிதைவுக்குள்ளாகினர்.
ஓ! குந்தியின் மகனே {பீமா}, கலி யுகத்தில் அறம் ஒரே காலில் நிற்கிறது. இந்த இரும்பு யுகத்தின் தொடக்கத்தில் நாராயணன் கருப்பு நிறத்தை அணிகிறான். இந்த யுகத்தில் வேதங்களும் நெறிகளும், அறம், வேள்விகள், அற நோன்புகள் ஆகியன பயன்பாட்டில் இருந்து விழுகின்றன. ஈதி {அதிக மழை, வறட்சி, எலிகள், வெட்டுக் கிளி, பறவைகள், அண்டை நாட்டுப் பகை மன்னர்கள் – ஆகிய பயிருக்கு சாதகமற்ற ஆறு பொருள்கள்}, நோய், களைப்பு, கோபம், பிற குறைபாடுகள், இயற்கைப் பேரிடர், துயரம், பற்றாக்குறை பயம் ஆகியன உண்டாகும். யுகம் கரையும்போது, அறமும் குறைவடைகிறது. அறம் குறையும் போது, உயிரினங்கள் அழிகின்றன. உயிரினங்கள் அழிந்தால் இயற்கை அழிவைச் சந்திக்கிறது. யுக முடிவில் செய்யப்படுகிற அறச் செயல்கள் எதிர்மறை பலன்களை அளிக்கின்றன. பல யுகங்கள் வாழ்வன கூட இம்மாற்றங்களுக்கு ஆட்படுகின்றன. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, உனது ஆவலை அறிந்ததால் இதைச் சொல்கிறேன். ஒரு நல்ல மனிதன் ஏன் மிதமிஞ்சிய பொருளைக் {பயனற்றதைக்} குறித்து ஆவலாக இருக்க வேண்டும்? ஓ! நீண்ட கரங்கள் கொண்டவனே {பீமா}, ஒவ்வொரு யுகத்தின் தன்மைகள் குறித்து முழுமையாகச் சொல்லிவிட்டேன். உனக்கு நன்மை உண்டாகட்டும். இனி நீ திரும்பிப் போ” என்றான் {ஹனுமான்}.
ஹனுமான் நீதி! – வனபர்வம் பகுதி 149-ஹனுமான் தனது பெரும் உடலை பீமனுக்குக் காட்டுவது; சௌகந்திக வனத்திற்குச் செல்லும் பாதையை ஹனுமான் பீமனுக்குக் காட்டுவது; நால்வகை மனிதர்களின் கடமைகளை ஹனுமான் பீமனுக்கு உரைப்பது.
பீமசேனன் {ஹனுமானிடம்} சொன்னான், “உமது முந்தைய வடிவத்தைக் காணாது நான் செல்ல மாட்டேன். உம்மிடம் நான் உதவி பெறக்கூடியவனாக இருந்தால், நீர் உமது சொந்த உருவை எனக்குக் காட்ட வேண்டும்” என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பீமனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் குரங்கு {ஹனுமான்} சிரித்துக் கொண்டே தான் கடலைத் தாண்டிய போது கொண்டிருந்த உருவை வெளிக்காட்டினான். தனது தம்பியை {பீமனை} திருப்தி செய்ய விரும்பிய ஹனுமான் உயரத்திலும் அகலத்திலும் மாபெரும் உருவெடுத்தான். அளக்கமுடியா பிரகாசம் கொண்ட அந்தக் குரங்கு {ஹனுமான்}, மரங்களடர்ந்த அந்த வாழைத் தோப்பை மறைத்த படி விந்தியமென வளர்ந்து நின்றான். மலையைப் போல உருவெடுத்த தாமிர விழிகளும், கூரிய பற்களும், புருவம் சுருங்கிய குறியுடைய முகமும் கொண்ட அந்த வானரம் {ஹனுமான்}, தனது நீண்ட வாலை ஆட்டியபடி எல்லாப் புறங்களிலும் வியாபித்துக் கிடந்தான். குருக்களின் மகன் {பீமன்} தனது அண்ணனின் பெருத்த உருவத்தைக் கண்டு மலைத்ததால் அவனுக்குத் திரும்பத் திரும்ப மயிர்ச்சிலிர்ப்பு உண்டானது. சூரியனைப் போன்ற பிரகாசத்துடனும், பொன் மலையைப் போலவும், எரியும் ஆகாயம் போலவும் இருந்த அவனைக் கண்ட பீமன் தனது கண்களை மூடிக் கொண்டான். பிறகு ஹனுமான் பீமனிடம் புன்னகையுடன், “ஓ! பாவமற்றவனே, இந்த அளவுக்கு மட்டுமே எனது உருவை உன்னால் காண முடியும். எனினும், நான் எனது உருவத்தை நான் விரும்பியவாறு இதை விட அதிகமாகப் பெருக்கிக் கொண்டே போக முடியும். ஓ பீமா, எதிரிகளுக்கு மத்தியில் எனது உருவம் சுயசக்தி கொண்டு தானே அதிகமாக வளரும்” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “விந்திய மலையைப் போல இருந்த ஹனுமானின் கடுமை நிறைந்த அற்புத உடலைக் கண்ட வாயுத் தேவனின் மகன் {பீமன்} தடுமாறிப் போனான். மயிர் சிலிர்த்தவனாய் இருந்த உயர்ந்த பண்புகளுடைய மனம் கொண்ட பீமன், தனது கரங்களைக் கூப்பி, ஹனுமானிடம், “ஓ தலைவா, உமது உடலின் பெரும் அளவுகளைக் கண்டேன். ஓ உயர்ந்த பலம் கொண்டவரே, உமது சக்தியால் உம்மைக் குறைத்துக் கொள்ளும். உதிக்கும் சூரியனைப் போலவும், அளவிட முடியாதவராகவும், கட்டுப்படுத்தப்பட முடியாதவராகவும் மைநாக மலையைப் போலவும் இருக்கும் உம்மை என்னால் காண முடியவில்லை. ஓ வீரரே, நீர் அருகில் இருந்த போதும் ராமன் ராவணனை தானே எதிர்த்துச் சென்றான் என்பதில் இன்று எனது இதயம் ஆச்சரியம் கொள்கிறது. உமது கரத்தின் பலத்தால் நீர் ஒருவரே இலங்கையையும், அதன் போர்வீரர்களையும், குதிரைகளையும், யானைகளையும், ரதங்களையும் அழித்திருக்க முடியுமே. ஓ வாயுத்தேவனின் மகனே {ஹனுமாரே}, உம்மால் அடைய முடியாதது எதுவுமில்லை. ராவணனும், அவனைப் பின்பற்றுவோர் அனைவரும் சேர்ந்து ஒருங்கே வந்தாலும் போரில் உம் ஒருவருக்கு அவர்கள் அனைவரும் சேர்ந்தும் நிகராக மாட்டார்கள்” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பீமனால் இப்படிச் சொல்லப்பட்ட வானரத்தலைவன் ஹனுமான் பாசமாக முறையான வார்த்தைகளால் பதிலளித்தான். ஹனுமான், “ஓ வலுத்த கரம் கொண்டவனே, ஓ பாரதா {பீமா}, நீ சொல்வது போலத்தான் {உண்மைதான்}. ஓ பீமசேனா, அந்த ராட்சசர்களில் இழிந்தவன் {இராவணன்} எனக்கு நிகராக மாட்டான். ஆனால் உலகங்களின் முள்ளான ராவணன் என்னால் கொல்லப்பட்டிருந்தால், ரகு மகனின் {ராமனின்} புகழுக்குக் களங்கம் ஏற்பட்டிருக்கும். அதற்காகவே நான் அவனை விட்டேன். அந்த ராட்சசர்களின் தலைவனையும், அவனது அடிபொடிகளையும் கொன்று, சீதையைத் தனது நகரத்திற்குக் கொண்டு வந்த அந்த வீரன் {ராமன்}, மனிதர்கள் மத்தியில் தனது புகழை நிலைக்க வைத்தான். ஓ! பெரும் ஞானியே, உனது சகோதரர்களுக்கு நன்மை செய்ய விரும்பியும் வாயுத்தேவனால் காக்கப்பட்டும் பேறுடனும் மங்களகரமாகவும் செல்.
ஓ! குருக்களில் முதன்மையானவனே {பீமனே}, இவ்வழி சௌகந்திக வனத்திற்குச் செல்கிறது. (இத்திசையில் முன்னேறினால்) யக்ஷர்களாலும் ராட்சசர்களாலும் காக்கப்பட்டு வரும் குபேரனின் நந்தவனத்தை நீ காணலாம். உனது சுயபலத்தால் நீ பூக்களைப் பறிக்காதே. குறிப்பாக மனிதர்களிடம் மதிப்பைப் பெறும் தகுதி தேவர்களுக்கு இருக்கிறது. ஓ பாரதக் குலத்திற்சிறந்தவனே, காணிக்கைகள், ஹோமங்கள், மதிப்பிற்குரிய வணக்கங்கள், மந்திரங்கள் உரைத்தல் மற்றும் துதி ஆகியவற்றால் தேவர்கள் மனிதர்களுக்கு அருளை வழங்குகிறார்கள். ஓ பாரதா {பீமா}, ஓ குழந்தாய், எனவே, கடுஞ்செயல் புரியாதே. உனது வகைக்கான {வர்ணத்துக்கான} கடமைகளில் இருந்து வழுவாதே. உனது கடமைகளைப் பற்றிக் கொண்டு, உயர்ந்த அறநெறியை புரிந்து கொண்டு பயின்று வா. கடமைகளை அறியாது, முதியோர்களைச் சேவிக்காது இருந்தால் பிருஹஸ்பதியைப் போன்ற மனிதர்களும் அறம் மற்றும் பொருளை உணர மாட்டார்கள். தீமை நன்மையென்ற பெயரிலும், நன்மை தீமை என்ற பெயரிலும் வரும் வழக்குகளின் வேறுபாடுகளை ஒருவன் உறுதி செய்து கொள்ள வேண்டும். இது போன்ற வழக்குகளில் புத்திகூர்மையற்றவர்கள் குழம்பிவிடுவார்கள். தர்ம நோன்புகளிலிருந்து நெறி உருவாகிறது; நெறி வேதங்களில் நிறுவப்பட்டிருக்கிறது; வேதங்களிலிருந்து வேள்விகள் வந்தன; வேள்விகள் மூலம் தேவர்கள் நிறுவப்படுகின்றனர்; வேதங்களில் சொல்லப்பட்டுள்ளபடி செய்யப்படும் வேள்விகளாலும் தர்மவிதிகளாலும் தேவர்கள் பராமரிக்கப்படுகின்றனர். மனிதர்கள், பிருஹஸ்பதி மற்றும் உசானஸ் {சுக்ரன்} ஆகியோரின் விதிகளைப் பின்பற்றியும், தங்கள் தொழில்களாலும் தங்களைப் பராமரித்துக் கொள்கின்றனர். கூலிகள் பெறுவதன் மூலமும், வரிகள் வசூலிப்பதன் மூலமும், வியாபாரம், விவசாயம் மற்றும் மாடு ஆடு வளர்ப்பு ஆகியவற்றின் மூலமும் இந்த உலகம் பராமரிக்கப்படுகிறது.
தொழில் மூலமே உலகம் பிழைத்திருக்கிறது. மூன்று வேதங்கள் {கல்வி}, விவசாயம், வணிகம், அரசமைப்பு உருவாக்குதல் ஆகியவை இருபிறப்பாளர்களின் {அந்தண, க்ஷத்திரிய, வைசிய வர்ணத்தாரின்} தொழில்கள் என ஞானமுள்ளோரால் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகையும் {வர்ணமும்} தனக்கு விதிக்கப்பட்ட தொழிலைப் பின்பற்றித் தன்னைப் பராமரித்துக் கொள்கிறது. இவை சரியாகப் பின்பற்றப்படும்போது உலகம் எளிதாகத் தன்னைப் பராமரித்துக் கொள்கிறது. எனினும், மக்கள் நேர்மையாகத் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளாததாலும், வேத தகுதியற்றிருப்பதாலும், அரசற்று இருப்பதாலும் உலகம் அநீதியால் சூழப்படுகிறது. மனிதர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தொழில்களைச் செய்யவில்லை என்றால் அழிந்து போவார்கள். ஆனால் இந்த மூன்று தொழில்களையும் சரியாகப் பின்பற்றினால் தர்மம் செழிக்கும். அந்தணர்களின் தர்மம் ஆன்மாவின் ஞானத்தை அடைவதாகும். இந்த வகையின் {வர்ணத்தின்} நிறம் மட்டுமே அண்டம் முழுவதும் ஒன்றாகவே இருக்கிறது {the hue of that order alone is universally the same}. வேள்விக் கொண்டாட்டம், கல்வி, பரிசுகள் கொடை ஆகியவை நன்கு அறியப்பட்ட {அனைத்து வகையினருக்கும் [வர்ணத்தாருக்கும்]} பொதுவான மூன்று கடமைகளாகும்.
வேள்விகள் நடத்துவதும், கல்வி கற்பிப்பதும், பரிசுகள் ஏற்பதும் ஒரு அந்தணனின் கடமையாகும். (குடிமக்களை) ஆள்வது க்ஷத்திரியனின் கடமையாகும்; (கால்நடை) வளர்த்தல் வைசியனின் கடமையாகும்; இருபிறப்பாளர் வகைகளுக்கு {பிராமணர்களுக்கு} சேவை செய்வதே சூத்திரனின் கடமையாகும். சூத்திரர்கள் பிச்சை எடுக்கக்கூடாது; ஹோமங்கள் செய்யக்கூடாது; நோன்புகள் நோற்கக்கூடாது; அவர்கள் தங்கள் தலைவனின் {முதலாளியின்} வசிப்பிடத்தில் வசிக்க வேண்டும். ஓ! குந்தியின் மகனே {பீமா}, உனது தொழில் (குடிமக்களை) பாதுகாக்கிற க்ஷத்திரியத் தொழிலாகும். புலன்களில் இருந்து விடுபட்டு, எளியவனாக இருந்து உனது கடமைகளைச் செய். அனுபவம் நிறைந்த மனிதர்களுடன் ஆலோசனை நடத்துபவனும், நேர்மையான, புத்திசாலியான, கல்வி கற்ற அமைச்சர்களால் உதவப்படுபவனுமான மன்னன் மட்டுமே ஆளலாம். தீமைக்கு அடிமையாக இருக்கும் மன்னன் தோல்வியைச் சந்திக்கிறான். சரியான தண்டனையும், நல்ல உதவிகளையும் செய்யும் மன்னனாலேயே உலகம் பாதுகாப்பாக இருக்கிறது.
எனவே, {ஒரு மன்னன்} பகை நாட்டின் இயல்பையும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளையும், எதிரிகளின் கூட்டாளிகளையும், அவர்களின் செழிப்பு மற்றும் அழிவையும், அவர்கள் அதிகாரத்தை அடைந்த வழிகளையும் ஒற்றர்கள் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒற்றர்கள் ஒரு மன்னனின் முக்கியத் துணைவர்களாவார்கள்; நுண்நயம் {திறமை}, ராஜதந்திரம், உள்ளத்துணிவு, தண்டனை தரும் முறை, அருள் மற்றும் புத்திகூர்மை ஆகியன வெற்றிக்கு வழிவகுக்கும். பிரிவோ அல்லது சமாதானம், பரிசு, சண்டைமூட்டுதல், தண்டனை, பார்வை ஆகியவை இணைந்தோ வெற்றியைக் கொடுக்கும்.
ஓ! பாரதர்களின் தலைவா {பீமா}, அரசியலுக்கு {அரசாட்சிக்கு} வேர் இராஜதந்திரமாகும்; இராஜதந்திரம் ஒற்றர்களின் முக்கியத் தகுதியாகும். சரியான தீர்மானங்கள் அரசியலில் வெற்றியைக் கொடுக்கும். ஆகையால், அரசியலில் அந்தணர்களின் ஆலோசனையும் கேட்கப்பட வேண்டும். ரகசிய காரியங்களில், பெண்களுடனோ, மூடனுடனோ, சிறுவனுடனோ, பேராசைக்காரனுடனோ, பைத்தியக்காரனுடனோ ஆலோசிக்கக் கூடாது. ஞானமுள்ளோரிடம் மட்டுமே ஆலோசிக்க வேண்டும். செயல்களைத் திறன் படைத்த அலுவலர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும்.
நட்புடன் உள்ள மனிதர்கள் மூலம் அரசாட்சி செய்ய வேண்டும். மூர்க்கர்களை எல்லாக் காரியங்களிலும் விலக்க வேண்டும். தர்ம காரியங்களில் பக்திமான்களையும், பொருளீட்டுவதில் கற்றறிந்தவர்களையும், குடும்பப் பாதுகாப்புக் காரியங்களில் அலிகளையும் {eunuch = நபும்சகர் = அலி}, நேர்மையற்ற காரியங்களில் குரூர்களையும் நியமிக்க வேண்டும். எதிரிகளின் செயல்களில் செய்யத்தக்கது, செய்த்தகாதது, அவர்களது பலம் மற்றும் பலமற்ற தன்மை, ஆகியவற்றையும், தன் ஒற்றர்களைக் கொண்டும், பகைநாட்டு ஒற்றர்களைப் பயன்படுத்தியும் அறிய வேண்டும். நேர்மையான மனிதர்களுக்குச் சாதகமாக அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்க வேண்டும்; சட்டத்தை மதிக்காதவர்கள், அடங்காத மனிதர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஒரு மன்னன் நீதியுடன் தண்டனையும், உதவியும் செய்யும்போது, சட்டத்தின் ஆட்சி சரியாகப் பராமரிக்கப்படும். ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {பீமா}, அறிவதற்குக் கடினமான ஒரு மன்னனின் கடமைகளை நான் விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.
மன அமைதியுடன் இவற்றைப் பின்பற்றி உனது வகைக்கான {வர்ணத்திற்கான} செயலைச் செய். அந்தணர்கள் அறத்தகுதி, புலனடக்கம், வேள்விகள் மூலம் சொர்க்கத்தை அடைகின்றனர். வைசியர்கள் கொடை, விருந்தோம்பல், அறச்செயல்கள் மூலம் உயர்ந்த நிலையை அடைகிறார்கள். க்ஷத்திரியர்கள் குடிமக்களைப் பாதுகாத்தும் தண்டித்தும், காமம், விரோத மனப்பான்மை, கோபம் ஆகியவற்றால் பாதிக்கபடாதிருந்தும் தெய்வீக உலகங்களை அடைகிறார்கள். (குடிமக்களை) நீதியுடன் தண்டித்தால் ஒரு மன்னன் நல்ல மனிதர்கள் அடையும் உலகத்தை அடைகிறான்.
ஹனுமான் மறைந்தான்! – வனபர்வம் பகுதி 150-தனது உருவத்தைச் சுருக்கிக் கொண்டு, பீமனுக்கு வரமருளிய ஹனுமான் அங்கேயே மறைந்து போதல்
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பின்னர் தன்னிச்சைப்படி பெருக்கிக் கொண்ட தனது பெருத்த உடலைச் சுருக்கிக் கொண்ட அக்குரங்கானவன் {ஹனுமான்}, தனது கரங்களைக் கொண்டு மீண்டும் பீமசேனனை அணைத்துக் கொண்டான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அண்ணனால் {ஹனுமானால்} தழுவப்பட்ட பீமனின் களைப்பு நீங்கி, அவனது அனைத்து (உடல் சக்தியும்) பலமும் மீண்டது. பெரும் வலிமையை மீண்டும் அடைந்த பிறகு, தனது உடல் சக்திக்கு இணையாக யாரும் இல்லை என அவன் {பீமன்} நினைத்தான்.
அக்குரங்கானவன் {ஹனுமான்} கண்களில் நீர் நிரம்பியபடி பீமனிடம் பாசத்தால் அடைபட்ட குரலுடன், “ஓ! வீரா {பீமா}, உனது வசிப்பிடம் திரும்பு. உனது பேச்சுகளில் தற்செயலாக என்னை நினைவு கொள். ஓ! குருக்களில் சிறந்தவனே, நான் இங்கு வசிப்பதாக யாரிடமும் சொல்லாதே. ஓ! பெரும் பலசாலியே, தேவர்கள் மற்றும் கந்தர்வர்களின் மிக அற்புதமான மனைவியர் இந்த இடத்திற்கு வந்து போவார்கள். அவர்கள் வரும் சமயமும் நெருங்கிவிட்டது. (உன்னைக் கண்டதால்) எனது கண்கள் அருள் பெற்றது. ஓ! பீமா, மானிட உடலின் ஸ்பரிசத்தை {தொடு உணர்வை} உன்னால் அடைந்ததால், ரகுவின் மகன் {ராமன்} எனது மனமெங்கும் நிறைந்தான். உலகத்தின் இதயங்களை மகிழ்வித்து, ராமன் என்ற பெயரில் அவதரித்த அவன் விஷ்ணுவே. சீதையின் தாமரை முகத்திற்கும், ராவணன் என்ற இருளுக்கும் சூரியன் அவன் {ராமன்}.
எனவே, குந்தியின் வீர மகனே {பீமா}, உனது இந்தச் சந்திப்புக் கனியற்றதாக இருக்கக்கூடாது. ஓ! பாரதா {பீமா}, உடன்பிறந்த உணர்வுடன் நீ என்னிடம் ஒரு வரம் கேள். உனக்கு விருப்பமிருக்குமானால், நான் வாரணாவதம் {இங்கே ஹஸ்தினாபுரம் என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்} சென்று திருதராஷ்டிரனின் தீய மகன்களை அழித்திடுவேன். அதுவும் உடனடியாக. அல்லது அந்த நகரத்தையே வெறும் பாறைகளாகச் சுக்கு நூறாக்குவேன். அல்லது துரியோதனனைக் கட்டி வந்து உன் முன் கிடத்துவேன். ஓ பெரும் பலம் கொண்டவனே, அதையும் இன்றே செய்வேன்” என்றான் {ஹனுமான்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இவ்வார்த்தைகளைக் கேட்ட உயர் ஆன்ம பீமன், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் ஹனுமானிடம், “ஓ! வானரங்களில் முதன்மையானவரே, இவையனைத்தையும் நீர் செய்துவிட்டதாகவே நான் கொள்கிறேன். உமக்கு நன்மை உண்டாகட்டும். ஓ! வலுத்த கரம் கொண்டவரே! நீர் என்னிடம் திருப்தியுடன் இருக்கிறீர் என்றால் நான் உம்மிடம் ஒன்று கேட்பேன். ஓ! பலம்வாய்ந்தவரே, உம்மைப் பாதுகாவலராகக் கொண்ட பாண்டவர்கள் பெரும் உதவியைப் பெற்றவர்களாவார்கள். உமது பராக்கிரமத்தால் நாங்கள் எங்கள் அனைத்து பகைவர்களையும் வீழ்த்துவோம்” என்றான்.
இப்படிச் சொல்லப்பட்ட ஹனுமான் பீமனிடம், “சகோதர உணர்ச்சியாலும் பாசத்தாலும், ஏராளமான அம்புகளும் ஈட்டிகளும் கொண்டு வரும் உனது எதிரிகள் மத்தியில் நான் பாய்ந்து உனக்கு நன்மையைச் செய்வேன். ஓ பலம்வாய்ந்தவனே, ஓ! வீரனே, நீ சிம்ம கர்ஜனை செய்யும்போது, நான் எனது கர்ஜனையையும் சேர்த்து அந்த ஒலிக்கு கூடுதல் பலத்தை அளிப்பேன். அர்ஜுனனின் தேரில் உள்ள கொடிக்கம்பத்தில் இருந்து, நான் கடும் கர்ஜனைகள் செய்து உனது எதிர்களின் ஆற்றலைக் குறைப்பேன். அதன் மூலம் நீ அவர்களை எளிதாகக் கொல்லலாம்” என்றான். இதைப் பாண்டுவின் மகனிடம் {பீமனிடம்} சொல்லிவிட்டு, {செல்ல வேண்டிய} வழியையும் சுட்டிக் காட்டினான் {ஹனுமான்}. பிறகு ஹனுமான் அந்த இடத்திலேயே மறைந்தான்.
சௌகாந்திகத்தைக் கண்ட பீமன்! – வனபர்வம் பகுதி 151-பல தோப்புகளையும், ஆறுகளையும் கடந்து சென்ற பீமன் சௌகாந்திக தாமரையை அடைவது
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்த வானரங்களில் முதன்மையானவன் {ஹனுமான்} சென்றதும், மனிதர்களில் பலசாலியான பீமன், அந்தப் பெரும் கந்தமாதன மலையின் வழியில் சென்றான். அப்போது அவன் மனதில் ஹனுமானின் உடல் பிரகாசம் பூமியில் ஒப்பற்றது என்றும், தசரதன் மகனின் {ராமனின்} பெருமைகளையும், உயர்ந்த மதிப்பையும் நினைத்துக் கொண்டான். அந்த வகை தாமரைகள் நிறைந்த பகுதியைத் தேடி முன்னேறிய பீமன், அழகான கானகங்களையும், தோப்புகளையும், ஆறுகளையும், பூத்துக்குலுங்கும் மரங்கள் அடர்ந்த தடாகங்களையும், பலவண்ணங்களில் பூக்களைக் கொண்டிருக்கும் காடுகளையும் கண்டான்.
ஓ! பாரதா {ஜனமேஜயா}, மழை பொழியும் மேகங்களைப் போல, உடலெல்லாம் புழுதி பூசிய மத யானைக்கூட்டங்களை அவன் {பீமன்} கண்டான். அந்த அருள் நிறைந்தவன் {பீமன்} மிக விரைவாகச் செல்லும்போது கானகத்தின் பக்கங்களில், வாயில் புற்களுடனும், அருகில் தங்கள் துணையுடனும் மான்கள் நின்று கொண்டிருப்பதையும் கண்டான். பராக்கிரமத்தால் அச்சமற்ற பீமசேனன், தென்றலால் அசைந்த நறுமணமிக்க மலர்களும், தாமிர வண்ண கிளைகளும் கொண்ட மரங்கள் வரவேற்றது போல, எருமைகளும், கரடிகளும், சிறுத்தைகளும் நிறைந்த மலைப்பகுதிக்குள் நுழைந்தான்.
வழியில் மயங்கித் திரியும் கருவண்டுகளால் மொய்க்கப்பட்ட பல தாமரைத் தடாகங்களைக் கடந்து சென்றான் {பீமன்}. அழகிய உயிரினங்களையும், காடுகளையும் தாண்டி இருக்கும் தாமரை மொட்டுகள் அவனை {பீமனை} கரங்கள் கூப்பி வரவேற்பது போல இருந்தது. திரௌபதியின் வார்த்தைகளை வழியுணவாகக் கொண்டு பீமன் விரைவாகச் சென்று, பூத்துக் குலுங்கும் மலைச்சரிவுகளிலேயே தனது மனத்தையும், பார்வையையும் நிலைக்க வைத்தான். கதிரவன் உச்சியைக் கடந்த போது, மான்கள் பரவிய அந்தக் காட்டில், பொன்மயமான தாமரைகள் நிறைந்த ஒரு பெரும் நதியைக் கண்டான். அன்னங்களாலும், நீர்க்காக்கைகளாலும், சக்கரவாகப் பறவைகளாலும் நிறைந்த அந்த நதி, அழகான புதிய தாமரைகளால் ஆன மாலை {ஆரம்} அந்த மலை மீது போடப்பட்டது போல இருந்தது. அந்தப் பெரும்பலம்வாய்ந்தவன் {பீமன்}, அந்த நதியில் மகிழ்ச்சியை அளிக்கும் உதயசூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட சௌகாந்திக தாமரைகளின் பெரும் கூடத்தைக் கண்டான். அதைக் கண்ட பாண்டுவின் மகன் {பீமன்}, விரும்பியதை அடைந்தவனாக உணர்ந்து, கானக வாசத்தால் துன்பத்தில் இருக்கும் தனது அன்புக்குரியவளின் {மனைவியான திரௌபதியின்} முன்பாக மானசீகமாக நின்றான்.
குரோதவாசர்களின் விசாரணை! – வனபர்வம் பகுதி 152-சௌகாந்திக மலர் இருக்கும் தடாகத்தில் இறங்க நினைத்த பீமனை, அத்தடாகத்தைக் காவல் காத்த ராட்சசர்கள் தடுத்து அவன் வந்த நோக்கத்தைக் கேட்பது
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்த இடத்தை அடைந்த பிறகு, பீமசேனன், கைலாச மலையின் உச்சியில் ராட்சசர்களால் பாதுகாக்கப்பட்ட அழகிய கானகத்தால் சூழப்பட்ட அந்த அழகிய தாமரைத் தடாகத்தைக் கண்டான். அத்தடாகம், குபேரனின் வசிப்பிடத்தில் இருந்து தொடர்ச்சியாக அருவிபோல விழுந்து கொண்டிருந்தது. நீண்ட நிழல் பரப்பும் பல வகை மரங்களாலும், கொடிகளாலும், சூழப்பட்ட அத்தடாகம் பச்சைக் குவளைகளால் மூடப்பட்டுக் காண்பதற்கு அழகாக இருந்தது.
அத்தெய்வீகத் தடாகம் பொற்தாமரைகளால் நிறைந்து, பல வகைப் பறவைகளால் மொய்க்கப்பட்டிருந்தது. அதன் கரைகள் சேறற்று அழகாக இருந்தன. உயர்ந்த பாறை பரப்பில் தேங்கியிருந்த அந்த அபரிமிதமான அற்புத நீர் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அது உலகத்தின் அற்புதமாகவும், காண்பதற்கு ஆரோக்கியமான அழகிய காட்சியாகவும் இருந்தது. அத்தடாகத்தின் நீரை, குந்தியின் மகன் {பீமன்} அமுதத்துக்கு நிகரான சுவையும், குளுமையும், தெளிவும், புத்தணர்ச்சியும் கொண்டதாகப் பீமன் உணர்ந்தான். அந்தப் பாண்டவன் {பீமன்} அந்நீரை மட்டுமீறித் தாராளமாகக் குடித்தான்.
அந்தத் தெய்வீகமான நீர்க்கொள்ளிடம் தெய்வீகமான சௌகாந்திக தாமரைகளால் மூடப்பட்டிருந்தது. மேலும் அற்புதமான நறுமணமிக்க, வைடூரியத் தண்டுகள் கொண்ட பல வண்ணங்களில் மினுங்கும் தங்கத் தாமரைகளையும் கண்டான். அன்னங்களாலும், நீர்க்காக்கைகளாலும் அசைக்கப்பட்ட அத்தாமரைகள் மாவு போன்ற புதுமையான பூந்தாதுகளைப் பரப்பிக் கொண்டிருந்தன. யக்ஷர்களின் மன்னனான உயர் ஆன்ம குபேரனின் விளையாட்டிடமாக அத்தடாகம் இருந்தது. கந்தர்வர்கள், அப்சரசுகள் மற்றும் தேவர்களால் அது பெரிதும் மதிக்கப்பட்டிருந்தது. தெய்வீக முனிவர்களும், யக்ஷர்களும், கிம்புருஷர்களும், ராட்சசர்களும், கின்னரர்களும் அத்தடாகத்துக்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தனர். அத்தடாகம் குபேரனால் நன்கு பாதுகாக்கப்பட்டிருந்தது.
அந்த ஆற்றையும், தெய்வீகமான அந்தத் தடாகத்தையும் கண்ட குந்தியின் பலம் நிறைந்த மகனான பீமசேனன் மிகவும் மகிழ்ந்தான். சீருடைகளுடனும், பலதரப்பட்ட ஆயுதங்களுடனும் இருந்த குரோதவாசர்கள் என்ற பெயர் கொண்ட நூற்றக்கணக்கான, ஆயிரக்கணக்கான ராட்சசர்கள், தங்கள் மன்னனின் {குபேரனின்} ஆணைக்கிணங்கி அத்தடாகத்தைச் பாதுகாத்து வந்தனர். மான்தோலுடுத்தி புஜங்களில் தங்க ஆரங்கள் பூட்டிய எதிரிகளை ஒடுக்குபவனும், குந்தியின் மகனுமான பயங்கர பராக்கிரமம் கொண்ட பீமன் ஆயுதங்களுடனும் வாளுடனும் அச்சமற்று தாமரைகளைச் சேகரிப்பதற்காக முன்னேறிக் கொண்டிருந்தபோது, அதைக் கண்டவர்கள் (ராட்சசர்கள்) உடனே தங்களுக்குள், “மான் தோலுடுத்தி, ஆயுதங்களுடன் இங்கே வந்திருக்கும் இந்த மனிதர்களில் முதன்மையானவனுடைய பயணத்தைக் குறித்து விசாரியுங்கள்” என்று சத்தம் போட்டனர். பிறகு அவர்கள் அனைவரும் கூடி பிரகாசமிக்கவனும், வலுத்த கரங்கள் கொண்டவனுமான விருகோதரனை {பீமனை} அணுகி, “யார் நீ? நீ எங்களது கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். துறவியின் கோலத்தில் இருந்தும் ஆயுதங்கள் தாங்கியிருக்கிறாய். ஓ! பெரும் புத்திகூர்மை கொண்டவனே, நீ (இங்கே) வந்த நோக்கத்தை விவரித்துச் சொல்” என்று கேட்டனர்.
மலர்களை அடைந்த பீமன்! – வனபர்வம் பகுதி 153-சௌகாந்திக மலர் பெற தான் வந்த காரணத்தை பீமன் சொல்வது; மலர்களைப் பறிக்க முடியாது என்று குரோதவாசர்கள் சொல்வது; பீமன் அதை மறுத்து மலர்களைப் பறிக்கச் செல்வது; ராட்சசர்களுக்கு பீமனுக்குமிடையில் நடந்த மோதல்; நூற்றுக்கணக்கான ராட்சசர்களை பீமன் கொல்வது; பின்வாங்கி ராட்சசர்கள் குபேரனிடம் சென்று முறையிடுவது; குபேரன் மலர்களை பீமன் பறித்துக் கொள்ளட்டும் என்று சொல்வது–
பீமன் {குரோதவாசர்களிடம்} சொன்னான், “நான் பாண்டுவின் மகன், பிறப்பால் நீதிமானான யுதிஷ்டிரனுக்கு அடுத்தவன், எனது பெயர் பீமசேனன். ஓ! ராட்சசர்களே, நான் விசால என்ற பெயர் கொண்ட இலந்தை மரத்திற்கு எனது சகோதரர்களுடன் வந்திருக்கிறேன். அவ்விடத்தில் பாஞ்சாலி {திரௌபதி}, இந்தப் பகுதியில் இருந்து வீசிய காற்றால் அடித்துவரப்பட்ட அற்புதமான சௌகாந்திக தாமரையைக் கண்டாள். அவள் அது போன்ற மலர்களை நிறைய அடைய விரும்புகிறாள். ராட்சசர்களே, களங்கமற்ற எனது மனைவியின் {திரௌபதியின்} விருப்பத்தை நிறைவேற்றுவதில் முனைப்புடனே நான் அம்மலர்களைப் பெறுவதற்காக இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்றான்.
அதற்கு ராட்சசர்கள், “ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {பீமா}, இவ்விடம் குபேரனுக்குப் பிடித்தமான விளையாட்டிடமாகும். மரணத்துக்கு ஆட்படும் மனிதர்கள் இங்கே விளையாட முடியாது. ஓ! விருகோதரா {பீமா}, தெய்வீக முனிவர்களும், தேவர்களும் கூட யக்ஷர்கள் தலைவனிடம் {குபேரனிடம்} அனுமதி பெற்றுத்தான் இத்தடாகத்தின் நீரை அருந்தி இங்கே விளையாடுவார்கள். ஓ பாண்டவா {பீமா}, கந்தர்வர்களும் அப்சரசுகளும் கூட இத்தடாகத்திற்கு வருவார்கள். பொக்கிஷத் தலைவனை அவமதித்து, சட்டத்தை மீறி இங்கே விளையாடும் தீயவன், சந்தேகற இங்கே அழிவைச் சந்திக்கிறான். அவனை {குபேரனை} அவமதித்து, பலத்தால் தாமரைகளைக் கவர்ந்த செல்ல முயற்சிக்கிறாய். பிறகு ஏன் நீ உன்னை நீதிமானான யுதிஷ்டிரன் தம்பி என்று சொல்லிக் கொள்கிறாய்? முதலில், யக்ஷர்களின் தலைவனிடம் {குபேரனிடம்} அனுமதி பெற்ற பிறகு இத்தடாகத்தின் நீரை அருந்தி, மலர்களையும் எடுத்துச் செல். அப்படிச் செய்யவில்லையென்றால், ஒரு தாமரையின் மீது கூட உனது பார்வை பட இயலாது” என்றார்கள் {குரோதவாசர்கள்}
பீமசேனன், “ராட்சசர்கள், நான் பொக்கிஷத் தலைவனை {குபேரனை} இங்குக் காணவில்லை. நான் அந்தப் பெரும் பலம் வாய்ந்த மன்னனை {குபேரனைக்} கண்டால் கூட, நான் அவனிடம் கெஞ்ச மாட்டேன். க்ஷத்திரியர்கள் {யாரிடமும்} எப்போதும் கெஞ்சமாட்டார்கள். இதுவே நிலைத்த அறநெறி; எவ்வகையிலேனும் நான் க்ஷத்திரிய அறநெறியைக் கைவிட மாட்டேன். இத்தாமரைத் தடாகம் இம்மலையின் அருவியில் இருந்தே ஊற்றெடுத்திருக்கிறது. இது குபேரனின் மாளிகைக்குள் இல்லை. எனவே, வைஸ்ரவணனுடன் சேர்ந்து அனைத்து உயிரினங்களுக்கும் இதில் சமபங்கு சொந்தமானதே. இத்தகு இயல்பு கொண்ட ஒன்றுக்காக யார் ஒருவரிடம் கெஞ்சிக்கொண்டிருப்பான்?” என்று கேட்டான் {பீமன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ராட்சசர்களிடம் இப்படிச் சொன்ன அந்த வலுத்த கரம் கொண்ட பொறுமையற்ற பலம்வாய்ந்த பீமசேனன், அத்தாமரைத் தடாகத்துக்குள் மூழ்கினான். இதன் காரணமாக அந்தப் பலம்வாய்ந்தவன் ராட்சசர்களால், “இதைச் செய்யாதே” என்று கண்டிக்கப்பட்டான். பிறகு அவர்கள் அனைவரும் அனைத்துப் பக்கங்களிலும் கூடிய நின்று கோபத்தால் திட்ட ஆரம்பித்தனர். அந்த ராட்சசர்களைக் கேலி செய்த அந்தக் கடும் பராக்கிரமம் நிறைந்த பலசாலி {பீமன்} (மேலும் மேலும்) மூழ்கினான். அவர்கள் {ராட்சசர்கள்} அனைவரும் அவனை {பீமனை} எதிர்க்கத் தயாரானார்கள். கண்களை உருட்டிக் கொண்டு, தங்கள் கரங்களை உயர்த்திய படி கோபத்துடன் பீமசேனனை நோக்கி ஓடி, “அவனைப் பிடியுங்கள்!”, “அவனைக் கட்டிப் போடுங்கள்”, “அவனை வெட்டுங்கள்! நாம் பீமசேனனைச் சமைத்து உண்டு விடலாம்!” என்று கத்தினர்.
இதைக் கண்ட அந்தப் பெரும் சக்தி கொண்டவன் {பீமன்}, தங்கத்தகடுகள் பொருத்தப்பட்ட தனது பலமிக்கப் பளு நிறைந்த கதாயுதத்தை எடுத்து அவர்களை நோக்கி “நில்லுங்கள்” என்று சொன்னான். அவர்கள் {ராட்சசர்கள்}, பளபளக்கும் ஈட்டிகள், போர்க்கோடரிகள் மற்றும் பல ஆயுதங்களுடனும் உணர்ச்சி வேகத்துடனும் திடீரெனத் துள்ளிக் குதித்தார்கள். பீமனை அழிக்க விரும்பிய அந்தக் கொடியவர்களும் மிகுந்த பயங்கரம் கொண்டவர்களுமான குரோதவாசர்கள் அவனை எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டார்கள். ஆனால், வாயுவினால் குந்தியின் கருவறையில் பெறப்பட்ட அந்த எதிரிகளைக் கொல்பவன் {பீமன்}, உண்மைக்கும் அறத்திற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன் பலமும் சக்தியும் நிறைந்த வீரனாக இருந்தான். அதனால், உயர் ஆன்ம பீமன் தனது அனைத்து எதிரிகளையும் வீழ்த்தி, அவர்கள் கரங்களை ஒடித்து, முதன்மையாக வந்தவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அந்தத் தடாகத்தின் கரையிலேயே கொன்று போட்டான். அவனது வீரத்தையும் பலத்தையும், நிபுணத்துவத்தையும், வேகத்தையும், கரங்களின் பலத்தையும் தாங்க முடியாத அந்த முதன்மை வீரர்கள் {ராட்சசர்கள்} திடீரென ஓடிப் பின்வாங்கினர்.
பீமசேனனால் அடிக்கப்பட்டும் துளைப்பட்டும் இருந்த குரோதவாசர்கள் போர்க்களத்திலிருந்து விலகி, குழப்பத்தால் விரைவாகக் கைலாசத்தின் சிகரத்தில் ஏறி வானத்தில் தங்களைத் தாங்கிக் கொண்டார்கள். தைத்தியர்களையும், தானவர்களையும் வீழ்த்திய சக்ரன் {இந்திரன்} போல, தனது வீரத்தால் எதிரிகளை வீழ்த்திய அவன் (பீமன்) வெற்றியடைந்ததால், தடாகத்துக்குள் மூழ்கி, தனது நோக்கத்தை அடைய விரும்பி, தாமரைகளைச் சேகரித்தான். அமுதம் போன்ற அந்நீரைப் பருகிய அவனது சக்தியும் பலமும் முழுவதுமாக மீட்டெடுக்கப்பட்டது. பிறகு அவன் விழுந்த அற்புதமான நறுமணமிக்கச் சௌகாந்திகத் தாமரைகளைச் சேகரிக்க ஆரம்பித்தான்.
மறுபுறம், பீமேசேனனின் பலத்தால் விரட்டப்பட்ட குரோதவாசர்கள், மிகவும் பயந்து போய், செல்வத்தலைவன் {குபேரன்} முன்பு நின்று, பீமனின் வீரம் மற்றும் போரில் அவனது பலத்தைக் குறித்துச் சுருக்கமாகச் சொன்னார்கள். அவர்களது வார்த்தைகளைக் கேட்ட அந்தத் தேவன் {குபேரன்} சிரித்தவாறு, “கிருஷ்ணைக்காக {திரௌபதிக்காக} பீமன் தான் விரும்பிய அளவு எவ்வளவு வேண்டுமானாலும் தாமரைகளை எடுத்துச் செல்லட்டும். இது ஏற்கனவே நான் அறிந்ததுதான்” என்றான். அதன்பிறகு, செல்வத்தலைவனின் {குபேரனின்} அனுமதியை எடுத்துக் கொண்ட (ராட்சசர்கள்), கோபத்தைக் கைவிட்டு, குருக்களில் முதன்மையானவனிடம் {பீமனிடம்} சென்றனர். அங்கே பீமன் தாமரைத் தடாகத்தில் தனியாக மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டனர்.
பீமனைத் தேடிய யுதிஷ்டிரன்! – வனபர்வம் பகுதி 154-தாங்கள் இருந்த இடத்தில் தோன்றிய தீச்சகுனங்களைக் கண்ட யுதிஷ்டிரன், பீமனைத் தேடல்; பீமன் மலர் தேடி வடகிழக்கில் சென்றிருக்கலாம் என்று திரௌபதி யுதிஷ்டிரனுக்குச் சொல்வது; யுதிஷ்டிரன் ராட்சசர்கள் உதவியுடன் அனைவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பி சௌகாந்திக மலர் இருக்கும் தடாகத்தை அடைந்து பீமனைக் காண்பது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, பாரதர்களில் சிறந்தவனான பீமன் தெய்வீகமானதும் அரிதானதுமான பல வண்ண புது மலர்களை அபரிமிதமாகச் சேகரித்தான்.
அச்சமயத்தில் போரை முன்னறிவிக்கும் வகையில், சரளைக் கற்களைக் தூக்கி வீசவல்லதும், கடுமையாகத் தாக்குவதுமான கடும் காற்று வீசியது. பயங்கரமான எரிகற்கள் இடிபோன்ற சத்தத்துடன் விழுந்தன. இருள் சூழ்ந்து சூரியன் ஒளியிழந்தான். அவனது கதிர்களை இருள் மூடியது. தனது பராக்கிரமத்தை வெளிப்படுத்திய பீமன் வெளியிட்ட பயங்கரச் சத்தம் வானத்திலேயே உலவி கொண்டிருந்தது. பூமி நடுங்கத் தொடங்கியது. தூசி மழை பொழிந்து. திசைகள் சிவந்தன. விலங்குகளும் பறவைகளும் கிறீச்சொலி கொண்ட குரலுடன் கதறின. எதையும் பிரித்துப் பார்க்க முடியாதவாறு அனைத்தையும் இருள் மூடியது. பிற தீய சகுனங்களும் அங்கே தெரிந்தன.
இந்த விசித்திர நிலையைக் கண்ட பேச்சாளர்களில் முதன்மையான தர்மனின் மகன் யுதிஷ்டிரன், “யார் நம்மை வெல்லப்போகிறார்கள்? போரில் மகிழும் பாண்டவர்களே, உங்களுக்கு நல்லது நடக்கட்டும்! உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். நான் காணும் காட்சி, நமது பராக்கிரமத்தை வெளிக்காட்டும் நேரம் அருகில் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது” என்றான். இதைச் சொன்ன மன்னன் {யுதிஷ்டிரன்} சுற்றிலும் பார்த்தான். எதிரிகளை ஒடுக்கும் பீமனை காணாத தர்மனின் மகன் யுதிஷ்டிரன் கிருஷ்ணையிடமும் {திரௌபதியிடமும்}, இரட்டையர்களிடமும் கடும் செயல்களைச் செய்யும் பீமனைக் குறித்து விசாரித்தான். அவன் {யுதிஷ்டிரன்}, “ஓ! பாஞ்சாலி {திரௌபதி}, பீமன் ஏதோ பெரும் சாதனையைச் செய்ய நினைத்திருக்கிறான் போலும். அல்லது தைரியமான செயல்களைச் செய்வதில் மகிழ்ச்சி கொள்ளும் அவன் {பீமன்}, ஏற்கனவே ஏதாவது வீரச் செயலைச் செய்து கொண்டிருக்கிறானா? அச்சத்தைத் தரும் போரைக் குறிக்கும் பெரும் அபாயத்தை முன்னறிவிக்கவே, இத்தகு தீச்சகுனங்கள் சுற்றிலும் தெரிகின்றன” என்றான்.
தனது அன்பிற்குரிய ராணியிடம் {திரௌபதியிடம்} யுதிஷ்டிரன் இப்படிச் சொல்லும்போது, இனிய புன்னகையும் உயர் மனமும் கொண்ட கிருஷ்ணை {திரௌபதி}, அவனது {யுதிஷ்டிரனின்} துயரத்தை நீக்கும் வகையில், “ஓ! மன்னா, இன்று காற்றால் அடித்து வரப்பட்டதே ஒரு சௌகாந்திகத் தாமரை. அதை அன்பால் நான் பீமசேனரிடம் காண்பித்தேன். அதன் பிறகு அந்த வீரரிடம் “உம்மால் இது போன்ற மலர்களை எடுத்துக் கொண்டு வர முடியுமானால், அதை எடுத்துக். கொண்டு விரைவாக வர வேண்டும்” என்று சொன்னேன். ஓ! பாண்டவரே {யுதிஷ்டிரரே}, வலுத்த கரம் கொண்டவர் {பீமர்}, எனது ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, வடகிழக்கு நோக்கிச் சென்றிருக்கலாம்” என்றாள்.
அவளின் {திரௌபதியின்} வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, இரட்டையர்களிடம், “விருகோதரன் {பீமன்} சென்ற பாதையில் நாமும் ஒன்றாகச் சேர்ந்து செல்வோம். களைத்துப் போய், பலமற்று இருக்கும் அந்தணர்களை ராட்சசர்கள் சுமக்கட்டும். ஓ! கடோத்கசா, ஓ! தேவனைப் போன்றவனே, நீ கிருஷ்ணையை {திரௌபதியைச்} சுமந்து கொள். பீமன் காட்டுக்குள் சென்றிருக்கிறான் என்பது எனக்கு நிதர்சனமாகத் தெரிகிறது. அவன் சென்று நீண்ட நேரமும் ஆயிற்று. வேகத்தில் அவன் காற்றுக்கு நிகரானவனாவான். வினதையின் மகனைப் {கருடனை} போல அவன் விரைவாக நிலத்தைக் கடந்து, தனது விருப்பப்படி வானத்தில் ஏறும் சக்தியையும் பெற்றவனாவான். ஓ! ராட்சசர்களே, நாம் உங்களது பராக்கிரமத்தின் மூலம் தொடர்ந்து செல்வோம். வேதங்களை அறிந்த சித்தர்களுக்கு அவனாக முதலில் எந்தத் தீங்கையும் செய்ய மாட்டான்” என்றான் {யுதிஷ்டிரன்}.
ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன ஹிடிம்பையின் மகனும் {கடோத்கஜனும்}, பிற ராட்சசர்களும் குபேரனின் தாமரைத் தடாகத்தை அறிந்ததால், லோமசருடனும் பிற அந்தணர்களுடனும், பாண்டவர்களைச் சுமந்து கொண்டு மகிழ்ச்சிகரமாகக் கிளம்பினர். விரைவாக அந்த இடத்தை அடைந்த அவர்கள், சௌகாந்திகங்களும், மற்றத் தாமரைகளும் நிரம்பிய கானகம் சூழந்த அந்த அழகிய தடாகத்தைக் கண்டனர். அதன் கரைகளில் நீண்ட கண்கள் கொண்ட யக்ஷர்கள் கொல்லப்பட்டும், கண்கள், கரங்கள், தொடைகள் அடித்தொடிக்கப்பட்டு, தலைகள் நசுக்கப்படும் கிடப்பதையும், அங்கே உயர் ஆன்ம பீமன் உணர்ச்சிப்பெருக்குடன் நிற்பதையும் கண்டனர். நிலைத்த கண்களுடன், உதடுகளைக் கடித்துக் கொண்டு, இரு கரங்களையும் சேர்த்து உயர்த்திப் பிடித்த கதாயுதத்துடன், பிரளய காலத்து யமனைப் போலக் கோபத்துடன் அத்தடாகக் கரையில் நின்று கொண்டிருந்தான்.
திமானான யுதிஷ்டிரன் அவனை மீண்டும் மீண்டும் அனைத்துக் கொண்டு இனிய வார்த்தைகளில், “ஓ! கௌந்தேயா {பீமா}, நீ என்ன செய்துவிட்டாய்? உனக்கு நன்மை ஏற்படட்டும்! நீ எனக்கு நன்மை செய்ய விரும்பினால், இதுபோன்ற மூர்க்கமான செயல்களையோ, அல்லது தேவர்களுக்குக் குற்றமிழைக்கும் செயல்களையோ இனி செய்யக் கூடாது” என்று சொன்னான். குந்தியின் மகனுக்கு {பீமனுக்கு} இவ்வாறு அறிவுரை கூறிபிறகு, மலர்களை எடுத்துக் கொண்டு, அந்தத் தெய்வீகமானவர்கள் அதே தடாகத்தில் விளையாட ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் பெருத்த உடல் படைத்த நந்தவனக் காவலர்கள், தங்கள் ஆயுதங்களாகப் பாறைகளை எடுத்துக் கொண்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். நீதிமானான யுதிஷ்டிரனையும், பெரும் முனிவரான லோமசரையும், நகுலன் மற்றும் சகாதேவனையும், அந்தணர்களில் முதன்மையானவர்களையும் கண்ட அவர்கள் பணிவுடன் வணங்கினார்கள். பிறகு நீதிமானான யுதிஷ்டிரனால் சமாதானப்படுத்தப்பட்ட ராட்சசர்கள் திருப்தியடைந்தார்கள். பிறகு குபேரனுக்கு அறிந்தவாறே, அந்தக் குருக்களில் முதன்மையானவர்கள் கந்தமாதனச் {மலைச்} சரிவுகளில் அமைந்த அந்த இடத்தில் அர்ஜுனனை எதிர்பார்த்து சில காலம் தங்கினார்கள்.
“பதரிக்குத் திரும்பு” என்ற அசரீரி! – வனபர்வம் பகுதி 155-பீமனிடம் யுதிஷ்டிரன், குபேரன் வசிப்பிடத்தை அடைவதற்கான வழியைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, ஓர் அசரீரி அவர்களை மீண்டும் பதரிக்குத் திரும்புமாறு பணித்தது; பிறகு அவர்கள் அனைவரும் மீண்டும் பதரி திரும்பி வசிக்க ஆரம்பித்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்த இடத்தில் {குபேரனின் தடாகத்தருகில்} வாழ்ந்து வந்தபோது யுதிஷ்டிரன் ஒருநாள் கிருஷ்ணை {திரௌபதி}, தனது தம்பிகள் மற்றும் அந்தணர்களிடம், “நாம் கவனத்துடன் பல மங்களகரமான புண்ணியத் தீர்த்தங்களையும், காண்பதற்கினிய கானகங்களையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கண்டோம். அவ்விடங்கள் அனைத்தும் தேவர்களாலும், உயர் ஆன்ம முனிவர்களாலும், பல அந்தணர்களாலும் வழிபடப்படும் இடங்களாகும். நாம் அந்தணர்களுடன் கூடி பல புண்ணிய ஆசிரமங்களிலும் நமது சுத்திகரிப்புச் சடங்குகளைச் செய்துள்ளோம். அந்த அந்தணர்களிடமிருந்து பல முனிவர்கள் மற்றும் பழங்கால அரசமுனிகளின் வாழ்வுகளையும், செயல்களையும், இனிமையான கதைகளையும் கேட்டோம். மலர்களையும் நீரையும் கொண்டு தேவர்களை வணங்கினோம். அந்த அந்த இடங்களில் கிடைக்கும் கனிகளையும், கிழங்குகளையும் காணிக்கைகளாகக் கொடுத்து பித்ருக்களையும் திருப்தி செய்தோம்.
உயர் ஆன்மா கொண்டவர்களுடன் சேர்ந்து புண்ணியமான அழகான மலைகளிலும், தடாகங்களிலும், கடலிலும் நமது சுத்திகரிப்புச் சடங்குகளைச் செய்தோம். அந்தணர்களுடன் கூடி இளை, சரஸ்வதி, சிந்து, யமுனை, நர்மதை மற்றும் பல அழகிய தீர்த்தங்களிலும் நீராடினோம். கங்கையின் தோற்றுவாயைக் கடந்த நாம், பல பறவைகள் வசிக்கும் அழகிய மலைகளையும், இமய மலைகளையும் கடந்து விசாலை என்று அழைக்கப்படும் இலந்தை இருக்கும் இடமான {பதரி} நரன் மற்றும் நாராயணனின் ஆசிரமத்தை அடைந்தோம். (கடைசியாக) சித்தர்கள் பெரிதாக மதிக்கும் இந்தத் தெய்வீகமான தடாகத்தை அடைந்தோம். ஓ! அந்தணர்களில் சிறந்தோரே, கொண்டாடப்படும் புனிதமான இடங்களை உயர் ஆன்ம லோமசருடன் சேர்ந்து நாமனைவரும் உண்மையில் கவனமாகக் கண்டோம். ஓ! பீமா, இனி நாம் சித்தர்கள் வசிக்கும் வைஸ்ரவணனின் {குபேரனின்} வசிப்பிடத்திற்கு எப்படிச் செல்வது? அதை அடைவதற்கான வழிகளைக் குறித்துச் சிந்தி” என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அப்படிச் சொன்ன போது, ஒரு ஆகாயக் குரல், “அடைவதற்கு அரிதான அவ்விடத்தை {குபேரனின் வசிப்பிடத்தை} உங்களால் அடைய முடியாது. குபேரனின் இந்த இடத்தில் இருந்து, நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அந்தப் பதரி என்றழைக்கப்படும் நர நாராயணனின் ஆசிரமத்திற்கு இந்த வழியாகவே செல்லுங்கள். ஓ! கௌந்தேயா {யுதிஷ்டிரா}, பிறகு மலர்களும் கனிகளும் நிறைந்து, சித்தர்களும் சாரணர்களும் வசிக்கும் விருஷபர்வாவின் ஆசிரமத்திற்குச் செல். அதைக் கடந்த பிறகு, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அர்ஷ்டிஷேனரின் ஆசிரமத்தை அடைவாய். அங்கிருந்து குபேரனின் வசிப்பிடத்தைக் காண்பாய்” என்றது {அசரீரி}.
அதே நேரத்தில் தெய்வீக மணத்துடன் குளிர்ந்த புதிய காற்று வீசியது; மலர் மாரியும் பொழிந்தது. வானத்தில் இருந்து வந்த தெய்வீகக் குரலைக் கேட்ட அனைவரும் மலைத்தனர். குறிப்பாக முனிவர்களும், அந்தணர்களும் மிகவும் ஆச்சரியப்பட்டனர். இந்த மாபெரும் அற்புதத்தைக் கேட்ட அந்தணரான தௌமியர், “இதற்கு மாறாக நாம் நடக்கக்கூடாது. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அதன்படியே {அக்குரல் சொல்லியபடியே} செய்வோம்” என்றார். மன்னன் யுதிஷ்டிரனும் அவருக்குக் கீழ்ப்படிந்தான். பிறகு, நர நாராயணரின் ஆசிரமத்திற்குத் திரும்பி, பீமசேனன், மற்றத் தம்பிகள், பாஞ்சாலி {திரௌபதி} மற்றும் அந்தணர்கள் சூழ அவன் {யுதிஷ்டிரன்} மகிழ்ச்சியாக வசிக்க ஆரம்பித்தான்.
ஜடாசுரன் வதம்! – வனபர்வம் பகுதி 156-பீமன் இல்லாத நேரத்தில் ஜடாசுரன் என்ற ராட்சசன், பாண்டவர்களையும், திரௌபதியையும் கடத்திச் செல்வது; பீமன் ஜடாசுரனைக் கொல்வது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படி அச்சிறந்த மலையில் அந்தணர்களுடன் வசித்து வந்த பாண்டவர்கள் அர்ஜுனன் திரும்புவதை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவர்களுக்கு நம்பிக்கை வளர்ந்து பிற ராட்சசர்களும், பீமனின் மகனும் {கடோத்கசனும்} சென்ற பிறகு, ஒரு நாள் பீமன் வெளியே சென்றிருந்தான். அப்போது, தீடீரென ஒரு ராட்சசன், நீதிமானான யுதிஷ்டிரனையம், இரட்டையர்களையும் {நகுலன், சகாதேவன் இருவரையும்}, கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} கடத்திச் சென்றான். (அந்தண வேடத்தில் இருந்த) அந்த ராட்சசன் பாண்டவர்களுடனேயே நெடுங்காலமாகத் தங்கியிருந்தவனாவான். அப்படி இருந்த போது அவன் தன்னைச் சாத்திரங்களை அறிந்த ஆலோசனை கூறத்தக்க உயர்ந்த வகை அந்தணனனாகக் காட்டிக் கொண்டான். பாண்டவர்கள் உபயோகித்த வில் மற்றும் அம்பறாத்தூணிகளையும், இன்னும் பிற பொருட்களையும் கவர்ந்து செல்லவும், திரௌபதியை அபகரிக்கவுமே அவன் நீண்ட நாட்களாகக் கண்காணித்து வந்தான். அந்தத் தீய பாவியின் பெயர் ஜடாசுரன் ஆகும். ஓ மன்னர் மன்னா {ஜனமேஜயா}, அவனை ஆதரித்த பாண்டுவின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு}, அந்தப் பாவி சாம்பலால் மூடப்பட்ட நெருப்பைப் போன்றவன் என்பது தெரியாது.
ஒரு நாள் எதிரிகளை ஒடுக்குபவனான பீமசேனன் வேட்டையாடுவதற்கு வெளியே சென்றான். கடோத்கசனும், அவனது அடிபொடிகளும் பலதரப்பட்ட திசைகளுக்குச் சிதறிப் போனதையும், லோமசர் மற்றும் நோன்பு நோற்கும் பிற பெரும் முனிவர்கள் நீராடுவதற்கும், மலர்கள் சேகரிப்பதற்கும் சென்றிருப்பதையும் கண்ட அவன் {அந்த ராட்சசன் ஜடாசுரன்}, பயங்கரமான பெரும் உருவம் எடுத்து (பாண்டவர்களின்) ஆயதங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு, திரௌபதியையும், மூன்று பாண்டவர்களையும் கடத்திக்கொண்டு சென்றான். அதன் பிறகு, பாண்டுவின் மகனான சகாதேவன், தனது முயற்சியால் அவனிடமிருந்து {அந்த ஜடாசுரன் என்ற ராட்சசனிடம் இருந்து} விடுபட்டு, கௌசிக என்ற வாளை எதிரியிடம் இருந்து பறித்து, பீமனை அழைத்துக் கொண்டே, அந்தப் பெரும் பலம் வாய்ந்தவன் சென்ற திக்கில் சென்றான்.
இப்படிக் கடத்திச் செல்லப்பட்ட போது, நீதிமானான யுதிஷ்டிரன் அவனிடம் (அந்த ராட்சசனிடம்), “ஓ! மூடா, (இத்தகு செயலால்) உனது தகுதி குறைந்தது. இயற்கையால் விதிக்கப்பட்ட விதியை நீ மதிக்க மாட்டாயா? மானுட இனத்தைச் சேர்ந்தவரோ அல்லது தாழ்ந்த வகையைச் சேர்ந்தவரோ, எவராயினும் அறத்தை மதித்து நடக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ராட்சசர்கள் அப்படி மதித்து நடக்க வேண்டும். முதலில் அவர்களே மற்றவர்களைவிட அறத்தை நன்கறிந்தவர்கள். இதையெல்லாம் கருதிப் பார்த்து நீ அறத்தைக் கைக்கொள்ள வேண்டும். ஓ! ராட்சசா, தேவர்கள், பித்ருக்கள், சித்தர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், விலங்குகள், ஏன் புழுக்களும் எறும்புகளும் கூட மனிதர்களை நம்பியே தங்கள் வாழ்வை நடத்துகின்றனர். நீயும் அப்படியே வாழ்கிறாய். மானுட இனத்தில் செல்வம் கொழிக்கிறது என்றால், உனது இனமும் செழிப்படையும். அவர்களுக்குப் பேரிடர் சம்பவித்தால் தேவர்களும் துன்புறுவர். காணிக்கைகளால் திருப்தி செய்யப்படுவதால்தான் தேவர்களும் வாழ்கின்றனர். ஓ! ராட்சசா {ஜடாசுரா}, நாங்களே {மனிதர்களே} நாடுகளின் பாதுகாவலர்களாகவும், ஆட்சியாளர்களும், குருக்களாகவும் இருக்கிறோம். நாடுகள் பாதுகாப்பற்று இருந்தால் வளமையும் மகிழ்ச்சியும் எப்படி வரும்? குற்றமேதும் நடக்காத வரை ஒரு ராட்சசன் ஒரு மன்னனை மீறி நடக்கக்கூடாது.
ஓ! மனிதர்களை உண்பவனே {ஜடாசுரனே}, சிறு தீங்கைக் கூட நாங்கள் செய்யவில்லையே. விகாசையில் வாழும் நாங்கள் தேவர்களையும் பிறரையும் எங்கள் சக்திக்குத் தக்கவாறு சேவித்தே வருகிறோம். நாங்கள் எங்களுக்கு மூத்தவர்களையும், அந்தணர்களையும் வணங்காமல் இருந்ததில்லை. ஒரு நண்பன், நம்பியிருப்பவன், உணவு கொடுத்தவன், தங்க இருப்பிடம் அளித்தவன் ஆகியோருக்கு ஒரு போதும் தீங்கிழைக்கக் கூடாது. நீ எங்களுடன் இருந்ததில் மகிழ்ச்சியாகவும் மரியாதையுடனும் வசித்திருக்கிறாய். ஓ! தீய மனம் கொண்டவனே, நாங்கள் கொடுத்த உணவையும் உண்ட நீ, எங்களைக் கடத்திக் கொண்டு செல்கிறாயா? உனது செயல்கள் சரியற்றவையாக இருக்கிறது. எந்தப் பலனும் இல்லாமல் நீ வயதால் வளர்ந்திருக்கிறாய். விலங்குக்கொப்பான உனது இயல்புகள் தீமையானவையாக இருக்கின்றன. ஒன்றுமில்லாததற்குச் சாகத் துணிந்தாய். ஆகையால் இன்று நீ ஒன்றுமில்லாமலேயே இறப்பாய். நீ உண்மையில் அறமற்று இருந்தாலும், தீமையற்றவனாக இருந்தால், எங்கள் ஆயுதங்களைக் கொடுத்துவிட்டு, போரிட்ட பின் திரௌபதியை அபகரித்துச் செல். ஆனால் மூடத்தனத்தால் நீ இச்செயலைச் செய்தால் நீ அவப்பெயரையும், சிறுமையையுமே பெறுவாய். மானுட இனத்தைச் சேர்ந்த இப்பெண்ணுக்கு {திரௌபதிக்கு} நீ ஏதும் தீங்கு செய்தால், நன்கு குலுக்கப்பட்ட பாத்திரத்தில் இருந்த விஷத்தைக் குடித்தவனாவாய்” என்று சொன்னான் {யுதிஷ்டிரன்}.
பிறகு, யுதிஷ்டிரன் தன்னைக் கனம் நிறைந்தவனாக ஆக்கிக் கொண்டான். அவனது எடையால் ஒடுக்கப்பட்ட அவன் முன்பு போல வேகமாகச் செல்ல முடியவில்லை. பிறகு திரௌபதி, நகுலன், சகாதேவன் ஆகியோரிடம் யுதிஷ்டிரன், “இந்த இழிந்த ராட்சசனைக் குறித்து அச்சத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். நான் அவனது வேகத்தைத் தடுத்திருக்கிறேன். பலம்வாய்ந்த கரம் கொண்ட வாயுத்தேவனின் மகன் {பீமன்}, வெகு தொலைவில் இருக்க மாட்டான். பீமன் இங்கு வந்த அடுத்த நொடி இந்த ராட்சசன் வாழ மாட்டான்” என்றான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, உணர்விழந்த ராட்சசனை முறைத்துப் பார்த்த சகாதேவன் குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம், “ஒரு க்ஷத்திரியனுக்குப் போரைவிடவோ அல்லது எதிரியை வீழ்த்துவதை விடவோ எது தகுதி வாய்ந்ததாக இருக்கும்? ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே, நாம் போரிடலாம். ஓ! பலம் வாய்ந்த கரம் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, ஒன்று இவன் நம்மைக் கொல்வான் அல்லது நாம் இவனைக் கொல்வோம். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இதுவே தகுந்த நேரமும் இடமும் ஆகும். ஓ! பொய்க்காத பராக்கிரமம் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, நமது க்ஷத்திரிய அறத்தைக் காட்ட நேரம் வாய்த்தது. நாம் வென்றோ அல்லது கொல்லப்பட்டோ சொர்க்கத்தை அடைவதே நமக்குத் தகும். இந்த ராட்சசன் வாழ்ந்தவாறே இன்று சூரியன் மறைந்தனானால், நான் இனிமேல் என்னை க்ஷத்திரியன் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். ஹோ! ஹோ! ராட்சசனே, நான் பாண்டுவின் மகனான சகாதேவன். ஒன்று என்னைக் கொன்று இந்த மங்கையைக் கடத்தி செல் அல்லது என்னால் கொல்லப்பட்டு உணர்விழந்து விழு” என்றான் {சகாதேவன்}.
மாத்ரியின் மகனான சகாதேவன் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே, வஜ்ரம் தாங்கியிருக்கும் வாசவனைப் போலக் கைகளில் கதாயுதத்துடன் பீமசேனன் அங்கே தோன்றினான். அவன் {பீமன்} தனது இரு சகோதரர்களையும், நல்ல மனம் கொண்ட திரௌபதியையும் (அந்தப் பேயின் தோள்களில்), தரையில் நின்று கொண்டு விதியால் மதியிழந்த ராட்சசனை கண்டித்துக் கொண்டிருந்த.சகாதேவனையும் கண்டான். தனது சகோதரர்களும், திரௌபதியும் கடத்தப்படுவதை அறிந்த பெரும் பலம் வாய்ந்த பீமன் கோபத்தால் எரிந்து அந்த ராட்சசனிடம், “முன்பு நீ எங்கள் ஆயுதங்களை நுண்ணாய்வு செய்த போதே நீ தீயவன் என்பது எனக்குத் தெரியும்; ஆனால் உன்னைக் குறித்து நான் அச்சப்படவில்லை. அதனால் உன்னை அப்போது கொல்லாமல் விட்டேன். நீ அப்போது அந்தண உருவில் இருந்தாய். எங்களிடம் எந்தக் கடும் வார்த்தைகளையும் பேசவில்லை. எங்களைத் திருப்தி செய்வதிலேயே மகிழ்ச்சி கொண்டிருந்தாய். மேலும் நீ எங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. அதற்கு மேலும் நீ எங்கள் விருந்தினராக வேறு இருந்தாய். ஆகையால் குற்றமிழைக்காத அப்பாவியான உன்னை; அதுவும் அந்தண உருவில் இருந்த உன்னை நான் எப்படிக் கொல்ல முடியும்? அப்படியிருப்பவன் ஒருவன் ராட்சசனாகவே இருந்தாலும், அவனைக் கொல்பவன் நரகத்திற்குச் செல்வான். மேலும் நேரம் வருவதற்கு முன்னால் உன்னைக் கொல்ல முடியாதல்லவா. இன்று உனது முழு நேரமும் முடிந்தது. அதனால்தான் விதி உன்னைக் கிருஷ்ணையை {திரௌபதியை} அபகரிக்கச் செய்தது. இக்காரியத்தைச் செய்ததால் நீ விதியெனும் தூண்டில் முள்ளில் சிக்கிக் கொண்டாய். முள்ளால் தைக்கப்பட்ட வாயுடன் நீரில் இருக்கும் மீனைப் போல இருக்கும் நீ எப்படி இன்று உயிருடன் இருக்க முடியும்? நீ ஏற்கனவே மனதால் {நீ விரும்பிய இடத்திற்கு} சென்றிருந்தாலும் உன்னால் இன்று நீ விரும்பிய இடத்திற்குச் செல்ல முடியாது. ஆனால் பகனும், ஹிடிம்பனும் சென்ற இடத்திற்கு நீ செல்ல வேண்டியதிருக்கும்” என்றான் {பீமன்}.
பீமனால் இப்படிச்சொல்லப்பட்ட அந்த ராட்சசன் அச்சத்தால் அவர்கள் அனைவரையும் கீழே இறக்கினான். இருப்பினும் விதியால் இழுக்கப்பட்ட அவன் போர் செய்ய அணுகினான். கோபத்தால் உதடுகள் துடிக்க அவன் {ஜடாசுரன்} பீமனிடம், “இழிந்தவனே, நான் தடுமாறவில்லை. நான் உனக்காகவே தாமதம் செய்தேன். நான் கேட்டிருப்பது போல உன்னால் ஏற்கனவே போரில் கொல்லப்பட்ட ராட்சசர்களுக்கு உனது இரத்தத்தைக் காணிக்கையாக்குவேன்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட பீமன் மிகச்சினம் கொண்டு பிரளய கால யமன் போல வாயோரங்களைத் தனது நாவால் நக்கிக் கொண்டிருந்த அந்த ராட்சசனை அணுகி, தனது கரங்களைத் தட்டினான். பீமன் போருக்கு எதிர்பார்த்து காத்திருப்பதைப் பார்த்த ராட்சசன் {ஜடாசுரன்} கோபத்துடன் வாலி இந்திரனை நோக்கி விரைந்தது போல விரைந்து சென்றான்.
அந்த இருவருக்குள்ளும் கடும் மற்போர் ஏற்பட்ட போது, மாத்ரியின் மகன் இருவரும் எல்லைமீறிய கோபத்துடன் முன்னேறினர். ஆனால் குந்தியின் மகனான விருகோதரன் {பீமன்} அவர்களைப் புன்னகையுடன் தடுத்து, “இந்த ராட்சசனுக்கு நானே போதும். நின்று பார். எனது சகோதரர்கள், எனது நற்செயல்கள், எனது வேள்விகள், எனது சக்திகள் மீது ஆணையாகச் சொல்கிறேன். நான் இந்த ராட்சசனைக் கொல்வேன்” என்றான். அவன் {பீமன்} அப்படிச் சொன்ன பிறகு, அந்த இரு வீரர்களான ராட்சசனும் {ஜடாசுரனும்} விருகோதரனும் {பீமனும்} ஒருவருக்கொருவர் சவால் விட்டபடி ஒருவர் கரத்தை மற்றவர் பிடித்தனர். அவர்கள் இருவரும் விட்டுக் கொடுக்காமல் சண்டையிட்டது தேவனுக்கும் அரசுரனுக்கும் இடையில் நடந்த போரைப் போல அது இருந்தது. தொடர்ச்சியாக மரங்களை வேரோடு பிடுங்கி அந்தப் பலம் பொருந்திய இருவரும் போரிட்டுக் கொண்டனர். ஒருவரை ஒருவர் பழிவாங்கும் உணர்ச்சியுடன் கொல்ல நினைத்த அவர்கள் தங்கள் தொடைகளால் பெரும் மரங்களை ஒடித்துப் போட்டனர். செடிகளுக்கு அழிவைத் தருவதான மரங்களைக் கொண்டு அவர்கள் செய்த போர் ஒரு பெண்ணுக்காக இரு சகோதரர்களான வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இடையில் நடந்த போரைப் போல இருந்தது. ஒரு நொடியில் மரங்களைக் காற்றில் வீசிய அவர்கள், அதைக் {மரங்களைக்} கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு பெரும் கர்ஜனை செய்தனர்.
அந்தப் பகுதியில் இருந்த மரங்களை அனைத்தும் பிடுங்கப்பட்டு நார்நாராய் ஆன பிறகு ஒருவரை ஒருவர் கொல்ல நினைத்த பலம்பொருந்திய அவர்கள் இருவரும், ஓ! பாரதா {ஜனமேஜயா}, மலையைப் போன்றும், பெரும் மேகக்கூட்டம் போன்று இருந்த பெரிய பாறைகளை எடுத்துக் கொண்டு போரிட்டனர். அதனால் பாதிக்கப்படாத இருவரும், பிறகு இடியைப் போன்ற செங்குத்தான பாறைகளை எடுத்துக் கொண்டு போரிட்டனர். பலம் நிறைந்த அவர்கள் அறைகூவியபடி துள்ளிக் குதித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு இரு பெரும் யானைகளைப் போல மற்போர் புரிந்தனர். பிறகு கடும் அடிகளைக் கொண்டு சண்டையிட்டனர். அந்த இரு பெரும் பலம் வாய்ந்தவர்களும் பற்களை நறநறவெனக் கடித்து ஒலியை எழுப்பினர்.
ஐந்து தலை பாம்பைப் போல இருந்த தனது கரத்தால் பீமன் அந்த ராட்சசனின் {ஜடாசுரனின்} கழுத்தில் ஒரு கடுமையை அடியை அடித்தான். பீமன் அடித்த முதல் அடியில் அந்த ராட்சசன் மயங்கினான். மயங்கிய அவனைப் பீமேசனேன் பிடித்துக் கொண்டான். பிறகு தேவனைப் போன்ற அந்தப் பெரும்பலம் வாய்ந்த கரம் கொண்ட பீமன் தனது இரு கரங்களால் அவனைத் தூக்கி நல்ல விசையுடன் தரையில் தூக்கி எறிந்து அவனது உறுப்புகள் அனைத்தையும் நொறுக்கினான். பிறகு தனது முட்டியால் அடித்து, கண்கள் உருண்டபடி, உதடுகள் கடித்தபடி இருந்த அந்த ராட்சசனின் தலையை மரத்தில் இருந்து கனியைப் பிடுங்குவது போல அவனது உடலில் இருந்து பிய்த்தெறிந்தான். பீமசேனன் தனது பலத்தால் ஜடாசுரனின் தலையைப் பிய்த்த போது, அவனது உடல் முழுவதும் ரத்தத்தால் பூசப்பட்டபடி இருந்தது. ஜடாசுரனைக் கொன்ற பீமன் யுதிஷ்டிரனின் முன்னிலைக்குக் வந்தான். அந்தணர்களில் முதன்மையானவர்கள் (பீமனை) வாசவனைப் புகழும் மருதர்களைப் போலப் புகழ ஆரம்பித்தனர்.
விருஷபர்வாவும்! ஆர்ஷ்டிஷேணரும்!! – வனபர்வம் பகுதி 157-யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடனும் அந்தணர்களுடனும் பேசி இமய மலையின் உச்சிக்குப் புறப்பட்டது; பாண்டவர்கள் மலையுச்சியை அடைந்தது; தங்கள் உடைமைகளை விருஷபர்வாவிடம் பாண்டவர்கள் வைத்துச் சென்றது; விருஷபர்வா பாண்டவர்களுக்கு வழிகாட்டித் திரும்பியது; பாண்டவர்கள் பல இடங்களைக் கண்ட பிறகு ஆர்ஷ்டிஷேணரின் ஆசிரமத்தை அடைந்து அவரைக் காண்பது
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்த ராட்சசன் {ஜடாசுரன்} கொல்லப்பட்ட போது, குந்தியின் அரச மகனான அந்தத் தலைவன் {யுதிஷ்டிரன்}, நாராயணனின் ஆசிரமத்திற்குத் திரும்பி அங்கே வசிக்க ஆரம்பித்தான். பிறகு ஒரு நாள்,, தனது தம்பியான ஜெயனை (அர்ஜுனனை) நினைவுகூர்ந்த யுதிஷ்டிரன் தனது மற்றத் தம்பிகளையும் திரௌபதியையும் அழைத்து, “நாம் இந்த நான்கு வருடத்தையும் கானகங்களில் உலவி அமைதியாகக் கழித்தோம். பூத்துக்குலுங்கும் செடிகளும், குயில்களும், கருவண்டுகளும், சாதகங்களும், புலிகளும், பன்றிகளும், எருமைகளும் கவயங்களும், மான்களும், கடும் விலங்குகளும், புனிதமான அழகான நூறு {100} இதழ் மற்றும் ஆயிரம் {1000} இதழ் தாமரைகளும், குவளை மலர்களும், நீலக் குவளைகளும் நிறைந்து தேவர்களாலும் அசுரர்களாலும் அடையப்படும் மலைகளின் ஏகாதிபதியான ஸ்வேத மலைக்கு ஐந்தாம் ஆண்டு வருவதாக அர்ஜுனன் வாக்களித்திருக்கிறான்.
அவனை {அர்ஜுனனைக்} காண விரும்பிய நாமும் அவனை {அர்ஜுனனைச்} சந்திப்பதற்காக அங்கே செல்வதாக இருந்தோம். ஒப்பற்ற பராக்கிரமம் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} என்னிடம், “நான் இராணுவ அறிவியல் பயில்வதற்காக அயல்வெளியில் இருப்பேன் ஐந்து வருடங்கள்” என்று என்னிடம் குறித்துச் சொல்லியனுப்பியிருக்கிறான். தேவலோகத்தைப் போல இருக்கும் அந்த இடத்தில் ஆயுதங்களைப் பெற்றுத் திரும்பும் காண்டீவத்தைத் தாங்கியிருப்பவனைக் காண்போம்” என்றான் {யுதிஷ்டிரன்}. இதைச் சொன்ன அந்தப் பாண்டவன் {யுதிஷ்டிரன்} அந்தணர்களையும், பிருதையின் {குந்தியின்} மகன்களையும் துறவிகளை வலம் வரச் செய்து, அத்துறவிகளிடம் மேற்சொன்ன காரியங்களைத் தெரிவித்தான். அதற்கு அந்த அந்தணர்கள், “இக்காரியம் உங்களுக்குச் செழிப்பையும் நன்மையையும் தரும். ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, இந்தத் தொல்லைகள் அனைத்தும் மகிழ்ச்சியாக மாறும். ஓ! பக்திமானே, க்ஷத்திரிய அறத்தால் பூமியை அடைந்து அவற்றை நீ ஆள்வாய்” என்று சொல்லி தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர்.
பிறகு அத்துறவிகளின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்த, அந்த எதிரிகளை ஒடுக்குபவனான யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடனும், அந்தணர்களுடனும் ராட்சசர்கள் பின்தொடர லோமசரின் பாதுகாப்போடு கிளம்பினான். அந்தப் பெரும் சக்தியுடையவனும் நோன்புகள் நோற்பவனுமான யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் வெறுங்காலில் நடந்து சென்றான். மற்றவர்கள் ராட்சசர்களால் சுமந்து செல்லப்பட்டனர். பிறகு மன்னன் யுதிஷ்டிரன் பல இன்னல்களுக்கிடையில், சிங்கங்களும், புலிகளும், யானைகளும் நிறைந்த வடக்கு திசையை நோக்கிச் சென்றான். அப்படி அவர்கள் செல்லும் வழியில் மைநாக மலையையும், கந்தமாதனத்தின் அடிப்பாகத்தையும், பாறை பரப்பான ஸ்வேத மலையையும், மலையின் உச்சியில் தெளிந்த நீருடைய சிற்றோடைகளையும் கண்டான். பதினேழாவது நாளில் அவன் இமயத்தின் புனிதச் சரிவுகளை அடைந்தான். ஓ! மன்னா {ஜனமேஜெயனே}, காந்தமாதனத்திலிருந்து வெகு தொலைவில் அல்லாமல் சற்று அருகே, ஒரு அருவிக்கருகில் பூத்துக் குலுங்கும் மரங்களுடன் இருந்த விருஷபர்வாவின் ஆசிரமத்தை பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, பல மரங்களும் கொடிகளும் அடர்ந்த இமயத்தின் புனிதச் சரிவுகளில் கண்டான்.
அந்த எதிரிகளை ஒடுக்குபவர்களான பாண்டுவின் மகன்கள், களைப்பில் இருந்து மீண்டு அரசமுனியான பக்திமான் விருஷபர்வாவிடம் சென்று அவருக்கு வாழ்த்து கூறினர். அந்த அரச முனியும் {விருஷபர்வாவும்} பாரதர்களில் முதன்மையான அவர்களைத் {பாண்டவர்களைத்} தனது சொந்த மகன்களைப் போலப் பாசத்துடன் வரவேற்றார். அந்த எதிரிகளை ஒடுக்குபவர்கள் அங்கே உரிய மரியாதையுடன் ஏழு இரவுகளைக் கடத்தினர். எட்டாவது நாளில் அனைத்து உலகங்களாலும் கொண்டாடப்படும் அந்த முனியிடம் {விருஷபர்வாவிடம்} விடைபெற்றுக் கொண்டு தங்கள் பயணத்தைத் தொடங்க தயாராகினர். தங்களிடம் மீந்திருந்த ஆடைகளை உயர் ஆன்ம விருஷபர்வாவிடம் ஒப்படைத்த பாண்டுவின் மகன்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா}, தங்கள் ஆபரணங்களையும், நகைகளையும் ஒன்றாக விருஷபர்வாவின் ஆசிரமத்தில் விட்டுவிட்டுச் சென்றனர். ஞானியும், பக்திமானும், அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனும், கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் அறிந்தவனுமான அவன் {விருஷபர்வா}, தனது மகன்களுக்குச் சொல்வது போல அந்தப் பாரதர்களில் சிறந்தவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} அறிவுரை கூறினார். பிறகு அவனிடம் {விருஷபர்வாவிடம்} விடைபெற்றுக் கொண்ட அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் வடக்கு நோக்கி சென்றனர். அப்படி அவர்கள் சென்ற போது பெருந்தன்மை கொண்ட விருஷபர்வா சிறிது தூரம் அவர்களைத் தொடர்ந்து சென்றார். பிறகு பாண்டவர்களை அந்தணர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களுக்கு அறிவுரை கூறி, அருள் கூறி, அவர்கள் செல்ல வேண்டிய வழி குறித்துச் சொல்லிய பெரும் சக்தி படைத்த விருஷபர்வா தான் வந்த வழியே சென்றான்.
பிறகு பொய்க்காத பராக்கிரமம் கொண்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் சேர்ந்து அனைத்து வகை விலங்குகளும் இருந்த மலைப்பாதையில் கால்நடையாக நடந்து சென்றான். அடர்த்தியான மரங்கள் நிறைந்த மலைச்சரிவுகளில் வாழ்ந்த பாண்டுவின் மகன் நான்காவது நாளில், ஓடைகளும், தங்கமும் ரத்தினங்களும் நிறைந்த பெரும் மேகக் குவியல் போல இருந்த ஸ்வேத மலையை அடைந்தான். பிறகு விருஷபர்வா சொன்ன வழியில் சென்று தாங்கள் பார்க்க எண்ணிய பலவித மலைகளையும் இடங்களையும் கண்டான். மீண்டும் மீண்டும் பல கடக்க முடியாத பாறைகளையும், அடைவதற்கு அரிதான மலைக்குகைகளையும் அவர்கள் தாண்டி சென்றனர். தௌமியர், கிருஷ்ணை {திரௌபதி}, பார்த்தர்கள் {பாண்டவர்கள்}, பெருந்துறவியான லோமசர் ஆகியோர் ஒன்றாக {சுமக்கப்பட்டு} சென்றனர். அவர்கள் களைப்படையவில்லை. பறவைகள் மற்றும் விலங்குகளின் ஓசைகளும், பலதரப்பட்ட மரங்களும் கொடிகளும், தாமரைத்தடாகங்களும், சதுப்பு நிலங்களும் நிறைந்து குரங்குகள் வசிக்கும் இடமாக அந்தப் பரந்து விரிந்த கானகம் இருந்தது. கிம்புருஷர்களின் வசிப்பிடமும், சித்தர்கள், சாரணர்கள், வித்யாதரர்கள், கின்னரர்கள் அடிக்கடி அடைவதும், யானைக்கூட்டங்களும், சிங்கங்கள், புலிகள், சரபங்களின் கர்ஜனைகள் நிறைந்ததும், பல விலங்களின் வசிப்பிடமுமான கந்தமாதன மலையை மயிர்ச்சிலிர்ப்புடன் அங்கிருந்து கண்டனர்.
போர்க்குணமுள்ள பாண்டுவின் மகன்கள் படிப்படியாக மகிழ்ச்சி நிறைந்த மனம் மற்றும் இதயத்துடன் நந்தன தோட்டத்தைப் போல அழகான தோப்புகளுடன் இருந்த வசிக்கத்தகுந்த கந்தமாதனை காட்டுக்குள் நுழைந்தனர். திரௌபதியுடனும், உயர் ஆன்ம அந்தணர்களுடனும் இப்படி நுழைந்த அந்த வீரர்கள் மந்தமாகத் தெளிவில்லாமல் மங்களகரமாக இருக்கும் காதுக்கினிமையான பறவைகளின் இனிய ஓசைகளைக் கேட்டனர். அனைத்துக் காலங்களிலும் பிரகாசமாகப் பூக்கும் மலர்களையும், காய்க்கும் கனிகளையும் கொண்ட மரங்கள் பாரம் தாங்க முடியாதவாறு நின்றன. மா, காட்டு இலந்தை, பவ்யம், மாதுளை, எலுமிச்சை நாரத்தைப் போன்றவை, பலா, கொய்யா, வாழை, நீர்ச்செடிகள், பரா, சண்பகம், மனமகிழச் செய்யும் கடம்பு, வில்வம், விளா, நாவல், காஸ்மரி, இலந்தை, அத்தி, இறலி, ஆல், அரசு, க்ஷிரிகம், சேமரம், நெல்லி, கடுமரம், தான்றி, புன்கு, கரமர்த்தம், மேலும் நிறையக் கனிகளைக் காய்க்கும் திந்துகம் ஆகிய பலவிதமான மரங்கள் அமிர்தம் போன்ற சுவையுள்ள கனிகளால் கந்தமாதன மலைச்சரிவிலுள்ள மரங்கள் நிறைந்திருந்தது.
அது தவிரச் சண்பகம், அசோகம், தாழை {கேதகம்}, மகிழ் {வாகுலம்}, புன்னை {புன்னகம்}, எழிலைம்பாலை {சப்தபர்னம்}, தாழையோடு கூடிய கோங்கு {கர்னிகரம்}, பாதிரி {பாதல் Patal}, அழகிய வெட்பாலை {குதஜம்}, மந்தாரம், தாமரை, பாரிஜாதம், மலையகத்தி {கோவிதரம்}, தேவதாரு, ஆச்சா {சாலம்}, பனை, பச்சிலை, திப்பிலி, பெருங்காயம், இலவு, பலாசு, அசோகம், சிம்சுபை, ஸர்ஜகம் ஆகிய மரங்கள் நான்கு பக்கங்களிலும் மனத்தைக் கவரும் வகையில் நிறைந்திருந்தது. அல்லிகள், புண்டரீகங்கள், கோகநாதங்கள், கருநெய்தல்கள், செங்கழுநீர்கள், தாமரைகள் ஆகியவை நான்கு பக்கத்திலும் நிரம்பியிருந்தன. கமலஹம்சங்கள், சக்கிரவாகங்கள், அன்றில்கள், நீர்க்கோழிகள், காரண்டவங்கள், வாத்துக்கள், அன்னங்கள், கொக்குகள், நாரைகள் ஆகிய நீர்வாழ் பறவைகள் அங்கிருந்த தடாகங்களில் நிறைந்திருந்தன. அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் அங்கே அந்தத் தாமரைத் தடாகங்கள் அழகான தாமரைக்கூட்டங்கள் நிரம்பியும், அதில் தேனைப் பருகி போதையின் மயக்கத்தில் மகிழ்ச்சியாகத் திரிந்த வண்டுகளின் இனிமையான ரீங்காரத்துடனும், தாமரைகளின் மத்தியில் இருந்து விழும் மகரந்தங்களால் சிவந்தும் காணப்பட்டன.
அங்கே இருந்த புதர்களில் பெண்மயில்களோடு இருந்த ஆண்மயில்கள் ஆசையால் பித்துக் கொண்டு மேக தூரியம் போன்ற ஒலியெழுப்பின. அப்படி ஆசையால் மயங்கி இருந்த மயில்கள் மகிழ்ச்சியால் ஆடிக்கொண்டும், தங்கள் தோகையை விரித்துக் கொண்டும் இனிமையான ஒலிகளை எழுப்பின. சில மயில்கள் தங்கள் துணையுடன் சேர்ந்து கொடிகள் அடர்ந்த வெட்பாலை மரங்களில் {குதஜா மரங்கள்} விளையாடிக் கொண்டிருந்தன. சில மயில்கள் வெட்பாலை மரங்களின் கிளைகளில் அமர்ந்து தங்கள் அழகான தோகைகளை விரித்து வீற்றிருந்தது அம்மரங்கள் அணிந்த கிரீடம் போல இருந்தது. காட்டின் ஊடே திறந்தவெளிகளில் காமனின் கணைகளைப் போல இருக்கும் அருள்நிறைந்த சிந்துவாரங்களைக் கண்டார்கள். மலைச்சிகரங்களில் உள்ள கோங்கு மரங்களில் {Karnikara கர்ணிகர மரம்} பொன்னிறமான மலர்கள் பூத்துக் குலுங்குவது சிறந்த காதணிகளைப் போல இருப்பதைக் கண்டார்கள். அக்கானகத்தில் காமனின் கணைகளைப் போல ஒருவனை ஆசையில் புன்னகைக்க வைத்து, சங்கடப்படவைக்கும் பூத்துக் குலுங்கும் மருதோன்றி மரங்களையும் {Karuvaka Tree} கண்டார்கள். அக்கானகத்தின் நெற்றியில் அழகாக வரையப்பட்டது போல உள்ள மஞ்சாடி மரங்களையும் {tilaka tree} கண்டார்கள். பூத்திருந்த மாமரங்களில் கருவண்டுகள் ரீங்காரமிட்டபடி காமனின் கணைகளுக்கு உதவி செய்து கொண்டிருந்தன.
அந்த மலைச்சரிவுகளில் பூத்துக்குலுங்கும் பலவிதமான மரங்களில் சில தங்க நிறத்திலும், சில காட்டுத்தீ போன்ற நிறத்திலும், சில சிவப்பு நிறத்திலும், சில கரு நிறத்திலும், சில வைடூரியம் போன்ற பச்சை நிறத்திலும் மலர்களைச் சுமந்த படி அழகாக நின்றன. இது தவிர அந்தப் பகுதியில் ஆச்சா {சால மரம்}, பச்சிலை {tamala}, பாதிரி {patala}, மகிழம் {vakula} மரங்களும் சேர்ந்து அந்த மலைச்சிகரத்திற்கு அணிவிக்கப்பட்ட மாலை போல இருந்தன. தெளிந்த பளிங்கு போன்ற பல தடாகங்களைக் கொண்ட அந்த மலைச் சரிவுகளில் வெண்மையான இறகுகள் கொண்ட அன்னங்கள் மற்றும் நாரைகளின் சத்தங்களும், தாமரைகளும், குவளைகளும் நிறைந்த அழகான நீர்நிலைகளும், நறுமணமிக்க மலர்களும், சுவமிக்கக் கனிகளும், அழகான தடாகங்களும், மனதைக் கவரும் மரங்களும் என அனைத்தையும் பாண்டவர்களின் கண்கள் ஆச்சரியத்துடன் கண்டன. (அப்படியே அவர்கள் முன்னேறிச் செல்கையில்) தாமரை {Kamala}, கருநெய்தல் {Utpala}, செங்கழுநீர் {Kalhara}, செந்தாமரை {Pundarika} ஆகியவற்றின் நறுமணத்துடன் இனிமையான தீண்டல் கொண்ட தென்றல் காற்றினால் வீசப்பட்டவர்களாகவும் அவர்கள் அந்தக் கானகத்துக்குள் புகுந்தார்கள்.
அப்போது யுதிஷ்டிரன் பீமனிடம் இனிமையாக, “ஆ! ஓ! பீமா, கந்தமாதனத்தின் இந்தக் கானகம் அழகாக இருக்கிறது. அந்த அழகான வனத்தில் தெய்வீகமான காட்டு மரங்களும், கொடிகளும், அழகான அடர்த்தியான இலைகளும், கனிகளும் இங்கிருக்கின்றன. மலராத மரமேதும் நாம் இங்குக் காணவில்லை. கந்தமாதனத்தின் இந்தச் சரிவுகளில், அனைத்து மரங்களும் அழகான இலைகளும் கனிகளும் கொண்டிருக்கின்றன. இந்தத் தாமரைத் தடாகங்களைப் பார், அதில் இருக்கும் தாமரைகளும் முழுதும் மலர்ந்திருக்கின்றன. அவற்றைச் சுற்றி கருவண்டுகள் ரீங்காரமிட்டபடி இருக்கின்றன. அத்தடாகத்தை யானைகள் தங்கள் துணையுடன் சேர்ந்து கலக்கிக் கொண்டிருக்கின்றன. இதோ இன்னுமொரு தடாகத்தைப் பார். மாலைகள் அணிந்து உருவம் கொண்டு வந்திருக்கும் இரண்டாவது ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போல வரிசையாகத் தாமரைகளுடன் இருக்கின்றன பார். இந்த அற்புதமான கானகத்தில் அழகான வனங்களும், பலவிதமான மலர்களின் நறுமணங்களும், கருவண்டுகளின் ரீங்காரமமும் நிறைந்திருக்கின்றன. ஓ! பீமா, எல்லாப்புறங்களையும் சுற்றிப் பார், இது தேவர்களின் விளையாட்டு மைதானம் போலல்லவா இருக்கின்றது. இங்கே வந்ததால் நாம் மனிதர்களில் உயர்ந்த நிலையை அடைந்து அருளப்பட்டவர்களானோம்.
ஓ! பார்த்தா {பீமா}, இந்தக் கந்தமாதனச் சரிவுகளில் பூத்துக்குலுங்கும் அழகான மரங்களில், பூத்துக் குலுங்கும் கொடிகள் அணைத்துக் கொண்டிருப்பது அழகாக இருக்கிறது. ஓ! பீமா, மலைச்சரிவுகளில் பேடுகளுடன் சேர்ந்து ஒலியெழுப்பும் மயில்களின் ஓசையைக் கேள். சகோரங்களும் {chakora}, சதபத்திரங்களும் {satapatra}, மதம்பிடித்த குயில்களும் {kokila}, கிளிகளும் {parrot} பூத்துக் குலுங்கும் இந்தப் பெரிய மரங்களில் அமர்ந்திருக்கின்றன. சிவப்பு நிறத்திலும், சிவந்த மஞ்சள் நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் பல பறவைகள் மரங்களின் உச்சியை அடைந்து, கிளைகளில் அமர்ந்து கொண்டு ஒன்றை மற்றொன்று பார்க்கின்றன. மலை அருவிகளிலும், பச்சை மற்றும் சிவந்த நிறத்திலுள்ள புற்தரையிலும் நாரைகள் தென்படுகின்றன. பிருங்கராஜம் {bhringaraja}, வல்லூறு {upachakra}, போத்து {heron} ஆகியவை அனைத்து உயிரினங்களின் மனதையும் கவரும் வண்ணம் இனிமையான ஒலியுடன் கூவுகின்றன. தாமரை போன்ற வெண்ணிறத்தில் நான்கு தந்தங்களைக் கொண்ட யானைகள் தங்கள் துணைகளுடன், வைடூரிய நிறத்தில் இருக்கும் பெரிய தடாகங்களைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன.
பல பனைமரங்கள் உயரமுள்ள மலைச்சிகரங்களில் இருந்து விழும் பல ஊற்றுகள் பல அருவிகளில் இருந்து விழுகின்றன. சூரியனின் பிரகாசத்தைக் கொண்ட பல அற்புதமான தாதுக்கள், இலையுதிர் காலத்தின் மேகங்கள் போல இந்தப் பெரிய மலையைப் பிரகாசிக்கச் செய்கின்றன. சில இடங்களில் மையின் நிறத்திலும், சில இடங்களில் தங்க நிறத்திலும், சில இடங்களில் கனிப்பொருள் போல மஞ்சள் நிறத்திலும், சில இடங்களில் செந்தூர நிறத்திலும், சில இடங்களில் மாலைநேர மேகங்களின் நிறத்திலும் சிவப்பு நஞ்சு போலக் குகைகளிலும், சில இடங்களில் முயலின் நிறத்திலும், சில இடங்களில் வெள்ளையும் கருப்புமாகத் தாதுக்கள் நிறத்திலும், சில இடங்களின் உதயச் சூரியனின் நிறத்திலும், பெரும் பிரகாசமிக்கத் தாதுக்கள் அந்த மலையை அழகூட்டிக் கொண்டிருக்கின்றன. ஓ! பார்த்தா {பீமா}, விருஷபர்வா சொன்னது போல, கந்தர்வர்களும், கிம்புருஷர்களும், தங்கள் காதல் துணைகளுடன் இந்த மலையின் சிகரங்களில் தெரிகிறதார்கள். ஓ! பீமா, அனைத்து உயிரினங்களையும் மயக்கும் ஒரே தாளம் கொண்ட பல பாடல்களும், வேத ஒலிகளும் கேட்கின்றன. புனிதமானதும், அருள் நிறைந்ததுமான தெய்வீக நதியான மகாகங்கை அன்னங்களுடனும், முனிவர்களுடனும், கின்னரர்களுடன் இருப்பதைப் பார். ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {பீமா}, தாதுக்களையும், நதிகளையும், அழகிய வனங்களையும், விலங்குகளும், பல வடிவங்களிலும், நூறு தலைகள் கொண்ட பாம்புகளையும், கின்னரர்களையும், கந்தர்வர்களையும், அப்சரசுகளையும் பார்” என்றான் {யுதிஷ்டிரன் பீமனிடம்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “எதிரிகளை வாட்டுபவர்களும், பராக்கிரமசாலிகளுமான அவர்கள் திரௌபதியுடனும், உயர் ஆன்ம அந்தணர்களுடனும், அச்சிறந்த மலைகளின் மன்னனை அடைந்து மகிழ்ந்தும், போதுமென்ற மனநிலையை அடையவில்லை. அதன்பிறகு, மலர்களும் கனிகளும் கொண்ட மரங்கள் நிறைந்த அரசமுனி ஆர்ஷ்டிஷேணரின் ஆசிரமத்தை அவர்கள் கண்டார்கள். பிறகு அவர்கள் எலும்புக்கூடு போலச் சதைகள் அற்று இருப்பவரும், கடும் தவத்திற்கான அனைத்துக் கடமைகளை அறிந்தவருமான ஆர்ஷ்டிஷேணரிடம் சென்றார்கள்.
ஆர்ஷ்டிஷேணரின் அறிவுரை! – வனபர்வம் பகுதி 158-யுதிஷ்டிரனிடம் ஆர்ஷ்டிஷேணர் நலம் விசாரிப்பது; பிறகு கைலாச மலையைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு ஆர்ஷ்டிஷேணர் சொல்வது; பிறகு அர்ஜுனன் வரவு வரை தனது ஆசிரமத்திலேயே அவர்கள் தங்கலாம் என்றும் சொன்னது.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பாவங்களைத் தவத்தால் எரித்த அவரை {ஆர்ஷ்டிஷேணரை} அணுகிய யுதிஷ்டிரன், தனது பெயரைச் சொல்லி சிரம் தாழ்த்தி மகிழ்ச்சியுடன் வாழ்த்துக் கூறினான். பிறகு கிருஷ்ணையும் {திரௌபதியும்}, பீமனும், அர்பணிப்புள்ள இரட்டையர்களும் {நகுலன் மற்றும் சகாதேவனும்}, அந்த அரசுமுனிக்குச் சிரம் தாழ்த்தி, அவரைச் சூழ்ந்து நின்றனர். பாண்டவர்களின் புரோகிதரான அறம்சார்ந்த தௌமியரும் நோன்பைக் கடைப்பிடிக்கும் அத்தவசியை அணுகினார். அந்த அறம்சார்ந்த முனிவர் {ஆர்ஷ்டிஷேணர்}, குருக்களின் முதன்மையான பாண்டுவின் மகன்களைத் தனது ஞானப்பார்வையால் கண்டு அறிந்தார். அவர் {ஆர்ஷ்டிஷேணர்} அவர்களிடம், “அமருங்கள்” என்றார்.
குருக்களின் தலைவனை {யுதிஷ்டிரனை} முறையாக வரவேற்ற அந்தக் கடும் தவசி, அவன் {யுதிஷ்டிரன்} தனது தம்பிகளுடன் அமர்ந்த பிறகு அவர்களின் சுக துக்கங்களைக் கேட்டறிந்தார். அவர் {ஆர்ஷ்டிஷேணர்}, “பொய்மையை நோக்கிச் செல்லாமலிருக்கிறாயா?
அறத்தை நோக்கிச் செல்கிறாயா?
ஓ பார்த்தா {யுதிஷ்டிரா}, தாய் தந்தை மீதான உனது கவனம் குறைவடையாமல் பார்த்துக் கொள்கிறாயா?
மேன்மையானவர்களும், முதியவர்களும், வேதங்களை அறிந்தவர்களும் உன்னால் மதிக்கப்படுகிறார்களா?
ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, பாவ காரியங்களில் உனது மனத்தைச் செலுத்தாமல் இருக்கிறாயா?
ஓ! குருக்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, நற்செயல் புரிவதும், தீச்செயல் புரியாமல் இருப்பதும் எப்படி என்பதை நீ தெரிந்து கொண்டிருக்கிறாயா? உன்னை நீ மேன்மையாகக் கருதாமல் இருக்கிறாயா? {தற்புகழ்ச்சி செய்யாமல் இருக்கிறாயா?},
பக்திமான்கள் உன்னால் திருப்திசெய்யப்பட்டு மதிக்கப்படுகிறார்களா? காட்டில் வசித்தாலும், அறத்தை மட்டுமே பயில்கிறாயா?
ஓ! பார்த்தா, உனது நடத்தையால் தௌமியர் துயரடையாது இருக்கிறாரா? தானத்திலும், தர்ம காரியங்களிலும், தவத்திலும், சுத்தத்திலும், கபடமற்ற நேர்மையிலும் {candour}, மன்னிப்பளிப்பதிலும் நீ உனது மூதாதையரின் வழக்கங்களைக் கடைப்பிடிக்கிறாயா?
அரசமுனிகள் சென்ற பாதையில் நீயும் செல்கிறாயா?
(தங்கள்) குலத்தில் மகன் பிறந்தால், பித்ரு லோகத்தில் இருக்கும் பித்ருகள், இந்த மகனின் பாவச்செயல்களால் நமக்குத் தீங்கு விளையுமா அல்லது இவனது நற்செயல்களால் நமக்கு நன்மை கிடைக்குமா? என்று எண்ணி சிரிக்கவும், துக்கப்படவும் செய்கிறார்கள். தந்தை, தாய், குரு, அக்னி மற்றும் ஐந்தாவதாகத் தனது ஆன்மா ஆகியவற்றுக்கு அஞ்சலி செலுத்தும் ஒருவன் இரு உலகங்களையும் {பூலோகம் மற்றும் சொர்க்கம்} வெல்கிறான்” என்று சொன்னார் {ஆர்ஷ்டிஷேணர்}.
யுதிஷ்டிரன் {ஆர்ஷ்டிஷேணயரிடம்}, “ஓ! வழிபடத்தகுந்தவரே, நீர் குறிப்பிட்ட கடமைகள் அனைத்தும் அற்புதமானவை. நான் அவற்றை எனது சக்திக்கு சிறந்தவாறு முறையாகவும் சரியாகவும் வெளிப்படுத்துகிறேன்” என்றான்.
ஆர்ஷ்டிஷேணர் {யுதிஷ்டிரனிடம்}, “பர்வசந்திகளின் போது {During Parvas = பௌர்ணமியும் பிரதமையும் சந்திக்கும்போது அல்லது அமாவாசையும் பிரதமையும் சந்திக்கும்போது}, காற்றையும் நீரையும் மட்டும் அருந்தும் முனிவர்கள் இந்த மலைகளிற் சிறந்த மலைக்கு விண் வழியாக வருவார்கள். மலையின் சிகரங்களில் காதல் பாங்கான கிம்புருஷர்கள் தங்கள் காதலிகளுடன் இணைபிரியாமல் இருப்பார்கள்; ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, வெண்பட்டு உடுத்திய பல அப்சரசுகளும், பல கந்தர்வர்களும், அழகான வித்யாதரர்களும் மாலைகள் அணிந்து கொண்டும், பலம்வாய்ந்த நாகர்களும், சுபர்ணர்களும், ஊரகர்களும் பிறரும் இங்கே காணப்படுவார்கள். பர்வசந்திகளின் போது, இம்மலையின் சிகரங்களில் பேரிகைகள், பணவங்கள், சங்கங்கள், மிருதங்கங்கள் ஆகியவற்றின் ஒலிகள் கேட்கும்.
ஓ! பரதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, இங்கிருந்தபடி நீ அந்த ஒலிகள் அனைத்தையும் கேட்கலாம். அவ்விடத்திற்கு எவ்வகையிலும் செல்ல நீங்கள் எண்ணலாகாது. ஓ! பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, இதற்கு மேலும் நீங்கள் செல்ல இயலாது. இது தேவர்களின் விளையாட்டிடமாகும். அங்கே செல்வதற்கு மனிதர்களுக்கு அனுமதியில்லை. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, மீறி நடக்கும் எம்மனிதனையும், அச்செயல் மிகச் சிறியதாக இருந்தாலும், இங்கிருக்கும் அனைத்து உயிரினங்களும் பகைக்கும், ராட்சசர்கள் அவர்களைத் தண்டிப்பார்கள்.
இந்தக் கைலாச மலையின் சிகரத்திற்கு அப்பால், தெய்வீக முனிவர்களின் பாதை தென்படுகிறது. யாரும் வெட்கங்கெட்டுப் போய், இதைக் கடந்து சென்றால், இரும்பு சூலங்களாலும், இன்னும் பல ஆயுதங்களாலும் அவனைக் கொன்று போடுவார்கள். ஓ! குழந்தாய், பர்வசந்திங்களின் போது இங்கே மனிதர்களின் தோள்களில் பயணிப்பவனும், அப்சரசுகளால் சூழப்பட்டவனுமான வைஸ்ரவணன் {குபேரன்} பகட்டுடனும் ஆடரம்பரத்துடனும் இருப்பான். ஓ! பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, ராட்சசர்களின் தலைவனான அவன் {குபேரன்} சிகரத்தில் அமர்ந்த பிறகு, அனைத்து உயிர்களும் அவனை உதயச் சூரியனைப் போலக் காண்கின்றன. அந்தச் சிகரமே தேவர்கள், தானவர்கள், சித்தர்கள், வைஸ்ரவணன் {குபேரன்} ஆகியோர் விளையாடும் நந்தவனமாகும்.
பர்வசந்திகளின் போது, பொக்கிஷத் தலைவனை {குபேரனை} மகிழ்விக்க எண்ணி கானம் பாடும் தும்புருவின் இனிய குரல் இந்தக் கந்தமாதனம் முழுவதும் கேட்கப்படும். ஓ! குழந்தாய், ஓ! யுதிஷ்டிரா, இங்கே பர்வசந்திகளின் போது, இது போன்ற அற்புதங்களை அனைத்து உயிர்களும் பார்க்கவும், கேட்கவும் செய்கின்றன. ஓ! பாண்டவர்களே, அர்ஜுனனை நீங்கள் சந்திக்கும்வரை சுவைமிக்கக் கனிகளையும், முனிவர்களின் உணவையும் உண்டு இங்கே தங்கிக் கொள்ளுங்கள். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, இங்கே வந்த பிறகு, நீங்கள் எதையும் மதிக்காமல் நம்பிக்கைதுரோகம் செய்யக்கூடாது. ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, இங்கே உங்கள் விருப்பப்படி வாழும்போது, நீ எண்ணியவாறு மாறுதல் அடைந்து, பிறகு உனது கரங்களின் பலத்தால் அடைந்த உலகை நெடுநாள் ஆள்வாய்” என்றார் {ஆர்ஷ்டிஷேணர்}.
மணிமான் வதம்! – வனபர்வம் பகுதி 159-சுபர்ணத்தின் சிறகசைவில் எழும்பிய காற்றால் கொண்டுவரப்பட்ட பஞ்சநிற மலரை திரௌபதி காண்பது; ராட்சசர்களை அழித்து வரும்படி பீமனிடம் திரௌபதி வேண்டுவது; பீமன் கந்தமாத மலையின் சிகரத்தில் ஏறி, மணிமான் முதலிய யக்ஷர்களைப் போரிட்டுக் கொல்வது…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} கேட்டான், “ஒப்பற்ற பராக்கிரமம் கொண்ட எனது பெரும்பாட்டன்கள் {பாண்டவர்கள்} கந்தமாதன மலையில் எவ்வளவு காலம் தங்கியிருந்தார்கள்? ஆண்மையைக் கொடையாகக் கொண்ட பெரும் பலம் வாய்ந்த அவர்கள் {பாண்டவர்கள்} {அங்கிருந்த போது} என்ன செய்தார்கள்? உலகங்களின் வீரர்களான அவர்கள் {பாண்டவர்கள்} அங்கு வசித்த போது, அந்த உயர் ஆன்மா கொண்டவர்களின் {பாண்டவர்களின்} உணவு என்னவாக இருந்தது? ஓ! அற்புதமானவரே {வைசம்பாயனரே}, இது குறித்த அனைத்தையும் நீர் சொல்லும். பீமசேனனின் பராக்கிரமத்தையும், அந்தப் பலம்வாய்ந்த கரம் கொண்டவன் இமய மலையில் என்ன செய்தான் என்பதையும் விவரித்துச் சொல்லும். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {வைசம்பாயனரே}, நிச்சயமாக மீண்டும் அவன் {பீமன்} யக்ஷர்களுடன் போரிடவில்லையா? அவர்கள் {பாண்டவர்கள்} வைஸ்ரவணனைச் சந்தித்தார்களா? ஆர்ஷ்டிஷேணர் சொன்னதுபோலச் செல்வத்தலைவன் {குபேரன்} அங்கு வந்தானா? ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே {வைசம்பாயனரே}, இவை அனைத்தையும், நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். நிச்சயமாக நான் அவர்களது {பாண்டவர்களின்} செயல்களைக் கேட்டு இன்னும் முழுமையாகத் திருப்தியடையவில்லை.”
வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} தொடர்ந்தார், “அந்த ஒப்பற்ற சக்தி கொண்டவரிடம் {ஆர்ஷ்டிஷேணரிடம்}, தங்கள் நன்மைக்கான அறிவுரைகளைக் கேட்ட அந்தப் பாரதர்களில் சிறந்தவர்கள் {பாண்டவர்கள்}, அதன் படியே நடக்கத் தொடங்கினார்கள். மனிதர்களில் சிறந்த அந்தப் பாண்டவர்கள், முனிவர்கள் உண்ணும் உணவையும், சுவை மிக்கக் கனிகளையும், நஞ்சில்லா கணைகளால் கொல்லப்பட்ட மான் இறைச்சியையும், பல வகைப்பட்ட சுத்தமான தேனையும் {மது என்று வேறு பதிப்பில் இருக்கிறது} உண்டு இமயத்தில் வசித்தார்கள். லோமசரிடம் பல கதைகளைக் கேட்டபடி இப்படியே வாழ்ந்து, தங்களது ஐந்தாவது வருடத்தைக் கடத்தினார்கள். ஓ! தலைவா {ஜனமேஜயா}, கடோத்கசன் “தேவையேற்படும் போது நான் இங்கு இருப்பேன்” என்று சொல்லி, அனைத்து ராட்சசர்களுடன் முன்பே சென்றுவிட்டான். பல அற்புதங்களைக் கண்டபடியே அந்தச் சிறப்புமிக்கவர்கள் {பாண்டவர்கள்} பல மாதங்களை ஆர்ஷ்டிஷேணரின் ஆசிரமத்தில் கழித்தனர். அங்கே பாண்டவர்கள் இன்பமாக விளையாடிக் கொண்டிருந்தபோது, உள்ளம் நிறைவு பெற்று, கடும் நோன்புகள் நோற்கும் முனிவர்களும், பெரும் நற்பேறு பெற்ற சாரணர்களும், பரிசுத்தமான ஆன்மா கொண்டவர்களும் அவர்களைக் {பாண்டவர்களைக்} காண வந்தனர். அந்தப் பாரதர்களில் முதன்மையானவர்கள் {பாண்டவர்கள்} அவர்களுடன் உலகம் சார்ந்த பல தலைப்புகளைப் {கதைகளைப்} பேசினார்கள்.
இப்படியே பல நாள் கடந்ததும் ஒரு நாள், ஒரு சுபர்ணம் {கருடன்}, அங்கிருந்த பெரும் தடாகத்தில் இருந்து, ஒரு பலம் வாய்ந்த நாகத்தைத் தூக்கிச் செல்வதை அவர்கள் {பாண்டவர்கள்} காண நேர்ந்தது. அதன் காரணமாக, பெரும் மரங்கள் உடைந்தன. அம்மரங்களைத் தாங்கிக் கொண்டிருந்த அந்தப் பெரும் மலை நடுங்கத்தொடங்கியது. அந்த அற்புதத்தை அனைத்து உயிர்களும் பாண்டவர்களும் கண்டனர். அந்தப் பெரும் மலையின் உச்சியில் இருந்து வீசிய காற்று, பாண்டவர்களுக்கு முன்னிலையில் பலவித நறுமணம் கொண்ட அழகான மலர்களை அடித்துக் கொண்டு வந்து சேர்ந்தது. நண்பர்களோடு கூடிய பாண்டவர்களும், சிறப்புமிக்கக் கிருஷ்ணையும் {திரௌபதியும்} ஐந்து நிறம் {பஞ்சவர்ணம்} கொண்ட தெய்வீக மலர்களைக் கண்டனர்.
அந்த மலையில் சுகமாக வீற்றிருந்து பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட பீமனிடம் கிருஷ்ணை {திரௌபதி}, “ஓ! பாரதக் குலத்தின் சிறந்தவரே, சுபர்ணம் {கருடன்} எழுப்பிய காற்றினால், ஐந்து நிறம் கொண்ட இந்த மலர்கள் {பஞ்சவர்ண மலர்கள்}, அனைத்து உயிர்களுக்கும் முன்னிலையில் மிக வேகமாக அஸ்வரத நதியில் விழுகின்றன. சத்தியத்தில் உறுதி கொண்ட உமது தம்பியால் {அர்ஜுனரால்}, கந்தர்வர்களும், நாகர்களும், ஏன் வாசவனும் {இந்திரனும்} கூடக் காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} கலங்கடிக்கப்பட்டார்கள். கடுமை நிறைந்த ராட்சசர்கள் கொல்லப்பட்டார்கள். காண்டீவ வில்லையும் அவர் {அர்ஜுனர்} பெற்றார். பராக்கிரமத்திலும், கரங்களின் பலத்திலும் வெல்லப்பட முடியாதவராக, தாங்க முடியாதவராக, சக்ரனின் {இந்திரனின்} பலத்திற்கு ஒப்பாகவே நீரும் இருக்கிறீர். ஓ! பீமசேனரே, உமது கரங்களின் சக்தியைக் கண்ட அனைத்து ராட்சசர்களும் பயந்து போய், இந்த மலையை விட்டுவிட்டு பத்து திக்குகளையும் அடையட்டும். அப்போது பயம் மற்றும் துயரத்தில் இருந்து உமது நண்பர்கள் விடுவிக்கப்பட்டு, பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த மங்களகரமான சிகரம் கொண்ட அற்புத மலையைக் காண்பார்கள். ஓ! பீமரே, உமது கரங்களின் பலத்தால் காக்கப்பட்டு, இந்தச் சிகரத்தைக் காணவேண்டும் என்ற எண்ணத்தை நான் நீண்ட நாளாக எனது மனதில் பேணிக்காத்து வருகிறேன்” என்றாள் {திரௌபதி}.
இதனால், நல்ல எழுச்சி கொண்ட காளை அடிக்கப்பட்டது போல அடிக்கப்பட்ட பீமசேனன், திரௌபதி தன்னை அவமதிப்பதாகக் கருதினான். அதை அவனால் பொறுக்கமுடியவில்லை. சிங்கம் அல்லது காளையைப் போன்ற நடையும், அருளும், தயாளமும், தங்கத்தைப் போன்ற பிரகாசமும், புத்திகூர்மையும், பலமும், கர்வமும், உணர்வும், வீரமும், சிவந்த கண்களும், அகன்ற தோள்களும், சிங்கப்பற்களும், அகன்ற கழுத்தும், ஆச்சா {சால} மரத்தைப் போன்ற உயரமும், உயர் ஆன்மாவும், அருள் நிறைந்த அனைத்து உறுப்புகளும், சங்கு குறிகள் கொண்ட கழுத்தும், மதயானையின் பலத்தையும் கொடையாகக் கொண்ட அந்தப் பாண்டவன் {பீமன்}, பொன்னால் பின்புறம் அலங்கரிக்கப்பட்ட தனது வில்லையும், வாளையும் எடுத்தான். சிங்கம் போன்ற செருக்குடன், மதயானையைப் போன்ற பலம் வாய்ந்த அவன் {பீமன்}, பயமோ துயரமோ இல்லாமல் அச்சிகரத்தை நோக்கி விரைந்தான். விற்களுடனும், கணைகளுடனும் சிங்கம் போன்றோ அல்லது மதங்கொண்ட யானை போன்றோ செல்லும் அவனை அனைத்து உயிரினங்களும் கண்டன.
பயமோ துயரமோ அற்ற அந்தப் பாண்டவன் {பீமன்}, தனது கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, திரௌபதி மகிழும் வகையில், அந்த மலைகளின் ஏகாதிபதியை {கந்தமாதன மலையை} நோக்கி முன்னேறினான். பிருதை {குந்தி} மற்றும் வாயுத்தேவன் மகனுக்கு {பீமனுக்கு} வாட்டமோ, பயமோ, ஊக்கமின்மையோ, (பிறரைக் கண்டு} விரோத மனப்பான்மையோ ஏற்படவில்லை. ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய கரடுமுரடான பாதையில் சென்ற அந்தப் பெரும் பலம் வாய்ந்தவன் {பீமன்}, பல பனைமரங்களின் {ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும் பனைகளின்} உயரம் இருக்கும் அந்தக் கடுமை நிறைந்த சிகரத்தில் ஏறினான். அச்சிகரத்தில் ஏறி, கின்னரர்களையும், பெரும் நாகர்களையும், முனிவர்களையும், கந்தர்வர்களையும், ராட்சசர்களையும் மகிழ்வித்த பாரதக் குலத்தில் வந்த முதன்மையானவன் {பீமன்}, வைஸ்ரவணனின் {குபேரனின்} வசிப்பிடத்தைப் பார்த்தான். சிகரத்தைவிட உயர்ந்த நந்தவனங்கள் சூழ, கோட்டைமதிற்சுவர், கோபுரங்கள், கதவுகள், வாயில்கள், வரிசையான கொடிகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு, ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்கச் சுவர்களால் அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டிருந்த பொன்மயமான பளிங்கு மாளிகைகள் அங்கே இருந்தன. இன்பக்கேளிக்கைகளுடன் ஆடிக்கொண்டிருந்த அருள் நிறைந்த மங்கைகளுடனும், தென்றல் காற்றால் ஆடிக்கொண்டிருந்த முக்கோண வடிவக் கொடிகளுடனும் {குபேரனின்} அவ்வசிப்பிடம் இருந்தது.
வளைந்த கைகளால் வில்லின் நுனியைப் பிடித்திருந்த பீமன், ஆவலுடன் கருவூலத் தலைவனின் {குபேரனின்} நகரத்தைக் கண்டான். அனைத்து உயிரினங்களும் மகிழும் வகையில் அங்கே நறுமணத்தைச் சுமந்து கொண்டு வீசிய தென்றல், அவனுக்குக் குணமளிக்கும் உணர்ச்சியைக் கொடுத்தது. அங்கே பல நிறங்களில் அழகான அற்புதமான மரங்களில், பலதரப்பட்ட இனிய ஒலிகள் நிரம்பியிருந்தன. அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த பாரதர்களில் முதன்மையானவன் {பீமன்}, ரத்தினக்குவியல்கள் சிதறி, பலவண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த ராட்சசத் தலைவனின் {குபேரனின்} அரண்மனையை நோட்டம் விட்டான். உயிர் மீது கொண்ட கவனத்தைக் கைவிட்ட பெரும் பலம்வாய்ந்த கரம் கொண்ட பீமசேனன், தனது கதாயுதம், வாள், வில் ஆகியவற்றைக் கைகளில் தாங்கியவாறு பாறை போல அசைவற்று நின்றான் {பீமன்}.
பிறகு பகைவர்களின் மயிர் சிலிர்க்கும் வண்ணம் தனது சங்கை எடுத்து ஊதினான்; தனது வில்லைச் சுண்டி நாணொலி எழுப்பினான்; தனது கைகளைத் தட்டி அனைத்து உயிர்களையும் துணிவிழக்கச் செய்தான். மயிர் சிலிர்த்த யக்ஷர்களும், ராட்சசர்களும் ஒலி வந்த திக்கில் இருந்த பாண்டவனை {பீமனை} நோக்கி விரைந்தனர். கதாயுதம், தடி, வேல்கம்பு, ஈட்டி, கோடரி ஆகிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டு யக்ஷர்களும், ராட்சசர்களும் கோபத்துடன் வந்தனர். ஓ!பாரதா {ஜனமேஜயா}, பீமனுக்கும் ராட்சசர்களுக்கும் இடையில் போர் துவங்கிய போது, மாய சக்தி கொண்ட அவர்களது சூலங்கள், ஈட்டிகள், கோடரிகள் ஆகியவற்றைப் பீமன் தனது அம்புகளால் அறுத்தெறிந்தான். பெரும் பலம் மிக்க அவன் {பீமன்} தனது கணைகளைக் கொண்டு, ஆகாயத்திலும், பூமியிலும் நின்று கர்ஜித்துக் கொண்டிருந்த ராட்சசர்களின் உடலைத் துளைத்தான் {பீமன்}.
அளவிலா பலமிக்கப் பீமன், கதாயுதம், தடி முதலியன கொண்டு எல்லாப்புறங்களிலும் இருந்து வந்த ராட்சசர்களின் உடலில் இருந்த செந்நிற மழை பெய்ய வைத்து, அந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கினான். பீமனின் பலமிக்கக் கரங்களில் இருந்த விடுபட்ட ஆயுதங்கள், ராட்சசர்கள் மற்றும் யக்ஷர்களின் உடல்களையும், கரங்களையும் அடித்தன. பிறகு, மேகங்களால் மூடப்பட்ட சூரியனைப் போல அருள் நிறைந்த பாண்டவன் {பீமன்} அனைத்துப் புறங்களிலும் ராட்சசர்களால் சூழப்பட்டிருப்பதை அனைத்து உயிரினங்களும் கண்டன. சூரியன் தனது கதிர்களால் அனைத்தையும் சூழ்வதைப் போல, அந்தப் பெரும்பலம் மிக்கக் கரம் கொண்டு வீழா பராக்கிரமம் கொண்டவன் {பீமன்}, தனது கணைகளால் எதிரிகளை மூழ்கடித்து அழித்தான்.
அவர்கள் {ராட்சசர்கள்} கர்ஜித்துக் கொண்டு பயமுறுத்தியபடி இருந்தாலும், பீமன் கலங்காதிருப்பதை ராட்சசர்கள் கண்டனர். அவர்களது உடல்கள் சிதைய, யக்ஷர்கள் பயத்தால் பீடிக்கப்பட, பீமசேனன் துன்பம் விளைவிக்கிற வகையில் பயங்கரமான ஒலி எழுப்பினான். பலமான வில்லைத் தாங்கியிருப்பவனை {பீமனைக்} கண்டு பயந்த அவர்கள், தங்கள் கதைகளையும், வேல்கம்புகளையும், வாள்களையும், தடிகளையும், கோடரிகளையும் கைவிட்டுத் தென்திசை நோக்கி ஓடினர். அகன்ற மார்பும், வலுத்த கரமும் கொண்டவனும், வைஸ்ரவணனின் {குபேரனின்} நண்பனுமான மணிமான் என்ற பெயர் கொண்ட ராட்சசன், தனது கைகளில் சூலங்களுடனும், கதாயுதங்களுடனும் அங்கே நின்று கொண்டிருந்தான்.
பெரும்பலம் மிக்க அவன் {மணிமான்}, தனது நிபுணத்துவத்தையும், ஆண்மையையும் வெளிக்காட்டத் தொடங்கினான். போரைக் கைவிட்டு ஓடும் அவர்களிடம் {ராட்சசர்களிடம்} புன்னகையுடன், “வைஸ்ரவணனின் {குபேரனின்} வசிப்பிடத்திற்குச் சென்று, அந்தச் செல்வத்தலைவனிடம் {குபேரனிடம்}, எண்ணிக்கையில் அதிகமான எங்கள் அனைவரையும், தனித்த ஒரு மனிதன் போரில் வீழ்த்தினான் என்று எப்படிச் சொல்வீர்கள்?” என்று கேட்டான். இதை அவர்களிடம் சொன்ன அந்த ராட்சசன் {மணிமான்}, கைகளில் தடிகளையும், ஈட்டிகளையும், கதாயுதங்களையும் எடுத்துக்கொண்டு அந்தப் பாண்டவனை {பீமனை} நோக்கி விரைந்தான். மதங்கொண்ட யானையைப் போல, அவன் வேகமாக விரைந்து சென்றான். அப்படி வந்தவனை {மணிமானை} பீமசேனன் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கணைகளால் {வத்சதந்தம் என்ற கணை} விலாப்புறத்தில் அடித்தான். அந்தப் பெரும்பலம் வாய்ந்த மணிமானும், தனது பங்கிற்கு, கோபத்துடன், பயங்கரமான கதாயுதத்தைப் பீமசேனன் மீது வீசினான். இதன் பேரில், கற்களில் கூரேற்றப்பட்ட எண்ணிலடங்கா கணைகளால் அந்தக் கதாயுதத்தைப் பீமன் தடுத்தான். அது மின்னல் போன்ற ஒளியை வெளியிட்டது. ஆனால் அந்தக் கதாயுதத்தை அடைந்த கணைகள் அனைத்தும் கலங்கடிக்கபட்டன. பிறகு கடும் பராக்கிரமம் நிறைந்தவனும் பெரும் பலம் வாய்ந்தவனுமான பீமன் {அந்த ராட்சசனால்- மணிமானால்} விடப்பட்ட அந்த ஆயுதத்தைத் தனது கதாயுத நிபுணத்துவத்தால் கலங்கடித்தான்.
அதே சமயம், புத்திகூர்மை கொண்ட அந்த ராட்சசன் {மணிமான்}, தங்கப் பிடி கொண்டு இரும்பினால் செய்யப்பட்ட பயங்கரமான தடியை எடுத்து வீசினான். நெருப்பைக் கக்கிய அத்தடி, பயங்கரச் சத்தமிட்டபடி, திடீரெனப் பீமனின் வலக்கரத்தைத் துளைத்துத் தரையில் விழுந்தது. அத்தடியால் கடும் காயமடைந்த வில்லாளியான, அளவிலா பராக்கிரமம் கொண்ட குந்தியின் மகன் {பீமன்}, கோபத்தில் கண்கள் உருள, தனது கதாயுதத்தை எடுத்தான். எதிரிகளுக்குப் பயத்தை ஏற்படுத்தி அவர்களை வீழ்த்த, பொற்தகடுகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த இரும்பு கதையை எடுத்த அவன் {பீமன்}, பெரும்பலமிக்க மணிமானை நோக்கி அச்சுறுத்தும் வகையிலும் பெரும் ஒலியுடனும் பெரும் வேகத்துடனும் வீசினான். மணிமான் தனது பங்கிற்குப் பெரும் உருவமும், சுடர்விட்டுப் பிரகாசிப்பதுமான தனது கைவேலை {வேல்} எடுத்துப் பீமனை நோக்கி பெரும் கூச்சலுடன் தூக்கி எறிந்தான்.
அந்த வேலை, தனது கதையின் முனையால் உடைத்த கதாயுத்த நிபுணனான அந்தப் பெரும் பலம்வாய்ந்தவன் {பீமன்}, கருடன் நாகத்தைக் கொல்ல விரைவது போல, அவனைக் {மணிமானைக்} கொல்ல விரைந்தான். பிறகு திடீரெனக் களத்தின் முன்னணிக்கு வந்த அந்தப் பலமிக்கக் கரம்வாய்ந்தவன் {பீமன்} வானத்தில் எழும்பி தனது கதையைச் சுழற்றி பெரும் கர்ஜனையுடன் வீசி எறிந்தான். இந்திரனால் ஏவப்பட்ட வஜ்ரம் போல, தீமை விளைவிக்கும் அந்தக் கதாயுதம், காற்றின் வேகத்தோடு சென்று அந்த ராட்சசனை {மணிமானை} அழித்துவிட்டுத் தரையில் விழுந்தது. காளை சிங்கத்தால் கொல்லப்படுவதைப் போல, பயங்கரமான பலம் கொண்ட ராட்சசன் {மணிமான்} பீமனால் கொல்லப்படுவதை அனைத்து உயிரினங்களும் கண்டன. அவன் {மணிமான்} கொல்லப்பட்டுத் தரையில் வீழ்த்தப்பட்டதைக் கண்டு, உயிருடன் இருந்த பிற ராட்சசர்கள் துயரத்தால் பயங்கரமான ஓலமெழுப்பியபடி கிழக்கு நோக்கி ஓடினர்.
குபேரனின் கோபம் தணிந்தது! – வனபர்வம் பகுதி 160-பீமனைக் காணாது மனம் வருந்திய பாண்டவர்கள் மலைச்சிகரத்தில் ஏறியது; பீமனையும், பீமனால் கொல்லப்பட்ட ராட்சசர்களையும் காண்பது; குபேரன் பீமனிடம் போருக்கு வந்தது; வந்த இடத்தில் யுதிஷ்டிரனைக் கண்டு கோபம் தணிந்து, தனக்கு அகத்தியரால் ஏற்பட்ட சாபத்தைச் சொன்னது; பீமசேனன் செயலால் சாபவிமோசனம் பெற்றதாகக் குபேரன் சொல்வது..
வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், “மலையின் குகைகளில் இருந்து பலதரப்பட்ட ஒலிகள் வருவதையும், பீமசேனனைக் காணாததையும் கண்ட, குந்தியின் மகனான அஜாதசத்ருவும் {யுதிஷ்டிரனும்}, மாத்ரியின் மகன்களான இரட்டையர்களும், தௌமியரும், கிருஷ்ணையும் {திரௌபதியும்}, அனைத்து அந்தணர்களும், (பாண்டவர்களின்) நண்பர்களும் துயரத்தில் நிறைந்தனர். அதன்பிறகு திரௌபதியை ஆரிஷ்டஷேணரிடம் ஒப்படைத்துவிட்டு, தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்ட அந்த வீரமிக்க, வலிமைமிக்க ரதவீரர்கள் {பாண்டவர்கள்} ஒன்றாகச் சேர்ந்து அந்த மலையின் சிகரத்தில் ஏறினர். எதிரிகளை ஒடுக்குபவர்களான வலிமையான வில்லாளிகளும், பலம் வாய்ந்த தேரோட்டிகளுமான அவர்கள் {பாண்டவர்கள்} அந்த மலைச்சிகரத்தை அடைந்ததும் பீமனையும், பீமனால் அடிக்கப்பட்டுச் சுயநினைவற்ற நிலையில் கிடக்கும் பெரும் பலம்வாய்ந்த ராட்சசர்களையும் கண்டனர். அந்தத் தானவப் படையைக் கொன்ற பிறகு, தனது கதாயுதத்தையும், வாளையும், வில்லையும் பிடித்தவாறு இருந்த அந்தப் பெரும் பலம் வாய்ந்தவன் {பீமன்}, மகவானைப் {இந்திரனைப்} போலத் தெரிந்தான்.
அற்புதமான நிலையை அடைந்த அந்தப் பாண்டவர்கள் தங்கள் சகோதரனை {பீமனைக்} கண்டதும், அவனை அணைத்துக் கொண்டு அங்கேயே அமர்ந்தனர். அந்தப் பெரும் பலம் வாய்ந்த வில்லாளிகள் இருந்த அந்தச் சிகரம், தேவர்களில் முதன்மையான, உயர்ந்த நற்பேறைக் கொண்ட லோகபாலர்கள் இருக்கும் சொர்க்கத்தைப் போலத் தெரிந்தது. குபேரனின் வசிப்பிடத்தையும், கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கும் ராட்சசர்களையும் கண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அங்கே அமர்ந்திருந்த தனது தம்பியிடம் {பீமனிடம்}, “முரட்டுத்தனத்தாலோ, அறியாமையாலோ, ஓ! பீமா, நீ பாவ காரியத்தைச் செய்திருக்கிறாய். ஓ! வீரா {பீமா}, துறவு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும்போது, காரணமற்று நீ செய்திருக்கும் இந்தக் கொலை உனக்குத் தகுந்ததன்று. ஏகாதிபதி விரும்பாத செயல் என்று கடமைகளை அறிந்தவர்களால் கணிக்கப்பட்டுள்ள செயல்களைச் செய்யக்கூடாது. ஆனால், ஓ! பீமசேனா, நீ தேவர்களையே அவமதிக்கும் காரியத்தைச் செய்திருக்கிறாய். பொருளையும், கடமையையும் கருதிப் பாராமல், பாவ எண்ணங்கள் பால் திரும்புபவன், ஓ! பார்த்தா {பீமா}, அந்தப் பாவகரச் செயல்களுக்கான கனியை அறுவடை செய்கிறான். எனினும், நீ எனது நன்மையை விரும்பினால், மீண்டும் இதுபோன்ற ஒரு காரியத்தைச் செய்யாதே” என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} தொடர்ந்தார், “தனது தம்பியான விருகோதரனிடம் {பீமனிடம்} இதைச் சொன்ன உயர்ந்த சக்தியும் உறுதியான மனமும், பொருள் குறித்த அறிவியலையும் அறிந்த குந்தியின் மகனான யுதிஷ்டிரன் பேச்சை நிறுத்தி, அவ்விஷயம் குறித்துச் சிந்திக்கலானான்.
மறுபுறம், பீமானால் கொல்லப்பட்டவர்கள் தவிர மீந்திருந்த ராட்சசர்கள் ஒன்று சேர்ந்து குபேரனின் வசிப்பிடத்திற்கு ஓடினார்கள். பெரும் வேகம் கொண்ட அவர்கள் வைஸ்ரவணனின் {குபேரனின்} வசிப்பிடத்தை விரைவாக அடைந்து, பீமனின் மீது ஏற்பட்ட பயத்தால் துன்பக்குரலுடன் கதறத் தொடங்கினர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, தங்கள் ஆயுதங்களை இழந்து, களைப்படைந்து, இரத்தக்கறை கொண்ட கவசங்களுடனும், கலைந்த கேசங்களுடனும், குபேரனிடம், “ஓ! தலைவா, கதாயுதம், தண்டம், வாள்கள், ஈட்டிகள், வேல்கம்புகள் கொண்டு போரிடும் உமது ராட்சசர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். ஓ! கருவூலத்தின் தலைவா, மலையில் ஊடுருவி வந்த ஒரு மனிதன், தனி ஒருவனாக உமது குரோதவாச ராட்சசர்கள் அனைவரையும் கொன்றுவிட்டான். மேலும், செல்வத்தின் தலைவா, யக்ஷர்களிலும் ராட்சசர்களின் முதன்மையானவர்கள் அங்கே அடிபட்டு, உணர்வற்று விழுந்து, இறந்து கிடக்கின்றனர். அவனது {பீமனது} கருணையால் நாங்கள் விடப்பட்டோம். மேலும், உமது நண்பரான மணிமானும் கொல்லப்பட்டார். இவை அனைத்தையும் ஒரு மனிதன் செய்தான். இதன்பிறகு எது சரியோ அதைச் செய்யும்” என்றனர்.
இதைக் கேட்ட யக்ஷப் படைகளின் தலைவன் {குபேரன்}, கோபம் மிகுந்து, சினத்தால் கண்கள் சிவக்க, “என்ன?” என்று கேட்டான். பீமனின் இரண்டாவது தாக்குதலைக் கேட்ட பொக்கிஷங்களின் தலைவனான, யக்ஷர்கள் மன்னன், கோபத்தால் நிறைந்து, “(குதிரைகளைப்) பூட்டுங்கள்” என்றான். அதன்பேரில், கரு மேக வண்ணத்தில் மலைச்சிகரம் போல உயரமாக இருந்த தேரில் தங்க ஆபரணங்கள் பூண்ட குதிரைகள் பூட்டப்பட்டன. தேரில் பூட்டப்பட்ட அனைத்து நற்குணங்களும், பத்து மங்களகரமான சுழிகளும் கொண்ட அந்தச் சக்திமிக்க, பலமிக்க அற்புதமான குதிரைகள், பலதரப்பட்ட ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுக் காண்பதற்கு அருமையாக இருந்தன. காற்றைப் போல வேகமாகச் செல்ல விரும்பிய அவை வெற்றித்தருணத்தில் கனைக்கும் கனைப்பொலியை, ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டு அப்போது கனைத்தன.
அந்தத் தெய்வீகமான பிரகாசமிக்க யக்ஷர்கள் மன்னன் {குபேரன்}, தேவர்களாலும், கந்தர்வர்களாலும் துதிபாடப்பட்டுக் கிளம்பினான். கண்கள் சிவந்து, தங்க நிறத்தில், பெரும் உடல் படைத்த, பெரும் பலமிக்க யக்ஷர்களின் முதன்மையான ஆயிரம் பேர் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, வாளைச் சுழற்றிக் கொண்டு, அந்த உயர் ஆன்ம பொக்கிஷத் தலைவனை {குபேரனைத்} தொடர்ந்து சென்றனர். வானத்தின் ஊடே பறந்து வந்த அக்குதிரைகள், தங்கள் வேகத்தால் வானத்தை இழுப்பதைப் போல ஓடி விரைவாகக் கந்தமாதனத்தை அடைந்தன. செல்வத்தின் தலைவனால் {குபேரனால்} பராமரிக்கப்படும் அந்தப் பெரும் கூட்டத்தையும், யக்ஷப்படைகளால் சூழப்பட்ட அருள் நிறைந்த உயர் ஆன்ம குபேரனையும் கண்ட பாண்டவர்களுக்கு மயிர் சிலிர்த்தது.
விற்களும், வாள்களும் தாங்கிக் கொண்டு நின்ற பெரும்பலம்வாய்ந்த ரதவீரர்களான பாண்டுவின் மகன்களைக் {பாண்டவர்களைக்} கண்ட குபேரன் மகிழ்ந்தான். தேவர்களின் காரியத்தை மனதில் கொண்ட அவன் இதயத்தால் திருப்தியடைந்தான். பெரும் வேகத்தைக் கொடையாகக் கொண்ட யக்ஷர்கள் பறவைகளைப் போல அந்த மலைச்சிகரத்தில் ஏறி, கருவூலங்களின் தலைவனைத் {குபேரனைத்} தலைமையாகக் கொண்டு அவர்கள் {பாண்டவர்கள்} முன்பாக நின்றனர். பிறகு, ஓ! பாரதா {ஜனமேஜயா}, அவன் {குபேரன்} பாண்டவர்களிடம் திருப்தியடைந்து நிற்பதைக் கண்ட யக்ஷர்களும், கந்தர்வர்களும் கலக்கமில்லாமல் அங்கே நின்றனர். பிறகு தாங்களே ஊடுருவி வந்ததாகக் கருதிய அந்த உயர் ஆன்ம ரத வீரர்களான பாண்டவர்கள், செல்வங்களைத் தரும் அத்தலைவனை {குபேரனை} வணங்கி, குவிந்த கரங்களுடன் கருவூலங்களின் தலைவனைச் {குபேரனைச்} சூழ்ந்து நின்றனர்.
பல வண்ணங்கள் பூசப்பட்டு விஸ்வகர்மாவால் கட்டப்பட்ட அழகான புஷ்பகத்தில் {புஷ்பக விமானத்தில்}, ஓர் அற்புதமான இருக்கையில் பொக்கிஷங்களின் தலைவன் {குபேரன்} அமர்ந்தான். பெரும் உடல் படைத்தவர்கள் சிலரும், முளை {அல்லது தாழ்ப்பாள்} போன்ற காதுகளைக் கொண்ட சிலருமான ஆயிரக்கணக்கான யக்ஷர்களும், ராட்சசர்களும், நூற்றுக்கணக்கான கந்தர்வர்களும், அப்சரசுக் கூட்டங்களுங்களும் அமர்ந்திருந்த அவன் {குபேரனின்} முன்னால், நூறு வேள்விகளைச் செய்தவனைச் சுற்றி அமரும் தேவர்களைப் போல அமர்ந்தனர். தலையில் அழகான தங்க மாலை அணிந்துகொண்டு, கரங்களில் சுருக்குக் கயிற்றையும், வாளையும், வில்லையும் கொண்டிருந்த செல்வத் தலைவனைக் {குபேரனைக்} ஏறிட்டுப் பார்த்தபடி பீமன் நின்றான். ராட்சசர்களால் பலத்த காயமடைந்திருந்த பீமசேனன் எந்தக் கவலையும் அடையாமல், குபேரனின் வருகையால் பயத்தையும் அடையாமல் இருந்தான்.
மனிதர்களின் தோள்களில் சவாரி செய்யும் அவன் {குபேரன்}, கூரிய கணைகளுடன் போரிடும் விருப்பத்துடன் நின்று கொண்டிருக்கும் பீமனைக் கண்டு தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, அனைத்து உயிர்களும், நீ அவைகளுக்கான நன்மையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாய் என்று அறிந்திருக்கின்றன. ஆகையால், நீ இந்த மலைச்சிகரத்தில் உனது தம்பிகளுடன் பயமற்ற வசிப்பாயாக. ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, நீ பீமனிடம் கோபம் கொள்ளாதே. இந்த யக்ஷர்களும், ராட்சசர்களும் விதியால் ஏற்கனவே கொல்லப்பட்டனர். உன் தம்பி அதற்கு ஒரு கருவியாக இருந்திருக்கிறான். செய்யப்பட்ட இந்தக் கெட்ட செயலுக்காக வெட்கப்பட வேண்டியது அவசியமில்லை. ராட்சசர்களின் இந்த அழிவு, தேவர்களால் முன்பே கணிக்கப்பட்டதுதான். பீமசேனன் மீதான கோபத்தை நான் ஊக்குவிக்கமாட்டேன். மாறாக, ஓ பாரதக் குலத்தின் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, நான் அவனிடம் {பீமனிடம்} திருப்தியாக இருக்கிறேன். நான் இங்கு வருவதற்கு முன்பே, பீமனின் இச்செயலால் திருப்தியடைந்தேன்” என்றான் {குபேரன் யுதிஷ்டிரனிடம்}.
வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், “மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} இப்படிப் பேசியவன் {குபேரன்}, பீமனிடம், “ஓ! குழந்தாய், ஓ குருக்களில் சிறந்தவனே, நான் இதை மனதில் வைக்கவில்லை. ஓ! பீமா, கிருஷ்ணையைத் {திரௌபதியைத்} திருப்தி செய்வதற்காக, தேவர்களையும், என்னையும் அவமதிக்கும் இம்முரட்டுச் செயலைச் செய்தாய். உனது கரங்களின் பலத்தை நம்பி, யக்ஷர்களையும், ராட்சசர்களையும் அழித்த உன்னிடம் நான் மிகவும் திருப்தி கொண்டுள்ளேன். ஓ! விருகோதரா {பீமா}, இன்று நான் ஒரு பயங்கர சாபத்தில் இருந்து விடுபட்டுள்ளேன். ஒரு குற்றத்திற்காகப் பெரும் முனிவரான அகஸ்தியர், கோபத்தால் என்னைச் சபித்தார். (உனது) இந்தச் செயலின் மூலம் நீ என்னை விடுவித்தாய். ஓ! பாண்டுவின் மகனே {பீமா}, நான் அடைந்த இழிவு முன்பே விதிக்கப்பட்டதே. எனவே, எவ்வழியிலும், ஓ! பாண்டவா {பீமா}, எக்குற்றமும் உன்னைச் சாராது” என்றான் {குபேரன்}.
யுதிஷ்டிரன் {குபேரனிடம்}, “ஓ! தெய்வீகமானவனே, உயர் ஆன்ம அகஸ்தியரால், நீ ஏன் சபிக்கப்பட்டாய்? ஓ! தேவனே, இந்தச் சாபம் ஏற்பட்ட விதத்தைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். சிறந்த புத்தியுள்ளவரான அகஸ்தியரின் கோபத்தால், அச்சமயத்திலேயே உன்னைத் தொடர்ந்து வந்த சேனைகளுடனும், பரிவாரங்களுடனும் நீ எரிக்கப்படாமல் இருந்தாய் என்பதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கிறது” என்றான்.
அதன்பேரில் கருவூலங்களின் தலைவன் {குபேரன்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு காலத்தில் குசஸ்தலி என்ற இடத்தில் தேவர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. மூன்று மகாபத்மங்கள் எண்ணிக்கையிலான கடும் முகம் கொண்ட, பலதரப்பட்ட ஆயுதங்கள் தாங்கிய யக்ஷர்கள் சூழ நான் அவ்விடத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். அப்படிச் செல்லும் வழியில், பல வகையான பறவைகளும், பூத்துக்குலுங்கும் மரங்களும் நிறைந்த யமுனைக் கரையில் கடும் தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முனிவர்களில் முதன்மையான அகஸ்தியரைக் கண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நெருப்பு போன்ற பிரகாசத்துடனும், உயர்த்திப் பிடித்த கரங்களுடன் அமர்ந்து, சூரியனை நோக்கிக் கொண்டிருந்த அந்தச் சக்தியின் குவியலைக் {அகஸ்தியரைக்} கண்ட உடனேயே, எனது நண்பனும், ராட்சசர்களின் அருள்நிறைந்த தலைவனுமான மணிமான், முட்டாள்தனத்தாலும், செருக்காலும், அறியாமையாலும், அந்தப் பெரும் முனிவரின் தலையில் எச்சிலை உமிழ்ந்தான்.
அதன் காரணமாக, அனைத்து திக்குகளையும் எரித்துவிடக்கூடிய கோபம் கொண்ட அவர் {அகஸ்தியர்} என்னிடம், “ஓ! கருவூலங்களின் தலைவா {குபேரா}, உனது நண்பன், உனது முன்னிலையில் என்னை இழிவாக அவமதித்ததால், உனது படைகளுடன் கூடிய அவன், ஒரு மனிதனின் கையால் அழிவைச் சந்திப்பான். ஓ! தீய மனம் கொண்டவனே, நீ அந்த மனிதனைக் காண்பதால், வீழ்ந்த உனது படைவீரர்களால் ஏற்படும் துன்பமான அந்தப் பாவத்திலிருந்து விடுபடுவாய். ஆனால் அவர்கள் {படைவீரர்கள்} உனது கட்டளைகளைப் பின்பற்றினால் (அந்தப் படைவீரர்களின்) பலமிக்க மகன்களுக்கு இந்தக் கடும் சாபம் உண்டாகாது. இந்தச் சாபத்தையே முன்பொரு காலத்தில் நான் முனிவர்களில் முதன்மையானவரிடம் {அகஸ்தியரிடம்} பெற்றேன். ஓ! பலம் வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, இப்போது நான் உனது தம்பியான பீமனால் விடுவிக்கப்பட்டேன்” என்றான் {குபேரன்}.
குபேரன் மறைந்தான்! – வனபர்வம் பகுதி 161-யுதிஷ்டிரனுக்குச் சில உபதேசங்களைச் செய்த குபேரன், அர்ஜுனனின் நலத்தைச் சொல்லி அங்கிருந்து மறைவது.
பொக்கிஷத்தலைவன் {குபேரன்} சொன்னான், “ஓ! யுதிஷ்டிரா, பொறுமை, திறன் (சரியான) நேரம், இடம் மற்றும் பராக்கிரமம் ஆகிய ஐந்தும் காரியங்களில் வெற்றியை நோக்கி மனிதனை இட்டுச் செல்கின்றன. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, கிருத யுகத்தில், மனிதர்கள் பொறுமையாகவும், தங்களுக்கு உரிய பணிகளில் திறன்வாய்ந்தும் தங்கள்கள் பராக்கிரமத்தைக் காட்டுவது எவ்வாறு என்பதை அறிந்துமிருந்தனர். ஓ!க்ஷத்திரியர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, பொறுமையோடிருந்து தனக்கான இடம், மற்றும் நேரத்தை புரிந்து கொண்டு, மனித தர்மங்களை நன்கு அறிந்த ஒரு க்ஷத்திரியன், நீண்ட காலம் இந்த உலகத்தைத் தனியாக ஆளுகிறான். ஓ! வீரா, இதன் படி நடந்து கொள்பவன் இந்த உலகத்தில் புகழையும், அடுத்த உலகத்தில் அற்புத நிலையையும் அடைகிறான்.
தனது பராக்கிரமத்தை உரிய இடத்தில் காலத்தில் வெளிப்படுத்திய வசுக்களோடு கூடிய சக்ரன் {இந்திரன்}, சொர்க்கத்தின் ஆளுமையை அடைந்தான். கோபத்திலிருப்பவனுக்குத் தனது வீழ்ச்சி தெரியாது. இயற்கையிலேயே தீயவனும், தீய எண்ணம் கொண்டவனும், இடம் நேரம் அறியாது செயல் புரிபவனும், இவ்வுலகம் மற்றும் அடுத்த உலகம் ஆகிய இரண்டிலும் அழிவைச் சந்திக்கிறார்கள். அப்படிப்பட்ட முட்டாளின் முயற்சிகள் அனைத்தும் கனியற்றதாகும். விரும்பத்தகுந்த நேரம் மற்றும் செயல்களை அறியாதவன் இவ்வுலகம் மற்றும் அடுத்த உலகம் ஆகிய இரண்டிலும் அழிவைச் சந்திக்கிறான். தீய நோக்கம் கொண்ட ஏமாற்றுகர மனிதர்கள் அனைத்து வகையிலும் நிபுணத்துவம் பெற வேண்டும் என்று எண்ணி முரட்டுச் செயல்களைச் செய்வார்கள்.
ஓ! மனிதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, பீமசேனன் அச்சமற்றவனாகவும், கடமைகளை அறியாதவனாகவும், செருக்குடையவனாகவும், குழந்தையின் மனம் கொண்டவனாகவும், பொறுமையற்றவனாகவும் இருக்கிறான். ஆகையால் அவனைக் குறித்து ஆய்வு செய். மீண்டும் பக்திமானான முனிவர் ஆர்ஷ்டிஷேணரின் ஆசிரமத்திற்கு இந்தத் தேய்பிறைகாலத்தில் திரும்பி பயமோ துயரமோ அற்று இரு. ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, என்னால் நியமிக்கப்பட்டு அழகையிலும் {அழகாபுரியில்} வசிக்கும் அனைத்து கந்தர்வர்களும் மற்றும் இந்த மலையில் வசிப்பவர்களும், ஓ! பலம்வாய்ந்த கரம் கொண்டவனே, உன்னையும், இந்த அந்தணர்களில் சிறந்தவர்களையும் காப்பார்கள். மேலும், ஓ! மன்னா, ஓ! அறம்சார்ந்த மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, தனது முரட்டுத் தனத்தால் விருகோதரன் இங்கு வந்தான் என்பதை அறிந்தாய், ஆகையால் அவனை ஆய்வு செய். ஓ! ஏகாதிபதி, இது முதல், இந்தக் கானகத்தில வசிக்கும் அனைத்து உயிர்களும் உன்னை வந்து சந்தித்து, உனக்காகக் காத்திருந்து, எப்போதும் உங்கள் அனைவரையும் காப்பாற்றும்.
மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, எனது பணியாட்கள் எப்போதும் உனக்குப் பலதரப்பட்ட இறைச்சிகளையும், சுவைமிக்கப் பானங்களையும் கொண்டு வந்து கொடுப்பார்கள். ஓ! மகனே, யுதிஷ்டிரா, தெய்வீகக் கூடுகையால் பெறப்பட்ட அர்ஜுனன் மகேந்திரனுக்கும் {இந்திரனுக்கும்}, விருகோதரன் வாயுத்தேவனுக்கும், நீ தர்மனும், பலம் கொண்ட இரட்டையர்கள் அசுவினிகளுக்கும் எப்படிப் பாதுகாக்கப்படத் தகுந்தவர்களோ, அதே போலவே எனக்கும் நீங்கள் அனைவரும் ஆவீர்கள். பிறப்பால் பீமசேனனுக்கு அடுத்தவனான, பொருள் அறிவியலும், அனைத்து மனித விதிகளையும் அறிந்தவனுமான பல்குனன் {அர்ஜுனன்} சொர்க்கத்தில் நன்றாக இருக்கிறான். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, சொர்க்கத்திற்கு இட்டுச்செல்லக்கூடியவை என்று உலகத்தில் அறியப்பட்ட அனைத்து நிறைகுணங்களும், தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} அவனது பிறப்பில் இருந்து நிறுவப்பட்டிருக்கின்றன.
தன்னடக்கம், தானம், பலம், புத்திக்கூர்மை, அடக்கம், தாங்கும் திறன், அற்புதமான சக்தி ஆகிய அனைத்தும் அந்த அற்புத ஆன்மாகக் கொண்ட மகத்தானவனிடம் {அர்ஜுனனிடம்} நிறுவப்பட்டுள்ளன. ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, ஆவியின் வறுமையால் {Poverty of Spirit}, ஜிஷ்ணு {அர்ஜுனன்} எந்த வெட்கங்கெட்ட செயலையும் செய்ததில்லை. பார்த்தன் {அர்ஜுனன்} ஒரு பொய் சொன்னான் என்று இந்த உலகத்தில் யாரும் சொன்னதில்லை. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தேவர்களாலும், பித்ருக்களாலும், கந்தர்வர்களாலும் மதிக்கப்பட்டுச் சக்ரனின் வசிப்பிடத்தில் ஆயுத அறிவியலைப் பயின்று கொண்டிருக்கிறான் குருக்களின் புகழைத் தூண்டுபவன் {அர்ஜுனன்}.
ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, பூலோகத்தின் அனைத்து ஆட்சியாளர்களையும் நீதியுடன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, உனது தகப்பனின் பாட்டனான சந்தனுவையும் தனது செயலைக் குறித்துத் திருப்தி கொள்ள வைத்தான் தனது குலத்தில் முதன்மையானவனான காண்டீவத்தைத் தாங்குபவன் {அர்ஜுனன்}. ஓ! மன்னா, யமுனையின் கரையில் தேவர்களையும், பித்ருக்களையும், அந்தணர்களையும் வழிபட்டு, ஏழு பெரும் குதிரை வேள்விகளைச் செய்து சொர்க்கத்தை அடைந்து, இந்திரனின் உலகத்தில் வசித்து வரும் உனது முப்பாட்டனும் கடும் தவசியுமான சக்கரவர்த்திச் சந்தனு, உனது நலம் குறித்து விசாரித்தான்” என்றான் {குபேரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், “செல்வத்தைப் பகிர்ந்தளிப்பவனின் {குபேரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்கள் அவனிடம் மிகவும் திருப்தி கொண்டனர். பிறகு தனது தடி, கதாயுதம், வாள், வில் ஆகியவற்றை இறக்கிய பாரதர்களில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்} குபேரனை வணங்கினான். பாதுகாப்பை அளிப்பவனான கருவூலத்தலைவன், நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் அவனைக் {யுதிஷ்டிரனைக்} கண்டு, “எதிரிகளின் கர்வத்தை அழிப்பவனாகவும், நண்பர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனாகவும் இரு. எதிரிகளை ஒடுக்குபவனே, எங்கள் அழகிய பகுதியில் வாழு. உனது விருப்பங்களுக்கு யக்ஷர்கள் குறுக்கே நிற்க மாட்டார்கள். குடகேசன் {அர்ஜுனன்}, ஆயுதங்களில் நிபுணத்துவம் அடைந்த பிறகு விரைவில் திரும்பி வருவான். மகவத்தால் {இந்திரனால்} விடை கொடுத்து அனுப்பப்படும் தனஞ்சயன் உன்னிடம் வந்து சேர்வான்” என்றான் {குபேரன்}.
அற்புதச் செயல்கள் செய்யும் யுதிஷ்டிரனிடம் இப்படிச் சொன்ன குஹ்யர்களின் தலைவன் {குபேரன்}, அந்த மலைகளில் சிறந்த மலையில் மறைந்தான். ஆயிரம் ஆயிரம் யக்ஷர்களும், ராட்சசர்கள் பஞ்சணைகள் கொண்ட, பல ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அவனைத் தொடர்ந்து சென்றனர். குதிரைகள் குபேரனின் வசிப்பிடத்தை நோக்கி முன்னேறிய போது, பறவைகள் காற்றில் பறக்கும் ஒலி எழும்பியது. கருவூலங்களின் தலைவனது {குபேரனின்} சாரதிகள் வானத்தை இழுப்பது போல, காற்றில் பறந்து சென்றனர்.
பிறகு செல்வத்தலைவனின் {குபேரனின்} உத்தரவின் பேரில், ராட்சசர்களின் சடலங்கள் அந்த மலைச்சிகரத்தில் இருந்த அப்புறப்படுத்தப்பட்டன. புத்திகூர்மை கொண்ட அகஸ்தியர் சாபத்தின் காலத்தை நிர்ணயித்தது போல, மோதலில் கொல்லப்பட்ட ராட்சசர்கள் சாபத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். பாண்டவர்கள் ராட்சசர்களால் மதிக்கப்பட்டுப் பல இரவுகளை அந்த வசிப்பிடத்தில இனிமையாகக் கழித்தனர்.
தௌமியர் விளக்கம்! – வனபர்வம் பகுதி 162-யுதிஷ்டிரனுக்குத் தௌமியர் மந்தரம், மேரு மலைகளைக் குறிப்பிட்டுச் சொன்னதும், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றின் இயக்கத்தைக் குறிப்பிட்டுச் சொன்னதும்
வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {ஜனமேஜயா}, சூரியோதயத்தின் போது, தனது தினசரி வழிபாடுகளை முடித்த தௌமியர், ஆரிஷ்டஷேணருடன் இருந்த பாண்டவர்களிடம் வந்தார். ஆரிஷ்டஷேணரின் பாதங்களை வணங்கிய தௌமியர், கூப்பிய கரங்களுடன் அனைத்து அந்தணர்களையும் வணங்கினார். பிறகு யுதிஷ்டிரனின் வலது கரத்தைப் பற்றிய தௌமியர் கிழக்கை நோக்கிக் கொண்டே, “ஓ! பலம்வாய்ந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இந்த மலைகளின் மன்னன் மந்தரம் பரந்து, பூமியை நிரப்பிக் கடல் வரை விரிந்திருக்கிறது. ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, வனங்களும், கானகங்களும், மலைகளும் நிறைந்த இந்தப் பகுதியை இந்திரனும், வைஸ்ரவணனும் {குபேரனும்} ஆட்சி செய்கிறார்கள். ஓ! குழந்தாய், அனைத்துக் கடமைகளையும் அறிந்த புத்திகூர்மையுள்ள முனிவர்கள், இதுவே இந்திரன் மற்றும் மன்னன் வைஸ்ரவணனின் {குபரேனின்} வசிப்பிடம் என்று சொல்கின்றனர். இருபிறப்பாளர்களும், கடமைகளை அறிந்த முனிவர்களும், சித்தர்களும், சத்யஸ்களும், தேவர்களும், இங்கிருந்தபடியே, சூரியன் உதிக்கும்போதே அவனைத் துதிக்கின்றனர்.
உயிருடன் இருக்கும் அனைத்து உயிரினங்களின் தலைவனும், அனைத்துக் கடமைகளையும் அறிந்தவனுமான மன்னன் யமன், ஆவி பிரிந்து வருபவர்கள் அடையத்தக்க இந்தத் தென்திசையை ஆள்கிறான். புனிதமானதும், காண்பதற்கு அற்புதம் வாய்ந்ததும், முதன்மையான செழிப்பு கொண்டதுமான இந்தச் சன்யமனம் {Sanyamana [சம்யமிநீ]} ஆவி பிரிந்தவர்கள் தலைவனின் {யமனின்} வசிப்பிடமாக இருக்கிறது. புத்திகூர்மையுடையவர்கள் அந்த மலைகளின் ஏகாதிபதியை அஸ்தம் (என்ற பெயரில்) என்று அழைக்கிறார்கள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இங்கு வந்த சூரியன், எப்போதும் சத்தியத்தில் நிலைத்திருக்கிறான். இந்த மலைகளின் மன்னன் {அஸ்தகிரி} மேலும், பரந்த ஆழத்திலும் நிலைத்திருக்கும் மன்னன் வருணன், அனைத்து உயிர்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறான். ஓ! உயர்ந்த நற்பேறு பெற்றவனே, வடக்குப் பகுதிகளைப் பிரகாசிக்க வைத்துக் கொண்டு, பலம்வாய்ந்த மகாமேரு கிடக்கிறது. பிரம்மத்தை அறிந்தவர்களுக்குப் புகலிடமாக இருக்கும் அந்த மங்களகரமான மலையில் {மகாமேருவில்}, பிரம்மனின் சபை இருக்கிறது. அங்குதான் அசையும் மற்றும் அசையாத அனைத்தையும் படைத்தவனும் அனைத்து உயிர்களின் ஆன்மாவுமான பிரஜாபதி இருக்கிறான். பிரம்மனின் மனதில் பிறந்த ஏழு மகன்களின் {பிரம்மனின் மானசபுத்திரர்கள்} வசிப்பிடமாக மங்களகரமான ஆரோக்கியமான மகாமேரு இருக்கிறது. அந்த எழுவரில் ஏழாமவன் தக்ஷன் ஆவான். ஓ! குழந்தாய், இங்கேதான் வசிஷ்டரைத் தலைமையாகக் கொண்ட ஏழு தெய்வீக முனிவர்களும் உதித்து அஸ்தமிக்கிறார்கள்.
பெருந்தகப்பன் (பிரம்மா), தேவர்களுடன் சுயஞானத்துடன் அமரும் மேருவின் அற்புதமான, பிரகாசமான சிகரத்தைப் பார். பிரம்மனின் வசிப்பிடத்துக்கு அடுத்ததாக, உயிர்களின் படைப்புக்குத் துவக்கமும், உண்மையான தலைமைக் காரணமுமான, பிறப்பு இறப்பும் அறியா முதன்மைத் தலைவனான நாராயணனின் இடம் இருக்கிறது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த மங்களகரமான இடத்தில் தேவர்களும் காண முடியாத அனைத்து சக்திகளும் இருக்கின்றன. சுயப்பிரகாசத்துடன் இருக்கும் உயர் ஆன்ம விஷ்ணுவின் பகுதி, சூரியன் அல்லது நெருப்பின் பிரகாசத்தை விட அதிகமாகப் பிரகாசிப்பதால் தேவர்களாலோ தானவர்களாலோ அதைக் காண இயலாது. நாராயணனுடைய அந்த இடம் மேருவுக்குக் கிழக்கே பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஓ! குழந்தாய், அனைத்து உயிர்களுக்கும் தலைவனும், சுயம்புவும், அண்டத்தின் முதன்மைக்காரணமானவனும், அனைத்து உயிர்களிலும் இருப்பவனும், அங்கே அற்புதமான அருளுடன் இருக்கிறான். பிரம்ம முனிவர்களே {பிரம்மரிஷிகளே} அங்கே செல்ல முடியாது என்கிற போது பெருமுனிவர்களைக் {மகாரிஷிகளைக்} குறித்து என்ன சொல்ல?
ஓ! குருக்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, யதிக்கள் {மனதால் தியானிப்பவர்கள்} மட்டுமே அங்கே செல்ல முடியும். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, (அவ்விடத்தில்) எந்த ஜோதிகளும் பிரகாசிப்பதில்லை. அங்கே அந்தப் புத்திக்கு எட்டாத ஆன்மா கொண்டவன் {விஷ்ணு} மட்டுமே ஆழ்நிலையில் ஒளிர்கிறான். அங்கே மரியாதையுடனும், கடும் தவத்துடனும், பக்திப்பயிற்சிகளின் அறத்தால் யதிக்கள் நாராயணனான ஹரியை அடைகின்றனர். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அங்கே சென்று சுயம்புவும், தேவர்களுக்கும், உயர் ஆன்மா கொண்டவர்களுக்கும், யோக வெற்றி பெற்றவர்களுக்கும், கர்வம் மற்றும் அறியாமை அகற்றியவர்களுக்கும் நித்தியமான தேவனுமான அண்ட ஆன்மாவை {நாராயணனை} அடைந்தவர்கள், மீண்டும் உலகத்துக்குத் திரும்புவதில்லை. ஓ! உயர்ந்த நற்பேறு பெற்ற யுதிஷ்டிரா, இந்தப் பகுதி ஆதியற்றது, அழிவற்றது, முடிவுமற்றது. இது கடவுளின் சாரமுடையது.
ஓ! குருக்களின் மகனே {யுதிஷ்டிரா}, சூரியனும் சந்திரனும் ஒவ்வொரு நாளும் எதிர் திசையில் மேருவைச் சுற்றி வருகின்றன. ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, ஓ! பலம்பொருந்திய ஏகாதிபதியே, அனைத்து ஒளிக் கோள்களும் இதே போல இந்த மலைகளின் மன்னனை {மேருவைச்} சுற்றி வருகின்றன. இப்படியே இருளை அகற்றும் வழிபடத்தகுந்த சூரியன், மற்றக் கோள்களை இழுத்துக் கொண்டு இதை (மலையை) வலம் வருகிறான். பிறகு நிலைத்து, மாலை வேளையைக் கடந்த நாளை உண்டாக்கும் சூரியன், வடதிசையை நோக்கிப் பயணிக்கிறான். பிறகு மீண்டும் மேருவை நெருங்கும் தெய்வீகமான சூரியன் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்ய விரும்பி கிழக்கு நோக்கி பயணிக்கிறான். இதே போலத் தெய்வீகமான சந்திரனும் மற்ற நட்சத்திரங்களுடன் கூடி இந்த மலையை வலம் வருகிறான். மாதத்தைப் பல பகுதிகளாகப் பிரிக்கும் அவனது {சந்திரனின்} வருகையால் பர்வ சந்திகள் பிரிகின்றன. இப்படியே தடையில்லாமல் பெரும் மேருவை வலம் வந்து அனைத்து உயிரினங்களுக்கும் உணவளித்த பிறகு, சந்திரன் மீண்டும் மந்தரத்திற்குச் செல்கிறான். இதே வழியில், இருளை அழிப்பவனான தெய்வீக சூரியன், தடங்கலற்ற பாதையில் நகர்ந்து, அண்டத்தின் அசைவுகளுக்குக் காரணமாகிறான். பனியை உண்டாக்க விரும்பும்போது, அவன் தெற்கே சென்று, அனைத்து உயிரினங்களுக்கும் குளிர்காலத்தைக் கொடுக்கிறான்.
பிறகு சூரியன், தெற்கில் இருந்து திரும்பி, தனது கதிர்களைக் கொண்டு அசையும் மற்றும் அசையாத அனைத்து உயிர்களிடம் இருந்தும் சக்தியை உறிஞ்சுகிறான். அதன் காரணமாக, மனிதர்களுக்கு வியர்வை, சோர்வு, மயக்கம் மற்றும் களைப்பு ஆகியவை ஏற்படுகின்றன. அனைத்து உயிர்களும் உறக்க {மயக்க/ களைப்பு} உணர்ச்சிக்கு ஆட்படுகின்றன. பிறகு, அறியப்படாத பகுதிகளில் இருந்து மீண்டு வரும் அந்தத் தெய்வீகமாகப் பிரகாசிப்பவன் {சூரியன்} மழையைப் பொழிய வைத்து, உயிரினங்களை மீள வைக்கிறான். மழை, காற்று, வெப்பம், ஆகிய வசதிகளால் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைப் பேணிப் பாதுகாக்கும் பலம்வாய்ந்த சூரியன் மீண்டும் தனது பழைய வழியைக் கைக்கொள்கிறான். ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, இப்படி உலவும் சூரியன் காலச்சக்கரத்தைத் தங்குதடையின்றிச் சுழற்றி, படைத்த பொருட்களிடம் ஆதிக்கம் செலுத்துகிறான். ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா} அவனின் {சூரியனின்} வழி தடையற்றது; அவன் {சூரியன்} ஒரு போதும் ஓய்வதில்லை. அனைத்து உயிர்களின் சக்தியை உறிஞ்சி மீண்டும் அவற்றுக்குத் திரும்ப அளிக்கிறான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நேரத்தை பகல், இரவு, காலம் {விநாடி}, கஷ்த்தம் {நாழிகை} ஆகியவாறு பிரிக்கும் அந்தத் தலைவனான சூரியன், அனைத்து உயிர்களின் உயிரையும், அசைவையும் நிர்ணயிக்கிறான்.
வந்தான் அர்ஜுனன்! – வனபர்வம் பகுதி 163-அர்ஜுனனின் வருகைக்காகப் பாண்டவர்கள் காத்திருந்தது; அனைத்து ஆயுதங்களையும் இந்திரனிடம் பெற்ற அர்ஜுனன் கந்தமாதனம் திரும்பியது…
வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} தொடர்ந்தார், “மலைகளில் அற்புதமான மலையில் {மேரு மலையில்} வசித்துக் கொண்டிருந்த அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் அற்புதமான நோன்புகளை நோற்றுக் கொண்டு, அர்ஜுனனைக் காண்பதற்கு ஆவலாக இருந்தனர். கந்தர்வர்களும், பெரும் முனிவர்களும், பெரும் பராக்கிரமமும், தூய்மையான விருப்பங்களும், உண்மையும், பொறுத்துக் கொள்ளும் ஆற்றலும் உடையவர்களில் முதன்மையான அந்தச் சக்தி மிகுந்தவர்களை {பாண்டவர்களை} மகிழ்ச்சிகரமாகக் காண வந்தனர். பூத்துக்குலுங்கும் மரங்கள் நிறைந்த அற்புதமான மலையை அடைந்த அந்தப் பெரும் பலம் வாய்ந்த ரதசாரதிகள், அந்தத் தெய்வீகப் பகுதியை அடைந்ததால் மருதர்களைப் போல மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தனர். மலர்கள் நிறைந்தும், மயில்கள் மற்றும் நாரைகளின் ஒலிகளும் நிறைந்த அந்த மலையின் சரிவுகளிலும், சிகரங்களிலும் பெரும் உற்சாகத்துடன் அவர்கள் {பாண்டவர்களும் சகாக்களும்} வாழ்ந்தனர்.
அந்த அழகான மலையில் தாமரைகள் நிறைந்த தடாகங்களையும், மரங்களடர்ந்த அத்தடாகங்களின் இருள் சூழ்ந்திருக்கும் கரைகளையும், அதில் கரண்டவங்களையும் அன்ன பறவைகளையும் அவர்கள் கண்டனர். பலதரப்பட்ட மலர்களும் ரத்தினங்களும் நிறைந்த அந்த மலர்ந்த விளையாட்டிடம், செல்வத்தை அளிக்கும் மன்னனை {குபேரனை} ஆக்கிரமிக்கும் வண்ணம் இருந்தது. எப்போதும் (அங்கேயே) உலவிக்கொண்டிருந்த, தவசிகளின் முதன்மையான (பாண்டவர்கள்), பல நிறங்களில் இருந்த நறுமணம் பொருந்திய பெரிய மரங்களும், மேகக்கூட்டங்களும் நிறைந்திருக்கும் அம்மலையின் சிகரத்தைக் காணும் சக்தியற்றிருந்தனர்.
ஓ! பெரும் வீரா {ஜனமேஜயா}, அந்த மலையின் சுய ஒளியாலும், வருடாந்தரச் செடிகளின் பிரகாசத்தாலும் அங்கே இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசம் தெரியாதிருந்தது. அந்த மலையிலேயே தங்கியிருந்து, ஒப்பற்ற சக்தி கொண்ட சூரியனின் பாதுகாப்பில் இருக்கும் அசையும் மற்றும் அசையாத பொருட்களுக்கு மத்தியில் அந்த மனிதர்களில் முதன்மையான வீரர்கள் {பாண்டவர்கள்}, சூரியனின் உதயத்தையும் அஸ்தமனத்தையும் கண்டனர். சூரியனின் உதயத்தையும் அஸ்தமனத்தையும் கண்டு, அந்த மலை மற்றும் திசைகளின் உதயத்தையும் அஸ்தமனத்தையும் கண்டு, இருளை விலக்குபவனின் {சூரியனின்} கதிர்களால் சுடர்விட்டுக்கொண்டிருக்கும் சந்திகளைக் கண்டும், அந்த வீரர்கள், உண்மையில் உறுதியான பலம்வாய்ந்த ரதசாரதியின் {அர்ஜுனனின்} வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். தினசரி சடங்குகளையும், வேதங்களையும் உரைத்து, அறச்சடங்குகளை முதன்மையாகச் செய்து, புனிதமான நோன்புகள் பயின்று உண்மைக்கு {சத்தியத்துக்கு} உண்மையாக அவர்கள் {பாண்டவர்கள்} இருந்தனர்.
“ஆயுதங்களில் தேர்ச்சி பெற்று அர்ஜுனன் திரும்புவதை விரைவாகக் காணும் நாம் மகிழ்ச்சியை உணர்வோமாக” என்று சொன்ன பார்த்தர்கள் {பாண்டவர்கள்} யோகப் பயிற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அந்த மலையில் இருக்கும் அழகான வனங்களைக் கண்டும், அவர்கள் கிரீடியையே {அர்ஜுனனையே} நினைத்துக் கொண்டிருந்ததால் அனைத்து பகலும் இரவும் அவர்களுக்கு ஒரு வருடத்தைப் போலத் தோன்றியது. தௌமியரின் அனுமதியுடன், உயர் ஆன்ம ஜிஷ்ணு {அர்ஜுனன்} ஜடா முடி தரித்து (வனத்திலிருந்து) சென்ற அந்த நொடியில் இருந்து மகிழ்ச்சி அவர்களை விட்டுச் சென்றது. ஆழ்ந்த நினைவுகளில் மூழ்கி இருக்கும் அவர்கள் எப்படி மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள்? தங்கள் அண்ணனான யுதிஷ்டிரனின் கட்டளையின் பேரில், மதயானை போன்ற நடை கொண்ட ஜிஷ்ணு {அர்ஜுனன்} காம்யக வனத்தில் அவர்களைப் பிரிந்ததில் இருந்து அவர்கள் அனைவரும் துயரத்திலேயே மூழ்கியிருந்தனர்.
ஓ! பாரதா {ஜனமேஜயா}, இவ்வழியிலேயே, பரதனின் வழித்தோன்றல்களான அவர்கள் {பாண்டவர்கள்}, ஆயுதங்களைக் கற்கும் நோக்குடன் வாசவனின் {இந்திரனின்} வசிப்பிடம் சென்றிருக்கும், வெள்ளைக் குதிரைகள் கொண்ட அவனைக் {அர்ஜுனனைக்} குறித்து நினைத்துக் கொண்டு அந்த மலையில் ஒரு மாத காலத்தைக் கடுமையுடன் கழித்தனர். ஆயிரம் கண் கொண்டவனின் {இந்திரனின்} வசிப்பிடத்தில் ஐந்து வருடங்கள் வசித்த அர்ஜுனன், தேவர்கள் தலைவனிடம் இருந்து, அக்னி {ஆக்னேயம்}, வருண {வாருணம்}, சோம {சௌம்யம்}, வாயு {வாயவ்ய}, விஷ்ணு {வைஷ்ணவம்}, இந்திர {ஐந்திரம்}, பசுபதி {பாசுபதம்}, பிரம்ம {பிரம்மம்}, பாரமேஷ்டி {பாரமேஷ்டியம்}, பிரஜாபதி, யம, தாதா, சவிதா, துவஷ்டா, வைஸ்ரவணா ஆகிய அனைத்து தெய்வீக ஆயுதங்களையும் பெற்றுக் கொண்டு, நூறு வேள்விகள் செய்தவனை {இந்திரனை} வணங்கி வலம் வந்து அவனது {இந்திரனின்} அனுமதியைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் கந்தமாதனம் வந்தான்.
காதலிக்குப் பரிசளித்த அர்ஜுனன்! – வனபர்வம் பகுதி 164-சொர்க்கத்தில் தான் இருந்த விதத்தைச் சுருக்கமாக யுதிஷ்டிரன் முதலானோருக்கு அர்ஜுனன் கூறியது.
வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} தொடர்ந்தார், “ஒரு நாள் அந்தப் பெரும் பலம்வாய்ந்த ரதசாரதிகள் {பாண்டவர்கள்} அர்ஜுனனைக் குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்த போது, மின்னலைப் போன்ற பிரகாசத்தையுடைய குதிரைகள் பூட்டப்பட்ட மகேந்திரனின் {இந்திரனின்} தேர் திடீரென வந்ததால் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சிப் பரவசமடைந்தனர். மாதலியால் ஓட்டப்பட்ட அந்தச் சுடர்விடும் ரதம், திடீரென வானத்தைப் பிரகாசமடையச் செய்து, புகையற்ற நெருப்பின் நாக்கு போலவும், மேகங்களால் அணைக்கப்பட்டு எரிகல் போலவும் தெரிந்தது. அந்த ரதத்தில் மாலைகளும், புதிதாகச் செய்யப்பட்ட ஆபரணங்களும் பூண்டு கிரீடி {அர்ஜுனன்} அமர்ந்திருந்தான். வஜ்ரம் தாங்குபவனின் {இந்திரனின்} பராக்கிரமம் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, சுடர்விடும் அழகுடன் அம்மலையில் இறங்கினான். அந்தப் புத்திக்கூர்மை கொண்டவன் {அர்ஜுனன்}, மகுடத்துடனும் மாலைகளுடன் அம்மலையில் இறங்கி முதலில் தௌமியரின் கால்களையும், பிறகு அஜாதசத்ருவின் {யுதிஷ்டிரனின்} கால்களையும் பணிந்தான்.
பிறகு அவன் {அர்ஜுனன்} விருகோதரனின் {பீமனின்} பாதங்களையும் பணிந்தான்; இரட்டையர்கள் {நகுலனும் சகாதேவனும்} அவனை {அர்ஜுனனை} வணங்கினர். பிறகு கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} சென்று அவளை உற்சாகமூட்டிய அவன் {அர்ஜுனன்}, தனது அண்ணனின் முன்னிலையில் பணிவுடன் நின்றான். அந்த ஒப்பற்றவனை {அர்ஜுனனைச்} சந்தித்ததால் அவர்கள் {பாண்டவர்கள்} அளவற்ற மகிழ்ச்சியை அடைந்தனர். நமுச்சி என்ற அசுரனைக் கொன்றவன் {இந்திரன்}, எந்தத் தேரில் இருந்து திதியின் வாரிசுகளான {தைத்தியர்களின்} ஏழு கூட்டங்களைக் கொன்றானோ அந்த இந்திரனுடைய தேரினைக் கண்ட தளராத மனம் கொண்ட பார்த்தர்கள் {பாண்டவர்கள்}, அதனிடம் சென்று அதனை {தேரை} வலம் வந்தனர். மிகவும் திருப்தி அடைந்த அவர்கள் {பாண்டவர்கள்}, தேவர்கள் தலைவனை {இந்திரனை} வணங்குவது போல மாதலியை வணங்கினர். பிறகு அந்தக் குரு மன்னனின் மகன் {யுதிஷ்டிரன்} அவரிடம் {மாதலியிடம்}, தேவர்களின் நலனை விசாரித்தான். மாதலியும் அவர்களைப் பதிலுக்கு வாழ்த்தினான். ஒரு தந்தை தனது மகன்களுக்கு அறிவுரை கூறுவது போலப் பார்த்தர்களுக்கு {பாண்டவர்களுக்கு} அறிவுரை கூறிய அவர் {மாதலி}, அந்த ஒப்பற்ற ரதத்தில் ஏறி, தேவர்கள் தலைவனிடம் {இந்திரனிடம்} திரும்பினார்.
இப்படி மாதலி சென்றவுடன், அரசு குலத்தின் முதன்மையானவனும் எதிரிகளை அழிப்பவனுமான சக்ரனின் மகன் {அர்ஜுனன்}, தனது காதலியான, சூதசோமனின் அன்னையிடம் {திரௌபயிடம்} சென்றான். சக்ரன் {இந்திரன்} தனக்கு அளித்த சூரியனைப் போலப் பிரகாசிக்கும் ஆபரணங்களையும், அழகான சுத்தமான ரத்தினங்களையும் அவளுக்கு {திரௌபதிக்கு} அளித்தான். பிறகு குருக்களில் முதன்மையானவர்களுக்கும் {பாண்டவர்களுக்கும்}, அந்தணர்களில் சிறந்தவர்களுக்கும் மத்தியில அமர்ந்து கொண்டு, நெருப்பைப் போல, சூரியனைப் போலப் பிரகாசித்த அவன் {அர்ஜுனன்}, “இவ்வழியில், சக்ரனிடம் இருந்தும், வாயுவிடம் இருந்தும், எங்கும் நிறைந்த சிவனிடம் இருந்தும் ஆயுதங்களை அடைந்தேன். இந்திரனோடு கூடிய அனைத்து தேவர்களும், எனது நடத்தையாலும், கவனக்கூர்மையாலும் என்னிடம் திருப்தி கொண்டார்கள்” என்று நடந்தது அத்தனையும் சொல்ல ஆரம்பித்தான் {அர்ஜுனன்}.
ஏற்றுக் கொள்ளும் வகையில் களங்கமற்ற செய்கைகள் செய்யும் கிரீடி {அர்ஜுனன்}, தனது குறுகிய கால சொர்க்கவாசத்தை அவர்களுக்குச் சுருக்கமாகச் சொன்ன பிறகு, மாத்ரியின் இரண்டு மகன்களுடன் {நகுலன் மற்றும் சகாதேவனுடன்} அன்று இரவு உறங்கினான்.
காம்யகம் திரும்பு யுதிஷ்டிரா! – வனபர்வம் பகுதி 165-இந்திரன் யுதிஷ்டிரனிடம் காம்யகம் திரும்புமாறு பணித்தது
வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், “இரவு கழிந்த பிறகு, தனது சகோதரர்களுடன் கூடிய தனஞ்சயன் {அர்ஜுனன்}, நீதிமானான யுதிஷ்டிரனை வணங்கினான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்த நேரத்தில், தேவர்களிடமிருந்து பலமிக்க இசையொலிகளும் தேர் சக்கரத்தின் தடதடப்பும், கிண்கிணி மணி ஒலிகளும் எழுந்தன. அதனால், அனைத்து விலங்குகளும், இரை தேடும் பறவைகளும் விலங்குகளும் தனித்தனியாக ஒலியெழுப்பின.
அனைத்துத் திசைகளில் இருந்தும் சூரியனைப் போன்ற பிரகாசமிக்கத் தேர்களில் கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ் கூட்டங்கள் எதிரிகளை ஒடுக்குபவனான தேவர்கள் தலைவனை {இந்திரனைத்} தொடர ஆரம்பித்தனர். தேவர்களின் மன்னனான புரந்தரன் {இந்திரன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறி, ஜொலிக்கும் அழகுடன் பார்த்தர்களிடம் {பாண்டவர்களிடம்} வந்தான். அங்கே (அந்த இடத்திற்கு) வந்த ஆயிரங்கண் கொண்டவன் {இந்திரன்} தனது தேரைவிட்டு இறங்கினான்.
நீதிமானான யுதிஷ்டிரன் இதைக் கண்டவுடன், இறவாதவர்களின் {தேவர்களின்} மன்னனான அந்த அருள் நிறைந்தவனை {இந்திரனை} தனது தம்பிகளுடன் அணுகினான். பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, தனது கண்ணியத்தின் விளைவாக அந்த அளவிடமுடியாத ஆன்மா கொண்ட தயாளனை {இந்திரனை} முறைப்படி வணங்கினான்.
பிறகு, புரந்தரனை {இந்திரனை} வணங்கிய பராக்கிரமம் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்தத் தேவர்கள் தலைவன் {இந்திரன்} முன்பு பணியாளனைப் போலப் பணிவுடன் நின்றான். தவத்தகுதியுடன் சடாமுடி தரித்து இருக்கும் பாவமற்ற தனஞ்செயன் {அர்ஜுனன்}, தேவர்கள் தலைவன் {இந்திரன்} முன்பாகப் பணிவுடன் இருப்பதைக் கண்ட பெரும் சக்தி வாய்ந்த குந்தி மகன் யுதிஷ்டிரன், அவனது {அர்ஜுனனின்} தலையை முகர்ந்தான். (அந்த உயரத்தில்} பல்குனனைக் {அர்ஜுனனைக்} கண்ட அவன் {யுதிஷ்டிரன்} பெரிதும் மகிழ்ந்து, தேவர்களின் மன்னனை {இந்திரனை} வணங்கி, உயர்ந்த அருளை அனுபவித்தான்.
பிறகு, பேருவகையில் நீந்திக் கொண்டிருந்த அந்த மனோபலம் கொண்ட ஏகாதிபதியிடம் {யுதிஷ்டிரனிடம்}, தேவர்கள் தலைவனான புத்திக்கூர்மை கொண்ட புரந்தரன் {இந்திரன்}, “ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, நீ பூமியை ஆள்வாய். நீ அருளப்பட்டிருப்பாயாக! ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, மீண்டும் காம்யகம் செல்வாயாக” என்றான்.
பிரம்மச்சரிய வாழ்வுமுறையை ஒரு வருடம் கடைப்பிடித்து, தனது புலன்களை அடக்கி, நோன்புகள் நோற்ற ஒரு கற்ற மனிதன், சக்ரன் {இந்திரன்} பாண்டவர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து கவனத்துடன் கேட்டானானால், அவன் எத்தடங்கலும் இன்றி நூறு வருடங்களுக்கு இன்பமாக வாழ்வான்” {என்றார் வைசம்பாயனர்}.
சிவனோடு போர்புரிந்தேன்! – வனபர்வம் பகுதி 166-வேடன் உருவில் வந்த சிவனுடன் தான் போரிட்டதைக் குறித்தும், பாசுபத ஆயுதத்தை, தான் பெற்ற கதையையும் அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம் சொன்னது…
வைசம்பாயனர் {ஜனமேஜெயனிடம்} சொன்னார், “தனக்கு உரிய இடத்திற்குச் சக்ரன் {இந்திரன்} சென்றதும், தனது சகோதரர்களுடனும் கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடனும்} சேர்ந்த பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்}, தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} வணக்கத்தைத் தெரிவித்தான். பிறகு, இப்படி வணங்கிய அந்தப் பாண்டவனின் {அர்ஜுனனின்} தலையை முகர்ந்தவன் {யுதிஷ்டிரன்}, மனக்களிப்பும் மகிழ்ச்சியும் கொண்டு தடைபட்ட வார்த்தைகளில் அர்ஜுனனிடம் “ஓ! அர்ஜுனா, இந்தக் காலத்தை நீ எப்படிச் சொர்க்கத்தில் கழித்தாய்? ஆயுதங்களை எப்படி அடைந்தாய்? தேவர்களின் தலைவனை {இந்திரனை} எப்படித் திருப்தி செய்தாய்? ஓ! பாண்டவா {அர்ஜுனா}, பிநாகையைத் தாங்கும் தெய்வீகமான சங்கரனை {சிவனை} எப்படிக் கண்டாய்? மேலும் ஆயுதங்களை எப்படி அடைந்தாய்? எம்முறையில் (அவர்களை) வழிபட்டாய்? “உன்னால் நான் திருப்தியடைந்தேன்” என்று நூறு வேள்விகள் செய்தவன் {இந்திரன்} சொல்லும் விதம், அந்த எதிரிகளை ஒடுக்குபவனுக்கு என்ன சேவை செய்தாய்? ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே {அர்ஜுனா}, நான் இவை அனைத்தையும் விவரமாகக் கேட்க விரும்புகிறேன். ஓ! பாவமற்றவனே, மகாதேவனையும் {சிவனையும்}, தேவர்களின் மன்னனையும் {இந்திரனையும்} நீ திருப்தி செய்த விதத்தையும், ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, வஜ்ரத்தைத் தாங்கியிருப்பவனுக்கு {இந்திரனுக்கு} நீ செய்த சேவையையும், எனக்கு விவரமாகச் சொல் தனஞ்சயா {அர்ஜுனா}” என்றான் {யுதிஷ்டிரன்}.
அர்ஜுனன் {யுஷ்டிரனிடம்}, “ஓ! பெரும்பலம் வாய்ந்த ஏகாதிபதி, நூறு வேள்விகள் செய்தவனையும் {இந்திரனையும்}, தெய்வீக சங்கரனையும் {சிவனையும்} எவ்வாறு முறையாகக் கண்டேன் என்பதைக் கேளும். ஓ! எதிரிகளை அழிப்பவரே, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, {ஆயுத} அறிவியலை (கற்க} அடைய நீர் வழிகாட்டியதும், உமது கட்டளையின் பேரில் கானகம் சென்று தவம்பயின்றேன். காம்யகத்தில் இருந்து பிருகுதுங்கம் சென்று தவத்தில் ஈடுபட்டு ஒரு இரவை அங்கே கழித்தேன். அடுத்த நாள் நான் ஒரு குறிப்பிட்ட அந்தணரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் என்னிடம், “ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, நீ எங்கே செல்லப் போகிறாய்?” என்று கேட்டார். ஓ! குருக்களின் வழி வந்தவரே {யுதிஷ்டிரரே}, அதன்பேரில் நான் உண்மை அனைத்தையும் அவரிடம் சொன்னேன். ஓ! மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரரே}, அந்த உண்மையைக் கேட்ட அந்த அந்தணர் மிகவும் திருப்தி கொண்டு என்னைப் புகழ்ந்தார். பின்பு, என்னிடம் திருப்தி கொண்ட அந்தணர், “ஓ! பாரதா {அர்ஜுனா}, நீ தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிரு. அப்படித் தவம் பயில்கையில், குறுகிய காலத்தில் நீ தேவர்களின் தலைவனைக் {இந்திரனைக்} காண்பாய்” என்றார்.
ஓ! பெரும் பலம்வாய்ந்த மன்னா, பிறகு, நான் அவரது அறிவுரைப்படி இமயத்தில் ஏறி, ஒரு மாதகாலம் கனிகளும் கிழங்குகளும் மட்டும் உண்டு தவம்பயில ஆரம்பித்தேன். இரண்டாவது மாதத்தை நீரை மட்டும் உண்டு கழித்தேன். ஓ! பாண்டவரே {யுதிஷ்டிரரே}, மூன்றாவது மாதம் முழுதும் உணவைத் தவிர்த்தேன். நான்காவது மாதம் கைகளை உயர்த்தியபடி இருந்தேன். அப்போது, நான் எனது பலத்தை இழக்காதது ஆச்சரியம்தான். ஐந்தாவது மாதத்தின் முதல் நாள் கழிந்த போது, எனது முன்னிலையில் பன்றியின் உருவத்தில் ஒரு உயிரினம், பூமியைத் தனது வாயால் புரட்டியும், கால்களால் தரையை மிதித்துக் கொண்டும், மார்பால் மண்ணைத் தேய்த்துக் கொண்டும் பயங்கரமாக நின்றது. அதை {அந்த உயிரினத்தைத்} தொடர்ந்து, பெண்கள் சூழ, வில், கணைகள், வாள் ஆகியவற்றைத் தாங்கியபடி வேடன் உருவில் இருந்த ஒருவன் வந்தான். அதன் பேரில், நான் எனது வில்லையும், இரண்டு அம்பறாத்தூணிகளையும் எடுத்து, எனது கணைகளால் அந்தப் பயங்கரமான உயிரினத்தைத் துளைத்தேன். அதே வேளையில் அந்த வேடனும் தனது பலம்வாய்ந்த வில்லை இழுத்து, அதை {அந்த விலங்கை) அடித்தது எனது மனதை உலுக்கியது.
மேலும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அவன் என்னிடம், “வேட்டை விதிகளை மீறி, நான் முதலில் அடித்த விலங்கை நீ ஏன் அடித்தாய்? இந்தக் கூரிய கணைகள் உனது கர்வத்தை அழிக்கும். அங்கேயே நில்” என்றான். பிறகு அந்தப் பெரும் உடல் படைத்தவன் {வேடன்}, வில்லோடு என்னை நோக்கி விரைந்தான். பிறகு மேகம் மழையைப் பொழிந்து மலையை மறைப்பது போல, அவனது பலம்வாய்ந்த கணைகளால், என்னை மறைத்தான். நான் எனது பங்குக்கு, பல கணைகளால் அவனை மறைத்தேன். முனை ஒளிரும் உறுதியான அம்புகளை உரிய மந்திரங்களுடன், {இந்திரன்} வஜ்ரம் கொண்டு மலையைப் பிளப்பது போல, அவனைத் துளைத்தேன். அப்போது அவனது உருவம் நூறாகவும், ஆயிரமாகவும் ஆனது. நான், அந்த உடல்கள் அத்தனையையும் எனது கணைகளால் துளைத்தேன். ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, பிறகு அந்த உருவங்கள் அனைத்தும் மீண்டும் ஒன்றாகின. அதை நான் அடித்தேன்.
பிறகு அவன் சிறிய உடலும் பெரிய தலையும் கொண்டவன் ஆனான். அதன்பிறகு பெரும் உடலும் சிறிய தலையும் கொண்டவன் ஆனான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அவன் தனது பழைய உருவம் கொண்டு போருக்காக என்னை அணுகினான். ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, நான் அவனை எனது கணைகளால் மூழ்கடிப்பதில் தோல்வியுற்ற போது, வாயுத் தேவனின் பெரும் பலம் வாய்ந்த ஆயுதத்தைப் பொருத்தினேன். ஆனால் அதை அவன் மீது செலுத்துவதில் நான் தோல்வி கண்டேன். அது ஆச்சரியமாக இருந்தது. அந்த ஆயுதம் பலனைக் கொடுக்கத் தவறிய போது, நான் திகைப்படைந்தேன். எனினும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, மேலும் கடுமையாக முயன்ற நான் அவனைப் பல பலம் வாய்ந்த கணைகளால் நிறைத்தேன். பிறகு, ஸ்தூணாகர்ண, வருண, சலப, அசமவர்ஷ ஆயுதங்களை எடுத்து அவன் மீது பொழிந்தேன். ஆனால், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, எனது அனைத்து ஆயுதங்களையும் அவன் உடனே விழுங்கிவிட்டான். எனது ஆயுதங்கள் அனைத்தும் விழங்கப்பட்ட பிறகு, நான் பிரம்மனின் ஆளுகை கொண்ட ஆயுதத்தை அவன் {வேடன்} மீது விட்டேன்.
சுடர்விட்டுச் செல்லும் கணைகள் அந்த ஆயுதத்தில் இருந்து கிளம்பி அவன் மீது குவிந்தது. இப்படி அடிக்கப்பட்ட எனது பலம்வாய்ந்த ஆயுதத்தால் மூழ்கிய அவன், தனது உடலைப் பெருக்கினான். பிறகு நான் வீசிய ஆயுதத்தின் சக்தியால் ஆகாயமும், வானத்தின் அனைத்து திக்குகளும் வாட்டப்பட்டன. ஆனால் அந்தப் பெரும் பலமும் சக்தியும் கொண்டவன் அந்த ஆயுதத்தை உடனே கலங்கடித்தான். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பிரம்மனின் ஆளுமை கொண்ட அந்த ஆயுதம் கலங்கடிக்கப்பட்ட போது பயங்கரமான அச்சம் என்னைப் பீடித்தது. அதனால் உடனே எனது வில்லையும் இரண்டு அம்பறாத்தூணிகளைப் பிடித்துக் கொண்டு, அவன் மீது கணைகளை அடித்தேன். ஆனால் அவன் {வேடன்} அனைத்து ஆயுதங்களையும் விழுங்கினான்.
அனைத்து ஆயுதங்களும் கலங்கடிக்கப்பட்டும் விழங்கப்பட்டும் போன போது, அவனுக்கும் {வேடனுக்கும்} எனக்கும் இடையில் மற்போர் நடந்தது. அடிகளாலும், அறைகளாலும் இருவரும் மோதிக் கொண்டோம். ஆனால் அவனை வீழ்த்த முடியாத நான், மதிமயங்கித் தரையில் விழுந்தேன். ஓ! பெரும்பலம் வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு சிரித்த அவன் {வேடன்}, என் கண் முன்பாகவே அந்தப் பெண்மணியுடன் சேர்ந்து அந்த இடத்திலேயே மறைந்து போனான்.. ஓ! சிறப்புவாய்ந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, இதைச் சாதித்த அந்தத் தெய்வீகமானவன் வேறு உரு கொண்டு தெய்வீக ஆடை பூண்டு வந்தான். வேடன் உருவைக் கைவிட்ட தேவர்களின் தெய்வீகத் தலைவன் {சிவன்}, தனது தெய்வீக தோற்றத்தைப் பெற்று அங்கே நின்றான்.
பிறகு, உமையுடன் கூடிய காளையைத் தனது குறியாகக் கொண்டவனும் பினகையைத் தாங்குபவனும், பல உருவங்கள் எடுக்கவல்லவனுமான அந்தத் தெய்வீகமானவன் {சிவன்}, பாம்புகளைத் தாங்கிக் கொண்டு என் முன்பு தோன்றினான். ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, அப்போதும் போருக்குத் தயாராகக் களத்தில் நின்று கொண்டிருந்த என்னை நோக்கி வந்த திரிசூலம் தாங்குபவன் {சிவன்}, “நான் உன்னிடம் மிகுந்த திருப்தி கொண்டேன்” என்றான். பிறகு அந்தத் தெய்வீகமானவன் எனது விற்களையும், வற்றாத அம்புகள் கொண்ட அம்பறாத்தூணி ஜோடியையும் என்னிடம் திருப்பிக் கொடுத்து, “ஓ! குந்தியின் மகனே. நீ என்னிடம் ஏதாவது வரம் கேள். நான் உன்னிடம் மிகவும் திருப்தி கொண்டேன். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும். ஓ! வீரா, உனது இதயத்தில் குடி கொண்டிருக்கும் விருப்பத்தைச் சொல். நான் அதை அருளுவேன். இறவா நிலை தவிர்த்து, உனது இதயத்தில் இருக்கும் விருப்பத்தை என்னிடம் சொல்” என்றான் {சிவன்}.
ஆயுதங்கள் பெறுவதில் நிலைத்த மனதுடன், நான் சிவனை வணங்கி, “ஓ! தெய்வீகமானவனே, எனக்குச் சாதகமாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால், நான் ஒரு வரத்தைப் பெற விரும்புகிறேன். தேவர்களிடம் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் {ஆயுத அறிவியலையும்} நான் கற்க விரும்புகிறேன்” என்றேன். பிறகு, அந்தத் திரயம்பகன் {சிவன் [முக்கண்ணன்]} என்னிடம், “ஓ! பாண்டவா {அர்ஜுனா}, எனது ஆயுதமான ரௌத்திரத்தை {பாசுபதத்தை} நான் உனக்குக் கொடுப்பேன்” என்றான். பிறகு மிகவும் திருப்தி கொண்ட மகாதேவன் {சிவன்}, வலிமைமிக்க ஆயுதமான பாசுபதத்தை எனக்கு அருளினான். அந்தத் தெய்வீக ஆயுதத்தை அருளிய அவன், என்னிடம், “இது மனிதர்கள் மீது ஏவப்படலாகாது. குறைந்த சக்தி கொண்டவர் மீது இதை ஏவினால், அது அண்டத்தையே உட்கொண்டு விடும். கடுமையாகப் பாதிக்கப்படும் போது மட்டுமே, இதை ஏவ வேண்டும். உன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் வீணான பிறகே, இதை நீ ஏவலாம்” என்றான் {சிவன்}.
காளையைக் குறியாகக் கொண்டவன் {சிவன்} இப்படி என்னிடம் திருப்தி கொண்ட போது, தடையற்ற சக்தி கொண்டு அனைத்து ஆயுதங்களைக் கலங்கடிப்பதும், பகைவர்களை அழிப்பதும், எதிரிகளின் படைகளை அழிப்பதும், அடைய முடியாத ஒப்பற்றதும், தேவர்களாலும், தானவர்களாலும், ராட்சசர்களாலும் தாங்கமுடியாததுமான பாசுபத ஆயுதம் உருவமெடுத்து வந்து என் அருகில் நின்றது. பிறகு அந்தத் தெய்வத்தின் கட்டளையின் பேரில் நான் அங்கே அமர்ந்தேன். நான் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே அந்தத் தெய்வம் {சிவன்} அந்த இடத்தில் இருந்து மறைந்தான்.
அர்ஜுனன் இந்திரன் சந்திப்பு! – வனபர்வம் பகுதி 167அ-தான் இந்திரலோகம் சென்றதையும், அங்கு வாசம் செய்ததையும், இந்திரனிடம் ஆயுதங்கள் பெற்றதையும் அர்ஜுனன் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது…
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதரே, தேவர்களுக்குத் தேவனும், தலைமை ஆன்மாவுமான திரயம்பகன் {முக்கண்ணன்} அருளால், அந்த இரவை அந்த இடத்திலேயே கழித்தேன். இரவைக் கழித்து, காலைச் சடங்குகளை முடித்ததும், நான் முன்பு சந்தித்த அந்தணர்களில் முதன்மையானவரைச் சந்தித்தேன். நடந்தவற்றை நான் அவரிடம் சொன்னேன். ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, தெய்வீகமான மகாதேவனை {சிவனை} நான் சந்தித்தது குறித்துச் சொன்னேன். ஓ! மன்னார்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, அவர் என்னிடம் திருப்தி கொண்டு, “யாராலும் காண முடியாத பெரும் தெய்வத்தை நீ கண்டதால், விரைவில் நீ வைவஸ்வதன் {யமன்} முதலான பிற லோகபாலர்கள் மற்றும் தேவர்களின் தலைவன் {இந்திரன்} ஆகியோருடன் நீ பழகுவாய். இந்திரன் உனக்கு ஆயுதங்களை வழங்குவான்” என்றார். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதைச் சொன்ன சூரியனைப் போன்ற அந்த அந்தணர், என்னை மீண்டும் மீண்டும் அணைத்து, அங்கிருந்து சென்றார்.
ஓ! எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, அந்த நாளின் மாலைப் பொழுதில், முழு உலகத்திற்கும் புத்துணர்ச்சியூட்டும் சுத்தமான தென்றல் வீசத் தொடங்கியது. இமய மலையின் அடிவாரத்தில் என் அருகில், நறுமணமிக்க அழகிய மலர்கள் புதிதாகப் பூக்கத் தொடங்கின. அனைத்து பக்கங்களிலும், மனதைக் கவரும் இனிய இன்னிசையும், இந்திரன் சம்பந்தமான பாடல்களும் கேட்கப்பட்டன. தேவர்கள் தலைவனுக்கு {இந்திரனுக்கு} முன்னிலையில் அப்சரஸ் மற்றும் கந்தர்வக் கூட்டங்கள் பலவகைப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர். மருதர்களும், மகேந்திரனின் பணியாட்களும், சொர்க்கவாசிகளும் தெய்வீகத் தேர்களில் ஏறி அங்கே வந்தனர். பிறகு சச்சியுடன் கூடிய மருத்வானும், அனைத்து தேவர்களும் நல்ல அலங்காரத்தோடு தேரில் ஏறி வந்தனர். அந்த நேரத்தில், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, மனிதர்களின் தோள்களில் பயணிப்பவன் {குபேரன்}, தனது சிறந்த கிருபையால் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். பிறகு தென்திசையில் அமர்ந்திருந்த யமனையும், அவரவர் இடங்களில் அமர்ந்திருந்த வருணன் மற்றும் தேவர்கள் தலைவனையும் {இந்திரனையும்) நான் கண்டேன்.
ஓ! மனிதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ஓ! பலம்வாய்ந்த ஏகாதிபதி, என்னை உற்சாகப்படுத்திய பிறகு அவர்கள், “ஓ! சவ்யசச்சின் {அர்ஜுனா}, லோகபாலர்களான நாங்கள் அமர்ந்திருப்பதைப் பார். தேவர்களின் காரியத்தை நிறைவேற்றவே நீ சங்கரனின் {சிவனின்} காட்சியைப் பெற்றாய். சுற்றி அமர்ந்திருக்கும் எங்களிடம் இருந்து ஆயுதங்களைப் பெற்றுக் கொள்” என்றனர். ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, அதன் பிறகு, உரிய முறையில் தேவர்களில் முதன்மையானவர்களை வணங்கிய நான் அந்தப் பெரும் பலம்வாய்ந்த ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டேன். பிறகு அவர்கள் என்னை அவர்களில் ஒருவராகவே உணர்ந்தார்கள். பின்னர் அந்தத் தேவர்கள் தாங்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்தப் பகுதிக்கே திரும்பினர்.
புகழ்பெற்ற தனது ரதத்தில் ஏறிய தேவர்கள் தலைவனான தெய்வீக மகவானும் {இந்திரனும்} என்னிடம், “ஓ! பல்குனா {அர்ஜுனா}, நீ தேவலோகம் செல்ல வேண்டியதிருக்கும். ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, இந்த உனது வருகைக்கு முன்னரே, நீ இங்கு வருவாய் என்பது எனக்குத் தெரியும். ஓ! பாரதர்களில் சிறந்தவனே, அதன்பிறகே நான் உனக்கு என்னை வெளிப்படுத்தினேன். முன்பே நீ பல தீர்த்தங்களில் நீராடி, இப்போதோ கடும் தவங்கள் இயற்றுகிறாய். ஆகையால், ஓ! பாண்டவா {அர்ஜுனா}, உன்னால் தேவலோகம் செல்ல இயலும். எனினும் நீ தேவலோகப் பயணம் மேற்கொள்ள இன்னும் கடும் தவம்பயில வேண்டும். எனது கட்டளையின் பேரில், மாதலி உன்னைத் தேவலோகங்களுக்கு அழைத்துச் செல்வான். உன்னை ஏற்கனவே தேவர்களும், உயர்ஆன்ம தெய்வீக முனிவர்களும் அறிவார்கள்” என்றான் {இந்திரன்}.
அதன்பேரில் நான் சக்ரனிடம் {இந்திரனிடம்}, “ஓ! தெய்வீகமானவரே {இந்திரரே}, எனக்குச் சாதகமாக இருப்பாயாக. நான் ஆயுதங்கள் பயில விரும்புகிறேன். ஆகவே, ‘நீ எனக்குக் குருவாக இருப்பாயாக’ என்று வேண்டுகிறேன்” என்று கேட்டேன். அதற்கு இந்திரன், “ஓ! குழந்தாய், ஆயுதங்கள் பயின்றால் பயங்கரக் காரியங்கள் புரிவாய். இதை நோக்கமாகக் கொண்டே நீ ஆயுதங்களை விரும்புகிறாய். எனினும், நீ விரும்பியவாறே ஆயுதங்களை அடைந்து கொள்” என்றான். பிறகு நான், “ஓ! எதிரிகளைக் கொல்பவனே, என்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் கலங்கடிக்கப்பட்டால் தவிர, நான் இந்தத் தெய்வீக ஆயுதங்களை மனிதர்கள் மீது ஏவ மாட்டேன். ஓ! தேவர்கள் தலைவா {இந்திரா}, எனக்குத் தெய்வீக ஆயுதங்களை அருள்வாயாக. (அதன் காரணமாக) இதன்பிறகு நான் போர் வீரர்கள் அடையும் உலகங்களை அடைவேன்” என்றேன்.
இந்திரன் {அர்ஜுனனிடம்}, “ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, உன்னைச் சோதித்துப் பார்க்கவே, நான் இவ்வார்த்தைகளை உன்னிடம் சொன்னேன். என் மூலமாகப் பெறப்பட்ட உனக்கு, இவ்வார்த்தைகள் பொருத்தமானதே. ஓ! பாரதா {அர்ஜுனா}, நீ எனது வசிப்பிடத்தை அடைந்து, ஓ! குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே {அர்ஜுனா} வாயு, அக்னி, வசு, வருண, மருத, சித்த, பிரம்ம, கந்தர்வ, உரக, ராட்சச, விஷ்ணு, நைரித ஆயுதங்களையும் மற்றும் என்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பெறுவாய்” என்று சொன்னான். இதை என்னிடம் சொன்ன சக்ரன் {இந்திரன்} அந்த இடத்திலேயே மறைந்து போனான்.
ஆயுத நிபுணனான அர்ஜுனன்! – வனபர்வம் பகுதி 167ஆ-தான் இந்திரலோகம் சென்றதையும், அங்கு வாசம் செய்ததையும், இந்திரனிடம் ஆயுதங்கள் பெற்றதையும், நிவாதகவசர்களை நோக்கி யுத்தத்திற்குப் புறப்பட்டதையும் அர்ஜுனன் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது.
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, குதிரைகள் பூட்டப்பட்ட புனிதமான தெய்வீகத்தேர் மாதலியால் {இந்திரனின் தேரோட்டியால்} நடத்தப்பட்டு அற்புதமாக வருவதை நான் கண்டேன். லோகபாலர்கள் சென்ற பிறகு மாதலி என்னிடம், “ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே {அர்ஜுனா}, தேவர்கள் தலைவன் {இந்திரன்} உன்னைக் காணும் விருப்பத்துடன் இருக்கிறான். ஓ! பெரும் பலம் வாய்ந்த கரம் கொண்டவனே {அர்ஜுனா}, தகுதியைப் பெற்ற பிறகு, உனது காரியத்தை செய். தகுதியால் அடையக்கூடிய உலகங்களை வந்து பார். இந்த உடலுடனேயே சொர்க்கத்துக்கு வா. ஓ! பாரதா {அர்ஜுனா}, ஆயிரம் கண் கொண்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்} உன்னைக் காண விரும்புகிறான்” என்றான். மாதலியால் இப்படிச் சொல்லப்பட்ட நான், இமய மலையை விட்டு அகன்று, அந்த அற்புதமான தேரை வலம் வந்து, அதன் மேல் ஏறினேன். குதிரை மரபுகளை நன்கறிந்த மிகத் தாராளமான மாதலி, மனோ வேக வாயு வேகங்களைக் கொடையாகக் கொண்ட குதிரைகளை செலுத்தினான்.
தேர் நகரத் தொடங்கியதும், அந்தத் தேரோட்டி {மாதலி} உறுதியாக அமர்ந்திருந்த எனது முகத்தைப் பார்த்து ஆச்சரியங்கொண்டு இவ்வார்த்தைகளைச் சொன்னான், “இன்று நடப்பது எனக்கு ஆச்சரியமாகவும் எதிர்பாராததாகவும் இருக்கிறது. இந்தத் தெய்வீகத் தேரில் அமர்ந்திருக்கும் நீ, சிறிதும் அசைந்ததாகத் தெரியவில்லை. ஓ! பாரத குலத்தில் முதன்மையானவனே {அர்ஜுனனே}, குதிரைகளின் முதல் தாவலில், தேவர்கள் தலைவன் கூட {இந்திரன் கூட} அசைவதை {தடுமாறுவதை} நான் எப்போதும் கவனித்திருக்கிறேன். ஆனால், இந்த ரதம் நகர்ந்த பிறகும் நீ அசைவற்றவனாக {தடுமாறாதவனாக} இருப்பதைக் காண்கிறேன். இது சக்ரனின் {இந்திரனின்} சக்தியையும் விஞ்சியிருக்கும் சக்தியாக எனக்குப் படுகிறது” என்றான் {மாதலி}.
ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, இதைச் சொன்ன மாதலி வானத்தில் பிரவேசித்து, தேவர்களின் வசிப்பிடங்களையும், அவர்களது அரண்மனைகளையும் காட்டினான். பிறகு குதிரைகள் பூட்டப்பட்ட அந்த ரதம் மேல்நோக்கிச் சென்றது. ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, தேவர்களும் முனிவர்களும் (அந்த ரதத்தை) வழிபடத்தொடங்கினர். நினைத்த இடங்களுக்கு செல்லவல்ல உயர்ந்த சக்தி கொண்ட கந்தர்வர்கள், அப்சரசுகள் மற்றும் தெய்வீக முனிவர்களின் உலகங்களை நான் கண்டேன். சக்ரனின் {இந்திரனின்} தேரோட்டியான மாதலி, தேவர்களுக்குச் சொந்தமான நந்தவனத்தையும் மற்ற பிற நந்தவனங்களையும் எனக்குக் காட்டினான். அடுத்ததாக நான், பொன்னாலும், விரும்பிய கனிகள் காய்க்கும் மரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட இந்திரனின் வசிப்பிடமான அமராவதியைக் {அமராவதி நகரத்தைக்} கண்டேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அங்கே சூரியன் வெப்பத்தைச் சிந்துவதில்லை; வெப்பமோ, குளிரோ, களைப்போ (யாரையும்) அங்கே வாட்டுவதில்லை. ஓ! பெரும் ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஓ! எதிரிகளை வாட்டுபவரே, அங்கே தேவர்கள் துக்கத்தையோ, ஆவியில் வறுமையையோ, பலவீனத்தையோ உணர்வதில்லை. ஓ! மனிதர்களை ஆள்பவரே {யுதிஷ்டிரரே}, தேவர்களும் மற்றவரும் கோபமோ, பேராசையோ கொள்வதில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே} தேவர்களின் வசிப்பிடங்களில் வாழ்பவர்கள் எப்போதும் உள்ளடக்கத்துடன் இருக்கிறார்கள்.
மேலும், அங்கே மரங்கள் எப்போதும் பசுமையான இலைகள், கனிகள், மற்றும் மலர்களைத் தாங்கியபடி இருக்கின்றன. அங்கிருக்கும் பலதரப்பட்ட ஏரிகளில் தாமரை மணம் வீசுகிறது. அங்கு வீசும் தென்றல் குளிர்ச்சியாகவும், சுவையாகவும், மணமிக்கதாகவும், தூயதாகவும், ஊக்கத்தைத் தருவதாகவும் இருக்கிறது. அங்கிருக்கும் நிலம், பல வகையான ரத்தினங்களாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அங்கே எண்ணிலடங்கா அழகிய விலங்குகளும், ஆகாயத்தில் எண்ணிலடங்கா விண்ணதிகாரிகளும் {பறவைகளும்} இருந்தன. பிறகு நான், வசுக்களையும், ருத்திரர்களையும், சத்யஸ்களையும், மருதர்களையும், ஆதித்தியர்களையும், அசுவனி இரட்டையர்களையும் கண்டு அவர்களை வணங்கி வழிபட்டேன். அவர்கள் தங்கள் வாழ்த்துகளை எனக்குத் தெரிவித்து, எனக்கு பலத்தையும், பராக்கிரமத்தையும், சக்தியையும், புகழையும், ஆயுதங்களையும் (ஆயுதங்களில் நிபுணத்துவத்தையும்), போர்க்களத்தில் வெற்றியையும் அருளினர். பிறகு கந்தவர்களாலும், தேவர்களாலும் வணங்கப்படும் அந்த அழகான நகரத்துக்குள் {அமராவதி நகரத்துக்குள்} நுழைந்து, கைகள் கூப்பியபடி, ஆயிரம் கண் கொண்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்} முன்பு நான் நின்றேன்.
அதன்பிறகு, அந்தக் கொடையளிப்பவர்களில் சிறந்தவன் {இந்திரன்}, தனது ஆசனத்தில் பாதியை மகிழ்ச்சியுடன் எனக்கு அளித்தான். அந்த வாசவன் {இந்திரன்} மதிப்புடன் என்னைத் தொட்டான் {தோள் மீது கை போடுதலாக இருக்கலாம்}. ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, ஆயுதங்களை அடைவதையும், அவற்றைக் கற்பதையும் நோக்கமாகக் கொண்ட நான், தாராள ஆன்மா கொண்ட தேவர்கள் மற்றும் கந்தர்வர்களுடன் சொர்க்கத்தில் வசிக்க ஆரம்பித்தேன். விஸ்வவனன் {விஸ்வவசு = குபேரன்} மகனான சித்ரசேனன் எனக்கு நண்பனான். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அவன் எனக்கு கந்தர்வம் (கந்தர்வ அறிவியல்} முழுவதையும் கற்றுக் கொடுத்தான். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, சக்ரனின் வசிப்பிடத்தில் நன்றாக கவனிக்கப்பட்டு, எனது விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டு, ஆயுதங்கள் பயின்று, பாடல்களையும், இசைக்கருவிகளின் தெளிவான ஒலிகளையும் கேட்டு, அப்சரசுகளில் முதன்மையானவர்களின் ஆட்டங்களையும் கண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தேன். கலைக்கல்வியை புறந்தள்ளாமல், அதைச் சரிவர கற்றேன். எனது கவனம் முழுவதும் ஆயுதங்களை அடைவதிலேயே குறிப்பாக நிலைத்திருந்தது. ஆயிரம் கண் கொண்ட அந்தத் தலைவன் {இந்திரன்} எனது நோக்கத்தில் திருப்தி கொண்டான். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இப்படியே வாழ்ந்து, சொர்க்கத்தில் இருந்தக் காலத்தைக் கடத்தினேன்.
குதிரையை {உச்சைஸ்ரவத்தை) வாகனமாகக் கொண்டவன் (இந்திரன்), நான் ஆயுதங்களில் நிபுணத்துவம் அடைந்தேன் என்று நம்பிக்கைக் கொண்ட பிறகு, தனது கையால் எனது தலையைத் தட்டி {தடவி}, “இப்போது தேவர்களாலும் உன்னை வீழ்த்த முடியாது. அப்படி இருக்கையில் பூமியில் வசிக்கும் குறையுள்ள {imperfect mortals) மனிதர்களை என்னவென்று சொல்வது? பாதிப்படையாத வலிமையுடையவனாகவும், கட்டுப்படுத்தப்பட முடியாதவனாகவும், போரில் ஒப்பிட முடியதவனாகவும் ஆகிவிட்டாய்” என்ற வார்த்தைகளைச் சொன்னான். பிறகு தனது உடல் ரோமங்கள் சிலிர்த்தெழ அவன் {இந்திரன்} என்னிடம், “ஓ! வீரா {அர்ஜுனா}, ஆயுதங்களால் போரிடும் போது உனக்கு இணையானவன் எவனும் இல்லை. ஓ! குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே {அர்ஜுனா}, எப்போதும் கவனம் நிறைந்தவனாக, கைகளைத் திறமையோடு உபயோகிப்பவனாக, உண்மையுள்ளவனாக, புலன்களை அடக்கியவனாக, அந்தணர்களின் பாதுகாவலனாக, ஆயுதங்களில் திறமையுள்ளவனாக, போர்க்குணமுள்ளவனாக நீ இருக்கிறாய். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, ஐந்து விதிகளையும் {1. விடுப்பது, 2. திரும்ப அழைப்பது, 3. மீண்டும் மீண்டும் விடுத்து திரும்ப அழைப்பது, 4. அடிபட்டவரை மீட்பது; 5. ஆயுதத்திற்கு புத்துயிரூட்டுவது} (விதிகளின் அறிவையும்), (அவற்றைப்) பயன்படுத்தி, நீ பதினைந்து {15} ஆயுதங்களைப் பெற்றிருக்கிறாய். ஆகையால், உனக்குச் சமமானவன் எவனும் இல்லை. நீ (ஆயுதங்களை) விடுப்பதையும், (அவற்றைத்) திருப்பி அழைப்பதையும், (அவற்றை) மறுபடி விடுப்பதையும், மறுபடி திருப்பி அழைப்பதையும், (அவற்றோடு) தொடர்புடைய பிராயச்சித்தத்தையும் {ஆயுத நெருப்பால் எரிக்கப்பட்ட குற்றமற்றவர்களைப் பிழைப்பித்தல் என்ற பொருள் வரும் என்கிறார்கள்}, அவை கலங்கடிக்கப்பட்டால், அவற்றுக்கு புத்துயிரூட்டுவதையும் முறையாகச் சரியாகக் கற்றிருக்கிறாய். ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {அர்ஜுனா}, நீ குருவுக்குக் கூலி {குருதட்சணை) கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கூலி கொடுப்பதாய் உறுதி கொடு; பிறகு நான் நீ என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாகச் சொல்வேன்” என்றான் {இந்திரன்}.
ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அதன் பேரில் நான் தேவர்கள் ஆட்சியாளனிடம் {இந்திரனிடம்}, “எனது சக்திக்குட்பட்ட வேலையாக அது இருந்தால், அது ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதாகக் கருதிக்கொள்” என்றேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இந்த வார்த்தைகளை நான் சொன்ன போது, இந்திரன் புன்னகையுடன், “மூவுலகிலும் (நீ சாதிக்க) உனது சக்திக்குட்படாத எதுவும் இல்லை. எனது எதிரிகளான நிவாடகவசர்கள் என்ற பெயர்கொண்ட தானவர்கள், சமுத்திரத்தின் கருவறைக்குள் வசிக்கின்றனர். அவர்கள் முப்பது கோடி {30,00,00,000} பேர் இருக்கின்றனர். அவர்கள் மோசமானவர்கள். அவர்கள் அனைவரும் சம உருவம், சம பலம் மற்றும் சம பிரகாசம் கொண்டவர்களாவர். அவர்களை அங்கேயே நீ கொல்ல வேண்டும். ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, அதுவே உனது குருவுக்கு நீ கொடுக்கும் கூலியாக இருக்கும்” என்றான் {இந்திரன்}.
இதைச்சொன்ன அவன் {இந்திரன்}, எனக்கு மயில் தோகை போன்ற ரோமங்களால் அலங்கரிக்கப்பட்டு, மாதலியால் {இந்திரனின் தேரோட்டியால்} நடத்தப்பட்ட பெரும் பிரகாசம் கொண்ட தெய்வீகத் தேரைக் கொடுத்தான். எனது தலையில் இந்த அற்புத கிரீடத்தைச் சூட்டினான். மேலும் அவன், தனது ஆபரணங்களைப் போலவே, எனது உடலிலும் தரித்துக் கொள்ள ஆபரணங்களையும் கொடுத்தான். தன்வகையில் சிறந்த துளைக்கப்பட முடியாத கவசத்தையும், தொடுவதற்கு இலகுவான, நீண்டு உழைக்கக்கூடிய நாணையும் காண்டீவத்தில் பொருத்திக் கொள்ள தந்தான். பிறகு, பழங்காலத்தில் விரோச்சனன் மகனான பலியை தேவர்கள் தலைவன் {இந்திரன்} எந்த ரதத்தில் இருந்து வீழ்த்தினானோ அந்த அற்புத ரதத்தில் நான் ஏறினேன். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {யுதிஷ்டிரரே}, அந்த ரதத்தின் சடசடப்பொலியால், அனைத்து தேவர்களும் என்னை தேவர்களின் மன்னன் {இந்திரன்} என்று நினைத்துக் கொண்டு (அங்கே) வந்தனர்.
பிறகு என்னைக் கண்ட அவர்கள், “ஓ! பல்குனா {அர்ஜுனா}, நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் நடந்ததைச் சொல்லி, “நான் இந்தப் போரை நடத்துவேன். உயர்ந்த நற்பேறைப் பெற்றவர்களே, நிவாதகவசர்களைக் கொல்ல விரும்பிக் கிளம்பிச் செல்கிறேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஓ! பாவமற்றவர்களே, எனக்கு அருள் வழங்குங்கள்” என்று கேட்டேன். அதன் பேரில் அவர்கள் தங்கள் தேவனான புரந்தரனை {இந்திரனை} துதிப்பது போல என்னைத் துதிக்க ஆரம்பித்தனர். அவர்கள், “மகவான் {இந்திரன்}, இந்தத் தேரைச் செலுத்தியே, சம்பரன், நமுசி, பலன், விரித்திரன், பிரஹராதன், நரகன் ஆகியோரை வென்றான். மேலும் மகவான் {இந்திரன்}, இந்தத் தேரில் ஏறியே, பல்லாயிரம், பல கோடி, பல நூறு கோடிகள் தைத்தியர்களை வென்றான். ஓ! கௌந்தேயா {அர்ஜுனா}, நீயும் இத்தேரில் ஏறி, பழங்காலத்தின் சுயம்படைத்த மகவானைப் {இந்திரனைப்} போல உனது பராக்கிரமத்தால், நிவாதகவசர்களைப் போரில் வெல்வாய். இதுவே சங்குகளில் சிறந்தது; இதைக் கொண்டு தானவர்களை நீ வீழ்த்துவாய். இதனால் நீ உயர் ஆன்ம சக்ரனின் {இந்திரனின்} வார்த்தைகளை வெல்வாய்” என்றனர். இதைச் சொன்ன தேவர்கள் (என்னிடம்), ஆழத்தில் உதித்த இந்தச் சங்கைக் {சங்கு} கொடுத்தனர். நான் இதை வெற்றிக்காகப் பெற்றுக் கொண்டேன். இந்நேரத்தில் என்னைத் தேவர்கள் புகழ்ந்தனர். பிறகு செயலில் ஈடுபடுவதற்காக நான், இந்த சங்கையும், கவசத்தையும், கணைகளையும், எனது வில்லையும் தரித்துக் கொண்டு, தானவர்களின் {அசுரர்களின்} வசிப்பிடத்தை நோக்கி முன்னேறினேன்” என்றான் {அர்ஜுனன்}.
நிவாதகவசர்கள்! – வனபர்வம் பகுதி 168-மாதலி செலுத்திய இந்திரனின் தேரில் சென்ற அர்ஜுனன் நிவாதகவசர்களின் நகரத்தை அடைந்தது; அர்ஜுனனின் சங்கு முழக்கத்தில் பயந்திருந்த நிவாதகவசர்களோடு அவன் போர் புரியத் தொடங்கியது..
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “சில இடங்களில் நடைபெற்ற பெருமுனிவர்களின் துதிகளுக்குப் பிறகு நான், (ஒரே நீளமாகத் தொடர்ந்து சென்று) வற்றாத நீர்த் தலைவனான கடலைக் கண்டேன். பாயும் பாறைகள் இடம் பெயர்வது போலவும், ஒன்றாகச் சந்தித்து உருண்டு செல்வது போலவும் அலைகள் எழும்பின. அங்கே ரத்தினங்கள் நிறைந்த மரப்பட்டைகள் சுற்றிலும் (காணப்பட்டது) இருந்தன. அங்கே திமிங்கலங்களும், ஆமைகளும், மகரங்களும் நீரில் பாதி மூழ்கியிருக்கும் பாறைகளைப் போலத் தெரிந்தன. சுற்றிலும் நீரில் மூழ்கியிருந்த ஆயிரக்கணக்கான உருளையான சங்குகள் இரவு நேர வானில் தெரியும் ஒளிபொருந்திய மேகங்களைப் போலத் தெரிந்தன. ஆயிரங்களுக்கு மேல் ஆயிரங்களாகக் குவியல் குவியலாக ரத்தினங்கள் மிதந்தன. சுழற்சியுடன் கூடிய வன்மையான காற்று வீசிக்கொண்டிருந்தது பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது.
சக்திமிக்க அலைகள் கொண்ட அனைத்து நீர்நிலைகளின் தலைவனைக் {கடலைக்} கண்ட பிறகு, அங்கிருந்து குறைந்த தூரத்திலேயே தானவர்கள் நிறைந்த அந்தப் பேய் நகரத்தைக் கண்டேன். பூமிக்கு அடியில் விரைவாகச் சென்று கொண்டிருந்த தானவர்கள் இருந்த அங்கேயும் கூட, தேரைச் செலுத்துவதில் திறன்மிக்க மாதலி {இந்திரனின் தேரோட்டி}, அத்தேரில் உறுதியாக அமர்ந்து சக்தியுடன் அதைச் செலுத்தினான். சில இடங்களில் மோதி, அந்நகரத்தைத் தனது தேரின் சடசடப்பொலியில் நடுங்க வைத்தான் {மாதலி}. வானத்தில் ஏற்படும் மேக கர்ஜனை போன்று இருந்த அத்தேரின் சடசடப்பொலியைக் கேட்ட தானவர்கள் என்னைத் தேவர்கள் தலைவன் {இந்திரன்} என்று எண்ணி அச்சமுற்றனர். பிறகு இதயத்தால் பயந்திருந்த அவர்கள் {தானவர்கள்} அனைவரும், தங்கள் கரங்களில் விற்களையும், கணைகளையும், வாள்களையும், ஈட்டிகளையும், கோடரிகளையும், கதாயுதங்களையும், தண்டங்களையும் தாங்கியபடி நின்றனர்.
பிறகு தங்கள் நகரத்தைக் காக்க வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்த அச்சம் நிறைந்த மனம் கொண்ட தானவர்கள், அங்கிருக்கும் எதையும் கண்டுபிடிக்காதவாறு {நகரத்தின்} வாயில்களை அடைத்தனர். அதன்பிறகு பயங்கர ஒலி கொண்ட தேவதத்தம் என்ற எனது சங்கை எடுத்து, மிகுந்த உற்சாகத்தோடு மீண்டும் மீண்டும் எனது காற்றைச் செலுத்தினேன் {ஊதினேன்}. அந்த முழுச் சூழலையே நிறைத்த அவ்வொலி எதிரொலிகளை எழுப்பியது. இதனால் பெரும் உயிரினங்கள் பயந்து (தங்களை) ஒளித்துக் கொண்டன. பிறகு, ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, திதியின் வாரிசுகளான அந்த நிவாட கவசர்கள் ஆபரணங்கள் பூண்டபடி ஆயிரக்கணக்கில் தங்கள் தோற்றத்தைக் காட்டினர். வித்தியாசமான கவசங்களைப் பூண்டு, தங்கள் கரங்களில் பலதரப்பட்ட ஆயுதங்களும், இரும்பு ஈட்டிகளும், கதாயுதங்களும், தண்டங்களும், சூலங்களும், பட்டாக்கத்திகளும், சக்கரங்களும், சதாக்னிகளும், பூசுண்டிகளும், பலதரப்பட்ட வாட்களையும் எடுத்துக் கொண்டனர்.
ஓ! பாரதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ரதம் செலுத்த வேண்டிய முறை குறித்து நிச்சயித்துக் கொண்ட மாதலி, தரை அளவில் தனது குதிரைகளைச் செலுத்தினான். விரைவாகச் செல்லும் அந்தக் குதிரைகளை அவன் செலுத்திய வேகத்தால் என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தானவர்கள் வித்தியாசமான தங்கள் இசைக்கருவிகள் மூலம் ஒலியெழுப்பினர். அவ்வொலியால் மதியிழந்த அச்சமுற்ற மீன்கள் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் திடீரென விரைந்து ஓடின. ஒரு பெரும் படை எனக்கு எதிராகக் கிளம்பியது. அந்தப் பேய்கள் எனக்கெதிராக நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் கூரிய கணைகளை அடித்தனர்.
பிறகு, ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, நிவாதகவசர்களை அழிக்கும்படியாக அந்தப் பேய்களுக்கும் எனக்குமான பயங்கரப் போர் மூண்டது. அந்தப் பெரும்போருக்கு தேவ முனிவர்களும், தானவ முனிவர்களும், பிரம்ம முனிவர்களும், சித்தர்களும் வந்திருந்தனர். வெற்றியை விரும்பிய அம்முனிவர்கள், தாரைக்கான (நடைபெற்ற) போரில் இந்திரனுக்குச் செய்தது போல (துதி) என்னைத் துதித்து இனிய வார்த்தைகள் கூறினர்.
போர் தொடங்கியது! – வனபர்வம் பகுதி 169-நிவாதகவசர்களோடு அர்ஜுனன் போர் புரியத் தொடங்கியது…
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, பிறகு,, நிவாதகவசர்கள் ஆயுதங்கள் தாங்கிய படி ஒரே கூட்டமாக உணர்ச்சிப் பெருக்குடன் என்னை நோக்கி விரைந்து வந்தார்கள். தேரின் பாதையைத் தடுத்து, சத்தமாகக் கர்ஜித்த அந்தப் பெரும் பலம் மிக்க ரதசாரதிகள் என்னை அனைத்து புறங்களிலும் நெருக்கி, அவர்களது கணைகளால் என்னை மூடினர். பிறகு பெரும் பராக்கிரமம் கொண்ட பிற பேய்கள் {அசுரர்கள்}, தங்கள் கணைகளாலும், தங்கள் கைகளில் இருந்த கைக்கோடரிகளையும், ஈட்டிகளையும், கோடரிகளையும் என் மீது வீசினர். இப்படி வீசப்பட்ட பெரும் பலம் வாய்ந்த கணைகளும், எண்ணற்ற கதாயுதங்களும், தண்டங்களும் இடைவிடாமல் எனது தேரில் விழுந்தபடியே இருந்தன. நிவாதகவசர்களில் பெரும்பயங்கரமான முகம் படைத்தவர்கள் விற்களையும் கூரிய ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு போருக்காக என்னை நோக்கி ஓடி வந்தார்கள். அந்த மோதலில் நேராகச் செல்லக்கூடிய பலவகையான வேகமான கணைகளை எனது காண்டீவத்தில் இருந்து அடித்து, அவர்கள் ஒவ்வொருவரையும் பத்து கணைகளால் துளைத்தேன். கல்லில் கூரேற்றப்பட்ட எனது கணைகளால் அவர்கள் திரும்பி ஓடினார்கள்.
பிறகு, மாதலியால் {இந்திரனின் தேரோட்டியால்} திறம்பட ஓட்டப்பட்ட எனது குதிரைகள், பலவிதமான அசைவுகளைக்காட்டி வாயு வேகத்துடன் இருந்தன. மாதலியால் திறம்பட வழிநடத்தப்பட்ட அவை திதியின் மகன்களை {அசுரர்களை} மிதிக்கத் தொடங்கின. மாதலியால் செயல்திறத்துடன் செலுத்தப்பட்ட அந்தத் தேரில் பூட்டப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான {பதினாயிரம்} குதிரைகள், ஏதோ சிலவே {சிறு எண்ணிக்கையிலான குதிரைகளே} இருந்தது போல எளிதாக நகரத்தொடங்கின. அவற்றின் மிதியாலும், தேர்ச்சக்கரத்தின் சடசடப்பாலும், எனது கணை மழையாலும், தானவர்கள் நூற்றுக்கணக்கில் விழ ஆரம்பித்தனர். விற்களுடன் போர்க்கோலத்தில் இருந்த மற்றவர்கள் உயிரிழந்து, தங்கள் தேரோட்டிகள் கொல்லப்பட்டு, குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்டனர். பிறகு, அனைத்து பக்கங்களையும், திசைகளையும் மூடியபடி, தாக்குவதில் திறம் படைத்த அனைவரும் (அனைத்து தானவர்களும்) பலதரப்பட்ட ஆயுதங்களுடன் வந்ததைக் கண்டு எனது மனது வருத்தமடைந்தது. (இச்சமயத்தில்) கடுமை நிறைந்த குதிரைகளைத் திறம்பட நடத்திய மாதலியின் அற்புத பராக்கிரமத்தை நான் சாட்சியாகக் கண்டேன்.
பிறகு, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அந்த மோதலில் வித்தியாசமான வேகமான ஆயுதங்களால் நான் ஆயுதம்தாங்கிய நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கானவர்களைத் (பேய்களை [அசுரர்களை]} துளைத்தேன். ஓ! எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, அனைத்து முயற்சிகளையும் முனைந்து கொண்டு களத்தில் திரிந்த என்னைக் கண்ட சக்ரனின் வீரத் தேரோட்டி {மாதலி} பெரும் திருப்தி கொண்டான். அந்தக் குதிரைகளாலும், தேராலும் ஒடுக்கப்பட்ட ஒரு சிலர் (அவர்கள் [அசுரர்கள்]} நிர்மூலமடைந்தனர்; பிறர் மோதலில் இருந்து விலகினர்; அதே நேரத்தில் கணைகளால் துன்புற்ற (சிலர்) நிவாடகவசர்கள், களத்தில் எங்களுக்குச் சவால் விட்டு பெரும் பலமிக்கக் கணைகளை மழையாகப் பொழிந்த படி எதிர்த்து வந்தனர். அதன்பேரில், மந்திரங்களால் ஈர்க்கப்பட்டுப் பிரம்ம ஆயுதங்களோடு தொடர்புடைய நான் அடித்த நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான வேகமான ஆயுதங்கள் அவர்களை எரிக்கத் தொடங்கின. என்னால் கடுமையாக ஒடுக்கப்பட்ட அந்தப் பலமிக்க அசுரர்கள் கோபம் மூண்டு ஒன்றாகச் சேர்ந்து கதாயுதங்களையும்ம், கணைகளையும் வாட்களையும் என் மீது பொழிந்தனர்.
பிறகு, ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, தேவர்கள் தலைவனுக்குப் {இந்திரனுக்குப்} பிடித்த ஆயுதமான மாகவன் என்ற பெயர் கொண்ட கடும் சக்தி படைத்த தலைமையான ஆயுதத்தை எடுத்து, அந்த ஆயுதத்தின் சக்தியைக் கொண்டு, அவர்களால் அடிக்கப்பட்ட திரிசூலங்கள், வாட்கள், மற்றும் தோமரங்களை ஆயிரம் துண்டுகளாக அறுத்தெறிந்தேன். பிறகு கோபத்தால் அவர்கள் கரங்களையும் அறுத்து ஒவ்வொருவர் மீதும் பத்து கணைகளைத் துளைத்தேன். அந்தப் போர்க்களத்தில் காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்ட கணைகள் அத்தனையும் கருவண்டுகளின் வரிசைகள் போலத் தெரிந்ததைக் கண்டு மாதலி ரசித்தான். அவர்களும் என் மீது கணைகளைப் பொழிந்தனர். ஆனால் நான் அந்தப் பலமிக்கக் கணைகளை எனது கணைகளால் அறுத்தேன்.
பிறகு இப்படி அடிக்கப்பட்ட நிவாதகவசர்கள் மீண்டும் அனைத்துப் புறங்களில் இருந்தும் பலம் மிக்கக் கணைகளால் என்னை மறைத்தனர். நான் அந்தக் கணைகளின் சக்தியை எனது வேகமான அற்புதமான எரிஆயுதங்களால் சமன் செய்து, கலங்கடித்து, அவர்களை ஆயிரக்கணக்கில் துளைத்தெடுத்தேன். அவர்களது கிழிந்த உடலில் இருந்த இரத்தம், மலை முகடுகளில் இருந்து ஓடும் மழைக்கால நீர் போல வழியத் தொடங்கியது. இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போன்று நேராகச் செல்லும் எனது வேகமான கணைகளால் காயமடைந்த அவர்கள் பெரிதும் துன்பமடைந்தனர். அவர்களது உடல்களில் நூற்றுக்கணக்கான இடங்களில் துளைக்கப்பட்டிருந்தனர். அவர்களது கரங்களின் சக்தியும் குறைந்து போயிற்று. பிறகு அந்த நிவாதகவசர்கள் மாயைக் கொண்டு (மாயையின் உதவி கொண்டு) என்னுடன் மோதினர்.
மாதலி மயங்கினான்! – வனபர்வம் பகுதி 170-தெய்வீக ஆயுதங்களின் துணை கொண்டு அர்ஜுனன் அசுரர்களின் மாயை ஒழித்து அவர்களைக் கொன்றது.
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு மலைப்பாறைகளைப் போன்ற மரத்துண்டுகளைக் கொண்ட கல்மழை பொழிந்தன. அது என்னை மிகவும் துன்புறுத்தியது. அந்த மோதலில் நான் அந்த (மலைகளை), நெருப்புடன் வெளிப்பட்ட எனது வேகமான அம்பு மழையால் சிதறடித்தேன். அந்தப் பாறைத் துணுக்குகள் விழும்போது நெருப்புக் குவியல்களாக விழுந்தன. இப்படி அந்தக் கல் மழை நிறுத்தப்பட்ட பிறகு, நீர் மழை தேர் அச்சின் அளவுள்ள தாரைகளோடு எனது அருகில் தோன்றியது. வானத்தில் இருந்து விழுந்த அந்த ஆயிரக்கணக்கான பலமிக்க நீர்த்தாரைகள் அந்த முழு வானத்தையும் திசைகளையும், திசைப்புள்ளிகளையும் நிரப்பின. கொட்டும் மழையும், வீசும் காற்றும், கர்ஜிக்கும் தைத்தியர்களும் என யாரையும் என்னால் காண முடியவில்லை. அந்தக் போர்க்களத்தில் வானையும் முழுப் பூமியையும் {இணைக்கும்படி} தொட்டுக் கொண்டு, விடாமல் பெய்து கொண்டிருந்த மழை என்னை மயங்கச் செய்தது. அதன்பேரில், நான் இந்திரனிடம் கற்ற தெய்வீக ஆயுதமான, சுடர்விட்டெரியும் பயங்கரமான விசோஷணா என்ற ஆயுதத்தை ஏவி நீரை வற்ற செய்தேன்.
ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, கல்மழை அழிக்கப்பட்டு, நீர்த்தாரைகள் வற்ற செய்யப்பட்ட பிறகு, தானவர்கள் நெருப்பையும் காற்றையும் கொண்டு மாயையைப் பரப்பினார்கள். பிறகு நான் நீராயுதங்களைக் கொண்டு {வருணாஸ்திரம் கொண்டு} அந்நெருப்பை அணைத்தேன். பிறகு பாறைகளை வீசும் ஆயுதம் கொண்டு {சைலாஸ்திரம்} அந்தக் கடும் காற்றை அடக்கினேன். இவையெல்லாம் தடுக்கப்பட்ட பிறகு, ஓ! பாரதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ஒடுக்கப்படமுடியாத தானவர்கள் பலதரப்பட்ட மாயைகளைத் தொடர்ந்து உருவாக்கினர். அங்கே பயங்கரமான கல்மழையும், அக்னி மற்றும் வாயு ஆயுதங்களின் மழையும் பொழிந்தன. அப்படிக் கட்டவிழ்க்கப்பட்ட மாயை அம்மோதலில் என்னைத் துன்புறச் செய்தது. எல்லாப்புறங்களிலும் அடர்த்தியான இருள் தோன்றியது.
இப்படி ஆழ்ந்த அடர்ந்த இருள் உலகத்தை மூடியதால் குதிரைகள் திரும்பின, மாதலி விழுந்தான், அவனது கையில் இருந்த தங்கச் சாட்டை {குறடா} பூமியில் விழுந்தது. ஓ! பாரதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, இதனால் பயந்து போன அவன் என்னிடம் “எங்கிருக்கிறாய்?” என்று அடிக்கடி கேட்டான். அவன் மனம் பேதலித்திருந்த அவ்வேளையில், என்னையும் அச்சம் ஆட்கொண்டது. பிறகு அவசரத்துடன் அவன் {இந்திரனின் தேரோட்டியான மாதலி} என்னிடம், “ஓ! பார்த்தா, அமுதத்துக்காகத் தேவர்களுக்கும் அசுரர்களுக்குப் பெரும் போர் நடந்திருக்கிறது. ஓ! பாவமற்றவனே, நான் அதைக் (அப்போரைக்) கண்டிருக்கிறேன். சம்பரனை அழித்த போதும் பயங்கரமான போர் மூண்டது. அப்போதும் நான் குறைவில்லாமல் தேவர்கள் தலைவனுக்குத் தேரோட்டியாகப் பணி செய்திருக்கிறேன். அதே போல, விரித்திரனைக் கொன்ற போதும், குதிரைகள் என்னால் நடத்தப்பட்டன. ஓ! பாண்டவா {அர்ஜுனா}, விரோச்சனின் மகன், பலன், பிரஹராதன் மற்றும் பிறருடன் நடந்த கோரமான போர்களையும் நான் கண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட பயங்கரமான போர்களில் எல்லாம் நான் பங்குபெற்றிருக்கிறேன். ஆனால், ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, (இதற்கு முன்னால்) எப்போதும் எனது உணர்வுகளை நான் இழந்ததில்லை. பெருந்தகப்பன் அனைத்து உயிர்களின் அழிவை நிர்ணயித்துவிட்டான் என்றே நிச்சயமாக நினைக்கிறேன். அண்ட அழிவைத் தவிர வேறு எதையும் இந்தப் போர் ஏற்படுத்தாது” என்றான் {மாதலி}.
அவனது வார்த்தைகளைக் கேட்ட நான், எனது சொந்த முயற்சியால் கவலை தரும் குழப்பத்தைத் தணித்துக் கொண்டு, “தானவர்களால் பரப்பப்படும் மாயையின் பெரும் சக்தியை அழிப்பேன் என்று நான் உனக்குச் சொல்கிறேன் மாதலி. எனது கரங்களின் வலிமையையும், எனது ஆயுதங்கள் மற்றும் காண்டீவத்தின் வல்லமையையும் பார். இன்று மாயை உருவாக்கும் ஆயுதங்களால் (அதன் துணையால்), நான் இந்த ஆழ்ந்த மனச்சோர்வையும், மற்றவர்களால் பரப்பப்படும் இந்தப் பயங்கரமான மாயையும் அகற்றுவேன். ஓ! தேரோட்டியே {மாதலி}, அஞ்சாதே. உன்னை அமைதிப்படுத்திக் கொள்” என்றேன். இதைச் சொன்ன நான், ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, தேவர்களின் நன்மைக்காக, அனைத்து உயிர்களையும் வெளிப்படுத்தும் ஆயுத மாயையை ஏற்படுத்தினேன். (அவர்களது) மாயை அகன்ற போது, ஒப்பற்ற பராக்கிரமம் கொண்ட அசுரர்களில் முதன்மையானவர்களில் சிலர், பலதரப்பட்ட மாயைகளைப் மீண்டும் பரப்பினார்கள்.
அதன்பேரில், ஒரு நேரம் (உலகம்) தெரிந்தது, மறு நேரம் இருள் அதை விழுங்கியது, ஒரு நேரம் உலகம் பார்வையில் இருந்த மறைந்தது, மறு நேரம் அது நீருக்குள் மூழ்கியது. அது பிரகாசமடைந்த போது, ரதத்தின் முன்பு அமர்ந்த மாதலி, நன்கு செலுத்தப்பட்ட குதிரைகளுடன், மயிர்க்கூச்செரியும்படி அக்களத்தில் உலவ ஆரம்பித்தான். பிறகு கடுமை நிறைந்த நிவாதகவசர்கள் என்னைத் தாக்கத் தொடங்கினார்கள். எனது வாய்ப்பைக் கண்டுபிடித்த நான், அவர்களை {தானவர்களை} யமனின் மாளிகைக்கு அனுப்பி வைக்க ஆரம்பித்தேன். பொங்கியெழும் அம்மோதலில், திட்டமிட்டு நிவாதகவசர்களை அழிக்க எண்ணினேன். திடீரென்று மாயையினால் மறைக்கப்பட்ட அந்த தானவர்களை என்னால் காண முடியவில்லை.
இந்திரலோகம் திரும்பிய அர்ஜுனன்! – வனபர்வம் பகுதி 171-நிவாதகவசர்களைக் கொன்ற பிறகு, அர்ஜுனன் இந்திரலோகம் திரும்புதல்..
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “மாயையின் உதவியுடன் கண்ணுக்குப்புலப்படாமலேயே தைத்தியர்கள் போரிடத்தொடங்கினர். கண்ணுக்குப் புலப்படும் ஆயுதங்களின் சக்தியைப் பயன்படுத்தி நானும் அவர்களுடன் போரிட்டேன். காண்டீவத்தில் இருந்து புறப்பட்ட கணைகள், பல்வேறு இடங்களில் இருந்த அவர்களின் தலைகளை அறுக்கத் தொடங்கின. இப்படி அந்த மோதலில் நான் தாக்கிய போது, திடீரெனத் தங்கள் மாயையை விலக்கிய நிவாதகவசர்கள், விரைவாகத் தங்கள் நகரத்திற்குள் நுழைந்தனர். இப்படி அந்தத் தைத்தியர்கள் ஓடி, அனைத்தும் தெரியத் தொடங்கிய போது, நூற்றுக்கணக்கானவர்களும் ஆயிரக்கணக்கானவர்களும் கொல்லப்பட்டுக் கிடப்பதை நான் கண்டேன். அங்கே நொறுக்கப்பட்ட ஆயுதங்களையும், ஆபரணங்களையும், உறுப்புகளையும், கவசங்களையும் நூற்றுக்கணக்காக நான் கண்டேன். குதிரைகள் ஓரிடத்தில் இருந்து மறு இடம் செல்வதற்கு இடமே கிடைக்கவில்லை {அப்படி அந்த இடம் நிறைந்திருந்தது}. ஆகையால் ஒவ்வொரு குதிப்புக்கும் அவை ஆகாயத்தில் செல்வது போல இருந்தது.
கண்களுக்குப் புலப்படாமலேயே இருந்த நிவாதகவசர்கள் ஆகாயத்தைப் பாறைக்குவியல்களால் மறைத்தார்கள். ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, பிற பயங்கரமான தானவர்கள், பூமியின் குடலுக்குள் நுழைந்து கொண்டு, குதிரைகளின் கால்களையும், தேரின் சக்கரங்களையும் பற்றினர். நான் போரிட்டுக் கொண்டிருந்த போதே, அவர்கள், பாறைகளால் எனது குதிரைகளைக் கடுமையாகக் குழப்பி, (எனது) தேரோடு சேர்த்து என்னையும் தாக்கினர். ஏற்கனவே விழுந்திருந்த பாறைகளாலும், விழுந்த கொண்டிருப்பவைகளாலும், நான் இருந்த அந்த இடம் பார்ப்பதற்கு ஒரு மலைக்குகையைப் போலக் காட்சியளித்தது. பாறைகள் என்னை முழுவதும் மூடின, குதிரைகளும் கடுமையாக நசுக்கப்பட்டன. இதனால் நான் கடுமையாகத் துயருற்றேன். இதை மாதலி {இந்திரனின் தேரோட்டி} கவனித்தான். பயந்திருக்கும் என்னைக் கண்ட அவன் {மாதலி}, என்னிடம், “ஓ! அர்ஜுனா, அர்ஜுனா! நீ அஞ்சாதே. ஓ! மனிதர்களின் தலைவா {அர்ஜுனா}, வஜ்ராயுதத்தை ஏவு” என்றான்.
அவனது வார்த்தைகளைக் கேட்ட நான், தேவர்களின் மன்னனுக்குப் {இந்திரனுக்குப்} பிடித்தமான ஆயுதமான அந்தப் பயங்கரமான வஜ்ராயுதத்தைச் செலுத்தினேன். காண்டீவத்திற்கு மந்திரங்களை ஊட்டிய நான், அந்தப் பாறைகள் இருந்த இடத்தைக் குறி வைத்து, இடி போலத் தாக்குகின்ற கூரான இரும்புக் கணைகளை அடித்தேன். வஜ்ரத்தினால் ஏவப்பட்ட அந்த மிகக்கடுமையான கணைகள் அங்கே இருந்த அனைத்து மாயைகளுக்குள்ளும் புகுந்து, நிவாதகவசர்களுக்கு மத்தியில் சென்றது. இடியின் சீற்றத்தால் {அந்த ஆயுதங்களால்} கொல்லப்பட்ட மலை போன்ற தானவர்கள், பூமியில் மொத்தமாகக் குவியலாக விழுந்தனர். தேரின் குதிரைகளைப் பூமிக்கடியில் கொண்டு போன தானவர்களுக்கு மத்தியில் நுழைந்த அக்கணைகள், அவர்களை யமனின் மாளிகைக்கு அனுப்பி வைத்தன. கொல்லப்பட்ட அல்லது நிலைகுலையச்செய்யப்பட்ட நிவாதகவசர்களால் அந்தப் பகுதியே முழுவதுமாக நிரம்பியிருந்தது. மலைகளைப் போன்ற அவர்கள் பாறைகளைப் போலச் சிதறிக் கிடந்தனர். குதிரைகளுக்கோ, தேருக்கோ, மாதலிக்கோ அல்லது எனக்கோ எந்தக் காயமும் ஏற்படாதிருந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.
பிறகு ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, புன்னகைத்தவாறே மாதலி {இந்திரனின் தேரோட்டி} என்னிடம், “ஓ! அர்ஜுனா, தேவர்களில் கூட உன்னிடம் காணப்படும் பராக்கிரமம் காணப்படவில்லை” என்றான். அந்தத் தானவப் படை அழிக்கப்பட்ட போது, அந்நகரத்தில் இருந்த {அசுரப்} பெண்கள் அனைவரும் இலையுதிர் கால நாரைகள் போல {சாரஸப் பறவைகள் போல} ஒப்பாரி வைத்தனர். பிறகு, தேரின் சடசடப்பொலி நிவாதகவசர்களின் மனைவியருக்கு அச்சமூட்டும்படி நான் மாதலியுடன் அந்த நகரத்திற்குள் நுழைந்தேன். அப்போது, மயில்களைப் போல {நிறத்தில்} இருந்த அந்தப் பத்தாயிரம் குதிரைகளையும், சூரியனைப் பிரதிபலித்த அந்தத் தேரையும் கண்ட அப்பெண்கள் கூட்டமாக ஓடினர். {அப்படி அவர்கள் ஓடும்போது} பயந்திருந்த அம்மங்கையரின் ஆபரணங்களில் (அது கீழே விழும்போது) மலைகளில் இருந்து விழும் பாறைகளைப் (பாறைகளின் ஒலி) போல ஒலி கேட்டது. (ஒரே நீளத்தில்), பீதியடைந்திருந்த அந்தத் தைத்தியர்களின் மனைவியர், எண்ணிலடங்கா ரத்தினங்களுடன் பலவண்ணங்களில் மின்னிய தங்கள் தங்கள் பொன் மாளிகைக்குள் நுழைந்தனர்.
தேவர்களின் நகரைக் காட்டிலும் மேன்மையான அந்த அற்புதமான நகரைக் கண்ட நான், மாதலியிடம், “தேவர்கள் ஏன் இது போன்று (இடத்தில்) வசிக்கவில்லை?. நிச்சயமாக இது புரந்தரனின் {இந்திரனின்} நகரத்தை விட மேன்மையாகத் தோன்றுகிறது” என்றேன். அதற்கு மாதலி, “ஓ பார்த்தா {அர்ஜுனா}, பழங்காலத்தில் இது எங்கள் தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} நகரமாகவே இருந்தது. பிறகு நிவாதகவசர்களால் தேவர்கள் இங்கிருந்து விரட்டப்பட்டனர். கடும் தவங்களை இயற்றிய அவர்கள் பெருந்தகப்பனைத் {பிரம்மனை} திருப்தி செய்து, ‘தாங்கள் இங்கே வசிக்க வேண்டும் என்றும், தேவர்களுடன் போர் ஏற்படும்போது அபாயங்களில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும்’ என்றும் வரங்கள் கேட்டனர் (கேட்டு அதை அடைந்தனர்). பிறகு சக்ரன் {இந்திரன்}, சுயம்புவான தலைவனிடம் {பிரம்மனிடம்} “ஓ! தலைவா, எங்கள் நன்மையில் விருப்பத்துடன், சரியானதைச் செய்யும்” என்றான். அதன்பேரில், ஓ! பாரதா {அர்ஜுனா}, இவ்விஷயத்தில் அந்தத் தலைவன்{பிரம்மன்} (இந்திரனிடம்), “ஓ! எதிர்களைக் கொல்பவனே {இந்திரனே}, வேறு உடல் {அர்ஜுனன் என்ற உடல்} கொண்டு, நீயும் (தானவர்களை அழிப்பாய்) செய்வாய்” என்று கட்டளையிட்டான். பிறகு, அவர்களைக் கொல்வதற்காகவே, சக்ரன் {இந்திரன்}, உன்னிடம் அந்த ஆயுதங்களைக் கொடுத்தான். உன்னால் கொல்லப்பட்ட இவர்களைத் தேவர்களால் கொல்ல இயலவில்லை. ஓ! பாரதா {அர்ஜுனா}, காலத்தின் நிறைவால், அவர்களை அழிப்பதற்காக நீ இங்கு வந்தாய். அதைச் செய்தும் முடித்தாய். ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, இந்தப் பேய்கள் {அசுரர்கள்} கொல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே, மகேந்திரன் {இந்திரன்}, உன்னிடம் இந்த ஆயுதங்களில் உள்ள அற்புதமான தலைமையான சக்திகளை வெளிப்படுத்தினான்” என்றான்.
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “தானவர்களை அழித்து, அந்நகரத்தை வீழ்த்திய பிறகு நான் மாதலியுடன் {இந்திரனின் தேரோட்டியுடன்} சேர்ந்து மீண்டும் தேவர்கள் வசிப்பிடம் சென்றேன்”
ஹிரண்யபுரம்! – வனபர்வம் பகுதி 172-அர்ஜுனன் இந்திரலோகம் திரும்புகையில் ஹிரண்யபுரத்தைப் பார்த்தல்; அந்நகரத்தில் வசித்து வந்த பௌலோமர்களையும் காலகேயர்களையும் கொன்ற பிறகு இந்திரலோகம் திரும்புதல்..
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்படித் திரும்புகையில், சுதந்திரமாக நினைத்தவண்ணம் நகரும் தன்மை கொண்டதும், பூமிக்குச் சம்பந்தமில்லாததும், நெருப்பைப் போன்றும், சூரியனைப் போன்றும் பிரகாசிப்பதுமான பலம்வாய்ந்த ஒரு நகரத்தை {அந்தரத்தில் மிதக்கும் நகரம்} நான் கண்டேன். அந்நகரத்தில் ரத்தினங்கள் நிறைந்த பல்வேறு மரங்களும், இனிய குரல் படைத்த இறகுகள் கொண்டவைகளும் {பறவைகளும்} நிறைந்திருந்தன. நான்கு வாயில்களும், பல வாயில் வழிகளும், கோபுரங்களும் இருந்த தாக்குதலுக்கு அசைந்து கொடுக்காத அந்த நகரத்தில் பௌலோமர்களும் காலகஞ்சர்களும் {காலகேயர்களும்} வசித்தனர். அது அனைத்து விதமான ரத்தினங்கள் நிறைந்து, புவிசாரா அற்புத தோற்றத்தைக் கொண்டிருந்தது. கனிகளும், மலர்களும் தாங்கியிருந்த மரங்கள் அனைத்து விதமான ரத்தினங்களுடன் அந்நகரில் நிறைந்திருந்தன. அங்கே பூமிக்கு சம்பந்தமில்லாத மிக அழகான பறவைகள் இருந்தன. மாலைகள் அணிந்து, கைகளில் சூலங்கள், இருமுனை கொண்ட வாட்கள், கதாயுதங்கள், தடிகள், விற்கள் ஆகியவற்றைச் சுமந்தபடி அசுரர்கள் கும்பலாக மகிழ்ச்சியுடன் அங்கே இருந்தனர்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, தைத்தியர்களின் அந்த அற்புதமான நகரத்தைக் கண்ட நான், மாதலியிடம் {இந்திரனின் தேரோட்டியிடம்}, “அற்புதமாகக் காட்சியளிக்கிறதே அது என்ன?” என்று கேட்டேன். அதற்கு மாதலி, “ஒரு காலத்தில் ஒரு தைத்தியனின் மகளான பௌலோமாவும், அசுர வகையில் வந்த பலமிக்கப் பெண்ணான காலகாவும் ஆயிரம் தேவ வருடங்களுக்குக் கடும் தவமிருந்தனர். அவர்களது தவத்தின் முடிவில், சுயம்பு {பிரம்மன்} அவர்களுக்கு வரங்களை அளித்தான். ஓ! மன்னர்களின் மன்னா {அர்ஜுனா}, என்றும் அவர்களது வாரிசுகளைத் தீயூழ் {துரதிர்ஷ்டம்} அடையாதிருக்கவும், தேவர்களாலோ, ராட்சசர்களாலோ, பன்னகர்களாலோ தங்கள் வாரிசுகளை அழிக்க முடியாதபடி இருக்கவும், அனைத்து வகை ரத்தினங்களும் நிறைந்த மிகப்பிரகாசமானதும், மிக அழகானதும், தேவர்களாலோ, பெரும் முனிவர்களாலோ, யக்ஷர்களாலோ, கந்தர்வர்களாலோ, பன்னகர்களாலோ, அசுரர்களாலோ, ராட்சசர்களாலோ வெல்ல முடியாததுமான வான்நகரம் ஒன்றையும் {பௌலோமாவும் காலகாவும்} வரமாகப் பெற்றனர். ஓ! பாரதர்களில் சிறந்தவனே {அர்ஜுனனே}, நகர்ந்து கொண்டே இருக்கும், தேவர்களற்ற அந்தப்புவிசாரா வான்நகரம் காலகேயர்களுக்காகப் பிரம்மனே உருவாக்கியதாகும்.
விரும்பப்படும் அனைத்து பொருட்களும் நிறைந்த இந்நகரத்தில் துன்பமோ நோயோ அறியப்பட்டதில்லை. ஓ! வீரா {அர்ஜுனா}, ஹிரண்யபுரம் எனக் கொண்டாடப்படும் இந்தப் பலமிக்க நகரத்தில் பௌலோமர்களும் காலகஞ்சர்களும் {காலகேயர்களும்} வசிக்கிறார்கள். இந்நகர் அந்த அசுரர்களாலேயே காக்கப்படுகிறது. ஓ! மன்னா {அர்ஜுனா}, எந்தத் தேவனாலும் கொல்லப்பட முடியாமல் இருப்பதால், ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {அர்ஜுனா}, அவர்கள் தங்கள் அனைத்து விருப்பங்களும் ஈடேறி, துயரைக் காணாமல் இன்பமாக இங்கு வசிக்கிறார்கள். மனிதனின் கைகளில் தான் இவர்களுக்கு அழிவு என்பதைப் பிரம்மன் முன்பே தீர்மானித்துவிட்டான். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நீ வஜ்ராயுதத்தை ஏவி இந்தப் பலமிக்க ஒடுக்கப்பட முடியாத காலகஞ்சர்களை அழிப்பாயாக” என்றான் {மாதலி}.
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, தேவர்களாலோ அசுரர்களாலோ அவர்களுக்கு அழிவில்லை என்பதைக் கேள்விப்பட்ட நான் மகிழ்ச்சியாக மாதலியிடம், “அந்நகரத்தை நோக்கி விரைவாகச் செல். தேவர்கள் தலைவனை {இந்திரனை} வெறுக்கும் அவர்களை நான் என் ஆயுதங்களைக் கொண்டு தாக்குவேன். தேவ வெறுப்புக் கொண்ட தீயவர்களில் என்னால் கொல்லப்பட முடியாதவர்கள் யாருமில்லை என்பது நிச்சயம்” என்றேன். அதன் பேரில் மாதலி, குதிரைகள் பூட்டிய அந்தத் தெய்வீகத் தேரில் என்னை ஹிரண்யபுரத்தின் அருகே அழைத்துச் சென்றான். என்னைக் கண்ட அந்தத் திதியின் மகன்கள் {அசுரர்கள்} பல்வேறு ஆடை ஆபரணங்களையும் அணிந்து, கவசம் பூண்டு என்னை நோக்கி விரைவாகப் பறந்து வந்தனர். பெரும் பராக்கிரமம் கொண்ட அந்தத் தானவர்களில் முதன்மையானவர்கள், என் மீது கோபம் கொண்டு கணைகளாலும், பல்லங்களாலும், கதாயுதங்களாலும், இருமுனை வாள்களாலும், தோமாரங்களாலும் என்னைத் தாக்கினர்.
அதன்பேரில், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, என் வலிமையின் துணை கொண்டு சரமாரியாக வந்த அந்த ஆயுதங்களை எனது கணை மழையால் தடுத்து எனது தேரில் அங்குமிங்கும் நின்று அவர்களைக் குழப்பி அதிசயிக்க வைத்தேன். இப்படிக் கலங்கிப் போன தானவர்கள் ஒருவரை ஒருவர் கீழே தள்ளத் தொடங்கினர். குழம்பிப் போன அவர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதினர். நான் எனது சுடர்விட்டெரியும் கணைகளால் அவர்களது தலைகளை நூற்றுக்கணக்கில் அறுத்துப் போட்டேன். என்னால் கடுமையாகத் தாக்கப்பட்ட அந்தத் திதியின் வாரிசுகள், (தங்கள்) நகரக்குள் {ஹிரண்யபுரத்திற்குள்} தஞ்சம் புகுந்து, தானவர்களுக்குத் தர்மமான மாயையைப் பயன்படுத்தி அதனுடன் {நகரத்துடன்} சேர்ந்து ஆகாயத்தில் பறந்தனர். அதன்பேரில், ஓ! குருக்களின் மகனே {யுதிஷ்டிரரே}, அந்தத் தைத்தியர்களின் வழிகளை அடைத்துக் கொண்டு, பலமிக்கக் கணைகளை அடித்து அவர்களது வழியைத் தடுத்தேன். பிறகு வரத்தின் அருளால் அந்தத் தைத்தியர்கள் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் எங்கும் விருப்பப்படி செல்லவல்ல அந்தப் புவிசாரா வான் நகரத்தில் தங்களைத் நிலைபடுத்திக் கொண்டனர். ஒரு சமயம் (அந்நகரம்) பூமியை அடைந்தது, ஒரு சமயம் மேலெழுந்தது; ஒரு சமயம் குறுக்காகச் சென்றது, ஒரு சமயம் நீருக்குள் மூழ்கியது.
ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, இதனால் நான், அமராவதியை ஒத்திருக்கும், விருப்பப்படி செல்லும் அந்தப் பெரும்பலம் வாய்ந்த நகரத்தைக் கடுமையாகத் தாக்கினேன். ஓ! பாரதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, திதியின் மகன்கள் {அசுரர்கள்} இருந்த அந்நகரத்தை {ஹிரண்யபுரத்தைக்} குவியலான தெய்வீக ஆயுதங்களைக் கொண்டு தாக்கினேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நேராகச் செல்லும், நான் அடித்த இரும்புக் கணைகளால் அடிக்கப்பட்ட அந்த அசுர நகரம் {ஹிரண்யபுரம்} உடைந்து பூமியில் விழுந்தது. இடியைப் போன்ற வேகம் கொண்ட எனது இரும்பு அம்புகளால் அடிக்கப்பட்டுக் காயமடைந்த அவர்கள், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, விதியால் உந்தப்பட்டு விரைந்தனர். பிறகு வானத்துக்கு உயர்ந்த மாதலி, சூரியப் பிரகாசம் கொண்ட அந்தத் தேருடன் முன் வந்து விழுவது போல வேகமாகப் பூமியில் இறங்கினான். பிறகு, ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, என்னுடன் போரிடும் ஆவலில் இருந்த கோபம் கொண்டவர்களின் {அசுரர்களின்} அறுபதாயிரம் {60,000} தேர்கள் என்னைச் சூழ்ந்து நின்றன. கழுகின் இறகுகள் கொண்ட கூரிய கணைகளைக் கொண்டு நான் அவற்றை (தேர்களை) அழித்தேன்.
இதைக் கண்டு, “மனிதர்களால் நமது படையை அழிக்க முடியாது” என்று எண்ணிய அவர்கள் கடல் அலைகளைப் போல மோதலில் ஈடுபட ஆரம்பித்தனர். அதன் பேரில் நான் தொடர்ச்சியாக (நாணில்) தெய்வீக ஆயுதங்களையே பொருத்தினேன். அற்புதமாகப் போரிடும் அந்த ரதவீரர்களின் ஆயிரக்கணக்கான கணைகள் எனது தெய்வீக ஆயுதங்களை எதிர்த்தன. அக்களத்தில் நான் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கானவர்கள் (அசுரர்கள்), விதவிதமான சூழ்ச்சிகள் செய்து தங்கள் தேர்களில் உலாவுவதைக் கண்டேன். பல வண்ண கவசங்களுடனும், கொடிக்கம்பங்களுடனும், வித்தியாசமான ஆபரணங்களுடனும் அவர்கள் என் மனதை மகிழ்வித்தனர். அந்த மோதலில் அவர்களை கணை மழை கொண்டு என்னால் துன்புறுத்த முடியவில்லை. அவர்களாலும் என்னைத் துன்புறுத்த முடியவில்லை. போரில் வல்லவர்களான ஆயுதம் தாங்கிய அந்த எண்ணிலடங்காதவர்களால் தாக்கப்பட்ட நான், அந்தப் பெரும் மோதலில் வலியை உணர்ந்தேன். பயங்கரமான அச்சம் என்னைப் பீடித்தது.
அதன்பேரில் மோதுவதற்கு (எனது சக்திகளைச்) சேகரித்த நான், தேவாதி தேவனான ரௌத்திரனிடம் {சிவனிடம் வணங்கி}, “அனைத்து உயிர்களுக்கும் நன்மையுண்டாகட்டும்” என்று சொல்லி, ரௌத்திரம் {பாசுபதம்} என்ற பெயரால் கொண்டாடப்படும் அனைத்து எதிரிகளையும் அழிக்கும் அந்தப் பெரும் பலமிக்க ஆயுதத்தைப் பொருத்தினேன். பிறகு, மூன்று தலைகளும், ஒன்பது கண்களும், மூன்று முகங்களும், ஆறு கரங்களும் கொண்ட ஒரு ஆண்மகனை நான் கண்டேன். அவனது கேசம் எரியும் நெருப்பைப் போலவும், சூரியனைப் போலவும் பிரகாசித்தது. ஓ! எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, நாக்குகளை நீட்டிக் கொண்டிருக்கும் பெரும் பலம் மிக்கப் பாம்புகளைத் தனது ஆடையாக அவன் கொண்டிருந்தான். ஓ! பாரதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, பயத்திலிருந்து விடுபட்ட நான், அந்தப் பயங்கரமான நித்தியமான ரௌத்திரத்தை {பாசுபதத்தைப்} காண்டீவத்தில் பொருத்தி, அளவிலா சக்தி கொண்ட முக்கண் சர்வனை {சிவனை} வணங்கி, ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, அந்தத் தானவர்களில் முதன்மையானவர்களை அழிக்கும் நோக்கோடு (அவ்வாயுதத்தை) விடுத்தேன்.
ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, அது {பாசுபத ஆயுதம்} அவ்வாறு ஏவப்பட்டதும், அதிலிருந்து, ஆயிரக்கணக்கான மான் உருவங்களும், சிம்மங்களும், புலிகளும், கரடிகளும், எருமைகளும், பாம்புகளும், பசுக்களும், சரபங்களும், யானைகளும், எண்ணிலடங்கா குரங்குகளும், காளைகளும், பன்றிகளும், பூனைகளும், நாய்களும், பேய்பிசாசுகளும், புருண்டங்களும், கழுகுகளும், கருடர்களும், சாமரங்களும், சிறுத்தைகளும், மலைகளும், கடல்களும், தேவர்களும், முனிவர்களும், அனைத்து கந்தர்வர்களும், யக்ஷர்களுடன் கூடிய ஆவிகளும், தேவர்களை வெறுப்பவர்களும் (அசுரர்களும்), குஹ்யர்களும், நைரிதர்களும், யானை வாய் கொண்ட சுறாக்களும், ஆந்தைகளும், மீன்கள், குதிரைகள் போன்ற உருவம் கொண்ட உயிரினங்களும், வாள்கள் மற்றும் பலதரப்பட்ட ஆயுதங்கள் தாங்கிய உயிரினங்களும், கதைகள் மற்றும் தண்டங்கள் ஏந்திய ராட்சர்களும் தோன்றினர்.
அவ்வாயுதம் {பாசுபதம்} ஏவப்பட்டதும் இப்படிப்பட்ட பல்வேறு உருவங்கொண்டவர்களால் இந்த அண்டமே நிறைந்தது. மூன்று தலைகள் கொண்ட சிலவும், நான்கு தெற்றுப் பற்கள் கொண்ட சிலவும், நான்கு வாய்கள் கொண்ட சிலவும், நான்கு கரங்கள் கொண்ட சிலவும் எனத் தங்கள் மேனியில் சதைத் துண்டுகளுடனும், கொழுப்புடனும், எலும்புகளுடனும், ஊனீருடனும் இருந்த பூதங்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட தானவர்கள் அழிவைச் சந்தித்தனர். ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, ஒரு நொடியில் நான் அந்தத் தானவர்கள் அனைவரையும், கல்லின் சாறு கொண்டு நெருப்பையும் சூரியனையும் போலச் சுடர்விட்டெரிந்த எனது அம்புக்கூட்டத்தால் கொன்றேன். காண்டீவத்தால் வெட்டப்பட்டு உயிரிழந்து வானத்தில் இருந்து விழுந்த அவர்களைக் கண்டு, நான் மீண்டும் திரிபுரத்தை அழித்த தெய்வத்தை {சிவனை} வணங்கினேன். புவிசாரா ஆபரணங்கள் பூண்டிருந்த அவர்கள் ரௌத்திராயுதத்தால் {பாசுபதத்தால்} நசுக்கப்பட்டதைக் கண்ட தேவர்களின் தேரோட்டி {மாதலி} பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.
தேவர்களான அவர்களாலும் அடைய முடியாத தாங்க முடியாத காரியத்தைச் சாதித்ததைச் சாட்சியாகக் கண்ட சக்ரனின் {இந்திரனின்} தேரோட்டியான மாதலி, மிகவும் திருப்தி கொண்டு என்னை வணங்கி இரு கரம் கூப்பி, “போர்க்களத்தில் நீ சாதித்த இந்தக் காரியம், பிறந்த எந்தப் பிறவியாலும், தேவர்களாலும் சாதிக்க முடியாது. ஏன் தேவர்கள் தலைவனே {இந்திரனே} இக்காரியத்தைச் சாதிக்க முடியாது. தேவர்களால் அழிக்க முடியாத வானத்தில் மிதந்து கொண்டிருந்த நகரத்தையும், அசுரர்களையும், ஓ! {அர்ஜுனா{ வீரா, நீ உனது பராக்கிரமத்தாலும், தவச்சக்தியாலும் நசுக்கினாய்” என்றான். அந்த வான்நகரம் அழிந்த போதும், தானவர்கள் கொல்லப்பட்ட போதும், அவர்களது மனைவியர் குராரிப் பறவைகளைப் போலத் துன்பத்தால் கதறி அழுது, கூந்தல் கலைந்தபடி நகரத்தைவிட்டு வெளியே வந்தனர். தங்கள் மகன்களுக்காகவும், சகோதரர்களுக்காகவும், தந்தைகளுக்காவும் தரையில் விழுந்து ஒப்பாரி வைத்த அவர்கள் துன்பகரமான குரலுடன் அழுதார்கள். தங்கள் நாயகரை இழந்ததால், அவர்கள் தங்கள் மார்புகளை அடித்துக் கொண்டதால், அவர்களது மாலைகளும் ஆபரணங்களும் கழன்று விழுந்தன.
கந்தர்வர்கள் நகரத்திற்கு ஒப்பான தோற்றம் கொண்ட அந்தத் தானவர்கள் நகரம் ஒப்பாரியால் நிறைந்தது. துயரடைந்து, அருள் இழந்து யானைகள் அற்ற தடாகம் போல, மரங்களற்ற கானகம் போலத் தங்கள் தலைவர்கள் அற்ற அந்நகரம் அழகாக இல்லை. மேகங்களால் கட்டப்பட்ட நகரம் போல அது மறைந்து போனது. களத்தில் எனது காரியம் முடிந்ததும் மகிழ்ச்சி நிறைந்த ஆவி கொண்ட மாதலி என்னைத் தேவர்கள் தலைவனின் வசிப்பிடத்திற்கு அழைத்துச் சென்றான். அந்தப் பலமிக்க அசுரர்களைக் கொன்று, ஹிரண்யபுரத்தை அழித்து, நிவாத கவசர்களையும் கொன்ற நான் இந்திரனிடம் சென்றேன். ஓ! மிகுந்த பிரகாசம் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, மாதலி நடந்ததை நடந்தவாறே தேவேந்திரனிடம் விவரமாகவும் முழுமையாகவும் எனது சாதனைகளை எடுத்துச் சொன்னான்.
ஹிரண்யபுரம் அழிக்கப்பட்டதையும், மாயைகள் சமன்படுத்தப்பட்டதையும், போர்க்களத்தில் நிவாதகவசர்களின் படுகொலையையும் கேள்விப்பட்ட புரந்தரன் {இந்திரன்} மருதர்களுடன் கூடி மிகவும் மகிழ்ந்து, “நன்று; நன்றி!” என்று சொல்லி மகிழ்ந்தான். தேவர்களுடன் கூடிய தேவர்களின் மன்னன் {இந்திரன்}, மீண்டும் மீண்டும் மகிழ்வூட்டி, “தேவர்களாலும் அசுரர்களாலும் செய்ய முடியாத சாதனையைச் செய்திருக்கிறாய். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பலமிக்க எனது எதிரிகளைக் கொன்று உனது குருவின் கூலியை {குருதட்சணையைக்} கொடுத்துவிட்டாய். ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, இப்படியே போர்க்களத்தில் எப்போதும் அமைதியாக இருந்து, தவறில்லாமல் ஆயுதங்களை ஏவினால், தேவர்களும், தானவர்களும், ராட்சசர்களும், யக்ஷர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும், பறவைகளும், பாம்புகளும் உன்னை எதிர்த்துக் களத்தில் நிற்க முடியாது. ஓ! கௌந்தேய {அர்ஜுனா}, உன்னுடைய கரங்களில் பலத்தால் வெல்லப்பட்ட பூமியை, குந்தியின் மகனான யுதிஷ்டிரன் ஆள்வான்” என்றான் {இந்திரன்}.
இந்திர கவசம்! – வனபர்வம் பகுதி 173-இந்திரனிடம் பெற்ற மாலை, சங்கு, கவசம், கிரீடம் ஆகியவற்றைக் குறித்து அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம் சொன்னது; யுதிஷ்டிரன் அந்தத் தெய்வீக ஆயுதங்களைப் பார்க்க விரும்பியது; அர்ஜுனன் நாளை காட்டுவதாகச் சொன்னது…
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “உடலைப் பிளக்கும் கணைகளால் காயப்பட்டிருந்த என்னை, தன்னைப் போலவே நினைத்த தேவர்களின் ஆட்சியாளன் {இந்திரன்}, என்னிடம் மிகவும் உறுதியுடன், “ஓ! பாரதா {அர்ஜுனா}, அனைத்து தெய்வீக ஆயுதங்களும் உன்னிடம் இருக்கின்றன. பூமியில் இருக்கும் எந்த மனிதனும் உன்னைப் பலத்தில் விஞ்ச முடியாது. ஓ! மகனே {அர்ஜுனனே}, நீ களத்தில் இருக்கும்போது, பல க்ஷத்திரியர்களுடன் கூடிய பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், சகுனி ஆகிய அனைவரும் சேர்ந்தும் கூட உன்னில் பதினாறில் {1/16} ஒரு பங்குக்குக் கூட ஆக மாட்டார்கள்” என்றான் {இந்திரன்}.
பிறகு, இந்தப் பொன்மாலையையும், பெரும் ஒலியெழுப்பும் தேவதத்தம் என்ற இந்தச் சங்கையும், துளைக்க முடியாதபடி உடலைப் பாதுகாக்கும் தனது தெய்வீக கவசத்தையும் அந்தத் தலைவனான மகவான் {இந்திரன்} எனக்குக் கொடுத்தான். இந்திரன் தானே (எனது தலையில்) இந்தக் கிரீடத்தைப் பொருத்தினான். அழகான, அரிதான புவிசாரா ஆடை ஆபரணங்களையும் எனக்குச் சக்ரன் {இந்திரன்} கொடுத்தான். இம்முறையில், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, தேவர்களுடன் சேர்ந்த சக்ரன் {இந்திரன்} என்னிடம், “ஓ! அர்ஜுனா, நீ செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது; உனது சகோதரர்கள் உன்னை நினைக்கிறார்கள்” என்றான். ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, சூதாட்டத்தின் காரணமாக எழும் கோபத்தை நினைத்தவாறே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நான் அந்த ஐந்து வருடங்களையும் இந்திரனின் வசிப்பிடத்தில் இப்படியே கழித்தேன். பிறகு அங்கிருந்து வந்து, சகோதரர்கள் சூழ இருந்த உம்மைக் கந்தமாதனத்தின் தாழ்ந்த பகுதிகளில் இருக்கும் சிகரத்தில் கண்டேன்” {என்றான் அர்ஜுனன்}.
யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, “ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, நற்பேறின் நிமித்தமாகவே நீ ஆயுதங்களை அடைந்தாய்; நற்பேறின் நிமித்தமாகவே தேவர்களின் தலைவன் {இந்திரன்} உன்னை வணங்கினான். ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {அர்ஜுனா}, நற்பேறின் நிமித்தமாகவே தேவியுடன் கூடிய ஸ்தாணு {உமையுடன் கூடிய சிவன்}, ஓ! பாவமற்றவனே உனக்குத் தங்களை வெளிப்படுத்தி, போரில் உன்னால் திருப்தியடைந்தான்; ஓ! பாரதர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, நற்பேறின் நிமித்தமாகவே நீ லோகபாலர்களைச் சந்தித்தாய்; ஓ! பார்த்தா, நற்பேறின் நிமித்தமாகவே நாம் வளமையடைந்தோம்; நற்பேறின் நிமித்தமாகவே நீ திரும்பி வந்தாய். நகரங்களை மாலையாக அணிந்த முழு உலகமும் வெல்லப்பட்டதாகவும், திருதராஷ்டிரன் மகன்கள் ஏற்கனவே அடக்கப்பட்டதாகவும் நான் இன்று கருதுகிறேன். இப்போது, ஓ! பாரதா {அர்ஜுனா}, பலமிக்க நிவாதகவசர்களை நீ எதன் உதவியால் கொன்றாயோ அந்தத் தெய்வீக ஆயுதங்களைக் காண ஆவலாக இருக்கிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}.
அதற்கு அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “கடும் நிவாதகவசர்களை எதை வைத்துக் கொன்றேனோ அந்தத் தெய்வீக ஆயுதங்களை நாளை காலையில் நீர் காணலாம்” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படித் தனது வருகையைக் குறித்து (உண்மையைத்) தெரிவித்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களுடன் ஒன்றாக அன்று இரவைக் கடத்தினான்.
அர்ஜுனனைத் தடுத்த நாரதர்! – வனபர்வம் பகுதி 174-தான் பெற்ற தெய்வீக ஆயுதங்களை அர்ஜுனன் யுதிஷ்டிரனுக்குக் காட்டியது; ஆயுதங்களின் சக்தியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உலகம் நடுங்கியது; இந்திரனால் அனுப்பப்பட்ட நாரதர் அர்ஜுனனைத் தடுத்தது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இரவு கடந்ததும் நீதிமானான யுதிஷ்டிரன் எழுந்து, தனது தம்பிகளுடன் சேர்ந்து தேவையான கடமைகளைச் செய்தான். பிறகு தனது தாயின் {குந்தியின்} மகிழ்வுக்குக் காரணமான அர்ஜுனனிடம் அவன் {யுதிஷ்டிரன்}, “ஓ! கௌந்தேயா {அர்ஜுனா}, தானவர்களை எவற்றைக் கொண்டு வீழ்த்தினாயோ அவ்வாயுதங்களைக் (எனக்கு) காட்டு” என்றான்.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, அதன்பேரில், ஓ பாரதா {ஜனமேஜயா}, பாண்டுவின் மகனான அதீத தூய்மை பயிலும் பெரும் பலமிக்கத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேவர்களால் தனக்குக் கொடுக்கப்பட்ட ஆயுதங்களைக் காட்டினான். மலைகளைத் துருவமாகவும் {pole} தரையை அச்சாகவும் {axle}, அடர்த்தியான மூங்கில் மரங்களை {துருவத்தையும் அச்சையும் இணைக்கும்} முப்பட்டையான மரமாகவும் {socket pole} கொண்ட பூமியில் தனது தேரில் அமர்ந்திருப்பது போல, பிரகாசமிக்க தெய்வீக கவசத்துடனும் காந்தியுடனும் அமர்ந்திருந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, தெய்வீக ஆயுதங்களை வெளிப்படுத்துத் துவங்கும் பொருட்டுத் தனது காண்டீவத்தையும், தனக்குத் தேவர்களால் கொடுக்கப்பட்ட சங்கையும் எடுத்தான்.
அந்தத் தெய்வீக ஆயுதங்கள் பொருத்தப்பட்டபோது, (அர்ஜுனனின்) பாதங்களால் ஒடுக்கப்பட்ட பூமி, (தன் மேலிருந்த) மரங்களுடன் சேர்ந்து நடுங்கத் தொடங்கினாள்; நதிகளும், கடலும் கலங்கித் தத்தளித்தன. (மலைப்) பாறைகள் வெடித்தன; காற்றும் அமைதியடைந்தது (வீசவில்லை). சூரியன் பிரகாசிக்கவில்லை; நெருப்புச் சுடர்விடவில்லை; இறுபிறப்பாளர்களின் வேதங்கள் பிரகாசிக்கவில்லை {அந்தணர்களுக்கு வேதங்கள் நினைவுக்கு வரவில்லை}. மேலும், ஓ! ஜனமேஜயா, இதனால் துன்பப்பட்ட பூமிக்கு அடியில் வசிக்கும் உயிரினங்கள், நடுக்கத்துடனும் உருக்குலைந்த முகத்துடனும் மேலெழும்பி கரங்கள் கூப்பிபடி பாண்டவர்களைச் சூழ்ந்து கொண்டன. அந்த ஆயுதங்களின் வெப்பத்தால் எரிக்கப்பட்ட அவை, தனஞ்சயனைத் (தங்கள் உயிருக்காகத்} தஞ்சம் அடைந்தன.
பிறகு பிரம்ம முனிவர்களும், சித்தர்களும், பெருமுனிவர்களும், அசையும் உயிரினங்கள் அனைத்தும் (காட்சிக்கு) வந்தன. தேவ முனிவர்களில் முதன்மையானவர்களும், தேவர்களும், யக்ஷர்களும், ராட்சசர்களும், கந்தர்வர்களும், இறகு படைத்த குழுக்களும் {பறவைகளும்}, (பிற) விண்ணதிகாரிகளும் {பறவைகளும்} (காட்சியில்) வந்தன. பெருந்தகப்பனும் {பிரம்மாவும்}, அனைத்து லோகபாலர்களும், தெய்வீகமான மகாதேவனும் தங்களைத் தொடர்பவர்களுடன் அங்கே வந்தனர். பிறகு ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, புவிசாரா பலவண்ண மலர்களைச் சுமந்து வந்த வாயு (காற்று தேவன்), அந்தப் பாண்டவனைச் {அர்ஜுனனைச்} சுற்றி அவற்றைத் தூவிச் {சென்றான்} விழுந்தான். தேவர்களால் அனுப்பப்பட்ட கந்தர்வர்கள் பல்வேறு பாடல்களைப் பாடினர். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அப்சரக்கூட்டங்களும் (அங்கே) ஆடின.
அப்படிப்பட்ட வேளையில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, தேவர்களால் அனுப்பப்பட்ட நாரதர் அங்கே வந்து, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இனிய வார்த்தைகளால், “அர்ஜுனா, ஓ! அர்ஜுனா, தெய்வீக ஆயுதங்களைத் தொடுக்காதே. (தகுந்த) ஒரு இலக்கும் இல்லாமல் இவற்றைப் பிரயோகம் செய்யக்கூடாது. இலக்கு என்று ஒன்று (தற்போது) இருந்தாலும், ஆபத்தில்லா சூழ்நிலையில் இவற்றைப் பிரயோகம் செய்யக்கூடாது. ஓ! குருக்களின் மகனே {அர்ஜுனா}, (தகுந்த நிகழ்வில்லாமல்) பிரயோகிப்படும் இந்த ஆயுதங்கள் பெரும் தீமையைச் செய்யும். மேலும், ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, உனக்கு உரைக்கப்பட்டது போல இந்தப் பலமிக்க ஆயுதங்களை உரியமுறையில் வைத்திருந்தால், சந்தேகமில்லாமல் உனது பலமும் மகிழ்ச்சியும் பெருக அது வழிவகுக்கும். இவற்றை உரிய முறையில் வைக்கவில்லையென்றால், ஓ! பாண்டவா {அர்ஜுனா}, இவை மூவுலகங்களையும் அழிக்கவல்ல கருவிகளாக மாறும். எனவே, நீ இதுபோல மீண்டும் செயல்படாதே. ஓ! அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, பார்த்தன் {அர்ஜுனன்} போர்க்களத்தில் உனது எதிரிகளை அடிக்கும்போது, நீயும் இந்த ஆயுதங்களைக் காண்பாய்” என்றார் {நாரதர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இப்படிப் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} தடுத்த தேவர்களும் பிறரும் அங்கிருந்து தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பினர். ஓ! கௌரவா {ஜனமேஜயா}, அவர்கள் அனைவரும் சென்ற பிறகு, அதே வனத்தில் திரௌபதியுடன் கூடிய பாண்டவர்கள் மகிழ்ச்சியாக வசிக்க ஆரம்பித்தனர்.
விடைபெற்றார் லோமசர்! – வனபர்வம் பகுதி 175-கந்தமாதனத்தில் இருந்து இறங்க யுதிஷ்டிரனுக்கு பீமன் அறிவுறுத்தல்; பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்ட லோமசர் தேவலோகம் சென்றது…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “அவ்வீரர்களில் பிரதானமானவன் {அர்ஜுனன்}, ஆயுதங்களை அடைந்த பின் விரித்திரனைக் கொன்றவனின் {இந்திரனின்} வசிப்பிடத்தில் இருந்து திரும்பிய பிறகு, போர்க்குணமுள்ள அந்தத் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} துணையுடன் பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} என்ன செய்தார்கள்?” என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இந்திரனுக்கு நிகரானவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனனின் துணை கொண்டு, அந்த அழகான அற்புதமான வனத்தில் (உள்ள) கருவூலத்தலைவனின் {குபேரனின்} நந்தவனத்தில் அவர்கள் இன்பமாக விளையாடிக் கொண்டிருந்தனர். மனிதர்களின் தலைவனான கிரீடி {அர்ஜுனன்}, ஆயுதங்களையே நோக்கமாகக் கொண்டு, கையில் வில்லுடன், மரங்கள் நிறைந்த ஒப்பற்ற இன்பமான நிலங்களை ஆராய்ந்தபடி உலாவினான். மன்னன் வைஸ்ரவணனின் {குபேரனின்} அருளால் ஒரு வசிப்பிடத்தை அடைந்த இறையாண்மையின் மகன்கள் {பாண்டவர்கள்}, மனிதர்களின் ஐஸ்வரியத்தில் எந்த அக்கறையும் கொள்ளவில்லை. ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவர்களது (வாழ்வின்) அந்தப் பகுதி அமைதியாகக் கடந்தது. பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துணையாகக் கொண்ட அவர்கள், நான்கு வருடங்களை ஒரு இரவைப் போலக் கழித்தனர். பாண்டவர்கள் (இந்த நான்கு வருடங்களையும்), முன்பே கழித்த ஆறு வருடங்களையும் சேர்த்து பத்து வருடங்களைச் சீராகக் கழித்தனர்.
பிறகு, வாயுத்தேவனின் உணர்ச்சி வேகமுள்ள மகனும் {பீமனும்}, ஜிஷ்ணுவும் {அர்ஜுனனும்}, வீரர்களான இரட்டையர்களும் {நகுலன், சகாதேவனும்} தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போல அமர்ந்திருந்த மன்னனின் {யுதிஷ்டிரனின்} முன்னால் அமர்ந்து, அவனிடம் நன்மையான இனிய வார்த்தைகளைப் பேசினர். “உமது வாக்குறுதியை வாய்க்கச் செய்வதற்கும், உமது நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்காகவுமே, ஓ! குருக்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, கானகத்தைக் கைவிட்டு, சுயோதனனையும் {துரியோதனனையும்} அவனைத் தொடர்பவர்களையும் கொல்லச் செல்லாமல் இருக்கிறோம். மகிழ்ச்சியுடன் இருக்கும் தகுதியை நாம் பெற்றிருந்தாலும், மகிழ்ச்சியை இழந்து வாழ்கிறோம். (கானகத்தில்) நாம் (இந்நிலையில்) வாழும் பதினோறாவது {11} ஆண்டாகும் இது. இனி தீய மனமும் குணமும் கொண்டவர்களை ஏமாற்றி, தலைமறைவு காலத்தை {அஞ்ஞாதவாசத்தை) எளிதாக வாழ்வோம். உமது ஆணையின் பேரிலேயே, ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அச்சத்தில் இருந்து விடுபட்டு, மரியாதையைத் துறந்து நாம் காடுகளில் உலவி வருகிறோம். நமது குடியிருப்பு அருகில் இருப்பதைக் கண்டு (நம் எதிரிகள்), நாம் தொலைதூர நாடுகளுக்குச் சென்றிருப்போம் என்பதை நம்ப மாட்டார்கள். அங்கு அறியப்படாதவாறு வாழ்ந்த பிறகு, அந்தப் பொல்லாத மனிதர்களான சுயோதனன் {துரியோதனன்} மற்றும் அவனைத் தொடர்பவர்களைப் பழிதீர்த்து, அந்த மனிதர்களில் தாழ்ந்தவனை {துரியோதனனை} எளிதாக வேரறுத்து, அவனைக் கொன்று நமது நாட்டை மீட்டெடுப்போம். ஆகையால், ஓ! தர்மராஜா {யுதிஷ்டிரரே}, நீர் பூமிக்கு இறங்குவீராக. ஓ! மன்னா, சொர்க்கபுரி போல இருக்கும் இந்தப் பகுதியில் நாம் வசிப்போமேயானால், நாம் நமது கவலைகளை மறந்துவிடுவோம். அப்படி நேர்கையில், ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, நறுமணமிக்க மலரைப் போல அசையும் மற்றும் அசையாத உலகங்களில் உமது புகழ் அழிந்து போகும். குரு தலைவர்களிடம் இருந்து நாட்டை அடைந்தால், நீர் அதை (பெரும் புகழை) அடைந்து, பல்வேறு வேள்விகளைச் செய்வீர். இதை {இப்போது வாழும் இந்நிலையை} நீர் குபேரனிடம் இருந்து பெறுகிறீர். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதை நீர் அடையலாம். இப்போது, ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, தவறிழைத்த எதிரிகளைத் தண்டிப்பது மற்றும் அழிப்பதை நோக்கி உமது மனதைச் செலுத்தும். ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இடியைத் தாங்குபவனே {இந்திரனே} உமது பராக்கிரமத்திற்கு முன்னால் நிற்க இயலாது. ஓ! தர்மராஜா {யுதிஷ்டிரரே} சுபர்ணத்தைத் தனது குறியாகக் கொண்டவனும் (கிருஷ்ணனும்), சினியின் பேரனும் (சாத்யகியும்), உமது நன்மையை விரும்புகிறார்கள். தேவர்களுடனேயே கூட மோதல் ஏற்பட்டு, அதில் அவர்கள் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் வலியை அடைய மாட்டார்கள். ஓ! மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே} அர்ஜுனன் ஒப்பற்ற பலத்துடன் இருக்கிறான். நானும் அவ்வாறே இருக்கிறேன். ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே} யாதவர்களுடன் கூடிய கிருஷ்ணன் உமது நன்மையில் விருப்பம் கொண்டிருக்கிறான். நானும், போரில் சாதிக்கும் வீரர்களான இரட்டையர்களும் {நகுலன், சகாதேவன் ஆகியோரும்} அவ்வாறே இருக்கிறோம். நீர் செல்வம், செழிப்பு, மேன்மை ஆகியவற்றைப் பெறுவதற்காக நாங்கள் எதிரிகளுடன் மோதி அவர்களை அழிப்போம்” என்றான் {பீமன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அறம், பொருள் ஆகியவற்றை அறிந்து, அளவில்லா பராக்கிரமத்துடன் இருக்கும், தர்மனின் பெருமைமிக்க அற்புதமான மகன் {யுதிஷ்டிரன்} அவர்களின் நோக்கத்தை அறிந்து, வைஸ்ரவணனின் {குபேரனின்} வசிப்பிடத்தை வலம் வந்தான். மாளிகைகளிடமும், நதிகளிடமும், தடாகங்களிடமும், அனைத்து ராட்சசர்களிடமும் விடைபெற்ற நீதிமானான யுதிஷ்டிரன், தாங்கள் (ஏற்கனவே) வந்த வழியை நோக்கினான். பிறகு மலையைப் பார்த்தபடி அந்த உயர் ஆன்ம, சுத்த மனம் படைத்தவன் அந்த மலைகளில் சிறந்த மலையிடம், “ஓ! மலைகளில் முதன்மையானவனே, எதிரிகளைக் கொன்று, எனது நாட்டை மீட்டு, எனது காரியங்கள் அனைத்தும் முடிந்ததும், நான் எனது நண்பர்களுடன் தவம்பயின்று கட்டுப்பட்ட ஆன்மாவுடன் மீண்டும் உன்னைக் காண்பேன்” என்றான். இதை அவன் தீர்மானமாகவும் கொண்டான். தனது தம்பிகளுடனும், அந்தணர்களுடனும், அந்தக் குருக்களின் தலைவன் {யுதிஷ்டிரன்} அதே சாலை வழியே முன்னேறினான். கடோத்கசனும் அவனைத் தொடர்பவர்களும் அவர்களை மலைமுகடுகளில் சுமந்து சென்றனர். அவர்கள் பயணிக்கத் தொடங்கியதும், ஒரு தந்தை மகனுக்கு அறிவுரை கூறுவது போலக் கூறிய பெரும் முனிவரான லோமசர், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், சொர்க்கவாசிகளின் புனிதமான இருப்பிடத்திற்குச் சென்றார். பிறகு மனிதர்களில் முதன்மையான ஆர்ஷ்டிஷேணராலும் அறிவுறுத்தப்பட்ட பார்த்தர்கள் {பாண்டவர்கள்}, அழகான தீர்த்தங்களையும், ஆசிரமங்களையும், பல பெரிய தடாகங்களையும் கண்ட படி தனியாகச் சென்றார்கள்.
துவைதவனம் திரும்பிய பாண்டவர்கள்! – வனபர்வம் பகுதி 176-கந்தமாதனத்தில் இருந்து இறங்கிய பாண்டவர்கள் கைலாசத்தைக் காண்பது; பதரியில் தங்குவது; விருஷபர்வாவையும் சுபாகுவையும் மீண்டும் காண்பது; மீண்டும் சரஸ்வதி நதிக்கரையில் இருந்த துவைதவனம் அடைந்து மகிழ்ந்தது.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “நீர்வீழ்ச்சிகள் நிறைந்த அழகான மலையில் இருக்கும் தங்கள் மகிழ்ச்சிகரமான இல்லத்தையும், பறவைகளையும், எட்டு திசைகளின் யானைகளையும் {திக் கஜங்களையும்}, குபேரனின் சேவர்களையும் {கின்னரர்களையும்} விட்டு அகன்ற அந்தப் பாரதக் குலத்தின் மனிதர்களில் முதன்மையானவர்களை மகிழ்ச்சி கைவிட்டது
குபேரனுக்குப் பிடித்த மலையான மேகங்களைப் போலத் தெரியும் கைலாசத்தைக் கண்டதும், அந்தப் பாரதக் குலத்தின் தலைமையான வீரர்களின் மகிழ்ச்சி அதிகரித்தது. கத்திகளும் விற்களும் தாங்கிய வீர மனிதர்களில் முதன்மையான அவர்கள், உயரங்களையும், மலைக்கணவாய்களையும், சிங்கங்களின் குகைகளையும், மலைக்குகைகளையும், சில பள்ளத்தாக்குகளையும், எண்ணிலடங்கா நீர்வீழ்ச்சிகளையும் கண்டும், மேலும் எண்ணிலடங்கா மான், பறவைகள் மற்றும் யானைகளுடன் கூடிய பெரும் கானகங்களையும் கண்டு திருப்தியுடன் முன்னேறினர். அழகான வனநிலங்களையும், ஆறுகளையும், தடாகங்களையும், குகைகளையும், மலைப்பொந்துகளையும் அடைந்தனர். இவை அனைத்தும் அந்தப் பெரும் மனிதர்களுக்கு இரவுக்கும் பகலுக்குமான வசிப்பிடங்களாக இருந்தன. அடைய முடியாத இடங்களை அடைந்து வசித்து, புத்திக்கெட்டாத ஆடம்பரம் நிறைந்த கைலாசத்தைக் கடந்த அவர்கள் விருஷபர்வாவின் மிக அழகான அற்புதமான ஆசிரமத்தை அடைந்தனர். மன்னன் விருஷபர்வாவைச் சந்தித்து, அவனால் வரவேற்கப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்} மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, மலைகளில் நேர்ந்த தங்கள் பயணத்தை விரிவாகவும் துல்லியமாகவும் அவனுக்கு {விருஷபர்வாவுக்கு} எடுத்துரைத்தனர்.
பிறகு,
தேவர்களும், பெரும் முனிவர்களும் வந்து போகும் அந்தப் புனிதமான வசிப்பிடத்தில் ஒரு இரவை இனிமையாகக் கடத்திய அந்தப் பெரும் போர்வீரர்கள் விசாலை என்று அழைக்கப்பட்ட இலந்தை மரத்தை வந்தடைந்தனர். பிறகு அந்தத் தயாள மனம் கொண்ட மனிதர்கள் நாராயணனின் இடத்தை அடைந்து, தேவர்களும் சித்தர்களும் வந்து போகும் குபேரனுக்கு விருப்பமான தடாகத்தைக் கண்டு துன்பமற்று வாழ்ந்தனர். அந்தத் தடாகத்தைக் கண்ட மனிதர்களில் முதன்மையான அந்தப் பாண்டு மகன்கள் நந்தனா என்ற நந்தவனத்தில் வசிப்பிடம் கிடைத்த பிரம்ம முனிவர்களைப் போல அனைத்துத் துன்பங்களையும் துறந்து அந்த இடத்தையும் கடந்து சென்றனர்.
அனைத்து வீரர்களும் பதரியில் {Badari} மகிழ்ச்சியாக ஒரு மாதம் வாழ்ந்த பிறகு, கிராதர்களின் மன்னனான சுபாகுவின் நாட்டை நோக்கி, தாங்கள் ஏற்கனவே வந்த வழியிலேயே முன்னேறினர். கடினமான இமாலயப் பகுதிகளைக் கடந்து, சீனம், துஷாரம், தரதம், அனைத்து தட்பவெப்ப நிலைகளையும் கொண்டதும், ரத்தினங்களைக் குவியலாகக் கொண்டதுமான குளிந்தம் ஆகிய நாடுகளைக் கடந்த அந்தப் போர்க்குணமிக்க மனிதர்கள் சுபாகுவின் தலைநகரத்தை அடைந்தனர். மன்னர்களின் மகன்களும், பேரப்பிள்ளைகளுமானவர்கள் தனது நாட்டை அடைந்ததைக் கேள்விப்பட்ட சுபாகு, மகிழ்ச்சியுடன் (அவர்களைச் சந்திக்க) முன்னேறினான். குருக்களில் சிறந்தவனும் {யுதிஷ்டிரனும்} அவனை வரவேற்றான். மன்னன் சுபாகுவைச் சந்தித்து, விசோகனைத் தலைமையாகக் கொண்ட தங்கள் அனைத்து தேரோட்டிகளுடனும் இணைந்து, இந்திரசேனன் முதற்கொண்ட சேவகர்களையும், கண்காணிப்பாளர்களையும், சமையலறைப் பணியாட்களையும் கண்டு அவருகளுடன் இணைந்து ஒரு நாள் இரவை அமைதியாகக் கழித்தனர்.
பிறகு அனைத்துத் தேர்களையும், தேரோட்டிகளையும் திரும்பப் பெற்றுக் கொண்டு, கடோத்கசனுக்கும் அவனைப் பின்தொடர்பவர்களுக்கும் விடை கொடுத்து அனுப்பி, யமுனைக்கு அருகே இருந்த மலைகளின் ஏகாதிபதியிடம் சென்றனர். நீரவீழ்ச்சிகளும், சாம்பல் மற்றும் காவி நிறச் சரிவுகளும், பனிமூடிய சிகரங்களும் கொண்ட அந்த மலைக்கு மத்தியில், சித்திரரத வனத்துக்கு ஒப்பான, காட்டுப் பன்றிகளும், பலதரப்பட்ட மான்களும் பறவைகளும் கொண்ட விசாகயூபம் என்ற கானகத்தைக் கண்ட போர்க்குணமிக்க அந்த மனிதர்கள் அதைத் தங்கள் இல்லமாக்கினார்கள்.
வேட்டையில் மயங்கி, அதையே தங்கள் தலைமைத் தொழிலாகக் கொண்ட பிருதையின் {குந்தியின்} மகன்கள் அந்தக் கானகத்தில் ஒரு வருடம் அமைதியாக வசித்தனர். அங்கே இருந்த ஒரு பெரிய மலைக்குகையில், சஞ்சலமும் துயரமும் பீடித்த இதயத்துடன் இருந்த விருகோதரன் {பீமன்}, பசியால் வெறுப்புற்றிருந்த, மரணத்தைப் போன்று கடுமையாக இருந்த ஒரு பெரும் பலமிக்கப் பாம்பைக் கடக்க நேர்ந்தது. இப்பிரச்சனையில், பக்திமிக்க மனிதர்களில் சிறந்த யுதிஷ்டிரன் தலையிட்டு விருகோதரனை {பீமனைக்} காத்தான். பீமனின் முழு உடலையும் தனது பிடிக்குள் விரைவாகப் பற்றியிழுத்த பாம்பிடம் இருந்து, எல்லையற்ற பலம் கொண்ட அவன் {யுதிஷ்டிரன்} மீட்டான். கானக பயணத்தின் பனிரெண்டாவது {12} வருடம் ஆரம்பித்ததும், அந்தக் குரு குலத்தின் பிரகாசமிக்கக் கொழுந்துகள் {பாண்டவர்கள்}, தவத்தில் ஈடுபட்டு, வில்வித்தையைத் தலைமையாகப் பயின்று சித்திரரதம் போல இருந்த அந்தக் கானகத்தைவிட்டு, சரஸ்வதியின் {நதியின்} அருகே வசிக்க எண்ணம் கொண்டு மகிழ்ச்சிகரமாகப் பாலைவனத்தின் எல்லைகளுக்கு அருகே வந்து, அந்த நதியின் கரைக்கருகே இருந்த துவைதவனத்தின் தடாகத்தை அடைந்தனர்.
ஐம்பொறிகளை அடக்கி, தர்ப்பையையும், தீர்த்த கமண்டலத்தையும் உடைய, அறச்சடங்கை ஒடுக்கும் பயிற்சிகளால் ஆழ்ந்த தியானம் செய்து, அங்கு வசிக்கும் தவம் பயிலும் தவசிகள், துவைதவனத்துக்குள் பாண்டவர்கள் நுழைவதைக் கண்டு, அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களை நோக்கி வந்தனர். புனிதமான அரசு, ருத்திராட்சம், ரௌஹீதகம், வஞ்சி, இலந்தை, கருங்காலி, வாகை, பிலவம், புங்கை, பீலுவிருக்ஷம், வன்னி, மூங்கில் ஆகிய மரங்கள் அந்தச் சரஸ்வதி நதியின் கரையில் வளர்ந்திருந்தன. யக்ஷர்கள், கந்தர்வர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோருக்குப் பிடித்தமானதும் தேவர்களின் இல்லம் போன்றதுமான சரஸ்வதியின் {நதியின்} (அருகில்) முழு மனநிறைவுடன் உலவி வந்த அந்த மன்னர்களின் மகன்கள் {பாண்டவர்கள்} அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
பாம்பிடம் அகப்பட்ட பீமன்! – வனபர்வம் பகுதி 177-பீமன் வனத்தில் வேட்டையாடித் திரிகையில் ஒரு பாம்பிடம் அகப்பட்டது…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! முனிவரே {வைசம்பாயனரே}, பெரும் பராக்கிரமும், பத்தாயிரம் {10,000} யானைகளின் பலமும் கொண்ட பீமன் அந்தப் பாம்பினால் (அதைக் கண்டு) எப்படிப் பீதியடைந்தான்? அந்த எதிரிகளைக் கொல்பவன், (குபேரனின்) தாமரைத் தடாகத்தில் யக்ஷர்களையும், ராட்சசர்களையும் கொன்றவன், வளங்களை அளிக்கும் புலஸ்தியரின் மகனை {குபேரனை} கர்வத்தோடு ஒற்றைக்கு ஒற்றைச் சண்டைக்கு அழைத்தவன், அப்படிப்பட்ட அவன் {பீமன்} பயத்தால் கலங்கி திகைத்துப் போனான் என்கிறீரே! நான் இதை (உம்மிடமிருந்து) கேட்க விரும்புகிறேன்; எனது ஆவல் பெரிதாக இருக்கிறது” என்று கேட்டான் {ஜனமேஜயன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயனே}, மன்னன் விருஷபர்வனின் ஆசிரமத்தை அடைந்த அந்தப் பயங்கரப் போர்வீரர்கள் பலதரப்பட்ட அற்புதமான வனங்களில் வாழ்ந்து வந்த போது, கையில் வில்லுடனும், கத்தியுடனும் இன்பமாக உலவி வந்த விருகோதரன் {பீமன்}, தேவர்களும் கந்தர்வர்களும் வந்து செல்லும் ஒரு அழகிய கானகத்தைக் கண்டான். அதன் பிறகு அவன் {பீமன்}, தேவ முனிவர்களும், சித்தர்களும் வந்து போவதும், அப்சரசு கூட்டங்கள் வாழும் இடமுமான இமய மலையின் (சில) அழகான இடங்களைக் கண்டான். அங்கே சகோரங்களும், சக்கரவாகங்களும், ஜீவஜீவங்களும், குயில்களும், பிருங்கராஜங்களும் ஆங்காங்கே (தங்கள் கானத்தை) ஒலித்தன. அங்கே அடர்ந்த நிழல் கொண்ட மரங்கள், எப்போதும் பூத்துக் குலுங்கும் மலர்களுடனும் கனிகளுடனும் மெதுவான பனியின் ஸ்பரிசத்துடன், கண்ணுக்கும் மனதிற்கும் இனிமையை அளித்தன.
அவன் {பீமன்} அங்கே பளிங்கு போல இருந்த மலையருவிகளையும், வெண்பனி நிறம் கொண்ட பத்தாயிரம் வாத்துகளையும், அன்னங்களையும், மேகங்களைச் சிறைபிடிக்கும் தேவதாரு மரங்கள் அடர்ந்த காடுகளையும், இடையிடையே மஞ்கள் நிற சந்தன மரங்கள், துங்கா, காளீயக மரங்கள் அடர்ந்த காடுகளையும் கண்டான். அந்தப் பெரும்பலமிக்கவன் {பீமன்} மேடு பள்ளமில்லாத, தண்ணீரில்லாத பாலை மலைவெளிகளில் நஞ்சற்ற சுத்தமான அம்புகளால் வேட்டை விளையாட்டினை விளையாடித் திரிந்தான். அந்தக் கானகத்தில், நூறு {100} யானைகளின் பலத்தைக் கொண்ட, புகழும் பலமும் மிக்கப் பீமசேனன் (பல) பெரிய காட்டுப் பன்றிகளைத் தனது (கரத்தின்) சக்தியால் கொன்றான். கடும் பராக்கிரமும், பெரும் பலமும், சிங்கம் மற்றும் புலியைப் போன்ற சக்தியும், நூறு மனிதர்களைத் தடுக்கும் ஆற்றலும், நீண்ட கரங்களும், நூறு யானைகளின் பலமும் கொண்ட அவன் {பீமன்}, பல மான்களையும், காட்டுப் பன்றிகளையும், எருமைகளையும் கொன்றான். அந்தக் கானகத்தில் ஆங்காங்கே மரங்களை வேருடன் பிடுங்கி வேகத்துடன் அவற்றை ஒடித்தான். அச்சத்தம் அக்கானகம் முழுதும், பூமி முழுதும் எதிரொலித்தது. மலைகளின் சிகரங்களை நொறுக்கியவாறும் தனது கர்ஜனையாலும், கைத்தட்டலாலும், போர்க்குரலாலும், புஜங்களைத் தட்டியும் பூமியை எதிரொலிக்கச் செய்த சிதைவற்றவனும், சதாகர்வியும், பயமற்றவனுமான பீமசேனன், மீண்டும் மீண்டும் அக்கானகத்தில் குதித்தபடி சென்றான்.
பீமசேனனின் கர்ஜனையைக் கேட்ட பலமிக்கச் சிங்கங்களும், பெரும் பலம் மிக்க யானைகளும் அச்சத்துடன் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வந்தன. அதே கானகத்தில் அச்சமற்று உலவி, ஓர் கானக வாசியைப் போல {வேடுவனைப் போல}, மனிதர்களில் மிகுந்த வீரமிக்கவன் வேட்டை விளையாட்டினை விளையாடிக் கொண்டு அந்தக் கானகத்தில் நடந்தான். வலிமையும், பராக்கிரமும் கொண்ட அவன் {பீமன்}, விசித்திரமான சத்தங்களை {strange whoopos} எழுப்பி, அனைத்து உயிர்களுக்கும் திகிலூட்டியபடி, அந்தப் பரந்தக் காட்டில் ஊடுருவினான். திகிலடைந்த பாம்புகள் குகைகளுக்குள் {தங்களை} மறைத்துக் கொண்டன. ஆனால் தாமதமில்லாமல் அவைகளை முந்தியும், மெதுவாக அவற்றைப் பின்தொடர்ந்து சென்றான்.
பின்னர், தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போன்ற வலிமைமிக்கப் பீமசேனன், மலைக்குகைகள் ஒன்றில் வாழும், அந்த (முழு) குகையையும் தனது பருத்த உடலால் மூடிக்கொண்ட, தனக்கு மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கிய {அதைக் கண்ட அச்சத்தினால்} ஒரு பாம்பைக் கண்டான். மலையைப் போன்ற பெரும் உடலும், அசுரத்தனமான பலமும், உடல் முழுதும் புள்ளிகளும் கொண்டு மஞ்சளைப் போன்ற {மஞ்சள்} நிறத்தில் இருந்து. அதன் வாய், நான்கு பற்களுடன் குகையின் உருவத்தில் தாமிர நிறத்தில் இருந்தது. சுடர்விடும் கண்களுடன் அது தொடர்ந்து தனது கடைவாயை நக்கிக் கொண்டிருந்தது. அசையும் உயிர்கள் அனைத்தையும் பீதியடைய வைக்கும் அது {அந்தப் பாம்பு}, அழிப்பவனான யமனின் உருவம் போலத் தெரிந்தது. அது விடும் மூச்சிரைப்பு ஒலியால் {ஹிஸ் என்ற ஒலி – hissing noise} அதட்டுவதைப் போல அது கிடந்தது.
பீமன் தனக்கு மிக அருகில் வந்ததைக் கண்ட ஆட்டை விழுங்கும் கோபம் கொண்ட அந்தப் பாம்பு, பெரும் கோபத்துடனும் வன்முறையுடனும் தனது பிடிக்குள் பீமசேனனைப் பற்றியது. பிறகு, அந்தப் பாம்பு பெற்றிருந்த வரத்தால், அதன் பிடிக்குள் இருந்த பீமசேனன், உடனே தனது சுய நினைவை இழந்தான். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பீமசேனன் கரங்களின் பலம் பத்தாயிரம் யானைகளின் பலத்திற்குச் சமமானது. ஆனால், பெரும் பராக்கிரமம் கொண்ட அந்தப் பீமன் அந்தப் பாம்பினால் வீழ்த்தப்பட்டு, மெதுவாக நடுங்கி அசைவதற்கு சக்தியற்று எதுவும் முயலாமல் இருந்தான். பலம் கொண்ட கரங்களும், சிம்மம் போன்ற தோள்களும் கொண்ட அவன் {பீமன்}, பத்தாயிரம் {10000} யானைகளின் பலத்தைப் பெற்றிருந்தாலும், அந்தப் பாம்பினால் பிடிக்கப்பட்டு, அது பெற்றிருந்த வரத்தின் காரணமாக வீழ்த்தப்பட்டு, தனது அனைத்து பலத்தையும் இழந்தான். அவன் தப்பிப்பதற்காகக் கடுமையாகப் போராடினான். ஆனால், எவ்விதத்தினாலும் {அந்தப் பாம்பைத்} திருப்பி அடிப்பதற்கு சக்தியுள்ளவன் ஆவதில் அவன் வெற்றிபெறவில்லை.”
பாம்பை அடைந்த யுதிஷ்டிரன்! – வனபர்வம் பகுதி 178-பீமனைப் பிடித்த பாம்பு தனது வரலாற்றைச் சொன்னது; தீச்சகுனங்களைக் கண்டு வருந்திய யுதிஷ்டிரன், பீமன் சென்ற பாதையைத் தொடர்ந்து சென்று அவன் பாம்பினால் பிடிக்கப்பட்டுக் கிடக்கும் இடத்தை அடைவது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “வலிமைமிக்கப் பீமசேனன், இப்படிப் பலமிக்கப் பாம்புக்கு அடங்கியதும், அந்தப் பாம்பின் பலத்தையும், அற்புதமான பராக்கிரமத்தையும் நினைத்து அதனிடம், “ஓ! பாம்பே, நீ யார் என்பதை எனக்குச் சொல்வதில் மகிழ்ச்சி கொள். ஓ! ஊர்வனவற்றில் முதன்மையானவனே என்னைக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்? நான் பாண்டுவின் மகனான பீமசேனன். நீதிமானான யுதிஷ்டிரனுக்கு அடுத்துப் பிறந்தவன். பத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் கொண்ட என்னை நீ எப்படி வீழ்த்தினாய்? என்னுடன் மோதிய எண்ணிலடங்கா சிங்கங்களும், புலிகளும், எருமைகளும், யானைகளும் என்னால் கொல்லப்பட்டிருக்கின்றன. ஓ! பாம்புகளில் சிறந்தவனே, பலமிக்க ராட்சசர்களும், பிசாசங்களும், நாகர்கள் எனது கரத்தின் சக்தி முன்னால் நிற்க முடியாதே. என்னதான் நான் முயன்றாலும், நீ என்னை விஞ்சுகிறாயே! நீ ஏதாவது மந்திரவித்தை கொண்டிருக்கிறாயா? அல்லது ஏதாவது வரம் பெற்றிருக்கிறாயா? ஓ! பாம்பே, உன்னால் பலம் நிறைந்த மனிதர்கள் கலங்கடிக்கப்படுகிறார்களே! எனவே, மனிதர்களின் பலம் நிலையற்றது என்பதில் நான் இப்போது நம்பிக்கை கொள்கிறேன்” என்றான் {பீமன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “உயர்ந்த செயல்கள் புரிந்த வீரனான பீமன் இப்படிச் சொன்னதும், அந்தப் பாம்பு அவனைப் பிடித்து, அவனது உடலை முழுவதும் சுற்றிக் கொண்டது. இப்படி அவனை {பீமனை} அடக்கிய அந்தப் பலமிக்க நோக்கம் கொண்ட அது, அவனது {பீமனின்} பருத்த கரங்களை மட்டும் விடுவித்தது. பிறகு அந்தப் பாம்பானவன், “நற்பேறினாலேயே, தேவர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று, பசியோடிருக்கும் எனக்கு, உன்னை உணவாக நிர்ணயித்திருக்கிறார்கள். உயிர் என்பது அனைத்து உயிருக்கும் விருப்பமானதாயிற்றே. நான் இந்தப் பாம்புருவை எப்படி அடைந்தேன் என்பதை உனக்குச் சொல்ல வேண்டும். ஓ! பக்திமான்களில் சிறந்தவனே, நான் {ஒரு} பெரும் முனிவரின் கோபத்தால் இந்த இழிந்த நிலைக்கு விழுந்தேன். இப்போது அந்தச் சாபத்திலிருந்து வெளியேறும்பொருட்டு நான் உனக்கு அது குறித்து அனைத்தையும் விவரிக்கிறேன்.
அரச முனியான நகுஷனைக் {நஹுஷனை} குறித்து நீ கேள்விப்பட்டிருப்பாய் என்பதில் {எனக்குச்} சந்தேகமில்லை. அவன் *{நகுஷன்} ஆயுவின் மகனும், உனது மூதாதையர்களின் குலத்தைத் தழைக்க வைத்தவனுமாவான். நானே அவன் {அந்த நகுஷன் நானே}. அந்தணர்களை அவமதித்த எனக்கு, அகத்தியரின் சாபம் ஏறப்பட்டு, நான் இந்த நிலைக்கு வந்தேன். நீ எனக்கு மகன் வழி {agnate} உறவினனாவாய். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறாய். நீ என்னால் கொல்லப்படத்தக்கவன் அல்ல. எனினும் நான் இன்று உன்னை விழுங்குவேன்! விதியின் குறுக்கீட்டைப் பார்! ஒரு நாளின் ஆறாவது பாகத்தில் எருமையோ யானையோ, எதுவாக இருந்தாலும் எனது அருகில் {பிடிக்குள்} வந்தால், ஓ! மனிதர்களில் சிறந்தவனே, {அதனால் என்னிடமிருந்து} தப்பிக்க முடியாது. ஓ! குருக்களில் சிறந்தவனே, தாழ்ந்த வகையைச் சேர்ந்த விலங்கால் நீ பிடிக்கப்படவில்லை. நானும் எனது பலத்தால் மட்டும் உன்னைப் பிடிக்கவில்லை. {பலவானையும் பிடிப்பது} அது எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வரமாகும்.
நான் சக்ரனின் {இந்திரனின்} அரண்மனைக்கு முன் இருந்த அரியாசனத்தில் இருந்து வேகமாக விழுந்து கொண்டிருந்தேன். அப்போது நான் அந்த வழிபடத்தகுந்த முனிவரிடம் (அகஸ்தியரிடம்) “இந்தச் சாபத்தில் இருந்து என்னை விடுவியும்” என்று கேட்டேன். இதனால், இரக்கத்தில் நிறைந்த அந்தச் சக்தி மிக்கவர் {அகஸ்தியர்} என்னிடம், “ஓ! மன்னா {நகுஷா}, சில காலம் கழித்து நீ விடுவிக்கப்படுவாய்” என்றார். பிறகு நான் பூமியில் (பாம்பாக) விழுந்தேன்; ஆனால் எனது (முந்தைய வாழ்வின்) ஞாபகம் என்னைக் கைவிடவில்லை. அது மிகவும் பழங்காலத்துச் சம்பவமாக இருந்தாலும், சொல்லப்பட்டது யாவையும் நான் இன்னும் ஞாபகப் படுத்துவேன். அந்த முனிவர் {அகஸ்தியர்} என்னிடம், “ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள உறவை குறித்து அறிந்த ஒருவன், உன்னுடைய கேள்விகளுக்குப் பதிலளித்து உன்னை விடுவிப்பான்” என்றார். “மேலும், ஓ! மன்னா {நகுஷா}, உன்னிலும் பலமிக்கவர்களை நீ பிடித்தால், அவர்கள் உடனே தங்கள் பலத்தை இழப்பார்கள்” என்று என்னிடம் இரக்கம் கொண்டவர்கள் {அந்தணர்கள்} சொன்னார்கள். பிறகு அந்த அந்தணர்கள் மறைந்தார்கள். ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே, இப்படியே நான் பாம்பானேன். நான் அதிகமான பாவச் செயல்களைச் செய்து, சுத்தமற்ற {இந்த} நரகத்தில் வாழ்ந்து, காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் {நகுஷன்}.
வலுத்தகரம் கொண்ட பீமசேனன் அந்தப் பாம்பிடம் {நகுஷனிடம்}, “ஓ! பலமிக்கப் பாம்பே, நான் கோபமடையவில்லை. என்னையும் நான் பழி சொல்லவில்லை. மகிழ்ச்சியையும் துயரத்தையும் குறித்து எண்ணினால், மனிதர்கள், அதைச் {மகிழ்ச்சியோ அல்லது துக்கமோ} சில பொழுது தங்கள் சக்தியால் கொண்டும் வருகிறார்கள், விலக்கவும் செய்கிறார்கள். சில பொழுது அது அவர்களால் முடிவதில்லை. எனவே, இதனால் ஒருவன் மற்றவன் மனதின் அமைதியைக் குலைக்கக்கூடாது. தன்முயற்சியால் எவன்தான் விதியை வெல்லமுடியும்? விதியே தலைமையானது என நான் கருதுகிறேன். தன்முயற்சியால் {சுயமுயற்சியால்} பயனேதும் இல்லை. விதியின் அடியால் அடிக்கப்பட்டு, எனது கரங்களில் பராக்கிரமம் இழந்து, உணரக்கூடிய காரணமேதுமில்லாமல் இன்று நான் விழுந்திருக்கும் நிலையைப் பார். ஆனால் நான் இன்று கொல்லப்படப் போவதால் அதிகம் வருந்தவில்லை.
எனது சகோதரர்கள் நாடிழந்து கானகத்தில் இருக்கிறார்களே என்றே வருந்துகிறேன். யக்ஷர்களும், ராட்சசர்கள் நிறைந்த இந்த அடைய முடியாத இமயத்தில் என்னைத் தேடித் தடுமாறுவார்கள். நான் கொல்லப்பட்டது கேட்டு, (எனது சகோதரர்கள்) அனைத்து முயற்சிகளையும் கைவிடுவார்கள். மீண்டும் நாட்டை அடைய விரும்பி, எனது கடும் மொழிகளால் சத்தியத்தில் உறுதி கொண்ட அவர்களை இதுவரை நான் கட்டுப்படுத்தி வந்தேன். அல்லது, {அப்படி நான் நடந்து கொள்ளவில்லை என்றால்} தேவர்களாலும், ராட்சசர்களாலும், கந்தர்வர்களாலும் வெல்லப்பட முடியாதவனும் அனைத்துக் கலைகளையும் அறிந்தவனுமான புத்திகூர்மையுள்ள அர்ஜுனன் {நாட்டை இழந்த} துயரத்தால் பாதிக்கப்படமாட்டான். அந்த வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனும், மிகுந்த பலசாலியுமானவன் {அர்ஜுனன்} தனியொருவனாகவே தேவர்களையும் அவர்கள் இடத்தில் இருந்து விரைவாக இழுத்துவிட வல்லவன். அப்படியிருக்க, அனைத்து மனிதர்களாலும் வெறுக்கப்பட்டு, அகங்காரமும், அறியாமையும் நிறைந்து ஏமாற்றுகரமான சூதாட்டம் விளையாடும் திருதராஷ்டிரன் மகனைக் {துரியோதனனைக்} குறித்து நான் என்ன சொல்ல?
மகன்களிடம் பாசமாக, பகைவர்களைக் காட்டிலும் அதிகமான மேன்மையை எங்களுக்கு எப்போதும் விரும்பும், எனது அப்பாவித் தாயை {குந்தியை} நினைத்து நான் வருந்துகிறேன். ஓ! பாம்பே, தலைவனற்ற அவள் {குந்தி} என் மீது கொண்டிருந்த நம்பிக்கை அனைத்தும் எனது அழிவினால் கனியற்றதாகும் {பலனற்றதாகும்}. எனது கரங்களின் சக்தியால் எப்போதும் பாதுகாக்கப்பட்டு, ஆண்மையைக் கொடையாகக் கொண்ட இரட்டையர்களான நகுலனும் சகாதேவனும் அவர்களது அண்ணனின் (என்னுடைய {பீமனுடைய}) அழிவால் மிகவும் உற்சாகம் குறைந்து, தங்கள் பராக்கிரமம் இழந்து, துயரால் பீடிக்கப்படுவார்கள். இதையே நான் நினைக்கிறேன் {நினைத்து வருந்துகிறேன்}” என்றான். இப்படி விருகோதரன் {பீமன்} மிகவும் புலம்பினான். பாம்பின் உடலால் சுற்றப்பட்ட அவனால் எந்த முயற்சியும் மேற்கொள்ள முடியவில்லை.
மறுபுறம், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், பயங்கரமான தீச்சகுனங்களை {கண்டும்) எண்ணிப் பார்த்து மிகவும் அஞ்சினான். வானத்தின் புள்ளிகள் பற்றி எரிவதாலும், ஆசிரமத்திற்கு வலப்புறத்தில் நின்று பயங்கர நரிகள் அமங்களகரமாக ஊளையிட்டதாலும் அவன் {யுதிஷ்டிரன்} பீதியடைந்தான். ஒரு சிறகும், ஒரு கண்ணும், ஒரு காலுமுள்ள பிரகாசமில்லாத விச்சுளிப் பறவைகள் {vartikas – வார்த்திகப் பறவைகள்}, சூரியனுக்கு எதிரில் ரத்தத்தைக் கக்கி கோரமாகக் காட்சியளித்தன. காற்று வறண்டதாகவும், பல கற்களைச் சுமந்து வருவதாகவும் வேகமாக வீசியது. வலப்புறத்தில் இருந்த அனைத்து விலங்குகளும், பறவைகளும் கத்தின. அண்டங்காக்கைகள் {கருங்காக்கைகள்} பின்புறமிருந்து “போ! போ!” என்று கத்தின. அதே நேரத்தில் (யுதிஷ்டிரனின்) வலக்கரமும், மார்பும், இடது காலும் (தானாகவே) துடிக்க ஆரம்பித்தன. மேலும், தீமையைக் குறிக்கும்படி அவனது இடது கண் ஒழுங்கற்ற முறையில் சுருங்கி விரிந்தது {துடித்தது}.
அதன் பேரில், ஓ! பாரதா {ஜனமேஜயா}, புத்திகூர்மையுள்ள நீதிமானான யுதிஷ்டிரன் ஏதோ (தவிர்க்க முடியாத) பேரிடர் சமீபிக்கிறது என்பதை உணர்ந்து, திரௌபதியிடம், “பீமன் எங்கே?” என்று கேட்டான். அதற்குப் பாஞ்சாலி {திரௌபதி}, விருகோதரன் {பீமன்} சென்று நெடுநேரம் ஆனதாகச் சொன்னாள். இதைக் கேட்ட அந்தப் பலம்வாய்ந்த கரம் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} “நீ திரௌபதிக்குப் பாதுகாப்பாக இருப்பாயாக” என்று சொல்லி விட்டு தௌமியரோடு கிளம்பினான். கிளம்பும்போது நகுலனிடமும் சகாதேவனிடமும் அந்தணர்களைப் பாதுகாக்குமாறும் சொன்னான். ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய குந்தியின் மகனான அந்தத் தலைவன் {யுதிஷ்டிரன்}, பீமனின் காலடித் தடங்களைத் தொடர்ந்து சென்று, அந்தப் பெரும் காட்டில் பீமசேனனைத் தேடினான். கிழக்கு திசையை அடைந்து யானைக்கூட்டங்களின் தலைமை யானைகளையும் (அவை கொல்லப்பட்டிருப்பதையும்), பீமனால் (பீமனின் காலடித்தடங்களால்) பூமி குறிக்கப்பட்டிருப்பதையும் கண்டான். ஆயிரக்கணக்கான மான்களும், நூற்றுக்கணக்கான சிங்கங்களும் அந்தக் கானகத்தில் {வீழ்ந்து} கிடப்பதைக் கண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது பாதையை உறுதி செய்தபடி சென்றான். வாயு வேகமாக மான்களைத் துரத்திச் சென்ற அந்த வீரனின் {பீமனின்} தொடையசைவில் ஏற்பட்ட காற்றால் விழுந்த மரங்கள் சிதறிக் கிடப்பதையும் கண்டான். {பீமனின்} பாதச்சுவடுகளால் வழிகாட்டப்பட்டு மேலும் முன்னேறி, வறண்ட, காற்று மிகுந்த, நீரில்லா உவர் நிலத்தை அடைந்து இலையில்லாத காய்கறிகள் {மரங்கள்} அடர்ந்து, முள் மரங்கள் நெருக்கமாக இருக்கும் அந்த இடத்தில் மொட்டை மரங்களும், சிறிய மரங்களும் நிறைந்திருந்தன. கற்களும், குச்சிகளும், புதர்களும் சிதறிக் கிடந்தன. அடைவதற்கு அரிதான மேடுபள்ளங்கள் நிறைந்த ஆபத்தான அந்த மலையின் குகையில், தனது தம்பி {பீமன்}, பாம்புகளில் முதன்மையானவனால் {பெரும்பாம்பால்} பிடிக்கப்பட்டு அசைவற்றிருப்பதைக் கண்டான் {யுதிஷ்டிரன்}.
யார் பிராமணன்? – வனபர்வம் பகுதி 179- பாம்பான நகுஷனின் கேள்விகளுக்குப் பதிலளித்த யுதிஷ்டிரன்..
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார் “தனது அன்புக்குரிய தம்பி {பீமன்}, அந்தப் பாம்பின் சுருளுக்குள் அகப்பட்டிருப்பதைக் கண்ட யுதிஷ்டிரன், “ஓ! குந்தியின் மகனே {பீமா}, உனக்கு இந்தத் தீயூழ் {துரதிர்ஷ்டம்} எவ்வாறு வந்தது? மலையைப் போன்ற உடல் படைத்த இந்தப் பாம்புகளில் சிறந்தவன் யார்?” என்று கேட்டான். அதற்குப் பீமசேனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! வழிபடத்தகுந்தவரே {யுதிஷ்டிரரே}, இந்தப் பெரும்பலம்வாய்ந்தவன் என்னைத் தனது உணவுக்காகப் பிடித்திருக்கிறான். பாம்பின் உருவில் வாழும் இவன் அரச முனியான நகுஷனாவான்” என்றான். யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, “ஓ! நீண்ட ஆயுள் கொண்டவனே {நகுஷனே}, அளவிடமுடியாத பராக்கிரமம் கொண்ட எனது தம்பியை {பீமனை} விடு; நாங்கள் உனது பசிக்கு வேறு உணவு தருகிறோம்” என்றான். அதற்கு அந்தப் பாம்பு, “எனது வாய்க்கருகில் வந்த இந்த மன்னனின் மகன் {பீமன்} இன்று எனக்கு உணவு ஆவான். நீ போகலாம். நீ இங்கு நிற்கலாகாது. (அப்படி நீ நின்றாயானால்) நீ எனக்கு நாளைய உணவாவாய். ஓ! வலுத்த கரம் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, எனது இடத்திற்கு வருவபன் எனது உணவாவான் என்பது எனக்கு விதிக்கிப்பட்டிருக்கிறது. நீயும் எனது இடத்திற்குள்ளேயே நிற்கிறாய். நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று எனக்கு உணவாக உனது தம்பி கிடைத்திருக்கிறான். நான் அவனை விடமாட்டேன். வேறு எந்த உணவையும் நான் விரும்பவில்லை” என்றான் {நகுஷன்}.
அதற்கு யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, “ஓ! பாம்பே, நீ தேவனாகவோ, அசுரனாகவோ, அரக்கனாகவோ இருப்பின் என்னிடம் உண்மையைக் கூறு. நான் யுதிஷ்டிரன் கேட்கிறேன். ஓ! பாம்பே, பீமசேனன் உன்னால் எதற்குப் பிடிக்கப்பட்டான்? எதை அடைந்தால், அல்லது எதை அறிந்தால் நீ திருப்தியடைவாய். ஓ! பாம்பே, நான் உனக்கு என்ன உணவைத் தர வேண்டும்? எதன் காரணமாக நீ அவனை விடுவிப்பாய்” என்று கேட்டான். அதற்கு அந்தப் பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாவமற்றவனே, நான் ஆயுவின் மகனான உனது மூதாதையும், சந்திரனில் இருந்து ஐந்தாமவனும் ஆவேன். நகுஷன் என்ற பெயரில் கொண்டாடப்பட்ட மன்னன் நான். வேள்விகள், தவம், வேத கல்வி, சுயக்கட்டுப்பாடு, பராக்கிரமம் ஆகியவற்றால் நான் மூன்று உலகங்களின் ஆட்சியுரிமையை அடைந்தேன். நான் அப்படி ஒரு நிலையில் இருந்த போது, அகங்காரம் என்னை ஆட்கொண்டது. எனது அரியாசனத்தைச் சுமப்பதில் ஆயிரக்கணக்கான அந்தணர்கள் ஈடுபட்டார்கள். மேலாதிக்கப் போதையில் இருந்த நான் அந்தணர்களை அவமதித்தேன். ஓ! பூமியின் தலைவன், அகஸ்தியர் என்னை இந்த நிலைக்குத் தாழ்த்தினார். இருப்பினும், ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, இந்த நாள் வரை {பழைய பிறவியைக் குறித்த} எனது ஞாபகம் என்னைக் கைவிடவில்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயர் ஆன்ம அகஸ்தியரின் அருளால், நாளின் ஆறாவது பாகத்தில், நான் உனது தம்பியை {பீமனை} எனது உணவாக அடைந்தேன். நான் அவனை விடவும் மாட்டேன், வேறு உணவை நான் விரும்பவும் மாட்டேன். ஆனால், இன்று நீ என்னால் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்தாயானால் நான் விருகோதரனை {பீமனை} விடுவிப்பேன்” என்றான் {நகுஷன்}.
அதற்கு யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, “ஓ! பாம்பே {நகுஷனே}, நீ உனது விருப்பப்படி கேள்! என்னால் முடிந்தால், நான் உன்னைத் திருப்திப்படுத்தும் நோக்கில் உனது கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன். அந்தணன் அறிய வேண்டிய அனைத்தையும் நீ அறிந்திருக்கிறாய். ஆகையால், ஓ! பாம்புகளின் மன்னா {நகுஷனே}, (நீ) கேட்கும் கேள்விகளுக்கு நான் பதிலளிப்பேன்” என்றான்.
அந்தப் பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, எவன் பிராமணன்? எது அறியப்பட வேண்டியது? என்பதைச் சொல். உனது பேச்சால் நீ மிகுந்த புத்திசாலி என்பதை உணர்கிறேன்” என்றது.
யுதிஷ்டிரன் {பாம்புருவில் இருந்த நகுஷனிடம்}, “ஓ! பாம்புகளில் முதன்மையானவனே {நகுஷனே}, எவனொருவனில் உண்மையும், கொடையும், மன்னிக்கும் குணமும் {(forgivness) பொறுமையும்}, நன்னடத்தையும், இரக்கமும், தனது வகைக்குரிய சடங்குகளை நோற்றலும் {தவம்}, கருணையும் காணப்படுகின்றனவோ அவனே பிராமணனென்று கருதப்படுவான் என்று ஞானம் கொண்டவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். ஓ! பாம்பே {நகுஷனே}, எதை அடைந்தால் உயிரினங்கள் துயரால் பாதிக்கப்படாதோ, எதில் மகிழ்ச்சியோ துயரமோ இல்லையோ அந்த உயர்ந்த பிரம்மமே அறியப்பட வேண்டியது. இதில் உனது கருத்து என்ன?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்} “ஓ! யுதிஷ்டிரா, உண்மை, கொடை, மன்னிக்கும் குணம், இரக்கம், அருளைடைமை, அன்பு, வேதம் ஆகியன நான்கு வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்} நன்மையே செய்யும்.1 அறம் சம்பந்தப்பட்டவற்றில் இவை {இக்குணங்கள்} அதிகாரமிக்கவை. அது உண்மையே. இவை சூத்திரர்களிடமும் காணப்படுகின்றனவே. அறியப்பட வேண்டியது குறித்ததில், மகிழ்ச்சி, துயரம் என இரண்டும் அற்ற எந்தப் பொருளையும் நான் காணவில்லை” என்றான்.
யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, “சூத்திரரிடம் இருக்கும் குணங்கள் பிராமணரிடம் இருப்பதில்லை; அதே போல் பிராமணர்களிடம் இருப்பவை சூத்திரரிடம் இருப்பதில்லை. ஒரு சூத்திரன் பிறப்பால் மட்டுமே சூத்திரன் அல்லன். அதே போல ஒரு பிராமணன் பிறப்பால் மட்டுமே பிராமணன் அல்லன். எவனிடம் அத்தகு குணங்கள் இருக்கின்றனவோ அவன் பிராமணன் என்று ஞானமுள்ளோர் சொல்லியிருக்கின்றனர். அறியத்தக்கது இல்லை என்றும், மகிழ்ச்சி துயரமற்ற எந்தப் பொருளும் இல்லை என்றும் நீ சொல்கிறாய். அது உன் எண்ணம். எப்படிக் குளிர்ந்த பொருளில் வெப்பம் {சூடு} இல்லையோ, சூடுள்ள பொருளில் குளிரில்லையோ அவ்வாறே மகிழ்ச்சியுள்ள பொருளில் துக்கமும், துக்கமுள்ள பொருளில் மகிழ்ச்சியும் இருக்காது. இவ்வாறாக மகிழ்ச்சி மற்றும் துயரங்களால் விடுபட்ட (ஆனந்தமயமான) இடம் ஓரிடத்தில் இருக்கிறது. இது என் எண்ணம். (நான் சொன்னவாறு) அறியத்தக்க பொருள் (என்று நான் உறுதி சொன்னது) எதுவும் இல்லை என்று நீ உறுதி கூறுகிறாய். இரண்டும் (மகிழ்ச்சியும், துயரமும்) அற்ற எந்தப் பொருளும் இல்லை என்பது உனது கருத்து. ஓ! பாம்பே, (அவை) இரண்டும் இல்லாத எதுவும் இல்லைதான். ஆனால் குளிரில் வெப்பம் இருப்பதில்லை. அதே போல வெப்பத்தில் குளிர் இருப்பதில்லை. ஆகையால், இரண்டும் (மகிழ்ச்சியும் துயரமும்) இல்லாத ஒரு பொருள் இருக்க முடியாதா?” என்றான்.
பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா, நீ ஒருவனை அவனது குணத்தால் பிராமணன் என்று உணர்ந்தாயானால், ஓ! நீண்ட ஆயுள் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, நடத்தை என்பது அரங்கத்திற்கு வராதவரை சாதி வேறுபாடு என்பது வீணாகிவிடுமே” என்றான் {நகுஷன்}.
யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, “மனித சமுதாயத்தில், ஓ! பலமும், புத்திகூர்மையும் கொண்ட பாம்பே {நகுஷனே}, நான்கு வகையினரின் வரைமுறையற்ற கலவியால், ஒருவனது சாதி இன்னதென்று உறுதி செய்வது சிரமமானதாகும். இது எனது கருத்து. அனைத்து வகையைச் சார்ந்த மனிதர்களும் (வரைமுறையற்று) அனைத்து வகைப் பெண்களிடமும் வாரிசைப் பெறுகிறார்கள். மேலும் மனிதர்களில், பேச்சு, கலவி, பிறப்பு, இறப்பு என்பது அனைத்து வகையினருக்கும் பொதுவானதாகும். மேலும், முனிவர்கள் இதற்குச் சாட்சி பகர்வது போல, வேள்வியின் ஆரம்பத்தில், “நாங்கள் எந்தச் சாதியாக இருந்தாலும், நாங்கள் வேள்வியைக் கொண்டாடுகிறோம்” என்று சொல்கிறார்கள் எனவே, குணமே அத்தியாவசியமான தலைமைத் தேவை, என ஞானமுள்ளோர் வலியுறுத்துகின்றனர். தொப்புள் கொடியை அறுப்பதற்கு முன் ஒருவனுக்குப் பிறவி விழா கொண்டாடப்படுகிறது {ஜாதகர்ம சமஸ்காரம் விதிக்கப்படுகிறது}. அவனுக்கு தாய் சாவித்ரியாகவும், அவனது தந்தை புரோகிதராகவும் அதில் செயல்படுகின்றனர். வேதங்களை {படிக்க} ஆரம்பிக்காத வரை ஒருவன் சூத்திரன் எனக் கருதப்படுகிறான். இதில் சந்தேகங்கள் எழுவதால், ஓ! பாம்புகளின் இளவரசனே {நகுஷனே}, ஸ்வாயம்புவ மனு {Swayambhuba Manu}, சுத்திகரிப்புச் சடங்குகள் செய்த பிறகும் பிந்தையவர் {சூத்திரர்} நன்னடத்தை விதிகளுக்கு ஒத்துப் போகவில்லையென்றால், அவர் சார்ந்த அந்த வர்க்கத்தை விட, கலப்புசாதிகளே சிறந்தவையாகக் கருதத்தக்கவை எனத் தீர்மானித்தார். ஓ! அற்புதமான பாம்பே {நகுஷனே}, தூய விதிகளுக்கும், அறம்சார்ந்த நடத்தைகளுக்கும் எவனொருவன் கட்டுப்படுகிறானோ அவனையே, நான் இப்போது பிராமணனாக அறிவிக்கிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}. அந்தப் பாம்பு {நகுஷன்}, “ஓ யுதிஷ்டிரா, அறியத்தகுதி படைத்த அனைத்தையும் நீ அறிந்து வைத்திருக்கிறாய், உனது வார்த்தைகளைக் கேட்ட பிறகு, நான் (இப்போது) எவ்வாறு உனது தம்பி விருகோதரனை உண்பேன்” என்றான் {நகுஷன்}2
நகுஷன் ஞானம்! – வனபர்வம் பகுதி 180-யுதிஷ்டிரனிடம் திருப்தி கொண்ட பாம்பின் உருவத்தில் இருந்த நகுஷன், பல விஷயங்களை யுதிஷ்டிரனுக்குத் தெளிவாக்குவது; நகுஷன் தனக்கு பாம்பின் உருவம் ஏற்படக் காரணமான நிகழ்ச்சியைச் சொல்வது; நகுஷன் பீமனை விட்டுவிட்டு சுய உருவம் கொண்டு சொர்க்கம் சென்றது…
யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, “இவ்வுலகில் நீ வேதங்களையும், வேதாங்கங்களையும் கற்றவனாக இருக்கிறாய். (எனவே) ஒருவன் முக்தியடைய என்ன செய்ய வேண்டும்? என்பதை எனக்குச் சொல்” என்றான்.
அந்தப் பாம்பு {நகுஷன்}, “ஓ! பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, சரியான காரியங்களுக்குப் பிச்சை அளிப்பது {தானம்}, அன்பான வார்த்தைகள் பேசுவது {இன்சொல்}, உண்மை சொல்வது {சத்தியம்}, எந்த உயிரினத்துக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது {அஹிம்சை} ஆகியவற்றைச் செய்யும் மனிதன் சொர்க்கம் செல்கிறான் என்பது எனது நம்பிக்கை” என்று பதிலுரைத்தான் {நகுஷன்}.
யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, “ஓ! பாம்பே, இரண்டில் எது உயர்ந்தது, உண்மையா? {சத்தியமா?} அல்லது பிச்சையளிப்பதா? {தானமளிப்பதா?} அன்பான நடத்தை {இன்சொல்}, எவ்வுயிருக்கும் தீங்கிழையாமை {அஹிம்சை} ஆகியவற்றின் பெரிய அல்லது சிறிய முக்கியத்துவத்தையும் எனக்குச் சொல்” என்று கேட்டான்.
அந்தப் பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்} , “உண்மை {சத்தியம்}, பிச்சையிடுதல் {தானமளித்தல்}, அன்பான பேச்சு {இன்சொல்}, எவ்வுயிருக்கும் தீங்கிழையாதிருப்பது {அஹிம்சை} ஆகியவற்றின் இந்தப் பண்பு ஒப்புமையிலான சிறப்புகள், அவற்றைச் செய்யும் நோக்கத்தின் ஈர்ப்பால் (பயன்பாட்டால்) {அளவிடப்பட்டு} அறியப்படுகிறது. (சில நேரங்களில்) தானச் செயல்கள் சிலவற்றை விட, உண்மை அதிகம் பாராட்டப்படுகிறது; தானங்களில் சில, உண்மை பேசுவதை விட வரவேற்கத்தக்கதாக இருக்கின்றன. அதே போல, ஓ! பெரும் வலிமைமிக்க மன்னா, பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, எவ்வுயிருக்கும் தீங்கிழையாமல் இருப்பது {அஹிம்சை} நல்ல பேச்சை விட முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிகிறது, அதேபோல நேர்மாறாகவும் தெரிகிறது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, விளைவுகளைச் சார்ந்து இருந்தாலும் அப்படியே ஆகிறது. இப்போது, உனக்குக் கேட்கவேண்டிய ஏதாவது இருந்தால், அனைத்தையும் கேள், நான் அவற்றை உனக்குத் தெளிவுபடுத்துவேன் {I shall enlighten thee}” என்று மறுமொழி கூறினான் {நகுஷன்}.
யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, “ஓ! பாம்பே, சொர்க்கத்திற்குச் செல்லும் உடலற்றவன் {உடலை விட்டவன்}, புலன்களால் உணர்வது மற்றும் புலன்களால் செய்யப்படும் மாற்றமுடியாத கனிகளை {பலன்களை} (இங்கே புவியில்) அனுபவிப்பது ஆகியவற்றை நாம் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?” என்று கேட்டான்.
அந்தப் பாம்பு {நகுஷன் யுதிஷ்டிரனிடம்}, “தனது செயல்களால், மனித இருப்பு, சொர்க்கவாழ்வு அல்லது தாழ்ந்த விலங்காய் பிறப்பு என மூன்று {3} நிலைகளை மனிதன் அடைவது காணப்படுகிறது. இவற்றில், சோம்பலற்று, எவருக்கும் தீங்கிழைக்காது, தானம் மற்றும் பிற அறங்களைக் கொண்ட மனிதன், மனிதர்களின் உலகைவிட்டு வெளியேறிய பிறகு, சொர்க்கத்திற்குச் செல்கிறான். இதற்கு நேர்மாறாகச் செய்வதன் மூலம், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மனிதர்கள் மீண்டும் மனிதனாகவோ அல்லது தாழ்ந்த விலங்குகளாகவோ பிறக்கிறார்கள்.
ஓ! எனது மகனே {யுதிஷ்டிரனே}, குறிப்பாக இந்தத் தொடர்பில்தான், கோபம் மற்றும் காமம் மூலம் இயங்குபவனும், பேராசை மற்றும் துர்க்குணத்திற்குத் தன்னை அளித்தவனும், மனித நிலையில் இருந்து விழுந்து, தாழ்ந்த விலங்காக மறுபடியும் பிறக்கிறான். மேலும், தாழ்ந்த விலங்குகளும் மனித நிலைக்கு மாறுவதற்கு விதிக்கப்பட்டிருக்கின்றன; மாடு, குதிரை மற்றும் பிற விலங்குகள் தெய்வீக நிலையை அடைவதும் கவனிக்கப்பட்டுள்ளது.1 ஓ! எனது மகனே {யுதிஷ்டிரனே}, புலன் உணர்ச்சி கொண்ட ஒருவன், தனது செயல்களின் கனிகளை அறுத்து {செயல்களின் பலனைப் பெற்று}, இப்படி இந்த நிலைகளில் உடல் மாறிப் {வேறு உடலைப் பெற்று} பிறக்கிறான் {transmigrates}. ஆனால் மறுபிறப்பு பிறந்த ஞானி, நித்தியமான பரமாத்வாவில் தனது ஆன்மாவை இளைப்பாற்றுகிறான். உள்ளார்ந்த ஆவி {ஜீவாத்மா}, விதியால் கட்டப்பட்டு, தனது செயல்களின் கனிகளை அறுத்து, பிறப்புக்குப் பின் பிறப்பை அடைந்து கொண்டே இருக்கிறான். ஆனால், தனது செயல்களின் தொடர்பை இழந்த ஒருவன், பிறந்த அனைத்தினுடைய மாற்றமுடியாத விதியையும் உணர்கிறான்.” என்று மறுமொழி கூறினான் {நகுஷன்}. 2
யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, “ஓ! பாம்பே, ஒலி, தொடு உணர்வு, உருவம், மணம், சுவை ஆகியவற்றை ஒரு பிரிந்த ஆவி {பிரிந்த உயிர்} எவ்வாறு உணர்ந்து அறிகிறது என்பதில் குழப்பமில்லாமல் எனக்கு உண்மையைச் சொல்வாயாக. ஓ! உயர்ந்த மனம் கொண்டவனே {நகுஷனே}, நீ ஏன் காரியங்களை ஒரே சமயத்தில் அறிவதில்லை? ஓ! பாம்புகளில் சிறந்தவனே, {நகுஷனே} இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிப்பாயாக” என்று கேட்டான்.
அந்தப் பாம்பு {நகுஷன்- யுதிஷ்டிரனிடம்}, “ஓ! நீண்ட ஆயுள் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, ஆத்மா {ஆவி} என்று அழைக்கப்படும் பொருள், உடலுக்குள் குடியேறி, உணர்வு உறுப்புகளின் மூலம் வெளிப்பட்டு, காணப்படும் பொருட்களை உணர்ந்தறிகிறது. ஓ! பாரதக் குலத்தின் இளவரசனே {யுதிஷ்டிரா}, உணர்வு, மனம், புத்தி, ஆகியவை பொருட்களைக் காண்பதற்கு ஆன்மாவுக்குத் துணைபுரியும் கரணங்கள் {காரணிகள்} என்று அழைக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள். ஓ! எனது மகனே, நித்தியமான ஆவி {ஆன்மா}, மனதின் துணை கொண்டு, தனது கோளத்தை விட்டு வெளியே வந்து, புலன்கள் மூலம் செயல்பட்டு, அனைத்து உணர்வுகளையும் வாங்கிக் கொண்டு, வெற்றிகரமாக அனைத்தையும் {ஒலி, உருவம் {காட்சி}, மணம் போன்றவற்றைக்} காண்கிறது {உணர்கிறது}. ஓ! வீரமிக்கவனே {யுதிஷ்டிரனே}, உயிரினங்களின் மனமே அனைத்து உணர்வுகளுக்கும் {அறிவுக்கும்} காரணமாக இருக்கிறது. எனவே, அது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை உணர்ந்தறிய முடியாது. அந்த ஆவி {ஆன்மா}, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, புருவ மத்தியில் தனது இடத்தை அடைந்து, பலவிதமான பொருட்களை அறிய உயர்ந்த மற்றும் தாழ்ந்த அறிவாற்றலை அனுப்புகிறது. யோகிகள் அறிவார்ந்த கோட்பாட்டைச் செயல்படுத்திய பிறகு, ஆன்மாவின் செயல்கள் வெளிப்படுவதைக் காண்கின்றனர்” என்று மறுமொழி கூறினான் {நகுஷன்}.
யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, “மனம் மற்றும் புத்தியின் {அறிவாற்றலின்} தனித்துவமான பண்பு வேறுபாட்டை எனக்குக் கூறு. இவற்றின் ஞானமே பரமாத்மாவை தியானிக்கும் மனிதனுக்குத் தலைமை கடமையாக விதிக்கப்பட்டிருக்கிறது” என்று சொன்னான்.
அந்தப் பாம்பு {நகுஷன்- யுதிஷ்டிரனிடம்}, “மாயையின் மூலம், ஆன்மா அறிவாற்றலுக்கு அடிபணிந்து போகிறது. ஆன்மாவுக்கு அடிபணிந்ததே அறிவாற்றல் என்பது அறியப்பட்டிருந்தாலும், பிந்தையது {அறிவாற்றல்} (பிறகு) இயக்குனராகிறது. உணர்வுகளின் செயல்களாலேயே அறிவாற்றல் செயல்படுத்தப்படுகிறது. மனம் என்பது சுயம்புவாகும். புத்தி (வலி, இன்பம் ஆகிய) எந்த உணர்வையும் விளைவிப்பதில்லை, ஆனால் மனம் அதைச் செய்யும். எனது மகனே {யுதிஷ்டிரா}, இதுவே மனதுக்கும் புத்திக்கும் உள்ள வேறுபாடாகும். நீ இந்த விஷயத்தை அறிந்தவனாக இருக்கிறாய். இதில் உனது கருத்து என்ன?” என்று கேட்டான் {நகுஷன்}.
யுதிஷ்டிரன் {நகுஷனிடம்}, “ஓ! அறிவு மிக்கவனே, நீ, அறியத்தக்கது அனைத்தும் அறிந்து, நல்ல புத்திகூர்மையுடன் இருக்கிறாய். இந்தக் கேள்வியை ஏன் என்னிடம் நீ கேட்கிறாய்? நீ அனைத்தையும் அறிந்திருந்தாய்; அற்புதச் செயல்கள் பல செய்தாய்; மேலும் நீ சொர்க்கத்தில் வாழ்ந்தாய். அப்படியிருக்கும்போது மாயை உன்னை எப்படி ஆட்கொண்டது? இது குறித்து எனக்குப் பெருத்த சந்தேகம் இருக்கிறது” என்றான். அந்தப் பாம்பு {நகுஷன்}, செழிப்பு என்பது ஞானியையும், வீரமான மனிதனையும் கூட போதை கொள்ளச் செய்கிறது. ஆடம்பர வாழ்வு வாழ்பவர்கள் (விரைவில்) தங்கள் புத்தியை இழக்கிறார்கள். அதே போல நானும், ஓ! யுதிஷ்டிரா, செழிப்பால் ஏற்பட்ட மாய ஈர்ப்பால் ஆட்கொள்ளப்பட்டு, எனது உயர்ந்த நிலையில் இருந்து விழுந்தேன். {இப்போது} மீண்டும் எனது சுய உணர்வைப் பெற்று, உனக்கு இப்படித் தெளிவை உண்டாக்குகிறேன் ஓ! வெற்றிகரமான மன்னா {யுதிஷ்டிரா}, நீ எனக்கு நன்மையைச் செய்திருக்கிறாய். பக்திமானான உன்னுடன் விவாதித்ததில், எனது வலிநிறைந்த சாபம் சரி செய்யப்பட்டது.
பழங்காலத்தில், சொர்க்கத்தில், ஒரு தெய்வீகத் தேரில் நான் பயணித்துக் கொண்டிருந்தபோது கர்வத்தில் களிப்படைந்து, எதையும் நினைக்காதிருந்தேன் {எவரையும் மதிக்கவில்லை}. பிரம்மமுனிவர்கள், தேவர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள், மற்றும் அனைத்து பிற மூவுலகவாசிகளிடமும் நான் கப்பம் வசூலிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, எனது கண்ணால் எந்த உயிரினத்தைப் பார்த்து, எனது பார்வையை அதில் நிலைக்க வைத்தாலும், உடனே அதன் பலத்தை நான் அழிக்கிறேன். ஆயிரக்கணக்கான பிரம்ம முனிவர்கள் {பிரம்மரிஷிகள்} எனது தேரை இழுப்பது வழக்கமாக இருந்தது. கடமையாற்றாமையே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் எனது உயர்ந்த செழிப்பில் இருந்து விழுவதற்குக் காரணமாக இருந்தது. அவர்களில் {அந்த பிரம்மரிஷிகளில்} அகஸ்தியர் ஒரு நாள் எனது வாகனத்தை இழுத்துக் கொண்டிருந்தார். எனது பாதம் அவரது உடலைத் தொட்டது; கோபம் கொண்ட அகஸ்தியர், “அழிவு உன்னை ஆட்கொள்ளட்டும், நீ பாம்பாகப் போ” என்று என்னைச் சபித்தார். ஆகையால், எனது புகழை இழந்து, அந்த அற்புதமான தேரில் இருந்து நான் கீழே விழுந்தேன். அப்படி விழுந்து கொண்டிருக்கும்போது, நான் பாம்பாக மாறி தலைகீழே விழுவதைக் கண்டேன்.
“ஓ! வழிபடத்தகுந்தவரே {அகஸ்தியரே} இந்தச் சாபம் அணைக்கப்படட்டும். மயக்கத்தால் இப்படி மூடனாகிய ஒருவனை நீர் மன்னிப்பதே தகும்” என்று நான் அந்த அந்தணரிடம் {அகஸ்தியரிடம்} மன்றாடினேன். நான் (சொர்க்கத்தில் இருந்து) வீசி எறியப்பட்ட போது, அவர் என்னிடம் அன்பாக, “அறம்சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன் உன்னை இந்தச் சாபத்தில் இருந்து காப்பாற்றுவான். இந்தப் பயங்கரமான கர்வத்தின் பாவம் அப்போது உன்னால் அடைக்கப்படும். நீ முக்தியடைவாய்” என்றார். (அவரது) தவச் சக்தியைக் கண்டு அதிசயத்தால் தாக்கப்பட்டேன். எனவே, பரமாத்மா மற்றும் பிராமணர்களின் தன்மைகள் குறித்து உன்னிடம் கேள்வி கேட்டேன். உண்மை {சத்தியம்}, தானம், தன்னடக்கம், தவம், எவ்வுயிருக்கும் தீங்கிழையாமை {அஹிம்சை}, அறம் நிலைத்தல் ஆகியவையே, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, எப்போதும் ஒரு மனிதன் முக்தியடைவதற்கான வழிகள். குடும்பத் தொடர்புகளால் உண்டான குலத்தால் அதை {முக்தியை} அடைய முடியாது. உனது இந்தத் தம்பியான வலிமைமிக்கப் பீமசேனன் நல்ல அதிர்ஷ்டத்தைச் சந்திப்பான். மகிழ்ச்சியானது உன்னில் நிலைத்திருக்கட்டும். நான் மீண்டும் சொர்க்கம் செல்ல வேண்டும்” என்று பதிலுரைத்தான் {நகுஷன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்தார், “இப்படிச் சொன்ன அந்த மன்னன் நகுஷன், தனது பாம்புருவை விட்டு தெய்வீக உருவம் கொண்டு மீண்டும் சொர்க்கம் சென்றான். புகழ்மிக்கவனும், பக்திமானுமான யுதிஷ்டிரனும், தௌமியர் மற்றும் தனது தம்பி பீமனுடன் தனது ஆசிரமத்திற்குச் சென்றான். பிறகு, அறம் சார்ந்த யுதிஷ்டிரன் (அங்கே) கூடியிருந்த அந்தணர்களுக்கு அனைத்தையும் விரிவாக உரைத்தான். இதைக் கேட்ட அவனது மூன்று தம்பிமாரும் {அர்ஜுனன், நகுலன், சகாதேவனும்}, அனைத்து அந்தணர்களும், புகழ்பெற்ற திரௌபதியும் கூட வெட்கினார்கள். அற்புதமான அந்த அனைத்து அந்தணர்களும், பாண்டவர்களின் நன்மையை விரும்பி, பீமனை அவனது மடத்தனத்திற்காக நிந்தித்தனர். இது போன்ற செயல்களை மீண்டும் செய்யக்கூடாது என்று அவர்கள் அவனிடம் {பீமனிடம்} கூறினர். ஆபத்தைவிட்டு அகன்ற வலிமைமிக்கப் பீமனைக் கண்ட பாண்டவர்கள் மிகவும் திருப்தி கொண்டு, அங்கே தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.”
தீர்த்தயாத்ரா பர்வம் முற்றிற்று *
———————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply