ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ வன பர்வம்-ஸ்ரீ  நளோபாக்யான   பர்வம்–

வஞ்சகரை வஞ்சகத்தால் கொல்லலாம் – வனபர்வம் பகுதி 52அ-யுதிஷ்டிரனும் பீமனும் பேசிக்கொண்டிருக்கும்போது வந்த பிருகதஸ்வர் என்ற முனிவர் யுதிஷ்டிரனுக்கு நளன் கதையை சொல்ல ஆரம்பித்தது…

ஜனமேஜயன் சொன்னான், “உயர் ஆன்மா கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்ஆயுதங்களைப் பெறுவதற்காக இந்திரலோகம் சென்ற பிறகு, யுதிஷ்டிரனும், பாண்டுவின் மற்ற மகன்களும் என்ன செய்தனர்?”

வைசம்பாயனர் சொன்னார், “உயர் ஆன்மா கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} ஆயுதங்களைப் பெறுவதற்காக இந்திரலோகம் சென்ற பிறகு, அந்த பாரதக் காளைகள் கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} தொடர்ந்து காம்யக வனத்திலேயே வசித்தனர். ஒருநாள், துயரத்தில் ஆழ்ந்து, அந்த பாரதர்களில் முதன்மையானவர்கள் கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சுத்தமான தனித்த பசுமையான புல்வெளியில் அமர்ந்திருந்தனர். தனஞ்சயனுக்காக {அர்ஜுனனுக்காக} வருந்தி, துயரத்தில் மூழ்கி, அழுகையால் அவர்களின் {பாண்டவர்களின்} குரல் தடைப்பட்டு வெளிவந்தது. தனஞ்சயனின் பிரிவு அவர்களை {பாண்டவர்களைச்} சித்திரவதை செய்த அதே அளவு துன்பமும் அவர்களை வாட்டியது. அர்ஜுனன் பிரிவாலும், நாட்டை இழந்ததாலும் துன்புற்றிருந்த பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட பீமன் யுதிஷ்டிரனிடம், “ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, பாண்டு மகன்களின் உயிர்கள் யாரை நம்பியிருக்கிறதோ, யார் இறந்தால் நம்மைப் போன்றும் நமது பிள்ளைகளைப் போன்றும் பாஞ்சாலர்களும், சாத்யகியும், வாசுதேவரும் {கிருஷ்ணரும்} நிச்சயம் இறந்து போவார்களோ அந்த பாரதக்குலக் காளையான அர்ஜுனன், உமது கட்டளையின் பேரில் சென்றுவிட்டான். உமது கட்டளையின் பேரில், அவனது பல துயரங்களை நினைத்துக் கொண்டு அந்த அறம் சார்ந்த பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} சென்றுவிட்டான் என்பதைவிட சோகம் நிறைந்தது எது இருக்கிறது? அந்த சிறப்பு மிக்க வீரனுடைய {அர்ஜுனனுடைய} கரங்களின் பலத்தை நம்பியே, நாம் நமது எதிரிகளைப் போர்க்களத்தில் ஏற்கனவே தோற்கடித்தவிட்டோம் என்றும், முழு உலகத்தையும் அடைந்துவிட்டோம் என்றும் கருதி வருகிறோம்.

அந்த வீரன் {அர்ஜுனன்} சொன்னதன் நிமித்தமாகவே சபையின் நடுவே கூடியிருந்த சுபலர்களையும் திருதராஷ்டிரர்களையும் கொல்வதில் இருந்து பின்வாங்கினேன். பலம்வாய்ந்த கரங்களைக் கொடையாகக் கொண்டும், வாசுதேவனால் {கிருஷ்ணனால்} தாங்கப்பட்டும், நீரே எங்களது கோபத்திற்கான வேர்க்காரணம் என்பதால் எங்கள் கோபங்களைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. உண்மையில் கிருஷ்ணனின் உதவியுடன், கர்ணனின் தலைமையில் இருக்கும் நம் எதிரிகளைக் கொன்று, இந்த முழு உலகத்தையும் நம் கரங்களின் பலத்தால் அடையலாம். ஆண்மையுடன் கூடியவர்களாக இருந்தும், சூதாட்டத்தால் பேரிடரில் மூழ்கி இருக்கிறோம். அதே நேரம் வெற்று முட்டாள்களான திருதராஷ்டிரர்கள் (அவர்களை நம்பியிருக்கும் மன்னர்கள் கொடுக்கும்) காணிக்கைகளால் வளர்ந்து வருகின்றனர்.

ஓ பலம்வாய்ந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, க்ஷத்திரியக் கடமைகளை மனதில் நிறுத்துவதே உமக்குத் தகும். ஓ பெரும் மன்னா, கானகத்தில் வாழ்வது க்ஷத்திரியக் கடமையல்ல {க்ஷத்திரிய தர்மம் அல்ல}. ஓ மன்னா, க்ஷத்திரிய அறநெறிகளை அறிந்தவர் நீர். ஆள்வதே க்ஷத்திரியர்களின் முதல் கடமை என்று ஞானமுள்ள விவேகிகள் கருதுகின்றனர். ஆகையால், கடமையின் பாதையில் இருந்து பிறழாதீர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உடனே நாம் இக்கானகத்தில் இருந்து கிளம்பி, பார்த்தனையும் {அர்ஜுனனையும்}, ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} வரவழைத்து, பனிரெண்டு வருடங்கள் கழியுமுன்பே திருதராஷ்டிரர் மகன்களைக் கொன்றுவிடலாம்.

ஓ சிறப்பு வாய்ந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஓ மன்னர் மன்னா, அந்த திருதராஷ்டிரர்கள் வரிசையாக நிற்கும் பல போர்வீரர்களால் சூழப்பட்டிருந்தாலும், நான் தனியாளாக, எனது வலிமை மூலம் மட்டும் அவர்களை வேறு உலகத்திற்கு அனுப்பி வைப்பேன். நான் திருதராஷ்டிரன் மகன்கள் அத்தனை பேரையும் சுபலர்களுடன் சேர்த்து, துரியோதனன், கர்ணன் மற்றும் யாரெல்லாம் என்னோடு சண்டையிடுவார்களோ அத்தனை பேரையும் நிச்சயம் கொல்வேன். நான் அனைத்து எதிரிகளையும் கொன்ற பிறகு, நீர் கானகத்திற்கு திரும்பி வரலாம். இப்படிச் செயல்படுவதால், ஓ மன்னா, (அந்தப் போரால் ஏற்படும் பாவங்களால்) எந்த களங்கமும் உம் மேல் கற்பிக்கப்படாது. ஓ எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, ஓ பலம்வாய்ந்த ஏகாதிபதியே, ஓ தந்தையே, பலவகையான வேள்விகளால் அவற்றைக் {பாவங்களைக்} கழுவி நாம் மேன்மையான சொர்க்கத்தை அடையலாம். அத்தகைய முழுமை எங்கள் மன்னர் {யுதிஷ்டிரன்}, விகேமற்றவராக இருந்தாலோ அல்லது காலந்தாழ்த்துபவராக இருந்தாலோ நம்மைக் கடந்து வரக்கூடும். ஆனால் நீரோ அறம்சார்ந்தவராக இருக்கிறீர். வஞ்சகர்களை நிச்சயம் வஞ்சகத்தாலேயே கொல்ல வேண்டும். வஞ்சகர்களை வஞ்சகத்தால் கொல்வது பாவமாகக் கருதப்படுவதில்லை.

ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, அறநெறிகளை நன்கு உணர்ந்தவர்களால், ஓ பெரும் இளவரசே {யுதிஷ்டிரரே}, ஒரு பகலும் ஒரு இரவும் சேர்ந்து ஒரு வருடத்திற்கு சமம் என்று சொல்லப்படுகிறது. மேன்மையானவரே, கடுமையான விரதங்கள் இருந்து கழிக்கப்படும் ஒரு நாள் ஒரு வருடத்திற்கு சமானம் என்று வேத வார்த்தைகளிலும் கேட்கப்படுகிறது. ஓ மங்காப் புகழ் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, வேதங்களின் அதிகாரத்தை நீர் ஏற்கிறீர் என்றால், ஒரு நாளையும், அதைவிட அதிகமாகவும் ஒரு காலத்தைத் தேர்ந்தெடுத்து அதை பதிமூன்று {13} வருடங்களுக்கு சமமாக கருதிக்கொள்ளும். ஓ எதிரிகளை ஒடுக்குபவரே, துரியோதனனையும் அவனைத் தொடர்பவர்களையும் கொல்வதற்கு இதுவே சமயமாகும். அல்லது, ஓ மன்னா, குறித்த காலத்திற்கு முன்னரே, அவன் அனைத்து உலகத்தையுத் தனது ஆளுகைக்குள் கொண்டு வந்துவிடுவான். ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவரே, இவையனைத்தும் நீர் சூதுக்கடிமையாக இருந்ததால் விளைந்த காரியங்களே.

ஒரு வருடம் யாரும் அறியாமல் தலைமறைவாக வாழ்வதாக நீர் உறுதி அளித்திருப்பதன் தொடர்ச்சியாக, நாம் ஏற்கனவே அழிவின் ஆரம்பத்தில் இருக்கிறோம். தீய மனம் கொண்ட துரியோதனன், தனது ஒற்றர்களைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாத எந்த நாட்டையும நான் காணவில்லை. அந்த இழிந்தவன் நம்மைக் கண்டுபிடித்து, மீண்டும் வஞ்சகமாக நாடு கடத்துவான். அந்தப் பாவியால் குறித்த காலத்திற்குள் நம்மைக் கண்டுபிடிக்க இயவில்லை என்றாலும், ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, உம்மை மீண்டும் பகடைக்கு அழைப்பான். மீண்டும் விளையாட்டு நடக்கும். மீண்டும் நீர் அழைக்கப்பட்டால், மீண்டும் பகடையாடி நீரே உம்மை துடைத்தழித்துக்கொள்வீர்.

நீர் பகடையில் திறம்படைத்தவர் அல்ல. அதை விளையாட ஆரம்பித்தால், நீர் உமது உணர்வுகளை இழந்துவிடுவீர். ஆகையால், ஓ பெரும் பலம் வாய்ந்த மன்னா, நீர் மீண்டும் கானக வாழ்க்கையையே ஏற்க வேண்டி வரும். ஓ பெரும்பலம் வாய்ந்த மன்னா, வேதங்களின் விதிகளை முழுமையாக கடைபிடியும். இழிந்த வாழ்வை ஏற்பது உமக்குத் தகாது. வஞ்சகர்கள் கொல்லப்பட வேண்டும். உமது கட்டளையின் பேரில் நான் (ஹஸ்தினாபுரம்) சென்றால், புற்குவியலின் மேல் நெருப்பு விழுவது போல, எனது பலம் அனைத்தையும் செலுத்தி துரியோதனனைக் கொல்வேன். ஆகையால், எனக்கு அனுமதி கொடுப்பதே உமக்குத் தகும்” என்றான் {பீமன்}.

உன்னைவிட பரிதாபத்துக்குரியவன் நளன்! – வனபர்வம் பகுதி 52ஆ

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படி பீமனால் சொல்லப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அந்த பாண்டு மகனின் {பீமனின்} தலையை முகர்ந்து பார்த்து, அமைதிப்படுத்தி, “ஓ பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவனே {பீமனே}, சந்தேகமற நீ காண்டீவத்தைத் தாங்குபவன் {அர்ஜுனன்} துணையுடன், பதிமூன்றாவது {13} வருட முடிவில் சுயோதனனைக் {துரியோதனனைக்} கொல்வாய். ஆனால் ஓ பிருதையின் மகனே {குந்தியின் மகனே பீமா}, ஓ தலைவா, காலம் வந்துவிட்டது என்ற உனது தீர்மானத்தைப் பொறுத்தவரை, பொய்மை என்னிடத்தில் இல்லாத காரணத்தால், நான் பொய்மையைப் பேச அஞ்சுகிறேன். ஓ குந்தியின் மகனே {பீமா}, மோசடிகளின் துணை இல்லாமலேயே, ஒடுக்கமுடியாத தீய துரியோதனனையும் அவனது கூட்டாளிகளையும் நீ கொல்வாய்” என்றான் {யுதிஷ்டிரன்}.

நீதிமானான யுதிஷ்டிரன் பீமனிடம் பேசிக் கொண்டிருந்த போது, அங்கே சிறப்பு மிகுந்த முனிவரான பிருகதஸ்வர் {Rishi Vrihadaswa}வந்தார். அந்த அறம்சார்ந்த துறவியைத் தன் முன் கண்ட நீதிமானான மன்னன் {யுதிஷ்டிரன்} விதிப்படி மதுபர்க்கம் {தேன், தயிர், நெய் மற்றும் வெண்ணையின் கலவை} கொடுத்து அவரை {முனிவர் பிருகதஸ்வரை} வழிபட்டான். அந்தத் துறவி அமர்ந்து, புத்துணர்ச்சி அடைந்ததும், பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட யுதிஷ்டிரன் அவர் அருகே உட்கார்ந்து, அவரை நிமிர்ந்து பார்த்து, மிகவும் பரிதாபகரமான தொனியில்,

“ஓ புனிதமானவரே {முனிவர் பிருகதஸ்வரே}, பகடையில் திறனுள்ள தந்திரமான சூதாடிகளால் அழைக்கப்பட்டு, எனது செல்வம், நாடு ஆகியவற்றை சூதில் இழந்தேன். நான் பகடையில் திறமையானவனும் கிடையாது. எனக்கு ஏமாற்றவும் தெரியாது. பாவிகள் நியாமற்ற முறைகளைக் கைக்கொண்டு என்னை விளையாட்டில் வீழ்த்தினர். எனது உயிருக்கும் மேலான அன்பான மனைவி {திரௌபதி} பொதுச்சபையின் மத்தியில் இழுத்துவரப்பட்டாள். இரண்டாவது முறையும் என்னை வீழ்த்தி, மான்தோலுடுத்த வைத்து, துயரமான வனவாழ்க்கையை இந்தக் கானகத்தில் வாழும்படி என்னை அனுப்பினர். தற்சமயம் நான் கானகத்தில் துயர்நிறைந்த வாழ்க்கையை துயர்நிறைந்த இதயத்துடன் வாழ்ந்து வருகிறேன். சூதாடும்போது அவர்கள் கடுமையான கொடும் மொழிகளால் பேசியதும், அந்த பகடையாட்டம் சம்பந்தமாக எனது நண்பர்களும் குடிமக்களும் என்னைப்பற்றி பேசியதும் என் மனதிலேயே இருக்கின்றன.

அந்த வார்த்தைகளை நினைத்து நினைத்து இரவு முழுவதும் (தூங்காமல்) துயர் கொள்கிறேன். யாரை நம்பி எங்கள் அனைவரின் வாழ்வுகளும் இருக்கின்றனவோ அந்த சிறப்புமிக்க காண்டீவத்தைத் தாங்குபவனையும் {அர்ஜுனனையும்} இழந்து, கிட்டத்தட்ட உயிரற்றனாகவே நான் இருக்கிறேன். அன்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் அந்த இனிய பேச்சு கொண்ட, பரந்த இதயம் கொண்ட பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்}, அனைத்து ஆயுதங்களையும் பெற்று, எங்களிடம் திரும்பி வருவதை நான் என்று காண்பேன்? என்னைவிட தீயூழ் {துரதிர்ஷ்டம்} கொண்ட மன்னன், வேறு எவனாவது இந்த பூமியில் இருக்கிறானா? இது போன்ற நிகழ்ச்சிகளை இதற்கு முன்பு நீர் கண்டதோ கேட்டதோ உண்டா? என்னைப் பொறுத்தவரை, என்னைவிட இழிந்த மனிதன் வேறு எவனும் இருக்க மாட்டான்” என்றான் {யுதிஷ்டிரன்}.

பிருகதஸ்வர் சொன்னார், “ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, ‘என்னைவிட பரிதாபகரமான மனிதன் வேறு எவனும் இல்லை’ என்று சொல்கிறாய். ஓ பாவமற்ற ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, நீ கேட்பதாயிருந்தால், வரலாற்றில் உன்னைவிட இழிந்த நிலையை அடைந்த மன்னனின் வரலாற்றைச் சொல்லட்டுமா?” என்று கேட்டார்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அதன் பிறகு மன்னன் {யுதிஷ்டிரன்} அந்தத் துறவியிடம் {பிருகதஸ்வரிடம்}, “ஓ சிறப்பு மிகுந்தவரே, இதுபோன்ற நிலைக்கு வீழ்ந்த அந்த மன்னனின் வரலாற்றை நான் கேட்க விரும்புகிறேன். சொல்லும்” என்றான் {யுதிஷ்டிரன்}.

பிருகதஸ்வர், “ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கீழே வீழாதவனே, உனது தம்பிகளுடன் சேர்ந்து கவனமாகக் கேள். நான் உன்னைவிட பரிதாபகரமான நிலையை அடைந்த ஒரு இளவரசனின் வரலாற்றைச் சொல்கிறேன். நிஷாதர்களின் கொண்டாடப்பட்ட மன்னனான வீரசேனன் என்ற பெயர் கொண்ட ஒருவன் இருந்தான். அவனுக்கு அறம், பொருள் அறிந்த மகனாக நளன் என்ற பெயரில் ஒருவன் இருந்தான். அந்த மன்னன் {நளன்} புஷ்கரன் என்பவனால் வஞ்சகமாக வீழ்த்தப்பட்டு, பேரிடரை அடைந்து, தனது மனைவியுடன் கானகத்தில் வாழ்ந்தான் என நாம் கேள்விப்படுகிறோம். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அப்படி அவன் {நளன்} கானகத்தில் வாழ்ந்த போது, அவனுடன் அடிமைகளோ, தேர்களோ, தம்பிகளோ அல்லது நண்பர்களோகூட கிடையாது. ஆனால் நீயோ தேவர்களைப் போன்ற உனது வீர சகோதரர்களாலும், பிரம்மாவைப் போன்ற மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களாலும் சூழப்பட்டிருக்கிறாய். ஆகையால், துயருறுவது உனக்குத் தகாது” என்றார் {பிருகதஸ்வர்}.

யுதிஷ்டிரன், “ஓ நாவண்மை படைத்தவர்களில் முதன்மையானவரே {முனிவர் பிருகதஸ்வரே}, சிறப்புமிக்க நளனின் வரலாற்றை விரிவாகக் கேட்க நான் விரும்புகிறேன். ஆகையால், அதை எனக்கு நீர் உரைக்க வேண்டும்” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}

காதல் தூது சென்ற அன்னம்! – வனபர்வம் பகுதி 53-நளன்பீமன்தமயந்தி குறித்து பிருகதஸ்வர் வர்ணிப்பது; அன்னம் நளனிடம் பேசுவது; அன்னம் தமயந்தியிடம் பேசுவது…

பிருகதஸ்வர் சொன்னார், “வீரசேனன் மகனான நளன் என்றொரு மன்னன் இருந்தான். அவன் {நளன்} பலம் வாய்ந்தவனாகவும், அழகனாகவும், குதிரைகளை (குதிரைகள் பற்றிய அறிவை) அறிந்தவனாகவும், விரும்பிய அனைத்து சாதனைகளைச் செய்தவனாகவும் இருந்தான். அவன் {நளன்} தேவர்களுக்குத் தலைவனைப் போல மன்னர்களுக்குத் தலைமையானவனாக இருந்தான். எல்லோருக்கும் மேம்பட்டவனான அவன், புகழில் சூரியனைப் போல இருந்தான். அவன் நிஷாதர்களுக்கு மன்னனாக இருந்து, வேதமறிந்த அந்தணர்களின் நன்மையில் எண்ணம் உள்ளவனாகவும், பெரும் வீரத்தைக் கொண்டவனாகவும் இருந்தான். அவன் {நளன்} உண்மை பேசுபவனாகவும், பகடையில் விருப்பம் உள்ளவனாகவும், பெரும் பலம் வாய்ந்த படைக்குத் தலைவனாகவும் இருந்தான். ஆண்களுக்கும் பெண்களுக்கும் அன்பால் விருப்பமுள்ளவனாகவும், பெரும் ஆன்மாவால் ஆசைகளை அடக்கியும் வாழ்ந்தான். அனைவரையும் காத்து, வில்லாளிகளில் முதன்மையானவனாக இருந்து, மனுவைப் போன்றவனாக இருந்தான்.

அவனை {நளனைப்} போலவே விதரப்பர்கள் {விதரப்ப நாட்டு மக்கள்} மத்தியில், பீமன் என்றொருவன் (பீமன் என்ற பெயர் கொண்ட ஒரு மன்னன்) இருந்தான். அவனும் {பீமனும்} பயங்கரமான பராக்கிரமும், வீரமும் கொண்டவனாகவும், குடிமக்களுக்கு நன்மை செய்பவனாகவும், அனைத்து அறங்கள் கொண்டவனாகவும் இருந்தான். ஆனால், (இவையெல்லாம் இருந்தும்), பிள்ளையில்லாதிருந்தான். அவன் நிலைத்த மனதோடு, ஒரு பிள்ளையைப் பெறுவதற்காக தன்னால் ஆன அளவு முயன்றான்.

ஓ பாரதா {யுதிஷ்டிரா}, (ஒரு நாள்), அவனிடம் தமனர் என்ற பிரம்ம முனிவர் {பிரம்மரிஷி}, வந்தார். ஓ மன்னர் மன்னா {யுதிஷ்டிரா}, அறநெறிகளை அறிந்த பீமன், பிள்ளை பெற விரும்பி, தனது மனைவியுடன் சேர்ந்து அந்த சிறப்புமிக்க முனிவரை மரியாதையுடன் வரவேற்று திருப்தி செய்தான். இதனால் மிகவும் மகிழ்ந்த தமனர், அந்த மன்னனுக்கும் {பீமனுக்கும்} அவனது மனைவிக்கும் ரத்தினம் போன்ற மகளையும், உயர்ந்த ஆன்மாவும், பெரும் புகழையும் கொண்ட மூன்று மகன்களையும் வரமாகக் கொடுத்தார். அவர்கள் {அந்தக் குழந்தைகள்) முறையே தமயந்தி, தமன், தாந்தன், தமனன் ஆவர். அந்த மூன்று மகன்களும் அனைத்து சாதனைகளையும் செய்பவர்களாகவும், கொடூரமான முகத்தோற்றம் கொண்டவர்களாகவும், கடும் பராக்கிரம் கொண்டவர்களாகவும் இருந்தனர். கொடியிடை கொண்ட தமயந்தி, அழகாலும், பிரகாசத்தாலும், அருளாலும், அதிர்ஷ்டத்தாலும், உலகத்தால் கொண்டாடப்படுபவள் ஆனாள். அவள் பருவ வயதை அடைந்த போது, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான பெண் பணியாட்களும், பெண் அடிமைகளும், சச்சிக்காக {இந்திரனின் மனைவிக்காக} காத்திருப்பதைப் போல அவளுக்காக காத்திருந்தனர்.

பீமனின் மகளான அந்தக் களங்கமற்றவள் {தமயந்தி}, அனைத்து ஆபரணங்களும் பூண்டு, மேகங்களில் இருக்கும் பிரகாசமான மின்னல் போல, தனது பணிப்பெண்களுக்கு மத்தியில் பிரகாசித்தாள். அகன்ற விழி கொண்ட அந்த மங்கை {தமயந்தி}, ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போலவே பெரும் அழகு படைத்திருந்தாள். தேவர்களுக்கு மத்தியிலோ, யக்ஷர்களுக்கு மத்தியிலோ, மனிதர்களுக்கு மத்தியிலோ அதைப்போன்ற அழகு கொண்ட பெண்ணை அதற்கு முன்னர் யாரும் கேள்விப்பட்டதோ, பார்த்ததோ கிடையாது. அந்த அழகான மங்கை, மகிழ்ச்சியால் தேவர்களின் இதயத்தைக் கூட நிறைத்தாள்.

மனிதர்களில் புலியான நளன், மூன்று உலகத்திலும் தனக்கு இணை இல்லாதவனாக இருந்தான். அவன் அழகில் மனித உரு கொண்ட கந்தர்பன் {மன்மதன்} போல இருந்தான். இவற்றால் வியப்படைந்த கட்டியக்காரர்கள் திரும்பத் திரும்ப நளனின் பெருமைகளைக் கொண்டாடி தமயந்தியிடத்திலும், தமயந்தியின் பெருமைகளை நிஷாத ஆட்சியாளன் {நளன்} இடத்திலும் புகழ்ந்தார்கள். திரும்பத் திரும்ப ஒருவர் நற்குணங்களை மற்றவர்கள் கேள்விப்பட்டு ஒருவர் மேல் ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே ஈர்க்கப்பட்டனர். அந்த ஈர்ப்பு, ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா} வளர ஆரம்பித்தது.

பிறகு, நளன் தனது இதயத்தில் இருந்த காதலைக் கட்டுப்படுத்த முடியாதவனானான். அவன் நீண்ட நேரத்தைத் நந்தவனத்துடன் சேர்ந்த தனது உள் அறையில் {அரண்மனையில்} கழிக்க ஆரம்பித்தான். அங்கே {நந்தவனத்தில்}, அந்த வனத்தில் தங்க இறகுகள் கொண்ட அன்னங்கள் பல உலவுவதைக் கண்டான். அவற்றில் ஒன்றைத் தன் கரங்களால் பற்றினான். அதன் காரணமாக அந்த விண்ணதிகாரி {அன்னம்}, நளனிடம், “உன்னால் நான் கொல்லப்படலாகாது. ஓ மன்னா, நான் உனக்கு ஏற்புடைய ஒரு காரியத்தைச் செய்வேன். ஓ நிஷாதர்களின் மன்னா {நளனே}, உன்னைத் தவிர வேறு யாரையும் (தனது தலைவனாக அடைய) தமயந்தி விரும்பாதவாறு, அவளிடம் நான் உன்னைக் குறித்துப் பேசுவேன்” என்றது.

இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {நளன்}, அந்த அன்னத்தை விடுவித்தான். அந்த அன்னப்பறவைகள் தங்கள் சிறகுகளை விரித்து விதரப்ப நாட்டுக்குச் சென்றன. விதரப்ப நாட்டுக்கு வந்த அந்தப் பறவைகள், அவற்றைக் கண்ட தமயந்தியின் முன் பறந்தன. பணிப்பெண்களுக்கு மத்தியில் இருந்த தமயந்தி, இயல்புக்கு மிக்க தோற்றம் கொண்ட அந்தப் பறவைகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, நேரத்தைக் கடத்தாமல் அந்த விண்ணதிகாரிகளைப் {அன்னங்களைப்} பிடிக்க முயன்றாள். இதன் காரணமாக, அந்த அன்னங்கள், அந்த அழகான மங்கையர் கூட்டத்திற்கு முன்பு, எல்லா திசைகளிலும் பறந்தன. அந்த மங்கையரும் ஒவ்வொருவரும் ஒரு அன்னத்தின் பின்னாக அந்தப் பறவைகளைத் தொடர்ந்து சென்றனர். தமயந்திக்கு முன் ஓடிய அன்னம், அவளை {தமயந்தியைத்} தனிமையான இடத்திற்குப் பிரித்து அழைத்துச் சென்று, மனிதக் குரலில் அவளிடம், “ஓ தமயந்தி, நிஷாதர்களில் நளன் என்ற பெயர் கொண்ட ஒரு மன்னன் இருக்கிறான். அவன் அசுவினிகளின் அழகுக்கு நிகராக, மனிதர்களுக்கு மத்தியில் தனக்கு இணை இல்லாதவனாக இருக்கிறான். உண்மையில் அவன் மனித உரு கொண்ட கந்தர்பன் {மன்மதன்} போல இருக்கிறான். ஓ அழகான நிறம் கொண்டவளே, ஓ கொடியிடையாளே, நீ அவனுக்கு மனைவியானால், நீ வாழ்வதற்கும், உனது அழகுக்கும் ஒரு காரணம் இருக்கும். நாங்கள் தேவர்களையும், கந்தர்வர்களையும், நாகர்களையும், ராட்சசர்களையும், மனிதர்களையும் கண்டிருக்கிறோம். ஆனால் நளனைப் போன்ற ஒருவனை நாங்கள் இதுவரை கண்டதில்லை. ஆண்களில் நளன் தலைமையானவன் ஆனது போல, நீயும் உனது பாலினத்தில் {பெண்ணினத்தில்} ரத்தினம் தான். சிறந்தவர்களுடன் சிறந்தவர்கள் சேரும் போதே மகிழ்ச்சி ஏற்படுகிறது” என்றான் {அன்னப்பறவை}.

ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, அன்னத்தால் இப்படிச் சொல்லப்பட்ட தமயந்தி, அவனிடம் {அன்னத்திடம்}, “நீ இதே போல நளனிடமும் {அவரிடமும்} சொல்” என்றாள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, “அப்படியே ஆகட்டும்” என்று விதரப்பனின் மகனிடத்தில் சொன்ன அந்த முட்டையிடும் இனத்தைச் சேர்ந்தவன் {அன்னப்பறவை}, நிஷாதர்களின் நாட்டிற்குத் திரும்பி, அனைத்தையும் நளனிடம் கூறினான்.

தமயந்தியை விரும்பிய தேவர்கள் – வனபர்வம் பகுதி 54-நளன் குறித்த நினைவுகளால் தமயந்தி மெலிந்து போவது; அவளது நிலையை அவளது தந்தையான பீமன் உணர்ந்து சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்வது; தேவலோகத்தில் நாரதர் இந்திரனிடம் அச்சுயம்வரத்தைக் குறித்து சொல்லும்போது லோகபாலர்களும் அதைக் கேட்டுவிட்டு தமயந்தியை விரும்புவது; சுயம்வரத்திற்குச் செல்லும் வழியில் தேவர்கள் நளனைச் சந்திப்பது…

பிருகதஸ்வர் சொன்னார், “ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அன்னம் பேசிய வார்த்தைகளைக் கேட்டதிலிருந்து தமயந்தி நளனைக் குறித்து தனது மன அமைதியை இழந்தாள். அடிக்கடி பெருமூச்சுவிட்டபடி, பதட்டமடைந்து துக்கத்தில் மூழ்கியதால், முகம் வெளிறி, உடல் மெலிவடைந்தாள். அவள் இதயத்தை காதல் தேவன் அடைந்ததால், அவள் விரைவில் நிறம் இழந்து, விழி படபடத்து சுருங்கி விரிந்து, மனம் பிறழ்ந்தவள் போன்ற தோற்றத்தைப் பெற்றாள். படுக்கை, இருக்கைகள், இன்பநுகர் பொருட்கள் என்று எதிலும் ஆசையற்றவளாக இருந்தாள். பகலும் இரவும் கீழே படுத்து ஓ! என்றும் ஐயோ! எனும் ஆச்சரிய ஒலிகளுடன் அழுது கொண்டிருந்தாள்

சஞ்சலமடைந்து வீழ்ந்த நிலையில் இருந்த அவளின் {தமயந்தியின்} நிலையைக் கண்ட பெண் பணியாட்கள், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அவளது நோயைக் குறித்து விதரப்ப ஆட்சியாளனிடம் {பீமனிடம்} மறைமுக பொருளுடன் சொன்னார்கள். பெண் பணியாட்களின் மூலம் தமயந்தின் நிலையை கேள்விப்பட்ட மன்னன் பீமன், தனது மகளின் {தமயந்தியின்} விவகாரம் தீவிரமானது எனக் கருதினான். அவன் {பீமன்} தனக்குள்ளேயே, “ஏன் எனது மகள் இப்போது நோய்ப்பட்டவள் போலத் தெரிகிறாள்?” என்று கேட்டுக் கொண்டான். தனது மகள் பருவ வயது அடைந்ததை நினைவு கூர்ந்த மன்னன் {பீமன்}, தமயந்தியின் சுயம்வரம் நடக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்தான்.

ஓ மேன்மையானவனே {யுதிஷ்டிரா}, பிறகு அந்த ஏகாதிபதி {பீமன்}, பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரிடமும் {அவர்களை அழைத்து}, “வீரர்களே, தமயந்தியின் சுயம்வரம் நடக்க இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்றான்தமயந்தியின் சுயம்வரத்தைக் கேள்விப்பட்ட அனைத்து மன்னர்களும் பீமனிடம் வந்து, அவனது தூதை ஏற்கும் வகையில், பூமியை தங்கள் தேர்ச்சக்கரங்களின் ஒலியாலும், தங்கள் யானைகளின் பிளிறலாலும், தங்கள் குதிரைகளின் கனைப்பொலிகளாலும் நிறைத்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு காண்பதற்கு அருமையானவையாக இருக்கும் தங்கள் படைகளுடனும், அருள் நிறைந்த மாலைகளுடனும் வந்தனர். பலம் வாய்ந்த கரங்கள் கொண்ட பீமனும் அந்தச் சிறப்புமிக்க ஏகாதிபதிகளுக்கு உரிய மரியாதையை வழங்கினான். அவனால் {பீமனால்} முறைப்படி மரியாதைசெய்யப்பட்ட அவர்கள் {அந்த ஏகாதிபதிகள்}, அங்கேயே வசித்தார்கள்.

இந்தச் சூழ்நிலையில் தேவ முனிவர்களில் முதன்மையான பிரகாசம் மிக்கவர்களும், பெரும் விவேகிகளும், பெரும் நோன்புகள் நோற்பவர்களுமான நாரதரும் பர்வதரும், இந்திரலோகத்தில் பயணம் மேற்கொண்டிருந்த போது இறவாதவர்கள் தலைவனின் {இந்திரனின்} மாளிகைக்குள் நுழைந்து உரிய வழிபாட்டைப் பெற்றனர். அவர்களை மரியாதையுடன் வழிபட்ட மகவத் {இந்திரன்}, அவர்களின் சிதைவுறாத அமைதியைக் குறித்தும், அனைத்து விதமான நன்மைகள் குறித்தும் கேட்டான். அதற்கு நாரதர், “ஓ தலைவா, ஓ தெய்வீகமானவனே, எல்லாவிதத்திலும் அமைதி எங்களுடன் இருக்கிறது. ஓ மகவத் {இந்திரா}, ஓ மேன்மையானவனே, முழு உலகத்தில் இருக்கும் மன்னர்களிடத்திலும் அமைதி நிலவுகிறது” என்றார்.

பிருகதஸ்வர் தொடர்ந்தார், “பலனையும், விரித்திரனையும் {Vala and Vritra} கொன்றவன் {இந்திரன்), நாரதரின் வார்த்தைகளைக் கேட்டு, “அறம் அறிந்த பூமியின் ஆட்சியாளர்கள், வாழ்வின் அனைத்து விருப்பங்களையும் துறந்து சண்டையிட்டு, களத்தைவிட்டு புறமுதுகிட்டு ஓடாமல் ஆயுதங்களால் மரணத்தை அடைந்து, இந்த உலகத்தை அடைவார்கள். இந்த உலகம் {இந்திரலோகம்} எனக்கு எப்படி இருக்கிறதோ அவர்களுக்கும் அப்படியே அவர்கள் விருப்பங்களையெல்லாம் கொடுத்து நிரந்தரமானதாக இருக்கும். அப்படிப்பட்ட அந்த க்ஷத்திரிய வீரர்கள் எங்கே? அந்த மன்னர்கள் (இப்போது) என்னை அணுகுவதில்லையே. எனக்குப் பிடித்தமான அந்த விருந்தினர்கள் எங்கே?” என்று கேட்டான் {இந்திரன்}.

இப்படி சக்ரனால் {இந்திரனால்} கேட்கப்பட்ட நாரதர், “ஓ மகவத்தே {இந்திரனே}, ஏன் (இங்கே, இப்போது) நீ மன்னர்களைப் பார்ப்பதில்லை என்பதைக் கேள். விதரப்ப நாட்டை ஆளும் ஆட்யாளனுக்கு தமயந்தி என்று கொண்டாடப்படும் ஒரு மகள் இருக்கிறாள். பூமியில் உள்ள பெண்களின் அழகையெல்லாம் அவள் மீறி இருக்கிறாள். ஓ சக்ரா {இந்திரா}, அவளது சுயம்வரம் விரைவில் நடக்க இருக்கிறது. அங்கே எல்லா திசைகளில் இருந்தும் அனைத்து மன்னர்களும் இளவரசர்களும் செல்கிறார்கள். ஓ பலனையும், விரித்திரனையும் கொன்றவனே, அந்த பூமியின் முத்தான அவளை {தமயந்தியை} அடைய பூமியின் அனைத்து தலைவர்களும் ஆர்வத்துடன் விரும்புகிறார்கள்” என்று மறுமொழி கூறினார் {நாரதர்}.

அவர்கள் அப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, இறவாதவர்களில் முதன்மையானவர்களும், அக்னியைத் தங்கள் மத்தியில் கொண்டவர்களுமான லோகபாலர்கள், தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} முன்னால் தோன்றினர். நாரதர் சொன்ன கனமான செய்திகள் அனைத்தையும் அவர்கள் அனைவரும் கேட்டனர். அதைக் கேட்ட உடனேயே “நாங்களும் அங்கு செல்லப்போகிறோம்” என்று அவர்கள் அனைவரும் பேரானந்தத்துடன் உரத்துச் சொன்னார்கள். ஓ பலமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அவர்கள் அனைவரும் தங்கள் பணியாட்களுடன் தங்கள் தங்கள் வாகனங்களில், மன்னர்கள் அனைவரும் எங்கிருக்கின்றனோ {எங்கு சென்றார்களோ} அந்த விதரப்ப நாட்டிற்குக் கிளம்பினர்.

ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, உயர் ஆன்மா கொண்ட மன்னன் நளனும் மன்னர்கள் கூட்டத்தைக் கேள்விப்பட்டு, தமயந்தியின் மீதான காதலாலும் மகிழ்ச்சியாலும் நிறைந்த இதயத்துடன் கிளம்பினான். பூமியின் மீது பயணித்துக் கொண்டிருந்த நளனைத் தேவர்கள் {காணும்படி நேர்ந்தது} கண்டனர். உருவ அழகில் காம தேவனைப் {மன்மதன்} போலவே இருந்தான். சூரியனைப் போன்று பிரகாசித்த அவனைக் கண்ட லோகபாலர்கள் அவனது அழகெனும் செல்வத்தைக் கண்டு வியப்பால் நிறைந்து, தாங்கள் விரும்பிய நோக்கத்தைக் கைவிட்டனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தங்கள் தேர்களை வானத்திலேயே விட்ட சொர்க்கவாசிகள், ஆகாயத்தில் இருந்து இறங்கி, நிஷாதர்களின் ஆட்சியாளனிடம் {நளனிடம்}, “ஓ நிஷாதர்களை ஆளும் ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, ஓ நளனே, நீ உண்மைக்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறாய். நீ எங்களுக்கு உதவி செய். ஓ மனிதர்களில் சிறந்தவனே, நீ எங்களுக்குத் தூதுவனாகச் செயல்படு” என்றனர் {தேவர்கள்}.

நளனைக் கண்டு எழுந்த பெண்கள் – வனபர்வம் பகுதி 55-தேவர்கள் நளனை தமயந்தியிடம் தூது அனுப்புதல்; நளனைக் கண்டு ஆச்சரியமடைந்த பெண்கள் எழும்புதல்; தமயந்தி நளன் உரையாடல்..

பிருகதஸ்வர் தொடர்ந்தார், “ஓ பாரதா {யுதிஷ்டிரா}, நளன் தேவர்களிடம், “நான் அதைச் செய்வேன்” என்று வாக்குறுதி கொடுத்தான். அதன் பிறகு அவர்கள் முன் கை கட்டியபடி அணுகி, “நீங்கள் யார்? என்னைத் தூதுவனாகக் கொள்ள விரும்பும் நபர் யார்? மேலும், இனி நான் உங்களுக்குச் செய்ய வேண்டியது என்ன? உண்மையாக எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டான். நிஷாத மன்னன் {நளன்} இப்படிப் பேசியதும் மகவத் {இந்திரன்} அவனிடம் {நளனிடம்}, “நாங்கள் தமயந்திக்காக இங்கு வந்திருக்கும் இறவாதவர்கள் {Immortals தேவர்கள்} என்று அறிந்து கொள். நான் இந்திரன், இவன் அக்னி, இவன் நீர்த்தேவன் {வருணன்}, ஓ மன்னா {நளனே}, இவனே மனிதர்களின் உடலை அழிக்கும் யமன். எங்கள் வருகையை தமயந்தியிடம் “உலகப் பாதுகாவலர்களான, பெரும் இந்திரனும் மற்றவர்களும் {உனது} சுயம்வரத்தைக்காண விரும்பி சபைக்கு வர இருக்கின்றனர். சக்ரன் {இந்திரன்}, அக்னி, வருணன், யமன் ஆகிய தேவர்கள் உன்னை அடைய விரும்புகின்றனர். ஆகையால், அவர்களில் ஒருவரை நீ தலைவனாகக் கொள்” என்ற வார்த்தைகளில் சொல்” என்றான் {இந்திரன்}.

சக்ரனால் {இந்திரனால்} இப்படிச்சொல்லப்பட்ட நளன் கூப்பிய கரங்களுடன், “நானும் அதே காரியத்தை நாடியே வந்திருக்கிறேன். என்னை நீங்கள் (தூது) அனுப்புவது தகாது. ஒருவன் தானே காதலின் ஆளுகையில் இருக்கும் போது, அவன் ஒரு {அந்த} மங்கையிடம் மற்றவர்களுக்காக எப்படி பரிந்து பேச முடியும்? ஆகையால் தேவர்களே என்னை விட்டுவிடுங்கள்” என்றான். இருப்பினும் தேவர்கள், “ஓ நிஷாதர்களின் ஆட்சியாளனே {நளனே}, “நான் செய்வேன்” என்று முதலில் வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதன் படி நடக்க ஏன் இப்போது மறுக்கிறாய்? ஓ நிஷாதர்களின் ஆட்சியாளனே {நளனே} காலந்தாழ்த்தாமல் இதைக் குறித்து எங்களுக்குச் சொல்” என்றனர்.

பிருகதஸ்வர் தொடர்ந்தார், “தேவர்களால் இப்படிச் சொல்லப்பட்ட நிஷாதர்களின் ஆட்சியாளன் {நளன்}, “அந்த மாளிகைகள் நன்றாக பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்குள் நுழைய முடியும் என்று எவ்வாறு நான் நம்புவது?” என்று மீண்டும் பேசினான். அதற்கு இந்திரன், “உன்னால் நுழைய முடியும்” என்று மறுமொழி கூறினான். “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன நளன் அதன் பிறகு தமயந்தியின் அரண்மனைக்குச் சென்றான். அங்கே வந்து, அழகால் பிரகாசிப்பவளும், அங்கங்கள் யாவும் உரிய உருவத்தில் அற்புதமாகக் கொண்டவளும், மிக மென்மையான உறுப்புகள் கொண்டவளும், கொடியிடையும், அழகான கண்களும் கொண்டவளான விதரப்ப மன்னனின் மகள் {தமயந்தி},  பணிப்பெண்களால் சூழப்பட்டிருப்பதைக் கண்டான். தனது சுய பிரகாசத்தால், சந்திரனின் ஒளியைப் பழிப்பது போல அவள் தெரிந்தாள். இனிய புன்னகை கொண்ட அந்த மங்கையை அப்படியே அவன் பார்த்துக் கொண்டிருந்ததால் நளனின் காதல் அதிகரித்தது. ஆனால் உண்மையைக் காக்க விரும்பிய அவன், தனது ஆசையை அடக்கிக் கொண்டான்.

பிரகாசமிக்க அந்த நிஷாதனைப் {நளனைப்} பார்வையில் கண்டதும், பெண்களின் முதன்மையான அவர்கள், ஆச்சரியமடைந்து, தங்கள் இருக்கைகளில் இருந்து ஊற்றென எழும்பினர். (அவனைக் {நளனைக்} கண்ட பார்வையில்) ஆச்சரியத்தால் நிறைந்து, இதய மகிழ்ச்சியோடு நளனைப் புகழ்ந்தனர். எதையும் பேசாமல் அவர்கள் “ஓ, என்ன அலங்காரம்? ஓ, இந்த உயர் ஆன்மா கொண்டவனுக்கு என்ன கனிவு? யாரிவன்? தேவனா? யக்ஷனா? அல்லது கந்தர்வனா?” என்று மானசீகமாக நினைத்து அவனுக்கு மரியாதை செலுத்தினர். அந்தப் பெண்களில் முதன்மையானவர்கள் நளனின் பிரகாசத்தாலும், அவர்களுக்கு ஏற்பட்ட நாணத்தாலும் ஆச்சரியத்துடன் கூடிய குழப்பமடைந்து, அவனை அணுகிப் பேசாதிருந்தனர்.

தமயந்தியும் வியப்பால் தாக்கப்பட்டிருந்தாலும், போர்க்குணமுள்ள நளன் புன்னகைத்தவாறே தானும் புன்னகைத்துக் கொண்டு, “ஓ களங்கமற்ற குணங்கள் கொண்டவரே, காதலை எனக்குத் தூண்டி விட வந்திருக்கும் நீர் யார்? ஓ பாவமற்றவரே, ஓ தேவ உரு கொண்ட வீரரே, இங்கு வந்திருக்கும் நீர் யார் என்று அறிய ஆவலாய் இருக்கிறேன். மேலும், நீர் ஏன் இங்கு வந்திருக்கிறீர்? எனது மாளிகை நன்கு பாதுகாக்கப்பட்டது என்றும் மன்னரின் ஆணைகள் கடுமையானவை என்று கருதி வரும் வேளையில், நீர் எப்படி யாரும் அறியாமல் இருக்கிறீர்?” என்று கேட்டாள்.

விதரப்ப மன்னனின் மகளால் {தமயந்தியால்} இப்படிச் சொல்லப்பட்ட நளன், “ஓ அழகான மங்கையே, எனது பெயர் நளன் என்பதை அறிந்து கொள். நான் இங்கு தேவர்களின் தூதுவனாக வந்திருக்கிறேன். சக்ரன் {இந்திரன்}, அக்னி, வருணன், யமன் ஆகிய தேவர்கள் உன்னை அடைய விரும்புகிறார்கள். ஓ அழகான மங்கையே, அவர்களில் ஒருவரை நீ உனது தலைவனாகத் தேர்ந்தெடு. அவர்களின் சக்தியாலேயே நான் யாரும் பார்க்காதவாறு நான் இங்கு நுழைந்தேன். இதன் காரணமாகவே எனது வழியில் என்னை யாரும் காணவில்லை அல்லது எனது நுழைவைத் தடுக்கவில்லை. ஓ கனிவானவளே {தமயந்தி}, இந்த காரியத்துக்காகவே நான் தேவர்களில் முதன்மையானவர்களால் அனுப்பப்பட்டேன். ஓ பேறு பெற்றவளே, இதைக் கேட்டு, உனக்கு மகிழ்ச்சி தருவதைச் செய்” என்றான் {நளன்}.

உமக்காகவே நான் உயிர் விடுவேன் – வனபர்வம் பகுதி 56-நளனிடம் தமயந்தி, தான் அவனை விரும்புவதாகச் சொல்வது; நளன் தேவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்குமாறு தமயந்தியிடம் சொல்வது;  தமயந்தி பழியற்ற ஒரு வழியைச் சொல்வது; தமயந்தியைச் சந்தித்த செய்தியை தேவர்களிடம் நளன் கூறுவது..

பிருகதஸ்வர் சொன்னார், “தேவர்களை வணங்கிய தமயந்திஇப்படிச் சொன்ன நளனிடம் புன்னகையுடன், “ஓ மன்னா {நளரே}, உரிய முறையில் என்னிடம் அன்பு கொண்டு {காதல் கொண்டு}, நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு கட்டளையிடுவீராக. நானும், எனக்கு உரியதாக இருக்கும் எல்லா செல்வங்களும் உமதே. ஓ மேன்மையானவரே, முழு நம்பிக்கையுடன் கூடிய உமது அன்பை {காதலை} எனக்கு அருளும். ஓ மன்னா, அன்னங்கள் பேசிய மொழி என்னை எரித்துக் கொண்டிருக்கின்றன. ஓ வீரரே, உமக்காகவே நான் இந்த மன்னர்களின் கூடுகையைக் கூட்டியிருக்கிறேன். ஓ உரிய மரியாதை தருபவரே, உம்மை வணங்கும் என்னை நீர் கைவிட்டீரென்றால், உமக்காகவே நான் விஷத்தையோ, நெருப்பையோ, நீரையோ, {தூக்கு} கயிறையோ நாடுவேன்” என்றாள் {தமயந்தி}.

விதரப்ப மன்னனின் {பீமனின்} மகளால் {தமயந்தியால்} இப்படிச் சொல்லப்பட்ட நளன், அவளிடம், “லோகபாலர்கள் இருக்கும்போது, நீ மனிதனையா தேர்ந்தெடுப்பாய்? உனது இதயத்தை அந்த உயர் ஆன்ம தலைவர்களிடம், உலகத்தை உண்டாக்கிவர்களிடம் திருப்பு. அவர்களின் பாத தூசுக்குக்கூட நான் சமானமாக மாட்டேன். இறப்பைக் கொண்ட மனிதன் {mortal}, தேவர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தினால் மரணத்தைச் சந்திப்பான். ஓ களங்கமற்ற உறுப்புகளைக் கொண்டவளே {தமயந்தி}, என்னைக் காப்பாற்று! எல்லாவற்றையும் விஞ்சும் தேவர்களைத் தேர்ந்தெடு. தேவர்களை ஏற்பதால், நீ கறையில்லா ஆடைகளையும், பலவண்ண தெய்வீக மாலைகளையும், அற்புதமான ஆபரணங்களையும் அனுபவிப்பாய். பூமி முழுவதையும் சுருக்கி, திரும்பவும் விழுங்குகின்ற தேவர்களில் தலைவனான ஹுதாசனனை {அக்னியை} எந்தப் பெண்தான் தனது தலைனாகத் தேர்ந்தெடுக்க மாட்டாள்? தனது கதாயுத்தின் அசைவால், அனைத்து உயிரினங்களையும் அறத்தின் பாதையில் நடத்துபவனை {யமனை}, எந்தப் பெண்தான் தனது தலைவனாகத் தேர்ந்தெடுக்க மாட்டாள்? தேவர்களுக்குத் தலைவனும், தைத்தியர்கள் மற்றும் தானவர்களைத் தண்டிப்பவனும், அறம்சார்ந்த உயர் ஆன்ம மகேந்திரனை {இந்திரனை}, எந்தப் பெண்தான் தனது தலைவனாகத் தேர்ந்தெடுக்க மாட்டாள்? அல்லது, உனது இதயத்தில் லோகபாலர்களில் ஒருவனான வருணனைத் தேர்ந்தெடுத்தால், தயக்கமின்றி அதைச் செய். இதை நட்பின் அறிவுரையாக ஏற்றுக் கொள்” என்றான் {நளன்}.

இப்படி அந்த நிஷாதனால் {நளனால்} சொல்லப்பட்ட தமயந்தி, கண்ணீரால் கண்கள் நீராட, துயரத்துடன் நளனிடம், “ஓ பூமியின் தலைவா, அனைத்து தேவர்களையும் வணங்கி, நான் உம்மை என் தலைவனாகத் தேர்ந்தெடுக்கிறேன். இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றாள். தேவர்களின் தூதுவனாக வந்த அந்த மன்னன், கரங்கள் கூப்பி நடுங்கிக் கொண்டிருந்த தமயந்தியிடம், “ஓ இனியவளே, நீ விரும்பியவாறே செய். ஓ அருளப்பட்டவளே, நான் தேவர்களுக்கு வாக்குக் கொடுத்துவிட்டு, மற்றவர் காரியமாக வந்து, எனது சொந்த நலனை நான் எப்படி நாட முடியும்? அறம் சார்ந்து எனது நலனை நாட முடியும் என்றால் நான் நாடுவேன். ஓ அழகானவளே, நீயும் அதன்படியே செய்” என்றான் {நளன்}.

பிறகு, பிரகாசமிக்க புன்னகை கொண்ட தமயந்தி, மன்னன் நளனிடம் கண்ணீரால் தடைபற்ற குரலுடன் மெதுவாக, “ஓ மனிதர்களின் தலைவா, நான் பழியற்ற வழியொன்றைக் காண்கிறேன். அப்படிச் செய்தால் எந்தப் பாவமும் உம்மை அணுகாது. ஓ மன்னா {நளனே}, ஓ மனிதர்களில் முதன்மையானவரே, இந்திரனின் தலைமையில் வந்துள்ள அனைத்து தேவர்களுடன் நீரும் சுயம்வரத்திற்கு வாரும். ஓ ஏகாதிபதி {நளரே}, அங்கே, அந்த லோகபாலர்களின் முன்னிலையில், ஓ மனிதர்களில் புலியே, நான் உம்மைத் தேர்ந்தெடுப்பேன். அப்போது உம்மீது எந்தப் பழியும் ஏற்படாது” என்றாள்.

ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, விதரப்ப மன்னனின் மகளால் {தமயந்தியால்} இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் நளன், தேவர்கள் ஒன்றாகத் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பினான். அந்தப் பெரும் தேவர்களை அவன் அணுகுவதைக் கண்ட லோகபாலர்கள், ஆர்வத்துடன் என்ன நடந்தது என்பதை விசாரிக்க, அவனிடம், “ஓ மன்னா {நளா}, இனிய புன்னகை கொண்ட தமயந்தியைக் கண்டாயா? அவள் எங்களைக் குறித்து என்ன சொன்னாள்? ஓ பாவமற்ற ஏகாதிபதியே {நளா}, எங்களுக்கு அனைத்தையும் சொல்” என்று கேட்டனர்.

நளன், “உங்களால் கட்டளையிடப்பட்ட நான், கோலைக் {தடியைக்} கைகளில் தாங்கி, மூத்த {அனுபவம் வாய்ந்த} காவலர்களால் காக்கப்பட்ட, உயர்ந்த நுழைவாயில்களைக் கொண்ட தமயந்தியின் அரண்மனைக்குள் நுழைந்தேன். உங்களது சக்தியின் தன்மையால், நான் அங்கு நுழைந்த போது, அந்த இளவரசியைத் {தமயந்தியைத்} தவிர யாரும் என்னைக் காண வில்லை. நான் அவளது பணிப்பெண்களைக் கண்டேன். அவர்களும் என்னைக் கண்டார்கள். ஓ மேன்மையான தேவர்களே, மேலும், என்னைக்கண்டதும் அவர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர். நான் அவளிடம் பேசிய போது, அந்த அழகான முகம் கொண்ட அந்த மங்கை {தமயந்தி}, ஓ தேவர்களில் சிறந்தவர்களே, அவளது விருப்பத்தை என் மேல் நிலைக்க வைத்து என்னை {அவளுக்கான துணையாகத்} தேர்ந்தெடுத்தாள். அந்த மங்கை {தமயந்தி}, “ஓ மனிதர்களில் புலியே, தேவர்கள் உம்முடன் சுயம்வரத்திற்கு வரட்டும். அவர்களது முன்னிலையில் நாம் உம்மைத் தேர்ந்தெடுக்கிறேன். இதனால், ஓ பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவரே {நளரே}, உம்மை எந்தப் பழியும் சேராது” என்றாள். தேவர்களே, இதுவே நான் சொன்னவாறு அங்கு நடந்தது. தேவர்களில் முதன்மையானவர்களே {லோகபாலர்களே}, கடைசியாக {இனி} அனைத்தும் உங்களைச் சார்ந்தே இருக்கிறது” என்றான் {நளன்}.

நளனைத் தேர்ந்தெடுத்த தமயந்தி! – வனபர்வம் பகுதி 57-தமயந்தியின் சுயம்வரம் நடப்பது; நளனைப் போன்ற உருவத்துடன் லோகபாலர்கள் நால்வரும் நளனுடன் சேர்ந்து நிற்பது; யார் நளன் என்று தமயந்தி குழம்புவது; நளனை வெளிக்காட்டும்படி தேவர்களிடம் தமயந்தி மானசீகமாக வேண்டுவது; சில குறிப்புகளைக் கொண்டு உண்மையான நளனை தமயந்தி தேர்ந்தெடுப்பது..

பிருகதஸ்வர் தொடர்ந்தார், “புனிதமான சந்திர நாளில், புண்ணியமான காலத்தில், நன்மை தரும் நேரம் வந்த போது, மன்னன் பீமன், மன்னர்களை சுயம்வரத்திற்கு அழைத்தான். இதைக் கேள்விப்பட்ட அனைத்து பூமியின் தலைவர்களும் காதலால் தாக்குண்டு, தமயந்தியை (அடைய) விரும்பி அங்கே விரைவாக வந்தனர். அந்த ஏகாதிபதிகள் அனைவரும், தங்கத் தூண்களாலும், உயர்ந்த நுழைவு வாயில் கொண்ட அந்த அரைவட்டமான சபைக்குள் கடும் மலைகளில் நுழையும் பெரும் பலம் வாய்ந்த சிங்கங்கள் போல நுழைந்தார்கள். வாசனையான மாலைகளாலும், பளபளப்பாக்கப்பட்ட காது வளையங்களாலும், நகைகளாலும் நன்கு தங்களை அலங்கரித்துக் கொண்ட அந்த பூமியின் தலைவர்கள் அங்கிருந்த பல இருக்கைகளில் தங்கள்  தங்களுக்குரிய இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள்.

புனிதமான அந்த மன்னர்களின் சபை, மனிதர்களில் புலிகளால் நிரம்பி, நாகர்களால் மொய்க்கப்பட்ட போகவதி {நகரத்தைப்} போல அல்லது புலிகளால் நிரம்பிய பெரும் மலைக்குகை போல இருந்தது. அவர்களது கரங்கள் பலமானவையாக இரும்பு கதாயுதம் போல நல்ல உருவத்தில், அருளுடன் ஐந்து தலை நாகங்களைப் போல காட்சி அளித்தது. அழகான கேசம், அழகான நாசி, விழி, புருவம் ஆகிய அருளுடன் இருந்த அந்த மன்னர்கள் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் போல மின்னினர்.

பிறகு, (நேரம் வந்ததும்), அழகான முகத்தைக் கொண்ட தமயந்தி, தனது பிரகாசத்தால் அங்கிருந்த இளவரசர்களின் இதயங்களையும் கண்களையும் கொள்ளை கொண்டு சபைக்குள் நுழைந்தாள். அவளைப் பார்த்த அந்த சிறப்புவாய்ந்த ஏகாதிபதிகளின் பார்வை, அவளது எந்த அங்கத்தில் முதலில் விழுந்ததோ, அந்த அங்கத்திலேயே {பார்வை} நிலைத்து, சற்றும் அசையாமல் இருந்தனர். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்த ஏகாதிபதிகளின் பெயர்கள் சொல்லப்பட்டபோது, பீமனின் மகள் {தமயந்தி} ஒரே தோற்றம் கொண்ட ஐந்து பேரைக் கண்டாள். உருவத்தில் எந்த வித்தியாசமும் இன்றி அங்கு அமர்ந்திருந்த அவர்களைக் கண்டு, மனதில் சந்தேகம் கொண்டாள். அவளால் {தமயந்தியால்} அவர்களில் யார் மன்னன் நளன் என்பதை உறுதி செய்ய முடியவில்லை. (அவர்களில்) அவள் யாரைக் கண்டாலும், அவனை நிஷாத மன்னன் {நளன்} என்றே கருதினாள். இதனால் துயரம் கொண்ட அந்த அழகானவள் தனக்குள், “ஓ, எப்படி நான் தேவர்களை வேறுபடுத்திப் பார்ப்பேன்? எப்படி அரசன் நளனைக் கண்டுகொள்வேன்?” என்று நினைத்தாள்.

இப்படிச் சிந்தித்த விதரப்பனின் {மன்னன் பீமனின்} மகள் {தமயந்தி}, துயரத்தால் நிறைந்தாள். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தேவர்களின் அடையாளங்களைத் தான் கேள்விப்பட்டவாறு நினைத்துப் பார்த்து, தனக்குள், “முதியவர்களிடம் இருந்து நாம் கேள்விப்பட்ட தேவர்களின் குணங்கள் இப்போது இந்தப் பூமியில் இங்கே இருக்கும் எந்த தெய்வத்துக்கும் பொருந்தவில்லையே” என்று நினைத்தாள். இந்தக் காரியத்தைக் குறித்து தனது மனதில் குழப்பிக் கொண்டு, திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்து, அந்தத் தேவர்களின் பாதுகாப்பையே நாடுவது என்று தீர்மானித்தாள். மனதாலும் சொல்லாலும் அவர்களை வணங்கி, கரங்கள் கூப்பி, நடுக்கத்துடன் அவர்களிடம், “அன்னங்களின் பேச்சைக் கேட்டதில் இருந்து, நான் நிஷாதர்களின் மன்னனை {நளனை} எனது தலைவனாகத் தேர்ந்தெடுத்தேன். ஓ, உண்மையின் பொருட்டு, தேவர்கள் அவரை {நளரை} எனக்கு வெளிப்படுத்தட்டும். மனதாலோ சொல்லாலோ நான் அவரை விட்டு நான் வழி தவறியதில்லை. ஓ, உண்மையின் பொருட்டு, தேவர்கள் அவரை {நளரை} எனக்கு வெளிப்படுத்தட்டும். தேவர்களே நிஷாதர்களின் ஆட்சியாளரை {நளரை} எனக்கு தலைவராக விதித்திருப்பதால், ஓ, உண்மையின் பொருட்டு, அவர்கள் {தேவர்கள்{ அவரை {நளரை} எனக்கு வெளிப்படுத்தட்டும். நளருக்கு மரியாதை செலுத்தும் பொருட்டும்,  உண்மையின் பொருட்டும், நான் இந்த நோன்பை மேற்கொள்வதால், ஓ, தேவர்கள் அவரை {நளரை} எனக்கு வெளிப்படுத்தட்டும். ஓ, உலகங்களின் அந்த மேன்மையான பாதுகாவலர்கள், அந்த நீதிமானான மன்னனை நான் அறிந்து கொள்ளும் பொருட்டு, தங்கள் உண்மை உருவை அடையட்டும்” என்றாள் {தமயந்தி}.

தமயந்தியின் பரிதாபகரமான வார்த்தைகளைக் கேட்டும், நிஷாதர்களின் மன்னன் {நளனின்} மேல் தீவிர காதல் கொண்ட அவளது நிலைத்த தீர்மானத்தை உறுதி செய்து கொண்டும்,  அவளது இதயசுத்தத்தையும், நளன் மீது கொண்ட பாசத்தையும் கருதிப் பார்த்து, தங்கள் தங்கள் பண்புகளைத் தங்களால் இயன்ற வரை ஏற்ற அந்த தேவர்கள் தாங்கள் நினைத்ததைச் செய்தனர். அதன் பிறகு, அவள் {தமயந்தி}, தேவர்கள் வியர்வையற்றவர்களாக, கண் சிமிட்டாதவர்களாக, வாடா மாலைகள் தரித்தவர்களாக, தூசு கறை படியாதவர்களாக, தரையைத் தொடாமல் நிற்பதைக் கண்டாள். நிஷாதன் {நளன்}, தனது நிழல் தெரியும்படி, வாடிய மாலையுடன், தூசால் கறைபட்டு, வேர்வையுடன், பூமியில் கால் பதித்து, கண்களைச் சிமிட்டிக் கொண்டு நின்றான்.

ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தேவர்களையும், அறம் சார்ந்த நளனையும் கடந்து வந்த பீமனின் மகள் {தமயந்தி}, தனக்கு உண்மையான நிஷாதனைத் {நளனைத்} தேர்ந்தெடுத்தாள். அந்த அகன்ற விழி கொண்டக் காரிகை. நாணத்துடன், அவனது ஆடையின் நுனியைப் பற்றி, மிதமிஞ்சிய அருள் கொண்ட அந்த மலர் மாலையை அவனது {நளனின்} கழுத்தில் அணிவித்தாள். அந்த அழகன நிறம் கொண்ட மங்கை {தமயந்தி} நளனைத் தனது கணவனாகத் தேர்ந்தெடுத்தபோது, தீடீரென வியப்புடன், “ஓ” என்றும் “ஐயோ!” என்றும் மன்னர்கள் வெடித்தனர். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தேவர்களும் பெரும் முனிவர்களும் வியப்படைந்து, “அற்புதம்! அற்புதம்!” என்று மன்னனைப் {நளனைப்} பாராட்டினர்.

ஓ கௌரவனே {யுதிஷ்டிரா}, வீரசேனின் அரசமகன், மகிழ்ச்சியால் இதயம் நிறைந்து,  அழகான தமயந்தியிடம், “ஓ அருளப்பட்டவளே, தேவர்களின் முன்னிலையில் மனிதனான {இறந்து போகக்கூடிய mortal} என்னைத் தேர்ந்தெடுத்ததால், நான் உனது உத்தரவுக்குக் கீழ்ப்படியும் கணவனாக இருப்பேன் என்பதை அறிந்து கொள். ஓ இனிய புன்னகை கொண்டவளே, என்னுடலில் எனது உயிர் உள்ள வரை, நான் உனதாகவே, உனக்கு மட்டுமே ஆனவனாக இருப்பேன் என்று உண்மையாகச் சொல்கிறேன்.” என்று சொல்லி ஆறுதலளித்தான். தமயந்தியும், குவிந்த கரங்களுடன், அதே போன்ற வார்த்தைகளில் மரியாதை செலுத்தினாள்.

அக்னியையும், மற்ற தேவர்களையும் கண்ட அந்த மகிழ்ச்சி நிறைந்த ஜோடி, மானசீகமாக அவர்களின் பாதுகாப்பை வேண்டினர். பீமனின் மகள் {தமயந்தி}, நிஷாதனைத் {நளனைத்} தனது கணவனாகத் தேர்ந்தெடுத்த பின்னர், பெரும் பிரகாசம் கொண்ட லோகபாலர்கள் திருப்தியான இதயத்துடன், நளனுக்கு எட்டு {8} வரங்களை அளித்தனர்சச்சியின் தலைவனான சக்ரன் {இந்திரன்}, நளனுக்கு வேள்விகளில் தனது {இந்திரனின்} தேவ தன்மையைக் காணவும், அருள் உலகங்களை அடையவும் வரங்களைக் கொடுத்தான். ஹுதாசனன் {அக்னி}, அந்த நிஷாதன் {நளன்} விரும்பியபோதெல்லாம் தான் {அக்னி} அவனுக்குக் காட்சியளிக்கவும், தன்னைப் போன்ற பிரகாசத்தை உடைய உலகங்களை அடையவும் வரங்களைக் கொடுத்தான். யமன், அவனுக்கு உணவில் நுட்பமான சுவையையும் {நளன் நல்ல சமையற்கலைஞன்}, மேலான அறநிலையையும் வரங்களாக அளித்தான். நீர்த்தலைவன் {வருணன்}, நளனுக்கு, விரும்பிய போது தன்னைக் காணவும், தெய்வீக நறுமணம் கொண்ட மலர்மாலைகளையும் வரங்களாகக் கொடுத்தான். இப்படியே அவர்களில் {லோகபாலர்களில்} ஒவ்வொருவரும் இரு வரங்களை அளித்தனர். இந்த வரங்களை அளித்த தேவர்கள் சொர்க்கத்திற்குத் திரும்பினர். தமயந்தி நளனைத் தேர்ந்தெடுப்பதைச் சாட்சியாகக் கண்ட மன்னர்களும், மகிழ்ச்சியுடன் தாங்கள் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே திரும்பிச் சென்றனர்.

அந்தப் பலம் வாய்ந்த ஏகாதிபதிகள் சென்றதும், உயர் ஆன்ம பீமன், மிகவும் திருப்தியடைந்து, நளன் மற்றும் தமயந்தியின் திருமணத்தைக் கொண்டாடினான். தான் விரும்பிய காலம் வரை அங்கு தங்கிய மனிதர்களில் சிறந்த அந்த நிஷாதன் {நளன்}, பீமனின் அனுமதியைப் பெற்று தனது சொந்த நகரத்திற்குத் திரும்பினான். பெண்களில் முத்தை {தமயந்தியை} அடைந்த அந்த அறம்சார்ந்த மன்னன், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பலனையும் விரித்திரனையும் கொன்றவன் {இந்திரன்சச்சியுடன் இருப்பது போல, தனது நாட்களை மகிழ்ச்சிகரமாகக் கடத்தினான். சூரியனைப் போன்ற புகழுடன் இருந்த அந்த மன்னன் {நளன்}, மகிழ்ச்சியால் நிறைந்து, தனது குடிமக்களை நீதியுடன் ஆண்டு, அவர்களுக்கு பெரும் திருப்தியை அளித்தான். *நகுஷனின் மகனான யயாதியைப் போன்ற அந்த புத்திசாலி ஏகாதிபதி {நளன்}, அந்தணர்களுக்கு ஏராளமான பரிசுகளுடன் குதிரை வேள்வியையும், மற்ற பல வேள்விகளையும் கொண்டாடினான்.

தமயந்தியுடன் காதலுடன் கானகங்களிலும், தோப்புகளிலும் தேவர்களைப் போல விளையாடினான். அந்த உயர்ந்த மனம் கொண்ட மன்னன் {நளன்}, தமயந்தியிடம் இந்திரசேனன் என்ற மகனையும், இந்திரசேனை என்ற மகளையும் பெற்றான். வேள்விகள் கொண்டாடி, (தமயந்தியுடன்) விளையாடி, இருந்த அந்த மன்னன், செல்வங்களுடன் கூடிய பூமியை ஆண்டான்.

பகடைக்குள் நுழைந்த துவாபரன் – வனபர்வம் பகுதி 58-லோகபாலர்கள் கலியையும் துவாபரனையும் செல்லும் வழியில் கண்டது; தமயந்தி நளனைத் தேர்ந்தெடுத்ததை அறிந்த கலி துவாபரனின் துணையுடன் நளனை அவமதிப்பதாக உறுதி கூறுவது…

பிருகதஸ்வர் சொன்னார், “பீமன் மகள் {தமயந்தியின்} அந்த நிஷாதனை {நளனை}த் தேர்ந்தெடுத்தபிறகு, உலகங்களின் அந்தப் பிரகாசமிக்க பாதுகாவலர்கள் {லோகபாலர்கள்} திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்களின் {தேவர்களின்} வழியில் தங்களை நோக்கி வந்த துவாபரனையும் {துவாபர யுகம்}, கலியையும் {கலியுகம்} சந்தித்தனர்.

அதன்பிறகு கலி சக்ரனிடம் {இந்திரனிடம்}தமயந்தியின் சுயம்வரத்திற்கு சென்று, அந்த மங்கையை {மனைவியாக} அடையப்போகிறேன். எனது இதயம் அந்த மங்கை மீதே நிலைத்திருக்கிறது” என்றான். இதைக் கேட்ட இந்திரன் புன்னகையுடன், “சுயம்வரம் முடிந்துவிட்டது. எங்கள் கண் முன்பாகவே அவள் {தமயந்தி} நளனைக் கணவனாக வரித்தாள்” என்றான் {இந்திரன்}.

சக்ரனால் {இந்திரனால்} இப்படிச் சொல்லப்பட்ட தேவர்களில் தீயவனான கலி, கோபத்தால் நிறைந்து, அந்த தேவர்களிடம், “தேவர்களின் முன்னிலையில் ஒரு மனிதனை {இறந்து போகும் உயிரை – Mortal-ஐ} அவள் தனது தலைவனாகத் தேர்ந்தெடுத்ததால், அவள் கடும் வேதனையைச் சந்திப்பது உறுதி” என்றான். கலியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், “எங்களுடைய அனுமதியின் பேரிலேயே தமயந்தி நளனை வரித்தாள். அனைத்து அறங்களும் கொண்ட மன்னன் நளனை எந்த மங்கைதான் தேர்ந்தெடுக்கமாட்டாள்? கடமைகள் அனைத்தையும் அறிந்து, நேர்மையுடன் இருக்கும் நளன், அவன் புராணங்களை ஐந்தாவது வேதமாகக் கருதி நான்கு வேதங்களையும் படித்திருக்கிறான்.

அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கற்றவனாகவும், உறுதியான நோன்புகளுடன் உண்மை பேசுபவனாகவும், தனது வீட்டில் விதிப்படி செய்ய வேண்டிய வேள்விகளைச் செய்து எப்போதும் தேவர்களைக் கொண்டாடுபவனாகவும் வாழ்கிறான் {நளன்}. லோகபாலர்களைப் பிரதிபலிக்கும் அந்த மனிதர்களில் புலி, உண்மை, பொறுமை, அறிவு, சுத்தம், சுயக்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டு முழுமையான அமைதியடைந்த ஆன்மாவைக் கொண்டவனாக இருக்கிறான். ஓ கலியே, இத்தகு குணங்களைக் கொண்ட நளனைச் சபிக்க நினைக்கும் முட்டாள், தனது அச்செயலால் தன்னையே சபித்துக் கொண்டு அழித்துக் கொள்கிறான். மேலும், ஓ கலியே, இத்தகு அறங்களை முடிசூடிக்கொண்டிருக்கும் நளனைச் சபிக்க முயல்பவன், வேதனைகள் நிறைந்த அடியற்ற பரந்த நரகக்குழியில் மூழ்குவான்” என்றனர். இப்படி கலியிடமும் துவாபரனிடமும் சொல்லிவிட்டு, தேவர்கள் சொர்க்கத்திற்குச் சென்றனர்.

தேவர்கள் சென்றவுடன், கலி துவாபரனிடம், “ஓ துவாபரா, நான் எனது கோபத்தை அடக்க முடியாதவனாக இருக்கிறேன். நான் நளனைப் பீடித்து, அவனது நாட்டைப் பிடுங்கப் போகிறேன். அவன் இனிமேலும் பீமனின் மகளுடன் {தமயந்தியுடன்} விளையாட முடியாது. பகடைக்குள் நுழைந்து, நீ எனக்கு உதவுவாயாக” என்றான் {கலி-கலி யுகன்}.

சூதாடிய நளனும் புஷ்கரனும் – வனபர்வம் பகுதி 59-கலியால் உபதேசிக்கப்பட்ட புஷ்கரன், தமயந்தியின் முன்னிலையில் நளனைச் சூதாட அழைத்தல்; நளனும் புஷ்கரனும் பல மாதங்களுக்குச் சூதாடியது..

பிருகதஸ்வர் சொன்னார், “இப்படி துவாபரனுடன் {துவாபர யுகத்துடன்} உடன்பாடு செய்து கொண்ட கலி {கலியுகம்} நிஷாத மன்னன் {நளன்} இருந்த அரண்மனைக்கு வந்தான். அவனிடம் ஏதாவது ஓட்டையைக் {குறையைக்} கண்டுபிடிப்பதற்காக, அந்த நிஷாதர்களின் நாட்டில் பல காலம் தொடர்ந்து வசித்தான். இப்படி காத்திருந்த கலி, பனிரெண்டாவது {12} வருடத்தில்தான் ஒரு ஓட்டையைக் கண்டுபிடித்தான். ஒருநாள், இயற்கையின் அழைப்புக்கு பதில் சொல்லிவிட்டு {ஜலமோஜனம் = சிறுநீர் கழித்துவிட்டு}, காலைக்கழுவாமல், நீரை மட்டும் தொட்டுவிட்டு, தனது சந்தி கால வழிபாட்டைச் செய்தான்.

இதனால் {இந்தப் புறக்கணிப்பால்}, கலி அவனது உடலுக்குள் புகுந்தான். நளனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, புஷ்கரன் முன்பு தோன்றி, அவனிடம், “வா வந்து நளனுடன் பகடை விளையாடு. எனது உதவியின் பேரில் நீ நிச்சயம் வெல்வாய். மன்னன் நளனை வீழ்த்தி, அவனது நாட்டை அடைந்து, நிஷாதர்களை நீ ஆட்சி செய்வாய்” என்றான் {கலி}.

கலியால் இப்படி உபதேசிக்கப்பட்ட புஷ்கரன் நளனிடம் சென்றான். முக்கியமான பகடைக்காயாகி, விருஷன் {காளை} என்ற பெயரோடு புஷ்கரனை அணுகினான் துவாபரன். எதிரிவீரர்களைக் கொல்லும் போர்க்குணமுள்ள நளன் முன்பாக புஷ்கரன் தோன்றி, திரும்பத் திரும்ப அவனிடம் {நளனிடம்}, “நாம் இருவரும் சேர்ந்து பகடை விளையாடுவோம்” என்று கேட்டான். தமயந்தியின் முன்னால் இப்படி சவால்விடப்பட்ட அந்த உயர்ந்த எண்ணம் கொண்ட மன்னனால் {நளனால்} அதை நிராகரிக்க முடியவில்லை. அதன் தொடர்ச்சியாக அவன் ஆட்டத்துக்கான நேரத்தைக் குறித்தான்.

தனது பந்தயப் பொருட்களான தங்கம், வெள்ளி, தேர்கள், ஆடைகள் ஆகிவற்றை கலியினால் பீடிக்கப்பட்ட நளன் இழக்க ஆரம்பித்தான். பகடையில் வெறிபிடித்த அந்த எதிரிகளை ஒடுக்குபவனை {நளனை}, அவனது நண்பர்களால் கூட அந்த விளையாட்டில் இருந்து விலக்க முடியவில்லை. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, துயரத்தில் இருந்த அந்த ஏகாதிபதியைப் {நளனைப்} பார்ப்பதற்கும், அவனை விளையாட்டில் இருந்து தடுப்பதற்காகவும், குடிமக்கள் அனைவரும் முதலமைச்சர்களுடன் சேர்ந்து அங்கே வந்தனர். ஒரு தேரோட்டி தமயந்தியிடம், “ஓ மங்கையே, குடிமக்களும், நாட்டின் அதிகாரிகளும் வாயிலில் காத்திருக்கின்றனர். அறத்தையும் செல்வத்தையும் கொண்ட தங்கள் மன்னன் பேரிடரில் வீழ்ந்ததைத் தாங்கிக் கொள்ள இயலாத குடிமக்கள் இங்கே வந்திருக்கின்றனர் என்று நிஷாதர்களின் மன்னனிடம் {நளனிடம்} தெரிவிப்பாயாக” என்றான் {தேரோட்டி}.

அதனால் பீமனின் மகள் {தமயந்தி}, துயரத்தில் மூழ்கி, கிட்டத்தட்ட தனது நினைவை இழக்கும் நிலையில், தடைபட்ட சொற்களுடன் நளனிடம், “ஓ மன்னா, குடிமக்களும் நாட்டின் முதலமைச்சர்களும் உம்மீது கொண்ட விசுவாசத்தால், உம்மைக் காணவிரும்பி வாயிலில் நிற்கின்றனர். அவர்களுக்கு உம்மைக் காணும் வாய்ப்பை அருளும்” என்றாள். ஆனால் கலியால் பீடிக்கப்பட்ட மன்னன் {நளன்}, இப்படிப் புலம்பிக் கொண்டிருந்த அருள்நிறைந்த பார்வை கொண்ட தனது ராணிக்கு {தமயந்திக்கு} ஒரு வார்த்தையும் மறுமொழி கூறாதிருந்தான். இதனால், நாட்டின் அமைச்சர்களும், குடிமக்களும் துயரமும் அவமானமும் அடைந்து “இவன் வாழ மாட்டான்” என்று சொல்லி தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர். ஓ யுதிஷ்டிரா, இப்படியே அறம்சார்ந்தவனான நளன் முழுவதும் மோசம்போகும்வரை அவனும் {நளனும்} புஷ்கரனும் பல மாதங்களுக்கு ஒன்றாகச் சூதாடினர்.

விதர்ப்பம் சென்ற பிள்ளைகள் – வனபர்வம் பகுதி 60-நளன் சூதில் அனைத்தையும் இழந்துவிடுவான் என்று எதிர்பார்த்த தமயந்தி, தேரோட்டியை அழைத்து தனது பிள்ளைகளை விதரப்ப்ப நாட்டில் இருக்கும் தனது தந்தை பீமனிடம் அழைத்துச் செல்ல வேண்டுவது. தேரோட்டியும் அவ்வாறே செய்வது.

பிருகதஸ்வர் சொன்னார், “ஓ மன்னா {யுதிஷ்டிரா} பீமனின் மகளான கலக்கமற்ற தமயந்தி, நேர்மையான மன்னன் {நளன்} பகடையால் உணர்விழந்திருப்பதைக் கண்டு, அச்சத்திலும் துயரத்திலும் மூழ்கினாள். மன்னன் செய்யும் இக்காரியம் மிகத்தீவிரமானது என்று அவள் {தமயந்தி} நினைத்தாள். நளனை அச்சுறுத்திக் கொண்டிருந்த பேரிடரின் தொடர்ச்சியைக் கண்டு, தனது தலைவன் {நளன்} அனைத்தையும் தொலைத்துவிட்டான் என்பதைப் புரிந்து, அவனுக்கு {நளனுக்கு} நன்மை செய்ய வேண்டி, பெரும் புகழ்வாய்ந்த, தன் மேல் நல்ல நோக்கம் கொண்ட, அனைத்துக் கடமைகளையும் குதூகலமாகச் செய்யும், நம்பிக்கையும் இனிமையான பேச்சும் கொண்ட பிருகத்சேனை என்ற பணிப்பெண்ணை அழைத்து, “ஓ பிருஹத்சேனா, இங்கிருந்து சென்று நளரின் பெயரால் அமைச்சர்களை அழைத்து, செல்வத்தில் எதுவெல்லாம் தோற்கப்பட்டது, எவை நம்மிடம் மீதம் எஞ்சியிருக்கிறது என்பதைச் சொல்” என்று சொல்லி அனுப்பினாள்.

நளனின் அழைப்பைக் கேட்ட அமைச்சர்கள், “இது நமக்கு நற்பேறே” என்று சொல்லி மன்னனை அணுகினர். இரண்டாவது முறையும் வந்த குடிமக்களைக் கண்ட பீமனின் மகள் {தமயந்தி}, நளனிடம் அதைத் தெரிவித்தாள். ஆனால் மன்னன் {நளன்} அவளை மதிக்கவில்லை. தனது வார்த்தைகளை தனது கணவன் கருதவில்லை என்பதைக் கண்டு, மிகவும் நாணி, தனது உள் அறைக்கு {அந்தப்புரத்திற்குத்} திரும்பினாள். தொடர்ச்சியாக பகடை அறம்சார்ந்த நளனுக்குச் சாதகமாக இல்லை, அவன் அனைத்தையும் இழந்துவிட்டான் என்பதைக் கேள்விப்பட்டு, மீண்டும் தனது பணிப்பெண்ணிடம், “ஓ பிருஹத்சேனா, திரும்பவும் நளரின் வார்த்தைகளை, ஓ அருளப்பட்டவளே, தேரோட்டியான வார்ஷ்ணேயனிடம் சுமந்து செல். இப்போது கையில் இருக்கும் காரியம் மிகவும் தீவிரமானது” என்றாள். தமயந்தியின் வார்த்தைகளைக் கேட்ட பிருஹத்சேனை, வார்ஷ்ணேயனை நம்பிக்கைக்குரிய பணியாட்களை அனுப்பி அழைத்தாள்.

காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ற நடத்தையுள்ள களங்கமற்ற பீமனின் மகள் {தமயந்தி}, அந்தச்சூழ்நிலைக்குத் தக்கவாறு மென்மையான வார்த்தைகளால், “உன்னிடம் மன்னர் எப்படி நடந்து கொள்வார் என்பது உனக்குத் தெரியும். அவர் இப்போது சிரமத்தில் இருக்கிறார். ஆகவே அவருக்கு உதவுவதே உனக்குத் தகும். * புஷ்கரனிடம் மன்னர் {நளர்} எந்த அளவு தோற்கிறாரோ அவ்வளவு அந்த விளையாட்டின் மீதான தீவிரம் அதிகரிக்கிறது. புஷ்கரனுக்குக் கீழ்ப்படிந்தே பகடை விழுகிறது. அவை {பகடை} விளையாட்டில் நளருக்குச் சாதகமாக இல்லை என்று காணப்படுகிறது. அந்த {பகடை} விளையாட்டால் ஈர்க்கப்பட்டு, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வார்த்தையை அவர் கேட்பதில்லை. ஏன் எனது வார்த்தைகளையே கூட அவர் {நளர்} கேட்பதில்லை. இருப்பினும், விளையாட்டால் ஈர்க்கப்பட்டு, எனது வார்த்தைகளை அவர் கருதிப்பார்க்க வில்லையெனினும், அந்த உயர் ஆன்ம நிஷாதர் {நளர்} பழிச்சொல்லுக்கு உரியவர் இல்லை. ஓ தேரோட்டியே {வார்ஷ்ணேயரே}, நான் உனது பாதுகாப்பை நாடுகிறேன். என் கட்டளைப்படி நட. என் மனம் எனக்கு ஐயமூட்டுகிறது. மன்னர் துயரத்தை அடையலாம். ஆகவே, நளருக்குப் பிடித்தமான மனோவேகம் கொண்ட குதிரைகளையும், இந்த இரட்டையர்களையும் {எனது மகன் மற்றும் மகளையும்) தேரில் அழைத்துக் கொண்டு குண்டினபுரம் செல். எனது உறவினர்களிடம் {பிறப்பால் உண்டான உறவுகளிடம்{ எனது பிள்ளைகளையும் தேரையும் குதிரைகளையும் கொடுத்துவிட்டு, நீ அங்கேயே தங்கினாலும் சரிதான், அல்லது வேறு ஏதாவது இடத்திற்கு உனது விருப்பபடி செல்வதாக இருந்தாலும் சரிதான்” என்றாள் {தமயந்தி}.

நளனின் தேரோட்டியான வார்ஷ்ணேயன், தமயந்தியின் இவ்வார்த்தைகளை விவரமாக மன்னனின் தலைமை அதிகாரிகளிடம் தெரிவித்தான். அவர்களிடம் ஆலோசித்து அவர்களது ஏற்பையும் பெற்றுக் கொண்டு, ஓ பெரும் பலம் வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, {நளனின்} குழந்தைகளைத் தேரில் அழைத்துக் கொண்டு விதர்ப்பத்திற்குக் கிளம்பினான். இந்திரசேனன் என்ற ஆண்பிள்ளையையும், இந்திரசேனை என்ற பெண்பிள்ளையையும், தேர்களில் சிறந்த தேரையும், குதிரைகளையும், கொடுத்துவிட்டு, நளனைக் குறித்து இதயத்தில் வருந்திய அந்தத் தேரோட்டி, பீமனிடம் {தமயந்தியின் தந்தையிடம்} பிரியாவிடை பெற்று சென்றான். சிலகாலம் பயணத்தில் உலவிக்கொண்டிருந்தவிட்டு, அயோத்தியா நகரம் சென்றான். அங்கு துக்கம் நிறைந்த இதயத்துடன் மன்னன் ருதுபர்ணனின் முன்னிலையில் நின்று, அந்த ஏகாதிபதிக்குத் தேரோட்டியாகப் பணியில் சேர்ந்தான்(புஷ்கரன் – நளனுடைய தம்பி)

நிர்வாணமானான் நளன் – வனபர்வம் பகுதி 61-நளன் சூதில் தோற்று, வனத்திற்குச் செல்வது; பசியால் வாடுவது; ஆடைகளை இழப்பது; தனது மனைவியான தமயந்தியை தெற்கு நோக்கிச் செல்லுமாறு சொல்வது; தமயந்தி மறுப்பது..

பிருகதஸ்வர் சொன்னார், ” வார்ஷ்ணேயன் {தேரோட்டி} சென்ற பிறகு, நீதிமானான நளனிடமிருந்து நாட்டையும் எஞ்சியிருந்த செல்வங்களையும் வென்றான் புஷ்கரன். ஓ மன்னா {யுதிஷ்டிரா} தனது நாட்டை இழந்த நளனிடம், புஷ்கரன் சிரித்துக் கொண்டே, “விளையாட்டு தொடரட்டும். ஆனால் இப்போது உன்னிடம் பந்தயப்பொருள் என்ன இருக்கிறது. தமயந்தி மட்டுமே இருக்கிறாள்; மற்ற யாவையும் நான் வென்றுவிட்டேன். நல்லது என்று நீ விரும்பினால், தமயந்தியை இப்போது பந்தயப் பொருளாக வை” என்றான்.

புஷ்கரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த அறம்சார்ந்த மன்னன் {நளன்}, கோபத்தால் தனது இதயம் வெடித்துவிடுவது போல உணர்ந்து, ஒரு வார்த்தையும் பேசாதிருந்தான். மனம் நொந்து புஷ்கரனைப் பார்த்த பெரும் புகழ்வாய்ந்த மன்னன் {நளன்}, தனது உடலில் இருந்த அனைத்து ஆபரணங்களையும் கழற்றினான். ஒற்றையாடையில் உடலை மூடி, அனைத்து செல்வங்களையும் துறந்து, நண்பர்களின் துயரத்தைப் பெருக்கும்வகையில், வெளியேறினான் மன்னன் {நளன்}. அவன் அப்படி வெளியேறும்போதும், தமயந்தியும், ஒற்றையாடை உடுத்தி, அவன் பின்னால் தொடர்ந்து சென்றாள்.

புறநகருக்கு வந்த நளன் அங்கே தனது மனைவியுடன் மூன்று இரவுகள் தங்கினான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நளன் மீது கவனம் செலுத்தும் எவனும் கொல்லப்படுவான் என்று நகரம் முழுவதும் பிகடனம் செய்தான் புஷ்கரன். புஷ்கரனின் இவ்வார்த்தைகளாலும், நளன் மீது அவன் {புஷ்கரன்} கொண்டிருந்த விரோத மனப்பான்மையை அறிந்ததாலும், ஓ யுதிஷ்டிரா, அக்குடிமக்கள் அவனுக்கு எந்த விருந்தோம்பலையும் செய்யவில்லை. அவன் விருந்தோம்பலுக்குத் தகுந்தவன் என்றாலும் அவனை யாரும் கருதிப் பார்க்காததால், நளன் நகரத்திற்கு வெளியே புறநகரில் நீரை மட்டும் உண்டு மூன்று இரவுகளைக் கழித்தான். பசியால் துன்புற்ற அம்மன்னன் {நளன்}, பழங்களையும், கிழங்குகளையும் தேடிச் சென்றான். தமயந்தியும் அவனைப் பின்தொடர்ந்தாள்.

பட்டினியால் துயரம் கொண்ட நளன், பல நாட்களுக்குப் பிறகு தங்க நிறத்தாலான சிறகுகள் கொண்ட சில பறவைகளைக் கண்டான். பிறகு அந்த நிஷாதர்களின் பலம் வாய்ந்த தலைவன் {நளன்} தனக்குள்ளேயே, “இவையே {பறவைகளே} எனது இன்றைய உணவும் செல்வமும் ஆகும்” என்று நினைத்து, தான் அணிந்திருந்த ஆடையைக் கொண்டு அவற்றை மூடினான். அப்போது அந்தப் பறவைகள் வானத்தில் எழுந்தன. துயரத்துடன் நிர்வாணமகாக தரையைப் பார்த்துக் கொண்டு நின்ற நளனைக் கண்டு அந்த விண்ணதிகாரிகள் {பறவைகள்}, “ஓ சிறுபுத்தி கொண்டவனே {நளனே}, நாங்களே அந்தப் பகடைக்காய்கள். ஆடைகளுடன் கூட நீ செல்லக்கூடாது என்று விரும்பிய நாங்கள், உனது உடையை எடுத்துச் செல்லவே வந்தோம்” என்றன.

தான் ஆடையற்றிருப்பதையும், பகடைகள் (தனது ஆடையுடன்) சென்றுவிட்டதையும் அறிந்த அறம்சார்ந்த நளன், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தமயந்தியிடம், “ஓ களங்கமற்றவளே, நான் யாருடைய கோபத்தால் எனது நாட்டை இழந்தேனோ, யாருடைய ஆதிக்கத்தால் துயரத்திற்கும் பசிக்கும் ஆளானேனோ, யாரால் நிஷாதர்களிடம் இருந்து விருந்தோம்பலையும் வாழ்வாதாரத்தையும் நான் பெறமுடியவில்லையோ, ஓ மருட்சியுடையவளே {தமயந்தி}, அவை பறவைகளின் உரு கொண்டு எனது ஆடைகளை எடுத்துச் சென்றுவிட்டன. இந்தக் கடும் விபத்தில் வீழ்ந்து, துயரத்தால் பீடிக்கப்பட்டு, உணர்வுகளற்று இருக்கும் நான் உனக்குத் தலைவனாக இருக்கிறேன். ஆகையால், உனது நன்மைக்காக நான் பேசும் வார்த்தைகளைக் கேள்.

இந்தப் பல சாலைகள், அவந்தி  தென்னக நாடுகளுக்கு வழிகாட்டுகின்றன. அவந்தி நகரத்தையும் ரிக்ஷவான் என்ற மலையையும் தாண்டிப் போகின்றன. இதுவே விந்தியம் என்று அழைக்கப்படும் பெரும் மலை, {இது} கடலைநோக்கி ஓடும் இந்த பயோஷ்ணி ஆறு, இங்கே துறவிகளின் ஆசிரமங்களும், பலதரப்பட்ட கனிகளும், கிழங்குகளும் இருக்கின்றன. இந்தச் சாலை விதரப்ப நாட்டுக்கு செல்கிறது. அந்தச் சாலை கோசல நாட்டிற்கு செல்கிறது. தெற்கே செல்லும் இந்த சாலைகளுக்கு அப்பால் தென்னகம் {தென்நாடு} இருக்கிறது” என்றான். இப்படி பீமனின் மகளிடம் {தமயந்தியிடம்} பேசிய துயர் நிறைந்த நளன், ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தமயந்தியிடம் திரும்பத் திரும்ப இந்த வார்த்தைகளைப் பேசினான்.

அதன்பிறகு துயரத்தால் நிறைந்து, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் தமயந்தி அந்த நிஷாதனிடம் {நளனிடம்} பரிதாபகரமாக, “ஓ மன்னா, உமது நோக்கத்தை நினைத்து எனது இதயம் நடுங்குகிறது, எனது உறுப்புகள் அனைத்தும் தளர்கின்றன. நீர் உமது நாட்டை இழந்து, செல்வங்களை இழந்து, ஆடையற்று, பசியால் தேய்ந்து, சிரமப்படும் போது, உம்மை இந்தத் தனிமையான கானகத்தில் எப்படி விட்டுச் செல்வேன்? ஆழ்ந்த கானகத்தில், களைப்புடனும், பசியால் பீடிக்கப்பட்டும், உமது பழைய அருளை நினைவுகூரும் போது, ஓ பெரும் ஏகாதிபதியே {நளரே}, நான் உமது களைப்பை நீக்கி ஆறுதலளிப்பேன். ஒவ்வொரு துயருக்கும் மனைவிக்கு இணையான மருந்து வேறில்லை என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். ஓ நளரே, அந்த உண்மையைத் தான் நான் உம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றாள் {தமயந்தி}.

தனது ராணியின் {தமயந்தியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட நளன், “ஓ கொடியிடையுடைய தமயந்தி, எல்லாம் நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. துயரத்தில் இருக்கும் மனிதனுக்கு மனைவிக்கு இணையான நட்போ மருந்தோ கிடையாதுதான். நான் உன்னைக் கைவிட முயலவில்லை. ஆகையால், ஓ மருட்சியுடையவளே, உனக்கு ஏன் இந்த அச்சம்? ஓ களங்கமற்றவளே, நான் என்னைக் கைவிட்டாலும் விடுவேனே, உன்னைக் கைவிடேன்” என்றான். 

பிறகு தமயந்தி, “ஓ பெரும் பலம்வாய்ந்த மன்னா {நளரே}, நீர் என்னைக் கைவிட நினைக்கவில்லை என்றால், விதரப்ப நாட்டிற்குச் செல்லும் வழியை நீர் எனக்கு ஏன் சுட்டிக்காட்டுகிறீர்? ஓ மன்னா {நளரே}, நீர் என்னைக் கைவிடமாட்டீர் என்பதை நான் அறிவேன். ஆனால், ஓ பூமியின் தலைவா, உமது மனம் தடுமாறுவதைக் கருத்தில் கொண்டே நீர் என்னைக் கைவிடுவீர் என எண்ணுகிறேன்.  ஓ மனிதர்களில் சிறந்தவரே, நீர் அவ்வழியை எனக்குத் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டுவதால், ஓ தேவர்களைப் போன்றவரே {நளரே}, எனது துயரத்தை அதிகரிக்கிறீர். எனது உறவினர்களிடம் நான் செல்ல வேண்டும் என்பது உமது நோக்கமாக இருந்தால், அது உமக்கு திருப்தியை அளிக்கும் என்றால், நாம் இருவரும் சேர்ந்தே விதரப்ப்ப நாட்டிற்கு செல்வோம். ஓ மரியாதைகள் கொடுப்பவரே, அங்கே விதர்ப்ப நாட்டு மன்னர் நம்மை மரியாதையுடன் வரவேற்பார். அவரால் மதிக்கப்பட்டு, ஓ மன்னா, நீர் நமது இல்லத்தில் மகிழ்ச்சியாக வாழலாம்” என்றாள் {தமயந்தி}.

தமயந்தியைக் கைவிட்ட நளன் – வனபர்வம் பகுதி 62-நளன் தமயந்திக்கு ஆறுதல் கூறி உறங்க வைத்த்து; அவளிடம் இருந்து பாதி ஆடையை வெட்டி எடுத்துக் கொண்டு, அவளைக் கைவிட்டுச் சென்றது…

நளன் சொன்னான், “நிச்சயமாக உனது தந்தையின் நாடு என்னுடையது போன்றதே. ஆனால், இப்போது கடைநிலையில் இருக்கும் நான் எந்தக் காரணம் கொண்டும் அங்கு செல்ல மாட்டேன். முன்பொரு காலத்தில் உனது இன்பத்தை அதிகரிக்க நான் அங்கு மகிழ்ச்சியுடன் தோன்றினேன். துன்பத்துடன் இருக்கும் நான், இப்போது உன் வருத்தத்தை அதிகரிக்கும்படி அங்கு எப்படிச் செல்வேன்?” என்று கேட்டான்.

பிருகதஸ்வர் தொடர்ந்தார், “{தனது மனைவியின்} பாதி உடையால் தன்னை மறைத்துக் கொண்டிருந்த மன்னன் நளன்தமயந்தியிடம் இதையே திரும்பத் திரும்பச் சொல்லி அவளுக்கு ஆறுதல் கூறினான். ஒரே ஆடையை உடுத்தியிருந்த இருவரும், அங்குமிங்கும் அலைந்து திரிந்து, பசி மற்றும் தாகத்தால் களைப்படைந்து, கடைசியாக பயணிகளுக்கான ஒரு மண்டபத்தை {சத்திரத்தை} அடைந்தனர். 

அந்த இடத்திற்கு வந்த நிஷாதர்களின் மன்னன் {நளன்}, விதரப்ப்ப நாட்டு இளவரசியுடன் {தமயந்தியுடன்} கீழே வெறுந்தரையில் அமர்ந்தான். தூசி படிந்து அழுக்கடைந்த மெலிந்த ஒரே துணியை அவர்கள் இருவரும் அணிந்திருந்தனர். பெரும் களைப்பால் அந்தத் தரையிலேயே தமயந்தியுடன் அவன் தூங்கிவிட்டான். பெரும் துக்கத்தோடு இருந்த, அனைத்து நற்குறிகளையும் கொண்டு, அப்பாவியாகவும், மென்மையானவளாகவும் இருந்த தமயந்தி, திடீரென ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினாள். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அப்படி அவள் நளனுடன் உறங்கிக் கொண்டிருந்த போது, இதயமும் மனமும் கலக்கமடைந்திருந்ததால், நளனால் முன்பு போல அமைதியாகத் தூங்க முடியவில்லை.

நாடிழந்து, நண்பர்களை இழந்து, கானகத்தில் துயர்வாழ்வு வாழ்வதைத் தனக்குள் எண்ணி, “எனது இந்தச் செயலால் என்ன பயன் ஏற்படும்? அப்படிச் செயல்படவில்லையென்றால் என்ன பயன் ஏற்படும்? இப்போது மரணம்தான் எனக்குச் சிறந்ததா? அல்லது நான் எனது மனைவியைக் கைவிட வேண்டுமா? என்னிடம் உண்மையான அர்ப்பணிப்புடன் இருக்கும் அவள், இந்தப் பெரும் துன்பத்தை எனக்காகவே அனுபவிக்கிறாள். என்னிடம் இருந்து பிரிந்தால், அவள் தனது உறவினர்களிடம் செல்ல வாய்ப்பிருக்கிறது. என்மீது கொண்ட அர்ப்பணிப்பால், என்னுடனேயே அவள் தங்கினால், சந்தேகமற அவளைத் துயர் கவ்வும். ஆனால், நான் அவளைக் கைவிட்டால், அவளைத் துயர் கவ்வுவது சந்தேகத்திற்குரியதே. மறுபுறம். அவள் சிலகாலம் மகிழ்ச்சியாக இருக்கும் வாய்ப்பும் சாத்தியமில்லாதது இல்லை” என்று நினைத்தான். இதேயே திரும்பத் திரும்ப எண்ணி, திரும்பத் திரும்ப ஆலோசனை செய்து முடிவாக, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தமயந்தியைக் கைவிடுவதே சிறந்த  வழி என்று தீர்மானித்தான்.

அவன் {நளன்} மேலும், “உயர்ந்த புகழும், நற்பேறும், தனது கணவனான என்னிடம் அர்ப்பணிப்பும் கொண்ட அவளுக்கு {தமயந்திக்கு}, அவளது சக்தியின் காரணமாக, அவளது வழியில் யாரும் தீங்கை ஏற்படுத்திவிடமுடியாது.” என்றும் நினைத்தான். இப்படியே, தமயந்தியுடன் தங்கியிருந்தபோது, தீய கலியால் தாக்குதலுக்குள்ளான அவனது மனம், அவளைக் கைவிடத் தீர்மானித்தது. தனக்கு ஆடையில்லாதிருப்பதையும், அவளுக்கும் ஒரே ஆடையே இருப்பதையும் சிந்தித்து, தனக்காக அதில் ஒரு பகுதியை அடைய, தமயந்தியின் ஆடையைப் பாதியாக வெட்ட எண்ணம் கொண்டான்.

அதன் பிறகு அவன்,  “எனது அன்புக்குரியவள் {தமயந்தி} காணாமல் {அறியாமல்}, இந்த ஆடையை எப்படிப் பிரிப்பது?” என்று எண்ணினான். இப்படி எண்ணிய அந்த அரசன் நளன் அந்த மண்டபத்தில் மேலும் கீழுமாக நடந்தான். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அங்குமிங்குமாக நடந்த போது, உறையற்ற ஒரு அழகான வாள் அந்த மண்டபத்தில் கீழே கிடப்பதைக் கண்டான். அந்த எதிரிகளை ஒடுக்குபவன், அந்த வாளைக் கொண்டு, அந்தத் துணியின் ஒரு பாதியை வெட்டி எடுத்து, அந்தக் கருவியை {வாளை} வீசி எறிந்து, உணர்வற்று உணங்கிக்கொண்டிருந்த விதரப்ப்பனின் மகளை {தமயந்தியை} விட்டு {கைவிட்டு} வெளியேறினான்.

ஆனால் அவனது இதயத்திடம் தோற்ற நிஷாதர்களின் மன்னன் {நளன்} மீண்டும் மண்டபத்திற்குத் திரும்பிவந்து, தமயந்தியைக் {மீண்டும்} கண்டு, கண்ணீர்விட்டு அழுதான். அவன், “ஐயோ! வாயுத்தேவனோ, சூரியனோ இதற்கு முன்னால் கண்டிராத எனது அன்பானவள், இன்று கேவலமாக வெறுந்தரையில் படுத்து உறங்குகிறாளே. வெட்டப்பட்ட ஆடையுடன், கவனம் சிதறிக் கிடப்பவள் போல இருக்கும் இந்த பிரகாசமான புன்னகை கொண்ட அழகானவள், விழித்தெழும்போது எவ்வாறு நடந்து கொள்வாள்? தனது தலைவனுக்கு {எனக்கு} தன்னை அர்ப்பணித்திருக்கும் பீமனின் இந்த அழகான மகள் {தமயந்தி}, என்னைப் பிரிந்து, விலங்குகளும், பாம்புகளும் வசிக்கும் இந்த ஆழ்ந்த கானகத்தில் எப்படி பயணம் செய்வாள்? ஓ அருளப்பட்டவளே, ஆதித்தியர்களும், வசுக்களும், மருதர்களுடன் கூடிய அசுவினி இரட்டையர்களும் உன்னைக் காக்கட்டும். உனது அறமே உனக்குச் சிறந்த பாதுகாவலாக இருக்கும்” என்று சொன்னான்.

பூமியில் ஒப்பற்ற அழகுடைய தனது அன்பான மனைவியைப் பார்த்து இப்படிச் சொன்ன நளன், கலியால் அறிவிழந்து அங்கிருந்து செல்ல முற்பட்டான். கலியால் ஒரு பக்கமும், காதலால் ஒரு பக்கமும் இழுக்கப்பட்ட மன்னன் நளன், மீண்டும் மீண்டும் புறப்பட்டு, மீண்டும் மீண்டும் மண்டபத்திற்குத் திரும்பினான். அந்த இழிவடைந்த மன்னனின் இதயம் இரண்டாகப் பிளந்திருந்தது போலத் தோன்றியது. ஊஞ்சல் போல அவன் மண்டபத்தை விட்டு வெளியேயும் உள்ளேயும் திரும்பித் திரும்பி நடந்தான். நீண்ட நேரம் பரிதாபகரமாக அழுது, கலியால் உணர்விழந்து வாயடைந்து போன நளன், தூங்கிக் கொண்டிருக்கும் தனது மனைவியைக் கைவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். கலியின் தொடுதலால் அறிவிழந்து, தனித்த காட்டில் தனது மனைவியைத் தனியாக விட்டு, தனது நடத்தையைக் குறித்து எண்ணி துயரத்துடன் சென்றுவிட்டான்.

தமயந்தியிடம் காமுற்ற வேடன் – வனபர்வம் பகுதி 63-துயில் களைந்த தமயந்தி நளனில்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்து அழுவது; நளனைத் தேடி காட்டில் அலையும்போது தமயந்தியை மலைப்பாம்பு வளைத்துக் கொள்வது; எங்கிருந்தோ வந்த ஒரு வேடன் தமயந்தியைக் காப்பது; தமயந்தியின் அழகைக் கண்டு மயங்கி வேடன் அவளை அடைய விரும்புவது; தமயந்தி தனது சாபத்தால் வேடனைக் கொன்றது..

பிருகதஸ்வர் சொன்னார், “ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி நளன் சென்ற பிறகு, புத்துணர்ச்சி பெற்ற அழகான தமயந்தி, அந்தத் தனிமையான கானகத்தில் மருட்சியுடன் எழுந்தாள். ஓ பலம்வாய்ந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தனது தலைவனான நிஷாதனைக் {நளனைக்} காணாததால் துயரும் வலியும் கொண்டு, பயத்தால், “ஓ தலைவா! ஓ பலம்வாய்ந்த ஏகாதிபதி! ஓ கணவா, என்னைக் கைவிட்டீரா? இந்தத் தனிமையான இடம் எனக்குப் பயமாக இருக்கிறது. ஓ நான் கெட்டேன், நான் தொலைந்து போனேன். ஓ சிறப்புமிக்க இளவரசே, நீர் அறம் அறிந்து உண்மை பேசுவபவர் ஆயிற்றே. அப்படியிருக்கும்போது, எனக்கு வாக்கு கொடுத்துவிட்டு, உறங்கிக் கொண்டிருந்த என்னை இக்கானகத்தில் கைவிடலாமா? உமக்காகத் தன்னை அர்ப்பணித்த உமது மனைவியை நீர் ஏன் கைவிட்டீர்? நான் உமக்கு என்ன தீங்கிழைத்தேன்? மற்றவர்கள் அல்லவா உங்களுக்கு தீங்கிழைத்தனர்?

ஓ மனிதர்களின் மன்னா {நளரே}, லோகபாலர்களின் முன்னிலையில் நீர் என்னிடம் பேசிய வார்த்தைகளுக்கு உண்மையாக நீர் நடந்து கொள்வதே தகும். ஓ மனிதர்களில் காளையே {நளரே}, மனிதர்கள் அவர்களுக்குக் குறித்த நேரத்தில்தான் மரணிப்பார்கள் என்பதால்தான் நீர் கைவிட்டபிறகும் உமது மனைவி வாழ்கிறாள்.

ஓ மனிதர்களில் காளையே, இந்த கேலி போதும்! ஓ கட்டுப்படுத்தப்பட முடியாதவரே {நளரே}, நான் பயங்கரமான அச்சத்தில் இருக்கிறேன். ஓ தலைவா, உம்மை வெளிக்காட்டும். நான் உம்மைக் காண்கிறேன்! ஓ மன்னா {நளரே}, நான் உம்மைக் காண்கிறேன்! ஓ நிஷாதரே {நளரே}, நீர் அந்தப் புதர்களுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது தெரிகிறது. ஏன் எனக்கு மறுமொழி கூறமலிருக்கிறீர்? ஓ பெரும் மன்னா {நளரே}, புலம்பிக்கொண்டிருக்கும் என்னை இந்த அவலநிலையில் கண்டும், ஓ மன்னா நீர் என்னை அணுகி ஆறுதல் கூறாமல் இருந்து கொடூரமான செயலைச் செய்கின்றீர். நான் எனக்காகக் கவலைப்படவில்லை, எதற்காகவும் கவலைப்படவில்லை. ஓ மன்னா {நளரே}, நீர் எப்படி தனிமையில் நாட்களைக் கடத்துவீர் என்றே நான் கவலைகொள்கிறேன். மாலைப்பொழுதில் பசியாலும், தாகத்தாலும், களைப்பாலும் ஒடுக்கப்பட்டு, மரத்திற்கடியில் இருக்கும்போது, என்னைக் காணாமல் எப்படி நீர் இருந்து கொள்வீர்?” என்று உரக்கக் கதறினாள்.

பெருத்த வேதனையுடனும், எரியும் துயருடனும் இருந்த தமயந்தி, துன்பத்துடன் அழுதுகொண்டே அங்கும் இங்கும் ஓடினாள். இப்போது அந்த ஆதரவற்ற இளவரசி எழுந்தாள், இப்போது மயங்கி கீழே மூழ்கினாள். இப்போது பயத்தால் சுருங்கினாள். இப்போது அழுது சத்தமாக ஒப்பாரி வைத்தாள். கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த பீமனின் மகள் {தமயந்தி}, கடுந்துயரத்தால் எரிந்து, நீண்ட பெருமூச்சுகளை விட்டபடி, மயங்கிய நிலையில் அழுது, “எதன் {being = பூதம்} சாபத்தால் பீடிக்கப்பட்ட நிஷாதர் இந்தத் துன்பத்தை அனுபவிக்கிறாரோ, அது {அந்தப் பூதம்} எங்களை விட அதிக துன்பத்தைத் தாங்கட்டும். பாவமற்ற இதயம் கொண்ட நளருக்கு இந்த நிலையைக் கொடுத்த அந்தத் தீயது {தீய பூதம்}, இதைவிட அதிகமான தீங்குகளைக் கொண்ட மோசமான வாழ்வை வாழட்டும்.” என்று சொன்னாள். அந்த ஒப்பற்ற மன்னின் {நளனின்} பட்டத்து ராணி இப்படியே புலம்பியபடி, இரைதேடும் விலங்குகள் வசிக்கும் அந்தக் காடுகளில் தனது தலைவனைத் தேடத் தொடங்கினாள். அந்த பீமனின் மகள் {தமயந்தி} அழுதுகொண்டே அங்குமிங்கும் அலைந்து, பைத்தியக்காரி போல, “ஐயோ! ஐயோ! ஓ மன்னா!” என்று கதறினாள். பெண் கடற்புறா {குரரி பறவை} போல சத்தமாக அழுது, துயரடைந்து, தொடர்ச்சியாக இடைவிடாத பரிதாபகரமான ஒப்பாரியிட்டபடி ஒரு பெரும் உருவம் கொண்ட பாம்பின் அருகில் வந்தாள்.

பசித்திருந்த அந்தப் பெரும்பாம்பு, தனது அருகில் வந்து, தனது எல்லைக்குள் இருந்த பீமனின் மகளைத் {தமயந்தியைத்} திடீரெனப் பற்றியது. துயரம் நிறைந்து பாம்பின் சுருளுக்குள் மடிந்து இருந்த போதும் அவள் தனக்காக அழாமல் அந்த நைஷதனுக்காகவே {நளனுக்காகவே} அழுதாள். அவள், “ஓ தலைவா, இந்தக் கைவிடப்பட்ட வனத்தில் யாருடைய பாதுகாப்புமற்ற நான் இந்தப் பாம்பினால் கைப்பற்றப்பட்ட பின்பும், நீர் ஏன் என்னை நோக்கி விரைந்து வராமல் இருக்கிறீர்? ஓ நைஷதரே {நளரே}, நீர் என்னை நினைக்கும்போது இது எப்படி சரியா இருக்கும்? ஓ தலைவா, இன்று இந்தக் கானகத்தில் என்னை ஏன் கைவிட்டுச் சென்றீர்? இந்த நிலையில் இருந்து விடுபட்டு, நீர் உமது மனம், உணர்வுகள், செல்வங்கள் ஆகியவற்றைத் திரும்பப் பெறும்போது, என்னைக் குறித்து சிந்தித்தால் உமக்கு எப்படி இருக்கும்? ஓ நைஷாதரே {நளரே}, ஓ பாவமற்றவரே, நீர் சோர்வுற்று, பசித்து, மயங்கி வரும்போது, ஓ மன்னர்களில் புலியே, உமக்கு யார் ஆறுதல் கூறுவார்?” என்று சொன்னாள்.

அவள் இப்படி அழுது கொண்டிருக்கும்போது, ஆழ்ந்த கானகத்தில் உலவிக் கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட வேடன், அவளது புலம்பல்களைக் கேட்டு, அந்த இடத்திற்கு விரைந்து வந்தான். பாம்பின் சுருளுக்குள் இருந்த அந்த அகன்ற கண் கொண்டவளைக் கண்டு, அதனிடம் {பாம்பிடம்} விரைந்து, அதன் தலையைத் தனது கூரிய ஆயுதத்தால் வெட்டி எறிந்தான். அந்த ஊர்வன விலங்கை {பாம்பைச்} சாகடித்து தமயந்தியை விடுவித்தான் அந்த வேடன். அவள் உடல் மீது நீர்த்தெளித்து, அவளுக்கு உணவு கொடுத்து ஆறுதல் சொன்னான். ஓ பாரதா {யுதிஷ்டிரா} அவன் அவளிடம், “ஓ அழகிய இளம் மானின் கண்களைக் கொண்டவளே, யார் நீ? நீ ஏன் இந்த கானகத்திற்கு வந்தாய்? ஓ அழகானவளே, நீ எப்படி இந்தப் பெருந்துயரத்தில் சிக்கினாய்?” என்று கேட்டான்.

ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா} இப்படி அந்த மனிதனால் அணுகி அழைக்கப்பட்ட தமயந்தி, ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அவனிடம் நடந்தது அத்தனையும் சொன்னாள். அழகிய களங்கமற்ற அங்கங்களுடனும், தேன் போன்ற இனிய பேச்சுடனும், வளைந்த இமை முடிகளுடனும், முழு நிலவைப் பிரதிபலிக்கும் முகத்துடனும், உருண்ட இடையுடனும், பருத்த மார்புகளுடனும், அரை ஆடையிலும் இருந்த அந்த அழகிய பெண்ணைக் {தமயந்தியைக்} கண்ட வேடன் ஆசையால் பீடிக்கப்பட்டான். காமதேவனால் தாக்குண்ட அந்த வேடன் வெற்றிக்குரலுடனும், மென்மையான வார்த்தைகளுடனும் அவளிடம் {தமயந்தியிடம்} ஆறுதலாகப் பேசினான்.

கற்புடைய அழகான தமயந்தி, அவனைக் கண்டு அவனது நோக்கத்தை உணர்ந்ததும், அவள் சீற்றத்துடன் கூடிய கோபத்தால் நிறைந்து, அந்தக் கோபத்தால் எரிந்து கொண்டிருந்தாள். ஆனால், அந்த தீய மனம் படைத்த இழிந்தவன் {வேடன்}, எரியும் ஆசையால் கோபமடைந்து, பலத்தைப் பயன்படுத்தினான். அவள் சுடர்விட்டெரியும் தழலென வெற்றிகொள்ள முடியாதவளாக இருந்தாள். நாட்டை இழந்து, கணவனையும் இழந்து இருந்ததால் ஏற்கனவே துயரத்தில் இருந்த தமயந்தி, சொல்ல முடியாத அந்தத் துயரத்தின் போது, “நான் நைஷதரைத் {நளரைத்} தவிர வேறு எவரையும் நினைத்தவளில்லை. ஆகையால் குறுகிய மனம் கொண்டு துரத்தும் இந்தக் இழிந்தவன், உயிரற்றவனாக விழட்டும்” என்று சபித்தாள். அவள் அப்படிச் சொன்னவுடன், அந்த வேடன், நெருப்பால் உட்கொள்ளப்பட்ட மரமென உயிரற்று தரையில் விழுந்தான்.

புலியிடம் பேசிய தமயந்தி – வனபர்வம் பகுதி 64அ-வேடனை அழித்த தமயந்தி, நளனைத் தேடி காடு முழுவதும் அலைவது; நளனை நினைத்துப் புலம்புவது; புலியிடம் பேசுவது

பிருகதஸ்வர் தொடர்ந்தார், “தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட தமயந்தி அந்த வேடனை அழித்த பிறகு, வெட்டுக்கிளிகளின் கீச்சொலிகளால் நிறைந்த அந்தத் தனிமையான பயங்கரக் காட்டில் தொடர்ந்து முன்னேறினாள். அந்தக் காடு, சிங்கங்களாலும், சிறுத்தைகளாலும், ருருக்களாலும் {மான்களாலும்}, புலிகளாலும், எருமைகளாலும், கரடிகளாலும் நிறைந்திருந்தது. அது பலவகையான பறவைகளாலும், பாதிப்படைந்த திருடர்களாலும், மிலேச்ச குடிகளாலும் மொய்க்கப்பட்டிருந்தது. அது சாலம் {ஆலமரமாக இருக்க வேண்டும்}, மூங்கில், தவம், அஸ்வதம் {அரசு}, திந்துகம், இங்குதை, கின்சுகம் {பலாசு}, அர்ஜுனம் {மருது}, நிம்வம் {அரிஷ்டம்}, தினிசை {ஸ்யந்தனம்}, சல்மலை {முள்ளிலவு}, ஜம்பு {நாவல்}, மா, லோத்ரம், கதேச்சு {கருங்காலி}, தேக்கு, பிரம்பு, பத்மகம், அமலாஹம் [Amalaha] {நெல்லி}, ப்லக்ஷம், கடம்பு, உதும்பரம் [Udumbara]{அத்தி}, பதரி [Vadari]{இலந்தை}, வில்வம், ஆலமரம், பிரியாளம், பனை, பேரீச்சம், ஹரிதகம் {கடுக்காய்}, விபிதகம் {தான்றி} ஆகிய மரங்களைக் கொண்டிருந்தது.

பல பறவைகளால் இன்னிசையெழுப்பப்பட்டு, அற்புதமான காட்சிகளும், பல நதிகளும், ஏரிகளும், குளங்களும், பல்வகை பறவை மற்றும் விலங்குகளையும், பலவகைப்பட்ட தாதுக்களையும் கொண்ட பல மலைகளை விதரப்ப்ப இளவரசி {தமயந்தி} கண்டாள். அவள் எண்ணற்ற பாம்புகளையும், குட்டிச்சாத்தான்களையும், கடும் முகத்தோற்றம் கொண்ட ராட்சசர்களையும், தடாகங்களையும், குளங்களையும், சிறு குன்றுகளையும், சிற்றோடைகளையும், அழகான தோற்றம் கொண்ட நீரூற்றுகளையும் கண்டாள். அந்த விதரப்ப்ப இளவரசி {தமயந்தி}, எருமைக்கூட்டங்களை அங்கே கண்டாள். காட்டுப் பன்றிகளையும், கரடிகளையும், பல பாம்புகளையும் அந்தக் கானகத்தில் கண்டாள். அறம், புகழ், நற்பேறு, பொறுமை ஆகியவற்றால் பாதுகாப்பாக இருந்த தமயந்தி அந்தக் கானகத்தில் தனியாக நளனைத் தேடிக் கொண்டிருந்தாள். பீமனின் அரச மகள் {தமயந்தி}, தனது தலைவனின் பிரிவால் மட்டுமே துயருற்று, அந்தப் பயங்கரமான காட்டில் எதைக்குறித்தும் அஞ்சாமல் இருந்தாள்.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, துயர்நிறைந்த அவள் {தமயந்தி} ஒரு கல்லில் அமர்ந்து, கணவனால் ஏற்பட்ட துயரின் காரணமாக தனது உறுப்புகள் அனைத்தும் நடுங்கப் புலம்பினாள், “ஓ நிஷாதர்களின் மன்னா {நளரே}, ஓ அகன்ற மார்பும் பலம் பொருந்திய கரங்களும் கொண்டவரே, ஓ மன்னா, இந்தத் தனிமையான கானகத்தில் என்னை விட்டு நீர் எங்கு சென்றீர்? ஓ வீரரே, குதிரைவேள்விகளையும் {அசுவமேத வேள்வியையும்} இன்னபிற வேள்விகளையும் செய்தீர், (அந்தணர்களுக்கு} தாராளமாகப் பரிசுகளைக் கொடுத்தீர், என்னிடம் மட்டும் ஏன் பொய்யாக நடக்கிறீர்? ஓ மனிதர்களில் சிறந்தவரே, ஓ பெரும் பிரகாசம் கொண்டவரே, ஓ மங்களமானவரே, எனக்கு முன்பாக நீர் ஏற்ற உறுதிமொழியை நினைத்துப் பாரும்.

ஓ ஏகாதிபதி {நளரே}, வானத்தில் பறக்கும் அன்னங்கள் உமக்கு எதிரிலும் எனக்கு எதிரிலும் என்ன பேசின என்பதை நினைத்துப் பாரும். ஓ மனிதர்களில் புலியே, நீர் கற்ற அங்கங்கள், உப அங்கங்களுடன் கூடிய நான்கு வேதங்கள் முழுமையையும் ஒரு புறமும், உண்மை மறு புறமும் இருக்கும்போது சமமாகவே இருக்கும். ஆகையால், ஓ எதிரிகளைக் கொல்பவரே, ஓ மனிதர்களின் தலைவா, அவற்றை நினைத்து, முன்பு என்னிடம் சொல்லிய வார்த்தைகளை உண்மையாக்குவதே உமக்குத் தகும். ஐயோ, ஓ வீரரே, ஓ நளரே, ஓ பாவமற்றவரே, நான் இந்த பயங்கராமன கானகத்திலேயே அழியப் போகிறேன். ஓ நீ ஏன் எனக்கு பதில் அளிக்கவில்லை?  கடும் பசியில் இருக்கும், கடும் முகத்தோற்றம் கொண்ட இந்தப் பயங்கரமான கானகத்துக்கு அரசன் {சிங்கம்}, தனது தாடைகளை விரித்து என்னை பயத்தால் நிறைக்கிறது. நீர் ஏன் என்னைக் காக்க வரவில்லை? ‘உன்னைவிட எனக்கு அன்பானவள் யாரும் இல்லை’ என்று சொன்னீரே.

ஓ அருளப்பட்டவரே, ஓ மன்னா, நீர் முன்பு பேசிய வார்த்தைகளுக்கு நன்மை செய்யும். ஓ மன்னா {நளரே}, உம்மால் காதலிக்கப்பட்டும், என்னால் நீர் காதலிக்கப்பட்டும், உணர்விழந்து அழுது கொண்டிருக்கும் உமது அன்பான மனைவிக்கு ஏன் பதிலளிக்க மறுக்கின்றீர்? ஓ பூமியின் மன்னா, ஓ மரியாதைக்குரியவரே, ஓ எதிரிகளை ஒடுக்குபவரே, ஓ அகன்ற கண்கள் உடையவரே, உடல் மெலிந்து, இடரால் பாதிக்கப்பட்டு வெளிர் நிறம் கொண்டு, நிறமாற்றம் அடைந்து, பாதி ஆடையுடன், மந்தையில் இருந்து பிரிந்த வெள்ளாடு போல அழுதுகொண்டு, புலம்பிக் கொண்டிருக்கும் என்னை ஏன் கருதிப்பாராமல் இருக்கிறீர்?

ஓ ஒப்பற்ற இறையாண்மை கொண்டவரே, உமக்கு என்னை அர்ப்பணித்திருக்கும் தமயந்தியான நான் இந்தப் பெரும் கானகத்தில் தனிமையில் உம்மிடம் பேசுகிறேன். அப்படியிருந்தும் ஏன் எனக்கு மறுமொழி கூறாமல் இருக்கிறீர்? ஓ மனிதர்களின் தலைவா, ஓ உன்னத பிறப்பும் நடத்தையும் கொண்டு அருள் நிறைந்த அங்கங்கள் கொண்டவரே, நான் இன்று உம்மை இந்த மலையில் காணவில்லையே! ஓ நிஷாதர்களின் மன்னா, ஓ மனிதர்களில் முதன்மையானவரே, ஓ எனது துயரை அதிகரிப்பவரே {நளரே}, சிங்கங்களாலும், புலிகளாலும் முற்றுகையிடப்படும் இந்தப் பயங்கரமான காட்டில் நீ படுத்துக் கொண்டிருக்கிறீரா? அமர்ந்திருக்கிறீரா? நின்று கொண்டிருக்கிறீரா? அல்லது இங்கிருந்து சென்றுவிட்டீரா? இதை அறிந்து கொள்ள, “மன்னன் நளரை இந்தக் கானகத்தில் கண்டீரா?” என உம்மீது கொண்டிருக்கும் துயரத்தால் நான் யாரிடம் கேட்பேன்? “என்னைப் பிரிந்தவரும், உயர் ஆன்மா கொண்ட, எதிரிகளின் படையை அழிக்கும் அழகானவருமான நளரைக் கண்டீரா?” என்று இந்தக் கானகத்தில் நான் யாரிடம் விசாரிப்பேன். “நீ தேடும் தாமரை இதழ் போன்ற கண்களையுடைய மன்னர் நளர் இங்கே தான் இருக்கிறார்” என்ற இனிமையான வார்த்தைகளை இன்று நான் யாரிடம் கேட்பேன்?”

இதோ கானக மன்னனான அழகான முகம் கொண்ட புலி, நான்கு பற்களுடனும், பெரிய கன்னங்களுடனும் வருகிறது. அதனிடம் நான் பயமில்லாமல் இப்படிப் பேசுவேன். நான் அதனிடம் “நீயே விலங்குகளின் மன்னன், நீயே இந்தக் கானகத்திற்கும் மன்னன். என்னை விதரப்ப்ப மன்னனின் மகளாகவும், எதிரிகளை அழிக்கும்  நிஷாத மன்னனின் {நளரின்} மனைவியாகவும் இருக்கும் தமயந்தி என்று அறிந்து கொள். இடர்பாடுகள் மற்றும் துயரால் பீடிக்கப்பட்டு, நான் தனிமையில் இந்தக் கானகத்தில் எனது கணவரைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஓ விலங்குகளின் மன்னா, நீ அவரைக் கண்டிருந்தால் எனக்கு (நளர் குறித்த செய்தியைக் கூறி} ஆறுதல் கூறு. ஓ கானக மன்னா, நளரைக் குறித்து உன்னால் பேச முடியவில்லை என்றால், ஓ விலங்குகளில் சிறந்தவனே, நீ என்னை விழுங்கி இந்தப் பெரும் துன்பத்தில் இருந்து என்னை விடுதலை செய்.” என்பேன் {என்றாள் தமயந்தி}.

மலையிடம் பேசிய தமயந்தி – வனபர்வம் பகுதி 64ஆ-தமயந்தி நளன் குறித்து மலையிடம் புலம்புவது; பிறகு மூன்று நாட்கள் நடந்து ஒரு ஆசிரமத்தை அடைந்து துறவிகளைக் காண்பது…

அழுது கொண்டிருந்த தமயந்தி, மலையை நோக்கி, “இந்தக் கானகத்தில் எனது புலம்பலைக்கேட்டுக்கொண்டிருக்கும் மலைகளின் அரசனிடம் கேட்கிறேன், கடலை நோக்கி ஓடும் சுத்தமான நீர் கொண்ட பல நதிகளை கிரீடமாக அணிந்து, உயர்ந்த புனிதமான மலைகளையும், சொர்க்கத்தை முத்தமிடும் பல வண்ண அழகிய சிகரங்களையும், பல தரப்பட்ட தாதுகளும், பல தரப்பட்ட மன்னர்களின் ரத்தினங்களாலும் நிறைந்து இந்த அகன்ற கானகத்தின் பதாகை {Banner} போல இருக்கும் இந்த மலையிடம் கேட்கிறேன்.

சிங்கங்களாலும், புலிகளாலும், யானைகளாலும், காட்டுப்பன்றிகளாலும், மான்களாலும், எல்லாப்புறமும் (இன்னிசையை) எதிரொலிக்கும் பல வகை பறவைகளாலும், கின்குசம் {பலாசு}, அசோகம், வாகுலம் {மகிழம்}, புன்னகம் {புன்னை}, பூத்திருக்கும் கர்ணிகரம் {கோங்கு மரம்}, தவம், பிலாக்ஷம், போன்ற மரங்களாலும் நிறைந்து, நீர்க்கோழிகளால் மொய்க்கப்படும் நீரோடைகளையும், முகடுகளையும், உச்சிகளையும் கொண்டிருக்கும் புனிதமானவனே {மலையே}, ஓ மலைகளில் சிறந்தவனே, ஓ அற்புதக் காட்சி தருபவனே, ஓ கொண்டாடப்படுபவனே உன்னிடம் கேட்கிறேன்.

ஓ மங்களகரமானவனே {மலையே}, ஓ பூமியின் தூணே, நான் உன்னை வணங்குகிறேன். உன்னை அணுகும் நான், உன்னை வணங்குகிறேன். ஒரு மன்னனின் {பீமனின்} மகளென்றும், ஒரு மன்னனின் {வீரசேனனின்} மருமகள் என்றும், ஒரு மன்னனின் {நளனின்} மனைவியென்றும், தமயந்தி என்ற பெயர் கொண்டவள் என்று என்னை அறிந்து கொள். நால்வகை மனிதர்களையும் காத்து, விதரப்ப்பர்களை ஆளும் பூமியின் அதிபதியான பீமன் என்ற பெயர் கொண்டவரே எனது தந்தை. ராஜசுயம், அசுவமேதம் ஆகிய வேள்விகளைச் செய்து அந்தணர்களுக்கு நிறைந்த பரிசுகளைக் கொடுத்தவரே அந்த மன்னர்களில் சிறந்தவர் {பீமர்}, அழகான அகன்ற கண்களை உடையவரும், வேதங்களுக்குத் தன்னை அர்ப்பணித்தவருமான அவர் {பீமர்}, உண்மை பேச்சு கொண்டு, அப்பழுக்கற்ற குணம் கொண்டு, சூழ்ச்சியற்று, மென்மையானவராக, வலிமை நிறைந்து, பெரும் செல்வத்தைக் கொண்டு, அறநெறிகள் அறிந்து, தூய்மையாக இருந்து, அனைத்து எதிரிகளையும் வீழ்த்தி, விதரப்ப்ப நாட்டு குடிமக்களை காத்து வருகிறார் {பீமர்}. ஓ புனிதமானவனே {மலையே}, உன்னிடம் இப்படிவந்து நிற்கும் நான் அவரின் {பீமரின்} மகள் என்பதை அறிந்து கொள்.

மனிதர்களில் சிறந்த, நிஷாதர்களின் கொண்டாடப்படும் ஆட்சியாளர், உயர் புகழ் கொண்ட வீரசேனன் என்ற பெயர் கொண்டவரே எனது மாமனார். அந்த மன்னரின் மகனும், வீரரும், அழகரும், குழப்ப முடியாத ஆற்றல் கொண்டவரும், தனது தந்தையின் வழி வந்த நாட்டை ஆட்சி செய்பவரான நளன் என்ற பெயர் கொண்டவர். ஓ மலையே, அந்த எதிரிகளைக் கொல்பவரும், புண்ணியஸ்லோகா என்ற பெயராலும் அழைக்கப்படுபவரும், தங்க நிறம் கொண்டவரும், அந்தணர்களுக்குத் தன்னை அர்ப்பணித்தவரும், வேதங்களை அறிந்தவரும், நாநலம் மிக்க நீதிமானும், சோமத்தைப் பெருமடக்காகக் குடிப்பவரும், நெருப்பை வழிபடுபவருமாகிய அந்த மன்னர் {நளர்}, வேள்விகளைக் கொண்டாடுபவராவார். அவர் தாராளவாதியாகவும், போர்க்குணமுள்ளவராகவும், (குற்றவாளிகளைப்) போதுமான அளவு தண்டிப்பவராகவும் இருக்கிறார். நான் அவரின் {நளரின்} அப்பாவி மனைவி, அவரது ராணிகளில் தலைமையானவள் (the chief of his queens) [1], (மிக உயர்ந்தவரும், போர்க்குணமுள்ளவரும், உரைக்கப்பட்ட நீதி வழிகளிலே நடப்பவருமான அவருடைய {நளரின்} அதிர்ஷ்டமற்ற அப்பாவி மனைவி இங்கே வந்திருக்கிறேன். அனைத்தையும் இழந்து, கணவனால் கைவிடப்பட்டு, அனாதையாகிப் பாதுகாப்பற்று பாரதர்களில் காளையும், மனிதர்களில் சிறந்துவருமான அவரை நாலாபுறங்களிலும் அலைந்து திரிந்து தேடிக் கொண்டிருக்கிறேன்” )உனது முன்னிலையில் நிற்கிறேன். ஓ மலைகளில் சிறந்தவனே, செல்வத்தை இழந்து, கணவரையும் இழந்து, பாதுகாப்பற்று, துயரத்தால் பீடிக்கப்பட்டு, எனது கணவரைத் தேடி நான் இங்கு வந்திருக்கிறேன்.

ஓ மலைகளில் முதன்மையானவனே, (வானத்தை நோக்கி) உயர்ந்த கோபுரங்கள் போன்ற நூறு சிகரங்கள் கொண்ட நீ, இந்தப் பயங்கரக் கானகத்தில் மன்னன் நளரைக் கண்டாயா? பெரும்பலம் வாய்ந்த யானையின் நடை கொண்ட, பெரும் புத்திகூர்மை கொண்ட, நீண்ட கரங்கள் கொண்ட, கடும் சக்தி கொண்ட, பராக்கிரமும், பொறுமையும், வீரமும், உயர்ந்த புகழும் கொண்ட நிஷாதர்களின் ஆட்சியாளரும் எனது கணவருமான சிறப்புவாய்ந்த நளரைக் கண்டாயா? ஓ மலைகளில் சிறந்தவனே, இப்படித் தனியாக துக்கப்பட்டு, துயரத்தில் மூழ்கிய என்னை, துயரத்தில் இருக்கும் உனது மகளாகக் கருதி, இன்று எனக்கு ஆறுதல் வார்த்தை சொல்லமாட்டாயா?” என்று புலம்பினாள்.

மீண்டும் அவள் {தமயந்தி}, “ஓ வீரரே {நளரே}, ஓ பராக்கிரமம் நிறைந்த போர்வீரரே, ஓ அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரே, ஓ உண்மைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரே, ஓ பூமியின் தலைவா, நீர் இந்தக் கானகத்தில் இருந்தால், ஓ மன்னா {நளரே}, உம்மை என்னிடம் வெளிப்படுத்திக் கொள்ளும்” என்றும் “ஓ மென்மையான, மேகங்களைப் போன்ற ஆழ்ந்த, அமிர்தம் போன்ற இனிய குரலுடன் “விதரப்ப்பரின் மகளே” என்று தனித்துவமான உச்சரிப்புடன், வேதங்களின் இனிய நாதத்தைப் போன்று வளமையான பரிசுத்தமான வார்த்தைகளை இனி நான் என்று கேட்பேனோ? ஓ மன்னா {நளரே}, நான் பயந்திருக்கிறேன். ஓ அறம்சார்ந்தவரே, எனக்கு ஆறுதல் அளியும்” என்றாள் {தமயந்தி}.

இப்படி மலைகளின் முதன்மையான மலையிடம் பேசிய தமயந்தி, பிறகு வடக்கு நோக்கி சென்றாள். இப்படியே மூன்று பகலும், மூன்று இரவும் நடந்த அந்தப் பெண்களில் சிறந்தவள், தேவலோகச் சோலை போன்று இருந்த துறவிகளின் ஒப்பற்ற ஒரு தவச்சோலையை அடைந்தாள். வசிஷ்டர், பிருகு, அத்ரி போன்ற கடும் உணவுக்கட்டுபாடு கொண்டவர்களும், மனங்களை முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களும், புனிமானவர்களுமான துறவிகள் வசித்த ஒரு அழகிய ஆசிரமத்தைக் கண்டாள். அத்துறவிகளில் சிலர் நீரை மட்டுமே உண்டு வாழ்ந்தனர். சிலர் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தனர். சிலர் (உதிர்ந்த) இலைகளை மட்டுமே உண்டு வாழ்ந்தனர். அத்துறவிகள் அனைவரும் ஆசையைக் கடந்து, மேம்பட்ட அருளை அடைந்து, மரப்பட்டைகளையும், மான் தோல்களையும் ஆடையாக அணிந்து, உணர்வுகளைக் கட்டுப்படுத்தியவர்களாகவும் இருந்தனர். துறவிகள் வசித்த அந்தத் துறவில்லத்தைக் {ஆசிரமத்தைக்} கண்டும், அங்கே நிறைந்திருந்த மான் கூட்டம் மற்றும் குரங்களுகளைக் கண்டும் தமயந்தி மகிழ்ந்தாள். அழகான புருவங்களும், நீண்ட கூந்தலும், அழகான இடையும், பருத்த மார்பும், முகத்தை அலங்கரித்த அழகான பற்களும், கருத்த பெரிய அழகான கண்களும் கொண்ட அப்பாவியும் அருள்நிறைந்தவளுமான அந்தப் பெண்களில் சிறந்த தமயந்தி, பிரகாசத்துடனும் பெருமையுடனும் அந்த துறவில்லத்திற்குள் நுழைந்தாள். கடுந்தவங்கள் பயின்று முதிர்ந்த அந்த துறவிகளை வணங்கி, பணிவுடன் நின்றாள்.

மாயத்துறவிகளின் தீர்க்கதரிசனம் – வனபர்வம் பகுதி 64இ-ஆசிரமத்தை அடைந்த தமயந்தி, அங்கு வசித்த முனிவர்களிடம் நலன் விசாரித்தல்; அவள் வந்த காரணத்தை முனிவர்கள் கேட்டல்; தமயந்தி தனது கணவனைக் குறித்து சொல்லுதல்; முனிவர்கள் தீர்க்கதரிசனமாக சில சங்கதிகளைச் சொல்வது…

அந்தக் கானகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த துறவிகள், தமயந்தியிடம், “நல்வரவு!” என்று சொன்னார்கள். பிறகு அந்தத் துறவிகள் அவளுக்கு உரிய மரியாதை செலுத்தி, “அமர்ந்து கொள். நாங்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்” என்று கேட்டனர். அதற்கு அந்த பெண்களில் சிறந்தவள் {தமயந்தி}, “பாவமற்றவர்களே, சிறந்த அருள் பெற்ற துறவிகளே, உங்கள் தவங்களும், வேள்வி நெருப்பும், அறச்சடங்குகளும், உங்கள் வகைக்குண்டான கடமைகளும் நன்றாக நடைபெறுகிறதா?” என்று கேட்டாள் {தமயந்தி}.

அதற்கு அவர்கள், “ஓ அழகான சிறப்புமிக்க பெண்மணியே, {மேற்கண்ட} எல்லாவிதத்திலும் செழிப்புடனே இருக்கிறோம். ஆனால், ஓ குற்றமற்ற அங்கங்கள் கொண்டவளே, நீ யார் என்பதையும், எதைத் தேடிக் கொண்டிருக்கிறாய் என்பதையும்  எங்களுக்குச் சொல். உனது அழகான உருவத்தையும், பிரகாசமான காந்தியையும் கண்டு நாங்கள் மலைக்கிறோம். உற்சாகம் கொள். துயரப்படாதே. ஓ பழியற்றவளே, அருளப்பட்டவளே, நீ இந்தக் கானகத்தின் தேவதையா? அல்லது இந்த மலையின் தேவதையா? அல்லது இந்த நதியின் தேவதையா? என்பதை எங்களுக்குச் சொல்” என்றனர்.

தமயந்தி அந்தத் துறவிகளிடம், “ஓ அந்தணர்களே, நான் இந்த கானகத்துக்கோ, மலைக்கோ, ஓடைக்கோ தேவதையல்ல. ஓ துறவுச்செல்வம் பெற்ற முனிவர்களே, நான் மானுடப்பிறவி என்பதை அறிந்து கொள்ளுங்கள். நான் எனது வரலாற்றை விவரமாகச் சொல்கிறேன். நீங்கள் கேளுங்கள். பீமன் என்ற பெயர் கொண்டு விதரப்ப்பத்தை ஆளும் பெரும் பலம்வாய்ந்த ஆட்சியாளராக ஒரு மன்னர் இருக்கிறார். ஓ மறுபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} முதன்மையானவர்களே, நான் அவரது மகள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பெரும் புகழ்வாய்ந்தவரும், வீரரும், போர்க்களத்தில் எப்போதும் வெற்றி பெறுபவரும், கற்றவரும், நிஷாதர்களின் ஞானமுள்ள ஆட்சியாளருமான நளன் என்ற பெயர் கொண்டவரே எனது கணவர். தேவர்களை வழிபடுவதில் ஈடுபட்டு, இரு பிறப்பாளர்களுக்கு {அந்தணர்களுக்குத்} தன்னை அர்ப்பணித்து, நிஷாதர்களின் குல வழியைக் காத்து, பெரும் சக்தியுடனும், பெரும் பலத்துடனும், உண்மையுடன், அனைத்துக் கடமைகளையும் அறிந்தும், சத்தியத்தில் தடுமாற்றமில்லாமலும், எதிரிகளை வீழ்த்தியும், தேவர்களுக்கு சேவை செய்தும், எதிரியின் நகரங்களை வென்றும், அருள் நிறைந்தும் இருக்கும் நளன் என்ற பெயர் கொண்ட அந்த மன்னர்களில் முதன்மையானவர் தேவர்களின் தலைவனது பிரகாசத்துக்கு ஈடானவராவார். அந்த எதிரிகளை அழிக்கும், அகன்ற கண்களுடைய, முழு நிலவின் நிறத்தில் இருப்பவரே {நளரே} எனது கணவர்.

அவர் {நளர்} பெரும் வேள்விகளைச் செய்தார். அவர் வேதங்களையும் அதன் கிளைகளையும் கற்றவர், போர்க்களத்தில் எதிரிகளை அழிப்பவர், பிரகாசத்தில் சூரியனையும் சந்திரனையும் போன்றவர். உண்மைக்கும் அறத்திற்கும் தன்னை அர்ப்பணித்திருந்த அந்த மன்னர் {நளர்}, சூதாட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற குறுகிய மனம் படைத்த ஏமாற்றுக்கார மனிதர்களால் பகடை விளையாட அழைக்கப்பட்டு, செல்வத்தையும் நாட்டையும் இழந்தார். மன்னர்களில் காளையான அவரது மனைவியே நான் என்றும் எனது பெயர் தமயந்தி என்றும், (தொலைந்து போன) எனது தலைவனைக் {நளரை} கவலையுடன் தேடிவருகிறேன் என்றும் அறிந்து கொள்ளுங்கள்.  இதயத்தின் சோகத்தால், போரில் நிபுணத்துவம் வாய்ந்த, உயர் ஆன்மா கொண்ட, ஆயுதங்களை நன்கு பயன்படுத்தத் தெரிந்த எனது கணவர் நளரைத் தேடுவதற்காக கானகங்களையும், மலைகளையும், ஏரிகளையும், நதிகளையும், குளங்களையும், காடுகளையும் சுற்றி வருகிறேன். அந்த நிஷாதர்களின் தலைவரான மன்னன் நளர், உங்களுக்குச் சொந்தமான இந்த காண்பதற்கினிய துறவியில்லத்திற்கு வந்தாரா? ஓ அந்தணர்களே, புலிகளாலும் மற்ற விலங்குகளாலும் முற்றுகையிடப்படும் பயங்கரம் நிறைந்த இந்தக் காட்டின் வழியே அவருக்காகவே வந்தேன். இன்றும் சில பகல் மற்றும் இரவுகளுக்குள் நான் மன்னன் நளரைக் காணவில்லையென்றில், நான் எனது உடலைக் கைவிட்டு எனக்கு நன்மையைத் தேடிக் கொள்வேன். அந்த மனிதர்களில் காளை இல்லாத இந்த எனது வாழ்வு எதற்குப் பயன்படும்? எனது கணவரின் காரியமாக துன்பத்துடன் நான் வாழ்வது எவ்வாறு?” என்றாள்.

கதியற்று அந்தக் கானகத்தில் அழுது கொண்டிருந்த பீமனின் மகளான தமயந்தியிடம், அந்த உண்மை பேசும் துறவிகள், “ஓ அருளப்பட்டவளே, ஓ அழகானவளே, வருங்காலம் உனக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்பதை எங்கள் தவச்சக்தியால் நாங்கள் பார்க்கிறோம். நீ விரைவில் அந்த நைஷாதனைக் காண்பாய். ஓ பீமனின் மகளே, நீ நிஷாதர்களின் தலைவனும், எதிரிகளைக் கொல்பவனும், அறம்சார்ந்தவர்களில் முதன்மையானவனுமான நளன் துன்பங்களில் இருந்து விடுதலையடைவதை நீ காண்பாய். ஓ அருளப்பட்ட மங்கையே, உனது தலைவனான மன்னன் {நளன்}, அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு அனைத்து வகையான ரத்தினங்களையும் அணிந்து, எதிரிகளைத் தண்டித்து, எதிரிகளின் இதயத்தில் பயங்கரத்தை உணரச் செய்து, நண்பர்களின் இதயங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி, அனைத்து அருளாலும் முடிச்சூடப்பட்டு அதே நகரத்தை ஆள்வதை நீ காண்பாய்” என்றனர்.

நளனின் அன்புக்குரிய ராணியான அந்த {விதரப்ப்ப நாட்டு} இளவரசியிடம் இப்படிப் பேசிய அந்த துறவிகள், அவர்களது புனிதமான நெருப்புகளுடனும், ஆசிரமத்துடனும் அவள் {தமயந்தி} பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போனார்கள். அந்தப் பெரும் அற்புதத்தைக் கண்ட மன்னன் வீரசேனின் மருமகளான குறையற்ற அங்கங்கள் கொண்ட தமயந்தி ஆச்சரியத்தில் மூழ்கினாள். அவள் தனக்குத் தானே, “நான் கண்டது கனவா? என்ன நிகழ்வு இப்போது நடந்தது? அந்தத் துறவிகள் அனைவரும் எங்கே? அந்த ஆசிரமம் எங்கே? மேலும், புனிதமான நீருடன் காண்பதற்கு இனிய பல வகையான கோழிகளின் {அல்லது வளர்ப்புப் பறவைகளின் என்றும் கொள்ளலாம்} ஓய்விடமாக இருந்த அந்த ஆறு எங்கே? பூக்களுடனும், கனிகளுடனும் இருந்த அந்த அழகிய மரங்கள் எங்கே” என்று நினைத்தாள் {தமயந்தி}.

சேதிக்குச் சென்ற வணிகர் கூட்டம் – வனபர்வம் பகுதி 64ஈ-தமயந்தி பயங்கரமான காட்டைக் கடந்து ஒரு அகலமான பாதையை அடைந்து அங்கே ஒரு பெரிய வணிகர் கூட்டத்தைக் கண்டது.

துறவிகள் மறைந்ததைச் சிறிது நேரம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த இனிய புன்னகை கொண்ட பீமனின் மகளான தமயந்தி, தனது கணவனை {நளனை} நினைத்து துயரத்தால் பீடிக்கப்பட்டு, தனது முகத்தின் நிறத்தை இழந்தாள். அக்கானகத்தின் வேறொரு பகுதிக்குச் சென்று ஒரு அசோக மரத்தைக் கண்டாள். அந்தக் கானகத்தில் அடர்த்தியான இலைகளுடன் அழகாகப் பூத்துக் குலுங்கிய அந்த மரங்களில் முதன்மையான மரத்தில் பறவைகள் இன்னிசை பாடிக் கொண்டிருக்கும்போது, கண்களில் கண்ணீருடனும், துயரத்தால் தடைபட்ட குரலுடனும் அந்த மரத்திடம், தமயந்தி, “கானகத்தின் இதயப்பகுதியில் இருக்கும் அருள் நிறைந்த மரமே, பூக்களால் அலங்கிக்கப்பட்டு இந்த மலைகளின் மன்னன் மேல் அழகாக இருக்கிறாய். ஓ அழகான அசோகமே, நீ என்னை இந்தத் துயரில் இருந்து விரைவாக விடுவிக்க மாட்டாயா? எதிரிகளைக் கொல்பவரும், தமயந்தியின் அன்புக்குரிய கணவருமான மன்னன் நளர், அச்சத்திலிருந்தும் துயரத்திலிருந்தும், தடைகளிலிருந்தும் விடுபட்டவராக இருப்பதை நீ கண்டாயா?

பாதி ஆடையுடுத்தி, கண்ணுக்கினிய நிறத்துடன் இருக்கும் துயரத்தால் தாக்கப்பட்டு கானகத்துக்கு வந்த அந்த வீரரும், நிஷாதர்களின் ஆட்சியாளரும் எனது அன்புக்குரியவருமான எனது கணவரைக் கண்டாயா? ஓ அசோக மரமே, என்னை இந்தத் துயரத்தில் இருந்து விடுவி! ஓ அசோகமே, அசோகம் என்றால் துயரை அழிப்பவன் என்று பொருள் ஆகையால் உனது பெயரை நிலைநிறுத்து” என்று கேட்டாள். பிறகு அந்த மரத்தை மூன்று முறை வலம் வந்து, துயரம் நிறைந்த இதயத்துடன் இருந்த அந்த பெண்களில் சிறந்தவளான பீமனின் மகள் {தமயந்தி}, அந்தக் கானகத்தின் பயங்கரமான பகுதிக்குள் நுழைந்தாள். தனது தலைவனைத் தேடியவாறு சுற்றி வந்த அந்த பீமனின் மகள் {தமயந்தி} பல மரங்களையும், ஓடைகளையும், பார்ப்பதற்கு இனிய மலைகளையும், பல விலங்குகளையும், பறவைகளையும், குகைகளையும், செங்குத்தான பாறைகளையும், அற்புதமான தோற்றம் கொண்ட பல ஆறுகளையும் கண்டாள். அப்படியே முன்னேறிச் சென்ற போது, ஒரு அகலமான பாதையை அடைந்து ஒரு வணிகர்க்குழு அங்கே குதிரைகளுடனும், யானைகளுடனும் குளிர்ந்த தெளிந்த நீரைக் கொண்ட நதியின் கரையில் இறங்குவதைக் கண்டாள். அந்த நதி பார்ப்பதற்கு அழகானதாகவும், அகலமானதாவும், பிரம்புப் புதர்களால் மூடியபடியும், கொக்குகள், சக்கிரவாகப் பறவைகள், மீனுண்ணும் பறவைகள் ஆகிவற்றின் ஒலியால் நிறைந்தும், ஆமைகள், முதலைகள், மீன்கள் ஆகியவற்றுடன் ஏராளமான தீவுகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது.

அந்தக் கவிகைகளைக் {நாடோடிகளின் வண்டி} கண்டவுடன் அந்த அழகானவளும், நளனின் கொண்டாடப்பட்ட மனைவியும், பைத்தியம் பிடித்த காட்டுவாசி போல இருந்தவளுமான தமயந்தி, துயரத்தால் ஒடுக்கப்பட்டு, பாதி ஆடையுடன், மெலிந்து, நிறம் மங்கி, அழுக்கடைந்து, தூசு போர்த்திய கூந்தலுடன், அதன் {வண்டியின்} அருகில் சென்று அதற்கு மத்தியில் நுழைந்தாள். அவளைக் கண்ட சிலர் பயத்தால் ஓடினர், சிலர் ஆர்வத்துடன் பார்த்தனர், சிலர் சத்தம் போட்டனர், சிலர் அவளைப் பார்த்துச் சிரித்தனர், சிலர் அவளை வெறுத்தனர். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அவள் மேல் பரிதாபப்பட்டு, அவளிடம் {தமயந்தியிடம்}, “ஓ அருளப்பட்டவளே, யார் நீ? யாருக்குச் சொந்தமானவள்? இந்தக் கானகத்தில் எதைத் தேடுகிறாய்? உன்னைக் கண்டு நாங்கள் அஞ்சுகிறோம். நீ மானுடப்பிறவிதானா? ஓ அருளப்பட்டவளே, உண்மையைச் சொல். நீ இந்த வனத்திற்கோ, அல்லது அந்த மலைக்கோ அல்லது சொர்க்கத்தின் திக்குகளுக்கான தேவதையா? நாங்கள் உனது பாதுகாப்பைக் கோருகிறோம். நீ யக்ஷப் பெண்ணா? அல்லது ராட்சசப் பெண்ணா? அல்லது தேவலோக மங்கையா? ஓ குற்றமற்ற குணங்கள் கொண்டவளே,  எங்களுக்கு அருள் வழங்கி எங்கைக் காப்பாற்று. ஓ அருளப்பட்டவளே, இந்தக் கவிகைகள் விரைவாகச் சென்று செழிப்பை அடையவும், நாங்கள் நன்றாக பாதுகாப்புடன் இருக்கவும் தக்க செயலைச் செய்” என்றனர்.

இப்படி அந்தக் கவிகைக்காரர்களால் சொல்லப்பட்டதும், கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்த, துயரத்தால் ஒடுக்கப்பட்ட இளவரசி தமயந்தி, “ஓ கவிகையின் தலைவா, வணிகர்களே, இளைஞர்களே, முதியவர்களே, குழந்தைகளே, இந்தக் கவிகைகளுக்குச் சொந்தக்காரர்களான நீங்கள் என்னை மானுடப்பிறவி என்று அறிந்து கொள்ளுங்கள். நான் ஒரு மன்னனின் {மன்னன் பீமனின்} மகள், ஒரு மன்னனின் {மன்னன் வீரசேனனின்} மருமகள், ஒரு மன்னனின் {மன்னன் நளனின்} மனைவியுமாவேன். நான் எனது தலைவனின் காட்சியைக் காண ஆவலுடன் இருக்கிறேன். விதரப்ப்பத்தின் ஆட்சியாளர் எனது தந்தையே, எனது கணவர் நிஷாதர்களின் தலைவனான நளன் என்ற பெயர் கொண்டவர். வீழாத அருள் உடைய அவரை நான் இப்போது தேடிக் கொண்டிருக்கிறேன். எனது அன்புக்குரியவரான மன்னன் நளரை, அந்த மனிதர்களில் புலியை, எதிரிப் படையை அழிப்பவரை நீங்கள் காண நேர்ந்திருந்தால் எனக்கு விரைவாகச் சொல்லுங்கள்” என்றாள் {தமயந்தி}.

அதன்பிறகு அந்தப் பெரும் கவிகைகளின் தலைவனான சுசி என்ற பெயர் கொண்டவன், குற்றமற்ற அங்கங்கள் கொண்ட தமயந்தியிடம், “ஓ அருளப்பட்டவளே, எனது வார்த்தைகளைக் கேள். ஓ இனிய புன்னகை கொண்டவளே, நான் ஒரு வணிகன். நானே இந்தக் கவிகைகளுக்குத் தலைவனாக இருக்கிறேன். ஓ ஒப்பற்ற மங்கையே, நளன் என்ற பெயர் கொண்ட எந்த மனிதனையும் நான் காணவில்லை. மனிதர்கள் வசிக்காத இந்தப் பரந்த கானகத்தில், யானைகளும், சிறுத்தைகளும், எருமைகளும், புலிகளும், கரடிகளும், மற்ற விலங்குகளும் மட்டுமே இருக்கின்றன. உன்னைத்தவிர, நான் வேறு எந்த மனிதனையோ பெண்ணையோ இங்கு காணவில்லை. ஆகவே, யக்ஷர்களின் மன்னனான * மணிபத்ரன்  எங்களுக்கு உதவி செய்வதாக” என்றான். இப்படி அவர்களால் சொல்லப்பட்ட அவள் {தமயந்தி} அந்த வணிகர்களிடமும், அந்தக் கூட்டத்தின் தலைவனிடமும், “இந்தக் கவிகைகள் எங்கு செல்கின்றன என்று எனக்குச் சொல்வீராக” என்று கேட்டாள். அதற்கு அந்தக் குழுவின் தலைவன், “ஓ பெரும் மன்னனின் மகளே, சேதியை ஆளும் உண்மை பேசும் சுபாஹுவின் நகரத்திற்கு லாபம் கருதி இந்தக் கவிகைகள் செல்கின்றன” என்றான் {வணிகர் தலைவன் சுசி}.(*மணிபத்ரன் – குபேரனுக்கு அடுத்த யக்ஷர் தலைவன். அவன் காடு மற்றும் மலைகளைக் கடக்கும் வணிகர்களைக் காக்கும் தேவனாவான்})

வணிகர்களைத் தாக்கிய யானைக் கூட்டம் – வனபர்வம் பகுதி 65அ-தமயந்தி சேதி நாட்டுக்குச் செல்லும் வணிகர்கள் கூட்டத்தோடு நளனைக் காணும் ஆவலில் செல்வது; ஒரு தடாகத்தைக் கண்டு அந்த வணிகர் கூட்டம் அங்கே தங்குவது; இரவில் உறங்கிக் கொண்டிருந்த போது ஒரு பெரும் யானைக் கூட்டம் வணிகர்களைத் தாக்கியது.

பிருகதஸ்வர் சொன்னார், “கவிகைகள் தலைவனின் வார்த்தைகளைக் கேட்ட குற்றமற்ற அங்கங்கள் கொண்ட தமயந்தி, தனது தலைவனை {நளனைக்} காணும் ஆவலில் அந்தக் கவிகைகளுடன் சேர்ந்து முன்னேறினாள். இப்படியே பல நாட்கள் சென்ற போது அந்த வணிகர்கள், அந்தப் பயங்கரமான அடர்த்தியான கானகத்தின் நடுவே தாமரை மணம் கமழும் பெரிய தடாகத்தைக் கண்டனர். அது புற்கள் நிறைந்தும், விறகு, கனிகள் மற்றும் மலர்கள் நிறைந்தும், மிக அழகாகவும், காண்பதற்கு மிக இனிமையாகவும் இருந்தது. 

அதில் பல வகைப்பட்ட நீர்க்கோழிகளும், பறவைகளும் வசித்தன. அதில் விழுந்து கொண்டிருந்த நீர் சுத்தமானதாகவும் இனிமையானதாகவும் இருந்தது. மொத்தத்தில் அந்த இடம் முழுவதும் இதயத்தைக் கவர்வதாக இருந்தது. கவிகைகளில் வந்த அந்தக் கூட்டம் மிகவும் களைத்திருந்ததால், அங்கேயே தங்குவதென முடிவெடுத்தது.

அவர்களது தலைவனின் அனுமதியைப் பெற்று, அந்த அழகிய கானகத்தில் ஓய்வெடுத்துக் கொண்டனர். அந்தப் பெரும் கூட்டம் மாலைப் பொழுதிலும் அங்கேயே தங்கினர். நடு இரவில் எல்லாம் அடங்கி அமைதி அடைந்த போது, களைப்பாக இருந்த அந்தக் கூட்டத்தினர் அனைவரும் தூங்கினர். அப்போது மதப்பெருக்கால் கலங்கிய ஒரு யானைக்கூட்டம் அந்தத் தடாகத்தில் நீர் அருந்த வந்து, அங்கிருந்த கூட்டத்தையும் அவர்களுக்குச் சொந்தமான எண்ணிலடங்கா யானைகளையும் கண்டது. மனிதர்களால் பழக்கப்பட்ட அந்த யானைகளைக் கண்ட காட்டு யானைகள் கோபம் கொண்டு மதம் பெருகி கோபத்தோடும் அவற்றைக் கொல்லும் நோக்கத்தோடும் நாட்டு யானைகளை நோக்கி விரைந்தன. மலை முகடுகளில் இருந்து பெயர்ந்த சிகரங்கள் சமவெளியை நோக்கி விரைவது போல விரைந்த அந்த யானைகளின் சக்தி தாங்க முடியாததாக இருந்தது. அந்தத் தாமரைக்குளத்தைச் சுற்றி இருந்த பாதைகளையெல்லாம் அடைத்துக்கொண்டு கவிகைகளில் வந்தக் கூட்டத்தினர் உறங்கிக் கொண்டிருந்தனர். விரைந்து வந்த யானைகள் காட்டுப் பாதைகள் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டன. திடீரென அந்த யானைகள் அனைத்தும் தரையில் உணர்வற்றுக் கிடந்த மனிதர்களை நசுக்க ஆரம்பித்தன.

“ஓ” “ஐயோ” என்று கதறிய உறக்கத்தால் குருடான அந்த வணிகர்கள், ஆபத்திலிருந்து தப்பிப்பதற்காக பிணங்களையும், புதர்களையும் புகலிடமாகக் கொண்டனர். சிலர் தந்தங்களாலும், சிலர் துதிக்கைகளாலும், சிலர் அந்த யானைகளின் கால்களாலும் கொல்லப்பட்டனர். எண்ணிலடங்கா ஒட்டகங்களும், குதிரைகளும் கொல்லப்பட்டன, நடந்து வந்த மனிதக் கூட்டம் பயத்தால் ஓடி ஒருவரை ஒருவர் {மிதித்து} கொன்றனர். உரக்க கதறிய அவர்களில் சிலர் தரையில் விழுந்தனர். சிலர் பயத்தால் மரங்களில் ஏறினர், சிலர் சமமற்ற தரையில் விழுந்தனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி யானைக் கூட்டத்தால் தாக்கப்பட்ட அந்த விபத்தால் அந்தப் பெரும் கூட்டம் பெரிய இழப்பைச் சந்தித்தது. அங்கே எழுந்த பயங்கரமான கதறல் மூன்று உலகங்களையும் பயமுறுத்தியது.

“அதோ பார், பெரும் நெருப்பு”, “காப்பாற்றுங்கள்!” “விரைவாக ஓடுங்கள்”, “ஏன் ஓடுகிறீர்கள்?”. “குவியலில் இருந்து ரத்தினங்கள் விழுகின்றன, எடுங்கள்”, “இந்த செல்வம் அனைத்தும் அற்பமாய் போகிறதே”, “நான் பொய் சொல்ல மாட்டேன்”, “ஓ கவனம் கலைந்தவனே, நான் மறுபடியும் சொல்கிறேன், எனது வார்த்தைகளை நினைத்துப் பார்” இப்படிப்பட்ட கூக்குரல்களுடன் அவர்கள் பயத்தில் ஓடிக் கொண்டிருந்தனர். தமயந்தி பயத்துடனும் துயரத்துடனும் விழித்து அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த உயிரிழப்புகளைக் கண்டாள். எதிர்பாராமல் நடைபெற்றதும், மூவுலகங்களின் பயத்தைத் தூண்டுவதுமான அந்தப் படுகொலைகளைக் கண்டு, தாமரை இதழ் கண்களைக் கொண்ட அந்த மங்கை {தமயந்தி}, பயத்தால் கடுமையடைந்து, கிட்டத்தட்ட மூச்சை நிறுத்தியபடி விழித்தாள்.

அந்தக் கூட்டத்தில் அடிபடாமல் தப்பியவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, தங்களுக்குள், “இந்த நிலை நமக்கு ஏற்பட, நாம் என்ன செய்தோம்? நிச்சயமாக, நாம் சிறப்புமிக்க மணிபத்திரர்களை வணங்கத் தவறிவிட்டோம். அதே போல மேன்மையான அருள் நிறைந்த யக்ஷமன்னன் வைஸ்ரவணனையும் {குபேரனையும்} வணங்கவில்லை. அந்தத் தெய்வங்களை வணங்காததால் தான் நமக்கு இந்தப் பேரிடர் சம்பவித்தது. நாம் அவர்களுக்குத் தக்க மரியாதை வழங்கவில்லை. ஒருவேளை, நாம் சில பறவைகளைக் கண்டோமே அதனால் இது நிகழ்ந்ததா? நமக்கு நட்சத்திர பலன் நன்மையாய் இல்லை. வேறு எந்தக் காரணத்தால் நமக்கு இந்தப் பேரிடர் சம்பவித்தது?” என்று கேட்டுக் கொண்டனர்.

செல்வங்களையும் உறவினர்களையும் இழந்த வேறு சிலர், “நமது பெரும் கவிகைகளுடன் வந்தாளே ஒரு பைத்தியக்காரி {தமயந்தி}, அவள் மானுடப்பிறவி போலவே இல்லை. அவள் வித்தியாசமாக இருக்கிறாள். அவளின் காரணமாகவே இந்தப் பயங்கர மாயை நடந்தேறியுள்ளது. இது ஏற்கனவே திட்டமிடப் பட்டதாகத்தான் இருக்கும். அவள் {தமயந்தி} நிச்சயமாக ராட்சசியோ அல்லது யக்ஷப் பெண்ணோ அல்லது பிசாசாகவோதான் இருப்பாள். இந்த தீமைகள் அனைத்தும் அவள் வேலைதான். இதில் சந்தேகமென்ன? வணிகர்களை அழித்தவளும், எண்ணிலடங்கா துயரங்களைக் கொடுத்தவளுமான அந்தத் தீயவளை மறுபடியும் கண்டால், நமக்குத் தீங்கைச் செய்த அவளை, கற்களாலும், புழுதியாலும், புற்களாலும், மரத்தாலும், கைமுஷ்டிகளாலும் அடித்துக் கொல்ல வேண்டும்” என்றனர்.

அந்த வணிகர்களின் பயங்கர வார்த்தைகளைக் கேட்ட தமயந்தி, பயத்தாலும், வெட்கத்தாலும், துயராலும், இதன்காரணமாக நமக்குத் தீமை வருமோ என்று எண்ணியும் காட்டுக்குள் ஓடினாள். தன்னைத் தானே நிந்தித்துக் கொண்ட அவள், “ஐயோ, கடவுள் என்னிடம் கொண்டுள்ள கோபம் அதிகமாகவும் கடுமையாகவும் இருக்கிறதே. எனது வழியில் அமைதி ஏற்படவில்லையே. எந்தத் தீச்செயலால் இந்த நிகழ்ச்சி நடந்தது? நினைவாலோ, சொல்லாலோ, செயலாலோ நான் யாருக்கும் சிறு தீமை செய்ததாகவும் எனக்கு நினைவில்லையே. எனது எந்த செயலால் இந்தச் சம்பவம் நடந்தது? நிச்சயமாக, முற்பிறவியில் நான் செய்த பெரும்பாவங்களுக்காகவே நான் இந்தப் பேரிடரில் மூழ்கியுள்ளேன். எனது கணவரின் {நளனின்} நாடு பறிபோனது. தனது உறவினரிடமே அவர் {எனது கணவர்} தோல்வியுற்றார். தலைவன், மகன், மகள் ஆகியோரைப் பிரிந்து, பாதுகாப்பற்ற நிலையில் இரைதேடும் விலங்குகள் நிறைந்த இந்தக் கானகத்தில் இருக்கிறேன்.” என்று சொல்லிக் கொண்டாள் {தமயந்தி}.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அடுத்த நாள், அந்தக் கூட்டத்தில் எஞ்சிய வணிகர்கள், இறந்து போன தங்கள் சகோதரர்கள், தந்தைகள், மகன்கள், நண்பர்கள் ஆகியோருக்காக வருந்தி அழுது, பிறகு அந்த இடத்தை விட்டுச் சென்றனர்.

தமயந்தியிடம் அரசத்தாயின் கருணை! – வனபர்வம் பகுதி 65ஆ-வணிகர்களிடம் இருந்து பிரிந்த தமயந்தி சேதி நாட்டை அடைந்து, மன்னனுடைய தாயின் கண்ணில் படுவது; அந்த மன்னனின் தாய் தமயந்தியை அழைத்து, தனது மகளுக்குத் தோழியாகச் செய்வது…

பிறகு, விதரப்ப்பத்தின் இளவரசி {தமயந்தி} புலம்பத் தொடங்கினாள், “ஐயோ, என்ன தீச்செயலை நான் நிகழ்த்திவிட்டேன்! இந்தத் தனிமையான கானகத்தில் நான் பெற்ற மனிதர்கள் கூட்டம், யானைக்கூட்டத்தால் அழிவுற்றதே, இது எனது துரதிர்ஷ்டத்தின் தொடர்ச்சியாகவே நடைபெற்றுள்ளது. சந்தேகமற நீண்ட காலத்திற்கு நான் இந்தப் பேரிடரைத் தாங்கிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறதே. காலம் வராமல் எந்த மனிதனும் இறக்க மாட்டான் என்ற பெரியோரின் சொற்களை நான் கேட்டிருக்கிறேன்.

அதனால்தான் துக்கத்தில் இருக்கும் நான் இப்போது யானைக்கூட்டத்திடம் மிதிபட்டு கொல்லப்படாமலிருக்கிறேன். மனிதர்களுக்கு நேரும் எதுவும் விதியால் கிடைப்பதன்றி வேறு எதுவுமில்லை. எனது குழந்தைப் பருவத்தில் இருந்தே நான் நினைவாலோ, வார்த்தையாலோ, செயலாலோ எந்தப் பாவமும் செய்யாதிருக்கையில் இந்தப் பேரிடர் எனக்கு எவ்வாறு நேர்ந்தது? எனது கணவரால் எனக்கு நேர்ந்த இந்தத் துன்பம், அந்தத் தேவர்களான லோகபாலர்களால் நிகழ்கிறது என்றே நினைக்கிறேன். சுயம்வரத்திற்காக வந்த அவர்களை நளருக்காக நான் அவமதித்தேன்” என்று புலம்பினாள் {தமயந்தி}.

ஓ மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரா}, இப்படி அழுதுகொண்டிருந்த அற்புத மங்கையும், கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்தவளுமான தமயந்தி, அந்தப் படுகொலையிலும் பிழைத்த வேதமறிந்த அந்தணர்களுடன், துயரத்தால் ஒடுக்கப்பட்டு, இலையுதிர் காலத்துச் சந்திரன் போல ஆனாள் {நிறம் மங்கினாள்}. பிறகு அங்கிருந்து விரைவாக வெளியேறி, மாலை நேரத்தில் அந்த மங்கை {தமயந்தி} சேதிகளின் மன்னனான உண்மை பேசும் சுவாஹுவின் பெரும் பலம் பொருந்திய நகரத்திற்கு வந்து சேர்ந்தாள். அவள் {தமயந்தி} அந்த அற்புதமான நகரத்திற்குள் அரை ஆடையுடனேயே நுழைந்தாள். அப்படி அவள் பயத்தில் மூழ்கி, மெலிந்து, துயரமுற்று, கூந்தல் கலைந்து, உடலெல்லாம் மண்புழுதியுடன் ஒரு பைத்தியக்காரியைப் போலச் செல்வதை அங்கிருந்த குடிமக்கள் கண்டனர். அப்படி அவள் சேதி மன்னனின் நகரத்திற்குள் நுழைந்தபோது, அந்த நகரத்தின் சிறுவர்கள் ஆர்வ மிகுதியால் அவளைப் பின்தொடர்ந்தனர்.

அவர்களால் {சிறுவர்களால்} சூழப்பட்ட அவள் {தமயந்தி}, மன்னனின் {சேதிநாட்டு மன்னன் சுவாஹுவின்} அரண்மனை முன்பு வந்தாள்.  அந்த மாளிகையின் மேல்தளத்தில் இருந்த மன்னனின் தாய், கூட்டத்தால் சூழப்பட்ட அவளைக் {தமயந்தியைக்) கண்டாள். அவள் தனது செவிலியிடம், “போய் அந்தப் பெண்ணை என் முன்னால் கொண்டு வா. கதியற்ற அவள் இந்தக் கூட்டத்தால் எரிச்சலடைந்திருக்கிறாள். துயரத்தில் இருக்கும் அவள் உதவி நாடி நிற்கிறாள். அவளது அழகு எனது இல்லத்தைப் பிரகாசிக்க வைப்பதை நான் காண்கிறேன். பைத்தியக்காரியைப் போல இருந்தாலும், அந்த அழகானவள் {தமயந்தி}, அகன்ற கண்களுடன் ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போல இருக்கிறாள்” என்றாள். இப்படி கட்டளையிடப்பட்ட அந்த செவிலி வெளியே சென்று, அக்கூட்டத்தை விரட்டி தமயந்தியை அருள் நிறைந்த அந்த உப்பரிகைக்குக் கொண்டு வந்தாள்.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அப்படி அவளைக் கூட்டி வந்த செவிலி ஆச்சரியத்துடன் அவளிடம் {தமயந்தியிடம்}, இப்படிப்பட்ட துயர நிலையில் இருந்தாலும், நீ அழகான உருவைக் கொண்டிருக்கிறாய். நீ மேகத்திற்கு மத்தியில் இருக்கும் மின்னலைப் போல மிளிர்கிறாய். நீ யார் என்பதையும், யாருடையவள் என்பதையும் என்னிடம் சொல். ஓ தெய்வீக அழகைப் பெற்றவளே, ஆபரணங்களற்று இருந்தாலும், உனது அழகு மானுடப்பிறவியைச் சார்ந்ததாக இல்லை. ஆதரவற்று இருந்தாலும், இந்த மனிதர்களின் சீற்றத்திற்கு முன்னால் அசைந்து கொடுப்பவளாகத் தெரியவில்லை” என்று கேட்டாள். செவிலியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பீமனின் மகள் {தமயந்தி}, நான் எனது கணவருக்கு என்னை அர்ப்பணித்திருக்கும், மனித குலத்தைச் சார்ந்த ஒரு பெண் என்பதை அறிந்து கொள். நான் நல்ல பரம்பரையில் பிறந்த பணிப்பெண். நான் விரும்பிய இடத்தில், கனிகளையும் கிழங்குகளையும் உண்டு, தனியாக வாழ்ந்து, மாலைப்பொழுது ஏற்படும் இடத்தில் தங்குகிறேன். எனது கணவர் எண்ணற்ற அறங்களைக் கொண்டு எப்போதும் தன்னை எனக்கு அர்ப்பணித்தவர் ஆவார்.

நானும், எனது பங்குக்கு அவருடன் ஆழ்ந்த பிடிப்புடன், அவரை நிழலெனப் பின்தொடர்ந்தேன். அவர் தீவிரமாக பகடையில் ஈடுபடும் சூழ்நிலை அமைந்தது. பகடையில் தோல்வியுற்று, அவர் கானகத்திற்கு வந்தார். நானும் எனது கணவருடன் சேர்ந்து துயரத்துடன் ஒற்றையாடையுடன் பைத்தியக்காரியைப் போல கானகத்திற்கு வந்தேன். ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ காரணத்திற்காக, அந்த வீரர், பசியாலும், தாகத்தாலும் துன்பப்பட்டு, தனது ஒரே ஆடையையும் இழக்க அந்தக் கானகத்தில் உந்தப்பட்டார். ஆடையிழந்து, உணர்வையும் இழந்து பைத்தியக்காரர் போல இருந்த அவரை, நானும் எனது ஒற்றையாடையுடன் பின்தொடர்ந்தேன். அவரைத் தொடர்ந்த நான், அவருடன் சேர்ந்து பல இரவுகள் தூங்காமல் இருந்தேன். இப்படியே பல நாட்கள் கடந்தன. ஒரு நாள் நான் தூங்கிக் கொண்டிருந்த போது, எனது ஒற்றையாடையில் பாதியை வெட்டி எடுத்துக் கொண்டு, எந்தத் தவறும் செய்யாத என்னை அவர் கைவிட்டுச் சென்றுவிட்டார். தாமரையின் நிறம் கொண்ட எனது கணவரை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். எனது இதயத்துக்குச் சொந்தக்காரரான தேவர்களைப் போன்ற எனது அன்புக் கணவரை எனது கண்கள் இன்னும் காணவில்லை. அதனால் நான் இரவும் பகலும் துக்கத்தில் கழிக்கிறேன்” என்றாள்.

கண்ணீர் நிறைந்த கண்களுடனும், துயரத்தால் தடைபட்டக் குரலுடனும் இப்படிப் புலம்பிக் கொண்டிருந்த பீமனின் மகளிடம் {தமயந்தியிடம்}, மன்னனின் தாய், “ஓ அருளப்பட்ட மங்கையே, நீ என்னுடனேயே வசித்து வா. நான் உன்னிடம் மிகவும் திருப்தி கொண்டிருக்கிறேன். ஓ அழகான மங்கையே, எனது ஆட்கள் உனது கணவனைத் தேடுவார்கள். அல்லது அவனே கூட தனது அலைச்சலினூடே தானாக இங்கு வர வாய்ப்பு இருக்கிறது. ஓ அழகான மங்கேயே, நீ இங்கேயே தங்கினால் (தொலைந்த) உனது தலைவனை மீட்கலாம்” என்றாள். மன்னனின் தாயால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்ட தமயந்தி, “ஓ வீரர்களின் அன்னையே, சில நிபந்தனைகளின் பேரில் நான் உம்முடன் தங்குவேன். நான் எஞ்சிய உணவை உண்ண மாட்டேன். யாருடைய காலையும் நான் கழுவ மாட்டேன். எந்த ஆடவருடனும் நான் பேச மாட்டேன். யாரேனும் என்னை (மனைவியாக்கிக் கொள்ளவோ வைப்பாட்டியாக்கிக் கொள்ளவோ) நாடினால், அவன் உமது கரங்களால் தண்டனை பெற வேண்டும். அதன் பிறகும் அவன் மீண்டும் மீண்டும் வேண்டினால், அந்தத் தீயவனுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். இதுவே நான் செய்திருக்கும் சபதமாகும். நான் எனது கணவரை வெளியே தேடுவதற்காக, அந்தணர்களின் ஆலோசனையைக் கேட்க உத்தேசித்துள்ளேன். இவையனைத்தையும் உம்மால் செய்ய முடியும் என்றால், நான் நிச்சயம் உம்முடன் வாழ்வேன். இல்லாவிட்டால், நான் உம்முடன் வசிப்பதற்கான வழியை எனது இதயத்தில் நான் காணவில்லை.” என்றாள். அதற்கு அந்த மன்னனின் அன்னை, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், “இவையனைத்தையும் நான் செய்வேன். இவ்வித சபதத்தை மேற்கொண்டிருப்பது உனக்கு நன்மையே” என்றாள்.

பிருகதஸ்வர் {Vrihadaswa} தொடர்ந்தார், “ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பீமனின் மகளிடம் {தமயந்தியிடம்}, இப்படிப் பேசிய அந்த மன்னனின் அன்னை, ஓ பாரதா {யுதிஷ்டிரா}, சுநந்தை {Sunanda} என்று அழைக்கப்பட்ட தனது மகளிடம், “ஓ சுநந்தா {Sunanda}, தேவதை போல இருக்கும் இந்த மங்கையை சைரந்திரி {Sairindhri} என ஏற்றுக் கொள்! இவளும் உனது வயதை உடையவளாக இருப்பதால், இவள் உனது தோழியாக இருக்கட்டும். இவளுடன் சேர்ந்து கவலையற்று மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிரு” என்றாள். சுநந்தையும் மகிழ்ச்சியாக தமயந்தியை ஏற்று, தனது தோழியருடன் சேர்ந்து அவளை {தமயந்தியை} தனது அறைக்கு இட்டுச் சென்றாள். அங்கே மரியாதையுடன் நடத்தப்பட்ட தமயந்தி, மிகவும் திருப்தியடைந்து, துயரைவிட்டு தொடர்ச்சியாக அங்கு வசிக்க ஆரம்பித்தாள். அங்கே அவளின் {தமயந்தியின்} விருப்பங்கள் அனைத்தும் முறையாக செய்து கொடுக்கப்பட்டன.

நளனைத் தீண்டிய கார்க்கோடகன்! – வனபர்வம் பகுதி 66-தமயந்தியைக் கைவிட்டு வந்த நளன் ஒரு பெரும் காட்டுத் தீயைக் காண்பது; அந்தக் காட்டுத் தீயில் அகப்பட்ட கார்க்கோடகன் என்ற பாம்பை மீட்பது; அந்தப் பாம்பு கடித்ததால்  நளன் தனது சுய உருவத்தை இழந்தது;

பிருகதஸ்வர் {Vrihadaswa} சொன்னார், “ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, {தமயந்தியைக்} கைவிட்டு சென்ற நளன், அந்த அடர்ந்த காட்டில் பொங்கி எழும் காட்டுத்தீயைக் கண்டான். அந்தக் காட்டுத்தீக்கு மத்தியில் இருந்து ஏதோ ஒரு உயிரினம், “ஓ நீதிமானான நளனே, இங்கே வா” என்று திரும்பத் திரும்பக் கதறும் ஒலியைக் கேட்டான். அதற்கு மறுமொழியாக “அஞ்ச வேண்டாம்” என்று சொல்லி, அந்த நெருப்புக்கு மத்தியில் நுழைந்து ஒரு பெரும் நாகம் சுருண்டு படுத்திருப்பதைக் கண்டான். அந்த நாகமும் தனது கரங்களைக் கூப்பி, நடுங்கிக் கொண்டே நளனிடம், “ஓ மன்னா, நான் கார்க்கோடகன் என்ற பெயர் கொண்ட பாம்பு. நான் உயர்ந்த துறவுத்தகுதியைப் பெற்ற நாரதப் பெருமுனிவரை ஏமாற்றினேன். அதனால் அவர் என்னை கோபத்தால் சபித்துவிட்டார். ஓ மனிதர்களின் மன்னா {நளனே}, அவர் என்னை, “நளன் வந்து உன்னை எடுக்கும் வரை இங்கேயே அசையாதிருப்பாய். அவன் உன்னை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்வான். அதன் பிறகு நீ இந்த சாபத்தில் இருந்து விடுபடுவாய்” என்றார். 

அதன்காரணமாகவே நான் ஒரு அடியும் எடுத்து வைக்க முடியாதவனாக இருக்கிறேன். உன் காரியமாக உனக்கு நன்மையானதைச் சொல்வேன். என்னைக் காப்பாற்றுவதே உனக்குத் தகும். நான் உனது நண்பனாக இருப்பேன். எனக்குச் சமமான எந்தப் பாம்பும் கிடையாது. நான் உனது கைகளில் பாரமில்லாதவாறு இருப்பேன். என்னை எடுத்துக் கொண்டு, இங்கிருந்து வேகமாகச் செல்” என்றான் {கார்க்கோடகன்}.

இதைச் சொன்ன அந்தப் பாம்புகளின் இளவரசன் {கார்கோடன்}, கட்டைவிரல் அளவு சிறியதானான். அவனைத் தனது கைகளில் எடுத்துக் கொண்ட நளன், நெருப்பில்லாத இடத்திற்கு சென்றான். நெருப்பில்லாத திறந்த வெளிக்கு வந்ததும் நின்று அந்தப் பாம்பைக் கீழே விட எண்ணினான் நளன். அப்போது கார்க்கோடகன், “ஓ நிஷாதர்களின் மன்னா, உனது பாத எட்டுகளை எண்ணிக் கொண்டே இன்னும் முன்னேறு. அதே வேளையில் நான் உனக்கு ஒரு நல்லதைச் செய்கிறேன்” என்றான். நளன் தனது எட்டுகளை எண்ணினான், பத்தாவது எட்டு எடுத்து வைக்கும்போது அந்தப் பாம்பு அவனைக் {நளனைக்} கடித்தான். அப்படி கடிபட்டதும் அவனது {நளனின்} உருவம் விரைவாக மாற்றம் கண்டது.  தனது உருவம் மாறுவதைக் கண்ட நளன் ஆச்சரியம் அடைந்தான். அந்தப் பாம்பு சொந்த உருவத்தை அடைவதையும் அந்த மன்னன் {நளன்} கண்டான்.

அந்தக் கார்க்கோடகன் என்ற பாம்பு, நளனுக்கு ஆறுதல் சொல்லும் வகையில், “மக்கள் உன்னை அடையாளம் காணாதவாறு, நான் உனது அழகை இழக்கச் செய்திருக்கிறேன். ஓ நளனே, யாரால் வஞ்சிக்கப்பட்டு இந்தத் துயரத்தை நீ அடைந்தாயோ, அவன் {கலி} எனது விஷத்தால் சித்திரவதை செய்யப்பட்டு உன்னுள் வசித்திருப்பான். ஓ ஏகாதிபதி {நளனே}, அவன் உன்னை விட்டுப் போகாத வரை, உனது உடலில் இருந்து, உனது அங்கங்கள் அனைத்திலும் இருக்கும் எனது விஷத்தால் வலியை உணர்வான். ஓ மனிதர்களின் ஆட்சியாளனே {நளனே}, நீ அப்பாவியாக இருந்தும், தீமைக்குத் தகுதியில்லாதவனாக இருந்தும், உன் மேலுள்ள கோபத்தாலும், வெறுப்பாலும் உன்னை வஞ்சித்தவனிடம் {கலியிடம்} இருந்து நான் உன்னைக் காத்திருக்கிறேன். ஓ மனிதப் புலியே, ஒ மன்னா {நளனே}, எனது அருளால், இனி நீ எந்த மிருகங்களுக்கும், எதிரிகளின் கோரைப் பற்களுக்கும், வேதங்களை அறிந்த அந்தணர்களுக்கும் அஞ்சத்தேவையில்லை. ஓ ஏகாதிபதியே {நளனே}, எனது விஷத்தாலும் நீ வலியை உணர மாட்டாய்.

மேலும், ஓ மன்னர்களில் முதன்மையானவனே {நளனே}, நீ எப்போதும் போர்க்களத்தில் வெற்றிவாகை சூடுபவனாக இருப்பாய். ஓ இளவரசனே {நளனே}, ஓ நிஷாதர்களின் தலைவனே {நளனே}, இந்த நாளே நீ காண்பதற்கினிய நகரமான அயோத்தியாவுக்குச் சென்று, சூதில் நிபுணனான ரிதுபர்ணன் முன்பு நின்று, “நான் ஒரு தேரோட்டி. எனது பெயர் பாகுகன்” என்று சொல். குதிரைகளைக் குறித்த உனது ஞானத்திற்காக அந்த மன்னன் {ரிதுபர்ணன்} உனக்கு பகடையில் நிபுணத்துவம் கொடுப்பான். இக்ஷவாகு குலத்தில் பிறந்து செழிப்புடன் இருக்கும் அவன் உனக்கு நண்பனாவான். நீ பகடையில் நிபுணனான பிறகு, நீ செழிப்பை அடைவாய். நீ உனது மனைவியையும் குழந்தைகளையும், உனது நாட்டையும் அடைவாய். இதையெல்லாம் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஆகையால், உனது மனம் கவலை கொள்ளாதிருக்கட்டும். ஓ மனிதர்களின் தலைவா {நளனே}, நீ உனது சரியான உருவத்தைக் காண விரும்பும்போது, என்னை நினைவுகூர்ந்து இந்த ஆடையை அணிந்து கொள். இதை நீ அணிவதால் சுய உருவைத் திரும்பப் பெறுவாய்” என்று சொன்னான் {கார்க்கோடகன்}. இதைச் சொல்லிய அந்த நாகன் {கார்கோடன்} நளனிடம் இரண்டு தெய்வீக ஆடைகளைக் கொடுத்தான். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, இப்படி நளனிடம் சொல்லி அவனுக்கு ஆடையைக் கொடுத்த பாம்புகளின் மன்னன் {கார்க்கோடன்}, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அப்போதே அந்த இடத்திலேயே தன்னைத்தானே அரூபமாக்கிக் {கண்ணுக்குப் புலப்படாதவனாக்கிக்} கொண்டான்.

குதிரைக்கொட்டில் அதிகாரியான நளன் – வனபர்வம் பகுதி 67-பாம்பு கார்க்கோடகன் மறைந்த பிறகு நளன் அயோத்தி செல்வது; ரிதுபர்ணனின் கொட்டில் (லாயம்) கண்காணிப்பாளன் ஆனது; வார்ஷ்ணேயன் மற்றும் ஜீவலன் என்ற நண்பர்களை அடைந்தது; தனது மனைவி தமயந்தியை நினைத்துப் புலம்பியது…

பிருகதஸ்வர் சொன்னார், “பிறகு அந்தப் பாம்பு {கார்க்கோடன்} மறைந்ததும், நிஷாதர்களின் ஆட்சியாளனான நளன், அன்றிலிருந்து பத்தாம் நாளில் ரிதுபர்ணனின் நகரத்திற்குள் {அயோத்திக்குள்} நுழைந்தான். பிறகு அவன் {நளன்} மன்னனை {ரிதுபர்ணனை} அணுகி, “எனது பெயர் பாகுகன். இந்த உலகத்தில் குதிரைகளை நிர்வகிப்பதில் எனக்கு இணை யாரும் இல்லை. அனைத்து காரியங்களிலும் நிபுணத்துவம் பெற்ற என்னிடம் கடினமான விஷயங்கள் குறித்த ஆலோசனைக்கும் நாடலாம். சமையற்கலையிலும் நான் அனைவரையும் விஞ்சி இருக்கிறேன். கடினமான அனைத்து சாதனைகளிலும், இந்த உலகத்தில் உள்ள அனைத்து கலைகளிலும் வெற்றியடைய நான் முயல்கிறேன். ஓ ரிதுபர்ணரே, என்னை நீர் ஆதரிக்கலாமே!” என்று கேட்டான் {நளன்}.

அதற்கு ரிதுபர்ணன், “ஓ பாகுகா என்னுடன் வசிப்பாயாக. உனக்கு நன்மை ஏற்படட்டும். நீ சொன்ன அனைத்தையும் நீ செய்வாய். குறிப்பாக, எனக்கு எப்போதுமே விரைவாக {பயணம்} செல்வதில் விருப்பம் உண்டு. எனது குதிரைகள் விரைவாகச் செல்ல தக்க நடவடிக்கைகள் எடு. நான் உன்னை கொட்டில்களின் {லாயங்களின்} கண்காணிப்பாளனாக நியமிக்கிறேன். நான் உனக்கு பத்தாயிரம் {10000} (பொன் அல்லது நாணயம்) ஊதியமாகக் கொடுப்பேன். வார்ஷ்ணேயன், ஜீவலன் ஆகிய இருவரும் எப்போதும் உனது கட்டளைப்படியே நடப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நீ மகிழ்ச்சியாக வாழ்வாய். ஆகையால், ஓ பாகுகா, நீ என்னிடம் வசித்துக் கொள்” என்று மறுமொழி கூறினான் {அயோத்தி மன்னன் ரிதுபர்ணன்}.

பிருகதஸ்வர் தொடர்ந்தார், “இப்படி மன்னனால் சொல்லப்பட்ட நளன், வார்ஷ்ணேயனையும், ஜீவலனையும் துணையாகக் கொண்டு, மரியாதையுடன் நடத்தப்பட்டு, ரிதுபர்ணனின் நகரத்திலேயே {அயோத்தியிலேயே} வசிக்க ஆரம்பித்தான். அந்த மன்னன் {நளன்} அங்கேயே வசித்துக் கொண்டு, விதரப்ப்பத்தின் இளவரசியை {தமயந்தியை} நினைவுகூர்ந்து, எல்லா மாலை நேரங்களிலும் பின்வரும் ஸ்லோகத்தை உரைத்தான். அதாவது, “கதியற்று, பசி மற்றும் தாகத்தால் பீடிக்கப்பட்டு, களைத்துப் போய் அந்த இழிந்தவனை {என்னை} நினைத்து எங்கு படுத்திருக்கிறாளோ? இப்போது யாருக்காக {வேலை செய்யக்} காத்திருக்கிறாளோ?” என்று சொன்னான் {என்ற பொருள் கொண்ட சுலோகத்தைச் சொன்னான்}. ஒருமுறை இரவில், அவன் அந்தச் சுலோகத்தை இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த போது, ஜீவலன், “ஓ பாகுகா, நீ தினமும் யாருக்காகப் புலம்புகிறாய்? நான் அதைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். ஓ நீண்ட ஆயுள் அருளப்பட்டவனே, நீ யாருக்காகப் புலம்புகிறாயோ, அவள் யாருடைய மனைவி?” என்று கேட்டான்.

இப்படிக் கேட்கப்பட்ட அந்த மன்னன் நளன், “புத்தியற்ற குறிப்பிட்ட ஒருவனுக்கு, அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஒரு மனைவி இருந்தாள். அந்த இழிந்தவன் தனது சத்தியங்களைப் பொய்யாக்கினான். ஏதோ காரணத்திற்காக அந்தத் தீய மனிதன் அவளிடம் இருந்து பிரிந்தான். அவளிடம் இருந்து பிரிந்த பிறகு, அந்த இழிந்தவன் ஊரெல்லாம் சுற்றி துயரத்துடனும், துன்பத்தில் எரிந்தும் இரவும் பகலும் ஓயாதிருந்தான். இரவில் அவளைக் குறித்து அவன் நினைத்து, இந்த சுலோகத்தைப் பாடுகிறான். இந்தத் துயரங்களுக்குத் தகுதியில்லாத அவன், உலகம் முழுவதும் சுற்றி, கடைசியாக ஒரு புகலிடத்தை அடைந்து, தனது நாட்களைக் கடத்தி, தனது மனைவியை நினைத்துக் கொண்டிருக்கிறான்.

இந்த மனிதனுக்குப் பேரிடர் சம்பவித்தபோது, அவனது மனைவி அவனுடன் காட்டுக்குத் தொடர்ந்து வந்தாள். அற்ப அறம் கொண்ட அவனால் கைவிடப்பட்ட அவளது உயிர் கூட ஆபத்தில் இருக்கிறது. தனியாக, வழிகளைப் பற்றிய ஞானம் இல்லாமல், தாங்க முடியாத துன்பத்தோடு, பசியாலும் தாகத்தாலும் களைப்படைந்த ஒரு பெண்ணால், தனது உயிரைக் காத்துக்கொள்ள முடியாது. ஓ நண்பா, அதிர்ஷ்டமற்ற, புத்தியற்ற அவனால், இரைதேடும் விலங்குகள் நிறைந்த, அகன்ற, பயங்கரமான கானகத்தில் அவள் கைவிடப்பட்டாள்” என்றான் {நளன் }.

இப்படி தமயந்தியை நினைவுகூர்ந்த நிஷாதர்களின் மன்னன் {நளன்}, யாரும் அறியாதவாறு, அந்த ஏகாதிபதியின் {ரிதுபர்ணனின்} வசிப்பிடத்தில் தொடர்ந்து வசிக்கலானான்.

தமயந்தியைக் கண்ட சுதேவன் – வனபர்வம் பகுதி 68-மன்னன் பீமன் நளனையும் தமயந்தியையும் தேடச் சொல்லி அந்தணர்களை அனுப்பியது; சுதேவன் என்ற அந்தணன் சேதி நாட்டு அரண்மனையில் தமயந்தியைக் காண்பது; தமயந்தி அவனிடம் கண்ணீர்விட்டு அழுவது; இதைக் கண்ட சுனந்தை இது பற்றி அரசத்தாயிடம் {ராஜமாதாவிடம்} சொல்வது…

வைசம்பாயனர் சொன்னார், “நளனுடைய நாடு திருடப்பட்டு, அவன் தனது மனைவியுடன் காணாமல் போன பிறகு, பீமன் நளனைக் காண விரும்பி, அவனைத் தேட அந்தணர்களை அனுப்பி வைத்தான். அவர்களுக்குப் பெரும் செல்வத்தைக் கொடுத்த பீமன் அவர்களிடம், “நளனையும் எனது மகள் தமயந்தியையும் தேடுங்கள். நிஷாதர்களின் ஆட்சியாளன் {நளன்} எங்கிருக்கிறான் என்பதை உறுதி செய்து, அவனுடன் சேர்த்து எனது மகளையும் {தமயந்தியையும்} இங்கே கொண்டு வாருங்கள். இப்பணியை யார் நிறைவேற்றுவார்களோ, அவர்கள் ஆயிரம் பசுக்களையும், வயல்வெளிகளையும், நகரத்தைப் போன்ற ஒரு கிராமத்தையும் என்னிடம் இருந்து பெறுவார்கள். நளனையும் தமயந்தியையும் இங்கே கொண்டு வருவதில் தோல்வியுற்றாலும், அவர்களைப் பற்றிய செய்தியைக் கொண்டு வருபவர்கள் என்னிடம் இருந்து செல்வத்தைப் பிரதிபலிக்கும் ஆயிரம் பசுக்களைப் பெறுவார்கள்” என்று அறிவித்தான் {பீமன்}.

இப்படிச் சொல்லப்பட்ட அந்த அந்தணர்கள், மகிழ்ச்சியுடன், நளனையும் அவனது மனைவியையும் தேடி, எல்லா புறங்களிலும் இருந்த நகரங்கள் மற்றும் மாகாணங்களில் தேடச் சென்றனர். ஆனால் நளனையோ அவனது மனைவியையோ அவர்கள் எங்கும் காணவில்லை. கடைசியாக சுதேவன் என்ற அந்தணன், சேதி நாட்டின் அழகான நகரத்திற்கு வந்த போது, {சேதிநாட்டு} மன்னன் {தெய்வங்களை} *வழிபடும் நேரத்தில், சுனந்தையுடன் அமர்ந்திருந்த விதரப்ப்பத்தின் இளவரசியை {தமயந்தியை} மன்னனின் அரண்மனையில் கண்டான். புகைச் சுருள்களால் மூடப்பட்ட நெருப்பு போன்று பிரகாசித்த அவளது ஒப்பற்ற அழகு, லேசாகக் கண்டடையக்கூடியதாக இருந்தது. அழுக்கடைந்து, மெலிந்திருந்த அகன்ற கண்களையுடைய அந்த மங்கையைக் கண்டதும், பல காரணங்களால் அது தமயந்திதான் என்ற முடிவுக்கு வந்தான் {அந்த அந்தணன் சுதேவன்}.

பிறகு சுதேவன், “நான் முன்பு கண்டதைப் போலவே இந்த மங்கை இப்போதும் இருக்கிறாள். ஓ, மூன்று உலகங்களின் கண்களுக்கும் இனிய ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போன்ற இந்த அழகானவள் மீது, எனது கண்கள் பட்டதால் நான் அருளப்பட்டவனே! முழு நிலவைப் போன்றும், மாறாத இளமையுடனும், அழகிய வட்டமான மார்புகளுடனும், எல்லாபுறங்களையும் தனது காந்தியால் பிரகாசிக்க வைத்துக் கொண்டும், அழகான தாமரைகளைப் போன்ற அகன்ற கண்களுடனும், காமனின் ரதியைப் போன்றும், அனைத்து உலகங்களின் கண்களுக்கும் இனியவளாக முழு நிலவின் கதிர்களைப் போலவும், பாதகமான அதிர்ஷ்டத்தால் இடம் மாற்றப்பட்ட விதரப்ப்பத்தின் தடாகத்தில் இருக்கும் தாமரைத் தண்டைப் போலவும் இருக்கிறாள். இவள் செயல்களால் ஏற்பட்ட ஏமாற்றத்தில் இருக்கிறாள்.

தனது கணவனைக் குறித்த வருத்தத்தால் பீடிக்கப்பட்டு, துயரத்துடன் இருக்கும் அவள், பவுர்ணமி இரவின் போது விழுங்கப்பட்ட முழு நிலவின் வெளிச்சம் போலவோ அல்லது ஊற்று வற்றிக் காய்ந்த நீரோடை போலவோ இருக்கிறாள். யானையின் துதிக்கையால் நசுக்கப்பட்ட தாமரை இதழ்களையும், யானையின் வருகையால் பயந்த பறவைகளையும், நீர்க்கோழிகளையும் கொண்ட நாசமடைந்த தடாகத்தைப் போல அவளது நிலை இருக்கிறது. உண்மையில் இந்தப் பெண், அழகான வடிவுடனும், அழகான அங்கங்களுடனும், ரத்தினங்கள் நிறைந்த மாளிகையில் வசிக்கும் தகுதியுடனும் இருக்கிறாள். ஆனால் இப்போதோ, சூரியனால் சுடப்பட்ட தாமரைத் தண்டைப் போல வேரறுந்து இருக்கிறாள். அழகு, தயை ஆகியவற்றுடன், பூணும் தகுதி இருந்தும் ஆபரணங்கள் ஏதுமற்று, புதிய புகலிடத்தை அடைந்த சந்திரன் கருப்பு மேகங்களால் மறைக்கப்பட்டது போல இருக்கிறாள்.

வசதிகளையும் ஆடம்பரங்களையும் இழந்து, அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களைப் பிரிந்து, தனது தலைவனைக் காணும் நம்பிக்கையில் துயரத்துடன் வாழ்கிறாள். உண்மையில், ஆபரணங்கள் அற்று இருந்தாலும், கணவனே ஒரு பெண்ணுக்குச் சிறந்த ஆபரணம். கணவன் இல்லாமல் இருப்பதால், இந்தப் பெண் அழகாக இருந்தாலும், ஒளி இழந்து இருக்கிறாள். இப்படிப்பட்ட மனைவியை இழந்து, அவன் {நளன்} துக்கத்திற்கு பலியாகாமல் இருந்தால், அந்தக் காரியம் நளனால் செய்யப்பட்ட கடும் சாதனையே.

கரிய கூந்தலும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களும் கொண்டு, அருளுக்கு தகுதியிருப்பினும் துயரில் இருக்கும் இந்த மங்கையைக் கண்டு, எனது இதயம் கூட வலிக்கிறதே. ஐயோ, கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்து, அனைத்து நற்குறிகளாலும் அருளப்பட்ட இந்தப்பெண், இந்தத் துன்பக்கடலைக் கடந்து, சந்திரனை மீண்டும் அடைந்த ரோகிணி {நட்சத்திரம்} போல, எப்போது தனது தலைவனின் துணையை அடையப்போகிறாளோ? இழந்த நாட்டை மீண்டும் பெறும் மன்னன் மகிழ்வதைவிட, நிச்சயம், இவளை {தமயந்தியை} மீண்டும் அடையும் நிஷாதர்களின் மன்னன் {நளன்} அதிகமாக மகிழ்வான். இவளது இயல்புக்கும், வயதுக்கும், ஒழுக்கத்துக்கும் சமமான நளன், கரிய கண்களைக் கொண்டவளும், விதரப்ப்பனின் மகளுமான இந்த மங்கையை அடையத் தகுதியுடையவனே. தனது கணவனைச் சந்திக்க எவ்வளவு ஆர்வத்துடன் இருக்கிறாள் இவள். அளவிடமுடியா வீரமும், சக்தியும், பலமும் கொண்ட அந்த வீரனைக் குறித்து துயருற்றிருக்கும் இந்த ராணிக்கு {தமயந்திக்கு}, நான் ஆறுதல் சொல்வதே தகும். தனது தலைவனை நினைத்தும், இதுவரை காணாத துன்பத்தையும் கண்டும் இருக்கும், சந்திரனைப் போன்ற முகம் கொண்டு, துயரத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் இந்தப் பெண்ணுக்கு நான் ஆறுதல் சொல்வேன்” என்று நினைத்துக் கொண்டான் {அந்தணன் சுதேவன்}.

பிருகதஸ்வர் தொடர்ந்தார், “இப்படி பல்வேறு சூழ்நிலைகளையும் குறிப்புகளையும் நினைத்துப் பார்த்த சுதேவன் என்ற அந்த அந்தணன் {சுதேவன்} தமயந்தியை அணுகி, “ஓ விதரப்ப்ப இளவரசியே {தமயந்தியே}, நான் சுதேவன், உனது தமயனின் அன்பு நண்பன். நான்மன்னன் பீமரின் விருப்பத்தின் பேரில் உன்னைத்தேடியே இங்கு வந்திருக்கிறேன். உனது தந்தை, தாய் மற்றும் உனது சகோதரர்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்கள். நீண்ட ஆயுள் அருளப்பட்ட உனது மகனும் மகளும் அமைதியாக வாழ்கிறார்கள். உனது உறவினர்கள், உயிரோடு இருந்தாலும், உன்னை நினைத்து இறந்தவர்கள் போலவே இருக்கிறார்கள். உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அந்தணர்கள், உன்னைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்” என்றான் {சுதேவன்}.

பிருகதஸ்வர் தொடர்ந்தார், “ஓ யுதிஷ்டிரா, சுதேவனை அடையாளம் கண்டு கொண்ட தமயந்தி, தனது உறவினர்கள் மற்றும் அவளது இரத்த சம்பந்தமுடைய அனைவரின் நிலையையும் ஒருவர் பின் ஒருவராக அவனிடம் விசாரித்தாள். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பிறகு, துயரத்தால் பீடிக்கபட்ட விதரப்ப்ப இளவரசி, தனது தமையனின் நண்பனும், அந்தணர்களில் முதன்மையானவனுமான சுதேவனை எதிர்பாராமல் கண்டதால், மிகவும் அழுதாள். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தமயந்தி அழுவதையும், சுதேவனிடம் தனிமையில் பேசுவதையும் கண்ட சுனந்தை, துன்பம் கொண்டு அரசத்தாயிடம் சென்று “ஒரு அந்தணனின் முன்னிலையில் சைரந்திரி கடுமையாக அழுகிறாள். நீ விரும்பினால், உன்னைத் திருப்திப்படுத்திக் கொள் {வேண்டுமானால் வந்து பார்}” என்றாள் {சுனந்தை}.

இதன்பேரில், சேதி நாட்டு மன்னனின் தாய், அரண்மனையின் அந்தப்புரத்தில் இருந்துவெளியே வந்து, அந்தப் பெண்ணும் (தமயந்தியும்), அந்த அந்தணனும் இருந்த இடத்திற்கு வந்தாள். பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சுதேவனை அழைத்து, அவனிடம், “இந்த அழகானவள் யாருடைய மனைவி? இவள் யாருடைய மகள்? இந்த அழகான கண் கொண்ட மங்கை, தனது உறவினர்களையும், கணவனையும் எப்படி இழந்தாள்? இந்தத் துன்பத்தில் வீழ்ந்திருக்கும் இந்த மங்கையைக் காண நீ எப்படி வந்தாய்? இவை அனைத்தையும் நான் உன்னிடம் விவரமாகக் கேட்க விரும்புகிறேன். தெய்வீக அழகு கொண்ட இந்த மங்கையைப் பற்றி உன்னிடம் நான் கேட்பது அனைத்திற்கும் உண்மையைச் சொல்” என்றாள். பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி அரசத்தாயால் சொல்லப்பட்ட அந்தணர்களில் சிறந்தவனான சுதேவன், வசதியாக {சிரமம் இல்லாமல்} அமர்ந்து கொண்டு, தமயந்தியின் உண்மையான வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தான் {விதரப்ப்ப நாட்டு மன்னன் பீமனால் அனுப்பப்பட்ட அந்தணன் சுதேவன்}”. 

நளனைத் தேடும் பணி ஆரம்பம்! – வனபர்வம் பகுதி 69-அரசத் தாய் சுதேவனிடமிருந்து தமயந்தியைப் பற்றிய உண்மைகளை அறிதல்; தமயந்தியின் மச்சத்தைக் கொண்டு, அவள் தனது சகோதரியின் மகள் என்பதை அரசத்தாய் அறிதல்; தமயந்தியை அவளது சொந்த நாட்டுக்கு அனுப்புதல்; தமயந்தியின் வற்புறுத்தலாம் பீமன் நளனைத் தேடி அந்தணர்களை மீண்டும் அனுப்புதல்…

சுதேவன் சொன்னான், “பீமன் என்ற பெயரில், அறம் சார்ந்து, விதரப்ப்பத்தின் சிறப்புமிக்க ஆட்சியாளராக ஒருவர் இருக்கிறார். இந்த அருளப்பட்ட மங்கை, அவரது மகளாவாள். இவள் தமயந்தி என்ற பெயரால் பரந்து அறியப்பட்டிருக்கிறாள். வீரசேனன் மகனும், நிஷாதர்களை ஆளும் மன்னனுமான ஒருவன், நளன் என்ற பெயரில் இருக்கிறான். இந்த அருளப்பட்ட மங்கை {தமயந்தி}, ஞானமும், நீதியும் கொண்ட அந்த ஏகாதிபதியின் {நளனின்} மனைவியாவாள். தனது தம்பியால் {புஷ்கரனால்} பகடையில் வீழ்த்தப்பட்டு, நாட்டை இழந்த அந்த மன்னன் {நளன்}, தமயந்தியுடன் சேர்ந்து யாரும் அறியாமல் சென்றுவிட்டான். நாங்கள் தமயந்தியை இந்த உலகம் முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறோம். கடைசியாக இந்தப் பெண், உமது மகனின் இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டாள்.

இவளின் {தமயந்தியின்} அழகை விஞ்ச இந்த உலகில் வேறு எந்தப் பெண்ணும் கிடையாது. எப்போதும் இளமையுடன் இருக்கும் இந்த மங்கையின் {தமயந்தியின்} புருவத்திற்கு மத்தியில், தாமரையைப் பிரதிபலிக்கும் ஒரு அற்புதமான மச்சம், பிறப்பில் இருந்தே இருக்கிறது. (முன்) நாங்கள் பார்த்தபோது, மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் சந்தினைப் போல, (முன்னெற்றி) தூசியால் (பூசப்பட்டு) அது மறைந்திருந்தது. செழிப்பையும், செல்வத்தையும் குறிப்பதற்கு படைப்பாளனால் {பிரம்மனால்} அங்கே வைக்கப்பட்ட குறியீடான அது, வளர்பிறையின் முதல் நாள் {பிரதமையன்று} தோன்றும் சந்திரன் மேகத்தால் மறைக்கப்பட்டது போல, லேசாகத் தான் தெரிந்தது. உடல் தூசியால் மூடியிருந்தாலும், இவளது அழகு மறையவில்லை. இவள் தன்னைக் கவனித்துக் கொள்ளவில்லையெனினும், அது {மச்சம்} இன்னும் வெளிப்படையாக இருந்து தங்கம் போல மின்னுகிறது.  தேவதையைப் போன்ற இந்தப் பெண்ணை {தமயந்தியை}, வெப்பத்தை வைத்தே நெருப்பைக் கண்டுபிடிப்பது போல், இவளது உருவத்தையும், அந்த மச்சத்தையும் வைத்தே நான் கண்டுபிடித்தேன்” என்றான் {பிராமணன் சுதேவன்}.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சுதேவனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சுனந்தை, தமயந்தியின் புருவங்களுக்கு மத்தியில் இருந்த மச்சத்தில் படிந்திருந்த தூசியைத் துடைத்தாள். அதன்பிறகு அது {அந்த மச்சம்}, மேகத்தில் இருந்து வெளிப்பட்டு வானத்தில் தெரியும் சந்திரனைப் போலத் தெரிந்தது. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்த மச்சத்தைக் கண்டதும், சுனந்தையும், அரசத்தாயும் அழத்தொடங்கி, தமயந்தியை வாரி அணைத்தபடி சிறிது நேரம் அமைதியாக நின்றனர். கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த அரசத்தாய், மென்மையான வார்த்தைகளால், “இந்த மச்சத்தை வைத்து, நீ எனது சகோதரியின் மகள் என்பதை அறிந்தேன். ஓ அழகான பெண்ணே {தமயந்தியே}, உனது அன்னையும் நானும், தசார்ண நாட்டு ஆட்சியாளரான சுதாமனின் மகள்களாவோம். அவள் மன்னர் பீமனுக்கு {விதரப்ப்ப நாட்டு மன்னனுக்கு} அளிக்கப்பட்டாள். நான் வீரபாகுவுக்குக் {சேதி நாட்டு மன்னனுக்குக்} கொடுக்கப்பட்டேன். தசார்ண நாட்டில் இருக்கும் எங்களது தந்தையின் அரண்மனையில் நான் உனது பிறப்பைக் கண்டேன் {சேதி நாட்டு அரசத்தாய் தமயந்தியின் சித்தி}. ஓ அழகானவளே {தமயந்தி} உனக்கு, எனது வீடும் உன் தந்தையின் வீடு போன்றதே. ஓ தமயந்தி, இந்த செல்வங்கள் எனக்கு எப்படியோ அதபோலத்தான் உனக்கும்” என்றாள்.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இதைக் கேட்டதும், தனது அன்னையின் சகோதரியை வணங்கி, “அறியப்படாமல் இருந்தும், நான் இங்கே உம்முடன் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன். எனது விருப்பங்கள் அனைத்தும் திருப்தியாகச் செய்யப்பட்டன. என்னை நீங்கள் நன்றாகப் பார்த்துக் கொண்டீர்கள். நான் தங்கியிருந்தவரை எப்படி மகிழ்ந்தேனோ அப்படியே இனிமேலும் சந்தேகமற இன்னும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால் தாயே, நெடுநாளாக நாடு கடந்து இருக்கிறேன். ஆகையால், (நான் செல்வதற்கு) எனக்கு  நீங்கள் உத்தரவு வழங்க வேண்டும் எனது மகனும் மகளும் எனது தந்தையின் அரண்மனையில் வாழ்ந்து வருகிறார்கள். தந்தையையும் தாயையும் பிரிந்து, துயருடன் அவர்கள் எவ்வாறு தங்கள் நாட்களைக் கடத்துகிறார்களோ? எனக்கு ஏற்புடையதை நீங்கள் செய்ய வேண்டுமென்றால், நேரங்கடத்தாமல், ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்யுங்கள். நான் விதரப்ப்பத்திற்குச் செல்ல விரும்புகிறேன்” என்றாள்.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இதனால் (தமயந்தியின்) அன்னையின் சகோதரி {அரசத்தாய்}, இதயத்தில் மகிழ்ந்து, “அப்படியே ஆகட்டும்” என்றாள். ஓ பாரதர்களின் தலைவனே {யுதிஷ்டிரா}, அந்த அரசத்தாய் தனது மகனிடம் அனுமதி பெற்று, அதிகமான மெய்க்காவலர்களுடனும், முதல்தரமான ஆடைகள், பானங்கள் மற்றும் உணவும் கொடுத்து, மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் அனுப்பி வைத்தாள். விரைவாக அவள் {தமயந்தி} விதரப்ப்ப நாட்டை அடைந்தாள். அவளது உறவினர்களை அனைவரும் (அவளது வரவால்) மகிழ்ந்து, அவளை மரியாதையுடன் வரவேற்றனர். தனது உறவினர்களும், பிள்ளைகளும், தனது பெற்றோர் இருவரும், பணிப்பெண்கள் அனைவரும் நலமாக இருப்பதைக் கண்ட சிறப்புமிக்க தமயந்தி, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தேவர்களையும், அந்தணர்களையும் மேன்மையான முறையில் வழிபட்டாள். தனது மகளை {தமயந்தியைக்} கண்ட மன்னன் {பீமன்}, மிகவும் மகிழ்ந்து, சுதேவனுக்கு ஆயிரம் பசுக்களையும், பல செல்வங்களையும், ஒரு கிராமத்தையும் கொடுத்தான்.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த இரவைத் தனது தந்தையின் மாளிகையில் கழித்து களைப்பில் இருந்து மீண்ட தமயந்தி தனது அன்னையிடம், “ஓ தாயே, உனக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் வாழ வேண்டும் என்று நீ விரும்பினால், மனிதர்களில் வீரரான நளரைக் கொண்டு வர (அக்கறையுடனும், சிரமம் பாராமலும்) முயற்சிக்க வேண்டும்” என்றாள். இப்படி தமயந்தியால் சொல்லப்பட்ட வணக்கத்திற்குரிய ராணி சோகத்தில் ஆழ்ந்தாள். கண்ணீரால் குளித்த அவளால் {ராணியால்} பதில் சொல்ல இயலவில்லை. அவளது {தமயந்தியின்} துயர்நிலையைக் கண்டு, அந்த உள் அறைகளில் {அந்தப்புரத்தில்}  இருந்தவர்கள் அனைவரும் “ஓ” என்றும், “ஐயோ” என்றும் உரக்க அழுதனர். பிறகு ராணி பலம்பொருந்திய ஏகாதிபதியான பீமனிடம், “உமது மகள் தமயந்தி, தனது கணவனை நினைத்து {அழுது} புலம்புகிறாள். ஓ மன்னா {பீமரே}, தனது நாணம் அனைத்தையும் விட்டு, தனது மனதில் இருப்பதை அவளே என்னிடம் தீர்மானமாகச் சொன்னாள். அந்த நீதிமானை (நளனை), உமது மக்கள் {பணியாட்கள்} தேடட்டும்” என்றாள்.

அவளால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {பீமன்அந்தணர்களிடம் “நளனைக் கண்டுபிடிக்க தீவிரமாக முயலுங்கள்” என்று சொல்லி எல்லாப்புறங்களுக்கு அனுப்பினான். விதரப்ப்ப ஆட்சியாளனால் {நளனைத் தேட} உத்தரவிடப்பட்ட அந்த அந்தணர்கள், தமயந்தியின் முன் தோன்றி, தாங்கள் மேற்கொள்ளப்போகும் பயணத்தைக் குறித்து அவளிடம் சொல்லினர். அவர்களிடம் அந்த பீமனின் மகள் {தமயந்தி}, “நீங்கள் சென்று, அனைத்து நாடுகளிலும், அனைத்து சபைகளிலும் “ஓ அன்புக்குரிய சூதாடியே, அர்ப்பணிப்பும் அன்பும் கொண்ட உமது மனைவியான நான் கானகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது  எனது பாதி ஆடையை வெட்டி எடுத்துக் கொண்டு என்னைக் கைவிட்டு எங்கே சென்றீர்? அந்தப் பெண், உம்மால் உத்தரவிடப்பட்டபடியே உம்மை எதிர்பார்த்து, பாதி ஆடையுடனும், எரியும் துயரத்துடனும் உமக்காகக் காத்திருக்கிறாள்! ஓ மன்னா {நளரே}, ஓ வீரரே, எப்போதும் துயரத்துடன் அழுது கொண்டே இருக்கும் அவளிடம் கருணை கொண்டு பதிலளியும்.” என்று சொல்லுங்கள். காற்றின் துணையால் நெருப்பு கானகத்தை உட்கொண்டுவிடும். ஆகையால், அவர் என் மீது பரிதாபம் கொள்ளும் வகையில் இதையும் இதற்கு மேலும் சொல்லுங்கள்.

(மேலும்) “மனைவியாகப்பட்டவள் எப்போதும் கணவனால் பாதுகாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் இருக்க வேண்டும். கடமைகள் அனைத்தையும் அறிந்து, நல்லவராக இருக்கும் தாங்கள், ஏன் அந்த இரு கடமைகளையும் {பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் [உணவு அளித்தல்]} புறக்கணித்தீர்? புகழும், ஞானமும், நல்ல பிறப்பும், அன்பும் உடைய நீர் ஏன் இப்படி அன்பில்லாமல் நடந்து கொண்டீர்? இவையெல்லாம் எனது நற்பேறுகள் தொலைந்ததனால் நடக்கின்றன என்று அஞ்சுகிறேன்” என்று சொல்லுங்கள். இப்படி நீங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, யாராவது உங்களுக்கு பதிலளித்தால், அந்த மனிதரைக் குறித்து அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள். அவர் யார்? அவர் எங்கு வசிக்கிறார்? என்பதை அறிந்து கொள்ளுங்கள். மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர்களே, இந்தப் பேச்சைக்கேட்டு யார் உங்களிடம் பதில் பேச விழைகிறாரோ, அவரின் அந்த வார்த்தைகளை என்னிடம் {எனது கவனத்திற்கு} கொண்டு வாருங்கள். நீங்கள் உச்சரிக்கும் வார்த்தைகளைக் கேட்கும் யாரும், இது என்னால் உத்தரவிடப்பட்ட வார்த்தைகள் என்றோ அல்லது நீங்கள் என்னிடம் திரும்ப வருவீர்கள் என்றோ அறிந்து கொள்ளாதவாறு பேசுங்கள். பதில் சொல்லும் அவர், செல்வந்தரா, அல்லது ஏழையா, அல்லது சக்தியற்றவரா, என்றும் அறிந்து கொள்ளுங்கள். உண்மையில் அவர் குறித்த அத்தனையும் அறிந்து கொள்ளுங்கள்” என்று {அந்த அந்தணர்களிடம்} சொன்னாள் {தமயந்தி}.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி தமயந்தியால் உத்தரவிடப்பட்ட அந்தணர்கள் அனைவரும், பேரழிவில் சிக்கியிருக்கும் நளனைத் தேடி, எல்லாத் திக்குகளுக்கும் சென்றனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நகரங்களிலும், நாடுகளிலும், கிராமங்களிலும், துறவிகள் இருக்கும் இடங்களிலும், இடையர்கள் இருக்கும் இடங்களிலும் {இடைச்சேரிகளிலும்} அந்த அந்தணர்கள் அவனை {நளனைத்} தேடினர். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அவர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் தமயந்தி சொல்லியபடி செய்தனர்.

“கண்டேன் நளனை!”, என்றான் பர்ணாதன். – வனபர்வம் பகுதி 70-பர்ணாதன் என்ற அந்தணன், அயோத்தி சென்று பாகுகனைச் சந்தித்துப் பேசியதாகவும், அவன் நளனாக இருக்கக்கூடும் என்றும், தமயந்தியிடம் வந்து சொல்வது; சந்தேகத்தின் அடிப்படையில் தமயந்தி சுதேவனை ரிதுபர்ணனின் நாட்டுக்கு அனுப்பவது; சுதேவனிடம் நளன் தமயந்திக்கான சமாதானத்தைச் சொல்வது…

பிருகதஸ்வர் சொன்னார், “பிறகு நீண்ட காலம் கடந்ததும், பர்ணாதன் என்ற அந்தணன் ஒருவன் {விதரப்ப்ப} நகரத்திற்குத் திரும்பி பீமனின் மகளிடம் {தமயந்தியிடம்}, “ஓ தமயந்தி, நிஷாதர்களின் மன்னனான நளனைத் தேடி, அயோத்தி நகருக்குச் சென்று, பங்காசூரனின் மகன் {ரிதுபர்ணன்) முன் நின்றேன். ஓ பெண்களில் சிறந்தவளே, நான் உனது வார்த்தைகளை அந்த அருளப்பட்ட ரிதுபர்ணன் முன்னிலையில் திரும்பச் சொன்னேன். ஆனால், நான் திரும்பத் திரும்ப அவற்றைச் சொன்னாலும், அதைக் கேட்ட அந்த மனிதர்களின் ஆட்சியாளனோ {ரிதுபர்ணனோ}, அல்லது அங்கிருந்த அரசவையினரோ எதற்கும் பதில் சொல்லவில்லை. பிறகு, நான் அந்த ஏகாதிபதியால் {ரிதுபர்ணனால்} அனுப்பப்பட்ட பிறகு, ரிதுபர்ணனின் சேவையில் ஈடுபட்டிருக்கும் பாகுகன் என்ற பெயர் கொண்ட மனிதன் என்னை அணுகி அழைத்தான்.

குட்டைக் கைகளுடன், காணச்சகியாத் தோற்றம் கொண்ட அந்த பாகுகன், மன்னனின் {ரிதுபர்ணனின்} தேரோட்டியாக இருக்கிறான். அவன் வேகமாக வண்டி ஓட்டுவதில் நிபுணனாகவும், சமையற்கலையை நன்கு அறிந்தவனாகவும் இருக்கிறான். அப்படிப்பட்டவன், அடிக்கடி பெருமூச்சுவிட்டபடி, திரும்பத் திரும்ப அழுது, எனது நலத்தை விசாரித்து, பிறகு என்னிடம், “என்னதான் துயரத்தில் விழுந்தாலும், கற்புடைய மங்கையர் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு நிச்சயம் சொர்க்கத்தை அடைவார்கள். கற்புடைய பெண்கள், அறம்சார்ந்த நடத்தை என்ற கவசத்துடன் தங்களது வாழ்வை நடத்துவதால், அவர்கள் தங்கள் தலைவர்களால் கைவிடபட்டாலும், அதன் காரணமாக அவர்கள் {அவன் மீது} கோபங்கொள்ள மாட்டார்கள்.  அனைத்து அருளையும் இழந்து, துயரத்தில் மூழ்கிய பிறகே அவன் {நளன்} அவளை {தமயந்தியைக்} கைவிட்டதால், அவள் கோபம் கொள்ளக்கூடாது. வாழ்வாதாரத்தைப் பெற முயன்றபோது, பறவைகளால் ஆடை களவாடப்பட்டு துயரத்தில் மூழ்கியவன் மீது அழகு நிறைந்த அறம்சார்ந்த பெண் கோபமடையக்கூடாது. தான் நன்றாக நடத்தப்பட்டாலும், இல்லையென்றாலும், நாடிழந்து, செழிப்பெல்லாம் இழந்து, பசியால் ஒடுக்கப்பட்டு, பேரிடரில் மூழ்கிய தனது கணவனை அந்த இழிந்த நிலையில் கண்டும், அப்படிப்பட்ட {அறம்சார்ந்த} ஒரு மனைவி, ஒருபோதும் தன்னைக் {அவனுக்கெதிரான} கோபத்தில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது” என்று சொன்னான். அவனது வார்த்தைகளைக் கேட்டதும், நான் விரைந்து இங்கு வந்துவிட்டேன். இப்போது நீ அனைத்தையும் கேட்டுவிட்டாய். மன்னனுக்கு {பீமருக்கு} இது குறித்துச் சொல்லிவிட்டு, உனக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்” என்றான் {பர்ணாதன்}.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பர்ணாதனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தமயந்தி, கண்கள் நிறைந்த கண்ணீருடன் தனது தாயிடம் வந்து, “ஓ தாயே, மன்னர் பீமரிடம், எனது இந்தக் காரியம் குறித்து எதுவும் தெரியப்படுத்தக்கூடாது. உனது முன்னிலையில், நான் அந்தணர்களில் சிறந்த சுதேவனை {இக்காரியத்தில்} நியமிக்கப் போகிறேன். நீ எனது நன்மையில் விருப்பமுள்ளவளாக இருந்தால், மன்னர் பீமர் எனது காரியத்தை அறியாதவாறு நடந்து கொள். என்னை எப்படி எனது நண்பர்களுக்கு மத்தியில் கொண்டு வந்து சேர்த்தானோ அப்படியே நளரைக் கொண்டு வரும் காரியத்திற்காக, உரிய அறம் சார்ந்த சடங்குகளைச் செய்த பிறகு, காலந்தாழ்த்தாமல் சுதேவன் அயோத்தியா நகரத்திற்குச் செல்லட்டும்” என்றாள். பர்ணாதன் களைப்பில் இருந்து மீண்டதும், விதரப்ப்பத்தின் இளவரசி {தமயந்தி}, அவனை வணங்கி, நிறைந்த செல்வத்தைக் கொடுத்து, “ஓ அந்தணரே, நளர் இங்கு வந்ததும், நான் உனக்கு இன்னும் அதிகமான செல்வத்தை அளிப்பேன். ஓ மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவனே, நான் விரைந்து எனது (தொலைந்த) தலைவனை மீட்க ஏதுவாக, நிச்சயம் யாராலும் செய்ய முடியாத செயற்கரிய சேவையை எனக்காக நீ செய்திருக்கிறாய்” என்றாள்.

இப்படி தமயந்தியால் சொல்லப்பட்ட உயர்ந்த மனம் கொண்ட அந்தணன் {பர்ணாதன்}, அவளுக்கு ஆறுதல் கூறி, ஆசீர்வாதங்கள் செய்து, தனது காரியம் வெற்றியடைந்ததெனக் கருதி தனது இல்லத்திற்குச் சென்றான். அவன் சென்ற பிறகு, துன்பத்தால் ஒடுக்கபட்ட தமயந்தி, ஓ யுதிஷ்டிரா, தனது தாயின் முன்னிலையில் சுதேவனை அழைத்து, “ஓ சுதேவா, பறவையென நேராக அயோத்தியா நகரத்திற்குச் சென்று, மன்னன் ரிதுபர்ணனிடம், “பீமனின் மகளான தமயந்திக்கு மற்றொரு சுயம்வரம் நடக்கப் போகிறது. அனைத்து மன்னர்களும், இளவரசர்களும் அங்கே செல்கின்றனர். நேரத்தைக் கணக்கிட்டுப் பார்த்ததில், அந்த விழா நாளை நடைபெறப் போகிறது என்று காண்கிறேன். ஓ எதிரிகளை அடக்குபவரே {ரிதுபர்ணா}, உம்மால் முடியும் என்றால், காலந்தாழ்த்தாமல் செல்லும். வீரனான நளன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்பது தெரியாததால், நாளை சூரியன் உதித்ததும் அவள் {தமயந்தி}, தனது இரண்டாவது கணவனைத் தேர்ந்தெடுப்பாள்” என்று சொல்” என்றாள். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அவளால் இப்படிச் சொல்லப்பட்ட சுதேவன் கிளம்பினான். அவன் என்ன சொல்ல {தமயந்தியால்} வழிநடத்தப்பட்டானோ, அதை ரிதுபர்ணனிடம் சொன்னான்

வார்ஷ்ணேயனின் சந்தேகம் – வனபர்வம் பகுதி 71-தமயந்தியின் சுயம்வரத்திற்கு ஒரே நாளில் செல்ல ரிதுபர்ணன் பாகுகனைப் பணித்தது; பாகுகன், வார்ஷ்ணேயன் மற்றும் ரிதுபர்ணன் ஆகிய மூவரும் விதரப்ப்பம் நோக்கி தேரில் சென்றது; பாகுகன் தேரோட்டும் திறனைப் பார்த்து இவன் நளனாக இருப்பானோ என்று வார்ஷ்ணேயன் சந்தேகித்தது…

பிருகதஸ்வர் தொடர்ந்தார், “சுதேவனின் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ரிதுபர்ணன், பாகுகனிடம் மென்மையான வார்த்தைகளில், “ஓ பாகுகா {நளனே}, குதிரைகளைப் பழக்குவதிலும், அவற்றை வழிநடத்துவதிலும் நீ அதி நிபுணனாக இருக்கிறாய். இது உனக்கு விருப்பமானால், நான் தமயந்தியின் சுயம்வரத்திற்கு ஒரே நாளில் செல்ல விரும்புகிறேன்” என்றான். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இப்படிச் சொல்லப்பட்ட நளன், தனது இதயம் வெடித்துவிடுவது போன்ற துயரத்தில் ஆழ்ந்தான். அந்த உயர்ந்த ஆன்மா கொண்ட மன்னன் துன்பத்தால் எரிந்தான். அவன் தனக்குள்ளேயே, “துன்பத்தால் குருடாகியே தமயந்தி இப்படிச் செய்கிறாளோ! அல்லது இந்த அற்புதமானத் திட்டத்தை அவள் {தமயந்தி} என் பொருட்டு உருவாக்கியிருக்கிறாளோ!

ஐயோ, புத்தியற்ற எனது பாவத்தால் ஏமாற்றப்பட்ட விதரப்ப்பத்தின் அப்பாவி இளவரசி {தமயந்தி} செய்யும் இந்தச் செயல் கொடூரமாக இருக்கிறதே. இந்த உலகத்தில் பெண்களின் இயல்பு நிலையற்றதாகவே காணப்படுகிறது. எனது குற்றமும் பெரியதுதான்; அல்லது எனது பிரிவால் துயரடைந்ததால் என்னை வெறுத்து இப்படிச் செய்கிறாளோ. உண்மையில், அந்தக் கொடியிடை கொண்ட பெண் {தமயந்தி}, என்னால் துன்பத்துக்கும் நம்பிக்கையின்மைக்கும் ஆளாகியிருந்தாலும், நிச்சயமாக இவ்வகை செயலைச் செய்யக் கூடியவள் அல்ல. அதுவும் குறிப்பாக (என்மூலமாக) குழந்தைகள் இருக்கும்போது அப்படிச் செய்ய மாட்டாள். இருப்பினும், இது உண்மையா? பொய்யா? என்று நான் அங்கே சென்று உறுதி செய்த பிறகு அறிந்து கொள்வேன். ஆகையால், நான் ரிதுபர்ணன் காரியத்தையும் மற்றும் எனது காரியத்தையும் {ஒரே நாளில் விதரப்ப்பம் செல்வது என்ற ரிதுபர்ணன் காரியத்தையும் எனது மனைவியைக் காண்பது என்ற எனது காரியத்தையும்} சாதிப்பேன்” என்று நினைத்துக் கொண்டான்.

இப்படி மனதுக்குள் தீர்மானித்துக் கொண்ட பாகுகன் {நளன்}, இதயத்தில் துயரத்துடன் மன்னன் ரிதுபர்ணனிடம் கரங்கள் கூப்பி, “ஓ ஏகாதிபதி, நான் உமக்கு அடிபணிகிறேன். ஓ மனிதர்களில் புலியே, ஓ மன்னா {ரிதுபர்ணரே} நான் விதரப்ப்ப நகரத்திற்கு ஒரே நாளில் செல்வேன்” என்றான். பிறகு ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னன் பங்காசூரனின் மகனின் {ரிதுபர்ணனின்} கட்டளையின் பேரில் பாகுகன் {நளன்கொட்டிலுக்குச் {குதிரை லாயத்திற்குச்} சென்று குதிரைகளைப் பரிசோதித்தான். விரைந்து செய்யுமாறு ரிதுபர்ணனால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட பாகுகன் {நளன்}, தீவிர ஆராய்ச்சிக்கும், கவனமான யோசனைக்கும் பின்னர், சதைப்பற்றற்று மெலிந்திருந்தும், வலிமையுடையதும், நீண்ட பயணத்துக்கு தகுதியானதும், உயர்ந்த இனம் மற்றும் பண்புகளால் பலம்வாய்ந்ததும், அமங்களமான குறிகளற்றதும், அகலமான நாசிகளும், வீங்கிய கன்னங்களும், முடி சார்ந்த பத்து சுழிகளால் குறைகளற்றதும், சிந்து நாட்டில் பிறந்ததும், காற்றைப் போன்ற வேகம் கொண்டதுமான சில குதிரைகளைத் தேர்ந்தெடுத்தான்.

அந்தக் குதிரைகளைக் கண்ட மன்னன் {ரிதுபர்ணன்} சிறிது கோபம் கொண்டு, “நீ செய்ய விரும்பிய இந்தக் காரியம் என்ன? நீ எங்களைக் கேலி செய்யக்கூடாது. பலத்திலும் மூச்சிலும் பலவீனமான இந்த எனது குதிரைகள் எப்படி நம்மைச் சுமந்து செல்லும்? இவற்றின் உதவியைக் கொண்டு இந்த நெடும்பாதையில் எப்படிச் செல்ல முடியும்?” என்று கேட்டான். அதற்கு பாகுகன் {நளன்}, “இந்தக் குதிரைகள் ஒவ்வொன்றும் தனது நெற்றியில் ஒரு சுழியும், நெற்றிப்பொட்டில் இரண்டும், இரு பக்க உடலிலும் நான்கும், மார்பில் ஒன்றும், முதுகில் ஒன்றும் என சுழிகளைக் கொண்டிருக்கின்றன. சந்தேகமற, இந்தப் புரவிகளால் விதரப்ப்ப நாட்டிற்குச் செல்ல முடியும். ஓ மன்னா {ரிதுபர்ணரே}, நீர் மற்றவைகளைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், அவற்றைக் குறித்துக் காட்டும், அந்தப் புரவிகளை நான் உமக்காக விரட்டி ஓட்டுகிறேன்” என்றான். பிறகு விடைகொடுத்த ரிதுபர்ணன், “ஓ பாகுகா, நீ குதிரைகளைப் பற்றிய அறிவியலை அறிந்தவன். நீ அவற்றில் (அவற்றை வழிநடத்துவதிலும்) நிபுணனாக இருக்கிறாய். எவை தகுதியுடையவை என்று நீ நினைக்கிறாயோ அவற்றை விரைவாக விரட்டு” என்றான்.

அதன் பிறகு திறன் வாய்ந்த நளன் தேரில், அதிவேகமாகச் செல்லும் நான்கு அற்புதமான உயர்சாதிக் குதிரைகளைப் பூட்டினான். குதிரைகள் பூட்டப்பட்டதும், மன்னன் {ரிதுபர்ணன்} நேரத்தைக் கடத்தாமல் அந்தத் தேரில் ஏறினான். அப்போது அந்தச் சிறந்த குதிரைகள் முழங்கால் மடக்கி பூமியில் விழுந்தன. பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த மனிதர்களில் முதன்மையான மன்னன் நளன், சக்தியும் பலமும் கொண்ட அந்தக் குதிரைகளைத் தேற்றினான். பிறகு கடிவாளத்தை இழுத்து அவற்றை எழுப்பி, தேரோட்டியான வார்ஷ்ணேயனையும் தேரில் அமர்த்தி, மிகுந்த வேகத்தில் செல்ல ஆயத்தமானான். அந்த குதிரைகளில் சிறந்தவை, பாகுகனால் {நளன்} தூண்டப்பட்டு, வாகனத்தில் இருப்பவர்க்ள ஆச்சரியம் அடையும் வகையில் வானத்தில் எழுந்தன.

காற்றின் வேகத்தைக் கொடையாகக் கொண்டு அந்த தேரை இழுத்துச் சென்ற அக்குதிரைகளைக் கண்டு, அருள்நிறைந்த அயோத்தியா மன்னன் {ரிதுபர்ணன்} மிகுந்த ஆச்சரியம் கொண்டான். தேர்ச்சக்கரங்களின் ஒலியையும், குதிரைகளின் நிர்வாகத்தையும் கண்ட வார்ஷ்ணேயன், குதிரைகளை வழிநடத்துவதில் பாகுகனின் {நளனின்} திறமையைக் குறித்துச் சிந்தித்தான். அவன் {வார்ஷ்ணேயன்} தனக்குள், “இவன், தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} தேரோட்டியான மாதலியா? அதே அற்புதமான குறிகளை நான் இந்த வீரன் பாகுகனிடம் காண்கிறேன். அல்லது அழகான மனித உடலை அடைந்தவனும், புரவிகளின் அறிவியலை அறிந்தவனுமான சாலிஹோத்ரனோ {குதிரை சாஸ்திரம் என்கிற அஸ்வசாஸ்திரம் இயற்றிய முனிவரே சாலிஹோத்ரர் என்று அறிகிறோம்}. அல்லது எதிரிகளின் நகரத்தை அழிக்கும் மன்னன் நளர்தான் இங்கு வந்துவிட்டாரா? அல்லது அந்த நளர் அறிந்த அறிவியலை இந்த பாகுகனும் அறிந்திருக்கிறானா? நளருக்கு இணையான அறிவை இந்த பாகுகன் பெற்றிருப்பதை நான் காண்கிறேனே.

மேலும் பாகுகனுக்கும் நளருக்கும் ஒரே வயது தான் இருக்கும். மேலும், இவன் பெரும் பராக்கிரம் கொண்ட நளனாக இல்லாவிட்டாலும், அவருக்கு இணையான அறிவு கொண்டவனே. இருப்பினும், துரதிர்ஷ்ட காலத்தில் சிறப்புமிக்க மனிதர்கள்கூட சாத்திரங்களின் விதிகளுக்கு மாற்றுருவில் உலவுவார்கள். இந்த மனிதனின் பார்க்கச் சகியாத தோற்றத்தில் எனது எண்ணம் மாறத் தேவையில்லை; நளன் கூட தனது தனிப்பட்ட குணங்களை அழித்துக் கொண்டார். வயதைப் பொறுத்தவரை இவன் நளருக்குச் சமமாகவே இருக்கிறான். இருப்பினும் தோற்றத்தில் வித்தியாசம் இருக்கிறது. பாகுகனும் {நளனும்} அனைத்து சாதனைகளுக்கும் சொந்தக்காரனாக இருக்கிறான். அகையால், இவனை நளர் என்றே நினைக்கிறேன்” என்று நினைத்துக் கொண்டான்.

ஓ பலம் வாய்ந்த ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, இப்படி நீண்ட நேரம் தனது மனதில் சிந்தித்த, நீதிமானான நளனின் (முன்னாள்) தேரோட்டியான வார்ஷ்ணேயன், இப்படியே சிந்தனையில் ஆழ்ந்தான். மேலும், மன்னர்களில் முதன்மையான ரிதுபர்ணன், குதிரைச்சவாரி அறிவியலில் பாகுகனின் திறமையைக் கண்டு, தனது தேரோட்டியான வார்ஷ்ணேயனுடன் சேர்ந்து பெரும் மகிழ்ச்சியை அனுபவித்தான். மேலும் பாகுகனின் திறனையும், தீவிரத்தையும், கடிவாளத்தைப் பிடிக்கும் முறையையும் நினைத்த மன்னன் {ரிதுபர்ணன்} பெரும் மகிழ்ச்சியடைந்தான்.

நளனை விட்டு வெளியேறிய கலி! – வனபர்வம் பகுதி 72-வேகமாக நளன் தேரை ஓட்டிச் சென்ற போது, ரிதுபர்ணனின் மேலாடை விழுவது; நளன் ரிதுபர்ணனை அம்மேலாடையை எடுக்க அனுமதியாதது; ரிதுபர்ணன் தனது திறமையைச் சொல்வது; நளன் நம்பாதது; ரிதுபர்ணன் தான்றி மரத்தின் இலைகளையும் கனிகளையும் எண்ணிச் சொல்வது; நளன் அதை நம்பாது எண்ணி உண்மை கண்டறிந்து அதிசயிப்பது; நளன் ரிதுபர்ணனிடம் இருந்து பகடையின் ரகசியத்தை அறிவது; கலி நளனை விட்டு அகலுவது…

பிருகதஸ்வர் தொடர்ந்தார், “வானத்தில் பறந்து செல்லும் பறவையைப் போல நளன் விரைவாக ஆறுகளையும், மலைகளையும், கானகங்களையும், தடாகங்களையும் கடந்து சென்றான். அப்படி அவன் {நளன்} சென்று கொண்டிருக்கும்போது, எதிரிகளின் நகரங்களைக் கைப்பற்றும் பங்காசூரனின் மகனது {ரிதுபர்ணனின்} மேலாடை தரையில் விழுந்தது. அப்படி அவனின் {ரிதுபர்ணனின்} மேலாடை விழுந்ததும், அந்த உயர்ந்த மனம் கொண்ட ஏகாதிபதி நேரத்தைக் கடத்தாமல் உடனேயே நளனிடம், “நான் அதை {விழுந்த மேலாடையை} எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ஓ ஆழ்ந்த புத்திகூர்மை கொண்டவனே {பாகுகனே-நளனே}, மிகுந்த வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இந்தக் குதிரைகளை நிறுத்து. நான் வார்ஷ்ணேயனைக் கொண்டு அந்த ஆடையை எடுத்து வரச் செய்கிறேன்” என்றான்.

அதற்கு நளன் அவனிடம் {ரிதுபர்ணனிடம்}, அந்த ஆடை வெகுதூரத்தில் விழுந்து கிடக்கிறது. நாம் ஒரு யோஜனை தூரம் {எட்டு மைல்கள் அல்லது 13 கிலோமீட்டர்கள்} கடந்து வந்துவிட்டோம். ஆகையால் அதை நம்மால் மீட்டெடுக்க முடியாது” என்றான். ஓ மன்னா {யுதிஷ்டிரா} நளன் இப்படிச் சொன்னதும், அந்த பங்காசூரனின் மகன் {ரிதுபர்ணன்}, அக்கானகத்தில் கனிகள் நிறைந்த தான்றி {Vibhitaka tree = தான்றி மரம்} மரத்தைக் கண்டான். அந்த மரத்தைக் கண்டதும் அம்மன்னன் பாகுகனிடம் விரைவாக, “ஓ தேரோட்டியே, கணக்கீட்டில் {எண்ணிக்கை அறிவில்) எனது உயர்ந்த திறமையைப் பார். எல்லா மனிதர்களும் அனைத்தையும் அறிந்துவிடுவதில்லை. அனைத்து அறிவியலிலும் நிபுணத்துவம் வாய்ந்த எவரும் கிடையாது. ஓ பாகுகா, ஞானம் முழுவதும் {உலகத்தின் மொத்த ஞானத்தையும்} ஒரே மனிதனிடம் காணப்படுவதில்லை.  இந்த மரத்தில் இருக்கும் இலைகளும் கனிகளையும் விட, தரையில் உதிர்ந்து கிடக்கும் அந்த மரத்தின் இலைகளும் கனிகளும் நூற்றி ஒரு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது {இலைகளில் நூறும், கனிகளில் ஒன்றும் அதிகம் என்றும் கதைகளில் கேட்டிருக்கிறேன்}. அந்த மரத்தின் இரு கிளைகளில் ஐம்பது லட்சம் (5 million} இலைகளும், இரண்டாயிரத்து தொண்ணூற்று ஐந்து கனிகளும் இருக்கின்றன. வேண்டுமானால் இந்த இரு கிளைகளையும் மற்ற கிளைகளையும் ஆராய்ந்து பார்” என்றான்.

அதற்கு நளன் தேரை நிறுத்தி அம்மன்னனிடம், “ஓ எதிரிகளை நசுக்குபவரே {ரிதுபர்ணரே}, எனது அறிவுக்கு எட்டாத ஒரு காரியத்தைச் சொல்லி, நீரே உம்மைப் புகழ்ந்து கொள்கிறீர். ஆனால், ஓ ஏகாதிபதி, அந்தத் தான்றி மரத்தை வெட்டி நான் எனது புலன்களால் கிடைக்கும் சாட்சிகளைக் கொண்டு {எண்ணிப் பார்த்து} அதை உறுதி செய்வேன். ஓ மன்னா,  அப்படி உண்மையிலேயே நான் எண்ணிப் பார்த்தால் அது ஊகங்களின்படி இருக்காது {உண்மையாகக் கூட இருக்கலாம்}. ஆகையால், உமது முன்னிலையிலேயே, ஓ ஏகாதிபதி {ரிதுபர்ணரே}, நான் இந்த தான்றியை வெட்டுவேன். அது {நீர் சொன்னது போலச்} சரியாக இருக்குமா இருக்காதா என்று எனக்குத் தெரியாது. ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {ரிதுபர்ணரே}, உமது முன்னிலையிலேயே நான் அதன் கனிகளையும் இலைகளையும் எண்ணுவேன். அதுவரை வார்ஷ்ணேயன் இந்தக் குதிரைகளின் கடிவாளத்தைச் சிறிது நேரம் பிடிக்கட்டும்” என்றான் {பாகுகனாக இருக்கும் நளன்}.

அந்தத் தேரோட்டியிடம் {பாகுகன் என்ற நளனிடம்} அம்மன்னன் {ரிதுபர்ணன்}, “விரையமாக்குவதற்கு நேரம் இல்லை” என்றான். ஆனால் பாகுகன் பணிவுடன், “சிறிது நேரம் காத்திருக்கவும். நீர் அவசரத்தில் இருக்கிறீர் எனில், வார்ஷ்ணேயனை தேரோட்டியாகக் கொண்டு செல்லும். சாலை நேராகவும் சமமாகவுமே இருக்கிறது” என்றான். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, இதற்கு பாகுகனைச் சமாதானப்படுத்த ரிதுபர்ணன், “ஓ பாகுகா, நீயே ஒரே தேரோட்டி, உனக்கு இணையானவன் இந்த உலகத்தில் இல்லை. மேலும், நீ குதிரைகளின் மரபுகளை அறிந்திருக்கிறாய். நான் விதரப்ப்பத்திற்குச் செல்வது உனது உதவியின் மூலம்தான் ஆகும் என்று நினைக்கிறேன். நான் என்னை உனது கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன். நீ எனக்கு எந்தத் தடையையும் ஏற்படுத்துவது உனக்குத் தகாது. மேலும், ஓ பாகுகா, நீ இன்றே என்னை விதரப்ப்பத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு சூரிய உதயத்தைக் காணச் செய்தாயானால், நீ விரும்பும் எதையும் நான் உனக்குக் கொடுப்பேன்” என்றான் {அயோத்தி மன்னன் ரிதுபர்ணன்}.

அதற்கு பாகுகன், “நான் உமது வார்த்தைகளை ஏற்கிறேன். இந்தத் தான்றியை (அந்த மரத்தின் இலைகளையும் கனிகளையும்} எண்ணி முடித்ததும், விதரப்ப்பத்திற்கு முன்னேறுவேன்” என்று பதில் சொன்னான். பிறகு அந்த மன்னன் {ரிதுபர்ணன்}, அவனிடம் {நளனிடம்} தயக்கத்துடன், “எண்ணிப்பார். இந்தக் கிளையின் பகுதியில் இருக்கும் இலைகளையும் கனிகளையும் எண்ணியதும், நீ எனது உறுதியை {எண்ணிக்கையை} ஏற்று திருப்தியடைவாய்” என்றான். அதன்பிறகு பாகுகன் {நளன்} விரைவாகத் தேரில் இருந்து இறங்கி அந்த மரத்தைச் சாய்த்தான். அப்படி எண்ணி முடித்ததும் கனிகளின் எண்ணிக்கை, அம்மன்னன் சொன்னது போலச் சரியாக இருப்பதை அறிந்து ஆச்சரியமடைந்து, “ஓ ஏகாதிபதி, இந்த உமது சக்தி அற்புதமானது. ஓ இளவரசரே, நீர் எதைக் கொண்டு இதை உறுதி செய்தீரோ அந்தக் கலையை அறிய விரும்புகிறேன்” என்று கேட்டான்  {பாகுகன் என்ற நளன்}.

விரைவாகச் செல்ல நினைத்த மன்னன் {ரிதுபர்ணன்} பாகுகனிடம் {நளனிடம்}, “எண்ணிக்கையில் உள்ள நிபுணத்துவத்தைப் போல நான் பகடையிலும் நிபுணன் என்பதை அறிந்து கொள்” என்றான். அதற்கு பாகுகன் {நளன்}, “ஓ மனிதர்களில் காளையே, இந்த அறிவை எனக்குக் கொடும். பதிலுக்கு குதிரைகளின் அறிவை நான் உமக்குக் கொடுக்கிறேன்” என்றான். பாகுகனின் நல்லெண்ணத்தில் இருக்கும் முக்கியத்துவத்தைக் கருதிய மன்னன் ரிதுபர்ணன், {அந்தத் தேரோட்டி கொண்டிருந்த) குதிரைகளின் மரபு ஞானத்தில் இருந்த மயக்கத்தால், “அப்படியே ஆகட்டும்” என்றான். “உன்னால் பரிந்துரைக்கப்பட்ட படி, நீ பகடை அறிவியலை என்னிடம் இருந்து பெற்றுக் கொள். ஓ பாகுகா, நான் பெற வேண்டிய குதிரை அறிவியலைக் குறித்து நீ சொன்னதில் உறுதியோடு இரு” என்று சொன்னான். இப்படிச் சொன்ன ரிதுபர்ணன், நளனுக்கு அந்த அறிவைப் {நளன் விரும்பிய பகடை அறிவியலை} போதித்தான். நளன் பகடை அறிவியலைக் கற்றுக் கொண்டதும், அவனது உடலில் இருந்து {பாம்பு} கார்க்கோடகனின் கடும் விஷத்தைக் கக்கிக் கொண்டு, கலி {கலி யுகம்} வெளியேறினான்.

பிறகு, (தமயந்தியின் சாபத்தால்) பாதிக்கப்பட்ட கலி (நளனின் உடலில் இருந்து) வெளியேறியபோது, அந்தச் சாபத்தின் நெருப்பும் கலியை விட்டது. உண்மையில், நெடுங்காலம் கலியால் பாதிக்கப்பட்ட மன்னன் {நளன்}  கீழான உடலைப் பெற்றிருந்தான். இதனால் நிஷாதர்களின் ஆட்சியாளனான அந்தக் கலா [Kala = கலா (அ) காலன்] {நளன்}, கோபத்தில் கலியைச் சபிக்க எண்ணினான், ஆனால் அதற்குள் பயந்து போன கலி, நடுக்கத்துடனும், கூப்பி கரங்களுடனும், “ஓ மன்னா {நளா},  உனது கோபத்தைக் கட்டுப்படுத்து. உனக்கு நான் சிறப்பைத் {புகழைத்} தருவேன். இந்திரசேனனின் தாய் {தமயந்தி}, நீ அவளைக் கைவிட்டபோதே, என்னைக் கோபத்தில் சபித்துவிட்டாள். அப்போதிருந்து உனக்குள் இருந்து நான் துன்பத்தை அனுபவித்து வருகிறேன். ஓ பெரும் பலம் வாய்ந்த ஏகாதிபதியே, ஓ வீழ்த்தப்பட முடியாதவனே, நான் தினமும் இரவும் பகலும் அந்த பாம்புகளின் இளவரசன் {கார்க்கோடகன்} விஷத்தால் எரிந்து வருகிறேன். நான் உனது பாதுகாப்பைக் கோருகிறேன். பயந்து போய், உனது பாதுகாப்பைக் கோரும் என்னை நீ சபிக்காமல் இருந்தால், உனது கதையைக் {நளனின் கதையைக்} கவனத்துடன் உரைக்கும் மனிதர்கள், என்னைக் குறித்த {கலியின்-கலிகாலத்தின்} பயத்தில் இருந்து நிச்சயம் விடுபடுவார்கள் {மனிதர்களுக்கு} என்னைக் {கலிகாலத்தைக்} குறித்த பயம் உண்டாகாது}” என்றான் {கலி என்ற கலிகாலம்}.

இப்படி கலியால் சொல்லப்பட்ட மன்னன் நளன், தனது கோபத்தை அடக்கிக் கொண்டான். இப்படி பயந்துபோயிருந்த கலி விரைவாக அந்தத் தான்றி மரத்துக்குள் நுழைந்தான். கலி அந்த நைஷாதனுடன் பேசிக் கொண்டிருந்த போது, மற்றவர்களின் பார்வைக்கு தெரியாதவாறு {தன்னை மறைத்து அரூபமாக} இருந்தான். தனது பாதிப்புகளில் இருந்து விடுபட்டு, மரத்தின் கனிகளை எண்ணி முடித்திருந்த அம்மன்னன் {நளன்}, பெரும் மகிழ்ச்சியில் மூழ்கி, உயர்ந்த சக்தியை அடைந்து, அந்தத் தேரில் ஏறி, குதிரைகளை விரைவாகச் செலுத்தி, பெரும் சக்தியுடன் முன்னேறினான். கலியின் தொடுதலால், அந்தத் தான்றி மரம், அந்நேரத்திலிருந்தே {மனிதர்களால்} விலக்கப்பட்ட மரமானது.

மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் நளன் அந்த குதிரைகளில் முதன்மையானவற்றை விரைவுப்படுத்தினான். அவை சிறகுகள் கொண்ட உயிரினங்களைப் போல மீண்டும் காற்றில் ஏறியது. நளன் சென்ற பிறகு, கலியும் தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கலியால் கைவிடப்பட்ட அந்த பூமியின் தலைவனான் மன்னன் நளன், தனது சொந்த உருவத்தை ஏற்கவில்லையென்றாலும் அந்தப் பேரிடரில் இருந்து விடுபட்டான்.

தேரொலியால் ஏற்பட்ட குழப்பம்! – வனபர்வம் பகுதி 73-மாலைப்பொழுதிலேயே நளன் தேரை விதரப்ப்ப நாட்டிற்குக் கொண்டு வருவது; அந்தத் தேரொலியால் அங்கிருந்த விலங்குகள் கூட நளன் வந்துவிட்டானா என்று குழம்புவது; தமயந்தியும் நளன் வந்துவிட்டான் என்று நம்புவது; பின்பு நளன் இல்லாததைக் கண்டு வருந்தி ஒரு பெண் தூதுவரை நளனைத் தேடி அனுப்புவது

பிருகதஸ்வர் தொடர்ந்தார், “கலங்கடிக்க முடியாத வீரம் கொண்ட ரிதுபர்ணன் மாலைப்பொழுதில் விதரப்ப்ப நகரத்திற்கு வந்து சேர்ந்ததும், அந்நகரத்து மக்கள் மன்னன் பீமனிடம் {ரிதுபர்ணன் வந்த இச்செய்தியை} அறிவித்தார்கள். பீமனின் அழைப்பின் பேரில் அந்த {அயோத்தி நகர} மன்னன், தனது தேரொலியால் அடிவானத்தையும், {அண்டத்தின்} பத்து புள்ளிகள் அனைத்தையும் நிறைத்து, குண்டினம் {விதரப்ப்பத்தின் தலைநகரம்} என்ற அந்த நகரத்திற்குள் நுழைந்தான். அந்த நகரத்தில் {குண்டினத்தில்} இருந்த நளனின் குதிரைகள், அந்தச் சத்தத்தைக் கேட்டு, நளன் இங்கிருந்த போது எப்படி மகிழ்ந்தனவோ அப்படி மகிழ்ந்தன.

கர்ஜனையுடன் வரும் மழைக்கால மேகம் போல, நளன் விரட்டி வந்த அந்தத் தேரின் ஒலியை தமயந்தியும் கேட்டாள். பீமனும், (நளனின்) குதிரைகளும், முன்பொரு காலத்தில் நளன் இங்கிருந்த போது கேட்டது போலவே அந்தத் தேரொலியைக் கேட்டனர். மாடியில் இருந்த மயில்களும், கொட்டில்களில் இருந்த யானைகளும், குதிரைகளும், ரிதுபர்ணனின் தேரொலியைக் கேட்டன. ஓ மன்னா {யுதிஷ்டிரா} மேகங்களின் கர்ஜனையைப் போலக் கேட்ட அந்த ஒலியால் யானைகளும், மயில்களும், {தேர் வந்த} அந்த திக்கை நோக்கி, உண்மையான மேக கர்ஜனையைத் தாங்கள் கேட்டது போல மகிழ்ச்சியுடன் கதறின.

தமயந்தி, “முழு உலகத்தையும் நிறைத்து வரும் இந்தத் தேரொலியால் எனது இதயம் மகிழ்வதால், வருவது மன்னன் நளராகத் தான் இருக்கும். எண்ணிலடங்கா அறங்களைக் கொண்ட வீரரும் சந்திரனைப் போன்ற பிரகாசத்துடன் இருக்கும் முகத்தைக் கொண்டவருமான நளரை நான் காணவில்லை என்றால், நான் நிச்சயம் இறப்பேன். நான் இன்று அந்த வீரரின் ஆர்வமானத் தழுவலுக்கு ஆட்படவில்லை என்றால், நான் நிச்சயம் இருக்க மாட்டேன். மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலைக் கொண்ட அந்த நைஷாதர் {நளர்} இன்று என்னிடம் வரவில்லையென்றால், நான் நிச்சயம் தங்கமாகப் பிரகாசிக்கும் நெருப்புக்குள் புகுவேன். மன்னர்களில் முதன்மையானவரும், சிம்மம் போன்ற பலம் நிறைந்தவரும், மதம் கொண்ட யானையின் பலம் கொண்டவருமான அவர் தன்னை என் முன் வெளிப்படுத்த வில்லையென்றால், நான் நிச்சயம் வாழ மாட்டேன். அவரிடம் ஒரு பொய்மையையும் நான் கண்டதில்லை. அவர் யாருக்கும் ஒரு தீங்கு செய்வதையும் நான் கண்டதில்லை. அவர் கேலிக்காகக் கூட பொய்மை பேசியதில்லை. ஓ, எனது நளர் மேன்மையானவர், மன்னிக்கும் தன்மை கொண்டவர், வீரர், அனைத்து மன்னர்களிலும் மேன்மையானவர். அவர் {நளர்} ஏற்றுக்கொண்டிருக்கும் {ஏகபத்தினி} விரதத்தால், மற்ற பெண்களின் மத்தியில் பேடியாக அறியப்படுகிறார். இரவும் பகலும் அவரையே சிந்திக்கும் எனது இதயம், அந்த அன்பானவர் இல்லாததால், துயரத்தில் வெடிக்கப் போகிறது” என்று சொன்னாள்.

ஓ பாரதா {யுதிஷ்டிரா}, இப்படி உணர்வை இழந்து துக்கப்பட்ட தமயந்தி, நீதிமானான நளனைக் காண (தனது மாளிகையின்) மாடிக்கு ஏறினாள். மாளிகையின் மத்தியில் இருந்த முற்றத்தில், அவள் {தமயந்தி} அந்தத் தேரில் மன்னன் ரிதுபர்ணனையும், வார்ஷ்ணேயனையும், பாகுகனையும் கண்டாள். வார்ஷ்ணேயனும், பாகுகனும் {நளனும்}, அந்த அற்புதமான வாகனத்தில் இருந்து இறங்கி, குதிரைகளை நுகத்தடியில் இருந்து கழற்றி, அந்த வாகனத்தை {தேரை} சரியான இடத்தில் நிறுத்தினர். மன்னன் ரிதுபர்ணனும் தேரில் இருந்து இறங்கி, கடும் பராக்கிரமம் கொண்ட மன்னன் பீமன் முன்னிலையில் நின்றான். பெருமை நிறைந்தவர்கள் அகாலத்தில் (விருந்தினராக) வருவது கிடையாது என்பதால், பீமன் அவனை பெரும் மதிப்புடன் வரவேற்றான். பீமனால் இப்படி மதிக்கப்பட்ட ரிதுபர்ணன் திரும்பத் திரும்பப் பார்த்தான். ஆனால் சுயம்வரத்திற்கான எந்தத் தடயத்தையும் அவன் காணவில்லை.

ஓ பாரதா {யுதிஷ்டிரா}, விதரப்ப்பத்தின் ஆட்சியாளன் {பீமன்}, ரிதுபர்ணனை அணுகி, “நல்வரவு! உமது இந்த வருகைக்கான நிகழ்ச்சி {விசேஷம்} என்ன?” என்று கேட்டான். தனது மகளின் கரத்தைப் பெறுவதற்காகவே மன்னன் ரிதுபர்ணன் வந்திருக்கிறான் என்று அறியாத மன்னன் பீமன் இப்படிக் கேட்டான். கலங்கடிக்க முடியாத பராக்கிரமமும், புத்திசாலித்தனத்தைக் கொடையாகவும் கொண்ட மன்னன் ரிதுபர்ணன், அங்கே பிற மன்னர்களோ, இளவரசர்களோ இல்லாததைக் கண்டான். சுயம்வரத்தைக் குறித்து யாரும் பேசிக் கொள்வதைக் கூட அவன் கேட்கவில்லை. அந்தணர்க் கூட்டத்தையும் அவன் காணவில்லை. இதனால் கோசலத்தின் அந்த மன்னன் {ரிதுபர்ணன்} நீண்ட நேரம் சிந்தித்து, “நாம் உமக்கு மரியாதை செலுத்தவே வந்தேன்” என்றான்.

இதனால் ஆச்சரியமடைந்த மன்னன் பீமன்நூறு யோஜனைக்கு மேல் கடந்து வந்திருக்கும் ரிதுபர்ணனின் வருகையைக் குறித்து சிறிது நேரம் சிந்தித்தான். அவன் தனக்குள், “மற்ற அரசாங்கங்களையும், எண்ணிலடங்கா நாடுகளையும் கடந்து, எனக்கு மரியாதை செலுத்த வந்ததாகச் சொல்வது சரியல்ல. இவர் வந்திருப்பதற்கான காரணம் புதிராகவே இருக்கிறது. இருப்பினும், உண்மையான காரணத்தைப் பின்பு நான் அறிவேன்” என்று நினைத்தான். மன்னன் பீமன் இப்படி நினைத்தாலும், அவன் ரிதுபர்ணனை ஒட்டுமொத்தமாக விட்டுவிடவில்லை. அவன் ரிதுபர்ணனிடம், “நீர் களைத்திருக்கிறீர். ஓய்வெடும்” என்றுத் திரும்பத் திரும்பச் சொன்னான். இப்படி திருப்தி கொண்ட பீமனால் மரியாதை செலுத்தப்பட்ட மன்னன் ரிதுபர்ணனும் திருப்தியடைந்து, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனுக்கென ஒதுக்கிய மாளிகையில் பீமனின் பணியாட்களுடனும்,  மன்னனின் உறவினர்களுடனும் சென்றான்.

பிருகதஸ்வர் தொடர்ந்தார், “ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி ரிதுபர்ணன் சென்றதும், வார்ஷ்ணேயனும், பாகுகனும் {நளனும்} தேரைக் கொட்டிலுக்குக் கொண்டு சென்றனர். அங்கே குதிரைகளை விடுவித்து, முறைப்படி அவற்றைக் கவனித்து, அவற்றுக்கு ஆறுதல் அளித்து, தேருக்குப் பக்கத்தில் அமர்ந்தனர். அதே நேரத்தில் பெரும் துயரத்தில் இருந்த விதரப்ப்ப இளவரசி தமயந்தி, பங்காசூரனின் மகனையும் {ரிதுபர்ணனையும்}, சூத குலத்தைச் சார்ந்த வார்ஷ்ணேயனையும், மாற்றுருவத்தில் இருந்த பாகுகனையும் கண்டு, “இந்தத் தேரொலி யாருடையது? நளருடைய தேரைப் போன்றே சத்தம் பலமாக இருந்ததே. ஆனால் அந்த நிஷாதர்களின் ஆட்சியாளரை {நளரை} நான் காணவில்லையே. நிச்சயமாக வார்ஷ்ணேயன் நளரிடம் இருந்த அந்தக் கலையைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் அந்தத் தேரின் ஒலி நளரின் தேரொலி போலக் கேட்டிருக்கிறது. அல்லது ரிதுபர்ணன் நளரைப் போன்ற நிபுணராகி, நளரைப் போன்ற தேரொலியை எழுப்பினானா?” என்று தனக்குள் நினைத்துக் கொண்ட அந்த அருளப்பட்ட அழகான மங்கை, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த நிஷாதனைத் {நளனைத்} தேடி ஒரு பெண் தூதரை அனுப்பினாள்

நளனைச் சந்தித்த கேசினி! – வனபர்வம் பகுதி 74-தமயந்தி கேசியினை பாகுகனிடம் தூதாக அனுப்புதல்; கேசினி பாகுகனிடம் வந்து விசாரித்தல்; நளனின் துயரம்

தமயந்தி சொன்னாள், “ஓ கேசினி, பார்வைக்குச் சகிக்காதபடி, நீளம் குறைந்த கைகளுடன் தேரின் அருகே அமர்ந்திருக்கும் அந்தத் தேரோட்டியிடம் சென்று அவர் யார் என்பதை அறிந்து வா. ஓ அருளப்பட்டவளே, ஓ குறைகளற்றவளே, அவரை அணுகி, தகுந்த வார்த்தைகளுடனும், எச்சரிக்கையுடன், வழக்கமாக விசாரிப்பது போல விசாரித்து, அவர் குறித்த அனைத்து உண்மையான விவரங்களையும் கேள். எனது மனம் கொள்ளும் திருப்தியான உணர்வையும், எனது இதயம் உணரும் மகிழ்ச்சியையும் கருதி, இவரே மன்னன் நளர் என்று நினைத்து நான் அஞ்சுகிறேன். மேலும், ஓ குறையற்றவளே, அவரது நலத்தை விசாரித்த பிறகு, பர்ணாதன் சொன்ன வார்த்தகளை அவரிடம் சொல். ஓ அழகானவளே, அவர் சொல்லும் மறுமொழியைப் புரிந்து கொண்டு, என்னிடம் வந்து சொல்” என்றாள் {தமயந்தி}.

இப்படி உத்தரவிடப்பட்ட அந்தப் பெண் தூதுவர், எச்சரிக்கையுடனேயே சென்றாள். அப்படிச் சென்ற கேசினி பாகுகனிடம் {நளனிடம்} பேசுவதை, தமயந்தி மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். கேசினி, “ஓ மனிதர்களில் முதன்மையானவரே, உமது வரவு நல்வரவாகுக. நான் உமது மகிழ்ச்சியை விரும்புகிறேன். ஓ மனிதர்களில் காளையே, தமயந்தின் வார்த்தைகளை இப்போது கேளும். நீ எப்போது கிளம்பினீர்கள்? என்ன காரியத்துக்காக இங்கே வந்தீர்கள்? எங்களுக்கு உண்மையைச் சொல்லும். விதரப்ப்பத்தின் இளவரசி {தமயந்தி} இவற்றைக் கேட்க விரும்புகிறார்” என்றாள். அதற்கு பாகுகன், “கோசலத்தின் சிறப்பு மிகுந்த மன்னன் {ரிதுபர்ணன்}, தமயந்தியின் இரண்டாவது சுயம்வரம் நடைபெறப் போவதாக ஒரு அந்தணன் மூலம் அறிந்தார். அதைக் கேள்விப்பட்டே, காற்றின் வேகம் கொண்டு, நூறு யோஜனை தூரம் செல்லக்கூடிய அற்புதமான புரவிகளின் உதவியுடன் அவர் இங்கு வந்திருக்கிறார். நான் அவரது தேரோட்டி” என்று பதில் சொன்னான்.

பிறகு கேசினி, “உங்களில் மூன்றாமவர் எங்கிருந்து வருகிறார்? அவர் யாருடையவர் (யாருடைய மகன்}? நீர் யாருடைய மகன்? இந்த வேலையைச் செய்ய எப்படி நீர் வந்தீர்?” என்று கேட்டாள். இப்படிக் கேட்கப்பட்டு பாகுகன், “(நீ விசாரிக்கும்) அவன் {வார்ஷ்ணேயன்}, அறம்சார்ந்த நளனின் தேரோட்டியாக இருந்து, வார்ஷ்ணேயன் என்ற பெயரால் அனைவராலும் அறியப்பட்டவன் ஆவான். ஓ அழகானவளே, நளன் நாட்டைவிட்டு சென்றதும், அவன் பங்காசூரனின் மகனிடம் {ரிதுபர்ணரிடம்} வந்தான். நான் குதிரைகளைப் பற்றி நன்கு அறிந்த நிபுணன் ஆகையால், தேரோட்டியாக அமர்த்தப்பட்டேன். உண்மையில், மன்னன் ரிதுபர்ணரே என்னை அவரது தேரோட்டியாகவும், சமையற்காரனாகவும் தேர்ந்தெடுத்தார்” என்று மறுமொழி கூறினான் {பாகுகனாக இருக்கும் நளன்}.

கேசினி மீண்டும், “வார்ஷ்ணேயன், தனது மன்னன் நளன் எங்கு சென்றிருக்கிறார் என்பதை அறிவானோ. ஓ பாகுகரே, அவன் (தனது தலைவரைக்) இது குறித்து உம்மிடம் பேசியிருக்கலாமே” என்றாள். அதற்கு பாகுகன், “அற்புதமான செயல்கள் செய்து நளனுடைய பிள்ளைகளை இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு, வார்ஷ்ணேயன் தற்போது இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டான். அவனுக்கு {வார்ஷ்ணேயனுக்கு} அந்த நைஷாதன் {நளன்} எங்கிருக்கிறான் என்பது தெரியாது. ஓ சிறப்பானவளே, நளன் தனது அழகை (உண்மையான உருவை) இழந்து, மாற்றுருவத்தில் உலகம் முழுவதும் திரிந்து வருவதால் அவன் எங்கிருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. நளனை நளன் மட்டுமே அறிவான். நளனுக்கு உரிய அடையாளங்கள் எங்கும் அவனைக் காட்டாது {அவனது அடையாளங்களை வைத்து, அவனை எங்கும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது}.” என்றான் {நளன்}.

இப்படிச் சொல்லப்பட்ட கேசினி மறுபடியும், “அவன் முன்பு இங்கிருந்து அயோத்தியாவுக்குச் சென்ற ஒரு அந்தணன், பெண்ணின் உதடுகளுக்குரிய வார்த்தைகளை “ஓ அன்புக்குரிய சூதாடியே, அர்ப்பணிப்பும் அன்பும் கொண்ட உமது மனைவியான நான் கானகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது  எனது பாதி ஆடையை வெட்டி எடுத்துக் கொண்டு என்னைக் கைவிட்டு எங்கே சென்றீர்? அந்தப் பெண், உம்மால் உத்தரவிடப்பட்டபடியே உம்மை எதிர்பார்த்து, பாதி ஆடையுடனும், இரவும் பகலும் எரியும் துயரத்துடனும் உமக்காகக் காத்திருக்கிறாள்! ஓ மன்னா {நளரே}, ஓ வீரரே, எப்போதும் துயரத்துடன் அழுது கொண்டே இருக்கும் அவளிடம் கருணை கொண்டு பதிலளியும். ஓ சிறப்பானவரே, அந்தப் பழியில்லாதவள் கேட்பதற்காக குழம்பி அலையும் ஏற்புடைய வார்த்தைகளை அவளுக்குச் சொல்லும்” என்ற அவளது வார்த்தைகளைச் சொல்லியிருந்தான். அந்த அந்தணனின் இவ்வார்த்தைகளை முன்பே கேட்ட நீர் அதற்கு மறுமொழி கூறினீர்! விதரப்ப்பத்தின் இளவரசி {தமயந்தி}, நீர் அப்போது சொன்ன அவ்வார்த்தைகளை மறுபடியும் கேட்க விரும்புகிறார்” என்று கேட்டாள்.

பிருகதஸ்வர் தொடர்ந்தார், “ஓ குருகுலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, கேசினியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட நளனின் இதயம் வலித்தது. அவனது கண்கள் கண்ணீரால் நிரம்பின. தனது துயரத்தை அடக்கிக் கொண்ட அம்மன்னன் {நளன்}, எரியும் துயரத்துடன் மறுபடியும் அவ்வார்த்தைகளை, கண்ணீரால் தடைபட்ட குரலுடன், “என்னதான் துயரத்தில் விழுந்தாலும், கற்புடைய மங்கையர் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு நிச்சயம் சொர்க்கத்தை அடைவார்கள். கற்புடைய பெண்கள், அறம்சார்ந்த நடத்தை என்ற கவசத்துடன் தங்களது வாழ்வை நடத்துவதால், அவர்கள் தங்கள் தலைவர்களால் கைவிடபட்டாலும், அதன் காரணமாக அவர்கள் {அவன் மீது} கோபங்கொள்ள மாட்டார்கள்.  அனைத்து அருளையும் இழந்து, துயரத்தில் மூழ்கிய பிறகே அவன் {நளன்} அவளை {தமயந்தியைக்} கைவிட்டதால், அவள் கோபம் கொள்ளக்கூடாது. வாழ்வாதரத்தைப் பெற முயன்றபோது, பறவைகளால் ஆடை களவாடப்பட்டு துயரத்தில் மூழ்கியவன் மீது அழகு நிறைந்த அறம்சார்ந்த பெண் கோபமடையக்கூடாது. தான் {கணவனால்} நன்றாக நடத்தப்பட்டாலும், இல்லையென்றாலும், நாடிழந்து, செழிப்பெல்லாம் இழந்து, பசியால் ஒடுக்கப்பட்டு, பேரிடரில் மூழ்கிய தனது கணவனை அந்த இழிந்த நிலையில் கண்டும், அப்படிப்பட்ட {அறம்சார்ந்த} ஒரு மனைவி, ஒருபோதும் தன்னைக் {அவனுக்கெதிரான} கோபத்தில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது” என்றான்.

ஓ பாரதா {யுதிஷ்டிரா}, துயரத்தால் ஒடுக்கப்பட்ட, நளன் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது, அவன் தனது கண்ணீரை அடக்க முடியாமல் அழத்தொடங்கினான். அதன்பிறகு கேசினி, இந்த உரையாடல் மூலம் அனைத்தையும் அறிந்து, அவனின் {பாகுகனின் – நளனின்} வருத்தத்தையும் ஆவேசத்தையும் அறிந்து தமயந்தியிடம் திரும்பினாள்.

தனது பிள்ளைகளைக் கண்ட நளன்! – வனபர்வம் பகுதி 75-தமயந்தி மீண்டும் கேசியினை அனுப்பி பாகுகனின் நடத்தையைக் கண்காணிக்கச் செய்தல்; பாகுகனின் இயல்புக்கு மிக்க செயல்களைக் கண்டு ஆச்சரியமடைந்த கேசினி விரைவாக வந்து அச்செய்தியை தமயந்தியிடம் சொல்லல்; தமயந்தி மீண்டு கேசினியை அனுப்பி சூடான இறைச்சியைக் கொண்டு வரச் செய்தல்; பாகுகனே நளன் என்று உறுதி செய்துகொண்டு, தனது பிள்ளைகளைக் கேசினியுடன் அனுப்பி வைத்தல்; பிள்ளைகளைக் கண்ட பாகுகன் பெருந்தொனியுடன் அழுதல்…

பிருகதஸ்வர் சொன்னார், “அனைத்தையும் கேட்ட தமயந்தி துயரத்தில் ஆழ்ந்து, அந்த மனிதரே நளன் என்று சந்தேகித்து, கேசினியிடம், “ஓ கேசினி, நீ மறுபடியும் சென்று பாகுகரின் நடத்தையை அமைதியாகக் குறித்துக் கொள். ஓ அழகானவளே, அவர் ஏதாவது நிபுணத்துவத்துடன் செய்தால், அவர் அதைச் செய்யும்போது நன்றாகக் கூர்ந்து கவனித்துக் கொள். மேலும், ஓ கேசினி, அவர் உன்னிடம் நீரோ நெருப்போ கேட்கலாம். அப்போது நீ அவரது காரியத்தைத் தடை செய்வதற்காக, அதைக் கொடுப்பதற்கு எந்த அவசரத்தையும் காட்டாதே. அவரது நடத்தைகளை நன்றாகக் குறித்துக் கொண்டு இங்கே வந்து என்னிடம் சொல். பாகுகரிடம் மனிதச் செயலையோ, மனிதர்களுக்கு மீறிய {தெய்வ} செயலையோ கண்டால் மற்ற அனைத்துடன் சேர்த்து எனக்கு வந்து தெரிவி” என்றாள்.

இப்படி தமயந்தியால் சொல்லப்பட்ட கேசினி, குதிரைகளின் மரபுகளை அறிந்த அந்த மனிதனின் நடத்தைகளைக் குறித்துக் கொண்டு திரும்பி வந்தாள். பிறகு, உண்மையில் அங்கு பாகுகனிடம் தான் கண்ட மனித செயலையும், மனிதர்களுக்கு அப்பாற்பட்ட {தேவ} செயல்கள்  அத்தனையும் சொன்னாள். கேசினி, “ஓ தமயந்தி, அனைத்துக்கூறுகளிலும் இத்தகு கட்டுப்பாடும் ஆற்றலும் கொண்ட மனிதரை நான் இதுவரை கண்டதோ கேட்டதோ கிடையாது. தாழ்வான பாதைகளில் அவர் வரும்போது ஒரு போதும் குனிவதில்லை. ஆனால் அவர் வருவதைக் கண்டு அந்தப் பாதையே வளர்ந்து, அவரது உருவம் எளிதாகச் செல்லும் அளவிற்கு இடம் கொடுக்கிறது. அவர் அணுகும்போது நுழையமுடியாத குறுகிய துளைகளும் இவருக்காக வழிவிட்டு அகன்றுவிடுகின்றன.

மன்னர் பீமர் ரிதுபர்ணனின் உணவுக்காக பல வகையான விலங்குகளின் இறைச்சியை அனுப்பி வைத்தார். அங்கே இறைச்சியைச் சுத்தப்படுத்துவதற்காக பல பாத்திரங்கள் இருந்தன. அவர் {பாகுகன் -நளர்} அவற்றைப் பார்த்த உடனேயே அவை (நீரால்) நிரம்பின. பிறகு இறைச்சியைக் கழுவிய பிறகு, உணவைச் சமைக்க ஆரம்பித்தார். அவர் கை நிறைய புல்லை எடுத்துக் கொண்டு சூரியனுக்கு நேராகக் காட்டினார். அது தானாகவே திடிரென்று பற்றிக் கொண்டது. அந்த அற்புதத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு நான் இங்கு வந்துவிட்டேன். மேலும், அவரிடம் நான் மேலும் ஒரு அற்புதத்தைக் கண்டேன். ஓ அழகானவளே, அவர் நெருப்பைத் தொடுகிறார். ஆனால், அது அவரைச் சுடவில்லை. அவர் சில மலர்களை எடுத்து மெதுவாக அவற்றை அழுத்தினார். அவரது கையால் அழுத்தப்பட்ட அம்மலர்கள் தங்கள் சுய உருவை இழக்கவில்லை. மாறாக அவை சாம்ப நிறம் {அதிக நிறம்} கூடி, மேலும் நறுமணமாயிற்று. இந்த அற்புதமான நிகழ்ச்சிகளைக் கண்டு நான் இங்கே விரைவாக வந்துவிட்டேன்” என்றாள்.

பிருகதஸ்வர் தொடர்ந்தார், “அறம்சார்ந்த நளனின் இச்செயல்களைக் கேட்டு, அவனது நடத்தைகளைக் கொண்டு அவனைக் கண்டுபிடித்த தமயந்தி அவனை மீட்டு விட்டதாகவே கருதினாள். இந்த அனைத்துக் குறிப்புகளாலும் பாகுகன்தான் தனது கணவன் என்று சந்தேகித்த தமயந்தி, மீண்டும் அழுதுகொண்டே கேசினியிடம் மென்மையான வார்த்தைகளால், “ஓ ஆழகானவளே, மீண்டும் ஒரு முறை சென்று, அடுக்களையில் {சமையல் செய்யும் இடம்} (அவரால்) சமைத்து சுத்தம் செய்து வைக்கப்பட்டிருக்கும் இறைச்சியை பாகுகன் அறியாமல் எடுத்துக் கொண்டு வா” என்றாள் {தமயந்தி}.

தமயந்திக்கு ஏற்புடையதை எப்போதும் செய்ய விழையும் கேசினி, இப்படிக் கட்டளையிடப்பட்டதும் பாகுகனிடம் சென்று, சூடான இறைச்சியை எடுத்துக் கொண்டு நேரம் கடத்தாமல் விரைவாக வந்தாள். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, அந்த இறைச்சியை கேசினி தமயந்தியிடம் கொடுத்தாள். நளனால் சுத்தம் செய்யப்பட்ட இறைச்சியை ஏற்கனவே உண்டிருக்கும் தமயந்தி, தனது பணிப்பெண்ணால் கொண்டுவரப்பட்ட இறைச்சியை சுவைத்துப் பார்த்தாள். அதன் பிறகு பாகுகன்தான் நளன் என்ற தீர்மானத்திற்கு வந்து, இதயத்தின் துயரத்தால் உரக்க அழுதாள். ஓ பாரதா {யுதிஷ்டிரா} துக்கத்தில் மூழ்கி, தனது முகத்தைக் கழுவிக் கொண்டு, தனது இரு பிள்ளைகளையும் கேசினியுடன் அனுப்பி வைத்தாள். பாகுகன் என்ற மாற்று உருவத்தில் இருந்த மன்னன் {நளன்}, இந்திரசேனையையும் அவளது சகோதரனையும் {இந்திரசேனனையும்} அடையாளம் கண்டு, விரைவாக முன்னேறி, அவர்களை வாரி அணைத்து, தனது மடியில் அமர்த்திக் கொண்டான்.

தேவர்கள் போன்று இருந்த தனது பிள்ளைகளை எடுத்துக் கொண்டு, பெரும் துக்கத்தால் இதயம் ஒடுக்கப்பட்டு, பெருந்தொனியில் உரத்த வார்த்தைகள் சொல்லி அழ ஆரம்பித்தான். தனது உள்ளப்போராட்டத்தைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்திய பின், திடீரென பிள்ளைகளை விட்டு விட்டு, கேசினியிடம், “ஓ அழகான மங்கையே, இந்த இரட்டையர்கள் எனது சொந்தப் பிள்ளைகளைப் போன்றே இருக்கின்றனர். எதிர்பாராமல் இவர்களைச் சந்தித்ததால் நான் கண்ணீர் விட நேர்ந்தது. நாங்கள் வேறு நிலத்தில் {நாட்டில்} இருந்து வந்திருக்கும் விருந்தாளிகள், நீ அடிக்கடி என்னிடம் வந்தால், மக்கள் தவறாக நினைப்பார்கள். ஆகையால், ஓ அருளப்பட்டவளே, சுகமாக செல்” என்றான் {நளன்}.

நளனும் தமயந்தியும் சேர்ந்தனர்! – வனபர்வம் பகுதி 76-கேசினி பாகுகனின் உள்ளப் போராட்டத்தை தமயந்தியிடம் சொன்னது; வந்திருப்பது நளனே என்று ஒருவாறு அறிந்து கொண்ட தமயந்தி, தனது தாயிடம் நளனைச் சந்திக்க அனுமதி கோருவது; தமயந்தி பாகுகனிடம் கேள்விக் கேட்பது; நளன் தனது நிலையைச் சொல்லி, அறம்சார்ந்த பெண் இரண்டாவது திருமணம் செய்யலாமா என்று கேட்பது; தன்னைச் சந்தேகிப்பது தகாது என்று நளனுக்கு தமயந்தி உணர்த்துவது; வாயுத்தேவன் சாட்சி சொல்வது; தம்பதிகள் இணைவது…

பிருகதஸ்வர் சொன்னார், “அறம்சார்ந்த ஞானம் கொண்ட நளனின் உள்ளப்போராட்டத்தை அறிந்த கேசினி, தமயந்தியிடம் சென்று அனைத்தையும் கூறினாள். இதனால் இதயத் துயரம் கொண்ட தமயந்தி நளனைக் காணும் ஆவல் கொண்டு, கேசினியைத் தனது தாயிடம் தன் சார்பாக, “பாகுகரே – நளர் என்று நான் சந்தேகிக்கிறேன். நான் பல வழிகளில் அவரைச் சோதித்துப் பார்த்துவிட்டேன். அவரது தோற்றம் குறித்து மட்டுமே எனக்குச் சந்தேகம் இருக்கிறது. நானே அவரைச் சோதித்துப் பார்க்க நினைக்கிறேன். ஓ தாயே, ஒன்று அவர் அரண்மனைக்குள் நுழைய அனுமதி கொடு, அல்லது நான் அவரிடம் செல்ல எனக்கு அனுமதி கொடு. இவற்றை எனது தந்தையின் {மன்னன் பீமனின்} கவனத்திற்கு கொண்டு சென்றோ அல்லது கொண்டு செல்லாமலோ செய்” என்று பேசு” என்று {கேசினியிடம்} சொன்னாள் {தமயந்தி}.

இப்படி தமயந்தியால் சொல்லப்பட்ட அந்த மங்கை {தமயந்தியின் தாய்}, தனது மகளின் நோக்கத்தை பீமனிடம் தெரிவித்தாள். அம்மன்னனும் அவற்றை அறிந்து தனது சம்மதத்தைத் தெரிவித்தார். ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் சம்மதத்தையும் பெற்ற தமயந்தி, நளனை தனது அறைக்கு கொண்டுவரச் செய்தாள். எதிர்பாராத வகையில் தமயந்தியைச் சந்தித்த மன்னன் நளன் துன்பத்திலும் துயரத்திலும் மூழ்கி கண்ணீரில் குளித்தான். பெண்களில் சிறந்த அந்த தமயந்தியும் மன்னன் நளனை அந்த நிலையில் கண்டு, துன்பத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டாள்.

ஓ ஏகாதிபதி, சிவப்பு நிற ஒற்றையாடை அணிந்து, சடை விழுந்த கூந்தலுடனும், அழுக்கடைந்த மேனியுடனும் இருந்த தமயந்தி பாகுகனிடம், “ஓ பாகுகரே, கடமையை நன்கு அறிந்த ஒரு மனிதர், கானகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் தனது மனைவியை கைவிட்டுச் செல்வதை நீர் எங்காவது கண்டிருக்கிறீரா? களைப்பால் பாதிக்கப்பட்ட, எக்குற்றமும் இழைக்காத தனது அன்புக்குரிய மனைவியைக் கைவிடும் செயலை அறம் சார்ந்த நளரைத் தவிர வேறு யாரால் செய்ய முடியும்? அந்த ஏகாதிபதியின் {நளரின்} கண்களில் குற்றவாளியாகத் தெரிய, என் இளம் வயதில் இருந்து நான் என்ன குற்றம் செய்தேன்? எதற்காகத் கானகத்தில் தூங்கிக் கொண்டிருந்த என்னைக் கைவிட்டு அவர் சென்றார்? முன்பு தேவர்களையும் புறக்கணித்து அவரை {நளரைத்} தேர்ந்தெடுத்து, அவரது பிள்ளைகளுக்கும் தாயாகி அவருக்கே என்னை அர்ப்பணித்து, அவருக்கு அன்பான மனைவியாக இருந்த என்னை ஏன் அவர் கைவிட்டார்? நெருப்புக்கு எதிராகவும், தேவர்களுக்கு முன்னிலையிலும் எனது கைகளைப் பற்றி, “நிச்சயமாக நான் உனதே” என்று உறுதி ஏற்றார். ஓ, என்னைக் கைவிட்ட போது அவரது அந்தச் சபதம் என்ன ஆயிற்று” என்று கேட்டாள்.

தமயந்தி இவற்றையெல்லாம் சொன்னபோது, துயரத்தால் அவளது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. துயரால் பாதிக்கப்பட்டு, அவளது சிவந்த கண்களின் கருவிழிகளில் இருந்து பெருகி வரும் நீரைக் கண்டு, நளனும் கண்ணீர் சிந்தி, “ஓ மருட்சி கொண்டவளே, நாட்டை இழந்ததோ, உன்னைக் கைவிட்டதோ எனது செயல் இல்லை. அவை இரண்டும் கலியால் ஏற்பட்டவை. ஓ அறம்சார்ந்த பெண்களில் முதன்மையானவளே, கானகத்தில் பகலும் இரவும் எனக்காக அழுது, சோகத்தில் மூழ்கி, கலியைச் சபித்தாய். அதன் காரணமாக அவன் எனது உடலிலேயே தங்கி, உனது சாபத்தின் தொடர்ச்சியாக எரிந்து கொண்டிருந்தான். உண்மையில் உனது சாபத்தில் எரிந்த அவன், நெருப்புக்குள் இருக்கும் நெருப்பென என்னுள் வாழ்ந்தான்.

ஓ அருளப்பட்ட பெண்ணே, நான் செய்த சடங்குகளாலும், தவங்களாலும் அந்த இழிந்தவனை வென்றேன். ஆகையால், நமது துயரங்கள் முறிந்து போகும். அந்த இழிந்த பாவி {கலி} என்னைவிட்டு சென்றுவிட்டான். அதனாலேயே நான் இங்கு வந்திருக்கிறேன். ஓ அழகான மங்கையே, நான் உனக்காகவே இங்கு வந்திருக்கிறேன். எனக்கு வேறு எதுவும் நோக்கம் கிடையாது. ஆனால் ஓ மருட்சியுடையவளே, அர்ப்பணிப்புடன் அன்பாக இருக்கும் கணவனைக் கைவிட்டு எந்தப் பெண்ணாவது உன்னைப் போல இரண்டாவது தலைவனைத் தேர்ந்தெடுப்பாளா? மன்னரின் {பீமரின்} உத்தரவின் பேரில், தூதுவர்கள், “பீமரின் மகள் {தமயந்தி}, தனது விருப்பத்துடன், சுயமாக, தகுதியான இரண்டாவது கணவரைத் தேர்ந்தெடுக்கப் போகிறாள்” என்று சொல்லி இந்த முழு உலகத்தையும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்டவுடன், பங்காசூரனின் மகன் {ரிதுபர்ணன்} இங்கு வந்திருக்கிறார்” என்றான்.

நளனின் இந்தப் புலம்பலைக் கேட்ட தமயந்தி, பயந்து நடுங்கி, கரங்களைக் கூப்பி, “ஓ அருளப்பட்டவரே, என்னிடம் எந்தக் குறையும் கண்டு என்னைச் சந்தேகிப்பது உமக்குத் தகாது. ஓ நிஷாதர்களின் ஆட்சியாளரே {நளரே}, தேவர்களையும் புறக்கணித்து, நான் உம்மைத் தலைவராகக் கொண்டேன். உம்மை இங்கு கொண்டு வரவே, எல்லாப்புறங்களிலும் அலைந்து, கீழ்வானத்தின் எல்லா இடங்களுக்கும் சென்று, எனது வார்த்தைகளை பாடல்களாக்கி பாடிக்கொண்டிருக்கிறார்கள் கற்ற அந்தணர்கள். ஓ மன்னா, பர்ணாதன் என்ற கற்ற அந்தணன் உம்மை கோசலத்தில் ரிதுபர்ணனின் அரண்மனையில் கண்டுபிடித்தான். நீர் அந்த வார்த்தைகளுக்குத் தகுந்த விடையை மறுமொழியாய்ப் பகர்ந்த போதே, ஓ நைஷாதரே {நளரே}, நான் உம்மை மீட்க இந்தத் திட்டத்தை உருவாக்கினேன்.

ஓ பூமியின் தலைவரே, உம்மைத் தவிர இந்த உலகத்தில் குதிரைகளைக் கொண்டு நூறு {100} யோஜனை தூரத்தைக் கடந்து வர யாரும் கிடையாது. ஓ ஏகாதிபதி {நளரே}, உமது பாதத்தைத் தொட்டுச் சத்தியமாகச் சொல்கிறேன், நான் நினைவால் கூட எந்தப் பாவமும் செய்யாதவள். நான் எந்தப் பாவமாவது செய்திருந்தால், அனைத்தையும் சாட்சியாகக் கண்டு, இந்த உலகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் காற்று எனது உயிரை எடுக்கட்டும். நான் எந்தப் பாவமாவது செய்திருந்தால், வானத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் சூரியன் எனது உயிரை எடுக்கட்டும். நான் எந்தப் பாவமாவது செய்திருந்தால், எல்லா உயிரிலும் வசித்து சாட்சியாக இருக்கும் சந்திரன் எனது உயிரை எடுக்கட்டும். மூன்று உலகங்களையும் முழுமையாக நிலைத்திருக்கச் செய்யும் அந்த மூன்று தேவர்களும் {வாயு, சூரியன், சந்திரன்} இன்று உண்மையை அறிவிக்கட்டும். அல்லது அவர்கள் இன்று என்னைக் கைவிடட்டும்” என்றாள் {தமயந்தி}.

அவளால் {தமயந்தியால்} இப்படிச் சொல்லப்பட்டதும், காற்றின் தேவன் {வாயுத்தேவன்} வானத்தில் இருந்து, “ஓ நளா, அவள் {தமயந்தி} எந்தத் தவறும் செய்யவில்லை என்ற உண்மையை நான் உனக்குச் சொல்கிறேன். ஓ மன்னா {நளா}, தமயந்தி தனது குடும்பத்தின் மரியாதைக் காப்பாற்றியும், அந்த மரியாதையை உயர்த்தியும் இருக்கிறாள். இதற்கான சாட்சி நாங்களே. இந்த மூன்று {3} வருடங்களிலும் நாங்களே இவளுக்குப் பாதுகாவலர்களாக இருந்தோம். இந்த நிகரற்ற திட்டத்தை அவள் உனக்காகவே உருவாக்கினாள். உன்னைத்தவிர, நூறு யோஜனைகள் தூரத்தை ஒரே நாளில் கடக்கும் திறன், இந்த உலகத்தில் வேறு யாருக்கும் கிடையாது. ஓ ஏகாதிபதி, நீ பீமனின் மகளை அடைந்துவிட்டாய். அவளும் உன்னை அடைந்து விட்டாள். நீ எந்தச் சந்தேகத்தையும் ஊக்குவிக்கும் அவசியம் இல்லை. உனது துணைவியுடன் சேர்ந்திருக்கக் கடவாய்” என்றான்.

காற்றின் தேவன் இப்படிச் சொன்னதும் அங்கே மலர் மாரி பொழிந்தது. தேவதுந்துபிகள் முழங்கின. மங்களகரமாக காற்றும் வீசத்தொடங்கியது. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, இந்த அற்புதங்களைக் கண்ட எதிரிகளை ஒடுக்குபவனான மன்னன் நளன்தமயந்தி குறித்த தனது சந்தேகங்களையெல்லாம் தூக்கி எறிந்தான். பிறகு அந்த பூமியின் தலைவன் {நளன்}, பாம்புகளின் மன்னனை {கார்க்கோடகனை} நினைவுகூர்ந்து, அந்த சுத்தமான ஆடையை அணிந்து தனது சொந்த உருவத்தை அடைந்தான். தனது நீதிமானான தலைவன் சுய உரு அடைந்ததைக் கண்ட, குற்றமற்ற அங்கங்கள் கொண்ட பீமனின் மகள் {தமயந்தி}, அவனை வாரி அணைத்தபடி,  உரத்த சத்தத்துடன் அழ ஆரம்பித்தாள். மன்னன் நளனும், தனக்காக அர்ப்பணித்திருந்த பீமனின் மகளையும் {தமயந்தியையும்}, தனது பிள்ளைகளையும் முன்பைப் போல அணைத்துக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.

அகன்ற கண்கள் கொண்ட தமயந்தி, அவனது மார்பில் தனது முகத்தைப் புதைத்து, பெருமூச்சுவிட்டபடி தனது துயரங்களை நினைவு கூர்ந்தாள். துன்பத்தில் மூழ்கிய அந்த மனிதர்களில் புலி {நளன்}, அழுக்கடைந்திருந்த, இனிய புன்னகை கொண்ட தமயந்தியை அணைத்தபடி சிறிது நேரம் அப்படியே நின்றான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அரசத்தாய் {Queen mother – பீமனின் தாய்}, இதயத்தில் மகிழ்ந்து, பீமனிடம், நளன் மற்றும் தமயந்திக்கிடையே நடந்த நிகழ்ச்சியைச் சொன்னாள். அதற்கு அந்த பலம் பொருந்திய ஏகாதிபதி, “இன்றையப் பொழுதை நளன் அமைதியுடன் கழிக்கட்டும், நாளை அவனது குளியலும், இறவணக்கமும் முடிந்த பின்னர், தமயந்தியுடன் இருக்கும் அவனை நான் காண்பேன்” என்றான்.

ஓ மன்னா, அவர்கள், தங்கள் கானக வாழ்வையும், கடந்தகால நிகழ்ச்சிகளையும் ஒருவருக்கொருவர் உரைத்து, அந்த இரவை மகிழ்ச்சியாகக் கழித்தனர். விதரப்ப்பத்தின் இளவரசியும் {தமயந்தியும்}, நளனும், மகிழ்ச்சியால் நிறைந்த இதயங்களுடன், ஒருவரை ஒருவர் மகிழச் செய்து, மன்னன் பீமனின் அரண்மனையில் தங்கள் நாட்களைக் கழிக்கத்தொடங்கினர். (நாட்டை இழந்து) நான்காவது வருடத்திலேயே நளன், தனது விருப்பங்கள் நிறைவேறி, தனது மனைவியுடன் சேர்ந்து, உயர்ந்த அருளை மறுபடியும் அனுபவித்தான். வயலில் இருக்கும் இளஞ்செடிகள் மழையைப் பெற்று மகிழ்வது போல, தனது தலைவனை {நளனை} மீட்டதில் மகிழ்ச்சி அடைந்தாள் தமயந்தி. தனது தலைவனை மீட்ட பீமனின் மகள் {தமயந்தி}, தனது விருப்பத்தை அடைந்து, களைப்பு நீங்கி, துயரங்கள் விலகி, அழகில் பிரகாசித்து, சந்திரனால் பிரகாசித்த இரவு போல மகழ்ச்சியில் திளைத்தாள்.

நளனை அறிந்த ரிதுபர்ணன்! – வனபர்வம் பகுதி 77-நளன் தமயந்தியுடன் சேர்ந்துவிட்டான் என்பதை மன்னன் ரிதுபர்ணன் அறிவது; பிறகு நளனிடம் இருந்து குதிரை மரபின் அறிவியலை அறிந்து கொண்டு தனது சொந்த நகரத்திற்குத் திரும்புவது…

பிருகதஸ்வர் சொன்னார், “அந்த இரவைக் கழித்த பிறகு, மன்னன் நளன் ஆபரணங்கள் பூண்டு, தமயந்தியைத் தன் அருகில் கொண்டு, தன்னை மன்னனின் முன்பு நிறுத்திக் கொண்டான். நளன் தனது மாமனாரைப் பணிவுடன் வணங்கினான். அவனுக்குப் பிறகு தமயந்தியும் தனது மரியாதையை தனது தந்தைக்குச் செலுத்தினாள். மேன்மையான பீமனும் பெருமகிழ்ச்சியுடன், அவனை {நளனைத்} தனது மகனாக வரவேற்று, அவனையும் {நளனையும்}, அவனுக்கு தன்னை அர்ப்பணித்திருக்கும் அவனுடைய மனைவியையும் {தமயந்தியையும்} சரியான வார்த்தைகளால் ஆறுதல் கூறி மதிப்பளித்தான். அவனுக்கு அளிக்கப்பட்ட மரியாதையை முறையாக ஏற்றுக் கொண்ட மன்னன் நளன், மாமனாருக்கு {மன்னர் பீமருக்குத்} தனது சேவைகளை உரித்தாக்கினான்.

நளன் வந்ததைக் கண்ட குடிமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கே அந்த நகரத்தில் மகிழ்ச்சியால் பெருத்த ஒலி எழுந்தது. குடிமக்கள் அந்த நகரத்தைக் கொடிகளாலும், மாலைகளாலும், பதாகைகளாலும் அலங்கரித்தனர். தெருக்கள் நீர் தெளிக்கப்பட்டு, தரை மலர்களாலும் மற்ற பொருட்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. குடிமக்கள், தங்கள் வீட்டு வாயில்களில் மலர்களை மலைபோல் குவித்து வைத்தனர், கோயில்களையும் புனித இடங்களையும் மலர்களால் அலங்கரித்தனர். பாகுகன் {நளன்தமயந்தியுடன் ஏற்கனவே இணைந்துவிட்டான் என்று ரிதுபர்ணன் கேள்விப்பட்டான். அந்த மன்னனும் {ரிதுபர்ணனும்} இவற்றைக் கேள்விப்பட்டு மகிழ்ந்தான். பிறகு மன்னன் {ரிதுபர்ணன்} நளனின் முன்பு வந்து, அவனின் {நளனின்} மன்னிப்பைக் கோரினான். புத்திசாலியான நளனும் ரிதுபர்ணனிடம் பல காரணங்களைக் காட்டி மன்னிப்பைக் கோரினான்.

பேசுபவர்களில் முதன்மையானவனும், உண்மையை அறிந்தவனுமான மன்னன் ரிதுபர்ணன், நளனால் இப்படி மரியாதை செய்யப்பட்ட பிறகு, முகத்தில் ஆச்சரியத்துடன், நிஷாதர்களின் ஆட்சியாளனிடம் {நளனிடம்}, “உமது நற்பேறாலேயே நீர் உமது மனைவியைத் திரும்ப அடைந்து, மகிழ்ச்சியை அடைந்தீர். ஓ நைஷாதரே {நளரே}, நீர் எனது இல்லத்தில் மாற்றுருவில் இருந்த போது, ஓ பூமியின் தலைவா, நான் உமக்கு எந்தத் தீங்கையும் செய்யவில்லை என நம்புகிறேன். தெரிந்தோ தெரியாமலோ நான் ஏதாவது தவறு செய்திருந்தால் நீங்கள் மன்னிக்க வேண்டும்” என்றான். இதைக் கேட்ட நளன், “ஓ ஏகாதிபதியே {ரிதுபர்ணரே}, நீர் எனக்கு சிறு காயத்தையும் ஏற்படுத்தியதில்லை. அப்படியே நீர் செய்திருந்தாலும், அது எனது சினத்தைத் தூண்டியதில்லையாதலால் அது என்னால் மன்னிக்கப்பட வேண்டும். நீர் முன்பே எனது நண்பர், ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {ரிதுபர்ணரே}, நீர் எனக்கு உறவினரும் கூட. ஆகையால், நான் உம்மிடம் பெரும் மகிழ்வு கொள்கிறேன். ஓ மன்னா, எனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி உமது வசிப்பிடத்தில் நான் வாழ்ந்தேன். இன்னும் சொல்லப்போனால், எனது சொந்த வீட்டிலிருந்ததை விட நான் அங்கு மகிழ்ச்சியாக இருந்தேன். உமது {உமக்குத் தரவேண்டிய} குதிரை மரபுகளின் ஞானம் என்னிடம் இருக்கிறது. ஓ மன்னா {ரிதுபர்ணரே}, நீர் விருப்பப்பட்டால் நான் அதை உமக்குக் கொடுக்கிறேன்” என்றான்.

இதைச் சொன்ன அந்த நைஷாதன் ரிதுபர்ணனுக்கு அந்த அறிவியலைக் கொடுத்தான். ரிதுபர்ணன் அதை உரிய சடங்குகளுடன் பெற்றுக் கொண்டான். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, நிஷாத ஆட்சியாளனுக்கு {நளனுக்கு} ஏற்கனவே பகடையின் புதிர்களை விளக்கியிருந்த பங்காசூரனின் மகன் {ரிதுபர்ணன்}, குதிரை மரபுகளின் அறிவியலை அதன் புதிர்களுடன் நளனிடம் இருந்து பெற்றுக் கொண்டான். பிறகு வேறு ஒருவனைத் தனது தேரோட்டியாக நியமித்துக் கொண்ட ரிதுபர்ணன் தனது நகரத்திற்குச் சென்றான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, ரிதுபர்ணன் சென்றதும், மன்னன் நளன் வெகு நாளைக்கு அந்தக் குண்டின நகரத்தில் தங்கவில்லை.

புஷ்கரனை வென்ற நளன்! – வனபர்வம் பகுதி 78-நளன் சிறு படையுடன் தனது நாட்டுக்குத் திரும்பி புஷ்கரனை சூதுக்கு அழைப்பது; புஷ்கரனின் ஏளனம் மற்றும் பேராசை; நளன் புஷ்கரனை வெல்வது; புஷ்கரனுக்கு பாதி நாட்டைக் கொடுப்பது…

பிருகதஸ்வர் சொன்னார், “ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நிஷாதர்களின் ஆட்சியாளன் {நளன்} அங்கே {குண்டினத்தில்} ஒரு மாதம் தங்கிய பிறகு, பீமனின் அனுமதியுடன், சிலரை மட்டும் அழைத்துக் கொண்டு நிஷாதர்களின் நாட்டுக்குச் சென்றான். வெள்ளை நிறத்திலான தனித்தேருடன், பதினாறு {16} யானைகளும், ஐம்பது {50} குதிரைகளும், அறுநூறு {600} காலாட்படையுடனும் அந்த ஒப்பற்ற மன்னன் {நளன்} பூமியை நடுங்கச் செய்து, நேரத்தைக் கடத்தாமல் கோபத்துடன் அங்கு {நிஷாதர்களின் நாட்டுக்குள்} நுழைந்தான். வீரசேனனின் பலம்பொருந்திய மகன் {நளன்} புஷ்கரனை அணுகி, அவனிடம் {புஷ்கரனிடம்}, “நான் பெரும் செல்வம் ஈட்டியிருக்கிறேன். நாம் மீண்டும்  {பகடை} விளையாடலாம்.

அனைத்தையும் சேர்த்து தமயந்தியையும் பந்தயப் பொருளாக வைக்கிறேன். ஓ புஷ்கரா நீ உனது நாட்டைப் பந்தயப் பொருளாக வை. விளையாட்டு ஆரம்பமாகட்டும். இதுவே எனது நிச்சயமான உறுதிப்பாடு. நீ அருளப்பட்டிரு, நம்மிடம் உள்ள அனைத்தையும் சேர்த்து நமது உயிரையும் பந்தயத்தில் வைப்போம். வென்ற பிறகு, ஒருவர் மற்றவரின் செல்வத்தையோ நாட்டையோ அடையலாம், உடைமையாளன் கேட்கும்போது அதைப் பந்தயம் வைப்பது உயர்ந்த கடமை என்று விதிநெறிகள் சொல்கின்றன. அல்லது பகடை விளையாடுவதில் உனக்கு மகிழ்ச்சி இல்லையென்றால், ஆயுதங்களால் ஆன விளையாட்டு தொடங்கட்டும். ஓ மன்னா {புஷ்கரா}, ஒற்றை ஆளாகப் போரிட்டு நீயோ நானோ அமைதியை அடைவோம். இந்த நாடு பரம்பரை பரம்பரையாக வருவதாகும். அதை எந்தச் சூழ்நிலையிலும், எந்த உபாயத்தைக் கைக்கொண்டாவது மீட்பதே சிறந்தது என்று பெரும் முனிவர்கள் சொல்கிறார்கள். ஓ புஷ்கரா இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடு. பகடையுடன் சூதா? அல்லது வில் வளைத்துப் போரா?” என்று கேட்டான்.

நிஷாதனால் {நளனால்} இப்படிச் சொல்லப்பட்ட புஷ்கரன், தனது வெற்றி குறித்த நிச்சயத்தோடு சிரித்துக் கொண்டே அந்த ஏகாதிபதியிடம் {நளனிடம்}, “ஓ நைஷாதா {நளா}, நற்பேறினாலேயே நீ மீண்டும் பந்தயம் செய்வதற்கான செல்வத்தைச் சம்பாதித்தாய். தமயந்தியின் தீயூழ் {துரதிர்ஷ்டம்} முடிவுக்கு வரப்போவதும் இந்த நற்பேறாலேயே. ஓ மன்னா {நளா}, நற்பேறாலேயே நீ உனது மனைவியுடன் இன்னும் உயிருடன் இருக்கிறாய். ஓ பெரும் பலம் பொருந்திய கரங்கள் கொண்டவனே {நளனே}, உனது செல்வத்தையும் தமயந்தியையும் வெல்வேன் என்றும், அவள் {தமயந்தி} சொர்க்கத்தில் இந்திரனுக்காகக் காத்திருக்கும் அப்சரஸ் போல எனக்காகக் காத்திருப்பாள் என்றும் தெளிவாகத் தெரிகிறது. ஓ நைஷாதா {நளா}, நான் தினமும் உன்னை நினைவு கூர்ந்தேன். நான் உனக்காகவே காத்திருந்தேன். ரத்த சம்பந்தமில்லாதவர்களுடன் சூதாடுவதில் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. குற்றமற்ற குணங்கள் கொண்ட அழகான தமயந்தியை இன்று வென்று, என்னை அதிர்ஷ்டசாலியாக நினைத்துக் கொள்வேன். உண்மையில், அவளே {தமயந்தியே} எனது இதயத்தில் எப்போதும் குடியிருந்தவள்” என்று பதில் சொன்னான் {நளனின் சகோதரனான தம்பி புஷ்கரன்}.

தெளிவற்று தற்பெருமை பேசுபவனின் {புஷ்கரனின்} வார்த்தைகளைக் கேட்ட நளன் கோபம் கொண்டு தனது வாளால் அவனது தலையை வெட்ட விரும்பினான். இருப்பினும், கண்கள் கோபத்தால் சிவந்திருந்தாலும் நளன் புன்னகையுடன், “நாம் விளையாடலாம். ஏன் இப்போது பேசுகிறாய்? என்னை வீழ்த்தி, நீ விரும்பும் எதையும் சொல்” என்றான். பிறகு புஷ்கரனுக்கும் நளனுக்கு இடையில் விளையாட்டுத் தொடங்கியது. ஒரே வீச்சில் தனது செல்வங்களையும், பொக்கிஷத்தையும், தனது தம்பியின் {புஷ்கரனின்} உயிரையும் பந்தயத்தில் வென்ற நளன் அருளப்பட்டவனே. வெற்றியடைந்த மன்னன் புஷ்கரனிடம் சிரித்துக் கொண்டே, “ஒரு முள்ளும் இல்லாத இந்த முழு நாடும் எந்தத் தடையும் இல்லாமல் எனதாயிற்று. ஓ மன்னர்களில் இழிந்தவனே, உன்னால் விதரப்ப்பத்தின் இளவரசி மீது பார்வையைக் கூடச் செலுத்த முடியாது. ஓ மூடனே, இப்போது நீயும் உனது குடும்பமும் அவளது அடிமைகளாகச் சுருக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் உனது கைகளால் எனக்கு ஏற்பட்ட முந்தைய தோல்வி உனது செயலால் ஏற்படவில்லை. ஓ மூடனே, அதை நீ அறியமாட்டாய். கலியே இவை அனைத்தையும் செய்தான். ஆகையால், மற்றவர்கள் குறையை நான் உன் மீது சுமத்தமாட்டேன். நீ தேர்ந்தெடுப்பது போல உனது வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொள். நான் உனக்கு உனது உயிரைத் தருகிறேன். உனக்கு (பரம்பரைச் சொத்தில்) உனது பங்கையும், அனைத்துத் தேவைகளையும் அளிக்கிறேன். ஓ வீரனே, சந்தேகமற உன் மேல் நான் கொண்ட பாசம் முன்பு போலவே இருக்கும்உடன்பிறந்த பாசமும் என்னிடம் அழியாது. ஓ புஷ்கரா, நீ எனது தம்பி, நீ நூறாண்டு காலம் வாழ வேண்டும்” என்றான் {நளன்}.

கலங்கடிக்கமுடியாத பராக்கிரமம் கொண்ட நளன் இப்படி தனது தம்பிக்கு ஆறுதல் கூறி, மீண்டும் மீண்டும் அவனை அணைத்துக் கொண்டு, சொந்த நகரத்திற்குச் செல்ல அவனுக்கு அனுமதி கொடுத்தான். நிஷாத ஆட்சியாளனால் {நளனால்} ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இப்படி ஆறுதல் அளிக்கப்பட்ட புஷ்கரன், அந்த நீதிமானான மன்னனை வணங்கி, கரங்கள் கூப்பியபடி அவனிடம் {நளனிடம்}, “உமது புகழ் அழிவற்றதாக இருக்கட்டும். ஓ மன்னா, எனக்கு உயிரையும், புகலிடத்தையும் கொடுத்த நீ பத்தாயிரம் {10000} வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்” என்றான்.

பிறகு மன்னனால் {நளனால்} மகிழ்ச்சிப் படுத்தப்பட்ட புஷ்கரன் அங்கே ஒரு மாதம் வசித்து, பெரும் படையுடனும், கீழ்ப்படியும் பணியாட்களுடனும், தனது உறவினர்களுடனும் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தனது சொந்த நகரத்திற்குச் சென்றான். பிறகு அந்த மனிதர்களில் காளை இரண்டாவது சூரியனைப் போலப் பிரகாசித்து அழகாக இருந்தான். அந்த அருளப்பட்ட நிஷாதர்களின் மன்னன் {நளன்}, புஷ்கரனுக்கு ஆட்சியைக் கொடுத்து அவனைச் செழிப்பாக்கி, பிரச்சனைகளில் இருந்து அவனை விடுவித்து, ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட தனது அரண்மனைக்குள் நுழைந்தான். நிஷாதர்களின் ஆட்சியாளன் {நளன்} அப்படி தனது அரண்மனைக்குள் நுழைந்து தனது குடிமக்களுக்கு ஆறுதல் அளித்தான். அந்த நாட்டின் அனைத்துக் குடிமக்களும், தொண்டர்களும் பெரும் மகிழ்ச்சியால் மயிர்ச்சிலிர்த்து நின்றனர். நாட்டின் அதிகாரிகளைத் தலைமையாகக் கொண்ட மக்கள் தங்கள் கரங்களைக் கூப்பி, “ஓ மன்னா {நளரே}, இந்த நாடு மற்றும் நகரம் முழுவதும் இருக்கும் நாங்கள் உண்மையிலேயே இன்றுதான் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இன்று, நூறு வேள்விகளைச் செய்தவனை {இந்திரனை} தலைவனாக அடைந்த தேவர்கள் போல, எங்களது ஆட்சியாளனை அடைந்துவிட்டோம்” என்றனர்.

பகடை அறிவை அடைந்தான் யுதிஷ்டிரன்! – வனபர்வம் பகுதி 79-நளன் தமயந்தியைத் தனது நாட்டிற்கு அழைத்து வந்து மகிழ்ச்சியாக இருந்ததைச் சொன்ன பிருகதஸ்வர், யுதிஷ்டிரனும் அப்படியே இருப்பான் என்று சொன்னது; யுதிஷ்டிரனுக்கு பிருகதஸ்வர் பகடை அறிவைக் கொடுப்பது; யுதிஷ்டிரன் அர்ஜுனனின் கடும் தவத்தைக் கேள்விப்பட்டு துன்புறுவது; அந்தணர்களுடன் உரையாடியது..

பிருகதஸ்வர் சொன்னார், “நகரம் துயரமற்று மகிழ்ச்சியுடன் அங்கே விழா தொடங்கிய போது, பெரிய படையுடன் சென்று மன்னன் {நளன்தமயந்தியை (அவளது தந்தை பீமனின் வீட்டிலிருந்து) அழைத்துவந்தான். பகைவர்களைக் கொல்லும் பயங்கர பராக்கிரமும், அளவிடமுடியா ஆன்மாவும் கொண்ட அவளது தந்தையான் பீமனும் தனது மகளுக்கு உரிய மரியாதைகளைச் செலுத்தி அனுப்பி வைத்தான். மகனுடனும் மகளுடனும் வந்த விதரப்ப்பத்தின் இளவரசியின் வருகையை அடுத்து, மன்னன் நளன் தனது நாட்களை, நந்தனம் எனும் சோலையில் இருக்கும் தேவர்கள் தலைவனைப் போல மகிழ்ச்சியாகக் கழித்தான்.

அழியாப் புகழ் கொண்ட அந்த மன்னன் {நளன்}, தனது நாட்டை மீட்டெடுத்து, ஜம்பு தீபகற்பத்தின் ஏகாதிபதிகளில் சிறந்தவனாக, அதை மீண்டும் ஆளத் தொடங்கினான். அவன் {நளன்} எண்ணிலடங்கா வேள்விகளைச் செய்து பரிசுகளை அந்தணர்களுக்குப் பெருமளவில் கொடுத்தான். ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, நீயும் உனது இரத்த உறவுகளுடனும் சொந்தங்களுடனும் அதே போல விரைவில் பிரகாசிப்பாய். ஓ மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, இப்படியே எதிரிகளின் நகரங்களை அடக்கும் மன்னன் நளன், ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, பகடையாட்டத்தின் தொடர்ச்சியாக தனது மனைவியுடன் துன்பத்தில் மூழ்கினான். மேலும், ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, இந்த துன்பங்கள் அனைத்தையும் நளன் தனியாகவே அனுபவித்து, தனது செழிப்பை மீட்டெடுத்தான். ஆனால் நீயோ!, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, இதயத்தை அறத்தில் நிலைக்க வைத்து, உனது தம்பிகளுடனும், கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடனும்} இந்தக் கானகத்தில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கிறாய். ஓ ஏகாதிபதி, நீ தினமும் வேதங்களையும் அதன் கிளைகளையும் அறிந்த அருளப்பட்ட அந்தணர்களுடன் கலந்து கொள்வதால், துன்பத்திற்கான காரணம் உனக்கு சிறியதே.

நாகன் கார்க்கோடகன், தமயந்திநளன், அரச முனி ரிதுபர்ணன் ஆகியவர்களைத் தவிர்த்து இந்த வரலாறு தீமைகளை அழிக்கவல்லது. ஓ மங்காப் புகழ் கொண்டவனே, கலியின் ஆதிக்கத்தையும் அழிக்கும் இவ்வரலாறு, ஓ மன்னா, இதைக் கேட்கும் உன்னைப் போன்ற மனிதர்களுக்கு ஆறுதல் அளிக்கும். (வெற்றியில்) உறுதியற்ற மனித முயற்சியை நினைவுகூர்ந்து, நீ செழிப்பிலோ, துரதிர்ஷ்டத்திலோ மகிழ்ச்சியையோ துக்கத்தையோ அடைவது உனக்குத் தகாது. இந்த வரலாற்றைக் கேட்ட பிறகு, ஓ மன்னா, துன்பத்தை வளர்க்காமல் ஆறுதலடை. ஓ பெரும் மன்னா, துன்பமடைந்து ஏங்கிக் கொண்டிருப்பது உனக்குத் தகாது. உண்மையில், விதியின் தான்தோன்றித்தனத்தையும், முயற்சியின் கனியற்ற தன்மையையும் நினைவுகூரும் தன்னை அடக்கிய மனிதன் மன அழுத்தம் கொண்டு துன்புறமாட்டான்.

நளனின் இந்த உயர்ந்த வரலாற்றைத் திரும்பத் திரும்பச் சொல்பவனையோ, அல்லது சொல்லும்போது கேட்பவனையோ, தீயூழ் {துரதிர்ஷ்டம்} எப்போதும் அணுகாது. இந்தப் பழைய அற்புதமான வரலாற்றைக் கேட்கும் ஒருவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், விலங்குகள், மனிதர்களில் உயர்ந்த இடம், ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெறுவதோடு, சந்தேகமற, தனது எல்லா காரியங்களிலும் வெற்றியடைந்து, புகழடைவான். மேலும், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நீ வளர்க்கும் பயத்தை (யாரும் தன்னை பகடைக்கு அழைத்துவிடுவார்களோ என்ற பயத்தை) ஒரே முறையில் நான் அகற்றிவிடுவேன். ஓ ஒப்பற்ற பராக்கிரமம் கொண்டவனே {யுதிஷ்டிரா}, நான் பகடையின் அறிவியலை முழுமையாக அறிவேன். நான் உன்னிடம் திருப்தியடைந்துள்ளேன். ஓ குந்தியின் மகனே, அந்த அறிவைப் பெற்றுக்கொள். நான் உனக்குச் சொல்கிறேன்” என்றார் {பிருகதஸ்வர்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிறகு மன்னன் யுதிஷ்டிரன், இதயத்தில் மகிழ்ந்து, பிருகதஸ்வரிடம், “ஓ சிறப்புமிக்கவரே, பகடையின் அறிவியலை நான் உம்மிடம் இருந்து அறிய விரும்புகிறேன்” என்றான். பிறகு அந்த முனிவர் {பிருகதஸ்வர்} பாண்டுவின் உயர் ஆன்ம மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} பகடையின் அறிவைக் கொடுத்தார். அப்படிக் கொடுத்துவிட்டு, அந்தப் பெரும் துறவி ஹயசீர்ஷம் என்ற புனிதமான நீர்நிலைக்கு குளிப்பதற்காகச் சென்றார்.

உறுதியான நோன்புகள் நோற்கும் யுதிஷ்டிரன், பிருகதஸ்வர் சென்ற பிறகு வந்த அந்தணர்களின் மூலமும், வெவ்வேறு திக்குகளிலிருந்தும், இடங்களில் இருந்தும், மலைகள் மற்றும் கானகங்களில் இருந்தும் வந்த துறவிகள் மூலமும், இடது கையாலும் வில்லின் நாணை இழுக்கும் பெரும் புத்திகூர்மை கொண்ட அர்ஜுனன், காற்றை மட்டுமே உண்டு கடுந்தவத்தில் இருப்பதை அறிந்தான். அவன் {யுதிஷ்டிரன்}, பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, இதுவரை யாரும் செய்யாத கடும் தவத்தைச் செய்வதாகக் கேள்விப்பட்டான்.

பிருதையின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} சரியான நோன்புகளுடனும், உறுதியான மனத்துடனும், மௌனமாக நீதிதேவனின் மனித உடலாக இருந்து பிரகாசித்துக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டான். ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தனது அன்புத் தம்பியான குந்தியின் மகன் ஜெயன் {அர்ஜுனன்}, அந்தப் பெரும் வனத்தில் கடும் தவம் இருப்பதை அறிந்து மிகவும் துன்பமடைந்தான். துயரத்தால் எரியும் இதயத்துடன் இருந்த பாண்டுவின் மூத்த மகன் {யுதிஷ்டிரன்}, அந்தப் பெரும் வனத்தில் ஆறுதல் வேண்டி, அவனுடன் வாழ்ந்துவந்த, பலவகை ஞானம் கொண்ட அந்தணர்களிடம் கலந்துரையாடினான்.

நளோபாக்யான பர்வம் முற்றிற்று

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading