ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ வன பர்வம்-ஸ்ரீ  பதிவிரதா மாஹாத்மியப் பர்வம்–

அஸ்வபதியின் மகள் சாவித்ரி! – வனபர்வம் பகுதி 291-மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சாவித்ரியின் கதையைச் சொல்ல ஆரம்பிப்பது; மத்ர நாட்டு மன்னன் அஸ்வபதி காயத்ரிதேவியை வேண்டுவது; மன்னன் அஸ்வபதியிடம் மனநிறைவு கொண்ட காயத்ரிதேவி மன்னன் அஸ்வபதிக்கு வரத்தை அருள்வது; அஸ்வபதிக்கு சாவித்ரி பிறப்பது; பூப்படைந்த பின்னரும் யாரும் பெண் கேட்க வராததால், அஸ்வபதி தன் மகள் சாவித்ரியிடம், அவளே தனக்குகந்த மணாளனைத் தேர்ந்தெடுக்குமாறு சொல்வது…

“யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, “ஓ! வலிமைமிக்கத் தவசியே {மார்க்கண்டேயரே}, இந்தத் துருபதன் மகளுக்காக {திரௌபதிக்காக} வருந்துமளவுக்கு நான் எனக்காகவோ, இந்த எனது தம்பிகளுக்காகவோ, நாட்டை இழந்ததற்காவோ வருந்தவில்லை. அந்தத் தீயவர்களால் நடத்தப்பட்ட பகடையாட்டத்தால் நாங்கள் துன்புற்றிருந்தபோது, கிருஷ்ணையே {திரௌபதியே} எங்களை விடுவித்தாள். ஜெயத்ரதனால் அவள் இக்கானகத்திலிருந்து வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்டாள். துருபதன் மகளைப் {திரௌபதியைப்} போல வேறு எந்தக் கற்புடைய மேன்மையான மங்கையையாவது இதுவரை நீர் கண்டதோ கேட்டதோ உண்டா?” என்று கேட்டான்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, ஓ! யுதிஷ்டிரா, கற்புடைய மேன்மையான மங்கையரின் தகுதிகளை, சாவித்ரி என்ற பெயர் கொண்ட இளவரசி எப்படி அடைந்தாள் என்பதை முழுமையாகக் கேள். மத்ரர்கள் {மத்ர நாட்டவர்கள்} மத்தியில் {among Madras}, அறம்சார்ந்த, உயர்ந்த பக்தி கொண்ட ஒரு மன்னன் {அஸ்வபதி} இருந்தான். அவன் எப்போதும் அந்தணர்களுக்கு நல்லதைச் செய்பவனாக இருந்தான். அவன் உயர்ந்த ஆன்மா கொண்டவனாக {மகாத்மாவாக}, உண்மையில் உறுதியுள்ளவனாக இருந்தான். அவன் புலன்களை நன்கு அடக்கியவனாகவும், வேள்விகளுக்குத் தன்னை அர்ப்பணித்தவனாகவும் இருந்தான். தானமளிப்பவர்களில் முதன்மையானவனாகவும், திறனுடையவனாகவும், குடிமக்கள் மற்றும் கிராமப்புற மக்கள் ஆகிய இருவராலும் விரும்பப்படுபவனாகவும் இருந்தான். பூமிக்குத் தலைவனாக இருந்த அவனது பெயர் அஸ்வபதி என்பதாகும். அவன் அனைத்து உயிர்களின் நன்மையையும் நோக்கமாகக் கொண்டவனாக இருந்தான். உண்மையான பேச்சும், கட்டுப்படுத்தப்பட்ட புலன்களும் கொண்ட அந்த மன்னிக்கும் இயல்புடையவனுக்கு (அந்த ஏகாதிபதிக்கு), குழந்தையில்லாமல் இருந்தது. அவன் {அஸ்வபதி} முதிர்வயதினன் ஆன போது, இதன்காரணமாக {குழந்தையில்லாததால்} துயரத்திற்கு உள்ளானான். வாரிசையுண்டாக்கும் நோக்குடன் அவன் {அஸ்வபதி}, கடும் நோன்புகள் நோற்று, பிரம்மச்சரிய வகை வாழ்வியலின் உதவியைக் கொண்டு, புலன்களில் இருந்து விடுபட்டு, அற்ப உணவை உட்கொண்டு வாழத் தொடங்கினான்.

அந்த மன்னர்களில் சிறந்தவன் {அஸ்வபதி}, (தினமும்) நெருப்பில் பத்தாயிரம் பலியுணவை இட்டு, சாவித்ரிதேவியை [1] மதிக்கும் வண்ணம் மந்திரங்களைச் சொல்லி, {அந்த நாளின்} ஆறாவது காலத்தில் [2] மிதமாக உண்டான். இது போன்ற நோன்புகளைப் பயின்றே அவன் பதினெட்டு {18} வருடங்களைக் கடத்தினான். பதினெட்டு வருடங்கள் முழுமையாக முடிந்ததும் சாவித்ரி (அவனிடம்) நிறைவு கொண்டாள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் மகிழ்ச்சியுடன் வெளிப்பட்டு, அக்னிஹோத்ர நெருப்பில் இருந்து உருவம் கொண்டு வந்த அந்தத் தேவி {goddess}, மன்னனுக்குக் காட்சி கொடுத்தாள். வரங்களை அளிக்கும் நோக்குடன் இருந்த அவள் {சாவித்ரி}, அந்த ஏகாதிபதியிடம் {அஸ்வபதியிடம்}, “ஓ! மன்னா {அஸ்வபதி}, உனது பிரம்மச்சரிய பயிற்சிகளாலும், உனது தூய்மையிலும், சுய அடக்கத்திலும், நீ நோற்ற நோன்புகளிலும், உனது அனைத்து முயற்சிகளிலும், வணக்கத்திலும் நான் மனநிறைவு கொண்டேன். ஓ! வலிமைமிக்க மன்னா, ஓ! அஸ்வபதி, நீ விரும்பும் வரத்தை என்னிடம் கேள். எனினும், நீ எவ்வகை அறத்திலும் அலட்சியம் கொள்ளக்கூடாது” என்ற வார்த்தைகளைச் சொன்னாள்(ஒரு பகலை எட்டாகப் பிரித்து, அதில் வரும் ஆறாவது காலத்தில் அஸ்வபதி உண்டான் )

அதன்பேரில் அஸ்வபதி, “அறத்தை அடையும் பொருட்டே நான் இந்தப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். ஓ! தேவி, எனது குலத்தின் தகுதிக்கு ஏற்ப பல மகன்கள் எனக்குப் பிறக்க வேண்டும்! ஓ! தேவி, நீ என்னிடம் நிறைவு கொண்டாயானால், நான் இந்த வரத்தையே உன்னிடம் கேட்பேன். வாரிசை அடைவதிலேயே பெரும் தகுதி இருக்கிறது என்று இருபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} என்னிடம் உறுதி கூறியுள்ளனர்!” என்றான். அதற்குச் சாவித்ரி, “ஓ! மன்னா, உனது இந்த நோக்கத்தை ஏற்கனவே அறிந்தே, நான் தலைவரான பெருந்தகப்பனிடம் {பிரம்மாவிடம்} உனது மகன்களைக் குறித்துப் பேசினேன். அந்தச் சுயம்புவால் அருளப்படும் உதவியாலேயே, பெரும் சக்தி கொண்ட ஒரு மகள் இந்தப் பூமியில் உனக்கு விரைவாகப் பிறப்பாள். இதற்கு மறுமொழி கூறுவது உனக்குத் தகாது. பெரும்பாட்டனின் {பிரம்மாவின்} உத்தரவின் பேரில் மிகுந்த மனநிறைவுடன் இருக்கும் நான் உனக்கு இதைச் சொல்கிறேன்” என்று மறுமொழி கூறினாள்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சாவித்ரியின் வார்த்தைகளை ஏற்று, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன அந்த மன்னன் {அஸ்வபதி} அவளை மீண்டும் மனநிறைவு கொள்ளச் செய்து, அவளிடம் {சாவித்ரியிடம்}, “இது விரைவாக நடக்கட்டும்!” என்றான். சாவித்ரி மறைந்த பிறகு, அந்த ஏகாதிபதி தனது நகரத்திற்குள் நுழைந்தான். பிறகு அந்த வீரன், தனது குடிகளை நேர்மையான முறையில் ஆண்டு, தனது நாட்டில் வாழ ஆரம்பித்தான். சில காலம் கழிந்த பிறகு, நோன்புகள் நோற்ற அந்த மன்னன் {அஸ்வபதி}, அறப்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த தனது மூத்த ராணியிடம் வாரிசை உண்டாக்கினான் {கர்ப்பத்தை உண்டாக்கினான்}. பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அந்த மால்வ இளவரசியின் கருவறையில் இருந்த கரு, வானத்தில் வளர்பிறையின் போது வளரும் நட்சத்திரங்களின் தலைவனைப் {சந்திரனைப்} போல வளர்ந்தது.

நேரம் வந்தபோது, அவள் {மால்வ இளவரசி} தாமரை போன்ற கண்களைக் கொண்ட ஒரு மகளைப் பெற்றெடுத்தாள். அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் {அஸ்வபதி}, வழக்கமான சடங்குகளை அவள் சார்பாக மகிழ்ச்சியாக நடத்தினான். அவள், சாவித்ரி தேவியை மதித்துப் பலியுணவுகளைக் காணிக்கையாக இட்ட அறத்தால், அவளால் {சாவித்ரி தேவியால்} மகிழ்ச்சியாக வழங்கப்பட்டவள் ஆதலால், அவளது தந்தையும் {அஸ்வபதியும்}, அந்தணர்களுக்கு அவளுக்குச் சாவித்ரி என்ற பெயரைச் சூட்டினர். அந்த மன்னனின் மகள் உருவமெடுத்து வந்த ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போல வளர்ந்து வந்தாள். குறித்த நேரத்தில், அந்தக் காரிகை {அஸ்வபதியின் மகள் சாவித்ரி} பூப்படைந்தாள். மெல்லிடையும், பருத்த பின்புறமும் கொண்டு தங்கச் சிலை போன்ற இருந்த அந்த அருள் நிறைந்த மங்கையைக் கண்ட மக்கள், “நாம் ஒரு தேவ கன்னிகையைப் {goddess} பெற்றுள்ளோம்” என்று நினைத்தனர். எரியும் பிரகாசம் கொண்ட அவளது சக்திக்குக் கட்டுப்பட்ட ஒருவராலும் தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அந்தப் பெண்ணை மணமுடிக்க முடியவில்லை.

பிறகு ஒரு பருவ காலத்தில் நோன்பிருந்து, தலைக்குக் குளித்த அவள், தன்னைத் தனது (குல) தெய்வத்தை வணங்கி, உரிய சடங்குகளுடன் அந்தணர்களை வேள்வித்தீயில் பலியுணவுகளைக் காணிக்கையாக்கச் செய்ய நேர்ந்தது. தெய்வத்துக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்ட மலர்களை எடுத்த ஸ்ரீயைப் போன்ற அழகுடைய அந்த மங்கை {சாவித்ரி}, தனது உயர் ஆன்ம {மகாத்மாவான} தந்தையிடம் {அஸ்வபதியிடம்} சென்றாள். தன் தந்தையின் பாதத்தை வணங்கி, அவனுக்குத் தான் கொண்டு வந்திருந்த மலர்களைக் கொடுத்த அந்தப் பெரும் அருள் நிறைந்த கன்னிகை, கூப்பிய கரங்களுடன் மன்னனுக்கு {அஸ்வபதியின்} அருகில் நின்றாள். பூப்படைந்த தனது மகள் தெய்வீக காரிகையைப் போல இருப்பதையும், மக்கள் அவளைக் கோராததையும் {வரன்களால் வேண்டப்படாததைக்} கண்ட மன்னன் சோகமானான்.

பிறகு அந்த மன்னன் {அஸ்வபதி}, {சாவித்ரியிடம்} ,“மகளே, உன்னை {ஒருவனுக்கு} அளிக்கும் நேரம் வந்துவிட்டது! ஆனால் யாரும் உன்னைக் கேட்கவில்லை. (எனவே) உனது குணங்களுக்கு நிகரான ஒரு கணவனை நீயே தேடிக் கொள்! உன்னால் விரும்பப்படும் அந்த மனிதனை நீ எனக்குச் சொல். நீ விரும்பியவாறு உனது கணவனை நீ தேர்வு செய். நான் நன்கு ஆராய்ந்த பிறகு உன்னைக் {அவனுக்குக்} கொடுப்பேன். தேவர்களின் நிந்தனைக்கு உள்ளாகாதபடி நீ நடந்து கொள்ள வேண்டும்!” என்றான்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “இந்த வார்த்தைகளைத் தனது மகளுக்கும், தனது முதிர்ந்த ஆலோசகர்களுக்கும் {அமைச்சர்களுக்கும்} சொன்ன அவன் {அஸ்வபதி}, தனது பணியாட்களிடம் அவளைத் தொடர்ந்து போகும்படி “செல்லுங்கள்!” என்று சொன்னான். அதன்பேரில், நாணத்துடன் தனது தந்தையின் பாதங்களை வணங்கிய அந்தப் பணிவான பெண் {சாவித்ரி}, எந்தத் தயக்கமும் இன்றி, தனது தந்தையின் வார்த்தைகளுக்கிணங்க வெளியே சென்றாள். ஒரு தங்கத் தேரில் ஏறிய அவள் {சாவித்ரி}, அரச முனிகள் இருந்த ஒரு காண்பதற்கினிய ஆசிரமத்திற்கு, தனது தந்தையின் முதிர்ந்த அமைச்சர்களுடன் சென்றாள். ஓ! மகனே {யுதிஷ்டிரா}, அங்கே முதிர்ந்தவர்களின் பாதங்களை வழிபட்ட அவள் {சாவித்ரி}, படிப்படியாகக் கானகமெங்கும் உலவ ஆரம்பித்தாள். இப்படி அந்த மன்னனின் {அஸ்வபதியின்} மகள் {சாவித்ரி} அனைத்து புனிதமான பகுதிகளிலும் செல்வத்தைத் தானமளித்து, இரு பிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர்களுக்குச் சொந்தமான பலதரப்பட்ட இடங்களுக்குச் சென்றாள்.

சாவித்ரியின் தேர்வு! – வனபர்வம் பகுதி 292-அஸ்வபதி மற்றும் நாரதரின் முன்னிலையில் சால்வனான சத்யவானைத் தனக்குக் கணவனாகத் தேர்வு செய்திருப்பதாக சாவித்ரி சொல்வது; சத்யவான் அற்ப ஆயுள் கொண்டவன் என்று நாரதர் சொல்வது; வேறு ஒருவரைத் தேர்ந்தெடுக்குமாறு அஸ்வபதி சாவித்ரியிடம் கோருதல்; வேறு ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில்லை என்று சாவித்ரி உறுதியுடன் கூறல்; சத்யவான் சாவித்ரி திருமணத்திற்கு அஸ்வபதி சம்மதித்தல் …

“மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஒரு சந்தர்ப்பத்தில், மத்ரத்தின் {மத்ர நாட்டின்} தலைவனான மன்னன் {அஸ்வபதி}, தனது சபையில் நாரதருடன் அமர்ந்து உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பல புனிதமான பகுதிகளுக்கும், ஆசிரமங்களுக்கும் சென்று வந்த சாவித்ரி, மன்னனின் {அஸ்வபதியின்} அமைச்சர்களுடன் தனது தந்தையின் வசிப்பிடத்திற்கு வந்தாள். தனது தந்தை {அஸ்வபதி} நாரதருடன் அமர்ந்திருப்பதைக் கண்ட அவள் {சாவித்ரி} தனது சிரம் தாழ்த்தி அவ்விருவரின் பாதங்களையும் வணங்கினாள். நாரதர் {அஸ்வபதியிடம்}, “இந்த உனது மகள் எங்கே சென்றிருந்தாள்? ஓ! மன்னா, எங்கிருந்து இவள் வந்திருக்கிறாள்? பூப்பெய்திவிட்ட இவளை இன்னும் ஏன் ஒரு கணவனுக்குக் {தகுந்தவனுக்குக்} கொடுக்காமலிருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அஸ்வபதி, “நிச்சயமாக இக்காரியத்திற்காவே அனுப்பப்பட்ட இவள் (தனது தேடலில் இருந்து) இப்போது திரும்பியிருக்கிறாள். ஓ! தெய்வீகத் தவசியே {நாரதரே}, இவள் தேர்ந்தெடுத்து வந்திருக்கும் கணவனை இவளிடமிருந்தே {சாவித்ரியிடமிருந்தே} கேளும்!” என்றான் {அஸ்வபதி}.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிறகு, தனது தந்தையின் {அஸ்வபதியின்} வார்த்தைகளை தெய்வத்தின் வார்த்தையாக மதிக்கும் அந்த அருளப்பட்ட மங்கை {சாவித்ரி}, இப்படிப்பட்ட வார்த்தைகளால் தனது தந்தை கட்டளையிட்டதும் அனைத்தையும் விரிவாகச் சொன்னாள். அவள் {சாவித்ரி}, “சால்வர்களுக்கு மத்தியில் தியுமத்சேனன் என்ற பெயரால் அறியப்படும் அறம்சார்ந்த ஒரு க்ஷத்திரிய மன்னன் இருந்தார். காலத்தின் ஓட்டத்தில் அவர் குருடராகும்படி நேர்ந்தது. ஞானம் கொண்ட அந்தக் குருட்டு மன்னனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தார். அருகே வசித்திருந்த ஒரு பழைய எதிரி, மன்னனுக்கு {தியுமத்சேனருக்கு} ஏற்பட்ட விபத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அவரது {தியுமத்சேனரின்} நாட்டைப் பறித்துக் கொண்டான். அதன் பேரில், அந்த ஏகாதிபதி {தியுமத்சேனர்} குழந்தையைத் தனது மார்பில் தாங்கிக் கொண்டிருந்த தனது மனைவியை அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றார். இப்படிக் காட்டுக்குள் சென்ற அவர், பெரும் நோன்புகள் நோற்று, கடும் தவங்களைப் பயிலத் தொடங்கினார். நகரத்தில் பிறந்த அவரது மகன் {சத்யவான்}, ஆசிரமத்தில் வளரத் தொடங்கினார். அந்த இளைஞரே {சத்யவானே}, எனது கணவராவதற்குத் தகுந்தவர் என்று, அவரையே எனது தலைவராக இதயப்பூர்வமாக நான் ஏற்றுக் கொண்டேன்!” என்றாள் {சாவித்ரி}.

அவளது இந்த வார்த்தைகளைக் கேட்ட நாரதர், “ஐயோ, ஓ! மன்னா {அஸ்வபதி}, எதையும் அறியாமல், அற்புதமான குணங்களைக் கொண்ட சத்யவானைத் தனது தலைவனாக ஏற்றதனால், சாவித்ரி பெரும் தவறிழைத்து விட்டாள்! அவனது தந்தை {தியுமத்சேனர்} உண்மையே பேசுபவர். அவனது தாயும் பேச்சில் உண்மை கொண்டவள். இதன் காரணமாகவே அந்தணர்கள் அந்த {அவர்களது} மகனுக்குச் சத்யவான் என்று பெயர் சூட்டினர். அவனது குழந்தைப்பருவத்தில் அவன் குதிரைகளால் மகிழ்ச்சியடைந்து, களிமண்ணால் குதிரைகள் செய்தான். அவன் குதிரைகளின் படங்களையும் வரைந்தான். இதன் காரணமாகவே அந்த இளைஞன் சில நேரங்களில் சித்திராஸ்வன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான்” என்றார்

பிறகு மன்னன் {அஸ்வபதி}, “தனது தந்தைக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் இளவரசன் சத்யவான், சக்தியும், புத்திசாலித்தனமும், மன்னிக்கும் தன்மையும் {பொறுமையும்}, வீரமும் கொண்டவனா?” என்று கேட்டான். நாரதர், “சக்தியில் சத்யவான் சூரியனைப் போன்றவன், ஞானத்தில் பிருஹஸ்பதியைப் போன்றவன்! அவன் தேவர்களின் தலைவனைப் {இந்திரனைப்} போன்ற வீரம் கொண்டவன், பொறுமையில் பூமாதேவி போன்றவன்!” என்றார். பிறகு அஸ்வபதி, “இளவரசன் சத்யவான் கொடையளிப்பதில் தாராளமானவனா? அந்தணர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனா? அவன் அழகானவனா? பெருந்தன்மை கொண்டவனா? காண இனிய தோற்றம் கொண்டவனா?” என்று கேட்டான்.

நாரதர், “தனது சக்திக்கேற்ப கொடையளிப்பதில், தியுமத்சேனனின் மகன் {சத்யவான்சங்கிருதியின் மகன் ரந்திதேவனைப் போன்றவன். உண்மை நிறைந்த பேச்சிலும், அந்தணர்களிடம் கொண்ட அர்ப்பணிப்பிலும், உசீநரனின் மகன் சிபியைப் போன்றவன். யயாதியைப் போன்ற பெருந்தன்மை கொண்டவன், சந்திரனைப் போன்ற அழகு கொண்டவன். தோற்றப்பொலிவில் அவன் அசுவினி இரட்டையர்களைப் போன்றவன். புலனடக்கம் கொண்ட அவன் {சத்யவான்} மென்மையானவன், வீரன் மற்றும் உண்மை நிறைந்தவன்! ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அவன் {சத்யவான்}, தனது நண்பர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருந்து, வன்மம் விலக்கி, அடக்கமானவனாகவும் பொறுமையுள்ளவனாகவும் இருக்கிறான். உண்மையில் சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், பெரும் தவத்தகுதிகள் படைத்தவர்களும், மேன்மையான குணம் கொண்டவர்களும், அவன் எப்போதும் தனது நடத்தையில் சரியாக இருப்பவன் என்றும், பெருமை உறுதியாக அவனது புருவத்தில் அமர்ந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள்” என்றார்.

இதைக் கேட்ட அஸ்வபதி, “ஓ! மதிப்பிற்குரிய தவசியே {நாரதரே}, அவன் அனைத்து அறங்களையும் கொண்டிருக்கிறான் என்று நீர் எனக்குச் சொல்கிறீர்! இப்போது, உண்மையில் அவனுக்கு {சத்யவானுக்கு }ஏதாவது குறைகள் இருந்தால் எனக்குச் சொல்லும்” என்று கேட்டான். அதற்கு நாரதர், “அவனது அனைத்து அறங்களையும் மூழ்கடிக்கும் ஒரே ஒரு குறை அவனிடம் இருக்கிறது. முயற்சிகளில் பெரிய முயற்சியைச் செய்தாலும், அந்தக் குறை வெல்ல முடியாததாக இருக்கிறது. அவனிடம் ஒரே ஒரு குறைதான் உள்ளது, வேறு எதுவும் கிடையாது. குறுகிய வாழ்நாள் கொண்ட அந்தச் சத்யவான், இன்றிலிருந்து ஓராண்டுக்குள் தனது உடலைக் கைவிடுவான்!” என்றார் {நாரதர்}.

அந்தத் தவசியின் {நாரதரின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த மன்னன் {அஸ்வபதி}, “ஓ! சாவித்ரி வா. ஓ! அழகு காரிகையே, நீ சென்று வேறொரு தலைவனைத் தேர்ந்தெடுப்பாயாக! (இந்த இளைஞனிடம்) அவனது தகுதிகளையெல்லாம் மீறி ஒரு பெரும் குறை இருக்கிறது. தேவர்களாலும் மதிக்கப்படும் சிறப்புமிக்க நாரதர், இன்னும் ஓராண்டுக்குள் சத்தியவான் தனது உடலைக் கைவிடுவான் என்றும், அவனது நாட்கள் எண்ணப்படுகின்றன என்றும் சொல்கிறார்!” என்றான். தன் தந்தை {அஸ்வபதி} சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்ட சாவித்ரி, “மரணம் நேரிடுவது ஒரு முறையே; ஒரு மகள் {திருமணம் செய்து) கொடுக்கப்படுவது ஒரு முறையே; நான் தானம் அளிக்கிறேன் என்று ஒரு மனிதன் சொல்ல முடிவது ஒரு முறையே! இம்மூன்று காரியங்களும் ஒரு முறையே நடக்க இயலும். உண்மையில், வாழ்நாள் குறைந்தோ, நீண்டோ, அறங்களைக் கொண்டோ அல்லது அவை அற்றோ, நான் எனது கணவரை ஒரு முறை தேர்ந்தெடுத்துவிட்டேன். இரண்டாவது முறை நான் தேர்ந்தெடுக்க மாட்டேன். முதலில் மனதில் தீர்மானம் செய்து, வார்த்தைகளால் அவற்றை வெளிப்படுத்தி, பிறகு பயிற்சிக்கு {செயல்பாட்டுக்கு} கொண்டு வரப்படுகிறது. இதற்கு எனது மனமே ஓர் உதாரணமாகும்! {என் மனமே பிரமாணமாகும்}” என்றாள்.

பிறகு நாரதர், “ஓ! மனிதர்களில் சிறந்தவனே {அஸ்வபதி}, உனது மகள் சாவித்ரியின் இதயம் தடுமாறவில்லை! அறத்தின் பாதையில் இருந்து அவளை எந்த வழியிலும் தடுமாறச் செய்ய இயலாது! சத்யவானிடம் இருக்கும் அறங்கள் {நல்லொழுக்கங்கள்} வேறு எந்த மனிதனிடமும் கிடையாது. எனவே, உனது மகளை {சாவித்ரியை சத்யவானுக்கு} அளிப்பதை நான் அங்கீகரிக்கிறேன்!” என்றார். அதற்கு அந்த மன்னன் {அஸ்வபதி}, “ஓ! சிறப்புமிக்கவரே, உமது வார்த்தைகள் உண்மையாதலால், நீர் சொல்வதற்குக் கீழ்ப்படியாமல் இருக்கக்கூடாது. நீர் எனது குருவாக இருப்பதால், நீர் சொன்னவாறே நான் நடந்து கொள்வேன்!” என்றான். நாரதர், “உனது மகளான சாவித்ரியை அளிப்பது {அளிக்கும் சடங்கு} அமைதியுடன் நடைபெறட்டும்! நான் சொல்கிறேன். நீங்கள் அனைவரும் அருளப்பட்டிருங்கள்!” என்றார்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன நாரதர் வானத்தில் எழுந்து சொர்க்கத்திற்குச் சென்றார். மறுபுறம், தனது மகளின் {சாவித்ரியின்} திருமணத்திற்கான ஏற்பாடுகளை மன்னன் {அஸ்வபதி} செய்யத் தொடங்கினான்.

சத்யவான் சாவித்ரி திருமணம்! – வனபர்வம் பகுதி 293-காட்டில் வாழ்ந்த சால்வ மன்னன் தியுமத்சேனனின் ஆசிரமத்திற்கு மத்ர மன்னன் அஸ்வபதி சென்று, சாவித்ரியைச் சத்தியவானுக்குக் கொடுத்துத் திருமணத்தை நடத்தி தன் நகருக்குத் திரும்பியது; சாவித்ரி நல்ல மருமகளாகவும், நல்ல மனைவியாகவும் சால்வ ராஜகுடும்பத்துக்கு மனநிறைவைக் கொடுத்தது..

“மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “தனது மகளின் {சாவித்ரியின்} திருமணம் குறித்த (நாரதரின்) வார்த்தைகளைச் சிந்தித்துப் பார்த்த மன்னன் {அஸ்வபதி}, {தனது மகள் சாவித்ரியின்} திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான். முதிர்ந்த அந்தணர்களையும், புரோகிதர்களுடன் கூடிய ரித்விக்குகளையும் அழைத்துக்கொண்டு, ஒரு மங்களகரமான நாளில் தன் மகளுடன் கிளம்பினான். அந்தப் புனிதமான காட்டில் இருந்த தியுமத்சேனனின் ஆசிரமத்தை அடைந்த மன்னன் {அஸ்வபதி}, இருபிறப்பாளர்களை {பிராமணர்களைத்} துணைக்கு அழைத்துக் கொண்டு, {தேரில் இருந்து இறங்கி} நடந்து சென்று அந்த அரசமுனியை {தியுமத்சேனனை} அணுகினான். அங்கே அவன் {மன்னன் அஸ்வபதி} பெரும் ஞானம் கொண்ட அந்தக் குருட்டு ஏகாதிபதி {தியுமத்சேனன்}, ஓர் ஆச்சா {சால} மரத்தினடியில் பரப்பப்பட்ட, தர்ப்பை மெத்தையில் அமர்ந்திருப்பதைக் கண்டான். அந்த அரச முனியை {தியுமத்சேனனை} முறையாக வணங்கிய அந்த மன்னன் {அஸ்வபதி}, அடக்கத்துடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அதன்பேரில் அவனுக்கு ஆர்க்கியாவும், ஆசனமும், ஒரு பசுவும் கொடுத்த அந்த ஏகாதிபதி {தியுமத்சேனன்}, தன் அரசவிருந்தினனிடம் {அஸ்வபதியிடம்}, “உமது வருகைக்கான காரணம் யாது?” என்று வினவினான். இப்படிக் கேட்கப்பட்ட மன்னன் {அஸ்வபதி}, சத்யவான் குறித்த தனது நோக்கம் மற்றும் காரணங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தினான். பிறகு அஸ்வபதி, “ஓ! அரச முனியே {தியுமத்சேனரே}, இந்த அழகிய பெண், சாவித்ரி என்ற பெயர் கொண்ட எனது மகளாவாள். ஓ! அறநெறிகள் அறிந்தவரே, நமது {க்ஷத்திரிய} வகைக்கான வழக்கங்களின் படி எற்புடையதைச் செய்து, என்னிடம் இருந்து இவளை உமது மருமகளாகப் பெற்றுக் கொள்ளும்!” என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட தியுமத்சேனன் {அஸ்வபதியிடம்}, “நாட்டை இழந்து, காட்டை வசிப்பிடமாகக் கொண்டு, அறப்பயிற்சியில் ஈடுபட்டுவரும் நாங்கள் கட்டுப்பாடான வாழ்வுடன் துறவிகளாக வாழ்கிறோம். கானக வாழ்வுக்குத் தகாத உமது மகள் எப்படி இந்தக் காடுறை ஆசிரமத்தில் வாழ்ந்து {எதிர்வரும்} இன்னல்களைத் தாங்கிக் கொள்வாள்?” என்று கேட்டான் {தியுமத்சேனன்}.

அதற்கு அஸ்வபதி {தியுமத்சேனனிடம்}, “இன்பமும் துன்பமும் (நிலையற்றதாகிய அந்த இரண்டும்) வரும், போகும் என்பதை நானும், எனது மகளும் {சாவித்ரியும்} அறிந்திருக்கும்போது, இத்தகு வார்த்தைகளை என்னைப் போன்ற ஒருவனிடம் நீர் பயன்படுத்துவது தகாது! ஓ! மன்னா {தியுமத்சேனரே}, நான் மனதில் தீர்மானத்துடனே இங்கு வந்திருக்கிறேன். நட்பினால் நான் உம்மை வணங்கினேன்; எனவே, எனது நம்பிக்கையை அழிப்பது உமக்குத் தகாது! அன்பினால் உம்மிடம் வந்திருக்கும் என்னை அவமதிப்பதும் உமக்குத் தகாது! என்னுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள நீர் எனக்குச் சமமானவரும் தகுந்தவரும் ஆவீர். உண்மையில், நான் உம்மிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ளும் அளவுக்கு, உமக்குச் சமமானவனாகவும் தகுந்தவனாகவும் இருக்கிறேன். எனவே, எனது மகளை உமது மருமகளாகவும், நல்லவனான சத்யவானின் மனைவியாகவும் ஏற்றுக் கொள்ளும்” என்று சொன்னான். இந்த வார்த்தைகளைக் கேட்ட தியுமத்சேனன் {அஸ்வபதியிடம்}, “முன்பொரு காலத்தில் நான் உம்மிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ள விரும்பினேன். ஆனால், அதைத் தொடர்ந்து நான் எனது நாட்டை இழந்ததால் {கேட்கத்} தயங்கினேன். எனவே, நான் முன்பே விரும்பிய உமது விருப்பம், இந்த நாளே நடக்கட்டும். உண்மையில், நீர் எனது விருந்தாளியாக வரவேற்கப்படுகிறீர்” என்றான்.

பிறகு, அந்தக் காட்டின் ஆசிரமங்களில் வசித்த அனைத்து இருபிறப்பாளர்களையும் {பிராமணர்களையும்} அழைத்த அந்த இரு மன்னர்களும், முறையான சடங்குகளுடன் அந்த இணைப்பு விழாவை {திருமணத்தை} நடத்தினர். தகுந்த உடைகளுடனும், ஆபரணங்களுடனும் தனது மகளை {சாவித்ரியை} அளித்த அஸ்வபதி, பெரும் மகிழ்ச்சியுடன் தனது வசிப்பிடம் திரும்பினான். அனைத்து குணங்களையும் கொண்ட ஒரு மனைவியை அடைந்த சத்யவான், மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். தனது இதய விருப்பத்தின் படி கிடைத்த கணவனால் அவளும் {சாவித்ரியும்} பெருமகிழ்ச்சியடைந்தாள். தனது தந்தை {அஸ்வபதி} சென்ற பிறகு, தன் ஆபரணங்கள் அனைத்தையும் களைந்த அவள் {சாவித்ரி}, மரவுரியாலும், சிவப்பு வண்ணம் பூசப்பட்ட துணிகளையும் {காஷாய வஸ்திரங்களையும்} உடுத்திக் கொண்டாள்.

அவளது சேவைகளாலும், அறங்களாலும், அவளது மென்மையாலும், சுய மறுப்பாலும், அனைவருக்கும் ஏற்புடைய தனது செய்கைகளாலும் அவள் {சாவித்ரி} அனைவருக்கும் மனநிறைவைத் தந்தாள். ஆடைகளாலும், ஆபரணங்களாலும் அலங்கரித்து, தானே தனிப்பட்ட முறையில் தனது மாமியாரைக் கவனித்து, அவளை {தனது மாமியாரை} மனநிறைவு கொள்ளச் செய்தாள். தனது பேச்சை அடக்கி, தனது மாமனாரையே தெய்வமாக வழிபட்டு அவரையும் {தியுமத்சேனனையும்} மனநிறைவு கொள்ளச் செய்தாள். தேன் போன்ற தனது பேச்சாலும், அனைத்து வகை வேலையிலும் தான் கொண்ட நிபுணத்துவத்தாலும், சமநிலை கொண்ட மனநிலையாலும், தனிமையில் தனது காதல் குறிப்புகளாலும் தனது கணவனை {சத்யவானை} மனநிறைவு கொள்ளச் செய்தாள். இப்படியே, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் பக்தி கொண்ட கானக வாசிகள், தங்கள் ஆசிரமத்தில் வாழ்ந்து, சில காலம் தவப்பயிற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால், சாவித்ரியின் துன்பகரமான மனதில், இரவும் பகலும் நாரதரின் வார்த்தைகள்  ஒலித்துக்கொண்டே இருந்தன.”

சத்யவானைத் தொடர்ந்த சாவித்ரி! – வனபர்வம் பகுதி 294-திருமணம் முடிந்து ஒரு வருடம் முடிந்த தருவாயில், தனது தலைவனின் இறுதிக் காலம் நெருங்கியதை உணர்ந்த சாவித்ரி மூன்று நாள் விரதமிருப்பது; நான்காவது நாளில் காட்டுக்குள் செல்ல கோடரியுடன் புறப்பட்ட கணவனிடம், தானும் வருவதாகச் சொல்வது; அவளது மாமனார், மாமியாரிடம் அனுமதி பெறுமாறு சத்யவான் சொல்வது; சத்யவானின் பெற்றோர் சாவித்ரி அவனுடன் செல்ல அனுமதிப்பது.

“மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இப்படியே நெடுங்காலம் கழிந்த பிறகு, சத்தியவானுக்கு நியமிக்கப்பட்ட மரணக் காலம் வந்தது. நாரதர் சொன்ன வார்த்தைகள் சாவித்ரியின் மனதில் எப்போதும் இருந்ததால், அவள் நாட்கள் செல்லும்போதே அவற்றை {நாட்களை} எண்ணி வந்தாள். அன்றிலிருந்து நான்காவது நாள் தனது கணவன் {சத்யவான்} இறப்பான் என்பதை உறுதியாக அறிந்த அந்த மங்கை {சாவித்ரி} அல்லும்பகலும் நோன்பிருந்து திரிராத்ரா [1] {மூன்று இரவுகள்} விரதம் இருந்தாள். அவளது நோன்பைப் பற்றிக் கேட்ட மன்னன் {தியுமத்சேனன்} மிகவும் வருந்தி, சாவித்ரிக்கு இன்சொல் கூறும் வகையில், “ஓ! மன்னனின் மகளே {சாவித்ரி}, நீ நோற்கத் தொடங்கியிருக்கும் நோன்பு மிகவும் கடினமானது; தொடர்ச்சியாக மூன்று இரவுகள் {நாட்கள் என்றிருக்க வேண்டும்} உண்ணாதிருப்பது மிகவும் கடினமாகும்” என்றான் {தியுமத்சேனன்}.(திரயோதசியில் ஆரம்பித்து, பிரதமையில் முடிக்கும் நோன்பு. திரிராத்ரா நோன்பினால், நோற்கும் பெண்ணுடைய கணவனின் வாழ்நாள் வளரும்.)

இவ்வார்த்தைகளைக் கேட்ட சாவித்ரி, “தந்தையே {மாமனாரே தியுமத்சேனரே}}, நீர் வருந்தாதீர்! இந்த நோன்பை என்னால் நோற்க முடியும்! நிச்சயமாக நான் விடமுயற்சியுடன் இப்பணியை மேற்கொள்வேன். விடாமுயற்சியே நோன்பை வெற்றியுடன் முடிப்பதற்குக் காரணமாக இருக்கும்!” என்றாள். அவள் {சாவித்ரி} சொன்னதைக் கேட்ட தியுமத்சேனன், “விரதத்தைக் கைவிடு என்று, என்னால் ஒரு வகையிலும் சொல்லமுடியாது. மாறாக என்னைப் போன்ற ஒருவன், விரதத்தை நிறைவேற்று என்றே சொல்ல வேண்டும்” என்றான். இதை அவளிடம் சொன்ன உயர் ஆன்ம தியுமத்சேனன் {பிறகு} நிறுத்திக் கொண்டான். விரதத்தைத் தொடர்ந்த சாவித்ரி மரப்பொம்மையைப் போல (மெலிந்து) காணப்பட்டாள். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அவளது கணவன் நாளை இறந்துவிடுவான் என்று நினைத்துத் துயருற்றிருந்த சாவித்ரி, {நின்று கொண்டே} உண்ணாவிரதத்தைக் கடைப்பிடித்து, மிதமிஞ்சிய கவலையுடன் அந்த இரவைக் கழித்தாள்.

இரண்டு கை {இரண்டு முழ} உயரத்திற்குச் சூரியன் உதித்தெழுந்த போது, சாவித்ரி தனக்குள், “இன்றே அந்த நாள்” என்று நினைத்துக் கொண்டு, தனது காலைச் சடங்குகளை முடித்து, சுடர்விடும் நெருப்புக்கு காணிக்கைகளை அளித்தாள். முதிர்ந்த அந்தணர்களையும், தனது மாமனார், மாமியாரையும் வணங்கிய அவள் {சாவித்ரி}, அவர்கள் முன்னிலையில் கூப்பிய கரங்களுடன் புலன்களை ஒருமுகப்படுத்தினாள். ஆசிரமத்தில் தங்கியிருந்த துறவிகள் அனைவரும், சாவித்ரியின் நன்மையைக் கருதி, அவள் {சாவித்ரி} கைம்மை {விதவையாகி} துன்பம் அடையக்கூடாது என்ற மங்கல வாழ்த்துகளை உச்சரித்தனர். ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த சாவித்ரி, துறவிகளின் அவ்வார்த்தைகளை “அப்படி ஆகட்டும்” என்று மனப்பூர்வமாக ஏற்றாள். நாரதரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த அந்த மன்னனின் மகள் {சாவித்ரி}, அந்தக் காலத்தையும், நேரத்தையும் எதிர்பார்த்திருந்து காத்திருந்தாள்.

ஓ! பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, பிறகு, மனம் நிறைந்த அவளது மாமனாரும் மாமியாரும் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அந்த இளவரசியிடம், “குறித்த நோன்மை நீ முடித்துவிட்டாய். நீ உணவு உட்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது; எனவே, எது சரியானதோ அதைச் செய்!” என்றனர். அதற்குச் சாவித்ரி, “எனது நோன்பை இப்போது முடித்துக் கொண்ட நான், சூரியன் கீழே இறங்கியதும் உண்பேன். இதுவும் எனது இதயத்தின் தீர்மானமே. இது எனது நோன்புமாகும்!” என்றாள்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இப்படித் தனது உணவைக் குறித்துச் சாவித்ரி பேசிய போது, சத்யவான், கோடரியை எடுத்துத் தோள்களில் இட்டு, காட்டுக்குப் புறப்பட்டான். அதன்பேரில் சாவித்ரி தனது கணவனிடம், “நீர் தனியாகச் செல்வது தகாது! நானும் உம்மோடு வருகிறேன். உம்மிடம் இருந்து பிரிவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது!” என்றாள். அவளது வார்த்தைகளைக் கேட்ட சத்யவான், “இதற்கு முன்னர் நீ காட்டுக்குச் சென்றதில்லை. ஓ பெண்ணே {சாவித்ரி}, காட்டுப்பாதைகள் கடப்பதற்குக் கடினமானவையாகும்! மேலும் உனது நோன்பின் காரணமாக உண்ணாவிரதம் இருந்து நீ மெலிந்திருக்கிறாய். எனவே, நீ கால்களால் எவ்வாறு நடப்பாய்?” என்று கேட்டான். இப்படிச் சொல்லப்பட்ட சாவித்ரி, “நான் விரதத்தின் தளர்வை உணரவில்லை; சோர்வையும் உணரவில்லை. {உம்முடன்} வருவதற்கு நான் எனது மனதைத் தயார் செய்து விட்டேன். எனவே, என்னைத் தடுப்பது உமக்குத் தகாது!” என்றாள். அதற்குச் சத்யவான், “நீ வருவதற்கு விரும்பினால், நான் உனது விருப்பத்தை நிறைவேற்றுவேன். எனினும், தவறு செய்துவிட்டதாக நான் குற்ற உணர்வுக்கு ஆளாகாதவாறு, நீ எனது பெற்றோரிடம் அனுமதி பெறு!” என்றான்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இப்படித் தனது தலைவனால் சொல்லப்பட்ட பெரும் நோன்புகள் நோன்ற சாவித்ரி, தனது மாமனாரையும், மாமியாரையும் வணங்கி, அவர்களிடம், “பழங்களைப் பெற எனது கணவர் காட்டுக்குச் செல்கிறார். எனது மரியாதைக்குரிய மாமியார் மற்றும் மாமனாரின் அனுமதியுடன் நான் அவருடன் செல்வேன். இன்று அவரிடம் இருந்து பிரிவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. உங்கள் மகன் வேள்வி நெருப்புக்காவும், மரியாதைக்குரிய பெரியவர்களுக்காகவும் செல்கிறார். எனவே, உங்கள் அறிவுரையால் அவரை {தீர்மானத்தை} மாற்ற முடியாது. உண்மையில, வேறு எந்தக் காரியத்திற்காகவும் அவர் காட்டுச்சென்றால் அவருக்கு அறிவுரை கூறலாம். என்னைத் தடுக்காதீர்கள்! நான் அவருடன் {சத்யவானுடன்} காட்டுக்குள் செல்வேன். நான் ஆசிரமத்தை விட்டு வெளியே சென்று குறைந்தது ஒரு வருடம் ஆகிறது. உண்மையில், பூத்துக்குலுங்கும் வனத்தைக் காண நான் மிகவும் விரும்புகிறேன்!” என்றாள்.

சொல்லப்பட்ட இவ்வார்த்தைகளைக் கேட்ட தியுமத்சேனன், “சாவித்ரி, அவளது தந்தையால், எனக்கு மருமளாக அளிக்கப்பட்டது முதல், எப்போதும் என்னிடம் தனக்கெனக் கோரும் வார்த்தைகளை என்னிடம் பேசியதாக எனக்கு நினைவில்லை. எனவே, எனது மருமகளின் விருப்பம் இக்காரியத்தில் நிறைவேறட்டும். எனினும், ஓ மகளே {சாவித்ரி}, சத்யவானின் வேலை புறக்கணிக்கப்படாத வகையில் நீ நடந்து கொள்ள வேண்டும்!” என்றான்

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இருவரின் அனுமதியையும் பெற்ற சிறப்புமிக்கச் சாவித்ரி, இதயத்தில் துன்பத்தால் வருந்தினாலும் புன்னகையுடன் தனது தலைவனுடன் சென்றாள். அகன்ற கண்களைக் கொண்ட அந்தப் பெண், அழகிய காட்சிகளையும், மயில் கூட்டம் நிறைந்த கானகத்தையும் கண்டவாறே சென்று கொண்டிருந்தாள். சத்யவான், சாவித்ரியிடம் இனிமையாக, “புனித ஊற்றுகள் கொண்ட இந்த ஆறுகளையும், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த அற்புத மரங்களையும் பார்!” என்றான். ஆனால், குற்றமற்ற அந்தச் சாவித்ரி, தனது தலைவனின் அனைத்து மனநிலைகளிலும் அவனைக் கவனித்தும், தெய்வீக தவசியின் {நாரதரின்} வார்த்தைகளை நினைவு கூர்ந்தும், தனது கணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கருதினாள். இரண்டாகப் பிளந்த இதயத்துடன் இருந்த அந்த மங்கை {சாவித்ரி}, தனது தலைவனுக்கு மென்மையாகப் பதில் கூறி, அந்தக் காலத்தை {காலனை} எதிர்பார்த்து அவனைத் {சத்யவானைத்} தொடர்ந்து சென்றாள்.

சத்யவானை மீட்ட சாவித்ரி! – வனபர்வம் பகுதி 295அ-பழங்களைப் பறித்து, மரக்கிளைகளை வெட்டிய சத்யவானுக்கு வியர்த்துப் போனதால், தலைவலி வந்தது; தூங்கப்போவதாகச் சொன்ன சத்தியவானின் தலையைச் சாவித்ரி தனது மடியில் கிடத்தியது; சாவித்ரி யமனைக் கண்டது; சாவித்ரிக்கும் யமனுக்கு இடையில் நடந்த உரையாடல்; சாவித்ரி பெற்ற நான்கு வரங்கள்; யமனிடம் ஐந்தாவது வரமாகச் சாவித்ரி சத்யவானின் உயிர்மீட்பைக் கேட்பது..

“மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “பலவானான சத்யவான் பிறகு தனது மனைவியையும் {சாவித்ரியையும்} அழைத்துக் கொண்டு, பழங்களைப் பறித்து, தனது கூடையை அவற்றால் நிரப்பிக் கொண்டான். பிறகு அவன் {சத்யவான்} மரங்களின் கிளைகளை விழச்செய்யத் தொடங்கினான் {வெட்டத் தொடங்கினான்}. அப்படி அவன் {சத்யவான்} வெட்டிக் கொண்டிருந்தபோது, அவனுக்கு {சத்யவானுக்கு} வேர்க்கத் தொடங்கியது. அவ்வேலையின் விளைவாக, அவனுக்குத் தலை வலிக்கத் தொடங்கியது. கடும் உழைப்பால் பாதிக்கப்பட்ட அவன் தனது அன்பிற்குரிய மனைவியை {சாவித்ரியை} அணுகி, அவளிடம், “ஓ! சாவித்ரி, இந்தக் கடுமையான வேலையின் காரணமாக எனக்குத் தலை வலிக்கிறது. எனது அங்கங்கள் அனைத்தும், எனது இதயமும் மிகவும் களைத்துப் போய்விட்டன! ஓ! மிதமாகப் பேசுபவளே {சாவித்ரி}, எனக்கு உடல்நிலை சரியில்லை என்று நினைக்கிறேன். எண்ணிலடங்கா அம்புகளால் எனது தலை துளைக்கப்படுவதைப் போல உணர்கிறேன். எனவே, ஓ! மங்களகரமான மங்கையே {கல்யாணி}, நிற்பதற்கும் சக்தியற்ற நான் உறங்க விரும்புகிறேன்” என்றான் {சத்யவான்}.

இவ்வார்த்தைகளைக் கேட்ட சாவித்ரி விரைவாக முன்னேறி, தனது கணவனை {சத்யவானை} அணுகி, தரையில் அமர்ந்து, அவனது தலையைத் தனது மடியில் வைத்தாள். பிறகு நாரதரின் வார்த்தைகளை நினைத்துப் பார்த்த அந்த ஆதவற்ற பெண் {சாவித்ரி}, அந்த நாளின் (நிர்ணயிக்கப்பட்ட) பிரிவு, முகூர்த்தம் மற்றும் கணத்தைக் கணிக்கத் தொடங்கினாள். அடுத்த நொடியில் அவள் {சாவித்ரி}, செவ்வாடை உடுத்தி, தலையில் கிரீடத்துடன் உள்ள ஒருவனைக் கண்டாள். அவனது பெரிய உடல் சூரியனைப் போன்று பிரகாசித்தது. கரிய நிறமும், சிவந்த கண்களும் கொண்ட அவன் {யமன்}, கையில் சுருக்குக் கயிறை {பாசத்தை} வைத்துக் கொண்டு பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தான். அவன் {யமன்}, சத்யவானுக்கு அருகில் நின்று கொண்டு அவனை {சத்யவானை} நிலைத்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனைக் {யமனைக்} கண்ட சாவித்ரி, தனது கணவனின் தலையை மெதுவாகத் தரையில் வைத்து, திடீரென எழுந்து, நடுங்கும் இதயத்துடன் துயர் நிறைந்த இவ்வார்த்தைகளைப் பேசினாள். அவள் {சாவித்ரி}, “மனிதசக்திக்கு அப்பாற்பட்ட உனது உருவத்தைக் கண்டு, நீ ஒரு தேவன் என்பதாகக் கொள்கிறேன். உனக்கு விருப்பமிருந்தால், ஓ! தேவர்களின் தலைவா, நீ யார் என்றும், நீ என்ன செய்யக் கருதுகிறாய் என்றும் என்னிடம் சொல்” என்றாள். அதன் பேரில் யமன் {சாவித்ரியிடம்}, “நீ எப்போதும் உனது கணவனுக்கு அர்ப்பணிப்போடு இருக்கிறாய், மேலும் தவத்தகுதி கொண்டவளாகவும் இருக்கிறாய். இதன்காரணமாகவே நான் உன்னோடு உரையாடுகிறேன். ஓ! மங்களகரமானவளே, நான் யமன் என்று அறிந்து கொள். மன்னனின் {தியுமத்சேனனின்} மகனான இந்த உனது தலைவன் சத்யவானின் நாட்கள் முடிந்துவிட்டன {வாழ்ந்நாள் [ஆயுள்] முடிந்துவிட்டது}. எனவே, நான் இவனை எனது சுருக்குக் கயிற்றில் {பாசத்தில்} கட்டி எடுத்துச் செல்லப் போகிறேன். இது எனது வேலை {கடமை} என்பதை அறிந்து கொள்!” என்றான். இந்த வார்த்தைகளுக்கு, சாவித்ரி {யமனிடம்}, “ஓ! வழிபடத்தகுந்தவனே! மனிதர்களைக் கொண்டு செல்ல உனது தூதர்களே வருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஓ! தலைவா, பிறகு ஏன் நீயே நேரடியாக வந்திருக்கிறாய்?” என்று கேட்டாள் {சாவித்ரி}.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அவளால் {சாவித்ரியால்} இப்படிச் சொல்லப்பட்ட பித்ருக்களின் சிறப்புமிக்கத் தலைவன் {யமன்}, அவளை இணங்க வைக்கும் நோக்கில், தனது நோக்கங்கள் குறித்த உண்மை அனைத்தையும் அவளுக்கு வெளிப்படுத்தத் தொடங்கினான். யமன் {சாவித்ரியிடம்}, “இந்த இளவரசன் {சத்யவான்}, அறங்களையும், மேனி அழகையும் கொண்டவன். சாதனைகள் கடலளவு கொண்டவன். எனது தூதர்களால் கொண்டு போகத் தகாதவன். எனவேதான், நானே நேரடியாக வந்தேன்!” என்றான். இதைச் சொன்ன யமன் தனது முக்கியச் சக்தியின் மூலம் சத்யவானின் உடலில் இருந்து, {யமனின்} முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருந்த கட்டைவிரலளவு உள்ள ஒருவனைத் தனது சுருக்குக் கயிற்றால் {பாசத்தால்} கட்டி வெளியே இழுத்தான். சத்யவானின் உயிர் இப்படி எடுக்கப்பட்ட போது, அவனது உடல், சுவாசமற்று, பிரகாசமிழந்து, அசைவிழந்து, காணச் சகியாத படி இருந்தது. சத்யவானின் உயிர் சாரத்தைக் கட்டி எடுத்த யமன், தென்திசையில் முன்னேறினான். அதன்பேரில், தனது தலைவனுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்தவளும், தனது நோன்புகளில் வெற்றி மகுடம் தரித்தவளும், துயரத்தில் மூழ்கிய இதயம் கொண்டவளுமான மேன்மையான சாவித்ரி யமனைத் தொடர்ந்து செல்லத் தொடங்கினாள்.

இதனால் யமன், “ஓ! சாவித்ரி, நில்! திரும்பிச் செல். உனது தலைவனின் {சத்யவானின்} ஈமக்கடன்களைச் செய்! நீ உன்னுடைய தலைவனிடம் கொண்ட அனைத்துக் கடமைகளிலிருந்தும் விடுபட்டுவிட்டாய். எதுவரை வரமுடியுமோ அதுவரை நீ வந்துவிட்டாய்” என்றான். சாவித்ரி, “எனது கணவர் எங்கே கொண்டு செல்லப்படுகிறாரோ, அல்லது அவர் எங்குப் போகிறாரோ, அங்கே நான் அவரைத் தொடர்ந்து செல்வேன். இது எனது நித்திய வழக்கமாகும் {கடனாகும்}. என் தவத்தின் அறத்தால், மூத்தவர்களிடம் நான் கொண்ட மரியாதையால், எனது தலைவன் மீது நான் கொண்ட பாசத்தால், நான் நோற்ற நோன்புகளால், உனது உதவியாலும் கூட நான் வருவது தடுக்கப்படவில்லை. மற்றொருவருடன் ஏழு அடிகள் சேர்ந்து நடப்பதின் மூலம், அந்த மற்றவனின் துணை கொண்டதால், அவனுடன் ஒரு நட்பு ஒப்பந்தமாகிறது என்று உண்மை ஞானம் கொண்ட ஞானிகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (நான் உன்னிடம் கொண்ட) அந்த நட்பைக் கருதி, நான் உன்னிடம் ஒன்றைப் பேசுகிறேன். அதை நீ கேள்.

கல்வியுடன் கூடிய மணமாகாநிலை {பிரம்மச்சரியம்} (1),
இல்லறம் {கிரகஸ்தம்} (2),
காட்டில் ஓய்ந்திருத்தல் {வானப்பிரஸ்தம்} (3),
உலகைத் துறத்தல் {சந்நியாசம்} (4)

ஆகிய தொடர்ச்சியான நான்கு வகை வாழ்வுகளை மேற்கொண்டாலும் தங்கள் ஆன்மாவைக் கட்டுக்குள் வைக்காதவர்கள் எந்தத் தகுதியையும் அடைவதில்லை. உண்மை ஞானம் கொண்டதே ஆன்மத்தகுதி என்று அழைக்கப்படுகிறது. எனவே, ஆன்மத்தகுதியே {ஆத்மஞானமே} அனைத்திலும் முதன்மையானது என்றும், தொடர்ச்சியாக வரும் நான்கு வகை வாழ்வின் வழிகள் {முதன்மையானவை} அல்ல என்றும் ஞானிகள் தீர்மானித்துள்ளனர். நான்கு வகையான இவற்றில் ஒன்றின் கடமைகளையாவது ஞானிகளின் வழிகாட்டுதலின் படி ஏற்புடைய வகையில் பயின்றால். ஞானிகளின் வழியில் உடன்படும் இந்த நான்கு வகையில் ஏதாவதொன்றின் கடமைகளைப் பயில்வதன் மூலம், நாம் உண்மையான தகுதியை {ஞானத்தை} அடைந்துவிடுகிறோம். எனவே, நாம் கல்வியுடன் கூடிய மணமாகா நிலையான {பிரம்மச்சரியம்}, இரண்டாவது வகையையும் {முதல் வகை என்றிருக்க வேண்டும், ஆனால் ஆங்கிலத்தில் இப்படித்தான் இருக்கிறது}, துறவு என்ற மூன்றாவது வகையையும் {நான்காவது வகை என்றிருக்க வேண்டும்) விரும்பவில்லை. இதற்காகவே ஞானிகள், ஆன்மத்தகுதியே {ஆத்மஞானமே} அனைத்திலும் முதன்மையானது என்று தீர்மானித்திருக்கிறார்கள்!” என்றாள்.

அவளது வார்த்தைகளைக் கேட்ட யமன் {சாவித்ரியிடம்}, “நீ திரும்பு! ஒரு காரணத்தை அடிப்படையாக வைத்து, சரியான எழுத்துகள், உச்சரிப்புகளைக் கொண்டு அமைக்கப்பட்ட உனது இந்த வார்த்தைகளைக் கேட்டு நான் மகிழ்கிறேன். ஓ! களங்கமற்ற குணங்கள் கொண்டவளே {சாவித்ரி}, உனது கணவனின் வாழ்வைத் {உயிரைத்} தவிர வேறு ஏதேனும் வரத்தை நீ கேள். நீ கேட்கும் எந்த வரத்தையும் நான் அளிப்பேன்!” என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட சாவித்ரி, “நாட்டை இழந்து, பார்வையும் இழந்து, எங்கள் காடுறை ஆசிரமத்தில் ஓய்வு வாழ்வை வாழ்கிறார் எனது மாமனார். உன் ஆதரவால் அந்த மன்னன் {தியுமத்சேனன்} தனது பார்வையைப் பெற்று, நெருப்பைப் போன்றோ சூரியனைப் போன்றோ பலத்தைப் பெறட்டும்!” என்றாள்.

யமன் {சாவித்ரியிடம்}, “குற்றமற்ற குணங்கள் கொண்டவளே, இவ்வரத்தை நான் உனக்கு அளிக்கிறேன்! நீ சொன்னவாறே அது நடக்கும்! உனது பயணத்தால் நீ களைத்திருப்பதாகத் தெரிகிறது. எனவே நீ திரும்பு! சோர்வுற்றிருக்கும் நீ மேலும் பாதிப்படையாதே!” என்றான்.

அதற்குச் சாவித்ரி {யமனிடம்}, “எனது கணவர் அருகில் இருக்கும் போது களைப்பை நான் எப்படி உணர்வேன்? எனது கணவர் எங்கிருக்கிறாரோ, நிச்சயமாக அதுவே எனது இடமும் ஆகும். நீ எனது கணவரை எங்கே கொண்டு போகிறாயோ, அங்கே நானும் வருவேன்! ஓ! தேவர்களின் தலைவா {யமனே}, நான் சொல்வதை மீண்டும் கேள்! பக்திமானுடனான ஒரேயொரு நேர்காணல் கூட மிகவும் விரும்பத்தக்கதாகும்; அவர்களுடன் {பக்திமான்களுடனான} நட்பு என்பது அதைவிட மேலானதாகும். அறம்சார்ந்தவர்களுடனான {நல்லவர்களுடனான} உறவு கனியற்றதாக {பலனற்றதாக} இருக்க முடியாது. எனவே, நெறிசார்ந்தவர்களின் துணையுடனே ஒருவன் வாழ வேண்டும்” என்றாள்.

யமன் {சாவித்ரியிடம்}, “பயனுள்ள வழிமுறைகள் நிறைந்திருக்கும் நீ சொன்ன வார்த்தைகள், இதயங்களை மகிழ்விக்கும், கற்றோரின் ஞானத்தை மேம்படுத்தும். எனவே, ஓ! பெண்ணே {சாவித்ரியே}, சத்யவானின் வாழ்வைத் தவிர இரண்டாவதாக இன்னொரு வரத்தை கேள்!” என்றான். சாவித்ரி, “சில காலத்துக்கு முன்னால், ஞானமும், புத்தி கூர்மையும் கொண்ட எனது மாமனார் தனது நாட்டை இழந்தார். அந்த ஏகாதிபதி {தியுமத்சேனர்} மீண்டும் தனது நாட்டை அடையட்டும். எனக்கு மேன்மையான அவர் தனது கடமைகளைக் கைவிடாதிருக்கட்டும்! இதுவே நான் கேட்கும் இரண்டாவது வரம்!” என்றாள். யமன், “விரைவில் அம்மன்னன் {தியுமத்சேனன்} தனது நாட்டை மீண்டும் பெறுவான். அவன் தனது கடமைகளில் இருந்து எப்போதும் விழ மாட்டான். இப்படியே, ஓ! மன்னனின் மகளே நான் உனது விருப்பத்தை நிறைவேற்றிவிட்டேன்! இப்போது நீ திரும்பு! மேலும் எதிர்வரும் சிரமத்தை அனுபவிக்காதே!” என்றான்.

அதற்குச் சாவித்ரி {யமனிடம்}, “உனது தீர்ப்புகளின் மூலம் அனைத்து உயிர்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. உனது தீர்ப்புகளாலேயே, {விதியின் பயனாகவே} அவற்றை எடுத்துச் செல்கிறாய். உனது விருப்பத்தின் படி அல்ல. எனவே, ஓ! தெய்வமே, ஓ! தெய்வீகமானவனே, மக்கள் உன்னை யமன் என்று அழைக்கின்றனர்! நான் சொல்லும் வார்த்தைகளை நீ கேள்! சிந்தனையாலோ, வார்த்தையாலோ, செயலாலோ காயப்படுத்தாமல், அன்பு செலுத்தி, அவரவர் பெற வேண்டியதைக் கொடுப்பதே அனைத்து உயிர்களின் நன்மையை நோக்கிச் செய்யப்படும் {உனது} நித்திய கடமை ஆகும். இவ்வுலகைப் பொறுத்தமட்டில், அனைத்தும் இவ்வாறே (எனது கணவரைப் போலவே} இருக்கிறது. மனிதர்கள் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் அற்றிருக்கிறார்கள். எனினும், நல்லவர்கள் தங்கள் பாதுகாப்பைக் கோரும் எதிரிகளுக்குக் கூடக் கருணை காட்டுவார்கள்!” என்றாள். யமன், “தாகம் கொண்ட ஆன்மாவுக்கு நீரைப் போல, உன்னால் எனக்குச் சொல்லப்பட்ட இவ்வார்த்தைகள் இருக்கின்றன. எனவே, ஓ! அழகான பெண்ணே {சாவித்ரி}, மீண்டும் சத்யவானின் உயிரைத் தவிர வேறு ஏதேனும் வரத்தைக் கேள்!” என்றான்.

இந்த வார்த்தைகளுக்குச் சாவித்ரி {யமனிடம்}, “பூமியின் தலைவரான எனது தந்தை {அஸ்வபதி} மகன்களற்று இருக்கிறார். அவர் தனது இடுப்பில் நூறு மகன்களைப் {ஔரஸ புத்திரர்களைப்} பெற்று, அவரது {என் தந்தையான மன்னன் அஸ்வபதியின்} குலம் தழைக்க வேண்டும் என்பதே நான் உன்னிடம் கேட்கும் மூன்றாவது வரமாகும்” என்று மறுமொழி கூறினாள்.

யமன் {சாவித்ரியிடம்}, “ஓ! மங்களகரமான பெண்ணே {கல்யாணி}, உனது தகப்பன் {மன்னன் அஸ்வபதி}, நூறு சிறப்புமிக்க மகன்களைப் பெறுவான். அவர்கள் உனது தந்தையின் குலத்தைத் தழைக்கச் செய்வார்கள்! ஓ! மன்னனின் மகளே {சாவித்ரி}, இப்போது நீ உனது விருப்பதை அடைந்தாய். திரும்பிச் செல். போதுமான அளவுக்கு நெடுந்தூரம் வந்துவிட்டாய்!” என்றான். சாவித்ரி, “எனது கணவருக்கு அருகில் இருப்பதால், நான் நடந்த வந்த வழியின் தொலைவை நான் உணரவில்லை. உண்மையில், எனது மனம் இன்னும் நீண்ட வழிகளில் விரைகிறது. {இப்படிச்} சென்று கொண்டிருக்கும்போதே நான் தற்போது சொல்லும் வார்த்தைகளையும் கேள்! நீ விவஸ்வத்தின் {விவஸ்வானின் = சூரியனின்} பலமிக்க மகனாவாய். இதன் காரணமாகவே நீ ஞானிகளால் வைவஸ்வதன் என்று அழைக்கப்படுகிறாய். ஓ! தலைவா, படைக்கப்பட்ட அனைத்திற்கும் பொதுவான சட்டத்துக்கு உட்பட்டு நீ செயல்படுவதாலேயே நீ அறத்தலைவனாக {தர்மத்தின் தலைவனாக = தர்மராஜாவாக = தர்மதேவனாக} நியமிக்கப்பட்டிருக்கிறாய்! நேர்மையானவர்களிடம் ஒருவன் கொள்ளும் நம்பிக்கையை, தன்னிடத்தில் கூட ஒருவனும் கண்டுகொண்டு இளைப்பாறுவதில்லை. எனவே, அனைவரும் நேர்மையானவர்களுடனான நெருக்கத்தை அதிகம் விரும்புகின்றனர். இதயத்தின் நற்குணம் மட்டுமே அனைத்து உயிரினங்களிடமும் நம்பிக்கையைத் தூண்டுகிறது. குறிப்பாக இதன்காரணமாகவே மக்கள் நேர்மையானவர்களை நம்புகிறார்கள்” என்றாள்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட யமன் {சாவித்ரியிடம்}, “ஓ அழகான பெண்ணே {சாவித்ரி}, உன்னைத் தவிர வேறொருவரிடமும் இவ்வார்த்தைகளை நான் கேட்டதில்லை; உனது இந்தப் பேச்சால் நான் பெரிதும் மகிழ்கிறேன். சத்யவானின் உயிரைத் தவிர நான்காவதாக ஒரு வரத்தைப் பெற்று, நீ உன் வழியே செல்!” என்றான். பிறகு சாவித்ரி, “நான் மற்றும் சத்யவான் {இவர்} ஆகிய எங்கள் இருவரின் இடைகளைக் {loins} கொண்டு, பலமும், பராக்கிரமமும், {எங்கள்} குலத்தைத் தழைக்க வைக்கும் திறனும் கொண்ட நூறு மகன்கள் {ஔரஸபுத்திரர்கள் = இடையில் பிறக்கும் பிள்ளைகள்} பிறக்கட்டும்! இதுவே நான் உன்னிடம் இரந்து கேட்கும் நான்காவது வரமாகும்!” என்றாள். அவளது இந்த வார்த்தைகளைக் கேட்ட யமன், “ஓ! பெண்ணே, பலமும், பராக்கிரமும் கொண்டு, பெரும் மகிழ்ச்சியில் உன்னை ஆழ்த்தும் நூறு மகன்களை நீ பெறுவாய்! ஓ! மன்னனின் மகளே, மேலும் நீ களைப்படையாதே! திரும்பிப் போ! நீ ஏற்கனவே வெகுதூரம் வந்துவிட்டாய்!” என்றான்.

இப்படிச் சொல்லப்பட்ட சாவித்ரி {யமனிடம்}, “நேர்மையாக இருப்பவர்கள் எப்போதும் நித்திய அறநெறிகளையே பயில்கிறார்கள்! பக்திமான்களுடனான பக்திமான்களின் தொடர்பு கனியற்றதாகாது {பயனற்றதாகாது}! பக்திமானர்களால், அந்தப் பக்திமான்களுக்கு ஆபத்து ஏற்படுவதில்லை. நேர்மையானவர்களே தங்கள் சத்தியத்தால் வானத்தில் சூரியனை நகர வைக்கிறார்கள். அந்த நேர்மையானவர்களே உலகத்தையும் தங்கள் துறவால் தாங்குகிறார்கள்! ஓ! மன்னா, நேர்மையானவர்களை நம்பியே கடந்த காலமும் எதிர் காலமும் இருக்கிறது! எனவே, நேர்மையானவர்களின் துணையுடன் இருக்கும் நேர்மையானவர்கள் ஒருபோதும் உற்சாகமற்று இருப்பதில்லை. இதுவே நல்லவர்கள் மற்றும் நேர்மையானவர்களின் நித்திய பயிற்சி என்பதை அறிந்திருக்கும் நேர்மையானவர்கள், எந்தக் கைம்மாறும் எதிர்பாராமல் பிறருக்கு நன்மையைச் செய்கின்றனர். ஒரு நற்காரியத்தை நல்லவர்களும் அறம்சார்ந்தவர்களும் எப்போதும் தூக்கி எறிய மாட்டார்கள். ஆர்வமோ, கண்ணியமோ இத்தகு செயல்களால் பாதிக்கப்படுவதில்லை. இத்தகு நடத்தை நேர்மையின்பாற்பட்டதால், நேர்மையானவர்களே அனைவரின் பாதுகாவலர்களாகிறார்கள்” என்றாள்.

அவளது வார்த்தைகளைக் கேட்ட யமன் {சாவித்ரியிடம்}, “இது போன்ற மனதிற்கு ஏற்புடைய, அறநெறி கலந்த, தேன் போன்ற சொற்றொடர்கள் நிறைந்த பெருமைமிக்க வார்த்தைகளை மேலும் மேலும் நீ சொல்வதால், உன் மீது நான் உணரும் {கொள்ளும்} மரியாதை மேலும் அதிகரிக்கிறது. ஓ! கொண்ட தலைவனிடம் பெரும் அர்ப்பணிப்பு கொண்டவளே, ஒப்பற்ற ஒரு வரத்தை கேள்!” என்றான்.

இப்படிச் சொல்லப்பட்ட சாவித்ரி {யமனிடம்}, “ஓ! கௌரவத்தைக் கொடுப்பவனே, நீ ஏற்கனவே கொடுத்திருக்கும் வரம், எனது கணவனுடனான சேர்க்கை {கலவி} இல்லாது சாத்தியப்படாது! எனவே, மற்ற வரங்களுக்கு மத்தியில், இந்தச் சத்யவானின் உயிர் மீட்கப்படட்டும் என்பதே நான் கேட்கும் வரமாகும்! எனது கணவரில்லாத நான் இறந்தவள் போன்றவளே! என் கணவரில்லாத எந்த மகிழ்ச்சியையும் நான் விரும்பவில்லை. என் கணவரில்லாத சொர்க்கத்தையே கூட நான் விரும்பவில்லை. என் கணவரில்லாத எந்தச் செழிப்பையும் நான் விரும்பவில்லை. என் கணவரில்லாது வாழ்வதற்கு என்னால் எனது மனதைத் தயார் செய்ய இயலாது! “சத்யவான் உயிருடன் மீட்கப்படட்டும்; அப்படி நேர்ந்தால் தான் உனது வார்த்தைகளை உண்மையாக்க முடியும் {உனது வார்த்தைகள் பொய்க்காது}” என்ற இந்த வரத்தையே நான் கேட்கிறேன்!” என்றாள்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அதன்பேரில், “அப்படியே ஆகட்டும்!” என்று சொன்ன நீதி அளிக்கும் விவஸ்வத்தின் {சூரியனின்} மகன், தனது சுருக்குக் கயிற்றை {பாசத்தை} அவிழ்த்து, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் சாவித்ரியிடம் , “ஓ! மங்களகரமான கற்புடைய பெண்ணே, இப்படியே உனது கணவன் என்னால் விடுவிக்கப்பட்டான்! நோயிலிருந்து விடுதலை பெற்றிருக்கும் இவனை நீ மீண்டும் எடுத்துக் கொள்ள முடியும். அவன் வெற்றியை அடைவான்! உன்னுடன் சேர்ந்து அவன் {சத்யவான்} நானூறு வருட வாழ்வை அடைவான். உரிய சடங்குகளுடன் வேள்விகளைக் கொண்டாடும் அவன், இவ்வுலகில் பெரும்புகழைப் பெறுவான். உன்னிடம் சத்யவான் நூறு மகன்களைப் பெறுவான். தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரர்களுடன் கூடிய இந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் மன்னர்களாக இருப்பார்கள். உனது பெயரின் தொடர்பால் அவர்கள் எப்போதும் புகழுடன் இருப்பார்கள். உனது தந்தையும் {அஸ்வபதியும்}, உனது தாய் மாளவியிடம் நூறு மகன்களைப் பெறுவான். தேவர்களைப் போன்றிருக்கும் உனது க்ஷத்திரிய சகோதரர்கள், அவர்களது மகன்கள் மற்றும் மகள்களுடன் மாளவர்கள் என்ற பெயரில் பரவலாக அறியப்படுவார்கள்!” என்றான் {யமன்}.

பெற்றோரை நினைத்து வருந்திய சத்யவான்! – வனபர்வம் பகுதி 295ஆ-யமனிடம் வரங்களைப் பெற்ற சாவித்ரி, தனது கணவன் சத்யவான் சடலம் கிடந்த இடத்திற்குச் செல்வது; தூக்கத்தில் இருந்து எழுவது போலச் சத்யவான் எழுவது; தனக்கு என்ன நேர்ந்தது என்று சாவித்ரியிடம் கேட்பது; நாளை சொல்வதாக சாவித்ரி சொல்வது; இரவாகிவிட்டதால் அங்கேயே தங்குவதா அல்லது ஆசிரமத்தை நோக்கிச் செல்வதா என்று இருவரும் குழம்புவது; தன் பெற்றோரை நினைத்து வருந்திய சத்யவான் ஆசிரமத்திற்கு விரைந்து செல்ல வேண்டும் என்று கூறியது; இருவரும் ஆசிரமத்தை நோக்கிச் சென்றது

சாவித்ரிக்கு இவ்வரங்களை அளித்து, அவளைத் தடுத்த யமன் தன் வசிப்பிடத்திற்குத் திரும்பினான். யமன் சென்ற பிறகு, தனது கணவனின் {சத்யவானின்} சாம்பல் நிற சவம் கிடந்த இடத்திற்குச் சாவித்ரி திரும்பி, தனது தலைவன் தரையில் கிடப்பதைக் கண்டு, அவனை அணுகி, அவனைத் தூக்கி, அவனது தலையைத் தனது மடியில் வைத்துக் கொண்டு தரையில் அமர்ந்தாள். பிறகு தன் உணர்வுகள் மீண்ட சத்யவான், விசித்திரமான நிலத்தில் {அந்நிய தேசத்தில்} இருந்து சிறிது காலம் கழித்து வீடு திரும்பியவன் போலப் பாசத்துடன் சாவித்ரியை மீண்டும் மீண்டும் பார்த்து, அவளிடம், “ஐயோ, நீண்ட நேரம் தூங்கிவிட்டேனே! எதனால் நீ என்னை எழுப்பவில்லை? என்னை இழுத்துச் சென்ற அந்தக் கரிய மனிதன் எங்கே?” என்று கேட்டான். அவனின் {சத்யவானின்} வார்த்தைகளுக்குச் சாவித்ரி, “ஓ! மனிதர்களில் காளையே, நீர் நீண்ட நேரம் என் மடியில் தூங்கிவிட்டீர்! அனைத்து உயிர்களையும் கட்டுப்படுத்துபவனான வணங்கத்தக்க யமன் சென்றுவிட்டான். ஓ! அருளப்பட்டவரே, நீர் {களைப்பாறி} புத்துணர்ச்சி அடைந்துவிட்டீர். ஓ! மன்னரின் மகனே {சத்யவானே}, உறக்கம் உம்மைக் கைவிட்டது! உம்மால் எழ இயலும் என்றால் எழுந்திரும்! இரவு ஆழ்ந்துவிட்டதைப் {இருளடர்ந்திருப்பதைப்} பாரும்!” என்றாள் {சாவித்ரி}.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “தன் நினைவை மீண்டும் அடைந்த சத்யவான், இனிய உறக்கத்தை அனுபவித்தவன் எழுவதைப் போல எழுந்து, எல்லாப்புறமும் வனத்தால் சூழப்பட்டிருப்பதைக் கண்டு {சத்யவான் சாவித்ரியிடம்}, “ஓ! கொடியிடை பெண்ணே {சாவித்ரியே}, பழங்களைக் கொள்வதற்காக நான் உன்னுடன் வந்தேன். பிறகு நான் மரத்தைப் பிளந்து கொண்டிருந்தபோது, என் தலையில் வலியை உணர்ந்தேன். என் தலையில் ஏற்பட்ட கடுமையான வலியின் காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியாதவனாக இருந்தேன். எனவே, நான் உனது மடியில் உறங்கினேன். ஓ! மங்களகரமானவளே, இவை அனைத்தும் என் நினைவில் இருக்கிறது. பிறகு நீ என்னை அணைத்த போது, உறக்கம் எனது புலன்களைக் களவாடிவிட்டது. பிறகு சுற்றிலும் இருளாக இருப்பதை நான் கண்டேன். அதற்கு மத்தியில் மிகுந்த பிரகாசத்துடன் கூடிய ஒருவனை நான் கண்டேன். ஓ! கொடியிடையாளே, நீ அனைத்தையும் அறிவாயென்றால், நான் கண்டது கனவா அல்லது நனவா என்பதைச் சொல்!” என்றான் {.

அதன்பின், சாவித்ரி அவனிடம் {சத்யவானிடம்}, “இரவு ஆழமாகிறது. ஓ இளவரசே {சத்யவானே}, அனைத்தையும் நான் நாளை உமக்குச் சொல்கிறேன். எழும், எழுந்திரும், உமக்கு நன்மையே விளையட்டும்! ஓ! அற்புத நோன்புகள் கொண்டவரே {சத்யவானே}, உமது பெற்றோரைப் பாரும்! வெகுநேரத்திற்கு முன்னரே கதிரவன் இறங்கிவிட்டான். இரவும் ஆழமாகிறது. அச்சந்தரும் குரல் கொண்ட இரவு உலாவிகள் {ராட்சசகர்கள்} மகிழ்ச்சியுடன் நடந்து திரிகின்றனர். காட்டில் நடந்து செல்லும் கானக வாசிகளின் {விலங்குகளின்} காலடி ஓசைகள் கேட்கின்றன. தெற்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும் வரும் நரிகளின் பயங்கர ஊளைகளும் (அச்சத்தால்) எனது இதயத்தை நடுங்க வைக்கின்றன!” என்றாள். பிறகு சத்யவான் {சாவித்ரியிடம்}, “ஆழ்ந்த இருளால் மூடியிருக்கும் வனப்பகுதிகள் ஒரு பயங்கரத் தோற்றத்தை அணிந்திருக்கின்றன. எனவே, உன்னால் பாதையைக் கண்டுகொள்ள இயலாது. அதன் விளைவாக, {மேற்கொண்டு} செல்லவும் இயலாது!” என்றான் {சத்யவான்}.

அதற்குச் சாவித்ரி {சத்யவானிடம்}, “இன்று இந்தக் காட்டில் ஏற்பட்ட கடுந்தீயின் விளைவாக,  ஓர் உலர்ந்த மரம் {விழாமல்} எரிந்து கொண்டு நிற்கிறது. காற்றினால் தூண்டப்படும் நெருப்பு, இப்போதும் அப்போதும் நின்று நிதானித்து எரிந்து கொண்டிருக்கிறது. நான் சிறிது நெருப்பைக் கொண்டு வந்து சுற்றிலும் இருக்கும் இந்த விறகுகளை எரிக்கிறேன். நீர் அனைத்துக் கவலையும் விரட்டுவீராக. உமக்கு உடல்நிலை சரியில்லை என்பதைக் காண்கிறேன். எனவே, நீர் போகத் துணியவில்லை என்றால், (இவை) அனைத்தையும் நானே செய்வேன். இருள் சூழ்ந்த இந்தக் கானகத்தில் உம்மாலும் வழியைக் கண்டுபிடிக்க இயலாது. நீர் விரும்பினால், நாளை இந்தக் காடு காணத்தக்க வகையில் இருக்கும்போது நாம் செல்லலாம். ஓ பாவமற்றவரே, இதுவே உமது விருப்பமென்றால், நாம் இந்த இரவை இங்கேயே கழிக்கலாம்!” என்றாள் {சாவித்ரி}.

இந்த அவளது வார்த்தைகளைக் கேட்ட சத்யவான் {சாவித்ரியிடம்}, “என் தலைவலி நீங்கிவிட்டது; எனது அங்கங்கள் நன்றாக இருப்பதை உணர்கிறேன். உனது உதவியுடன், என் தந்தையையும், தாயையும் காண விரும்புகிறேன். இதற்கு முன் ஒருபோதும் நான் சரியான நேரம் கடந்த பின்னர் ஆசிரமம் திரும்பியது கிடையாது. மாலை வேளைக்கு முன்னரே என் தாய் என்னை ஆசிரமத்தை விட்டு வெளியே செல்லத் தடுப்பாள். காலையில் நான் வெளியே வந்தாலும், என்னைக் குறித்து எனது பெற்றோர் கவலை கொள்ளத் தொடங்குவர். பின்பு எனது தந்தை, காடுறை ஆசிரமங்களில் இருக்கும் கானகவாசிகளோடு சேர்ந்து என்னைத் தேடுவார். ஆழ்ந்த துயரத்தின் காரணமாக இதற்கு முன்னரே என் தந்தையும் தாயும், “நீ மிகவும் தாமதித்து வருகிறாய்!” என்று பல முறை என்னைக் கண்டித்துள்ளனர். என் நிமித்தம் அவர்களுக்கு என்ன நிலை ஏற்பட்டிருக்கிறதோ என்று நினைக்கிறேன். என்னைக் காணாத போது அவர்கள் மிகுந்த துன்பத்தை அடைவார்கள். இந்த இரவுக்கு முந்தைய இரவில், என்னிடம் அன்பு கொண்ட அவ்விருவரும் ஆழ்ந்த வருத்தத்துடன் அழுது, என்னிடம், “ஓ! மகனே {சத்யவானே}, உன்னை இழந்தால், நாங்கள் இருவரும் ஒருக்கணமேனும் வாழ மாட்டோம்! நீ வாழும் காலம் வரைதான் நிச்சயம் நாங்கள் வாழ்வோம். இந்தக் குருடர்களுக்கு நீ தான் ஊன்றுகோல்; நமது குலம் அழியாமல் இருப்பது உன் கையிலேயே இருக்கிறது. எங்கள் ஈமப் பிண்டம், எங்கள் புகழ், எங்கள் வம்சம் ஆகியன உன்னை நம்பியே இருக்கின்றன” என்றனர்.

எனது தாய் முதிர்ந்தவள்; என் தந்தையும் அப்படியே. நிச்சயம் நானே அவர்களது ஊன்றுகோல். இரவில் என்னை அவர்கள் காணவில்லையென்றால், அவர்களது நிலைமை என்னவாகும்? குற்றமற்ற என் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் ஆபத்தில் இருப்பதற்கும், இதயம் பிளக்கும் துயரத்தில் நான் சிக்கவும் காரணமாக இருந்த எனது தூக்கத்தை நான் வெறுக்கிறேன். என் தந்தையும், தாயுமில்லாது என்னால் உயிரைத் தாங்க இயலாது. துன்பத்தால் ஆறுதலடையாத மனம் கொண்ட எனது குருட்டுத் தந்தை, இந்நேரம், ஆசிரமவாசிகள் அனைவரிடமும் என்னைக் குறித்துக் கேட்டுக் கொண்டிருப்பார் என்பது நிச்சயம். ஓ! அழகான பெண்ணே {சாவித்ரியே}, நான் எனது தந்தைக்காகவும், தன் தலைவருக்கு எப்போதும் கீழ்ப்படியும் எனது பலவீனமான தாய்க்காகவும் வருந்துவது போல, எனக்காக வருந்த மாட்டேன். என்னைக் குறித்த வேதனையால் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது நிச்சயம். அவர்கள் வாழும் வரையே நான் எனது உயிரைப் பிடித்திருப்பேன். அவர்களை நானே பராமரிக்க வேண்டும் என்பதையும், அவர்களுக்கு ஏற்புடையதை மட்டுமே நான் செய்ய வேண்டும் என்பதையும் நான் அறிவேன்!” என்றான் {சத்யவான்}.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “தன் பெற்றோரிடம் அன்பும் மதிப்பும் கொண்ட அந்த அறம் சார்ந்த இளைஞன் {சத்யவான்} இதைச் சொன்ன பிறகு, துக்கத்தால் பாதிக்கப்பட்டுத் தனது கரங்களை உயர்த்தி, துன்பக் குரலில் {அழுது} புலம்பத் தொடங்கினான். துயரத்தில் மூழ்கியிருக்கும் தனது தலைவனைக் கண்ட அறம்சார்ந்த சாவித்ரி, அவனது கண்களில் இருந்த கண்ணீரைத் துடைத்து {சாவித்ரி சத்யவானிடம்}, “நான் நோன்புகள் நோற்றவளானால், கொடையளித்தவளானால், வேள்வி செய்தவளானால், எனது மாமனாருக்கும், மாமியாருக்கும், எனது கணவருக்கும் இந்த இரவு நன்மையானதாகட்டும்! கேலிக்காகக் கூட நான் ஒரு பொய்யையும் சொன்னதாக எனக்கு நினைவில்லை. எனது மாமனாரும், மாமியாரும் உண்மையின் அறத்தால் {சத்தியத்தால்} பிழைத்திருக்கட்டும்!” என்றாள். சத்யவான், “என் தந்தையையும், தாயையும் காண ஆவலோடு இருக்கிறேன்! எனவே, ஓ! சாவித்ரி, தாமதிக்காமல் புறப்படு. ஓ! அழகான காரிகையே, என் தந்தைக்கோ தாய்க்கோ ஏதும் தீங்கு நேர்ந்திருந்தால், நான் வாழமாட்டேன் என்று என்மேல் சத்தியமாகச் சொல்கிறேன். உனக்கு அறத்தின் மீது ஏதாவது மதிப்பிருந்தால், நான் வாழ வேண்டும் என்று நீ விரும்பினால், எனக்கு ஏற்புடையதைச் செய்வது உனது கடமை என்றால் ஆசிரமத்திற்குப் புறப்படு!” என்றான் {சத்யவான்}.

பிறகு அந்த அழகிய சாவித்ரி எழுந்து, தனது கூந்தலை முடிந்து, தனது கணவனைக் கரங்களால் தூக்கி நிறுத்தினாள். அப்படி எழுந்த சத்யவான், தன் கைகளால் தனது அங்கங்களைத் துடைத்தான். அப்படியே அவன் சுற்றிலும் ஆய்வு செய்தபோது, அவனது கூடையில் அவனது கண்கள் விழுந்தன. பிறகு சாவித்ரி அவனிடம் {சத்யவானிடம்}, “நாளை நீர் பழங்களைச் சேகரிக்கலாம். உமது வசதிக்காக நான் உமது கோடரியைச் சுமந்து வருவேன்” என்றாள். பிறகு அந்தக் கூடையை ஒரு மரத்தின் கிளையில் தொங்கவிட்டு, கோடரியை எடுத்துக் கொண்ட அவள், தனது கணவனை மீண்டும் அணுகினாள். அழகிய தொடைகள் கொண்ட அந்தப் பெண், தனது கணவனின் இடது கரத்தைத் தனது இடது தோளில் வைத்து, தனது வலக்கரத்தால் அவனை அணைத்துக் கொண்டு, யானை போல நடக்கத் தொடங்கினாள்.

பிறகு சத்யவான் {சாவித்ரியிடம்}, “ஓ! பயந்தவளே, பழக்கத்தினால் (காட்டு) வழிகளை நான் அறிந்திருக்கிறேன். மேலும், மரத்தினூடே வரும் நிலவின் ஒளியால் அதை நான் காண முடிகிறது. இப்போது நாம், பழங்கள் சேகரிக்கக் காலையில் வந்த அதே பாதையை அடைந்திருக்கிறோம். ஓ! மங்களகரமானவளே, நாம் வந்த வழியிலேயே செல்; இனியும் நீ நமது பாதையைக் குறித்துச் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. பலாச மரம் அடர்ந்த இந்தப் பாதையின் அருகில் இரண்டு வழிகள் பிரிகின்றன. அதற்கு வடக்கே இருக்கும் பாதையில் நீ செல்வாயாக. நான் இப்போது நலமுடன் இருக்கிறேன். எனது பலத்தையும் மீண்டும் அடைந்துவிட்டேன். என் தந்தையையும், தாயையும் காண விரும்புகிறேன்!” என்றான். இதைச் சொன்ன சத்யவான் ஆசிரமத்தை நோக்கி விரைவாகச் சென்றான்.

தியுமத்சேனன் அடைந்த மகிழ்ச்சி! – வனபர்வம் பகுதி 296-தியுமத்சேனனுக்குப் பார்வை கிடைத்தது; மகன் சத்யவான் திரும்பாததால் அந்த முதிர்ந்த மன்னனும் அவனது மனைவியும் அவனைத் தேடிக் காடெங்கும் அலைந்தது; பிறகு ஆசிரமவாசிகள் அவர்களைத் திரும்ப ஆசிரமத்திற்குக் கொண்டு வந்து சேர்த்து, சத்யவான் உயிரோடுதான் இருப்பான் என்று ஆறுதல் வார்த்தை கூறியது; சத்யவானும் சாவித்ரியும் ஆசிரமம் திரும்பியது; தியுமத்சேனன் மூன்று மடங்கு செழிப்பை அடைந்ததாக முனிவர்கள் வாழ்த்துவது; முனிவர்கள் சாவித்ரியிடம் உண்மையை விசாரித்தது; உண்மையைச் சொன்ன சாவித்ரி…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அதேவேளையில், பலமிக்கத் தியுமத்சேனன் தனது பார்வையை மீண்டும் பெற்றதால் {அவனுக்கு} அனைத்தையும் பார்க்க முடிந்தது. அவனது பார்வை தெளிவடைந்ததும், அவனைச் சுற்றியுள்ள அனைத்தும் அவனுக்குத் தெரிந்தது. ஓ! பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, பிறகு தனது மனைவி சைப்பியையுடன் (அக்கம்பக்கத்து) ஆசிரமங்களில் தனது மகனை {சத்யவானைத்} தேடிய அவன் {தியுமத்சேனன்}, அவன் {தனது மகன்} நிமித்தம் மிகுந்த மன வேதனையை அடைந்தான். அந்த இரவில் அந்த முதிர்ந்த ஜோடி, ஆசிரமங்களிலும், நதிகளிலும், காடுகளிலும், தடாகங்களிலும் {தங்கள் மகன் சத்யவானைத்} தேடினர். ஏதாவது ஓர் ஒலி அவர்களுக்குக் கேட்டால், உடனே தங்கள் தலைத் தூக்கி, தன் மகன்தான் வருகிறானோ என்ற அவலில், “ஓ! அதோ சாவித்ரியோடு சத்யவான் வருகிறான்” என்றனர். அங்கேயும் இங்கேயும் பைத்தியக்காரர்களைப் போல விரைந்ததில், கிழிந்தும், உடைந்தும், காயப்பட்டும், தர்ப்பைப் புற்களாலும், முட்களால் தைக்கப்பட்டும் இருந்த அவர்களது பாதங்களில் இரத்தம் பெருகியது.

பிறகு அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த அந்தணர்கள் அனைவரும் அவர்களிடம் வந்து, சுற்றிலும் அவர்களைச் சூழ்ந்து கொண்டு, அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களை அவர்களுடைய ஆசிரமத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கே தனது மனைவியுடன் {மனைவி சைப்பியுடம்} கூடிய தியுமத்சேனன் முதிர்ந்த துறவிகளால் சூழப்பட்டு, பழங்காலத்தின் ஏகாதிபதிகளுடைய கதைகளால் மகிழ்வூட்டப்பட்டனர். தங்கள் மகனை {சத்யவானைக்} காணவிரும்பிய அந்த முதிர்ந்த ஜோடி {இதனால்} ஆறுதலடைந்தாலும், தங்கள் மகனின் இளமை நிறைந்த நாட்களை நினைத்துப் பார்த்த அவர்கள் மிகவும் வருந்த தொடங்கினர். துயரத்தால் பீடிக்கப்பட்ட அவர்கள் பரிதாபகரமான குரலில், “ஐயோ, ஓ! மகனே {சத்யவானே}, ஐயோ!, ஓ! மருமகளே {சாவித்ரியே}, நீங்கள் எங்கிருக்கிறீர்கள்?” என்று புலம்பத் தொடங்கினர்.

பிறகு உண்மை நிறைந்த அந்தணரான சுவார்ச்சஸ் என்பவர் அவர்களிடம், “சாவித்ரியின் தவங்களையும், சுய ஒடுக்கத்தையும், நடத்தையையும் கருத்தில் கொண்டால், சத்யவான் வாழ்கிறான் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை!” என்றார். பிறகு கௌதமர் {மன்னன் தியுமத்சேனன் மற்றும் அவன் மனைவி சைப்பியிடம்}, “நான் வேதங்களையும் அதன் கிளைகளையும் கற்றிருக்கிறேன். மேலும் நான் பெரும் தவத்தகுதியை அடைந்திருக்கிறேன். மேலும் நான் பிரம்மச்சரிய வாழ்வு முறையைப் பயின்று ஒரு மணமாகாதவனாகவே வாழ்ந்திருக்கிறேன். நான் அக்னியையும் பெரியவர்களையும் மனநிறைவு கொள்ளச் செய்திருக்கிறேன். குவிந்த ஆன்மாவுடன் நான் பல நோன்புகளையும் நோற்றிருக்கிறேன். நான் அடிக்கடி விதிப்படி காற்றை மட்டுமே உண்டும் வாழ்ந்திருக்கிறேன். இந்தத் தவத்தகுதியின் அறத்தால், நான் மற்றவர்களின் செயல்களை அறிந்திருக்கிறேன். எனவே, சத்யவான் வாழ்கிறான் என்பதில் நீங்கள் உறுதியடையுங்கள்” என்றார்.

அதன்பின் அவரது சீடர் ஒருவர், “என் குருவின் உதடுகளில் இருந்து விழுந்த வார்த்தைகள் ஒரு போதும் பொய்யாகாது. எனவே சத்யவான் நிச்சயம் உயிரோடு இருக்கிறான்” என்றார். மேலும் அந்த முனிவர் {கௌதமர்}, “அவனின் {சத்யவானின்} மனைவியான சாவித்ரி கொண்டிருக்கும் மங்களக் குறிகளைக் கருத்தில் கொண்டால், அவை அனைத்தும் அவள் விதவைக்கோலத்தில் இருந்து விதிவிலக்கு பெற்றிருக்கிறாள் என்பதைக் காட்டுகின்றன. எனவே, சத்யவான் உயிரோடு இருக்கிறான் என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை” என்றார். பிறகு பரத்வாஜர், “அவனின் {சத்யவானின்} மனைவியான சாவித்ரியின் தவத்தகுதி, சுய ஒடுக்கம், மற்றும் நடத்தையைக் கருதினால், சத்யவான் உயிரோடு இருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை” என்றார். பிறகு தால்பியர், “நீ பார்வையை மீண்டும் அடைந்திருப்பதாலும், சாவித்ரி உணவருந்தாமல் தனது நோன்பை நிறைவேற்றிச் சென்றிருப்பதாலும், சத்யவான் உயிரோடு இருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.

பிறகு ஆபஸ்தம்பர், “அனைத்துப் புறங்களிலும் சூழ்நிலை அமைதியாக இருப்பதால் பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளின் குரல்கள் கேட்கப்படுகின்றன. அந்த ஒலிப்பின் அமைப்பும், நீர் பார்வையை மீண்டும் பெற்றிருக்கும் காரணமும், உலகம் சார்ந்த காரியங்களுக்காக நீர் மீண்டும் ஒருமுறை பயன்படப்போகிறீர் என்பதைக் குறிக்கின்றன. சத்யவான் உயிரோடு இருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை” என்றார். பிறகு தௌமியர், “உமது மகன் அனைத்து அறங்களையும் கொண்டிருப்பதாலும், அவன் அனைவராலும் விரும்பப்படுவதாலும், நீண்ட வாழ்நாளுக்கான குறிகளை அவன் மேனியில் தாங்கியிருப்பதாலும், சத்யவான் உயிரோடு இருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இப்படி உண்மை பேச்சுக் கொண்ட அந்தத் துறவிகளால் உற்சாகமூட்டப்பட்ட தியுமத்சேனன், அந்தக் காரணங்களை ஆராய்ந்து சிறிது ஆறுதல் அடைந்தான். பிறகு, சிறிது நேரம் கழித்து, அந்த இரவில், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் சாவித்ரி தனது கணவன் சத்யவானுடன் அந்த ஆசிரமத்தை அடைந்து, அதற்குள் நுழைந்தாள். பிறகு அந்த அந்தணர்கள், “ஓ! பூமியின் தலைவா {தியுமத்சேனா}, உமது மகனுடனான இச்சந்திப்பையும், உமது கண்பார்வை மீட்பையும் கண்டு நாங்கள் அனைவரும் உம்மை வாழ்த்துகிறோம். உமது மகனுடனான சந்திப்பும், உமது மருமகளின் காட்சியும், உமது பார்வை மீட்பும் என நீர் மூன்று மடங்கு செழிப்பை அடைந்துவிட்டீர். நாங்கள் சொன்ன அனைத்தும் நடந்தே தீரும்; அதில் சந்தேகம் இல்லை. எனவே, விரைவில் வளமையில் வளர்வீர்களாக!” என்றனர்.

பிறகு, ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, இரு பிறப்பாளர்கள் {பிராமணர்கள்} நெருப்பை மூட்டி மன்னன் தியுமத்சேனன் முன்பு அமர்ந்தார்கள். தங்கள் இதயத்தில் இருந்த துன்பங்களைக் களைந்து தனியே நின்று கொண்டிருந்த சைப்யை, சத்யவான் மற்றும் சாவித்ரி ஆகியோர் அவர்களின் {இருபிறப்பாளர்கள் மற்றும் தியுமத்சேனரின்} அனுமதியின் பேரில் கீழே அமர்ந்தனர். பிறகு ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, அந்த ஏகாதிபதியுடன் {தியுமத்சேனனுடன்} அமர்ந்திருந்த அந்தக் கானகவாசிகள் {இருபிறப்பாளர்கள் = அந்தணர்கள்}, ஆவலால் தூண்டப்பட்டு, மன்னனின் {தியுமத்சேனனின்} மகனிடம் {சத்யவானிடம்}, “ஓ! சிறப்புமிக்கவனே, உனது மனைவியுடன் நீ ஏன் முன்பே வரவில்லை? இரவில் இவ்வளவு தாமதமாக ஏன் வந்தாய்? என்ன தடை உன்னைத் தடுத்தது? ஓ! மன்னனின் மகனே {சத்யவானே}, எங்களுக்கும், உனது தந்தை மற்றும் தாய்க்கும் இத்தகு அச்சத்தை ஏன் ஏற்படுத்தினாய் என்பதை நாங்கள் அறியவில்லை. இவை அனைத்தையும் நீங்கள் எங்களுக்குச் சொல்வதே தகும்” என்று கேட்டனர்.

அதன் பிறகு சத்யவான், “எனது தந்தையின் அனுமதி பெற்ற நான், சாவித்ரியுடன் காட்டுக்குச் சென்றேன். அந்தக் காட்டில் நான் மரத்தைப் பிளந்து கொண்டிருந்த போது, என் தலையில் வலியை உணர்ந்தேன். அந்த வலியின் விளைவாக, நான் ஆழ்ந்த உறக்கத்தில் விழுந்தேன். இவையே என் ஞாபகத்தில் இருக்கின்றன. (என் நிமித்தமாக) நீங்கள் அனைவரும் துக்கப்படும்படி இரவில் இவ்வளவு தாமதமாக வருவதற்குக் காரணமாக அமைந்த இவ்வளவு நீண்ட உறக்கத்தை நான் இதுவரை உறங்கியதில்லை. இதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை” என்றான். பிறகு கௌதமர் {சத்யவானிடம்}, “உனது தந்தைக்குக் கிடைத்த திடீர் பார்வை மீட்பைக் குறித்து நீ அறியவில்லை. எனவே, சாவித்ரி இதை விவரிப்பதே தகும். {பிறகு கௌதமர் சாவித்ரியைப் பார்த்து}, நன்மை, தீமை ஆகியவற்றின் புதிர்களை நிச்சயம் நீ நன்கு அறிந்திருக்கிறாய். எனவே, நான் (உன்னிடமிருந்து) அதைக் கேட்க விரும்புகிறேன். மேலும், ஓ! சாவித்ரி, பிராகசத்தினால் நீ சாவித்ரி தேவியைப் போன்றவள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். இதன் காரணத்தை நீ அறிந்திருக்க வேண்டும். எனவே, உண்மையை நீ உரைப்பாயாக! அது ரகசியமாக வைக்கப்பட வேண்டியதில்லை என்றால், நீ எங்களுக்கு அதை விவரிக்கலாம்!” என்றார்.

கௌதமரின் இந்த வார்த்தைகளுக்குச் சாவித்ரி, “நீங்கள் கணித்தது போலத்தான் உள்ளது. உங்கள் விருப்பம் நிச்சயம் ஈடேறாமல் இருக்காது. நான் வைத்துக் கொள்வதற்கு என்னிடம் எந்த ரகசியமும் இல்லை. எனவே உண்மையைக் கேளுங்கள்! உயர் ஆன்மா கொண்ட {மகாத்மாவான} நாரதர் எனது கணவரின் மரணத்தை முன்னுரைத்தார் {கணித்திருந்தார்}. கணிக்கப்பட்ட அந்த நாள் இன்றுதான். எனவே, எனது கணவனின் துணையில் இருந்து பிரிவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் உறக்கத்தில் விழுந்தது, தனது தூதர்களுடன் வந்த யமன், அவர் முன்னிலையில் தன்னைக் காட்டி, அவரைக் கட்டி, பித்ருக்கள் வசிக்கும் உலகத்திற்கு எடுத்துச் சொல்லத் தொடங்கினான். அதன்பேரில் நான் அந்தத் தலைசிறந்த தேவனைப் உண்மை நிறைந்த வார்த்தைகளால் புகழ்ந்தேன். அவன் {யமன்} எனக்கு ஐந்து வரங்களை அளித்தான். அவற்றை என்னிடம் இருந்து நீங்கள் கேட்பீராக!

எனது மாமனாருக்காக {தியுமத்சேனருக்காக}, அவரது பார்வை மீட்பு மற்றும் நாடு மீட்பு ஆகிய இரண்டு வரங்களைப் பெற்றேன். {எனது மற்றொரு வரத்தால்} எனது தந்தையும் {அஸ்வபதியும்} நூறு மகன்களைப் பெற்றார். {எனது மற்றொரு வரத்தால்} நானும் எனக்கு நூறு மகன்களைப் பெற்றேன். {எனது மற்றொரு வரத்தால்} எனது கணவரான சத்யவான் நானூறு வருட வாழ்வைப் பெற்றார். எனது கணவரின் உயிருக்காகவே நான் அந்த நோன்பை நோற்றேன். இப்படியே இந்த எனது பெரும் பேரிடர், பிறகு மகிழ்ச்சியாக மாறிய காரணத்தை விரிவாக உங்களுக்குச் சொல்லிவிட்டேன்” என்றாள். அதற்கு முனிவர்கள், “ஓ! சிறந்த மனநிலையும், நோன்புகள் நோற்றலும், அறமும், சிறப்புமிக்கக் குலமும் கொண்ட கற்புடைய பெண்ணே {சாவித்ரியே}, பேரிடர்களில் மூழ்கி, இருள் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இந்த மன்னர்களில் முதன்மையானவனின் குலம் உன்னால் மீட்கப்பட்டது!” என்றார்கள்.

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “பிறகு அந்தப் பெண்களில் சிறந்தவளை {சாவித்ரியைப்} பாராட்டி வணங்கிய அந்த முனிவர் கூட்டம், அந்த மன்னர்களில் முதன்மையானவனிடமும் {தியுமத்சேனனிடமும்}, அவனது மகனிடமும் {சத்யவானிடமும்} விடைபெற்றுக் கொண்டர். அவர்களை {தியும்தசேனன் குடும்பத்தை} வணங்கிய அவர்கள் {துறவிகள்} உற்சாகமான இதயங்களோடு அமைதியாகத் தங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.

நாட்டை மீண்டும் அடைந்த சால்வன்! – வனபர்வம் பகுதி 297-தியுமத்சேனின் எதிரி, அவனது அமைச்சனாலேயே கொல்லப்பட்டான் என்று சால்வ நாட்டு மக்கள் வந்து சொல்வது; தியுமத்சேனன், தனது மகன் சத்யவான் மருமகள் சாவித்ரி மற்றும் மனைவி சைப்பியுடம் தனது நாட்டுக்குத் திரும்புவது; பட்டமேற்பது; சாவித்ரிக்கு தான் பெற்ற வரங்கள் பலிதமாவது; சாவித்ரியின் கதையைக் கேட்பதால் விளையும் நன்மை…

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இரவு கழிந்து, சூரிய உருண்டை உதித்த போது, அந்தத் துறவிகள், தங்கள் காலைச் சடங்குகளை முடித்து ஒன்றாகக் கூடினார்கள். அந்த வலிமைமிக்கத் துறவிகள் என்னதான் மீண்டும் மீண்டும் சாவித்ரியின் உயர்ந்த நற்பேறைக் குறித்துத் தியுமத்சேனனிடம் பேசினாலும் அவர்கள் மனநிறைவு கொள்ளவே இல்லை. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அப்போது, சால்வத்திலிருந்து பெரிய மக்கள் கூட்டம் ஒன்று அந்த ஆசிரமத்திற்கு வர நேர்ந்தது. தியுமத்சேனனின் எதிரி, தனது சொந்த அமைச்சனாலேயே கொல்லப்பட்டான் என்ற செய்தியை அவர்கள் கொண்டு வந்திருந்தனர். நாட்டை அபகரித்தவன் தனது நண்பர்களுடனும் கூட்டாளிகளுடனும் சேர்ந்து, தனது அமைச்சனாலேயே கொல்லப்பட்டான், அவனது துருப்புகளும் ஓடின என்பதைக் கேள்விப்பட்ட குடிமக்கள் அனைவரும் (முறைவழியிலான தங்கள் மன்னனின் சார்பில் நின்று), “கண்ணுள்ளவனோ, அது இல்லாதவனோ {குருடனோ}, அவனே {தியுமத்சேனனே} எங்கள் மன்னனாக இருக்க வேண்டும்” என்று எப்படி ஒருமனதுடன் சொல்லினர் என்பதையும் அவர்கள் சொன்னார்கள்.

மேலும் அவர்கள், “அந்தத் தீர்மானத்தின் விளைவாகவே நாங்கள் உம்மிடம் அனுப்பப்பட்டுள்ளோம். இந்தத் தேரும், நால்வகை அணிகளைக் கொண்ட இந்தப் படையும் உமக்காகவே இங்கே வந்திருக்கின்றன! ஓ! மன்னா {தியுமத்சேனா}, உமக்கு நன்மை விளையட்டும். வருவீராக! நீரே நகரில் {மன்னனாக} அறிவிக்கப்பட்டிருக்கிறீர்! உமது தந்தைக்கும், பாட்டனுக்கும் சொந்தமான உமது நிலையை {அரியணையை} எப்போதும் நிரப்புவீராக!” என்றனர். பார்வை அடைந்து, நல்ல உடல்நிலை கொண்டிருக்கும் மன்னனைக் {தியுமத்சேனனைக்} கண்ட அவர்கள், தங்கள் சிரம் தாழ்த்தினர்; அவர்களது விழிகள் ஆச்சரியத்தால் விரிந்தன. பிறகு அந்த ஆசிரமத்தில் வசித்த முதிர்ந்தவர்களையும் அந்தணர்களையும் வணங்கி, பதிலுக்கு அவர்களால் வணங்கப்பட்ட அந்த மன்னன் {தியுமத்சேனன்} தனது நகருக்குக் கிளம்பினான். சைப்யை, சாவித்ரி மற்றும் படைவீரர்களால் சூழப்பட்டு, மனிதர்களின் தோளால் தாங்கப்பட்ட, நல்ல விரிப்புகள் கொண்ட வாகனத்தில் {பல்லக்கில்} அவன் {தியுமத்சேனன்} சென்றான்.

மகிழ்ச்சி நிறைந்த இதயங்கள் கொண்ட புரோகிதர்கள் அரியணையில் தியுமத்சேனனையும், பட்டத்து இளவரசனாக அவனது {தியுமத்சேனனின்} உயரான்ம மகனையும் {சத்யவானையும்} நிறுவினர். பிறகு நீண்ட காலம் சென்றதும், சால்வ குலத்தின் புகழை மேம்படுத்தும் வகையில் போர்க்களத்தில் பின்வாங்காத போர்க்குணமிக்க நூறு மகன்களைச் சாவித்ரி பெற்றாள். மேலும் அவள் {சாவித்ரி}, {தனது தாய்} மாளவியிடம் மத்ரத்தின் {மத்ர நாட்டின்} தலைவனான {தனது தந்தை} அஸ்வபதி மூலம் பிறந்த நூறு பலமிக்க உடன்பிறப்புகளான {தனது} சகோதரர்களையும் அடைந்தாள். இப்படியே, ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, சாவித்ரி, தன்னையும், தன் தந்தை மற்றும் தாயையும் தனது மாமனார் மற்றும் மாமியாரையும், தனது கணவனின் குலத்திதையும் பரிதாபகரமான அவலநிலையில் இருந்து உயர்ந்த நற்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தினாள். அந்த மென்மையான பெண்ணான சாவித்ரியைப் போலவே, அற்புத குணம் கொண்ட இந்த மங்களகரமான துருபதன் மகளும் {திரௌபதியும்}, உங்கள் அனைவரையும் மீட்பாள்” என்றார் {மார்க்கண்டேயர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இவ்வாறு அந்த உயர் ஆன்ம {மகாத்மாவான} துறவியால் {மார்க்கண்டேயரால்} தூண்டப்பட்ட பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, துன்பத்திலிருந்து மனம் விடுபட்டு, காம்யக வனத்தில் தொடர்ந்து வாழலானான். சாவித்ரி குறித்த இந்தச் சிறந்த கதையை மதிப்புடன் கேட்கும் ஒரு மனிதன், அனைத்திலும் வெற்றியையும், மகழ்ச்சியையும் அடைந்து, துன்பத்தை எப்போதும் சந்திக்காமல் இருப்பான்!” என்றார் {வைசம்பாயனர்}.

கர்ணனுக்கு எச்சரிக்கை செய்த சூரியன்! – வனபர்வம் பகுதி 298-ர்ணனின் கனவில் அந்தணனாக வந்த சூரியன்; இந்திரன் அந்தண ரூபத்தில் வந்து அவனிடம் குண்டலங்களையும் கவசத்தையும் இரந்து கேட்பான் என சூரியன் கர்ணனை எச்சரித்தது; இருப்பினும் அவற்றைக் கொடுப்பேன் என்று கர்ணன் சூரியனிடம் சொன்னது .

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! அந்தணரே, “தனஞ்சயன் {அர்ஜுனன்} இங்கிருந்து சென்ற பிறகு, யார் ஒருவரிடமும் நீ வெளிப்படுத்தாத உனது கடும் அச்சத்தை நான் அகற்றுவேன்” என்ற ஆழ்ந்த பொருள் கொண்ட இந்திரனின் வார்த்தைகளை லோமசர் அந்தப் பாண்டு மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} சொல்லும் அளவுக்கு, கர்ணன் குறித்து யுதிஷ்டிரன் வளர்த்துக் கொண்ட பெரும் அச்சம் யாது? ஓ! துறவிகளில் சிறந்தவரே {வைசம்பாயனரே}, அறம்சார்ந்த யுதிஷ்டிரன் ஏன் அதை யாரிடமும் வெளிப்படுத்தவில்லை?” என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னர்களில் புலியே {ஜனமேஜயா}, நீ கேட்டவாறே, அந்த வரலாற்றை நான் உனக்குச் சொல்கிறேன்! ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, எனது வார்த்தைகளை நீ கேள்! (அவர்களது வனவாசத்தில்) பனிரெண்டு ஆண்டுகள் கடந்து, பதிமூன்றாவது ஆண்டு வந்தபோது, பாண்டு மகன்களிடம் எப்போதும் நட்பாக இருந்த சக்ரன் {இந்திரன்}, கர்ணனிடம் (அவனது காதுகுண்டலங்களை) இரந்து பெறத் தீர்மானித்தான். ஓ! பலமிக்க ஏகாதிபதியே {ஜனமேஜயா}, (கர்ணனின்) காது குண்டலங்களைக் குறித்துத் தேவர்களின் பெருந்தலைவனுடைய {இந்திரனின்} எண்ணங்களை உறுதி செய்து கொண்ட பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்ட சூரியன், கர்ணனிடம் சென்றான். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தணர்களுக்குத் தன்னை அர்ப்பணித்து, பேச்சில் உண்மை கொண்ட அந்த வீரன் {கர்ணன்}, இரவில், விலையுயர்ந்த விரிப்புகள் பரப்பிய ஆடம்பரக் கட்டிலில் வசதியாகப் படுத்திருந்த போது, தனது மகனின் {கர்ணனின்} மீது அன்பும் பாசமும் நிறைந்த அந்தப் பிரகாசமிக்கத் தேவன் {சூரியன்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, அவனது {கர்ணனின்} கனவுகளில் தன்னை வெளிக்காட்டினான்.

தன் தவச் சக்தியின் மூலம், வேதங்களை அறிந்த ஓர் அழகான அந்தண உருவம் கொண்ட சூரியன், கர்ணனிடம் அவனின் {கர்ணனின்} நன்மைக்காக இனிமையான வார்த்தைகளில், “ஓ! மகனே, ஓ! கர்ணா, ஓ! உண்மை நிறைந்தவர்களில் முதன்மையானவனே, எனது வார்த்தைகளை நீ கேள்! ஓ! வலிய கரங்கள் கொண்டவனே, உன் மீது கொண்ட பாசத்தால், உனக்கு எது பெரும் நன்மை என்பதை நான் இன்று உனக்குச் சொல்கிறேன்! ஓ! கர்ணா, உனது காது குண்டலங்களை அடையும் நோக்குடனும், பாண்டு மகன்களின் நன்மையில் கொண்ட விருப்பத்தாலும், அந்தணனாகத் தன்னை மறைத்துக் கொண்டு சக்ரன் {இந்திரன்} உன்னிடம் வருவான்! பக்திமான்களால் கேட்கப்படும்போது, நீ கொடையளிப்பாய்; கொடை ஏற்கமாட்டாய்; அது உனது குணம் என்று அவனும் அறிவான்; உலகம் அனைத்தும் அறியும். ஓ மகனே {கர்ணா}, நீ உன்னிடம் கேட்கப்படும் செல்வத்தையோ, எந்தப் பிற பொருளையோ அந்தணர்களுக்குக் கொடுக்கிறாய். மேலும் நீ யாருக்கும் எதையும் மறுப்பதில்லை. இப்படிப்பட்டவன் நீ என்பதை அறிந்த பகனை அடக்கியவன் {இந்திரன்} உன்னிடம் உனது காது குண்டலங்களையும், கவசத்தையும் இரந்து பெற வருவான்.

அவன் உன்னிடம் காது குண்டலங்களை இரக்கும்போது {யாசிக்கும்போது}, நீ அவற்றை அவனுக்கு அளிப்பது தகாது. ஆனால், நீ உன்னால் இயன்ற அளவு இனிய பேச்சுகளால் அவனை மன நிறைவு கொள்ளச் செய்ய வேண்டும். இதுவே உனது தலையாய நன்மை! உன்னிடம் காதுகுண்டலங்களை {இந்திரன்} கேட்கும்போது, அதற்குப் பதிலாக ரத்தினங்கள், பெண்கள், பசுக்கள் மற்றும் பல்வேறு வகையான செல்வங்கள் ஆகியவற்றை அவனுக்கு வழங்கியும், பல்வேறு முன்னோடி நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டியும், பல்வேறு காரணங்களைச் சொல்லியும் அவற்றை {குண்டலங்களை} அடைய நினைக்கும் புரந்தரனிடம் {இந்திரனிடம்} மீண்டும் மீண்டும் நீ மறுக்க வேண்டும். ஓ! கர்ணா, நீ உன்னுடன் பிறந்த உனது அழகிய காது குண்டலங்களைக் கொடுத்துவிட்டால், உனது வாழ்நாள் குறுகி, நீ மரணத்தைச் சந்திப்பாய்! கவசமும் காதுகுண்டலங்களும் கொண்ட நீ, ஓ! மரியாதைகள் செய்பவனே {கர்ணா}, எதிரிகளால் போர்க்களத்தில் கொல்லப்பட இயலாதவானாக இருப்பாய். எனது வார்த்தைகளில் உனது இதயத்தை நிறுத்து! ரத்தினங்களால் இழைக்கப்பட்ட இந்த ஆபரணங்கள் அமுதத்தில் {தேவலோக அமிர்தத்தில்} இருந்து உதித்தவை. எனவே, உன் உயிர் மீது நீ அன்பு கொண்டிருப்பாயானால், அவை உன்னால் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றான் {சூரியன்}.

இந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் {சூரியனிடம்}, “என்னிடம் இத்தகு கருணை காட்டும் நீ யார் என்பதைச் சொல்? உனக்கு விருப்பமுண்டானால், ஓ! சிறப்புமிக்கவனே, அந்தண உருவில் இருக்கும் நீ யார் என்பதை எனக்குச் சொல்?” என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணன், “ஓ! மகனே, நானே ஆயிரம் கதிர்கள் கொண்டவன் {சூரியன்}, பாசத்தாலேயே, நான் உனக்குப் பாதையைக் {நீ செய்ய வேண்டிய காரியத்தைக்} காட்டினேன்! அவ்வாறு செய்வதால் {சுட்டிக்காட்டிய பாதையில் செல்வதால்} உனக்கு மிகுந்த நன்மையுண்டாகும் என்று கொண்டு, எனது வார்த்தைகளின் படி செயல்படு!” என்றான். அதற்குக் கர்ணன் {சூரியனிடம்}, “பிரகாசத்தின் தேவன் {சூரியனான நீ}, என் நலம் நாடி, இன்று என்னிடம் பேசுவதே, நிச்சயமாக நான் அடைந்த உயர்ந்த நற்பேறாகும். எனினும், எனது இந்த வார்த்தைகளைக் கேள்! ஓ! வரங்களை அளிப்பவனே {சூரியனே}, பாசத்தால் மட்டுமே நான் இதை உன்னிடம் சொல்கிறேன். அது உனக்கு மனநிறைவைத் தரட்டும்! நான் உனக்கு அன்பானவனாக இருப்பின், என் நோன்பில் இருந்து நான் விலக்கப்படக்கூடாது! ஓ! பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்டவனே, மேன்மையான அந்தணர்களுக்கு எனது உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பேன் என்ற எனது இந்த நோன்பு உண்மை நிறைந்தது {of a verity} என்பதை முழு உலகமும் அறியும்.

ஓ! விண்ணதிகாரிகள் அனைவரிலும் சிறந்தவனே, பாண்டு மகன்களின் நன்மைக்காகச் சக்ரன் {இந்திரன்}, ஓர் அந்தணனாக வேடந்தரித்து என்னிடம் இரந்து {யாசித்து-பிச்சைகேட்டு} வந்தால், ஓ! தேவர்களின் தலைவா {சூரியனே}, மூன்று உலகங்கள் முழுவதிலும் பரவியிருக்கும் எனது புகழ் பாதிக்கப்படாத வகையில், நான் எனது காது குண்டலங்களையும், சிறந்த கவசத்தையும் அவனுக்குக் {இந்திரனுக்குக்} கொடுப்பேன். உயிரைக் காத்துக் கொள்வதற்காகப் பழிக்கத்தக்க செயலைச் செய்வது எங்களைப் போன்றோருக்குத் தகாது. மாறாக, புகழைக் கொடுக்கும் சூழ்நிலையில், உலகால் புகழப்பட்டு மரணத்தைச் சந்திப்பதே எங்களைப் போன்றோருக்குச் சரியானதாகும். எனவே, நான் எனது காது குண்டலங்களையும், எனது கவசத்தையும் இந்திரனுக்கு அளிப்பேன்! பலனையும், விருத்திரனையும் கொன்றவன் {இந்திரன்}, பாண்டு மகன்களின் நன்மைக்காக {எனது} காது குண்டலங்களைக் கேட்க வந்தால், அதனால் எனக்குப் புகழே விளையும், அதே நேரத்தில் {அச்செயல்} அவனது {இந்திரனுக்கு} புகழ்க்கேட்டுக்கு  வழி வகுக்கும்.

ஓ! பிரகாசம் கொண்டவனே {சூரியனே}, புகழுடையோர், தேவலோகங்களில் மகிழும் அதே வேளையில், அது {புகழ்} அற்றவர்கள் தொலைந்து போகிறார்கள் {நாசமடைகிறார்கள்}. எனவே, உயிரைக் கொடுத்துக் கொள்முதல் செய்ய வேண்டியிருந்தாலும், நான் இவ்வுலகத்தில் {அந்தப்} புகழையே விரும்புகிறேன். தாயைப் போல, புகழ், மனிதர்களை இவ்வுலகில் வாழ வைக்கிறது. அதே வேளையில், அழிவற்ற உடல்களுடன் திரிந்தாலும் புகழ்க்கேடு மனிதர்களைக் கொல்கிறது. ஓ! உலகங்களின் தலைவா, ஓ! பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்டவனே {சூரியனே}, “அடுத்த உலகில் புகழே ஒருவனுக்குத் தலையாய ஆதரவாகும். இந்த உலகில் தூய {பரிசுத்தமான} புகழே வாழ்நாளை அதிகரிக்கும்” என்று படைப்பாளனால் {பிரம்மனால்} பாடப்பட்ட ஒரு பழைய ஸ்லோகம், புகழே மனிதர்களுக்கு உயிர் என்பதற்குச் சாட்சியளிக்கிறது.

எனவே, என்னுடன் பிறந்த எனது காது குண்டலங்கள் மற்றும் கவசம் ஆகிய இவை இரண்டையும் அளிப்பதால், நான் நித்திய புகழை வெல்வேன்! மேலும் அதையே நியமத்தின் படி முறையாக அந்தணர்களுக்கு அளிப்பதாலும், போர் எனும் வேள்வியில் எனது உடலை (தேவர்களுக்குக் காணிக்கையாக) அளிப்பதாலும், செயற்கரிய கடினமான சாதனைகளை அடைவதாலும், போரில் எனது எதிரிகளை வெல்வதாலும், நான் புகழை அடைவேனேயன்றி வேறில்லை. போர்க்களத்தில் தங்கள் உயிருக்காகப் பிச்சை கேட்பவர்களின் அச்சங்களை அகற்றி, முதிர்ந்தவர்களையும், சிறுவர்களையும், அந்தணர்களையும் பயங்கரவாதம் மற்றும் பதட்டத்தில் இருந்து விடுவித்து, சிறந்த புகழையும், உயர்ந்த சொர்க்கத்தையும் நான் வெல்வேன். எனது உயிரையே தியாகம் செய்தாவது எனது புகழ் காக்கப்பட வேண்டும். இதையே எனது நோன்பாக அறிவாயாக! அந்தணனாக வேடமிட்டு வரும் மகவானுக்கு {இந்திரனுக்கு} இப்படிப்பட்ட மதிப்புமிக்கக் கொடையை அளிப்பதனால், ஓ தேவா {சூரியனே}, நான் இவ்வுலகில் மிக மேன்மையான நிலையை அடைவேன்” என்றான் {கர்ணன்}.

கர்ணனை மீண்டும் எச்சரித்த சூரியன்! – வனபர்வம் பகுதி 299-குண்டலங்களையும் கவசத்தையும் இந்திரனுக்குக் கொடுத்துவிடாதே என்று மீண்டும் கர்ணனை எச்சரித்த சூரியன்.

சூரியன் {கர்ணனிடம்} சொன்னான், “ஓ! கர்ணா, உனக்கும், உனது நண்பர்களுக்கும், உனது மகன்களுக்கும், உனது மனைவியருக்கும், உனது தந்தைக்கும், உனது தாய்க்கும் தீங்கிழைக்கும் எதையும் செய்துவிடாதே; ஓ! உயிரைத் தாங்கியிருப்பவர்களில் சிறந்தவனே {கர்ணா}, மனிதர்கள், தங்கள் உடல்களைத் தியாகம் செய்ய விரும்பாமலே, (இவ்வுலகில்) புகழையும், சொர்க்கத்தில் நீடித்த புகழையும் விரும்புகிறார்கள். ஆனால், .நீயோ உனது உயிரைச் செலவு {தியாகம்} செய்து சாகாப்புகழை விரும்புகிறாய் ஆதலால், சந்தேகமற அவள் {புகழ்} உனது உயிரைப் பறிப்பாள். ஓ! மனிதர்களில் காளையே {கர்ணா}, இவ்வுலகில், தந்தை, தாய், மகன், பிற உறவினர்கள் ஆகியோர் உயிருடனிருப்பவர்களுக்கே பயனளிப்பவர்களாக இருக்கிறார்கள். ஓ! மனிதர்களில் புலியே {கர்ணா}, மன்னர்களைப் பொறுத்தவரை, அவர்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்களது பராக்கிரமம் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இதை நீ புரிந்து கொண்டாயா? ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே {கர்ணா}, உயிருடன் வாழ்பவர்களுக்குப் புகழ் நன்மையைச் செய்யும்! உடல்கள் சாம்பலாக்கப்பட்ட இறந்தவர்களுக்கு, புகழால் என்ன பயன்?

இறந்து போனவன் புகழைக் கண்டு மகிழ முடியாது. உயிரோடிருப்பவனே அதுகுறித்து மகிழ முடியும். இறந்து போனவனின் புகழ் என்பது சடலத்தின் கழுத்தில் இருக்கும் மலர்கள் நிறைந்த மாலைக்கு ஒப்பானது. நீ என்னை மதித்து வழிபடுபவன் ஆதலால், உனது நன்மைக்காக இதைச் சொல்கிறேன். என்னை வழிபடுபவர்கள் எப்போதும் என்னால் பாதுகாக்கப்படுகிறார்கள். உன்னிடம் நான் பேசுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்! ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {கர்ணா}, பெரும் மதிப்புடன் இவன் {கர்ணன்} நம்மை வணங்குகிறான் என்று மீண்டும் நினைத்தே, நான் உன் மீது அன்பால் ஈர்க்கப்பட்டேன். எனவே, என் வார்த்தைகளின் படி நடந்து கொள்!

இது தவிர, விதியால் விதிக்கப்பட்ட ஓர் ஆழமான மர்மம் இவை அனைத்திலும் இருக்கிறது. எந்தவிதமான அவநம்பிக்கையும் இன்றி நீ செயல்படு! ஓ! மனிதர்களில் காளையே {கர்ணா}, தேவர்களுக்கு ரகசியமான இது குறித்து நீ அறிவது தகுந்தது அல்ல. எனவே, நான் அந்த ரகசியத்தை உனக்கு வெளிப்படுத்தவில்லை. எனினும், குறித்த நேரத்தில் நீ புரிந்து கொள்வாய். நான் ஏற்கனவே சொன்னதைத் திரும்பச் சொல்கிறேன். ஓ! ராதையின் மகனே {கர்ணா}, எனது வார்த்தைகளை உனது இதயத்தில் நிறுத்து! வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்} அவற்றை {குண்டலங்களையும் கவசத்தையும்} உன்னிடம் கேட்கும்போது, நீ அவனுக்கு {இந்திரனுக்கு} உனது குண்டலங்களைக் கொடுத்துவிடாதே!

ஓ! பெரும்பிரகாசம் கொண்டவனே {கர்ணா}, நீ உனது குண்டலங்களுடன் இருக்கும்போது, தெளிந்த வானில் இருக்கும் விசாக நட்சத்திரத்து சந்திரன் போல அழகாக இருக்கிறாய்! {உயிருடன்} வாழும் ஒருவனுக்கே, புகழ் பலனளிக்கும் என்பதை அறிந்து கொள். எனவே, தேவர்களின் தலைவன் {இந்திரன்} காது குண்டலங்களைக் கேட்கும்போது, ஓ! மகனே {கர்ணா}, நீ அவனிடம் {அதற்கு} மறுக்க வேண்டும்! பலவிதமான காரணங்கள் பொதிந்த பதில்களை நீ திரும்பத் திரும்பச் சொல்வதால், ஓ! பாவமற்றவனே {கர்ணா}, காது குண்டலங்களை அடைய நினைக்கும் தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} ஆவல் அகலும்.

இனிமை மற்றும் மரியாதை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட ஆழ்ந்த சிந்தனைக்குரிய காரணங்கள் நிறைந்த பதில்களை வலியுறுத்திச் சொல்லி புரந்தரனின் நோக்கத்தை நீ அகற்றுவாயாக. ஓ! மனிதர்களில் புலியே {கர்ணா}, தன் இடது கையாலும் வில்லை வளைக்கும் திறன் பெற்றவனுக்கு {அர்ஜுனனுக்கு} எப்போதும் நீ சவால் விடுவாய். மேலும் வீரனான அர்ஜுனனும் போரில் உன்னுடன் நிச்சயம் மோதுவான்.  {கர்ணா} நீ உனது காது குண்டலங்களுடன் இருக்கும்போது, இந்திரனே அர்ஜுனனின் துணைக்கு வந்தாலும், அவனால் {அர்ஜுனனால்} உன்னைப் போரில் வீழ்த்த முடியாது. எனவே, ஓ! கர்ணா, நீ போர்க்களத்தில் அர்ஜுனனை வீழ்த்த விரும்பினால், இந்த உனது அழகிய காது குண்டலங்கள் உன்னால் இந்திரனுக்குக் கொடுக்கப்படக்கூடாது” என்றான் {சூரியன்}

சக்தி ஆயுதம்! – வனபர்வம் பகுதி 300-இந்திரனுக்குக் கவசத்தையும் குண்டலங்களையும் கொடுக்கக் கர்ணன் சூரியனிடம் அனுமதி கோரியது; இந்திரனிடம் சக்தி ஆயுதத்தைப் பெற்றுக் கொண்டு குண்டலங்களையும், வசத்தையும் கொடுக்கும்படி கர்ணனுக்குச் சூரியன் அனுமதி கொடுத்தது.

கர்ணன் {சூரியனிடம்} சொன்னான், “ஓ! பிரகாசத்தின் தலைவா, நான் உன்னை வழிபடுபவன் என்பதை அறிவாயாக! ஓ! கடுங்கதிர்களைக் கொண்டவனே {சூரியனே}, என்னால் தானமாகக் கொடுக்க முடியாதது எதுவுமில்லை என்பதை நீ அறிவாய்! ஓ! பிரகாசத்தின் தலைவா {சூரியனே}, நான் உன் மீது கொண்டிருக்கும் பக்தியைப் போன்று, என் மனைவியரோ, என் மகன்களோ, எனது சுயமோ, எனது நண்பர்களோ, எனக்கு அன்புக்குரியவர்கள் {விருப்பமானவர்கள்} அல்ல. ஓ! ஒளியை உண்டாக்குபவனே {சூரியனே}, பெரும் ஆன்மா கொண்டவர்கள் {மகாத்மாக்கள்}, தங்கள் அன்புக்குரிய வழிபாட்டாளர்களிடம் அன்பு கொண்டிருக்கிறார்கள் என்பதை நீ அறிவாய். “கர்ணன் எனது பக்தனும் அன்பிற்குரியவனும் ஆவான். அவன் சொர்க்கத்தில் வேறு தெய்வத்தை {தேவனை} அறியமாட்டான்.” என்று நினைத்தே, ஓ! தலைவா {சூரியா}, நீ எனக்கு நன்மையானதை என்னிடம் சொன்னாய். எனினும், ஓ! பிரகாசமான கதிர்கள் கொண்டவனே {பாஸ்கரனே, சூரியனே}, சிரம் தாழ்த்தி மீண்டும் நான் உன்னை வேண்டுகிறேன், மீண்டும் நான் உன் கைகளில் என்னை ஒப்புக்கொடுக்கிறேன். நான் ஏற்கனவே சொன்ன பதிலையே மீண்டும் உரைப்பேன். நீ என்னை மன்னிப்பதே தகும்!

பொய்மையைப் போல் மரணம் கூட எனக்குப் பயங்கரம் நிறைந்ததாக இல்லை {பொய்மைக்கு அஞ்சுகிறேன், மரணத்திற்கஞ்சவில்லை}. அந்தணர்களைப் பொறுத்தவரை, நான் அவர்களுக்காக எனது உயிரையும் கொடுக்கத் தயங்கமாட்டேன்! ஓ! தெய்வீகமானவனே {சூரியனே}, பாண்டுவின் மகனான பல்குனனை {அர்ஜுனனைக்} குறித்து நீ சொன்னதை மதிக்கிறேன். போர்க்களத்தில் நான் நிச்சயம் அர்ஜுனனை வெல்வேன் என்பதால், ஓ! பிரகாசத்தின் தலைவா {சூரியனே}, நீ என்னையும் அவனையும் தொட்டு, உனது இதயத்தில் தோன்றியிருக்கும் கவலையை அகற்றுவாயாக! ஓ! தெய்வமே {சூரியனே}, ஜமதக்னேயரிடமும் {பரசுராமரிடமும்}, உயர் ஆன்ம {மகாத்மாவான} துரோணரிடமும் பெரும் பலம் பெற்ற ஆயுதங்களை நான் பெற்றிருப்பது குறித்து நீ அறிவாய். ஓ! தேவர்களில் முதன்மையானவனே {சூரியனே}, எனது நோன்பைத் தொடர எனக்கு அனுமதி அளிப்பாயாக! வஜ்ரம் தாங்கியவன் {இந்திரன்} என்னிடம் இரந்து கேட்டு வரும்போது, நான் எனது உயிரையும் அவனுக்குக் கொடுப்பேன்.” என்று சொன்னான் {கர்ணன்}.

சூரியன் {கர்ணனிடம்}, “ஓ! மகனே {கர்ணா}, வஜ்ரத்தைத் தாங்கியிருப்பவனுக்கு உனது காது குண்டலங்களைக் கொடுத்தால், ஓ! வலிமைமிக்கவனே, நீ வெற்றியடையும் நோக்கத்திற்காக அவனிடம் {இந்திரனிடம்}, “ஓ! நூறு வேள்விகள் செய்தவனே {இந்திரனே}, நான் ஒரு நிபந்தனையின் பேரில் காது குண்டலங்களை அளிப்பேன்” என்று சொல். காது குண்டலங்களுடன் இருக்கும்போது, உன்னை எந்த உயிரினத்தாலும் கொல்ல முடியாது என்பது நிச்சயம். எனவே, ஓ! மகனே {கர்ணா}, போர்க்களத்தில் அர்ஜுனன் உன்னைக் கொல்வதைக் காண விரும்பியே, தானவர்களை அழிப்பவன் {இந்திரன்}, உன்னை உனது காது குண்டலங்களை இழக்கச் செய்ய விரும்புகிறான்.

வீழ்த்துவதற்கு இயலாத ஆயுதங்களைத் தாங்கியிருக்கும் தேவர்கள் தலைவனான புரந்தரனை {இந்திரனை} உண்மையான வார்த்தைகளால் மீண்டும் மீண்டும் புகழ்ந்து {இந்திரனிடம்}, “எதிரிகள் அனைவரையும் கொல்லும் திறன் கொண்டதும், இலக்கு தவறாததுமான ஒரு கணையை {சக்தி ஆயுதம்} நீ எனக்குக் கொடு. நானும், ஓ! ஆயிரங்கண் தெய்வமே {இந்திரா}, சிறந்த கவசத்துடன் சேர்த்து, காது குண்டலங்களையும் உனக்குக் கொடுக்கிறேன்” என்று வேண்டிக் கேள். இந்த நிபந்தனையின் பேரிலேயே சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நீ காது குண்டலங்களைக் கொடுக்க வேண்டும். ஓ! கர்ணா, அந்தக் கணையைக் கொண்டு, போர்க்களத்தில் நீ உனது எதிர்களைக் கொல்லலாம். ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {கர்ணா}, தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} கணை, எதிரிகளை நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் கொல்லாமல், எய்தவன் கரங்களுக்குத் திரும்பாது!” என்றான் {சூரியன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன அந்த ஆயிரங்கதிர் தெய்வம் {சூரியன்} திடீரென மறைந்து போனான். அடுத்த நாள், தனது துதிகளைச் சொன்ன பிறகு, கர்ணன் தனது கனவை சூரியனிடம் சொன்னான். விருஷன் {கர்ணன்} தான் கண்ட காட்சியில் கண்டவற்றையும், அவர்களுக்குள் {சூரியனுக்கும் கர்ணனுக்கும் இடையில்} அன்று இரவு நடந்தது அத்தனையும் சொன்னான். அதன் பிறகு, அனைத்தையும் கேட்ட சுவர்ணபானுவின் {ராகுவின்} எதிரியான தலைவனும் {சூரியனும்}, ஒளிபொருந்தியவனும், தெய்வீகமானவனுமான சூரியன், அவனிடம் {கர்ணனிடம்} புன்னகையுடன், “அப்படியே!” என்றான். பிறகு எதிரி வீரர்களைக் கொல்பவனான ராதையின் மகன் {கர்ணன்} இக்காரியம் குறித்து அனைத்தையும் அறிந்து, அந்தக் கணையை {சக்தி ஆயுதத்தை} அடைய விரும்பி, வாசவனை {இந்திரனை} எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

குந்திபோஜன் குந்திக்கிட்ட கட்டளை! – வனபர்வம் பகுதி 301-குந்திபோஜனிடம் சென்ற துர்வாசர்; துர்வாசரைத் தனது அரண்மனையில் வசிக்க வைத்த குந்திபோஜன்; குந்திக்கு குந்திபோஜனின் கட்டளை…

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “வெப்பக் கதிர்கள் கொண்ட தெய்வம் {சூரியன்} கர்ணனிடம் வெளிப்படுத்தாத ரகசியம் என்ன? அந்தக் காது குண்டலங்கள் என்ன வகையைச் சார்ந்தவை? அந்தக் கவசம் என்ன வகை? அந்தக் கவசமும், அந்தக் காது குண்டலங்களும் எங்கிருந்து வந்தவை? ஓ! மனிதர்களில் சிறந்தவரே {வைசம்பாயனரே}, இவை யாவையும் நான் கேட்க விரும்புகிறேன்! ஓ! துறவை செல்வமாகக் கொண்டவரே இவை அனைத்தையும் எனக்குச் சொல்லும்” என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்ட தெய்வம் {சூரியன்}, எந்த ரகசியத்தை வெளிப்படுத்த வில்லை என்பதை நான் உனக்குச் சொல்வேன். ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒரு காலத்தில் தாடி, சடாமுடி ஆகியவற்றுடன் கையில் தண்டம் தரித்த, உயரமான தேகமும் கடும் சக்தியும் கொண்ட ஓர் அந்தணர் குந்திபோஜனின் முன்னிலையில் தோன்றினார். கண்களுக்கு ஏற்புடையவராகவும், குறைகளற்ற அங்கங்கள் கொண்டவராகவும், பிரகாசத்தில் சுடர்விட்டு எரிபவராகவும் அவர் தெரிந்தார். மஞ்சளும் நீலமும் கலந்த தேனின் நிறத்தை {பிங்கவர்ணம்} அவர் கொண்டிருந்தார். அவரது பேச்சுத் தேனொழுகுவதாக இருந்தது. துறவுத்தகுதி மற்றும் வேதங்களில் அறிவு ஆகியவற்றால் அவர் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

பெரும் துறவுத்தகுதி கொண்ட அந்த மனிதர் மன்னன் குந்திபோஜனிடம், “ஓ கர்வமற்றவனே {குந்திபோஜா}, உணவை உன்னிடம் பிச்சையாகப் பெற்று, உனது இல்லத்தில் விருந்தினனாக வாழ விரும்புகிறேன்! உனது தொண்டர்களோ, நீயோ எப்போதும் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்! ஓ! பாவமற்றவனே {குந்திபோஜா}, இதில் உனக்கு விருப்பமென்றால், நான் உனது இல்லத்தில் வாழ்வேன்! நான் விரும்பும் போது உனது இருப்பிடத்தில் இருந்து செல்வேன்; விரும்பும்போது திரும்பவும் வருவேன். ஓ! மன்னா {குந்திபோஜா}, எனது உணவிலோ, படுக்கையிலோ யாரும் எனக்குக் குற்றமிழைக்கக்கூடாது” என்றார்.

பிறகு குந்திபோஜன் அவரிடம் உற்சாகமான வார்த்தைகளால், “அப்படியே ஆகட்டும். இன்னும் சிறப்பாக ஆகட்டும்” என்றான். பிறகு அவன் அவரிடம் மீண்டும், “ஓ பெரும் ஞானியே, எனக்குப் பிருதை {குந்தி} என்ற பெயரில் சிறப்புவாய்ந்த மகளொருத்தி இருக்கிறாள். அவள், நோன்பு நோற்று, கற்பு, கட்டுப்படுத்தப்பட்ட புலன்கள், அற்புத குணம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறாள். அவள் உம்மைக் கவனித்துக் கொண்டு, உமக்குத் தேவையானதை மரியாதையுடன் செய்வாள். அவளது மனநிலையைக் கண்டு நீர் மகிழ்ச்சியடைவீர்!” என்றான். அந்த அந்தணரிடம் இப்படிச் சொல்லி, அவரை முறையாக விருந்தோம்பிய மன்னன் {குந்திபோஜன்}, அகன்ற கண்களுடைய தனது மகள் பிருதையிடம் சென்று, “ஓ குழந்தாய், பெரிய பக்திமானான இந்த அந்தணர் எனது இல்லத்தில் வசிக்க விரும்புகிறார். ஓ குழந்தாய், உனது தகுதி மற்றும் பணிவிடை செய்யும் திறன் ஆகியவற்றை நம்பி, அவரது கோரிக்கையை “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி நான் ஏற்றுக் கொண்டேன். எனவே எனது வார்த்தைகள் பொய்க்காதபடி நடந்து கொள்வதே உனக்குத் தகும். வேத கல்வியில் ஈடுபட்டு தவத்தகுதியைக் கொண்டிருக்கும் இந்த மரியாதைக்குரிய அந்தணர் என்ன கேட்டாலும் அதைச் சுறுசுறுப்பாகச் செய். இந்த அந்தணர் கேட்கும் எதுவும் உற்சாகத்துடன் கொடுக்கப்படட்டும். ஓர் அந்தணன் என்பவர் தலைமையான ஆற்றலுக்கு உருவகமாக உள்ளார். உயர்ந்த தவத்தகுதியின் உருவகமாகவும் அவர் உள்ளார். அந்தணர்களின் அறப்பயிற்சிகளின் தொடர்ச்சியாகவே வானத்தில் சூரியன் ஒளிர்கிறது. மரியாதைக்குத் தகுதியுடைய அந்தணர்கள் அவமதிக்கப்பட்டதாலேயே, பலமிக்க அசுரன் வாதாபியும், தாலஜங்கனும் அந்தண சாபத்தால் அழிக்கப்பட்டனர். ஓ குழந்தாய், தற்போது அப்படிப்பட்ட ஓர் உயர்ந்த அறம்சார்ந்தவரே உனது பராமரிப்பில் விடப்பட்டுள்ளார்.

நீ எப்போதும் இந்த அந்தணரைக் குவிந்த மனதுடன் கவனித்துக் கொள்ள வேண்டும். ஓ மகளே {குந்தி}, அந்தணர்களையும், பெரியோர்களையும், உறவினர்களையும், பணியாட்களையும், நண்பர்களையும் உனது குழந்தைப்பருவத்தில் இருந்து நீ எப்படி உனது தாய்மாரைப் போலவும், என்னைப் போலவும் நினைத்துக் கவனித்து வருகிறாய் என்பதை நான் அறிவேன். உன்னை நீயே நன்று தாங்கிக் கொள்வாய் என்றும், அனைவருக்கும் சரியானதை அளிப்பாய் என்றும் நான் அறிவேன். ஓ குற்றமில்லா அங்கங்கள் கொண்டவளே {குந்தி}, எனது நகரத்திலும் அந்தப்புரத்திலும் உனது நடத்தையில் அதிருப்தி கொண்டோர் பணியாட்களுக்கு மத்தியில் கூட இருக்கமாட்டார்கள். எனவே, கோபக்கார அந்தணர்களுக்காகக் காத்திருப்பதற்கு நீயே தகுதியானவள் என்று நினைத்தேன்.

ஓ பிருதை, நீ ஒரு பெண். என்னால் மகளாக எடுத்து வளர்க்கப்பட்டு வருபவள். நீ விருஷ்ணி குலத்தில் பிறந்தவள். நீ சூரனுக்குப் பிடித்தமான மகள். ஓ பெண்ணே {குந்தி}, உன்னை உனது தந்தை எனக்கு மகிழ்ச்சியாகக் கொடுத்தார். பிறப்பால் வசுதேவனுக்குத் தங்கையான நீ எனது குழந்தைகளில் முதன்மையானவள் ஆவாய். “எனக்கு முதலில் பிறக்கும் குழந்தையைக் கொடுப்பேன்” என்று உறுதி கூறிய உனது தந்தை, நீ குழந்தையாக இருக்கும்போதே உன்னை என்னிடம் கொடுத்தார். அதன்காரணமாகவே நீ எனது மகளாக இருக்கிறாய். அத்தகு குலத்தில் பிறந்து, இத்தகு குலத்தில் வளர்க்கப்பட்ட நீ ஒரு மகிழ்ச்சியான நிலையில் இருந்து மறு மகிழ்ச்சியான நிலைக்கு வந்து ஒரு தாமரையில் இருந்து மறுதாமரைக்கு மாற்றப்பட்டவள் போல இருக்கிறாய்.

ஓ மங்களகரமான பெண்ணே, குறிப்பாக இழிந்த வகையில் பிறந்த பெண்களைச் சிரமத்துடன் பாதுகாத்தாலும், அவர்களது முதிராத வயதின் தொடர்ச்சியாக நடத்தை கெடுகிறார்கள். ஆனால், ஓ பிருதை, நீ அரச குலத்தில் பிறந்து, அழகால் இயல்புக்குமிக்க நிலையில் இருக்கிறாய். ஓ பெண்ணெ, மேலும் நீ அனைத்தையும் கொண்டிருக்கிறாய். எனவே, ஓ மங்கையே, பெருமை, கர்வம், சுயமுக்கியத்துவம்ஆகிய உணர்வுகளைக் கைவிட்டு, வரமளிக்கும் அந்தணரை வழிபட்டு அவருக்காகக் காத்திருந்து, அதனால், ஓ பிருதை மங்களகரமான நிலையை அடைவாயாக! ஓ மங்களகரமான பாவமற்ற பெண்ணே, அப்படி நடந்து கொண்டால், நீ நிச்சயம் மங்களகரமான நிலையை அடைவாய்! ஆனால் மாறாக, இருபிறப்பாளர்களில் சிறந்தவரின் கோபத்தைத் தூண்டினாலோ, எனது மொத்த குலமும் அவரால் எரிக்கப்படும்!” என்றான் குந்திபோஜன்.

சோம்பலைத் தள்ளிவைத்த குந்தி! – வனபர்வம் பகுதி 302-குந்திபோஜனுக்கு உறுதி அளித்த குந்தி, ; குந்திபோஜன் சில முறைமைகளைக் குந்திக்குச் சொன்னது; அந்தணரிடம் தனது மகளை அறிமுகப்படுத்திய குந்திபோஜன், அவள் ஏதாவது பிழை செய்தால் பொறுத்தருளுமாறு அந்த அந்தணரிடம் குந்திபோஜன் வேண்டியது; குந்தி அந்த அந்தணரைப் பொறுப்புடன் பார்த்துக் கொண்டது…

குந்தி {வளர்ப்புத் தந்தையான குந்திபோஜனிடம்}, “ஓ! மன்னா, நீர் உறுதிகொடுத்தவாறே, குவிந்த மனதோடு {மனம் ஒன்றி} நான் அந்த அந்தணருக்கு {துர்வாசருக்குப்} பணிவிடை செய்வேன். ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {குந்திபோஜரே}, நான் இதைப் போலியாகச் சொல்லவில்லை. அந்தணர்களை வழிபடுவது எனது இயல்பே. மேலும், தற்போதைய வழக்கில், உமக்கு விருப்பமானதை நான் செய்தால், எனது நன்மைக்கு அது பெரிய பலனளிக்கும். அந்த வழிபடத்தகுந்தவர் மாலையிலோ, காலையிலோ, இரவிலோ, நடு இரவிலோ வந்தாலும், என்னிடம் கோபம் கொள்ள அவருக்கு எந்தக் காரணமும் இருக்காது! ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, இருபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்குச்} சேவை செய்யும் நன்மையைச் செய்வதும், உமது கட்டளைகளை நிறைவேற்றுவதுமே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {குந்திபோஜரே}, எனக்கு உயர்ந்த பலனைத் தரும். எனவே, ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவரே, என்னை நீர் நம்பலாம்!

அந்த அந்தணர்களில் சிறந்தவர் {துர்வாசர்} உமது இல்லத்தில் வசிக்கும்போது, அதிருப்திக்கான எந்த நிலையையும் அடைய மாட்டார். நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஓ! மன்னா {குந்திபோஜரே}, நான் மிகுந்த கவனத்தோடு, அந்த அந்தணருக்கு ஏற்புடையதையும், உமக்கு நன்மை நிறைந்ததையுமே செய்வேன். ஓ! பாவமற்றவரே, பேரறம்சார்ந்த அந்தணர்கள் மனநிறைவடைந்தால் முக்தியையும், வருந்தினால் அக்குற்றவாளிக்கு அழிவையும் தரவல்லவர்கள் என்பதை நான் முழுமையாக அறிவேன். எனவே, நான் அந்த அந்தணர்களில் முதன்மையானவரை மனம் நிறையச் {திருப்தி கொள்ளச்} செய்வேன். ஓ! ஏகாதிபதி {குந்திபோஜரே}, அந்த மறுபிறப்பாள மனிதர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரை {துர்வாசரைக்} குறித்து நீர் கவலைக் கொள்ளத்தேவையில்லை. ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, முற்காலத்தில் சுகன்யாவின் செயல் காரணமாகச் சியவனர் தீங்கிழைத்தது போல, ஏகாதிபதிகளின் வரம்புமீறல்களின் விளைவாக அந்தணர்கள் அவர்களுக்குத் தீமையை விளைவிக்கின்றனர். எனவே, ஓ! மன்னா {குந்திபோஜரே}, நான் பெரும் ஒழுங்குமுறையுடன் {சரியான இடைவெளிகளில்}, அந்த அந்தணர்களில் சிறந்தவருக்காக {துர்வாசருக்காகக்} காத்திருந்து, உமது கட்டளைகளின் படி நடந்து கொள்வேன்!” என்றாள் {குந்தி}.

அவள் {குந்தி} இப்படி நீளமாகப் பேசியதும், அவளை அணைத்துக் கொண்ட மன்னன் {குந்திபோஜன்}, அவளுக்கு உற்சாகமூட்டி, அவளால் என்ன செய்யப்பட வேண்டும் என்பதை அவளுக்கு விளக்கமாகத் தெரிவித்தான். பிறகு அந்த மன்னன் {குந்திபோஜன் குந்தியிடம்}, “ஓ மென்மையான பெண்ணே {குந்தியே}, உனது நன்மைக்காகவும், எனது நன்மைக்காகவும், உனது குலத்தின் நன்மைக்காகவும், ஓ! குற்றமற்ற அங்கங்கள் கொண்டவளே {குந்தி}, அச்சமில்லாமல் செயல்படு!” என்றான். அந்தணர்களுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த சிறப்புமிக்கக் குந்திபோஜன், பிறகு, பிருதையை {குந்தியை} அந்த அந்தணரிடம் {துர்வாசரிடம்} அழைத்துச் சென்று, “ஓ! அந்தணரே {துர்வாச முனிவரே}, இது எனது மகள். இளவயது கொண்ட இவள், ஆடம்பரமாக {சுகபோகமாக} வளர்க்கப்பட்டவளாவாள். எனவே, இவள் எப்போதாவது வரம்புமீறி நடந்து கொண்டால், அதை உமது இதயத்தில் கொள்ளாதீர்! முதிர்ந்த மனிதர்கள், சிறுவர்கள், துறவிகள் ஆகியோர் அடிக்கடி வரம்பு மீறினாலும் சிறப்புமிக்க அந்தணர்கள் கோபம் கொள்வதில்லை. அவர்கள் பெரும் குற்றம் இழைத்தாலும் மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} பொறுமைகாப்பார்கள். எனவே, ஓ! அந்தணர்களில் சிறந்தவரே, தனது சக்திக்கும் முயற்சிக்கும் இயன்ற அளவு ஒருவனால் செய்யப்படும் வழிபாடு ஏற்கப்பட வேண்டும்!” என்றான் {குந்திபோஜன்}.

ஏகாதிபதியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த அந்தணர் {துர்வாசர்}, “அப்படியே ஆகட்டும்!” என்றார். அதன்பிறகு அந்த மன்னன் {குந்திபோஜன்} மிகுந்த மன நிறைவு கொண்டு அன்னங்களைப் போலவும், சந்திரனின் கதிர்களைப் போலவும் வெண்மையாக இருக்கும் ஒரு மாளிகையை அவருக்குக் கொடுத்தான். வேள்வி நெருப்புக்கான அறையில், குறிப்பாக அவருக்கெனவே ஓர் இருக்கையை மன்னன் {குந்திபோஜன்} வைத்தான். அந்த அந்தணருக்கு அளிக்கப்பட்ட உணவு மற்றும் பிற பொருட்கள் சிறந்த வகையில் இருந்தன. சோம்பலையும், சுயமுக்கியத்துவ உணர்வுகளையும் தள்ளி வைத்த அந்த இளவரசி {பிருதை}, நல்ல உள்ளத்துடன் அந்த அந்தணரை {துர்வாச முனிவரை} தனக்குள் ஆராதித்து, அவருக்காகக் காத்திருக்கத் தீர்மானித்தாள். சுத்தமான நடத்தை கொண்ட கற்புடைய குந்தி, அந்த அந்தணருக்கு {துர்வாசருக்குச்} சேவை செய்வதற்காக அங்கே சென்றாள். தெய்வத்துக்காகக் காத்திருப்பது போலவே, அந்த அந்தணருக்காகக் காத்திருந்து, அவரைப் பெரிதும் மனம் நிறையச் செய்தாள் {குந்தி}.”

வரம் மறுத்த குந்தி! – வனபர்வம் பகுதி 303-குந்தி செய்த பணிவிடையால் மகிழ்ந்த அந்தணர் அவளுக்கு வரம் கொடுக்க முன் வந்தது; வரத்தை மறுத்த குந்தி; அவள் வரத்தை ஏற்கவில்லையென்றாலும், மந்திரம் உபதேசித்த அந்தணர்; அந்தணர் அரசனிடம் விடைபெற்றது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கடும் நோன்புகள் கொண்ட அந்தக் கன்னிகை {குந்தி}, ஓ! வலிமைமிக்க ஏகாதிபதி {ஜனமேஜயா}, பரிசுத்த இதயம் கொண்ட தனது பணிவிடையால், கடும் நோன்புகள் கொண்ட அந்த அந்தணரை {துர்வாசரை} மனம் நிறையச் செய்வதில் வென்றாள். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, “நான் காலையில் திரும்பி வருவேன்” என்ற சொல்லும் அந்த அந்தணர்களில் சிறந்தவர்கள், சில நேரங்களில் மாலையிலோ இரவிலோதான் திரும்புவார்; எனினும், அந்தக் கன்னிகை {குந்தி}, அனைத்து நேரங்களிலும் அருமையான உணவு, பானம் மற்றும் படுக்கை ஆகியவற்றைக் கொடுத்து அவரை {அந்த அந்தணரை; துர்வாசரை} வழிபட்டாள். நாளுக்கு நாள் அவரது உணவு, இருக்கை மற்றும் படுக்கை ஆகியவற்றில் அவளது {குந்தியின்} கவனம் தேய்ந்துபோவதற்குப் பதிலாக வளர்ந்து வந்தது.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவளது {குந்தியின்} ஏற்பாடுகளில் ஏதாவது குறை கண்டு அந்த அந்தணர் {துர்வாசர்} அவளைக் கடிந்து கொண்டாலோ, கடும்வார்த்தைகள் பேசினாலோ கூட, பிருதை {குந்தி}, அவருக்கு ஏற்பில்லாத எதையும் செய்தாளில்லை. பல சந்தர்ப்பங்களில் அந்த அந்தணர் குறித்த நேரத்திற்கு நெடுநேரத்திற்குப் பின்னரே வந்தார். பல சந்தர்ப்பங்களின் உணவைக் கொடுக்கக் கடினமான நேரங்களில் (நள்ளிரவு நேரம் போன்ற நேரங்களில்) அவர் {துர்வாசர்}, “எனக்கு உணவு கொடு!” என்று கேட்பார். ஆனால் அந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம், “அனைத்தும் தயாராக இருக்கின்றன” என்று சொல்லும் பிருதை {குந்தி} அவர் கேட்டதை அவருக்கு முன் ஏந்துவாள். ஒரு சீடரையோ {சிஷ்யை}, மகளையோ, தங்கையையோ போலப் பெண்களில் ரத்தினமான அந்தப் பழியற்ற பெண் அர்ப்பணிப்பான இதயத்துடன், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த அந்தணர்களின் முதன்மையானவரை {துர்வாசரை} மனநிறைவு கொள்ளச் செய்தாள்.

அந்தணர்களில் சிறந்த அவர் {துர்வாசர்}, அவளின் {குந்தியின்} நடத்தையில் கவனிப்பிலும் மனம் மகிழ்ந்தார். சரியான மதிப்புடன் கூடிய அவளது கவனிப்புகளை அவர் {துர்வாசர்} பெற்றார். ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் அவளின் {குந்தியின்} தந்தை {குந்திபோஜன்} அவளிடம், “ஓ! மகளே {குந்தி}, உனது கவனிப்பால் அந்தணர் {துர்வாசர்} மனநிறைவு அடைகிறாரா?” என்று கேட்பான். அதற்கு அந்தச் சிறப்புமிக்கக் கன்னிகை {குந்தி}, “மிக நன்றாக!” என்று மறுமொழி சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அதன்பேரில், உயர் ஆன்ம குந்திபோஜன் உயர்ந்த மகிழ்ச்சியை உணர்ந்தான். ஒரு முழு வருடம் கடந்ததும், அந்தத் துறவிகளில் சிறந்தவரால் {துர்வாசரால்}, தன்னைக் கவனித்துக் கொள்வதில் ஈடுபட்டிருந்த பிருதையிடம்  {குந்தியிடம்} எந்தத் குற்றத்தையும் காண முடியாமல் அவளிடம் மிகவும் மனநிறைவு கொண்டு, “ஓ! மென்மையான கன்னிகையே {குந்தியே}, உனது கவனிப்புகளால், ஓ! அழகான பெண்ணே {குந்தியே}, நான் மிகவும் மகிழ்ந்தேன். ஓ! அருளப்பட்ட பெண்ணே {குந்தி}, இவ்வுலகத்தில் மனிதர்களால் அடைய முடியாத அரிதான வரங்களைக் கேள். அதை அடைவதால், நீ இவ்வுலகில் உள்ள பெண்கள் அனைவரின் புகழையும் விஞ்சி நிற்பாய்!” என்றார் {துர்வாசர்}.

இந்த வார்த்தைகளுக்குக் குந்தி {துர்வாசரிடம்}, “வேதங்களை அறிந்தவர்களின் தலைவரான நீரும், எனது தந்தையும், என்னிடம் மனநிறைவுடன் இருப்பதால், என் சார்பாக அனைத்தும் செய்யப்பட்டுவிட்டன. வரங்களைப் பொறுத்தமட்டில், ஓ! அந்தணரே, அவை அனைத்தும் என்னால் ஏற்கனவே பெறப்பட்டுவிட்டன!” என்றாள். அதற்கு அந்த அந்தணர் {துர்வாசர் குந்தியிடம்}, “ஓ! மென்மையான கன்னிகையே, ஓ! இனிய புன்னகை கொண்டவளே {குந்தி}, நீ என்னிடம் இருந்து வரங்களை அடைய விரும்பவில்லையென்றால், தேவர்களை அழைக்கும் மந்திரத்தை என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வாயாக! தேவர்களுக்கு மத்தியில் உள்ள எவரை நீ இந்த மந்திரத்தை உச்சரித்து அழைத்தாலும், அவன் உன் முன் வந்து, ஆளுகைக்குள் இருப்பான். நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த மந்திரத்தின் தகுதியினால் மென்மையான வடிவத்தில் வரும் அத்தேவன் அடிமையின் பணிவான அணுகுமுறை அனுமானித்து, உனது அதிகாரத்துக்கு உட்பட்டு இருப்பான்!” என்றார்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் கன்னிகை {குந்தி}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, இருபிறப்பாளர்களில் சிறந்தவரின் {அந்த அந்தணரின்} சாபத்திற்கஞ்சி, அவரது விருப்பங்களை இரண்டாவது முறையாக மறுக்க முடியவில்லை. பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த அந்தணர் குற்றமற்ற அங்கங்கள் கொண்ட அந்தப் பெண்ணுக்கு {குந்திக்கு} அதர்வண வேதத்தின் தொடக்கத்தில் உள்ள அந்த மந்திரங்களை உரைத்தார். அந்த மந்திரங்களை அவளுக்குச் சொன்ன பிறகு, அவர் {துர்வாசர்} குந்திபோஜனிடம், “ஓ! ஏகாதிபதி {குந்திபோஜா}, எப்போதும் உரிய முறையில் வழிபடப்பட்டு, உனது மகளிடம் {குந்தியிடம்} மனநிறைவு கொண்டு உனது இல்லத்தில் இருந்த நான், இப்போது செல்கிறேன்” இதைச் சொன்ன அவர் அங்கேயே மறைந்து போனார். அந்த அந்தணர் {துர்வாசர்} அங்கே மறைந்து போனதைக் கண்ட மன்னன் {குந்திபோஜன்} ஆச்சரியத்தால் தாக்கப்பட்டான். மேலும், பிறகு, அந்த ஏகாதிபதி {குந்திபோஜன்}, தனது மகளை {குந்தியை} சரியான மதிப்புடன் நடத்தினான்” .

குந்தியிடம் பேசிய சூரியன்! – வனபர்வம் பகுதி 304-மந்திரங்களின் சக்தியைச் சோதிக்கக் குந்தி எண்ணுவது; அதே நேரத்தில் அவளுக்குப் பருவமும் வந்தது; கிழக்கில் உதிக்கும் சூரியனைக் கண்டு மந்திரங்களால் குந்தி அவனை அழைத்தது; சூரியன் வந்தது; குந்தி அவனைத் திரும்பி செல்லும்படி சொன்னது; சூரியன் குந்தியை மிரட்டியது; குந்தி தனது நிலையை விளக்குவது; சூரியன் தனது நிலையை விளக்குவது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்த அந்தணர்களில் முதன்மையானவர் {துர்வாசர்}, வேறு வேலையாகச் சென்றுவிட்ட பிறகு, அந்தக் கன்னிகை {குந்தி}, அந்த மந்திரங்களின் திறனைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினாள். அவள்  தனக்குள்ளேயே, “அந்த உயர் ஆன்மா கொண்டவரால் {மகாத்மாவால்} எனக்கு அளிக்கப்பட்ட அந்த மந்திரங்களின் இயல்பு எப்படிப்பட்டது? தாமதிக்காமல் நான் அதன் சக்தியைச் சோதிப்பேன்” என்று நினைத்தாள். அப்படி அவள் {குந்தி} சிந்தித்துக் கொண்டிருக்கையிலேயே, திடீரெனப் பருவகாலத்தின் {ருது} அறிகுறிகள் தனக்குத் தென்படுவதை உணர்ந்தாள். திருமணமாகாத போதே, தனக்குப் பருவகாலம் வந்ததால், அவள் {குந்தி} வெட்கமும் நாணமுமடைந்தாள். தனது அறையில் ஓர் ஆடம்பரப் படுக்கையில் அமர்ந்திருந்த அவள் {குந்தி}, கிழக்கில் சூரியக் கோளம் உதிப்பதைக் காண நேர்ந்தது. சிறந்த இடை கொண்ட அந்தக் கன்னிகையின் {குந்தியின்} கண்கள் மற்றும் மனம் ஆகிய இரண்டும் அந்தச் சூரிய கோளத்தின் மேல் நிலைத்து நின்றது. காலைச் சூரியனின் அழகைக் கண்டு, தெவிட்டாமல் மீண்டும் மீண்டும் அந்தக் கோளத்தை அவள் கூர்ந்து நோக்கியபடியே இருந்தாள். திடீரென அவளுக்கு {குந்திக்கு} தெய்வீகப் பார்வை கொடையாகக் கிடைத்தது.

பிறகு அவள் {குந்தி}, கவசத்துடனும், காது குண்டலங்களுடனும் இருந்த அந்தத் தெய்வீகமான தேவனைக் {சூரியனைக்} கண்டாள். ஓ மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, அந்தத் தேவனைக் {சூரியனைக்} கண்ட அவள் மந்திரங்களைக் {மந்திரங்களின் திறனைக்} குறித்து ஆவல் கொள்ளத் தொடங்கினாள். அதன்பிறகு அந்தக் கன்னிகை {குந்தி}, அவனை {சூரியனை} அழைக்கத் {மந்திரங்களால் அழைக்கத்} தீர்மானித்தாள். மேலும், பிராணாயாமத்தின் உதவியைக் கொண்டு, அவள் {குந்தி} நாள்-படைப்போனை {சூரியனை} {மந்திரங்களால்} அழைத்தாள் {invoked}. ஓ! மன்னா {ஜனமேஜயா}, இப்படி அவளால் அழைக்கப்பட்ட நாள்படைப்போன் {சூரியன்}, விரைவில் {அவளுக்குத்} தன்னை வெளிப்படுத்தினான். தேன் போன்ற மஞ்சள் நிறமும், வலிய கரங்களும், சங்கின் கோடுகளைப் போன்று கழுத்தில் கோடுகளும் அவனுக்கு {சூரியனுக்கு} இருந்தன. மேலும் தோள்வளைகளும், கிரீடமும் அணிந்திருந்த அவன், சிரித்தபடியே அனைத்து திசைகளையும் ஒளியூட்டிக் கொண்டு வந்தான். யோக சக்தியின் மூலமாகத் தன்னை இருகூறாகப் பிரித்து, அதில் ஒன்றைக் கொண்டு தொடர்ந்து வெப்பத்தை அளித்தான். மற்றொன்றைக் கொண்டு குந்தியின் முன்பு தோன்றினான்.

அவன் {சூரியன்} குந்தியிடம் மிகுந்த இனிமையான வார்த்தைகளில், “ஓ! மென்மையான கன்னிகையே {குந்தி}, மந்திரங்களுக்குக் கட்டுப்பட்ட நான், உனக்குக் கீழ்ப்படிந்து வந்திருக்கிறேன். ஓ! ராணி {குந்தி}, உனது ஆளுகைக்கு ஆட்பட்டிருக்கும் நான் என்ன செய்ய வேண்டும்? நீ என்ன கட்டளையிட்டாலும் நான் அதைச் செய்வேன். எனக்குச் சொல்?” என்று கேட்டான். அந்தத் தெய்வத்தின் {சூரியனின்} வார்த்தைகளைக் கேட்ட குந்தி {சூரியனிடம்}, “ஓ! வழிபாட்டுக்குரியவரே {சூரியனே}, நீர் எங்கிருந்து வந்தீரோ அங்கேயே செல்லும்! ஆவலின் காரணமாக மட்டுமே நான் உம்மை {மந்திரங்களால்} அழைத்தேன். ஓ! வழிபாட்டுக்குரியவரே {சூரியனே}, என்னை மன்னியும்” என்றாள். பிறகு சூரியன், “மெலிந்த இடைகொண்ட காரிகையே {குந்தி}, நீ சொன்னது போலவே நான் வந்த இடத்திற்கே திரும்பி செல்வேன்! எனினும், ஒரு தேவனை அழைத்து, அவனை வீணாக அனுப்புவது சரியாகாது! ஓ! அருளப்பட்டவளே {குந்தி}, காதுகுண்டலங்களும், கவசமும் தரித்து, உலகத்தில் ஒப்பிலாத பராக்கிரமம் கொண்ட ஒரு மகனைச் சூரியனிடம் இருந்து பெறுவதே உனது எண்ணம். எனவே, ஓ! யானை நடை கொண்ட காரிகையே {குந்தி}, உன்னை என்னிடம் ஒப்படைப்பாயாக! ஓ! மங்கையே, பிறகு நீ உனது விருப்பப்படி ஒரு மகனை அடைவாய்! ஓ மென்மையான பெண்ணே, ஓ! இனிய புன்னகை கொண்டவளே {குந்தி}, உன்னை அறிந்த பிறகு நான் திரும்பிச் செல்வேன்!

நீ இன்று எனது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, எனக்கு மனநிறைவளிக்கவில்லை என்றால், கோபத்தில் உன்னையும், உனது தந்தையையும் {குந்திபோஜனையும்}, அந்த அந்தணரையும் {துர்வாசரையும்} நான் சபிப்பேன். உனது குற்றத்தால், நான் அவர்கள் அனைவரையும் எரிப்பேன். உனது வரம்புமீறலை அறியாத உனது முட்டாள் தகப்பனுக்கும், உனது மனநிலையையும், நடத்தையையும் அறியாது, உனக்கு மந்திரங்களை அளித்த அந்த அந்தணருக்கும் உகந்த தண்டனையை அளித்து அல்லற்படுத்துவேன். ஓ! பெண்ணே, புரந்தரனைத் தலைமையாகக் கொண்ட சொர்க்கத்தில் உள்ள தேவர்கள் அனைவரும் உன்னால் ஏமாற்றப்படும் என்னைக் கண்டு ஏளனச் சிரிப்புடன் அதோ அங்கு நின்று பார்க்கின்றனர். நீ இப்போது தெய்வீகப் பார்வை கொண்டிருக்கிறாய், எனவே, அந்தத் தேவர்களைப் பார்! நீ என்னைப் பார்ப்பதற்காகவே, தெய்வீகப் பார்வையை நான்  உனக்கு ஏற்கனவே அளித்திருக்கிறேன்” என்றான் சூரியன்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அதன்பிறகு அந்த இளவரசி {குந்தி}, ஆகாயத்தில் தத்தமது துறையில் [1] சரியாக நிற்கும் தேவர்களையும்,  ஏற்கனவே தன் முன் கண்டது போலவே கதிர்களுடனும், பெரும் பிரகாசத்துடனும் இருக்கும் சூரியனையும் கண்டாள். அவர்கள் அனைவரையும் கண்ட அந்தப் பெண் மிகவும் பயந்தாள். பிறகு அவளின் {குந்தியின்} முகம் வெட்கத்தாலும் நாணத்தாலும் நிறைந்தது. பிறகு அவள் {குந்தி} சூரியனிடம், “ஓ! கதிர்களின் தலைவரே {சூரியனே}, உமது துறைக்கே [1] திரும்பிப் போம். எனது கன்னித்தன்மையைக் கருத்தில் கொண்டு, உமது இந்தச் சீற்றம், எனக்குக் கடும் துயர் நிறைந்ததாக இருக்கிறது. ஒரு தந்தையோ, தாயோ, பிற மேன்மையானவர்களோ தான் தங்கள் மகளின் உடலைக் கொடுக்க முடியும். தூய்மை குன்றாமல் இருப்பதே பெண்களின் உயர்ந்த கடமை என்று இவ்வுலகம் கருதுவதை உயர்வாக எண்ணும் நான் அறத்தை தியாகம் செய்ய மாட்டேன். ஓ! பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்டவரே {சூரியனே}, எனது மந்திரங்களின் சக்தியைச் சோதித்துப் பார்க்க மட்டுமே, சிறுபிள்ளைத்தனமாக நான் உம்மை அழைத்துவிட்டேன். இளம் வயது கொண்ட ஒரு பெண் செய்த காரியம் இஃதென்றெண்ணி, ஓ! தலைவா {சூரியனே}, அவளை மன்னிப்பதே உமக்குத் தகும்!” என்றாள் {குந்தி}.

பிறகு சூரியன் {குந்தியிடம்}, “உன்னை நான் அப்படிப்பட்ட பெண் என்று {சிறுமியாகக்} கருதுவதாலேயே, ஓ! குந்தி, நான் உன்னிடம் இவ்வளவு மிதமாகப் பேசுகிறேன். வேறு ஒருத்தியிடமும் {சிறுமியல்லாதவளிடம்} நான் இதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். இதனால் நீ நிச்சயம் மகிழ்ச்சியை அடைவாய். ஓ! அச்சம் கொண்ட கன்னிகையே {குந்தி}, நீ மந்திரங்களைக் கொண்டு என்னை அழைத்ததால், எந்தக் காரியமும் நடைபெறாமல் நான் செல்வது தகாது. ஓ! குற்றமற்ற அங்கங்கள் கொண்டவளே {குந்தி}, அப்படி நான் செய்தால், இவ்வுலகத்தில் கேலிக்குரியவனாவேன். ஓ அழகிய காரிகையே {குந்தி}, அனைத்துத் தேவர்களில் இருந்து நான் விடுபடுவேன் {a bye-word with all the celestials}. எனவே, உன்னை எனக்குத் தா! அதனால் நீ என்னைப் போன்றே ஒரு மகனை அடைந்து, இவ்வுலகால் புகழப்படுவாய்” என்றான் {சூரியன்}.

கர்ணனுக்காக கவசகுண்டலங்கள் பெற்ற குந்தி! – வனபர்வம் பகுதி 305-சூரியனைச் சமாதானப்படுத்த முயன்ற குந்தி; சூரியன் அவளுக்குக் காது குண்டலங்களும், கவசமும் கொண்ட மகன் பிறப்பான் என்று சொன்னது; குந்தி சூரியனை ஏற்றது; குந்தி மயங்கி விழுந்தது; சூரியன் அவளது கன்னித்தன்மையை அழிக்காது, தன்னை அவளது கருவறையில் வைத்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அந்த உன்னதமான பெண் {குந்தி} அவனிடம் {சூரியனிடம்} இனிய வார்த்தைகளில் பேசினாலும், அவளால் ஆயிரங்கதிர் கொண்ட தெய்வத்தின் {சூரியனின்} கருத்தை மாற்ற முடியவில்லை. இருளை அகற்றுபவனின் கருத்தை மாற்றுவதில் தோல்வியுற்ற அவள் {குந்தி}, கடைசியாகச் சாபத்துக்கஞ்சி, ஓ! மன்னா {ஜனமேஜயா}, “என் காரியமாக எனது அப்பாவி தந்தையும் {குந்திபோஜனும்}, அந்தப் அந்தணரும் {துர்வாசரும்}, கோபக்கார சூரியனின் சாபத்தில் இருந்து எப்படித் தப்புவார்கள்? சக்தியும், தவமும் பாவங்களை அழிக்கவல்லதாயினும், முதிராத வயது கொண்ட நேர்மையானவர்கள், முட்டாள்தனமாக அவற்றை அணுக முடியாது. அது போன்ற வழியில் முட்டாள் தனமாக நடந்ததால்தான் நான் இன்று இந்த அஞ்சத்தக்க நிலையில் நிறுத்தப்பட்டுள்ளேன். உண்மையில் நான் இந்தத் தெய்வத்தின் {சூரியனின்} பிடியிலேயே நிறுத்தப்பட்டுள்ளேன். இருப்பினும், நானாகவே என் உடலை இவருக்கு {சூரியனுக்கு} கொடுத்து, பெரும் பாவத்தை எப்படிச் செய்ய முடியும்?” என்று நீண்ட நேரம் சிந்தித்தாள்.”

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “சாபம் குறித்த அச்சத்தால் பாதிக்கப்பட்டு, அவளுக்குள்ளாகவே நிறையச் சிந்தித்ததால் புலன்களின் முழு உணர்வு மழுக்கம் {உணர்வு தெரியாத நிலை} அவளுக்கு ஏற்பட்டது. எதைத் தீர்மானிப்பது என்று அவள் குழப்பத்தில் ஆழ்ந்தாள். அந்தத் தெய்வத்திற்கு {சூரியனுக்குக்} கீழ்ப்படிந்தால் ஏற்படும் நண்பர்களின் நிந்தனை குறித்து ஒரு புறம் அஞ்சிய அவள் {குந்தி}, ஓ மன்னா {ஜனமேஜயா}, மறுபுறம் மறுத்தால் ஏற்படும் சாபத்தைக் குறித்தும் சிந்தித்த அந்தக் கன்னிகை கடைசியாக, ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தத் தேவனிடன் {சூரியனிடம்}, நடுங்கும் வார்த்தைகளின் நாணத்துடன், “ஓ! தேவரே {சூரியா}, என் தந்தை, தாய், நண்பர்கள் ஆகியோர் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, நான் கடமையை மீறுதல் என்பது நடக்கக்கூடாது. ஓ! தேவரே {சூரியனே}, உம்முடன் சேர்ந்து சட்டத்திற்குப் புறம்பான காரியத்தைச் செய்தேனானால், என் நிமித்தமாக எனது குலத்தின் மதிப்பு இவ்வுலகத்தில் தியாகம் செய்யப்பட வேண்டும். எனினும், ஓ! வெப்பமளிப்பவர்களில் முதன்மையானவரே {சூரியனே}, நீர் இதைத் தகுதியுடைய செயல் என்று கருதினால், எனது உறவினர்கள் என்னை உமக்கு அளிக்கவில்லையெனினும் நான் உமது விருப்பத்தை நிறைவேற்றுவேன்! நான் உமக்கு என்னை அளித்த பிறகும் நான் கற்புடன் நீடிக்க வேண்டும்! அறம், மதிப்பு, புகழ், ஒவ்வொரு உயிரினத்தின் உயிர் ஆகியன உம்மில் நிறுவப்பட்டுள்ளன என்பது நிச்சயம்!” என்றாள் {குந்தி}.

அவளது இவ்வார்த்தைகளைக் கேட்ட சூரியன் {குந்தியிடம்}, “ஓ! இனிய புன்னகை கொண்டவளே {குந்தி}, உனது தந்தையோ, தாயோ அல்லது மற்ற பிற பெரியோரோ உன்னை எனக்குக் கொடுக்கத் தகுதி வாய்ந்தவர்கள் இல்லை. ஓ! அழகான காரிகையே, உனக்கு நன்மையே விளையட்டும்! எனது வார்த்தைகளைக் கேள்! ஒரு கன்னிப் பெண் அனைவரின் துணையையும் விரும்புவதாலேயே, ஆசை என்ற பொருள் கொண்ட காமம் என்ற வேரில் இருந்து {வேர்ச்சொல்லில் இருந்து} அவளுக்குக் கன்னிகை {kanya} என்ற பெயர் உண்டானது. எனவே, ஓ! சிறந்த இடைகளும், அழகிய நிறமும் கொண்டவளே, ஒரு கன்னிகை, இவ்வுலகில் இயற்கையாகவே சுதந்திரமானவளாக இருக்கிறாள். ஓ! பெண்ணே, எனது கோரிக்கைக்கு உடன்படுவதால் நீ எந்தப் பாவத்திற்கான குற்ற உணர்வையும், எந்த வகையிலும் அடைய மாட்டாய். அனைத்து உயிர்களுக்கும் நன்மையை விரும்பும் நான் எவ்வாறு ஒரு அநீதியான செயலைச் செய்வேன்? ஆண்கள் பெண்கள் அனைவரும் எந்தத் தடைகளாலும் கட்டுப்படக்கூடாது என்பதே இயற்கையின் நியதி. இயற்கைக்கு மாறானதே {தவறானதே} எதிர் நிலை ஆகும். எனக்கு மனநிறைவளித்த பின்னரும் நீ கன்னியாகவே நீடிப்பாய். உனது மகனும் வலிய கரங்கள் கொண்டவனாகவும் சிறப்புமிக்கவனாகவும் இருப்பான்” என்றான் {சூரியன்}.

அதற்குப் பின்னர் குந்தி {சூரியனிடம்}, “ஓ! இருளை அகற்றுபவரே {சூரியனே}, நான் உம்மிடம் இருந்து மகனை அடைந்தால், அவன் கவசத்துடனும், காது குண்டலங்களுடனும், வலிய கரங்கள் கொண்டவனாகவும், பெரும் சக்தி நிறைந்தவனாகவும் இருக்கட்டும்!” என்றாள். அவளது {குந்தியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சூரியன், “ஓ மேன்மையான கன்னிகையே {குந்தி}, எனது மகன் வலிய கரங்கள் கொண்டவனாகவும், காதுகுண்டலங்கள் மற்றும் கவசம் அணிந்தவனாகவும் இருப்பான். அவனது காது குண்டலங்கள் மற்றும் கவசம் ஆகிய இரண்டும் அமிர்தத்தால் ஆனவையாக இருக்கும். அவனது கவசம் துளைக்க முடியாததாக இருக்கும்” என்றான் {சூரியன்}.

பிறகு குந்தி {சூரியனிடம்}, “நீர் என்னிடம் பெறும் மகனுடைய அந்தச் சிறந்த கவசமும், காதுகுண்டலங்களும் அமிர்தத்தாலானவை என்றால், ஓ! தேவரே, ஓ! வழிபடத்தகுந்த தெய்வமே {சூரியனே}, உமது நோக்கம் நிறைவடையட்டும்! அவன் {அந்த மகன்}, உம்மைப் போலவே சக்தியுள்ளவனாகவும், வலுவானவனாகவும், ஆற்றலுடையவனாகவும், அழகானவனாகவும் இருக்கட்டும்! அவன் அறம் நிறைந்தவனாக இருக்கட்டும்!” என்றாள். பிறகு சூரியன் {குந்தியிடம்}, “ஓ! இளவரசி, ஓ! சிறந்த காரிகையே {குந்தி}, இந்தக் காது குண்டலங்களை அதிதி எனக்குக் கொடுத்தாள். ஓ! அச்சமுள்ள பெண்ணே {குந்தி}, நான் இவற்றையும், சிறப்பான கவசத்தையும் உனது மகனுக்கு அளிப்பேன்!” என்றான். பிறகு குந்தி, “ஓ! வழிபடத்தகுந்தவரே, ஓ! ஒளியின் தலைவரே {சூரியனே}, எனது மகன் நீர் சொல்வது போல இருப்பானாகில், நான் உம்மை மனம் நிறையச் செய்வேன்!” என்றாள்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவளது வார்த்தைகளைக் கேட்ட சூரியன், “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னான். சுவர்ணபானுவின் {ராகுவின்} எதிரியான அந்த விண்ணதிகாரி {சூரியன்}, தனது ஆன்மாவை யோகத்தில் நிலைக்க வைத்து, குந்திக்குள் நுழைந்து அவளது தொப்புளைத் தொட்டான். இதனால், சூரியனின் சக்தியின் நிமித்தமாக அந்தக் காரிகை {குந்தி}, மயங்கி விழுந்தாள். அந்த மதிப்பிற்குரிய பெண் பிறகு தனது கட்டிலில் விழுந்து, உணர்வுகளையும் இழந்தாள். பிறகு சூரியன் அவளிடம் {குந்தியிடம்}, “ஓ! அருள்நிறைந்த இடை கொண்டவளே {குந்தி}, ஆயுதம் தாங்குபவர்கள் அனைவரிலும் முதன்மையானவனாக வரும் ஒரு மகனை நீ பெறுவாய். அதே வேளையில் நீ கன்னியாகவே இருப்பாய்” என்றான் {சூரியன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, பெரும் பிரகாசம் கொண்ட சூரியன் செல்லத்தொடங்கிய போது, அந்தப் பெண் {குந்தி} நாணத்துடன், “அப்படியே ஆகட்டும்” என்றாள். இப்படியே மன்னன் குந்திபோஜனின் மகள் {குந்தி}, சூரியனால் தொந்தரவு செய்யப்பட்டு {importuned by Surya}, அவனிடம் {சூரியனிடம்} இருந்து ஒரு மகனை அடைந்து, உடைந்த கொடி போல அந்தச் சிறந்த படுக்கையில் மயங்கி விழுந்தாள். இப்படியே கடுங்கதிர்களைக் கொண்ட தெய்வம் {சூரியன்}, அவளை மயங்கச் செய்து, யோக சக்தியின் அறத்தால் அவளுக்குள் நுழைந்து, அவளின் {குந்தியின்} கருவறையில் தன்னையே வைத்தான். எனினும், அந்தத் தெய்வம் {சூரியன்}, சதையால் கன்னித் தன்மையழித்து அவளை {குந்தியை} மாசுபடுத்தவில்லை. சூரியன் சென்றதும், அந்தப் பெண் {குந்தி} தனது உணர்வை மீண்டும் பெற்றாள்”

அஸ்வ நதியில் மிதந்த கர்ணன்! – வனபர்வம் பகுதி 306-கவசத்துடனும் காதுகுண்டலங்களுடனும் குந்திக்குக் குழந்தை பிறந்தது; குந்தி குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து அஸ்வ நதிக்கு எடுத்துச்சென்று அழுது புலம்பியது; குந்தி அப்பெட்டியை அஸ்வ நதியில் விட்டது; பெட்டி அஸ்வநதியிலிருந்து கங்கைக்கு மிதந்து சென்று சம்பா என்ற நகரத்தை அடைந்தது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, வளர்பிறை முதல்நாளில் {பிரதமையில்}, வருடத்தின் பத்தாவது மாதத்தில் {தை மாதத்தில்}, {on the first day of the lighted fortnight during the tenth month of the year }, ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் தலைவன் {சூரியன்} மூலம் பிருதைக்குக் {குந்திக்கு} கருவுண்டானது. சிறந்த இடைகள் {excellent hips} கொண்ட அந்தக் காரிகை {குந்தி}, நண்பர்களிடம் கொண்ட பயத்தின் காரணமாக, யாரும் தன் நிலையை அறியாதவண்ணம் தான் கருவுற்றிருப்பதை மறைத்தாள். அந்தக் காரிகை {குந்தி}, தனது நிலையைக் கவனமாக மறைத்து, கன்னியருக்காக ஒதுக்கப்பட்ட குடியிருப்பிலேயே முழுவதும் வாழ்ந்த போது, அவளது {குந்தியின்} செவிலியைத் {Nurse} தவிர {வளர்ப்புத்தாயைத் தவிர என்றும் சில பதிப்புகளில் இருக்கின்றன} வேறு யாரும் அந்த உண்மையை {அவளது உண்மை நிலையை} அறியவில்லை. தெய்வத்தின் அருளால், அந்த அழகிய கன்னிகை, குறித்த நேரத்தில் தேவனைப் போன்ற ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.

அக்குழந்தை, தனது தந்தையை {சூரியனைப்} போலவே கவசத்துடனும், பிரகாசமான காது குண்டலங்களுடனும் இருந்தான். அவன் சிங்கம் போன்ற கண்களும், காளையைப் போன்ற தோள்களும் கொண்டிருந்தான். குழந்தையைப் பெற்றவுடனேயே, அந்த அழகிய பெண், தனது செவிலியிடம் ஆலோசித்து, மென்மையான விரிப்பும், விலையுயர்ந்த தலையணையும் செடிநார் வேலைப்பாட்டுடனும் கூடிய ஒரு வசதியான {தாராளமான இடம் கொண்ட} மென்மையான பெட்டியில் அந்தக் குழந்தையை வைத்தாள். அதன் மேற்பரப்பு மெழுகால் {தேன்மெழுகால்} தீட்டப்பட்டிருந்தது. மேலும் அந்தப் பெட்டியை ஒரு வளமான மூடி பொதிந்திருந்தது. கண்களில் கண்ணீருடன் அவள் {குந்தி} அந்தக் குழந்தையை அஸ்வ நதிக்குச் சுமந்து சென்று, அந்தக் கூடையை அதன் {அந்நதியின்} நீரில் அனுப்பினாள். திருமணமாகாத ஒரு பெண், குழந்தை பெறுவது முறையற்றது என்பதை அவள் {குந்தி} அறிந்திருந்தாலும், ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, பெற்ற பாசத்தால் அவள் பரிதாபகரமாக அழுதாள். அப்படி அஸ்வ நதியின் நீரில் பெட்டியை அனுப்பிய போது அழுது கொண்டே குந்தி சொன்ன வார்த்தைகளை {ஜனமேஜயா} நீ கேட்பாயாக!”

“ஓ! குழந்தாய், நிலம், நீர், ஆகாயம் மற்றும் தெய்வீகப் பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவர் கையாலும் உனக்கு நன்மையே நேரிடட்டும். உனது பாதைகள் அனைத்தும் மங்களகரமானவையாக இருக்கட்டும்! எந்த ஒருவரும் உன் வழியைத் தடை செய்யாதிருக்கட்டும்! ஓ! மகனே, உன்னைக் கடக்க நேரிடும் அனைவரின் இதயங்களும் உன்னிடம் பகை கொள்ளாதிருக்கட்டும்! நீர்நிலைகளின் தலைவன் வருணன், உன்னை நீரில் பாதுகாக்கட்டும்! வானத்தை அதிகாரம் செய்யும் தெய்வம் உன்னை வானத்தில் முழுவதும் பாதுகாக்கட்டும்! ஓ! மகனே, விதியால் விதிக்கப்பட்டதற்கேற்ப நான் யாரிடம் உன்னைப் பெற்றேனோ அந்த வெப்பம் வெளியிடுபவர்களில் சிறந்தவரும், உனது தந்தையுமான சூரியன், உன்னை அனைத்து இடங்களிலும் காக்கட்டும்! ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், சத்யஸ்கள், விஸ்வதேவர்கள், மருதர்கள், திசைப்புள்ளிகளுடன் கூடிய பெரும் இந்திரன், அவர்களுக்குத் தலைமையாக ஆள்பவர்கள் ஆகியோரும், தேவர்கள் அனைவரும் உன்னை அனைத்து இடங்களிலும் பாதுகாக்கட்டும்! இந்த உனது கவசத்தால் நான் அந்நிய நிலங்களிலும் உன்னை அடையாளங்காண்பேன்!

ஓ! மகனே, உனது தந்தையும், பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்ட தெய்வீகமானவருமான சூரியன், ஓடையில் சென்று கொண்டிருக்கும் உன்னைத் தனது தெய்வீகப் பார்வையால் காண்பவராக இருப்பதால் அவர் நிச்சயம் அருளப்பட்டவரே! ஓ! தேவனால் பெறப்பட்டவனே {மகனே}, நீ தாகமடையும்போது உனக்கு உறிஞ்சக் கொடுப்பவளும் {பால் கொடுப்பவளும்}, உன்னை மகனாகக் கொள்பவளுமான மங்கையும் அருளப்பட்டவளே. தெய்வீக கவசத்தாலும், தெய்வீக காது குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, தாமரை மலர்களைப் போன்ற அகன்ற கண்களும், மெருகிடப்பட்ட தாமிரத்தைப் போன்றோ, தாமரை இதழ்களைப் போன்ற நிறமும், அழகிய நெற்றியும், சுருள் முனை கொண்ட முடியும் கொண்ட உன்னைத் தனது மகனாக ஏற்கப் போகிறவள் எப்பேற்பட்ட நற்கனவைக் கண்டிருப்பாளோ. ஓ! மகனே, தரையில் தவழ்ந்து, புழுதி பூசி, விளங்காத இனிமையான மழலைச் சொற்களை உச்சரிக்கும் உன்னைக் காண்பவள் நிச்சயம் அருளப்பட்டவளே! ஓ! மகனே, இமயத்தின் காடுகளில் பிறந்த சிங்கத்தைப் போல உயர்ந்த இளமையை நீ அடைவதைக் காணப் போகும் அவள் நிச்சயம் அருளப்பட்டவளே!” {என்று சொல்லி அழுதாள் குந்தி}.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, இப்படி நீண்ட நேரம் பரிதாபகரமாகப் புலம்பியழுத பிருதை {குந்தி}, அந்தக் கூடையை அஸ்வ நதியின் நீரில் வைத்தாள். தன் மகன் நிமித்தமாகத் துயர் கொண்டு பெரிதும் அழுத அந்தத் தாமரைக்கண் காரிகை {குந்தி}, தனது மகனை அடிக்கடி காண விரும்பினாலும், நள்ளிரவில் அந்தக் கூடையை விட்டுவிட்டு, ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, என்ன நடந்தது என்பதைத் தனது தந்தை அறிந்து விடுவானோ என்று பயந்து கொண்டே, தனது செவிலியுடன் மீண்டும் மாளிகையை அடைந்தாள். அதே வேளையில், அந்தக் கூடை அஸ்வ நதியில் இருந்து சர்மண்வதி நதிக்கும், பிறகு சர்மண்வதியில் இருந்து யமுனைக்கும், அங்கிருந்து கங்கைக்கும் என மிதந்து கொண்டே கடந்து சென்றது. குழந்தையைக் கொண்டிருந்த அந்தக் கூடை, கங்கையின் அலைகளால் சுமந்து செல்லப்பட்டுச் சூத குலத்தவன் ஆளும் சம்பா என்ற ஒரு நகரத்தை அடைந்தது. தன் உடல் அணிந்திருந்த அந்தச் சிறந்த கவசத்தாலும், அமிர்தத்தாலான அந்தக் காது குண்டலங்களாலும், விதியால் இப்படி விதிக்கப்பட்டதாலுமே உண்மையில் அந்தக் குழந்தை உயிருடன் இருந்தது”

கர்ணனின் இருப்பிடம் அறிந்த குந்தி! – வனபர்வம் பகுதி 307-கங்கையில் மிதந்து வந்த பெட்டியை ராதை எடுப்பது; அதிரதன் அப்பெட்டியில் இருந்த குழந்தையை எடுத்தது; ராதை கர்ணனைத் தனது மகனாகத் தத்தெடுத்துக் கொண்டது; கர்ணன் அங்க தேசத்தில் வளர்வது; ஒற்றர்கள் மூலம் குந்தி கர்ணனைக் குறித்து அறிவது; இளைஞனானதும் கர்ணன் ஹஸ்தினாபுரம் வருவது; துரியோதனனுடன் கர்ணனுக்கு ஏற்பட்ட நட்பு; கர்ணன் பெரும் வில்லாளி என உலகம் புகழ்வது; அர்ஜுனனிடம் கர்ணனுக்கு ஏற்பட்ட போட்டி மனப்பான்மை; கர்ணனிடம் வந்த இந்திரன்…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இந்த நேரத்தில் திருதராஷ்டிரனின் நண்பனான அதிரதன் என்ற பெயர் கொண்ட ஒரு சூதன், தனது மனைவியுடன் கங்கையாற்றுக்கு வர நேர்ந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, பூமியில் ஒப்பற்ற அழகு படைத்த அவனது {அதிரதனின்} மனைவியின் பெயர் ராதை ஆகும். அந்த உயர்ந்த அருள் பெற்ற காரிகை {ராதை}, ஒரு மகனை அடைய பெரும் முயற்சி செய்திருந்தாலும், ஓ! எதிரிகளை அடக்குபவனே {ஜனமேஜயா}, அப்படி ஒருவனைப் {ஒரு மகனைப்} பெறுவதில் தோல்வியுற்றிருந்தாள். கங்கையாற்றுக்கு வந்த அவள் {ராதை}, நீரோட்டத்தில் மிதந்து வரும் பெட்டியைக் கண்டாள். ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கும் சாதனங்களுடனும், களிம்புகளுடனும் {மருந்துகளுடனும்} இருந்த அப்பெட்டியை ஜானவியின் {கங்கையின்} அலைகள் அவளிடம் {ராதையிடம்} கொண்டு வந்து சேர்த்தன. ஆர்வத்தால் ஈர்க்கப்பட்ட அந்தப் பெண் {ராதை}, அதைப் பிடிக்கச் செய்தாள். பிறகு அவள் தேரோட்டி சாதியைச் சேர்ந்த {தனது கணவன்} அதிரதனுக்கு அனைத்தையும் உரைத்தாள். இதைக்கேட்ட அதிரதன் நீர்நிலையில் இருந்து அப்பெட்டியை எடுத்து, {சில} கருவிகளைக் கொண்டு அதைத் திறந்தான். அவன் அதில் {அப்பெட்டியில்} காலைச் சூரியனைப் போன்ற பிள்ளையைக் கண்டான். அந்தக் குழந்தை தங்கக் கவசத்துடனும், காது குண்டலங்களுடன் கூடிய அழகிய முகத்துடன் இருந்தது. அதன்பிறகு அந்தத் தேரோட்டியும், அவனது மனைவியும் {ராதையும்} இத்தகு ஆச்சரியத்தால் தாக்கப்பட்டு, அதிசயத்தால் தங்கள் கண்களை அகல விரித்தனர். அந்தக் குழந்தையைத் தனது மடியில் கிடத்திக் கொண்ட அதிரதன் தனது மனைவியிடம் {ராதையிடம்}, “ஓ! அச்சமுள்ள பெண்ணே {ராதை}, நான் பிறந்ததிலிருந்து இதுபோன்ற அதிசயத்தைக் கண்டதேயில்லை. நம்மிடம் வந்திருக்கும் இந்தக் குழந்தை தெய்வீகப் பிறப்பு கொண்டவனாக இருக்க வேண்டும். உண்மையில், மகனற்ற எனக்குத் தேவர்களே இவனை அனுப்பி வைத்துள்ளனர்!” என்று சொல்லி, ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா} அந்தக் குழந்தையை ராதையிடம் கொடுத்தான்.

அதன்பிறகு ராதை, தேவவடிவமும், தெய்வீக பிறப்பும், தாமரை இதழ்களைப் போன்ற பிரகாசமும், சிறந்த அருளும் நிரம்பிய அக்குழந்தையை {கர்ணனை}, விதிப்படி {தன் மகனாக} தத்தெடுத்துக் கொண்டாள். அவளால் {ராதையால்} முறைப்படி வளர்க்கப்பட்ட அந்தப் பெரும் பராக்கிரமம் கொண்ட குழந்தை {கர்ணன்} வளரத் தொடங்கினான். கர்ணனைத் தத்தெடுத்த பிறகு அதிரதன், தனது மற்ற மகன்களைப் பெற்றான். பிரகாசமான கவசமும், பொன்மயமான காது குண்டலங்களும் பெற்ற அக்குழந்தைக்கு {கர்ணனுக்கு}, இருபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} வசுசேணன் என்று பெயரிட்டார்கள். இப்படியே பெரும் பிரகாசமும், அளவிடமுடியாத பராக்கிரமும் பெற்றவன் {கர்ணன்} தேரோட்டியின் {அதிரதனின்} மகனாகி, வசுசேணன் என்றும் விருஷன் என்றும் அறியப்பட்டான்.

தெய்வீக கவசத்துடன் கூடிய தனது மகன் தேரோட்டியின் (அதிரதனின்) மூத்த மகனாக அங்கர்கள் {அங்க நாட்டினர்} மத்தியில் வளர்ந்து வருகிறான் என்பதைப் பிருதை {குந்தி} தனது ஒற்றர்கள் மூலம் {சாரன் வாயிலாக} அறிந்தாள். காலத்தின் செயல்பாட்டில் {ஓட்டத்தில்} தனது மகன் வளர்ந்ததைக் கண்ட அதிரதன், அவனை {கர்ணனை} யானையின் பெயரால் பெயரிடப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} அனுப்பினான். கர்ணன் ஆயுதங்களைக் கற்கும்பொருட்டுத் துரோணரிடம் சென்றான். அந்த வலிமைமிக்க இளைஞனுக்கு {கர்ணன்} துரியோதனனிடம் நட்பு ஏற்பட்டது. துரோணர், கிருபர் மற்றும் ராமன் {பரசுராமர்} ஆகியோரிடம் நான்கு வகை ஆயுதங்களையும் அடைந்த அவன் {கர்ணன்}, வலிமைமிக்க வில்லாளி என்று இவ்வுலகில் புகழைப் பெற்றான்.

திருதராஷ்டிரன் மகனிடம் {துரியோதனனிடம்} நட்பேற்பட்ட பிறகு, அவன் {கர்ணன்}, பிருதையின் {குந்தியின்} மகன்களுக்குக் காயமேற்படுத்தும் நோக்கம் கொண்டவனானான். உயர் ஆன்மா கொண்ட பல்குனனுடன் {அர்ஜுனனுடன்} சண்டை போடுவதையே {போரிடுவதையே} அவன் எப்போதும் விரும்பினான். ஓ மன்னா {ஜனமேஜயா}, அவர்கள் {கர்ணனும் அர்ஜுனனும்} முதன்முதலாக ஒருவருக்கொருவர் பார்த்தபோதிலிருந்தே, கர்ணன் எப்போதும் அர்ஜுனனுக்குச் சவால் விடுவான். அர்ஜுனனும் அவனது பங்குக்கு  {கர்ணனிடம்} சவால் விடுவான். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, இதுவே குந்தியிடம் தான் பெற்று, சூதர்கள் குலத்தால் வளர்க்கப்பட்ட கர்ணனைக் குறித்துச் சூரியன் அறிந்த ரகசியம் என்பதில் சந்தேகமில்லை.

காது குண்டலங்களுடனும், கவசத்துடனும் இருக்கும் அவனைக் {கர்ணனைக்} கண்ட யுதிஷ்டிரன், அவனைப் {கர்ணனைப்} போரில் கொல்ல முடியாது என்று எண்ணி, அதனால் எப்போதும் {உள்ளத்தில்} பெரும் வலி கொண்டான். ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, நாளின் மத்திய வேளையில், கர்ணன் நீரில் இருந்து எழுந்ததும், கரங்கள் கூப்பி பிரகாசமிக்கச் சூரியனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்போது அவனிடம் {கர்ணனிடம்} செல்வம் கேட்பதை அந்தணர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், இருபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்கு} ஒன்றைக் கொடுக்க முடியாது என்று சொல்ல அவனுக்கு ஏதுமில்லை. பிறகு, (இது போன்ற ஒரு சமயத்தில்) இந்திரன், அந்தண வேடம் பூண்டு அவன் {கர்ணன்} முன் தோன்றி, “எனக்குக் {பிட்சை} கொடு!” என்று கேட்டான். அதன் பிறகு ராதையின் மகன், “நீர் வரவேற்கப்படுகிறீர் {நல்வரவு}!” என்று மறுமொழி கூறினான்.

கவசத்தை உரித்தெடுத்த கர்ணன்! – வனபர்வம் பகுதி 308-அந்தண வேடத்தில் வந்த இந்திரன் கர்ணனிடம் கவசத்தையும் குண்டலங்களையும் கேட்பது; கர்ணன் அது தனது உயிரை அழிக்கும் என்று சொல்லி மறுப்பது; இந்திரன் அதைத்தவிர வேறு எதுவும் வேண்டாமென்பது; அவற்றுக்கு ஈடாக வேறு ஏதேனும் இந்திரன் அளிக்க வேண்டும் என்று கர்ணன் கோருவது; இந்திரன் வாசவி என்ற சக்தி ஆயுதத்தைத் தருவதாகக் கர்ணனுக்குச் சொல்வது; அதை ஏற்ற கர்ணன் தனது கவசத்தையும் குண்டலங்களையும் அறுத்து இந்திரனுக்குக் கொடுப்பது; கர்ணன் ஏமாற்றப்பட்டதை அறிந்த கௌரவர்கள் துயரையும், பாண்டவர்கள் மகிழ்ச்சியையும் அடைவது…

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தேவர்களின் தலைவன் {இந்திரன்}, அந்தண வேடம் தரித்து வந்த போது, அவனைக் கண்ட கர்ணன் {இந்திரனிடம்}, “நல்வரவு!” என்றான். அவனது {அந்த அந்தணரின்} நோக்கத்தை அறியாத அதிரதனின் மகன் {கர்ணன்}, அந்த அந்தணனிடம் {இந்திரனிடம்}, “தங்கத்தாலான அட்டிகை {#}, அழகிய காரிகைகள் {#}, அபரிமிதமான பசுக்களுடன் நிறைந்த கிராமங்கள் ஆகியவற்றில் நான் எதை உமக்குக் கொடுக்க வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணன் {இந்திரன்}, “நான் தங்கத்தாலான அட்டிகையையோ, அழகிய காரிகைகளையோ வேறு ஏதும் ஏற்புடைய பொருளையோ உன்னிடம் கேட்கவில்லை. அவைகளைக் கேட்பவர்களுக்குக் கொடுப்பாயாக. ஓ!பாவமற்றவனே {கர்ணா}, நீ உனது நோன்பில் உண்மையுள்ளவனாய் இருக்கிறாய் என்றால், (உனது மேனியில் இருக்கும்) உன் உடலுடன் ஒட்டிப்பிறந்த இந்தக் கவசத்தையும், இந்தக் காது குண்டலங்களையும் அறுத்து எனக்கு அளிப்பாயாக!” என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் {இந்திரனிடம்}, “ஓ! அந்தணரே, நான் உமக்கு வீடு தோட்டத்துடன் கூடிய நிலத்தையும், அழகிய காரிகைகளையும், பசுக்களையும், கழனிகளையும் {fields} கொடுப்பேன்; ஆனால் எனது கவசத்தையும், காது குண்டலங்களையும் உமக்குத் தர இயலாதவனாக இருக்கிறேன்!” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிக் கர்ணனால் பலவிதமான வார்த்தைகளில் மறுக்கப்பட்டாலும், ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, அந்த அந்தணன் {அதாவது இந்திரன்} வேறு எந்த வரத்தையும் கேட்கவில்லை. கர்ணன் தன் சக்தியால் இயன்றவரை அவனைச் சமாதானப்படுத்தி, முறையாக வழிபட்டாலும், அந்த அந்தணர்களில் சிறந்தவன் வேறு எந்த வரத்தையும் கேட்கவில்லை. அந்த அந்தணர்களில் முதன்மையானவன் {இந்திரன்}, வேறு எந்த வரத்தையும் கேட்காத போது, ராதையின் மகன் {கர்ணன்}, அவனிடம் {இந்திரனிடம்} புன்னகையோடு, “ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, எனது கவசம் எனது உடலோடு பிறந்தது, இந்தக் காது குண்டலங்கள் அமிர்தத்தில் இருந்து எழுந்தவை. இவற்றாலேயே உலகங்களில் நான் கொல்லப்பட முடியாதவனாக இருக்கிறேன். எனவே, அவற்றை என்னால் பிரிய முடியாது. ஓ! அந்தணர்கள் மத்தியில் உள்ள காளையே, செழிப்பு நிறைந்ததும், எதிரிகளற்றதுமான இந்த முழு உலகத்தின் அரசாட்சியை என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வீராக! ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே, எனது காது குண்டலங்களையும், என்னுடலுடன் பிறந்த கவசத்தையும் நான் இழந்தால், எதிரிகளால் வெல்லத்தக்கவன் ஆகிவிடுவேன்!” என்றான் {கர்ணன்}.

வைசம்பாயனர்  {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பகனைக் கொன்ற அந்தச் சிறப்புவாய்ந்தவன் {இந்திரன்} வேறு வரத்தைக் கேட்காத போது, கர்ணன் அவனிடம் {இந்திரனிடம்} மீண்டும் புன்னகையுடன், “ஓ! தேவர்களுக்குத் தேவா, ஓ! தலைவா {இந்திரா}, இதற்கு முன்பே நான் உன்னை அடையாங்கண்டு கொண்டேன். ஓ! சக்ரா {இந்திரா}, நீயே தேவர்களுக்குத் தலைவனாதலால், உனக்கு நான் பயனில்லாத வரத்தை அளிப்பது முறையாகாது! மறுபுறம், நீயே படைப்பாளனும், அனைத்து உயிரினங்களுக்கும் தலைவனாக இருப்பதால், நீயே எனக்கு வரங்களை அளிக்க வேண்டும்! ஓ! தேவா {இந்திரா}, நான் இந்தக் கவசத்தையும், காது குண்டலங்களையும் உனக்கு அளித்தால், நான் அழிவைச் சந்திப்பேன் என்பது நிச்சயம். நீயும் கேலிக்குள்ளாக்கப்படுவாய். எனவே, ஓ! சக்ரா {இந்திரா}, எனது குண்டலங்களையும், சிறந்த கவசத்தையும் எடுத்துக் கொண்டு அதற்கீடாக ஏதாவது ஒன்றை எனக்கு அளிப்பாயாக! இல்லையெனில், நான் அவற்றை உனக்குத் தர மாட்டேன்!” என்றான் {கர்ணன்}. உடனே சக்ரன் {இந்திரன் கர்ணனிடம்}, “நான் உன்னிடம் வருவதற்கு முன்பே, சூரியன் எனது நோக்கத்தை அறிந்து, அனைத்தையும் உனக்கு விளக்கிருக்கிறான் என்பதில் ஐயமில்லை! ஓ கர்ணா, நீ விரும்பியது போலவே ஆகட்டும்! ஓ மகனே, வஜ்ராயுதத்தைத் தவிர, நீ பெற விரும்புவது யாது என்பதை எனக்குச் சொல்!” என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இந்திரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் மகிழ்ச்சியில் நிறைந்து, தனது காரியம் நிறைவேறப்போவதைக் கண்டு வாசவனை {இந்திரனை} அணுகி, தடுக்கப்பட முடியாத கணையைப் பெற எண்ணி, இந்திரனிடம், “ஓ! வாசவா, எனது கவசத்துக்கும் காது குண்டலங்களுக்கும் ஈடாகத் தடுக்கப்பட இயலாததும், போரின் பொருட்டு அணிவகுக்கும் எதிரிக் கூட்டத்தை அழிக்கத் தகுதி வாய்ந்ததுமான கணையொன்றை எனக்குத் தருவாயாக!” என்றான் {கர்ணன்}.

உடனே, ஓ! பூமியின் ஆட்சியாளனே {ஜனமேஜயா}, ஒருக்கணம் அந்தக் கணையை மனதில் நிறுத்தி (அதை அங்குக் கொண்டுவரும் பொருட்டு), வாசவன் {இந்திரன்} கர்ணனிடம், உனது காது குண்டலங்களையும், உனது உடலுடன் ஒட்டிப் பிறந்த கவசத்தையும் எனக்கு அளித்து, அதற்கு ஈடாகச் சில நிபந்தனைகளின் பேரில் இந்தக் கணையைப் பெற்றுக் கொள்! நான் போர்க்களத்தில் தைத்தியருடன் மோதும்போது, கலங்கடிக்கப்படாத இந்தக் கணை, எனது கைகளால் வீசப்பட்டு, எதிரிகளை நூற்றுக்கணக்கில் அழித்து, நோக்கம் நிறைவேறியதும் எனது கைக்கே திரும்பி வந்துவிடும். எனினும், உனது கையில் இந்தக் கணை, ஓ! சூதனின் மகனே {கர்ணா}, உனது எதிரியில் பலமிக்க ஒரே ஒருவனைக் கொல்லும். அந்தச் சாதனையை அடைந்த பின்னர், அது உறுமிக்கொண்டும், சுடர்விட்டுக்கொண்டும் என்னிடம் திரும்பிவிடும்!” என்றான் {இந்திரன்}.

அதற்குக் கர்ணன் {இந்திரனிடம்}, “நான் யாருக்கு அஞ்சி இருக்கிறேனோ, அந்தப் பெரும் கர்ஜனை செய்யும் தீ போன்று சூடான என்னுடைய ஓர் எதிரியைக் கடும்போரில் கொல்ல நான் விரும்புகிறேன்” என்றான். அதற்கு இந்திரன், “அப்படிக் கர்ஜிக்கும் பலம் நிறைந்த எதிரியை நீ போர்க்களத்தில் கொல்வாய். ஆனால், நீ கொல்ல நினைக்கும் அவன், சிறப்பு மிக்க ஒரு நபரால் பாதுகாக்கப்படுகிறான். “வெல்லப்படமுடியாத பன்றி {வராகம்}” என்றும், “புரிந்துகொள்ளப்பட முடியாத நாராயணன்” என்றும் {பஜ்ஞவராகன் என்றும் வெல்லப்படாத நாராயணன் என்றும்} வேதம் அறிந்தவர்களால் அழைக்கப்படும் அந்தக் கிருஷ்ணன் அவனைப் பாதுகாத்து வருகிறான்!” என்றான். அதற்குக் கர்ணன் {இந்திரனிடம்}, “அது அப்படியே இருந்தாலும், ஓ! சிறப்புமிக்கவனே {இந்திரா}, ஒரே ஒரு சக்திவாய்ந்த எதிரியை {நிச்சயம்} அழிக்கும் அந்த ஆயுதத்தை எனக்குக் கொடுப்பாயாக! எனது பங்குக்கு நான் எனது கவசத்தையும், காது குண்டலங்களையும் எனது மேனியில் இருந்து அறுத்து உனக்குக் கொடுப்பேன். எனினும், இதனால் காயப்படும் எனது உடல் காணச்சகியாதது ஆகாமல் நீ அருள வேண்டும்!” என்றான்.

இதைக் கேட்ட இந்திரன் {கர்ணனிடம்}, “ஓ! கர்ணா, நீ உண்மையை நோற்க {சத்தியத்தைப் பேண} உள்ளதால், உனது மேனி காணச்சகியாததாகவோ, வடு உடையதாகவோ ஆகாது. ஓ! பேச்சால் அருளப்பட்டவர்களில் சிறந்தவனே, ஓ! கர்ணா, நீ உனது தந்தையைப் போலவே சக்தியும் நிறமும் கொண்டிருப்பாய். கோபத்தில் பித்தேறி, உன்னிடம் வேறு ஆயுதங்கள் இருக்கும்போதோ, உனது உயிருக்கு உடனடி ஆபத்து இல்லாதபோதோ இந்தக் கணையை நீ ஏவினால், இது உன்மேலேயே விழும்” என்றான். கர்ணன் {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா {இந்திரா}, நீ சொல்வது போலவே, எனது உயிருக்கு உடனடி ஆபத்து இருக்கும்போது மட்டுமே நான் இந்த வாசவி {இந்திரசக்தி} கணையை வீசுவேன்! இதை உண்மையாக உனக்குச் சொல்கிறேன்!” என்றான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சுடர்விடும் கணையைப் பெற்றுக் கொண்ட கர்ணன், தனது இயற்கை கவசத்தை உரிக்கத் தொடங்கினான். தனது உடலை வெட்டிக் கொள்ளும் கர்ணனைக் கண்ட தேவர்கள், தானவர்கள் மற்றும் மனிதக் கூட்டம் சிம்ம கர்ஜனை புரிந்தது. அப்படிக் கர்ணன் தனது கவசத்தை உரித்துக் கொண்டிருந்த போது முகத்தில் எந்தவித கடும் மாற்றத்தையும் {விகாரத்தையும்} காட்டிக் கொள்ளவில்லை. மனிதர்களில் வீரனான அவன் {கர்ணன்}, மீண்டும் மீண்டும் புன்னகைத்துக் கொண்டே ஆயுதம் கொண்டு தனது உடலை அறுத்துக் கொண்டிருந்த போது, தேவலோக பேரிகைகள் {#} முழங்கின; தெய்வீக மலர் மாரி பொழிந்தது. தனது சிறந்த கவசத்தைத் தனது மேனியில் இருந்து அறுத்தெடுத்த கர்ணன், இன்னும் {குருதி} சொட்டிக் கொண்டிருந்த அதை {கவசத்தை} வாசவனிடம் {இந்திரனிடம்} கொடுத்தான். தனது காதுகளில் இருந்து காதுகுண்டலங்களையும் அறுத்த அவன், அவற்றையும் இந்திரனிடம் கொடுத்தான்.

இந்தக் காரணத்தின் அடிப்படையிலேயே அவன் கர்ணன் என்று அழைக்கப்பட்டான். கர்ணனை  இப்படி ஏமாற்றி அவனை உலகப் புகழடையச் செய்த சக்ரன், பாண்டு மகன்களின் காரியம் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாக எண்ணி புன்னகைத்தான். இவை அனைத்தையும் செய்து முடித்த அவன் {கர்ணன்} சொர்க்கத்திற்கு உயர்ந்தான். கர்ணன் ஏமாற்றப்பட்டதை அறிந்த திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரும் துயருற்று செருக்கிழந்தார்கள். மறுபுறம், பிருதையின் {குந்தியின்} மகன்கள், தேரோட்டியின் மகனுக்கு {கர்ணனுக்கு} ஏற்பட்ட அவல நிலையை அறிந்து, மகிழ்ச்சியால் நிறைந்தனர்.”

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “பாண்டுவின் மகன்களான அவ்வீரர்கள் அந்நேரத்தில் எங்கிருந்தனர்? இந்த வரவேற்கத்தக்க செய்தியை அவர்கள் யார் மூலம் அறிந்தார்கள்? வனவாசத்தின் பனிரெண்டாவது ஆண்டுக் கழிந்ததும் அவர்கள் என்ன செய்தார்கள்? ஓ! சிறப்புமிக்கவரே இவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக!” என்று கேட்டான்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சைந்தவர்கள் தலைவனை {ஜெயத்ரதனை} வீழ்த்தி, கிருஷ்ணையை {திரௌபதியை} மீட்ட அவர்கள், காட்டில் தங்கள் வனவாசத்தின் வலி நிறைந்த காலத்தை முழுதும் கடத்தி, மார்க்கண்டேயர் உரைத்த தேவர்கள் மற்றும் முனிவர்கள் குறித்த பழங்கதைகளைக் கேட்ட பிறகு, மனிதர்களில் வீரர்களான அவர்கள் காம்யக வனத்தில் இருந்த தங்கள் ஆசிரமத்தில் இருந்து, தங்கள் அனைத்து தேர்களுடனும், தொண்டர்களுடனும், தேரோட்டிகள், பசுக்கள், தங்களைத் தொடர்ந்த குடிமக்கள் ஆகிய அனைவருடனும் புனிதமான துவைத வனத்திற்கு மீண்டும் சென்றனர்.

பதிவிரதா மாஹாத்மியப் பர்வம் முற்றிற்று*

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading