இந்திரலோகமடைந்தான் அர்ஜுனன் – வனபர்வம் பகுதி 42-மாதலி கொண்டு வந்த தேரில் அர்ஜுனன் பயணித்து சொர்க்கத்தின் பல பகுதிகளைக் காணுதல்; அர்ஜுனன் இந்திரலோகம் அடைதல்…
வைசம்பாயனர் சொன்னார், “ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா} அந்த லோகபாலர்கள் சென்ற பிறகு, எதிரிகளைக் கொல்லும் அர்ஜுனன், இந்திரனின் தேரைக் குறித்து சிந்திக்க ஆரம்பித்தான். புத்திகூர்மையுள்ள அந்த குடகேசன் {அர்ஜுனன்} அப்படி சிந்தித்துக் கொண்டிருந்த போது, மேகங்களைப் பிளந்து கொண்டு, சுற்றத்தை ஒளியூட்டி, மேகக்கூட்டங்களின் கர்ஜனையை ஒத்த ஒலியை எழுப்பிக் கொண்டு வந்த மிகுந்த ஒளிவீசும் அந்தத் தேரை, மாதலி வழிநடத்திக் கொண்டு வந்தான். வாள்கள், பயங்கர உருவிலான ஏவுகணைகள், அச்சமூட்டும் கதாயுதங்கள், மின்னலைப் போன்ற தெய்வீக ஒளிவீசும் இறகு கொண்ட கணைகள், இயக்கிகள் பொருத்தப்பட்ட சக்கரங்கள் ஆகியவை சுற்றுவட்டாரத்தை விரிவாக்கி, பெரும் மேகத்திரளுக்கு ஒப்பான சத்தத்தை எழுப்பிக் கொண்டு அந்த தேரில் இருந்தன. நெருப்பைக் கக்கும் பெரும் நாகங்களும், வெண்மேங்கள் போன்ற கற்குவியல்களும் அந்தத் தேரில் இருந்தன.
அந்தத் தேர் தங்க நிறம் கொண்ட பத்தாயிரம் {10000} குதிரைகளால் இழுக்கப்பட்டு, காற்றின் வேகம் கொண்டிருந்தது. மாயை நிறைந்த அந்த தேரின் முன்னேற்றத்தை கண்களால் காண முடியவில்லை. அர்ஜுனன் அந்தத் தேரில், மரகத நிறம் அல்லது கருநீல தாமரையின் நிறத்தில் இருந்த வைஜயந்தம் என்ற கொடிக்கம்பத்தைக் கண்டான். அது தங்க ஆபரணங்களாலும், நேரான மூங்கிலாலும் ஆன கொடிக்கம்பமாக இருந்தது. தங்க ஆசனத்தில் அமர்ந்திருந்த தேரோட்டியைக் கண்ட பலம்வாய்ந்த கரம் கொண்ட பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனன்}, அது {அந்தத் தேர்} தேவர்களுக்குச் சொந்தமானது என்று கருதினான்.
அர்ஜுனன் அந்தத் தேரைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது, தேரோட்டியான மாதலி, தேரைவிட்டு இறங்கி தலைவணங்கி அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ சக்ரனின் {இந்திரனின்} அதிர்ஷ்டசாலி மகனே {அர்ஜுனா}, சக்ரன் {இந்திரன்} உன்னைக் காண விரும்புகிறார். நேரத்தைக் கடத்தாமல் இந்தத் தேரில் ஏறு. இந்தத் தேர் இந்திரனால் அனுப்பப்பட்டது. நூறு வேள்விகளைச் செய்த தேவனும், இறவாதவர்களின் {தேவர்களின்} தலைவனுமான உனது தந்தை, “குந்தியின் மகனை இங்கே கொண்டு வா. தேவர்கள் அவனைக் காணட்டும்” என்று என்னிடம் உத்தரவிட்டார். தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோரால் சூழப்பட்ட சங்கரரும் உன்னைக் காண காத்திருக்கிறார்கள். பகனைக் கொன்றவர் {இந்திரனின்} உத்தரவின் பேரில், இந்தத் தேரில் ஏறி, என்னுடன் தேவர்களின் உலகத்துக்கு வா. ஆயுதங்களைப் பெற்ற பின்னர் நீ திரும்பலாம்.” என்றான் {மாதலி}.
அர்ஜுனன், “ஓ மாதலி, நூறு ராஜசுய மற்றும் குதிரை வேள்விகளாலும் அடைய முடியாத இந்த அற்புதமான தேரில் நேரத்தைக் கடத்தாமல் ஏறு. பெரும் வேள்விகளைச் செய்து, நிறைந்த செல்வத்தை பரிசாகக் கொடுத்திருக்கும் பெரும் செழிப்பு மிக்க மன்னர்களும், ஏன் தேவர்களும், தானவர்களும் கூட இந்தத் தேரில் ஏற தகுதிபடைத்தவர் அல்லரே. தவத்தகுதி இல்லாத எவனும் இந்தத் தேரைக் காணவோ அல்லது தொடவோ முடியோதபோது, இதில் தவத்தகுதி இல்லாத மனிதர்கள் பயணிக்க முடியாது. ஓ அருளப்பட்டவனே {மாதலி}, நீ இந்தத் தேரில் ஏறி, குதிரைகள் அசையாமல் நின்ற பிறகு, நேர்மையானவர்களின் நெடுஞ்சாலையில் அடியெடுத்து வைக்கும் அறம் சார்ந்த மனிதன் போல நான் அதில் ஏறுவேன்”, என்று பதிலுரைத்தான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “சக்ரனின் தேரோட்டியான மாதலி, அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு விரைவாக அந்தத் தேரில் ஏறி குதிரைகளைக் கட்டுப்படுத்தினான். பிறகு, அர்ஜுனன் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், கங்கையில் குளித்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டான். பிறகு அந்த குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தனது வழக்கமான வழிபாடுகளை முறையாகத் {செவிக்குப் புலப்படாதபடி) திரும்பச் செய்தான். பிறகு முறைப்படி பித்ருக்களுக்கு நீரால் அர்ப்பணம் செய்தான். கடைசியாக, மலைகளின் மன்னன் மந்தரத்திடம் {மந்தர மலையிடம்}, “ஓ மலையே, நீயே புனிதமானவர்களும் அறம்சார்ந்த நடத்தையுடைவர்களுமான சொர்க்கத்தை விரும்பும் முனிவர்களுக்குப் புகலிடமாக இருக்கிறாய். ஓ மலையே, உனது கருணையாலேயே, அந்தணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும் சொர்க்கத்தை அடைந்து, துன்பங்கள் களைந்து, தேவர்களுடன் விளையாடுகிறார்கள்.
ஓ மலைகளின் மன்னா, ஓ மலையே, நீயே முனிவர்களின் ஆசிரமம், நீயே உனது மார்பில் பல புண்ணியத் தலங்களைத் தாங்குகிறாய். உனது உயரங்களில் நான் மகிழ்ச்சியாக வசித்திருக்கிறேன். நான் இப்போது உன்னிடம் நன்றியுடன் பிரியாவிடை பெறுகிறேன். உனது மேட்டுச் சமவெளிகளையும், நிழல் நிறைந்த கொடி பந்தல்களையும், புண்ணியத்தலங்களையும் நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். உன்னில் வளரும் சுவை மிகுந்த கனிகளை உண்டிரிக்கிறேன். உனது உடலில் இருந்து சுரக்கும் வாசனை நிறைந்த நீரைக் கொண்டு எனது தாகத்தைத் தணித்திருக்கிறேன். இனிமையான அமிர்தத்தைப் போன்ற உனது ஊற்று நீரையும் பருகியிருக்கிறேன். ஓ மலையே, தந்தையின் மடியில் மகிழ்ச்சியாக உறங்கும் பிள்ளையைப் போல நானும் மகிழ்ச்சியாக, ஓ மலைகளின் மன்னா, ஓ அற்புதமானவனே உனது மார்பில் அப்சரஸ்களின் இசையை எதிரொலித்து விளையாடிக் கொண்டும், வேதங்களை உரைத்துக் கொண்டும் இருந்திருக்கிறேன். ஓ மலையே, உனது மேட்டுச் சமவெளியில் ஒவ்வொரு நாளும் ஆனந்தமாக வாழ்ந்திருக்கிறேன்” என்று சொல்லி அந்த மலையிடம் பிரியாவிடை பெற்று எதிரி வீரர்களைக் கொல்லும் அர்ஜுனன், சூரியனைப் போலப் பிரகாசித்து, அந்த தெய்வீகத் தேரில் ஏறினான்.
மேலும் புத்திக்கூர்மை கொண்ட அந்த குரு இளவரசன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், இயல்புக்கு மிக்க சாதனைகளாலானதும், சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்டதுமான அந்த தெய்வீகத் தேரில் ஏறி வானத்தில் பயணித்தான். உலக மனிதர்களின் கண்களுக்கு அவன் மறைந்த பிறகு, இயல்புக்கு மிக்க அழகுடைய ஆயிரக்கணக்கான தேர்களைக் கண்டான். அந்தப் பகுதியில் ஒளியைக் கொடுக்க சூரியனோ, சந்திரனோ, நெருப்போ இல்லை. ஆனால் அந்தப் பகுதி அறத்தின் தவத்தகுதியால் உற்பத்தியான தன்னொளி கொண்டு பிரகாசித்தது. பூமியில் இருந்து பார்க்கும்போது நட்சத்திர உருவில் தெரியும் அந்தப் பிரகாசமான பகுதிகள், உண்மையில் அவை பெரியதாக இருந்தாலும் வானத்தில் விளக்கு போல தெரிந்தன. அதனதன் இடத்தில் முழு அழகுடனும் பிரகாசத்துடன் தன்னொளி கொண்டு மின்னிய அவற்றை பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} கண்டான். அங்கே தவத்தில் வெற்றி மகுடம் சூடிய அரச முனிகளையும், போரில் தன்னுயிரீந்த வீரர்களையும், தவநோன்புகளால் சொர்க்கத்தை அடைந்தவர்களையும் நூற்றுக்கணக்கில் கண்டான். அங்கே சூரியனைப் போன்ற கந்தர்வர்கள் ஆயிரக்கணக்கிலும், குஹ்யர்களும், முனிவர்களும், எண்ணிலடங்கா அப்சர இனங்களும் இருந்தனர்.
தன்னொளி பெற்று பிரகாசித்த அந்தப் பகுதிகளைக் கண்ட பல்குனன் {அர்ஜுனன்} மிகவும் வியந்து, மாதலியிடம் அவை குறித்து விசாரித்தான். மாதலியும் மகிழ்ச்சியுடன், “ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, இவர்கள் தங்களுக்குரிய இடங்களில் இருக்கும் அறம் சார்ந்த மனிதர்களாவர். ஓ மேன்மையானவனே, நீ இவர்களைத் தான், பூமியில் இருந்து நட்சத்திரங்களெனக் கண்டாய்” என்றான். பிறகு (இந்திரலோகத்தின்} வாயிலில் எப்போதும் வெற்றிவாகைசூடும் நான்கு தந்தங்களுடைய அழகான யானையான அனைத்து சிகரங்களையும் கொண்ட கைலாச மலையைப் போன்ற ஐராவதம் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். சித்தர்களின் வழியில் பயணித்த {சித்தர்களின் வழியை அடைந்த} அந்தக் குருக்களில் முதன்மையான பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, மன்னர்களில் சிறந்தவனான மாந்தாதா போல அழகுடன் அமர்ந்தான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களுடன், அறம் சார்ந்த மன்னர்களுக்கான பகுதியைக் கடந்து சென்றான். அந்தக் கொண்டாடப்படும் அர்ஜுனன், தொடர்ச்சியாக சொர்க்கத்தின் பகுதிகளைக் கண்டு, கடைசியாக இந்திரனின் நகரமான அமராவதியைக் கண்டான்.
அப்சரஸ்களின் நடனம்! – வனபர்வம் பகுதி 43-அர்ஜுனனைப் பலர் புகழ்தல்; இந்திரன் தனது மகனை கண்கொட்டாமல் பார்த்து ரசிப்பது; இந்திரனின் சபையில் அப்சரஸ்களின் நடனம்
வைசம்பாயனர் சொன்னார், “அர்ஜுனன் கண்ட இந்திரனின் நகரம் {அமராவதி நகரம்} மகிழ்ச்சிகரமானதாகவும், சித்தர்களும் சாரணர்களும் ஓய்வெடுக்கும் இடமாகவும் இருந்தது. அங்கே அனைத்து காலங்களுக்கும் உரிய மலர்களும், அனைத்து விதமான புனித மரங்களும் இருந்தன. அப்சரஸ்களுக்கு ஓய்வெடுக்கப் பிடித்தமான இடமான நந்தனம் என்று அழைக்கப்பட்ட தெய்வீகச் சோலையையும் கண்டான். நறுமணம் கொண்ட காற்றும், இனிய மணம் கொண்ட மலர்களும், தெய்வீக அரும்புகள் கொண்ட மரங்களும் அதன் தலைவனும் அவனை வரவேற்க நிற்பது போலத் தெரிந்தது. தவம் செய்யாத எவரும், அக்னியில் நெய் விடாத எவரும் அதைக் காணமுடியாத படி அந்தப் பகுதி இருந்தது. போர்க்களத்தில் புறமுதுகிட்டவர்களுக்கானது அல்லாமல், அறம்சார்ந்தவர்களுக்கு மட்டுமே ஆன பகுதியாக அது இருந்தது.
வேள்விகளோ, கடும் நோன்புகளோ, வேத அறிவு இல்லாதவர்களோ, புண்ணிய நீர்களில் நீராடதவர்களோ, வேள்விகளிலும் தானங்களிலும் விலக்கப்பட்டவர்களோ அந்தப் பகுதியைக் காணமுடியாது. வேள்விகளைத் தடை செய்பவர்களோ, தாழ்ந்தவர்களோ, போதைதரும் மதுவைக் குடிப்பவர்களோ, குருவின் படுக்கையைக் களங்கப்படுத்தியவர்களோ, (பரிசுத்தமற்ற) புலால் உண்பவர்களோ, தீயவர்களோ அதைக் காண முடியாது. தெய்வீக இசையால் நிறைந்த அந்தத் தெய்வீக சோலையைக் கண்ட பலம்வாய்ந்த கரம் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, இந்திரனுக்குப் பிடித்தமான நகரத்துக்குள் {அமராவதிக்குள்} நுழைந்தான். நினைத்த இடத்திற்குச் செல்லவல்ல ஆயிரக்கணக்கான தெய்வீகத் தேர்கள் சரியான இடங்களில் நிறுத்தப்பட்டிருப்பதை அவன் கண்டான். அனைத்து திக்குகளிலும் பத்தாயிரக்கணக்கான அவ்வகை தேர்கள் நகர்ந்து கொண்டிருப்பதையும் கண்டான். மலர்களின் நறுமணத்துடன் கூடிய வாசனையான தென்றலால் வருடப்பட்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அப்சரஸ்களாலும் கந்தர்வர்களாலும் புகழப்பட்டான்.
கந்தர்வர்கள், சித்தர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோருடன் இருந்த தேவர்கள், நற்செயல்கள் புரிந்த பிருதையின் {குந்தியின்} மகனை {அர்ஜுனனை} மகிழ்ச்சியுடன் மதித்து நடந்தனர். தெய்வீக இசை முழக்கத்துடன், ஆசீர்வாதங்கள் அவன் மீது பொழியப்பட்டன. பிறகு, வலுத்த கரங்கள் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தன்னைச் சுற்றி சங்குகள் மற்றும் பேரிகைகளின் இசையைக் கேட்டான். சுற்றி நின்ற அனைவராலும் புகழப்பட்ட பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்}, பிறகு இந்திரனின் கட்டளையின் பேரில், சுரவீதி என்று அழைக்கப்பட்ட பெரிதான அகன்ற நட்சத்திரப் பாதையில் சென்றான். பிறகு அவன், சத்யஸ்கள், விசுவஸ்கள், மருதர்கள், அசுவினி இரட்டையர்கள், ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், பெரும் பிரகாசமுடைய பிரம்மரிஷிகள், திலீபனைத் தலைமையாகக் கொண்ட எண்ணிலடங்கா அரசமுனிகள், தும்புரு, நாரதர், ஹாஹா மற்றும் ஹூஹூ என்று அழைக்கப்பட்ட கந்தர்வ இரட்டையர்கள் ஆகியோரைச் சந்தித்தான்.
அந்த எதிரிகளைத் தண்டிக்கும் குரு இளவரசன் கடைசியாக நூறு வேள்விகளைச் செய்த தேவனான, தேவர்கள் தலைவனைச் {இந்திரனைச்} சந்தித்து அவனை முறைப்படி வணங்கினான். பிறகு அந்த வலுத்த கரம் கொண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தேரில் இருந்து இறங்கி பகனைத் தண்டித்தவனான தேவர்கள் தலைவனை {இந்திரனை} அணுகினான். தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} தலைக்கு மேல், தங்கப்பிடி கொண்ட அழகான வெண்குடை பிடிக்கப்பட்டிருந்தது. தெய்வீக வாசனைத்திரவியங்களைக் கொண்டு நறுமணமாக்கப்பட்ட சாமரம் அவனுக்கு வீசப்பட்டது. விசுவவசுவைத் தலைமையாகக் கொண்ட கந்தர்வர்களாலும், பாணர்களாலும், பாடகர்களாலும், ரிக், யஜுர் வேதங்களை உச்சரிக்கும் அந்தணர்களில் முதன்மையானவர்களாலும், மற்றவர்களாலும் அவன் புகழப்பட்டான்.
பிறகு, குந்தியின் பலம் பொருந்திய மகன் {அர்ஜுனன்} இந்திரனை அணுகி, தனது தலையைத் தரையில் பதித்து அவனை வணங்கினான். அதன்பிறகு, இந்திரன் தனது உருண்டு பருத்த கரங்களால் அவனை {அர்ஜுனனை} அணைத்துக் கொண்டான். பிறகு அவனது கரத்தைப் பற்றிய சக்ரன் {இந்திரன்}, தேவர்களாலும் முனிவர்களாலும் வழிபடப்படும், புனிதமான தனது ஆசனத்திலேயே ஒரு பகுதியைக் கொடுத்து அவனை உட்காரச் செய்தான். ஆயிரம் கண்ணுடைய தேவனின் {இந்திரனின்} கட்டளைக்கிணங்கி, சக்ரனின் {இந்திரனின்} ஆசனத்தில் அமர்ந்த, அளவிடமுடியாத சக்தி படைத்த பிருதையின் மகன் {அர்ஜுனன்}, இரண்டாவது இந்திரனைப் போல ஒளிர்ந்தான்.
பாசத்தால் உந்தப்பட்ட விரித்திரனைக் கொன்றவன் {இந்திரன்}, அர்ஜுனனைச் சமாதானம் செய்து, தனது நறுமணமிக்க கரங்களால் அவனது {அர்ஜுனனின்} அழகான முகத்தைத் தொட்டுப் பார்த்தான். பிறகு, விரித்திரனைக் கொன்ற ஆயிரம் கண்களையுடையவன் {இந்திரன்}, வஜ்ராயுதம் பிடித்து வடுபட்ட தனது கரத்தால், வில்லின் நாணிழுத்து கடினமாகி தங்கத்தூண்களைப் போல இருந்த அர்ஜுனனின் பெரும் கரங்களைத் தட்டிக் கொடுத்தும், தேய்த்தும் பார்த்தான். சூரியனையும் சந்திரனையும் போல தனது மகன் தனது சபையை அழகூட்டியதைக் கண்ட ஆயிரம் கண்ணுள்ள தேவன் {இந்திரன்}, சுருண்ட முடி கொண்ட {குடாகேசன்}, தனது மகனை {அர்ஜுனனை} மீண்டும் கண்டு, புன்னகைத்து, மகிழ்ச்சியால் கண்களை அக விரித்து திருப்தியடையாமல் இருந்தான். அவனை {அர்ஜுனனை} அதிகமாகப் பார்க்க பார்க்க, மேலும் அவனை அதிகமாகப் பார்க்க ஆசைப்பட்டான்.
தேய்பிறையின் பதினான்காவது நாள் {சதுர்த்தசியில்} சூரியனும் சந்திரனும் வானத்தை அழகூட்டுவது போல, ஒரே இருக்கையில் அமர்ந்த தந்தையும் மகனும், அந்தச் சபையின் அழகை மேலும் கூட்டினர். புனிதமான மற்றும் புனிதமற்ற இசையில் நிபுணனான தும்புருவின் தலைமையிலான கந்தர்வ இசைக்குழு, இனிமையான பாடல்களைப் பாடினர். தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடைய கிரிடச்சி {கிருதாசி}, மேனகை, ரம்பை, பூர்வசித்தி, சுவயம்பிரபா, ஊர்வசி, மிஸ்ரகேசி, தண்டகௌரி, வரூதினி, கோபாலி, சஹஜன்யா, கும்பயோணி, பிரஜாகரை, சித்திரசேனா, சித்திரலேகா, சஹை, மதுரஸ்வனா ஆகியவர்களும், ஆயிரக்கணக்கன மற்றவர்களும், கடுந்தவம் பயின்ற மனிதர்களின் இதயங்களை மகிழ்விக்கும் பணியில் ஈடுபட்டு நடனமாடிக் கொண்டிருந்தனர். மெலிந்த இடைகளும், பெருத்த அழகான இடைகளும் கொண்டு, பல பரிமாணங்கள் காட்டி, தங்கள் பருத்த மார்புகளை அசைத்து, தங்கள் பார்வைகளைச் சுழலவிட்டு, பார்வையாளர்களின் இதயங்களையும், எண்ணங்களையும், மனங்களையும் கொள்ளை கொள்ளும் கவர்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இசையும் நடனமும் கற்ற அர்ஜுனன் – வனபர்வம் பகுதி 44-அர்ஜுனன் சகோதரர்களை நினைத்து கவலை கொள்தல்; இந்திரன் அர்ஜுனனை இசையும் நடனமும் கற்றுக் கொள்ளச் சொல்லி சித்திரசேனனை நண்பனாகக் கொடுத்தல்; அர்ஜுனன் சித்திரசேனனிடம் இசையும் நடனமும் கற்றல்;
வைசம்பாயனர் சொன்னார், “தேவர்களும், கந்தர்வர்களும், இந்திரனின் விருப்பங்களை உணர்ந்து, அற்புதமான ஆர்கியாவைத் தயார் செய்து, பிருதையின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு} அவசரமாக மரியாதை செலுத்தினர். அவனின் {அர்ஜுனனின்} கால்களையும் முகத்தையும் கழுவ நீர் கொடுத்து, அந்த இளவரசனை {அர்ஜுனனை}, இந்திரனின் அரண்மனைக்குள் அழைத்துச் சென்றனர். இப்படி வழிபடப்பட்ட ஜிஷ்ணு {அர்ஜுனன்}, தொடர்ந்து தனது தந்தையின் {இந்திரனின்} வசிப்பிடத்தில் வாழ ஆரம்பித்தான். தெய்வீக ஆயுதங்களைப் பெறுவதற்காகவும், அந்த ஆயுதங்களைத் திரும்ப அழைக்கும் வித்தையைக் கற்றுக் கொள்வதற்காகவும் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அங்கேயே தொடர்ந்து இருந்தான். பிறகு, சக்ரனின் {இந்திரனின்} கைகளால் அவனுக்குப் {இந்திரனுக்குப்} பிடித்தமான வஜ்ராயுதத்தையும் மற்ற பயங்கரமான கர்ஜனை கொண்ட, மேகத்தின் தோற்றத்தையும், (நடனமாடும்) மயில்களின் தோற்றத்தையும் கொண்டு அறியக்கூடிய விண்ணுலகின் மின்னலைப் போன்ற பிற ஆயுதங்களையும் பெற்றான். அப்படி ஆயுதங்களை அடைந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களை நினைவுகூர்ந்தான். இருப்பினும், இந்திரனின் கட்டளையின் பேரில், வசதியுடனும் ஆடம்பரத்துடனும் முழுமையாக ஐந்து வருடங்கள் சொர்க்கத்தில் வாழ்ந்தான்.
அர்ஜுனன் ஆயுதங்களைப் பெற்ற சில காலங்களுக்குப் பிறகு, தகுந்த நேரத்தில் இந்திரன், “ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, சித்திரசேனனிடம் இருந்து இசையையும் ஆடற்கலையையும் கற்றுக் கொள். இசைக்கருவிகளால் இசைக்கப்படும் தற்போதைய தேவலோக இசை, மனிதர்களின் உலகில் இல்லை. ஓ குந்தியின் மகனே, அது உனக்கு நன்மையைத் தரும். பிறகு புரந்தரன் {இந்திரன்}, சித்திரசேனனை அர்ஜுனனுக்கு நண்பனாகக் கொடுத்தான். அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் அர்ஜுனன்} சித்திரசேனனுடன் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தான். அவனுடன் இருந்த காலத்தில் சித்திரசேனன் அர்ஜுனனுக்கு குரலிசையும், கருவி {வாத்திய} இசையும், நடனமும் கற்றுக் கொடுத்தான். ஆனால் சுறுசுறுப்பான அர்ஜுனன், சுபலனின் மகனான சகுனியின் நியாயமற்ற விளையாட்டை நினைவுகூர்ந்து, கோபத்துடன் துச்சாசனனையும் அவனது மரணத்தையும் நினைத்துப் பார்த்து மன அமைதியின்றியே இருந்தான். இருப்பினும், சித்திரசேனனுடனான அவனது நட்பு முழுமையாகக் கனிந்து, ஒப்பிலா நடனத்தையும், கந்தர்வர்களால் இசைக்கப்படும் இசையையும் அர்ஜனன் கற்றுக் கொண்டான். பல வகைப்பட்ட நடனங்களையும், வித்தியாசமான வகைகளிலான குரலிசை மற்றும் கருவியிசைகளையும் கற்றுக் கொண்ட அந்த எதிரி வீரர்களைக் கொல்பவன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களையும், தாய் குந்தியையும் நினைத்துப் பார்த்து மன அமைதி பெற்றானில்லை.
பெண்சுகத்திலும் வல்லவனாக வேண்டும் – வனபர்வம் பகுதி 45-அர்ஜுனன் ஊர்வசியைப் பார்த்ததைக் கண்ட இந்திரன், சித்திரசேனனை அழைத்து ஊர்வசியிடம் சென்று தனது செய்தியைச் சொல்லுமாறு சொன்னது; சித்திரசேனன் ஊர்வசியிடம் சென்று அர்ஜுனனைப் புகழ்ந்து சொல்லி, அர்ஜுனனிடம் ஊர்வசி செல்ல வேண்டும் என்று உரைப்பது; ஊர்வசி தான் ஏற்கனவே அர்ஜுனன் மேல் மோகத்தில் இருப்பதாகத் தெரிவிப்பது…
வைசம்பாயனர் சொன்னார், “ஒருநாள், அர்ஜுனனின் *பார்வை ஊர்வசியின் மேல் விழுந்ததைக் கண்ட வாசவன் {இந்திரன்}, சித்திரசேனனை {அர்ஜுனனின் கந்தர்வ நண்பன்} தனிமையில்அழைத்து, “ஓ கந்தர்வ மன்னா, நான் திருப்தியடைந்தேன்; அப்சரஸ்களில் முதன்மையான ஊர்வசியிடம் எனது தூதுவனாகச் சென்று, மனிதர்களில் புலியான பல்குனனுக்காக {அர்ஜுனனுக்காக} அவளை {ஊர்வசியைக்} காத்திருக்கச் செய். அவளிடம், {ஊர்வசியிடம்} “எனது {இந்திரன்} பயிற்சியின் மூலம் அர்ஜுனன் அனைத்து ஆயுதங்களையும், மற்ற கலைகளையும் கற்றுக் கொண்டு, எல்லோராலும் கொண்டாடப்பட்டு இருக்கிறான். அவனை {அர்ஜுனனை} பெண்களின் துணையைக் கொள்ளும் கலையை அறிந்தவனாகவும் நீ ஆக்க வேண்டும்” என்ற எனது {இந்திரன்} வார்த்தைகளைச் சொல்” என்றான் {இந்திரன்}.
இந்திரனால் இப்படிச் சொல்லப்பட்ட கந்தர்வ மன்னன் {சித்திரசேனன்}, அந்த வாசவனின் {இந்திரனின்} கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, விரைவாக அப்சரஸ்களில் முதன்மையான ஊர்வசியிடம் சென்றான். அவனைக் கண்டதும், அவனது அடையாளத்தைக் கண்டு கொண்டு, அவனுக்கு மகிழ்ச்சியுண்டாவது போல அவனை வரவேற்கவும் வணங்கவும் செய்தாள். தான் வசதியாக அமர்ந்ததும் அவன் {கந்தர்வ மன்னனான சித்திரசேனன்}, மெல்லி புன்னகையுடன், வசதியாக அமர்ந்திருந்த ஊர்வசியிடம், “ஓ அழகான இடை கொண்டவளே, உன்னிடம் ஒரு உதவியைக் கேட்கும் சொர்க்கத்தின் ஒரே தலைவன் {இந்திரன்} அனுப்பியே நான் இங்கு வந்திருக்கிறேன்.
பிறப்பிலிருந்தே தன்னுள் இருக்கும் பல அறங்களுக்காகவும், தனது அருளுக்காகவும், நடத்தைக்காகவும், அழகுக்காகவும், நோன்புகளுக்காகவும், சுயக்கட்டு பாடுகளுக்காகவும், பலம் மற்றும் வீரத்திற்காகவும் தேவர்கள் மற்றும் மனிதர்கள் மத்தியில் அறியப்பட்டவனும், அறம்சார்ந்தவர்களால் மதிக்கப்பட்டு எப்போதும் தயாரான சொல்நயத்துடனும், அறிவுஜீவியாகவும், அற்புதமான சக்தியுடனும், மன்னிக்கும் தன்மையுடனும், எந்த விதமான கறையும் படாமலும், நான்கு வேதங்களையும், அதன் கிளைகளையும், உபநிஷத்துகளையும், புராணங்களையும் கற்று, குருவுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனும், அறிவாற்றலின் எட்டு பண்புகளைக் கொண்டவனும்,
தனது துறவு, திறன், மூலம் {பிறப்பிடம்}, வயது ஆகியவற்றைக் கொண்டு, தேவலோகத்தை மஹாவத் {இந்திரன்} போன்று தனியாகவே காக்க இயன்றவனும், தற்பெருமை பேசாதவனும், அனைவருக்கும் தகுந்த மரியாதை கொடுப்பவனும், நுட்பமான சிறு பொருளையும் பெரிதாக மொத்தமாகப் பார்ப்பவனும், இனிமையான பேச்சு கொண்டவனும், விதவித விதமான உணவு மற்றும் பானங்களை நண்பர்களுக்கும், தன்னை நம்பி இருப்பவர்களுக்கும் கொடுப்பவனும், உண்மையுள்ளவனும், அனைவராலும் வழிபடப்படுபவனும், நா நலமிக்கவனும், அழகானவனும், கர்வமற்றவனும், தனக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களிடம் அன்புடன் இருப்பவனும், அண்டத்திற்கே திருப்தியாக இருந்து அனைவராலும் விரும்பப்படுபவனும், சத்தியத்தில் உறுதியுடன் இருப்பவனும், மகேந்திரனுக்கும் {இந்திரனுக்கும்}, வருணனுக்கும் எல்லாவிதத்திலும் சமமான அர்ஜுனனை நீ அறிவாய். ஓ ஊர்வசி, அந்த வீரன் சொர்க்கத்தின் இன்பங்களைச் சுவைப்பதற்காக உருவாக்கப்பட்டவன் என்பதை அறிந்துகொள். இந்திரனின் கட்டளையின் பேரில் அவன் {அர்ஜுனன்} இன்று உனது பாதத்தை அடையட்டும். ஓ இனிமையானவளே, அர்ஜுனன் உன் பக்கமாகச் சாய்ந்திருப்பதால், இதைச் செய்” என்றான் {சித்திரசேனன்}.
இப்படிச் சொல்லப்பட்டதும் களங்கமற்ற குணம் கொண்ட ஊர்வசி புன்னகை கொண்ட முகத்துடன் அந்த கந்தர்வனின் {சித்திரசேனனின்} வார்த்தைகளை உயர்ந்த மரியாதையுடன் பெற்று, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், “மனிதர்களை அலங்கரிக்க வேண்டிய அறங்களை, அவை உம்மால் சொல்லப்பட்ட போது {அர்ஜுனனை வர்ணித்தது} கேட்டேன். யார் இப்படிப்பட்ட அறங்களைக் கொண்டிருந்தாலும், நான் அவர்களுக்கு எனது ஆதரவை அளிப்பேன். பிறகு, நான் ஏன் அர்ஜுனனை எனது காதலனாகக் கொள்ளக்கூடாது? இந்திரனின் உத்தரவினாலும், உம்மிடம் நான் கொண்டுள்ள நட்பினாலும், பல்குனனின் {அர்ஜுனனின்} எண்ணிலடங்கா நற்குணங்களாலும் ஈர்க்கப்பட்டு, நான் ஏற்கனவே காம தேவனின் ஆளுகைக்குட்பட்டிருக்கிறேன். ஆகையால், நீ விரும்பிய இடத்திற்கு செல். நான் மகிழ்ச்சியாக அர்ஜுனனிடம் செல்வேன்” என்றாள் {ஊர்வசி}.
ஊர்வசி எனும் அழகு தேவதை! – வனபர்வம் பகுதி 46அ-அர்ஜுனனைக் காண நடந்து சென்ற ஊர்வசியின் அழகு குறித்த வர்ணனை…
வைசம்பாயனர் சொன்னார், “இப்படி தனது காரியத்தில் வெற்றியடைந்த கந்தர்வனை வழியனுப்பிய ஒளிரும் புன்னகையுடைய ஊர்வசி, பல்குனனை {அர்ஜுனனை} அடையும் விருப்பத்தால், நீராடினாள் {குளித்தாள்}. தன்னைச் சுத்திகரித்துக் கொண்ட அவள் {ஊர்வசி}, அழகிய ஆபரணங்களாலும், தெய்வீக மணம் கொண்ட மாலைகளாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டாள். அர்ஜுனனின் அழகைக் கண்டு, காம தேவனால் உந்தப்பட்ட அவளது இதயம் மன்மதனின் அம்புகளால் மீண்டும் மீண்டும் தைக்கப்பட்டது. மனம் முழுவதும் அர்ஜுனனை நிறைத்து, தெய்வீக போர்வைகள் போர்த்தப்பட்ட அகலமான அற்புதமான படுக்கையில் அவனுடன் {அர்ஜுனனுடன்} மானசீகமாக விளையாடினாள்.
மாலை சந்தி ஆழ்ந்து சந்திரன் உதித்த போது, உயர்ந்த இடை கொண்ட அந்த அப்ரசஸ் அர்ஜுனனின் மாளிகைக்குக் கிளம்பினாள். அதே மனநிலையுடன், தனது மிருதுவான, மென்மையான, நீண்ட கூந்தலில் மலர்க்குலைகளைத் தரித்து இயல்புக்கு மிக்க அழகான தோற்றமுடையவளானாள். தனது அழகு மற்றும் அருளாலும், தனது புருவங்களின் அழகான அசைவாலும், தனது மென்மையான {பேச்சு} ஒலிகளாலும், சந்திரனைப் போன்ற தனது முகத்தாலும், அவள் {ஊர்வசி} நிலவின் அழகுக்கு சவால் விட்டு நடந்து செல்வது போலத் தோன்றியது.
அவள் {ஊர்வசி} அப்படி முன்னேறிச் செல்கையில், தங்க ஆரங்களாலும், தெய்வீகத் தைலங்களாலும், நறுமணச் சந்தனத்தாலும் அலங்கரிக்கப்பட்ட அவளின் {ஊர்வசியின்} பருத்த கூர்மையான மார்புகள் நடுங்கத்தொடங்கின {அசைந்தன [ஆங்கிலத்தில் began to tremble என்றே இருக்கிறது]}. அவளுடைய மார்புகளின் கனத்தால், அவள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் முன்னோக்கி குனிவது போல, மூன்று மடிப்புகளுடன் கூடிய தனது மிக அழகான இடையை வளைத்தாள். காமதேவனின் அழகிய உறைவிடமான, களங்கமற்ற வடிவம் கொண்ட அவளது இடுப்பு, தங்கச்சங்கிலிகளாலும், மெலிதான ஆடையாலும் அலங்கரிக்கப்பட்டு துறவிகளின் துறவு நிலையை அசைத்துப் பார்க்கும் சக்தியுடன் மலையின் கீழ்ப்பகுதியைப் போல அகன்றும் உயர்ந்தும் பருத்தும் உருண்டையாக மிகவும் அழகாக இருந்தது. அழகிய மறைந்த கணுக்கால்களும், தட்டையான உள்ளங்காலும், தாமிர நிறத்தில் நீண்ட சிவந்த கட்டைவிரலும், ஆமையின் முதுகைப் போன்ற வளைந்து உயர்ந்த குதிகாலும் கொண்ட அவளது பாதம், மணிகளாலும் ஆபரணங்களாலும் {சலங்கைகளாலும்} அலங்கரிக்கப்பட்டு, மிகவும் அழகான தோற்றம் கொண்டிருந்தது.
அவள் {ஊர்வசி} உட்கொண்டிருந்த சிறிதளவு மதுவால் கொண்ட மயக்கத்துடனும், ஆசையின் உற்சாகத்திலும், பல்வேறு அணுகுமுறைகளால் நகர்ந்து, மகிழ்ச்சியான உணர்வை வெளிப்படுத்தி சென்ற அவள் {ஊர்வசி} வழக்கத்தைவிட அதிக அழகான தோற்றம் கொண்டவளாகத் தெரிந்தாள். என்னதான் சொர்க்கம் அற்புதமான பல பொருட்களால் நிறைந்திருந்தாலும், இப்படி ஊர்வசி நடந்து செல்வதைக் கண்ட சித்தர்களும், சாரணர்களும், கந்தர்வர்களும், தங்கள் கண்கள் கண்ட அனைத்தைக் காட்டிலும் அவள்தான் அழகு என்று கருதினர். அவளது உடலின் மேல்பாகத்தில் மேக நிறம் கொண்ட மெல்லிய துணியை அணிந்திருந்தாள். அதனால், அவள் ஆகாயத்தில் நிறைந்த மேகத்திரள், சந்திரனின் ஒளியைப் பிரதிபலிப்பதைப் போல அழகாக இருந்தாள். காற்று வேக மனோ வேகத்துடன் சென்ற அந்த ஒளிரும் புன்னகைக்குச் சொந்தக்காரி {ஊர்வசி}, பாண்டுவின் மகனான பல்குனனின் {அர்ஜுனனின்} மாளிகையை விரைவில் அடைந்தாள்
அலியாவாய் என்று சபித்தாள் ஊர்வசி! – வனபர்வம் பகுதி 46ஆ-சித்திரசேனன் சொல்கேட்டு அர்ஜுனனிடம் சென்று தனது விருப்பத்தை ஊர்வசி உரைத்தல்; கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்ட அர்ஜுனன் ஊர்வசியைத் தாயாகக் கருதுவதாக பதிலுரைத்தல்; அப்சரஸ்களின் நிலையை ஊர்வசி எடுத்துச் சொல்லல்; அர்ஜுனன் மீண்டும் மறுத்தல்; ஊர்வசி அர்ஜுனனைச் சபித்தல்; இக்காரியங்களை அறிந்த இந்திரன் அர்ஜுனனுக்குச் சமாதானம் சொல்லல்.
வைசம்பாயனர் சொன்னார் “ஓ மனிதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அழகான கண்களைக் கொண்ட ஊர்வசி, அர்ஜுனனுடைய மாளிகை வாயிலை அடைந்து, வாயில்காப்போனிடம் சில வார்த்தைகளைச் சொல்லி அனுப்பினாள். (உத்தரவு கிடைத்ததும்), அவள் {ஊர்வசி} விரைவாக அந்த பிரகாசமான, அழகான அரண்மனைக்குள் நுழைந்தாள். ஆனால், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அவளைத் தனது மாளிகையில் இரவு நேரத்தில் பார்த்த அர்ஜுனன், இதயத்தில் பயத்தால் பீடிக்கப்பட்டு, அவளை உரிய மரியாதையுடன் அழைக்க வெளியே வந்தான். விரைவில் அவளைக் கண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, அடக்கத்தால் {Modesty} தனது கண்களை மூடிக்கொண்டான். அவளை {ஊர்வசியை} வணங்கிய அவன் {அர்ஜுனன்}, தன்னை விட உயர்ந்த ஒருவரிடம் {குருவைப் போன்ற மூத்தவருக்கு} செய்யும் வழிபாட்டை அந்த அப்சரஸுக்குச் {ஊர்வசிக்குச்} செய்தான். பிறகு, அர்ஜுனன், “ஓ அப்சரஸ்களில் முதன்மையானவளே, நான் எனது சிரம் தாழ்த்தி உன்னை வணங்குகிறேன். ஓ மங்கையே, உன் கட்டளைகளை நீ எனக்குத் தெரியப்படுத்து. நான் உனது பணியாள் {அடிமை} போல உனக்குக் காத்திருப்பேன்” என்றான் {அர்ஜுனன்}
வைசம்பாயனர் தொடர்ந்தார், “பல்குனனின் {அர்ஜுனனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட ஊர்வசி, தனது உணர்ச்சிகளை இழந்தாள். விரைவில் அவள் {ஊர்வசி}, அர்ஜுனனிடம், கந்தர்வனான சித்திரசேனனுக்கும் தனக்கும் நடைபெற்ற உரையாடலை எடுத்துரைத்தாள். மேலும் அவள் {ஊர்வசி}, “ஓ மனிதர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, சித்திரசேனனுக்கும் எனக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலையும், நான் ஏன் இங்கு வந்தேன் என்பதையும் சொல்கிறேன். நீர் இங்கு வந்ததும், ஓ அர்ஜுனரே, மகேந்திரன் {இந்திரன்} ஒரு பெரிய அழகான சபையைக் கட்டினார். அதில் தேவலோக விழாக்கள் அனைத்தும் நடைபெறும். ஓ மனிதர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, அந்த சபைக்கு, ருத்திரர்களும், ஆதித்தியர்களும், அசுவினிகளும் வசுக்களும் வந்தனர். அங்கே பல பெரும் முனிவர்களும், அரசமுனிகளும், சித்தர்களும், சாரணர்களும், யக்ஷர்களும், பெரும் நாகர்களும் கூட வந்தனர். ஓ அகன்ற கண்கள் உடையவரே {அர்ஜுனரே}, சூரியனையும் சந்திரனையும் போன்ற பிரகாசமிக்க அந்தச் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தகுதிக்கேற்றபடியும், மரியாதைக்கேற்றபடியும், வீரத்திற்கு ஏற்றாற்படியும் ஆசனங்களில் அமர்ந்தனர். ஓ சக்ரனின் மகனே {அர்ஜுனரே}, கந்தர்வர்கள் வீணை மீட்டி தெய்வீக இசையுடன் கூடிய அழகான பாடல்களைப் பாடினர். ஓ குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரே {அர்ஜுனரே}, முக்கியமான தேவதைகள் {அப்சரஸ்கள்} அனைவரும் அங்கே நடனமாடினர்.
பிறகுதான், ஓ பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனரே}, நீர் உமது நிலைத்த பார்வையை என் மேல் செலுத்தினீர். தேவர்களின் சபை முடிந்ததும், உமது தந்தையால் கட்டளையிடப்பட்ட தேவர்கள் அனைவரும் அவர்களது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். முக்கியமான தேவதைகளும் {அப்சரஸ்களும்} தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர். மற்றவர்களும் கூட, ஓ எதிரிகளைக் கொல்பவரே {அர்ஜுனரே}, உமது தந்தையின் {இந்திரனின்} கட்டளைக்கிணங்கி அவரிடம் விடைபெற்று சென்றனர். அதன்பிறகுதான், சக்ரனால் {இந்திரனால்} அனுப்பப்பட்ட சித்திரசேனன் எனது வசிப்பிடத்திற்கு வந்தார். ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவரே, அவர் {சித்திரசேனன்}, என்னிடம், “ஓ அழகான நிறம் கொண்டவளே, நான் தேவர்கள் தலைவனால் {இந்திரனால்} அனுப்பப்பட்டேன். மகேந்திரனுக்கும் {இந்திரனுக்கும்}, எனக்கும், உனக்கும் ஏற்புடைய வகையில் ஒரு காரியத்தைச் செய். ஓ அழகான இடை கொண்டவளே, போர்க்களத்தில் சக்ரனைப் {இந்திரனைப்} போன்ற வீரனும், எப்போதும் பெருந்தன்மை கொண்டவனுமான அர்ஜுனனைத் திருப்தி செய்ய முயற்சி செய்” என்றார். இவையே அவர் சொன்ன வார்த்தைகளாகும். இப்படியே, ஓ பாவங்களற்றவரே {அர்ஜுனரே}, அவராலும் {சித்திரசேனராலும்}, உமது தந்தையாலும் கட்டளையிடப்பட்டு, ஓ எதிரிகளைக் கொல்பவரே {அர்ஜுனரே}, உமக்காகக் காத்திருப்பதற்காக, நான் உம்மிடம் வந்திருக்கிறேன். உமது நற்குணங்கள் எனது இதயத்தைக் கவர்ந்தன. அதனால் நான் ஏற்கனவே காம தேவனின் ஆளுகைக்குள் விழுந்துவிட்டேன். ஓ வீரரே, நான் அதை எப்போதும் பேணிக் காப்பேன். அது எனது விருப்பமும் கூட” என்றாள் {ஊர்வசி}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “இச்சூழலில் சொர்க்கத்திலிருந்தபோது, அர்ஜுனன் அவளது {ஊர்வசியின்} அழுத்தமான பேச்சால் நாணமுற்றான். தனது காதுகளைத் தனது கைகளால் மூடிக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, “ஓ அருளப்பட்ட மங்கையே {ஊர்வசியே}, நீ என்னிடம் இப்படிப் பேசுகிறாயே! எனது கேட்கும் உணர்வுக்கு ஐயோ. ஓ அழகிய முகம் கொண்டவளே, எனது மதிப்பீட்டின் படி நீ என்னைவிட உயர்ந்தவரின் மனைவிக்குச் {wife of a superior} சமமானவளாவாய். நீ எனக்கு நற்பேறுபெற்ற குந்தியை {தாயைப்} போன்றவளும், இங்கிருக்கும் இந்திரனின் ராணியான சச்சியைப் போன்றவளுமாவாய். இதுவே எனது விருப்பம். நான் அதை எப்போதும் பேணிக் காப்பேன். ஓ மங்களமானவளே, இதில் சந்தேகமே கிடையாது. ஓ அருளப்பட்டவளே, நான் உன்னை நிலைத்த பார்வையுடன் பார்த்தது உண்மைதான். ஆனால் அதற்குக் காரணம் இருக்கிறது. ஓ ஒளிரும் புன்னகையுடையவளே, நான் அதை உனக்கு உண்மையாகச் சொல்வேன். “பளபளக்கும் மங்கையான இவள் கௌரவ குலத்தின் தாயாக இருப்பாள்” என்று மனதினில் நினைத்தே, மகிழ்ச்சியுடன் கண்களை அகல விரித்து உன்னை நிலைத்த பார்வை கொண்டு பார்த்தேன். ஓ அருளப்பட்ட தேவதையே {அப்சரஸே}, நீ எனது குலத்தின் தாயாக இருந்து, என்னைவிட மேன்மையானவர்களுக்கும் மேன்மையானவளாக இருப்பதால், நீ என்னைக் கருதி மற்ற உணர்வுகளை வளர்ப்பது தகாது” என்றான் {அர்ஜுனன்}.
அர்ஜுனனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட ஊர்வசி, “தேவர்கள் தலைவனின் மகனே {அர்ஜுனரே}, அப்சரஸ்களான நாங்கள் சுதந்திரமானவர்கள், தேர்வு செய்வதில் கட்டுப்பாடில்லாதவர்கள். ஆகையால், நீர் என்னை உமக்கு மேன்மையானவளாக மதிப்பிடுவது தகாது. புரு குலத்தின் மகன்கள் பேரர்கள் ஆகிய அனைவரும், தங்கள் தவத் தகுதிகளின் தொடர்ச்சியாக இங்கே வந்து எங்களுடன் விளையாடுவார்கள். அதனால் அவர்கள் எந்தப் பாவமும் அடைவதில்லை. ஆகையால், ஓ வீரரே, உமது கண்டிப்பைக் குறைத்துக் கொள்ளும். என்னை வெளியே அனுப்புவது உமக்குத் தகாது. நான் ஆசையால் எரிந்து கொண்டிருக்கிறேன். நான் உமக்கு என்னை அர்ப்பணித்திருக்கிறேன். ஓ தகுந்த மரியாதை அளிப்பவரே {அர்ஜுனரே}, என்னை ஏற்றுக் கொள்ளும்” என்று பதிலுரைத்தாள் {ஊர்வசி}.
அர்ஜுனன், “ஓ சுத்தமானக் களங்கமற்ற குணம் கொண்ட அழகான மங்கையே {ஊர்வசியே}, கேள். நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன். நான்கு திசைகளும், அதற்கு குறுக்காக உள்ள திசைகளும் {எட்டு திக்குகளும்}, ஏன் தேவர்களும் கூட கேட்கட்டும். ஓ பாவமற்றவளே, எனக்கு குந்தி, மாத்ரி, சச்சி ஆகியோர் எப்படியோ, அதே போல நீயும் எனது குலத்தின் தாயே. எனது மரியாதைக்கு உரியவளே, நான் உனக்குத் தலைவணங்கி, உனது பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கேட்டுக் கொள்கிறேன். ஓ அழகான நிறம் கொண்டவளே, திரும்பிச் செல். நீ எனது சொந்தத் தாயைப் போல என்னால் வழிபடத்தகுந்தவள். நீ என்னை மகனைப் போலப் பாதுகாப்பதே உனக்குத் தகும்” என்று மறுமொழி கூறினான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “பார்த்தனால் {அர்ஜுனனால்}, இப்படிச் சொல்லப்பட்ட ஊர்வசி, கோபத்தால் தனது உணர்வுகளை இழந்தாள். அவள் {ஊர்வசி}, கோபத்தால் நடுங்கி, தனது புருவங்களைச் சுருக்கி, அர்ஜுனனைப் பார்த்து, “ஒரு பெண், உமது தந்தையின் உத்தரவின் பேரிலும், அவளது சொந்த விருப்பத்தின் பேரிலும், உமது மாளிகைக்கு வந்திருக்கிறாள். காமனின் கணைகளால் துளைக்கப்பட்ட அந்தப் பெண்ணை நீர் அவமதித்து விட்டீர். ஆகையால், ஓ பார்த்தரே {அர்ஜுனரே}, நீர் உமது ஆண்மையை {ஆண் தன்மையை} இழந்து, இழிந்த அலியாகி, மகளிருக்கு மத்தியில் ஆடற்கலைஞராக உமது பொழுதைக் கழிப்பீர்” என்று சபித்தாள் {ஊர்வசி}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படி அர்ஜுனனைச் சபித்த ஊர்வசியின் உதடுகள் அதன் பின்பும் நடுங்கியபடியே இருந்தன. அவள் {ஊர்வசி} நீண்ட மூச்சுகளை விட்டபடியே இருந்தாள். விரைவில் அவள் {ஊர்வசி} தனது சொந்த வசிப்பிடத்திற்குத் திரும்பினாள். எதிரிகளைக் கொல்பவனான அர்ஜுனன், நேரத்தைக் கடத்தாமல் சித்திரசேனனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனிடம், அன்றிரவு ஊர்வசிக்கும் தனக்கும் இடையில் நடந்த சம்பவங்களைச் சொன்னான். அவன் {அர்ஜுனன்} சித்திரசேனனிடம் நடந்தது அத்தனையும் சொல்லி, தனக்கு அவள் {ஊர்வசி} சாபமிட்டத்தையும் திரும்பத் திரும்பச் சொன்னான். சித்திரசேனன் இவை அனைத்தையும் சக்ரனிடம் {இந்திரனிடம்} சொன்னான். அந்த ஹரிவாஹனன் {இந்திரன்}, தனது மகனை {அர்ஜுனனைத்} தனிமையில் அழைத்து, இனிமையான வார்த்தைகளால் சமாதானம் கூறி, புன்னகையுடன், “ஓ உயிரினங்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, ஓ குழந்தாய், பிருதை {குந்தி} உன்னை அடைந்ததால், இன்று அவள் {குந்தி} உண்மையிலேயே அருளப்பட்ட தாயானாள். ஓ பலம் பொருந்திய கரம் கொண்டவனே {அர்ஜுனா}, நீ இப்போது, உனது பொறுமையாலும், சுயக்கட்டுப்பாட்டாலும் முனிவர்களையும் வீழ்த்திவிட்டாய். ஆனால், ஓ தகுந்த மரியாதை கொடுப்பவனே, ஊர்வசி உனக்கிட்ட சாபம் உனக்கு நன்மையையே பயக்கும். ஓ குழந்தாய், நீ நல்ல இடத்திலேயே நிற்பாய். ஓ பாவங்களற்றவனே {அர்ஜுனனே}, பூமியில் நீ {வனவாசத்தில்} பதிமூன்றாவது {13} வருடத்தை, எவரும் அறியாமல் கழிக்க வேண்டும் அல்லவா? அப்போதுதான் நீ ஊர்வசியின் இந்தச் சாபத்திற்கு ஆளாவாய். ஆண்மையின்றி ஆடற்கலைஞராக ஒரு வருடம் கழித்த பிறகு, நீ உனது சக்தியைத் திரும்ப அடைவாய்” என்றான் {இந்திரன்}.
சக்ரனால் {இந்திரனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்த எதிரி வீரர்களைக் கொல்பவனான பல்குனன் {அர்ஜுனன்}, பெரும் மகிழ்ச்சியை அடைந்து, சாபத்தைக் குறித்து நினைப்பதை நிறுத்தினான். பிறகு, பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, கந்தர்வனான சித்திரசேனனுடன் சொர்க்கத்தின் பல பகுதிகளில் பெரும் கொண்டாட்டத்துடன் விளையாடினான்”
“பாண்டு மகனின் {அர்ஜுனனின்} இந்த வரலாற்றைக் கேட்கும் எந்த மனிதனின் ஆசைகளும் காமவிகார முடிவை நோக்கி ஓட முடியாது {ஆசையால் உண்டாகும் காம விகாரங்கள் முழுவதும் தொடராமல் முடிவடையும்} [The desires of the man that listeneth to this history of the son of Pandu never run after lustful ends]. தேவர்கள் தலைவனின் மகனான பல்குனனின் {அர்ஜுனனின்} இந்த சுத்தமான நடத்தையை பரிதாபத்துடன் கேட்கும் மனிதர்களில் முதன்மையானவர்கள், கர்வம், அகந்தை, கோபம் மற்றும் பிற குறைகளையெல்லாம் களைந்து, சொர்க்கத்தை அடைந்து, பேரின்பத்துடன் அங்கே விளையாடுவார்கள்.”
இந்திரன் யுதிஷ்டிரனுக்கு செய்தி அனுப்புதல் – வனபர்வம் பகுதி 47-இந்திரலோகத்திற்கு லோமசர் வருகை; இந்திரன் லோமசருக்கு அர்ஜுனனைக் குறித்து விளக்குதல்; இந்திரன் யுதிஷ்டிரனிடம் சென்று அவனைப் பாதுகாக்குமாறு லோமசரைப் பணித்தல்; அர்ஜுனனும் யுதிஷ்டிரனைப் பாதுகாக்குமாறு லோமசரிடம் வேண்டுதல்; லோமசர் புறப்பாடு; காம்யக வனத்தில் யுதிஷ்டிரனை லோமசர் காண்பது…
வைசம்பாயனர் சொன்னார் “ஒரு நாள் பெருமுனிவரான லோமசர் {Rishi Lomasa}, தனது பயணங்களின் போது, தேவர்கள் தலைவனைக் {இந்திரனைக்} காணும் விருப்பத்தோடு இந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்றார். அந்தப் பெருமுனிவர் {லோமசர்} தேவர்கள் தலைவனை {இந்திரனை} அணுகி, மரியாதையுடன் அவனை வணங்கினார். அப்போது பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} வாசவனின் {இந்திரனின்} பாதி ஆசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். பல பெருமுனிவர்களால் வணங்கப்பட்ட அந்த அந்தணர்களில் முதன்மையானவர் {லோமசர்} சக்ரனின் {இந்திரனின்} விருப்பப்படி ஒரு அற்புதமான ஆசனத்தில் அமர்ந்தார். இந்திரனின் ஆசனத்தில் அமர்ந்திருந்த அர்ஜுனனைக் கண்ட அந்த முனிவர், க்ஷத்திரியனான அர்ஜுனன் சக்ரனின் {இந்திரனின்} ஆசனத்தை எப்படி அடைந்தான் என்று நினைத்தார். தேவர்களே வழிபடும் அந்த ஆசனத்தை அடைய அவன் {அர்ஜுனன்} தகுதி வாய்ந்த செயலைச் செய்திருக்கக் கூடும் என்றும், அவன் (தனது தவத்தகுதியால்) என்னென்ன உலகங்களை வென்றிருக்கக் கூடும் என்று தனது மனதில் நினைத்துக் கொண்டார்.
அந்த முனிவர் {லோமசர்} அப்படி தனது நினைவுகளில் மூழ்கியிருந்தபோது, விரித்திரனைக் கொன்றவனான சக்ரன் {இந்திரன்} இது குறித்து அறிந்தான். இவற்றை அறிந்த சச்சியின் தலைவன் {இந்திரன்}, லோமசரிடம் புன்னகையுடன், “ஓ பிரம்ம முனிவரே {பிரம்மரிஷியே}, உமது மனதில் ஓடிக் கொண்டிருப்பதைக் குறித்து கேளும். மனிதர்களின் உலகில் பிறப்பெடுத்திருக்கும் இவர் மரணத்திற்குரிய {நர மனிதன்} அல்ல. ஓ பெரும் முனிவரே, இந்த பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட வீரன் {அர்ஜுனன்} குந்தியிடம் பிறந்த எனது மகனாவான். சில காரியங்களுக்காக ஆயுதங்களை அடையவே இவன் {அர்ஜுனன்} இங்கு வந்திருக்கிறான். ஐயோ! உயர்ந்த தகுதிகள் கொண்ட பழங்காலத்து முனிவனான இவனை உம்மால் உணர முடியவில்லையா? ஓ அந்தணரே {லோமசரே}, இவன் யார் என்றும், எதற்காக என்னிடம் வந்திருக்கிறான் என்றும் சொல்கிறேன் கேளும். பழங்காலத்து அற்புதமான முனிவர்களான இருவர் உலகத்தில் நரன் என்றும் நாராயணன் என்றும் அழைக்கப்பட்டனர். ஓ அந்தணரே {லோமசரே}, அவர்கள் தான் ரிஷிகேசனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} என்பதை அறிவீராக. நரன் என்றும் நாராயணன் என்றும் உலகத்தால் அறியப்பட்டு, மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் அந்த முனிவர்கள், குறிப்பிட்ட காரியத்தை சாதிப்பதற்காகவும், அறம்பெறவும் உலகத்தில் பிறந்திருக்கிறார்கள்.
சித்தர்களாலும், சாரணர்களாலும் வழிபடப்படும், பதரி {Vadari} என்ற பெயரால் உலகத்தால் அறியப்படும் அவர்களது புனிதமான ஆசிரமம், கங்கையின் மூலம் ஆரம்பிக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது. ஓ அந்தணரே {லோமசரே}, விஷ்ணு மற்றும் ஜிஷ்ணு ஆகியோரின் அந்த ஆசிரமத்தை சிறப்பு மிகுந்த முனிவர்களாலும், ஏன் தேவர்களாலும் கூட காண முடியாது. ஓ பிரம்ம முனிவரே, பிரகாசமிக்க அந்த முனிவர்கள் எனது விருப்பத்தின் பேரில், பூமி பாரத்தைக் குறைக்க வேண்டி, பெரும்பலத்துடன் பூமியில் பிறந்திருக்கிறார்கள். இதையும் தவிர்த்து, தாங்கள் பெற்ற வரத்தின் காரணமாக கர்வம் கொண்ட நிவாதகவசர்கள் என்ற ஒரு குறிப்பிட்ட அசுர வகையினர், எங்களுக்குக் காயம் ஏற்படுத்துவதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தங்களது பலத்தால் தற்பெருமை பேசிக்கொண்டு, தேவர்களை அழிக்க அவர்கள் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். வரத்தைப் பெற்ற பிறகு அவர்கள் தேவர்களை மதிப்பதில்லை. கடுமையும் பலமும் கொண்ட அந்த தானவர்கள் பாதாளப்பகுதியில் வசிக்கிறார்கள். அனைத்து தேவர்களும் ஒருங்கிணைந்தும் அவர்களுடன் போரிட இயலாத நிலையுள்ளது.
ஓ மேன்மையானவரே {லோமசரே}, மதுவைக் கொன்றவரும், உலகத்தில் கபிலர் என்று அறியப்பட்டவரும், சிறப்புமிக்க சகரனின் மகன்களைத் தனது பார்வையாலேயே எரித்தவருமான அந்த அருளப்பட்ட விஷ்ணுவை {கிருஷ்ணனை} அவர்கள் பலத்த சத்தங்களுடன் பூமியின் குடல் பகுதியில் சந்திக்கும்போது, ஓ அந்தணரே, அந்த வெல்லப்படமுடியாத ஹரி {கிருஷ்ணன்} எங்களுக்கு பெரும் சேவையைச் செய்யக் கூடும். அவரோ {கிருஷ்ணனோ} அல்லது பார்த்தனோ {அர்ஜுனனோ} அல்லது இருவரும் சேர்ந்தோ எங்களுக்கு சந்தேகமற பெரும் சேவையைச் செய்யக்கூடும். பெரும் ஏரியில் தனது பார்வையாலேயே நாகர்களைக் கொன்ற ஹரி {கிருஷ்ணன்}, நிச்சயம் நிவாதகவசர்கள் என்று அழைக்கப்படும் அசுரர்களையும் அவர்களைத் தொடர்பவர்களையும் கொல்லும் தகுதி படைத்தவரே. ஆனால், முக்கியமற்ற இந்தப் பணியில் மதுவைக் கொன்றவனை {மதுசூதனனான கிருஷ்ணனை} ஈடுபட வலியுறுத்த வேண்டியதில்லை. ஆற்றல்களின் குவியலாக பலம் பொருந்தியிருக்கும் அவர் {கிருஷ்ணன்}, தனது ஆற்றல்களைப் பெருக்கினால், இந்த முழு அண்டமும் எரிந்துவிடும்.
இந்த அர்ஜுனனும் அவர்களைக் கொல்லத் தகுதிவாய்ந்தவனே. இந்த வீரன் அவர்களைப் {நிவாதகவசர்களைப்} போர்க்களத்தில் கொன்ற பிறகு, மனிதர்களின் உலகத்திற்குத் திரும்பிச் செல்வான். நீர் எனது பரிந்துரையின் பேரில் பூமிக்கு செல்லும். காம்யக வனத்தில் வாழும் வீரம்மிகுந்த யுதிஷ்டிரனைக் காண்பீர். பல்குனனை {அர்ஜுனனைக்} குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும், ஆயுதக்கலையில் பரிசுத்தமான வலிமை கொள்ளாமல், ஆயுதங்களில் நிபுணத்துவம் அடையாமல், அவனால் {அர்ஜுனனால்} பீஷ்மரிடமோ, துரோணரிடமோ மற்றவர்களிடமோ போர்க்களத்தில் போராட முடியாது என்பதால், ஆயுதங்கள் அனைத்திலும் நிபுணத்துவம் அடைந்த பிறகு, அந்த வீரன் பூமி திரும்புவான் என்றும் போர்க்களத்தில் கலங்காத வீரம் கொண்ட அந்த அறம் சார்ந்த யுதிஷ்டிரனிடம், என் சார்பாகச் சொல்லும். மேலும் அந்தச் சிறப்புமிக்க யுதிஷ்டிரனிடம், பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட குடகேசன் {சுருள் முடி கொண்ட அர்ஜுனன்}, ஆயுதங்களை அடைந்த பிறகு, தெய்வீக நடனம், குரலிசை, கருவியிசை ஆகிய அறிவியல்களிலும் நிபுணத்துவம் அடைந்திருக்கிறான் என்பதையும் சொல்லும். மேலும் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} “ஓ மனிதர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, நீ உனது தம்பிகளை அழைத்துக் கொண்டு பல்வேறு புண்ணியத்தலங்களைக் காண வேண்டும். பல்வேறு புனித நீர்நிலைகளில் நீராடி உங்கள் பாவங்களைத் தொலைத்தால், உங்கள் இதய நோய் கொஞ்சம் குறையும். பிறகு உங்கள் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்ட பிறகு, உங்கள் நாட்டை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்” என்றும் சொல்லும். ஓ அந்தணர்களில் முதன்மையானவரே {லோமசரே}, பூமியில் உலவிக் கொண்டிருக்கும் யுதிஷ்டிரனை உமது தவச்சக்தியால் பாதுகாப்பதே உமக்குத் தகும். மலைகளில் கடினமான பகுதிகளிலும், முரட்டுத்தனமான புல்வெளிகளிலுமே கடும் ராட்சசர்கள் எப்போதும் வாழ்கிறார்கள். அந்த நரமாமிச உண்ணிகளிடம் இருந்து மன்னனைக் காப்பாற்றும்” என்று சொன்னான் {இந்திரன்}.
லோமசரிடம் மகேந்திரன் இப்படிப் பேசிய பிறகு, பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} அந்த முனிவரிடம் மரியாதையுடன், “எப்போதும் பாண்டுவின் மகனைக் {யுதிஷ்டிரனைக்} காப்பாற்றும். ஓ மனிதர்களில் சிறந்தவரே, உம்மால் காக்கப்படும் மன்னன் {யுதிஷ்டிரன்}, பல்வேறு புண்ணியத்தலங்களுக்குச் சென்று அந்தணர்களுக்குத் தானங்கள் செய்யட்டும்” என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்தப் பெரும் பலம்வாய்ந்த தவசியான லோமசர் அவர்கள் இருவருக்கும் “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, காம்யக வனத்தை அடைய விரும்பி பூமிக்குக் கிளம்பினார். அந்த வனத்தை அடைந்து, அந்த எதிரிகளைக் கொல்பவனும் குந்தியின் மகனுமான நீதிமானான யுதிஷ்டிரனைத் தவசிகளும், அவனது தம்பிகளும் சூழக் கண்டார்.
திருதராஷ்டிரனின் அச்சம் – வனபர்வம் பகுதி 48-அர்ஜுனன் குறித்த அச்சங்களை திருதராஷ்டிரன் சஞ்சனிடம் சொல்வது…
ஜனமேஜயன் சொன்னான், “அளவிடமுடியாத சக்தி படைத்த பிருதை மகனின் {குந்தி மகன் அர்ஜுனனின்} இந்த சாதனைகள் நிச்சயம் அற்புதமானவையே. ஓ அந்தணரே {வைசம்பாயணரே}, பெரும் விவேகம் கொண்ட திருதராஷ்டிரன இவற்றைக் கேள்விப்பட்ட போது என்ன சொன்னான்?”
வைசம்பாயனர் சொன்னார், “அம்பிகையின் மகனான மன்னன் திருதராஷ்டிரன், இந்திரலோகத்திற்கு அர்ஜுனனின் வருகையையும், இந்திரனின் வசிப்பிடத்தில் அவன் வசித்ததையும் முனிவர்களில் முதன்மையான துவைபாயனர்{வியாசர்} மூலம் அறிந்து சஞ்சயனிடம், “ஓ தேரோட்டியே, புத்திகூர்மையுள்ள அர்ஜுனனின் செயல்களை ஆதி முதல் அந்தம் வரை நான் கேட்டதுபடி நீ அறிவாயா? ஓ தேரோட்டியே {சஞ்சயா}, இழிந்த பாவியான எனது மகன் {துரியோதனன்} இப்போதும், மிக மோசமான கொள்கைகளிலேயே ஈடுபட்டுள்ளான். தீய ஆன்மா படைத்த அவன், நிச்சயம் பூமியின் மக்கள்தொகையைக் குறைத்துவிடுவான். எந்தச் சிறப்பு வாய்ந்த மனிதனின் கேலிப்பேச்சு கூட உண்மையாக இருக்கிறதோ, யாருக்காக தனஞ்சயன் {அர்ஜுனன்} போரிடுவானோ, அவன் {யுதிஷ்டிரன்} நிச்சயம் மூவுலகையும் வெல்வான். கல்லில் கூராக்கப்பட்ட கூர்முனைக் கணைகளை அர்ஜுனன் சிதறடிக்கும்போது, மரணத்திற்கும் சிதைவுக்கும் அஞ்சாத யார் தான் அவன் முன்னிலையில் நிற்க முடியும்?
வெல்லப்பட முடியாத பாண்டவர்களுடன் போரிட வேண்டிய எனது இழிந்த மகன்கள், நிச்சயமாக அழிந்து போவார்கள். இரவும் பகலும் இதுகுறித்தே சிந்தித்தும், காண்டீவத்தைத் தாங்குபவன் {அர்ஜுனன்} முன்னால் நிற்கப் போகும் வீரனை நம்மில் ஒருவரிலும் நான் காணவில்லை. துரோணரும், கர்ணனும், பீஷ்மரும் அவனுக்கு எதிராகப் போர்க்களம் புகுந்தால், இந்தப் பூமியைப் பேரிடர் தாக்கும். கர்ணன் மறதியும் அன்பும் கொண்டிருப்பவனாதலால் அவன் {கர்ணன்} வழி வெற்றியை நான் காணவில்லை. குருவான துரோணர் முதிர்ந்தவராக இருக்கிறார். ஆனால் அந்த அர்ஜுனனின் ஆசான் {துரோணர்}, கோபம் கொண்டவராகவும், பலம் வாய்ந்தவராகவும், பெருமை கொண்டவராகவும், உறுதியான வீரம் கொண்டவராகவுமே இருக்கிறார். இந்த வீரர்கள் அனைவரும் ஒப்பற்றவர்களாக இருப்பதால், நடக்கப் போகும் சண்டை மிகப் பயங்கரமானதாக இருக்கும். அவர்கள் அனைவருமே ஆயுதங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாகவும், பெரும் புகழ்வாய்ந்தவர்களாகவுமே இருக்கிறார்கள். உலகத்தின் ஆட்சியுரிமை தோல்வியால் பெறுவதாக இருந்தால் அவர்கள் அதை விரும்ப மாட்டார்கள்.
இவர்களின் மரணத்தாலோ அல்லது பல்குனனின் {அர்ஜுனனின்} மரணத்தாலோ மட்டுமே அமைதியை மீட்டெடுக்க முடியும். இருப்பினும், அர்ஜுனனை வெல்லக்கூடிய ஒரு மனிதன் இருக்கிறனோ இல்லையோ தெரியவில்லை. என்னைக் காரணமாகக் கொண்டு அவன் கொண்டிருக்கும் கோபத்தை எப்படித் தணிக்க முடியும்? தேவர்கள் தலைவனுக்குச் சமமான அந்த வீரன் {அர்ஜுனன்}, காண்டவத்தில் அக்னியைத் திருப்திப்படுத்தியதாலேயே, அந்தப் பெரும் ராஜசூய வேள்வியின் போது பூமியின் அனைத்து ஏகாதிபதிகைளயும் அவனால் வீழ்த்த முடிந்தது. ஓ சஞ்சயா, மலைமேல் விழும் வஜ்ராயுதம் {இடி} கூட அந்த மலையின் எந்தப் பகுதியையாவது உட்கொள்ளமால் மீதம் வைக்கும், ஆனால், ஓ குழந்தாய் {சஞ்சயா}, கீர்த்தியினால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட கணைகள் எதையும் மீதம் வைக்காது. சூரியனின் கதிர்கள் இந்த அண்டத்தின் அசைவன மற்றும் அசையாதவற்றை வெப்பமூட்டுவது போல, அர்ஜுனனின் கைகளால் அடிக்கப்பட்ட கணைகள் எனது மகன்களை எரித்துவிடும். சவ்யஸாசியான அர்ஜுனனுடைய அந்தத் தேரின் ஒலியால் உண்டான பயத்தால் பீடிக்கப்பட்ட பாரதர்களின் சாமூஸ் {சைனியம்} நான்கு பக்கங்களிலும் பிளக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. விதத்திரி {துர்கை}, எல்லாவற்றையும் அழிப்பவனாக அர்ஜுனனைப் படைத்திருக்கிறாள். எதிரியாகக் களத்தில் நிற்கும் அவன் {அர்ஜுனன்}, பெரும் எண்ணிக்கையிலான கணைகளை இறைப்பவனாக இருக்கிறான். அவனை {அர்ஜுனனை} வெல்லக்கூடிய யார் இருக்கிறார்?” என்று சொன்னான் {திருதராஷ்டிரன்}.
அர்ஜுனனின் சாதனைகள் அற்புதமானவை! – வனபர்வம் பகுதி 49-திருதராஷ்டிரன் சொன்ன துரியோதனின் தீய நடத்தைகளை சஞ்சயன் ஆமோதிப்பது; சிவன் அர்ஜுனன் சந்திப்பு பற்றி சஞ்சயன் கூறுவது; அர்ஜுனனின் சாதனைகளையும், துரியோதனின் தீமைகளையும் திருதராஷ்டிரன் சஞ்சனிடம் சொல்வது
சஞ்ஜயன் சொன்னான், “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனைக் குறித்து நீர் சொன்னது அனைத்தும் உண்மையே. ஓ பூமியின் அதிபதியே {திருதராஷ்டிரரே}, நீர் சொன்னதில் எதுவும் பொய் இல்லை. அளவிடமுடியா சக்தி கொண்ட பாண்டவர்கள், தாங்கள் மணந்த புனிதமான புகழ் கொண்ட மனைவியான கிருஷ்ணை {திரௌபதி}, சபை நடுவே இழுத்து வரப்பட்டதைக் கண்டதால் மிகுந்த கோபத்தில் உள்ளனர். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, துச்சாசனன் மற்றும் கர்ணனின் கொடும் வார்த்தைகளையும் கேட்டு அவர்கள் {பாண்டவர்கள்} ஆத்திரமடைந்திருக்கின்றனர்.
அதனால் அவர்கள் {பாண்டவர்கள்} என் கணக்குப்படி {குருக்களை} மன்னிக்கமாட்டார்கள் என்றே கருதுகிறேன். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பதினோரு {11} உருவங்களில் இருக்கும் தேவர்களுக்குத் தேவனான ஸ்தானுவை {சிவனை} அர்ஜுனன் எப்படிப் போர்க்களத்தில் திருப்திப்படுத்தினான் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தேவர்களின் சிறப்புமிக்க தலைவனான கபதர்தின் {சிவன்}, பல்குனனைச் {அர்ஜுனனைச்} சோதிக்க எண்ணி, வேடன் {கிராதன்} உரு கொண்டு அவனுடன் போரிட்டான். லோகபாலர்களும், தங்கள் ஆயுதங்களை அந்த குரு குல காளைக்கு {அர்ஜுனனுக்கு} கொடுக்க வேண்டி, அந்த அழிவில்லா சக்தி கொண்டவனுக்கு {அர்ஜுனனுக்கு} காட்சியளித்தனர்.
பல்குனனைத் {அர்ஜுனனைத்} தவிர உலகத்தில் வேறு எந்த மனிதன், சொந்த உருவங்களில் இருக்கும் அந்தத் தேவர்களைக் காண முயற்சி செய்வான்? எட்டு {8} உருவங்கள் கொண்ட மகேஸ்வரனாலேயே போர்க்களத்தில் அர்ஜுனனை பலவீனப்படுத்த முடியாதபோது, வேறு எவரால்தான் அவனைப் பலவீனப்படுத்த முடியும்? திரௌபதியை இழுத்து வந்ததால் கோபமூட்டப்பட்ட பாண்டுவின் மகன்களால் உமது மகன்கள் பயங்கரமான அச்சமூட்டும் பேரிடரை தாங்களாகவே வரவழைத்துக் கொண்டனர். திரௌபதிக்குத் தனது தொடைகள் இரண்டையும் காட்டிய துரியோதனனைக் கண்ட பீமன் நடுங்கும் உதடுகளுடன், “இழிந்தவனே, பதிமூன்று {13} வருடங்கள் கழிந்து, உனது அந்தத் தொடைகளை, கடுமையாக இறங்கும் எனது கதைகளைக் கொண்டு சிதைப்பேன்” என்று சொன்னான்.
பாண்டுவின் மகன்கள் அனைவரும் அடிப்பதில் முதன்மையானவர்கள்; அவர்கள் அனைவரும் அளவற்ற ஆற்றல்படைத்தவர்கள்; அவர்கள் அனைவரும் அனைத்து விதமான ஆயுதங்களையும் அறிந்திருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் தேவர்களாலும் வீழ்த்த முடியாதவர்களாக இருக்கிறார்கள். தாங்கள் மணந்த மனைவியின் {திரௌபதியின்} அவமானத்தைக் கண்டு ஆத்திரமுற்ற பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்களான பாண்டவர்கள்}, கோபத்தால் உந்தப்பட்டு, போர்களத்தில் உமது மகன்களைக் கொல்வார்கள் என்று நான் கருதுகிறேன்” என்றான் {சஞ்சயன்}.
திருதராஷ்டிரன் சொன்னான், “ஓ தேரோட்டியே {சஞ்ஜயனே}, பாண்டுவின் மகன்களிடம் அத்தகு கொடும் வார்த்தைகளைப் பயன்படுத்திய கர்ணன் எப்படிப்பட்ட கலக்கத்தை ஏற்படுத்துவிட்டான். கிருஷ்ணையைச் சபைக்கு இழுத்து வந்ததே பகைக்குப் போதுமான காரணியாக இல்லையா? அண்ணனும் குருவுமானவன் நேர்மையான பாதையில் நடக்காத போது எனது தீய மகன்கள் எப்படி உயிருடன் இருக்க முடியும்? பார்வையற்றவனாகவும், சுறுசுறுப்பாக இயங்கமுடியாதவனாகவும் என்னைக் கண்ட எனது இழிந்த மகன் {துரியோதனன்}, ஓ தேரோட்டியே {சஞ்சயா}, என்னை முட்டாள் என்று நம்பி எனது வார்த்தைகளைக் கேளாதிருக்கிறான். இழிந்தவர்களான கர்ணன், சுபலன் {சகுனி} மற்றும் அவனது {துரியோதனனின்} பிற ஆலோசகர்கள், எதையும் சரியாகப் புரிந்து கொள்ளத் திறனற்ற எனது மகனின் தீமைகளுக்கும் கீழ்த்தரமான இச்சைகளுக்கும் இடம் கொடுக்கிறார்கள் {அவனை ஊக்கப்படுத்துகிறார்கள்}.
அளவற்ற ஆற்றல் கொண்ட அர்ஜுனன் கோபத்துடன் அடிக்கும் கணைகளை விட்டு விட்டால் கூட, அவன் மெதுவாக அடிக்கும் கணைகளே எனது மகன்களை உட்கொண்டு விடும். மந்திரங்களால் தெய்வீகக் கணையாக மாற்றப்படும் பலம்வாய்ந்த அர்ஜுனனின் கணைகள் அவனது பெரிய வில்லில் இருந்து கிளம்பும் போது, தேவர்களைக் கூட அது தண்டித்துவிடுமே. மூவுலகங்களுக்குத் தலைவனும் ஹரியும் ஆனவனை {கிருஷ்ணனை} தனது ஆலோசகனாகவும், பாதுகாப்பாளனாகவும், நண்பனாகவும் கொண்டிருப்பவனான, பாவிகளை அடிப்பவன் {அர்ஜுனன்}, தன்னால் வெற்றிகொள்ள முடியாத எதையும் சந்திக்க மாட்டான். ஓ சஞ்சயா, மகாதேவனின் கரங்களால் அவன் அணைத்துக் கொள்ளப்பட்டான் என்று அர்ஜுனன் குறித்து நாம் கேள்விப்படுவது மிகவும் அற்புதமானதாகும்.
தாமோதரனால் உதவி செய்யப்பட்ட அர்ஜுனன், காண்டவ வனத்தை எரிப்பதில் அக்னிக்கு துணை செய்தது இந்த உலகத்தால் சாட்சியாகக் காணப்பட்டது. ஆகையால், பீமன், பார்த்தன் {அர்ஜுனன்}, சத்துவத குலத்தைச் சார்ந்த வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகியோர் கோபம் கொண்டால், நிச்சயம் எனது மகன்களும், அவர்களது {எனது மகன்களின்} நண்பர்களும், சுபலர்களும் போரில் அவர்களுக்கு {பீமன், அர்ஜுனன், கிருஷ்ணனுக்கு} இணையாக மாட்டார்கள்” என்றான் {திருதராஷ்டிரன்}.
மான் கறியுண்ட அந்தணர்கள் – வனபர்வம் பகுதி 50-அர்ஜுனன் இல்லாத ஐந்து வருடங்களுக்கு அந்தணர்களுக்குப் பாண்டவர்கள் எப்படி உணவு கொடுத்தார்கள் என்பது பற்றி விவரிப்பு..
ஜனமேஜயன் சொன்னான், “ஓ முனிவரே {வைசம்பாயணரே}, பாண்டுவின் வீர மைந்தர்களைக் {பாண்டவர்களைக்} காட்டுக்கு அனுப்பி வைத்த பிறகு, திருதராஷ்டிரனின் இந்தப் புலம்பல்கள் வீண்தானே. தனது முட்டாள் மகனான துரியோதனன், அந்த பலம் வாய்ந்த வீரர்களை கோபமூட்டும்படி அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} ஏன் அனுமதித்தான்? ஓ அந்தணரே, பாண்டுவின் மகன்கள் கானகங்களில் வாழ்ந்த போது, அவர்களது உணவு என்ன என்பதை எங்களுக்குச் சொல்லும். அவை வனப்பகுதிகளில் இருந்து கிடைத்தனவா? அல்லது சாகுபடியில் இருந்து உற்பத்தியாகினவா?” என்று கேட்டான்.
வைசம்பாயனர் சொன்னார், “மனிதர்களில் காளையான அவர்கள், தங்கள் சுத்தமான கணைகளால் மான்களைக் கொன்று, தங்கள் உணவை கானகத்தின் உற்பத்தியில் பெற்று, அதில் ஒரு பகுதியை முதலில் அந்தணர்களுக்குப் படைத்து, அதனினும் மீந்ததையே அவர்கள் உண்டார்கள். ஓ மன்னா {ஜனமேஜயா}, பெரும் விற்களைத் தாங்கும் அந்த வீரர்கள் வனத்தில் வசித்த போது, நெருப்புடன் வழிபடுபவர்களும், நெருப்பில்லாமல் வழிபடுபவர்களுமான இரு வகை அந்தணர்களாலும் தொடரப்பட்டார்கள். அந்தக் கானகத்தில், யுதிஷ்டிரனால் தாங்கப்பட்டவர்களாக, முக்தி வழிகளில் ஈடுபடும் ஸ்நாதக அந்தணர்களே பத்தாயிரம் {10000} பேர் இருந்தார்கள். ருருக்களையும், கருப்பு மான்களையும், மற்ற விலங்குவகையில் உள்ள சுத்தமான காட்டு விலங்குகளையும், அவர்கள் அந்த அந்தணர்களுக்குக் கொடுத்தார்கள். யுதிஷ்டிரனுடன் தங்கிய யாரும் வெளிறிப் போயோ, நோய்வாய்ப்பட்டோ, மெலிதாகவோ, பலவீனமாகவோ, துக்கத்துடனோ, அச்சமுற்றோ இருக்க வில்லை
குருக்களின் தலைவனும் அறம் சார்ந்த மன்னனுமான யுதிஷ்டிரன், தனது தம்பிகளைத் தனது பிள்ளைகளைப் போல பராமரித்தான். தனது உறவினர்களைத் தனது உடன் பிறந்த சகோதரர்களைப் போல பராமரித்தான். சுத்தமான புகழ் கொண்ட திரௌபதி, தனது கணவர்களுக்கும், அந்தணர்களுக்கும், ஏதோ அவள்தான் அவர்களது தாய்என்பது போல, உணவு கொடுத்து, அனைவரிலும் கடைசியாகவே தனது உணவை எடுத்துக் கொண்டாள். தங்கள் விற்களைக் கையில் கொண்டு, மன்னன் {யுதிஷ்டிரன்} கிழக்கிலும், பீமன் தெற்கிலும், இரட்டையர்கள் மேற்கிலும், வடக்கிலும் என தினந்தோறும் அந்தக் கானகத்தின் மான்களை இறைச்சிக்காக கொன்றனர். அர்ஜுனன் இல்லாத போது, தொடர்ந்து ஐந்து வருடங்களாக அந்தக் காம்யக வனத்தில் இருந்த பாண்டவர்கள், கல்வியையும், வழிபாடுகளையும், வேள்விகளையும் செய்து வந்தனர்” என்றார் {வைசம்பாயனர்}
பயங்கரமான போர் நடக்கும்! – வனபர்வம் பகுதி 51-அர்ஜுனன் இல்லாத ஐந்து வருடங்களுக்கு அந்தணர்களுக்குப் பாண்டவர்கள் எப்படி உணவு கொடுத்தார்கள் என்பது பற்றி விவரிப்பு
வைசம்பாயனர் சொன்னார், “மனிதர்களில் காளையான அம்பிகையின் மகன் திருதராஷ்டிரன், பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} அற்புதமான வாழ்க்கைமுறையைக் கேள்விப்பட்டு துன்பத்தில் ஆழ்ந்தான். துயரத்தில் மூழ்கிய அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, சூடாக பெருமூச்சுவிட்டபடி, தனது தேரோட்டியான சஞ்சயனிடம், “ஓ தேரோட்டியே {சஞ்சயா}, பழைய சூதாட்டத்தின் தொடர்ச்சியாக எனது மகன்களின் தீய நடத்தைகளையும், பாண்டு மகன்களின் பொறுமை, பெரும் புத்திகூர்மை, தாங்கிக்கொள்ளமுடியாத பராக்கிரமம், ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் இயல்புக்கு மிக்க அன்பு, வீரம் ஆகியவற்றையும் இரவும் பகலும் நினைத்து ஒருக் கணமும் நிம்மதியில்லாமலே இருக்கிறேன்.
பாண்டவர்களில், தெய்வீகப் பிறவிகளான சிறப்புமிக்க நகுலனும் சகாதேவனும் பிரகாசத்தில் தேவர்கள் தலைவனுக்கு நிகராகவும், போர்க்களத்தில் ஒப்பற்றவர்களாகவும் இருக்கிறார்கள். ஆயுதங்களைக் கையாள்வதில் உறுதியாகவும், நீண்ட தூரத்திற்கும் கணையடிக்கும் திறனுடனும், போர்க்களத்தில் திடமாகவும், குறிப்பிடத்தக்க வகையில் கை லாவகமும், எளிதாக அடக்க முடியா கோபம் கொண்டவர்களாகவும், பெரும் உறுதியுடனும், சுறுசுறுப்புடனும் அவர்கள் இருக்கிறார்கள். சிங்கத்தின் வீரம் கொண்ட யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத அந்த அசுவினிகள் {நகுல சகாதேவ இரட்டையர்கள்}, போர்க்களத்தில் பீமனையும் அர்ஜுனனையும் முன்னே விட்டு வரும்போது, ஓ சஞ்சயா, எனது வீரர்கள் யாரும் மீதம் இல்லாமல் கொல்லப்படுவார்கள். போர்க்களத்தில் யாருக்கும் நிகரற்றவர்களும் தெய்வீகப் பிறவிகளுமான அந்த வீர்கள், திரௌபதிக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி கோபத்துடன் வரும்போது யாருக்கும் மன்னிப்பைக் காட்ட மாட்டார்கள்.
பெரும் பலம் வாய்ந்த விருஷ்ணி குல வீரர்களும், பெரும் சக்தி வாய்ந்த பாஞ்சாலர்களும், பிருதையின் மகன்களும் {பாண்டவர்களும்}. குழப்ப முடியா வீரம் கொண்ட வாசுதேவனின் தலைமையில் வரும்போது, எனது படையணியினரை வெடித்துச் சிதறடிப்பர். ஓ தேரோட்டியே {சஞ்சயா}, ராமனாலும் {பலராமனாலும்}, கிருஷ்ணனாலும் வழிநடத்தப்பட்ட மூர்க்கமான விருஷ்ணிகளை மட்டுமே கூட எனது பக்கம் கூடியிருக்கும் அனைத்து வீரர்களாலும் தாங்கிக் கொள்ள முடியாது. அவர்களில் பெரும் வீரனான பயங்கரமான சக்தி கொண்ட பீமன், அனைத்து வீரர்களையும் கொல்லும் தகுதி படைத்த தனது இரும்பு கதாயுதத்தை உயர்த்திப் பிடித்தபடி வருவான். கடும் இரைச்சலுக்கு மேலே வானத்தில் உள்ள இடியைப் போன்ற சத்தத்துடன் காண்டீவத்தின் நாணொலி கேட்கும். மூர்க்கமான பீமனின் கதாயுதத்தையும், காண்டீவத்தின் சத்தமான நாணொலியையும் எனது பக்கத்தில் இருக்கும் மன்னர்களால் எதிர்த்து நிற்க முடியாது. இதன்காரணமாகவே, ஓ சஞ்சயா, இதுவரை துரியோதனின் குரலுக்குக் கீழ்ப்படிந்த நான், இதற்கு முன் நான் மறுத்த, ஆனால் அந்த நேரத்தில் கடைப்பிடித்திருக்க வேண்டிய எனது நண்பர்களின் ஆலோசனைகளைத் திரும்ப நினைவுகூர்கிறேன்” என்றான்.
சஞ்சயன், “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உம்மால் செய்ய முடிந்தும், உமது பிள்ளையின் மேல் கொண்டிருந்த பாசத்தினால் அதைச் செய்யாமல் விட்டது உமது பெருந்தவறு. மங்கா புகழ் கொண்ட வீரனான மதுவைக் கொன்றவன் {மதுசூதனன் = கிருஷ்ணன்}, பாண்டவர்கள் பகடையில் தோற்கடிக்கப்பட்டனர் என்பதைக் கேள்விப்பட்டு, விரைவாக காம்யக வனத்திற்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினான். திருஷ்டத்யும்னன் தலைமையில் வந்த திரௌபதியின் மகன்களும், விராடனும், திருஷ்டகேதுவும், பெரும் வீரர்களான கேகயர்களும் அங்கே சென்றனர். பாண்டு மகன்களின் பார்வையில் அந்த வீரர்கள் சொன்னதையெல்லாம் நமது ஒற்றர்கள் மூலமாக நான் அறிந்தேன். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவற்றை முழுமையாக உம்மிடம் சொல்லியிருக்கிறேன். மதுசூதனன் பாண்டவர்களைச் சந்தித்தபோது, அவர்கள் அவனை {கிருஷ்ணனை} போர்க்களத்தில் பல்குனனுக்கு {அர்ஜுனனுக்குத்} தேரோட்டியாக இருக்கும்படி கேட்டனர். ஹரியும் {கிருஷ்ணனும்}, “அப்படியே ஆகட்டும்” என்றான்.
பிருதையின் மகன்கள் மான் தோலை உடுத்தியிருப்பதைக் கண்ட கிருஷ்ணன் மிகவும் கோபம் கொண்டு யுதிஷ்டிரனிடம், “பிருதையின் மகன்கள் இந்திரப்பிரஸ்தத்தில் கொண்டிருந்த யாராலும் பெற முடியாத செல்வங்களை ராஜசுயத்தின் போது நான் கண்டிருக்கிறேன். அங்கே வங்கர்களையும், அங்கர்களையும், பௌந்தரர்களையும், ஓத்ரர்களையும், சோழர்களையும், திராவிடர்களையும், அந்தகர்களையும், பல தீவுகளின் தலைவர்களையும், சிங்கள ஆட்சியாளர்களையும் சேர்த்து கடலில் உள்ள பல நாடுகள் மற்றும் அதன் எல்லை மாநிலங்களின் தலைவர்கள், காட்டுமிராண்டி மிலேச்சர்கள், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், மேற்கில் உள்ள நூற்றுக்கணக்கான மன்னர்கள், கடற்கரைத் தலைவர்கள் அனைவரும், பாஹ்ல்வ மன்னன், தரதர்கள், பல்வேறு இனங்களான கிராதர்கள் {வேடர்கள்}, யவனர்கள், சக்ரர்கள், ஹரஹுனர்கள், சீனர்கள், துகாரர்கள், சிந்தவர்கள், ஜாகுடர்கள், ராமடர்கள், முண்டர்கள், பெண்ணரசு நடைபெறும் நாட்டில் வசிப்பவர்கள், தங்கணர்கள், கேகயர்கள், மாளவர்கள், காஷ்மீரத்துவாசிகள் ஆகியோர் உமது ஆயுதங்களின் பராக்கிரமத்திற்கு அஞ்சி, உமது அழைப்புக்குக் கீழ்ப்படிந்து, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உமது அலுவல்களை ஏற்றுச் செய்தனர். உறுதியற்ற அந்தச் செல்வங்கள் இப்போது எதிரியிடம் காத்திருக்கின்றன. எதிரியின் உயிரை மாய்த்து நான் உமக்கு அதை மீட்டுக் கொடுப்பேன்.
ஓ குருக்களின் தலைவரே {யுதிஷ்டிரரே}, ராமன் {பலராமன்}, பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள், அக்ரூரர், கதன், சாம்பன், பிரதியும்னன், அஹூகர், வீரனான திருஷ்டத்யும்னன், சிசுபாலனின் மகன் ஆகியோரது உதவியைக் கொண்டு, துரியோதனன், கர்ணன், துச்சாசனன், சுபலனின் மகன் {சகுனி} ஆகியோரையும், நம்மை எதிர்த்துப் போரிடும் அனைவரையும் ஒரே நாளில் நான் கொல்வேன். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, நீர் உமது தம்பிகளுடன் ஹஸ்தினாபுரத்தில் வாழ்ந்து, திருதராஷ்டிரன் கட்சியில் இருந்த பறித்த செல்வங்களை அனுபவித்து, இந்தப் பூமியை ஆள்வீர்” என்றான் {கிருஷ்ணன்}. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இவையே யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணன் பேசிய வார்த்தைகள். கிருஷ்ணனின் பேச்சின் இறுதியில் பேசிய யுதிஷ்டிரன், “ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நீ சொன்ன வார்த்தைகளை உண்மையாக ஏற்கிறேன். ஓ பலம்பொருந்திய கரங்கள் கொண்டவனே {கிருஷ்ணா}, பதிமூன்று {13} வருடங்கள் கழித்து நீ எனது எதிரிகளைக் கொன்றால் போதும். ஓ கேசவா {கிருஷ்ணா}, இதை எனக்கு சத்தியமாகச் சொல். நான் இப்போது கானகத்தில் வாழ்வதைப் போல வாழ்வேன் என்று மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} முன்னிலையில் சத்தியம் செய்திருக்கிறேன்” என்றான்.
நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் வார்த்தைகளுக்குச் சம்மதம் தெரிவித்து, திருஷ்டத்யும்னனின் தலைமையில் இருந்த ஆலோசகர்கள் அனைவரும் கோபம் கொண்ட கேசவனை {கிருஷ்ணனை} இனிமையான வார்த்தைகளையும், அந்தச் சூழ்நிலைக்கேற்ற உணர்வுகளையும் கொண்டு சமாதானம் செய்தனர். அவர்கள் அனைவரும் வாசுதேவனின் காதுபட தூய செயல்கள் கொண்ட திரௌபதியிடம், “ஓ மங்கையே, உனது கோபத்தின் தொடர்ச்சியாக துரியோதனன் தனது உயிரை விடுவான். ஓ அழகான நிறம் கொண்டவளே, அதை நாங்கள் உனக்கு சத்தியம் செய்து தருகிறோம். எனவே, மேலும் துயரங்கொள்ளாதே. ஓ கிருஷ்ணா {திரௌபதி}, பகடையில் வெல்லப்பட்ட உன்னைக் கண்டு கேலி பேசியவர்கள் அனைவரும் தங்கள் செயல்களுக்கான கனியை அறுவடை செய்வார்கள். இரை தேடும் விலங்குகளும், பறவைகளும் அவர்களின் சதைகளை உண்டு அவர்களை கேலி செய்யும். ஓநாய்களும் கழுகுகளும் அவர்களின் ரத்தத்தைக் குடிக்கும். ஓ கிருஷ்ணா {திரௌபதி}, உனது கூந்தலைப் பிடித்து இழுத்து வந்த அந்த இழிந்தவர்களின் உடல்களை பிணந்திண்ணி விலங்குகள் இழுத்துச் சென்று உண்ணும். உனக்கு வலியைக் கொடுத்தவர்களும், உன்னை அவமதித்தவர்களும், தலையற்றவர்களாக பூமியில் சாய்வார்கள். பூமியும் அவர்களது ரத்தத்தைக் குடிப்பாள்” என்றனர்.
ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த பாரத குலத்தின் காளைகளால், இவையும், பலதரப்பட்ட பேச்சுகளும் அங்கு பேசப்பட்டன. அவர்கள் அனைவரும் சக்தி வாய்ந்த வீரர்களாகவும், போர்க்காயங்களுடன் கூடியவர்களாகவும் இருந்தார்கள். பதிமூன்று {13} வருடங்கள் சென்றதும், யுதிஷ்டிரனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பலம்பொருந்திய வீரர்கள் அனைவரும் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தலைமையில் (போர்க்களத்திற்கு) வருவார்கள். ராமன் {பலராமன்}, கிருஷ்ணன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, பிரத்யும்னன், சாம்பன், யுயூதனன், பீமன், மாத்ரியின் மகன்கள், கேகய இளவரசர்கள், பாஞ்சால இளவரசர்கள், மத்ஸ்ய மன்னன் ஆகியோருடனும், இன்னும் சிறப்புமிக்க, கொண்டாடப்படும் ஒப்பற்ற வீரர்களுடனும், அவர்களின் வழி நடப்பவர்களுடனும், அவர்களது படையினரோடும் வருவார்கள். பிடரிமயிர் நிமிர்ந்து கோபத்துடன் இருக்கும் சிங்கத்தைப் போன்றவர்களுடன், உயிர் வாழ விரும்பும் யார்தான் போர்க்களத்தில் எதிர்த்து நிற்பார்கள்?” என்று கேட்டான் {சஞ்சயன்}.
திருதராஷ்டிரன், “பகடையாட்டம் நடைபெறும் போது விதுரன் என்னிடம், “ஓ மன்னா, பாண்டவர்களை (பகடையில்) வீழ்த்த நினைத்தீரென்றால், அது நிச்சயம் பெரும் ரத்த சிந்தலுக்கும், குருக்களின் அழிவுக்கும் வழி வகுக்கும்” என்று சொன்னான். நான் அதை உணராதிருந்தது குறித்து சிந்திக்கிறேன். முன்பு விதுரன் என்னிடம் சொன்னது போல, பாண்டவர்களின் சபதம் முடியும் காலத்தில் சந்தேகமற பயங்கமான போர் நடக்கப்போகிறது” என்றான் {திருதராஷ்டிரன்}.
இந்திரலோகாபிகமன பர்வம் முற்றிற்று*
———————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply