அர்ஜுனனின் கடும் தவம் – வனபர்வம் பகுதி 38-அர்ஜுனன் கடுந்தவத்தை மேற்கொள்வது; அந்த தவத்தால் ஏற்படும் அனலைத் தாங்க முடியாமல் முனிவர்கள் அனைவரும் பரமசிவனிடம் சென்று அர்ஜுனன் குறித்து முறையிடுவது; பரமசிவன் தக்கது செய்வதாக வாக்களிப்பது
*ஜனமேஜயன் சொன்னான், “ஓ சிறந்தவரே {வைசம்பாயணரே}, களங்கமற்ற சாதனைகள் கொண்ட அர்ஜுனன் ஆயுதங்கள் அடைந்த வரலாற்றை நான் விவரமாகக் கேட்க விரும்புகிறேன். மனிதர்களில் புலியான பெரும் பலம் வாய்ந்த கரங்களும், பெரும் சக்தியும் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்தக் கானகத்தில் தனிமையாக எப்படி நுழைந்தான். வேதமறிந்தவர்களில் முதன்மையானவரே, அங்கே வசிக்கும்போது அர்ஜுனன் என்ன செய்து கொண்டிருந்தான்? சிறப்பு வாய்ந்த ஸ்தானுவும், தேவர்கள் தலைவனும் அவனால் {அர்ஜுனனால்} எப்படி திருப்திசெய்யப்பட்டார்கள்? ஓ மறுபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} சிறந்தவரே, உமது உதவியால் நான் அவற்றைக் கேட்க விரும்புகிறேன். நீரே அனைத்தையும் அறிந்தவர்; தேவர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரையும் நீர் அறிவீர். ஓ அந்தணரே, பழங்காலத்தில் தோல்வியைக் கண்டிராத தாக்குபவர்களில் முதன்மையான அர்ஜுனனுக்கும், பவாவுக்கும் இடையில் நடைபெற்ற பெருமளவில் இயல்புக்கு மிக்க, இணையற்ற போரைக் குறித்துச் சொல்லும். அதைக் கேட்கும் போது மயிர்க்கூச்சம் ஏற்பட்டு விரைத்துக் கொள்ளும். மனிதர்களில் சிங்கம் போன்றவர்களின் இதயங்களும், பிருதையின் {குந்தியின்} வீர மைந்தர்களின் {பாண்டவர்களின்} இதயங்களும் கூட, இதைக்கேட்டவுடன், தங்கள் தாழ்மையை உணர்ந்து ஆச்சரியம் மற்றும் மகிழ்ச்சியால் நடுக்கமுற்றன. அர்ஜுனன் வேறு என்னவெல்லாம் செய்தான் என்று எனக்கு முழுமையாகச் சொல்லும். ஜிஷ்ணுவின் {அர்ஜுனனின்} வரலாற்றைக் கேட்கும்போது மிகச்சிறிய அளவுகூட நிந்திக்கப்படத்தக்க செயல்கள் எனக்குத் தெரியவில்லை. ஆகையால் அந்த வீரனின் வரலாற்றை முழுமையாக எனக்குச் சொல்லும்,” {என்றான் *ஜனமேஜயன்}
வைசம்பாயனர் சொன்னார், “ஓ குருக்களில் புலியே {ஜனமேஜயனே}, அற்புதமானதும், நீளமானதும், நிகரற்றதுமான அந்த சிறந்த வீரன் சம்பந்தமானதை நான் உனக்கு விவரிப்பேன். ஓ பாவங்களற்றவனே, குறிப்பாக, தேவர்களுக்குத் தேவனான முக்கண்ணனை {சிவனை} அர்ஜுனன் சந்தித்தது தொடர்பாகவும், அந்த சிறந்த தேவனுடன் அவனுக்கு ஏற்பட்ட மோதலையும் பற்றி கேள்
“யுதிஷ்டிரனின் கட்டளையின் பேரில், அளவற்ற வீரம் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} தேவர்களின் தலைவனான சக்ரனையும் {இந்திரனையும்}, தேவர்களுக்குத் தேவனான சங்கரரையும் {சிவனையும்) பார்க்கக் (காம்யக வனத்தைவிட்டு) கிளம்பினான். வலிமைவாய்ந்த கரங்கள் கொண்ட பலம் வாய்ந்த அர்ஜுனன், தனது நோக்கம் வெற்றியடைவதற்காக தெய்வீக வில், தங்கப்பிடி கொண்ட வாள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வடக்கே இமயம் நோக்கி சென்றான். ஓ மன்னா {ஜனமேஜயா}, மூவலகத்திலும் போர்வீரர்களில் முதன்மையான அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, அமைதியான மனமும், காரியங்களில் உறுதியும் கொண்டு தன்னை முழுதாக அக்காரியத்திற்கு அர்ப்பணித்து நேரத்தை இழக்காமல் தவ நோன்புகள் நோற்றான். முட்செடிகளும், மரங்களும், மலர்களும், பலதரப்பட்ட பழங்களும் நிறைந்த, பலவகையான் சிறகு கொண்ட உயிரினங்கள் வசித்த, பல்வேறு வகைப்பட்ட விலங்குகள் உலவும், சித்தர்களும் சாரணர்களும் ஓய்ந்திருக்கும் பயங்கரமான கானகத்துள் அவன் {அர்ஜுனன்} தன்னந்தனியாக நுழைந்தான். மனிதர்களற்ற அந்த வனத்தில் குந்தியின் மகன் {அர்ஜுனன்} நுழைந்த போது, சொர்க்கத்தில் சங்கநாதங்களும், பேரிகைகளும் கேட்கப்பட்டன. அடர்த்தியான பூமழை பூமியின் மீது விழுந்தது. வானத்தில் பரவிய மேகங்கள் கனமான நிழலை உண்டாக்கின. பெரும் மலைகளின் அடிவாரத்தில் இருந்த அந்தக் கடினமான வனப்பகுதிகளைத் தாண்டிய அர்ஜுனன், விரைவில் இமயத்தின் மார்பை அடைந்தான். அங்கே சிறிது நேரம் தங்கி பிரகாசிக்க ஆரம்பித்தான். அங்கு சிறகுள்ள பாடகர்கள் {பறவைகளின்} இனிய இசையைக் கேட்டான். ஏராளமான விரிவடைந்த பசுமையான மரங்களையும் கண்டான். கடுமையான எதிர் சுழிப்புகளால் ஆங்காங்கே முறிந்த, வைடூரியம் போன்ற நீர்ச்சுழல்கள் கொண்ட நதிகளையும் கண்டான். அந்த நதிகளில் அன்னங்களும், வாத்துகளும், கொக்குகளும் இசையை எதிரொலித்துக் கொண்டு சென்றன. அந்த நதிக்கரைகளில் ஆண் கோகிலப் பறவைகளின் {குயில்களின்} பொங்கி வரும் கீதமும், மயில்கள் மற்றும் கொக்குகளின் இனிய இசையும் நிறைந்திருந்தது. அந்தப் பெரும்பலம்வாய்ந்த போர் வீரன் {அர்ஜுனன்}, சுத்தமான, புனிதமான, அருந்துவதற்கு சுவையான அந்த நதிகளையும், அழகான அதன் கரைகளையும் கண்டு மிகவும் மகிழ்ந்தான். அப்படி மகிழ்ந்த கடும் சக்தி கொண்ட உயர்ந்த ஆன்மாவான அர்ஜுனன், அந்த மகிழ்ச்சிகரமான கானகப் பகுதியில் தன்னை கடுமையான தவத்திற்கு அர்ப்பணித்தான்.
கரிய மான் தோலையும், ஒரு குச்சியையும் கொண்ட புல்லாலான கந்தலுடை அணிந்து, தரையில் உதிர்ந்து விழும் இலைகளை உண்டிருந்தான். மூன்று இரவுகளுக்குள்ளான இடைவெளியில் பழங்கள் உண்டு தனது முதல் மாதத்தைக் கடத்தினான். இரண்டாவது மாதத்தை ஆறு நாள்களுக்கு ஒரு முறை உண்டும், மூன்றாவது மாதத்தை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை உண்டும் கடத்தினான். நான்காவது மாதம் வந்தது. அப்போது பாரதர்களில் சிறந்த, வலிமை மிக்க கரங்கள் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தான். கரங்களை உயர்த்தி, எதன் மீதும் சாயாமல், கால் கட்டைவிரல் நுனியில் நின்று கடும் தவத்தைத் தொடர்ந்தான். தொடர்ந்து குளித்துக் கொண்டே இருந்ததால், அந்த சிறப்பு வாய்ந்த வீரனின் முடி மின்னலைப் போன்றும், தாமரையைப் போன்றும் நிறம் கொண்டன.
பிறகு பெரும் முனிவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பிநாகம்க் கொண்ட தேவனிடம் {சிவனிடம்} சென்று, பிருதை மகனின் {அர்ஜுனனின்} கடும் தவம் குறித்து சொல்வதற்காகச் சென்றனர். அந்த தேவர்களுக்குத் தேவனை {சிவனை} வணங்கி, அர்ஜுனனின் தவத்தைக் குறித்து சொல்வதற்காக, “பெரும் சக்தி கொண்ட இந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தவங்களில் கடுமையான தவத்தை இமயத்தின் மார்பில் செய்து கொண்டிருக்கிறான். ஓ தேவர்களுக்குத் தேவா {சிவனே}, அவனது தவத்தின் வெப்பத்தால், பூமியெங்கும் புகையை வெளியேற்றுகிறது. அவனது இந்தக் கடுந்தவத்திற்கான காரணத்தை நாங்கள் அறியவில்லை. இருப்பினும், அவன் எங்களுக்கு வலியை உண்டாக்குகிறான். அவனது செயலை நிறுத்தும்” என்றனர். ஆன்மாவை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அந்த முனிவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அனைத்து உயிர்களின் தலைவனும் உமையின் கணவனுமானவன் {சிவன்}, “பல்குனனைக் {அர்ஜுனனைக்} குறித்து நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் நீங்கள் எங்கிருந்த வந்தீர்களோ அங்கேயே செல்லுங்கள். அர்ஜுனனின் இதய விருப்பத்தை நான் அறிவேன். சொர்க்கமோ, செழிப்போ, நீண்ட ஆயுளோ அவனது விருப்பம் இல்லை. அர்ஜுனன் விரும்புவதை அவனுக்கு நான் இன்றே கொடுப்பேன்” என்றார் {சிவன் பெருமான்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “உண்மை பேசும் அந்த முனிவர்கள், மகாதேவனின் {சிவனின்} இந்த வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சியடைந்து தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.
அர்ஜுனனை வாரி அணைத்த சிவன் – வனபர்வம் பகுதி 39-சிவன் வேடனாக வந்து அர்ஜுனனுடன் மோதுவது; அர்ஜுனன் சிவனிடம் தோற்பது; அர்ஜுனன் செய்த துதியால் மகிழ்ந்த சிவன் அவனைத் தேற்றுவது…
வைசம்பாயனர் சொன்னார், “அந்த சிறப்புமிக்க தவசிகள் அனைவரும் சென்ற பிறகு, பிநாகத்தைத் தாங்குபவனும், பாவங்களை அழிப்பவனுமான சிறப்புமிகுந்த ஹரன் {சிவன்}, பெரும் உருவமும் இரண்டாவது மேருவைப் போன்ற தீரமும், தங்க மரம் போன்று ஒளிவீசும் வேடனின் {கிராத = வேடன்} உருவெடுத்து, கைகளில் அழகான வில்லையும், கடும் விஷம் கொண்ட பாம்புகள் போலிருக்கும் பல கணைகளையும் எடுத்துக் கொண்டு, தீ போன்ற உருவத்துடன் இமயத்தின் மார்புக்கு கீழிறங்கி வந்தான். அந்த அழகான தேவர்களுக்குத் தேவன் {சிவன்}, வேடுவப் பெண்ணுரு கொண்டிருந்த உமையுடனும், பலவிதமான உருவங்களிலும், ஆடைகளிலும் இருந்த மகிழ்ச்சி பொங்கும் பூதங்களுடனும், வேடுவ ஆடைகள் அணிந்த ஆயிரக்கணக்கான பெண்களுடனும் வந்தான். ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படிப்பட்ட துணைகளுடன் தேவர்களுக்குத் தேவன் {சிவன்} வந்ததன் தொடர்ச்சியாக, திடீரென அந்தப் பகுதி முழுவதும் அழகானது. விரைவில் அந்த இடம் முழுவதும் பவித்திரமான அமைதி பரவியது. நீரூற்றுகள், நீரோடைகள் மற்றும் பறவைகளின் ஒலிகள் சட்டென நின்றன.
தேவர்களுக்குத் தேவன் {சிவன்} பழியில்லா செயல் புரியும் பிருதையின் {குந்தியின்} மகனை அணுகியபோது, அங்கே பன்றி வடிவில் இருந்த மூகன் என்ற தானவன் {அசுரன்} அர்ஜுனனைக் கொல்ல முயற்சிக்கும் அற்புதமான காட்சியைக் கண்டான். தன்னைக் கொல்ல முனையும் எதிரியைக் கண்ட பல்குனன் {அர்ஜுனன்}, காண்டீவத்தையும், கடும் விஷம் கொண்ட பாம்புகள் போன்ற கணைகளையும் எடுத்தான். தனது வில்லின் நாணைச் சுண்டிவிட்டு, அந்த நாணொலியால் அந்தச் சூழ்நிலையை நிறைத்து அந்த பன்றியிடம், “நான் இங்கே வந்து உனக்கு எந்தக் காயத்தையும் ஏற்படுத்தவில்லை. இருப்பினும் நீ என்னைக் கொல்ல முயற்சிக்கிறாய். ஆகையால், நான் நிச்சயம் உன்னை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புவேன்” என்றான் {அர்ஜுனன்}.
வில்லை உறுதியாகப் பிடித்திருக்கும் பல்குனன் {அர்ஜுனன்}, அந்தப் பன்றியைக் கொல்ல எத்தனிக்கும்போது, வேடன் உருவில் இருந்த சங்கரன் {சிவன்} திடீரென அவனைத் {அர்ஜுனனைத்} தடுத்து, “இந்திரகீல மலையைப் போன்ற நிறத்தில் இருக்கும் இந்தப் பன்றியை நானே முதலில் குறி வைத்தேன்” என்றான். இருப்பினும் இவ்வார்த்தைகளை மதிக்காத பல்குனன் {அர்ஜுனன்}, அந்தப் பன்றியை அடித்தான். பிரகாசத்துடன் இருந்த வேடனும் நெருப்பைப் போன்றதும், இடியைப் போன்றதுமான தனது கணையை அதே பொருளின் {பன்றியின்} மீது அடித்தான். இருவராலும் அடிக்கப்பட்ட கணைகள் ஒரே நேரத்தில், மூகனின் {பன்றி உருவில் இருந்த அசுரனின்} பரந்த மேனியில் கடுமையாகத் தைத்தன. அந்த இரு கணைகளும், இந்திரனின் இடியும் {வஜ்ராயுதமும்}, மேகங்களில் உள்ள இடியும் சேர்ந்து மலையின் மார்பில் விழுவது போன்று பெரும் சத்தத்துடன் அந்தப் பன்றியின் மேல் விழுந்தன. பல கணைகளை ஒத்த அந்த எரியும் வாய் கொண்ட பாம்புகள் போன்ற இரு கணைகளின் தாக்கத்தால் மூகன் {பன்றி உருவில் இருந்த அசுரன்} தனது உயிரை விட்டு, மீண்டும் ராட்சச உரு எடுத்தான்.
எதிரிகளைக் கொல்லும் ஜிஷ்ணு {அர்ஜுனன்}, தேவனைப் போன்ற பிரகாசத்துடனும், வேடுவ உடையுடனும், பல பெண்களுடனும் இருந்த அந்த மனிதனைத் {சிவனைத்} தன் முன் கண்டான். அவனைக் கண்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் புன்னகை பூத்தவாறு, “பெண்கள் சூழ தனிமையில் இந்தக் கானகத்தில் சுற்றித்திரியும் நீ யார்? தங்கத்தைப் போன்ற பிரகாசத்துடன் இருக்கும் நீ, இந்தப் பயங்கரமான கானகத்தைக் கண்டு அஞ்சவில்லையா? என்னைக் கொல்லும் நோக்கோடு வந்த இந்த ராட்சசனை நானே முதலில் குறி வைத்தேன். என்னால் முதலில் குறிபார்க்கப்பட்ட பன்றியை நீ ஏன் அடித்தாய்? இதன் காரணமாக, நீ என்னிடம் இருந்து உயிருடன் தப்ப முடியாது. என்னிடம் நீ நடந்து கொண்ட விதம் துரத்தல் சடங்கின் படி இல்லை {வேட்டை தர்மத்தின்படி இல்லை}. ஆகையால், ஓ மலைவாசியே, நான் உனது உயிரை எடுப்பேன்” என்றான் {அர்ஜுனன்}.
பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்த வேடன் {வேடன் உருவில் இருந்த சிவன்}, புன்னகைத்தபடியே, இடது கையால் தனது வில்லைத் தாங்கி, மென்மையான வார்த்தைகளால், “ஓ வீரனே, நீ என்னைக் குறித்து கவலைப்படாதே. கானகவாசிகளான எங்களுக்கு இந்தக் கானக நிலமே சரியான வசிப்பிடம். உன்னை மதிக்கும் அதே வேளையில், உன்னை ஒரு கேள்வியும் கேட்கிறேன். இவ்வளவு சிரமங்களுக்கு இடையில் நீ ஏன் இந்த இடத்தை உனது வசிப்பிடமாகத் தேர்ந்தெடுத்தாய். ஓ தவசியே, மிருகங்கள் நிறைந்த இந்தக் கானகமே எங்கள் வீடு. ஆனால், மென்மையாகவும், வசதியாகவும் வளர்க்கப்பட்டு நெருப்பைப் போன்ற பிரகாசத்துடன் இருக்கும் நீ, ஏன் இந்தத் தனிமையான பகுதியில் தனியாக வசிக்கிறாய்?” என்று கேட்டான் {வேடன் உருவில் இருக்கும் சிவன்}.
அர்ஜுனன் சொன்னான், “காண்டீவத்தையும், நெருப்பு போன்ற ஒளிவீசும் கணைகளையும் நம்பியே நான் இந்தப் பெரும் கானகத்தில் இரண்டாவது பாவகி {அக்னி} போல வாழ்கிறேன். மிருக உரு கொண்டு வந்த இந்தக் கொடூரமான ராட்சசன் என்னால் எப்படிக் கொல்லப்பட்டான் என்பதைக் கண்டாய்” என்றான். அதற்கு அந்த வேடன் {சிவன்}, “இந்த ராட்சசன், எனது வில்லில் இருந்து அடிக்கப்பட்ட கணையாலேயே கொல்லப்பட்டு என்னால் யமனுலகு அனுப்பப்பட்டான். அவன் என்னாலேயே முதலில் குறிவைக்கப்பட்டான். எனது அடியாலேயே அவன் {ராட்சசன் மூகன்} உயிரும் பிரிந்தது. உனது பலத்தில் கர்வம் கொண்டு, உனது சொந்த தவறுகளுக்காக மற்றவர்களைக் குறை சொல்கிறாய். ஆகையால், ஓ இழிந்தவனே, உனது குறைக்காக நீ என்னிடம் இருந்து உயிருடன் தப்ப மாட்டாய். அப்படியே நில். நான் உன் மீது வஜ்ரத்தைப் போன்ற கணைகளை அடிக்கிறேன். நீயும் உனது சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி, உனது கணைகளை என் மீது அடிக்க முயற்சி செய்” என்றான் {வேடன் உருவில் இருந்த சிவன்}.
வேடனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன் மிகவும் கோபம் கொண்டு கணைகளால் அவனை {சிவனைத்} தாக்கினான். இருப்பினும் அந்த வேடன் {சிவன்} மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அந்தக் கணைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியாக, “இழிந்தவனே, இழிந்தவனே, எனது {முக்கிய} உள்ளுறுப்புகளைத் துளைக்குமாறு உனது சிறந்த கணைகளை என் மீது அடி” என்றான் {சிவன்}. இப்படிச்சொல்லப்பட்ட அர்ஜுனன் தனது கணைகளை மழையெனப் பொழிந்தான். இருவரும் மிகுந்த கோபமடைந்து கடும் போரில் ஈடுபட்டு, ஒருவர் மீது ஒருவர் கடும் விஷம் கொண்ட பாம்புகள் போன்ற கணைகளை மழையாகப் பொழிந்தனர். பிறகு அர்ஜுனன் வேடன் மீது கணைமழையை நன்றாகப் பொழிந்தான். இருப்பினும் சங்கரன் {சிவன்}, அந்தப் பெரு மழையை மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் தாங்கிக் கொண்டான். பிநாகத்தைத் தாங்குபவன் {சிவன்}, அந்தக் கணைமழையை சிறிது நேரம் தாங்கிக் கொண்டு, காயமற்று அசையாத மலையென நின்றான்.
தனது கணைமழை பலனற்றுப் போவதைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, மிகவும் வியந்து, திரும்பத் திரும்ப, “அற்புதம், அற்புதம், ஐயோ நுண்மையான உறுப்புகள் கொண்ட இந்த மலைவாசி, நடுங்காமல் காண்டீவத்தில் இருந்து செல்லும் கணைகளைத் தாங்கிக் கொள்கிறானே. யார் இவன்? இவன் ருத்திரனா? அல்லது வேறு ஏதாவது தேவன், அல்லது யக்ஷன், அல்லது அசுரனாக இருப்பானா? சில நேரங்களில் தேவர்களும் இமயத்தின் உயரங்களுக்கு இறங்கி வருவார்களே. பிநாகத்தைத் தாங்கியிருக்கும் தேவனைத் {சிவனைத்} தவிர, வேறு யாராலும், என்னால் அடிக்கப்பட்டு காண்டீவத்தில் இருந்து தொடர்ச்சியாக புறப்படும் ஆயிரக்கணக்கான கணைகளைத் தாங்க முடியாதே. அவன் தேவனோ, யக்ஷனோ, ருத்திரனை {சிவனைத்} தவிர அவன் வேறு யாரோ, அது எப்படியிருந்தாலும், எனது கணைகள் மூலம் அவனை யமனுலகு அனுப்புவேன்” என்று நினைத்துக் கொண்டான். ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படி யோசித்த அர்ஜுனன் மகிழ்ச்சியான இதயத்துடன், சூரியனின் கதிர்களைப் போல ஒளிவீசும் நூற்றுக்கணக்கான கணைகளை அடித்தான். இருப்பினும், உலகங்களைப் படைத்த அந்த சிறப்புமிக்கவன், திரிசூலத்தைத் தாங்குபவன் {சிவன்}, கல்மழையைத் தாங்கிக் கொள்ளும் மலையைப் போல, கணைகளின் அந்தப் பெருமழையை மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் தாங்கிக் கொண்டான்.
விரைவில், பல்குனனின் கணைகள் தீர்ந்து போயின. இதைக் கவனித்த அர்ஜுனன் மிகவும் அச்சமுற்றான். அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, *காண்டவ வனம் எரிந்த போது வற்றாத அம்பறாத்தூணியைக் கொடுத்த சிறப்புமிகுந்த தேவனான அக்னியை நினைக்க ஆரம்பித்தான். அவன் {அர்ஜுனன்}, “ஐயோ, எனது கணைகள் தீர்ந்துவிட்டனவே. இனி எனது வில்லில் வைத்து எதை அடிப்பது? எனது கணைகளையெல்லாம் விழுங்கும் இந்த மனிதன் யார்? ஈட்டிகளால் கொல்லப்படும் யானைகளைப் போல, எனது வில்லின் நுனியை வைத்து அடித்து கொன்று, அவனை கதாயுதம் தாங்கும் யமனின் உலகத்திற்கு அனுப்பி வைப்பேன்” என்று எண்ணினான் {அர்ஜுனன்}.
பிறகு சிறப்பு வாய்ந்த அர்ஜுனன் தனது வில்லை எடுத்துக் கொண்டு, அந்த வேடனை தனது வில்லின் நாணினால் இழுத்து, இடியைப் போன்று இறங்கும் கடும் அடிகளை அடித்தான். எதிரி வீரர்களைக் கொல்லும் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, வில்லின் நுனியை வைத்து சண்டையிட்ட போது, அந்த மலைவாசி {சிவன்} அவன் {அர்ஜுனன்} கையில் இருந்த அந்த தெய்வீக வில்லைப் பறித்தான். தன்னிடம் இருந்த வில் பறிக்கப்பட்டதைக் கண்ட அர்ஜுனன், தனது வாளை எடுத்து, சண்டையை முடிக்க எண்ணி எதிரியை நோக்கி ஓடினான். பிறகு அந்தக் குரு இளவரசன் {அர்ஜுனன்}, தனது கைகளின் மொத்த பலத்தையும் பயன்படுத்தி கடும் கற்களாலும் தாங்கிக் கொள்ள முடியாத அந்தக் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு அந்த வேடனின் தலையில் அடித்தான். ஆனால் வாள்களில் முதன்மையான அந்த வாள், அந்த வேடனின் {சிவனின்} தலையைத் தொட்டவுடன் துண்டுகளாகச் சிதறிப் போயிற்று.
பிறகு பல்குனன் {அர்ஜுனன்} மரங்களைக் கொண்டும் கற்களைக் கொண்டும் சண்டை செய்தான். பெரும் உடல் படைத்த வேடனின் வேடத்தில் இருந்த அந்தச் சிறப்பு மிகுந்த தேவன் {சிவன்}, மரங்கள் மற்றும் கற்களின் மழையை பொறுமையாகத் தாங்கிக் கொண்டான். பிறகு, பிருதையின் {குந்தியின்} பலம் பொருந்திய மகன், கோபத்தில் வாயில் இருந்து புகை வர, மடக்கிய கை முட்டியைக் கொண்டு வேடன் உருவில் வந்திருந்த வெல்லப்பட முடியாத கடவுளை {சிவனை} இடி போன்ற அடிகளால் அடித்தான். வேடன் உருவில் இருந்த கடவுள் {சிவ பெருமான்} பல்குனனின் {அர்ஜுனனின்} அடிகளுக்கு பதிலாக இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போன்ற கடுமையான அடிகளைக் கொடுத்தான். பாண்டுவின் மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, அந்த வேடனுக்கும் {சிவனுக்கும்} இடையில் நடந்த அந்த சண்டையில் விழுந்த அடிகளால் அந்த இடம் முழுவதும் பயங்கர சத்தம் எழுந்தது. பழங்காலத்தில் விரித்திரனுக்கும் வாசவனுக்கும் இடையே நடந்த சண்டையைப் போன்று இருந்த அடிகளால் ஆன அந்தக் கடும் சண்டை சிறிது நேரமே நீடித்தது.
பலம்பொருந்திய ஜிஷ்ணு {அர்ஜுனன்}, அந்த வேடனைக் கட்டிப்பிடித்து, தனது மார்பால் அவனை {சிவனை} நசுக்க ஆரம்பித்தான். ஆனால் பெரும் பலம் பொருந்திய அந்த வேடன், உணர்வற்ற பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} மிகக் கடுமையாக நசுக்கினான். அவர்கள் இருவர் கரங்கள் மற்றும் மார்புகளின் அழுத்தத்தின் காரணமாக, நெருப்பில் எரியும் கரி போல, அவர்கள் உடல் புகையைக் கக்கத் தொடங்கின. பிறகு அந்தப் பெரும் தெய்வம் {சிவன்}, ஏற்கனவே அடிபட்ட பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} மேலும் அடித்தும், கோபத்துடன் தனது முழு பலத்தைப் பயன்படுத்தி, அவனை உணர்விழக்கச் செய்தான். பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்த தேவர்களுக்குத் தேவனால் நசுக்கப்பட்ட பல்குனன் {அர்ஜுனன்}, காயம்பட்டு சிதைந்த உறுப்புகளால் அசையும் தன்மையை இழந்து, சதைப் பிண்டமானான். அந்தச் சிறப்புமிக்க தெய்வத்தால் {சிவ பெருமானால்} அடிக்கப்பட்ட அவன் {அர்ஜுனன்}, அசையும் தன்மையை இழந்து, செத்தவனைப் போல மூச்சற்று பூமியில் விழுந்தான்.
இருப்பினும், விரைவில் உணர்வை அடைந்து, கிடந்த நிலையில் இருந்து எழுந்து, உடல் முழுதும் இரத்தத்தால் நனைந்து, மிகவும் துக்கத்துக்குள்ளானான். மானசீகமாக அந்த தேவர்களுக்குத் தேவனை {சிவனைப்} பணிந்து, களிமண்ணால் அந்த தெய்வத்தை {சிவனைச்} செய்து மலர் மாலைகளால் வழிபட்டான். பவனின் {சிவனின்} களிமண் சிலைக்கு தான் சாற்றிய மாலை, அந்த வேடனின் தலையை அலங்கரிப்பதைக் கண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மிகவும் மகிழ்ந்து இயல்பு நிலையை அடைந்தான். பிறகு அவன் {அர்ஜுனன்} பவனின் {சிவனின்} பாதத்தில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான். அந்தத் தெய்வமும் அவனிடம் திருப்தி கொண்டான்.
அர்ஜுனனின் அற்புதத்தைக் கண்ட ஹரன் {சிவன்}, கடும் தவத்தால் அவனது {அர்ஜுனனது} உடல் மெலிந்திருப்பதைக் கண்டு, அவனிடம் ஆழ்ந்த குரலில் மேகங்கங்களைப் போன்ற கர்ஜனையுடன், “ஓ பல்குனா {அர்ஜுனா}, இணையற்ற உனது செயலைக் கண்டு நான் திருப்தியடைந்தேன். வீரத்திலும், பொறுமையிலும் உனக்கு ஈடான இன்னொரு க்ஷத்திரியன் யாருமில்லை. ஓ பாவமற்றவனே, உனது பலமும் வீரமும் கிட்டத்தட்ட எனக்கு சமமாகவே இருக்கிறது. ஓ பலம் வாய்ந்த கரம் கொண்டவனே {அர்ஜுனனே}, நான் உன்னிடம் திருப்தி அடைந்தேன். ஓ பாரத குலத்தின் காளையே {அர்ஜுனனே}, ஓ அகன்ற கண் உடையவனே, நான் உனக்கு {ஞானக்} கண்களைக் கொடுக்கிறேன். என்னைப் பார் {எனது உண்மையான உருவத்தைப் பார்}. முன்பு நீ முனிவனாக இருந்தவன். நீ உனது எதிரிகளையும், சொர்க்கத்தில் வசிப்பவர்களையும் வீழ்த்துவாய். நான் உன்னிடம் திருப்தியடைந்ததால், யாராலும் தடுக்கமுடியாத ஆயுதத்தை நான் உனக்கு கொடுக்கிறேன். விரைவில், நீ எனது ஆயுதத்தைத் தாங்கும் தகுதியை அடைவாய்” என்றார் {சிவ பெருமான்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிநாகத்தைத் {வில்} தாங்குபவனும், மலைகளை {கைலாசம்} வசிப்பிடமாகக் கொண்டவனும், நெருப்பு போல ஒளிவீசும் தெய்வமுமான மகாதேவனை {சிவனை} உமையுடன் {பார்வதியுடன்} கண்டான் பல்குனன் {அர்ஜுனன்}. எதிரிகளின் நகரங்களைக் கைப்பற்றும் பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனன்}, முழங்காலில் நின்று தலைவணங்கி, ஹரனை {சிவனை} வழிபட்டு அருள் பெற்றான். பிறகு அர்ஜுனன், “ஓ கபர்தின் {சடைமுடியுள்ளவனே}, ஓ தேவர்களுக்குத் தலைவனே, ஓ பகனின் கண்களை அழித்தவனே, ஓ தேவர்களுக்குத் தேவா, ஓ மகாதேவா, ஓ நீலத் தொண்டை கொண்டவனே {நீலகண்டா}, ஓ சடாமுடி தரித்தவனே, நீயே அனைத்து காரியங்களுக்கும் காரணம் என்பதை நான் அறிவேன். ஓ முக்கண்ணனே, ஓ அனைவருக்கும் தலைவனே, நீயே அனைத்து தேவர்களுக்கும் அடைக்கலம் ஆவாய். இந்த அண்ட ம் உன்னில் இருந்தே ஊற்றெடுத்தது. தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் ஆகியோர் இருக்கும் மூன்று உலகத்திலும் நீ வீழ்த்தப்பட முடியாதவன். நீயே விஷ்ணுவாக இருக்கும் சிவன். நீயே சிவனாக இருக்கும் விஷ்ணு. பழங்காலத்தில் தக்ஷனின் வேள்வியை நீயே அழித்தாய். ஓ ஹரியே, ஓ ருத்ரா, நான் உன்னை வணங்குகிறேன். உனது நெற்றியில் ஒரு கண் கொண்டவன் நீ. ஓ சர்வனே, ஓ ஆசைக்குந்த பொருட்களை அருள்பவனே, ஓ திரிசூலத்தைத் தாங்குபவனே, ஓ பிநாகத்தைத் தாங்குபவனே, ஓ சூரியா, ஓ சுத்தமான உடல் கொண்டவனே, ஓ அனைத்தையும் படைத்தவனே, நான் உன்னை வணங்குகிறேன். ஓ படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் தலைவனே, உனது அருள் கிடைக்க நான் உன்னை வணங்குகிறேன். அண்ட அருளின் ஊற்றான கணங்களின் தலைவன் நீயே, அண்டத்தின் காரணங்களுக்கு காரணமாயிருப்பவன் நீயே. ஆண்மக்களில் முதன்மையானவர்களை விஞ்சி நிற்பவனே, ஓ ஹரனே, நீயே உயர்ந்தவன், நீயே நுட்பமானவன். ஓ சிறப்புமிக்க சங்கரனே, எனது தவறை மன்னிப்பாயாக. உன்னைக் காணவே, உனக்கு அன்பானதும், தவசிகளின் அற்புதமான வசிப்பிடமுமான இந்தப் பெரும் மலைக்கு நான் வந்தேன். அனைத்து உலகங்களாலும் வழிபடப்படுபவன் நீ. ஓ தலைவா, உனது அருள் பெறவே நான் உன்னை வணங்குகிறேன். அறியாமையால் உன்னுடன் போரிட்ட எனது கடுஞ்செயல்களைத் தவறாக எண்ணாதே. ஓ சங்கரா, நான் உனது பாதுகாப்பைக் கோருகிறேன். நான் செய்த அனைத்திற்காகவும் என்னை மன்னித்துவிடு” என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “காளையைத் தனது குறியாகக் {குறியீடாகக்} கொண்ட அந்தப் பலம் பொருந்திய தெய்வம், அர்ஜுனனின் அழகான கரங்களைத் தனது கரங்களால் பற்றி, புன்னகைத்து, “நான் உன்னை மன்னித்துவிட்டேன்” என்று சொல்லி, தனது கரங்களால் அர்ஜுனனை வாரி அணைத்து, மீண்டும் அர்ஜுனனைச் சமாதானப் படுத்தினார் {சிவ பெருமான்}.
எவரும் அறியா பாசுபதம் உனதே! – வனபர்வம் பகுதி 40-அர்ஜுனனின் முற்பிறவியை எடுத்துக் கூறிய சிவன், அவனை வரம் கேட்க பணித்தல்; அர்ஜுனன் பிரம்மசிரம் வேண்டுதல்; சிவன் அர்ஜுனனுக்கு பாசுபதத்தை அளித்தல்; ஏற்கனவே பறித்த காண்டீவத்தையும் அளித்து, விண்ணுலகம் செல்லப் பணித்தல்.
மகாதேவன் {சிவன்} சொன்னான், “உனது முற்பிறவியில் நீ நாராயணனின் நண்பனான நரனாக இருந்தாய். பதரியில் [1] ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு நீ கடுந்தவத்தில் இருந்தாய். (இங்கு பதரி என்று குறிக்கப்படுவது, பத்ரிநாத் ஆகும். பத்ரிநாத் நரன் மலை, நாராயணன் மலை என்ற இரு சிகரங்களுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்கு ஆகும். இதன் வழியாகவே பாண்டவர் சொர்க்கம் சென்றனர். பத்ரி நாத்தில் திரௌபதி இறந்து வீழ்ந்தாள். இங்கு அமர்ந்தே வியாசர் மஹாபாரதம் சொன்னதாகவும், அருகில் ஓடிய சரஸ்வதி நதியை சத்தமிடாமல் இருக்கச் சொல்ல நதி பூமிக்கடியில் சென்று பிறகு குகைவழியாய் வெளிப்பட்டு அலக்நந்தாவில் கலக்கிறது.)உன்னிலும், ஆண்மக்களில் முதன்மையான விஷ்ணுவிலும் பெரும் பலம் வசிக்கிறது. நீங்கள் இருவரும் உங்கள் பலத்தால் இந்த முழு அண்டத்தையும் தாங்குகிறீர்கள். ஓ தலைவா {அர்ஜுனா}, உனது கடுமையான வில்லின் நாணொலி சத்தம் . நீயும், கிருஷ்ணனும், இந்திரனின் முடிசூட்டலின் போது தானவர்களைத் தண்டித்தீர்கள்.
ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, உனது கைகளுக்குப் பொருந்தும் இந்த வில்லான காண்டீவம் அப்போதும் உன் கையில் இருந்தது. ஓ ஆண்மக்களில் முதன்மையானவனே, எனது மாய சக்தியைப் பயன்படுத்தியே நான் அதை {காண்டீவத்தை} உன்னிடம் இருந்து பறித்தேன். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, உனக்குச் சரியாகப் பொருந்தும் இந்த இரட்டை அம்பறாத்தூணிகள் மீண்டும் வற்றாததாக ஆகும். ஓ குரு குலத்தின் மகனே {அர்ஜுனா}, உனது உடல், வலியில் இருந்தும் நோயில் இருந்தும் விடுபடும். உனது வீரம் கலங்கடிக்கப்பட முடியாததாக இருக்கும். நான் உன்னிடம் திருப்தி கொண்டுள்ளேன். ஓ ஆண்மக்களில் முதல்வனே, நீ விரும்பும் வரத்தை என்னிடம் கேள். ஓ அனைத்து எதிரிகளையும் தண்டிப்பவனே, ஓ சரியான (தகுதி வாய்ந்தவர்களுக்கு) மரியாதை கொடுப்பவனே, உனக்கு ஈடான ஆண்மகன் தேவலோகத்தில் கூட இல்லை. எந்த க்ஷத்திரியனும் உன்னைவிட மேன்மையானவன் இல்லை” என்றார் {சிவ பெருமான்}.
அர்ஜுனன் சொன்னான், “ஓ காளையைக் குறியீடாகக் கொண்டிருக்கும் சிறப்புமிக்க தெய்வமே, நீ நான் விரும்புவதை அருள்வதாக இருந்தால், ஓ தலைவா, உன்னால் தாங்கப்படும் தெய்வீகமான ஆயுதமான பிரம்மசிர ஆயுதத்தைப் பெற விரும்புகிறேன். யுக முடிவில் மொத்த அண்டத்தையே அழிக்கும் சக்தி கொண்ட அந்த ஆயுதத்தின் துணை கொண்டு, ஓ தேவர்களுக்குத் தேவா {சிவனே}, நான் ஒரு புறமும், கர்ணன், பீஷ்மர், கிருபர் மற்றும் துரோணர் ஆகியோர் மறு புறமும் நின்று கடும்போரிடும்போது உமது கருணையால் நான் வெற்றியை அடைவேன். தானவர்கள், ராட்சசர்கள், தீய ஆவிகள், பிசாசுகள், கந்தர்வர்கள், நாகர்கள் என அனைவரையும் உட்கொள்ளும் அந்த ஆயுதத்தை ஏவும் போது அதில் இருந்து ஆயிரக்கணக்கான கடும் கதாயுதங்களும், கடும் விஷம் கொண்ட பாம்புகள் போன்ற கணைகளையும் உற்பத்தி செய்யும். அந்த ஆயுதத்தைக் கொண்டு நான் பீஷ்மர், துரோணர், கிருபர், எப்போதும் இழிவாகவே பேசும் கர்ணன் ஆகியோருடன் நான் போரிடுவேன். ஓ பகனின் கண்களை அழித்த சிறப்புமிக்கவனே, அவர்களுடன் சண்டையிட்டு வெற்றி பெறுவதே எனது முதன்மையான விருப்பமாகும்” என்றான்.
பவன் {சிவன்}, “ஓ பலம் மிக்கவனே {அர்ஜுனனே}, எனக்குப் பிடித்த எனது ஆயுதமான பாசுபதத்தை {பாசுபதாயுதத்தை} நான் உனக்குத் தருகிறேன். ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, நீ அதைத் தாங்கவும், விடுக்கவும், திரும்பப்பெறவும் தகுதி வாய்ந்தவன். தேவர்கள் தலைவனோ {இந்திரனோ}, யமனோ, யக்ஷர்களின் மன்னனோ, வருணனோ அல்லது வாயுவோ இது குறித்து {இந்த ஆயுதம் குறித்து} அறியமாட்டார்கள். அப்படி இருக்கும்போது மனிதர்கள் இதுகுறித்து எவ்வாறு அறிவார்கள்? ஆனால், ஓ பிருதையின் மகனே {அர்ஜுனா}, பலம் குறைந்த எதிரியின் மேல் இதை விடுத்தால் இந்த முழு அண்டமும் அழிந்துவிடும். ஆகையால், சரியான காரணம் இல்லாமல் இந்த ஆயுதத்தை விடுக்கக்கூடாது. இந்த மூன்று உலகிலும் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றில், இந்த ஆயுதத்தால் அழிக்க முடியாதவர் யாரும் இல்லை. இந்த ஆயுதத்தை மனதாலும், கண்ணாலும், வார்த்தைகளாலும், வில்லாலும் தொடுக்கலாம்” என்றார் {சிவ பெருமான்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைக் கேட்ட பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனன்}, தன்னைச் சுத்திகரித்துக் கொண்டான். பிறகு அண்டத்தின் தலைவனை {சிவபெருமானை} அணுகி, மிகவும் கவனத்துடன், “எனக்கு அதை உணர்த்தும்” என்றான். பிறகு மகாதேவன் {சிவன்}, யமனின் சீற்றத்துடன் கூடிய அந்த ஆயுத ஞானத்தை பாண்டுவின் மகன்களில் சிறந்தவனுக்கு {அர்ஜுனனுக்கு}, அதைத் தொடுப்பது திரும்பப் பெறுவது ஆகிய புதிர்களுடன் கொடுத்தான். பிறகு அந்த ஆயுதம், இதற்கு முன் உமையின் தலைவனான சங்கரனிடம் காத்திருந்தது போல அர்ஜுனனுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தது. அர்ஜுனன் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான்.
அந்தக் கணத்தில் மலைகள், சோலைகள், மரங்கள், கடல்கள், கானகங்கள், கிராமங்கள், நகரங்கள், சுரங்கங்களுடன் கூடிய முழு உலகமும் நடுங்கியது. ஆயிரக்கணக்கான சங்குகள், பேரிகைகள், துந்துபி ஆகியவற்றின் ஒலி கேட்டது. அந்தக் கணத்தில் சூறாவளியும் சுழற்காற்றும் வீசத்தொடங்கியது. அளவற்ற சக்தி கொண்ட அர்ஜுனனிடம் தங்கி அந்த ஆயுதத்தின் சீற்றத்தைக் கண்டு தேவர்களும், தானவர்களும் அஞ்சினர். அளவற்ற சக்தி கொண்ட பல்குனனின் {அர்ஜுனனின்} உடலில் இருந்த அனைத்துத் தீமைகளையும், தனது தீண்டலால் அந்த முக்கண் தெய்வம் {சிவன்} விரட்டினான். அந்த முக்கண் தெய்வம் அர்ஜுனனிடம் “விண்ணுலகம் செல்” என்று கட்டளையிட்டான். ஓ மன்னா {ஜனமேஜயா}, பிறகு, அர்ஜுனன் அந்த தெய்வத்தை வழிபட்டு, தலைவணங்கி, கரங்கள் கூப்பி அவனைப் {சிவனைப்} பார்த்தான். பிறகு, தேவலோகவாசிகளின் தலைவன் {சிவன்}, மலையின் மார்பில் தனது வசிப்பிடத்தை வைத்திருக்கும் அந்தப் பிரகாசமிக்க தெய்வம், அந்த உமையின் கணவன், ஆசைகளை முழு கட்டுக்குள் வைத்திருந்து அனைத்து அருளுக்கு ஊற்றக்கண்ணாக இருக்கும் அந்த தெய்வமான பவன் {சிவன்}, தானவர்களையும் பிசாசுகளையும் அழிக்கவல்ல காண்டீவம் என்ற வில்லை மனிதர்களில் முதன்மையான அர்ஜுனனுக்குக் கொடுத்தான். அந்த மனிதர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பனி நிறைந்த சமவெளிகளையும், குகைகளையும், சாய்வான நிலங்களையும், தன்னகத்தே கொண்டு, வானத்தில் உலவும் பெரும் முனிவர்களுக்கு ஓய்விடமாக இருக்கும் அந்த மலையை விட்டு, அந்த தேவர்களுக்குத் தேவன் {சிவன்} உமையுடன் சேர்ந்து வானத்தில் உயர்ந்து சென்றான்.
மேலும் ஆயுதங்கள் அடைந்தான் அர்ஜுனன் – வனபர்வம் பகுதி 41-யமன், வருணன், குபேரன் ஆகியோரிடம் இருந்து அர்ஜுனன் ஆயுதங்களைப் பெறுவது
வைசம்பாயனர் சொன்னார், “காளையைக் குறியீடாகக் கொண்ட பிநாகத்தைத் தாங்குபவன் {சிவன்}, உலகம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சூரியன் மறைவதைப் போல, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே இப்படி மறைந்து போனான். எதிரி வீரர்களைக் கொல்லும் அர்ஜுனன் இதைக் கண்டு வியந்து, “ஓ, நான் பெரும் தேவனான தேவர்களுக்குத் தேவனை {சிவனை} நான் கண்டுவிட்டேன். நான் பிநாகத்தைத் தாங்கும் முக்கண்ணனான ஹரனை {சிவனை} அருள் வழங்கும் கோலத்தில், எனது கண்களால் கண்டும், கைகளால் தொட்டுமிருக்கிறேன். நான் நிச்சயம் பேறுபெற்றவன்தான். நான் நிச்சயம் வெற்றியடைவேன். நான் ஏற்கனவே பெருமைவாய்ந்தவன் ஆகிவிட்டேன். எனது எதிரிகள் என்னால் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டனர். எனது காரியங்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டது” என்று நினைத்துக் கொண்டான் {அர்ஜுனன்}.
அளவிடமுடியாத சக்தி கொண்ட பிருதையின் {குந்தியின்} மகன், இப்படிச் சிந்தித்துக் கொண்டிருந்த போது, அங்கே அந்த இடத்திற்கு நீர்க்கடவுளான வருணன், அனைத்து விதமான நீர் மிருகங்களுடன், வைடூரியத்தைப் போன்று பிரகாசித்துக் கொண்டு, அந்தச் சூழ்நிலையையே தனது பிரகாசத்தால் நிறைத்து அழகுடன் வந்தான். ஆண் நதிகளையும், பெண் நதிகளையும், நாகர்களையும், தைத்தியர்களையும், சத்யர்களையும், சிறு தெய்வங்களையும் அழைத்துக் கொண்டு அந்த நீர் மிருகங்களின் தலைவனும் நிர்வாகியுமான வருணன் அந்த இடத்திற்கு வந்தான். மேலும், சுத்தமான தங்கத்தைப் போன்ற உடல் கொண்டு தலைவன் குபேரன், தனது பிரகாசமிக்க தேரில் அமர்ந்து, எண்ணிலடங்கா யக்ஷர்களுடன் அங்கே வந்தான். அந்தக் கருவூலத் தலைவன் {குபேரன்}, பெரும் அழகுடன், அந்தச் சூழ்நிலையைத் தனது பிரகாசத்தால் நிறைத்து அங்கே அர்ஜுனனைக் காண வந்தான். மேலும், உலகங்களை அழிக்கும் சக்தி கொண்ட பெரும் அழகு கொண்ட யமன், படைப்புத் தலைவர்களான பித்ருகளையும் உடன் அழைத்துக் கொண்டு வந்தான். சூரியனின் மகனும், அனைத்து உயிர்களை அழிப்பவனுமான, அந்த புத்திக்கெட்டாத ஆன்மா கொண்ட அறத்தேவன் {யமன்}, கையில் கதாயுதத்துடன், தனது தேரில், குஹ்யர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் ஆகிய பகுதிகளையும் சேர்த்து மூன்று உலகத்திற்கும் ஒளியூட்டி, யுகத்தின் முடிவில் எழும் இரண்டாவது சூரியனைப் போல இருந்தான்.
அங்கே வந்த அவர்கள், சுடரொளி வீசிக்கொண்டு, பலவண்ண வேறுபாடுகளுடன் இருந்த அந்தப் பெரும் மலையின் உச்சியில் கடுந்தவத்தில் இருந்த அர்ஜுனனைக் கண்டார்கள். மேலும், மறு கணத்தில் சிறப்புமிகுந்த சக்ரன் {இந்திரன்}, தனது ராணியுடன், (தெய்வீக யானையான) ஐராவதத்தில் அமர்ந்து, அனைத்து தேவர்களும் சூழ அங்கே வந்தான். தனது தலைக்கு மேலே வெண்குடை பிடிக்கப்பட்டதால், மேகங்களில் இருந்து எட்டிப் பார்க்கும் சந்திரனைப் போல இருந்தான் அவன் {இந்திரன்}. கந்தர்வர்களாலும், தவத்தை செல்வமாகக் கொண்ட முனிவர்களாலும் வாழ்த்தப்பட்ட அந்த தேவர்களின் தலைவன் {இந்திரன்} , அந்த மலையின் உச்சியில் இரண்டாவது சூரியனைப் போல இறங்கினான்.
அறத்தை முழுதும் அறிந்து பெரும் புத்திகூர்மை கொண்ட யமன், அந்த மலை உச்சியின் தெற்கே இறங்கி, மேகங்களை ஒத்த ஆழ்ந்த குரலில், “அர்ஜுனா, உலகப் பாதுகாவலர்களான நாங்கள் இங்கு வந்திருப்பதைப் பார். நீ எங்களைக் காணும் தகுதியைப் பெற்றிருப்பதால், நாங்கள் உனக்குப் {தெய்வீகப்} பார்வையைத் தருகிறோம். நீ உனது முற்பிறவியில் அளவிடமுடியா ஆன்மாவும், பெரும் பலமும் கொண்ட நரன் என்ற முனிவனாக இருந்தாய். ஓ குழந்தாய், பிரம்மனின் கட்டளைக்கிணங்க, நீ மனிதர்களுக்கு மத்தியில் பிறந்தாய்! ஓ பாவமற்றவனே, வசுக்களின் மைந்தனும், குருக்களின் அறம்சார்ந்த பாட்டனுமான பெரும் சக்தி கொண்ட பீஷ்மன் போர்க்களத்தில் உன்னால் வீழ்த்தப்படுவான். போர்க்களத்தில் பரத்வாஜரால் {துரோணரால்} கட்டளையிடப்பட்ட கடும் சக்தி படைத்த அனைத்து க்ஷத்திரியர்களையும் வீழ்த்துவாய். மனிதர்கள் மத்தியில் பிறந்திருக்கும் கடும் வீரம் கொண்ட தானவர்களையும் {அசுரர்களையும்}, நிவாதகவசர்கள் என்ற பெயர்பெற்ற தானவர்களையும் வீழ்த்துவாய்.
ஓ குருகுலத்தின் மகனே {அர்ஜுனா}, ஓ தனஞ்சயா, தனது சக்திக்காக உலகங்களால் கொண்டாடப்படுபவனும் எனது தந்தையின் {சூரியனின்} பகுதியுமான கடும் வீரம் கொண்டவனுமான கர்ணனை நீ கொல்வாய். ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, எதிரிகளை அடிப்பவனே, தேவர்கள், தானவர்கள், ராட்சசர்கள் ஆகியோரின் பகுதிகளைக் கொண்டு பூமியில் அவதரிப்பவர்களையும் கொல்வாய். உன்னால் கொல்லப்படும் இவர்கள், தங்கள் செயல்களால் எந்த உலகங்களை அடைய வேண்டுமோ அந்த உலகங்களை அடைவார்கள். ஓ பல்குனா {அர்ஜுனா}, உனது சாதனைகளால், உலகம் உள்ளளவும் உனது புகழ் நிலைத்திருக்கும். போரில் நீ மகாதேவனையே {சிவனையே} திருப்தி செய்துவிட்டாய். நீ விஷ்ணுவுடன் சேர்ந்து, பூமியின் பாரத்தைக் குறைப்பாய். யாராலும் கலங்கடிக்க முடியாது எனது ஆயுதமான இந்த கதாயுதத்தைப் பெற்றுக் கொள். இந்த ஆயுதத்தால் நீ பெரும் சாதனைகளைச் செய்வாய்” {என்றான் எமன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ ஜனமேஜயா, பிறகு பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனன்}, உரிய மந்திரங்கள் மற்றும் சடங்குகளுடனும், அந்த கதா ஆயுதத்தை விடுப்பதற்கும் திரும்பப் பெறுவதற்குமான புதிர்களுடனும் யமனிடம் இருந்து முறையாகப் பெற்றுக் கொண்டான். பிறகு மேகங்களைப் போல நீல நிறம் கொண்ட நீர் வாழ்வனவற்றின் தலைவனான வருணன், அந்த மலை உச்சியின் மேற்கு பாகத்தில் அமர்ந்து, “ஓ பிருதையின் {குந்தியின்} மகனே, க்ஷத்திரியம் பயிலும் க்ஷத்திரியர்களில் முதன்மையானவன். ஓ அகன்ற தாமிரக் கண்கள் உடையவனே, என்னைப் பார், நானே நீர்த்தலைவனான வருணன், என்னால் வீசப்படும் சுருக்குக் கயிறு தாங்கமுடியாததாக இருக்கும். ஓ குந்தியின் மகனே, நீ என்னிடம் இருந்து இந்த வருண ஆயுதங்களை அதை விடுப்பதற்கும், திரும்ப அழைப்பதற்குமான புதிர்களுடன் பெற்றுக் கொள். ஓ வீரனே, இந்த ஆயுதங்களைக் கொண்டு, தாரகைக்காக {பிருஹஸ்பதி மனைவியின் காரணமாக} நடைபெற்ற யுத்தத்தால் பெரும் பலம் வாய்ந்த ஆயிரக்கணக்கான தானவர்கள் கட்டப்பட்டு பிடிபட்டனர். நீ அவற்றை என்னிடம் இருந்து பெற்றுக் கொள். யமனே உனது எதிரியானாலும், இதை நீ உனது கைகளில் வைத்திருந்தால், அவனால் உன்னிடம் இருந்து தப்ப முடியாது. நீ இதை வைத்துக் கொண்டு போர்க்களத்தில் உலாவும் போது, அந்த நிலம் க்ஷத்திரியர்களற்றதாகவிடும்.” என்றான் {வருணன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “வருணன், யமன் ஆகிய இருவரும் தங்கள் தெய்வீக ஆயுதங்களைக் கொடுத்தபிறகு, கைலாசத்தின் உயரங்களில் தனது இல்லத்தைக் கொண்டுள்ள கருவூலத் தலைவன் {குபேரன்}, “ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உன்னுடனான எனது இந்தச் சந்திப்பு, கிருஷ்ணனை நான் சந்தித்தது போன்ற மகிழ்ச்சியை எனக்குக் கொடுக்கிறது. ஓ இடது கையால் வில்லைத்தாங்குபவனே, ஓ பலம்வாய்ந்த கரங்களுடையவனே, நீ முன்பு (மற்ற தேவர்களைப் போல) நித்தியமான தேவனாக இருந்தவன். பழங்கால கல்பங்களில், நீ தினமும் எங்களுடன் தவச்சடங்குகளில் ஈடுபட்டுள்ளாய். ஓ மனிதர்களில் சிறந்தவனே, நான் உனக்கு தெய்வீகப் பார்வையைத் தருகிறேன். ஓ பலம்வாய்ந்த கரங்களுடையவனே, நீ ஒப்பந்த தைத்தியர்களையும் தானவர்களையும் கூட வீழ்த்துவாய். நேரத்தையிழக்கமால், என்னிடமிருந்தும் நீ ஒரு தெய்வீக ஆயுதத்தைப் பெற்றுக் கொள். இதைக் கொண்டு நீ திருதராஷ்டிரனின் படைகளை வீழ்த்த முடியும். எனக்குப் பிடித்தமான இந்த அந்தர்த்தானாயுதத்தைப் பெற்றுக் கொள். சக்தியும், பராக்கிரமும், பிரகாசமும் கொண்ட இந்த ஆயுதம் எதிரிகளைத் துக்கத்தில் ஆழ்த்தும் வல்லமைபெற்றது. சிறப்புமிக்க சங்கரரால் {சிவனால்} திரிபுரம் அழிக்கபட்ட போது, பெரும் பலம் வாய்ந்த அசுரர்கள் இந்த ஆயுதத்தாலேயே உட்கொள்ளப்பட்டார்கள். ஓ ஒப்பற்ற வீரம் கொண்டவனே, உனக்கு கொடுப்பதற்காக நான் அதை எடுக்கிறேன். மேருவைப் போன்ற கண்ணியம் பொருந்திய நீ, இதைத் தாங்குவதற்குத் தகுதி வாய்ந்தவனே” என்றான். இந்த வார்த்தைகள் பேசப்பட்ட பிறகு, பெரும் பலம் பொருந்திய குரு இளவரசனான அர்ஜுனன், குபேரனிடம் இருந்து அந்த தெய்வீக ஆயுதத்தை முறைப்படி பெற்றுக் கொண்டான்.
பிறகு தேவர்களின் தலைவன் {இந்திரன்}, தடையற்ற சாதனைகள் செய்த பிருதையின் மகனிடம் {அர்ஜுனனிடம்} இனிமையான வார்த்தைகளாலும், பேரிகைகளைப் போன்றதும், மேங்களின் கர்ஜனை போன்றதுமான ஆழ்ந்த குரலில், “ஓ பெரும்பலம் வாய்ந்த கரங்கள் கொண்ட குந்தியின் மகனே, நீ பழங்கால தேவனாவாய். நீ ஏற்கனவே உயர்ந்த வெற்றியையும், தேவனின் தன்மையையும் பெற்றுவிட்டாய். ஆனால், ஓ எதிரிகளை ஒடுக்குபவனே, நீ இன்னும் தேவர்களின் காரியங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. நீ விண்ணுலகத்திற்கு வர வேண்டும். ஆகையால், ஓ பெரும் ஒளிவீசும் வீரனே, தயாராக இரு. மாதலியைத் தேரோட்டியாகக் கொண்ட எனது தேர் விரைவில் பூமியில் இறங்கப் போகிறது. ஓ கௌரவனே {அர்ஜுனா}, உன்னை விண்ணுலகம் அழைத்துச் சென்று, அங்கே எனது தெய்வீக ஆயுதங்களை உனக்குக் கொடுப்பேன்” என்றான் {இந்திரன்}.
இமய மலையின் உயரங்களில், ஒன்றாகக் கூடியிருந்து உலகப் பாதுகாவலர்களைக் {லோகபாலர்களைக்} கண்ட, பெரும் சக்தி கொண்ட குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, மிகவும் வியந்து, அங்கே கூடியிருந்த லோகபாலர்களை வார்த்தைகளாலும், நீராலும், பழங்களாலும் முறைப்படி வழிபட்டான். அந்த தேவர்களும் பதில் மரியாதை செய்து திரும்பிச் சென்றனர். விரும்பிய இடத்திற்கு செல்லும் சக்தி படைத்த தேவர்கள் மனோ வேகத்தால் தங்கள் எங்கிருந்து வந்தனரோ அந்த இடங்களுக்கு திரும்பிச் சென்றனர்.
மனிதர்களில் காளையான அர்ஜுனன், இப்படி ஆயுதங்களை அடைந்து, மகிழ்ச்சியால் நிறைந்தான். விருப்பம் நிறைவேறு வெற்றி மகுடம் தரித்தவனாக அவன் தன்னைக் கருதினான்.
கைராத பர்வம் முற்றிற்று**
———————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply