கிருஷ்ணனைத் துதித்த அர்ஜுனன் – வனபர்வம் பகுதி 12அ-விருஷ்ணிகள், பாண்டவர்கள் வெளியேற்றப்பட்டதை அறிந்து கோபத்துடன் இருந்த பாண்டவர்களைக் கானகத்தில் சந்தித்தல்; பாண்டவர்களின் நிலை கண்டு கிருஷ்ணன் கோபம் கொள்ளுதல்; கிருஷ்ணனைச் சமாதானப்படுத்த அர்ஜுனன் துதி பாடல்…
வைசம்பாயனர் சொன்னார், “பாண்டவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்பதைக் கேள்விப்பட்ட போஜர்கள், விருஷ்ணிகள், அந்தகர்கள் ஆகியோர் அந்தப் பெரும் வனத்தில் துயரத்தில் இருந்த வீரர்களிடம் சென்றனர். பாஞ்சாலர்களுக்கு இரத்த உறவுகளும், சேதி நாட்டு மன்னன் திருஷ்டகேதுவும், உலகத்தால் கொண்டாடப்படும் பலம் நிறைந்த சகோதரர்களான கேகேயர்களும், கோபத்தால் எரியும் இதயங்களுடன், பிருதையின் {குந்தியின்} மகன்களைக் காண அந்தக் கானகத்திற்குச் சென்றனர். திருதராஷ்டிரன் மகன்களை நிந்தித்த அவர்கள், “நாம் என்ன செய்வது?” என்றனர். க்ஷத்திரிய குலத்தின் அந்தக் காளைகள், வாசுதேவனைத் {கிருஷ்ணனைத்} தலைமையாகக் கொண்டு, நீதிமானான யுதிஷ்டிரனைச் சுற்றி அமர்ந்தனர். குருக்களில் முதன்மையானவர்களை மரியாதையுடன் வணங்கிய கேசவன் {கிருஷ்ணன்} துக்கத்துடன், “இந்தப் பூமி, துரியோதனன், கர்ணன், துட்சாசனன், தீய சகுனி ஆகியோரது இரத்தத்தைக் குடிக்கும்! இவர்களைப் போர்க்களத்தில் கொன்று, அவர்களைப் பின்பற்றுபவர்களையும், அரசு முறை கூட்டாளிகளையும் வீழ்த்தி, நாம் நீதிமானான யுதிஷ்டிரனை அரியணையில் அமர்த்தலாம்! தீயவர்கள் கொல்லப்படத்தக்கவர்கள்! இதுவே நிலைத்த அறநெறியாகும்” என்றான்
வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு நடந்த அநீதியின் காரணமாக, ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} படைக்கப்பட்ட அத்தனைப் பொருட்களையும் எரிக்கும்படி கோபம் கொண்டான். அர்ஜுனன் அவனைச் சமாதானப் படுத்தினான். கேசவன் {கிருஷ்ணன்} கோபமடைந்ததைக் கண்ட பல்குனன் {அர்ஜுனன்}, அனைத்து பொருட்களுக்கும் ஆன்மாவானவன் {கிருஷ்ணன்}, அளக்க முடியாதவன், நிலையானவன், எல்லையற்ற சக்தி கொண்டவன், பிரஜாபதியின் தலைவன், அனைத்து உலகங்களின் முதன்மை ஆளுனாகிய ஆழமான ஞானம் கொண்ட விஷ்ணு {கிருஷ்ணன்} முற்பிறவிகளில் சாதித்த சாதனைகளை உரைக்க ஆரம்பித்தான்”
“அர்ஜுனன், “பழங்காலத்தில், ஓ கிருஷ்ணா, மாலை சந்திக்கும் இடத்தை வீடாகக் கொண்ட முனிவனாக பத்தாயிரம் {10000} வருடம் கந்தமாதன மலைகளில் உலவினாய்! பழங்காலத்தில் நீரை மட்டுமே உட்கொண்டு வாழ்ந்து, புஷ்கரா ஏரியின் அருகில் பதினோராயிரம் {11000} வருடங்கள் வசித்திருந்தாய்! ஓ மதுவைக் கொன்றவனே, கரங்களை உயர்த்தி, ஒற்றைக் காலில் உயர்ந்த மலைகளான பதரிகா மலைகளில் காற்றை மட்டுமே உட்கொண்டு நூறு {100} வருடங்கள் நின்று கழித்தாய். மேலாடை களைந்து, உடல் மெலிந்து, நரம்புகளால் ஆன உருவம் போல சரஸ்வதி நதிக்கரையில் இருந்து, பனிரெண்டு {12} வருட வேள்வியைச் செய்தாய்! ஓ பெரும் பலமும் சக்தியும் கொண்ட கிருஷ்ணா, ஆயிரம் {1000} தேவ வருடங்கள் நெடுக ஒற்றைக் காலில் அறவோர் வந்து போகும் பிரபாசம் என்ற சமவெளியில் நின்றிருந்தாய்.
நீயே படைப்புகளுக்கு காரணமும் வழியுமாக இருக்கிறாய் என்று வியாசர் என்னிடம் சொல்லியிருக்கிறார். ஓ கேசவா, க்ஷேத்திரத்தின் தலைவா {நினைவு நிலை, அறிவு, அத்தியாவசிய உறுப்புகள், பத்து உணர்வுகள், பஞ்சபூதங்கள், ஆசை, வெறுப்பு, இன்பம், வலி, உறுப்புகளின் கலவை மற்றும் சைத்தன்யம் ஆகியவை அடங்கிய மகாபூதத்தின் தலைவா}, நீ அனைத்து மனங்களையும் அசைப்பவன், அனைத்துப் பொருட்களுக்கு ஆதியும் அந்தமும் ஆனவன்! அனைத்து தவங்களும் உன்னிலேயே ஓய்கின்றன. நீயே அனைத்து வேள்விகளையும் உள்ளடக்கிய நித்தியமானவன்! இந்த பூமியின் முதல் வாரிசான அசுரன் நரகனைக் கொன்று, அவனது காது குண்டலங்களை அடைந்தாய். முதல் குதிரை வேள்வியை {அசுவமேத யாகத்தை} {அந்த அசுரனையே வேள்விக் குதிரையாக்கி} நீயே செய்தாய்.
ஓ அனைத்து உலகங்களின் காளையே, இச்சாதனையைச் செய்து, அனைத்தையும் வென்றவன் நீ! தைத்தியர்கள் மற்றும் தானவர்களைப் போரில் கொன்றவன் நீ. பெரும் கரம் கொண்ட கேசவா {கிருஷ்ணா}, சச்சியின் தலைவனுக்கு {இந்திரனுக்கு} அண்ட ஆளுகையைக் கொடுத்து, மனிதர்களுக்கு மத்தியில் நீ பிறந்திருக்கிறாய்! ஓ எதிரிகளைக் கொல்பவனே, ஆதி நீரில் மிதந்து, அதன் தொடர்ச்சியாக ஹரி, பிரம்மன், சூரியன், தர்மன், தத்ரி, யமன், அனலன், வசு, வைஸ்ரவணன், ருத்ரன், காலன், வானம் மற்றும் பத்து திக்குகள் ஆகியவர்களாக ஆனாய். சுயம்புவாக உருவாகி, இந்த அண்டத்தில் உள்ள அசைவன மற்றும் அசையாதனை ஆகியவற்றின் தலைவனாக இருக்கிறாய். அனைத்து பொருட்களின் படைப்பாளனாய் இருக்கிறாய். இருப்பு கொண்டுள்ளவைகளில் முதன்மையானவன் நீயே!
ஓ மதுவைக் {மது என்ற அசுரனைக்} கொன்றவனே, ஓ அபரிமிதமான சக்தி படைத்தவனே, ஓ கிருஷ்ணா, சைத்திரரத வனத்தில், அனைத்து தேவர்களின் தலைவனை வேள்வி செய்து திருப்தி செய்தாய்! ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, ஒவ்வொரு வேள்வியிலும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தங்கத்தை பகிர்ந்து கொடுத்தாய். ஓ யாதவகுலத்தின் மகனே, ஓ முதன்மையான தன்மைகள் கொண்ட மேன்மையானவனே, *அதிதியின் மகனாகி, நீ இந்திரனுக்குத் தம்பியானாய்! ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, ஓ கிருஷ்ணா, நீ குழந்தையாய் இருக்கும்போதே, உனது சக்தியால், சொர்க்கத்தையும், வானத்தையும் பூமியையையும் மூன்று அடியால் அளந்தாய்! சொர்க்கத்தையும் வானத்தையும் மூடும் ஆன்மா கொண்டவனே, சூரியனின் உடலில் தங்கி, அவனுக்கு உள்ளிருந்து நீயே பிரகாசிக்கின்றாய்.
ஓ மேன்மையானவனே, ஆயிரக்கணக்கான உனது அவதாரங்களில், ஓ கிருஷ்ணா, நீ, நூற்றுக்கணக்கான அசுரர்களைக் கொன்றிருக்கிறாய். மௌரவர்களையும், பாஷர்களையும் அழித்து, நிசுந்தன் மற்றும் நரகனைக் கொன்று, பிராக்ஜோதிஷத்திற்குச் செல்லும் வழியைப் பாதுகாப்பாக்கினாய்! ஜாருதியில் அஹ்பிருத்தியையும், கிராதன் மற்றும் சிசுபாலனையும், அவர்களின் ஆதரவாளர்களையும், ஜராசந்தன் மற்றும் சைப்பியன் மற்றும் சததன்வன் ஆகியோரையும் நீயே கொன்றாய். மேகங்களைப் போல கர்ஜிக்கும் உனது ரதத்தில், சூரியனைப் போலப் பிரகாசித்து, போர்க்களத்தில் ருக்மியை வீழ்த்தி, போஜரின் மகளை {ருக்மிணியை} உனது ராணியாகக் கொண்டாய். இந்திரத்தியும்னனையும், யவனனான கசேருமனையும் நீயே கொன்றாய்! சௌபாவின் தலைவனான சால்வனைக் கொன்று, சௌபா நகரத்தை அழித்தவன் நீயே! உன்னால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலை மேலும் சொல்கிறேன் கேள். கார்த்தவீர்யனுக்கு நிகரான மன்னன் போஜனை ஐராவதியில் வைத்துக் கொன்றாய், கோபதியும், தலகேதுவும் உன்னால் கொல்லப்பட்டனர்!
ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, புனிதமான நகரமும், செல்வச்செழிப்பும், முனிவர்களுக்கு ஏற்புடையதுமான துவாரகையை நீயே உண்டாக்கினாய், கடைசியில் நீயே அந்நகரத்தை கடலுக்குள் மூழ்கடிப்பாய். ஓ மதுவைக் கொன்றவனே, கோபம், பொறாமை, பொய்மை, கொடுமை ஆகியவற்றைக் களைந்திருக்கும் உன்னில் எப்படி கபடம் இருக்க முடியும்? ஓ தேய்மானத்தை அறியாதவனே, வேள்விக்களத்தில் அமர்ந்திருக்கும் உன்னை முனிவர்கள் அணுகி, உனது பாதுகாப்பைக் கோருகின்றனர். ஓ மதுவைக் கொன்றவனே, யுக முடிவில்,அனைத்தையும் அழித்து, அனைத்தையும் உனக்குள் நீயே ஏற்றுக் கொள்கிறாய்.
ஓ விருஷ்ணி குலத்தவனே, யுக ஆரம்பத்தில், தாமரை போன்ற உனது தொப்புளில் இருந்து அசையும் மற்றும் அசையா பொருட்களின் தலைவனான பிரம்மன் உதிக்கிறான். இந்த முழு அண்ட மும் உன்னுடையதே! கொடும் தானவர்களான மது கைதவன் ஆகியோர் பிரம்மனைக் கொல்ல நினைத்த போது, ஓ ஹரி, நீ அதைக் கண்டு, உனது நெற்றியில் இருந்து திரிசூலம் தாங்கும் சம்புவை {சிவனை} ஊற்றெடுக்கச் செய்தாய். இப்படியே இந்த இரு தெய்வங்களும் உனது உடலில் இருந்து, அவர்கள் வேலையைச் செய்ய எழுந்தனர்! இவை யாவையும் நாரதரே எனக்குச் சொன்னார்.
ஓ நாராயணா, பல்வேறு சடங்குகள் கொண்ட பெரும் வேள்வியை பல பரிசுகள் கொடுத்து கொண்டாடி சித்திரரத வனத்தில் நீயே செய்தாய்! ஓ தெய்வமே, ஓ தாமரை இலைகளைப் போன்ற கண்களை உடையவனே, குழந்தையாய் இருக்கும்போதே உனது பலத்தைக் கொண்டும், பலதேவரின் {பலராமரின்} உதவியைக் கொண்டும் நீ செய்த சாதனைகள் யாராலும் செய்ய முடியாதவை. அந்தணர்கள் சூழ கைலாசத்திலும் வசித்தவன் நீயே!” என்று வழிபட்டான் {அர்ஜுனன்}.- * ஓ! கிருஷ்ணா,அதிதியின் மகனாகி, நீ இந்திரனுக்குத் தம்பியானாய்!
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா! – வனபர்வம் பகுதி 12ஆ-திரௌபதி கிருஷ்ணனிடம் தனது துயரை உரைத்தல்
வைசம்பாயனர் தொடர்ந்தார், “கிருஷ்ணனுக்கு உயிரான அந்தச் சிறப்புமிக்க பாண்டவன் {அர்ஜுனன்}, கிருஷ்ணனிடம் இவற்றைச் சொல்லி முடித்தான். ஜனார்த்தனன், (பிருதையின் {குந்தியின்} மகனுக்கு மறுமொழியாக), “நீ என்னுடையவன், நான் உன்னுடையவன். என்னுடையவை எல்லாம் உன்னுடையவையாகும்! உன்னை வெறுப்பவன் என்னையும் வெறுக்கிறான்! உன்னைத் தொடர்பவன் என்னையும் தொடர்கிறான்! பிறரால் வெல்லமுடியாதவனே, நீயே நரன், நான் நாராயணன். அல்லது ஹரி! நாம் மனிதர்களின் உலகத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக முனிவர்களான நரன் மற்றும் நாராயணனாக இருந்தோம். பார்த்தா {அர்ஜுனா}, எனக்காக நீயும், உனக்காக நானும் இருக்கிறோம்! பாரத குலத்தின் காளையே {அர்ஜுனா}, நம்மில் இருக்கும் வித்தியாசங்களை யாராலும் புரிந்து கொள்ள முடியாது!” என்று கிருஷ்ணன் சொன்ன போது அர்ஜுனன் ஊமையானான்.வைசம்பாயனர் தொடர்ந்தார், “கோபமாக இருந்த வீரம் நிறைந்த மன்னர்களுக்கு மத்தியில் சிறப்புமிக்க கேசவன் {கிருஷ்ணன்} இப்படிச் சொன்ன போது, திருஷ்டத்யும்னன் மற்றும் தனது வீர சகோதரர்களால் சூழப்பட்ட தாமரை இலைகள் போன்ற கண்களைக் கொண்ட பாஞ்சாலி {திரௌபதி}, பாதுகாப்புத்தர விரும்பி கோபத்துடன் பேசிக்கொண்டு, மைத்துனர்களுடன் அமர்ந்திருந்த அனைவருக்கும் புகலிடமானவனை {ரட்சகனை} {கிருஷ்ணனை} அணுகினாள்
“அனைத்துப் பொருட்களையும் படைப்பதில் நீ ஒருவனே பிரஜாபதி என்றும் அனைத்து உலகங்களையும் படைத்தவன் நீ என்றும் அசிதரும், தேவலரும் சொல்லியிருக்கின்றனர். கட்டுப்படுத்தப்பட முடியாதவனே {கிருஷ்ணா}, மதுசூதனா {ஓ மதுவைக் கொன்றவனே}, நீயே வேள்வி என்றும், நீயே வேள்வியைச் செய்பவன் என்றும், நீயே நடத்தப்படும் வேள்வியை ஏற்றுக் கொள்பவன் என்றும், நீயே விஷ்ணு என்றும் ஜமதக்னேயர் சொல்கிறார். ஆண்மக்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, நீயே மன்னிப்பு என்றும், நீயே உண்மை என்றும் முனிவர்கள் சொல்கிறார்கள்! நீயே உண்மையில் இருந்து பிறந்த வேள்வி என்று காசியபர் சொல்கிறார்! மேன்மையானவனே {கிருஷ்ணா}, சத்தியர்களுக்கும், சிவன்களுக்கும் நீயே தேவன் என்றும், நீயே அனைத்துப் பொருட்களின் படைப்பாளனும் தலைவனும் ஆவாய் என்றும் நாரதர் சொல்கிறார். மனிதர்களில் புலி போன்றவனே {கிருஷ்ணா}, பொம்மைகளை வைத்து விளையாடும் சிறு பிள்ளையைப் போல, பிரம்மன், சங்கரன், சக்ரன் உள்ளிட்ட தேவர்களை வைத்து நீயே விளையாடுகிறாய்! மேன்மையானவனே {கிருஷ்ணா} வானம் உனது தலையாலும், பூமி உனது பாதத்தாலும் மூடியிருக்கிறது. இந்த உலகங்கள் உனது கருவறைகளாக இருக்கின்றன. நீயே நித்தியமானவன்! வேத அறிவு, ஆன்மசக்தி மற்றும் தவத்தால் பரிசுத்தமானவர்களும், ஞானத்தால் ஆன்ம பார்வையைக் கொண்டவர்களுமான முனிவர்கள், பொருட்களில் சிறந்த பொருள் நீயே என்று சொல்கின்றனர்.
ஆண்மக்களின் தலைவனே அறச்செயல்களுக்குத் தங்களை அர்ப்பணித்து, போர்க்களத்தில் புறமுதுகிடாமல், சாதனைகள் அனைத்தும் சாதித்த எல்லா அரசமுனிகளுக்கும் நீயே புகலிடமாய் இருக்கிறாய். அனைத்திற்கும் நீயே தலைவனாக இருக்கிறாய். எங்கும் நிறைந்திருப்பவனாக நீயே இருக்கிறாய். அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாக நீயே இருக்கிறாய். அனைத்திலும் வியாபித்து செயல்படும் சக்தியாக நீயே இருக்கிறாய். ஏழு உலகங்களும், அதை ஆள்பவர்களும், நட்சத்திர சேர்கைகளும், அடிவானத்தின் பத்து புள்ளிகளும், வான், நிலவு, சூரியன் ஆகியவை அனைத்தும் உன்னிலேயே நிறுவப்பட்டிருக்கின்றன! பலம் நிறைந்த கரம் கொண்டவனே {கிருஷ்ணா}, (உலகம் சார்ந்த) உயிரினங்களின் அறநெறிகளும், அண்டத்தின் நிலையாமையும், உன்னில் நிறுவப்பட்டிருக்கின்றன! அனைத்து உயிரினங்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகிய அனைத்திற்கும் உயர்ந்த தலைவனாக {கடவுளாக} நீயே இருக்கிறாய்! எனவே, {மதுசூதனா} மதுவைக் கொன்றவனே {கிருஷ்ணா}, பாசத்தால் உந்தப்பட்டு என்னைப் பொறுத்துக் கொள். நான் இப்போது எனது கவலைகளை உன்னிடம் சொல்லப் போகிறேன்!
கிருஷ்ணா, பிருதையுடைய {குந்தியுடைய} மகன்களின் மனைவியும், திருஷ்டத்யும்னனின் தங்கையும், உனது தோழியுமான {நண்பருமான} என்னைப் போன்ற ஒருத்தி, சபையில் எப்படி இழுத்துச் செல்லப்படலாம்! ஐயோ, எனது மாதவிடாய்க் காலத்தில், ரத்தக்கறையுடன், ஒற்றையாடையுடன் நடுங்கிக் கொண்டும் அழுது கொண்டும் இருந்த நான் குருக்களின் சபைக்கு இழுத்துச் செல்லப்பட்டேன்! அந்தச் சபையில் இருந்த மன்னர்களுக்கு மத்தியில் ரத்தக்கறையுடன் இருந்த என்னைக் கண்ட திருதராஷ்டிரனின் தீய மகன்கள் எள்ளி நகையாடினர்! மதுவைக் கொன்றவனே {கிருஷ்ணா}, பாண்டுவின் மகன்களும், பாஞ்சாலர்களும், விருஷ்ணிகளும் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே {உயிருடன் இருக்கும்போதே} என்னை அடிமையாகக் கொள்ளும் தங்கள் விருப்பத்தைச் சொல்ல தைரியம் கொண்டனர்!
கிருஷ்ணா, விதிப்படி நான் திருதராஷ்டிரருக்கும் பீஷ்மருக்கும் மருமகளாவேன்! இருப்பினும், ஓ மதுவைக் கொன்றவனே, பலவந்தமாக என்னை அடிமையாகக் கொள்ள விரும்பினர்! தாங்கள் மணந்து கொண்ட மனைவியான நான் கொடுமையான முறையில் நடத்தப்பட்டபோது (அசைவில்லாமல்) பார்த்துக் கொண்டிருந்த போர்க்களத்தில் பலம்வாய்ந்தவர்களும் முதன்மையானவர்களுமான பாண்டவர்களை நான் குற்றம்சாட்டுகிறேன்! பீமேசேனரின் பலத்திற்கு ஐயோ, அர்ஜுனரின் காண்டீவத்திற்கு ஐயோ. ஜனார்த்தனா, அற்ப மனிதர்களால் நான் அவமதிக்கப்பட்டு துன்பறுவதை அவர்கள் இருவரும் கண்டனர். பலவீனமான கணவன் கூட, தான் மணந்த மனைவியைக் காப்பான். அந்த நித்தியமான அறநெறியை அறம்சார்ந்தவர்கள் தவறாமல் பின்பற்றுவர். மனைவியைக் காப்பதால் ஒருவன் தனது சந்ததியைக் காக்கிறான். சந்ததியைக் காப்பதால் அவன் தன்னையே காத்துக் கொள்கிறான். ஒருவன் தன் மனைவியிடத்தில் தானே பிறக்கிறான். ஆகையால், மனைவியானவள் ஜெயா என்று அழைக்கப்படுகிறாள்.
ஒரு மனைவியும் தனது கருவறையில் புகுந்து அவனே அவளுக்குப் பிறப்பதால் தனது தலைவனைக் {கணவனைக்} காக்க வேண்டும்! பாதுகாப்பு கோரும் யாரையும் பாண்டவர்கள் கைவிடுவதில்லை. இருப்பினும், அப்படிக் கோரிய என்னைக் கைவிட்டார்கள்! எனது ஐந்து கணவர்களால் அபரிமிதமான சக்தி கொண்ட ஐந்து மகன்களைப் பெற்றேன். யுதிஷ்டிரரால் பிரதிவிந்தியனையும், விருகோதரரால் {பீமனால்} சூதசோமனையும், அர்ஜுனரால் சுரூதகீர்த்துயம், நகுலரால் சதானிகனையும், இளையவரால் {சகாதேவனால்} சுரூதகர்மனையும் பெற்றெடுத்தேன். அவர்கள் அனைவரும் அசைக்கமுடியாத ஆற்றல் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அவர்களுக்காகவாவது என்னைக் காப்பது முக்கியமில்லையா? கிருஷ்ணா, உனது மகன் பிரத்யும்னனைப் போன்றே அவர்களும் {எனது மகன்களும்} பெரும் வீரர்களே! அவர்கள் அனைவரும் வில்லாளிகளில் முதன்மையானவர்களாகவும், எந்த எதிரியாலும் போர்க்களத்தில் வெல்லப்பட முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். அவ்வளவு சக்தி உடையவர்கள் திருதராஷ்டிரர் மகன்களின் தீங்குகளை ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்? ஏமாற்றப்பட்டு, நாட்டை இழந்து, அடிமைகளாக்கப்பட்டனர். நானும் எனது மாதவிடாயின் போது, மேனியில் ஒற்றையாடையுடன் சபைக்கு இழுத்துச் செல்லப்பட்டேன்.
மதுசூதனா {மதுவைக் கொன்றவனே {கிருஷ்ணா}, யாராலும் நாணேற்ற முடியாத காண்டீவத்திற்கு ஐயோ, அர்ஜுனரையும், பீமரையும், உன்னையும் காத்துக் கொள். ஓ கிருஷ்ணா, {இவ்வளவையும் செய்த பிறகும்) துரியோதனன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டதால், பீமரின் பலத்திற்கு ஐயோ, அர்ஜுனரின் வீரத்திற்கு ஐயோ. மதுசூதனா {மதுவைக் கொன்றவனே}, அவனே {துரியோதனனே} முன்பும், சிறு பிள்ளைகளாக {பிரம்மச்சாரிகளாக} இருந்த குற்றமற்ற பாண்டவர்களை அவர்களது தாயுடன் நாட்டைவிட்டுத் துரத்தினான். பீமருக்கு உணவில் கடும் விஷத்தைக் கலந்து கொடுத்ததும் அந்தப் பாவியே. ஆனால், ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பீமர் கடும் விஷத்தையும் உணவுடன் சேர்த்து செரித்தார். அல்லது அன்றே பீமரின் நாட்கள் முடிந்திருக்கும்.
கிருஷ்ணா, இந்தத் துரியோதனனே, வீட்டிற்கருகில் பிரமாணம் என்ற ஆலமரத்தடியில் நின்று கொண்டு, தூங்கிக்கொண்டிருந்த பீமரை, அவர் எதிர்பாராத விதத்தில் கங்கைக்குள் தள்ளவிட்டுவிட்டு நகரத்திற்குத் திரும்பினான். ஆனால் குந்தியின் மகனான பலம் பொருந்திய கரங்களுடைய பீமசேனர், தூக்கத்தில் இருந்து எழுந்து, கட்டுக்களை அவிழ்த்து, நீரில் இருந்து எழுந்து வந்தார். இந்தத் துரியோதனனே கடும் விஷம் நிறைந்த கருநாகங்களை பீமசேனர் உடல் முழுவதும் கடிக்க வைத்தான். ஆனால் இந்த எதிரிகளைக் கொல்பவர் சாகவில்லை. விழித்தெழுந்த குந்தியின் மகன் அனைத்து நாகங்களை அடித்து நொறுக்கி, துரியோதனனின் விருப்பத்துகந்த தேர்ப்பாகனை தனது இடது கையால் கொன்றார்.
என் வார்த்தைகள் பொய்க்காது என்றான் கிருஷ்ணன் – வனபர்வம் பகுதி 12இ-திரௌபதி கிருஷ்ணனிடம் தனது துயரை உரைத்தல்; கிருஷ்ணன் திரௌபதிக்கு சமாதானம் கூறுதல்; அர்ஜுனன் மற்றும் திருஷ்டத்யும்னன் ஆகியோர் உறுதி கூறுதல்…
திரௌபதி தொடர்ந்தாள், “*1வாரணாவதத்தில் தங்கள் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை {பாண்டவர்களை} எரித்துக் கொல்ல எண்ணி, அவனே {துரியோதனனே} அந்த வீட்டுக்குத் தீ வைத்தான். இத்தகு செயலை யாரால் செய்ய முடியும்? பிறகுதான் சிறப்புவாய்ந்த குந்தி பேரிடரால் தாக்கப்பட்டு, நெருப்பு சூழ, பயங்கரமாகக் கதற ஆரம்பித்தாள். தனது பிள்ளைகளிடம், “ஐயோ, கெட்டேன்! இந்த நெருப்பில் இருந்து நாம் இன்று தப்பிப்பது எவ்வாறு! ஐயோ எனது பாலகர்களுடன் நான் அழிந்து போகப் போகிறேனே!” என்றாள். பிறகு, பலம் நிறைந்த கரங்களும், காற்றின் சக்தியைப் போன்ற வீரத்தையும் கொண்ட பீமர், தனது தாய்க்கும் சகோதரர்களுக்கும் “*2பறவைகளின் மன்னனான வினதையின் மகன் கருடனைப் போல நான் ஆகாயத்தில் எழும்புவேன். நமக்கு இந்த நெருப்பிடம் இருந்து பயமில்லை” என்று ஆறுதல் கூறினார். பிறகு தனது தாயை இடது புற இடுப்பிலும், மன்னரை {யுதிஷ்டிரரை} வலது புற இடுப்பிலும், இரட்டையர்களைத் தனது தோள்களிலும், விவத்சுவை {அர்ஜுனரை தனது முதுகிலும் தாங்கிய பெரும் பலம் வாய்ந்த விருகோதரர் {பீமசேனர்}, அவர்கள் அனைவரையும் தூக்கிக் கொண்டு, ஒரே தாவலில் நெருப்பைக் கடந்து, தனது தாயையும், சகோதரர்களையும் நெருப்பில் இருந்து காப்பாற்றினார்.
அதே இரவில் அங்கிருந்து தங்கள் தாயுடன் கிளம்பி, ஹிடிம்பனின் காட்டிற்கருகே வந்தனர். களைத்துப் போய் துயரத்துடன் தங்கள் தாயுடன் உறங்கிக் கொண்டிருக்கும்போது, ஹிடிம்பை என்ற ராட்சச பெண் ஒருத்தி அவர்களை அணுகினாள். தங்கள் தாயுடன் தரையில் படுத்து தூங்கும் பாண்டவர்களைக் கண்டு, ஆசையால் உந்தப்பட்டு, பீமசேனரைத் தனது தலைவராகக் கொள்ள நினைத்தாள். அந்தப் பலவீனமானவள் பீமரின் பாதங்களை எடுத்து தனது மடியில் வைத்து, தனது மிருதுவான கரங்களால் அழுத்திக் கொடுத்தாள். அளவிடமுடியா சக்தியும் பெரும் பலமும், வீழ்த்த முடியா வீரமும் கொண்ட பீமர், உறக்கத்தில் இருந்து எழுந்து அவளிடம், “களங்கமற்ற குணம் கொண்டவளே, நீ இங்கு என்ன விரும்புகிறாய்?” என்று கேட்டார். இப்படிக் கேட்கப்பட்ட அந்தக் களங்கமற்ற, நினைத்த உருவை எடுக்கக்கூடிய ராட்சசப் பெண் மறுமொழியாக அந்த உயர் ஆன்ம பீமரிடம், “இந்த இடத்தில் இருந்து விரைவாக ஓடுங்கள்! பெரும் பலம் கொண்ட எனது தமையன் உங்களைக் கொல்ல வருவான்! ஆகையால் தாமதிக்காமல் விரைந்து செல்லுங்கள்” என்றாள். பீமர் கர்வத்துடன், “நான் அவனிடம் அச்சம் கொள்ளவில்லை! அவன் இங்கு வந்தால், நான் அவனைக் கொல்வேன்!” என்றார். இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டே அந்தப் பயங்கரமான நரமாமிச உண்ணி {ஹிடிம்பன்} அந்த இடத்தில் வந்தான்.
பயங்கரமான உருவத்துடன் காணச் சகிக்காதபடி காட்சியளித்து, உரத்த கர்ஜனை செய்து கொண்டு வந்த அந்த ராட்சசன், “ஹிடிம்பையே, நீ யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய்? அவனை என்னிடம் கொண்டு வா, நான் அவனைச் சாப்பிடுகிறேன். தாமதிப்பது உனக்குத் தகாது” என்றான். ஆனால், களங்கமற்ற அந்த ராட்சசப் பெண் {ஹிடிம்பை} மிகுந்த இரக்கம் கொண்டதாலும், அவர்கள் மீது பரிதாபம் கொண்ட சுத்தமான இதயம் கொண்டதாலும், ஏதும் பேசாமல் இருந்தாள். பிறகு அந்த நரமாமிசம் உண்ணும் கொடிய விலங்கு, பயங்கரமாகக் கர்ஜனை செய்து, பெரும் பலத்துடன் பீமரிடம் விரைந்தான். பெரும் சீற்றத்துடன் அவனை அணுகிய அந்த பலம்வாய்ந்த நரமாமிச உண்ணி, பெரும் கோபம் கொண்டு, பீமரின் கைகளைத் தனது கைகளால் பற்றி, இந்திரனின் வஜ்ராயுதத்தைப் போல இறுக்கிக் கடினமாக்கி, திடீரென பீமரை இடிமின்னலின் சக்தியுடன் ஒரு அடி அடித்தான். ராட்சசனிடம் அகப்பட்ட கரங்களுடன் இருந்த பீமர் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பெரும் கோபம் கொண்டார். பிறகு பீமசேனருக்கும் ஹிடிம்பனுக்கும் இடையில் ஒரு பயங்கரமான போர் நடந்தது. அனைத்து ஆயுதங்களிலும் நிபுணத்துவம் வாய்ந்த அந்த இருவர் புரிந்த போர், வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} விரித்திரனுக்கும் நடந்தப் போரைப் போல இருந்தது.
பாவங்களற்றவனே {கிருஷ்ணா}, அந்த ராட்சசனுடன் நெடுநேரம் விளையாடிய பிறகு பலமும் பெரும் சக்தியும் நிறைந்த பீமர், களைப்புடன் போராடிக் கொண்டிருந்த அந்த நரமாமிச உண்ணியை {ஹிடிம்பனை} கொன்றார். ஹிடிம்பனைக் கொன்ற பிறகு, பிற்பாடு *3கடோத்கசனைப் பெற்ற {அவனது தங்கையான} ஹிடிம்பையை முன் விட்டு, பீமரும் அவரது சகோதரர்களும் சென்றனர். பிறகு அந்த எதிரிகளை ஒடுக்குபவர்கள், தங்கள் தாயை அழைத்துக் கொண்டு, பல அந்தணர்கள் சூழ ஏகசக்கரத்தை நோக்கி முன்னேறினர். அவர்களின் பயணத்திற்கு இடையில், வியாசர் வந்து அவர்களின் நன்மைகள் கருதி அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பிறகு ஏகச்சக்கரத்தை அடைந்ததும், அங்கேயும் கடும் நோன்புகள் நோற்ற பாண்டவர்கள் ஹிடிம்பனைப் போலவே கொடுமையான *4பகன் என்ற பெரும் பலம் வாய்ந்த நரமாமிச உண்ணியைக் கொன்றனர். அடிப்பவர்களில் முதன்மையான பீமர் அந்தக் கொடுமையான நரமாமிச உண்ணியைக் கொன்ற பிறகு, தனது சகோதரர்களுடன் துருபதரின் தலைநகருக்குச் சென்றார். கிருஷ்ணா, நீ பீஷ்மகனின் மகளான ருக்மிணியை அடைந்தது போல, அங்கே தங்கியிருந்த சவ்யசாசின் {அர்ஜுனர்} என்னை அடைந்தார்! மதுசூதனா, *5அர்ஜுனர் மற்றவர்களால் செய்ய முடியாத சாதனையைச் செய்தும், அங்கு கூடிய பல மன்னர்களிடம் போரிட்டும் என்னை சுயம்வரத்தில் வென்றார்.
கிருஷ்ணா இப்படியே எண்ணிலடங்கா துயரங்களுடனும், பெரும் சோகத்துடன் தௌமியரைத் தலைமையாகக் கொண்டு, இனிமையான குந்தியின் துணையின்றி வாழ்ந்து வருகிறேன். பெரும் பலத்தையும் சிங்கம் போன்ற வீரத்தையும் கொடையாகக் கொண்டிருந்தும், எதிரிகளிடம் நான் கேவலப்படும்போது இவர்கள் ஏன் இப்படி அமர்ந்திருந்தார்கள்? பலம் குறைந்த தீய கொடும் எதிரிகளின் கையால் தீங்கிழைக்கப்பட்டு, நான் நீண்ட காலம் எரிந்து கொண்டிருக்க வேண்டியதுதானா? நான் பெருமைமிக்க குலத்தில் பிறந்தேன். *6இயல்புக்கு மிக்க வழியில் இந்த உலகத்துக்கு வந்தேன். பாண்டவர்களின் அன்பு மனைவியாக இருக்கிறேன், சிறப்பு மிக்க பாண்டுவின் மருமகளாக இருக்கிறேன்! மதுவைக் கொன்றவனே {மதுசூதனா} இப்படி பெண்களில் முதன்மையானவளாக, கணவர்களுக்கு என்னை அர்ப்பணித்தவளாக நான் இருப்பினும், இந்திரர்களுக்கு ஒப்பான பாண்டவர்களின் கண்ணெதிரிலேயே கூந்தலைப் பற்றி இழுத்து வரப்பட்டேன்.” என்றாள் {திரௌபதி}.
மென்மையாகப் பேசும் கிருஷ்ணை {திரௌபதி} இப்படிச் சொல்லிவிட்டு தாமரை மொட்டுகளைப் போல இருக்கும் மென்மையான கைகளால் தனது முகத்தை மூடிக்கொண்டு அழத் தொடங்கினாள். அப்படி பாஞ்சாலி {திரௌபதி} வடித்த கண்ணீர் அனைத்து நற்குறிகளும் பெற்ற அவளது ஆழமான, பருத்த, அழகான மார்பகங்களைக் கழுவிச் சென்றது. பிறகு அவள் தனது கண்களைத் துடைத்துக் கொண்டு, அடிக்கடி பெருமூச்சுவிட்டபடி கோபம் நிறைந்த வார்த்தைகளுடனும் தடைபட்ட குரலுடனும், “கணவர்கள், அல்லது மகன்கள், அல்லது நண்பர்கள், அல்லது சகோதரர்கள், அல்லது தந்தையோ அற்றவளாக நான் இருக்கிறேன். மதுசூதனா எனக்கு நீயும் இல்லாது போனாய். தாழ்ந்த எதிரிகளால் நான் கடுமையாக நடத்தப்பட்ட போது, நீங்கள் அனைவரும் அதைக் கண்டும் அசையாமல் அமர்ந்திருந்தீர்கள்! கர்ணன் செய்த கேலியால் ஏற்பட்ட வருத்தம் தணிக்கப்பட முடியாததாக இருக்கிறது! இவற்றின் அடிப்படையில், உறவினராக, மரியாதைக்காக, நமது நட்புக்காக, உனக்கு என் மீது இருக்கும் தலைமைத் தன்மைக்காக நான் எப்போதும் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டியவள்” என்றாள்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், அந்த வீரர்களின் கூட்டத்தில் அழுது கொண்டிருந்த திரௌபதியிடம் வாசுதேவன் {கிருஷ்ணன்}, “அழகான மங்கையே, நீ யார் மீது கோபத்துடன் இருக்கிறாயோ அவர்களின் மனைவிமார், விவத்சுவின் {அர்ஜுனனின்} கணைகளால் தாக்குண்டு இரத்தத்தில் நனைந்து தரையில் கிடக்கும் தங்கள் கணவர்களைக் கண்டு, நீ இப்போது எப்படி அழுகிறாயோ அதே போல அழுவார்கள். பெண்ணே, அழாதே, பாண்டுவின் மகன்களுக்காக நான் எனது முழு சக்தியையும் பயன்படுத்துவேன்! நீ (மறுபடியும்) மன்னர்களுக்கு ராணியாவாய் என்பதை நான் உனக்கு உறுதி கூறுகிறேன். வானம் இடிந்து விழலாம், இமயம் பிளந்து போகலாம், கடல் நீர் வற்றிப் போகலாம், ஆனால் எனது வார்த்தைகள் பலனற்று போகாது {பொய்க்காது}!” என்றான். அச்யுதனின் மறுமொழியைக் கேட்ட திரௌபதி தனது மூன்றாம் கணவனை (அர்ஜுனனை} சாய்ந்தபடி பார்த்தாள். பலம்வாய்ந்த மன்னா {ஜனமேஜயா}, அர்ஜுனன் திரௌபதியிடம், “தாமிரம் போன்ற அழகான கண்களை உடையவளே வருந்தாதே! சிறப்புமிக்கவளே, மதுவைக் கொன்றவன் {மதுசூதனன் = கிருஷ்ணன்} சொல்வது போலவே நடக்கும்! அழகானவளே, வேறு மாதிரியாக நடக்காது!” என்றான்.
திருஷ்டத்யும்னன், “நான் துரோணரைக் கொல்வேன், சிகண்டின் பாட்டனைக் {பீஷ்மரைக்} கொல்வான். பீமசேனர் துரியோதனனைக் கொல்வார், தனஞ்செயர்{அர்ஜுனன்} கர்ணனைக் கொல்வார். தங்கையே, ராமன் {பலராமன்} மற்றும் கிருஷ்ணனின் துணையாகக் கொண்ட எங்களை விரித்திரனைக் கொன்றவனால் கூட வீழ்த்த முடியாது. அப்படி இருக்கும்போது திருதராஷ்டிரனின் மகன்களால் என்ன செய்ய முடியும்?” என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “இந்த வார்த்தைகள் பேசப்பட்ட பிறகு, அனைத்து வீரர்களும் தங்கள் முகங்களை வாசுதேவன் பக்கமாக திருப்பினர். அவன், அவர்களுக்கு மத்தியில் இருந்து பின்வருமாறு பேசினான்.
சூது பெருந்தீங்கானது – வனபர்வம் பகுதி 13-சூதாட்ட காலத்தில் தாம் துவாரகையில் இல்லாததே யுதிஷ்டிரனுக்கு நேர்ந்த துயரத்திற்குக் காரணம் என்று கிருஷ்ணன் சொல்வது….
வாசுதேவன் சொன்னான், “பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, நான் துவாரகையில் இருந்திருந்தால், ஓ மன்னா, இந்தத் தீமை உம் மேல் விழுந்திருக்காது! கட்டுப்படுத்தப்பட முடியாதவனே, அம்பிகையின் மகனோ (திருதராஷ்டிரரோ), துரியோதனனோ, மற்ற கௌரவர்களோ என்னை அழைக்காதிருந்தால்கூட அந்தச் சூதாட்டத்துக்கு வந்து, அந்த ஆட்டத்தின் தீமைகளை எடுத்துக் கூறி, பீஷ்மர், துரோணர், கிருபர், பால்ஹீகர் ஆகியோரை உதவிக்கு அழைத்து அந்த ஆட்டம் நடவாமல் தடுத்திருப்பேன்.
மேன்மையானவரே {யுதிஷ்டிரரே}! உமக்காக ஏகாதிபதிகளில் முதன்மையான விசித்திரவீரியனின் மகனிடம் {திருதராஷ்டிரரிடம்}, உமது மகன்களுக்கும் பகடைக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் போகட்டும் என்று சொல்லியிருப்பேன். நீர் இப்படி துயரில் விழக்காரணமான பல தீமைகளையும், முன்பொருகாலத்தில் வீரசேனின் மகன் நாட்டை இழந்த கதையையும் எடுத்துக் கூறியிருப்பேன். மன்னா {யுதிஷ்டிரா}, பகடையினால் ஏற்படும் தீமைகளை எண்ணிப்பாராமல் மனிதன் அதில் விழுகிறான்! அவ்விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் மனிதன் (வெற்றியடையும் விருப்பத்தால்} எப்படித் தொடர்ந்து விளையாடுவான் என்பதை விவரித்துச் சொல்லியிருப்பேன். மனிதர்களை மயக்கி அடிமையாக வைக்கும் பெண், பகடை, வேட்டை, மது ஆகிய நான்கும் மனிதனின் செழிப்பை அழிக்கும் நான்கு தீமைகளாகும். சாத்திரமறிந்த அனைவரும் இவர்களை அனைத்து தீமைகளும் தாக்கும் என்ற கருத்தையே கொண்டிருக்கின்றனர். பகடைக்கு அடிமையாக இருக்கும் அந்த குறிப்பிட்ட மனிதர்களுக்கே அதன் அனைத்துத் தீமைகளும் தெரியும்.
பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, அம்பிகையின் மகனுக்கு {திருதராஷ்டிரருக்கு} முன்னால் தோன்றி, இந்தப் பகடையின் மூலம் ஒரு நாளில் மனிதர்கள் அனைத்து உடைமைகளையும் இழந்து துயரத்தில் வீழ்வதையும், அவர்களே சுவைக்காத அவர்களது செல்வத்தை இழந்து கடும் வார்த்தைகள் பேசும் நிலை ஏற்படுவதையும் எடுத்துக் கூறியிருப்பேன்.
குரு குலத்தைத் தழைக்க வைப்பவரே {யுதிஷ்டிரரே}, இவற்றையும் இன்னும் பிற தீமைகளையும் சுட்டிக் காட்டியிருப்பேன். நான் சொல்லும் வார்த்தைகளை அவர்{திருதராஷ்டிரர்} ஏற்றுக் கொண்டிருந்தால் குருக்களின் நலனும், அறமும் பாதுகாக்கப்பட்டிருக்கும்!
மன்னர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, அவர் மருந்து போன்ற எனது நல்ல ஆலோசனைகளை ஏற்க மறுத்திருந்தால், பிறகு, ஓ பாரதகுலத்தில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, நான் எனது பலத்தால் அவரை {திருதராஷ்டிரரைக்} கட்டாயப்படுத்தியிருப்பேன்! அந்தச் சபையில் அவருக்காகக் காத்திருப்பவர் எவரும், நண்பர் என்ற போர்வையில் எதிரியாய் இருக்கும் எவரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வந்தால், அவர்கள் அனைவரையும் அந்த சூதாடிகளுடன் சேர்த்துக் கொன்றிருப்பேன்! கௌரவரே {யுதிஷ்டிரரே}, நான் அப்போது ஆனர்த்த தேசத்தில் {துவாரகையில்} இல்லாததாலேயே உமக்குப் பகடை மூலம் இந்தத் துயர் வந்தது.
குருக்களில் சிறந்தவரே, பாண்டுவின் புதல்வரே {யுதிஷ்டிரரே}, துவாரகைக்கு வந்ததும் யுயூதனன் மூலம் உமக்கு நேர்ந்த பேரிடரைப் பற்றி அறிந்தேன். மன்னர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, இதைக் கேள்விப்பட்டதும் துயரத்தால் தாக்குண்டு, கனத்த இதயத்துடன், விரைவாக உம்மைப் பார்க்க விரும்பி இங்கு வந்தேன். மன்னா, பாரத குலத்தின் காளையே, நீர் பெரும் துன்பத்தில் விழுந்துவிட்டீர்! கேடுகாலத்தில் மூழ்கியிருக்கும் உம்மையும் உமது சகோதரர்களையும் நான் காண்கிறேன்!” என்றான் {கிருஷ்ணன்}.
சிசுபால வதத்திற்கு பழி வாங்கிய சால்வன்! – வனபர்வம் பகுதி 14-ஆனர்த்த நாட்டில் {துவாரகையில்} கிருஷ்ணன் இல்லாத காரணம் யாது என்று யுதிஷ்டிரன் கேட்டல்; சிசுபாலனின் வதத்திற்கு பழி வாங்குவதற்காக சால்வன் துவாரகையில் நடத்திய வெறியாட்டத்தை கேள்விப்பட்டு சால்வன் நகரத்தை அழிக்கச் சென்றிருந்தாக கிருஷ்ணன் பதிலுரைத்தல்…
யுதிஷ்டிரன் சொன்னான், “கிருஷ்ணா, நீ ஏன் அங்கு {ஆனர்த்த நாட்டில்) இல்லை? விருஷ்ணி குல வழித்தோன்றலே, நீ வெளியே சென்றிருந்த போது எங்கே வசித்திருந்தாய்? நாட்டை விட்டு வெளியே சென்று என்ன செய்து கொண்டிருந்தாய்?”கிருஷ்ணன், “பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, நான் சால்வ நகரத்தை {சௌபம்} அழிக்க (அழிக்கும் ஏற்பாட்டைச் செய்ய) சென்றிருந்தேன். கௌரவர்களில் முதன்மையானவரே, நான் அப்படிச் செய்ய வேண்டிய காரணங்களைக் கேளும். தமகோஷனின் வீர மகனும், நன்கு அறியப்பட்ட மன்னனுமான பலம் நிறைந்த கரங்களும் பெரும் சக்தியைக் கொண்டவனுமான சிசுபாலன் கொல்லப்பட்டான். பாரதர்களில் சிறந்தவரே, உமது ராஜசுய வேள்வியில் எனக்கு அளிக்கப்பட்ட முதல் மரியாதையை ஏற்க முடியாததால் கோபம் கொண்ட அந்தத் *தீயவன் {சிசுபாலன்} என்னால் கொல்லப்பட்டான். ஓ பாரதரே, அவன் கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்ட சால்வன், கடும் கோபம் கொண்டு, நான் உம்மிடம் தங்கியிருந்த போது, {மூத்த வீரர்கள்} யாருமற்ற துவாரகைக்குச் சென்றான்.
விலைமதிப்பில்லா உலோகங்களால் செய்யப்பட்டதால் சௌபம் என்று அழைக்கப்பட்ட ரதத்தில் அங்கே சென்று, விருஷ்ணி குலத்தின் இளம் வீரர்களுடன், எங்கள் குல காளைகளுடன் கருணையின்றி போரிட்டான். அங்கே பல விருஷ்ணி குல இளம் இளவரசர்களைக் கொன்ற அந்த தீயவன் {சால்வன்}, அந்த நகரத்தின் {துவாரகையின்} தோட்டங்கள் அத்தனையும் அழித்துவிட்டான். பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, அவன் {சால்வன்} “அந்த விருஷ்ணி குல தாழ்ந்தவனும், வசுதேவரின் தீய ஆன்மா கொண்ட மகனுமான வாசுதேவன் {கிருஷ்ணன்} எங்கே? போரில் விருப்பம் கொண்ட அவனது கர்வத்தை அழிக்கிறேன். ஆனர்த்தர்களே! உண்மையைச் சொல்லுங்கள். அவன் எங்கிருக்கிறானோ நான் அங்கே செல்கிறேன். கம்சன் மற்றும் கேசியைக் கொன்றவனைக் கொன்ற பிறகே நான் திரும்பிச் செல்வேன். அவனைக் கொல்லாது நான் திரும்புவதில்லை என்று எனது ஆயுதங்களின் மீது சத்தியம் செய்கிறேன்” என்று சொல்லித் திரும்பத் திரும்ப “அவன் எங்கே? அவன் எங்கே?” என்றும் கேட்ட சௌபத்தின் தலைவன் {சால்வன்} என்னுடன் போரிட விரும்பி அங்கும் இங்கும் ஓடினான்.
மேலும் அந்தச் சால்வன், “சிசுபாலனை அவன் கொன்றதால் ஏற்பட்டிருக்கும் எனது கோபத்தால் அற்பனும், பாவியும், நம்பிக்கை துரோகம் செய்பவனுமான அவனை {கிருஷ்ணனை} இன்று யமனின் மாளிகைக்கு அனுப்புகிறேன்.” மன்னா {யுதிஷ்டிரரே}, மேலும் அவன் {சால்வன்}, “இளம்பருவம் கொண்டு சிறுவனாக இருந்த என் தம்பியை {சிசுபாலனை} போர்க்களத்தில் இல்லாது இருந்த அவனை {என் தம்பி சிசுபாலனை} தயாராக இல்லாத நிலையில் கொன்ற அந்த இழிந்த ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} நான் கொல்வேன்.” என்று சொன்னான்.
பெரும் மன்னா, குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரரே}, அவன் {சால்வன்} இப்படி ஒப்பாரி வைத்து அழுது, என்னை நிந்தித்து, விலைமதிப்பில்லாத உலோகங்களால் ஆன, நினைத்த இடத்திற்கு செல்லவல்ல தனது ரதத்துடன் {சௌபம் என்ற ரதத்துடன்} ஆகாயத்தில் எழும்பினான். கௌரவரே {யுதிஷ்டிரரே}, நாடு திரும்பியதும், அந்தத் தீய மனதுடைய மாத்திக நாட்டு மன்னன் {மார்த்திகாவதகம்} என்னைக் குறித்து சொன்னதையெல்லாம் கேள்விப்பட்டேன். குரு குலத்தின் வழி வந்தவரே {யுதிஷ்டிரரே}, ஓ மன்னா, இதனால் கோபம் அடைந்த நான், அனைத்தையும் நினைத்துப் பார்த்து, அவனைக் கொல்ல மனதில் தீர்மானம் செய்தேன். கௌரவரே {யுதிஷ்டிரரே}, ஆனர்த்தர்களை அவன் ஒடுக்கியதையும், என்னை நிந்தித்ததையும், அவனது மிதமிஞ்சிய திமிரையும் அறிந்த நான் அந்த இழிந்தவனை அழிக்கத் தீர்மானம் கொண்டேன்.
பூமியின் தலைவரே {யுதிஷ்டிரரே}, அதன் படி, அந்தச் சௌபனைக் {சௌபத்தின் அதிபதியான சால்வனைக்} கொல்ல நான் {எனது துவாரகை நகரத்தை விட்டு} வெளியேறினேன். அவனை இங்கும் அங்கும் தேடி, கடைசியாக கடலுக்கு நடுவில் உள்ள தீவு ஒன்றில் அவனைக் {சால்வனைக்} கண்டேன். மன்னா {யுதிஷ்டிரரே}, பிறகு கடலில் இருந்து பெறப்பட்ட பாஞ்சஜன்யத்தை எடுத்து ஊதி, சால்வனைப் போருக்கு அழைத்து சவால் விட்டேன். நான் போருக்காக அங்கு நின்றேன். அந்த நேரத்தில் எண்ணிலடங்கா தானவர்கள் என்மீது தாக்குதல் நடத்தினார்கள். கடைசியில் அவர்களையெல்லாம் வீழ்த்தி தரையில் சாய்த்தேன். பெரும் பலம்வாய்ந்த கரம் கொண்டவரே! இந்தக் காரணத்தினால்தான் நான் அங்கு {உம்மிடம்} வரமுடியவில்லை! ஹஸ்தினாபுரத்தில் நடந்த நியாயமற்ற பகடையாட்டத்தைக் கேள்விப்பட்ட பிறகு, துயரில் மூழ்கியிருக்கும் உம்மைக் காண இங்கு வந்தேன்” என்றான் {கிருஷ்ணன்}.
துவாரகையில் மதுவிலக்கு! – வனபர்வம் பகுதி 15-சால்வனின் முற்றுகையில், துவாரகையில் நடந்த போர்த்தயாரிப்புகள் மற்றும் கோட்டைகளின் தன்மைகளைக் குறித்து கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு விவரித்தல்..
யுதிஷ்டிரன், “பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட சிறப்புகள் மிக்க வாசுதேவா, சௌபத்தின் தலைவன் {சால்வன்} மரணம் குறித்து விரிவாகச் சொல். இந்த விவரிப்பால் எனது ஆர்வம் தணியவில்லை” என்று கேட்டான்.வாசுதேவன் {கிருஷ்ணன்}, “பெரும்பலம்வாய்ந்த கரம் கொண்ட மன்னா, *சுரூதஸ்ரவசின் மகன் (சிசுபாலன்) என்னால் கொல்லப்பட்டதைக் கேட்ட சால்வன், ஓ பரத குலத்தில் சிறந்தவா {யுதிஷ்டிரரே}, துவாராவதி நகரத்திற்கு வந்தான்! பிறகு, பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே} அந்தத் தீய மன்னன் {சால்வன்}, தனது படைகளை வரிசையாக நிறுத்தி, அந்த நகரத்தைச் சுற்றிலும் மேலிருந்தும் முற்றுகையிட்டான். வானில் தன்னை நிறுத்திக் கொண்ட அந்த மன்னன் {சால்வன்} அந்த நகரத்திற்கு {துவாரகைக்கு} எதிராகப் போர் தொடுத்தான். எல்லா புறங்களில் இருந்தும் அடர்த்தியான ஆயுதங்களைப் பொழிந்து அந்தப் போர் நடந்தது.
பாரத குலத்தின் காளையே, அந்த நகரம் {துவாரகை} எல்லாப்புறங்களிலும் கோட்டை பாதுகாப்புடனும் இருந்தது. அந்தக் கோட்டை, கோட்டை கட்டும் அறிவியலுடன் இருந்தது. நீண்ட முக்கோண வடிவ கொடிகளுடனும், வளைவுகளுடனும், வீரர்களுடனும், சுவர்கள் மற்றும் மேடைகளுடனும், இயந்திரங்கள், சுரங்கங்கள், மற்றும் மரத்தாலான முள்வேலியால் தடுக்கப்பட்ட தெருக்களும், நெருப்பு, பாத்திரங்கள், (நீர் எடுத்துச் செல்ல) மான் தோல் மற்றும் அனைத்து ஆயுதங்களும், ஆயுதங்களை ஏவும் இயந்திரங்களுடன் கூடிய வாயில்கள் கொண்ட கோபுரங்கள் மற்றும் மாளிகைகளுடன் அந்தக் கோட்டை இருந்தது.
மேலும் அந்த வாயில்களில் எக்களாம், சிறு முரசு, மேளம், ஈட்டிகள், கவண்கள், சதாக்னிகள், கலப்பை பங்குகள், ஏவுகணைகள், கற்பந்துகள், போர்க்கோடரிகள் மற்றும் பிற ஆயுதங்கள், இரும்பு பதித்த கவசங்கள், பந்துகளையும், தோட்டாக்கள் மற்றும் கொதிக்கும் திரவங்களை வீசக்கூடிய இயந்திரங்களும் இருந்தன. அந்த நகரம் {துவாரகை}, எண்ணிலடங்கா ரதங்களுடன், உயர்ந்த பிறப்பு கொண்டவர்களும், எந்த எதிரியையும் எதிர்க்கவல்லவர்களுமான கதன், சாம்பன், உத்தவன் மற்றும் பிற வீரர்களால் காக்கப்பட்டு இருந்தது. உத்தரவிடும் பணிகளில் தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்ட அவர்கள், குதிரைப்படை மற்றும் காலாட்படையின் துணை கொண்டு நகரத்தைக் காக்கத் தொடங்கினார்கள்.
கவனக்குறைவைத் தவிர்க்க உக்கிரசேனரும், உத்தவனும் நகரம் முழுவதும் சென்று யாரும் மது அருந்தக் கூடாது என்று அறிவித்தனர். அனைத்து விருஷ்ணிகளும் அந்தகர்களும், தாங்கள் கவனக்குறைவாக நடந்து கொண்டால் சால்வனால் கொல்லப்படுவோம் என்பதை நன்றாய் அறிந்து, நிதானத்துடனும் விழிப்புணர்வுடனும் இருந்தனர்.
ஆனர்த்த நாட்டின் கோமாளிகளையும், ஆடற்கலைஞர்களையும், பாடகர்களையும் காவலர்கள் நகரத்தை விட்டுத் துரத்தினர். நதிகளின் மேல் இருந்த அனைத்து பாலங்களும் அழிக்கப்பட்டன. படகுகள் தடுக்கப்பட்டன. (நகரத்தைச் சுற்றிலும் இருந்த) அகழிகளில் அடியில் சூலங்கள் நட்டு வைக்கப்பட்டன. நகரைச் சுற்றி இருந்த இரண்டு மைல் நீளம் கொண்ட நிலங்கள் சமமற்றவையாக, துளைகளும் குழிகளும் தோண்டப்பட்டு அடியில் ரகசியமாக எரிபொருட்கள் {Combustibles வெடி பொருட்களோ!} நிரப்பப்பட்டன.
பாவமற்றவரே {யுதிஷ்டிரரே}, எங்கள் கோட்டை இயற்கையிலேயே வலிமையானது. எல்லாப்புறங்களில் இருந்தும் நன்கு பாதுகாக்கப்பட்டது. அதில் எல்லா வகையான ஆயுதங்களும் நிரப்பப்பட்டிருந்தது. இந்தத் தயாரிப்புகளின் தொடர்ச்சியாக எங்கள் நகரம் எப்போதையும் விட எதிரியைச் சந்திக்கத் தயாராகவே இருந்தது.
பாரதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, இவை அனைத்தின் தொடர்ச்சியாக அந்த நகரம் இந்திரனின் நகரம் போலவே காட்சி அளித்தது. மன்னா, சால்வன் அதை {அந்நகரத்தை} அணுகிய போது, அந்த விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் நகரம் ஏற்றுக் கொண்ட குறிப்புகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல், யாரும் நுழையவும், அதை விட்டு வெளியேறவும் முடியாத நிலையில் இருந்தது. அந்த நகரத்தின் அனைத்து தெருக்களும், திறந்த வெளிகளும், எண்ணிலடங்கா யானைகளாலும் குதிரைகளாலும் நிரப்பப்பட்டன.
பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவரே, போரிடத் தாயாரயிருந்த வீரர்களுக்கு உதவித்தொகைகளுடன் கூடிய கூலியும், உணவுப் பங்கீடும், ஆயுதங்களும், ஆடைகளும் வழங்கப்பட்டன. அந்த வீரர்களில் தங்கம் கொடுக்கப்படாதவர்கள் யாரும் இலர். கூலிக்கொடுக்கப்படாத யாரும் இலர். கட்டாயப்படுத்தப்பட்ட எவரும் இலர். பராக்கிரமத்தை முன்பே வெளிப்படுத்ததாத யாரும் இலர். தாமரை இலைகளைப் போன்ற கண்களை உடையவரே {யுதிஷ்டிரரே}, இப்படியே நன்கு திட்டமிட்டப்பட்ட ஏற்பாடுகளினால் பாதுகாக்கப்பட்ட துவாரகை ஆஹுகரால் (உக்கிரசேனரால்) காக்கப்பட்டது.
கிருஷ்ணனின் மகன்கள் வீரம் – வனபர்வம் பகுதி 16-சால்வனின் படைபலத்தை கிருஷ்ணன் விவரித்தல்; கிருஷ்ணனின் மகன்களான சாம்பன், சாருதேஷ்ணன், பிரத்யும்னன் ஆகியோர் சால்வப் படைகளிடம் காட்டிய வீரத்தைக் குறித்து கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் சொல்வது….
வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், “ஓ! மன்னர் மன்னா {யுதிஷ்டிரா}, சௌபத்தின் தலைவன் சால்வன், காலாட்படை, குதிரைப்படை மற்றும் யானைகள் கொண்ட பெரும் படையுடன் எங்கள் நகரத்தை நோக்கி வந்தான்! மன்னன் சால்வனின் தலைமையில் வந்த நால்வகைப் படைகளும் அதிகமான நீர் சூழ்ந்த சமவெளியில் நின்றன. கல்லறைகள், தேவர்களுக்கு அர்ப்பணித்திருந்த கோவில், புனிதமான மரங்கள், எறும்புப் புற்றுகள் ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் அவனது {சால்வனின்} படையே நிரம்பியிருந்தது. (நகரத்தை நோக்கி செல்லும்) சாலைகள் அனைத்தும் அந்தப் படைகளின் பிரிவுகளால் தடுக்கப்பட்டன. ரகசிய வழிகளும் எதிரிகளின் முகாமால் தடுக்கப்பட்டிருந்தது. கௌரவரே, மனிதர்களில் காளையே (யுதிஷ்டிரரே}, சௌபத்தின் ஆட்சியாளன் {சால்வன்}, அனைத்துவிதமான ஆயுதங்களுடனும், ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவர்களுடனும், அடர்ந்த காட்சி கொண்ட, ரதங்கள், யானைகள், பதாகைகளுடன் கூடிய குதிரைப் படை, நல்ல முறையில் கூலி கொடுக்கப்பட்ட பலமும் அனைத்து நற்குறிகளும் கொண்ட காலாட்படை வீரர்கள், பறவைகளின் தலைவனைப் போல (கருடனைப் போல), அற்புதமான ரதங்களில் வில்லுடன் கூடிய ரதவீரர்கள் ஆகியோருடன் பறவைகளின் மன்னனைப் போல (கருடனைப் போல) துவாரகையை நோக்கி விரைவாக வந்தான்.
சால்வனின் படையைக் கண்ட விருஷ்ணி குலத்தின் {யாதவ குலத்தின்} இளைஞர்களான இளவரசர்கள், அவர்களுக்கு {சால்வ படையினருக்கு} நகருக்கு வெளியே பதிலடி கொடுப்பது என்று தீர்மானித்தனர். மன்னா {யுதிஷ்டிரரே}, சாருதேஷ்ணன், சம்பன், பெரும் வீரனான பிரதியும்னன் ஆகியோர் கவசம் பூண்டு, அனைத்துவித ஆபரணங்களும் பூண்டு தங்கள் ரதங்களின் ஏறி சால்வனின் எண்ணிலடங்கா வீரர்களுடன் மோதுவதெனத் தீர்மானித்து சென்றனர்.
சாம்பன் தனது வில்லை எடுத்துக் கொண்டு சால்வனின் படைத்தளபதியும், அமைச்சருமான க்ஷேமவிருத்தியுடன் ஆர்வமாகப் போர்க்களத்தில் மோதினான். பாரதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, அந்த ^ஜாம்பவதியின் மகன் {சாம்பன்}, மழையைப் பொழியவைக்கும் இந்திரனைப் போல, தனது கணைகளை மழையெனப் பொழிந்தான். பெரும் பலம்வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரரே}, பிறகு சால்வப் படைகளின் தளபதியான க்ஷேமவிருத்தி, அந்தக் கணைமழையை, இமயம் போல நின்று அசையாமல் தாங்கிக் கொண்டான்.
மன்னர்களில் முதன்மையானவரே, க்ஷேமவிருத்தி, தனது பங்குக்கு, தன் மாயச் சக்தியைப் பயன்படுத்தி சாம்பன் மீது பலம்வாய்ந்த கணைகளைச் சரமாரியாகப் பொழிந்தான். அந்த மாயையால் ஈர்க்கப்பட்ட சாம்பன் தனது பதில் மாயையால் ஆயிரக்கணக்கான கணைகளை அவனது (எதிரியின்) {க்ஷேமவிருத்தியின்} ரதத்தின் மீது பொழிந்தான். சாம்பனின் கணைகளால் துளைக்கப்பட்டு, அதிக காயம் கொண்டு, தனது விரைவான குதிரையின் உதவியுடன் களத்தை விட்டு விலகினான் {க்ஷேமவிருத்தி}.
சால்வனின் {க்ஷேமவிருத்தி} தீய தளபதி களத்தை விட்டு விலகியதும், பெரும் பலம் வாய்ந்த தைத்தியனான வேகவத் எனது மகனை {சாம்பனை} நோக்கி விரைந்தான். ஏகாதிபதிகளில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, விருஷ்ணி குலத்தைத் தழைக்க வைக்கும் வீரனான சாம்பன், வேகவத்தின் தாக்குதலைப் பொறுத்து களத்தை விடாதிருந்தான். குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, குலைக்க முடியா வீரம் கொண்ட சாம்பன், விரைவாகச் செல்லும் ஒரு கதாயுதத்தைச் சுழற்றி, வேகவத்தின் மீது வேகமாக ஏறிந்தான். மன்னா {யுதிஷ்டிரரே}, அந்த கதாயுதத்தால் தாக்குண்ட வேகவத் சிதைந்த வேர்களைக் கொண்ட காட்டின் தலைவன் {ஆல மரம்} விழுவது போல தரையில் விழுந்தான். இப்படி அந்தப் பெரும் பலம்வாய்ந்த அசுரனைத் தனது கதாயுதத்தால் கொன்ற எனது மகன் {சாம்பன்} அந்தப் பெரும்படைக்குள் நுழைந்து, அனைவருடனும் போரிட்டான்.
பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, நன்கு அறியப்பட்ட தானவனும் பெரும் பலம் வாய்ந்த வீரனுமான பிவிந்தியன் ஒரு பெரும் பலம்வாய்ந்த வில்லைத் தாங்கிக் கொண்டு, சாருதேஷ்ணனை எதிர்கொண்டான். ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, சாருதேஷ்ணனுக்கும் பிவிந்தியனுக்கும் இடையில் நடந்த போர் பழங்காலத்தில் விரித்திரனுக்கும் வாசவனுக்கும் இடையில் நடைபெற்ற போரைப் போல கடுமையானதாக இருந்தது! அவர்களிருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் கணைகளால் தாக்கிக் கொண்டு, ஒருவரை மற்றவர் துளைத்து, இரு பெரும் பலம் வாய்ந்த சிம்மங்களைப் போல கர்ஜித்துக் கொண்டிருந்தனர்.
பிறகு ^ருக்மிணியின் மகன் {சாருதேஷ்ணன்}, தனது வில் நாணில் நெருப்பைப் போலவும் சூரியனைப் போலவும் பிரகாசித்த பெரும் ஆயுதம் ஒன்றைப் பொருத்தி தகுந்த மந்திரங்களை உச்சரித்து அதற்கு உயிருண்டாக்கினான். ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, எனது மகனான அந்த பெரும் போர் வீரன் {சாருதேஷ்ணன்}, கோபத்தால் எரிந்து, பவிந்தியனுக்குச் சவால் விட்டு, அந்த ஆயுதத்தை அவன் {பிவிந்தியன்} மீது ஏவினான். அந்த ஆயுதத்தால் தாக்குண்ட அந்த தானவன், உயிரற்ற சடலமாகக் கீழே தரையில் விழுந்தான். பவிந்தியன் கொல்லப்பட்டதை அறிந்த மொத்த படையும் நடுங்கியது.
அப்போது சால்வன், நினைத்த இடம் எங்கும் செல்லக்கூடிய தனது அழகான ரதத்தில் மேலும் முன்னேறி வந்தான். பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட மன்னா {யுதிஷ்டிரரே}, அப்படி அழகான தேரில் வந்த சால்வனைக் கண்ட துவாரகையின் வீரர்கள் பயத்தால் நடுங்கினார்கள். ஆனால், குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, பிரத்யும்னன் வெளியே வந்து, ஆனர்த்தர்களுக்கு ஊக்கம் கொடுத்து, “நடுங்காதீர்கள், நான் போர்புரியப்போவதைப் பாருங்கள். எனது சக்தியைக் கொண்டு தேரோடு கூடிய அந்தச் சால்வனைத் தடுப்பேன். யாதவர்களே, இந்த நாளில், பாம்புகள் போன்ற கணைகளை எனது வில்லில் இருந்து வெளியேற்றி, சௌபத்தின் தலைவனான {சால்வனை} இந்தப் புரவலனை அழிப்பேன்! அனைவரும் உற்சாகத்தோடு இருங்கள்! அஞ்சாதீர்கள்! சௌபத்தின் தலைவன் {சால்வன்} இன்று கொல்லப்படுவான்! என்னுடன் மோதியதும், அந்த இழிந்தவன், தனது தேருடன் சேர்ந்து அழிவைச் சந்திப்பான்” என்றான். பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, பிரத்யும்னன் இப்படி உற்சாகத்துடன் பேசியதும், யாதவப் புரவலர்கள், வீரரே {யுதிஷ்டிரரே}, களத்திலேயே நின்று, உற்சாகத்துடன் போர்புரியத் தொடங்கினார்கள்.()(1.ருக்மினி, 2.மித்திரவிந்தை, 3.சத்தியை, 4.ஜாம்பவதி, 5.ரோகிணி, 6.சுசீலா, 7.சத்தியபாமா, 8.லக்ஷ்மனை என எட்டு மனைவியர் கிருஷ்ணருக்கு இருந்தனர்.)
பிரத்யும்னன் சால்வன் போர் – வனபர்வம் பகுதி 17-பிரத்யும்னனுக்கும் சால்வனுக்கும் இடையில் நடந்த போரைக் குறித்து கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு விவரித்தல்.
வாசுதேவன் தொடர்ந்தான், “பாரத குலத்தின் காளையே, யாதவர்களிடம் இப்படிப் பேசிய ருக்மிணியின் மகன் (பிரத்யும்னன்) தனது தங்க ரதத்தில் ஏறினான். அவனது {பிரத்யும்னன்} தேரை இழுத்துச் சென்ற குதிரைகள் அற்புதமான வகையைச் சேர்ந்தவை. அந்தத் தேரில் யமனைப் போன்ற கடுமையுடன் திறந்த வாய் உள்ள மகரம் பொறிக்கப்பட்ட கொடி பொருத்தப்பட்டிருந்தது. தரையில் ஓடுவதை விட பறப்பதைப் போல இருக்கும் குதிரைகளுடன் அவன் {பிரத்யும்னன்} எதிரியை நோக்கி விரைந்தான். அந்த வீரன் அம்பறாத்தூணி, வாள் ஆகியவற்றை அணிந்து கொண்டு, விரல்களுக்கு தோல் கவசம் பூண்டு, மின்னலைப் போன்ற பிரகாசமிக்க தனது வில்லை எடுத்துச் சுண்டினான். பெரும் பலத்துடன் அந்த வில்லை ஒரு கரத்தைவிட்டு மறு கரத்திற்கு மாற்றிக் கொண்டு எதிரியை அவமதிப்பது போல, தானவர்களுக்கு மத்தியிலும் சௌப நகரத்தின் போர்வீரர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தினான்.
மேலும் எதிரியை அவமதிப்பது போல, போர்க்களத்தில் தானவர்களைத் தொடர்ந்து கொன்ற போது, அவன் சரமெனத் தொடர்ந்து கணையடித்ததில் யாரும் சிறு இடைவெளியையும் காணவில்லை. அவனது {பிரத்யும்னனின்} முகத்தின் நிறம் மாறவில்லை. அவனது உறுப்புகள் நடுங்கவில்லை. அவனது அற்புதமான வீரத்தைப் பறைசாற்றும் விதத்தில் அவனால் எழுப்பப்பட்ட சிம்ம கர்ஜனைகளை மட்டுமே மக்கள் கேட்டனர். வாயை அகல விரித்திருக்கும் நீர்மிருகம் அனைத்து மீன்களையும் விழுங்குவது போல, ரதங்களில் சிறந்த தனது ரதத்தின் கொடிக்கம்பத்தில் இருந்த கொடி, சால்வனின் போர் வீரர்கள் இதயங்கள் பயங்கரத்தை உணர்ந்தனர். மன்னா {யுதிஷ்டிரா}, எதிரிகளை வெட்டித் தள்ளும் பிரத்யும்னன், சால்வனிடம் போர் புரிய விரும்பி அவனிடம் {சால்வனிடம்} விரைந்து சென்றான்.
குரு குலத்தைத் தழைக்க வைப்பவரே {யுதிஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் தனது வீரத்தைப் பறைசாற்றிய பிரத்யும்னனைக் கண்டு கோபம் கொண்ட சால்வனால் அந்தச் சவாலைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதரிகளின் நகரங்களை வெல்லும் சால்வன், கோபத்தால் வெறிகொண்டு, கட்டற்ற வேகம் கொண்ட தனது அழகிய ரதத்தில் இருந்து இறங்கி, பிரத்யும்னனிடம் போர்புரியத் தீர்மானித்தான். சால்வனுக்கும், விருஷ்ணி வீரர்களில் முதன்மையானவனுக்கும் {பிரத்யும்னனுக்கும்} இடையில் நடந்த போர், பழங்காலத்தில் இந்திரனுக்கும் பலிக்கும் {மஹாபலிக்கும்} இடையில் நடந்த போரைப் போல இருப்பதை மக்கள் கண்டனர்.
வீரரே {யுதிஷ்டிரரே}, தங்கத்தாலானதும், கொடிகளும், கொடிக்கம்பங்களும், அம்பறாத்தூணிகளும் கொண்ட தனது அழகிய தேரில் ஏறிய சிறப்புமிக்கவனும் பலம் பொருந்தியவனுமான சால்வன் பிரத்யும்னனை நோக்கித் தனது கணைகளை அடிக்கத் தொடங்கினான். பிரத்யும்னன் தனது கரங்களின் சக்தியால் அடர்த்தியான கணை மழையால் சால்வனை மூடினான். பிரத்யும்னனால் இவ்வளவு தாக்கப்பட்டும் சௌபத்தின் மன்னன், அவனைப் பொறுத்துக் கொள்ளாமல், எனது மகனை {பிரத்யும்னனை} நோக்கி சுடர்விட்டு எரியும் நெருப்பு போன்ற கணைகளை அடித்தான்.
ஏகாதிபதிகளில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, சால்வனின் கணைகளால் துளைக்கப்பட்ட ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, நேரத்தைத் தவற விடாது, எதிரியின் உயிர்ப்பகுதிக்குள் நுழையும் ஆற்றல் கொண்ட கணையை அடித்தான். எனது மகனால் {பிரத்யும்னனால்} அடிக்கப்பட்ட இறகுகள் கொண்ட அந்தக் கணை, சால்வனின் கவசத்தைத் துளைத்து, இதயத்திற்குள் நுழைந்தது. இதனால் சால்வன் மயக்கம் அடைந்து கீழே விழுந்தான். வீரனான மன்னன் சால்வன் உணர்விழந்து கீழே விழுந்ததைக் கண்ட தானவர்களில் முதன்மையானவர்கள் பூமியை மறைப்பது போல ஓடிப் போனார்கள். பூமியின் தலைவரே {யுதிஷ்டிரரே}, சால்வனின் படை, சௌபத்தின் தலைவனான தங்கள் மன்னன் உணர்வின்றி கீழே விழுவதைக் கொண்டு “ஓ….” “ஐயோ” என்று சொல்லி ஓலமிட்டனர்.
குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, மீண்டும் உணர்வைப் பெற்ற, பெரும் பலம் வாய்ந்த சால்வன் எழுந்து, பிரத்யும்னனை நோக்கி தனது கணைகளை அடித்தான். வீரனும், பலம் வாய்ந்த கரம் கொண்டவனுமான பிரத்யும்னன், தனது எதிரியால் {சால்வனால்} தொண்டையில் துளைக்கப்பட்டு, தளர்ந்து போய் தனது தேரில் இருந்தான். பெரும் பலம் வாய்ந்த மன்னரே, ருக்மிணியின் மகனைக் {பிரத்யும்னனைக்} காயப்படுத்திய சால்வன், சிம்மத்தைப் போல உரக்க கர்ஜித்து, உலகம் முழுவதையும் அந்தச் சத்தத்தால் நிறைத்தான்! பாரதரே {யுதிஷ்டிரரே}, எனது மகன் {பிரத்யும்ன்ன} உணர்விழந்த போது, அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடாத சால்வன், தாங்க முடியாத கணைகளை அவன் {பிரத்யும்னன்} மீது ஏவினான். குரு குலத்தின் தலைவா {யுதிஷ்டிரரே}, இப்படி எண்ணிலடங்கா கணைகளால் துளைக்கப்பட்ட பிரத்யும்னன், போர்க்களத்தில் அசைவற்றுக் கிடந்தான்.
புறமுதுகிடுதல் கோழைத்தனம் – வனபர்வம் பகுதி 18-உணர்வற்று விழுந்த பிரத்யும்னனை தேரோட்டி களத்தைவிட்டு வெளியேறுதல்; உணர்வு திரும்பிய பிரத்யும்னன் தேரோட்டியைக் கடிந்து கொள்ளல்
வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், “மன்னா {யுதிஷ்டிரரே}, சால்வனின் கணைகளால் பிரத்யும்னன் உணர்விழந்ததும், போரிட வந்திருந்த விருஷ்ணிகள் உள்ளம் உடைந்து துயரத்தில் மூழ்கினர். அந்த விருஷ்ணி குல, அந்தக குல வீரர்கள் துயரத்தில் ஓ என்றும் ஐயோ என்றும் அலறும்போது, எதிரிப் படையில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. உணர்விழந்த பிரத்யும்னனைக் கண்ட தேரோட்டியான தாருகனின் மகன், வேகமாக செல்லும் குதிரைகளின் துணையுடன் அவனை {பிரத்யும்னனைக்} களத்தை விட்டு வெளியே கொண்டு சென்றான். அந்தத் தேர் சிறிது தூரம் செல்வதற்குள்ளேயே உணர்வைத் திரும்பப் பெற்ற பிரத்யும்னன், கைகளில் தனது வில்லை எடுத்துக் கொண்டு அந்தத் தேரோட்டியிடம், “சூத இனத்தின் மகனே, நீ என்ன செய்துவிட்டாய்? களத்தை விட்டு நீ ஏன் வெளியே செல்கிறாய்? போர்களத்தில் இது விருஷ்ணிகளின் வழக்கமில்லையே! சூத மகனே, கடும் போர் புரியும் சால்வனைக் கண்டதும் கலங்கிப் போனாயா? அல்லது இப்போரைக் கண்டு உள்ளம் ஒடிந்து போனாயா? உனது மனதை உண்மையாகச் சொல்!” என்று கேட்டான்.
அதற்கு அந்தத் தேரோட்டி, “ஜனார்த்தனரின் மகனே, “நாம் குழம்பவில்லை, அல்லது அச்சம் என்னைப் பீடிக்கவில்லை. மறுபுறம், கேசவரின் மகனே, சால்வனை வீழ்த்துவது உனக்குச் சிரமம் என்று நான் கருதுகிறேன்! ஆகையால், ஓ வீரனே, மெதுவாக நான் களத்தைவிட்டு அகலுகிறேன். அந்த இழிந்தவன் உன்னைவிட பலசாலியாக இருக்கிறான்! தேரில் இருக்கும் வீரனைக் காப்பது ஒரு தேரோட்டியின் கடமையாகும். நீ உணர்விழந்து வேறு இருந்தாய். நீண்ட ஆயுளைக் கொடையாகக் கொண்டவனே, நீ என்னைப் பாதுகாப்பது போல, நான் உன்னை எப்போதும் பாதுகாக்க வேண்டும்! தேரில் இருக்கும் வீரன் எப்போதும் (அவனது தேரோட்டியால்) காக்கப்பட வேண்டும் என்பதை நினைத்துப் பார்த்தே, நான் உன்னை வெளியே அழைத்து வந்தேன்.! மேலும், பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே, நீ தனியாளாக இருக்கிறாய், தானவர்களோ பலராக இருக்கின்றனர். ருக்மிணியின் மகனே {பிரத்யும்னனே}, இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து, சண்டையில் நீ அவர்களுக்குச் சமம் இல்லை என்று நினைத்து, நான் வெளியே செல்கிறேன்!” என்றான்.
வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், “அந்தத் தேரோட்டி இப்படிப் பேசியதும், ஓ கௌரவரே {யுதிஷ்டிரரே}, மகரத்தைக் கொடியாகக் கொண்டவன் {பிரத்யும்னன்}, “தேரைத் திருப்பு, ஓ தாருகனின் மகனே, மறுபடி இதைப் போல் செய்யாதே; அதை எப்போதும் செய்யாதே, சூதனே, நான் உயிருடன் இருக்கும்போது சண்டையை விட்டு விலகாதே! களத்தைக் கைவிட்டுச் செல்பவனோ, “நான் உனக்கு அடிமை” என்று சொல்லி, காலில் விழுந்த எதிரியைக் கொல்பவனோ அல்லது பெண்ணையோ, சிறுவனையோ, முதிர்ந்தவனையோ, தேரை இழந்து, ஆயுதங்கள் ஒடிந்து, துயரத்தில் இருக்கும் வீரனையோ கொல்பவன் விருஷ்ணி குல மகனாக இருக்க முடியாது. நீ தேரோட்டிகளின் குலத்தில் பிறந்தவன். உன் தொழிலில் பயிற்சி பெற்றவன்.
தாருகனின் மகனே, போர்க்களத்தில் விருஷ்ணிகளின் முறைமைகளை அறிந்தவன் நீ! விருஷ்ணிகளின் முறைமைகளை அறிந்த நீ, ஓ சூதா, இப்போது செய்தது இனி எப்போதும் களத்தில் இருந்து விலகாதிருப்பாயாக! கட்டுப்படுத்தப்பட முடியாதவரும், கதனின் அண்ணனுமான மாதவர், நான் முதுகில் காயம்பட்டு கலங்கிப் போய் களத்தை விட்டு பின்வாங்கி வந்தேன் என்பதைக் கேள்விப்பட்டால் என்ன சொல்வார். கேசவரின் அண்ணனான பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவரும், நீல நிற ஆடை உடுத்தி, மதுவால் உண்டான மயக்கத்துடன் இருக்கும் பலதேவர் {பலராமன்} திரும்பி வரும்போது என்ன சொல்வார்? சூதா, பெரும் போர் வீரனும் மனிதர்களில் சிங்கமான சினியின் பேரன் {சாத்யகி}, நான் போரில் இருந்து விலகினேன் என்பதைக் கேள்விப்பட்டால் என்ன சொல்வான்?
தேரோட்டியே, எப்போதும் வெற்றிவாகைச் சூடும் சம்பன், கட்டுப்படுத்தப்பட முடியாத சாருதேஷ்ணன், கதன், சரணன், அக்ரூரர் ஆகிய பெரும் பலம் வாய்ந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்னிடம் என்ன சொல்வார்கள்! இதுவரை, எனது நடத்தைக்காகவும் வீரத்திற்காகவும், மரியாதைக்காகவும், ஆண்மைக்காகவும் கருத்தில் கொள்ளப்பட்டிருந்த என்னை, விருஷ்ணி குல வீரர்களின் மனைவிமார், தாங்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும் போது, என்னைக் குறித்து என்ன பேசிக் கொள்வார்கள்? அவர்கள், போர்க்களத்தை விட்டு இங்கே வந்திருக்கும் இந்தப் பிரத்யும்னன் ஒரு கோழை! அவனுக்கு ஐயோ! என்றே சொல்வார்கள். நன்றாகச் செய்தாய் என்று அவர்கள் சொல்லவே மாட்டார்கள். நான் இகழ்ச்சிக்கும் பரிகசிப்புக்கும் ஆளானால், ஓ சூதா, அதைவிட நான் சாவதே மேல்!
ஆகையால், இன்னுமொரு முறை களத்தைவிட்டு வெளியேறாதே! எனக்குப் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, மதுவைக் கொன்றவரான {மதுசூதனர்} ஹரி, பாரத சிங்கத்தின் {யுதிஷ்டிரரின்} வேள்விக்குச் சென்றிருக்கிறார்! ஆகையால், என்னால் அமைதியாக இருக்க முடியாது! ஓ சூதா, வீரம் கொண்ட கிருதவர்மர் சால்வனை எதிர்த்து வந்தபோது, நான் சால்வனைத் தடுத்து நிறுத்துவேன் என்று அவரை நிறுத்தினேன். ஹிருதிகரின் மகனான அவரும் என்னைப் புகழ்ந்துவிட்டு சென்று விட்டார்! இப்படி போர்க்களத்தைவிட்டு வெளியேறினால், அந்த பெரும்பலம் வாய்ந்த போர்வீரரிடம் {கிருதவர்மரிடம்}, அவரைச் சந்திக்கும்போது என்ன சொல்வேன்? கட்டுப்படுத்தப்பட முடியாதவரும், பெரும்பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவரும், சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைச் சுமப்பவருமான அந்த தாமரை இதழ் போன்ற கண் கொண்டவரிடம் {கிருஷ்ணரிடம்} நான் என்ன சொல்வேன்?
சாத்யகி, பலதேவர், மற்றும் பிற விருஷ்ணி, அந்தக குலத்தைச் சேர்ந்தவர்கள் என்னைப் பெருமையாகவே எப்போதும் சொல்வர்! அவர்களுக்கெல்லாம் நான் என்ன சொல்வேன்? சூதனே, போர்க்களத்தை விட்டு அகன்று, முதுகில் கணைகளால் ஏற்பட்ட காயத்துடன், நான் உன்னால் வெளியே கொண்டு செல்லப்பட்டால், எக்காரணம் கொண்டும் என்னால் உயிர்வாழ முடியாது! ஆகையால், தாருகனின் மகனே, விரைவாகத் தேரைத் திருப்பு. பேராபத்தில் கூட இனிமேல் இப்படிச் செய்யாதே. சூதா, கோழைப் போல ஓடிச் சென்று, முதுகில் {எதிரிகளின்} கணைகளால் துளைக்கபடும் அளவுக்கு நான் வாழ விரும்பவில்லை. சூத மகனே, போர்க்களத்தில் இருந்து கோழை போல நான் ஓடுவதை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா? தாருகனின் மகனே, நான் போரில் ஆர்வம் கொண்டு, போர்த்தாகம் தணியாமல் இருக்கும்போது களத்தைக் கைவிடுவதை நீ செய்யலாகாது! ஆகையால், களத்திற்குத் திரும்பிப் போ!” என்றான் {பிரத்யும்னன்}.
சால்வனை வீழ்த்திய பிரத்யும்னன் – வனபர்வம் பகுதி 19-உணர்வு திரும்பிய பிரத்யும்னனைத் தேரோட்டி, மீண்டும் களத்திற்கு இட்டுச் செல்லல்; சால்வனை பிரத்யும்னன் வீழ்த்துதல்…
வாசுதேவன் தொடர்ந்தான், “இப்படிச் சொல்லப்பட்ட சூதகுல மகன் {தேரோட்டி}, பலம் பொருந்தியவர்களில் முதன்மையான பிரத்யும்னனிடம் இனிமையான வார்த்தைகளில் விரைந்து மறுமொழி கூறினான். அவன், “ஓ ருக்மிணியின் மகனே {பிரத்யும்னனே}, போரில் விருஷ்ணிகளின் முறைமைகளை அறிந்த நான், களத்தில் குதிரைகளை வழிநடத்த அஞ்சவில்லை. இதைத் தவிர வேறு எதுவுமில்லை! ஆனால், நீண்ட ஆயுள் அருளப்பட்டவனே {பிரத்யும்னா}, போரில் தேரை வழிநடத்துபவர்களுக்கு, அந்தத் தேரில் இருக்கும் போர்வீரனை என்ன செய்தாவது காக்க வேண்டும் என்று சொல்லித்தரப்படுகிறது! நீயும் மிகவும் தாக்கப்பட்டு இருந்தாய். சால்வனின் கணைகளில் நீ மிகுந்த காயங்களை அடைந்திருந்தாய். மேலும் ஓ வீரனே, நீ உணர்வை இழந்திருந்தாய். ஆகையால், நான் களத்தில் இருந்து விலக வேண்டியிருந்தது! ஆனால், சத்வதர்களின் தலைவனே, இப்போது நீ உணர்வை அடைந்துவிட்டாய். ஆகையால், கேசவரின் மகனே, குதிரைகளை வழிநடத்துவதில் எனக்கிருக்கும் திறமையை இப்போது பார்! நான் தாருகரால் பெறப்பட்டு, நல்ல பயிற்சி அளிக்கப்பட்டுள்ளேன். நான் இப்போது, கொண்டாடப்படும் சால்வப் படையின் அணிவகுப்பை அச்சமின்றி ஊடுருவிச் செல்வேன்!” என்றான்.
வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், “வீரரே {யுதிஷ்டிரரே}, இதைச் சொன்ன அந்தத் தேரோட்டி, கடிவாளத்தின் வாரை இழுத்து, குதிரைகளை விரைவாக போர்க்களத்திற்கு நடத்தினான். மன்னா {யுதிஷ்டிரரே}, சாட்டையால் அடிக்கப்பட்டும், கடிவாளங்களால் இழுக்கப்பட்டு சென்ற அந்த அற்புதமான குதிரைகள் வளைவாகவும், ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியாக இல்லாமலும், வலதுபுறமாகவும் இடது புறமாகவும் அழகான அசைவுகளுடன், காற்றில் பறப்பதைப் போல சென்றன. மன்னா {யுதிஷ்டிரரே}, கை லாவகம் கொண்ட தாருகன் மகனின் நோக்கத்தை அறிந்த அந்தக் குதிரைகள், மிகுந்த சக்தியுடன், தரையில் தங்கள் குளம்புகளைப் பதிக்காமல் செல்வது போலத் தெரிந்தது! அந்த மனிதர்களில் காளை {தேரோட்டி}, எளிதாக சால்வனின் சேனையைச் சுற்றி வந்ததைக் கண்டவர்கள் மிகுந்த ஆச்சரியம் கொண்டனர்.
பிரத்யும்னனின் திறமிக்க செயலைத் தாங்கிக் கொள்ள முடியாத சௌபத்தின் தலைவன் {சால்வன்}, உடனே மூன்று கணைகளைத் தனது எதிரியின் தேரோட்டி மீது அடித்தான்! எனினும், அந்தத் தேரோட்டி, அந்தக் கணைகளின் வேகத்தைக் குறித்து எந்த லட்சியமும் செய்யாமல் தொடர்ந்து வலப்புறமாகச் சென்றான். வீரரே {யுதிஷ்டிரரே}, பிறகு அந்த சௌபத்தின் தலைவன் {சால்வன்}, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்} மீது பல்வேறு வகையான ஆயுதங்களை ஏவினான்! ஆனால் அந்த எதிரிகளைக் கொல்லும் வீரனான ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, தனது கை லாவகத்தை சிறு புன்னகையால் வெளிக்காட்டி, அந்த ஆயுதங்கள் அவனை நெருங்கும் முன்னரே அவற்றைத் துண்டாக்கினான். பிரத்யும்னனால் கணைகள் துண்டிக்கப்பட்டதைக் கண்ட சௌபத்தின் தலைவன், அசுர மாயையை அறிந்தவனாதலால், அவற்றின் துணை கொண்டு அடர்த்தியான கணை மழையைப் பொழிந்தான். தன்னை நோக்கி அடிக்கப்பட்ட அந்த வலிமைவாய்ந்த தைத்திய ஆயுதங்களைத் தனது பிரம்ம ஆயுதத்தைக் கொண்டு பல துண்டுகளாக்கினான். பிறகு பிரத்யும்னன் பிற மன்னர்களின் இறகு கொண்ட கணைகளை அடித்தான்.
அந்த தைத்தியனால் அடிக்கப்பட்ட இரத்தம் குடிக்கும் கணைகளை விலக்கி, அவனைத் {சால்வனைத்} தலையிலும், மார்பிலும், முகத்திலும் அடித்தான். அதனால் ஏற்பட்ட காயங்களால் சால்வன் உணர்விழந்து கீழே விழுந்தான். பிரத்யும்னனால் கணைகளால் காரிய வாதம் கொண்ட அந்தச் சால்வன் கீழே விழுந்த போது, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, அவனை {சால்வனை} நோக்கி, எந்த எதிரியையும் அழிக்கும் வேறொரு கணையைப் பொருத்தி குறி பார்த்தான். அனைத்து தாசார்ஹர்களாலும் வழிபடப்படுவதும், சுடர் விட்டு எரியும் நெருப்பு போன்றதும், கடும் விஷம் கக்கும் பாம்பு போன்றதுமான அந்தக் கணையைக் கண்டு, அந்த ஆகாயமே “ஓ”, “ஐயோ” என்றது போல இருந்தது.
பிறகு கருவூலத் தலைவனைத் (குபேரனைத்) தலைமையாகக் கொண்ட இந்திரன் முதற்கொண்ட அனைத்து தேவர்களும், நாரதரையும், பெரும் வேகம் கொண்ட வாயுத் தேவனையும் அனுப்பினார்கள். அந்த இருவரும் ருக்மிணியின் மகனை {பிரத்யும்னனை} அணுகி, தேவர்கள் அனுப்பிய செய்தியைச் சொல்லி, “வீரனே, மன்னன் சால்வன் உன்னால் கொல்லப்படக்கூடாது! அந்தக் கணையை விலக்கிக் கொள். போரில் உன்னால் அவனைக் கொல்ல இயலாது! அந்தக் கணையால் கொல்லப்பட முடியாத, அதன் சக்தியைத் தாங்கக் கூடிய மனிதன் யாருமில்லை. வலிமையுள்ள கரம் கொண்டவனே, தேவகியின் மகனான கிருஷ்ணனின் கையால் அவன் இறக்க வேண்டும் என்று பெரும்படைப்பாளர் {பிரம்மா} விதித்திருக்கிறார். அது பொய்யாகக் கூடாது!” என்றனர். இதன் காரணமாக பிரத்யும்னன் கணைகளில் சிறந்த அந்தக் கணையை தனது வில்லில் இருந்து பிரத்யும்னன் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எடுத்து, தனது அம்பறாத்தூணியில் திரும்ப வைத்தான். பிறகு, மன்னர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, அந்த வலிமை வாய்ந்த சால்வன், பிரத்யும்னனின் கணைகளால் தாக்குண்டு, இதயம் ஒடிந்து, விரைவாக சென்று விட்டான். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தத் தீய சால்வன், விருஷ்ணிகளால் இப்படித் தாக்கப்பட்டு, விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தனது தேரில் ஏறி, துவாரகையை விட்டு வானத்தில் ஏறி வெளியேறினான்
சால்வனுடன் கிருஷ்ணன் புரிந்த போர் – வனபர்வம் பகுதி 20-துவாரகை திரும்பிய கிருஷ்ணன் சால்வனைத் தேடி பல நாடுகளைக் கடந்து சென்று அவனைக் கண்டடைந்து அவனுடன் யுத்தம் புரிந்தது;
வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்னான், “சால்வன் அனர்த்தர்களின் நகரத்தைவிட்டு சென்ற பிறகு, உமது பெரும் ராஜசூய வேள்வியை முடித்ததும் நான் அங்கு சென்றேன்! அங்கே சென்றதும் துவாரகை தனது ஓளியை இழந்திருப்பதைக் கண்டேன். பெரும் ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, அங்கே வேத உச்சரிப்புகள் மற்றும் வேள்வி ஆகியவற்றின் ஒலி கேட்கவில்லை. அற்புதமான மங்கையர் தங்கள் ஆபரணங்களை இழந்திருந்தனர். தோட்டங்கள் அழகிழந்து இருந்தன. இக்காட்சிகளால் அச்சமுற்ற நான், ஹிருதிகனின் மகனிடம் {கிருதவர்மனிடம்}, “மனிதர்களில் புலி போன்றவனே, விருஷ்ணிகளின் நகரத்தில் இருக்கும் ஆண்களும் பெண்களும் துயருற்று இருக்கின்றனர்?” என்று கேட்டேன். மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, இப்படிக் கேட்கப்பட்ட ஹிருத்திகனின் மகன் (கிருதவர்மன்), நகரத்தின் மீதான சால்வனின் படையெடுப்பையும், அவன் திரும்பிச் சென்றதையும் விவரமாகத் தெரிவித்தான்.
பாரதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, இவை அனைத்தையும் கேட்ட நான், சால்வனைக் கொல்ல எனது மனதில் தீர்மானித்தேன். பாரதர்களில் சிறந்தவரே, குடிமக்களை ஊக்கப்படுத்தி, மன்னர் ஆஹுகரிடமும், அனகதுந்துபியிடமும், விருஷ்ணி குலத்தின் தலைமை வீரர்களிடமும், “யாதவர்களில் காளைகளே, நான் சால்வனைக் கொல்லப் போகிறேன் என்பதை அறிந்து, நீங்கள் அனைவரும் விழிப்புடன் இந்த நகரத்திலேயே இருங்கள். அவனை {சால்வனைக்} கொல்லாமல் நான் துவாராவதி நகரத்திற்குத் திரும்பமாட்டேன். சால்வனுக்கும், விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அவனது தேருக்கும் அழிவை ஏற்படுத்திவிட்டு நான் உங்களிடம் வருகிறேன். பகைவருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் இந்த துந்துபி {போர் இசை வாத்தியம்}, கூர்மை, நடுத்தர மற்றும் சம சுவரங்களில் அடிக்கப்படட்டும்”, என்று சொன்னேன்.
பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, என்னால் இப்படித் தொடர்ந்து ஊக்கப்படுத்தப்பட்ட அந்த வீரர்கள் மகிழ்ச்சியாக என்னிடம், “சென்று பகைவர்களைக் கொல்லுங்கள்” என்றனர். இப்படி மகிழ்ச்சி நிறைந்த அந்த வீரர்களிடம் இருந்து வாழ்த்துகளைப் பெற்று, அந்தணர்களை அதிர்ஷ்டமான வார்த்தைகளைக் கூற வைத்து, மறுபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} சிறந்தவர்களையும் சிவனையும் வணங்கி, சைப்பியம், சுக்ரீவம் என்ற குதிரைகளை எனது தேரில் பூட்டி, தேர்ச்சக்கரங்களின் ஒலியால் அந்த இடத்தையே நிறைத்து, சங்குகளில் சிறந்த சங்கான பாஞ்சஜன்யத்தை ஊதிக்கொண்டு வெளியே சென்றேன்.
மன்னா {யுதிஷ்டிரரே}, மனிதர்களில் புலியே, சந்தேகத்திற்கிடமில்லாது வெற்றியடையும் எனது நால்வகைப் படையுடன் நான் கிளம்பினேன். மரங்களால் கிரீடம் சூட்டப்பட்டு, நீர்த்தேக்கங்களாலும், ஓடைகளாலும் நிரம்பிய பல நாடுகளையும் மலைகளையும் கடந்து, கடைசியாக மார்திகாவர்தம் என்ற நாட்டை அடைந்தேன். அங்கே, மனிதர்களில் புலி போன்றவரே {யுதிஷ்டிரரே}, விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தனது தேருடன் சால்வன் சமுத்திரத்தின் அருகில் சென்று கொண்டிருந்ததாகக் கேள்விப் பட்டு அவனைத் தொடர்ந்து சென்றேன்.
எதிரிகளைக் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, அலைகள் கொண்ட ஆழமான கடலுக்கு மத்தியில் சால்வன் விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தனது தேருடன் இருந்தான். யுதிஷ்டிரரே, தூரத்தில் இருந்தே என்னைக் கண்ட அந்தத் தீய ஆன்மா, என்னைத் தொடர்ந்து போருக்கு அழைத்துக் கொண்டிருந்தான். எனது வில்லில் இருந்து புறப்பட்ட வேகமாக சென்று துளைக்கக்கூடய எனது கணைகள் அவனது தேரை அடையவில்லை. இதனால் நான் மிகுந்த கோபமடைந்தேன்.
மன்னா, தைத்தியனின் மகனும் பாவியுமான அந்த கட்டுப்படுத்த முடியாத சக்தி கொண்டவன் {சால்வன்}, அவனது பங்குக்கு ஆயிரக்கணக்கான கணைகளை ஊற்று போல என்னை நோக்கி அடித்துக் கொண்டிருந்தான். பாரதரே, எனது வீரர்கள் மீதும், எனது தேரோட்டி மீதும், எனது குதிரைகள் மீதும் கணைகளை மழையெனப் பொழிந்தான். அந்தக் கணைகளைக் குறித்துக் கருதிப் பாராமல் நாங்கள் தொடர்ந்து போரிட்டோம். பிறகு சால்வனைத் தொடரும் வீரர்கள் என்னை நோக்கி நேரடியாக ஆயிரம் கணைகளை அடித்தனர். அசுரர்கள், எனது குதிரைகளையும், எனது தேரையும், தாருகனையும் உயிரைத் துளைத்துப் பறிக்கவல்ல கணைகளால் மூடினர்.
குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, ஆயுதங்களில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட நிபுணத்துவத்தைப் பெற்ற நானும் பத்தாயிரக்கணக்கான கணைகளை மந்திரங்களை உச்சரித்து அடித்தேன்! விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அந்த தேர் வானத்தில் இரண்டு மைல்களுக்கு அப்பால் இருந்த போது, அதை எனது துருப்புகளால் காண முடியவில்லை. ஆகையால் அவர்கள் என்னை தங்கள் கர்ஜனைகளால் ஊக்கப்படுத்தியும் கைத்தட்டிக் கொண்டும் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க முடிந்தது. எனது கை நுனியால் விடப்பட்ட கணைகள் அனைத்தும் தானவர்களின் உடலில் பூச்சிகளைப் போல ஊடுருவின.
விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அந்தத் தேரில் இருந்து ஓலம் எழுந்தது. கூரிய கணைகளால் தாக்குண்டவர்கள் அந்தப் பெரும் சமுத்திரத்தின் நீருக்குள் விழுந்தனர். தங்கள் கரங்களையும் இழந்தவர்களும், கழுத்துகளை இழந்து தலையில்லாத முண்டங்களின் வடிவத்தில் இருந்தவர்களும் பெரும் ஓலமிட்டு விழுந்தனர். அப்படி அவர்கள் விழும்போதே, அந்தச் சமுத்திரத்தின் நீரில் வாழ்ந்த விலங்குகளால் விழுங்கப்பட்டனர். பிறகு நான் நீரில் இருந்து பெற்றதும், தாமரைத் தண்டு போல அருள்நிறைந்ததும், பால் போன்ற வெண்மை கொண்டதும், மகரந்த மலரைப் {Kunda Flower} போலவும், நிலவைப் போலவும், வெள்ளியைப் போலவும் இருந்த பாஞ்சஜன்யத்தை பலமாக ஊதினேன்.
விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தேரையுடைய சால்வன், தனது வீரர்கள் விழுவதைக் கண்டு, மாயையின் உதவியுடன் போர்புரியத் தொடங்கினான். அவன் தொடர்ச்சியாக என்னை நோக்கி கதாயுதங்களையும், கலப்பைகளையும், இறகு கொண்ட கணைகளையும், ஈட்டிகளையும், போர்க்கோடரிகளையும், வாட்களையும், ஈட்டிகைளப் போன்ற கணைகளையும், இடிகளையும், சுருக்கு கயிறுகளையும், அகலமான வாட்களையும், பீப்பாய்களில் இருந்து தோட்டாக்களையும் {bullets from barrels}, தண்டங்களையும், ஏவுகணைகளையும் அடித்தான். என்னை நோக்கி அவர்களை வரவைத்த நான், வெகுவிரைவாக அவர்களை பதில் மாயையால் அழித்தேன். தனது மாயைகள் பலனற்றுப் போவதைக் கண்ட அவன் {சால்வன்}, மலைச்சிகரங்களை எடுத்துப் போர்புரிய ஆரம்பித்தான்.
பாரதரே {யுதிஷ்டிரரே}, அங்கே இருளும் ஒளியும் மாறி மாறி வந்தன. திடீரென நாள் இருண்டதாகவும் அழகானதாகவும் இருந்தது. திடீரென வெப்பமாகவும், திடீரென குளிர்ச்சியாகவும் இருந்தது. அங்கே நிலக்கரி, சாம்பல் மற்றும் கணைகளின் மழை பொழிந்தன. இப்படி ஒரு மாயையை உண்டாக்கிய அந்த எதிரி என்னுடன் போரிட்டுக் கொண்டிருந்தான். அதை உறுதி செய்த நான், பதில் மாயையால் முன் வந்த மாயையை அழித்தேன். சரியான நேரத்தில் சுற்றிலும் நான் கணைகளின் மழையைப் பொழிந்தேன். வலிமைமிக்க மன்னா {யுதிஷ்டிரரே}, பிறகு வானத்தின் மாடம் நூறு சூரியன்களை உடையது போலவும், நூறு சந்திரன்கள் உடையது போலவும், ஆயிரம் பத்தாயிரிம் நட்சத்திரங்களை உடையது போலவும் காட்சியளித்தது. அது இரவா அல்லது பகலா என்பதை யாராலும் நிர்ணயம் செய்ய முடியவில்லை. கலக்கமடைந்த நான், எனது வில்லின் நாணில் பிரஜ்ஞாயுதத்தைப் {பிரஜ்ஞாஸ்திரத்தைப்} பொருத்தினேன். குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, அந்த ஆயுதம், பருத்திச் செதில்களாக மாறி காற்றால் இழுத்துச் செல்லப்பட்டது! முடிவில் ஒருவரின் உடல் மட்டும் மீண்டிருப்பதற்காகக் கணக்கிட்டது போல அங்கே பெரும் போர் நடந்தது. ஏகாதிபதிகளில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, ஒளி மீண்டதும், மீண்டும் நான் எதிரியுடன் போரிட்டேன்.
வசுதேவரைக் கொன்றான் சால்வன் – வனபர்வம் பகுதி 21-சால்வனுடன் கிருஷ்ணன் புரிந்த போர்; வசுதேவர் மாண்டார் என்று ஆஹூகர் கிருஷ்ணனுக்கு செய்தி அனுப்புவது; வானில் இருந்த சால்வன் தேரில் இருந்து வசுதேவர் விழுவது; இதைக் கண்ட கிருஷ்ணன் மயக்கமடைவது…
வாசுதேவன் சொன்னான், “மனிதர்களில் புலி போன்றவரே {யுதிஷ்டிரரே}, எனது பெரும் எதிரியான மன்னன் சால்வன், இப்படிப் போர்க்களத்தில் என்னிடம் போரிட்டு, மீண்டும் வானத்தில் எழும்பினான். வலிமைவாய்ந்த ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, வெற்றியின் மீது இருக்கும் விருப்பத்தால் உந்தப்பட்டு, அந்தத் தீயவன் என்மீது சதாக்னிகளையும், பெரும் கதாயுதங்களையும், எரியும் ஈட்டிகளையும், கனத்த தண்டங்களையும் வீசினான். அந்த ஆயுதங்கள் வானத்தில் வரும்போதே, நான் எனது வேகமான கணைகளால் தடுத்து, அவை என்னிடம் வரும் முன்பே அவற்றை இரண்டு மூன்று துண்டுகளாக்கினேன். அதனால் வானத்தில் பெரும் சத்தம் இருந்தது. சால்வன், தாருகனையும், எனது குதிரைகள் மற்றும் தேரையும் நூற்றுக்கணக்கான நேர்க்கணைகளால் மூடினான்.
வீரரே {யுதிஷ்டிரரே}, பிறகு, தாருகன் {தேரோட்டி} மயங்கும் முன்பு என்னிடம் தெளிவாக, “சால்வனின் கணைகளால் தாக்குண்ட பிறகும் நான் களத்தில் நிற்கிறேன் என்றால், அது எனது கடமை என்பதால் தான். ஆனால், {மேலும்} அப்படிச் செய்ய இயலாதவனாக இருக்கிறேன். எனது உடல் பலவீனமடைந்துவிட்டது” என்றான். எனது தேரோட்டியின் பரிதாபகரமான வார்த்தைகளைக் கேட்டு, நான் அவனைப் பார்த்தேன். அவன் {தேரோட்டி தாருகன்} கணைகளால் புண்ணாகியிருந்தான். பாண்டுவின் மகன்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, அவனது மார்புகளோ, தலையோ, உடலோ, கரங்களோ, அம்புகளால் மறைக்கப்படாமல் இல்லை. அந்தக் கணைகளால் உண்டான புண்களில் இருந்து இரத்தம் ஒழுகிக்கொண்டே இருந்தது. மழையில் முழுக்க நனைந்த சிவந்த சுண்ணாம்பு மலை எப்படி இருக்குமோ அப்படி அவன் இருந்தான். வலிமைமிக்க கரங்கள் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, இப்படிப் போர்க்களத்தில் சால்வனின் கணைகளால் துளைக்கப்பட்டு, கைகளில் கடிவாளக் கயிற்றைப் பற்றியிருந்த எனது சாரதிக்கு நான் உற்சாகமூட்டினேன்.
பாரதரே {யுதிஷ்டிரரே}, அந்த நேரத்தில், துவாரகையில் தனது வீட்டை வைத்திருக்கும் ஒரு குறிப்பிட்ட மனிதன் எனது தேருக்கு வேகமாக வந்து, ஒரு நண்பனைப்போல், ஆஹுகர் சொல்லியனுப்பிய செய்தியைச் சொன்னான். அவன் ஆஹுகரின் பணியாட்களில் ஒருவன் போலத் தெரிந்தான். சோகத்துடன், துயரால் உடைந்த குரலுடன் அவன் “வீரரே {கிருஷ்ணரே}, துவாரகையின் தலைவர் ஆஹுகன் உமக்கு சில வார்த்தைகளைச் சொல்லி அனுப்பியிருக்கிறார். கேசவரே {கிருஷ்ணரே}, உமது தந்தையின் நண்பர் என்ன சொல்லியனுப்பியிருக்கிறார் என்பதைக் கேளும், “விருஷ்ணி குலத்தின் மகனே {கிருஷ்ணனே}, கட்டுப்படுத்தப்பட முடியாதவனே, நீ இல்லாத போது, இன்று சால்வன் துவாரகைக்கு வந்து, பலாத்காரமாக வசுதேவரைக் கொன்றான். ஆகையால், மேலும் போர் செய்யத் தேவையில்லை. போரை நிறுத்து, ஓ ஜனார்த்தனா, இங்கே வந்து துவாரகையைக் காப்பாற்று! அதுவே உனது முதற்கடமை!” என்று ஆஹுகர் சொன்னதாக செய்தியாளன் சொன்னான். இந்த வார்த்தைகளைக் கேட்டு எனது இதயம் கனத்தது. நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை என்னால் உறுதிசெய்ய முடியவில்லை.
வீரரே {யுதிஷ்டிரரே}, இந்தப் பெரும் துரதிர்ஷ்டத்தைக் கேட்டு, சாத்யகியையும், பலதேவரையும் {பலராமரையும்}, வலிமைவாய்ந்த பிரத்யும்னனையும் மனதால் நிந்தித்தேன். குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரரே}, துவாரகை மற்றும் வசுதேவரைக் காப்பதை அவர்களுக்கு அடிப்படைக் கடமையாக வைத்தே, நான் சால்வனின் நகரத்தை அழிக்கச் சென்றேன். துயர் நிறைந்த இதயத்துடன் நான் என்னிடமே, “அந்த எதிரிகளை அழிக்கும், வலிமைவாய்ந்த கரங்களுக்கு சொந்தக்காரரான பலதேவர் உயிருடன் இருக்கிறாரா, சாத்யகி, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, சாருதேஷ்ணன், சாம்பன் ஆகியோர் உயிருடன்தான் இருக்கின்றனரா?” என்று கேட்டுக் கொண்டேன். மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, அவர்கள் உயிருடன் இருந்தால், இடியைத் தாங்குபவனால் {இந்திரனால்} கூட சூதரின் மகனை (வசுதேவரை) எவ்வழியிலும் அழிக்க முடியாது. வசுதேவர் இறந்து விட்டார் என்றால் பலதேவர் {பலராமன்} உள்ளிட்ட அனைவரும் உயிரை இழந்திருப்பார்கள் என்பதே எனது உறுதியான தீர்மானமாக இருந்தது.
வலிமைவாய்ந்த மன்னா {யுதிஷ்டிரரே}, அவர்கள் அனைவரும் அழிந்துவிட்டார்களே என்று நினைத்துப் பார்த்த நான் துயரத்தில் மூழ்கினேன்! இந்த மனநிலையுடன் நான் சால்வனை எதிர்கொண்டேன். ஓ பெரும் ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, அப்போது நான் அந்த விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தேரில் இருந்து வசுதேவர் விழுவதைக் கண்டேன். இதைக் கண்ட நான் மயக்கமடைந்தேன். அனைத்துத் தகுதிகளையும் இழந்து வானில் இருந்து *பூமியை நோக்கி விழும் யயாதியைப் போல எனது தந்தை எனக்குத் தெரிந்தார். அழுக்கடைந்த தலைப்பாகையுடன், தலைமுடி கலைந்து, ஆடைகள் கலைந்து விழும் எனது தந்தை, தகுதிகளை இழந்து வானில் இருந்து விழும் ஒரு கோள் {கிரகம்} போலத் தெரிந்தார். பிறகு எனது வில்லான சாரங்கம் எனது கைகளில் இருந்து விழுந்தது. குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, எனக்கு மயக்கம் வந்தது! நான் தேரின் பக்கவாட்டில் அமர்ந்தேன்.
பாரத குலத்தின் வழித்தோன்றலே, நான் தேரில் சுயநினைவின்றி இருப்பதைக் கண்டு, நான் இறந்து விட்டேன் என்று நினைத்த எனது முழு படையும் “ஓ”, “ஐயோ” என்று கதறின. தனது கரங்களையும் கீழ் முட்டிகளையும் நீட்டியபடி புரண்டு கொண்டு வந்த எனது தந்தை, வானத்தில் இருந்து விழும் பறவையைப் போலத் தெரிந்தார். வலிமைவாய்ந்த கரங்கள் கொண்ட வீரரே {யுதிஷ்டிரரே}, கைகளில் ஈட்டிகளையும் போர்க்கோடரிகளையும் வைத்திருந்த எதிரி வீரர்கள் பயங்கரமாகத் தாக்கினர்! (இவற்றைக் கண்டு) எனது இதயம் நடுங்கியது. நான் விரைவில் உணர்வடைந்தேன். ஓ வீரரே, அப்போது அந்தக் களத்தில் விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தேரையோ, எதிரியான சால்வனையோ, அல்லது முதிர்ந்த எனது தந்தையையோ நான் காணவில்லை! பிறகு நான் கண்டதெல்லாம் மாயை என்பதை என் மனதில் நிச்சயித்துக் கொண்டேன். உணர்வுகள் மீண்ட நான், மறுபடியும் நூற்றுக்கணக்கான கணைகளை அடிக்க ஆரம்பித்தேன்.
நாடு திரும்பிய கிருஷ்ணன் – வனபர்வம் பகுதி 22-சால்வனுடன் கிருஷ்ணன் புரிந்த போர்; சால்வனைக் கிருஷ்ணன் கொல்லுதல்; யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு கிருஷ்ணன் துவாரகை திரும்புதல்…
வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், “பிறகு, பாரத குலத்தில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, எனது அழகான வில்லை எடுத்து, விலையுயர்ந்த பொருட்களால் ஆன அந்தத் தேரில் இருந்தவர்களும் தேவர்களுடைய எதிரிகளும் ஆனவர்களின் தலையை எனது கணைகளால் வெட்டிப் போட ஆரம்பித்தேன்! எனது வில்லான சாரங்கத்தில் இருந்து, பாம்புகள் போன்ற வடிவம் கொண்டவையும், பெரும் உயரம் செல்லக்கூடிவையும், பெரும் சக்தி படைத்தவையுமான அழகான கணைகளை ஏவ ஆரம்பித்தேன். குரு குலத்தைத் தழைக்க வைப்பவரே {யுதிஷ்டிரரே}! பிறகு என்னால் விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அந்தத் தேரைக் காண முடியவில்லை. மாயசக்தியால் அது மறைந்து போயிருந்தது! நான் ஆச்சரியத்தில் மூழ்கினேன்.
பாரதரே {யுதிஷ்டிரரே}, நான் அப்படி காத்திருந்த போது, பயங்கரமான முகங்களும் தலைமுடியும் கொண்ட தானவப்படையினர் பெரும் அலறல் அலறினர். பிறகு அந்தக் கடும் போரில் நான், அவர்களை அழிக்கும் நோக்கத்துடன், எனது வில்லின் நாணில் சத்தமில்லாமல் சென்று எதிரியைத் துளைக்கும் வல்லமை பெற்ற ஆயுதத்தைப் பொருத்தினேன். இதன் பிறகு அவர்கள் சத்தம் அடங்கியது. ஆனால், சத்தமிட்ட தானவர்கள் அனைவரும் சூரியன் போலப் பிரகாசிப்பதும், சத்தத்தைக் கொண்டே தாக்கும் திறன் கொண்ட எனது கணைகளால் கொல்லப்பட்டனர். ஒரு இடத்தில் சத்தம் அடங்கியதும், வலிமைவாய்ந்த மன்னா {யுதிஷ்டிரரே}, வேறு இடத்தில் இருந்து அலறம் சத்தம் கேட்கத் தொடங்கியது. அங்கேயும் எனது கணைகளை அனுப்பினேன். இவ்வகையில், பாரதரே {யுதிஷ்டிரரே}, அசுரர்கள் பத்து பகுதிகளில் இருந்தும் மேலிருந்தும் கீழிருந்தும் அலற ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரும் மற்றும் வானத்தில் இருந்து மறைமுகமாக நின்று போரிட்டவர்களும், மந்திரங்களால் உந்தப் பட்ட பலதரப்பட்ட உருவங்களில் உள்ள எனது தெய்வீக கணைகளால் கொல்லப்பட்டனர். வீரரே {யுதிஷ்டிரரே}, பிறகு, விரும்பிய இடத்திற்கு செல்லும் திறன் கொண்ட விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அந்தத் தேர் எனது கண்களைத் தடுமாறச் செய்து, பிராக்ஜோதிஷத்தில் மீண்டும் காணப்பட்டது!
பிறகு, அழிக்கும் சக்தி கொண்ட பல்வேறு உருவங்களில் இருந்த தானவர்கள் திடீரென பெரும் கல் மழையைப் பொழிந்தனர், கற்களின் ஊற்று என் மீது விழுந்து என்னை மூடியது. என்னைச் சுற்றி அவை (உச்சிகளும் முகடுகளும் கொண்ட) எறும்புப் புற்று போல வளர்ந்தன. எனது குதிரைகள், தேரோட்டி, கொடிக்கம்பங்கள், ஆகியவையுடன் சேர்த்து நானும் செங்குத்தான பாறைகளின் நடுவே மற்றவர்களின் பார்வையில் இருந்து மொத்தமாக மறைந்து போனேன். பிறகு, எனது படையாய் இருந்த விருஷ்ணிகுலத்தின் முதன்மையானவர்கள் பீதியால் தாக்குண்டு, திடீரென அனைத்துப் பக்கங்களிலும் சிதறி ஓட ஆரம்பித்தனர். மன்னா {யுதிஷ்டிரரே}, என்னை அந்த நிலையில் கண்டு, சொர்க்கமும் வானமும், பூமியும், “ஓ”, “ஐயோ” என்ற வார்த்தைகளால் நிரம்பியன. ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, பிறகு, துயரத்தில் மூழ்கிய எனது நண்பர்கள், சோகத்துடன் அழுது, கனத்த இதயத்துடன் ஒப்பாரி வைத்தனர்! எதிரிகளின் இதயங்கள் மகிழ்ச்சியில் மூழ்கியன. நடுக்கமில்லாதவரே, நான் இவற்றையெல்லாம் அந்த எதிரியை வீழ்த்திய பிறகு கேள்விப்பட்டேன்! பிறகு நான், கற்களைத் துளைக்கவல்ல இந்திரனின் விருப்பமான (ஆயுதமான) வஜ்ராயுதத்தை எடுத்து, அந்த மொத்த நிறை கொண்ட செங்குத்தான் பாறைகளை அழித்தேன்.
ஆனால் எனது குதிரைகள், அந்தக் கற்களின் நிறையால் துன்பப்பட்டு, மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டு நடுங்கத் தொடங்கின. பிறகு என்னைக் கண்ட எனது நண்பர்கள், மேகங்களைக் கலைத்துக் கொண்டு உதிக்கும் சூரியனைக் கண்டவர்கள் போல மகிழ்ச்சியடைந்தனர். பிறகு, பாறைகளின் பாரத்தைத் தாங்காமல், கிட்டத்தட்ட தங்கள் கடைசி மூச்சை சுவாசித்துக் கொண்டிருந்த குதிரைகளைக் கண்ட எனது தேரோட்டி, அந்த சூழ்நிலைக்குத் தக்க வார்த்தைகளைச் சொன்னான். “ஓ விருஷ்ணி குலத்தவரே, விலையுயர்ந்த உலோகங்களால் ஆன தேருக்குச் சொந்தமான சால்வன் (அவ்விடத்தில்) அமர்ந்திருப்பதைப் பாரும். அவனை அலட்சியம் செய்யாதீர்! நன்கு முயற்சி செய்யும்! சால்வனிடம் நீர் கொண்டுள்ள மென்மையையும், கருத்துகளையும் கைவிடும்! வலிமைவாய்ந்த கரம் கொண்டவரே, சால்வனைக் கொல்லும். கேசவரே, அவனை வாழ விடாதீர்! வீரரே, உமது நண்பரல்லாதவரை (எதிரிகளை) அழிப்பவரே, அனைத்து முயற்சிகளையும் கைக்கொண்டு ஒரு எதிரி கொல்லப்பட வேண்டும். பலம் வாய்ந்த மனிதனின் காலடியில் அமர்ந்திருக்கும் ஒரு பலவீனமான எதிரியைக் கூட அந்தப் பலவான் அலட்சியம் செய்யக் கூடாது. நம்மிடம் போர்புரியத் துணிந்தவன் குறித்து சொல்லவும் வேண்டுமா?
ஆகையால், மனிதர்களில் புலியே {கிருஷ்ணா}, ஓ தலைவா, விருஷ்ணி குலத்தின் முதன்மையானவரே {கிருஷ்ணரே}, அனைத்து முயற்சிகளையும் கைக்கொண்டு அவனைக் கொல்லும். மேலும் தாமதிக்காதீர்! மென்மையான திட்டங்களால் அழிக்கப்படக்கூடியவன் இவன் இல்லை. உம்மிடம் போரிட்டுக் கொண்டு துவாரகையைப் பாழாக்கி இவன், உமக்கு நண்பனாக முடியாது என்பது எனது கருத்து” என்றான் {தேரோட்டி}. கௌந்தேயரே {யுதிஷ்டிரரே}, எனது தேரோட்டியின் இவ்வார்த்தைகளைக் கேட்டும், அவன் சொன்னது உண்மை என்பதை அறிந்து, சால்வனைக் கொல்லும் நோக்கிலும், விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அந்தத் தேரை அழிக்கும் நோக்கிலும் போரில் (புத்துணர்ச்சியுடன்) ஈடுபட்டேன். வீரரே, தாருகனிடத்தில், “சற்றுப் பொறு” என்று சொல்லி, எனது வில்லின் நாணில் எனது விருப்பத்திற்குரிய ஆயுதமான தெய்வீகம் கொண்டதும், கட்டுப்படுத்தப்பட முடியாததும், கலங்கடிக்கப்பட முடியாததும், சக்தியால் வெடித்துச் சிதறுவதும், அனைத்தையும் துளைக்கும் சக்தி பெற்றதும், பெரும் பிரகாசமுடையதும் எனக்குப் பிடித்தமான ஆயுதமும் ஆன எரிந்து கொண்டிருந்த நெருப்பாயுதத்தை {ஆக்னேயாஸ்திரத்தை} பொருத்தினேன்.
“விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அந்தத் தேரையும் அதில் இருக்கும் அனைத்து எதிரிகளையும் அழி” என்று சொல்லி அந்தக் கணையை அடித்தேன். யக்ஷர்களையும், ராட்சசர்களையும், தானவர்களையும், அசுத்தமான குலங்களில் பிறந்த மன்னர்களையும் சாம்பலாக்குவதும், கூர்மையானதும், களங்கமற்றதும், அழிவுக்கடவுளான யமனைப் போன்றதும், ஒப்பற்றதும், எதிரிகளைக் கொல்வதுமான பெரும் சக்தி பெற்ற சக்கரமான சுதர்சனத்தை எனது கரத்தின் பலத்தாலும், மந்திரங்களை உச்சரித்தும் கோபத்துடன் ஏவினேன். விண்ணில் எழுந்த அது யுகத்தின் கடைசியில் பிராகசத்துடன் மின்னும் இரண்டாவது சூரியனைப் போல இருந்தது. ஒளியிழந்த சௌப நகரத்தை அடைந்து, வாளால் நெடும் மரத்தை அறுப்பது போல நகரத்துக்குள் நுழைந்தது.
சுதர்சனத்தின் சக்தியால் இரண்டாகப் பிளந்து மகேஸ்வரரின் கணைகளால் அசைக்கப்பட்ட திரிபுரா நகரம் போல விழுந்தது. சௌப நகரம் இப்படி விழுந்த பிறகு, சக்கரம் மீண்டும் எனது கைகளை அடைந்தது. மீண்டும் அதை {சுதர்சனத்தை} எடுத்து, பெரும் சக்தியுடன் அதைச் சுழற்றி, “சால்வனிடம் செல்” என்று சொல்லி வீசினேன். பெரும் எடை கொண்ட கதையைச் என்மீது வீசுவதற்காக சுழற்றிக் கொண்டிருந்த சால்வனை அந்தச் சக்கரம் இரண்டாகப் பிளந்தது. அதன் சக்தியால் அந்த எதிரியைப் பொசுக்கியது. அந்த வீரன் கொல்லப்பட்ட பிறகு, இதயம் வருந்திய தானவப் பெண்மணிகள், “ஓ” என்றும் “ஐயோ” என்றும் அலறிக் கொண்டு எல்லாப்புறமும் ஓடினர். எனது தேரை சௌப நகரத்தின் முன்பாக எடுத்துச் சென்று, நான் மகிழ்ச்சிகரமாக எனது சங்கை எடுத்து ஊதி எனது நண்பர்களின் மனதிற்கு மகிழ்ச்சியை ஊட்டினேன். அரண்மனைகளுடனும், வாயில் வழிகளுடனும் மேரும் மலையின் சிகரம் போல இருந்த அவர்களின் நகரம் மொத்தமாக அழிந்து பொசுங்கியது. தானவர்கள் அனைவரும் அச்சத்தால் ஓடிவிட்டனர். இப்படி சௌப நகரத்தை அழித்து, சால்வனைக் கொன்ற நான் ஆனர்த்த நாட்டிற்குத் திரும்பும் எனது நண்பர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கினேன். மன்னா {யுதிஷ்டிரரே}, இதன் காரணமாகவே என்னால்யானையின் பெயர் கொண்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வர முடியவில்லை. எதிரி வீரர்களை அழிப்பவரே! ஓ வீரரே, நான் வந்திருந்தால், சுயோதனன் {துரியோதனன்} உயிருடன் இருக்க மாட்டான். பகடையாட்டமும் நடைபெற்றிருக்காது. நான் இப்போது என்ன செய்ய? அணை உடைந்த பிறகு நீரைத் தேக்குவது என்பது சிரமமாகும்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்தக் கௌரவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, இப்படிப் பேசிய வலிமை நிறைந்த கரங்கள் கொண்ட ஆண்மக்களில் முதன்மையானவனும், அனைத்து அருளையும் கொண்டவனுமான மதுவைக் கொன்றவன் {மதுசூதனன் = கிருஷ்ணன்}, பாண்டவர்களை வணங்கி, விடைபெறத் தயாரானான். வலிமை நிறைந்த கரம் கொண்ட அந்த வீரன் மரியாதையுடன் நீதிமானான யுதிஷ்டிரனை வணங்கினான். மன்னனும் {யுதிஷ்டிரனும்} பதிலுக்கு வணங்கினான். பீமன், அவனது {கிருஷ்ணனின்} தலையில் இருந்த கிரீடத்தை முகர்ந்து பார்த்தான். அர்ஜுனனால் கட்டி அணைத்துக் கொள்ளப்பட்டான். இரட்டையர்கள் அவனை {கிருஷ்ணனை} மரியாதையுடன் வணங்கினர். அவன் தௌமியரால் முறையாக மதிக்கப்பட்டான், திரௌபதி கண்ணீரால் அவனை வழிபட்டாள். *சுபத்திரையையும், அபிமன்யுவையும் தங்கத் தேரில் ஏறச் செய்து, பாண்டவர்களால் வணங்கப்பட்டு கிருஷ்ணனும் அந்தத் தேரில் ஏறினான். யுதிஷ்டிரனைச் சமாதானம் செய்த பிறகு, கிருஷ்ணன், சைப்பியம், சுக்ரீவன் என்ற குதிரைகள் பூட்டப்பட்டு, சூரியனைப் போலப் பிரகாசித்த தனது தேரில் ஏறி துவாரகைக்குச் சென்றான். தாசார்ஹ குலத்தைச் சேர்ந்த அவன் சென்றதும், பிரிஷாதனின் {துருபதன்} மகன் திருஷ்டத்யும்னனும், தன்னுடன் திரௌபதியின் மகன்களை அழைத்துக் கொண்டு, தனது நகரத்திற்குத் {காம்பில்யத்திற்குத்} திரும்பினான்.
சேதி நாட்டு மன்னன் திரிஷ்டகேது {சிசுபாலன் மகனான திருஷ்டகேது},தனது தங்கையை{**கரேணுமதி = நகுலனின் மனைவி,சிசுபாலனின் புதல்வியை} அழைத்துக் கொண்டு, பாண்டவர்களிடம் விடைபெற்று அழகான நகரமான சுக்திமதிக்கு சென்றான். பாரதரே, குந்தி மகன்களின் அனுமதியைப் பெற்ற அளக்கமுடியாத சக்தி கொண்ட கேகயர்களும் பாண்டவர்கள் அனைவரையும் மரியாதையுடன் வணங்கிய பிறகு கிளம்பிச் சென்றனர். ஆனால் அந்தணர்களும், யுதிஷ்டிரனின் நாட்டில் வாழ்ந்த வைசியர்களும் தொடர்ச்சியாக கேட்டுக் கொள்ளப்பட்டும், பாண்டவர்களை விட்டு விலகவில்லை. மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, பரத குலத்தின் காளையே, காம்யக வனத்தில் அந்த உயர் ஆன்மா கொண்டவர்களைச் சூழ்ந்திருந்தவர்கள் இயல்புக்கு மிக்கவர்களாகத் தெரிந்தார்கள். பிறகு யுதிஷ்டிரன், உயர்ந்த மனம் கொண்ட அந்தணர்களை வணங்கி, உரிய நேரத்தில் தனது மக்களிடம், “தேரைத் தயார் செய்யுங்கள்” என்று சொன்னான்.
மக்களைத் திருப்பி அனுப்பிய பாண்டவர்கள் – வனபர்வம் பகுதி 23-கிருஷ்ணன் விடைபெற்றுச் சென்றதும், தங்களைத் தொடர்ந்து வந்த குடிமக்களுக்கு ஆறுதல் சொல்லி பாண்டவர்கள் திருப்பி அனுப்பியது…
வைசம்பாயனர் தொடர்ந்தார், “தாசார்ஹர்களின் தலைவன் {கிருஷ்ணன்} சென்ற பிறகு, சிவனைப் போல இருக்கும் வீரர்களான யுதிஷ்டிரன், பீமர், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்களும், கிருஷ்ணையும் {திரௌபதியும்} மற்றும் அவர்களின் {பாண்டவர்களின்} புரோகிதரும் {தௌமியரும்}, அற்புதமான குதிரைகள் பூட்டப்பட்ட விலையுயர்ந்த தேர்களில் ஏறி ஒன்றாக கானகத்திற்குள் சென்றனர். அப்படி அவர்கள் கிளம்பும் நேரத்தில், சிக்ஷா, அக்ஷரா மற்றும் மந்திரங்களை அறிந்த அந்தணர்களுக்கு நிஷ்கங்கள் அளவு கொண்ட தங்கத்தையும், ஆடைகளையும், பசுக்களையும் விநியோகித்தனர். வில்லுடனும், நாண் கயிறுகள், எரியத்தக்க ஆயுதங்கள், கணைகள், ஈட்டிகள் மற்றும் அழிவிற்குண்டான பொறிகளுடன் இருந்த இருபது {20} பணியாட்கள் அவர்களைத் தொடர்ந்தனர். இளவரசர்களுக்குத் தேவையான ஆடைகள், ஆபரணங்கள், செவிலிகள், பணியாட்கள் ஆகியவற்றுடன் அந்த இளவரசர்களை {பாண்டவர்களை} இந்திரசேனன் {பாண்டவர்களின் தேரோட்டி} தனது தேரில் வேகமாகத் தொடர்ந்தான். பிறகு குருக்களில் சிறந்தவனை {யுதிஷ்டிரனை} அணுகிய உயர் மனம் கொண்ட குடிமக்கள், அவனை {யுதிஷ்டிரனை} வலம் வந்தனர்.
குருஜாங்காலத்தின் தலைமை அந்தணர்கள் அவனை {யுதிஷ்டிரனை} வணங்கினர். நீதிமானான யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன் பதிலுக்கு மகிழ்ச்சியுடன் வணங்கினான். அங்கு சிறிது நேரம் நின்ற அந்தச் சிறப்புவாய்ந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, திரளான குருஜாங்காலவாசிகளை கண்டான். குருக்களில் சிறப்பு வாய்ந்த அந்தக் காளை {யுதிஷ்டிரன்}, ஒரு தந்தை மகன்களை உணர்வதைப் போல அவர்களைக் {குருஜாங்காலவாசிகளைக்} கண்டு உணர்ந்தான். அந்த மக்களும் அவனைத் தங்கள் தந்தையைப் போல உணர்ந்தனர்! அந்தப் பெரும் திரளான மக்கள், குரு வீரனை {யுதிஷ்டிரனை} அணுகி, அவனைச் சுற்றி நின்றனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, துன்புற்று, வெட்கமடைந்து, கண்களில் நீருடன் அவர்கள் அனைவரும், “ஐயோ, ஓ தலைவா! ஓ தர்மா!” என்றனர். பின்னும் அவர்கள், “நீயே குருக்களின் தலைவன், நீயே எங்கள் மன்னன், நாங்கள் உனது குடிமக்களே! ஓ நீதிமானான ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, இந்த நாட்டில் வசிப்பவர்களும் உனது குடிமக்களும் ஆகிய எங்களை விட்டு நீ எங்கு செல்கிறாய்? கொடும் இதயம் கொண்ட திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஐயோ! தீய மனம் படைத்த சுபலனின் மகனுக்கு {சகுனிக்கு} ஐயோ! கர்ணனுக்கு ஐயோ! ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவரே, இந்தப் பாவிகள் எப்போதும் அறத்தில் உறுதியாக இருந்த உமக்குத் தீங்கு செய்யவே விரும்பினர்.
கைலாசத்தின் பிரகாசத்திற்கு ஒப்பான இந்திரப்பிரஸ்த நகரத்தை எதிரிகளை அற்று உன்னை நிறுவிக் கொண்டாய். ஓ சிறப்புவாய்ந்த நீதிமானான மன்னா {யுதிஷ்டிரா}, இப்போது அதைவிட்டு {இந்திரப்பிரஸ்தத்தை விட்டு} நீ எங்கு செல்கிறாய்? ஓ இயல்புக்கு மிக்க சாதனைகளைச் செய்தவனே! ஓ சிறப்பு மிகுந்தவனே, *மயனால் கட்டப்பட்டதும், தேவர்களின் அரண்மனைகளைப் போன்ற பிரகாசம் கொண்டதும், தேவ மாயையும், தேவர்களால் காக்கப்பட்டதுமான அந்த இணையற்ற அரண்மனையை விட்டு, ஓ தர்மா! நீ எங்கே செல்கிறாய்? பிறகு, அறம், இன்பம் மற்றும் பொருள் ஆகியவற்றை அறிந்த பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} உரத்த குரலில், “கானகத்தில் வாழ்ந்து, தனது எதிரிகளின் நற்பெயர்களைக் களைய மன்னர் {யுதிஷ்டிரர்} உத்தேசித்துள்ளார். அறம், பொருள் ஆகியவற்றை உணர்ந்த மறுபிறப்பாளர்களைத் {அந்தணர்களைத்} தலைமையாகக் கொண்டு செல்லும் எங்களுக்கு நல்லது நடக்க துறவிகளின் அருளைப் பெற அவர்களை {துறவிகளை} அணுகுங்கள்.” என்றான். அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தணர்களும் மற்ற வகையினரும், ஓ மன்னா {ஜனமேஜயா}, அவனை மகிழ்ச்சியுடன் வணங்கி, அந்த சார்ந்தவர்களில் முதன்மையானவனை வலம் வந்தனர்! அந்தப் பிருதையின் {குந்தியின்} மகனுக்கும் {யுதிஷ்டிரனுக்கும்}, விருகோதரனுக்கும் {பீமனுக்கும்}, தனஞ்செயனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, யக்ஞசேனிக்கும் {திரௌபதிக்கும்}, இரட்டையர்களுக்கும் நல்விடை கொடுத்தனர். யுதிஷ்டிரனால் {திரும்பிச் செல்லுமாறு} கட்டளையிடப்பட்ட அவர்கள், கனத்த இதயத்துடன் நாட்டுக்குள் இருக்கும் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.
துவைத வனம் சென்ற பாண்டவர்கள் – வனபர்வம் பகுதி 24-
பாண்டவர்கள் தங்கள் பனிரெண்டு வருட வனவாசத்தைக் கழிக்க துவைத வனத்தை அடைதல்..
வைசம்பாயனர் சொன்னார், “அவர்கள் எல்லாம் சென்ற பிறகு, குந்தியின் உறுதி குலையாத அறம்சார்ந்த மகனான யுதிஷ்டிரன், தனது தம்பிகளிடம், “நாம் இந்தத் தனிமையான வனத்தில் பனிரெண்டு வருடங்கள் வசிக்க வேண்டும்.ஆகையால், இந்தப் பெரும் வனத்தில், காண்பதற்கினிய பறவைகளும், மான்களும், மலர்களும், கனிகளும் இருக்கும் இடத்தைத் தேடுங்கள். இந்த வருடங்கள் முழுவதையும் அறம்சார்ந்த மனிதர்கள் வசிக்கும் அதிர்ஷ்டகரமான இடத்தில் இனிமையாக வசிக்கலாம்!” என்றான் {யுதிஷ்டிரன்}.
இப்படி யுதிஷ்டிரன் சொன்னதும், தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்த தர்மனின் மகனை {யுதிஷ்டிரனை} குருவை வணங்குவது போல வணங்கி அந்தச் சிறப்பு வாய்ந்த மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} மறுமொழி கூற ஆரம்பித்தான். “அனைத்து பழம்பெரும் ரிஷிகளிடமும் நீர் மரியாதையுடன் காத்திருந்திருக்கிறீர். இந்த மனிதர்களின் உலகில் நீர் அறியாத ஒன்றும் கிடையாது. ஓ பாரத குலத்தின் காளையே, எப்போதும் நீர் துவைபாயனர்{வியாசர்} உள்ளிட்ட அந்தணர்களிடமும் மற்றவர்களிடமும் மரியாதையுடன் காத்திருந்திருக்கீறர்.
பெரும் ஆன்மத் தகுதி படைத்து, புலன்களைத் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்து எல்லா உலகங்களின் வாசலுக்கும், கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் உலகங்களுக்கும், தேவர்களின் உலகத்திலிருந்து பிரம்மலோகத்திற்கும், செல்லும் சக்தி படைத்த நாரதரிடமும் மரியாதையுடன் காத்திருந்திருக்கின்றீர். அந்தணர்களின் கருத்துகளையும், அவர்களது வீரத்தையும் சந்தேகமற நீர் அறிந்து வைத்திருக்கின்றீர்! ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நமக்கான நன்மைகளை அடைவதையும் அறிவீர்! ஓ பெரும் மன்னா, நீர் எப்படி விரும்புகிறீரோ அப்படியே நாங்கள் வாழ்வோம்! இதோ இந்த தடாகம் முழுவதும் புனித நீர் இருக்கின்றது. மலர்கள் நிறைந்து, காண்பதற்கினியதாகவும், பல்வேறு வகையான பறவைகள் உள்ளதாகவும் இந்தத் துவைத வனம் இருக்கிறது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உமக்கு விருப்பம் இருந்தால், பனிரெண்டு வருடங்களும் {12} நாம் இங்கேயே வசிக்கலாம்! இல்லையென்றால்?” என்ற கேள்வியோடு நிறுத்தினான் அர்ஜுனன். அதற்கு மறுமொழியாக யுதிஷ்டிரன், “ஓ பார்த்தா {அர்ஜுனா}, நீ ஒன்றைப் பரிந்துரைக்கிறாய் என்பதே அதன் தன்மையை எனக்கு விளக்குகிறது! நாம் அந்தப் புனிதமான, கொண்டாடப்படும் துவைதவனம் என்று அழைக்கப்படும் தடாகத்திற்குச் செல்வோம்.” என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிறகு பாண்டுவின் அறம்சார்ந்த மகன் {யுதிஷ்டிரன்} எண்ணற்ற அந்தணர்களுடன், துவைதவனம் என்று அழைக்கப்படும் அந்த புனிதமான தடாகத்திற்குச் சென்றான். நெருப்பு வேள்வி செய்யும அந்தணர்களும், அப்படி இல்லாதவர்களும், பிச்சை எடுத்து வேத கல்விக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களும், வானப்பிரஸ்தர்களும் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து இருந்தனர். கடும் நோன்பு நோற்று தவ வெற்றி கண்ட நூற்றுக்கணக்கான மகாத்மாக்களால் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} சூழப்பட்டு இருந்தான். பாண்டுவின் மகன்களாகிய அந்த பாரத குலத்தின் காளைகள் எண்ணற்ற அந்தணர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சிகரமான புனித வனமான துவைத வனத்திற்குள் நுழைந்தனர். வசந்த காலத்தின் நெருக்கத்தில் அந்தப் பெரும் வனம் {துவைத வனம்}, சால மரம், பனை, மா, மாதுகம் {இலுப்பை}, நிபம் {அடம்பு}, கதம்பம் {கடம்பு}, சர்சம், அர்ஜுனம் {மருத மரம்}, கார்னிகரம் {கோங்கு}, ஆகிய பூக்களுடன் கூடிய மரங்களுடன் இருந்தது. அந்த வனத்தில் மயில்களும், தத்யுஹங்களும் {நீர்க்கோழிகளும்}, சக்கோரங்களும் {புராண காலத்துப் பறவை}, வார்ஹின்களும்{புராண காலத்துப் பறவை}, கோகிலங்களுமான {குயில்களுமான} பறவைகளின் கூட்டங்கள் மரங்களின் உச்சியில் இருந்து மகிழ்விக்கும் குரலுடன் கூவிக் கொண்டிருந்தன. அதிக மதம் கொண்ட பெரும் மலை போன்ற யானைகள், பெண்யானைகளுடன் கூட்டமாக இருப்பதை அங்கே மன்னன் கண்டான்.
அழகான போகவதியை {சரஸ்வதி நதியை} அணுகிய மன்னன், அங்கே ஆன்ம வெற்றி அடைந்த பல தவசிகளும், தலையில் ஜடாமுடியுடன், மரவுரி அணிந்து தூய ஆன்மா கொண்ட அறம் சார்ந்த மனிதர்களும் அந்தக் காட்டில் வசிப்பதைக் கண்டான். அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையான மன்னனும் {யுதிஷ்டிரனும்}, அவனது தம்பிகளும், தொடர்ந்து வந்தவர்களும், தாங்கள் வந்த தேர்களில் இருந்து இறங்கி, அளவற்ற சக்தி கொண்ட இந்திரன் சொர்க்கத்திற்குள் நுழைவது போல அந்த வனத்திற்குள் நுழைந்தனர். உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் ஏகாதிபதியைக் காண விரும்பி சாரணர்களும் சித்தர்களும் பெருங்கூட்டமாக அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} வந்தனர். பெரும் புத்திகூர்மை கொண்டவனும், மன்னர்களில் சிம்மத்தைப் போன்றவனுமானவனைகச் {யுதிஷ்டிரனை} சுற்றி அந்தக் கானகவாசிகள் நின்றனர். சித்தர்களை வணங்கியும், மன்னனுக்குரிய அல்லது தேவர்களுக்குரிய மதிப்புடன் அவர்களால் வணங்கப்பட்ட அந்த மன்னன், அந்த அறம்சார்ந்தவர்களில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்}, மறுபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} முதன்மையானவர்களுடனும் கூப்பிய கரங்களுடனும் அந்தக் கானகத்திற்குள் நுழைந்தான். தன்னை நாடி வந்த அறம் சார்ந்த தவசிகளை வணங்கியும் அவர்களால் வணங்கப்பட்டும் இருந்த அந்த மன்னன், மலர்கள் நிறைந்த ஒரு பெரும் மரத்தினடியில் பழங்காலத்தில் தனது தந்தை அமர்ந்தது போல அமர்ந்தான். பாரத குலத்தின் தலைவர்களான பீமன், தனஞ்சயன் {அர்ஜுனன்}, இரட்டையர்கள், கிருஷ்ணை {திரௌபதி}, மற்றும் அவர்களைத் தொடர்ந்தவர்கள் அனைவரும் மிகுந்த களைப்படைந்து, தங்கள் வாகனங்களை விட்டு, மன்னர்களில் சிறந்தவனைச் {யுதிஷ்டிரனைச்} சுற்றி அமர்ந்து கொண்டனர். அந்த ஐந்து சிறந்த வில்லாளிகள் கொடிகளின் எடை தாங்காமல் வளைந்து நின்ற அந்தப் பெரும் மரத்திற்கு அடியில் அமர்ந்திருந்தபோது, ஓரமாக அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் (ஐந்து) பெரும் யானைகளுடன் கூடிய மலை போல அந்த மரம் தெரிந்தது.
மார்க்கண்டேயர் உபதேசம் – வனபர்வம் பகுதி 25-பாண்டவர்களின் விருந்தாளியாக வந்த முனிவர் மார்க்கண்டேயர் சில உபதேசங்களைச் செய்வது
வைசம்பாயனர் சொன்னார், “துன்பத்தில் வீழ்ந்திருந்த அந்த இளவரசர்கள் {பாண்டவர்கள்} கடைசியாக அந்தக் கானகத்தில் ஒரு இனிமையான வசிப்பிடத்தை அடைந்தனர். சரஸ்வதி நதியால் சுத்தப்படுத்தப்பட்ட சால மரங்கள் நிறைந்த அந்த வனத்தில், இந்திரர்களைப் போன்ற அவர்கள் விளையாடத் தொடங்கினர். அந்தச் சிறப்புமிக்க மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்தக் குரு குலத்தின் காளை, அக்கானகத்தில் இருந்த யதிகளையும், முனிவர்களையும், முக்கியமான அந்தணர்களையும், அற்புதமான பழங்கள் மற்றும் கிழங்குகள் கொடுத்து திருப்தி செய்தான்
பெரும் சக்தி படைத்தவரும், அந்த இளவரசர்களுக்குத் தந்தை போன்றவரும், அவர்களது புரோகிதருமான தௌமியர் அந்தப் பெரும் கானகத்தில் வசிக்கப்போகும் பாண்டவர்களுக்காக இஷ்டி மற்றும் பைத்ரேயம் என்ற வேள்விச் சடங்குகளைச் செய்ய ஆரம்பித்தார். தங்கள் நாட்டைத் தொலைத்து, கானகத்தில் வாழும் பாண்டவர்களின் வசிப்பிடத்திற்கு விருந்தாளியாக முதிர்ந்தவரான ஆழ்ந்த அளவற்ற ஆற்றல் பெற்ற முனிவர் மார்க்கண்டேயர் வந்தார்.
குரு குலத்தின் காளையும் உயர்ந்த ஆன்மா கொண்டவனும், ஒப்பற்ற பலமும் சக்தியும் கொண்டவனுமான யுதிஷ்டிரன், தேவர்களாலும், மனிதர்களில் முனிவர்களாலும் மதிக்கப்பட்டு, சுடர்விட்டெரியும் நெருப்புக்குச் சமமான பிரகாசத்துடன் இருந்த அந்தப் பெரும் முனிவருக்குத் {மார்க்கண்டேயருக்கு} தனது வணக்கத்தைத் தெரிவித்தான். அனைத்தையும் அறிந்த ஒப்பற்ற சக்தி கொண்ட அந்தச் சிறப்பு வாய்ந்த முனிவர், திரௌபதி, யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் ஆகியோரை தவசிகளுக்கு மத்தியில் கண்டு புன்னகைத்து, மனதில் இராமனைக் குறித்து நினைத்துப் பார்த்தார். இதனால் வெளிப்படையாக வருத்தமுற்ற நீதிமானான யுதிஷ்டிரன் அவரிடம், “இந்தத் தவசிகள் அனைவரும் நான் இங்கிருப்பதைக் கண்டு வருத்தமுறுகின்றனர். ஆனால் நீர் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பது போல இவர்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு தனியாக சிரித்துக் கொண்டிருக்கிறீரே! ஏன்?” என்று கேட்டான்.
மார்க்கண்டேயர் மறுமொழியாக, “ஓ குழந்தாய்! நானும் வருந்துகிறேன். நான் மகிழ்ச்சியால் சிரிக்கவில்லை. மகிழ்ச்சியினால் உண்டாகும் கர்வமும் எனது இதயத்துக்குக் கிடையாது! இன்று இந்தப் பேரிடரைக் கண்ட நான், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த தசரத மைந்தன் ராமனை நினைத்துப் பார்க்கிறேன்! அந்த ராமன் கூட தந்தையின் கட்டளைக்கிணங்க லட்சுமணனுடன் கானகத்தில் வசித்தான். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, பழங்காலத்தில் வில்லுடன் ரிஷ்யமுக மலைகளில் அலைந்து திரிந்த அவனை {ராமனை} நான் கண்டிருக்கிறேன். அந்தச் சிறப்பு மிகுந்த ராமன், நமுச்சியைக் கொன்றவனும் யமனுக்குத் தலைவனுமான இந்திரனைப் போன்றவன். இருப்பினும் அந்தப் பாவமற்றவன் கூட {ராமனும் கூட} தந்தையின் {தசரதனின்} கட்டளையை தன் கடமையாக ஏற்று, கானகத்தில் வசிக்க வேண்டியிருந்தது. சிறப்பு மிகுந்த ராமன் பராக்கிரமத்தில் சக்ரனுக்குச் {இந்திரனுக்குச்} சமமானவன். போர்க்களத்தில் ஒப்பற்றவன். இருப்பினும் அவன் {ராமன்} அனைத்து இன்பங்களையும் துறந்து கானகத்தில் திரிய வேண்டியிருந்தது. ஆகையால், நான் பலவான் என்று சொல்லி யாரும் அநியாயம் செய்யக் கூடாது!
மன்னர்களான நாபாகனும், பகீரதனும், மற்றவர்களும் கடல் சூழ்ந்த இந்த உலகத்தை உண்மையால் {சத்தியத்தால்} வெற்றிகொண்டு, ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா, (கடைசியாக) அதன்பிறகு அனைத்து உலகங்களையும் அடைந்தார்கள். ஆகையால், நான் பலவான் என்று சொல்லி யாரும் அநியாயம் செய்யக் கூடாது!
ஓ மனிதர்களில் மேன்மையானவனே, அறமும் உண்மையும் கொண்ட காசி மன்னனும், கருஷனும் தனது நாட்டையும், செல்வங்களையும் துறந்தபோது பைத்தியக்கார நாய் என்று அழைக்கப்பட்டார்கள் { king of Kasi and Karusha was called a mad dog for having renounced his territories and riches!}. ஆகையால், நான் பலவான் என்று சொல்லி யாரும் அநியாயம் செய்யக் கூடாது!
ஓ மனிதர்களில் சிறந்தவனே, ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, படைப்பாளரால் {பிரம்மனால்} வேதங்களில் விதிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு, நீதி தவறாத ஏழு முனிவர்கள் வானத்தில் சுடர்விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆகையால், நான் பலவான் என்று சொல்லி யாரும் அநியாயம் செய்யக் கூடாது!
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தந்தங்களுடன் கூடிய மலைமுகடுகளைப் போன்ற பெரும் யானைகளைப் பார். ஓ மனிதர்களில் மேன்மையானவனே அவர் படைப்பாளரின் {பிரம்மனின்} விதிகளை மீறுவதில்லை. ஆகையால், வலிமை எனதே என்று சொல்லி யாரும் அநியாயம் செய்யக் கூடாது!
ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, அனைத்து உயிர்களும் தங்கள் தங்கள் வகைக்கு ஏற்ப படைப்பாளரின் விதிப்படி நடப்பதைப் பார். ஆகையால், வலிமை எனதே என்று சொல்லி யாரும் அநியாயம் செய்யக் கூடாது!
ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரனே}, உண்மையில், அறத்தில், நன்னடத்தையில், அடக்கத்தில், நீ அனைத்து உயிர்களிலும் விஞ்சி நிற்கிறாய். உனது புகழும், சக்தியும், நெருப்பையோ அல்லது சூரியனையோ போல பிரகாசமாக இருக்கின்றன. உனது சத்தியங்களில் உறுதியாக இருக்கும், ஓ சிறப்பானவனே, வலி நிறைந்த வனவாசத்தைக் கழித்து, ஓ மன்னா, உனது சக்தியால், நீ மீண்டும், கௌரவர்களிடம் இருந்து வளமையைப் பறிப்பாய்!” என்றார் {மார்க்கண்டேயர்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “நண்பர்களுக்கும் தவசிகளுக்கும் மத்தியில் (அமர்ந்து) இருந்த யுதிஷ்டிரனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பெரும் முனிவர் {மார்க்கண்டேயர்}, தௌமியரையும், பாண்டவர்களையும் வணங்கிய பிறகு வடக்கு திசை நோக்கிச் சென்றார்!”
முனிவர் பகன் உபதேசம் – வனபர்வம் பகுதி 26-அந்தணர்களின் முக்கியத்துவத்தை யுதிஷ்டிரனுக்கு முனிவர் பகன் எடுத்துரைத்தல்..
வைசம்பாயனர் சொன்னார், “பாண்டுவின் சிறப்புமிக்க மகன் {யுதிஷ்டிரன்}, தொடர்ந்து துவைத வனத்தில் வசித்த போது, அந்தப் பெரும் கானகமே அந்தணர்களால் நிரம்பியது. அக்கானகத்தில் இருந்த தடாகமே இரண்டாவது பிரம்மலோகம் போல, அங்கு எப்போதும் வேத ஒலிகள் கேட்டுக் கொண்டிருந்தது. யஜுர், ரிக், சாமத்தின் ஒலிகள் மற்றும் அந்தணர்களின் உச்சரித்த வார்த்தைகள் கேட்பதற்கு காதுக்கினியனவாக இருந்தது. அந்தணர்களின் வேத ஒலியும், பிருதை {குந்தி} மைந்தர்களின் {பாண்டவர்களின்} வில்லொலியுடன் சேர்ந்து அந்தண க்ஷத்திரிய முறைகள் கலந்த ஒரு அழகான முறையாக இருந்தது.
ஒரு நாள் மாலைப் பொழுதில் தால்பிய குடும்பத்தைச் சேர்ந்த பகன் என்ற முனிவர், மற்ற முனிவர்களுக்கு மத்தியில் இருந்த குந்தியின் மகன் யுதிஷ்டிரனிடம், “ஓ குருக்களின் தலைவா, ஓ பிருதையின் {குந்தியின்} மகனே, தவக்கடமைகள் கொண்ட அந்தணர்களின் ஹோமத்திற்கான நேரம் வந்துவிட்டதைக் கவனி. இது (வேள்வி) நெருப்பு மூட்டப்படும் நேரமாகும்! கடும் நோன்புகள் நோற்ற இவர்கள், உன்னால் பாதுகாக்கப்பட்டு, இந்தப் புனிதமான பகுதியில் அறச்சடங்குகளை {rites of religion} செய்கிறார்கள். பிருகு, அங்கிரஸ் வழித்தோன்றல்களும், வசிஷ்டர், காசியபர் வழித்தோன்றல்களும், அகத்தியரின் மகன்களும், அற்புதமான நோன்புகள் கொண்ட அத்ரியின் வாரிசுகளும் சேர்ந்து உண்மையில் அந்தணர்களில் முதன்மையானவர்களான அனைவரும் உன்னிடம் சேர்ந்திருக்கின்றனர்!
ஓ குந்தியிடம் பிறந்த குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரனே}, உனது தம்பிகளுடன் சேர்ந்து நான் சொல்லும் வார்த்தைகளைக் கேள்! காற்றுடன் சேர்ந்த நெருப்பு கானகத்தை உட்கொள்வதைப் போல, பிரம்ம சக்தி க்ஷத்திரிய சக்தியுடன் இணைந்தும், க்ஷத்திரிய வலிமை, அந்தண பலத்துடன் இணைந்தும், சேரும் சக்தி அனைத்து எதிரிகளையும் உட்கொண்டுவிடும்! ஓ குழந்தாய், இவ்வுலகத்தையும், மறு உலகத்தையும் நீண்ட நாட்களுக்கு அடக்கி வைக்க எண்ணும் ஒருவன் தன்னுடன் அந்தணர்கள் இல்லாமல் இருக்க விரும்பக்கூடாது. உண்மையில், ஒரு மன்னன் அறம் மற்றும் உலக நடப்புகளை அறிந்து, ஆசைகளையும் அறியாமையையும் துறந்து இருக்கும் அந்தணரை அடைந்த மன்னனே தனது எதிரிகளை வீழ்த்த முடியும்!
தனது குடிமக்களை நன்றாகப் பேணிப் பாதுகாத்து முக்திக்கு வழிவகுக்கும் கடமைகளைச் செய்த மன்னன் பலி {பலிச்சக்கரவர்த்தி}, அதற்குக் காரணமாக அந்தணர்களைத் தவிர வேறு எந்தக் காரணத்தையும் காணவில்லை. இதன் காரணமாகவே, விரோசனனின் மகனான அந்த அசுரன் {பலிச்சக்கரவர்த்தி}, எப்போதும் திருப்தியுடனும், அள்ள அள்ள குறையாத செல்வத்தையும் அடைந்தான். அந்தணர்களின் உதவியால் முழு உலகத்தையும் அடைந்த பிறகு, அவர்களுக்கு {அந்தணர்களுக்குத்} தீங்கு செய்ததாலேயே அவன் {பலிச் சக்கரவர்த்தி} அழிவைச் சந்தித்தான்.
செல்வங்கள் நிறைந்த இந்தப் பூமி, அந்தணனுடன் இல்லாத க்ஷத்திரியனை ஒரு போதும் கொண்டாடாது. அந்தணரின் ஆளுகைக்கு உட்பட்டு, தனது கடமைகளை அவரிடம் இருந்து கற்றவனையே கடலால் சூழப்பட்ட இந்தப் பூமி வணங்குகிறது. போர்க்களத்தில் உள்ள பாகன் இல்லாத யானை போன்று அந்தணர்கள் இல்லாத க்ஷத்திரியன் பலம் குறைந்து பலவீனனாவான். அந்தணனின் பார்வை ஒப்பற்றது. க்ஷத்திரியனின் பலமும் இணையற்றதே. இந்த இரண்டும் சேரும் போது, இப்படிப்பட்ட சேர்கை முழு உலகத்திற்கும் மகிழ்ச்சியை விளைவிக்கும். காற்றுடன் சேர்ந்த நெருப்பு பலம் பெற்று, வைக்கோலையும், மரங்களையும் உட்கொள்வது போல, அந்தணர்களுடன் சேர்ந்த மன்னர்கள் எதிரிகள் அனைவரையும் உட்கொள்வார்கள். ஆகையால், ஓ குந்தியின் மகனே, ஓ யுதிஷ்டிரா! அடையாததை அடையவும், இருப்பதை அதிகரித்துக் கொள்ளவும், சரியான பொருளுக்கும் மனிதர்களுக்கும் செலவு செய்யவும், ஞானமும் அனுபவமும் உள்ள வேதமறிந்த மரியாதைக்குரிய அந்தணர் ஒருவரை உன்னிடம் வைத்துக் கொள். நீ எப்போதும் அந்தணர்களை உயர்வாகவே மதித்திருக்கிறாய். இதன் காரணமாகவே உனது புகழ் பெரிதாக மூன்று உலகங்களிலும் சுடர்விட்டு எரிகிறது.” என்றார்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிறகு, யுதிஷ்டிரனைப் புகழ்ந்து பேசிய தால்பிய குலத்தைச் சேர்ந்த {முனிவர்} பகனிடம் திருப்தி கொண்ட, யுதிஷ்டிரனுடன் இருந்த அனைத்து அந்தணர்களும் அவரை வழிபட்டனர். துவைபாயனர், நாரதர், ஜமதக்னேயர், பிருதுஸ்ரவஸ், இந்திரத்யும்னர், பாலகி, கிரிதசேதஸ், சகஸ்ரபத், கர்ணஸ்ரவஸ், முஞ்சர், லவணாஸ்வர், காசியபர், ஹாரிதர், ஸ்தூலகர்ணர், அக்னிவேஸ்யர், சௌனகர், கிருதவாகர், சுபாகனர், பிருஹதஸ்வர், விபாவசு, ஊர்தரேதஸ், விருஷாமித்ரர், சுஹோத்ரர், ஹோத்ரவாஹணர் ஆகியோரும், கடும் நோன்புகள் நோற்ற பல அந்தணர்களும் சேர்ந்து, சொர்க்கத்தில் இருக்கும் புரந்தரனைக் கொண்டாடும் முனிவர்கள்போல யுதிஷ்டிரனைக் கொண்டாடினர்.
கோபப்பட மாட்டீரா? மன்னா! – வனபர்வம் பகுதி 27-ஒவ்வொருவருக்கும் நேர்ந்த அநியாயங்களையும், உண்மையில் அவர்களது மதிப்புகளையும் எடுத்துக் கூறி, உமக்கு ஏன் கோபம் வரவில்லை என்று யுதிஷ்டிரனிடம் கேள்வி கேட்கிறாள் திரௌபதி
வைசம்பாயனர் சொன்னார், “கானகத்திற்கு நாடு கடத்தப்பட்ட பிருதையின் {குந்தியின்} மகன்கள், மாலைப்பொழுதில் கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} அமர்ந்து, துயரத்துடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். கற்றறிந்தவளும், பார்ப்பதற்கு அழகானவளும், தனது தலைவர்களுக்கு அன்பானவளும், அவர்களுக்குத் தன்னை அர்ப்பணித்தவளுமான கிருஷ்ணை {திரௌபதி} யுதிஷ்டிரனிடம் “பாவியும், கடுமை நிறைந்தவனும், தீய மனதுடையவனுமான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} நிச்சயம் நமக்காக வருந்தமாட்டான். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தத் தீய இதயம் கொண்ட இழிந்தவன் உம்மையும் என்னையும் மான் தோலுடுத்தி கானகத்திற்கு அனுப்பியும் கூட வருத்தப்படவில்லை. அந்த நேரத்தில் அறம் சார்ந்த தனது அண்ணனிடம் {உம்மிடம்} கடும் மொழிகள் பேசிய தீய செயல்கள் புரியும் அந்த இழிந்தவனின் {துரியோதனனின்} இதயம் இரும்பாலானது. அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் தகுதியுள்ள உமக்கு இந்த துக்கம் தகாது. உம்மை இப்படிப்பட்ட துன்பத்துக்கு தள்ளிய அந்த தீய மனம் படைத்த இழிந்த பாவி {துரியோதனன்}, தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறான்
ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, மான் தோலுடுத்தி நீர் கானகத்திற்குச் செல்லும்போது, ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, துரியோதனன், கர்ணன், தீய மனம் கொண்ட சகுனி, துரியோதனின் தீய தம்பியான துச்சாசனன் ஆகிய நால்வர் {4} மட்டுமே கண்ணீர் சிந்தவில்லை! இவர்களைத் தவிர்த்து, ஓ குருக்களில் {குருகுலத்தில்} சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, மற்ற குருக்கள் {குருகுலத்தினர்} அனைவரும் துயரத்தில் மூழ்கி கண்களில் நீரை வார்த்தனர்! இப்போதிருக்கும் உமது படுக்கையைக் கண்டு, முன்பு நீர் கொண்டிருந்த படுக்கையை நினைத்து நான் துயருறுகிறேன். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, துன்பம் அனுபவிக்கத் தகாத நீர், எல்லா ஆடம்பரங்களுடனேயே வளர்ந்தீர்! உமது சபையில் இருந்த தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு தந்தத்தால் ஆன ஆசனத்தை மனதில் நினைத்து, இப்போது குசப்புல்லாலான {வெட்டிவேராலான} உமது ஆசனத்தைக் கண்டதால் துயரம் என்னை எரிக்கிறது.
ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உமது சபையில் மன்னர்களால் சூழப்பட்ட உம்மைக் கண்டேன்! அப்படி இப்போது உம்மைக் காண முடியாத நிலையில், என் மனம் எப்படி அமைதியுடன் இருக்கும்? சந்தனம்பூசி சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் இருந்த உமது மேனியைக் கண்டேன்! ஐயோ, அழுக்கும் மண்ணும் பூசிய உமது மேனியை நான் இப்போது காண்பதால் துயரத்தால் எனது உணர்வுகளை இழக்கிறேன்! ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, சுத்தமான வெள்ளை நிறம் கொண்ட பட்டாடை உடுத்திய உம்மையே முன்பு நான் கண்டிருக்கிறேன்! ஆனால், இப்போது கிழிசல்களை உடுத்தியிருக்கும் உம்மைக் காண்கிறேன்.
முன்பு, அனைத்து வகையான சுத்தமான உணவுகளைக் கொண்ட தங்கத் தட்டுகள் உமது வீட்டில் இருந்து ஆயிரக்கணக்கான அந்தணர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஓ மன்னா, வீடில்லாதவர்களும், இல்லறவாசிகளுமான தவசிகளுக்கு உணவில் சிறந்த வகையை நீர் கொடுத்தீர்! முன்பு, உலர் மாளிகையில் வாழ்ந்து கொண்டு, ஆயிரக்கணக்கான தட்டுகளில் உணவை நிரப்பி, அந்தணர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொடுத்தீர்! ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, {இப்போது} இதையெல்லாம் காணும் எனது இதயம் எப்படி அமைதி பெறும்? ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, காதுகுண்டலங்களுடன் இளமையாக இருக்கும் இந்த உமது தம்பிகள், இனிமையான உணவுகளைப் புசித்து, நிபுணத்துவத்துடன் உடுத்தியவர்கள் ஆயிற்றே! ஐயோ, ஓ மன்னா, துன்பமடையத் தகாத அவர்கள் கானகத்தில் வாழ்ந்து, கானகத்தில் கிடைப்பதை உண்பதை நான் காண்கிறேன். எனது இதயம், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அமைதியை அறியவில்லை.
இந்த பீமசேனர், கானகத்தில் துயரத்துடன் வாழ்வதைக் கண்டு, காலம் கடந்துவிட்டாலும் உமக்குக் கோபம் வரவில்லையா? ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எந்த உதவியும் இல்லாமல் அனைத்தையும் செய்யும் சிறப்புமிக்க பீமசேனர், அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் தகுதி கொண்ட அவர் {பீமசேனர்}, இப்படித் துயரத்தில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டும் உமக்கு ஏன் கோபம் வரவில்லை? ஓ மன்னா, எண்ணற்ற வாகனங்களால் சூழப்பட்டு, விலையுயர்ந்த ஆடைகள் உடுத்தும் பீமசேனர், இப்படி கானகத்தில் வாழ நேர்ந்ததை நினைத்து ஏன் உமக்குக் கோபம் வரவில்லை?, இந்த மேன்மை மிக்க மனிதர் {பீமர்}, போர்க்களத்தில் அனைத்து குருக்களையும் கொல்லத் தயாராய் இருக்கிறார். இருப்பினும், நீர் செய்த சத்தியத்தை நிறைவேற்றுவதற்காக காத்திருந்து, இந்த அனைத்துத் துன்பங்களையும் தாங்கிக் கொள்கிறார்.
இந்த அர்ஜுனர், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இரு கரங்களைக் கொண்டிருந்தாலும், இலகுவாக கணையடிக்கும் திறமைக்காக, ஆயிரம் {1000} கரம் கொண்ட அர்ஜுனனுக்குச் (கார்த்தவீர்யார்ஜுனனுக்கு) சமமானவரே! இவர் {அர்ஜுனர்} (எதிரிகளுக்கு) யுகத்தின் முடிவில் நிற்கும் யமனைப் போன்றவர்! அவரது {அர்ஜுனரது} ஆயுதங்களின் பராக்கிரமத்தாலேயே பூமியின் அனைத்து மன்னர்களும் உமது வேள்வியில் அந்தணர்களுக்காக காத்து நின்றார்கள். மனிதர்களில் புலி போன்ற அர்ஜுனர், தேவர்களாலும் தானவர்களாலும் ஆர்வத்துடன் வணங்கப்படுகிறார். அவர் இந்த நிலையில் இருப்பதைக் கண்டும் உமக்கு ஏன் கோப உணர்ச்சி வரவில்லை? ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, ஆடம்பரத்துடன் வளர்ந்து, துயரடையத் தகாத பிருதையின் {குந்தியின்} மகன் {அர்ஜுனர்} நாடு கடத்தப்பட்டு இந்நிலையில் இருப்பதைக் கண்டும் உமக்குக் கோபம் வராததைக் கண்டு நான் துயருறுகிறேன். ஒரே தேரில் நின்று கொண்டு, தேவர்களையும், மனிதர்களையும், நாகர்களையும் வீழ்த்திய அர்ஜுனர் நாடு கடத்தப்பட்டு இப்படி இருப்பதைக் கண்டும் உமக்கு ஏன் கோபம் வரவில்லை? ஓ மன்னா, முன்பு தேர்களையும், பல உருவம் கொண்ட வாகனங்களையும், குதிரைகளையும், யானைகளையும் கொடையாகப் பெற்றும், பூமியின் மன்னர்களிடம் இருந்து அவர்களது செல்வத்தைப் பிடுங்கி வந்தும் எதிரிகளைத் தண்டிப்பவராகவும், ஒரே முயற்சியில் ஐநூறு கணைகளை வீசும் திறமை பெற்றவராகவும் உள்ள அர்ஜுனர் நாடு கடத்தப்பட்டு, இந்நிலையில் இருக்கும் போதும் உமக்கு ஏன் கோபம் வரவில்லை?
ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அழகு நிறமும் கட்டுடல் கொண்டவரும், இளமையானவரும், வாள்வீசுபவர்களில் முதன்மையானவரும் ஆன நகுலர் நாடு கடத்தப்பட்டு இந்நிலையை அடைந்ததைக் கண்டும், உமக்கு ஏன் கோபம் வரவில்லை? ஓ மன்னா, ஓ யுதிஷ்டிரரே, அழகிய உருவம் கொண்டவரும், வீரம் கொண்டவரும், மாத்ரியின் மகனுமான சகாதேவர் நாடுகடத்தப்பட்டு இந்நிலையில் இருப்பதைக் கண்டும் எதிரிகளை நீர் ஏன் மன்னிக்கிறீர்? ஓ மன்னா, துயரடையத்தகாத நகுலரும் சகாதேவரும் துயரத்தில் இருக்கும் காட்சியைக் கண்டும் உமக்கு ஏன் கோபம் வரவில்லை? ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, துருபதரின் குலத்தில் பிறந்து, திருஷ்டத்யும்னன் தங்கையாகவும், சிறப்புமிகுந்த பாண்டுவின் மருமகளாகவும், வீரர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் மனைவியாகவும் உள்ள நான் நாடுகடத்தப்பட்டு இந்நிலையில் இருக்கும்போதும், நீர் ஏன் எதிரிகளை மன்னிக்கிறீர்?
ஓ பாரதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, உண்மையில் உமக்கு கோபம் என்பதே இல்லை. இல்லாவிட்டால், உமது தம்பிகள் மற்றும் எனது (துன்ப) நிலையைக் கண்டும், உமது மனம் ஏன் அசையவில்லை? கோபமற்ற ஒரு க்ஷத்திரியன் கூட இந்த உலகத்தில் கிடையாது என்று சொல்லப்படுகிறது. பழமொழிகள் மாறுபடுவதை இப்போது நான் உம்மிடம் காண்கிறேன். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, வாய்ப்பு வரும்போது தனது சக்தியை உணராத க்ஷத்திரியன், அனைத்து உயிர்களாலும் அவமதிக்கப்படுகிறான்! ஆகையால், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, எதிரிகளை மன்னிக்கும் உமது குணத்தை நீர் நீட்டித்து வரக்கூடாது. உண்மையில், உமது சக்தியைக் கொண்டு, நீர் அவர்களனைவரையும் சந்தேகமற கொன்றுவிடலாம்! ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அதே போல, மன்னிக்கும் நேரம் வரும்போதும் சமாதானமடையாத க்ஷத்திரியன், அனைத்து உயிர்களிடத்தும் செல்வாக்கற்றுபோய், இம்மையிலும் மறுமையில் அழிவடைவான்.” {என்று யுதிஷ்டிரனிடம் கூறுகிறாள் திரௌபதி}
பணிவே சாதிக்கும்! – வனபர்வம் பகுதி 28-பலிச்சக்கரவர்த்தி, தனது பாட்டனான பிரகலாதனிடத்தில், கோபம் குறித்தும், கோபமடையாமல் இருப்பது குறித்தும் தனது சந்தேகங்களைக் கேட்பது; பிரகலாதன் தனது பேரனுக்கு, அவனது சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுப்பது; இக்கதையை திரௌபதி யுதிஷ்டிரனுக்குச் சொல்வது.
திரௌபதி தொடர்ந்தாள், “இவ்விஷயத்தில், பிரகலாதனுக்கும், விரோசனனின் மகனான பலிக்கும் {பலிசக்கரவர்த்திக்கும்} இடையே பழங்காலத்தில் நடந்த உரையாடல் உதாரணமாகச் சொல்லப்படுகிறது. ஒரு நாள் பலி {பலிச்சக்கரவர்த்தி}, அசுரர் மற்றும் தானவர்களின் தலைவனும், பெரும் ஞானம் கொண்டவனும், கடமை குறித்த அறிவியலின் புதிர்களை நன்கு அறிந்தவனுமான தனது பாட்டன் பிரகாலதனிடம், “ஓ தாத்தா, மன்னிக்கும் தன்மை மெச்சத்தகுந்ததா? அல்லது பலமும் சக்தியும் மெச்சத்தகுந்ததா? இது குறித்து எனக்குப் புதிராக இருக்கிறது. ஓ தாத்தா, உம்மிடம் கேட்கும் எனக்கு இது குறித்துத் தெளிவுபடுத்தும்! ஓ அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரே, உண்மையில் எது மெச்சத்தகுந்தது என்பதை எனக்குச் சொல்லும்! உமது கட்டளை எதுவானாலும் நான் அதைக் கட்டாயம் ஏற்றுக் கொள்வேன்!” என்றான் {பலி-பலிச்சக்கரவர்த்தி}.
இப்படிக் கேட்கப்பட்ட ஞானம்கொண்ட அவனது {பலியின்) பாட்டனான {பிரகலாதன்}, அவ்விஷயத்தில் தன்னிடம் சந்தேகம் கேட்ட தனது பேரனுக்கு {பலிக்கு} முழுமையாகச் சொன்னான். பிரகலாதன், “ஓ குழந்தாய், பலமும் எப்போதும் மெச்சத்தகுந்ததில்லை. மன்னிப்பும் எப்போதும் மெச்சத்தகுந்ததில்லை. நிச்சயமான இந்த இரண்டு உண்மைகளையும் நீ அறிந்து கொள்! எப்போதும் மன்னிப்பவன் பல தீங்குகளுக்கு ஆளாகிறான். பணியாட்களும், அந்நியர்களும், எதிரிகளும் அவனை எப்போதும் அவமதிப்பர். எந்த உயிரும் அவனுக்கு அடிபணியாது. ஆகையால், ஓ குழந்தாய், எப்போதும் மன்னிக்கும் குணம் கொண்டவர்களை கற்றவர்கள் மெச்சுவதில்லை! எப்போதும் மன்னிக்கும் மனிதனை அவனது பணியாட்கள் அவமதித்து எப்போதும் ஏதாவது குறை சொல்பவர்களாகவே இருப்பார்கள். அற்ப புத்தியுள்ள மனிதர்கள் அவனை {மன்னிப்பவனை} ஏமாற்றி அவனது செல்வத்தைக் கவர்வார்கள். இழிந்த ஆன்மா கொண்ட பணியாட்கள் அவனது {மன்னிப்பவனது} வாகனங்கள், துணிகள், ஆபரணங்கள், ஆடைகள், படுக்கைகள், ஆசனங்கள், உணவுகள், பானங்கள் மற்றும் பிற பொருட்களை தாங்கள் விரும்பியபடி எடுத்துப் பயன்படுத்துவார்கள். தங்கள் தலைவன் மற்றவர்களுக்குக் கொடுக்கக் கட்டளையிடும் பொருட்களைக் கொடுக்கமாட்டார்கள். தங்கள் தலைவனுக்கு உரிய மரியாதையும் கொடுக்க மாட்டார்கள். அவனை வழிபடமாட்டார்கள். இவ்வுலகத்தில் அவமதிப்பு என்பது மரணத்தைவிட மோசமானது.
ஓ குழந்தாய் {பேரன் பலியே}, மகன்களும், பணியாட்களும், உபசரிக்கிறவர்களும், ஏன் அந்நியர்களும் கூட எப்போதும் மன்னிப்பவனிடம் கடுஞ்சொற்கள் பேசுவார்கள். எப்போதும் மன்னிக்கும் குணம் கொண்டவனை அவமதிக்கும் மனிதர்கள், அவனது மனைவியைக் கூட விரும்புவார்கள். அவனது மனைவியும் தான் விரும்பியபடி செயல்படத் தயாராவாள். எப்போதும் இன்பத்தை விரும்பும் பணியாட்கள், தங்கள் தலைவனிடம் இருந்து சிறு தண்டனைகூட கிடைக்காவிட்டால், எல்லா தீமைகளையும் செய்வார்கள். அதிலும் தீயவர்கள் தங்கள் தலைவனுக்குக் காயம் ஏற்படுத்தவும் விளைவார்கள். இதுவும் மேலும் சிலவும் எப்போதும் மன்னிக்கும் குணம் கொண்டவனின் குறைகளாகும்.
ஓ விரோசனனின் மகனே {பலியே}, எப்போதும் மன்னிக்காதவர்களின் குறைகளை இப்போது கேள்! கோபம் கொண்ட மனிதன், இருளால் சூழப்பட்டு, தனது சக்தியாலே, பலதரப்பட்ட தண்டனைகளை மனிதர்களுக்குக் கொடுத்து, அந்த மனிதர்கள் அந்தத் தண்டனைக்குத் தகுந்தவர்கள் தானா என்பதைப் பாராமல் இருந்து, அதன் காரணமாகவே தங்கள் நண்பர்களிடம் இருந்து பிரிவார்கள். அப்படிப்பட்ட மனிதன், தனது உறவினர்களாலும், அந்நியர்களாலும்கூட வெறுக்கப்படுவான். அப்படிப்பட்ட {எப்போதும் கோபமடையும்} மனிதன், மற்றவர்களை அவமதிப்பதால், செல்வத்தை இழப்பதும், அவமதிப்பை அடைவதும், சோகம், வெறுப்பு, குழப்பம், எதிரிகள் ஆகியவற்றையும் சம்பாதித்துக் கொள்கிறான். கோபம் கொண்ட மனிதன், தனது கடுஞ்சினத்தின் காரணமாக மனிதர்களுக்குத் தண்டனை கொடுத்து, (பதிலுக்கு) கடுஞ்சொற்களைப் பெறுகிறான். அப்படிப்பட்டவன், விரைவில் தனது செழிப்பை இழந்து, நண்பர்களையும் உறவினர்களையும் இழக்கிறான். ஏன் உயிரைக் கூட இழக்கிறான்.
தனக்கு உதவுபவர்களிடமும், எதிரிகளிடமும் தனது பலத்தைப் பயன்படுத்தும் மனிதன், உலகத்துக்கே அச்சுறுத்தலாக இருந்து, வீட்டில் வசிக்கும் பாம்பு போல அந்தக் குடும்பத்தாருக்குத் தெரிகிறான். உலகத்துக்கே அச்சுறுத்தலாக இருப்பவன் என்ன செழிப்பை அடைந்து விட முடியும்? சமயம் வாய்க்கும்போது மக்கள் அவனைக் காயப்படுத்தத் தயங்கமாட்டார்கள். ஆகையால், எல்லா சந்தர்ப்பங்களிலும் மனிதர்கள் பலத்தையோ மன்னிப்பையோ அதிகம் வெளிக்காட்டக்கூடாது. ஒருவன் தனது பலத்தையும், மன்னிக்கும் குணத்தையும் சரியான சமயங்களில் பயன்படுத்த வேண்டும். சரியான நேரங்களில் மன்னிப்பு, கடுமை, பலம் ஆகியவற்றைக் காட்டுபவன், இவ்வுலகிலும் மறு உலகிலும் இன்பத்தை அடைகிறான்.
நான் இப்போது, எச்சந்தர்ப்பங்களில் மன்னிக்கலாம் என்று கற்றவர்களால் விதிக்கப்பட்டதை விளக்கமாகவும், எது எப்போதும் பின்பற்றத்தக்கது என்பதையும் சொல்கிறேன். நான் சொல்லும்போது கவனமாகக் கேட்டுக் கொள்! உனக்கு ஒரு சேவையைச் செய்தவன், உனக்குப் பெரும் தீங்கிழைத்திருந்தாலும், அவனது முந்தைய சேவையை நினைத்துப் பார்த்து, அந்தக் குற்றவாளியை மன்னிக்கலாம். கல்வியையும் ஞானத்தையும் மனிதர்களால் எளிமையாக அடைய முடியாது. ஆகையால், அறியாமையாலும், முட்டாள்தனத்தாலும் குற்றமிழைத்தவர்களை மன்னிக்கலாம். தெரிந்தே குற்றமிழைத்துவிட்டு, தெரியாமல் செய்துவிட்டேன் என்று கெஞ்சுபவர்களை, அவர்களது குற்றம் அற்பமானதாக இருந்தாலும் தண்டிக்க வேண்டும். அத்தகு நேர்மையற்ற மனிதர்கள் மன்னிக்கப்படக்கூடாது.
எல்லா உயிரினங்களின் முதல் குற்றமும் மன்னிக்கப்பட வேண்டும். இருப்பினும், இரண்டாவது குற்றம் அற்பமானதாக இருந்தாலும் கூட தண்டிக்க வேண்டும். ஒரு மனிதன் விரும்பாமல் குற்றமிழைத்திருப்பின், அவனது கோரிக்கையை ஆராய்ந்து, சீரான நீதி விசாரணை செய்து, அவனை மன்னிக்க வேண்டும். பணிவு பலத்தை வெற்றி கொள்ளும், பணிவு பலவீனத்தையும் வெற்றி கொள்ளும். பணிவால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. ஆகையால், பணிவே (நம் பார்வைக்குத் தெரிவதைவிட) உண்மையாக கடுமையானது. ஒருவன் இடம், நேரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தனது பலத்தையும் பலவீனத்தையும் குறித்துக் கொண்டும் செயல்பட வேண்டும். இடத்தையும் நேரத்தையும் கணக்கில் கொள்ளாமல் செய்யப்படும் எந்தச் செயலும் வெற்றியடையாது. ஆகையால், நீ எப்போதும் இடத்திற்காகவும், நேரத்திற்காகவும் காத்திருக்க வேண்டும்! சில நேரங்களில் மக்களுக்கு அஞ்சி குற்றவாளிகள் மன்னிக்கப்பட வேண்டும். இவையே மன்னிக்கும் நேரங்கள் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பங்களைத் தவிர மற்ற நேரங்களில் மீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றே சொல்லப்படுகிறது” என்றான் { பலியின் பாட்டன் பிரகலாதன்}.
திரௌபதி தொடர்ந்தாள், “ஆகையால், ஓ மன்னா, நீர் பலத்தைப் பிரயோகிக்கும் நேரம் வந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன்! நம்மை எப்போதும் காயப்படுத்தும் குருக்களையும், திருதராஷ்டிரனின் பேராசைக்கார மகன்களையும் மன்னிக்கும் நேரம் இது கிடையாது! நீர் இப்போது பலத்தை உபயோகிப்பதே தகும். எளிமையாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கும் மனிதன் அவமதிக்கப்படுகிறான். கடுமையாக இருப்பவர்கள் மற்றவர்களை துன்புறுத்துகிறார்கள். உண்மையில், அது அதற்கு தகுந்த நேரத்தில் இரண்டிற்கும் {கோபமடைவதும் கோபமடையாதிருப்பதும்) தஞ்சம் கொடுப்பவனே மன்னனாவான்” என்றாள்.
கோபம் அனைத்தையும் அழித்துவிடும் – வனபர்வம் பகுதி 29-கோபத்தில் இருக்கும் குற்றங்களை திரௌபதிக்கு யுதிஷ்டிரன் சொல்வது..
யுதிஷ்டிரன் சொன்னான், “கோபமே மனிதனைக் கொல்லும், அதே வேளை கோபமே மனிதனை வளம்பெற வைக்கும். ஓ! பெரும் ஞானம் கொண்டவளே {திரௌபதியே}, கோபமே செழிப்பு மற்றும் துரதிர்ஷ்டங்களுக்கு வேர்க்காரணமாகும். ஓ! அழகானவளே, எவன் கோபத்தை அடக்குகிறானோ அவன் செழிப்பை அடைகிறான். கோபத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கும் மனிதன், தனது கடும் கோபத்தின் விளைவாக துரதிர்ஷ்டத்தை வரவழைத்துக் கொள்கிறான். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் அழிவுக்கும் கோபமே காரணமாக இருக்கிறது. உலகத்திற்கே அழிவைக் கொண்டுவரும் கோபத்தை நான் எப்படி விரும்பி ஏற்பேன்?
கோபம் கொள்ளும் மனிதன் பாவம் இழைக்கிறான். கோபம் கொண்ட மனிதன் தனது குருவைக் கூட கொல்வான். கோபம் கொண்ட மனிதன் தனக்கு மேலானவர்களைக் கூட கடுஞ்சொற்களால் அவமதிப்பான். கோபம் கொண்ட மனிதன் எது சொல்லப்பட வேண்டும் எது சொல்லப்படக்கூடாது என்பதற்குண்டான வேறுபாடை அறியாமல் போகிறான். கோபம் கொண்ட மனிதன் செய்ய முடியாத செயல் எதுவும் இல்லை. கோபம் கொண்ட மனிதனால் சொல்ல முடியாத வார்த்தைகளும் எதுவும் இல்லை. கோபத்தின் காரணமாக ஒரு மனிதன், கொல்லப்படத் தகாத மனிதனையும் கொன்றுவிடுவான். கோபம் கொண்ட மனிதன் தனது ஆன்மாவைக்கூட யமனின் உலகுக்கு அனுப்புவான். இக்குறைபாடுகளைக் கண்டே, ஞானமுள்ளோர், உயர்ந்த செழிப்பை இவ்வுலகிலும் மறு உலகிலும் அடைய தங்கள் கோபத்தை அடக்கிக் கொள்கின்றனர். இதன் காரணமாகவே அமைதியான ஆன்மா கொண்டோர் கோபத்தைத் தங்களிடம் இருந்து விரட்டுகின்றனர். இப்படி இருக்கும் போது எங்களைப் போன்றோர் எப்படி அதில் ஈடுபடுவோம்?
ஓ! துருபதனின் மகளே {திரௌபதியே}, இதையெல்லாம் கருதியே எனது கோபம் தூண்டப்படவில்லை. கோபம் கொண்ட மனிதனுக்கு எதிராக எந்த செயலும் செய்யாத மனிதன் தன்னையும் பிறரையும் பெரும் அச்சத்தில் இருந்து காத்துக் கொள்கிறான். உண்மையில் அப்படிப்பட்ட மனிதன் தனக்கும், கோபம் கொண்ட மனிதனுக்கும் மருத்துவன் போன்றவன் ஆவான். மற்றவர்களால் துன்பத்துக்குள்ளான பலவீனமான மனிதன், தனது முட்டாள்தனத்தால் தன்னைவிட பலசாலிகளிடம் கோபமாக நடந்து கொண்டால், தனது அழிவுக்கு தானே காரணமாகிறான். இப்படி தெரிந்தே தனது உயிரை விடும் மனிதர்களுக்கு எந்த உலகமும் கிடைக்காது. ஆகையால், ஓ! துருபதன் மகளே {திரௌபதியே}, பலவீனமான மனிதன் கோபத்தை அடக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. துன்பத்தில் இருக்கும் ஞானமுள்ள மனிதன் கோபப்படாமல் இருந்தால், தனக்கு துன்பத்தை ஏற்படுத்தியவனை விட மறு உலகில் மகிழ்ச்சியாக இருக்கிறான். இதன் காரணமாகவே பலமாக இருந்தாலும் பலவீனமாக இருந்தாலும் ஞானமுள்ள மனிதன், எப்போதும் தன்னை துன்புறுத்துகிறவனையும் அவன் கெட்ட காலத்தில் இருந்தாலும் கூட மன்னிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஓ! கிருஷ்ணா {திரௌபதி}, இதன் காரணமாக அறம்சார்ந்தவர்கள் கோபத்தை வென்றவர்களைப் பாராட்டுகிறார்கள். உண்மையில், நேர்மையானவனும் மன்னிக்கும் குணமுள்ளவனும் எப்போதும் வெற்றி பெறுவான் என்பதே அறம்சார்ந்தவர்கள் கருத்து. உண்மையே பொய்மையைவிட நன்மை; மென்மையான நடத்தையே கடுமையான நடத்தையைவிட நன்மை. என்னைப்போன்ற ஒருவன், துரியோதனனைக் கொல்லும் காரணத்திற்காக, பல குறைகளையுடையதும், அறம்சார்ந்தவர்கள் தங்கள் ஆன்மாவில் இருந்து விரட்டும் கோபத்தை மேற்கொள்வது, எங்ஙனம்?
பின்வருவதை அறியும் கற்றவர்களால் பலம் நிறைந்த மனிதன் என்று கருதப்படுபவர்கள் நிச்சயமாக வெளிப்புறத் தோற்றத்தில் மட்டும் கோபம் மிகுந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். பொங்கி வரும் கோபத்தை தனது ஞானத்தால் அடக்குபவனே பலம் கொண்ட மனிதன் என்று உண்மையை அறிந்த கற்றவர்கள் சொல்கிறார்கள். ஓ! அழகிய இடை கொண்டவளே {திரௌபதி} கோபம் கொண்ட மனிதன் நடைபெறும் காரியங்களை அதன் உண்மைத் தன்மையுடன் பார்ப்பதில்லை. கோபம் கொண்ட மனிதன் தனது வழியைக் காண்பதில்லை. அவன் மனிதர்களையும் மதிக்க மாட்டான். கோபம் கொண்ட மனிதர் கொல்லத்தகாதவர்களையும் கொல்வான். கோபம் கொண்ட மனிதன் தனது ஆசான்களையும் கொல்வான். ஆகையால், சக்தி கொண்ட மனிதன் கோபத்தை தூரத்தில் விலக்கி வைக்க வேண்டும்.
கோபத்தில் மூழ்கிய மனிதன் பராக்கிரமசாலிக்கே உரிய பெருந்தன்மை, கண்ணியம், தைரியம், திறமை மற்றும் பிற குணங்களை எளிதாக அடைவதில்லை. கோபத்தைக் கைவிடுவதால் ஒரு மனிதன் சரியான சக்தியை வெளிப்படுத்த முடியும். ஓ! ஞானமுள்ளவளே {திரௌபதியே}, அதே வேளை கோபம் கொண்ட மனிதனால் சரியான நேரத்தில் தனது சக்தியை வெளிப்படுத்த முடியாது. அறியாமையில் இருப்பவர்களே கோபத்தை சக்திக்குச் சமமாகக் கருதுவார்கள். கோபம் என்பது உலகத்தின் அழிவிற்காக மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், சரியாக நடக்க விரும்பும் மனிதன் எப்போதும் கோபத்தைக் கைவிட வேண்டும். தனது வகைக்கே உரிய அற்புதமான அறங்களைக் கைவிட்ட மனிதன் கோபப்படுபவனாக இருப்பான். அனைத்து விதங்களிலும் மீறி நடக்கும் ஒளியற்ற மனம் கொண்ட முட்டாள்கள் இப்படி நடந்து கொள்ளும்போது, ஓ! குறைகளற்றவளே, என்னைப்போன்ற ஒருவன் (அவர்களைப் போல) எப்படி மீறி நடக்க முடியும்?
பூமியைப் போன்ற பொறுமையுள்ள மனிதர்கள் இல்லையெனில், தொடர்ந்து கோபப்படும் மனிதர்களால் உலகம் அமைதியற்றே இருக்கும். காயப்பட்டவர்கள் தங்கள் காயங்களுக்கு பதிலடி கொடுப்பதும், மேலானவனால் தண்டிக்கப்பட்டவன் அந்த மேலானவனை பதிலுக்கு தண்டிப்பதும் அனைத்து உயிர்களின் அழிவுக்குக் காரணமாக இருக்கும். உலகத்தில் பாவம் அதிகரிக்கும். வேறு மனிதனிடம் தீய வார்த்தைகளைக் கேட்கும் மனிதன், பதிலுக்கு அந்த வார்த்தைகளைத் திருப்பிச் சொல்வதும், காயம் கொண்ட மனிதன் தனது காயங்களுக்கு பதிலடி கொடுப்பதும், தண்டனை பெற்ற மனிதன் பதிலுக்கு தண்டிப்பதும் ஏற்படுவதால், தந்தையர் மகன்களையும், மகன்கள் தந்தைகளையும், கணவர்கள் மனைவியரையும், மனைவியர் கணவர்களையும் கொல்லும் நிலை ஏற்படும். ஓ! கிருஷ்ணா {திரௌபதி}, இப்படிப்பட்ட கோபம் நிலவும் உலகத்தில் பிறப்பு எப்படி ஏற்படும்! ஓ! அழகான முகம் கொண்டவளே {திரௌபதியே}, உயிர்களின் பிறப்பு சமாதானத்தால் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்.
ஓ! திரௌபதி, மன்னர்களும் கோபத்திற்குத் தங்களை ஒப்புக் கொடுத்தால், குடிமக்கள் விரைவில் அழிவைச் சந்திப்பர். ஆகையால், கோபம், மக்களின் அழிவுக்கும் துயரத்திற்கும் காரணமாகும். மன்னிக்கும் தன்மையுடன் பூமியைப் போன்ற பொறுமை கொண்ட மனிதர்கள் உலகத்தில் இருப்பதாலேயே உயிர்கள் செழிப்பையும் வாழ்வையும் பெறுகின்றன. ஓ! அழகானவளே, என்ன காயம் ஏற்பட்டாலும் ஒருவன் மன்னிக்க வேண்டும். மனிதன் மன்னிக்கும் தன்மையுடன் இருப்பதாலேயே உயிர்களின் தொடர்ச்சி ஏற்படுகிறது. கோபத்தை வெல்பவனே, ஞானி. அவனே பலவான். கோபத்தை வெல்லும் சக்தி படைத்த மனிதன், பல எண்ணற்ற {மகிழ்ச்சி நிறைந்த இன்பகரமான} உலகங்களுக்கு சொந்தக்காரனாவான். அதேவேளையில் கோபம் கொண்ட மனிதன் முட்டாள் என்று அழைக்கப்பட்டு, இவ்வுலகிலும் மறு உலகிலும் அழிவைச் சந்திக்கிறான்.
ஓ! கிருஷ்ணா {திரௌபதி}, எப்போதும் மன்னிக்கும் தன்மை கொண்ட பொறுமையானவர்களுக்காக சிறப்பு மிகுந்த மன்னிக்கும் தன்மை கொண்ட காசியபர் இந்த வரிகளைப் பாடியிருக்கிறார். “மன்னிப்பதே {பொறுமையே} அறம்; மன்னிப்பதே வேள்வி, மன்னிப்பே வேதம், மன்னிப்பே சுருதி. இதை அறிந்த மனிதன் எதையும் மன்னிக்கும் ஆற்றல் பெற்றவனாக இருப்பான். பொறுமையே பிரம்மம், பொறுமையே உண்மை, மன்னிப்பே பாதுகாக்கப்பட்ட ஆன்மத்தகுதி, எதிர்கால ஆன்மத்தகுதியைக் காப்பது பொறுமையே. பொறுமையே தவம், பொறுமையே புனிதம், பொறுமையாலேயே இந்த அண்ட ம் தாங்கப்படுகிறது. தகுதிவாய்ந்த பல வேள்விகளைச் செய்தவர்கள், வேதங்களை அறிந்தவர்கள் மற்றும் தவசிகள் அடையும் உலகத்தை பொறுமைசாலி அடைவான். வேத வேள்விகள் செய்பவர்களும், அறத்தின்படியான நன்மையான சடங்குகளைச் செய்பவர்கள் மற்ற உலகங்களை அடைவார்கள். பொறுமைசாலி, புகழப்படும் பகுதிகள் கொண்ட பிரம்மனின் உலகத்தை அடைவார்கள். பலசாலிகளின் பலமே பொறுமை {மன்னிக்கும் தன்மை}. பொறுமையே வேள்வி, பொறுமையே மன அமைதி. ஓ! கிருஷ்ணா {திரௌபதி} இப்படி இருக்கும்போது பிரம்மம், உண்மை, ஞானம் ஆகியவற்றை அடைய விரும்பும் எங்களைப் போன்றோர் எப்படி பொறுமையைக் கைவிடமுடியும்?
பொறுமையாக இருப்பவன் பிரம்மத்தை அடைய முடியும் என்பதால் ஒரு ஞானி பொறுமையைக் கைக்கொள்ள வேண்டும். பொறுமைசாலிகளுக்கு இந்த உலகம் சொந்தம். மறு உலகமும் அவர்களுடையதே. பொறுமை மதிப்பையும், அருளையும் பெற்றுத் தருகிறது. பொறுமையால் கோபத்தை வெற்றி கொள்ளும் மனிதர்கள் உயர்ந்த உலகங்களை அடைவார்கள். ஆகையால், பொறுமையே உயர்ந்த அறம் என்று சொல்லப்படுகிறது.” என்று எப்போதும் பொறுமையுடன் இருப்பவர்களைக் குறித்து காசியபர் பாடியிருக்கிறார். ஓ! திரௌபதி பொறுமை குறித்த இந்த வரிகளைக்கேட்ட பிறகு உனக்குள் உள்ளடங்கு. கோபத்திற்கு ஆளாகாதே. சந்தனுவின் மகனான எங்கள் பாட்டா {பீஷ்மர்}, அமைதியையே வழிபடுகிறார்; கிருபரும் சஞ்சயரும் அமைதியையே உரைக்கின்றர். சோமதத்தன், யுயுத்சு, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, எங்கள் பாட்டனான வியாசர், ஆகிய அனைவரும் அமைதியை குறித்தே பேசுகின்றனர். இவர்களால் அமைதியின் பக்கம் அழைத்துவரப்படும் மன்னர் {திருதராஷ்டிரன்} நமது நாட்டை நமக்குத் திரும்பக் கொடுப்பார் என்று நினைக்கிறேன். இருப்பினும், அவர் {திருதராஷ்டிரன்} மயக்கமடைந்தால், அவர் அழிவைச் சந்திப்பார். ஓ! பெண்ணே {திரௌபதியே}, பாரதர்களின் வரலாற்றில் அவர்களை பேரிடரில் ஆழ்த்த ஒரு நெருக்கடி வந்திருக்கிறது. இது சில காலங்களுக்கு முன்பே ஏற்பட்டிருக்கும் உறுதியான தீர்மானம். சுயோதனனுக்கு {துரியோதனனுக்கு} நாட்டை அடையும் தகுதியில்லை. ஆகையால்தான், அவனால் {துரியோதனனால்}பொறுமையாக இருக்க முடியவில்லை. நான் ஆட்சி உரிமை கொண்டவன் ஆகையால் பொறுமையை ஏற்கிறேன். மன்னிப்பும் , மென்மையும் சுயமாக ஒருவன் அடைய வேண்டும். அவர்களின் நித்தியமான தன்மையையே பிரதிபலிக்கிறது. ஆகையால் உண்மையில் நான் அந்தக் குணங்களை என்னிடம் சேர்த்துக் கொள்வேன்.
கறை படிந்தவனா கடவுள்? – வனபர்வம் பகுதி 30-யுதிஷ்டிரனுடன் திரௌபதியின் விவாதம்…
திரௌபதி சொன்னாள், “உமது உணர்வுகளை மூடியிருக்கும் {மறைக்கும்} தத்திரியையும் (ஆதித்தியர்களில் [சூரியர்களில்] ஒருவன் = ஆரோக்கியத்திற்கான தேவன்} விதத்திரியையும் {பெண் தெய்வம் [துர்கை என்றும் கொள்ளலாம்]} நான் வணங்குகிறேன். நீர் தாங்கும் சுமையைச் சுமப்பதில், உமது தந்தைமாரும் பாட்டன்மாரும் பின்பற்றிய வழிகளில் இருந்து நீர் மாறுபடுகிறீர்! மனிதர்களுடைய செயல்களின் தாக்கம் {செயல்களினால் உண்டாகும் பாவத்தின் விளைவு} வாழ்வின் வெவ்வேறு சூழ்நிலைகளில் நம்மைத் தாக்குகிறது. செயல்கள் தவிர்க்க முடியாத விளைவுகளை {பின் விளைவுகளை} ஏற்படுத்துகின்றன; விடுதலை என்பது வெறும் மடமையின் காரணமாகவே விரும்பப்படுகிறது. அறம், மென்மை, பொறுமை {மன்னிக்கும் தன்மை}, முற்போக்கு, கண்டிக்கப்படுவோம் என்ற பயம் ஆகியவற்றின் மூலம் மனிதன் செழிப்பை அடைய முடியாது என்றே காணப்படுகிறது.
ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, அது அப்படியில்லை என்றால், இந்தத் தாங்கிக் கொள்ள முடியாத பேரிடர், அதற்குத் தகுதியில்லாத உமக்கும், பெரும் சக்திகள் கொண்ட உமது தம்பிகளுக்கும் ஏற்பட்டிருக்காது! செழிப்புடன் இருந்த அந்நாட்களிலும் சரி, தீயூழ் {துரதிர்ஷ்டம்} வாய்ந்த இந்நாட்களிலும் சரி, ஓ பாரதரே, அறத்தைவிட உகந்தது உமக்கு வேறு எதுவும் இருந்ததில்லை. அறத்தை உமது உயிரைவிட அதிகமாகக் கருதி வருகிறீர். உமது நாடும், உமது சுயமும் அந்தணர்களாலும், உமக்கு மூத்தவர்களாலும், தேவர்களாலும் அறத்திற்காக மட்டுமே கருதப்படுகின்றன.
நீர், பீமசேனரையும், அர்ஜுனரையும், மாத்ரி மகன்களான இரட்டையர்களையும் {நகுல சகாதேவர்களையும்}, அவர்களுடன் சேர்த்து என்னையும் கைவிட்டாலும் விடுவீரே ஒழிய அறத்தைக் கைவிட மாட்டீர்! மன்னன் அறத்தைக் காப்பான் என்றும், அப்படி அவனால் காக்கப்பட்ட அறம் (பதிலுக்கு) அவனைக் காக்கும் என்றும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இருப்பினும் அறம் உம்மைக் காக்காததையே நான் கண்டு வருகிறேன்! ஓ மனிதர்களில் புலி போன்றவரே {யுதிஷ்டிரரே}, மனிதனைத் தொடரும் அவனது நிழல் போல, உமது இதயம், ஒரே நோக்கோடு அறத்தையே நாடுகிறது. நீர் உமக்குச் சமமானவர்களையோ, தாழ்ந்தவர்களையோ, மேன்மையானவர்களையோ என்றும் அவமதித்ததில்லை. முழு உலகத்தை நீர் அடைந்தும், உமக்கு கர்வம் அதிகரிக்கவில்லை!
ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, நீர் எப்போதும் அந்தணர்களையும், தேவர்களையும், பித்ருக்களையும், சுவதங்களுடனும் மற்ற வகையான வழிபாடுகளாலும் வழிபட்டு வருகிறீர்! ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, நீர் எப்போதும் அந்தணர்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுத்து, அவர்களைத் திருப்தி செய்திருக்கிறீர். யதிகளுக்கும், சந்நியாசிகளுக்கும், இல்லறத்துறவிகளுக்கும் உமது இல்லத்தில் தங்கத்தாலான தட்டில் வைத்து உணவு பரிமாறியிருக்கிறீர். வானப்பிரஸ்தர்களுக்கு தங்கமும் உணவும் எப்போதும் கொடுத்திருக்கிறீர். அந்தணர்களுக்கு நீர் கொடுக்க மாட்டீர் என்று சொல்லும்படி எந்தப் பொருளும் உமது வீட்டில் இல்லை.
உமது {மன} அமைதிக்காக, உமது இல்லத்தில் நடைபெற்ற விஸ்வதேவ வேள்வியில், சுத்தம் செய்யப்பட்ட பொருட்களை முதலில் உமது விருந்தினர்களுக்கும், மற்ற எல்லா உயிர்களுக்கும் கொடுத்து மீந்ததையே நீர் உண்டீர்! விருப்பத்தை ஈடேற்றும், இஷ்டிகளையும், பாசுபந்தங்கள் எனும் வேள்விகளையும், இல்லறக் கடமைகளுக்கான சடங்குகளையும், பக வேள்விகளையும், அனைத்து வகையான பிற வேள்விகளையும் உமது வீட்டில் நீர் நடத்தியிருக்கிறீர். திருடர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தத் தனிமையான கானகத்திற்கு நாடுகடத்தப்பட்டும், சொந்த நாட்டை இழந்தும் உமது அறம் கெடவில்லை!
பெரும் பரிசுகள் கொடுத்து நடத்தப்பட வேண்டிய அஸ்வமேதம், ராஜசுயம், புண்டரீகம், கோஸ்வம் ஆகிய பெரும் வேள்விகளை நீர் செய்திருக்கிறீர்! விபரீத உணர்வுகளால் உந்தப்பட்ட அந்தக் கடுமையான நேரத்தில், பகடையில் தோற்று, உமது நாட்டையும், உமது செல்வங்களையும், உமது ஆயுதங்களையும், உமது தம்பிகளையும், ஏன் என்னையும் இழந்தீர்! ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எளிமை, மென்மை, அடக்கம், உண்மை ஆகியவற்றைக் கொண்டிருந்தும், தீமை நிறைந்த சூதில் உமது மனம் ஈர்க்கப்பட்டது எவ்வாறு? ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உமது இந்தத் துயரையும் பேரிடரையும் கண்டு எனது இதயம் துயரத்தில் மூழ்குகிறது. நான் எனது உணர்வுகளை இழக்கும் நிலையில் இருக்கிறேன்.
மனிதர்கள் அனைவரும் கடவுளின் விருப்பத்திற்கு இணங்கி நடக்க முடியுமே தவிர, தங்கள் விருப்பங்கள் படி நடக்க முடியாது என்பதற்கு ஒரு பழைய வரலாறு இருக்கிறது. மரத்தால் செய்யப்பட்ட மரப் பதுமையைக் {பொம்மையைக்} கட்டி, நூல் கொண்டு ஆட்டி வைப்பது போல, அனைத்து துன்பங்களையும், இன்பங்களையும் விதிப்பவனான மேலான கடவுள், தான் படைத்த மக்களை ஆட்டி வைக்கிறான். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, அனைத்துப் பொருட்களையும் மூடியிருக்கும் வெளியைப் போல, கடவுளும் அனைத்து உயிர்களுக்குள்ளும் ஊடுருவி இருந்து இன்பத்தையும் துன்பத்தையும் விதிக்கிறான். நூலால் கட்டப்பட்ட பறவை போல, அனைத்து உயிரினங்களும் கடவுளை நம்பியே இருக்கின்றன. அனைவரும் கடவுளுக்குக் கட்டுப்பட்டவர்களே அன்றி வேறு யாருக்கும் அல்ல. யாரும் தனக்குத் தானே விதித்துக் கொள்பவனாக இருக்க முடியாது.
நூலில் உள்ள முத்தைப் போல அல்லது, கயிற்றால் கட்டப்பட்ட காளையைப் போல அல்லது நீர்ச்சுழலில் சிக்கிய மரத்தைப் போல, அனைத்து உயிர்களும் படைப்பாளனின் கட்டளைகளைத் தொடர்கின்றன. அந்தப் அண்ட ஆன்மாவை {கடவுளை} நம்பியிருக்கும் மனிதன், ஒருக்கணம் கூட சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. இருளால் சூழப்பட்ட எந்த மனிதனும், தானே தனது துன்பத்திற்கும் இனபத்திற்கும் தலைவனாக இருக்க முடியாது. கடவுளால் உந்தப்பட்டே அவர்கள் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்கள். லேசான வைக்கோல் பலமான காற்றை நம்பியிருப்பது போல, ஓ பாரதரே {யுதிஷ்டிரரே} அனைத்து உயிர்களும் கடவுளை நம்பியே இருக்கின்றன. இதுதான் கடவுள் என்று யாராலும் சொல்ல முடியாதெனினும், அனைத்து உயிர்களுக்குள்ளும் இருக்கும் கடவுள், அண்டத்தில் நகர்ந்து நல்லது கெட்டதைச் செய்து வருகிறான். இந்த நமது உடலை ஆயுதமாகக் கொண்டு, தலைவர்களுக்குத் தலைவன் {கடவுள்} நன்மை மற்றும் தீமையின் கனிகளைப் பறிக்கிறான்.
கடவுளால் பரப்பப்பட்டிருக்கும் மாயையின் சக்தியைப் பாரும். கடவுள் தனது மாயையால் குழப்புவதன் மூலமாக, உயிர்களைத் தங்கள் நண்பர்களையே கொல்ல வைக்கிறான். உண்மை அறிந்த முனிவர்கள் அவற்றை வித்தியாசமாகக் காண்கிறார்கள். அவை அவர்களுக்கு சூரிய ஒளியைப் போல வேறு ஒளியில் தெரிகின்றன (சாதாரணக் கண்களுக்கு ஒளிக்கீற்று போலத் தெரிபவை, ஆழ்ந்த பார்வை கொண்டோருக்கு உணவிலும் பானகங்களிலும் இருக்கும் பூச்சிகளைப் பார்ப்பது போலத் தெரிகிறது). சாதாரண மனிதர்கள் இவ்வுலகத்தை வேறுமாதிரியாகப் பார்க்கிறார்கள். இங்கு படைப்பிலும் அழிப்பிலும் வேறு வேறு செயல்வகைகளைக் கைக்கொண்டு, அனைத்தையும் செய்பவன் இறைவனே ஆவான்.
ஓ யுதிஷ்டிரரே, சுயம்புவான பெருந்தகப்பன் {பிரம்மா}, அந்தப் பெரும் தெய்வம், ஒரு மரத்தின் மந்தமான உணர்வற்ற பகுதியை, மரத்தை வைத்தே உடைப்பது போலவும், கல்லைக் கல்லால் உடைப்பது போலவும், இரும்பை இரும்பால் உடைப்பது போலவும், தான் படைத்த உயிரை தானே கொல்கிறான். அந்தத் தலைவர்களுக்குத் தலைவன் {பிரம்மன்}, தன் சித்தத்தின் படி உயிரினங்களை உற்பத்தி செய்து, அவற்றை அழித்து, ஒரு குழந்தை களிமண் பொம்மையுடன் விளையாடுவது போல, தான் படைத்த உயிரினங்களுடன் விளையாடுகிறான்.
ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, கடவுள் தான் படைத்த உயிரினங்களுடன் ஒரு தந்தையைப் போலவோ அல்லது ஒரு தாயைப் போலவோ நடந்து கொள்கிறான் என எனக்குத் தோன்றவில்லை. ஒரு தீய மனிதனைப் போல, அவன், தான் படைத்தவை மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்! மேன்மையான, நன்னடத்தையுள்ள, எளிமையான மனிதர்கள் துன்புற்று, பாவிகள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு நான் வருத்தமடைகிறேன். உமது துயரத்தையும், சுயோதனனின் {துரியோதனனின்} செழிப்பையும் நான் காண்பதால், பாரபட்சத்துடன் நடக்கும் அந்தப் பெரும் ஆணையாளனைக் {கடவுளைக்} குறித்து நான் உயர்வாகப் பேச மாட்டேன்.
ஐயா {யுதிஷ்டிரரே}, விதிகள் அனைத்தையும் மீறி, நியாயமற்று, பேராசையுடன் நடந்து கொண்டு, அறத்தையும் நல்லொழுக்கத்தையும் காயப்படுத்தும் திருதராஷ்டிரனின் மகனுக்குப் {துரியோதனனுக்கு} பெரும் செழிப்பை வழங்கி என்ன பெரும் கனியை {பலனை} அடைந்து விடப்போகிறான் அந்த பெரும் ஆணையாளன் {கடவுள்}? ஒரு செயலின் பலன் {வினை} செய்தவனை மட்டுமே தொடரும்; மற்றவரைத் தொடராது என்றால், நிச்சயமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலாலும் ஏற்படும் பாவத்தால் கடவுளே கறைபடுகிறான். எனினும், செய்யப்பட்ட செயலின் பாவம் செய்தவனைச் சாரவில்லை என்றால், பலமே (தனியொருவனின் பலமே) செயல்களுக்கான உண்மையான காரணமாகும் (கடவுள் இல்லையென்றாகிவிடும்). நான் பலமற்றவர்களுக்காக வருந்துகிறேன்!” என்றாள் {திரௌபதி}.
கடவுளைப் பழிக்காதே கிருஷ்ணா! – வனபர்வம் பகுதி 31-யுதிஷ்டிரன் திரௌபதிக்கு விளக்கம் சொல்வது..
யுதிஷ்டிரன் சொன்னான், “ஓ யக்ஞசேனி {திரௌபதி}, உனது பேச்சு மென்மையானதாக, அற்புதம் நிறைந்த சொற்றொடர்கள் கொண்டதாக இருக்கிறது. நாங்கள் அதைக் {கவனமாகக்} கேட்டோம். எனினும், நீ நாத்திகர்களின் மொழியில் பேசுகிறாய். ஓ இளவரசி {திரௌபதி}, எனது செயல்களுக்கான கனியை {பலனை} எதிர்பார்த்து நான் செயல்படுவதில்லை. கொடுப்பது எனது கடமையாகையால் நான் கொடுக்கிறேன்; வேள்வி செய்வது எனது கடமையாகையால் நான் வேள்வி செய்கிறேன்! இல்லற வாழ்வு வாழும் ஒரு மனிதன் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம், அவை கனி கொடுக்குமா கொடுக்காதா என்பதைக் கருதாமலேயே எனது சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி செய்கிறேன். ஓ அழகிய இடை கொண்டவளே, அறத்தின் கனியை அடைய விரும்பி நான் அறம்பயில வில்லை. வேதத்தின் விதிகளை மீறி நடக்கக்கூடாது என்று கருதியும், நல்லவர்கள் மற்றும் ஞானமுள்ளவர்களின் நடத்தையைக் கண்டுமே நான் அறம்பயில்கிறேன்!
ஓ கிருஷ்ணா {திரௌபதி}, எனது இதயம் இயற்கையாகவே அறத்தின்பால் ஈர்க்கப்படுகிறது. அறம்பயில்வதின் மூலம் அந்த அறத்தின் கனியை அடைய விரும்பும் மனிதன் அறத்தை வணிகம் செய்பவனே ஆவான். அறச்செயல்கள் செய்த பிறகு, அதன் கனி குறித்து சந்தேகப்படுபடும் பாவ மனம் கொண்டவனுக்கு, அவனது ஐயத்தின் காரணமாகவே அக்கனி கிடைக்காது. , அறம் குறித்த சந்தேகம் உனக்கு இருக்கக்கூடாது என்பதற்காகவே இது போன்ற விஷயங்களில் நிறைய சாட்சிகளைக் கொண்டிருக்கும் வேதங்களில் சொல்லப்பட்டிருப்பதை நான் உன்னிடம் பேசுகிறேன். அறத்தை சந்தேகிப்பவன் தாழ்ந்த பிறவியான விலங்காகப் பிறக்க விதிக்கப்படுகிறான். வேதங்களின் படி, பலவீனமான புரிதல் கொண்ட மனிதன் ஒருவன், அறம், நல்லொழுக்கம், அல்லது முனிவர்களின் வார்த்தைகளைச் சந்தேகித்தால், நித்திய வாழ்வில் இருந்தும், அருளில் இருந்தும் வெளியேற்றப்பட்டு சூத்திரனாகிறான்.
ஓ புத்திசாலியே {திரௌபதியே}, நற்குலத்தில் பிறந்த ஒரு குழந்தை வேதங்களைப் பயின்று, அறத்தால் தன்னைத் தாங்கிக் கொண்டால், அறக்குணம் கொண்ட அரச முனிகள் அவனது வயதைக் கருதிப் பாரார். ஆனால், அறத்தைச் சந்தேகித்து, சாத்திரங்களை மீறி நடக்கும் பாவம் நிறைந்த இழிந்தவன், சூத்திரர்களை விடவும், ஏன் திருடர்களை விடவும் தாழ்ந்தவனாகக் கருதப்படுவான். அளவிடமுடியா ஆன்மா கொண்ட பெரும் தவசியான மார்க்கண்டேயர் நம்மிடம் வந்ததை நீயே உன் கண் கொண்டு பார்த்தாய்! அறத்தால் மட்டுமே அவர் சதையுடன் கூடிய நித்தியத்தன்மையை {சாகாவரத்தை} அடைந்தார். வியாசர், வசிஷ்டர், மைத்திரேயர், நாரதர், லோமசர், சுகர் மற்றும் பிற முனிவர்கள் அனைவரும் அறத்தால் மட்டுமே பரிசுத்தமான ஆன்மாவை அடைந்தனர். தெய்வீக தவச் சக்தியும், சாபமிட மற்றும் அருள் வழங்கக் கூடிய சக்தியும், தேவர்களைப் போன்றே அவர்கள் மேன்மையுடன் இருப்பதையும் நீயே உன் கண்ணாறக் கண்டிருக்கிறாய்.
ஓ பாவமற்றவளே {திரௌபதியே}, தேவர்களுக்குச் சமமான இவர்கள் அனைவரும், வேதங்களில் எழுதியிருப்பதைத் தங்கள் கண்களால் கண்டு, அறமே முதன்மைக் கடமை என்று விவரிக்கின்றனர். ஆகையால், ஓ இனிமையான அரசியே {திரௌபதியே}, மடமை கொண்ட இதயத்துடன் {மனத்துடன்} தெய்வத்தையோ செயலையோ சந்தேகிக்கவோ நிந்திக்கவோ செய்யாதே! அறத்தைச் சந்தேகித்து அதை அவமதிக்கும் முட்டாள், தனது ஆய்வறிவால் கிடைத்த சாட்சியைக் கொண்ட கர்வத்துடன், மற்ற சாட்சிகள் அனைத்தையும் காணாது, எதிர்காலத்தையே நிகழ்காலம் போல அறிந்து சொல்லும் முனிவர்களை பைத்தியக்காரர்கள் என்கிறான். தனது புலன்களைத் திருப்தி செய்யும் மேலோட்டமான வார்த்தைகளையே கருதிப்பார்க்கும் அந்த முட்டாள், மற்ற அனைத்திலும் குருடாயிருக்கிறான். அறத்தைச் சந்தேகிப்பவன் தனது குற்றத்திற்கு பரிகாரம் இல்லாதவன் ஆவான். கவலை நிறைந்த அந்த ஆறுதல் பெற முடியாத பாவி, அதன் பிறகு எந்த நல்லுலகையும் அடையமாட்டான்.
சாட்சிகளை நிராகரிப்பவனும், வேத சாத்திரங்களின் பொருளை அவதூறாகப் பேசுபவனும், காமத்தாலும் பேராசையாலும் உந்தப்பட்டு விதி மீறுபவனுமான அந்த முட்டாள் நரகத்திற்குச் செல்கிறான். ஓ இனிமையானவளே {திரௌபதியே}, மறுபுறம், அறத்தை நம்பிக்கையுடன் பேணிக் காப்பவர்கள், மறு உலகத்தில் நித்தியமான அருளைப் பெறுகிறார்கள். அறத்தைப் பேணிக்காக்காத முட்டாள், முனிவர்கள் அருளிய சாட்சிகளை மீறி நடந்து, அந்த சாத்திர மீறலுக்காக எந்த {உலக} வாழ்க்கையிலும் செழிப்பை அடைய மாட்டார்கள்.
ஓ அழகானவளே {திரௌபதியே}, மரியாதையுடன் முனிவர்களின் வார்த்தைகளையும், அறம்சார்ந்தவர்களின் நடத்தைகளையும் சாட்சியாக எண்ணிப் பார்க்காதவன், நிச்சயமாக இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் நிலைக்க மாட்டான். ஓ கிருஷ்ணா {திரௌபதி}, நல்லவர்கள் பயிலும் பழமையான தர்மம் அண்ட அறிவு பெற்று அனைத்தையும் காணும் சக்தி பெற்ற முனிவர்களால் நிறுவப்பட்டது. ஓ துருபதனின் மகளே {திரௌபதி}, கடலைக் கடக்க நினைக்கும் வணிகர்களுக்கு கப்பல் எப்படியோ, அப்படி சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புவோரின் ஒரே படகு தர்மமே {சனாதன தர்மம்}. ஓ களங்கமற்றவளே {திரௌபதியே}, அறம்சார்ந்தோரால் பயிலப்படும் அறங்கள் கனி கொடுக்கவில்லையெனில், இந்த அண்ட மே காரிருளில் மூழ்கிவிடும். யாரும் முக்திக்கு முயற்சிக்கமாட்டார்கள். யாரும் ஞானத்தையோ செல்வத்தையோ பெற முயற்சிக்க மாட்டார்கள். மனிதர்களும் விலங்குகளைப் போலவே வாழ ஆரம்பிப்பார்கள்.
தவம் {ஆன்மிகம்}, பிரம்மச்சரியம், வேள்விகள், வேத கல்வி, தானம், நேர்மை ஆகியவை கனி கொடாமலிருந்தால், தலைமுறை தலைமுறையாக மனிதர்கள் அறம் பயின்றிருக்க மாட்டார்கள். செயல்கள் கனியற்றதாக இருப்பின், ஒரு கொடிய குழப்பமே பின்தொடரும். மனிதர்களின் நிலைமைக்கு {தரத்திற்கு} அப்பார்ப்பட்ட முனிவர்களும், தேவர்களும், கந்தர்வர்களும், ராட்சசர்களும் அறத்தை இந்த அளவு ஈடுபாட்டுடன் ஏன் பயில வேண்டும்? கடவுளே அறத்திற்கான கனி கொடுப்பவன் என்பதை அறிந்தவன், இவ்வுலகத்தில் அறத்தையே பயில்வான். ஓ கிருஷ்ணா {திரௌபதி}, இதுவே நித்திய செழிப்பு {செழிப்பின் ஊற்றுக்கண்}.
ஞானம் மற்றும் தவத்தின் கனிகள் தெரியும்போது, அறமும், தீமையும் கனியற்றதாகிவிடாது. ஓ கிருஷ்ணா {திரௌபதி}, நீ கேள்விப்பட்டவாறே உனது பிறப்பைக் குறித்து நினைத்துப் பார். பெரும் வீரம் கொண்ட திருஷ்டத்யும்னன் எப்படிப் பிறந்தான் என்பதை நினைத்துப் பார். ஓ இனிய புன்னகை கொண்டவளே {திரௌபதி}, இவையே {அறத்தின் கனிகளுக்கு} சிறந்த சாட்சிகள். தங்கள் மனதைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள், தங்கள் செயல்களுக்கான கனியைப் பறிப்பார்கள். சிறிது அறம்பயில்பவர்கள் கனியின் சிறு பகுதிகளை அடைவார்கள். அறத்தைச் சிறிதும் பயிலாத அறியாமையில் உள்ள மூடர்கள், எவ்வளவுதான் (இங்கு) பெற்றாலும், மறு உலகத்தில் ஒன்றையும் அடையமாட்டார்கள். ஓ அழகானவளே {திரௌபதியே}, வேதங்களில் விதிக்கப்பட்ட அறச்செயல்களும், மீறல்களும் கனிகொடாமல் போவது என்பதன் ஆதியும் அந்தமும், தேவர்களும் அறியாத புதிராக உள்ளது. இவற்றையெல்லாம் சாதாரண மனிதர்கள் அறியாமல் இருக்கின்றனர். இந்தப் புதிரைத் தக்க வைத்துக் கொள்ளும் தேவர்கள், மாயையால் அதை மறைக்கிறார்கள் என்பது புரிந்து கொள்ள முடிகிறது.
நோன்புகளிலும் தவத்திலும் நம்பிக்கை வைத்து, தங்கள் பாவங்களை எரித்து, அமைதியாகவும் புனிதமாகவும் வசிக்கும் ஆசைகளை அழித்த மறுபிறப்பாளர்கள் {அந்தணர்கள்} இவை அனைத்தையும் புரிந்து கொள்கிறார்கள். ஆகையால், அறம் கனி கொடுப்பதை நீ காணவில்லையென்றாலும், தர்மத்தையும் தேவர்களையும் நீ சந்தேகிக்கக்கூடாது. நீ விருப்பத்துடன் வேள்விகளைச் செய்ய வேண்டும். ஆணவம் இல்லாமல் தொண்டு செய்ய வேண்டும். இந்த உலகில் செய்யப்படும் அனைத்து செயல்களுக்கும் கனிகள் இருக்கின்றன. அறம் நித்தியமானது. காசியபரை சாட்சியாக வைத்து, தனது (ஆன்மிக) மகன்களுக்கு பிரம்மாவே இதைச் சொல்லியிருக்கிறார். ஓ கிருஷ்ணா {திரௌபதி}, உனது சந்தேகங்கள் மூடுபனி விலகுவது போல விலகட்டும். இவை அனைத்தையும் நினைத்துப் பார்த்து, உனது சந்தேகங்கள் நம்பிக்கைக்கு வழி கொடுக்கட்டும். அனைத்து உயிரினங்களுக்கும் தலைவனான கடவுளை அவதூறு செய்யாதே. அவனை {கடவுளை} எப்படி அறிவது என்பதை அறிந்து கொள். அவனைப் பணிந்து வணங்கு. உனது மனம் இது போல் ஆகாது பார்த்துக் கொள். ஓ கிருஷ்ணா {திரௌபதி}, மனிதர்களுக்கு அருளும் தலைவர்களுக்குத் தலைவனான கடவுளை பக்தியுடன் அணுகி, அழியாத் தன்மை {நித்தியத்தன்மை} பெறு!
செயல்பாடில்லா வாழ்வு சாத்தியமற்றது! – வனபர்வம் பகுதி 32-செயல் மற்றும் செயலின்மை குறித்து தனது தந்தை துருபதனின் இல்லத்தில் இருந்த போது ஒரு அந்தணரின் மூலம் அறிந்து கொண்ட திரௌபதி, தனது நாயகனான யுதிஷ்டிரனிடம் அவற்றை மீண்டும் சொல்லிப் புலம்புதல்…
திரௌபதி சொன்னாள், “ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, நான் தர்மத்தை அவமதிக்கவோ பழிக்கவோ இல்லை. அனைத்து உயிரினங்களின் தலைவனான கடவுளை நான் ஏன் அவமதிக்க வேண்டும்? ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, துயரத்தால் தாக்கப்பட்டு நொந்து போயிருப்பதால் நான் மீண்டும் புலம்புகிறேன் என்பதை அறிந்து கொள்ளும். ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, உலகில் உள்ள உணர்வுள்ள எவ்வுயிரும் எப்படிச் செயல்படும் என்று நான் சொல்வதைக் கவனமாகக் கேளும். அசையாத உயிரினங்களைத் தவிர்த்து வேறு எந்த உயிரினமும் செயல்படாமல் இருக்காது. ஒரு கன்றுக்குட்டி, தான் பிறந்த உடனேயே, தாயின் மடியை அடைந்து பால் குடிக்கிறது. தங்கள் சிலைகளை வைத்து மந்திரங்கள் ஓதப்படுவதன் விளைவாக மனிதர்கள் வலியை உணர்கிறார்கள்.
ஆகையால், ஓ யுதிஷ்டிரரே, முன்ஜென்மங்களில் தாங்கள் செய்த செயல்களின் அடிப்படையிலேயே உயிரினங்கள் தங்கள் குணங்களை அடைகின்றன. ஓ பாரதர்களில் காளையே {யுதிஷ்டிரரே}, அசையும் உயிரினங்களில் மனிதன் மட்டும் தனது செயல்கள் மூலம் இவ்வுலக வாழ்க்கை மற்றும் மறு உலக வாழ்க்கையை நிர்ணயிப்பதால் விசேஷமானவனாக இருக்கிறான். முந்தைய ஜென்ம வாழ்க்கையின் தாக்கத்தால், அனைத்து உயிர்களும் தங்கள் செயல்களின் கனிகளை இவ்வுலகில் பறிப்பது தெரிகிறது. உண்மையில், அனைத்து உயிரினங்களும் முந்தய ஜென்ம வாழ்வின் தாக்கத்தோடேயே வாழ்கின்றன. (யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே) நீரில் வாழும் கொக்கைப் போல படைப்பாளரும் {பிரம்மாவும்}, அண்ட ஆணையாளரும் தங்கள் வேலையைச் செய்கின்றனர். செயல்படாத உயிரினத்தின் வாழ்வு சாத்தியமற்றதாகிவிடுகிறது. ஆகையால், எந்த உயிரினமாக இருந்தாலும் செயலற்ற தன்மையுடன் அல்லாமல் செயல்பாடோடே இருக்க வேண்டும். செயலைத் துறப்பதால் கண்டிக்கப்படாதிருக்க நீரும் செயல்பட வேண்டும்.
கவசம் தரிப்பது போல, செயலால் உம்மைக் காத்துக் கொள்ளும். செயல்கள் அல்லது வேலையின் பயன்பாட்டை உண்மையில் அறிந்தவன் ஆயிரத்தில் ஒருவனாக இருக்கலாம்; அல்லது அதுவும் இல்லாமலிருக்கலாம். ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், தனது செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளவும் செயல்பட வேண்டும்; {செல்வ} வரவுக்காக முயற்சிக்காதவன், தனது செல்வத்தைத் தொடர்ந்து செலவழித்துக் கொண்டே இருந்தால், இமயத்தை ஒத்த அவனது பெரும் செல்வமும் விரைவில் செலவழிந்துவிடும். செயல் இல்லை என்றால் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்து போகும். செயல்கள் கனிகொடுக்க வில்லையென்றால், உயிரினங்கள் பெருகியிருக்காது. சில நேரங்களில் உயிரினங்கள் கனியற்ற செயல்களை செய்வதை நாம் காண்கிறோம். அவை செயல்படவில்லை என்றால் அவற்றின் வாழ்வு சாத்தியமற்றதாகிவிடும். விதியை நம்பும் மனிதர்களும், வாய்ப்பை {அதிர்ஷ்டத்தை} நம்பும் மனிதர்களும், மனிதர்களிலேயே இழிந்தவர்களாவார்கள். செயல்திறனை நம்புபவர்கள் மட்டுமே பாராட்டத்தக்கவர்கள். வசதியாக பொய்யுரைத்துக் கொண்டு, செயல்படாமல், விதியை மட்டுமே நம்பி இருப்பவன், சுடப்படாத மண் பானை நீரால் அழிவது போல அழிந்து போவான். அதே போல, வாய்ப்பை நம்பி எதிர்பார்த்து, செயல்பட முடிந்தும் செயல்படாமல் உட்கார்ந்து இருப்பவனும், பலவீனமான மற்றும் ஆதரவற்ற தனது வாழ்க்கையால் நீண்ட நாள் பிழைத்திருக்க மாட்டான்.
எதிர்பாராவிதத்தில் செல்வத்தை அடையும் ஒருவன், யாரொருவரின் முயற்சியும் இல்லாமல் அதைப் பெற்றதால், அதிர்ஷ்டத்தால் அடைந்தான் என்று சொல்லப்படுகிறது. ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரரே}, அறச்சடங்குகள் மூலம் ஒரு மனிதன் அடையும் எந்த நற்பேறாக இருந்தாலும், அது அதிர்ஷ்டவசமாகப் பெற்றதாகவே சொல்லப்படுகிறது. மனிதன் செயல்பாட்டால் கனியை அடைந்தால், தனது செயல்பாடுகளின் நேரடிப் பயனான அது, அவனது தனிப்பட்ட திறனுக்கான சாட்சியாக மதிக்கப்படுகிறது. ஓ மனிதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, காரணம் இல்லாமல் தானாக ஒருவனால் அடையப்படும் செல்வம், தன்னிச்சையான கையகப்படுத்தல் என்று சொல்லப்படுகிறது. அதிர்ஷ்டவசமான அருளாலும், தானாகவும் வரும் எந்தப் பொருளும், ஒருவனுடைய செயல்களின் பயனாகப் பெறப்பட்டது என்று கருதப்பட்டாலும், அது முன்ஜென்ம வாழ்க்கையில் அவன் செய்த செயல்களின் விளைவே ஆகும். அண்ட ஆணையாளரான கடவுள், முன் ஜென்ம வாழ்க்கையில் செய்த செயல்களை ஆராய்ந்து, இந்த உலகத்தில் அதன் பகுதிகளை மனிதர்களுக்கு வழங்குகிறான். நல்லதாகவோ தீயதாகவோ எச்செயலையும் செய்யும் ஒரு மனிதன், அது கடவுள் கொடுத்த பயன் என்பதை அறிந்து, முன்ஜென்ம வாழ்க்கைக்குத் தக்க படி செயல்படுகிறான். இந்த உடல் கடவுளின் கரங்களில், செய்யப்படும் செயல்களுக்கு கருவியாக மட்டுமே இருக்கிறது. செயல்திறனற்றதாக இருக்கும் உடல், கடவுள் பணித்ததைச் செய்கிறது.
ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, தலைவர்களுக்குத் தலைவனான கடவுளே, அனைத்து உயிர்களையும் செயல்பட வைக்கிறான். உயிரினங்கள் தானே செயல்படும் சக்தியற்றவை. ஓ வீரரே, மனிதன் முதலில் மனதில் ஒரு காரியத்தைத் தீர்மானித்து, தனது அறிவின் துணை கொண்டு அதைச் சாதிக்கிறான். ஆகையால், நாம், (மனிதன் செய்யும் காரியங்களுக்கு) மனிதனே காரணம் என்று சொல்கிறோம். ஓ மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரரே}, மாளிகைகளும், நகரங்களும் மனிதர்களின் செயல்களின் பயன்களே, ஆகையால் மனிதர்களின் செயல்கள் எத்தனை என்று எண்ணுவது சாத்தியமற்றது. எள்ளில் இருந்து எண்ணை எடுக்கலாம் என்றும், பாலில் இருந்து தயிர் எடுக்கலாம் என்றும், விறகு எரிப்பதால் உணவைச் சமைக்க முடியும் என்றும், புத்தி கொண்ட மனிதன் தனது அறிவின் துணை கொண்டு அறிந்து கொள்கிறான். இவற்றையெல்லாம் சாதிக்கும் வழிகளையும் அவர்கள் அறிகிறார்கள். அவற்றை அறிந்து கொண்டு, பின்பு சரியான பொருட்களைக் கொண்டு அவற்றைச் சாதிக்கிறார்கள். தங்கள் செயல்களின் வழியாகக் கிடைக்கும் பலன்களைக் கொண்டு உயிரினங்கள் வாழ்கின்றன.
ஒரு நிபுணன் ஒரு வேலையைச் செய்தால், அதைச் சரியாகச் செய்கிறான். வேலையில் இருக்கும் வித்தியாசங்களால், நிபுணத்துவம் அற்ற கை செய்த வேலையை நாம் கண்டறிகிறோம். ஒரு மனிதன் செய்யும் செயல்களின் விஷயத்தில் அவன் காரணமாக இருக்க வில்லையெனில், வேள்விகள் அவன் விஷயத்தில் கனி கொடுக்காது. யாரும் அவனுக்கு சீடனாகவும் முடியாது. குருவாகவும் முடியாது. ஒரு வேலைக்கு அந்த மனிதனே காரணமாக இருப்பதால்தான் அவன் வெற்றியடையும்போது பாராட்டப்படுகிறான். ஆகையால் அந்தப் பணியில் அவன் தோற்கும்போது நிந்திக்கப்படுகிறான். தனது செயல்களுக்குத் தானே காரணமாகாத மனிதன் இவற்றையெல்லாம் எப்படி நியாயப்படுத்த முடியும்? சிலர் அனைத்துமே அதிர்ஷ்டத்தின் பயன் என்று சொல்கின்றனர். வேறு சிலர் அப்படியில்லை என்கின்றனர். ஆனால் விதியின் பயன் என்றும், அதிர்ஷ்டத்தின் பயன் என்றும் சொல்லப்படும் அனைத்தும், முன்ஜென்ம செயல்களின் நல்ல அல்லது தீய செயல்களின் பயனாக இருக்கின்றன. அதிர்ஷ்டத்தாலும், விதியாலும் உடைமைகள் கிடைப்பதும் காணப்படுகிறது. சில விதியாலும், சில அதிஷ்டத்தாலும், சில முயற்சியாலும் பெற்றப்படுகின்றன. மனிதர்களின் விஷயத்தில் இவை மூன்றையும் தவிர்த்து நான்காவதாக ஒரு காரணம் கிடையாது. உண்மை அறிந்த, அறிவுத்திறமை கொண்டவர்கள் இப்படியே சொல்கின்றனர்.
எனினும், நன்மையான அல்லது தீங்கான கனிகளைக் கொடுப்பது கடவுள் இல்லை என்றால், உயிரினங்களில் பரிதாபகரமானவர்கள் யாரும் இருக்க முடியாது. முந்தைய செயல்களின் விளைவுகள் ஒரு கட்டுக்கதை என்றால், மனிதன் வேலை செய்யும் அனைத்துக் காரியங்களும் வெற்றிகரமானதாக இருக்க வேண்டும். ஆகையால் இவ்வுலகில் மூன்று மட்டுமே {விதி, அதிர்ஷ்டம், முயற்சி} வெற்றி மற்றும் தோல்வியின் கதவுகள் என்று (முன் ஜென்ம வாழ்வின் செயல்களைக் கருதிப்பாராமல்) கருதுபவர்கள் உடலைப் போலவே மந்தமாக செயலற்று இருப்பார்கள். இவையெல்லாம் இப்படி இருப்பினும் மனிதன் செயல்பட வேண்டும். இது மனுவின் தீர்மானமாகும். ஓ யுதிஷ்டிரரே, செயல்படாத மனிதன் நிச்சயம் அடிமைப்படுவான் {Succumb}. இவ்வுலகத்தில் செயல்படும் மனிதன் பொதுவாக வெற்றியையே சந்திக்கிறான். இருப்பினும் செயலற்றவன் வெற்றியை அடைவதே இல்லை. வெற்றி சாத்தியமில்லாத போது, வெற்றியின் பாதையில் இருக்கும் தடைகளை விலக்க ஒருவன் முயற்சிக்க வேண்டும்.
ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, (கடுமையாக) வேலை செய்யும் {உழைக்கும்} மனிதனின் கடன்கள் (கடவுளுக்கு பட்ட கடன்கள்) (அவன் வெற்றி அடைந்தாலும் அடையாவிட்டாலும்) ரத்து செய்யப்படுகின்றன. செயலற்று, நீண்டு கிடப்பவன், துரதிர்ஷ்டத்தில் மூழ்குகிறான். துடிப்புடனும், நிபுணத்துவத்துடனும் இருப்பவன் நிச்சயம் வெற்றியை அறுவடை செய்து, செழிப்பையும் இன்பத்தையும் அடைவான். தன்னம்பிக்கையுடன் செயல்களில் ஈடுபடும் புத்திசாலி மனிதர்கள், வித்தியாசமாக இருப்பவர்களை சந்தேகம் உள்ளவர்களாகவும், வெற்றியடையாதவர்களாகவும் கருதுகிறார்கள். எனினும் நம்பிக்கை நிறைந்தவர்களை வெற்றியாளர்களாகவே அவர்கள் கருதுகிறார்கள். இந்தக் கணம் நாம் துன்பத்தில் மூழ்கி இருக்கிறோம். இருப்பினும் நீர் செயல்பட்டால் நமது துன்பம் விலகும். நீர் தோல்வியுற்றால், அதுவே உமக்கும், விருகோதரருக்கும் {பீமருக்கும்}, விவத்சுவுக்கும் {அர்ஜுனருக்கும்}, இரட்டையர்களுக்கும் {நகுலர், சகாதேவருக்கும்} (நீங்கள் எதிரியிடம் நாட்டை பறிக்க முடியவில்லை என்ற) ஆதாரத்தை வழங்கும்.
மற்றவர்களின் செயல்களுக்கு வெற்றிமகுடம் சூட்டப்படுவதைக் காண்கிறோம். நமது செயல்களும் வெற்றியடையும் என்று கருதலாம். தொடர்ச்சி எப்படி இருக்கும் என்பதை ஒருவன் எப்படி முன்பே அறிந்து கொள்ள முடியும்? முயற்சி செய்தால், அந்த முயற்சிக்கு கனி கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். உழவன் கலப்பையைக் கொண்டு நிலத்தை உழுது விதைகளைத் தூவுகிறான். பிறகு பயிரை விளைவிக்க மேகமே {மழையே} காரணம் என்று அமைதியாக அமர்கிறான். மேகங்கள் அவனுக்கு சாதகமாக இல்லையென்றாலும், அந்த உழவன் பழியில் இருந்து விடுவிக்கப்படுகிறான். அவன் தனக்குள்ளேயே, “மற்றவர்கள் செய்ததைத்தான் நானும் செய்தேன். இருந்தபோதிலும் தோல்வியைச் சந்தித்தேன். என்னை எந்தப் பழியும் சாராது.” என்று நினைத்துக் கொண்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, தன்னைத்தானே நிந்தித்துக் கொள்ளாதிருப்பான்.
ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, ஒரு நம்பிக்கையின்மையுடன், “நான் செயல்படுகிறேன். ஆனாலும் வெற்றி எனதாகவில்லையே!” என்று கருதக்கூடாது. ஏனென்றால் முயற்சியைத் தவிர்த்து வெற்றிக்கான இன்னும் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. வெற்றியோ தோல்வியோ நம்பிக்கையின்மை கூடாது. ஏனென்றால் செயல்களின் வெற்றி சேர்க்கை மற்றும் பல சூழ்நிலைகளைப் பொருத்ததாகும். ஒரு முக்கியமான பொருள் தேவை என்றால் வெற்றி அதற்கு ஈடானதாகாது அல்லது வெற்றி கிட்டாது. இருப்பினும் முயற்சி இல்லையென்றால் வெற்றி கிட்டாது. முயற்சி இல்லாது வேறு எது இருந்தாலும் அது பாராட்டத்தக்கதல்ல. புத்திசாலிகள், செழிப்பை அடைய இடம், நேரம், வழி, அதிர்ஷ்ட சடங்குகள் ஆகியவற்றைச் சரியாகச் செய்து தங்கள் புத்தியின் துணையுடன் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்துவார்கள். கவனத்துடனும், விழிப்புடனும் வீரத்தைத் தலைமை வழிகாட்டியாகக் கொண்டு வேலையைச் செய்ய வேண்டும். ஒரு வேலையின் வெற்றிக்குத் தேவையான குணங்களின் சேர்க்கையில் வீரமே முக்கியமானதாகும்.
எதிரி தன்னைவிட பல குணங்களில் மேன்மையாக இருப்பதைக் காணும் புத்திசாலி மனிதன், சமரசக் கலைகளையும், சரியான சாதனங்களையும் பயன்படுத்தி தனது காரியங்களை நிறைவேற்றுவதற்கு வழி தேட முயற்சிக்க வேண்டும். அவன் தனது எதிரிக்கு தீமையையும், எதிரியை அகற்றுதலையும் விரும்ப வேண்டும். மரணத்திற்குரிய மனிதர்களைப் பற்றி இல்லாமல், அவனது எதிரி கடல், மலைகளாகவும் இருந்தாலும் கூட அவனது நோக்கங்கள் இவ்வாறே வழிநடத்தப்பட வேண்டும். ஒரு மனிதன் தனது எதிரிகளிடம் இருக்கும் ஓட்டைகளைத் தேடுவதன் மூலம், தனது மற்றும் தனது நண்பர்களின் கடனைத் தீர்க்கிறான். எந்த மனிதனும் தன்னைத் தானே இழிவுப்படுத்திக் கொள்ளக்கூடாது. தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்பவன் உயர்ந்த செழிப்பை அடையவே மாட்டேன். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, இதுபோன்ற சூழ்நிலைகளில் இந்த உலகத்தில் வெற்றி என்பது அடையக்கூடியதே. உண்மையில் இவ்வுலகத்தில் வெற்றி என்பது நேரம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கிடைக்கிறது.
முன்பு என் தந்தை {துருபதன்} தன்னுடன் ஒரு கற்ற அந்தணரை வைத்திருந்தார். ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, அவரே {அந்த அந்தணரே} இவற்றையெல்லாம் என் தந்தைக்கு {துருபதனுக்குச்} சொன்னார். உண்மையில் பிருஹஸ்பதி வெளிப்படுத்திய கடமை குறித்த இவ்வழிமுறைகள், எனது சகோதரர்களுக்கு {திருஷ்டத்யும்னன் போன்றோர்க்குக்} கற்றுத் தரப்பட்டது. பிறகு, அவர்களிடம் இருந்தே, என் தந்தையின் {துருபதரின்} இல்லத்தில் இருந்தபோது நான் கேட்டறிந்தேன். ஓ யுதிஷ்டிரரே, இடைவேளை நேரங்களில் நான் {உள் அறைகளில் இருந்து = அந்தப்புரத்தில் இருந்து} வெளியே சென்று என் தந்தையின் {துருபதரின்} மடியில் அமர்ந்து கொள்வேன். அப்போது அந்தக் கற்ற அந்தணர் இந்த உண்மைகளையெல்லாம் இனிமையாகவும் ஆறுதலாகவும் எனக்குச் சொன்னார்.
அறம்பயில்பவன் ஏன் துன்புறுகிறான்? – வனபர்வம் பகுதி 33அ-அறம், பொருள், இன்பம் குறித்து பீமன் யுதிஷ்டிரனிடம் பேசுவது
வைசம்பாயனர் சொன்னார், “யக்ஞ்சேனியின் {திரௌபதியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமசேனன், கோபத்தால் பெருமூச்சுவிட்டபடி, மன்னனை {யுதிஷ்டிரனை} அணுகி, அவனிடம், “ஓ ஏகாதிபதி {அண்ணா யுதிஷ்டிரரே}, (உமக்கு முன்பாக) நாடுகள் சம்பந்தமான காரியங்களில் நல்ல மனிதர்கள் வழக்கமாகச் செல்லும் பாதையில் நடந்து செல்லும். இப்படி அறம், இன்பம் மற்றும் பொருளை இழந்து, தவசிகளின் ஆசிரம வாழ்க்கை வாழ்வதால் நமக்கு என்ன லாபம்? அறத்தாலோ நேர்மையாலோ, பலத்தாலோ துரியோதனன் நம்மிடம் இருந்து நாட்டைப் பறிக்கவில்லை. அவன் நியாயமற்ற பகடையாட்டம் மூலம் பறித்தான். கழிவுகளை உண்ணும் பலவீனமான குள்ளநரி, சிங்கத்திடம் இருந்து அதன் இரையைப் பறிப்பது போல, அவன் நமது நாட்டை நம்மிடம் இருந்து பறித்தான்
ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, சத்தியத்துடன் ஒட்டிக் கொள்ளும் வெற்றுத் தகுதிக்குக் {அறத்திற்குக்} கீழ்ப்படிந்து, துன்பத்தினை அனுபவித்து, அறம் மற்றும் இன்பத்திற்கு ஊற்றுக்கண்ணான செல்வத்தை ஏன் கைவிட வேண்டும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, காண்டீவத்தைத் தாங்குபவனால் {அர்ஜுனனால்} காக்கப்பட்டதால் இந்திரனாலும் கைப்பற்ற முடியாதிருந்த நமது நாடு, உமது பொறுப்பிலாத் தன்மையாலேயே நம் கண் எதிரிலேயே நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டது. ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நாம் உயிருடன் இருக்கும்போதே, கையாலாகாதவனிடம் இருந்து பறிக்கப்பட்ட கனி போல அல்லது நொண்டியிடம் இருந்து பறிக்கப்பட்ட பசுக்களைப் போல, நமது செல்வம் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டது.
நீர் அறத்தைக் கைக்கொள்வதில் உண்மையுடன் {விசுவாசத்துடன்} இருக்கிறீர். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, உம்மைத் திருப்திப்படுத்தவே நாங்கள் இந்தக் கொடிய பேரிடரில் மூழ்கியுள்ளோம். ஓ பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, நாங்கள் உமது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாலேயே, நமது நண்பர்களின் இதயத்தைக் கிழித்து, எதிரிகளின் இதயங்களைத் திருப்திப்படுத்துகிறோம். உமக்குக் கீழ்ப்படிந்து, திருதராஷ்டிரன் மகன்களைக் கொல்லாது வந்த முட்டாள்த்தனமான நமது செயல் என்னை வருந்த வைக்கிறது.
ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, வனவிலங்கைப் போன்ற உமது கானக வாழ்க்கை என்பதை பலவீனமாவன் மட்டுமே ஏற்பான். நிச்சயமாக, பலவானான எந்த மனிதனும் இப்படிப்பட்ட வாழ்க்கையை மேற்கொள்ள மாட்டான். இந்த உமது வாழ்க்கை முறையை கிருஷ்ணனோ, பீபத்சு {பீபத்சு}வோ {அர்ஜுனனோ}, அபிமன்யுவோ, ஸ்ருஞ்சயரோ, நானோ, மாத்ரியின் மகன்களோ ஏற்கவில்லை. நோன்புகளால் பாதிக்கப்பட்டு நீர், அறம்! அறம்! என்று கதறுகிறீர்.
நம்பிக்கையின்மையால் நீர் உமது ஆண்மையை இழந்துவிட்டீரா? தங்கள் செழிப்பை மீட்க முடியாத கோழைகள் மட்டுமே, கனியற்ற, அழிவை ஏற்படுத்தக்கூடிய நம்பிக்கையின்மையைப் பேணிக் காப்பர். உமக்கு திறனும் கண்களும் இருக்கின்றன. நம்மிடம் ஆண்மை இருப்பதை நீர் காண்கிறீர். நீர் அமைதியான வாழ்க்கை மேற்கொள்வதாலேயே உமக்கு இந்தத் துயரம் தெரியவில்லை. மன்னிக்கும் இயல்பு கொண்ட நம்மை இந்த திருதராஷ்டிரர்கள் திறமையற்றவர்களாகவே உண்மையில் கருதுகிறார்கள். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இந்தத் துயரம் போர்க்களத்தில் நேரும் மரணத்தைவிட எனக்குத் துன்பமாக இருக்கிறது. எதிரிகளுக்குப் புறமுதுகிடாமல் நியாயமான முறையில் போரிட்டு மடிவது, இந்த வனவாசத்தைவிட சிறந்ததே. அப்படிச் செய்தால் மறு உலகத்தில் நாம் பேரானந்தம் உள்ள பகுதிகளை அடையலாம். அப்படி இல்லையென்றால், ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, அவர்கள் அனைவரையும் கொன்ற பிறகு, நாம் முழு உலகத்தையும் செழிப்பையும் அடைவோம்.
பெரும் சாதனைகளைச் செய்ய விரும்பி, நமது வகைக்குண்டான முறைகளை அனுசரிப்பவர்கள், நமது தீமைக்காக பழிவாங்க விரும்புபவர்கள், இதையே தங்கள் கடமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது நாடு நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டதால், நாம் போரில் ஈடுபட்டால், நமது செயலைக் காணும் உலகம் நமக்குப் புகழையே தரும், இழிவைத் தராது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, ஒருவனுடைய சுயத்தையும், நண்பர்களையும் சித்திரவதை செய்யும் அறம் உண்மையில் அறமே ஆகாது. மறுபுறம் பேரிடர்களை உற்பத்தி செய்யும் அது தீமையானது. சில நேரங்களில் அறமே மனிதனுடைய பலவீனமாகிறது. அப்படிப்பட்ட மனிதன் அறம்பயின்றாலும், இறந்த மனிதனைக் கைவிடும் இன்பத்தையும் வலியையும் போல, அறமும் பொருளும் அவனைக் கைவிடும்.
அறத்திற்காகவே அறம்பயில்பவன் எப்போதும் துன்பப்படுகிறான். சூரிய ஒளியைக் காண இயலாத குருடனைப் போல அறத்தின் காரண காரியங்களை அறியாத அவனை ஞானி {அறிவுள்ளவன்} என்று அழைக்கமுடியாது. செல்வத்தை தனக்கு மட்டுமே என்று கருதுபவன், செல்வத்தின் காரண காரியங்களை அறிய மாட்டான். உண்மையில் அவன், கானகத்தில் மாடு மேய்க்கும் பணியாளைப் போன்றவன். அறத்தையும், இன்பங்களையும் தவிர்த்து, எவன் தொடர்ந்து செல்வத்தை மட்டுமே அதிகமாகக் கொள்கிறானோ, அவன் எல்லோராலும் தண்டிக்கப்படவும் கொல்லப்படவும் தக்கவன். அறமும் செல்வமும் அற்று, தான்தோன்றித் தனமாக இன்பத்தை மட்டுமே நுகர்பவன், காய்ந்த குளத்தில் சாகும் மீனைப் போல, தனது காலம் முடியும் போது சாவான். இந்தக் காரணங்களுக்காகவே, ஞானமுள்ளவர்கள் எப்போதும் அறம் மற்றும் பொருள் சம்பந்தமாக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். நெருப்புக்கு எரிபொருளைப் போல, அறமும் பொருளுமே இன்பத்திற்கான முக்கியத் தேவை.
இன்பம் அறத்தையே தனது வேராகக் கொண்டிருக்கிறது. அறமும் இன்பத்துடன் சேர்ந்தே இருக்கிறது. ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, கடல் மேகங்களை உற்பத்தி செய்வதும், மேகங்கள் கடலை நிரப்புவதும் போல அவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. ஒரு பொருளைத் தொடுவதாலோ, செல்வத்தை அடைவதாலோ ஏற்படும் மகிழ்ச்சியானது இன்பம் எனப்படுகிறது. கண்களுக்குப் புலப்படாத உடலற்ற அது {இன்பம்} மனதிலேயே இருக்கிறது. செல்வத்தை (அடைய) விரும்புபவன், தனது வெற்றிக்காக பெரும் அறப்பங்கு {அறத்தில் ஈடுபட்டு அதில் பெரும் பங்கைப்) பெற முயற்சிக்கிறான். இன்பத்தை விரும்புபவன், (தனது விருப்பம் உணரப்பட வேண்டும் என்பதற்காக) செல்வத்தைத் தேடுகிறான். எனினும், இன்பம் தனது பங்குக்கு எதையும் தருவதில்லை. ஒரு இன்பம் மற்றொரு இன்பத்திற்கு வழிகாட்டும். விறகில் இருந்து சாம்பலைப் பெறலாம். ஆனால் சாம்பலில் இருந்து எதுவும் கிடைக்காது.
ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நாம் காணும் பறவைகளை வேடன் கொல்கிறான். அதைப் போலவே பாவங்கள் இந்த உலகின் உயிரினங்களைக் கொல்கின்றன. ஆகவே, இன்பத்தாலோ பேராசையாலோ தவறாக வழிநடத்தப்பட்டவன், அறத்தின் இயல்பைக் காணாமல், அனைவராலும் கொல்லப்படத்தக்கவனாக இருந்து, இங்கும் {இவ்வுலகத்திலும்} அங்கும் {மறு உலகத்திலும்} இழிந்த நிலையை அடைகிறான். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இன்பத்திற்கான பல பொருட்களை {செல்வத்தை} அடையும்போது இன்பத்தையும் அடையலாம் என்பதை நீர் அறிவீர். அவற்றின் {செல்வத்தின்} சாதாரண நிலைகளையும், அவற்றின் பெரும் மாற்றங்களையும் நீர் நன்கு அறிவீர். அதை {செல்வத்தைத்} தொலைப்பதால் இயலாமையும் மரணமும் வருகிறது. துன்பமும் வருகிறது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தத் துயரம் இப்போது நம்மை மூழ்கடிக்கிறது. ஐம்புலன்கள், அறிவாற்றல், இதயம் போன்றவற்றில் இருந்து எழும் மகிழ்ச்சி, அதற்கான பொருளை நோக்கி நம்மை வழிநடத்தும். அதுவே இன்பம் எனப்படுகிறது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அந்த இன்பமே, நமது செயல்களுக்கான சிறந்த கனிகள் என நான் நினைக்கிறேன்.
ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, இப்படியே ஒருவன் அறம், பொருள் மற்றும் இன்பத்தை ஒன்றன் பின் ஒன்றாகக் கருத வேண்டும். ஒருவன் தன்னை அறத்திற்கு மட்டுமே அர்ப்பணித்துக் கொள்ளக்கூடாது. அதே போல விருப்பங்களை நிறைவேற்றும் செல்வத்தை {பொருளை} மட்டுமே என்றும், இன்பத்தை மட்டுமே என்றும் பயிலக்கூடாது. இவை மூன்றையும் எப்போதும் பயில வேண்டும். ஒருவன் காலையில் அறத்தையும், மதிய வேளையில் செல்வத்தையும், மாலையில் இன்பத்தையும் தேட வேண்டும் என்று சாத்திரங்கள் சொல்கின்றன. ஒருவன் வாழ்வின் முன் பகுதியில் இன்பத்தையும், இரண்டாவதாக செல்வத்தையும் கடைசியாக அறத்தையும் பயில வேண்டும் என்றும் சாத்திரங்கள் சொல்கின்றன. ஓ பேச்சாளர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தும் ஞானமுள்ளவர்கள், அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் சரியான நேரத்தில் சரியானபடி செய்கிறார்கள்.
இன்றே ஹஸ்தினாபுரம் செல்வீர்! – வனபர்வம் பகுதி 33ஆ-தனது அண்ணனான யுதிஷ்டிரனிடம் பீமன் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை விவரித்து, ஹஸ்தினாபுரத்தின் மீது போர் தொடுக்க ஆலோசனை கூறுதல்….
பீமன் தொடர்ந்தான், “ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரரே}, இவை மூன்றையும் {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை} விடுப்பதோ அல்லது மேற்கொள்வதோ, மகிழ்ச்சியை விரும்புவோருக்கு எது சிறந்ததோ அதை நீர் கவனமாக ஆராய்ந்து நிர்ணயிக்க வேண்டும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அதன்பிறகு சற்றும் தாமதிக்காமல் அவற்றை அடைவதையோ அல்லது கைவிடுவதையோ செய்ய வேண்டும். இவ்விரண்டிலும் முடிவு எடுக்க முடியாமல் சலனத்துடன் இருப்பவன் இழிந்த வாழ்வை மேற்கொள்கிறான். உமது நடத்தை எப்போதும் அறம் சார்ந்தே இருக்கிறது என்பது நன்கு அறியப்பட்டதே.
இந்த உமது நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நீர் செயல்பட வேண்டும். பரிசு, வேள்வி, அறிவுள்ளோரை மதித்தல், வேத கல்வி, நேர்மை ஆகியவை, ஓ மன்னா, இவ்வுலகிலும் மறு உலகிலும் பயனளிக்கக்கூடிய உயர்ந்த அறங்களாகும். ஓ மனிதர்களில் புலி போன்றவரே {யுதிஷ்டிரரே}, இருப்பினும் ஒருவன் கணக்கிலடங்கா மற்ற பல சாதனைகளைச் செய்திருந்தாலும் செல்வமற்று இருந்தால் அவனால் இவ்வறங்களை அடைய முடியாது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இந்த முழு அண்டமே அறத்தை நம்பியுள்ளது. அறத்தை விட உயர்ந்தது எதுவும் கிடையாது.
ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பெரும் செல்வம் வைத்திருப்பவனாலேயே அறத்தை அடைய முடிகிறது. பிச்சைக்கார வாழ்வு வாழ்வதாலோ, அயர்ந்து போன வாழ்வு வாழ்வதாலோ செல்வம் சம்பாதிக்க முடியாது. அறத்தால் வழிகாட்டப்பட்ட புத்தியைக் கொண்டே செல்வம் சம்பாதிக்க முடியும். உமது காரியத்தில், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அந்தணர்களுக்கு சாத்தியமான பிச்சையெடுத்தல் விலக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், ஓ மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரரே}, உமது பலம் மற்றும் சக்தியைக் கொண்டு செல்வத்தைப் பெற முயற்சி செய்யும். பிச்சையெடுத்து வாழ்தலோ, சூத்திரரின் வாழ்வு முறையோ உமக்கு ஏற்றதல்ல. பலமும் சக்தியும் க்ஷத்திரியர்களைப் பொறுத்தவரை அறம். ஆகையால், உமது வகைக்கு ஏற்ற அறத்தை மேற்கொண்டு உமது எதிரிகளை நீர் கொல்ல வேண்டும். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, எனது பலத்தையும், அர்ஜுனனின் பலத்தையும் துணையாகக் கொண்டு திருதராஷ்டிரர் மகன்களின் பலத்தை அழித்துவிடும்.
கல்வி கற்ற ஞானமுள்ளவர்கள் ஆட்சியுரிமையே அறம் என்கின்றனர். ஆகையால் ஆட்சியுரிமையை அடையும். தாழ்மையான நிலையில் வாழ்வது உமக்குத் தகாது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, விழித்தெழும், (உமது க்ஷத்திரிய வகைக்கான) நித்தியமான அறங்களைப் புரிந்து கொள்ளும். பிறப்பிலேயே மனிதர்களுக்கு வலியை உண்டாக்கும் கொடூரமான செயல்கள் புரியும் வகையைச் சேர்ந்திருக்கிறீர். உமது குடிமக்களைப் பேணிக்காத்து, கனிகளை அறுவடை செய்யும். அப்படிச் செய்தால் நிந்திக்கப்பட மாட்டீர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இந்த அறத்தை உமது வகைக்கு விதித்தது கடவுளே ஆகும். இதிலிருந்து நீர் விலகிக்கொண்டால், உம்மை நீரே கேலிக்குரியவர் ஆக்கிக் கொள்வீர். சுய வகைக்கு {சொந்த வர்ணத்துக்கு} உரிய அறங்களில் இருந்து விலகுதல் எப்போதுமே மெச்சப்படுவதில்லை. ஆகையால், ஓ குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, உமது வகைக்கு {க்ஷத்திரிய வகைக்கு} உகந்தவாறு உமது இதயம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி ஆக்கி, அயர்ச்சியான வாழ்வைத் தூக்கி எறிந்து, சக்தியை அடைந்து ஆண்மையுடன் உமது சுமையை நீர் சுமக்க வேண்டும்.
ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, எந்த மன்னனும் அறத்தின் வழிகளை மட்டுமே கொண்டு, உலகின் ஆட்சி உரிமையையோ, செழிப்பையோ அல்லது செல்வாக்கையோ அடைய முடியாது. வேடன், பெரும் கும்பலுக்கு {விலங்குகள் அல்லது பறவைகளுக்கு} கவர்ச்சிகரமான உணவைப் பார்வைக்கு வைத்து ஆசை காட்டி, தனது உணவை அடைவது போல, புத்திசாலியானவன், தாழ்ந்தவர்களும் பேராசை கொண்டவர்களுமான எதிரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து நாட்டைப் பெறுவான். மன்னர்களில் காளையே {யுதிஷ்டிரரே}, பல அசுரர்கள், தங்கள் அண்ணன்கள் பதவியும் செல்வாக்குடனும் இருக்கும்போதே, யுக்தியைக் கொண்ட தேவர்களால் அழிக்கப்பட்டனர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இப்படியே அனைத்தும் பலவான்களுக்கு உடையதாகிறது.
ஓ பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, யுக்திகளைக் கைக்கொண்டு எதிரிகளைக் கொல்லும். போர்க்களத்தில் வில் தாங்குபவர்களில் அர்ஜுனனுக்கு ஈடானவர் யாருமில்லை. அதே போல கதாயுதம் தாங்குவதில் எனக்கு நிகர் யாருமில்லை. ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பலவான்கள், எதிரிகளின் திட்டங்களை ஒற்றர்கள் மூலம் உளவு கொண்டு படைகளின் எண்ணிக்கையை வைத்து போர் புரிவதில்லை. மாறாக, தங்கள் பலத்தை நம்பியே போர் புரிகின்றனர். ஆகையால், ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, உமது பலத்தை வெளிக்காட்டும். பலமே செல்வத்தின் வேர். வேர் என்று சொல்லப்படும் மற்றவையெல்லாம் உண்மையில் அதன் வேர் அல்ல. குளிர் காலத்தில் மரத்தின் நிழலால் உண்டாவது எதுவும் இல்லை. அதே போல, பலமில்லாத அனைத்தும் கனியற்றதாகவே ஆகிவிடும்.
ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, தனது செல்வத்தைப் பெருக்க எண்ணும் ஒருவன், நிலத்தில் விதைகளைத் தூவுவதைப் போல செல்வத்தை செலவு செய்ய வேண்டும். இது குறித்து உமது மனதில் சந்தேகம் இல்லாதிருக்கட்டும். எனினும், செலவு செய்யும் செல்வம், வரவாக வரப்போகும் செல்வத்துக்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ ஆகும் என்றால், செல்வத்தைச் செலவு செய்யக்கூடாது. ஏனெனில், செல்வ முதலீடு கழுதையைப் போன்றது, சொறியும்போது முதலில் இன்பமாக இருக்கும். ஆனால் அதுவே பின்பு வலியாகிப் போகும்.
ஓ மனிதர்களின் மன்னா {யுதிஷ்டிரரே}, ஒரு மனிதன் விதைகளைத் தூவுவதைப் போல, பெரும் அறத்தைப் பெறுவதற்காக தன்னிடம் இருந்து சிறு அறத்தைத் தூவினால், அவன் அறிவுள்ளவன் என்று கருதப்படுகிறான். நான் சொல்லும் இது சந்தேகத்திற்கு அப்பாற்ப்பட்டது. ஞானமுள்ளவர்கள் தங்கள் எதிரியின் நண்பர்களை அவனிடம் இருந்து பிரித்து, அவனை {அந்த எதிரியை} பலவீனமாக்கி, தனக்குக் கீழ்ப்படிய வைக்கிறார்கள். பலவான்கள் கூட, தங்கள் தைரியத்தை நம்பியே போர்புரிகிறார்கள். {தைரியமற்ற} தொடர்ந்த முயற்சிகளாலோ, சமரசக்கலைகளாலோ ஒருவன் எப்போதும் நாட்டை அடைய முடியாது.
தேனைக் கவர வருபவனை, எண்ணற்ற தேனீக்கள் பல சேர்ந்து கொல்வது போல, சில நேரங்களில், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பலவீனமான மனிதர்கள் பலர் கூடி எண்ணிக்கையில் அதிகமாகி, பலவானான எதிரியைக்கூட கொன்றுவிடுகிறார்கள். அனைத்தையும் காக்கும் சூரியன், தனது கதிர்களால் கொல்லவும் செய்கிறான். அது போல, நீர் சூரியனின் வழிகளைப் பின்பற்ற வேண்டும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, தனது நாட்டைக் காத்துக் கொள்ளவதும், மக்களைப் பேணிக்காப்பதும் வேதங்களில் சொல்லப்பட்ட தவ வாழ்க்கையாகும். உமது முன்னோர்கள் அத்தகு தவ வாழ்க்கையைக் கைக்கொண்டிருக்கின்றனர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, ஒரு க்ஷத்திரியன் தவத்தால் அருள் உலகை அடைய மாட்டான். மாறாக, நியாயமாகப் போரிட்டு வென்றாலோ அல்லது தோல்வியுற்றாலோ கூட அவ்வுலகை {அருள் உலகை} அடைகிறான். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இந்த உமது துயரத்தைக் கண்டு, ஒளி சூரியனைக் கைவிடும் என்றும், அருள் {grace = கருணை / மென்மை} சந்திரனைக் கைவிடும் என்றும் உலகம் தீர்மானித்திருக்கிறது.
ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நல்ல மனிதர்கள் தனியாகவோ அல்லது கூட்டு சேர்ந்து, ஒருவருடன் ஒருவர் உரையாடி, உம்மை பாராட்டவும் பழிக்கவும் செய்கிறார்கள். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, குருக்களும் அந்தணர்களும் ஒன்று கூடி அறியாமையாலோ, காரியவாதத்தாலோ, பேராசையாலோ அல்லது பயத்தாலோ ஒரு பொய்யும் உரைக்கமாட்டீர் என்று விவாதித்தும், உமது உறுதியான சத்தியப்பற்றைக் குறித்து மகிழ்ச்சியாகவும் பேசுகின்றனர். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நாட்டை அடைவதற்காக ஒரு மன்னனால் செய்யப்படும் பாவங்கள் அனைத்தும், அவன் அந்நாட்டை அடைந்த பிறகு, செய்யப்படும் வேள்விகளாலும் தானங்களாலும் கரைந்து போகிறது. அந்தணர்களுக்கு கிராமங்களைக் கொடுப்பதாலும், ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடுப்பதாலும், மேகத்திலிருந்து வெளிப்படும் சந்திரனைப் போல, ஒரு மன்னன் பாவத்திலிருந்து விடுபடுகிறான்.
ஓ குரு குலத்தின் மகனே, ஓ யுதிஷ்டிரரே, நமது நாட்டின் இளைஞர்களும் முதியவர்களும் ஆக அனைத்துக் குடிமக்களும் உம்மைப் புகழ்கிறார்கள். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, நாய் உணவருந்தும் பாத்திரத்தில் பால் இருப்பது போல, சூத்திரர்களிடம் வேதம் இருப்பது போல, திருடர்களிடம் உண்மை இருப்பது போல, மாதர்களிடம் பலம் இருப்பது போல, துரியோதனனிடம் அரசுரிமை இருக்கிறது என்று அனைத்து மக்களும் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். பாடத்தை மனப்பாடம் செய்வது போல, மாதர்களும் குழந்தைகளும் திரும்பத் திரும்ப இதையே சொல்கின்றனர். ஓ எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, எங்களுடன் சேர்த்து நீரும் இத்தகு தாழ் நிலைக்கு வீழ்ந்துவிட்டீர்.
ஐயோ, உம்முடன் சேர்ந்து நாங்கள் அனைவரும் உமது துயரத்தில் தொலைந்து போனோம். ஆகையால், அனைத்து கருவிகளும் பொருத்தப்பட்ட உமது தேரில் ஏறி, மேன்மையான அந்தணர்களை நல்வார்த்தைகள் சொல்லச்சொல்லி, இன்றே விரைந்து ஹஸ்தினாபுரம் சென்றால், அங்கே {ஹஸ்தினாபுரத்தினை} வென்று அதில் கிடைக்கும் பொருட்களை நீர் அந்தணர்களுக்கு கொடுக்கலாம். வில்தாங்குவதில் உறுதியான உமது தம்பிகளாலும், ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவர்களாலும் சூழப்பட்டு, கடும் விஷம் கொண்ட பாம்புகளைப் போல, மருதர்களால் சூழப்பட்ட, விரித்திரனைக் கொன்றவனைப் {இந்திரனைப்} போல இங்கிருந்து வெளியேறும்.
ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, நீர் பலசாலி ஆகையால், இந்திரன் அசுரர்களை வாட்டியது போல உமது பலத்தைக் கொண்டு பலவீனமான எதிரிகளை வாட்டி, திருதராஷ்டிரன் மகன்கள் அனுபவிக்கும் செல்வங்களை அவர்களிடமிருந்துப் பறியும். காண்டீவத்தில் இருந்து புறப்படும், கடும் விஷம் கொண்ட பாம்புகளைப் போன்றவையும், கழுகு இறகுகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான கணைகளை எந்த மனிதனாலும் தாங்க முடியாது. ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, நான் கோபத்துடன் போர்க்களத்தில் இருக்கும்போது, எனது கதாயுதத்தின் தூண்டுதலைத் தாங்கிக் கொள்ளக்கூடிய வீரனோ, யானையோ, குதிரையோ எதுவும் கிடையாது.
ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, ஸ்ரீன்ஜயர்கள், கைகேயர்கள் மற்றும் விருஷ்ணி குல காளையரின் துணை கொண்டு போரிட்டு, நாம் ஏன் நமது நாட்டை அடையக்கூடாது? ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நமது எதிரியின் கையில் இருக்கும் இந்த பூமியை, பெரும் படைகளின் துணை கொண்டும், நமது முயற்சியாலும் வெற்றி கொள்ள முடியாதா?
கடும் வார்த்தைகளால் என்ன பயன்? – வனபர்வம் பகுதி 34-யுதிஷ்டிரன் தனது சபதத்தை விடமுடியாது என்று சொல்வது; சபதத்தின் முடிவுக்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் என்று பீமனிடம் சொல்வது…
வைசம்பாயனர் சொன்னார் “பீமசேனனால் இப்படிச் சொல்லப்பட்ட, உண்மைக்குத் தன்னை உறுதியாக அர்ப்பணித்திருந்த, உயர் ஆன்ம மன்னனான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்} பொறுமையுடன் இருந்து சில கணம் பொறுத்து, “ஓ பாரதா {பீமா}, சந்தேகமற இவையெல்லாம் உண்மையே. அம்பு போன்ற உனது வார்த்தைகளால் துளைத்து என்னைச் சித்திரவதைச் செய்யும் உன்னை என்னால் நிந்திக்க முடியாது. எனது முட்டாள்தனத்தால் மட்டுமே இந்தப் பேரிடர் உங்களுக்கு வந்திருக்கிறது. திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} நாட்டையும் அரசுரிமையையும் பறிக்க விரும்பியே நான் பகடை வீச முற்பட்டேன். அதனால்தான், தந்திரம் கொண்ட சூதாடியான சுபலனின் மகன் {சகுனி}, சுயோதனன் {துரியோதனன்} சார்பாக என்னை எதிர்த்து விளையாடினான்.
மலைநாட்டுக்காரனான {காந்தார நாட்டுக்காரனான} சகுனி, ஏய்ப்பதில் மிகவும் தந்திரம் மிக்கவன். எந்த யுக்தியும் தெரியாமல் சபை நடுவே நான் பகடை வீசினேன். அவன் {சகுனி} தந்திரமாக என்னை வீழ்த்திவிட்டான். அதனாலேயே, ஓ பீமசேனா, நாம் இந்தப் பேரிடரில் மூழ்கினோம். சகுனியின் விருப்பத்திற்கேற்றபடி பகடைகள் இரட்டைப் படையாகவும், ஒற்றைப்படையாகவும் விழுவதைப் பார்த்தாவது நான் எனது மனதை அடக்கியிருக்க வேண்டும். இருப்பினும், கோபம் ஒரு மனிதனின் பொறுமையை விரட்டிவிடுகிறது. ஓ குழந்தாய் {பீமா}, ஆணவம், தற்பெருமை, கர்வம் ஆகியவற்றின் வசமாக இருக்கும்போது மனதை கட்டுக்குள் வைக்க முடியவில்லை.
ஓ பீமசேனா, நீ பயன்படுத்திய வார்த்தைகளுக்காக நான் உன்னை நிந்திக்கவில்லை. இவ்விதம் நமக்குக் நடக்க வேண்டியது முன்பே விதிக்கப்பட்டது என்றுதான் நான் கருதுகிறேன். திருதராஷ்டிரன் மகனான மன்னன் துரியோதனன் நமது நாட்டை விரும்பி, நம்மை துன்பத்திலும் அடிமைத்தனத்திலும் தள்ளியபோது, திரௌபதியே நம்மைக் காத்தாள். மீண்டும் பகடை விளையாட சபைக்கு அழைக்கப்பட்ட போது, அனைத்து பாரதர்கள் முன்னிலையிலும், திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பந்தயப் பொருள் குறித்து என்ன சொன்னான் என்பதை நீயும் அறிவாய் அர்ஜுனனும் அறிவான்.
துரியோதனன் “ஓ இளவரசே, அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, (வீழ்த்தப்பட்டால்) நீ உனது அனைத்து தம்பிகளுடன், அனைவரும் அறியும்படி பனிரெண்டு {12} வருடங்களுக்கு நீ தேர்ந்தெடுக்கும் கானகத்தில் வாழ வேண்டும். பதிமூன்றாவது {13வது} வருடத்தை தலைமறைவாகக் கழிக்க வேண்டும். அந்தக் கடைசி காலத்தில், பாரதர்களின் ஒற்றர்கள் உங்களைப் பற்றி கேள்விப்பட்டு நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களைக் கண்டுபிடித்து விட்டால், நீ மீண்டும் கானகத்தில் அதே அளவு காலம் வாழ வேண்டும். மேலும் கடைசி வருடத்தை தலைமறைவாக வாழ வேண்டும். இது குறித்து சிந்தித்து அதை சபதமாக ஏற்றுக் கொள். {துரியோதனனாகிய} என்னைப் பொறுத்தவரை, எனது ஒற்றர்களைக் குழப்பி அவர்களால் கண்டுபிடிக்க முடியாதவாறு நீங்கள் இருந்தீர்களானால், ஓ பாரதா, ஐந்து நதிகள் பாயும் இந்த நாடு மீண்டும் உனதாகும் நான் இந்தக் குருக்களின் சபையில் சத்தியம் செய்கிறேன். அதே போல, ஓ பாரதா, உன்னால் நான் வீழ்த்தப்பட்டால், நாங்கள் அனைவரும், எங்கள் செல்வங்களைத் துறந்து, அதே காலத்திற்கு, அதே விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்வோம்.” என்று சொன்னான் {துரியோதனன்}.
அந்த இளவரசனால் {துரியோதனனால்} அப்படிச் சொல்லப்பட்டதும், நான் அனைத்து குருக்களுக்கும் மத்தியில் “அப்படியே ஆகட்டும்” என்றேன். அந்த இழிந்த விளையாட்டு அதன்பிறகு தொடங்கியது. நாம் வீழ்த்தப்பட்டு நாடு கடத்தப்பட்டோம். அதனாலேயே நாம் பல வனங்களில் துயரத்துடனும், அசௌகரியத்துடனும் சுற்றி வருகிறோம். எனினும் திருப்தியடையாத சுயோதனன் {துரியோதனன்} கோபத்திற்குத் தன்னைக் கொடுத்து, நமது இடரைக் கண்டு அனைத்து குருக்களையும் மகிழ்ச்சி தெரிவிக்க வைத்தான். நல்லோர் முன்னிலையில் இப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் நுழைந்த பிறகு, பூமியில் உள்ள நாட்டிற்காக யார்தான் அந்த ஒப்பந்தத்தை உடைக்க முடியும்?
ஒரு மரியாதைக்குரிய மனிதனுக்கு, ஒப்பந்தத்தை மீறி அரசை அடைவதை விட மரணமே மேலானது என்று நான் நினைக்கிறேன். அந்த விளையாட்டின் போது, *நீ எனது கரங்களை எரிக்க விரும்பினாய். அர்ஜுனனால் நீ தடுக்கப்பட்டு, உனது கரங்களையே பிசைந்து நின்றாய். நீ விரும்பியதைச் செய்திருந்தாயானால், இந்தப் பேரிடர் நம்மேல் விழுந்திருக்குமா? ஓ பீமா, உனது வீரத்தை உணர்ந்த நீ, இப்படிப்பட்ட ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னரே ஏன் அதைச் சொல்லவில்லை? ஏற்ற சபதத்தினால் துயரில் மூழ்கி, நேரமும் கடந்து பிறகு, என்னிடம் இத்தகு கடும் வார்த்தைகள் பேசி என்ன பயன்?
ஓ பீமா, திரௌபதி அப்படித் துன்பப்படுத்தப்பட்டதைக் கண்டும் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்பதுதான் எனது பெரும் கவலை. நான் ஏதோ விஷ பானத்தை அருந்தியதைப் போல எனது இதயம் எரிகிறது. இருப்பினும் குரு வீரர்களுக்கு மத்தியில் சபதமேற்ற பிறகு, என்னால் அதை மீற முடியாது. விதைகளைத் தூவியவன் அறுவடைக்காகக் காத்திருப்பது போல, ஓ பீமா, பொறுத்திரு. நமது சிறந்த நாட்கள் மீண்டும் வரும். முதலில் காயப்பட்டவன், எதிரிகள் கனிகளுடனும் மலர்களுடன் இருப்பதை அறிந்து, அவனைத் தனது வீரத்தால் பழிவாங்குவது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட வீரன் சாகாப்புகழடைகிறான். அப்படிப்பட்ட மனிதன் பெரும் செழிப்பை அடைகிறான். அவனது எதிரிகள் அவனுக்கு தலைவணங்கி, இந்திரனைச் சுற்றி பாதுகாப்புக்காக நிற்கும் தேவர்களைப் போல, நண்பர்கள் அவனைச் சூழ்ந்து நிற்பார்கள்.
ஆனால், ஓ பீமா, எனது சத்தியம் பொய்யாகாது என்பதை அறிந்து கொள். நான் அறத்தை உயிரினும், தேவத்தன்மையினும் மேலாகக் கருதுகிறேன். நாடு, மகன்கள், புகழ், செல்வம் ஆகியவை அனைத்தும் உண்மையின் {சத்தியத்தின்} பதினாறில் ஒரு பங்குக்கு ஈடாகாது.” என்றான் {யுதிஷ்டிரன்}.
கைப்பிடி புல்லால் மலைகளை மறைப்பீரா? – வனபர்வம் பகுதி 35-வனவாசத்தை முடிக்காமலேயே துரியோதனனை வெல்ல வேண்டும் என்று பீமன் யுதிஷ்டிரனிடம் சொல்வது..
பீமன் சொன்னான், “ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நுரை போலவும், (எப்போதும் விழத்தயாராக இருக்கும்) கனிந்த கனி போலவும், நீர் காலத்தை நம்பி அழியும் தன்மை பெற்று இருக்கிறீர். வேகமான கணையைப் போன்றும், வேகமாக ஓடும் நீரூற்றைப் போன்றும், மரணத்தைப் போன்றும் உள்ள எல்லையற்ற, அளவிடமுடியாத காலத்திற்குட்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் நுழைந்தால், நம்மிடம் உள்ள அனைத்தும் அதில் அடித்துச் செல்லப்படுகிறது. அவை எல்லாம் உம்மிடம் இருக்கும் என்று எப்படி நீர் கருதுகிறீர்? ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, ஊசியால் குத்தி எடுக்கப்படும் மைப்பொடி போல ஒவ்வொரு கணமும் வாழ்நாள் குறையும் ஒருவன், எப்படி காலத்தை எதிர்பார்க்கலாம்? அளவற்ற ஆயுள் கொண்டவனோ அல்லது தனது வாழ்நாள் எவ்வளவு என்ற நிச்சயம் கொண்டவனோ, எதிர்காலத்தைத் தன் கண் முன் நடக்கும் நிகழ்வு போல அறிபவனுமே (எதிர்பார்த்த) காலத்தின் வருகைக்காகக் காத்திருக்கலாம்
ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நாம் நமது வாழ்நாட்களைக் குறைத்து பதிமூன்று {13} வருடங்கள் காத்திருந்தோமானால், அது நம்மை மரணத்திற்கு அருகில் கொண்டு செல்லும். உடலுள்ள எந்த உயிரினத்திற்கும் மரணம் நிச்சயம் வரும். ஆகையால், நாம் இறக்கும் முன்பு நமது நாட்டை அடைய நாம் முயற்சிக்க வேண்டும். எதிரிகளைத் தண்டிக்கத் தவறி, புகழடைவதில் தோல்வியுறுபவன், அசுத்தமான ஒரு பொருளைப் போன்றவனாவான். தடுமாறும் காளையைப் போல புகழற்று அழிந்து போகக்கூடியவன் இந்தப் பூமிக்குத் தேவையற்ற பாரமாகவே இருப்பான். எதிரிகளைத் தண்டிக்காமல் பலமற்று, வீரமற்று வீணாக ஒருவன் வாழ்ந்தால், அவன் தாழ்ந்த பிறவியாகவே கருதப்படுவான். போர்க்களத்தில் எதிரிகளைக் கொன்று உமது கரத்தின் பலத்தால் பெற்ற செல்வத்தை அனுபவியும். உமது கரங்களால் தங்கத்தைப் பொழிய முடியும்; உமது புகழ் உலகெங்கும் பரவும்.
ஓ அனைத்து எதிரிகளையும் ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, ஓ மன்னா, தனக்குத் தீங்கிழைத்தவனைக் கொல்வதால் ஒருவன் அன்றே நரகத்திற்குச் சென்றாலும், அந்த நரகம் கூட அவனுக்கு சொர்க்கமாக மாறும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, ஒருவன் கோபத்தை அடக்குவதால் உண்டாகும் வலி உணர்ச்சி நெருப்பை விட எரிச்சல் நிறைந்ததாக இருக்கும். இப்போது கூட நான் அதனால் எரிந்து கொண்டுதான் இருக்கிறேன். என்னால் பகலிலோ இரவிலோ உறங்க முடிவதில்லை. பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} என்று அழைக்கப்படும் பிருதையின் {குந்தியின்} இந்த மகன், வில் நாணை இழுப்பதில் முதன்மையானவனாவான். அவன் {அர்ஜுனன்} குகைக்குள் வாழும் சிங்கத்தைப் போல இங்கே வாழ்ந்து கொண்டிருந்தாலும், நிச்சயமாக துக்கம் அவனை எரித்துக் கொண்டுதான் இருக்கிறது. பூமியில் உள்ள அனைத்து வில்லாளிகளின் துணையும் இல்லாமல் எதிரிகளைக் கொல்ல நினைக்கும் அவன், பலம் வாய்ந்த யானையைப் போல, தனது நெஞ்சத்தில் எழும் கோபத்தை அடக்கிக் கொண்டிருக்கிறான்.
நகுலன், சகாதேவன், வீரர்களின் தாயான முதிர்ந்த குந்தி ஆகியோர் உம்மைத் திருப்திப்படுத்தவே ஊமையாக இருக்கின்றனர். அவர்களுக்குச் சமமாக சிரீன்ஜயர்களும் நமது நண்பர்கள் அனைவரும், உம்மைத் திருப்தி செய்ய எண்ணுகின்றனர். நானும் பிரதிவிந்தியனின் தாயும் {திரௌபதியும்} மட்டுமே துயரத்தில் எரிந்து உம்மிடம் இதுகுறித்துப் பேசுகிறோம். நான் உம்மிடம் என்னவெல்லாம் பேசுகிறேனோ, அவையெல்லாம் துக்கத்தில் மூழ்கி போருக்கு ஆவலாகக் காத்திருக்கும் இவர்கள் அனைவருக்கும் ஏற்புடையதே. ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அலட்சியப்படுத்தத்தக்க பலவீனமானவர்களால் நமது நாடு கவரப்பட்டு, அவர்களால் அந்த நாடு அனுபவிக்கப்படுவதை விட வேறு என்ன பேரிடர் நமக்கு வர வேண்டும்?
ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உமது பலவீனமான மனதாலேயே, நீர் செய்து கொடுத்த உறுதிமொழியை மீற வெட்கப்படுகிறீர். ஆனால், ஓ எதிரிகளைக் கொல்பவரே, இந்த உமது மனநிலையாலும் உமது அன்பாலும் இந்தக் கொடிய வலியைத் தாங்கிக் கொள்வதை யாரும் மெச்சமாட்டார்கள். வேதங்களை அதன் பொருள் உணராது மனப்பாடம் செய்யும் மடமையும் அறியாமையும் கொண்ட உயர் பிறவிகளைப் போல, உமது அறிவு உண்மையைக் காணவில்லை. நீர் அந்தணர்களைப் போல அன்பாக இருக்கிறீர். நீர் எப்படி க்ஷத்திரியக் குலத்தில் பிறந்தீர்? க்ஷத்திரிய குலத்தில் பிறந்தவர்கள் பொதுவாக குரூர புத்தி உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.
நீர், மனுவால் உரைக்கப்பட்ட குரூரமான, கபடமான, அமைதிவழிகளுக்கும் அறத்திற்கும் எதிரான அரச கடமைகளைக் கேட்டிருக்கிறீர். பிறகு ஏன், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நீர் தீய திருதராஷ்டிரன் மகன்களை மன்னிக்கிறீர்? உமக்கு அறிவும், வீரமும் கல்வியும், உயர்ந்த பிறப்பும் இருக்கிறது. ஓ மனிதர்களில் புலியே, செய்ய வேண்டிய காரியத்தில் முயற்சியில்லாமல் பெரும்பாம்பு போல அசையாமல் ஏன் இருக்கிறீர்?
ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, எங்களை மறைக்க விரும்புபவன், இமயத்தின் மலைகளை, கைப்பிடி புல்லால் மறைக்க விரும்புகிறான். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, உலகம் முழுவதும் நீர் அறியப்பட்டவராதலால், மனிதர்களை அறியாமல் எப்படி சூரியனால் முழு வானத்தைக் கடக்க முடியாதோ அப்படி உம்மால் யாராலும் அறியப்படாமல் இருக்க முடியாது. நீர் நிறைந்த இடத்தில் கிளை பரப்பி, மலர்களுடனும், இலைகளுடனும் இருக்கும் பெரும் மரம் போல அல்லது இந்திரனின் யானையைப் {ஐராவதத்தைப்} போல இருக்கும் ஜிஷ்ணுவால் {அர்ஜுனானால்} எப்படி யாராலும் அறியப்படாமல் இருக்க முடியும்? இளம் சிங்கங்களைப் போல இருக்கும் நமது தம்பிகளான இந்தப் பிள்ளைகள் நகுலனும் சகாதேவனும் எப்படி கமுக்கமாக {இரகசியமாக} வாழ முடியும்? ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, துருபதனின் மகளும் , இளவரசியும் , வீரர்களின் தாயும், அறச் செயல்களுக்காக உலகம் முழுவதும் அறியப்பட்ட இந்தக் கிருஷ்ணை {திரௌபதி} எப்படி யாரும் அறியாமல் வாழ முடியும்? என்னைப் பிள்ளைப் பருவத்தில் இருந்து அனைவரும் அறிவர். யாரும் அறியாமல் நான் எப்படி வாழ முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. இந்தச் செயல் மேருவின் மலைகளை மறைக்க முயல்வதற்குச் சமமானது.
நம்மால் அவர்களது நாடுகளில் இருந்து விரட்டப்பட்ட பல மன்னர்கள் இருக்கிறார்கள். நம்மால் நாடுகடத்தப்பட்ட, செல்வங்கள் அபகரிக்கப்பட்ட இந்த மன்னர்களும் இளவரசர்களும் நமக்கு நண்பர்கள் இல்லையாகையால், அவர்கள், திருதராஷ்டிரனின் தீய மகன்களைத் தொடர்வார்கள். திருதராஷ்டிரனுக்கு நன்மை செய்ய விரும்பும் அவர்கள், நிச்சயம் நம்மைக் காயப்படுத்தவே எண்ணுவார்கள். நிச்சயம் அவர்கள் நமக்கு எதிராக எண்ணிலடங்கா ஒற்றர்களை ஏவுவார்கள். அவர்கள் நம்மைக் கண்டுபிடித்து அவர்களுக்குச் சொன்னால், பெரும் ஆபத்தில் நாம் மூழ்குவோம். நாம் ஏற்கனவே பதிமூன்று {13} மாதங்களைக் கானகத்தில் கழித்துவிட்டோம். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அவற்றையே பதிமூன்று வருடங்களாகக் கருதிக் கொள்ளும். சோமத்திற்கு ஈடாக மூலிகைப்பானை கருதப்படுவதைப் போல, ஒரு வருடத்திற்கு ஒரு மாதம் ஈடாகும் என்று ஞானமுள்ளவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அல்லது, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, புனிதமான சுமைகளைச் சுமக்கும் அமைதியான காளைக்கு நல்ல சுவையான உணவைக் கொடுத்து இந்தப் பாவத்தில் இருந்து நீர் விடுபடலாம். ஆகையால், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உமது எதிரிகளைக் கொல்லத் தீர்மானியும். ஒவ்வொரு க்ஷத்திரியனுக்கும் போரைத் தவிர உயர்ந்த அறம் கிடையாது!” என்றான் {பீமன்}.
பெரும் முனிவனே அர்ஜுனன்! – வனபர்வம் பகுதி 36-யுதிஷ்டிரனும் பீமனும் பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கே வியாசர் வந்து யுதிஷ்டிரனுக்கு ஞானத்தை உபதேசிப்பது. வியாசரின் கட்டளைப்படி யுதிஷ்டிரன் துவைத வனத்தைவிட்டு, காம்யக வனம் சென்று தனது வசிப்பிடத்தை அமைத்துக் கொள்வது..
வைசம்பாயனர் சொன்னார், “பீமனின் வார்த்தைகளைக் கேட்ட குந்தியின் மகனும், மனிதர்களில் புலியும், பகைவர்களைக் கொல்பவனுமான யுதிஷ்டிரன் பெருமூச்சு விட்டபடி அமைதியாகச் சிந்தித்தான். பிறகு தனக்குள்ளேயே, “மன்னர்களின் கடமைகளையும், பலவகைப்பட்டவர்களின் கடமைகள் குறித்த உண்மைகளையும் கேட்டிருக்கிறேன். கடமைகளைக் கண்ணுக்கு முன்பு வைத்து, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தங்கள் நடத்தைகளில் அவற்றை அனுசரிப்பவர்களே கடமையைச் சரியாகச் செய்பவர்கள் ஆவார்கள். அறத்தின் உண்மையான வழிகளை அறிந்த நான், மேருவைப் புரட்டிப் போடுவது போல அறத்தை எப்படி புரட்டிப் போடுவேன்?” என்று சிறிது நேரம் சிந்தித்து, மேற்கொண்டு என்ன செய்வது என்பதைத் தீர்மானித்து, பீமனை மேற்கொண்டு எதுவும் பேசவிடாமல் அவனுக்கு மறுமொழி கூறினான்.
அவன் {யுதிஷ்டிரன்}, “ஓ பலம்பொருந்திய கரங்கள் கொண்டவனே, நீ சொல்வது அனைத்தும் உண்மையே. ஆனால், ஓ பேசுபவர்களில் முதன்மையானவனே, நான் சொல்லப்போகும் மறுமொழியையும் கேள். ஓ பீமா, ஒருவன் செய்ய முயற்சிக்கும் எந்தப் பாவ காரியமும், தைரியத்தை {திமிரை} நம்பி மட்டுமே செய்யப்பட்டு, எப்போதும் வலியின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்கிறது. ஆனால், ஓ பலம் பொருந்திய கரங்கள் கொண்டவனே {பீமனே}, ஆழ்ந்து ஆராய்ந்து, நன்கு வழிநடத்தப்பட்ட வீரத்துடனும், அனைத்து கருவிகளுடனும், எது தொடங்கப்பட்டாலும் அது வெற்றியடையும். தேவர்களே கூட அப்படிப்பட்ட ஏற்பாடுகளுக்கு அனுக்கிரம் செய்வார்கள். ஓ பீமா, பலத்தில் கொண்டுள்ள கர்வத்தாலும், அவசரத்தாலும் அக்காரியத்தை உடனே நடத்த வேண்டும் என்று எண்ணுகிறாய்.
வீழ்த்துவதற்கு கடினமான பூரிஸ்ரவஸ், சலன், பெரும் பலம் மிக்க ஜலசந்தன், பீஷ்மர், துரோணர், கர்ணன், துரோணரின் பலம் மிக்க மகன் {அஸ்வத்தாமன்}, திருதராஷ்டிரன் மகன்களாகிய துரியோதனனும் மற்றவரும் ஆயுதக்கலையில் சாதனை செய்தவர்கள். அவர்கள் அனைவரும் நம்முடன் போரிடத் தயாராக இருக்கிறார்கள். நம்மால் காயப்பட்ட அந்த மன்னர்களும் பூமியின் தலைவர்களும், கௌரவர்களுடன் உறவு பூண்டவர்களும் கௌரவர்களின் பக்கத்தையே சேர்வார்கள்.
பீஷ்மர், துரோணர், மற்றும் சிறப்புவாய்ந்த கிருபர் ஆகியோரின் நடத்தை அவர்களிடம் {கௌரவர்களிடம்} எவ்வாறு இருக்கிறதோ அதே போல நம்மிடம் இருந்தாலும், ஓ பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே {பீமனே}, எனது உறுதியான முடிவு என்னவென்றால் அவர்கள் தாங்கள் அனுபவிக்கும், தங்களுக்கு மிகவும் பிடித்தமான அரச உதவிகளுக்குப் பதிலாக, போர்க்களத்தில் உயிரையும் தர சித்தமாயிருப்பார்கள். அர்ப்பணிப்புடன் அறம்பயிலும் அவர்கள் அனைவரும் தெய்வீக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் நிபுணர்கள். வாசவனால் {இந்திரனால்} தலைமை தாங்கப்படும் தேவர்களால் கூட அவர்களை வீழ்த்த முடியாது என்றே நான் எண்ணுகிறேன். இன்னும் அவர்களிடம் கர்ணன் என்ற மாபெரும் வீரன் இருக்கிறான். மூர்க்கமும், எப்போதும் கோபமும் கொண்ட அவன் {கர்ணன்} அனைத்து ஆயுதங்களிலும் நிபுணனாகவும், வெல்லப்பட முடியாதவனாகவும், துளைக்க முடியாத கவசம் கொண்டவனாகவும் இருக்கிறான். மனிதர்களில் முதன்மையான அவர்கள் அனைவரையும் போரில் வீழ்த்தாமல், எந்த உதவியும் அற்ற நாம் துரியோதனனை எப்படிக் கொல்ல முடியும்? ஓ விருகோதரா {பீமா}, வில் தாங்குபவர்கள் அனைவரிலும் முதன்மையான அந்த சூத மகனின் {கர்ணனின்} கை லாவகத்தை நினைத்து என்னால் தூங்கவே முடியவில்லை,” என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மூர்க்கமான பீமன் அச்சமுற்று ஏதும் பேசாதிருந்தான். பாண்டுவின் மகன்கள் இப்படி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கும் போது, சத்தியவதியின் மகனும் பெரும் தவசியுமான வியாசர் அங்கே வந்தார். அப்படி அவர் வந்த போது பாண்டுவின் மகன்கள் அவரை முறைப்படி வணங்கினர். பிறகு, பேசுபவர்களில் முதன்மையான அவர் {வியாசர்} யுதிஷ்டிரனிடம், “ஓ யுதிஷ்டிரா, ஓ பலம்பொருந்திய கரங்கள் கொண்டவனே, ஓ மனிதர்களில் காளையே, உனது இதயத்தில் என்ன கடந்து செல்கிறது என்பதை எனது ஞானப்பார்வையில் கண்டே, நான் உன்னிடம் வந்தேன். ஓ அனைத்து எதிரிகளையும் கொல்பவனே, பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, இளவரசர்களான துரியோதனன் மற்றும் துச்சாசனன் ஆகியோரிடம் நீ கொண்ட அச்சத்தை எல்லா விதிகளுக்கும் உட்பட்டு நான் விலக்குவேன். என்னிடம் இருந்து அதைக் கேட்டு அமைதியுடன் அதைச் சாதித்து முடி. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அதைச் சாதிப்பதன் மூலம் இந்த நோயில் இருந்து விடுபடு.” என்றார்.
பராசரரின் மகனான {வியாசர்}, அந்தப் பேசுபவர்களில் முதன்மையானவர் {வியாசர்} யுதிஷ்டிரனை ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று, ஆழமான வார்த்தைகளில், “ஓ பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரனே}, பிருதையின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்லும்போது உனது செழுமைக்கான நேரம் வரும். வெற்றியை உருவகமாகக் கொண்ட பிரதிஸ்மிருதி என்ற ஞானத்தை நான் அதைப் பெறத் தகுதியுடைய உனக்குத் தருகிறேன். அதை (உன்னிடமிருந்து) பெறும் அர்ஜுனன் உனது விருப்பத்தை சாதிக்கக்கூடியவனாக இருப்பான். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, மகேந்திரன், ருத்திரன், வருணன், குபேரன், யமன் ஆகியோரிடம் அர்ஜுனன் சென்று அவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பெறட்டும். அவன் {அர்ஜுனன்} தவத்தின் காரணமாகவும் வீரத்தின் காரணமாகவும் தேவர்களைக் காணும் தகுதியைப் பெற்றவனாவான். அவன் {அர்ஜுனன்}, அழிவறியாத, எப்போதும் வெற்றிபெறும், ஒப்பற்ற, நித்திய தெய்வமான பழங்காலத்து நாராயணனுக்கு நண்பனும், பெரும் சக்தி படைத்த முனிவனுமாவான். பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட அவன் {அர்ஜுனன்}, இந்திரனிடமும், ருத்திரனிடமும், லோகபாலர்களிடமும் இருந்து ஆயுதங்களைப் பெற்ற பிறகு பெரும் சாதனைகளைச் சாதிப்பான். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இந்தக் கானகத்தை விட்டு, நீ வசிப்பதற்கு தகுதியான வேறு கானகத்திற்குச் செல்லவும் சிந்தனை செய். நீண்ட காலத்திற்கு ஒரே இடத்தில் வசிப்பது அருமையாக இருப்பது அரிது. உனது காரியத்தில் {நீ இங்கு தங்குவதால்}, இது தவசிகளுக்கு துயரத்தையும் கொடுக்கலாம். நீ வேதங்களின் பல கிளைகள் அறிந்த எண்ணிலடங்கா அந்தணர்களைப் பராமரிப்பதாலும், தொடர்ந்து இங்கு வசிப்பதாலும், இக்கானகத்தில் மான்களின் எண்ணிக்கை முழுவதும் அழிந்து போகக்கூடும். பல செடி கொடிகளும் அழிந்து போகும்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} இப்படிச் சொல்லிவிட்டு, பெரும் ஞானம் கொண்ட, உலகத்தின் புதிர்களை அறிந்த சிறப்புவாய்ந்த, மேன்மையான தவசியான வியாசர், தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்த நீதிமானான யுதிஷ்டிரனுக்கு அறிவியலில் முதன்மையான ஞானத்தைக் {பிரதிஸ்மிருதி} கொடுத்தார். பிறகு அந்தக் குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} விடைபெற்றுக் கொண்டு, அங்கிருந்து வியாசர் மறைந்தார். அறம்சார்ந்த புத்திசாலியான யுதிஷ்டிரன், தான் பெற்ற ஞானத்தைக் கவனமாக மனதில் நிறுத்தி, சரியான நேரங்களில் அவற்றை உரைத்தான். வியாசரின் ஆலோசனையைக் கேட்டு மகிழ்ந்த குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, துவைதவனத்தைவிட்டு, சரஸ்வதி நதிக்கரையில் இருந்து காம்யக வனத்திற்குச் சென்றான். தவத்தகுதியுடையவர்களும், சரியான உச்சரிப்பு மற்றும் ஒலியமைப்பு குறித்த அறிவியலை அறிந்த எண்ணிலடங்கா அந்தணர்கள், தேவர்கள் தலைவனைத் {இந்திரனைத்} தொடரும் முனிவர்கள் போல அவனைத் {யுதிஷ்டிரனைத்} தொடர்ந்து சென்றார்கள். காம்யக வனத்திற்கு வந்த சேர்ந்த அந்த பாரதர்களில் சிறந்த காளைகள், தங்கள் நண்பர்கள் மற்றும் பணியாட்களுடன் தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர். ஓ மன்னா {ஜனமேஜயா} சக்தி படைத்த அந்த வீரர்கள், அங்கே விற்பயிற்சிக்கு தங்களை அர்ப்பணித்து, வேத மந்திரங்களைக் கேட்டுக் கொண்டு அங்கு சிறிது காலம் வசித்தார்கள். அங்கே அந்த வனத்தில் சுத்தமான கணைகளைத் தரித்துக்கொண்டு தினமும் மான் வேட்டையாடினார்கள். பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும், அந்தணர்களுக்கும் சரியான நேரத்தில் சரியான சடங்குகளைச் செய்தார்கள்.
இந்திரனைக் கண்ட அர்ஜுனன் – வனபர்வம் பகுதி 37-யுதிஷ்டிரன் அர்ஜுனனுக்கு பிரதிஸ்மிருதியை உபதேசித்து, அனைத்து ஆயுதங்களையும் பெறுவதற்காக வடக்கு நோக்கி அனுப்புதல்; அர்ஜுனன் இந்திரனை அடைவது; இந்திரன் அர்ஜுனனை சிவனை நோக்கித் தவம் இருக்குமாறு ஆலோசனை கூறுவது
வைசம்பாயனர் சொன்னார், “சிறிது நேரம் கழித்து, நீதிமானான யுதிஷ்டிரன் முனிவரின் {வியாசரின்} கட்டளையை நினைவுகூர்ந்து, மனிதர்களில் காளையும், பெரும் ஞானியுமான அர்ஜுனனைத் தனிமையில் அழைத்தான். மலர்ந்த முகத்துடன் அர்ஜுனனின் கரங்களைப் பற்றிக்கொண்ட எதிரிகளைத் தண்டிக்கும் அறம் சார்ந்த யுதிஷ்டிரன், சிறிது நேரம் சிந்தித்தப்பிறகு, தனிமையில் தனஞ்செயனிடம் {அர்ஜுனனிடம்} தெளிவான மென்மையான வார்த்தைகளால், “ஓ பாரதா {அர்ஜுனா}, மொத்த ஆயுத அறிவியலும் பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோரிடம் இருக்கிறது. அவர்கள் அனைத்துவிதமான பிரம்ம, தேவ, மனித, வயவ்ய {வாயு வசிக்கும் வடமேற்கு பகுதியைச் சேர்ந்த [அல்லது] வாயு} ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்தும், அதை திரும்ப அழைப்பது குறித்தும் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} சமாதானப்படுத்தப்பட்டு, மதிக்கப்பட்டு, திருப்திசெய்யப்பட்டு, ஒரு குருவிடம் ஒருவன் நடந்து கொள்ளும் முறைப்படி நடத்தப்படுகிறார்கள். திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} தனது படை வீரர்கள் அனைவரிடமும் மிகவும் பாசத்துடன் நடந்து கொள்கிறான். அவனால் {துரியோதனனால்} அனைத்துத் தலைவர்களும் மதிக்கப்பட்டு, திருப்தி செய்து அவர்களிடம் மறு நன்மையை எதிர்பார்த்து இருக்கிறான். இப்படி அவனால் {துரியோதனனால்} மதிக்கப்பட்டவர்கள், தங்கள் பலத்தைப் {நமக்கு எதிராகப்} பயன்படுத்தத் தவறமாட்டார்கள்.
ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, கிராமங்கள், நகரங்கள், கானகங்கள், சுரங்கங்கள் மற்றும் கடல்களுடன் கூடிய மொத்த பூமியும் துரியோதனனின் ஆட்சிக்குட்பட்டு இருக்கிறது. நீ மட்டுமே எங்களது ஒரே அடைக்கலம். உன் மீது பெரும் பாரம் இருக்கிறது. ஆகையால், ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, நான் இப்போது நீ என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன். நான் கிருஷ்ண துவைபாயனரிடம் {வியாசரிடம்} இருந்து ஒரு அறிவியலைப் பெற்றிருக்கிறேன். அந்த அறிவியலை நீ பயன்படுத்தினால், முழு அண்டத்தின் அறிவும் உனக்கு வெளிப்படும். ஓ குழந்தாய், கவனமாக அந்த அறிவியலை என்னிடம் இருந்து பெற்று, குறித்த நேரத்தில் (அந்த அறிவியலின்) துணை கொண்டு தேவர்களின் கருணையைப் பெறு. ஓ பாரத குலத்தின் காளையே, கடுமையான தவத்திற்கு உன்னை நீ அர்ப்பணித்துக் கொள். ஓ குழந்தாய் {அர்ஜுனா}, வில், வாள், கவசம் ஆகியவற்றைப் பூண்டு, நோன்பு மற்றும் நல்ல உறுதிகளை மேற்கொண்டு, யாருக்கும் வழி கொடாமல் வடதிசை நோக்கிச் செல். ஓ தனஞ்செயா {அர்ஜுனா}, தேவ ஆயுதங்கள் அனைத்தும் இந்திரனிடம் இருக்கின்றன. விரித்திரன் மீதிருந்த பயத்தால் தேவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் பலங்கள் அனைத்தையும் சக்ரனிடம் {இந்திரனிடம்} கொடுத்தனர். ஒரே இடத்தில் கூடி இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் நீ பெறுவாய். நீ சக்ரனிடம் {இந்திரனிடம்} செல். அவன் {இந்திரன்}, அவனது அனைத்து ஆயுதங்களையும் உனக்குத் தருவான். வில்லை எடுத்துக் கொண்டு இன்றே புரந்தரனைக் {இந்திரனைக்} காண செல்” என்றான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “இதைச் சொன்ன மேன்மையுள்ள நீதிமானான யுதிஷ்டிரன், அந்த அறிவியலை அர்ஜுனனுக்குக் கொடுத்தான். உரிய சடங்குகளுடன், பேச்சு, உடல், மனம் ஆகியவற்றை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்து, தம்பிக்கு {அர்ஜுனனுக்கு} அந்த அறிவியலைக் கொடுத்த அண்ணன் {யுதிஷ்டிரன்}, தம்பியை {அர்ஜுனனை} உடனே செல்ல கட்டளையிட்டான். யுதிஷ்டிரனின் கட்டளையின் பேரில், பலம்வாய்ந்த கரம் கொண்ட அர்ஜுனன், காண்டீவத்தையும், வற்றாத ஆம்பறாத்தூணிகளையும் எடுத்துக் கொண்டு, கவசம், கையுறை, உடும்புத்தோலால் செய்யப்பட்ட விரலுறை ஆகியவற்றைப் பூண்டு, நெருப்பில் நெய்யூற்றி {அக்னி ஹோமம் செய்து}, அந்தணர்களுக்கு பரிசுகள் கொடுத்து அவர்களைத் தன்னை ஆசீர்வதிக்கச் செய்து, இந்திரனைக் காணும் நோக்கோடு (காம்யக வனத்தைவிட்டு) வெளியேறினான்.
வில்தாங்கிய அந்த வீரன் {அர்ஜுனன்}, வெளியேறும் போது உருக்கத்துடன் பெருமூச்சு விட்டபடி, திருதராஷ்டிரன் மகன்களுக்கு மரணத்தைக் கொடுக்க மேல்நோக்கிப் பார்த்தான். குந்தியின் மகன் {அர்ஜுனன்} ஆயுதந்தரித்து வெளிக்கிளம்புவதைக் கண்ட அந்தணர்களும், சித்தர்களும், அரூபமான ஆவிகளும் அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, நீ விரும்பியதை விரைவில் அடைவாய்” என்றனர். அந்தணர்கள் தங்கள் ஆசீர்வாதங்களைச் சொல்லி, “நீ கொண்டிருக்கும் நோக்கத்தை அடைவாய். வெற்றி உண்மையில் உனதாகட்டும்” என்றனர்.
சால மரம் போன்ற பருமனான தொடைகள் கொண்ட வீரனான அர்ஜுனன், அனைவரின் இதயங்களையும் கவர்ந்து செல்வதைக் கண்ட கிருஷ்ணை {திரௌபதி} அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ வலுத்த கரம் கொண்டவரே {அர்ஜுனரே}, உம்மைப் பெற்ற போது குந்தி என்னவெல்லாம் விரும்பினாளோ, நீர் என்னவெல்லாம் விரும்புகிறீரோ அவற்றை எல்லாம் சாதியும். ஓ தனஞ்செயரே {அர்ஜுனரே}, நாம் யாரும் இனி எப்போதும் க்ஷத்திரிய குலத்தில் பிறவாதிருப்போமாக. பிச்சையெடுத்து வாழும் அந்தணர்களை நான் எப்போதும் வணங்கி வருகிறேன். இளவரசர்களின் சபையில் என்னைக் கண்ட இழிந்த துரியோதனன் என்னை மாடு என்று சொல்லி பரிகரித்தது எனக்கு பெரும் துயரத்தைக் கொடுக்கிறது. இதையும் தவிர்த்து அவன் {துரியோதனன்} பல கடுஞ்சொற்களை அந்தச் சபையில் வைத்து சொன்னான். நான் இதுவரை உணர்ந்த அவமானங்களைவிட, உம்மைப் பிரியும் இந்த சோகம் பெரிதாக இருக்கிறது. நீர் இல்லாத போது, நிச்சயமாக உமது சகோதரர்கள் மணிக்கணக்காக உமது வீரச் சாகசங்களையே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனரே}, நீ வெகு காலத்திற்கு வெளியே இருந்துவிட்டால், எங்களுக்கு எந்த இன்பமும் செல்வமும் கிடையாது. அப்படிக் கிடைத்தாலும் அது எங்களுக்குச் சுவை தராது. ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனரே}, நமது செழுமை, நமது துன்பம், வாழ்வும் மரணமும், நமது நாடு, செழிப்பு ஆகியவை அனைத்தும் உம்மை நம்பியே இருக்கின்றன. ஓ பாரதரே {அர்ஜுனரே}, வெற்றி உமதாகட்டும் என்று நான் உம்மை வாழ்த்துகிறேன். ஓ பாவமற்றவரே, இப்போது நீர் செய்யப்போகும் காரியத்தால் பலம் நிறைந்த எதிரிகளைக்கூட உம்மால் எதிர்க்க முடியும். ஓ பெரும் பலம் உடையவரே, வெற்றியை அடைய விரைவாகச் செல்லும். ஆபத்துகள் உமைத்தாக்காதிருக்கட்டும். நான் தத்ரியையும் {ஆதித்யர்களில் ஒருவன் [ஆரோக்கியத்திற்கானவன்]} விதத்ரியையும் {துர்கையையும்} வணங்குகிறேன். நாம் உம்மை ஆசீர்வதிக்கிறேன் {I bless thee}. செழிப்பு உமதாகட்டும். ஓ தனஞ்செயரே {அர்ஜுனரே}, நீர் எப்போதும் உமது அண்ணனை வழிபட்டு, அவரது உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிவதால், ஹ்ரீ, ஸ்ரீ, கீர்த்தி, தித்ரி, புஷ்டி, உமை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் உமது வழியில் உம்மைக் காப்பார்கள். ஓ பாரத குலத்தின் காளையே {அர்ஜுனரே}, நான், வசுக்களையும், ருத்திரர்களையும், ஆதித்தியர்களையும், மணிலர்களையும், விஸ்வதேவர்களையும், சத்யர்களையும் உமது நன்மைக்காக வழிபடுவேன். ஓ பாரதரே {அர்ஜுனரே}, வானம், நிலம், சொர்க்கம் ஆகியவற்றில் இருக்கும் தொல்லை கொடுக்கும் ஆவிகளிடம் இருந்தும் மற்ற பல ஆவிகளிடமிருந்தும் பாதுகாப்பாக இரும்” என்று சொன்னாள் {திரௌபதி}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், “யக்ஞசேனனின் {துருபதனின்} மகளான கிருஷ்ணை {திரௌபதி} ஆசீர்வாதங்களைக் கூறி நிறுத்திக் கொண்டாள். பாண்டுவின் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட மகன் {அர்ஜுனன்}, தனது சகோதரர்களை வலம் வந்து, தௌமியரை வலம் வந்து, தனது அழகான வில்லை எடுத்துக் கொண்டு கிளம்பினான். இந்திரனைக் காணும் ஆவலால் சென்று கொண்டிருந்த பெரும் சக்தியும் வீரமும் கொண்ட அர்ஜுனன் சென்ற வழியை விட்டு அனைத்து உயிரினமும் கிளம்பத் தொடங்கின.
அந்த எதிரிகளைக் கொல்பவன் தவசிகள் வசித்த பல மலைகளைக் கடந்து, தேவர்கள் ஓய்வெடுக்கும் புனிதமான இமய மலையை அடைந்தான். தவ நோன்புகளின் தொடர்ச்சியாக, காற்றைப் போல, மனோ வேகத்தைக் கொடையாகக் கொண்ட அந்த உயர் ஆன்மா {அர்ஜுனன்}, ஒரே நாளில் அந்த புனிதமான மலையை அடைந்தான். இமய மலையையும், கந்தமாதனாவையும் கடந்து, பல சமமற்ற ஆபத்தான பகுதிகளை, இரவு பகல் பாராமல், களைப்படையாமல் கடந்து சென்றான். இந்திரகீலத்தை {மலை} அடைந்த தனஞ்சயன் {அர்ஜுனன்} சிறிது நேரம் தங்கினான்.
அங்கே அவன் {அர்ஜுனன்} வானத்தில் இருந்து “நில்!” என்ற ஒரு குரலைக் கேட்டான். அக்குரலைக் கேட்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} சுற்றிலும் தனது பார்வையைச் செலுத்தினான். வலக்கையின் திறனை இடக்கையிலும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட அர்ஜுனன், தனக்கு எதிரே மர நிழலில் பிரம்மாவின் பிரகாசத்துடன் பழுப்பு மஞ்சள் நிறத்தில் {of tawny colour}, சடாமுடியும் மெலிதான உடலுடன் ஒரு தவசி நிற்பதைக் கண்டான். அப்படி அர்ஜுனனை நிறுத்திய அந்த வலிமைவாய்ந்த தவசி அவனிடம், “வில், அம்புகளுடனும், கவசத்துடனும், வாள் உறை மற்றும் கையுறையுடனும் க்ஷத்திரிய வகைக்குரிய குறிகளுடன் இருக்கும் நீ யார் குழந்தாய்? இங்கே ஆயுதங்களுக்கான தேவை இல்லை. இந்த இடம், கோபமோ இன்பமோ அற்று தவ நோன்புகளுக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் அமைதியான அந்தணர்களின் வசிப்பிடமாகும். இங்கே எந்த விதமான சச்சரவும் இல்லாததால், வில்லின் அவசியம் இங்கு இல்லை. ஆகையால், ஓ குழந்தாய், உனது வில்லைத் தூக்கி எறி. நீ இங்கு வந்த ஒரே காரணத்திலேயே வாழ்க்கையின் புனித நிலையை அடைந்துவிட்டாய். ஓ வீரனே, உன்போன்ற வீரமும் சக்தியும் கொண்ட மனிதர்கள் யாரும் இல்லை” என்றார். இப்படியே அந்த அந்தணர் பலமுறை புன்னகை கொண்ட முகத்துடன் அர்ஜுனனை வலியுறுத்தினார். ஆனால் தனது காரியத்தில் உறுதியாய் இருந்த அர்ஜுனனை அவரால் அசைக்க முடியவில்லை.
இதைக்கண்ட அந்த மறுபிறப்பாளர் {அந்தணர்}, இதயத்தில் மகிழ்ந்து, அர்ஜுனனிடம் மீண்டும், “ஓ எதிரிகளைக் கொல்பவனே, நீ அருளப்பட்டிரு! நானே சக்ரன் {இந்திரன்}, நீ விரும்பும் வரத்தை என்னிடம் கேள்” என்றார். இப்படிச் சொல்லப்பட்ட குரு குலத்தை நிலை நிறுத்துபவனான வீரனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, சிரம் தாழ்த்தி, கைகளைக் கூப்பி, அந்த ஆயிரம் கண் உடையவனிடம் {இந்திரனிடம்}, “ஓ சிறப்பு மிக்கவரே, நான் அனைத்து ஆயுதங்களையும் உம்மிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன். இதுவே எனது விருப்பத்திற்குரிய பொருள்; இந்த வரத்தை எனக்கு அருளும்” என்று கேட்டான். அந்த தேவர்களின் தலைவன் {இந்திரன்}, சிரித்துக் கொண்டே, அவனிடம் {அர்ஜுனனிடம்} மகிழ்ச்சியாக, “ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, நீ இந்த இடத்தை அடைந்த பிறகு, ஆயுதங்களுக்கான தேவை என்ன இருக்கிறது? நீ ஏற்கனவே வாழ்க்கையின் புனித நிலையை அடைந்து விட்டாய். நீ விரும்பும் அருள் நிறைந்த உலகங்களைக் கேள்” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆயிரம் கண்ணுடையவனிடம் {இந்திரனிடம்}, “அருள் நிறைந்த உலகங்களையும், இன்பம் நுகர் பொருட்களையும், தெய்வீக உலகங்களையும் நான் விரும்பவில்லை. ஓ தேவர்கள் தலைவா {இந்திரா}, அனைத்து தேவர்களின் செழிப்பை நான் விரும்பவில்லை. எனது சகோதரர்களை கானகத்தில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன். பகைவர்களைப் பழிதீர்க்காமல், அனைத்து உலகங்களில் அனைத்து காலங்களிலும் அழியா பழியை அடைவேன். மகிழ்ச்சியைப் பற்றிய இந்தப் பேச்சு எதற்கு?” என்று கேட்டான். இப்படிச் சொல்லப்பட்ட அனைத்து உலகங்களாலும் வழிபடப்படுபவனான விரித்திரனைக் கொன்றவன் {இந்திரன்}, மென்மையான வார்த்தைகளால் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைச்} சமாதானப் படுத்த எண்ணி, “நீ எப்போது அனைத்து உயிரினங்களின் தலைவனான திரிசூலம் தாங்கும், முக்கண் சிவனைக் காண்கிறாயோ, ஓ குழந்தாய், அப்போது, நான் உனக்கு அனைத்து தேவ ஆயுதங்களையும் தருகிறேன். ஆகையால், தேவர்களில் உயர்ந்த தெய்வத்தைப் பார்க்கும் தகுதியைப் பெற முயற்சி செய். அப்படி அவரை நீ கண்ட பிறகுதான், ஓ குந்தியின் மகனே {அர்ஜுனா}, நீ உனது அனைத்து விருப்பங்களையும் அடைய முடியும்” என்றான். பல்குனனிடம் {அர்ஜுனனிடம்} இப்படிச் சொன்ன சக்ரன் {இந்திரன்} உடனே மறைந்து போனான். தவத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அர்ஜுனன் அதே இடத்தில் தங்கினான்.
அர்ஜுனாபிகமன பர்வம் முற்றிற்று*
———————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply