ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ சபா பர்வம்-ஸ்ரீ  சிசுபால வத   பர்வம்–

சிசுபாலனை விமர்சித்த பீஷ்மர் – சபாபர்வம் பகுதி 39-(சிசுபால வத பர்வம் – 01)-மன்னர்கள் சினமடைவதைக் கண்ட யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் ஆலோசனை கேட்பது; பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு சமாதானம் கூறி, சிசுபாலனையும் மற்ற மன்னர்களையும் விமர்சிப்பது.

வைசம்பாயனர் சொன்னார், “அந்தப் பெரும் கூட்டமான மன்னர்கள், அண்ட அழிவின் போது காற்றில் கொந்தளிக்கும் கடலென கோபத்தில் கொந்தளிப்பதைக் கண்ட யுதிஷ்டிரன், எதிரிகளைக் கொல்லும் புருஹிதன் (இந்திரன்) பெரும் சக்தி படைத்த பிருஹஸ்பதியிடம் சொல்வது போல அந்தக் குருகுல பெரும்பாட்டனிடம் {பீஷ்மரிடம்}, அந்தப் புத்திசாலி மனிதர்களின் தலைவரான முதிர்ந்த பீஷ்மரிடம், “கடல்போன்ற இந்த மன்னர்க்கூட்டம் கோபத்தால் கொந்தளிக்கிறது. ஓ பாட்டா, நான் இக்காரியத்தில் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குச் சொல்வீராக.(1-3) ஓ பாட்டா, எனது வேள்வி தடைபடாதவாறும், எனது குடிகளுக்குக் காயம் ஏற்படாதவாறும் நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(4)

அறவிதிகளை அறிந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இதைச் சொன்னதும், குருக்களின் பாட்டன் பீஷ்மர்,(5) “அஞ்சாதே, ஓ குருக்களின் புலியே {யுதிஷ்டிரனே}, நாயால் சிங்கத்தைக் கொல்ல முடியுமா? இதற்கு முன்பே நான் வழியைக் கண்டுபிடித்துவிட்டேன். அது நன்மையானதாகவும் கொள்கைக்கு இணக்கமானதாகவும் இருக்கும்.(6) உறங்கும் சிங்கத்திடம் சென்று நாய்கள் கூட்டமாக குலைப்பதைப் போலவே, இந்தப் பூமியின் அதிபதிகள் {மன்னர்கள்} செயல்படுகின்றனர்.(7) 

உண்மையாகவே, ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா}, சிங்கத்தின் முன் நிற்கும் நாய்கள் போலவே இவர்கள் {இந்த ஏகாதிபதிகள்}, உறங்கிக் கொண்டிருக்கும் விருஷ்ணி குல சிங்கத்தின் {கிருஷ்ணனின்} முன்பு நின்று கொண்டு கோபத்தில் குலைத்துக் கொண்டிருக்கின்றனர்.(8) அச்யுதன் {கிருஷ்ணன்} இப்போது உறங்கும் சிங்கமாக இருக்கிறான். அவன் விழிக்கும் வரை, மனிதர்களில் சிங்கமான இந்தச் சேதியின் தலைவன் {சிசுபாலன்}, இந்த ஏகாதிபதிகளைச் சிங்கங்கள் போல காட்சி அளிக்கச் செய்கிறான்.(9)

ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா}, ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, அற்ப புத்தி கொண்ட இந்த சிசுபாலன், அண்டத்தின் ஆன்மாவுடன் முரண்பட்டு, தன்னுடன் சேர்த்து இந்த மன்னர்களையும் யமனின் உலகத்திற்கு அழைத்துப் போக விரும்புகிறான்.(10) ஓ பாரதா {யுதிஷ்டிரா}, உறுதியாக, தனது சக்திகளில் ஒன்றான சிசுபாலனைத் தனக்குள் எடுத்துக் கொள்ள விஷ்ணு விரும்புகிறான்.(11) ஓ புத்திசாலி மனிதர்களின் தலைவனே {யுதிஷ்டிரா}, ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, சேதி மக்களின் மன்னனான இந்தத் தீய மனம் படைத்தவனும், மற்ற ஏகாதிபதிகளும், வேண்டுமென்றே தவறான வழியில் செல்ல நினைக்கின்றனர்.(12) உண்மையில் இந்த மனிதர்களில் புலி {சிசுபாலன்} தன்னுடன் அழைத்துச் செல்ல நினைக்கும் இவர்களும் இந்தச் சேதியின் மன்னனைப் போலவே வேண்டுமென்றே தவறான வழியில் செல்ல நினைக்கின்றனர்.(13) ஓ யுதிஷ்டிரா மாதவனே {கிருஷ்ணா} படைப்பாளன், அதே போல அவனே மூன்று உலகில் இருக்கக்கூடிய நான்கு வகையான உயிர்கள் அனைத்தையும் அழிப்பவனுமாவான்” என்றார் பீஷ்மர்”.(14)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிறகு அந்தச் சேதியின் ஆட்சியாளன் {சிசுபாலன்}, பீஷ்மரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, அவரிடம், ஓ பாரதா {ஜனமேஜயா}, கடினமான வார்த்தைகளைப் பேசினான்”.(15)

சிசுபாலன் சொன்ன கிழட்டு அன்னத்தின் கதை – சபாபர்வம் பகுதி 40-(சிசுபால வத பர்வம் – 02)-பீஷ்மரை நிந்திக்க கிழட்டு அன்னத்தின் கதையைச் சொன்ன சிசுபாலன்.

சிசுபாலன், “உனது குலத்தில் புகழற்ற கிழப் பாவியே {பீஷ்மரே}, எண்ணற்ற போலிப் பயங்கரங்களைக் காட்டி இந்த ஏகாதிபதிகளை மிரட்ட உனக்கு வெட்கமாக இல்லையா?(1) குருக்களின் முதன்மையானவனான நீ, வாழ்வின் மூன்றாம் நிலையில் {பிரம்மச்சரியம்} வாழ்ந்து கொண்டு, அறம் குறித்து விரிவான ஆலோசனையை வழங்கிக் கொண்டிருக்கிறாய்.(2) ஒரு படகு மற்றொரு படகுடன் கட்டப்பட்டது போலவோ, ஒரு குருடன் இன்னொரு குருடனைத் தொடர்வதைப் போலவோ, குருக்கள் {குரு குலத்தவர்கள்} உன்னைத் தங்கள் வழிகாட்டியாகக் கொண்டுள்ளனர்.(3) பூதனயைக் கொன்றான் என்றும், இன்ன பிறச் செயல்களைச் செய்தான் என்றும் இவனை (கிருஷ்ணனைப்) பற்றிச் சொல்லி மேலும் ஒரு முறை எங்கள் இதயங்களைக் காயப்படுத்தியிருக்கிறாய்.(4)

கேசவனைப் {கிருஷ்ணனை} புகழ விரும்பி இப்படி முரட்டுத்தனமாகவும், முட்டாள்த்தனமாகவும் பேசும் உன் நாக்கு நூறு துண்டுகளாகப் பிளக்காமல் இருப்பது ஏன்?(5) ஞானத்தில் மேன்மையான நீ, அற்ப புத்தி கொண்ட மனிதனும் இகழ விரும்பும் ஒரு மாட்டு இடையனைப் புகழ விரும்புவது எவ்வாறு?(6) குழந்தையாக இருந்த கிருஷ்ணன் ஒரு பிணந்தின்னிக்கழுகைக் கொன்றதிலும், அல்லது போர்க்கலையில் நிபுணத்துவம் இல்லாத அஸ்வத்தையும் {குதிரையையும்}, ரிஷபத்தையும் {காளையையும்} அவன் {கிருஷ்ணன்} கொன்றதிலும் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன?(7) தேர் {சகடம்} என்ற அசையாத ஒரு துண்டு மரத்தை இவன் உதைத்துக் கீழே தள்ளினான் என்றால், ஓ பீஷ்மா, அதில் என்ன அற்புதம் இருக்கிறது?(8) ஓ பீஷ்மா, எறும்புப் புற்று போல இருக்கும் கோவர்த்தன மலையை ஒரு வாரம் காலம் இவன் தாங்கியதில் என்ன குறிப்பிடத்தகுந்த அம்சம் இருக்கிறது?(9) ‘ஒரு மலையின் மேல் விளையாடிக் கொண்டிருக்கும்போது, அதிக உணவை உண்டான்’ என்று நீ சொல்வதுதான் எனக்கு அதிக ஆச்சரியத்தைத் தருகிறது.(10) ஆனால், அறவிதிகளை அறிந்த நீ, கம்சனின் உணவை உண்டு, அவனையே கொன்ற இவனது தீய செயலை பெரும் சாதனையாக நினைக்கிறாய்.(11)

குருகுலத்தின் புகழற்றவனே {பீஷ்மனே}, அறவிதிகள் குறித்து நீ அறியாமையுடன் இருக்கிறாய். நான் இப்போது உனக்குச் சொல்வதை ஞானமுள்ளோரிடம் நீ கேட்டதில்லையா?(12) அறம்சார்ந்த ஞானமுள்ளோர், நேர்மையானவர்களிடம், யாரிடம் நாம் உணவைப் பெறுகிறோமா, யாரின் நிழலில் இருக்கிறோமோ அந்தப் பெண்களிடமும், பசுக்களிடமும், பிராமணர்களிடமும் உனது ஆயுதத்தைத் தூக்காதே என்று சொல்வார்கள். ஓ பீஷ்மா, இந்தப் படிப்பினைகள் அனைத்தையும் நீ தூக்கியெறிந்துவிட்டாய்.(13,14) ஓ குரு குலத்தின் புகழற்றவனே {பீஷ்மா}, கேசவனைப் {கிருஷ்ணனைப்} புகழ விரும்பி, ஏதோ நான் எதையும் அறியாதவனைப் போல அவன் {கிருஷ்ணன்} மேன்மையானவன் என்றும், பெருமை வாய்ந்தவன் என்றும் என் முன்னிலையில் பிதற்றுகிறாய்.(15) உனது வார்த்தையால், ஓ பீஷ்மா, பெண்ணையும், வழிபடத்தகுந்த பசுவையும் கொன்றவனை {கிருஷ்ணனைப்} புகழ்வதில் என்ன பெரிய பாடத்தை அறிய முடியும்? ஓ பீஷ்மா, இப்படிப்பட்டவன் {கிருஷ்ணன்} எப்படி புகழ்ச்சிக்குத் தகுதியுடையவனாக இருப்பான்?(16) “இவனே {கிருஷ்ணா} ஞானமுள்ளோரில் முதன்மையானவன், இவனே அண்டத்தின் தலைவன்” என்ற உனது வார்த்தைகளைக் கேட்டு ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} இதையெல்லாம் உண்மை என்று நம்பிவிடப்போகிறான்.ஆனால் நிச்சயமாக, இவையெல்லாம் பொய்யே.(17) 

புகழ்ந்து பாடுபவனின் வரிகள், அது அடிக்கடிப் பாடப்பட்டாலும், அதைப் பாடுபவன் மீது எந்தக் கருத்தையும் ஏற்படுத்தாது. ஒவ்வொரு உயிரினமும் பூலிங்கப் பறவைப் (சிங்கத்தின் பற்களுக்கிடையே இருக்கும் இறைச்சியை உண்பது) போல தனது மனப்போக்கின் படி நடக்கின்றன.(18) இந்த உனது மனப்போக்கு காரியம் சார்ந்ததே. அதில் சிறிது சந்தேகமும் இல்லை. உன்னை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு, கிருஷ்ணனை வழிபாட்டுக்குத் தகுந்தவன் என்று கருதும் பாண்டுவின் மகன்கள் பாவகர மனப்போக்கையே கொண்டுள்ளனர். அறவிதிகள் அறிந்தும், நீ ஞானமுள்ளோர் பாதையில் இருந்து விழுந்துவிட்டாய்.(19,20) எனவே நீயும் பாவியே. ஓ பீஷ்மா, தன்னை அறம்சார்ந்தவனாகவும், ஞானத்தில் மேன்மையானவனாகவும் கருதும் ஒருவன், அறநோக்கங்களில் இருந்து இப்படி விலகிச் செல்வானா?(21) 

நீதியின் வழிகளை நீ அறிந்திருந்தால், ஞானத்தின் வழியை நீ அறிந்திருதால், நீ அருளப்பட்டிருப்பாயாக. ஓ பீஷ்மா, ஞானத்திலும், அறத்திலும் செருக்கு கொண்டிருக்கும் உன்னால், வேறு ஒருவனிடம் இதயத்தை வைத்திருந்த அறம்சார்ந்த பெண்ணான அம்பை[1] கடத்திச் செல்லப்பட்டது ஏன்? உன்னால் கொண்டு வரப்பட்டும், அந்தப் பெண்ணின் {அம்பைன்} நிலையை அறிந்த நேர்மையான அறவழிகளுக்குக் கட்டுப்பட்ட உனது தம்பி விசித்திரவீரியன் அவளை {அம்பையை} திருமணம் செய்து கொள்ளவில்லை. அறம் குறித்து சுயபுராணம் பாடும் உனது கண்களுக்கு எதிரிலேயே, உனது தம்பியின் விதவை மனைவிகள் {அம்பிகை, அம்பாலிகை} அடுத்தவரிடம் {வியாசரிடம்} பிள்ளைகள் பெற்றனரே அது நேர்மையா வழிதானா?(22-24) இதில் அறம் எங்கே இருக்கிறது, ஓ பீஷ்மா? உனது அறியாமையாலும், ஆண்தன்மையற்ற நிலையாலும் ஏற்ற இந்த பிரம்மச்சரியம் கனியற்றதாகும்.(25)

அறவிதிகளை அறிந்தவனே, உனது நற்பேற்றை நான் காணவில்லை. நீதிகளை இந்த வழிகளில் விவரமாக எடுத்துக் கூறும் நீ பெரியவர்களிடம் பணி செய்திருக்க மாட்டாய்.(26) வழிபாடு, பரிசு, கல்வி, வேள்விகள் ஆகிய அனைத்தும் தகுதியால் ஒரு பங்கு அல்ல, ஒரு மகனைப் பெறுவதில் பதினாறில் ஒரு பங்குகூட இவை அனைத்தும் சேர்ந்து ஈடாகாது.(27) ஓ பீஷ்மா, கணக்கற்ற நோன்புகளால் கிடைக்கும் தகுதியும், நோன்புகள்களால் கிடைக்கும் தகுதியும் ஒருவன் பிள்ளையற்று இருந்தால் கனியற்றதாகிவிடுகிறது.(28) நீ பிள்ளையற்றவன், கிழவன், போலி நீதிகளை உரைப்பவன். கதைகளில் வரும் அன்னப்பறவை போல, இப்போது உனது உறவினர்கள் கையாலேயே நீ சாகப் போகிறாய்.(29) ஞானம்படைத்தோர் இதை முதலிலேயே சொல்லியிருக்கின்றனர். நீ கேட்பதற்காக அதை முழுமையாக உனக்குச் சொல்கிறேன்.(30)

பழங்காலத்தில் ஒரு கடற்கரையில் ஒரு கிழட்டு அன்னப்பறவை வாழ்ந்து வந்தது. எப்போதும் நீதியைப் பேசியும், ஆனால் நடத்தையில் வேறு விதமாக இருந்தும், இறகுகள் முளைத்த குலத்திற்கு {பறவைகளுக்குப்} பாடம் நடத்தியது.(31) “அறம் பயில்வாயாக, பாவம் கைவிடுவாயாக’ என்ற வார்த்தைகளையே மற்ற பறவைகள் அதனிடம் இருந்து அடிக்கடி கேட்டன.(32) ஓ பீஷ்மா, முட்டையிடும் இனம்சார்ந்த அந்தப் பறவைகள், கடலில் உலவிக் கொண்டு, அந்தக் கிழட்டுப் பறவைக்காக உணவு கொண்டு வந்தன என்று நாம் கேள்விப் படுகிறோம்.(33) ஓ பீஷ்மா, அந்தப் பறவைகள் அனைத்தும், தங்கள் முட்டைகளை அந்த முதிய பறைவையின் காவலில் வைத்துவிட்டு, கடலின் நீருக்குள் குதித்து உணவு தேடின. தன்னலனில் மட்டுமே அக்கறை கொண்டதும், பாவியுமான அந்தக் கிழட்டு அன்னப்பறவையோ, முட்டாள்த்தனமாகத் தன்னை நம்பிக் கொண்டிருக்கும் மற்ற பறவைகளின் முட்டைகளைத் தின்றது. சில காலம் கழித்து, முட்டைகளின் எண்ணிக்கை குறைந்ததை ஒரு ஞானமுள்ள பறவை கண்டது. ஒரு நாள் இந்தக் காரியத்தைத் தனது கண்களாலேயே கண்டது.(34,35) அந்தக் கிழட்டு அன்னப்பறவையின் இந்தப் பாவகரச் செயலைக் கண்ட அந்தப் பறவை, மற்ற பறவைகளிடம் சென்று துயருடன் பேசியது.(36) பிறகு, ஓ குருக்களில் சிறந்தவனே, அந்தப் பறவைகள் அனைத்தும் அந்தக் கிழட்டுப் பறவையின் தீய செயலைக் கண்டு, அந்தப் போலி நடத்தையுள்ள பாவியை அணுகி, அதைக் கொன்றன.(37)

உனது நடத்தையும், ஓ பீஷ்மா, அந்தக் கிழட்டு அன்னப்பறவையைப் போலவே இருக்கிறது. அந்த அன்னப்பறவைகள் கிழட்டு அன்னப்பறவையைக் கொன்றது போல கோபத்தில் இருக்கும் இந்தப் பூமியின் அதிபதிகள் உன்னைக் கொல்லப் போகிறார்கள்.(38) புராணங்களை அறிந்த மனிதர்கள், ஓ பீஷ்மா, இது சம்பந்தமாக ஒரு பழமொழியைச் சொல்வார்கள். நான், ஓ பாரதா {பீஷ்மா} அதைத் திரும்பச் சொல்கிறேன்.(39) அஃது இதுதான்: ஓ இறகுகளால் உன்னைத் தாங்குபவனே {பறவையே}, உனது இதயம் (ஆசைகளால்) பாதிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் நீ (அறத்தை) போதிக்கிறாய்; ஆனால், முட்டைகளை உண்ணும் இந்தப் பாவகர காரியம் உனது பேச்சை மீறிய செயலாக இருக்கிறது!” என்றான் {சிசுபாலன்}.(40)

மூர்க்கமாகக் குதித்த பீமன் – சபாபர்வம் பகுதி 41-(சிசுபால வத பர்வம் – 03)-சிசுபாலன் ஜராசந்தனின் மரணத்தைச் சுட்டிக் காட்டி கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன் ஆகியோரை இகழ்வது; பீஷ்மரைப் பெண்தன்மை உள்ளவர் என்று வசைபாடுவது; இதையெல்லாம் கேட்ட பீமன் கோபத்தால் மூர்க்கத்தனமாகக் குதிக்க எத்தனிப்பது; பீஷ்மர் அதைத் தடுப்பது; சிசுபாலன் அசட்டையாக அதைப் பார்ப்பது; பீஷ்மர் பீமனுக்கு ஆலோசனைகள் கூறுவது.

சிசுபாலன் சொன்னான், “‘இவன் ஓர் அடிமை {தாஸன்}[1]’ என்று சொல்லி கிருஷ்ணனுடன் போரிட விரும்பாத பெரும்பலம் வாய்ந்த மன்னன் ஜராசந்தன் எனது உயர்ந்து மதிப்புக்குத் தகுதி வாய்ந்தவராக இருந்தார்.(1) (கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் “கம்சனுக்கு அடிமை என்று நினைத்து” என்றிருக்கிறது.)ஜராசந்தனின் மரணத்தைப் பொறுத்தவரை, கேசவன் {கிருஷ்ணன்} செய்த காரியத்தையும், பீமனும் அர்ஜுனனும் செய்த காரியங்களையும் யார்தான் சரி என்று புகழ்வார்கள்?(2) முறையற்ற வாயில் வழியாக நுழைந்து, பிராமணர்களாக வேடம் பூண்டு, மன்னன் ஜராசந்தனின் ஆற்றலை இந்தக் கிருஷ்ணன் கண்டான்.(3) அந்த ஏகாதிபதி {ஜராசந்தன்} பாதங்களைக் கழுவ நீர் கொடுத்த  பிறகே தனது பிராமண வேடத்தை அறம்சார்ந்து வெளிப்படுத்தினான்.(4)

ஓ குரு குலத்தானே {பீஷ்மா}, கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன் ஆகியோரை ஜராசந்தன் உண்ணும்படி கேட்டுக் கொண்ட போது, இந்த கிருஷ்ணன் தான் அந்த ஏகாதிபதியின் {ஜராசந்தனின்} கோரிக்கையை மறுத்தான்.(5) இந்த முட்டாள் {கிருஷ்ணன்} காட்டிக் கொள்வது போல, இவன் தான் {கிருஷ்ணன் தான்} அண்டத்தின் தலைவன் என்றால், இவன் ஏன் தன்னை பிராமணனாக கருதவில்லை?(6) இருப்பினும் இந்தக் காரியம் எனக்கு ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்துகிறது. நீ என்னதான் பாண்டவர்களை ஞானமற்ற வழியில் நடத்திச் சென்றாலும், அவர்கள் உன்னை நேர்மையானவனாகவே மதிக்கின்றனர்.(7) ஓ பாரதா {பீஷ்மா}, பெண் தன்மையுள்ளவனும், கிழவனுமான உன்னை எல்லா காரியங்களுக்கும் வழிகாட்டியாகப் பெற்றவர்கள் இதை ஆச்சரியமாக நினைக்காமல் இருக்கலாம்” என்றான் {சிசுபாலன்}”.(8)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சிசுபாலனின் இந்தக் கடும் வார்த்தைகளைக் கேட்டவனும், பெரும் சக்தியும், பெரும் பலமும் கொண்டவனும், மனிதர்களில் முதன்மையானவனுமான பீமசேனன் பெரும் கோபம் கொண்டான்.(9) இயற்கையிலேயே பெரிதான அவனது கண்கள் மேலும் விரிந்து, தாமரை இலைகளைப் போல அகன்றது. அது, கோபத்தால் தாமிரம் போன்று சிவந்திருந்தது.(10) அங்கே கூடியிருந்த ஏகாதிபதிகள், மூன்று சிகரங்களைக் கொண்ட மலையில் ஓடும் கங்கையின் மூன்று நீரூற்றுகளைப் போல அவனுடைய {பீமனுடைய} நெற்றியில் மூன்று கோடுகளை {சுருக்கங்களைக்} கண்டனர்.(11) பீமசேனன் தனது பற்களை கோபத்தால் நெறுநெறுத்து {நரநரவெனக்} கடித்த போது, அந்த ஏகாதிபதிகள் அவனது {பீமனது} முகத்தில், யுக முடிவில் உயிர்களனைத்தையும் விழுங்கக் காத்திருக்கும் யமனைக் கண்டனர்.(12) பெரும் மனோ சக்தி கொண்ட அந்த வீரன் {பீமன்} மூர்க்கமாகக் குதிக்கத் தயாரான போது, பலம் வாய்ந்த கரங்களைக் கொண்டவரான பீஷ்மர், மகாசேனனை (தேவர்கள் தளபதி) {முருகனைப்} பிடித்துக் கொண்ட மகாதேவன் {சிவன்} போல அவனைப் {பீமனைப்} பிடித்துக் கொண்டார்.(13) ஓ பாரதா {ஜனமேஜயா}, குருக்களின் பாட்டனான பீஷ்மர் நல்ல ஆலோசனைகள் பலவற்றைச் சொல்லி பீமனின் கோபத்தை அடக்கினார்.(14) 

மழைக்காலத்தில் நீர் பெருகினாலும் கண்டங்களை {கரைகளை} மீறாதக் கடலைப் போல எதிரிகளைத் தண்டிப்பவனான பீமனால் பீஷ்மரின் வார்த்தைகளைத் தட்ட முடியவில்லை.(15) ஆனால், ஓ மன்னா {ஜனமேஜயா}, பீமன் கோபமாக இருந்தாலும், ஆண்மையும், ஆற்றலும் கொண்ட சிசுபாலன், அஞ்சி நடுங்கவில்லை.(16) பீமன் மூர்க்கமாகக் குதிக்க எப்போதும் தயாராக இருந்தாலும், சிறு விலங்கின் கோபத்தை அசட்டை செய்யும் சிங்கம் போல சிசுபாலன் அவனை {பீமனைக்} குறித்து ஒன்றையும் நினைக்கவில்லை.(17) அந்த பலம் வாய்ந்த சேதி மன்னன், பயங்கர ஆற்றலைக் கொண்ட பீமன் கோபத்துடன் இருப்பதைக் கண்டு சிரித்துக் கொண்டே,(18) “அவனை {பீமனை} விடுவாயாக, ஓ பீஷ்மா! அவன் {பீமன்} எனது ஆற்றலால், நெருப்பில் விழுந்த பூச்சிபோல பொசுங்கிப் போவதை இந்த ஏகாதிபதிகள் அனைவரும் காணட்டும்” என்றான்.(19) சேதி நாட்டு ஆட்சியாளனின் {சிசுபாலனின்} இந்த வார்த்தைகளைக் கேட்டவரும், குருக்களில் முதன்மையானவரும், புத்திசாலி மனிதர்களின் தலைவருமான பீஷ்மர், பீமனிடம் இவ்வாறு பேசினார்” {என்றார் வைசம்பாயனர்}.(20)

சிசுபாலனின் பிறப்பு மர்மம் – சபாபர்வம் பகுதி 42-(சிசுபால வத பர்வம் – 04)-பீஷ்மர், சிசபாலன் மூன்று கண்கள் மற்றும் நான்கு கரங்களுடன் பிறந்ததாகக் கூறுவது; யாருடைய மடியில் வைக்கும்போது அவை விழுகின்றனவோ அவனே சிசுபாலனின் கொலையாளி என்று ஓர் அரூபக் குரல் சொல்வது; கிருஷ்ணன் மடியில் வைக்கும் போது அவ்வுறுப்புகள் விழுவது; சிசுபாலனின் தாய் கிருஷ்ணனிடம் வரம் கேட்பது; சிசுபாலனின் நூறு பிழைகளைப் பொறுப்பதாக கிருஷ்ணன் உறுதி கூறுவது.–

பீஷ்மர் சொன்னார், “சேதி மன்னனின் குலத்தில் சிசுபாலன் மூன்று கண்களுடனும் நான்கு கரங்களுடனும் பிறந்தான். அவன் {சிசுபாலன்} பிறந்ததும், கழுதைக்கொப்பான குரலில் இரைந்து ஊளையிட்டான்.(1) இதனால் அவனது {சிசுபாலனது} தந்தையும் தாயும் உறவினர்களும் அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். இந்த இயல்புக்கு மீறிய தீய சகுனங்களைக் கண்ட அவனது {சிசுபாலனது} பெற்றோர் அவனைக் கைவிடத் தீர்மானித்தனர்.(2) ஆனால், {புலப்படாத} ஓர்  அரூபமான குரல், அந்த நேரத்தில் ஒலித்து, துயரத்தில் மூழ்கியிருந்த மன்னனிடம், அவனது மனைவி, அமைச்சர்கள் புரோகிதர் ஆகியோர் முன்னிலையில்,(3) “ஓ மன்னா, உன்னுடைய இந்த மகன், நற்பேறு பெற்றவனாகவும், பலத்தில் மேன்மையானவனுமாக இருப்பான். எனவே நீ அச்சப்பட வேண்டாம். கவலையில்லாமல் இந்தக் குழந்தையை {சிசுபாலனை} நீ வளர்ப்பாயாக.(4) அவன் (குழந்தைப் பருவத்திலேயே) இறந்து போக மாட்டான். அவனது காலம் {இறப்பு} இன்னும் வரவில்லை. ஆயுதங்களால் இவனை {சிசுபாலனை} கொல்லப் போகிறவனும் ஏற்கனவே பிறந்துவிட்டான்” என்றது {அந்த அரூபமான குரல்}.(5)

இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தக் குழந்தையின் தாய், துயர மிகுதியால் அந்த அரூபக் குரலிடம்,(6) “என் பிள்ளையை மதித்து இந்த வார்த்தைகளை உதிர்த்தவனை நான் குவிந்த கரங்களுடன் வணங்குகிறேன். அவன் {சிசுபாலனைக் கொல்லப் போகிறவன்} தெய்வீகமானவனா? அல்லது வேறு ஏதாவது உயிர்வகையைச் சேர்ந்தவனா என்று அவனே {அரூபக் குரலே} சொல்லட்டும்.(7) எனது மகனை {சிசுபாலனை} கொல்லப் போகிறவன் எவன் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்” என்றாள்.(8) 

அதற்கு அந்த அரூபக் குரல், “யார் மடியில் இக்குழந்தையை வைக்கும்போது, இவனது {சிசுபாலனது} மிகுதியான கரங்களும் ஐந்து தலை நாகத்தைப் போல தலைகளும் விழுமோ, யாருடைய பார்வை பட்டதும் இவனது மூன்றாவது கண் மறைகிறதோ, அவனே இக்குழந்தையைக் கொல்லப் போகிறவன்” என்றது.(9,10) 

குழந்தையின் மூன்று கண்களையும், நான்கு கரங்களையும், அரூபக் குரலின் வார்த்தைகளையும் கேள்விப்பட்ட(11) உலகத்தின் மன்னர்கள் அனைவரும் சேதிக்கு அவனைக் காணச் சென்றனர். சேதியின் மன்னன் அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் தகுதிக்கேற்ப வழிபட்டு,(12) ஒருவர் பின் ஒருவராக அவர்களது மடியில் குழுந்தையை வைத்துப் பார்த்தான். ஒருவர் பின் ஒருவராக ஆயிரம் மன்னர்கள் மடியில் வைத்தும், அந்த அரூபக் குரல் சொன்ன வேளை வரவில்லை. துவாராவதியில் {துவாரகையில்} இவையனைத்தையும் கேள்விப் பட்ட பெரும் பலம் வாய்ந்த யாதவ வீரர்களான சங்கர்ஷணனும் {பலராமனும்}, ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்}, சேதியின் தலைநகருக்கு யாதவர்களின் மகளான (சேதியின் ராணியான), தங்கள் தந்தையின் தங்கையை {அத்தையைக்} காணச் சென்றனர்.(13-15) 

அங்கே சென்ற ராமனும் {பலராமனும்}, கேசவனும் {கிருஷ்ணனும்}, அங்கே இருந்தவர்களில் அவரவர் தகுதிக்கேற்ப அனைவரையும் வணங்கி, மன்னனையும் ராணியையும் வணங்கி, அனைவரின் உடல்நலனையும் விசாரித்த பிறகு, தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.(16) பதிலுக்கு அந்த வீரர்கள் வணங்கப்பட்டதும், பெரும் மகிழ்ச்சியுடன் இருந்த ராணி {சேதி நாட்டின் ராணி} தானே தனது குழந்தையை {சிசுபாலனை} தாமோதரனின் {கிருஷ்ணனின்} மடியில் வைத்தாள்.(17) அந்தக் குழந்தை {சிசுபாலன்} அப்படி மடியில் வைக்கப்பட்டதும், தேவைக்கதிகமான கரங்கள் அனைத்தும் கீழே விழுந்தன. நெற்றியில் இருந்த கண்ணும் மறைந்தது.(18) 

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராணி துயரத்துடன் கிருஷ்ணனிடம் ஒரு வரம் கேட்டாள். அவள் {சேதி நாட்டின் ராணி}, “ஓ பெரும் பலம் கொண்ட கிருஷ்ணா, நான் அச்சத்தால் பீடிக்கப்படுகிறேன். எனக்கு ஒரு வரம் தருவாயாக.(19) துயர் நிறைந்தவர்களுக்கு துன்பத்தைக் களைய உறுதியளிப்பவன் நீ. அனைவரின் அச்சத்தையும் விலக்கவல்லவன் நீ”, என்றாள். 

இப்படி அவளால் {சேதி நாட்டின் ராணியால்} கேட்டுக் கொள்ளப்பட்ட யது குலத்தின் கிருஷ்ணன்,(20) “ஓ மரியாதைக்குரியவளே, அஞ்சாதே. நீ நீதிகளை அறிந்தவள். உனக்கு என்னிடம் எந்த அச்சமும் இருக்காது. நான் உனக்கு என்ன வரம் தர வேண்டும்? ஓ அத்தை, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?(21) என்னால் முடிந்தாலும், முடியாவிட்டாலும், உன் ஆணையை நிறைவேற்றுவேன்” என்றான். 

இப்படி கிருஷ்ணன் சொன்னதும், {சேதி நாட்டின்} ராணி,(22) “ஓ பெரும் பலம் கொண்டவனே {கிருஷ்ணா}, சிசுபாலன் செய்யும் குற்றங்களை நீ எனக்காக மன்னிக்க வேண்டும். ஓ யது குலத்தின் புலியே, ஓ தலைவா, நான் கேட்கும் இதுவும் ஒரு வரம் தான் என்பதை அறிந்து கொள்வாயாக”, என்றாள்.(23) 

அதற்கு கிருஷ்ணன், “ஓ அத்தை, அவன் {சிசுபாலன்} கொல்லப்படத் தகுதி வாய்ந்தவனாக இருந்தாலும், நான் அவனது {சிசுபாலனது} நூறு குற்றங்களை மன்னிப்பேன். நீ வருந்தாதே” என்றான் {கிருஷ்ணன்}”.(24)

பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ பீமா, மன்னனும், தீய இதயம் கொண்ட பாவியுமான இந்தச் சிசுபாலன், கோவிந்தன் {கிருஷ்ணன்} கொடுத்த வரத்தால் கர்வம் கொண்டு, உன்னைப் போருக்கு அழைக்கிறான்”.(25)

பீஷ்மருக்கு எதிராக கலகம் பிறந்தது – சபாபர்வம் பகுதி 43-(சிசுபால வத பர்வம் – 05)-பீஷ்மர், பீமனின் கோபமாற்றுவது; இதைக் கேட்ட சிசுபாலன் மிகுந்த கோபம் கொண்டு பீஷ்மரை இகழ்வது; பீஷ்மர் பேசிய வார்த்தைகள் அங்கு கூடியிருந்து மன்னர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்துவது; பீஷ்மரைக் கொல்ல அங்குக் கூடியிருந்த மன்னர்களில் சிலர் எண்ணுவது; பீஷ்மர் சமாதானம் சொல்வது–

பீஷ்மர் சொன்னார், “அழியாத பலம் கொண்ட உன்னை {பீமனே} சேதி நாட்டு ஆட்சியாளன் {சிசுபாலன்} சொந்த புத்தியால் அழைக்கவில்லை. நிச்சயமாக, இது அண்டத் தலைவனான கிருஷ்ணனின் காரியம்தான்.(1) ஓ பீமா, மரணத்தினால் ஆட்கொள்ளப்பட்டவனும், தன் குலத்தில் இழிந்தவனுமான இவன் {சிசுபாலன்} இன்று என்னை அவமதித்தது போல அவமதிக்க இந்தப் பூமியில் வேறு எந்த மன்னன் இருக்கிறான்?(2) இந்த பலம்வாய்ந்த கரங் கொண்டவன் {சிசுபாலன்}, ஹரியின் {கிருஷ்ணனில்} சக்தியில் ஒரு பாகம்தான் என்பதில் ஐயமில்லை. நிச்சயமாக, அந்தத் தலைவன் {கிருஷ்ணன்} தனது சக்தியைத் தானே எடுத்துக் கொள்ள விரும்புகிறான்.(3) இந்தச் சூழ்நிலையில், ஓ குரு குலத்தின் புலியே {பீமா}, தீய இதயம் கொண்டவனும், புலி போன்றவனுமான சேதி நாட்டு மன்னன் {சிசுபாலன்}, நம்மையெல்லாம் மதிக்காமல் முழங்கிக் கொண்டு இருக்கிறான்” என்றார் {பீஷ்மர்}”.(4)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பீஷ்மரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சேதி நாட்டு மன்னன் {சிசுபாலன்} மேலும் பொறுத்துக் கொள்ள முடியாமல். கோபத்தால் பீஷ்மரிடம் பேசினான்.(5) அவன் {சிசுபாலன்}, “ஓ பீஷ்மா, அடிக்கடி இருக்கையில் இருந்து எழுந்து, திறம்பெற்ற ஒரு வந்தியைப் போலத் தொடர்ந்து கேசவனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்து கொண்டிருக்கிறாய். அவன் {கிருஷ்ணன்} கொண்டிருப்பதாக நீர் சொல்லும் ஆற்றல் எமது {உமது எதிரியாகிய எங்களுக்கே} ஆகட்டும்.(6) ஓ பீஷ்மா, உனது மனம் மற்றவர்களைப் புகழ்வதில் இனிமை அடைகிறது என்றால், கிருஷ்ணனை விட்டு நீ இந்த மன்னர்களைத் துதிப்பாயாக.(7) பிறக்கும் போதே இந்தப் பூமியைப் பிளந்தவனும், மன்னர்களில் அற்புதமானவனுமான பாஹ்லீகத்தின் ஆட்சியாளன் தரதனைத் துதிப்பாயாக.(8) 

ஓ பீஷ்மா, அங்கம், வங்கம் எனும் பகுதிகளை ஆளும் ஆட்சியாளன் கர்ணன், ஆயிரம் கண்கள் உடையவனுக்கு {இந்திரனுக்கு} நிகரானவன், பெரும் வில்லை வளைப்பவன்,(9) பலம் வாய்ந்த கரங்களும், பிறக்கும் போதே தெய்வீக காது குண்டலங்களும், இயற்கையான கவசமும் கொண்டு, உதயசூரியனைப் போலப் பிரகாசித்து,(10) வாசவனுக்கு {இந்திரனுக்கு} நிகரான ஒப்பற்ற ஜராசந்தனை மல்யுத்தத்தில் வீழ்த்தி அந்த ஏகாதிபதியை கிழித்து துவைத்தவன் {கர்ணன்} இருக்கிறான். அவனைத் துதிப்பாயாக.(11)

ஓ பீஷ்மா, பெரும் பலம் வாய்ந்த வீரர்களும், புகழுக்குத் தகுந்தவர்களும், பிராமணர்களில் சிறந்தவர்களும், தந்தையும் மகனுமான துரோணர், மற்றும் அஸ்வத்தாமன் ஆகிய இருவரில் எவர் ஒருவரும், ஓ பீஷ்மா, கோபம் கொண்டால் அசைவன மற்றும் அசையாதன கொண்ட மொத்த பூமியையும் அழித்து விடுவார்கள், என்று நான் நம்புகிறேன்.(12,13) ஓ பீஷ்மா, போரில் துரோணருக்கோ அஸ்வத்தாமனுக்கோ நிகரான ஒரு மன்னனை நான் காணவில்லை. நீ ஏன் அவர்களைப் புகழ விரும்பவில்லை?(14)

பலம்வாய்ந்த கரம் கொண்டவனும், மன்னர்களுக்கு மன்னனும், கடல் சூழ்ந்த மொத்த உலகிலும் நிகரற்றவனுமான துரியோதனனையும் கடந்து,(15) பேராற்றலும், அனைத்து ஆயுதங்களும் கொண்ட ஜெயத்ரதனையும் கடந்து, ஆற்றலுக்காக உலகத்தாரால் கொண்டாடப்படும் கிம்புருஷர்களின் குரு துருமன்,(16) சரத்வானின் மகனும், பாரத இளவரசர்களின் குருவும், பெரும் சக்தி வாய்ந்த முதியவருமான கிருபர் ஆகியோரையும் கடந்து, கேசவனை {கிருஷ்ணனை} நீ ஏன் புகழ்கிறாய்?(17) வில்லாளிகளில் முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனும், சிறந்த மன்னனுமான ருக்மியைப் புகழாமல் ஏன் நீ கேசவனைப் புகழ்கிறாய்?(18)

அளவுகடந்த சக்தி கொண்ட பீஷ்மகன், மன்னன் தந்தவக்ரன் {தந்தவக்தரன்}, எண்ணற்ற வேள்வித் தண்டுகளுக்காக {யூபங்களுக்காக} அறியப்படும் பகதத்தன், மகத மன்னன் ஜெயத்சேனன்,(19) துருபதன், விராடன், சகுனி, பிருஹத்பலன், அவந்தியின் விந்தன், அனுவிந்தன், பாண்டியன், பெருஞ்செழிப்புடைய ஸ்வேதன், உத்தமன்,(20)  சங்கன், செருக்குடைய விருஷசேனன், பெரும் பலம் கொண்ட ஏகலவ்யன், அபரிமிதமான சக்தி கொண்டவனும், பெரும் தேர்வீரனுமான கலிங்க நாட்டு மன்னன் ஆகியோர் அனைவரையும் விட்டு கேசவனை {கிருஷ்ணனை} நீ ஏன் புகழ்கிறாய்?(21) 

ஓ பீஷ்மா, உனது மனம் எப்போதும் அடுத்தவர்களைத் துதி பாடுவதில் நிலைத்திருந்தால், நீ ஏன் சல்லியனையும், பூமியின் மற்ற ஆட்சியாளர்களையும் புகழவில்லை?(22) நீதிகள் சம்பந்தமாக அறம்சார்ந்த முதிய மனிதர்களிடம் நீ கேட்காதது திண்ணமாகத் தெரிகிறது. அதற்கு நான் என்ன செய்துவிட முடியும்?(23) ஓ பீஷ்மா, தன்னையும் மற்றவர்களையும், இகழ்வதும் புகழ்வதும், மரியாதைக்குரியவர்களின் செயலில்லை என்பதை அறிவாயா?(24) ஒ பீஷ்மா, அறியாமையால் விடாமல் தகுதியில்லாத கேசவனைப் {கிருஷ்ணனைப்} புகழும் இந்த உனது நடத்தையை யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள்.(25) உனது விருப்பத்தால் மட்டுமே, போஜனின் (கம்சனின்) வேலைக்காரனும், மாட்டு இடையனுமானவனிடம் முழு அண்டத்தையும் நிறுவ, உன்னால் எப்படி முடிகிறது?(26)

ஒரு வேளை, ஓ பாரதா, இந்த நிலை உனது இயல்பன்று, நான் முன்னமே சொன்ன பூலிங்கப் பறவையைப் போலவே நீ இருக்கிறாய்.(27) இமயமலைக்கு அடுத்த பக்கத்தில் பூலிங்கம் என்ற ஒரு பறவை இருந்தது. ஓ பீஷ்மா, அந்தப் பறவை எப்போதும் பாதகமான வார்த்தைகளையே பேசும்.(28) ‘மூர்க்கத்தனமாக எதையும் செய்யாதீர்’ இதுவே அவள் {பூலிங்கப் பறவை} அடிக்கடிச் சொல்வது. ஆனால் தானே மூர்க்கமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவள் {பூலிங்கப் பறவை} அறிவதில்லை.(29) அற்ப அறிவு கொண்ட அந்தப் பறவை சிங்கம் உணவு உண்ணு போது, அதன் வாயில், அதன் பற்களுக்கிடையே சிக்கியிருக்கும் இறைச்சித் துண்டுகளை உண்டது.(30) நிச்சயமாக, ஓ பீஷ்மா, சிங்கம் சம்மதித்திருப்பதால் அந்தப் பறவை வாழ்கிறது. ஓ பாவம் நிறைந்த இழிந்தைவனே, நீ எப்போதும் அந்தப் பறவை போலவே பேசுகிறாய்.(31) நிச்சயமாக, ஓ பீஷ்மா, இந்த மன்னர்கள் சம்மதித்திருப்பதால் மட்டுமே நீ வாழ்கிறாய். அனைவரின் கருத்துகளுக்கும் எதிராகவே செய்யும் உன்னைப் போல வேறு எவனும் இல்லை” என்றான் {சிசுபாலன்}”.(32)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சேதி ஆட்சியாளனின் இந்தக் கடுஞ்சொற்களைக் கேட்ட பீஷ்மர், ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தச் சேதி மன்னனிடம்,(33) “உண்மையில் இந்தப் பூமியின் ஆட்சியாளர்கள் சம்மதித்திருப்பதால்தான் நான் உயிருடன் இருக்கிறேனா? ஆனால், நான் இந்த மன்னர்களை ஒரு துரும்பாகக் கூட மதிக்கவில்லை” என்றார்.(34)

இந்த வார்த்தைகளைப் பீஷ்மர் பேசியதும், கூடியிருந்த மன்னர்கள் கோபத்தால் கொதித்தார்கள். அவர்களில் சிலர் எழுந்து நின்று பீஷ்மரை இகழத் தொடங்கினார்கள்.(35) பீஷ்மரின் அந்த வார்த்தைகளைக் கேட்டவர்களும், பெரும் விற்களைக் கொண்டவர்களுமான அந்த மன்னர்களில் சிலர், “இழிந்த பாவியான இந்தப் பீஷ்மன், கிழவனாயிருந்தும் செருக்குடன் இருக்கிறான். இவன் மன்னிக்கத்தகுந்தவனல்ல.(36) எனவே மன்னர்களே, கோபத்தால் உந்தப் பட்டிருக்கும் இந்தப் பீஷ்மனை, விலங்கைக் கொல்வதைப் போல கொல்ல வேண்டும். அல்லது துரும்பை எரிப்பது போல நாம் இவனை எரித்துவிடுவோம்” என்றனர்.(37) 

அந்த ஏகாதிபதிகளின் இந்த வார்த்தைகளைக் கேட்ட குருக்களின் பெருந்தகப்பன் பீஷ்மர், பெரும் புத்திகூர்மையோடு அந்தப் பூமியின் தலைவர்களுக்குப் பதிலளித்தார்.(38) “நமது பேச்சுக்கு ஓர் எல்லையை நான் காணவில்லை. வார்த்தைகள் வார்த்தைகளாலேயே பதிலளிக்கப்படுகின்றன. எனவே, பூமியின் தலைவர்களே, நான் சொல்வதை அனைவரும் கேட்பீராக.(39) விலங்கைப் போல நான் உங்களால் கொல்லப்படுகிறேனோ, துரும்பாலான நெருப்பில் எரிக்கப்படுகிறேனோ {அதுவரை} உங்கள் அனைவரின் தலையிலும் என் காலை வைத்ததாகட்டும்.(40) அழிவில்லா கோவிந்தன் {கிருஷ்ணன்} இதோ இருக்கிறான். நாம் அவனையே {கிருஷ்ணனையே} வணங்கியிருக்கிறோம். விரைவாக மரணத்தை விரும்பும் இவன் {சிசுபாலன்}, சக்கரமும் கதாயுதமும் கொண்டவனும், கரிய நிறத்தவனுமான மாதவனை {கிருஷ்ணனை} போருக்கு அழைக்கட்டும்; அவன் {சிசுபாலன்} வீழ்த்தப்பட்டு, இந்தத் தேவனின் {கிருஷ்ணன்} உடலில் கலக்கட்டும்!” என்றார் {பீஷ்மர்}”.(41,42)

சிசுபால வதம் – சபாபர்வம் பகுதி 44-(சிசுபால வத பர்வம் – 06)-சிசுபாலன் கிருஷ்ணனை அறைகூவி அழைத்தது; அங்கே கூடியிருந்து மன்னர்களுக்கு சிசுபாலனின் தவறுகளைக் கிருஷ்ணன் விளக்குவது; சிசுபாலன் கிருஷ்ணனைக் கடிந்து கொள்வது; கிருஷ்ணன் சிசுபாலனைக் கொல்வது; யுதிஷ்டிரனின் ராஜசூய வேள்வி முடிவுக்கு வருவது; கிருஷ்ணன் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு துவாரகை திரும்புவது..

வைசம்பாயனர் சொன்னார், “பீஷ்மரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட, பேராற்றல் வாய்ந்த சேதியின் ஆட்சியாளன் {சிசுபாலன்}, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} போரிட விரும்பி, அவனிடம்,(1) “ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நான் உன்னை அறைகூவி அழைக்கிறேன். நான் இன்று உன்னையும் பாண்டவர்கள் அனைவரையும் கொல்லும்வரை என்னுடன் போரிடுவாயாக.(2) ஓ கிருஷ்ணா, பாண்டுவின் மகன்கள், மன்னனாகக் கூட இல்லாத உன்னை வழிபட்டு, இந்த மன்னர்களை அவமதித்ததால், உன்னுடன் சேர்த்துக் கொல்லப்பட தகுதி படைத்தவர்களே.(3) ஓ கிருஷ்ணா, மன்னனாக இல்லாதவனும், அடிமையும், தீயவனும், வழிபடத் தகாதவனுமாகிய ஆகிய உன்னை வழிபடத் தகுதியுடையவன் என்று குழந்தைத்தனமாகப் பூஜித்த பாண்டவர்கள் கொல்லப்படத் தக்கவர்களே என்பது என் கருத்து” என்று சொன்னான்.(4) இப்படிச் சொன்ன அந்த மன்னர்களில் புலி {சிசுபாலன்}, அங்கே கோபத்தில் முழங்கியபடி நின்றான்[1]. சிசுபாலன் ஓய்ந்த பிறகு, கிருஷ்ணன், பாண்டவர்களின் முன்னிலையில் அனைத்து மன்னர்களிடமும் மென்மையான சொற்களில் இவ்வாறு பேசினான்.(5) (கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகமாக, “பராக்ரசாலியான அந்தச் சிசுபாலன் இவ்வாறு சொல்லிப் புலிபோல் இரைந்து எல்லாப் பிராணிகளும் பார்த்திருக்கையில் மிகக் கோபமுற்று எல்லா அரசர்களோடுங்கூட யுத்தஸந்நாஹஞ் செய்து கொண்டு தர்மராஜருடைய யாகத்தைக் கெடுக்கும் எண்ணத்துடன் விரைவாகச் சென்றான். அதன் பிறகு, கேசியைக் கொன்றவரும், பகைவரையழிப்பவருமாகிய கேசவர், சக்கரத்தையும், கதையையும் கையிலேந்திக் கொண்டு தாருகனென்னும் ஸாரதியினால் கொடிகட்டி அலங்கரிக்கப்பட்டதும், ரதங்களுள் உத்தமுமான தமது ரதத்தினருகிற்சென்று பீஷ்மரால் கைகொடுக்கப்பெற்று அதன் மேலேறினார். கெட்ட ஸ்வபாவமுள்ள அந்தச் சிசுபாலனால் கோபம் மூட்டப்பட்ட அரசர்களனைவரையும் கிருஷ்ண பகவான் ஒற்றைத் தேராளியாக யுத்தத்தில் ஸந்தித்தார். அப்போது கருடக் கொடி கட்டின ரதத்திலிருப்பவரும், உதயகால ஸூர்யனைப் போலத் தம் ஒளியினால் பிறருக்குத் தாபத்தையுண்டு பண்ணிக் கொண்டு வில்லில் நாணேறிடுகிறவரும், உயர்ந்த புஷ்பரதத்திலிருக்கும் இரண்டாவது மன்மதனைப் போன்றவரும், தாமரை மலர் போன்ற கண்களையுடையவருமான கண்ணபிரானை அரசர்களனைவரும் கண்டனர். அவ்வாறு தம் பராக்ரமத்தினால் கொளுத்திகிறவர் போல ஸஞ்சரிக்கும் கண்ணனைக் கண்டு அரசர்கள் பரவசர்களாகி கிருஷ்ணனுக்குத் தக்க மரியாதையைச் செய்தனர். ஜனமேஜய ராஜாவே, சிறந்த கைகளையுடையவரும், அஸுரச்ரேஷ்டர்களையழிப்பவரும், பகைவர்களான வீரர்களைக் கொல்லுகிறவருமாகிய அந்த யாதவ வீரர் அவ்வரசர்களை நோக்கி இன்சொல்லாகச் சொல்லலானார்” என்றிருக்கிறது. இது கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் இல்லை.)

அவன் {கிருஷ்ணன்}, “மன்னர்களே, இந்த தீய மனதுடையவன், சத்வதகுல மகளின் மகனும், எங்கள் சத்வத குலத்துக்கு வந்த பெரும் எதிரியுமாவான். நாங்கள் இவனைக் காயப்படுத்த எண்ணியதில்லை என்றாலும், இவன் {சிசுபாலன்} எப்போதும் எங்களுக்குத் தீமையையே நாடினான்.(6) மன்னர்களே, தீய செயல்களைச் செய்யும் இந்தப் பாவி {சிசுபாலன்}, எனது தந்தையின் {வசுதேவரின்} தங்கை மகனாக இருப்பினும், நான் பிராக்ஜோதிஷ நகருக்கு சென்றுவிட்டதைக் கேள்விப்பட்டு, துவாரகைக்கு வந்து, அந்த நகரத்தை எரித்தான்.(7) போஜ மன்னன் {உக்கிரசேனன்} ரைவத மலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த மன்னனின் பணியாட்களைத் தாக்கி, அவர்களைச் சங்கிலிகளில் பிணைத்து தனது நகரத்துக்கு இழுத்துச் சென்றான்.(8) தன் காரியங்கள் அனைத்திலும் பாவம் நிறைந்தவனாக உள்ள இந்த இழிந்தவன், என் தந்தையின் குதிரை வேள்விக்காக ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் சுதந்திரமாக விடப்பட்டிருந்த குதிரையை அவ்வேள்வியைத் தடை செய்யும்பொருட்டுக் களவாடினான்.(9) அப்பாவியான பப்ருவின் (அக்ரூர்) மனைவி துவாரகையில் இருந்து சௌவீர நாட்டுக்குச் செல்லும் வழியில், தீய நோக்கங்களால் உந்தப்பட்ட இவன், அவள் விருப்பமின்றி அவளை அபகரித்துச் சென்றான்.(10) 

தன் தாய் மாமனுக்குத் தீங்கிழைத்த இவன் {சிசுபாலன்}, மன்னன் கரூஷனின் உடையை அணிந்து கொண்டு, கரூஷனுக்காக நிச்சயிக்கப்பட்டிருந்த விசால நாட்டு இளவரசியான அப்பாவி பத்திரையை அபகரித்துச் சென்றான்[2].(11) (கும்பகோணம் பதிப்பில், “இவன் மாதுலனுக்குத் தீங்கிழைப்பவனாக மாயையினால் மறைந்து விசாலனுடைய புதல்வியாகிய பத்ரையென்பவளை அவள் துயரப்படும்படி குகுரர்களையும், அந்தகர்களையும் கொன்று அவர்களின் மனைவிகளையழவைத்துக் கரூச தேசத்தரசனுக்காகக் கொண்டு போனான். கெட்ட எண்ணமுள்ள இவன் என் தந்தையினால் வரிக்கப்பட்டவளும், பதிவ்ரதையும், விசாலராஜன் பெண்ணுமான பத்ரையைப் பரபரப்புடன் உள்ளே பிரவேசித்து எடுத்தான். இவன் என்னை ஜயிக்கக் கருதிக் கரூச ராஜாவுடன் ஸ்நேஹஞ்செய்து கொண்டு ஜராஸந்தனையடுத்து எனக்கு இன்னாதவற்றைச் செய்தான்” என்றிருக்கிறது. இது கங்குலி, மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் சொல்லப்பட்டிருக்கும் செய்திக்கு முரணாக இருக்கிறது. மேலும் அதிக செய்தியாக, அதைத் தொடர்ந்து “அரசர்களே, அவற்றையையெல்லாம் நான் எண்ண முடியாது. இவ்வாறு இவன் யாதவர்களுக்கு எல்லையில்லாத தீங்கள் செய்தவன். இவன் மிகக் கபடமாகவே நம்முடைய விஷயத்தில் அனேக கார்யங்களைச் செய்தான். ‘இவனைக் கொல்லுவதற்குரிய குற்றங்கள் நூற்றை நாம் பொறுப்போம்’ என்று இவன் தாயாருக்கு நான் செய்த கொடிய சபதங்களினால் நான் கட்டுப்பட்டிருந்தேன். அவ்வாறாகவே இவனையழிப்பதற்குரிய குற்றங்கள் நூறும் என்னால் பொறுக்கப்பட்டன. இவனைக் கொல்லுகிற காலமாகிய இந்த ஸமயத்தில் நான் எவ்வகையிலும் பொறுக்கக்கூடாத பிழைகள் இரண்டுள்ளன. ‘யாகத்துக்கிடையூறு செய்பவனைக் கொல்வேன்; பாண்டவர்களுக்கு விரோதியைக் கொல்வேன்’ என்ற இரண்டு வகை நிச்சயம் எனக்கு இருக்கிறது. அதை நான் எப்படி மாற்றுவேன்?” என்றுமிருக்கிறது. அதன் பிறகு மேற்கண்ட அடிக்குறிப்பு எண்ணுக்குப் பின்வருமாறே தொடர்கிறது.)இந்தத் துயரங்கள் அனைத்தையும் நான் என் தந்தையின் {வசுதேவரின்} தங்கைக்காகப் பொறுமையாகத் தாங்கிக் கொண்டேன். இருப்பினும், இவையெல்லாம் இன்று இந்த மன்னர்கள் முன்னிலையில் நற்பேற்றின் பொருட்டே நடைபெற்றது.(12) இவன் {சிசுபாலன்} என்னிடம் கொண்டிருக்கும் பகைமையை இன்று நீங்கள் அனைவரும் கண்டீர்கள். என் முதுகுக்குப் பின்னால் இவன் {சிசுபாலன்} செய்ததையெல்லாம் அறிந்தீர்கள்.(13) இதையெல்லாம் மீறி, இந்த ஏகாதிபதிகளின் முன்னிலையில் செருக்கின் எல்லையைக் கடந்ததால், இவன் {சிசுபாலன்} என்னால் கொல்லப்படத் தகுதியுடையவனாக இருக்கிறான். இவன் இன்று எனக்கு ஏற்படுத்தியிருக்கும் காயங்களை என்னால் மன்னிக்க இயலவில்லை.(14) விரைவான மரணத்தை விரும்பி, இந்த மடையன் ருக்மிணியை விரும்பினான். ஆனால் வேதப் பொருளை அடைய முடியாத சூத்திரன் போல, இந்த மூடனால் {சிசுபாலனால்} அவளை {ருக்மிணியை} அடைய முடியவில்லை”, என்றான் {கிருஷ்ணன்}.(15)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்டவர்களும், அங்கு திரண்டிருந்தவர்களுமான ஏகாதிபதிகள், சேதி நாட்டு ஆட்சியாளனை {சிசுபாலனை} இகழ்ந்தார்கள்.(16) ஆனால் பலம்பொருந்திய சிசுபாலன், இந்த வார்த்தைகளைக் கேட்டு, சத்தமாகச் சிரித்து,(17) “ஓ கிருஷ்ணா, ருக்மிணி (உனது மனைவி) மீது நான் ஆசை கொண்டிருந்தேன் என்பதை இவ்வளவு மன்னர்கள் முன்னிலையில் சொல்கிறாயே, சபையில் இவற்றைச் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா?(18) ஓ மதுவைக் கொன்றவனே {கிருஷ்ணா}, தனது மனைவி வேறு யாராலோ நினைக்கப்பட்டாள் என்று மதிப்பு மிக்க மனிதர்களுக்கிடையில் சொல்வதற்கு உன்னைவிட்டால் வேறு ஆண்மகன் யார் இருக்கிறார்?[3](19) ஓ கிருஷ்ணா, நீ விரும்பினால் என்னை மன்னி அல்லது மன்னிக்காதே. ஆனால் கோபத்தாலோ, நட்பாலோ, நீ எனக்கு என்ன செய்துவிட முடியும்?” என்று கேட்டான் {சிசுபாலன்}.(20)(ருக்மிணி விதர்ப்ப மன்னன் பீஷ்மகனின் மகளாவாள். அவளுடைய தந்தை அவளைச் சிசுபாலனுக்குத் திருமணம் செய்து கொடுக்க உறுதியளித்திருந்தான். எனினும், கிருஷ்ணனைக் காதலித்து வந்த ருக்மிணி அவனுக்கு ஒரு மடலை அனுப்பினாள். அதன் பேரில், கிருஷ்ணனும், பலராமனும் சென்று ருக்மிணியின் சகோதரனான ருக்மியை வீழ்த்தி, ருக்மிணியை அபகரித்துச் சென்றனர்)

சிசுபாலன் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது, மதுவைக் கொன்ற மேன்மையானவன் {கிருஷ்ணன்}, தனது மனத்தில் அசுரர்களின் செருக்கை அடக்கும் சக்கராயுதத்தை நினைத்தான்.(21) சக்கரம் தனது கைகளுக்கு வந்தவுடன், பேச்சில் வல்லவனான அந்தச் சிறந்தவன் {கிருஷ்ணன்}, சத்தமாக இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(22) 

அவன் {கிருஷ்ணன்}, “பூமியின் தலைவர்களே, ஏன் இவன் {சிசுபாலன்} இதுவரை என்னால் மன்னிக்கப்பட்டான் என்பதைக் கேட்பீராக. அவனது தாயாரால் வேண்டப்பட்ட படி, இவனது {சிசுபாலனது} நூறு குற்றங்கள் என்னால் மன்னிக்கப்பட வேண்டியிருந்தது.(23) இஃதை அவள் {சிசுபாலனின் தாய்} என்னிடம் வரமாகவே கேட்டாள். நானும் அருளினேன். மன்னர்களே அந்த எண்ணிக்கை நிறைவடைந்துவிட்டது. ஏகாதிபதிகளே, நான் இப்போது உங்கள் முன்னிலையில் இவனை {சிசுபாலனைக்} கொல்லப் போகிறேன்” என்று சொன்னான்.(24) 

இவ்வாறு சொன்னவனும்,  எதிரிகளைக் கொல்பவனுமான அந்த யதுகுலத் தலைவன் {கிருஷ்ணன்}, பெரும் கோபம் கொண்டவனாக, உடனடியாக சேதியின் ஆட்சியாளன் {சிசுபாலன்} தலையைத் தனது சக்கரத்தால் துண்டித்தான்.(25) அந்தப் பெரும்பலம் படைத்தவன், இடியால் தாக்கப்பட்ட மலைப்பாறைபோல கீழே விழுந்தான். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயன்}, வானில் இருக்கும் சூரியனைக் காண்பது போல சிசுபாலன் உடலில் இருந்து கடும் சக்திவெளியேறுவதை அங்கே கூடியிருந்த மன்னர்கள் கண்டனர்.(26) அப்படி வெளியே வந்த அந்த சக்தி, அனைத்து உலகங்களாலும் வழிபடப்படும் தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடைய கிருஷ்ணனை வணங்கி, அவனது {கிருஷ்ணனின்} உடலுக்குள் புகுந்தது.(27) மனிதர்களின் தலைவனான அந்த பெரும்பலம் வாய்ந்தவனின் {கிருஷ்ணனின்} உடலுக்குள் அந்த சக்தி புகுந்ததைக் கண்ட அந்த மன்னர்க்கூட்டம் அதை அற்புதமாகக் கருதினர்.(28) 

சேதி மன்னனை {சிசுபாலனை} கிருஷ்ணன் கொன்ற பிறகு, மேகமற்று இருந்த போதும் அங்கே மழை பொழிந்தது, இடி முழக்கம் கேட்டது, பூமியே நடுங்கியது.(29) அங்கே இருந்த மன்னர்களில் சிலர் பேச்சறியாது ஜனார்த்தனனை {கிருஷ்ணனைப்} பார்த்த படியே நின்றிருந்தனர்.(30) சிலர் தங்கள் கட்டைவிரலை உள்ளங்கைகளில் கோபத்தால் பிசைந்து கொண்டு, தங்கள் உதடுகளைப் பற்களால் கடித்துக் கொண்டனர்.(31) அந்த மன்னர்களில் சிலர் விருஷ்ணி குலத்தோனைத் {கிருஷ்ணனைத்} தனிமையில் சந்தித்துப் பாராட்டவும் செய்தனர். சிலர் மிகுந்த கோபம் கொண்டனர், அதே வேளையில் சிலர் நடுநிலை வகித்தனர்.(33) பெரும் முனிவர்கள் இதயத்தில் மகிழ்ந்து கேசவனை {கிருஷ்ணனைப்} புகழ்ந்து விட்டுச் சென்றனர். கிருஷ்ணனின் ஆற்றலைக் கண்ட உயர் ஆன்ம பிராமணர்களும், பெரும்பலம் வாய்ந்த மன்னர்களும், இதயத்தில் மகிழ்ந்து அவனைப் புகழ்ந்தனர்.(34)

பிறகு யுதிஷ்டிரன், தன் தம்பிகளை அழைத்து, மன்னன் சிசுபாலனின் இறுதிச் சடங்குகளை, தமகோஷனின் வீர மைந்தனான சிசுபாலனுக்குச் சரியான முறையில் செய்யக் கட்டளையிட்டான். பாண்டுவின் மகன்கள் தங்கள் தமையனின் கட்டளையைச் சரியாகச் செய்தனர். பிறகு யுதிஷ்டிரன், அனைத்து மன்னர்களுடன் சேர்ந்து மன்னன் சிசுபாலனின் மகனை சேதி நாட்டுக் அரசனாய் நிறுவினான்.(35,36)

பிறகு பெரும் சக்தி படைத்த குருக்களின் மன்னனுடைய {யுதிஷ்டிரனின்} அந்த {ராஜசூய} வேள்வி, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அனைத்து செழிப்பாலும் அருளப்பட்டு, அனைத்து இளைஞர்களுக்கும் நிறைவை ஏற்படுத்துவதாக அழகாக அமைந்தது. இறுதியாக அந்த {ராஜசூய} வேள்வி, அனைத்து இடையூறுகளும் நீங்கி, அபரிமிதமான செல்வங்களுடனும், தானியங்களுடனும், அபரிமிதமான அரிசி மற்றும் அனைத்து விதமான உணவுகளும் கொண்டு, அவை அனைத்தும் கேசவனால் {கிருஷ்ணனால்} கவனிக்கப்பட்டு அதிர்ஷ்டகரமாக முடிவுக்கு வந்தது.(37,38) யுதிஷ்டிரன் சரியான நேரத்தில் அந்தப் பெரும் வேள்வியை முடித்தான். பெரும் பலம் வாய்ந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அந்த மேன்மையான சௌரி {கிருஷ்ணன்}, தனது வில்லான சாரங்கத்துடனும், சக்கரத்துடனும், கதாயுதத்துடனும், அந்த வேள்வியை கடைசிவரை காத்து நின்றான்.(39) 

அனைத்து க்ஷத்திரிய ஏகாதிபதிகளும், வேள்வியை முடித்து குளித்து விட்டு நின்ற அறம் தழைக்கும் யுதிஷ்டிரனிடம் வந்து,(40) “நற்பேறினாலேயே நீ வெற்றியடைந்தாய். ஓ அறம் சார்ந்தவனே {யுதிஷ்டிரனே}, நீ ஏகாதிபத்திய மரியாதையை அடைந்துவிட்டாய். ஓ அஜமீட குலத்தானே, உன்னால் உமது குலத்தின் புகழ் எங்கும் பரவி நிற்கிறது.(41) ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, இந்த உனது செயலால், நீ பெரும் அறத் தகுதியை அடைந்துவிட்டாய்.(42) நாங்கள் விரும்பியவாறு, நாங்கள் உன்னால் வழிபடப்பட்டோம். நாங்கள் எங்கள் நாடுகளுக்குத் திரும்ப விரும்புகிறோம் என்பதை உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறோம். நீ எங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்” என்றனர்.(43)

அந்த ஏகாதிபதிகளின் வார்த்தைகளைக் கேட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஒவ்வொருவரையும் அவர்கள் தகுதிக்கேற்ப வணங்கி, தனது தம்பிகளிடம், “இந்த ஏகாதிபதிகள் தங்கள் சுய விருப்பத்தின் பேரிலேயே நம்மிடம் வந்திருக்கிறார்கள்.(44) எதிரிகளைத் தண்டிக்கும் இவர்கள் என்னிடம் விடைபெற்றுத் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப விரும்புகின்றனர். அவர்கள் அருளப்பட்டிருக்கட்டும். நமது நாட்டு எல்லை வரை இவர்களை வழி அனுப்பிவிட்டு வாருங்கள்”, என்று கட்டளையிட்டான்.(45) 

தனது தமையனின் {யுதிஷ்டிரனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த அறம் சார்ந்த பாண்டவ இளவரசர்கள், அவரவர்கள் தகுதிக்கேற்ப அந்த மன்னர்களைத் தொடர்ந்து சென்றனர்.(46) மன்னன் விராடனை பலம் பொருந்திய திருஷ்டத்யும்னன் தொடர்ந்து சென்றான். பெரும் பலம் பொருந்திய தேர்வீரான யக்ஞசேனனை {துருபதனைத்} தனஞ்சயன் {அர்ஜுனன்} தொடர்ந்து சென்றான்.(47) பீஷ்மரையும், திருதராஷ்டிரரையும் பீமசேனன் தொடர்ந்து சென்றான். போர்களத்தில் நிபுணனான சகாதேவன், துரோணரையும் அவரது மகனையும் {அசுவத்தாமன்} தொடர்ந்து சென்றான்.(48) சுபலனையும், அவனது மகனையும் {சகுனியையும்} நகுலன் தொடர்ந்து சென்றான். திரௌபதியின் மகன்களும், சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} மலைசார்ந்த நாடுகளுக்கு மன்னர்களைத் தொடர்ந்து சென்றனர்.(49) மற்ற க்ஷத்திரியக் காளைகள் வேறு பல க்ஷத்திரியர்களைத் தொடர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான பிராமணர்களும் உரிய மரியாதைகளுடன் திரும்பிச் சென்றனர்.(50)

அனைத்து மன்னர்களும் பிராமணர்களும் சென்ற பிறகு, பலம்பொருந்திய வாசுதேவன் {கிருஷ்ணன்} யுதிஷ்டிரனிடம்,(51) “ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரரே}, உமது அனுமதியுடன் நான் துவாரகை செல்ல விரும்புகிறேன். பெரும் நற்பேற்றால், நீர் வேள்விகளில் முதன்மையான ராஜசூய வேள்வியை முடித்திருக்கிறீர்” என்றான்.(52) 

ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} இப்படிச் சொன்னதும், யுதிஷ்டிரன், “உனது கருணையால், ஓ கோவிந்தா {கிருஷ்ணா}, இந்தப் பெரும் வேள்வியை நான் நிறைவுசெய்தேன்.(53) உனது கருணையாலேயே எனது மேலாதிக்கத்தை அனைத்து க்ஷத்திரியர்களும் ஏற்றுக் கொண்டு, இங்கே பெரும் மதிப்புகளிலான காணிக்கைகளுடன் வந்தனர்.(54) ஓ வீரனே {கிருஷ்ணா}, நீயில்லாமல், எனது இதயம் எந்த மகிழ்ச்சியையும் அடையவில்லை. எனவே, ஓ ஓ பாவமற்றவனே நான் எப்படி உனக்கு விடைகொடுப்பேன்?(55) ஆனால் நீயும் துவாரகை சென்றாக வேண்டும்” என்றான். 

உலகம் முழுதும் புகழ் கொண்ட அறம்சார்ந்த ஹரி {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனால் இப்படி சொல்லப்பட்ட பிறகு, தனது மைத்துனனுடன் {யுதிஷ்டிரனுடன்}, பிருதையிடம் {குந்தியிடம்} சென்று, “ஓ அத்தை, உனது மகன்கள் ஏகாதிபத்திய மாட்சிமையை அடைந்துவிட்டார்கள்.(56,57) அவர்கள் பெறும் செல்வச் செழிப்பை அடைந்துவிட்டார்கள். பெரும் வெற்றியையும் அடைந்து விட்டார்கள். இவை அனைத்திலும் நிறைவடைவாயாக. ஓ அத்தை, நான் துவாரகை செல்ல விரும்புகிறேன். எனக்கு அனுமதி கொடுப்பாயாக” என்றான்.(58) 

அதன் பிறகு கேசவன் {கிருஷ்ணன்}, திரௌபதியிடமும், சுபத்திரையிடமும் விடைபெற்றான். அந்தப்புரத்திற்குள் இருந்து யுதிஷ்டிரனுடன் வெளியே வந்து,(59) தனது தூய்மைப் பணிகளை முடித்து, தனது தினசரி சடங்குங்களையும் வழிபாடுகளையும் முடித்து, பிராமணர்களை நல்வாழ்த்துகளை கூறச் செய்தான். பிறகு அந்த பலம் வாய்ந்த கரம் கொண்ட தாருகன், அற்புதமான அலங்காரத்துடன் கூடியதும், மேகங்களைப் பிரதிபலிக்க்ககூடியதுமான தேருடன் அங்கே வந்து நின்றான். கருடக் கொடி கொண்ட அந்த தேர் அங்கே வந்ததைக் கண்டவனும்,(60,61) தாமரை இலை போன்ற கண்கள் கொண்ட உயர்ந்த ஆன்மா {கிருஷ்ணன்}, அதை மரியாதையுடன் வலம் வந்து, அதன் மேல் ஏறி துவாரகைக்குப் புறப்பட்டான்.(62) 

பிறகு, பெரும் செழிப்பைக் கொண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன் பெரும் பலம்வாய்ந்த வாசுதேவனை {கிருஷ்ணனை} நடந்தே தொடர்ந்து சென்றான்.(63) பிறகு, தாமரை இலைகளைப் போன்ற கண்களை உடைய ஹரி {கிருஷ்ணன்}, அந்தச் சிறந்த தேரைச் சிறிது நேரம் நிறுத்தி, குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம்,(64) “ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரரே}, உமது குடிகளைக் கண்ணாகப் பொறுமையுடன் பாதுகாப்பீராக. அனைத்து உயிர்களுக்கும் மேகம் எப்படி நன்மையைச் செய்கிறதோ, அனைத்துப் பறவைகளுக்கு மரம் எப்படி தனது கிளைகளை விரித்து நன்மை செய்கிறதோ,(65) சாகாதவர்களுக்கு {தேவர்களுக்கு} ஆயிரம் கண்ணுடையவன் {இந்திரன்} எப்படிப் பாதுகாப்பாக இருக்கிறானோ, அப்படி உமது உறவினர்களுக்கு பாதுகாப்பாக இருப்பீராக” என்றான் {கிருஷ்ணன்}.(66) 

கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் இப்படி பேசி முடித்து, ஒருவருக்கொருவர் விடைபெற்று தங்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர். ஓ மன்னா {ஜனமேஜயா}, சத்வத குலத்தலைவன் {கிருஷ்ணன்} துவாராவதிக்குத் {துவாரகைக்குத்} திரும்பியதும், மன்னன் துரியோதனன், மன்னன் சுபலனின் மகன் சகுனியுடன் தனியாக, அந்தத் தெய்வீக சபா மண்டபத்தில் தொடர்ந்து வாழ்ந்து வந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(67,68)

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading