ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ சபா பர்வம்-ஸ்ரீ  தியூத   பர்வம்–

“நான் சாகிறேன்” என்றான் யுதிஷ்டிரன் -சபாபர்வம் பகுதி 45-(தியூத பர்வம் – 01)யுதிஷ்டிரன் சிசுபாலனின் துர்மரணம் குறித்து வியாசரிடம் வினவுவது; வியாசர் இந்த சகுனத்தால் பதிமூன்று வருடத்தில் க்ஷத்திரிய குலத்தின் அழிவு ஏற்படும் என்று சொல்வது; வியாசர் கைலாசம் செல்வது; யுதிஷ்டிரன் அனைத்துக்கும் காரணமான நான் சாகிறேன் என்றது; அர்ஜுனன் அதை மறுத்துப் பேசியது; யுதிஷ்டிரன் புதிய நோன்பை உண்டாக்கியது…

வைசம்பாயனர் சொன்னார், “வேள்விகளில் முதன்மையானதும், சாதிப்பதற்குக் கடினமானதுமான ராஜசூய வேள்வி முடிவடைந்ததும், வியாசர் தனது சீடர்களுடன் யுதிஷ்டிரனிடம் வந்தார்.(1) அவரைக் கண்ட யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் எழுந்து தனது பாட்டனான அந்த முனிவரை {வியாசரை} வழிபட்டு, அவரது கால்களைக் கழுவிக் கொள்ள நீர் கொடுத்து, அமர ஆசனமும் கொடுத்தான்.(2) அந்தச் சிறப்புமிகுந்தவர் {வியாசர்}, விலையுயர்ந்த தங்க ஆசனத்தில் அமர்ந்து பிறகு, நீதிமானான யுதிஷ்டிரனிடம், “உனது இருக்கையில் அமர்வாயாக”, என்றார்.(3)

தனது தம்பிகள் சூழ இருக்கையில் யுதிஷ்டிரன் அமர்ந்ததும், உண்மை பேசுபவரான வியாசர்,(4) “ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே} நற்பேற்றின் பொருட்டு செழிப்பில் வளர்வாயாக. அடைவதற்கு கடினமான ஏகாதிபத்திய மாட்சிமையை அடைந்துவிட்டாய். ஓ குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, உன்னால் குரு குலம் செழிப்படையும்.(5) ஓ சக்கரவரத்தி {யுதிஷ்டிரா}, நான் முறையாக வணங்கப்பட்டேன். நான் உன்னிடம் விடைபெற விரும்புகிறேன்”, என்றார். 

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கறுத்த நிறம் கொண்ட அந்த முனிவரால் {வியாசரால்} இப்படி சொல்லப்பட்டதும்,(6) தனது பாட்டனின் கால்களைத் தொட்டு வணங்கி, அவரிடம், “ஓ மனிதர்களின் தலைவரே {வியாசரே}, களைவதற்கு கடினமான ஐயம் எனக்குள் எழுந்திருக்கிறது.(7) ஓ மறுபிறப்பாளர்களில் காளையே {வியாசரே}, இதிலிருந்து என்னைக் காக்க உம்மைத் தவிர வேறு யாரும் இல்லை. சிறப்பு மிகுந்த முனிவரான நாரதர், {இந்த ராஜசூயம் நடைபெற்றால்} தெய்வீகச் சூழல், நடைமுறைச் சூழல், இம்மை என்ற மூன்று விதமான தீய சகுனங்களை தெரிவித்திருக்கிறார். ஓ பாட்டா {வியாசரே}, சேதி மன்னனின் {சிசுபாலனின்} வீழ்ச்சியாக அந்த முற்குறிகள் முடிந்துவிட்டனவா?”, என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(8,9)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ மன்னா {ஜனமேஜயா}, மன்னனின் {யுதிஷ்டிரனின்} இந்த வார்த்தைகளைக் கேட்டவரும், மேன்மையானவரும், பராசரரின் மைந்தரும்[1], கறுத்த நிறத்தவரும், தீவில் பிறந்தவருமான வியாசர்,(10) “ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, பதிமூன்று வருடங்களில் அந்த தீய சகுனங்கள் அனைத்து க்ஷத்திரியர்களுக்கும் அழிவைக் கொண்டு வரும்.(11) ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, காலத்தின் ஓட்டத்தில், உன்னையாக முதன்மைக் காரணமாகக் கொண்டு, ஓ பாரதா, துரியோதனனின் பாவங்களுக்காக, பீமன் மற்றும் அர்ஜுனனின் பலத்தால் உலகத்தின் க்ஷத்திரியர்கள் அழிக்கப்படுவார்கள்.(12) ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, திரிபுரனைக் கொன்றவனும், நீலத்தொண்டையுடையவனுமான பவனை {சிவனை} நீ உனது கனவில் காண்பாய். காளையைத் தனது குறியாகக் கொண்டவனை, மனித மண்டை ஓட்டை உறிஞ்சிக் குடிப்பவனை {சிவனை}, அந்தப் பயங்கரமானவனை, கடுமையானவனை, அனைத்து உயிர்களின் தலைவனை, தேவர்களுக்குத் தேவனை, உமையின் கணவனை, ஹரன் என்றும் சர்வன் என்றும் விருஷன் என்று அழைக்கப்பட்டு, கைகளில் திரிசூலத்துடனும், பினாகை என்ற வில்லுடனும், புலித் தோல் போர்த்தியிருப்பவனை நீ உனது கனவில் காண்பாய். காளையில் அமர்ந்த படி கைலாச மலை போன்ற வெள்ளை நிறத்தில், விடாமல் பித்ருக்களின் உலகத்தின் பக்கமாகத் {தென் திசையாகத்} தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் அந்தச் சிவனை நீ காண்பாய்.(13-15) ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, அதுதான் இன்றைய உனது கனவாக இருக்கும். அந்தக் கனவைக் காண்பதால் நீ துயருறாதே. காலத்தைவிட மேன்மையானது எதுவும் இல்லை.(16) நீ அருளப்பட்டிரு. நான் இப்போது கைலாச மலையை நோக்கிப் போகிறேன். பூமியைக் கண்ணும் கருத்துமாக உறுதியுடன், பொறுமையாக அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஆண்டு வா!” என்றார் {வியாசர்}”.(17)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இதைச் சொன்ன. அந்தத் தீவில் பிறந்த சிறப்புமிகுந்த கறுப்பு நிற வியாசர், தனது சீடர்களுடன், வேதங்களின் அனைத்து விதிகளையும் கடைப்பிடித்தபடி கைலாசத்தை நோக்கிச் சென்றார்.(18) தனது பாட்டன் இப்படிச் சென்றதும், துயரத்தால் உந்தப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, தொடர்ந்து அந்த முனிவர் {வியாசர்} சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தான்.(19) அதன் பிறகு அவன் {யுதிஷ்டிரன்} தனக்குள்ளேயே, “நிச்சயமாக முனிவர் {வியாசர்} சொன்னது நடந்தே தீரும். முயற்சியால் மட்டுமே விதியை வெல்ல முடியுமா?”, என்று நினைத்துக் கொண்டான்.(20)

பிறகு, பெரும் சக்தி கொண்ட அந்த யுதிஷ்டிரன் தனது தம்பிகளை அழைத்து, “மனிதர்களில் புலிகளே, தீவில் பிறந்த முனிவர் {வியாசர்} என்னிடம் பேசியதைக் கேட்டீர்கள்.(21) முனிவரின் {வியாசரின்} வார்த்தைகளைக் கேட்ட பிறகு நான் ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கிறேன். க்ஷத்திரியர்களின் சாவுக்குக் காரணமாக இருக்கும் நான் சாவதுதான் அத்தீர்மானம்.(22) எனது அன்புக்கு உரியவர்களே, காலம் இப்படித்தான் வகுத்திருக்கிறது என்றால், நான் வாழ்வதில் பயன் என்ன?” என்று கேட்டான். 

மன்னனின் {யுதிஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன்,(23) “ஓ மன்னா, நினைவை அழிக்கும் இந்த பயங்கர மன அழுத்தத்துக்கு ஆளாகாதீர். தாங்கும் திறனை ஒன்றுகூட்டி, ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, எது நன்மையோ அதைச் செய்யும்” என்றான்.(24)

உண்மையில் உறுதியான யுதிஷ்டிரன், துவைபாயனரின் {வியாசரின்} வார்த்தைகளைச் சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, தனது தம்பிகளிடம்,(25) “அருளப்பட்டு இருப்பீராக. இந்த நாளில் இருந்து நான் மேற்கொள்ளப் போகும் நோன்பைக் குறித்துக் கேளுங்கள். நான் எந்தக் காரணத்திற்காக வாழ்ந்தாலும், இனி வரும் பதிமூன்று வருடங்களுக்கு, எனது தம்பிகளிடமோ, அல்லது பூமியின் மற்ற மன்னர்களிடமோ கடுஞ்சொல்லைப் பேசமாட்டேன். எனது உறவினர்களின் கட்டளைக்குக் கீழ் வாழ்ந்து, அறம் பயின்று,(26,27) எனது நோன்புக்கு முன்மாதிரியாக வாழப் போகிறேன். எனது பிள்ளைகளுக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் வித்தியாசம் இல்லாமல், நான் இந்த முறையில் வாழ்ந்தால், (எனக்கும் மற்றவர்களுக்கும் இடையில்) எந்த ஒரு ஏற்பின்மையும் {முரண்பாடும்} ஏற்படாது. ஏற்பின்மையே {முரண்பாடே} உலகத்தில் போர் ஏற்படுவதற்கான காரணமாகும்.(28) மனிதர்களில் காளைகளே, போரை தொலைவில் வைத்துவிட்டு, அனைவருக்கும் நான் ஏற்புடையதைச் செய்தால், உலகத்தில் என்னைக் குறித்து எந்தத் தீய கருத்தும் ஏற்படாது” என்று சொன்னான்.(29) 

தங்கள் அண்ணனின் இந்த வார்த்தைகளைக் கேட்டவர்களும், அண்ணனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} ஏற்புடையதையே எப்போதும் செய்பவர்களுமான பாண்டவர்கள் {பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்} அவற்றை அங்கீகரித்து ஏற்றனர்.(30) நீதிமானான யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன், சபைக்கு மத்தியில் இப்படிப்பட்ட சபதத்தை ஏற்று, புரோகிதர்களை நிறைவடையச் செய்து, உரிய சடங்குகளால் தேவர்களையும், பித்ருக்களையும் நிறைவடையச் செய்தான்.(31) ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அனைத்த ஏகாதிபதிகளும் சென்ற பிறகு யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன், அமைச்சர்களுடன், தனது அன்றாட நற்சடங்குகளைச் செய்து, தனது அரண்மனைக்குள் நுழைந்தான். ஓ மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனன், சுபலனின் மகன் சகுனி ஆகியோர் அந்த மகிழ்ச்சிகரமான சபாமண்டபத்துடன் கூடிய வீட்டிலேயே தொடர்ந்து வசித்து வந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(32,33)

தலைகுப்புற விழுந்தான் துரியோதனன் – சபாபர்வம் பகுதி 46-(தியூத பர்வம் – 02)துரியோதனன் குளத்தில் விழுவது; தரையை குளம் என்று நினைத்து ஆடைகளை உயர்த்துவது; பிறகு யுதிஷ்டிரனிடம் விடைபெற்று ஹஸ்தினாபுரம் திரும்புவது; பாண்டவர்களின் வளமையைக் கண்டு துரியோதனன் அடையும் பொறாமை; அவற்றை சகுனியிடம் விவரித்தல்

வைசம்பாயனர் சொன்னார், “மனிதர்களில் காளையான துரியோதனன் தொடர்ந்து (பாண்டவர்களின்) சபாமண்டபத்துடன் கூடிய அரண்மனையிலேயே வசித்தான். அந்த குரு இளவரசன் {துரியோதனன்} சகுனியுடன் சேர்ந்து அந்த மாளிகை முழுவதையும் ஆராய்ந்தான்.(1) அந்தக் குரு இளவரசன் {துரியோதனன்} இத்தகைய தெய்வீக வடிவமைப்புகளை யானையின் பெயரை வைத்து அழைக்கப்படும் நகரத்தில் (ஹஸ்தினாபுரத்தில்) கண்டதேயில்லை.(2)

ஒரு நாள் மன்னன் துரியோதனன் அம்மாளிகையைச் சுற்றி வருகையில், ஒரு பளிங்கு தரைக்கு வந்தான். அந்த மன்னன் {துரியோதனன்}, தனது அறியாமையால், அதை நீர் நிறைந்த குளம் என்று கருதித் தனது ஆடைகளை இழுத்துக் கொண்டான். பிறகு தனது தவறை உணர்ந்த அந்த மன்னன் {துரியோதனன்} அந்த மாளிகையில் பெரும் சோகத்துடன் உலவினான்.(3-5) சிறிது நேரம் கழித்து அம்மன்னன் {துரியோதனன்}, பளிங்கு போன்ற இதழ்களைக் கொண்ட தாமரைகளுடன் கூடிய குளத்தைக் கண்டு, தரை என்று கருதி தனது ஆடைகளுடன் உள்ளே விழுந்தான்.(6)

துரியோதனன் அந்தக் குளத்துக்குள் விழுந்ததைக் கண்ட பெரும் பலம் வாய்ந்த பீமன் உரக்கச் சிரித்தான். அந்த அரண்மனையில் இருந்த பணியாட்களும் சிரித்தார்கள்.(7) மன்னனின் உத்தரவால் அந்தப் பணியாட்கள் அழகான உலர்ந்த ஆடைகளை அவனுக்காக {துரியோதனனுக்காக} கொண்டு வந்தனர். துரியோதனனின் பரிதாப நிலையைக் கண்ட பெரும் பலம் வாய்ந்த பீமன்,(8) அர்ஜுனன், இரட்டையர்கள் {நகுலன், சகாதேவன்} என அனைவரும் உரக்கச் சிரித்தனர். இது போன்ற கேலிகளுக்கு {அவமானங்களுக்கு} பழக்கப்படாத துரியோதனனால் அவர்களது சிரிப்பைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(9) 

அவன், தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டு, அவர்களிடம் தனது பார்வையைச் செலுத்தாமலிருந்தான். மீண்டும் ஒரு வரண்ட தரையைத் தண்ணீரென நினைத்த அந்த ஏகாதிபதி {துரியோதனன்} தனது ஆடைகளைத் தூக்கிக் கட்டிக் கொண்டதைக் கண்டு அனைவரும் மீண்டும் சிரித்தார்கள். அந்த மன்னன் {துரியோதனன்} சிறிது நேரம் கழித்து பளிங்கினால் ஆன மூடிய கதவை தவறுதலாகத் திறந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.(10,11) அதைக் கடந்து செல்ல அவன் {துரியோதனன்} நினைக்கையில், அவனது தலை அந்தக் கதவில் மோதி, தள்ளாடியபடி நின்றான். மற்றொரு இடத்தில் திறந்திருந்த கதவை மூடியிருப்பதாக நினைத்து, அதைத் திறக்க தனது கையை நீட்டியபடி குப்புற விழுந்தான்.(12) மேலும் உண்மையில் திறந்திருந்த மற்றொரு கதவை மூடியிருப்பதாக நினைத்து, அந்த மன்னன் {துரியோதனன்} அதனின்று விலகிச் சென்றான்.(13) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனன், ராஜசூய வேள்வியில் அபரிமிதமான செல்வத்தைக் கண்டும், அந்த சபாமண்டபத்துக்குள் நடந்த பல பிழைகளுடனும் {ஏமாற்றங்களுடனும்} பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு ஹஸ்தினாபுரம் திரும்பினான்.(14,15)

அப்படி அவன் {துரியோதனன்} தனது நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போதே, பாண்டவர்களின் செல்வச்செழிப்பைக் கண்டு இதயம் பிளந்தவனாக, பாவத்தின் பக்கம் சேர்ந்து துன்புற்றான்.(16) பாண்டவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதையும், மன்னர்கள் அவர்களுக்கு கப்பம் கட்டுவதையும், மன்னர்கள் மட்டும் அல்லாமல் இளையவர்களும் முதியவர்களும், பாண்டவர்களுக்கு நன்மை செய்வதையும், கண்டு, பாண்டுவின் சிறப்புவாய்ந்த மகன்களின் {பாண்டவர்களின்} செல்வச்செழிப்பையும் பிரகாசத்தையும் நினைத்து, திருதராஷ்டிரன் மகனான துரியோதனன் மங்கிப் போனான்.(17,18) துயரால் பீடிக்கப்பட்ட இதயத்துடன் (தனது நகரத்தை நோக்கி) முன்னேறிய அவன் {துரியோதனன்}, மனத்தில் சபாமண்டபத்தையும், ஞானமுள்ள யுதிஷ்டிரனின் ஒப்பற்ற செழிப்பையுமே நினைத்துச் சென்றான்.(19) திருதராஷ்டிரனின் மகனான துரியோதனன், இப்படியே தனது நினைப்புகளில் மூழ்கி சுபலனின் மகனுடன் பேசாமல் வந்தான். அவன் {சகுனி} தொடர்ந்து பேச முயிற்சித்தாலும் ஒரு வார்த்தையும் பேசாமல் வந்தான்.(20) 

நினைவு தப்பி இருக்கும், அவனைக் கண்ட சகுனி, “ஓ துரியோதனா, நீ ஏன் பெருமூச்செறிகிறவன் போல இப்படிச் செல்கிறாய்?” என்று கேட்டான்.(21)

துரியோதனன், “ஓ மாமா, சிறப்புமிகுந்த அர்ஜுனனின் ஆயுதங்களின் வலிமையால் யுதிஷ்டிரன் முழு உலகத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதையும், பிருதையின் {குந்தியின்} மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} வேள்வி, தேவர்களில் புகழ்வாய்ந்த சக்ரனின் {இந்திரனின்} வேள்வி போல இருந்ததையும் கண்டு,(22,23) பகலும், இரவுமாக பொறாமையால் எரிந்து, கோடைகாலத்தில் {ஆனி, ஆடி மாதங்களில்} வற்றிவிடும் ஆழமற்ற குளத்தைப் போன்றவனாக நான் இருக்கிறேன்.(24) சத்வதர்களின் தலைவனால் {கிருஷ்ணனால்} சிசுபாலன் கொல்லப்பட்ட போது, சிசுபாலன் பக்கம் நின்று பேச ஒரு ஆண் மகனும் இல்லாததைக் கண்டீரா?(25) 

பாண்டவர்களெனும் நெருப்பால் எரிக்கப்பட்டவர்களைப் போல இருந்த அவர்கள் அனைவரும் அந்தக் குற்றத்தை மன்னித்தார்களே; யாரால் அதை மன்னிக்க முடியும்?(26) வாசுதேவனால் {கிருஷ்ணனால்} செய்யப்பட்ட முறையற்ற அந்தப் பெருஞ் செயல், பாண்டுவின் சிறப்புமிகுந்த மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} பலத்தால் வெற்றியடைந்தது.(27) பல ஏகாதிபதிகள் ஏதோ வைசியர்கள் கப்பம் கட்டுவதுபோல, பல்வேறு பரிசுகளைக் குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரனுக்காகக் கொண்டு வந்தார்களே.(28) பிரகாசமிக்க யுதிஷ்டிரனின் செல்வத்தைக் கண்ட பிறகு, நான் பொறாமை கொள்ளக்கூடாது என்று எவ்வளவுதான் கருதினாலும், எனது இதயம் பொறாமையால் பற்றி எரிகிறது” {என்றான் துரியோதனன்}.(29)

இப்படித் தனது நிலையைப் பிரதிபலித்த துரியோதனன், நெருப்பால் சுடப்பட்டது போல காந்தார மன்னனிடம் {சகுனியிடம்} மறுபடியும் பேசினான்.(30) அவன் {துரியோதனன்}, “நான் சுடர்விட்டு எரியும் நெருப்பில் விழப்போகிறேன், அல்லது நஞ்சை விழுங்கப் போகிறேன், அல்லது நீரில் மூழ்கப்போகிறேன்.(31) ஆற்றல்மிக்க ஆண்மை கொண்ட எந்த மனிதன்தான் உலகத்தில் தனது எதிரிகள் செழிப்பிலும், தான் வறுமையிலும் வாழத் தாங்கிக் கொள்வான்?(32) எனவே, (எதிரிகளின்) இந்த செழிப்பையும், நற்பேற்றையும் கண்டும் தாங்கிக் கொண்டிருக்கும் நான் பெண்ணுமல்ல, பெண்ணல்லாதவனுமல்ல, ஆணுமல்ல, ஆணல்லாதவனுமல்ல.(33) உலகத்தின் மீதான அவர்களது {பாண்டவர்களது} ஆட்சி உரிமையையும், அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} இருக்கும் பரந்த மக்கள் கூட்டத்தையும், அந்த வேள்வியையும் கண்ட என்னைப் போன்ற யார்தான் பொறாமை கொள்ளாமல் இருப்பார்?(34) தனியாக அத்தகைய அரச செழிப்பை என்னால் பெற இயலாது; எனக்கு இந்த விஷயத்தில் உதவி செய்ய எந்தக் கூட்டாளியையும் நான் காணவில்லை. இதன் காரணமாகவே நான் தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறேன்.(35) 

குந்தி மகனின் {யுதிஷ்டிரனின்} தெளிவான பெரும் செல்வச் செழிப்பைக் கண்ட பிறகு, நான் விதியே தலைமையானது என்றும், முயற்சிகள் பலனளிக்காது என்றும் கருதுகிறேன்.(36) ஓ சுபலரின் மகனே {சகுனியே}, முன்பு நான் அவனை {யுதிஷ்டிரனை} அழிக்க முயன்றேன். ஆனால் எனது முயற்சிகள் எல்லாவற்றையும் முறியடித்து, குளத்திற்குள் முளைக்கும் தாமரையென அவன் {யுதிஷ்டிரன்} செழிப்பில் வளர்ந்திருக்கிறான்.(37) இதன் காரணமாகவே நான் விதியை முதன்மையாகவும், முயற்சிகளைக் கனியற்றதாகவும் கருதுகிறேன். திருதராஷ்டிரனின் மகன்கள் சிதைவடைந்து வருகிறார்கள், பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறார்கள்.(38) பாண்டவர்களின் செழிப்பையும், சபா மண்டபத்தையும், அந்த வேலைக்காரர்கள் சிரித்ததையும் கண்டு எனது இதயம் நெருப்பில் இருப்பதைப் போல பற்றி எரிகிறது.(39) எனவே, ஓ மாமா, நான் ஆழ்ந்த துயரத்தில் இருப்பதையும், பொறாமையால் நிறைந்திருப்பதையும் அறிந்து கொண்டு, திருதராஷ்டிரரிடம் இது குறித்து சொல்வீராக”, என்றான் {துரியோதனன்}.(40)

சகுனியின் திட்டம் – சபாபர்வம் பகுதி 47-(தியூத பர்வம் – 03)-சகுனி, யுதிஷ்டிரனைப் பார்த்துப் பொறாமை கொள்ளாதே என்று துரியோதனனுக்கு அறிவுறுத்துவது; தனது நண்பர்களுக்கும், தனது அணி தலைவர்களுக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல், பாண்டவர்களின் செல்வத்தை அபகரிக்க துரியோதனன் திட்டம் கேட்பது; சகுனி அதற்கு ஒரு வழி சொல்வது…

சகுனி சொன்னான், “ஓ துரியோதனா, நீ யுதிஷ்டிரனிடம் பொறாமை கொள்ளக் கூடாது. பாண்டுவின் மகன்கள் அவர்களுக்குத் தகுதியான நற்பேறையே அனுபவிக்கிறார்கள்.(1) ஓ எதிரிகளைக் கொல்பவனே {துரியோதனா}, ஓ பெரும் மன்னா, எண்ணற்ற திட்டங்களைத் தீட்டினாலும் உன்னால் அவர்களை {பாண்டவர்களை} அழிக்க முடியவில்லை. அத்திட்டங்களில் பலவற்றை உன்னால் செயல்படுத்தவே முடியவில்லை. அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்} நற்பேற்றால் அவை அனைத்திலும் இருந்து தப்பித்தனர்.(2,3) அவர்கள் {பாண்டவர்கள்} திரௌபதியை மனைவியாய் அடைந்து, துருபதன், துருபதனின் மகன்கள், வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகியோரை கூட்டாளிகளாய் அடைந்து, இந்த உலகத்தை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வர அவர்கள் உதவியைப் பெற்றிருக்கிறார்கள்.(4) 

ஓ மன்னா {துரியோதனா}, அவர்கள் வஞ்சனையின்றி தங்கள் தந்தைவழி {பாண்டுவின்} நாட்டின் பங்கை அடைந்து தங்கள் சக்தியாலேயே வளர்ந்திருக்கிறார்கள். இதில் நீ வருத்தமடைய என்ன இருக்கிறது?(5) ஹஸ்தாசனனை {அக்னியை}[1]  நிறைவடையச் செய்த தனஞ்சயன் {அர்ஜுனன்} காண்டீபத்தையும், வற்றாத அம்பறாத்தூணிகள் இரண்டையும், பல தெய்வீக ஆயுதங்களையும் அடைந்தான்.(6) அந்தத் தனித்தன்மை வாய்ந்த வில்லுடன், தனது கரத்தின் பலத்தையும் சேர்த்து உலக மன்னர்கள் அனைவரையும் அவனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறான். இதில் நீ வருத்தமடைய என்ன இருக்கிறது?(7)

எதிரிகளைக் கொல்பவனும், இருகைகளையும் சம திறனுடன் இயக்குபவனுமான அர்ஜுனன், மயாசுரனைத்[2] தீயில் இருந்து காப்பாற்றி, தனக்கு அந்த சபா மண்டபத்தைக் கட்டித் தர அவனை ஏற்பாடு செய்தான்.(8) இதனாலேயே மயனின் கட்டளையின் பேரில், கடும் முகம் கொண்ட ராட்சசர்களும், கின்னரர்கள் என்று அழைக்கப்பட்டவர்களும் அந்த சபா மண்டபத்தைக் கட்டுவதில் அவர்களை ஆதரித்தனர். இதில் நீ வருத்தப்பட என்ன இருக்கிறது?(9) ஓ மன்னா, உனக்கு கூட்டாளிகளே இல்லை என்று நீ சொன்னாய். ஓ பாரதா {துரியோதனா}, இது உண்மை இல்லை. உனது தம்பிகளான இவர்கள் அனைவரும் உனக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறார்கள்.(10) பெரும் வில்லைத் தாங்கும் துரோணர், அவரது மகன் {அஸ்வத்தாமன்}, ராதையின் மகன் கர்ணன், பெரும் போர் வீரரான கௌதமர் (கிருபர்),(11) நானும் எனது சகோதரர்களும், மன்னன் சௌமதத்தி ஆகியோர் உனக்குக் கூட்டாளிகளாக இருக்கிறோம். இவர்கள் அனைவருடன் ஒன்றிணைந்து இந்த முழு உலகத்தையும் வெற்றி கொள்வாயாக” என்றான் {சகுனி}.(12)

துரியோதனன், “ஓ மன்னா, உமக்குத் நிறைவுண்டாகுமானால், நான் உம்மையும் இந்த வீரர்களையும் வைத்து பாண்டவர்களை வெற்றி கொள்வேன்.(13) நான் அவர்களை {பாண்டவர்களை} இப்போது வீழ்த்தினால், இந்த உலகமும் அதில் இருக்கும் அனைத்து ஏகாதிபதிகளும் எனதாவார்கள், அனைத்து செல்வங்களும் நிரம்பிய அந்த சபா மண்டபத்துடன் கூடிய வீடும் எனதாகும்”, என்றான் {துரியோதனன்}.(14)

சகுனி, “தனஞ்சயன் {அர்ஜுனன்}, வாசுதேவன் {கிருஷ்ணன்}, பீமசேனன், யுதிஷ்டிரன், நகுலன், சகாதேவன், தனது மகன்கள் இருவருடன் கூடிய துருபதன்(15) ஆகியோரை தேவர்களாலும் போரில் வீழ்த்த முடியாது. அவர்கள் போரில் திளைப்பவர்களும், பெரும் வில் படைத்தவர்களும், பெரும் வீரர்களுமாவர்.(16) ஆனால், ஓ மன்னா {துரியோதனா}, யுதிஷ்டிரனை வீழ்த்தும் வழிகள் எனக்குத் தெரியும். அதைக் கேட்டு, அதன்படியே நடப்பாயாக”, என்று பதிலுரைத்தான் {சகுனி}.(17)

துரியோதனன், “ஓ மாமா, நமது நண்பர்களுக்கும், சிறப்புமிக்க மனிதர்களான வேறு சிலருக்கும் ஆபத்தில்லாமல் அவர்களை வீழ்த்த ஏதாவது வழியிருந்தால் எனக்குச் சொல்வீராக” என்றான்.(18)

சகுனி, “குந்தியின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு}, பகடை விளையாட்டில் விருப்பம் அதிகம், ஆனால் எவ்வாறு விளையாடுவது என அவனுக்குத் தெரியாது. அந்த மன்னனை {யுதிஷ்டிரனை} விளையாட அழைத்தால், அவனால் மறுக்க முடியாது.(19) நான் பகடையில் திறன் பெற்றவன். இக்காரியத்தில் {பகடை விளையாட்டில்} உலகத்தில் எனக்கு நிகர் யாருமில்லை. ஏன், ஓ குருவின் மகனே {துரியோதனா}, மூவுலகத்திலும் கிடையாது. எனவே, அவனை {யுதிஷ்டிரனை} பகடை விளையாட அழைப்பாயாக.(20) பகடையில் திறன் பெற்ற நான், ஓ மனிதர்களில் காளையே {துரியோதனா}, அவனது {யுதிஷ்டிரனது} நாட்டையும், அவனது {யுதிஷ்டிரனது} செல்வங்களையும் உனக்காக வெல்வேன்.(21) ஆனால், ஓ துரியோதனா, இவை அனைத்தையும் மன்னரிடம் (திருதராஷ்டிரரிடம்) சொல்வாயாக. உனது தந்தையின் {திருதராஷ்டிரனின்} ஆணையின் பேரில், நான் யுதிஷ்டிரனின் உடைமைகள் அனைத்தையும் நிச்சயம் வெல்வேன்”, என்றான்.(22)

துரியோதனன், “ஓ சுபலரின் மகனே {சகுனி மாமனே}, குருக்களின் தலைவரான திருதராஷ்டிரரிடம் நீரே முறையாக இவை யாவற்றையும் சொல்வீராக. என்னால் அவ்வாறு செய்ய இயலாது” என்றான்.(23)

திட்டம் செயல்வடிவம் பெற்றது – சபாபர்வம் பகுதி 48-(தியூத பர்வம் – 04)-சகுனி திருதராஷ்டிரனிடம் துரியோதனனின் துயர் விசாரிக்கச் சொல்வது; திருதராஷ்டிரன் துரியோதனனிடம் என்ன குறை என்று விசாரிப்பது; துரியோதனன் தனது பொறாமையைப் பற்றிக் கூறுவது; சகுனி தனது திட்டத்தை வெளிப்படுத்துவது; திருதராஷ்டிரன் விதுரனிடம் கலந்தாலோசிப்பதாகச் சொல்வது; துரியோதனன் அதற்கு மறுப்பு தெரிவிப்பது; விதுரனிடம் ஆலோசிக்காமலே ஒரு தீர்மானத்திற்கு வருவது..

வைசம்பாயனர் சொன்னார், “ஓ மன்னா {ஜனமேஜயா}, மன்னன் யுதிஷ்டிரனின் ராஜசூய வேள்வியால் ஈர்க்கப்பட்ட சுபலனின் மகன் சகுனி, துரியோதனனின் நோக்கங்களை அறிந்து, சபா மண்டபத்தில் இருந்து வெளியே வரும்போது, அவனுக்கு {துரியோதனனுக்கு} விரும்பியவாறு பேசியபடியே, பெரும் ஞானமுள்ள திருதராஷ்டிரனை அணுகினான். அங்கே (அரியணையில்) அமர்ந்திருந்த அந்தக் கண்ணில்லா ஏகாதிபதியிடம் {திருதராஷ்டிரனிடம்},(1-3) “ஓ பெரும் மன்னா, ஓ பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரியோதனன் நிறமிழந்து மங்கி, உடல் மெலிந்து, மன அழுத்தத்துடன் கவலைக்கு இரையாகிறான்.(4) பகைவனின் காரணமாக உமது மூத்த மகனுக்கு {துரியோதனனுக்கு} நேர்ந்த துயரத்தை நீர் விசாரிக்காமல் இருப்பது ஏன்?” என்று கேட்டான் {சகுனி}.(5)

திருதராஷ்டிரன், “துரியோதனா, ஓ குருகுலத்தின் மகனே, உனது பெருந்துயருக்கான காரணம் என்ன? நான் கேட்கலாம் என்றால் எனக்குக் காரணத்தைச் சொல்வாயாக.(6) இந்தச் சகுனி நீ நிறமிழந்து மங்கி, உடல் மெலிந்து, மன அழுத்தத்துடன் கவலைக்கு இரையாவதாகச் சொல்கிறான். உனது கவலைக்கு என்ன காரணம் என்பது எனக்குத் தெரியவில்லை.(7) என்னுடைய இந்தப் பெரும் செல்வம் உனது கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. உன் தம்பிகளும், நம் உறவினர்கள் அனைவரும் உனக்கு ஏற்பில்லாத எதையும் செய்யவில்லை.(8) சிறந்த ஆடைகளையே நீ உடுத்துகிறாய், இறைச்சியுடன் சேர்ந்த சிறந்த உணவையே நீ உண்கிறாய், சிறந்த குதிரையே உன்னைச் சுமக்கிறது. மங்கச் செய்து உன்னை உடல் மெலியச் செய்வது எது?(9) விலையுயர்ந்த படுக்கைகளும், அழகான மங்கையரும், ஆசனங்கள் மற்றும் அறைகலன்களுடன் கூடிய மாளிகைகளும், மகிழ்ச்சிதரத்தக்க விளையாட்டுகளும், உனது உத்தரவுக்காக காத்திருக்கின்றன என்பதில் ஐயமில்லை.(10) தேவர்களுக்குரிய வசதிகள் அனைத்தும் உனக்கும் இருக்கின்றன. எனவே, ஓ பெருமையுடையவனே, ஓ மகனே {துரியோதனா}, ஏதுமில்லாதவன் போல நீ ஏன் வருத்தப்படுகிறாய்?” என்று கேட்டான்[1].(11)

(கும்பகோணம் பதிப்பில் இதற்கு மேலும், “அப்பா, தாய்தந்தையர்களால் புத்ரனுக்குச் செய்யத்தக்கவற்றுள் எது சிறந்ததாக நினைக்கப்பட்டிருக்கிறதோ அதையும், நம்முடைய குலத்தின் ராஜ்யலக்ஷ்தி எல்லாவற்றையும் நீ அடைந்திருக்கிறாய். தேவலோகத்தில் தேவேந்திரனுக்கு இருப்பது போலவே எல்லா விருப்பங்களும், பலவகை சிறந்த உணவுகளும், பானங்களும் உனக்கு இருக்கின்றன. ஏன் வ்யஸனப்படுகிறாய்? நிருக்தம் சந்தம் முதலான ஆறு அங்கங்களோடு கூடிய வேதத்தையும் அஸ்திர வித்தையையும், சாஸ்திரங்களையும், பத்து இலக்கணங்களுடன் கிருபாச்சாரியரிடம் படித்துத் தேர்ந்திருக்கிறாய்; பலராமரிடத்திலும், கிருபரிடத்திலும், துரோணரிடத்திலும் அஸ்த்ர வித்தை கற்றிருக்கிறாய்; நீ ஸஹோதரர்களில் ஜ்யேஷ்டன்; ராஜ்யத்திலிருக்கிறாய்; புத்திரனே, ஏன் துயரப்படுகிறாய்? புத்திரனே, நீ பிரபுவாயிருந்து கொண்டு ஸூதர்களாலும், மாகதர்களாலும் துதிக்கப்பெற்று ஸாமான்ய ஜனங்களுக்குக் கிடையாத உணவு உடைகளை மிகுதியாக அனுபவிக்கிறாய். எல்லாந்தெரிந்தவனே, இவ்வுலகத்தில் மற்றொருவன் மேன்மையையடைந்திருக்கானென்பது உன் வ்யஸனத்திற்குக் காரணமாவதெப்படி? அதை நான் கேட்கிறேன்; சொல்” என்றிருக்கிறது. பத்து இலக்கணங்களுடன் கூடிய சாஸ்திரங்கள் என்பதன் அடிக்குறிப்பில், “1.ஸ்வரம், 2.வர்ணம், 3.பதம், 4.தாது, 5.வேற்றுமையுருபுகள், 6.வினையுறுப்புகள், 7.கிருதபத்யயம், 8.தத்திதபத்யயம், 9.காரகம், 10.ஸமாஸம்” என்றிருக்கிறது.)

துரியோதனன், “நான் பாவியைப் போல உண்டு உடுத்தி கடும் பொறாமைக்கு இரையாகி எனது காலத்தைப் போக்கி வருகிறேன்.(12) பகைவனின் செருக்கைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனும், தனது குடிகளை அந்தப் பகைவனின் கொடுங்கோன்மையிலிருந்து விடுவிக்க விரும்புபவனும், அந்தப் பகைவனைக் கொன்று வாழ்பவனுமான ஒருவனே நல்ல ஆண்மகனென அழைக்கப்படுகிறான்.(13) ஓ பாரதரே, மனநிறைவும், செருக்கும் (ஒருவனுடைய) செழிப்பை அழித்துவிடும். கருணை மற்றும் அச்சம் என்ற இரு குணங்களைக் கொண்டவனால் ஒருபோதும் உயர முடியாது.(14) யுதிஷ்டிரனின் செழிப்பைக் கண்டபிறகு, நான் அனுபவிப்பவை ஏதும் எனக்கு நிறைவைத் தரவிலை. மிகுந்த பிரகாசத்தைக் கொண்ட குந்தி மகனின் {யுதிஷ்டிரனின்} செழிப்பு என்னை மங்கச் செய்கிறது.(15) அந்தச் செழுமை என் கண்ணெதிரே இல்லையென்றாலும், பகைவனின் செழுப்பையும், எனது வறுமையையும் நான் காண்கிறேன். எனவே நான் நிறம் இழந்து, சோகமாகி, மங்கிப் போய் மெலிந்திருக்கிறேன்.(16) 

யுதிஷ்டிரன் இல்லற வாழ்வு வாழும் எண்பத்தெட்டாயிரம் ஸ்நாதக பிராமணர்களை ஆதரிக்கிறான். அவர்கள் ஒவ்வொருவருக்கும் முப்பது அடிமைப் பெண்களைக் கொடுத்திருக்கிறான்.(17) இது போக, ஆயிரக்கணக்கான பிராமணர்கள் அவனது அரண்மனையில் தங்கத் தட்டுகளில் உணவு உண்கின்றனர்.(18) காம்போஜ நாட்டு மன்னன் அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} கறுப்பாகவும், சிவப்பாகவும் கணக்கிலடங்கா கதலி மான்களின் தோல்களையும், அற்புதமான வடிவமைப்புகள் கொண்ட விலையுயர்ந்த சால்வைகளையும் (கப்பமாக) அனுப்பியிருக்கிறான். நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான பெண் யானைகளும், முப்பதாயிரம்  பெண் ஒட்டங்கங்களும் அவனது அரண்மனைக்குள்ளேயே உலவுகின்றன. அவை அனைத்தையும் இந்தப் பூமியின் மன்னர்கள் பாண்டவர்களின் தலைநகருக்கு {காண்டவ பிரஸ்தம் / இந்திரப் பிரஸ்தம்} காணிக்கையாகக் கொண்டு வந்தனர்.(19,20) ஓ பூமியின் தலைவா, அந்த முதன்மையான வேள்விக்கு மன்னர்கள் தங்கக் குவியல்களைக் குந்தியின் மகனுக்காக {யுதிஷ்டிரனுக்காக} எடுத்து வந்தனர்.(23)

பாண்டுவின் புத்திசாலி மகன்களின் வேள்விக்காகக் கொண்டுவரப்பட்ட  செல்வத்தைப் போல வேறு எந்த வேள்விக்கும் கொண்டு வரப்பட்டதாக நான் கண்டதும் கேட்டதும் இல்லை..(22) ஓ மன்னா, எதிரியிடம் இருக்கும் அபிரிமிதமான செல்வத்தைக் கண்ட பிறகு, என்னால் மன அமைதி பெற முடியவில்லை.(23) நூற்றுக்கணக்கான பிராமணர்கள் யுதிஷ்டிரனின் கொடையால் ஆதரிக்கப்பட்டு, {அவன் கொடுத்த} பசுக்களால் வந்த செல்வத்தை அடைந்து, அந்த மாளிகையின் வாயிலில் மூவாயிரம் கோடி காணிக்கைகளுடன் நின்றனர்.(24) அவர்களை வாயில் காப்போர் உள்ளே விடாமல் தடுத்துக் கொண்டிருந்தனர். அழகான தங்கக் கமண்டலங்களில் நெய்யைக் கொண்டவந்த அவர்களுக்கு அரண்மனைக்குள் நுழைய அனுமதி கிடைக்கவில்லை.(25) பெருங்கடலே வெள்ளைத் தாமிர {வெண்கலப்} பாத்திரத்தில் தனது நீரால் உற்பத்தி செய்யப்பட்ட அமுதத்தை நிரப்பிக் கொண்டு வந்தது. அந்த அமுதம் சக்ரனின் வருடந்திர செடிகள் மற்றும் மலர்களால் உற்பத்தி செய்வதை விட உயர்ந்ததாக இருந்தது.(26) (வேள்வியின் முடிவில்) வாசுதேவன் {கிருஷ்ணன்}, அற்புதமான சங்கைக் {சங்கு} கொண்டு வந்து, எண்ணிலடங்கா ரத்தினங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கத்தாலான ஆயிரம் பாத்திரங்களில் இருந்த கடல் நீரை எடுத்து பிருதையின் {குந்தியின்} மகனைக் {யுதிஷ்டிரனைக்} நீராட்டினான்.(27) 

இவை யாவற்றையும் கண்ட நான் பொறாமையால் நோய் கொண்டேன். அந்தப் பாத்திரங்கள் கிழக்கு மற்றும் தெற்கு கடல்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் மனிதர்கள் தோளில் சுமந்தபடி அதை மேற்கு கடலுக்கும் கொண்டு சென்றனர். ஓ மனிதர்களில் காளையே, ஓ தந்தையே {திருதராஷ்டிரரே}, பறவைகள் மட்டுமே செல்லக்கூடிய வடக்கு பகுதிகளுக்கு அர்ஜுனன் சென்று, அங்கிருந்து பெரும் அளவிலான செல்வங்களைக் கொண்டு வந்தான். இன்னுமொரு அற்புதமான நிகழ்வையும் உமக்கு உரைக்கிறேன். கேட்பீராக.(28-30) நூறாயிரக்கணக்கான பிராமணர்கள் உணவூட்டப்பட்டபோது, அதைத் தெரிவிப்பதற்கென்று ஒவ்வொரு நாளும் சங்க நாதங்கள் தொடர்ச்சியாக முழங்கப்பட்டன.(31) ஆனால், ஓ பாரதா  நான் தொடர்ந்து முழக்கப்பட்ட சங்கநாதங்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த ஒலியைக் கேட்டு எனது உடலின் மயிர்க்கால்கள் சிலிர்த்தன.(32) 

ஓ பெரும் மன்னா, மிகப்பெரிய சுற்றுச் சுவருக்குள், கணக்கிலடங்கா ஏகாதிபதிகள் பார்வையாளர்களாக நிரம்பி, மேகமற்ற வானில் தெரியும் நட்சத்திரங்களைப் போல மின்னி பார்ப்பதற்கு அழகாக இருந்தனர்.(33) ஓ மனிதர்களின் மன்னா, ஞானமுள்ள பாண்டு மகனுக்காக {யுதிஷ்டிரனுக்காக}, அந்த வேள்விக்கு வந்த ஏகாதிபதிகள் அனைத்து வகையான செல்வங்களுடனும் வந்தனர்.(34) அப்படி வந்த மன்னர்கள் வைசியர்களைப் போல, பிராமணர்களுக்கு உணவு பரிமாறினார்கள். ஓ மன்னா, யுதிஷ்டிரனிடம் நான் கண்ட செழிப்பை, தேவர்களின் தலைவனிடமோ, யமனிடமோ, வருணனிடமோ,(35) குஹ்யர்களின் தலைவனிடமோ {குபேரனிடமோ} கூட காண முடியாது. பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} பெரும் செழிப்பைக் கண்டு என் இதயம் எரிகிறது. என்னால் அமைதியை அனுபவிக்க முடியவில்லை” என்றான் {துரியோதனன்}.(37)

துரியோதனனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சகுனி, “ஓ வாய்மையை ஆற்றலாகக் கொண்டவனே {துரியோதனா}, நீ கண்ட பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} ஒப்பற்ற செல்வத்தை எப்படி அடையலாம் என்பதைக் கேட்பாயாக.(37) ஓ பாரதா {துரியோதனா}, நான் பகடையில் திறன் பெற்றவன், உலகத்தில் அனைவருக்கும் மேன்மையானவன் {பகடையில்}, என்னால் வெற்றியை உறுதிகூற முடியும். {பாய்ச்சிகையின்} ஒவ்வொரு வீச்சுக்கும் வெற்றியை உறுதியாகச் சொல்ல முடியும். எப்போது என்ன பகடை வீசுவது, எப்போது வீசக்கூடாது என்பது எனக்குத் தெரியும். எனக்கு இந்த {பகடை} விளையாட்டில் சிறந்த ஞானம் உண்டு.(38) குந்தியின் மகனுக்கும் பகடை விளையாட விருப்பம் உண்டு என்றாலும் அவனுக்கு அதில் திறன் கிடையாது. விளையாடவோ அல்லது போரிடவோ அழைத்தால், அவன் நிச்சயம் வருவான்.(39) நான் ஒவ்வொரு வீச்சுக்கும் வஞ்சம் பயின்று அவனை {யுதிஷ்டிரனை} வீழ்த்துவேன். அவன் செல்வங்கள் அனைத்தையும் வெல்வேன், என்று உறுதி கூறுகிறேன். ஓ துரியோதனா! பிறகு நீ அவற்றை அனுபவிக்கலாம்” என்றான் {சகுனி}”.(40)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “மன்னன் துரியோதனன், சகுனியால் இப்படி சொல்லப்பட்டதும், சிறிது நேரத்தைக் கூட கடத்தாமல் திருதராஷ்டிரனிடம்,(41) “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பகடையில் {சொக்கட்டானில்} திறன்பெற்ற இந்தச் சகுனி, பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} செல்வங்களைப் பகடையில் வெல்லத் தயாராக இருக்கிறார். நீர் அவருக்கு அப்படிச் செய்ய அனுமதி வழங்குவீராக” என்றான் {துரியோதனன்}.(42)

திருதராஷ்டிரன், “நான் எப்போதும் பெரும் ஞானம் உள்ள எனது அமைச்சன் க்ஷத்தனின் {விதுரனின்} ஆலோசனைகளையே பின்பற்றுகிறேன். அவனிடம் ஆலோசித்த பிறகு நான் எனது முடிவை உங்களுக்குச் சொல்கிறேன்.(43) பெரும் முன் நோக்கும் திறனைக் {தீர்க்கதரிசனம்} கொண்டவனும், கண்களில் நீதியைக் கொண்டவனுமான அவன், இரு தரப்புக்கும் எது நல்லது, எது சரி என்பதையும், இவ்விஷயத்தில் எது செய்யப்பட வேண்டும் என்பதையும் சொல்வான்” என்றான் {திருதராஷ்டிரன்}.(44)

அதற்கு துரியோதனன், “நீர் க்ஷத்தரிடம் {விதுரரிடம்} ஆலோசனை கேட்டால், அவர் உம்மைத் தடுத்து விடுவார். நீர் இதைச் செய்யாமல் விட்டால், தந்தை திருதராஷ்டிரரே, நான் நிச்சயமாகத் தற்கொலையே செய்வேன்.(45) ஓ மன்னா, நான் இறந்த பிறகு, விதுரர் மகிழ்ச்சியாக இருப்பார். பிறகு நீர் அனைத்து உலகத்தையும் அனுபவிக்கலாம். என்னிடம் உமக்கு என்ன தேவை இருக்கிறது” என்றான் {துரியோதனன்}”.(46)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “துரியோதனனால் சொல்லப்பட்ட இந்தத் துயரமிக்க வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், துரியோதனின் உத்தரவை ஏற்று, தனது பணியாட்களை அழைத்து,(47) “கலைஞர்களைக் கொண்டு, ஆயிரம் தூண்களுடன் கூடியதும், நூறு  கதவுகளைக் கொண்டதும், இனிமையானதும், அகன்றதுமான ஓர் அழகிய மாளிகையைக் கட்டுங்கள்.(48) தச்சர்களையும் இணைப்பாளர்களையும் {சிற்பிகளையும்} கொண்டு விலையுயர்ந்த கற்களை அதன் சுவர்களில் பதியுங்கள். அதை அழகாக்கி, அங்கே செல்வதற்கு வசதியாக அனைத்துக் காரியங்களையும் முடியுங்கள்” என்றான்.(48)

ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, துரியோதனனைத் தணிக்க ஒரு தீர்மானத்துக்கு வந்த மன்னன் திருதராஷ்டிரன், விதுரனை அழைத்துவர தூதுவர்களை அனுப்பினான்.(51) விதுரனைக் கலந்தாலோசிக்காமல் அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} எந்த முடிவையும் எடுத்ததில்லை. ஆனால், இவ்விஷயத்தைப் பொறுத்தவரை, சூதின் தீமையை அறிந்தும் அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} மகனிடம் கொண்ட அன்பினால் அதில் ஈர்ப்புடன் இருந்தான்.(52) இருப்பினும் புத்திசாலி விதுரன் இது குறித்து அறிந்ததும், கலி காலம் வந்து விட்டது என்று அறிந்து கொண்டான். அழிவின் தொடக்கத்தை உணர்ந்து விரைவாக திருதராஷ்டிரனிடம் வந்தான்.(53) விதுரன் தன் சிறப்புக்குரிய அண்ணனை {திருதராஷ்டிரனை} அணுகி, அவனது பாதம் பணிந்து இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(53) 

அவன் {விதுரன்}, “ஓ மேன்மையான மன்னா {அண்ணா திருதராஷ்டிரா}, நீர் எடுத்திருக்கும் தீர்மானத்தை நான் அங்கீகரிக்கவில்லை. ஓ மன்னா, இந்தச் சூதாட்டத்தின் பொருட்டு, உமது பிள்ளைகளுக்குள் சச்சரவு வரும் வகையில் செயல்படாதீர்” என்றான்.(54)

திருதராஷ்டிரன், “ஓ க்ஷத்தா {விதுரா}, தேவர்கள் நம்மிடம் கருணையோடு இருந்தால், கண்டிப்பாக எனது மகன்களுக்குள் சச்சரவு ஏற்படாது.(55) எனவே, மங்கலமானதோ இல்லையோ, நன்மையானதோ இல்லையோ, நட்பு ரீதியான இந்தப் பகடை ஆட்டம் நடக்கட்டும். இது நிச்சயம் விதியால் நமக்கு விதிக்கப்படுகிறது.(56) ஓ பாரதக் குலத்தின் மகனே {விதுரா}, நான், துரோணர், பீஷ்மர் ஆகியோர் அருகில் இருக்கும்போது, விதியால் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் கூட என்ன தீமை நடந்துவிட முடியும்.(57) எனவே, காற்றின் வேகம் கொண்ட குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் இன்றே காண்டவப்பிரஸ்தம் சென்று, உன்னுடன் யுதிஷ்டிரனை அழைத்து வருவாயாக.(58) ஓ விதுரா, இதுவே எனது தீர்மானம் என்பதை நான் உனக்குச் சொல்கிறேன். எனக்கு வேறு எதையும் சொல்லாதே. நமக்கு அனைத்தையும் தரும் விதியே வலிமையானது என நான் கருதுகிறேன்” என்றான் {திருதராஷ்டிரன்}.(59) 

திருதராஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு தனது குலம் அழிந்தது என்று கருதிய விதுரன், பெரும் ஞானம் கொண்ட பீஷ்மரிடம் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(60)

திரௌபதி சிரித்தாளா? – சபாபர்வம் பகுதி 49-(தியூத பர்வம் – 05)-ஜனமேஜயன் கேட்டுக்கொண்டதற்கேற்ப வைசம்பாயனர், துரியோதனன் திருதரஷ்டிரனிடம் சோகமாகப் பேசியதை முழுமையாகச் சொல்வது; பகடையாட்டம் வேண்டாம் என்று திருதராஷ்டிரன் துரியோதனனிடம் சொல்வது; விதுரனின் ஞானம் குறித்து சொல்வது; துரியோதனன் தனது தரப்பு சோகங்களைச் சொல்வது–

ஜனமேஜயன், “ஓ வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, எனது முப்பாட்டன்களான பாண்டுவின் மகன்களைத் துயரத்தில் ஆழ்த்திய, பங்காளிகளுக்குள் தீமையை விளைவித்த பகடை விளையாட்டு எப்படி நடைபெற்றது?(1) அந்தச் சபையில் எந்தெந்த மன்னர்கள் இருந்தனர். அவர்களில் அந்த விளையாட்டை அங்கீகரித்தவர்கள் யார்? அவர்களில் ஏற்காதவர் யார்?(2) ஓ பாவமற்றவரே {வைசம்பாயனரே}, ஓ மறுபிறப்பாளர்களின் {பிராமணர்களின்} தலைவரே, உலகத்தின் அழிவுக்குக் காரணமாக இருந்த இது குறித்து நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்.” என்றான்”.(3)

சௌதி சொன்னார், “இப்படி மன்னனால் {ஜனமேஜயனால்} கேட்கப்பட்ட போது, முழு வேதங்களையும் அறிந்தவரும், பெரும் சக்தி கொண்டவருமான வியாசரின் சீடர் {வைசம்பாயனர்}, நடந்தது அத்தனையும் விவரமாகக் கூறினார்.(4)

வைசம்பாயனர் சொன்னார், “ஓ பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, ஓ பெரும் மன்னா {ஜனமேஜயா}, நீ கேட்க விரும்பினால், நான் மறுபடி அனைத்தையும் விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(5)

விதுரனின் கருத்தை உறுதிப்படுத்திக் கொண்ட அம்பிகைமகன் திருதராஷ்டிரன், துரியோதனனைத் தனிமையில் அழைத்து,(6) “ஓ காந்தாரியின் மகனே, பகடையாட்டம் {த்யூதம்} வேண்டாம். விதுரன் அதுகுறித்து நன்றாகப் பேசவில்லை. பெரும் ஞானம் கொண்ட அவன், எனக்கு நன்மையல்லாத ஓர் ஆலோசனையை எனக்குச் சொல்லமாட்டான்.(7) விதுரன் எனக்கு அதிக நன்மை தரும் காரியத்தையே சொல்வான் என நான் கருதுகிறேன். ஓ மகனே {துரியோதனா}, அஃது உனது நன்மைக்காகவும் தான் என நான் கருதுவதால், அதையே செய்வாயாக.(8) வாசவனுக்கு {இந்திரனுக்கு} ஆன்ம குருவும், சிறப்புமிகுந்தவரும், கல்விமானும், ஞானியுமான பிருஹஸ்பதி, தேவர்கள் தலைவனுக்கு {இந்திரனுக்கு} விளக்கிச் சொன்ன அனைத்து (அரசியல் நீதிகளின்) அறிவியலையும் விதுரன் அறிவான்.(9) 

ஓ மகனே {துரியோதனா}, விதுரன் அறிவுறுத்துவதை நான் எப்போதும் ஏற்றுக் கொள்வேன். ஓ மன்னா {துரியோதனா}, விருஷ்ணி குலத்தோரின் {யாதவ குலத்தோரின்} மதிப்பிற்குரிய ஞானமுள்ள உத்தவரைப் போல, பெரும் புத்திசாலியான விதுரன், குரு குலத்தில் முதன்மையானவன் என்று கருதப்படுகிறான். ஆகையோல், ஓ மகனே {துரியோதனா}, பகடையாட்டம் வேண்டாம். பகடை வேற்றுமையை உண்டாக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.(10,11) வேற்றுமைகளே ஒரு நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தும். எனவே, ஓ மகனே {துரியோதனா} சூதாடும் உனது திட்டத்தைக் கைவிடுவாயாக. ஓ மகனே {துரியோதனா}, நீ தந்தையும் தாயுமான எங்களிடம் பெற விதிக்கப்பட்ட மூதாதையர்களின் தரம் மற்றும் உடைமைகளை அடைந்தாய். நீ கல்வியறிவு பெற்றவன், அனைத்து பிரிவு ஞானத்திலும் புத்திசாலியாக இருக்கிறாய். நீ உனது பெற்றோரின் வசிப்பிடத்தில் அன்புடனும் பாசத்துடனும் வளர்க்கப்பட்டிருக்கிறாய்.(12,13) 

தம்பிகளுக்கெல்லாம் மூத்தவனாகப் பிறந்து, உனது சொந்த நாட்டுக்குள்ளேயே வாழ்ந்தும் நீ ஏன் உன்னை மகிழ்ச்சியற்றவனாக கருதிக் கொள்கிறாய்? ஓ பலம்வாய்ந்த கரம் கொண்டவனே, சாதாரண மக்களால் பெற முடியாத உள்ளதில் மிகச் சிறந்த உணவையும் ஆடைகளையும் பெறுகிறாய்.(14) நீ ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறாய்? ஓ மகனே {துரியோதனா}, ஓ பெரும் பலம் வாய்ந்த கரம் கொண்டவனே, மக்களாலும் செல்வங்களாலும் நிறைந்த உனது மூதாதையர் நாட்டை ஆண்டு, விண்ணுலகில் இருக்கும் தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போல நீ இருக்கிறாய். நீ ஞானம் கொண்டவனாக இருக்கிறாய். உன்னை மனச்சோர்வுக்குள்ளாக்கியிருக்கும் உனது துன்பத்துக்கான வேர் என்னவாக இருக்கும் என்பதை நீ எனக்குச் சொல்ல வேண்டும்”, என்றான் {திருதராஷ்டிரன்}.(15,16)

துரியோதனன், “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்தையும் (எதிரிகளின் செல்வச் செழிப்பைக்) கண்டும், உண்டும், உடுத்தியும் வரும் நான் பாவம் நிறைந்த இழிந்தவனாவேன். பகைவனின் செழிப்பைக் கண்டும் பொறாமை அடையாதவனை இழிந்தவன் என்றே சொல்கிறார்கள்.(17) ஓ மேன்மையானவரே, இது போன்ற செல்வச்செழிப்பு எனக்குத் நிறைவைத் தரவில்லை. குந்தி மகனின் {யுதிஷ்டிரனின்} பிரகாசமிக்க செழிப்பைக் கண்டு நான் பெருந்துன்பத்தில் இருக்கிறேன்.(18) பூமி முழுமையும் யுதிஷ்டிரனின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைக் கண்டும், உயிரோடு இருக்கும் எனது ஆன்மா வலிமையானதுதான்.(19) நீபர்கள், சித்ரகர்கள், குகுரர்கள், காரஸ்கரர்கள், லோகஜங்கர்கள் ஆகியோர் {ஆகிய அரசர்கள்} யுதிஷ்திரனின் அரண்மனையில் அடிமைகளைப் போல இருக்கின்றனர்.(20) 

இமயம், கடல், கடற்கரைப் பகுதிகள், ரத்தினங்களையும் தங்கத்தையும் தரும் கணக்கற்ற இடங்கள், ஆகியவற்றின் அதிபதிகளும் யுதிஷ்டிரனின் செழிப்பை அங்கீகரித்துள்ளனர்.(21) ஓ ஏகாதிபதி, மூத்தவனாகவும், சிறந்தவனாகக் கருதி மதிப்புடன் வரவேற்கப்பட்டு, (காணிக்கையாக வரும்) ரத்தினங்களையும் நகைகளையும் ஏற்கும் பணியில் நான் நியமிக்கப்பட்டேன்.(22) ஓ பாரதரே, அங்கே இருந்த கூட்டம் கொண்டு வந்திருந்த மதிப்புமிக்க நகைகளின் பெரும் அளவை யாரும் கண்டதில்லை.(23) ஓ மன்னா, அந்தச் செல்வங்களைப் பெற்று பெற்றே எனது கரங்கள் சோர்ந்தன. நான் களைப்புற்ற போது, அந்த மதிப்புமிக்க பொருட்களைக் கொண்டு வந்தவர்கள் நான் இயல்புநிலை அடையும் வரை காத்திருந்தனர்.(24) 

பிந்து {பிந்துசரஸ்) ஆற்றில் இருந்து ரத்தினங்கள் மற்றும் தங்கங்களைக் கொண்டுவந்து, ஏரி போன்ற தரையை கொண்ட மாளிகையை அசுரத்தச்சன் மயன் (பாண்டவர்களுக்காக) பளிங்காலேயே கட்டிக் கொடுத்திருக்கிறான். அங்கு நிறைந்திருந்த (செயற்கை) தாமரைகளைக் கண்டு, ஓ மன்னா, அங்கு நீர் இருக்கிறது என்று தவறுதலாக நினைத்தேன்.(25) (அதைக் கடக்கும் போது) நான் எனது ஆடைகளைத் தூக்கியதைக் கண்ட விருகோதரன் (பீமன்), எதிரியின் செழிப்பைக் கண்டு மயங்கினேன் என்றும், எனக்கு அது போன்ற ரத்தினங்கள் கிடையாது என்றும் கருதி என்னைப் பார்த்து நகைத்தான்.(26) என்னால் முடிந்திருந்தால், ஓ மன்னா, அதன் காரணமாக அங்கேயை விருகோதரனை {பீமனைக்} கொன்றிருப்பேன். ஆனால், ஓ ஏகாதிபதி, ஆனால் நாம் பீமனைக் கொல்ல முயன்றால், நமது நிலையும் சிசுபாலனைப் போலத் தான் ஆகியிருக்கும் என்பதில் ஐயமில்லை.(27,28) 

ஓ பாரதரே, பகைவனால் ஏற்பட்ட அந்த அவமானம் என்னை எரிக்கிறது. மீண்டும் ஒருமுறை, ஓ மன்னா, அதேபோன்ற ஒரு குளம், ஆனால் உண்மையில் அங்கு நீர் நிறைந்திருக்கிறது. நான் அதை பளிங்குத் தரை என்று தவறுதலாக நினைத்து அந்த நீருக்குள் விழுந்தேன்.(29) இதைக் கண்ட பீமனும், அர்ஜுனனும் கேலியாகச் சிரித்தனர். மற்ற மங்கையருடன் வந்த திரௌபதியும் அவர்களது சிரிப்பில் பங்கு கொண்டாள்.(30) அஃது என் இதயத்தை பெரும் துன்பத்துக்கு உள்ளாக்கியது. எனது ஆடைகள் நனைந்தன, மன்னனின் {யுதிஷ்டிரனின்} உத்தரவின் பேரில் பணியாட்கள் வேறு ஆடைகள் கொடுத்தனர். அதுவும் எனக்குப் பெரும் துயரத்தைக் கொடுத்தது.(31) 

ஓ மன்னா, இன்னொரு தவறைக் குறித்தும் சொல்கிறேன் கேளும். சரியாகக் கதவு போலவே இருந்த ஒன்றின் ஊடாக நான் கடந்து செல்ல நினைத்தபோது, அங்கு பாதை இல்லை,(32) நான் சுவற்றில் எனது நெற்றியால் முட்டிக் கொண்டு காயமடைந்தேன். எனக்கு தலையில் அடிபட்டத்தைத் தூரத்திலிருந்தே கண்ட இரட்டையர்களான நகுலனும் சகாதேவனும் ஓடிவந்து அவர்கள் கரத்தால் தாங்கிப் பிடித்து அவர்களுக்கு என்னிடம் உள்ள அக்கறையைக் வெளிப்படுத்தினர்.(33) 

சகாதேவன் மீண்டும் மீண்டும் புன்னகைத்தது போல, ஓ மன்னா, இது தான் கதவு, இந்த வழியாகச் செல்வீராக” என்றான்.[1](35) ஓ மன்னா, நான் அந்த மாளிகையில் கண்ட பல ரத்தினங்களின் பெயர்களைக் கூட கேள்விப்பட்டது இல்லை. இதன் காரணமாகவே எனது இதயம் வலிக்கிறது” என்றான் {துரியோதனன்}.(36)(கும்பகோணம் பதிப்பில், “அங்கே அவ்வாறு அடிபட்ட என்னை, சேர்ந்திருந்த நகுலஸஹதேவர்களிருவரும் தூரத்திலிருந்து பார்த்து வ்யஸனப்பட்டுக் கைகளால் அணைத்தனர். அந்த ஸமயத்தில் ஸஹதேவன், என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு, “திருதராஷ்டிரபுத்திரனே, வாயில் இங்கேயிருக்கிறது; அங்கே போகாதே” என்று அடிக்கடி சொன்னான். அந்த ஸமயத்தில் பீமஸேனனும், “திருதராஷ்டிர புத்திரனே” என்றழைத்து, சிரித்து, “ராஜாவே, வாயில் இங்கே” என்று சொன்னான். அந்த ஸபையில் நான் கண்ட ரத்னங்களுக்குப் பெயர்களைக் கூட இதற்கு முன் நான் கேட்டதில்லை. அதுவும் என் மனத்தைச் சுடுகிறது” என்றிருக்கிறது.)

துரியோதனன் விவரித்த காணிக்கைப் பட்டியல் – சபாபர்வம் பகுதி 50-(தியூத பர்வம் – 06)-ராஜசூய வேள்விக்காக யுதிஷ்டிரனுக்கு காணிக்கையாக வந்த விலை உயர்ந்த பொருட்களைக் குறித்து துரியோதனன் விரிவாக திருதராஷ்டிரனுக்கு உரைத்தது.

துரியோதனன் சொன்னான், “ஓ பாரதரே, பூமியின் மன்னர்கள் அடுத்தடுத்து பாண்டு மகன்களுக்காகக் கொண்டு வந்தவையும், பாண்டவர்களால் சொந்தமாக்கிக் கொள்ளப்பட்டவையும், நான் கண்டவையுமான விலை உயர்ந்த பொருட்களைக் குறித்துச் சொல்கிறேன் கேட்பீராக.(1) எதிரியின் செல்வத்தைக் கண்டு நான் நினைவிழந்து என்னையே மறந்திருந்தேன். ஓ பாரதரே, பலர் கொண்டு வந்த பூமியின் விளைச்சல் மற்றும் பூமியின் உற்பத்தியில் இருந்து கிடைக்கும் செல்வங்களை நான் சொல்கிறேன் கேட்பீராக. காம்போஜ நாட்டு மன்னன் எண்ணற்ற தோல்களையும், கம்பளியினால் ஆன போர்வைகளையும், எலிகள் மற்றும் வளைகளில் வசிக்கும் விலங்குகளின் மயிர், பூனை மயிர் ஆகியவற்றால் செய்யப்பட்டவையும், தங்க இழைகளால் பிண்ணப்பட்டவையுமான போர்வைகளையும் அந்தச் சிறந்த மன்னனுக்குக் {யுதிஷ்டிரனுக்குக்} கொடுத்தான்.(2,3) கிளி மூக்குகளைப் போன்ற மூக்குகளைக் கொண்ட கல்மாஷம் மற்றும் தித்தேத்தி வகை குதிரைகளில் முன்னூறும் {காம்போஜ மன்னன்} கொடுத்தான். ஒலிவம் மற்றும் பிலுஷங்களால் கொழுத்து வளர்க்கப்பட்ட நூறு ஒட்டகங்களையும், அதே எண்ணிக்கையிலான பெண் கழுதைகளையும் அவன் கொடுத்தான்[1].(4)(கும்பகோணம் பதிப்பில், “குருவிகள் போலச் சித்ர நிறமுள்ளவையும், கிளிமூக்குப் போலச் சிவந்த மூக்குள்ளவையுமான முந்நூறு குதிரைகளையும், சிலேஷ்மாதகம், வன்னி, புன்கு இவற்றின் காய்களினால் வளர்க்கப்பட்ட ஒட்டகங்களையும், பெண் குதிரைகளையும் திரிகர்த்த தேசத்தார் கொடுத்தனர்” என்றிருக்கிறது. )

கால்நடை வளர்க்கும் கணக்கற்ற பிராமணர்கள், நீதிமானான யுதிஷ்டிரனைத் நிறைவடையச் செய்யும் வகையில், முப்பது கோடி காணிக்கைகளுடன் காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு அரண்மனைக்குள் அனுமதி கிடைக்கவில்லை. யுதிஷ்டிரன் கொடுத்த நிலத்தில் வாழ்ந்து, ஆடு மாடுகளைச் செல்வமாகக் கொண்ட நூற்றுக்கணக்கான பிராமணர்கள், அங்கே தெளிந்த நெய் நிரம்பிய தங்கள் தங்கக் கமண்டலங்களுடன் வந்தனர். அவர்கள் அப்படிப்பட்ட காணிக்கைகளைக் கொண்டு வந்த போதும், அவர்களுக்கு {பிராமணர்களுக்கு} அரண்மனைக்குள் அனுமதி கிடைக்கவில்லை.(5-8) கடற்கரையில் வசித்த சூத்திர மன்னர்கள், ஓ மன்னா, நற்குணத்தையும், கொடியிடையும், அடர்த்தியான கூந்தலையும் கொண்டவர்களும், தங்க ஆபரணங்களையும் பூண்டவர்களுமான நூறு ஆயிரம் பணிப்பெண்களைக் காருபசிக {பாருகச்ச} நாட்டில் இருந்து தங்களுடன் கொண்டு வந்தனர்; மேலும், பிராமணர்களுக்குத் தகுந்த ரங்கு மானின் பல வகைப்பட்ட தோல்களையும் மன்னன் யுதிஷ்டிரனுக்குக் காணிக்கையாக அவர்கள் கொண்டு வந்தனர்.(9,10) வானத்தின் மழையால் விளையும் பயிர்களை உண்டு வாழும் பைரவர் {த்ருமர்}, பராதர், துங்கர் {காச்யர்}, கிதாவகர் ஆகிய இனங்களைச் சார்ந்தவர்களும், கடற்கரையில் வசிப்பவர்களும், கானகங்கள் மற்றும் கடலின் அடுத்த கரையில் வசித்தவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு, தாங்கள் கொண்டு வந்த ஆடு மாடு, கழுதை, ஒட்டகம், காய்கறி, தேன், போர்வைகள், நகைகள், பல வகைப்பட்ட ரத்தினங்களுடன் வாயிலிலேயே அவர்கள் காத்திருந்தனர்.(11-14)

பெரும் போர்வீரனும், பிராக்ஜோதிஷ நாட்டின் ஆட்சியாளனுமான பகதத்தன், மிலேச்ச நிலங்களின் பெரும் ஆட்சியாளர்கள், யவனர்களின் தலைவர்க்ள என எண்ணற்றவர்கள், தாங்கள் கொண்டு வந்த காணிக்கைகளான காற்றின் வேகம் கொண்ட சிறந்த வகை குதிரைகளுடன், உள்ளே நுழைய முடியாமல் வாயிலிலேயே காத்திருந்தனர்.(15) (இதைக் கண்ட) மன்னன் பகதத்தன், தான் கொண்டு வந்திருந்தவையும், தந்தங்களால் ஆன கைப்பிடி கொண்டவையும், ரத்தினங்களாலும் வைரங்களாலும் அலங்கரிக்கப்பட்டவையுமான எண்ணற்ற வாள்களோடு அந்த வாயிலில் இருந்து விலக வேண்டியிருந்தது.(16) பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல இன மக்கள் அங்கே வந்தனர், அவர்களில் சிலருக்கு இரண்டு கண்களும், சிலருக்கு மூன்று கண்களும், சிலருக்கு நெற்றியில் கண்ணும் இருந்தன. அவர்களில் அவுஷ்மிகர்கள், நிஷாதர்கள், ரோமகர்கள் என்ற இனத்தாரும், ஒற்றைக் கால் கொண்ட சில நரமாமிச உண்ணிகள் ஆகியோரும் அங்கே வந்தனர்[2].(17) ஓ மன்னா, அவர்களும் அனுமதி மறுக்கப்பட்டு வாயிலுக்கு வெளியே நின்றனர். (கும்பகோணம் பதிப்பில், “த்வியக்ஷர் {இரண்டு கண்ணுடையவர்}, த்ரியக்ஷர் {மூன்று கண்களையுடையவர்}, தல்லாடாக்ஷர் {நெற்றியில் கண் கொண்டவர்}, ஔஷ்ணீஷர் {தலைப்பாகைக்காரர்}, அஹயர் {குதிரையில்லாதவர்}, பாஹுகர் {கை நீண்டவர்கள்}, புருஷாதகர் {மனிதனைத் தின்பவர்}, ஏகபாதர் {ஒற்றைக்காலர்} என்னும் ஜாதியார் அங்கே பொன் வெள்ளி முதலிய தனங்களை யுதிஷ்டிரனுக்குக் காணிக்கையாகக் கொடுக்க வந்து வாயிலில் தடுக்கப்பட்டிருந்ததைக் கண்டேன்” என்றிருக்கிறது.)

இந்த வித்தியாசமான ஆட்சியாளர்கள் தங்களுடன் வித்தியாசமான நிறங்களிலும், கருப்பு கழுத்து கொண்டவையும், பெரும் உடல் கொண்டவையும், காற்றின் வேகம் கொண்டவையும், மிகவும் சாந்தமானவையாகவும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிற வகையில் உள்ள பத்தாயிரம் கழுதைகளைக் கொண்டு வந்திருந்தனர். அந்தக் கழுதைகள் பெரும் வடிவத்துடனும், காண்பதற்கினிய வண்ணங்களுடனும் இருந்தன.(18,19) அவை அனைத்தும் வங்குவின் கரையில் பிறந்தனவாகும். அங்கே வந்திருந்த பல மன்னர்கள் யுதிஷ்டிரனுக்கு தங்கமும் வெள்ளியும் பெரும் அளவில் கொடுத்தனர்.(20) பெரும் செல்வம் கொடுத்த அவர்களுக்கு யுதிஷ்டிரனின் அரண்மனைக்குள் நுழையும் அனுமதி கிடைத்தது. ஒரு கால் மட்டுமே உள்ள மக்கள் யுதிஷ்டிரனுக்கு இறந்த பூச்சிகளில் இருந்து எடுக்கப்பட்டும் சிவந்த நிறம் கொண்ட காட்டுக் குதிரைகளையும், சில வெள்ளை மற்றும் வானவில் நிறம் மேக நிறம் கொண்டவையும், கலந்த நிறங்கள் கொண்டவையுமாக பல வகை குதிரைகளைக் கொடுத்தனர். அவை அனைத்தும் மனோ வேகம் கொண்ட குதிரைகளாக இருந்தன. அவர்கள் அனைவரும் மேன்மையான தரம் கொண்ட தங்கத்தை போதுமென்ற அளவுக்கு அந்த மன்னனுக்குக் {யுதிஷ்டிரனுக்குக்} கொடுத்தனர். எண்ணிலடங்கா சின்களும் {சீனர்களில் ஒரு இனம்}, க்ஷகர்களும், உத்திரர்களும்,கானகத்தில் வாழும் பல காட்டுமிராண்டி இனங்களும்,(21-23) பல விருஷ்ணிகளும், ஹரஹூணர்களும், இமயத்தில் உள்ள மங்கலான நிறம் கொண்ட இனங்களும், நீபர்களும், கடற்கரை வாசிகளும், வாயிலில் அனுமதி கிடைக்காமல் காத்திருந்தனர்.(24)

பாஹ்லீக மக்கள், நல்ல வடிவம் கொண்டவையும், கருப்பு கழுத்து கொண்டவையும், தினமும் இருநூறு மைலகள் ஓடக்கூடியவையும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவையும், நன்கு பழக்கப்பட்டவையும், உலகத்தால் கொண்டாடப்படுபவையுமான பத்தாயிரம் கழுதைகளையும் கொடுத்தனர். தகுந்த லட்சணங்கள் கொண்டு, அற்புதமான நிறங்களில் இருந்த அவற்றின் தோல் தொடுவதற்கு இனிமையாக இருந்தது. மேலும் பாஹ்லீகர்கள் கணக்கிலடங்காவையும், சீனத்தில் தயாரானவையுமான கம்பளிகளையும், ரங்கு வகை மான்களின் தோல்களையும், சணல் ஆடைகளையும், பூச்சிகளில் உற்பத்தியாகும் இழைகளைக் கொண்டு பிண்ணப்பட்ட ஆடைகளையும் கொண்டு வந்தனர். மேலும் தாமரை நிறம் கொண்ட ஆயிரக்கணக்கான பருத்தி ஆடைகளையும் கொண்டு வந்தனர். அவை அனைத்தும் மென்மையான அமைப்புடன் இருந்தன. மேலும் அவர்கள், ஆயிரக்கணக்கான ஆட்டுத் தோல்களையும், மேற்கு நாடுகளில் தயாராகும் கூர்மையான நீண்ட வாட்களையும், வளைந்த பட்டா கத்திகளையும், கைக்கோடரிகளையும், கூர்முனை கொண்ட போர்க் கோடரிகளையும் கொடுத்தனர். பல நறுமணப் பொருட்களையும், நகைகளுயும், பல்வேறு ரத்தினங்களையும் ஆயிரக்கணக்கில் கொண்டு வந்தும், அரண்மனைக்குள் நுழைய மறுக்கப்பட்டு வாயிலிலேயே காத்திருந்தனர்.(25-29) 

சகர்கள், துஹுதர்கள், கங்கர்கள், ரோமகர்கள், தலையில் கொம்பு முளைத்த மனிதர்கள் ஆகியோர் கணக்கிலடங்கா யானைகளுடனும், பத்தாயிரம் குதிரைகளுடனும், நூறாயிரம் கோடி தங்கத்துடனும் அரண்மனைக்குள் நுழைய மறுக்கப்பட்டு வாயிலிலேயே காத்திருந்தனர்.(30,31) பல மதிப்புமிக்க பொருட்களையும், விலையுயர்ந்த தரைவிரிப்புகளையும், வாகனங்களையும், படுக்கைகளையும், தங்கத்தாலும் தந்தத்தாலும் அலங்கரிக்கப்பட்ட பல நிறங்களில் உள்ள கவசங்களையும், பல்வேறு ஆயுதங்களையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வகைப்பட்ட வடிவங்களில் உள்ள தேர்களையும், புலித்தோல் போர்த்தப்பட்ட நன்கு பழக்கப்பட்ட குதிரைகளையும், யானைகளைப் போர்த்தும் போர்வைகளையும், பல்வேறு நகைகள், ரத்தினங்கள், நீண்ட மற்றும் குறுகிய கணைகள் {அம்புகள்}, மேலும் பல வகைப்பட்ட ஆயுதங்களுடனும் வந்திருந்த கிழக்கு நாடுகளின் மன்னர்கள், வேள்வி நடத்தப்படும் சிறப்புமிகுந்த பாண்டவர்களின் அரண்மனைக்குள் நுழையும் அனுமதியைப் பெற்றனர்” {என்றான் துரியோதனன்}.(32-35)

சோழனும் பாண்டியனும் என்ன பரிசளித்தனர்? – சபாபர்வம் பகுதி 51-(தியூத பர்வம் – 07)ராஜசூய வேள்விக்காக யுதிஷ்டிரனுக்கு காணிக்கையாக வந்த விலை உயர்ந்த பொருட்களைக் குறித்து துரியோதனன் விரிவாக திருதராஷ்டிரனுக்கு உரைத்தது…

துரியோதனன் சொன்னான், “ஓ பாவமற்றவரே, யுதிஷ்டிரனுக்கு பூமியின் மன்னர்கள் கொடுத்த பல்வேறு காணிக்கைகளான பெரும் செல்வத்தை நான் சொல்கிறேன் கேட்பீராக.(1) மேருவுக்கும், மந்தர மலைக்கும் நடுவில் பாயும் சைலோதை ஆற்றுக்கு அருகில் கீசகம் என்ற மூங்கில்களின் நிழலில் வசிக்கும்(2) கஷர்கள், ஏகாஸனாத்யர்கள், அர்ஹர்கள், பிரதரர்கள், தீர்க்கவேணுக்கள், பாரடாக்கள், குலிந்தர்கள், தங்கணர்கள் {பரதங்கணர்கள்} ஆகியோர்(3) எறும்புப்புற்றிலிருந்து வெளிக்கொணரப்படும் {பிபீலிகம் என்ற பெயரில் அழைக்கப்படும்} சிறந்த தங்கத்தைக் காணிக்கையாகக் குவியல் குவியல்களாகக் கொண்டு வந்தனர். அவை துரோணங்களில் (பாத்திரங்களில்) அளக்கப்பட்டன.(4)

பெரும் பலம் வாய்ந்த மலைவாழ் பழங்குடிகள் எண்ணிலடங்கா மென்மையான சாமரங்களைக் (நீண்ட தூரிகைகள்) கொண்டு வந்தனர். அவை கருப்பாகவும், சில சந்திரபிம்பத்தைப் போன்று வெள்ளையாகவும் இருந்தன. மேலும் அவர்கள் இமயத்தில் விளையும் பூக்களிலிலும், மிசேலிய சம்பகம் என்ற பூக்களிலும் {சண்பக மலர்களிலும்} எடுக்கப்பட்ட இனிமையான தேனையும், வடகுருக்கள் பகுதியிலிருந்து மலர் மாலைகளையும், இன்னும் வடக்கே கைலாசத்தில் இருந்து வித்தியாசமான செடிவகைகளையும் கொண்டு வந்து உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், மன்னன் யுதிஷ்டிரனின் மாளிகை வாசலில் தலையைக் கவிழ்ந்தவாறு காத்திருந்தனர்.(5-7) 

இமய மலைக்குப் பின்புறத்திலும், சூரியன் உதயமாகிற மலைச்சாரலிலும், கடற்கரையிலும், லௌஹித்ய மலைகளின் இருபுறத்தில் இருந்தும் வந்திருந்தவர்களும், கொடும் ஆயுதங்களைத் தாங்கியவர்களும், கொடுஞ்செயல்களைச் செய்பவர்களும், கனிகளும் கிழங்குகளும் உண்பவர்களும், தோலாடை உடுத்துபவர்களுமான எண்ணிலடங்காத கிராதர்களின் தலைவர்களையும் நான் அங்கு கண்டேன்.(8,9) 

ஓ மன்னா, பெரும் அளவிலான {உயர்ரக} சந்தனத்தையும், பல வகை கற்றாழைகளுடன், கருப்பு கற்றாழையும், {அகில்களையும்} குவியல் குவியலாக மதிப்பு மிக்க தோல்களும், தங்கங்களும், நறுமணப்பொருட்களும், தங்கள் குலத்தைச் சார்ந்த பத்தாயிரம் பணிப்பெண்களையும், பல தொலைதூர நாடுகளில் உள்ள பல அழகான விலங்குகள் மற்றும் பறவைகளையும், மலைகளில் இருந்து கொணரப்பட்ட பெரும் பிரகாசமுள்ள தங்கத்தையும் கொண்டு வந்த அந்த கிராதர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வாயிலிலேயே காத்திருந்தனர்.(10-12)

ஆயுதங்களில் நல்ல பயிற்சியுடையவர்களும், நற்குடியில் பிறந்த க்ஷத்திரியர்களுமான கைராதர்கள் {காபவ்யர்கள்}, தரதர்கள், தர்வர்கள், சூரர்கள், வையமகர்கள், ஔதும்பரர்கள், துர்விபாகர்கள், குமாரர்கள், பாரடர்களுடன் கூடிய பாஹ்லீகர்கள்,(13) காச்மீரர்கள், கௌரகர்கள், ஹம்சகயணர்கள், சிபிக்கள், திரிகர்த்தர்கள், யௌதேயர்கள், மத்ர நாட்டு ஆட்சியாளர்கள், கைகேயர்கள்,(14) அம்பஷ்டர்கள், கௌகுரர்கள் {கௌரகர்கள்}, தார்க்ஷியர்கள், வஸ்திரபர்கள், பஹ்லவர்கள், வஸாதயர்கள் {வஸுதேயர்கள்}, மௌலேயர்கள் க்ஷுத்ரகர்கள், மாலவர்கள்,(15) பௌண்ட்ரயர்கள் {ஸௌண்டிகர்கள்}, குக்குரர்கள், சகர்கள், அங்கர்கள், வங்கர்கள், புண்ட்ரர்கள், சஸானவத்யர்கள், கயர்கள் ஆகியோர் மன்னன் யுதிஷ்டிரனுக்கு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான காணிக்கைகளைக் கொண்டு வந்தனர்.(16,17)

வங்கர்கள், கலிங்கர்கள், மகதர்கள், தாம்ரலிப்தர்கள், புண்ட்ரகர்கள், தௌவாலிகர்கள் {துகூலர்கள்}, சகரகர்கள், பத்ரோர்டர்கள், சைசவர்கள்,(18) எண்ணிலடங்கா கர்ணபிராவரானர்கள் ஆகியோர் வாயில் முன் திரண்டனர். மன்னனின் {யுதிஷ்டிரனின்} உத்தரவின் பேரில், அவர்களிடம், ’காக்க முடிந்தவர்களும், நல்ல காணிக்கை கொண்டு வருபவர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவர்’ என்று வாயில் காப்போர் கூறினர்.(19) பிறகு அந்த நாடுகளின் மன்னர்கள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், உயர்ந்த விரிப்புகளால் போர்த்தப்பட்டவையும், ஏர் போன்ற தந்தங்களை உடையவையுமான யானைகளைக் ஆளுக்கு ஆயிரம் என கொடுத்தனர். அவை தாமரையின் வண்ணத்தில் இருந்தன. பாறைகள் போன்று கருமையாகவும், எப்போதும் மந்தமாகவும் இருக்கும் அவை, காம்யக தடாகத்தின் அருகிலிருந்து பெறப்பட்டு கவசங்கள் பூட்டப்பட்டவை ஆகும். அந்த யானைகள் அதிக பொறுமை உடையனவாகவும், உயர்ந்த வகையைச் சேர்ந்தவையாகவும் இருந்தன. இந்தக் காணிக்கைகளைக் கொடுத்த பிறகு, அந்த மன்னர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர்.(20,21) ஓ மன்னா, இவர்களும், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த இன்னும் பலரும், இன்னும் எண்ணிலடங்கா சிறப்பு மிகுந்த மன்னர்களும், வேள்விக்காக நகைகளையும், ரத்தினங்களையும் கொண்டு வந்தனர்.(22] 

இந்திரனின் நண்பனும் கந்தர்வர்களின் மன்னனுமான சித்திரரதன்[1] காற்றின் வேகம் கொண்ட நானூறு குதிரைகளைக் காணிக்கையாகக் கொடுத்தான்.(23) (சித்திரரதன் என்பவன் அர்ஜுனனுடன் போரிட்ட கந்தர்வனாவான்)தும்புரு என்ற கந்தர்வன், மாவிலையின் நிறம் கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான நூறு  குதிரைகளை மகிழ்ச்சியாக கொடுத்தான்.(24) ஓ குரு குலத்தவரே, மிலேச்ச பழங்குடிகளால் கொண்டாடப்படும் மன்னன் சூகரன், பல நூற்றுக் கணக்கான அற்புதமான யானைகளைக் கொடுத்தான்.(25) மத்ஸ்ய நாட்டு மன்னன் விராடன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இரண்டாயிரம் யானைகளைக் காணிக்கையாகக் கொடுத்தான்.(26) பாம்சு நாட்டைச் சேர்ந்த மன்னன் வஸுதானன், பாண்டுவின் மகனுக்கு இருபத்தாறு யானைகளையும், இருநூறு குதிரைகளையும் காணிக்கையாகக் கொடுத்தான்.(27) அவை அனைத்தும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, இளமையுடன் பெரும் வேகம் செல்லக்கூடியதாகவும் இருந்தது. அவன் இவற்றையும் இன்னும் பல செல்வங்களையும் கொடுத்தான்.(28)

யக்ஞசேனன் {துருபதன்}, அந்த வேள்வியில் பாண்டுவின் மகன்களுக்கு, பதினாலாயிரம் பணிப்பெண்களையும், அவரவர் மனைவிகளுடன் பத்தாயிரம் ஆண் பணியாட்களையும், பல நூறு அற்புதமான யானைகளையும், யானைகளால் இழுக்கப்பட்ட இருபத்தாறு  தேர்களையும், மேலும் தனது முழு நாட்டையும் கொடுத்தான். பிறகு விருஷ்ணி குலத்தின் வாசுதேவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனின் பெருமையை உயர்த்த, பதினாலாயிரம் அற்புதமான யானைகளைக் கொடுத்தான். உண்மையில், கிருஷ்ணனின் ஆன்மாவாகவே அர்ஜுனன் இருக்கிறான். அர்ஜுனனின் ஆன்மாவாகவே கிருஷ்ணனும் இருக்கிறான். அர்ஜுனன் சொல்லும் எதையும் கிருஷ்ணன் சாதிப்பான். கிருஷ்ணன், அர்ஜுனனுக்காக சொர்க்கத்தையே கூட புறக்கணிக்கும் தகுதி படைத்தவனாவான்.(29-32) அர்ஜுனனும், கிருஷ்ணனுக்காகத் தனது உயிரையே கொடுப்பான்.

தங்கப்பாத்திரங்களில் நிரப்பப்பட்டதும், மலைய மலைகளில் மட்டுமே விளைக்கூடியதுமான சந்தனச் சாற்றையும், பெரும் அளவிலான சந்தனக் கட்டைகளையும், தர்ததுரா மலைகளிலிருந்து அகிற்கட்டைகளையும், அதிக பிரகாசமுடைய ரத்தினங்களையும், தங்கத்தால் பிண்ணபட்ட அற்புதமான ஆடைகளையும் கொண்டு வந்தும் கூட, சோழ மற்றும் பாண்டிய மன்னர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி கிடைக்கவில்லை[2]. (பாண்டிய, சோழ, சேர அரசர்கள் என்ன கொடுத்தனர் எனக் கும்பகோணம் பதிப்பின் ஓரிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது பின்வருமாறு, “பாண்டியராஜன் தர்ததுர மலையிலுண்டான தொண்ணாற்றாறு பாரம் நிறையுள்ள முதல் தரமான சந்தனக் கட்டளைகளையும், தொண்ணூற்றாறு சங்கங்களையும் தர்மராஜாவுக்கு விரைந்து கொடுத்தான். சோள{ழ}ராஜன், கேரளராஜன் இருவரும் கணக்கில்லாத சந்தனங்களையும், அகில்களையும், பலவகையான முத்துக்களையும், வைடூரியங்களையும் பாண்டுபுத்ரனுக்குக் கொடுத்தனர்” என்றிருக்கிறது.)கடலில் விளையும் சிறந்த ரத்தினங்களையும், கூடவே குவியல் குவியலாக முத்துகளையும், (33-35) யானைகளுக்கான நூற்றுக்கணக்கான விரிப்புகளையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடைகள் உடுத்தியவர்களும், கண்களின் ஓரம் தாமிரம் போலச் சிவந்தவர்களுமான எண்ணிலடங்கா கருநிற மனிதர்களையும் {சிங்களர்களையும்}(36) கொண்டு வந்தும் அந்தக் காணிக்கைகளுடன் சிம்ஹள {சிங்கள} மன்னன் வாயிலில் காத்திருந்தான். 

எண்ணிலடங்கா பிராமணர்களும், வீழ்த்தப்பட்ட க்ஷத்திரியர்களும், வைசியர்களும், தொண்டுபுரியும் சூத்திரர்களும், யுதிஷ்டிரன் மீதிருந்த அன்பால் அந்தப் பாண்டுவின் மகனுக்காகக் காணிக்கைகளைக் கொண்டு வந்தனர். பல்வேறு நிலங்களில் இருந்து வந்திருந்தவர்களும் சிறந்த, மத்திம, தாழ்ந்த என அனைத்துத் தரப்பு மக்களும்,(37,38) யுதிஷ்டிரனின் வசிப்பிடத்தையே மற்றொரு உலகமாக மாற்றினர். பூமியின் மன்னர்கள் இப்படி அற்புதமான மற்றும் மதிப்புமிக்க காணிக்கைகளைக் கொடுப்பதைக் கண்ட நான் துக்கத்தால் மரணத்தை விரும்பினேன். 

ஓ மன்னா, நான் இனி யுதிஷ்டிரன் எவருக்குச் சமைத்த மற்றும் சமைக்காத உணவு கொடுப்பானோ அந்தப் பாண்டவப் பணியாட்களைப் பற்றிச் சொல்கிறேன் கேட்பீராக. அங்கே நூறு லட்சம் கோடி {மூன்று கோடியே பதினாயிரவர் என்று சொல்கிறது கும்பகோணம் பதிப்பு}  யானையும், குதிரைகளும்,(39-42) பத்து கோடி தேர்களும், எண்ணிலடங்கா காலாட்படை வீரர்களும் இருந்தனர். சமைக்கப்படாத மூலப்பொருட்கள் ஓர் இடத்தில் அளக்கப்பட்டன; மற்றோர் இடத்தில் அவை சமைக்கப்பட்டன;(43) வேறோர் இடத்தில் அவை பரிமாறப்பட்டன. அந்தக் கோலாகல விழாவின் இசை எல்லா இடங்களிலும் கேட்கப்பட்டது. யுதிஷ்டிரனின் மாளிகையில் இருந்த அனைத்து வகை மனிதர்களில் உணவில்லை என்றோ ஆபரணங்கள் இல்லை என்றோ ஒருவரையும் நான் காணவில்லை. 

இல்லற வாழ்வு வாழும் எண்பத்தெட்டாயிரம் ஸ்நாதக பிராமணர்கள்(44,45) யுதிஷ்டிரனால் ஆதரிக்கப்படுகின்றனர். அவன் {யுதிஷ்டிரன்} அவர்கள் ஒவ்வொருக்கும் முப்பது பணிப்பெண்களைக் கொடுத்து நிறைவடையச் செய்தான். அப்படி நிறைவடைந்த அவர்கள் {அந்தப் பிராமணர்கள்}, அவனது பகைவர்களின் அழிவுக்கு இதயத்தால் வேண்டுகிறார்கள்.(46) 

உணர்வுகளை முழுக்கட்டுப்பாட்டில் கொண்ட வேறு பத்தாயிரம் தவசிகள் நாள்தோறும் யுதிஷ்டிரனின் அரண்மனையில் தங்கத் தட்டுங்களில் உணவுண்கின்றனர்.(47) ஓ மன்னா  யக்ஞசேனி {திரௌபதி}, தான் உண்ணவில்லை என்றாலும், பழுதுள்ள உறுப்புகள் கொண்டவர்களும், குள்ளர்களும் உள்ளிட்ட மற்ற அனைவரும் உண்டுவிட்டார்களா என்பதை நாள்தோறும் கவனிக்கிறாள்.(48) 

ஓ பாரதரே, திருமணத்தாலான உறவு நிலையால் பாஞ்சாலர்களும், நட்பு நிலையால் அந்தக விருஷ்ணிக்களும் {யாதவர்களும்} என அவ்விரு குலங்கள் மட்டுமே எதையும் கப்பமாகக் கொடுக்கவில்லை[3]” {என்றான் துரியோதனன்}.(49)(இதற்கு முன்பு 29-33 ஸ்லோகங்களில் இவர்கள் இருவரும் பெரும் செல்வத்தைக் கொடையாகக் கொடுத்ததாக குறிப்பிருக்கிறது. என்றாலும், அவர்கள் அவற்றைக் கப்பமாக அல்லாமல் அன்பால் கொடுத்தனர் எனக் கொள்ளலாம்.)

“எட்டு பேர் சிரித்தனர்” என்றான் துரியோதனன் – சபாபர்வம் பகுதி 52-(தியூத பர்வம் – 08)- துரியோதனன் திருதராஷ்டிரனிடம் எதிரியின் செல்வச் செழிப்பையும், தனது துயரத்தையும் விபரித்தல்.

துரியோதனன் சொன்னான், “அனைத்துலகாலும் மதிப்பிற்குரிய மன்னர்களாகக் கருதப்படுபவர்களும், வாய்மைக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களும், கடும் நோன்புகள் நோற்றவர்களும், பெரும் கல்வியும், சொல்திறமும் பெற்றவர்களும், வேதங்களையும் அதன் கிளைகளையும் அறிந்தவர்களும், வேள்விகள் செய்தவர்களும், பக்தியும் அடக்கமும் கொண்டவர்களும், தங்கள் ஆன்மாவை அறத்திற்கு அர்ப்பணித்தவர்களும், பெரும் புகழ் படைத்தவர்களும், முடிதரிக்க பெரும் சடங்குகள் பலவற்றைக் கண்டவர்களுமான அவர்கள் {மன்னர்கள்} அனைவரும் யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்து அவனை {யுதிஷ்டிரனை} வழிபட்டார்கள்.(1,2) வேள்வியில் யுதிஷ்டிரன் பிராமணர்களுக்குக் கொடையளிக்க, காட்டுப் பசுக்கள் பலவற்றையும், மேலும் அவற்றில் பால் கறப்பதற்கான வெண்தாமிரத்தாலான {வெண்கலத்தால் ஆன} பல பாத்திரங்களையும் அம்மன்னர்கள் கொண்டு வந்ததைக் கண்டேன்.(3)

ஓ பாரதரே, வேள்வியின் முடிவில் யுதிஷ்டிரன் குளிப்பதற்காக, பெரும் ஆயத்தத்துடன் கூடிய பல மன்னர்கள், பல அற்புதமான பாத்திரங்களில் தூய்மையான நீரைத் தங்கள் தங்கள் நாடுகளில் இருந்து கொண்டு வந்தனர்.(4) பாஹ்லீக மன்னர், பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்ட தேரைக் கொண்டு வந்தார். மன்னன் ஸுதக்ஷிணன், காம்போஜ நாட்டைச் சார்ந்த உயர்ரக வெள்ளைக்குதிரைகள் நான்கை அந்தத் தேரில் தானே பூட்டினான்.(5) பெரும் பலம் வாய்ந்த சேதி நாட்டு ஆட்சியாளன் சுனிதன் {சிசுபாலன்}, தேர் அச்சையும், கொடிமரத்தையும், தன் கரத்தால் தானே அந்தத் தேரில் பூட்டினான்.(6) தென்னாட்டு மன்னன், கவசத்துடன் தயாராக நின்றான்; மகத ஆட்சியாளன் மலர் மாலையுடனும், கிரீடத்துடனும் நின்றான்; பெரும் போர்வீரனான வஸுதானன் அறுபது வயது யானையுடனும், மத்ஸ்ய நாட்டு மன்னன் {விராடன்} அத்தேருக்கு தங்கத்தாலான பக்க இணைப்புகளையும் {பொன் பாச்சிகைகளையும்}; மன்னன் ஏகலவ்யன் காலணிகளுடனும்; அவந்தி நாட்டு மன்னன், இறுதி நீராடலுக்கான பலவகைப்பட்ட நீர்களுடனும்;(7,8) மன்னன் சேகிதானன் அம்பறாத்தூணியுடனும்; காசி மன்னன் வில்லுடனும், சல்லியன் தங்கக் கைப்பிடி கொண்ட வாளையும் கொண்டு வந்தனர்.(9)

பிறகு, பெரும் ஆன்மத்தகுதி படைத்தவர்களான தௌமியர், வியாசர், நாரதர், அசிதரின் மகன் தேவலன் ஆகியோர், சடங்கு நடக்கும் இடத்தில் நின்று, தூய நீரை மன்னன் {யுதிஷ்டிரன்} தலையில் தெளித்தனர் {அபிஷேகஞ்செய்தனர்}.(10) பெரும் முனிவர்களான அவர்கள், அந்தச் சடங்கு நடக்கும் இடத்திலேயே மகிழ்சியுடன் அமர்ந்தனர். வேதமறிந்த மற்ற சிறப்புவாய்ந்த முனிவர்கள், ஜமதக்னியின் மகனுடனும் {பரசுராமருடனும்}, முனிவரெழுவருடனும் {ஸப்தரிஷிகளுடனும்} சேர்ந்து சொர்க்கத்தின் இந்திரனை அணுகுவதைப் போல பெரும் வேள்விப் பரிசுகள் கொடுப்பவனான யுதிஷ்டிரனை அணுகி, மந்திரங்களைச் சொன்னார்கள்.(11,12) தடுக்க முடியாத ஆற்றலை கொண்ட சாத்யகி (மன்னன் {யுதிஷ்டிரன்} தலைக்கு மேல்) குடை பிடித்தான். தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, பீமனும் மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} விசிறியால் வீசிவிட்டனர்;(13) இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்} தங்கள் கரங்களில் சாமரங்களை ஏந்தியிருந்தனர். 

முந்தைய கல்பத்தில் பிரஜாபதி {பிரம்மன்} இந்திரனுக்குக் கொடுத்ததும், ஆயிரம் நிஷ்க தங்கம் கொண்டு தேவதச்சன் விஸ்வகர்மனால் செய்யப்பட்டதுமான வருணின் பெரும் சங்கை {வருணசங்கத்தை}, கடலரசன் கொண்டு வந்தான் {திருப்பாற்கடல் கொணர்ந்து கொடுத்தது}.(14,15) அந்தச் சங்கைக் கொண்டுதான் வேள்வியின் முடிவில் கிருஷ்ணன் யுதிஷ்டிரனை நீராட்டினான். அதைக் கண்ட நான் {துரியோதனன்} சிறிதளவு மயக்கத்தை அடைந்தேன். மக்கள் கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் உள்ள கடல்களுக்குச் செல்கின்றனர். ஆனால், ஓ தந்தையே {திருதராஷ்டிரரே}, பறவைகளைத் தவிர வேறு எவராலும் வடக்கு கடலை அடைய முடியாது என்றாலும், பாண்டவர்கள் தங்கள் ஆளுகையை அங்கு வரை விரிவடையச் செய்திருக்கிறார்கள். ஏனெனில், மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அங்கிருந்து {வடக்கு கடலில் இருந்து} கொண்டு வரப்பட்ட நூற்றுக்கணக்கான சங்குகளை {வேள்வி மண்டபத்தில்} முழக்கியதை நான் கேட்டேன். அந்த சங்குகள் தொடர்ச்சியாக முழக்கப்பட்ட போது, என் உடலின் மயிர்க்கால்கள் சிலிர்த்தன. பலம் குறைந்த மன்னர்கள் {அம்முழக்கத்தைக் கேட்டு மயக்கமடைந்து} கீழேவிழுந்தனர்.(16-18) பலம் பொருந்தியவர்களும், ஆற்றல்மிக்கவர்களும்,  அழகானவர்களுமான திருஷ்டத்யும்னன், சாத்யகி, பாண்டுவின் மகன்கள், கேசவன் {கிருஷ்ணன்} ஆகிய எட்டு பேரும், மதியிழந்திருந்த அம்மன்னர்களையும், என்னையும் கண்டு வெளிப்படையாகவே சிரித்தனர்.(19)

பிறகு மகிழ்ச்சி நிறைந்த இதயம் கொண்ட பீபத்சு (அர்ஜுனன்), ஓ பாரதரே, கொம்புகளில் பொற்தகடு பொருத்தப்பட்ட ஐநூறு எருதுகளை முக்கியமான பிராமணர்களுக்குக் கொடுத்தான்.(20) குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன் ராஜசூய வேள்வியை நிறைவுசெய்த பிறகு, மேன்மையான ஹரிச்சந்திரன் அடைந்த பெருஞ்செழிப்பை அடைந்தான். அச்செழிப்பை ரந்திதேவனோ, நாபாகனோ, ஜௌவனாஸ்வனோ {யௌவனாஸ்வனோ / மாந்தாதாவோ}, மனுவோ, வேணுவின் மகனான மன்னன் பிருதுவோ, பகீரதனோ, யயாதியோ, நகுஷனோ கூட அடைந்ததில்லை.(21,22) ஓ மேன்மையானவரே, ஹரிச்சந்திரன் பெற்ற அதே செழிப்பை பிருதையின் {குந்தியின்} மகனும் அடைந்ததைக் கண்ட பிறகு, நான் இன்னும் வாழ்வதில் எந்த நன்மையையும் நான் காணவில்லை.(23,24) 

ஓ பாரதரே! மனிதர்களின் ஆட்சியாளரே, குருட்டு மனிதனால் (எருதின் தோள்களில்) பூட்டப்படும் நுகத்தடி தளர்வுறுவே செய்யும். அந்த நிலையே நமது நிலையும் கூட. மூத்தவர்கள் தேய்ந்து கொண்டிருக்கும்போது இளையவர்கள் வளர்கிறார்கள்.(25) ஓ குருக்களின் தலைவரே, இதையெல்லாம் கண்ட பிறகு, மனத்தளவில் கூட என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. ஓ மன்னா, இதன் காரணமாகவே நான் துயரத்தில் மூழ்கி, நிறம் மங்கியவனாக, உடல் மெலிந்திருக்கிறேன்” {என்றான் துரியோதனன்}.(26)

உனது கரங்களை நீயே வெட்டிக் கொள்ளாதே! – சபாபர்வம் பகுதி 53-(தியூத பர்வம் – 09)திருதராஷ்டிரன் துதியோதனனுக்கு புத்தி கூறல்…

திருதராஷ்டிரன் சொன்னான், “நீ எனது மூத்த மகனும், எனது மூத்த மனைவிக்குப் {காந்தாரிக்கு} பிறந்தவனுமாவாய். எனவே, ஓ மகனே {துரியோதனா}, நீ பாண்டவர்களைக் குறித்து பொறாமைப்படாதே. பொறாமையுள்ளவன் எப்போதும் மகிழ்ச்சியற்றவனாக இருந்து மரண வேதனையை அனுபவிப்பான்.(1) ஓ பாரத குலத்தின் காளையே {துரியோதனா}, யுதிஷ்டிரன் வஞ்சனை அறியான். அவனும் உனக்குச் சமமாக செல்வம் படைத்திருக்கிறான். உனது நண்பர்களையே, அவனது நண்பர்களாகவும் கொண்டிருக்கிறான். அவன் {யுதிஷ்டிரன்} உன்னிடத்தில் பொறாமை கொள்ளவில்லை. அவனிடம் நீ பொறாமை கொள்வதேன்?(2)

ஓ மன்னா {துரியோதனா}, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளைப் பொறுத்தவரையில் நீ யுதிஷ்டிரனுக்கு நிகராகவே இருக்கிறாய். மடமையால் {அறியாமையால்} உனது சகோதரனின் {யுதிஷ்டிரனின்} செல்வத்தை நீ விரும்புவதேன்? அப்படி இருக்காதே. பொறாமைப்படுவதை நிறுத்துவாயாக. துயருறாதே.(3) ஓ பாரத குலத்தின் காளையே {துரியோதனா}, வேள்வி செய்ததால் கிடைத்த மதிப்பை நீ விரும்புகிறாயெனில், உனது புரோகிதர்களை அழைத்து பெரும் வேள்வியான ஸப்ததந்து என்ற வேள்வியைச் செய்வாயாக.(4) அப்போது, இந்தப் பூமியின் மன்னர்கள், மகிழ்ச்சியுடனும், பெரும் மதிப்புடனும், அபரிமிதமான செல்வத்தையும், ரத்தினங்களையும், ஆபரணங்களையும் உனக்காகவும் கொண்டு வருவார்கள்.(5) 

ஓ குழந்தாய் {துரியோதனா}, அடுத்தவர் உடைமைகளை விரும்புவது மிகக் கீழ்த்தரமான நடத்தையாகும். மறுபுறம், தனது உடைமைகளில் நிறைவுடன், தன் வகைக்கு உரிய செயல்களைச் செய்து வருபவன் பெரும் மகிழ்ச்சியோடு இருப்பான்.(6,7) அடுத்தவர் செல்வத்தை அடைய விரும்பாது, தனது காரியங்களை மட்டும் செய்து, தான் ஈட்டியதைக் காப்பதே உண்மையில் பெருமையின் குறியீடாகும்.(8) பாண்டுவின் மகன்கள் உன் கரங்களைப் போன்றவர்களாவர். உனது கரங்களை நீயே வெட்டிக் கொள்ளாதே! உனது சகோதரர்களின் செல்வத்துக்காக உள் வேற்றுமை மூழ்காதே.(9) 

ஓ மன்னா {துரியோதனா}, பாண்டுவின் மகன்களிடம் பொறாமை கொள்ளாதே. உனது சகோதரர்களின் {பாண்டவர்களின்} மொத்த செல்வமும் உனது செல்வமும் சமமாகவே இருக்கின்றன. நண்பர்களுடன் சச்சரவு செய்வது பெரும்பாவமாகும். உனது பாட்டன்களே அவர்களுக்கும் {பாண்டவர்களுக்கும்} பாட்டன்கள்.(10) வேள்வி நேரத்தில் கொடையளிப்பாயாக, உனக்கு விருப்பமான அனைத்து பொருட்களையும் அடைந்து நிறைவடைவாயாக. பெண்களுடன் களிப்பில் ஈடுபட்டு ஆனந்தமாக இருப்பாயாக. அமைதியை அனுபவிப்பாயாக” {என்றான் திருதராஷ்டிரன்}.(11)

துரியோதன நீதி – சபாபர்வம் பகுதி 54-(தியூத பர்வம் – 10)திருதராஷ்டிரனுக்கு துரியோதனன் சொல்லும் நீதிகள்…

துரியோதனன் சொன்னான், “கறியைத் தீண்டும் அகப்பையானது அந்தக் கறிச்சுவையை அறியாததைப் போலவே அறிவாற்றல் இல்லாதவனும், பல பொருட்களைப் பற்றி கேள்வியறிவு மட்டுமே கொண்டிருப்பவனுமான ஒருவன், சாத்திரங்களின் கருத்தை அறியமாட்டான்.(1) நீர் அனைத்தையும் அறிந்தும் என்னைக் குழப்புகிறீர் {திகைக்க வைக்கிறீர்}. ஒரு படகில் கட்டப்பட்ட மற்றொரு படகு போல, நானும் நீரும் கட்டப்பட்டிருக்கிறோம். உம் சொந்த காரியத்தில் உமக்கு ஊக்கமில்லையா? அல்லது என்னிடம் பகையை வளர்க்கிறீரா?(2) உடனே செய்ய வேண்டியதை, எதிர்காலத்தில் செய்யலாம் என்று சொல்லும் உம்மை ஆட்சியாளராகப் பெற்ற உமது மகன்களும், கூட்டாளிகளும் அழிந்து போய் விடுவார்கள்.(3) 

பிறர் சொல் கேட்கும் ஒருவனை வழிகாட்டியாகக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி வழி தவறுவார்கள். அவனைப் பின் தொடர்பவர்கள் சரியான பாதையை அடைவார்கள் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?(4) ஓ மன்னா, நீர் முதிர்ந்த ஞானம் உடையவர்; முதிர்ந்தவர்களின் வார்த்தைகளைக் கேட்கும் சந்தர்ப்பம் வாயக்கப் பெற்றவராகவும், உணர்வுகளை உமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவராகவும் இருக்கிறீர். நமக்கு வேண்டிய காரியங்களைச் செய்யத் தயாராக இருக்கும் எங்களைக் குழப்பாதீர்.(5) மன்னர்களின் நடத்தை சாதாரண மக்களிலிருந்து வேறுபட்டது என்று பிருஹஸ்பதி {தேவ குரு} சொல்லியிருக்கிறார். எனவே மன்னர்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் தங்கள் சொந்த நலனை கவனத்தில் கொள்ள வேண்டும்.(6) 

வெற்றி அடைதலே க்ஷத்திரியர்களின் ஒழுக்கத்துக்கு வழிகாட்டும் ஒரே பிரமாணமாக இருக்க வேண்டும். எனவே, அறம் சார்ந்தவையாகவோ, அல்லாதவையாகவோ இருப்பினும், தனது சொந்த ஒழுங்குக்கு {தனது வகைக்கு} ஏற்ற கடமைகளில் ஐயம் என்ன இருக்கமுடியும்?(7) தன் பகைவனின் ஒளிமிக்க செல்வத்தைப் பறிக்க விரும்பும் ஒருவன், ஓ பாரத குலத்தின் காளையே, சாட்டையைச் சுழற்றித் தன் குதிரைகளை அடக்கும் தேரோட்டி போல, அனைத்து திசைகளையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும்.(8) வெறுமனே வெட்டும் கருவி மட்டுமல்ல; வெளிப்படையாகவோ, மறைமுகமாவோ பகைவனை வீழ்த்தும் வழிமுறையும் ஆயுதமேயாகும் என ஆயுதங்கள் கையாள்வதை வழக்கமாகக் கொண்டோர் சொல்கின்றனர்.(9) 

பகைவனாகவோ, நண்பனாகவோ அறியப்பட்ட ஒருவனது வடிவமோ, உறுப்பிலக்கணமோ {அங்க லட்சணமோ} அவசியமல்ல. ஒருவனுக்கு வலியை {துன்பத்தை} உண்டாக்கும் மற்றொருவன், ஓ மன்னா, வலியை உணர்பவனுக்கு பகைவனாவான்.(10) நிறைவின்மையே செழிப்பின் வேராகும். எனவே, ஓ மன்னா, நான் நிறைவின்மையுடன் இருக்கவே விரும்புகிறேன். செழுமை கையகப் படுத்தப்பட்ட பிறகும், கடுமையாக முயற்சிப்பவனே உண்மையான கொள்கை கொண்ட மனிதனாவான்.(11) ஈட்டப்பட்ட செல்வம் பதுக்கப்படும்போதும் கொள்ளையடிக்கப்படலாம். எனவே, எவனும் செல்வத்திலும் செழுப்பிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது. இதுவே {இத்தகைய கொள்ளைகளே} மன்னர்களின் {வழக்கமான} நடத்தையாக இருக்கிறது.(12) இந்திரன், அமைதிக்கு உடன்பட்டு உறுதிமொழி கொடுத்த பிறகு நமுசியின் தலையைத் துண்டித்தான். பகைவனுக்கு எதிரான இந்த நிலையான ஒழுக்கத்தை அவனும் {இந்திரனும்} அங்கீகரிப்பதாகவே இச்செயல் உள்ளது.(13) 

தவளைகளையும், வளையில் வாழும் விலங்குகளையும் விழுங்கும் பாம்பைப் போல, அமைதியுடன் இருக்கும் மன்னனையும், வீட்டை விட்டு வெளியே வராத பிராமணனையும் இந்தப் பூமி விழுங்கிவிடுகிறது.(14) ஓ மன்னா, இயற்கையிலேயே எவனும் எவனுக்கும் பகைவனாக முடியாது. பொதுவான நாட்டங்களைக் கொண்டவனே {அதே நாட்டங்களைக் கொண்ட} மற்றொருவனுக்கு பகைவனாகிறான்.(15) அவனே வேறு நாட்டம் கொண்டவனுக்குப் பகைவனாவதில்லை. வளரும் பகைவனை தன் மூடத்தனத்தால் {அறியாமையால்} கவனிக்காதவன், சிகிச்சையற்ற நோயினால் உயிர்ப் பறிக்கப்படும் நோயாளியைப் போல அழிந்து போவான்.(16) 

அதிக முக்கியத்துவம் இல்லாத பகைவனாக இருப்பினும், அவனே ஆற்றலில் வளர்ந்து வந்தால், மரத்தின் வேரருகே இருக்கும் வெள்ளை எறும்புகள் மரத்தை விழுங்குவதைப் போல அவனை விழுங்கிவிடுவான்.(17) ஓ பாரதரே, ஓ அஜமீடரே {அஜமீட வம்சத்தவரே}, பகைவனின் செழிப்பு உமக்கு ஏற்பில்லாததாகவே இருக்கட்டும். ஞானமுள்ளோர், சுமையைப் போல இந்தக் கொள்கையை எப்போதும் தங்கள் தலையில் சுமக்க வேண்டும்.(18) தனது செல்வ வளர்ச்சியை எப்போதும் விரும்பும் ஒருவன், பிறப்பிலிருந்தே இயல்பாக வளரும் உடலைப் போலவே, தனது உறவினர்கள் மத்தியில் வளர்ந்து வருவான். ஆற்றல் விரைவான வளர்ச்சியைக் கொடுக்கும்.(19) 

பாண்டவர்களின் செல்வத்தை நான் விரும்பினாலும், இன்னும் அஃதை எனது சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. தற்சமயம், நான் எனது திறமையில் இருக்கும் ஐயங்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறேன். அவ்வையங்களைத் தீர்த்துக் கொள்ள நான் உறுதியான தீர்மானத்துடன் இருக்கிறேன். ஒன்று நான் அவர்களது {பாண்டவர்களது} செல்வத்தை அடைவேன், அல்லது போரில் மடிந்து வீழ்வேன்.(20) ஓ மன்னா, மனத்தின் நிலை இவ்வாறு உள்ள போதும், நாள்தோறும் பாண்டவர்கள் செல்வ நிலையில் வளரவும், நாம் வளராமலும் இருக்கும் போதும், நான் என் உயிருக்காக ஏன் கவலைப்படப் போகிறேன்?” என்றான் {துரியோதனன்}.(21)

பகடைக்கான மாளிகை தயாரானது – சபாபர்வம் பகுதி 55-(தியூத பர்வம் – 11)-சகுனி துரியோதனனுக்கு உற்சாகம் கொடுப்பது; துரியோதனன் மீண்டும் தனது தந்தை திருதராஷ்டிரனிடம் வேண்டுவது; திருதராஷ்டிரன் மறுப்பது; மீண்டும் துரியோதனன் வலியுறுத்துவது; விதுரனைக் கேட்க வேண்டும் என்று திருதராஷ்டிரன் சொல்வது; துரியோதன் அதை ஏற்காதது; சபா மண்டபம் தயாராவது..

சகுனி சொன்னான், “ஓ வெற்றியாளர்களில் சிறந்தவனே {துரியோதனா}, நீ எதைக் கண்டு துயர் அடைகிறாயோ அந்தப் பாண்டுவின் மகன் யுதிஷ்டிரனின் செழிப்பை {பகடையாட்டத்தின் மூலம்} நான் (உனக்காகக்) பறிப்பேன்.(1) எனவே, ஓ மன்னா {துரியோதனா}, குந்தியின் மகனான யுதிஷ்டிரனை இங்கே அழைப்பாயாக. திறன்நிறைந்த ஒருவன் பகடை வீசுவதன் மூலம், தனக்கு எந்தக் காயமும் ஏற்படாமல் திறனற்ற ஒருவனை வீழ்த்திவிட முடியும்.(2,3) ஓ பாரதா {துரியோதனா}, பந்தயமே எனது வில், பகடைக் காய்கள் எனது கணைகள், அந்தப் பகடையில் இருக்கும் குறிகளே எனது வில்லின் நாண், பகடைப் பலகையே எனது தேருமாகும்”, {என்றான் சகுனி}[1].(4)(கும்பகோணம் பதிப்பில், “நான் படைத்தலையில் யுத்தஞ்செய்யாமலும், பிராணஸம்சயத்தையடையாமலும், புண்படாமலும் பாச்சிகைகளை இறைத்து, தெரியாதவனான தர்மராஜனை ஜயிப்பதில் ஸமர்த்தன். பாரதனே, எனது பந்தயங்கள்தாம் விற்களென்றும், காய்கள்தாம் அம்புகளென்றும், சூதாட்டத் திறனுடைய ரஹஸ்யந்தான் நாண்கயிறென்றும், காய்களைப் போடும் வகைதான் தேரென்றும் அறி” என்றிருக்கிறது.)

துரியோதனன், “பகடையில் திறன்பெற்றவரான இந்தச் சகுனி, ஓ மன்னா, பகடை விளையாட்டில் பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} செல்வத்தைப் அபகரிக்கத் தாயாராக இருக்கிறார். அவருக்கு {சகுனிக்கு} அனுமதி அளிப்பதே உமக்குத் தகும்” என்றான்.(5)

திருதராஷ்டிரன், “எனது தம்பியான சிறப்பு மிகுந்த விதுரனின் ஆலோசனைகளுக்கே நான் எப்போதும் கீழ்ப்படிவேன். அவனுடன் கலந்தாலோசித்த பிறகு, இக்காரியத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் சொல்கிறேன்” என்றான்.(6)

துரியோதனன், “விதுரர், பாண்டு மகன்களுக்கு நன்மை செய்வதிலேயே எப்போதும் ஈடுபடுபவராவார். ஓ கௌரவரே, என்னிடம் அவரது {விதுரரது} உணர்வுகள் வேறு வகையில் உள்ளன {அவ்வாறில்லை}.(7) எனவே, இப்போது முன்மொழியப்பட்ட செயலை உமது இதயத்திலிருந்து அவர் விலக்கி விடுவார் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை[2]. ( கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிக சொற்களுடன், “ராஜாவே, அந்த விதுரரும், வியாஸரைவிட அதிகமாகத் தெரிந்தவர்தாம்; ஆனால் வெறுந்தர்மத்தையே சொல்லுவர். அது ஜயத்துக்கு ஸாதகமாகாது. பரதச்ரேஷ்சரே, ஜயம் தர்மத்திற்கு மாறானது. ஆதலால், தந்திரமுள்ளவன்தான் ஜயிப்பான். (வியாஸரும், விதுரருமாகிய) அவர்களிருவரும் (ஜயத்துக்கு) விரோதிகள். நிச்சயபுத்தியுள்ள விதுரர் உமது எண்ணத்தை மாற்றிவிடுவார். கௌரவரே, அவர் பாண்டவர்களின் விஷயத்தில் நன்மை செய்ய ஊக்கத்தோடிருப்பது போல என் விஷயத்திலில்லை” என்றிருக்கிறது)ஓ குரு குலத்தின் மகனே, ஒரு குறிப்பிட்ட காரியத்தில் இரு வேறு மனிதர்களின் மனங்கள் ஒரே வகையில் இருக்காது என்பதால் அடுத்தவர் ஆலோசனையின் பேரில் எந்தக் காரியத்தையும் செய்யும் நிலையை எந்த மனிதனும் அடையக்கூடாது.(8) ஆபத்திற்கான அனைத்துக் காரணங்களையும் காணாது இருக்கும் மூடன், மழைக்காலத்தில் அழியும் ஒரு பூச்சியைப் போல அழிவடைவான்.(9) ஒருவன் செழிப்படையும் வரை நோயோ, யமனோ காத்திருப்பதில்லை. எனவே, வாழ்வும் உடல்நலமும் இருக்கும்வரை, ஒருவன் (செழிப்புக்காக காத்திராமல்) தனது காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும்” என்றான் {துரியோதனன்}.(10)

திருதராஷ்டிரன், “ஓ மகனே {துரியோதனா}, பலவான்களிடம் பகைமை என்பதை நான் ஒருபோதும் பரிந்துரைக்க மாட்டேன். பகைமை நமது உணர்வுகளில் மாற்றங்களைக் ஏற்படுத்துகிறது. அஃது இரும்பால் செய்யப்படாதது எனினும், அதுவும் {பகைமை} ஒரு ஆயுதமே ஆகும்.(11) ஓ இளவரசனே, கொடும்போரின் விளைவுகளைத் தனக்குப் பின்னால் கொண்டு வருவதெதுவோ, இழப்புகள் நிறைந்ததெதுவோ, அதை நீ பேரருளெனக் கருதுகிறாய். தொடங்கிய உடனேயே அது கூரிய வாள்களையும், கூர்முனைக் கணைகளையும் உண்டாக்கும்[3] ” என்றான்.(12)(கும்பகோணம் பதிப்பில், “சூதாட்டமென்னும் அனர்த்தத்தை ஸாதகமென்று நினைக்கிறாய். அந்தச் சூதாட்டம் ஆரம்பிக்கப்படுமாயின் எவ்வகையிலாவது கூர்மையான கத்திகளையும், அம்புகளையும் உண்டாக்கிவிடும்” என்றிருக்கிறது.)

துரியோதனன், “தொல்பழங்காலத்து மனிதர்களே பகடைப் பயன்பாட்டைக் கண்டுபிடித்தவர்கள் ஆவர். அதில் எந்த அழிவுமில்லை, எந்த ஆயுதத்தாக்குதலும் அதிலில்லை. எனவே, சகுனியின் சொற்கள் உமக்கு ஏற்புடையதாகட்டும், சபா மண்டபம் கட்டுவதற்கு விரைவாக ஆணையிடுவீராக.(13) நம் மகிழ்ச்சிக்கு வழிகாட்டும் சொர்க்கத்தின் கதவு, சூதின் மூலம் நமக்குத் திறக்கப்படும். உண்மையில், (இத்தகு துணையுடன்) சூதாட்டத்தை மேற்கொள்பவர்கள், நற்பேறு பெறும் தகுதியை அடைவார்கள். அப்போது பாண்டவர்கள், (உமக்கு மேன்மையானவர்களாக இல்லாமல்) உமக்கு சரி நிகரானவர்களாவார்கள். எனவே பாண்டவர்களுடன் சூதாடுவீராக {எங்களை அனுமதிப்பீராக}” என்றான்.(14)

திருதராஷ்டிரன், “உன்னால் சொல்லப்படும் சொற்கள் எனக்கு உவப்பாக இல்லை. ஓ மனிதர்களின் ஆட்சியாளா {துரியோதனா}, உனக்கு ஏற்புடையதை நீ செய்வாயாக. ஆனால், இந்த சொற்களுக்கு இணக்கமாக செயல்பட்டால் நீ வருந்த வேண்டியிருக்கும்; நீதியற்ற இத்தகு வார்த்தைகளால், பிற்காலத்தின் செழிப்பைக் கொண்டு வர முடியாது.(15) வாய்மை மற்றும் ஞானத்தின் பாதையில் நடக்கும் விதுரன் இதை முன்பே அறிந்திருந்தான். பெரும் துயரங்களையும், க்ஷத்திரியர்களின் உயிர் நாசத்தையும் விதியே தீர்மானிக்கிறது” என்றான் {திருதராஷ்டிரன்}”.(16)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இதைச்சொன்னவனும், பலமற்ற மனத்தைக் கொண்டவனுமான திருதராஷ்டிரன், பிறகு, விதியைத் தவிர்க்க முடியாது எனவும், அதுவே மிக மேலானது எனவும் கருதினான். விதியால் இப்படி மதியிழந்த மன்னன், தனது மகனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து, உரத்த குரலில்,(17) “தங்கம் மற்றும் வைடூரியத்தால் அலங்கரிக்கப்பட்டதும், ஆயிரம் தூண்களுடனும், நூறு வாயில்களுடனும் கூடியதும், முழுமையாக இரண்டு மைல்கள் (ஒரு குரோசம்} நீளமும், அதே அளவு அகலமும் கொண்டதும்,  ஆயிரந்தூண்களுடன் கூடிய பளிங்கு வளைவு அரண்மனையென்று அழைக்கக்கூடியதும், அழகிய வர்ணனைக்குகந்ததுமான ஒரு சபா மண்டபத்தை காலந்தாழ்த்தாமல் மிகக் கவனமாகக் கட்டுவீராக.” என்றான் {திருதராஷ்டிரன்}.(18)

அவனது {திருதராஷ்டிரனின்} சொற்களைக் கேட்டவர்களும், புத்தியும், திறனும் கொண்டவர்களுமான ஆயிரக்கணக்கான கலைஞர்கள், மிக விரைவாக அந்த அரண்மனையைக் கட்டி, அதில் அனைத்துப் பொருட்களையும் நிரப்பினர்.(19) விரைவில் மன்னனிடம் வந்து அரண்மனை கட்டும் வேலை முடிந்தது என்றும், அது காண்பதற்கினியதாகவும், அழகாகவும், அனைத்து வகை ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதாகவும், தங்கத்தால் ஊடு இழை பொருத்தப்பட்ட பல வண்ணங்களில் ஆன தரைவிரிப்புகள் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.(20) 

பெரும் கல்விமானான மன்னன் திருதராஷ்டிரன், பிறகு, முதல் அமைச்சர் விதுரனை அழைத்து, “நீ {காண்டவப்பிரஸ்தம்} சென்று, காலந்தாழ்த்தாமல் இளவரசன் யுதிஷ்டிரனை இங்கே அழைத்து வருவாயாக.(21) அவன் {யுதிஷ்டிரன்} தனது தம்பிகளுடன் இங்கே வந்து, என்னுடைய இந்த அழகான சபாமண்டபத்தையும், கணக்கற்ற நகைகளையும், ரத்தினங்களையும், விலையுயர்ந்த படுக்கைகள் மற்றும் தரைவிரிப்புகளையும் கண்டு, நட்பு ரீதியிலான ஒரு பகடை ஆட்டத்தில் கலந்து கொள்ளட்டும்” என்றான் {திருதராஷ்டிரன்}.(22)

திருதராஷ்டிரன் ஆணை – சபாபர்வம் பகுதி 56-(தியூத பர்வம் – 12)-யுதிஷ்டிரனை அழைத்து வரும்படி திருதராஷ்டிரன் விதுரனைப் பணிப்பது…

வைசம்பாயனர் சொன்னார், “மன்னன் திருதராஷ்டிரன், தனது மகனின் {துரியோதனனின்} எண்ணத்தை அறிந்து விதியை வெல்ல முடியாது என்று நினைத்து {வைசம்பாயனனாகிய} நான் சொன்னவாறு செய்தான்.(1) இருப்பினும், புத்திசாலி மனிதர்களில் முதன்மையான விதுரன், தனது அண்ணனின் {திருதராஷ்டிரனின்} சொற்களை ஏற்காமல்,(2) “ஓ மன்னா {திருதராஷ்டிரரே, உமது ஆணையை நான் ஏற்கவில்லை. நீர் இவ்வாறு செயல்பட வேண்டாம். நமது குலத்திற்கே இஃது அழிவை ஏற்படுத்துமென நான் அஞ்சுகிறேன். உமது பிள்ளைகள் ஒற்றுமையைத் தொலைத்தால், அவர்களுக்குள் வேற்றுமை உண்டாகும். ஓ மன்னா, இந்தப் பகடை விளையாட்டினால் விளையப் போவதாக இதையே காண்கிறேன்” என்றான்.(3)

திருதராஷ்டிரன், “விதி எனக்கு எதிராகச் செயல்படவில்லை என்றால், இந்த சச்சரவு எனக்குத் துயரத்தை ஏற்படுத்தாது. இந்த முழு அண்டமும் விதியின் ஆதிக்கத்திலும், படைத்தவனின் விருப்பத்திற்கேற்பவுமே நகர்கிறது. அது சுதந்திரமாக இல்லை.(4) எனவே, ஓ விதுரா, எனது உத்தரவின் பேரில் மன்னன் யுதிஷ்டிரனிடம் சென்று, குந்தியின் சிறந்த மகனான அவனை {யுதிஷ்டிரனை} இங்கே {ஹஸ்தினாபுரத்திற்கு} அழைத்து வருவாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.(5)

ஹஸ்தினாபுரம் வந்த பாண்டவர்கள் – சபாபர்வம் பகுதி 57-(தியூத பர்வம் – 13)-விதுரன் இந்திரப்பிரஸ்தம் சென்று யுதிஷ்டிரனை அழைப்பது; யுதிஷ்டிரன் சூதின் தீமையை விளக்குவது; விதுரன் அஃதை ஆமோதிப்பது; திருதராஷ்டிரன் கட்டளையை இருவரும் ஏற்று ஹஸ்தினாபுரம் வருவது; ஹஸ்தினாபுரம் வந்த பாண்டவர்கள் உறவினர்கள் அனைவரையும் சந்திப்பது–

வைசம்பாயனர் சொன்னார், “தன் விருப்பத்திற்கு மாறாக மன்னன் திருதராஷ்டிரனால் ஆணையிடப்பட்ட விதுரன், அதிக உறுதியும், பெரும் வேகமும், பலமும் கொண்ட குதிரைகள் உதவியுடன் அமைதியாகவும் பொறுமையாகவும், பாண்டுவின் ஞானமுள்ள மகன்கள் வசிப்பிடத்திற்குப் புறப்பட்டான்.(1)  பெரும் புத்திசாலித்தனம் கொண்ட விதுரன் பாண்டவர்த் தலைநகரம் போகும் பாதையில் முன்னேறிச் சென்றான். மன்னன் யுதிஷ்டிரனின் நகரத்தை அடைந்து, அதற்குள் நுழைந்து, எண்ணிலடங்கா பிராமணர்களால் வணங்கப்படும் அரண்மனையை நோக்கி முன்னேறினான்.(2) குபேரனின் மாளிகை போல இருந்த அந்த அரண்மனைக்கு வந்த அறம்சார்ந்த விதுரன், தர்மனின் மகனான யுதிஷ்டிரனை அணுகினான்.(3) பூமியில் எந்த எதிரியும் இல்லாதவனும், வாய்மைக்குத் தன்னை அர்ப்பணித்தவனுமான அந்த சிறப்புவாய்ந்த அஜமீடன் {யுதிஷ்டிரன்}, விதுரனை வணங்கி, திருதராஷ்டிரன் மற்றும் அவனது மகன்கள் குறித்து விசாரித்தான்.(4) 

யுதிஷ்டிரன், “ஓ க்ஷத்தரே {சித்தப்பா விதுரரே} மகிழ்ச்சியற்ற மனங்கொண்டவராகத் தெரிகிறீர். அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் தானே இங்கு வந்திருக்கிறீர்? திருதராஷ்டிரரின் மகன்கள், முதிர்ந்தவரான அவர்களின் தந்தைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்கள் என்று நம்புகிறேன். மக்கள், திருதராஷ்டிரரின் ஆட்சிக்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள் என்றும் நம்புகிறேன்” என்றான்.(5)

விதுரன், “தமது மகன்களுடன் கூடிய சிறப்புமிக்க மன்னர் {திருதராஷ்டிரர்} நலமாகவும், தமது உறவினர்கள் சூழவும் இந்திரனைப் போல ஆண்டு வருகிறார். தமக்குக் கீழ்ப்படிந்திருக்கும் தமது மகன்கள் அனைவராலும் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். அந்தச் சிறப்புமிக்க ஏகாதிபதி, தமது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதில் முனைப்புடன் இருக்கிறார்.(6) குருக்களின் மன்னர் {திருதராஷ்டிரர்}, உன் {உள்ள} அமைதி {குறைவின்மை} மற்றும் செழிப்பை விசாரிக்குமாறும், திருதராஷ்டிரர் புதிதாகக் கட்டியிருக்கும் அரண்மனையானது, உன்னுடையதற்கு {உன் அரண்மனைக்கு} நிகராக இருக்கிறதா என்று காண்பதற்கு உன் தம்பிகளுடன் கூடிய நீ ஹஸ்தினாபுரத்திற்கு வருமாறு உன்னிடம் கேட்கவும் எனக்கு ஆணையிட்டிருக்கிறார்.(7) ஓ பிருதையின் மகனே, நீ உன் தம்பிகளுடன் அங்கே வந்து மகிழ்ந்திருந்து, நட்புரீதியிலான ஒரு பகடையாட்டத்தில் அமர்வாயாக. குருக்கள் ஏற்கனவே வந்துவிட்டனர் என்பதால் நீயும் அங்கே சென்றால் நாங்கள் மகிழ்வோம்.(8) சிறப்புமிக்க மன்னர் திருதராஷ்டிரர் அங்கே கொண்டு வந்திருக்கும் சூதாடிகளையும், வஞ்சகர்களையும் நீ காண வேண்டும். ஓ மன்னா, இதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன். மன்னரின் ஆணையை நீ அங்கீகரிப்பாயாக.” என்றான் {விதுரன்}[1].(9)

(கும்பகோணம் பதிப்பில் விதுரர், “ராஜாவே, மஹாத்மாவான திருதராஷ்டிர மஹாராஜா தம் புத்ரர்களாலும், குலத்தோராலும் சூழப்பெற்று இந்திரன் போல ஸுகமாக இருக்கிறார். அந்த மஹாத்மாவானவர், தம் புத்ரர்களுடைய குணங்களால் மாற்றப்பட்டவராய் வ்யஸனத்தைவிட்டுத் தம்மிலேயே ஸுகமடைந்து ஸந்தோஷமுற்றிருக்கிறார். கௌரவராஜாவான் திருதராஷ்டிரர் முதலில் உன்னுடைய க்ஷேமத்தையும், குறைவின்மையையும் விசாரித்து, பிறகு, “புத்ரனே, உன் ஸஹோதரர்களின் இந்த ஸபை உன் ஸபைக்குச் சமமான அழகுள்ளதாயிருக்கிறது. நீ வந்து பார்க்க வேண்டும். குந்தி புத்திரனே, ஸஹோதரர்களுடன் கூட நீ இந்தச் சபைக்கு வந்து ஸ்நேஹிதர்களுக்குள் சொக்கட்டானாட்டத்தை ஆடி மகிழ வேண்டும். நீங்கள் எல்லாரும் சேருவதில் நமக்கு விருப்பமிருக்கிறது. கௌரவர்களனைவரும் முன்னமே வந்து சேர்ந்திருக்கின்றனர்” என்று (உனக்குச் சொல்லும்படி) சொன்னார். ராஜாவே, மஹாத்மாவான திருதராஷ்டிர மஹாராஜாவினால் ஏற்படுத்தப்பட்டு அந்தச் சபையில் உட்கார்ந்திருக்கும் மோசக்காரர்களான சூதாட்டக்காரர்களை நீ பார்க்கக்கடவாயென்பதைச் சொல்வதற்காக நான் வந்தேன். இதை நீ செய்வாயாக” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “தமது மகன்களுடன் கூடிய சிறப்புமிக்க மன்னர் {திருதராஷ்டிரர்} நலமா இருக்கிறார். தமது உறவினர்கள் சூழ இந்திரனைப் போல அவர் ஆண்டு வருகிறார். ஓ மன்னா, தமக்குக் கீழ்ப்படிந்திருக்கும் தமது மகன்கள் அனைவராலும் அந்த ஏகாதிபதி மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனால் அவர் தமது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதில் முனைப்புடன் இருக்கிறார்.(6) குருக்களின் மன்னர் {திருதராஷ்டிரர்}, முதலில் உன்  அமைதி மற்றும் செழிப்பை விசாரிக்குமாறும், அதன் பிறகு அவரது சார்பில் பின்வருமாறு சொல்லவும் எனக்கு ஆணையிட்டிருக்கிறார். (அவர் உன்னிடம்) “(என்னால் கட்டப்பட்டிருக்கும்) உன் தம்பியின் சபா மண்டபம் உன் சபைக்கு இணையானதாக இருக்கிறது. எனவே, (வந்து) அதைப் பார்ப்பாயாக..(7) ஓ பிருதையின் மகனே, அங்கே வந்து அரண்மனையில் இன்புற்றிருந்து, உன் தம்பிகளுடன் {துரியோதனாதிகளுடன்} சேர்ந்து நட்புரீதியிலான ஒரு பகடையாட்டம் ஆடுவாயாக. உன் வருகையில் நாமும், அங்கே திரண்டிருக்கும் குருக்கள் அனைவரும் மகிழ்வோம்” {என்றும் சொல்லச் சொன்னார்}.(8) ஓ மன்னா, சிறப்புமிக்க மன்னர் திருதராஷ்டிரர் கொண்டு வந்திருக்கும் வஞ்சகச் சூதாடிகளை நீ அங்கே காண்பாய். இதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன். மன்னரின் ஆணையை நீ அங்கீகரிப்பாயாக.(9)” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளது போன்றே இருக்கிறது. இந்த உரையாடலே சரியானதாகவும் தெரிகிறது. கங்குலியின் பதிப்பில் வாக்கியங்களின் அமைப்பில் வேறுபாடு தெரிகிறது.)

யுதிஷ்டிரன், “ஓ க்ஷத்தரே {சித்தப்பா விதுரரே}, நாம் பகடையாட அமர்ந்தால், நமக்குள் சச்சரவு தோன்றக்கூடும். இதை அறிந்தும் எந்த மனிதன் சூதாட இணங்குவான்? எங்களுக்கு எது சரியாக இருக்கும் என்று நீர் நினைக்கிறீர்? நாங்கள் அனைவரும் உமது ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து இருக்கிறோம்” என்றான்.(10)

விதுரன், “துயரங்கள் அனைத்திற்கும் வேரானது சூது என்பதை நான் அறிவேன். அந்த எண்ணத்தை மன்னர் {திருதராஷ்டிரன்} கைவிட என்னால் முடிந்த வரை போராடினேன். இருப்பினும், மன்னர் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார். இதையெல்லாம் அறிந்து கொண்டு, ஓ கற்றவனே, எது நன்மையோ அதைச் செய்வாயாக” என்றான்.(11) 

யுதிஷ்டிரன், “திருதராஷ்டிரரின் மகன்கள் தவிர, விளையாடத் தயாராக இருக்கும் வேறு நேர்மையற்ற சூதாடிகள் யார் யார்? ஓ விதுரரே, அவர்கள் யார்? எங்கள் நூற்றுக்கணக்கான உடைமைகளைப் பந்தையப் பொருளாக வைத்து நாங்கள் யாருடன் விளையாட வேண்டி வரும் என்பதை எங்களுக்குச் சொல்வீராக” என்றான்.(12)

விதுரன், “ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பகடையில் நிபுணனான காந்தார மன்னன் சகுனி, தனது கைகளின் நிபுணத்துவத்தால் பந்தயப் பொருளை அடைவதில் உறுதியாக இருக்கிறான். மேலும், விவிம்சதி, மன்னன் சித்திரசேனன், சத்தியவிரதன், புருமித்திரன், ஜயன் ஆகியோரும் அங்கே இருக்கின்றனர்” என்றான்.(13)

யுதிஷ்டிரன், “எப்போதும் வஞ்சகத்தையே நம்பியிருப்பவர்களும், உறுதிமிக்கவர்களுமான கொடும் சூதாடிகள் அங்கிருப்பது தெரிகிறது. இருப்பினும், இந்த முழு அண்டமும், படைத்தவனின் விருப்பத்தின்படியும், விதியின் கட்டுப்பாட்டிற்குள்ளும் நடக்கிறது. அது சுதந்திரமானதல்ல.(14) ஓ கற்றவரே {விதுரரே}, மன்னன் திருதராஷ்டிரரின் உத்தரவின் பேரில் நான் சூதாட்டத்தில் ஈடுபட விரும்பவில்லை. ஒரு தந்தை தனது மகனுக்கு நன்மையையே செய்வான். நீர் எங்கள் குரு, ஓ விதுரரே, எங்களுக்கு எது நன்மையானது என்பதை எனக்குச் சொல்வீராக.(15) சூதாட எனக்கு விருப்பமில்லை, எனவே நான் விளையாட மாட்டேன். ஆனால் அந்தச்சபையில் தீய சகுனி என்னை அழைத்தால்? அப்படி அவன் அழைத்தால், என்னால் மறுக்க முடியாது. அது தீர்மானிக்கப்பட்ட எனது நிலைத்த நோன்பாகும்” என்றான்.(16)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “மன்னன் யுதிஷ்டிரன் விதுரனிடம் இப்படிச் சொல்லிவிட்டு, காலந்தாழ்த்தாமல் தனது பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய கட்டளையிட்டான். மறுநாள், மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது உறவினர்களுடனும், பணியாட்களுடனும், திரௌபதியை மையமாகக் கொண்டிருக்கும் வீட்டிலிருக்கும் மங்கையரையும் அழைத்துக் கொண்டு குருக்களின் தலைநகரத்திற்குப் {ஹஸ்தினாபுரத்திற்குப்} புறப்பட்டான்.(17) பகைவரைத் தண்டிப்பவனான மன்னன் யுதிஷ்டிரன், ‘கண்ணுக்கு முன்னால் ஒளிரும் பொருட்கள் விழுவதைப் போல, ஏதோ மனிதன் கயிற்றால் கட்டப்பட்டு ஆடுவதைப் போல, விதி நமது மதியை மயக்கி இயற்கையின் ஆளுகைக்குள் நம்மைத் தள்ளுகிறது’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு, திருதராஷ்டிரனின் ஆணை குறித்து மேலும் ஆராயாமல், க்ஷத்தனுடன் {விதுரனுடன்} புறப்பட்டான். (18,19)

பகை வீரர்களைக் கொல்பவனும், பாண்டு மற்றும் பிருதையின் {குந்தியின்} மகனுமான அவன் {யுதிஷ்டிரன்}, பாஹ்லீக நாட்டு மன்னன் கொடுத்த தேரில் ஏறி, அரச அங்கிகள் பூட்டிக் கொண்டு தனது தம்பிகளுடன் புறப்பட்டான்.(20) அரசப் பிரகாசத்துடன் கூடிய அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, பிராமணர்கள் தனக்கு முன்பு நடக்க, தனது நகரத்தில் இருந்து புறப்பட்டு, திருதராஷ்டிர ஆணையின் பேரிலும், காலத்தின் உந்துதலாலும் {தன் நகரத்தில் இருந்து} புறப்பட்டுச் சென்றான்.(21) ஹஸ்தினாபுரத்தை அடைந்து, திருதராஷ்டிரனின் அரண்மனைக்குச் சென்றான். அங்கே சென்ற பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மன்னனை {திருதராஷ்டிரனை} அணுகினான்.(22) பிறகு அந்த மேன்மையானவன் {யுதிஷ்டிரன்} பீஷ்மரையும், துரோணரையும், கர்ணனையும், கிருபரையும், துரோணரின் மகனையும் {அஸ்வத்தாமனையும்} அணுகி ஆரத்தழுவினான். பதிலுக்கு அவர்களாலும் தழுவிக் கொள்ளப்பட்டான்.(23)

பெரும் பலம் வாய்ந்த கரம் கொண்ட அந்தப் பேராற்றல் கொண்டவன் {யுதிஷ்டிரன்}, சோமதத்தனை அணுகினான், பிறகு துரியோதனன், சல்லியன், சுபலனின் மகன் {சகுனி},(24) மேலும் தனக்கு முன்பே அங்கு வந்திருந்த மன்னர்கள் அனைவரையும் அணுகினான். பிறகு அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} வீரனான துச்சாசனனையும், பிறகு தனது (மற்ற) தம்பிகளையும்,(25) பிறகு ஜெயத்ரதனையும், பிறகு குருக்கள் அனைவரையும் ஒருவர் பின் ஒருவராக அணுகினான். பெரும் பலம் வாய்ந்த கரங்களைக் கொண்டவனான அவன், தனது தம்பிகளால் சூழப்பட்டு, ஞானமுள்ள மன்னன் திருதராஷ்டிரனின் அறைக்குள் நுழைந்தான்.

பிறகு யுதிஷ்டிரன், எப்போதும் தனது தலைவனுக்குக் கீழ்ப்படிந்திருக்கும் மரியாதைக்குரிய காந்தாரி, தனது மருமகள்களால் சூழப்பட்டு ரோகிணி நட்சத்திரம் போல வீற்றிருப்பதைக் கண்டான். பிறகு காந்தாரியை வணங்கி, அவளால் ஆசி வழங்கப்பட்டு,(26-28) தமது கண்ணைப் போன்ற ஞானம் கொண்ட சிறப்பு வாய்ந்த ஏகாதிபதியான, முதிர்ந்த பெரியப்பாவை {திருதராஷ்டிரனை} மன்னன் {யுதிஷ்டிரன்} கண்டான்.(29) பிறகு மன்னன் திருதராஷ்டிரன், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அவனது {யுதிஷ்டிரனது} தலையை முகர்ந்து பார்த்து, பீமசேனனை மூத்தவனாகக் கொண்டவர்களும், பாண்டுவின் மகன்களுமான மற்ற நான்கு இளவரசர்களின் தலைகளையும் முகர்ந்தான்.(30) மனிதர்களில் புலிகளான அழகான பாண்டவர்களைக் கொண்ட குருக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ந்தனர்.(31) 

பிறகு மன்னனால் உத்தரவிடப்பட்டு, பாண்டவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரத்திரனங்களும் நகைகளும் நிறைந்த அறைக்குச் சென்றனர். அவர்கள் அறைகளுக்குள் சென்றதும், திருதராஷ்டிரனின் வீட்டுப் பெண்மணிகள் துச்சலையுடன் {திருதராஷ்டிரனின் ஒரே மகளுடன்} சென்று அவர்களைப் {பாண்டவர்களைப்} பார்த்து வந்தனர்.(32) பிரகாசமிக்கவளும், செழிப்பானவளும், அழகியுமான யக்ஞசேனியைக் {திரௌபதியைக்} கண்ட திருதராஷ்டிரனின் மருமகள்கள் மகிழ்ச்சியற்றுப் போய் பொறாமையால் நிறைந்தனர்.(33)

அந்தப் பெண்மணிகளுடன் உரையாடிய அந்த மனிதர்களில் புலிகள் பிறகு தங்கள் தினசரி உடற் பயிற்சிகளையும், அந்த நாளுக்குரிய தங்கள் சடங்குகளையும் செய்தனர்.(34) தங்கள் தினசரி வழிபாடுகளை முடித்து, வாசனை மிகுந்த சந்தனக் குழம்பைத் தங்கள் மேனியில் பூசிக் கொண்டு, நற்பேறு பெற எண்ணி, பிராமணர்களுக்குப் பரிசுகள் கொடுத்து அவர்களது வாழ்த்துகளைப் பெற்றனர். பிறகு சிறந்த சுவையுள்ள உணவை உண்டு இரவு ஓய்வுக்காகத் தங்கள் அறைகளுக்குள் சென்றனர்.(35) 

அந்த குருக்களின் காளைகள், அழகான பெண்களின் இசையால் உறங்க வைக்கப்பட்டனர். அந்த எதிரிகளின் நகரங்களை அடக்கும் வீரர்கள், அந்தப் பெண்களின் சுகத்தால் அந்த இரவை இனிமையாகக் கழித்தனர். இரவை இன்பமாகக் கழித்த அவர்கள், காலையில் பாடகர்களால் இனிமையான இசை இசைத்து எழுப்பப்பட்டு, தங்கள் படுக்கைகளில் இருந்து விடியலிலேயே எழுந்தனர்.(36,37) பிறகு தங்கள் தினசரி சடங்குகளை முடித்துக் கொண்டு சபா மண்டபத்துக்குள் நுழைந்தனர். அங்கே அவர்கள் {பாண்டவர்கள்}, சூதாடத் தயாராக இருந்தவர்களால் வணங்கப்பட்டனர்” {என்றார் வைசம்பாயனர்}.(38)

ஆட்டம் ஆரம்பம் – சபாபர்வம் பகுதி 58-(தியூத பர்வம் – 14)-பகடைக்காக உண்டாக்கப்பட்ட சபாமண்டபத்துக்குள் பாண்டவர்கள் நுழைவது; யுதிஷ்டிரன் சூதின் தீமையை விளக்குவது; சகுனி சமாதானம் கூறுவது; யாருடன் தான் விளையாட வேண்டும் என்று யுதிஷ்டிரன் கேட்பது; விளையாட்டு ஆரம்பமாவது.

வைசம்பாயனர் சொன்னார், “யுதிஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட பிருதையின் மகன்கள் {பாண்டவர்கள்} அந்தச் சபா மண்டபத்துக்குள் நுழைந்து, அங்கே இருந்த அனைத்து மன்னர்களையும் அணுகினர். வழிபடத்தகுந்தவர்களை வழிபட்டும், வயதுக்குத் தகுந்தபடி ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டும், விலையுயர்ந்த விரிப்புகள் விரிக்கப்பட்டவையும், தூய்மையானவையுமான தங்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.(1,2) அவர்களும் {பாண்டவர்களும்} மற்ற மன்னர்களும் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, சுபலனின் மகனான சகுனி யுதிஷ்டிரனிடம்,(3) “ஓ மன்னா, இந்த சபா மண்டபம் நிறைந்திருக்கிறது. இவர்கள் அனைவரும் உனக்காகவே காத்திருக்கின்றனர். எனவே, பகடை விரிக்கப்படட்டும், ஓ யுதிஷ்டிரா, விளையாட்டுக்கான விதிகளும் நிர்ணயிக்கப்படட்டும்” என்றான்.(4)

யுதிஷ்டிரன், “ஏமாற்று நிறைந்த சூதாட்டம் பாவகரமானது. அதில் எந்த க்ஷத்திரிய ஆற்றலும் கிடையாது. நிச்சயமாக அதில் எந்த நீதிநெறியும் கிடையாது. ஓ மன்னா {சகுனி}, பிறகு நீ ஏன் சூதை இப்படிப் புகழ்கிறாய்?(5) ஏமாற்று விளையாட்டில் பெருமைப்படும் சூதாடிகளை ஞானமுள்ளோர் பாராட்டுவதில்லை. ஓ சகுனி, இழிந்தவனைப் போல ஏமாற்றுகரமான வழிகளில் எங்களை வீழ்த்தாதே” என்றான்.(6)

சகுனி, “வெல்வதிலும், வீழ்வதிலும் உள்ள ரகசியங்களை அறிந்த அந்த உயர் ஆன்ம விளையாட்டு வீரன், எதிரியின் ஏமாற்றும் கலைகளை சூனியமாக்கும் நிபுணத்துவம் வாய்ந்த, சூதின் மாறுதல்களை உன்னிப்பாகக் கவனிப்பதில் ஒருமுகம் கொண்ட, விளையாடத் தெரிந்தவன் பாதிப்படைவதில்லை. ஓ பிருதையின் {குந்தியின்} மகனே, பகடையில் பந்தயம் வைக்கும்போது, வெற்றி தோல்வியால் நமக்குக் காயம் ஏற்படுகிறது. அதன் காரணமாகவே சூது குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, விளையாட்டை ஆரம்பிக்கலாம். அஞ்சாதே. பந்தயம் நிச்சயிக்கப்படட்டும், தாமதம் செய்யாதே!” என்றான்.(7,8)

யுதிஷ்டிரன், “சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் நாம் செல்ல வழி வகுக்கும் செயல்களைக் குறித்து நமக்கு எப்போதும் சொல்லும் அசிதனின் மகனான முனிவர்களில் சிறந்த தேவலன், சூதாடிகளைக் கொண்டு ஏமாற்றுகரமாக விளையாடுவது மிகப்பாவகரமானது என்று சொல்கிறார். தந்திரமில்லா போர் செய்து பெரும் வெற்றியே சிறந்த விளையாட்டாகும். இருப்பினும், விளையாட்டின் ஒரு வகையாகக் கருதப்படும் சூதாட்டம் அப்படிப்பட்டதல்ல.(9,10) மரியாதைக்குரியவர்கள் ஒரு போதும் மிலேச்ச மொழியைப் பேசவோ, அல்லது தங்கள் நடத்தையில் ஏமாற்றுத்தனத்தையோ கொள்ள மாட்டார்கள். தந்திரமும் குறுக்கு புத்தியும் இல்லாத போர் செய்வதே நேர்மையான மனிதர்களின் செயல்பாடாகும்.(11) ஓ சகுனி, எங்கள் தகுதிக்கேற்ப பிராமணர்களுக்கு நன்மை செய்வது எவ்வாறு என்று கற்க நாங்கள் சேகரித்து வைத்திருக்கும் செல்வத்தை, வேண்டுமென்றே விளையாடி எங்களிடம் இருந்து வெற்றி கொள்ளாதே. எதிரிகள் கூட பந்தயம் வைத்து ஏமாற்றி விளையாடி இவ்வகையில் வீழ்த்தப்படக்கூடாது. நான் தந்திரத்தின் மூலமாக மகிழ்ச்சியையோ செல்வத்தையோ அடைய விரும்பவில்லை. சூதாடியின் நடத்தை, ஏமாற்றுத்தனம் இல்லாத நடத்தையாக இருந்தாலும் பாராட்டத்தகுந்தது அல்ல” என்றான்.(12,13)

சகுனி, “ஓ யுதிஷ்டிரா, நேர்மையற்ற நோக்கமான வெற்றியடைவதில் இருக்கும் விருப்பத்தால், உயர் பிறப்பு பிறந்த ஒருவன் மற்றவனை நாடுகிறான் (போட்டி, மேன்மைக்கான பந்தயம்).(14) அதே போல மற்றொரு நேர்மையற்ற நோக்கமான வீழ்த்துவதில் உள்ள விருப்பத்தால், ஒரு கற்ற மனிதன் மற்றவனை அணுகுகிறான் (கல்விப் போட்டியில்). இருப்பினும், இது போன்ற நோக்கங்கள் உண்மையில் நேர்மையற்றதாக மதிக்கப்படவில்லையே.(15) ஓ யுதிஷ்டிரா, ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவன், நிபுணத்துவம் இல்லாதவனை அணுகுகிறான்; வலுத்தவன் பலவீனனை அணுகுகிறான். இது தான் எல்லா போட்டிகளிலும் உள்ள நடைமுறையாகும்.(16) ஓ யுதிஷ்டிரா, நோக்கம் என்பது வெற்றியே. எனவே, நீ கொண்டிருக்கும் அச்சத்தால், நான் நேர்மையற்ற முறையில் உன்னை அணுகுவதாக நீ கருதினால், ஆட்டத்தில் இருந்து விலகுவாயாக” என்றான்.(17)

யுதிஷ்டிரன், “அறைகூவி அழைக்கப்பட்ட பிறகு, நான் பின்வாங்குவதில்லை. இது எனக்கு நானே நிறுவிக் கொண்ட நோன்பாகும். மேலும், ஓ மன்னா {சகுனி}, விதி மிக வலியது. விதியின் கட்டுப்பாட்டிலேயே நாம் அனைவரும் இருக்கிறோம்.(18) இந்தச் சபையில் இருக்கும் யாருடன் நான் விளையாட வேண்டும்? என்னுடன் சமமாக பந்தயம் வைக்கத்தகுந்த நபர் யார் இருக்கிறார்? ஆட்டம் தொடங்கட்டும்” என்றான்.(19)

அதற்கு துரியோதனன், “ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நான் அனைத்து நகைகளையும், ரத்தினங்களையும், அனைத்து வகை செல்வத்தையும் அளிக்கிறேன். எனக்காக, எனது மாமாவான இந்தச் சகுனி விளையாடுவார்” என்றான்.(20) 

யுதிஷ்டிரன், “ஒருவருக்காக மற்றவர் விளையாடுவது என்பது விதிக்கு முரணாக எனக்குத் தெரிகிறது. ஓ கல்விமானே, நீயேகூட இதை ஏற்றுக் கொள்வாய். இருப்பினும், இதையே நீ விரும்பினால் விளையாட்டுத் தொடங்கட்டும்” என்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(21)

“பார், நான் வென்றுவிட்டேன்!” என்றான் சகுனி – சபாபர்வம் பகுதி 59-தியூத பர்வம் – 15)பகடை ஆட்டம் தொடங்கி முதல் வீச்சில் யுதிஷ்டிரன் தோற்றது…

வைசம்பாயனர் சொன்னார், “விளையாட்டுத் தொடங்கிய போது, மன்னன் திருதராஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட அனைத்து மன்னர்களும் அந்த சபையில் இருந்த இருக்கைகளில் அமர்ந்தனர்.(1) ஓ பாரதா {ஜனமேஜயா}, பீஷ்மர், துரோணர், கிருபர், உயர் ஆன்ம விதுரன் ஆகியோர் மகிழ்ச்சியற்ற இதயங்களுடன் பின்னே அமர்ந்தனர்.(2) சிங்கக் கழுத்து {சிங்கப் பிடரி} கொண்டவர்களும், பெரும் சக்தி கொண்டவர்களுமான மன்னர்கள் தனியாகவும், ஜோடிஜோடியாகவும், அழகான வடிவமும், வண்ணமும் கொண்டவையுமான உயர்ந்த இருக்கைகளில் அமர்ந்தனர்.(3) ஓ மன்னா {ஜனமேஜயா}, அங்கே கூடியிருந்த மன்னர்களால் அந்த சபை மிகப் பிரகாசித்து நற்பேற்றை அருளும் தேவர்கள் அமர்ந்திருக்கும் தேவலோக சபை போல காட்சியளித்தது.(4) அங்கிருந்தவர்கள் அனைவரும் வேதங்களை அறிந்தவர்களாகவும், ஆற்றல் கொண்டவர்களாகவும், பிரகாசத்துடன் கூடியவர்களாகவும் இருந்தனர். ஓ பெரும் மன்னா {ஜனமேஜயா}, பிறகு நட்புரீதியான அந்தப் பகடை ஆட்டம் தொடங்கியது.(5)

யுதிஷ்டிரன், “ஓ மன்னா {துரியோதனா}, அழகானதாகவும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருப்பதும், பெரும் மதிப்பு கொண்டதும், சிறந்ததுமான இந்த முத்துச்சரம், பழங்காலத்தில் சமுத்திரத்தைக் கடைந்து பெறப்பட்டது,(6) ஓ மன்னா {துரியோதனா}, இதுவே எனது பந்தயப் பொருள். ஓ பெரும் மன்னா, என்னுடன் விளையாடுவதற்காக, இதற்கு பதில் நீ பந்தயமாக வைக்க விரும்பும் செல்வம் என்ன?” என்று கேட்டான்.(7)

துரியோதனன், “என்னிடம் நிறைய ரத்தினங்களும், பெருஞ்செல்வமும் இருக்கின்றன. ஆனால் நான் அவற்றில் பெருமை கொள்ளவில்லை. இந்தப் பந்தயத்தை நீயே வெல்வாயாக” என்றான்”.(8)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிறகு, பகடையில் பெரும் நிபுணத்துவம் வாய்ந்த சகுனி, பகடைப் பாச்சிகையை {தாயக்கட்டையை} எடுத்து (உருட்டி) யுதிஷ்டிரனிடம், “பார், நான் வென்றுவிட்டேன்!” என்றான்.(9)

நியாயமற்ற வழிகளில் வென்றான் சகுனி! – சபாபர்வம் பகுதி 60-(தியூத பர்வம் – 16)- யுதிஷ்டிரனின் செல்வங்களை சகுனி ஏமாற்றி வெல்லுதல்…

யுதிஷ்டிரன் சொன்னான், “இந்தப் பந்தயப் பொருளை நியாயமற்ற முறையில் வென்று விட்டாய். ஆனால், அதற்காக பெருமைப்படாதே, ஓ சகுனி. ஆயிரம் ஆயிரமாகப் பந்தயம் வைத்து நாம் விளையாடலாம்.(1) என்னிடம் ஆயிரம் நிஷ்கங்கள்[1] (கும்பகோணம் பதிப்பில் “நூற்றெட்டு பலம் கொண்ட பொன் நாணயம்” என்ற அடிக்குறிப்பு இருக்கிறது.)நிரம்பிய பல அழகான பெட்டிகளும் {ஜாடிகள்} எனது கருவூலத்தில் உள்ளன. மேலும் வற்றாத தங்கமும், அதிகமான வெள்ளியும், மற்ற தாதுப்பொருட்களும் உள்ளன. ஓ மன்னா, இதுவே நான் உன்னிடம் வைக்கும் பந்தயப் பொருளாகும்” என்றான்”.(2)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட சகுனி, குரு குலத்தைத் தழைக்க வைப்பவர்களில் தலைவனும், பாண்டு மகன்களின் மூத்தவனும், மங்காத புகழ் கொண்டவனுமான மன்னன் யுதிஷ்டிரனிடம், “பார், நான் வென்றுவிட்டேன்!” என்றான்.(3)

யுதிஷ்டிரன், “எப்போதும் வெற்றியைத் தருவதும், சரியான அளவுகள் கொண்டதும், புலித்தோலால் மூடப்பட்டதும், அற்புதமான சக்கரங்களும் கொடிமரங்களும் பூட்டப்பட்டதும், சிறு மணிகளால் அலங்கரிக்கப்பட்டதும், ஆயிரம் தேர்களுக்குச் சமமாக சுமக்கப்படுபவரின் இதயத்தை மகிழ்ச்சியால் நிறைப்பதுமாக இருக்கிறது எனது அரசத்தேர் {ராஜரதம்}. அந்த அழகான புனிதமான தேரின் சக்கரங்கள் எழுப்பும் ஒலியானது மேகக்கூட்டங்களின் உறுமல் போலவும், கடலின் முழக்கம் போலவும் இருக்கும். அந்த தேரில் சந்திர பிம்பம் போன்றவையும் வெண்மையானவையுமான உயர்ந்த சாதி குதிரைகள் எட்டு பூட்டப்பட்டிருக்கின்றன. அவற்றின் குளம்படிகளில் இருந்து எந்த புவிசார்ந்த உயிரினமும் தப்ப முடியாது. ஓ மன்னா, இதுவே நான் பந்தயப் பொருளாக வைக்கும் எனது செல்வமாகும்” என்றான் {யுதிஷ்டிரன்}.(4-6)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைக் கேட்டு, பகடை பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி, நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு யுதிஷ்டிரனிடம், “பார், நான் வென்றுவிட்டேன்!” என்றான்.(7)

யுதிஷ்டிரன், “கைகளிலும், தோள்களிலும் தங்க ஆபரணங்கள் பூண்டவர்களும், கழுத்தைச் சுற்றி நிஷ்கங்களும் மற்ற ஆபரணங்களும் பூண்டவர்களும்,(8) விலையுயர்ந்த மாலைகள் பூண்டவர்களும், ஆடம்பர ஆடைகள் உடுத்தியவர்களும், மேனியில் சந்தனம் பூசிக் கொண்டவர்களும், நகைகளும், தங்கமும் அணிந்தவர்களும், ஆய கலைகள் அறுபத்து நான்கில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களும், பாடுவதில் ஆடுவதில் சிறந்து விளங்குபவர்களும், எனக்காகக் காத்திருந்து எனது கட்டளையின் பேரில் தேவர்களுக்கும், ஸ்நாதக பிராமணர்களுக்கும், மன்னர்களுக்கும் சேவை செய்பவர்களும், இளமையானவர்களுமான ஆயிரம் பணிப்பெண்கள் என்னிடம் உண்டு. ஓ மன்னா, இந்தச் செல்வத்தை நான் பந்தயமாக வைக்கிறேன்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(9,10)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைக் கேட்டு, பகடை பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி, நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு யுதிஷ்டிரனிடம், “பார், நான் வென்றுவிட்டேன்!” என்றான்.(11)

யுதிஷ்டிரன், “பட்டாடை உடுத்தியவர்களும், ஞானமும் புத்திசாலித்தனமும் கொண்டவர்களும், தாங்கள் இளமையாக இருப்பினும் தங்கள் புலன்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களும், காதுகளில் வளையங்கள் பூண்டவர்களும், இரவும் பகலும் தங்கள் கரங்களில் தட்டுகளுடனும் உணவுடனும் விருந்தினர்களை உபசரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களுமான பணியாட்கள் ஆயிரம் பேர் என்னிடம் உண்டு. ஓ மன்னா {துரியோதனா}, இந்த செல்லவத்தை நான் உன்னிடம் பந்தயமாக வைக்கிறேன்” என்றான்”.(12,13)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைக் கேட்டு, பகடை பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி, நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு யுதிஷ்டிரனிடம், “பார், நான் வென்றுவிட்டேன்!” என்றான்.(14)

யுதிஷ்டிரன், “ஓ சுபலனின் மகனே {சகுனியே}, பொற்கச்சைகளுடன் கூடியவையும், ஆபரணங்கள் பூண்டவையும், நெற்றிப் பொட்டிலும், கழுத்திலும் மற்ற பகுதிகளிலும் தாமரைக் குறியுடன் இருப்பவையும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பவையும்,(15) அழகான நீண்ட ஏர் போன்ற தடித்த வெள்ளை தந்தங்களுடன் கூடியவையும், மன்னர்களைத் தங்கள் முதுகில் சுமந்து செல்லத் தகுதி வாய்ந்தவையும், போர்க்களத்தில் அனைத்துவிதமான ஒலிகளையும் தாங்கிக் கொள்ளக்கூடியவையும், பேருடல் படைத்தவையும், எதிரி நகரின் சுவர்களைச் சாய்க்கவல்லவையும், புதிய மேகங்கள் போன்ற நிறத்தில் உள்ளவையுமான ஆயிரம் யானைகளும், அவை ஒவ்வொன்றுக்குக் எட்டு பெண் யானைகள் என ஒரு யானைக் கூட்டம் என்னிடம் இருக்கிறது. ஓ மன்னா, இந்த செல்வத்தை நான் பந்தயமாக வைக்கிறேன்” என்றான்”.(16,17)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படிச் சொன்ன யுதிஷ்டிரனிடம், சுபலனின் மகனான சகுனி சிரித்துக் கொண்டே, “பார், நான் அதை வென்றுவிட்டேன்!” என்றான்.(18)

யுதிஷ்டிரன், “என்னிடம் எவ்வளவு யானைகள் உண்டோ, அவ்வளவு தேர்கள் இருக்கின்றன. அத்தேர்கள் அனைத்திலும் தங்கத் தூண் மற்றும் கொடிக்கம்பம் நாட்டப்பட்டு நன்கு பழக்கப்பட்ட குதிரைகள் பூட்டப்பட்டு, போரிட்டாலும் போரிடாவிட்டாலும், ஒரு மாத ஊதியமாக ஆயிரம் நாணயங்களைப் பெறுபவர்களும், அற்புதமாகப் போரிடுபவர்களுமான போர்வீரர்களைக் கொண்டிருக்கின்றன. ஓ மன்னா, இந்த செல்வத்தை நான் உன்னிடம் பந்தயமாக வைக்கிறேன்” என்றான்”.(19,20)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இந்த வார்த்தைகள் பேசப்பட்ட போது, பகையில் உறுதி கொண்ட அந்தத் தீய சகுனி, யுதிஷ்டிரனிடம், “பார், நான் அதை வென்றுவிட்டேன்!” என்றான்.(21)

யுதிஷ்டிரன், “ஆபரணங்கள் பூண்டிருக்கும் இந்த தித்திரி, கல்மாஷம் என்ற கந்தர்வ வகை குதிரைகள், காண்டீபம் தாங்கும் அர்ஜுனனிடம் போரில் வீழ்ந்த சித்திரரதனால் மகிழ்ச்சியுடன் கொடுக்கப்பட்டவையாகும். ஓ மன்னா, இந்த செல்வத்தை, நான் உன்னிடம் பந்தயப் பொருளாக வைக்கிறேன்” என்றான்.(22,23)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இதைக் கேட்டு, பகடை பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி, நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு யுதிஷ்டிரனிடம், “பார், நான் வென்றுவிட்டேன்!” என்றான்.(24)

யுதிஷ்டிரன், “சுமைகளை இழுக்கப் பயன்படும் முதன்மையான உயர்வகை இழுவை விலங்குகள் {வண்டிமாடுகள்} பூட்டப்பட்ட பத்தாயிரம் தேர்களும் வாகனங்களும் என்னிடம் இருக்கின்றன.(25) பால் குடித்து, அரிசி {சோறு} உண்டு, துணிச்சலும் வலிவும் கொண்டு, அகலமான மார்புகளுடன் கூடியவர்களும், ஒவ்வொரு வகையில் {வர்ணத்தில்} இருந்தும் ஆயிரம் ஆயிரமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுமான அறுபதாயிரம் வீரர்கள் என்னிடம் இருக்கிறார்கள். ஓ மன்னா {துரியோதனா}, இந்த எனது செல்வத்தை நான் உன்னிடம் பணயமாக வைக்கிறேன்” என்றான்”.(26,27)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இதைக் கேட்டு, பகடை பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி, நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு யுதிஷ்டிரனிடம், “பார், நான் வென்றுவிட்டேன்!” என்றான்.(28)

யுதிஷ்டிரன், “என்னிடம் நானூறு நிதிகள் (பெரும் மதிப்பிலான நகைகள்) தாமிரம் மற்றும் இரும்பு தகடுகளால் உறையிடப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் விலையுயர்ந்த சுத்தமான ஜதரூப வகை {ஆணிப்பொன்} தங்க இலைகள் அளவில் ஐந்து துரோணங்கள் கொண்டவை ஆகும். ஓ மன்னா {துரியோதனா}, இந்த எனது செல்வத்தை நான் உன்னிடம் பணயமாக வைக்கிறேன்” என்றான்”.(29-30)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இதைக் கேட்டு, பகடை பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி, நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு யுதிஷ்டிரனிடம், “பார், நான் அதை வென்றுவிட்டேன்!” என்றான்”.(31)

காக்கையைக் கொடுத்து மயில்களை வாங்கு! – சபாபர்வம் பகுதி 61-(தியூத பர்வம் – 17)விதுரன், திருதராஷ்டிரனிடத்தில் சூதாட்டத்தை நிறுத்தச் சொல்லல்…

வைசம்பாயனர் சொன்னார், “நிச்சயம் (யுதிஷ்டிரனுக்கு) முழு நாசத்தைக் கொண்டு வரப்போகும் சூதாட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அனைத்து ஐயங்களையும் சிதறடிப்பவனான விதுரன், திருதராஷ்டிரனிடம்,(1) “ஓ பெரும் மன்னா, ஓ பாரத குலத்தவரே, நோய்வாய்ப்பட்டுத் தனது இறுதி மூச்சை சுவாசிக்கும் ஒருவனுக்கு மருந்தைப் போன்ற என் வார்த்தைகளில் உமக்கு ஏற்பில்லை என்றாலும், நான் சொல்வதைக் கவனிப்பீராக.(2) எப்போது தீய எண்ணம் கொண்ட இந்தத் துரியோதனன் தான் பிறந்த உடனேயே, பொருந்தாத குள்ளநரி போல ஊளையிட்டானோ[1] அப்போதே பாரத குலத்தின் அழிவுக்காக இவன் {துரியோதனன்} விதிக்கப்பட்டிருக்கிறான் என்று அனைவராலும் அறியப்பட்டது.(3) ஓ மன்னா {திருதராஷ்டிரா}, உங்கள் அனைவரின் மரணத்திற்கும் இவன் {துரியோதனன்} காரணமாவான் என்பதை அறிந்து கொள்வீராக. ஓ மன்னா {திருதராஷ்டிரா}, துரியோதனன் என்ற வடிவத்தில், உமது வீட்டில் ஒரு குள்ளநரி வாழ்ந்து வருகிறது. உமது அறியாமையின் {மடமையின்} காரணமாக நீர் அதை அறியவில்லை. நான் சொல்லப்போகும் கவிஞனின் (சுக்கிரனின்) வார்த்தைகளை இப்போது கேட்பீராக.(4)

(மலைகளில்) தேனைச் சேகரிப்போர், தாங்கள் தேடியது {தேன்} கிடைத்ததும், தாங்கள் கீழே விழப்போவதை கவனிப்பதில்லை. அபாயகரமான உயரங்களை ஏறி, தாங்கள் தேடும் பொருளிலேயே எண்ணத்தையும் நோக்கத்தையும் கொண்டு, கீழே விழுந்து, அழிவைச் சந்திக்கின்றனர்.(5) இந்தத் துரியோதனன், பகடையாட்ட வெறியில், தேன் சேகரிப்போர் போல, விளைவுகளைக் கருதாமல் தான் தேடுவதை அடைவதிலேயே நோக்கமாக இருக்கிறான். பெரும் போர்வீரர்களை எதிரிகளாக்கிக் கொண்டு, தன் முன் இருக்கும் வீழ்ச்சியைக் காண்கிறான் இல்லை.(6) 

ஓ பெரும் ஞானம் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, போஜர்களில், தங்கள் குடிமக்களின் நன்மைக்காக, தங்கள் குலத்துக்குப் பொருந்தாத தகுதியற்ற மகனை {அஸமஞ்சனைக்} கைவிட்டனர் என்பதை நீர் அறிவீர்.(7) அந்தகர்களும், யாதவர்களும், போஜர்களும் ஒன்றுகூடி, கம்சனைக் கைவிட்டனர். அதன் பிறகு, அந்த முழு குலத்தாலும் கட்டளையிடப்பட்டு, அதே கம்சன் எதிரிகளைக் கொல்லும் கிருஷ்ணனால் கொல்லப்பட்டதால்,(8) அந்த குலத்தைச் சார்ந்த மக்கள் அனைவரும் நூறு வருடங்களுக்கு மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். எனவே உமது கட்டளையின் பேரில், அர்ஜுனன் இந்த சுயோதனனைக் {துரியோதனனைக்} கொல்லட்டும்.(9) 

இந்தப் பாவியைக் கொல்வதன் விளைவால், குருக்கள் மகிழ்ந்து, தங்கள் நாட்களை மகிழ்ச்சியில் களிப்பார்கள். ஓ பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு காக்கையைக் கொடுத்து, அதற்கு மாற்றாக பாண்டவர்களான இந்த மயில்களை வாங்கிக் கொள்வீராக. ஒரு குள்ளநரியைக் கொடுத்து, அதற்கு மாற்றாக இந்த புலிகளை வாங்கிக் கொள்வீராக. துன்பக்கடலில் மூழ்காதீர்.(10) ஒரு குடும்பத்திற்காக ஒரு {குடும்ப} உறுப்பினரைத் தியாகம் செய்யலாம்; ஒரு கிராமத்திற்காக ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்யலாம்; ஒரு மாநிலத்துக்காக ஒரு கிராமத்தைத் தியாகம் செய்யலாம். ஒருவனின் ஆன்மாவுக்காக இந்த மொத்த பூமியையும் தியாகம் செய்யலாம்.(11) இப்படிச் சொல்லித்தான், அனைத்து உயிர்களின் எண்ணங்களையும், எதிரிகள் அனைவருடைய பயங்கரத்தின் மூலங்களையும் அறிந்த, எங்கும் உள்ள காவியர் {சுக்கிரன்}, ஜம்பன் {அசுரன்} பிறந்தபோது பெரும் அசுரர்களிடம், அவனை {அசுரன் ஜம்பனை} கைவிடுமாறு தூண்டினார்.(12) 

ஒரு குறிப்பிட்ட மன்னன், தங்கம் கக்கிய சில காட்டுப்பறவைகளை, தனது வசிப்பிடத்திற்கு எடுத்துச் சென்று, பிறகு சபலத்தால் {பேராசையால்} அவற்றைக் கொன்றான். ஓ எதிரிகளைக் கொல்பவரே,(13) சபலத்தால் குருடாகி, மகிழ்ச்சியை விரும்பி, தங்கத்துக்காக, ஒரே நேரத்தில், தனது தற்கால மற்றும் எதிர்கால லாபங்களை அந்த மன்னன் அழித்துக் கொண்டான். எனவே, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கதையில் வரும் மன்னனைப் போல லாபத்தில் விருப்பம் கொண்டு பாண்டவர்களைத் தண்டிக்காதீர்.(14) பிறகு, ஓ பரதனின் வழித்தோன்றலே, அறியாமையால் குருடாகி, அந்தப் பறவைகளைக் கொன்ற மனிதன் போலவே பின்பு வருத்தப்பட வேண்டியிருக்கும். தான் தினமும் பாசத்துடன் பராமரிக்கும் தோட்டத்தில் இருக்கும் மரங்களில் இருந்து (நிறைய பூக்களைப்) பறிக்கும் பூ வியாபாரி போல, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, தினம் தினம் பாண்டவர்களிடம் இருந்து பூக்களைப் பறிக்கலாம். அனைத்தையும் கரித்துண்டாக்கிவிடும் நெருப்பை உற்பத்தி செய்யும் தென்றல் போல அவர்களை வேர் வரை எரித்துவிடாதீர். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, உமது மகன்களுடனும் உமது துருப்புகளுடனும் யமனின் உலகத்துக்குச் செல்லாதீர்.(15,16) ஒன்றாக இருக்கும் பிருதையின் {குந்தியின்} மகன்களை அங்கே எதிர்க்கும் வல்லமை யாருக்கு இருக்கிறது? மற்றவர்களைக் குறித்துப் பேசாதீர், தேவர்களின் தலைவனால் கூட அதைச் செய்ய முடியுமா?” என்றான் {விதுரன்}.(17)

பாண்டுவின் மகன்களோடு போரிடாதீர்! – சபாபர்வம் பகுதி 62-(தியூத பர்வம் – 18)விதுரன், திருதராஷ்டிரனிடத்தில் சூதாட்டத்தை நிறுத்தச் சொல்லல்

விதுரன், “சூதாட்டமே வேற்றுமைகளின் வேராகும். அது ஒற்றுமையின்மையைக் கொண்டு வருகிறது. விளைவுகளால் அது பயங்கரமானது. இருப்பினும், இந்த வழியைக் கொண்டு, திருதராஷ்டிரனின் மகன் துரியோதனன் தனக்கு பயங்கரமான பகையை உண்டாக்கிக் கொள்கிறான்.(1) பிரதீபன் மற்றும் சந்தனுவின் சந்ததியினர் தங்கள் பயங்கரமான துருப்புகளுடனும், பாஹ்லீகர்களான தங்கள் கூட்டாளிகளுடனும், துரியோதனனின் பாவங்களுக்காக அழிவைச் சந்திக்கப் போகின்றனர்.(2)

துரியோதனன் கொண்டிருக்கும் இந்த போதையின் விளைவு, கோபம் கொண்ட காளை, தனது கொம்புகளையே உடைத்துக் கொள்வது போல, நாட்டை விட்டு வலுக்கட்டாயமாக அதிஷ்டத்தையும் செழிப்பையும் விரட்டும்.(3) கற்ற துணிச்சலுள்ள ஒரு மனிதர், தனது முன்னுணர்தலைக் {தீர்க்கதரிசனத்தை – பின் வருவதை முன்பே அறிதலைக்} கருதாமல், இன்னொரு மனிதனின் இதயத்தைத் {சிந்தனையைத்} தொடர்ந்தானானால், சிறுவனால் வழிநடத்தப்பட்ட படகில் கடலில் சஞ்சரித்து மூழ்குவது போல துயரத்தில் மூழ்குவான்.(4)

துரியோதனன், பாண்டுவின் மகனோடு {யுதிஷ்டிரனோடு} சூதாடுகிறான், நீரோ! அவன் வெல்கிறான் என்று பேரானந்தத்தில் இருக்கிறீர். இது போரை உண்டாக்கும் வெற்றி, இதன் முடிவு மனிதர்களின் அழிவாக இருக்கும்.(5) உங்களால் நன்கு திட்டமிடப்பட்ட இந்தக் கவர்ச்சி விளையாட்டு, கொடிய முடிவுகளையே கொடுக்கும். நீர் செய்த இந்த ஆலோசனைகளால் பெரும் துயரத்தையே நீர் கொண்டு வந்திருக்கிறீர். உம்முடன் நெருக்கமான உறவு கொண்டுள்ள யுதிஷ்டிரனுடனான உமது இந்த சண்டையை நீர் முன்னுணரவில்லை என்றாலும், அது உமக்கு ஏற்புடையதாகவே இருக்கிறது.(6)

சந்தனுவின் மகன்களே, பிரதீபனின் சந்ததியினரே கேளுங்கள், கௌரவர்களின் இந்தச் சபையில் இருப்பவர்களே, விவேகத்தின் வார்த்தைகளைக் கேளுங்கள். இந்தப் பாவியைத் தொடர்ந்து சென்று சுடர்விட்டு எரியும் நெருப்புக்குள் நுழையாதீர்கள்.(7) பகடையில் போதையுண்டிருக்கும் பாண்டுவின் மகனான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, எப்போது கோபத்துக்கு ஆட்படுவானோ, விருகோதரனும் {பீமனும்}, அர்ஜுனனும், இரட்டையர்களும் {நகுல சகாதேவர்களும்} எப்போது கோபத்துக்கு ஆட்படுவார்களோ, அந்த குழப்பமான சூழ்நிலையில், உங்களுக்குப் புகலிடமாக இருப்பவன் எவன்?(8)

ஒ பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, நீரே ஒரு செல்வச் சுரங்கம். சூதாட்டத்தில் கிடைப்பது போல, நீர் விரும்பிய அளவு பெரும் செல்வத்தை (வேறு வழிகளில்) உம்மால் அடைய முடியும். பாண்டவர்களின் பெரும் செல்வத்தை வெல்வதனால் உமக்கு என்ன லாபம்? பாண்டவர்களையே செல்வமாக அடைந்தால், அது இந்தச் செல்வங்களைவிட எல்லாம் பெரிதாகும்.(9) நாம் அனைவரும் இந்த விளையாட்டில் சுபலனுக்கு {சகுனி} இருக்கும் நிபுணத்துவத்தை அறிவோம். இந்த மலை நாட்டு மன்னன் {காந்தார மன்னன் சகுனி}[1], சூதாடுவதில் கொடிய வழிகளை அறிந்தவன். சகுனி எங்கிருந்து வந்தானோ அங்கேயே செல்லட்டும். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகன்களோடு போரிடாதீர்!” என்றான் {விதுரன்}.(10) (மலை நாட்டு {காந்தர நாட்டு} மன்னன் {சகுனி}, மகாபாரத காலத்திய காந்தார நாடு என்பது இன்றைய 20ம் நூற்றாண்டின் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காந்தகார் நகரத்தினையும் அதைச் சுற்றியுள்ள பெரும் மலைப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரும் நாடாகும். அந்த காந்தார நாட்டினை மகாபாரத காலத்தில் சுபலன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். மன்னன் சுபலனின் மகன் சகுனி {Sakuni}. சுபலனின் மகளும் சகுனியின் சகோதரியுமானவள் காந்தாரி. திருதராஷ்டிரனின் மனைவியும், துரியோதனன் முதலான 100 பேரின் தாயுமானவள் இந்த காந்தார நாட்டு மன்னன் சுபலனின் மகளான காந்தாரி ஆவாள். இவ்வாறே துரியோதனனுக்கு சகுனி தாய் மாமன் ஆகிறான்.)

பார்வையில் விஷம் கொண்ட பாம்புகளைக் கோபப்படுத்தாதே – சபாபர்வம் பகுதி 63-(தியூத பர்வம் – 19)-துரியோதனை விதுரனைக் கண்டித்து, அவமானப்படுத்துவது; விதுரன் திருதராஷ்டிரனிடம் தனது உள்ளத்தைத் தெரியப்படுத்துதல்…

துரியோதனன் சொன்னான், “ஓ க்ஷத்தரே {விதுரரே}, நீர் எப்போதும் நமது எதிரிகளின் புகழைப் பெருமையாகவும், திருதராஷ்டிரர் மகன்களை தாழ்த்தியுமே பேசி வருகிறீர். ஓ விதுரரே, உமக்கு யாரைப் பிடிக்கும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். நீர் எப்போதும் எங்களை சிறுவர்களாகவே தாழ்த்திக் கருதி(1), உமக்கு நெருக்கமானவர்களின் வெற்றியை விரும்பி, உமக்கு விருப்பமில்லாவதவர்களின் தோல்வியையும் விரும்பி வருபவர் ஆவீர். உமது நாவும் மனமும் உமது இதயத்தைக் காட்டிக் கொடுக்கின்றன. உமது பேச்சில் நீர் காட்டும் பகைமை, உமது இதயத்தில் இருப்பதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது.(2) பாம்பைப் போன்ற உம்மை எங்கள் மடியில் வைத்துப் பேணி வளர்த்திருக்கிறோம். வளர்ப்பவருக்கு தீமையை விரும்பும் பூனையைப் போன்றவர் நீர். முதலாளியைக் {எஜமானைக்} காயப்படுத்துவதைவிட கொடும்பாவம் ஏதுமில்லை என்பது ஞானமுள்ளோர் வாக்காகும். ஓ க்ஷத்தரே, எப்படி இந்தப் பாவத்திற்கு நீர் அஞ்சாமல் இருக்கிறீர்?(3) 

எங்கள் எதிரிகளை வீழ்த்தியதால் நாங்கள் பெரும் நன்மைகளை அடைந்துள்ளோம். எங்களைக் குறித்து கடும் வார்த்தைகளைப் பயன் படுத்தாதீர். நீர் எப்போதும் எதிரியுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளும் விருப்பத்திலேயே இருக்கிறீர். இந்த காரணத்திற்காகவே நீர் எங்களை எப்போதும் வெறுக்கிறீர்.(4) மன்னிக்க முடியாத வார்த்தைகளைப் பேசுவதால் ஒரு மனிதன் பகைவனாகிறான். மேலும் எதிரியைப் புகழ்ந்து, ஒருவனது சொந்த அணியின் ரகசியங்களைப் பகிரங்கப்படுத்தக்கூடாது. (எப்படியிருந்தாலும் நீர், இந்த விதியை மீறிவிட்டீர்). எனவே, ஓ ஒட்டுண்ணியே {விதுரரே}, நீர் ஏன் இப்படி எங்களைத் தடுக்கிறீர்? நீர் விரும்பியதை எல்லாம் சொல்கிறீர்.(5) ஓ விதுரரே, எங்களை அவமதிக்காதீர். உமது மனத்தை நாங்கள் அறிவோம். சென்று முதியவர்களின் பாதங்கள் அருகே அமர்ந்து கற்றுக்கொள்வீராக. நீர் அடைந்திருக்கும் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்வீராக. மற்றவர்கள் காரியங்களில் கூப்பிடாமலே தலையிடாதீர்.(6) 

எங்களின் தலைவராக உம்மை நீரே நினைத்துக் கொள்ளாதீர். ஓ விதுரரே, எங்களிடம் எப்போதும் கடுமையான வார்த்தைகளைச் சொல்லாதீர். எங்களுக்கு எது நன்மை என்று நாங்கள் உம்மிடம் கேட்கவில்லை. ஓ க்ஷத்தரே, உமது கரங்களில் நிறைய அனுபவித்த எங்களை எரிச்சல் படுத்தாமல் பேசுவதை நிறுத்துவீராக.(7) ஒரு கட்டுப்பாட்டாளனே உண்டு. இரண்டாமவன் கிடையாது. அவன் தாயின் கருவறையில் இருக்கும் சிசுவையும் கட்டுப்படுத்துவான். நானும் அவனாலேயே கட்டுப்படுத்தப் படுகிறேன். தாழ்ந்த நிலைகளை நோக்கிப் பாயும் நீரைப் போல, அவன் என்னை இயக்கும் வழியில் நான் துல்லியமாகச் செயல்படுகிறேன்.(8) கற்சுவற்றில் தனது தலையை மோதி உடைத்துக் கொள்பவரும், பாம்புக்கு தீனி கொடுப்பவரும், தங்கள் சொந்த அறிவின் வழிகாட்டுதல்படி அந்தச் செயல்களில் ஈடுபடுகின்றனர். (ஆகையல், இந்தக் காரியத்தில் எனது அறிவாலேயே நான் வழிகாட்டப்படுகிறேன்). அடுத்தவரை பலவந்தமாகக் கட்டுப்படுத்த முயலும் ஒருவன் பகைவனாகிறான்.(9) 

நட்பு ரீதியாகக் கொடுக்கப்படும் ஆலோசனையாக இருப்பின், கற்றவர்களை அதைத் தாங்கிக் கொள்வர். எளிதில் தீப்பற்றிக்கொள்ளக் கூடிய கற்பூரம் போன்ற பொருளுக்குத் தீயிடுபவன், அதை அணைக்க விரைவாக ஓடினாலும், அதன் சாம்பலைக்கூடக் காண்பதில்லை.(10) தனது எதிரியின் நண்பனுக்கோ, தனது காப்பாளன் குறித்து எப்போதும் பொறாமையுடன் இருப்பவனுக்கோ, அல்லது தீய மனமுடைய ஒருவனுக்கோ அடைக்கலம் கொடுக்கக்கூடாது. எனவே, ஓ விதுரரே, நீங்கள் எங்கு விரும்புகிறீரோ அங்கு செல்லும். கற்பற்ற மனைவியை, என்னதான் நன்றாக நடத்தினாலும், அவள் தனது கணவனை கைவிட்டுவிடுவாள்” என்றான் {துரியோதனன்}.(11)

விதுரர் திருதராஷ்டிரனிடம், “ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனக்கு அறிவுறுத்தியதால், தனது தொண்டர்களைக் கைவிடும் மனிதர்களின் நடத்தை குறித்து நீர் என்ன நினைக்கிறீர் என்று (பாகுபாடில்லாமல்) சாட்சி போல இருந்து எங்களுக்குச் சொல்லும். உண்மையில், மன்னர்களின் இதயங்கள் மிக நிலையற்றன ஆகும். முதலில் பாதுகாப்பைக் கொடுத்து, கடைசியாகத் தங்கள் கதாயுதங்களால் அடிப்பார்கள்.(12) ஓ இளவரசனே (துரியோதனா}, அறிவாற்றலில் முதிர்ச்சியுடையவனாக உன்னை நீ கருதிக் கொள்கிறாய், மேலும், ஓ தீய இதயம் கொண்டவனே, என்னை நீ சிறுபிள்ளையாகக் கருதுகிறாய். ஆனால், முதலில் ஒருவனை நண்பனாக ஏற்றுக் கொண்டு பிறகு அவனிடம் தொடர்ந்து குறை கண்டு கொண்டிருப்பவனையே சிறுவனாகக் கருத வேண்டும்.(13) நற்குலத்தில் பிறந்த மனிதனின் வீட்டில் இருக்கும் கற்பற்ற மனைவி போல, தீய இதயம் கொண்ட மனிதனை நேர்மையான பாதைக்குக் கொண்டு வர முடியாது. இளம் மங்கையின் அறுபது வயது கணவனுக்கு எப்படி அறிவுரைகள் ஏற்புடையதாக இருக்காதோ அப்படி இந்த பாரதகுலத்தின் காளைக்கும் {துரியோதனனுக்கு} நிச்சயம் ஏற்புடையதாக இருக்காது.(14) 

ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இதன்பிறகும், செயல்களின் நன்மை தீமை குறித்து, நீர் உமக்கு ஏற்புடைய சொற்களைக் கேட்க விரும்பினால், பெண்களிடமும், முட்டாள்களிடமும், முடவர்களிடமும், மேலும் இது போன்ற விளக்கங்களுக்குப் பொருந்தும் மனிதர்களிடமும் கேட்டுக் கொள்வீராக.(15) ஏற்றுக் கொள்ளும் வார்த்தைகளைப் பேசும் பாவியை இந்த உலகம் பெற்றிருக்கிறது. ஆனால், ஏற்பில்லா வார்த்தைகள் மருந்துகள் போல இருந்தாலும், அதைப் பேசுபவனும், அதைக் கேட்பவனும் மிக அரிதானவர்களாகவே உள்ளனர்.(16) உண்மையில், தனது முதலாளிக்கு ஏற்போ, ஏற்பில்லையோ, அதைக் கருதில் கொள்ளாமல், அறம்சார்ந்து நின்று மருந்து போல இருக்கும் ஏற்பில்லாத கருத்தைச் சொல்பவனே ஒரு மன்னனின் உண்மையான கூட்டாளியாவான்.(17) 

ஓ பெரும் மன்னா, நேர்மையாளர்கள் குடிக்கும், நேர்மையற்றவர்கள் தவிர்க்கும் கசப்பான, காரமான, எரிச்சலுள்ள, போதையற்ற, ஏற்பில்லாத, கலகம் செய்யும் மருந்தான அடக்கம் என்ற பானத்தைக் குடிப்பீராக. அதைக் குடித்து, ஓ மன்னா {திருதராஷ்டிரா}, நீர் உமது புகழை மீட்டெடுப்பீராக.(18) நான் எப்போதும் திருதராஷ்டிரருக்கும் அவரது மகன்களும் செல்வாக்கையும் புகழையுமே விரும்புபவன். இவை உமக்கு நடக்கட்டும், நான் உம்மைப் பணிகிறேன் (நான் விடைபெறுகிறேன்). பிராமணர்கள் எனக்கு நன்மையை வாழ்த்தட்டும்.(19) ஓ குருவின் மகனே {திருதராஷ்டிரரே}, ஞானமுள்ள ஒருவன், பார்வையிலேயே விஷம் கொண்ட பாம்புகளை கோபப்படுத்தக்கூடாது. இதுவே நான் என் மனத்தில் ஆழமாகப் பதிய வைக்கும் பாடம்” என்றான் {விதுரன்}.(20)

அனைத்தையும் இழந்தான் யுதிஷ்டிரன் | சபாபர்வம் – பகுதி 64-(தியூத பர்வம் – 20)யுதிஷ்டிரன் சகுனியிடம் அனைத்து செல்வங்களையும் இழப்பது; தனது தம்பிகளை இழப்பது; தன்னை இழப்பது; பின்பு திரௌபதியை இழப்பது…

சகுனி சொன்னான், “ஓ யுதிஷ்டிரா, நீ பாண்டவர்களின் செல்வத்தை நிறைய இழந்துவிட்டாய். இன்னும் எங்களிடம் தோற்காதது ஏதேனும் உன்னிடம் இருந்தால், ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, அது என்ன என்பதை எங்களுக்குச் சொல்வாயாக” என்றான்.(1)

யுதிஷ்டிரன், “ஓ சுபலனின் மகனே {சகுனியே}, சொல்லப்படாத செல்வம் என்னிடம் உள்ளது எனக்குத் தெரியும். ஆனால், ஓ சகுனி, நீ ஏன் அந்தச் செல்வத்தைக் குறித்துக் கேட்கிறாய்?(2) ஆயிரங்களில் பத்து மடங்கும் {ஆயுதம் / பதினாயிரம்}, பத்துலட்சம் பத்து லட்சமாகவும் {பரயுதம் / பத்து லட்சம்}, பத்து லட்சங்களில் பத்து மடங்கும் {சங்கு / பத்து லட்சம் கோடி}, பத்து லட்சங்களில் நூறு மடங்கும் {பத்மம் / நூறு கோடி}, நூறு கோடிகளில் பத்து மடங்கும் {அர்ப்புதம் / பத்துக்கோடி}, நூறு கோடிகளில் நூறு மடங்கும் {கர்வம் / ஆயிரங்கோடி}, லட்சம் கோடிகளில் பத்து மடங்கும் {சங்கம் / லட்சம் கோடி}, லட்சம் கோடிகளில் நூறு மடங்கும் {நிகர்வம் / பத்தாயிரம் கோடி}, ஆயிரம் கோடி கோடி கோடிகளில் பத்து மடங்கும் {மஹாபத்மம் / நூறு லட்சம் கோடி}, ஆயிரம் கோடி கோடி கோடிகளில் நூறு மடங்கும் {பரார்த்தம் / லட்சம் லட்சம் கோடி}, அதற்கு மேலும் பந்தயம் வை. என்னிடம் அவ்வளவு இருக்கிறது. ஓ மன்னா {சகுனி}, அந்தச் செல்வத்தைக் கொண்டு நான் உன்னிடம் விளையாடுகிறேன்” என்றான்”.(3,4)

வைசம்பாயனர் சொன்னார், “பகடைப் பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், “பார், நான் வென்றுவிட்டேன்!” என்றான்.(5)

யுதிஷ்டிரன், “ஓ சுபலனின் மகனே {சகுனியே}, என்னிடம் பர்ணாசியில் {ஓர் ஆறு}[1] இருந்து சிந்து ஆற்றின் கிழக்குக் கரை வரை விரிந்து இருக்கும் நாட்டில் அளவிடமுடியா எண்ணிக்கையில் பசுக்களும், குதிரைகளும், கறவை மாடுகளும், வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் இருக்கின்றன. இந்தச் செல்வத்தைக் கொண்டு, ஓ மன்னா {சகுனி}, நான் உன்னுடன் விளையாடுவேன்” என்றான்”.(6)(பர்ணாசி என்ற ஆறு வர்ணாசா என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இது தற்காலத்தில் உள்ள சம்பல் {சர்மண்வதி} ஆற்றின் கிளை ஆறான பாணாசை இது குறிக்கிறது. இந்த ஆறு மத்திய பிரதேசத்தில் இருக்கிறது.})

வைசம்பாயனர் சொன்னார், “பகடைப் பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், “பார், நான் வென்றுவிட்டேன்!” என்றான்.(7)

யுதிஷ்டிரன், “ஓ மன்னா, என்னிடம் எனது நகரம், எனது நாடு, நிலம், பிராமணர்களைத் தவிர்த்து அங்கு வசிக்கும் மக்கட்செல்வம், மற்றும் பிராமணர்களை மட்டும் என்னிடம் தக்க வைத்துக் கொண்டு, அங்கிருக்கும் அனைத்து மனிதர்களையும் எனது செல்வமாகக் கொண்டு, நான் உன்னுடனே விளையாடுவேன” என்றான்”.(8)

வைசம்பாயனர் சொன்னார், “பகடைப் பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், “பார், நான் வென்றுவிட்டேன்!” என்றான்.(9)

யுதிஷ்டிரன், “ஓ மன்னா {சகுனியே}, இதோ இங்கிருக்கும் இந்த இளவரசர்கள், தாங்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களாலும், காது வளையங்களாலும் பிரகாசிக்கின்றனர். அவர்கள் மேனியில் இருக்கும் நிஷ்கங்களும், அனைத்து அரச ஆபரணங்களும் எனது செல்வமாகும். இந்தச் செல்வத்தைக் கொண்டு, ஓ மன்னா {சகுனி}, நான் உன்னுடன் விளையாடுவேன்” என்றான்”.(10)

வைசம்பாயனர் சொன்னார், “பகடைப் பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், “பார், நான் அவற்றை வென்றுவிட்டேன்!” என்றான்.(11)

யுதிஷ்டிரன், “பெரும் பலம் வாய்ந்த கரமும், சிங்கம் போன்ற கழுத்தும், சிவந்த கண்களும் இளமையும் உடைய இந்த நகுலன் இப்போது எனது பந்தயப் பொருளாவான். அவன் {நகுலன்} எனது செல்வம் என்பதை அறிந்து கொள்வாயாக” என்றான்.(12)

அதற்கு சகுனி, “ஓ மன்னா, யுதிஷ்டிரா, இளவரசன் நகுலன் உனக்கு அன்பானவன். அவன் {நகுலன்} ஏற்கனவே எங்கள் வசமாகிவிட்டான். இனி யாரை வைத்து நீ விளையாடுவாய்?” என்று கேட்டான்”.(13)

வைசம்பாயனர் சொன்னார், “இப்படிச் சொன்ன சகுனி, தனது பகடைப் பாச்சிகையை வீசி யுதிஷ்டிரனிடம், “பார், அவன் {நகுலன்} எங்களால் வெல்லப்பட்டான்” என்றான்.(14)

யுதிஷ்டிரன், “இந்தச் சகாதேவன் நீதியை நிர்வாகம் செய்கிறான். இவன் இவ்வுலகத்தில் கல்விக்காக மதிப்பைப் பெற்றிருக்கிறான். பந்தயமாக வைக்கக்கூடாதவன் என்றாலும், நான் எனக்கு அன்பான அவனை {சகாதேவனைப்} பந்தயப் பொருளாக வைத்து விளையாடுகிறேன்” என்றான்”.(15)

வைசம்பாயனர் சொன்னார், “பகடைப் பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், “பார், நான் வென்றுவிட்டேன்!” என்றான்.(16)

மேலும் சகுனி, “ஓ மன்னா {யுதிஷ்டிரா}, மாத்ரின் மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} உனக்கு அன்பானவர்கள். அவர்கள் இருவரும் என்னால் வெல்லப்பட்டனர். இருப்பினும் பீமசேனனையும் தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} மிக உயர்வாகக் கருதுகிறாய் எனத் தெரிகிறது” என்றான்.(17)

யுதிஷ்டிரன், “மூடரே! ஒரே இதயமாக இருக்கும் எங்களுக்குள் ஒற்றுமையின்மையை உண்டாக்கி, அறநெறிகளைக் கருதாமல் பாவகரமாக நடந்து கொள்கிறீர்” என்றான்.(18)

சகுனி, “போதையுண்ட ஒருவன் குழிக்குள் {நரகத்திற்குள்} விழுந்து, நகரும் சக்தியை இழந்து அங்கேயே தங்குவான். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நீ மூத்தவனும், சிறந்தவனுமாக இருக்கறாய். ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, நான் (உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்) உன்னை வணங்குகிறேன்.(19) ஓ யுதிஷ்டிரா, தாங்கள் விழிப்புடன் இருக்கும்போதோ கனவிலோ கூட உச்சரிக்காத வார்த்தைகளை விளையாட்டில் உற்சாகமடைந்திருக்கும் சூதாடிகள் உச்சரிப்பார்கள்”, என்றான்.(20)

யுதிஷ்டிரன், “போர் எனும் கடலின் மறுகரைக்கு எங்களை அழைத்துச் சென்று, எப்போதும் எதிரிகளை வெற்றி கொள்ளும் பெரும் செயலும், சக்தியும் கொண்ட இளவரசனும், உலகத்தின் மாவீரனுமான பல்குனனை {அர்ஜுனனைப்} பந்தயமாக வைக்ககூடாதெனினும் அவனை {அர்ஜுனனை} பந்தயமாக வைத்து உன்னிடம் விளையாடுவேன்” என்றான்”.(21)

வைசம்பாயனர் சொன்னார், “பகடைப் பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், “பார், நான் வென்றுவிட்டேன்!” என்றான்.(22)

மேலும் சகுனி, “வில்லைத் தரிப்பவர்களின் முதன்மையான இந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, இரு கரங்களிலும் சம திறன் வாய்ந்தவன் என்னால் வெல்லப்பட்டான். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, உன்னிடம் எஞ்சியிருக்கும் செல்வத்தைக் கொண்டோ, உனது அன்பான தம்பியான பீமனைப் பந்தயமாகக் கொண்டோ என்னுடன் விளையாடுவாயாக” என்றான்.(23)

யுதிஷ்டிரன், “ஓ மன்னா, என்னதான் பந்தயப் பொருளாக வைக்கப்படக்கூடாதவனாக இருந்தாலும், சிங்கக் கழுத்தும், வளைந்த புருவங்களும், சாய்ந்த கண்களும் கொண்டவனும், போரில் முதன்மையானவனும், தானவர்களுக்கு எதிரியான வஜ்ரதாரியைப் {இந்திரனைப்} போன்றவனும், அவமானப்படுத்த முடியாதவனும், இவ்வுலகத்தில் பலத்தில் நிகரற்றவனும், கதாயுதம் தாங்கியிருப்பவனும் எதிரிகளைக் கொல்பவனும், எங்கள் தலைவனுமான இந்த இளவரசன் பீமசேனனைப் பந்தயமாக வைத்து விளையாடுகிறேன்” என்றான்”.(24,25)

வைசம்பாயனர் சொன்னார், “பகடைப் பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், “பார், நான் வென்றுவிட்டேன்!” என்றான்.(26)

சகுனி தொடர்ந்தான், “ஓ குந்தியின் மகனே, நீ நிறைய செல்வங்களை இழந்துவிட்டாய். குதிரைகள், யானைகள், உனது தம்பிகளையும் கூட இழந்துவிட்டாய். நீ தோற்காத வேறு ஏதேனும் பொருள் உன்னிடம் இருக்கிறதா என்பதைச் சொல்வாயாக” என்றான்.(27)

யுதிஷ்டிரன், “எனது தம்பிகளுக்கெல்லாம் மூத்தவனும், அவர்களுக்கு அன்பானவனுமான நான் மட்டுமே வெல்லப்படாமல் இருக்கிறேன். உன்னால் வெல்லப்பட்ட நான், வெல்லப்பட்டவன் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன்” என்றான்”.(28)

வைசம்பாயனர் சொன்னார், “பகடைப் பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி இதைக் கேட்டதும், நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு, யுதிஷ்டிரனிடம், “பார், நான் வென்றுவிட்டேன்!” என்றான்.(29)

மேலும் சகுனி, “உன்னை வெல்ல நீயே அனுமதித்தாய். இது மிகப் பாவகரமானது. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, உன்னிடம் இன்னும் செல்வம் இருக்கிறது. எனவே, உன்னை நீயே இழந்ததால் அது நிச்சயம் பாவகரமானதுதான்” என்றான்”.(30)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பகடையில் திறன் வாய்ந்த சகுனி இப்படிச் சொல்லிவிட்டு, அங்கு இருந்த மற்ற துணிச்சல் மிக்க மன்னர்களிடம் தான் பாண்டவர்களை ஒருவர் பின் ஒருவராக வென்றதைச் சொன்னான்.(31) 

சுபலனின் மகன் {சகுனி}, யுதிஷ்டிரனிடம், “ஓ மன்னா, உனக்கு அன்பான மற்றொரு பந்தயப் பொருள் உன்னால் தோற்கப்படாமல் இருக்கிறது. பாஞ்சால இளவரசி கிருஷ்ணையை {திரௌபதியை} பந்தயமாக வைப்பாயாக. அவளை {திரௌபதியை} வைத்து வென்று உன்னை மீட்டுக் கொள்வாயாக” என்றான்.(32)

யுதிஷ்டிரன், “நீலச் சுருள் முடிகளைக் கொண்டவளும், மெலிவுமில்லாமல் பருத்துமில்லாமல், குட்டையுமில்லாமல், நெட்டையுமில்லாமல் இருக்கும் திரௌபதியைப் பந்தயமாக வைத்து நான் உன்னுடன் விளையாடுவேன்.(33) அவள் {திரௌபதி}, இலையுதிர்கால தாமரையின் இலை போன்ற கண்களுடையவளும், தாமரை மணம் கொண்டவளும், தாமரையில் வீற்றிருப்பவளின் (லட்சுமி தேவி) அழகுக்கு நிகரானவளும், ஸ்ரீயைப் போன்ற அங்கலட்சணமும் அனைத்து அருளும் கொண்டவளும்,(34) மென்மையான இதயம் கொண்டவளாக இருப்பதால் எந்த மனிதனும் மனைவியாகக் கொள்ள விரும்பப்படுபவளும், அழகென்ற செல்வம் கொண்டவளும் அறம் சார்ந்தவளும் ஆவாள்.(35) அவள் {திரௌபதி}, அனைத்துத் தகுதிகளும் கொண்டவளும், இரக்கம் கொண்டவளும், இனிமையான பேச்சு கொண்டவளும், எந்த மனிதனும் அறம், இன்பம் மற்றும் செல்வத்தை அடைவதற்காக மனைவியாக அடைய விரும்பப்படுபவளும் ஆவாள்.(36) அவள் {திரௌபதி} பின் தூங்கி முன் எழந்து, இடையர்களையும், மேய்ப்பர்களையும் கவனித்துக் கொள்வாள்.(37) அவளின் {திரௌபதியின்} முகம், வேர்வையில் நனைந்திருந்தாலும் தாமரை அல்லது மல்லிகை போலவே இருக்கும். குளவி போன்ற மெல்லிடையும், நீண்டு வழியும் கூந்தலும், சிவந்த உதடுகளும், தாழாத உடலும் கொண்டவளே பாஞ்சால இளவரசி {திரௌபதி}.(38) ஓ மன்னா {சகுனி}, கொடியிடை திரௌபதியை எனது பந்தையப் பொருளாக வைத்து, ஓ சுபலனின் மகனே {சகுனியே} நான் உன்னிடம் விளையாடுவேன்” என்றான்”.(39)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்த புத்திசாலி மன்னன் யுதிஷ்டிரன் இப்படிப் பேசியதும், “சீ…! சீ…!” என்ற வார்த்தைகளையே அந்தச் சபையில் இருந்த முதிர்ந்த மனிதர்கள் சொன்னார்கள்.(40) அந்த சபையே கலக்கமடைந்தது. அங்கிருந்த மன்னர்கள் அனைவரும் துயரத்திற்கு உள்ளானார்கள். பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகியோர் வேர்வையில் மூழ்கிப் போனார்கள்.(41) விதுரன் தனது தலையை இரு கைகளுக்கிடையிலும் வைத்துக் கொண்டு, நினைவிழந்தவன் போல அமர்ந்திருந்தான். தனது தலையைக் கீழ்நோக்கி வைத்துக் கொண்டு தீவிரமாக ஆலோசித்து பாம்பு போல பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.(42) 

ஆனால் இதயத்தால் மகிழ்ந்த திருதராஷ்டிரன், “பந்தயம் வெல்லப்பட்டதா?”, “பந்தயம் வெல்லப்பட்டதா?” என்று திரும்பத் திரும்ப கேட்டு, தனது உணர்ச்சிகளை மறைக்க முடியாதவனாக இருந்தான்.(43) 

சபையில் இருந்த மற்றவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தோடிய போது, துச்சாசனனுடனும், மற்றவர்களுடனும் சேர்ந்து கொண்டு கர்ணன் சத்தம் போட்டு சிரித்தான்.(44) வெற்றியால் செருக்கடைந்த சுபலனின் மகன் {சகுனி}, உற்சாக மிகுதியால் “உனக்கு அன்பான ஒரு பந்தயப் பொருள் இருக்கிறது” என்றும், “பார், நான் வென்றுவிட்டேன்!” என்றும் மீண்டும் மீண்டும் சொல்லி வீசப்பட்ட பகடைப் பாச்சிகைகளை எடுத்துக் கொண்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(45)

குருக்களின் அழிவு நிச்சயம் | சபாபர்வம் – பகுதி 65-(தியூத பர்வம் – 21)- துரியோதனன் விதுரனிடம் திரௌபதியை அழைத்து வரச் சொல்வதும்; விதுரன் சொன்ன விளக்கங்களும்…

துரியோதனன், “ஓ க்ஷத்தரே இங்கே வாரும், பாண்டவர்களின் அன்புக்கும் நேசத்திற்கு உரிய மனைவியான திரௌபதியை இங்கே அழைத்து வாரும். அறைகளை துடைத்துக் கூட்டுவதற்கு அவளை பலவந்தமாக அனுப்புவீராக. நமது பணிப்பெண்கள் தங்கும் இடத்தில் அந்தப் பேறற்ற பெண்ணும் தங்கட்டும்” என்றான்.(1)

விதுரன், “ஓ பாவி {துரியோதனா}, இந்த வார்த்தைகளை உச்சரிப்பதால் உன்னை நீயே கயிறுகளில் கட்டிக் கொள்கிறாய் என்பதை நீ அறிய மாட்டாயா? செங்குத்தான பாறையின் விளிம்பில் நீ தொங்கிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள மாட்டாயா? மானாக இருந்து கொண்டு பல புலிகளின் கோபத்தைத் தூண்டிக் கொண்டிருக்கிறாய் என்பதை நீ அறிய மாட்டாயா?(2) கொடும் விஷம் கொண்ட பாம்புகள் சினம் தூண்டப்பட்ட நிலையில் உனது தலையில் இருக்கின்றன. பாவியே, மேலும் அவர்களின் கோபத்தைத் தூண்டினால் நீ எமனுலகு செல்வாய்.(3) மன்னன் {யுதிஷ்டிரன்} தன்னையே இழந்து, தனக்கே தலைவனாக இல்லாத போது, அவளைப் பந்தயமாக வைத்ததால் கிருஷ்ணை {திரௌபதியை} அடிமையாக மாட்டாள்.(4) சாகும் போது மட்டுமே கனியைக் கொடுக்கும் {பலனைத் தரும்} மூங்கிலைப் போல, திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} இந்த விளையாட்டின் மூலம் பொக்கிஷத்தை வென்றான். அதனால் போதையுண்டிருப்பதால், தனது கடைசி காலமான இந்த காலத்தில் பகடையால் உண்டாகும் பகைமையையும், பயங்கரங்களையும் காணாமல் இருக்கிறான்.(5)

எந்த மனிதனும் கடும் வார்த்தைகளைச் சொல்லி மற்றவர்கள் இதயத்தைத் துளைக்கக்கூடாது. எந்த மனிதனும் பகடையாட்டத்தின் மூலமோ, வேறு நியாயமற்ற வழிகளிலோ தனது எதிரியை வெல்லக்கூடாது. வேதங்கள் அங்கீகரிக்காத, நரகத்திற்கு இட்டுச் செல்லும் வார்த்தைகளை அடுத்தவரை வருந்தச் செய்ய எந்த மனிதனும் சொல்லக்கூடாது.(6) சிலர் தங்கள் உதடுகளில் இருந்து கடும் வார்த்தைகளைச் சொல்கின்றனர். அதனால் பாதிக்கப்பட்ட வேறு மனிதன் இரவும் பகலும் துன்பப்படுகிறான். அந்த வார்த்தைகள் அடுத்தவரின் இதயத்தை துளைத்தெடுக்கும். எனவே, கல்விமான்கள் அடுத்தவரைச் சுட்டிக்காட்டும் அப்படிப்பட்ட வார்த்தைகளை எப்போதும் சொல்லவே கூடாது.(7)

ஒரு சமயம் ஓர் ஆடு ஒரு கொக்கியை {கத்தியை} விழுங்கிற்று, அஃது அந்த கொக்கியினால் துளைக்கப்பட்ட போது {சிரமப்பட்ட போது}, ஒரு வேடன் அதன் தலையை தரையில் வைத்து, அதன் தொண்டையைப் பயங்கரமாக அறுத்து, அந்தக் கொக்கியை வெளியே எடுத்தான். எனவே, ஓ துரியோதனா, நீயும் அதேபோல பாண்டவர்களின் செல்வத்தை விழுங்காதே. அவர்களை {பாண்டவர்களை} உனது எதிரிகளாக்கிக் கொள்ளாதே.(8) பிருதையின் {குந்தியின்} மகன்கள் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்வதில்லை. நாய் போன்ற கீழ்த்தரமான மனிதர்கள் மட்டுமே இப்படிப்பட்ட கடும் வார்த்தைகளை எல்லா வகை மக்களிடமும், அதாவது கடைசி காலத்தில் காட்டில் வசிக்கும் மக்களிடமும், இல்லற வாழ்க்கை வாழ்பவர்களிடமும், தவ அர்ப்பணிப்பில் இருப்பவர்களிடமும், பெரும் கல்வி கற்றவர்களிடமும் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர்.(9) ஐயோ! திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்}, நேர்மையற்ற குணம் நரகத்தில் நுழையும் பயங்கரமான கதவுகளில் ஒன்றாகும் என்பதை அறியவில்லை. ஐயோ! பகடை விளையாட்டு விஷயத்தில், பல குருக்களும், அவர்களுக்கு மத்தியில் இருக்கும் துச்சாசனனும் அவனது {துரியோதனனது} நேர்மையற்ற பாதையிலேயே தொடர்ந்துள்ளனர்.(10)

சுரைக்காய் மூழ்கலாம், கற்கள் மிதக்கலாம், படகுகள் கூட எப்போதும் நீரில் மூழ்கலாம், ஆனாலும் திருதராஷ்டிரன் மகனான இந்த மூட மன்னன் {துரியோதனன்}, தனக்கு நன்மையான எனது இந்த வார்த்தைகளைக் கேட்க மாட்டான்.(11) இவன்தான் {துரியோதனன் தான்} குருக்களின் அழிவுக்குக் காரணமாக இருப்பான் என்பதில் ஐயமில்லை. நண்பர்கள் சொல்லும் நன்மையான நீதிச்சொற்கள் கேட்கப்படாமலும், மறுபுறம் சபலமும் அதிகரித்து இருப்பதால், பயங்கரமான பேரழிவே குருக்களுக்கு ஏற்படப்போகிறது”, என்றான் {விதுரன்}.(12)

சபை நடுவே இழுத்துவரப்பட்டாள் திரௌபதி | சபாபர்வம் – பகுதி 66-(தியூத பர்வம் – 22)-துரியோதனன் தனது பணியாளை அழைத்து திரௌபதியை அழைத்து வரச் சொல்லல்; பணியாள் மறுபடியும் சபைக்கு வந்து திரௌபதியின் கேள்வியைக் கேட்டல்; துரியோதனன் தனது பணியாளிடம் மீண்டும் திரௌபதியை அழைத்து வரச் சொல்லல்; அவன் தயங்கி நிற்பதைக் கண்டு துச்சாசனனை அனுப்புவது; துச்சாசனன் சென்று திரௌபதியின் கூந்தலைப் பற்றி சபை நடுவே இழுத்து வருவது; திரௌபதி சபை பெரியோர்களிடம் நியாயம் கேட்பது; பீஷ்மர் கைவிரிப்பது; இந்த நிலையில் யுதிஷ்டிரனைக் கண்டு பீமன் கோபப்படுவது…

வைசம்பாயனர் சொன்னார், “செருக்கால் போதையுண்ட திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, க்ஷத்தனை {விதுரனைக்} கண்டு, “சீ” என்று சொல்லி விட்டு பணியாளான பிராதிகாமினைப் பார்த்து, மரியாதைக்குரிய மூத்தவர்கள் முன்னிலையில் அவனை {பிராதிகாமினை} அழைத்து,(1) “செல் பிராதிகாமின், சென்று திரௌபதியை இங்கே கொண்டு வருவாயாக. பாண்டுவின் மகன்களிடம் அச்சம் கொள்ளாதே. விதுரர் மட்டுமே அப்படி பயத்தால் உளறுகிறார். மேலும், அவர் நமது செழிப்பை எப்போதும் விரும்புவதில்லை” என்றான்”.(2)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படி ஆணையிடப்பட்டவனும், சூத சாதியைச் சேர்ந்தவனுமான பிராதிகாமின், மன்னனின் {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்டு விரைவாக சென்று, சிங்கத்தின் குகைக்குள் நாய் நுழைவது போல பாண்டவர்களின் வசிப்பிடத்திற்குள் நுழைந்து பாண்டு மகன்களின் ராணியை {திரௌபதியை} அணுகினான்.(3) 

பிறகு அவன் {பிராதிகாமின்}, “ஓ திரௌபதி, பகடையில் போதையுண்ட யுதிஷ்டிரனிடம் இருந்து துரியோதனன் உன்னை வென்றுவிட்டார். எனவே, திருதராஷ்டிரர் வசிப்பிடத்திற்கு இப்போதே வருவாயாக. ஓ யக்ஞசேனி {திரௌபதி}, நான் உன்னை அழைத்துச் சென்று, வீட்டு ஊழியம் செய்யும் இழிபணியில் உன்னை நியமிக்கப் போகிறேன்” என்றான்.(4)

திரௌபதி, “ஓ பிராதிகாமின், ஏன் இப்படிப் பேசுகிறாய்? தனது மனைவியை பந்தயப் பொருளாக வைத்து எந்த இளவரசன் விளையாடுவான்? மன்னர் நிச்சயமாக பகடையில் போதையுண்டிருக்கிறார். இல்லையென்றால், அவரால் பந்தயமாக வைத்தாட வேறு பொருளைக் காண முடியாதா?” என்றாள்.(5)

பிராதிகாமின், “அவரிடம் {யுதிஷ்டிரனிடம்} எதுவும் இல்லாத போதே பாண்டுவின் மகனான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்} உன்னை வைத்து சூதாடினார். மன்னன் {யுதிஷ்டிரன்} முதலில் தனது தம்பிகளையும், பிறகு அவரையும், அதன் பிறகு உன்னையும் பந்தயமாக வைத்து விளையாடினார் ஓ இளவரசி {திரௌபதி}” என்றான்.(6)

திரௌபதி, “ஓ சூதக் குல மகனே {பிராதிகாமினே}, நீ சென்று, அந்தச் சபையில் இருக்கும் சூதாடியிடம் {யுதிஷ்டிரனிடம்}, யாரை முதலில் அவர் இழந்தார், தன்னையா அல்லது என்னையா என்று கேட்பாயாக.(7) இதை உறுதி செய்து கொண்டு, இங்கே வருவாயாக. பிறகு, ஓ சூதக் குல மகனே {பிராதிகாமினே}, நீ என்னை அழைத்துச் செல்லலாம்” என்றாள்”.(8)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்தத் தூதுவன் {பிராதிகாமின்}, அந்தச் சபையில் இருந்த அனைவரிடமும் திரௌபதியின் வார்த்தைகளைச் சொன்னான். பிறகு மன்னர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த யுதிஷ்டிரனிடம்,(9) “திரௌபதி உம்மிடம், ’என்னை விளையாட்டில் தோற்ற போது, நீர் யாருக்கு தலைவனாக இருந்தீர்? நீர் உம்மை முதலில் இழந்தீரா அல்லது என்னையா?’ என்று கேட்கச் சொன்னாள்” என்று சொன்னான்.(10) 

யுதிஷ்டிரன் அறிவாற்றலை இழந்து, நினைவிழந்து அமர்ந்திருந்தான். நன்மையாகவோ, தீமையாகவோ அந்த சூதனுக்கு அவன் {யுதிஷ்டிரன்} ஒரு பதிலும் சொல்லாமல் இருந்தான்.(11)

துரியோதனன், “பாஞ்சால இளவரசி {திரௌபதி} இங்கே வந்து தனது கேள்வியைக் கேட்கட்டும். இந்தச் சபையில் இருக்கும் அனைவரும் அவளும் {திரௌபதியும்} யுதிஷ்டிரனும் பேசிக் கொள்வதைக் கேட்கட்டும்” என்றான்”.(12)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “துரியோதனனின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்த அந்தத் தூதுவன் {பிராதிகாமின்} மறுபடியும் வேகமாக அந்த அரண்மனைக்குச் சென்று, அவனே {பிராதிகாமினே} மிகத் துயர் கொண்டு, திரௌபதியிடம்,(13) “ஓ இளவரசி, அந்தச் சபையில் இருப்பவர்கள் உன்னை அழைக்கிறார்கள். கௌரவர்களின் அழிவு உன் கைகளில் இருப்பதாகத் தோன்றுகிறது. ஓ இளவரசி, துரியோதனன் உன்னை சபையின் முன்னே அழைக்கிறான் எனும்போது, பலவீனமான மூளை கொண்ட அந்த மன்னன் {துரியோதனன்}, தனது செழிப்பை வெகு காலத்திற்குக் காத்துக் கொள்ள முடியாது” என்றான்.(14)

திரௌபதி, “உலகத்தின் பெரும் ஆணையாளரின் {பிரம்மனின்} ஆணை நிச்சயமாக அப்படித்தான் இருக்கிறது. மகிழ்வும் துயரமும் ஞானமுள்ளோரையும் ஞானமற்றோரையும் தொடுக்கின்றன. இருப்பினும் அறமே உலகத்தில் உயர்ந்த பொருள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைச் சரியாக காத்தோமானால், அது நிச்சயம் நமக்கு அருளைக் கொடுக்கும்.(15) அறம் கௌரவர்களைக் கைவிடாதிருக்கட்டும். திரும்ப சென்று அந்தச் சபையில் உள்ளோரிடம், அறநெறிகளுக்கு ஏற்ற எனது வார்த்தைகளை மறுபடி சொல். அந்த அறம் சார்ந்த, அறநெறி அறிந்த மூத்தோர் உறுதியாகச் சொல்லும் சொல் கேட்டு நடக்க நான் தயாராக இருக்கிறேன்” என்றாள்”.(16)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “யக்ஞசேனியின் {திரௌபதியின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த சூதன் {பிராதிகாமின்}, சபைக்குத் திரும்ப வந்து, திரௌபதியின் வார்த்தைகளைத் திரும்பச் சொன்னான். ஆனால், அனைவரும் தங்கள் முகத்தை கீழ்நோக்கி வைத்துக் கொண்டு, திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனின்} ஆவலையும் தீர்மானத்தையும் அறிந்து, ஒரு வார்த்தையும் பேசாமல் இருந்தனர்.(17)

இருப்பினும், யுதிஷ்டிரன், ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, துரியோதனனின் நோக்கத்தைக் கேள்விப்பட்டு, ஒரு நம்பிக்கைக்குரிய தூதுவரிடம்,(18) ‘திரௌபதி தனது மாதவிடாய்க் காலத்தில் இருப்பதால், உந்தி வெளிப்பட ஒற்றையாடையுடன் இருந்தாலும், தனது மாமனார் முன்னிலையில் அழுது கொண்டே வரட்டும்” என்று சொல்லி திரௌபதியிடம் அனுப்பினான்.(19) 

ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த புத்திசாலித் தூதுவனும் திரௌபதியின் வசிப்பிடத்திற்கு வேகமாக வந்து யுதிஷ்டிரனின் நோக்கங்களைத் தெரிவித்தான்.(20) 

அதே வேளையில் அந்தச் சிறப்புமிகுந்த பாண்டவர்கள் துயரம் கொண்டு, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு, தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்ய இயலாமல் இருந்தனர்.(21) அவர்கள் {பாண்டவர்கள்} மீது பார்வையைச் செலுத்திய மன்னன் துரியோதனன் இதயத்தில் மிகவும் மகிழ்ந்து அந்தச் சூதனிடம், “ஓ பிராதிகாமின், அவளை {திரௌபதியை} இங்கே கொண்டு வா. கௌரவர்கள் அவளது கேள்விக்கு அவள் முகத்துக்கு எதிரேயே பதில் சொல்லடும்” என்றான்.(22) அவனது {துரியோதனது} உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியும் அந்தச் சூதன் {பிராதிகாமின்}, துருபதன் மகளின் {திரௌபதியின்} கோபத்துக்குப் {கோபத்துக்கு வாய்ப்பிருப்பதை நினைத்து} பயந்து, நுண்ணறிவுக்கான நற்பெயரைக் கருதாமல், மறுபடியும் அந்தச் சபையில் இருந்தவர்களிடம், “நான் கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} என்ன சொல்வது?” என்று கேட்டான்.(23)

பிராதிகாமினின் சொல்லைக் கேட்ட துரியோதனன் “ஓ துச்சாசனா, எனது சூதனின் குறைந்த புத்தியுடைய மகன் {பிராதிகாமின்} விருகோதரனுக்கு {பீமனுக்கு} அஞ்சுகிறான். எனவே, நீயே சென்று யக்ஞசேனனின் மகளை {திரௌபதியை} இங்கு வலுக்கட்டாயமாக இழுத்து வருவாயாக. தற்போது நமது எதிரிகள் நமது விருப்பத்தை எதிர்பார்த்தே இருக்கின்றனர். அவர்களால் {பாண்டவர்ககளால்} உன்னை என்ன செய்ய முடியும்?” என்றான்.(24)

தனது அண்ணனின் {துரியோதனனின்} உத்தரவைக் கேட்ட துச்சாசனன் ரத்தச்சிவப்பாக இருந்த கண்களுடன் எழுந்து, அந்தப் பெரும் போர்வீரர்களின் {பாண்டவர்களின்} வசிப்பிடத்திற்கு நுழைந்து, அந்த இளவரசியிடம் {திரௌபதியிடம்},(25) “ஓ பாஞ்சால இளவரசி கிருஷ்ணையே {திரௌபதி}, வா… வருவாயக… நீ எங்களால் வெல்லப்பட்டாய். ஓ தாமரை இலை போன்ற அகன்ற கண்களை உடையவளே {திரௌபதியே}, இப்போதே வந்து குருக்களை உனது தலைவர்களாக ஏற்றுக் கொள். நீ அறம் சார்ந்தே அடையப்பட்டாய், சபைக்கு வருவாயாக” என்றான் {துச்சாசனன்}.(26)

இந்த வார்த்தைகளைக் கேட்டு பெரும் துயரத்துடன் எழுந்த திரௌபதி, தனது மங்கிய முகத்தை தனது கரத்தால் துடைத்துக் கொண்டு, பெரும் துயரத்துடன் திருதராஷ்டிரன் வீட்டுப் பெண்கள் இருந்த இடத்திற்கு ஓடிப் போனாள்.(27) இதனால் கோபத்துடன் முழங்கிய துச்சாசனன், அவள் பின்னே ஓடி, நீல நிறத்தில், அலை அலையாக இருந்த ராணியின் {திரௌபதியின்} அடர்த்தியான கூந்தலைப் பற்றினான்.(28) 

ஐயோ! ராஜசூய வேள்வியில் மந்திரங்களுடன் ஆன்ம நீர் தெளிக்கப்பட்ட அந்தக் கூந்தலை பாண்டவர்களின் ஆற்றலைக் கருதாமல், இப்போது திருதராஷ்டிரன் மகன் {துச்சாசனன்}, வலுக்கட்டாயமாக பற்றி இழுத்தான்.(29) கிருஷ்ணையின் {திரௌபதியின்} நீண்ட கூந்தலைப் பற்றி சபையின் நடுவே இழுத்துச் சென்றான். அவள் {திரௌபதி} பலம் நிறைந்த காப்பாளர்களைப் பெற்றிருந்தும், இப்படி இழுத்து வரப்பட்டதால், புயலில் சிக்கிய வாழை மரம் என நடுங்கினாள்.(30)

அவனால் {துச்சாசனனால்} இழுத்தவரப்பட்டு, உடல் வளைந்திருந்த அவள் {திரௌபதி}, மயக்கத்துடன் அழுதாள், “பாவி, என்னை இப்படி சபையின் நடுவே கொண்டு செல்வது தவறான நடத்தையாகும். எனது மாதாந்திர காலம் வந்திருக்கிறது. நான் இப்போது ஒற்றை ஆடை உடுத்தியிருக்கிறேன்” என்றாள்.(31) 

மேலும் விஷ்ணுவும், நரனும் நாராயணராகவும் இருந்த கிருஷ்ணனிடம் பாவமாக வேண்டிக் கொண்டிருந்த கிருஷ்ணையின் {திரௌபதியின்} கருங்கூந்தலை வலுக்கட்டையமாக பற்றி இழுத்துச் சென்ற துச்சாசனன்,(32) “உனது மாதாந்திர காலம் வந்ததோ இல்லையோ, நீ ஒற்றையாடையுடன் இருக்கிறாயோ அல்லது நிர்வாணமாக இருக்கிறாயோ, பகடையில் நீ வெல்லப்பட்டு பிறகு, எங்களுக்கு நீ அடிமையாக ஆன பிறகு எங்கள் பணிப்பெண்கள் வாழும் இடத்தில் நீ விரும்பியவாறு இருந்து கொள்” என்றான்”.(33)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “துச்சாசனால் இழுத்துச் செல்லப்பட்ட போது, கலைந்த முடிகளுடன், அவளது பாதி ஆடை தளர்ந்து, கோபத்தால் உட்கொள்ளப்பட்ட எளிமையான கிருஷ்ணை {திரௌபதி}, மயக்கத்துடன்,(34) “கல்வியின் அனைத்துக் கிளைகளையும் அறிந்த, வேள்விக்கு தங்களை அர்ப்பணித்து, இந்திரனுக்கு சமமான மனிதர்கள் நிறைந்திருக்கும் இந்தச் சபையில் சிலர் மேன்மையானவர்களாகவும், மற்றவர்கள் மதிப்புக்குரியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் நான் இந்த நிலையில் நிற்க முடியாது.(35) ஓ பாவி! கொடுஞ்செயல் புரிபவனே {துச்சாசனனே} என்னை இப்படி இழுக்காதே. என்னை இப்படித் திறந்து காட்டாதே. நீ தேவர்களையும் இந்திரனையும் கூட்டாளியாக வைத்திருந்தாலும், இந்த இளவரசர்கள் (எனது தலைவர்கள்) உன்னை மன்னிக்க மாட்டார்கள்.(36) தர்மனின் சிறப்புவாய்ந்த மகன் {யுதிஷ்டிரன்}, இப்போது அறநெறிக் கடமைகளுக்குக் கட்டுப்பட்டிருக்கிறார். இருப்பினும், அறநெறி மிகவும் நுட்பமானது. தெளிந்த பார்வையுள்ளவர்கள் மட்டுமே அதை உறுதி செய்ய முடியும். எனது தலைவன் {யுதிஷ்டிரன்} அறத்தை மறந்து அணுவளவு குற்றம் செய்தார் என்று என் வாக்கினாலும்கூட சொல்ல நான் விரும்பவில்லை.(37) 

மாதாந்திர காலத்தில் இருக்கும் என்னை இந்த குரு வீரர்கள் முன்னிலையில் இழுத்து வருகிறாய். உண்மையில் இது தகாத காரியம். ஆனால் இங்கிருக்கும் ஒருவரும் இதைக் கண்டிக்கவில்லை. நிச்சயமாக இவர்களும் உன்னைப் போன்ற மனம் கொண்டவர்களே.(38) சீ… உண்மையில் பாரதர்களிடம் அறம் மறைந்துவிட்டதா? உண்மையில் க்ஷத்திரிய ஒழுக்கமும் மறைந்துவிட்டதா? அல்லது ஒழுக்கத்தின் எல்லைகளைக் கடக்கும் இந்தச் செயலை, இந்தச் சபையில் இருக்கும் குருக்கள் அனைவரும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்களே!(39) 

ஓ, துரோணரும், பீஷ்மரும், க்ஷத்தரும் {விதுரரும்}, இந்த மன்னரும் {திருதராஷ்டிரரும்} தங்கள் சக்தியை இழந்துவிட்டனரே. அல்லது, குருக்களில் முதன்மையான இந்த மூத்தவர்கள் ஏன் இக்குற்றத்தைக் கண்டும் அமைதியாக பார்க்கின்றனர்?” என்றாள் {திரௌபதி}”.(40)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படியே அந்தக் கொடியிடை கிருஷ்ணை {திரௌபதி} அந்தச் சபையில் துக்கத்துடன் அழுதாள். தனது பார்வையைத் தனது கோபம் கொண்ட தலைவர்களான பாண்டவர்களிடம் செலுத்திய அவள் {திரௌபதி}, தனது பார்வையால் மேலும் அவர்களின் {பாண்டவர்களின்} கோபத்தைத் தூண்டினாள்.(41) தங்கள் நாட்டையோ, செல்வத்தையோ, விலையுயர்ந்த ரத்தினங்களையோ களவாடியது குறித்து அவர்கள் பெரிதும் துயரம் கொள்ளவில்லை. ஆனால், நாணத்தோடும் கோபத்துடனும் இருந்த கிருஷ்ணையின் {திரௌபதியின்} பார்வையைக் கண்டு கோபத்தால் பெரும் துயர் அடைந்தனர்.(42) 

ஆதரவற்ற தங்கள் தலைவர்களைக் காணும் கிருஷ்ணையை {திரௌபதியைக்} கண்ட துச்சாசனன், மேலும் அவளை {திரௌபதியை} வலுக்கட்டாயமாக இழுத்து, அவளிடம், “அடிமையே அடிமையே” {தாசி, தாசி} என்று சொல்லி சத்தமாகச் சிரித்தான்.(43) அந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் மிகவும் மகிழ்ந்து அந்தப் பேச்சை அங்கீகரித்து சத்தமாகச் சிரித்தான். அதே போல, சுபலனின் மகனான காந்தார மன்னன் சகுனியும் துச்சாசனனைப் பாராட்டினான்.(44) கிருஷ்ணை {திரௌபதி} இப்படிச் சபை நடுவே இழுத்துவரப்பட்டதைக் கண்டு இவர்கள் மூவர் {துச்சாசனன், கர்ணன், சகுனி} மற்றும் துரியோதனனைத் தவிர்த்து அனைவரும் சோகத்தில் நிறைந்திருந்தனர்.(45)

இவையனைத்தையும் கண்ட பீஷ்மர், “ஓ அருளப்பட்டவளே, அறம் மிகவும் நுட்பமானது. எனவே, இக்காரியத்தில் என்னால் எந்தத் தீர்மானத்துக்கு வர முடிய வில்லை. ஒரு புறம், செல்வமில்லாதவன் மற்றவருடைய செல்வத்தைப் பணயம் வைக்க முடியாது என்றாலும், மறுபுறம், மனைவியர் தங்கள் தலைவர்களின் ஆணைப்படி நடக்க வேண்டியவர்கள்.(46) யுதிஷ்டிரன், இந்த உலகம் முழுதும் நிறைந்த செல்வத்தையும் கைவிடுவான், ஆனால் அவன் {யுதிஷ்டிரன்} அறத்தைக் கைவிட செய்ய மாட்டான். {அப்படிப்பட்ட} அந்தப் பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, “நான் வெல்லப்பட்டேன் என்கிறான். எனவே, என்னால் இக்காரியத்தில் ஒரு தீர்மானத்துக்கு வர முடியவில்லை.(47) பகடையில் சகுனி அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} சமமானவன் கிடையாது {ஆனால் உயர்ந்தவன்}. இருப்பினும், குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} தானே முன்வந்து பந்தயம் வைத்தான். அந்தச் சிறப்பு மிகுந்த யுதிஷ்டிரனே சகுனி ஏமாற்றி விளையாடினான் என்று கருதவில்லை. எனவே இக்காரியத்தில் என்னால் எதுவும் தீர்மானிக்க முடியாது” என்றான்.(48)

திரௌபதி, “பகடையில் நிபுணத்துவம் இல்லை என்றாலும், மன்னர் {யுதிஷ்டிரர்} இந்தச் சபைக்கு அழைக்கப்பட்டு, {பகடையில்} திறன் வாய்ந்தவரும், தீயவரும், வஞ்சகருமான பெரும் சூதாடியுடன் {சகுனியுடன்} விளையாட வைக்கப்பட்டார். இப்படியிருக்கையில், அவர் {யுதிஷ்டிரர்} தானாக முன்வந்து பந்தயம் வைத்தார் என்று எப்படிச் சொல்லப்படுகிறது?(49) பாண்டவர்களின் தலைவரை {யுதிஷ்டிரரை} வஞ்சக நடத்தையும், அறமற்ற நோக்கங்களும் கொண்ட பாவிகள் ஒன்றுகூடி மதியிழக்கச் செய்து வீழ்த்தினர். அவர்களின் தந்திரங்களை அவர் {யுதிஷ்டிரர்} அறிய முடியாது, ஆனால் அவர் இப்படிச் செய்துவிட்டார்.(50) இங்கு, இந்தச் சபையில், தனது மகன்களுக்கும், மருமகள்களுக்கும் தலைவர்களான குருக்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும், எனது வார்த்தைகளை மனத்தில் கொண்டு, நான் சொல்லியிருக்கும் காரியத்தைத் தீர்மானியுங்கள்” என்றார்”.(51)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படிப் பரிதாபமாக அழுது கொண்டிருந்த கிருஷ்ணை {திரௌபதி}, துச்சாசனன் ஏற்றுக்கொள்ள முடியாத கடும் சொற்களைப் பேசிய போது ஆதரவற்ற தனது தலைவர்களை {பாண்டவர்களை} அடிக்கடி பார்த்தாள்.(52) மாதவிடாய் காலத்தில் இருந்த அவள் இப்படி இழுத்து வரப் படுவதையும், அவளுக்கு {திரௌபதிக்கு} சற்றும் பொருந்தாத நிலையில், மேலாடை தளர்ந்த நிலையில் அவள் இருப்பதையும் கண்ட விருகோதரன் {பீமன்}, தனது உறுதியையும் தாண்டி, கண்களை யுதிஷ்டிரனிடம் நிலைக்க வைத்து, கோபத்துக்கு உள்ளானான்” {என்றார் வைசம்பாயனர்}.(53)

மானம் காத்த மாயவன் | சபாபர்வம் – பகுதி 67-(தியூத பர்வம் – 23)யுதிஷ்டிரனின் கரங்களை எரித்துவிடுவதாக பீமன் சொல்வது; அர்ஜுனன் பீமனைக் கண்டிப்பது; திரௌபதிக்கு ஆதரவாக திருதராஷ்டிரனின் மகன் விகர்ணன் நீதி கேட்பது; கர்ணன் விகர்ணனைக் கண்டிப்பது; கர்ணன் துச்சாசனனிடம் திரௌபதியின் ஆடையைக் களையச் சொல்வது; திரௌபதி கிருஷ்ணனை வேண்டுவது; கிருஷ்ணன் திரௌபதியின் மானம் காக்க விரைந்து வருவது; பீமன், துச்சாசனனின் மார்பைப் பிளந்து உதிரம் குடிப்பேன் என்று சபதம் ஏற்பது; விதுரர் மறுபடி நியாயம் கேட்பது; பிரகலாதன், சூதன்வான் மற்றும் விரோசனன் கதையை விதுரர் சொல்வது; கர்ணன் திரௌபதியை அந்தப்பரத்திற்கு அழைத்துச் செல்லுமாறு துச்சாசனனிடம் சொல்வது; துச்சாசனன் திரௌபதியை இழுப்பது.

பீமன் சொன்னான் “ஓ யுதிஷ்டிரரே, சூதாடிகளின் இல்லத்தில் தளர்ந்த நடத்தை கொண்ட பல பெண்கள் இருந்தாலும், அவர்கள்கூட அப்பெண்கள் மீது கொண்டிருக்கும் அன்பால் அவர்களைப் பந்தயப் பொருளாக வைக்கமாட்டார்கள்.(1) காசி மன்னன் கொடுத்த அத்தனை அற்புதப் பொருட்களையும், செல்வங்களையும், விலங்குகளையும், வேறு செல்வங்களையும், கவசங்களையும், வேறு மன்னர்கள் கொடுத்த ஆயுதங்களையும், நமது நாட்டையும், உம்மையும், எங்களையும் எதிரிகள் வென்று விட்டார்கள்.(2,3) நீர் எங்கள் தலைவராக இருப்பதால் இவற்றில் நான் கோபம் கொள்ளவிலை. இருப்பினும், திரௌபதியைப் பந்தயமாக வைத்த உமது செயல் பெரிதும் முறையற்றது என நான் கருதுகிறேன்.(4) இந்த அப்பாவிப் பெண் {திரௌபதி} இப்படி நடத்தப்படுவதற்குத் தகுந்தவளல்ல. பாண்டவர்களைத் தலைவர்களாக அடைந்து, தாழ்ந்தவர்களும், இழிந்தவர்களும், கொடூரர்களும், தீய மனம் கொண்டவர்களுமான கௌரவர்களால் இவ்வாறு உம்மாலேயே தண்டிக்கப்படுகிறாள்.(5) அவள் காரணமாகவே, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எனது கோபம் உம்மீது விழுகிறது. நான் அந்த உமது கரங்களை எரிக்கப் போகிறேன். சகாதேவா, நெருப்பைக் கொண்டு வருவாயாக” என்றான்[1].(6) 

பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் பீமன் பேச்சு ….

சூதர் மனைகளிலே அண்ணே! தொண்டு மகளிருண்டு.

சூதிற் பணய மென்றே — அங்கோர் தொண்டச்சி போவதில்லை.   69

ஏது கருதிவைத்தாய்? அண்ணே, யாரைப் பணயம்வைத்தாய்?

மாதர் குலவிளக்கை — அன்பே வாய்ந்த வடிவழகை.   70

பூமி யரசரெல்லாங் கண்டே போற்ற விளங்குகிறான்,

சாமி, புகழினுக்கே — வெம்போர்ச் சண்டனப் பாஞ்சாலன்.   71

அவன் சுடர்மகளை, அண்ணே, ஆடி யிழந்துவிட்டாய்.

தவறு செய்துவிட்டாய்; — அண்ணே, தருமங் கொன்றுவிட்டாய்.   72

சோரத்திற் கொண்டதில்லை;  அண்ணே, சூதிற் படைத்ததில்லை.

வீரத்தினாற் படைத்தோம்;  வெம்போர் வெற்றியினாற் படைத்தோம்;   73

சக்கரவர்த்தி யென்றே  மேலாந் தன்மை படைத் திருந்தோம்;

பொக்கென ஓர்கணத்தே  எல்லாம் போகத் தொலைத்துவிட்டாய்.   74

நாட்டையெல்லாந் தொலைத்தாய்;  அண்ணே, நாங்கள் பொறுத்திருந்தோம்.

மீட்டும் எமையடிமை  செய்தாய், மேலும் பொறுத்திருந்தோம்.   75

துருபதன் மகளைத்  திட்டத் துய்ந னுடற்பிறப்பை, இருபகடை யென்றாய், ஐயோ! இவர்க் கடிமையென்றாய்!   76

இதுபொறுப்ப தில்லை, தம்பி! எரிதழல் கொண்டுவா.

கதிரை வைத்திழந்தான் — அண்ணன் கையை எரித்திடுவோம்.   77

இதைக் கேட்ட அர்ஜுனன், “ஓ பீமசேனரே, இதற்கு முன் நீர் இதுபோன்ற சொற்களைச் சொன்னதில்லை. நிச்சயமாக உயர்ந்த நிலையில் இருந்த உம் அறம் இந்தத் தீய எதிரிகளால் அழிக்கப்பட்டது.(7) நீர் எதிரிகளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டாம். உயர்ந்த அறத்தைப் பயில்வீராக. அறம் சார்ந்தவரும், அனைவருக்கும் மூத்தவருமான அண்ணனை {யுதிஷ்டிரரை} மீறிப் பேசுவது எவனுக்குத் தகும்?(8) மன்னர் எதிரியால் அழைக்கப்பட்டார், க்ஷத்திரிய ஒழுக்கத்தை நினைவில் கொண்டு, தமது விருப்பத்திற்கு மாறாக பகடை விளையாடினார். அது நிச்சயமாக நமது புகழுக்கு உகந்ததே” என்றான் {அர்ஜுனன்}.(9) 

பீமன், “ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, க்ஷத்திரிய ஒழுக்கத்தை ஏற்று மன்னர் நடந்து கொண்டார் என்பதை நான் அறியாமல் இருந்திருந்தால், அவரது {யுதிஷ்டிரரது} கரங்களை வலுக்கட்டாயமாகப் பற்றி தழல் நெருப்பில் எரித்திருப்பேன்” என்றான் {பீமன்}”.(10)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “துயரத்தில் இருக்கும் பாண்டவர்களையும், பாஞ்சால இளவரசியின் {திரௌபதியின்} நிலையையும் கண்ட திருதராஷ்டிரனின் மகனான விகர்ணன்,(11) “மன்னர்களே, யக்ஞசேனியால் {திரௌபதியால்} கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிப்பீராக. நமக்குப் பரிந்துரைக்கப்பட்ட காரியத்தில் நாம் நீதியைத் தீர்மானிக்காமல் இருப்போமானால், நம் அனைவருக்கும் விரைவில் நரகம் நிச்சயம்.(12) குருக்களில் மூத்தவர்களான பீஷ்மரும், திருதராஷ்டிரரும், உயர் ஆன்ம விதுரரும் ஒன்றும் சொல்லாமல் இருப்பதேன்?(13) எங்கள் அனைவருக்கும் குருவான பரத்வாஜர் மகனும் {துரோணரும்}, கிருபரும் இங்கே இருக்கின்றனர். இந்த மறுபிறப்பாளர்களில் சிறந்தவர்கள் பதிலளிக்காமல் இருப்பதேன்?(14) அனைத்துப் புறத்தில் இருந்தும் இங்கே வந்து திரண்டிருக்கும் மன்னர்கள், லாப மற்றும் கோப நோக்கங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த கேள்விக்கு பதில் அளிக்கட்டும்.(15) மன்னர்களே, மன்னன் துருபதனின் அருளப்பட்ட மகள் {திரௌபதி} கேட்டிருக்கும் இந்த கேள்விக்கு பதிலளிப்பீராக. அதன் பிறகு சற்று சிந்தித்து எத்தரப்பில் இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பீராக” என்றான் {விகர்ணன்}.(16)

இப்படியே விகர்ணன் அந்த சபையின் முன்பு தொடர்ச்சியாகத் தனது கோரிக்கையை வைத்தான். ஆனால் அந்த மன்னர்கள் அவனுக்கு நன்மையாகவோ, தீமையாகவோ ஒரு வார்த்தையும் பேசவில்லை.(17) அனைத்து மன்னர்களிடமும் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்துக் கொண்டிருந்த விகர்ணன், தனது கரங்களைப் பிசைய ஆரம்பித்து, பாம்பு போல பெருமூச்சுவிட்டான்.(18) 

பிறகு அந்த இளவரசன் {விகர்ணன்} இறுதியாக, “பூமியின் மன்னர்களே, கௌரவர்களே, நீங்கள் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கிறீர்களோ இல்லையோ, நீதி என்றும், சரியானது என்றும் நான் கருதுவதைச் சொல்லப் போகிறேன்.(19) மனிதர்களில் முதன்மையானவர்களே, வேட்டை, குடி, சூது, அதிகப்படியான மாதர் இன்பம் ஆகிய நான்கும் மன்னர்களுக்கான நான்கு தீமைகளாகும்.(20) இவற்றுக்கு அடிமையாக இருக்கும் மன்னன் அறத்தை வஞ்சித்து வாழ்கிறான். இப்படி ஒழுங்கற்ற நடத்தைகளில் ஈடுபடுபவனை எந்த அதிகாரமும் இல்லாதவனாகவே மக்கள் கருதுவார்கள்.(21) இந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரர்}, இந்தத் தீமைகளில் ஒன்றில் ஆழ்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, இந்த வஞ்சகச் சூதாடிகளால் தூண்டப்பட்டு, திரௌபதியைப் பந்தயமாக வைத்தார்.(22) மறுபுறம், இந்த அப்பாவி திரௌபதி பாண்டு மகன்கள் அனைவரின் பொது மனைவியாவாள். மேலும், மன்னர் {யுதிஷ்டிரர்} முதலில் தம்மை இழந்த பிறகு, இவளை {திரௌபதியை} பந்தயமாக வைத்தார்.(23) இந்தப் பந்தயத்தில் விருப்பம் கொண்ட சுபலனே {சகுனியே}, மன்னனை {யுதிஷ்டிரனை} இந்தக் கிருஷ்ணையை {திரௌபதியைப்} பந்தயமாக வைக்கத் தூண்டினான். இச்சூழ்நிலைகளையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும் நான், திரௌபதி வெல்லப்படவில்லை என்ற தீர்மானத்திற்கு வருகிறேன்” என்றான் {விகர்ணன்}.(24)

இந்த வார்த்தைகளைக் கேட்டு, அந்தச் சபையில் இருந்தவர்களால் பெரும் கூச்சல் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் விகர்ணனைப் பாராட்டி, சுபலனின் மகனைக் {சகுனியைக்} கண்டித்தனர்.(25) அவ்வொலியால், கோபம் கொண்டு உணர்வுகளை இழந்த ராதையின் மகன் {கர்ணன்}, நல்ல வடிவம் கொண்ட தனது கரங்களை அசைத்து,(26) “ஓ விகர்ணா, எதிர்மறையான, சீரற்ற பல நிலைகளை இந்தச் சபையில் என்னால் காண முடிகிறது. விறகில் உண்டாகும் நெருப்பு, அந்த விறகையே உட்கொள்வது போல, நீ வெளிப்படுத்தும் இந்தச் சினம் உன்னையே உட்கொள்ளும்.(27) திரௌபதியால் தூண்டப்பட்ட பிறகும் இங்கிருக்கும் பிரமுகர்கள் ஒரு வார்த்தையும் பேச வில்லை. அவர்கள் அனைவரும், துருபதனின் மகள் {திரௌபதி} சரியாக வெல்லப்பட்டதாகவே கருதுகிறார்கள்.(28) ஓ திருதராஷ்டிரர் மகனே {விகர்ணா}, வயது முதிராதவனான நீ மட்டுமே கோபத்தில் வெடிக்கிறாய். சிறுவனாக இருக்கும் நீ முதியவன் போல சபைக்கு மத்தியில் நின்று பேசுகிறாய்.(29) ஓ துரியோதனன் தம்பியே {விகர்ணா}, (நீதியாக) வெல்லப்பட்ட கிருஷ்ணை {திரௌபதி} வெல்லப்படவில்லை என்று முட்டாளைப் போல சொல்வதால், உண்மையான அறநெறி எது என்பதை நீ அறிய மாட்டாய் என்று தெரிகிறது.(30) 

ஓ திருதராஷ்டிரர் மகனே {விகர்ணா}, பாண்டவர்களில் மூத்தவன் {யுதிஷ்டிரன்} இந்தச் சபையின் முன்னால் தனது உடைமைகள் அனைத்தையும் பந்தயமாக வைத்த போது, கிருஷ்ணை {திரௌபதி} வெல்லப்படவில்லை என்று நீ சொல்வதெப்படி?(31) ஓ பாரத குலத்தின் காளையே {விகர்ணா}, {யுதிஷ்டிரனின்} அனைத்து உடைமைகளில் திரௌபதியும் ஒருத்திதான். எனவே, நியாயமாக வெல்லப்பட்ட கிருஷ்ணை {திரௌபதி} வெல்லப்படவில்லை என்று நீ சொல்வதெப்படி?(32) திரௌபதி (சுபலனால்) குறிப்பிடப்பட்டு, பாண்டவர்களால் பந்தயப் பொருளாக அங்கீகரிக்கப்பட்டவள். நீ அவள் {திரௌபதி} வெல்லப்படவில்லை என்று கருதுவதற்கான காரணமென்ன?(33) அல்லது, அவள் {திரௌபதி} ஒற்றையாடையுடன் இங்கு கொண்டு வரப்பட்டது சரியில்லாத நடவடிக்கையென நீ கருதினால், அதற்கு நான் சொல்லும் குறிப்பிட்ட சிறந்த காரணங்களைக் கேட்பாயாக.(34) 

ஓ குரு குலத்தின் மகனே {விகர்ணா}, ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் என்றே தேவர்கள் தீர்மானித்திருக்கின்றனர். இருந்தாலும், இந்தத் திரௌபதி பல கணவர்களைக் கொண்டிருக்கிறாள். எனவே, இவள் {திரௌபதி} நிச்சயம் கற்பற்ற பெண்ணே {வேசையே}.(35) எனவே, இவளை {திரௌபதியை} இந்தச் சபையின் முன்பு ஒற்றையாடையில் கொண்டு வருவதோ, அவளது ஆடைகளைக் களைவதோ {ஆடையே இல்லாமல் கொண்டுவருவதோ} ஆச்சரியப்படத்தக்க செயல் அல்ல.(36) பாண்டவர்கள் கொண்ட செல்வங்களும், இவளும், பாண்டவர்கள் அனைவரும் சுபலனின் மகனால் {சகுனியால்} நீதியுடன் வெல்லப்பட்டனர்.(37) ஓ துச்சாசனா, நீதி மொழிகள் பேசும் இந்த விகர்ணன் சிறுவனே. பாண்டவர்களின் உடைகளையும், திரௌபதியின் உடையையும் களைவாயாக” என்றான் {கர்ணன்}.(38)

இந்த வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்கள், ஓ பாரதா {ஜனமேஜயா}, பாண்டவர்கள் தங்கள் மேலாடைகளைக் களைந்து, கீழே தூக்கி எறிந்து அந்தச் சபையில் அமர்ந்தார்கள்.(39) பிறகு துச்சாசனன், ஓ மன்னா, அனைவரின் முன்னிலையிலும் திரௌபதியின் ஆடையே வலுக்கட்டாயமாகப் பற்றிக் களையத் தொடங்கினான்”.(40)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “திரௌபதியின் உடை அப்படி களையப்படும்போது, ஹரியின் நினைப்பால் அவள் {திரௌபதி பேரொலியுடன் கதறி அழுது}, “ஓ கோவிந்தா {கிருஷ்ணா}, ஓ துவாரகையில் வசிப்பவனே, ஓ கிருஷ்ணா, ஓ (பிருந்தாவனத்தின்) இடையர் குலப் பெண்களால் விரும்பப்படுபவனே {கோபீஜனப்ரியா},(41) ஓ கேசவா, கௌரவர்கள் என்னை அவமானப்படுத்துவதைப் பார்ப்பாயாக. ஓ தலைவா, ஓ லட்சுமியின் கணவனே, ஓ விராஜத்தின் (பிருந்தாவனத்தின்) தலைவனே, அனைத்துத் துன்பங்களையும் அழிப்பவனே, ஓ ஜனார்த்தனா, இந்தக் கௌரவப் பெருங்கடலில் மூழ்கும் என்னைக் காப்பாற்றுவாயாக.(42) ஓ கிருஷ்ணா, ஓ பெரும் யோகியே, அண்டத்தின் ஆன்மாவே, அனைத்துப் பொருட்களையும் படைத்தவனே, ஓ கோவிந்தா, குருக்களுக்கு மத்தியில் உணர்வுகளை இழந்து துன்பத்தில் இருக்கும் என்னைக் காப்பாற்றுவாயாக” என்று அழுதாள்.(43) 

துயரத்தில் இருந்த அந்த அழகான பெண்மணி {திரௌபதி}, தனது முகத்தை மூடி, மூவுலகத்தின் தலைவனான ஹரியான கிருஷ்ணனை நினைத்து பேரொலியுடன் கதறினாள்.(44) திரௌபதியின் வார்த்தைகளைக் கேட்டவனும், இரக்கமுள்ளவனுமான கிருஷ்ணன் ஆழமான உணர்ச்சிக்கு ஆட்பட்டு, இரக்கத்துடன் தனது ஆசனத்தைவிட்டு எழுந்து, கால்நடையாகவே அங்கு வந்தான்.(45) கிருஷ்ணன், விஷ்ணு, ஹரி மற்றும் நரன் ஆகியோரிடம் யக்ஞசேனி {திரௌபதி} உரக்க அழுது கொண்டிருந்தபோது, சிறப்புமிக்க தர்மதேவன் {கிருஷ்ணன்} எவராலும் கவனிக்கப்படாதவனாக இருந்து, அவளை {திரௌபதியை} பல வண்ணங்கள் உடைய அற்புதமான துணிகளால் மூடினான்.(47) 

ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, திரௌபதியின் ஆடை இழுக்கப்பட்டு, ஓர் ஆடை உருவப்பட்ட போது, அதே வகையைச் சார்ந்த மற்றொரு ஆடை அவளை மறைப்பது போலத் தோன்றியது.(47) இப்படியே பல துணிகள் காணப்படும் வரை இது தொடர்ந்து கொண்டு இருந்தது. ஓ மேன்மையானவனே, அறத்தைக் காக்க, பல வண்ணங்களில் நூற்றுக்கணக்கான ஆடைகள் திரௌபதியின் மேனியில் இருந்து வந்தன.(48) பல குரல்களின் ஆழ்ந்த முழக்கம் அங்கே எழுந்தது. அந்தச் சபையில் இருந்த மன்னர்கள், உலகத்தின் காட்சிகளில் இயல்புக்கு மிக்க காட்சியைக் கண்டு, திரௌபதியைப் பாராட்டி, திருதராஷ்டிரன் மகனை {துச்சாசனைக்} கண்டிக்கத் தொடங்கினர்.(49) மேலும், பீமன் தனது கரங்களைப் பிசைந்து கொண்டு, கோபத்தில் உதடுகள் நடுங்க, பெருத்த குரலில் மன்னர்களுக்கு மத்தியில் ஒரு பயங்கரமான சபதத்தை ஏற்றான்.(50) 

பீமன், “உலகத்தின் க்ஷத்திரியர்களே, நான் சொல்லப்போகும் இந்தச் சொற்களைக் கேட்பீராக. இது போன்ற சொற்களை வேறு மனிதர்கள் எவரும் இதுவரை சொன்னதில்லை, எதிர்காலத்திலும் யாரும் எப்போதும் இவற்றைச் சொல்ல மாட்டார்கள்.(51) பூமியின் தலைவர்களே, இவ்வார்த்தைகளைப் பேசிவிட்டு, அவற்றை நான் நிறைவேற்றாமல் இருந்தால், இறந்து சென்ற எனது மூதாதையர்களின் உலகம் எனக்குக் கிடைக்காமல் போகட்டும். போர்களத்தில் சக்தியை மட்டுமே பயன்படுத்தி, கொடிய மனம் கொண்டவனும், இழிந்தவனுமான இந்தப் பாவியின் மார்பைப் பிளந்து, இவனது {துச்சாசனனது} உயிர்க்குருதியைக் குடிக்காமல் போனேன் எனில், எனது மூதாதையர்கள் உலகத்தை நான் அடையாமல் போகக் கடவேன்” என்றான்”.(52,53)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பீமனின் இந்தக் கொடும் வார்த்தைகளைக் கேட்ட சபையோர் இருக்கையின் நுனியில் நின்றனர். அங்கே இருந்த அனைவரும் பீமனைப் பாராட்டி, திருதராஷ்டிரன் மகனை நிந்தித்தனர்.(54) அந்தச் சபையில் {திரௌபதியின் மேனியில் இருந்து உருவப்பட்ட} துணிக்குவியல் திரண்ட போது, துச்சாசனன் களைப்படைந்து நாணத்துடன் கீழே ஆமர்ந்தான்.(55)

அந்தச் சபையிலிருந்தவர்களும், தேவர்களைப் போன்றவர்களுமான மனிதர்கள் குந்தியின் மகன்களை அந்த நிலையில் கண்டு, (திருதராஷ்டிரன் மகனையும் பார்த்து) “சீ, சீ” என்றனர்.(56) ஒன்றுகலந்த அவர்களின் குரல் கேட்டவர்களை இருக்கையின் நுனியில் நிற்கச் செய்தது. அந்தச் சபையில் இருந்த நேர்மையான மனிதர்கள் அனைவரும், “ஐயோ! திரௌபதியின் கேள்விக்கு இந்தக் கௌரவர்கள் பதிலளிக்கவில்லையே” என்று சொல்லி திருதராஷ்டிரனையும் நிந்தித்து அவர்கள் பெரும் கூச்சலிட்டனர்.(57)

பிறகு, நீதி நெறிகளின் அறிவியலை அறிந்தவனான விதுரன், தனது கரங்களை அசைத்து, அனைவரையும் அமைதிப்படுத்தி,(58) “இந்தச் சபையில் இருப்போரே, ஆதரவற்று அழுது கொண்டிருக்கும் திரௌபதி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறாள். நீங்கள் யாரும் பதிலளிக்கவில்லை. இது போன்ற நடத்தையால் அறமும் அறநெறிகளும் தண்டிக்கப்படுகின்றன.(59) நெருப்பால் உட்கொள்ளப்பட்டவன் போல, துயரத்துக்கு ஆட்பட்ட மனிதன் நல்ல மனிதர்களின் சபையை அணுகுகிறான். அந்தச் சபையில் இருப்பவர்கள் அந்த நெருப்பைத் தணித்து, அவனை உண்மையாலும் அறநெறிகளாலும் குளிரச் செய்வர்.(60) பாதிக்கப்பட்ட மனிதன் சபையாரிடம் அறநெறி வழங்கும் தனது உரிமைகள் பற்றி கேட்கிறான். அப்போது அந்தச் சபையில் இருப்போர் விருப்பாலும் கோபத்தாலும் உந்தப்படாமல் அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும்.(61)

மன்னர்களே, விகர்ணன் அவனது ஞானத்துக்கும் நீதிக்கும் தகுந்தவாறு அந்தக் கேள்விக்கு பதிலளித்திருக்கிறான். நீங்கள் சரியாக நினைப்பதை நீங்களும் பதிலாகச் சொல்ல வேண்டும்.(62) அறநெறிகளின் விதிகளை அறிந்து, ஒரு சபையில் கலந்து கொண்டு, ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் {மௌனமாக} இருப்பது என்பது பாதி பொய்க்கு சமமாகும்.(63) மறுபுறம் அறநெறிகளின் விதிகளை அறிந்த ஒருவன் ஒரு சபையில் சேர்ந்து பொய்யான பதிலைச் சொன்னால், நிச்சயமாக பொய் சொன்ன பாவம் அவனைச் சாரும்.(64) பழைய வரலாற்றில் உள்ள அங்கிரசின் மகனான பிரகலாதனின் கதையைக் கல்விமான்கள் மேற்கோளாகக் காட்டுவார்கள்.(65)

பழங்காலத்தில் தைத்தியர்களின் தலைவனாக பிரகலாதன் என்ற பெயரில் ஒருவன் இருந்தான். அவனுக்கு விரோசனன் என்ற பெயர் கொண்ட ஒரு மகன் இருந்தான், அந்த விரோசனன் தனக்கு ஒரு மணமகளை அடைவதற்காக அங்கிரசின் மகனான சூதன்வானிடம் சச்சரவு செய்தான்.(66) அந்த மணமகளை அடைவதன் பொருட்டு அவர்கள் இருவரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, “நான்தான் பெரியவன், நான்தான் பெரியவன்” என்று சொன்னார்கள்.(67) அவர்கள் இப்படி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்ட பிறகு, அவர்கள் இருவரும் பிரகலாதனை நடுவராகக் கொண்டு தங்கள் இருவருக்குள்ளும் ஒரு தீர்மானத்திற்கு வர முடிவு செய்தனர். அவர்கள் அவனிடம் {பிரகலாதனிடம்}, “எங்கள் இருவரில் (மற்றவனுக்கு) யார் பெரியவன்? இந்தக் கேள்விக்கு விடை பகரும். பொய் சொல்லாதீர்” என்றனர்.(68)

இந்த சண்டையால் அச்சமடைந்த பிரகலாதன் தனது பார்வையைச் சூதன்வானிடம் செலுத்தினான். யமனின் கதாயுதத்தைப் போல கோபத்தால் எரிந்து கொண்டிருந்த சூதன்வான், அவனிடம் {பிரகலாதனிடம்},(69) “நீர் தவறாக விடையளித்தாலோ, விடையளிக்காமல் இருந்தாலோ உமது தலை வஜ்ரதாரியின் {இந்திரனின்} இடியால் நூறு துண்டுகளாகச் சிதறிப்போகும்” என்றான்.(70) 

சூதன்வானால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த தைத்தியன் {பிரகலாதன்}, அத்திமர இலை போல நடுங்கி, ஆலோசனைக்காக பெரும் சக்தி வாய்ந்த காசியபரிடம் சென்றான்.(71) 

பிரகலாதன், “ஓ சிறப்பும், மேன்மையும் வாய்ந்தவரே, தேவர்களையும், அசுரர்களையும், பிராமணர்களையும் வழிநடத்த வேண்டிய அறநெறிகளின் விதிகளை நன்கு அறிந்தவர் நீர். இருப்பினும், கடமையின் படி பார்த்தால் இந்தச் சூழ்நிலை பெரும் சிரமம் கொண்டதாக இருக்கிறது. நான் உம்மிடம் ஒன்று கேட்கிறேன்.(72) ஒருவனிடம் கேள்வி கேட்ட பிறகு, அவன் பதிலளிக்கவில்லை என்றாலோ, தவறாக பதிலளித்தாலோ அவன் எந்த உலகங்களை அடைவான்?” என்று கேட்டான்.(73)

காசியபர், “பதிலை அறிந்தும் ஒருவன் சபலத்தாலோ, கோபத்தாலோ, அச்சத்தாலோ விடையளிக்கவில்லை என்றால், அவன் தன் மீது வருணனின் ஆயிரம் சுருக்குகளைப் {சுருக்கு கயிறு} போட்டுக் கொள்கிறான்.(74) ஒரு காரியத்தைக் குறித்து  விழியாலோ, காதாலோ சாட்சியாக நின்று அறிந்தவன், பொறுப்பில்லாமல் பேசினால், அவனும் தன்மேல் ஆயிரம் வருண சுருக்குகளை {வருண பாசங்களை} மாட்டிக் கொள்கிறான்.(75) முழுமையாக ஒரு வருட முடிவில் அச்சுருக்குகளில் ஒன்று தளரும். எனவே, அறிந்தவன், உண்மையை மறைக்காமல் பேச வேண்டும்.(76) அறம் பாவத்தால் {என்ற கணையால்} துளைக்கப்பட்டு ஒரு சபையை அடைந்தால், அந்தக் கணையை அகற்ற வேண்டியது அந்தச் சபையில் இருக்கும் அனைவரின் கடமையாகும். அல்லது அவர்களே அந்த அந்தப் பாவத்தால் துளைக்கப்படுவார்கள்.(77)

ஒரு சபையில் உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய செயல் கண்டிக்கப்படவில்லை என்றால், அந்தச் செயலில் இருக்கும் பாதி பாக பாவம் அந்த சபைக்குத் தலைமை தாங்குபவனைச் சாரும். கால் பாக பாவம் கண்டிக்கத்தக்க படி நடந்து கொண்டவனுக்கும், கால் பாக பாவம் அங்கிருந்த மற்றவர்களையும் சாரும்.(78) மறுபுறம், சபையில், கண்டிக்கப்பட வேண்டியவன் கண்டிக்கப்பட்டால், அந்த சபைக்குத் தலைமை தாங்குபவன் எல்லா பாவங்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டவனாகிறான். மற்ற சபை உறுப்பினர்களுக்கு எந்தப் பாவமும் சேருவதில்லை. குற்றம் புரிந்தவன் மட்டுமே அந்தச் செயலுக்குப் பொறுப்பாளி ஆவான்.(79)

ஓ பிரகலாதா, நீதி குறித்துக் கேட்கப்படும்போது தவறாக விடை சொல்பவர்கள், தங்களிலிருந்து ஏழு தலைமுறையினர் மற்றும் தங்களுக்கு முந்தைய ஏழு தலைமுறையினர் செய்த அறச்செயல்களை அழிக்கின்றனர்.(80) செல்வத்தை இழந்தவன், மகனை இழந்தவன், கடனாளி, உடனிருந்தவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டவன், கணவனை இழந்த பெண், மன்னனின் ஆணைக்கேற்ப எல்லாவற்றையும் இழந்தவன், மலட்டுப் பெண், புலியால் விழுங்கப்பட்டவன், சக்காளத்தியாக இருப்பவள், போலி சாட்சியால் சொத்தை இழந்தவன் ஆகியோரின் துயரங்கள் அனைத்தும் ஒன்றே என்று தேவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது.(81-83) பொய் பேசுபவன் இந்த பல்வேறு துயரங்களையும் அனுபவிப்பான். ஒரு காரியத்தைப் பார்த்தோ கேட்டோ புரிந்து கொள்ளும் மனிதன் அந்த காரியத்தின் சாட்சியாகிறான்.(84) எனவே, ஒரு சாட்சியானவன் எப்போதும் உண்மையையே பேச வேண்டும். உண்மை பேசும் சாட்சி தனது அறத்தகுதிகளையும் உலகம் சார் உடைமைகளையும் இழப்பதில்லை” என்றார் {காசியபர்}.(85) 

காசியபரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிரகலாதன், தனது மகனிடம் {விரோசனனிடம்},(86) “சூதன்வான் உன்னைவிடப் பெரியவன், (அவனது தந்தை) அங்கிரஸ் என்னைவிடப் பெரியவர். சூதன்வானின் தாயும், உனது தாயைவிட பெரியவள். எனவே, ஓ விரோசனா, இந்த சூதன்வானே உனது வாழ்வின் தலைவனாவான்” என்றான்.(87) 

பிரகலாதனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சூதன்வான், “உனது மகன் மீதிருக்கும் பாசத்தால் மாறி நடக்காமல், நீ அறத்தைக் கைக்கொண்டதால், உனது மகனான இவன் {விரோசனன்} ஆயிரம் வருடங்களுக்கு வாழட்டும் என்று நான் ஆணையிடுகிறேன்” என்றான் {சூதன்வான்}”.(88)

மேலும் விதுரன், “எனவே சபையில் இருக்கும் அனைவரும் இந்த உயர்ந்த அற உண்மைகளைக் கேட்டு, திரௌபதி கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்பதைச் சிந்திக்கட்டும்” என்றான்.(89) 

வைசம்பாயனர் தொடர்ந்தார், “விதுரனின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த சபையில் இருந்த மன்னர்கள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இருப்பினும், கர்ணன் மட்டும் துச்சாசனனிடம் “இந்தப் பணிப் பெண் கிருஷ்ணையை {திரௌபதியை} அந்தப்புரத்திற்கு அழைத்துச் செல்வாயாக” என்றான்.(90) 

இதன் காரணமாக துச்சாசனன், பார்வையாளர்கள் முன்னிலையில் ஆதரவற்றவளாகவும், நாணத்துடனும் நின்று கொண்டிருந்தவளும், தனது தலைவர்களான பாண்டவர்களைக் கண்டு பரிதாபமாக அழுது கொண்டிருந்தவளுமான திரௌபதியை இழுக்கத் தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(91)

கேள்வியின் நாயகன் யுதிஷ்டிரனே | சபா பர்வம் – பகுதி 68-((தியூத பர்வம் – 24)மன்னர்களிடமும், கௌரவர்களிடமும் திரௌபதி கேள்வி கேட்பது; பீஷ்மர் பதில் உரைக்க இயலாது என்றும், இந்தக் கேள்விக்கு பதிலை யுதிஷ்டிரனே சொல்ல வேண்டும் என்றும் சொல்வது…

திரௌபதி, “மனிதர்களில் மோசமானவனே, தீய மனதுடைய துச்சாசனா சற்று பொறுப்பாயாக. உயர்ந்த கடமையாக இருக்கும் ஒரு செயலை நான் செய்ய வேண்டும். நான் இதுவரை அதைச் செய்யவில்லை. இந்தப் பாவியின் {துச்சாசனனின்} பலம் நிறைந்த கரங்களால் வலுக்கட்டாயமாக இழுக்கப்படுவதால், நான் எனது உணர்வுகளை இழந்தேன்.(1) நான் இந்த குருக்களின் சபையில் இருக்கும் மரியாதைக்குரிய பெரியோர்களை வணங்குகிறேன். இதை நான் முன்கூட்டி செய்யாதது என் தவறாகாது” என்றாள்”.(2)

வைசம்பாயனர் சொன்னார், “பாதிக்கப்பட்டவளும், ஆதரவற்றவளுமான திரௌபதி, இப்படி நடத்தப்படுவதற்கு உரியவள் இல்லையென்றாலும், முன்பைக் காட்டிலும் அதிக பலத்துடன் இழுக்கப்பட்ட போது, அந்தக் குருக்களின் சபையில் தரையில் விழுந்து, இப்படி அழுதாள்,(3) “ஐயோ, இதற்கு முன்பு ஒரே ஒரு முறைதான், அதுவும் சுயம்வரத்தின்[1] போதுதான், சபையில் கூடியிருந்த மன்னர்களால் நான் பார்க்கப்பட்டேன். அதன் பிறகு ஒரு முறை கூட நான் {எவராலும்} பார்க்கப்படவில்லை. {அப்படிப்பட்ட} நான் இன்று இந்தச் சபையின் முன்னால் அழைத்து வரப்பட்டிருக்கிறேன்.(4) முன்பு அரண்மனையில் இருந்தபோது, காற்றும், சூரியனும் கூட கண்டிராத ஒருத்தி, ஒரு கூட்டத்தின் பார்வைக்கு வெளிப்படுத்தப்பட்டாள்.(5) ஐயோ, அரண்மனையில் இருந்தபோது எவளைக் காற்று தீண்டினால் கூட பாண்டுவின் மகன்களுக்கு துயரத்தைக் கொடுக்குமோ, அவளே இன்று பாண்டவர்களால் துன்பப்பட்டு, இந்தப் பாவியால் பற்றி இழுத்தவரப் பட்டிருக்கிறாள்.(6) ஐயோ, இந்தக் கௌரவர்கள், இந்த நிலைக்குத் தகாத தங்கள் மருமகள், அவர்கள் முன்பும் பாதிக்கப்படுவதைப் பொறுத்திருக்கின்றனர்.(7) காலங்கள் இணைப்பிலிருந்து அப்பாற்பட்டு போனதாகத் தெரிகிறது {விபரீத காலமென்று நினைக்கிறேன்}. உயர் பிறப்பு பிறந்தும்[2], கற்புடன் இருந்தும், நான் இந்த பொது சபைக்கு வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டேன் என்பதைவிட வேறு என்ன துயரம் எனக்கு வேண்டும்? எதற்காக இந்த மன்னர்கள் அறியப்பட்டிருக்கின்றனரோ, அந்த அறம் எங்கே?(8,9)

பழங்காலத்தின் மன்னர்கள், தாங்கள் மணந்த மனைவிகளை பொது சபைக்கு அழைத்து வருவதில்லை என்று கேள்விப்படுகிறோம். ஐயோ, என்றுமழியாத அந்தப் பழக்க வழக்கங்கள் கௌரவரிடம் இருந்து மறைந்தே போய்விட்டன. இல்லையென்றால், பாண்டவர்களின் கற்புள்ள மனைவியும், பிருஷதன் மகனின் {திருஷ்டத்யும்னன்} தங்கையும், வாசுதேவன் {கிருஷ்ணனின்} தோழியுமான நான், இந்தச் சபையின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டதெவ்வாறு?(10) கௌரவர்களே, நான், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் மணந்த மனைவியாவேன், இம்மன்னன் {யுதிஷ்டிரன்} பிறந்த அதே புகழ்பெற்ற {க்ஷத்திரிய} குலத்திலேயே நானும் பிறந்தேன். நான் பணிப்பெண்ணா? அல்லது வேறா? என்று இப்போது எனக்குச் சொல்வீராக. நான் உங்கள் பதிலை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன்.(11) குருக்களின் பெயரை அழிக்க வந்த இந்தப் பாதகன் என்னைக் கடுமையாகத் துன்புறுத்துகிறான். கௌரவர்களே, இனிமேலும் என்னால் தாங்க முடியாது. மன்னர்களே, நான் வெல்லப்பட்டேனா? வெல்லப்படவில்லையா? என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அஃது என்னவாக இருப்பினும் நான் உங்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன்” என்றாள் {திரௌபதி}.(12,13)

இந்த வார்த்தைகளைக் கேட்ட பீஷ்மர், “ஓ அருளப்பட்டவளே, அறத்தின் பாதை நுட்பமானது என்று நான் ஏற்கனவே சொன்னேன். இந்த உலகத்தின் சிறந்த ஞானியும் அதை {அறத்தைப்} புரிந்து கொள்வதில் எப்போதும் தோல்வியுறுகிறான்.(14) உலகத்தில் பலம் வாய்ந்த மனிதன் எதை அறம் என்று நினைக்கிறானோ, உண்மை வேறாக இருப்பினும், அதையே மற்றவர்களும் அறமாகக் கருதுகின்றனர். ஆனால், பலவீனமான மனிதன் எதை அறமாகக் கருதுகிறானோ அஃது உயர்ந்த அறமாக இருப்பினும், அதை எள்ளளவும் கருத மாட்டார்கள்.(15) ஈடுபட்டிருக்கும் காரியத்தின் முக்கியத்துவத்தாலும், அதன் சிக்கல் மற்றும் நுட்பமான தன்மையாலும், நீ கேட்கும் கேள்விக்குத் தீர்மானமான பதிலை என்னால் சொல்ல இயலவில்லை.(16) இருப்பினும், அனைத்துக் குருக்களும் பேராசைக்கும் முட்டாள்தனத்துக்கும் அடிமையாகிவிட்டார்கள் என்பது நிச்சயம். நமது குலத்தின் அழிவு வெகு தொலைவில் இல்லை.(17) 

ஓ அருளப்பட்டவளே {திரௌபதியே}, நீ மருமகளாக நுழைந்திருக்கும் குடும்பம் எப்படிப்பட்டதெனில், அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்கள், எவ்வளவுதான் துன்பத்தால் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் அறத்திலிருந்தும் நெறிகளிலிருந்தும் வழுவுவதில்லை.(18) ஓ பாஞ்சால இளவரசி {திரௌபதி}, நீ இவ்வளவு துயரப்படும்போதும், உனது பார்வை அறத்திலும் அறநெறியில் நிறைந்திருக்கும் உனது நடத்தையும் உனக்கு தகுதியுடையதே.(19) அறநெறிகளை அறிந்த துரோணர் மற்றும் இங்கிருக்கும் பல முதியவர்கள், தங்கள் தலையைத் தொங்கப் போட்டு இறந்தவர்கள் போல உயிரற்ற உடலாக அமர்ந்திருக்கின்றனர்.(20) இருப்பினும், இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் அதிகாரம் உடையவன் யுதிஷ்டிரன் என்றே எனக்குத் தோன்றுகிறது. நீ வெல்லப்பட்டாயா? வெல்லப்படவில்லையா? என்பதைத் தீர்மானிக்க வேண்டியவன் அவனே {யுதிஷ்டிரனே}”, என்றார் {பீஷ்மர்}.(21)

எங்கள் அண்ணன் எங்கள் தலைவன் | சபா பர்வம் – பகுதி 69)-(தியூத பர்வம் – 25)திரௌபதியின் கேள்விகளுக்கு அச்சபை பதில் சொல்லாததுது; துரியோதனன், திரௌபதியிடம் உன் கணவன்மார்கள் யுதிஷ்டிரனைத் தங்கள் தலைவன் இல்லை என்று சொல்லட்டும், உன்னை அடிமை வாழ்வில் இருந்து விடுவிக்கிறேன் என்று கூறல்; பீமன் யுதிஷ்டிரன் எங்கள் தலைவனே என்று கூறல்..

வைசம்பாயனர் சொன்னார் “துரியோதனன் மீதிருந்த பயத்தால், அன்றில் பேட்டைப் போல {பெண் விரலடிப்பான் பறவை போல}, பாவமாக அழுதுகொண்டு திரும்பத் திரும்பக் கோரிக்கை வைத்த திரௌபதியைக் கண்டும், அந்தச் சபையில் இருந்த மன்னர்கள் யாரும் நன்மையாகவோ தீமையாகவோ ஒரு வார்த்தையும் பேசவில்லை.(1) 

அந்த மன்னர்களும், அவர்களின் மகன்களும், பேரன்களும் அமைதியாக இருப்பதைக் கண்ட திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்}, மெல்லச் சிரித்து, பாஞ்சால மன்னனின் மகளிடம் {திரௌபதியிடம்},(2) “ஓ யக்ஞசேனி, நீ கேட்டிருக்கும் கேள்வி உனது கணவர்களான பெரும் பலம் வாய்ந்த பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோரைச் சார்ந்து இருக்கிறது. அவர்களே {பாண்டவர்களே} உனது கேள்விக்கு பதிலளிக்கட்டும்.(3) ஓ பாஞ்சாலி, அவர்கள் {பாண்டவர்கள்} உனக்காக, இந்த மதிப்பு மிக்க மனிதர்களின் முன்னிலையில், யுதிஷ்டிரன் தங்கள் தலைவன் இல்லை எனத் தீர்மானித்து, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைப் பொய்யனாக ஆக்கட்டும். பிறகு நீ இந்த அடிமை நிலையில் இருந்து விடுவிக்கப்படுவாய்.(4) தர்மனின் இந்த சிறப்பு மிகுந்த மகன் யுதிஷ்டிரன், எப்போதும் அறம் சார்ந்து இருப்பவன். இந்திரனைப் போல இருக்கும் யுதிஷ்டிரனே உனக்குத் தான் தலைவனா இல்லையா என்று தீர்மானிக்கட்டும். அவனது {யுதிஷ்டிரனது} வார்த்தைகளைக் கொண்டு, நீ பாண்டவர்களையோ, எங்களையோ தாமதமில்லாமல் ஏற்றுக் கொள்வாயாக.(5) உண்மையில், இந்தச் சபையில் இருக்கும் கௌரவர்கள் அனைவரும் உனது துயரம் எனும் கடலில் மிதந்து கொண்டிருக்கின்றனர். துரதிர்ஷ்டசாலிகளான உனது கணவர்களைக் கண்டு, பெருந்தன்மையுடன் இருக்கும் சபையோர்களால் உனது கேள்விக்கு பதிலளிக்க இயலவில்லை” என்றான் {துரியோதனன்}”.(6) 

வைசம்பாயனர் தொடர்ந்தார், “குரு மன்னனின் {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்டு, அந்த சபையில் இருந்தவர்கள் உரக்கப் பாராட்டினார்கள். அங்கீகரிக்கும் வகையில் கூச்சலிட்டு, தங்கள் கண் மற்றும் உதட்டு அசைவுகளால் ஒருவருக்கொருவர் குறிப்பால் பேசிக்கொண்டனர். மேலும், அவர்களில் சிலரிடம் இருந்து “ஓ”, “ஐயோ” என்ற குரல்கள் கேட்டன.(7) மகிழ்ச்சிகரமான துரியோதனனின் வார்த்தைகளால், அங்கிருந்த (அவனைச் சார்ந்த) கௌரவர்கள், மிக மகிழ்ச்சியடைந்தனர். நிறைவடைந்த மன்னர்கள் அனைவரும் குருக்களின் அறம் சார்ந்த மன்னனை {துரியோதனனை} மெச்சினார்கள்.(8) அந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் முகங்களை அறத்தின் விதிகளை அறிந்த யுதிஷ்டிரன் பக்கம் திருப்பி, அவன் {யுதிஷ்டிரன்} என்ன சொல்லப்போகிறான் என்று ஆவலாகப் பார்த்தனர்.(9) அந்த சபையில் இருந்த அனைவரும், போர்க்களத்தில் தோற்காத பாண்டுவின் மகனான அர்ஜுனன் என்ன சொல்வான் என்றும், பீமசேனன் என்ன சொல்வான் என்றும், இரட்டையர்கள் என்ன சொல்வார்கள் என்றும் கேட்க ஆவலாக இருந்தனர்.(10) 

அங்கே கேட்ட பல குரல்களின் ஹூங்காரம் நின்றதும், பீமசேனன், சந்தனம் பூசப்பட்டவையும், பலம்வாய்ந்தவையும் நன்கு அமைந்தவையுமான தனது கரங்களை ஆட்டி,(11) “நீதிமானும், உயர் ஆன்மாவும், எங்கள் அண்ணனுமாகிய இந்த மன்னன் யுதிஷ்டிரன், எங்களுக்கு தலைவனாக இல்லையெனில், நாங்கள் இந்த குருக்கள் குலத்தை (இவை அனைத்திற்காகவும்) மன்னித்திருக்கவே மாட்டோம்.(12) எங்களது அறம் மற்றும் தவத்தகுதிகள் அனைத்திற்கும், ஏன் எங்கள் உயிர்களுக்கும் கூட அவரே {யுதிஷ்டிரரே} தலைவராவார். அவர் தாம் வெல்லப்பட்டதாகக் கருதினால், நாங்கள் அனைவரும் வெல்லப்பட்டவர்களே ஆவோம்.(13) அஃது அப்படியில்லையெனில், இந்தப் பூமியைத் தங்கள் பாதங்களால் தொடும் எந்த உயிரினமாக இருந்தாலும், அது பாஞ்சால இளவரசியின் கூந்தலைத் தொட்ட பிறகு, என்னிடம் இருந்து உயிருடன் தப்ப முடியாது.(14) இரும்புத் தடிகளை {பரிகாயுதங்களைப்} போல இருப்பவையும், நன்கு அமைந்தவையுமான என் பலமிக்க கரங்களைப் பாருங்கள், இவற்றுக்குள் அகப்பட்டால் சதக்ரதுவாலும் (இந்திரனாலும்) அவற்றினிடமிருந்து தப்ப முடியாது.(15) அறத்தின் முடிச்சுகளால் {தர்மமெனும் கயிற்றால்} கட்டப்பட்டு, எங்கள் அண்ணன் {யுதிஷ்டிரன்} மீதிருக்கும் மரியாதையாலும், அமைதியாக இருக்குமாறு அர்ஜுனன் தொடர்ந்து கேட்டுக் கொள்வதாலும், நான் எந்தப் பயங்கரத்தையும் செய்யவில்லை.(16) எனினும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் கட்டளையிட்டால், சிறு விலங்குகளைக் கொல்லும் சிங்கத்தைப் போல, வாளின் வேலையை எனது கைவீச்சால் {அறைகளால்} செய்து, திருதராஷ்டிரரின் இந்தக் கேடுகெட்ட மகன்களைக் கொல்வேன்” என்றான் {பீமன்}”.(17)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைப் பேசிய பீமனிடம், பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோர், “ஓ பீமா, பொறுத்துக் கொள்வாயாக. உன்னால் அனைத்தும் சாத்தியப்படும்” என்றனர்[1].(18)(இரண்டு பகடை ஆட்டங்களும் சர்வதாரி வருடம் ஆவணி மாத தேய்பிறை 3ம் நாள் முதல் 7ம் நாள் வரை நடைபெற்றது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 10 மாதம் 2 நாள். பகடை ஆட்டம் நடைபெற்றபோது யுதிஷ்டிரனுக்கு வயது: 76 ; பீமனுக்கு வயது: 75 ; அர்ஜுனனுக்கு வயது: 74 ; நகுல சகாதேவர்களுகு: 73 ; துரியோதனனுக்கு வயது: 75 ; கர்ணனுக்கு வயது: 92 ; கிருஷ்ணனுக்கு வயது: 74 என்கிறது ஓர் ஆய்வு)

பாண்டவர்களை மீட்டாள் திரௌபதி | சபா பர்வம் – பகுதி 70(தியூத பர்வம் – 26)-கர்ணன் மேலும் திரௌபதியை அவமதிப்பது; பீமன் கோபம் கொள்வது; அர்ஜுனன் பதில் சொல்வது; தீய சகுனங்களை விதுரரும் காந்தாரியும் உணர்ந்து திருதராஷ்டிரனுக்கு உணர்த்துவது; திருதராஷ்டிரனிடம் இரண்டு வரங்கள் கேட்டு திரௌபதி பாண்டவர்களை மீட்பது…

கர்ணன், “இந்தச் சபையில் உள்ள அனைவரிலும், பீஷ்மர், விதுரர், மற்றும் குருக்களின் ஆசான் (துரோணர்) ஆகியோர் சுதந்திரமானவர்களாக இருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில், இவர்கள்தான் எப்போதும் தங்கள் தலைவனை {திருதராஷ்டிரனை} துன்மார்க்கன் போலப் பேசி, எப்போதும் அவரைக் கண்டித்து, எப்போதும் அவரது {திருதராஷ்டிரரின்} செழிப்பை விரும்பாமலிருக்கிறார்கள்.(1) ஓ சிறந்தவளே {திரௌபதியே}, ஓர் அடிமை, அவனது மகன் மற்றும் அவனது மனைவி ஆகியோர் சுதந்திரமில்லாதவர்கள். அவர்கள் {அடிமைகள்} செல்வம் ஈட்ட முடியாது. அப்படியே ஈட்டினாலும் அஃது அவர்களின் தலைவருடையது. தனது கணக்கில் ஒரு உடைமையையும் சேர்த்துக் கொள்ள முடியாத ஓர் அடிமையின் {யுதிஷ்டிரனின்} மனைவியாவாய் நீ.(2) மன்னர் திருதராஷ்டிரரின் அந்தப்புரத்திற்குச் சென்று, அங்கிருக்கும் மன்னரின் உறவினர்களுக்குப் பணிவிடை செய்வாயாக. அதுவே உனக்குச் சரியான காரியம் என நாங்கள் வழிகாட்டுகிறோம். ஓ இளவரசி {திரௌபதி}, திருதராஷ்டிரரின் அனைத்து மகன்களும்தான் இப்போது உனக்குத் தலைவர்கள் ஆவர், பிருதையின் {குந்தியின்} மகன்கள் அல்ல.(3) 

ஓ அழகானவளே {திரௌபதியே}, உனக்கான கணவனை நீ இப்போது தேர்ந்தெடுத்துக் கொள்வாயாக. அவன் {இப்போது உன்னால் தேர்ந்தெடுக்கப்படுபவன்} உன்னை சூதில் வைத்தாடி அடிமையாக்க மாட்டான். பெண்கள், குறிப்பாக அடிமையாக இருப்பவர்கள் சுதந்திரமாகத் தனது கணவரைத் தேர்ந்தெடுக்கத் துணியும் போது நிந்திக்கப்படுவதில்லை.(4) எனவே, நீ அதைச் செய்வயாக. நகுலன், பீமசேனன், யுதிஷ்டிரன், சகாதேவன், அர்ஜுனன் ஆகியோர் {எங்களால்} வெல்லப்பட்டனர். மேலும், ஓ யக்ஞசேனி {யக்ஞசேன என்றழைக்கப்படும் துருபதனின் மகளே திரௌபதி} நீ இப்போது அடிமையாக இருக்கிறாய். அடிமையாக இருக்கும் உனது கணவர்கள் இனிமேலும் உனக்குத் தலைவர்களாகத் தொடர முடியாது.(5) ஐயோ, பாஞ்சால மன்னன் துருபதன் மகளை {திரௌபதியை} இந்தச் சபையின் முன்னால் பகடைப் பணயமாக வைத்தாடிய பிருதையின் {குந்தியின்} மகன் {யுதிஷ்டிரன்} தன் வாழ்வையும், ஆற்றலையும், ஆண்மையையும் பயனற்றதெனக் கருதவில்லையா?” என்று கேட்டான்”.(6)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், கோபம் நிறைந்தவனுமான, பீமன் துயரத்தால் பெரும் மூச்சிரைத்தான். மன்னனுக்குக் {யுதிஷ்டிரனுக்குக்} கீழ்ப்படிந்து, அறம் மற்றும் கடமையால் கட்டப்பட்டு, கோபத்தால் அனைத்தையும் தனது பார்வையால் எரித்துக் கொண்டே,(7) “ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இந்தச் சூத மகனின் {கர்ணனின்} வார்த்தைகளால் எனக்குக் கோபம் வரவில்லை, ஏனெனில் உண்மையிலேயே நாம் அடிமைத்தனத்திற்குள் நுழைந்துவிட்டோம். நீர் இளவரசியை {திரௌபதியைப்} பந்தயமாக வைத்து விளையாடவில்லையெனில் நமது எதிரிகளால் என்னிடம் இப்படிப் பேச முடியுமா?” என்று கேட்டான்”.(8)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பீமசேனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன் அமைதியாக உணர்விழந்து இருந்த யுதிஷ்டிரனிடம்,(9) “ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பீமன் அர்ஜுனன் ஆகிய இருவரும், இரட்டையர்களும் கூட உனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றனர். (திரௌபதி கேட்ட) கேள்விக்கு நீ பதிலளி. கிருஷ்ணை {திரௌபதி} வெல்லப்படவில்லை என்று நீ கருதுகிறாயா என்பதைச் சொல்வாயாக” என்றான்.(10) 

குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} இப்படிப் பேசிய துரியோதனன், ராதையின் மகனை {கர்ணனை} ஊக்குவித்து பீமனை அவமதிக்க விரும்பி, வாழை மரம் போலவும், யானையின் துதிக்கையைப் போலவும் இருப்பதும், அனைத்து அதிர்ஷ்ட குறிகளையும் கொண்டதும், இடியைப் போன்ற பலமுடையதுமான தனது இடது தொடையை {ஆடை விலக்கித்} திரௌபதியின் பார்வையில் படும்படி வெளிக்காட்டினான்.(11,12) 

இதைக் கண்ட பீமசேனன், தனது சிவந்த கண்களை அகல விரித்து, அனைத்து மன்னர்களுக்கு மத்தியில் துரியோதனனிடம் (கணை போன்ற வார்த்தைகளால்) துளைப்பது போல,(13) “பெரும்போரில் உன்னுடைய இந்தத் தொடையை உடைக்கவில்லையென்றால், விருகோதரன் {பீமன்} தனது மூதாதையர்களின் நல்லுலகத்தை அடையமாட்டான்” என்றான்.(14) 

கொழுந்துவிட்டெரியும் மரத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் தீப்பொறிகள் வெளிப்படுவது போல, கோபம் நிறைந்த பீமனின் அனைத்து உறுப்புகளில் இருந்தும் தீப்பொறிகள் வெளிப்பட்டன.(15)

பிறகு விதுரன் அனைவரிடமும், “பிரதீபரின் குலத்தைச் சேர்ந்த மன்னர்களே, பீமசேனனிடம் இருந்து எழும் பேரபாயத்தைக் காண்பீராக. பாரதர்களை விஞ்ச அச்சுறுத்தும் இந்தப் பெரும்போர் நிச்சயம் விதியால் அனுப்பப்பட்டது என்பதை அறிந்து கொள்வீராக.(16) திருதராஷ்டிரரின் மகன்கள், நிச்சயமாக, ஒவ்வொரு சரியான கருத்தையும் கருத்தில் கொள்ளாமல் சூதாடினார்கள். அவர்கள் இப்போதும் ஒரு {அரச குலத்தைச் சேர்ந்த} பெண்மணியை {திரௌபதியைக்} குறித்து சர்ச்சை செய்து வருகின்றனர். நமது நாட்டின் செழிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கிறது. ஐயோ, கௌரவர்கள் இன்னும் பாவகர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.(17) கௌரவர்களே, நான் அறிவிக்கப்போகும் உயர்ந்த கட்டளைகளை உங்கள் மனத்தில் கொள்ளுங்கள். அறத்துக்கு கொடுமை செய்தால், இந்த முழு சபையும் மாசுபடும். யுதிஷ்டிரன், அவனே வெல்லப்படுவதற்கு முன் அவளைப் {திரௌபதியை} பணயம் வைத்திருந்தானானால், அவன் {யுதிஷ்டிரன்} நிச்சயமாக அவளது {திரௌபதியின்} தலைவனாகக் கருதப்பட்டிருப்பான்.(18) எந்த செல்வத்தையும் வைத்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் ஒருவன் எந்த நேரத்தில் பணயம் வைத்தாலும், அதை வெல்வது என்பது கனவில் செல்வத்தை வெற்றிகொள்வது போன்றதாகும். காந்தார மன்னனின் {சகுனியின்} வார்த்தைகளைக் கேட்ட, இந்த சந்தேகமற்ற உண்மையில் இருந்து வீழ்ந்துவிடாதீர்கள்” என்றான் {விதுரன்}.(19)

விதுரர் இப்படிப் பேசுவதைக் கேட்ட துரியோதனன், “பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள் ஆகியோரின் சொற்களுக்கு நான் இணங்குகிறேன். அவர்கள் யுதிஷ்டிரன் தங்கள் தலைவன் இல்லை என்று சொல்லட்டும். அப்போது, யக்ஞசேனி {திரௌபதி} தனது அடிமை நிலையில் இருந்து விடுவிக்கப்படுவாள்” என்றான்.(20)

இதைக் கேட்ட அர்ஜுனன், “குந்தியின் சிறப்பு வாய்ந்த மகனும், நீதிமானுமான இந்த மன்னன் யுதிஷ்டிரர், விளையாட்டு தொடங்குவதற்கு முன்பு வரை நிச்சயம் எங்கள் தலைவராகவே இருந்தார். ஆனால், அவரே {யுதிஷ்டிரரே} தன்னைத் தோற்ற பிறகு, அவர் யாருடைய தலைவர் என்று கௌரவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்” என்றான்”.(21)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்த நேரத்தில், திருதராஷ்டிரன் அரண்மனையில் இருந்த ஹோமம் செய்யும் அறையில் {அக்னி ஹோத்ர சாலையில்} இருந்து ஒரு நரி உரக்க ஊளையிட்டது. மேலும், ஓ மன்னா {ஜனமேஜயா}, அப்படி நரி ஊளையிட்டதைத் தொடர்ந்து, கழுதைகள் கத்தின. எல்லா புறங்களில் இருந்தும் கொடும் பறவைகள் தங்கள் கதறல்களால் பதில் சொல்லத் தொடங்கின.(22) அனைத்தையும் அறிந்த விதுரன், சுபலனின் மகள் {காந்தாரி} ஆகிய இருவரும் அந்தக் கொடும் ஒலியின் பொருளை உணர்ந்து கொண்டனர். பீஷ்மர், துரோணர், மற்றும் கல்விமானான கௌதமர் {கிருபர்} ஆகியோர் உரக்க “சுவஷ்டி! சுவஷ்டி!” {அமைதி, நல்லதே நடக்கட்டும்} என்றனர்.(23)

பிறகு காந்தாரியும், கல்விமானான விதுரனும் இந்தப் பயங்கர சகுனத்தைக் குறித்த அனைத்தையும் பெரும் துயரத்துடன் மன்னனுக்குத் தெரியப்படுத்தினர். அதன்பேரில் மன்னன் {திருதராஷ்டிரன்},(24) “தீய மனம் கொண்ட துரியோதனா, ஓ பாவியே, குருக்களில் காளையரின் மனைவியை {திரௌபதியை}, குறிப்பாக அவர்கள் {பாண்டவர்கள்} மணந்த மனைவியான திரௌபதியை, இப்படி அவமதிப்பாகப் பேசியதால், ஏற்கனவே அழிவு ஏற்பட்டுவிட்டது” என்று சொன்னான்.(25) 

ஞானம் கொண்ட திருதராஷ்டிரன், தனது ஞானத்தின் துணை கொண்டு, தனது உறவினர்களையும், நண்பர்களையும் அழிவில் இருந்து காக்கும் பொருட்டு, பாஞ்சால இளவரசியான கிருஷ்ணையை {திரௌபதியைச்} சமாதானப் படுத்தத் தொடங்கினான்.(26) 

அவளிடம் {திரௌபதியிடம்} அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, “ஓ பாஞ்சால இளவரசி {திரௌபதி}, என்னிடம் ஒரு வரத்தைக் கேட்பாயாக. கற்புள்ளவளும், அறம் சார்ந்தவளுமான நீ, எனது மருமகள்களில் மூத்தவளாவாய்” என்றான்.(27)

திரௌபதி, “ஓ பாரதகுலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நீர் எனக்கு ஒரு வரம் அருளுவதாக இருந்தால், அனைத்துக் கடமைகளுக்கும் கீழ்ப்படியும், அழகான யுதிஷ்டிரர், அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறட்டும்.(28) அறியாச் சிறுவர்கள், பெரும் மனோ சக்தி கொண்ட பிரதிவிந்தியனை {யுதிஷ்டிரனுக்கும், திரௌபதிக்கும் பிறந்த மகனை} அடிமையின் மகனே என அழைக்காதிருக்கட்டும்.(29) அவன் {பிரதிவிந்தியன்} இளவரசனாக இருப்பதால், அனைத்து மனிதர்களுக்கும் மேன்மையானவனாக இருக்க வேண்டும். அனைத்து மன்னர்களாலும் வளர்க்கப்பட வேண்டியவனை அடிமையின் மகனே என்று அழைப்பது முறையாகாது” என்றாள்.(30)

திருதராஷ்டிரன் அவளிடம் {திரௌபதியிடம்}, “ஓ மங்கலமானவளே, நீ சொல்வது போலவே ஆகட்டும். ஓ சிறந்தவளே, இன்னுமொரு வரத்தைக் கேட்பாயாக, நான் அதைத் தருவேன். உனக்கு இரண்டாவது வரம் கொடுக்கச் சொல்கிறது எனது மனம். நீ ஒரே ஒரு வரம் பெறக்கூடியவள் இல்லை” என்றான்.(31)

திரௌபதி, “ஓ மன்னா, பீமசேனர், தனஞ்சயர் {அர்ஜுனர்}, இரட்டையர்கள் ஆகியோர் தங்கள் தேர்கள் மற்றும் விற்களுடன், கட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, தங்கள் சுதந்திரத்தை மீண்டும் அடையட்டும்” என்று கேட்டாள்.(32) 

திருதராஷ்டிரன், “ஓ அருளப்பட்ட மகளே, நீ விரும்பியவாறே ஆகட்டும், மூன்றாவது ஒரு வரத்தைக் கேட்பாயாக, இரு வரங்கள் உனக்குப் போதுமானதல்ல. அறம் சார்ந்த நடத்தையுடைய நீ, எனது மருமகள்களில் முதன்மையானவள் ஆவாய்” என்றான்.(33)

திரௌபதி, “ஓ மன்னர்களில் சிறந்தவரே, ஓ சிறந்தவரே, பேராசை எப்போதும் அறவீழ்ச்சியைக் கொண்டு வருகிறது. மூன்றாவது வரம் பெறும் தகுதி எனக்கு இல்லை. எனவே நான் எதுவும் கேட்கத் துணிய மாட்டேன்.(34) ஓ மன்னர்களுக்கு மன்னா, வைசியன் ஒரு வரம் கேட்கலாம் என்றும்; க்ஷத்திரியப் பெண் இரு வரம் கேட்கலாம் என்றும்; க்ஷத்திரிய ஆண் மூன்று வரம் கேட்கலாம் என்றும்; பிராமணன் நூறு வரம் கேட்கலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.(35) ஓ மன்னா, கட்டுப்பட்ட இழிந்த நிலையில் இருந்து எனது கணவர்கள் விடுபட்டனர். அவர்களின் அறச்செயல்களால் நாங்கள் செழிப்பை அடைவோம்!” என்றாள் {திரௌபதி}.(36)

பீமன் அமைதிப்படுத்தப்பட்டான் | சபா பர்வம் – பகுதி 71-(தியூத பர்வம் – 27)பாண்டவர்கள் திரௌபதியால் பிழைத்தனர் என்று சொல்லி கர்ணன் அவமதிப்பது; பீமன் கோபம் கொள்வது; அர்ஜுனன் பதில் சொல்வது; மேலும் கோபம் கொண்ட பீமனை யுதிஷ்டிரன் சாந்தப்படுத்தி திருதராஷ்டிரனை அணுகுவது…

கர்ணன் சொன்னான், “இந்த உலகில் அழகுக்காக பெயர் பெற்ற எந்தப் பெண்மணியும் (இந்த திரௌபதயைப் போல்) இதுபோன்ற செய்கையைச் செய்து நாம் கேள்விப்பட்டதில்லை.(1) பாண்டு மற்றும் திருதராஷ்டிரன் மகன்கள் கோபத்தால் தூண்டப்பட்டிருக்கும் போது, இந்த திரௌபதி, பாண்டவர்களின் மீட்பவளானாள்.(2) உண்மையில், இந்த பாஞ்சால இளவரசி {திரௌபதி}, படகில்லாமல் துன்பக்கடலில் மூழ்கிக்கொண்டிருந்த பாண்டுவின் மகன்களுக்கு படகாகி, அவர்களைப் பாதுகாப்பாகக் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தாள்” என்றான்”.(3)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “குருக்களுக்கு மத்தியில், பாண்டுவின் மகன்கள் தங்கள் மனைவியால் காப்பாற்றப்பட்டனர் என்று சொல்லப்பட்ட கர்ணனின் வார்த்தைகளைக் கேட்டு பெரும் துயரடைந்த கோபக்கார பீமசேனன் (அர்ஜுனனிடம்),(4) “ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, சந்ததி, செயல்கள் {கர்மம்}, கல்வி {ஞானம்} ஆகிய மூன்று ஒளிகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது. இந்த மூன்றிலிருந்துதான் படைப்புகள் படைக்கப்பட்டிருக்கின்றன என்று தேவலர் சொல்லியிருக்கிறார்.(5) இந்த உடலை விட்டு உயிர் போன பிறகு, தூய்மையிழக்கும் இந்த உடல், உறவினர்களால் கைவிடப்படும்போது, இந்த மூன்றும்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் {ஆத்மாவுக்கும்} தொண்டாற்றுகின்றன.(6) ஆனால், நமக்குள் இருக்கும் அந்த ஒளி, நமது மனைவியை அவமதிக்கும் இந்தச் செயலால் மங்குகிறது. ஓ அர்ஜுனா, இப்படி அவமதிக்கப்பட்ட மனைவியிடம் பிறக்கும் மகன், நமக்குத் தொண்டு செய்வான் என்பது எப்படி நிச்சயமாகும்?” என்று கேட்டான்.(7)

அர்ஜுனன், “ஓ பாரதரே {பீமரே}, இழிந்த மனிதர்கள் கடுஞ்சொற்களைச் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் மேன்மையான மனிதர்கள் பதில் பேசுவதில்லை. சொந்தமாக மதிப்பை ஈட்டிய மனிதர்கள், அவர்களுக்கு பதில் சொல்ல முடியும் என்றாலும், எதிரிகளின் எதிர் நடவடிக்கைகளை நினைக்க மாட்டார்கள். மாறாக, அவர்களின் நற்செயல்களைப் புதையலாக நினைப்பார்கள்” என்றான்.(8,9)

பீமன், “ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இங்கே கூடியிருக்கும் எதிரிகளை இந்த அரண்மனைக்கு வெளியில் இப்போதே, நேரத்தைக் கடத்தாமல் கொன்று வேரோடு அழிக்கட்டுமா?(10) இல்லையென்றால், வார்த்தைகளுக்கும் ஆணைக்கும் என்ன தேவை இருக்கிறது? நான் இப்போதே இவர்களைக் கொன்று விடுகிறேன், ஓ மன்னா, நீர் எதிரியில்லாத இந்த மொத்த உலகையும் ஆள்வீராக” என்றான்.(11) 

இப்படிச் சொன்ன பீமன், தொடர்ச்சியாகத் தனது கோபப் பார்வையைச் சுழலவிட்டு, தனது தம்பிகளுடன் கூடி இழிந்த விலங்குகளுக்கு மத்தியில் உள்ள சிங்கம் போல இருந்தான்.(12) ஆனால் நற்செயல்களையே செய்யும் அர்ஜுனன், முறையிடும் தோற்றத்துடன் தனது அண்ணனைச் {பீமனைச்} சமாதானப்படுத்தத் தொடங்கினான். பேராற்றலும், வலுத்த கரமும் கொண்ட அந்த வீரன் {பீமன்} கோபத்தால் எரியத் தொடங்கினான்.(13) ஓ மன்னா {ஜனமேஜயா}, விருகோதரனின் {பீமனின்} காதுகளில் இருந்தும் மற்ற புலன்களில் இருந்தும் நெருப்பும், புகையும், தீப்பொறிகளும் வெளிப்பட்டன.(14) பிரளய கால யமனைப் போல அவனது புருவங்கள் நெறித்து, அவனது முகத்தைக் காணப் பயங்கரமாக இருந்தது.(15) பிறகு யுதிஷ்டிரன் அந்தப் பலம் வாய்ந்த வீரனை {பீமனைத்} தடுத்து, தனது கரங்களால் கட்டி அணைத்து அவனிடம் {பீமனிடம்}, “இவ்வாறு இராதே. அமைதியுடனும், சமாதானத்துடனும் இருப்பாயாக” என்றான்.(16) கோபத்தால் கண்கள் சிவந்து இருந்த அந்தப் பெரும் கரம் வாய்ந்தவனை அமைதிப்படுத்திய மன்னன் {யுதிஷ்டிரன்}, வேண்டும் வகையில் கரங்களைக் கூப்பிக் கொண்டு, தனது பெரியப்பாவான திருதராஷ்டிரனை அணுகினான்” {என்றார் வைசம்பாயனர்}.(17)

இந்திரப்பிரஸ்தம் புறப்பட்ட பாண்டவர்கள் | சபா பர்வம் – பகுதி 72-(தியூத பர்வம் – 28)-திருதராஷ்டிரன் ஆணையை எதிர்பார்த்த யுதிஷ்டிரன்; சகோதர அன்பு தழைக்கட்டும் என்ற திருதராஷ்டிரன்; காண்டவப்ரஸ்தம் புறப்பட்ட பாண்டவர்கள்..

யுதிஷ்டிரன் சொன்னான், “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, நீரே எங்கள் தலைவர். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குக் கட்டளையிடுவீராக. ஓ பாரதரே, நாங்கள் எப்போதும் உமக்குக் கீழ்ப்படிந்தே இருக்க விரும்புகிறோம்” என்றான்.(1)

அதற்கு திருதராஷ்டிரன், “ஓ அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, நீ அருளப்பட்டிருப்பாயாக. அமைதியுடனும் பாதுகாப்புடனும் நீ செல்லலாம். நீ சென்று, செல்வங்களுடன் கூடிய உனது நாட்டை எனது ஆணையின் பேரில் ஆள்வாயாக.(2) குழந்தாய், இந்தக் கிழவனின் உத்தரவை உனது மனத்தில் ஏற்றுக் கொள்வாயாக. நான் கொடுக்கும் ஆலோசனைகள் அனைத்தும் உங்கள் நன்மைக்கும் மேன்மைக்குமே ஆகும்.(3) ஓ யுதிஷ்டிரா, ஓ குழந்தாய், அறத்தின் நுட்பமான பாதையை அறிவாய். பெரும் ஞானம் கொண்ட நீ, அடக்கத்துடன் பெரியோர்களுக்காக காத்திருப்பவனாகவும் {பெரியோருக்குப் பணிவிடை செய்பவனாகவும்} இருக்கிறாய்.(4) எங்கே புத்திசாலித்தனம் இருக்கிறதோ அங்கே பொறுமை இருக்கிறது. எனவே, ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அமைதி ஆலோசனைகளைத் தொடர்ந்து செல். கோடரி மரத்தின் மேலேதான் விழும், கல்லின் மேல் அல்ல. (நீ அறிவுரை ஏற்பாய், துரியோதனன் ஏற்கமாட்டான்).(5) 

எதிரிகளின் பகைச் செயல்களை நினைத்துப் பாராமல் இருப்பவர்கள் சிறந்த மனிதர்கள் ஆவர். நல்லவர்கள், பகைவர்களின் நற்செயல்களை மட்டுமே நினைத்துப் பார்ப்பர், தீச்செயல்களை அல்ல;(6) எதிரிகளின் நல்லதையே பார், குறைகளைப் பார்க்காதே. அவர்களுடன் பகை கொள்ளாதே. தவிரவும் நல்லவர்கள், மற்றவர்களுக்கு பிரதிபலன் எதிர்பாராமல் நல்லதைச் செய்வார்கள்.(7) ஓ யுதிஷ்டிரா, மனிதர்களில் தாழ்ந்தவர்களே சண்டையிடும் வகையில் கடுஞ்சொற்களைப் பேசுவார்கள்; அதே வேளையில் பாகுபாடு பார்ப்பவர்கள், அப்படிப் பேசப்படும் வார்த்தைகளுக்கு பதிலளிப்பார்கள்.(8) நல்லவர்கள் தங்கள் உணர்வுகளைப் போல மற்றவர்கள் உணர்வுகளையும் அறிவார்கள், எனவே அவர்கள் தீச்செயல்களை நினைவுகூராமல் நற்செயல்களையே கருதிப் பார்ப்பார்கள். நீ இதுவரை மனத்தைக் கவரும் முகப் பாவத்துடன், அறம், செல்வம், இன்பம், முக்தி ஆகியவற்றின் வரம்புகளை மீறாமல், நல்ல மனிதனாக இருந்தாய்.(9-11) ஓ குழந்தாய், துரியோதனனின் கடுஞ்சொற்களை மனத்தில் வைத்துக் கொள்ளாதே. நீ நல்லதையே நினைக்க விரும்பினால் உனது தாய் காந்தாரியையும் என்னையும் பார்ப்பாயாக.(12) 

ஓ பாரதா {யுதிஷ்டிரா}, என்னைப் பார், நான் இன்னும் உயிருடன் இருக்கும் கண்ணில்லாத முதிர்ந்த உனது தந்தையாவேன். நண்பர்களைக் காணவும், எனது பிள்ளைகளின் பலத்தையும், பலவீனத்தையும் காணவும் கூடிய கொள்கை நோக்கத்துடனேயே நான் இந்தப் பகடை விளையாட்டை அனுமதித்தேன். ஓ மன்னா, உன்னை ஆட்சியாளனாகவும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் அறிந்த விதுரனை ஆலோசகராகவும் கொண்டிருக்கும் குருக்கள் எதற்காகவும் துயரப்படத் தேவையில்லை. உன்னில் அறம் இருக்கிறது. அர்ஜுனனில் பொறுமை இருக்கிறது, பீமசேனனிடத்தில் ஆற்றலும்,(13-15) மற்றும் இரட்டையர்களிடத்தில் பெரியோரை மதிக்கும் பக்தியும் இருக்கிறது. ஓ அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, நீ அருளப்பட்டிருப்பாயாக. காண்டவப் பிரஸ்தத்திற்கு {இந்திரப் பிரஸ்தத்திற்குத்} திரும்பிச் செல்வாயாக. உனக்கும் உனது பங்காளிகளுக்கும் இடையில் சகோதர அன்பு தழைக்கட்டும். உனது மனம் எப்போதும் அறத்தில் நிலைத்திருக்கட்டும்” என்றான் {திருதராஷ்டிரன்}”.(16)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிறகு, பாரதர்களில் முதன்மையான அந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தனது பெரியப்பாவிடம் {திருதராஷ்டிரரிடம்} மரியாதையின் அனைத்து அங்கங்களுடன் பேசி முடித்து, தனது தம்பிகளுடன் காண்டவப் பிரஸ்தத்திற்குப் புறப்பட்டான்.(17) திரௌபதியைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு மேக வண்ணத்துடன் இருந்த தங்கள் தேர்களில் ஏறி, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் நகரங்களில் சிறந்த இந்திரப்பிரஸ்தத்திற்குப் புறப்பட்டனர்” {என்றார் வைசம்பாயனர்}.(18) 

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading