ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ சபா பர்வம்-ஸ்ரீ  அர்க்கியாஹரணப்   பர்வம்–

மன்னர்களுக்கு மரியாதை செய் – சபாபர்வம் பகுதி 35-(அர்க்கியாஹரணப் பர்வம் – 01)-பழையன நினைவுகூரும் நாரதர்; பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் மன்னர்களுக்கு அர்க்கியம் கொடுக்கக் கட்டளையிடல்; யுதிஷ்டிரன் யாருக்கு முதலில் அர்க்கியம்   கொடுப்பது என்று கேட்டல்; பீஷ்மர் கிருஷ்ணனுக்குக் கொடுக்கச் சொல்லல்; சகாதேவன் முதல் அர்க்கியத்தை கிருஷ்ணனுக்கு கொடுத்தல்; சேதி நாட்டு மன்னன் கோபப்படல்–

வைசம்பாயனர் சொன்னார், “வேள்வியின் இறுதி நாளில் புனித நீரை மன்னன் மேல் தெளிக்க வேண்டிய நேரத்தில்[1], (கும்பகோணம் பதிப்பில், “அபிஷேசனீயமென்னும் ராஜஸூயத்துக்கு அங்கமான ஸோமயாகஞ் செய்யுங்காலத்தில்” என்றிருக்கிறது.)நன்கு மதிக்கப்பட வேண்டிய பிராமண முனிவர்களும், அங்கே அழைக்கப்பட்டிருந்த மன்னர்களும் சேர்ந்து வேள்வி மண்டபத்தின் உள் இணைப்புக்குள் {யாக சாலைக்குள்} சென்றனர்.(1) அங்கே வசதியாக அமர்ந்த அந்தச் சிறப்புமிக்க முனிவர்கள், நாரதரைத் தங்களில் முதன்மையாகக் கொண்டு, அந்த அறையில் தேவலோக முனிவர்களைப் போலவும், பிரம்மனின் மாளிகையில் அமர்ந்திருந்த தெய்வீக முனிவர்கள் போலவும் அங்கே வீற்றிருந்தனர். அம்முனிவர்கள் பல்வேறு தலைப்புகளில் தங்கள் உரையாடல்களைத் தொடங்கினர்.(2,3) இன்னும் சில காலத்தைக் கழிக்க நினைத்த அம்முனிவர்கள், பிரம்மனின் அவையில் அமர்திருந்த தேவர்களைப் போலத் தங்களை நினைத்துக் கொண்டு விவாதத்தை தொடங்கினர், “இஃது இப்படித்தான்”” என்றும், “இஃது இப்படி இல்லை” என்றும் “இஃதுவும் இப்படித்தான்” “இது வேறுமாதிரியாக இருக்க முடியாது” என்றும் பலர் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.(4) 

வாதப்போர் புரிந்து கொண்டிருந்தவர்களில் சிலர், தங்கள் பேச்சுத்திறமையால் பலவீனமான கட்சியை பலமானதாகவும், பலமானதை பலமற்றதாகவும் ஆக்கினர்.(5) இறைச்சித்துண்டைத் தூக்கியெறியும் போது அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பருந்து அஃது ஆகாயத்தில் இருந்து விழுமுன்னரே அதைப் பிடிப்பது போல, அந்த வாதப் போராளிகள் பெரும் புத்திசாலித்தனத்துடன் எதிராளிகள் பேச்சில் உள்ள குறைகளைக் கண்டு பிடித்துப் பேசினர்.(6) அவர்களில் சிலர் அறவிதிகளிலும், நோன்புகளிலும், பல உரைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருந்ததால் அவர்களது பேச்சு இனிமையாக இருந்தது.(7) 

ஓ மன்னா {ஜனமேஜயா}, வேள்வி மேடையானது, தேவர்களாலும், பிராமணர்களாலும், பெரும் முனிவர்களாலும் சூழப்பட்டு, விண்ணில் பதிக்கப்பட்டிருக்கும் நட்சத்திரங்களைப் போல பெரும் அழகுடன் இருந்தது.(8) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, யுதிஷ்டிரனின் மாளிகையில் இருந்த அந்தப் பீடத்தின் அருகில் சூத்திரரோ, நோன்பு நோற்காதவரோ எவரும் இல்லை.(9) வேள்வியால் பிறந்த செல்வத்தை அடையும் யுதிஷ்டிரனின் நற்பேற்றைக் கண்ட நாரதர், பெரிதும் நிறைவடைந்தார்.(10) அந்த க்ஷத்திரியர்களின் பெரும் கூட்டத்தைக் கண்ட நாரத முனிவர், ஓ மனிதர்களின் மன்னா {ஜனமேஜயா}, சிந்தனையில் ஆழ்ந்தார்.(11) ஓ மனிதர்களில் காளையே {ஜனமேஜயா}, அவர் {நாரதர்} பழங்காலத்தில் பிரம்மனின் மாளிகையில்,[2]அனைத்து தேவர்களின் உயிர் பகுதிகளும் பூமியில் அவதரித்திருப்பது குறித்து தான் கேள்விப்பட்டதை நினைத்துப் பார்த்தார்(12). ஓ குரு குலத்தின் மகனே {ஜனமேஜயா}, அந்தக் கூட்டம் (அவதாரம் செய்திருக்கும்) தேவர்களின் கூட்டம் என்பதை அறிந்த நாரதர், தனது மனத்தில் தாமரை இதழ் போன்ற கண்களையுடைய ஹரியை {விஷ்ணுவை} நினைவுகூர்ந்தார்.(13) 

அனைத்துப் பொருட்களையும் படைத்தவனும், அனைத்து தேவர்களிலும் மேன்மையானவனுமான நாராயணன், தேவர்களை அழைத்து, “பூமியில் நீங்கள் பிறந்து, ஒருவரை ஒருவர் கொன்று, மீண்டும் விண்ணுலகம் வாருங்கள்” என்று கட்டளையிட்ட நாராயணன், அந்த தேவர்களின் எதிரிகளைக் கொல்பவன், எதிரி நகரங்களை அடக்குபவன், தனது வாக்கைத் தானே காக்க, க்ஷத்திரிய குலத்தில் பிறந்திருக்கிறான் என்பதை நாரதர் அறிந்திருந்தார்.(14,15) அண்டத்தின் தலைவனான சம்பு என்று அழைக்கப்படும் மேன்மையான புனிதமான நாராயணன், தேவர்களுக்கு இப்படி ஆணையிட்டு, தானும் யது குலத்தில் பிறந்து, குலத்தை தழைக்க வைப்பதில் முதன்மையானவனாக இருந்தான் என்பதையும்,(16) பெரும் நற்பேறு பெற்ற அந்தக-விருஷ்ணி குலத்தில் {யாதவ குலத்தில்} அவதரித்து, நட்சத்திரங்களுக்கு மத்தியில் மின்னும் சந்திரனைப் போல இருக்கிறான் என்பதையும் நாரதர் அறிந்திருந்தார்.(17) 

எதிரிகளை வாட்டுபவனும், தனது கரத்தின் வலிமைக்காக இந்திரனுடன் கூடிய தேவர்களால் எப்போதும் புகழப்படுபவனுமான ஹரி {விஷ்ணு}, மனித வடிவில் இந்தப் பூமியில் வாழ்கிறான் என்பதையும் நாரதர் அறிந்திருந்தார்.(18) தானே தோன்றியவனான அவனே, பெரும் பலம் கொண்ட இந்த க்ஷத்திரியக் கூட்டத்தை பூமியில் இருந்து எடுத்துக் கொள்வான் என்றும், வேள்வியில் அனைவராலும் வழிபடப்படும் எல்லையற்ற பேரறிவாளனான ஹரியே அல்லது நாராயணனே ஒப்பற்ற தலைவன் என்றும் அறிந்திருந்தார். பெரும் புத்திக்கூர்மையை கொடையாகக் கொண்ட நாரதர், அனைவரிலும் முதன்மையானவர், அறமறிந்தவர், இவையாவும் நினைத்துப் பார்த்து, அந்த ஞானமுள்ள மன்னன் யுதிஷ்டிரனின் வேள்வியில் அதிர்ச்சிகர உணர்வுகளுடன் அமர்ந்திருந்தார்.(19-21)

பிறகு பீஷ்மர், ஓ மன்னா {ஜனமேஜயா}, மன்னன் யுதிஷ்டிரனிடம், “ஓ பாரதா {யுதிஷ்டிரா}, ஒவ்வொருவரின் தகுதிக்கேற்ப மன்னர்களுக்கு அர்க்கியம் (மரியாதைக்குரிய பொருள்) வழங்கப்படட்டும்.(22) ஓ யுதிஷ்டிரா! கேட்பாயாக. குரு, வேள்விப் புரோகிதர், உறவினர், ஸ்நாதகர், நண்பர், மன்னர், ஆகிய அறுவரும் அர்க்கியம் பெற தகுதியுடையவர்கள். இவர்களில் யாரும் ஒருவனுடன் ஒரு முழு வருடத்திற்கு இருப்பாரானால், அவர் அர்க்கியம் கொடுத்து வழிபடத்தகுந்தவரே. இந்த மன்னர்கள் நம்முடன் சில காலமாக தங்கி வருகின்றனர். எனவே, ஓ மன்னா, இவர்கள் அனைவருக்கும் கொடுக்க இங்கே அர்க்கியம் கொண்டு வரப்படட்டும். இங்கு இருப்பவர்களிலேயே முதன்மையானவருக்கு முதல் அர்க்கியம் கொடுக்கப்படட்டும்” என்றார் {பீஷ்மர்}.(23-25)

பீஷ்மரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், “ஓ பாட்டா {பீஷ்மரே}, ஓ குரு குலத்தவரே, இங்கிருப்பவர்களில் யார் முதன்மையானவர் என்பதையும், யாருக்கு நம்மால் அர்க்கியம் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் எனக்குச் சொல்லும்” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(26)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா}, சந்தனுவின் மகன் பீஷ்மர், தனது புத்திகூர்மையால், கிருஷ்ணனே அனைவரிலும் முதன்மையானவன் என்பதைத் தீர்மானித்து,(27) “(கிருஷ்ணன் என்ற பொருளில்) ஒளிர்வனவற்றில் சூரியனைப் போல தனது சக்தியாலும், பலத்தாலும், ஆற்றலாலும் நம்மிடையே ஒளிர்பவன் இவன்.(28) சூரியனற்ற பகுதியில் சூரியன் இருப்பது போலவோ அசைவற்ற இடத்தில் திடீர்த் தென்றலைப் போலவோ அவனாலேயே நமது இந்த வேள்வி மேடை பிரகாசமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கிறது” என்றார்.(29) 

பீஷ்மரால் ஆணையிடப்பட்டவனும், பேராற்றல் கொண்டவனுமான சகாதேவன், அற்புதமான பொருட்களின் கலவையான முதல் அர்க்கியத்தை விருஷ்ணி குலத்தின் கிருஷ்ணனுக்குக் கொடுத்தான்.(30) கிருஷ்ணனும் முறைப்படி அதை ஏற்றுக் கொண்டான். ஆனால், வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} வழங்கப்பட்ட வழிபாடுகளைக் கண்டு சிசுபாலனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(31) பலம் வாய்ந்த அந்த சேதி நாட்டு மன்னன், சபையின் மத்தியில் பீஷ்மரையும் யுதிஷ்டிரனையும் வசைபாடியபிறகு, வாசுதேவனைப் {கிருஷ்ணனை} பழிக்கத் தொடங்கினான்”[3] {என்றார் வைசம்பாயனர்}.(32)(கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகமாக, “மஹாபலசாலியான அந்தச் சிசுபாலன், ஸபையில் பீஷ்மரையும், தர்மராஜரையும் இகழ்ந்து கிருஷ்ணனைத் தூஷித்தான். அவர்களுடைய இங்கிதத்தையும், கருத்தையுமறிந்த ஸஹதேவன் கோபித்தான். அபிமானமுள்ளவர்களும், பலசாலிகளுமான அரசர்களுக்கு முன் ஸஹதேவன் பாதத்தைத் தூக்கிக் காண்பித்தபோது ஸஹதேவன் தலையில் பெரும் பூமாரி பொழிந்தது. பிறந்ததுமுதல் யாதவர்களுக்கு விரோதியான சிசுபாலன் சொல்லலானான். “கேட்டவன் குற்றமுள்ள கர்ப்பத்தில் {அன்னிய புருஷ ஸம்பந்த்தாலுண்டான கர்ப்பம்} பிறந்த அரசன்; அரசன்; மறுமொழி சொன்னவன் {எப்போதும் தாழ்ந்த இடத்திற்குச் செல்லும்} நதியின் மகன்; பூஜையைப் பெற்றுக் கொண்டவன் இடையன்; கெடுத்தவன் குற்றமுள்ள கர்ப்பத்தில் பிறந்தவன். இங்குள்ள ஸபையோரனைவரும் ஊமை போலிருக்கின்றனர். என்ன சொல்வது?” என்றான். அவன் இவ்வாறு சொல்லி நகைத்து உடனே தர்மராஜாவை நோக்கி மறுபடியும் பேசலானான், “பாண்டவனே, பூஜைக்குரிய மற்றவர்களிருக்க இடையனைப் பூஜித்தையே. நீ அவனை எல்லோருக்கும் மேற்பட்டவனாகப் பார்க்கிறாயா? மற்றவர்களைப் பார்க்கவேயில்லையா? நண்பனே, அதிகமாகப் பார்ப்பதும், பாராமலிருப்பதும் இவ்விரண்டும் காரியத்தைக் கெடுப்பவைகள்; இவற்றுள் நீ எடையெடுத்துக் கொண்டாய்” என்றிருக்கிறது. கங்குலி, மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் இந்தப் பகுதி இல்லை.)

சிசுபாலன் நிந்தனை – சபாபர்வம் பகுதி 36-(அர்க்கியாஹரணப் பர்வம் – 02)-சிசுபாலன் யுதிஷ்டிரனையும், பீஷ்மரையும், கிருஷ்ணனையும் நிந்தித்தல்…

சிசுபாலன், “ஓ குரு குலத்தவனே, இந்தச் சிறப்புமிக்க ஏகாதிபதிகள் அனைவருக்கும் மத்தியில் இந்த விருஷ்ணி குலத்தவன் {கிருஷ்ணன்}, ஒரு மன்னனைப் போன்ற அரச வழிபாட்டுக்குத் தகுதியற்றவன்.(1) ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, தாமரைபோன்ற கண்களை உடைய இவனை {கிருஷ்ணனை} வலிந்து வழிபடும் இந்நடத்தை சிறப்பு மிக்க பாண்டவர்களுக்குத் தகாதது.(2) பாண்டுவின் மகன்களே, நீங்கள் குழந்தைகளாக இருக்கிறீர்கள். அறம் மிக நுட்பமானதென்பதால், நீங்கள் அஃதை அறியவில்லை. கங்கையின் மகன் பீஷ்மரும் குறைந்த அறிவுடனேயே இருக்கிறார். அதனால் தான் (உனக்கு இப்படி அறிவுரை வழங்கி) அறவிதிகளை மீறி நடக்கிறார்.(3) ஓ பீஷ்மரே, உம்மைப்போல அறம் மற்றும் ஒழுக்கத்தை அறிந்தும் விருப்பப்படி {இஷ்டப்படி} நடப்பவன், நேர்மையானவர்கள் மற்றும் ஞானவான்களுக்கு மத்தியில் இருந்து விலக்கப்பட வேண்டியவனாவான்.(4) ஒரு மன்னனாகக் கூட இல்லாத இந்த தசார்ஹா குலத்தவன் இந்த மன்னர்களுக்கு மத்தியில் எப்படி இந்த வழிபாட்டை ஏற்கலாம்? மேலும் அவன் எப்படி உம்மால் வழிபடப்படலாம்?(5)

ஓ குரு குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, கிருஷ்ணன் வயதில் மூத்தவன் என்று நீ மதிப்பிட்டிருந்தால், இதோ வசுதேவர் {கிருஷ்ணனின் தந்தை} இருக்கிறார், எப்படி அவர் {வசுதேவர்} முன்னிலையில் அவரது மகனை {கிருஷ்ணனை} நீ வழிபடலாம்?(6) வாசுதேவனை {கிருஷ்ணனை} உன் நலம் விரும்பியாகவோ, ஆதரவாளனாகவோ மதிப்பிட்டிருந்தால், இதோ துருபதன் இருக்கிறார்; எப்படி மாதவன் {கிருஷ்ணன்} (முதல் மரியாதையான) வழிபாட்டுக்குத் தகுந்தவனாவான்?(7) ஓ குருவின் மகனே {யுதிஷ்டிரனே}, கிருஷ்ணனை குருவாக மதிக்கிறாயா? துரோணர் இங்கிருக்கும்போது விருஷ்ணி குலத்தவன் எப்படி வழிபடப்படலாம்?(8)

ஓ குருவின் மகனே, கிருஷ்ணனை ரித்விஜனாக மதிக்கிறாயா? துவைபாயனர் {வியாசர்} இங்கிருக்கும்போது கிருஷ்ணன் உம்மால் எப்படி வழிபடப்படலாம்?(9) சந்தனுவின் மகனும், விரும்பிய போது இறக்கும் வரம் பெற்றவருமான கிழவன் பீஷ்மர் இங்கிருக்கும்போது, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கிருஷ்ணன் உன்னால் ஏன் வழிபடப்பட்டான்?(10) ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்த வீரன் அஸ்வத்தாமன் இருக்கும்போது, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கிருஷ்ணன் உன்னால் ஏன் வழிபடப்பட்டான்?(11) மனிதர்களில் முதன்மையானவனும், மன்னர்களின் மன்னனுமான துரியோதனனும், பாரத இளவரசர்களின் குருவான கிருபரும் இங்கிருக்கும்போது, கிருஷ்ணன் உன்னால் ஏன் வழிபடப்பட்டான்?(12)  ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, கிம்புருஷர்களின் குரு துருமனையும் தாண்டி கிருஷ்ணன் ஏன் வழிபடப்பட்டான்? ஒப்பற்ற பீஷ்மகனும், அனைத்து நற்குறிகளும் கொண்ட மன்னன் பாண்டியனும், மன்னர்களில் முதன்மையான ருக்மியும், ஏகலவ்யனும்[1], மத்ர மன்னன் சல்யனும் இங்கிருக்கும்போது, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா} நீ ஏன் கிருஷ்ணனுக்கு முதல் வழிபாட்டைச் செலுத்தினாய்?(13,14)(யுதிஷ்டிரனின் ராஜசூய வேள்வியில் ஏகலவ்யனும் கலந்து கொண்டிருக்கிறான்.)

அனைத்து மன்னர்களுக்கு மத்தியில் தனது பலத்தைக் குறித்து செருக்கு கொண்டவனும், பெரும் பலத்துடன் கூடியவனும், பல மன்னர்களைத் தனது சொந்த பலத்தால் மட்டுமே வென்றவனும், பிராமணர் ஜமதக்னேயரின் {பரசுராமரின்} விருப்பத்திற்குரிய சீடனுமான கர்ணன் இருக்கிறான். ஓ பாரதா {யுதிஷ்டிரா} அவனையும் தாண்டி நீ ஏன் முதல் வணக்கத்தை கிருஷ்ணனுக்குச் செலுத்தினாய்?(15,16) 

மதுவைக் கொன்றவன் {மதுசூதனன் / கிருஷ்ணன்}, வேள்விப் புரோகிதனும் அல்ல, குருவும் அல்ல, மன்னனும் அல்ல. இவற்றை எல்லாம் அறிந்தும், ஓ குருக்களின் தலைவனே {யுதிஷ்டிரனே}, என்ன லாபத்தைக் கருதி நீ இக்காரியத்தைச் செய்தாய்?(17) ஓ பாரதா {யுதிஷ்டிரா} மதுசூதனனுக்கு முதல் மரியாதை செய்வதுதான் உனது விருப்பமென்றால், இத்தனை மன்னர்களை இங்கே அழைத்து அவர்களை ஏன் அவமதித்தாய்?(18) குந்தியின் சிறந்த மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அச்சத்தாலோ, லாப விருப்பத்தாலோ சமாதானத்தால் வெல்லப்பட்டோ நாங்கள் கப்பம் கட்டவில்லை.(19) மறுபுறம் ஏகாதிபத்திய மாட்சிமைக்கான அவனது {யுதிஷ்டிரனின்} விருப்பத்தில் இருந்த அற நோகத்திற்காகவே கொடுத்தோம். அப்படியிருந்தும் அவன் {யுதிஷ்டிரன்} எங்களை அவமதித்து விட்டான்.(20) 

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, வேறு எந்த செயலால் எங்களை இவ்வளவு அவமதிக்க முடியும்? திரண்டிருக்கும் மன்னர்களுக்கு மத்தியில் அரச லட்சணம் இல்லாத கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை வழங்கபட்டதைவிட வேறு என்ன அவமானம் வேண்டும்?(21) உண்மையில் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, அறத்துக்கான பொது மதிப்பைக் காரணமே இல்லாமல் அடைந்திருக்கிறான். இல்லையென்றால் தகுதியில்லாத ஒருவனுக்கு மரியாதை செய்து அறத்தின்கண் வீழ்வானா?(22) விருஷ்ணி குலத்தில் {யாதவ குலத்தில்} பிறந்த இந்த இழிந்தவன் {கிருஷ்ணன்}, நியாயமற்ற முறையில் மன்னன் ஜராசந்தனைக் கொன்றான்.(23) யுதிஷ்டிரன் நேர்மையைக் கைவிட்டுவிட்டான். அர்க்கியத்தை {தீர்த்தத்தை} முதலில் கிருஷ்ணனுக்குக் கொடுத்து தனது அற்பத்தனத்தைக் காட்டிவிட்டான்.(24) 

ஓ ஜனார்த்தனா, ஆதரவற்ற குந்தியின் மகன்கள் {பாண்டவர்கள்}, அச்சம் கொண்டவர்களாகவும், அற்பர்களாகவும் இருக்கிறார்கள். ஓ மாதவா {கிருஷ்ணா}, உனக்கு முதல் மரியாதை செய்யும் போது, அதற்கு நீ தகுதியில்லாதவன் என்று அவர்களுக்கு நீயாவது சொல்லியிருக்க வேண்டாமா?(25) ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அற்பமான இளவரசர்களால் {பாண்டவர்களால்} கொடுக்கப்படும் போதும், உனக்குத் தகுதியில்லாத மரியாதையை ஏன் நீ ஏற்றாய்?(26) தூய்மையாக்கப்பட்ட நெய் கிடைக்கப்பட்ட நாய், அதைத் தனிமையில் உண்பதைப் போலவே உனக்குத் தகுதியில்லாததை ஏற்றுக் கொண்டு பெரும் மரியாதை கிடைத்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறாய்.(27) ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இதில் இந்த ஏகாதிபதிகளுக்கு எந்த அவமானமுமில்லை; மறுபுறம் நீயே குருக்களை {கௌரவர்களை} அவமதித்து இருக்கிறாய்.(28) நிச்சயமாக, ஓ மதுவைக் கொன்றவனே {மதுசூதனா / கிருஷ்ணா}, ஆண்மையைற்றவனுக்கு மனைவி எவ்வாறானவளோ, கண்ணில்லாதவனுக்கு அற்புதமான காட்சி எவ்வாறானதோ,  மன்னனல்லாத உனக்கு செய்யப்பட்ட அரச வழிபாடும் அவ்வாறானதேயாகும்.(29) யுதிஷ்டிரன் யார் என்பதும், பீஷ்மன் யார் என்பதும் காணப்பட்டது. இந்த வாசுதேவன் {கிருஷ்ணன்} யார் என்பதும் காணப்பட்டது. நிச்சயமாக, அவரவர்கள் எப்படியோ அப்படியே காணப்பட்டது” என்றான் {சிசுபாலன்}.(30) 

இந்த வார்த்தைகளைப் பேசிய சிசுபாலன், தனது சிறந்த இருக்கையில் இருந்து எழுந்து, மன்னர்களையும் அழைத்துக் கொண்டு, சபை விட்டு வெளியேறினான்” {என்றார் வைசம்பாயனர்}.(31)-

பீஷ்மர் விளக்கம் – சபாபர்வம் பகுதி 37-(அர்க்கியாஹரணப் பர்வம் – 03)-யுதிஷ்டிரன் சிசுபாலனைச் சமாதானப்படுத்துவது; பீஷ்மர் அதைத் தடுப்பது; கிருஷ்ணனின் பெருமையை விளக்குவது…

வைசம்பாயனர் சொன்னார், “பின்பு மன்னன் யுதிஷ்டிரன் சிசுபாலனுக்குப் பின்பு விரைவாக ஓடி, சமாதானம் செய்யும் தொனியில் இனிமையான வார்த்தைகளால்,(1) “ஓ பூமியின் தலைவா, நீ சொல்லும் அனைத்தும் உனக்குத் தகுந்ததல்ல. ஓ மன்னா {சிசுபாலா}, இது அதிக பாவம் நிறைந்ததும், தேவையில்லாத கொடூரம் நிறைந்ததும் ஆகும்.(2) பீஷ்மரை அவமதிக்காதே, ஓ மன்னா {சிசுபாலா}, அப்படிச் செய்யும் காரியம் அறம் சாராதது ஆகும்.(3) இந்த மன்னர்களைப் பார், இவர்கள் அனைவரும் உன்னை விட வயதில் மூத்தவர்கள். இவர்கள் அனைவரும் கிருஷ்ணனுக்கு செலுத்தப்பட்ட மரியாதையை ஏற்றுக் கொள்கின்றனர். அவர்களைப் போல நீயும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.(4) ஓ *சேதி நாட்டு ஆட்சியாளனே {சிசுபாலனே}, பீஷ்மர் கிருஷ்ணனை உண்மையில் அறிவார். ஆனால், நீ இந்த குரு குலத்தவரை {பீஷ்மரை} நன்கு அறிய மாட்டாய்”, என்றான் {யுதிஷ்டிரன்}.(5)

இதன்பிறகு பீஷ்மர், “அண்டத்தில் பழமையானவனான கிருஷ்ணனுக்கு செய்யப்பட்ட மரியாதையை ஏற்காதவன் மென்மையான வார்த்தைகளுக்கும் சமாதானத்துக்கும் அருகதையற்றவனாவான்.(6) க்ஷத்திரிய குல வீரர்களுக்கு தலைவர்களாக இருப்பவர்கள் போர்களத்தில் இன்னொரு க்ஷத்திரியனை வென்று, அவனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அவனை விடுவித்துவிட்டால், அவன் வீழ்த்தப் பட்டவனுக்கு குருவாகிறான்.(7) நான் இந்த சபையில் உள்ள மன்னர்களில், இதம சத்வதகுல மகனுடைய {கிருஷ்ணனுடைய} சக்தியால் போர்க்களத்தில் வீழ்த்தப்படாத யாரையும் நான் காணவில்லை.(8) இங்கிருக்கும் இவன் (கிருஷ்ணன் என்ற பொருளில்), கறைபடாத புகழ் கொண்டவன், நம்மால் மட்டும் வழிபடத்தகுந்தவன் அல்ல. மாறாக, மூன்று உலகங்களாலும் வழிபடத் தகுந்தவன்.(9) கணக்கிலடங்கா க்ஷத்திரிய வீரர்கள் போர்க்களத்தில் கிருஷ்ணனால் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். இந்த எல்லையில்லா முழு அண்டமும் இந்த விருஷ்ணி குலத்தவனாலேயே {யாதவ குலத்தவனாலேயே} நிறுவப்பட்டது.(10) எனவே நாம் பழைமையானவனும், சிறந்தவனுமான இந்தக் கிருஷ்ணனை வழிபடுகிறோமையன்றி வேறு எவரையுமல்ல. இப்படிச் சொல்வது உனக்குத் தகாது. உனது புரிதல் இப்படி இருக்கக் கூடாது.(11) 

ஓ மன்னா {சிசுபாலா}, நான் ஞானத்தால் முதிர்ந்தவர்கள் பலரை வழிபட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட ஞானமுள்ளோர் அனைவரும் பேசிக்கொள்வதையும் நான் கேட்டிருக்கிறேன். அவர்களில் பலர் அனைத்தையும் சாதித்த சௌரியை {கிருஷ்ணனை} மதிப்புடன் நினைவு கூர்கிறார்கள். கிருஷ்ணன் பிறந்ததிலிருந்தே செய்த பெரும் புத்திகூர்மை நிறைந்த செயல்களைக் குறித்து மக்கள் பேசிக் கொள்வதை நான் கேட்டிருக்கிறேன். ஓ சேதியின் மன்னா {சிசுபாலா}, நாங்கள் ஏறுக்குமாறாக மனம் போன போக்கிலோ, எங்களுக்குள் இருக்கும் உறவு நிலையைக் கருத்தில் கொண்டோ, கிருஷ்ணனால் கிடைக்கும் நன்மைகளுக்காகவோ ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} வழிபடவில்லை. அவன் உலகத்தின் நல்லவர்களால் வழிபடப்படுகிறான், அவன் அனைத்துயிர்களின் மகிழ்ச்சிக்குக் காரணமாகவும் இருக்கிறான்.(12-15) 

அவனது புகழுக்காகவும், ஆற்றலுக்காகவும், அவன் அடைந்த வெற்றிகளுக்காகவுமே நாங்கள் அவனுக்கு முதல் மரியாதையை அளித்தோம். நாங்கள் இச்சபையில் இருக்கும் இளம் வயதினரைக்கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இல்லை.(16) அறம் செய்யும் அனைவரைக் காட்டிலும் முதன்மையானவனாக, முதல் மரியாதைக்குத் தகுதியுடையவனாக ஹரியையே {கிருஷ்ணனையே} கருதினோம். பிராமணர்களில் ஞானத்தாலும், க்ஷத்திரியர்களில் பலத்தாலும்,(17) வைசியர்களில் செல்வத்தாலும், சூத்திரர்களில் மூத்தவனாகவும் இருக்கும் அவன் {கிருஷ்ணன்} நமது வழிபாட்டுக்குத் தகுந்தவனாவான். கோவிந்தனுக்கு {கிருஷ்ணனுக்கு} மரியாதை அளிக்கப்பட்டதில் இரண்டு காரணங்கள் இருக்கின்றன.(18) அவை வேதங்களிலும் அதன் கிளைகளிலும் உள்ள ஞானமும், அதீத ஆற்றலுமாகும். கேசவன் தனித்துவமானவன் என்பதை உலகத்தில் உள்ள எந்த மனிதரால் நிராகரிக்க முடியும்?(19) தயாளம், புத்திசாலித்தனம், வேத ஞானம், ஆற்றல், அடக்கம், சாதனைகள், அற்புதமான புத்திகூர்மை, பணிவு, அழகு, உறுதி, மனநிறைவு, செழிப்பு ஆகிய அனைத்தும் அச்யுதனில் {கிருஷ்ணனில்} தங்கியிருக்கின்றன.(20) 

எனவே மன்னர்களே, தனது சாதனைகளுக்காகவும், ஆசானாக, தந்தையாக, குருவாக, அர்க்கியாவை {தீர்த்தத்தை} பெரும் தகுதி படைத்த, அனைவரின் வணக்கத்திற்கும் உரிய கிருஷ்ணனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த முதல் மரியாதையை ஏற்பதே உங்களுக்குத் தகும்.(21) ரிஷிகேசனே {கிருஷ்ணா} வேள்விப் புரோகிதர், அவனே குரு, ஒருவரின் மகளை திருமணத்தில் ஏற்கும் தகுதி படைத்த ஸ்நாதகன், மன்னன், நண்பன் என அனைத்தும் அவனே. எனவே அச்யுதன் {கிருஷ்ணன்} நம்மால் வழிபடத்தகுந்தவன்.(22) கிருஷ்ணனே அண்டத்தின் ஆதிமூலமாகவும். அண்டம் எதில் கரையுமோ அதுவுமாக இருக்கிறான். நிச்சயமாக, அண்டத்தில் உள்ள அசைவன அசையாதன ஆகியன கிருஷ்ணனிடம் இருந்தே தோன்றின.(23) வெளிப்படுத்தப்படாத மூல காரணம் அவனே (அவ்யாக்த பிராக்ரிதி), அவனே படைப்பாளி, அவனே நிலைத்தவன், அனைத்து உயிர்களின் காட்சி எல்லைக்கும் அப்பாற்பட்டவன். அதனால் மங்காப் புகழ் கொண்ட அவன் {கிருஷ்ணன்} உயர்ந்த வழிபாட்டிற்குத் தகுதியானவனே.(24)

பேரறிவு, உணர்வுகளின் தொகுப்பு, ஐந்து பூதங்கள், காற்று, வெப்பம், நீர், வானம், பூமி, நால்வகை உயிரினங்கள் (முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் உயிரினங்கள், முட்டையில்லாமல் உயிருள்ள குட்டிகளை ஈனும் உயிரினங்கள், ஈரம் செறிந்த கழிவுப் பொருட்களில் உயிர்பெறும் உயிரினங்கள் {புழு பூச்சிகள்}, தாவரவகை ஆகியன) அனைத்தும் கிருஷ்ணனில் நிறுவப்பட்டவையே.(25) சூரியன், சந்திரன், விண்மீன்கூட்டம், கோள்கள், அனைத்து முக்கிய திசைகள், இடையேயுள்ள திசைகள், அனைத்தும் கிருஷ்ணனில் நிலைத்திருப்பவை.(26) அனைத்து வேத வேள்விகளிலும் அக்னிஹோத்ரம் முதன்மையானதைப் போல, அனைத்து மந்திரங்களிலும் காயத்ரி முதன்மையானதைப் போல, மனிதர்களில் முதன்மையான மன்னர்களைப் போல, ஆறுகளில் முதன்மையான கடலைப் போல, விண்மீன்களில் முதன்மையான சந்திரனைப் போல, பிரகாசமானவற்றில் முதன்மையான சூரியனைப் போல, மலைகளில் முதன்மையான மேருவைப் போல, பறவைகளில் முதன்மையான கருடனைப் போல,(27-28) இந்த அண்டத்தின் மேல் எல்லை, கீழ் எல்லை, பக்கவாடு ஆகியவற்றில் உள்ள தேவர்களையும் உள்ளடக்கிய அனைத்து உலகங்களிலும் கேசவனே {கிருஷ்ணா} முதன்மையானவன்.(29)

இந்த சிசுபாலன் சிறுவன். எனவே, எங்கும் எப்போதும் கிருஷ்ணனைக் குறித்து மக்கள் இவ்வாறே பேசுகிறார்கள் என்பதை இவன் அறியவில்லை.(30) உயர்ந்த தகுதியை அடைய விரும்பும் ஒருவன் காணும் காட்சியை, அதிலிருக்கும் அறத்தை இது போன்ற வெளிச்சத்தில் இந்த சேதி நாட்டு ஆட்சியாளன் {சிசுபாலன்}[1] ஒருபோதும் காண மாட்டான்.(31) மூத்தவர்களிலோ இளையவர்களிலோ, சிறப்புமிகுந்த பூமியின் தலைவர்களிலோ கிருஷ்ணனை மதிக்காத யார் இருக்கிறார்? அல்லது கிருஷ்ணனை வழிபடாத யார்தான் இருக்கிறார்கள்?(32) இந்த வழிபாடு தகுதியானது அல்ல என்று சிசுபாலன் கருதினால், இவ்விஷயத்தில் அவனுக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்து கொள்ளட்டும்”,[2] என்றார் {பீஷ்மர்}”.(33)

(கும்பகோணம் பதிப்பில் இதன் பிறகும் பீஷ்மர் கிருஷ்ணனின் பெருமைகளை உரைக்கிறார். அது மொத்தம் ஐம்பது பக்கங்கள் நீண்ட விவரிப்பாகும். அதன் விபரம் சுருக்கமாகப் பின்வருமாறு: உலக சிருஷ்டியையும், நாராயண வடிவத்தையும் கூறுவது; நாராயணன் உலகத்துக்குப் பரம பாட்டன் என்றது; மதுகைடவவதம்; பூமி மேதினி என்று பெயர் பெற்ற வரலாறு; வராஹாவதார வரலாறு; யஜ்ஞவராஹர் பெருங்கடலில் இருந்து பூமியைத் தூக்கி நிலைநிறுத்தியது; நரசிம்மாவதார வரலாறு; ஹிரண்யகசிபு பிரம்மனிடம் வரம்பெற்றது; ஹிரண்யகசிபுவை விஷ்ணு வதம் செய்வானென தேவர்களுக்குச் சொன்ன பிரம்மன்; மூவுலகங்களையும் பீடித்த ஹிரண்யகசிபு; அவனைக் கொல்லுமாறு பிரம்மன் முதலிய தேவர்கள் நாராயணனை வேண்டியது; நரசிம்ம வடிவத்தில் ஹிரண்யகசிபுவிடம் வந்த நாராயணன்; ஹிரண்யகசிபு வதம்; வாமனாவதார வரலாறு; வாமனன் மஹாபலியிடம் மூன்றடி நிலம் இரந்தது; விஷ்ணு உலகளந்தது; விஷ்ணுவின் பாதச் சுவட்டில் ஏற்பட்ட பிளவில் உண்டான ஆறு; அசுரர்களின் செல்வத்தையும், மூவுலகத்தையும் இந்திரனுக்குக் கொடுத்த விஷ்ணு; தத்தாத்ரேயாவதார வரலாறு; கார்த்தவீரியன் தவமும், பெற்ற வரமும்; பரசுராமாவதார வரலாறு; கார்த்தவீரியன் வதம்; க்ஷத்திரியர்களை அழித்த பரசுராமர்; பித்ரு தர்ப்பணம் செய்த பரசுராமர்; பூமியைக் காசியபருக்குக் கொடுத்தது; கன்னிகைகள் பரசுராமரை ஸௌபனோடு எதிர்க்க வேண்டாமென்றது; பரசுராமர் ஆயுதங்களை விட்டுத் தவஞ்செய்தது; ராமாவதார வரலாறு; தசரதன் மகனாகப் பிறந்த திருமால்; ராமன் சீதையை மணந்தது; ராமனின் வனவாசம்; ராமன் சீதையைப் பிரிந்தது; ராமன் சுக்கிரீவனையும், ஆஞ்சனேயரையும் நேசித்தது; வாலி வதம்; ராவண வதன்; விபீஷணன் பட்டாபிஷேகம்; ராம்பிரான் பட்டாபிஷேகம்; கிருஷ்ணாவதார வரலாறு; கல்கி அவதாரம்; கிருஷ்ணனின் வரலாற்றை விரிவாகச் சொல்லுமாறு பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; தாரகாமய யுத்தம்; காலநேமி வதம்; கிருஷ்ணாவதாரத்திற்கு முன் ஏற்பட்ட யோகநித்திரை; பூமியில் பிறந்த தேவர்கள்; விஷ்ணு யது குலத்தில் அவதரித்தது; கிருஷ்ணன் தேவ காரியங்களைச் செய்யப் போகிறான் என்று சொன்ன இந்திரன்; சகடாஸுரன் வதன்; பூதனை வதம்; மருத மரங்களை வீழ்த்துவது; பாண்டீர மரத்தடியில் விளையாடியது; காளியநர்த்தனம்; தேனுகாசுரனைப் பலராமன் கொன்றது; கோவர்த்தன பூஜையில் பாயஸம் பருகிய கிருஷ்ணன்; கோவர்த்தன கிரியைத் தூக்கியது; கிருஷ்ணனுக்குப் பட்டாபிஷேகம் செய்த இந்திரன்; அரிஷ்டன், கேசி, சாணூரன், ஸுதாமன் ஆகியோர் வதம்; பலராமன் முஷ்டிகனைக் கொன்றது; பலராமனும் கிருஷ்ணனும் குருகுல வாசஞ்செய்தது; வேதவேதாங்கங்களைக் கற்றது; வில்வித்தை கற்றது; ஸாந்தீபனி முனிவர் பலராமன் மற்றும் கிருஷ்ணனிடம் குருதக்ஷிணை கேட்டது; பலராமனும், கிருஷ்ணனும் மீன் வடிவத்தில் இருந்து அசுரனைக் கொன்றது; பலராமனும், கிருஷ்ணனும் ஸாந்தீபனிக்கு குருதக்ஷிணை கொடுத்து; கிருஷ்ணன் ஜராசந்தனை வென்றது; நரகாஸுரன் தோற்றம்; துவாரகைக்கு வந்த இந்திரன்; அதிதியின் வேண்டுகோளைக் கிருஷ்ணனுக்குச் சொன்னது; முரன், நிசும்பன், ஹயக்ரீவன், விரூபாக்ஷன், நரகன் ஆகியோரைக் கிருஷ்ணன் கொன்றது; பூமிதேவி கிருஷ்ணனிடம் குண்டலங்களைக் கொடுத்து நரகனுடைய ஸந்ததிகளைக் காப்பாற்றும்படி வேண்டியது; நரகனைக் கொன்றது; நரகனுடைய அரண்மனையைப் பார்த்தது; மணிக்குன்றிலிருந்த பெண்கள் தங்களுக்கு நாரதரும், வாயு தேவனும் சொன்னதைக் கிருஷ்ணனுக்குச் சொன்னது; தங்களுக்குக் கணவராகும்படி அவர்கள் கிருஷ்ணனைக் கேட்டது; செல்வங்களையும், பெண்களையும், மணிக்குன்றையும் கருடன் மேலேற்றி தேவலோகம் சென்ற கிருஷ்ணன்; அதிதி தேவிக்குக் குண்டலங்கொடுத்தது; அதிதி தேவி சத்தியபாமைக்கு வரமளித்தது; கிருஷ்ணன் துவாரகை திரும்பியது; துவாரகா நகரச் சிறப்பு, கிருஷ்ணன் பலராமரோடும், இந்திரனோடும் தன் அரண்மனைக்குள் நுழைந்தது; கிருஷ்ணனுடைய வரலாற்றுச் சுருக்கத்தை இந்திரன் சொன்னது; இந்திரன் தேவலோகம் சென்றது; கிருஷ்ணனுடைய தாய்மாரும், மனைவியரும் கிருஷ்ணனைக் கண்டது; பாணாசுரன் வரலாறு; அநிருத்தன் உஷையை அடைந்தது; பாணன் அநிருத்தனைச் சிறையிலிட்டது; கிருஷ்ணன் பாணனுடைய நகரத்திற்குச் சென்றது; பாணனுடய நகரத்தைக் காத்த சிவன்; பாணனுடைய கைகளை அறுத்த கிருஷ்ணன்; அநிருத்தனையும், உஷையையும் கருடனில் ஏற்றி வந்த கிருஷ்ணன்; கிருஷ்ணன் பெற்ற வேறு பல வெற்றிகள் ஆகியவற்றைச் சொல்லி கிருஷ்ணனுக்கு மேலானவர் வேறு யாருமில்லை என்று யுதிஷ்டிரனிடம் சொல்லி முடித்தார் பீஷ்மர். கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராய் பதிப்புகளில் மேற்கண்ட கதைகள் சொல்லப்படவில்லை. இவை ஹரிவம்சத்தில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.)

கிருஷ்ணனை எதிர்க்கத் துணிந்த மன்னர்கள் – சபாபர்வம் பகுதி 38-(அர்க்கியாஹரணப் பர்வம் – 04)-சகாதேவன் சினம் தீரப் பேசுவது; பூமாரி பொழிவது; அனைத்து மன்னர்களையும் பாண்டவர்களுக்கும் யாதவர்களுக்கும் எதிராக சிசுபாலன் தூண்டுவது..

வைசம்பாயனர் சொன்னார், “பெரும் பலம்வாய்ந்த பீஷ்மர் இதைச் சொல்லி முடித்தார். பிறகு சகாதேவன் (சிசுபாலனைப் பார்த்து) பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மறுமொழியைச் சொன்னான்.(1) {சிசுபாலன்}, “கேசியைக் கொன்றவனும், பெரும் சக்தி கொண்டவனும், கரிய நிறந்தவனுமான கிருஷ்ணனை நான் வணங்குவதைக் காணச் சகியாத மன்னர்கள் யாரேனும் இங்கே இருப்பின்,(2) (சிசுபாலனைப் போன்ற) பெரும் பலவான்களான  அவர்களின் தலைகளில் இந்த எனது பாதம் பதிந்ததாக ஆகட்டும். இதைச் சொல்லும் எனக்கு, அப்படிப்பட்டவன் உரிய பதிலைச் சொல்வானாக.(3) 

வழிகாட்டியாக, தந்தையாக, குருவாக இருக்கும் கிருஷ்ணனுக்குச் செய்யப்பட்ட வழிபாட்டையும், கொடுக்கபட்ட அர்க்கியத்தையும் {தீர்த்தத்தையும்} புத்திகூர்மையுள்ள மன்னர்கள் அங்கீகரிப்பார்களாக” என்றான். இப்படி சகாதேவன் தனது பாதத்தைக் காட்டிய போது, அங்கே இருந்த புத்திசாலித்தனமும், ஞானமும், பெருமையும் கொண்ட பலசாலி ஏகாதிபதிகளில் யாரும் எதையும் சொல்லவில்லை. சகாதேவனின் தலையில் பூமாரி பொழிந்தது.(4-6) 

ஓர் அரூபமான குரல் “நன்று, நன்று!” என்றது. பிறகு, கருப்பு மானின் தோலை அணிந்தவரும், கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் சொல்பவரும்,(7) அனைத்து உலகங்களையும் அறிந்தவரும், அனைத்து சந்தேகங்களையும் அகற்றுபவருமான நாரதர், கணக்கிலடங்கா உயிர்களுக்கு மத்தியில் தெளிவான தொனியில்,(8) “தாமரைக் கண் கிருஷ்ணனை வணங்காத மனிதர்கள் அசைவுள்ளவர்களானாலும் இறந்தவர்களாகவே கருதப்பட வேண்டும், அவர்களிடம் எப்போதும் எந்தச் சந்தர்பத்திலும் பேசுதல் கூடாது”, என்றார் {நாரதர்}”.(9)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிராமணர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்தவனும், மனிதர்களில் தேவனுமான சகாதேவன், வழிபடத் தகுந்தவர்களை வழிபட்டு விழாவினை நிறைவேற்றினான்.(10) ஆனால், முதல் மரியாதையை கிருஷ்ணன் ஏற்றதை விரும்பாதவனும், எதிரிகளைக் கொல்பவனுமான சுனிதன் (சிசுபாலன்), கோபத்தால் தாமிரம் போலக் கண்கள் சிவக்க, அங்கே இருந்த மனித ஆட்சியாளர்களிடம் {மற்ற மன்னர்களிடம்},(11) “உங்களுக்குத் தலைமையேற்க நான் இருக்கும்போது, நீங்கள் இப்போது என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?(12) கூடியிருக்கும் விருஷ்ணிகளுக்கும் {யாதவர்களுக்கும்} பாண்டவர்களுக்கும் எதிராகப் போரில் அணிதிரள்வோமா?” என்று கேட்டான்.(13) 

பிறகு அந்த சேதிகளில் {சேதி நாட்டவரில்} காளை {சிசுபாலன்}, மன்னர்களைத் தூண்டிவிட்டு, வேள்வியை நிறைவடையாமல் தடுப்பது எப்படி என்று அவர்களுடன் ஆலோசனை செய்யத் தொடங்கினான்.(13) அந்த வேள்விக்கு அழைக்கப்பட்டு அங்கு வந்திருந்த ஏகாதிபதிகள் அனைவரும், சுனிதனைத் {சிசுபாலனைத்} தங்கள் தலைவனாகக் கொண்டு, மிகுந்த கோபத்துடன் முகம் மங்கி இருந்தனர்.(14) அவர்கள் அனைவரும், “யுதிஷ்டிரனால் செய்யப்பட்ட வேள்வியின் இறுதிச் சடங்கிற்கும், கிருஷ்ணனுக்கு செய்த கௌரவத்திற்கும் நம்முடைய ஏற்பில்லை என்ற வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும்”, என்று கூறினர்.(15) 

தங்கள் பலத்தின் மீதிருந்த அதீத நம்பிக்கையாலும், கோபத்தால் மதியிழந்ததாலும், தன்னம்பிக்கையால் அசைக்கப்பட்ட அவர்கள், தங்களுக்கு நேர்ந்த அவமானத்தைக் கருதி இப்படிப் பேச தொடங்கிய அந்த ஏகாதிபதிகள் திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்தனர்.(16) அவர்களது நண்பர்கள் அவர்களைச் சமாதானப் படுத்த முயற்சித்தாலும், அவர்களது முகங்கள் கோபத்தால் முழக்கம் செய்யும் சிங்கம் தனது இரையை விரட்டிவிடுவது போல விரட்டப்பட்டனர்.(17)  பெருங்கடலென இருந்த மன்னர்கள், கணக்கிலடங்கா அலைகளான தங்கள் துருப்புகளுடன் பயங்கரமான மோதலுக்குத் தயாராகிறார்கள் என்பதைக் கிருஷ்ணன் புரிந்து கொண்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(18)

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading