ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ சபா பர்வம்-ஸ்ரீ  ராஜசூயீக   பர்வம்–

கண்ணன் வந்தான், அங்கே கண்ணன் வந்தான்! – சபாபர்வம் பகுதி 32-(ராஜசூயீக பர்வம் – 01)ண்பர்களும், அதிகாரிகளும் யுதிஷ்டிரனை வேள்வியைத் தொடங்கச் சொல்வது; அதே நேரத்தில் வந்த கிருஷ்ணனிடம் யுதிஷ்டிரன் அனுமதி கேட்பது; கிருஷ்ணன் யுதிஷ்டிரனைப் புகழ்ந்து வேள்வியைத் தொடங்குமாறு அனுமதி அளித்தது; வேள்விக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் பாண்டவர்கள் சேகரித்தல், சகாதேவனை அனுப்பி நாட்டிலுள்ளோரை அழைத்து வர ஏற்பாடு செய்தல்; பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுகள்; நகுலனை அனுப்பி, ஹஸ்தினாபுரத்தில் இருந்து தனது உறவினர்களை அழைத்து வர ஏற்பாடு செய்தல்…

வைசம்பாயனர் சொன்னார், “நீதிமானான யுதிஷ்டிரன் வழங்கிய பாதுகாப்பாலும், அவன் {யுதிஷ்டிரன்} தனது நடத்தையில் பேணிய வாய்மையாலும், எதிரிகளைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மையாலும், அந்த அறம் சார்ந்த ஏகாதிபதியின் {யுதிஷ்டிரனின்} குடிமக்கள் தங்கள் தங்கள் தொழில்களில் ஈடுபட்டனர்.(1) நியாயமான வரிவிதிப்பாலும், அந்த ஏகாதிபதியின் {யுதிஷ்டிரனின்} அறம் சார்ந்த ஆட்சியாலும், அவனது நாட்டில் மக்கள் விரும்பியவாறே மேகங்கள் அதிக மழையைப் பொழிந்தன. அந்த நாட்டின் நகரங்களும் ஊர்களும் பெரும் செழிப்படைந்தன.(2) அந்த ஏகாதிபதியின் {யுதிஷ்டிரனின்} செயல்களால், அந்த நாட்டின் அனைத்து செயல்களும், குறிப்பாக கால்நடை வளர்த்தலும், உழவும், வணிகமும் பெரும் செழிப்படைந்தன.(3) ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த நாட்களில் கள்வர்களும் வஞ்சகர்களும் கூட தங்களுக்குள் பொய் பேசிக் கொள்வதில்லை.(4) அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்த யுதிஷ்டிரனின் அந்த நாட்களில் {ஆட்சி காலத்தில்}, எந்த ஒரு வறட்சியோ, பெருவெள்ளமோ, தொற்று நோய்களோ, நெருப்போ அல்லது அகால மரணங்களோ ஏற்படவில்லை.(5)

சில ஏற்புடைய தொண்டுகளுக்காகவோ, வழிபாடுகளுக்காகவோ, ஏழ்மையை உண்டாக்காத கப்பம் கட்டவோ மட்டுமே (போருக்காக அல்லாமல் மேற்கண்ட காரணங்களுக்காக மட்டுமே) மற்ற மன்னர்கள் யுதிஷ்டிரனை அணுகினர்.(6) அந்த மன்னனின் {யுதிஷ்டிரனின்} பெரிய கருவூலம் {பொக்கிஷ அறை} முழுவதும், அறம் சார்ந்து ஈட்டப்பட்ட செல்வங்கள் குவியலாக நிறைந்து கிடந்தன. நூறு வருடங்கள் தொடர்ச்சியாக அந்தச் செல்வங்களைப் பயன்படுத்தினாலும் அவை வற்றாத அளவுக்குக் குவிந்து கிடந்தன.(7)

கருவூல நிலையையும் மற்றும் தனது அனைத்து உடைமைகளையும் உறுதி செய்த அந்த குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, வேள்வியைச் செய்வதில் தனது இதயத்தை நிலைபெறச் செய்தான்.(8) அவனது {யுதிஷ்டிரனது} நண்பர்களும் அதிகாரிகளும், தனியாகவும், சேர்ந்தும் வந்து அவனை அணுகி, “ஓ மேன்மையானவனே, வேள்விக்கான நேரம் வந்துவிட்டது. எனவே காலம் கரைந்துபோகும் முன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வாயாக” என்றனர்.(9) 

அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது, எங்கும் எதிலும் இருப்பவனும், பழமையானவனும், வேதங்களின் ஆன்மாவும், ஞானம் உள்ளவர்களால் விவரிக்கப்படும்படியான ஒப்பற்றவனும், அண்டத்தில் நிலைத்து நிற்கும் இருப்புகளில் முதன்மையானவனும், அனைத்துப் பொருட்களின் ஆதி மூலமும், அனைத்துப் பொருட்களும் எதில் கடைசியாகக் கரையுமோ அத்தன்மை உடையவனும், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலங்களின் தலைவனும், கேசியைக் கொன்ற கேசவனுமான ஹரி (கிருஷ்ணன்) அங்கே வந்தான்.(10,11) விருஷ்ணி குலத்தோரின் {யாதவ குலத்தோரின்} அரணும், துயர் நிறைந்த காலத்தில் அச்சத்தை விரட்டுபவனும், அனைத்து எதிரிகளையும் தாக்குபவனுமான அவன், வசுதேவரை (யாதவ) படைக்குத் தலைவராக நியமித்து, மன்னன் யுதிஷ்டிரனுக்காக பெரும் செல்வத்தைத் தன்னுடன் கொண்டு வந்து, அந்த அற்புதமான நகரங்களின் நகரத்துக்குள் நுழைந்தான். அவனது {கிருஷ்ணனது} பெரும் படையில் இருந்த தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி அந்தக் காண்டவத்தின் சூழ்நிலையையே நிறைத்தது. மனிதர்களில் புலியான மாதவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களின் அளவற்ற செல்வத்தை மேலும் அதிகரிக்க,(12-14) வற்றாத கடல் போன்ற ரத்தினங்களைத் தன்னுடன் கொண்டு வந்தான், பாண்டவர்களின் எதிரிகளுக்கு இது துயரை அதிகரித்தது. இருண்ட பகுதி சூரியனால் மகிழ்ச்சியடைவதைப் போல, காற்றற்ற இடத்தில் தென்றலைப் போல கிருஷ்ணனின் இருப்பு அந்த பாரதர்களின் {பாண்டவர்களின்} தலைநகரை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.(15) மகிழ்ச்சியாக அவனை {கிருஷ்ணனை} அணுகிய யுதிஷ்டிரன் அவனுக்கு உரிய கௌரவத்தைக் கொடுத்து, அவனது நலனைக் குறித்து விசாரித்தான். கிருஷ்ணன் வசதியாக அமர்ந்த பிறகு,(16) அந்த மனிதர்களில் காளையான பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தௌமியருடனும், துவைபாயனருடனும் {வியாசருடனும்}, மற்ற வேள்விப் புரோகிதர்களுடனும் பீமன், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்களுடனும் {நகுல,சகாதேவனுடனும்} கிருஷ்ணனிடம் பேசினான்.(17)

யுதிஷ்டிரன், “ஓ கிருஷ்ணா, உனக்காகவே இந்த உலகம் என் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. ஓ விருஷ்ணி {யாதவ} குலத்தவனே {கிருஷ்ணா}, உனது அருளாலேயே இந்த செல்வம் அனைத்தையும் நான் அடைந்தேன்.(18) ஓ தேவகியின் மகனே {கிருஷ்ணா}, ஓ மாதவா {கிருஷ்ணா}, இந்தச் செல்வங்களை விதிப்படி, மேன்மையான பிராமணர்களுக்கும், வேள்விப்படையல்களைச் சுமந்து செல்பவனுக்கு {அக்னிக்கும்} அர்ப்பணிக்க விரும்புகிறேன்.(19) ஓ தசார்ஹ குலத்தவனே {கிருஷ்ணா}, ஓ பலம் வய்ந்த கரங்களைக் கொண்டவனே, இந்த வேள்வியை உன்னுடனும் எனது தம்பிகளுடனும் கொண்டாட எனக்கு அனுமதி கொடுப்பாயாக.(20) ஓ கோவிந்தா, ஓ நீண்ட கரங்களைக் கொண்டவனே, ஓ தசார்ஹ குலத்தவனே, இவ்வேள்வியில் உன்னை நீ நிறுவிக் கொள்வாயாக. நீ இந்த வேள்வியைச் செய்தால் நான் பாவங்களில் இருந்து விடுபடுவேன்.(21) அல்லது, ஓ மேன்மையானவனே {கிருஷ்ணா}, உன்னால் அனுமதிக்கப்பட்டு, ஓ கிருஷ்ணா, நானும் எனது தம்பிகளும் வேள்வி மேடையில் அமர்ந்தால், நான் அந்த அற்புத வேள்வியின் மூலம் கிடைக்கும் கனியை அனுபவிக்க முடியும்”, என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(22)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “யுதிஷ்டிரன் இவ்வாறு சொன்னதன் பிறகு, கிருஷ்ணன், தன் குணங்கள் பலவற்றைப் புகழடையச் செய்யும் வகையில்,(23) “ஓ மன்னர்களின் புலியே {யுதிஷ்டிரரே}, ஏகாதிபத்திய கௌரவத்தை அடைய உமக்குத் தகுதி இருக்கிறது. எனவே, நீரே அந்தப் பெரும் வேள்வி செய்வீராக.(24) நீர் அந்த வேள்வியைச் செய்து கனி கிட்டப்பெறும்போது நாங்கள் அனைவரும் வெற்றி மகுடம் தரித்தவர்களாக எங்களை நினைத்துக் கொள்வோம். நான் எப்போதும் உமது நன்மையையே நாடுகிறேன். நீர் விரும்பிய அந்த வேள்வியைச் செய்வீராக.(24) அந்தக் காரியத்திற்காக எனக்கும் ஏதாவது அலுவலை {வேலையைக்} கொடுப்பீராக. நான் உமது கட்டளைகள் அனைத்தையும் ஏற்க வேண்டும்”, என்று சொன்னான்.(25) 

அதற்கு யுதிஷ்டிரன், “ஓ கிருஷ்ணா, எனது தீர்மானம் ஏற்கனவே நிறைவேறிவிட்டது. ஓ ரிஷிகேசா {கிருஷ்ணா} எனது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு நீ இங்கு இருக்கும் போது வெற்றி நிச்சயம் எனதே ஆகும்” என்றான் {யுதிஷ்டிரன்}.(26)

வைசம்பாயனர் சொன்னார், “கிருஷ்ணனால் கட்டளையிடப்பட்ட பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} தனது தம்பிகளுடன் சேர்ந்து ராஜசூய வேள்விக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் திரட்டுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.(27) எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, வீரர்களில் முதன்மையான சகாதேவனிடமும், அனைத்து அமைச்சர்களிடமும்,(28) “பிராமணர்களால் வழிகாட்டப்பட்டு, நேரத்தைக் கடத்தாமல் வேள்விக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தீரட்டுவீராக. தௌமியர் சொல்லும் அனைத்தையும் அவர் குறிப்பிடும் காலத்திற்குள் ஒன்றன்பின் ஒன்றாக சரியான வரிசையில் முடித்துக் கொடுங்கள்.(29,30) இந்திரசேனனும், விசோகனும், அர்ஜுனனின் தேரோட்டியான பூருவும் என்னை நிறைவடையச் செய்யும் பொருட்டு வேள்விக்குத் தேவையான உணவைத் திரட்டட்டும்.(31) குருக்களில் முதன்மையானோர் அனைவரும், பிராமணர்களின் இதயத்தைக் கவரும் ஏற்புடைய ருசியும் மணமும் கொண்ட அனைத்துப் பொருட்களையும் திரட்டுவீராக” என்றான் {யுதிஷ்டிரன்}.(32)

நீதிமானான யுதிஷ்டிரனால் இச்சொற்கள் சொல்லப்பட்டதும், வீரர்களில் முதன்மையான சகாதேவன் அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றித் தன் மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} அவற்றைத் தெரிவித்தான்.(33) 

ஓ மன்னா, துவைபாயனர் {வியாசர்}, வடிவம் கொண்டு வந்த வேதங்களைப் போன்ற மேன்மையான பிராமணர்களை வேள்விப் புரோகிதர்களாக நியமித்தார்.(34) அந்த சத்தியவதியின் மகன் {வியாசர்}, தானே அந்த வேள்வியின் பிரம்மாவாக அமர்ந்தார். தனஞ்சய குலத்தின் காளையான ஸுஸாமர், சாம வேத மந்திரங்களை உரைப்பவராகவும்,(35) பிரம்மனுக்குத் தன்னை அர்ப்பணித்த யாஜ்ஞவல்கியர் அதர்யுவாகவும், வசுவின் மகனான பைலரும், தௌமியரும் ஹோத்ரிகளாகவும் {ஹோதாவாக} ஆனார்கள்.(36) ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, வேதங்களையும் அதன் அங்கங்களையும் அறிந்த இவர்களின் சீடர்களும் மகன்களும், ஹோத்ரக்தர்கள் ஆனார்கள்.(37) அனைவரும் நல்வாழ்த்துகளைச் சொல்லி, வேள்வியின் பொருளை உரைத்து, அந்தப் பெரிய வேள்வி மண்டபத்தை முறைப்படி வழிபட்டனர்.(38) 

பிராமணர்களால் உத்தரவிடப்பட்ட கட்டுமானக் கலைஞர்களும் பிற கலைஞர்களும் தேவர்களின் கோவில்களைப் போல நல்ல நறுமணமிக்க பெரும் இடம் கொண்ட எண்ணிலடங்கா அறைகளைக் கட்டினர்.(39) இவையெல்லாம் முடிந்த பிறகு, அந்த மன்னர்களில் சிறந்தவன் {யுதிஷ்டிரன்}, மனிதர்களில் காளை யுதிஷ்டிரன், தனது தலைமை ஆலோசகனான {அமைச்சனான} சகாதவனை அழைத்து,(40) “நேரங்கடத்தாமல், அனைவரையும் வேள்விக்கு அழைத்து தூதுவர்களை அனுப்புவாயாக”, என்றான். மன்னனின் {யுதிஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சகாதேவன், தனது தூதுவர்களிடம், “நாட்டில் உள்ள பிராமணர்கள் அனைவரையும், நில உடைமையாளர்கள் (க்ஷத்திரியர்கள்) அனைவரையும்,(41) வைசியர்கள் அனைவரையும், மரியாதைக்குரிய அனைத்து சூத்திரர்களையும் இங்கே விரைவாக அழைத்து வாருங்கள்”, என்று சொல்லி அவர்களை {தூதுவர்களை} விரைவாக அனுப்பினான்.(42)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பெரும் வேகம் கொண்ட அந்த தூதுவர்கள் இப்படிக் கட்டளையிடப்பட்டு அனைவரையும் அந்த பாண்டவனின் உத்தரவுப்படி நேரத்தைக் கடத்தாமல் அழைத்தனர். பிறகு பல நண்பர்களையும் அந்நியர்களையும் அவர்களுடன் அழைத்துவந்தனர்.(43) ஓ பாரதா {ஜனமேஜயா}, பிராமணர்கள் சரியான நேரத்தில் குந்தியின் மகனான யுதிஷ்டிரனை ராஜசூய வேள்வியில் நிறுவ அமர்த்தினார்கள்.(44) அவனை {யுதிஷ்டிரனை} வேள்வியில் நிறுவும் சடங்கு முடிந்ததும், அந்த தர்ம தேவனே மனித வடிவம் கொண்டு வந்தது போல இருந்தவனும், மனிதர்களில் சிறந்தவனும், நீதிமானுமான அறம் சார்ந்த மன்னன் யுதிஷ்டிரன், அந்த மனிதர்களில் சிறந்தவன், ஆயிரக்கணக்கான பிராமணர்களும், தனது தம்பிகளும் நண்பர்களும் உறவினர்களும் ஆலோசகர்களும் {அமைச்சர்களும்}, பெரும் எண்ணிக்கையிலான பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த க்ஷத்திரிய மன்னர்களும் சூழ வேள்வி மண்டபத்துக்குள் நுழைந்தான்.(45,46) 

ஞானத்தில் திறம் கொண்டவர்களும், வேதங்களிலும் வேறு பல கிளைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுமான பல பிராமணர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து வரத் தொடங்கினர். ஆயிரக்கணக்கான கைவினைக் கலைஞர்களும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் கட்டளையின் பேரில், அந்த பிராமணர்களுக்கும் அவர்களது பணியாட்களுக்கும் தனித்தனியே வாழ்விடங்களை {தங்குமிடங்களைக்} கட்டிக் கொடுத்தனர். அந்த வாழ்விடங்கள் உணவும், ஆடைகளும், கனிகளும், அனைத்து பருவங்களுக்கும் ஏற்ற மலர்களாலும் நிரம்பியிருந்தன.(47-49)

ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதியால் முறையாக வணங்கப்பட்ட அந்த பிராமணர்கள் தொடர்ந்து அங்கே வசித்து பல தலைப்புகளில் பேசியும், ஆடற்கலைஞர்கள் மற்றும் நடனக்கலைஞர்களின் நிகழ்ச்சிகளைக் கண்டும் தங்கள் பொழுதை கழித்தனர்.(50) அந்த உயரான்ம பிராமணர்கள் மகிழ்வுடன் உண்டு கொண்டிருக்கும் ஒலி இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது.(51) “கொடுங்கள்”, “உண்ணுங்கள்” போன்ற வார்த்தைகள் அங்கே அனுதினமும் கேட்டுக் கொண்டே இருந்தன.(52) ஓ பாரதா {ஜனமேஜயா}, மன்னன் யுதிஷ்டிரன் அந்த பிராமணர்களுக்கு ஆயிரம் பசுக்களையும், படுக்கைகளையும், பொற்காசுகளையும், மங்கையரையும் அளித்தான்.(53) இப்படியே பாண்டுவின் மகனான அந்த ஒப்பற்ற வீரனின் {யுதிஷ்டிரனின்} வேள்வி, விண்ணுலகில் செய்யப்படும் சக்ரனின் {இந்திரனின்} வேள்வியைப் போல நடத்தப்பட்டது.(54) பிறகு அந்த மனிதர்களில் காளையான மன்னன் யுதிஷ்டிரன், பாண்டுவின் மகனான நகுலனை, பீஷ்மர், துரோணர், திருதராஷ்டிரன், விதுரன், கிருபர், தனது பங்காளிகள் ஆகியோரை நல்ல முறையில் ஹஸ்தினாபுரத்தில் இருந்து அழைத்து வர அனுப்பினான்” {என்றார் வைசம்பாயனர்}.(55,56)

வேள்விக்கு வந்த மன்னர்கள்! – சபாபர்வம் பகுதி 33-(ராஜசூயீக பர்வம் – 02)-ஹஸ்தினாபுரத்தில் இருந்து கௌரவர்கள் வேள்விக்கு வருவது; வேள்விக்கு வந்திருந்த மன்னர்கள் பட்டியல்; அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாளிகைகள்…

வைசம்பாயனர் சொன்னார், “பாண்டுவின் மகனும், எப்போதும் வெற்றிவாகைசூடுபவனுமான நகுலன், ஹஸ்தினாபுரத்தை அடைந்து, முறைப்படி பீஷ்மரையும், திருதராஷ்டிரனையும் அழைத்தான்.(1) அந்த குரு குலத்தின் மூத்தவன் {திருதராஷ்டிரன்}, ராஜகுருவை {கிருபரை} தலைமையாகக் கொண்டு, முறையான சடங்குகளுடன் அழைக்கப்பட்டு, மிகவும் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் வேள்விக்கு வந்தான்.(2)

ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மன்னன் யுதிஷ்டிரனின் வேள்வியைக் கேள்விப்பட்டு, வேள்வியின் இயல்பை அறிந்த நூற்றுக்கணக்கான பிற க்ஷத்திரியர்கள், பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்திரனின் வேள்வி மண்டபத்தைக் காண மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் பல்வேறு நாடுகளில் இருந்து பல விலையுயர்ந்த நகைகளுடன் வந்தனர்.(3,4) திருதராஷ்டிரன், பீஷ்மர், உயர்ந்த புத்திகூர்மையுடைய விதுரன், துரியோதனனைத் தலைமையாகக் கொண்ட கௌரவச் சகோதரர்கள், காந்தார மன்னன் சுபலனும் பெரும் பலம் படைத்த சகுனியும்,(5,6) அசலன், விருஷகன், தேர்வீரர்களில் முதன்மையான கர்ணன், பெரும் பலம் வாய்ந்த சல்லியன், பலம் நிறைந்த பாஹ்லீகன்,(7) ஸோமதத்தன், குரு குலத்தின் பூரி, பூரிஸ்ரவஸ் {பூரிச்ரவன்}, சலன், அச்வத்தாமன், கிருபர், துரோணர், சிந்துவின் ஆட்சியாளன் ஜெயத்ரதன்,(8) தனது மகன்களுடன் கூடிய யக்ஞசேனன் {துருபதன்}, பூமியின் அதிபதியான சல்லியன் {சால்வனாக இருக்க வேண்டும்}, கடல்சார் நிலங்களின் மிலேச்ச இனக்குழுக்களுடன் கூடிய பெரும் தேர்வீரரனான பிராக்ஜோதிஷ நாட்டின் பகதத்தன்,(9) கடற்கரையின் சதுப்புநிலங்களில் வாழும் மிலேச்சர்கள், மலை சார் நிலங்களைச் சார்ந்த பல மன்னர்கள், மன்னன் பிருஹத்பலன்,(10) பௌண்ட்ரர்களின் மன்னன் வாசுதேவன் {கிருஷ்ணன் அல்ல}, வங்க மற்றும் கலிங்க நாட்டு மன்னன், ஆகர்ஷன், குந்தலன், மால்வ மன்னர்கள், ஆந்திரகர்கள்,(11) திராவிடர்கள் {த்ரமிடர்கள்}, சிங்களர்கள், மன்னன் காஷ்மீரன், பெரும் சக்தி கொண்ட மன்னன் குந்திபோஜன், மன்னன் கௌரவாஹனன்,(12) பாஹ்லீக வீரர்களான பிற மன்னர்கள், தனது இரு மகன்களுடன் கூடிய விராடன், பெரும் பலம் கொண்ட மாவேல்லன் ஆகியோரும்,(13) பல நாடுகளில் இருந்து பல்வேறு மன்னர்களும், இளவரசர்களும் அங்கே வந்தனர். 

ஓ பாரதா {ஜனமேஜயா}, பெரும் சக்தி கொண்டு போர்க்களத்தில் ஒப்பற்றவனாக இருக்கும் மன்னன் சிசுபாலன் தனது மகனுடன் பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} வேள்விக்கு வந்திருந்தான். ராமன் {பலராமன்}, அனிருத்தன், கனகன் {கங்கன்}, சாரணன்,(14,15) கதன், பிரத்யும்னன், சாம்பன், பெரும் சக்தி படைத்த சாருதேஷ்ணன், உல்முகன், நிஷாதன் {நிசடன்}, ஆற்றல்மிகுந்த அங்கவாஹன் ஆகியோரும்,(16) மேலும் தேர் வீரர்களான விருஷ்ணிகள் பலரும் அங்கே வந்திருந்தனர். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவர்களும், மத்திய நாடுகளிலிருந்த பல மன்னர்களும் பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} ராஜசூய வேள்விக்கு வந்தனர்.(17) 

ஓ மன்னா {ஜனமேஜயா}, யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில், அந்த ஏகாதிபதிகள் அனைவருக்கும், மாளிகைகள் ஒதுக்கப்பட்டன.(18) அந்த மாளிகைகளில் பல்வேறு பொருட்களும், குளங்களும், பெரும் மரங்களும் இருந்தன. தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, அனைத்து ஏகாதிபதிகளையும் அவர்களது தகுதிகளுக்கு ஏற்ப வழிபட்டான்.(19) மன்னனால் {யுதிஷ்டிரனால்} வழிபடப்பட்ட அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாளிகைகளில் ஓய்ந்திருக்கச் சென்றனர். அந்த மாளிகைகள், காண்பதற்கு இனியனவாகும், அனைத்து அறைகலன்களுடனும், {வெள்ளையாக உயர்ந்து இருக்கும்} கைலாச மலைப்பாறைகள் போல இருந்தன.(20) 

அவை {மாளிகைகள்} அனைத்துப் புறங்களிலும், நன்கு கட்டப்பட்ட உயர்ந்த வெண்சுண்ணம் பூசப்பட்ட சுவர்களுடனும், தங்க வலை பின்னப்பட்ட ஜன்னல்களுடனும், அறையின் உள்கட்டுகள் வரிசையான முத்துகளால் அலங்கரிக்கப்பட்டும்,(21) எளிதாக ஏறும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டும், விலையுயர்ந்த தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டும் அழகாக இருந்தன. அவை {மாளிகைகள்} அனைத்தும் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், அற்புதமான நறுமணப்பொருட்களால் மணமாக்கப்பட்டும் இருந்தன.(22) அவற்றின் {மாளிகைகளின்} வாயில்களும் கதவுகளும் ஒன்று போல அமைக்கப்பட்டு, ஒரு யோஜனை தொலைவில் இருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் இருந்தன. அவை மக்கள் கூட்டமாக வர ஏதுவாக அகன்று இருந்தன.(23) பல விலையுயர்ந்த பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு, பல உலோகங்களால் கட்டப்பட்டு, அவை {மாளிகை} இமயமலைச் சிகரங்களைப் போல இருந்தன. சிறிது காலம் அந்த மாளிகையில் ஓய்ந்திருந்த அந்த ஏகாதிபதிகள், பல சதஸ்யர்களால் (வேள்விப் புரோகிதர்களால்) சூழப்பட்டு, பிரமாணர்களுக்கு பெரும் பரிசுகளை வழங்கிய வேள்வியைக் கண்டனர். மன்னர்களும், பிராமணர்களும், முனிவர்களும் இருப்பதைக் கண்ட போது, ஓ மன்னா {ஜனமேஜயா}, தேவர்களால் நிறைந்த விண்ணுலகம் போல அந்த வேள்வி மண்டபம் காட்சியளித்தது” {என்றார் வைசம்பாயனர்}.(24,25)

கால் கழுவும் பணியேற்ற கிருஷ்ணன் – சபாபர்வம் பகுதி 34-(ராஜசூயீக பர்வம் – 03)-யுதிஷ்டிரன் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பணியில் நியமிப்பது; வேள்விக்கு வந்த மன்னர்கள் பெரும் செல்வத்தைக் கொண்டு வருவது; அச்செல்வங்களை ஏற்கும் பணியில் துரியோதனன் இருப்பது; வேள்வி இனிமையாக தொடங்கப்படுவது–

வைசம்பாயனர் சொன்னார், “பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, யுதிஷ்டிரன், தனது பாட்டனையும் {பீஷ்மரையும்}, குருவையும் {துரோணரையும்} அணுகி வழிபட்ட பிறகு,(1) பீஷ்மரிடமும், துரோணரிடமும், கிருபரிடமும், துரோணரின் மகனிடமும் {அஸ்வத்தாமனிடமும்}, துரியோதனனிடமும், விவிங்சதியிடமும், “இந்த வேள்வி காரியங்களில் நீங்கள் அனைவரும் எனக்கு உதவ வேண்டும்.(2) இங்கே இருக்கும் பெரும் செல்வம் அனைத்தும் உங்களுடையதே. நீங்கள் ஒருவருக்கொருவர் ஆலோசித்து, நீங்கள் விரும்பியபடி என்னை வழிநடத்துங்கள்” என்றான் {யுதிஷ்டிரன்}.(3)

வேள்வியில் நிறுவப்பட்ட பாண்டு மகன்களில் மூத்தவன் {யுதிஷ்டிரன்}, இப்படிச் சொல்லிவிட்டு, அவர்கள் அனைவரையும் அவரவருக்குத் தகுந்த அலுவல்களில் நியமித்தான்.(4) அவன் துச்சாசனனை உணவுத்துறை மற்றும் இன்பம் அனுபவிக்கத்தக்க பொருட்களைத் திரட்டுதல் ஆகியவற்றில் நியமித்தான். அஸ்வத்தாமன் பிராமணர்களைக் கவனித்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டான்.(5) மன்னர்களை பதில் மரியாதையுடன் அழைத்துவர சஞ்சயன் நியமிக்கப்பட்டான். பெரும் புத்திகூர்மையுடைய பீஷ்மர், துரோணர் ஆகிய இருவரும், எது இதுவரை நடந்திருக்கிறது, எது நடக்க வேண்டும் என்று கவனிக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்டனர்.(6) வைரங்கள், தங்கம், முத்துக்கள், ரத்தினங்கள் ஆகியவற்றைக் கவனித்துக் கொள்ளவும், பிராமணர்களுக்கு பரிசுகளை விநியோகிக்கவும் கிருபர் நியமிக்கப்பட்டார்.(7) அதே போல மற்ற மனிதர்களில் புலிகளும் ஒவ்வொரு அலுவலில் நியமிக்கப்பட்டனர். நகுலனால் அழைத்துவரப்பட்ட பாஹ்லீகர், திருதராஷ்டிரன், சோமதத்தன், ஜெயத்ரதன் ஆகியோர் வேள்வியின் தலைவர்களாக இருந்து அனைத்தையும் அனுபவித்தனர்.(8) 

அறவிதிகள் அனைத்தையும் அறிந்தவனும், க்ஷத்தன் என்றும் அழைக்கப்பட்டவனுமான விதுரன், செலவுகளைக் கவனிப்பவனாக நியமிக்கப்பட்டான். மன்னர்களிடம் இருந்து பரிசுகளையும் கப்பங்களையும் பெறும் பொறுப்பை துரியோதனன் ஏற்றுக் கொண்டான்.(9) உலகத்தின் மையமாக இருப்பவனும், யாரைச் சுற்றி அனைத்து உலகமும் நகர்ந்து கொண்டு இருக்கிறதோ அந்தக் கிருஷ்ணன், அற்புதமான கனிகளை {பலன்களை} அடைய விரும்பி, தனது சுயவிருப்பத்தின் காரணமாக பிராமணர்களின் கால்களைக் கழுவும் பணியை ஏற்றுக் கொண்டான்.(10)

அந்த வேள்வி மண்டபத்தையும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனையும் காண வந்த யாவரும், (எண்ணிக்கையில், நிறையில் அல்லது அளவில்) ஆயிரத்துக்குக் குறையாத காணிக்கைகளுடனேயே வந்தனர்.(11) அனைவரும் மன்னன் யுதிஷ்டிரனுக்கு பெரும் நகைக் குவியல்களைப் பரிசாகக் கொண்டு வந்து கௌரவித்தனர். தங்கள் செல்வங்களில் ஒரு பகுதியைப் பரிசாகக் கொண்டு வந்த மன்னர்கள், தாங்களே குருகுல மன்னன் யுதிஷ்டிரனின் வேள்வியை முடிக்கும் அளவும் நகைகளைக் கொடுத்ததாக இறுமாந்து இருந்தனர். மேலும், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த சிறப்புமிகுந்த குந்தியின் மகனுடைய வேள்வி மண்டபம், அங்கிருந்த பல அரண்மனைகளாலும், அதைச் சூழ்ந்திருந்த பாதுகாவலர்கள் மற்றும் வீரர்களாலும் மிகவும் அழகாகக் காட்சியளித்தது. அந்த வேள்வியைக் காண வந்த தேவர்களின் தேர்களை முட்டி நின்றன அம்மாளிகைகள். அந்த வேள்வியைக் காணவந்த மன்னர்களுக்காகக் கட்டி வைக்கப்பட்டிருந்த மாளிகைகள், அங்கே பிராமணர்களும் வசித்ததால் தேவர்களின் தேர்களைப் போல இருந்தன. அவை, ரத்தினங்களாலும், அனைத்துவகை செல்வங்களாலும் நிரம்பியிருந்தன. கடைசியாக அங்கே வந்த மன்னர்களும் நன்கு அலங்கரிக்கப்பட்டு, அனைத்து வகை செல்வங்களுடனும் அழகுடனுமே இருந்தார்கள்.(12-15) 

வருணனுடன் போட்டியிடும் வகையில் செல்வம் கொண்டிருந்த யுதிஷ்டிரனின் (ராஜசூய) வேள்வி, ஆறு நெருப்புகளால் புகழ்பெற்ற[1] பிராமணர்களுக்கு நிறைந்த செல்வங்கள் பரிசாகக் கொடுக்கப்பட்டு தொடங்கப்பட்டது.(16) (ஆறு அக்னிகள் என்பன, ஆரம்பணீயம், க்ஷத்திரத்ருதி, வியுஷ்டி, த்விராத்திரம், தசபேயம், ஸப்தபேயம் ஆகியனவாகும் என கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது.)அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அனைவரையும் பெரும் மதிப்பிலான பரிசுகளாலும் ஒவ்வொருவர் விரும்பும் அனைத்து பொருட்களையும் கொடுத்து நிறைவடையச் செய்தான். அபரிமிதமான அரிசி சோற்றாலும், அனைத்து வகை உணவுகளாலும், காணிக்கையாகக் கொண்டு வரப்பட்ட நகைகளாலும், அங்கே வந்திருந்த பெரும் கூட்டம் நிறைவாக உபசரிக்கப்பட்டது.(17) தேவர்களும், வேள்வியின் மந்திரங்களாலும், அதன் உச்சரிப்புகளையும் நன்கு அறிந்த முனிவர்களாலும் இடப்பட்ட இடா {இடாஹோமம்}, தெளிந்த நெய், ஹோமம் {ஆஜ்ய ஹோமம்} மற்றும் படையல்களாலும் மிகுந்த நிறைவடைந்தனர்.(18) தேவர்களைப் போல பிராமணர்களும் வேள்விப் பரிசுகளாலும், உணவாலும் பெரும் செல்வத்தாலும் மிகுந்த திருப்தியடைந்தனர். நான்கு வகை மனிதர்களும் அந்த வேள்வியால் திருப்தியடைந்து மகிழ்ச்சியில் நிறைந்திருந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(19)-

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading