ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ சபா பர்வம்-ஸ்ரீ  திக்விஜய  பர்வம்–

திக்விஜயம் சென்ற பாண்டவர்கள் – சபாபர்வம் பகுதி 25-(திக்விஜய பர்வம் – 01)பீமன், அர்ஜுனன், நகுல சகாதேவர் ஆகியோர் யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு தனித்தனியே நாடுகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஆளுக்கொரு திசையாகச் செல்வது; பாண்டவர்களின் போர்ப்பயணங்களை வைசம்பாயனர் சுருக்கமாகச் சொல்லல்…

வைசம்பாயனர்    சொன்னார், “விற்களில் சிறந்த வில்லையும், வற்றாத அம்பறாத்தூணியையும், தேரையும் கொடிக்கம்பத்தையும், சபா மண்டபத்தையும் அடைந்த அர்ஜுனன், யுதிஷ்டிரனிடம்,(1) “ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, வில், ஆயுதங்கள், பேராற்றல், கூட்டாளிகள், பரந்த ஆட்சிப்பகுதி, புகழ், துருப்புகள் ஆகியவற்றை விரும்பியவாறு அடைவது கடினமென்றாலும், இவை யாவும் என்னால் அடையப்பட்டது.(2) எனவே, ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, இனி நாம் நமது கருவூலத்தை {பொக்கிஷத்தை} நிரப்ப வேண்டும் என்று நான் கருதுகிறேன். பூமியின் பிற மன்னர்கள் நமக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.(3) நற்பேற்றை அருளும் ஒரு புனிதமான சந்திர நாளில், சாதகமான நட்சத்திரக் கூடுகைகள் இருக்கும் போது, கருவூலத்தலைவன் {குபேரன்} இருக்கும் திக்கை (வடக்கு திசையை) நோக்கி நான் எனது படையெடுப்பைத் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றான்”.(4)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} வார்த்தைளைக் கேட்டு, அனைத்து எண்ணங்களையும் திரட்டிய அமைதியான குரலில்,(5) “ஓ பாரத குலத்தின் காளையே {அர்ஜுனனே}, பிராமணர்களின் நல்வாழ்த்துகளைப் பெற்று, உன் பகைவர்களைத் துயரத்தில் ஆழ்த்துவாயாக. உனது நண்பர்களை மகிழ்ச்சியில் நிரப்புவாயாக. ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, வெற்றி நிச்சயமாக உனதே. உன் விருப்பங்கள் ஈடேறப்பெற்றவனாக நீ இருப்பாய்” என்றான் {யுதிஷ்டிரன்}.(6,7)

இவ்வாறு சொல்லப்பட்ட அர்ஜுனன், பெரும் படைகள் சூழ, அக்னியிடம் இருந்து தான் பெற்றதும், அற்புத சாதனைகளைக் கொண்டதுமான தெய்வீக தேரில் ஏறி {படையெடுத்துப்} புறப்பட்டுச் சென்றான்.(8) பீமசேனனும், மனிதர்களில் காளைகளான இரட்டையர்களும் {நகுல சகாதேவர்களும்}, நீதிமானான யுதிஷ்டிரனை அன்புடன் வழிபட்டு, பெரிய படைகளுக்குத் தலைமையேற்றுப் புறப்பட்டுச் சென்றார்கள். 

பாகனைத் தண்டித்தவனின் மகன் {அர்ஜுனன்}, கருவூலத் தலைவனின் {குபேரனின்} திசையைத் தன் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தான்.(8,9) பீமசேனன் தனது படைபலத்தால் கிழக்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான், சகாதேவன் தெற்கையும், அனைத்து ஆயுதங்களையும் அறிந்த நகுலன் மேற்கையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.(10) தன் தம்பிகள் இந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போது, மேன்மையானவனும் நீதிமானானவனுமான யுதிஷ்டிரன் காண்டவப்பிரஸ்தத்திலேயே தங்கி, நண்பர்களுடனும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தான்.(11)

[1]இதையெல்லாம் கேட்ட {பிராக்ஜோதிஷ நாட்டு மன்னன்} பகதத்தன், “ஓ குந்தியைத் தாயாகக் கொண்டவனே {அர்ஜுனா}, உன்னை மதிப்பது போலவே நான் யுதிஷ்டிரனையும் மதிக்கிறேன். இவை யாவும் நான் செய்வேன் {கொடுப்பேன்}. மேலும் நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக” என்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(12)(ங்குலியில் உள்ள இந்தப் பனிரெண்டாம் ஸ்லோகம் மன்மநாததத்தரின் பதிப்பில் இல்லை. மாறாக அடுத்த அத்தியாயத்தில் இது விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.  கங்குலியில் ஓர் அத்தியாயம் விடுபட்டிருக்க வேண்டும். )

அர்ஜுனனின் வடதிசைப் போர்ப்பயணம்! – சபாபர்வம் பகுதி 26-(திக்விஜய பர்வம் – 02)-பீமன், அர்ஜுனன், நகுல சகாதேவர் ஆகியோர் யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு தனித்தனியே நாடுகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஆளுக்கொரு திசையாகச் செல்வது; பாண்டவர்களின் போர்ப்பயணங்களை வைசம்பாயனர் சுருக்கமாகச் சொல்லல்…

{ஜனமேஜயன், “ஓ பிராமணரே, (பாண்டவர்களால்) பல்வேறு திசைகளில் நடத்தப்பட்ட படையெடுப்புகளின் வரலாற்றை முழுமையாக எனக்குச் சொல்வீராக. என் மூதாதையரின் பெரும் வரலாற்றைக் கேட்பதில் நான் தணிவடையவில்லை” என்றான்.(1)

வைசம்பாயனர் சொன்னார், “பூமியானது பிருதையின் மகன்கள் அனைவராலும் ஒன்றன்பின் ஒன்றாகக் கைப்பற்றப்பட்டது. முதலில் தனஞ்சயனின் (அர்ஜுனனின்) படையெடுப்பை நான் உனக்குச் சொல்கிறேன்.(2)

வலிய கரங்களைக் கொண்டவனும்,  பெருந்துணிவுமிக்க சாதனைகளைச் செய்தவனுமான தனஞ்சயன், முதலில் குளிந்தர்களின் {குலிங்கர்களின்} மன்னனை வென்றான்.(3) குளிந்தர்கள், அனஸ்தர்கள் மற்றும் காலகுடர்கள் ஆகியோரை வென்ற பிறகு அவன் சுமண்டலனையும், அவனது துருப்புகளையும் வென்றான்.(4) ஓ மன்னா, பகைவர்களைத் தண்டிப்பவனாக சவ்யசச்சின் (அர்ஜுனன்) அவனுடன் (சுமண்டலனுடன்) சேர்த்து சாகலத் தீவையும், மன்னன் பிரதிவிந்தியனையும் வென்றான்.(5) சாகலம் பூமியின் ஏழு தீவுகளில் ஒன்றாகும், அந்தத் தீவில் பல மன்னர்கள் இருந்தனர். அவர்கள் மற்றும் அவர்களுத் துருப்புகளுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் பயங்கர போர் நடைபெற்றது.(7) ஆனால், ஓ பாரதகுலத்தில் சிறந்தவனே, அந்தப் பெரும் வில்லாளிகள் அனைவரும் அர்ஜுனனால் வீழ்த்தப்பட்டனர். அவர்கள் அனைவருடன் சேர்த்து, பிராக்ஜோதிஷ நாட்டையும் அவன் தாக்கினான்[*].(7) (கும்பகோணம் பதிப்பில், “சிறந்த கைகளையுடைய அர்ஜுனன் முதலில் குலிங்க தேசத்தரசனை எளிதாகவே வசப்படுத்தினான். அவனுடன் சேர்ந்தே அர்ஜுன்ன் ஸால்வ தேச நகரத்துக்குச் சென்றான். சிறந்த மனமுள்ள அந்தத் தனஞ்சயன் ஸால்வ நகரத்தைச் சேர்ந்து தனது பரமாக்ரமத்தினால் ஸால்வதேசத்தரசனாகிய உக்ரதன்வனென்பவனை வசப்படுத்தினான். வீரனான அர்ஜுனன் த்யுமத்ஸேனனென்னும் அந்த அரசனை ஜயித்து உடனே அவனைத் தனது படைத்தலைவனாகச் செய்து கொண்டு கடதேசத்துக்குச் சென்றான். குந்திபுத்ரனான அர்ஜுனன் அந்தத் தேசத்தரசனாகிய ஸுநாபனைப் பராக்ரமத்தினால் யுத்தத்தில் வசப்படுத்தி இரண்டாவது ஸேனாதிபதியாகச் செய்தான். இராஜாவே, பகைவரைப் பீடிப்பவனாகிய ஸவ்யஸாசியானவன் அவனுடன் கூடவனே சாகலத்வீபத்தில் பிரதிவிந்தியனென்னும் அரசனை ஜயித்தான். சாகலத்வீபத்தவர்களும், ஸபதத்வீபத்தவர்களுமான அரசர்களுக்கு அர்ஜுனன் சேனைகளோடு பெரும்போர் உண்டாயிற்று. அர்ஜுனன் தர்மராஜாவுடைய இஷ்டத்தை நிறைவேற்றுவதற்காக அவர்களனைவரையும் ஜயித்து அவர்களுடன் சேர்ந்தே ப்ராக்ஜ்யோதிஷமென்னும் நகரத்துக்குச் சென்றான். இராஜாவே, அந்நகரத்தில் பகதத்தனென்னும் மஹாராஜனிருந்தான்” என்றிருக்கிறது.)

ஓ மன்னா, அந்நாட்டின் மன்னன் பகதத்தனாவான். சிறப்புமிக்க பாண்டவன் {அர்ஜுனன்} அவனுடன் பெரும்போரைச் செய்தான்.(8) கிராதர்கள், சீனர்கள் ஆகியோருடன் கூடிய பிராக்ஜோதிஷ மன்னன் {பகதத்தன்} கடற்கரையில் வசிக்கும் எண்ணற்ற வேறு போர்வீரர்களாலும் ஆதரிக்கப்பட்டான்.(9) தொடர்ந்து எட்டு நாட்கள் தனஞ்சயனுட் போரிட்டும் போரில் அவன் சிறிதும் களைப்படையாததைக் கண்ட மன்னன் பகதத்தன், புன்னகைத்தவாறே,(10) “ஓ வலிய கரங்களைக் கொண்டவனே (வீரா), ஓ குருவின் வழித்தோன்றலே, பாகனைக் கொன்றவனுடைய (இந்திரனுடைய) மகனாகவும், போர்க்கள ரத்தினமாகவும் இருப்பதால் போரில் இத்தகைய சக்தி உனக்குத் தகுந்ததே.(11) ஓ குழந்தாய், நான் இந்திரனின் நண்பனாவேன். போரில் அவனுக்கு {இந்திரனுக்குச்} சற்றும் குறைவில்லாதவனான என்னால் உன் முன்பு நிற்க முடியவில்லை.(12) ஓ பாண்டுவின் மகனே, நீ விரும்புவதென்ன? நான் உனக்காகச் செய்ய வேண்டியதென்ன? ஓ வலிய கரங்களைக் கொண்ட வீரா, ஓ மகனே, நீ என்ன செய்யச் சொன்னாலும் நான் உனக்காக அதைச் செய்வேன்” என்றான் {பகதத்தன்}.(13)

அர்ஜுனன், “குருக்களில் முதன்மையானவரும், அறக்கருத்துகள் அனைத்தையும் கற்றவருமான மன்னன் தர்மராஜர் யுதிஷ்டிரர், பெரும் தக்ஷிணைகளுடன் கூடிய வேள்விகளைச் செய்பவராவார் (அவர் ஏகாதிபத்திய மேன்மையை அடைய விரும்புகிறார்).(14) அவர் ஏகாதிபத்திய மேன்மையை அடைவதை நான் காண விரும்புகிறேன். நீர் அவருக்குக் கப்பம் கட்ட வேண்டும். என் தந்தையின் நண்பரான நீர் என்னால் நிறைவடையச் செய்யப்பட்டீர். நான் உமக்கு ஆணையிடமுடியாது. எனவே, தன்விருப்பத்துடன் உற்சாகமாக நீர் கப்பங்கட்டுவீராக” என்றான்.(15)

பகதத்தன், “ஓ குந்தியின் மகனே, மன்னன் யுதிஷ்டிரனும் எனக்கு உன் போன்றவனே. நான் இவை யாவையும் செய்வேன்; நான் உனக்கு வேறு என்ன செய்ய வேண்டும் எனச் சொல்வாயாக” என்று கேட்டான்”.(16)}[1]

வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, பகதத்தனிடம், “இதற்கு உறுதி அளித்தீரெனில், நான் விரும்பியது அனைத்தையும் நீர் செய்ததாக ஆகும்” என்றான்.(1)(17) 

இவ்வாறு பிராக்ஜோதிஷ மன்னனைத் தன் கட்டுக்குள் கொண்ட வந்த குந்தியின் மகனான நீண்ட கரங்களுடைய தனஞ்சயன் {அர்ஜுனன்}, கருவூலத்தலைவன் {குபேரன்} இருக்கும் திசையில் வடக்கு நோக்கி தனது படையெடுப்பை மேற்கொண்டான்.(2)(18) மனிதர்களில் காளையான அந்தக் குந்தியின் மகன், மலைத்தடங்கள் மற்றும் அதைச்சுற்றிய புறநகர் களையும், மலைப்பாங்கான பகுதிகளையும் வெற்றி கொண்டான்.(3)(19) இப்படி அனைத்து மலைகளையும், அவற்றை ஆட்சி செய்த மன்னர்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அவர்களிடம் கப்பம் பெற்றான்.(4)(20) அந்த மன்னர்களின் அன்பை வென்று, அவர்களுடன் கூட்டணி சேர்ந்த அவன் {அர்ஜுனன்}, ஓ மன்னா {ஜனமேஜயா}, அடுத்ததாகத் தன் பேரிகை முழக்கங்களாலும், தன் தேர்ச்சக்கரத்தின் பேரொலியாலும், வரிசையாக சென்ற தனது யானைகளின் பிளிறல்களாலும் உலகை நடுங்கச் செய்து, உலூக நாட்டு மன்னன் பிருஹந்தனை எதிர்த்துப் படையை நடத்தினான்.(5,6)(21,22)

இருப்பினும், பிருஹந்தன் தனது நால்வகை துருப்புகளுடன் கூடிய படையை நடத்திக் கொண்டு தனது நகரத்தைவிட்டு வெளியே வந்து, பல்குனனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றான்.(7)(23) பிருஹந்தனுக்கும், தனஞ்சயனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த போர் பயங்கரமானதாக இருந்தது. பிருஹந்தனால் பாண்டு மகனின் {அர்ஜுனனின்} ஆற்றலைத் தாங்க முடியாத நிலை ஏற்பட்டது.(8)(24) மலைப்பாங்கான பகுதிகளை ஆளும் ஒப்பற்ற மன்னன் {பிருஹந்தன்} குந்தியின் மகனை எதிர்க்க முடியாதவனாகக் கருதி, தனது முழு செல்வங்களுடனும் அவனை {அர்ஜுனனை} அணுகினான்.(9)(25) அர்ஜுனன் பிருஹந்தனிடம் இருந்து அவனது நாட்டைப் பறித்துக் கொண்டான். ஆனால், பிறகு, அவனுடன் {பிருஹந்தனுடன்} அமைதியை ஏற்படுத்திக் கொண்டு {சமாதானம் செய்து கொண்டு}, அந்த மன்னனையும் {பிருஹந்தனையும்} அழைத்துக் கொண்டு, சேனாபிந்துவை எதிர்த்து படை நடத்தி அவனை {சேனபிந்துவை} அந்த நாட்டிலிருந்து விரட்டினான்.(10)(26) அதன் பிறகு அவன் {அர்ஜுனன்}, மோதாபுரம், வாமதேவம், ஸுதாமம், ஸுஸங்குலம், வட உலூக நாடு ஆகியவற்றிலுள்ள மன்னர்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(11)(27) அதன்பிறகு, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில் அர்ஜுனன் சேனாபிந்துவின் நகரத்தை விட்டு அகலாமல், தனது துருப்புகள் மட்டும் அனுப்பி அந்த ஐந்து நாடுகளையும், மக்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். அர்ஜுனன் சேனாபிந்துவின் நகரமான தேவப்பிரஸ்தத்திற்கு நால்வகை துருப்புகள் கொண்ட தனது படையுடன் வந்து அங்கேயே தங்கினான்.(12)(28)

பிறகு, தனது கட்டுப்பாட்டுக்குள் இருந்த மன்னர்களாலும், மக்களாலும் சூழப்பட்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, பூரு குலத்தின் காளையான மன்னன் விஷ்வகச்வனை எதிர்த்து படை நடத்தினான்.(13,14)(29,30) பெரும் வீரம் கொண்ட வீர மலைநாட்டினர் பலரை வீழ்த்திய பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பூரு மன்னனால் பாதுகாக்கப்பட்ட அவனது நகரத்தைத் தன் படையின் துணையால் ஆக்கிரமித்தான்.(15)(31) போரில் பூரு மன்னனை வீழ்த்திய பிறகு, மலைக்கள்ளர்க் கூட்டங்களையும், உத்சவ சங்கேதம் என்று அழைக்கப்பட்ட ஏழு இனக்குழுக்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.(16)(32) பிறகு அந்த க்ஷத்திரியகுலக்காளை {அர்ஜுனன்}, வீர க்ஷத்திரியர்களான காஷ்மீரர்களையும், மன்னன் லோஹிதனையும், பத்து சிறு தலைவர்களையும் வீழ்த்தினான்.(17)(33) பிறகு, திரிகர்த்தர்கள், தார்வர்கள், கோகநதர்கள் மற்றும் பிற க்ஷத்திரியர்களுக்கு எதிராக பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} முன்னேறினான்.(18)(34)

காண்பதற்கினிய நகரமான அவிசாரி நகரத்தை அடைந்து, உரக நாட்டை ஆளும் ரோசமானனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.(19)(35) பிறகு, அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, தனது பலத்தை வெளிக்காட்டி, பல ஆயுதங்களால் நன்கு காக்கப்பட்டிருந்த சிங்கபுரம் எனும் காண்பதற்கினிய நகரத்தை ஒடுக்கினான்.(20)(36) பிறகு துருப்புகளுக்குத் தலைமை தாங்கிச் சென்ற பாண்டுவின் மகனான அர்ஜுனன், சுஹ்மம் {ஸும்ஹம்}, சுமலம் {சோளம்}ஆகிய பகுதிகளை கடுமையாகத் தாக்கினான்.(21)(37) இவ்வாறு கடுமையாகத் தாக்கிய பிறகு, பேராற்றல் கொண்ட இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, வெல்ல முடியாத பாஹ்லீகர்களை வென்று தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(22)(38) பிறகு பாண்டுவின் மகனான பல்குனன் {அர்ஜுனன்}, தேர்ந்தெடுக்கப்பட்ட படையை மட்டும் தன்னுடன் அழைத்துச்சென்று தரதர்களையும் காம்போஜர்களையும் வீழ்த்தினான்.(23)(39)

பிறகு இந்திரனின் மேன்மையான மகன் வடகிழக்கு பகுதியின் காடுகளில் வசித்த கள்வர்க் கூட்டத்தை {தஸ்யுக்களை} வீழ்த்தினான்.(24)(40) ஓ பெரும் மன்னா {ஜனமேஜயா}, இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, லோஹர்கள், கிழக்கு காம்போஜர்கள், வட ரிஷிகர்கள் ஆகியோரையும், அவர்களது கூட்டணிகள் அனைத்தையும் முறியடித்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(25)(41) உண்மையில் பிருதையின் {குந்தியின்} மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்} அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற போர், பழங்காலத்தில் பெரும் படுகொலைகள் நேர்ந்ததும், (பிரகஸ்பதியின் மனைவி) தாரகைக்காக தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடைபெற்றதுமான போரைப் போல இருந்தது.(26)(42) பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, ரிஷிகர்களைப் போர்க்களத்தில் வீழ்த்திய அர்ஜுனன், அவர்களிடம் இருந்து கிளியின் மார்பின் நிறத்தில் இருந்த எட்டு குதிரைகளையும், மேலும் வடக்கே பிறந்து பெரும் வேகத்தில் செல்லக்கூடிய கிளி நிறக் குதிரைகளையும் கப்பமாகப் பெற்றான்.(27,28)(43,44) இறுதியாக இமய மற்றும் நிஷ்குட மலைகள் அனைத்தையும் வென்ற அந்த மனிதர்களின் காளை {அர்ஜுனன்}, வெண்மலைகளுக்கு {சுவேத பர்வதத்திற்கு} வந்து, அதன் சாரலில் முகாமிட்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(29)(45)

வடகுரு நாட்டை அடைந்த அர்ஜுனன் – சபாபர்வம் பகுதி 27-(திக்விஜய பர்வம் – 03)-அர்ஜுனன் வடதிசையில் சென்று வென்று வந்த போர்ப்பயண விவரிப்பு…

வைசம்பாயனர் சொன்னார், “வீரனும், பெரும் சக்தி படைத்தவனுமான பாண்டவர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, வெண்மலைகளைக் கடந்து, திருமப்புத்திரனால்  ஆளப்பட்ட கிம்புருஷர்களின் {சிங்க தலையும் மனித உடலும், அல்லது மனிதத் தலையும் சிங்க உடலும் பெற்றவர்களின்} நாட்டை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். பிறகு க்ஷத்திரியர்களின் பெரும் படுகொலைகளுக்குப் பின் அந்தப் பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தான்.(1,2) அந்த நாட்டை வென்ற பிறகு, அந்த இந்திரனின் மகன் (அர்ஜுனன்) மனத்தை ஒருமுகப்படுத்தி, தனது துருப்புகளுக்குத் தலைமை தாங்கி, குஹ்யர்களால் {யக்ஷர்களால்} ஆளப்படும் ஹாராடகம்  {ஹாடகம்} என்ற நாட்டை நோக்கி முன்னேறினான்.(3)

அவர்களை அடக்கி ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்ட அந்த குரு இளவரசன் முனிவர்களுக்குப் புனிதமான மானஸம் {மானசரோவர் ஏரி} என்ற அற்புதமான தடாகத்தையும், முனிவர்களுக்குப் புனிதமான {ரிஷிகுல்யை என்றழைக்கப்படும்} பல ஏரிகளையும் குளங்களையும் கண்டான்.(4) ஹாராடகத்தைச் சுற்றியிருக்கும் கந்தர்வர்களால் ஆளப்படும் இடங்களையும் அடக்கி கப்பம் கட்டச் செய்துவிட்டு, அந்த மேன்மையான இளவரசன் மானஸ தடாகத்திற்கு வந்தான்.(5) அங்கே அந்த வெற்றியாளன் {அர்ஜுனன்} அந்த நாட்டின் காணிக்கையாக, தித்திரி, கல்மாஷம், மண்டூகம் என்ற அற்புதமான குதிரைகளைப் பெற்றான்[1].(6) (கும்பகோணம் பதிப்பில், “அப்போது அந்தக் கந்தர்வ நகரத்தில் தித்திரிப்பக்ஷிகள் போலச் சித்திரவர்ணமுள்ளவையும், மண்டூகங்களென்று பெயருள்ளவையுமான உத்தமமான குதிரைகளையெல்லாம் கப்பமாகப் பெற்றான்” என்றிருக்கிறது.)இறுதியாக அந்தப் பாகனைக் கொன்றவனின் {இந்திரனின்} மகன் {அர்ஜுனன்}, வட ஹரிவர்ஷ நாட்டை அடைந்து, அதை வெல்ல விரும்பினான். (7)

அங்கே பெரும் பலம் பொருந்தியவர்களும், குறிப்பிடும் அளவிற்குப் பெரும் உடல்படைத்தவர்களும், ஆற்றல் நிறைந்தவர்களுமான வாயில் காப்போர்கள், பெருந்தன்மை நிறைந்த இதயத்துடன் அவனிடம் {அர்ஜுனனிடம்} வந்து,(8) “ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, இந்த நாடு {வட ஹரிவர்ஷ நாடு} உன்னால் வெல்லப்பட முடியாதது. உனது நன்மையை நீ விரும்பினால், விரைவாகத் திரும்பிச் செல்வாயாக. ஓ அச்யுதா, உன் படையெடுப்புகள் ஏற்கனவே போதுமானவையாக இருக்கின்றன.(9) இந்தப் பகுதியில் நுழையும் எந்த மனிதனும் அழிந்து போவான். நாங்கள் உன்னிடம் நிறைவடைந்தோம். நீ இதுவரைச் செய்த படையெடுப்பே மிக அதிகம்.(10) இங்கே, ஓ அர்ஜுனா, வெல்லத்தக்க எதையும் நீ காணமுடியாது. வட குருக்கள் இங்கே வாழ்கிறார்கள். இங்கே போரிடலாகாது.(11) உள்ளே நுழைந்தாலும், உன்னால் எதையும் காணமுடியாது. மனித கண்களைக் கொண்டு இங்கே எதையும் காண முடியாது.(12) இருப்பினும், நீ வேறு ஏதாவது எதிர்பார்த்தால், ஓ பாரதா {அர்ஜுனா} எங்களிடம் சொல்வாயாக. ஓ மனிதர்களில் புலியே நீ சொல்வதை நாங்கள் செய்கிறோம்” என்று சொன்னார்கள்.(13) 

இவ்வாறு சொல்லப்பட்ட அர்ஜுனன் சிரித்துக் கொண்டே, “பெரும் புத்திகூர்மை கொண்டவரும், நீதிமானுமான யுதிஷ்டிரன், கண்ணியமிக்க ஏகாதிபத்ய நிலையை  அடைய {பேரரசனாக} நான் விரும்புகிறேன்.(14) உங்கள் நிலம் மனிதர்களுக்கு எதிராக அடைக்கப்பட்டிருகிறது என்றால், நிச்சயம் நான் அதற்குள் நுழைய மாட்டேன். ஆனால் யுதிஷ்டிரருக்கு கப்பத்தைக் கட்டிவிடுங்கள்” என்றான். (15)

அர்ஜுனனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அவர்கள், தெய்வீக ஆடை ஆபரணங்கள் பலவற்றையும், தெய்வீக வடிவமைப்புகளிலான பட்டையும், தெய்வீகத் தன்மை கொண்ட தோலையும் கொடுத்தனர்.(16) இவ்வாறு அந்த மனிதர்களில் புலி {அர்ஜுனன்}, க்ஷத்திரியர்களுடனும், கள்வர்க் கூட்டங்களுடனும் எண்ணிலடங்கா போர்களைச் செய்து, வடக்கில் இருக்கும் நாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(17) தலைவர்களை வீழ்த்தி, அவர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அவர்களிடம் இருந்து பெரும் செல்வத்தையும், பல்வேறு ரத்தினங்களையும் பொன்னையும், கிளியின் நிறத்திலும், கிளியின் இறக்கையின், மயில் நிறத்திலும் உள்ளவையும், வேகமாகச் செல்லக்கூடியவையுமான தித்திரி, கல்மாஷ வகை குதிரை வகைகளையும் அடைந்தான். (18,19)

ஓ மன்னா {ஜனமேஜயா}, நால்வகை துருப்புகளுடன் சூழ, அந்த வீரன் அற்புதமான நகரமான சக்ரப்பிரஸ்தத்திற்குத் {இந்திரப்பிரஸ்தத்திற்குத்} திரும்பி வந்தான்.(20) பார்த்தன் {அர்ஜுனன்}, நீதிமானான யுதிஷ்டிரனிடம், தான் பெற்ற விலங்குகளுடன் {கால்நடைகளுடன்} கூடிய முழு செல்வத்தையும் கொடுத்தான். பிறகு அந்த ஏகாதிபதியுடைய {யுதிஷ்டிரனுடைய} ஆணையின் பேரில் ஓய்வெடுப்பதற்காக அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் நுழைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(21)

பீமனின் கீழ்த்திசைப் போர்ப்பயணம் – சபாபர்வம் பகுதி 28-(திக்விஜய பர்வம் – 04)-யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்று பீமன் கிழக்கு நோக்கி படையெடுப்பது; பாஞ்சாலம் செல்வது; சேதியில் தங்குவது…

வைசம்பாயனர் சொன்னார், “அதேவேளையில் {அர்ஜுனன் வடக்கு நோக்கி படை நடத்தி சென்ற வேளையில்}, பெரும் சக்தி கொண்ட பீமசேனன், யுதிஷ்டிரனின் அனுமதியைப் பெற்று, கிழக்கு நோக்கி படை நடத்திச் சென்றான்.(1) பராக்கிரமம் கொண்டவனும்,, யானைகளும், குதிரைகளும், தேர்களும் நிறைந்த படையுடன் இருந்தவனும், எதிரிகளின் துயரை அதிகரிப்பவனுமான அந்தப் பாரதர்களில் புலி {பீமன்}, நன்கு ஆயுதங்கள் நிரம்பியவனாகவும், எதிரி நாடுகளை நசுக்கும் தகுதி உள்ளவனாகவும் இருந்தான். மனிதர்களில் புலியான பாண்டுவின் மைந்தன் {பீமன்}, பெரும் நாடான பாஞ்சாலத்திற்குச் சென்று அந்தப் பழங்குடிகளுடன் உடன்பாடு காண பல்வேறு வழிகளைக் கையாண்டான்.(2,3)

பிறகு அந்த வீரன் {பீமன்}, பாரத குலத்தவரில் காளை, குறுகிய காலத்திற்குள், கந்தகர்களையும் விதேகர்களையும் வீழ்த்தினான். அந்த மேன்மையானவன் {பீமன்}, தசர்னர்களை அடக்கினான். அந்த தசார்ணர்களின் நாட்டில், சுதர்மன் என்ற மன்னன் வெறுங்கைகளுடன் பீமனுடன் கடும்போர் புரிந்தான். அந்த ஒப்பற்ற மன்னனின் சாதனையைக் கண்ட பீமன், அந்த பெரும் பலம் வாய்ந்த சுதர்மனைத் தனது தளபதிகளில் முதன்மையானவனாக நியமித்தான்.(4-6) கடும் ஆற்றல் கொண்ட பீமன் பிறகு தனது படையின் காற்தடங்களால் பூமியை நடுங்கச் செய்து மேலும் கிழக்கு நோக்கி சென்றான்.(7) 

பலத்தில் அனைவருக்கும் முதன்மையான அந்த வீரன் {பீமன்}, படைகளுக்குத் தலைமையாக நின்று அஸ்வமேத மன்னன் ரோசமனை {அச்வமேதேச்வரனை} வீழ்த்தினான்.(8) பிறகு அந்த குந்தியின் மைந்தன் அந்த ஏகாதிபதியைத் தனது கடும் சாதனையால் வீழ்த்தி கிழக்குப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(9) பிறகு பெரும் பலம் கொண்ட அந்த குரு குல இளவரசன் {பீமன்} தெற்கில் உள்ள புளிந்த நாட்டிற்கு சென்று சுகுமாரனையும், மன்னன் சுமித்திரனையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(10)

பிறகு, ஓ ஜனமேஜயா, அந்த பாரத குலத்தின் காளை {பீமன்}, யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில் பெரும் சக்தி மிக்க சிசுபாலனை எதிர்த்து படை நடத்தினான்.(11) பாண்டு மகனின் {பீமனின்} நோக்கத்தை அறிந்த அந்த சேதி நாட்டு மன்னன் {சிசுபாலன்}, தனது நகரை விட்டு வெளியே வந்தான். பகைவரைத் தண்டிப்பவனான அவன் {சிசுபாலன்}, பிருதையின் {குந்தியின்} மகனை {பீமனை} மதிப்புடன் வரவேற்றான்.(12) அப்போது, ஓ மன்னா {ஜனமேஜயா}, சேதி நாட்டு மற்றும் குருகுலக் காளைகளான அவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் சந்தித்து, ஒருவர் நலனை மற்றவர் விசாரித்தனர்.(13) பிறகு, ஓ ஏகாதிபதி, சேதி நாட்டு மன்னன் {சிசுபாலன்}, புன்னகையுடன் தனது நாட்டை {சேதி நாட்டை} பீமனுக்கு அளித்து, “ஓ பாவமற்றவனே {பீமனே}, நீ என்ன செய்ய விரும்புகிறாய்?” என்று கேட்டான்.(14) 

அதன்பேரில், பீமன் மன்னன் யுதிஷ்டிரனின் நோக்கங்களை எடுத்துரைத்தான். (அந்தப் பாண்டவனால்) விரும்பப்பட்டதைப் போலவே அம்மன்னனும் {சிசுபாலனும்} செயல்பட்டான்.(15) ஓ மன்னா {ஜனமேஜயா}, பீமன், சிசுபாலனால் நல்ல முறையில் கவனிக்கப்பட்டு, முப்பது இரவுகளுக்கு அங்கே வசித்தான். அதன்பிறகு, அவன் {பீமன்} தனது துருப்புகளுடனும் வாகனங்களுடனும் சேதியைவிட்டு புறப்பட்டான்” {என்றார் வைசம்பாயனர்}[2].(16)(கும்பகோணம் பதிப்பில், “அப்போது பீமஸேனன் சேனைகளோடும் வாஹனங்களோடும் பதின்மூன்றுராத்திரி அங்கே வஸித்து, சிசுபாலனால் மரியாதை செய்யப்பெற்றுச் சென்றான்” என்றிருக்கிறது. கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் இக்காலம் முப்பது இரவுகள் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.)

பீமனின் வெற்றிப்பயணம்! – சபாபர்வம் பகுதி 29-(திக்விஜய பர்வம் – 05)பீமனின் கிழக்குத் திசைப் போர்ப்பயண விவரிப்பு; பீமசேனன் வெற்றியுடன் இந்திரப்ரஸ்தம் திரும்பியது

வைசம்பாயனர் சொன்னார், “பிறகு, பகைவர்கள் அனைவரையும் தண்டிப்பவனானவன் {பீமன்}, குமார {குமாரவிஜயம் என்ற} நாட்டின் மன்னன் ஸ்ரீணிமத் {சிரேணிமான்}, கோசல நாட்டின் மன்னன் பிருஹத்பலன் ஆகியோரை வீழ்த்தினான்.(1) பிறகு பாண்டு மகன்களில் முதன்மையான பீமன் கடும் சாதனைகளைச் செய்து அனைவரையும் விஞ்சி, அறம்சார்ந்த பலம்வாய்ந்த மன்னனான அயோத்தி மன்னன் தீர்க்கயக்ஞனை வீழ்த்தினான்.(2) பிறகு, அந்த மேன்மைவாய்ந்த பீமன், கோபாலகக்ஷ நாடு, வட கோசலம் மற்றும் மல்லர்களின் மன்னன் ஆகியோரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(3) ஈரப்பதம் நிறைந்த பகுதியான இமயத்தின் அடிவாரத்துக்கு வந்த அந்தப் பெரும் பலம் வாய்ந்தவன் {பீமன்}, அந்த முழு நாட்டையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(4)

இதே வழியில் அந்த பாரத குலத்தின் காளை {பீமன்} பல நாடுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். பலம் வாய்ந்த மனிதர்களில் முதன்மையான அந்த பெரும் சக்தி படைத்த பாண்டுவின் மகன் {பீமன்}, அடுத்து பல்லாட நாட்டையும், பல்லாடத்தின் அருகில் உள்ள சுக்திமந்தா {சக்திமான்} மலையையும் வெற்றி கொண்டான்.(5) பிறகு நீண்டு கரங்களுடைய பயங்கர ஆற்றலைக் கொண்ட பீமன், பின்வாங்காத காசி மன்னன் ஸுபாஹுவை வீழ்த்தி அவனை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(6)

பிறகு அந்தப் பாண்டு மகன்களில் முதன்மையானவன் {பீமன்}, தனது படைபலத்தால் ஸுபார்ச்வ நாட்டு பெரும் மன்னனான கிரதன் என்பவனைப் போரில் வீழ்த்தினான். பிறகு அந்தப் பெரும் சக்தி கொண்டவன் {பீமன்}, மத்ஸ்யர்களையும், பெரும் பலம் வாய்ந்த மலதர்களையும், எந்த அச்சமும் ஒடுக்குதலும் இல்லாத {அநக நாட்டையும், அபய நாட்டையும்} பசுபூமி என்ற நாட்டையும் வீழ்த்தினான். பிறகு, அந்த நீண்ட கரன் கொண்ட வீரன் {பீமன்}, அந்தப் பூமியை விட்டு மதஹரா, மஹிதரா {மததாரம்},(7-9) ஸோமதேயம் ஆகிய பகுதிகளை வெற்றி கொண்டு, தனது பாதச்சுவடுகளை வடக்கு திசை நோக்கித் திருப்பினான்.(10)

பிறகு, அந்தப் பெரும் பலம் வாய்ந்த குந்தியின் மகன் {பீமன்}, தனது படை பலத்தைக் கொண்டு வத்சபூமி என்ற நாட்டையும், பர்க்கர்களின் மன்னனையும், நிஷாத ஆட்சியாளனையும், மனிமத்தையும் {மணிமானையும்} எண்ணிலடங்கா பல மன்னர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(11) பிறகு, சிறிதும் களைப்பறியாதவனான அந்த பீமன், விரைவாக தென் மல்லர்களையும் {தக்ஷிணமல்லர்களையும்}, போகவான் மலைகளையும் வெற்றி கொண்டான்.(12) அடுத்ததாக அந்த வீரன் {பீமன்}, சர்மகர்கள் மற்றும் வர்மகர்கள் ஆகியோருடன் உடன்பாடு காண்பதில் வென்றான். பிறகு அந்த மனிதர்களில் புலி {பீமன்}, பூமியின் அதிபதியான விதேஹ மன்னன் ஜனகனை எளிதாக வீழ்த்தினான். பிறகு அந்த வீரன் {பீமன்}, தனது யுக்தியைக் கொண்டு சகர்கள், மற்றும் அந்தப் பகுதியின் நாடோடிகளை {பர்ப்பரர்களைத்} தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(13,14) பாண்டுவின் மகன் {பீமன்} விதேஹ நாட்டில் இருந்து கொண்டு தனது துருப்புகளை அனுப்பி, இந்திர மலையில் உள்ள கிராதர்களின் ஏழு மன்னர்களை வெற்றி கொண்டான்.(15) 

பிறகு அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரன் {பீமன்}, அளவில்லா சக்தியுடன், ஸுமஹர்களையும், பரஸுமஹர்களையும் போரில் வீழ்த்தினான்., அவர்களைத் தனது பக்கம் வெற்றி கொண்ட குந்தியின் மகன் {பீமன்} பெரும் பலத்துடன் மகதத்தை எதிர்த்து படை நடத்தினான். அப்படியே தான் செல்லும் வழியில் தண்டன் மற்றும் தண்டதாரன் என்ற பெயர்களைக் கொண்ட ஏகாதிபதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். பிறகு அந்த ஏகாதிபதிகளையும் இணைத்துக் கொண்டு, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, கிரிவ்ரஜத்தை நோக்கி படை நடத்தினான்.(16,17) 

உடன்படிக்கையின் மூலம் ஜராசந்தனின் மகனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அந்த வீரன் {பீமன்}, அவனைத் தனக்குக் கப்பம் கட்ட வைத்து, அந்த ஏகாதிபதிகள் அனைவரையும் உடன் அழைத்துக் கொண்டு கர்ணனை[1]  எதிர்த்து படை நடத்தினான்.(18) (இந்த இடத்தில் கங்குலியின் புத்தகத்தில் கர்ணன் என்று வர வேண்டியது, எழுத்தப்பிழையாக கம்சன் என்று வந்துவிட்டது என்று நினைக்கிறேன். மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் மற்றும் கும்பகோணம் பதிப்புகளில் இந்த இடத்தில் கர்ணன் என்றே வருகிறது. கங்குலியிலேயே கூட 18ம் ஸ்லோகத்தில் கம்சன் என்று வருவது, 19ம் ஸ்லோகத்தில் கர்ணன் என்றே இருக்கிறது. எனவே இந்த இடத்தில் நாமும் கர்ணன் என்றே கொள்கிறோம்.)பிறகு அந்தப் பாண்டவர்களில் முதன்மையானவன் {பீமன்}, பூமிகள் நடுங்க தனது நால்வகைப் படைகளையும் நடத்திச் சென்று எதிரிகளைக் கொல்லும் கர்ணனை எதிர்த்துப் போரிட்டான்.(19) ஓ பாரதா, அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரன் {பீமன்}, கர்ணனை அடக்கித் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதன்பிறகு மலை பகுதிகளின் பலம்வாய்ந்த மன்னனை வீழ்த்தினான்.(20)

கரத்தின் பலம் கொண்ட பாண்டுவின் மகன் {பீமன்}, ஒரு கடும் போரில் மோதாகிரியில் வசித்த பெரும் பலம்வாய்ந்த மன்னனை வீழ்த்தினான்.(21) பிறகு அந்தப் பாண்டவன் {பீமன்}, ஓ மன்னா {ஜனமேஜயா}, கடும் ஆற்றலும், பலமும் கொண்ட புண்ட்ர நாட்டு மன்னன் வாசுதேவன் மற்றும் கௌசிகக்கச்சத்தை ஆண்ட மன்னன் மஹௌஜஸன் ஆகியோரை வீழ்த்திய பிறகு வங்க நாட்டைத் தாக்கினான்[2].(22,23) (கும்பகோணம் பதிப்பில், “அதன்பிறகு, புண்ட்ரதேசத்தரசனும், வீரனுமான அந்தப் பௌண்ட்ரக வாஸுதேவனென்னும் அரசன் கிருஷ்ணனுடைய கைகளின் பயத்தினால், “நான் இப்போது யாதவ வீரனான கிருஷ்ணனுடன் யுத்தஞ்செய்யேன்” என்று சொல்லிக் கப்பங்கொடுத்தான். கௌசிகி நதிக்கரையில் உள்ள மஹௌஜஸன் என்னும் அரசனையும் சந்தித்தான்” என்றிருக்கிறது.)பிறகு, ஸமுத்திரஸேனன், மன்னன் சந்திரஸேனன், தாம்ரலிப்தன், கர்வடர்களின் மன்னன்,(24) ஸும்ஹத்தின் {ஸும்ஹ நாட்டின்} ஆட்சியாளன், கடற்கரையில் வசித்த மிலேச்ச மன்னர்கள் ஆகியோரை வெற்றி கொண்டான் அந்த பாரதர்களில் காளை {பீமன்}.(25)

இவ்வாறு காற்று தேவனின் {வாயு தேவனின்} பலம்பொருந்திய மகன் {பீமன்} இப்படி பல்வேறு நாடுகளை வென்று, அவர்களிடம் இருந்து கப்பம் பெற்று லௌஹித்யத்தை {லௌஹித்யமென்னும் நதத்தை} நோக்கி முன்னேறினான்.(26) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, கடற்கரையில் உள்ள சதுப்பு நிலப்பகுதிகளில் வசித்த மிலேச்ச மன்னர்களை கப்பம் கட்ட வைத்து, பல்வேறு செல்வங்களையும்,(27) சந்தனக்கட்டைகளையும், நறுமண கற்றாழைகளையும் {அகில்}, ஆடைகளையும், ரத்தினங்களையும், முத்துகளையும், சால்வைகளையும், பொன், வெள்ளி மற்றும் மதிப்புமிக்க பவழங்களையும் பெற்றுக் கொண்டான்.(28) மிலேச்ச மன்னர்கள் குந்தியின் சிறப்புவாய்ந்த மகனிடம் பொற்காசுகளையும், ரத்தினங்களையும் கோடிக்கணக்காகக் கொடுத்தனர்.(29) பிறகு, பயங்கர ஆற்றலைக் கொண்ட பீமன், இந்திரப்பிரஸ்தம் திரும்பி, மொத்த செல்வத்தையும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் கொடுத்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(30)

சகாதேவனின் தென்திசைப் போர்ப்பயணம்! – சபாபர்வம் பகுதி 30-(திக்விஜய பர்வம் – 06)-யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்று சகாதேவன் தெற்கு நோக்கி படையெடுப்பது; சகாதேவன் அடக்கிய நாடுகளின் விபரம்…

வைசம்பாயனர் சொன்னார், “சகாதேவன், நீதிமானான யுதிஷ்டிரன் மேல் கொண்ட அன்பினால் பெரும் படைகளுடன் தென்திசை நோக்கி படையெடுத்துச் சென்றான்.(1) பெரும் பலவானான அந்த வல்லமைமிக்க குருகுல இளவரசன் {சகாதேவன்}, மொத்த சூரசேனர்களையும், மத்ஸ்ய மன்னனையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(2) பிறகு அதிராஜர்களின் பெரும் பலம் வாய்ந்த மன்னனான தந்தவக்ரனை வீழ்த்திய அந்த வீரன், அவனைத் தனக்குக் கப்பம் கட்ட வைத்து, மீண்டும் அவனையே அரியணையில் அமர்த்தினான்.(3) 

அதன் பிறகு அந்த இளவரசன் {சகாதேவன்}, சுகுமாரனையும், மன்னன் சுமித்திரனையும், பிற மத்ஸ்யர்களையும், {கள்வர்களான} படச்சரர்களையும் தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தான்.(4) பெரும் புத்திசாலித்தனம் கொண்ட அந்த குரு வீரன் {சகாதேவன்}, மிக விரைவாக நிஷாதர்கள் நாட்டை வெற்றி கொண்டான். மேலும், அவன் {சகாதேவன்} உயர்ந்த மலையான கோசிருங்கத்தையும், பூமியின் அதிபதி சிரேணிமத் {சிரேணிமான்} ஆகியோரையும் வெற்றி கொண்டான்.(5) பிறகு நவராஷ்டிரம் {நரராஷ்டிரம்} என்ற நாட்டை அடக்கிய அந்த வீரன், பிறகு குந்திபோஜனை நோக்கி தனது படையை நடத்தினான். குந்திபோஜன் பெரும் விருப்பத்துடன் வெற்றிவீரனின் {சகாதேவனின்} கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டான்.(6) 

அதன்பிறகு, சர்மண்வதி ஆற்றங்கரையில், முன்பு வாசுதேவனால் {கிருஷ்ணனால்} வீழ்த்தப்பட்ட மன்னன் ஜம்பகனின் மகனை எதிர்கொண்டான்.(7) ஓ பாரதா {ஜனமேஜயா}, ஜம்பகனின் மகன் சகாதேவனுடன் போரிட்டான். சகாதேவன் அந்த இளவரசனைத் தோற்கடித்து, தெற்கு நோக்கி படையை நடத்தினான்.(8) பிறகு அந்த பெரும் பலம் வாய்ந்த வீரன் ஸேகர்களையும் மற்றும் பிறரையும் {அபரஸேகர்களையும்} வீழ்த்தி அவர்களைத் தனக்கு ரத்தினங்களையும் பல செல்வங்களையும் கப்பமாகக் கட்ட வைத்தான்.(9) தான் வீழ்த்திய இனக்குழுகளை தனது கூட்டணியாக்கிக் கொண்டு, நர்மதை ஆற்றங்கரையில் அமைந்துள்ள நாடுகளை நோக்கி படை நடத்தினான்.[1] (கும்பகோணம் பதிப்பில், இதற்கடுத்து, “அங்கே நரகாஸுரன் மகனும், சிறந்த கைகளையுடையவனுமாகிய பகதத்தனென்னுமரசன் அர்ஜுனனுக்குக் கப்பங்கொடுத்ததாகக் கேட்டுத் திரும்பினான்” என்றிருக்கிறது. இந்தக் குறிப்பு கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் இல்லை.)விந்தன், அனுவிந்தன் என்ற அவந்தி நாட்டு மன்னர்கள் இருவரை வீழ்த்திய அசுவினி இரட்டையரின் பெரும் பலம் பொருந்திய மகன் {சகாதேவன்}, அவர்களிடம் இருந்து பெரும் செல்வத்தைக் கப்பமாக அடைந்தான். பிறகு அந்த வீரன் {சகாதேவன்} போஜகடம் என்ற நகருக்குச் என்றான்.(10,11)

ஓ மங்காப் புகழுடைய மன்னா {ஜனமேஜயா}, அவனுக்கும் {சகாதேவனுக்கும்}, அந்த நாட்டு மன்னனுக்கும் {போஜகட நாட்டு மன்னன் பீஷ்மகனுக்கும்} இடையில் இரண்டு நாட்களுக்கு கடும் போர் நடந்தது. ஆனால் மாத்ரியின் மகன் {சகாதேவன்}, வெல்லப்படமுடியாத பீஷ்மகனை வீழ்த்தி,(12) கோஸல நாட்டு மன்னனையும், வேண்வா {வேணை} ஆற்றங்கரையில் அமைந்துள்ள பகுதிகளின் ஆட்சியாளனையும், கந்தரகர்களையும், கிழக்கு கோசலத்தின் மன்னர்களையும் வீழ்த்தினான்.(13)

பிறகு, அந்த வீரன், நாடகேயனையும், ஹேரம்பகனையும் போர்க்களத்தில் வீழ்த்தி, மாருத நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, முஞ்ச கிராமத்தை {ரம்மியக்ராமமென்னும் ஊர்களையும்} தனத் பலத்தால் ஒடுக்கினான். பிறகு, பாண்டுவின் மகன் {சகாதேவன்}, நாசீனர்கள், அர்ப்புகர்கள் ஆகியோரின் பெரும் பலம் வாய்ந்த ஏகாதிபதிகளையும், நாட்டின் அந்தப் பகுதியில் இருந்த பல்வேறு காட்டு மன்னர்களையும் வீழ்த்தினான். மேலும் வாதாதிபன் என்ற மன்னனை அந்தப் பெரும் பலம் கொண்ட வீரன் {சகாதேவன்} அடக்கினான்.(14,15) பிறகு, மேலும் தெற்கு நோக்கிப் படையெடுத்து புளிந்தர்களையும் அடக்கினான். அந்த நகுலனின் தம்பி {சகாதேவன்}, ஒரு நாள் முழுவதும் பாந்திரிய {பாண்டிய}[2] நாட்டு மன்னனுடன் போரிட்டான்.(16)(கும்பகோணம் பதிப்பில், “சிறந்த கைவன்மையுள்ள அந்த ஸஹதேவன் பாண்டிய தேசத்தரசனோடு ஒரு நாள் போர் செய்து அவனை ஜயித்துத் தென்திசை மார்க்கமாகச் சென்று கிஷ்கிந்தையென்று உலகத்தில் பெயர் பெற்ற குகையை அடைந்தான்” என்றிருக்கிறது. கிஷ்கிந்தை பாண்டிய தேசத்திற்குத் தெற்கில் இருக்கவில்லை. பிபேக்திப்ராயின் பதிப்பில் அவந்திக்ககு சென்று விந்தன் அனுவிந்தனை வீழ்த்தும் சகாதேவன் நேரடியாக மாஹிஷ்மதிக்கு வந்து மன்னன் நீலனுடன் போர்புரியும் இடத்திற்கு வர்ணனை சென்று விடுகிறது.)

அந்த நீண்ட கரம் கொண்ட வீரன் அந்த ஏகாதிபதியை வீழ்த்திய பிறகு மேலும் தெற்கே சென்றான். அதன்பிறகு அவன், கொண்டாடப்படும் குகைகளான கிஷ்கிந்தியத்தைக் கண்டு, அங்கே ஏழு நாட்களுக்கு குரங்கு மன்னர்களான மைந்தன், துவிவிதனுடன் போர் புரிந்தான். இருப்பினும் அந்த சிறப்பு மிகுந்த மன்னர்கள், அந்தத் தாக்குதலில் களைப்படையாதிருக்கும் சகாதேவனால் மகிழ்ச்சி அடைந்தார்கள். பிறகு அவர்கள் மகிழ்ச்சியுடன் அந்த குரு இளவரசனிடம் {சகாதேவனிடம்},(17-19) “ஓ பாண்டு மகன்களில் புலியே {சகாதேவனே}, எங்கள் அனைவரிடம் இருந்தும் காணிக்கையாகக் கப்பம் பெற்றுக் கொண்டு செல்வாயாக. பெரும் புத்திகூர்மை கொண்ட மன்னன் யுதிஷ்டிரனின் காரியம் தடைபெறாமல் நடைபெறட்டும்” என்றனர்.(20) அவர்களிடம் இருந்து நகைகளையும், ரத்தினங்களையும் பெற்றுக் கொண்டு மாஹிஷ்மதி என்ற நகரத்தை நோக்கி முன்னேறினான். அங்கே அந்த மனிதர்களில் காளை {சகாதேவன்} மன்னன் நீலனுடன் போரிட்டான்.(21)

மன்னன் நீலனுக்கும், பாண்டுவின் மகனான பெரும் பலம்வாய்ந்த சகாதேவனுக்கும் நடந்த மோதல் கடுமையானதும் காணப் பயங்கரமானதாகவும் இருந்தது.(22) அந்த மோதலில் பெருங்குருதி சிந்தப்பட்டது. அக்னி தேவன் மன்னன் நீலனுக்குத் துணைபுரிந்ததால், அந்த வீரனின் {சகாதேவனின்} வாழ்வே பெரும் ஆபத்தில் இருந்தது.(23) தேர்களும், வீரர்களும், யானைகளும், கவசமணிந்த படை வீரர்களுமாக சகாதேவனின் படையில் இருந்த அனைவரும் நெருப்பால் பீடிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள்.(24) இதைக் கண்ட குரு குல இளவரசன் {சகாதேவன்} பெரும் துயர் கொண்டான். ஓ ஜனமேஜயா, இதைக் கண்ட ஆந்த வீரனால் {சகாதேவனால்} மேற்கொண்டு என்ன செய்வது என்று தீர்மானிக்க முடியவில்லை.” {என்றார் வைசம்பாயனர்}.(25)

ஜனமேஜயன், “ஓ மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, வேள்வியை நிறைவேற்றும் பொருட்டுப் போரிட்டுக் கொண்டிருந்த சகாதேவனுக்கு எதிராக, அந்தப் போரில் ஏன் அக்னி தேவன் திரும்பினான்?” என்று கேட்டான்.(26)

வைசம்பாயனர் சொன்னார், “ஓ ஜனமேஜயா, அக்னிதேவன் மாஹிஷ்மதியில் வசித்து வந்தபோது, ஒரு காதலனாகப் புகழ்பெற்றான் என்று சொல்லப்படுகிறது[3].(27) (கங்குலியின் பதிப்பில் Lover “காதலன்” என்றும், மன்மதநாததத்தரின் பதிப்பில் Adulterer “சோரன்” என்றும் சொல்லப்பட்டுள்ளது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “சிறப்புமிக்க நெருப்பு தேவன், மாஹிஷ்மதியில் வாழ்ந்துவந்த போது ஒருமுறை ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டவனாக Act of adultery பிடிபட்டான்” என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், “முன்னம் அக்னி பகவான் அந்த மாஹிஷ்மதி நகரத்தில் வாசஞ்செய்து கொண்டு பரஸ்திரீயினிடம் விருப்பம் வைத்தவனாகக் கண்டுபிடிக்கப்பட்டானென்று கேட்டிருக்கிறீரல்லவா?” என்றிருக்கிறது.)மன்னன் நீலனுக்கு பேரழகு படைத்த ஒரு மகள் இருந்தாள். அவள் எப்போதும் வேள்வி நெருப்பின் அருகில் தனது தந்தையுடன் இருந்து, அதை {அக்னியை} வீரியத்துடன் சுடர்விட்டு எரிய வைத்தாள்.(28) மன்னன் நீலனின் வேள்வியில் நெருப்பு மூட்ட விசிறினாலும் எரியாமல், அந்த மங்கையின் அழகான இதழ்க் குவித்து ஊதிய மென்மையான காற்றினால் மட்டுமே அந்த அக்னி எரிந்தான்.(29) அக்னி அந்த அழகான மங்கையை தனக்கு மணமகளாக்கிக் கொள்ள விரும்பினான். அந்த மங்கையும் அவனை {அக்னியை} ஏற்றுக் கொண்டாள்.(30)

ஒரு நாள் அந்த அக்னிதேவன் ஒரு பிராமண வடிவை ஏற்றுக் கொண்டு, அந்த அழகானவளின் தோழமையை இன்பமாக அனுபவித்த போது மன்னன் நீலனால் கண்டறியப்பட்டான். எனவே, அந்த அறம்சார்ந்த மன்னன், அந்த பிராமணனைச் சட்டப்படி தண்டிக்க ஆணையிட்டான்[4].(31) (கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், “அக்னிபகவான் மானிட வடிவத்தோடு தன் விருப்பத்தை வாய்விட்டுச் சொன்னான். எல்லாருடைய கிருஹங்களிலும் இவ்வாறே சொன்னான். அந்தப் பெண்ணினாலும் அவன் அங்கீகரிக்கப்பட்டான். இது நீல ராஜனுக்குத் தெரியாது என்றும் வருவித்துக் கொள்க’ என்பதும் பழைய உரை” என்றிருக்கிறது.)இதனால் அந்த சிறப்பு வாய்ந்த தேவன் {அக்னி தேவன்} பெருங்கோபத்துக்குள்ளானான். இதைக் கண்ட அந்த மன்னன் மிகவும் வியந்து, தரையளவு சிரம் தாழ்த்தினான்.(32) பிறகு சிறிது காலம் கழித்து பிராமண வடிவில் வந்த அக்னி தேவனுக்கே தன் மகளை மணமுடித்துக் கொடுத்தான்.(33) அந்த தேவன் விபாவசு (அக்னி), மன்னன் நீலனின் மகளான அந்த அழகிய புருவம் கொண்டவளை ஏற்றுக் கொண்டு, அந்த ஏகாதிபதிக்கு {மன்னன் நீலனுக்கு} அருள் புரிந்தான்.(34) பிறகு, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுபவனான அக்னி, அம்மன்னனைத் {நீலனை} தன்னிடம் ஏதாவது வரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு சொன்னான். அந்த மன்னன் {நீலன்}, எப்போதும் போரில் தனது துருப்புகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது என்ற வரத்தைக் கேட்டான்.(35) அந்த நேரத்திலிருந்து, ஓ மன்னா {ஜனமேஜயா}, இதை அறியாமல் நீலனின் நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்த ஏகாதிபதிகள் அனைவரும் ஹுதாசனனால் {அக்னியால்} எரிக்கப்பட்டார்கள். (36)

ஓ குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே {ஜனமேஜயா}, அந்த நேரத்தில் இருந்து, மாஹிஷ்மதி என்ற அந்த நகரத்தில் இருந்த பெண்கள் மற்றவர்களால் (மனைவியாக) ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவர்கள் நினைத்தவாறு நடந்து கொள்ளவும், ஒரு குறிப்பிட்ட கணவனுக்கு கட்டுப்படாமல் இருக்கவும், அக்னிதேவன் தன் வரத்தின் மூலம் அவர்களுக்குக் கலவியில் சுதந்திரம் {சைரினிகளாக / ஸ்வைரினிகளாக இருக்க சுதந்திரம்} அளித்தான்.[5](37,38) (கும்பகோணம் பதிப்பில், “அந்தக் காலத்தில் அந்த மாஹிஷ்மதி நகரத்துப் பெண்கள் அதிகக் கட்டுக்குட்படாதவர்களாய்த் தம்மனம் போனபடி இருந்தனர். பெண்களுக்குக் கட்டுப்பாடில்லாமலிருக்கும்படி அக்னி வரம் கொடுத்தான். அங்கே மங்கையர்கள் சுதந்திரர்களாகத் தங்கள் விருப்பப்படி நடப்பது வழக்கம்” என்றிருக்கிறது.)மேலும், ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, அந்த நேரத்தில் இருந்து (மற்ற நாட்டு) ஏகாதிபதிகள், அக்னியின் மேல் கொண்ட அச்சத்தால் அந்த நகரத்தின் {மாஹிஷ்மதி நகரத்தின்} பக்கம் திரும்பாமல் இருந்தார்கள்.(39) அறம்சார்ந்த சகாதேவன், நெருப்பால் சூழப்பட்டு, அச்சத்தால் பீடிக்கப்பட்ட தனது துருப்பு வீரர்களைக் கண்டு, மலையென அசையாது இருந்தான். பிறகு தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தண்ணீரைத் தொட்டு, அந்த வீரன் (சகாதேவன்) அனைத்தையும் தன்வசப்படுத்தும் அக்னியிடம் இந்த வார்த்தைகளில் பேசினான்:(40)

“ஓ, வந்து சென்ற தடத்தைப் புகையால் பதிப்பவனே, நான் உன்னை வணங்குகிறேன். இந்த எனது முயற்சிகள் எல்லாம் உனக்காகவே செய்யப்படுகின்றன. ஓ அனைத்தையும் தூய்மை செய்பவனே {அக்னியே}, நீயே தேவர்களுக்கு வாயாக இருக்கிறாய், நீயே வேள்வியாகவும் இருக்கிறாய்.(41) நீ அனைத்தையும் தூய்மையாக்குவதால் பாவகன் என்றும் அழைக்கப்படுகிறாய். உன்னிடத்தில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யைச் சுமந்து செல்வதால் நீ ஹவ்யவாஹனன் என்றும் அழைக்கப்படுகிறாய். உன்னிடம் பேசவே வேதங்கள் வந்தன. எனவே நீ ஜாதவேதன் என்று அழைக்கப்படுகிறாய்.(42) தேவர்களுக்குத் தலைவனாக இருக்கும் நீ சித்திரபானு, அனலன், விபாவசு {சொர்க்கத்தின் வாயிலைத் திறப்பவன்}, ஹுதாசனன் {ஹோமங்களைப் புஜிப்பவன்}, ஜுவாலனன் {ஜ்வலிப்பவன்}, சிகி {தழலுள்ளவன்},(43) வைசுவானரன் {அனைவரிடமும் உள்ளவன்}, பிங்கேசன் {பசுமை நிறமுள்ளவற்றுள் சிறந்தவன்}, பிலவங்கன் {தாண்டிச் செல்பவன்}, பூரிதேஜன் {பேரொளியுள்ளவன்} என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறாய். குமரனுக்கு (கார்த்திகேயனுக்கு) {முருகனுக்கு} நீயே ஆதிமூலமாய் இருக்கிறாய். நீ புனிதமானவன், ருத்ரகர்ப்பனும், ஹிரண்யகிரீதனும் நீயே.(44) ஓ அக்னி, எனக்கு சக்தியைக் கொடு, வாயு எனக்கு உயிரைக் கொடுக்கட்டும், பூமி எனக்கு பலத்தையும் ஊட்டத்தையும் கொடுக்கட்டும், நீர் {தண்ணீர்} எனக்கு செழிப்பைக் கொடுக்கட்டும்.(45) ஓ அக்னி, நீர் பிறக்க முதன்மைக் காரணம் நீயே, பெரும் தூய்மை உடையவன் நீயே, தேவர்களில் முதன்மையானவன் நீயே, நீயே அவர்களுக்கு வாயாகவும் இருக்கிறாய். ஓ அக்னி, நீ என்னை உனது வாய்மையால் தூய்மைப்படுத்துவாயாக.(46) முனிவர்களும், பிராமணர்களும், தேவர்களும், அசுரர்களும், தினமும் தெளிந்த நெய்யை வேள்வியில் விதிப்படி ஊற்றுகின்றனர். அந்த வேள்விகளில் காட்சி அளிக்கும் உன்னிலிருந்து பிரகாசிக்கும் வாய்மைக் கதிர்கள் என்னைத் தூய்மையாக்கட்டும்.(47) புகையைக் கொடியாகக் கொண்டவனே, வாயுவால் ஏற்படும் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுவிப்பவனே, நீ அனைத்து உயிர்களிலும் இருக்கிறாய். ஓ அக்னி, உனது உண்மைச்சுடர்களால் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக.(48) அப்படி உன்னால் தூய்மைப்படுத்தப்படும் நான், ஓ மேன்மையானவனே {அக்னியே}, உன்னிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓ அக்னி, நீ எனக்கு மனநிறைவு, செழிப்பு, அறிவு மற்றும் மகிழ்ச்சியை அருள்வாயாக”, என்று வேண்டினான் {சகாதேவன்}”.(49)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “மேற்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஒருவன் அக்னிக்குள் {நெருப்புக்குள்} தெளிந்த நெய்யை ஊற்றினால், அவன் எப்போதும் செழிப்பும், தனது முழுகட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஆன்மாவும் அருளப்பட்டு, அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவான்.(50)

சகாதேவன் மறுபடியும் அக்னியிடம், “ஓ ஆகுதிகளைச் சுமந்து செல்பவனே, நீ ஒரு வேள்வியைத் தடை செய்யாதிருப்பாயாக” என்றான்.(51) 

மனிதர்களில் புலியான மாத்ரியின் மகன் {சகாதேவன்}, இதைச் சொல்லிவிட்டு, பீதியிலிருந்த தன் துருப்புகளின் முன்னிலையில், பூமியில் குசப்புற்களை விரித்து நெருப்பை எதிர்பார்த்து அதன் மேல் அமர்ந்தான்.(52) கண்டங்களை {கரைகளை} மீறாத கடலைப் போல அக்னி அவன் தலை மீது விழவில்லை. ஆனால் மறுபுறம் குருகுல இளவரசனும்,(53) மனிதர்களில் தேவனுமான அந்த சகாதேவனிடம் அக்னி அமைதியாக வந்து அனைத்து உறுதிமொழிகளையும் கொடுத்து, “ஓ குரு குலத்தவனே {சகாதேவா}, இந்த கோலத்திலிருந்து எழுந்திடுவாயாக. ஓ எழுவாயாக. நான் உன்னிடம் ஒரு முயற்சியையே செய்தேன் {உன்னை சோதித்துப் பார்த்தேன்}.(54) நான் உன் நோக்கத்தையும், தர்மன் மகனின் {யுதிஷ்டிரனது} நோக்கத்தையும் அறிவேன். ஆனால், ஓ பாரத குலத்தவரில் சிறந்தவனே {சகாதேவனே}, மன்னன் நீலனின் வழித்தோன்றல்களில் ஒருவன் இருக்கும்வரை, இந்த நகரம் என்னால் பாதுகாக்கப்பட்டிருக்கும். இருப்பினும், ஓ பாண்டுவின் மகனே {சகாதேவனே}, நான் உனது இதய விருப்பத்தை ஈடேற்றுகிறேன்” என்றான்.(55,56) 

அக்னியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, ஓ பாதர குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அந்த மாத்ரியின் மகன் இதயத்தில் மகிழ்ச்சியுடன் எழுந்தான். தனது கரங்களைக் குவித்து, சிரம் தாழ்த்தி அனைத்தையும் தூய்மையாக்கும் நெருப்பு தேவனை வணங்கினான்.(57) இறுதியாக அக்னி மறைந்ததும், அந்தத் தேவனின் கட்டளையால் மன்னன் நீலன் அங்கு வந்து மனிதர்களில் புலியான, போர்க்களத்தில் குருவான சகாதேவனை முறைப்படி வணங்கினான். சகாதேவன் அவனது வணக்கங்களை ஏற்றுக் கொண்டு, நீலனை தனக்குக் கப்பம் கட்டச் செய்தான்.(58,59) மன்னன் நீலனைத் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த வெற்றியாளனான மாத்ரியின் மகன் {சகாதேவன்}, மேலும் தெற்கு நோக்கி சென்றான். அந்த நீண்ட கரம் கொண்ட வீரன் பெரும் சக்தி கொண்ட திரைபுரத்தின்  மன்னனை {திரைபுரனைத்} தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(60) 

பிறகு தனது படைகளை பௌரவ நாட்டுக்கு எதிராகத் திருப்பி, அந்த ஏகாதிபதியை வீழ்த்தி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். பின்பு பெரும் முயற்சி செய்து சௌராஷ்டிராவின் {ஸுராஷ்டிரம்} மன்னன் அக்ரிதியையும், கௌசிகர்களின் குருவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். அந்த அறம் சார்ந்த இளவரசன் {சகாதேவன்}, சௌராஷ்டிர நாட்டில் தங்கி இருந்த போது, போஜகடத்தின் பீஷ்மகனுக்கும், புத்திகூர்மையுள்ள, இந்திரனின் நண்பனான அவனது மகன் ருக்மிக்கும் ஒரு தூதுவனை அனுப்பினான்.(61-63) தனது மகனுடன் கூடிய அந்த ஏகாதிபதி {பீஷ்மகன்}, கிருஷ்ணனுடனான உறவை நினைத்துப் பார்த்து, பாண்டு மகனின் {சகாதேவனின்} கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டான்.(64) பிறகு போர்க்களத்தின் குரு {சகாதேவன்}, மன்னன் ருக்மியிடம் இருந்து நகைகளையும், செல்வத்தையும் பெற்றுக் கொண்டு மேலும் தெற்கு நோக்கி படை நடத்தினான்.

பிறகு பெரும் சக்தியும் பலமும் கொண்ட அந்த வீரன் சூர்ப்பாரகனையும் தாலாகடனையும்,(65) தண்டகர்களையும் {தண்டகாவனத்தைச் சேர்ந்தவர்களையும்} அடக்கினான். பிறகு அந்த குரு வீரன், கடற்கரையில் வாழும் கணக்கிலடங்கா மிலேச்ச இனக் குழுக்களையும், (66) நிஷாதர்களையும், கர்ணபிராவணர்கள் என்ற மனித இறைச்சி உண்பவர்களையும், ராட்சதர்களும் மனிதர்களும் கலந்து பிறந்த காலமுகர்களையும்,(67) கோல மலையையும், ஸுரபிபட்டணம், தாமிரத்தீவு, ராமக மலை ஆகியவற்றை வென்றான்.(68) அந்த உயர் ஆன்ம வீரன், மன்னன் திமிங்கிலனையும், ஒற்றைக் கால் மனிதர்களான கேரகர்கள் என்ற காட்டுமிராண்டிக் கூட்டத்தையும் வென்றான்.(69) அந்தப் பாண்டுவின் மகன் {சகாதேவன்}, ஸஞ்சயந்தி என்ற நகரத்தையும், பாஷாண்டம், கரஹாடகம் என்ற நாடுகளுக்கும் தனது தூதுவர்களை மட்டுமே அனுப்பி, அவர்களைக் கப்பம் கட்ட வைத்தான்.(70) அந்த வீரன் {சகாதேவன்} பௌந்திரயர்களையும் {பாண்டியர்களையும்}, திராவிடர்களையும், உத்திர கேரளர்களையும் {வடகேரளர்களையும்}, {ஓட்ரர்கள், கேரளர்கள்},[6] (( பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்த இடத்தில் சோத்ரர்கள் என்று இருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், இது ஒருவேளை சோழர்களாக இருக்கலாம் என்று விளக்கப்பட்டிருக்கிறது.))ஆந்திரர்களையும், தாளவனர்களையும், கலிங்கர்களையும், உஷ்டிரகர்ணிகர்களையும்[7],(71) (கும்பகோணம் பதிப்பில், இவர்கள் “ஒட்டகக்காதர்கள்” என்ற அடிக்குறிப்பு இருக்கிறது)யவனர்களின் காண்பதற்கினிய அடவி நகரத்தையும் தனது கட்டுப்பாட்டில், கொண்டு வந்து அவர்களிடம் இருந்து கப்பம் வாங்கினான்.[8](72)

(கும்பகோணம் பதிப்பில், “அதன்பிறகு, தாம்ரபர்ணி நதிக்குச் சென்று கன்யாதீர்த்தத்தைக் கடந்து, தென்தேசமெல்லாம் ஜயித்த பின் ஸஹதேவன், அலைகள் நிரம்பின கடலின் வடகரையை அடைந்து பீமஸேனனுடைய புத்திரனான கடோத்கசனை நினைத்தான். நினைத்தவுடன் ராக்ஷஸனான கடோத்கசன் எதிரிற்காணப்பட்டான். பகைவரையழிப்பவனும், சிறந்த புத்திமானுமாகிய ஸஹதேவன் கடற்கரையிலுள்ள அந்தத் தாழ்வரையிலிருந்து கொண்டே மேரு மலைச் சிகரம் போல வந்த கடோத்கசனைப் பார்த்துத் தர்மராஜருடைய கட்டளைக்காக வர வேண்டுமென்று இன்சொல்லாகச் சொன்னான். உடனே கடோத்கசன் ராக்ஷஸச சேவகர்களோடு ஸஹதேவனை வணங்கி நின்றான். தர்மாத்மாவும், பகைவர ஜயிப்பவனுமாகிய ஸஹதேவன் அங்கிருந்து கொண்டே மிக்க தைரியமும், பயங்கரமாகிய உருவமுமுள்ளவனாகிய கடோத்கசனைப் புலஸ்திய குலத்தோரும் மஹாத்மாவுமாகிய விபீஷணருக்கு ஸ்நேஹத்தை முன்னிட்டுத் தூதுவிடுத்தான்” என்றிருக்கிறது. இந்தக் குறிப்பு வேறு எந்தப் பதிப்புகளிலும் இல்லை.)

ஓ மன்னர் மன்னா {ஜனமேஜயா}, அந்த எதிரிகளைக் கொல்பவன் {சகாதேவன்}, மாத்ரியின் மகனான புத்திகூர்மையுள்ளவன் கடற்கரைக்கு வந்து, பெரும் உறுதிகள் கொடுத்து புலஸ்தியரின் பேரனனான சிறப்பு மிகுந்த விபீஷணனிடம் தனது தூதுவர்களை அனுப்பினான். காலத்தின் செயலை மதிப்புடன் நினைத்துப் பார்த்த அந்த மேன்மையான ஏகாதிபதி {விபீஷணன்} விருப்பத்துடன் பாண்டு மகனின் {சகாதேவனின்} கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டான்.(73,74) அவன் {விபீஷணன்}, பாண்டுவின் மகனுக்கு பல்வேறு நகைகளையும், ரத்தினங்களையும், சந்தனத்தையும், பல தரப்பட்ட தெய்வீக ஆபரணங்களையும்,(75) விலையுயர்ந்த ஆடைகளையும், விலையுயர்ந்த முத்துகளையும் அனுப்பி வைத்தான். புத்திசாலித்தனம் கொண்ட சகாதேவன், அவை அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, தனது சொந்த நாட்டுக்குத் {இந்திரப்பிரஸ்தம்} திரும்பினான்.(76)
 
ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே, அந்த எதிரிகளை அழிப்பவன் {சகாதேவன்}, சமாதானத்தாலும், போராலும் பல மன்னர்களை வீழ்த்தி, அவர்களைத் தனக்குக் கப்பம் கட்டச் செய்து தனது சொந்த நகரத்திற்குத் {இந்திரப்பிரஸ்தம்} திரும்பினான்.(77) ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, தான் கொண்டு வந்த அனைத்து செல்வத்தையும் நீதிமானான யுதிஷ்டிரனிடம் கொடுத்து, தன்னை வெற்றியாளனாகக் கருதி, தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழத்தொடங்கினான் {சகாதேவன்}” {என்றார் வைசம்பாயனர்}[9].(78)(கும்பகோணம் பதிப்பில் இதற்கு அடுத்து வரும் இரண்டு அத்தியாயங்களில், சோழ மற்றும் பாண்டிய நாட்டுகளுக்கு சகாதேவன் சென்றதும், சகாதேவனால் அனுப்பப்பட்ட கடோத்கசன் விபீஷணனிடம் சென்று காணிக்கை வாங்கி வந்தும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதன் பிறகே நகுலனின் மேற்றிசை பயணம் சொல்லப்படுகிறது. கங்குலி, மன்மதநாததத்தர் மற்றுப் பிபேக்திப்ராய் பதிப்புகளில் மேற்கண்டவை சொல்லப்படவில்லை. அந்தத் தகவல்கள் சுவாரசியம் நிறைந்தவையாகவும், தமிழகம் மற்றும் இலங்கை சார்ந்தவையாகவும் இருப்பதால், வாசகர்கள் அதையும் அறிய வேண்டும் என்பதற்காக கும்பகோணம் பதிப்பில் உள்ளதை உள்வாங்கி வேறு சொற்களில் கீழே தருகிறேன். கங்குலியில் இல்லாதது என்பதால் அவற்றுக்கு ஸ்லோக எண்கள் தரவில்லை.)

ஜனமேஜயன், “பிராமணர்களில் சிறந்தவரே, கடோத்கசன் வரவையும், அவன் இலங்கைக்குச் சென்றதையும், விபீஷணனைக் கண்டதையும், காவேரியைக் கண்டதையும் கேட்க விரும்புகிறேன். வரிசையாக எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.

வைசம்பாயனர் சொன்னர், “ஓ ஜனமேஜயா, சகாதேவனின் ஆற்றலையும், சக்தியையும் குறித்து நடந்தவாறே சொல்கிறேன் கேட்பாயாக. அவன் தன் ஆற்றலால் காடுகளிலும், தீவுகளில் உள்ளவர்களைப் போரில் வென்று, தென்திசையைக் கட்டுப்படுத்தி, சோழ நாட்டுக்குச் சென்றான். அப்போது அவன், பலவகை பறவைகளால் அடையப்பட்டதும், முனிவர்களால் அலங்கரிக்கப்பட்டதுமான காவிரி ஆற்றங்கரையை அடைந்தான். ஆச்சா, லோத்திரம், மருதம், வில்வம், நாவல், இலவு, முருக்கு, கடம்பு, ஏழிலைம்பாலை, குமிழ், நெல்லி, பெருங்கிளைகளைக் கொண்ட ஆல், புளி, அத்தி, வன்னி, பலாசம், அரசு, கருங்காலி, இலந்தை, அசவகர்ணம், மா, புண்டரகம், வாழை முதலிய மரங்கள் அங்கே நிறைந்திருந்தன. சக்ரவாகம், வாத்து, நீர்க்காக்கை, கடற்காக்கை, அன்றில், நீர்க்கோழி முதலிய நீர்ப்பறவைகளை கூட்டங்கூட்டமாக இருந்தன. முனிவர்கள் பலரின் ஆசிரமங்களாலும், வழிபடுவதற்குரிய மரங்களாலும் அது நிறைந்திருந்தது. வேதங்களிலும், வேதாங்கங்களிலும் கரைகண்ட தூய்மையான பிராமணர்கள் அங்கே நிறைந்ததிருந்தார்கள். சில இடங்களில் கரையில் முளைத்திருக்கும் மரங்கள் மிகுதியாக மலர்ந்திருப்பதனால் அது மாலைகளை அணிந்திருப்பது போன்றிருந்தது. சில இடங்களில் செங்கழுநீர், குவளை, செவ்வல்லி, ஆம்பல், தாமரை முதலியவைகள் மலர்ந்திருக்கும் ஆறுகளில் சிறந்த அந்தக் காவிரியைக் கண்ட சகாதேவன், “நம் நாட்டில் கங்கை சிறந்திருப்பது போல இங்கே காவேரி சிறந்திருக்கிறாள்” என்று மகிழ்ந்தான்.

அந்த ஆற்றைத் தன் துருப்புகளுடன் கடந்து தென்கரையை அடைந்தான். பாண்டவன் அந்நாட்டுக்கு வந்திருப்பதைக் கேட்டு அந்நாட்டு மக்கள் விருப்பத்துடன் அவனைக் காணச் சென்றனர். காண்பதற்கினிய திரமிடர்களில் {தமிழர்களில்} ஆடவரும், மங்கையரும் அங்கே சென்று அந்தப் பாண்டவனை மகிழ்ச்சியுடன் கண்டனர். மென்மையான உடலும், அகன்ற விழிகளைக் கொண்டவனும், பூமியில் தேவனுக்கு ஒப்பானவனும், வியத்தகு பேரழகனுமான சகாதேவன் போகும்போது அந்நாட்டினர் கண்ணிமைக்காமல் அவனைக் கண்டனர். குமாரக்கடவுளுக்கு ஒப்பான அந்த சகாதேவனை மங்கலப் பாடல்களுடன் துதித்து, விரும்பத்தக்க பற்பல உயர்ந்த பொருட்களையும், மற்றும் விரும்பத்தக்க பல வசதிகளையும் அளித்து அவர்கள் அவனை உபசரித்தனர்.

சிறந்த கரங்களைக் கொண்டவனான அந்த சகாதேவனும் மகிழ்ச்சியுடன் அவர்களைக் கண்டு, அவர்களுக்கு விடைகொடுத்தனுப்பி தென்திசைக்குப் புறப்பட்டான். அங்கே சோழ மன்னனைத் தன் தூதன் மூலம் விரைவாக வசப்படுத்தி, அவனிடமிருந்து ரத்தினங்களைப் பெற்றுக் கொண்டு பாண்டிய நாட்டுக்குச் சென்றான். சோழ நாட்டிலுள்ள மற்ற மனிதர்கள் சகாதேவனைக் காண்பதில் ஆசை தீராதவர்களாக அவனைப் பின்தொடர்ந்து சென்று பாண்டிய நாட்டை அடைந்தனர். ஓ ஜனமேஜயா, பிறகு சகாதேவன், காட்டில் திரியும் யானைகளையும், புலிகளையும், மான்களையும், பல விலங்குக் கூட்டங்களையும், கிளிகளையும், மயில்களையும், கழுகுகளையும், காட்டுக் கோழிகளையும் பார்த்துக் கொண்டே பாண்டிய நாட்டை அடைந்தான்.

அர்ஜுனனுக்கு மாமனாகிய பாண்டிய மன்னனிடம் தூதர்களை அனுப்பினான். பாண்டியன் மலயத்வஜன் சகாதேவனுடைய ஆணையை அன்புடன் அங்கீகரித்தான். அர்ஜுனன் மனைவியும், பாண்டிய அரசமகளும், அழகிற்சிறந்தவளும், நல்ல லக்ஷணங்கள் பொருந்தினவளும், பெண்களிற் சிறந்தவளுமாகிய சித்திராங்கதை சகாதேவன் வந்திருப்பதை அறிந்து பெரும் அளவிலான ரத்தினங்களை அன்புடன் அனுப்பினாள். அந்த நிகரற்ற மதிப்பைக் கண்டு சகாதேவனும் மகிழ்ச்சியுடன் தன் அண்ணனின் மகனான பப்ருவாகனனுக்கு ரத்தினங்களைப் பெரும் அளவில் அளித்து, அர்ஜுனன் மாமனும், திராவிட நாட்டுக்கும், மணலூர் நகரத்திற்கும் மன்னனுமான மலயத்வஜப் பாண்டியனைத் தூதர்கள் மூலம் வசப்படுத்தி, அவனிடத்திலிருந்து ரத்தினங்களைப் பெற்றுக் கொண்டு தமிழ் மக்களால் சூழப்பட்டவனாக அகஸ்தியருக்கு இருப்பிடமும், தேவலோகத்துக்குச் சமானமுமான சிறந்த மலையை அடைந்தான்.[10](கங்குலியின் பதிப்புப் படி சித்திராங்கதை மணிபுரத்தைச் சேர்ந்தவள். அவளது தந்தையின் பெயர் சித்திரவாகனன்.)

ஓ ஜனமேஜயா, அந்த மலையை வலம் வந்த சகாதேவன், தெளிவானதும், குளிர்ச்சியானதும், தீர்த்தத்தைக் கொண்டதும், மனத்தைக் கவர்வதுமான தாம்ரபர்ணி என்கிற ஆற்றைக் கடந்து கடற்கரையை அடைந்தான். 

ஓ பாரதா, ஓ மன்னர்மன்னா, ஓ ஜனமேஜயா, சிறந்த கரங்களைக் கொண்ட மன்னன் சகாதேவன் புத்திமான்களில் சிறந்தவர்களும், நல்ல ஆலோசனை வழங்கக்கூடியவர்களுமான அமைச்சர்களுடன் ஆலோசித்து, தன் அண்ணன் பீமனின் மகனான கடோத்கசனை நினைத்தான். நினைத்த மாத்திரத்திலேயே அந்த ராட்சசனும் {கடோத்கசனும்} அங்கே வந்தான். நெடும் உயரமும், பெருங்கைகளும் கொண்ட அவன் இருண்ட மேகத்தைப் போல இருந்தான். அவன் பொன்குண்டலங்களையும், விசித்திரமான முத்தாரங்களையும், தோள்வளைகளையும், ரத்தினச்சதங்கைகளையும், பொன் மாலையையும், அரைக்கட்டையும், கடகங்களையும், தோள்வளைகளையும், கிரீடத்தையும் அணிந்திருந்தான். அவன் நீண்ட கோரப்பற்களையும், சிவந்த கூந்தலையும், செம்பட்டை நிறமான மீசையையும் கொண்டிருந்தான். பயங்கரமான உடல் படைத்த அவன் மேனியில் செஞ்சந்தனஞ்சூடி, மெல்லிய ஆடை தரித்திருந்தான். பெரும்பலசாலியான அந்தக் கடோத்கசன் தன் வலிமையினால் பூமியை நடுங்கச் செய்தபடி அங்கே வந்தான். மலை போல இருந்த அந்தக் கடோத்கசனைக் கண்டு அங்குள்ள மக்கள் அனைவரும் சிங்கத்தைக் கண்ட அற்ப விலங்குகளைப் போல அஞ்சி ஓடினர். புலஸ்தியரிடம் செல்லும் ராவணனைப் போல சகாதேவனிடம் அவன் வந்தான்.

ஓ மன்னா, சகாதேவனைக் கண்ட கடோத்கசன் கரங்குவித்து அவனை வணங்கிப் பணிந்து, “நான் செய்ய வேண்டியதென்ன?” என்று கேட்டான்.

மேரு மலையின் சிகரம் போல வந்து நின்ற அந்தக் கடோத்கசனைக் கண்ட சகாதேவன் அவனை இருகைகளாலும் வாரி அணைத்து, உச்சிமுகர்ந்து, அமைச்சர்களுடன் சேர்ந்து அவனைக் கௌரவித்து, அன்புடன், “பெரும்பலம் கொண்ட குழந்தாய், கப்பத்தின் பொருட்டு அனுப்பப்படும் நீ, லங்காபுரிக்குச் சென்று, ராட்சசர்களின் மன்னனும், உயர் ஆன்மா கொண்டவருமான விபீஷணனைக் கண்டு ராஜசூய வேள்விக்கு வேண்டிய பல வகையான ரத்தினங்களைப் பெரும் அளவில் பெற்றுக் கொண்டு திரும்பி வருவாயாக” என்றான்.

ஓ ஜனமேஜயா, சகாதேவனால் இவ்வாறு சொல்லப்பட்ட கடோத்கசன், மனமகிழ்ந்து, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லித் தென்திசை நோக்கிச் சென்றான். ஓ மன்னா, சகாதேவனை வலம் வந்து, லங்கையை நோக்கிப் புறப்பட்ட அந்தக் கடோத்கசன், ஆமைகளும், முதலைகளும், சிறுமீன்களும், பெருமீன்களும், நீர்யானைகளும், சிப்பிகளும், சங்குகளும் மிகுதியாக நிரம்பியிருக்கும் கடலைக் கண்டான். ஓ மன்னர்களுக்கு மன்னா, அந்தக் கடோத்கசன் ராமன் கட்டிய அணையை {பாலத்தைக்} கண்டு, அவனுடைய சக்தியை நினைத்துக் கொண்டே கடலின் தென்கரையைச் சேர்ந்தான். 

சுற்று மதில்களைக் கொண்டதும், அழகான கோபுர வாயில்களைக் கொண்டதும், வெண்மையும், செம்மையுமான பல மாட மாளிகைகளால் நிறைந்திருப்பதும், அழகிய மிருதங்க ஒலி நிறைந்ததும், எக்காலத்திலும் காய்த்துப் பூத்திருக்கும் மரங்களைக் கொண்ட தோட்டங்களால் அழகாயிருப்பதும், மலர்களின் மணம் நிரம்பிய அரச சாலைகளைக் கொண்டதும், இந்திரனின் அமராவதிக்கு நிகரானதுமாக பேரெழிலுடன் திகழ்ந்த லங்கா நகரத்திற்குள் கடோத்கசன் நுழைந்தான். சூலம், பராஸம் முதலிய ஆயுதங்களைத் தரித்துப் பலவித அலங்காரங்களுடன் இருக்கும் பல ராட்சசர்களையும், தேவலோகத்து மலர்மாலைகளைச் சூடி, தெய்வீக ஆபரணங்களை அணிந்து கொண்டு, மதுவினால் சிவந்த கண்களையும், பருத்த பின்புறங்களையும், கொங்கைகளையும் கொண்ட அழகிய பெண்களையும் அங்கே கடோத்கசன் கண்டான். பீமசேனன் மகனான கடோத்கசனைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சியும், வியப்புமடைந்தனர்.

இந்திரனின் மாளிகைக்கு நிகரான அரச மாளிகையை அடைந்த கடோத்கசன், அங்கே இருந்து வாயிற்காப்போனிடம், “கௌரவர்களில் சிறந்தவரும், பெரும்பலசாலியும் பாண்டுவென்ற பெயர் படைத்தவருமான மன்னன் ஒருவர் இருந்தார். அவருடைய இளைய மைந்தர் சகாதேவனைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். நான் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரால் கப்பத்தின் பொருட்டு அனுப்பப்பட்ட தூதனாவேன். மன்னர்களுக்கு மன்னரான விபீஷணரைப் பார்க்க விரும்புகிறேன். விரைவில் சென்று என்னைக் குறித்து அவரிடம் தெரிவிப்பாயாக” என்றான். ஓ ஜனமேஜயா, அந்தச் சொல்லைக் கேட்ட வாயிற்காப்போன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அரண்மனைக்குள் சென்றான். விபீஷணனிடம் தூதன் வந்திருப்பதைக் குறித்துத் தெரிவித்தான். விபீஷணன் “அந்தத் தூதனை என்னிடம் அழைத்து வருவாயாக” என்றான்[11].(இதன்பிறகு கடோத்கசன், விபீஷணனைச் சந்திக்கிறான். பாண்டவர்களின் வரலாறை ஆதிமுதல் அந்தவரை சுருக்கமாக அவனுக்குத் தெரிவித்து, அப்படிப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ராஜசூயம் செய்வதாகவும், அதற்கு விபீஷணன் கப்பம் அளிக்க வேண்டும் என்றும் கடோத்கசன் சொல்கிறான். விபீஷணன் உடன்படுகிறான். பெருஞ்செல்வத்தைக் கப்பமாக கடோத்கசனிடம் கொடுத்து அனுப்புகிறான்.)

ஓ ஜனமேஜயா, ராட்சசர்களோடு கூடிய கடோத்கசன் ரத்தினங்களை எடுத்துக் கொண்டு லங்கையிலிருந்து சகாதேவனிடம் விரைவாகச் சென்றான். கடலைக் கடந்து ரத்தினங்களைக் கொண்டு வந்திருக்கும் பயங்கரமான ராட்சசர்களையும், கடோத்கசனையும் சகாதேவன் கண்டான். அங்குள்ள தமிழர்கள் அரக்கர்களைக் கண்டு அஞ்சி ஓடினர். பிறகு கடோத்கசன் சகாதேவனை அடைந்து கரங்குவித்து நின்றான். சகாதேவன், ரத்தினக் குவியலையும், கடோத்கசனையும் கண்டு களிப்புற்று அவனை ஆறத்தழுவிக் கொண்டு அரக்கர்களிடம் அன்பு பாராட்டினான். தமிழர்களனைவருக்கும் விடைகொடுத்தனுப்பின பிறகு தான் புறப்படத் தொடங்கினான். இவ்வாறு ஆற்றலினாலும், இனிய சொல்லினாலும் வெற்றிச் செல்வம் பொருந்திருப்பதனால் மன்னர்களை வென்று, கப்பம் கட்டச் செய்த அந்த வீரன், ராட்சசர்களுடன் சேர்ந்து, ரத்தினமயமான பனைமரங்களை எடுத்துக் கொண்டு பூமியை அதிரச் செய்கிறவன் போல இந்திரப்ரஸ்தத்தில் நுழைந்தான்.

ஓ ஜனமேஜயா, சகாதேவன் யுதிஷ்டிரனைக் கண்டு கரங்குவித்து வணங்கித் துதித்து, அவனால் பாராட்டப்பட்டான். யாருக்கும் கிடையாத மிகுதியான செல்வக்குவியல்கள் இலங்கையிலிருந்து வந்தனவற்றைக் கண்டு நீதிமானான மன்னன் பெரும் மகிழ்ச்சியையும், பெரும் வியப்பையும் அடைந்தான். ஓ பாரதா, ஓ ஜனமேஜயா, ஆயிரங்கோடிகளுக்கும் மேற்பட்ட பொன்களையும், பல வகை ரத்தினங்களையும், பசுக்களையும், வெள்ளாடு, செம்மறியாடு, எருமைகளையும், உயர் ஆன்மாவும், நீதிமானுமான மன்னனிடம் ஒப்படைத்து, தன் காரியத்தை நிறைவேற்றி சகாதேவன் சுகமாக வசித்தான்” {என்றார் வைசம்பாயனர்}.[12]

நகுலனின் மேற்றிசைப் போர்ப்பயணம் – சபாபர்வம் பகுதி 31-(திக்விஜய பர்வம் – 07)-நகுலன் மேற்கு நோக்கி படையெடுப்பது; நகுலன் அடக்கிய நாடுகளின் விபரம்…

வைசம்பாயனர் சொன்னார், “நான் இப்போது உன்னிடம் நகுலனின் சாதனைகளையும், வெற்றிகளையும் குறித்தும் முன்பு வாசுதேவன் {கிருஷ்ணன்} அடக்கிய திசையை அந்த மேன்மையானவனும் {நகுலனும்} எப்படி அடக்கினான் என்பதையும் உரைக்கப் போகிறேன்.(1) புத்திகூர்மையுள்ள நகுலன், தங்கள் கூச்சலாலும், சிங்க முழக்கங்களாலும் நடுங்கச் செய்த வீரர்களாலும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியாலும் உலகை நடுங்கச் செய்த படை சூழ, காண்டவப்பிரஸ்தத்தில் இருந்து மேற்கு நோக்கி சென்றான்.(2,3)

அந்த வீரன் {நகுலன்} முதலில் (தேவர்ப்படைத் தளபதி) கார்த்திகேயனுக்கு {முருகனுக்குப்} பிடித்தமான மலைநாடான ரோஹீதகத்தைத் தீவிரமாகத் தாக்கினான். அந்த நாடு காண்பதற்கு இனிமையாகவும், செழிப்புடனும், பசுக்கள் நிறைந்து, அனைத்துவிதமான செல்வங்களும், உற்பத்திகளும் நிறைந்தாக இருந்தது.(4) அந்த நாட்டின் மத்தமயூரகர்களுடன் பாண்டுவின் மகன் {நகுலன்} நடத்திய போர் கடுமையாக இருந்தது. அதன்பிறகு, அந்த சிறப்புமிகுந்த நகுலன், பல பொருட்களால் நிறைந்த சைரீஷகம் என்ற முழு பாலைவனப் பகுதியையும் அதே போன்ற மற்றொன்றான மஹேத்தத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். அரசமுனியான ஆக்ரோசன் என்பவனுடன் அந்த வீரன் கடும்போர் புரிந்தான்.(5,6) 

பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, அந்த நாட்டின் அப்பகுதியை விட்டு அகன்று தசார்ணர்களையும், சிபிக்களையும், திரிகர்த்தர்களையும், அம்பஷ்டர்களையும், மாலவர்களையும், கர்ப்படர்களின் ஐந்து இனக்குழுக்களையும், இரு பிறப்பாளர்களான {பூணூல் அணிந்த} மத்தியமகேயர்களையும் வாடதானர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். வளைந்த சுற்றுகளைக் கொண்ட தனது பயணத்தில் அந்த மனிதர்களில் காளை, உத்ஸவ-ஸங்கேதகர்கள் என்ற (மிலேச்ச) இனக்குழுக்களை வெற்றி கொண்டான். அந்தச் சிறப்பு மிகுந்த வீரன் {நகுலன்}, கடற்கரையில் வசித்த பெரும் பலம் வாய்ந்த கிராமணீயர்கள்,(7-9) சூத்திரர்கள், சரஸ்வதி நதிக்கரையில் இருந்த ஆபிரர்கள், மீன்பிடி தொழில் செய்த அனைத்து இனக்குழுக்களையும், மலைகளில் வசித்தவர்களையும்,(10) ஐந்து ஆறுகளின் பெயரால் {பஞ்சநதம் என்று} அழைக்கப்படும் நாட்டையும், அமர மலையையும், உத்தரஜ்யோதிஷம் என்ற நாட்டையும், திவ்யகடம் என்ற நகரத்தையும், துவாரபாலர்கள் என்ற ஒருவகை இனக்குழுவையும் விரைவாகத் தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தான். அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, ராமடர்களையும், ஹாரஹூணர்களையும் {ஹாரர்களையும், ஹூணர்களையும்}, மேற்கிலிருந்த பல்வேறு மன்னர்களையும் வீழ்த்தினான்.(11-12) 

அங்கே அப்படி தங்கியிருந்த போது நகுலன், ஓ பாரதா {ஜனமேஜயா}, வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்குத்) தூதுவர்களை அனுப்பினான்.(13) யாதவர்கள் அனைவருடன் சேர்ந்து வாசுதேவன் {கிருஷ்ணன்} அவனது {நகுலனின்} கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டான். அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரன் {நகுலன்}, மத்ர நாட்டு நகரமான சாகலத்துக்குச் சென்று,(14) தனது மாமன் சல்லியனைப் பாண்டவர்களின் கட்டுப்பாட்டை அன்பினால் ஏற்க வைத்தான். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, விருந்தோம்பலுக்கும், சல்லியனின் உபசரிப்புக்கும் தகுதியுடைய அந்த சிறப்பு வாய்ந்த இளவரசன் {நகுலன்}, தனது மாமனால் {சல்லியனால்} நன்கு உபசரிக்கப்பட்டான்.(15) போரில் திறன்பெற்ற அந்த இளவரசன் {நகுலன்}, சல்லியனிடம் இருந்து பெரும் எண்ணிக்கையிலான நகைகளையும், ரத்தினங்களையும் பெற்றுக் கொண்டு அவனது நாட்டை விட்டு அகன்றான். 

பிறகு அந்த பாண்டுவின் மகன் {நகுலன்}, கடற்கரையில் வசித்த மிலேச்சர்களையும்,(16) முரட்டு இனக்குழுக்களான பஹ்லவர்களையும், {பர்ப்பரர்களையும்}, கிராதர்களையும், யவனர்களையும், சகர்களையும் தனது பலத்தால் அடக்கினான்.(17) இப்படி பல்வேறு ஏகாதிபதிகளை வீழ்த்தி, அவர்களைத் தனக்குக் கப்பம் கட்ட வைத்த குருக்களில் முதன்மையான நகுலன், செல்வங்களை நிறைத்துக் கொண்டு, தனது சுவடுகளைப் பின்பற்றித் தனது சொந்த நகரத்திற்குத் திரும்பினான். ஓ மன்னா {ஜனமேஜயா}, பத்தாயிரம் ஒட்டகங்கள் மிகவும் சிரமத்துடன் சுமந்து வரக்கூடிய அளவுக்குப் பெரும் செல்வத்தை அவற்றின் முதுகில் ஏற்றிக்கொண்டு வந்தான் நகுலன்.(18) இந்திரப்பிரஸ்தத்தை அடைந்த அந்த மாத்ரியின் அதிர்ஷ்டக்கார வீர மகன் {நகுலன்}, தான் கொண்டு வந்த அனைத்து செல்வத்தையும் யுதிஷ்டிரனிடம் கொடுத்தான்.(19)

ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே முன்பொரு காலத்தில் வாசுதேவனால் {கிருஷ்ணனால்} அடக்கப்பட்ட வருண தேவனின் திசையான மேற்கிலிருந்த நாடுகளை நகுலனும் வென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(20)

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading