எதிரியை அழிக்கப் புறப்பட்ட மூன்று வீரர்கள் -சபாபர்வம் பகுதி 20-(ஜராசந்த வத பர்வம் – 01)ஜராசந்தனுக்கான நேரம் வந்துவிட்டதை கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு எடுத்துரைத்தல்; அதற்கு ஒரு திட்டத்தை வகுத்தல்; யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணன் அர்ஜுனனையும் பீமனையும் அனுப்பி வைக்குமாறு கோரல்; யுதிஷ்டிரன் கிருஷ்ணனைப் புகழ்தல்; யுதிஷ்டிரனிடம் விடைபெற்று கிருஷ்ணன், அர்ஜுனன் மற்றும் பீமன் ஆகியோர் மகதத்தை நோக்கிக் கிளம்புதல்…
“கிருஷ்ணன், “ஹம்சனும் டிம்பகனும் வீழ்ந்துவிட்டனர். தனது ஆதரவாளர்களுடன் கம்சனும் கொல்லப்பட்டான். எனவே, ஜராசந்தனின் அழிவுக்கு நேரம் வந்துவிட்டது.(1) தேவர்களாலோ அசுரர்களாலோ (அல்லது இருவரும் சேர்ந்தோ) அவனைப் போரில் வீழ்த்த முடியாது. இருப்பினும், வெறுங்கையால் நடக்கும் தனி மோதலில் {மற்போரில் / மல்யுத்தத்தில்} அவனை வீழ்த்தமுடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்.(2) என்னிடம் கொள்கையும், பீமரிடம் பலமும், அர்ஜுனனிடம் வெற்றியும் உள்ளன. எனவே, ராஜசூய வேள்வி நடத்துவதற்கு முன்னோடியாக மகத ஆட்சியாளனின் {ஜராசந்தனின்} அழிவை நாம் நிச்சயம் அடைய வேண்டும்.(3) நாங்கள் மூவரும் ரகசியமாக அந்த ஏகாதிபதியைச் சந்திக்கும்போது, அவன் நிச்சயமாக, எங்களில் ஒருவருடன் தனிப்போரில் ஈடுபடுவான்.(4) அவமானத்திற்கு அஞ்சியும், பேராசை மற்றும் செருக்கினாலும் அவன் நிச்சயமாக பீமரையே மோதலுக்கு அழைப்பான். செருக்கால் கொழுத்த மனிதனை மரணம் வீழ்த்துவதைப் போல, பெரும் கரமும் பலமும் கொண்ட பீமசேனர் அம்மன்னனுக்கு அழிவை ஏற்படுத்துவார்.(4,6) நீர் {யுதிஷ்டிரரே} என் இதயத்தை அறிந்தீரானால், என்னில் உமக்கு நம்பிக்கை இருக்குமானால், காலத்தைக் கடத்தாமல் அதற்கான உறுதிமொழியாக எனக்கு பீமரையும் அர்ஜுனனையும் கொடுப்பீராக” என்று கேட்டான் {கிருஷ்ணன்}.(7)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்த மேன்மையானவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்ட யுதிஷ்டிரன், மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் நிற்கும் பீமனையும் அர்ஜுனனையும் கண்டு,(8) “ஓ அச்யுதா {கிருஷ்ணா}, எதிரிகளை அழிப்பவனே, அப்படிச் சொல்லாதே. நீயே பாண்டவர்களின் தலைவன். நாங்கள் உன்னைச் சார்ந்தே இருக்கிறோம்.(9) ஓ கோவிந்தா {கிருஷ்ணா}, நீ சொல்வதெல்லாம் ஞானம் கொண்ட ஆலோசனைகளே. செல்வத்தால் முதுகு காட்டப்பட்ட ஒருவனை எப்போதும் நீ வழிநடத்த மாட்டாய்.(10) உனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நான், ஜராசந்தன் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டதாகக் கருதுகிறேன். அவனால் {ஜராசந்தனால்} அடைத்து வைக்கப் பட்டுள்ள மன்னர்கள் ஏற்கனவே விடுவிக்கப் பட்டதாகக் கருதுகிறேன். ராஜசூயம் என்னால் சாதிக்கப்பட்டதாகவே கருதுகிறேன்.(11,12)
நீ இல்லாமல், அறம், பொருள், இன்பம் ஆகியவை பறிக்கப்பட்டு, நோயால் பீடிக்கப்பட்ட துயர் நிறைந்த மனிதன் போல நான் வாழத்துணிய மாட்டேன்.(13) பார்த்தனால் {அர்ஜுனனால்} சௌரி {கிருஷ்ணன்} இல்லாமல் வாழ முடியாது. அதே போல சௌரியாலும் பார்த்தன் இல்லாமல் வாழ முடியாது. கிருஷ்ணனாலும் அர்ஜுனனாலும் அடைய முடியாத பொருட்கள் உலகத்தில் எதுவும் இல்லை.(14) அழகிய பீமன், பெரும் பலம் கொண்ட மனிதர்களில் முதன்மையானவன் ஆவான். நீங்கள் இருவரும் {கிருஷ்ணனும் அர்ஜுனனும்} அவனுடன் இருக்கும்போது, பெரும் புகழ் பெற்ற அவனால் {பீமனால்}, எதைத்தான் சாதிக்க முடியாது?(15) சரியாக வழிநடத்தப்பட்ட துருப்புகள் எப்போதும் அருமையான பணியையே செய்யும். தலைவன் இல்லாத படை மந்தமானது என்று ஞானமுள்ளோரால் சொல்லப்படுகிறது. எனவே படைகள் எப்போதும் அனுபவம் வாய்ந்த தளபதிகளாலேயே வழிநடத்தப்பட வேண்டும்.(16) தாழ்வாக இருக்கும் இடங்களுக்கே, ஞானமுள்ளோர் நீரை {தண்ணீர்} வழிநடத்துவர். மீனவர்கள் கூட (குளத்தில் உள்ள) நீரைத் துளைகள் மூலம் வெளியேற்றுகின்றனர். (அனுபவம் வாய்ந்த தலைவர்கள், எதிரியின் திட்டத்தில் உள்ள ஓட்டைகளையும், தாக்கக்கூடிய பகுதிகளையும் எப்போதும் கண்டுபிடித்து தங்கள் படைகளை நடத்துவர்).(17)
எனவே நாங்கள் அரசியல் அறிவியலை அறிந்த உலகப் புகழ் கொண்ட கோவிந்தனின் தலைமையை ஏற்கவே அனைத்துவகையிலும் முயற்சிப்போம்.(18) ஒருவரின் காரிய சாதனையை வெற்றிகரமாக முடிக்க, ஞானத்தையும் கொள்கையையும் பலமாகக் கொண்டும், காரண காரியங்களில் உள்ள அறிவோடும் நம்மை வழிநடத்தும் கிருஷ்ணனை தேரில் அமர்த்த வேண்டும்.(19) எனவே இந்தக் காரிய சாதனைக்கு, பிருதையின் {குந்தியின்} மகனான அர்ஜுனன், யாதவர்களில் முதன்மையான கிருஷ்ணனைத் தொடரட்டும், பீமன் அர்ஜுனனைத் தொடரட்டும். கொள்கை, நற்பேறு, மற்றும் பலம் ஆகியவையே, பராக்கிரமத்துடன் கூடிய வெற்றியைக் கொண்டு வரும்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(20)
வைசம்பாயனர் சொன்னார், “இப்படி யுதிஷ்டிரனால் சொல்லப்பட்டதும், பெரும் சக்தி வாய்ந்த கிருஷ்ணன், அர்ஜுனன், பீமன் ஆகிய மூவரும், ஏற்கும் சொல் கொண்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் ஆசி பெற்று, ஸ்நாதக பிராமணர்களைப் போல உடையணிந்து பிராகசித்தபடி மகத நாட்டை நோக்கிச் செல்ல ஆயத்தமானார்கள்.(21) சூரியனையும், சந்திரனையும், நெருப்பையும் போன்ற மேன்மையான சக்தியையும், உடலையும் கொண்டு, சிறைபட்டிருக்கும் தங்கள் உறவு மன்னர்களின் நிலையை நினைத்துக் கோபம் கொண்ட நெருப்பைப் போல அவர்கள் சென்றனர். போரில் தோல்வி காணாத கிருஷ்ணன், அர்ஜுனன் மற்றும் பீமனை தேர்களில் கண்ட மக்கள், அவர்கள் ஏற்கனவே காரியத்தைச் சாதித்து விட்டதாகவும், ஜராசந்தன் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டதாகவும் நினைத்தார்கள்.(22-24)
சிறப்பு மிக்க அந்த இணை (கிருஷ்ணனும் அர்ஜுனனும்), (அண்டத்தின்) அனைத்து செயல்களையும், அனைத்து உயிரினங்களிலும் உள்ள அறம், பொருள், இன்பம் ஆகியவற்றையும் இயக்குவதில் நிபுணர்களாவர்.(25) குரு நாட்டில் இருந்து கிளம்பி, குருஜாங்கலத்தைக் கடந்து, அழகான தாமரைத் தடாகம் ஒன்றை அடைந்தார்கள். பிறகு காலகூட மலைகளைக் கடந்து,(26) தங்கள் பெயரையே கொண்ட மலைகளில் உற்பத்தியாகும் கண்டகி, சதாநீரை (காரடோயா), சர்கரவர்தை ஆகிய ஆறுகளைக் கடந்தனர்.(27) பிறகு அவர்கள் சரயூ ஆற்றைக் கடந்து, கிழக்கு கோசலத்துக்கு வந்தனர். அந்த நாட்டையும் கடந்து மிதிலைக்குச் சென்று, அங்கிருந்து, மாலை, சர்மண்வதி,(28) கங்கை, சோணம் ஆகிய ஆறுகளையும் கடந்து அந்த மூன்று வீரர்களும் மேலும் கிழக்கு நோக்கி சென்றனர். இறுதியாக, மங்காப்புகழ் கொண்ட அந்த வீரர்கள் குசம்பத்தின் (குசம்ப நாட்டின்) இதயமான மகதத்தை அடைந்தனர்.(29) பிறகு கோரத மலைகளை அடைந்து, எப்போதும் பசுக்களாலும், செல்வங்களாலும், நீராலும் நிறைந்த, பல எண்ணிலடங்கா மரங்கள் நிற்கும் மகத நகரைக் கண்டனர்” {என்றார் வைசம்பாயனர்}.(30)
ஜராசந்தனை எதிர்கொண்ட கிருஷ்ணன் – சபாபர்வம் பகுதி 21-(ஜராசந்த வத பர்வம் – 02)-கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு அந்த நகரத்தின் பெருமையை எடுத்துச் சொல்வது; கிருஷ்ணன் பீமன் அர்ஜுனன் ஆகியோர் மகத நகருக்குள் நுழைவது; ஒரு மலைச்சிகரத்தைத் தங்கள் கணைளால் உடைப்பது; முறையற்ற வாசல் வழியாக ஜராசந்தனை அணுகுவது; ஜராசந்தன் அவர்களுக்கு மரியாதை செய்வது; ஸ்நாதக பிராமணர்கள் யார் என்பதை கிருஷ்ணன் ஜராசந்தனுக்குத் தெரிவிப்பது; கிருஷ்ணன் ஜராசந்தனை பகைவன் என்று சொல்வது…
வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்னான், “ஓ பார்த்தா {அர்ஜுனா}, அழகாக எழுந்து நிற்கும் மகதத்தின் பெரும் தலைநகரைப் பார். கால்நடைக் கூட்டங்களாலும், வற்றாத நீர்த்தேக்கங்களாலும், சரியான வரிசையில் நிற்கும் நன்றாக அலங்கரிக்கப்பட்ட ஐந்து மாளிகைளுடன் இருக்கும் இந்த நகரம் அனைத்து பேரிடர்களில் இருந்தும் விடுபட்டதாக இருக்கிறது.(1) பெரும் சிகரங்களையும், இடைவிடாமல் தொடர்ச்சியாக ஒன்றன் மேல் ஒன்று சாய்ந்தவையாக குளிர்ந்த நிழலைத் தரும் உயர்ந்த மரங்களையும் கொண்ட வைஹரம் {விபுலம்}, வராஹம், ரிஷபம், ரிஷிகிரி மற்றும் காண்பதற்கினிய சைத்தியா {சைத்தியகம்} ஆகிய ஐந்து பெரும் மலைகளும் அந்த கிரிவ்ரஜம் என்ற நகரத்திற்கு பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன.(2,3) அந்த மலைகளின் மார்புகள் காண்பதற்கினிய கானகம் மற்றும் நறுமணம் வீசும் லோத்திர மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மரங்களாலும் மறைக்கப்பட்டிருக்கிறது.(4) இங்கேதான் கடும் நோன்புகள் நோற்ற சிறப்பு வாய்ந்த கௌதமர் {தீர்க்கதமஸ்}, சூத்திரப் பெண்ணான ஔசிநரியிடம் {உசீநரனின் மகளிடம்} கக்ஷீவத் {கக்ஷீவான்} மற்றும் பிற கொண்டாடப்பட்ட மகன்களைப் பெற்றெடுத்தார்[1].(5) (இந்தக் கதையை ஆதிபர்வம் 104 பகுதியில் படிக்கலாம்)கௌதமரிடம் இருந்து உற்பத்தியான அந்த குலம் இன்னும் இயல்பான மனித குலத்தின் (ஏகாதிபதிகளின்) ஆட்சியில் வாழ்வது, கௌதமர் மன்னர்களிடம் கொண்ட அன்பின் சாட்சியாக இருக்கிறது.(6) ஓ அர்ஜுனா, பழங்காலத்தின் அங்க, வங்க தேசங்கள் மற்றும் பிற தேசங்களின் பெரும் சக்தி வாய்ந்த ஏகாதிபதிகள் கௌதமரின் வசிப்பிடமான இந்த இடத்திற்கு வந்து மகிழ்ச்சியாகத் தங்கள் நாட்களைக் கழித்தனர்.(7)
ஓ பார்த்தா {அர்ஜுனா}! கௌதமரின் வசிப்பிடத்திற்கு அருகில் இருக்கும், காண்பதற்கினிய அரச மரங்களையும், அழகான லோத்திர மரங்களையும் பார்.(8) பழங்காலத்தில் அங்கே எதிரிகளைக் கொல்லும் அர்ப்புதன், சக்ரவாபின், சுவஸ்திகன் ஆகிய நாகர்களும், மணி என்ற சிறந்த நாகனும் வசித்தனர்.(9) மகதர்களின் நாடு பஞ்சத்துக்கு ஆட்படக்கூடாது என்பது அந்த மனுவின் ஆணையே. கௌசிகரும் மணிமத்தும் {மணிமானும்} கூட இந்த நாட்டுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர்[2].(10) (கும்பகோணம் பதிப்பில், கிருஷ்ணன் சொல்வதாக இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு: “பாண்டரம், விபுலம், வாராகம், சைத்யகம், மாதங்கம் எனும் இவ்வைந்து சிறந்த பர்வதங்களிலும் ஸகலஸித்தர்களின் கிருஹங்களும், மஹாத்மாக்களான ஸந்யாஸிகள் ரிஷிகள் இவர்களின் ஆச்ரமங்களும், விருஷபன், தமாலன், மஹாவீர்யன் என்னும் நாகர்களுடைய கிருஹங்களும், கந்தர்வர்கள், ராக்ஷஸர்களின் வீடுகளும் இருக்கின்றன. கக்ஷீவானென்னும் முனியின் தவப்பெருமையினால் தபோதங்கள் என்று பெயர் பெற்ற புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் ஸித்ததீர்த்தங்களெனவும் சொல்லப்படுகின்றன. மணிமானென்னும் நாகனைக் கண்டமாத்திரத்தினாலேயே மனிதன் க்ஷேமத்தையும், ஸுகத்தையும் அடைவான். இப்படி நாற்புறங்களிலும் வெல்லமுடியாத அழகிய நகரத்தையடைந்ததுதான் ஜராஸந்தன் ஒப்பற்ற காரிய ஸித்தியை நினைக்கிறான். நாம் இப்போது ஸமீபத்தில் போய் அவன் கர்வத்தை போக்கிவிடுவோம்” என்றிருக்கிறது.)காண்பதற்கினியதும், தாக்குதலுக்கு அசைந்து கொடுக்காததுமான இப்படிப்பட்ட நகரத்தைக் கொண்டிருக்கும் ஜராசந்தன், மற்ற ஏகாதிபதிகளைப் போல அல்லாமல், தனது நோக்கங்களின் கனியை அடையத் தீவிரமாக முயல்கிறான். இருப்பினும், நாம் அவனை {ஜராசந்தனைக்} கொன்று அவனது செருக்கைத் தணிப்போம்” என்றான் {கிருஷ்ணன்}.(11)
வைசம்பாயனர் சொன்னார், “இப்படிப் பேசிச்சென்ற அபரிமிதமான சக்தி படைத்த இரண்டு பாண்டவர்களும் விருஷ்ணிகுலத்தவனுமான {கிருஷ்ணனுமான} பங்காளிகள், மகத நகரத்திற்குள் நுழைந்தனர்.(12) பிறகு அவர்கள் தாக்குதலுக்கு வளைந்து கொடுக்காத நகரமான மகிழ்ச்சியான நால்வகை குடிமக்களும் நிறைந்த, விழாக்களுக்குப் பஞ்சமில்லாத கிரிவ்ராஜ நகரத்தை அணுகினர்.(13) அந்த நகரத்தின் வாயிலை வந்தடைந்த அந்தப் பங்காளிகள் (அந்த வாயிலைக் கடந்து செல்லாமல்) பிருஹத்ரதன் குலத்தாராலும், அந்நாட்டு குடிமக்களாலும் வழிபடப்பட்டு, அவர்கள் பார்த்துப் பார்த்து ஆனந்தமடையும் சைத்யக மலையின் சிகரங்களைத் தங்கள் கணைகளால் துளைக்க தொடங்கினர்.(14,15) பிருஹத்ரதன், அங்கேதான் ரிஷபன் என்ற மனித ஊனுண்ணியை கொன்று, அந்தப் பெரும் விலங்கின் {ரிஷபனின்} தோலைக் கொண்டு மூன்று பெரிய பேரிகைகளைத் தனது நகரத்தில் செய்து வைத்தான். அந்தப் பேரிகைகளை ஒரு முறை அடித்தாலே, அதன் ஒலி ஒரு மாத காலத்திற்கு நிலைத்திருக்கும். தெய்வீக மலர்களால் மூடியிருந்த அந்த பேரிகைகள் தொடர்ந்து இனிமையான ஒலியை எழுப்பி வந்த இடமும், மகதர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியதுமான சைத்யக மலைச்சிகரத்தை அந்தப் பங்காளிகள் உடைத்தெறிந்தனர். ஜராசந்தனைக் கொல்ல விரும்பிய அவர்களின் செயல்கள் அனைத்தும், எதிரியின் தலையில் தங்கள் காலை வைப்பது போல இருந்தன.(16-19) அசைக்க முடியாததும், பெரியதும், உயரமானதும், பழமையாதும், கொண்டாடப்பட்டதும், மலர்களாலும் நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான அந்த மலைச்சிகரத்தை தங்கள் உறுதியான பலம் வாய்ந்த கரங்களால் உடைத்து எறிந்தனர். பிறகு மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அந்த நகரத்திற்குள் நுழைந்தனர்.(20,21)
அந்த நகரத்தில் வாழ்ந்த கல்விமான்களான பிராமணர்கள் தீய சகுனங்களைக் கண்டு ஜராசந்தனிடம் சொன்னார்கள்.(22) புரோகிதர், மன்னனை யானையின் மீது அமர்த்தி, ஊதுவத்தி ஏற்றிச் சுற்றிப் போட்டனர். பேராற்றல் கொண்ட ஜராசந்தனும், தீ சகுனங்களால் ஏற்படும் விளைவுகளை விரட்ட, சரியான நோன்புகள் கொண்ட வேள்விக்கு ஏற்பாடு செய்தான்.(23) அதே வேளையில் ஓ பாரதா {ஜனமேஜயா}, வெறுங்கையாலோ, ஆயுதங்களற்றோ ஜராசந்தனுடன் போர் புரிய விரும்பிய அந்தப் பங்காளிகள், ஸ்நாதக பிராமணர்களின் வேடத்தில் அந்த நகரத்திற்குள் நுழைந்தனர்.(24) அழகிய மலர்கள், பொருட்கள், மனிதனின் ஆசைக்குகந்த அனைத்து வகை பொருட்களுடன் கூடிய அழகான கடைகளை அவர்கள் அங்கே கண்டனர்.(25) மனிதர்களில் சிறந்தவர்களான கிருஷ்ணன், பீமன், தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோர், அந்தக் கடைகளைக் கண்டபடியே பொது வழி சாலையில் நடந்து சென்றனர். பெரும் பலம் கொண்ட அவர்கள், மலர் வியாபாரிகளிடம் இருந்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த பூ மாலைகளைப் பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டனர்.(26) பல வகை நிறங்களிலான ஆடைகளை உடுத்தி, பூமாலைகளைத் தரித்துக் கொண்டு, காதில் குண்டலங்களுடன் இருந்த அந்த வீரர்கள், மாட்டு மந்தையைக் காணும் இமாலய சிங்கங்களென பெரும் புத்திகூர்மை கொண்ட ஜராசந்தனின் வசிப்பிடத்தைக் கண்டு அதனுள் நுழைந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, சந்தனம் பூசப்பட்ட அந்த வீரர்களின் கரங்கள், சால மரத்தைப் போல இருந்தன. மரங்களைப் போன்ற கழுத்துகளையும், அகன்ற மார்புகளையும் கொண்டு, யானைகளைப் போல இருந்த அந்த வீரர்களைக் கண்ட மகத நாட்டு மக்கள் பெரிதும் வியப்படைந்தனர்(27-29). அந்த மனிதர்களில் காளைகள், மக்களால் நிறைந்த மூன்று வாயில்களைக் கடந்து, பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் மன்னனை அணுகினர்.(30) விரைவாக எழுந்த ஜராசந்தன், அவர்களுக்கு கால் கழுவ நீரும், தேனும் மற்ற பிற பொருட்களுடன் கூடிய அர்க்கியத்தையும் கொடுத்து அவர்களைக் கௌரவித்தான். அந்தப் பெரும் மன்னன் அவர்களைப் பார்த்து, “உங்கள் வரவு நல்வரவாகட்டும்!” என்றான்.(31,32)
ஓ ஜனமேஜயா, இதைக் கேட்ட பார்த்தனும் {அர்ஜுனனும்} பீமனும் அமைதியாக நின்றனர். அந்த ஏகாதிபதியிடம் {ஜராசந்தனிடம்} கிருஷ்ணன், “ஓ மன்னர்களின் மன்னா, இவர்கள் இருவரும் {பீமனும் அர்ஜுனனும்} நோன்பு காக்கின்றனர். எனவே அவர்கள் பேச மாட்டார்கள்.(33) அவர்கள் இன்று நள்ளிரவு வரை பேசமாட்டார்கள். அதன்பிறகே அவர்கள் பேசுவார்கள்!” என்றான். அந்த மன்னன் தனது விருந்தினர்களுக்கு {கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன்}, வேள்வி அரங்கில் ஓர் இடம் கொடுத்து தங்க வைத்து, தனது தனி அறைக்குள் ஓய்ந்திருக்கச் சென்றான்.(34) நடு இரவு வந்ததும், பிராமண உடையில் இருந்த தனது விருந்தினர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான் {ஜராசந்தன்}. ஸ்நாதக பிராமணர்கள் வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டால், உடனே அது நள்ளிரவாக இருந்தாலும் அவர்களை வந்து சந்திப்பது அந்த மன்னன் {ஜராசந்தன்} ஏற்றிருக்கும் நோன்பாகும்.(35,36)
அந்த மன்னர்களில் சிறந்தவன் {ஜராசந்தன்}, தனது விருந்தினர்களின் விசித்திரமான ஆடைகளைக் கண்டு மிகவும் வியப்படைந்தான். இருப்பினும், அவர்களுக்காக மதிப்புடன் காத்திருந்தான் {அவர்களுக்குப் பணிவிடை செய்தான்}.(37) மறுபுறம், ஓ பாரத குலத்தில் சிறந்தவனே, அந்த மனிதக்காளைகள், எதிரிகளைக் கொல்பவர்கள், ஜராசந்தனைக் கண்டு,(38) “ஓ மன்னா, சிரமமில்லாமல் முக்தி அடைவாயாக.” என்றனர். ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதியிடம் இதைச் சொல்லி, ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர்.(39) ஓ மன்னர்களின் மன்னா {ஜனமேஜயா}, பிராமண வேடத்தில் இருந்த பாண்டுவின் மகன்களிடமும் {பீமன் மற்றும் அர்ஜுனனிடமும்} யாதவ குலத்தவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, ஜராசந்தன், “இருக்கைகளில் அமருங்கள்” என்றான்.(40) அந்த மனிதக்காளைகள் பெரும் வேள்வியை நடத்தும் மூன்று புரோகிதர்கள் போல அமர்ந்து அழகாக இருந்தனர்.(41)
ஓ குரு குலத்தவனே {ஜனமேஜயா} வாய்மைக்கு உறுதியாகத் தன்னை அர்ப்பணித்திருக்கும் மன்னன் ஜராசந்தன், தனது விருந்தினர்களின் வேடத்தை உணர்ந்து அவர்களிடம், “இந்த முழு உலகத்திலும் உள்ள ஸ்நாதக நோன்பை கடைப்பிடிக்கும் பிராமணர்கள், மலர்களையும், மாலைகளையும், நறுமணப் பொருட்களையும் தங்கள் மேனியில் தரிப்பதில்லை என்பதை நான் அறிவேன். எனவே, மலர்களால் உங்களை அலங்கரித்துக் கொண்டு, கைகளில் வில்நாணிழுக்கும் வடுக்களை {காயங்களைப்} பெற்றிருக்கும் நீங்கள் யார்?(42,43) வண்ண ஆடைகள் உடுத்தி, காலமற்ற காலத்தில் மலர்களால் அலகரித்துக் கொண்டு, பிராமண சக்தியுடன் இருக்கும் நீங்கள் உங்களை நான் பிராமணர்கள் என்று எண்ண வேண்டும் என்று நினைக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்கள். வாய்மையே மன்னர்களையும் அலங்கரிக்கிறது.(44) அரசகோபத்தின் அச்சமில்லாமல் சைத்யக மலைச்சிகரத்தை உடைத்து, மாற்றுருவத்தில், முறையற்ற வாயில் வழியாக ஏன் வந்தீர்கள்?(45) பிராமணனின் சக்தி அவனது வாக்கிலேயே இருக்கிறது (செயலில் அல்ல). உங்கள் இந்தக் காரியங்கள், நீங்கள் காட்டிக்கொள்ளும் குலத்திற்கு ஏற்புடையவை அல்ல. எனவே உங்கள் நோக்கம் என்ன என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள்.(46) முறையற்ற வழியில் இங்கே வந்தும், நான் கொடுத்த மரியாதையை ஏன் நீங்கள் ஏற்கவில்லை? நீங்கள் என்னிடம் வந்த நோக்கம் என்ன?” என்றான் {ஜராசந்தன்}.(47)
மன்னனால் இப்படிச் சொல்லப்பட்டதும், பேச்சில் வல்லவனான உயர் ஆன்ம கிருஷ்ணன் அந்த ஏகாதிபதியிடம் {ஜராசந்தனிடம்} மரணக் குரலுடன் அமைதியாகப் பேசினான்.(48)
கிருஷ்ணன், “ஓ மன்னா, எங்களை ஸ்நாதக பிராமணர்கள் என்று அறிவாயாக. ஓ ஏகாதிபதி {ஜராசந்தா}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய அனைவரும் ஸ்நாதக நோன்பை நோற்கத் தகுதியுடையவர்களே.(49) இந்த நோன்பு குறிப்பிட்ட மற்றும் பொதுவான விதிகளை (பலவற்றை) உள்ளடக்கியது. இந்த நோன்பை குறிப்பிட்ட விதிகளுடன் பின்பற்றும் க்ஷத்திரியன் செழிப்பை அடைகிறான்.(50) எனவே, நாங்கள் எங்களை மலர்களால் அலங்கரித்திருக்கிறோம். ஓ மன்னா {ஜராசந்தா}, மேலும் க்ஷத்திரியர்கள் தங்கள் சக்தியைக் கரங்களால் வெளிப்படுத்துவாரேயன்றி பேச்சால் அல்ல. எனவே, ஓ பிருஹத்ரதனின் மகனே {ஜராசந்தா}, க்ஷத்திரியர்களால் சொல்லப்படும் வார்த்தைகள் ஆற்றல்மிக்கவை அல்ல.(51) ஓ ஏகாதிபதி {ஜராசந்தா}, படைத்தவன் {பிரம்மன்} தனது சொந்த சக்தியையே க்ஷத்திரியனின் கரங்களில் வைத்திருக்கிறான். நீ அதைக் காண வேண்டும் என்று விரும்பினால், நிச்சயம் அதை நீ இன்று காணலாம்.(52) பகைவனின் வசிப்பிடத்தை முறையற்ற வழியில் அடைய வேண்டும் என்பதும், நண்பனின் வசிப்பிடத்தை முறையான வழியில் அடைய வேண்டும் என்பதும் விதிக்கப்பட்டிருக்கும் விதிகளே ஆகும்.(53) ஒரு காரியத்தை சாதிப்பதற்காக பகைவனின் வசிப்பிடத்தை அடைந்தால், அவன் எங்களுக்குச் செய்யும் வழிபாடுகளை ஏற்கக்கூடாது என்பதும் நாங்கள் கொண்டிருக்கும் நிலைத்த நோன்பே” என்றான் {கிருஷ்ணான்}.(54)
“அடப்பாவி! நீயா அப்பாவி?” என்றான் கிருஷ்ணன் – சபாபர்வம் பகுதி 22-(ஜராசந்த வத பர்வம் – 03)-தான் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ததாக நினைவில்லை என்று ஜராசந்தன் கூறல்; கிருஷ்ணன் சிறையில் அடைபட்டிருக்கும் மன்னர்களைக் குறித்துச் சொல்லல்; மனிதபலியை உலகம் கண்டதில்லை என்று கூறல்; க்ஷத்திரியர்களின் கடமையை ஜராசந்தன் நினைவூட்டல்; மன்னர்களை விடுவிக்க முடியாதெனவும், மோதுவதற்குத் தயார் எனவும் ஜராசந்தன் கூறல்…
ஜராசந்தன் சொன்னான், “நான் எப்போது உங்களுக்கு தீங்கேதும் செய்தேன் என்று என்னால் நினைவுகூர முடியவில்லை. கவனமாக எனது மனத்தில் நினைத்துப் பார்த்தாலும், நான் உங்களுக்கு என்ன காயமிழைத்தேன் என்று அறிய முடியவில்லை.(1) நான் உங்களுக்கு எத்தீங்கும் இழைக்காத அப்பாவியாக இருக்கும்போது, பிராமணர்களாகிய நீங்கள் ஏன் என்னை பகைவனாகக் கருதுகிறீர்கள்? எனக்கு உண்மையுடன் பதில் சொல்லுங்கள். அதுவே நேர்மையானவர்கள் நடந்து கொள்ளும் முறை.(2) ஒருவரின் இன்பத்திற்கோ அறத்திற்கோ செய்யப்படும் தீங்கு துன்பம் மிகுந்ததாகும். ஓர் அப்பாவி மனிதனின் இன்பதுக்கோ, அறத்திற்கோ தீங்கு செய்யும் ஒரு க்ஷத்திரியன், பெரும் வீரனாகவும், அறவிதிகளை அறிந்தவனாகவும் இருந்தாலும் கூட, பாவிகளுக்கு ஏற்படும் விதி போல, அவன் செழிப்பில் இருந்து வீழ்வான்.(3,4) க்ஷத்திரியர்களின் வழிமுறைகளே மூன்று உலகிலும் நேர்மையானவை. உண்மையில், அறவிதிகளை அறிந்த மனிதர்கள் க்ஷத்திரிய வழிமுறைகளைப் புகழவே செய்கிறார்கள்.(5) எனது {க்ஷத்திரிய} வகைக்கான முறைகளை உறுதியான ஆன்மாவுடன் பின்பற்றும் நான், எனக்குக் கீழ் இருப்பவர்களுக்குத் தீங்கிழைத்ததில்லை. எனவே, இந்தக் குற்றச்சாட்டை நீங்கள் என் மீது வைத்தால் அது பிழையானது ஆகும்” {என்றான் ஜராசந்தன்}.(6)
கிருஷ்ணன், “ஓ வலிய கரங்களை உடையவனே {ஜராசந்தனே}, ஒரு குலத்தின் பெருமையைத் தாங்கி நிற்கும் ஒரு குறிப்பிட்ட தலைவருடைய உத்தரவின் பேரில் நாங்கள் உன்னை எதிர்த்து வந்திருக்கிறோம்.(7) ஓ மன்னா {ஜராசந்தா}, நீ பல க்ஷத்திரியர்களைக் கைதிகளாக (உனது நகரத்தில்) வைத்திருக்கிறாய். இவ்வளவு பெரிய தீங்கு {குற்றம்} செய்திருக்கும் நீ எப்படி உன்னை அப்பாவியாகக் கருதிக் கொள்கிறாய்?(8) ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜராசந்தா}, அறம் சார்ந்த மன்னர்களுக்கு நீ எப்படித் தீங்கு செய்யலாம்? ஓ மன்னா, பிற மன்னர்களைக் கொடுமையாக நடத்தி, ருத்திர தேவன் வேள்வியல் அவர்களைப் பலியிடப் போகிறாய்.(9) ஓ பிருஹத்ரதனின் மகனே {ஜராசந்தனே}, உன்னால் இழைக்கப்படும் பாவம் எங்களையும் தீண்டலாம். நாங்கள் அனைத்து செயல்களையும் அறத்தன்மையுடன் செய்து வருகிறோம். நாங்கள் அறத்தைக் காக்கும் தகுதியுடனேயே இருக்கிறோம்.(10)
தேவர்களுக்கு மனிதனை பலியாகக் {நர பலி} கொடுக்கும் முறை எங்குமே காணப்படுவதில்லை. தேவனான சங்கரருக்கு மனிதர்களைப் பலியாகக் கொடுக்க ஏன் நீ விரும்புகிறாய்?(11) உனது வகை சார்ந்த மனிதர்களை நீ {வேள்விப் பலியாகத் தகுதியுடைய} விலங்குகளாகவே மதிக்கிறாய். ஓ ஜராசந்தா, உன்னைப் போன்ற மூடனைத் தவிர வேறு யாரால் இப்படிச் செயல்பட முடியும்?(12) ஒருவன் எந்தச் சூழ்நிலையில் ஒரு செயலைச் செய்திருந்தாலும், அதற்கான கனிகளை அவன் நிச்சயம் அடைவான்.(13) எனவே, எங்கள் உறவினர்களைக் கொன்றவனான உன்னை, துயரில் இருக்கும் மக்களுக்கு உதவும் வகையிலும், எங்கள் குலத்தின் செழிப்புக்காகவும் நாங்கள் கொல்ல வந்திருக்கிறோம்.(14) க்ஷத்திரியர்களில் (உனக்குச் சமமாக) எந்த ஆண்மகனும் இல்லை என நீ நினைக்கிறாய். இது உனது பங்குக்கு நீ செய்யும் பிழையாகும்.(15)
ஓ மன்னா, பெருமையுடைய ஆன்மாவும், தாய்தகப்பன் வழியில் மதிப்பும் கொண்ட எந்த க்ஷத்திரியன், வெளிப்படையான போரில் ஈடுபடுவதால் நிலையான நல்லுலக {சொர்க்க} வாழ்வை அடையாமல் போகிறான்?(16) ஓ மனிதர்களில் காளையே {ஜராசந்தனே}, க்ஷத்திரியர்கள் விண்ணுலகை நோக்கமாகக் கொண்டு எப்போதும் தங்களைப் போரிலும், வேள்வியிலும் ஈடுபடுத்திக் கொண்டு முழு உலகையும் வெற்றி கொள்வார்கள்.(17) வேத கல்வி, பெரும்புகழ், தவ நோன்புகள், போர்க்களத்தில் மரணம் ஆகிய செயல்கள் அனைத்தும் நல்லுலகை {சொர்க்கத்தை} நோக்கி அழைத்துச் செல்லும். மற்ற மூன்று வழிகளில் நல்லுலகம் கிடைப்பது ஐயம் என்றாலும், போர்க்கள மரணம் நிச்சயம் அதைத் தரும்.(18) போர்க்களத்தில் மரணம் என்பது இந்திரனின் அரண்மனையை அடையும் வழியாகும். அது பல நல்ல தகுதிகளால் அருளப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே நூறு வேள்விகளைச் செய்தவன் (இந்திரன்) தனது குறிப்பிடும்படியான தகுதிகளுடன் இருந்து, அனைத்து அசுரர்களையும் வீழ்த்தி அண்டத்தை ஆண்டு வருகிறான். பெரும் பலத்தில் செருக்குள்ள மகத வீரனான உன்னைத்தவிர வேறு எவரிடம் பகைமை கொண்டால் நிச்சயமாக நல்லுலகை அடைய முடியும்?(19,20)
ஓ மன்னா {ஜராசந்தா}, பிறரை அவமதிக்க நினைக்காதே. மனிதர்கள் அனைவரிடமும் ஆற்றல் இருக்கிறது. ஓ மனிதர்களின் மன்னா {ஜராசந்தா}, உனது ஆற்றலுக்கு இணையான, மேன்மையான ஆற்றலைக் கொண்ட பல மனிதர்கள் இருக்கிறார்கள்.(21) இவர்கள் அனைவரும் அறியப்படும் வரை, நீயே ஆற்றலுக்காக அறியப்படுவாய். ஓ மன்னா {ஜராசந்தா}, உனது ஆற்றலை எங்களால் தாங்கிக் கொள்ள முடியும்.(22) அதனாலேயே நான் இவ்வாறு பேசுகிறேன். ஓ மகத மன்னா {ஜராசந்தா}, உனக்குச் சமமானவர்கள் முன்னிலையில் உனது மேன்மையான நிலையையும், செருக்கையும் கைவிடுவாயாக. ஓ மன்னா {ஜராசந்தா}, உனது பிள்ளைகளுடனும், அமைச்சர்களுடனும், படைகளுடனும் சேர்ந்து யமலோகத்திற்குச் செல்லாதே.(23) தம்போத்பவன், கார்த்தவீரியன், உத்தரன், பிருஹத்ரதன் ஆகிய மன்னர்களும் மேன்மையானவர்களை அவமதித்ததற்காக தங்கள் படைகளோடு சேர்ந்து அழிவைச் சந்தித்தார்கள்.(24) உன்னிடம் கைதிகளாக இருக்கும் ஏகாதிபதிகளை மீட்க விரும்பி இங்கே வந்திருக்கும் நாங்கள் நிச்சயமாக பிராமணர்கள் அல்ல என்பதை அறிந்து கொள்வாயாக. நான் ரிஷிகேசன் {கிருஷ்ணன்). சௌரி என்றும் நான் அழைக்கப்படுகிறேன். இந்த இரு வீரர்களும் பாண்டுவின் மகன்களாவர்.(25) ஓ மகத மன்னா {ஜராசந்தா}, நாங்கள் உன்னை அறைகூவி ஆழைக்கிறோம். உறுதியோடு எங்களுடன் போரிடுவாயாக. ஒன்று ஏகாதிபதிகள் அனைவரையும் விடுவி அல்லது யமனின் உலகத்தைச் சென்றடைவாயாக” என்றான் {கிருஷ்ணன்}[1].(26)
(இவ்விடத்தில் கும்பகோணம் பதிப்பில் ஒரு நீண்ட பகுதி இருக்கிறது. அது கங்குலியின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இடம்பெறவில்லை. அந்தப் பகுதி பின்வருமாறு, “ஜராஸந்தன் இதைக் கேட்டுக் கோபங்கொண்டு பேசத் தொடங்கினான். “நான் கம்ஸனல்லேன்; பிரலம்பனல்லேன்; பாணனல்லேன்; முஷ்டிகனல்லனே; நரகனல்லேன்; இந்த்ரதபனனல்லேன்; கேசியல்லேன்; பூதனையுமல்லேன்; காலயவனனுமல்லேன்; அவர்களல்லரோ உன்னால் யுத்தத்தில் கொல்லப்பட்டவர். நீ இடைக்குலத்திற் பிறந்தவன். உன் முன் ஜாதியை நினை. நீ நம்மிடம் பயந்தோடி நாடோடி மனிதனைப் போலப் பிறப்பிடமான மதுரையை விட்டுக் கடல் தீவைச் சார்ந்தாயன்றோ? கிருஷ்ணா, அப்படிப்பட்ட நீ, இப்போது கார்காலம் கடந்த பிறகு மேகம் கர்ஜிப்பது போல வீணாக கர்ஜிக்கிறாய். மாதவா, உன்னைக் கொன்று என் மருமகனும், உக்ரஸேனன் புத்ரனும், சிறந்த புத்திமானுமாகிய கம்ஸன் கடனை இப்போதே தீர்க்கப் போகிறேன். உன்னையும்,உனக்கு வேண்டினவர்களையும் கொல்வதற்காக உன்னுடன் யுத்தஞ்செய்ய எனக்கு நெடுநாளாக விருப்பமிருந்தது. நல்ல காலமாதலால் இந்திராதிதேவர்க்ள என் ஆரம்பத்தைப் பயன்படச் செய்தனர். கோவிந்தா, இந்தப் பீமஸேனனும், அர்ஜுனனுமாகிய இருவரும் அசக்தர்கள். நான் இவர்களை யுத்தத்தில் பிடித்து ஒரு சிங்கம் சிறு மிருகங்களைக் கொல்வது போலக் கொல்வேன்” என்றான். அப்போது ஸ்ரீ பகவான், “ஜராஸந்தா, ஏன் கர்ஜிக்கிறாய்? நீ சொல்வதைச் செய்கையால் நடத்து. ராஜாக்களுள் இழிவானவனே, அமைச்சர்களுடனும், புத்திரர்களுடனும் உன்னை நான் இப்போது சண்டையில் எனது கட்டளையைச் செய்பவர்களான இவ்விரு பாண்டவர்களால் கொல்லுவிக்கப் போகிறேன். நீ எப்பாடு பட்டாலும் உயிரோடு உன் நகரத்தில் பிரவேசிக்க மாட்டாய்” என்று சொன்னார்” என்றிருக்கிறது. அதன் பிறகு கும்பகோணம் பதிப்பிலும் கங்குலியின் பதிப்பில் உள்ளதைப் போலவே தொடர்கிறது. அடுத்த அத்தியாயத்துடன் சேர்த்துப் பார்க்கும்போது இந்தப் பகுதி இங்கே சரியாக ஒட்டவில்லை.)
ஜராசந்தன், “எந்த மன்னனையும் வீழ்த்தாமல், அவனைக் கைதியாக நான் கொள்வதில்லை. என்னிடம் வீழாத எவரை நான் இங்கே வைத்திருக்கிறேன்?(27) ஆற்றலைக் காட்டி மற்றவர்களைத் தனது ஆட்சிக்குள் கொண்டு வந்து அடிமைகளாக நடத்துவது என்பது க்ஷத்திரியர்கள் தொடர வேண்டிய கடமையாகும்.(28) க்ஷத்திரியர்களின் கடமைகளை உங்களுக்கு எடுத்துரைத்த இத்தருணத்தில், ஓ கிருஷ்ணா, வேள்வியில் தேவர்களுக்கு பலியிடக் கைப்பற்றப்பட்ட இந்த ஏகாதிபதிகளை, இன்று அச்சத்தால் விடுதலை செய்வேனா?(29) துருப்புகளுக்கு எதிராக துருப்புகளை அணிவகுத்துப் போரிடலாமா? அல்லது தனியாக ஒருவரோடொருவர் நேருக்குநேர் போரிடலாமா? அல்லது ஒரே நேரத்தில் இருவருக்கோ, மூவருக்கோ எதிராக போரிவா? அல்லது மூவரிடம் தனித்தனியாகப் போரிடவா? எப்படி வேண்டுமானாலும் நான் தயாராக இருக்கிறேன்” என்றான் {ஜராசந்தன்}.(30)
வைசம்பாயனர் சொன்னார், “கடுஞ்சாதனைகளைச் செய்த அந்த வீரர்களுடன் போரிட விரும்பிய ஜராசந்தன், இவ்வாறு பேசிவிட்டு, (தனது மகன்) சகதேவனை {ஸஹதேவனை} அரியணையில் அமர்த்தினான்.(31) பிறகு ஓ பாரத குலத்தின் காளையே, அந்த மன்னன், போரிடும் முன்னர், தன் தளபதிகளான கௌசிகன் மற்றும் சித்திரசேனனை நினைவுகூர்ந்தான்.(32) இந்த இருவரைத்தான், ஓ மன்னா {ஜனமேஜயா}, இந்த உலகத்திலுள்ள அனைவரும் முன்பு மரியாதையுடன் ஹம்சன், டிம்பகன் என்று அழைத்தார்கள்.(33) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, பலமிக்க மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், மனிதர்களில் சிறந்தவனும், மதுவைக் கொன்றவனும் {மது என்ற அசுரனைக் கொன்றவனும் / மதுசூதனனும்}, வாய்மையில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனும், ஹலாதரன் தம்பியும், தற்கட்டுப்பாடுதைய தேவனுமான சௌரி {கிருஷ்ணன்}, மகத மன்னன் போரில் பீமனால் கொல்லப்படவே விதிக்கப்பட்டிருக்கிறானேயன்றி மதுவை அழித்தவனாலல்ல என்பதை அறிந்து, பலமிக்க மனிதர்களில் முதன்மையானவனும், புலி போன்ற பலத்தைக் கொண்டவனும், பயங்கர வீரம் கொண்ட போர்வீரனுமான மன்னன் ஜராதசந்தனைத் தானே கொல்ல விரும்பவில்லை” {என்றார் வைசம்பாயனர்}.(34,35)
பதினாலாவது நாளில் ஓய்ந்த ஜராசந்தன் – சபாபர்வம் பகுதி 23-(ஜராசந்த வத பர்வம் – 04) ஜராசந்தன் மோதுவதற்கு பீமனைத் தேர்ந்தெடுத்தல்; கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் போர் தொடங்கல்; ஜராசந்தனுக்கும் பீமனுக்கும் நடந்த உக்கிரமான போர்; உணவு உறக்கம் இல்லாமல் நடந்த பதிமூன்று நாள் போர்; பதினாலாவது நாளில் ஜராசந்தன் களைத்துப் போதல்; அதை கிருஷ்ணன் பீமனுக்கு உணர்த்துதல்; பீமன் ஜராசந்தனைக் கொல்ல விரும்புதல்…
வைசம்பாயனர் சொன்னார், “அனைத்துப் பேச்சாளிகளிலும் முதன்மையானவனும், யாதவ குலத்தைச் சார்ந்தவனுமான கிருஷ்ணன், போரிடத் தீர்மானித்திருந்த ஜராசந்தனிடம்,(1) “ஓ மன்னா {ஜராசந்தா}, எங்கள் மூவரில் நீ யாருடம் போரிட விரும்புகிறாய்? எங்களில் யார் {உன்னுடனான} போரிட ஆயத்தமாக வேண்டும்?” என்று கேட்டான்.(2)
இப்படிக் கேட்கப்பட்டவனும், மகத ஆட்சியாளனும், பெரும் பிரகாசமிக்கவனுமான மன்னன் ஜராசந்தன், {கிருஷ்ணனை மாடு மேய்ப்பவன் என்றும், அர்ஜுனனைச் சிறுவன் என்றும் நினைத்து} தான் பீமனுடம் போரிட விரும்புவதாகத் தன் கருத்தை வெளிப்படுத்தினான்.(3) பிறகு புரோகிதர், கோரோசனையையும்[1], (பசுவின் வயிற்றிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் நிறமுள்ள வாசனைப் பண்டம். கோரோசனை என்ற பொருளை மாட்டிலிருந்து எடுத்து மருந்தாகப் பயன்படுத்துவது பாரதம் முழுவதும் வழக்கமாக இருந்தது.)மலர் மாலைகளையும், பிற மங்கலப் பொருட்களையும், நினைவை மீட்டெடுக்கவும், காயங்களையும் வலியையும் ஆற்றவும் கூடிய பல மருந்துகளையும் கொண்டு வந்து, போருக்காக மூச்சிரைத்துக் கொண்டிருந்த ஜராசந்தனை அணுகினார்.(4) ஒரு சிறப்புமிக்க பிராமணரைக் கொண்டு தன் நன்மைக்கான சடங்குகளை முடித்த மன்னன் ஜராசந்தன், க்ஷத்திரியக் கடைமைகளை நினைவுகூர்ந்து, போருரிகளை உடுத்திக் கொண்டான்.(5)
மணிமுடியை அகற்றி, தலைமுடியை வாரிக் கட்டிக் கொண்ட ஜராசந்தன், கண்டங்களை {கரைகளை} வெடித்துச் சிதற வைக்கும் பெருங்கடலைப் போல நின்றான்.(6) பிறகு, பேராற்றல் கொண்ட அந்த ஏகாதிபதி {ஜராசந்தன்}, பீமனிடம், “நான் உன்னுடன் போரிடப் போகிறேன். மேன்மைமிக்க மனிதனால் வீழ்த்தப்படுவதே சிறந்தது” என்றான்.(7) இதைச் சொல்லிவிட்டு, அனைத்து எதிரிகளையும் ஒடுக்கும் ஜராசந்தன், தேவர்கள் தலைவனை நோக்கி விரையும் அசுரன் பலனைப் போல பீமனை நோக்கி விரைந்தான்.(8) கிருஷ்ணன் {மங்கலக் காரியங்களைச் செய்து} பீமனுக்காக தேவர்களை இருப்புக்கு அழைத்தான். கிருஷ்ணனின் மைத்துனனான பெரும் பலம் வாய்ந்த பீமசேனன் போரிடும் விருப்பத்துடன் ஜராசந்தனை நோக்கி முன்னேறினான்.(9)
மனிதர்களில் புலிகளும், பேராற்றல் கொண்டவர்களுமான அந்த வீரர்கள், வெறுங்கையையே தங்கள் ஆயுதமாகக் கொண்டு, ஒருவரையொருவர் வீழ்த்த விரும்பி உற்சாகமாக மோதலில் ஈடுபட்டனர்.(10) ஒருவர் கரங்களை அடுத்தவர் பற்றிக் கொண்டும், ஒருவருக்கொருவர் கால்களைப் பின்னிக் கொண்டும், தங்கள் கக்கங்களைத் தட்டிக் கொண்டு மோதினர். அடிக்கடி ஒருவர் கழுத்தை மற்றவர் தங்கள் கரங்களால் பிடித்தும், இழுத்தும், வன்முறையுடன் தள்ளியும், ஒருவர் உடல் உறுப்புகளை மற்றவர் அழுத்தியும் தொடர்ந்து தங்கள் கக்கங்களைத் தட்டிக் கொண்டும் முழக்கமிட்டனர்.(11,12) ஓ மேன்மையானவனே {ஜனமேஜயா}, சில நேரங்களில் தங்கள் கரங்களை விரித்துக் கொண்டும், சில நேரங்களில் அருகில் இழுத்துக் கொண்டும் {சித்ரஹஸ்தங்களைச் செய்து கொண்டும்}, பிறகு உயர்த்தியும் தாழ்த்தியும், ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டனர். கழுத்தால் கழுத்தை மோதி, நெற்றியால் நெற்றியை மோதி, மின்னல் கீற்றுகளைப் போல நெருப்புப் பொறிகள் பறக்க வைத்தனர்.(13) பல வகைகளில் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து, உள்ளே இருக்கும் நரம்புகளும் பாதிக்கும் வண்ணம் வன்முறையுடன் ஒருவரை ஒருவர் மிதித்துக் கொண்டும், உள்ளங்கைகளை இறுக மூடி மற்றவர் மார்பில் குத்திக் கொண்டனர். வெறும் கையையே ஆயுதமாகக் கொண்டு முழங்கும் மேகங்களைப் போல கட்டிப்பிடித்து, மதம் கொண்ட இரு யானைகள் தங்கள் துதிக்கைகளைக் கொண்டு தாக்கிக் கொள்வது போல ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.(14,15)
ஒருவர் அடியை மற்றவர் வாங்கிக் கொண்டு, ஒருவரை ஒருவர் இழுத்துக் கொண்டும், தள்ளிக் கொண்டும், கோபம் கொண்ட சிங்கங்களைப் போல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.(16) தனது உறுப்புகளால் மற்றவரின் அனைத்து உறுப்புகளையும் தாக்கியும், தன் கரத்தை மற்றவருக்கு எதிராகப் பயன்படுத்தியும், ஒருவர் மணிக்கட்டை மற்றவர் பிடித்தும், ஒருவரை ஒருவர் தொலைவாகத் தூக்கி வீசினர்.(17) மற்போரில் சாதித்தவர்களான அந்த இரு வீரர்களும் ஒருவர் கரத்தை மற்றவர் பிடித்து, தன்னை நோக்கி இழுத்து, ஒருவரை ஒருவர் வன்முறையுடன் நசுக்கினர்.(18) பிறகு அந்த வீரர்கள் மற்போரில் பிருஷ்டபங்கம் என்ற சாதனையைச் செய்ய தொடங்கினர். அச்சாதனையில், ஒருவரை, அவரது முகம் தரையை நோக்கி இருக்கும் வண்ணம் வைத்துத் தூக்கி எறிதலும், பின்பு எதிரியை அதே நிலையில் நீண்ட நேரம் தக்க வைத்தலும் ஒரு முறையாகும். தங்கள் கரத்தால் ஒவ்வொருவரும் சம்பூர்ண மூர்ச்சை மற்றும் பூர்ணகும்பம் ஆகிய சாதனைகளையும் செய்தனர்.(19) சில வேளைகளில் காய்கறிகளைக் கட்டும் கயிறைப் போல தங்கள் கரங்களை ஒருவருக்கு ஒருவர் பின்னினர் {திருணபீடம் செய்தனர்}. விரல்களை மடக்கி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர் {பூர்ணயோகம்}. ஒரு உறுப்பைத் தாக்குவது போல பாசாங்கு காட்டி உடலின் வேறு உறுப்பைத் தாக்கினர் {முஷ்டிகம்}. இப்படி அந்த வீரர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர்[2].(20)(கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், பிருஷ்டபங்கம் = முதுகைத் தரையிற்படும்படி செய்வதனால் உண்டாகும் அவமானம், ஸம்பூர்ணமூர்ச்சை = வயிறு முதலான இடங்களில் கசக்குவதனாலுண்டாகும் மூர்ச்சை, திருணபீடம் = நார் முதலியவற்றினாற் கயிற்திரிப்பது போல ஒருவரோடொருவர் கைகால்களைப் பின்னிக் கொள்வது, பூர்ணயோகம் = தலை முதல் கால் வரையில் முழு உடம்பையும் சேர்த்தணைப்பது; அசதியடித்தல், முஷ்டிகம் = ஓரிடத்தில் குத்துவதாகக் காட்டி மற்றோரிடத்தில் குத்துவது” என்றிருக்கிறது.)
ஓ மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரைக் கொண்ட ஆயிரக்கணக்கான குடிமக்கள், ஏன் பெண்களும் வயது முதிர்ந்தவர்களும் கூட அங்கே வந்து கூடி அந்தப் போரைக் கண்டனர். அந்தக் கூட்டம் இடைவெளியில்லாமல் நெருக்கத்துடன் கூடியிருந்ததைப் பார்ப்பதற்கு ஒரு பெரும் திடமான பொருள் போல இருந்தது.(21,22) மற்போர் வீரர்கள் தங்கள் கரங்களைத் தட்டிக் கொள்ளும் ஒலியும், ஒருவரைக் கீழே வீழ்த்த மற்றவர் கழுத்தைப் பிடித்து இழுப்பதும், ஒருவர் காலை மற்றவர் பிடித்து, மோதிக் கொள்வதுமான ஒலிகள் அனைத்தும் கூடி மலை நொறுங்கி விழுவது போலவும், இடியின் முழக்கம் போலவும் இருந்தது.(23) பலம் வாய்ந்தவர்களில் முதன்மையானவர்களான அவர்கள் இருவரும் தங்களுக்குள் மோதிக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பி, ஒருவரின் சிறு தவறையும் பயன்படுத்தி முன்னிலை பெற இருவரும் விழிப்புடன் இருந்தனர்.(24) மேலும், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெரும் பலம் வாய்ந்த பீமனும் ஜராசந்தனும் கடுமையாகப் போரிட்டு பழங்காலத்தின் விருத்திரன் மற்றும் வாசவனை நினைவுபடுத்தும் வகையிலான தங்கள் கரங்களின் அசைவுகளால் மக்கள் கூட்டத்தை விரட்டினர்.(25)
இப்படியே அந்த இரு வீரர்களும் ஒருவரை ஒருவர் இழுத்து, பின்னுக்குத் தள்ளி, திடீரென வெட்டி இழுத்து, தலைகுப்புற தள்ளி, பக்கவாட்டில் தள்ளி, ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். சில நேரங்களில் தங்கள் கால் முட்டிகளை வைத்துத் தாக்கிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் சத்தமாகத் திட்டிக் கொண்டு, விரல்களை இறுக மூடித் தாக்கிக் கொண்டு, பெரும் பாறை இறங்கி வருவதைப் போல அடியை ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொண்டனர். அகலமான தோள்களும், நீண்ட கரங்களும் கொண்ட இரு மற்போர் வல்லுனர்களும், ஒருவரை ஒருவர் இரும்பு கதாயுதத்தைப் போன்ற தங்கள் நீண்ட கரங்களால் தாக்கிக் கொண்டனர்.(26-28) அந்த இரு வீரர்களுக்கிடையேயான அந்தப் போர், கார்த்திகை மாதத்தின் முதல் (சந்திர) நாளில் {பிரதமையில்} துவங்கியது. பிறகு அந்தச் சிறப்பு மிகுந்த வீரர்களால் இடைவெளியும் உணவும் இன்றி இரவு பகல் பாராமல் பதிமூன்றாவது சந்திர நாள் {திரியோதசி} வரை தொடர்ந்தது. பதினாலாவது சந்திர நாள் {சதுர்த்தசி} இரவில் மகத ஏகாதிபதி {ஜராசந்தன்} களைப்பால் விலகினான்.(30)
ஓ மன்னா, அந்த ஏகாதிபதி களைப்பாக இருப்பதைக் கண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, கடும் செயல்கள் செய்யும் பீமனிடம் அவனைத் தூண்டிவிடுவதற்காக,(31) “ஓ குந்தியின் மகனே {பீமரே}, களைப்பு மிகுதியால் இருக்கும் பகைவனை நசுக்கக் கூடாது, அப்படி நசுக்கினால் அவன் இறக்கவும் நேரிடலாம்.(32) எனவே, ஓ குந்தியின் மகனே {பீமரே}, இந்த மன்னன் உம்மால் ஒடுக்கப்படக் கூடாது. மறுபுறம், ஓ பாரத குலத்தின் காளையே, உமது பகைவனிடம் உமக்கு இணையானவனாக இருக்கும்வகையில் மட்டுமே உமது கரங்கொண்டு போரிடுவீராக” என்றான்.(33)
பிறகு, கிருஷ்ணனால் இப்படிச் சொல்லப்பட்டவனும், எதிரிகளைக் கொல்பவனுமான பாண்டுவின் மகன் {பீமன்}, ஜராசந்தனின் நிலையை உணர்ந்து, அவனது உயிரை எடுக்கத் தீர்மானித்தான்.(34) பலம்வாய்ந்த மனிதர்களின் முதன்மையான அந்தக் குரு குல இளவரசன் {பீமன்}, இதுவரை போரில் தோல்வியுறாத ஜராசந்தனை வீழ்த்த விரும்பித் தன் பலம் மற்றும் ஆற்றலனைத்தையும் ஒருங்கே கூட்டினான் {பீமன்}” {என்றார் வைசம்பாயனர்}.(35)
ஜராசந்தனை இரண்டாக உடைத்த பீமன் – சபாபர்வம் பகுதி 24-(ஜராசந்த வத பர்வம் – 05)பீமன் ஜராசந்தனைக் கொன்றது; கிருஷ்ணன் மலைக்கோட்டையில் அடைபட்டிருந்த மன்னர்களை விடுவித்தது; ஜராசந்தனின் தெய்வீகத் தேரை எடுத்துக் கொண்டது; ஜராசந்தனின் மகனை அரியணையில் அமர்த்தியது; மன்னர்களின் பரிசையும், சகாதேவனின் {ஜராசந்தன் மகன்} பரிசையும் கிருஷ்ணன் ஏற்றுக் கொண்டது. கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன் ஆகியோர் இந்திரப்பிரஸ்தம் திரும்பியது; யுதிஷ்டிரன் மகிழ்ச்சி அடைந்தது; அந்தத் தெய்வீக தேரை கிருஷ்ணனுக்கு யுதிஷ்டிரன் கொடுப்பது; கிருஷ்ணன் துவராகைக்கு மனோவேகத்தில் திரும்பியது…
வைசம்பாயனர் சொன்னார், “இப்படிச் சொல்லப்பட்ட பீமன் ஜராசந்தனைக் கொல்வதில் உறுதி பூண்டு, யது குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணனிடம், “ஓ யது குலத்தின் புலியே, ஓ கிருஷ்ணா, போதிய பலத்துடன் என்னுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் இந்தப் பாவியை நான் மன்னிக்க மாட்டேன்” என்றான்.(1,2) பீமனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மனிதர்களில் புலியான கிருஷ்ணன், தாமதமில்லாமல் ஜராசந்தனைக் கொல்வதற்கு அந்த வீரனை {பீமனை} ஊக்குவிக்கும் வகையில், “ஓ பீமரே, நற்பேற்றின் காரணமாக (உமது தந்தையான) தேவன் மருத்தனிடம் {வாயுத்தேவனிடம்) நீர் அடைந்த பெரும் பலத்தை, ஜராசந்தனிடம் பயன்படுத்துவீராக” என்றான்.(3,4) இப்படி கிருஷ்ணனால் சொல்லப்பட்டவனும், எதிரிகளைக் கொல்பவனுமான பீமன், பெரும் பலம் வாய்ந்த ஜராசந்தனைக் காற்றில் உயரமாகத் தூக்கி சுழற்றத் தொடங்கினான்.(5) ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, இப்படியே காற்றில் அவனை {ஜராசந்தனை} நூறு முறை சுழற்றி, ஜராசந்தனின் முதுகெலும்பில் தன் கால் முட்டியை வைத்த பீமன், அவனது உடலை இருகூறுகளாக உடைத்துப் போட்டான். இப்படி அவனை {ஜராசந்தனைக்} கொன்ற அந்தப் பெரும்பலம் வாய்ந்த விருகோதரன் பயங்கர முழக்கம் செய்தான்.(6) பீமன் அப்படி ஜராசந்தனை உடைத்துப்போட்டு பிறகு, அந்தப் பாண்டவனின் {பீமனின்} முழக்கம், ஜராசந்தனின் மரண ஓலம், பேரொலியாக எழுந்து அனைத்து உயிர்களின் இதயத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியது.(7) மகதத்தின் குடிமக்கள் அனைவரும் இதைக் கண்ட பயங்கரத்தால் ஊமைகளாகினர். இதைக் கண்ட பல பெண்கள் தகுந்தகாலத்திற்கு முன்பே கருக்களை ஈன்றெடுத்துவிட்டனர்.(8) இந்த முழக்கங்களைக் கேட்ட மகத மக்கள், இமயம் பிளந்து பூமியில் விழுந்து இரண்டாகக் கிடக்கிறதோ என்று நினைத்தனர்.(9) பிறகு அந்த எதிரிகளை ஒடுக்குபவர்கள், உறங்குவது போல கிடந்த மன்னனின் உயிரற்ற உடலை அரண்மனை வாயிலில் விட்டுவிட்டு அந்த நகரத்தை விட்டு வெளியே சென்றனர்.(10)
பிறகு கிருஷ்ணன் கொடிக்கம்பத்துடன் கூடிய ஜராசந்தனின் தேரை ஆயத்தமாக்கி, அதில் அந்தச் சகோதரர்களை பயணிக்கச் செய்து, (சிறையில் இருந்த) தனது உறவினர்களை விடுவித்தான்.(11) பெரும் அளவிலான தங்கத்தையும், செல்வங்களையும் கொண்ட அந்த மன்னர்கள், கொடூரமான விதியில் இருந்து காப்பாற்றப் பட்டதால், அவர்கள் கிருஷ்ணனை அணுகி பல பொன்னையும் ரத்தினங்களையும் அவனுக்குப் பரிசாக அளித்தனர்.(12) தன் எதிரியை வீழ்த்திய கிருஷ்ணன், ஆயுதங்களுடன் எந்தக் காயமும் இன்றி, (விடுவிக்கப்பட்ட) மன்னர்களையும் உடன் அழைத்துக் கொண்டு, (ஜராசந்தனின்) அந்தத் தெய்வீக தேரில் கிரிவ்ரஜத்தை விட்டு வெளியே வந்தான்.(13) இந்தப் பூமியில் எந்த ஏகாதிபதியாலும் வீழ்த்தப்பட முடியாதவனும், பேரழகனும், எதிரியைக் கொல்வதில் திறன் கொண்டவனும், தான் கொண்ட வில்லை இரு கைகளாலும் தாங்கக்கூடியவனும் (அர்ஜுனனும்), பெரும் பலங்கொண்டவனும் (பீமனும்), கிருஷ்ணன் தேரை ஓட்ட, பொல்லாங்கு நிறைந்த அந்த இடத்தில் இருந்து வெளியே வந்தனர்.(14)
வீரர்களான பீமனும் அர்ஜுனனும் பயணிக்க கிருஷ்ணனால் செலுத்தப்பட்ட, அந்த சிறந்த தேர் பேரழகு வாய்ந்ததாக இருந்தது.(15) பழங்காலத்தில் இந்த தேரில் நின்றே இந்திரனும் விஷ்ணுவும் (அசுரர்களுக்கு எதிராகப்) போரில் ஈடுபட்டனர். அந்தப் போருக்கு முக்கிய காரணமாகவும், பல கொலைகளுக்குக் காரணமாகவும் (பிருஹஸ்பதியின் மனைவி) தாரகை இருந்தாள். அந்த தேரை ஓட்டிக் கொண்டு வந்த கிருஷ்ணன் மலைக்கோட்டையை விட்டு வெளியே வந்தான்.(16) புடம்போட்ட பொன்னைப் போல பிரகாசித்து, வரிசையாக அலங்கரிக்கப்பட்ட மணிகள் குலுங்க, அதன் சக்கர ஒலி மேகத்தின் முழக்கத்தைப் போல இருக்க, போரில் வெற்றியை மட்டுமே தந்து, எவனுக்கு எதிராக செலுத்தப்படுகிறதோ அவனைக் கொல்லும் அந்த தேரில் இந்திரன், பழங்காலத்தில் தொண்ணூற்று ஒன்பது அசுரர்களைக் கொன்றிருக்கிறான். அந்த மனிதர்களில் காளைகள் (மூன்று மைத்துனர்களும்) அந்த தேரைப் பெற்றதால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.(17,18) இரண்டு சகோதரர்களுடன் கூடியவனும், நீண்ட கரத்தைக் கொண்டவனுமான கிருஷ்ணன், (ஜராசந்தனின்) அந்த தேரில் அமர்ந்திருப்பதைக் கண்ட மகத மக்கள் மிகவும் வியப்படைந்தனர்.(19) ஓ பாரதா {ஜனமேஜயா), காற்றின் வேகம் கொண்ட குதிரைகள் பூட்டப்பட்டிருந்த அந்த தேரில் அமர்ந்திருந்த கிருஷ்ணன் பேரழகுடன் காணப்பட்டான்.(20)
அந்தச் சிறந்த தேரில், பார்வைக்குப் புலப்படாத தெய்வீகக் கலை அம்சத்துடன் கொடிக்கம்பம் இணைக்கப்பட்டிருந்தது. வானவில்லின் பிரகாசம் கொண்ட அந்த அழகிய கொடிக்கம்பத்தை ஒரு யோஜனை தொலைவில் இருந்தும் காணலாம்.(21) கிருஷ்ணன் அதில் ஏறி வெளியே வரும்போது கருடனை நினைத்துக் கொண்டான். தன் தலைவனால் நினைக்கப்பட்ட கருடன், உடனே வந்து, கிராமங்களில் அனைவராலும் வழிபடப்படும் மரம் போல நின்றான்.(22) பாம்புகளை உண்டு வாழும் கனம் நிறைந்த உடல் கொண்ட கருடன், திறந்த வாயுடன் பயங்கரமாக முழங்கிக் கொண்டிருக்கும் எண்ணிலடங்கா உயிரினங்களைக் கொண்ட அந்த அற்புதத்தேரின் கொடிக்கம்பத்தில் அமர்ந்தான்.(23) அதன் பிறகு அந்த தேர் ஆயிரம் கதிர்களால் சூழப்பட்ட நடுப்பகல் சூரியன் போல பார்ப்பதற்கு கூசும்படி இருந்தது. ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த தெய்வீகக் கொடிக்கம்பம் எந்த மரத்தின் மீது மோதாதபடியும், மனிதர்களின் கண்களுக்குப் புலப்படாததாகவும், எந்த ஆயுதத்தாலும் தாக்கப்படாததாகவும் இருந்தது.(24,25) மனிதர்களின் புலியான அச்யுதன் {கிருஷ்ணன்}, மேக முழக்கம் புரியும் சக்கரங்களைக் கொண்ட அந்த தெய்வீக தேரில் பாண்டுவின் மகன்களுடன் {பீமன், அர்ஜுனனுடன்} பயணித்து, கிரிவ்ரஜத்தைவிட்டு வெளியே வந்தான்.(26)
கிருஷ்ணனால் செலுத்தப்பட்ட அந்தத் தேரானது வாசவனிடம் இருந்து மன்னன் வசுவால் பெறப்பட்டதும், வசுவிடம் இருந்து பிருஹத்ரதனால் பெறப்பட்டதும், பிறகு ஜராசந்தனிடம் வந்ததுமாக இருந்தது.(27) நீண்ட கரமும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களும், சிறப்புவாய்ந்த புகழும் கொண்டவன் {கிருஷ்ணன்}, கிரிவ்ரஜத்தைவிட்டு வெளியே வந்தும், நகருக்கு வெளியே ஒரு சம வெளியில் (சிறிது நேரம்) நின்றான்.(28) ஓ மன்னா {ஜனமேஜயா}, பிராமணர்களைத் தலைமையாகக் கொண்ட குடிமக்கள், அங்கே விரைந்து வந்து உரிய அறச்சடங்குகளுடன் வாழ்த்தினர்.(29) சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மன்னர்கள் அனைவரும் பெரும் மதிப்புடன் புகழும் வகையில் மதுசூதனனிடம் {கிருஷ்ணனிடம்},(30) “ஓ நீண்ட கரங்கொண்டவனே {கிருஷ்ணா}, ஜராசந்தனால் பீடிக்கப்பட்டு மிகுந்த துயரத்தில் இருந்த எங்களை இன்று நீ விடுவித்திருக்கிறாய். ஓ தேவகியின் மகனே {கிருஷ்ணா}, பீமன் மற்றும் அர்ஜுனனுடன் கூடி நீ சாதித்த இந்த அறச்செயல் இயல்புக்கு மீறிய சாதனையாகும்.(31,32) ஓ விஷ்ணுவே {கிருஷ்ணா}, ஜராசந்தனின் மலைக் கோட்டையில் அல்லலுற்ற எங்களை, நாங்கள் பெற்ற நற்பேற்றாலேயே விடுவித்தாய். இதனால், ஓ யது குலத்தின் மகனே {கிருஷ்ணா}, நீ செய்தற்கரிய செயலைச் செய்திருக்கிறாய்.(33) ஓ மனிதர்களில் புலியே, நாங்கள் உன்னை வணங்குகிறோம். நாங்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடு. அது எவ்வளவு கடினமாக இருந்தாலும், உனது கட்டளையை அறிந்த நாங்கள், ஓ தலைவா {கிருஷ்ணா}, நிச்சயம் அதைச் சாதிப்போம்”, என்று சொன்னார்கள்.(34)
இப்படி அந்த ஏகாதிபதிகளால் சொல்லப்பட்ட ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, அவர்களுக்கு {விடுவிக்கப்பட்ட மன்னர்களுக்கு} அனைத்து உறுதிகளையும் கொடுத்துவிட்டு, அவர்களிடம் {விடுவிக்கப்பட்ட மன்னர்களிடம்}, “யுதிஷ்டிரர் ராஜசூய வேள்வி செய்ய நினைத்திருக்கிறார்.(35) அறத்தால் வழிநடத்தப்படும் அந்த ஏகாதிபதி, உயர்ந்த அதிகாரமுள்ள உண்மையான மதிப்பை அடைய விரும்புகிறார். என் மூலமாக இதை அறிந்து கொண்டு அவருக்கு அவரது காரியங்களில் உதவி செய்யுங்கள்” என்றான்.(36)
ஓ மன்னா {ஜனமேஜயா}, இதயத்தில் மகிழ்ச்சி நிறைந்த அந்த ஏகாதிபதிகள் கிருஷ்ணனின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, “அப்படியே ஆகட்டும்!” என்றனர்.(37) இதைச் சொன்ன பூமியின் அந்தத் தலைவர்கள், பல நகைகளை தாசார்ஹ குலத்தவனுக்கு {கிருஷ்ணனுக்கு) பரிசாக அளித்தனர். பிறகு கோவிந்தன் {கிருஷ்ணன்}, அவர்களிடம் கொண்ட அன்பால், அவர்கள் கொடுத்த பரிசுகளில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டான்.(38)
பிறகு ஜராசந்தனின் மகனும், உயர்ந்த ஆன்மாவுமான சகதேவன், தனது உறவினர்களுடனும், தனது நாட்டின் முக்கிய அதிகாரிகளுடனும், புரோகிதரை தன் முன் கொண்டு அங்கே வந்தான்.(39) அந்த இளவரசன் {சகதேவன்}, பணிந்து வணங்கி, பெரும் பொற்குவியலையும், விலையுயர்ந்த கற்களையும் பரிசாகக் கொடுத்து, மனிதர்களில் தேவனான வாசுதேவனை {கிருஷ்ணனை} வழிபட்டான்.(40) பிறகு மனிதர்களில் சிறந்த கிருஷ்ணன் பயத்தில் இருந்த அந்த இளவரசனுக்கு {சகாதேவனுக்கு} அனைத்து உறுதிகளையும் கொடுத்து, பெருமதிப்பிலான அந்தப் பரிசுகளை ஏற்றுக் கொண்டான்.(41) மகிழ்ச்சியுடன் இருந்த கிருஷ்ணன் அந்த இளவரசனுக்கு மகதத்தின் ஆட்சியுரிமையைக் கொடுத்தான். அந்த மேன்மையான, மனிதர்களில் பலம் வாய்ந்த கரங்கள் கொண்ட, ஜராசந்தனின் சிறப்புவாய்ந்த மகன் {சகதேவன்}, அந்த நாட்டின் அரியணையில் அமர்த்தப்பட்டு, கிருஷ்ணனின் நட்பைப் பெற்று, பிருதையின் {குந்தியின்} மகன்களால் மதிப்புடன் நடத்தப்பட்டு, தனது தந்தையின் {ஜராசந்தனின்} நகருக்குள் மீண்டும் நுழைந்தான்.(42,43) பிருதையின் {குந்தியின்} மகன்களுடன் இருந்த பெரும் நற்பேறு பெற்ற மனிதர்களில் காளையான கிருஷ்ணன், எண்ணிலடங்கா நகைகளுடன் மகத நகரை விட்டு வெளியேறினான்.(44) பாண்டுவின் இரு மகன்களுடன் {பீமன், அர்ஜுனனுடன்} அச்யுதன் (கிருஷ்ணன்) இந்திரப்பிரஸ்தத்தை அடைந்தான். யுதிஷ்டிரனை மகிழ்ச்சியுடன் அணுகி, அந்த ஏகாதிபதியிடம்,(45) “ஓ மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, நற்பேற்றின் நிமித்தமாக, பெரும் பலம் வாய்ந்த ஜராசந்தன் பீமரால் கொல்லப்பட்டான். (கிரிவ்ரஜ) சிறையில் அடைபட்டிருந்த மன்னர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.(46) மேலும் நற்பேற்றினால் பீமரும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்) அந்த நகரத்தில் காயமடையாமல் நலமுடன் தங்கள் சொந்த நகரத்திற்குத் திரும்பியிருக்கின்றனர்” என்றான்.(47)
பிறகு யுதிஷ்டிரன், கிருஷ்ணனை அவனது தகுதிக்கேற்ப வழிபட்டு, பீமனையும் அர்ஜுனனையும் மகிழ்ச்சியுடன் வாரி அணைத்துக் கொண்டான்.(48) எதிரிகளற்ற அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, தனது தம்பிகளின் வெற்றியாலும், ஜராசந்தனின் மரணத்தாலும் மிகவும் மகிழ்ந்து, தனது தம்பிகளுடன் அந்தச் சூழ்நிலையைக் கொண்டாடினான்.(49) பாண்டுவின் மகன்களில் மூத்தவன் (யுதிஷ்டிரன்), தனது தம்பிகளுடன் சேர்ந்து இந்திரப்பிரஸ்த்ததிற்கு வந்திருந்த மன்னர்களை, அவர்களது வயதுக்குத் தகுந்தபடி உற்சாகப்படுத்தி வழிபட்டு விடை கொடுத்து அனுப்பினான்.(50) யுதிஷ்டிரனால் கட்டளையிடப்பட்ட அந்த மன்னர்கள் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் நேரந்தாழ்த்தாமல் தங்கள் வாகனங்களில் தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர்.(51)
இப்படியே, ஓ மன்னா {ஜனமேஜயா}, மனிதர்களின் புலியும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் எதிரியான ஜராசந்தனின் மரணத்துக்குக் காரணமாக இருந்து, யுதிஷ்டிரனிடமும், பிருதையிடமும் {குந்தியிடமும்}, திரௌபதியிடமும், சுபத்திரையிடமும், பீமசேனனிடமும், அர்ஜுனன் மற்றும் நகுல சகாதேவர்களிடமும் விடைபெற்றான். தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இருந்தும் விடைபெற்று, யுதிஷ்டிரனால் தனக்குக் கொடுக்கப்பட்ட அந்த தெய்வீகத் தேரில் தனது நகரத்திற்கு (துவாரகைக்கு) மனோ வேகத்துடன் சுற்றுச்சூழலின் பத்து புள்ளிகளை அந்தத் தேரின் சக்கர ஒலியால் கலங்கச் செய்து சென்றான்.(52,55) ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, கிருஷ்ணன் புறப்படத் தயாராக இருந்த போது, யுதிஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட பாண்டவர்கள், அந்தக் களைப்பறியா முயற்சியுடைய மனிதர்களில் புலியை {கிருஷ்ணனை} வலம் வந்தனர்.(56)
தேவகியின் மகனான அந்தச் சிறப்பு வாய்ந்த கிருஷ்ணன், (இந்திரப்பிரஸ்தத்தை விட்டு) சென்ற பிறகு, பெரும் வெற்றியை அடைந்து, மன்னர்களின் பயத்தை விலக்கிய காரியம் செய்த அந்தப் பாண்டவர்கள் புகழுடன் இருந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்தப் பாண்டவர்கள் தங்கள் நாட்களை கடத்தி, திரௌபதியை மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் வைத்திருந்தனர். அந்த நேரத்தில் அறம், இன்பம், பொருள், ஆகியவற்றுக்குச் சரியாக மன்னன் யுதிஷ்டிரன் தனது குடிமக்களைக் காத்து வந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(57-59)
———————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply