வாய்மையே என் ஆயுதம்! – ஆதிபர்வம் பகுதி 215-(அர்ஜுன வனவாச பர்வம் – 01)-ஒரு பிராமணனிடம் பசுக்களைத் திருடியவர்களிடம் இருந்து அதை மீட்டுக் கொடுக்க எண்ணி, தனது ஆயுதத்தை எடுக்க அறைக்குச் சென்ற அர்ஜுனன், யுதிஷ்டிரனும் திரௌபதியும் தனித்திருப்பதைக் காண்பது; அவர்களுக்குள் ஏற்பட்ட விதி மீறப்பட்டதால் அவன் பனிரெண்டு வருட வனவாசம் மேற்கொள்வது.
வைசம்பாயனர் சொன்னார், “இப்படிப்பட்ட ஒரு விதியைத் தங்களுக்குள் அமைத்துக் கொண்ட பாண்டவர்கள், தொடர்ந்து அங்கே {காண்டவ பிரஸ்தத்தில்} வசித்தனர். தங்கள் வீரத்தால் அவர்கள் பலநாட்டு மன்னர்களைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர்.(1) பிருதையின் {குந்தியின்} ஐந்து மகன்களான அளவிடமுடியா சக்தி கொண்டவர்கள் அவர்கள் அனைவருக்கும் கிருஷ்ணை {திரௌபதி} கீழ்ப்படிந்து நடந்தாள்.(2) யானைகளால் நிறைந்த சரஸ்வதி நதி, ஐந்து நீரோட்டங்களாகப் பிரிந்து இன்பமடைந்ததைப் போல, திரௌபதி தனது ஐந்து வீரக் கணவர்களைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தாள். அவர்களும் அவளைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.(3) அந்தச் சிறப்புவாய்ந்த பாண்டவர்கள் தங்கள் செயல்களில் அறத்தன்மையுடன் இருந்ததால், மொத்த குரு குலமும், பாவங்களில் இருந்து விடுபட்டு, மகிழ்ச்சியாக வளமையில் வளர்ந்தனர்.(4)
ஓ மன்னா {ஜனமேஜயா}, சில காலம் கழித்து, ஒரு சம்பவம் நடந்தது. குறிப்பிட்ட சில கள்வர்கள் தங்கள் கொள்ளையைச் சுமந்து செல்கையில், ஒரு பிராமணனின் கால்நடைகளையும் திருடிச் சென்றுவிட்டனர்.(5) கோபத்தால் தனது உணர்வை இழந்த அந்த பிராமணன், காண்டவப் பிரஸ்தத்துக்கு வந்து, துன்ப மிகுதியால் பாண்டவர்களைக் கடிந்து கொண்டான்.(6)
அந்த பிராமணன், “பாண்டவர்களே, உங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் இருந்து, வெறுக்கத்தக்க தீய பாவிகளால் எனது பசுக்கள் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. அந்தக் கள்வர்களைத் துரத்திச் செல்லுங்கள்.(7) ஐயோ, ஓர் அமைதியான பிராமணனிடம் இருந்த புனிதமான நெய், காகங்களால் கொண்டு செல்லப்பட்டதே. ஐயோ, காலியான சிங்கத்தின் குகைக்குள் தீய நரி படையெடுக்கிறதே!(8) நிலத்தின் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு எடுத்துக் கொள்ளும் மன்னன், அவனது குடிகளைக் காக்கவில்லையென்றால், அவனை உலகத்திலேயே அதிகப் பாவங்களைச் செய்த பாவி என ஞானமுள்ளோர் அழைக்கின்றனர்.(9) ஒரு பிராமணனின் செல்வம் கள்வர்களால் கொண்டு செல்லப்படுகிறது. அறமே சிறுமையைத் தாங்குகிறதே! துயரத்தில் மூழ்கியிருக்கும் எனது கரங்களைப் பற்றித் தூக்குங்கள் பாண்டவர்களே!” என்றான் {பிராமணன்}.(10)
வைசம்பாயணர் தொடர்ந்தார், “குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்} கசப்பான துயரத்தில் அழுது கொண்டு சொன்ன பிராமணர்களின் வார்த்தைகளைக் கேட்டு “அஞ்சாதே!” என்று உரத்த குரலில் அந்த பிராமணனுக்கு உறுதியளித்தான்.(11) ஆனால், அப்பொழுது அந்தச் சிறப்பு மிகுந்த பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களை வைக்கும் அறையில் நீதிமானான யுதிஷ்டிரனும், கிருஷ்ணையும் {திரௌபதியும்} இருந்தார்கள். அழுது கொண்டே இருந்த பிராமணனின் வார்த்தைகள் அவனை {அர்ஜுனனை} உந்தினாலும், அர்ஜுனனால் அந்த அறைக்குள்ளும் நுழைய முடியவில்லை. ஆயுதங்கள் இல்லாமல் பிராமணனுடன் செல்லவும் முடியவில்லை.(12,13)
பிராமணனால் அழைக்கப்பட்ட அந்த அர்ஜுனன் சோகம் நிறைந்த இதயத்துடன் சிறிது நேரம் சிந்தித்தான்.(14) “ஐயோ, இந்த பிராமணனின் செல்வம் களவாடப்பட்டிருக்கிறதே! நான் அவனது கண்ணீரை வற்றச் செய்ய வேண்டும்.(15) இப்போதும் அழுது கொண்டே இருக்கும் அவன், துயரத்துடன் நமது வாசலுக்கு வந்திருக்கிறான். இப்போது நான் இவனைக் காக்கவில்லை என்றால், இந்த அலட்சியத்தால் மன்னனுக்குப் {யுதிஷ்டிரனுக்குப்} பாவம் ஏற்படும்.(16) நமது இந்த அறமற்ற தன்மை {அதர்மம்} நாடு முழுவதும் அறியப்படும். அதனால் நமக்குப் பெரும் பாவம் ஏற்படும்.(17) மன்னனை {யுதிஷ்டிரனை} மதிக்காமலே அறைக்குள் சென்றாலோ, எதிரிகளற்ற அந்த மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} உண்மையற்று நான் நடந்து கொண்டதாக ஆகும்.(18) அந்த அறைக்குள் நுழைவதன் மூலம், நான் வனவாசத் தண்டனை பெற்று அங்கேயே சாகக்கூட நேரிடும். உடலை விட அறமே மேலானாது. எனவேதான் உடல் அழிந்த பிறகும் அது நீடிக்கிறது” என்று நினைத்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஒரு தீர்மானத்திற்கு வந்து, அந்த அறைக்குள் நுழைந்து யுதிஷ்டிரனிடம் பேசினான்.(19,21)
வில்லுடன் வெளியே வந்த அவன், அந்த பிராமணனிடம் மகிழ்ச்சியுடன், “ஓ பிராமணரே! அந்தப் பாவித் திருடர்கள் நம்மை விட்டு வெகுதூரத்திற்குச் செல்லாதவாறு விரைந்து செல்வோம். நான் உம்முடன் வந்து, உமது செல்வத்தைத் திருடர்கள் கையில் இருந்து மீட்டுத் தருகிறேன்” என்றான் {அர்ஜுனன்}.(22,23)
பிறகு இருகரங்களையும் சம நிபுணத்துவத்துடன் பயன்படுத்தும் தனஞ்சயன் {அர்ஜுனன்}, கையில் வில்லேந்தி, கவசம் பூண்டு, மேற்கூடு கொண்ட தேரில் ஏறி கள்வர்களைத் தொடர்ந்தான். அத்திருடர்களைத் தனது கணைகளின் மூலம் துளைத்து, தங்கள் கொள்ளையைத் திரும்பத் தர நிர்ப்பந்தித்தான்.(24) அந்த பிராமணனுக்குப் பசுக்களை மீட்டுக் கொடுத்து, பெரும் புகழை வென்று, தலைநகருக்குத் திரும்பினான். மூத்தவர்களை வணங்கி, அனைவராலும் பாராட்டப்பட்ட அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்} கடைசியாக யுதிஷ்டிரனை அணுகி,(25,26) “ஓ தலைவா, எனக்கு விடை கொடுப்பீராக. நான் எனது சபதத்தை நிறைவேற்ற வேண்டும். நீர் திரௌபதியுடன் அமர்ந்திருப்பதைக் கண்டதால், நமக்குள் விதிக்கப்பட்ட விதியை மீறியவன் ஆகிறேன். எனவே, நான் கானகத்திற்குச் செல்கிறேன். இதுவே நமக்குள் நாம் தீர்மானித்துக் கொண்டது” என்றான்.(26,27)
அந்த வலிநிறைந்த சொற்களைத் திடீரெனக் கேட்ட யுதிஷ்டிரன் மிகுந்த துன்பம் கொண்டு கலக்கமடைந்த குரலில் “ஏன்!” என்று கேட்டான்.(28) பிறகு சிறிது நேரம் கழித்து, மன்னன் யுதிஷ்டிரன், சபதங்களைத் துறக்காத, சுருண்ட முடி கொண்ட தனது தம்பி தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} துயரத்துடன்,(29) “ஓ பாவம் அற்றவனே, நான் உனக்கு மரியாதைக்குரியவன் என்றால், நான் சொல்வதைக் கேட்பாயாக.(30) ஓ வீரனே, நன்மைக்காகவே நீ அந்த அறைக்குள் நுழைந்தாய் என்பது எனக்குத் தெரியும். நீ எனக்குப் பிடிக்காதது எதையும் செய்தாயா? ஆனால் எனது மனம் நிறைவு கொள்ளவில்லையே.(31) ஒரு தம்பி, தனது அண்ணனும் அண்ணனின் மனைவியும் உட்கார்ந்திருக்கும் அறைக்குள் நுழைவது குற்றமாகாது. ஓர் அண்ணன், தம்பியும் தம்பியின் மனைவியும் உட்கார்ந்திருக்கும் அறைக்குள் நுழைவதே குற்றமாகும்.(32) எனவே, ஓ பலம் பொருந்திய கரம் கொண்டவனே, நீ சொல்லும் காரணத்திலிருந்து விலகு. நான் சொல்வதைச் செய்வாயாக. உனது அறம் தாழவில்லை. நீ என்னை அவமானப்படுத்தவில்லை” என்றான் {யுதிஷ்டிரன்}.(33)
இதைக் கேட்ட அர்ஜுனன், “ஒருவன் தனது கடமையைச் செய்யும்போது இரட்டுற மொழிதல் {உண்மையை மழுப்பிச் சிலேடையாகப் பேசுதல் – quiblling} அனுமதிக்கப்படுவதில்லை என்று நீர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். நான் உண்மையிலிருந்து நழுவ முடியாது. உண்மையே எனது ஆயுதம்” என்றான் {அர்ஜுனன்}.(34)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “மன்னனின் அனுமதியைப் பெற்று, அர்ஜுனன் தன்னைக் கானக வாழ்வுக்குத் தயார் செய்து கொண்டான்; பிறகு அவன் பனிரெண்டு {12} வருடங்கள் கானகத்தில் வாழச் சென்றான் {அர்ஜுனன்}.(35)
உலூபியின் காமமும், அர்ஜுனன் பெற்ற வரமும்! – ஆதிபர்வம் பகுதி 216-(அர்ஜுன வனவாச பர்வம் – 02)குளிப்பதற்காக கங்கையில் இறங்கிய அர்ஜுனன் உலூபி என்ற நாக கன்னிகையால் நீருக்கு அடியில் இழுத்துச் செல்லப்பட்டது; நீருக்கு அடியில் வேள்விச் சடங்கு செய்தது; இரவு தங்கி காலை கங்கைக் கரை வந்தது; வரம் பெற்றது…
வைசம்பாயனர் சொன்னார், “குருகுலத்தின் புகழைப் பரப்பும் பெரும் பலம் வாய்ந்த கரம் கொண்ட அர்ஜுனன் (கானகத்திற்கு) கிளம்பியபோது, வேதங்கள் அறிந்த பிராமணர்கள் அந்தச் சிறப்பு மிகுந்த வீரனுக்குப் பின்னால் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை நடந்து சென்றனர்.(1) பரமாத்மாவுக்குத் தங்களை அர்ப்பணித்து, வேதங்களையும், அதன் கிளைகளையும் நன்கறிந்த பிராமணர்களும், இசை நிபுணத்துவம் கொண்டவர்களும், கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்த துறவிகளும், புராணங்களை உரைப்போரும்,(2) புனிதமான கதைகளைப் பக்தர்களுக்கு உரைத்துப் பிரம்மச்சரியம் பூண்டவர்களும், வானப்பிரஸ்தர்களும் {காட்டில் துறவு எண்ணத்துடன் வாழும் தம்பதியரும்}, தெய்வீக வரலாறுகளை இனிமையாக உரைக்கும் பிராமணர்களும்,(3) மேலும் பல்வேறு வகையில் இனிமையாகப் பேசும் மனிதர்களும், இந்திரனைத் தொடரும் மருத்துகளைப் போல, அர்ஜுனனுடன் பயணித்தனர்.(4)
ஓ பாரதக் குலத்தோனே {ஜனமேஜயா}, அந்தப் பாரதர்களில் காளையானவன், தனது பயணத்தில் பல மகிழ்ச்சிகரமான, காணுதற்கினிய காட்சிகள் கொண்ட கானகங்களையும், ஏரிகளையும், நதிகளையும், கடல்களையும், மாநிலங்களையும், நீரையும் கண்டான், ஒரே நீளத்தில் கங்கை உற்பத்தியாகும் இடத்திற்கே சென்ற அந்த வீரன் அங்கேயே வசிக்க நினைத்தான்.(5,6) ஓ ஜனமேஜயா! பாண்டு மகன்களில் முதன்மையான அந்த உயர் ஆன்மா கொண்டவன் அங்கு வாழும்போது ஏற்பட்ட அற்புத நிகழ்ச்சியை இப்போது கேட்பாயாக.(7)
ஓ பாரதா {ஜனமேஜயா}, குந்தியின் மகனைத் தொடர்ந்து சென்ற பிராமணர்களும், தங்கள் வசிப்பிடத்தை அந்தப் பகுதியிலேயே ஏற்படுத்திக் கொண்டு, எண்ணற்ற அக்னி ஹோத்திரங்களைச் (நெருப்பை மூட்டி புனித சடங்குகளைச்) செய்தனர்.(8) ஓ மன்னா {ஜனமேஜயா}, சரியான பாதையில் இருந்து நழுவாத, நோன்பு நோற்கும் கற்ற பிராமணர்கள் தினமும் அந்தப் புனித நீரோடையின் அருகில் மந்திரங்களைச் சொல்லி, நெருப்பை மூட்டி, அந்த நெருப்பில் தெளிந்த நெய்யை அவிர்ப்பாகமாக ஊற்றி மலர்களால் வழிபட்டு வந்ததால், அந்த இடமே மிகுந்த அழகாகக் காட்சி அளித்தது.(9,10)
ஒரு நாள், அந்தப் பகுதியில் பிராமணர்களுக்கு மத்தியில் தங்கியிருந்த பாண்டவர்களில் காளையானவன் {அர்ஜுனன்}, தனது சுத்திகரிப்புச் சடங்குகளைச் செய்ய கங்கைக்குள் இறங்கினான்.(11) சுத்திகரிப்புச் சடங்குகள் முடிந்ததும், தனது முன்னோர்களை நினைத்து நீரால் அர்ச்சனை செய்தான். செய்து முடித்ததும் நெருப்பின் முன் வேள்வி செய்வதற்காக நீரில் இருந்து எழுந்த போது,(12) அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரன் {அர்ஜுனன்}, காம தேவனால் உந்தப்பட்ட நாக மன்னனின் மகளான உலூபியால் நீருக்கு அடியில் இழுத்துச் செல்லப்பட்டான்.(13)
பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, நாக மன்னன் கௌரவ்யனின் அழகிய மாளிகைக்குத் தூக்கிச் செல்லப்பட்டான். அவனுக்காகவே அங்கே வேள்வி நெருப்பு எரிவதை அர்ஜுனன் கண்டான். நெருப்பைக் கண்ட குந்தியின் மகனான அர்ஜுனன் வேள்விச்சடங்குகளை அர்ப்பணிப்புடன் செய்தான். அச்சமற்ற அர்ஜுனன், உருவற்ற நெருப்பில் தெளிந்த நெய்யை விடுவதைக் கண்ட அக்னி அவன் {அர்ஜுனன்} மீது பெரும் மனநிறைவு கொண்டான். (14,15)
இப்படித் தனது சடங்குகளை நெருப்பின் முன் செய்த குந்தியின் மகன் {அர்ஜுனன்}, நாக மன்னன் மகளைக் {உலூபியைக்} கண்டு அவளிடம் சிரித்துக் கொண்டே,(16) “ஓ அழகானவளே, உனது துடுக்குத் தனத்தால் என்ன காரியத்தைச் செய்தாய்? ஓ மருண்டவளே! இந்த அழகான பகுதி யாருக்குச் சொந்தமானது? நீ யார்? யாருடைய மகள்?” என்று கேட்டான்.(17)
அர்ஜுனனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட உலூபி, “ஐராவதனின் குலத்தில் பிறந்த கௌரவ்யன் என்றொரு நாகன் இருக்கிறான். ஓ இளவரசரே, நான் அந்தக் கௌரவ்யனின் மகளே. எனது பெயர் உலூபி ஆகும்.(18) ஓ மனிதர்களில் புலியே, சுத்திகரிப்பு காரியங்களுக்காக நீரோடையில் இறங்கிய உம்மைக் கண்ட நான் காம தேவனால் மதியையிழந்தேன்.(19) ஓ பாவமற்றவரே, நான் திருமணமாகாதவள். நான் உமது நிமித்தமாகக் காம தேவனால் துன்புறுகிறேன். ஓ குரு குலத்தவரே, உம்மைக் கொடுத்து என்னை இன்று மன நிறைவு கொள்ளச் செய்வீராக” என்றாள் {நாகக் கன்னி உலூபி}[1].(20)(பீஷ்ம பர்வம் பகுதி 91ல் உலூபி ஒரு விதவை என்ற குறிப்பு இருக்கிறது. இங்கே திருமணமாகாதவள் என்று உலூபி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். கும்பகோணம் பதிப்பில், “கௌரவபுத்திரனே, குற்றமற்றவனே, உன்னிமித்தமாக அனங்கனாற்பீடிக்கப்பட்டவளும், விவாகமில்லாதவளுமாகிய எனக்கு நீ இப்போது ஆத்மதானஞ்செய்தால் ஆனந்தத்தையுண்டாக்குவாய்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “ஓ கௌரவக் குலத்தோன்றலே, காதல் தேவன் என்னைத் துன்புறுத்துகிறான். நான் இன்னும் கன்னியாக இருக்கிறேன். இன்று உம்மை எனக்குக் கொடுத்து என்னை நிறைவுகொள்ளச் செய்வீராக” என்றிருக்கிறது.)
அர்ஜுனன், “மன்னன் யுதிஷ்டிரனின் கட்டளையால், ஓ இனிமையானவளே {உலூபியே}, நான் பனிரெண்டு வருட பிரம்மச்சரிய விரதம் நோற்றிருக்கிறேன். நான் நினைத்தவாறு செயல்பட எனக்கு அதிகாரம் இல்லை.(21) ஆனால், நீர் அதிகாரியே, நான் (என்னால் முடிந்தால்) உனக்கு இன்பம் கொடுக்க விரும்புகிறேன். நான் எனது வாழ்வில் பொய்ம்மை பேசியதில்லை. (22) எனவே, ஓ நாகக் கன்னிகையே, நான் உனக்கு இன்பம் அளிக்கும் அதே வேளையில், பொய்ம்மையிலிருந்தும், கடமையைத் தவறும் குற்றத்தில் இருந்தும் நான் எப்படித் தப்பிப்பேன் என்பதையும் சொல்” என்றான் {அர்ஜுனன்}.(23)
அதற்கு உலூபி “ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனனே}, நீர் ஏன் இந்த உலகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறீர்? நீர் ஏன் உமது அண்ணனால் பிரம்மச்சரிய வாழ்வு வாழ கட்டளையிடப்பட்டிருக்கிறீர்? என்பதை நான் அறிவேன்.(24) உங்கள் அனைவரின் பொது மனைவியான துருபதன் மகளுடன் {திரௌபதியுடன்} உங்களில் யாராவது தனிமையில் அமர்ந்திருந்தால், அதைக் காணும் உங்களில் மற்றவர் பனிரெண்டு வருடங்களுக்குப் பிரம்மச்சாரியாகக் கானகத்தில் வாழ்வது என்பது நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட உறுதியில் ஏற்பட்ட புரிந்துணர்வு {ஒப்பந்தம்} ஆகும். எனவே, உங்களில் யாராவது நாடு கடத்தப்பட்டால் அது திரௌபதியின் நிமித்தமாகவே இருக்க வேண்டும்.(25,26) அந்த உறுதியில் இருந்தே நீர் இந்தக் கடமையைச் செய்கிறீர். (எனது வேண்டுகோளை நீர் ஏற்றுக் கொள்வதால்) உமது அறம் எந்தத் தாழ்வையும் அடைந்துவிடாது. மேலும், ஓ அகன்ற கண் கொண்டவரே {அர்ஜுனரே}, துயரத்தில் இருப்பவரை மீட்பது உமது கடமையாகும்.(27)
என்னை விடுவிப்பதால் உமது அறம் தாழ்ந்துவிடாது. ஓ அர்ஜுனரே உமது அறத்திற்குச் சிறு தாழ்வு ஏற்பட்டாலும், எனது உயிரைக் காப்பாற்றியதால் உமக்குப் பெரும் புண்ணியம் கிடைக்கும். உம்மை வழிபடுபவளாக என்னை அறிந்து கொள்ளும். எனவே, ஓ பார்த்தரே {அர்ஜுனரே}! உம்மை எனக்குக் கொடும்! ஓ தலைவா, இதுவும் (கெஞ்சி அன்பை வேண்டும் பெண்ணை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும்) ஞானமுள்ளோர் கருத்துதான்.(28,29) இந்த வழியில் நீர் செயல்படவில்லை என்றால், நான் என்னை அழித்துக் கொள்வேன், என்பதை அறிந்து கொள்ளும். பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவரே {அர்ஜுனரே}, எனது உயிரைக் காப்பாற்றி, பெரும் புண்ணியத்தைப் பெற்றுக் கொள்ளும்.(30) ஓ மனிதர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, நான் உமது பாதுகாப்பை வேண்டுகிறேன். ஓ குந்தியின் மகனே {அர்ஜுனனே}, நீர் துயரத்தில் இருப்பவரையும், தலைவர் இல்லாதவர்களையும் எப்போதும் காப்பவர். அழுது கொண்டிருக்கும் நான் உமது பாதுகாப்பை வேண்டுகிறேன்.(31) ஆசை நிரம்பிய நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். எனவே எனக்கு ஏற்புடைய செயலைச் செய்யும். உம்மை எனக்குக் கொடுத்து எனது விருப்பத்தை மனநிறைவுப்படுத்துவதே உமக்குத் தகும்” என்றாள் {நாகக் கன்னி உலூபி}.(32)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “நாக மன்னனின் மகளால் {உலூபியால்} இப்படிச் சொல்லப்பட்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, அறத்தைத் தனது குறிக்கோளாகக் கொண்டு அவள் விரும்பிய அனைத்தையும் செய்தான்.(33) அந்தப் பெரும்பலசாலியான அர்ஜுனன் இரவு முழுவதும் நாக மாளிகையில் கழித்து, சூரியனுடன் தானும் எழுந்தான்.(34) கௌரவ்யனின் அரண்மனையிலிருந்து தான் கங்கையில் இறங்கிய அதே இடத்திற்கு, உலூபியுடன் மீண்டும் வந்தான். கற்புடைய உலூபி அவனிடம் விடைபெற்றுக் கொண்டு தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினாள்.(35) ஓ பாரதா {ஜனமேஜயா}, யாராலும் அர்ஜுனனை நீரில் வெல்ல முடியாத படி “நீரிலும், நிலத்திலும் வாழும் எந்த உயிரினத்தையும் உம்மால் வெற்றி கொள்ள இயலும்” என்று வரம் கொடுத்தாள் அவள் {உலூபி}”.(36)
அர்ஜுனன் சித்ராங்கதை திருமணம்! – ஆதிபர்வம் பகுதி 217-(அர்ஜுன வனவாச பர்வம் – 03) அர்ஜுனன் பல சிகரங்களையும், பல புண்ணிய இடங்களையும் கண்டு மணிப்புரம் சென்றது; அங்கே சித்ரவாஹனன் மகள் சித்ராங்கதையை மணந்தது…
வைசம்பாயனர் சொன்னார், “பிறகு அந்த வஜ்ரதாரியின் {இந்திரனின்} மகன் {அர்ஜுனன்} (தன்னுடன் வசித்து வந்த) பிராமணர்களிடம் நடந்தது அத்தனையும் சொல்லி, இமயத்தின் சாரலை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான்.(1) அவன் அகஸ்தியவடம் எனும் இடத்தை அடைந்து, அங்கிருந்து வசிஷ்டரின் சிகரத்திற்குச் சென்றான். பிறகு அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} பிருகுவின் சிகரத்திற்குச் சென்றான்.(2) அங்கே தன்னை நீராலும், சடங்குகளாலும் தூய்மைப்படுத்திக் கொண்டு, பிராமணர்களுக்கு ஆயிரக்கணக்கான பசுக்களையும், பல வீடுகளையும் பரிசாகக் கொடுத்தான்.(3) அந்த மனிதர்களில் சிறந்தவன் {அர்ஜுனன்} ஹிரண்யபிந்து என்று அழைக்கப்பட்ட ஆசிரமத்தை நோக்கி முன்னேறினான். அங்கேயும் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்ட பாண்டுவின் மகன், அதன் பிறகு பல புனிதமான இடங்களைக் கண்டான் {புண்ணிய ஸ்தலங்களைத் தரிசித்தான்}.(4)
அந்த உயரங்களில் {சிகரங்களில்} இருந்து இறங்கிய அந்த மனிதர்களின் தலைவன் {அர்ஜுனன்}, ஓ பாரதா {ஜனமேஜயா}, கிழக்கிலிருக்கும் நாடுகளைக் காண ஆவல் கொண்டு, பிராமணர்களுடன் சேர்ந்து கிழக்கு நோக்கிப் பயணித்தான்.(5) அந்தக் குரு குலத்தின் முதன்மையானவன் {அர்ஜுனன்}, பல புண்ணிய நீர்நிலைகளை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாகக் கண்டான். நைமிசவனத்தின் அடர்ந்த காட்டில் (தாமரைகள் நிறைந்த) உத்பலினி என்ற ஆற்றையும், நந்தா நதி மற்றும் அபரநந்தா நதி, கௌசிகி நதி, மற்றும் பெரும் ஆறுகளான கயை மற்றும் கங்கை, புனித நீர்நிலை கொண்ட அனைத்து இடங்களையும் கண்டு தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டான். ஓ பாரதா {ஜனமேஜயா}, அப்போது (சில வழக்கமான சடங்குகளுடன்) பிராமணர்களுக்குப் பல பசுக்களைக் கொடுத்தான்.(6-8) அங்கத்திலும், வங்கத்திலும், கலிங்கத்திலும்[1] உள்ள அனைத்துப் புனித நீர்நிலைகளையும், புனித இடங்களையும் அர்ஜுனன் பார்வையிட்டான்.(9)(வங்கம்- மேற்கு வங்காளம் மாநிலமும், பங்களாதேஷ் நாட்டையும் உள்ளடக்கியது; கலிங்கம்- இன்றைய ஒடிசா=ஒரிஸ்ஸா மாநிலத்தையும் குறிக்கிறது. அர்ஜுனன் தெற்கு நோக்கியே வந்திருக்க வேண்டும்)
அவற்றையெல்லாம் கண்டு, முறையான சடங்குகளைச் சரியாகச் செய்து, நிறைந்த செல்வத்தைத் தானமாகக் கொடுத்தான். ஓ பாரதா, அந்தப் பாண்டுவின் மகனைத் தொடர்ந்து சென்ற பிராமணர்கள் கலிங்க நாட்டு வாயிலில் அவனுக்கு விடை கொடுத்து அனுப்பி, மேலும் தொடர்ந்து செல்லாமல் நின்று கொண்டனர்.(10) குந்தியின் மகனான அந்த வீரத் தனஞ்சயன் {அர்ஜுனன்} அவர்களிடம் விடை பெற்று சில பணியாட்கள் மட்டுமே உடன்வர பெருங்கடலை நோக்கிச் சென்றான்.(11) கலிங்க நாட்டைக் கடந்த அந்தப் பலம் வாய்ந்தவன் {அர்ஜுனன்} பல்வேறு வித்தியாசமான நாடுகளையும், புனித இடங்களையும், வித்தியாசமான மாளிகைகளையும், அழகான வீடுகளையும் வழியில் கண்டு கொண்டே சென்றான்.(12) துறவிகள் நிறைந்த மகேந்திர மலையையும் கண்டு, அதன் பிறகு கடற்கரை வழியாகவே மெதுவாக நடந்து மணிப்புரம் என்ற நாட்டுக்குச் சென்றான்[2].(13)(இந்தக் கதையைக் கொண்டுதான் தென்னகப் பதிப்புகளில் அல்லிராஜ்யம் சித்தரிக்கப்பட்டுள்ளதாகத் தேவதத் கூறுகிறார். அவற்றில் மணிப்புரம் {மணலூரபுரம்} பாண்டிய நாடாகச் சொல்லப்படுவதாகவும் சொல்கிறார் தேவதத்.—இதற்கு வலு சேர்ப்பது போல, கும்பகோணம் பதிப்பில், “மஹாபலசாலியான அவன் ரிஷிகளால் சோபிக்கின்ற மஹேந்திர பர்வதத்தைக் கண்டு, அதன்பிறகு கோதாவரியில் ஸ்நானஞ்செய்து, அதைத் தாண்டி ஸமுத்திர ஸங்கமத்தில் பிரசித்தி பெற்ற காவேரியையடைந்து ஸ்நானஞ்செய்து, தேவரிஷி பிதிர் தர்ப்பணஞ்செய்து, ஸமுத்திரக் கரையாலேயே கிரமமாக மணலூரென்னும் இடத்திற்குச் சென்றான்” என்றிருக்கிறது.–பிபேக்திப்ராயின் பதிப்பில், “அவன் தவசிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் மஹேந்திர மலையைக் கண்டான். மெதுவாகப் பெருங்கடலின் கரையில் பயணித்த அவன் விரவில் மணலூரத்திற்கு வந்து சேர்ந்தான்” என்றிருக்கிறது. இங்கே ஊரின் பெயரில் கும்பகோணம் பதிப்பும், பிபேக்திப்ராயின் பதிப்பும் ஒத்திருப்பதைக் காணமுடிகிறது. ஆனால் பிபேக்திப்ராயின் பதிப்பில் கும்பகோணம் பதிப்பில் காணப்படும் தென்ன ஆறுகளைப் பற்றிய குறிப்பு இல்லை.)
ஓ மன்னா, அந்த நாட்டில் உள்ள புனிதமான இடங்களையும், புண்ணிய நீர்நிலைகளையும் கண்ட பலம்வாய்ந்த கரங்களைக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன், கடைசியாக மணிபுரத்தின் மன்னனான அறம் சார்ந்த சித்ரவாஹனனிடம் சென்றான். அந்த மணிபுரத்தின் மன்னனுக்கு, பேரழகுடன் விளங்கிய சித்ராங்கதை என்ற பெயர்கொண்ட மகள் ஒருத்தி இருந்தாள்.(14,15) தனது தந்தையின் அரண்மனையில் இன்பமாக உலவிக் கொண்டிருந்த அவளை அர்ஜுனன் சந்திக்க நேர்ந்தது. சித்ரவாஹனனின் அழகான பெண்ணை, அர்ஜுனன் அடைய விரும்பினான்.(16) அவன் அந்த மன்னனிடம் (அவளது தந்தையிடம்) சென்று, தனக்கு வேண்டியதைக் {சித்ராங்கதையைக்} கேட்டான் {அர்ஜுனன்}.
அவன் {அர்ஜுனன்} சித்ரவாஹனனிடம், “ஓ மன்னா, ஒரு சிறப்புவாய்ந்த மகன் நான். உமது மகளை {சித்ராங்கதையை} எனக்குக் கொடுப்பீராக” என்று கேட்டான். (17) இதைக் கேட்ட மன்னன், “நீ யாருடைய மகன்?” என்று கேட்டான். அதற்கு அர்ஜுனன், “நான் தனஞ்சயன், பாண்டு மற்றும் குந்தியின் மகன்” என்றான்.(18) இதைக் கேட்ட மன்னன் அவனிடம் இனிமையான சொற்களால், “எங்கள் குலத்தில் பிரபஞ்சனன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான்.(19) அவன் பிள்ளை இல்லாது இருந்தான். ஒரு பிள்ளையைப் பெற அவன் தீவிர தங்கள நோன்புகளை நோற்றான். அவனது கடுந்தவத்தால், ஓ பார்த்தா {அர்ஜுனா}, அவன் தேவர்களுக்குத் தேவனும், உமைக்குக் {உமாவுக்குக்} கணவனுமான மகாதேவனை, பிநாகையை (பெரும் வில்லை) ஏந்திய தன்னிகரில்லா தலைவனை மனநிறைவு கொள்ளச் செய்தான். அந்தச் சிறப்புமிக்கத் தலைவன், அவனது குலத்தில் வரும் ஒவ்வொருவனுக்கும் ஒரே குழந்தையை {மட்டுமே} வரமாகக் கொடுத்தான்.(20,21) அந்த வரத்தின் காரணமாக எங்கள் குலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரே குழந்தைதான் பிறந்தது. எனது எல்லா மூதாதையர்களும் ஆண் மகவைத் தான் ஈன்றனர்.(22) இருப்பினும், ஓ பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனனே}, எனது குலத்தைத் தழைக்கச் செய்ய எனக்குப் பெண் மகவையே கொண்டேன். ஆனால், ஓ மனிதர்களில் காளையே, நான் எப்போதும் எனது மகளை {சித்ராங்கதையை} மகனைப் போலவே பார்க்கிறேன்.(23)
அதனால் அவளை நான் புத்ரிகையாக்கி இருக்கிறேன் {புத்திரிகை ஆக்க சடங்கு செய்தால், அவள் மூலம் பிறக்கும் பிள்ளைகள் அவளது தகப்பனுக்கு வாரிசாகும்}.
எனவே, ஓ பாரதா {அர்ஜுனா}, அவளிடம் {சித்ராங்கதையிடம்} உன்னால் பெறப்படும் மகன்களில் ஒருவனே எனது குலத்தைத் தழைக்க வைக்க வேண்டும். அந்த மகனை வரதட்சனையாக எனக்கு நீ கொடுத்தால், எனது மகளை {சித்ராங்கதையை} உனக்குக் கொடுக்கச் சம்மதிக்கிறேன். ஓ பாண்டுவின் மகனே, இதை நீ ஏற்றால், இந்த உடன்பாட்டின் படி நீ அவளை அடையலாம்” என்றான்.(24,25)
அந்த மன்னனின் {சித்ரவாஹனனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அனைத்தையும் ஏற்றுக் கொண்டான். சித்ரவாஹனனின் மகளைப் {சித்ராங்கதையை} (தனது மனைவியாகப்) பெற்ற குந்தியின் மகன் {அர்ஜுனன்}, அந்த நகரத்தில் மூன்று வருடங்கள் வசித்தான்.(26) இறுதியில் சித்ராங்கதை ஒரு மகனைப் பெற்றாள். அர்ஜுனன் அந்த அழகிய இளவரசியைப் {சித்ராங்கதையைப்} பாசத்துடன் வாரி அணைத்துக் கொண்டான். பிறகு மன்னனிடம் (அவளது தந்தை {சித்ரவாஹனனிடம்}) விடைபெற்றுக் கொண்டு, தனது ஊர் சுற்றலைத் திரும்பத் தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}[3].(27)(கும்பகோணம் பதிப்பில் இங்கே பப்ருவாகனன் பிறப்பு சொல்லப்படவில்லை. “அர்ஜுனன், “அப்படியே ஆகட்டும்” என்று பிரதிஜ்ஞை செய்து அந்தக் கன்னிகையை வாங்கிக் கொண்டு பதிமூன்றாவது மாஸத்தில் விவாஹச் சடங்கைச் செய்து அங்கே மூன்று மாத காலமிருந்தான் என்றிருக்கிறது” இதில் கால வேறுபாடும் இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இங்கே பப்ருவாகனின் பிறப்பு சொல்லப்படவில்லை. “சித்திரவாகனனின் மகளை ஏற்றுக் கொண்ட கௌந்தேயன், அங்கே அந்த நகரத்தில் மூன்று குளிர்காலங்கள் இருந்தான்” என்றிருக்கிறது. இது கங்குலியில் உள்ளதைப் போல மூன்று வருடங்களைக் குறிப்பதாக இருக்க வேண்டும்.)
அப்சரஸ்களைச் சபித்த அந்தணன்! – ஆதிபர்வம் பகுதி 218-(அர்ஜுன வனவாச பர்வம் – 04)- பிராமணனின் சாபத்தால் அப்சரஸ்கள் முதலைகளாக மாறியது…
வைசம்பாயனர் சொன்னார், “அந்தப் பாரதக் குலத்தின் காளை {அர்ஜுனன்}, புண்ணிய நீர்நிலையான தெற்குக் கடற்கரைக்குச் சென்றான். அங்கே பல துறவிகள் வசித்து வந்தனர்.(1) அங்கே ஐந்து பகுதிகளாக நிலம் சிதறிக் கிடந்தது; அங்கெல்லாம் பல துறவிகள் வசித்து வந்தனர். ஆனால், அந்த ஐந்து நீர் நிலைகளும் அனைவராலும் தவிர்க்கப்பட்டிருந்தன.(2) அகஸ்தியம், சௌபத்ரம், பெரும் புனிதம் வாய்ந்த பௌலோமம், பெரும் நன்மைகளையும், அந்த நீர்நிலையில் குளித்தால், குதிரை வேள்விக்கு ஒப்பான பயன் தரக்கூடிய கரந்தமம் என்ற நீர்நிலையும், பெரும் பாவங்களைப் போக்க வல்ல பரத்வாஜம் என்ற நீர்நிலையும் புனிதம் வாய்ந்தவையாக இருந்தன.(3,4)
குரு குலத்தவரில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, அந்த ஐந்து புண்ணிய நீர்நிலைகளையும் கண்டு, அங்கே யாரும் வசிக்கவில்லை என்பதையும் கண்டு, குறிப்பாகத் துறவிகள் அங்கே வசிக்க வில்லை என்பதையும் உறுதி செய்து கொண்டு அங்கே இருந்த நல்லவர்களிடம் கரங்கள் கூப்பி,(5) “ஓ துறவிகளே, இந்த ஐந்து நீர்நிலைகளும் பிரம்மனை உச்சரிக்கும் துறவிகளால் விலக்கப்பட்டிருக்கிறதே; அஃது ஏன்?” என்று கேட்டான்.(6) அதற்கு அந்தத் துறவிகள், “இந்த நீர்நிலைகளில் ஐந்து பெரும் முதலைகள் வசிக்கின்றன. அவை அங்கே குளிக்க வரும் துறவிகளை இழுத்துச் சென்று விடுகின்றன. அதன் காரணமாகவே, ஓ குரு குலத்தின் மகனே {அர்ஜுனனே}, இந்த நீர்நிலைகள் விலக்கப்பட்டிருக்கின்றன” என்று சொன்னார்கள்.(7)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்தத் துறவிகளின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சக்தி மிக்கக் கரங்களைக் கொண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, அவர்களால் விலக்கப்பட்ட அந்த நீர்நிலைகளைக் காணச் சென்றான்.(8) சுபத்ர என்ற பெரும் முனிவரின் பெயரால் அழைக்கப்படும் அற்புதமான நீர்நிலைக்கு வந்த அந்த எதிரிகளை அழிக்கும் வீரன், குளிப்பதற்காகத் திடீரென நீர்நிலைக்குள் மூழ்கினான்.(9) அந்த மனிதர்களில் புலியானவன் {அர்ஜுனன்} அந்த நீர்நிலைக்குள் மூழ்கியதும், அவனது காலை ஒரு பெரும் முதலை பற்றியது.(10) ஆனால், வலிய கரங்களைக் கொண்ட குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, போராடிய அந்த நீர் அதிகாரியைக் {முதலையைக்} கரையில் பலவந்தமாக இழுத்துப் போட்டான்.(11) ஆனால் அர்ஜுனனால் கரையில், நிலத்தில் இழுத்துப் போடப்பட்ட அந்த முதலை, ஆபரணங்கள் பூண்ட அழகான பெண்ணாக மாறியது.(12)
குந்தியின் மகனான அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} காணற்கரிய அந்தக் காட்சியைக் கண்டு, அந்த மங்கையிடம் நிறைவடைந்த இதயத்துடன்,(13) “ஓ அழகானவளே, நீ யார்? நீ ஏன் இந்த நீரை அதிகாரம் செய்து கொண்டு இருக்கிறாய்? நீ ஏன் இப்படிப்பட்ட பாவங்களை இழைக்கிறாய்?” என்று கேட்டான்.(14)
அதற்கு அந்த மங்கை, “ஓ வலிய கரங்களைக் கொண்டவரே! நான் கானகத்தில் விளையாடும் ஓர் அப்சரஸ் ஆவேன். ஓ பலம் வாய்ந்தவரே, எனது பெயர் வர்க்கை ஆகும். நான் தெய்வீகப் பொருளாளருக்கு {தேவலோகப் பொக்கிஷ அதிகாரிக்கு} (குபேரனுக்கு} மிகவும் அன்பானவள்.(15) என்னுடன் இன்னும் நான்கு தோழிகள் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் அழகானவர்கள்; நினைத்த இடத்திற்குச் செல்லக்கூடிய சக்தி பெற்றவர்கள். அவர்களுடன் ஒருநாள் நான் குபேரனின் வசிப்பிடத்திற்குச் சென்றேன்.(16) அப்படிச் செல்லும் வழியில் நாங்கள் கடும் தவத்தில் இருந்த ஒரு பிராமணனைக் கண்டோம். அவன் மிகுந்த அழகுடனும், வேதங்களில் அறிவுடனும், தனிமையில் தவம் மேற்கொண்டிருந்தான்.(17) அந்த முழுக் கானகமும் அங்கே இருந்த துறவிகளின் பிரகாசத்தால் மறைக்கப்பட்டிருந்தது. அவன் அந்தப் பகுதியையே சூரியனைப் போலப் பிரகாசிக்கச் செய்திருந்தான்.(18)
அந்த நேரத்தில், அவனது தவ அர்ப்பணிப்பையும், அவனது அற்புதமான அழகையும் கண்ட நாங்கள் அவனது தியானத்தைக் கலைக்கத் திட்டமிட்டோம்.(19) நான் {வர்க்கை}, சௌரபேயி, சமீசி, வியுத்யுதை {புத்புதை} மற்றும் லதை ஆகியோர் அந்த பிராமணனை அணுகினோம்.(20) நாங்கள் பாட்டுப் பாடியும், சிரித்தும் மற்றும் பல வழிகளிலும் அந்த பிராமணனை மயக்க முயற்சி செய்தோம். ஆனால் பிராமணன் {இளைஞன்} அவனது இதயத்தை எங்களில் நிலைபெறச் செய்யவில்லை.(21) அவனது மனம் முழுவதும் தியானத்தில் நிலைத்திருந்தது. இளமையின் பெரும் சக்தி படைத்த அந்த பிராமணன், தனது இதயத்தை எங்களிடம் செலுத்தாமல் உறுதியான இதயத்துடன் இருந்தான். ஆனால், ஓ க்ஷத்திரியர்களில் காளையே {அர்ஜுனரே}, அவன் எங்களைக் கண்ட போதும் பெரும் கோபத்துடன் கண்டான். அவன் எங்களைப் பார்த்து, “நீங்கள் அனைவரும் முதலைகளாக மாறி, நூறு வருடங்களுக்கு நீர்நிலைகளில் அதிகாரம் செலுத்துங்கள்” என்று சபித்தான்” {என்று கூறினாள் அப்சரஸ் வர்க்கை}.(22)
வர்க்கை தொடர்ந்த கதை! – ஆதிபர்வம் பகுதி 219-(அர்ஜுன வனவாச பர்வம் – 05) பிராமணனிடம் சாபம் பெற்ற அப்சரஸ்கள்; நாரதர் அப்சரஸ்களுக்கு தெற்கு கடற்கரையில் இருக்கும் புனித நீர்நிலைகளுக்குச் செல்லுமாறு வழிகாட்டியது; அர்ஜுனன் அவர்களை சாபத்திலிருந்து மீட்டது; அர்ஜுனன் மீண்டும் மணிபுரம் சென்று தனது மகன் பப்ருவாஹனன் அரியணையில் அமர்த்தப்பட்டிருப்பதைக் காண்பது; அர்ஜுனன் சித்ராங்கதையைக் கண்ட பிறகு கோகர்ணம் செல்வது…
வைசம்பாயனர் சொன்னார், “வர்க்கை தொடர்ந்தாள், “ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவரே, இந்தச் சாபத்தின் காரணமாக நாங்கள் அனைவரும் துயர் உற்றோம். நாங்கள் தவத்தை செல்வமாகக் கொண்டு தனது உறுதியில் இருந்து விலகாத அந்த பிராமணரை மனநிறைவு செய்ய நினைத்தோம்.(1) அவனிடம் நாங்கள், “அழகினாலும் இளமையாலும் ஏற்பட்ட கர்வத்தாலும், காம தேவனின் உந்துதலாலும், முறையற்ற செயலைச் செய்தோம்.(2) ஓ அந்தணரே, நீர் எங்களை மன்னியும். உண்மையில், ஓ அந்தணரே, கடும் நோன்பு நோற்று, தவத்தை செல்வமாகக் கொண்ட உம்மை மயக்க நாங்கள் இங்கு வந்தது, மரணத்தை நோக்கி வந்தது போலாயிற்று.(3) இருப்பினும், அறம்சார்ந்தவர்கள், பெண்கள் கொல்லப்படக்கூடாது என்று சொல்லியிருக்கின்றனர். எனவே, அறத்தால் நீர் இன்னும் வளர்வீராக.(4) நீர் எங்களைக் கொல்லலாகாது. ஓ அறத்தை நன்கு அறிந்தவரே, ஒரு பிராமணன் என்பவன் அனைத்து உயிர்களுக்கும் நண்பன் என்றே சொல்லப்பட்டுள்ளது. ஓ பெரும் வளமை கொண்டவரே! ஞானமுள்ளோர் வாக்கும் மெய்யாகட்டும்.(5) மேம்பட்டவர்கள் தங்களிடம் பாதுகாப்பை நாடி வருபவரை எப்போதும் காப்பர். நாங்கள் உமது பாதுகாப்பைக் கோருகிறோம். நீர் எங்களை மன்னிப்பதே தகும்” என்றோம்.(6)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்டவனும், அற ஆன்மாக் கொண்டவனும், நற்செயல்களாலும், பிரகாசத்தாலும், சூரியனுக்கும் சந்திரனுக்கும் நிகரானவனுமான அந்தப் பிராமணன், அவர்களிடம் மனநிறைவு அடைந்தான்.(7)
அந்த பிராமணன், “நூறு மற்றும் நூறாயிரம் என்பன நிலைத்த தன்மையைக் குறிக்கும் குறீயீடுகள் ஆகும். நான் நூறு என்ற வார்த்தையை உச்சரித்தேன். அஃது ஒரு குறிப்பிட்ட எல்லை கொண்ட காலத்தைக் குறிக்குமே அன்றி, முடிவற்ற காலத்தைக் குறிக்காது.(8) எனவே நீங்கள் முதலைகளாகி, (நான் சொன்னவாறு நூறு ஆண்டுகளுக்கு) மனிதர்களைப் பிடித்து உண்ணுங்கள். அந்தக் காலத்தின் முடிவில், மேன்மை மிகுந்த ஒருவன் உங்கள் அனைவரையும் நீரில் இருந்து வெளியே நிலத்தின் தரையில் இழுத்துப் போடுவான்.(9) அப்போது நீங்கள் உங்கள் உண்மையான வடிவை அடைவீர்கள். நான் கேலிக்காகக் கூடப் பொய் பேசியதில்லை.(10) எனவே, நான் சொன்னது நடந்தே தீரும்.(10) நீங்கள் வசித்த அந்தப் புனித நீர்நிலைகள் உலக மக்களால் நதி-தீர்த்தங்கள் (பெண்களின் துன்பத்திற்கும், அத்துன்பத்திலிருந்து விடுதலை அடையும் நிலைக்கும் தொடர்புடைய புனித நீர் நிலை) என்ற பெயரால் புகழ் அடையும். அந்த இடங்கள் அத்தனையும், புனிதமானவையாகவும், பாவம் போக்குவனவாகவும் அறம்சார்ந்த ஞானிகளால் காணப்படும்” என்றான் {அப்சரஸ்களிடம் பிராமணன்}.(11)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “வர்க்கை அர்ஜுனனிடம், “பிராமணனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நாங்கள் {அப்சரஸ்கள்} அவரை மரியாதையுடன் வணங்கி, வலம் வந்தோம்.(12) அப்போது, “(நாம் முதலையாக மாறிய பிறகு) நமது உண்மை உருவத்தைத் திரும்பத் தரும் மனிதனை எங்குச் சந்திப்போம்” என்று எண்ணிக் கொண்டே அந்த இடத்தை விட்டு கனத்த இதயத்துடன் திரும்பிக் கொண்டிருந்தோம்.(13) அப்படி நினைத்துக் கொண்டே வந்த போது, ஓ பாரதா {அர்ஜுனா}, நாங்கள் மேன்மையுடன் கூடிய தெய்வீக முனிவர் நாரதரைச் சந்தித்தோம்.(14) அளவில்லா சக்தி கொண்ட அந்த முனிவரைக் கண்டதால், எங்கள் இதயங்கள் மகிழ்ச்சியால் நிறைந்தன. ஓ பார்த்தா {அர்ஜுனா}, நாங்கள் அவரை மரியாதையுடன் வணங்கி வெட்கம் {அவமானத்தால் வெட்கம்} நிறைந்த முகத்துடன் அவர் முன்பு நின்றோம்.(15) அவர் எங்களது துயரின் காரணத்தைக் கேட்டார். நாங்கள் அவரிடம் அனைத்தையும் சொன்னோம்.
நடந்தது அத்தனையும் கேட்ட அந்த முனிவர்,(16) “தெற்குக் கடலருகே இருக்கும் தாழ்ந்த நிலங்களில், ஐந்து புனிதமான நீர் நிலைகள் இருக்கின்றன. அது மகிழ்ச்சிகரமான, மேன்மையான, புனிதம் நிறைந்த இடமாகும். தாமதமில்லாமல் அங்கே செல்லுங்கள்.(17) பாண்டுவின் மகனும், தூய ஆன்மா கொண்டவனும், மனிதர்களில் புலியுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, உங்களை இந்த இக்கட்டான சூழலில் இருந்து சந்தேகமற {நிச்சயம்} விடுவிப்பான்” என்றார்.(18)
ஓ வீரரே, அந்த முனிவரின் வார்த்தைகளைக் கேட்ட நாங்கள் அனைவரும் இங்கே வந்தோம். ஓ பாவமற்றவரே, இன்று உண்மையிலேயே நான் உம்மால் விடுவிக்கப்பட்டுவிட்டேன்.(19) ஆனால் எனது நான்கு தோழிகள் இன்னும் அந்த நீர்நிலைகளில் இருக்கின்றனர். ஓ வீரரே, அவர்களையும் விடுவித்து நல்ல காரியத்தைச் செய்வீராக” என்றாள் {வர்க்கை அர்ஜுனனிடம்}.(20)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிறகு, ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பெரும் சக்தி கொண்ட அந்தப் பாண்டவர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, அனைவரையும் சாபத்திலிருந்து விடுவித்தான்.(21) நீரிலிருந்து எழுந்த அவர்கள் தங்கள் சொந்த வடிவை அடைந்தார்கள். ஓ மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்த அப்சரஸ்கள் பழைய உண்மையான வடிவுடன் காணப்பட்டனர்.(22) (எந்தக் காரணத்திற்காக அந்த இடங்கள் இழி பெயர் பெற்றிருந்தனவோ அவற்றிலிருந்து) அந்தப் புனித நீர்நிலைகளைக் காப்பாற்றி, அந்த அப்சரஸ்களுக்கும், அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்திற்குச் செல்ல விடைகொடுத்து அனுப்பினான். அர்ஜுனன் சித்ராங்கதையை மறுபடியும் காண ஆவல் கொண்டான்.(23) எனவே, அவன் மணிபுர {மணலூர்} நகரம் நோக்கி முன்னேறினான். அங்கே வந்ததும், தன்னால் சித்ராங்கதையிடம் பெறப்பட்ட மகனான பப்ருவாஹனன் அரியணையில் அமர்ந்திருப்பதைக் கண்டான்[1]. ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, மீண்டும் சித்ராங்கதையைக் கண்ட அர்ஜுனன், கோகர்ணம் என்ற இடத்தை நோக்கி முன்னேறினான்” என்றார்.[24](இதன் பிறகு கும்பகோணம் பதிப்பில், இங்கே தான் பப்ருவாகனனின் பிறப்பு சொல்லப்படுகிறது. மேலும் அதிக தகவல்களும் இருக்கின்றன. அவை பின்வருமாறு: “பிரபுவான அர்ஜுனன் அந்தத் தீர்த்தங்களை அவ்வாறு (உபத்திரவமில்லாமல்) சுத்தமாகச் செய்து அந்த அப்ஸரஸுகளுக்கும் விடைகொடுத்துச் சித்ராங்கதையைப் பார்ப்பதற்காக மறுபடியும் மணலூருக்குச் சென்றான். ராஜ்யத்திற்குரியவனான பப்ருவாகனனென்னும் புத்திரனை அவனிடம் உண்டு பண்ணினான். ராஜாவே, பிறகு, அவன் அந்தப் புத்திரனைப் பார்த்துச் சித்ரவாகனனிடத்திற்போய், “சித்ராங்கதையின் கன்னியாசுல்கமான பப்ருவாகனனை நீ வாங்கிக் கொள். ராஜாவே, நீ வாங்கிக் கொள்வதால் நான் கடனிலிருந்து விடுபட்டவனாவேன்” என்று சொன்னான். மறுபடியும், அர்ஜுனன் சித்திராங்கதையைப் பார்த்து, “நீ இங்கேயே இரு. உனக்கு ஸுகமுண்டாகட்டும். பப்ருவாகனனைப் போஷித்துவா. எனது இருப்பிடமாகிய இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்தபிறகு என்னுடன் கலந்திருப்பாய். குந்தி, யுதிஷ்டிரர், பீமன், என்னுடைய இளைய சகோதரர்கள் இவர்களையும் மற்ற என்னுடைய பந்துக்களையும் நீ அங்கே வந்து பார்க்கலாம். சிலாக்கியமானவளே, என் பந்துக்களெல்லாருடனும்சேர்ந்து நீ சந்தோஷமடைவாய். தர்மத்திலிருப்பவரும், ஸத்தியத்தை விடாதவரும் குந்தி புத்திரருமான யுதிஷ்டிர் பூமியை முழுவதும் ஜயித்து ராஜஸூய யாகம் செய்யப் போகிறார். இப்புவியில் ராஜாவென்று பெயர்பெற்ற அரசர்கள் மிகுந்த இரத்தினங்களையெடுத்துக் கொண்டு அதற்கு வருவார்கள். அப்போது உன் பிதாவும் வருவார். அவர் யுதிஷ்டிரரைச் சேவை செய்ய வரும்போது நீயும் சேர்ந்து வருவாய். ,ராஜஸூய யாகத்தில் உன்னைப் பார்ப்பேன். புத்தினைக் காப்பாற்று. துயரப்படாதே. எனது உயிரே பப்ருவாகனனென்னும் பெயரோடு வெளியில் உலாவுகிறது. ஆதலால், வம்சத்தை விருத்தி பண்ணுகிற ஆண் குழந்தையை வளர். ஆதலால், சித்ரவாகனனுடைய தாயபாகத்தைப் பெறுகிறவனும் தர்மப்படி பூருவம்சத்தை விருத்தி பண்ணுகிறவனுமாகிய பாண்டவர்களுடைய அன்புள்ள புத்திரனை எப்போதும் காப்பாற்று. சிலாக்கியமானவளே, என் பிரிவினால் நீ வருத்தப்படாது” என்று சொன்னான். சித்திராங்கதைக்கு இவ்வாறு சொல்லித் தூரத்திலுள்ள கடற்கரையின் இடத்தைச் சேர்ந்து அங்கே ஸ்நானஞ்செய்து மிகுதியான தனங்களைத் தானஞ்செய்து கேரள தேசம் தாண்டித் தர்சனத்தினாலே முக்தியைக் கொடுப்பதும் பசுபதியினுடைய முதன்மையான க்ஷேத்திரமும், பாபியான மனிதனுக்கும் பாபபயமில்லாத உயர்ந்த மேற்கதியைக் கொடுக்கத்தக்கதுமாகிய கோகர்ணக்ஷேத்திரத்தை நோக்கிச் சென்றான்” என்றிருக்கிறது.பிபேக்திப்ராயின் பதிப்பில், “அந்தத் தீர்த்தங்களைத் தூய்மைப்படுத்தி, முதலைகளின் வடிவில் இருந்து விடுபட்ட அப்சரஸ்களுக்கு விடைகொடுத்தனுப்பிய அந்தத் தலைவன் {அர்ஜுனன்}, சித்திராங்கதையைக் காண மணலூர் நகரத்திற்கு மீண்டும் சென்றான். அவள் மூலமாக மன்னன் பப்ருவாகனன் என்ற பெயர் கொண்ட ஒரு மகனைப் பெற்றான். ஓ மன்னா, அவனைக் கண்டபிறகு அந்தப் பாண்டவன் கோகர்ணத்திற்குச் சென்றான்” என்றிருக்கிறது.)
கிருஷ்ணன் அர்ஜுனன் சந்திப்பு! – ஆதிபர்வம் பகுதி 220-(அர்ஜுன வனவாச பர்வம் – 06)-மேற்கு கடற்கரை புனித இடங்களைக் கண்டு களித்த அர்ஜுனன் பிரபாசத்துக்கு வருவது; அங்கே கிருஷ்ணனைச் சந்திப்பது; கிருஷ்ணனும் அர்ஜுனனும் ரைவதக மலை செல்வது; பிறகு அங்கிருந்து துவாரகை செல்வது…
வைசம்பாயனர் சொன்னார், “[1]அளவிடமுடியா ஆற்றல் கொண்ட அர்ஜுனன், ஒன்றன் பின் ஒன்றாக மேற்குக் கடற்கரையில் இருந்து அனைத்துப் புனித நீர்நிலைகளையும், புண்ணிய இடங்களையும் கண்டான். அவை அனைத்தையும் கண்டு இறுதியாக பிரபாசையை அடைந்தான்.(1,2) (இந்த இடத்திற்கு முன்பே கும்பகோணம் பதிப்பில் மேலதிகத் தகவல்கள் இருக்கின்றன. அதன் சுருக்கம் பின்வருமாறு: அர்ஜுனன் பிரபாசத்தை அடைந்தான். கதன் எனும் யாதவன் மூலம் சுபத்திரை குறித்து அறிகிறான் அர்ஜுனன். அவளைக் கவர நினைக்கிறான். திரிதண்டம் தரித்து, தலையை மொட்டையடித்துக் கொண்டு, கமண்டலம் தரித்து சந்நியாச வேடமிட்டு கிருஷ்ணனைத் தியானித்தான். சத்தியபாமாவுடன் இருந்த கிருஷ்ணன், அர்ஜுனனின் எண்ணத்தை அறிந்து சிரித்தான். சிரிப்பின் காரணத்தைக் கேட்ட சத்தியபாமாவிடம் அர்ஜுனன் செய்ய இருக்கும் காரியத்தைக் குறித்துச் சொல்லி, தான் சிரித்தது மகிழ்ச்சியின் காரணமாக என்றும் சொன்னான். அர்ஜுனன் தீர்த்தங்கள் திரிந்து பிரபாசத்தை அடைந்திருப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்தான்.” பிறகு கங்குலியில்வருவதைப் போலவே தொடர்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும், கங்குலியின் பதிப்பிலும் மேற்கண்ட தகவல்கள் இல்லை.)வெல்லப்பட முடியாதவனான அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, பிரபாசம் என்ற புனிதமான இடத்தை அடைந்தான். யாராலும் வெல்லமுடியாத அர்ஜுனன் அந்தப் புனிதமான மகிழ்ச்சிகரமான இடத்தை அடைந்ததும், மதுசூதனன் (கிருஷ்ணன்) அதைக் கேள்விப்பட்டான்.(3) மாதவன் {கிருஷ்ணன்}, குந்தி மகனான தனது நண்பனைக் {அர்ஜுனனைக்} காண உடனே அங்குச் சென்றான். கிருஷ்ணன், அர்ஜுனன் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து அணைத்துக் கொண்டு, ஒருவர் நலனை மற்றவர் கேட்டனர். பழங்காலத்தின் முனிவர்களான நரனும் நாராயணனுமான அந்த இரு நண்பர்களும் கீழே அமர்ந்தனர்.(4,5)
வாசுதேவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம் அவனது பயணங்களைக் குறித்து, “ஓ பாண்டவனே {அர்ஜுனா}, நீ ஏன் புனித நீர்நிலைகளையும் புண்ணிய இடங்களையும் தரிசித்துக் கொண்டு உலகத்தைச் சுற்றி வருகிறாய்?” என்று கேட்டான்.(6)
பிறகு அர்ஜுனன் நடந்தது அத்தனையும் சொன்னான். அனைத்தையும் கேட்ட விருஷ்ணி குலத்தின் வீரன் {கிருஷ்ணன்}, “இஃது எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருக்கிறது” என்றான்.(7)
கிருஷ்ணனும் அர்ஜுனனும் சிறிது நேரம் பிரபாசத்தில் தாங்கள் விரும்பியபடி உலவி, ரைவதக மலையில் சில நாட்களைக் கடத்தச் சென்றனர்.(8) அவர்கள் ரைவதகத்திற்கு வருவதற்கு முன்பே, கிருஷ்ணனின் உத்தரவின் பேரால் அந்த மலை பல கலைஞர்களால் அழகுபடுத்தப்பட்டிருந்தது. கிருஷ்ணனின் உத்தரவின் பேரில் நிறைய உணவு வகைகளும் சேகரித்து வரப்பட்டன.(9) சேகரிக்கப்பட்ட அனைத்தையும் அனுபவித்த {உண்ட} அர்ஜுனன், வாசுதேவனுடன் {கிருஷ்ணனுடன்} அமர்ந்து நடிகர்கள் மற்றும் ஆடற்கலைஞர்களின் நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தான்.(10) அனைவருக்கும் உரிய மரியாதையைக் கொடுத்து அனுப்பி வைத்த அந்த உயர் ஆன்மப் பாண்டவன் {அர்ஜுனன்} நல்ல அழகான அலங்கரிக்கப்பட்ட படுக்கையில் தன்னைக் கிடத்திக் {படுத்துக்} கொண்டான்.(11)
அந்த அற்புதமான படுக்கையில் தன்னைக் கிடத்திக் கொண்ட பலம் வாய்ந்த கரம் கொண்டவன் {அர்ஜுனன்}, தான் சென்று புனித நீர்நிலைகள், ஏரிகள், மலைகள், ஆறுகள், கானகங்கள் ஆகியவற்றைப்பற்றிக் கிருஷ்ணனுக்குத் தெரிவித்தான்.(12) இதையெல்லாம் சொல்லிக் கொண்டே, தெய்வீகப் படுக்கையில் நீட்டிய அவனை {அர்ஜுனனை}, ஓ ஜனமேஜயா! தூக்கம் களவாடியது.(13) காலையில் இனிமையான பாடல்களுடனும், வீணையின் இன்னிசைச் சுரங்களுடனும், பாடகர்களின் துதி மற்றும் வாழ்த்துகளுடனும் {அர்ஜுனன்} எழுப்பப்பட்டான்.(14) அத்தியாவசியச் செயல்கள் மற்றும் சடங்குகளுக்குப் பிறகு, விருஷ்ணி குலத்தவனால் {கிருஷ்ணனால்} பாசத்தோடு அழைக்கப்பட்டான். தங்க தேரில் சென்ற அந்த வீரன் {அர்ஜுனன்}, யாதவர்களின் தலைநகரான துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(15)
ஓ ஜனமேஜயா! குந்தியின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு} மரியாதை செலுத்துவதற்காக, அந்தத் துவாரகை நகரம் மட்டுமல்லாது, அதிலிருந்த வீடுகளும், தோட்டங்களும் கூட நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தன.(16) குந்தியின் மகனைக் காண விரும்பிய துவாரகைவாழ் குடிமக்கள், நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் வீதிவழிகளில் குவிந்தனர்.(17) பொது இடங்களிலும் பொது வழிகளிலும் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலுமான பெண்கள், ஆண்களுடன் கலந்து நின்றது, போஜர்கள், விருஷ்ணிகள், அந்தகர்கள் ஆகியோரின் கூட்டத்தைப் பெருகச் செய்தது.(18) போஜர்கள், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் ஆகியோரின் மகன்கள் அனைவரும் அர்ஜுனனை மரியாதையுடன் வரவேற்றனர். பதிலுக்கு அவனும், வழிபடத் தகுந்தவர்களை வழிபட்டு, அவர்கள் அருளைப் பெற்றுக் கொண்டான்.(19) அந்த வீரன் {அர்ஜுனன்}, யாதவக் குல இளைஞர்களால் பாசத்துடன் வரவேற்கப்பட்டான். தன் வயதுக்கு நிகரானவர்கள் அனைவரையும் மறுபடி மறுபடி அணைத்தான்.(20) ரத்தினங்களாலும், இன்பநுகர் பொருட்கள் அனைத்தாலும் நிரம்பிய கிருஷ்ணனின் மகிழ்ச்சிகரமான மாளிகைக்குச் சென்றான். அங்கே கிருஷ்ணனுடன் பல காலம் தங்கியிருந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(21)
———————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply