ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ ஆதி பர்வம்-ஸ்ரீ சுபத்திரா ஹரணப்  பர்வம் – 

“சுபத்திரையைக் கடத்து!” என்றான் கிருஷ்ணன் – ஆதிபர்வம் பகுதி 221-(சுபத்திரா ஹரணப் பர்வம் – 01)-ரைவதக மலையில் பெரும் விழா நடப்பது; பலராமன், பிரத்யும்னன், சாம்பன் ஆகியோர் மது உண்டு போதையுடன் அங்கே சுற்றித் திரிவது; கிருஷ்ணனும், அர்ஜுனனும் தனித்து உலவுவது; சுபத்திரையைக் கண்டு அர்ஜுனன் மோகிப்பது; சுபத்திரையைக் கடத்திச் சொல்லுமாறு கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு வழி சொல்வது; யுதிஷ்டிரனுக்குச் செய்தி அனுப்புவது…

வைசம்பாயனர் சொன்னார், “ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜனமேஜயா}, சில நாட்களில் ரைவதக மலையில், விருஷ்ணி மற்றும் அந்தகக் குலத்தவரின் பெரும் விழா ஒன்று வந்தது.(1) போஜர்கள், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் அந்த மலைவிழாவில், அந்தக் குலங்களைச் சேர்ந்த வீரர்கள், பிராமணர்களுக்கு, ஆயிரக்கணக்கில் செல்வங்களைக் கொடுத்தனர்.(2) ஓ மன்னா {ஜனமேஜயா} அந்த மலைப்பகுதியில் இருந்த பல மாளிகைகள் ரத்தினங்களாலும், பகட்டான சாயல் கொண்ட செயற்கை மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(3) பாடகர்கள் பாடவும், நடனக்கலைஞர்கள் ஆடவும், இசைக்கலைஞர்கள் தங்கள் கச்சேரியை ஆரம்பித்தனர்.(4) அனைத்து ஆபரணங்களையும் பூண்டவர்களும், பெரும் சக்தி கொண்டவர்களும், தங்கத் தேர்களில் பவனி வந்தவர்களுமான விருஷ்ணி குல இளைஞர்கள் பார்க்க மிகவும் அழகாக இருந்தனர்.(5)

குடிமக்களில் சிலர் கால்நடையாகவும், சிலர் அற்புதமான ரதங்களிலும், தங்கள் மனைவியருடனும், பணியாட்களுடனும் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் வந்தனர்.(6) அங்குப் பெருங்களிப்புடன் மது அருந்தி {மதுபானத்தினால் மயங்கிபடி}, தன் விருப்பப்படி உலவி கொண்டிருந்த தலைவன் ஹாலாதரன் (பலராமன்), தன்னுடன் இருந்த (தனது மனைவி) ரேவதியுடன் சேர்த்து, பல இசைக்கலைஞர்களாலும் மற்றும் பாடகர்களாலும் தொடரப்பட்டான்.(7) அங்கே விருஷ்ணி குலத்தின் பலம் பொருந்திய மன்னனான உக்ரசேனன், தனது ஆயிரம் மனைவியருடனும், பல இனிமையான பாடகர்களுடனும் வந்தான்.(8) போர்களத்தில் பயங்கரமான ருக்மினியனும் {பிரத்யும்னனும்}, சாம்பனும் மது உண்டு உற்சாக மிகுதியுடன் உலவிக் கொண்டிருந்தனர். அவர்கள் பூ வேலைப்பாடுகள் நிறைந்த விலை உயர்ந்த ஆடைகளை உடுத்தி மிகுந்த அழகுடன் இருந்தனர். அவர்களைப் பார்ப்பதற்குக் கேளிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தேவர்களைப் போல இருந்தனர்.(9) அக்ரூரர், சாரணன், கதன், பப்ரு, நிசதன், சாருதேஷ்ணன், பிருது, விப்ருது,(10) சத்யகன், சாத்யகி, பங்ககாரன், மகாரவன், ஹார்த்திக்யன், உத்தவன் ஆகியோரும், பெயர் சொல்லப்படாத இன்னும் பலரும் தங்கள் மனைவியருடனும், பாடகர்கள் குழுவுடனும் தொடரப்பட்டு, அந்த மலைவிழாவைச் சிறப்பித்தனர்.(11,12) அந்த மகத்தான, ஆடம்பரமான, மகிழ்ச்சிகரமான திருவிழா தொடங்கியபோது, வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, பார்த்தனும் {அர்ஜுனனும்}, இவை அனைத்தையும் கண்ணுற்றுபடியே ஒன்றாகச் சென்றனர்.(13) அப்படி அவர்கள் உலவிக் கொண்டிருக்கையில், வசுதேவரின் {கிருஷ்ணனின் தந்தை} மகளாகிய அழகிய பத்திரை {கிருஷ்ணனின் தங்கை சுபத்திரை}, அனைத்து ஆபரணங்களும் பூண்டு மங்கையர் மத்தியில் இருப்பதைக் கண்டனர்.(14)

அர்ஜுனன் அவளைக் கண்டது முதல் காம தேவன் வசம் ஆனான். ஓ பாரதா {ஜனமேஜயா}, மனிதர்களில் புலியான கிருஷ்ணன், ஆழ்ந்த கவனத்துடன் அவளைக் {சுபத்திரையைக்} குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்த அர்ஜுனனைக் கண்டு புன்னகைத்து, “இஃது எப்படி இருக்கிறது? கானகத்தில் உலவித் திரியும் ஒருவனது இதயம் காமதேவனால் கலங்கலாமா?(15,16) இவள் என் தங்கை, ஓ பார்த்தா {அர்ஜுனா}, இவள் சாரணருடன் {பலராமருடன்} பிறந்த தங்கையாவாள். இவளது பெயர் பத்திரை {சுபத்திரை}. இவள் என் தந்தைக்குப் பிடித்தமான மகளாவாள். நீ அருளப்பட்டிருப்பாயாக. உனது இதயம் அவளிடம் நிலைத்திருந்தால், அஃதை என்னிடம் சொல். நான் இது குறித்து நேரடியாக என் தந்தையிடம் பேசுகிறேன்” என்றான் {கிருஷ்ணன்}.(17)

அர்ஜுனன், “இவ்வளவு அழகுடையவள், வசுதேவரின் {கிருஷ்ணனின் தந்தை} மகளாகவும், வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தங்கையாகவும் இருப்பதால், அவளால் யாரைத்தான் வசீகரிக்க முடியாது?(18) விருஷ்ணி குல மங்கையான உனது தங்கை {சுபத்திரை} எனக்கு மனைவியானால், நான் அனைத்திலும் வளமையடைவேன் என்பது உண்மையாகும்.(19) ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, எந்த வழியில் நான் இவளை {சுபத்திரையை} அடைய முடியும் என்பதைச் சொல்வாயாக. இவளைப் பெறுவதற்காக, மனிதனால் சாதிக்க முடிந்த அனைத்தையும் நான் சாதிப்பேன்” என்று பதிலுரைத்தான் {அர்ஜுனன}.(20)

அதற்கு வாசுதேவன் {கிருஷ்ணன்}, “ஓ மனிதர்களில் காளையே, சுயம்வரம் என்பதே க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்பட்ட முறை. ஆனால், ஓ பார்த்தா {அர்ஜுனா}, இந்த மங்கையின் உணர்வு மற்றும் மனநிலையை நாம் அறியாததால், {சுயம்வரத்தில்} என்ன நடக்கும் என்பது ஐயத்திற்கிடமானதுதான்.(21) ஆற்றல் நிறைந்த க்ஷத்திரியர்களுக்கு, விரும்பிய பெண்ணை அபகரித்துச் செல்லும் செயலும் மெச்சப்படுகிறது என்று கற்றவர்கள் சொல்கிறார்கள்.(22) எனவே, ஓ அர்ஜுனா, அவள் சுயம்வரத்தில் என்ன செய்வாள் என்பது நமக்கு நிச்சயமாகத் தெரியாததால், அழகான என் தங்கையைப் {சுபத்திரையைப்} பலவந்தமாக அபகரித்துச் செல்வாயாக” என்றான் {கிருஷ்ணன்}.(23)

பிறகு கிருஷ்ணனும், அர்ஜுனனும், என்ன செய்ய வேண்டும் என்பதை நிச்சயித்துக் கொண்டனர். வேகமான தூதுவர்களை இந்திரப்பிரஸ்தத்தில் இருக்கும் யுதிஷ்டிரனிடம் அனுப்பி அனைத்தையும் தெரிவித்தனர். வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரன் அதைக் கேட்டவுடன், அதற்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்தான்” {என்றார் வைசம்பாயனர்}[1].(24)

(கும்பகோணம் பதிப்பில், “அதன்பிறகு, அர்ஜுனனும், கிருஷ்ணனும் செய்ய வேண்டிய உபாயத்தை நிச்சயம் செய்து கொண்டு சீக்கிரம் செல்பவர்களாகிய சில தூதர்களை இந்திரப் பிரஸ்தத்தில் வஸிக்கும் தர்மராஜருக்கு அதையெல்லாம் தெரிவிப்பதற்காக அப்போது அனுப்பினர். மஹாவீரரான தர்மபுத்திரர் அதைக் கேட்டதும் குந்தியோடு கூட அனுமதி கொடுத்தார். பீமஸேனனும, அதைக்கேட்டுத் தங்கள் காரியம் நிறைவேறினதாக நினைத்தான். இவற்றையெல்லாம் தூதர் வந்து சொல்லக்கேட்டு, சிறந்த புத்தியுள்ள கிருஷ்ணபகவான், அர்ஜுனனுக்கு அனுமதி கொடுத்துவிட்டுக் காரியம் இவ்விதம் செய்ய வேண்டுமென்று மனத்திற்குள் வைத்துக் கொண்டு தூதர்களுடன் கூடவே துவாரகைக்குச் சென்றார்” என்றிருக்கிறது.–மேலும், கும்பகோணம் பதிப்பில் இதற்குப் பிறகு வரும் அடுத்தடுத்த மூன்று அத்யாயங்களில்: துவாரகையின் வெளித்தோட்டத்தில் வசித்த அர்ஜுன ஸந்யாஸியை யாதவர்கள் கண்டதும், அவனை ஸுபத்ரையின் கன்யாந்தப்புரத்தில் வஸிக்கும்படி பலராமர் சொன்னதும், தான் முன்கேட்டிருந்த லக்ஷணங்களினால் அர்ஜுனனென்று சந்தேகித்த ஸுபத்ரை பாண்டவர்களுடைய க்ஷேமத்தை விசாரித்ததும், அர்ஜுனன் உண்மை சொன்னதால் காதல் கொண்ட அவளைப் பற்றி, ருக்மிணி தேவகிக்குத் தெரிவித்த்தும், ஸுபத்ரா விவாஹத்தை நடத்துவதற்காகச் சிவோத்ஸவம் என்ற காரணத்தைக் கொண்டு கிருஷ்ணன் யாதவர்களோடு கடலிலுள்ள தீவிற்குச் சென்றதும்; காந்தர்வ விவாஹம் செய்து கொள்ளலாம் என ஸுபத்ரையிடம் அர்ஜுனன் சொன்னதும்; இந்திரனை நினைத்து அர்ஜுனன் தியானம் செய்ததும்; குசஸ்தலி நகரை இந்திரனும் பரிவாரங்களும் அடைந்தது; இரவில் கிருஷ்ணன் துவாரகை வந்தடைந்தது; இந்திரன் தலைமையில் அர்ஜுனன், சுபத்ரை திருமணம் நடந்தது; இருபத்திரண்டு தினங்கள் ருக்மிணியின் இல்லத்திலேயே அர்ஜுனன் வசித்திருந்தது; அர்ஜுனன் ஸுபத்ரையுடன் கிருஷ்ணனுடைய தேரிலேறிக் காண்டவப் பிரஸ்தம் செல்ல ஆரம்பித்தது; விப்ருதுவுடன் ஏற்பட்ட போர்; அர்ஜுனனுக்குச் சாரதியாக ஸுபத்திரை செயல்பட்டது ஆகிய நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன.–எனினும் கங்குலி, மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் மேற்கண்ட சம்பவங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.)

சுபத்திரையைக் கடத்தினான் அர்ஜுனன்! – ஆதிபர்வம் பகுதி 222-(சுபத்திரா ஹரணப் பர்வம் – 02)-ரைவதக மலையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சுபத்திரை அர்ஜுனன் கடத்திக் கொண்டு செல்வது; இதை அறிந்த யாதவர்கள் கோபம் கொள்வது; பலராமன் கிருஷ்ணனைக் கேட்பது; அர்ஜுனன் குறித்த தனது எண்ணத்தை பலராமன் சொல்வது…

வைசம்பாயனர் சொன்னார், “யுதிஷ்டிரனின் சம்மதத்தைக் கேள்விப்பட்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்த மங்கை ரைவதக மலைக்குச் சென்றிருப்பதை உறுதி செய்து கொண்டு, வாசுதேவனின் சம்மதத்தையும், அனைத்து ஆலோசனைகளையும் செய்து ஒரு தீர்மானத்திற்கு வந்தான்.(1) மனிதர்களில் முதன்மையான அந்தப் பாரதக் குலத்தின் காளை {அர்ஜுனன்}, கிருஷ்ணனின் சம்மதத்துடன், நன்றாக உருவாக்கப்பட்டிருந்த தங்கத் தேரில் பயணித்தான்.(2) அந்த தேரில் சிறு மணிகள் வரிசையாகத் தொங்கவிடப்பட்டிருந்தன.  அனைத்து வித ஆயுதங்களும் அதற்குள் இருந்தன. தேர்ச் சக்கரங்களின் ஓசை மேகத்தின் முழக்கத்திற்கு ஒப்பாக இருந்தது. அந்தத் தேர் சுடர்விட்டு எரியும் நெருப்புப் போலப் பிரகாசமாக இருந்தது. பகைவர்கள் கண்டால் அஞ்சி நடுங்கும் அந்த தேரில் சைவியம் மற்றும் சுக்ரீவம் என்ற இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. அர்ஜுனன் கவசம் பூண்டு, கையில் வாள் தாங்கி, விரல்களுக்குத் தோல் கையுறை அணிந்து, வேட்டைக்குக் கிளம்புவது போலச் சென்று கொண்டிருந்தான்.(3-5)

அதே வேளையில் சுபத்திரை, மலைகளின் இளவரசனான ரைவதத்தை வழிபட்டு, அங்கிருந்த தெய்வங்களை வணங்கி, பிராமணர்கள் வாழ்த்துகளைப் பெற்று,(6) மலையைச் சுற்றி நடந்து, துவாரவதியை {துவாரகையை} நோக்கிச் செல்லும் பாதையில் வந்து கொண்டிருந்தாள். காமனின் கணைகளால் தாக்குண்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, திடீரென அந்தக் குற்றங்குறையற்ற யாதவப் பெண் மேல் பாய்ந்து, அவளை {சுபத்திரையை} வலுக்கட்டாயமாகத் தனது தேரில் ஏற்றினான். இனிமையான புன்னகை கொண்ட அந்த மங்கையைக் கைப்பற்றிய பிறகு, அந்த மனிதர்களில் புலியானவன், அந்தத் தங்க ரதத்தைத் தனது நகரத்தை (இந்திரப்பிரஸ்தத்தை) நோக்கிச் செலுத்தினான்.(7,8) அதேவேளையில் ஆயுதம் தரித்த சுபத்திரையின் பணியாட்கள், அவள் இப்படி அபகரித்துச் செல்லப்பட்டதைக் கண்டு, துவாரகை நகரத்தை நோக்கி அழுது கொண்டே ஓடினர்.(9) சுதர்மம் என்று அழைக்கப்பட்ட அந்த யாதவச் சபைக்கு அனைவரும் சென்று, பார்த்தனின் {அர்ஜுனனின்} அற்றலைக் குறித்து சபையின் தலைவனிடம் தெரிவித்தனர்.(10)

பணியாட்களிடம் இருந்து இவை அனைத்தையும் கேட்ட சபைத்தலைவன், தனது தங்கத்தாலான எக்காளத்தை எடுத்து உரத்து முழக்கமிட்டுப் படைகளை அழைத்தான்.(11) அந்த ஒலியால் உந்தப்பட்ட போஜர்களும், விருஷ்ணிகளும், அந்தகர்களும் எல்லாப் புறங்களிலிருந்து ஓடி வந்தனர். உணவு அருந்தி கொண்டிருந்தவர்கள் அதை அப்படியே போட்டுவிட்டு எழுந்து வந்தனர். குடித்துக் கொண்டிருந்தவர்கள் குடியை விட்டு ஓடி வந்தனர்.(12) மனிதர்களில் புலிகளான விருஷ்ணி மற்றும் அந்தகக் குல வீரர்கள், அற்புதமான விரிப்புகளால் மூடப்பட்டுப் பலவண்ண ரத்தினங்கள், பவளங்களால் அலங்கரிக்கப்பட்டு எரியும் நெருப்புப் போலப் பிரகாசமாய் இருந்த ஆயிரம் தங்க அரியணைகளில் ஏறி அமர்ந்தனர். உண்மையில் எரியும் நெருப்பின் மேல், மேலும் அதன் பிரகாசத்தினை அதிகரிக்க அவர்கள் ஏறி அமர்ந்தது போல இருந்தது.(13,14) அப்படி அவர்கள் அனைவரும் வந்த அந்தச் சபையில் தங்கள் அரியணைகளில் தேவர்களைப் போல அமர்ந்த பிறகு, சபைத்தலைவன், அவனது பின் இருந்தவர்களின் துணைக் கொண்டு, ஜிஷ்ணுவின் {அர்ஜுனனின்} நடத்தையைக் குறித்துச் சொன்னான்.(15)

மதுவால் சிவந்த கண்களுடன் இருந்த அந்தக் கர்வம் கொண்ட விருஷ்ணி வீரர்கள், இதைக் கேட்டதும், அர்ஜுனன் செய்கையைத் தாங்க முடியாமல் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்தனர்.(16) அவர்களில் சிலர், “ரதங்களைத் தயார் செய்யுங்கள் என்றனர். சிலர், “ஆயுதங்களை எடுங்கள்” என்றனர். சிலர் “நமது விலை உயர்ந்த வில்லையும், உறுதியான கவசங்களையும் கொண்டு வாருங்கள்” என்றனர். சிலர் சத்தமாகத் தங்கள் சாரதிகளிடம் தேரை எடுக்கச் சொல்லினர். சிலர் பொறுமையிழந்து, அவர்களாகவே தங்கள் குதிரைகளுக்கு நுகத்தடி பூட்டி, அவற்றைத் தங்கள் தங்க தேர்களில் பூட்டினர்.(17,18) அவர்களது தேர்களும், ஆயுதங்களும், மற்றப் பொருட்களும் வந்து கொண்டிருந்த நேரத்தில் அந்த வீரர்களிடம் பெரும் முழக்கங்கள் எழுந்தன.(19)

வெண்மையானவனும் கைலாச மலையைப் போல உயரமானவனுமான பலதேவன் {பலராமன்}, காட்டுப் பூக்களாலும், நீல ஆடைகளாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டு, மது கொடுத்த போதையுடன்,(20) “புத்தியற்றவர்களே, ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} அமைதியாக அமர்ந்திருக்கும்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அவன் மனத்தில் என்ன இருக்கிறது என்பதை அறியாமல் வீணாகக் கோபத்தில் முழங்காதீர்கள்!(21) சொல்ல வேண்டியதை இந்த உயர் ஆன்மக் கிருஷ்ணன் சொல்லட்டும். அவன் செய்ய விரும்புவதை உடனடியாக நிறைவேற்றுங்கள்” என்றான்.(22)

ஹலாயுதனின் {பலராமனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அனைவரும் அதை ஏற்றுக் கொண்டு, “நன்று! நன்று!” என்றனர். பிறகு அவர்கள் அனைவரும் அமைதி அடைந்தனர்.(23) புத்திசாலியான பலதேவனின் {பலராமனின்} வார்த்தைகளால் அங்கு அமைதி மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. அவர்கள் அனைவரும் சபையில் தங்கள் ஆசனங்களில் அமர்ந்தனர்.(24)

எதிரிகளை ஒடுக்குபவனான ராமன் {பலராமன்} வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, “ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இங்கே அமர்ந்து கொண்டு, நீ ஏன் அமைதியாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?(25) ஓ அச்யுதா {கிருஷ்ணா}, உன் நிமித்தமாகவே, பிருதையின் மகன் {அர்ஜுனன்} இங்கு அழைக்கப்பட்டு நம்மால் கௌரவிக்கப்பட்டான். இருப்பினும், நமது மரியாதைக்கு அந்தப் பாவி {அர்ஜுனன்} உகந்தவனல்லன் என்று படுகிறது.(26) மரியாதைக்குரிய குடும்பத்தில் பிறந்த எந்த மனிதன், தான் உணவு உண்ட தட்டை உடைத்துப் போடுவான்?(27) இத்தகு சம்பந்தத்தை ஏற்க விரும்பும் எவன்தான், இங்கு ஏற்ற தொண்டுகளைக் கருத்தில் கொண்டும், இன்பத்தை விரும்பி இத்தகு மூர்க்கமான செயலைச் செய்வான்?(28) அவன் {அர்ஜுனன்} நம் அனைவரையும் அவமதித்து, இன்று சுபத்திரையைத் தூக்கிச் சென்றதால், அவன் தனது மரணத்தை விரும்புகிறான் என்றே படுகிறது.(29) அவன் {அர்ஜுனன்} அவனது காலை எனது முடி தரித்த தலையில் வைத்துவிட்டான். ஓ கோவிந்தா {கிருஷ்ணா}, என்னால் எவ்வாறு இதைப் பொறுத்துக் கொள்ள முடியும்? மிதிக்கப்பட்ட பாம்பு அதைத் தாங்கிக் கொள்ளாது சீறுவது போல நானும் சீற வேண்டாமா?(30) இன்று நான் தனியாகச் சென்று உலகத்திலிருந்து கௌரவர்களை அழித்து ஒழிக்கிறேன்! அர்ஜுனனின் இந்த வரம்பு மீறிய செயலை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது” என்றான்.(31)

அங்கிருந்த போஜர்கள், விருஷ்ணிகள், அந்தகர்கள் ஆகியோர் அனைவரும், பலதேவன் {பலராமன்} சொன்னது அனைத்தையும் ஏற்று மேக முழக்கம் போலவும் துந்துபி வாத்தியம் போலவும் முழக்கம் செய்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(32)

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading