நாரதர் சொன்ன திலோத்தமை கதை! – ஆதிபர்வம் பகுதி 210-(ராஜ்யலாப பர்வம் – 01)-யுதிஷ்டிரனின் சபைக்கு நாரதர் வருகை; சுந்தன் உபசுந்தன் கதையை மேலோட்டமாகச் சொல்வது; அந்தக்கதையை விரிவாகச் சொல்லுமாறு பாண்டவர்கள் நாரதரை வேண்டுவது…
ஜனமேஜயன், “ஓ தவத்தை செல்வமகாக் கொண்டவரே! எனது முப்பாட்டன்களான அந்த உயர் ஆன்மா கொண்ட சிறப்பு வாய்ந்த பாண்டவர்கள், இந்திரப்பிரஸ்தத்தின் அரசுரிமையைப் பெற்ற பிறகு என்ன செய்தார்கள்? அவர்களுடைய மனைவியான திரௌபதி அவர்கள் அனைவருக்கும் எப்படிக் கீழ்ப்படிந்து நடந்தாள்?(1,2) அனைவரும் ஒரு மனைவியிடம் இணைக்கப்பட்டு இருக்கும்போது, மனிதர்களை ஆண்ட அந்தச் சிறப்புமிகுந்த ஆட்சியாளர்களிடம், கிருஷ்ணையைக் {திரௌபதியைக்} குறித்து எந்த மன வேற்றுமையும் நிகழவில்லையா?(3) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} இணைந்த பின் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் எப்படி நடந்து கொண்டனர் என்பதைக் குறித்து அனைத்தையும் நான் முழுமையாகக் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான் {ஜயமேஜயன் வைசம்பாயனரிடம்}.(4)
வைசம்பாயனர் சொன்னார், “எதிரிகளை வாட்டுபவர்களான அந்தப் பாண்டவர்கள், திருதராஷ்டிரனின் கட்டளையின் பேரில் நாட்டை அடைந்த பிறகு, கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்ந்து காண்டவப்பிரஸ்தத்தில் மகிழ்ச்சியாக தங்கள் நாட்களைக் கடத்தினர்.(5) பெரும் சக்தி கொண்ட யுதிஷ்டிரன், எப்போதும் உண்மையைப் பற்றிக் கொண்டு, அந்த நாட்டை அடைந்ததிலிருந்து, தனது தம்பிகளின் துணையுடன் அறம் சார்ந்து அதை ஆண்டான்.(6) பெரும் ஞானம் கொண்ட பாண்டுவின் மகன்கள், உண்மைக்குத் தங்களை அர்ப்பணித்து, அனைத்து எதிரிகளையும் வென்று, அங்கே மகிழ்ச்சியுடன் வாழ்க்கையைத் தொடர்ந்தனர்.(7) மனிதர்களில் காளைகளான அவர்கள், பெருமதிப்பிற்குரிய தங்கள் அரச அரியணையில் அமர்ந்து, தங்கள் அரசியல் கடமைகளை நிறைவேற்றினர்.(8)
ஒருநாள், அப்படி அவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும்போது, ஊர்சுற்றி வந்த தெய்வீக முனிவரான நாரதர் அங்கே வந்தார்.(9) அம்முனிவரைக் கண்ட யுதிஷ்டிரன், அவருக்குத் தான் அமர்ந்திருந்த அழகான ஆசனத்தைக் கொடுத்தான். அந்தத் தெய்வீக முனிவர் அமர்ந்த பிறகு, ஞானமுள்ள யுதிஷ்டிரன், அவனது கையாலேயே அவருக்கு அர்க்கியத்தைக் {நீரில் மலர் தூவி கொடுப்பது} கொடுத்தான். அப்போது அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அந்த முனிவரிடம் தனது நாட்டின் நிலையைப் பற்றிச் சொன்னான்.(10,11) அந்த முனிவர் {நாரதர்}, வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு பெரும் மனநிறைவை அடைந்து, அவனை {யுதிஷ்டிரனை} வாழ்த்தி ஆசீர்வதித்தார். அந்த மன்னனை அமரக் கட்டளையிட்டார். முனிவரால் {நாரதரால்} கட்டளையிடப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்} அமர்ந்தான். (12)
மன்னன் {யுதிஷ்டிரன்}, கிருஷ்ணைக்கு {திரௌபதிக்கு} அந்தச் சிறப்புமிக்கவரின் {நாரதரின்} வருகையைச் சொல்லி அனுப்பினான். முனிவரின் வருகையைப் பற்றிக் கேள்விப்பட்ட திரௌபதி, தன்னைச் சரியான முறையில் தூய்மைப்படுத்திக் கொண்டு, மிகுந்த மரியாதையுடன் பாண்டவர்களுடன் நாரதர் இருந்த இடத்திற்கு வந்தாள். அறம்சார்ந்த பாஞ்சால இளவரசி {திரௌபதி}, தெய்வீக முனிவரின் {நாரதரின்} பாதங்களை வழிபட்டு, அவர் முன்பு குவிந்த கரங்களுடன் கண்களுக்கு மறைவாக நின்றாள்.(13-15) சிறப்புவாய்ந்த நாரதர், அவளைப் பலவாறாக வாழ்த்தி, அந்த இளவரசியை ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பி வைத்தார்.(16)
அந்தச் சிறப்புமிக்க முனிவர், கிருஷ்ணை {திரௌபதி} சென்றதும், யுதிஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட பாண்டவர்கள் அனைவரையும் தனியாக அழைத்து,(17) “புகழ்பெற்ற பாஞ்சால இளவரசி {திரௌபதி} நீங்கள் அனைவரும் மணந்த மனைவியாவாள். எனவே, உங்களுக்குள் வேற்றுமை உருவாகாதவாறு, உங்களுக்குள் ஒரு விதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.(18) பழங்காலத்தில், மூவுலகங்களாலும் கொண்டாடப்பட்ட சகோதரர்களான சுந்தன், உபசுந்தன் ஆகிய இருவொரும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டால் அன்றி வேறு ஒருவர் அவர்களை அழிக்க முடியாது {அப்படிப்பட்ட வரத்தை அவர்கள் பெற்றிருந்தனர்}.(19) அவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே நாட்டை ஆண்டு, ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து, ஒரே படுக்கையில் உறங்கி, ஒரே ஆசனத்தில் அமர்ந்து, ஒரே தட்டில் உணவும் உண்டனர். இருப்பினும் அவர்கள் இருவரும் திலோத்தமைக்காக ஒருவரை ஒருவர் கொன்றனர்.(20) எனவே, ஓ யுதிஷ்டிரா, நீங்கள் ஒருவருக்கு ஒருவர் உள்ள நட்பைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் வேற்றுமை உருவாகாமல் செயல்படுங்கள்” என்றார் {நாரதர்}.(21)
இதைக் கேட்ட யுதிஷ்டிரன், “ஓ பெரும் முனிவரே, அசுரர்களான சுந்தனும், உபசுந்தனும் யாருடைய மகன்கள்? எப்போது அவர்களுக்குள் வேற்றுமை உருவாகி ஒருவரை ஒருவர் கொன்றனர்?(22) சகோதரர்கள் இருவரையும் ஒருவரை ஒருவர் கொல்ல வைத்த திலோத்தமை யாருடைய மகள்? அவள் ஓர் அப்சரசா (நீர்த் தேவதையா) அல்லது ஏதாவது தேவனின் மகளா?(23) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! ஓ பிராமணரே {நாரதரே}, நடந்தது அத்தனையும் அது நடந்தவாறே அறிய நாங்கள் விரும்புகிறோம். இது குறித்த எங்கள் ஆவல் அதிகரிக்கிறது” என்றான் {யுதிஷ்டிரன்}”.(24)
சுந்தனும் உபசுந்தனும்! – ஆதிபர்வம் பகுதி 211-(ராஜ்யலாப பர்வம் – 02)-சுந்தன் உபசுந்தன் ஆகியோரின் கடுந்தவம்; பிரம்மா அவர்களுக்குக் கொடுத்த வரம்; கொடுக்க முடியாத வரம்; மாற்றிக் கொடுத்த வரம்; மகிழ்ச்சி நிறைந்த தைத்தியர்களின் நகரம்…
வைசம்பாயனர் சொன்னார், “யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நாரதர், “ஓ பிருதையின் {குந்தியின்} மகனே, ஓ யுதிஷ்டிரா, நான் சொல்லப்போகும் இந்தப் பழைய கதையை உனது தம்பிகளுடன் சேர்ந்து நடந்தது அத்தனையும் நடந்தபடியே கேள்.(1) பழங்காலத்தில் பெரும் பலம் வாய்ந்தவனும், பெரும் சக்தியும் பலமும் கொண்வனுமான தைத்தியன் ஒருவன், பெரும் அசுரனான ஹிரண்யகசிபுவின் {விஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தில் கொல்லப்பட்டவன்} குலத்தில் நிகும்பன் என்ற பெயரில் பிறந்திருந்தான்.(2) அந்த நிகும்பனுக்குச் சுந்தன், உபசுந்தன் என்ற இரு மகன்கள் பிறந்தார்கள். அந்தப் பலம் வாய்ந்த அசுரர்கள் இருவரும், பெரும் சக்தியையும், பயங்கரமான ஆற்றலையும் கொண்டிருந்தார்கள். அச்சகோதரர்கள் இருவரும், கடுமையானவர்களாகவும், தீய இதயம் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(3) அந்தத் தைத்தியர்கள் இருவரும் ஒரு தீர்மானத்துடன் கூடியவர்களாக, ஒரே சாதனைகளையும், முடிவுகளையும் எப்போதும் அடைவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் தங்கள் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் பகிர்ந்து அனுபவித்தனர்.(4) ஒருவருக்கு ஒருவர் ஏற்கும் வகையில் செயல்களைச் செய்து, அந்தச் சகோதரர்கள் இருவரும் எப்போதும் சேர்ந்தே இருந்தனர். எங்குச் சென்றாலும் சேர்ந்தே சென்றனர்.(5)
ஒரே வகையான தீர்மானமும், பழக்க வழக்கமும் கொண்ட அவர்களைக் காணும் போது, இரு பகுதிகளாகப் பிரிந்த ஒரே மனிதனைப் போலத் தெரிந்தனர். பெரும் சக்தி கொண்டு, எல்லாவற்றிலும் எப்போதும் ஒரே தீர்மானம் கொண்ட அந்தச் சகோதரர்கள் இவ்வாறே படிப்படியாக வளர்ந்தும் வந்தனர்.(6) ஒரு காரணத்துக்கான செயலைச் செய்து, மூன்று உலகங்களையும் அடக்கி ஆள விருப்பம் கொண்ட அந்தச் சகோதரர்கள், சரியான ஆயத்தங்களுக்குப் பிறகு, விந்திய மலைக்குச் சென்றனர். அங்கே சென்று கடும் தவங்களைச் செய்தனர்.(7) பசியாலும், தாகத்தாலும் துன்புற்றுத் தலையில் சடாமுடி தரித்து, மரவுரி {மரப்பட்டைகளால் ஆன உடுப்பு} உடுத்தி, நீண்ட காலத்திற்குப் பிறகு ஆன்மத் தகுதி அடைந்தனர்.(8) அவர்கள் தங்களை தலை முதல் கால் வரை அழுக்காக்கிக்கொண்டு, காற்றை மட்டுமே உண்டு, கால் கட்டைவிரலில் நின்று தவம் செய்தனர். பிறகு தங்கள் உடல் சதைகளைத் துண்டுகளாக அறுத்து நெருப்பில் போட்டனர். தங்கள் கரங்களை உயரத் தூக்கியபடி, நிலைத்த கண்களுடன், அவர்கள் நோற்ற தவம் நீண்ட காலமாக தொடர்ந்தது.(9)
அவர்கள் அப்படி தவம் இயற்றிக் கொண்டிருக்கையில், ஓர் அற்புதமான நிகழ்வு நடந்தது. அவர்களது தவத்தின் சக்தியினால் நீண்ட காலமாகக் கொதிப்படைந்திருந்த விந்தியமலை அனைத்துப்புறங்களிலும் புகையை வெளியிடத் தொடங்கியது.(10) அவர்களது கடுந்தவத்தின் மகிமையைக் கண்ட தேவர்கள் அச்சமடைந்தனர். அவர்களது தவமானது முன்னேற்றம் அடையாமல் இருக்க, அந்தத் தேவர்கள் எண்ணற்ற தடைகளை அவர்களுக்கு உண்டாக்கினர்.(11) தேவர்கள் தொடர்ச்சியாக அச்சகோதரர்களை, விலைமதிப்புமிக்க பல பொருட்களைக் கொண்டும், மிகுந்த அழகுடைய கன்னிகைகளைக் கொண்டும் அவர்களை மயக்க முயன்றனர். இருப்பினும் அந்தச் சகோதரர்கள் தங்கள் உறுதியை உடைக்கவில்லை.(12)
தேவர்கள், அந்தச் சிறப்புமிகு சகோதரர்களின் முன்னிலையில் தங்கள் மாய சக்தியைப் பயன்படுத்தித் மீண்டும் மீண்டும் முயன்றனர். அவர்களது சகோதரிகள், தாய்மார்கள், மனைவியர் மற்றும் அவர்களது உறவினர்கள் அனைவரும், கலைந்த கேசம், ஆபரணம் மற்றும் உடைகளுடன் அவர்களை நோக்கிப் பயத்துடன் ஓடி வருவது போலவும், கையில் கதாயுதம் கொண்ட ஒரு ராட்சசன் அவர்களைத் துரத்தி அடித்துக் கொண்டு வருவதாகவும் அவர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} கண்டனர்.(13,14) அப்படி ஓடி வந்த பெண்கள் அந்தச் சகோதரர்களை நோக்கி, “எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று கேட்பது போலவும் தோன்றிற்று. ஆனால், இவையாவும் அவர்களை அசைக்கவில்லை. அந்தச் சகோதரர்கள் தங்கள் உறுதியை உடைக்கவில்லை.(15) இந்தக் காட்சி அவர்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாததைக் கண்ட போது அந்த மங்கையரும், ராட்சசனும் அவர்களது பார்வையில் இருந்து மறைந்து போனார்கள்.(16)
இறுதியாக, அனைவரின் நலனையும் வேண்டுபவனும், தலைவர்களுக்குத் தலைவனூமான பெரும்பாட்டன் {பிரம்மன்}, அந்தப் பெரும் அசுரர்களிடம் வந்து, அவர்கள் விரும்பிய வரத்தைக் கேட்குமாறு சொன்னான்.(17) பெரும் ஆற்றலைக் கொண்ட சகோதரர்களான சுந்தனும் உபசுந்தனும், பெரும்பாட்டனைக் {பிரம்மனைக்} கண்டு, தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து, கரங்களைக் கூப்பி அவருக்காகக் காத்திருந்தனர்.(18) அந்தச் சகோதரர்கள் இருவரும் {சுந்தனும், உபசுந்தனும்} அந்தத் தேவனிடம், “ஓ பெரும்பாட்டனே, நீர் எங்களது தவத்தால் மனநிறைவு அடைந்தீரேயானால்,(19) ஓ தலைவா, எங்களுக்கு அனைத்து ஆயுதங்களின் அறிவையும், மாய சக்திகளின் அறிவையும் கொடுத்து நன்மையைச் செய்வீராக. நாங்கள் பெரும்பலத்துடன் விரும்பிய உருவை எடுக்கும் சக்தியை எங்களுக்குத் தந்தருளும். இறுதியாக எங்களுக்குச் சாகா வரத்தை அருள்வீராக” என்று கேட்டனர் {சுந்தனும், உபசுந்தனும்}.(20)
அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட பிரம்மன், “சாகாவரம் தவிர்த்து, நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும். ஏதாவது ஒரு வகையில் மட்டும் மரணம் நேரும் வகையில் நீங்கள் வரம் கேட்டால், மரணிக்காதவர் போலவே வாழலாம்.(21) அரசுரிமையில் மட்டுமே விருப்பங்கொண்டு நீங்கள் இக்கடுந்தவத்தை இயற்றியதால், என்னால் உங்களுக்கு சாகாவரம் தர முடியாது.(22) நீங்கள் மூன்று உலகத்தையும் அடக்கி ஆளவே கடும் தவம் இயற்றினீர்கள். ஓ பெரும் பலம் வாய்ந்த தைத்தியர்களே, நீங்கள் கேட்ட அந்த ஒரு விருப்பத்தை {சாகா வரத்தை} மட்டும் என்னால் தர முடியாது” என்றான்”.(23)
நாரதர் தொடர்ந்தார், “பிரம்மனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சுந்தனும், உபசுந்தனும், “ஓ பெரும்பாட்டனே, எங்களில் ஒருவரால் தவிர, அசைவன, அசையாதன என்ற மூவுலகத்தில் இருக்கும் படைக்கப்பட்ட எந்தப் பொருளினாலும் எங்களுக்கு மரணம் நேரக்கூடாது” என்று கேட்டனர்.(24)
அதற்குப் பெருந்தகப்பன் {பிரம்மன்}, “இப்பொழுது நீங்கள் கேட்ட விருப்பத்தை நான் உங்களுக்கு அருள்கிறேன். உங்கள் மரணம் உங்கள் விருப்பப்படியே நிர்ணயிக்கப்படுகிறது” என்று சொல்லி வரத்தைக் கொடுத்து, அவர்களின் தவத்தைக் கைவிட வைத்து, தனக்கு உரிய பகுதிக்குச் சென்றுவிட்டான்.(25,26)
பலம் வாய்ந்த சகோதரர்களான அந்தத் தைத்தியர்கள் {சுந்தனும், உபசுந்தனும்}, பல வரங்களைப் பெற்று, அண்டத்தில் யாராலும் கொல்லப்பட முடியாதவர்களாக ஆனார்கள். அவர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் திரும்பினார்கள்.(27) பெரும் நுண்ணறிவைக் அந்தத் தைத்தியர்களின் உறவினர்களும், நண்பர்களும், வெற்றி மகுடம் சூடிப் பல வரங்களைப் பெற்றுத் திரும்பியிருக்கும் அவர்களைக் கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.(28) சுந்தனும், உபசுந்தனும் தங்கள் சடா முடிகளைக் களைந்து தலையில் மகுடம் சூடினர். விலை உயர்ந்த ஆடைகளையும், அணிகலன்களையும் அணிந்து மிகுந்த அழகுடன் காட்சியளித்தனர்.(29) அவர்கள் தகுந்த நேரமாக இல்லாதிருந்தாலும், தங்கள் நகரத்தில் ஒவ்வொரு இரவும் சந்திரனை உதிக்க வைத்தனர். அவர்களது நண்பர்களும், உறவினர்களும் இதயத்தில் ஆனந்தம் அடைந்து, மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி, இன்பத்துக்குத் தங்களை அர்ப்பணித்தார்கள்.(30)
“உண்பாயாக”, “ஊட்டுவாயாக”, “கொடுப்பாயாக”, “மகிழ்விப்பாயாக”, “பாடுவாயாக”, “குடிப்பாயாக” போன்ற உற்சாகக் குரல்களே அனைத்து வீடுகளிலும் தினம் தினம் கேட்டன.(31) ஆங்காங்கே சத்தமான குரல்களுடன், கைதட்டல்களும் சேர்ந்து அந்தத் தைத்தியர்களின் நகரத்தையே நிறைத்தது.(32) நினைத்த உருவை அடையும் அந்தத் தைத்தியர்கள் எல்லாவகையான இன்ப விளையாட்டுகளிலும் ஈடுபட்டும், ஒரு முழு வருடத்தையே ஒரு நாளாகக் கருதிக் காலம் கடப்பதையே அறியாது இருந்தார்கள்” என்றார் {நாரதர்}.”(33)
அசுரர் பிடியில் மூவுலகம்! – ஆதிபர்வம் பகுதி 212-(ராஜ்யலாப பர்வம் – 03)-சுந்தனும், உபசுந்தனும் மூவுலகங்களையும் வென்றது; வேள்விகளும், பிதுர்காரியங்களும், இறைவணக்கமும் நின்றுபோனது; அசுரர்கள் கேளிக்கை விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது; குருக்ஷேத்திரத்தைத் தங்கள் வசிப்பிடமாக்கிக் கொண்டது…
நாரதர் தொடர்ந்தார், “கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்த பிறகு சகோதரர்களான சுந்தனும், உபசுந்தனும், மூன்று உலகங்களின் ஆட்சி உரிமையை விரும்பி, ஆலோசனை செய்து, தங்கள் படைகளை அணிதிரட்டக் கட்டளையிட்டனர்.(1) தங்கள் நாட்டின் அமைச்சர்கள், தைத்திய குல பெரியோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் ஒப்புதலைப் பெற்றுப் புறப்படுவதற்கு முன்னர்ச் செய்ய வேண்டிய சில முதற்படியான சடங்குகளைச் செய்து, மகம் நட்சத்திரம் உச்சத்தில் {கிழக்கின் அடிவானில்} இருக்கும் அன்று இரவில் புறப்பட்டனர்.(2) அந்தச் சகோதரர்கள் கவசம்பூண்டு, கைகளில் கதைகளும், போர்க்கோடரிகளும், ஈட்டிகளும், கம்புகளும் கொண்ட பெரும் தைத்தியப் படையுடன் சென்றனர்.(3) அந்தத் தைத்தியப் படையினர் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன், சாரணர்களைக் {பாடகர்களைக்} கொண்டு தங்களது எதிர்கால வெற்றி குறித்தும், நற்பேறு குறித்தும் புகழ்ச்சிப் பாடல்களைப் பாடிக்கொண்டு சென்றனர்.(4) நினைத்த மாத்திரத்தில் விரும்பிய இடத்திற்குச் செல்லும் சக்தி பெற்ற அந்தத் தைத்திய சகோதரர்கள் மிகக் கடுமையாகப் போர் புரிந்து, வானத்திற்கு உயர்ந்து, தேவர்கள் இருக்கும் பகுதிக்குச் சென்றனர்.(5)
அவர்கள் வருவதை அறிந்த தேவர்கள், உயர்ந்த தேவனின் வரம் அருளப்பட்டதையும் அறிந்துகொண்டு, தேவலோகத்தைவிட்டுப் பிரம்ம லோகத்திற்குப் பாதுகாப்புக் கோரிச் சென்றனர்.(6) கடும் ஆற்றலைக் கொண்ட அந்தத் தைத்திய வீரர்கள், விரைவில் இந்திரலோகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, விதவிதமான யக்ஷ, ராட்சச இனங்களையும், விண்ணை அதிகாரம் செய்யும் அனைத்து உயிர்களையும் வென்று திரும்பினர்.(7) அடுத்ததாக, அந்தப் பெரும் தேர் வீரர்கள், பாதாள லோகத்தில் உள்ள நாகர்கள் உலகத்தையும், கடலில் வசிக்கும் உயிரினங்களையும், அனைத்து மிலேச்ச வகைகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.(8)
அடுத்ததாக அவர்கள், முழு உலகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் தங்கள் படைவீரர்களுக்கும் கடும் கட்டளைகளை இட்டனர்.(9) “பிராமணர்களும், அரச முனிகளும், தங்கள் படையல்களாலும், பெரும் வேள்விகளில் கொடுக்கப்படும் உணவு வகைகளாலும், தேவர்களுக்குச் சக்தியையும், பலத்தையும், வளத்தையும் அளிக்கின்றனர்.(10) அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் அசுரர்களின் எதிரிகள் ஆவர். எனவே, நாம் அனைவரும் சேர்ந்து, அவர்கள் அனைவரையும் இந்த நிலத்தின் முகத்தில் கொன்று போட வேண்டும்” என்றனர்.(11)
இப்படியே அந்த அசுரச் சகோதரர்கள் {சுந்தனும், உபசுந்தனும்}, இந்தத் தீய முடிவைச் சூளுரைத்து, தங்கள் படை வீரர்களுக்குக் கட்டளையிட்டுப் பெருங்கடல் இருக்கும் கிழக்குக் கடற்கரைக்கும், திசைகள் அனைத்திற்கும் சென்றனர்.(12) வேள்விகள் செய்தவரையும், வேள்விகளுக்குத் துணை புரிந்த பிராமணர்களையும், அந்தச் சகோதரர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} உடனடியாகக் கொன்றனர். அவர்களை அப்படிப் பயங்கரமாகக் கொன்று விட்டு, அந்த இடத்தை விட்டு வேறு இடத்திறகுச் சென்றனர்.(13) அந்தப் படை வீரர்கள், தங்கள் ஆன்மாவைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முனிவர்களின் ஆசிரமங்களில் எரியும் வேள்வி நெருப்புகளை எடுத்து நீரில் தூக்கி வீசினார்கள்.(14) கோபத்தால் சபித்த அந்தச் சிறப்பு மிகுந்த முனிவர்களின் சாபங்கள், அந்தச் சகோதரர்கள் (பிரம்மனிடம்) பெற்ற வரங்களால் செயலிழந்தன.(15)
தங்கள் சாபங்கள், கல்லின் மேல் அடிக்கப்பட்ட கணை போல ஒரு சிறு அசைவையும் ஏற்படுத்தாதைக் கண்டு, தங்கள் சடங்குகளையும் உறுதிகளையும் கைவிட்டு எல்லாத் திசைகளிலும் சிதறி ஓடினர்.(16) தங்கள் ஆன்மாவைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த ஆன்ம வெற்றி பெற்ற முனிவர்கள் கூட அந்த அசுரச் சகோதரர்கள் மீதிருக்கும் பயத்தால், வினதையின் மகனைக் (பாம்புண்ணியான கருடனைக்) கண்ட பாம்புகள் போலப் பறந்து ஓடினர்.(17) அவர்களது புனிதமான ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. புனிதமான கமண்டலங்களும், பாத்திரங்களும் உடைக்கப்பட்டன. அதில் இருந்த புனிதமானவைகள் தரையில் சிதறிக் கொட்டப்பட்டன.(18) உயிரினங்கள் எல்லாம் பேரழிவில் அழிந்தது போல, இந்த முழு அண்டமும் வெறுமையானது. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, முனிவர்கள் எல்லாம் மறைந்து போய், அரூபமாக மாறிய பிறகு, இரு பெரும் அசுரர்களும் அவர்களை அழிக்க எண்ணி பல்வேறு உருவங்களை எடுத்தனர்.(19) குகைகளில் ஒளிந்திருந்த முனிவர்களை நோக்கி மதங்கொண்ட யானையாக மாறிச் சென்று யமனின் உலகுக்கு அனுப்பி வைத்தனர்.(20)
சில நேரங்களில் சிங்கங்களாகவும், சில நேரங்களில் புலிகளாகவும், அடுத்த நொடியே மறைந்தும், கொடுமையான வழிகளைக் கையாண்டும் கண்ட முனிவர்களையெல்லாம் கொன்றனர்.(21) கல்வியும், வேள்விகளும் நிறுத்தப்பட்டு; மன்னர்களும், பிராமணர்களும் கொல்லப்பட்டனர். முழு உலகமும் விழாக்களும், கோலாகலங்களும் அற்றுப் போயின.(22) அச்சமடைந்த மனிதர்களின் “ஓ”, “ஐயோ”, “அம்மா” என்ற ஓலமே எங்கும் கேட்டுக் கொண்டிருந்தது. வாங்குவதும், விற்பதுமான வணிகம் நின்று போனது. அனைத்து அறச் சடங்குகளும் நின்று போயின; இந்த உலகத்தில் புனிதமான விழாக்களும், திருமணங்களும் இல்லாமல் போயிற்று.(23) உழவு {விவசாயம்} ஒதுக்கப்பட்டது {நிறுத்தப்பட்டது}, விலங்குகள் {கால்நடைகள்} வளர்க்கப்படவில்லை. நகரங்களும், ஆசிரமங்களும் மனிதர்கள் அற்றுப் போயின. எங்கு பார்த்தாலும் எலும்புகளும், எலும்புக்கூடுகளும், சிதறிப் பூமியைப் பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது.(24)
பித்ருக்களுக்கு {முன்னோர்களுக்கு} மரியாதை செய்யும் விழாக்களெல்லாம் நின்று போயின. ‘வஷத்’ என்ற புனிதமான ஒலியும், நற்பேறுகளுக்கான அனைத்துச் சடங்குகளும் நின்று போயின. காண்பதற்குப் பூமி பயங்கரமானதாக ஆனது.(25) சுந்தன் மற்றும் உபசுந்தனின் இந்தச் செயல்களையெல்லாம் சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்மீன் கூட்டங்கள், மற்றும் வானில் இருக்கும் அனைத்தும் சாட்சிகளாக நின்று பார்த்து, ஆழ்ந்த கவலையை அடைந்தன.(26) தேவலோகத்தின் எல்லா மூலைகளையும் தங்கள் கொடுமையான நடவடிக்கைகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அந்த அசுரச் சகோதரர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} எதிரி என்று சொல்ல ஒருவனும் இல்லாமல், குருக்ஷேத்திரத்தைத் தங்கள் வசிப்பிடமாக்கினர்”.(27)
திலோத்தமையால் சிவனுக்கு வந்த மூன்று முகங்கள்! – ஆதிபர்வம் பகுதி 213-(ராஜ்யலாப பர்வம் – 04)-சுந்தனும், உபசுந்தனும் புரியும் தீயச் செயல்களை தேவர்களும், முனிவர்களும் பிரம்மனிடம் சொல்லி முறையிடுவது; பிரம்மன் விசுவகர்மாவை அழைத்து அசுரச் சகோதரர்களின் அழிவுக்காக அழகான ஒரு பெண்ணை படைக்கச் சொன்னது; படைக்கப்பட்ட அப்பெண்ணைப் பார்த்து தேவர்களும், இந்திரனும், சிவனும் மயங்கியது.
நாரதர் தொடர்ந்தார், “மன அமைதியும், சுயக்கட்டுப்பாடும் கொண்ட அந்தத் தெய்வீக முனிவர்களும், சித்தர்களும், உயர் ஆன்ம முனிவர்களும், அண்டப் படுகொலையைக் கண்டு பெரும் துயரம் கொண்டனர்.(1) ஆசைகளையும், புலன்களையும், ஆன்மாவையும் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அண்டத்தின் மீது பரிவு கொண்டு, அவர்கள் அனைவரும் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} இருப்பிடத்திற்குச் சென்றனர்.(2) அங்கே சென்று, பெரும்பாட்டனைச் {பிரம்மனைச்} சுற்றி தேவர்களும், சித்தர்களும், பிரம்ம முனிவர்களும் அமர்ந்திருப்பதைக் கண்டனர்.(3) அங்கே தேவர்களுக்குத் தேவன் மகாதேவன் {சிவன்}, அக்னி, வாயு, சோமன் {சந்திரன்}, சூரியன், சக்ரன் {இந்திரன்}, பிரம்மனையே தியானிக்கும் முனிவர்கள், வைகானசர்கள், வாலகில்யர்கள், வானப்பிரஸ்தர்கள், மரீசிபர்கள், அஜர்கள், அவிமூடர்கள் போன்ற பெரும் சக்தி படைத்த பல துறவிகள் இருந்தனர்.(4,5)
சோகம் நிறைந்த இதயங்களுடன் தேவர்களும் மற்ற முனிவர்களும் பிரம்மனை அணுகிய போது மேற்குறிப்பிட்ட அனைத்து முனிவர்களும் பெருந்தகப்பனோடு {பிரம்மனோடு} அமர்ந்திருந்தார்கள்.(6) அப்படி வந்த அவர்கள் {முனிவர்கள்} சுந்தன் மற்றும் உபசுந்தனின் செயல்களைப் பற்றிக் கூறினர். அவர்கள் {முனிவர்கள்} அசுரச் சகோதரர்களின் {சுந்தன், உபசுந்தனின்} செயல்களை, அஃது எப்படி நிறைவேற்றப்பட்டது, எந்த வரிசையில் செய்யப்பட்டது போன்றவற்றை முழுவதுமாக எடுத்துக் கூறினர்.(7,8) அனைத்து தேவர்களும், பெரு முனிவர்களும் இந்தக் காரியத்தைக் குறித்து அதிக அழுத்தத்துடன் பெருந்தகப்பனிடம் {பிரம்மனிடம்} சொல்லினர். அந்தப் பெருந்தகப்பன் அவர்கள் சொன்ன அனைத்தையும் விவரமாகக் கேட்டு, சிறிது நேரம் யோசித்துவிட்டு, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துத் தன் மனத்தில் தீர்மானித்தான். அந்த அசுரச் சகோதரர்களுக்கு {சுந்தனுக்கும், உபசுந்தனுக்கும்} அழிவை ஏற்படுத்த ஒரு தீர்மானம் செய்து, விஸ்வகர்மனை {தேவலோக தச்சன்} அழைத்தார்.(9,10)
விஸ்வகர்மனைத் தன் முன் கண்ட பெரும் ஆன்மத் தகுதி கொண்ட பெருந்தகப்பன் {பிரம்மன்} அவனிடம் {விஸ்வகர்மனிடம்}, “அனைத்து இதயங்களையும் கொள்ளை கொள்ளும் தகுதி கொண்ட ஒரு மங்கையைப் படைப்பாயாக {உற்பத்தி செய்வாயாக}” என்றான்.(11)
பெருந்தகப்பனை {பிரம்மனை} வணங்கி, அவரது உத்தரவை மரியாதையுடன் பெற்றுக் கொண்ட அண்டத்தின் பெரும் தச்சன் {விஸ்வகர்மா}, மிகுந்த கவனத்துடன் ஒரு மங்கையைப் படைத்தான்.(12) விஸ்வகிரீதன் முதலில் மூன்று உலகங்களிலும் உள்ள அசையும் மற்றும் அசையாத பொருட்களின் அனைத்து அழகு குணங்களையும் தொகுத்துத் திரட்டினான்.(13) பிறகு அவன் அந்த மங்கையின் மேனியில் அவற்றைச் சேர்த்துப் படைத்தான். நிச்சயமாக, அந்தத் தெய்வீக மங்கை, பெரும் ரத்தினக் குவியல்களால் படைக்கப்பட்டாள்.(14) விஸ்வகர்மனால் மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்ட அந்த மங்கை, மூவுலகில் உள்ள பெண்களிலும் ஒப்பாரும், மிக்காரும் இல்லாதிருந்தாள்.(15)
பார்வையாளர்கள் பார்த்து திகைப்படையாத ஒரு சிறு பகுதியேனும் அவளது உடலில் இல்லாதிருந்தது.(16) இயல்புக்கு மிக்கத் தனது அழகால், தெய்வீக ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போல இருந்து அனைத்து உயிர்களின் இதயங்களையும், கண்களையும் கொள்ளை கொண்டாள்.(17) அனைத்து ரத்தினங்களில் இருந்தும் சிறு பகுதிகளை எடுத்து அவள் உருவாக்கப்பட்டதால், பெருந்தகப்பன் {பிரம்மன்} அவளுக்குத் திலோத்தமை என்ற பெயரைச் சூட்டினான்.(18) அதற்கு உயிர் கொடுத்து, அதன் வாழ்க்கை துவங்கிய போது, அந்த மங்கை {திலோத்தமை} பிரம்மனிடம் தலை வணங்கி, கரங்கள் கூப்பி, “படைக்கப்பட்ட அனைத்துப் பொருளுக்கும் தலைவா {பிரம்மா}, நான் என்ன பணியைச் சாதிக்க வேண்டும்? நான் எதற்காகப் படைக்கப் பட்டேன்?” என்று கேட்டாள்.(19)
அதற்குப் பெருந்தகப்பன் {பிரம்மன்}, “ஓ திலோத்தமா, அசுரர்களான சுந்தன் மற்றும் உபசுந்தனிடம் செல்வாயாக. ஓ இனிமையானவளே, உனது கொள்ளை கொள்ளும் அழகால் அவர்களை மயக்குவாயாக.(20) ஓ மங்கையே, அங்கே சென்று, அந்த அசுரச் சகோதரர்களின் {சுந்தன், உபசுந்தனின்} பார்வை உன் மீது பட்டவுடன், உனது அழகு என்ற செல்வத்தை அடைய எண்ணம் கொண்டு, ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டுக் கொள்ளும்படி நீ நடந்து கொள்வாயாக” என்றான் {பிரம்மன்}.(21)
நாரதர் தொடர்ந்தார், “அந்த மங்கை {திலோத்தமை}, பெருந்தகப்பனை {பிரம்மனை} வணங்கி, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லித் தேவர்கள் சூழ்ந்த அந்தச் சபையைச் சுற்றி நடந்தாள்.(22) அந்தச் சிறப்பு மிகுந்த பிரம்மன் அப்போது தனது முகத்தைக் கிழக்கு நோக்கி வைத்து அமர்ந்திருந்தார். மகாதேவனும் கிழக்கு நோக்கியே அமர்ந்திருந்தான். மற்றத் தேவர்கள் அனைவரும் வடக்கு நோக்கி அமர்ந்திருந்தார்கள். மற்ற முனிவர்கள் அனைவரும் எல்லாத் திசைகளையும் பார்த்து அமர்ந்திருந்தார்கள்.(23) தேவர்கள் அமர்ந்திருந்த அந்தச் சபையை வலம் வந்த அந்தத் திலோத்தமையை, இந்திரனும், அந்தச் சிறப்புமிக்க ஸ்தாணுவும் (மகாதேவனும் {சிவனும்}) மட்டும்தான் அமைதியை இழக்காமல் உறுதியுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர்.(24)
ஆனால் அந்த மங்கை {திலோத்தமை} தனது அருகில் வந்தபோது மிகுந்த ஆசைக்குள்ளான மகாதேவனின் {சிவனின்} உடலில் (திலோத்தமையைக் கண்டு) தென்புறத்தில் முழுவதும் மலர்ந்த தாமரையைப் போல ஒரு முகம் தோன்றியது.(25) அவள் {திலோத்தமை} அவனுக்குப் {சிவனுக்குப்} பின்புறம் சென்றதும் மேற்கில் ஒரு முகம் தோன்றியது. அந்த மங்கை அந்தப் பெரும் தேவனுக்கு {சிவனுக்கு} வடக்குப் புறத்தில் சென்றதும், நான்காவதாக அவனது உடலில் வடக்குப் பக்கம் ஒரு முகம் தோன்றியது. (அந்த மங்கையைக் காண ஆவலுடன் இருந்த) தேவர்கள் தலைவனுக்கு {இந்திரனுக்கு} ஒவ்வொன்றும் அகலமாகவும், சிவந்தும், முன்பும், பின்பும், இடுப்பிலுமாக ஆயிரம் கண்கள் தோன்றின.(26,27)
இப்படியே பெரும் தேவன் ஸ்தாணுவுக்கு {சிவனுக்கு} நான்கு முகங்களும், பலனைக் கொன்றவனுக்கு {இந்திரனுக்கு} ஆயிரம் கண்களும் உண்டாயிற்று.(28) இதன் நிமித்தமாக அனைத்துத் தேவர்களும் முனிவர்களும், தங்களை வலம் வந்த திலோத்தமை சென்ற திசைகளில் எல்லாம் தங்கள் முகத்தைத் திருப்பினர்.(29) தெய்வீகமான பெரும்பாட்டனைத் {பிரம்மனைத்} தவிர அங்கிருந்த சிறப்பு வாய்ந்த அனைவரின் பார்வையும் {திருஷ்டியும்} திலோத்தமையின் உடல் மீது விழுந்தது.(30) திலோத்தமை (அசுரர் நகரத்திற்குப்) புறப்பட்டதும், அவளது அழகு எனும் செல்வத்தின் மீது இருந்த மதிப்பால் அனைவரும் அந்தப் பணி நிறைவேறியதாகவே நினைத்தனர்.(31) அப்படி அந்தத் திலோத்தமை சென்றதும், அண்டத்தின் முதல் காரணமான அந்தப் பெரும் தலைவன் {பிரம்மன்} தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் விடை கொடுத்து அனுப்பி வைத்தான்”.(32)
பெண் பித்தால் அழிந்த சகோதரர்கள்! – ஆதிபர்வம் பகுதி 214-(ராஜ்யலாப பர்வம் – 05)-சுந்தனும், உபசுந்தனும் பெரும் இன்பத்துடன் போதையில் இருப்பது; அவர்கள் இருக்கும் இடத்திற்குத் திலோத்தமை சென்றது; அவள் காரணமாக அவர்களுக்குள் மோதல் ஏற்படுவது; இருவரும் அழிவது; நாரதர் பாண்டவர்களுக்குள் ஒரு விதியை ஏற்படுத்த வலியுறுத்துவது; அவர் முன்னிலையிலேயே அவர்களுக்குள் ஒரு விதி பிறப்பது…
நாரதர் தொடர்ந்தார், “அதே வேளையில் அசுரச் சகோதரர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} முழு உலகத்தையும் அடக்கி எதிரிகள் அற்று இருந்தனர். மூன்று உலகங்களையும் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, தங்கள் முயற்சிகளால் ஏற்பட்ட களைப்பும் நீங்கிய பிறகு, அவர்களால் இனி செய்யப்பட வேண்டியது எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.(1) கந்தர்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள், ராட்சசர்கள், பூமியை ஆண்ட மன்னர்கள் ஆகியோரின் செல்வங்களையெல்லாம் அபகரித்து வந்து, தங்கள் நாட்களை மகிழ்ச்சியுடன் கழித்தனர்.(2) அவர்கள் தங்களுக்கு (மூன்று உலகிலும்) எதிரிகளே இல்லை என்று கண்டபோது, இன்பத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தங்களை அர்ப்பணித்து, மற்ற முயற்சிகள் அனைத்தையும் கைவிட்டுத் தேவர்களைப் போல வாழ்ந்தனர்.(3) அவர்கள், பெண்கள், வாசனைப் பொருட்கள், பூ மாலைகள், இசை, குடி என அனைத்து வகை இன்பங்களையும், அனைத்து புலன் நுகர் பொருட்களையும் தாராளமாக அனுபவித்தனர்.(4) தேவர்களைப் போல அவர்கள் அபரிமிதமான இன்பங்களையும், கேளிக்கையையும் அனுபவித்துக் கொண்டு வீடுகளிலும், தோப்புகளிலும், நந்தவனங்களிலும், காடுகளிலும், மலைகளிலும் என அவர்கள் விரும்பிய இடங்களில் எல்லாம் திரிந்து கொண்டிருந்தனர்.(5)
ஒரு நாள் விந்திய மலைகளில் இருக்கும் கற்கள் நிறைந்ததும், பூத்துக்குலுங்கும் சால மரங்களும் நிறைந்த சமவெளிகளுக்கு இன்பம் அனுபவிப்பதற்காகச் சென்றனர்.(6) மிகவும் ஏற்புடையவையும், விரும்பத்தக்கவையுமான அனைத்து பொருட்களையும் அங்கே கொண்டு வந்த அந்தச் சகோதரர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} அற்புதமான இருக்கைகளில் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், அழகான பெண்கள் துணையுடனும் அமர்ந்தனர்.(7) அந்த மங்கையர், அந்தச் சகோதரர்களை மகிழ்விக்க எண்ணி, அங்கே இசையுடன் கூடிய நடனத்திற்கு ஏற்பாடு செய்தனர். அந்தச் சகோதரர்களை வாழ்த்திப் பாடல்கள் பாடப்பட்டன.(8)
அதேவேளையில், சிவப்புப் பட்டாலான ஒற்றையாடையுடன் தனது அழகுகளை எல்லாம் வெளிப்படுத்திய திலோத்தமை, காட்டுப்பூக்களைப் பறித்துக் கொண்டே அந்த வழியில் வந்தாள்.(9) ஆற்றங்கரையில் வளர்ந்திருக்கும் கர்ணீகாரங்களில் மலர்களைச் சேகரித்தபடியே, அந்தப் பெரும் பலம் வாய்ந்த அசுரர்கள் {சுந்தன், உபசுந்தன்} இருந்த இடத்திற்கு அவள் {திலோத்தமை} மெதுவாக வந்தாள்.(10) அந்த அசுரச் சகோதரர்கள் நிறையக் குடித்துப் போதையுடன் இருந்த போது, அந்தக் கற்பனைக்கெட்டாத அழகு கொண்ட மங்கையைக் {திலோத்தமையைக்} கண்டு அதனால் தாக்குண்டனர்.(11) அவர்கள் தங்கள் ஆசனங்களை விட்டு விரைவாக எழுந்து அந்த மங்கையிருக்கும் இடத்திற்குச் சென்றனர். காமத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அந்த இருவரும், தனக்கே அந்தப் பெண் வேண்டும் எனக் கேட்டனர்.(12)
சுந்தன் அந்த மங்கையின் வலது கையைப் பற்றி இழுத்தான். உபசுந்தன் இடது கையைப் பற்றினான்.(13) தாங்கள் பெற்ற வரங்களாலும், பெரும் பலத்தாலும், செல்வங்கள் மற்றும் ரத்தினங்களாலும், தாங்கள் குடித்த மதுவினாலும், மிகுந்த போதைக்குள்ளாகி,(14) அவைகளால் மதம் கொண்டு, விருப்பம் மற்றும் ஆசையினால் உந்தப்பட்டு, கோபத்தினால் புருவம் சுருக்கி அவர்கள் ஒருவருக்கொருவர் இவ்வாறு பேசிக் கொண்டனர்.(15) “அவள் எனது மனைவி, எனவே உனக்கு அவள் பெரியவள்” என்றான் சுந்தன். “அவள் எனது மனைவி, எனவே அவள் உனக்குக் கொழுந்தியாள்” என்ற மறுமொழி கூறினான் உபசுந்தன்.(16) பிறகும் அவர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} ஒருவருக்கு ஒருவர், “அவள் எனதே, உனதல்ல” என்றனர். விரைவில் மிகுந்த கோபத்துக்கு உள்ளாகினர். அந்த மங்கையின் அழகால் பைத்தியம் கொண்டு, ஒருவருக்குள் ஒருவர் தாங்கள் கொண்டிருந்த தங்கள் அன்பையும், பாசத்தையும்) மறந்து, ஆசையால் நினைவிழந்து, கடும் கதாயுதங்களைக் கையில் ஏந்தினர்.(17,18)
இருவரும், (அவள் {திலோத்தமை} கரம் பற்றுவதில்) “நானே முதல்வன், நானே முதல்வன்” என்று சொல்லி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட அந்த முரட்டு அசுரர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} தரையில் விழுந்து, ரத்தத்தில் குளித்து, வானத்தில் இருந்து விழுந்த இரு சூரியன்களைப் போலக் கிடந்தனர். அங்கே அவர்களுடன் வந்திருந்த பெண்களும் மற்ற அசுரர்களும் இதைக் கண்டு அச்சத்தாலும், துயரத்தாலும் ஓடிப் பாதாள லோகத்தில் தஞ்சம் அடைந்தனர்.(19,20)
தூய ஆன்மா கொண்ட பெருந்தகப்பன் {பிரம்மன்}, தேவர்களுடனும், பெரும் முனிவர்களுடனும் அங்கே வந்தார். அந்தச் சிறப்பு மிக்கப் பெருந்தகப்பன் திலோத்தமையைப் பாராட்டி, அவளுக்கு ஒரு வரம் தர விரும்புவதாகச் சொன்னார். அந்தத் தலைமைத் தெய்வம், வரம் கொடுக்க விரும்பி திலோத்தமையிடம்,(21,22) “ஓ அழகான மங்கையே, நீ ஆதித்யர்களின் உலகத்தில் சஞ்சரிக்கலாம். யாரும் நீண்ட நேரம் பார்க்க முடியாத வகையில் உனது பிரகாசம் பெரிதாக இருக்கும்!” என்றார்.(23) அனைத்து உயிர்களுக்கும் பெரும்பாட்டன் அவளுக்கு இந்த வரத்தைக் கொடுத்த பிறகு, மூன்று உலகங்களுக்கும் தலைவனாக இந்திரனை முன்பு போலவே நிறுவி, தனது இடத்திற்குத் திரும்பினார்”.(24)
நாரதர் தொடர்ந்தார், “இப்படியே, எப்போதும் ஒற்றுமையாகவும், அதற்காகவே முன்னுதாரணமாகவும் கொள்ளப்பட்ட அந்த அசுரர்கள், திலோத்தமைக்காகக் கோபத்தில் ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டனர்.(25) எனவே அன்பினால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். பாரதக் குலத்தில் வந்த முதன்மையானவர்களே, எனக்கு ஏற்புடையது எதையும் செய்ய நீங்கள் விரும்புவீர்கள். ஆனால், திரௌபதி குறித்து உங்களுக்குள் வேற்றுமை வராதபடிக்கு உங்களுக்குள் ஓர் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார் {நாரதர்}.(26)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “பெரும் முனிவர் நாரதரால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தச் சிறப்புமிகுந்த பாண்டவர்கள், தங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஆலோசித்து, அளவிட முடியாத சக்தி கொண்ட அந்தத் தெய்வீக முனிவரின் முன்னிலையில், தங்களுக்குள் ஒரு விதியை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்களுக்குள் ஏற்படுத்தப்பட்ட விதி என்னவென்றால், அவர்களில் ஒருவர் திரௌபதியுடன் அமர்ந்திருக்கும்போது, மற்ற நால்வரில் எவரேனும் அவர்களைக் கண்டால், அவன் பனிரெண்டு வருடங்களுக்கு[1] பிரம்மச்சாரியாகக் கானகத்திற்குள் ஓய்ந்து போக வேண்டும். இப்படி ஒரு விதியைத் தங்களுக்குள் அமைத்துக் கொண்ட, அந்த அறம் சார்ந்த பாண்டவர்களைக் கண்ட பெரும் முனிவர் நாரதர், அவர்களிடம் பெரும் மனநிறைவு கொண்டு, தான் விரும்பிய இடத்திற்குச் சென்றார்.(27-29)(வேறு பதிப்புகளில் 12 மாதம் என்றும் இருக்கிறது. ஆனால் அர்ஜுனன் அந்தத் தேசாந்தரத்தில் இந்தியாவின் பல பகுதிகளைக் கடக்கிறான். அவற்றை 12 மாதங்களில் கடக்க முடியுமா என்பதும், 12 வருடங்கள் தேவைப்படுமா என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியதே!) இப்படியே, ஓ ஜனமேஜயா! நாரதரால் உந்தப்பட்ட பாண்டவர்கள், தங்களுக்குள் பொது மனைவியைக் குறித்து ஒரு விதியை அமைத்துக் கொண்டனர். மேலும், இதனால்தான், ஓ பாரதா {ஜனமேஜயா}, அவர்களுக்குள் இது விஷயத்தில் சச்சரவு ஏற்படவில்லை” {என்றார் வைசம்பாயனர்}.(30)
———————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply