ஸ்ரீ மஹாபாரதம் -ஸ்ரீ ஆதி பர்வம்-ஸ்ரீ விதுராகமன  பர்வம் – 

திரௌபதியால் துரியோதனன் கணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டானா? – ஆதிபர்வம் பகுதி 202-(விதுராகமன பர்வம் – 01)-பாண்டவர்கள் பற்றிய செய்தியைக் கேட்ட மற்ற மன்னர்கள் திருதராஷ்டிரனைப் பழிப்பது; துரியோதனனை கணவனாக திரௌபதி தேர்ந்தெடுத்தாள் என்று புரிந்து கொண்ட திருதராஷ்டிரன்; துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோர் திருதராஷ்டிரனுடன் ஆலோசிப்பது..

வைசம்பாயனர் சொன்னார், “(திரௌபதியின் சுயம்வரத்திற்கு வந்த) அனைத்து ஏகாதிபதிகளுக்கும், அவர்களின் திறமை வாய்ந்த ஒற்றர்களால் பாண்டுவின் மகன்களுக்கும் திரௌபதிக்கும் திருமணம் நடந்த செய்தி எட்டியது.(1) வில்லை வளைத்துக் குறி அடித்த வீரன், வெற்றிபெறும் வீரர்களில் முதன்மையான, விற்கணைகளைத் தாங்குபவர்களில் முதன்மையான அர்ஜுனனைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதும்;(2) மத்ர மன்னன் சல்லியனை தரையில் தூக்கி எவன் தூக்கி எறிந்தானோ, தீண்டல் ஒன்றாலேயே எதிரிகளின் உயிரை எடுக்கும் வல்லமைபெற்ற எவனோ, கோபம் கொண்டு மரத்தைப் பிடுங்கி அங்கே கூடியிருந்த மன்னர்களை அச்சுறுத்தியவன் எவனோ, அவன் எதிரிகளை வீழ்த்தும் பீமனைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.(3,4)

பாண்டவர்கள் அமைதியான பிராமணர்கள் வடிவத்தோடு மாற்றுருவில் இருந்தார்கள் என்பதை அறிந்த ஏகாதிபதிகள் மிகவும் வியப்புற்றனர்.(5) குந்தியும், அவளது மகன்கள் அனைவரும் அரக்கு மாளிகை எரிந்ததால் கொல்லப்பட்டார்கள் என்பதையும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். எனவே, அவர்கள் பாண்டவர்களை மரணித்தவர்களின் உலகத்திலிருந்து மீண்டு வந்தவர்களாக மதித்தார்கள்.(6) புரோசனனின் தீய திட்டத்தை நினைத்துப் பார்த்த அவர்கள் அனைவரும், “ச்சீ, பீஷ்மன் இழிந்தவன், குரு குலத்தின் திருதராஷ்டிரன் இழிந்தவன்” என்று இகழ்ந்தனர்.(7) சுயம்வரம் முடிந்ததும் திரௌபதி பாண்டவர்களுடன் இணைக்கப்பட்டதை அறிந்த அனைத்து ஏகாதிபதிகளும், தங்கள் நாடுகளுக்குப் புறப்பட்டனர்.(8) அப்போது திரௌபதி, வெண்குதிரையைக் கொண்டவனைத் {அர்ஜுனனைத்} தனது தலைவனாகத் தேர்ந்தெடுத்ததைக் கேட்ட துரியோதனன் மிகவும் கவலை கொண்டான்.(9) தனது தம்பிகள், அசுவத்தாமன், தனது மாமன் (சகுனி), கர்ணன், கிருபர் ஆகியோருடன் அந்த இளவரசன் {துரியோதனன்} கனத்த இதயத்துடன் {காம்பில்யத்திலிருந்து} தனது தலைநகருக்கு {ஹஸ்தினாபுரத்துக்குப்} புறப்பட்டுச் சென்றான்.(10)

அப்போது, வெட்கத்தால் தலைகுனிந்த துச்சாசனன், தனது அண்ணனிடம் மெதுவாக, “அர்ஜுனன் மட்டும் தன்னை பிராமணனாக மறைத்துக் கொள்ளவில்லையெனில், அவனால் திரௌபதியை அடைவதில் வெற்றி பெற்றிருக்க முடியாது. அவன் இப்படி மாற்றுரு கொண்டதினாலேயே, ஓ மன்னா {துரியோதனா}, ஒருவராலும் அவனைத் தனஞ்சயன் {அர்ஜுனன்} எனக் கண்டு கொள்ள முடியவில்லை.(11) விதியே வலியது என நான் கருதுகிறேன். முயற்சிகள் கனி கொடுக்கவில்லை; ஓ அண்ணா பாண்டவர்கள் உயிரோடிருப்பது நமது முயற்சிகளுக்கு இகழ்ச்சியே” என்றான்.(12)

ஒருவருக்கொருவர் இப்படிப் பேசிக்கொண்டு, {அவனது பொறுப்பற்ற செயலுக்கு) புரோச்சனனைப் பழித்து, மகிழ்ச்சியற்ற துயர் நிறைந்த இதயங்களுடன் அவர்கள் ஹஸ்தினாபுரம் நகரத்திற்குள் புகுந்தனர்.(13) பிருதையின் {குந்தியின்} பலம் பொருந்திய மகன்கள் {பாண்டவர்கள்}, அரக்கு மாளிகையின் நெருப்பிலிருந்து தப்பித்து, துருபதனுடன் கூட்டணி அமைத்ததைக் கண்டு, திருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகிய துருபதனின் மற்ற மகன்களையும் நினைத்து, அச்சத்தால் பீடிக்கப்பட்டு, மனத்தளர்ச்சியை அடைந்தனர்.(14,15) திரௌபதி பாண்டவர்களால் வெல்லப்பட்டாள் என்பதையும், செருக்கழிந்த திருதராஷ்டிரனின் மகன்கள் அவமானத்துடன் (ஹஸ்தினாபுரத்திற்குத்) திரும்பி வந்தனர் என்பதையும் அறிந்த விதுரன் மகிழ்ச்சியில் திளைத்தான்.(16)

பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரனை அணுகிய க்ஷத்திரி {விதுரன்}, “குரு குலத்தவர் நற்பேற்றால் வளமை அடைகின்றனர்!” என்றான்.(17)

விதுரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட, விசித்திரவீரியனின் மகன் {திருதராஷ்டிரன்} வியப்புற்று, பெரும் மகிழ்ச்சியுடன், “என்ன நற்பேறு! ஓ விதுரா, என்ன நற்பேறு வந்தது!” என்று கேட்டான்.(18)

இப்படி அறியாமையில் இருந்த அந்தப் பார்வையற்ற ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, துருபதனின் மகள் {திரௌபதி} தனது மூத்த மகனான துரியோதனனைத் தனது தலைவனாகத் {கணவனாகத்} தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்பதாகப் புரிந்து கொண்டான்.(19) உடனே அந்த மன்னன் {திருதராஷ்டிரன்} திரௌபதிக்காகப் பல்வேறு ஆபரணங்களைச் செய்ய உத்தரவிட்டான். திரௌபதியும், தனது மகனான துரியோதனனும், ஹஸ்தினாபுரத்திற்கு மிகுந்த ஆடம்பரமான முறையில் அழைத்து வரப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டான்.(20)

அதன்பிறகு தான் விதுரன், அந்த ஏகாதிபதியிடம் {திருதராஷ்டிரனிடம்}, திரௌபதி பாண்டவர்களைத் தனது தலைவர்களாகத் {கணவர்களாகத்} தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்றும், அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்றும், அமைதியான முறையில் வாழ்ந்து மன்னன் துருபதனின் பெரு மதிப்பையும் பெற்று வருகிறார்கள் என்றும் தெரிவித்தான்.(21) மேலும், பாண்டவர்கள், துருபதனின் பல உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனும், சுயம்வரத்திற்கு வந்த மற்ற பல மன்னர்களுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பெரும் படைகள் இருக்கின்றன” என்றும் தெரிவித்தான்.(22)

விதுரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், “அந்தப் பிள்ளைகள் {பாண்டவர்கள்}, பாண்டுவுக்கு எப்படி அன்பானவர்களோ, அப்படியே எனக்கும் அன்பானவர்கள். அல்லாமலும், இப்போது அவர்கள் மீது எனது பாசம் அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்ன என்று கேட்பாயாக.(23) பாண்டுவின் வீர மகன்கள் நன்றாகவும், அமைதியாகவும் இருக்கிறார்கள். அவர்கள் பல நண்பர்களை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் சேர்த்திருக்கும் உறவினர்களும், கூட்டணியில் சேர்க்கப்பட்டிருப்பவர்களும் பெரும் பலம் பொருந்தியவர்களாவர்.(24) செழிப்போ, கேடோ  அடைந்திருக்கும் எந்த ஏகாதிபதிதான் துருபதனையும் அவனது உறவினர்களையும் கூட்டாளிகளாகக் கொள்ள விரும்ப மாட்டான்” என்றான் {திருதராஷ்டிரன்}”.(25)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஏகாதிபதியின் {திருதராஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட விதுரன், “ஓ மன்னா, உமது இந்தப் புரிதல் நூறு வருடங்களுக்கு மாற்றமில்லாமல் இருக்கட்டும்” என்று சொன்னான்.(26) இப்படிச் சொல்லிவிட்டுத் தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினான் விதுரன். அப்போது, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அங்கே திருதராஷ்டிரனிடம், துரியோதனனும், ராதையின் மகனான கர்ணனும் வந்தனர்[1].(27)(கும்பகோணம் பதிப்பில், துரியோதனாதிகள் திருதராஷ்டிரனிடம் வருவதற்கு முன் தனியாக ஆலோசித்தது இரண்டு அத்தியாயங்களில் வருகிறது, அதன் சுருக்கம் பின்வருமாறு: “திருதராஷ்டிரனின் மகன்கள் பாண்டவர்களைக் குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கும்போது, “அவர்களைக் கொல்ல வேண்டும்” என்று சகுனி சொல்வதும், “அவர்களைக் கொல்ல முடியாது. சமாதானமே செய்து கொள்ள வேண்டும் என்று சோமதத்தன் மகனான பூரிஸ்ரவஸ் பல தகவல்களுடன் விளக்கிச் சொல்வதும், கர்ணன், “பூரிஸ்ரவசின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டாலும், “எதிர்த்து செல்வதனாலோ, சேனையுடன் இங்கேயே நிற்பதாலோ, இந்தத் துருபத நகரத்தைப் பிடிப்பது முடியாது. பெரிய யுத்தமும் நல்லதன்று. நினைத்துப் பார்க்கையில் இங்கே யுத்தத்தில் விருப்பமுள்ள யாதவர்கள் நமது பின் இடத்தைப் பிடிப்பதற்கு முன் நாம் அவர்களை அழிப்பதற்கு இது காலமென்று எனக்குத் தோன்றுகிறது. எனவே போரிடுவதே சிறந்தது” என்று சொன்னதும், துரியோதனாதியர் பாண்டவர்களைக் கொல்வதற்காகப் பாஞ்சால நகரம் செல்வது; அர்ஜுனனிடம் போரில் கர்ணன் தோற்பது; துரியோதனாதிகள் பாண்டவர்களால் தோல்வியடைந்து திரும்பி ஹஸ்தினாபுரம் சேர்ந்தது; கிருஷ்ணனும், பலராமனும் பாஞ்சாலத்திற்கு வந்திருந்து பாண்டவர்களுடன் மகிழ்ந்திருந்தது” ஆகியன அந்த இரண்டு அத்தியாயங்களில் விவரிக்கப்படுகின்றன. கங்குலி, மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகிய பதிப்புகளில் இச்சம்பவங்கள் சொல்லப்படவில்லை.)அவர்கள் அந்த ஏகாதிபதியிடம் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ மன்னா, விதுரன் முன்னிலையில் வரம்பு மீறிய எந்தச் சொல்லையும் நாங்கள் பேச முடியாது. எனவே, நாங்கள் உம்மைத் தனிமையில் கண்டோம். எனவே, நாங்கள் விரும்பியதைச் சொல்கிறோம்.(28) ஓ ஏகாதிபதியே, நீர் என்ன செய்ய விரும்புகிறீர்? விதுரனின் முன்னிலையில் பாண்டவர்களைப் பெரிதும் புகழ்கிறீரே? உமது எதிரியின் வளமையை உமதாகக் கருதுகிறீரா?(29) ஓ பாவமற்றவரே, ஓ மன்னா, நீர் செயல்பட வேண்டிய விதத்தில் செயல்படவில்லை. ஓ தந்தையே, நாம் பாண்டவர்களைப் பலவீனப்படுத்தத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.(30) ஓ ஐயா, பாண்டவர்கள் நம்மையும், நமது பிள்ளைகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் விழுங்காதிருக்க, நாம் சேர்ந்து ஆலோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றனர்.(31)

திரௌபதியை பாண்டவர்களுக்கு எதிராக தூண்டுவோம் – ஆதிபர்வம் பகுதி 203-(விதுராகமன பர்வம் – 02)-துரியோதனன், திரௌபதியை பாண்டவர்களுக்கு எதிராகத் தூண்டவும், பாண்டவர்களைக் கொல்லவும் சொன்னது; குறிப்பாக பீமனின் பெருமைகளைச் சொல்லி, அவனைக் கொன்றால் பாண்டவர்கள் நாடு கேட்க மாட்டார்கள் என்று சொன்னது; கர்ணனிடம் கருத்து கேட்ட துரியோதனன்…

வைசம்பாயனர் சொன்னார், “திருதராஷ்டிரன், ” நீங்கள் பரிந்துரைப்பதைத்தான் நான் சரியாகச் செய்ய விரும்புகிறேன். ஆனால், எனது சிறு சதை {முக} மாற்றத்தினாலும் விதுரனுக்கு அதைத் தெரிவிக்க நான் விரும்பவில்லை.(1) எனவே, ஓ மகனே, எனது மனத்தின் சிறு குறிப்பையும் விதுரன் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே, நான் அவனது முன்னிலையில், பாண்டவர்களைப் புகழ்ந்தேன்.(2) இப்போது விதுரன் சென்றுவிட்டான். ஓ சுயோதனா (துரியோதனா) உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ஓ ராதேயா (கர்ணா) உனக்கு என்ன தோன்றுகிறது என்பதைச் சொல்வதற்கு இதுவே தகுந்த நேரம்” என்றான்.(3)

அதற்குத் துரியோதனன், “ஓ தந்தையே, நம்பிக்கைக்குரிய, திறம்வாய்ந்த, கைதேர்ந்த பிராமணர்களைக் கொண்டு, குந்தியின் மகன்களுக்கும் {யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் ஆகியோருக்கும்}, மாத்ரியின் மகன்களுக்கும் {நகுலன், சகாதேவன் ஆகியோருக்கும்} இடையே {பேத முறையில்} வேற்றுமையை உருவாக்க வேண்டும்.(4) அல்லது துருபதனுக்கும், அவனது மகன்களுக்கும், அவனது நாட்டின் அமைச்சர்களுக்கும் {தான முறையில்} பெரும் செல்வங்களைப் பரிசாகக் கொடுத்து, குந்தியின் மகனான யுதிஷ்டிரனைக் கைவிடச் செய்ய வேண்டும்.(5)

அல்லது நமது ஒற்றர்கள், பாண்டவர்களிடம் ஹஸ்தினாபுரத்தில் வசிப்பதால் உண்டாகும் தோதின்மைகளை {வசதியின்மைகளைத்} தனியாக விளக்கி, நம்மிடம் இருந்து பிரிந்து பாஞ்சாலத்திலேயே அவர்கள் நிரந்தரமாகத் தங்கும் வகையில், அவர்களைத் துருபதனின் ஆட்சிப் பகுதியிலேயே வசிப்பதற்குத் தூண்ட வேண்டும்.(6,7) அல்லது பெரும் வழிவகைகளை அறிந்த சில புத்திசாலி ஒற்றர்களைக் கொண்டு வேற்றுமையின் விதைகளைப் பாண்டவர்களுக்குள் தூவி, அவர்களை ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ளச் செய்ய வேண்டும்.(8) அல்லது அவர்களை {ஒற்றர்களைக்} கொண்டு கிருஷ்ணையை {திரௌபதியை} அவளது கணவர்களுக்கு எதிராகத் தூண்டிவிட வேண்டும். அவளுக்குப் பல தலைவர்கள் {கணவர்கள்} இருப்பதால், இந்தக் காரியம் கடினமானது அன்று. அல்லது சிலரைக்கொண்டு பாண்டவர்கள் கிருஷ்ணை {திரௌபதி} மீது வெறுப்பு கொள்ளச் செய்தால், பதிலுக்குக் கிருஷ்ணை {திரௌபதி} அவர்கள் மீது வெறுப்பைக் கொள்வாள்.(9) அல்லது, ஓ மன்னா, நுண்ணறிவு கொண்ட சில ஒற்றர்களை அங்கு செல்ல வைத்து, {தண்ட முறையில்} கமுக்கமாகப் பீமசேனனைக் கொல்ல வைக்க வேண்டும். அவர்கள் அனைவரிலும் பீமனே பலசாலியாவான்.(10)

முன்பொரு காலத்தில் பாண்டவர்கள், பீமனை மட்டுமே நம்பி, நம்மை அவமதித்திருக்கிறார்கள். பீமன் கடுமையானவன், வீரமானவன். அவனே பாண்டவர்களின் பாதுகாவலன்.(11) அவன் கொல்லப்பட்டால், மற்றவர்களின் பலமும் சக்தியும் குறைந்துவிடும். அவர்களது ஒரே பாதுகாவலான பீமனை இழந்துவிட்டால், மறுபடியும் நாட்டைப் பெற அவர்கள் முனைய மாட்டார்கள்.(12) ஓ மன்னா {திருதராஷ்டிரா}, பின்னாலிருந்து பீமன் காத்தால்தான், அர்ஜுனன் போரில் தன்னிகர் இல்லாதவன். பீமனில்லாத அர்ஜுனன், ராதேயனின் {கர்ணனின்} கால்பங்கு பலத்துக்கும் ஈடாக மாட்டான்.(13) ஓ மன்னா, நிச்சயமாக, பீமனில்லாத பாண்டவர்கள், நமது பலத்திற்கு முன்னால் தங்களை அற்பமாக உணர்ந்து, நாட்டைப் பெற உண்மையிலேயே முனைய மாட்டார்கள்.(14) அல்லது, ஓ ஏகாதிபதியே இங்கே வந்து, நமக்குக் கீழ்ப்படிந்து, அவர்கள் தங்கள் அமைதியை நிரூபித்தால், அதன் பிறகு நாம் (கணிகர் விளக்கியபடியே) அரசியல் அறிவியலின் ஆணைப்படி அவர்களை எப்படி ஒடுக்க வேண்டுமோ அப்படி ஒடுக்கலாம்.(15)

அல்லது, சில அழகான பெண்களைக் கொண்டு, பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} அவர்கள் மீது {பாண்டவர்கள் மீது} வருத்தம் கொள்ள வைக்கச் செய்யலாம்.(16) அல்லது ஓ ராதேயா {கர்ணா}, நமது தூதர்களை அங்கு அனுப்பி, அவர்களை இங்குக் கொண்டுவந்து, நம்பிக்கைக்குரிய ஆட்களைக் கொண்டு, மேற்கண்ட எந்த முறையிலாவது அவர்களைக் கொல்லலாம்.(17)  ஓ தந்தையே, இந்த (பல்வேறு  முறைகளில் உமக்கு குறையில்லாததாகத் தெரியும் எதையாவது கைக்கொள்வீராக. காலம் கடக்கிறது. இதற்கு மேலும் நாம் தவறிழைக்காமல் முனைய வேண்டும்.(18) ஓ ஏகாதிபதி, மன்னர்களில் காளையான துருபதனிடம்  அவர்களது நம்பிக்கை நிறுவப்படுவதற்கு முன் அவர்களைத் தாக்கி நாம் வெற்றி கொள்ள வேண்டும். (ஆனால் அவர்கள் துருபதனின் நம்பிக்கைக்கு உரியவர்களாக ஆகிவிட்டால், பின்பு நாம் நிச்சயம் தோல்வியைத் தான் சந்திப்போம்).(19). ஓ தந்தையே, இவையே பாண்டவர்களைத் தோல்வியடையச் செய்ய நான் கொண்டிருக்கும் கருத்துகள். இவை நன்மையா, தீமையா என்பதைத் தீர்மானித்துக்  கொள்வீராக. ஓ கர்ணா, நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான் {துரியோதனன்}.(20)

துரியோதனனை ஏசிய கர்ணன்! – ஆதிபர்வம் பகுதி 204-(விதுராகமன பர்வம் – 03) துரியோதனன் சொன்ன திட்டங்களைக் கேட்டு கர்ணன் அவனை ஏசியது; சூழ்ச்சியைக் கையாளாதே ஆற்றலை வெளிப்படுத்து என்று சொன்னது; செல்வம், இன்பம், நாடு என்று எதையும் பாண்டவர்களுக்காக கிருஷ்ணன் தியாகம் செய்வான் என்று சொன்னது; வீரமே க்ஷத்திரியனுக்கு அழகு என்று சொன்னது…

வைசம்பாயனர் சொன்னார், “துரியோதனனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட கர்ணன், “ஓ துரியோதனா, உன் பகுத்தறிவு நன்கு நிறுவப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஓ குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, பாண்டவர்களுக்கு எதிரான எந்த வழிவகையும் வெற்றிபெறாது.(1) ஓ வீரமான இளவரசனே, இதற்கு முன்பே நீ பல்வேறு நுட்பமான வழிவகைகள் மூலம் உனது விருப்பத்தைச் செய்யப் போராடியிருக்கிறாய். ஆனால், உனது எதிரிகளைக் கொல்வதில் தோல்வியே கண்டிருக்கிறாய்.(2) அப்போது அவர்கள் உனது அருகிலே வாழ்ந்து வந்தார்கள். ஓ மன்னா, அப்போது அவர்கள் சிறுவர்களாகவும் இருந்தார்கள். ஆனால், அப்போதும் உன்னால் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடிய வில்லை.(3) இப்போது அவர்கள் தொலைவில் இருக்கிறார்கள். வளர்ந்திருக்கிறார்கள். பெரும் ஆட்சிப்பரப்பைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஓ உறுதியான முடிவு கொண்டவனே, குந்தியின் மகன்கள் உனது எந்த நுட்பமான {தந்திரமான} திட்டமிடல் மூலமும் காயப்பட மாட்டார்கள். இஃது எனது கருத்து.(4) அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} அவர்களது விதி உதவி செய்கிறது. அவர்கள் தங்கள் மூதாதையர் நாட்டை அடைய விரும்புகிறார்கள். அப்படியிருக்கும்போது, நமது சக்தியைக் கொண்டு, எந்த வகையிலும் அவர்களுக்குத் தீங்கிழைப்பதில் நாம் வெற்றிகொள்ள முடியாது.(5)

அவர்களுக்குள் ஒற்றுமையின்மையை உருவாக்குவது என்பது முடியாத காரியம். பொது மனைவியைக் கொண்ட அவர்கள் அனைவரையும் பிரிக்க முடியாது.(6) அதே போல நமது ஒற்றர்களைக் கொண்டு கிருஷ்ணைக்கும் {திரௌபதிக்கும்} பாண்டவர்களுக்கும் இடையில் பேதத்தை ஏற்படுத்தவும் முடியாது. அவர்கள் {பாண்டவர்கள்} கேடு காலத்தில் {துரதிர்ஷ்டத்தில்} இருந்த போதே, அவள் அவர்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தாள். இப்போது வளமையில் இருக்கும் அவர்களை அவள் கைவிடுவாளா?(7) அல்லாமலும், பெண்கள் எப்போதும் பல கணவர்களை அடையவே விரும்புவார்கள். கிருஷ்ணை {திரௌபதி} அவள் விருப்பத்தை அடைந்துவிட்டாள். அவளைப் பாண்டவர்களிடம் பேதம் கொள்ள வைக்க முடியாது.(8) பாஞ்சால மன்னன் {துருபதன்} நேர்மையானவனும் அறம் சார்ந்தவனும் ஆவான்; அவன் பேராசையுடையவன் அல்லன். நாம் நமது முழு நாட்டை அவனுக்குக் கொடுப்பதாய் இருந்தாலும் அவன் பாண்டவர்களைக் கைவிட மாட்டான்.(9) துருபதனின் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, அனைத்துத் தகுதிகளும் கொண்டு பாண்டவர்களிடம் பிணைப்புடன் இருக்கிறான். எனவே, உனது சக்தியைக் கொண்டு எந்த நுட்பமான திட்டத்தைச் செய்தாலும் பாண்டவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது, என்று நான் நினைக்கிறேன்.(10)

ஆனால், ஓ மனிதர்களில் காளையே {துரியோதனா}, நான் இனி சொல்லப் போவதுதான் நமக்கு உகந்ததும், நன்மையானதும் ஆகும். ஆதாவது, அவர்கள் {பாண்டவர்கள்} அழியும் வரை அவர்களைத் தாக்கி அடித்துக் கொண்டு இருக்க வேண்டும். இந்தப் போக்கே உனக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டியது.(11) நமது தரப்பு பலமாக இருக்கும் வரையும், பாண்டவ மன்னனின் தரப்பு பலவீனமாய் இருக்கும் வரையும், அவர்களை எந்த மன உறுத்தலும் இன்றித் தாக்க வேண்டும்.(12) ஓ காந்தாரியின் மகனே {துரியோதனனே}, அவர்களது கணக்கிலடங்கா வாகனங்களும், விலங்குகளும், நண்பர்களும், நட்புக் குழுக்களும் ஒன்றாகத் திரளாத வரை, ஓ மன்னா, உனது ஆற்றலை வெளிப்படுத்துவதைத் தொடர்ந்து கொண்டிருப்பாயாக.(13) பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்}, பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட அவனது மகனுடன் {திருஷ்டத்யும்னனுடன்} சேர்ந்து, நம் மீது போர் தொடுக்க எண்ணாத வரை, ஓ மன்னா, உனது ஆற்றலை வெளிப்படுத்துவாயாக.(14) ஓ மன்னா, அனைத்தையும் எடுத்துக் கொண்டு பாண்டவர்களுக்கு அவர்கள் தந்தை வழிச் சொத்தை மீட்டுக் கொடுக்க விருஷ்ணி குலத்தோன் (கிருஷ்ணன்), யாதவப் படைகளுடன் துருபதன் நகரத்திற்குள் நுழையாத வரை உனது ஆற்றலை வெளிப்படுத்துவாயாக.(15)

செல்வம், இன்பத்துக்கான அனைத்து நுகர்ச்சிப் பொருட்கள், நாடு என அந்தக் கிருஷ்ணன், பாண்டவர்களுக்காக எதையும் தியாகம் செய்வான்.(16) அந்தச் சிறப்புமிக்கப் பாரதன் {கிருஷ்ணன்} தனி ஒருவனாக வீரத்தைக் காட்டி இந்த முழு உலகத்தையே அடைந்திருக்கிறான். இந்திரன் தன் ஆற்றலை மட்டுமே கொண்டு மூன்று உலகத்தின் ஆட்சியை அடைந்தான்.(17) ஓ மன்னா, ஆற்றல் மட்டுமே க்ஷத்திரியர்களால் எப்போதும் மெச்சப் படுகிறது. ஓ க்ஷத்திரியக் காளையே, துணிவுள்ளவனுக்கு ஆற்றலே முக்கியமான அறமாகும்.(18) எனவே, ஓ ஏகாதிபதி, நேரத்தைக் கடத்தாமல், நான்கு வகைச் சேனைகளைக் கொண்ட நமது பெரும் படையைக் கொண்டு துருபதனைத் தாக்கி, பாண்டவர்களை இங்கே கொண்டு வருவோம்.(19) உண்மையில், சமாதானக் கொள்கை கொண்டோ, பரிசையும் செல்வத்தையும் லஞ்சமாகக் கொடுத்தோ அல்லது ஒற்றுமையின்மையை உண்டாக்கியோ பாண்டவர்களை வீழ்த்த முடியாது. எனவே, உனது ஆற்றலைக் கொண்டே அவர்களை வெற்றி கொள்வாயாக.(20) உனது ஆற்றலைக் கொண்டு அவர்களை வெற்றிகொண்டு இந்தப் பரந்த உலகத்தை ஆட்சி செய்வாயாக. ஓ ஏகாதிபதி, நமது இலக்கை அடைய நான் வேறு வழி எதையும் காணவில்லை” என்றான் {கர்ணன்}”.(21)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “ராதேயனின் {கர்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட பெரும் பலம் வாய்ந்த திருதராஷ்டிரன், அவனைப் பெரிதும் மெச்சினான். அதன்பிறகு அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} அவனிடம்,(22) “ஓ சூதனின் மகனே {கர்ணனே}, நீ ஆயுதங்களில் தேர்ச்சி பெற்ற பெரும் ஞானம் கொண்டவன். எனவே ஆற்றலை வெளிக்காட்டச் சொன்ன உனது பேச்சு, உனக்கு மிகவும் பொருந்துகிறது.(23) ஆனாலும், பீஷ்மர், துரோணர், விதுரன் மற்றும் நீங்கள் இருவரும் {கர்ணனும், துரியோதனனும்) ஆலோசனை செய்து, நமது நலனுக்கு வழிவகுக்கும் திட்டத்தை ஏற்படுத்தி, அதையே ஏற்றுக் கொள்வீராக” என்றான் {திருதராஷ்டிரன்}”.(24)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிறகு மன்னன் திருதராஷ்டிரன், கொண்டாடப்பட்டவர்களான தனது அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து அவர்களுடன் ஆலோசித்தான்”.(25)

துரியோதனனை எச்சரித்த பீஷ்மர்! – ஆதிபர்வம் பகுதி 205-(விதுராகமன பர்வம் – 04)-திருதராஷ்டிரன் பீஷ்மரிடம் ஆலோசனை கேட்பது; பீஷ்மர் அனைவரையும் சமமாக நினைப்பதாகச் சொல்வது; பாண்டவர்கள் நெருப்பில் அகப்பட்டது துரியோதனனின் சூழ்ச்சியே என்று உலகம் நினைப்பதைச் சொல்லி துரியோதனனை பீஷ்மர் எச்சரிப்பது; பாண்டவர்களுக்கு பாதி நாட்டைக் கொடுக்கும்படி பீஷ்மர் அறிவுறுத்தியது…

வைசம்பாயனர் சொன்னார், “தனது கருத்தைச் சொல்லுமாறு திருதராஷ்டிரன் கேட்டதால், பீஷ்மர், “ஓ திருதராஷ்டிரா, பாண்டவர்களுடன் சச்சரவு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. நீ எனக்கு எப்படியோ, பாண்டுவும் எனக்கு அப்படியே என்பதில் ஐயமில்லை.(1) காந்தாரியின் மகன்களும் எனக்குக் குந்தியின் மகன்களைப் போலத்தான். ஓ திருதராஷ்டிரா, உனது மகன்களை நான் காப்பது போல, அவர்களையும் நான் காக்க வேண்டும்.(2) மேலும், ஓ மன்னா, துரியோதனனுக்கும் மற்ற குரு குலத்தவருக்கும் அவர்கள் {பாண்டவர்கள்} எவ்வளவு நெருக்கமோ, எனக்கும் அவ்வளவு நெருக்கமாகவே இருக்கிறார்கள்.(3) இத்தகையச் சூழ்நிலையில், அவர்களுடன் சச்சரவு என்பதை நான் {பீஷ்மன்} சற்றும் விரும்ப மாட்டேன். அந்த வீரர்களுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} பாதி நாட்டைக் கொடுப்பாயாக. இந்நாடு அந்தக் குரு குலத்தின் முதன்மையானவர்களுக்கும் தந்தையின் வழி வந்த நாடுதான் என்பதில் ஐயமில்லை.(4) மேலும், ஓ துரியோதனா, இந்த நாட்டை உனது தந்தையின் சொத்தாகப் பார்க்கும் நீ, பாண்டவர்களும் இந்த நாட்டை அவர்களது தந்தையின் சொத்தாக நோக்குகிறார்கள் என்பதை உணர வேண்டும்.(5)

பாண்டுவின் புகழ்பெற்ற மகன்கள் நாட்டை அடையவில்லை என்றால், அஃது எப்படி உனதாகும்? அல்லது அஃது எப்படி மற்ற பாரதக் குலத் தோன்றல்களுக்கு உரியதாகும்?(6) சட்டப்படி நீ மட்டுமே இதற்கு உரியவன் என நீ கருதினால், உனக்கு முன்னால் அவர்கள் நாட்டை அடைவதுதான் சட்டப்படியானது என அவர்கள் கருதுவார்கள், என்று நான் நினைக்கிறேன்.(7) அமைதியாக அவர்களுக்குப் பாதி நாட்டைக் கொடுப்பாயாக. இதுவே, ஓ மனிதர்களில் புலியே, எல்லோருக்கும் நன்மையைத் தரும்.(8) நீ வேறுமாதிரியாகச் செயல்பட்டால், அனைவர் மேலும் தீமை வந்து விழும். நீயும் அவமரியாதையால் மறைக்கப்பட்டிருப்பாய்.(9)  ஓ துரியோதனா, உனது நல்ல பெயரைக் காப்பாற்ற முயற்சி செய். ஒருவனின் நல்ல பெயர்தான் நிச்சயமாக அவனது பலத்தின் ஊற்றுக்கண்ணாகும். மதிப்பிழந்தவன் வாழ்வது வீண் என்று சொல்லப்படுகிறது.(10)

ஓ கௌரவா {துரியோதனா}, ஒருவனது புகழ் நிலைத்திருக்கும் வரை அவன் இறப்பதில்லை. ஒருவன் தனது புகழ் இருக்கும் வரை வாழ்ந்து, அது மறையும் போதே இறக்கிறான்.(11) ஓ காந்தாரியின் மகனே {துரியோதனா}, குரு குலத்தவருக்குத் தகுந்த {ஏற்ற} நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்வாயாக. பெரும்பலம் கொண்ட கரமுடையவனே, உனது மூதாதையர்களின் செயல்களைப் பின்பற்றுவாயாக.(12) பாண்டவர்கள் அழியவில்லை என்பது நமக்குக் கிடைத்த நற்பேறாகும். குந்தி வாழ்வதும் நமக்குக் கிடைத்த நற்பேறாகும். தனது செயலை சாதிக்க முடியாத பாவி புரோசனன் அழிந்தான் என்பதும் நமக்குக் கிடைத்த பெரும் நற்பேறாகும்.(13) குந்திபோஜனின் மகள் {குந்தி} எரிந்து செத்தாள் என்பதை நான் கேட்ட நேரத்திலிருந்து, ஓ காந்தாரியின் மகனே {துரியோதனா}, எந்த உயிரினத்தையும் சந்திக்கும் சக்தி அற்று இருந்தேன்.(14) ஓ மனிதர்களில் புலியே, குந்திக்கு நேர்ந்த விதியை அறிந்த உலகம், உன்னை விடப் புரோசனனைப் பெரிய குற்றவாளியாகக் கருதவில்லை.(15)

ஓ மன்னா, பாண்டுவின் மகன்கள் நெருப்பில் இருந்து தப்பி, மீண்டும் காட்சி அளித்துவிட்டதால், உனது தீய நோக்கங்களை விட்டுவிடுவாயாக.(16) ஓ குரு குலத்தோனே, அந்த வீரர்கள் {பாண்டவர்கள்} வாழும் வரை, இடியை ஆயுதமாகக் கொண்டவன் {இந்திரன்} நினைத்தாலும், அவர்களது மூதாதையர் நாட்டில் அவர்களுக்கு இருக்கும் பங்கை அவர்களை இழக்கச் செய்ய முடியாது என்பதை அறிந்து கொள்வாயாக.(17) பாண்டவர்கள் அறம்சார்ந்தவர்கள் {தர்மவான்கள்}, ஒற்றுமையானவர்கள். அவர்களுக்குச் சரிபாதி நாடான அவர்கள் பங்கைக் கொடுக்காமல் இருப்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.(18) நீ சரியாகச் செயல்பட வேண்டுமெனில், எனக்கு ஏற்புடையதை நீ செய்ய வேண்டுமெனில், அனைவரின் நன்மையை நீ கருதுவதாக இருந்திடில், பாதி நாட்டை அவர்களுக்குக் கொடுப்பாயாக” என்றார் {பீஷ்மர்}.(19)

துரோணர் சொன்ன ஆலோசனை! – ஆதிபர்வம் பகுதி 206 அ-(விதுராகமன பர்வம் – 05)-பாண்டவர்களுக்கு உரிய பங்கைக் கொடுக்குமாறு துரோணர் சொன்னது; பீஷ்மரும், துரோணரும் கௌரவர்களுக்கு தீங்கிழைப்பவர்கள் என்று கர்ணன் சாடியது;

வைசம்பாயனர் சொன்னார், “பீஷ்மர் முடித்ததும் துரோணர் பேசினார், “ஓ திருதராஷ்டிர மன்னா, ஆலோசனைக்கு அழைக்கப்பட்ட நண்பர்கள் எப்போதும் சரியானதை, உண்மையானதை, புகழைக் கொடுப்பதையே சொல்ல வேண்டும் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(1) ஓ ஐயா, இக்காரியத்தில் சிறப்பு மிகுந்த பீஷ்மர் சொன்னதைப் போலவே நானும் கருதுகிறேன். இந்த நாட்டின் ஒரு பங்கு பாண்டவர்களுக்குக் கொடுக்கப்படட்டும். அதுவே அழிவில்லாத அறமாகும்.(2) ஓ பாரதா {திருதராஷ்டிரா}, காலந்தாழ்த்தாமல், அனைவரும் ஏற்கும் பேச்சுக் கொண்ட ஒரு தூதுவனைத் துருபதனிடம் அனுப்புவாயாக. அவனிடம் பாண்டவர்களுக்குப் பெரும் செல்வத்தைக் கொடுத்தனுப்புவாயாக.(3) மணமகனுக்கும், மணமகளுக்குமான விலையுயர்ந்த பரிசுகளைத் துருபதனிடம் அந்தத் தூதன் கொண்டு செல்லட்டும். அவன் அந்த ஏகாதிபதியிடம் {துருபதனிடம்} உனது சக்தியின் பெருக்கத்தைச் சொல்லிப் புதிய கூட்டணி ஏற்பட வழிவகுக்கட்டும்.(4) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, நடந்தது அத்தனையும் அறிந்த நீயும், துரியோதனனும் இது விஷயத்தில் மிகுந்த மகிழ்ச்சி கொண்டதாக அந்த மனிதன் {தூதுவன்} அறியட்டும்.(5)

அவன் துருபதனிடமும், திருஷ்டத்யும்னனிடமும் இதைத் திரும்பத் திரும்பச் சொல்லட்டும். அவனுடன் {துருபதனுடன்} கூட்டணி அமைப்பதை நீ பெரிதும் விரும்புவதாகவும், அதற்கு நீ தகுதியுடையவன் என்பதையும் தெரியப்படுத்தச் சொல்வாயாக. அந்த மனிதன் {தூதுவன்} குந்தியின் மகன்களையும், மாத்ரியின் மகன்களையும் தொடர்ந்து வாழ்த்தட்டும்.(6) உனது உத்தரவின் பேரில், ஓ மன்னா, பசும்பொன்னால் ஆன ஆபரணங்கள் திரௌபதிக்குக் கொடுக்கப்படட்டும்.(7) ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரனே}, துருபதனின் மகன்களுக்கும் உகந்த பரிசுகளைக் கொடுத்து அனுப்புவாயாக.(8) பிறகு அந்தத் தூதுவன் பாண்டவர்களை ஹஸ்தினாபுரத்துக்குத் திரும்பச் சொல்லி அழைக்கட்டும்.(9) அந்த வீரர்கள் இங்கு வர {துருபதனால்} அனுமதிக்கப்பட்டதும், துச்சாசனனும், விகர்ணனும் அழகான தேர்களுடன் அவர்களை எதிர்கொண்டு அழைத்து வரட்டும்.(10) அவர்கள் ஹஸ்தினாபுரத்தை அடைந்ததும், அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் உன்னால் அன்புடன் வரவேற்கப்பட வேண்டும். அதன்பிறகு மக்களின் விருப்பப்படி அவர்களது தந்தைவழி வந்த அரியணையில் அவர்கள் அமரட்டும்.(11) ஓ பாரதக் குலத்தில் வந்த ஏகாதிபதியே, இதுதான் பாண்டவர்களிடம் நீ நடந்து கொள்ள வேண்டிய முறை. அவர்கள் உனது சொந்த மகன்களைப் போன்றவர்கள் ஆவர்” என்றார் {துரோணர்}.(12)

“கர்ணா! நீ தீயவன்” துரோணர்! – ஆதிபர்வம் பகுதி 206 ஆ-(விதுராகமன பர்வம் – 05)-துரோணர் கர்ணனுக்கு மறுமொழி கூறியது; கௌரவர்களின் அழிவைப் பற்றி எச்சரித்தது…

வைசம்பாயனர் தொடர்ந்தார், துரோணர் முடித்ததும், கர்ணன் மறுபடியும், “பீஷ்மர், துரோணர் ஆகிய இருவரும் உமது செல்வத்தாலும், உமது கருணைகளாலும் அதிகம் கொழுத்துப் போய் இருக்கிறார்கள்[1].(பெரியோரைக் கர்ணன் மதிக்காத போக்கு, இங்கிருந்தே தொடங்குகிறது. இதுவே பெரும்போர் வரை நீடிக்கிறது.)  இவர்களை எப்போதும் நீர் நம்பத்தகுந்த நண்பர்களாக மதிக்கிறீர். அப்படிப்பட்ட இவர்கள் இருவரின் ஆலோசனைகளும் உமது நன்மைக்கானதாக இல்லாமல் இருப்பது வேடிக்கையானது அல்லவா?(13) தீய நோக்கம் கொண்டு, தங்கள் இதயத்தின் தீமையை மறைத்து, நல்ல ஆலோசனை வழங்குவதாகச் சொல்பவர்களை ஞானமுள்ளோர் எப்படி அங்கீகரிப்பார்கள்?(14) கேடுகாலத்தில், நண்பர்களால் நிச்சயம் நன்மையும் செய்ய முடியாது, தீமையும் செய்ய முடியாது. அனைவரின் மகிழ்ச்சியோ, அல்லது நேர்மாறான நிலையோ அவர்களின் விதியைப் பொறுத்தே அமைகிறது.(15)  ஞானமுள்ளவனும், முட்டாளும், (வயதில்) இளமையானவனும், முதுமையடைந்தவனும், கூட்டணியுள்ளவனும், கூட்டணி அற்றவனும் – ஆகிய அனைவரும் சில நேரங்களில் மகிழ்ச்சியாகவும், சில நேரங்களில் மகிழ்ச்சியற்றும் இருப்பதை எங்கும் காண்கிறோம்.(16)

பழங்காலத்தில் அம்பவீசன் என்ற ஒரு மன்னன் இருந்ததாக நாம் கேட்டிருக்கிறோம். அந்த மகதநாட்டுத் தலைவன் ராஜகிருஹம் என்ற தலைநகரைக் கொண்டிருந்தான்.(17) அப்படிப்பட்ட அவன் தனது காரியங்கள் எதையும் செய்யாது இருந்தான். காற்றைச் சுவாசிப்பது மட்டுமே அவனது முயற்சியாக இருந்தது. அவனது காரியங்கள் அனைத்தும் அமைச்சர்களின் கைகளில் இருந்தன.(18) மஹாகர்ணி என்ற அவனது அமைச்சன், அந்த நாட்டின் தலைமை நிர்வாகியாக ஆனான். அந்நாட்டின் அதிகாரங்கள் அனைத்தையும் கொண்டவன் என்று தன்னைக் கருதிக் கொண்டு அந்த அமைச்சன், மன்னனை அவமதிக்கத் தொடங்கினான்.(19) அந்தப் பாவி, அந்த மன்னனுக்கு உரிய ராணிகள், செல்வங்கள், ஆட்சி உரிமைகள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டான்.(20) ஆனால், இவற்றையெல்லாம் அடைந்தும் அவனது பேராசை தணியவில்லை. அஃது இன்னும் கொழுந்துவிட்டெரிந்தது. மன்னனுக்கு உரிய அனைத்தையும் கவர்ந்த அவன், அரியணையையும் கவர்ந்தான்.(21) ஆனால், அந்த ஏகாதிபதி தனது கடமைகளில் கவனமற்று இருந்தும், காற்றைச் சுவாசிப்பதை மட்டுமே செயலாகக் கொண்டிருந்தும் கூட, சிறந்தது அனைத்தையும் பெற்றும், அந்த அமைச்சனால் தனது முதலாளியின் நாட்டை அடைய முடியவில்லை என்று கேள்விப்படுகிறோம்.(22)

ஓ மன்னா, அந்த ஏகாதிபதியின் ஆட்சியுரிமை விதியின் கையில் இருந்தது என்பதைத் தவிர நாம் இதில் வேறு என்ன சொல்ல முடியும்?(23) எனவே, ஓ மன்னா, இந்த நாடு விதியால் உமக்கு அளிக்கப்பட்டது. இந்த முழு உலகமே உமக்கு எதிரியாக ஆனாலும், நிச்சயம் அஃது உம்மிடமே தொடர்ந்து இருக்கும். இருப்பினும், விதி வேறு விதமாகக் கட்டளையிட்டால், நீர் எவ்வளவு முயன்றாலும், அஃது உம்மிடம் இருக்காது.(24) ஓ கல்விமானே, இவையெல்லாவற்றையும் நினைத்துப் பார்த்து, உமது அமைச்சர்களின் நேர்மையைப் பற்றியோ, மற்ற குணங்களைப் பற்றியோ தீர்மானித்துக் கொள்வீராக. அவர்களில் யார் தீயவர்கள், யார் ஞானத்துடன் பேசுபவர்கள், நல்லதைச் சொல்பவர்கள் என்பதை உறுதி செய்து கொள்வீராக” என்றான் {கர்ணன்}”.(25)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “கர்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட துரோணர் மறுமொழியாக, “நீ தீயவன் ஆனதால், உனது தீய நோக்கத்தின் காரணமாகவே இப்படிச் சொல்கிறாய் என்பதற்கு நீயே சான்று பகர்கின்றாய். பாண்டவர்களுக்குத் தீங்கிழைக்கவே[2], நீ எங்களிடம் குறை கண்டுபிடிக்கிறாய்.(26) ஆனால், ஓ கர்ணா, நான் சொன்னது அனைத்தும் குரு குலத்தின் வளமைக்காகச் சொன்னது என்பதை அறிந்து கொள்வாயாக. அவையெல்லாம், தீயதைக் கொண்டு வரும் என்று நீ மதித்தால், நமக்கு நல்லது எது என்பதை நீயே தீர்மானித்துக் கொள்வாயாக.(27) நான் சொன்ன நல்ல ஆலோசனைகள் பின்பற்றப்படவில்லையென்றால், அற்ப காலத்திற்குள் கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள் என்றே நான் நினைக்கிறேன்” என்றார் {துரோணர்}.(28)

“பாவிகளின் பேச்சைக் கேட்காதீர்” விதுரன்! – ஆதிபர்வம் பகுதி 207-(விதுராகமன பர்வம் – 06)-விதுரன் பீஷ்மருக்கும், துரோணருக்கும் ஆதரவாகப் பேசுவது; துரியோதனன், கர்ணன் மற்றும் சகுனியைப் பாவிகள், முட்டாள்கள், சிறுவர்கள் என்று விதுரன் பழித்தது; துரியோதனன் தவறால் நாட்டின் குடிமக்கள் கொல்லப்படுவார்கள் என்று எச்சரித்தது..

வைசம்பாயனர் சொன்னார், “துரோணர் முடித்ததும், விதுரன் ஆரம்பித்தான், “ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது நண்பர்கள் உமக்கு நன்மையையே சொல்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், உமக்கு அதைக் கேட்பதில் விருப்பமில்லை எனவே, அந்த வார்த்தைகளுக்கு உமது காதில் இடம் கிடைக்கவில்லை.(1) சந்தனுவின் மகனும், குருகுலத்தவரில் முதன்மையானவருமான பீஷ்மர் சொன்னது அற்புதமானதும், உமது நன்மைக்கானதும் ஆகும். ஆனால் நீர் அதைக் கேட்க மறுக்கிறீர்.(2) ஆசானான துரோணர் சொல்வதும் உமது நன்மைக்கே, ஆனால் அதைக்கூட ராதையின் மகனான கர்ணன் மதிக்க மறுக்கிறான்.(3) ஓ மன்னா {திருதராஷ்டிரா}, ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தாலும், மனிதர்களில் சிங்கங்களான இந்த இருவரைவிடச் {பீஷ்மர், துரோணர்} சிறந்த நண்பர்கள் கிடைக்க மாட்டார்கள்.(4) ஓ மன்னா, வயதில் மூத்தவர்களும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்தவர்களான இந்த இருவரும், எப்போதும் உம்மையும், பாண்டுவின் மகன்களையும் சமமான பார்வையிலேயே மதிக்கிறார்கள்.(5)

ஓ பாரதக் குலத்தின் மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்கள் இருவரும் அறத்தில் ஆகட்டும், உண்மை பேசுவதில் ஆகட்டும் தசரதனின் மகன் ராமனுக்கும், கயனுக்கும் எந்தவிதத்திலும் இளைத்தவர்கள் இல்லை.(6) இதற்கு முன்பு அவர்கள் உமக்கு எந்தத் தீய ஆலோசனையும் வழங்கியது கிடையாது. ஓ மன்னா, நீரும் அவர்களுக்கு எந்தக் காயத்தையும் ஏற்படுத்தியது கிடையாது. எனவே, எப்போதும் உண்மையுடன் நடந்து கொள்ளும் இந்த மனிதப் புலிகள், குறிப்பாக நீர் அவர்களைக் காயப்படுத்தாது இருக்கும்போது உமக்குத் தீய ஆலோசனையை ஏன் வழங்க வேண்டும்?(7,8) ஞானம் கொண்ட இந்த மனிதர்களில் முதன்மையானவர்கள், நேர்மையற்ற ஆலோசனைகளை உமக்கு வழங்கமாட்டார்கள்.(9) ஓ குரு குலத்தின் வழித்தோன்றலே {திருதராஷ்டிரரே}, அறவிதிகளை நன்கு அறிந்த இந்த இருவரும், செல்வத்திற்கு மயங்கி, பாகுபாட்டுடன் உங்களை ஏமாற்ற எதையும் சொல்ல மாட்டார்கள் என்பது என் உறுதியான நிலைப்பாடாகும்.(10)

ஓ பாரதா {திருதராஷ்டிரரே}, அவர்கள் சொன்னது அனைத்தும் உமது நன்மைக்கு ஆனதாகவே நான் கருதுகிறேன். ஓ ஏகாதிபதியே, துரியோதனனையும் மற்றவர்களையும் போலவே பாண்டவர்களும் உமது மகன்களே ஆவர் என்பதில் ஐயமில்லை.(11) எனவே, பாண்டவர்களைக் குறித்துத் தீய ஆலோசனைகள் வழங்கும் உமது ஆலோசகர்களுக்கு, உமது நலனில் அக்கறை இல்லை எனக் கொள்வீராக.(12) உமது பிள்ளைகள் குறித்து உமது இதயத்தில் ஏதாவது பாகுபாடு இருக்குமேயானால், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அதை வெளிக்கொணர வகைசெய்யும் {உமது இந்த} ஆலோசகர்கள் உமக்கு நன்மையைச் செய்யவில்லை என்பது உறுதியாகும்.(13) எனவே, ஓ மன்னா, இந்தப் பெரும் பிரகாசமுடையவர்களானச் சிறப்பு மிகுந்தவர்கள் {பீஷ்மரும், துரோணரும்}, தீயவற்றிற்கு வழி கோலும் எதையும் சொல்லவில்லை என நான் நினைக்கிறேன். இருப்பினும் நீர் இதைப் புரிந்து கொள்ளவில்லை.(14) வெற்றிகொள்ளப்பட முடியாத பாண்டவர்களைப் பற்றி இந்த மனிதக் காளைகள் {பீஷ்மரும், துரோணரும்} சொன்னவை முற்றிலும் உண்மையே. ஓ மனிதர்களில் புலியே, அதுகுறித்து வேறுவிதமாக நினைக்காதீர். நீர் அருளப்பட்டு இருப்பீராக.(15)

பாண்டுவின் மகனும், அழகனும், வலக்கையையும், இடக்கையையும் இணையான சக்தியுடன் பயன்படுத்துபவனுமான தனஞ்சயனை {அர்ஜுனனை} மகவத்தே {இந்திரனே} வந்தாலும் போரில் வெல்ல முடியுமா?(16) பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவனும், பலம் வாய்ந்த கரங்களைக் கொண்டவனுமான அந்தப் பெரும் பீமசேனனை தேவர்களாலும் வெல்ல முடியுமா?(17) உயிர்வாழ ஆசைப்படுபவர்கள் யாரேனும், யமனின் பிள்ளைகளைப் போல இருக்கும் அந்த இரட்டையர்களை {நகுலனையும், சகாதேவனையும்} போரில் வெல்ல முடியுமா?(18) அமைதி, கருணை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, உண்மை {சத்தியம்}, ஆற்றல் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து வாழும் பாண்டவர்களில் மூத்தவனை {யுதிஷ்டிரனை} யாரால் எப்படி வெல்ல முடியும்?(19) ராமனை (பலதேவனை {பலராமனைத்}} தங்கள் கூட்டாளியாகக் கொண்டு, ஜனார்த்தனனை (கிருஷ்ணனை) ஆலோசகராகக் கொண்டு, சாத்யகியை தங்கள் ஆதரவாளனாகவும் கொண்ட அவர்கள் ஏற்கனவே எல்லோரையும் போரில் வீழ்த்திவிட்டனர். துருபதனைத் தங்கள் மாமனாராகக் கொண்டு, துருபதனின் மகன்களான, திருஷ்டத்யும்னன் மற்றும் பிருஷதனின் குலத்தில் வந்த பிற மகன்களையும் மைத்துனர்களாகக் கொண்டவர்கள், நிச்சயம் வெல்ல முடியாதவர்கள் ஆவர்.(20)

ஓ ஏகாதிபதியே, இவையாவற்றையும் மனத்தில் கொண்டு, நாட்டின் மீது அவர்களின் உரிமை கோரல், உங்கள் உரிமையை விடப் பழையது {முதன்மையானது} என்பதை எண்ணி அவர்களிடம் அறத்தின் {தர்மத்தின்} படி நடந்து கொள்வீராக.(21) புரோசனனின் செயலால் உண்டான விளைவில், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, வசை {பழிச்சொல்} படிந்த கறை உம்மேல் உள்ளது. இப்போது, பாண்டவர்களிடம் அன்பாக நடந்து கொண்டு, அதைக் கழுவிக் கொள்வீராக.(22) ஓ ஏகாதிபதியே, பாண்டவர்களிடம் உமது அன்பான நடத்தை என்பது, குரு குலத்தைச் சார்ந்த நமது அனைவரின் உயிரையும் காத்து, நமக்குப் பெரிய நன்மையைத் தரும். அது க்ஷத்திரிய குலத்தின் வளர்ச்சிக்கே நம்மை அழைத்துச் செல்லும்.(23) நாம் ஏற்கனவே துருபதனிடம் போரிட்டிருக்கிறோம்; இப்போது நாம் அவனைக் கூட்டாளியாக அடைய முடிந்தால், நமது தரப்புக்கு அது பலத்தையே சேர்க்கும்.(24) ஓ மன்னா, தசார்ஹர்கள் என்பவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களும், பலசாலிகளுமாவர். கிருஷ்ணன் எங்கிருக்கிறானோ அவர்கள் அங்கேயே இருப்பார்கள். எங்கே கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கேயே நிச்சயம் வெற்றியும் இருக்கும் என்பதை அறிந்து கொள்வீராக.(25)

ஓ மன்னா, தேவர்களால் சபிக்கப்படாமல், சமரசம் மூலம் தடுக்க முடிந்ததைப் போர் மூலம் தடுக்க முற்பட்டால், அவர்களுக்குத் தேவர்களின் சாபம் கிடைக்காதா?(26) பிருதையின் மகன்கள் {பாண்டவர்கள்} உயிருடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்த குடிமக்களும், மற்ற குடிகளும் பெரும் மகிழ்ச்சியடைந்து, அவர்களைக் காண ஆவலாக உள்ளனர்.  ஓ ஏகாதிபதி, அவர்களுக்கு ஏற்புடைய வகையில் நடந்து கொள்வீராக.(27) துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர் பாவிகள், முட்டாள்கள் மற்றும் சிறுவர்களாவர். அவர்களின் வார்த்தைகளைக் கேட்காதீர்.(28,29)) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் தவறால் நாட்டின் குடிமக்கள் கொல்லப்படுவர் என்று அனைத்து அறங்களையும் கொண்ட உமக்கு நான் முன்பே சொல்லியிருக்கிறேன்” என்றான் {விதுரன்}.(30)

துருபதனிடம் அனுமதி கேட்ட விதுரன்! – ஆதிபர்வம் பகுதி 208-(விதுராகமன பர்வம் – 07)விதுரன், துருபதனிடம் சென்று, பல பரிசுப் பொருட்களையும், நலம் விசாரிப்புகளையும் செய்து, பாண்டவர்களை ஹஸ்தினாபுரம் அழைத்துச் செல்ல அனுமதி கேட்பது…

வைசம்பாயனர் சொன்னார், “இந்தப் பல்வேறு பேச்சுகளைக் கேட்ட திருதராஷ்டிரன், “சந்தனுவின் மகனும் கல்விமானுமான பீஷ்மரும், சிறப்பு மிகுந்த முனிவர் துரோணரும், நீயும் (ஓ விதுரா) உண்மையையும், எனக்கு எது நன்மையைத் தருமோ அதையுமே சொல்லியிருக்கிறீர்கள்.(1) நிச்சயமாக, அந்தப் பெரும் தேர் வீரர்களான குந்தியின் வீர மகன்கள், பாண்டுவின் மகன்களே. எனவே, விதிப்படி அவர்கள் எனது மகன்களே என்பதில் ஐயமில்லை.(2) எனது மகன்களுக்கு எப்படி இந்த நாட்டின் மீது உரிமை இருக்கிறதோ, அதே போல, பாண்டுவின் மகன்களுக்கும் நிச்சயமாக உரிமை உண்டு.(3) எனவே, முறையான அன்புமிக்க வழியில் விரைவாகப் பாண்டவர்களை அவர்களின் தாயுடன் {குந்தியுடன்} இங்கு அழைத்து வருவாயாக. ஓ பாரதக் குலத்தோனே {விதுரனே}, கூடவே தெய்வீக அழகுடைய கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} அழைத்து வருவாயாக.(4) நற்பேறால் மட்டுமே பிருதையின் {குந்தியின்} மகன்கள் உயிருடன் இருக்கிறார்கள்; நற்பேறால் மட்டுமே பிருதையும் உயிரோடிருக்கிறாள். நற்பேறால் மட்டுமே அந்தப் பெரும் தேர் வீரர்கள் துருபதனின் மகளை {திரௌபதியை} அடைந்தார்கள்.(5) நற்பேறால் மட்டுமே நமது பலம் அதிகரித்திருக்கிறது; நற்பேறால் மட்டுமே புரோசனன் அழிந்தான். ஓ பெரும் பிரகாசமுள்ளவனே, நற்பேறால் மட்டுமே எனது பெரும் துயர் நீக்கப்பட்டது” என்றான் {திருதராஷ்டிரன்}”.(6)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “விதுரன், ஓ பாரதா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரனுடைய கட்டளையின் பேரில், யக்ஞசேனனிடமும் {துருபதனிடமும்}, பாண்டவர்களிடமும் சென்றான்.(7) அவனுடன் கணக்கிலடங்கா நகைகளையும், பல தரப்பட்ட செல்வங்களையும், திரௌபதிக்காகவும், பாண்டவர்களுக்காகவும், யக்ஞசேனனுக்காகவும் கூட எடுத்துச் சென்றான்.(8) அறத்தின் அனைத்து விதிகளையும் அறிந்தவனும், அனைத்து அறிவியல்களிலும் ஆழ்ந்த ஞானம் கொண்டவனுமான விதுரன், துருபதனின் வசிப்பிடத்திற்கு வந்து, அந்த ஏகாதிபதியைச் சரியான முறையில் அழைத்து, அவனுக்காகக் காத்திருந்தான்.(9) துருபதன் விதுரனைச் சரியான முறையில் வரவேற்று அழைத்தான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.(10)

விதுரன் அங்கே பாண்டவர்களையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} கண்டான். அவன் அவர்களைக் கண்டதுமே அன்புடன் அவர்களை அணைத்துக் கொண்டு அவர்களின் நலம் விசாரித்தான்.(11) வாசுதேவனுடன் {கிருஷ்ணனுடன்} கூடிய பாண்டவர்கள் அளவிடமுடியா புத்திக்கூர்மைகொண்ட விதுரனைத் தகுந்த முறையில் வழிபட்டனர். ஆனால் விதுரன், ஓ மன்னா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரன் பெயரால் அவர்களது நலனைக் குறித்துத் திரும்பத் திரும்பப் பாசத்துடன் விசாரித்தான். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, அவன், பாண்டவர்களுக்கும், குந்திக்கும், திரௌபதிக்கும், துருபதனுக்கும், துருபதனின் மகன்களுக்கும், கௌரவர்களால் அவன் {விதுரன்} வழியாகக் கொடுத்தனுப்பப்பட்ட ரத்தினங்களையும், பல்வேறு வகைகளிலான செல்வங்களையும் கொடுத்தான்.(12-14) அளவற்ற புத்திக்கூர்மை கொண்ட அடக்கமுடைய விதுரன், பாண்டவர்கள் மற்றும் கேசவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் துருபதனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(15)

அவன் {விதுரன்}, “ஓ ஏகாதிபதி {துருபதரே}, உமது அமைச்சர்களுடனும் மகன்களுடனும் சேர்ந்து, நான் சொல்லப்போவதைக் கேட்பீராக. மன்னன் திருதராஷ்டிரன், தனது அமைச்சர்கள், மகன்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், ஓ மன்னா {துருபதா}, திரும்பத் திரும்ப உமது நலனைப் பற்றி விசாரித்தார்.  ஓ ஏகாதிபதி {துருபதா}, உம்முடன் ஏற்பட்ட சம்பந்தம் குறித்து அவர் {திருதராஷ்டிரர்} பெரும் மனநிறைவுகொண்டுள்ளார்.(16,17) ஓ மன்னா {துருபதரே}, அதே போல, சந்தனுவின் மகனான பெரும் ஞானம் கொண்ட பீஷ்மரும், குரு குலத்தவர் அனைவருடன் சேர்ந்து அனைத்து விதத்திலும் உமது நலனைக் குறித்து விசாரித்தார்.(18) பரத்வாஜரின் மகனும், பெரும் ஞானம் கொண்டவரும், உமது நண்பருமான துரோணர் உளப்பூர்வமாக உம்மைக் கட்டி அணைத்து, உமது மகிழ்ச்சி குறித்து விசாரித்தார்.(19) ஓ பாஞ்சாலர்களின் மன்னா {துருபதரே}, திருதராஷ்டிரனும், அனைத்துக் குரு குலத்தவரும் சேர்ந்து, உமது சம்பந்தம் கிடைத்ததால், பெரும் அருள் கிடைத்ததாகக் கருதுகிறார்கள்.(20)

ஓ யக்ஞசேனரே {துருபரே), நீர் நிறுவிய இந்தக் கூட்டணியால், ஒரு புதிய நாடு கிடைத்ததைப் போல அவர்கள் மகிழ்ந்திருக்கிறார்கள்.(21) ஓ ஏகாதிபதி {துருபதரே}, இவையாவற்றையும் அறிந்து கொண்டு, பாண்டவர்களை அவர்களது மூதாதையர் நாட்டுக்கு {குருஜாங்கலத்திற்கு} மீண்டும் செல்ல அனுமதி அளிப்பீராக. பாண்டு மகன்களைக் காண குருக்கள் பேராவல் கொண்டிருக்கின்றனர்.(22) இந்த மனிதர்களில் காளைகளை (அவர்களது நாட்டில் {ஹஸ்தினாபுரத்தில்}) நீண்ட நாட்களாகக் காணவில்லை. அவர்களும், பிருதையும் கூட தங்கள் நகரத்தைக் காண மிகுந்த ஆவலுடனேயே இருக்கக்கூடும்.(23) குரு மகளிர் அனைவரும், எங்கள் குடிமக்கள் அனைவரும், பாஞ்சால இளவரசியான கிருஷ்ணையைக் காண பேராவலுடன் காத்திருக்கிறார்கள்.(24) எனவே, ஓ ஏகாதிபதி {துருபரே}, காலந்தாழ்த்தாமல், பாண்டவர்கள் தங்கள் மனைவியுடன் {திரௌபதியுடன்} அங்கே செல்ல நீர் அனுமதிக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.(25)  ஓ மன்னா, சிறப்புமிகுந்த பாண்டவர்களுக்கு அங்கே செல்வதற்கு உமது அனுமதி கிடைத்ததும், நான் திருதராஷ்டிரருக்கு விரைவான தூதர்கள் மூலம் செய்தியைச் சொல்லி அனுப்புகிறேன். ஓ மன்னா {துருபதரே}, பாண்டவர்கள், குந்தியுடனும், கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடன்} புறப்படட்டும்” என்றான் {விதுரன்}”[1].(26)

பாண்டவர்கள் தலைநகரானது காண்டவப்பிரஸ்தம்! – ஆதிபர்வம் பகுதி 209-(விதுராகமன பர்வம் – 08)-திருதராஷ்டிரன் பாண்டவர்களைக் காண்டவப்பிரஸ்தம் போகச் சொன்னது; கிருஷ்ணனைத் தலைமையாகக் கொண்டு பாண்டவர்கள் அங்கே சென்றது; வியாசரைக் கொண்டு நகரத்துக்கான நிலத்தைத் தேர்ந்தெடுத்து அளந்தது; நகரை நிர்மாணித்தது; இந்திரப்பிரஸ்தத்தின் சிறப்பு விவரிப்பு; கிருஷ்ணன் துவாரகை திரும்பியது.

வைசம்பாயனர் சொன்னார், “விதுரனின் வார்த்தைகளைக் கேட்ட துருபதன், “ஓ பெரும் ஞானம் கொண்ட விதுரரே, நீர் சொன்னது போலத்தான் இருக்கிறது. மதிப்பிற்குரியவரே, நானும் இக்கூட்டணியின் விளைவை எண்ணிப் பெரிதும் மகிழ்ந்திருக்கிறேன்.(1) இந்த இளவரசர்கள் தங்கள் மூதாதையர் நாட்டுக்குத் திரும்புவதே சரியானது. ஆனால் அதை நானே சொல்வது சரியாகாது.(2) குந்தியின் வீர மகனான யுதிஷ்டிரனோ, பீமனோ, அர்ஜுனனோ, மனிதர்களில் காளைகளான இரட்டையர்களோ செல்வதற்கு விருப்பப்பட்டு, அறவிதிகள் அனைத்தையும் அறிந்த ராமனும் (பலதேவனும் {பலராமனும்}), கிருஷ்ணனும் அதே மனம் கொண்டார்களென்றால், பாண்டவர்கள் அங்கே செல்லட்டும். ஏனென்றால் இந்த மனிதப்புலிகள் (ராமனும் {பலராமனும்} கிருஷ்ணனும்), பாண்டுவின் மகன்களுக்கு நன்மையைச் செய்வதிலேயே எப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்றான் {துருபதன்}.3,4)

இதைக்கேட்ட யுதிஷ்டிரன், “ஓ ஏகாதிபதி {துருபதரே}, எங்கள் தம்பிகளுடன் சேர்ந்த நாங்கள், இப்போது உம்மை நம்பியிருக்கிறோம். நீர் ஆணையிட விரும்பும் செயலை நாங்கள் மகிழ்ச்சியுடன் செய்வோம்” என்றான்”.(5)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “அப்போது, வாசுதேவன் {கிருஷ்ணன்}, “நான் பாண்டவர்கள் செல்ல வேண்டும் என்றே கருதுகிறேன். ஆனால், நாம் அனைவரும் அறவிதிகள் அனைத்தையும் அறிந்த மன்னன் துருபதனின் கருத்துக்குக் கட்டுப்பட வேண்டும்” என்றான் {கிருஷ்ணன்}.(6)

துருபதன், “நான் இச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த மனிதர்களில் முதன்மையானவன் {கிருஷ்ணன்} எண்ணுவதை நிச்சயமாக ஏற்றுக் கொள்கிறேன்.(7) பாண்டுவின் சிறப்புவாய்ந்த மகன்கள் கிருஷ்ணனுக்கு எப்படி நடந்து கொள்கிறார்களோ அப்படியே என்னிடமும் நடந்து கொள்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.(8) குந்தியின் மகனான யுதிஷ்டிரன் கூட பாண்டவர்களின் நலனில், மனிதர்களில் புலியான கேசவனை விட {கிருஷ்ணனை விட} உறுதியாக இருக்க மாட்டான்” என்றான் {துருபதன்}.(9)

வைசம்பாயனர் தொடர்ந்தார், “சிறப்புவாய்ந்த துருபதனால் ஆணையிடப்பட்ட பாண்டவர்கள், கிருஷ்ணன், விதுரன் ஆகியோர் துருபதனின் மகளான கிருஷ்ணையையும் {திரௌபதியையும்}, புகழ்பெற்ற குந்தியையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தை {ஹஸ்தினாபுரம்} நோக்கிப் பயணித்தனர். அப்படி அவர்கள் பயணிக்கும்போது அவர்கள் இன்பத்திற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் வழியில் ஆங்காங்கே பல இடங்களில் தங்கிப் பயணித்தனர்.(10,11) அந்த வீரர்கள் {பாண்டவர்கள்} நகரத்தின் அருகே வந்துவிட்டார்கள் என்பதைக் கேட்ட மன்னன் திருதராஷ்டிரன், பாண்டவர்களை எதிர்கொண்டு அழைக்க கௌரவர்களை அனுப்பினான்.(12) ஓ பாரதா, அப்படி எதிர்கொண்டு அழைக்கச் சென்றவர்கள் பெரும் வில் கொண்ட விகர்ணனும், சித்ரசேனனும், போர்வீரர்களில் முதன்மையான துரோணரும், கௌதம குலத்தின் கிருபரும் ஆவர்.(13) இவர்களால் {கௌரவர்களால்} சூழப்பட்ட அந்தப் பெரும் பலம்வாய்ந்த வீரர்கள் {பாண்டவர்கள்}, அங்கு சேர்ந்த கூட்டத்தைக் கண்டு பிரகாசத்தில் பெருகி, மெதுவாக ஹஸ்தினாபுர நகரத்திற்குள் நுழைந்தனர்.(14) மொத்த நகரமே அங்கு கூடியிருந்த கூட்டத்தின் ஆவல்ததும்பிய ஆர்ப்பரிப்பால் ஒளியூட்டப்பட்டு இருந்தது. மனிதர்களில் புலிகளான அவர்கள், தங்களைக் கண்ட அனைவரின் இதயத்தையும் மகிழ்ச்சியால் நிரப்பினர்.(15)

மக்களின் இதயங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் பாண்டவர்கள், அப்படி முன்னேறிக் கொண்டிருக்கும்போது, தங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படியக் காத்திருக்கும் குடிமக்களின் சத்தமான பேச்சைக் கேட்டனர்.(16) சிலர், “இதோ, அனைத்து அறவிதிகளையும் அறிந்து, நம்மை {குடிமக்களை} எப்போதும் தங்கள் நெருங்கிய உறவினர்கள் போலப் பாதுகாக்கும் அந்த மனிதர்களில் புலி {யுதிஷ்டிரன்} திரும்பிவிட்டான்” என்றனர்.(17) இன்னும் வேறு இடங்களில், “மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட பாண்டு, நமக்கு உகந்ததைச் செய்யக் கானகத்திலிருந்து திரும்பிவிட்டான், என நிச்சயமாகத் தெரிகிறது” என்றனர்.(18) இன்னும் சிலர், “குந்தியின் வீர மைந்தர்கள் {பாண்டவர்கள்} நகரம் {ஹஸ்தினாபுர நகரம்} திரும்பிய பிறகு, நமக்கு என்ன நன்மைதான் நேராது?(19) நாம் எப்போதாவது தானம் செய்திருந்தாலோ, நெருப்பில் தெளிந்த நெய்யை விட்டிருந்தாலோ, நமக்கு ஏதாவது ஆன்மத் தகுதி இருந்தாலோ, அந்தச் செயல்களுடைய அறத்தின் தகுதிகளைக் கொண்டு பாண்டவர்கள் இந்த நகரத்தில் நூறு ஆண்டுகளுக்கு இருக்கட்டும்” என்றனர்.(20)

இறுதியாகப் பாண்டவர்கள் இடத்தை அடைந்து {அரண்மனையை அடைந்து}, திருதராஷ்டிரன் மற்றும் சிறப்பு மிகுந்த பீஷ்மரின் கால்களை {கால்களில் விழுந்து} வழிபட்டனர். அவர்கள் மதிப்பிற்குரிய அனைவரின் கால்களையும் வழிபட்டனர்.(21) (அங்கு குழுமியிருந்த) அனைத்துக் குடிமக்களின் நலனையும் விசாரித்தார்கள். இறுதியாகத் திருதராஷ்டிரனின் ஆணையின் பேரில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்குள் நுழைந்தனர்.(22) சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, அவர்கள், மன்னன் திருதராஷ்டிரன் மற்றும் சந்தனுவின் மகன் பீஷ்மரால் (சபைக்கு) அழைக்கப்பட்டார்கள்.(23)

அவர்கள் வந்ததும், மன்னர் திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனிடம், “ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, உனது தம்பிகளுடன் சேர்ந்து நான் சொல்வதைக் கேட்பாயாக. உங்களுக்குள் மீண்டும் (உங்களுக்கும், உங்கள் பங்காளிகளுக்கும்) வேற்றுமை உருவாகாதிருக்க காண்டவப்பிரஸ்தத்திற்குச் செல்லுங்கள்.(24) அங்கே உங்கள் வசிப்பிடத்தை நீங்கள் அமைத்துக் கொண்டால், உங்களுக்கு யாரும் தீங்கிழைக்க முடியாது. வஜ்ரதாங்கியால் {இந்திரனால்} காக்கப்படும் தேவர்களைப் போலப் பார்த்தனால் {அர்ஜுனனால்} காக்கப்பட்டுப் பாதி நாட்டை அடைந்து, காண்டவப்பிரஸ்தத்தில் வசித்திருங்கள்” என்றான் {திருதராஷ்டிரன்}.(25)

வைசம்பாயனர் தொடரந்தார், “திருதராஷ்டிரன் சொன்னதை ஏற்றுக் கொண்ட மனிதர்களில் காளைகளான அவர்கள் {பாண்டவர்கள்}, அம்மன்னனை {திருதராஷ்டிரனை} வணங்கிவிட்டு, ஹஸ்தினாபுரத்தில் இருந்து புறப்பட்டனர். பாதிநாட்டுடன் மனநிறைவு அடைந்து, சீர்படுத்தாத பாலைவனமான காண்டவப்பிரஸ்தத்திற்கு நகர்ந்தனர்.(26,27) குன்றாத பிரகாசம் கொண்ட அந்த வீரர்களான பாண்டவர்கள், கிருஷ்ணனைத் தலைமையாகக் கொண்டு அங்கு வந்து, அந்த இடத்தை அழகுபடுத்தி, அதை இரண்டாவது சொர்க்கமாக்கினர். அந்தப் பெரும் பலம் வாய்ந்த தேர் வீரர்கள் {பாண்டவர்கள்}, துவைபாயனரின் {வியாசரின்} துணையுடன் ஒரு புனிதமான, மங்கலமான இடத்தைத் தேர்ந்தெடுத்து, சில குறிப்பிட்ட பரிகாரம் {நிறைவு கொள்ளச் செய்யும்} சடங்குகளைச் செய்து, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை தங்கள் நகரத்திற்கு என அளந்தனர். அந்த இடத்தைச் சுற்றிக் கடல் போன்று அகலமாக அகழி தோண்டி, சுற்றிலும் பஞ்சு போன்ற மேகத்தைத் தொடுவதைப் போன்றும் சந்திரனின் கதிர்களைப் போன்றும் வெண்மையான வானுயர் {சொர்க்கத்தைத் தொடுமளவுக்கு} மதில்களைக் கட்டினர்.(28-30)

நகரங்களில் முதன்மையான அந்த நகரம், நாகர்கள் நிறைந்த போகவதியைப் (பாதாள உலகத்தின் தலைநகரத்தைப்} போன்று இருந்தது. அஃது அரண்மனைகளுடனும், எண்ணிலடங்கா வாயில்களுடனும், அந்த வாயில்கள் இரண்டு கதவுகளாகக் கருடனின் விரிந்த சிறகுகளைப் போல இருந்தன.(31) அது மேகங்களைப் போன்ற வாயில்களால் பாதுகாகப்பட்ட உயர்ந்த மந்தர மலையைப்ப போல இருந்தது. தாக்குவதற்குத் தயாரான ஏவுகணைகள் பொருத்தப்பட்டு, எதிரிகள் சாதாரணமாக எண்ணாதவாறு இருந்தது. எப்போதும் தயாராக இருக்கும் இரு நாக்குக் கொண்ட பாம்புகளைப் போன்ற கணைகளாலும், பல ஏவுகணைகளாலும் நிறைந்திருந்தது. சுவரினூடே இருந்த கோபுரங்கள், ஆயுதம் தாங்கிய மனிதர்களால் நிரம்பியிருந்தது. சுவர் முழுவதும் எண்ணிலடங்கா வீரர்கள் முழு நீளத்திற்கும் வரிசையாக நின்றனர். ஆயிரக்கணக்கான கூரிய கொக்கிகளும், சதக்னிகளும் (நூறு பேரைக் கொல்லும் இயந்திரம்), மேலும் பல போர் இயந்திரங்களும் அங்கே இருந்தன. அந்தச் சுவர்களில் பெரிய இரும்புச் சக்கரங்களும் பொருத்தப்பட்டிருந்தன. இவை எல்லாவற்றாலும் அந்த முதன்மையான நகரம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(32-34) அந்த நகரத்தின் தெருக்கள் அகலமாகவும், அற்புதமாகவும் அமைக்கப்பட்டிருந்தன. அங்கே விபத்துக்கான அச்சமே இல்லாமல் இருந்தது.(35) தெருக்கள் எங்கும் கணக்கற்ற மாளிகைகளுடன் இருந்த அந்த நகரம் அமராவதியைப் போல இருந்தது. அதன் காரணமாகவே அந்த நகரம் இந்திரப்பிரஸ்தம் (இந்திரனின் நகரம்) என்றும் அழைக்கப்பட்டது.(36)

நகரத்தில் ஒரு மகிழ்ச்சி நிறைந்த மங்கலமான இடத்தில் பாண்டவர்களின் அரண்மனை அனைத்து விதமான செல்வங்களும் நிரம்பி எழுந்தது. அது தேவலோகப் பொருளாளராள {பொக்கிஷ அதிகாரியான} குபேரனின் மாளிகையைப் போல இருந்தது. அது மின்னலுடன் கூடிய அடர்த்தியான மேகக்கூட்டம் போல இருந்தது.(37) அந்த நகரம் கட்டிமுடிக்கப்பட்ட பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, வேதங்களையும், பல மொழிகளையும் நன்கு அறிந்த கணக்கற்ற பிராமணர்கள் அங்கே வசிக்க விரும்பி வந்தனர்.(38) பொருளீட்ட விரும்பிப் பல திக்குகளிலிருந்தும் கணக்கற்ற வியாபாரிகள் அந்த நகரத்திற்கு வந்தனர். கலைகளில் நிபுணத்துவம் வாய்ந்த கணக்கற்ற மனிதர்களும், தங்கள் வசிப்பிடத்தை அங்கே அமைத்துக் கொள்ள விரும்பி வந்தனர்.(39) அந்த நகரத்தைச் சுற்றி கனிகளும், மலர்களும் தரக்கூடிய கணக்கற்ற மரங்களுடன் கூடிய பல நந்தவனங்களும் ஏற்படுத்தப்பட்டன.(40)

அங்கே மாமரங்களும், ஆம்ராதக மரங்களும், கடம்ப மரங்களும், அசோக மரங்களும், சண்பக மரங்களும், புன்னை மரங்களாலும், நாக, எலுமிச்சை மரங்களாலும், பலா மரங்களாலும், சால {ஆச்சா} மரங்களாலும், பனை மரங்களாலும், தமல, வாகுல {மகிழ மரங்களாலும்}, நறுமணமிக்கக் கேதக {தாழை} மரங்களாலும்,(41) அழகாகப் பூத்துக் குலுங்கித் தனது கனிகளின் எடையால் கிளைகள் தாழ்ந்து தொங்கும் பெரும் அமலக {அருநெல்லி} மரங்களாலும், லோத்ர மரங்களாலும், பூத்துக் குலுங்கும் அங்கோல மரங்களாலும்,(42) நாவல் மரங்களாலும், பாதாள {பாதிரி}, குஞ்சக {நீர்நொச்சில்}, அதிமுக {தினிசம்}, கரவிர {அலரிச்செடிகளாலும்}, பாரிஜாத மரங்களும், அதைப் போன்ற கணக்கிலடங்காப் பல வகை மரங்களும்,(43) பூக்களாலும், கனிகளாலும், உயிருடன் கூடிய இறக்கையுள்ள உயிரினங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அந்தப் பசுந்தோட்டங்கள் கோகிலப் (கரும்பறவை) {குயில்} பறவைகள் மற்றும் மயில்களின் இனிய கானத்தால் கிறங்கடிக்கப்பட்டு இருந்தன.(44)

அங்கே இன்ப வீடுகளும் {நீர் விளையாட்டு இடங்கள்} கண்ணாடிகளைப் போலப் பிரகாசமாக இருந்தன. சுத்தமான நீர் நிறைந்த பெரும் தடாகங்களும் {ஏரிகளும்}, தாமரையும், அல்லி மலர்களும் சூழ்ந்து, அன்னங்களாலும், வாத்துகளாலும் சக்கரவகங்களாலும் {ஒருவகை அன்னப்பறவை} அலங்கரிக்கப்பட்ட தடாகங்களும் நிறைந்திருந்தன. அங்கே நல்ல நீர்வாழ் செடிகள் வளர்ந்திருந்த இனிமையான குளங்களும் இருந்தன.  பெரும் அழகுடனும், பெரிய அளவிலும் பல்வேறு குளங்கள் அங்கே இருந்நதன.(45-47) ஓ மன்னா, நல்ல மனிதர்கள் வசித்த அந்தப் பெரிய நாட்டில் வாழ்ந்த பாண்டவர்களின் மகிழ்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.(48) அறம் சார்ந்த பீஷ்மர் மற்றும் மன்னன் திருதராஷ்டிரன் ஆகியோர் தங்களிடம் அறத்தின்படி நடந்து கொண்டதன் விளைவாக, பாண்டவர்கள் காண்டவப்பிரஸ்தத்தைத் தங்கள் வசிப்பிடம் ஆக்கிக் கொண்டார்கள்.(49) அந்த ஐந்து பெரும் பலம்வாய்ந்த வீரர்கள் {பாண்டவர்கள்} ஒவ்வொருவரும் ஓர் இந்திரனுக்குச் சமமாக இருந்தனர். அவர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த முதன்மையான நகரம், நாகர்களால் அலங்கரிக்கப்பட்ட போகவதி நகரம் போல இருந்தது.(50) ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பாண்டவர்களை அங்கே அமர்த்திவிட்டு, அந்த வீரனான கிருஷ்ணன், அவர்களிடம் {பாண்டவர்களிடம்} விடை பெற்றுக் கொண்டு, ராமனுடன் {பலராமனுடன்} துவாரவதிக்குத்  திரும்பிச் சென்றான்” {என்றார் வைசம்பாயனர்}.(51)

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading